Skip to main content

சிவா...THE WARRIOR - I






















SHOT - 1

அந்த நடைபாதையில் நான் நடந்து கொண்டிருந்தேன். மெலுகன்களின் தேசம் நாகரீகமாய் திட்டமிட்டு கட்டமைக்கப்பட்டிருப்பது இந்த மலை தேசத்தவனுக்கு பிரமிப்பாகத்தான் இன்னமும் இருக்கிறது. பனி உருகும் கையிலாய மலையையும் அதனைச் சுற்றியும் என் கால்கள் பதியாத இடமே இல்லை. மானசரவர் ஏரியின் குளுமையில் முரட்டுத் தன்மையாய் நான் ஊறிப்போய் கிடந்திருக்கிறேன். என்னைத் தேடி ஏன் மெலுகன்கள் வரவேண்டும்..? என்ற கேள்வி எனக்குள் இன்னமும் இருக்கிறது....

முரட்டுத்தனமான ஒரு சண்டையிடும் வாழ்க்கைக்கு நடுவே நான் வாழ்ந்தவன் என்பதற்கு சாட்சியாய் உடம்பு முழுதும் படுத்துக் கிடக்கின்றன தழும்புகள். பகீரதிகளும், இன்ன பிற இனக்குழுக்களும் இலட்சியமின்றி என்னை வெற்றி கொள்வதயே தங்களின் லட்சியமாகக் கொண்டு.. என்னையும் என் இனமக்களையும் எப்போதும் அச்சுறுத்துவதும் அவர்களின் சங்கை அறுத்து நானும் என் மக்களும் விரட்டுவதும் வழமையாகிப் போக மெலுகன்களின் சேனாதிபதி நந்தி கேட்டுக்கொண்டதற்கு இணங்க என் இன மக்களோடு மெலுகன்களின் தேசத்திற்குள் வந்து விட்டேன்.

நந்தியையும் மெலுகன்களையும் நான் நம்புவதற்கு அவர்கள் எங்களுடன் இருந்த போது நடந்த இரு யுத்தங்களும் எனக்கு உதவின. எப்போதும் எல்லாவற்றையும் சந்தேகிக்கவும் சகித்துக் கொள்ளவும் தெரிந்தவனே ஒரு கூட்டத்தை வழி நடத்த முடியும். மெலுகன்களின் பிரதிநிதியாய் வந்த நந்தியையும், அவனது கூட்டத்தையும் நான் முதலில் அவர்களே அறியாமல் கைதிகளாய்த்தான் வைத்திருந்தேன் என்பது எனக்கும் எனது தளபதியும் நண்பனுமான பத்ராவுக்கு மட்டுமே தெரியும்...

கைலாயத்தை விட்டு என் மக்களுக்காக நகர்ந்திருக்கிறேன். கடைசி இரு யுத்தங்களும்... அதுவும் இரண்டாவது யுத்தத்தில் பகீரதிகளின் தலைவன் யக்யாவை ருசிபார்க்க பத்ராவின் வாள் குறிபார்த்துக் கொண்டிருக்க.... பிழைத்து போடா ஈனமகனே என்று துரத்தி விட்டு விட்டு வந்திருக்கிறேன். பெண்களையும், பிள்ளைகளையும்.. முதியவர்களையும் யுத்த மரபிற்கு உட்படாமல் கொல்பவன் ஈன மகனாகத்தான் இருக்க முடியும்..!

மெலுகன்கள் எனக்கு விசித்திரமாய் தெரிகிறார்கள்... மேலும் எரிச்சலை வரவைக்கிறார்கள். மெலுகன்களின் தேச நுழைவாயிலில் தங்கவைக்கப்பட்ட என் கூட்டத்தினருக்கு நோய் எதிர்ப்புக்காய் கொடுக்கப்பட்ட மருந்திற்கு பிறகு ஏன் அவர்களுக்கு காய்ச்சல் வந்தது...? எனக்கு மட்டும் ஏன் வரவில்லை...? நான் குளித்து விட்டு.. வந்து உடையணிந்து கொண்டிருக்கையில் ஏன் எனது தொண்டை நீல நிறமாய் மாறியது...? அப்படி மாறியதை பார்த்து ஏன் நந்தியும் அந்த மருத்துவச்சி ஆயுர்வேதியும்.. எங்கள் கடவுளே...இரட்சகரே.. என்று எதற்கு என்னை வணங்க வேண்டும்...? பிஞ்சு முகமாய் இருக்கும் நந்தி 100 வருடமாக என்னை தேடிக் கொண்டிருந்ததாக கூறினாரே ஏன்...?

