Pages

Sunday, February 28, 2016

பனை மரக் காடே.... பறவைகள் கூடே..!


ஊருக்கு நடுவேயிருந்த  பெருந்திண்ணைகளை காட்டி கேட்டான் பேரன் இது என்னப்பத்தா..? இதான் மொளக்கூட்டுத் திண்ணைப்பே...மாரியாத்தாளுக்கு பொங்க வச்சு இங்கனதேன் மொளப்பாரி எடுப்போம் என்றாள் அவள்... யாருமற்ற திண்ணையை வெறித்தபடி கடந்தான் சிறுவன். ஒரு  வீட்டுத் திண்ணையில் சுருங்கிப் படுத்திருந்த  மீசைக்கார தாத்தாவைக் காட்டி இது யாருப்பத்தா இம்புட்டு பெரிய மீசை...? அவருதேன் நம்மூரு நாட்டமைப்பே...நாட்டாமைன்னா  என்னப்பத்தா...?

நம்மூருல எதுவும் பெரச்சினையின்னா முன்னாடி எல்லாம் அவருகிட்டதேன் போய்ச்சொல்லுவோம், நீ பாத்தியே மொளக்கூட்டுத் திண்ணை அங்கதேன் வச்சு நாயம் சொல்லுவாக...?

முன்னால் நடந்து கொண்டிருந்தாள் கிழவி...

உச்சி வெயில் மண்டையைப் பிளந்து கொண்டிருந்தது. வெறிச்சோடிக் கிடந்தது தெரு. தெரு முழுதும் செம்மண் புழுதி. செருப்புல்லாம நடக்கிறியே அப்பத்தா கால் சுடலையா உனக்கு....? பழகிப்போச்சப்பே...வெரசா வா என்று கையைப் பிடித்து அழைத்து நடந்தாள் அப்பத்தா.

ஏம்பத்தா இதென்னப்பத்தா இம்புட்டு மேடா இருந்துச்சு இது மேல ஏத்திக் கொண்டு வந்து  என்ன நிப்பாடி வச்சிருக்க ஒரே குப்பையா முள்ளுச் செடியா மண்டிக்கிடக்கு உள்ள இது என்னப்பத்தா...?

கண்டாங்கி சீலைக்குள்ளிருந்து அதிரசத்தைக் எடுத்து கொடுத்தபடியே அப்பத்தா சொன்னாள்...

இதாப்பு நம்மூரு கம்மா...மல பேஞ்சு முன்னாடி தண்ணி நிறைஞ்சு தெப்பமா கிடக்கும் இதுலதேன் எல்லா பொழப்பு தலைப்பும் நமக்கு...

மருதையில் ஆப்பரசேன் பண்னி போட்ட தடித்த கண்ணாடியை கழட்டி துடைத்து விட்டு மறுபடி போட்டுக் கொண்டாள் அப்பத்தா, கண்ணாடியை கழட்டிய போது வேறு யாரோ மாதிரி இருந்தாள், கண்கள் சுருங்கி மூக்கின் மேல் அழுத்தமாய் கண்ணாடியின் தடத்தோடு...

கம்மாக் கரையிலிருந்து இறங்கி நடந்தார்கள் அவர்கள்...

என்னப்பத்தா கருப்பு கருப்பா குட்டி குட்டி மரமா இருக்கே என்னப்பத்தா இதெல்லாம்..?

அங்க எல்லாம் பனைமரங்க இருந்துச்சப்பு முன்னாடி .... இந்தா நீ பாக்குறாயில்ல இந்த இடம் பூர பனை மரந்தேன்...இருந்துச்சு முன்னாடி. இப்ப.... வீடு கட்றதுக்கு பனங்கை வேணும்னு ஆளாளுகுக் வெட்டி வித்துப்புட்டாய்ங்கப்பா...

ஒரே கல்லா நட்டு வச்சி இருக்காங்க...இதென்னப்பத்தா..? தரிசு காட்டை காட்டி  அடுத்த கேள்வியைக் கேட்டான் பேரன்...

இதான்ப்பு வயலு, அந்த கம்மாத் தண்ணிய பாச்சி இதுலதேன் விவசாயம் செய்வாக மொதவெல்லாம்..? அதுல ப்ளாட்டுக் கல்லு நட்டு வச்சிருக்ககப்பே..

ஓ.. ப்ளாட் கல்லா....சரிப்பத்தா என்றபடி மெளனமாய் கொஞ்ச நேரம் நடந்த பேரன் சடாரென்று கேட்டான் ....வெவசாயம்னா என்னப்பத்தா? 

சோறு சாப்டுறீல்ல.. நீய்யி...?

இல்லப்பத்தா நான் பிட்சா, பர்கர், நூடுல்ஸ், கேஎஃப்சி,  கெலாக்ஸ், ஓட்ஸ், பாஸ்தா தான் எப்பவும் சாப்டுவேன்.. எப்பவாச்சும் அம்மா சோறு செய்வா....?

ஏப்பு நீ சொன்னதெல்லாம் திங்கிற சாமங்களா? அப்பத்தா  ஆச்சர்யமாய் கேட்டாள்?

ஆமாம்ப்த்தா...

அந்த கட்டக் கடைசியா சோறுன்னு சொன்னீல்ல அதை இங்கதேன் வெளைய வைப்போம்...அப்பத்தா சொன்னாள்...

ஏம்பத்தா அப்போ பர்கர், பிட்சா எல்லாம் எங்கப்பத்தா வெளைய வைப்பாங்க..? 

ஒங்கூர்லயா இருக்கும்....வரண்ட தொண்டையில் சொல்லி விட்டு வெளுத்த வானத்தைப் பார்த்தாள் அப்பத்தா...

அப்பத்தா முன்னால் நடந்து கொண்டிருந்தாள்..

பின்னால் செருப்புச் சத்தத்தோடு பேரன் நடந்து கொண்டிருந்தான். 

ஊரைச் சுத்தி பாத்தியாப்பே...? அப்பத்தா கேட்டாள்.

