Pages

Saturday, January 28, 2012

வழிப்போக்கன்....!ஒன்றை எழுதி தீர்ப்பதற்குள் பிராணன் போய் விட்டுதான் மீண்டும் வருகிறது. மூளையின் நரம்புகளுக்கு இடையில் சாக்கு தைக்கும் கோணி ஊசியை வைத்து இந்த பக்கம் குத்தி அந்தப் பக்கம் இழுப்பது போன்ற ஒரு வித தையல் வேலைதான் எழுத்து. முழு மூச்சாக மனம் குவித்து எதையாவது எழுத வேண்டும் என்று கணிணியில் அமர்ந்த அந்த நொடிக்குப் பின்னரே முடிச்சுக்கள் மெல்ல மெல்ல அவிழ்ந்து கொள்கிறது.

எழுதுதலை ஒரு பெண்ணோடு சல்லாபித்துக் கூடுவதற்கு சமம் என்று கூறலாமா இல்லையா என்று எனக்குத் தெரியாது ஆனால் நான் அப்படித்தான் கூறுவேன். உச்சத்தில் துடி, துடித்து தன்னை மறக்கும் பொழுது அது சில மணித் துளிகள்தான் என்றாலும் அதற்கு ஈடான ஒரு அனுபத்தை ஒரு கட்டுரையோ அல்லது கதையோ எழுதி முடிக்கும் வரை நான் அனுபவிக்கிறேன்.

மிகச் சிறந்த ஆக்கங்களை தருவிக்கும் ஒருவனுக்குத்தான் இப்படியான உணர்வு வரும் என்று சொல்வதற்கில்லை. உள்ளுக்குள் இருக்கும் வலியை இறக்கி வைக்கும் எவனொருவனுக்கும் இது சுகம்தான்...!

ஆமாம் கூடலின் உச்சத்தை ஒத்த சுகம்.

உள்ளுக்குள் படிந்து கிடக்கும் கறைகளையும், சமுதாயத்தால் ஏற்பட்ட வடுக்களையும், குற்றம் என்று அறிந்தே செய்த செயல்களுக்கான பிராயச்சித்தங்களையும், ஆன்ம தேடலின் உச்சத்தையும், சமூகத்திற்கு செய்ய நினைத்தும் இயலாமல் போகும் ஆற்றாமையையும்..., உருவம் கடந்த காதலின் உன்னதத்தையும்...

இறக்கி வைக்க இந்த எழுத்து உதவியாயிருக்கிறது.

எழுத்து எழுதுபவனுக்கு சுகம். சில நேரங்களில் வாசிப்பவனுக்கும் சுகமாய் இருக்கிறது. பல நேரங்களில் அது எரிச்சலாகவும் போய் விடுகிறது. எப்படி பார்த்தாலும் எழுதுபவன் சுகமாய்த்தான் உணர்வான்.. இந்த சுகத்தை ருசித்தவன் யார் என்ன சொன்னாலும் ஏதோ ஒரு மூலையில் எப்போதும் கிறுக்கிக் கொண்டுதான் இருப்பான்.

ஏதோ ஒன்றை வாசித்து விட்டு அதன் மையக் கருவினை மனதிலாக்கிக் கொண்டு அந்த செய்தியை தான் பார்க்கும் விதம் இப்படி என்று எழுத்துக்களை கோர்த்து கொண்டு வருவது மிகச் சுலபமானதுதான் என்றாலும் எழுதும் அந்த செய்தி வலுவானதாய் அடிமனதை ஓங்கி அறைந்து அந்த வலியை உள்ளுக்குள் பரவவிட்டிருக்க வேண்டும். வெறுமனே மனம் போடும் உணர்ச்சிக் கூச்சலைக் கேட்டு விட்டு அதை எழுத்தாக்கும் போது அங்கே படைப்பு முழுமை பெறுவது கிடையாது.

எந்த ஒரு செய்தியும் இல்லாமல், எழுத ஒரு புறக் காரணமுமின்றி உள்ளுக்குள் ஏற்படும் உணர்வுகளின் மாற்றங்களை அழுந்தப் பிடித்துக் கொண்டு உயிரால் உயிர் தொட்டு வாஞ்சையோடு அதை எழுதும் தருணங்கள் மிக அற்புதமானவை.

இருக்கும் ஏழு நிறங்களையும் தான் வரையும் ஓவியத்திற்குள் கொண்டு வர முயலுவது ஒரு பழக்கப்பட்ட புத்தி அல்லது தனக்குத் தெரிந்த வர்ணங்களைக் கூட்டிக் குறைத்து ஓவியத்தை படைக்கும் ஒரு தற்சார்பான புறம் சார்ந்த ஒரு முயற்சி. இதற்கு மாறாக ஒருவன் தனது கற்பனையில் தோன்றிய ஒரு புது வர்ணத்தை, இது வரை இவ்வுலகம் கண்டிராத நிறத்தைக் கொண்டு இயல்புகளைக் கடந்த ஒரு உருவமற்ற ஓவியம் வரைகிறான் என்றால்....

அது அவனின் கற்பனா உலகின் சஞ்சரிப்புகளை அனுபவமாக்கி, அனுபவத்தை மூளைக்குள் உணர்வாய் கிரகித்து அந்த கிரகிப்பினை முற்றிலும் புற உலகு சாராத ஒரு ஓவியமாக்குகிறான். அந்த ஓவியத்திற்கு ஒரு அர்த்தமும் இருக்க முடியாது. அது எந்த உருவத்தையும் சாரமல் இருக்கும். அது இந்த உலகோடு சம்பந்தப்பட்டது அல்ல...சரசரி மனிதக் கண்களுக்கு அது வெறும் வர்ணக் கலவையாய் ஏதே ஒரு பைத்தியக்காரனின் வேலையாத்தான் தெரியும்...

ஆனால் அது ஒரு படைப்பாளியின் மிகப் புதிய யாருமே செய்திராத ஒரு படைப்பு. அதன் ருசியினை படைத்தவன் அறிவான்....! அந்த வர்ணக்கூட்டு அவன் புத்தியிலிருந்த போதும் அதை அவன் படைத்து முடித்த போதும் அவன் கொண்டிருந்த சந்தோசம் கூடலின் உச்சத்தில் ஒரு சில மணித்துளிகள் பெறும் சுகத்தை விட...கோடாணு கோடி முறை அலாதியானது.

பெரும்பாலும் எல்லோருக்கும் புரியும் அல்லது எல்லோரும் கை தட்டி பாரட்ட வேண்டும் என்ற நிலை கடந்து ஒருவன் தன்னுள் ஏற்படும் உணர்வு பரிமாற்றங்களை, உடல் கடந்த சூட்சும அனுபவங்களை எழுத்தாக்கும் போது அது அவனைப் பூரணப்படுத்துகிறது.

பல நேரங்களில் எழுதிக் கொண்டிருக்கையில் புற உலகு அறுபட்டுப் போகிறது. உலகு சார்ந்த விடயங்கள் அற்பமாகிப் போகின்றன. எழுத்தினூடே குறுக்கிட்டு நலம் விசாரிக்கும் மனிதர்களும், சில தொலை பேசி அழைப்புகளும் சட்டென புத்தி மாற்றும் சில நிகழ்வுகளும் என்று வரும் போது.. ச்ச்சே....உங்களுக்குத் தெரியுமா நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்று...? என்னை விட்டு விடுங்கள் நான் இல்லை என்று தயவு செய்து எண்ணிக் கொள்ளுங்களேன் என்று கெஞ்சத்தான் தோன்றுகிறது.

வாழ்க்கையின் ஓட்டத்தில் சக மனிதர்களில் பெரும்பாலனவர்கள் நம்மை மதிக்க, நாமும் லெளகீகத்தில் நகர பொருள் இன்றியமையாததாகி விடுகிறது. என்னை இந்த சுழற்சி இன்றி விடுவிக்க ஏதேனும் ஒரு சக்தி உதவுமா என்று கூட சில நேரம் ஏங்கியும் போய் விடுகிறேன்.

ஒரு மழையை ரசிக்கவும், வெயிலை உணரவும், மாலை வேளையின் ரம்யத்தை உள்வாங்கிக் கொள்ளவும், அதிகாலையின் குளுமையை உணரவும், பட்டாம் பூச்சியை பரவசமாய் பார்க்கவும் கூட பொருளாதார தன்னிறைவு வேண்டும் என்று லெளகீகம் கண்டிப்பாய் சொல்கிறது.

லெளகீக பந்தங்களில் இருந்து கொண்டு வாள் எடுத்து உடலாய் நின்று ஒவ்வொரு பிரச்சினையையும், கபட மூளைகள் கொண்ட மனிதர்களையும், போட்டியையும் பொறாமையையும் வெட்டி வீழ்த்தி விட்டு சற்று திரும்பிப் பார்த்தால் முழுமையாய் வாழ முடியாமல் வாழ்க்கையில் இழந்து போனதும் மிகுதியாய் இருக்கிறது. ஏனென்றால் பொருள் தேடி ஓடும் ஓட்டம் ஒரு இலக்கு நோக்கிய நகர்வு.., அது ஒரு புலிப்பாய்ச்சல், இரைதான் கண்ணுக்கு தெரியுமே அன்றி... சூழலும், இருப்பும் அங்கே உணர முடியாத ஒரு மிருக நிலை அது.

புறம் நோக்கிய வாழ்க்கையை தொட்டு விட்டால் அது விடாது ஒரு முரட்டுக் குதிரையாய் நம்மை இழுத்துக் கொண்டு வெறித்தனமாய் ஓடி, ஓடி எங்கோ கொண்டு போய் எது எதுவோ நமது இலக்கென்று காட்டி, யார் யாரோ எதிரிகள் என்று தீர்மானித்துக் கொடுக்கிறது...

சட்டென்று அகம் நோக்கி திரும்ப அப்போது சாத்தியமே இல்லாமல் போகிறது. எழுத்து என்பதும், உணர்வு, அனுபவித்தல் என்பதும் கருங்கல்லில் ஆணி அடிப்பது போல கடினமாகிப் போகிறது. இரண்டையும் சரி சமமாய் அங்கே, இங்கே.. இங்கே.., அங்கே என்று ஓடி ..ஓடி.. அகம்.. புறம்....புறம்.. அகம்....என்று அலைந்து அலைந்து மனம் சமப்பட்டு....

இரண்டும் குவிந்த ஒரு இடத்தில் மெலிதாய் பிடிபடுகிறது இதுதான் வாழ்க்கை. இதுதான் முழுமை. இங்கேயே இருக்க வேண்டும் என்ற சூழல் இல்லாமல் இங்கேயே இருப்பவனும் முட்டாள்...

அங்கேயே இருக்கவேண்டும் என்ற சூழலும் நிபந்தனையுமின்றி அங்கேயே கிடப்பவனும் முட்டாள்...!

சமப்பட்டுக் கிட.....!

மிருகம் போல போரிடு ஆனால் ஒரு வண்ணத்துப் பூச்சி பூக்களைப் புணர்வதைப் போல மென்மையாயிரு...! ஒரு இராட்சசனாய் வாழ்க்கையை எதிர் கொள் ஒரு சாதுவாய் அதைக் கவனி....!

இப்படித்தான் நகர்கிறது பொழுதுகள். எழுதி எழுதி வைத்துக் கொள்கிறேன். வேண்டும் என்று யாராவது கேட்கும் பொழுது கொடுக்கலாம்...என்று தீர்மானித்தும் இருக்கிறேன். கூவிக் கூவி விற்பதையும், கூச்சல் போட்டு நான் யாரென்பதையும் ஒரு போதும் கூறப்போவது இல்லை....

ஏனேன்றால்..நான் ஒரு வியாபாரி அல்ல....

வழிப்போக்கன்....!


தேவா. SThursday, January 26, 2012

இசையோடு இசையாக..தொகுப்பு 3 !

புத்துணர்ச்சி வீசும் புதிய நாளை சூரியனின் வருகைக்கு முன்னாலேயே எழுந்து ஆழ சுவாசித்து ஆரத்தழுவி அந்த அற்புத பொழுதின் குளுமையை உடலுக்குள் வாங்கி...புத்தியின் சூடு தணிய இரவு உறக்கத்தில் அயர்ச்சியில் கிடந்த மூளை தன்னை உலுக்கிக் கொண்டு அன்று பிறந்த குழந்தையைப் போல அதிகாலையை ஆச்சரியாமாய் நோக்கும் தருணம் சுகமானது....

நகரத்து வாழ்க்கையில் மறுக்கப்பட்டுப் போய்விடும் பல அற்புதங்களை கிராமத்துக் காலைக்கு பிரபஞ்சம் ஆசிர்வாதம் செய்து கொடுத்திருக்கும்.... ஆடு, மாடு, நாய் போன்ற் மனித வாழ்க்கையோடு ஒன்றிப் போன விலங்குகளும், சேவல், கோழி, காகம், கிளி,குருவி, காடை,கவுதாரி, கொக்கு, மடையான், நாரை, சிட்டுக்குருவி, மரங்கொத்தி, குயில் போன்ற பறவைகளும் பிரபஞ்ச ஓட்டத்தில் விடியலை ருசிக்க எழுந்து கடவுளின் சாயலை தரிசித்துதான் விடுகின்றன.

மெல்ல நகர்ந்து வயல் வெளிக்குள் நுழையும் பொழுதில் இரவு முழுதும் புற்களோடு சல்லாபித்த பனித்துளிகள் இன்னும் சற்று நேரத்தில் சூரியனின் வருகைக்குப் பின் கிளம்ப இருக்கிறோம் என்ற தகவலை சிரித்துக் கொண்டே சொல்ல... குளிர்வான இரு ஊதக்காற்று உடல் தடவி நாடி நரம்புகளின் அயற்சிகளை எல்லாம் சுகமாய் நீவி விட்டு எனக்கு வேலை நிறைய இருக்கிறது என்று சொல்லாமல் சொல்லி விட்டு போய்க்கொண்டே இருக்கும்...

ரோசா, ஆவாரம்பூ, அரளிப்பூ, காட்டு ஆமணக்குப் பூ, பூவரசம் பூ, காட்டு மல்லி, பட்டு ரோசா, டிசம்பர் பூ, கனகாம்பரம், கொடி மல்லி, கொடியிலே கிடக்கும் பூசணிப் பூ.. சூரியனை விட நாங்க ரொமப் கலராக்கும் என்று சிரிக்கும் செவ்வந்திப் பூ.....என்று எல்லாமே புது மணப் பெண்ணாய் மெல்லிய காற்றில் ஆடிக் கொண்டு காதலை இந்த பிரபஞ்சமெங்கும் பரப்பிக் கொண்டிருக்கும்....

இப்படியாக எனக்குள் விரியும் காட்சிகளை புத்திக்குள் நிறைத்துப் போட்ட ஒரு அற்புதமான இசையையும் பாடலையும் நீங்களும் கேட்டுப் பாருங்கள். இளையராஜாவோடு கூட்டு சேர்ந்து மனதை கொள்ளையடிக்கும் வேலையைச் சரியாக செய்திருக்கிறார்கள் வைரமுத்துவும், ஜானகி அம்மாவும்.....

" வானில் தோன்றும் கோலம்
அது யார் போட்டதோ
பனி வாடை வீசும் காற்றின்
சுகம் யார் தந்ததோ
வயதில் தோன்றிடும்
நினைவில் ஆனந்தம்
வளர்ந்தாடுது இசைபாடுது
வழிந்தோடுது சுவைகூடுது "


மயக்கும் காலையைப் பற்றிய அற்புதமான நினைவுகளோடு இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாய் அமையட்டும்...!

தேவா. STuesday, January 24, 2012

மெளனமாய் ஒரு காதல்...!மீட்டெடுக்க முடியாத
மெளனத்திற்குள் தள்ளி
எனக்குள் ஊற்றெடுக்கிறது
ஒரு காதல்...!

சப்தமில்லா அதிர்வுகளை
காற்றில் பரவ விட்டு
கரைந்து போன கனவுகளை
அவ்வப்போது உரசி செல்லும்
நினைவுகளை பரிசளித்து விட்டு
காணாமலேயே போனாள்...
என் காதலி...!

