Pages

Saturday, July 30, 2011

நிராயுதபாணி...!


நினைவுகளுக்குள் நிறைந்து...
என்னை கலைத்துப் போடும்
உன்னை இமைத்து இமைத்து
விரட்ட முயன்றும் பிம்பமாய்
விழிகளுக்குள் பரவி...
நின்று கொண்டு, முரண்டு பிடித்து
மாட்டேன் என்கிறாய்!

ஒரு காற்று வந்து
என் தலை கலைக்க,
என் தவம் கலைந்து,
அனிச்சையாய் நினைவில்
வந்து செல்கிறது நீ விரல் நுழைத்து
விளையாடிய தருணங்கள்! !

அணைக்கிறேன் என்று
நீ மூட்டிவிட்டு சென்ற
தீயின் ஜுவாலைக்குள்
உஷ்ணமேறிய நினைவுகளோடு
எரிந்துக் கொண்டிருக்கும்
என் கனவுகளை
நீ காதலென்று சொல்கிறாய்
நான் உன்னை
கள்ளி என்று சொல்கிறேன்...,
ஆமாம்...
அதிரடியாய் உள் நுழைந்து
ஆக்கிரமிப்பு செய்து
என்னை அள்ளிக் கொண்டு
சென்றவளை பின்...
எப்படித்தான் அழைப்பதாம்?

கவிதை எழுதுவேன் என்றாய்...
எங்கே காட்டு என்று...
நான் சொல்லி விட்டு
நான் பார்த்த பாவத்திற்கா
என்னை கட்டிக் கைதியாய்
இழுத்துச் செல்கின்றன
உன் வார்த்தைகள்?

சப்தமில்லாமல் சிரிக்கிறாய்;
யுத்தம் இல்லாமல் அடிக்கிறாய்;
மிச்சமில்லாமல் கொல்கிறாய்;
சொச்சமில்லாமல் அழிக்கிறாய்;
கத்தி முனையில் நிர்ப்பந்திக்கும்
போர் வீரன் போல..
என்னை கவிதை முனையில்
மண்டியிடச் செய்து..
காதலை கொள்ளையடிக்கும்
உன் நினைவுகளோடு
தோற்றுப் போய்தான் நிற்கிறேன்
நிராயுதபாணியாய்!


தேவா. S

PS: சத்தியமா அடுத்து " கழுகு என்னும் போர்வாள்...! " (ஸ்ஸ்ஸ்ஸ் பா எவ்வளவு பில்டப் அப்டீன்றீங்களா... உங்க மைண்ட் வாய்ஸ் கேட்டுருச்சு!)

Wednesday, July 27, 2011

அது ஒரு மாலை நேரம்....!
அது ஒரு மாலை நேரம்..... என் கிராமத்து வீட்டின் கொல்லைப் புறத்தில் அமர்ந்திருக்கிறேன். மாலை வெயில் மெலிதான சிரிப்புடன் விடைபெற எத்தனிக்கையில் மேற்கிலிருந்து சூரியக் கதிரின் ஆரஞ்சுப் பழ ஒளியை மேனியில் வாங்கிய படி வரும் ஆடு மாடுகளின் கூட்டம்....

காராம் பசுக்களின் கழுத்து மணிகள் ஆடிக் கொண்டிருக்கும் சப்தம் தூரத்திலிருந்து ஏதோ ஒரு கிறக்கத்தை உண்டு பண்ண, கூடவே அந்த மேய்ப்பன் அவற்றை கட்டுக்குள் கொண்டு வர எழுப்பும் ஒலியும் அதன் உடன் சேர்ந்து கிறக்கத்தை அதிகமாக்க மெல்ல அரைக்கண்கள் சொருகிய படி....சொக்கிப் போய் கிடக்கிறேன்...!

கோழிகள், சேவல்கள், குஞ்சுகள் எல்லாம் ஒரு கெக்கரிப்போடு மெல்ல நிலம் கிளறியும், கால்களை சிரண்டி சிரண்டி எதையோ தேடிய படி என் வீட்டு பஞ்சாரத்தை நோக்கி வருகின்றன...

காலையில் வயலுக்குப் போன மாரிமுத்து தாத்தா ஏர்க் கலப்பையோடு...மாடுகளை ஓட்டிக் கொண்டு என் வீட்டு புஞ்சையை கடந்து நடந்து போய்க்கொண்டிருக்கிறார். காலில் முழங்கால் வரை சேறு....இருந்ததைப் பார்த்த நான் "...ஏன் தாத்தா வயக்காட்ல தானா சேத்த கழுவிட்டு வந்தா என்ன...? " என்று கேட்க நினைப்பதற்குள் அவரின் இறுக்கி கட்டிய பழுப்படைந்த வேட்டி தாண்டி வெளியே தெரிந்த கோவணத்தை பார்த்து சிரித்தே விட்டேன்...பிறகு எங்கே கேள்வி கேட்பது...!!

அந்தி வானம் எவ்வளவு அழகாய் மிருதுவாய் இருக்கிறது. என்றேனும் ஒரு நாள் இந்த வானத்தை தொட்டுவிடவேண்டும் என்ற என் கனவெல்லாம் நொறுங்கிப் போன அந்த நாளில் வானம் என்ற ஒன்றே கிடையாது என்று அறிந்த அந்த நொடி கலக்கமானதுதான்.. வானம் மட்டும் என்று சொல்ல முடியாது...நிலாவிற்கு கூட ஒரு நாள் போவேன் என்று திடமாய் நம்பியிருக்கிறேன்...காரணம் என் செல்ல அம்மாதான்...

எப்போது பார்த்தாலும் வானத்தைக் காட்டி, காட்டி சோறு ஊட்டுகிறேன் என்று சொல்லி சொல்லி என் நம்பிக்கையை வளர்த்து விட்டாள். அம்மா சோறூட்டும் போது அந்த நிலவின் கிரகணத்தில் மின்னும்.... கையிலிருக்கும் கிண்ணமும் அழகு.... என் அம்மாவும் அழகுதான். அம்மா எவ்வளவு பாசக்காரி....உச்சி மோந்து எனக்கு உண்ண கொடுக்கும் போது நான் உண்ணா விட்டால் " இரவில் சங்கிலிக் கருப்பன் வருவான் உன்னைத் தூங்கவிடமாட்டான் கண்ணா..." என்று பயமுறுத்தியே சாப்பிட வைப்பாள்.

வயிறு முட்ட ஊட்டி விட்டு நான் போட்டிருக்கும் வெள்ளை முண்டா பனியனைத் தூக்கி விட்டு வயிற்றில் கை வைத்து பார்த்து என் சாமிக்கு போதுமாய்யா...? என்று கேட்கும் போது நான் கெக்கபிக்க என்று பல நாள்கள் விபரம் தெரிந்தே சிரித்திருக்கிறேன்....அப்போது எனக்கு வாணி (வாயில் ஒழுகும் எச்சில்) ஊற்றும்....ங் ங்..ங் என்று ஒரு மாதிரி சிரித்து வைப்பேன்...வாயை அம்மா முந்தானையில் துடைக்கும் போது அம்மாவின் வாசம் ஒரு விதமாய் என் மூக்கினுள் செல்ல...

தோளோடு அவளைக் கட்டிக் கொண்டு கழுத்துச் சூட்டில் என் முகம் புதைத்துக் கொள்வேன். அப்படி முகத்தை பாதி மூடிக் கொண்டு ஓரவிழியால் நிலாவைப் பார்ப்பேன்...குளு குளுவென்று என்னை பார்த்து சிரிக்கும்.....நானும் நிலா உள்ளே இருக்கும் அந்த பாட்டியைப் பார்த்துக் கொண்டே உறங்கி விடுவேன்.

காலங்கள் எப்போதும் பிள்ளைப் பருவத்தில் அட்டகாசமாய் இருந்திருக்கின்றன.... என்று நான் யோசித்துக் கொண்டிருக்கும் போதே இருள் போர்வையை பூமி மீது இயற்கை அழகாய் போர்த்தி விட தொடங்கியிருந்தது... ! என்னைக் கடந்து சென்ற ஆடு மாடுகளின் ஓசைகள் தூரத்தில் இன்னமும் கேட்க....என் வலது பக்கத்தில் இருந்த ஒற்றைப் பனைமரத்தோடு தன் சல்லாபத்தை ஆரம்பித்திருந்தது வாடைக்காற்று...

அடிக்கடி இப்படித்தான்..இந்த கரியன் இருக்கிறானே..(ஒத்தப் பனையை இப்படித்தான் நான் அழைப்பேன்) மிகவும் சந்தோசமாகவே இருப்பான்...! சலசலவென்று காற்றினை தன்னுள் வாங்கி அவனெழுப்பும் ஒலி அலாதியாய் இருக்கும்....! அவனின் உயரத்தைப் பார்த்து எப்போதும் பிரமித்துக் கொண்டே இருப்பேன்...! இப்போதும் சலசலத்துக் கொண்டிருக்கிறான் கரியன்...

கரியனுக்கு நேர் எதிரே இருக்கும் எங்க பெரியாச்சி...(புளிய மரம்) இப்போது மிக உற்சாகமாய் இருக்கிறாள் என்று உணர்ந்து கொண்டேன். ஆமாம் காலையில் எழுந்து வெளியே சென்ற அவளின் பிள்ளைகள் எல்லாம் அவளின் மடிக்கு திரும்பி வந்து அமர்ந்து கொண்டு அன்றைய தினத்தின் நிகழ்வுகளை சிரித்துப் பேசிக் கொண்டிருக்கும் தருணம் அவள் முழு நிறைவோடுதானே இருப்பாள். எல்லா பறவைகளும் ...அதை நான் பார்த்தேன், இதை நான் தின்றேன்...நீ இன்னிக்கு எங்க போன.. நான் அங்க போனேன்....என்று பேசிச் சிரித்துக் கொண்டிருக்கையில் .... எனக்கு வந்த பொறாமை இருக்கிறதே....

என்ன பொறாமை என்று கேட்கிறீர்களா...அட...என்னையும் கூட சேத்துகிட்டா என்ன? மாட்டேன்னா சொல்றேன்....என்று எண்ணியபடியே வானத்தை எட்டிப் பிடித்திருந்தது என் பார்வை..

ஆமாம் இரவு ஆகட்டும் உடனே....இந்த வானம் பண்ணும் அலங்காரம்.. இருக்கிறதே... அதை நான் சொல்ல மாட்டேன்....நீங்களே பாருங்கள்....அலங்கார நட்சத்திரங்களோடு அவள்(து) எப்படி ஜொலிக்கிறது என்று....

மையல் கொண்டு நான் நின்றிருந்த நேரம் எவ்வளவு என்று உணரும் முன்பு....

வீட்டிக்குள்ளிருந்து அப்பத்தாவின் குரல்..." ஏப்பு இருட்டுல நிக்கிறியே...காத்து கருப்பு ஏதாச்சும் வந்து அடிச்சிரப் போவுது...உள்ள வாய்யா..." என்னை எட்டிப்பிடிக்க....

என் ஏகாந்தத்தை அங்கேயே கலைத்து விட்டு "........இந்த வந்துடனப்பத்தோவ்.. " என்று குரல் கொடுத்துக் கொண்டே வீட்டிற்குள் சென்றே விட்டேன்...!


அப்போ....வர்ர்ர்ட்டா.....!


தேவா. S


PS: Next shot .... " கழுகு என்னும் போர்வாள்...!

Tuesday, July 26, 2011

வெற்றிச் சிறகுகள்...!

வாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் அற்புதமானவை. சோகங்களும், சந்தோசங்களும் எப்போதும் நம்மைச் சமப்படுத்தியே அழைத்து செல்கின்றன என்ற உண்மையைப் பெரும்பாலும் மறந்து விட்டு சோகங்களின் அதிருப்திகளைச் சுமந்து கொண்டே வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

ஒரு மழையைக் கண்டு தன்னின் ஆத்மா நிறைந்து சந்தோஷித்து திளைத்தவனும் இருக்கிறான். அதே மழையை வெறுத்து இது என்ன தொந்தரவு என்று வெறுப்பவனும் இருக்கிறான். ஒரு செயல் இரண்டு விதமான பார்வைகள். பார்வைகளை பிறப்பிக்கும் மூளைகளின் கற்பிதங்கள் தாம் இத்தகைய வேறுபட்ட எண்ணங்களை உருவாக்குகின்றன.

மனிதன் திறந்த மனதோடு எல்லாவற்றையும் வரவேற்கும் தன்மையோடு எப்போதும் இருக்க வேண்டும். மாறாக நமது சமுதாயத்தில் இப்போது எதிர்மறை மனோநிலையோடு வாழும் ஒரு வாழ்க்கை முறை நமக்குத் தெரியாமலேயே நமக்குள் புகுத்தி விடப்பட்டிருக்கிறது. இந்த உலகின் மிக எளிதான காரியமாக எதைச் சொல்வீர்கள் நீங்கள்?

இந்த உலகின் மிக எளிதான காரியம் என்பது " இல்லை " என்று சொல்வதும் " முடியாது " என்று மறுப்பதும்தான். ஒரு செயலை ஏற்று அதனை பொறுப்பு கொண்டு நகர்த்திச் செல்லும் போது அங்கே ஏதேனும் நாம் செயல் செய்ய வேண்டியிருக்கிறது. திட்டமிடல் அவசியப்பட்டு போகிறது. கூர்மை தேவைப்பட புத்தியை உலுக்கி விட்டு எப்போதும் விழிப்புணர்வோடு இருப்பது அவசியமாகிறது. உழைக்க வேண்டியிருக்கிறது.

ஆனால்..

" முடியாது " என்று ஒரு வார்த்தையை கூறிய பின்னால் அங்கே எந்த செயலும் நிகழ்வதில்லை. இப்போது கூட ஒரு விடயத்தை கயிற்றின் மீது நடப்பது போல விளங்க வேண்டுகிறேன். இயலாத காரியங்களை இயலாது என்று சொல்வதற்கு பார்வையின் தெளிவுகளை நம் சுயநலத்திற்கு அப்பாற்பட்டு செலுத்த வேண்டும். இதற்கும் ஒரு பயிற்சி தேவைப்படுகிறது.

