Pages

Thursday, April 29, 2010

சில்லுன்னு ஒரு.....காதல்.....!அர்த்தம் இல்லாத கவிதைதான் இது.....காதலுக்கு அர்த்தம் தேடினால்.... நமக்கு சிக்குவது எல்லாம்....குழந்தைத்தனமாகத்தான்....இருக்கும்! அப்படித்தான் இந்த கவிதையும்.....

காதலியை பார்த்து விட்டு....தன் வீடு நோக்கி திரும்பும் ஒரு கிராமத்து இளைஞன்...அவள் காதலிக்கிறாளா இல்லையா என்று கூட இவனுக்குத் தெரியாது....ஆனால் அவளைப் பற்றிய நினைவுகள் அழுந்தப் பதிந்துவிட்டன இவனது மனதில்....அதனால் தான் சில் வண்டு சப்தம் கூட இவனை கேலி செய்வது போல தோன்றுகிறது.....

சாராலாய் அவனைச் சுற்றி ஏற்பட்ட சூழ் நிலையும் அவனது காதலை ஊக்குவிக்கும் வினையூக்கி ஆகிப் போனதுதான் அழகு.....! சூழலுக்குள் நுழைந்து கொள்ளுங்கள்... வசதியாய்....பிறகு படியுங்கள் கவிதையை.....அர்த்தங்கள் பிடிபடலாம்.....அழகாக.....!

அது ஒரு மழை நேரத்து...
மாலை நேரம்-என்
ஒற்றையடிப்பாதை....
நடையோடு துணைக்கு வந்த ...
நிலாவையும்...தாண்டி...
பின் தொடர்ந்தன...உன் நினைவுகள்...

வழி நெடுகிலும்.. நடை பயின்று..
ஒயிலாய்...வந்த...
ஒரு ஊதக் காற்று...
காதோரம் வந்து....
உன் பெயரை...கிசு கிசுத்து விட்டு...
ஓடி மறைந்தது.....!

தூரத்திலிருந்து...
ஒரு நட்சத்திரம்....
உன்னைப் போலவே...
கண்டும் காணாமல்....கண் சிமிட்டி
எந்த நேரமும்....போய்விடுவேன்
என்று பயமுறுத்தியது!

என் சிந்தனைகள்.....
உன்னிடமே சிக்கி இருப்பதால்
பக்கத்தில் நகர்ந்து செல்லும்....
ஆட்டு மந்தை...போல...
வெறுமனே... நானும் நகர்கிறேன்...
மந்தையில் ஒருவனாய்....

சில் வண்டுகள்... எல்லாம்....கூடி
தூறிக் கொண்டிருக்கும்...மழையையும்...
காதல் சாரல் வீசிக் கொண்டிருக்கும்...
என் மனதையும் கிண்டல் செய்து....
தொடங்கி விட்டன ..சப்தத்தை!
எத்தனை முறை....
மாற்றிப் பார்த்தாலும்...
கட்டவிழ்ந்த கன்று போல...
உன்னை நோக்கிப் பாய்கிறது...
என் மனது!

யாரின் சப்தமோ...
நிசப்தத்தை கிழித்து
யாரையோ தேடுகிறது...
காற்றில்!
இருட்டான வானமும்..
என் மனமும்...
போட்டிப் போட்டு....
கனத்து கிடந்தன...
நான் வெறுமனே நடக்கிறேன்...
காதல்...பெய்விக்கிறது....
மழையை எனக்குள்ளேயும்!


தேவா. S

புத்தகம்

ரசனையுடன் நேசிப்பாய்
தொடங்கிய அந்த நாள்...
சரியாக நினைவிலில்லை....
முழுதாய் என்னை...
உள்வாங்கிக் கொண்ட..
அந்த கணத்தில் தான்...
என் உயிர் நகரும்...
ஓசையினை உணர்ந்தேன்!

நான் உன்னை...
வாசிக்க....வாசிக்க...
என் மூளைகளின் செல்களில்..
கிறக்கமாய்... பரவிய...
போதை பரவவிடுகிறது....
ஓராயிரம்...எண்ணங்களை!

உன்னுள் ஊடுருவி...
என் விழிகள் உறவாடிய
பின் தான்...என் இமைகள்...
கவிழ்ந்து.....உறக்கம் சூழ்கிறது...!
அப்போதும் கூட...
என் நெஞ்சினில்..தலை சாய்த்து...
நீ உறங்கும் அழகினை ...
கலைக்க விரும்பாமல்..
அணைத்துக் கொண்டே.....
கடத்தியிருக்கிறேன்..
என் இரவுகளை!

விலையில்லா உனக்கு.....
விலைகொடுத்து
உன்னோடு கூடும்...
கணங்களில் ...எல்லாம்...
நான் கற்றது எல்லாம்
என்னைச் சலனமின்றி
மெளனமாக்கும்
இன்று வரை...புது புது...
வடிவங்கொண்டு...
நித்தம் ...எனை...
வசிகரித்து... நித்தம்
ஒரு பெயரோடு...தொடர்கிறது
நம் உறவாடல்...

- தேவா. S

Wednesday, April 28, 2010

எரிமலைகள் வெடிக்கட்டும் பதிவுத் தொடர் II(நான் இணைத்திருக்கும் இந்த புகைப்படம் பற்றி நான் எதுவும் எழுதவில்லை.....! உங்களின் மனசாட்சிகள் ஒரு கட்டுரை எழுதும் தனித்தனியே...இது பற்றி உங்களுக்குள்)இதுவரை

பாகம் I

இனி....

ரத்தம் கொதிக்கத்தான் செய்கிறது நண்பர்களே.... நம்மை சுற்றி நிகழும் நிகழ்வுகளை நினைத்துப் பார்த்தாலே! ஒவ்வொரு பதிவிட்ட பிறகும்... நான் சர்வ நிச்சயமாய் வாக்குகளின் எண்ணிக்கையினை நோக்குவதில்லை...ஆனால் எத்தனை பின்னூட்டங்கள் இட்டுள்ளார்கள் என்பதுதான் எனது முழு கவனத்திலிருக்கும்..ஏன் தெரியுமா?

கட்டுரையின் போக்கு...சரியா அல்லது தவறா அல்லது கட்டுரையில் இல்லாத வெளிப்படுத்த வேண்டிய கருத்துக்கள் இருக்கின்றனவா என்றுணர சரியான பின்னூட்டங்கள் உதவும்....! ஒரு லட்சம் பேர் என்னுடைய வலைப்பூவினுக்குள் நுழைந்து சென்றிருக்கிறார்கள் என்பதை விட...5 பேர் சிந்திக்க வைக்கும் வகையில் பின்னூட்டமிட்டுள்ளார்கள் என்பது ஆரோக்கியமான விசயம்...! நமது கருத்துக்களை தெளிவாக மக்களின் முன் நமது தமிழ்ச்சமுதாயத்தின் முன் வைக்க வேண்டும்...வலுவான இரண்டு கருத்துக்கள்....ஒரு லட்சம் ஓட்டுக்களுக்கு சமம்....என்பது எனது...பார்வை நோக்கு!


உலகத்தில் எந்த மனிதனுக்கு பட்டாலும் வலி...வலிதான் அப்படி இருக்கையில் ஏன் தமிழனுக்கு ஏற்பட்டதற்கு மட்டும் நீங்கள் ஏன் முக்கித்துவம் கொடுக்கிறீர்கள்? இது சமீபத்தில் ஒரு நண்பர் என்னிடம் கேட்ட கேள்வி....

எங்கே மனிதம் நசுக்கப்படுகிறதோ.. எங்கே உரிமைகள் பறிக்கப்படுகிறதோ அது எல்லாம் வன்மையாக எதிர்க்கப்படவேண்டிய ஒன்று...என்பதை மறுப்பதற்கில்லை....! அக்னி பக்கத்து வீட்டில் எரிந்தால் அதன் வெம்மை நமக்கு கூடுதலாக இருக்கும்...அதுவே பக்கத்து ஊரில் இருந்தால்.... அக்னி அணைக்கப்பட வேண்டும் என்ற நமது கருத்தில் மாறுதல் இல்லாவிட்டாலும் வெம்மை நமக்கு தெரிவதில்லை அல்லது உணர்வதில்லை....அது போலத்தான் ஈழத்தில் நடந்த கொடுமையின் வெம்மை நமக்கு கூடுதல்.....அதுமட்டுமல்ல....


எல்லா படைப்பினங்களையும் நாம் உற்று நோக்கினால் அவற்றில் இனம் என்று ஒன்று இருப்பது எல்லோருக்கும் தெரியும்...மனிதனிலும் இனம் எனப்படுவது யாராலும் மாற்றமுடியாத ஒன்று. ஒரு நாள் அதிகாலையில் எழுந்து... 24 மணி நேரத்துக்குள் எந்த நாட்டின் குடியுரிமையை வேண்டுமானாலும் பெற்றுக் கொண்டு அந்த நாட்டின் குடிமகனாக மாறிக்கொள்ளலாம்....எந்த மதத்தினை வேண்டுமானலும் தழுவி அந்த மதத்தினராக மாறிக் கொள்ளலாம்..., எந்த மொழியை வேண்டுமானாலும் கற்று அந்த மொழியில் புலமை பெற்றுக் கொள்ளலாம்.....ஆனால் நமது இனம் என்ற அடையாளத்தை மாற்ற முடியுமா? யாராய் வேண்டுமானாலும் இருங்கள்....ஆனால் எந்த இனம் என்பதற்கான அடையாளத்தை மாற்ற முடியாததுதானே.....

அது என்ன இனம்? என்றுதானே கேட்கிறீர்கள்....


ஒரே காற்றை சுவாசித்து.....ஒரே வகையான தண்ணீரைக் குடித்து.... ஒரு மண்ணில் விளைந்த பொருட்களை உண்டு அந்த மண்ணிற்கு ஏற்றார் போல வளர்ந்து நிற்கிறதே உயிர் அதை மாற்ற முடியுமா.....? காலம் காலமாக அந்த கலாச்சாரம் தாயின் அண்டத்திலும் தந்தையின் விந்தணுவிலும் கலந்து நமது உயிர்களுக்குள் ஊடுருவி இருக்கிறதே....அதை மாற்ற முடியுமா? புறச்சூழ் நிலையின் காரணமாக நமது மேம்போக்கான வெளிப்பழக்க வழக்கங்களை மாற்றிக் கொள்ளலாம்...ஆனால் நமது ஜீன்களுக்கு உள்ளே உட்கார்ந்திருக்கும் மரபணுக்களை எப்படி மாற்றுவது? குரோமோசோம்களில் குடியிருக்கும்... குணாதிசயங்களை எப்படியப்பா மாற்றுவது.....?

அதிகபட்ச தத்துவ விளக்கங்களை விடுத்து விட்டு....பாருங்கள், என்னைப் போலவே உடுத்தி...என் மொழி பேசி... என்னைப் போலவே வாழும் எம் மக்கள் தாக்கப்படுகிறார்கள்...கொடுமைப்படுத்தப்படுகிறார்கள் என்னும் போது எம்மை மீறி எமக்குள் ஏற்படும் உணர்வினை சரி என்றும் தவறென்றும் சொல்லவதற்கு யாருக்கும் உரிமையில்லை....! அது இயற்கைக்கு எதிரான செயல் அல்லவா? எமது உணர்வுகளை வெளிப்படுத்துவது சரியென்று விளக்க வேண்டிய ஒரு துரதிருஸ்டமான நிலைமை நமக்கு இப்போது....! ஏன் நாங்கள் ஈழத் தமிழர்களுக்கு குரல் கொடுக்கிறோம் என்று விளக்காதீர்கள்....? ஏன் சக தமிழர்களே... திராவிடர்களே... நீங்கள் குரல் கொடுக்க வில்லை என்று உரக்க கேளுங்கள்.....? அவர்களின் குரோமோசோம்களில் கோளாறு இருக்கலாம்....அது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று!


எமது ஈழத்து சகோதரி ஒருத்தி எழுதியிருக்கிறாள்.....

" கொட்டும் மழை நிறுத்திக்
கொப்பளிக்கும் மின்னல் கட்டி
இழுத்து வாருங்கள் அந்த இடியை
"இத்தால் நாம் அறிவிப்பது என்னவென்றால்"
என்று அறையுங்கள் முரசை
கலையட்டும் இவ்வுலகின் தூக்கம் "
( நன்றி: மயோரா மனோகரராசன்)


ஈழ மண்ணில் எம்மக்களின் வேதனையால் வெம்மி....அடி மனத்திலிருந்து எம் மொழி கொளுந்து விட்டு எரிவது தெரியவில்லையா? என் தமிழினமே....?


(எரிமலை இன்னும் வெடிக்கும்)


தேவா. S

Monday, April 26, 2010

எரிமலைகள் வெடிக்கட்டும்.....!
ஈழம் நமது சிந்தனையில் இருந்து நகர்ந்து போய் விட்டதா தமிழினச் சகோதரர்களே....! தனி நாட்டினை பெற்றெடுப்போம் என்ற சிந்தனையை விட....அந்த மண்ணில் தமிழினத்துக்கு நடந்த அநீதி எல்லாம்...உலகக்தமிழர்களின் உள்ளத்தை விட்டு பெயர்ந்து போய் விட்டதா?

தமிழ் நாட்டில் இருக்கும் எம் மக்கள் தினசரி செய்த்தித்தாள் செய்திகளின் பின் செல்லும் ஆட்டு மந்தையாய் மாறி விட்டனரா? எம்மக்களின் இன உணர்வுகளுக்கெல்லாம் அரசியல் சாயங்கள் பூசி ஓட்டுக்காய் கூவி விற்கும் கைப்பாவை ஆகி விட்டனரா? கொதித்தெழுந்திருக்க வேண்டிய ஒரு சமுதாயம்...இன்று எதுவுமே நடவாதது போல...சாமியார்களின் செய்தியிலும்...ஆயிரம் ஊழலோடு நடந்தேறிய விளையாட்டுப் போட்டிகளிலும்... கவனங்கள் திரும்பி விட்ட காரணத்தால்... நடந்து விட்ட அநீதி அழிந்து விடுமா?

எழுத்துலக நண்பர்களும் மற்ற கட்சிசார் ஊடகங்கள் போல வசதியாய் எல்லாவற்றையும் மறந்து விட்டு....ஏதேதோ எழுதிக் கொண்டிருக்கிறார்கள். நமது எழுத்தில் இருந்து வெளிவரும் அக்னி உலகைச் சூழ வேண்டாமா?. நம் தாய் தமிழின் வளத்தில் வார்தைகள் வந்து தெறிக்க வேண்டாமா? ஒவ்வொரு தமிழனும் தன் சக தமிழனுக்கு அநீதிகளை எடுத்துக் கூற வேண்டாமா?