மறந்து விட்டேன்
என்றிருக்கையில் கனவுகளில்
வந்து கண் சிமிட்டுகிறாள்,
காதலென்ற உணர்வு ஊற்றி
நெஞ்சு நிறைக்கிறாள்,
விழித்துக் கொண்டே...
நான் காணும் கனவுகளில்
எப்போதும் என் விழித்திரையில்
காட்சியாய் விரிகிறாள்!

இறுக்கமான நிசப்தங்களில்
காதோரம் வந்து
பெயர் சொல்லி கிசுகிசுக்கிறாள்,
பதறி நான் தேடுகையில்
புத்திக்குள் கை கொட்டி சிரிக்கிறாள்...;

சொல்லாமல் கொள்ளாமல் போனாலும்
முழுதும் இல்லாமலேயே ஆனாலும்
இருக்கத்தான் செய்கிறது
மீட்டெடுக்க முடியாத
மெளனத்திற்குள் தள்ளி விடும்
ஒரு காதல்!


தேவா.  S


Saturday, January 21, 2012

இசையோடு இசையாக..தொகுப்பு 2 !
பிறப்பு மனித வாழ்வின் முதல் முடிச்சு. தாய் அந்த முதல் முடிச்சை சுமக்கும் ஜீவன். படைக்கும் சக்தியைக் கொண்டிருப்பவன் யாரென்ற விவாதத்தை தள்ளி வைத்து விட்டு படைப்புக்களை சுமக்கும் வரம் பெற்ற ஜீவன் இந்த உலகத்தில் எல்லாவற்றையும் விட மேன்மையானது, உன்னதமானது, புனிதமானது, நிறைவானது, கருணை நிறைந்தது...இப்படி சொல்லிக் கொண்டே செல்லலாம்....

அம்மா...

எத்தனை இரும்பு மனம் படைத்தவர்களும் ஒரு முறை உதடு பிரித்து உச்சரித்துப் பார்க்கட்டும் அம்மா என்ற ஒற்றை வார்த்தையை அந்த வார்த்தைக்குப் பின் இருக்கும் கருணை என்னவென்று தெரியும், ப்ரியம் என்னவென்று புரியும், நேசம் என்னவென்று  விளங்கும். பிரதிபலன் பார்க்காமல் ஒவ்வொரு உயிரையும் சுமக்கத் தொடங்கும் தாய்மை எப்போதும் போற்றுதற்குரியது.

என் அம்மா எனக்காய் என்னென்ன கஷ்டங்கள் பட்டிருப்பாள் என்பதை வார்த்தைகளாய் நான் அறிந்திருந்தாலும், என் பெரியம்மா மகளான என் அக்காவின் பேறு காலத்தில் நான் உடன் இருந்திருக்கிறேன். 7 மாதத்தில் வளைகாப்பு முடிந்து வந்ததிலிருந்து அவளின் அன்றாடங்களை நான் கவனித்து இருந்திருக்கிறேன். நடக்க முடியாது, ஒருபக்கம் ஒருக்களித்துதான் படுக்க முடியும், சட்டென்று எழ முடியாது வலது கையை ஊன்றி மெல்ல தடுமாறி எழ வேண்டும், வெளியே சொல்ல முடியாத வலிகளோடு, இயற்கை உபாதைகளை கழிப்பதும் மிக மிகக் கடினம் என்று அவள் கூறுவதை வலியாய் எனக்குள் உள்வாங்கிக் கொண்டிருக்கிறேன்....

குறு குறுப்பாய் வயிற்றுக்குள் ஒரு குட்டி உயிர் இருப்பதை நான் பார்த்திருக்கிறேன். அதன் அசைவுகளைப் பார்த்து மிரண்டு போய் பெண்ணின் வலுவினையும், தைரியத்தையும் கண்டு வியந்திருக்கிறேன். ஒரு நடு இரவில் உண்ட உணவு செரிக்காமல் அவள் நெஞ்சை தடவிக் கொண்டிருக்கையில்,  மெல்ல எழுந்து போய் ஆச்சரியமாய் பார்த்திருக்கிறேன்..! அவள் யாரையும் எழுப்ப விரும்பவில்லை இது அவளின் வலி...அவளின் தேவை, அவளின் சுமை, அவளே சுமக்க வேண்டும். ஒவ்வொரு மனிதனின் ஆரம்ப நிலைகளில் தாயே எப்போதும் உடனிருக்கிறாள்.

அவ்வப்போது அவளுக்கு விக்கல் கூட வரும் ஒவ்வொரு விக்கலிலும் வயிறு இழுத்துக் கொண்டு மேலெழும்பி கீழே வரும், உள்ளே இருக்கும் குழந்தைக்கு எதுவும் ஆகக் கூடாது என்று அவள் பயந்திருக்கிறாள்...

வலி, வலி, வலி....இந்த வலியை எல்லாம் தாங்கிக் கொண்டு தன்னுள் ஒரு உயிரினைச் சுமந்து மெளனமாய் எல்லாம் தாங்கி ஒவ்வொரு பெண்ணும் இந்த இடத்தை கடக்கிறாள். பிரசவ வலி என்னவென்று ஒரு பெண்ணாய் உணராத வரைக்கும் ஒரு ஆணுக்கு அதைப் பற்றிய புரிதல் கண்டிப்பாய் வர முடியாது. 

இடுப்பு வலி எடுத்து, தண்ணீர் குடம் உடைந்து, இடுப்பெலும்புகள் மெல்ல விரிந்து கொடுக்க ஒரு பிரசவம் நிகழும் கணம் இந்த பிரபஞ்சத்தின் மிக முக்கியமான கணம்.....எத்தனை வலியோடு, எத்தனை சிரத்தையோடு ஒரு பிள்ளையை தவமிருந்து பெற்றெடுக்கிறாள் ஒரு தாய், அவளின் நிறைவுதான் என்ன? என்று ஒரு சிறு கேள்வியை ஒரு தாயிடம் கேட்டுப்பாருங்கள்...

பிள்ளை பிறந்த நொடியில் மயக்கமாயிருந்தாலும், மயக்கம் தெளிந்து தன் மகனையோ அல்லது மகளையோ காணும் அந்த நொடியில் அவளின் வலிகள் எல்லாம் மறைந்து உலகத்தில் எந்த ஜீவராசிகளும் பெறமுடியாத ஒரு திருப்தியை முழுமையை ஒரு பெண் பெறுகிறாள். தாய்மை என்னும் உன்னத நிலையை அடைகிறாள்.

ஆன்மீக வரலாற்றில் கூட பெண்கள் தனியே தியானம் என்றோ, முக்தி என்றோ, முழுமை என்றோ, ஞானி என்றோ அதிகம் தனித்து விவரிக்கப்படுவது இல்லை. காரணம்....ஒரு ஆணுக்குத்தான் முழுமையடைய ஓராயிரம் வழிமுறைகளும், தேடல்களும் தேவைப்படுகின்றன ஒவ்வொரு பெண்ணும் தாய்மை அடைந்து தன்பிள்ளையை பிரசவிக்கும் கணத்தில் பிரபஞ்சப் புரிதலை தன்னையறியாமலேயே புரிந்து அவள் தன்னிச்சையான முக்தி நிலையை,ஞான நிலையை எய்தி விடுகிறாள். 

தாய்மை என்பது உணர்வு நிலை. இளகு தன்மை. நேசிப்பின் உச்சம். வலிகளை தாங்கும் உத்வேகம். பிரபஞ்ச சுற்றினை முழுமையடைய வைக்க இந்த குணங்கள் உதவுகின்றன. ஒரு குழந்தையை சுமந்து வலிகளை தாங்கி அதைக் கடந்து வருகையில் ஒரு பெண் அதை எளிதில் எட்டி விடுகிறாள். இது இல்லாமலும் தாய்மை என்னும் உணர்வு நிலையை எல்லோராலும் அடைய முடியும்...ஆனால் அதற்கு உயரிய புரிதலும், அனுபவமும், தெளிவும் வேண்டும்.

மரணத்தின் உச்சம் தொட்டு ஒரு பிறப்பைக் கொடுக்கும் போது அது மிகப்பெரிய அனுபவமாகி அது தாயாகிறது. காலப்போக்கில் புறச்சூழல்கள் இவற்றை மறக்கடித்தாலும் இதன் மையத்தை எப்போதும் ஏந்திக் கொண்டுதான் ஒவ்வொரு பெண்ணும் இருக்கிறாள்.

ராஜா சாரின் இந்தப்பாடல் கூட தாய்மை நிரம்பியதுதான். புரிதலும் தெளிவும் கொண்ட அதிர்வுகளைப் நாதப் பெருவெளியில் இருந்து பிரித்து எடுத்து ஸ்வரங்களாக்கி, ஏற்ற இறங்களை கூட்டிக்குறைத்து அற்புதமான இசையைப் பிறப்பித்திருக்கும் ராஜாசார் தாய்மை நிரம்பியவர்தான். தாய்மை என்பது உருவமல்ல அது அனுபவங்களும் புரிதலும் கொண்ட உணர்வு நிலை என்று இந்தப்பாடல் தெளிவாகவே சொல்லும்..

வார்த்தைகளைக் கடந்து, ஜேசுதாஸின் தெய்வீகக் குரலோடு இந்த இசை கூட்டிச் செல்லும் தூரத்திற்கு கண்களை மூடிக் கொண்டு பயணித்துப் பாருங்கள்...நீங்களும் தாய்மை என்னும் உணர்வு நிலையை உணரக் கூடும்..!தேவா. S


எழுத்து வித்தை காட்டும் மோடி மஸ்தான்கள்...!ஒரு மாதிரியான தற்பெருமைகள் நிறைந்த புகழ்ச்சிகளை விரும்பும் ஒரு உலகத்தில் நான் இருக்கிறேன் என்பதை நான் உணர்ந்த போது எனக்கு ஏற்பட்ட கூச்சத்தை வார்த்தைகளுக்குள் கொண்டு வர முடியவில்லை.

எழுத்து என்பது வரம், எழுத்து என்பது தவம், கல்வி என்பது மற்றவர்களுக்கு சென்று சேர வேண்டிய அறிவு அல்லது புரிதல். படைப்பவன் ஒரு பிரம்மா, அந்த படைப்பால் வழி காட்டுதலால் வாழ்க்கை ஒளிர வேண்டும் என்றெல்லாம் நினைத்து அப்படியே இங்கே உலாவும் மனிதர்கள் இருப்பார்கள் என்ற நம்பிக்கையை காலம் சுக்கு நூறாய் உடைத்துப் போட்டு விட்டது.

இங்கே தன்னைத் தானே உலக மகா எழுத்தாளர்கள் என்று புகழ்ந்து கொள்ளும்  மனிதர்கள் முதல், சமூக அக்கறை என்ற லேபிளை நேரே நெற்றியில் பச்சைக் குத்திக் கொண்டு மனித தெளிவின்மைகளைப் பகடைக்காய் ஆடும் மனிதர்கள், மற்றும் நீலப்பட ரேஞ்சுக்கு எழுத்துக்களில் விரசத்தை தூண்டி விட்டு லேகியம் விற்று சம்பாரிக்கும் வியாபாரிகளென்று நீண்டு கொண்டே இருக்கும் பட்டியல் மிகப்பெரியது.

அலங்காரங்களால், மனித மனம் வசீகரம் கொள்ளும் விடயங்களை எழுத்தில் நிரப்புதல் தவறல்ல, ஆனால் அதன் விளைவுகள் என்ன மாதிரியாய் இருக்கும் என்ற ஒரு பொறுப்புணர்ச்சி இல்லாத களமாய் இது ஆகிப் போனது வரலாற்றில் பெரும் பிழையை ஏற்படுத்தியே தீரும்.

எதை எழுதலாம், எதை எழுதினால் வியாபாரம் ஆகும் என்று யோசிப்பது தவறில்லை அதற்காக பத்திரிக்கை துறையினரும், தனியார் தொலைக்காட்சித் துறையினரும் செய்யும் அதே யுத்தியை தனி மனிதர்கள் எழுதும் வலைப்பூக்களில் அரங்கேற்றிக் கொள்வது அவமானத்தின் உச்சம்.

பெரும் புரட்சியாளராய் என்னைக் காட்டிக் கொண்டு, என்னை பின் தொடருங்கள் மக்களே என்று போர்க்கொடியை எழுத்துக்களால் நான் ஏற்றும் போதே என் அருகதையையும் உற்று நோக்க வேண்டும் என்ற ஒரு நியாயத்தை ஏன் என்னால் கடை பிடிக்க முடியவில்லை..? இப்படியாய் நாங்கள் எங்கள் அனுபவங்களைப் பகிர்கிறோம் இதில் இருக்கும் சத்தியத்தை உணருங்கள் வாசிப்பாளர்களே.. என்று தொடை தட்டி நேர்மையான பகிர்தலைச் செய்ய முடியாத ஒரு துர்ப்பாக்கிய நிலையில் எழுத்துக்கள் பயணிப்பது.....ஆரோக்கியமான விடயமா?

மனிதனின் புறத்தை மாற்ற முயல்வது ஒரு தோற்றுப் போன வழிமுறை.... அது எப்போதும் மாற்றத்தை கொண்டு வருகிறேன் என்று சொல்பவனைத் தலைவனாக்கி விட்டு மிச்சமுள்ளோரை தெருமுனையில் பிச்சைக்காரனாய், புத்தி கெட்டவனாய் எப்போதும் யாரையோ எதிர்பார்த்து நிற்கும் ஒரு கையாலாகாதவனாய் நிறுத்தி வைத்து விடுகிறது.

மனிதர்களின் அகமாற்றம் இதற்கு நேர்மாறானது. 

குப்பைத் தொட்டியை தெருவில் வைப்பது வரைக்கும் புறமாற்றமென கொண்டால் குப்பைகளை தெருவில் இடாமல் குப்பைத் தொட்டியில் இடவேண்டும் என்று ஒருவனை நினைக்கவைப்பது அகமாற்றம். ஒருவன் தனக்குள் விழிப்படைந்தால்தான்....புறத்தை அவன் செம்மையாக வைக்க முடியும். இதை உணராத சமகால சமூகம் சீர்திருத்தம் செய்கிறேன் பேர்வழி என்று ஒரு மனிதனை உள்ளுக்குள் முழுமையாக உறங்க வைத்து விட்டு வெளியே விழிக்கச் சொல்கிறது.

உள்ளுக்குள் உறக்கம் கலைக்கும் யுத்தியை இவர்கள் அறிந்திருக்கவில்லை ஏனெனில் சமூக மாற்றத்தை விளைவிப்பதாய் கூறும் எவரும் சத்தியத்தில் உள்ளுக்குள் விழித்திருக்கவில்லை. 

இதன் விளைவுதான் சுதந்திர இந்தியாவில் ஏற்பட்டிருக்கும் முரண்பாடுகள்.

முழு விழிப்போடு ஒவ்வொரு குடிமகனும் இருந்த பொழுதில் இந்த தேசம் மிளிர்ந்தது. மன்னர்களும், சக்கரவர்த்திகளும் பேரரசர்களும் அதிகாரத்தால் தங்கள் நிர்வாகத்தை நடத்தினாலும் தமது தேசத்தின் குடிமக்களை முழு விழிப்பு நிலையில் வைத்திருந்தனர். அந்த விழிப்பு நிலையால்தான் பண்டைய தமிழகத்தில் மிகப்பெரிய வணிகப் பெருக்கம் இருந்தது, போர்களில் தமிழன் வெற்றி வாகைகள் சூடினான், பிரமாண்ட கற்கோயில்களை கற்பனைக்கும் எட்டமுடியாத வண்ணம் ஆக்கிக் கொடுத்தான்...

தொழில் நுட்பம் வளர்ச்சிகள் இல்லாமல், இயந்திரங்களின் பயன்பாடுகள் அறவே இல்லாமல், மனித வளத்தால் மட்டுமே நம்மால் சிறப்பாக இருக்க முடிந்தது. இதற்கு முழு முதற்காரணமாய் நான் வழிகாட்ட என்னைச் சுற்றிலும் முட்டாள்கள் இருக்க வேண்டும் என்ற வக்கிர அரசியல் அங்கே இருந்திருக்கவில்லை. மனிதவளம் மேம்படாத ஒரு சமூகம் தொழில் நுட்பத்தையும் அறிவியலையும் கையில் வைத்துக் கொண்டு என்ன செய்யும்...? அதன் விளைவுகள் எப்படி இருக்கும்...?