எந்த ஒரு செயலையும் செய்யும் போது நான், நான் நான் மட்டுமே இதனால் பயன் பெறவேண்டும் என்ற ஒரு எண்ணமிருப்பின் அந்த செயலைச் செய்வதை விட நம்மை முன்னிலைப்படுத்துவதிலேயே நம் கவனம் அதிகமாக இருக்கும். நாம் முன்னிலைப் படவில்லை எனில் ஒட்டு மொத்த செயலையுமே நாம் விட்டு வெறுத்து ஒதுங்கி, "முடியாது" என்று சொல்லும் நிலைக்கு வந்து விடுவோம்.

வாழ்க்கை மிக அற்புதமானது அதை ஒரு அழகியல் தன்மையோடு நாம் தொடரவேண்டும். எப்போதும் இயங்கும் சராசரி நிகழ்வுகளை விடுத்து அவ்வப்போது குழந்தைகளாக நாம் மாறவேண்டிய அவசியம் இருக்கிறது. குழந்தைகள் போல அல்ல....குழந்தைகளாகவே என்ற வார்த்தை படிமத்தை கவனித்துக் கொள்ளுங்கள்.

வாழ்க்கை இவ்வளவு இறுகிப் போனதற்கு காரணம் நாம் எடுத்துக் கொண்டுள்ள நிலைப்பாடுகள், நம்மைச் சுற்றிப் பின்னப்பட்டிருக்கும் சம்பிரதாய வலைகள், மனோவசியக் கட்டுக்கள், என்பது உங்களுக்குத் தெரியுமா? இவை எல்லாம் காலம் காலமாக நம்மாலும் நமக்கு வழிகாட்டுகிறேன் என்று கூறி வழி கெடுத்தவர்களாலும் பின்னப்பட்டது என்பதை அறிக. இவற்றை எல்லாம் அறுத்தெரிந்து வெளியே வரும் போது தான் உண்மையான சத்திய வாழ்க்கை கிடைக்கும். இதை ஆன்மீகம் விடுதலை,முக்தி என்று கூறுகிறது.

எனது ஆச்சர்யம் என்ன தெரியுமா? உங்களை ஒரு சக்கர வாழ்க்கைக்குள் அடைத்துக் கொண்டு, நான் இப்படிப்பட்டவன், இப்படி வாழ்பவன், இந்தக் கட்சியை சேர்ந்தவன், இந்த சித்தாந்தம் கொண்டவன் இந்த ஊர்க்காரன், என்று ஓராயிரம் மனோவசியக் கட்டுக்களைப் போட்டுக் கொண்டு நீங்கள் சுதந்திரமானவர் என்று எந்த தார்மீக நியாயத்தில் கூவி கூவி அறிவிக்கிறீர்கள்?

ஒரு வித மாயக்கட்டுக்குள் இருந்து கொண்டு சுதந்திர புருசர்கள் என்று சொல்பவர்களைப் பார்த்தால் எனக்கு சிரிப்புதான் வருகிறது. வெறுமையாய் இருக்கும் மனிதன் தன் சூழலுக்கு ஏற்ப நியாயங்களைத் தேடுகிறான். அது " அ " வாய் இருந்தாலும் சரி " ஆ "வாய் இருந்தாலும் சரி அல்லது " இ " ஆய் இருந்தாலும் சரி....அதில் இருக்கும் நியாத்தை தேடி எடுத்துக் கொண்டு பேசும் சக்தி நமக்கு இருக்கிறதா? இப்படி ஒரு சுதந்திரமான மனிதனாய் வாழும் போது நீங்கள் எல்லாவற்றிலும் இருக்கும் நன்மைகளை எடுத்துக் கொண்டவர்கள் ஆவீர்கள் தானே?

சித்தாந்தங்களும் தத்துவங்களும் தோன்றியது மனித வாழ்க்கையை சீரமைக்கத்தான் அவைகளே இறுதி உண்மைகள் அல்ல. தன்னைச் சுற்றி நடக்கும் அநீதிகளைப் பற்றி ஒரு மனிதன் முதலில் உணர்ந்து, அது பற்றி சிந்தித்து ஏன் இந்த சூழல் எனக்கும் என மக்களுக்கும் என்று முதலில் நினைத்திருக்க வேண்டும். இது முழுக்க முழுக்க அவனின் விழிப்புணர்வு சரியாக இருக்கும் பட்சத்தில்தான் நடந்திருக்க வேண்டும். சித்தாந்தங்களும் தத்துவங்களும் பிறக்க ஒரு மனிதன் தன்னின் இருப்பை, சூழலை, சக மனிதரின் கஷ்ட நஷ்டங்களை உணர்ந்தவனாயிருக்க வேண்டும்.

தெளிவான சிந்தனைகளின் பிறப்பிடம் முழுமையான விழிப்புணர்வு என்று அறிக;

ஏதோ கூற வந்து எங்கோ சென்று விட்டேன். கட்டுக்கள் இல்லாத ஒரு வாழ்க்கை வாழும் போது நீங்களும் நானும் நாமாகவே இருக்கிறோம். தயவு செய்து எவரின் கருத்துக்களும் அத்து மீறி உங்களின் விழிப்புணர்வு நிலையை உடைத்துப் போட்டு உங்களுக்குள் ஊடுருவி உங்களின் மூளைகளை கட்டுப்படுத்த விடவே விடாதீர்கள்.

இயற்கையில் வாழ்க்கையும் வாழ்வின் ஓட்டமும் மிகத்தெளிவாய் சிக்கல் இல்லாததாய் இருக்கிறது, அதை மட்டுப்பட்டு நின்று மடங்கிப் போய் விடாமல், அகண்டு பரந்து விரிந்த வானில் நமது வெற்றிச் சிறகுகளை விரிப்போம்....! எல்லைகள் கடந்த முழுமையின் ஏகாந்தத்தில் எப்போதும் சந்தோஷித்து இருப்போம்.

" உண்மைகளை வாங்கும் என் பாத்திரத்தில் சத்தியங்களை நிரப்ப எனக்கு கோட்பாடுகள் எதற்கு கொள்கை என்ற குறுகிய வட்டமெதற்கு...! ஒட்டு மொத்த பிரபஞ்ச நகர்வும் எமது கோட்பாடு....! ஒட்டு மொத்த மானுட நலமும் எமது கொள்கை! "

அடுத்த கட்டுரை என்ன அப்டீன்னு இப்பவே சொல்லிடுறேங்க..........


" கழுகு என்னும் போர்வாளுக்காக " காத்திருங்கள்.....!


தேவா. S

Thursday, July 21, 2011

தேடல்.....21.07.2011!

தெளிவுகளை நோக்கிய ஓட்டத்தில் தேடல் என்பது தன்னிச்சையான விசயமாகிப் போய்விடுகிறது. கோவிலுக்குள் சென்று சென்று சுற்றி சுற்றி தூணுக்கு தூண் அமர்ந்து அமர்ந்து அங்கும் இங்கும் அலைந்து அடித்து பிடித்து கருவறை முன்பு நின்று இறைவனை வணங்குகிறேன் பேர்வழி என்று கண்களை மூடி நமக்குள் நாமே நம்மைப் பார்த்துக் கொண்டு ஆழ்ந்த பெருமூச்சுக்குப் பின்னால் கோவிலைச் சுற்றி விட்டு ஏதோ ஒரு தூணின் ஓரத்தில் அமர்வோமே...., அப்போது கிடைக்கும் திருப்திக் கடலுக்குள் மூழ்கி இருக்கிறீர்களா?

கடும் வெறுமையில் வார்த்தைகளும் மனிதர்களும் இல்லாத போது நம்மை ஆளுமை செய்யும் அந்த மெளனம் நின்று நிதானித்து ஊறிக் கிடக்கவேண்டிய இடம். கோவிலுக்குச் செல்வது இந்த அமைதியை அனுபவிக்கத்தான். இப்படிப்பட்ட அமைதியை கொடுக்குமிடமாக கோவில் இருப்பதற்கு காரணம் அங்கே பரவும் அதிர்வலைகள். மனிதர்கள் அனைவரும் அதிர்வலைகளுக்குச் சொந்காரர்கள்தான்.

ஒவ்வொரு மனிதரும் ஒவ்வொரு அதிர்வலைகள். கோபமே உடையவர்கள் தங்களை சுற்றி கோப அதிர்வலைகளையும், சாந்த சொரூபிகள் சாந்தத்தையும் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். பலதரப்பட்ட சூழலும் வாழ்க்கை முறையும் இருக்கும் போது மனிதர்களும் பலவித உணர்வுகளுக்கு ஆட்பட்டுதான் இருக்கிறார்கள் இதனால் அமைதியும் சாந்தமும் எல்லா இடத்திலும் அவ்வளவு எளிதாக கை கூடி விடுவதில்லை.

கோவில், மசூதி, அல்லது தேவாலயம் என்ற ஒன்றை நிர்மாணித்து அங்கே வரும் மனிதர்களிடம் எல்லாம் அங்கே இறைவன் இருக்கிறான் என்ற புனிதத்தை புத்தியில் இரைத்தும் வைத்த பின்........அங்கே வரும் மனிதர்கள் நேர்மறையான ஒரு அதிர்வலைகளோடுதான் வருகிறார்கள். எல்லோருடைய எண்ணமும் சீராக இருக்கும் போது அங்கே ஒத்த அதிர்வுகள் ஏற்பட்டு நமது எண்ணங்களை அகற்றி விடுகிறது.

எண்ணங்கள் எல்லாம் வலுவானவை ஆனால் போலியானவை, ஏன் போலியானாவை என்று சொல்கிறேன் என்று கேட்கிறீர்களா? மாறும் தன்மை உள்ள எல்லாமே இடைக்கால உண்மைகள்தான். நிரந்தர உண்மைகள் என்றென்றும் மாறாதது. எண்ணங்களும் மாறிக் கொண்டே இருப்பது. சூழலுக்கு ஏற்றவாறு ஒருவரை நல்லவராகவோ அல்லது கெட்டவராகவோ காட்டி விடும். அவர் இப்படிப்பட்டவர் அல்லது அப்படிப்பட்டவர் என்ற அனுமானங்களே நமது எண்ணங்களாகின்றன.

பெரும்பாலும் அனுமானங்கள் அற்ற வாழ்வுதான் எளிதான வாழ்வு எனக் கொள்க. ஒரு உண்மை இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள் அதை நீங்கள் காணவில்லை அல்லது உணரவில்லை எனும் போது அதைப்பற்றிய அனுமானம் வெற்றுதானே? அனுமானம் என்பது நம்மை உண்மையை விட்டு எப்போதும் ஒதுக்கியே வைக்கும் ஒரு காரணி.

அனுமானங்கள் எல்லாம் சேர்த்து ஒரு எண்ணத்தை கொடுக்க அந்த எண்ணம் திடப்பட்டுப் போய் ஒரு சூழலில் உண்மையை காணும் போது உங்கள் எண்ணத்தோடேயே அதைப் பார்க்க வைக்கிறது. சத்தியத்தினை நமது எண்ணங்களோடு சேர்த்து வைத்துப் பார்த்து அதன் தாத்பரியத்தை இழக்கத்தான் செய்கிறோம்.

உண்மையில் யாரும் யாருக்கும் எதுவும் பகிரவோ அல்லது நிறுவவோ வேண்டியது இல்லை. காரணம் எந்த விடயமும் நிறுவி உணர்த்தி விடமுடியாது. உண்மையில் உணரும் போது அதை யாரும் விளக்க வேண்டிய அவசியமில்லை. வார்த்தைகளால் மனிதர்களை மாற்றமுடியாது, எழுத்தினால் முடியாது ஆனால் சிந்திக்க வைக்கலாம். இப்படிப்பட்ட சிந்திப்புகளால் அவர்களுக்குள் பூக்கும் தாத்பரியங்கள்தான் சத்தியத்தின் பரிமாணங்களைப் பிரதிபலிக்கும்.

ஒரு நிகழ்ச்சியை கூறிவிட்டு மேலே தொடருகிறேன்....

மயிலாப்பூர் கோவிலுக்கு நான் ஒரு முறை தனித்து சென்றிருந்தேன். கபாலி, கபாலி என்று நெக்குருகிப் போய் அந்த கோவிலின் இடப்புறத்திலிருந்த சுற்றுப்பாதையின் ஓரத்தில் நான அமர்ந்து இருந்த போது அந்த மனிதரை கவனித்தேன். விபூதியும் ஒரு வேஷ்டியும், ஒரு சட்டையும், தாடியும் மீசையுமாய், மனிதர்கள் இடமிருந்து வலம் சுற்றிய போது அவர் வலமிருந்து இடம் சுற்றிக் கொண்டிருந்தார்.

சிறிது நேரம் கழித்து கோபுரத்திற்கு வட மூலையில் தனியாக நின்று கொண்டு சூரிய நமஸ்காரம் செய்வது போல ஒற்றைக் காலில் நின்று கொண்டு தலைக்கு மேல் கை தூக்கி கும்பிட்டுக் கொண்டு கோபுர தரிசனம் செய்து கொண்டிருந்தார்.

அவரின் பார்வை கோபுரத்தை நிலைகுத்திப் பார்த்துக் கொண்டிருந்தது. சிறிது நேரம் கழித்து சில ஆசனங்களை செய்து கொண்டிருந்தார். பின் நான் அமர்ந்திருந்த இடத்திற்கு அருகில் வந்தமர்ந்தார். எனது ஆவலில் அவரின் அருகில் சென்று சில கேள்விகளை கேட்டேன். திரும்பி என்னை உற்று நோக்கினார். ஏன் கோவிலை வலமிருந்து இடம் சுற்றினார் என்று நான் கேட்ட ஒரு கேள்விக்கு மட்டும்....

நீங்கள் கட்டுப் போட்டுக் கொண்டிருக்கிறீர்கள். நான் கட்டவிழ்த்துக் கொண்டிருக்கிறேன். இது எனது வழி. எனது வழியை ஏன் கேள்வி கேட்கிறாய்? உனது வழியில் போ என்றார். சொல்லி விட்டு வேகமாய் போய் விட்டார். அவருக்கு ஒரு 40 வயது இருக்கும். எனக்கு சம்மட்டியால் அடித்தது போல அந்த வார்த்தைகள் உறுத்திக் கொண்டு இருந்தன. இன்னமும் அவர் சொன்ன வார்த்தையின் ஆழமும் அதிர்வும் என்னுள் சுற்றிக் கொண்டுதானிருக்கின்றன.