மனிதர்களை வணங்குதல் தவறு. மனிதர்கள் கடவுளர்கள் அல்ல. கடவுளர்கள் ஒரு போதும் மனிதனாய் வருவதில்லை. ஏனெனில் கடவுள் என்ற ஒன்று இங்கே தனித்து இல்லை. எங்கும் நிரம்பிக்கிடக்கும் சக்தியின் அதிர்வுகள் கூடிப்போன ஒருவன் தனது இயல்பு எல்லாமாய் ஆன ஆதியிலிருந்து பிரிந்து வந்தது என்பதை உணர்ந்த ஒருவன், உயர்ந்த பண்புகளைக் கொண்டவனாயிருக்க முடியும். கடவுளின் பண்புகளை ஒருவன் கொண்டிருக்கலாமேயன்றி கடவுள் என்று தனித்து ஒருவன் வர முடியாது. வெளிப்பட்டிருக்கும் எல்லாமே கடவுள்...நான் கடவுள்... என்று எனக்கு தெரியாது....நீங்கள் கடவுள் என்று உங்களுக்குத் தெரியாது.....! அப்படி தெரிந்த பின் நான் கடவுள் என்று அறிவித்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. அறிவித்துக் கொண்டால் அது கடவுள் இல்லை.

கடவுள் என்பது ஒரு ஆளே இல்லை. கடவுள் என்பது மெளனம்.

இப்படி தெரியாமல் இருப்பதாலேயே எது எதிலோ கடவுளை மட்டுப்படுத்திக் கொள்கிறோம். அடையாளத்துக்குள் பிரம்மாண்டத்தை நீங்கள் காண முடிந்தால் சிலை வணக்கம் செய்வதில் தவறில்லை....! பிரம்மாண்டத்துக்குள் அடையாளத்தை நீங்கள் கண்டு பிரம்மாண்டத்திற்கு கற்பனையில் ஒரு உரு கொடுத்துக் கொண்டால் நீங்கள் கூறும் உருவமில்லாதது உருவெடுத்துக் கொள்கிறது. இது சிலை வணக்கம் செய்வதைக் காட்டிலும் கொடியது....

நான் மெலுகன்கள் தேடும் நீலகண்டனா.. இல்லையா..? என்பது எல்லாம் எனக்குத் தெரியாது...ஆனால் நான் ஒரு போராளி...! என் வாள் எதிரிகளை வெட்டி வீசும்...உயிர் பயம் இல்லாமல் உயிரைக் குடிக்க வரும் எவனொருவனுக்கும் உயிர் பயம் என்னவென்று காட்டுவது என் வேலை. நான் தீமைகளை அழிக்கப் பிறந்தவன்...சில சமயம் தேவைகளின் அடிப்படையில் நல்லவைகளையும் கூட....ஹா..ஹா...

யார் நீங்கள்... எங்கே சென்று கொண்டிருக்கிறீர்கள்...? அன்னிய தேசத்தவர் போல இருக்கிறீர்கள்..? சடாமுடியோடு காட்சியளிக்கிறீர்கள்..? இடுப்பிலே புலித்தோல்..? கரடு முரடான தேகம், அலட்சியமான பார்வை, கழுத்திலே ருத்ராட்சம்...? இடுப்பிலே வாள்....?

யார் நீங்கள்...?

மெலுகன் தேசத்தின் பொறுப்பான காவலாளி என்னை தடுத்தவரை எனக்கு ஒன்றும் ஆக வில்லை....என் நெஞ்சிலே கை வைத்து தள்ளிய போது...எனக்குள் ஏதோ ஒன்று தடம் புரள.. உள்ளுக்குள்...