ஒரு இயக்கம் ஒரு தலைவன் இத்தோடு முடிந்துவிடுவதில்லை ஒரு இனத்தின் போராட்டமும் லட்சியமும்....! ஈழத்தை வென்றெடுக்க வேண்டும் என்ற எண்ணம் தவறென்று கூறுபவர்கள் தங்களின் மனசாட்சியிடம் கேட்கட்டும் அதில் என்ன தவறென்று....? நம்மில் சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மனோ நிலையில் இருந்தால் அவர்களுக்கு மனித உரிமைகள் என்றால் என்ன என்று படிக்கச்சொல்வேன் ...ஏன் தெரியுமா? மனித உரிமைகள் என்றால் என்ன என்று தெரிந்தால்தானே... அது மறுக்கப்படும் போது அல்லது கிடைக்காத போது என்ன மாதிரியான மன நிலைக்கு மனிதன் தள்ளப்படுவான் என்று உணர முடியும்.

தமிழ் நாட்டில் கட்சி நடத்தும் தலைவர்களிடமும்..அதை பின்பற்றும் தொண்டனிடமும் கேட்டுப்பாருங்கள்...மனித உரிமைகள் என்றால் என்ன? உங்களின் கட்சியின் கொள்கை என்ன? எந்த சித்தாந்ததையப்பா நீங்கள் பின் பற்றுகிறீர்கள் என்று...சரியாக எத்தனை பேர் பதில் சொல்வார்கள்? இவர்கள் தான் முட்டாள் தனமாக ஏதோ ஒரு கருத்தை ஆதரித்தோ அல்லது மறுத்தோ பேசி வருகிறார்கள்.

ஈழம் பற்றி பேசுபவனெல்லாம் இவர்களுக்கு புலிகள்..அப்படி என்றால் ஒட்டு மொத்த தமிழினமும் புலிகளா? என்ன பைத்தியக்காரத்தனம் இது..உங்களின் பழிவாங்கல்களுக்கு ஏன் எல்லா தமிழர்களையும் ஒரு போராட்ட இயக்கத்துக்குள் அடைத்துப்பார்க்கிறீர்கள்? ஈழம் வேண்டும் என்பது புதிதாய் ஏதோ தேசத்தை உருவாக்க நினைப்பதாய் எனக்குப்படுகிறது...அது தவறு... இழந்த நாட்டை திரும்ப பெற வேண்டும் என்று தேசத்தை இழந்தவன் நினைப்பதில் என்ன தவறு இருக்கமுடியும்?

இனி எந்தத் தமிழனும் கனவோடு இருக்க வேண்டாம் ...கனலோடு இருங்கள்....! நமது இனம் வஞ்சிக்கப்பட்டு இருக்கிறது.... எமது சகோதரிகள் கற்பு சூறை போயிருக்கிறது...எமது இனத்து குழந்தைகள் கருவிலேயே சமாதியாக்கப்படு இருக்கிறார்கள்...வாழ்க்கையை இழந்து இன்று...கப்பல்களில் நடுக்கடலிலும்...இன்ன பிற தேசங்களிலும் கையேந்தி ஆறுதல் தேடி நிற்கிறார்கள்...!

உலகிலுள்ள் இனத்திற்கு எல்லாம் தொன்மையான இனம் இன்று..ஒவ்வொரு நாட்டிலும் துரத்தப் பட்டுக்கொண்டிருக்கிறது.....தாய்த் தமிழன் என்ன செய்கிறான்.....டி.வியில் நித்யானந்தாவின் லீலைகளைப் பார்த்து விட்டு அது பற்றி ஆராய்ச்சி செய்து கொண்ருக்கிறான்....! ஆள்பவர்கள் அடுத்த தேர்தலில் இலவசமாய் எதைக் கொடுத்து மடக்கலாம் என்று ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.....!

கொதிக்கவில்லையா..உங்களின் இரத்தம்......?


(எரிமலை இன்னும் வெடிக்கும்)


தேவா. S


Sunday, April 25, 2010

காதல்....சொல்ல வந்தேன்....!


உன்னைப் பற்றிய... நினைவுகளையும்..
உன் மீதுள்ள...காதலையும்...
எத்தனை முறை எழுத்தாக்கினாலும்...
அவை குறைப்பிறசவ...
குழந்தைகளாய்தான் ஜனிக்கின்றன!

கற்பனைக் கெட்டா...காதலுணர்வினை...
கவிதைக்குள் கொண்டுவர...
பகீரதனாய்...பிராயத்தனம்
செய்கிறேன் தினமும்!

ஒரு ஓவியனாய் மாறி...
ஓராயிரம்...சித்திரங்களில்..
நம் காதலை...கொண்டுவர...
முயன்று..முயன்று...
கைகள் ஊனமானதுதான் மிச்சம்!

இசையாய் உன்னை ....
வெளிப்படுத்த..எண்ணி..
ஓராயிரம் சந்தங்கள் இட்டாலும்
எல்லம் வெறும் சப்தமாய்..
மட்டுமே...வெளிவருகிறது...!

என் மூச்சுக்காற்றை
ராகமாக்கி...காதலை...
வாசிப்பாய்...மாற்ற நினைத்தால்...
காதலை உள்வாங்கிக் கொண்டு
வெறும் காற்றை மட்டுமே...
துப்புகிறது... புல்லாங்குழல்!

எப்படி சொல்வது...
எனக்குள் இருக்கும் ..
நீ சொல்ல நினைக்கும் காதலை...
ஓராயிரம் முறை யோசித்தாலும்...
மூளையிடம் கேட்கும்...
வெறும் யாசிப்பாய்...
நின்று விடுகிறது என் நினைவுகள்!

இந்த கணமின்றி...
எல்லாக் காலங்களிலும்...
நிறைந்திருக்க வேண்டும்..
என் காவிய காதல்...
கவலையாய் சிந்தித்து..சிந்தித்து
வெளிப்படுத்த முடியாமலேயே...
அழிந்து போகுமா என் அற்புதக்காதல்!

நிறைவாய் கொட்டும் ...காட்டறுவி....,
நிறைந்து அடந்த பச்சைப் பசுமையான காடு...
யாருமற்ற வெட்டவெளி...
ஆர்ப்பரிக்கும்..பரந்த கடல்...
நட்சத்திரங்கள் நிறைந்த வானம்...
இவற்றில் எல்லாம் சூட்சுமமாய்..
நிறைத்து வைதிருக்கிறேன்...
எனக்குள் இருக்கும் ..
நீ சொல்ல நினைக்கும் காதலை...
மெளனமாய் நீ…
வாசிக்கும் தருணங்களில்...
உன் நினைவுகளில்...இருப்பேன்...
நித்ய காதலனாய்!

காதலை வார்த்தைகளில் சொல்லிவிட்டால் நாமும் சராசரியில் சிக்கிவிடுவோம் என்ற அச்சத்தில் தனது காதலை சொல்லாமலேயே உள்ளே தேக்கி வைத்திருக்கும் ஒரு வித்தியாசமான காதலனின் மனோ நிலையின் வெளிப்பாடாய் வந்து சேர்ந்த வார்த்தைகள் தான் இந்த கவிதை.

எல்லாவகையிலும் முயன்று...முயன்று அதன் பிரமாண்டாத்தை விளக்கமுடியாமல் தனக்குள்ளேயே மரணித்து விடுமோ இவனின் காதல் என்ற அச்சத்தின் விளைவாக காதலை வெளிப்படுத்தியே ஆகவேண்டும் என்ற தீர்க்கமான முடிவில்...இயற்கை எல்லாம் காதல்தானே என்று உணர்ந்து...தனது காதலியை இயற்கையின் பிரமாண்டகளைப் பார்க்கச் சொல்லுகிறான்...ஒவ்வொரு முறையும் பிரமாண்டமான் இந்த இயற்கையை கண்டு தன் காதலி வியக்கும் தருணங்களில் எல்லாம் இவனின் காதலைக் கொண்டு அவள் பிரமித்ததாகத்தானே ஆகும்....

எப்போதுமே..சொல்லாத காதலில்தான் சுகம் அதிகம்...அதுவும் வார்த்தையில்ல இவனின் வர்ணிப்பினால் காலங்கள் கடந்தும் இவன் காதலின் விளக்கங்கள் நிலைத்து நின்று இவனை நித்ய காதலனாய் ஆக்கும்.....இது தான் அவனின் காதலின்...வெளிப்பாடு...!

ஒரு சென் டைப்பில் முடித்து விட்டேன் கவிதையை....என்று தான் நினைக்கிறேன்...! நிதானமாய்..படித்து முடிக்கும் நேரத்தில் உங்களை ஒரு தியான நிலைக்கு இந்தக் கவிதை அழைத்துச் சென்றால் ஆச்சர்யமில்லை!

தேவா. S

Saturday, April 24, 2010

இன்னுமொரு...தாஜ்மஹால்....!


உன் நினைவுகள்
கொண்டே..இரவுகள்...
உடைக்கப்படுகின்றன...
காமம் இல்லா காதலாக..
ஒவ்வொரு கணமும் நாம் கடக்க...
நட்பின் பரிமாணங்கள்...
சூரியக்கதிர்களாய்...
நம்முள் எட்டிப்பாய்கின்றன...!

அர்த்தம் பொதிந்த...
உன் மெளனங்களொடு.....
நட்பாய். ...கரம் கோர்க்கும்
கணங்களில்....
காமம் அங்கே...
தற்கொலை செய்யும்...!

காதல் காதல்...என்று...
பெண்ணை...
காமத்திற்கு இழுக்கும்...
சமுதாயத்தில்....நட்பு ... நட்பு
என்று சொல்லி
காதலை என்னுள் நிறைப்பாய்!

உன் வார்த்தைகள்...
என்னை வெல்லும்....
கணங்களில் எல்லாம்...
நான் வாழ்க்கையை வென்றிருக்கிறேன்....!
உன் தோள் சாயும் தருணங்கள்....
தாய்மையை எனக்குள்...
ஊற்றி நிறைக்கும்!

ஆணாதிக்க சமுதாயத்தில்...
ஒன்று.. பெண் கூடுவதற்கு....
அல்லது....சுமைகளை...கூட்டுவதற்கு...
இன்று...திருமண பந்தங்கள்...
நம் நட்புக்கு நெருப்பு வைத்தன...
சம்பிரதாய கழுகுகள்...
பார்வைகளால் கொத்தி தின்றன...

மரபு மரபு என்று...
உன் திருமணத்திற்குப் பிறகு...
பிரிவுகளின் பின்னே ..
மெளனமாய்..
ஓடி ஒளிந்தது... நம் நட்பு!
ஆளுமை செய்ய...
அடையாளம் இட்டுக்கொண்ட
உறவுகளுக்கு மத்தியில்...
சர்சையாகிப் போனது...
ஆண் பெண் நட்பு!

நெருப்பாய் என்னை நேசித்த...
நீ..இன்று நெருங்க முடியா தூரத்தில்
திருமணம் நட்புக்கு முற்றுப்புள்ளியா?
நட்பென்றால் என்ன...
வெறும்.... வெற்றுப் புள்ளியா?
கேள்விகளால்...
எரிந்து சாம்பலானது... மூளை...!

நகர்ந்து போன நாட்களில்
கவனமாய் சேர்த்து வைத்த...
நினைவுகளில்...மெளனமாய்..
எழுப்புகிறேன்... நட்புக்கான...
இன்னுமொரு தாஜ்மஹாலை...!


இன்னமும் சர்ச்சைக்குரிய ஒரு விசயமாகத்தான் இருக்கிறது ஆண் பெண் நட்பு. ஆணும் ஆணும் மட்டுமே நட்பு கொள்ள வேண்டும் அல்லது பெண்ணும் பெண்ணும் நட்பு கொண்டிருக்க வேண்டும் என்று நமது மூளை பழக்கப்பட்டு போனதும் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நெறிப்படுத்தி வைத்ததும்...ஆணின் அத்துமீறலாம் ஏற்பட்ட ஒரு பழக்கமாகத்தான் இருக்க வேண்டும். நம்மை சுற்றி இருக்கும் எல்ல விசங்களிலும் பயன்பாட்டின் தன்மையை பொறுத்து அது நன்மை தீமை என்று பிரிக்கிறோம். உதாரணமாக இணையத்தின் பயன்பாடு என்பது...தீங்கு விளைவிக்க நினைப்பவர்களுக்கு எதிர்மறையான பயன் பாடும்....அதை ஆக்கப் பூர்வமாக பயன்படுத்துபவர்களக்கு நேர்மைறையான பயன்பாட்டினையும் கொடுக்கிறது.

பொருளிலோ அல்லது மனிதர்களிலோ இல்லை குறைபாடு அதை எப்படி கையாளுவது அல்லது அல்லது எப்படி எண்ணுவது என்பதை பொறுத்து....விளையும் நன்மையும் தீமையும் வேறுபடுகின்றன. அதே போலத்தான் ..ஆணுக்கு பெண் என்றால் போகம், பெண் என்றால் காமம் என்று காலம் காலமாக போதிக்கப்பட்து அந்த ஒரு மனோபாவம் கொண்ட சமுதாயத்தில்..பெண்ணோடு பழகும் நேரங்களில் எல்லாம் அவனுக்கு காமம் தான் தலை நோக்கி இருக்கும்.

காலம் காலமாக பெண்ணை வீட்டுக்குள் பூட்டிவைத்து அவளுக்கு மூக்கு குத்தி... அடிமைப்படித்திய காலங்கள் போய்விட்டன... என்பதை ஒத்துக் கொள்ளும் ஆண்கள்... பெண்களை மரியாதையாக நடந்த வேண்டும். ஒரு விசயத்தை ஆண் அணுகும் முறையும் பெண் அணுகும் முறையும் வேறு வேறானவை.... அது கடவுளாக இருக்கட்டும் இல்லை கம்பியூட்டராக இருக்கட்டும்.

நல்ல நட்பாய் இருக்கும் ஒரு தோழியின் மூலம் அல்லது ஒரு தோழனுடன் ஆரோக்கியமான கருத்து விவாதங்களும்... வெளிப்பாடுகளும் உள்ளபோது புதிய புதிய கருத்துக்கள் பிறக்கும். ஆண் பெண் நட்பு என்ற போர்வையில் மிலேச்சர்கள் தவறாக நடக்கவும் வாய்ப்பு இருப்பதால் ஆணும் பெணும் தன்னுடைய நட்பை தேர்ந்தெடுப்பதற்கு முன் தெளிவாக இருக்க வேண்டும் அது உணர்ச்சிவயப்பட்ட ஒரு தேர்வாக இல்லாமல்...அறிவுசார்ந்த ஒரு தேர்வாக இருந்தால் இருவருக்குமே நன்மை.