யாரும் யாரிக்கும் பகிர இந்த உலகத்தில் செய்திகள் இல்லை. வெற்றுக் குப்பிகளாய் இருக்கு வார்த்தைகளை இரைச்சலாய் எல்லோரும் பேசிக் கொண்டிருக்கிறோம். நிகழும் காரியங்கள் எல்லாம் அதுவாகவே தானியங்கு முறையில் ஒரு பெரும் சத்தியத்திற்கு உட்பட்டு நிகழ்கிறது ஆனால் மனித மனம் இது தன்னால் விளைந்தது, அவரால் விளைந்தது, இவரால் விளைந்தது என்று கொண்டாடுகிறது...

அவரும், இவரும், எவரும் வெறும் கருவிகள்தான். அந்த கருவிகளூடே கடந்து சென்று கொண்டிருக்கிறது ஒரு பெரும் சக்தி. அது இன்று இல்லை, நேற்று இல்லை.......அனாதியாய் நடந்து கொண்டிருக்கிறது. அனாதி என்றால் எப்போது ஆரம்பித்தது என்றும் தெரியாது. எப்போது முடியும் என்றும் தெரியாது. இது என் வழி என்று சொன்னவருக்கு அந்த வழியை ஏற்படுத்தியது ஒரு பெரும் சக்தி....

அவர் தன்னுடைய வழியைப் பற்றி கூறுவதில் எந்த லாபமும் எனக்குக் கிடைத்து விடப் போவது இல்லை மேலும் அவரும் ஒரு கருவி அவரைக் கடந்து செல்லும் பெரும் சக்தி என்னையும் கடந்து செல்ல வேண்டும். அப்படி கடந்து செல்வது அவரைப் போலவே இருக்கவேண்டிய அவசியம் இல்லை. அது முற்றிலும் வேறாக கூட இருக்கும். அது என் வழி. இதை வெறுமனே அவர் ஏதாவது கூறிப் பகிர்ந்திருந்தால் அதை எனக்கு ஏற்றார்ப் போல ஒரு கற்பிதம் கொண்டு ஏற்று விட்டு நான் சத்தியத்தைப் பார்க்கத் தவறியிருப்பேன்...

நான் என்ற ஒரு உணர்வினை தொலைத்து விட்டவர் அவர். நானும் தொலைக்க அந்த நானை தொலைக்க வைக்கும் புறச்சூழலும் காரணிகளும் எனக்கு அமையும். இப்போது அவரை நான் கண்டேன் அது ஒரு காரணி. நான் என்ற தன்முனைப்பை தொலைத்தவர்கள் பிரபஞ்சத்தையே தன்முனைப்பாய் கொண்டவர்கள். இப்படி இருக்கும் போது உலகின் எல்லா செயல்களின் அர்த்தமும் தெரியும். மட்டுப்படாமல் எல்லோருடைய வலியும் அவர்களின் வலியாகும். எல்லோருடைய சந்தோசமும் அவர்களின் சந்தோசமாகும்...

இருமை இல்லாது ஒருமையாய் இருக்கும் பொழுதில் எல்லாமே புரியும்........! நகர்ந்து கொண்டே இருக்கிறேன். இன்னமும் அந்த பெருஞ்சக்தியினை உள்வாங்கி ஏற்றபடி எனது தேடலின் தூரங்கள் குறைந்து, குறைந்து ஒரு நாள் என் தேடல் சுத்தமாய் நிற்கும்....அன்று எல்லாமாய் நானிருப்பேன்....!

தற்காலிகமாய் இந்தக் கருவி தற்சமயம் வாய்மூடிக் கொள்கிறது.


தேவா. S


Sunday, July 17, 2011

சுவாசமே...காதலாக....! தொகுப்பு:10

இன்னும் மறக்கவில்லை உன்னை பிரிந்த அந்த தினத்தின் கடைசி நிமிடத்தின் அடர்த்தியினை, மீண்டும் சந்திப்போம் என்ற எண்ணத்தை வலுவாக்கி, அந்த வலுவினை திடமாக்கி கண்களின் வழியே நீ வழிய விட்ட போது அதில் காதலும் சேர்ந்தே இருந்தது என்பதை மறுப்பதற்கில்லை, ஆனால் அதுதான் கடைசியாய் நாம் சந்திக்கும் தருணம் என்று நினைத்திடவில்லை....

காதலை எழுத்துக் கூட்டி வாசிக்க கற்றுக் கொண்ட அந்த முதல் சந்திப்பில் எனக்கான காதலை நான் கண்ட இடம் உன் கண்கள். எங்கோ சுற்றிக் கொண்டிருந்த என் விழிகள் எதார்த்தமாய் உன் விழிகளோடு பதிந்து மீள முடியாமல் இன்னும் உன் விழிகளை என் விழிகளுக்குள் ஏந்திக் கொன்டு வாழ்வதை உன்னிடம் பகிர நினைத்திருக்கிறேன். வார்த்தைகள் ஆசையாய் வெளி வரத்துடித்து பகிர நீ இல்லாத காரணத்தால் தொண்டைக் குழிக்குள்ளேயே ஒரு தர்ணா போரட்டம் நடத்தி தீக்குளித்து நெருப்பான ஏக்கப் பெருமூச்சாய் வெளிப்படுத்தியிருக்கிறது....

மனிதன் வாழும் காலத்தில் அவனை சுவாரஸ்யப்படுத்துவது காதல். அதையே அவன் சரியாக பயன்படுத்தாத போது அவனை அவஸ்தைப் படுத்துவதும் அதுதான். காதல் என்பதை பகிரப்படாத உணர்வாய் நாம் வைத்துக் கொள்ள வேண்டும் என்று நீ சொன்ன அந்த கந்தர்வ வார்த்தைகள் எனக்கு பிடிபட கொஞ்ச காலம் ஆனது.

வார்த்தைகளுக்குள் வெளிப்பட்டு விடும் காதல் அதன் திடமிழந்து போய் விடும் என்று நீ சொன்னதன் அர்த்தம் அதை உணர்வாய் தேக்கி வைத்து அதன் ஆளுமை என்னை புரட்டிப் போட்டு கொடுத்த உணர்வுகளின் ஆக்ரோசமான தாக்குதல்களில் என்னால் உணர முடிந்தது....

இன்று வரை உனக்கும் எனக்கும் ஒருவரை ஒருவர் பிடிக்கும் என்று பகிராமலேயே நாம் காதலித்தோம், பிரிந்து விட்டோம். ஆனால் காதல் என்ற ஒன்று ஜீவனாய் இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கிறதே எப்படி..? உருவமில்லா உணர்வுகளின் சங்கமத்திற்கு பெயரிட்டு அழைத்து அதை களங்கப்படுத்தி ஏதேதோ செய்து வைத்திருக்கிறது சமுதாய பழக்க வழக்கங்கள். நாம் அதைக் கடந்தான் நின்று கொண்டிருந்தோம்!

ஒவ்வொரு முறையும் நீ இல்லாத பொழுதுகளும், உனக்காக நான் காத்திருந்த பொழுதுகளும் மிக அற்புதமானவை. நான் என்னுள் நானாய் நிறைந்து வழிந்து என்னை நிரப்பிக் கொண்ட ஒரு கூர்மையான பொழுதுகள். என்னுடைய இருப்பினை மிக தெளிவாய் நான் உணர்ந்த கணங்கள். கீழே விழாமல் தத்தி தத்தி காற்றில் பறக்கும் ஒரு பஞ்சினைப் போல நான் மிதந்திருக்கிறேன் என்பது உனக்குத் தெரியுமா?

தூரத்தில் நீ நடந்து வர வர...உள்ளுக்குள் ஒரு பிரளயமாய் உணர்வுகள் சுற்றி சுற்றி இதயத்தை பிய்த்து வெளியே போட்டு விடலாமா என்று தோன்றுமளவிற்கு படபடப்பு கூடும் நிமிடங்கள். ஏதேதோ பேசுவோம்...உன் வார்த்தைகளுக்குள் உலக கவிதைகளும், தத்துவங்களும் மேலும் மெருகேறி என் செவியேறி என்னை கிறங்கடிக்கும்.

ஒரு ஆணின் அறிவும் பார்வையும் எப்போதும் பெண்ணிலிருந்து வேறுபட்டது. ஒரு பெண் உணர்வுப் பூர்வமாய் அறிவினை உள் வாங்குவாள், ஆனால் ஆண் அறிவுப்பூர்வமாய் உணர்வினை அணுகுவான். பெண்ணின் அனுபவத்தை அவள் பகிரும் தருணங்களில் சொக்கிப்போய் புதிதாய் ஏதேதோ காட்சிகளை உள்ளே பரப்பிப் போட ஓராயிரம் ஓவியங்களை அவனின் உனர்வுகள் தீட்ட ஆரம்பிக்கும்...

எனக்குள் உணர்வாய் பரவி
கவிதைகளாய் நான் எழுதிய
ஓராயிரம் ஓவியங்களின்
கரு உன்னிடம் இருந்து
ஜனித்த வார்த்தைகளின்
ஆழங்களில் இருந்தது
உனக்குத் தெரியுமா?

காட்சிப்படுத்த முடியாத காவியத்தினை எழுத்தினுள் கொண்டு வருதல் சாத்தியமா என்று யோசித்து, யோசித்து செதுக்கும் சிற்பமாய்த்தான் இருக்கிறது உன்னைப் பற்றிய நினைவுகளை எழுதும் போது, ஒவ்வொரு முறையும் நீ பேசும் வார்த்தைகளும் அழகுதான், முன் வந்து விழும் முடியை ஒதுக்கும் தொனியும் அழகுதான்.....! அழகு என்ற படிமாணம் பொதுவான விதிகளுக்குட்பட்டது அல்ல. எனக்கு அழகானதாய் தெரியும் விடயங்கள் மற்றவருக்கு அழகாயிருக்க வாய்ப்பிருக்காது...

நாட்களில் மிருதுவானது கடினமானது என்று சொல்ல முடியுமா? என்னால் தெளிவாக சொல்ல முடியும் உன்னோடான நாட்கள் மிருதுவானவை, ஆர்ப்பாட்டமானவை, தெளிவானவை. நாம் சந்தித்துக் கொள்வதற்கும் பேசிக் கொள்வதற்கும் என்றுமே அவசரப்பட்டது கிடையாது. ஒரு முறை நீ புடவை கட்டி வந்த தினமன்று எனக்குள் எழுந்த ஆச்சர்யத்தை கேள்வியாக வைத்த போது நீ வெட்கப்பட்டதை பார்த்த பின்புதான் பெண்ணின் வெட்கத்தில் இருக்கும் நளினம் என்னவென்று என்னால் உணர முடிந்தது...

மெல்ல ஏறெடுத்து
அரை விழிகளால் என்னை ஊடுருவி
சிரிப்புக்கும் புன்னகைக்கும் மத்திமத்தில்
உன் உதடுகள் பரவ விட்ட
சந்தோசத்தின் அதிர்வுகள்...
மெல்லப் பரவி கன்னங்களில்
ஒரு இளஞ்சிவப்பை கொண்டு வந்து
கண நேரம் என்னை ஸ்தம்பிக்கச் செய்து
என்னை மொத்தமாய் ஆட்கொண்டதே
அதுதானே வெட்கம்..???!!!!

இறைவனின் மீது எனக்கு கோபம் வருகிறது என்று நான் சொன்னவுடன் வெட்கமென்ற பாவம் சட்டென்று மாறி ஆச்சர்யமாய் உன் முகத்தில் குடிகொண்டு வார்த்தைகளை வெளிவிடாமல் ஏன் என்ற ஒரு கேள்வியை முகத்தால் செதுக்கிப்போட்டதே.....அந்தக் கணம் நான் மூர்ச்சையாகி விழ இருந்த நேரம், நல்ல வேளையாக பின்னால் இருந்த ஒரு மரத்தின் அரவணைப்போடு நான் சுதாரித்துக் கொண்டேன்....

இறைவன் ஆண்களுக்கு எப்போதும் கோபம், இறுக்கம் எல்லாம் அதிகமாக கொடுத்ததின் பின்ணனியில் என்ன சமுதாய நிர்ப்பந்தம் இருக்கிறது என்று என்னால் ஆராய முடியவில்லை, ஆனால் பெண்ணுக்குள் நளினத்தை இறைத்துப் போட்டு வெட்கம் என்ற ஒரு விடயத்தை அதில் மறைத்துப் போட்டு இப்படி ஆண்களை ஒரவஞ்சனை செய்திருக்கக் கூடாது என்று நான் சொன்னவுடன்....

ஆச்சர்யமாய் பார்த்துக் கொண்டிருந்த உன் விழிகள் மெல்ல பூத்து கல கல சிரிப்பாய் மாறி அந்த இடத்தில் ஏற்படுத்திய அதிர்வுகளில் அந்த மரத்தடியில் சிந்திக்கிடந்தவை எல்லாம் பூக்களா அல்லது உன் சிரிப்பா என்று நான் சந்தேகப்பட்டு கீழே குனிந்து பார்க்கத்தான் செய்தேன்....

வாழ்வின் அற்புதமான தருணங்கள் என்பவை அழகான பெண்ணோடு இருத்தல் என்று உலகம் நம்புகிறது, புறத்தை வைத்து வாழ்க்கையை தீர்மானிக்கும் மனிதர்கள் இப்படிப்பட்ட அபத்தத்தில் விழுந்து பின் வெளியேற சிரமப்பட்டு மூச்சு திணறிக் கொண்டிருக்கிறார்கள். அதுவல்ல நிஜம், வாழ்வின் ஆசிர்வதிக்கப்பட்ட தருணம் என்பது அறிவான பெண்ணோடு ஏற்படும் சினேகம், உறவு...! அழகினை தாண்டிய அறிவும் விசால பார்வையும் ஒரு பெண்ணிடமிருந்து ஆணுக்கு கிடைக்க வேண்டும், மாறாக ஆதரவான தெளிவான கம்பீரமான ஒரு ஆண் பெண்ணுக்கு கிடைக்க வேண்டும். முரண்பட்டுப் போகும் இடங்களில் எல்லாம் ஆணும் பெண்ணுமே முரணாகிப் போகிறார்கள்.

