Pages

Thursday, June 30, 2011

உடையாரின் அதிர்வலைகள்...!


எழுதிக் கொண்டே இருக்கையில் வந்து விழும் வார்த்தைகளோடு தொடர்பற்று எங்கிருந்தோ வரும் வீச்ச்சினை வாங்கி வாங்கி இறைத்துக் கொண்டிருக்கும் போது சட்டென்று அவை அழிந்து போயிருக்கிறதா உங்களுக்கு...?

முழுப்பக்கம் எழுதி முடித்து விட்டு விசைப்பலகையின் ஏதோ ஒரு சுட்டியை தவறாக தட்ட இணையத்தில் இருந்த எல்லாம் போயே போய் விட்டது. போனால் போனதுதான் அதை திரும்ப எடுக்க முடியாது.....என்ற நிலையில் சிறு கோபமும் இயலாமையும் வரத்தானே செய்கின்றன.

திட்டங்கள் மனித மனங்களுக்குச் சொந்தமனவை தன்னிச்சையாக கிளர்ந்தெழும் ஒரு இசையும், கவிதையும், கதையும், ஒரு கருவிக்கான செயல் வடிவங்களும் பிரபஞ்சத்திற்கு சொந்தமானவை. போனால் போனதுதான். அதே போல திரும்ப கிடைக்காமல் போகலாம் இல்லை அதை விட தெளிவான ஒன்றும் கிடைக்கலாம்......

எழுத்து என்பது ஒரு வரப்பிரசாதம் என்று எழுத்துச் சித்தர் பாலகுமாரன் அடிக்கடி கூறுவது உண்டு. பாலாவின் நாவல்களுக்குள் முங்கி முங்கி எழுந்து கொண்டிருந்த காலங்களில் இருந்து இன்று வரை பாலா மீது இருக்கும் ஒரு காதல் என்னுள் இருந்து மறையவே இல்லை. தோழமைகளும், உறவுகளும் பல நாவலாசிரியர்கள், கட்டுரையாளர்கள் என்று அறிமுகம் செய்தும் எனக்கு பாலாவின் மீதிருக்கும் பிரேமை குறையமலிருப்ப்பதற்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம்...

1) ஏனைய எழுத்துக்களில் இருக்கும் கருத்துக்கள் பிடிபட்டலும் ஒரு வேளை அதை ஏற்றுக் கொள்ள முடியாத அறிவு எனக்கு இருக்கலாம்.

2) பாலாவினை ருசித்து ரசித்து அந்த இன்பத்தில் இருந்து மனம் வெளிவர முடியாமல் அதையே சுற்றிக் கொண்டிருப்பதும் ஒரு காரணமாயிருக்கலாம்.

சென்னையில் நான் வேலை செய்து கொண்டிருந்த போது பாலவின் நாவல்கள் எல்லாம் பல்சுவை நாவல்களில் வரும். சென்னை தி. நகர் பஸ் ஸ்டாண்ட் எதிரில் நார்த் உஸ்மான் சாலை செல்லும் முனையில் ஒரு பங்க் கடையில் டீ, சமோசா மற்றும் எல்லா மாத,வார, நாளிதழ்களும் வைத்திருப்பார்கள்.

ரெங்கநாதன் தெருவில் தங்கியிருந்ததால் அடிக்கடி அங்கே செல்லும் வழக்கம் கொண்டிருப்பேன். கையில் டீயை ஏந்திக் கொண்டு கண்களால் கடைக்குள் தேடிக் கொண்டே இருப்பேன், நான் வாசிக்காத அல்லது புதிய பாலகுமாரன் நாவல்கள் வந்திருக்கின்றவா...என்று, ஒரு கட்டத்தில் கடைக்காரரே தம்பி வேறு ஒன்றும் புதியாய் வரவில்லை வந்தால் எடுத்து வைக்கிறேன் என்று சொல்லி விரட்டுமளவிற்கு கூட ஆகியிருக்கிறது.

பல்சுவை நாவல் பத்து ரூபாய்தான் என்பதால் அதைத்தான் வாங்குவேன், அதற்குள் பதுங்கிக் கிடகும் அமுதை உண்ட கிறக்கத்தில் அதை பதிப்பித்து வெளியிடும் திரு. பொன் சந்திரசேகர் ஐயா மீது கூட எனக்கு மிகப்பெரிய மரியாதை உண்டு. பொதுவாக பாலாவின் எழுத்து மீது இருக்கும் மரியாதையால் அவரின் புத்தகத்தை வாங்கிய உடன் அதை முகர்ந்து பார்த்து அழுத்தமாய் அதன் இருப்பை உணர்ந்து வருடி அதன் தடிமன் பார்த்து முன் அட்டைப் படம், பலாவின் போட்டோ இப்படியே கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டிருப்பேன் அதற்குப் பின் பதிப்புரை, ஆசிரியர் உரை, கேள்வி பதில் இப்படி...

திருப்பத்தூர் கல்லூரியில் நான் பயின்று கொண்டிருந்த காலத்தில் எங்கள் தமிழ்ப் பேராசிரியர் திரு. அய்க்கண் அவர்கள் கூறுவார்கள்...." டேய் தம்பி ஒரு புத்தகத்தை வாங்குனா முதல்ல அதோட அட்டைப் படத்தை பாரு, அதன் தலைப்பை பாரு...இப்போ அந்த கதை எப்படி இருக்கும்னு மனசால அனுமானிச்சு பாரு....ஓரளவிற்கு ஏதாச்சும் பிடிபட்ட உடனே....உள்ள போய் படி...! இரண்டு பக்கம் படிச்ச உடனே மீண்டும் கதைய நீ உன் அனுமானத்தோடு ஒத்து வருதான்னு பாரு.....வந்தா சரி வரலேன்னா ...அது வரைக்கும் படிச்ச இரண்டு பக்கத்துல இருந்து கதைய கெஸ் பண்ணி மேல படி..." என்பார்.

இப்படி கதையையும், நாடகத்தையும், சினிமாவையும் மனிதர்களையும் அனுமானித்து அனுமானித்து அனுமானங்கள் பல ஆயிரம் முறைகள் தோற்று தோற்று....ஆச்சர்யமாய் ஒரு நாள் சைக்கிள் ஓட்டக் கற்று கொண்டு எந்த கணத்தில் ஓட்டினோம் என்று சொல்ல முடியாத மாதிரி கணித்தல் ஒரு நாள் வசப்பட்டு போயிற்று. அதுவே பிரச்சினையாகவும் போய் விடுவது தனிக்கதை.

மனிதர்களின் வார்த்தைகள், வார்த்தைகளுக்கு கொடுக்கும் அழுத்தங்கள், ஏற்ற இறக்கங்கள், பேசும் போது ஏற்படும் முக மாற்றங்கள், முகத்தில் ஏற்படும் சுருக்கங்கள், கண்களில் ஏற்படும் அசைவுகள், கண்களின் நிறம், விசயத்தை உள்வாங்கும் தன்மை, பேச வரும் கருத்து, அங்க அசைவுகள், பேசும் காரணம் இவை எல்லாம் மிக வேகமாய் புத்தி கணக்குப் போட்டு உடனே, உடனே ஒரு சில அதிர்வுகளை நமக்குள் பரவ விடுகிறது.

ஆனால்.....இப்படியெல்லாம் அனுமானிக்க நாம் பரபரப்பாய் இருந்துவிடக் கூடாது. மனம் அமைதியாய் எதிராளியை உள்குவிந்து உள்வாங்கிக் கொள்ள வேண்டும். சாந்தமான ஊடுருவல் வேண்டும். இவையெல்லாம் சர்வ நிச்சயமாய் சாத்தியப்பட....நாம் அவராய் மாற வேண்டும்....!

பாத்தீங்களா டாப்பிக் மாறி போய்கிட்டு இருக்கேன்.....மீண்டும் இலக்கிற்கு வருவோம்....

இப்படி....ஒவ்வொரு புத்தகத்தையும் வாசிக்கும் போதும் அதை உணர்ந்து மடியில் ஒரு குழந்தையைப் போல வைத்துப் படிக்கும் ஒரு போக்கு வந்து விட்டது. அதுவும் யாரேனும் பக்கங்களை மடித்தாலோ அல்லது அதில் பென்சில் வைத்து கிறுக்கினாலோ ஒரு கோவிலின் கருவறைக்குள் செய்யும் அசிங்கமாகவும், ஒரு குழந்தையின் கையை முறிப்பது போலவும் உணர்ந்திருக்கிறேன்.

எல்லா நாவல்களும் இப்படி என்றால் பாலாவின் நாவல்கள் வாசிக்கப்படாமலேயெ சில மணிகள் என் கைகளுக்குள் இருக்கும். முழு மூச்சாய்.....140கிலோ மீட்டர் வேகத்தில் வாசிக்கும் ஒரு வாசிப்பாளன் நான் கிடையாது. வாசித்து.....வாசித்து உள் வாங்கி, அதை மென்று, அசை போட்டு ஜீரணித்து , மீண்டும் அதை நினைத்து நினைத்துப் பார்த்து என்னுள் முற்றிலும் கரைந்து போகுமளவிற்கு அதை ஊடுருவச் செய்து மெல்ல, மெல்ல இரண்டு இரண்டு பக்கங்களாய் முன்னேறுவேன்.....

ஆமாம்..நல்ல புத்தகங்கள் சட்டென முடிந்து விடக் கூடாது என்று மெதுவாய் வைத்து வைத்துதான் வாசிப்பேன். வாசித்த இரண்டு பக்கங்கள் பற்றிய கற்பனையில் ஒரு வாரம் கூட தாக்கங்கள் கொடுத்த நாவல்களும் உண்டு. ஆனால் பாலவின் மிகுதியான நாவல்கள் அந்த வேலையைச் செய்து இருக்கின்றன....பாலாவை விட்டு வந்தால் வெகு சில நாவல்கள்தான் அப்படி....குறிப்பாக....சிறுவயதில் நான் படித்த தேவி பாலாவின் " மடிசார் மாமி " மற்றும் வைரமுத்துவின் " கள்ளிக்காட்டு இதிகாசம் & கருவாச்சி காவியம்" தி.ஜாவின் "மரப்பசு " இப்படிக் கூறலாம்....

சமகாலத்தில் நான் குலுங்கிப் போய் நிற்பது, இந்த கட்டுரையை எழுத தாக்கம் கொடுத்தது " உடையார் ". ஸ்ரீ இராஜ ராஜத் தேவர் என்னும் மிகப்பெரிய புருசன் பற்றிய நாவல் அதுவும் எனக்குப் பிடித்த எழுத்துச் சித்தர் செதுக்கியிருக்கிறார். எனக்குள் என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்று கொஞ்சமேனும் கற்பனை செய்து பார்க்க இயலா அளவிற்கு பிரமாண்ட மூர்த்தியாய் என்னுள் விசுவரூபமெடுத்து நிற்பது யார்...?

உடையார் ஸ்ரீ இராஜ இராஜத் தேவரா? இல்லை அவரை இரத்தமும் சதையுமாய் மனதிற்குள் பிசைந்து அமர வைத்த பாலகுமாரனா?

எனக்குத் தெரியவில்லை. ஒரு பேரரசன், அவனது வீரம், அவனது காதல், அவனது கொடை, அவனது பக்தி, அவனது அரசியல் சாதுர்யம், அவனது குரு நம்பிக்கை, அவனுடைய சாந்தம்...என்று பரந்து விரிந்து வியாபித்து மனமெல்லாம் உடையாராய்.....எங்கும் தெரிய...மனம் ஏங்கிக் கொண்டிருக்கிறது தஞ்சையையும் அதை சுற்றியுள்ள பகுதிகளையும் புரிதலோடு சுற்றி வர...!

பிறந்து வளர்ந்தது தஞ்சாவூர்தான் என்றாலும், பல முறை தஞ்சை கோவிலுக்கும் திருவையாற்றுக்கும், கும்பகோணத்திற்கும், பட்டீஸ்வரம் எனப்படும் பழையாறைக்கும் சென்றிருக்கிறேன் என்றாலும்....அது வேறு.....!!!! இனி வேறு....

இனி...தஞ்சைப் பேரிய கோவிலுக்குள் செல்லும் போது உடையார் ராஜ ராஜத் தேவர் வருவார், அதை கட்டிய ராஜ ராஜ பெருந்தச்சன் வருவார், பிரம்மராயரான கிருஷ்ணன் ராமன் வருவார், பஞ்சவன் மாதேவி வருவார், கருவூர்த் தேவர் வருவார், பிரம்மராயரின் புதல்வன் அருண்மொழி வருவார், இளவரசன் இராஜேந்திரன் வருவார், பட்ட மகிஷிகளும், தேவரடியார்களும் அத்தனை சிற்பிகளும், படை வீரர்களும் அதிகாரிகளும், அதிகாரிச்சிகளும் வரத்தான் போகிறார்கள்...நானும் பித்தனாய் அந்த கற்றளி கோவிலுக்குள் கிறங்கிக் கிடக்கத்தான் போகிறேன்....!

கோவிலின் இடதிசையும், வல திசையும் பார்த்து பார்த்து வியக்கப் போகிறேன், கருமார்களும், சிற்பிகளும் நின்ற இடங்களையும், யானை குதிரை அடைக்கப்பட்டிருந்த இடங்களையும் பார்த்து பார்த்து தஞ்சைக்குள் வேறொரு மனோநிலையோடு அலையப்போகிறேன்.

இன்னமும் நினைவு வருகிறது....தஞ்சைக் கோவிலுக்குச் சென்று ஒரு அபிசேகம்செய்து விட்டு கண் மூடி மூலவரிடம் எனக்கு இது வேண்டும், அது வேண்டும் என்று கேட்டு விட்டு ஒரு இயந்திரமாய் அந்த கோவிலைச் சுற்றி விட்டு....ஏதோ ஒரு விலங்கு மனத்தோடு அதை ஒரு சிறு அம்புலியாய் பாவித்து வெளிவந்த என் செயல் அறியாமை என்று கொள்ள மனமின்று வரவில்லை அது ஒரு விலங்கு மனம். புரிதல் இல்லா கண் கட்டு வாழ்க்கை என்று உணர இயலுகிறது.

மனிதர்கள் பொதுவாக அப்படித்தான் மேலோட்டமாக வாழும் போது...வெவ்வேறு உணர்வுகள் நம்மை ஆட்கொள்ளத்தான் செய்கின்றன...! உடையாருக்குள் ஊர்ந்து கொண்டிருக்கிறேன் இப்போது....மனோ நிலையால் தஞ்சையில் இராஜ இராஜ சோழனின் ஆட்சிக்காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.

இந்த தொகுப்பில் நான் கூறப்போவது புத்தக விமர்சனம் அல்ல. இராஜ இராஜனின் கதையும் அல்ல ஆனால் இந்த மிகப்பெரிய சக்தி கொடுக்கும் தாக்கத்தை என்னளவில் வைத்துக் கொள்ள முடியாது. அதை பரிமாறியே ஆக வேண்டும். நான் வாசிக்க வாசிக்க என்னுள் ஏற்படும் மாற்றங்களையும், தெளிவுகளையும், உணர்தல்களையும் குறிப்பாக தாக்கங்களை பகிர்கிறேன். தொடர்ந்து பகிர்வேன்!!!!

சோழம்...!!!!! சோழம்..!!!! சோழம்....!!!


தேவா. S


Tuesday, June 28, 2011

போலாம்....ரைட்........!
பஸ்ல ஏறி உக்காந்தா இந்த சனம் பண்ற அலப்பறை இருக்கே ...யப்பா சாமி முடியல..! என்னைய மாதிரி மிடில் கிளாஸ் ஆளுகள படைச்சி நெருப்ப அள்ளிக் கொட்ற இந்த உச்சி வெயிலுல்ல பஸ்ஸுக்குள்ள ஏத்தி விட்டு....வேகாத வெயிலு வெளில அனலடிக்க உள்ள வேர்க்க விறு விறுக்க..ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அப்பாடா..மாரநாட்டு கருப்பு முடியலை சாமி....!

இந்த கண்டக்டர்கார பயலும் டிரைவர்காரப் பயலும் எங்க போய்ட்டாய்ங்க...? வண்டிய எடுத்தாய்ங்கன்னா கொஞ்சம் காத்தாச்சும் வரும்...! அந்தா நிக்கிறாய்ங்க பாருங்க இந்த வேகாத வெயில்ல டிரைவரு சாயா குடிச்சிகிட்டு நிக்கிறான்...அவன் பக்கத்துல் கண்டக்டர்காரப் பய போண்டாவ தின்னுகிட்டு....இப்பத்தானய்ய செத்த வடம் முன்னால கண்டுபட்டி காளையப்பன் மெஸ்ல மல்லுக் கட்டி சாப்டீக....அதுக்குள்ள ஒரு சாயா ஒண்ணு போண்டா ரெண்டு....

எல்லாம் காலவெனை....! இவிங்க வண்டிய கொண்டாந்து நிப்பாட்டினதுக்கு கடைக்காரய்ங்க ப்ரீயா கொடுப்பாய்ங்க போல...ஓட்டல்காரய்ங்களும் காசு வாங்கிருக்க மாட்டாய்ங்கன்னு நினைக்கிறேன்....சரி கெரகம் அதப் பத்தி ஏன் நாம பேசிகிட்டு...வெத்தியூரு வெளக்கு வரைக்கும் நாம போகப்போறோம்....இவிங்க கோழி கூப்ப்ட கார திருச்சில இருந்து பத்தியாந்து காரைக்குடியலாச்சும் நிறுத்திருந்துருக்கலாம்...மானகிரில வந்து கரைக்கிட்டா நிப்ப்பாட்டி சாப்புடாறய்ங்கன்னா இப்பிடி நெனைக்க தோணும்லப்பு...

ஏத்தா....கடகத்த வச்சிகிட்டு வெலாவுலயே இடிக்கிறியே..செத்த அத கீழதேன் வச்சா என்னனு கொஞ்சம் வேகமத்தேன் கேட்டுபுட்டேனோ...? வெத்தலைய போட்டுகிட்டு...கண்டாங்கிய கட்டிக்கிட்டு...காதுல போட்டுருக்க பாம்புவடம்...என் முகறையில அடிக்கிற மாதிரி வெரசா திரும்பி பேசின பேச்சுக்கு புளிச்சுன்னு மூஞ்சில துப்பியே இருக்கலாம்..இந்த அப்பத்தா...

அம்புட்டு வெத்தலை எச்சியும் மேல தெரிக்கிது...இதுல ஏச்சு வேற....!!!! ஏம்புத்தா...இப்ப என்ன கேட்டுபுட்டேன்டு...இப்புடி பாயுற...காசு இருந்தா தனியா கார வாங்கி போகத்தெரியாமலா..கவர்மெண்டு பஸ்குல்ல நின்டுகிட்டு நொண்டியடிக்கிறோம்....நல்லாத்தேன் வையிறீக....அட கடகத்த கொஞ்சம் அங்கிட்டு மாத்தி வையுத்தா...வயித்துல இடிக்கிதுன்னு சொன்னா....