இதற்கான பதிலாய்த்தான் சமகாலத்தில் நவீன தகவல் தொடர்பு சாதனத்தில் நமது பயன்பாடுகள் இருக்கின்றன. வலைப்பூக்கள் தனிமனிதர்களால் எழுதப்படும் ஒரு களம். இங்கே வியாபரம் செய்வது தவறில்லை. வணிகமும், பொருளாதாரமும் எல்லா இடங்களிலும் இருக்கத்தான் செய்யும் ஆனால் எப்படி வணிகம் செய்கிறோம்...? எதை வணிகம் செய்கிறோம் என்பதுதான் இங்கே மில்லியன் டாலர் கேள்வியாகிறது..!

மனதில் தோன்றுபவைகளை எல்லாம் எழுதிப் பார்க்கும் ஒரு சாரார், சமூக அக்கறைகளை எழுத்தில் கொண்டு வந்து ஏதோ ஒன்றை இந்த சமூகத்துக்குச் சொல்லிச் சொல்ல விரும்பும் சிலர், இதை இதை எழுதினால் வசீகரப்படும், இதற்கு கூட்டம் நிறைய வரும் என்று எழுத்தில் விசத்தை கலக்கும் ஒரு கூட்டம், 

எது எப்படி இருந்தாலும் நான் என்னை முன்னிலைப் படுத்திக் கொள்ளவேண்டும் என்று விரும்பும் ஒரு பிரிவினர், அற்புதமாய் கதைகளையும் கவிதைகளையும் கட்டுரைகளையும் தங்களின் உணர்விலிருந்து பிரதிபலித்து உருவாக்கும் படைப்பாளிகள் ஒரு பக்கம், மனிதன் விரும்புவது கேளிக்கைகளையும், அடுத்தவர் வாழ்க்கை பற்றிய அந்தரங்க செய்திகளையும், எப்போதும் மறைக்கப்பட்ட காமத்தையும்தான் என்று அதை அரங்கேற்றிக் கொள்ளும் வேறு சிலர்...

என்று தனி மனிதனின் ஆக்கங்கள் ஒரு மிகப்பெரிய காட்டாறாய் இயங்கிக் கொண்டிருக்கையில் வாசிக்கும் வாசிப்பாளன் தனது வயது, அனுபவம், மற்றும் புரிதலுக்கு ஏற்ப தனக்கு தேவைபடும் விடயத்தை இங்கே தேர்ந்தெடுக்கிறான்..

என் அன்பின் உறவுகளே...

இணையத்தை இன்று மிகுதியாக பயன்படுத்துபவர்கள் இளையர்கள், 18ல் ஆரம்பித்து 30வயதுக்குள் இணையத்தை பயன்படுத்துபவர்களின் விகிதாச்சாரம் அதிகம். சரியான வழிகாட்டுதல் தேவையான இந்த பருவத்தில் தனக்கு அறிமுகமாகும் இணையத்தில், தற்போது தமிழில் மிகுதியானவர்கள் பார்க்கும் ஒரு ஊடகமாய் இந்த வலைப்பூக்கள் இருக்கின்றன...

வழிகாட்டுதல் தேவையான இந்த இளையர்களுக்கு எதை நாம் பகிரப் போகிறோம்...? நமது தலைக்கனத்தையா...? நாம் மிகைப்பட்டபேர்களால் கவனிக்கப்பட வேண்டும் என்ற தன்முனைப்பையா? பரபரப்பு அரசியலையா? நடிகர், நடிகைகளின் அந்தரங்கத்தையா?  காமக்கதைகளையா? இல்லை சமூகத்தால் எப்போதும் விலக்கப்பட்ட தவறான விடயங்களை நான் செய்தேன் என்ற திமிரையா? 

நாம் தீர்மானிக்க வேண்டிய ஒரு கட்டாயத்தில் இருக்கிறோம். நான் செய்கிறேன் நீயாரடா கேள்வி கேட்க என்று அத்து மீறுபவர்களின் குரல்வளைகளை முடக்கிப் போடவேண்டிய சமூகக் கடமை இன்றைய இணைய பயன்பாட்டாளர்களிடம் சர்வ நிச்சயமாய் இருக்கிறது. இது பொதுவெளி..இங்கே உச்சபட்ச நாகரீகம் தேவைப்படுகிறது.

அசிங்கங்களையும், அடாவடியையும் அத்து மீறலையும் தவறான வழிகாட்டுதலையும் பொதுவெளியில் நிகழ்த்தி விட்டு இது எனது வலைப்பூ, எனது சொந்த விருப்பம் என்று மார்தட்டிக் கொள்வதில் தவறில்லை ஆனால் அது என் சமூகத்துப் பிள்ளைகளைக் கெடுக்கிறது எனும் பொழுது.. உக்கிரமான எமது கேள்விகளுக்கு பதிலளிக்கும் சமூகக் கடமை உமக்கு இருக்கிறது என்பதை மறக்க வேண்டாம்...!

எமது விதைகள் முளைக்காமலேயே போகட்டும்....ஆனால் அவை ஒருபோதும் ஒரு விஷச் செடியாய் முளைத்து பரவுவதில் எமக்கு யாதொரு உடன்பாடும் இல்லை...என்பதை அனைவரும் அறியச் செய்வோம் எம் தோழர்களே...!

மனிதர்களின் அகவிழிப்பும், புரிதலும் கூர்மையாக இருப்பின்....மோடி மஸ்தான்களின் மாயஜாலங்கள் எல்லாம் அழிந்து ஒழிந்து போகும் என்பது  நிதர்சனம்....!


" உன்னையறிந்தால், நீ உன்னையறிந்தால்
உலகத்தில் போராடலாம்…..
உயர்ந்தாலும், தாழ்ந்தாலும்...
தலை வணங்காமல் நீ வாழலாம்..! "


தேவா. S

Friday, January 20, 2012

மெளன விரதம்....!இன்று எதுவும் பேசக் கூடாது, என்று சங்கற்பம் எடுத்திருக்கிறேன். பேசக் கூடாது என்று தீர்மானித்த உடனேயே....மனம் விசுவரூபமெடுத்து வார்த்தைகளை மூளைக்குள் உடனே அலைய விட்டது. மெல்ல, மெல்ல அலைந்த வார்த்தைகள் எல்லாம் அதிர்வுகளாகவே வெகு நேரம் உள்ளுக்குள் சுற்றிக் கொண்டிருந்தன. சப்தங்களாய் தொண்டையிலிருந்து வெளி வந்து விடவேண்டும் என்று அவை கங்கணம் கட்டிக் கொண்டிருப்பது மட்டும் என்னால் தெளிவாக உணர முடிந்தது.

மெளனம் என்று வெளியில் சப்தம் செய்யாமையை சங்கல்பம் செய்யும் பலரால் உள் சப்தத்தை நிறுத்த முடிவதில்லை.  ஏதோ ஒன்றை இப்போதே நீ பேசியே ஆகவேண்டும் என்று கட்டளையிட்ட புத்தியை நான் உற்று நோக்கினேன்... புத்திக்குள் நினைவுகளாய் தேங்கிக் கிடந்த மனம்தான் எல்லா வேலையையும் செய்து கொண்டிருந்தது புரிந்தது. 

மற்ற புலன்கள் இயங்கிக் கொண்டிருக்கையில் சடாரென ஒரு புலனின் இயக்கத்தை நிறுத்தியது மனதுக்கு புதிதாய் பட்டிருக்க வேண்டும். இந்த மனம் எப்போதும் புது விடயங்களை ஆதரிப்பது இல்லை.

மனதிற்கு வசதியான விடயம் பழக்கப்பட்ட சூழல்களில் சுற்றிக் கொண்டிருப்பதுதான். புதிதாய் எது செய்தாலும் அல்லது மாற்றினாலும் மனம் அவ்வளவு சீக்கிரம் அதை ஒத்துக் கொள்வது கிடையாது. ஒரு ரவுடியாய் அது மிரட்டிப் பார்க்கும், பல கற்பனைகளைக் கொண்டு வந்து கொட்டி கோரப் பல் காட்டி பயமுறுத்திப் பார்க்கும். 

கடந்த காலத்தில் பயணிப்பதில் மிகப்பெரிய கில்லாடி இந்த மனம்...கடந்த காலத்தை கையில் எடுத்துக் கொண்டு நிகழ்காலத்தை மிரட்டி எதிர்காலத்தைப் பற்றி மிகப்பெரிய புரிதலைக் கொண்டிருப்பது போல தத்து பித்துவென்று எப்போதும் உளறும்.

ஆன்மாவிற்கு முக்காலமும் தெரியும். மனதிற்கு கடந்தகாலம் மட்டுமே தெரியும்... நிகழ்காலத்தில் அதனால் எப்போதும் நிற்க முடியாது....நிகழ்காலத்தை ஒரு ஊன்று கோலாய் வைத்துக் கொண்டு எதிர்காலத்திற்குள் கற்பனையாய் பயணிக்கும். மனம் வேறு, ஆன்மா வேறா? என்று நிறைய பேர் என்னிடம் கேட்டிருக்கிறார்கள். இருப்பது ஒரு மூளை இதில் எப்படி வெவ்வேறு என்று சந்தேகமாய் பார்ப்பார்கள்....

மனம் என்பது ஐம்புலன்களின் கூட்டு. ஐம்புலன்களின் அனுபவங்களை மூளைக்குள் கொண்டு போய் சேர்த்து, சேர்த்து அதை விவரித்துப் பார்த்து எப்போதும் இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு சூட்சுமம். அதிர்வுகளால் ஆன ஒரு அதிசயம். ஐம்புலன்களின் இயக்கமில்லாத பொழுது இந்த மனம் மெல்ல, மெல்ல ஒடுங்க ஆரம்பிக்கும். மனம் இயங்க புலன்களின் இயக்கம் தேவை. புலன்கள் ஒடுங்க....அது பேந்தப் பேந்த விழிக்கும் புத்திக்குள் போய் அவசர அவசரமாக கடந்த காலத்தை எடுத்துக் குப்பையைக் கிளறுவது போல கிளறும்....

நீ...என்ன வேண்டுமானலும் செய்து கொள்...மனமே,  புலன்கள் மூலம் உனக்கு ஒரு அனுபவத்தையும் நான் கொடுக்கப் போவதில்லை என்று அந்த மனதை வைத்தே நாம் பதில் மிரட்டலை ஒரு கட்டளையாய் சங்கல்பித்து விட்டு மெளனமாய் அதன் செயல்களை வேடிக்கை பார்க்க வேண்டும். இந்த வேடிக்கைப் பார்க்கும் இடத்தில்தான் தியானம் தொடங்குகிறது. தியானம் என்றால் கமண்டலம் சகிதம், சடாமுடியோடு இருக்கும் முனிவர்கள்தான் நமது புத்திக்குள் வந்து நிற்பார்கள்...

அது ஒரு திணிக்கப்பட்ட பொது புத்தியின் காட்சி. காவி உடுத்துதலும், கமண்டலம் சுமத்தலும், துறவறம் செல்லுதலும் ஒரு வழிமுறை. நாம் அந்த வழியில் பயணிக்கவில்லை.....இன்னும் சொல்லப் போனால் பயணம் என்ற ஒன்றே இல்லை. சரி அதை விட்டு விடுவோம்....இப்போது மனதின் நடவடிக்கையை வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்திருக்கிறோம், அதை கவனிப்போம்..

மற்ற நான்கு புலன்களும் ஒடுங்கும் போது செவி தானே தன்னால் சுற்றுப் புற ஒலிகளை வாங்கிக் கொள்ளும் அவ்வளவே அதனை மூளையில் ஒரு கிரகிப்பாய் ஆக்காது, ஆனால் கண்கள் அப்படி அல்ல மற்ற புலன்களை வேகமாய் இயக்க காட்சிகள் மிகப்பெரிய அளவில் உதவத்தான் செய்கின்றன. அதனால்தான் மெலிதாய் கண்களை மூடிக் கொள்கிறோம். 

புறத்தாக்கத்தை வேகமாய் பரிமாற்றம் செய்து மனதை விசுவரூபமெடுக்கச் செய்வதில் பார்வை பெரும் பங்கு வகிக்கிறது. கண்களை மிருதுவாக மூடிக் கொண்டு நுகர்ச்சி கடந்து வெறுமனே மூச்சினை கவனித்தபடி மனம் செய்யும் சேட்டைகளை எல்லாம் கவனித்துக் கொண்டிருக்கையில்...

பல மிரட்டகள், பல புலம்பல்களுக்குப் பிறகு மனதுக்கு புதிதாய் செய்தி கிடைக்காமல், பழைய விடயங்களை புரட்டி புரட்டி அலுத்துப் போய் மெல்ல மெல்ல சுருண்டு போக ஆரம்பிக்கும். மூச்சு மட்டும் சீராக உட்சென்று வெளிவர, மனமென்ற ஒன்று புள்ளியாய்க் கரைந்து போக எந்த நினைவுகளிமின்றி உடல் முழுதும் முழு உணர்வு நிலைக்கு வந்து உடலின் இருப்பும், சுற்றுப் புறங்களின் இருப்பும் தெளிவாய் உணர ஒரு சக்தி பளீச்சென்று பரவி உதவி செய்யும். 

புலன்களின் உதவியின்று...எல்லாமாய் இருக்கும், எங்கும் இருக்கும் அந்த சக்திதான், உயிர், அல்லது ஆன்மா அல்லது உணர்வு நிலை அல்லது கடவுள் தன்மை.

இது தனித்ததாய் உள்ளுக்குள் அடங்கிக் இருந்தாலும் புறத்திலிருக்கும் எல்லா சக்திகளோடும், உயிரோட்டங்களோடும் அணுக்களின் நகர்வுகளோடும் தொடர்புள்ளது. நான் உடல் அல்லது பெயர் அல்லது மனம் என்ற எல்லாம் கடந்து அங்கிங்கெனாதபடி அலையும் இந்த சக்தி பரிமாற்றமே பிரபஞ்சத்தில் எங்கும் நீக்கமற விரவிப் பரவிக் கிடக்கிறது. இந்த சக்தியே விகிதாச்சாரத்தில் வேறுபட்டு பல ஸ்தூலப் பொருட்களாயும் இருக்கிறது. ஸ்தூலமாய் இருக்கையில் இதன் குணம் வேறு. 

மெளன விரதத்தில் பேச்சற்று மெல்ல கண் இமைகளை மூடி அமர்ந்திருக்கையில் நான் மேலே சொன்ன எல்லாம் நிகழும். நிகழும் என்று சொல்லும் போதே நிகழும் வரை காத்திருத்தல் அவசியமென்பதை உணர்க; புலன்கள் அடங்க மனம் அடங்கும். புலன்களை அடக்க புலன்களின் செயல்பாடுகளைப் புரிதல் அவசியம். 

இந்தப் புரிதல் மனதை அறிய உதவும். அறிந்து அறிந்து விலக்காமல் நெருக்கமாக மனதோடு நின்று செய்...செய்...என்று சொல்லி மெளனமாய் வேடிக்கைப் பார்க்கையில் மனம் ஒடுங்கும். வாயில் போடப்படும் ஒரு திடமான மிட்டாயை சப்பி சப்பி சுவைத்து மெலிதாய் அது கரையுமே, அதுபோல கரையும்.

சமகாலத்தில் இருக்கும் சூழ்நிலையும் பொறுப்புக்களும் ஒன்று சேர்ந்து நம்மை மெளன விரதம் எல்லாம் இருக்க விடுவதில்லை. பேசாமல் ஒன்றும் செய்ய முடியாது என்கிற ஒரு காலச் சூழலில் வாழ்கிறோம் என்றாலும்..மாதம் ஒரு முறை மெளன விரதம் இருந்து பாருங்கள்.

மெளனம் என்றால் வாய் மட்டும் பேசாமல் மனம் பேசும் விரதம் அல்ல....! மெளன விரதம் என்று கூறி விட்டு பத்திரிக்கைகளையோ, தொலைக்காட்சியையோ அல்லது கணிணியையோ மேய்வது அல்ல. மெளனம் என்றால் புறமும் அகமும் ஒன்று சேர நமக்குள் ஏற்படும் ஒரு சீரான ஒத்ததிர்வு...!  பேசி பேசி ஒன்றும் யாரும் சாதித்து விடவில்லை...என்பதையும், மொழி என்பது நினைத்ததை நினைத்த மாதிரி பகிர முடியா ஒரு மொக்கைக் கத்தி என்பதையும் மெளன விரதம் தெளிவாய் உணர்த்தும்.