பாத்த்தேன்னப்பத்தா... ஆனா....ஏம்பத்தா ஊர்ல யாரையும் வெளியிலயே காணாம்...வீடுக மட்டுந்தான் இருக்கு.. ஆளுகளயே காணோம்..? 

எல்லாரும் பொழப்பு தலைப்புக்காக வெளியூரு போய்ட்டாகப்பே...என்ன மாதிரி கிழம் கட்டைக வீட்டுக்கு ஒண்ணு இரண்டு இங்கன இருக்குக...?

ஏன் அப்பத்தா நீங்க எல்லாம் மட்டும் இங்க இருக்கீங்க....?

வீட்டு வாசற்படியில் ஏறிக் கொண்டே ...ஒங்கப்பன் வேலை தேடி மெட்டரசுக்கு போயிட்டு காசு சம்பாரிச்சுட்டு திரும்பி வந்துருவமத்தான்னு...சொல்லிட்டுப் போனானப்பு...

அதேன்...

வீட்டையும் காட்டையும் காப்பத்தி வச்சிருக்க இங்கனதான கிடக்குறமப்பே....


தொண்டை அடைத்து வந்த கண்ணீரை முந்தானையில் துடைத்து விட்டு, மூக்கைச் சிந்திப் போட்டு விட்டு லீவுக்கு வந்த பேரனோடு வீட்டிற்குள் சென்றாள் கிழவி...!
தேவா சுப்பையா...

Saturday, February 27, 2016

பாம்பு வந்திருச்சு....!திடீரென்று ரமாதான் கத்தினாள். ஞாயிற்றுக் கிழமை மதியத்தை ஓய்வாய் ஈசிஸேரில் படுத்து கழித்துக் கொண்டிருந்த பரந்தமான் கையிலிருந்த குமுதத்தைத் தூக்கி எறிந்து விட்டு  பதறி அடித்துக் கொண்டு அடுக்களைக்குள் ஓடினார். வாசலில் பம்பரம் விட்டுக் கொண்டிருந்த பாபு பம்பரத்தை திண்ணையில் வீசி விட்டு வீட்டுக்குள் ஓடினான்.டேய்.. தம்பி உள்ள வராதடா.....அடுக்களைக்குள்ள பாம்பு வந்திருக்குடா என்று மாலு கத்தியபடியே திண்ணைக்கு ஓடி வந்த போது அவள் சப்தத்தைக் கேட்டு அறைவீட்டிற்குள்ளிருந்து லுங்கியை தூக்கிக் கட்டியபடி எங்கடி பாம்பு...? என்று வெளியே வந்த முரளியிடம் கிச்சன்ல அண்ணா என்று பயந்தபடியே சொன்னாள் மாலு...

முரளி கிச்சனுக்குள் சென்ற போது அவளுடைய அம்மா ரமாவும், அப்பா பரந்தமானும் கையில் விறகுக் கட்டைகளோடு நெல் கொட்டி வைத்திருக்கும் பத்தாயத்துக்குப் பின்னால் இருந்த அண்டா குண்டக்களைத் தட்டிக் கொண்டிருந்தார்கள். டேய்... நீ சின்னப் பையன் வெளில போடா பாம்பு உன்னைப் பிடுங்கி கிடுங்கி வைக்கப் போகுது...போய் வாசல்ல தம்பி தங்கச்சிகள பாத்துக்க என்று சொன்ன ரமாவைப் பார்த்து அப்போதுதான் கொஞ்சமமாய் அரும்பிக் கொண்டிருந்த மீசையை தடவியபடியே அம்மா.... காலேஜ் செகண்ட் இயர் படிக்கிற என்னப் பார்த்தா சின்னப்பையனா தெரியுதா....

விடுங்கம்மா நான் பாத்துக்குறேன் சொன்னபடி ஒரு குச்சியை எடுத்துக் கொண்டு வந்த முரளியை ஏற இறங்க பார்த்த பரந்தாமன், டேய் போய் பக்கத்து தெரு சைக்கிள் கடையில தனபால் உட்காந்திருப்பான் அவனைக் கூட்டிட்டு வேகமா ஒடியா என்று சொல்ல, ஏங்க தனபால் என்ன பாம்பு பிடிக்கிறவறா என்ன? அவர் சிகரட்தானே நல்லா பிடிப்பார் என்று பரந்தாமன் வீட்டுக்குத் தெரியாம அடிக்கும் திருட்டு தம்மை சீண்டினாள் ரமா. அப்போதுதான் பரந்தாமனுக்கு உறைத்தது பத்தாயத்துக்குப் பின்னால் இருக்கும் செல்ஃபின் மேல் கட்டையில் இருக்கும் சிகரட்டை ரமா பார்த்தாள் நாய் மாதிரி கத்துவாளே என்று...

எப்படியாவது ரமா கண்ணுக்கு தெரியாமல் எடுத்து மறைக்க வேண்டுமே என்று யோசித்தார், சிகரெட் பாக்கெட் பாம்பை விட பயங்கரமாய் அவரை பயமுறுத்த...

டேய்.. சொல்லிட்டே இருக்கேன் சும்மா நின்னுட்டே இருக்க போய் தனபால கூப்டுட்டு வாடா காசு கொடுத்தாதான் போவியோ என்று முரளியை பரந்தாமன் அதட்ட முறைத்தபடியே வாசலுக்கு வந்த முரளி தன் வீட்டு முன் தெருவே கூடி நின்று வேடிக்கைப் பார்ப்பதை கவனித்த போதுதான் கூட்டத்துக்கு நடுவே எதிர்வீட்டு தேவகி நிற்பதையும் கவனித்தான்...