கத்திமேல் நடப்பது போன்றதுதான்.... ஆனால் நடந்தால் அதுவன்றோ !சாதனை.....

" பெண்ணுக்குள் ஞானத்தை வைத்தான்...
புவிப்பேணி வளர்த்திடும் ஈசன்.
மண்ணுக்குள்ளே சில மூடர்...
நல்ல மாதர் அறிவை கெடுத்தார்."


தேவா. S

Thursday, April 22, 2010

வன்முறை...கன்று தடுத்து....
காராம் பசுவிடம்..
பால் கறக்கும் பொழுதுகளில்...
வரவில்லையா....
உங்களுக்கு மிருகாபிமானம்?

***

திறந்த வீட்டினுள்...
நுழையும் எதோ...போல...
செடியின் அனுமதியின்றி....
மலர்கொய்யும் போது...
மனம் சொல்லவில்லையா...
இது அத்துமீறல் என்று?

***

மனம் திறந்து ...
பேசிடும் பேச்சாய்....
வானம் மேகமுடைத்து...
பெய்யும் மழை மறுத்து..
கதவடைக்கும் கணங்களில்...
தோன்றவில்லையா...
உங்களின் சுய நலம்!

***
ஒவ்வொரு முறை....
மரம் களையும் போதும்...
புரிந்ததில்லையா.....
உங்களுக்கு....பூமித்தாயின்
கையிலிருக்கு குழந்தையைத்தான்...
கொல்கிறீர்களென்று!

***

நீங்கள் ...
பெளர்ணமியாய்...
ரசிக்காத காரணத்தால்....
தினம் தேய்ந்து..
அமாவாசையாய்..
கோபம் காட்டும்... நிலாவை
புரிந்து இருக்கீறீர்களா
இதுவரையில்....!

***

குருடர்களாய்...
கவனிப்பதில்லை...
நம் அன்றாட அத்துமீறல்களை...
என்றுதான் நிறுத்தப்போகிறோம்...
வசதியாய் நாம் மறந்திருக்கும்..
இந்த வன்முறைகளை......!


பொதுப்புத்தி என்ன கற்பித்திருக்கிறது...வன்முறை என்றால் வெடிகுண்டு வைப்பதும்...உயிர்ச்சேதம் விளைவிப்பதும்...பொதுச்சொத்துகளுக்கு சேதம் விளைவிப்பதுதான் வன்முறை என்பது...இவை எல்லாம் நாம் உணர்ந்த வன்முறைகள் அறிந்த வன்முறைகள். அறியாமல் இவை எல்லாம் வன்முறை அல்ல என்று நாம் உணராமல் செய்யும் ஏராளமான செயல்களில் வன்முறை இருப்பதை மிகைப்பட்ட மனிதர்கள் உணருவதில்லை.

கொஞ்சம் பைத்தியகாரத்தனமாய்த்தான் சராசரி ஓட்டத்தில் இருக்கும் மனிதர்களுக்கு இந்த கவிதையும், விளக்கங்களும் இருக்கும்...ஏளனம் செய்ய... நிறைய காரணஙக்ள் கூட இருக்கலாம்..... நான் உங்களிடம் வேண்டுவது எல்லாம்....கண்களால் இந்த பதிவை படிக்காமல் மனதால் படித்துப்பாருங்கள்... ஒரு வேளை... நான் சொல்ல வரும் உண்மையை நீங்கள் உணரலாம்!


தேவா. S

Wednesday, April 21, 2010

நாங்கள் இந்தியர்கள்! நீங்கள்....டோன்டு ....?

அன்புள்ள டோன்டு சார்.....!

எதுவுமே எழுதாம அப்படியே விட்டு விடலாம் என்று இன்று மதியம் வரை நினைத்தேன்...இருந்தாலும் சக பதிவர் என்ற வரைக்கு ஒரு சிறிய கடிதமாவது எழுதாவிட்டால் எனக்குள் இருக்கும் எனது விழிப்புணர்வு நிலை என்னை சும்மா விடாது.....!

பார்வதி அம்மாளை திருப்பி அனுப்பியதற்காக... அரசாங்கத்தின் மீதுதான் நமது கோபம் திரும்ப வேண்டும் அறிவு கெட்ட அரசாங்கம் அந்த மூதாட்டியை உள்ளே விடாததற்கு அதற்கு ஓராயிரம் சுய நல கேவலமான ஏகாத்திபத்திய காரணங்கள் இருந்தது....அது அதிகாரத்தில் இருப்பவர்களை மக்கள் தோலை உரித்து அரியாசனத்தில் இருந்து இறக்கும் வரை அவர்களின் ஏகாத்திபத்திய செயல்பாடுகள் மாறாது. இது ஒரு சமுதாய கோபாமாக மாறி....அரசாங்கக்துக்கு சூடு கொடுக்கும் வையில் இருக்க வேண்டும்...

சாதாரணமாய் வாழும் மனிதன் தனது கோபத்தை டீக்கடை வாசலிலோ அல்லது....அலுவலக கேண்டினிலோ....அல்லது ஒரு பேருந்து நிறுத்தத்தில் விவாதித்தோ தனது கோபத்தைப் போக்கிக் கொள்வான்...ஆனால் உங்களைப் போன்றவர்கள் எழுதும் ஆற்றல் கொண்ட மனிதர்கள் ...ஒரு முற்போக்கான விரிந்த பார்வை உங்களுக்கு இருக்க வேண்டாமா? இல்லை என்றால் வன்முறையாளன் கையில் கொடுக்கப்பட்ட சுதந்திரமாய் அது ஆகி விடாதா?

படைக்கும் திறன் கொண்ட ஒரு படைப்பாளி.....தப்பும் தவறுமாக தனது....சிந்தனைகளை ஓடவிட்டு...அதனை தன் எழுத்தாற்றல் மூலம் வாசகனுக்கு சமைக்கும் போது வலுவற்ற எண்ணங்களும்...சமகால நிகழ்வுகளின் விரிவாக்கமும் இல்லாத மனிதர்களின் மனதில் நஞ்சை விதைப்பது போல ஆகாதா? உங்கள் கையில் கிடைத்திருப்பது பலதரப்பட்ட மக்கள் படிக்கும் ஊடகம்...அதில் ஒரு கண்ணியம் இருக்க வேண்டாமா....! எழுதுவதில் ஒரு தனி ஒழுக்கம் இருக்கவேண்டாமா?

எழுத்தாளன் என்பவன் சமூக பொறுப்புகள் நிறைந்தவன்....சராசரி மனிதர்களுக்கும் உருவாக்கும் படைப்பாளிகளுக்கும் வித்தியாசங்கள் இருக்கிறது. எனக்கு தனிப்பட்ட முறையில் பிடித்த அல்லது பிடிக்காத விசங்களை நான் பொதுப்படுத்தக்கூடாது....அப்படி செய்தால் அதற்கு பெயர் பதிவு அல்ல...அது உங்களின் பெர்சனல் டைரி...! நமது விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு... சமச்சீரான பார்வைக்கு ....உட்பட்டு நாம் செய்திகளை நோக்கவேண்டும்....! உங்களுக்கு கண்டனங்களைத் தெரிவித்த அதே கதிர் சார்...உங்களின் சாதிப் பெயர் சொல்லி விமர்சித்தவர்களை கடுமையாக கண்டித்தார்.....இதில்தானே ஒரு சுய ஒழுக்கமும் நேர்மையும் இருக்கிறது!

சமுதாயத்தில் அக்கறை உள்ள உண்மையான மனிதன் இப்படி எழுதி விட்டு...மிகைப்பட்ட மனிதர்களிடம் இருந்து எதிரிடையான விளக்கங்களும்...கண்டங்களும் வரும் மாத்திரத்தில் உணர வேண்டாமா.....? தான் எழுதியது...தவறு என்று?...அதை மனதோடு வைத்திருந்தால்.அப்போது அது உங்களின் சொந்த கருத்து...!

உங்களின் எண்ணங்களை பதிவாக்கிவிட்டு... நான் அப்படித்தான் நினைக்கிறேன்!...அனுமாக்கிறேன்.....என்று....வாசிப்பவர்களை...அனுமானத்தின் நேசர்களாக....கற்பனையில் ஏதேதோ எண்ணச் சொல்லி....ஒரு தீவிரவாதத்தை உங்களின் எழுத்துக்குள் கொண்டு வராதீர்கள்...!

பார்வதி அம்மாளை உள்ளே வரவிடாமல் அனுப்பியது சரி என்று நீங்கள் சொல்வதனால்.... என்னவோ... நீங்கள்தான் ஏதோ இந்திய தேசத்தின் பக்தர் போலவும்...நாங்கள் ...தேசத்துக்கு எதிரானவர்கள் என்றும் உங்களுக்குள்...மாயையினை ஏற்படுத்திக்கொள்ளாதீர்கள். தேசப்பற்றோடு கூடியதுதான் மனிதாபிமானமும்....இந்திய தேசத்தை உங்களை விட அதிகம் நேசிக்கிறோம்...அந்த நேசிப்பு கூடிப்போனாதால்தான் எங்களிடம் மனிதாபிமானம் கூடிபோய் இருக்கிறது. மனிதாபிமானம் உள்ளவன் தான் ஒரு உண்மையான இந்தியனாக இருக்க முடியும்......

எங்களுக்கு மனிதாபிமானம் இருக்கிறது...... நாங்கள் இந்தியர்கள்.......! நீங்கள்....டோன்டூ ....சார்?


தேவா. S

சமத்துவ கனவு!

தொலைந்து போன நாட்களை...
நினைத்துதான் சந்தோசப்படுகிறோம்....
மரணித்த மனிதர்களிடம் மட்டுமே ...
வருகிறது மனிதாபிமானம்...
இன்னும் ஒரு நாள் விடியட்டும்...
அதுவும் வெறுமையாய் அடங்கட்டும்....

மதங்களின் போர்வை...
சுற்றிய மனிதர்கள்....!
சுய நலத்தை போர்வையாக்கிய
அரசியல்வாதிகள்...
காசுக்காக ஓட்டுப்போட ஒரு கூட்டம்...
கெளவரவத்திற்கா ஓட்டுபோடத...
ஒரு படித்த கூட்டம்...
புறக்கணிப்பதாய் சொல்லி...
ஒதுங்கும் ஒரு கூட்டம்....
இப்படித்தான் நடக்கிறது நம் நாட்டுத் தேர்தல்

கடைசி வீட்டுத் தாத்தாவின்
துருப்பிடித்த சைக்கிள்...
அடுத்த மழைக்குள்ளாவது
கூரை மாற்ற வேண்டும் என்ற ஆசை....
இரண்டுமே...
இந்திய வல்லரசு கனவு போல...!

உச்சிவெயில்...குண்டும் குழியுமான
என் கிராமத்து தார்ச் சாலை
மந்திரி வருக்கைக்காக
ஏழை வீட்டு மணபெண்ணாய்...
அலங்கரித்துக் கொள்கிறது....!
தெருவோர டீக்கடையில்...
ஒரு குவளை டீ குடித்து
உலக அரசியல் பேசும் ஊர்ப்பெருசுகள்...!

பழைய துணிபோட்டு...
பக்கெட் வாங்கும் அம்மணிகள்...
அம்மணமான குழந்தைகள்
துணி இல்லாமல்...
குடிசைகளின் ஓரங்களில்!
சீமான்களின் மீதமான உணவுகள்...
குப்பைத்தொட்டிக்கு போகாமல்...
என்று தான் நேராய்...
ஏழைகளின் வயிற்றுக்குப் போகுமோ...?
ஆடம்பராமாய் ஒரு கூட்டமும்...
அடுத்தவேளை...
சோறில்லாமல் ஒரு கூட்டமும்...!
இப்படித்தான் சமத்துவம்...
சமாதியாயிருக்கிறது!

எல்லா முரண்பாடுகளுடன்...
என் மூளை மட்டும்
ஏன்..ஒத்துப்போக மறுக்கிறது....
புரட்சியாய் என்னுள்...
உதிக்கும் எண்ணங்கள் எல்லஅம்....
பூமியை அடைவதற்கு முன்
அணையும் விண்வெளி கற்கள் போல...
செயலாவதற்கு முன் அழிந்து போகிறது...!

கற்ற கல்வியும்...
படித்த புத்தங்கங்களும்...
மக்களை விழிப்புணர்வு செய்ய...
முயன்று முயன்று...கடைசியில்...
முனை மழுங்கிய கத்தியாய்....!
மனிதர்கள் தங்களின்...
கோபங்களிலாலேயே... கொல்கிறார்கள்...
மனித நேயத்தை....!
நல்ல வீணைகள் எல்லாம்...
இன்று புழுதியில்தான் கிடக்கின்றன...
சுடர்மிகு அறிவுகள் எல்லாம்
இன்று முட்டாள்களின்...
கூட்டத்தின் நடுவே...ஊமைகளாய்....!சுற்றி நடக்கும் எல்லா விசயங்களையும் கண்டு வெம்பி எதேதோ செய்ய முயற்சித்து...பணமும் அதிகார பலமும் கொண்டவர்கள் மத்தியில் ஞானக் கேள்விகளோடு இருக்கும் ஒரு இளைஞனின் விரக்கிதியின் வெளிப்பாடு தான் கவிதை....!

பணம் உள்ளவர்களுக்கு அந்த பணமே...மேலும் மேலும் பணத்தை சம்பாரித்துக் கொடுப்பதால் ஏழைகளின் முன்னேற்றம் என்பது மிகக்கடினமாகவே இருக்கிறது. வெறும் காலோடு ஓடுபவனுக்கும் ஷு அணிந்து ஓடுபவர்களுகும் வித்தியாசம் இருக்கிறது. நாம் வேண்டுமானால் திரு.அப்துல்கலாமை ஒரு உதாரணத்துக்கு எடுத்துக் கொண்டு அவர் மேலே வரவில்லையா என்று இன்றைய கிராமப்புற பள்ளியில் பயிலும் மாணவர்களை கேட்கலாம்....ஆனால் இத்தனை காலங்களில் ஒரு அப்துல் கலாமைத்தான் நாம் உதாரணம் காட்ட முடியும்....அவரும் மேல் தளத்திற்கு வர என்ன பாடுப்பட்டார் என்பதை அவரது அக்னி சிறகுகள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

ஏற்றத் தாழ்வு இல்லாத ஒரு சமுதாயம் மலர...இலவசமாய் பொருட்கள் வழங்கி மக்களை...சோம்பேறிகள் ஆக்காமல்... ஆக்கப்பூர்வமான தொழில் செய்யும் வாய்ப்புகள், மற்றும் புதிய வேலை வாய்ப்புகளை வழங்கலாம்...! உழைத்து சம்பாதிக்கும் ஒருவன் அவன் சொந்தக் காசில் டி.வி. வாங்க மாட்டானா? அரசு தயவு செய்து ஆடம்பரப் பொருட்களை இலவசமாக வழங்குவதை நிறுத்தி அடிப்படை வசதி இல்லாதவர்களுக்கு, வாழ்வாதாரங்களைத் தொலைத்தவர்களுக்கு கடுமையான பரிசீலனக்குப் பின் இலவசமான உதவிகள் செய்யலாம்.