என்னமோ நேத்து சமஞ்ச கொமரி மாதிரி பொத்துகிட்டு வருது கோவம்னு சொல்லி வாய மூடல அங்கிட்டு ஒருத்தன் நறுக்குன்னு எங்கால மிதிச்சுகிட்டு வெளியில் எவ்வி சன்ன வழியா வெள்ளரிக்காய வாங்குறான்...

அட மொட்டையா போயிறுவ...காலுடா..வெண்ணை...! அடே....கால மிதிக்கிறாய்டான்னு கத்தி சொன்னதுக்கப்புறம்..என்னப்பு ரொம்பத்தேன் பேசிறீய......கண்டுவார் பட்டி முக்கு தாண்டாதுடி பஸ்ஸு....இறக்கிப்போட்டு வெளுத்துப் புடுவோம்டியோவ்ன்னு....கைய ஒங்கிகிட்டு வர்றான் பாருங்கப்பு....

இப்ப உள்ள இளசுகளுக்கு எல்லாம் மூக்க பொத்துகிட்டு வருது கோவம்....என்ன அப்படி பாக்குறீய இளசுகன்னு சொன்னதால என்னிய இளந்தாரிப் பயவுல்ல இல்லன்னு நெனச்சுப்புடாதீக...நமக்கும் வயசு ஒண்ணும் கூட ஆகல அப்பு....கொஞ்சந்தேன்,.... அட அத விட்டுத் தள்ளுங்க கழுதய...வண்டிய பொக்குனு எடுத்தாய்ங்கன்னா...பொக்குனு போகலாம்னு பாத்தா....எடுக்க மாட்டாய்ங்க போல இருக்கே...

அவிங்கள சொல்லியும் குத்தமில்லப்பு....டிரைவர், கண்டக்டருகன்னு சுளுவா சொல்லிப்புட்டு போயிருவாக எல்லோரும்....அவிங்க படுற பாடுகள பாத்தாலும் பொசுக்குனு ஒன்னும் சொல்ல முடியாத மாறிதேன் இருக்கு...! நம்மள மாறி ஆளுக அம்ம தேவையளுக்கு வந்து போய்கிட்டு இருக்கோம்....

காலம் புல்லா அவிங்க பொழப்பு இந்த காருக்குள்ளதேன் ஓடுதுப்பேய்....! டீசல் வண்டி ஓட்டிகிட்டு இந்த பெல்லா பயவுட்டு கியர போட்டு போட்டு வண்டிய ஒடிச்சு ஓட்டவுஞ்செய்யணும்..ரோட்ல குறுக்கா மறுக்கா வர்ற மனிச மக்களையும், மாடு கண்ணுகளையும் மனசுல வச்சித்தேன் வண்டியவும் பத்தணும். டிரைவர்னு சொல்லிப்புட்டோம்..அவுக வீட்லயும் பொண்ட்டாட்டி புள்ளைய இருக்கத்தானே செய்யதுக...வெள்ளன கோழி கூப்புட எடுக்குற வண்டி...தீயா கொதிக்கிற வெயிலுல அனலா கொதிக்கிற இஞ்சின் பக்கத்துல ஒக்காந்துகிட்டு....ஓட்டிகிட்டு வரதே பெரிய பாடு...

சில சமயத்துல நாம ரொம்ப தொல கார்ல போயிட்டு, நாம எறங்கிப் போகும் போதே..ஆத்தாடி இடுப்பு கழண்டு போச்சுடி பேச்சியாத்தா...கை வலிக்கிதிடி காளியாத்தானு முனகிகிட்டே....வீட்டுக்கு போயி வென்னீரு வச்சி குளிச்சாலும் அந்த அலிப்பு தீர நாலு நா ஆகும்...! ஆனா இந்த வண்டி ஓட்ற டிரவைரு மாருக வண்டிய கொண்டாந்தி நிப்பாட்டி நம்மள் எறக்கி விட்டுப்புட்டு....அரை மணி சென்டு மறுக்கா அந்த வண்டிய எடுத்துகிட்டு...நாம் ஏறுன ஊருக்கே திரும்பிப் போவாக....

அவுகளுக்கும் உடம்பு வலி இருக்கத்தானே செய்யும்...! இப்படித்தேன் சமயத்துல அவுக கஷ்டம் தெரியாம நாம அவுகள ரொம்ப சுளுவா பேசிப் புடுவோம்..! அவுக என்னதேன் டிரவரா இருந்தாலும் மனிசந்தானேப்பு....என்ன நாஞ்சொல்றது..?

எங்கூரு நாடி இருக்குறவய்ங்க எல்லாம் ரொம்ப வேகமான ஆளுகப்பு.., போன வாரம் இப்படித்தேன்...கூட்டமா இருக்குனு வண்டிய நிறுத்தாமா வெரசா போன கண்ணாத்தா பஸ் டிரைவரு வண்டிய மடங்கி ஊரு வழியா வரயில மரிச்சுப் புட்டாய்ங்க.....

அடின்னா செம்ம அடி...பாவம் அந்த டிரைவர் அண்ணே.....கைய எடுத்து கும்பிட்டுகிட்டு நிக்கயில கூட எங்கூரு பயலுக நிறுத்தாம அடிச்சுப் புட்டாய்ங்க...பாவமாத்தேன் இருந்துச்சு...என்ன பண்ணச் சொல்றிய...? நாம ஊடால போயி என்னமாச்சும் சொல்லுறம்னு வச்சிகிறுங்களே....நம்மளையும் போட்டு வெளுத்துப் புடுவாய்ங்க வெங்கம் பயலுக...

அவிங்க அவிங்க அண்ணன் தம்பிய எல்லாம் இந்த வேலைக் கழுதைய கட்டிகிட்டு அழுகுறப்ப தெரியும் அதுல இருக்குற சூதானம். எல்லாமே அப்புடித்தானப்பு...பட்டாத்தேன் திருந்துது ஊருச்சனம்...நாம் சொன்னா "....யேய் யாருப்பா நீயி....வெளக்கெண்ணை பெரிசா டீட்டெயிலு சொல்ல வந்திட்டியளோ..உம்ம சோலிய பாத்துகிட்டு போவியான்னு..." நம்மளத்தானா வைவாய்ங்க...

அட...இது யாரு....ஊடால... வயசனா கெழவி..இந்த வேகாத வெயிலுல்ல...பிச்சை எடுக்க ஏறியிருக்கு பஸ்ஸுக்குள்ல...அடப் பாவி பரப்யாய்ங்களா.....கிழவிய காப்பாத்தாம தெருவில விட்டுப்புட்டாய்ங்களேன்னு மனசு பதறி கேட்டே புட்டேன்...' ஏன் அம்மாயி....வூட்ல புள்ள குட்டிக இல்லையான்னு...' பொசுக்குனு அழுதுபுட்டா களவானி முண்ட.. என் கண்ணுலயும் தண்ணிய வர வச்சுப்புட்டா....புள்ளைக எல்லாம் விட்ருச்சுகளாமுத்தா....பொசுக்குனு பத்து ரூவாய கையில வச்சி அமுக்கிபுட்டு கண்ண தொடச்சிகிட்டேன்...என்ன மனுசப் பொறப்போ...என்ன எழவு செம்மமோ...?

ஆங்ங்ங்ங்.......என்ன சொல்லியிட்டு இருந்தேன்....ஆமா டிரைவரு கண்டக்டரு பொழப்பு பத்திதானே பேசிகிட்டு இருந்தேன்..ஆமாம்...ஆமாம்...! இதுல கண்டக்டர் அண்ணே பாடு இருக்கு பாருங்க....ஆத்தி....அத பத்தி ரொம்ப கேக்காதீகப்பு....! கூட்ட நாட்டத்துல இன்டு இடுவுல போயி டிக்கெட்டும் போடணும்....

மனிசன் கணக்கு வழக்கும் பாக்கணும், ஊடல செக்கிங் ஏறுனாகன்னா கரிக்கிட்டா கணக்கும் ஒப்படைக்கணும்....! அம்ம பயலுக சவுடாலா வண்டியில ஏறிகிட்டு டிக்கெட்டு எடுக்க மறந்துட்டேன்னு ஈசியா பல்ல இளிச்சுக்கிட்டு சொல்லிப் புடுவாய்ங்க.....அதுக்கு இந்தாள் புடிச்சிக்கிட்டு செக்கிங் ஏறுவாப்புல......! அவுக இன்வாய்ஸ் எழுதுறதுக்குள்ள் ஸ்டாப்பிங் போயிருச்சுன்னா....நாட்டானுக திட்றதையும் கேட்டுக்கணும்....

நம்மள எல்லாம் கூட்டியாந்து விட்டுபுட்டு கூட்டிகிட்டு போற வேலைய செய்யுறாக...சம்பளமே வாங்குனாலும் பொழப்பு ரொம்ப கஷ்டந்தேன் சாமி.....! நமக்கு கொஞ்ச நேரம் வெக்கைய தாங்க முடியாம அவுக மேல கோவம் வருது..ரோசிச்சு பாத்ததேன்....வெளங்குது.....

ஆத்தே...டிரைவரும் கண்டக்கிடரும் ஏறிட்டாக.....வண்டி எடுத்திட்டாய்ங்கப்பு....விசிலு சத்தம் உங்களுக்கு கேட்டிருச்சா.....அதானே பாத்தேன்..நீங்க உசாரு தானே...

நான் வாரேன் அப்பு......இனிமேயாச்சும் பஸ்ஸுல ஏறுனா நான் சொன்னத எல்லாம் நெனச்சுப் பாப்பியளா? கண்டிப்பா நினைப்பிய.....!!! பொறவு பாக்கலாமப்பு.....!


தேவா. S


Monday, June 27, 2011

நானில்லை....!


எத்தனை நாட்களானதென்று உணர முடியவில்லை எனக்கு. நான் ஆழமாய் உறங்கிக் கொண்டிருந்தேன் என்றுதான் எண்ணிக் கொண்டிருந்தேன். விழிப்பு வந்தும் அதை உணராமல் உறக்கம் அழுத்திக் கொண்டு இருப்பதை உணராமல் மீண்டும், மீண்டும் நான் உறக்கத்திலிருந்தேன் என்றே..நினைத்தேன். சட்டென உதறி எழ உடம்பு என்ற ஒன்று இல்லாமல் போனதால் உணர்விலேயே புரிந்து கொண்டேன் நான் இறந்து விட்டேன் என்று...

இலகுவாய் காற்றில் பறக்கும் இறகு போல அங்கும் இங்கும் அலைய முடிந்த எனக்கு எந்த வடிவமும் இல்லை என்றே எனக்குத் தெரியவில்லை. கை போன்ற ஒரு உணர்விருக்கிறது ஆனால் கையை தூக்க நினைக்கத்தான் முடிகிறது செயலாய் அது நிகழ வில்லை. நகர நினைத்த மாத்திரத்தில் அந்த, அந்த இடத்தில் போய்....அலைந்து கொண்டிருக்க முடிகிறது.

உயிரே இல்லை ஆனால் எப்படி யோசிக்க முடிகிறது என்று ஒரு எண்ணம் போல தோன்றியது...! அட உயிர் இல்லையென்று யார் சொன்னது? உடல் இல்லையென்று வேண்டுமானால் சொல்லலாம். உடலாய் இருக்கையில் புத்தியில் தேக்கி வைத்திருந்த அனுபவங்களை எல்லாம் நான் ஒரு பெயராய், உடலாய் நம்பி, நம்பி அதை விஸ்தாரித்து அது அப்படியே அதிர்வுகளாய் திடப்பட்டு அது உடலே இல்லாமல் இன்னும் மனமாய் என்னை அலைய வைத்திருக்கிறது.

பசிப்பது போல ஒரு உணர்வு இன்னும் என்னை விட்டு நீங்கவில்லை.....அதை பசிக்கிறது என்றே உணர்கிறேன் ஆனால் உணவுகளைக் கண்டும் அருந்த இயலாமல் பரவியே நிற்கிறேன்....பசி, உணவு என்று ஆழமாய் உள் வாங்கிக் கொண்ட உணர்வு....முன்பொரு நாள் நான் உடலாய் இருந்த போது நாகமொன்று கனவில் துரத்தி வருகையில் பயந்து ஓடிய அவஸ்தையைப் போல கொடுத்தது.

அப்போது உடலிருந்ததால் உதறி எழுந்தேன். இப்போது உடலற்றுப் போய் மனமாயிருக்கையில் அணையா பசியாய் நானென்ற ஏதோ ஒன்றை எரித்துப் போடுகிறதே....ஐயகோ இதுதான் நரகமா? பற்றற்று வாழ படித்து படித்து சொன்ன பெரியவர்களின் கருத்தெல்லாம் கேளாது விட்டேனே...இன்று இருண்டதொரு வெளியில் அதுவற்று, இதுவற்று உருவமற்று அலைந்தல்லவா திரிகிறேன்...!

நான் இறந்து விட்டேன்...! என் வீடு என்ன செய்யும் இப்போது...? என் பெற்றோர் என்ன செய்வர்..? என் காதலி என்ன செய்வாள்? உயிர் நண்பன், உயிர் சொந்தங்கள் எல்லாம் என்ன செய்யும்...?நானில்லா சுமையில் கதறி அழத்தானே செய்வர்...!! நான் ஏதேதோ எழுதினேனே....யார் யாரெல்லாம் படித்தனரே, பாராட்டினரே, சீராடிட்டினரே...என்னை போல ஒருவன் இல்லை என்று கொண்டாடினரே...! நான்....நான்....என்றல்லவா வாழ்ந்தேன்....நான் இல்லையெனில் யாரும் இயங்க முடியாது என்று எத்தனை தடவை கூறியிருப்பேன்...!

பல தடவை மனிதர்கள் எல்லாம் என்னைச் சுற்றி மையம் கொண்டே வரவேண்டும் என்று மமதையில் கூட பேசியிருக்கிறேன். நானில்லாத உலகம் இயங்காமலா இருக்கும்...!!!!! இறந்தும், உடலற்று மனமாய் அலையும் இந்த பொல்லா நிலையிலும் ஐயகோ என் அகங்காரம் இன்னமும் அறுபடாமல் என்னை சுற்றி வருகிறதே...! என் செய்வேன்..!

யார் யாரோ கடவுளர் என்று கணக்குப் போட்டு இன்று என் மனமே எனக்கு நரகமாய் போய் விட்டதே...! இதுவற்று இருந்தால் சுகமாயிருந்திருக்குமோ? என்றொரு ஏக்கம் வந்து ஒரு வேதனையை நெருப்பைப் போல பரவவிடுகிறதே...இதுதான் நரகமா? வயிறற்றும் பசிக்கிறது, உடலற்றும் நினைப்பிருக்கிறது.....சிறு சிறு கொடும் எண்ணங்களும் கடும் வலியைக் கொடுத்து என்னை சுட்டெரிக்கும் இந்த "தீ" தான் எண்ணைக் கொப்பரையா? அழுகை போன்ற ஒரு உணர்வும், உரக்க கத்த வேண்டும் என்றொரு உணர்வும் சூழ்ந்துதான் நிற்கிறதே அன்றி அதை நீக்கவும், போக்கவும் உடலெனும் அவயமில்லையே....!!!

திணறலாய்....பிண்டமற்ற பண்டமாய் மெல்ல ஊர்கிறேன்..காற்றினூடே....அதோ என் காதலி...!!!!அதோ என் காதலி....!!!!அவள் பேருந்து நிறுத்தமொன்றில் கல்லூரி செல்ல நிற்கிறாள். அவள் முன் சென்று அலைகிறேன்..! அவள் அறியவில்லை..அவளிடம் ஏதோ ஒரு விசயம் அவள் தோழி சொல்ல அவள் சப்தமாய் சிரிக்கிறாள்.....

கடைசியாய் நான் அவளைக் காணச் செல்லும் போதுதானே பேருந்துக்கடியில் ஹெல்மட் அணியா காரணத்தால் சிக்குண்டு இறந்து போனேன். அந்த வேதனை என் நினைவினூடே அழுத்த....இன்னும் அந்த கடைசி நேர வலி என்னை தலையில்லாமலேயே ஆட்கொண்டது....

என்னால் நம்ப முடியவில்லை...நானில்லை என்றால் இறந்தே விடுவேன் என்றவளா இவள்....????????!!!! வாழ்க்கையின் பல நிலைகளில் நாம் பேசிக் கொள்வது எல்லாமே ஒரு சம்பிரயதாயத்துக்குத்தான்.....ஆனால் வாழும் வரையில் அவையேல்லம் இழுத்துப் பிடித்து வைத்துக் கொண்டு அதன் பேரில் பல நம்பிக்கைகளைக் கொள்வதும், அல்லது நம்பாமல் சண்டைகள் செய்வதும் என்று..ஆனால்...எல்லாமே ...ஒரு உணர்ச்சியின் உச்சத்தில் பகிர்வதுதான் போல.....!

கண்ணீரில்லா அழுகையோடு அவளைக் கடந்து....நான் கண்ட நண்பர்கள், என்னை உயிரென்ற உறவுகள் என்று ஒவ்வொருவராய் பார்த்து பார்த்து....எல்லோரும் ஒன்று மற்ற ஒரு இலக்கு நோக்கி ஓடும் ஒரு இயந்திரமாய்த்தான் தெரிந்தார்கள்...

யாரோ ஒரு உறவுக்காரன் யாரிடமோ உரக்க சப்தமிட்டுக் கொண்டிருந்தான்..." நான் யார் தெரியுமா? என்னை யாரும் ஒன்றும் செய்ய முடியாது" என்று சவால் விட்டுக் கொண்டிருந்தான்.....ஐயோ...ஐயோ .....வேண்டாமடா முட்டாள்.....நான் நான் என்று சொல்லிக் கொண்டு அழுந்த உன்னை ஒரு உடலாக அல்லது பெயராக அல்லது பதவியாக பார்க்காதேடா முட்டாள்......கொடுமையாய் போய் விடுவாய் என்னைப் போலவே...என்று கத்திக் கூவி சொல்ல ஒரு எண்ணம் வந்து ஒடுங்கிக் கொண்டது....! ஆமாம் கத்திச் சொல்ல வாயும் நாவும் இல்லையே..அவற்றை மண்ணரித்ததோ...அல்லது தீ பொசுக்கியதோ...????

ஆனால்...

செவியற்று அதிர்வுகளாய் எல்லாம் உணர முடிந்தது, விழியற்றி ஒளியின் வீச்சினூடே...பார்க்கும் ஒரு பார்வை இருந்தது....ஆமாம் புலனற்ற பார்வை....! பேச்சு என்ற ஒன்றை அதிவுகளாய் வெளிப்படுத்தினாலும் அதை விளங்கும் நிலையில் யாரும் இல்லாமல் இருந்தது மேலும் வலியானது.