சுரீரென்று மண்டைக்குள் எதோ உறைக்க உள்ளே மறுபடி ஒடினான். அப்பா அந்த பாம்ப நானே அடிசுடுறேன் பா.. ரொம்ப ஈசி என்று அவனும் பத்தாயத்துக்குப் பின் இருந்த அந்த இடைவெளிக்குள் நுழையப் பார்க்க பரந்தாமன் அவனை முறைத்தார். டேய் போய் தனபால கூட்டிட்டு வாடா படுவா.... பாம்படிக்கிறானம் பாம்பு என்று  அவர் சொல்ல அரைமனதோடு மெல்ல திரும்பி ஓட்டமாய் கடைத்தெருவுக்கு ஓடின முரளிக்கு எதிர் வீட்டு தேவகி கொடுத்த லவ் லெட்டரை பத்திரமாய் பத்தாயத்திற்குப் பின்னால் இருந்த பழைய ஷெல்ஃபிற்குள் ஒளித்து வைத்திருப்பதை பாம்படிக்கிறேன் பேர்வழி என்று அப்பா பார்த்து விடக் கூடாது என்ற பயம் நெஞ்சைப் போட்டு பிசைந்து கொண்டிருந்தது.

மாலுவும், பாபுவும் தெருவில் நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தவர்களிடம் பாம்பைப் பார்க்காமலேயே கதை அளந்து கொண்டிருந்தார்கள். இம்ம்பூட்ட்ட்ட்ட்ட்டு பெருசு தெரியுமா... என்று தன் குட்டைக் கையை நீட்டி கதையளந்து கொண்டிருந்த பாபுவின் காதி மாலு மெல்ல போய் ஏதோ கிசு கிசுக்கவும் அதுவரையில் உற்சாகமாய்  பேசிக் கொண்டிருந்த பாபுவின் முகம் இருண்டு போனது...

ஏண்டி உன் புத்தகப் பைக்கட்டுக்குள்ள தான வைக்கச் சொன்னேன்...ரெண்டு சப்ஜெக்ட்ல நான் ஃபெயிலு வேறடி, அப்பாக்கு தெரியாம அம்மாகிட்ட கையெழுத்து வாங்கி சமாளிச்சிடலாம்னு நினைச்சேனே பன்னி எரும இப்போ சாமன் சட்ட நகட்றேன்னு செல்ஃப்ல  ஒளிச்சு வச்சிருக்க என் ப்ராக்ரஸ் ரிப்போர்டை பாத்து தொலைச்சா  பாம்பை விட்டுட்டு என்னைய போட்டு அடிக்க ஆரம்பிச்சுடுவாரே...

என்று அழுகமாட்டாமல் சொல்லிக் கொண்டிருந்த பாபுவின் சொக்காயை பிடித்து தொங்கியபடி ஏண்டா பாபு....பாம்ப நீ பாத்தியாடா? ரொம்ப நீட்டமாடா? என்ன பாம்புடா அது...பாம்பு மேல படம் இருந்துச்சுனா அடிக்கபுடாதும்பி அது சாமி பாம்பு....நீ ஆடி வெள்ளி படம் பாத்தியான்னா மாரியாத்தாதான் பாம்பு மாதிரி வந்து நம்மல செக் பண்ணுமாம்...

சாமி பாம்ப அடிச்சா அவ்ளோதான் அது கருவம் வச்சு அடுத்த ஜென்மத்துல  கொன்னே போட்டுருமாம்...அப்டி இல்லேன்னா அதோட தொணை பாம்பு நம்மள கருவம் வச்சி கொத்திடுமாம் ஒங்கப்பா அம்மாவுக்கு தெரியாது போல இருக்கு...போய்ச் சொல்லுடா என்று மூக்கை உறிஞ்சிக் கொண்டே இடுப்புக்கு கீழ் இறங்கிய கால்சட்டையை சரி செய்தபடி சொன்ன கோபுவை பார்த்து முறைத்தான் பாபு....

நீ போடா அங்கிட்டு இவரு பெரிய கலிக்ட்டரு வன்ட்டாரு மயிராண்டி என்று கத்தின பாபுவிற்கும் பக்கத்தில் நின்று கொண்டிருந்த அவன் அக்கா மாலுவிற்கும் ப்ராக்ர்ஸ் ரிப்போர்ட் அப்பா பரந்தாமனின் கையில் சிக்கி விடக் கூடாது, பெயிலானததுக்கு பாபுவிற்கும் அதை சொல்லாமல் மறைத்ததற்கு மாலுவிற்கும் செமத்தியாய் பூசை விழும் என்ற பயத்தில் பாம்பு பயம் எல்லாம் பறந்து போயிருந்தது.

அந்த அண்டாவ நவுத்து, இந்த ஸ்டூல புடி, அந்த ஜன்னலைத் திற, டார்ச்சை தூக்கி அடி...என்று விறகு கட்டையை வைத்து தட்டி அடுப்பங்கறையையே அல்லோலகல்லோலப் படுத்திக்கொண்டிருந்த பரந்தாமன் ரமாவைப் பார்த்து ஏண்டி எங்கடி இந்த முரளிப்பய தனாபால கூப்ட இம்புட்டு நேரமா....நையாப் பைசாவுக்கு பிரயோசனம் இல்லடி உன் மகன் உதவாக்கரை என்று கத்தியபடியே சிகரெட் பாக்கெட்டை ரமா பார்த்தால் இன்னைக்கு நைட் ஆரம்பிக்கிற கச்சேர் ஒரு மாசத்துக்கு ஓடுமே என்றும் பயந்து கொண்டும் தானிருந்தார்...

நையாப் பைசாவுக்கு முரளி பிரயோசனம் இல்லை என்று பரந்தாமன் சொல்லி முடித்த உடனேயே பைசா என்ற வார்த்தை பொளேர் என்று ரமாவை அறைந்து அவள் தூக்குவாளிக்குள் பரந்தமானுக்குத் தெரியாமல் சீட்டுப் பிடித்து சேர்த்து வைத்திருந்த 5000 ரூபாயை  ஞாபகப்படுத்தியது. அடா...டா இந்த மனுசன் கண்னுல காசு பட்டுச்சுன்னா....காசு நம்ம கைய விட்டுப் போறதோட இல்லாம, பாழாப் போன மனுசன் சந்தேகப்பட்டே கொன்னுடுவானே இனி சல்லிக் காசு எக்ஸாட்ட்ராவ கையில கொடுக்க மாட்டானே என்று ராமா யோசித்துக் கொண்டிருந்த போதே அலமாரியிலிருந்த தூக்கு வாளியை பரந்தாமன் எடுத்து நகர்த்தப் போக...