" அண்ட சராசரன், ஏகாந்தன், பரிபூரணன், விசுவநாதன், கபாலி, சுடலை, போராளி, பெருங்கோபக்காரன், விருப்பாக்ஷன், மகேஸ்வரன், ருத்ரன், சர்வேஸ்வரன், மகாயோகி, விஸ்வரூபன், லிங்கேஸ்வரன், இரட்சகன், பரந்தாபன், மகாகர்த்தா,  அஷ்டமூர்த்தி, அகிலாண்டேஸ்வரன்......

........ஈஸ்வரன்........ ஜகதீஸ்வரன்....டா............!!!!!!"

ஏதோ ஒன்று விசுவரூபமெடுத்து எனக்குள் பெருங்குரலெடுக்க....நான் மெல்ல சாந்தமாய் அவனை நோக்கினேன்....

என் பெயர்.. தேவ்....மகாதேவ்...!!!! சிவா என்று கூட என் மக்கள் என்னை அழைப்பார்கள். நான் மெலுகனின் விருந்தாளி. உங்கள் சேனாதிபதியோடு வந்திருக்கிறேன். அவர் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார் நாங்கள் தேவகிரிக்கு சென்று கொண்டிருக்கிறோம்.. உங்கள் நகரை சுற்றிப்பார்த்துக் கொண்டிருக்கிறேன்...

தீர்க்கமாய் அவனது கண்களை உற்றுப் பார்த்து பதில் கூறினேன்...மெளனமாய் அவன் சிரம் பணிந்து எனக்கு வழி விட்டபோது அவனுக்குப் பின்னால் அந்த அழகிய கட்டிடம் எனக்கு தெரிந்தது. சிற்பவேலைப்பாடுகளோடு இருந்த அந்த கட்டிடம் ஒரு ஆலயமாயிருக்க வேண்டும் நான் அதை நோக்கி நகர ஆரம்பித்தேன்...!

எங்கள் இனத்திற்கு என்று எந்த ஒரு ஆலயமும் தனித்து இல்லை. இயற்கையே எங்களுக்கான ஆலயமாயிருந்தது. கடவுளர்களும் எங்களுக்குத் தேவையற்றவர்களாய் இருந்தார்கள். அன்பு செலுத்துவதிலும் வாழ்க்கையை வாழ்வதிலும் எங்களைத் தற்காத்துக் கொள்வதிலுமே நாங்கள் நிரம்பிக் கிடந்தோம். எங்களுக்கு கடவுள் என்ற ஒன்று தேவையற்றதாக இருந்தது. நாகரீக சமூகத்திற்குத்தான் கடவுள் அவசியமானவராய் இருக்கிறார். அன்பை.... நேசத்தை.... புரிதலைக் கொண்ட எங்களைப் போன்ற காட்டுமிராண்டிகளுக்கு கடவுள் தேவையற்றவர்.

கடவுள் இருக்கிறார் என்று ஒரு கூட்டம் பேசிக் கொண்டிருப்பதாலேயே கடவுள் இல்லை என்று பேச ஒரு கூட்டம் உருவாகி விடுகிறது. இருத்தலும் இல்லாமையும் கடந்த ஒரு நிலையை இதுவரையில் இந்த மானுடக் கூட்டம் புரிந்து கொள்ளவில்லை. பகீரதிகள் எங்களை இடைவிடாது எதிர்த்தார்கள். அவர்கள் எங்களிடம் வெற்றி கொள்ள நினைத்தது வீரத்தை மட்டும்தான்...ஒரு வகையில் அவர்கள் உன்னதமானவர்களே...

அதிகாரத்தைக் காட்ட, பொருள் பலத்தைக் காட்ட, திமிரைக்காட்ட, ஆளுமையைக் காட்ட, சுயநலத்திற்காய் நாகரீகமடைந்த சமூகம் தொடர்ந்து சண்டையிட்டுக் கொள்கிறது...! சண்டையிட்டுக் கொண்டே தங்களை நாகரீகத்தின் உச்சத்தில் இருப்பவர்களாய் வர்ணித்தும் கொள்கிறது.