நீ கவிதை எழுதுவாய்
நான் வாசிப்பேன்..!
நீ சிரிப்பாய்..
நான் கவிதை எழுதுவேன்...!
என் கவிதை வரிகளை
நீ ஆழமாய் பார்ப்பாய்...
அதற்குள் படர்வாய்....
வார்த்தைகளுக்குள் குடி கொண்டிருக்கும்
உன்னை நீ பார்க்கும் தருணங்களில்
நான் சிறகடித்து எங்கேயோ
பறந்து கொண்டிருப்பேன்!

காலத்தின் கையைப் பிடித்துக் கொண்டு காதலை மனதில் தேக்கிக் கொண்டு நாம் நடந்து கொண்டிருந்தோம் ஒரு சூழல் நாம் பிரிய வேண்டும் என்று பணித்த போது சூழலை நாம் முன்னிலைப்படுத்தாமல் தேவையின் பொருட்டு பிரிந்தோம்.

அதே சூழல் நம் தொடர்புகளை அறுத்துப் போட்டு இன்றோடு ஏழாண்டுகள் ஆகி விட்டதும், மீண்டும் அந்த சூழலை முன்னிலைபடுத்தாமல் விலாசங்கள் மாறிப்போன உன்னைத் நான் தேடியும், நீ கிடைக்காமல் சிதறிப்போயிருக்க வேண்டிய என்னை உன் ஆழமான காதலின் நேசங்கள் சிதறாமல் சேமித்து வைத்திருந்தது போலத்தான் உன்னையும் சேமித்து வைத்திருக்கும் என்று நம்பி நான் ...எனக்காக வாழ்க்கை காட்டிய வழியில் நடந்து கொண்டிருந்தேன் உன் நினைவுகளோடு....

எவ்வளவு மாற்றங்கள்.....இந்த ஏழு வருடத்தில் திருமணம், குழந்தை என்று நான் மாறித்தான் விட்டேன் ஆனால் மாறாமல் உன் நினைவுகளை இன்னமும் இழுத்துப் பிடித்து வைத்திருக்கிறது உன் மீதான் ஒரு உணர்வுக் காதல்...

நேற்று எதேச்சையாக என் மகனை பள்ளியில் விட்டுத் திரும்பிய போது தூரத்தில் நீ........!!! உன் மகளை கையில் பிடித்தபடி...! நீ என்னைப் பார்க்கவில்லை...நான் நீ என்னைப் பார்ப்பதையும் விரும்பவில்லை..! ஆனால் காலம் மிக வினோதமானது அதனால்தான் மீண்டும் உன்னை நான் சந்திப்பதை ஏதோ ஒரு விதத்தில் அது ஆக்கி வைத்திருக்கிறது.

இருவரும் எதிர் எதிர் சந்தித்துக் கொண்ட அந்த பொழுதில்.....வார்த்தைகளும் வார்த்தை படிமங்களும் சட் சட்டென்று ஓடி ஒளிய அதே ஆச்சர்யத்தை நீ விழிகளில் தேக்கி........என் பெயர் சொல்லி அழைக்கையில் நான் உன் கையை பிடித்துக் கொண்டு நின்ற உன் மகளின் விழிகளை பார்த்துக் கொண்டிருந்தேன்....

பரஸ்பரம் நலம் விசாரித்தலோடு அந்த சந்திப்பு அட்டகாசமான ஒரு சம்பிரதாய சந்திப்புதான். வார்த்தைகள் மிக கண்ணியமாக நமது கடந்த காலத்தை ஓரம் வைத்து விட்டு.....நிகழ்காலத்தை விசாரித்துக் கொண்டிருந்தது. என் மகனும் அங்கேதான் படிக்கிறானென்றும் எனது வீடு இன்ன இடத்தில் இருக்கிறது என்றும் பகிர்ந்தேன்.. நீயும் உன்னைப்பற்றிய அறிமுகங்களைச் செய்து கொண்டாய்....இருவரும் இருவரின் வீடுகளுக்கு இருவரையுமே அழைத்துக் கொண்டோம்....!

கடந்த காலம் உள்ளே நினைவுகளாய் உருண்டு இருவரின் கண்களையும் நேருக்கு நேர் சந்திக்க விடாமல் செய்து கொண்டிருந்தது.....! பள்ளிக்கு நேரமானதை நீ உணர்ந்தாய்.. என் அலுவலகத்துக்க் நேரமானதை நான் உணர்ந்தேன்.....நன்றிகளோடு எதிர் எதிர் திசைகள் நடந்து கொண்டிருந்தோம்....

சில அடிகள் எடுத்து வைத்துக் கொண்டிருந்த போது ஏதோ ஒன்று என் பிடறியை அழுத்த திரும்பிப் பார்த்தேன்....எதேச்சையாக நீயும் திரும்பி இருந்தாய்......தூரங்களில் இருந்து ஆழாமாய் நீ ஊடுருவிப் பார்த்த பார்வையையும்...பிரிய விட்ட புன்னைகையையும் நான் உனக்குத் திருப்பிக் கொடுத்த போது இருவருமே சப்தமாய் சிரித்துக் கொண்டோம்.....!

மீண்டும் பிரிந்து விட்டோம்....! அவ்வளவுதான்..வாழ்க்கை அழகானது....வாழும் வரையில் தொடர்புகளையும் உறவுகளையும் சூழல்களையும் புரிந்து வாழும் போது...! அன்றைய சூழலில் அப்படி......இன்றைய சூழலில் இப்படி....! உன்னை நான் தேடவில்லை இப்போது..! நீ எங்கிருக்கிறாய் என்றும் ஆராயவில்லை...! சம கால வாழ்க்கையில் நான் சந்தோஷித்து இருக்கிறேன்..! அதே நேரத்தில் கடந்த கால நினைவுகளை மறுப்பதற்கில்லை....

அவை இருக்கின்றன....அவை அழகனாவை...! அப்படியே ஒரு ஓரமாய் நினைவுகளில் இருந்து விட்டுப் போகட்டும்..!

நான் நானாக... நீ நீயாக...வாழ்க்கையை அழகாய்த் தொடரல்தானே அழகு!


தேவா. S


Thursday, July 14, 2011

பாஸ்போர்ட்....!கொஞ்சம் யோசனையாதான் இருந்துச்சு ஊர்ல போயி பாஸ்போர்ட் ரினிவியூ பண்ணினா சரியா வருமா? இல்லை துபாய்லயே பண்ணிட்டு போயிடலாமான்னு...இருந்தாலும் ஒரு அலுப்பு சரி ஊர்ல போய் பாத்துக்கலாமேன்னு நம்பி வண்டியேறிட்டேங்க.....

ஒரு மாசம் லீவு. பாஸ்போர்ட் ரினிவியூ பண்ணி டக்குனு கிடைக்கணுமேன்னு சொல்லிட்டு விசாரிச்சு பாத்தப்ப, ட்ராவல்ஸ்ல கொடுக்கலாம்னு அப்பா சொன்னாங்க. நாமதான் ஊர்ல இருக்குற எல்லா கான்சுலேட்டுக்கும் போயிருக்கோமே நாம எதுக்கு ஏஜண்ட் கிட்ட எல்லாம் போகணும்னு சொல்லிட்டு (எம்புட்டு திமிரு எனக்கு!!!!) நோ..நோ நானே நேரா போயி திருச்சில ரினிவ் பண்ணிக்கிறேன்னு சொல்லிட்டேன். போன்ல என்கொயரி பண்ணினதுக்கு 14 வேலிட் டாகுமெண்ட்ஸ்ல கண்டிப்பா 3 ஒ அல்லது 4 ஒ டாகுமெண்ட் வேணும்னு சொல்லிட்டாங்க....(செக் பண்ணத்தான்..)

நானும் ரேசன் கார்ட், டிரைவிங் லைசன்ஸ், வோட்டர் ஐடி இது எல்லாம் கரெக்டா எடுத்து வச்சிகிட்டு காலையில 4 மணி பஸ்ஸுக்கு கிளம்பிட்டேன். எங்க ஊர்ல இருந்து காலையில கிளம்புனா ஒரு 8 அல்லது 9 மணி வாக்குல திருச்சி போயிடலாம். ஆனா 4 மணி பஸ்ஸ பிடிக்க 3 மணிக்கு எல்லாம் எழும்பணும்ல அப்போ எப்டி பாத்தாலும் தூக்கம் வராது நைட் புல்லா சரிதான?

கோழி கூப்ட கிளம்புனவன் ஒரு எட்டு மணிக்கு எல்லாம் திருச்சி மத்திய பேருந்து நிலையத்துகு வந்து எதித்தாப்ல இருக்குற ஹோட்டல்ல பூரி செட் வாங்கி கிழங்குல கை வைக்கிறப்பதான் தெரியுது அடா அடா போட்டோ இல்லையே நம்மகிட்டனு....நல்ல வேளை கடைக்கு பக்கத்துலயே ஒரு ஸ்டூடியோ...இருந்துச்சு. அப்டி இப்டி கடைய அந்தப் பையன் திறந்து அந்த கடையில வேலை பாக்குற பொண்ணுக கூட பேசி பேசி...டி ய வாங்கி குடிச்சு புட்டு ...வேலைய செய்ய இஷ்டமே இல்லமா அந்த பொண்ணுக கிட்ட பேசுறதுலயே குறியா இருந்தாப்ல...

ஒரு வழியா போட்டோவ வாங்கிகிட்டு இன்னொரு பஸ்ஸ பிடிச்சு மரக்கடை ஸ்டாப்பிங்கல் இறங்கி பாஸ்போர்ட் ஆபிசுக்குள்ள நுழைஞ்சு அப்ளிகேசன் ஃபார் ரினிவல் எங்க கிடைக்குமுங்கனு கேட்டேன் ஒருத்தர் கிட்ட....அவர் சொன்னாரு அட இப்போ அப்ளிகேசன் எல்லாம் இல்லங்க கம்ப்யூட்டர்லயே அடிச்சு பாரம் புல்லப் பண்ணி கொண்டு வரணும் (ஆன் லைன்)அந்தா அங்கிட்டு பாருங்க எக்ஸ் சர்வீஸ் மேன் எல்லாம் அந்த சாமியானா பக்கத்துல இருக்காங்க அவுங்க அடிச்சு கொடுப்பாங்க..அப்டி இல்லனா அந்தா எதித்தாப்ல கடை இருக்கு அங்க போயி அடிங்கனு அவர் கை காட்டி சொன்ன இடத்துல இலவசத்துக்கு காத்து கிடக்குற மாதிரி ஒரே கூட்டம்....

அடக் கொடுமையே என்ன இது...இப்டி இருக்குனு சொல்லிட்டு நான் பக்கத்துல எதுனாச்சும் பிரவுசிங்க் சென்டர் இருக்கும் அங்க போயி நாமளே அடிச்சுக்குவோம். நாம பாக்காத ஆன்லைன் பார்மான்னு பாஸ்போர்ட் ஆபிசுக்கு வலது பக்கம் 2 கிலோமீட்டர் இடது பக்கம் 2 கிலோ மீட்டர் பின்னால முன்னாலனு சுத்தி பாத்துட்டே ஒரு பிரவ்சிங் சென்டரும் இல்லை...(2008 லங்கோ) அடக் காலக் கொடுமையேன்னு வேற வழியில்லாம மணிய பாக்குறேன் பத்தே முக்கால்னு பல்லை இளிக்குது கடிகாரம்....

சரி எக்ஸ் சர்வீஸ்மேன் சைட்ல செம கூட்டமா இருக்கேனு சின்ன கடை ஒண்ணுல போயி கேட்டேன். அவரு படு பிசி டக்குனு ஒரு பார்ம என் மூஞ்சில தூக்கி அடிச்சு இதை பில் அப் பண்ணி கொடுங்க பாசுன்னு சொல்லிட்டு அவரு முன்னால இருந்த 75பேரையும் சமாளிக்கிறதுலயே இருந்தாரு. பில் அப் பண்ணி கொடுத்து அவரு அடிச்சு முடிச்சு அப்ளிகேசன் பார்ம என்கிட்ட கொடுத்தப்ப மணி 11:45. பார்ம அடிச்சுகிட்டு வெளில வர்றேன் இன்னொரு அண்ணாச்சி வந்தாப்ல கூடவே....

சார் தக்காலா? இப்போ போனியன்னா எப்புடி உள்ள போவீங்க...செம்ம கூட்டம் க்யூவில நிக்குறாய்க நீங்க ஒரு 200 ரூபாய் கொடுங்க உள்ள நேரா போயிடலாம்னு சொன்னாரு. ஏற்கனவே ஆன்லைன் பார்ம் பில் அப் பண்ண 300 கொடுத்த கடுப்புல அது எல்லாம் வேணாம் அண்ணே நான் பாத்துக்குறேன்னு...பாஸ்ப்போர்ட் ஆபிஸ் கிட்ட நின்ன க்யூவுல போயி நின்னேன். அட ஆண்டவா 3 கிலோ மீட்டருக்கு நிக்குறாய்ங்களே...எப்டி உள்ள போறதுன்னு யோசிச்சுட்டு இருந்தப்ப

முன்னால நிண்ட ஒருத்தரு.... சார் தக்கால் கியூ அங்கிட்டு இருக்கு பாருங்கனு கொஞ்சம் சின்ன சைஸ் க்யூவ காட்டவும் சந்தோசத்துல ஓடிப் போயி அங்க நின்னேன். இரும்பு கேட்ட பாதி திறந்து ஒவ்வொருத்தரா அனுப்பிச்சு கிட்டு இருந்த ஒரு காக்கி பேண்ட் வெள்ளை சட்டை, ஒரு மாதிரி ஜெமினி கணேசன் மீசை வச்சிருந்த சார் சொன்னாப்ல .." சார் நேர உள்ள கூட்டியாந்து ஆபிசர்கிட்ட விடுறேன் ஏன் சிரமப்படுறியன்னு" காதுக்குள்ள வந்து சொன்னாப்ல....

