Pages

Sunday, May 19, 2013

கனவுகள் பூக்கும் காடு.....!கொஞ்சம் காலம் முன்பு ஹார்மோன் செய்யும் கலகம்தானடா என்ற பெயரில் ஒரு தொடரை தொடங்கி  இரண்டாவது பாகத்தோடு நிறுத்தியிருந்தேன். அனுபவங்கள்தான் வாழ்க்கையைக் கட்டமைக்கிறது. கனவுகள் வாழ்க்கையை  ஆள்கிறது. அதனால் மீண்டும் கனவுகளை நிரப்பிக் கொண்டு எல்லைகளற்ற பெருவெளியில் சிறகுகளை விரிக்கலாம் என்று நினைத்திருக்கிறேன். 

இந்தத் தொடரை நான் எழுத ஆரம்பித்திருந்த நேரத்தில் பதிவுலகம் என்ற ஒன்று இருந்தது. நிறைய பதிவர்கள் தினம், தினம் எழுதிக் கொண்டிருந்தனர். தமிழில் தட்டச்சு செய்து நமது உணர்வுகளைப் பதியலாம் என்று ஒருவித உற்சாகத்தில் நிறைய, நிறைய, நிறைய பேர்கள் எழுதிக் கொண்டிருந்த நேரம் அது. படிக்க பள்ளிக்கூடத்திற்கு செல்லாமல் மதிய உணவு கிடைக்குமே என்று பள்ளிக்குச் செல்லும் சிறுவனைப் போல இலக்கிய தாகத்தில் எழுத வந்த ஆள் இல்லை நான்...வாழ்க்கையின் ஓட்டத்தில் கிடைத்த அலாதியான நினைவுகளை எழுதிப் பார்க்க வந்தவன்.

எல்லோரையும் போல சமூகக் கோபங்கள் எனக்கும் இருக்கிறது. சமூகத்தின் அடிப்படையில் இருக்கும் புரிதலின்மைக்கு காரணம் ஆன்மவிழிப்பு இல்லாததுதான் என்பதை உறுதியாக நம்புவன். ஆன்மீகம் என்பது என்னைப் பொறுத்தவரைக்கும் கட்டிடங்களுக்குள் கடவுள் தேடும் ஒரு வழிமுறை அல்ல. நேர்த்திக்கடன் வைத்து நிறைவேற்றி விட்டு அதற்கு பலன் எதிர்பார்க்கும் கொடுக்கல் வாங்கலும் இல்லை. எனக்கும் இந்தப் பிரபஞ்சத்திற்கும் இருக்கும் தொடர்பு என்ன என்று ஆராய்வதே எனக்குத் தெரிந்த ஆன்மீகம்.

தன்னைப் புரிந்து கொள்ளாத மனிதன் ஒருக்காலும் மற்ற மனிதனுக்கு வழிகாட்ட முடியாது. தன்னைப் புரிந்து கொண்டவன் கூட வழிதான் காட்டமுடியுமே அன்றி கூட்டிச் செல்ல இயலாது. சைவ சமயத்தை பின்பற்றும் ஒரு குடும்பத்தில் பிறந்ததனால் என்னால் கட்டுக்கள் இன்றி எல்லா பக்கத்திற்கும் புலிப்பாய்ச்சல் பாயமுடிந்தது. அப்படி பாய்வதற்கான சுதந்திரத்தை என் பெற்றோர்கள் எனக்குக் கொடுத்திருந்தார்கள். சர்வம் சிவமயம் என்னும்  சைவசித்தாந்தத்தின் அடிப்படை எனக்கு உதவியது. கடவுள் எங்கே இருக்கிறார் என்ற தேடல்... யார் கடவுளாய் இருக்கக் கூடும் என்றும் யோசிக்க வைத்தது. 

தேடலின் வெளிப்பாடே எழுதும் ஆர்வத்தை உண்டாக்க... அறிந்ததை... உணர்ந்ததை... எழுதிப்பார்க்க இந்த வலையுலகம் ஒரு நல்ல களமாய் எனக்கு இருந்தது. நிறைய நண்பர்களைப் பெற்றுக் கொடுத்தது. எழுதும் எழுத்து நன்றாக இருக்கிறதோ இல்லையோ உனக்கு நான் மறுமொழியும், திரட்டிகளில் வாக்கும் இட்டு விடுவேன் எனக்கு நீ இடவேண்டும் என்று ஒரு கையெழுத்திடாத ஒப்பந்தம் அன்றைக்கு பதிவர்களிடம் இருந்தது. நானும் மொய் வைத்திருக்கிறேன், எனக்கு மொய் வரவேண்டும் என்பதற்காகவே....