என்று எம்மக்கள் ஓட்டுகளுக்கு காசு வாங்காமல்......வாக்குச்சாவடிக்கு செல்கிறார்களோ அன்றுதான் ஒரு உண்மையான மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு உருவாகும்....!


தேவா . S

Tuesday, April 20, 2010

வார்த்தைகளற்ற...வார்த்தைகள்....!
அலுத்துதான்.. போகிறது...
வார்த்தைகளின்இரைச்சலை
நித்தம்...கேட்டு கேட்டு...
சப்தங்கள் இல்லா...
என் தனியுலகத்திற்குள்...
ஏன் அத்து மீறி.. நுழைகின்றன...?
தத்துவங்களும்..விளக்கங்களும்...

எத்தனை முறை உச்சரித்தாலும்
தவறாய்...கற்பிதங்கள் கொடுக்கும்...
வெற்று வார்த்தைகளை..
வைத்துக் கொண்டு...
நான் என்னதான் செய்வது?

இயற்கை எப்போதும்...
மெளனமாய் போதிக்கிறது...
ஒராயிரம்...விசயங்களை....!
விவரிக்கும் ஆசையில்...
நான் மட்டும்...
ஏன் சிக்கவேண்டும்...
சப்தங்களின்... நெரிசலுக்குள்!

எல்லா ஓசையும் நிறுத்தி விட்டு...
சப்தங்களை உள் நோக்கி..
திருப்பும் கணங்களில் மட்டும்...
கிடைக்கிறது...வெளியே
தொலைந்து போன... நிம்மதி!

சூட்சுமத்தை எழுத்தாய்...மற்றி...
உங்களின் கண்களுக்கு...
விருந்தாக்கிய பின்....
சூட்சுமத்தின் சாரமெல்லாம்....
கற்பூரமாய்....கரைந்து போய்...,
வெற்றுத்தாளிலிருந்து...
ஏதேதோ...எண்ணங்களை...
மாற்றிப் பூக்க வைக்கிறது....
வாசிப்பாளனின் மனதில்.....!

எப்படி பார்த்தாலும் எழுத்தாக்கும் முயற்சியும்...சொல்லிப் புரிய வைக்கும் முயற்சியும் பயனற்றது. ஓரயிரம் முறை முயன்று...ஒரு கருத்தை புரியவைக்க நினைத்தாலும் அது அவ்வளவு எளிதாய் நடந்து விடுவது இல்லை அப்படியே அது நிகழ்ந்தாலும் அது புரிந்து கொள்பவரின் பக்குவ நிலைக்கு ஏற்ப வேறு ஒரு தளத்தில் தான் விளங்கிக் கொள்ளப்படுதிறது.

சென் கதையில் சொல்வது போல ஒரு அழகான ரோஜா மலரை நான் பார்க்கிறேன்...அதை உங்களிடம் சொல்லி விளக்க்க முற்படும் போது உங்களின் கற்பனையில் ஒரு ரோஜா மலர் மலர்ந்து விடுகிறது. நீங்கள் கற்பிதம் கொண்ட ரோஜா மலருக்கும் நான் பார்த்த ரோஜ மலருக்கும் கண்டிப்பாய் எந்த ஒற்றுமையும் இல்லை..... என் உணர்தலை உங்களிடம் விளக்குவது சாத்தியமில்லை...அல்லது நீங்கள் போய் அந்த ரோஜாவை பார்த்து உணர்தால் சரியான விடயமாக இருக்கும். நீங்கல் நேரே பார்க்கும் போது உங்களின் உணர்வுகளுக்கு ஏற்ப அது உங்களை வசிகரீக்கமலும் போகலாம்...

இதுதானே...உண்மை ...விளக்கி ஒருத்தர் புரிந்து கொண்டார் என்றால்...அது ஒன்று நடிப்பு.....அல்லது அவர் விளங்கிக்கொண்டது வேறு ஏதோ.....சரி....சரி..... நான் மேலும் மேலும் ஏதேதொ எழுதி...உங்களை குழப்ப விரும்பவில்லை..உங்களின் அறிவின் நிலைக்கேற்ப விளங்கிகொள்ளுங்கள்...இந்த பதிவில் எந்த வலியுறுத்தலும் இல்லை.....! ஒரு மெல்லிய காற்று வீசியது...போல அவ்வளவே....!


தேவா. S

Monday, April 19, 2010

வாழ்க்கை வாழ்வதற்கே......!

எல்லோருக்குமே...டி.வி. மற்றும் பத்திரிக்கைகளில் வரும் விளம்பரங்கள் ரொம்பவே பிடிக்கும், வயது வித்யாசம் இல்லாமல் அனைவருமே இதில் லயித்து விட காரணம் ....சில நிடங்களே வரும் அல்லது ஒரு புகைப்படமாய் இருந்தாலும் அதில் ஒரு மெல்லிய உயிரோட்டம் இருப்பதுதான் உண்மை.

புரூக் பாண்ட்....விளம்பரத்தில்....கடைசிவரை தன் மனைவியை திணறடித்து விட்டு....இறுதியில் ஐ லவ் யூ சொல்வது தான் விளம்பரத்தின் அழகு... ஒரு படைப்பாளியின் மூளை எப்போதுமே..புதிது புதிதாகத்தான் சிந்திக்கிறது...அதாவது பழைமையாய் இருந்தாலும் அதில் ஒரு புதுமையைப் புகுத்தி பார்க்கிறது. கிரியேட்டிவிட்டி என்பது இல்லாத வாழ்க்கை வாழும் மனிதர்கள் பெரும்பாலும் சலித்துக் கொண்டுதான் வாழ்றார்கள்.....

தோழி சித்ரா தனது பதிவில் சந்திரமுகி பார்க்க வந்தவர் சந்திரமுகி ஆகிப்போன கதையை சொல்லியிருந்தார்....இப்படித்தான்....எக்குத்தப்பாக வாழ்க்கையை வாழ்ந்து மிகைப்பட்ட பேர்கள் சலித்துப்போயிருக்கிறார்கள். வாழ்வின் எல்லா நிகழ்வுகளுக்கும் அர்த்தம் தேடிக்கொண்டு சிலபேர் அலைந்து கொண்டிருக்கிறார்கள்....கடைசிவரை எதுவும் கிடைக்கமல்..அலுத்து சலித்து உட்கார்ந்து விடுகிறார்கள்.

ஒரு பூ பூப்பதில் என்ன அர்த்தம் இருக்கிறது...அழகு தான் இருக்கிறது...மொட்டு மலர்கிறது....அவ்வளவே...இதில் என்ன ஆராய்ச்சி வேண்டி இருக்கிறது...மறுபக்கத்தில்....பூ பூப்பதில் எந்த கர்வமும் இல்லை.... அது பூக்கிறது...மடிகிறது... அது நிகழ்வு...அவ்வளவுதான்...! நாம் தான் காணும் எல்லாவற்றுக்கும் அர்த்த கற்பித்துக் கொண்டு......காணும் காட்சியின் உயிர்ப்பை விளங்கிக்கொள்ளாமல் விட்டு விடுகிறோம்.

இராமரும், ஏசுவும் தத்துவங்கள் ....அதை ரசிப்பதை விட்டு விட்டு வேறு எங்கோ சென்று மாட்டிக்கொள்கிறோம்.....! வாழ்க்கை என்று சொல்லும் போதே அது வாழ்வதற்குதானே தவிர....அழுந்தி...அழுந்தி..வருந்தி வருந்தி மடிவதற்கு அல்ல..!

காலையில் இருந்து இரவு உறங்கும் வரை அனுபவித்து மகிழ ஓராயிரம் விசயங்கள் இருந்தாலும் ஏனோ இந்த பாழாய்ப்போன மனம் ஏதோ ஒரு கஸ்டத்தை நினைத்துக் கொண்டு கண்ணெதிரே உள்ள சந்தோசத்தை அனுபவிக்க மறுக்கிறது....இதை விட்டு வெளிவர வேண்டும் இது ஒரு யுத்தி....கஸ்டமாயிருந்தாலும் அதை அனுபவித்து சந்தோசமாய் எதிர்கொள்ளுங்கள்....அது நிச்சயம் பிரச்சினையின் வீரியம் நிச்சயமாய் குறையும்.

எப்போதும்..மிகப்பெரிய விசங்களில் சந்தோசத்தை தேடுகிறேன் பேர்வழி என்று மாட்டிக் கொண்டு முழிக்காதீர்கள்...சந்தோசம் சின்ன சின்ன விசயங்களில் உங்களின் கண்ணெதிரே இருக்கிறது... நீங்கள் செய்யவேண்டியது எல்லாம்....கண்ணை திறந்து....பார்ப்பது மட்டுமே.....

என்னடா விளம்பரத்தில் ஆரம்பித்து... எங்கேயோ போய்விட்டானே.. என்றுதானே நினைக்கிறீர்கள்...இல்லை இல்லை...இதோ..கீழே இருக்கும் விளம்பரங்களைப் பாருங்கள்...இதை உருவாக்கியவரின் கிரியேட்டிவிட்டியின் மூலம் இந்தப்படங்களின் உயிர்ப்பு...உங்களை நிச்சயமாய்....சிறிதளவேனும் சந்தோசம் கொள்ளச் செய்யும்...


மீண்டும் எச்சரிக்கிறேன்...ஆராயாமல்...அர்த்தங்களை விளங்கிக்கொள்ளுங்கள்.
....
....
......


என்ன புரியுதா...என்ன சொல்ல வர்றாங்கன்னு....!


ஹெல்த்தியா இருக்காங்களாம்....ஹார்லிக்ஸ் குடிச்சதனால....


2 நிமிசம் கொடுத்துதான் பாப்போமே..ன்னு தோணுதுல்ல....

வெளியே காற்றே இல்லையாமாம்.....

புவி வெப்பமடைதலை விளக்கும் ஒரு விளம்பரம்.....


புகை பிடிப்பதற்கு எதிராக இதை விட அழகாக யாரும் அறிவுரை சொல்ல முடியாது!

எல்லா பாம்புகளும்...அனிமெல் பிளானட் showவுக்கு போயிடுச்சாம்... !!!

மலையைக் கூட....பிளந்து தள்ளிவிடும் என்பதை எந்த இடத்தில் சரியாக பொருத்தியிருக்கிறார்கள் பாருங்கள்....!

இந்த விளம்பரத்தை பார்த்த பின்னும் மரத்தை வெட்ட நீங்கள் துணிந்தால்....உங்களுக்கு கல் மனசுதான்!

இதற்கு ஒன்றும் எழுத தேவையில்லை...ஹா...ஹா....ஹா... !

விபத்தில் காரே...தலைகீழா போனாலும்...டயர்கள் நிமிர்ந்து அதுவும் பார்க்கிங்கில் சரியாய் நிற்குமாம்.


திருமண வாய்ப்புகளை ஏற்படுத்துகிறார்களாம்...அதான் வேஷ்டி சேலை...


உங்களின் வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக ஆக்கிகொள்ளுங்கள் நண்பர்களே....உங்களின் மகிழ்ச்சிக்கு என் வாழ்த்துக்கள்!

தேவா. S

Sunday, April 18, 2010

தமிழா இதை எப்படி மன்னிக்கப் போகிறாய்....?


சிங்கத்தை பெற்ற....
தங்கம் வந்ததா...?
கரிகாலனை பெற்ற...
கடவுள் வந்ததா....?
வல்லரசு இந்தியாவே...
தொடை நடுங்கி.....
அனுமதி மறுத்தாயோ?
பிணி தீர்க்க வந்த...
மூதாட்டியிடமே...
நடு நடுங்கிய நச்சுப் பாம்புகளே...
சிங்கதலைவன் வந்தால்...
தூக்கிலிட்டு மரிப்பீரோ?
அனுமதி மறுத்து...
அவமானப்பட்டது....
காந்திதேசத்தில்...
கறை படியச் செய்தது.....
எல்லாம்...வீரமென்றா சொல்வீர்கள்!
விருந்தோம்பலை...உலகுக்கெல்லாம்...
விளக்கிச் சொல்லும்...தமிழ் நாடே...!
தமிழனுக்காய்...போராடிய...
சிங்க நிகர் தலைவனின்...
தாயையா நீ நிராகரித்தாய்....!
மருத்துவ உதவி தேடிய...ஒரு உயிரை...
மதிக்காமல் திருப்பிவிட்ட...
பாவம் உமை சும்மா விட்டிடுமா?
ஒட்டு பொறுக்கும்....பிச்சைக்காரர்கள்....
தேர்தல் நேரத்தில்அம் மட்டுமே வருவார்கள்....
தமிழினம் என்ற...திருவோடு ஏந்தி....!
என் தமிழனமே....கவனமாயிரு....!
காசு கொடுத்து அவன் வாங்கப் போவது....
உன் ஒற்றை ஒட்டு அல்ல....தமிழனின் தன்மானம்.....!

என் தாய் தமிழினமே.....தமிழினமே....மீண்டும் ஒரு முறை ஜோராக கைதட்டுங்கள்... மீண்டும் ஒரு கேவலமான காரியத்தை அரங்கேற்றி இருக்கும் இந்திய அரசாங்க கோமாளிகளைப் பார்த்து....! சாமியார்களின் காதல் காட்சிகளை காட்டுவதற்கு தமிழ் நாட்டில் ஊடகங்கள் இருக்கிறது.

