Pages

Friday, January 20, 2012

மெளன விரதம்....!இன்று எதுவும் பேசக் கூடாது, என்று சங்கற்பம் எடுத்திருக்கிறேன். பேசக் கூடாது என்று தீர்மானித்த உடனேயே....மனம் விசுவரூபமெடுத்து வார்த்தைகளை மூளைக்குள் உடனே அலைய விட்டது. மெல்ல, மெல்ல அலைந்த வார்த்தைகள் எல்லாம் அதிர்வுகளாகவே வெகு நேரம் உள்ளுக்குள் சுற்றிக் கொண்டிருந்தன. சப்தங்களாய் தொண்டையிலிருந்து வெளி வந்து விடவேண்டும் என்று அவை கங்கணம் கட்டிக் கொண்டிருப்பது மட்டும் என்னால் தெளிவாக உணர முடிந்தது.

மெளனம் என்று வெளியில் சப்தம் செய்யாமையை சங்கல்பம் செய்யும் பலரால் உள் சப்தத்தை நிறுத்த முடிவதில்லை.  ஏதோ ஒன்றை இப்போதே நீ பேசியே ஆகவேண்டும் என்று கட்டளையிட்ட புத்தியை நான் உற்று நோக்கினேன்... புத்திக்குள் நினைவுகளாய் தேங்கிக் கிடந்த மனம்தான் எல்லா வேலையையும் செய்து கொண்டிருந்தது புரிந்தது. 

மற்ற புலன்கள் இயங்கிக் கொண்டிருக்கையில் சடாரென ஒரு புலனின் இயக்கத்தை நிறுத்தியது மனதுக்கு புதிதாய் பட்டிருக்க வேண்டும். இந்த மனம் எப்போதும் புது விடயங்களை ஆதரிப்பது இல்லை.

மனதிற்கு வசதியான விடயம் பழக்கப்பட்ட சூழல்களில் சுற்றிக் கொண்டிருப்பதுதான். புதிதாய் எது செய்தாலும் அல்லது மாற்றினாலும் மனம் அவ்வளவு சீக்கிரம் அதை ஒத்துக் கொள்வது கிடையாது. ஒரு ரவுடியாய் அது மிரட்டிப் பார்க்கும், பல கற்பனைகளைக் கொண்டு வந்து கொட்டி கோரப் பல் காட்டி பயமுறுத்திப் பார்க்கும். 

கடந்த காலத்தில் பயணிப்பதில் மிகப்பெரிய கில்லாடி இந்த மனம்...கடந்த காலத்தை கையில் எடுத்துக் கொண்டு நிகழ்காலத்தை மிரட்டி எதிர்காலத்தைப் பற்றி மிகப்பெரிய புரிதலைக் கொண்டிருப்பது போல தத்து பித்துவென்று எப்போதும் உளறும்.

ஆன்மாவிற்கு முக்காலமும் தெரியும். மனதிற்கு கடந்தகாலம் மட்டுமே தெரியும்... நிகழ்காலத்தில் அதனால் எப்போதும் நிற்க முடியாது....நிகழ்காலத்தை ஒரு ஊன்று கோலாய் வைத்துக் கொண்டு எதிர்காலத்திற்குள் கற்பனையாய் பயணிக்கும். மனம் வேறு, ஆன்மா வேறா? என்று நிறைய பேர் என்னிடம் கேட்டிருக்கிறார்கள். இருப்பது ஒரு மூளை இதில் எப்படி வெவ்வேறு என்று சந்தேகமாய் பார்ப்பார்கள்....

மனம் என்பது ஐம்புலன்களின் கூட்டு. ஐம்புலன்களின் அனுபவங்களை மூளைக்குள் கொண்டு போய் சேர்த்து, சேர்த்து அதை விவரித்துப் பார்த்து எப்போதும் இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு சூட்சுமம். அதிர்வுகளால் ஆன ஒரு அதிசயம். ஐம்புலன்களின் இயக்கமில்லாத பொழுது இந்த மனம் மெல்ல, மெல்ல ஒடுங்க ஆரம்பிக்கும். மனம் இயங்க புலன்களின் இயக்கம் தேவை. புலன்கள் ஒடுங்க....அது பேந்தப் பேந்த விழிக்கும் புத்திக்குள் போய் அவசர அவசரமாக கடந்த காலத்தை எடுத்துக் குப்பையைக் கிளறுவது போல கிளறும்....