மெலுகன்களின் சேனாதிபதி நந்தி தங்களை சூர்ய வம்சத்தினர் என்று அடையாளப்படுத்திக் கொண்டார், சாதியின் அடிப்படையில் முன்னோர்கள் வகுத்துக் கொடுத்த படி சிறப்பாய் ஆள்கிறோம் என்றும் சொன்னார். சாதிப் பிரிவுகள் பற்றிய புரிதலுக்காய் ஒவ்வொருவரும் தனித்தனி முத்திரைகளை அணிவதாயும் கூறினார்...

இந்த நகரம் நன்றாயிருக்கிறது. இந்த தேசம் திட்டமிடப்பட்டு கட்டப்பட்டிருக்கிறது. மனிதர்கள் வாழ மனிதர்கள்தான் உழைக்க வேண்டும். எல்லாமே சரி...ஆனால் இந்த சாதி என்னும் கருமம் ஏன் இடையில் வரவேண்டும். பிரம்மாவின் தலையிலிருந்து ஒருவனும், கழுத்திலிருந்து ஒருவனும் உடலிருந்து ஒருவனும், காலிலிருந்து ஒருவனும் படைக்கப்பட்டிருப்பது உண்மையெனில்....

பிரம்மா என்றொரு கடவுள் இருப்பாரெனில், எனது வாளின் முனை முதலில் அவனது நடு நெஞ்சில்தான் முதலில் இறங்கும்.....என்று நான் யோசித்துக் கொண்டே அந்த அழகிய சிற்பவேலைப்பாடுகள் கொண்ட கட்டிடத்தை நெருங்கி விட்டேன். மெலுகன்கள் உல்லாசிகள் மட்டுமல்ல ரசனைவாதிகள் கூட...எவ்வளவு உயரமாய், வடிவாய், சிற்பங்களோடு கட்டிடங்களை திறமையாய்க் கட்டி இருக்கிறார்கள்....? ஓ...இது அந்த பிரம்மாவிற்கான கோவிலா....? இடுப்பிலிருந்த வாளை அனிச்சையாய் தொட்டுப்பார்த்துக் கொண்டேன்! பிரமாதம்...பிரமாதம், வெண்மையும் இளஞ்சிவப்புமாய் வர்ணம் பூசி....அற்புதமாய்...

ஹம்ம்ம்ம்ம்... திட்டமிட்டு கட்டப்படிருந்த அந்த ஆலயத்தின் முகப்பில் நிறைய வியாபாரிகள் இருந்தனர். நான் எனது காலணியை கழற்றாமல் படியேறிய போது காலணியைக் கழற்றிவிட்டு செல்லுமாறு ஒரு காவலாளியால் கேட்டுக் கொள்ளப்பட்டேன்...

காலணியை கழற்றி செல்ல வேண்டியதின் அவசியம்...மரியாதையா அல்லது சுத்தத்திற்காகவா? காவலாளியை நான் கேட்க..அவன் அது எனக்கு கொடுக்கப்பட்ட வேலை ஐயா.. என்றான் பணிவாக...நான் சிரித்துக் கொண்டே காலணியை அவனிடம் கொடுத்து விட்டு....கோயில் நோக்கி படியேறினேன்....

எத்தனை பேரின் உழைப்பில் தொழில் நுட்பத்தில் எழும்பி இருக்கிறது இந்தக் கோயில்...? சிற்பிகள் எல்லாம் போற்றப்படவேண்டியவர்கள்...ஆமாம் கடவுளை உண்டாக்கும் கடவுளர்கள்...ஹா...ஹா... எல்லாம் சரியாய்தான் இருக்கிறது மெலுகாவில் என்ன ஒன்று சிற்பிகள் சிற்பம்தான் செய்யவேண்டும், வேறு தொழில் செய்ய முடியாது என்னும் சட்டம்தான் எரிச்சலூட்டுகிறது....மடையர்கள்...மெதுவாய் எனக்குள் கூறிக் கொண்டே நான் நகர முற்படுகையில்....தலையில் குடுமியோடு ஒருவர் என்னை வழி மறித்தார்...