இப்போது எனது தந்தையப் பார்த்தேன்...! ஈன்றெடுத்த தகப்பா...என்னை பிண்டமாக்கிய கடவுளே..உனக்கு ஒன்றும் செய்யாமல் போய்ச் சேர்ந்து விட்டேனே என் தகப்பனே...! ஒற்றை பிள்ளை பெற்று விட்டு அதையும் தூக்கிக் கொடுத்து விட்டு தள்ளாத வயதில் அங்கும் இங்கும் உன்னை அலைய வைத்தேனே....!!!! ஒவ்வொரு முறை பைக்கினை எடுக்கும் போதும் ஓராயிரம் முறை சொல்வாயே...பார்த்து போப்பா...பார்த்துப் போப்பா என்று..கேட்டேனா நான்.....

என் புலம்பலை அவர் செவி சேரவில்லை திடமாய் சைக்கிள் மிதித்து யாரிடமோ தொலை பேசியில் நலம் விசாரித்துக் கொண்டு போய்க் கொண்டிருந்தார்...!

யாவரும் நலமே...!!! சகோதரிகள், காதலி, நண்பர்கள், உறவுகள் அனைவரும் நலமே.....இருக்கும் வரை எல்லோருக்கும் நாம் ரொம்ப அவசியம் என்று நினைத்து விடுகிறோம். இதோ காலம் என்னை பிடுங்கிப் போட்டு விட்டது....! நானில்லை..என்னையே நினைத்து உலகம் நின்று போய் விடவும் இல்லை....எல்லாம் இயங்குகிறது...எல்லாம் ஓடிக் கொண்டிருக்கிறது. நான் இருத்தலும் இல்லாமையும் ஒரு பொருட்டல்ல இந்த உலகிற்கு...! இந்த எண்ணம் ஏன் நான் உடலாய் இருக்கும் போது வர மறுத்தது...

அடுத்ததென்ன தெரியவில்லை..இப்படியே...பசியோடு வலியோடு கோபத்தோடு உடலற்று சுற்ற வேண்டும். உறவுகள் எல்லாம் பொய் அதை எல்லாம் தேடி நான் அலையக்கூடாது..எங்கோ செல்கிறேன்.... என்ற எண்ணத்தை தாங்கிய படி காற்றில் அலைய முற்பட்டேன்...

இதோ...இதோ..இதோ.. என் வீட்டினுள் இருந்துதான் இந்த சப்தம்....

" நான் பெத்த மகனே...நீ இல்லாமா போயிட்டியேடா.....! உனக்கு சோறு போட்டுட்டுதானே..நான் சாப்பிடுவேன்...! என் செல்ல மகனே உன்னை சீராட்டி வளர்தேனே....! மார்லயும் தோள்லயும் போட்டு வளர்த்த என் ராசா.. என்ன நட்டாத்துல் விட்டுட்டு நீ போய்ட்டியே.....

உன் செல்லக் கண்ணழுகும், வைர நெஞ்சழகும்..
எங்க போயி நான் பாப்பேன்....
என் செல்ல மகனே....எங்கயிடா நீயிருக்க...
பாலூட்டி வளர்த்த மாரு ..பத்திகிட்டு எரியுதுய்யா...
உன்னை சொமந்த என் வயித்துக்குள்ள
உன் அழுகுறலு கேக்குதய்யா..
துக்கி பால் கொடுக்க நீ பக்கதுல இல்லைன்னு
நான் துயரத்துல நிக்கிறேனே எஞ்சாமீ...."

அது ...அது... என் அம்மா.....!!!!

இன்னமும் என்னை மறக்காதா ஜீவனாய்...புலம்பி கொண்டிருந்த அவளின் குரல் என்னை இன்னமும் கிழித்துப் போட...காதுகளற்று உணர்வுகளால் இன்னும் அந்த தாய்மை என்னை அரவணைத்துப் போட....

அவளைச் சுற்றி சுற்றி வந்தேன்....ஆதரவாய் வாஞ்சையாய் அவளைப் படர்ந்தேன். நான் உயிராய் இருந்த போது அவளின் முந்தானை வாடையை முகர்ந்திருக்கிறேன்... இதோ மீண்டும் முகர்கிறேன்...அம்மா என்ற அன்பு......நான் இல்லாத பொதும் என்னை நினைக்கிறது...அம்மா என்ற உணர்வு உடல் இல்லாவிட்டால் கூட என்னை சமப்படுத்துகிறது....!

அம்மா என்ற உணர்வு உடலோடு மட்டும் சம்பந்ப்பட்டது அல்ல அது பிரபஞ்ச்ச மூலத்தின் சாயல் என்று ஒரு உணர்வு பளீச்சென்று பெரும் அதிர்வாய் என்னைத் தாக்கியது.

ஒரு ஜீவன் என்னை நினைக்கிறது என்றொரு சந்தோசம் போன்ற உணர்வு என்னை சூழ..........சரேலென்று ஒரு வெளிச்சக் காட்டுக்குள்......இழுத்துக் கொண்டு போனது ஏதோ ஒரு சக்தி....

நினைவுகள் மெல்ல மெல்ல என்னிடமிருந்து அறுபடத் தொடங்கின........நான் வேகமாய் வெளிச்சமும் இருளும் சூழ்ந்த எதற்குள்ளோ....பயணித்துக் கொண்டிருந்தேன்...!


தேவா. S

Sunday, June 26, 2011

இது ஒரு ரகசிய நாடகமே...!


கருப்பையில் ஜீவனாய் நான் நிறையும் முன்பு ஜடமாய், உயிராய் எங்கெங்கெல்லாம் விரவிக் கிடந்தது எனது பிண்டத்தின் மூலங்கள்? தாயின் கருமுட்டையோடு, தந்தையின் உயிரணு கலந்து ஒரு தசைக் கோளமாய் கிடந்த என் உடலுக்குள் உயிர் ஊற்றிய பிரமாண்டம் எது?

அங்கும் இங்கும் ஒரு சருகைப் போல நான் பறந்து பறந்து என்ன கொண்டு செல்லப் போகிறேன்? எல்லாம் நிறையும், எல்லாம் குறையும் என்றறிந்த மாத்திரத்தில் நான் எல்லாம் விட்டு போகாமல் உழல காரணமான உறவுகளும் என்னை இங்கு கொண்டு வந்த சூத்திரதாரியின் நிகழ்வுதானே?

எங்கே தொடங்கியது எனது பயணம்? எப்போது முடியும்? எனக்கு முன்னும் பின்னும் காலம் என்ற ஒன்று இருக்கத்தானே செய்யும்.. சிற்றின்பத்தால் நிறைந்து கிடக்கும் வாழ்க்கையை ஒரு நாய்க்கு போடும் சிறு ரொட்டியைப் போல போட்டு விட்டு பேரின்பத்தை மறைத்து வைத்து அதை அடைய மனமற்று போகும் போது அடையும் சூத்திரத்தை சூசகமாய் பிரபஞ்சத்துக்குள் கரைத்துப் போட்டது யார்?

அங்கிங்கெனாதபடி ஆடிக் கொண்டிருக்கும் சக்தி துகள்களின் ஆட்டமே நடராஜ தத்துவமென்று முத்திரை பதித்து சூசக கருத்தை உட்பொருளாய் வைத்து சென்ற மானுடர்களின் மனக்கூட்டு பிரபஞ்சத்தோடு இயைந்தேதான் இருந்ததா?

உடையப் போகும் குமிழியைப் போல, சிதறப் போகும் கண்ணாடி போல தன்னின் இயல்பு கொண்ட மானுடக் கூட்டம் தொடை தட்டி கொக்கரிக்கும் அறியாமை நீங்க ஜென்மங்களாய் பிறந்து பிறந்துதான் பிணி தீர்க்க வேண்டுமா?

காதலையும் காமத்தையும் இன்ன பிற இன்ப துன்பங்களையும் தானே தன்னில் தோன்றவிட்டு மறைந்து கிடக்கும் சக்தியை கடவுளென்று சொல்லி ஒரு சிலைக்குள்ளோ அல்லது ஒரு கட்டிடத்துக்குள்ளோ அல்லது ஒரு வேதத்துக்குள்ளோ மட்டுப் படுத்தி விட முடியுமா?

சூட்சுமத்தில், எதுவுமற்ற சூன்யத்தில் இருந்து எல்லாம் ஜனித்தது என்றால் இன்றும் சூட்சுமத்திலிருந்து பொருள்களையும் பொருளற்ற விதிகளையும் மனமற்று பேரியக்கத்தோடு ஒன்றிய ஒரு நிகழ்வாய் நாம் சமைத்து விட முடியாதா?

கலைகளும் கலைகளின் மூலங்களும், படைப்புகளும் படைப்புகளின் மூலமும் மனித மூளையின் எந்த இடத்திலிருந்து ஜனித்தாலும் ஒரு படைப்பாளி வெறுமையிலிருந்துதானே எல்லாம் படைக்கிறான். வெறுமையிலிருந்து அவன் படைப்பதாலேயே அவன் சூன்யத்திலிருந்து எல்லாவற்றையும் ஜனிப்பித்த பெருங்கருணையின் செயலை ஒத்துதானே செயல் படுகிறான்?

ஒவ்வொரு கலைஞனும் ஒவ்வொரு படைப்பாளியும் மனித மூளைகளில் கனவிலும் உதித்திராத ஒரு இசையையும், ஒரு கவிதையையும் ஒரு ஓவியத்தையும் ஒரு கதையையும் கட்டுரையையும் தெரிந்தோ தெரியாமலோ வெளிப்படுத்தி தீரும் போது அவனின் ஆழமும் மூலமும் இறையை ஒத்ததுதானே?

இந்த ரகசிய நாடகத்தினை உணர முடியாமல் இந்த கட்டுரையையும் உணர முடியாமல் மெல்ல விலகி சென்று உள்ளே எழும் நேர், எதிர் மறை எண்ணங்களின் சூத்திரதாரியும் நாம் தானே...!!!!

விளக்கம் கொடுத்தலும், கேட்டலும் தாண்டி ஆழமாய் தன்னை அறியும் பொழுதில் தோன்றும் கடவுளை யாருக்கு காட்ட? மெய்பித்தலுக்கு உட்படா ஒன்றை மெய்பிக்க சொல்லுவதும், மெய்பிப்பேன் என்பதும் சத்தியத்தில் பொய்தானே...!!!

அது இருக்கிறது...காலங்கள் கடந்தும் வெவ்வேறாய் ஜனிக்கிறது...நகர்கிறது...!


அவ்வளவே....!

தேவா. S

Thursday, June 23, 2011

முதல் நாள்...அன்று...!

அவள் கவிதையாய் பார்த்துக் கொண்டிருந்தாள். நான் படையிழந்த அரசனாய், மொழி மறந்த புலவனாய், நடை மறந்த முடவனாய் உணர்வுக்கும் மூர்ச்சைக்கும் இடையே ஒரு நூலிழையில் ஊசலாடிக் கொண்டிருந்தேன். வழக்கமாய் கண்கள் காண்பதற்காக பயன்படும் ஒரு உபகரணம் என்று அறிவு ஏற்றி வைத்திருந்த கருத்துச் சாரத்தினை நம்பி அவளை நேருக்கு நேராய் பார்த்ததின் அவஸ்தையைத்தான் இப்போது பகிர திக்கித் திணறிக் கொண்டிருக்கிறேன்.

இன்னுமொரு ஆச்சர்யமும் என்னை மொய்த்துக் கொண்டிருந்தது...ஆமாம்...! இவளின் விழிகளே எல்லா செய்திகளையும் பகிர்ந்து விடுகிறதே....என்று வார்த்தைகளின்றி உணர்வுகளை பரிமாறும் யுத்தியறிந்த சித்தியோடு இவளைப் படைத்து விட்ட கடவுளின் மீது கண நேரம் கோபமும், அவள் மீது பொறாமையும் ஒன்றாய் வந்து சென்றது.

மிரட்சியாய் என்னுள் ஆழச் சென்று கொண்டிருந்த அவளின் விழி வீச்சில் சுவாசத்தின் ஏற்ற இறக்கம் மாறிப் போனதில் ஆக்ஸிஜனின் வரத்து சட்டென்று அதிகரித்ததில் இதயத்தின் துடிப்பு அதிகமாகி....

அது உந்தித் தள்ளிய இரத்தம் உடலெல்லாம் பரவ ஜிவ்வென்ற ஏதோ ஒரு உணர்வில் நான் இருக்கிறேனா? இல்லை பறக்கிறேனா என்று மூளையை சரிப்பார்க்க சொன்ன போது அது வெவ்வ வெவ்வே...என்று என்னிடம் பழிப்புக் காட்டி விட்டு அவளை பார்த்த செய்தியைப் பகிர்ந்த விழியிடமிருந்து பிம்பங்களைத் திருடி திருடி அச்சேற்றி கொண்டிருந்தத அவசரத்தில் என்னை நினைவற்று சும்மா கிட என்று அதட்டி விட்டு அதன் வேலையைத் தொடந்து கொண்டிருந்தது.

விழிகளோடு மோதிச் சிதறிப்போய்க் கிடந்த என்னை கொஞ்சமேனும் இரக்கப்பட்டு அப்போது வீசிய காற்றாவது பேசாமல் சென்றிருக்கலாம். சட்டென்று வீசிய காற்று ஒரு ஓவியத்தின் மீது பரவிச் சென்ற கோபத்தில் நானிருக்க, பரவி மட்டுமா செல்வேன்.....என்று என்னை வெறுப்பேற்ற வேண்டுமென்றே ஒதுங்கிக் கிடந்த அவளின் தலை கேசத்தை கலைத்து கலைத்து விளையாடியாது கூட பரவாயில்லை....

அவ்வொரு முறையும் காற்றில் கலையும் கேசத்தினை அவள் சரி செய்து கொண்டிருந்த போதும், பட படப்பாய் இமைத்த போதும் அதைத்தான் என்னால் எதிர் கொள்ள் முடியவில்லை. ஒப்பனை கலைந்த சித்திரம் தானே தன்னை சரி செய்து கொண்டிந்தது.

அட இது என்ன இது....? எனக்குள் மூன்றாம் உலகப் போரை துவக்கி விட்டு விட்டு இவள் மெளனித்து இருக்கிறாள் என்று நான் யோசித்துக் கொண்டிருந்த போது அவள் அந்த கோப்பையிலிருந்த காபியை வாஞ்சையாய் உறிஞ்சிக்கொண்டே என்னை உற்று நோக்கிய நொடியில்...

மோட்சத்தை அடைந்த சந்தோசத்தில் காலியாகியிருந்த கோப்பைக்குள் நிறைந்து கிடந்தது என் மனது. காதலென்ற உணர்வின் மூலம் எது..? என்று வேகமாய் கணக்குப் போட்ட என் மூளை இவளிடம் என்ன பேசுவது என்று உள்ளே ஒரு ஒத்திகையையும் நடத்திக் கொண்டிருந்தது.

கவிதையிடம் கவிதை பேசினாள் புரியுமா? என்று தெரியவில்லை அதே நேரத்தில் விக்கிரகத்திடம் பேசினாலே வீண்தானே என்று கூட ஒரு எண்ணம் தோன்றிய போது மூளை சொன்னது அட...நீயும் விழியாலே பேசிவிடு என்று...

அட விழியால் பேசும் வித்தை அறிந்தவனா நான்...? அவளை எதிர் கொண்டு பார்க்க முடியாமல் கீழிறங்கிக் கிடக்கும் எனது விழிகள் மேலேறி அவளை பார்க்குமா? என்ற எண்ணத்தை முயற்சியாக்கி இதோ... இதோ முயல்கிறேன்...மெல்ல அவளின் விழிகளை சந்தித்த மூன்றாவது நிமிடம் அது நழுவி அவள் அப்போது வெளியிட்ட சிறு கவிதையை வாசிக்க உதடுகளுக்குச் செல்கிறதே...

எத்தனை முறை முயன்றாலும் தோல்வியில் அவளின் கவிதையை மீண்டும், மீண்டும் என் விழிகள் வாசிக்க அந்த கவிதை புன்னகை என்ற நிலையிலிருந்து பரிணாம வளர்ச்சியடைந்து சிரிப்பாய் மாறி

அதுவரையில் கண்கள் பட்டு வந்த அவஸ்தையை செவிகளுக்கு மாற்றி செப்புக் காசுகளின் சிதறுதலாய் செவிகளுக்குள் ஊடுருவி செவிப்பறையை அறைந்து....ஒலி வடிவில் மீண்டும் ஒரு படையெடுப்பு நடத்த தொடங்கியிருந்தது மூளையை நோக்கி...

ஏற்கனவே போரில் அழித்தொழிக்கப்பட்ட ஒரு நகரமாய் குற்றுயிரும் குலை உயிருமாய் சிதைந்து கிடந்த என் மூளை அடுத்த தாக்குதலின் அவஸ்தைகளை எப்படி எதிர் கொள்வது என்று தெரியாமல் பேந்த பேந்த விழித்துக் கொண்டிருக்க....

உன் முகம் பார்த்து
ஆழமாய் உன் கண்களுக்குள்
ஊடுருவித் தொலைந்து
உன் இதயத்தின் சப்தங்களோடு
கலந்து துடிக்கத்தான்..
அனுமதியேன்...!

என்று கூட என் மெளனத்தால் இயன்ற வரை அவளுக்குக் கெஞ்சலாய் செய்தியனுப்பிக் கூடப் பார்த்ததிலும் தோல்வியே என்னைத் தழுவியது. அவள் என் தடுமாற்றத்தை ரசிக்க, ரசிக்க நான் தொலைந்து கொண்டிருந்தேன். மொத்தத்தில் அவள் எனக்கானவள் என்று அவள் சொன்ன முதல் நொடியிலிருந்து...

என்னை சந்தித்து என்னைக் கொன்று கொண்டிருக்கும் இந்த நொடி வரையிலும் அவளின் அருகாமை என்னும் பிரமிப்பில் நான் வீழ்ந்து கிடந்த காலம்...ஐன்ஸ்டீனீன் ரிலேட்டிவிட்டி தியரியை மெய்ப்பித்துப் போட்டது. ஆமாம் கண நேரம் போல எங்களுக்குத் தோன்றினாலும்....வெகு நேரமாயிருந்ததை நாங்கள் உணரத்தான் வில்லை.

அந்த அந்தி நேரத்து வானம் மழை என்ற கவிதையை எழுத ஆயத்தமானதற்கு சாட்சியாய் சில மழைத்துளிகளையும் அனுப்பி வைத்தது. அந்த திறந்தவெளி காஃபி சாப்பின் ஊழியர்களும் பொறுமையற்றுப் போய் எங்களின் மெளன நாடகத்தை கண்டும் காணாததும் போல நாற்காலி மேசைகளை நகர்த்திக் கொண்டிருந்த போதும்...நான் அவளிடமிருந்த் மீளவில்லை.

அபோது ஓவியம் தனது கை மணிக்கடை நகர்த்தி நேரம் பார்த்து 6:15 என்று சொன்ன கடிகாரத்தோடு..அவள் தலை நிமிர்ந்து இசைத்தாள்...