திரைப்பட டிரெய்லர்கள் காட்டுவதற்கு... போட்டா போட்டி..ஏம்பா....உங்களுக்கு எல்லாம் மனசாட்சியே இல்லையா...ஒரு வயாதான மூதாட்டிக்கு....விசாவை கொடுத்து மலேசியாவில் இருந்து சென்னை வரை வரச்செய்து....அனுமதி மறுத்து திருப்பி அனுப்பினார்களே....எத்தனை தொலைக்காட்சிகள்...இதை மீண்டும் மீண்டும் போட்டுக் காட்டின? போட்டு கொண்டிருந்தால்... நமது நாட்டு ஊடங்கள் நடு நிலையோடு இருக்கின்றன என்று ஒத்துக்கொள்ளலாம்....இப்போது தெரிகிறாதா...என் மக்களே.....ஊடகங்கள் தங்களின் சுய லாபத்துக்காத்தான் செயல் படுகின்றன என்பதை உணர முடிகிறதா?

மேற்கொண்டு விவரித்து இந்த பதிவை எழுத மனம் வரவில்லை....ஏனென்றால்...மருத்துவ உதவி கேட்டு வந்தா தாயை திருப்பி அனுப்பிய தரங்கெட்ட செயல் செய்தவர்களை....எல்லாம் வல்ல இறை...பார்த்துக்கொள்ளும்...ஒரே ஒரு கேள்விதான்....என்னிடம் எஞ்சி இருக்கிறது....

"தள்ளாத வயதில் வந்த...தாயார் பார்வதி அம்மாளைக் கண்டே...இவ்வளவு பயப்படும்....இந்தியாவே(காங்கிரஸ்)....அவர் பெற்ற பிள்ளை வந்தால்..எவ்வளவு பயம் கொள்வீர்கள்? "

தேவா. S

இது என்ன மாயமடி?

ஒரு மழைக்கால முன்னிரவின்..
இருண்ட வனமும்..
"சோ" வென்று பெய்த...மழையும்....
நீ இல்லாத வெறுமையை....அதிகமாக்கின....!

உன் காதல் பார்வையின்....
கதிர்வீச்சில்... பஸ்பமானது என் இதயம்!
உன் உதட்டோர மச்சமும்...
நெற்றி விழும் முடியும்...
கூரான நாசியும், கவனமாய்...
என் கவிதைகளுக்கு ...கருவாகின்றன....!

ஓவியமாய் தலைசாய்த்து....
ஒய்யாரமாய் நீ ... பார்க்கும்..
காவியக் காட்சியினை...
விவரிக்கத் தெரியாமல்...
மெளனக் கடலில்...குதித்து...
தற்கொலை செய்து கொள்கின்றன....
வார்த்தைகள்...!

உன் விரல்களால்...
என் தலை கோதி....
சமாதி நிலைக்குள்...கண நேரம்....
எனைத் தள்ளி....
கல கல சிரிப்பொலியால்..
மீண்டும் எனை மீட்டெடுத்த..
கணங்களை விட்டு...மீளவேயில்லை நான்!

கவிதையாய்
உன் இமை துடித்த
ஒவ்வொரு வினாடியையும்..
நினைத்து நினைத்து...
பட படக்கிறது என் இதயம்!
எல்லா வார்த்தைகளையும்
வாசிக்க தெரிந்த எனக்கு....
உன் பெயரை....மட்டும்....
ஏன் சுவாசிக்கத்தான் முடிகிறது....!

என் இமைகளுக்குள் எப்போதும் நீ...
அதனால்தான்...பகல் முழுதும்...
உன்னைத் தொட்டு விளையாடியும்....
இரவுகளில் அணைத்துகொண்டும்...
உறங்குகிறேன்!

என் வார்த்தைகளை எல்லாம்..
கூர் தீட்டி...கவனமாய் கவிதையாக்கி...
உனை வெல்ல யுத்திசெய்தால்...
உன் மெளனம் என்னும்...
வார்த்தையில்லா கவிதைகள் எல்லாம்...
எனை வென்று விடுகிறதே இது என்ன மாயமடி?


சில பார்வைகளின் வீச்சில் சட்டென்று உள்ளம் தீப்பிடித்துக் கொள்ளும்...அப்படி ஏற்படும் ஒரு உணர்வை தனக்குள் வைத்துக் கொள்ள முடியாமல்... திணறும் ஒருவனின் மனோ நிலைதான் இந்தக் கவிதை.

காதல் வயப்பட்ட ஒரு மனிதனுக்கு.... தன் காதலியின் அசைவுகள் எல்லாமே..ஒரு கவிதைதான்... எல்லா நேரங்களிலும் தன்னிடம் நேசம் ஒரு பெண்ணை காதலியாகவே கொள்ளும் ஒருவன் சந்தோசமான ஒரு வாழ்க்கையினை வாழ முடியும். குறைகள் எத்தனை இருந்தாலும் காதல் அதை மறைத்து விடும் அல்லது மாற்றிவிடும்.

எனது கவிதை நாயகனும் அப்படித்தான்..... மழை பெய்யும் ஒரு முன்னிரவில் அந்த வெறுமை அவனது காதலி பற்றிய ஞாபங்களை கிளறிவிட...வெளியே பெய்த மழையை விட... இவனுள் பெய்த கவிதை மழை ரொம்ப சுவையாய் போனது. காதலைப் பற்றி வார்த்தைகளில் விவர்க்க முடியாமால் இவனின் வார்த்தைகள் எல்லாம் மெளனம் என்னும் கடலி விழுந்து தற்கொலை செய்த பின் இவனிடமும் மெளனமே எஞ்சி நிற்கிறது.


காதல் ஒரு அற்புதமான உணர்வு....அது ஆணையும் பெண்ணையும் சங்கமிக்க செய்யும் கடவுளின் ஆசிர்வாதம்....காதலுக்குள் சென்று நிதானமாய் சுற்றிப் பார்க்கும் அல்லது பார்த்து உணர்ந்த அனைவருக்கும் நன்றாகவே தெரியும் கடவுள் யாரென்று.....? மழை பெய்த பின்பு....மரத்திற்கு கீழே நின்று மரம் உலுக்கி... நனைவது போல...அர்த்தங்களையும் ஆராய்ச்சியும் இல்லாமல்....உங்கள் விழிகளால் இந்த கவிதையை உள் வாங்கி.. உள்ளத்தால்.... உலுக்கி உங்களை பரவசமாக்கிக்கொள்ளுங்கள்!

அற்புதமான உங்களின் இந்த பயணம் உங்களை....சாந்தப்படுத்தட்டும்...!
தேவா. S

Saturday, April 17, 2010

பொன்னாத்தாவின் ...புலம்பல்!
கழனியில வேல பாக்க
கலங்கி நின்னதில்ல...
கட்டுக் கதிரு சுமந்தும் ....
நடக்க சிரமப்பட்டதில்ல...
கையில் இரண்டு இடுப்பில் ஒண்ணு...
வயித்தில் ஒண்ணு....
இருந்த போதும் கவலையில்ல...
பத்துவீடு...சுத்திவந்து...
பத்துபாத்திரம் தேய்ப்பதில....
கூட... குறையுமில்ல...
மூலையில கிடந்தாலும்...
மூணுவேளை கஞ்சி ஊத்த...கஷ்டமில்ல....!
இரவு பகல் பாராம...
மிருகமா என்னை வேட்டையாடி...
கொன்னாலும்...பரவாயில்லை...
மொட்டையா போற...மகன்...
குடிச்சு...குடிச்சு.....சீரழிஞ்சு...
அவன் குடல கருக்கி...எங்க உசிர....
எடுக்காம இருந்தா சரிதேன்...!
கவுர்மெண்டே...கட துறந்து...
கருமாதி நடத்துதே....!
காந்தி போட்டோவ.....
காகிதத்தில் போட்டு வச்சு....
கல்லாவுல சமாதியாக்கி....
கல்லுக்கடை (டாஸ்மாக்) நடத்துதே!
கேக்க ஒரு நாதி இல்ல....
என் சுமைய எறக்கி வைக்க யாருமில்ல...
எல்லா சாமிய கும்பிட்டும்....
ஒரு சாமிக்கு கூட காதும் இல்ல...!

என்னதான் நவீனமயமாக்கல்...புதிய தொழில்களின் முதலீடு....தொழில் நுட்ப வளர்ச்சி, மகளிர் இட ஒதுக்கீடு என்று நாம் பேசி வந்தாலும்....மது அரக்கன் தமிழகத்தின் கிராமப்புற மக்களின் அன்றாட வாழ்க்கையினை பதம் பார்க்கமல் இல்லை. குடி குடியைக் கெடுக்கும் என்று எழுதி வைத்து விட்டு...தேசப்பிதாவாய்...மகாத்மவை ஏற்றுக் கொண்ட ஒரு ஜன நாயக நாட்டில் ஏன் ஒரு பூரண மதுவிலக்க்கினை நம்மால் ஏற்படுத்த முடியவில்லை? என்பது... இன்று பிறக்கும் குழந்தை கூட கேட்கும் ஞானக் கேள்வி.


நமது மக்களுக்கு மதுவின் பயன்பாடு பற்றிய விழிப்புணர்வு தேவை...! மேல் தட்டு மக்கள் இதனை பற்றிய விழிப்புணர்வு கொஞ்சமேனும் கொண்டிருப்பதால் அவர்களின் வாழ்வியல் முறையில் அதிக பிரச்சினைகள் ஏற்படுவதில்லை ஆனால்.....வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் மிகைப்பட்ட மக்களின் வாழ்வாதாரங்கள் தான் பாதிக்கப்படுகின்றன. கல்வியின்மையும்....மதுவினை பற்றிய விழிப்புணர்வும் இல்லாததுதான் இதற்கு காரணம்....!


அரசியல்வாதிகளும் , தன்னார்வதொண்டு நிறுவனங்களும்...மிக முக்கியமாக ஊடகங்கள் மது பற்றிய விழுப்புணர்வு பிரச்சாரத்தை மீண்டும் மீண்டும் விளம்பரப்படுத்த வேண்டும்! அறியாமையின் காரணமாக மதுக்கடைகளில் வீழ்ந்து கிடக்கும் எம்மக்களை காப்பாற்ற அரசு மிக முக்கிய முடிவுகளை உடனடியாக எடுத்தால் அது வறுமையில் வாடி மது அரக்கனால் சீரழிந்து கொண்டிருக்கும் லட்சக் கணக்கான மக்களை காப்பற்றி...சீரான, தெளிவான அடுத்த தலைமுறையை சர்வ நிச்சயமாய் உண்டாக்கும்!


தேவா. S

Thursday, April 15, 2010

கிளிகளின் கீதம்....சாலையோர என்வீடு...
வீட்டோர...புங்கை மரம்...
மரமிருக்கும் கிளிக்கூட்டம்...
ஒவ்வொரு அதிகாலை...
விடியலும்...இசைக்கச்சேரிதான் எனக்கு!

பிரம்ம முகுர்த்தத்தில் எழுந்து கொள்ளும்...
என்பகுதி விழிப்பு நிலையில்....
அவற்றின் குடும்ப பேச்சுக்கள்...
விழுந்தும் விழாமல்....
என் காதோராம்....உரசிச் சொல்லும்.!

சில நாள்...அவை பேசி சிரிக்கும்...
சில நாள் சண்டையிடும்...
பல நாள் காதல்கொண்டு...
மெதுவாய்....
கிசு கிசுத்து....
மனித அரவத்திற்கு முன்னே....
இரை தேடி....புறம் பறந்து செல்லும்....!

என் விடுமுறை நாளின்
எல்லா பகல் நேரமும்....
புங்கை மரக் கிளிக் கூட்டத்தோடுதான்...
கரைந்து செல்கையில்...
கூட இரண்டு குயில் சேர்ந்து....
இந்த கூட்டணிக்கு வலு சேர்க்கும்...
இப்பூமியின் இடர்ப்ப்பாடுகள் பற்றிய...
கவலையின்றி அவை தினம் பறக்கும்!

அதுவும் ஒரு விடியல்தான்...
அதிகாலை நேரம்...தான்...ஆனாலும்....சப்தமில்லை.....!
ஏன் கடந்த இரவு இன்னும் ...
விடியவே இல்லையா...?
அனிச்சையாய் எழுந்த கேள்வியில்...
அர்த்தம் இருப்பதாய் தோணவில்லை...!

பாதி தூக்கத்தில்...
கலைந்தது என் கனவு.....
கிளி சப்தமில்லா காலையில்....
தகர்ந்தது...என் இரவு.....!
என்னாவாயிற்று...என் இசைக் கச்சேரிக்கு...
மனிதன் எழும் முன்னே எழும் ...
கிளிக் கூட்டம்..மறந்து போய் உறங்குகிறதோ?
காசு வாங்காமல்...கூவும் குயிலின்..
புத்தியை மாற்றிவிட்டது யார்?

காத்திருந்து....புரண்டு...புரண்டு....
சப்தம் இல்லா சூன்யத்தில்...
என் உறக்கம் ஓடி ஒளிந்தது.....
கதவு தாள் திறந்து...கண் மடல் விரித்து...
வாசலோராம் நான் பார்த்து திகைத்து...
வீட்டினுள்ளே திரும்பிப்பார்த்தேன்.....
என் வீடுதானே இது..?!

நேற்று வரை இங்கிருந்த
புங்கை மரம் ....எங்கே?
புங்கை மர கிளைகளுக்குள்....
குடியிருந்த கிளிகள் எங்கே?
சொல்லாமல் கொள்ளாமல் செல்ல...
மனிதரல்ல...மரமன்றோ....அது?!
உற்று நோக்கிய பின்....
சாலையோர சரிவில்....புங்கை மரம்...
பிணமாய் கிடந்தது.....!
கிளிகள் குடியிருந்த கிளைகள்...
குண்டடி பட்ட குழந்தைகளாய்....!!!

தொலைபேசி பணியின்....அகழ்வாராச்சிக்காக....
வேரோடு.... பெயர்க்கப்பட்டு....
அத்துனை இலைகளும் திறந்த விழிகளாய்...;
எனை ஏக்கமாய் பார்தபடி
மரித்திருந்தது....புங்கை மரம்!

வாயில்லா காரணத்தால்...
வாழும் வாய்ப்பிழந்து போனதது...!
பாதி தூக்கத்தில்...பரிதவித்து....
போயிருக்குமே... என் கிளிக்கூட்டம்....
கிள்ளை பேச்சு ஒரு பதறலோடு..
முடிந்திருக்குமே....!
வெட்டவெளி வானத்தை
வெறித்து பார்தேன்...எட்டும் வரை தேடினேன் ...
கிளிக்கூட்டம் காணவில்லை...!

இரைச்சலில்லா...விடியல் சூன்யமாகிப்போனதெனக்கு...
உறக்கமில்லா இரவுகள்..தோறும்...
புங்கை மரம்...கிட்ட வந்து சலசலக்கும்
என் நினைவுகளிலது..பேசி சிரிக்கும்..
கிளிக் கூட்டம்...காதலாய் கிசுகிசுக்கும்....
வெறுமையாய் விடியும்...நிதர்சனக் காலையோ....
ஏனோ என்னை தனித்து நிறுத்தும்.....!