ரமா பயத்தில் என்ன செய்வதென்றே தெரியாமல் விக்கித்து நிற்க,  தன் ப்ராக்ரஸ் ரிப்போர்ட்டை அப்பா பார்த்து விடுவாரோ என்று பயந்தபடியே எட்டிப்பார்த்த பாபு சரியாக பரந்தாமன் தூக்கு வாளியை எடுக்கப் போக எங்கே  ப்ராக்ரஸ் ரிப்போர்ட் தொபுக்கடீர்  என்று சரிந்து அப்பா முன்னால் விழுந்து விடுமே என்று பயந்த பாபு....அப்ப்ப்ப்ப்ப்ப்பா.... பாம்பு இங்கருக்க்கு..... என்று வேண்டுமென்றே கத்தி ஒரு மூலையிலிருந்த பொந்தைக் காட்ட....

முரளியும் பரந்தாமனின் நண்பர் கோபாலைக் கூட்டிக் கொண்டு வீட்டுக்குள் வரவும் சரியாய் இருந்தது.

பாபுவின் அலறைக் கேட்ட பரந்தாமன் தூக்கு வாளியை விட்டு விட்டு ஜம்ப் பண்ணி ஓடி அவன் காட்டிய பொந்துக்கு எதிரே ஓடி வந்து நின்று கொண்டார் பரந்தாமன்... ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அப்பாடா சீட்டுப் பணம் தப்பிச்சுது என்று ரமா நிம்மதி பெருமூச்சு விட...

நான் பாத்தேன் பாம்பு... இந்த பொந்துக்குள்ளதான் போச்சு.. என்று பாபு சொல்ல... .சின்னப் பிள்ளை பொய் சொல்ல மாட்டான்யா... வா தேடிப்  பாப்போம் கிடைக்கலேன்னா இந்த பொந்துகுள்ளதான் இருக்கணும், ஏம்மா முதல்ல ஒரு துணி கொடுங்க என்று  தனபால் கேட்க பழைய கைலி ஒன்றை தனபாலிடம் கொடுத்தாள் ரமா. பாபு காடிய பொந்தை முதலில் துணியைச் வைத்து அடைத்தார் கோபால்.

மறுபடி பாம்பு தேடும் படலம்  தொடங்க.. பாபு நிம்மதியோடு வெளியே ஓடினான் விளையாட...!

தனாபாலும், பரந்தாமனும், முரளியும் ஆளுக்கொரு கம்போடு அடுப்படியில் அங்குமிங்கும் சுற்றித் தேடித் தேடி எங்கும் பாம்பு கண்ணில் படவில்லை,  தனபால் காலில் சிக்கிய சிகரெட் பாக்கெட்டை  யாருக்கும் தெரியாமல் பாக்கெட்டில் சொருகிக் கொள்ள, முரளி தேவகி கொடுத்த லவ் லெட்டரை மெல்ல எடுத்து கசக்கி பாக்கெட்டில் வைத்துக் கொண்டான்...

பாம்பு அந்த பொந்துக்குள்ள தான்பா போயிருக்கணும்..வேற எங்க போயி இருக்கும்...நாமதான் இம்புட்டு அலசி பாத்துட்டமே....என்ன பண்ணலம் இப்ப... என்று தனபாலைப் பார்த்தார் பரந்தாமன்...

சரி..சரி கொஞ்சம் சிமிண்ட்டும் மண்ணும் வாங்கிட்டு வாங்க அந்த இடத்தைப் பூசி அடைச்சிருவோம், பாம்பு உள்ளேயே செத்துப் போய்டும் என்று தனாபல் சொன்னதைக் கேட்ட பரந்தாமன்...

முரளியைப் போய் சிமிண்டும் மண்ணும் வாங்கி வரச் சொன்னார். பாபுவும், மாலுவும் மூணாவது வீட்டு வாசலில் ரொம்ப நாளாய் கிடக்கும் வீடு கட்டி மீதமான செங்கற்களை கொஞ்சம் பொறுக்கி வந்து வீட்டில் கொடுத்தனர்.

ஏண்டி பாம்ப நீ பாத்தீல்ல என்ன பாம்பு அது ...நல்ல பாம்பா இருந்தா நாகத்தம்மனுக்கு காசு முடிஞ்சு போட்றணும் பாத்துக்க என்றார் பரந்தாமன்.

ஏங்க என்ன பாம்புன்னு எல்லாம் எனக்கு எப்டிங்க தெரியும்...? ஆனா நல்ல பாம்பு மாறிதான் இருந்துச்சு....எதுக்கும் நான் காசு முடிஞ்சு போட்டுறேன் ஆத்தாதான் தெரியாம நாம செய்ற தப்பை எல்லா மன்னிச்சு காப்பத்தனும் கன்னத்தில் போட்டுக் கொண்டால் ராமா.

முரளி வாங்கி வந்த சிமிண்ட்டையும் மண்ணையும் கலந்து பூசுவதற்கு முன்னால் பொந்திற்குள் செங்கலைப் பொடித்து போட்டு நல்ல இறுக்கமாய் கட்டையை வைத்து குத்தி மேலே சிமிண்ட் போட்டு பூசி முடித்தார் கோபால்.

இனி வெளியே வர முடியாது, பய உள்ள்யே மாட்டிக்கிட்டான் என்று சிரித்தார் தனபால். சரி சரி.. இந்த சாமான் சட்டை எல்லாம் நவுத்தி வை... இந்தா வந்துர்றேன் என்று சட்டையைப் போட்டுக் கொண்டு கோபாலின் தோளில் கை போட்டபடி வெளியே கிளம்பினார் பரந்தாமன். சிகரெட் பாக்கெட் கோபால் பாக்கெட்டில் இருப்பதை ஏற்கெனவே அவர் கவனித்திருந்தார்...