" என்ன ப்ரசன்னா...ஒரு மணி நேரத்துக்கு மேல மெளனமாவே இருந்துட்ட......அச்சச்சோ...மழை வேற வரப் போகுது இன்னுமொரு 15 மினிட்ஸ் 23C வந்துடும்டா...முதல் நாள் உன்கிட்ட எவ்ளோ பேசணும்னு ஆசையா வந்தேன். இப்டி போயிடுச்சே நேரம் .நான் கிளம்புறேன்டா....நாளைக்குப் பேசலாம்.....ப்ளீஸ் ப்ளீஸ்..........ப்ளீஸ்.......ப்ளீஸ்...!பை டா........நீ எனக்கு காத்தால போன் பண்ணு ஒரு 11 மணிக்கு...ஆபீஸ்ல கொஞ்சம் ஃப்ரியா இருப்பேன்டா......பாய்ட கண்ணா....நாளைக்கு பார்ப்போம் சரியா....! "

அவள் ஓடிவிட்டாள் கட கடவென்று......! மழை இப்போது வலுக்கத் தொடங்கியிருக்க...நான் என் முதல் காதல் சந்திப்பினை நெஞ்சுக்குள் தேக்கியபடி வீட்டிற்கு எப்படி வந்து சேர்ந்தேன்...என்று யோசித்து..யோசித்து பார்க்கிறேன்...ம்ம்ம்ஹூம்..........தோணவே இல்லை....!

நாளைக்காவது பேச வேண்டும் என்று ஏதேதோ மூளை கணக்குப் போட்டுக் கொண்டிருந்தது..ம்ம்ம்ம் ...சரியாய் அவளின் அருகாமையில் எப்படி அறுந்து போகிறது எனது நினைவுகள்...? ம்ம்ம்ம்ம்...எனக்குள் நானே சிரித்துக் கொண்டு வெள்ளைப் பேப்பரில் கிறுக்கிக் கொண்டிருந்தேன்.....ஆனால்...

வெற்று மையை
காகிதத்தில் பரவவிட்டு
வார்த்தைகள் ஓடி
ஒளிந்து கொண்டன..
அவளின் நினைவுகளுக்குப் பின்னால்!

பேனாவைத் தூக்கி எறிந்து விட்டு படுக்கையில் சாய்ந்தேன்..!!!

வெளியே பெய்து கொண்டிருந்த மழை தாழ்வாரத்தின் வழியாய் ஜன்னலில் தாளம் போட்டுக் கொண்டிருந்தது.........திறந்த விழிகளோடு அன்றைய மாலையை மீண்டும் ரீவைண்ட் செய்து கொண்டிருந்த போதே அடுத்த நாள் பற்றிய நான் கனவுகளோடு உறங்கியே போனேன்....!


தேவா. S

Tuesday, June 21, 2011

வாழத்தானே வாழ்க்கை...!

ஒவ்வொரு வார்த்தையாய் எடுத்துக் கோர்த்துக் கொண்டிருக்கிறேன்! அன்பின் மிகுதிகள் எல்லாம் சொல்லில் வடிக்கப்படாதவையே என்று நாம் அறிந்துதானிருக்கிறோம், இருந்தாலும் கிளர்ந்தெழும் உணர்வுகளை எல்லாம் வெளிப்படுத்த தற்சமயம் என்னிடம் இருக்கும் ஒரே ஆயுதம் எழுத்துதான்.

ஒரு வானவில்லை ஆச்சர்யமாய் பார்த்து அதில் கிறங்கிப் போய் அதிசயித்து நின்ற வினாடியில் அதன் மொத்த அழகும் என் மெளனத்துக்குள் நிரம்பி ஏக்கத்தின் சாயலில் கொடுத்த சோகங்களில் என் வெறுமை மிகுந்திருந்தது.

வானவில் அழகு...! நான் ரசித்தது உண்மை....! ஆனால் நான் யோசித்து முடித்த தருணத்தில் அங்கே அது அழிந்து போய் வெற்று வானத்தை காட்டிக் கொண்டிருந்த இயற்கையின் விதியும் உண்மை....!

வானவில் கொடுத்த ஒரு போதையில் கிறங்கிக் கிடந்த மூளையில் ஜனித்த உணர்வுகளை எல்லாம் வார்த்தைகளாக்கி கைகளின் வழியே வழிந்தோட விட்டு ஒரு வெள்ளைப் பேப்பருக்குள் அவற்றை கொண்டு வந்த பின்.....என் உணர்வு முழுமைப் பட்டுப் போனது.

வானம் வரைந்து போட்ட
ஓவியத்தின் அழகில்
நான் ஒரு தூரிகையாய்
கிறங்கிக் கிடக்கையில்
அதை அழித்துப் போட்டது
யார்..?

***

அவ்வப்போது
வானவில்லை உடுத்தி
ஆச்சர்யப்படுத்தும் வானம்
எப்போதும் நிர்வாணமாய்த்தான்
இருக்கிறதா...???!!!!!

***

இனி ஒரு கணம்
எனக்கு எப்போது கிட்டும்
முழுதாய் வானவில்லை
கண்களால் சுகித்து
கவிதைகளை பிரசவிக்க!

***

அழகுகள் எப்போதும்
நிரந்தரப்பட்டு நிற்பதில்லை
கரைந்து போன
அந்த வானவில்லைப் போல!

***

போதையூற்றும் இயற்கையின் அன்றாட நிகழ்வுகளில் இப்படி நான் சொக்கிப் போய் நிற்கும் பல இடங்கள் உண்டு. அங்கே எந்த மானுடத் தேவைகளுமின்றி சூழலுக்குள் என்னைத் தொலைத்த தருணமெல்லாம் எப்படி காட்சிப் படுத்த அல்லது எப்படி உங்களுக்கு விவரிக்க என்ற பேரவல் எழுவதும் பின் அது இயலாமல் ஏதோ ஒன்றை கிறுக்கி வைப்பதும் வழமையான ஒன்றுதான்.

ஒரு நல்ல இசை, ஓவியம், மழை, இரவுகளில் நிலவை மறைத்து மறைத்து சிரிக்கும் தென்னங்கீற்று, பிணமெரியும் சுடுகாட்டில் தூரத்தில் கேட்கும் ஒரு குழந்தைக்கான தாலாட்டு, தனியே சைக்கிளில் செல்லும் போது எதிர்ப்படும் எதிர் காற்று என்று அவ்வப்போது பீறீட்டு எழும் உணர்வுகளை, ஏன் பகிரவேண்டும் என்று தோன்றுகிறது....என்று ஒரு அதிகாலைச் சூரியனோடு நான் காதல் செய்து கொண்டிருந்த வேளையிலே யோசித்தேன்.

கர்வம் கொண்டு எனக்கு மட்டுமே தெரியுமென்ற வகையா இது....? என்று யோசித்த போது, உணர்வுகளை பகிர்தலில் எப்போதும் மமதைகள் இருப்பதில்லை, அது...ஒரு தோழனின் தோள் சாய்ந்து இளைப்பாறும் நிகழ்வை ஒத்தது என்றெண்ணிய மறு நிமிடம் என் கைகள் மீண்டும் பரபரத்தன...

காகிதத்தோடு
கூட காத்திருந்த
என் பேனாவின்
நுனியின் பாய்ந்தே விடவா?
என்று என்னை பரிகசித்து
பார்த்துக் கொண்டிருந்த
என் பிள்ளைகளைத்தான்
நான் கவிதை என்கிறேன்...!

எழுத்து ஒரு வரப்பிரசாதம். அது வாசிப்பவனை எவ்வளவு தூரம் சீராக்குகிறதோ அதை விட பல மடங்கு எழுதுபவனை சமப்படுத்துகிறது. பகிர வேண்டுமென்ற ஆசையில் கிறுக்கி வைக்கும் எல்லாமே எல்லோரையும் சுவாரஸ்யப்படுத்தி விடாது. பலருக்கு அது வேறு பதில்களைக் கூட பகிர்ந்து விடலாம்.

கொஞ்சமாய் தரையில் சிந்திக் கிடந்த நீரை கைகளால் அங்கும் இங்கும் அலை பாய வைத்து ஒரு ஓவியம் வரைய நான் முயன்று கொண்டிருந்த ஒரு உச்சி வெயில் நேரத்தில் வெளியிலிருந்து என்னைக் காண வந்த நண்பனொருவன் சொன்னான் எனக்கு பைத்தியமென்று....!

நான் பைத்தியாகாரனாயிருந்ததால் அன்று பெரு மகிழ்ச்சி அடைந்தேன்...! நண்பனோடு கை குலுக்கி சந்தோசத்தை வெளிப்படுத்திய என்னை அவன் புரிந்திருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் என் எதிர்பார்ப்பில் நியாயம் கொஞ்சம் கூட இருக்காது என்று எனக்கும் தெரியும்.

அது என்னுடைய அப்போதைய மகிழ்ச்சி. நீரினை அங்கும் இங்கும் இழுத்து அது ஒரு குழந்தையாய் தவழ்ந்து வரும் போது கைகொட்டி ஒரு சிறுவனாய் மனம் குதித்த என் சந்தோசத்திற்கு என்ன விலை கொடுக்க முடியும்..? ஆனால்..என்னை போன்ற யாராவது வேறு ஒரு பைத்தியம் தானும் கொஞ்சம் தண்ணீரை கீழே சிந்தி என்னைப் போலவே பைத்தியமாக முயற்சி கூட செய்யலாம்....

அப்போது எங்களுக்குள் பகிரப்படாத ஒரு உள்ளார்ந்த உணர்வுப் பரிமாற்றம் நிகழுமே.....அந்த நிகழ்வினை, அந்த உணர்வினை நான் பகிர்தல் என்கிறேன்.

இருக்கும் வரை மனிதத் தொடர்புகளை விஸ்தாரித்து சந்தோசங்களை பேச்சாகவும், எழுத்தாகவும், இசையாகவும், மனிதர்கள் சக மனிதர்களுக்குப் பரிமாறிக் கொண்டே இருக்க வேண்டும். முற்றுப் பெறப் போகும் இந்த வாழ்வில் எதையும் கொண்டு செல்லப் போவதில்லை என்று யாரேனும் சொன்னால்..சிரித்துக் கொண்டே நகர்ந்து விடுங்கள்....

ஆமாம்...என்னைச் சுற்றி இவ்வளவு உறவுகள் இருந்தன, மேலும் அவர்களால் நான் இப்படி எல்லாம் சந்தோசமாயிருந்தேன், நான் இவ்வளவு சந்தோசப்படுத்தினேன் என்ற நிறைவை நாம் கொண்டு போவோம் என்று அவர்கள் அறிந்திருக்கவில்லை என்றுதான் நாம் கொள்ள வேண்டும்.

நமது குட்டி, குட்டி சந்தோசங்கள் எல்லாம் நம்மை வாழும் காலம் வரை உயிர்ப்புடன் வைத்திருக்கும். ஒரு வேர் பிடித்த மரம், தழைத்து, வளர்ந்து, விதை கொடுத்து, கனி கொடுத்து, பழம் கொடுத்து, நிழல் கொடுத்து, இளைப்பாற நிழல் கொடுத்து பின் வேறோடு ஒரு நாள் மறைந்து போவதில் எந்த ஒரு சித்தாந்தமும் இல்லை, சிக்கலும் இல்லை, வாய்ப்பாடுகள் இல்லை....எந்த முரணும் இல்லை.

ஆனால்...

காலமெல்லாம் பயனீட்டாளர்கள்...எனக்கு இந்த மரம் நிழல் கொடுத்தது, எனக்கு இந்த மரம் பழம் கொடுத்தது, விதை கொடுத்தது என்று நினைவில் கொள்ளத்தான் செய்வார்கள். இப்படி நினைவு கூறுவதால் என்ன பெருமை வந்து விடப் போகிறது மரத்துக்கு....?

ஒரு மரம் உயிர்த்தது; வெயிலிலும் மழையிலும் நிலைத்தது; காய்த்தது, பழுத்தது; மறைந்தது. வாழ்ந்த காலம் வரைஅந்த மரம் பெற்ற அனுபவம்தான் அதன் வாழ்க்கை... அவ்வளவே...!

இங்கே பிரித்தெடுத்துப் பார்க்கவும் ஆரயவும் ஏதுமற்று அது பகிர்ந்தது மட்டுமே மிச்சமிருக்கும். காலங்கள் ஏதேதோ கதைகள் சொல்லி ஓராயிரம் சூழல்களை கொடுத்து நம்மை ஓடச் செய்து விடுகிறது. இந்த ஓட்டத்திலேயே வாழ்வின் அழகுகளை, இயல்பான சந்தோசங்களை கவனித்தும் கவனிக்காமலும் வாழ்ந்து விரக்திகளை மட்டும் தேக்கிக் கொண்டு வெறுப்பில் மரணித்துப் போகிறோம்.

எப்போதும் வானம் ஓவியங்களை தீட்டி வைத்துக் கொண்டு காத்திருக்கிறது......! பட்சிகளின் ஓசைகளை எல்லாம் கேட்டும் கேட்காமல் ஏதோ ஒர் அலைவரிசையில் வானொலிக்கு காது கொடுத்து விட்டு அவற்றை ஏமாற்றி விடுகிறோம், ரசித்து சமைக்கும் அம்மாவிற்கும், மனைவிக்கும் ஆழமாய் ஒரு புன்னகையைக் கூட பரிசளிக்காமல் தொலைக்காட்சி விளம்பரத்தில் லயித்து விடுகிறோம்,

புத்தகங்களை பிரித்து வாசிக்க நேரமில்லாமல் முரண்களுக்குள் சிக்கி மன உளைச்சலுக்குள் போய் விடுகிறோம். தெருவோரம் நிற்கும் சுண்டல் விற்பவரிடம் அன்பாய்ப் பேசி சிரித்து அவர் குடும்பம் நலமாயிருக்கிறதா என்று விசாரிக்காமல் ஓராயிரம் முறை அவரைக் கடந்து செல்கிறோம், எப்போதும் பணம் தேடித்தானே ஓடுகிறோம் எப்போதாவது வாழ்க்கையை நாம் வாழ்ந்திருக்கிறோமா? சொல்லுங்கள்...

சரி கட்டுரைக்குள்ளே வந்து வெகு நேரம் ஆகி விட்டதல்லவா....? இந்த கேள்வியை மீண்டும் ஒரு முறை உங்களின் சிந்தனைக்கு விட்டு விட்டு....செல்கிறேன்...!

எப்போதும் ஓடிக் கொண்டிருக்கும் நாமெப்போதாவது வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறோமா?


தேவா. S


Monday, June 20, 2011

நியாபகத்தின் வடுக்கள்...!அழுந்த கிடக்கும்
உறக்கமற்ற அரக்க
இராத்திரிகளில்
பிதற்றும் மனம்
கட்டுக்கடங்கா குதிரையாக
இழுத்துச் செல்லும்
வெளிகளின் வழிகளில்
இரணமாய் கிழிக்கிறது
நியாபக முட்கள்...!

அடர்ந்திருக்கும் இருளில்
படிந்திருக்கும் கருமைகள்
ஏக்கங்களாய் நினைவுப்படுத்தும்
வெளிச்சப் புள்ளிகள்;
சுற்றிப் பரவிக் கிடக்கும்
இறுக்கத்தில் குறுக்கும்
நெடுக்கும் கோணலுமாய்
ஏதேதோ சாயங்களை
அப்பிக் கொண்ட
நிகழ் கால பொய்கள்...!

மூக்குடைந்த பேனாவிலிருந்து
வர மறுக்கும் என்...
கவிதைகளின் சப்தச் சிரிப்பில்
வெடித்து சிதறப்போகும்
என் மூளையினூடே
பரவி கிடக்கும் ஆசையில்
செல்லரித்துக் கிடக்கும்
ஒரு காதலின் அதிர்வுகளில்
வறண்டு கிடக்கும்
நாவுகளுக்குள் அடைபட்டுக்
கிடக்கிறது பகிர முடியாத
ஓராயிரம் வார்த்தைகள்..!


தேவா. S

Saturday, June 18, 2011

ஹாய்....18.06.2011!எப்பவும் சொல்றதுதான் இப்பவும் நியதிகளுக்குள் நின்று கொண்டு முடிக்க வேண்டும் என்பது எல்லாம் வாழ்க்கையின் நடைமுறை செயல்களுக்காகத்தான் செய்தாக வேண்டும். கதையும், கட்டுரையும், கவிதையும் என்னுடைய சொந்த விருப்பத்தின் பேரிலேயே எப்போதும் இருக்கவேண்டும் என்று விரும்புகிறேன்.

இது எனது ஓய்வு இடம். இது என்னுடைய ராஜாங்கம். நான் என் நினைவுகளின் சக்க்ரவர்த்தி. எனக்கு என்ன தோணுதோ அட்லீஸ்ட் அதை இங்கேயாவது செய்ய வேண்டும், ஆனால் வாழ்க்கையில் அப்படி முடியாது. புற வாழ்க்கை எப்போதும் மனிதத் தொடர்புகள் கொண்டது. உங்களுக்கும் எனக்கும் தேவை இருக்கிறதோ இல்லையோ இந்த சமுதாயத்தின் குரல்களையும், அதன் செம்மைகளையும், முரண்களையும், அசிங்கங்களையும் கேட்டுக் கொண்டோ அல்லது பார்த்துக் கொண்டோ தான் நகர வேண்டும். வேறு வழி கிடையாது.

புறம் இப்படி இருக்கையில் என் அகத்திற்குள் தேவையென்றால் மட்டுமே நான் மனிதர்களை அனுமதிக்கிறேன். புறத்திலே பற்கள் காட்டி வேறு வழியில்லை என்னை சுற்றி நீங்கள் வந்துதான் ஆகவேண்டும் என்று பழிப்பு காட்டும் மனிதர்களும் சூழல்களும் என் அகத்தில் அடி பட்டு தூரத்தில் தள்ளியே வைக்கப்படுகின்றனர் எப்போதும்...

என் ஏகாந்த சிறகுகள் என் விருப்பப்படியே விரியும். தேவைகளற்றுப் போனால் சிறகு மடக்கி ஒரு ஓரமாய் உறங்கும். இங்கே எனது தேவைகளை முடிவு செய்ய என் உள்ளுணர்விற்கு முழு சுதந்திரம் உண்டு.

பொருளை முன்னிலைப் படுத்தாது, மன நிம்மதியை முன்னிலைபடுத்தும் ஒரு மிகப்பெரிய ஏற்பாடு ஒன்று தன்னிச்சையாக இங்கே தீர்மானமாக்கப்பட்டு அது இட, வலம், மேல், கீழ் என்று எல்லா திசைகளிலும் அலைந்து கடைசியில் ஒரு ஓரமாய் சுருண்டு என்னை மனம் மனதை உற்றுப் பார்க்கிறது. அந்த தருணத்தில் நிம்மதி சிறகுகளை பூட்டிக் கொண்டு எங்கோ இல்லாமல் இருக்கும் சுகமும் கிடைக்கிறது.

முழுக்க முழுக்க இப்படிப்பட்ட ஒரு அக வாழ்க்கையில் நிர்ப்பந்தங்களற்று எழுத வேண்டும் என்ற எண்ணம் வலுவாக இருப்பது கண்டிப்பாய் மறுக்க முடியாதது. நூறு பேருக்கு என்ன பிடிக்கும் என்று பார்த்து பார்த்து யோசித்து எழுதுவது ஒரு வகை. இதில் தவறு இல்லை.