ஆத்தாடி மறுக்கா காந்தி போட்ட நோட்டு போகப் போகுதேன்னு இறுக்கமா பைய பிடிச்சுகிட்டு....இல்ல சார் இட்ஸ் ஓ.கேன்னு நான் சொன்னதை ஒரு கெட்ட வார்த்தையைப் கேட்டது போல கேட்டுகிட்டு...போயிட்டாப்ல ...! அதுக்கப்புறம் நான் உள்ல போற டெர்ம் வரும் போது கதவ ஒருக்கழிச்சுகிட்டு சிறுசா தொறந்து விட்டுபுட்டு......அட...போங்க வேகமானு அதட்டினதுக்கு கூட இதுதான் காரணாம் இருந்து இருக்குமோன்னு நான் மேல மாடி ரூம்ல போயி சேர்ல வெயிட் பண்ண சொல்ற வரைக்கும் யோசிச்சுட்டு இருந்தேன்...

நம்பர் சிஸ்டம் இல்லை ஆனா சீட் சிஸ்டம் இருந்துச்சு. வரிசைப்படி ஒவ்வொருத்தரா உள்ள ரூமுக்குள்ள இருந்த ஒரு மூணு ஆபிசர்கள் கிட்ட வரிசைப்படி போயி சந்திக்கணும்னு சொன்னாங்க. என்னோட டர்ன் வந்தப்ப எனக்கு கிடைச்ச ஆபிசர் ஒரு பெண்மணி. அம்மணி முன்னால போயி உட்காரதுக்கு முன்னால...குட் ஆஃப்டர் நூன் மேடம்னு நான் சொல்லி முடிக்கவும் அவுங்க என்ன ஒரு முறை முறைச்சுட்டு.......வெயிட் பண்ணுங்க சார்.....லஞ்ச் முடிச்சுட்டு வர்றோம்னு கெளம்பிட்டாங்க...சரியா மணி 1.00.

அந்த ரூம விட்டு வெளில வந்து பெரிய ஹால்ல நின்னுகிட்டு ஒரு ப்யூன் ஒருத்தர் கிட்ட கேட்டேன் உள்ள கேன்டீன் இருக்கா சார்னு...அவரு இருந்த பிசில வலது கை மூட்டால விலாவுல என்ன ஒரு இடி இடிச்சுட்டு வாசப்பக்கம் கைய காட்டிட்டு போயிட்டாரு! வாசப்பக்கம் போயி மறுபடியும் கீழ இறங்கி இரும்பு கேட் கிட்ட வந்து முன்னாடி என்கிட்ட வந்து சீக்கிரம் அனுப்பவான்னு கேட்டாரு பாத்தீங்களா ஒரு ஐயா அவர்கிட்ட கேட்டேன்....சார் வெளில போயி சாப்டுட்டு திரும்பி வரலாமன்னு...

ஓ..தாராளமா வரலாம்!!!! ஆனா வந்தா மறுபடி க்யூவுல நிக்கணும்னு ஒரு சிரிப்பு சிரிச்சு கிண்டல் பண்ற மாதிரி கனைச்சாரு.....! சரி விடு கிரகம்னு மறுபடியும் மாடிப் படி ஏறி நிதானமா வரும் போது படிக்கட்டுல ஒரு ஒரமா வெத்திலை எச்சிய துப்பி வச்சு இருக்காங்க பாருங்க...ஏன்யா சென்டரல் கவர்மெண்ட் ஒரு பாஸ்போர்ட் ஆபிஸ்ல இப்டி துப்பி வச்சி இருந்தீங்கன்னா..பப்ளிக் பஸ் ஸ்டாண்டல் எல்லாம் ஏன் துப்ப மாட்டீங்கனு நினைச்சுகிட்டு மேல ஏறும் போதே என் புத்திலதான் தப்பு இருக்குமோன்னு ஒரு டவுட் வேற....

அங்கிட்டும் இங்கிட்டும் பசியோட, அசதியோடு உள்ளயே அலைஞ்சு புட்டு...அரை மயக்கமாயிட்டேன்...! சரி கொஞ்சம் உஷார் பண்ணிக்கலாமேன்னு வாட்ச்ச திருப்பி மணி பாத்தேன் மணி 2:30. சரியா 1:00 மணிக்கு சாப்ட போன ஆபிசர்ஸ் 2 மணிக்கு வரணும்ல....அட வரலங்க....! ஒரு 2:45க்கு சிரிச்சு பேசிகிட்டு வந்தவுங்க உள்ள ஆள விடுன்னு சொல்லி உள்ள ஆளு போன பிறகும் மூணு டெஸ்க் முன்னாலயும் மூணு மனிசங்க நிக்கிறாய்ங்களேன்னு ஒரு சிரத்தை இல்லாம...பேசிக்கிட்டே இருந்தாங்க...

ஒரு வழியா என்ன உட்கார வச்சி எல்லா பேப்பரையும் செக் பணிட்டு... வேலிட் டாகுமெண்டையும் செக் பண்ணிட்டு... சொன்னிச்சு பாருங்க ஒரு விசயம் எனக்கு தலை சுத்திடுச்சு...அட ஆமாங்க 1998 ஆம் வருசம் எனக்கு பாஸ்போர்ட் வந்து பல தடவை வெளி நாடு போயிட்டு வந்தாச்சு 2008ல லீவுக்கு வந்த இடத்துல ரினிவ் பண்ணலாம்னு வந்தா 1998ல பாஸ்போர்ட் இஸ்யூ பண்ணினப்ப அவுங்களுகு போலிஸ் ரிப்போர்ட் வந்து கிடைக்கலயாம். அதனால நோட்டரி பப்ளிக் ஒருத்தர்கிட்ட போயி அஃபிடவேட் (ங்கொப்புறான சத்தியமா அந்த வார்த்தை அப்போதான் கேள்வி படுறேன்) வாங்கியாரணுமாம்....நான் அந்த ஊர்லதான் வசிக்கிறேன்னு.....

நான் கேட்டேன். ஏன் மேடம் போலிஸ் ரிப்போர்ட் வரலேன்னா அது உங்க பிரச்சினை. 10 வருசமா என்கொயரி பண்ணி ரிப்போர்ட் வரலேன்னா? நீங்கதான் அதை கன்சர்ன் டிப்பார்மெண்ட்கிட்ட ஃபாலோ பண்ணி வாங்கி இருக்கணும். ஏன் வாங்கல....? எத்தனை இமிக்ரேசன் ஸ்டாம்ப் இருக்கு என் பாஸ்போர்ட்ல....., நான் எவ்ளோ தடவை ட்ராவல் பண்ணி இருக்கேன் . இப்போ போலிஸ் ரிப்போர்ட் வராம எப்டி நீங்க பாஸ்போர்ட் இஸ்யூ பண்ணிணீங்க? சோ.. இட்ஸ் நாட் மை ப்ராப்ளம்னு சொன்னேன்....

இப்டி கேட்டவுடனே....ஹலோ மிஸ்டர் ...அதெல்லாம் எனக்குத் தெரியாது. போலிஸ் ரிப்போர்ட் வரலேன்னு ரிப்போர்ட் சொல்லுது. போயி வாங்கிட்டு அப்புறம் வாங்க....உங்க அப்ளிகேசன் ப்ராஸஸ் பண்றேன் இல்லன்னா முடியாதுன்னு....சொல்லிடிச்சு..! எவ்ளவோ எடுத்து சொல்லியும், 120 கிலோ மீட்டருக்கு அங்கிட்டு இருந்து வெள்ளன வந்தத சொல்லியும், அந்த ஏரியாவுல எனக்கு யாரையும் நோட்டரி பப்ளிக்க தெரியாதுன்னு சொன்னதையும் சீனியர் ஆஃபிசர மீட் பண்ண முடியுமான்னு நான் கேட்ட ரிக்வெஸ்ட்டையும்...

ஒரு வெள்ளை சட்டை வெள்ளை பேண்ட் போட்ட ப்யூன வச்சி என்ன கழுத்த பிடிச்சு வெளில தள்ளாத குறையா வெளில தள்ளி அந்தம்மா நிராகரிச்சுடுச்சு....கூடவே அந்த ப்யூன் கிட்ட ஒரு லிஸ்ட் ஒண்ணு கொடுத்து அனுப்பிச்சுது...அதாகப்பட்டது அந்த லிஸ்ட்ல இருந்தவுக எல்லாம் அந்தா ஏரியாவுல போலியா அப்டிவிவேட் கொடுத்த நோட்டரி மாருங்களாம், அவுங்க கிட்ட வாங்கிட்டு வந்தா செல்லாதுன்னு சொல்லி கையில கொடுத்தாரு அந்த ப்யூன்....

பசி, மயக்கம், கடுப்பு, மரியாதை இல்லாம அந்தம்மா பேசுன பேச்சு எல்லாம் சேர விரக்தியோட மெதுவா கீழ இறங்கி வந்தேன்.....!!!! மறுபடி அதே டைப்பிங் சென்டர் போனேன். எனக்கு டைப் பண்ணி கொடுத்தவர் இன்னமும் பிசியாத்தான் இருந்தார். விபரம் சொன்னேன்...உடனே...ஏய் குமரேசான்னு கூப்பிட்டார். வந்தவன் கிட்ட...அப்டவேட் வாங்கிட்டு வந்து கொடுப்பா சாருக்குனு சொன்னாரு....

அந்த பையன்..உங்க ஊரு வீட்டு விலாசம் எழுதிக் கொடுங்க ஒரு 500ரூபாயாகும் ஓ.கேவான்னு கேட்டான். எனக்கு ஒண்ணுமே புரியல எதுக்கு அப்டிவேட் கொடுக்கணும்னே தெரியலையேன்னு குழம்பிகிட்டு இருந்த எனக்கு அந்த நேரத்துல வேலய முடிக்கணுமேன்னு....அவன் கிட்ட பேரம் பேசி 300 ரூபாய் கொடுத்தேன்....

அந்த தம்பி போக தயார் ஆகும் போது...தம்பி நோட்டரி பப்ளிக் பேரு லிஸ்ட்டுடு டு..ன்னு பேப்பரை காட்டினேன்...! அவன் சொன்னான் தெரியும் சார்...இவரு வேற ஆளு லிஸ்ட்ல இல்லாத ஆளுதான் வெயிட் பண்ணுங்கன்னு சொல்லிட்டுப் போனவன் 10 நிமிசத்துல திரும்பி வந்தான்....

ஸ்டாம்ப் பேப்பர்ல பக்காவா திருச்சில உட்கார்ந்து கிட்டு மதுக்கூர்ல இருக்க எனக்கு என்னிய பாக்காமலேயே ஜவாப்பு கொடுத்து இருந்தார் சார்வாள்.

அதுவரைக்கும் அந்த தெருக்கடையோர கல்லுல உட்கார்ந்து இருந்த நான் எழுந்து மறுபடி பாஸ்போர்ட் ஆபிசுக்கு போகணும்னு மணி பாத்தப்ப....மணி 6:15......

போய்ட்டு காலையில் வந்து கொடுங்க சார் இனிமே பாக்க மாட்டாங்கனு சொல்லிட்டு அடுத்த வேலைக்கு குமரேசன் தம்பி போய்ட்டான்...! வந்த வேலை முடியாதது மட்டும் இல்லாம ஏகப்பட்ட மன உளைச்சலோட சாப்ட கூட மனசு இல்லாம ஒரு டீய குடிச்சுட்டு....! கடையில தண்ணிய வாங்கி மூஞ்சிய கழுவிட்டு....தஞ்சாவூர் போற பஸ்ல ஏறி ஜன்னலோராமா உட்கார்ந்து கிட்டேன்.....

வண்டி போக போக சில்லுனு காத்து மூஞ்சிக்கு தெம்பா இருந்துச்சு....கூடவே சில கேள்விகளும் என்னை தொலைச்சு போட்டுச்சு....

1) ஒரு இடத்துக்கு போறதுக்கு முன்னால பிரிப்பேர் பண்ணிக்காம போனது என் தப்புதான் ஆனா....ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கானவங்க வந்து போற ஒரு பாஸ்போர்ட் ஆபிஸ் வாசல்ல ஏஜண்ட்கள் குமிஞ்சு கிடக்காங்களே..., கன்ன பின்னானு ஒரு காசு கேக்குறாங்களே..இதையெல்லாம் ஏன் அரசே பட்டதாரி இளைஞர்களை வச்சி செய்யக் கூடாது?

2) பாஸ்போர்ட் ஆபிச சுத்தி சுத்தி ஒரு பிரவுசிங் சென்டர் கூட இல்லாதது எதார்த்தமான ஒன்றா? அல்லது வேறு பின்ணனி உண்டா?

3) ஒவ்வொரு தடவையும் ஆன்லைன்ல போட்டு இருக்கோம், ஆன்லைன்ல போட்டு இருக்கோம்னு சொல்ற பாஸ்போர்ட் ஆஃபிசர்ஸ் வேலை செய்றது ரூரல் சைட்லனு கவர்மெண்டுக்கு வேணா தெரியாம இருக்கலாம்? ஆனா அங்க வேலை பாக்குற ஆபிசர்ஸ்க்குமா தெரியாது. முனியனும், குப்பனும், இராமசாமியும்........ஆன்லைன் பாத்துதான் அன்றாடத்த தொடங்குறாங்களா.....என்ன?

4) 1998ல கொடுத்த பாஸ்போர்ட்டுகு போலிஸ் ரிப்போர்ட் வரலன்னு சொல்லி என்ன விரட்டியடிச்ச அந்த அதிகாரி ஏன் சிடு சிடுன்னு எரிஞ்சு விழணும்? நம்ம ஊர்ல கஸ்டமர் சர்வீஸ்னா என்னனு தனியார் நிறுவனம் மட்டும்தான் படிக்கணும் நடக்கணுமா? அரசு அலுவலகங்களும் போலிஸ் ஸ்டேசனும் இதை பின் பற்றக் கூடாதா?

5) அவசரத்துக்கும் அலைக்கழிப்புக்கும் கால விரையத்துக்கும் பயந்துகிட்டுதான் நோட்டரி பப்ளிக்குக்கு நான் காசு கொடுத்து அந்த சர்டிபிகேட் வாங்கினேன். இப்படிப்பட்ட நிகழ்வுகளுக்கு காரணம் சூழலும் முறையற்ற அரசு இயந்திரங்களும்னு எடுத்தக்கலாமா? இல்லை இது முழுக்க முழுக்க என்னோட தப்பா?

