Skip to main content

பேச்சி.....!




















அடிக்கடி பல சிந்தனைகளோடு அலுவலகத்தின் முதன்மை நிலைக்கதவை எல்லோருமே கடந்து செல்வதுண்டு. நானும் அப்படித்தான். வழி நெடுகிலும் இருக்கும் போக்குவரத்து நெரிசல் பற்றிய எரிச்சலோடு எட்டு மணிக்கு அலுவலகத்தை நெருங்கும் போது அசுர கதியில் கதவைத் திறந்து சென்று இருக்கையில் அமர்ந்து அன்றாடத்தில் மூழ்குவதும், வேலை நிமித்தமாய் வெளியில் செல்லும் போது செல்லும் இலக்கு, அங்கே செய்ய வேண்டிய வேலைகள் என்று மனம் எப்போதும் எங்கோ குவிந்து கிடக்க கதவைத் திறந்து கொண்டு போயும் வந்துமிருக்கிறேன்.

நான் மட்டுமில்லை என் அலுவலகத்திலிருக்கும் எல்லோருமே இப்படித்தான். மனிதன் இயந்திரமாகிப் போனதின் விளைவுகளை பளீர் நீல வானம் பல முறை பேசி சிரித்திருக்கலாம். என் வீட்டு தோட்டத்திலிருக்கும் செடிகள் மானுடரின் மிருக சிந்தனைகளை பற்றி பழங்கால மனிதர்களோடு எங்களை ஒப்பிட்டுப் நகைத்திருக்கலாம். விவசாயத்தை தொலைந்து போகச் செய்த நவீனத்தின் விசம் தடவிய கோர நாவின் கடுமையை நகரத்தின் நடுவே அலைந்து தெரியும் பசுக்களும், எருதுகளும் விரக்தியாய் விழிகளால்  பரிமாறிக் கொண்டிருக்கலாம்...!

சிறு பிராயத்தில் எல்லாம் எனக்கு இயற்கையோடு நிறைய தொடர்பிருந்து இருக்கிறது. எனக்கு இருந்த தொடர்பு என் தந்தைக்கு இருந்ததை விடவும், என் பாட்டனுக்கு இருந்ததை விடவும் அடர்த்தி குறைவானதுதான் என்றாலும் என் மகளை விட எனது தொடர்பு அடர்த்தியானது. என் ஆரம்பப் பள்ளி பிராயத்தில் நாங்கள் இருந்த வீட்டுக்குப் பின்னால் மிகப்பெரிய தோட்டம் ஒன்று இருந்தது. அந்த தோட்டம் யாருக்கு சொந்தமானது என்பது எல்லாம் எங்களுக்குத் தெரியாது.

அது புற்களால் நிரம்பி இருக்கும். தும்பைப் பூ செடி நிறைந்து கிடக்கும். என்னை ஒத்த சிறார்களுக்கு எல்லாம் அந்த தோட்டம் தான் எல்லாமே. பத்து பதினைந்து தென்னை மரங்களுக்கு மேலே கவிழ்ந்து கிடக்கும் நீல நிற வானத்தில் ஆங்காங்கே நீந்திக் கொண்டிருக்கும் மேகக் குட்டிகளிலும், கெட்டியான அடர் மேகங்களிலும் இறந்து போன எங்களின் உறவினர்களின் முகங்கள் எட்டிப்பார்ப்பதாக சொல்லி சோகமாய் பார்த்து இருக்கிறோம்.

இந்திரா காந்தி, நேரு, காந்தி, நாய்க் குட்டி, மான், யானை, கப்பல் என்று எல்லாவற்றையும் கூப்பிட்டு கூப்பிட்டு நண்பர்களிடம் நான் காண்பித்தது உண்டு. ஊர்ந்து செல்லும் அட்டைப் பூச்சிகளின் மீது இருக்கும் கருப்பு சிவப்பு வர்ணத்தை வாய் பிளந்து ரசித்துக் கொண்டிருக்கையில், அதன் பக்கத்திலேயே மஞ்சள் கருப்போடு இன்னுமொரு அட்டைப்பூச்சி வருவதைப் பார்த்து...டேய்.. இன்னொன்னுடா....என்று வாய் பிளந்து ஆச்சர்யத்தில் ஆழ்ந்து போனதும் உண்டு. சிறு குச்சியைக் கொண்டு அருகில் சென்றவுடன் சுருண்டு கொண்டு அசையாமல் கிடக்கும அட்டைப்பூச்சி எப்போதும் எழும் என்று மணிக்கணக்கில் அருகில் இருந்து கவனித்தது உண்டு. தட்டான் பூச்சிகளின் வாலில் நூல் கட்டி பறக்க விட்ட படியே அடுத்த பிறவியில் தட்டானாய் பிறப்போமா என்று யோசிக்கையில்