மாலுவும் பாபுவும் தெருவில் ஓடிப்போய் பாம்பு சிறைப்பட்ட கதையை சொல்லி அளந்து கொண்டிருக்க முரளி ஜன்னல் வழியே வாசலில் நின்றிருந்த எதிர் வீட்டு தேவகியோடு கண்களால் பேச ஆரம்பித்திருந்தான்.

ரமா சாமான்களை ஒதுங்க வைத்து விட்டு ....பளீச் சென்று கொல்லைக் கதவை திறந்து வைத்து விட்டு கொல்லைக்குள் சென்று பொழுதாயிப் போடுச்சு....பாம்பு வந்தா என்ன பரதேசி வந்தா என்ன என் வேலையையும் நாந்தான் பாக்கணும்... என்று அலுத்து கொண்டே...பாத்திரம் தேய்க்க ஆரம்பித்த போது....

யாருமில்லாத அந்த அடுப்பங்கறையின் பத்தாயத்திற்கு பின்னால் குப்புறக் கவிழ்த்து வைக்கப்பட்டிருந்த சர்வப் பானைக்கு பின்னாலிருந்து எட்டிப் பார்த்தது....

அந்தப் பாம்பு...

நாக்கை நீட்டி ...நீட்டி பயந்தபடியே பேந்த பேந்த முழித்தபடி....திறந்திருந்த கொல்லைக் கதவு வழியே தப தபவென்று....வெளியே கொல்லைக்குள் ஓடியே போனது அது...!

தேவா சுப்பையா...

Wednesday, February 24, 2016

கிணற்றடி...!


வீடு கட்டுவதற்கு முன்பு வெட்டிய கிணறு அது என்று பாட்டி சொன்னாள். தாத்தா அப்போது ரங்கூனில் இருந்தாராம். குடிசை வீடாய் இருந்த போது தரைக் கிணறாய் இருந்ததை மாற்றி சுற்றுச் சுவரெழுப்பி கயிறு போட்டு கையால்தான் தண்ணீர் இழுத்திருக்கிறாள் பாட்டி. ரங்கூனிலிருந்து வந்த தாத்தா பக்கத்தூர் செவ்வாய்க்கிழமை சந்தையில் உசைன் பாய் கடையில் வாங்கி வந்து மாட்டி இருக்கிறார் அந்த சகடையை. சாரக்கயிறை போட்டு தாத்தா தண்ணீர் இறைக்கும் லாவகமே தனியாம், வீடு கழுவ, பாத்திரங்கள் கழுவ, எப்போதும் வீட்டுப் பெண்களும் அவ்வப்போது ஆண்களும் கிணற்றடியில் குளிப்பார்களாம்...

பாட்டிக்கு பத்துப் பிள்ளைகள். பத்து பிள்ளைகளின் அத்தனை தேவைகளையும் தீர்த்து வைத்தது அந்தக் கொல்லைப்புறக் கிணறுதான். விடியற்காலையில் ஓட ஆரம்பிக்கும் சகடை பின்னிரவு வரை ஓடித் தீர்த்து விட்டு ஒரு சில மணி நேரம் மட்டுமே கொஞ்சம் ஓய்ந்து கிடக்குமாம். பிரம்ம முகூர்த்தத்தில் மனிதர்கள் விழிக்கும் முன்பு சகடை விழித்துக் கொண்டு காத்திருக்குமாம்...

காலை நாலு மணிக்கு கர்ர்ர்க்ரர்க்க்க்ர்ரகரவென்று அந்த கிராமத்து வீடுகளின் எல்லா வீட்டுக் கிணறுகளிலும் சகடைகள் உருள ஆரம்பித்து விடுமாம்.
நான் வளர்ந்த பின்பு கிணற்றுக்கு மோட்டர் போட்டு வீட்டுக்குள் பைப் இழுத்த போது சகடையை கழட்டி ஒரு மூலையில் என் கடைசி மாமன் வீசிய போது...
அதை ஒரு கைக்குழந்தையைப் போல எடுத்து தன் கண்டாங்கிச் சேலைக்குள் பொத்தி எடுத்துச் சென்றாள் பாட்டி...! கொல்லைக் கடவிலிருந்த பெரும்புளியமரத்தூரினடியில் உட்கார்ந்து சகடையை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த அவளை யாரும் கவனிக்கவில்லை என்னைப் போலவே...

நேற்று பரணைச் சுத்தம் செய்து கொண்டிருந்த போது உருண்டு விழுந்த தரையில் ஓடிய சகடையைப் பார்த்த போதுதான் படக்கென்று நினைப்பு வந்தது....
இப்போதெல்லாம் எங்கே கேட்கிறது சகடைச் சத்தம்...?

மோட்டார் பொருத்திய கிணற்றடி பக்கம் யாருமே செல்வதில்லை இப்போதெல்லாம்....

ஆனால்...

முன்பெல்லாம் வீடு தோறும் கிணறு இருந்தது, ஊர் ஊருக்கு ஒரு பொதுக் கிணறும் இருந்தது... அங்கெல்லாம் இடைவிடாமல் இந்த சகடைச் சப்தத்தோடு சேர்த்து எல்லோருடைய வாழ்க்கைகளும் உருண்டோடிக் கொண்டிருந்தது தானே?
தேவா சுப்பையா...Tuesday, February 23, 2016

ராஜாவாக இருப்பதென்பது...!


