Pages

Wednesday, January 23, 2013

சிவா...THE WARRIOR - II

முதல் பகுதியை வாசிக்க இங்கே அழுத்தவும்

SHOT II

பிணங்களெரியும் இராத்திரிகளில், ஏகாந்த தனிமைகளிள், எண்ணங்களற்று இருக்கும் போது உள்ளுக்குள் ஏதேதோ எண்ணங்கள் அலையலையாய் மோதிச் செல்லும்...

என்னோடு எனக்காய் வாழும் இந்த குளிர் மலை தேசத்து மக்களும், வெவ்வேறு இனமாக தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு என்னோடு சண்டையிடும் மக்களும், இந்த பூமிப்பந்தில் பரவி வாழும் இன்ன பிற எல்லா மனிதர்களும், எல்லா ஜீவராசிகளும், மரங்களும், கொடிகளும், மலைகளும், கடல்களும்...நான் சலனப்பட, சலனப்பட.. உருவாகின...

எல்லாமே என்னுரு....எனக்கெதற்கு ஒரு தனி உரு...? எனக்கு உருவுமில்லை குருவுமில்லை...! உக்கிர கோபத்தில் சுடுகாடு அதிர நான் ஆடியிருக்கிறேன். ஒரு பாதம் தூக்கி இன்னொரு பாதம் அழுத்தி.....தகிட தகிட தத்தத்தரிகிட தரிகிட தத்தோம்...தகிட தகிட தகிட...எனது டமருகம் அதிர, அதிர அடித்துக் கொண்டே ஆடியிருக்கிறேன். நான் பிரபஞ்சம் எனது அசைவு உயிர்கள்...

எண்ணம் நின்று போக, நான் மெளனத்தை காலங்களை நிறுத்தி சுகிக்கத் தொடங்கி இருந்தேன். இது ஒரு கூடல். உடல் ஈடுபடாத கூடல். மெளனத்தை கூடும் சுகம் நின்று போவதில்லை... அது இடைவிடாத பிரணவ அதிர்வுகளாய் உள்ளுக்குள் அதிர்ந்து கொண்டே இருக்கும் சுகம். உடலுக்குள்....இருந்து இதை அனுபவிக்க தொடங்கிய முதல் வினாடியில் உடல் விட்டு நகரவே விருப்பம் தோன்றும்...

நான் உடல் எடுத்ததின் நோக்கம் என்ன....என்று எனக்குத் தெரியாது. அது தெரியாமல் நான் உடலை விடப்போவதில்லை...நான் ரெளத்ரன். காரணம் அறிய வந்த காரியம் நான்.... எண்ணம் நின்று போன நொடி எப்போது என்று தெரியாமல் நான் சலனமின்றி அமர்ந்திருக்கையில்.... அந்த சாரட் வண்டியின் சப்தம் என் உயிரை இழுத்து உடலுக்குள் விட்டது....

குளிர்ந்த காற்று....என் கேசத்தை கலைத்து விளையாடிக் கொண்டிருக்க.... அற்புதமான அந்த தருணத்திற்கு அழகு சேர்க்கும் விதமாய் அந்த சாரட் பிரம்மாவின் கோயிலின் வாகன நிறுத்துமிடத்தில் வந்து நின்றது...! மிகவும் சாதுர்யமாய் குதிரையின் கடிவாளம் பிடித்து காற்றில் தன் பொன்னிற கேசம் பறக்க வந்தவளின் நீல நிறக் கண்களை நான் பார்த்தேன்....

நான் பிறப்பெடுத்ததன் காரணம் இவள்தானென்று எனக்குள் ஏதோ ஒன்று உணர்த்த..., அவளின் வனப்பில் என் தியானத்தின் திசை தனது பாதையை மாற்றிக் கொண்டது. அவளின் உடலின் வளைவுகளை ஊடுருவிய எனது கண்கள் ஜென்மங்களாய் அவளோடு நான் கொண்டிருந்த பந்தத்தை எனக்கு எடுத்துச் சொல்ல...அவளோடு கூடிக்கிடந்த நாட்கள் அனிச்சையாய் புத்திக்குள் எட்டிப்பார்க்க, காமத்துக்கும் காதலுக்கும் மத்திமத்தில் உருவான உணர்ச்சி ஒன்று என் புத்தியை பேதலிக்க செய்தது... உள்ளுக்குள் ஏதேதோ தடம் புரள...