வெறுமையால் நிரம்பி நிரம்பி.....
வெறுத்துப் போனதென் வாழ்வு;
கிளிக் கூச்சல் கேட்காமல் செத்துப் போனது
என் உணர்வு....!
இதோ என் கால்கள்....வேறு வீடு தேடி.....
வாடகையினைப் பற்றி கவலையில்லை....
ஒரே ஒரு... நிபந்தனைதான்....
....
.......
........
......

"மரம் நிறைந்த வீடு
மனிதர்கள் குறைந்தாலும்
பறவைகள் அதிகமிருக்கவேண்டும் "
அவ்வளவுதான்...!தேவா சுப்பையா...

Tuesday, April 13, 2010

வாழ்வே மாயம்.... தொடர் பதிவு V I
இந்த தொடரின் மூலம் எந்த ஒரு தனிமனிதரின் வாழ்க்கையை பிரபலமாக்கும் முயற்சியை நான் எடுக்கவில்லை மாறாக தினம் மாறிகொண்டிருக்கும் ஒரு நிலையில்லாத ஒரு வாழ்க்கையினைத்தான் நாம் அனைவரும் திடமாக நம்பி....சில தவறான முடிவுகளை எடுத்து விடுகிறோம்....அந்த நிலையாமையின் நெருப்பை அனைவரின் நெஞ்சுக்குள்ளும் கொண்டு வரும் ஒரு சிறு முயற்சி....!

ஒரு பதிவெழுதி நான் சமுதாயத்தின் எண்ண ஓட்டத்தை மாற்றி விடுவேன் என்று சொல்லவில்லை...ஒருவர் அல்லது இருவர் இதை உணர் ந்தாலே...அது கட்டுரையின் வெற்றி.....

தொடர்ந்து செல்வோம்....!

இதுவரை

பாகம் I
பாகம்II
பாகம் III
பாகம் IV
பாகம் V

இனி....

கட்டைகளுக்கு நடுவே வைக்கப்பட்டது உடல்........மறைக்கப்படாமல் இருந்தது முகம். ஒரு தீக்குச்சி தன்னுள் அக்னியை தேக்கி வைத்து அந்த உடலை பஸ்பமாக்க காத்திருந்தது.....! சடங்குகள் எல்லாம்....கடந்து....அக்னி காதலோடு
உடலை அணைத்து.....உருமாற்றிக்கொண்டிருந்தது....! வந்தவர் எல்லாம் திரும்பிப்பார்க்காமல் சென்றுவிட.... ஒரு ஓரமாய் அமர்ந்து இருந்த என்னை யாரும் கவனிக்கவில்லை..........

ஒரு முறை மாமாவோடு டீ குடித்துக்கொண்டிருந்தேன்....சூடான டீ...அவரது கையில் கொஞ்சம் தெரியாமல் ஊற்றிவிட்டது.....துடி துடித்து விட்டார் மனுசன்..."தம்பி...கை எரியுதுடா...எரியுதுடா" என்று கலங்கியே போய் விட்டார்.....! இன்று முழு உடலையும் நெருப்பு மேய்ந்து கொண்டிருக்கிறது....பாகம் பாகமாய்....அணு அணுவாய்......! எனக்குள் பாமரத்தனமாய் ஏற்பட்ட ஒரு கேள்வி.. .என்னை தாண்டி உச்சரிப்பாய் வெளியில் வந்து விழுந்தது....." இப்போ சூடா இல்லையா மாமா? உனக்கு இப்போ உடம்பு எரியலையா மாமா? அன்னைக்கு உனக்கு எரியுதுன்னு சொன்னியே.....அப்போ எது உனக்குள்ளே இருந்துச்சு உனக்கு சுட்டது....? இப்போ எது இல்லை உனக்கு சுடமா இருக்கு?....


அக்னி இப்போது இடம் மாறி என்னுள் எரிந்து கொண்டிருந்தது....! இவ்வளவுதான் வாழ்க்கை.... ! தொடர்ந்து நிகந்து கொண்டிருக்கும் எந்த நிகழ்வுகளுக்கும்...இறுதியாய் என்னவாகும் என்ற கேள்விக்கும் சம்பந்தமில்லை.....!

சந்தோசம் மற்றும் துக்கத்தின் அளவுகள் ஏழை பணக்காரன் என்று பார்த்து மாறுவதில்லை...மெர்சிடிஸ் பென்ஸ் இல்லை என்றால் அம்பாசடரில் செல்லும் போது ஒருவன் எவ்வளவு வேதனைப்படுவானோ அந்த அளவே...ஒருவன் சைக்கிளை விற்றுவிட்டு நடந்து செல்லும் போது அதே அளவுதான் அவனது கவலையின் அளவும்...சிலருக்கு லீ மெர்டியனில் உணவருந்தினால் சந்தோசம் சிலருக்கு...முனியாண்டி விலாசிலே அந்த சந்தோசம் கிடைத்துவிடும்....


எல்லா வேறுபாடும் மூளையின் செல்களுக்குள் பதிந்து இருக்கிறது....வெளியில் ஏதும் இல்லை. இதற்கு இடையில் தான் சாதி என்றும் மதம் என்றும் ஓவ்வொரு கூறாக மனிதர்கள் தாங்கள் வாழ்வதற்காகவே.....பல குழுக்களை ஏற்படுத்திக்கொண்டார்களே தவிர... நிஜத்தில் உள்ள இறை நிலைக்கும்.... இங்கே கடைபிடிக்கப்படும் விசயங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

எந்த கடவளையும் நான் பார்த்தேன் உங்களுகும் காட்டுவேன் என்று யாரும் சொன்னதில்லை....! அப்படி சொல்பவர்கள் எல்லாம் ரகசியாமாக கண்டவர்கள்... ஏன் கடவுள் பொதுவாய் தோன்றி நான் தான் கடவுள் என்று சொல்லலாமே.... அப்படி சொன்னால் பாமரர்களும்...படித்தவர்களும் ஒரு நிலை எடுத்து அவரை பின்பற்றலாமே.....? இதுவெல்லாம் நடக்காது என்று கடவுளை கற்பிப்பவர்களுக்கே தெரியும்...இருந்தாலும் அப்படி சொல்லிக் கொள்வதில் ஒரு சுகம் இருக்கிறது.

வாழ்வில் இரண்டு நிகழ்வுகள் மிக உறுதியாக நம்மால் அறுதியிட்டு சொல்ல முடியும்...ஒன்று பிறப்பு....மற்றொன்று இறப்பு...! இந்த இரண்டையும் உற்று நோக்கி தியானம் செய்தால் வாழ்வின் ரகசியங்களுக்கான சாவியும் அந்த சாவியை கொண்டு திறந்தால் கடவுளும் வரலாம்......சென் ஹைகூ சொல்வது போல....

" கதவை திறந்து வை ....
கடவுள் வந்தாலும்
வரலாம்....."


வரமாட்டர் என்பது நிச்சயமல்ல....ஆனால் வருவார் என்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம். கடவுளும், காமமும், பிறப்பும், இறப்பும் .... நமக்கு கிடைத்துள்ள துருப்புச்சீட்டுக்கள்...இதனைப் பிடித்து...ஆழ்ந்து உணர்ந்துதான் ....வாழ்வாற்றை கடக்கவேண்டும்....! மரணத்தை பற்றி எழுதினால்...படிக்கவே பயப்படும் மனிதர்களை நினைத்தால் கொஞ்சம் கவலையாகத்தான் இருக்கிறது.....அவர்கள் தள்ளிப்போட்டாலும் நிகழபோகும் ஒன்றுதான். ஒதுக்கி வாழாமல் உணர்ந்துதான் வாழச்சொல்கிறேன்.

மாமா என்ற அடையாளம் அழிந்து விட்டது அல்லது வேறு ரூபமாய் மாறிவிட்டது...அதைப்பற்றி ஆராய்ந்து அவர் எங்கு சென்றார் என்ன ஆனது என்று மேற்கொண்டு நான் ஏதாவது சொன்னால் அது எல்லாம் பச்சைப் பொய்! இந்த நிகழ்வு...அதன் தாக்கம் அதனால் ஏற்பட்ட மாற்றம்தான் முக்கியம்....! சிதையின் நெருப்பு அணைந்துவிட்டது ஆனால் அந்த நிகழ்வு ஏற்படுத்திய கனல் என்னுள் இன்னு எரிகிறது...தொடர்ந்து எரியும்.....!


தொடர்ந்து ....வந்து படித்து கருத்து சொன்ன எல்லா உள்ளங்களுக்கும் நன்றி.....!


பூசுவதும் வெண்ணீறு
பூண்பதுவும் பொங்கரவம்
பேசுவதும் திருவாயால்
மறைபோலுங் காணேடீ
பூசுவதும் பேசுவதும்
பூண்பதுவுங் கொண்டென்னை
ஈசனவன் (இறை) எவ்வுயிர்க்கும்
இயல்பானான் சாழலோ.

தேவா. S


(முற்றும்.)

Sunday, April 11, 2010

வாழ்வே மாயம்.... தொடர் பதிவு V


பதிவினை தொடங்கும் போது ஏதோ ஒன்று அல்லது இரண்டு பதிவுகளில் முடிந்து விடும் என்று தான் நினைத்து ஆரம்பித்தேன், ஆனால் 5வது பதிவு வரை வர வேண்டிய அவசியமாகி விட்டது. இன்னும் ஒரு பதிவு வரலாம் அல்லது இத்தோடும் முடியலாம்... பார்க்கலாம்....

சகோதரி சித்ரா அவர்கள் எல்லா பாகங்களையும் வரி விடாமல் வாசித்து வாக்களித்து...கருத்துக்களும் தெரிவித்து இருப்பது நெகிழ்ச்சியாக இருந்தது அவரின்...வாசிக்கும் திறன் மட்டுமல்லாது பதிவர்களை ஊக்குவிக்கும் ஒரு தாயுள்ளமும் இருப்பதை என்னால் உணர முடிந்தது. சாதாரணமாக பின்னூட்டத்தில் வாழ்த்து சொல்லவதை விட.... முதன்மைப் பதிவிலேயே அவருக்கு நன்றி தெரிவிப்பதுதான்....தர்மம்..... நன்றிகள் சகோதரி.....!

வாழ்க்கையின் ஓட்டத்தோடு எல்லா நிகழ்வுகளும் சட்டென நடந்து முடிந்து விடுகின்றன.... நினைத்துப் பார்க்கும் போது எல்லாமே கனவாகத்தான் தோன்றுகின்றன.... சரி....மேற்கொண்டு நாம் பயணிக்கலாம்.

இது வரை
பாகம் 1 - http://maruthupaandi.blogspot.com/2010/04/i.html
பாகம் 2 - http://maruthupaandi.blogspot.com/2010/04/i-i.html
பாகம் 3 - http://maruthupaandi.blogspot.com/2010/04/i-i-i.html
பாகம் 4 - http://maruthupaandi.blogspot.com/2010/04/i-v.html

இனி...

உரத்த குரலில் அவர் எழுப்பிய ஓசை எனக்கு எரிச்சலை ஏற்படுத்தியது....அவரும் ஒரு மாமாதான்...சட்ட்னெ திரும்பி நான் முறைத்துப்பார்த்தேன்....ஏங்க உள்ள கொண்டு போகக்கூடாது?னு அதட்டிக் கேட்டேன்....எனது கோபம் அவர் வயதை மறைத்துவிட்டது. இல்ல இல்ல ...அவச்சாவு செத்திருக்கான்....வீட்டுக்குள்ள கொண்டு போக கூடாது...புள்ள குட்டிங்க...வாழுற வீடுள்ளன்னு சொன்னாரு.....

அடப்பாவிகளா...எவ்வளவு கஸ்டப்பட்டு வீடு கட்டினாரு தெரியுமா....ஒவ்வொரு செங்கல்லும் அவரோட உழைப்பு வியர்வை...அவர் கட்டுன வீட்டுக்குள்ள அவரோட உடம்பை ஒரு 2 நிமிடமாவது வைக்க முடியாதா? எனக்குள் ஏற்பட்ட கேள்வி அழுகையாய் வெடித்தது. பெரிய மனிதரின் சொல் கேட்டு...உயிரில்லாத அந்த உடம்பு தெருவிலேயே வைக்கப்படது.....உறவுகளின் ஒப்பாரியும்....ஒரு பக்கம் மற்றொரு பக்கம் அவருக்கான....இறுதி ஊர்வலத்துக்கான....ஊர்தி தயாராகிக்கொண்டிருந்தது.

மனிதர்கள் உயிரோடு இருக்கும் போது எவ்வளவு ஆர்ப்பாட்டங்கள்...கட்டிப்பிடிப்பதும்...முத்தம் கொடுப்பதும்...சலவை சட்டையும் வேட்டியும்....மோதிரமென்ன...செயின் என்ன....வாசனை திரவியங்கள் என்ன...அண்ணானு ஒருத்தன்....சொல்லங்க தலைவான்னு ஒருத்தன்...ஆமாம் பாஸ்னு ஒருத்தன்...அன்பே....டார்லிங்..கண்ணா....ராஜா...செல்லமே..எத்தனை எத்தனை பெயர்கள்.....இப்படியெல்லாம் கூப்பிட்டு கடைசியில்..பிணம்டானு ஒரே வார்த்தையில் முடிச்சுடுறாங்க....அடச்சே...என்ன.... வாழ்க்கை இதுன்னு தோன்றியாது. பட்டினத்தார் சொன்னது போல இறந்த உடலைச் சுற்றி இறக்கப்போகும் உடல்கள் ...ஒப்பாரி வைத்த காட்சியும்....சட்டென்று முடிவுக்கு வந்தது........

இறுதி ஊர்வலம் நகரதொடங்கி தெருமுனை வரையும்....சொந்த பந்தங்களின்....அழுகைக்குரல் கேட்டுக் கொண்டிருந்தது......எனக்குள் கண்ணதாசனின் வரிகள்...ஞாபகம் வந்தது...

கூப்பிட்டு பார்த்தால்...கேட்காது....
எந்த கோர்ட்டுக்கும் போனால் ஜெயிக்காது...
அந்த கோட்டையின் வாசல் திறக்காது....
போனால் போகட்டும் போடா....