ஆனால்....

எனக்கு பிடிக்கிறது, நான் இப்படித்தான் எழுதுவேன். உங்களுக்குப் பிடித்திருந்தால் வாசியுங்கள் என்று எண்ணுவது இன்னொரு வகை. இந்த வகையைப் பற்றிக் கொண்டே பெரும்பாலும் நான் ஊர்கிறேன். அதனாலேயே தோணும் போது எல்லாம் தோணுவதை எழுதி கொண்டு நகர்கிறோம். பலத்த கை தட்டல்கள் பெரும்பாலும் எனக்கு பயத்தையே வரவழைக்கின்றன.

ஆமாம்.

மனிதர்கள் எந்த அளவு இனிமையானவர்களோ, அந்த அளவுக்கு கொடுமையானவர்களும் கூட என்ற கூற்றை யாரும் மறுக்க முடியாது. பொதுவான நியதிகளைப் பின்பற்றி தனக்கு பாதகமாயிருப்பினும் அதை ஏற்றுக் கொண்டு உண்மையின் பக்கம் நிற்பவர்கள் சொற்பமானவர்கள் தான்.

ஒரு செய்தியோ, அல்லது நிலைப்பாடோ அல்லது சூழலோ தனக்கு முரணாயிருக்கிறது என்று ஒரு மனிதன் உணரும் போது அங்கே இருக்கும் சத்தியத்தை எப்போதும் அவன் பார்ப்பதில்லை. மாறாக கடும் கோபம் கொள்கிறான். நேற்று வரை பாராட்டிப் பேசியவர்களை தூக்கியெறிந்து விடுகிறான்.

காட்சிகளும் வார்த்தைகளும் எப்போதும் மனிதர்களுக்கு சரியான செய்திகளைப் பகிர்வது இல்லை, ஆனால் இதை வைத்த்துக் கொண்டுதான் நாம் அடுத்தவருக்கு புரிய வைக்கிறேன் பேர் வழி என்று களமிறங்கி கத்திக் கத்திப் பேசி, காட்சிப் படுத்தி, எழுதி ஏதேதோ அபத்தங்கள் செய்து கொண்டிருக்கிறோம்.

மாற்றத்தின் வேர்கள் பெரும்பாலும் வெளியில் இல்லை அவை ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் மறைந்து கிடக்கிறது. சத்தியமும், உண்மையும் தேவை என்று ஒருவன் உணரும் போது, ச்சே...என்னடா லைஃப் இது என்னத்த கொண்டு போகப் போகிறோம் என்ற இடத்தினை அறியும் போது அவனுக்குள் இருக்கும் இந்த சாஃப்ட்வேர் வேலை செய்ய ஆரம்பிக்கிறது.

அதனால் தான்.. அறிவின் நிலைக்கு ஏற்ப கருத்துக்களின் சாரம் ஒரு மனிதனால் விளங்கிக் கொள்ளப்படுகிறது. ஒரு அறிவு நிலையில் நிலவு அம்புலியாகிறது. மறு அறிவு நிலையில் உயிரற்ற கோளாகிறது. இன்னுமொரு புரிதலில் நம்மை விட சக்தி வாய்ந்த உயிரோட்டம் அங்கும், இங்கும் எங்கும் இருப்பது புரிகிறது.

கலீல் ஜீப்ரான் கூறியதை போல மனித மூளையே எல்லா மேஜிக்கையும் செய்கிறது. நேற்று நல்லவன், இன்று கெட்டவனாகிறான். அதே கெட்டவன் அப்படியே இருப்பானா...? என்றால் அதுவும் கிடையாது மீண்டும் அவனை நல்லவன் என்று நாமே கூறுவோம். இதை எல்லாம் தாண்டி ஒரு சத்தியத்திற்குள் மனிதன் வர அவனது ஈ.கோவை விட்டொழிக்க வேண்டும்.

என் கண் முன்னே பலரின் பகட்டுக்களை பார்க்கிறேன். தன் உத்தியோகம் இதுவென்றும், தம்மிடம் இவ்வளவு வசதிகள் இருக்கிறது என்றும், தங்களின் பகட்டுக்களை இப்படி, அப்படி என்று மறைமுகப்படுத்தி அடுத்தவர்களிடம் சொல்வதன் மூலம் தங்களது ஈகோவை வளர்த்துக் கொள்கிறார்கள்.

நேரமே எனக்கு இல்லை என்று கூறும் மனிதர்களைப் பார்த்தால் ஆச்சர்யமாய் இருக்கிறது. அவரவர் மனாசாட்சிக்குத் தெரியும் தாங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறோம், மேலும் நமது நேரத்தினை எப்படியெல்லாம் அன் புரடக்டிவிட்டியில் செலவழிக்கிறோம் என்று.

என்னுடைய ஒரே ஆச்சர்யம் இதுதான்....எனக்கு நேரமில்லை என்று சொல்லும் போதே அவரவர் மனசாட்சிகள் அவரை குத்துமா அல்லது அல்லது பாராட்டுமா என்று எனக்குத் தெரியவில்லை.

"தன்னெஞ்சறிவது பொய்யற்க " என்பது இரண்டு மார்க் கேள்விக்கான பதிலாய் பலருக்கு ஆகிப் போய்விட்டது. பேசிப் பேசி வெளியே வந்து விழுந்து விட்டேன் பாருங்கள் இப்படித்தான்...

எல்லா விசயங்களிலும் மூக்கை நுழைத்து அறிந்த விசயங்களின் அனுபவங்களில் இருந்து கிடைக்கும் சாரத்தினை வைத்து ஒரு கருத்து சொல்லி விடுகிறது மனது. அங்கும் இங்கும் எங்கும் மனிதக் கூட்டங்களுக்குள் முண்டியடித்துக் கொண்டு சப்தமாய் ஏதேதோ பேசும் பொழுதே உள்ளே இருந்து ஒரு அழைப்பு மணி... அடித்துக் கொண்டும் இருக்கிறது.

அகங்காரம் வளர்க்க பேசுகிறாயா? இல்லை அறுக்கப் பேசுகிறாயா என்று மேலும் கீழும் தலையசைத்து மெளனமாய் ஒரு தன்முனைப்பு எச்சரிக்கை செய்கிறது. அதைக் கண்டும் காணாதது போல மனம் மேலும் மேலும் வெளியேறிச் சென்று கொண்டே இருக்கும் போது சடாரேன்று உள்ளிருந்து கேட்கும் குரலின் சத்தியத்தை உணர்ந்து வாரிச் சுருட்டிக் கொண்டு மீண்டும் உள்நோக்கி ஓடி வார்த்தைகளை எல்லாம் ஒடித்துப் போட்டு விட்டு...

அம்மா அதட்டும் போது கையைக் விரித்துக் காட்டி ஒன்றும் செய்யலையே.. என்று சிறுவயதில் சொல்வதைப் போல எனக்கு நானே கூறிக் கொள்கிறேன்.

ஒரு மையக்கருத்தோடு ஆரம்பித்து மையக்கருத்து இல்லாமல் அலைந்து மீண்டும் சொல்ல வந்ததை சொல்லிவிட்டு செல்கிறேன். " ஹார்மோன் செய்யும் கலகம் தானடா " என்ற ஒரு தொடரும், " ஆன்மாவின் பயணம் " என்ற தொடரும் தூக்கத்திலிருந்து விழித்த குழந்தையாய் என்னை இப்போது தொந்தரவு செய்ய ஆரம்பித்திருக்கிறது.

அடுத்த அடுத்த பாகங்களை இம்மாத இறுதி அல்லது ஜூலை முதல் வாரத்துக்குள் எழுதி முடிக்கலாம் என்று ஒரு முடிச்சு விழுந்துள்ளது. பார்க்கலாம்.....திட்டங்கள் எல்லாம் நாம் தீட்டுவோம் ஆனால் நடைபெற சூழலும், மனமும் ஒத்துழைக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல இறையிடம் இந்த தீர்மானத்தை விட்டு விட்டு....

நான் கிளம்புறேங்க...! உங்களுக்கும், வீட்டிலிருக்கும் எல்லா உறவுகளுக்கும் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் எனது அன்பான வாழ்த்துக்கள்!

அப்போ....வர்ர்ர்ட்ட்டா!


தேவா. S


Wednesday, June 15, 2011

ராஜபக்சே என்னும் அரக்கன்.....!

என்ன நிகழ்த்தியிருக்கிறாயடா நாயே.....! ராஜ பக்சே பேயே...!!!!

என்ன தீங்கு செய்தது என் இனம்....! தொடர்ந்து ஓடும் சானல் 4ன் வீடியோவை என்னால் காண முடியவில்லையே...!!! அவலத்தை அரங்கேற்றி விட்டு அரியாசனத்தில் வீற்றிருக்கும் பேய்களை ஒழிக்க மானம் கெட்ட காலமே உனக்கு ஒரு நேரமில்லையா...!

குற்றுயிரும் குலை உயிருமாய் எம் உறவுகள் கதறும் வேதனைக் காட்சிகளை காணவே சகிக்கவில்லையே.. எம்மக்களே எப்படி சகித்தீர்...! அடிப்படை வசதிகளற்ற ஏழ்மை குடி கொண்ட மருத்துவ மனைகளில் கிடைத்த மருந்தை வைத்து உடல் பிழைக்க போராடிய மனிதர்கள் மீது குண்டு வீசி கொல்ல, அந்த மருத்துவ மனையைச் சிதைக்க எப்படியாடா மனம் வந்தது மானங்கெட்ட மனிதனே...!

நீ பெற்றது வெற்றியா? த்தூ...வெட்கங்கெட்ட வெறி கொண்ட பிச்சைக்கார நாய்க்கு
ஊரிலில்லுள்ள ஓநாய்கள் போட்ட பிச்சையில் எம் குலத்தை குதறிய நீ பெற்றது வெற்றியா?உனக்கு உணவு கொடுத்தோர், ஆயுதம் கொடுத்தோர், பொருள் கொடுத்தோர் வாழ்க்கையில் எல்லாம் அழிவுகள் வந்து வீழாதோ?

இந்திய தேசத்திலிருந்து ஆயுதங்களும் உதவிகளும் எம் சொந்தங்களை அழிக்க சென்றிருக்கின்றன என்றென்னும் போது.....அதன் பின்னனியில் இருந்த கொடும் பாவிகளின் குரல்வளைகளை இழுத்துப் பிடித்து கடித்து கடித்து இரத்தம் குடிக்கவேண்டும் என்றே தோன்றுகிறது. என்ன குற்றம் செய்தனர்? உரிமைகள் மறுக்கப்பட்ட தேசத்தில்ட் தமது உரிமைகள் வேண்டி போராடிய கூட்டம் குற்றமுள்ளதா?

வல்லரசுக்கனவில் திருவோட்டை உலநாடுகளிடம் ஏந்தி இன்னமும் பிச்சை எடுக்கும் ஒரு தேசமாய் எம் தேசத்த்தை மாற்றியதாகட்டும், ஒரு அன்னிய தேசத்தின் பிரச்சினையை தீர்க்க சட்டாம்பிள்ளையாய் அமைதிப்படை என்று ஒன்றை அனுப்பி எம்மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்டு அதன் விளைவுகளை சந்தித்து அதற்கு வஞ்சம் தீர்க்க நரித்தனமாய் இலங்கை இராணுவத்துக்கு உதவிய வகையிலாகட்டும்.......

காங்கிரஸ் என்னும் கட்சியும் அதன் தலைவர்களும் இன்று இல்லாமல் போகலாம், நாளை இல்லாமல் போகலாம் ஆனால் சர்வ நிச்சயமாய் நம் காலத்திலேயே சிதறுண்டு சின்னா பின்னமாகி, கொடுமையை நிகழ்த்த உதவி செய்த மூளைகள் எல்லாம் குழம்பி தெருத் தெருவாய் திரிவர் இல்லையேல் வேறு ஏதேனும் ஒரு அரக்கனின் வாயில் அகப்பட்டு இறப்பர்....!

அத்தனை கொடுமைகளையும் நிகழ்த்தி விட்டு சமத்துவத்தைப் பற்றி பேசி காந்தி தேசம் இது இதை நாங்கள் ஆள்கிறோமென்று வெட்கம் கெட்டுப் போய் ஓட்டுபிச்சை எடுக்கும் பிச்சைகார காங்கிரசே.....உனது முடிவு அதி பயங்கரமாயிருக்கும் என்பதை இக்கணமே அறுதியிடுகிறோம். சம பலம் இல்லாத ஒரு சண்டை....அங்கே நீ சட்டாம் பிள்ளை. வெட்கமாயில்லை உனக்கு, ஒரு பக்கம் உலக நாடுகள் எல்லாம் ஒன்று சேர்ந்து நிற்க மறுபுறம் என் இனம் மட்டும் தனித்து நின்று போராட.....

நீ பெற்றது வெற்றியா????? பிச்சைக்கார ராஜ பக்ஸே....! காறி உன் முகத்தில் உமிழ எமக்கொரு வாய்ப்பில்லாததால் இக்கட்டுரையை உன் முகத்தில் காறி உமிழும் ஒரு நிகழ்வைப் போல் கருதிக் கொள்கிறோம். பொது மக்கள், குழந்தைகள், முதியவர் என்று மட்டுமில்லாமல், பள்ளிக்கூடம், மருத்துவமனை என்று பாரபட்சம் இல்லாமல் யுத்த மரபினை மீறிய அரக்கனை என்ன செய்யவேண்டும் என்று இந்த சர்வ தேச சமுதாயத்திற்கு தெரியாதா? ஆளும் இத்தாலிய காங்கிரசுக்குத் தெரியாதா?

வஞ்சம் தீர்க்க நினைத்த இந்தியாவின் ஆசை என்னும் நெருப்பை மூட்டி எரித்து குளிர்காயும் அரக்கன் ராஜ பக்சேக்கும் எம் மக்களின், எம் குழந்தைகளின் கூக்குரல் எல்லாம் ஒன்றும் செய்து விடாது என்ற தைரியமிருக்கலாம்....ஆனால் உனது முடிவையும் இந்த உலகம் காணும். என் இனம் காணும் அந்த முடிவினில் அநீதிகளுக்கு எல்லாம் மொத்தமாய் பகிரப்பட்ட ஒரு பதிலும் ஒளிந்திருக்கும்.

எல்லா அவலங்களுக்கும் பின்னால் வேறு வழியின்றி பொது மக்களை கேடயமாக பயன்படுத்திய விடுதலைப்புலிகளின் பங்கும் சேர்ந்துதான் ஏராளமான உயிர்களை இழப்பதற்கு காரணமாயிருந்தாலும், இலங்கை இராணுவம் யுத்த மரபுகளை மீறியிருப்பது தெள்ளத் தெளிவாக எல்லோரும் அறிந்த ஒரு விடயமாகும். யுத்தத்தில் கைப்பற்றப்பட்ட எதிரிகளாய் இருந்தாலும் அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தகுந்த விசாரணைகள் நடத்தி அதன் பின் குற்றத்திற்கான தண்டனைகள் கொடுக்கப்பட்ட வேண்டும்.

ஆனால்....

என்ன செய்திருக்கிறது தெரியுமா இந்த அரக்கனின் படைகள். ஒவ்வொரு மனிதனின் கண்கள் கட்டப்பட்டு, கைகள் கட்டப்பட்டு, மண்டியிட வைக்கப்பட்டு அசிங்க வார்த்தைகளை அவர்கள் காதுபட பேசி அங்கே சுடவா இங்கே சுடவா என்று கேலி பேசி தெரு நாய்களை சுட்டுக் கொல்வது போல சுட்டுக் கொன்றுருக்கிறார்கள்.

அகில உலக சட்டத்தின் முன்னால் இவையெல்லாம் கடும் குற்றங்கள்....! இவற்றையெல்லாம் மறைக்கத்தான் உலகத்தின் மீடியாக்களை யுத்தப்பகுதிகளுக்கு அனுமதிக்காமல் பேடித்தனம் காட்டினான் ராஜ பக்சே...!

தமிழ்ப் பெண்களின் உடைகள் உருவப்பட்டு....அத்தனை கொடுமைகளும் செய்யப்பட்டு இறுதியில் துப்பாக்கியால் சல்லடை சல்லடையாக துளைத்து எடுத்து நிர்வாணத்தோடு அவர்களை எல்லாம் கேவலமா இழுத்து குழிக்குள் தள்ளியிருக்கிறது மிருங்களின் படை. இசைப்பிரியா மற்றும் பல சகோதரிகளின் உடல்களை நிர்வாணமாக்கி அத்தனை கொடுமைகளும் செய்து பின் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள்.

இறுதி யுத்தத்திற்கு சில தினங்கள் முன்பு இந்தியாவிலிருந்த மத்திய அரசின் முக்கிய தலைகளிடம் பேசி, ராஜ பக்சேயின் ஒப்புதலோடு நிபந்தனையற்ற சரணடைய வந்த விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு தலைவர்களை எல்லாம் குருவியைச் சுடுவதைப் போல சுட்டுக் கொன்றிருக்கிறான் நயவஞ்சக ராஜபக்ஸே...!

யுத்தம் முடிந்து இன்று அமைதி திரும்பிவிட்டதாக அறிவிப்புகள் செய்யும் இலங்கையாகட்டும் அதற்கு சப்பை கட்டு கட்டும் இந்தியாவாகட்டும்... இவர்கள் கட்டவிழ்த்து விடுவது எல்லாம் கட்டுக் கட்டாய் பொய்களைத்தான். எல்லா தமிழர் வாழ் இடங்களையும் சிங்களவர்கள் ஆக்கிரமித்துக் கொள்ள இன்னமும் தமிழர்கள் டெண்ட்களில்தான் வசித்து வருகிறார்கள்.

இன்னமும் பரந்து விரிந்த இந்த உலக சமுதாயம்.. கண்டும் காணமால் போனால்... ஆங்காங்கே இது போன்ற ராஜபக்சேக்களோடு அரக்கர்கள் கூட்டம் ஒன்று சேர்ந்து மனித சமுதாயத்திற்கே பெரும் சவாலாய் போகும் ஆபத்துக்கள் நிறைய இருக்கின்றன. மனித நேயம் என்றால் என்ன என்று நாம் வசிக்கும் ஒரு இடத்திற்கு பக்கத்திலிருக்கும் ஒரு தேசத்து மனிதர்களுக்கு தெரியாமல் இருப்பது மட்டுமல்லாமல் நாம் வசிக்கும் தேசமும் இதற்கு உடந்தையாயிருந்திருக்கிறது என்று எண்ணும் போது உள்ளம் நடு நடுங்குகிறது.

இந்திய ஊடகங்கள் தமது கபட நாடகங்களை அன்னா ஹசரே போன்ற செல்வாக்கு படைத்த மனிதர்களின் உண்ணா விரத போராட்டங்களிலும், செல்வ செழிப்பான சாமியார்களின் மேடைப் பேச்சுக்களை கவரேஜ் செய்து பெரும் புரட்சி தேசத்தில் ஏற்பட்டு விட்டதைப் போல ஒரு மாயையை எம் தேசத்து மக்களின் மனதில் விதைத்து தமது வியாபரத்தை பெருக்கிகொள்கின்றன.