" அன்னிய தேசத்தவர் போல காட்சியளிக்கிறீர்கள்...?கழுத்தை சுற்றி ஏன் அங்கவஸ்த்திரத்தால் மறைத்திருக்கிறீர்கள்...?"  என்று அவர் கேட்கவும்....

ஏன் நீங்களும் என்னை ஆண்டவனே..கடவுளே.. நீலகண்டனே... என்று காலைப்பிடிக்கவா...? நான் உள்ளுக்குள் முணு முணுத்தபடியே நமட்டுச் சிரிப்பு சிரித்ததை அந்த பெரியவர் பார்த்து விட்டு கொஞ்சம் கடுமையானார்....

ஹ்ம்ம்ம் நீங்கள் கடவுள் நம்பிக்கை இல்லாதவர் போலத் தெரிகிறதே...? என்று கேட்கவும்....அடக்கொடுமையே அவருக்கு எப்படி நம்மைப் பற்றி தெரிகிறது என்று யோசித்தபடியே...

ஏன் அப்படி கேட்கிறீர்கள்..? என்றேன்...

இல்லை... இல்லை கோயிலுக்கு வந்தால் சாமி கும்பிட வேண்டும்...மூலவரைப் பார்க்காமல் நீங்கள் சிற்பங்களை வேடிக்கைப் பார்க்கிறீர்களே... அதனால்தான் கேட்டேன் என்றார்.

அந்தப் பெரியவரை நான் இமைக்காமல் பார்த்தேன். கடவுள் இங்கே இருக்கிறார் என்று உங்களுக்கு சொல்லிக் கொடுத்ததை எனக்கு சொல்கிறீர்கள்....ஐயா தவறில்லை. நன்றிகள்...!!!! என்று கை கூப்பியபடி என்னை ஆசிர்வதியுங்கள் என்றேன்.... என் தலை மீது கை வைத்து கண்களை தீர்க்கமாய் பார்த்தபடி.....காலத்தின் நாயகர்கள் எப்போதும் கட்டுக்குள் நிற்கவேண்டிய அவசியமில்லை என்று சிரித்தார்...!

ஐயோ இந்த மெலுகன்களுக்கு என்னவாயிற்று என்று யோசித்தபடியே நான் கோயிலை விட்டு வெளியில் வந்தேன்...

கோயில் படிக்கட்டில் சம்மணமிட்டு அமர்ந்தேன். இரு கைகளையும் கோர்த்து நிமிர்ந்து உட்கார்ந்தேன்...! ஆழமாய் மூச்சினை உள் இழுத்து வெளியே விட்டேன். உடம்பு முழுதும் எத்தனை காயங்கள். எவ்வளவு அழுத்தமான வாழ்க்கை என்னுடையது. எத்தனை கொடூரர்களின் உயிரை பறித்திருக்கிறேன். நடு இரவில் எரியும் பிணங்களுக்கு நடுவே நான் அமர்ந்து வாழ்க்கையின் நுனி என்னவென்றறிய எவ்வளவு முயன்றிருக்கிறேன்.
 
நான் படைப்பவன். நான் அழிப்பவன். அழிப்பது படைக்க....படைப்பது....அழிக்க......
 
 
(இரண்டாம் பாகம் வாசிக்க இங்கேஅழுத்தவும்...)
 

தேவா. S

Courtesy

Main Source: The Immortals of Meluha - Mr. Amish




Comments

pudugaithendral said…
நல்ல புத்தகம். சுவாரசியமா இருக்கும். முதல் பாகம் படிச்சிட்டு இரண்டாவது பாகத்தை கையில் எடுத்திருக்கிறேன்.

இதைப்பற்றி நானும் பதிவு போட்டிருக்கிறேன்.

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்...

மகள்...!