நானும் ஒரு தோள் கொடுத்து தூக்கி...மாமாவின் உடலோடு... நகர்ந்து கொண்டிருந்தேன்.... நந்தனத்தில் இருந்டு சி.ஐ.டி . நகர் வழியாக கண்ணம்மா பேட்டை நோக்கி.....எல்லாமே புதுசு எனக்கு.....ஆர்ப்பாட்டமாய்.....எகத்தாளமாய்.....இருந்த என் வாழ்வின் ஒரு மிகபெரிய...திருப்புமுனையாகிப் போனது இந்த நிகழ்வு! இதோ.....ஊரெல்லாம் உலகெல்லாம் சுற்றும் மனிதர்கள் கடைசியாக உள் நுழையும்....வாயில் வந்து விட்டது......கண்ணம்மா பேட்டை.........கலக்கமாய்...ஒரு இறுதி ஊர்வலத்தின் இறுதி நிலைக்கு....வந்து விட்டோம்.... நெஞ்சமும் தோளும் கனக்க...ஒரு.....இறுக்கத்துடன்...ஊர்வலம்...வாயிலை கடந்து உள் நுழைகிறது......


தேவா. S(தொடரும்)


Saturday, April 10, 2010

இனி ஒரு விதி செய்வோம்


சமீபத்திலொரு தோழி என்னிடம் கேட்டார் நீங்கள் ஏன் மனித வாழ்வின் அவலங்களைப் பற்றி மட்டும் எழுதுகிறீர்கள்...வாழ்வில் எவ்வளவோ நல்ல விசயங்கள் நிகழ்வுகள் இருக்கின்றனவே....ஏன் ஒரு பெஸிமிஸ்ட் (Pessimist) போல எழுதுகிறீர்கள் என்றும் கேட்டார். அவருடைய கேள்வியை மறு பரிசீலனை செய்யாமல் நானும் ஒத்துக்கொண்டேன்.

அதாவது மனித அவலஙகள் பற்றிதான் எழுதுவது என்ற எந்த ஒரு தீர்மானமும் எடுத்துக் கொண்டு எழுத உற்காருவதில்லை....அதே நேரத்தில் பதிவு எழுதவேண்டுமே என்று கடமைக்காகவும் எழுதுவதில்லை...ஏதாவது ஒரு செய்தி நம்மை பாதித்து பதறவைக்கும் நேரத்தில் நமது ஆதங்கத்தை வெளிப்படுத்தும் ஒரு வடிகால் தான் பதிவுகள்! காயங்களுக்குத்தானே...மருந்து தேவை......கை குலுக்க ஓராயிரம் கைகள் இருந்தாலும்...கவலையை துடைப்பது என்னவோ சில கைகள் தானே....அவர்கள் எல்லாம் நேர் நோக்காளர்கள்தானே(optimist).....?

மேலும்..... நல்ல சுகாதாரமான இடத்தை சுற்றி கோடி பேர் இருப்பார்கள் ...சாக்கடையை சுத்தம்செய்வது எல்லாரும் செய்யும் காரியமல்ல....அவலங்கள் பற்றி பேசுவது அதை மிகைப்படுத்துவதற்கு அல்ல....அவலங்களை களைவதற்காகத்தான் .....! சந்தோசங்களை மட்டும் பேசுவதும் எழுதுவதும்....உண்மையான சந்தோசமல்ல.....அது ஒரு ஓடி ஓளியும் முயற்சி....உண்மையை நேருக்கு நேர் சந்திக்க முடியாத திரணியற்ற செயல்.

ஏதாவது ஒரு சினிமா நடிகையின் அந்தரங்கத்தைப் பற்றி எழுதினால் நிறைய பேர் வந்து படிப்பார்கள்...சானியா மிர்சாவின் திருமணத்தைப் பற்றி...அக்கு வேறு ஆணிவேர் வரை அலசி ஆராய்ந்தால் கூட நிறைய பேர் படிப்பார்கள்.....ஆனால் அது ஆரோக்கியமான விசயமா? நல்ல கருத்துக்களை வித்துக்களை விதைக்கிறோமா? சிந்தித்து பாருங்கள்...அடுத்தவன் வீட்டு அந்தரங்கத்தை பற்றி விவரிக்கவும் விவாதிக்கவும் நாம் அனைவரும் நமது மூளைகளை நாய்க்குட்டி போல பழக்கி இருக்கிறோம். இந்த நிலை மாறவேண்டாமா?

கடந்த 6 ஆம் தேதி....சட்டீஸ்காரில் மாவோயிஸ்ட்களின் கண்ணிவெடி தாக்குதலில் 75 ரிசர்வ் போலிசார்கள் பரிதாம்பாமாக உயிரிழுந்திருக்கிறார்கள். நம்மில் எத்தனை பேர்கள் இந்த செய்தியை முன்னிலைப்படுத்தி தீவிரவாத்தின் கொடுமையை மக்களுக்கு போகஸ் செய்து காட்டி இருக்கிறோம். பொழுது போவதற்காய் ஏதாவது செய்கிறோம் என்றாலும் அதில் ஒரு ஆழ்ந்த சிந்தனையை பரவவிட வேண்டாமா? நமது எழுத்துக்களை படிக்கிறவர்களை உங்களின் எண்ணோட்டம் புரட்டிப்போட வேண்டாம? சமூக பிரஞ்ஞை உள்ள ஒரு கலம்...அதை கவனமாய் கையாளவேண்டாமா.....

மக்கள் படிக்கிறார்கள் விரும்புகிறார்கள் என்பதற்காஅக நமது எழுத்தின் ஓட்டத்தை மாற்றி.....கட்டுரைகளை கவர்ச்சிப்பொருளாய் ஆக்கலாமா? நடிகை நமீதாவின் ரகசிய காதல் காட்சிகள் என்று போட்டால் அதிக அளவில் அதை பார்க்க கூட்டம் வரும்...கூட்டம் வரும் என்பதால் நாம் பிரபல எழுத்தாளர் ஆகி விடுவோமா? நல்ல எழுத்தை இரண்டு பேர் படித்தால் போதும் அப்படி ஒரு கொள்கையோடு எழுத வந்துவிட்டால் நல்ல எழுத்துக்களை படிக்கும் வாசகர் கூட்டம் அதிகரிக்கும். அதை விட்டு விட்டு...பாம்பு வைத்து வித்தை காட்டும் மோடி மஸ்தான் போல கூட்டம் சேர்ப்பதில் எனக்கு விருப்பமில்லை....

வலைப்பக்கங்கள் இலவசமாக கூகுள் வழங்குகிறது.....வாய்ப்பு தரப்படாத.... திறமையை வெளிக்காட்டமுடியாத....அத்தனை எழுத்தாளர்கள்...கவிஞர்கள்...சமூக பிரஞ்ஞை உள்ள சக்தி மிகுந்த அனைவரும்....ஒன்று கூடி தேரிழிப்போம்.... நல்ல ஒரு சமுதாயம் பிறக்க...விதையாய் இருப்போம்.....! நம்மால் முடிந்த அளவிற்கு.....வலுவான ஒரு சமுதாயத்தின் அங்கமாவோம்!


"இனி ஒரு விதி செய்வோம் அதை எந் நாளும் காப்போம்......தனி மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகக்தினை அழித்திடுவோம்.....! "


தேவா. SThursday, April 8, 2010

வாழ்வே மாயம்.... தொடர் பதிவு I Vசில நேரங்களில் வாழ்வின் சில பகுதிகள் இறுக்கமாய் நம்முள் பதிந்து....ஒரு புதிய பரிமாணத்தை நமக்கு கொடுக்கும்...புறத்தில் அது ஏதோ பெரிய.. இழப்பைப் போல் இருந்தாலும் அது புதிய விசயங்களின் பிறப்பாய்த்தான் இருக்கும்...

இதுவரை...

பாகம் 1 - http://maruthupaandi.blogspot.com/2010/04/i.html
பாகம் 2 - http://maruthupaandi.blogspot.com/2010/04/i-i.html
பாகம் 3 - http://maruthupaandi.blogspot.com/2010/04/i-i-i.html

அப்படித்தான் ஆகிப்போனது எனக்கும்...ஒரு இறப்பில் ஓராயிரம் புதிய விசயங்கள் என்னுள் பிறந்தன....சரி....ஊர்தியோடு சேர்ந்து நாமும் ஊர்வோம்.............

இனி....

அமரர் ஊர்தியின் உள்ளே இருந்த எனக்கு தலை மெதுவாக சுற்றத் துவங்கியது.. உள்ளே உடலின் அருகே இருந்த...எனக்கு...அசைவற்ற.. சலனமற்ற... மாமாவின் உடலை பார்க்கும் போது...அந்த உடல் உடுத்தி உண்டு.... சிரித்து... அலங்கரித்து...விளையாடி.... வாழ்வின் எல்லா பூரிப்புகளையும் அனுபவித்து...கவலைகளில் கலங்கி..எத்தனை எத்தனை ஆட்டங்கள்....!


அவரது திருமணம் நடந்த சமயம் என் நினைவில் வந்தது...அத்தனை சிறப்பாய்....அந் நாள் அ.தி.மு.க அமைச்சர் திருநாவுக்கரசர் தலைமையில் நடந்தேறியது.....வாழ்வில் எத்தனை குதுகலங்கள்......இன்று.. அந்த சம்பவங்களுக்கு எல்லாம் எந்த வித சம்பந்தமும் எனக்கில்லை என்னுள் இருந்து அனுபவித்ததது ஏதோ வேறு ஒன்று நாங்கள் வெறும் கருவிதான் என்று உடலின் பாகங்கள் எல்லாம்... வெறும் கட்டையைப் போல கிடந்தன......!

நிலையாமையின் உச்சத்தில் அமர்ந்திருந்த எனக்கு...உலகோடு எந்த தொடர்பும் இல்லாத ஒரு நிலை ஏற்பட்டது.. எனக்குள் எந்த எண்ணங்களும் ஏற்படவில்லை..சுற்றி இருந்தவர்களை பார்த்த போது அவர்கள் தலைகளை திருப்பி.....வெளிப்புறமாக பார்த்துக்கொண்டு உள்ளிருக்கும் சூழ் நிலையிலிருந்து தங்களை விடுவிக்க முயற்சி செய்து கொண்டிருந்தார்கள். வாகனம் இராயப்பேட்டையிலிருந்து டாக்டர். ராதகிருஷ்ணண் சலை வழியே சென்று கொண்டிருந்தது.... நான் வெளி நோக்கி பார்வையை செலுத்தினேன்....

ஆச்சர்யத்திலும் ஆச்சர்யாமாய் வெளியில் உள்ள எந்த நிகழ்ச்சியோடும் என் மனது தொடர்பு கொள்ளவில்லை அதாவது கண்கள் கண்ட காட்சியினை மனம் விவரித்து பார்க்கவில்லை. ஸ்கூட்டரிலும், பைக்கிலும்..பேருந்திலும்.... நடை பாதையிலும் மக்கள் ...மக்கள்...மக்கள்....சுற்றிலும் மனிதர்கள்....ஆனால் அத்தனை பேரும் பொம்மைகளாய் எனது கண்ணுக்கு காட்சியளித்தார்கள்.


அனைவரின் உடலும்..ஏதோ காரியமாக பொம்மைகளாய் அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருப்பதாய் பட்டது. இந்த உடலை எல்லாம் உருவமில்லா ஏதோ ஒன்று...ஆட்டுவிப்பது போல தெரிந்தது...எல்லாம் போலியாய் பட்டது. ஏதோ ஒரு மாயையில் தனக்கும் தன்னை சுற்றியும் சில நியாயங்களை உருவாக்கி கொண்டு ஒரு வாழ்க்கை நடந்து கொண்டிருப்பாதாய் பட்டது.


எல்லா மனிதர்களும் இறப்பு என்பது தங்களுக்கு வெகு தூரம் இருப்பாதாகவும் தாங்கள் கோடானு கோடி ஆண்டுகள் வாழப்போவது போன்ற ஒரு எண்ணத்தில்....ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். ஒரு நாள் சட்டென்று எல்லாம் நின்றவுடன் அவர்களின் கனவுகள் எல்லாம்...கலைந்து போன வானவில்லாய் மறைந்து விடுகின்றன். இதை உணர்ந்தால்...மனிதன் எப்படி மனிதனை வதைப்பான்..? வன்முறை ஏது....?

எல்லா நியதிகளும் மனிதர்கள் தங்களின் வசதிக்காக ஏற்படுத்திக்கொண்டது....அந்த நியதிகளே மனிதனின் வாழ்வியல் முறைகளையும் வாழ்வாதாரங்களையும் தகர்க்கும் என்றால் அப்படிப்பட்ட நியதிகளின் அவசியமே நமக்கு தேவையில்லைதானே? சாதாரணனின் இந்த எண்ணங்கள் சரியா தவறா? என்று கூட மனிதர்கள் வாதிடலாம்....

மிக நீண்ட பயணமாகத்தான் எனது இந்த அமரர் ஊர்தியின் பயணம் இருந்தது....மெளனத்தால் நிரம்பிய அர்த்தங்கள் நிறைந்த ஒரு பயணம்....

வீடு வந்தது......வாகனத்தில் இருந்து கூட்டத்தை பிளந்து... நாங்கள் இறங்கினோம்....!கூட்டம் குய்யோ முறையோ என்று கதறியது......உடல் கீழே இறக்கி வீட்டுக்குள் கொண்டு செல்ல எத்தனிக்கப்படது. அப்போது கூட்டத்தில் இருந்து ஒரு உறவினர் அடித்தொண்டையிலிருந்து கத்தினார்...

" வீட்டுக்குள்ல உடம்ப கொண்டு போகாதீங்கப்பா......" நான் திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தேன்......


தேவா. S(தொடரும்...)

Wednesday, April 7, 2010

இரவுகளின் தாரகை...இரவுகளின் தாரகை நான்...
மாலை வேளைகளில் தான்...
என்....பெண்மைக்கு....
தூரிகையால் அலங்காரங்கள்....
வாசனைகளில் என்னை நிரப்பி...
வரும் வாடிக்கையாளனுக்கு...
காத்திருப்பேன்....வாசலிலே...!

கண் இமைக்கும் நேரத்தில்...
காதல்....
கை சொடுக்கும் நேரத்தில்....
காமம்.. .!
பணப்பையின் கனத்திற்கு...
ஏற்றார் போல கூடிக் குறையும்..
எங்களின் உணர்வுகள்!

எச்சமிட்டு பறக்கும்...
காகம் போல....
உச்சத்திற்கு....பிறகு...
பறக்கும் மனிதர்களுக்கு நடுவே...
வயிற்றுக்காக உடல் விற்கும்...
அவலங்கள் நாங்கள்!