நீ...என்ன வேண்டுமானலும் செய்து கொள்...மனமே,  புலன்கள் மூலம் உனக்கு ஒரு அனுபவத்தையும் நான் கொடுக்கப் போவதில்லை என்று அந்த மனதை வைத்தே நாம் பதில் மிரட்டலை ஒரு கட்டளையாய் சங்கல்பித்து விட்டு மெளனமாய் அதன் செயல்களை வேடிக்கை பார்க்க வேண்டும். இந்த வேடிக்கைப் பார்க்கும் இடத்தில்தான் தியானம் தொடங்குகிறது. தியானம் என்றால் கமண்டலம் சகிதம், சடாமுடியோடு இருக்கும் முனிவர்கள்தான் நமது புத்திக்குள் வந்து நிற்பார்கள்...

அது ஒரு திணிக்கப்பட்ட பொது புத்தியின் காட்சி. காவி உடுத்துதலும், கமண்டலம் சுமத்தலும், துறவறம் செல்லுதலும் ஒரு வழிமுறை. நாம் அந்த வழியில் பயணிக்கவில்லை.....இன்னும் சொல்லப் போனால் பயணம் என்ற ஒன்றே இல்லை. சரி அதை விட்டு விடுவோம்....இப்போது மனதின் நடவடிக்கையை வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்திருக்கிறோம், அதை கவனிப்போம்..

மற்ற நான்கு புலன்களும் ஒடுங்கும் போது செவி தானே தன்னால் சுற்றுப் புற ஒலிகளை வாங்கிக் கொள்ளும் அவ்வளவே அதனை மூளையில் ஒரு கிரகிப்பாய் ஆக்காது, ஆனால் கண்கள் அப்படி அல்ல மற்ற புலன்களை வேகமாய் இயக்க காட்சிகள் மிகப்பெரிய அளவில் உதவத்தான் செய்கின்றன. அதனால்தான் மெலிதாய் கண்களை மூடிக் கொள்கிறோம். 

புறத்தாக்கத்தை வேகமாய் பரிமாற்றம் செய்து மனதை விசுவரூபமெடுக்கச் செய்வதில் பார்வை பெரும் பங்கு வகிக்கிறது. கண்களை மிருதுவாக மூடிக் கொண்டு நுகர்ச்சி கடந்து வெறுமனே மூச்சினை கவனித்தபடி மனம் செய்யும் சேட்டைகளை எல்லாம் கவனித்துக் கொண்டிருக்கையில்...

பல மிரட்டகள், பல புலம்பல்களுக்குப் பிறகு மனதுக்கு புதிதாய் செய்தி கிடைக்காமல், பழைய விடயங்களை புரட்டி புரட்டி அலுத்துப் போய் மெல்ல மெல்ல சுருண்டு போக ஆரம்பிக்கும். மூச்சு மட்டும் சீராக உட்சென்று வெளிவர, மனமென்ற ஒன்று புள்ளியாய்க் கரைந்து போக எந்த நினைவுகளிமின்றி உடல் முழுதும் முழு உணர்வு நிலைக்கு வந்து உடலின் இருப்பும், சுற்றுப் புறங்களின் இருப்பும் தெளிவாய் உணர ஒரு சக்தி பளீச்சென்று பரவி உதவி செய்யும். 

புலன்களின் உதவியின்று...எல்லாமாய் இருக்கும், எங்கும் இருக்கும் அந்த சக்திதான், உயிர், அல்லது ஆன்மா அல்லது உணர்வு நிலை அல்லது கடவுள் தன்மை.

இது தனித்ததாய் உள்ளுக்குள் அடங்கிக் இருந்தாலும் புறத்திலிருக்கும் எல்லா சக்திகளோடும், உயிரோட்டங்களோடும் அணுக்களின் நகர்வுகளோடும் தொடர்புள்ளது. நான் உடல் அல்லது பெயர் அல்லது மனம் என்ற எல்லாம் கடந்து அங்கிங்கெனாதபடி அலையும் இந்த சக்தி பரிமாற்றமே பிரபஞ்சத்தில் எங்கும் நீக்கமற விரவிப் பரவிக் கிடக்கிறது. இந்த சக்தியே விகிதாச்சாரத்தில் வேறுபட்டு பல ஸ்தூலப் பொருட்களாயும் இருக்கிறது. ஸ்தூலமாய் இருக்கையில் இதன் குணம் வேறு. 