இன்னும் சொல்லப் போனால் இந்தியாவில் வசிக்கும் அத்தனை இந்தியர்களின் கண்களையும் இன்று காங்கிரஸ் ஏகாதிபத்திய அரசின் ஊடகங்கள் மறைத்துதான் வைத்திருக்கின்றன. நாம் செழிப்பாயிருக்கிறோம் என்றும் வல்லரசு ஆகிவிட்டோம் என்றும் நியாத்தின் தேசம் நாம் என்றும் ஏதேதோ சொல்லி மக்களை மூளைச் சலவை செய்து வைத்திருக்கிறார்கள்.

ஜனநாயக நாடாக தன்னை அறிவித்துக் கொண்டிருக்கும் இந்தியாவின் ஊடகங்களின் கைகள் கட்டப்பட்டிருக்கின்றன. அதனால்தான்.. சேனல் 4 போன்ற இந்தியர் அல்லாத வெளிநாட்டு ஊடகங்கள் சீறிப்பாய்ந்து உண்மைகளை வெளிக் கொண்டு வரும் போது அதையும் கூட நமது நாட்டு டிவிக்களில் ஒளிபரப்ப எல்லாம் தனியார் தொலைக்காட்சிகளும் பயப்படுகின்றன.

உப்பு தின்றவன் தண்ணீர் குடித்துதான் ஆகவேண்டும். எம் மக்களை கொன்று குவித்த, எமது சகோதரிகளின் கற்பழித்த, எமது பிள்ளைகளின் உயிர் குடித்த எல்லா செயல்களையும்ச் எய்த ராஜபக்சேவும் அந்த அரக்கனுக்கு உடன் போன மிருகங்களும் அதற்கான பதிலை சொல்லும் வரை இந்த இயற்கை விடாது.. !!!!

அதுவரையில் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்ட....எம்மக்களின் ஆன்மா சாந்தியடையாது....!

(சேனல் 4 எல்லா வீடியோவையும் பார்த்து விட்டேன்......என்னால் உண்ண முடியவில்லை...உறக்கமும் வரவில்லை......!!!! திக் பிரமை பிடித்து அமர்ந்திருக்கிறேன்!)


தேவா. S


Tuesday, June 14, 2011

காவியமானவனே....!

மழை நின்று
போயிருந்த ஒரு...
மாலையில் தூரலாய்
பெய்யத் தொடங்கியிருந்தது
உன் நினைவுகள்!

கனவுகளை நிஜமாக்கியவன்
நிஜமாய் கனவாகிப் போன
ஆச்சர்யத்தை செரிக்க முடியாத
எண்ணங்கள் ஒரு கவிதையாய்
என்னுள் ஊற்றெடுக்க
கலைந்து சென்ற மேகமாய்
நகர்ந்து கொண்டிருந்த
நினைவுகளை எட்டிப் பிடிக்க
முயன்று முயன்று..
தோற்றுக் கொண்டிருந்தன
என் முயற்சிகள்!!!!

தொலைதலில் ஜெயித்துப் போன
என் காதலின் படிமங்கள்
காதோரம் ஏதேதோ கிசு கிசுக்க
உடல் தழுவிச் செல்லும்
காற்று உன்னை நினைவுபடுத்தியதை
மறக்க முயற்சித்து மறக்காமல்
காத்திருக்கிறேன் நான்..!


***

திக்குகளும் திக்குகளின்
தெரிவுகளும் மறந்து
ஆதியும் அந்தமும் அறியா
மூலத்தின் சாயலில்
வழியற்று நிற்கிறேன் நான்!

சுற்றிச் சுழலும்
பாதைகளில் பயணிக்கும்
கால் தடங்களின்
போதனைகளின் அருவெறுப்புகளில்
விலகி நின்று
தெருவோர குப்பைகளோடு
கரைந்து கிடக்கிறது மனம்..!

தொடராத பயணமாய்
தடைப்பட்டிருக்கும் என்
தருணங்களில் தீக்குச்சியாய்
உன் நினைவுகளைக்
கிழித்துப் போட்டு விட்டு
மெளனமெனும் வேடமிட்டு
சப்தமாய் சிரிக்கிறது காலம்!


தேவா. S

பின் குறிப்பு: இரண்டு கவிதையும் பெண்ணின் பார்வையிலிருந்து.......


Monday, June 13, 2011

கோமானாகப் பார்க்கும் சீமான்...!


திருவிழா காலங்களின் அங்கொன்றும் இங்கொன்றுமாய் கடைகள் முளைப்பது போல ஏதேதோ பிரச்சினைகள் நாட்டை தாக்கும். அப்போதெல்லாம் யார் யாரோ போராடுவர், யார் யாரோ புயலாக கிளம்பி உக்கிரத்தின் உச்சியில் நின்று மக்களின் நலனுக்காக கூக்குரலிடுவர். இதற்கு சமீபகால உதாரணம் சினிமா டைரக்டர் திருவாளர். சீமான் அவர்கள்.

தேர்தல் முடிந்து விட்ட சூழலில், ஈழப் பிரச்சினையை மையமாக வைத்து அரசியல் செய்யத் தொடங்கியிருந்த சீமான் இனி என்ன செய்வார் என்ற எனது மனதை அரித்த கேள்விக்கு பதிலாய் சீமானும் நிஜ அரசியல் செய்ய தொடங்கியிருக்கும் சம கால நிகழ்வுகள் பதில்களாய் நம்மிடம் வந்து விழுகின்றன.

ஈழத்தில் நடாத்தப்பட்ட வன் கொடுமைச் சம்பவங்களுக்கு மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சிதான் காரணம் என்பது நம் ஊர் தெருக்களில் கோலிக் குண்டு விளையாடும் சிறுபிள்ளைகளுக்கும் தெரியும். அதை எதிர்த்து ஈழத்தில் நடந்த மனித நேய முரண்களை கண்டிக்கும் வண்ணம் சீமான் எதிர் கொண்டு நடத்திய போராட்டங்களும், அதனால் அவரை பல முறை இறையாண்மைக்கு எதிராய் பேசியதாய் குற்றம் சாட்டி மத்திய அரசின் கைப்பாவையாய் இருந்த தி.மு.க சிறையிலடைத்ததும் நாம் அறிந்த விடயம்தான்..!

ஈழப்பிரச்சினைக்கு அப்பாற்பட்டு....

சீமானின் அரசியல் கொள்கை என்ன? இனத்தின் பெயரால் மனித உணர்வுகளை தூண்டி விட்டு தான் முன்னெடுத்து செல்லும் ஒரு இயக்கத்தின வேர்களில் செழிக்கும் பாதை தெளிவானதாய் இருக்குமா?

நாம் அனைவரும் தமிழர்கள் என்ற உணர்வினை கொண்டிருப்பது எவ்வளவு சரியோ அவ்வளவு தவறானது நாம் தமிழர்கள் என்ற ஒரு குறுகிய வட்டத்திற்குள் நின்று இவ்வுலகை பார்ப்பதும்.

உலகமயமாக்கள், இணையத் தொடர்புகள், தொழில்நுட்ப வளர்ச்சி என்று விரிந்து பரந்திருக்கும் இக்கால கட்டத்தில் நான் தமிழன் எனக்கு பாரம்பரியம் இருக்கிறது என்று பேசுவதும், அதன் பெருமைகளைக் கொள்வதும் நாம் நம்மை வளர்த்துக் கொள்ள உதவ வேண்டுமேயன்றி அரசியல் நடத்தவும் அடுத்த மாநில அல்லது தேசத்து மக்களுக்கு எதிராகவும் ஒரு நிலைப்பாட்டையும் எடுக்க அதனை ஒரு ஆயுதமாய் கொள்தல் எப்படி சரியாகும்?

ஈழத்தில் நடந்த இன அழிப்பு கொடுமைகளுக்கு எல்லாம் தாய்த்தமிழர்களாகிய நாம் நம் கடும் கண்டனங்களையும் எதிர்ப்புகளையும் தெரிவிக்கலாம். இந்திய அரசை வலியுறுத்தி ராஜபக்சேக்கும் அவரது நிலைப்பாட்டிற்கும் எதிரான செயல்கள் செய்ய போராட்டங்கள் நடத்தலாம் ஆனால் தமிழக அரசியலையும் தமிழ் நாட்டு மக்களுக்கு தேவைப்படும் வளமான எதிர்காலத்திற்கும் ஈழப்பிரச்சினையை மையமாக வைத்து அரசியல் செய்தால் அது அறிவுப் பூர்வமான விடயமா?

அதைத்தான் சீமான் செய்கிறார்.

ஈழப்பிரச்சினைக்கு போராடுதல் வேறு. ஈழமக்களுக்கு ஆதரவாய் நாம் கோஷமிடுதல் வேறு. தமிழ் நாட்டு அரசியல் வேறு. சீமானுக்கும் இது தெரியும். இருந்தாலும் நரம்பு புடைக்க பேசி உணர்ச்சிக் கத்தியின் முன்னால் தமிழகத்திலிருக்கும் 7 கோடி பேரையும் நீ எல்லாம் தமிழன் ஒன்று கூடு என்று கோரிக்கை வைப்பதில் எவ்வளவு பகுத்தறிவு இல்லையோ அவ்வளவு பகுத்தறிவு அற்றது தமிழக முதல்வரின் சோ கால்ட் லேட்டஸ்ட் ஸ்டண்ட் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்து அவர் நடத்தப்போகும் பொதுக்கூட்டமும்.

ஏன் சீமான்..? தமிழக முதல்வர் அவர்கள் ஏன் இந்த கண்துடைப்பு வேலை செய்கிறார் என்று உங்களுக்குத் தெரியாதா? ஈழப்போரின் போது இதே முதலமைச்சர் எத்தனை போராட்டங்களை நடத்தினார் தனது கட்சியின் சார்பில். ஒரு திரைப்பட இயக்குனராய் இருந்த நீங்கள் உணர்ச்சியின் உச்சத்தில் கொந்தளித்து மேடை மேடையாக குமுறிய போது ஒரு மிகப்பெரிய கட்சியின் தலைவாராய் இருந்த செல்வி. ஜெயலலிதாவின் ஈழத்திற்கு ஆதரவான போரட்ட முகம் எப்படியிருந்தது?

விடுதலைப்புலிகளின் செயல்பாட்டை அடக்கி ஒடுக்கியதோடு அல்லாமல் வை.கோ போன்றவர்களை வருடக்கணக்கில் சிறையில் அடைத்து வைத்தது எந்த அம்மையார்? பொடாவில் உள்ளே சென்று வருடக்கணக்கில் சிறையில் இருந்த வை.கோ... எந்த வகையில் உங்களை விட தாழ்ந்தவராகிறார்? என்ற கிளைக்கேள்வியையும் இங்கே வைத்துச் செல்கிறேன்.

வை.கோ விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாய் செயல்பட்டார் அதனால் அவரை உள்ளே தள்ளியது அப்போதைய அ.தி.மு.க அரசு. நீங்கள் யாருக்கு ஆதரவாய் செயல்படுகிறீர்கள்? அரசியல் ஸ்டண்ட் அடிக்கும் அம்மையாரை ஆழமான ஈழ நேசர் என்று அடையாளப்படுத்திக் கொண்டிருக்கும் நீங்கள் எப்படி ஆதரிக்கலாம்?

அரசியல் திருப்பங்களில் இன்னும் ஐந்து வருடம் நீங்கள் சுகமாய் ஜீவிக்க இந்த பொதுக்கூட்டங்கள் உங்களுக்கு உதவும் என்பது என்னவோ சரிதான் ஆனால் நீங்கள் நாம் தமிழர் என்ற ஒரு இயக்க கொண்டிருகிறீர்களே... தமிழக தமிழனின் ஆதாரமான பிரச்சினைகள் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?

தெளிவான தமிழ்நாட்டினை படைக்க உங்களிடம் செயல் திட்டங்கள் ஏதேனும் இருக்கிறதா? நன்றாக உணர்வுப் பூர்வமாக பேசத்தெரிந்தவரெல்லாம் நாடாள முடியாது திரு. சீமான் அவர்களே.. அப்படியிருந்தால் தமிழகத்தை 13 வருடங்கள் தொடர்ந்து எம்.ஜி.ஆர் ஆண்டிருக்க மாட்டார். கருணாநிதிதான் ஆண்டிருப்பார்.

தி.மு.க விற்கும் அ.தி.மு.கவிற்கும் ஒரு மாற்று அரசியலை தமிழக தமிழன் பெரும் கனவாய் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறான். ஏதோ ஒரு வகையில் உங்களின் செயல்பாடுகளில் இருக்கும் இன உணர்வினை மெய்யென்று நம்பி ஏதோ இவர் செய்வார் என்று எதிர்பார்த்திருக்கிறான்...!நீங்கள் என்னவென்றால் தேர்தல் முடிந்தவுடன் ஆளும் கட்சி தீர்மானம் போட்டது நாங்கள் பாராட்டுகிறோம் என்று வெடித்து முடித்த புஸ்வானம் போல கருகிக் கிடக்கிறீர்கள்....

அரசியல் ஸ்டண்ட்ஸ் எல்லாம் பார்த்து காதில் புகை வரும் அளவிற்கு கடுப்பில் இருக்கும் தமிழக தமிழனின் கண்களில் வளரும் இத்தருணத்தில் மாட்டித் தொலைக்காதீர். கத்துக்குட்டி தீர்மானங்களையும் உமது ஆளுங்கட்சி ஆதரிப்புகளையும் மூட்டைத் கட்டிப் போட்டு விட்டு .. ஒரு தனிப்பெரும் தலைவனாக.. தமிழக தமிழனின் பிரச்சினைகளையும் அதன் மூலங்களையும் ஆரய்ந்து தெளிவான ஒரு செயல் திட்டத்தையும் கொள்கையையும் அறிவியுங்கள்....!

இப்படி கதை கதையாக சீமானுக்கு நாம் சொல்லிக் கொண்டே இருக்கலாம் எனது சொந்தங்களே...!

காலத்திற்கும் ஈழப்பிரச்சினைப் பற்றி பேச வேண்டுமெனில் தாய்த்தமிழனுக்கு உடம்பில் கொஞ்சம் உயிரும் சொரணையும் வேண்டுமல்லவா?

சீமான்கள் வருவார்கள் போவார்கள்....எம் மக்கள் விழிப்போடு இருந்தால் அதுவே போதும் எமக்கு...!


தேவா. SSunday, June 12, 2011

என்னை யாரென்று சொல்வீர்?
ஊர்ந்து ஊர்ந்து
சடேரென்று ஞான் வீழும்
இடம் ஒன்றை
அருவியெனப் விளம்பினாயே?
நான் அருவியா?

அசைந்தாடி
நான் மெல்ல நடந்து
கட்டில்லாமல் புரண்ட
என்னை காட்டாறென்றாயே
நான் காட்டாறா?

வற்றிப் போய்
நான் உருவமற்று
அருவமாகி கிடந்தபோது
என்னைப் பொட்டலென்றாயே
நான் பொட்டலா?

மேகத்தினூடே கலந்து
நான் குளிர்ந்த உச்சத்தில்
சட சடவென்று உதிர்ந்தபோது
என்னை மழையென்றாயே
நான் மழையா?

கரிக்கும் என்னை
கரை ஒதுக்கி
காய வைத்து காயவைத்து
உப்பு என்றாயே
நான் உப்பா?

காலங்கள் தோறும்
உன் கற்பனைகளில்
என்னை சிறை வைத்தாய்
மெப்பனையில் ஏதோ..
பெயர் வைத்தாய்
அது மட்டும்தான் நானா?

சிலை என்றாய்,
மரமென்றாய்,
மனமென்றாய்
உடலென்றாய்
உயிரென்றாய்
உன் விழிகளுக்குள்
அகப்பட்டு,
புத்திகள் செரித்ததெல்லாம்
நானா?

எல்லாம் நிறுத்தி
சுட்ட எதுவமற்று கிடக்கும்
சூன்யத்திற்குள்
எல்லாம் சேர்த்து
உறங்காப் பெருவெளியில்
உறங்கும் என்னை
பின் யாரென்று சொல்வாய்?


தேவா. S

Saturday, June 11, 2011

ரயில் சினேகம்....!


எதார்த்தமான உறவுகள் எதையும் எதிர்பார்ப்பது இல்லை. வருகிறார்கள் சந்திக்கிறார்கள் பிரிகிறார்கள் சந்தித்தலும் பிரிதலுமல்ல இங்கே பிரதானம் ஆனால் இடைப்பட்ட தருணத்தில் இருந்த அர்த்தம் பொதிந்த நிமிடங்கள் தான் பிரதானம்.

நான் ஒருவரை சந்திக்கிறேன்... அறிமுகம் செய்து கொள்கிறோம். அருகிலிருக்கும் ஒரு தேநீர் கடைக்குச் சென்று தேநீரை இரு கோப்பையிலே வாங்கி அர்த்தங்கள் பொதிந்த பார்வைகளைப் பரிமாறி கொள்கிறோம். அவரைப் பற்றி விசாரிக்கிறேன் அவரும் என்னைப் பற்றி விசாரிக்கிறார். எங்களின் விசாரிப்பு பரஸ்பரம் என்ன என்று அறிவதில் ஒரு எல்லைக்கோட்டிற்கு அப்பாலே நிற்கிறது.

நான் எங்கிருந்து வருகிறேனென்று அவரும் கேட்கவில்லை அவர் எங்கே செல்லப் போகிறார் என்று நானும் கேட்கவில்லை. அந்த சந்திப்பில் அவரின் இருப்பும் என்னுடைய இருப்பும் இங்கே மிகவும் அவசியமானதாக இருந்து விடுகிறது.

அந்த மரநிழல் அப்போது கரைந்த காகம், வானில் மிதக்கின்ற மேகங்கள், மெலிதாய் வீசும் ஒரு காற்று, காற்றில் பறக்கும் சருகுகளும் வானில் பறக்கும் சில பறவைகளும், டீக்கடையில் டீ ஆற்றுபவரின் திறமையும், எம்மைச் சுற்றி இருந்த மனிதர்களின் சல சலப்பும் இங்கே மிக முக்கியமாய்ப் போகிறது.

ஏதேதோ பேசுகிறோம், எதற்காகவோ சிரிக்கிறோம், திடீரென்று நான் சொன்ன ஒரு விசயத்திற்கு அவர் கோபம் கொள்கிறார், சற்றைகெல்லாம் கோபம் மறைந்து அந்த செயலுக்கு வருத்தம் தெரிவிக்கிறார்.

மீண்டும் சிரிக்கிறோம். அப்போது தூறல் போட ஆரம்பித்த வானைப் பார்த்து மழையைப் பற்றி கொஞ்சம் பேசுகிறோம் அப்போது அவர் படித்த கவிதை வரிகளை சொல்லி சிலாகித்துப் போகிறார்..நானும் எனக்குப் பிடித்த ஒரு பாடலின் வரிகளை பதிலுக்குச் சொல்ல அவரும் புளகாங்கிதம் அடைகிறார்.