பிரபஞ்ச சுழற்சியின்...
சூட்சுமத்தை.....வர்ணமாக்கி...
விலைக்கு விற்கும்...
தலைமுறை கடந்த வியாபாரிகள் நாங்கள்!
உடல் தொட்ட எந்த விரல்களும்...
எங்கள் உள்ளம் தொட்டதில்லை...!

விரக தாபத்திற்கு...'
விளக்கம் தெரியாமல்...
விரகத்தை விளக்கில் எறிக்கிறோம்...!
எங்களுக்குள்ளும் ...இருக்கிறது...
காதலும் காமமும்...காய்ந்துபோன நிலமாய்...
தேய்ந்து போன நிலாவாய்....!

உழைப்பிருந்தும் உற்பத்தியின்றி..
முடங்கிக் கிடக்கின்றன...
எங்களின் கருவறைகள்...
தெய்வமில்லா…கோவிலின் ...
திருவிழாவாய்....தொடர்கிறது....
எங்களின்...இரவுகள்!

ஒரு சீரியசான தொடர் பதிவுக்கு நடுவே...சட்டென்று.... டர்ண் செய்து.....இந்த கவிதை பதிவினை வெளியிடுகிறேன்.....காரணம் எதுவும் கிடையாது.. என்னைப் பொறுத்த வரையில் எந்த தாக்கத்தையும் உள்ளே வைக்கக் கூடாது....அதே நேரத்தில்...வாழ்க்கை எல்லாவித பரிமாணங்களையும் கொண்டது.. எதையும் மிச்சம் வைக்காமல் அலசி ஆராய வேண்டும்....! ஒரு பயணிக்கு சுற்றுப்புறங்களை வேடிக்கைப்பார்த்து உள்வாங்கிக்கொள்வது தவிர வேறு என்ன வேலை இருக்கிறது..... வாழ்க்கைப்பேருந்தின் பயணிகள் தானே... நாம்....!

விலை மாதுக்கள் என்பவர்கள் நமது கலாச்சாரத்தோடு பிண்ணிப் பிணைந்தவர்கள்....! அந்த காலங்களில் அவர்களிக்கு மரியாதை செய்து தெய்வத்துக்கு சமமாய் மதித்த காலங்களும் அதற்கான கதைகளும் நம் பாரம்பரியத்தில் நிறையவே உண்டு....! தெய்வத்துக்கு தொண்டு செய்து....அவர்கள் மனிதர்களின் இச்சைகளை தேவையின் பொருட்டு தீர்த்து வைத்தார்கள் அதனால்தான் அவர்களை தேவரடியார் என்று அழைத்தனர்.

இன்னும் சொல்லப்போனால் அவர்கள் விருப்பப்பட்டால் தான் சல்லாபம்....யாருடைய குடியையும் கெடுக்கும் பொருட்டு செயல்படவும் மாட்டர்கள்....வேண்டும் என்றே பொருள் ஈட்டவும் தங்களின் காமத்தை விற்கவும் மாட்டார்கள். இவர்களை மரியாதையாக ஒவ்வொருவரும் நடத்த வேண்டும் என்றுதான்.. இவர்களை இறைவனை மணந்து கணவனாக ஏற்று வாழ்ந்து வந்தார்கள், இறைவனின் மனைவி என்றால் யாரும் தவறாக நடக்க மாட்டர்கள் அல்லவா.... வற்புறுத்த மாட்டார்கள் அல்லவா? அதுதான் லாஜிக்.....இதற்கு நமது இலக்கியங்களில் ஓராயிரம் விளக்கங்கங்களும் உதாரணங்களும் இருக்கின்றன.....!

நாளடைவில் இவர்களை சமுதாயம் அறுவெறுப்பு பொருளாக்கியது......ஆண்கள் அத்து மீற ஆரம்பித்தார்கள்.....போகத்துக்காக மோகம் கொள்ள ஆரம்பித்தனர்... ! தொடர்ந்து இன்னலுக்கும் அவமரியாதைக்கும் நடுவே...இவர்கள் நலிவடைந்து நலிவடைந்து....கடைசியில் பொருளீட்டும் பொருட்டு வியாபாரப் பொருளாய்...சந்தைக்கு வந்து விட்டார்கள்....வறுமை தான் இன்றைய விபச்சரத்தின்...மூல காரணமாய்ப் போய் விட்டது. பழைய காலத்து உதாராணங்களை வைத்துக் கொண்டு வரப்போகும் நவீன யுகத்திற்கும் நமக்கு தேவரடியார்கள் தேவையில்லை......வறுமையைகருவறுப்போம்.....மனிதர்களை....மனிதர்களாய்...வாழச்செய்வோம்.....!


தேவா. STuesday, April 6, 2010

வாழ்வே மாயம்.... தொடர் பதிவு I I I


ஏதோ... சொந்த கதையை நான் சொல்வதற்காக இந்த பதிவை தொடராக இடவில்லை... அந்த அளவுக்கு பிரபலமானவனுமல்ல...அதானால் மிகைப்பட்டவர்களுக்கு அதீத ஆர்வம் எடுபட வாய்ப்பும் இல்லை....மிக முக்கியமான காரணம் என்னவென்றால்.....இது சமகாலத்தில் நடக்கும் பிரச்சினை அல்ல.. மேலும் முழுக்க முழுக்க....வாழ்வியலும், வாழ்வில் மிகைப்பட்டவர்கள் நினைக்கவே மறுக்கும் ஒரு நிகழ்வு பற்றிய செய்தி....சரி... நாம் மேற்கொண்டு நகர்வோம்.....

இதுவரை..

பாகம் 1 - http://maruthupaandi.blogspot.com/2010/04/i.html

பாகம் 2 - http://maruthupaandi.blogspot.com/2010/04/i-i.html


இனி....

இரவு முழுதும் தூங்கமுடியாமல் ஒராயிரம் கேள்விகள் ஏவுகணையாய் என் மனதை துளைத்தது...இறக்கும் வரை கனவுகள்...ஆசைகள்.....பேச்சுக்கள்....சண்டைகள், காதல், காமம்...பதவி, அந்தஸ்து, பணம்...என்று நான் ... நான் .. நான் என்று வாழும் மனிதர்கள் சட்டென்று ஒரு நாள் போய் சேர்ந்த பின்னால்....இவர்களின் தேடல் எல்லாம் என்னவாகும்....?சடலமாய் ஒரு மனிதரின் உடலை நான் பார்த்தேன்... அந்த மனிதர் என்னிடம் பேசி சிரித்து....எதிர்கால திட்டங்களை கூறி... நன்றாக உடுத்தி...உண்டு..வாழ்ந்தவர்...! இன்று அந்த உடல் இருக்கிறது...மீதி எல்லாம் எங்கே...எங்கே....எங்கே? இது ஒரு பக்கம் என்றால்....

உயிரோடு இருந்த போது அந்த மனிதர் பிரச்சினைகளோடு வாழ்ந்த போது வாயளவில் ஆறுதல் கூட வக்கில்லாத...மானுட கூட்டம்...எங்கே தன்னிடம் ஏதாவது கேட்டு விடுவானோ என்று ஓடி ஒளிந்த மனிதர்கள்...இன்று குய்யோ முறையோ என்று அழுது கொண்டு....ஏன் உயிரோடு இருந்த போது ஏன் இந்த பச்சாதாபம் உஙகளிடம் இல்லை?

இந்த இடத்தில் ஒரு முக்கிய மான கருத்தை பதிவு செய்ய விரும்புகிறேன்....உங்கள் சுற்றங்கள் அல்லது நட்பு வட்டாராத்தில் ஒருவருக்கு பிரச்சினை என்றால்....ஆறுதலாய் அவர் கரம் பற்றி நான் உன் கூட இருக்கிறேன் என்று சொல்லுங்கள்..... நீங்கள் பொருளாதர உதவி செய்வது எல்லாம் அப்புறம்... ! உங்களின் நம்பிக்கை... உங்களின் ஆதரவு..... நம்மோடு ஒருவர் இருக்கிறார் என்ற உத்வேகம்...அவரை மீளவைக்கும். ஆனால் அதை செய்யக்கூட திரணி இல்லாத...மனிதர்கள் நமது சமுதாயத்தில் மிகைப்பட்டு போனது தான்.... ஏற்றுக்கொள்ள முடியாத உண்மை!


....இரவு நகர்ந்து செல்ல....மெல்ல மெல்ல சென்னை சோம்பல் முறித்து எழுந்தது..... அதிகாலை சென்னையில் சேவலின் கூவலில்லா குறையை...ஆட்டோ சைரன்கள் போக்கிவிடும். நேரம் நகரத்துவங்கி உச்சியையும் தாண்டிவிட்டது.....12 மணிக்கு சொன்னார்கள்....பரிசோதனை செய்கிறார்கள் என்று.....1:30க்கு சொன்னார்கள் முடிந்து விட்டது என்று....2:30 மணிக்கு வெள்ளை பொட்டலமாய்....மாமவின் உடல் எங்களிடம் ஒப்படைக்கப்பட்டது. உறவுகள் எல்லாம் காரிலும்...ஆட்டோவிலும் வீடு நோக்கி ( நந்தனம் சிக்னல் அருகே....) விரைய... என்னோடு சேர்த்து ஒரு 10 பேர் அங்கே நின்றோம்...! அமரர் ஊர்தியி... மாமாவின் உடல் ஏற்றப்படது....அன்றுதான் அமரர் ஊர்தியின் உள் அமைப்பை பார்த்தேன்..ஒரு பக்கம் மட்டும் நீளவாக்கில் இருக்கை....இருந்தது... மீதி இருந்த ஊர்தியின் தரைப்பகுதியில்.. ..உடல் வைக்கப்படது. 10 பேரில் 6 பேர் ஆட்டோ பிடித்து சென்று விட....

நான் அமரர் ஊர்தியினுள் ஏற எத்தனிக்க.....என் தந்தை ஒரு நிமிடம் என் தோள் தொட்டு மெளனமாய் எனைத்தடுக்க... நானு அதை தடுத்து ஏறியதை பார்த்து...அப்பாவும்.....சித்தப்பாவும் என் கூட ஏறி அமர்ந்தார்கள்....அமரர் ஊர்தி மெல்ல நகர ஆரம்பித்தது....பரபரப்பான சென்னை நகரின் சாலைகள் வழியே.......!


தேவா. S


(தொடரும்.....)

Sunday, April 4, 2010

வாழ்வே மாயம்.... தொடர் பதிவு I I


இது வரை

http://maruthupaandi.blogspot.com/2010/04/i.html
இனி....

நிறைய உடல்களை பார்த்த பின் ஒரு உடன் ஒரு உடலின் கையில் தழும்பு இருப்பதை கண்டு என்னை அவசரமாய் அழைத்தர்...அந்த தழும்பை பார்த்த உடனேயே.. என் கண்களில் கண்ணீர் அனிச்சையாய் வந்தது....

என் தாயிருந்த...இடத்திலே...
நீ இருந்தாய்...
இன்று நீ இருக்கும் இடம்..
எது மாமா?

என்ன கவலை தீருமுன்னு...
நீ மரிச்சே...
உடல ஒழிச்ச நீ...
உடனே பிறப்பாயோ...
மனச அலைய விட்டு...
மறு ஜென்மம் எடுப்பாயோ...?

என் அம்மாமனே...
உனை.. எந்த பிறப்பில்...
காண்பேனோ....
இல்லை இனி காணமலேயே போவேனோ...?


மாமவின் முகம் தெளிவாய்....முன் தினம் செய்யப்பட்ட சவரம்.. நன்றாகதெரிய.....சாந்தமாய்...எனைப்பார்த்து சிரிப்பது போல தெரிந்தது.....
! என்னிடம் விவரிக்க எந்த ஒரு வார்த்தையோ பயமோ இல்லை....மனம் ஒரு நிலைப்பட்டு தனித்து கிடந்தது....! எந்த ஒரு சலனமும் இல்லாமல்.. தனிமைப்பட்டு கிடந்தது....! ஏதோ ஒரு விசயம் மெலிதாய் புலப்பட்டு ஆத்மா அதை உணர்ந்ததை... மனமும் மூளையும் கிரகிக்க முடியாததால்.. அந்த அனுபவத்தை சொல்ல முடியவில்லை.

மாமா இல்லை.....இது மாமாவின் உடல்...சரி....மாமா எங்கே? அல்லது எது மாமா என்று என்னால் அழைக்கப்பட்டது? ரமண மகரிசியின் நான் யார் என்பதின் தத்துவ விளக்கம்...என் மர மண்டையில் எதார்த்த கேள்விகளாய் வெளியே வந்தது. ஏதோ ஒரு விசயம் புரிந்தும் புரியாமலும்....இருந்தது....

" தம்பி போகலாம்பா.... என்று வாட்ச் மேன் உலுக்கிய போது மீண்டும் நிதானத்துக்கு வந்தேன்......"

கண்ணீரோடு வாட்ச்மேனின் கரம் பற்றி... நன்றியை என் கண்களில் இருந்து அவரது கண்களுக்கு மாற்றியபடி...சலமின்றி மார்ச்சுவரி....கதவை அடைந்த போது.....திரும்ப ஒருதடவை.....மாமாவின் உடலை திரும்பி பார்த்தேன்....

சண்முகம்......ஆமாம் அது தான் அவர் பெயர்.....சிவகங்கை மாவட்டம்....காளையார் கோவிலை அடுத்த மறவ மங்கலம்....பேருந்து நிறுத்ததில் இறங்கி...."செல்லச்சாமி பிள்ளை...." வீடு எதுன்னு கேட்டா.....வீட்டு வாசல்ல கொண்டு போய் விடுவாங்க....ஜமீன் தாருடைய பேரன் தான் இவரு...100 ஏக்கர் நிலம் வீடு வாசல்னு எல்லாம்...சூதாட்டம் மாதிரி சூறாவளியா சுத்தி...சென்னையில் காய்கறி வியாபரத்துல வந்து விட்டுருச்சு....

எல்லா கனவுகளும் வாழ்க்கை.....சூழ் நிலை இந்த இரண்டுகும் நடுவே பந்தாடப்பட்டு....மனிதனின் சுய அடையாளத்தை தொலைத்து விடுகிறது.....

கதவை திறந்து வெளியில் வந்தேன்....உறவுகளின் ஒப்பாரி என்னை ஒன்றும் செய்ய வில்லை...ஒரு ஓராமாய் நான் அமர்ந்து இருந்தேன்....இரவு நேர சென்னையின் வானம் மட்டும் என் தொடர்பில் இருந்தது.....!


தேவா. S(தொடரும்)