மெளன விரதத்தில் பேச்சற்று மெல்ல கண் இமைகளை மூடி அமர்ந்திருக்கையில் நான் மேலே சொன்ன எல்லாம் நிகழும். நிகழும் என்று சொல்லும் போதே நிகழும் வரை காத்திருத்தல் அவசியமென்பதை உணர்க; புலன்கள் அடங்க மனம் அடங்கும். புலன்களை அடக்க புலன்களின் செயல்பாடுகளைப் புரிதல் அவசியம். 

இந்தப் புரிதல் மனதை அறிய உதவும். அறிந்து அறிந்து விலக்காமல் நெருக்கமாக மனதோடு நின்று செய்...செய்...என்று சொல்லி மெளனமாய் வேடிக்கைப் பார்க்கையில் மனம் ஒடுங்கும். வாயில் போடப்படும் ஒரு திடமான மிட்டாயை சப்பி சப்பி சுவைத்து மெலிதாய் அது கரையுமே, அதுபோல கரையும்.

சமகாலத்தில் இருக்கும் சூழ்நிலையும் பொறுப்புக்களும் ஒன்று சேர்ந்து நம்மை மெளன விரதம் எல்லாம் இருக்க விடுவதில்லை. பேசாமல் ஒன்றும் செய்ய முடியாது என்கிற ஒரு காலச் சூழலில் வாழ்கிறோம் என்றாலும்..மாதம் ஒரு முறை மெளன விரதம் இருந்து பாருங்கள்.

மெளனம் என்றால் வாய் மட்டும் பேசாமல் மனம் பேசும் விரதம் அல்ல....! மெளன விரதம் என்று கூறி விட்டு பத்திரிக்கைகளையோ, தொலைக்காட்சியையோ அல்லது கணிணியையோ மேய்வது அல்ல. மெளனம் என்றால் புறமும் அகமும் ஒன்று சேர நமக்குள் ஏற்படும் ஒரு சீரான ஒத்ததிர்வு...!  பேசி பேசி ஒன்றும் யாரும் சாதித்து விடவில்லை...என்பதையும், மொழி என்பது நினைத்ததை நினைத்த மாதிரி பகிர முடியா ஒரு மொக்கைக் கத்தி என்பதையும் மெளன விரதம் தெளிவாய் உணர்த்தும்.

வார்த்தைகளால் புரியவைக்க முடியாதவற்றை மெளனம் அழகாக மனிதர்களுக்கு உணர்த்தும் என்பது முக்காலமும் உண்மை....!

அற்புதமான உங்களின் ஒரு மெளனவிரத தினத்திற்கு எனது வாழ்த்துக்கள்...!


தேவா. S4 comments:

Admin said...

மௌனத்தை தாங்கி வந்த பதிவு..மௌனவிரதத்திற்கு நல்லதொரு விளக்கம்..வாசித்தேன் வாக்கிட்டேன்..
நன்றி..

நேரமிருந்தால் வாசியுங்கள்

நீ யாரெனத் தெரியவில்லை

சசிகலா said...

வார்த்தைகளால் புரியவைக்க முடியாதவற்றை மெளனம் அழகாக மனிதர்களுக்கு உணர்த்தும் என்பது முக்காலமும் உண்மை....!
அருமையான பகிர்வு

நிகழ்காலத்தில்... said...

எந்தவிதமான தியானபயிற்சிகளும் இல்லாமல் எளிதில் மனம் அடங்க இந்த் மெளனம் ஒன்று போதும்.

என்ன அனுபவித்தீர்களோ அதை அப்படியே எழுத்தாக்கி இருக்கறீர்கள் தேவா.,

அதற்கு என் பாராட்டுகள் !!

kousalya raj said...

அடங்கா மனதை மெல்ல மெல்ல எவ்வாறு கட்டுக்குள் கொண்டு வருவது என்பதை படி படியாக விளக்கிய விதம் சிறு குழந்தைக்கும் புரியும் விதத்தில் அருமை.

ஆன்மா, மனம் வேறுபாடு நன்கு தெளிந்தேன்...!!

//நிகழும் என்று சொல்லும் போதே நிகழும் வரை காத்திருத்தல் அவசியமென்பதை உணர்க//

ம்...இது முக்கியம் !!

//வார்த்தைகளால் புரியவைக்க முடியாதவற்றை மெளனம் அழகாக மனிதர்களுக்கு உணர்த்தும் //

சரிதான்.

எழுத்து வாசகர்களை பக்குவ படுத்தினால் அதுவன்றோ படைப்பு !!

நன்றிகள் + வாழ்த்துக்கள்