பாபுவின் கால் சட்டை இடுப்பில் இருந்து இறங்கி பின் பகுதியைக் அரைகுறையாய் காட்ட சிரித்துக் கொண்டெ சுற்றி இருக்கும் நண்பர்களிடம் சொல்லி சிரித்துக் கொண்டே விளையாடியது உண்டு. என்ன செய்யவில்லை நான்...? எதை மறுத்திருக்கிறேன் நான்...?

சின்ன சின்ன வண்டுகள் புல்லின் மீது பாகிரதனாய் பிராயத்தனம் கொண்டு நகருவதைப் புல்லின் மீது படுத்துக் கொண்டு பார்க்கும் போதும், அதன் ஒரு குட்டி வண்டு கருப்பு சிவப்பு நிறத்தில் குண்டு மணியைப் போல உருண்டு உருண்டு வருவதைப் பார்த்து என்ன வர்ணக்கலவை என்று வியந்த படி அந்த வண்டை பிடித்து கையில் வைத்து ஓட விட்டும் நான் ரசித்த நாட்கள் எல்லாம் எங்கே போயின இப்போது..?

புல்லில் இருந்து எழும் பச்சை வாசனையை அனிச்சையாய் என் மூளை எனக்குள் பரவ, நான் இயந்திரமாய் இயங்கிக் கொண்டிருக்கிறேன் இப்போது....!

அலுவலகத்தின் கதவு பற்றி சொல்லி விட்டு அங்கே கடந்த இரண்டு வருடங்களாய் படுத்துக் கிடக்கும் பேச்சியைப் பற்றி சொல்லாமல் விட்டு விட்டேன் பாருங்கள். பேச்சிக்காக எழுத ஆரம்பித்த கட்டுரைதான் இது.. என்ன லட்சணமாய் என் சிறுவயதுக்குள் சென்று விட்டது பாருங்கள்.

பேச்சியை நான் முதலின் கவனித்தது ஜோசப்போடு ஏதோ ஒரு சந்திப்பிற்காய் வெளியில் சென்ற போதுதான். வெளியில் செல்ல வேண்டிய அவசரத்தில் அவன் வண்டியை பார்க்கிங்கிலிருந்து உருவி ரிவர்ஸில் வந்து வேகமாய் முன்னோக்கி உருமி முன்னே வற .. வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பேச்சி என்ன செய்வது என்றறியாமல் வண்டியின் முன் நிற்க, வண்டி அவளை அடித்து தூக்கி வீசியது.

அட.. பூனைய அடிச்சுட்டீங்க ஜோசப் என்று சொல்லிக் கொண்டே வண்டியிலிருந்து இறங்கி பேச்சி தூக்கி எறியப்பட்ட பழைய சாமன்கள் கிடந்த இடுக்குகளுக்குள் பார்த்தேன்.. மியாவ்.. மியாவ் என்று சப்தம் மட்டும் வந்தது. உயிரோடு இருப்பாளா...????? என்று சோகமாய் யோசித்துக் கொண்டிருக்கையில் செல்ல வேண்டிய சந்திப்பிற்கான நேரம் பிடரியைப் பிடித்து மிண்டும் வண்டியில் ஏறச் சொன்னது.