உடலின் ஒட்டு மொத்த வெப்பமும் சுருண்டு உருண்டு என் நாசியைக் கடக்க, என்னைச் சுற்றிலும் இருந்த குளுமை சிறிது வெம்மையானது. யாரிவள்...? கூரான நாசிக்கு அவளின் இடது புற நாசியில் அணிந்திருந்த ஒற்றை வைர மூக்குத்தி இன்னமும் கூடுதல் வசீகரத்தைக் கொடுக்க...அவளின் மீது பதிந்த எனது விழிகள்.....மீளமுடியாமல் சிக்கித் தவிக்க...எனக்கு காதலின் கன பரிமாணங்கள் என்னவென்று புரிய ஆரம்பித்தது.

தொடர்ச்சியாய் அவளை நான் பார்த்துக் கொண்டிருந்ததை அவள் எப்படி கவனிக்காமல் இருக்க முடியும். உடன் வந்த தோழியோடு ஒரு தென்றலாய் என்னைக் கடந்து அவள் கோயிலின் படிக்கட்டுகளில் ஏறிக் கொண்டிருந்தாள்...

யார் இவள்...?

மனது முழுதும் அவளே வியாபித்துக் கிடக்க கோயிலுக்குள் சென்றவளை, திரும்பி வருகையில் மீண்டுமொரு முறை பார்க்கலாம் என்ற எண்ணத்தோடு படிக்கட்டிலேயே நான் அமர்ந்திருந்தேன்...

அவள் திரும்பி வருவதை கவனித்து, மீண்டும் அவளிடம் சென்று தஞ்சமடைந்தது மனது. காற்றில் ஆடும் அவளது சேலையின் நுனியைப் பிடித்துக் கொண்டு உடன் சென்று விடலாமா என்றொரு யோசனை சிறுபிள்ளைத்தனமாய் எனக்குள் கிளைக்க...

எனக்கான தேவதை இவள்தானென்று உள்ளுக்குள் ஒரு வித படபடப்பு பரபரப்பாய் இயங்க ஆரம்பிக்க.. ஆயிரமாயிரம் போர்களின் போது நிதானமாய் துடித்த என் இதயம் இப்போது படபடவென்று அவளின் இமைகளோடு போட்டி போட்டு துடிக்க.. இந்த கரடு முரடானவனுக்குள் இருந்து எட்டிப்பார்த்து சிரித்தது ஒரு அடாவடிக்காதல்.....

"உங்களுக்கு என்ன பிரச்சினை...? போகும் போதும் என்னையே உற்றுப் பார்த்துக் கொண்டே இருந்தீர்கள்? இப்போதும் அப்படியே...நிஜமாகவே உங்களுக்கு ஏதும் பிரச்சினையா....உங்களைப் பார்த்தால் அன்னிய தேசத்தவர் போல இருக்கிறதே?"

அவள் என்னிடம் நேருக்கு நேராய் கண் பார்த்து அவள் கேட்க..., இல்லை.. இல்லை... நான்.. ..நீங்கள்.. அதோ... அவள் .. இல்லை.... இல்லை அந்த கோயில்....என்னிடம் வார்த்தைகள வந்து சிக்கிக் கொள்ளாமல் தகிட தத்தம் ஆட.. நான் திணறிப் போய்.... " உங்களை இதற்கு முன் எங்கோ பார்த்திருக்கிறேன் ..." என்று உத்தேசமாக ஏதோ ஒன்றை சொல்லிக் கொண்டிருக்கும் போதே .. அவளின் உடலிலிருந்து பரவிய நறுமணத்தில் மகுடிக்கு மயங்கிய பாம்பாய் அடங்கி ஒடுங்கி அவளின் கழுத்தில் என் நாசி வைத்து முகர்ந்து....முன்னேறி....