இருவரின் ப்ரிய நாவலாசிரியர்கள், நடிகர்கள், இசையமைபாளர்கள் என்று பேசிக் கொன்டே இருக்க தேநீர் கோப்பை காலியாகிறது. ஒரு சந்தோசம் எனக்குப் பிடித்த மனிதரை நான் சந்தித்தேனென்று எனக்கும் அவருக்கும் இருக்கும் போதே இருவரும் இரு திசையில் செல்லவேண்டிய அவசியம் ஏற்படுகிறது.

எங்களுக்குத் தெரியும் நாங்கள் சேரும் போதே பிரிவோமென்று.....புன்முறுவலோடு அவரின் கையைப் பற்றி குலுக்குகிறேன்....பரஸ்பரம் இருவரும் கண்களால் ஏதோ ஒன்றை பரிமாறிக் கொள்ள எந்த வலியுறுத்தலுமின்றி பிரிகிறோம்.....எந்த நிலைப்பாட்டையும் எடுக்காமல், எந்த வாக்குறுதியையும் பெறாமல் எந்த அடையாளங்களையும் விட்டுச் செல்லாமல் புன் சிரிப்போடு அவர் கிழக்கே நடக்கிறார் நான் மேற்கே நடக்கிறேன்.....

ஒரே ஒரு முறை திரும்பிப் பார்த்து இருவரும் சிரித்துக் கொண்டோம்.

இப்படியாக ஒவ்வொரு உறவையும் வைத்துக் கொள்ளுமென் முயற்சிகளில் திணிக்கப்படுவது எல்லாம் உறவென்ற பெயரில் அத்து மீறல்தான் தோழர்காள். அழுத்தம் கொடுக்காத உறவுகள் எல்லாம் எப்போதும் நெஞ்சின் ஓரத்தில் அலாதியான நினைவுகளாய் நிறைந்து நிற்கிறார்கள் தித்திப்பாய்...

வாழ்வின் ஒவ்வொரு தருணத்திலும் எதிர்பார்ப்பு இல்லாமல் நம்மிடம் வந்து நம்க்கு சுகமான நினைவுகளை விதைத்துச் செல்லும் அத்தனை பேரும் கடவுளர்தாம்...! நெருங்கிய உறவென்று கூறி ஏற்றுக் கொள்ளும் சுமைகளை விட அவ்வப்போது வந்து நம் நெஞ்சு நிறைக்கும் இந்த சினேகங்கள்...எல்லாம் ஒவ்வொரு குட்டிக் கவிதைகள் போலத்தான்.....

நிறைய பேசிட்டேங்க........கிளம்புறேன்.....வில் கேட்ச் யூ ஆல் லேட்டர்!

அப்போ வர்ர்ர்ர்ர்ட்ட்டா....!


தேவா. S

பின் குறிப்பு: கட்டுரையில் வரும் அவர் அவளாகவும் இருக்கலாம், அவனாகவும் இருக்கலாம்.

Wednesday, June 8, 2011

ஒரு அழகிய கனவு...!
விலை பேசி முடித்து விட்டேன்.... நாம் குடியிருந்த வீட்டினை....! கடைசியாய் ஒரு முறை நான் கண்ட கனவுகளை கண்டு செல்லலாம் என்று காம்பவுண்ட் கேட்டினை தள்ளும் போதே... முகப்பு ஓரமாய் இருக்கும் அறைக்குள் இருக்கும் நமது படுக்கையறை வழியே ஒட்டிக் கொண்டிருக்கும் முகம் இன்னும் மாயையாய் என் புத்திக்குள் இருந்து எட்டிப் பார்க்கிறது...

காதலையும், கனவுகளையும் ஒன்றாக்கி நாம் குடியேறிய அந்த முதல் தினத்தை எப்படி மறக்க...? சிறகு முளைத்த பட்டாம் பூச்சியாய் வீட்டிற்குள் பரவசமாய் அங்கும் இங்கும் நாம் சுற்றித் திரிந்த நாட்கள் எவ்வளவு அருமையானவை....! காதலின் தொடர் பாதையில் திருமணம் என்பது ஒரு சடங்காகிப் போக நீ என் மனைவியாகிப் போனாய்...

காலையில் நீ எப்போதும் கொடுக்கும் காஃபியில் காதல் நிறைந்திருக்கும் சர்க்கரையாய் காமம் கலந்திருக்கும். நீர் சொட்டும் தலைக்கு நீ சுற்றியிருக்கும் அந்த டவலையும் தாண்டி நீர் சொட்டும் காட்சியை ஒரு வேளை நான் ஓவியானியிருந்தால் அதை ஒப்பற்ற சித்திரமாக்கியிருப்பேன்..

கவிஞனானதால்.. வார்த்தைகளுக்குள் அதைக் கொண்டு வரப் போராடிப் போராடி.... முழுமையாய் அதை வார்த்தைப் படுத்த முடியாமல் பேனாவை நான் உடைத்தெறிந்த போது நீ... ஒரு குழந்தையை போல நீ சிரித்தது கண்டு நானும் ஒரு குழந்தையாகிப் போனேன் உன்னிடம்...!

ஒரு காவியமாய்
துண்டுக்குள்
சுற்றிக் கிடந்த
உன் கேசத்தின்
ஒற்றை முடி கொடேன்
என் கவிதைப் புத்தகத்தின்
ஏதேனும் ஒரு பக்கத்திற்கு
உயிர் கொடுக்கட்டும்!

***

ஒரு சிலையோடு
எப்படி குடும்பம் நடத்த
கலவரமாய் குழப்புகிறதடி
உன் அழகு!

***

உதடுகளால்
என் உதடு தொட்டு
என் உயிருக்குத் தானே
நீ ஒத்தடம்
கொடுக்கிறாய் எப்போதும்!

***

காதலை சொல்ல
வழியற்றுப் போய்
காமம் கொள்ளும்
என் காதலை
நீ அறிவாயா?


தினசரிகளில் நீ காதலை கண்களிலும் நான் காலண்டர் காகிதத்திலும் கொடுத்து பரிமாறிக் கொண்டிருந்த பொழுதுகள் அவை...! நான் கூட உன்னிடம் அடிக்கடி கூறியிருக்கிறேன்.....சுவர்க்கம் ஒன்று என்று ஏன் மனிதன் எங்கேயோ கற்பிதம் கொள்கிறான், நான் வேண்டுமானால் பகிங்கரப்படுத்தி விடவா? நான் வசிப்பது சுவர்க்கத்திலென்று! உன் மடியில் படுத்துக் கொண்டு நான் கேட்ட நாட்கள் எல்லாம் வானவில்லைப் போல அழகான நிறம் கொண்ட நாட்கள்தானே....!

மெளனமாய் சுற்றி வந்து கொண்டிருக்கிறேன்.. உன் நினைவுகள் நிரம்பிக் கிடக்கும் உன்னோடு வசித்த இந்த வீட்டின் மூலைகளுக்குள்...! வெறிச்சோடி கிடக்கும் வீட்டுக்குள் வெளிச்சமில்லை நான் விளக்கிட்ட பின்னரும்...! வெளிச்சம் நீ என்றுதானே அடிக்கடி சொல்வேன் நான் இன்று மட்டும் மாற்றுவேனா என்ன?

இதோ.. இந்தக் குளியலறை என்னை கண் சிமிட்டிக் கூப்பிடுகிறது...! மெல்ல திரும்பிப் பார்க்கிறேன். வெட்கத்தில் அது என்னைப் பார்த்து மெளனமாய் ஏதேதோ கதைகள் கூறி மெலிதாய் ஏதோ நினைவுகளை மனதினில் பதிக்க.... ஒரு பெருமூச்சாய் எல்லா விளையாட்டுக்களும் வெளிச் செல்கிறது.

இதோ..பார்க்கக் கூடாது என்று நான் முடிவு செய்து வைத்திருந்த நமது படுக்கையறையை வேறு வழியற்று வெறித்துப் பார்க்கிறேன். பிரபஞ்ச சூட்சுமத்தின் இத்தியாதிகளை தன்னுள் நிறைத்து வைத்திருக்கும் காமமென்னும் கடலை நாம் கடந்த இடம்.

மோகத்தில் மேகங்கள் உரசி பெருமழை பெய்விப்பது போல தாகத்தில் நாம் உரசி...சாந்தியடைந்து தட்சிணாமூர்த்தி தத்துவத்தை கற்று தேர்ந்து கலவி செய்த இடம். இருந்ததனை இருந்ததுபோல இருந்து காட்டி வாய் பேசாமல் பிரபஞ்ச ரகசியத்தின் நிழல்தனை தொட்ட இடம்...!

நானற்று, நீயுமற்று வெறுமனே இருந்து மூல இருப்பினை உணரவைத்த காமத்தின் உச்சத்தில் கடவுளைக் கண்டோம் என்று மானசீகமாய் எழுதி கையெழுத்திட்ட ஒரு மடம்.

இன்னும்
சிதறிக் கிடக்கிறது
நமது சிணுங்கல்களோடு
கூடிய உன் கொலுசொலியும்
வளையோசையும்...!

மெலிதாய் பரவிக்
கிடக்கும் மல்லிகை வாசத்தை
பிறப்பிப்பது இந்த
அறையா? அல்லது
என் மூளையா?

ஆச்சர்யமாய் என் பின்னந்தலையத் தட்டிக் கொண்டு...என்னை கட்டாயமாய் நகர்த்திக் கொண்டு கடைக்கண் கண்ணீரோடு வெளியே வருகிறேன்..! அடுப்பங்கறைப் பக்கமாய் கடக்கையில் உனக்காக நான் வார்த்த தோசைகள் எல்லாம்..எ நினைவுக்கு வந்ததுதான் விட்டது...! என் ஆசைகளைப் போல எல்லாம் கருகிப் போய் விட்டன....உணவோடு சேர்த்து எனக்கு உயிரையும் ஊட்டிய இடம் இன்று மயானக் காடாய்....!

பூஜையறைக்கு பள்ளியறை என்றும் படுக்கையறைக்கு பூஜை அறை என்றும் நாம் பெயரிட்டு விளையாடியது என் நினைவுகளுக்குள் நீச்சலடித்துக் கொண்டிருந்தது. ஆமாம் இரண்டின் மூலம் முக்தி நோக்கிய பயணம் தானே செய்தோம்...!

வாசல், கொல்லை, தோட்டம், நம் குட்டி பிரபஞ்சமான மொட்டை மாடி, நிஜ பிரபஞ்சமாம வெற்று வானம் என்று எல்லாமே என்னை குத்திக் கிழிக்கும் நினைவுகளோடு மிரட்ட இன்று நீயில்லை...

காதல் என்ற வார்த்தையை திருமணம் என்ற வாழ்க்கை நியதியால் வென்றோம். திருமணம் காதலைத் தின்று ஏதேதோ புரிதலின்மைகளை மெதுவாய் நம்மில் கரைத்து கடைசியில் கோபமாய் மாறி நீயும் நானும் ஒரு ஒருவர் எரித்து விடுவது போல மோதிக் கொண்ட நமது கடைசி நேர காட்சிகளை நான் மறக்கவே விரும்புகிறேன்.

அடிக்கடி நமக்குள் சண்டையைக் கொண்டு வந்த காரணங்கள் வெற்று என்று கூறியிருக்கிறேன். நீ என்னை வார்த்தைகளால் குதறியிருக்கிறாய், பதிலுக்கு நானும் ஒரு தெரு நாயாய் சீறியிருக்கிறேன். காரணங்களை வகைப்படுத்திப் பார்க்க மனது இப்போதும் நடுங்குகிறது.

காதலை எப்போதும் மனித மனக் கோளாறுகள் வென்று விடுகின்றன. நமது தன்முனைப்பு என்னும் ஈ.கோ காதலாய் இருந்த போது விட்டுக் கொடுத்து அனுபவித்தது ஆனால் கணவன் மனைவி என்று ஆன பின்பு...உனக்கு ஏற்றார் போல நான் இருக்க வேண்டும் என்று நீயும், என்னுடைய கட்டளையை நீ ஏற்க வேண்டும் என்று நானும்

அதிகாரத்தையும் அடக்கு முறையையும் மாறி மாறி நாம் பிரயோகம் செய்ததில் காதலென்னும் குழந்தையும், காமம் என்ற கடவுளும் மரித்தே போனார்கள்....!

ஏகாந்த வானின்
பறவைகள் நாம்...!
யார் யாரை
கூண்டுக்குள் அடைக்க.....?

இதோ விவகாரத்து கிடைத்து ஒரு வாரம் ஆகி விட்டது. சட்டம் ஒரு வெள்ளைப் பேப்பரில் கட்டளையாய் நம்மைப் பிரித்துப் போட்டது....!

இனி...
உனக்கு நீ....!
எனக்கு நான்...!


நினைவுகளுக்குள் நீந்தி முடித்து விட்டேன் பெண்ணே...! உனக்காக நான் எழுப்பிய வீடென்னும் கட்டிடத்தையும் விற்று விட்டேன்....! எண்ணங்கள் என்னை முறுக்கியெடுக்க மீண்டும் உன்னோடு வாழ்ந்த வீட்டினை ஏக்கமாய் பார்த்த்து விட்டு காம்பவுண்டின் இரும்புக் கதவினை அடைக்கிறேன்....

மீண்டும் உன் முகம்......முகப்போர அறையினுள் இருந்து எட்டிப் பார்க்கிறது...!

மெல்ல என்னுள் சிரித்துக் கொண்டு.. அண்ணாந்து வானம் பார்க்கிறேன்...

அலையும் மேகங்கள்
கலையும் கனவுகள் போல
இருக்கும் இல்லாமைகள்...
என் வாழ்க்கையைப் போல...!

ஆமாம் கனவுகள் எல்லாம் கலைவதற்குதானே...! நான் கண்டதும் ஒரு அழகிய கனவுதான்...!

நான் நடந்து கொண்டிருந்தேன்!


தேவா. SMonday, June 6, 2011

யாதுமானது ...!


தனிமர்ந்திருந்தேன் அன்றொரு நாள்..! உள்ளிருந்து கிளைந்தெழுந்த ஒரு உணர்வு என்னிடமிருந்து விலகி நின்று என்னை உற்று நோக்கியது..! மெல்ல வியர்த்து வியந்தேன்...சப்தங்கள் உள் வாங்கிய தொண்டையிலிருந்து வார்த்தைகள் வெளிப்பட்டு நீ யாரெனெ துணிச்சலை கைக்கொண்டு ஒரு கேள்வியை பிறப்பித்தேன்....மருண்ட விழிகளோடு....!

எம்மை நோக்கி தொடுக்கப்பட்டதா உமது கேள்வி என்ற பதில் கேட்டு மெல்ல எச்சில் மிடறு விழுங்கி ஆம்... ஆம்.. உம்மை நோக்கிதான் என்று பதில் பகின்று காத்திருந்தேன். திக்கெட்டும் ஒலிக்க ஒரு சிரிப்பொலி எனக்கு முதல் பதிலானாது அதைத் தொடர்ந்து....

எம்மை இறையென அறி; எமது பெயர் சிவமென புரி... என்ற பதிலில் வியர்த்திருந்த நான் மெல்ல துணிச்சலை கைக் கொண்டு... இறையென்றால் நலமன்றோ பயக்கும். வீணில் ஏன் எனக்கொரு அச்சம். எம்மிடம் இருக்கும் கேள்விகளே இப்போது மிச்சம் அவற்றை குறையில்லாது எம்முன் இறையென்றறிவித்து உரை பகின்ற அந்த உருவமற்ற உச்ச சக்தியிடமே கேட்போமென்ற துணிவு வந்தது.

ஓ... நீர்தான் இறையோ...!!!! உம்மை சிவமென்கிறார், சிலை என்கிறார், உரு என்கிறார் அரு என்கிறார், எமது ஊரில் பலப் பல பெயர்கள் வேற்று நாட்டில் உனக்கு வேறு பெயர்; உம்மை இல்லை என்கிறார் சிலர்; உண்டு என்கிறார் சிலர்....

நீர் தான் இறையென்றால் உமக்கு தெளிந்தவொரு பதமில்லையோ...? மானுடரை குழம்ப விட்டு ஆடுவதில் உமக்கு என்ன அப்படி ஒரு சுகம்...?

பிரமாண்டம் இப்போது நிசப்தமானது.. மெல்ல மெல்ல அசைந்து பின் அசையாதிருந்து.....பின்

எமது தொழில் என்ன தெரியுமா என்று இறையென்று அறிவித்த ஒன்று என்னிடமே கேள்வி கேட்டு நான் பதில் சொல்ல முயன்ற கணத்தில் அதுவே விடை பகின்றது....

எனது பெயர் கூத்தன். எனது தொழில் கூத்து.

நீ ஒரு கூத்து, உன்னை சுற்றியிருக்கும் மானுடரும் விலங்குகளும் இயற்கையும் ஒரு கூத்து, சுற்றும் பூமி ஒரு கூத்து, பூமியை பெயர்த்தெறிந்த சூரியனொரு கூத்து.. இவையெல்லாம் நீ அறிந்த கூத்துகள். மானுடராய் நான் நடத்தும் கூத்துக்களில் மானுடரென அறியப்படுபவருக்கு எனது இன்ன பிற கூத்துக்கள் அறிதல் அவ்வளவு சாத்தியமில்லை. அறிய வேண்டுமெனில் அவரின் மனம் மறந்து செயல் மறந்து, உடல் மறக்கும் கணத்தில் எம்மில் எம்மாய் அவர் மாறும் அபூர்வம் நிகழும். அக்கணத்தில் உணர்தல் சாத்தியம் பகிர்தல் சாத்தியமில்லை.

என்னின் இன்ன பிற கூத்துக்களாய் ஆழிக் கூத்து, ஊழிக் கூத்து, அகண்ட கூத்து, ஐம்பூதக் கூத்து, சிவ தத்துவக் கூத்து, வித்தியா தத்துவ கூத்து, ஆன்ம தத்துவக் கூத்து, என்று பரந்து விரிந்த எமது கூத்துக்களில் உம்மால கைக்கொள்ள இயன்றது உடலளவில் ஆனம் தத்துவக் கூத்துக்கள்தாம்... அட்டமா சித்திக்களாய் நீவிர் அறிவனவும் கூத்துக்கள்தான்...

எம்மை விளங்க வேண்டி மானுடராய் நானே தான் அலைகிறேன். ஒவ்வொரு நிலையிலும் விளங்க அலைந்து விளக்கமெல்லாம் பொய்யன்றறிந்து விளக்கத்தை விட்டு உணருதல் நிலையில் என்னை அடைகிறேன்.

முரண்... யாம் சமைத்தது. முரணற்று யாமிருந்தது எமது பூர்வ நிலையாகும். எமது பூர்வத்தில் யாம் இருந்த நிலை உமது கற்பனைகளுக்கும் எட்டாத ஒரு நிலை. கற்பனையில் யாதொன்று தோன்றினாலும் அது பொய்யே...! எம்மின் மெய்யறிய யாமாய் நீர் மாற வேண்டும்!