காற்றில் பறக்கும் பட்டம் போல நகர்ந்த வாழ்வின் பரிணாமங்களை மொத்தமாய் மாற்றிப் போட்டவள் அவள்.....!!!!!!! என் தெளியாத நினைவுகளை தெளியவைக்கும் வினையூக்கியாய் மொத்த வாழ்வையும் செரித்துப் போட ஜனித்து வந்தவளை வாரிசென்றும், மகளென்றும் வாழ்க்கை சொன்னாலும்..... எனக்கு எப்போதுமே ஒரு குழந்தையாய் அவளைப் பார்க்கத் தோன்றியது இல்லை..... வாழ்க்கை என்னை படமாக வரைந்து அதை அரைகுறையாய் நிறுத்தி வைத்திருந்த பொழுதில் அதை பூரணமாக்க இறைவன் அனுப்பி வைத்த தூரிகை அவள்....! அவள் கேள்விகளுக்கு பதில் அளிப்பதை விட கேள்வியின் ஆழங்களில் சிக்கிக் கொண்டு மேலே வர முடியாமல் நான் போராடிய தருணங்கள்தான் அதிகம்..... இரவும் பகலும் ஏன் வரவேண்டும்....? மேகங்கள் கொஞ்சம் தாழத்தான் பறந்தால் என்ன? நாங்களும் விளையாடுவோமே... இறந்தால் நாம் எங்கு போவோம்..... இறந்துதான் போவோம் என்றால் ஏன் டாடி பிறக்க வேண்டும்? கடவுள் இருக்கிறது என்றால் ஏன் டாடி யாரும் பயப்படுவதில்லை.....? வயதுக்கு மீறிய கேள்விகளா? இல்லை.. இந்த வயதில் நாம் குறை அறிவோடு இருந்தோமா என்ற சந்தேகங்களை சர்வ சாதரணாமாய் விதைத்துக் கொண்டே விளையாடச் சென்று விடுவாள் அவள். இங்கே விளையா...

பப்பு....!

காலையிலிருந்து பப்புவிற்கு தலை சுற்றியது, வயிறு குலைந்தது, மயக்கம் வந்தது, ஒரு மாதிரி...சுழற்றி, சுழற்றி அடித்தது....என்ன ஆச்சுன்னு கேக்குறீங்களா? மேலே படிங்க....பாஸ்.... பப்புவுக்கு தினம் ஒரு பதிவு எழுதி போஸ்ட் பண்ணனும் அப்படி இப்படி ஏதேதோ எழுதி போஸ்ட் பண்ணி ஓட்டிக்கிட்டிருந்த அவனுக்கு அன்னிக்கு என்ன எழுதறதுன்னு தெரியல.....ஏதாச்சும் எழுதியாகணுமேன்னு ஒரே டென்சன்.. என்னமோ இவன் கூவி உலகம் விடியப் போறாப்புல ஒரு நினைப்பு..... சொக்கா........பதிவு எழுத ஒரு வலி சொல்ல மாட்டியான்னு கத்தாத குறைதான்....! தூங்கி எழுந்த உடனே அடிக்கிற அலாரத்தை ஆஃப் பண்ணும் போதே நினைச்சான்....அலாரம் டைம்பிக்ஸ் பத்தி எழுதலாமா.....காலையில எப்படி தொந்தரவு கொடுக்குதுன்னு.....ம்ம்ம் சரியா அது பத்தி ஒண்ணும் மேட்டர் கிடைக்காததால அத ஸ்கிப் பண்ணிட்டான்... குளிக்க பாத்ரூம் போனான்...பைப்புல தண்ணி வந்த வேகத்துல நினைச்சான்... சரி தண்ணீர் சேமிப்பை பத்தி எழுதலாமான்னு,,ம்ம்ம்ஹீம்...அது பத்தியும் ஒண்ணும் சரியா தோணலை....! சாப்பிடும் போது நினைச்சான்... இட்லிக்கு தொட்டுக்க ஏத்த சட்னின்னு ஒரு சமையல் குறிப்பாச்சும் போடுவமான்னு ... உடனே அவ...