" நான் உங்களிடம் பேசிக் கொண்டிருக்கிறேன்....நீங்கள் மீண்டும் என்னையே முறைத்துக் கொண்டிருக்கிறீர்கள்..." சிற்பம் இப்போது சிடுசிடுவென்று சிணுங்கி அழகை வேறு பரிணாமத்தில் வெளிப்படுத்தியது.....

இல்லை ...நான் உங்களை.. என்று நான் மீண்டும் பேச ஆரம்பிக்கும் முன்பு சடாரென்று ஐந்து முகமூடி அணிந்த முரடர்கள்...அவளை நோக்கி வேகமாக ஓடி வர...சட்டென்று அவளை என் பின்புறமாக நிற்கச் சொல்லி முன் புறத்தில் நான் .....அவளை மறைத்தபடி...நின்று வாளோடு வேகமாய் வந்து கொண்டிருந்த அந்த முரடர்களை எதிர் நோக்கியபடியே என் வாளினை சர்ர்ர்ரேலென்று உருவினேன்... நான் வாள் உருவிய கணத்தில் எனக்கு பின்னாலும் வாளை உருவும் சப்தமொன்று சர்ர்ர்ர்ரேலென்று கேட்க....சட்டென நான் திரும்பிப் பார்த்த போது அந்த பெண்ணும் தனது வாளை கையிலெடுத்து இருந்தாள்....

பரவாயில்லை... எங்கள் இன மக்களில் பெண்கள் போரிடுவதில்லை...! மெலுகன்கள்..பெண்களையும் பயிற்றுவித்திருக்கிறார்கள் போல..., " பதுமைகள் எல்லாம் பல்லாங்குழி ஆடினால் மட்டும் போதாதா...." நான் மெதுவாய் முணு முணுத்தது அவளுக்கு கேட்டிருக்க வேண்டும்....ஹ்ம்ம்...ஹூம் என்று அவள் அதட்டிய இரண்டாவது நொடியில் எங்களைச் சூழ்ந்த அந்த முரடர் கூட்டம் தாக்கத் தொடங்கியிருந்தது...

வாடா... வா.... வழி தவறி வந்த மந்தை ஆடே.... பசித்து பசித்து காத்துக் கிடக்கும் இந்தக் கொடும் புலிக்கு நீ இரையாகிப் போ...! என் கழுத்திற்கு வந்த அவனது வாள் காற்றிலேயே தடுக்கப்பட்டு...அவனது இடது மார்பு குத்திக் கிழிக்கப்பட்டு.. அடி வயிற்றில் அழுத்தமாய் கொடுக்கப்பட்ட உதையில் அவன் படிக்கட்டுகளில் உருண்டு கொண்டிருந்தான்...

மெலுகன்கள் நாகரீகமானவர்கள் என்றல்லவா நினைத்தேன் இங்கேயும் காட்டு மிருகங்கள் கொடும் பசியோடு அலையத்தான் செய்கின்றன இடது முறம் திரும்பி அங்கிருந்து வந்த ஒரு வாளை தடுத்து.... வலது புறத்தில் நிறபவனின் இடது தோள்பட்டைக்குள் நுழைத்து என் வாளினை வெளியே எடுத்து...நேரே வந்தவனின் முகத்தில் எனது இடக்கரத்தால் ஒரு குத்து விட அவனின் தாடை இரண்டாய் பிளக்கும் சப்தம் கேட்ட நொடியில் திரும்பிப்பார்த்தேன்....

எஞ்சியிருந்த ஒருவனை அவள்... சூறையாடிக் கொண்டிருந்தாள்...எனது உடலிலும் ஆங்காங்கே வாளின் கீறல்கள், ஒரு உயரமான தடியனின் வாள் எனது வலது தோள் பட்டையையும் பதம் பார்த்திருக்க...வலிகளை தாங்கிப் பழக்கப்பட்ட எனது உடம்பு அதை சட்டை செய்யவில்லை....

கலைந்து கிடந்த எனது கேசத்தை அள்ளி முடிந்து கொண்டேன்....அவளின் வாளுக்கு பதில் சொல்ல முடியாத கடைசி முரடனும் ஓடி ஒளிய....மூச்சிறைகக் என் முன் நின்றவளைக் கண்டு மூர்க்கமானது என் மனது....

