
ப்ரியங்களை சுமந்த உன் கடிதத்தினை ஒரு குழந்தையை ஏந்தி வரும் தாதியாய் என்னிடம் சேர்ப்பித்து சென்ற தபால்காரனின் மீது பெருங்கருணை ஒன்று பிறந்தது. உன் கையெழுத்தில் என் முகவரியை உறையின் மேல் பக்கத்தில் எழுதியிருந்த உனக்கு, நீதான் என் முகவரி என்பதும் தெரியும். விலாசங்கள் எல்லாம் வாழ்க்கையின் தற்காலிகப் பக்கங்களை குறிப்பிடுபவை. நீ எழுதி அனுப்பிய கடிதம், நீ எனக்கு தூரமாய் இருப்பதைப் போல போலியாய்க் காட்டினாலும் என்னுள்ளே எனக்கு மிக அருகே நீ இருக்கிறாய்.
வாஞ்சையோடு காதலை உன் பேனாவுக்குள் நிரப்பித்தான் என் பெயரை முகவரிக்காக நீ எழுதி இருக்கவேண்டும். எழுதியவரின் ஆசையை வாசிப்பவன் உள்வாங்கிக் கொள்ளத்தான் செய்வான். வெறுமனே ஆசை என்றில்லாமல் நீ ஆசை, ஆசையாய் என் பெயரை அழுத்தம் திருத்தமாய் எழுதி மீதி இருக்கும் எழுத்துக்களில் காதலை ஊர்வலப்படுத்தி இருந்தாய். முகவரியின் கடைசி வரியை நீ எழுதி முடித்திருக்கையில் ஒரு பதட்டம் ஒன்று பளீச்சென்று உனக்குள் வந்து போனதை கொஞ்சம் கோணலாய் கலைந்து போயிருந்த அந்த எழுத்துக்கள் எனக்குச் சொன்னது.
அனுப்புனர் பகுதியில் அக்கறையில்லாமல் சிதறிக்கிடந்த உன் பெயர் உனக்கு முக்கியமில்லை என்று நீ நினைத்திருந்தாலும், கிறுக்கலானா உன் பெயர் பார்த்து எனக்குக் கிறுக்குப் பிடித்துதான் போனது. அலட்சியமாய் நீ எழுதியிருந்த உன் பெயர் அழகினை ஏந்திப் பிடித்துக் கொண்டிருந்தது. கடித உறையை தொட்டுத் தடவி வாஞ்சையோடு உன் கை ரேகைகள் படிந்திருந்த எல்லா இடங்களிலும் என் கைரேகைகளைப் படிய வைத்தேன்...!
அந்தக் கடிதத்தினை ஒரு பித்துப் பிடித்தவனைப் போல நெஞ்சில் வைத்து அணைத்த படி உன் நினைவுகளில் மூழ்கிப் போனேனா... இல்லை மோகத்தில் வீழ்ந்து போனேனா அல்லாது ஞானத்தில் ஆழ்ந்து போனேனா என்று தெரியவில்லை. என்னிடமிருந்து புறம் சட்..சட்டென்று தனது தொடர்புகளைத் துண்டித்துக் கொள்ள இமைகள் கவிழ்ந்து, உறக்கத்தைப் போன்ற ஒரு விழிப்புநிலை என்னைச் சூழ்ந்து கொண்டது.
வார்த்தைகள் எல்லாம் தொலைந்து போக வெறிச்சோடிக் கிடந்த என் மனதினுள் உன் நினைவுகள் மட்டுமே எஞ்சி இருந்தது. இந்த கடிதத்தை பிரித்துப் படிப்போமா வேண்டாமா? வாசித்துத் தீர்த்துவிட்டால் கடிதம் முடிந்து போகுமே...என்ற பயத்தில் கடிதத்தினை திறக்காமலேயே ஒரு குழந்தையைப் போல நெஞ்சில் சுமந்து கொண்டிருந்தேன். நினைவுகள்தான் காதலில் எப்போதும் சுகமானது. காதலியின் இருப்பு எப்போதும் ஒரு முழுமைக்குள் நம்மைக் கொண்டு சேர்த்து விடுகிறது.
அது ஒரு சமாதி நிலை. பூரணத்தில் கலந்த பின்பு அங்கே இது, அதுவென்று எடுத்துச் சொல்வதற்கு ஒன்றுமில்லை. எல்லாமே இயல்பாய் மாறிப்போன பின்பு தனித்து ஒரு சந்தோசத்தையும் துக்கத்தையும் பிரித்து எடுத்து சொல்ல இயலாது. யாருக்கும் அங்கே எதுவும் நிகழாத ஒரு சலனமில்லாத முழுமை அது.