வார்த்தைகளால் புரியவைக்க முடியாதவற்றை மெளனம் அழகாக மனிதர்களுக்கு உணர்த்தும் என்பது முக்காலமும் உண்மை....!

அற்புதமான உங்களின் ஒரு மெளனவிரத தினத்திற்கு எனது வாழ்த்துக்கள்...!


தேவா. SThursday, January 19, 2012

கவிதைக்கு அவள் என்று பெயர்...!ஒரு மழை பெய்யவும் பெய்யாமலிருக்கவும் சாத்தியமாயிருந்த விடுமுறை நாளின் மதிய மூன்றரை மணிக்கு புரண்டு படுக்கையில் கம்பளிக்குள் இருந்து அரைத் தூக்கத்தில் பார்த்த போது கையில் தேனீரை வைத்துக் கொண்டு 

"ஆவி பறக்கும் டீ......" என்று அவள் பயமுறுத்த தொடங்கி இருந்தாள்...

ச்ச்ச்சிம்னி அப்டித்தான்....எப்போதும்!  விளையாட்டாய் என்னை காதலித்து விளையாட்டாய் கைப் பிடித்து விளையாட்டாகவே வாழ்ந்து கொண்டிருப்பவள்...! என்னாச்சு...இப்பவே டீ...போட்டுக் கொண்டு வந்துட்ட என்று நான் சோம்பல் முறித்து எழ எத்தனிக்கையில் டீயை பக்கத்து மேசையில் வைத்து விட்டு சரியாய் என் மேல் வந்து சாய்ந்தவளை ஓ......எழுந்திரு ச்ச்ச்சிம்னி என்று தடுக்க முயன்றதை பார்த்து விட்டு...

என்ன...? என் வெயிட் தாங்க முடியலையா......உதடு சுளித்து பொய்யான கோபத்தை கண்களில் கொண்டு வந்து என் முகவாயை தூக்கி முத்தமிட நெருங்கி வந்தவள் சட்டென்று ரூட்டை மாற்றி முன் நெற்றியில் முத்தமிட்டு கேசம் கலைத்து....பப்பு கண்ணா....வீ நீட் டூ கோ ஃபார் எ வாக்....அதுவும் வெளில மழை வர மாதிரி இருக்கு தூறல் போட ஆரம்பிக்கப் போகுது... வீ கோ........நவ் நவ்வ்.....நவ்...தைய தக்க் தைய தக்க என்று குதிக்க ஆரம்பித்திருந்தாள்..

கண்ணாடி ஜன்னலின் வழியே திரண்டிருந்த கருமேகங்களும் சுற்றி சுற்றி அடிக்கும் காற்றும்.... மாரியம்மன் கோவில் திருவிழாவில் சாமியாடும் பெண்களைப் போல தலையை ஆட்டி ஆட்டி ஆடிக்கொண்டிருந்த மரங்களும் என்று இயற்கை ஒரு மிகப்பெரிய கொண்டாட்டத்திற்கு தயார் ஆகிக் கொண்டிருந்தது. 

ஜன்னலைப் பார்த்தபடி...தலைக்கு ஒரு கையைக் கொடுத்து மறுகையால் அவளின் இடுப்பை வளைத்தபடி யோசித்துக் கொண்டிருந்தவனின் மூக்கைப் பிடித்து சடாரென்று திருகி...இடியட்.......நான் என்ன சொல்றேன்....நீ என்ன பண்ணிட்டு இருக்க..என்று என் செல்லப் பிசாசு இம்சித்தது.  இருடி....மொதல்ல நீ கைய எடு லூசு,  என்ற படி எழுந்து நின்று கிவ் மி டூ செகண்ட்ஸ் என்று சொல்லிவிட்டு வாஷ் ரூமிற்குள் நுழைந்து முகம் கழுவி தலைக்கு தண்ணீர் விட்டு கைகளால் படிய வாரிய படி வெளியே வந்து...

ப்ளூ கலர் ஜெர்கினுக்குள் நுழைந்து, பிளாக் கலர் ட்ராக் பேண்ட் உடுத்தி, கேன்வாஸோடு வாசலில் நின்று....ஏண்டி எருமை எவ்ளோ நேரம் வெயிட் பண்றது நீ வர்றியா...?இல்லை நான் போட்டா..என்று போட்ட கூச்சலில் லபோ ...திபோ என்று ஓடி வந்து வாசல் கதவு அருகே நின்று இடுப்பில் கை வைத்து முறைத்தது என் கவிதை.....!  அவள் மூச்சிறைத்துக் கொண்டிருக்க என் புத்தி ஏதோ குறுக்கு நெடுக்காக ஓடி வேறு திட்டம் தீட்டியது...

ச்ச்சிம்னிமா..நாம வேணும்னா இன்னொரு நாளைக்கு போலாமாடா வாக் என்று கை தூக்கி சோம்பல் முறிக்கையில்...அது எல்லாம் ஒண்ணும் வேணாம்.. உங்க புத்தி எல்லாம் எனக்கு தெரியும்...லெட்ஸ் கோ நவ் ஒன்லி...கதவு மூடி பூட்டி விட்டு... என் முதுகைத் திருப்பி போ...போ......போடா.என்று முன்னால் தள்ளினாள்...

அந்த எஸ்டேட்டுக்கு நான் மாற்றாலாகி வந்து 6 மாதங்கள் ஆகி விட்டது. தேநீர் தூள் தயாரிக்கும் ஒரு பிரத்தியோக தென்னிந்திய கம்மெனியின் எச்.ஆர் உத்தியோகத்தின் சுமையை துளியேனும் தலைக்கு ஏற்றி டென்சன் ஆக்காமல் இந்த இயற்கையும், மலைகளும், ஆரவாரமான பள்ளத்தாக்குகளும் என்னை ப்ரஷ்ஷாகாத்தான் வைத்திருக்கின்றன.. பத்தாக் குறைக்கு என் ச்செல்ல ச்ச்சிம்னி என்னும் ஷர்மிலி....

வெறுமனே அவளைச் சிம்னி என்று கூப்பிடமாட்டேன் "சி" க்கு முன்னால் ஒரு இரண்டு மூன்று ச்ச்ச்சை அழுத்தி சேர்த்து ச்ச்ச்சிம்னி என்று கூப்பிடும் போது காதலை அழுத்தமாய் வார்த்தைகளில் அடிக்கடி அவளுக்கு என்னால் பரிமாற முடிந்தது. ச்ச்ச்மினி ஒரு சர்வாதிகாரி. ஆமாம்...காதல் சர்வாதிகாரி. அவள் சொன்னாள் மறு பேச்சில்லை...

கவனமாய் என் ஆசைகளை கண்டு கொண்டு அதை சரியாய் நிறைவேற்றியும், அபிலாசைகளை அடக்கியும் வழிநடத்தும் கெட்டிக்காரி. என் கவிதைகளால் எப்போதும் அர்ச்சனைகள் செய்வேன் அவள் புன்னகையால் எனக்கு அருள் பாலிப்பாள். அருள் பாலித்த மூன்றாவது நொடியில் பிரபஞ்ச ரகசியத்தின் மூலத்தை நோக்கி மெல்ல மெல்ல பயணிப்போம். மூர்ச்சையாகும் அளவு நடக்கும் யுத்ததில் பக்தி எல்லாம் உடைந்து போய் மூலாதாரம் விழித்துக் கொண்டு முதுகுத் தண்டின் வழியே மெல்ல மெல்ல பயணித்து சகஸ்கரம் தொட முயன்று ஞான மார்க்கத்துக்குள் மெல்ல நுழைவோம்....!

மூலாதாரம் தாண்டி சுவாதிஷ்டனம் கடந்து மணிப்பூரகம் தொடும் முன்பு பல முறை சறுக்கி விழுந்திருக்கிறேன். பக்தியாய் தொடங்கும் காமம் ஒரு கட்டத்தில் அதைக் கடந்து வேறு ஒரு களத்தில் பயணிக்கத்தான் செய்தது....

என்னா சார் எங்க போய்ட்டீங்க....? என் கூடத்தானே நடந்து வர்றீங்க....ச்ச்ச்சிமினி என்னை உலுக்கினாள்....ஹி ஹி ஒண்ணும் இல்லை ச்ச்சிம்னி ச்ச்சும்மா என்றேன்...! சரியான சாமியார்டா... நீ, டக்கு டக்குன்னு வேற எங்கயும் போய்டாத.. இப்போ..இங்க இந்த நிமிசத்துல இரு...

சாரலாய் மெலிதாய் தூறல் போட ஆரம்பிக்க அவள் துள்ளிக் குதித்தபடி என் கைகளைக் கட்டிக் கொண்டு எனக்கு நெருக்கமாய் நடக்க ஆரம்பித்தாள்..! ஏண்டா... இந்த மலை மேல இருக்க மரம் எல்லாம் காலம் பூரா வானத்தை பார்த்துகிட்டு மழையில நனைஞ்சுகிட்டு எவ்ளோ சந்தோசமா இருக்கு பாத்தியா...?!!!

கட்டுப்பாடுகள் இல்லை கேள்வி கேப்பாடு இல்லை.. இயற்கையான ஒரு விதியை தனக்குள்ள மெளனமா சுமந்துகிட்டு..தன்னால வாழுதுங்க.....பேச்சிலர் ஆஃப் ஆர்ட் இன் இன்டிரியர் டெக்னாலஜி படித்தவள் தத்துவம் பேசிக் கொண்டிருந்தாள்...

உனக்கு ஏன் ச்ச்ச்சிம்னி ரொம்பவே லோன் லினெஸ்சும்.. இந்த மாதிரி இயற்கையும் பிடிச்சு இருக்கு...இன்பேக்ட் சிட்டில வளர்ந்த பொண்ணு எப்டி என் கூட அட்ஜஸ்ட் பண்ணி இருப்பன்னு நான் உன்னை கூட்டிட்டு வரும் போது ரொம்பவே யோசிச்சு இருக்கேண்டி...பிக்காஸ்..இட்ஸ் டிப்பிகல்ட் டு கோ வித் மீ.....என்றேன்...!

அட லூசு புருஷா... சிட்டில வளர்ந்தா என்ன.. ? கிராமத்துல வளர்ந்தா என்ன...? ஆணா இருந்தா என்ன...?  பெண்ணா இருந்தா என்ன? உள்ளுக்குள்ள ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ஆசைகள்,  ஒவ்வொரு கனவுகள்...

நான் கனவு கண்டேன்...
நீ வர்ணம் பூசினாய்...

சொல்லிவிட்டு எப்டி நம்ம கவிதை..? என்று அவள் ஸ்வெட்டரின் காலரை தூக்கி விட்டுக்கொண்டாள்...! நீ யாரு...இன்னொரு கவிதை சொல்லு ச்ச்ச்சிம்னி என்றேன் கெஞ்சலாய்...! ஏய்....என்ன விளையாடுறியா...பிச்சு புடுவேன் படுவா....நான் கம்பன் வீட்டுக் கட்டுத் தறிடா....நீதான் என் கம்பன்...நீ சொல்லு ஏதாச்சும்...! என்னை சும்மா சீண்டாத......,அவள் சிணுங்கலாய் ஒரு கவிதையைப் பிரசவித்து விட்டு.....

ஒன்றும் தெரியாதது போல, என்னை விட்டுக் கொஞ்சம் தள்ளி சீராக எனக்கு சரியாய் நடந்து வந்து கொண்டிருந்தாள்..!

நான் கவிதை சொல்வேன் என்று அவள் அமைதியாகி இருந்தாள். என் எல்லா நகர்வுகளையும் மூர்க்கமாய் ரசிப்பவள் அவள்...அவளின் ரசனைக்காகவென்றே நான் படைப்பாளியாய் இருக்க ப்ரியமாயிருந்தேன். ரசனைகளின் உச்சங்கள் கொடுக்கும் போதையில்தான் ஒரு படைப்பாளியின் நகர்வு எப்போதும் இருக்கிறது. அவள் ரசிக்கிறாள்...நான் அவளுக்காய் படைக்கிறேன்...!

அந்த சூழல் எனக்குள் கிறக்கத்தை அதிகமாக்கி இருந்தது. மழை பெய்யாமலும் பெய்தும் ஒரு மாதிரி விளையாடிக் கொண்டு இருந்ததும், அத்தனை சரிவாக இல்லாத சிறு ஏற்ற இறக்கங்கள் கொண்ட அந்த மலைப்பாதையும், சுற்றி இருந்த தேயிலைத் தோட்டங்களும், கண்ணுக் கெட்டிய தூரம் வரைப் பரவிக் கிடக்கும் பசுமையும்.....,சுழன்று சுழன்று அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருக்கும் மேகங்களும் என்று....நான் மொத்தமாய் தொலைந்து போய்தான் நடந்து கொண்டிருந்தேன்..

டக்.. டக்.. டக்.. டக்.. டக்.............

மெளனத்தை இருவருமே போர்த்திக் கொண்டிருந்தோம். எதுவுமே பேசவில்லை. அவளை நானும், என்னை அவளும்,  அவ்வப்போது விழிகளால் வருடிக் கொண்டோம். என் மனசு முழுதும் முழுமையான காதலில் நிரம்பிக் கிடந்தது, காதலை ஏதேனும் ஒரு சக்திதான் தூண்டி விடும்...பெரும்பாலும் அவள் காதலான மனைவி..., ஆழமான மெல்லிய பாடல், ஒரு சூழல், யாரென்றே தெரியாத முகம் தெரியாத சில பெண்கள் என்று பலவும்....காதலின் கிரியா ஊக்கியாய் இருக்கலாம்..

காதலிப்பதும் பெரும் சுகம் என்றால் காதலிக்கப்படுவது அதை விட பெரும் சுகம். அந்த ஒரு குறிப்பிட்ட தினத்தில் இயற்கையையும், என் வழித்துணையாய் வந்த வாழ்க்கை துணையையும் நான் தீரத் தீர காதலித்து காதலில் கிறங்கிக் கிடந்தேன்...பதிலுக்கு அவளும், சுற்றியிருந்த ரம்யமான சூழலும் என்னை மூர்ச்சை கொள்ளும் அளவு காதலித்துக் கொண்டிருக்க..நான் வார்த்தைகள் கடந்த, உணர்வுகள் கடந்த, மனம் கடந்த ஒரு சமாதியில்....நானே நானாய், நானே மழையாய், நானே, மரமாய், நானே மேகமய் நானே....என் மனைவியாய்....ஒரே நேரத்தில் எல்லாமாய் உணர்ந்து ஊறிக் கிடந்தேன்...

மறுபடியும் மூலாதாரம் விழிக்க..., சுவாதிஷ்டனம், மணிப்பூரகம்....என்று சக்தி மேலே எழ ஆரம்பிக்க மூச்சு மெல்ல சீராக.....அனாதகத்தை தொடப் போகும் முன்பு....

யூ இடியட்....!!!! நான் உன்னை கவிதை சொல்ல சொன்னேன்டாஆஆஆஆ........!!!!! .ஸ்டுப்பிட்....என்று லெளகீகம் என் வயிற்றில் குத்தியது....அடிக்கத் துரத்தியது....ஓ.....சாரி, சாரி..... சாரிடி.....நான் சொல்றேன்....சொல்றேன்....சொல்லி விட்டு ஓட ஆரம்பித்தேன்....அவள் துரத்தினாள்....

பாதை ஓரம் கிடந்த ஒரு சிறு பாறையில் மூச்சிறைக்க அமர்ந்தேன்...., என் முன் வந்து மறுபடியும் அவள் மூச்சிறைத்தாள்...கண்ணடித்து வீட்டுக்கு போலாமா என்றேன்......! ஹி ஹி.. வீட்டுக்குத்தானே போகணும் சார்.... பின்ன என்ன காட்டுக்கா போகப் போறோம்....? என்று சொல்லி விட்டு ஹா.. ஹா என்றாள்..., ஜோக்கடித்து விட்டாளாம்...