கடைசியா.....

6) 10 வருசத்துக்கு முன்னால கொடுத்த பாஸ்போர்ட்டுக்கு, போலிஸ் ரிப்போர்ட் வரலன்னு சொல்லி என்ன்னை அதுக்கு பொறுப்பாக்கியது சரியா தப்பா?

இப்டி எல்லாம் நான் யோசிச்சுகிட்டே ஊர் வந்து சேந்துட்டேன்....! அதுக்கடுத்த நாள் நான் போய் அப்ளை பண்ணியது, அதுக்கப்புறம் பாஸ்போர்ட் வந்தது...இப்போ இது நடந்து 3 வருசம் ஆனது எல்லாம் இல்லை மேட்டர்....மேலே இருக்கும் 6 கேள்வியும்தான் மேட்டர். ஏன்னா இன்னும் இந்த கேள்விகள் என்னை தொடர்ந்து கிட்டேதான் இருக்கு....இன்னேலர்ந்து உங்களையும் தொடரட்டும்....

அப்போ வர்ர்ர்ர்ட்டா!

தேவா. S


Wednesday, July 13, 2011

ஒலியற்ற ஓசைகள்..!எதார்த்தங்களை விரும்புபவர்களுக்கு
எழுத்துக்களோ, விமரிசைகளோ
அல்லது...
சராசரி நிகழ்வுகளோ எப்போதும்
திருப்தியை கொடுத்து விடுமா என்ன?

சொர்க்கங்களில் வாசம் செய்பவர்களுக்கு
சந்தோசத்தை பெட்டிக்குள்...
அடைத்து கொடுத்தலாகுமா?
எல்லா விடியலையும் புதியதாய்
சுவீகரித்துக் கொண்ட ஜீவன்களுகு
சிறந்த நாளென்று தனித்து
எதைப் பகிர?..!

வழக்கம் போல
தனிமையில் மூழ்கி ஏகாந்தமாயிருக்க
நிதம் வானம் பார்த்து உனை மறக்க
ஒரு துளி கூட விடாது மழையை
மொத்தமாய் விழியாலோ அல்லது
உடலாலோ உள் வாங்கிக் கொள்ள
ஏதோ ஒரு புத்தகத்தில்
எப்போதும் உனைத் தொலைக்க
.....
.....
.....
மொத்தத்தில் பட்டாம் பூச்சியாய்
எப்போதும் சிறகடிக்க
வாழ்த்துகள்....!
......
.....
....

என்றெல்லாம்....
எழுதி முடித்த பின்னும்
எதோ ஒன்று மிச்சமாயிக்கும்
ஒரு அடர்ந்த மெளனத்தில்
நிறைந்திருக்கிறது...
எழுத்துக்களுக்குள் ஏற்ற முடியாத
வாழ்த்தின் ஓசைகள்!


தேவா. S

Tuesday, July 12, 2011

ஹாய்...12.07.2011!ஹோ...ன்னு இருக்கு மனசு...! பதிவுகள் எழுத ஆரம்பிச்ச காலத்துல இருந்து இப்போ வரைக்கும் இதை, இதை எழுதணும்னு ஒரு நாள் கூட திட்டமிட்டது கிடையாது. ஒரு வருசத்துக்கு 365 நாள்னு வச்சுக்கிட்டா எழுத்துன்னு எழுத ஆரம்பிச்சதுல இருந்து இன்னிக்கு வரைக்கும் தினமும் நான் எழுதிட்டு இருக்கதாதான் கணக்கு வழக்கு சொல்லுது.

ஒவ்வொரு தடவையும் எழுதும் போதும் ஒரு அழுத்தமனா வலி மனசுக்குள்ள இருந்துகிட்டுதான் இருக்கு. அது என்ன ஏதுன்னு தெளிவா என்னால சொல்ல முடியாது ஆனா எழுதி ஏதோ சொல்லிட்டேன்னு சொல்லிகிறத விட எழுதினதால நான் பக்குவப்பட்டேன் அப்டீன்றது ஒரு நிதர்சனமான உண்மை.

வாழ்க்கையில பெரிய கஷ்டமான விசயமா நான் பாக்குறது உள்ளுணர்வு உறுத்தலோட வாழ்க்கைய வாழ்றது. எழுத்துன்னு எழுத வந்த உடனே அது தனிப்பட்ட வாழ்க்கையை விட பளிச்சுன்னு நம்மள காட்டிக்கிற மாதிரிதான் எல்லோரும் எழுதுவாங்க, நானும் அதைதான் செய்றேன். ஏன்னா இது பொது வெளி.

ஒரு கல்யாண வீட்டுக்கு போகும் போது வெள்ளையும் சொள்ளையுமா, அலங்காரங்கத்தோடதான் போவோம், ஏன்னா அது பொதுவெளி அந்த மாதிரி இடத்துல நம்மை பளீச்சுனு காட்டிகணும்னுதான் விரும்புவோம். பொது வெளில எழுதும் போதும் அப்டீதான் நம்மளால முடியாத, நாம பின்பற்றாத பலதையும் எழுதுவோம். வெளியே இருக்கும் தவறுகளைச் சுட்டிக்காட்டுவோம், சமூக நீதி பற்றி பேசுவோம் இப்டி, எல்லாமே...இருக்கும்னு வச்சுகோங்களேன்

இப்டி எழுதி முடிச்சுட்டு எதிர்மறையா வாழ்றவங்க எல்லாம் ஆத்மார்த்தமா எழுதி இருக்க மாட்டங்களோன்றது என்னோட எண்ணம். ஏன்னு கேட்டிங்கன்னா எழுதும் நிலையில் மனம் கிளர்ந்து ஒரு பரிசுத்த நிலையில கருத்துக்கள் வருது அதை எழுதி முடிச்சுட்டு நாம படிக்கும் போதே அது நமக்கு புதுசாதான் தெரியுது.

எழுத்துக்களின் வலிமையும், இன்னமும் எழுதணும்ன்ற ஆசையும் சேர்ந்து ஒரு வித பொறுப்புணர்ச்சியைக் கொடுக்கணும்னு நான் நினைக்கிறேன். அந்த பொறுப்புணர்ச்சியில் விளையும் தெளிவுகள் ஒரு நல்ல மனுசனா நம்மள மாத்திக்கறதுக்கு உதவுது என்பதும் நிதர்சனமான உண்மை.

என் எழுத்துக்கள் எனக்குள் கொன்று போட்ட முரண்கள் ரொம்ப அதிகம். அது இன்னமும் இருக்குற அரக்க குணங்களை கொன்னு குவிச்சுட்டு மொத்தமா ஆள விட்டுச்சுன்னா டாட்டா...பாய்..பாய்னு நாம பெட்டிய தூக்கிட்டு போயிடப் போறோம். என்னிடம் குறைகள் இருக்கிறது. அந்த குறைகள் ததும்புகின்றன ததும்பல் எழுத்தாகி நான் இப்டி எழுதிட்டேன் எல்லோரும் என்னைய பாருங்க அப்டீன்னு தற்சமயம் வெளிக்காட்டிக் கொள்கிறேன். இது கொஞ்சம் உறுத்தலா இருக்கு...

அப்டீன்னா எழுதாம இருக்க வேண்டியதுதானேனு ஒரு எண்ணமும் வருது. இங்க எழுதுறதும் எழுதாததும் பிரச்சினையே இல்லை. எழுதிட்டு இந்த எழுத்துக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லைன்ற ஒரு மனோநிலையை நாம இன்னும் அடையலையேன்றது தான் ஆதங்கமா இருக்கு. சரி.. எழுதி எழுதி இந்த ஆதங்கத்தையும் தீத்துக்குவோம். ஏதோ ஒரு கணத்தில் தொடர்புகள் அறுப்பட்டுத்தான் போகும் அப்டீன்ற நம்பிக்கையோட தோணுறத எழுதிட்டே இருப்போம்னு ஒரு மனசு சொல்லுது.

பாத்தீங்களா....? நான் ஒரு மனுசன் ஆன உள்ள இருக்குற மனசு எவ்ளோ இழுத்தடிக்குதுன்னு. காலமும், சூழலும் மாற, மாற மனோ நிலைகளும் மனுசங்களுக்கும் மாறித்தான் போயிடுது. ஒரு ஆர்ப்பாட்டமான பிரயாணமா தொடங்கின இந்த வலைப்பூ வாழ்க்கையின் ஆரம்ப கட்டங்கள் எல்லாம் ரொம்ப கூட்டத்தோட, குதுகலாமா சந்தோசமா ஒரு வித எதிர்ப்பார்ப்புகளோட இருந்தோம். ஒரு கட்டத்தில் மெல்ல மெல்ல நிதானம் வந்து நம்மளை சூழ ஆரம்பிச்சுடுது. அதுக்கு காரணம் சூழலை உள்ளது உள்ள படி விளங்கிக் கொள்ளும் ஒரு பக்குவம் கிடைச்சதுன்னு வச்சுக்கோங்களேன்.

அப்டிப்பட்ட நேரத்துல ஒடுற ஓட்டத்த கொஞ்சம் ஸ்லோ பண்ணிகிட்டு மெளனமா சுத்தி இருக்கவங்கள பாக்குற மனோநிலை வந்துடுது. நானும் ஒரு கூட்டத்தின் அங்கமாவும் அதே நேரம் தனியாவும் உணர முடிஞ்சுது. ஒரு சினிமா படத்தை தியேட்டர்ல பாக்கும் போது திரையில் வர்ற காட்சியோடு லயிச்சுப் போயி கை தட்டி விசிலடிச்சு, சிரிக்கும் போது சிரிச்சு, அழும் போது அழுது, சண்டை போடுறப்ப கோபப்பட்டு....ஒரு மாதிரி நாமளும் திரையிலேயே வாழ ஆரம்பிச்சுடுவோம்....

டக்குனு ஒரு நிமிசம் எல்லாம் நிறுத்திட்டு....

திரையில இருந்து விலகி அடா...அடா...இது படம்னு ஒரு உணர்வு வரும், அப்டியே மெதுவா திரும்பி பக்கத்து சீட்ல இருக்க மனுசங்க..பின்னால படம் பாத்துட்டு இருக்க மனுசங்க, ஆப்பரேட்டர் கேபின், இப்டி அந்த சினிமா தியேட்டரின் சூழலையும் பாத்துட்டு, நம்மளையும் பாத்துகிட்டு திரையில சினிமாவையும் பார்க்கும் போது அப்போ கிடைகிறது வேற உணர்வு....

அப்டீதான் நான் இப்போ உணர்றேன். எழுத்து, எழுத்தின் மூலம் கிடைக்கும் நட்புகள், இப்டி இந்த ஒரு உலகத்துக்குள்ளயும் நின்னுகிட்டு வெளில இருக்குற நிதர்சனத்தையும் சேர்த்து வச்சு பார்க்கும் போது வேறு ஒரு மனோநிலை கிடைக்குது. எந்தவித ஆரவாரமும் அவசரமும் இல்லாமல் ஒரு வித சீரான வேகத்துல பயணிப்பதே சிறந்ததா படுது.

காலம் ஓடிட்டே இருக்கு...வாழ்க்கை கொண்டு வந்து இப்போ இங்க நிறுத்தி இருக்கு....! இன்னும் என்னவெல்லாம் இந்த காலம் சொல்லப் போகுதோ அப்டீன்ற ஒரு ஆர்வம் மனசு ஓரம் தேங்கிக் கிடந்தாலும், எல்லா விசயமும் தாண்டி முதுமையை அனுபவிக்கணும்ன்ற ஒரு ஆசை ஆயாசமா மனசுக்குள்ள ஒட்டிகிட்டும் இருக்கு.......

ஓட்டங்கள் எல்லாம் அனுபவமாகிப் போக ஒரு ஈசி சேர்ல சாஞ்சுகிட்டு வாழ்க்கையோட எல்லா கூத்தையும் மனதுக்குள்ள அசை போட்டுகிட்டு ஒரு தனிமையை உள்ளே சுகமா அனுபவிச்சுக்கிட்டு வாழலாமே, அப்டீன்ற ஏக்கம் தான் அதுன்னு மெதுவா உணர முடியுது.

பரோட்டோ சிக்கன் 10 வயசுல இருந்து பிடிக்குது...34 வயசு வரைகும் திரும்ப திரும்ப சாப்டுகிட்டே இருக்கோம்...சாப்ட்டு, சாப்ட்டு அதுல ஒரு திருப்திய அடைஞ்சு அதை அழகா கடந்து வந்துட்டம்னா...ஒரு நேரத்துல பாதி வாழைப்பழம் சாப்டுட்டு கம்முனு இருக்குற பக்குவம் வந்துடணும். அப்டி வராம எனக்கு சாகுற வரைகும் பரோட்டோ சிக்கன்னு சொன்னா உயிருன்னு சொல்லி அடம்பிடிச்சேன்னு வச்சுக்கோங்க...அப்போ எனக்கு ஆசை தீரலன்னு அர்த்தம்....அதோட இல்லாம ஒவ்வொரு தடவையும் நான் சாப்டப்ப அதை ஏதோ மேலோட்டமா செஞ்சு இருக்கேனே தவிர ஆத்மார்த்தமா செய்யலைன்னு அர்த்தம்.

ஆத்மார்த்தமா ஈடுபடுற காரியங்கள் சீக்கிரமே ஒரு நிறைவைக் கொடுத்துடும்ங்க..! நிறைவை எட்டாமலேயே இருந்தா, நாமா ஈடுபாடு இல்லாம இருந்திருக்கோம்னு அர்த்தம். அழகானதுதான் வாழ்க்கை ஆனால் அபத்தங்கள் நிறைஞ்சதுன்னு இன்னிக்கு மனசு ஓரமா படுது...