முழுமை அழகானது, ஆனால் சுவாரஸ்யமானது அல்ல. நிறைகுடத்தை நீங்களும் நானும் போற்றலாம், அது சலனமற்று இருப்பதாக பெருமைப்பட்டுக் கொள்ளலாம், ஆனால் தளும்பும் குடம் அழகானது. வாழ்க்கையின் நியதியில் தத்துவம் சொல்வதில் வேண்டுமானால் குறை குடம் குறைந்து போயிருக்கலாம், ஆனால் குறை குடம் வசீகரமானது. அது முழுமையை நோக்கிய ஏக்கங்களைத் தளும்பல்களாய் கொண்டிருப்பது. சலக்....சலக் என்று இடுப்பில் இருக்கும் ஒரு குடத்தின் நீர் வெளியே எட்டிப்பார்க்க முயலுவது கவிதைத்துவமானது.
வாழ்க்கையும் அப்படித்தான். எல்லாம் கிடைத்து விட்டால். எந்தப் பிரச்சினையுமே இல்லாவிட்டால்... அங்கே வாழ்க்கை இல்லை. வாழ்க்கை என்றாலே இயங்குவது. முழுமையை நோக்கி இயங்குவது. இங்கே கிடைத்தலை விட இழத்தல்தான் சுகம். பெறுதல் சந்தோசத்தோடு முடிந்து விடுகிறது. இழத்தல் சந்தோசத்தை நோக்கி நகர மீண்டும் செயல் செய்ய வைக்கிறது. திருமணத்திற்காக காதலிப்பவர்கள் அதனால்தான் திருமணமான பின்பு காதலைத் தொலைத்து விடுகிறார்கள். திருமணத்தோடு அவர்களின் வாழ்க்கைப் பூரணமாகி விடுகிறது. இரண்டு பிள்ளைகள் பெற்ற உடன் பிள்ளைகளுக்கு ஏதேனும் சேர்த்து விட்டு... இன்னமே எனக்கு என்ன இருக்கிறது.. என்று விரக்தியாய் கேட்க ஆரம்பித்து விடுகிறார்கள்.
தங்களின் வாழ்க்கையை வலுக்கட்டாயமாக முடித்துக் கொள்ளும் கோடாணு கோடி பேர்கள் இங்கே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் முழுமையை அடைந்து விட்டதாய் எண்ணிக் கொண்டு நரகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். பூரணம் என்பது பெரும் நிம்மதி. அந்த பெரும் நிம்மதியை அடைய பல கட்டங்களில் நாம் நகர்ந்து செல்லும் இயக்கமே நமது இருப்பினை உறுதி செய்கிறது.
இதோ இந்த காகித உறைக்குள் என் காதல் உயிரான எழுத்துக்களாய் படுத்துக் கொண்டிருக்கிறது. நான் வாசிக்க, வாசிக்க என்னுள் நிறைந்து ஏதேதோ உணர்வுகளைக் கிளறி விடப்போகிறது. இது அவளின் இருப்பை விட வசீகரமானது, வலுவானது. எந்த ஒரு காதலியும் தன் காதலன் உடன் இருக்கையில் ஏக்கத்தை கொடுத்து விடமுடியாது. ஏக்கங்களைத் தீர்த்துக் கொள்ளவே இங்கே பெரும்பாலும் விரும்புகிறார்கள். ஏக்கத்தை ரசிக்க யாரும் இங்கே கற்றுக் கொள்ளவில்லை. காதலனோ, காதலியோ பிரிந்து இருக்கும் போது கொடுக்கும் தாக்கத்தினை அருகில் இருக்கும் போது கொடுப்பதில்லை.
சோகம் சுகமானது. பெறுதலுக்காய் இருக்கும் தவம் புரிதலோடு இருக்குமெனில் அது கடவுள் தன்மையை ஒத்தது. சட், சட் என்று எல்லாம் கிடைத்து விடும் மனிதர்கள் சபிக்கப்பட்டவர்கள். வலிக்க, வலிக்க வெயிலில் நடந்து சில்லென்று நீர் பருகும் மனிதனின் சந்தோச உணர்வுகளை ஒருபோதும் குளு குளு அறையில் அமர்ந்து குளிர்ந்த நீரை பிரிட்ஜில் இருந்து குடிக்கும் மனிதன் அடையவே முடியாது....