காகிதத்தில் கவிதை செய்து, செய்து...
நான் களைத்தே போய்விட்டேன்....,
என் உதடுகளில் தேக்கி வைத்திருக்கிறேன்
ஓராயிரம் கவிதைகளை...
எங்கே உன் முன் நெற்றி காட்டு,
நாசி காட்டு, கன்னம் காட்டு, கழுத்து காட்டு
உதடுகளைக் காட்டு.....

என்று நான் கவிதையென்று ஒன்றை சொல்ல....ச்ச்சீ படுவா உதை படுவ.. என்று என் நெஞ்சு பிடித்து தள்ளி மிருதுவாய் சாய்ந்தாள்....! சரி வா வீட்டுக்கு போகலாம்....இருட்டிடுச்சு...என்றாள். அவள் சொன்னதையே நான் வேகமாய் அழுத்தி திருப்பிச் சொன்னேன்....முறைத்தாள்.....!

மெல்ல கை கோர்த்துக் கொண்டு ஏதேதோ பேசிக் கொண்டு மெல்ல வீடு நோக்கி நகர ஆரம்பித்தோம்....

நல்ல வேளை மழை வரலேல்ல........என்றவள் வீடு நெருங்கியதும்...ஆமா நைட் உனக்கு என்ன டின்னர் வேணும்டா.....? இட்லி, தோசை , சப்பாத்தி, சாதம்.....என்று பட்டியலிட்டு பதிலுக்காய் என்னைப் பார்த்தாள்....

நான் " நீ " என்றேன்...எங்கோ பார்த்தபடி....,

யூ டாமிட்.....நீ பட்னிதான் இன்னிக்கு.....அவள் பேசிக் கொண்டே வீட்டுக் கதவைத் திறந்து உள்ளே போனாள்...

நான் வாசற்படியில் அமர்ந்து வானம் பார்த்தேன்....நட்சத்திரங்கள் கண் சிமிட்டிக் கொண்டிருந்தன....

" பட்டு கருநீல - புடவை
பதித்த நல்வயிரம்
நட்ட நடுநிசியில் - தெரியும்
நட்ச்த்திரங்களடி "

பாரதி மூளைக்குள் ஏறி மீசை அமர்ந்து முறுக்கிக் கொண்டிருந்தான்.....நேரம் போனதே தெரியவில்லை....மறுபடியும் மூலாதாரம், சுவாதிஷ்டனம், மணிப்பூரகம்....என்று நகர ஆரம்பித்து இருந்தேன்...

உள்ளேயிருந்து என் ச்ச்ச்சிம்னி கூப்பிட்டாள்......." சாப்பாடு ரெடி வாங்க........." 

அனாதகம் தொடும் முன் வழுக்கி விழுந்த படி எழுந்தேன்....இதோ வந்துட்டேன்மா......!

வீட்டுக்குள் சென்று விட்டேன்....!

தேவா. S


மரம்...!யாருமற்ற ஒரு பொழுதில் அந்த மரத்தடியில் நான் நின்று கொண்டிருந்தேன். என்ன மரம் என்று மனம் ஆராயவில்லை. மரத்தின் வேர்களில் பார்வையை ஊன்றி அதன் பிடிப்புகளுக்குள் மெல்ல மெல்ல ஊடுருவி வெகு ஆழத்தில் சென்று அதன் மையவேரினை மனம் பற்றி முடிச்சிட்டுக் கொண்ட சற்று நேரத்தில் நான் மரமாகிப் போனேன்.

முதல் முறையாய் மனமற்ற ஒரு உணர்வு நிலையில் மண்ணின் ஆழத்தில் இருந்த ஈரப்பதத்தை சுகமாய் உறிஞ்சி உறிஞ்சி என் உடலின் பாகங்களுக்கெல்லாம் பரவ விட்டுக் கொண்டிருந்தேன். சலனமில்லாமல் ஒற்றைக் காலில் நிற்பது ஒரு சுகானுபவம். சுகத்தை உடலுக்குள் தேக்கிக் கொண்டு என் நீட்சிகளை மெல்ல மெல்ல உணர்தலாய் பார்த்துக் கொண்டிருந்தேன். விழிகள் இல்லை ஆனால் பார்வை இருந்தது.

மண்ணுக்கடியில் எத்தனை ஜீவராசிகள் இருக்கின்றன. ஒவ்வொன்று குறு குறுப்பாய் அங்கும் இங்கும் ஒரு ஓட்டத்தில் இருப்பதை தெளிவாக உணர முடிந்தது. அவைகளுக்கெல்லாம் நினைவுகள் பல மையப்புள்ளிகளளில் இருக்கவில்லை. ஒரே புள்ளியில் அவற்றின் மனம் குவிந்து கிடப்பதை அதிர்வுகளாய் அறிய முடிந்தது. அந்த ஒற்றைப் புள்ளியில் உயிர் வாழும் ஆசை தேங்கிக் கிடப்பதும், அந்த ஆசையின் இரண்டு முகங்களாய் பசியும், காமமும் ஒடுங்கிக் கிடந்ததும் தெரிந்தது.

உணவு தேடுதலும் உண்ணலும், இனப்பெருக்கம் செய்தலும் மட்டுமே அவற்றின் வேலையாயிருந்தன. உயிர்ப்பயமும் எல்லாவற்றுக்குள்ளும் இருந்தன. ஏன் பயப்பட வேண்டும் என்ற கேள்விக்குப் பின்னால் எந்த ஒரு பதிலும் இல்லாமல் வெற்றுக் கூடாகவே இருந்தது. பூமின் ஆழத்தில் அதன் நடு மையம் கனன்று கொண்டிருந்தாலும் அதன் அடுத்த அடுத்த அடுத்த கட்டங்களில் நீர் கசிந்து கசிந்து ஒரு மாதிரியான குளுமையாய்த்தான் பூமி எப்போதும் இருக்கிறது.

மெல்ல என் வேர்களை பரப்பி....ஒரு உற்சாக கூடலாய் பூமியை அழுத்தி அந்த சுகத்தை அனுபவித்து நான் விடாமல் நீர் உறிஞ்சிக் கொண்டிருந்தேன். தனிமைதான் அது ஆனால் சுற்றிலும் எல்லாம் அதன், அதன் அழகில் இயங்க நானே நானாய் நானும் இயங்கும் ஒரு தனிமை. ஆழமான ஆனால் எல்லாமே அழகான ஒரு தனிமை. பல காலச் சூழல்களிலும் நான் இங்கே நின்றிருக்கிறேன். ஒரு பறவை எங்கிருந்தோ வந்து இந்த காட்டுப் பகுதியில் எச்சமிட அதன் எச்சத்திலிருந்த ஒரு பழத்தின் கொட்டையாய் நான் இருந்தேன் முன்பு...

விதையாய் நான் இருந்த போதும் எனக்குள் ஒரு இயக்கம் இருந்தது, மெல்ல மெல்ல என் பிஞ்சுக்கால்களை மண்ணில் பதித்தேன். மெல்லிய சவ்வுகள் எல்லாம் விதையாய் இருந்த எனக்குள் மெல்ல அறுபட மண்ணில் ஒரு சிறு வேராய் நான் இறங்கிய அந்த தினம் எனக்கு மறக்க முடியாத தினம்தான்...., ஒரு மாதிரி கூச்சத்தோடு மண்ணை தொட்ட என்னை வாரி இழுத்துக் அணைத்துக் கொண்டது இந்த பூமித் தாய்.  மனிதர்களின் வாழ்க்கையில் சிசுவினை பிறப்பித்து விட்டு தாய் நகர்ந்து விடுவாள்....

ஆனால் இங்கே....

சிசுவினை தன்னிடம் இழுத்துக் கொண்டு காலெமெல்லாம் கூடவேதான் இந்த தாயிருப்பாள். அவளின் தொடர்பின்றி நான் இல்லை. நான் பரப்பிய வேர்கள் மண்ணுக்குள் நுழைய சிரமப்பட்ட காலங்களில் எல்லாம் ஒரு மழையோ இல்லை இரவு நேர பனியோ பூமித்தாயோடு கூடிக் கலந்து மெல்ல அவளை இலகுவாக்கி நான் உட்செல்ல இடம் கொடுத்து இருக்கின்றன.

பிஞ்சாய் நான் கண் மூடிய படியே மண்ணுக்குள் அமிழ்ந்து முதன் முதலாய் என்னுள் முலைப்பாலாய் என்னுள் செலுத்திய நீர்தான் என் உயிரின் முதல் வித்து. ஒரு துளியினை எனக்குள் அனுப்பி...உற்சாகமாய் தாய் பசுவின் முலை முட்டும் ஒரு கன்றினைப் போல பூமியை மெல்ல மெல்ல முட்டி, முட்டி மோதி சிலிர்ப்பாய் சிறு துளிர்ப்பினை இலைகளாக்கி தலை தூக்கி நான் பூமியை விட்டு வெளியே வந்து எட்டிப் பார்த்த போது சடாரென்று சூரியனின் ஒளி எனக்குள் ஊடுருவ எனக்கான உணவு செய்யும் ஒருவித்தையை நானே புரிந்து கொண்டேன்....

அங்கும் இங்கும் அலையும் காற்றினை சுவாசித்து, சுவாசித்து பிராணனை என்னுள் ஆழமாய்  நிரப்பிக் கொண்டேன்..! நான் உயிர்வாழ ஒரு கூட்டுக் கலவையான காற்றும், உணவு செய்ய ஒரு கூட்டுக் கலவையான காற்றும் என்னைக் கேட்க்காமலேயே எனக்கு உதவி செய்ய...நானே நானாய் இருக்க...என்னைச் சுற்றி இருந்த எல்லாமே உதவின..

நான் தனிதான் இருந்தாலும் கூட்டினால் கிடைத்த தனிமை இது. நான் மெளனமாய் இருப்பதற்கு என்னைச் சுற்றி இருக்கும் நிறைய சப்தங்கள் எனக்கு உதவி இருக்கின்றன. தட்டுத் தடுமாறி மெல்ல மெல்ல வேர்பிடித்து நிதானமாய் நான் வளர வளர நான் பலமானேன்....

கிளைகளானேன்...பல இளைகளானேன்....பருவம் எய்தி மெல்ல மொட்டுக்களாய் என் பருவத்தின் எழுச்சியினை வெளிப்படுத்தினேன்....பூவானேன்....வண்டுகளோடு கூடிக் கூடிப் பின் காயானேன்...பின் பழுத்த பழமானேன்...! தனித்திருந்த நான்  ஒரு கட்டத்தில் பெரும் கூட்டத்திற்கு சொந்தமாயும் ஆகிப்போனேன்....

எங்கெங்கிருந்தோ பறவைகளும், பல்லிகளும், பாம்புகளும், பூச்சிகளும், பல ஜீவராசிகளும் என்னிடம் வரும்..! நான் முழு உறக்கமோ அல்லது விழிப்போ இல்லாத மத்திமத்தில் எப்போதும் ஒரு மோன நிலையில் இருக்கும் ஒரு உயிர் ஆனால் என்னிடம் வரும் யாவும் இரவுகளில் உறங்கும், பகற் பொழுதில் சண்டையிடும், தத்தம் அலகு கொண்டு பழங்களாய் பரவிக் கிடக்கும் என்னை குத்திக் கிழித்து தன் பசி தீர்க்கும்.......

சில விலங்குகள் என் மீது உராய்ந்து உராய்ந்து ஏதோ ஒரு சுகம் தேடும்...! சில தன் கூடு கட்ட என்னை துளையிடும்...., எல்லாம் வலிதான் ஆனால் அதுவும் சுகம்தான். நான் என்ற என்னை எனக்காக மட்டும் வைத்து கொண்டு நகர்தல் இந்த பிரபஞ்ச இயக்கத்திற்கு முரணானது...

சார்புடைமை என்பது பிரபஞ்ச நியதி. நான் வாழ நான் நிறைய பேரைச் சார்ந்திருந்தேன்....இருக்கிறேன்....இருப்பேன்...! அப்படித்தான் தான் வாழ என்னைச் சார்ந்து மற்றவை இருக்கின்றன...! கூட்டமாய் கோடி பேர் வந்தாலும், ஆடிப்பாடி சிரித்தாலும், உண்டு களித்து சென்றாலும், நிழலில் ஓய்ந்து உறங்கி மகிழ்ந்தாலும் நிகழ்வுகளாய் பகிர்தலாய் மட்டுமே பயணிக்கிறது எங்கள் உறவு...

நிபந்தனைகளோடு யாரும் வருவதுமில்லை. நிபந்தனைகளோடு யாரும் செல்வதும் இல்லை. நான் இருக்கிறேன்... .என்னைச் சுற்றி எல்லாம் நிகழும், செல்லும்...எங்களுக்குள் எந்த உறவுப் பரிமாற்றங்களும் எதிர்பார்ப்புகளும் கிடையாது.

நிலத்தில் நீர் வற்றிப் போய், மழை பெய்யாமல் போன காலங்களும் உண்டு, அப்போதெல்லாம் தண்ணீர் இல்லாமல் நான் கருகி இலைகளெல்லாம் உதிரிந்து உயிர்ப் போராட்டம் கூட நடத்தி இருக்கிறேன். எனக்கு வலிக்கிறது என்று அதை நான் வேறு யாருக்கும் மாற்ற நினைத்ததில்லை....

செழித்து இருக்கும் போது என்னோடு கொஞ்சிக் குலாவிய குயில்களும், கோட்டன்களும், காகங்களும், இன்ன பிற பறவைகளும், நிழழுக்காய் என்னிடம் ஒதுங்கிப் பாராட்டிய மனிதர்களும், மனம் மகிழ்ந்த விலங்குகளும் என்னிடம் நெருங்கக் கூட இல்லை....

நான் செழித்திருந்தேன்..அவை என்னை இருப்பாக்கிக் கொண்டன. நான் பட்டுப் போக ஆரம்பித்தேன் அவை இடம்பெயர்ந்து விட்டன. நாளை மீண்டும் செழிப்பாவேன் அவை மீண்டும் வரும்.  இது நியதி.....இதில் சந்தோசமும் இல்லை துக்கமும் இல்லை...!

உறவுகளை உரிமைகளாக எடுத்துக் கொள்ளும் போது வலியும் கூடிப் போகிறது வாழ்க்கையும் வெறுத்துப் போகிறது. உறவுகளும் இன்ன பிற சுக துக்கங்களும் வெறும் நிகழ்வுகள்தான்! நானும் ஒரு நிகழ்வு....இங்கே வருத்தப்பட ஒன்றுமில்லை...!

வாழ்க்கையின் நகர்வோடு நான் நகர்கிறேன் என்னைச் சுற்றியும் எல்லாமும் நகர்கின்றன.....! இதோ இன்று வேர் பிடித்து பிரமாண்டமாய் ஒரு அரசனாய் சிரித்துக் கொண்டிருக்கிறேன்.....நாளை வேரோடு சாய்ந்து வீழவும் செய்வேன்.... ஆழமான புரிதல்களோடு எப்போதும் பரஸ்பரம் அன்பை மட்டுமே பகிரத் தெரிந்திருக்கும் ஒரு உயிர்...அவ்வளவே..!

என்னைப் பொறுத்த மட்டில் என் வாழ்க்கை ஒரு தவம். புலன்கள் இல்லாமல் உடலே உணர்வாய், உணர்வே புத்தியாய், புத்தியே புரிதலாய் ஆழமான சுவாசத்தோடு தொடர்ந்து கொண்டிருக்கிறது என் தவம்.....

" எலேய்...........கிறுக்குப் பயலே....பர்மாக்காரரோட மரத்தடியில நின்னுகிட்டு என்ன ரோசிச்சுக்கிட்டு இருக்க....மாட்டப் பத்துடா கூதற....."

யாரோ வேகமாய் கத்த சட்டென்று முடிச்சுக்கள் அவிழ்த்து நான் மனிதனானேன்....மரம் பர்மாகாரருக்கு சொந்தமாகிப் போனது......!


தேவா.  SSunday, January 15, 2012

இசையோடு இசையாக..தொகுப்பு I !' எல்லாம் தான் பெண்ணே செய்தேன்..! எதார்த்த உலகத்தில் உன்னிடம் ஏகாந்தக் கனவுகளைப் பரப்பினேன்..! சராசரி சாலை என்று நடக்கவே பயந்தாய், உனக்கு என் கவிதைச் சிறகுகளைப் பூட்டி பறந்து வா என்றேன். ஒரு நாள் உன் கண்ணில் தூசு விழுந்த பொழுதில் கண் கலங்கி நின்றாய் அதை கண்களில் இருந்து எடுத்து அந்த சிறு தூசியை ஒரு அரக்கனை எரிப்பது போல எரித்துப் போட்டேன்...!!!