அடுத்த சில மணித்துளிகளில் பேச்சியை மறந்து விட்டேன். பிறகு ஒரு வெயில் காலத்தில் அலுவலக கதவிற்கு கீழே கசியும் குளிர் காற்றுக்காய் அவள் வெளியில் படுத்திருப்பதை கண்டேன். கதவைத் திறந்து உள்ளே வருபவர்களும், உள்ளே இருந்து வெளியே செல்பவர்களும் விரட்டி விட, ஓடி விட்டு மறுபடி அங்கே வந்து படுத்துக் கொள்வாள். அடிபட்டதற்கு பிறகு அவளைப் பார்த்த அன்று....ஓ...யூ ஆர் அலைவ்..என்று கேட்டு விட்டு கடந்து சென்று விட்டேன். மதியம் சாப்பிட்டு விட்டு யாரவது வைக்கும் உணவை சாப்பிட்டு விட்டு அங்கேயே இருக்கும் பேச்சியை சில நேரங்களில் காண முடியாது.

எங்கடா பேச்சிய காணோம் என்று ஆபிஸ் பாயிடம் எப்போதாவது கேட்பேன்...." பேக்சைட்ல கிடக்குனு.... பிரசவிச்சுட்டுண்டு" என்று தெள்ளிய மலையாளத்தில் அவன் சொல்வதைக் கேட்டு ஓகோ என்று நான் சொல்வதோடு மறந்து போவேன். சடாரென்று ஒரு நாள் இரண்டு மூன்று குட்டிகள் அலுவலக தோட்டத்தில் சுற்றி வர, பிரசவித்த பேச்சியும் சப்தமில்லாமல் உடன் வந்து நிற்பாள். இப்படி அவள் வந்து கதவருகே படுப்பதும் பின் காணாமல் போவதும், ஆபிஸ் பாயிடம் நான் கேட்கும் போது அவன் " பிரசவிச்சுட்டுண்டு.. " என்று சொல்வதும், பின் குட்டிகளோடு அவள் பவனி வருவதும், சமகாலச் சூழல்கள் அவற்றை எனக்கு மறக்கடிப்பதும் வழமையாகிப் போனது.

இரண்டு தினங்களுக்கு முன்பு அலுவலத்தின் வாசற்படியில் நமது வீட்டு வாசற்படியில் அமருவது போல அமர்ந்திருந்தேன். எப்போதும் உந்திச் செல்லும் கதவுகளை கை வைத்து வருடினேன். சட்டென்று கிராமத்து பூர்வீக வீட்டின் பிரமாண்ட கதவுகளும் முழங்கை நீள சாவியும் மனதில் வந்து சென்றது. அலுவலக வாசலை ஒட்டிய ஒரு சிறு புல்வெளியிலிருந்து தலை தூக்கி மியாவ் என்று எட்டிப் பார்த்தாள் பேச்சி.....

ஏய்....பேச்சி இங்க வாடி....கை நீட்டி அழைத்தேன்....! ஓய்வு என்பது நாம் உருவாக்கிக் கொள்வதடா முட்டாள் என்று உள்மனம் என்னை செல்லமாய் கண்டித்து ஏதோ செய்தி பகிர...முதுகினைத் தூக்கி உயர்த்தியபடி.. பேச்சி என் அருகே வந்து எனக்குப் பக்கத்தில் இருந்த சுவற்றில் முன் நெற்றியையும், கன்னத்தையும் வைத்து உரசிக் கொண்டிருந்தாள். அரிக்கும் போல இருக்கிறது என்று கை நீட்டி பக்கத்தில் இழுத்து கழுத்தையும், நெற்றியையும் முகத்தையும் வருடி கொடுத்தேன்...

முன்னங்கால்களை நீட்டி சுகமாய் படுத்துக் கொண்டது. பந்தயக்குதிரை போன்ற ஓட்டம் நிறைந்த வாழ்க்கை எவ்வளவு தூரம் என்னை வேறு அச்சில் இயங்க வைத்து விட்டது. ஒரு முறை கூட நின்று உற்று பேச்சியை நான் கவனித்தது கிடையாது...., பேச்சியை மட்டுமா, நண்பர்களை, உறவுகளை, பல சூழல்களை என்று எப்போதும் எதையோ யோசித்து எங்கோ நான் மட்டுமா ஓடிக் கொண்டிருக்கிறேன்....என்னைச் சுற்றிய உலகமும்தான்....