வாழ்க்கையின் தூரங்கள் அழைத்து சென்று கொண்டே இருக்குங்க...! வாழ்க்கை முழுதும் மனுசங்க...மனுசங்கன்னு......நிறைஞ்சு போயி இருக்காங்க...! சந்தோசமா நாம வாழறதோட சேத்து, சந்தோசமா எல்லோரையும் வச்சிக்கிட்டோம்ன்ற திருப்தில போயி சேர்ந்துட்டா முடிஞ்சு போச்சுங்க எல்லாம்...!

ஒவ்வொரு தடவை எழுதி முடிக்கும் போது நிறைவே இருப்பது கிடையாது. எதையோ சொல்ல வர்றேன் அதை சொல்றதுக்கு அனுமதி மறுத்துகிட்டே இருக்குது இயற்கை. தெளிவான வாழ்க்கை வாழணும் நிறைஞ்ச உறவுகளோட, திருப்தியா.....இதை எனக்கும், உங்களுக்கும், இந்த உலகத்துல இருக்குற எல்லோருக்கும் அசையாமல் ஆடிக்கொண்டிருக்கும் இந்த சக்தி ஓட்டம் கொடுக்கணும், கொடுக்கும்....அப்டீன்றது தீர்மானமான எனது வேண்டுதல்.

அழகான பயணத்தில் போய் கிட்டே இருப்போம்...........! என்ன, என்ன தோணுதோ அதை எல்லாம் பகிர்ந்துக்கணும்னு எனக்கு தோணுற வரைக்கும் எழுதிகிட்டே இருக்கேன்....., ஏதோ ஒரு வகையில என் எழுத்து உங்களை சந்தோசப்படுத்தி இருக்கு அப்டீன்றத உணர்றதே பெரிய நிறைவாயிருக்கும் எனக்கு அவ்ளோதான்....

மத்த படி....உங்களுக்கும், வீட்டிலுள்ளவர்களுக்கும் மற்ற நம் எல்லா உறவுகளுக்கும் எனது அன்பான வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகளை என் மனம் குவித்து எல்லாம் வல்ல பெருஞ்சக்தியிடம் வேண்டுகிறேன்....!

ரொம்ப பேசிட்டேன்.....! கேட்ச் யூ ஆல் லேட்டர்...!


தேவா. S


Monday, July 11, 2011

சதி....!


எழுத்துக்களை தேடவில்லை இப்போது என்னெதிரே பவ்யமாய் மண்டியிட்டுக் கிடக்கின்றன அவை. முன்னூறு என்றில்லை எந்நூறும் அவளுக்குச் சொந்தமானது அல்லவா....? இதில் முன் நூறு பின் நூறு என்று எதைப் பிரித்து அவளைச் சொல்ல...?

என் அசைவுகளின் மூலமெதுவென்று யாருமறிந்திருக்க வாய்ப்பில்லை. எனது வலிவுன் மூலம், சிவமாயிருக்கும் என்னை சக்தி கொடுத்து தாங்கிப் பிடித்திருக்கும் மூல சக்தி, ஆதி சக்தி அவள், ஆனால் பந்தப்படாமல் சலனமற்று எப்போதும் ஒதுங்கியே இருக்கிறாள். வாழ்வின் ஓட்டத்தில் நான் தடுமாறி நின்ற இடம் இரண்டு....

ஒன்று தாய்....

மற்றொன்று தாயுமான மனைவி....!

வார்த்தைகளும், வாழ்க்கைப் படிமங்களும் ஏற்றி வைத்த உணர்வுகள் உடனே வந்து சண்டையிடும் நீ எப்படி மனைவியை தாயெனலாம்? என்று ....உணர்வுகள் கொடுத்த விவரிப்புகளில் சூழல்களை மனதுக்குள் விதைத்தவள், என்னைப் பெற்ற தாயின் வலியினை எனக்கு காட்டியவள், வாழ்க்கையின் எல்லா சூழலிலும் குடும்பம் என்ற ஒற்றை சொல்லுக்குள் நின்று கொண்டு பாராபட்சமின்றி சுழலுபவள்...

தன்னின் வீடு மறந்து என்னின் வீட்டினை சுவீகரித்து என் தகப்பனுக்காய், தாய்க்காய் கண்ணீர் உகுத்து அவரின் உடல் நலனை பேணுபவள், என் சகோதரனை ஈன்றெடுத்த பிள்ளையாய் பார்ப்பவள், தான் கற்ற கல்வியை கர்வமாக்கிக் கொள்ளாமல் வாழ்க்கையாக்கிக் கொண்டவள், தன்னின் மெளனத்தாலேயே என் கர்வங்களை ஆணாதிக்கத் திமிரை செதுக்கிப் போட்டு விட்டு என் சப்தங்களை சூரசம்ஹாரம் செய்தவள்....

தாயுமானவள் தானே? பெருஞ் சக்திதானே....? போற்றலைக் கூட லெளகீக சராசரிகள் விமர்சிக்கும் என்று பொதுபுத்தியில் நான் கர்வம் கொண்டு கை கட்டி காணதது போல இருந்தாலும் என் மனம் இவள் நோக்கி எப்போதும் கை கூப்புகிறதே? என்னது மனைவியை வணங்குகிறாயா....? என்று குரல்கள் புறத்தில் கேட்டாலும் புறத்தை காலடியில் மிதித்துப் போட்டு அவளின் அன்பிற்கு முன்னால் மீண்டும் மீண்டும் மனம் குவித்து மண்டியிடுகிறதே மனது...!!!!

பெண்ணை சரிக்கு சமமாக நடத்துவேன் என்ற வாக்கியத்துக்கு பின்னாலேயே ஒளிந்து கிடக்கும் ஆணாதிக்க படிமம் நான் விட்டுக் கொடுக்கிறேன் என்ற கர்வம், ஆனால் அவளுக்கு பிடித்த மாதிரியெல்லாம் அவள் நடக்க, அவள் ரசித்து ரசித்து ஒவ்வொன்றாய் செய்ய எனக்கு சம கால சமூகம் விதைத்துப் போட்டிருக்கும் சில பெண்ணடிமைப் பற்றிய கருத்துக்களை அவளிடம் சமர்ப்பித்த போது கூட ஒரு புன் முறுவலோடு அதை அடித்து நொறுக்கியிருக்கிறாள்...

எனக்காக பார்த்து பார்த்து சமைப்பதும், அதை உண்பதை ரசிப்பதும், விடியலில் எழுந்து குளித்து வந்தவுடன் ஒரு டம்ளரில் முதலில் தண்ணீர் கொடுத்து பின் எனக்குப் பிடித்த டீயை கொடுத்து அதை நான் அமைதியாய் குடிப்பதிஅ ஓரக்கண்ணால் உள்வாங்கிக் கொண்டு அடுக்களையில் பாத்திரங்களோடு சடு குடு விளையாடி காலை உணவையும் மதிய உணவையும் இரு டப்பாக்களில் அடைத்துக் கொடுத்து விட்டு ஹேங்கரில் இருந்து சட்டையை எடுத்துக் கொண்டு வந்து கையில் கொடுத்து டைம் ஆச்சு..சீக்கிரம் கிளம்பித் தொலைங்கன்னு ஒரு அதட்டல் போட்டு விட்டு மகளை எழுப்பப் போகும் போதும்...

நான் ஸ்தம்பித்துக் இருக்கிறேன்!!!

எனக்காக ஒன்றும் நீ செய்ய வேண்டாம். நான் உன்னை ஆக்கிரமித்து கட்டாயப்படுத்தவில்லை. நீ... உனக்கு எது கன்வினியன்ட் நேரமாயிருக்கிறதோ அப்போது எழுந்து உன் தேவைகளைப் பார்த்தால் மட்டும் போதும் கணவன் மனைவி என்றால் சரி சமம்தான். ஊரெல்லாம் பெண்ணடிமை செய்யக் கூடாது என்று பேசிக் கொண்டு இங்கே ஒரு சோம்பேறிக் கணவனாய் எல்லாவற்றையும் நீ செய்ய அனுமதிப்பது கொஞ்சமல்ல நிறையவே உறுத்துகிறது என்றேன்....

அதற்கான பதிலாய் அவள் தொடுத்த சரத்தின் சாரம் என்னை உலுக்கித்தான் போட்டது. சம உரிமை கொடுக்கிறேனென்று எந்தவொரு ஆடவனும் சொல்லும் வார்த்தையிலேயே பழுதிருக்கிறது. உரிமை யாரும், யாருக்கும் கொடுக்க இயலாது. பரஸ்பரம் கணவன் மனைவி இருவரும் இருவரின் சந்தோசங்களை அனுமதித்து அதை ரசிக்க கற்றுக் கொள்ளும் இடத்தில் ஆண் என்ன? பெண் என்ன? எனக்கு உங்களுக்கு இப்படி எல்லாம் செய்யப் பிடிக்கிறது செய்கிறேன். உங்களை சந்தோசப்படுத்த வேண்டும் என்பதை விட இப்படி எல்லாம் செய்தால் நான் திருப்தியடைவேன் என்பது எனது எண்ணம். இங்கே எனக்கு எந்த வற்புறுத்தலும் இல்லை எனக்கு இப்படி இருப்பதில் சுகமாயிருக்கிறது....

இங்கே கணவன் மனைவியர் இடையே, நான் இதை உனக்கு விட்டுத் தருகிறேன், நீ எனக்கு அடகி விட்டுத் தா என்ற வியாபாரமே அபத்தமானது. எனது சந்தோசத்தை நீங்கள் தடுக்கவில்லை ரசிக்கிறீர்கள் நான் திருப்தி கொள்கிறேன். இயல்பை மீறி எது நடந்தாலும் அபத்தமாகிவிடும் தானே...?

இன்று சமைத்துப் போட்டு அதை நீங்கள் ரசித்து உண்ணுவதை உறுத்துப் பார்த்து நான் கொள்ளும் சந்தோசம் நாளையே மாறலாம், எனக்கு அலுவலகத்தில் சென்று வேலை செய்ய வேண்டும் என்ற எண்ணம் வரலாம்... அப்போது எனக்கு அதில் சந்தோசமிருக்கும் அதையும் இப்படியே ஏற்றுக் கொண்டீர்களேயானால் உங்களுக்குள் முரணில்லை என்று அர்த்தம்....

என்று அவள் பகின்று செல்வதற்கு முன்னால் மெலிதாய் புன்னகைத்து சென்றதின் பின்னணியில் பாரதியின் முறுக்கு மீசை நறுக்கென்று தெரிந்ததை மறுப்பதற்கில்லை. ஒரு கணவன் மனைவியை திருமணம் ஆனதில் இருந்து எதிர் பாலாய் பார்த்து இனக்கவர்ச்சியில் இருந்திருப்பான், பிள்ளைகள் பெற்ற பின் அவளை பெண்ணாகவே பார்ப்பான்......இப்படி எல்லா நிலையிலும் பெண்ணாக பார்த்து, பார்த்து, பாலினம் முன் வந்து அரசாட்சி நடத்திக் கொண்டே இருக்கும்

ஆனால்....

அவள் எனக்கு ஒரு பெண்ணாகவோ, மனைவியாகவோ, அல்லது உறவாகவோ தெரியவில்லை மாறாக துணையாக தெரிந்தாள். ஆமாம் எனது துணை என்று வார்த்தையால் சொல்லுமிடமல்ல இது, எனது துணை என்று ஏதோ எழுதி விட்டு போகும் இடமில்ல இது ...எனக்கு அவள் துணைய என்று நான் சொல்லும் இந்த இடம் ஒரு " சாசனம் " அத்தனை அர்த்தங்களை உள்வாங்கி உணர்வுகளை இங்கே கொட்டுகிறேன்....!

அன்பு செலுத்துவதால் மட்டுமல்ல, காமம் கொண்டதால் மட்டுமல்ல, பிள்ளை பெற்றதால் மட்டுமல்ல இவை எல்லாம் கடந்து என் இன்னல்களில் எல்லாம் எனக்குத் துணையாக நின்ற பெருஞ்சக்தி அவள். நான் நிறைய பேசுவேன்...என் வார்த்தைகள் எல்லாம் அவளைக் கடந்து செல்லும் போது தலை குனிந்துதான் செல்லும். நான் நிறைய எழுதுவேன்...என் எழுத்துக்கள் எல்லாம் அவளின் மெளனத்தில் இருந்து பூத்த பூக்களாய்த் தானிருக்கும்.

கடவுளையும், காமத்தையும் உலகத்தையும் நான் கம்பீரமாக பார்க்கிறேன் என்றால், எனது வார்த்தைகளில் திமிர் இருப்பது உண்மையானால், எனது விசால பார்வைகள் புறப்பட்ட இடம் அவள் கொடுக்கும் உறுதி, அவள் ரசித்து என்னை சுதந்திரமாய் விடும் பேராண்மை....! என்னடா பேராண்மை என்ற வார்த்தை ஆணுக்குரியதாயிறே என்கிறீர்களா....இங்கே அதை அவளுக்குரியதாய் நான் ஆக்கிக் கொள்வதில் பெருமிதம் கொள்கிறேன்.

ஒரு கோப்பை தேநீரை அவளோடு அமர்ந்து எதுவும் பேசிக்கொள்ளாமலேயே அமைதியாக அருந்தும் தருணங்கள் அற்புதமானவை. மனைவி என்ற இச்சை கடந்து எனது உயிர்துணையாக தோள் கொடுத்து நிற்கும் சாரதி அவள். ஆண் பெண் என்ற இடமழிந்து என்னை ஆக்கிரமித்து இயங்கவைக்கும் பெருஞ்சக்தி அவள்....

பிரியுமிடமென்று ஒன்று வரும் தேவி...
அன்று உன்னை விட்டு நான் செல்லவும்
என்னை விட்டு நீ செல்லவும் அனுமதிகளின்றி
கை கோர்த்து இருவரின் பாதங்களும்....
ஒன்றாய் முத்தமிடட்டும் மரணமென்ற ஒன்றை...!


அடிக்கடி சொல்வேன்...! ஆதரவாய் சிரிப்பாள். என்னை முழுதாய் ஆக்கிரமித்து போட்டிருக்கும் ஒரு சக்திக்கு எனது சக்தி உள்ளவரை கடன்பட்டிருக்கிறேன். இந்த எழுத்துக்கள் எப்போதும் ஈடாகாது....