ராஜாக்கள் உலகம் கொடுமையானதுதான்...
தீரம் என்ற பெயரில் எல்லாவற்றிற்கும்
முன் செல்ல வேண்டும்...
கோடி பேருக்கு ஒரு நீதி சொல்லி
அது சரிதான் என்று நிறுவ வேண்டும்...
ஒவ்வொரு நிமிடத்திற்குள்ளும் ஒளிந்திருக்கும்
ஆபத்துக்களை கெதக் கெதக் என்று
கடக்க வேண்டும்...
பயப்படாத மனிதன் உண்டா இந்த புவியில்வ்.?
ஆனால்...
ராஜாக்கள் வாழ்க்கையில் பயப்படவே கூடாது...
உடல் முடியாத போதும்
கம்பீரமாய் நடக்கப் பழகவேண்டும்...
குரல் வரவில்லை என்றாலும் கர்ஜிப்பது போல
நினைத்துக் கொண்டு மியாவ் என்றாவது சப்தமெழுப்ப வேண்டும்
ஊரையே நடு நடுங்க வைத்து விட்டு
நம்பிக்கையின் நாயகனென்று முகம் இறுக்கி,
உதடு துடித்து மீசை முறுக்கிவிட்டு...
மொத்தத்தில்...
வலிக்காத மாதிரியே நடிக்க வேண்டும்...
ஆமாம்...
பேரவஸ்தைதான் ஒரு ராஜாவாக இருப்பதென்பது...!
தேவா சுப்பையா...Sunday, February 14, 2016

பேசித் திரியும் மான்கள்...!


அதோ தூரத்தில் தெரியும் அந்த மலைகளுக்கு  அப்பால் மிகப்பெரிய சமவெளியொன்று இருக்கிறதாம். அங்கேதான் மானுட வாழ்வின் பேருண்மைகளைப் பேசித் திரியும் மான்கள் சுற்றித் திரிகின்றனவாம் என்று என் பாட்டி என்னிடம் சொன்ன போது மானுட வாழ்வின் பேருண்மையென்று எதைச் சொல்கிறாய் பாட்டி என்று கேட்ட பொழுது....

குலுங்கிக் குலுங்கி அழத்தொடங்கியிருந்தாள் அவள்.

இறந்து போன தாத்தா புகைப்படத்திலிருந்து என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தார். தாத்தாவின் புகைப்படத்தின் கீழே ஏற்றப்பட்டிருந்த தீபம் காற்றிலாடாமல் நின்று நிதானமாய் எரிந்து கொண்டிருந்தது. பாட்டியின் கன்னம் தொட்டுத்தடவி அவளின் தலை நிமிர்த்தினேன்...

கண்ணீரைத் துடைத்தபடி அவள் மெல்ல பேசத் தொடங்கினாள்.... அந்த சமவெளியில் சுற்றித் திரியும் மான்கள் பேசுவது போலவே கற்பனை செய்து கொண்டேன் நான் அல்லது எனக்கு அப்படி தோன்றியது.  மெல்ல மெல்ல அரிக்கேன் விளக்கின் வெளிச்சத்தை தூண்டி விட்டபடி பேசிக் கொண்டிருந்த பாட்டி எனக்கு தேவதையைப் போல தெரிந்தாள். அவள் பிராயத்தில் நிறைய கவிதைகளை எழுதுவாளாம், கனவுகளிலும் கற்பனைகளிலுமே தன்னை விரும்பித் தொலைப்பாளாம். இதுதான் இன்னதுதானென்று அறுதியிட்டுச் சொல்ல முடியாத இந்த நிதர்சனமற்ற வாழ்க்கையை சட்டை செய்யாமல் தன் போக்கில் வளர்ந்தவளைத்தான் இந்த கிராமத்தில் மின்மினிப் பூச்சியைப் போல கொண்டு வந்து போட்டிருக்கிறது காலம்.

இதுவரையில் வாழ்க்கையில் நடந்து முடிந்தன யாவும் பொய்களே என்று அவள் கூறிக் கொண்டிருந்த போது ஜன்னல் வழியே வீட்டுக்குள் எட்டிப்பார்த்த நிலவினை நான் மெளனமாய் பார்த்துக் கொண்டிருந்தேன்...

சூரியனைப் பார்த்தாயா மாறுவேடமிட்டு இரவிலும் சுற்றித் திரிகிறது என்ற பாட்டியை நான் ஊடுருவிப் பார்த்தேன்....

விளக்கொளியில் பட்டு அவளது மூக்குத்தி ஜொலித்துக் கொண்டிருந்தது....வெளுத்த தலைமுடியும் பளபளக்கும் கண்களையும் கொண்ட அவள் யுகங்களாய் காதலோடு ஜனித்து மரித்து ஜனித்து வந்திருப்பவள் என்று என் மனது சொன்னது....

இதோ ஆயிற்று பத்து வருடங்களுக்கு மேல்....

தாத்தாவுக்கு அருகே பாட்டியும் புகைப்படத்தில் புன்னகைத்துக் கொண்டிருக்கிறாள்....ஆடாமல் அசையாமல் எரிந்து கொண்டிருக்கிறது விளக்கு.....

தூரத்தில் தெரியும் அந்த மலைகளுக்குப் பின்னாலிருக்கும் சமவெளியில் பேருண்மையைப் பேசும் மான்கள் இன்னமும் சுற்றிக் கொண்டுதானிருக்க வேண்டும்....
தேவா சுப்பையா...


Monday, February 8, 2016

இதன் பெயர்தான்(னா) காதல்..?!


பார்த்த மாத்திரத்திலேயே முகத்தில் பேயாய் அறைய வேண்டும் அது. நம்மைப் புரட்டிப்
போட்டு வேறு பேச்சொன்றும் இல்லாமல் மூர்ச்சையாக்கி தர தரவென்று இழுத்துச் செல்ல வேண்டும். அதற்கு மேல் ஒன்றும் இல்லை என்ற பித்தமிகு நிலையில் தன்னிலை மறந்து, புறச்சூழல் மறந்து... இதோ...இவள் தான் என் தேவதை, இவள்தான் என் வாழ்க்கை, இவளின்றி ஏதும் நகராது என் வாழ்வில், இவளே எனது வாழ்வின் ஆரம்பம், இவளே என் வாழ்வின் இறுதி என்று எண்ணி எண்ணி இதயம் துடித்து எகிறி வெளியே விழுந்து விடுமோ என்ற பயத்தில் ஆழமான பெருமூச்சின் உஷ்ணத்தோடு நகர வேண்டும் நாட்கள்...

அது காதல், அந்த காதல் என்ன என்ன செய்யவேண்டுமோ அத்தனை அவஸ்தைகளையும் செய்யும்....