என் காதல் வலிக்கிறது. என் காதலி என்னோடு இப்போது இல்லை. நாங்கள் கடிதங்களில் எங்கள் உயிர்களை பரிமாறிக் கொள்கிறோம். அவள் கடிதத்திற்காக காத்திருக்கும் பொழுதுகள் வசீகரமானவை. ஜீவனுள்ள குழந்தைகளாய் எங்களின் வார்த்தைகள் அங்கும், இங்கும் கடிதங்கள் மூலம் எங்களுக்காய் நகர்ந்து ஆறுதல் தருகின்றன. நான் அவளோடு இல்லை என்பதையும், அவள் என்னோடு இல்லை என்பதையும் உணர வைக்கும் இந்த வெறுமை அழகானது. அது காதலை, பாசத்தை இன்னும் திடப்படுத்துகிறது.
ஏதோ ஒரு மயக்க வசீகரத்தில் நேருக்கு நேர் பார்த்துக் கட்டிக் கொண்டு, முத்தம் கொடுத்து, கூடல் என்னும் உடல் கவர்ச்சியில் வழுக்கி விழுந்து ப்ரியங்களை பரிமாறிக்கொள்ளும் யாதொரு அவசரமும் எங்களுக்கு இல்லை. எங்களின் தூரமும், பிரிவும் மிகப்பெரிய பக்குவத்தைக் கொடுத்து காதலின் கன பரிமாணங்களை கவிதையாய் எடுத்துக் காட்டிக் கொண்டிருக்கின்றன. இது கடவுள் ஆசிர்வாதம். உடலை மறந்து உயிரை உயிர் நேசிக்க பேரிறை வைத்த ஒரு யுத்தி.
வாஞ்சையோடு அவளின் கடிதத்தை மீண்டும் கையிலெடுத்தேன். அன்பு காகிதமாய் உருமாறி கைகளில் தவழ்ந்து கொண்டிருந்தது.
என்ன எழுதி இருப்பாள்....?.....
பிரிவை நியாயப்படுத்தும் என் அன்பின் மீது கோபமாய் என்னை அதீதமாய் காதலிப்பதாய் சொல்லி இருக்கலாம்? மீண்டும் காணப் போகும் அந்தக் கணத்தினை ஒரு வண்ணத்துப் பூச்சியை மென்மையாய் பிடித்து அதன் இறகினை ரசிக்கும் அழகோடு வார்த்தைப் படுத்தி இருக்கலாம். இரவுகளின் நீளத்தில் தொலைந்து போன அவளின் தூக்கத்தைப் பற்றியும், பெளர்ணமி இரவில் தனித்தமர்ந்து என் நினைவுகளோடு நிலா பார்த்த நிகழ்வினையும், மழை பெய்த தினத்தில் வேண்டுமென்றே குடை மறந்து சென்று நனைந்ததைப் பற்றியும், என் கவிதை வரிகளுக்கு வர்ணமடித்து சுவரெங்கும் ஒட்டி வைத்திருப்பது பற்றியும், ஈரத்தலை துவட்டுகையில் அவளின் காதோரம் நான் கிசு கிசுத்த கிறக்கமான நிமிடங்கள் பற்றியும்....அவள் எழுதி விட்டு... கடைசியில் வழக்கம் பொல ' எப்படா உன்னை நான் பாக்குறது...? ' என்று வழக்குத் தமிழில் ஒரு வழக்கு கூட தொடுத்திருக்கலாம்.
என் இதயம் பட படக்க...ஒரு கூட்டுப்புழுவில் இருந்து வெளியே வரும் ஒரு வண்ணத்துப் பூச்சியின் வலி, அவஸ்தையாய் என் நெஞ்சைப் பிடித்து இழுக்க.. என் அவளின், என் அம்முவின் கடிதம் திறக்க தீர்மானித்து விட்டேன். பிஞ்சுக் குழந்தையின் விரல் பிடித்து நகம் கொய்யும் அவஸ்தையோடு மெல்ல கிழித்த அந்த கடித உறையின் வசீகரமான கிழிந்த பகுதியினை மிக பத்திரமாய் எடுத்து என் டைரிக்குள் பதுக்கி வைத்தேன்......
மீதமிருக்கும் கடித உறையை கவனமாய் என் மடியில் வைத்துக் கொண்டு ஒரு கண்ணாடி பாத்திரத்தை கையில் எடுக்கும் கவனத்தோடு காகிதத்தில் வந்திருந்த என் காதலை மெல்லப் பிரித்து கையிலெடுத்து எழுத்துக்களை என் விழிகளால் முத்தமிடுவதற்கு முன்பு.....கடிதத்திலிருந்து என் நாசி தொட்ட அவளின் வாசம் என்னை பித்துப் பிடிக்கச் செய்ய....
அவள் வார்த்தைகளுக்குள் விழுந்து நான் காணாமல் போயிருந்தேன்....!
தேவா. S
Comments
மிக அருமை