வார்த்தைகளுக்குள் அடக்க முடியாத அர்ப்பணிப்புகளை ஒவ்வொரு கட்டுரையும் எனது ஒவ்வொரு செயலும் அவளுக்கான அர்ப்பணிப்புகளாக்கிக் கொள்கிறேன்...! வழிகாட்டுபவரை குரு என்று சொல்லலாம்....அர்த்தங்களால் என் வாழ்க்கைக்கு வழிகாட்டும் அவளும் எனக்கு குரு தானே?

வாழ்க்கையின் தொடர்ச்சியை ஒரு சிறு கட்டுரைக்குள் அடைக்க முடியாது...அது நீண்டு கொண்டே இருக்கும்...!!!

தற்காலிகமாக....கட்டுரையை நிறுத்திக் கொள்கிறேன்...வாழ்க்கையை தொடர்ந்தபடி....


தேவா. S

Tuesday, July 5, 2011

நிதர்சனத்தின் தீண்டல்!கொழுந்து விட்டெரியும்
ஆளவரமற்ற தார்சாலையின்
அக்னிச் சூட்டில்
பாதங்களின் பொறுக்க
முடியா ஓட்டத்தில்
எட்டிப் பிடிக்க முடியாத
இலக்குகளின் கோரப்பற்கள்
முன்னின்று பயமுறுத்தும்
விழித்தெழுந்த ஒரு
நள்ளிரவு கனவு விடியல் வரை
துரத்தி கொண்டு வந்துவிடும்
நிஜங்களோ கனவை விட கொடுமையாய்!

யாதார்த்த போர்வையைச்
சுற்றிக் கொண்டு எப்போதும்
தினசரி நிகழ்வுகளுக்குள் அகப்படாத
ஒரு குருட்டு காதலியின்
கிழிந்துபோன உடைகளினூடே
பரவிக் கிடக்கும் ஏழ்மையை
பார்க்க சகிக்காது
இறுக மூட நினைக்கும்
கண்கள் மூடினாலும்
காட்சிப் படுத்துகின்றன
என் ஏழ்மைக் காதலை!

விடம் ஏறிப்போன நாவுகளுக்கு
அழுகிப் போன மூளைகள்
பரவவிடும் கட்டளைகளில்
இறுமாந்து கிடக்கும்
திடப்பட்ட மனிதர்களின்
கேலியும் பேச்சும்
சீண்டலும் சீறலும்
முற்றிலும் அன்னியப்பட்டதாய்
பார்த்து சகித்து ஒதுங்குகையில்
முகத்திற்கு முன் நடக்கும்
அவலட்சண கூத்துக்களை
காறி உமிழ்ந்து கலைக்க
நினைக்கையில் பாவமாய்
புத்திக்குள் எட்டும் இந்த...
அவலங்களின் ஜனிப்பு மூலங்கள்!

விட்டு விலகிடும் ஆசையில்
கட்டி இழுத்துக் கொண்டிருக்கும்..
மூடனாய் அழுந்தி இறக்கும்
அற்ப பதர்களின் ஆட்டத்துக்குள்
ஒரு ஓட்டமாய் அமிழ்ந்திருக்கும்
உயிரின் மூலமாய் நின்று சிரிக்கிறது
ஜென்மங்களாய் தொடரும்...
என் ஊழ்வினை!


தேவா. S

Sunday, July 3, 2011

நம்ம மண்ணுதேன்...!!!!
எப்டி பட்ட நாள் எல்லாம் மிஸ் பண்ணியிருக்கோம்...அதாவது இழந்து இருக்கோம்னு நினைக்கிறப்ப ச்ச்சும்மா நம்ம மேலயே வெறுப்பா இருக்குல்ல...? இன்னமும் அனுபவிக்கிற பாக்கியசாலிகள் இருக்கத்தான் செய்வாங்க..!

லீவுக்கு ஆயா வீட்டுக்கு போவோம்...அம்மாவோட அம்மாவ ஆயான்னு கூப்பிடுறது எங்க வழக்கம் (அட உங்க வழக்கமும் அதுவா அப்போ....பிஞ்ச்...பிஞ்ச் பிஞ்ச்!!!!). முழுப்பரீட்சை முடிஞ்ச உடனே....ஊருக்கு கெளம்புறதே ஒரு அலாதியான விசயம். பெரும்பாலான நம்ம சனத்துக்கு அப்பாவோட வகையிறக்கள விட அம்மாவோட வகையிறாக்கள் மேல பிடிப்பு ஜாஸ்தியா இருக்கும். இதுக்கு காரணம் என்ன என்ன பாலிடிக்ஸோ அது நமக்கு வேண்டாம் இப்ப.... !

பட்டுக்கோட்டையில இருந்து பஸ் ஏறி...காரைக்குடி வரைக்கும் போற ஏற்படுற உணர்வுகள் இருக்கே... அத வார்த்தைகளுக்குள்ள கொண்டு வர முடியாது. தஞ்சாவூர் ஜில்லாவுலதான் அப்பாவுக்கு வேலை....சொந்த ஊரு சிவகங்கைச் சீமை.

நம்ம பழக்க வழக்கம் எல்லாம் காவிரித்தாயோட மடியில ஆனா பூர்வீகம் வானம் பார்த்த சிவகங்கையோட செம்மண். இரண்டு வேறு கலாச்சாரம், மனிதர்கள், பழக்க வழக்கங்கள்னு சின்ன வயசுல இருந்தே அந்த மாற்றத்தை பாத்து பாத்து ஆச்சர்யமா புத்தி பல கேள்விகள கேக்க ஆரம்பிச்சுது!

இந்த ஊரு மட்டும் பச்சை பசேல்னு ச்சும்மா ஜில்லுனு இருக்கே, செருவா விடுதி, ஆவணம் தாண்டி அறந்தாங்கி நுழையறதுக்கு முன்னால கொஞ்சம் கொஞ்சமா மண்ணு மாறுறதும் மரம் மட்டைங்க மாறுறதும் மனுசங்க மாறுறதும் ஏன்னு.....போட்டு நெஞ்ச அரிச்சுகிட்டே இருக்கும் ஒரு கேள்வி?

வெயிலு காலத்துல வீட்டுக்குத் தெரியாம இடுப்புல துண்ட கட்டிகிட்டு ஆத்துல போய் பசங்க கூட கண்ணு செவக்குற வரைக்கும் ஆட்டம், பச்சை பசேல்னு வயக்காட்டுக்குள்ள திபு திபுன்னு ஒடியாறதும்னு தஞ்சாவூர் ஜில்லா எப்பவுமே ஒரு குளுமைதான். தென்னந்தோப்பும் வாழத்தோப்பும் மாந்தோப்பும் பாத்து பாத்து பழக்கப்பட்டு..

அறந்தாங்கி தாண்டி பஸ் போகும் போதே கருவ மரமெல்லாம் முள்ளோடோ நின்னுகிட்டு இருக்கறத பாக்குறப்ப கொஞ்சம் வருத்தமாத்தான் இருக்கும். அஞ்சாவது ஆறாவது படிக்கிற காலத்துலயே நினைச்சுப் பார்ப்பேன்.

தண்ணியில்லாமத்தான் இந்த நிலமெல்லாம் வரண்டு போயி கெடக்குது, தண்ணி வரத்து இருந்துச்சுன்னா மண்ணோட தரம் மாறி செழிப்பா போயிறுமே, தஞ்சாவூருக்குள்ள ஓடுற ஆத்த இங்குட்டு கொண்டு வந்தா என்னனு எல்லாம் கிறுக்குத்தனமா யோசிப்பேன், அறந்தாங்கில இருந்து கண்டனூர் வர்ற வழி எல்லாம் முந்திரிக் காடா இருக்கும் அந்த மண்ண பாத்தா செவ செவன்னு இருக்கும்.

தஞ்சாவூர் மாவட்டத்துக்குள்ள ஊருங்க எல்லாம் அடுத்தடுத்து இருக்கும்...ஆனா சிவகங்கங்கை மாவட்டம் முழுசும் ஊருங்க தள்ளித் தள்ளி இருக்கும் இடையில காடுகளாத்தான் இருக்கும் அதுவும் சரளைக் கல்லுங்க இருக்குற செம்மண்னுதான்...

அந்த அந்த ஊரு மண்ணுக்கேத்த மாதிரி மனுசங்க குணமும் அமைஞ்சு போயிடும்கிறது அப்போ எனக்குத் தெரியாது. ஆனா இனிக்கு யோசனை பண்ணிப் பாக்குறப்ப பளிச்சுனு மனசுக்குப் படுது

பொதுவா தஞ்சாவூர் பக்கம் இருக்குற ஆளுங்க எல்லாம் ஒரு வித அமைதியத்தான் இருப்பாங்கா..ஆனா உள்ளுக்குள்ள யோசனை காத தூரம் இருக்கும் சட்டு சட்டுனு மனுசங்கள பாத்து எடை போடுறது அவுங்களுக்கு கை வந்த கலை.

மூணு போகம் நெல்லு வெளஞ்சு, கரும்பு, தென்னைன்னு எல்லாமே பாஸிட்டிவா போன ஒரு வாழ்க்கை வாழ்றவங்களுக்கு ஆர அமர யோசிக்க நேரம் இருந்திருக்கும்.....அதே நேரம் ஒரு மனசுக்குள்ள கர்வமும் இருக்கும் எப்பவுமே....

ஆனா...

தெக்குச் சீமைன்னு சொல்ற சிவககங்கை, இரமநாதபுரம் மாவட்டத்த சேந்த ஆளுங்களுக்கு ஒரு வித கோபம் எப்பவுமே இருக்கும். அது திட்டமிட்டு சேத்த கோபமாயிருக்காது....வானம் பாத்து, பாத்து மழை தண்ணி ஏமத்திட்டு போறப்ப சாவியா போகுற பயிருகள பாத்து வத்திப் போயி கிடக்குற கண்மாய பாத்து ஒரு கோபத்தோடயே இருப்பாங்க...

தீயா கொளுத்துற வெயிலுக் காட்டுக்க்குள்ள சுத்தியும் கருவ மண்டிக்கிடக்குற ஊருக்குள்ள ஒத்த கேணியில ஊரே தண்ணி எறைக்குற மாதிரியான வாழ்க்கைமுறையில என்ன சுபிட்சம் வந்துடப் போகுதுன்னு நீங்களே சொல்லுங்க?

இதுக்காகவே அந்த காலத்துல சிங்கப்பூர், மலேசியா, பர்மானு ஆளுக போயி அங்க இருந்து சொத்து சேத்து வந்து இருப்பாங்க...! முரட்டு மீசையும், பெரிய கிருதாவும், காது வளத்த அப்பத்தாக்களும் கோவம் ஜாஸ்தி வர்ற ஆளுகதான் ஆனா...சரளை மண்ண வெட்டும் போது கரடு முரடா வெட்ட விடாம கோவம் காட்டும்...

வெட்டுப் பட்டு ஆழமா தோண்டிப் பாத்தீங்கன்னா..வெள்ளை மண்ணு சல சலன்னு வழிய விட்டு வெலகி நிக்கும். அப்டித்தான் மனுசங்க வாழ்க்கை முறையும் சூழ் நிலையும் கரடு முரடா இருந்தாலும், அடி மனசுல ஈரம் அதிகம் இருக்குற சனங்கதான் எல்லோரும்

அதனால்தான் முரட்டு மீசை வச்சிருக்கிற ஆளுக கூட பாசத்துக்கு கட்டுப்பட்டு "என்ன பெத்த அய்யா.....என்ன பெத்த ராசானு" கதறி அழுகுற மாதிரி சம்பவங்களையும் சர்வ சாதாரணமா நெறய பாக்கலாம்...! என்ன பண்றது வசதி வாய்ப்புகளை அவங்களுக்கு இயற்கையே தடுத்துப் போட்டிருந்தாலும்...

ஊரு ஊருக்கு ஊருணின்னு சொல்லக் கூடிய குளங்க்ளையும், கம்மாய்ன்னு சொல்லக்கூடிய ஏரிகளையும் நிறைய கட்டிப் போட்டு இருப்பாங்க. ஒரு அடை மழை காலத்துல எல்லா ஊருணிலயும் கம்மாயிலயும் தண்ணி ரொம்பிப் போயிரும்.

அட இப்படியே கலச்சார விவரணைக்குள்ளேயே போய்ட்டேன் பாருங்க. மண்ணுக்கேத்த மாதிரி மனுச மனசும் உடம்பும், மாறும்னு சொல்ல வந்தேங்க.....! முழுப் பரிட்சை லீவுக்கு ஆயா வீட்டுக்குப் போனப்ப என்ன எல்லாம் கூத்தடிச்சேன்னு சொல்ல வந்த படுவாதான் நான்........அதை விட்டுப் புட்டு எங்க எங்கயோ ஊரச் சுத்திகிட்டு இருக்கேன் பாருங்க..!

மெதுவா பேசுவோம் அது பத்தி எல்லாம்...இம்புட்டு படிக்கிறதுக்கே நீங்க உங்க வேலைய விட்டுப் புட்டு வந்து இருக்கீங்க...! எங்க போக போறோம் இங்க தான இருக்கப் போறோம் சாவகாசமா பேசுவோம்.

நமக்குன்னு விதி விலக்கு இருக்கா என்ன? தொடர்ச்சின்னு போடணும், பாகம் போடணும், அப்டி ஆரம்பிக்கணும் இப்டி முடிக்கணும்னு.....அட சொந்தஞ் சோலிகளுக்குள்ள என்ன முறைப்பாடு.....

மெதுவா பேசுவோம்...! அடாடா ஆரம்பத்துல இருந்து கேக்கணும்னு இருந்தேன் மறந்தே போய்ட்டேன் பாருங்க....

எல்லோரும் நல்லா இருக்கீங்களா? .............வீட்ல எல்லாம் எப்டி இருகாவ்வோ? (தஞ்சாவூர் ஸ்டைல்) .......! ஆத்தா அப்பு எல்லாம் சும்மா இருக்காகளா (சிவகங்கை பக்கம்...இப்டித்தேன்).........!

பேசிட்டே இருப்பேன்...........வண்டிய இழுத்து இங்க நிப்பாட்டிக்கிறேன்..!

அப்போ வர்ர்ர்ர்ர்ட்ட்டா!


தேவா. S-