நள்ளிரவில் அது உறக்கம் கலைக்கும், திக்குத் தெரியாத கருவானின் தீராத தூரத்தை பார்த்தபடி தொண்டை அடைக்க, மூச்சு திணறி அது கேவிக் கேவி அழும், படுத்து கண் மூடி அவளைக் கண்ட அந்த கடைசிக் கணத்தை மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீட்டெடுத்து உமிழ் நீரை விழுங்கி ஆசுவாசப்பட்டு கொண்டு சிறகடித்து கனவில் பறக்கும். அப்பப்பப்ப்பா....இவள் இமைகளுக்குள் இருப்பது இரு விழிகளா இல்லை தீக்கங்குகளா என்ற கேள்வியொன்றை கேட்டு கேட்டு அடம் பிடிக்கும் பழக்கப்படாத யானையைப் போல நகராமல் நகர்ந்து கொண்டிருக்கும் அந்த பெரும் இரவை மெல்ல மெல்ல கட்டி இழுக்கும். காதல் பர்ப்பதற்கு என்னவோ கனமில்லாத ஒரு பஞ்சைப் போலதான் அங்குமிங்கும் பறந்து கொண்டிருக்கும்... ஆனால் காதல் கொள்ளும் போதுதான் அது ஒரு கனத்த மிருகம் ஆனால் பார்க்கமட்டுமே மென்மையானது என்ற ரகசியம் விளங்கும்...

அவள் விழிகளால் புன்னகைப்பாள், உதடுகளால் உச்சரித்து உச்சரித்து உயிர் குடிப்பாள், அவ்வப்போது கேசம் ஒழுங்கு செய்கிறேன் பேர்வழி என்று உயிரை பதற வைப்பாள், எங்கோ பார்ப்பது போல எப்போதும் என்னையே பார்த்துக் கொண்டிருப்பாள், தீரத் தீர வேண்டும் என்பதை வேண்டவே வேண்டாமென்று சொல்வாள், வேண்டவே வேண்டாததைக் கொண்டு வந்து கொட்டு என்பாள், பேசாமலேயே இருப்பாள் ஆனால் தினமும் நினைவுகளில் பக்கம் பக்கமாய் பேசுவாள், கேள்விகள் கேட்டு வராத பதில்களுக்காய் வார்த்தைகளை தேடாமல் மெளனத்தால் மூர்ச்சையாக்குவாள்...ப்ரியத்தைச் சொல்லாமல் சொல்லவும், நேசத்தை கோபமாக காட்டவும் செய்வாள்...
அமிலக்கடலுக்குள் பிடித்துத் தள்ளி நெருப்பெரியும் ராத்திரிகளை பரிசளித்து விட்டு அவள் விழித்திருப்பாளா? உறங்கிக் கொண்டிருப்பாளா என்ற தர்க்கத்திற்குள் நாம் தத்தளித்துக் கொண்டிருக்கும் போதே....

அதிகாலையில் ஐ லவ் யூ என்ற மூன்றே வாக்கியத்தில் நம்மை இன்னுமொரு அதிய தினத்திற்குள் தள்ளிவிட்டு... மீண்டும் அவளைக் காணப் போகும் அந்தக் கணத்திற்காய் கடிகார முள்ளோடு சேர்ந்து நொடிக்கு நொடி நகரும் ஒரு பேரவஸ்தையைப் பரிசளிப்பாள்.

காதலொன்றும் ஏதோ வழியில் எதிர்ப்படும் பால்ய சினேகிதனை பார்த்து சிரித்துப் பேசிச் செல்வதைப் போல எளிதானதொன்றுமில்லை, அது சுகமானதுதான் என்றாலும் வலியையும், கண்ணீரையும், ஏமாற்றத்தையும் எதிர்ப்பார்ப்பையும் போட்டுப் பிசைந்து பேரன்புக் கடலுக்குள் தள்ளிவிட்டு இனி இங்கே எதுவுமில்லை இதைத் தவிர என்றும் எண்ண வைப்பது...வாழ்க்கையின் எல்லாப் பொழுதுகளையும், எல்லாப் பருவங்களையும், போதும் போதுமெனுமளவிற்கு வானத்தையும் மேகத்தையும் நிலவினையும், இன்னபிற வாழ்வின் அத்தனை அழகியலையலையும் தன் அடையாளமாக்கிக் கொண்ட காதலென்ற ஒன்றின் ஆதி முத்திரையோடுதான் முடிச்சிட்டுத் தொடங்கியத் இந்த ராட்சச வாழ்வு...

அடிப்பெண்ணே..
சுறாவளியாய் என்னை சுழற்றி 
அடிக்கும் இந்தக் கொடூரக் காதலையா
உன் கருணைமிகு விழிகளிலிருந்து
பிரசவித்து எனக்கு பரிசளித்தாய்...?

இரக்கமில்லாமல் என்னுள் அரற்றிக் கொண்டிருக்கும்
அத்தனை நினைவுகளையும் பெயர்த்தெடுத்து
உன் முன் கவிதையென்று மொழிபெயர்து வைத்து விட்டு
மண்டியிட்டுக் கிடக்கும் இந்த உணர்வுகளை,
விவரிக்க முடியாத என் கனவுகளை....,
நீ பட்டாம் பூச்சியைத் துரத்திப் பிடிக்கும்
சிறுமியைப் போல விரட்டி கொண்டிருக்கிறாய்!

பஞ்சுப் பொதியினில் படுத்துறங்கும் தேவதையாய்
நீ என்னவோ சலனமின்றிதான் இருக்கிறாய் என்றாலும்
கடும் கனவு கண்ட கொடும் ராத்திரியில்
அலறி எழுந்து தாய் தேடும் பிள்ளையைப் போல...
உன்னையே மீண்டும் மீண்டும்
தேடி வரும் என் நினைவுகளை...
என்ன செய்வதென்றறியாமல்தான்...
இதோ இந்த வார்த்தைகளை எல்லாம் 
நான் கடந்து கொண்டிருக்கிறேன்...
விலாசம் தொலைத்த வழிப்போக்கனாய்....
தேவா சுப்பையா...