அன்றாட தினசரி காலண்டரை கிழித்து அதை தூக்கியெறியாமல் நித்தம் உனக்கொரு கவிதை எழுதி கொடுத்தேன். என் சுட்டு விரல் உன் மேல் பட்டால் கூட எதன் பொருட்டோ என் காதல் வந்ததென்று நீ எண்ணி விடக் கூடாது என்று எப்போதும் என் காமத்தை தூரங்களில் விலக்கியே வைத்துதான் உன்னோடு நடப்பேன்.

ஒரு சந்தோசமென்றால் கூட நீ நன்றாக சிரித்த பின்புதான் நான் சிரித்தேன். நீ சிரித்து முடிக்கும் முன்னால் நான் சிரிப்பை நிறுத்தி விடுவேன். நீ அழைக்கும் போதெல்லாம் வந்திருக்கிறேன், நீ விலக்கும் போதெல்லாம் தூரமாய் போயிருக்கிறேன். உன் அனுமதிகளோடேதானே பெண்ணே எல்லாம் நகர்ந்து கொண்டிருந்தது.. இன்று எட்ட முடியா தூரமாய் நீ நகர்ந்து போனது ஏனோ?

நீர் வேண்டாம் என்று...
பூமி சொன்னால்...
எங்கேதான் பெய்யும் மழை?

நீ அழைக்காத என் அலைபேசி இறந்து போய் கிடக்கிறது.....என் கவிதைகள் எல்லாம் உன் வாசித்தலின்றி சுவாசம் தப்பிய மீனாய் துடி துடித்துக் கொண்டிருக்கிறது. என்னைச் சுற்றி இருந்த எல்லாம் தான் பெண்ணே ரசித்தாய் ஆனால்...........என்னை மட்டும் நீ ரசிக்கவேயில்லையே ஏன்...? ' 

இப்படியாக நீண்டு கொண்டிருக்கும் வரிகளில் காதல் ஒன்று தொலைந்து போனதை ஒரு கவிதையாய் சொல்லும் இந்தப் பாடலின் தாக்கம் கொள்ளை கொள்ளையாய் இருக்கிறது. எப்பவுமே எனக்கு விஜய் பிடிக்கும் ஐ யூஸ்ட் டு சே நெக்ஸ்ட் தமிழ் சினிமாவ ரூல் பண்ணப் போறது விஜய்தான்னு....! இப்போ வேணா டைமிங்க் ஒரு மாதிரி இருக்கலாம்....பட் ஒழுங்கா கதை ச்சூஸ் பண்ணி நடிச்சா....கண்டிப்பா இன்னொரு ரஜினி.. !!!அப்டி ஒரு பக்கா பக்கத்து வீட்டுப் பையன் முகம்.

சரி.. விஜய் பிடிக்கதவங்க இங்க வந்து ஒழிக கோசம் போட்டுடாதீங்க..!!! இந்த பதிவு பாட்டுக்கு... மேலே இருக்கும் சூழலுக்கு அட்டகாசமாய் விஜய் ரிஆக்ட் பண்ணியிருப்பாங்க....மணி சர்மாவோட சாரோட இசை இனிமைக்கு வைரமுத்து சார் வரிகள்...சரியா பொருந்தியிருக்கும். பாடலின் ஜீவன் ஹரிஸ் ராகவேந்திரர்.

" காதல் என்ற ஒன்று அது கடவுள் போல
உணர தானே முடியும் அதில் உருவம் இல்லை
காயம் கண்ட இதயம் ஒரு குழந்தை போல
வாயை மூடி அழுமே சொல்ல வார்த்தை இல்லை "

இனிய இசை அனுபவத்துக்கு வாழ்த்துக்கள்....!அப்போ.........வர்ர்ர்ட்ட்டா...!!!!

தேவா. S

பின் குறிப்பு: அப்போ அப்போ இது மாதிரி பாடல்களை கேட்டுட்டு...அப்போ தோணுறத டக்கு டக்குனு எழுதிடலாம்னு இருக்கேன். பாடல் விமர்சனம் கிடையாது...விமர்சனம் பண்ற அளவுக்கு எல்லாம் நமக்கு புத்தி பத்தாது....! இது ச்ச்சும்மா....அட..ச்ச்சுமன்னா என்னவா? ச்ச்சுமான்னா சும்மாதான்...!


மாடு புடிக்க வாரியளா....?!ஏறு தழுவுதல்னுதானே சல்லிக்கட்டை அப்பவே நம்ம பாட்டன் பூட்டன் எல்லாம் சொல்லி வச்சிருக்காய்ங்க...இன்னிக்கு புதுசா வந்து மிருக வதை லொட்டு லொசுக்குன்னு கோர்ட்ல கேச போட்டுகிட்டு...என்னாப்பு நீங்க...? ஆயிரத்தெட்டு ரூல்ஸ் ரெகுலேசன் எல்லாம் வச்சிகிட்டு, காலங்காலமா நாங்க வெளையாடிக்கிட்டு இருந்த விசயதை இம்புட்டு சீரியசா ஆக்கிபுட்டியளே....

சல்லிகட்டுல மாடு குத்திதேன் மனுசங்க செத்துப் போயிருப்பாய்ங்கன்னு பேப்பர்ல படிச்சி இருப்பீக...? எங்கனயாச்சும் மாடுக செத்துப் போச்சுன்னு படிச்சு இருக்கீகளா? இருக்காதே....சல்லிக்கட்டுனா என்ன மாட்ட தும்புறுத்துறதா....? அங்க அங்க சில பேரு அத்து மீறி இருப்பாய்ங்க...அது கழுத எல்லா பொழப்புலயும்தானே அத்து மீறிப் போற ஆளுக இருக்கு....

சல்லிகட்டு எங்களுக்கு வீர வெளையாட்டுப்பா...?என்னாண்டு நினைச்சீய..? இதுல என்னப்பு வீரம் இருக்குன்னு கேக்கிறியளா...? மாட்டை புடிச்சு அடக்கி கீழ தள்ளி மேல ஏறி நிக்கிறதுதான் சல்லிக்கட்டுன்னு யாரு சொன்னது....அப்டி  எல்லாம் செய்றது இல்லப்பு சல்லிக்கட்டுனா...

மாட்ட வெரசா வெரட்டிகிட்டு போயி அதோடு திமிலிசங்கைய புடிச்சி கட்டிப் புடிச்சிகிட்டு, கீழ விழுந்துறாம வெரசா மாட்டோட வேகத்துக்கு ஈடு கொடுத்து வேகமா ஒடியாரணுமப்பே...மாடு குத்தப் பாக்கும், சில நேரம் குத்தியேபுறும், அங்கிட்டு இங்கிட்டு தள்ளி நம்மள விழுத்தாட்டப் பாக்கும் அம்புட்டையும் தாங்கி கிட்டு ரெம்ப நேரம் யாரு நிக்கிறானோ அவென் செயிச்சவன்...

மாட்டு புடிக்கிறதுல என்ன வீரம்னு கேப்பாய்ங்க..நீங்க அம்மூரு மாடுகள வந்து பாக்கணும்...தீனியப் போட்டு,...கொம்புகளை சீவி சிங்காரமா இதுக்காண்டியே வளர்த்தி வச்சு இருப்பாய்ங்க...! மாடுன்னு சொன்னா அது மிருகந்தேன்..அதுக்கு ஒரு கூறு மாறும் தெரியாது ஆனா மனுசப்பயலுக்கு கூறு மாறு தெரியும்ல...மாடு எங்கிட்டு எப்போ திரும்புதுன்னு மனுசப்பயலாள ரோசிக்கவே முடியாது...

அங்கிட்டு திரும்பும், இங்கிட்டு பாத்து முறைக்கும், முன்னாடி இருக்க கால சிராண்டிகிட்டே நம்மள குத்தறதுக்கு குறிபாக்கும், வாலை தூக்கும்...முன்னாடி பாயும், பின்னாடி கால எட்டி ஒதைக்கிம், அங்கிட்டு போகுதுன்னு நினைப்பீக லவக்குன்னு இங்கிட்டு வெரசா திரும்பும்..., 

அசந்து மசந்து நின்னியன்னு வச்சிகிறுங்க...எந்தப்பக்கட்டு சதைய குத்தி கிழிக்கும்னு நமக்கே தெரியாது...! ஒண்ணுந்தெரியாட்டி லவக்குனு கீழ படுத்துக்கிட்டியன்னா பேயாம திரும்பிகிட்டு போயிறும்..ஓடி ஒளிஞ்சறாலாம்னு வெரசா ஓடினா வெரட்டி வந்து குத்தும்...

கனமான மாடுகள எவ்விப் புடிக்கறதுக்கு முன்னாடி நம்மள் எவ்வி குத்தியேபுடுமப்பே...வவுத்துல குத்தி தூக்கி எறிஞ்சுச்சுனா... அம்புட்டுதேன்....குடலு வேற குந்தாணி வேறயா போயி விழுக வேண்டியதுதேன்....! 

அம்புட்டும் தெரிஞ்சும் அந்த உசுர துச்சமா மதிச்சு மாடுக கிட்ட போயி அதுவும் பெல்லா கோவக்கார மாடுகளா பாத்து அதுக மேல பாஞ்சு திமிலி சங்கிய புடிச்சு அணைச்சுகிட்டு போகையில் மனசு பூரா காத்துல பறக்குற மாதிரி இருக்கும் பாருங்க....அதேன்...அதேன் சந்தோசம்....!

மாடு குத்திபுறும்னு தெரிஞ்சும், குத்தினா செத்துப் போயிருவோம்னு புரிஞ்சும் போயி மாட்ட புடிக்கிறோம் பாத்தியளா அது வீரந்தானே....! இதைப் போயி என்னமோ நாங்க மாடுக கூட மல்லுக்கட்டி சண்டை போடுறமாதிரி இட்டுக்கட்டி சல்லிக்கட்ட நிறுத்துங்க..அது இதுன்னு பொலம்பிகிட்டு இருக்காய்ங்க....

இளந்தாரிப் பயலுக இப்படி சாடிப் போயி மாடு புடிக்கிறது எல்லாம் அதுவும் முரட்டு முரட்டு மாடுகளை பிடிக்கிறது எல்லாம் வீரம்யா...வீரம்..பொறவு இதை என்னாண்டு சொல்லுவிய? மாடு குத்தி பத்து பன்னெண்டு தையலுகள போட்டுகிட்டு அடுத்த சல்லிகட்டுக்கு வந்து நின்ன பயலுக எங்கூர்ல ரெம்பப் பேரப்பே....! சும்மா காச்சுக்கும் ஓடிப்பிடிச்சு வெளையாடுற வெளையாட்டு இல்ல இது....சல்லிக்கட்டுன்னா...தமிழப்பயலுகளோட வீர வெளையாட்டு...!

வயக்காட்ல நின்னு விதை போட்டு தண்ணி பாச்சி, ஏறு ஓட்டி உழுது, களையெடுத்து, நட்டு, வெள்ளாமை செஞ்சு, கதிரறுத்து, பொனையடிச்சு, தூத்தி, அதை நெல்லா ஆக்கி அதை மூடையில கட்டி இந்தா......அப்டி முதுகுல தூக்கி பாரவண்டியில இப்டி இறக்கி வைக்கியில மனசு ரெக்கை கட்டி பறக்குமப்பு...

வயக்காட்டுப் பொழப்பு கஷ்டப்பாடு பொழப்புதேன்...ஆனா அடிமை பொழப்பு இல்லப்பு...வலியோட செஞ்சாலும் மனசு நெறஞ்சு செய்யிறோம்....

சொல்ல வந்த சோலிய மறந்து போயிட்டேன் பாருங்க...அம்மூர்ல நாளைக்கி சல்லிகட்டு வந்திருங்கப்பு...., மாடுகளை இளந்தாரிக புடிக்கிறதும், புடிமாடுகளைக் கொண்டு வந்தவைங்க மூஞ்சிய தூக்கி வச்சிகிட்டு அழுகுறதும்னு..........ஒரே ஆட்டமாத்தான் நிப்போம்....,அம்ம வீட்டுக்கு வந்துருங்க...சாப்டு கீப்டுபுட்டு...போயி மாடு புடிக்கலாம்...!

அப்போ.....வர்ர்ர்ர்ர்ட்ட்டடா!!!!!


தேவா. S


Saturday, January 14, 2012

ஈழம் என்னும் கனவு...!மீண்டும் சில காணொளிகளை இரத்தக் கறைகளை விழிகளில் தேக்கியபடி காண நேரிட்டது.. ஈழத்தில் நடை பெற்றது போர் என்று உலக நாடுகளோடு சேர்ந்து அரக்கன் ராஜபக்சே வேண்டுமானால் கூறலாம் ஆனால் ஈழத்தில் நடந்தது போர் அல்ல.. அது திட்டமிடப்பட்ட பெரும் இன அழிப்பு...

தனியொரு படையாக இலங்கையின் பேரினவாத அரச படைகள் எம்மவரை நோக்கிச் சென்றிருக்குமெனில் காலம் இந்நேரம் அவர்களைச் செரித்துப் போட்ட இடத்தில் தமிழீழக் கொடி பட்டொளி வீசி பறந்து இருக்கும். ஒரு முறை அல்ல ஓராயிரம் முறை இலங்கை இராணுவத்தை அழித்தொழிக்கும் வல்லமையை தமீழீழ விடுதலைப் புலிகள் கொண்டிருந்தார்கள் என்பதை நாம் வார்த்தைகளைக் கொண்டு விளக்க வேண்டிய அவசியமே இல்லை.

உலக நாடுகள் எல்லாம் ஒன்று சேர்ந்து சண்டையிட்டால்தான் வெல்ல முடியும் என்ற ரீதில் எங்கும் நகர்தல் சாத்தியமில்லாமல் விடுதலை புலிகளின் கைகளும் தொடர்புகளும் கட்டப்பட்டுதான் போர் எனப்படும் மிருக வெறியாட்டம் ஈழத்தில் நடந்தேறியது. இப்போது சொல்லுங்கள் எப்பேர் பட்ட இராணுவத்தை அண்ணன் பிரபாகரன் கட்டியெழுப்பி இருப்பார் என்று...? அதன் வல்லமை என்னவென்று சற்றே கண் மூடி யோசித்துப் பாருங்கள் உலகத்தீரே.....

விடுதலைப் புலிகள் தனி நாடு கேட்டார்கள், ஈழத்து மக்கள் இலங்கையைப் பிரித்துக் கேட்டார்கள் என்று இனியும் பொய்ச்செய்திகளைப் பரப்பாதீர்கள் மனிதர்களே...குறிப்பாய் தமிழ் பேசும் தமிழர்களே....!

ஈழப்போர் நிகழ்த்தப் பெற்றது தம் தேசத்தை அடையும் நோக்கில், தாய் தமிழரின் மண்ணில் சுதந்திரமாய் வாழ முடியாமல் அடிமைகளாய் சிங்களவனிடம் உரிமைகளைப் பலி கொடுத்து விட்டு திணறிப் நின்று கொண்டிருந்த மக்கள் எடுத்த எடுப்பிலேயே ஆயுதமேந்திப் போராடவில்லை என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

காந்திய வழியில் அறப்போராட்டத்தை நம் உறவுகள் முன்னேடுத்தப் போது வன்முறையைக் கொண்டு மிருகமாய் அவர்களை அடக்க முற்பட்ட வெறி பிடித்த சிங்களவன் வன்முறையாளன் இல்லையா? தமிழன் தொடைக்கறி இங்கே கிடைக்கும் தமிழச்சியின் முலைக் கறி இங்கு கிடைக்கும் என்று தமிழர்களை கொன்று கிழித்து அவன் ஆடிய வெறியாட்டங்களை எல்லாம் எப்படி நாம் மறந்து போவது...?