இவளை எங்கோ பார்த்திருக்கிறேன்...எப்போதும் இவளோடே இருந்திருக்கிறேன் என்று திண்ணமாய் எனக்குப் புரிந்தது...!

" மிக்க நன்றி உங்கள் உதவிக்கு....உங்களுக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால்... என்னை தேவகிரியில் வந்து பாருங்கள்... இது எங்களின் எதிரிகளின் கைங்கர்யம்.. நான் என் தந்தையாரிடம் இவர்களைப் பற்றிக் கூறி சரி செய்து கொள்கிறேன்....எது எப்படியாயிருந்தாலும்.... உங்களின் உதவிக்கு நன்றி..." அவள் சொல்லி முடிக்கும் போதே அது வரை கோயிலுக்குள் ஓடிச் சென்று ஒளிந்து நின்று எல்லாவற்றையும் வேடிக்கைப் பார்த்த அந்த பெண்ணின் தோழி வேகமாய் ஓடி வந்து ' தேவி..... உங்களுக்கு ஒன்றும் ஆகவில்லையே என்று அவளின் கை பிடிக்க....

" ஒன்றுமில்லை கிருத்திகா வா போகலாம் என்று அவள் புறப்பட்டாள்...."

"எனக்கு உதவி எதுவும் தேவையில்லாவிட்டால் கூட உங்களை நான் வந்து மீண்டும் பார்க்கலாமா? நான் காதல் வேகத்தில் அவளிடம் கேட்டேன்..." அவள் பதில் ஒன்றும் சொல்லாமல் படி இறங்கிக் கொண்டிருந்தாள்....

சரி எனக்கு உங்கள் உதவி தேவை என்றால் தேவகிரியில் வந்து உங்களை என்ன வென்று கேட்பது, யாரிடம் விசரிப்பது.............? நான் பின்னாலாயே வேகமாய் நடந்தபடியே கேட்டேன்.....

" ஹ்ம்ம்...நீங்கள் தேவகிரிக்கு வந்து...." சதி" சதியைப் பார்க்க வேண்டும் என்று யாரிடம் வேண்டுமானாலும் கேளுங்கள்...அவர்களே உங்களை கூட்டிக் கொண்டு வருவார்கள்...."

கோணல் மாணலாய் முகத்தைக் காட்டி கிருத்திகா பதில் சொல்லிவிட்டு வேகமாய் சதிக்கு ஈடு கொடுத்து நகர்ந்து கொண்டிருந்தாள்...

"சதி...."

நான் உஷ்ணமாய் சொல்லிப்பார்த்தேன்....அவளோடான ஏதோ ஒரு ஜென்மாந்திர முடிச்சு ஒன்று சட்டென பிடிபட....அவள் என்னவள் என்ற எண்ணம் என்னை இப்போது முழுமையாய் என்னை ஆக்கிரமித்து இருந்தது....

வருகிறேன்...சதி.....உனக்காகவே வருகிறேன்....!!! என் காதலை கண்களுக்குள் தேக்கி வைத்திருப்பவளே...... என் உயிரினை உன் உடலுக்குள் பதுக்கி வைத்திருப்பவளே....என்னின் பாதியே.....என் தேவியே....!

நான் தேவகிரிக்கு வருகிறேன்...சதி...........!

காத்திரு....!


(TASK I - COMPLTETED)


தேவா. S
 
Courtesy
Photo: Maniam Selvan - Vikatan
Main Source - The Immortals of Meluha - Mr. Amish
 
 
 
 

1 comment:

ரசிகன் said...

ஆங்கிலத்தில் படித்து ரசித்த புத்தகத்தின் தமிழ்ச் சுருக்கம்!!! . நல்ல முயற்ச்சிக்கு நன்றியும் வாழ்த்துக்களும் :) Shot II வில் வரும் முரடர் கூட்டத்தின் தலைவனான முகமூடி , இக்கதையின் முக்கிய பாத்திரம் அல்லவா ? இரண்டாம் பாகமான Secrets of Naga வில் தான் அவர் பற்றிய உண்மை வெளியிடப்படும் என்றாலும் அவரது இன்ட்ரோவையும் சேர்த்திருந்தால் நலம். Story travels at a stunning speed when compared to the original :)