மழையாலானவள்...!


மழை பெய்து கொண்டிருக்கிறது. மரங்கள் சூழ்ந்த உன் வீட்டு முற்றத்தின் ஓரத்தில் அமர்ந்திருக்கிறாய் நீ. உன் வீட்டு மண் சுவற்றில் ஆங்காங்கே காரை பெயர்ந்திருக்கிறது. இந்த அடைமழைக் காலத்தில் உன் வீட்டுக் கூரைகள் கருணையோடு மழையை உன் வீட்டினுள்ளும் பெய்ய அனுமதிக்கும் என்று முன்பொரு நாள் நீ கூறியிருந்தாய்...ஊறிப் போன மண் சுவற்றையும் நீ சாய்ந்திருக்கும் முற்றத்து ஈர மரத்தூணையும் பார்த்தபடி உன் வீட்டு வாசலில் இருக்கும் ஒரு மரத்தின் பின் நின்று நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்...

ஆள் அரவமற்று இருக்கும் இந்த முற்பகலில் குடை கூட எடுக்கக் மறந்து போய் நான் இங்கு வந்து நிற்பது மழையையும் உன்னையும் பார்க்க மட்டுமே என்பதை யாருக்கும் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்பதை அடித்துப் பெய்து இந்த மழை சொல்லிக் கொண்டிருந்ததை நீ கவனிக்கவே இல்லை..., மழை நனைத்திருந்த அள்ளிச் சொருகிய பாவடையுடன், காற்று கலைத்துக் கொண்டிருந்த உன் கேசத்தை சரிப்படுத்திக் கொள்ளாமல் எங்கோ வெறித்துக் கொண்டிருந்தாய்... நீ...

யாருமற்ற இந்த தனிமையோடு அடர்த்தியான மழையை, அந்தமழையால் நனையும் சுற்றி இருக்கும் தாவரங்களை, மரங்களை, இந்த இரைச்சலை, இந்தக் குளுமையை, மண்ணை கரைத்தபடி சுழித்து நுரைத்து ஓடும் நீரின் சலசலப்பினை, குளிர் தாங்காமல் சிறகு ஒட்டிப் போய் தத்தித் தத்திச் செல்லும் அந்த காகத்தை, ஏதோ ஒரு மரத்திலமர்ந்து இந்த சூழலை இன்னும் அழகாக்க கூவிக் கொண்டிருக்கும் அந்தக் குயிலை....
என்று எதையும் விட்டுவிடாமல் விழி விரித்து நான் பார்த்துக் கொண்டிருந்தேன்.

காதலென்பது யாரோ ஒரு பெண்ணை காதலிப்பது மட்டுமல்ல, அவளின் அழகினை, அவளின் அவலட்சணத்தை, அவளின் சூழலை, அவளின் கோபத்தை, அவளிடம் பிடித்ததை, பிடிக்காததை என்று அந்தப் பெண்ணைச் சுற்றியிருக்கும் யாவற்றையும் உள்வாங்கி நேசிப்பது. பேசினாலும், பேசாவிட்டாலும், கூட இருந்தாலும் இல்லாவிட்டாலும் எப்போதும் மனக்கிளர்ச்சியைக் கொடுப்பவளாய் அவள் இருப்பாளாயின் அவளை விட்டு விடாதே...அவளை தொடர்ந்து கொண்டே இரு. தூர நின்றாவது அவளை விழிகளால் விழுங்கிக் கொண்டே இரு. நல்ல கவிதைகள் எல்லாம் வாசித்து கிரகித்து அந்த உணர்வில் ஊறிப்போய் திளைத்து,எப்படி மயங்கிக் கிடக்க வைக்கிறதோ அப்படித்தான் ஒரு பெண்ணோடான காதலும் இருக்க வேண்டும்.

இன்னும் சொல்லப் போனால் காதலென்ற பேருணர்வுப் பெருவெளிக்குச் செல்ல வேண்டுமானல் பெரும்பாலும் பெண் என்னும் பெருங்கதவைத் தட்ட வேண்டிதானிருக்கிறது....என்பது ஆண்களுக்கான விதி. பெண்களின் காதல் எப்படியிருக்கும் என்று ஆராய ஒன்று எனக்கு பிடிக்கவில்லை அல்லது நேரமில்லை. ஆணாய் இருந்து உலகத்தைப் பார்க்கும் போது பெண்ணை ஆணுக்குரியவளாய் மட்டும் பார்க்கும் போது ஏற்படும் அபத்தங்களுக்குள் நான் எப்போதும் போக விரும்பவதேயில்லை...
நான் ஆணாயிருந்து பெண்ணை ஒரு பெண்ணாகவே பார்க்கிறேன்...அதில் உன்னைப் போன்று என் உணர்வுகளை உரசி தீப்பிடிக்க வைப்பவளை காதலியாகப் பார்க்கிறேன்...

மழை நீரில் கை நனைத்து விளையாடிக் கொண்டிருந்தாய். மழை உன்னை நனைத்தது....நீ என்னை நனைத்தாய்....
காற்று வெகு உக்கிரமாய் அடித்து மேகங்களை கலைக்க முயன்று கொண்டிருந்தது... அங்குமிங்கும் தடுமாறிக் கொண்டிருக்கும் என் மனதை போலவே மேகங்களும் கனத்து கருத்து இங்குமங்கும் அலைமோதிக் கொண்டிருந்தன....

தலையை உதறி மீண்டும் ரிப்பனால் தூக்கிக் கட்டியபடி ...
நீ வாசலுக்கு வந்தாய்...
ஒரு கவிதையில்
இன்னொரு கவிதை
நனையத் தொடங்கி இருக்க...
விழிகள் விரித்து....
அந்தக் காவியக் காட்சியினை
பார்க்கத் தொடங்கி இருந்தேன் நான்....
என்னுள்ளும் அடித்துப் பெய்ய
ஆரம்பித்தது மழை...
உன் வாசத்துடன்....
தேவா சுப்பையா...