அற வழியில் போராடி, போராடி ஓய்ந்து போய் இனி சிங்களவனோடு ஒத்து வாழ முடியாது என்ற முடிவுக்கு தந்தை செல்வா போன்ற பெரியவர்கள் எல்லாம் வந்து 1976ல் வட்டுக்கோட்டை தீர்மானத்தில் தமிழர்களுக்கு தமிழ் ஈழம் ஒன்றே தீர்வு என்று தீர்மானித்தார்கள்...! 

தனித் தமிழ் ஈழம் என்று குறிப்பிட்ட பகுதியை மீட்டெடுக்க களமாடினாலும் வரலாற்றின் எந்தப் பக்கத்தைப் புரட்டிப் பார்த்தாலும், பழம் பெரும் தமிழ் இலக்கியங்களை வாசித்தாலும் அங்கே ஈழம் என்ற ஒற்றை வார்த்தைதான் இருக்கிறதே அன்றி இலங்கை என்ற ஒரு வார்த்தையே இல்லை என்பதை நாம் அறிய முடியும்...!

மொத்த ஈழத்தையும் சிங்களவனிடம் கொடுத்து விட்ட தமிழர்கள் தான் வாழ தன் நாட்டில் சிறு நிலப்பரப்பை அதுவும் உரிமைகள் மறுக்கப்பட்டு, அடித்து நொறுக்கப்பட்டும் அடிமைகளைப் போல ஆள நினைத்தவனிடம் கேட்டுப் போராடியதுதான் இந்தியா போன்ற நாடுகளுக்குத் தீவிரவாதமாய்ப் போய்விட்டது...!

தீவிரவாதம் என்ற வார்த்தையை ஈழப் போரட்டத்தை சுட்டிக் காட்டப் பயன்படுத்திய கயவன் சிங்களவன் செய்ததுதான் தீவிரவாதம்.  விடுதலைப்புலிகள் தீவிரவாதிகள் என்றால், ஈழத்தில் அமைதிப் படை என்ற பெயரில் இராணுவத்தை அனுப்பி கிட்டத்தட்ட 70,000 தமிழர்களைக் கொன்று குவித்த தேசத்தை என்னவென்று அழைப்பீர்கள் தோழர்களே....?

ஒவ்வொரு தமிழனின் ஆழ்மனதிலும் தனித் தமிழ் ஈழம் என்பது அணையாத நெருப்பாய் எரிந்து கொண்டே இருக்க வேண்டும். வெவ்வேறு நாட்டில் இருந்தாலும் எந்த வித மாற்று அடையாளங்களும் இன்றி தமிழன் என்ற ஒரு அடைப்புக்குள் தமிழர்கள் ஒன்று இணைய வேண்டும் என்பதுதான் காலம் நம் முன் வைத்திருக்கும் மிகப்பெரிய வேண்டுகோள்.

தமிழர் திருநாளாய் அடையாளம் காணப்படும் பொங்கல் திருநாளை நீங்கள் தமிழ்ப் புத்தாண்டு என்று கொண்டடிக் கொள்ளுங்கள் அல்லது உழவர் திருநாள் என்று கொண்டாடிக் கொள்ளுங்கள்....இதுவல்ல நமது தலையாய பிரச்சினை,

ஆனால் ஒவ்வொரு முறையும் தமிழன்  என்று நாம் உரைக்கும் போதெல்லாம் நம் இனத்திற்கு நடந்த பெரும் வஞ்சிப்பினையும் பேரழிவினையும் மறந்து விடாமல்...

எழுத்தாய், பேச்சாய், செயலாய் இந்த இன உணர்வு என்னும் நெருப்பினைப் பரவச் செய்யுங்கள். மீண்டும், மீண்டும் காணும் ஈழப் போர்க்குற்ற காணொளிகளும், புகைப்படங்களும் நம் நெஞ்சை கருக்கிப் போடத்தான் செய்கின்றன. நம்மைச் சுற்றியிருக்கும் ஆயிரம் பிரச்சினைகளில் ஈழம் என்ற ஒரு பெரும் துரோகத்தை மறந்து விடாதீர்கள்....

தமிழர் திருநாளை நாம் கொண்டாடும் இவ்வேளையில் ஈழத்தில் இருக்கும் தமிழர்களையும், உறவுகளை எல்லாம் இழந்து விட்டு சிங்களவனின் அதிகாரத்தின் கீழ் அவர்கள் மன ஊனத்தோடு வாழ்வதையும் மறந்து போகாதீர்கள்...!

தமிழர்கள் எல்லாம் சுபிட்சமாய் தனி ஈழம் அமையப் பெற்று சுதந்திர ஈழக்காற்றை சுவாசுக்கும் பொழுதில்தான்....

தமிழர் திருநாட்களை நாம் கொண்டாடுவதிலும் வாழ்த்துக்கள் கூறுவதிலும் ஒரு அர்த்தமும் நியாயமும் இருக்கும் என்ற வலியினைப் பதிவு செய்வதோடு கட்டுரை வாய் மூடிக்கொள்கிறது தற்காலிகமாய்...!


தேவா. S

தீமைகளை கொளுத்துவோம்.....!

கிளர்ச்சிகளை ஊட்டும் திட்டங்களையும், மன முதிர்ச்சிகளை காட்டும் எழுத்துக்களையும், விளம்பரப் பலகைகளில் பெயர் கோர்க்கும் திட்டங்களையும் கோஷங்கள் இட்டு மனிதர்களை குவிக்கும் வழிமுறைகளையும், வியாபார யுத்திகள் கொண்ட புத்திகளையும் கடந்து செல்ல முற்படுகையில் சரசாரியான எம்மைப் போன்ற மானுடர்களின் விழுப்புணர்வு தன்மை என்பது மங்கித்தான் போய்விடுகிறது.

சுயமாய் சிந்திக்கவும், சுயமாய் திட்டமிடவும், விரும்பிய திசையில் நகரவும் சமுதாயத்தைச் சுற்றிப் பின்னப்பட்டிருக்கும் பொதுப் புத்தி என்னும் வலைப்பின்னல் நம்மை விடுவதே இல்லை.

காலம் காலமாக மானுட இனத்திற்கு நன்மை செய்கிறேன் என்ற போர்வையில், தம்மையும் தம்மைச் சுற்றி இருக்கும் சுய நல மூளைகளையும் முன்னிறுத்தியே பெரும்பாலான மக்கள் போராட்டங்களும், மக்களுக்கான விழிப்புணர்வு திட்டங்களும், சமூக இயக்கங்களும் நகர்ந்து கொண்டிருக்கின்றன. அரசியல் கட்சிகளும், சமூக நல் இயக்கங்களும் போதும் போதுமென்ற அளவிற்கு தங்கள் பெயர்ப்பலகைகளை இந்திய தேசம் முழுமைக்கும் மாட்டி வைத்திருக்கின்றன.

தனி மனித வாழ்வின் உயரம் இன்னும் மாற்றப்படவே இல்லை அல்லது மாறவே இல்லை. தோற்றுப் போன வழிமுறைகளையே மனிதர்கள் மீண்டும் மீண்டும் தூசு தட்டி எடுத்து வைத்துக் கொண்டு அதை விடியலுக்கான பாதையென்று விடாமல் கூறிக் கொண்டு இருக்கிறார்கள்

சமூக நல்நோக்கு என்பது தனிமனித விருப்பம். தனிமனித விழிப்புணர்வு. உணவினை காலமெல்லாம் தட்டில் இட்டு விட்டு அதை உதவி என்று உலகில் உள்ளோர் அறியச் செய்து என்னோடு இருக்கும் சக மனிதனை பிச்சைக்காரனாக்கி வைப்பதுதான் சமூக நல் நோக்கா?

பேச்சும் எழுத்தும் என்ன செய்து விடும் என்று ஏளனம் செய்யும் மூளைகள் எல்லாம் வரலாற்றின் பக்கங்களில் சரியாய் தங்களின் விழிகளை பதிக்காதவை. பேனா முனையிலிருந்து வீறிட்டு வெளிப்பட்ட சக்தி மிகுந்த எழுத்துக்களும், மக்களின் மனங்களைப் புரட்டிப் போடும் செறிவு நிறைந்த உணர்ச்சி மிகு பேச்சுகளும் புரட்சி விதையை மனித மனங்களில் விதைத்து மாற்றங்களின் காரணியாய் எப்போதும் இருந்திருக்கின்றன.

பதத்துப் போன திட்டங்களை ஓராயிரம் மனிதர்களிடம் திணித்து இதை நீ செய்.. அதை நீ செய்.. என்று தம்மை அறிவு ஜீவிகளாய் காட்டிக் கொண்டு சகமனிதனை கை பிடித்து கூட்டி செல்கிறேன் என்று கூறுபவர்களே..... உமது பயணம் எதுவரை? ஒரு ஏழையின் ஒரு வேளை வயிற்றுப் பாட்டிற்கு நீங்கள் உணவழிக்கும் வழிமுறையில் உங்களின் திருப்தி இருக்கிறது என்பதை நான் மறுக்கவில்லை... 

ஆனால்...அடுத்த வேளை உணவுக்கு அவனை உழைக்க வைக்க என்ன வழிமுறையைச் செய்து கொடுத்தீர்கள் நீங்கள்....? மக்கள் பணி ஆற்றும் சிங்கங்களே.....அடுத்தவரோடு உங்கள் அனுபவங்களை புரிதல்களை தெளிவு படுத்தி விவாதித்து சரி தவறுகளை சமுதாயத்திற்கு கொண்டு சேர்க்காமல் மேடைகளில் முழங்கி இதுவரையில் என்ன சாதித்து விட்டீர்கள் இந்த சமுதாயத்தில்...

பெரியார், அண்ணா போன்ற புரட்சித் தலைவர்களின் பேச்சிலும் எழுத்திலும் சமுதாயத்திற்கு தொண்டு செய்யும் மேம்போக்குத் தனம் மட்டுமா மிகுந்திருந்தது....அல்லவே.....அவர்களின் வழிமுறைகளை,வார்த்தைகளை கேட்கும் மனிதர்களின் புத்திகள் எல்லாம் தம்மை உலுக்கிக் கொண்டு கேள்விகளை கேட்டு பகுத்தறியும் தன்மையினை அவனுக்குள் ஊற்றி மாற்றத்தை அவர்களின் மனதிலே ஏற்படுத்ததானே செய்தது...?

வழிகாட்டுகிறேன் என்ற வழிமுறையை விட்டு  தள்ளி நின்று அதற்கு மாறாக ஒவ்வொரு தனி மனிதனையும் இந்த சமுதாயத்தின் பொறுப்புக்களையும் தத்தம் குடும்பத்தின் பொறுப்புக்களையும் உணரவைக்கும் ஒரு மிகப்பெரிய யுத்த களத்தில் நாம் நின்று கொண்டிருக்கிறோம். தயவு செய்து தெருவிற்கு வராதீர்கள் மனிதர்களே....சமுகம் என்பதை சரி செய்ய நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் உமது வீட்டினை சரி செய்வது...

தயவு செய்து யாருக்கேனும் கொடி பிடிக்கவும் கோஷங்கள் இடவும் செல்லாதீர் மானுடரே... நீர் செய்ய வேண்டியது எல்லாம் உமக்கும் உம்மைச் சுற்றியிருப்பவர்களுக்கும் சுமூகமான பகிர்தலைக் கொடுக்க வேண்டிய வாழ்க்கையை வாழ்வது. பொய்யையும் புரட்டு அரசியலையும் வாய் மொழியாக யாரோ சொல்வதைக் கேட்டு யாரையும் உங்கள் தலைவர்களாக்கிக் கொள்ளாதீர்கள் என் சமூகத்தீரே...

உணர்வுகளால் ஒருவன் உங்களைக் கட்டிப் போடுவான் அவன் உங்களுக்கு பொருளாய் உதவிகள் செய்ய ஒரு போதும் விரும்பமாட்டான். உமது நேரத்தை செலவு செய்து அவனுக்காய் கோஷமிடவும், ஊர்வலம் போகவும் அழைக்க மாட்டான். உம்மின் அகக் கண்களை திறந்து உமது உழைப்பை உமக்கே மூலதனமாக்கி, எழுத்தினை உமக்கு அறிவித்து வாசிக்கவும், அந்த வாசிப்பினால் உலகின் நடைமுறைகளை உமக்குள் ஏற்றி வைத்து தெளிவுகளை உங்களைக் கொண்டே கைகொள்ளச் சொல்வான்....

அவனே உங்கள் தலைவன்!!!!

அவன் எப்போதும் உங்களுக்கு நல் வார்த்தைகள் மட்டுமே கூறி உங்களைப் புகழ்ந்து கொண்டே இருக்க மாட்டான்..., மாறாக உமது வேலையைச் சரியாய் செய்யாவிடில் எப்போதும் உம்மைச் சாடி விரட்டுபவனாய் இருப்பான்.

கழுகு  என்னும் சமூக விழிப்புணர்வு இணைய தளத்தின் மூலம் இதையே நமது செய்தியாக பகிர விரும்புகிறோம்.  கழுகு இணைய உலகில் இயன்ற வரை தம் சிறகினை அசைத்துப் பறந்து இணைய பயனீட்டார்களிடம் விழிப்புணர்வையும் தத்தம் கடமைகளை அறிந்தவர்களாயும் இருக்கச் செய்கின்றது. 

தெருவில் இறங்கி மனிதர்களை வழி நடத்த ஒருவன் வருகிறான் என்றால் அவன் தன்னிறைவு பெற்றவனாய் இருந்தால் தான் முழுமையான சமூக நல்நோக்கு இருக்கும் இல்லையேல் தத்தம் சுய நலக் கொம்புகள்தான் சமூக நல் நோக்கு என்று வேசமிட்டுக் கொள்ளும் என்று நம்புகிறது. 

அதற்காகவே ஒவ்வொரு தனி மனிதரையும் தன்னிறைவு அடைந்த மனிதராய் மாறச் சொல்கிறது.

கழுகின் வழிமுறைகளும் செயல் திட்டங்களும் ஒருக்காலமும் முன்னால் எப்போதும் எல்லோரும் செய்ததாய் இருக்கப் போவது இல்லை. இப்படி இல்லாமல் யாம் இருப்பதாலேயே பலருக்கும் எமது நகர்வுகள் பிடிபடுவதுமில்லை. மீன்களை வாங்கிக் கொடுத்து மனிதர்களை சோம்பேறிகளாக்கி தம்மை கர்ண பிரபுக்களாக, எப்போதும் தம்மை உயரத்தில் வைத்துக் கொள்ள முனையும் வியாபார மனிதர்களின் முகத்திரைகளை கிழித்தெறியும் ஒரு யுத்தக் களத்தில் நாங்கள் எழுத்துக்களால் களமாடிக் கொண்டிருக்கிறோம்....

மீன் பிடிக்கக் கற்றுக் கொண்ட மனிதர்கள் மீன்களை பிச்சையாக கொடுக்கும் மனிதர்களின் முகத்தில் விசிறியடித்து உங்களின் பிச்சைகள் எமக்கு வேண்டாமென்று உறுதியாய் ஒரு நாள் கூறுவார்கள்.......... அந்த அற்புத தினத்தில்....பகட்டுத் தலைவர்களும், போலியாய் புரட்சிக் கொடி ஏந்தும் மனிதர்களும் பிழைப்பற்றுப் போய் தத்தம் கடைகளுக்கு பூட்டுக்களை போட்டு பூட்டி விட்டு...

உழைத்தால் தான் உண்ண முடியும் என்ற செவுட்டில் அறையும் உண்மையை உணரத்தான் போகிறார்கள். 

பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பது இயற்கையின் விதி...இந்த போகி தினத்தில் தேவையற்ற மன அழுக்குகளை எல்லாம் கலைந்து, தீமைகள் என்னும் என்னும் குப்பைகளை எல்லாம் மனதளவில் கொளுத்தி புதுப் புது முயற்சிகள் செய்து வெற்றிகளை குவித்து நாளும் மிளிர்வோம்...!


அனைவருக்கும் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்!!!!

தேவா. SThursday, January 12, 2012

விவேகானந்தர் என்னும் பெருஞ்சக்தி...!