சிறு புன்னகையைக் கூட பரிமாறிக் கொள்ள தயாரில்லாத, பக்கத்து வீட்டுக்காரர்கள், காரோட்டிகள், லிப்டில் கண நேரம் பயணம் செய்யும் அப்பார்ட்மெண்ட் சிமிண்ட் மனிதர்கள், தொழில்சார்ந்து சந்திக்கும் மனிதர்கள், சூப்பர் மார்க்கெட் பரபரப்பு மனிதர்கள்....என்று ரெடிமேடாய் ஒரு ஹலோ, ஹாய், பாய், ஹவ் ஆர் யூ, டேக் கேர் என்று இயந்திரத்தனமாய் போய்விட்டதே வாழ்க்கை...

யோசித்தபடியே பேச்சியை தடவிக் கொடுத்துக் கொண்டிருந்தேன்...பேச்சி கண் மூடி கிறங்கிக் கிடந்தாள்.

" பிரசவிக்காம் போகுணு சாரே....வயித்தக் கண்டா....வலிதாயிட்டுண்டு ..." ஆபிஸ் பாய் அவசரமாய் சொல்லிக் கொண்டே ஏதோ ஒரு வேலைக்காய் ஓடிக் கொண்டிருந்தான்.

ஏண்டி பேச்சி....யாருடி உன் புருசன்...? மாசமா இருக்க..அப்புறம் காணமப் போயிடுற...? குட்டிகளோட முறைச்சுக்கிட்டே சுறு சுறுன்னு பிறகு மெலிஞ்ச உடம்பா சுத்துற...? இப்ப தனியா வந்து என் மடில கிடக்க.....?

அட்லீஸ்ட் எங்கடி நீ பெத்த புள்ளைங்க எல்லாம்...?

மெளனமாவே நீ எல்லாத்தையும் சுமக்குற, குட்டிகளை பெத்தெடுக்குற..அப்புறம் எல்லாமே உன்ன விட்டுப் போயிடுதேடி... நீ கவலைப்படுறது எல்லாம் இல்லியா?

பேச்சிக்கு நான் கேட்டது புரிந்திருக்குமா என்று தெரியவில்லை...மியாவ்...என்று மெலிதாய் முனகியபடியே...கண்ணைத் திறந்து என்னை பார்த்தாள்....., பிறகு கண்ணை மூடிக் கொண்டாள்...!

அது என்ன உணர்வோ தெரியவில்லை...நான் கண் கலங்கி அழுதபடியே அவளை வருடிக் கொண்டிருந்தேன்...


தேவா. S


Comments

Robert said…
அன்றாட அவசர கதியான வாழ்க்கையின் இடையிடையே பால்யம் தொட்டு உயிர்ப்பாய் சில வினாடிகளைத் தந்துவிட்டு செல்கிறது இந்த யந்திர உலகம். நன்றுதான் உயிர்ப்புடன் இருந்ததற்கும், இருப்பதற்கும்.. அருமை நண்பா...
பேச்சி...
சுவராஸ்யமாய் ஆரம்பித்து.... சிறுவயதுக்குள் தாவி.. வீட்டுக் கதவையும் திறந்து... மீண்டும் பேச்சிக்காய் வருந்தி எங்களையும் கலங்க வைத்துவிட்டீர்கள் அண்ணா....
//தென்னை மரங்களுக்கு மேலே கவிழ்ந்து கிடக்கும் நீல நிற வானத்தில் ஆங்காங்கே நீந்திக் கொண்டிருக்கும் மேகக் குட்டிகளிலும், கெட்டியான அடர் மேகங்களிலும் இறந்து போன எங்களின் உறவினர்களின் முகங்கள் எட்டிப்பார்ப்பதாக சொல்லி சோகமாய் பார்த்து இருக்கிறோம்.//
உண்மைதான் சகோ.பிரிந்துபோன உறவுகள் இயற்கையோடு கலந்து என்றும் எம்முடனே இணைந்திருப்பது உண்மைதான்.உணர்கிறேன் நானும்.உயிர்களிடத்தே கொண்ட உங்கள் அன்பு மெச்சத்தக்கது.வாழ்த்துக்கள்.
'உயிர்களிடத்து அன்பு செய்திட வேண்டும்' என்கிற வாக்கியத்தின் உள்ளர்த்தத்தை, கட்டுரையின் ஒவ்வொரு வரியிலும் உணரமுடிந்தது. உளம் தொட்ட பதிவு.

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த