நீர் கூறும் முரணெல்லாம் யாமே சமைத்தோம். அவையெல்லாம் எம்மை யாமறிய யாமே வைத்துக் கொண்ட சத்திய சித்துக்கள். கலங்காதே.. நீ உன்னை நானென்றறிய இவையெல்லாம் பாடமாகக் கொள். இயற்கையில் சமம் என்றொன்று இல்லை என்று அறி; புத்தி தெளி; நேர், எதிரென்ற முரண்கள் எல்லாம் இயக்க விதிகள் என புரி;

இடி முழக்கமென எனக்கு கிட்டிய பதில்கள் பகுதி எனது செவியிலேயே ரீங்காரமிட, மிகுதி தலைக்குள் சென்று மூளையின் செல்களோடு புரிதலுக்காய் போராட நான் திக்கித் திணறி சமாளித்து.... மீண்டும் ஒரு கேள்வியை இறைக்கு இரையாக்கினேன்...!

நான் வணக்கும் சிவபெருமான் யார்? உமக்கு உருவமில்லையெனில் அந்த சித்திரத்தில் அரவத்தை தோள் கொண்டு சடா முடியோடு தோன்றும் மனிதன் யார்? நீயா ? நீயில்லையா? உமக்கு உருவமில்லையெனில் ஏன் நான் அந்த சித்திரத்தை வணங்க வேண்டும்.....?

புன் முறுவல் போன்ற ஒரு உணர்வோடு என்னை அரவணைத்த இறை மீண்டும் மீட்டத் தொடங்கியது....

ஹா ஹா ஹா .....! நீ நானாகும் வழியிலிருப்பதை அறிகிறேன்!. உனது கேள்விகளே உமது பயணத்திற்கான துருப்புச் சீட்டு.... எம்மிடம் கேள்விகளை வினயமின்றி வைப்போருக்கு பதில்கள் எப்போதுமுண்டு. சந்தேகம் கொள்பவரின் புத்திகளை யாம் சீண்டுவதில்லை. அவை ஜென்மங்களாய் அலைந்து அலைந்து அனுபவம் கொண்டு பதில்கள் பெற ஒரு விதியினை அவற்றுக்கு யாமே இட்டிருக்கிறோம்.

நீர் வணங்கும் அந்த மனிதன் முதன் முதலில் மனித இனம் தோன்றிய பின்பு தன்னை நானாக உணர்ந்த மனிதன். முதல் முக்தன்! முதல் ஜீவிதன்.....! கருத்துக்களால் சூழப்பட்ட நீ கேள்விகள் கேட்பதற்கு உனக்கு புறச்சூழல் உதவுகிறது, இதற்கு முன் என்னை உணர்ந்தவர் விட்டுச் சென்ற பதில்களில் இருந்து தெளிவு கிட்ட வாய்ப்புள்ளது ஆனால்.....

முதல் முக்தனுக்கு என்னை உணர்தல் அவ்வளவு எளிதன்று..அவனின் பெயர் ருத்ரன். அவன் என்னை உணர சுடலையிலேயே வசித்தான். சுடலையின் பொடி பூசி நானும் ஒரு நாள் இறப்பேன் என்று கதறி கதறி தனக்குள்ளெயே கூவி... நான் யாரென்று தன்னுள் கேள்விகள் கேட்டுத் துடித்தான்.

கொடும் விஷம் கொண்ட நாகத்தை எடுத்து தன் கழுத்தில் கட்டிக் கொண்டு நானும் நீயுமொன்று என்று பித்தனாய் புலம்பினான். சுடுகாட்டில் இருந்த மண்டை ஓடுகளை தனது கழுத்தில் அணிந்து கொண்டு பேயாய் சுற்றினான். எரியும் பிணங்களுக்கு முன்பு அவன் இருந்த தியான உச்சத்தில் அவன் சிவமாகிய என்னை உணர்ந்தான்.

அதனால்தான் அவனை சிவத்தை உணர்ந்த பெருமான் அதாவது சிவபெருமான் என்றழைத்தனர். என்னை யாரும் கண்டிராததால் எமக்கும் உருவொன்று இல்லையாதலால் எம்மை உணரும் முதல் நிலையாய் அவன் உருவம் வரைந்து உருவேற்றி வணங்கத் தொடங்கினர் உன் போன்ற மானுடர்....

இதோ இன்று நீ கேள்விகள் கேட்டாய் நான் ஏன் இந்தப் படத்தை வணங்கவேண்டுமென்று...? இப்படி கேள்விகள் எழும் வரை மானுடர் சிலைகளையும், மரங்களையும் படங்களையும் வணங்கத்தான் செய்வர். கேள்விகள் ஜனிக்க வைக்கப்பட்ட சூட்சும இலக்குகள் இவையெல்லாம்.

இன்று நீ உணர்ந்தாய் நான் யாரென்று....! உனக்கு அந்த சித்திரம் இனி அவசியமில்லை ஆனால் உன் வீட்டில் பெண்டு பிள்ளைகள் இருப்பரே.. அவர்கள் கேட்டனரா இக்கேள்விகளை....? ஆமெனில் அந்த சித்திரங்களை தூக்கியெறி இல்லையெனில் அவர்கள் கேள்விகள் கேட்கும் வரை தொடரட்டும் உமது வழிபாடு...

இப்பிறப்பில் இல்லாவிட்டாலும்...வேறு உடலை அவர்களின் ஆன்மா தொடும் போது இப்போது தொடர்ந்த வழக்கம் கேள்விகளாய் ஜனித்து அவர்களை கடைத் தேற்றும்...! அது வரை நீ நடி...... எம்மைப் பற்றிய புரிதலை அறியாதவன் போல கேள்விகள் கேட்டு மானுடரின் மனதில் கேள்விகளைப் பதியம் போடு...!

உனக்குத் தெரியும் நான் யாரென்று... எனக்குத் தெரியும் நீ நானென்று.....உனது பணி தொடரட்டும்.....!

என்னுள் இறையாய் நின்று ஸ்பூரித்த இறை என்னும் ஒரு சூட்சுமம்...ஏதோ ஒரு பலத்த சப்தம் எனக்கு அருகே கேட்க தொடர்பற்றுப் போனது. நான் கண் விழித்தேன்....ஒரு பூனை பாத்திரத்தை தள்ளி விட்டு என்னைக் கடந்து ஓடியது.

என் தியானம் கலைய.....என் சிந்தனைக்குள்... நான் தேடிய இறை நான் தானா?

...என்ற கேள்வி ஓடிக் கொண்டிருக்க என் விழிகள் கண்ணீரோடு நிலை குத்திப் போய் மேலே ஓடிக் கொண்டிருந்த மின் விசிறியை வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்க...

நான் மீண்டும் இல்லாமல் போனேன்....!


தேவா. S


Saturday, June 4, 2011

ஆன்ம யுத்தம்...!

அது ஒரு விடியல் காலை நேரம் இரவு முழுதும் முன்னும் பின்னும் நான் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருக்கிறேன். ஏதேதோ புத்தகங்களை படித்து கடவுள், பிறப்பு, இறப்பு, இந்த மூன்றுக்கும் அருகே நான் சென்று விடையறிய முற்படும் பொழுதில் தெரிந்தும் தெரியாமலும் விடைகள் என்னை விட்டு விலகிப் போக...

ஆழமான ஒரு கடலின் தரையைத் தொட்டு விடும் வேகத்தில் நீருக்குள் நான் சென்று அந்த கடலின் தரையை என் நடுவிரலால் தொட்டுத் தடவிக் கொண்டிருக்கும் போது நீர் மீண்டும் என்னை மேல் நோக்கி எடுத்துக் கொண்டு வந்தால் என்னவொரு இயலாமை இருக்குமோ அப்படி ஒரு இயலாமை எனக்குள் கோபமாய் வந்ததில் கண்ணீர் என் கண்களை கட்டுப்பாடுகளின்றி கடந்து கொண்டிருந்தது....

நான், நான் என்று அடித்து பிடித்து வாழ்ந்து, சுற்றிலும் பகட்டான மனிதர்கள் கொண்ட ஒரு சூழலில் நான் பல வேறு நிகழ்வுகளைப் பார்த்திருக்கிறேன். எல்லாமே அபத்தங்கள் என்று இன்று தெளிவாக உணர முடிந்தது. எனது கிராமத்தில் இருவர் வெட்டிக் கொண்டு இறந்து போயினர்.

காரணம் முனியனின் வரப்பிலிருந்க மரத்தின் வேர் குப்பனின் வரப்புக்கும் பொதுவாக இருப்பது போல இருக்க அந்த உதய மரம் எனக்கு சொந்தம் என்று இவன் சொல்ல அவன் மறுக்க 2000 ரூபாய் கூட பெறாத உதயன் மரம், இருவரின் குடும்பத்தையும் நிற்கதியில் நிற்க வைத்ததோடு அல்லாமல் போலிஸ், கோர்ட் என்று மேலும் சிக்கல்களை தாரளமாய் வழங்கியிருந்தது.

மாதங்களாய் அந்த உதய மரம் வேறோடு வெட்டப்பட்டு அந்த ஊர் போலிஸ் ஸ்டேசனில் கிடந்தது. அது யாருக்குப் போனது என்ன நடந்தது என்றெல்லாம் தெரியவில்லை ஆனால் முனியனும் குப்பனும் செத்துப் போனார்கள்.

அகங்காரம் கொண்ட மனம் மனிதர்களை எப்போதும் சிந்திக்க விடுவதில்லை. அது எப்போதும் தனக்கு நிறைய தெரியும் என்றும் தனக்கு கீழ்தான் எல்லோரும் என்றும் ஒரு கற்பனைக் காட்சியை தனக்குள் வரைந்து வைத்திருக்கிறது.

வாழ்க்கையில் எதுவும் நிலையில்லை என்று அறிந்தும் தெரிந்தும் வீண் ஜம்பங்களை பேசுகிறது. எனது கடவுள், எனது சித்தாந்தம், எனது சாதி எனது மதம், எனது மூளை என்று பல இரும்புக் கம்பிகளை சொருகிக் கொண்டு மனிதர்கள் ஒரு சிறைக்குள் வாழ்கிறார்கள்.

நேற்று வரை நான் கும்பிட்டு வந்த முருகனும் பிள்ளையாரும், சிவனும் மனித வாழ்க்கையை போதிக்க பெரியவர்களால் உருவாக்கப்பட்ட கற்பனைகள். அவையெல்லாம் ஒவ்வொரு தத்துவத்தை விளக்க கொண்டு வரப்பட்ட காட்சி வடிவங்கள் என்று அறிந்த உடனே எனது தூக்கம் போயிற்று.... அப்படி இல்லை நம்பாதே என்று மனம் எனக்கு கட்டுக்கள் ஏற்படுத்தி மூளையைப் பொய்யன் என்று சொன்னது.....

மூளையோ எந்த சலனமுமின்றி இதுதான் சத்தியம் நான் ஒன்றும் சொல்ல மாட்டேன். உனது மனதை நீ நம்பினாலும் தடுக்க மாட்டேன். எப்படி இருந்தாலும் எதார்த்ததிற்கு எல்லோரும் வந்துதான் ஆக வேண்டும். நீ மட்டும் விதி விலக்கா என்ன? என்று என்னைப் பார்த்து புன் முறுவலாய் சிரித்தது.

எனது தூக்கம் சுத்தமாய் போய் விட பளீச் என்று விழித்துக் கொண்டேன். மெல்ல எழுந்து பால் கனிக்கு வந்தேன். அதிகாலை மணி நான்கில் சென்னை மெல்ல மெல்ல சோம்பல் முறித்துக் கொண்டிருந்தது. வானம் இன்னும் கருமையாயிருக்க என் மனதில் இறைவன் என்ற கற்பிதங்கள் எல்லாம் மழையில் கரைந்த அழுக்குகளாய் கரைந்து கோண்டிருந்தன.

எல்லா மதமும் மனித நன்மைக்கே...! எல்லா தேவ தூதர்களும் மனிதரில் சிறந்தவர் மேலும் இந்த உண்மை உணர்ந்தவர்; என்று ஒரு எண்ணமும் இல்லை இல்லை கடவுளர் இருக்கிறார்கள் என்று ஒரு எண்ணம் அதன் பின்னால் மறைந்து கொண்டும் எட்டிப்பார்த்தன.

நான் சட்டை செய்யாமல் எதிலும் என்னை புகுத்தாமல் வெறுமனே நின்று கொண்டிருந்தேன். ஏதேதோ எண்ணங்கள் உருவாக வெறுமனே நிலைகுத்திப் போயிருந்த கண்களுக்கு முன்னால் மாய உலகத்தில் மனிதர்களின் பெருமைகளும் திமிர்களும் எனக்கு நினைவுக்கு வர சட்டென ஒரு கோபம் துளிர்த்தது...

மானுட தவறுகளுக்கும், அகங்காரங்கள் கொண்ட மானுட புத்திகளுக்கும் புத்திகள் புகட்ட வேண்டும். ஏற்றுக் கொள்பவருக்கு என்று ஒரு முறையும், புரியாதவர்களுக்கு ஒரு முறையும், வெறுப்பவர்களுக்கு ஒரு முறையும், மறுப்பவர்களுக்கு ஒரு முறையும், எல்லாம் அறிந்தும் மனிதர்களை கேலிப் பொருள்களாக்குபவர்களுக்கு ஒரு முறையும் என்று தனித்தனியே அஸ்திரங்களாய உருவாக்கப்பட வேண்டும்.

யுத்திகளின் மூலம் மனித புத்திகளுக்குள் நுழைந்து சீர்ப்படுத்த வேண்டும். காலமெல்லாம கற்ற கல்வியும், பார்க்கும் காட்சிகளும் தத்துவங்களும், கடவுளர்களும் எதுவுமே பயன் தராது. மனிதன் விழிக்க வேண்டும். அவனது உள்ளுணர்வு எப்போதும் சுடர் விட்டு பிரகாசிக்க வேண்டும்.

தன்னையும் சுற்றுப் புறத்தையும் சரியாக வைத்துக் கொள்ள மனிதன் நான் என்று அகந்தையை அழிக்க வேண்டும். அகந்தை அழிக்க தன்னை அறிதல் வேண்டும். தன்னை அறிய பயிற்சிகள் வேண்டும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பயிற்சி. அமைதியாய் சொன்னால் ஏறுபவனுக்கு அமைதியாய், செவுட்டில் அறைந்து ஏற்றுபவனுக்கு செவுட்டில் அறைந்து, வாளெடுத்த் நெஞ்சுக்கு நேரே வருபவனுக்கு இரு கைகள் முறுக்கி காலை ஒடித்து வலி என்றால் என்னவென்று போதித்து உணரவைக்கும் பயிற்சி....

என்னவெல்லாம் செய்யவேண்டுமோ அதையெல்லாம் செய்ய வேண்டும். எது நடந்தாலும் மனிதன் சக மனிதனை நேசிக்கவும் அன்பு செய்யவும் இருக்கும் வரை சந்தோசமாய் வாழவும் வழி செய்ய வேண்டும்....

என் ஆயுட்காலம் குறைவு. ஒரு நூறு பேரின் ஆன்மாவை நான் விழிக்க வைப்பேன். நூறு பேரின் விழிப்பு நிலை ஆயிரமாகும் ஆயிரம் பேரும் சும்மா இருக்க மாட்டார்கள்... ஆமாம் ஆன்ம விழிப்பு என்பது புலி வாலை பிடிக்கும் செயல். ஆன்ம விழிப்பு அடைந்தவன் சும்மா இருக்க மாட்டான். ஏதாவது பேசிக் கொண்டும் எழுதிக் கொண்டும் பைத்தியமாய் இயங்குவான். பிசாசாய் வேலை செய்வான்.

நானும் கூவிக் கூவி கத்துகிறேன். எங்கு பார்த்தாலும் எழுதி வைக்கிறேன். என்னை சந்திக்கும் மனிதர்களிடம் எல்லாம் பதம் பார்த்து நெஞ்சில் என் ஆன்ம கத்தி சொருகுகிறேன்...

நான் தனி அல்ல கூட்டு நிகழ்வின் ஒரு பகுதி. பிரமாண்டத்தின் ஒரு அணு. என்னிடம் பிரமாண்டத்தின் குணங்களுண்டு....! மெல்லிய தீ நான் .. பற்றிப் பரவுவேன்.. காற்றையே எரிப்பேன்.. கரும் கல்லையும் தகர்ப்பேன்....

தொடர்ச்சியாக எனக்குள் எண்ணங்கள் எழுந்து நானே நானாய் நின்று உறுதி பூண்டு கொண்டிருந்த வேளையில், என்னின் ஒரு பகுதியான பூமியில் மானுடர்கள் எழத் தொடங்கிருந்தனர்...

என்னின் பகுதியான சூரியன் மேலெழும்பி செஞ்சுடராய் என்னைப் பார்த்து சிரித்தான். நானும் பதிலுக்கு சிரித்து வைத்தேன்.....

பளீச் சென்று விடிய..... தொடங்கியது எனது ஆன்ம யுத்தம்!


தேவா. S


Wednesday, June 1, 2011

முடிவில்லா பயணங்கள்...!துரத்தும் நிஜங்களை
ஓடி ஜெயிக்கும் கனவுகளின்
நினைவுகளில் இறுகிக் கிடக்கும்
இமைகள் பிரிய மறுக்கின்றன!

அறிமுகமில்லா யார் யாரோ
என்னை கடந்து செல்லும்
என் மரண ஊர்வலத்தில்
தொடர்ச்சியாய் வரும் பால்ய
நினைவுகளை நகர்த்த முடியாமல்
காற்றில் அலைகிறது சூட்சும மனம்!

இரவையும் பகலையும் கடந்த
ஒரு வெளியில் கலைந்து திரிகையில்
கடக்க முடியாத காம நினைவுகள்
இடைவெளியற்று நிரம்பிக் கிடக்க
இரணமாய் பரவும் வலிகளை
உறிஞ்சிப் போட வழிகளற்று
அடர்ந்த இருளில் நகர்கிறது என் ஆன்மா!

சுற்றும் பூமியின் சுழலுக்குள்
சிக்கிக் கொண்ட ஏதோ ஒன்று
தொடர்புகள் அறுக்க வலிவுகள் அற்று
கவ்விக் கிடக்கும் கட்டற்ற வெளியில்
எங்கோ நடக்கும் கலவியில்
ஏதேனும் ஒரு பிண்டத்துக்குள்
அடைப் பட்டுப் போவேனென்று
சொல்லாமல் சொல்லிற்று
என்னைச் சுற்றிக் கெட்டிப் பட்டுக்
கிடந்த நிசப்தம்!

மீண்டும் ஏதேதோ வாசனைகள்
முடிவற்ற விருப்பங்கள்
தீண்டியும் தீண்டாமலும் செய்த
தீங்குகளின் அடுக்குகள்
எல்லாம் சேர்ந்து மெல்ல
எங்கோ நகர்த்த
முடிவற்று தொடரும் பயணத்தின்
முடிவுகளாய் எதைக் கொள்ள?
எதை வெல்ல?


தேவா. S