நரேந்திரன் ஒரு விழிப்புணர்வு பெற்ற இளைஞனாக இருந்ததால்தான் தன்னைக் கடந்து மானுடநலம் சார்ந்து அவனால் சிந்திக்க முடிந்தது. வாழ்வியல் பிரச்சினைகளின் தீர்வுகளை கையில் சுமந்து கொண்டிருந்த பட்டங்களையும், வாசித்த புத்தகங்களையும் கடந்தும் அவன் தேடியதன் விளைவாகத்தான் அவனுக்குள் ஞானம் குடிகொண்டது. நரேந்திர தத்தா என்னும் சராசரி மனிதன் விவேகாந்தர் ஆனார்.

வாழ்வியல் தேடலின் பிரதிபலிப்பாய் ஆன்மீகம் இருப்பதை அறிந்திருக்கும் உலகத்தீர், ஆன்மீகம் என்பதற்கு யார் யாரோ பின்பற்றும் மூடநம்பிக்கைகளை மட்டும் உதாரணமாகக் காண்பித்து விட்டு தங்களை அறிவு ஜீவிகள் என்ற உறைக்குள் புதைத்துக் கொண்டு ஆன்மீகம் சார்ந்த தேடல் உடையவர்களை முட்டாள்கள் என்று நினைக்கின்றனர்.

கடவுளை நம்புவனுக்கும் கடவுளைத் தேடுபவனுக்கும் வித்தியாசம் இருக்கிறது. கடவுளைத் நம்புபவன் யாரோ ஒருவரிடம் கோரிக்கைகளை வைத்து விட்டு ஆட்டு மந்தையைப் போல எதையையோ பின்பற்றுகிறான், ஆனால் கடவுளைத் தேடுபவன், படைப்பின் அற்புதத்தை ருசித்து விட்டு இதன் மூலமும் எப்படி வந்து இருக்கும் என்ற ஆர்வ மிகுதியால் வாழ்க்கை என்னும் அற்புதத்திற்கு பின்னாலிருக்கும் அதிசயத்தை தேடி அலைகிறான்.

கோபம், காமம், தூக்கம், காமம், பசி இந்த ஐந்து உணர்வுகளை மட்டும் கொண்டிருந்து அதை மையப்படுத்தியே வாழ முற்படுவாயின் அவன் விலங்கை ஒத்தவனாகிறான். அதனைக் கடந்து இவை எல்லாம் ஏன் தோன்றுகின்றன? எங்கே நகர்கிறது வாழ்க்கை என்று உள்ளுணர்வு விழித்தெழும் போது அவன் ஆன்ம விசாரத்தை தொடங்குகிறான்.

நான் பிறந்திருக்கிறேன். சிரிக்கிறேன், கதைக்கிறேன், அழுகிறேன், என்னவெல்லாமோ செய்கிறேன் எனது நகர்வு எதை நோக்கி என்று சிந்திக்காமல் இட்டதை உண்டு, கிடைத்ததை குடித்து ஒரு தெரு நாய் சாலையைக் கடக்கையில் மரித்துப் போவது போல மரித்தலில் என்ன சிறப்பு இருக்கிறது...

நரேந்திரன் தன்னை உணர்ந்ததால் மட்டும் விவேகானந்தர் ஆகவில்லை. அவர் இயல்பிலேயே தன்னை உணர்ந்தவராய் தியானம் என்ற மன ஒருநிலை கூடியவராய் பிறந்திருந்தார் ஆனால் அவர் வாழ்க்கையையும் சக மனிதர்களையும், தான் சார்ந்திருந்த மண்ணின் மகத்துவங்களையும், கடவுள் என்ற விசயத்தில் பதிந்து கிடந்த விஞ்ஞானத்தையும் உணர்ந்த போதுதான் விவேகானந்தர் ஆனார்.

" எனது வீரக் குழந்தைகளே! நீங்கள் மகத்தான பணிகளைச் செய்யப் பிறந்தவர்கள் என்பதில் நம்பிக்கை கொள்ளுங்கள். சிறிய நாய்க்குட்டிகளின் குரைப்பைக் கேட்டு நீங்கள் அஞ்ச வேண்டியதில்லை. ஆகாயத்தின் இடியோசைகளைக் கேட்டும் நீங்கள் அஞ்ச வேண்டாம்”

விவேகானந்தர் உத்வேகம் கொடுத்து இளையர் சக்தியை உசுப்பேற்றி விட்ட ஒப்பற்ற இந்திய தேசத்தின் இளம் தலைவர். தான் சார்ந்து இருந்த மண்ணில் வேறோடு பற்றியிருந்த ஒரு சித்தாந்தத்தை உணர்ந்து வேதாந்தப் பாடங்களின் தொழில் நுட்ப மற்றும் விஞ்ஞான வடிவங்களை உள்வாங்கிக் கொண்டு அதை செயல்வடிவமாக்கிய சூத்திரதாரி.

கடவுள் தேடலின் உச்சத்தில் விவேகானந்தருக்கு கிடைத்த தெளிவுதான் இந்திய தேசத்தின் ஆன்மீக வரலாற்றின் மீது விழுந்த ஒரு புதிய பரந்த வெளிச்சம். கடவுள் என்று ஒருவர் இருந்தால் அவர் ஏன் வாழ்க்கையில் இவ்வளவு ஏற்றத் தாழ்வுகளை படைக்க வேண்டும் என்ற கேள்விக்கு அவர் அளித்த பதிலில் தன்னம்பிகையும், சுய சீர்திருத்தமுமே நிரம்பிக் கிடந்தது.

கடவுள் என்பது நம்மை விட்டெ எங்கோ அமர்ந்திருக்கும் ஒரு மனிதரல்ல அவர் சிலருக்கு கொடுத்து சிலருக்கு மறுப்பதற்கு....கடவுள் என்பது நம்மைச் சுற்றியிருக்கும் வாய்ப்புக்களே....பண்படுத்தப்பட்டு தன்னை சரியாக வைத்திருக்கும் ஒருவன் வாய்ப்புக்களை பயன்படுத்தி ஜெயிக்கிறான். தன்னைப் பற்றிய முழுமையான விழிப்புணர்வு இல்லாமல் யாரோ வந்து ஏதோ அதிசயம் செய்வான் என்று நம்பும் சோம்பேறி தோற்கிறான்.

39 வயதில் விவேகானந்தரின் ஆயுள் முடிவடைந்தது அல்லது முடித்துக் கொண்டர் என்றுதான் சொல்லவேண்டும். பிரம்மத்தின் வலுவான சக்தி விவேகானந்தர் என்னும் உடலுக்குள் சென்று அற்புதமான விளைவுகளை பாரத தேசத்தில் உருவாக்கத்தான் செய்தது.

இந்திய தேசத்திலிருக்கும் ஒவ்வொரு இளைஞனின் மிகப்பெரிய ரோல் மாடலாய் விவேகானந்தர்தான் இருக்க முடியும். மொழி, இனம், மதம் சாதி என்று எல்லாவற்றையும் உடைத்துப் போட்டு விட்டு விவேகானந்தரின் வாழ்க்கையை வாசிக்கும் ஒவ்வொரு இளைஞனின் வாழ்க்கையும் சர்வ நிச்சமாய் மாறித்தான் போகும்.

விவேகானந்தரின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றியும் அவரின் கருத்துக்களை பற்றியும் நாம் பேசிக் கொண்டே இருக்கலாம்.. அவற்றை எல்லாம் இன்றைய இளையர்கள் எடுத்து வாசிப்பதோடு மட்டுமில்லாமல்....ஆன்ம விசாரணையையும் அறிவுத் தேடலையும், உரம் கொண்ட உறுதியான செயல்களையும், தெளிவான பார்வைகளையும் கைக் கொள்ளத்தான் வேண்டும்.

" நியாயத்தின் வழிகள் சிலவேளைகளில் சிரமமானதாக, துன்பம் தருவதாக இருக்கலாம். ஆனால் நியாயம் என்று நீ கருதுவதைச் செய்வதற்கு ஒருபோதும் தயங்காதே. உண்மையின் பாதையிலிருந்து ஒருபோதும் விலகாதே "

என்ற விவேகானந்தரின் வார்த்தைகளில் இருக்கும் சத்தியத்தை அறிவோம்...! உத்வேகம் கொண்ட இளையராய் இந்த தேசத்தின் அசைக்க முடியாத சக்தியாய் மாறுவோம்...!

அனைவருக்கும் தேசிய இளைஞர்கள் தின வாழ்த்துக்கள்!!!!!


தேவா. S

Tuesday, January 10, 2012

ஹாய்....10.01.2012!அயற்சி வருவதற்கு காரணம் தொடர் வேலைகள் மற்றும் திரும்ப திரும்ப செய்யும் ஒரே மாதிரியான வேலைகள். எழுதுவதற்கு காரணமாய் புறத்தாக்கமோ அல்லது அகத்தாக்கமோ இல்லாமல் போய் விட்டால் எழுத்து நீர்த்துதான் போய் விடுகிறது. அனுபவத்தை, லயிப்பின் சுகத்தை அல்லது வலியை எழுதும் போது அதன் சுவாரஸ்யம் எப்போதுமே அலாதியானதுதான்...

ஆனால், பதிவுகள், அல்லது பதிவுலகம் என்ற ஒரு வட்டத்திற்குள் வந்து ஒரு வாரம் அல்லது மாததிற்கு இத்தனை பதிவுகள் இடவேண்டும் என்ற ஒரு மாயா இலக்குக்குள் சிக்கி அதை நோக்கி ஓடும் போது ஒரு படைப்பாளி மரித்துதான் போய் விடுகிறான். இதற்கு மாறாக இன்னொரு விசயம் ஒன்றும் இருக்கிறது, எழுதுவது தனது ஆத்ம திருப்திக்காக என்ற ஒரு வரையறை தாண்டி வாசகர்கள் பொழுது போக்கும் விதமாக எழுதுவதுதான் அது....

கமர்சியல் ரைட்டிங் எனப்படும் வெகுஜன ரசனையை மையப்படுத்தி வார்த்தைகளை நகர்த்துவது ஒரு தனித்திறமை. எனக்குத் தெரிந்து இந்த பதிவுலகில் மிகச்சிலரே அதைச் செய்து வருகின்றனர். இன்றைய தேதிக்கு வாசகனின் தேவை என்ன என்று யோசித்து தனது படைப்பாற்றலை கொண்டு பளீச் என்று சொல்வதும் ஒரு திறமை. இலக்கியவாதிகள் என்ற வட்டம் தாண்டிய பாமரனை ஒரு எழுத்து சென்று சேரும் போது அங்கே படைப்பாளி கண்டிப்பாய் வெற்றி பெறத்தான் செய்கிறான்.

ஆத்ம திருப்திக்காக எழுதும் போது எழுத்து குறிப்பிட்ட வட்டத்திற்குள் சுருண்டு கொள்கிறது. பயன்பாடுகளின் விகிதமும் குறிப்பிட்ட எல்லையில் நின்றும் விடுகிறது. மிகச் சிறந்த கருத்துக்களை போகிற போக்கில் விதைத்து பொழுதுபோக்காய் மனிதர்களிடம் கொண்டு சேர்க்க நான் இதுவரையில் நினைத்தது கிடையாது. இதற்கு தனிப்பட்ட காரணம் என்று எதுவும் இல்லை என்றாலும் சூழலும், அனுபவமுமே மனிதனின் முதிர்ச்சியை நிர்ணயிக்கின்றன.

ஆன்மீகம் பற்றி நிறைய பேசி இருக்கிறேன் என்றாலும் ஆன்மீகத்தையும் அதன் புரிதலையும் பொட்டலம் போட்டு வியாபாரம் செய்ய முடியாது. அது வாங்கும் தன்மையோடு தொடர்புடையது. சூட்சுமத்தை பேசும் போது உருவத்தை காட்ட முடியாது. உருவத்தை காட்டினால் அது பொய் அல்லது போலி. ஆன்மீகத்தின் சாரங்களும் நுட்பங்களும் விளங்க முடியாதவை அவற்ற உணரத்தான் முடியும்.

நிறைய கட்டுரைகளை ஆன்மீகத்தின் மையம் தொட்டு எழுதியிருப்பதால் வெகுஜன தொடர்பற்றுப் போய் தேடுபவனின் பார்வைகளுக்கு மட்டும் பொருளை தெரிவித்து விட்டு ஓரமாய் ஒதுங்கிக் கொண்டன எனது மிகைப்பட்ட கட்டுரைகள். இது இப்படித்தான்....இதை மாற்றி கூற முடியாது. இதற்கு படம் வரைதல் கடினம், இடம் சுட்டிப் பொருள் விளக்குதல் கடினம்.

எழுதி நிறைய பேரிடம் கொண்டு சேர்ப்பதை விட எழுதி, எழுதி பார்ப்பதில் ஒரு விதமான சுகம் எனக்கு கிடைத்து விட்டது. எழுதும் போது வந்து விழும் வார்த்தைகளை மீண்டும் வாசித்து வாசித்து ஒரு வாசகனாய் என்னை நெறிப்படுத்திக் கொள்ள முடிந்தது. வாசிக்கையில் எழுத்தினை விட்டு நான் வெகு தூரம் இருப்பதும் எனக்கு புலப்பட்டது. கற்றுக் கொடுக்க என்னிடம் எதுவில்லாமல் கற்றுக் கொள்ள எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தது.

அந்த ஆசையிலேயே நிறைய எழுதவேண்டும் என்று ஸ்பூரித்து, எழுதி எழுதி படித்துக் கொண்டிருக்கிறேன். கட்டுரையின் நீளம் கூடுதல் என்றோ அல்லது புரியவில்லை என்று சிலர் என்னிடம் கூறும் போது எனக்கு என்னை மாற்றிக் கொள்ள வேண்டும் அல்லது நிறைய பேர்கள் விரும்பும் வகையில் கரம், மசாலா பொடி தூவி வாசனையாய் எழுத எனக்கு தோன்றவில்லை.

காரணம்...,எழுதி எழுதி நான் திருப்தி கொண்டேன் என்பதுதான் உண்மை. இது ஒரு மாதிரியான சுகம். இது அடுத்தவர் சாரா திருப்தி. விளக்க முடியாத ஒரு அற்புதம்.

ஆன்மீக அடிப்படையிலான கதை, கட்டுரை மற்றும் கவிதைகள் செய்து கொண்டிருக்கையில் காமமும் ஆன்மீகத்தின் மறுக்க முடியாத பாகம்தானே என்ற எண்ணம் தோன்றியது. காமம் பற்றி மருத்துவ ரீதியாக, விஞ்ஞான ரீதியாகத்தான் நிறைய பேர் எழுதுகிறார்கள். சிலர் வக்கிரத்தை தூண்டும் படி படம் போட்டு எழுதி விட்டு காமம் என்றும் கூறுகிறார்கள்.

காமத்தின் சரியான பார்வைகளை ஆன்ம ரீதியில் எழுதினால் என்ன? என்று ஒரு கேள்வி எழுந்தது. விளைவு காமத்தை சரியான விகிதத்தில் ஆன்மப்புரிதலாய் உடல்கடந்த ஒரு உணர்வாய் எழுதலாம் என்று தீர்மானிக்கவும் செய்தேன். காமத்தை விரசமில்லாமல் வாசிப்பாளன் முகம் சுழிக்காமல் எழுதி அது உள்நோக்கிய பார்வையை கூர்மையாக்கி தெளிவுகளை கொடுக்கும் வகையில் எழுதவேண்டும் என்பது கயிற்றில் நடப்பது.... போல...

நடந்து பார்க்கலாம்..!

இவையெல்லாம் கடந்து...., மேலே நான் சொன்னது போல பொழுது போக்காய் வாசிப்பாளனின் நாடி பிடித்துப் பார்த்து...என்ன செளக்கியமா? என்று கேட்கும் கமர்சியல் கட்டுரைகளையும் எழுதினால்தான் ஏதோ ஒரு வட்டம் எனக்குள் பூர்த்தியாகும் போல தோன்றுகிறது.

பார்க்கலாம்...காலமும், சூழலும் எப்படி நம்மை வழி நடத்துகின்றன என்று.....!

வேற என்னங்க.... இப்டி.. அப்டி ட்ராக் மாறி மாறி நிறைய பேசிட்டேன்...! உங்களுக்கும், வீட்டிலுள்ள அத்தனை உறவுகளுக்கும் எனது அன்பான நன்றிகள் + வாழ்த்துக்கள்...!


அப்போ........வர்ர்ர்ர்ட்ட்டா...!!!!!


தேவா. S