நிறைய பேரை வாசிக்க வைக்க திரட்டிகளில் பதிவுகள் மேலே வரவேண்டும். அதற்கு பதிவர்களாகிய சக நண்பர்களின் உதவி வேண்டும்.  வாக்கு செலுத்தி வாக்கு வாங்கியும் இருக்கிறேன். இன்றைக்கு காலம் பதிவுலகம் என்ற ஒன்றையே உடைத்துப் போட்டு விட்டிருக்கிறது அல்லது நான் அந்த கட்டமைப்பில் இருந்து வெளியே வந்து விட்டேன் என்றுதான் சொல்ல வேண்டும். இந்த வலைப்பக்கத்தை வாசிக்க வருபவர்களுக்கு எந்த ஒரு சமகால லெளகிக சந்தோசங்களும் கிடைக்காது. கவர்ச்சிகரமான வசீகரிக்கும் எந்த ஒரு விசயமும் என்னிடம் இல்லை. நிலையாமை பற்றி நான் பேசுவது நிறைய பேருக்கு அலர்ஜியாய் இருக்கும். இருக்கும் வரையில் வாழ்ந்து சென்று விடலாமே... ஏன் நிலையாமை பற்றி எல்லாம் யோசிக்கவேண்டும் என்பது அவர்களின் எண்ணம்.

பிறந்த எல்லாம் மரிக்கத்தான் வேண்டும். இதில் எந்த ஒரு மாற்றமும் இல்லை. இடையில் ஏன் எனது, எனது என்று வாழ்ந்து வாழ்க்கையை சிக்கலாக்கிக் கொள்ளவேண்டும் என்பது மட்டுமே எனது கேள்வி. இங்கே என்னால் ஆனது என்று ஒன்றும் இல்லை. ஒரு செயலை நான் பூர்த்தி செய்ய குறைந்தது இன்னொருவர் உதவி எனக்கு வேண்டும், இப்படி இருக்கையில் நான் செய்தேன்...என்னால் மட்டுமே முடியும் என்று எண்ணுவது எல்லாம் மிகப்பெரிய மாயை.

இப்போது ஆன்மத் தேடல் இருக்கும் சிலர் தொடர்ச்சியாக இந்தத் தளத்தை வாசிக்கிறார்கள் என்பது எனக்கு ஒரு உந்து சக்தியாய் இருந்து எழுதவேண்டும் என்ற எண்ணத்தை தோற்றுவிக்கிறது. மனிதர்களின் புத்திக்கு எட்டாத விடயங்களைப் படைத்து விட்டு படியேறி வந்து படித்துக் கொள்ளுங்கள் என்று சொல்லும் மாமேதைத்தனம் கொண்டவர்களையும் கொண்டது இந்த சமூகம். அதே போல எனது அருட்தந்தை, ஆன்மீக வழிகாட்டி, எழுத்துலகின் குரு, ஐயா திரு. பாலகுமாரன் போன்றவர்கள் வாழ்வியலை, மனித வாழ்வின் சிக்கல்களை, அவர்களைச் சுற்றி இருக்கும் முரண்களை, ஆன்மீகத் தேடலை, கடவுளின் அவசியத்தை, ஒழுக்கத்தை, நெறி முறைகளை, அன்பை, சகிப்புத்தன்மையை, ஞானத்தை தங்களின் எழுத்தில் குழைத்து குழைத்து கொடுத்து பேரறிவுப் பால் புகட்டியதால் வளர்ந்த குழந்தைகள் என்னைப் போல எத்தனையோ பேர்கள்.

சாமானியனைச் சென்று சேராத எழுத்து இருந்து என்ன பயன்? அது பொக்கிசமாகவே இருக்கட்டும்... ஆனால் பயன் தராத பொக்கிசம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் ஒன்றுதான். வெகுஜன தொடர்புக்காய், புரிதலுக்காய் எழுத்து பயன்படவேண்டும். ஆன்மீகம் என்னும் பேரறிவைப் பகுத்தறிவு என்னும் புரிதலின்மையால் இந்த சமூகம் மறுத்துக் கொண்டிருப்பதற்கு நம்மிடையே இருக்கும் ஆன்மீகப் போலிகளும், மூட நம்பிக்கைகளுமே காரணம். தன்னுள் இருக்கும் வெறுமையை, காலித்தன்மையை உணர்ந்தவனுக்கு கிரீடங்கள் எதற்கு? பக்தர்கள் எதற்கு? கற்றுக் கொடுக்க காசு எதற்கு? நான் கடவுள் என்று சொல்லிக் கொள்ளும் மமதை எதற்கு...?

ஆன்ம உயர்வு எல்லோரையும் சமமாய் பார்க்கச் சொல்கிறது. வாஞ்சையோடு மனதால் அன்போடு  அணைத்துக் கொள் என்கிறது. குழந்தைகளை கை பிடித்து அழைத்துச் செல்லும் ப்ரியத்தோடு சக மனிதரை அழைத்துச் செல்லச் சொல்கிறது. திருப்தியின் உச்சத்தில் என்ன தேவைகளை இந்த உலகம் கொடுத்து விட முடியும். நான் வெறும் காலியானவன், என்னுள் எண்ணங்கள் வந்து வந்து செல்கின்றன அவ்வளவே என்று உணருமிடத்தில் பேரமைதியைத் தவிர வேறொன்றும் இருப்பதில்லை. நிறைய பேர் இங்கே தன்னை யாரென்று பிரகடனப்படுத்திக் கொள்ளவே எழுதுகிறார்கள். ஆனால் பாலகுமாரன் ஐயா போன்றவர்கள் போகிற போக்கில் தங்களின் அகந்தையை அழித்துக் கொள்வதோடு வாசிப்பவனின் அகந்தையையும் சேர்த்தே அழிக்கவும் செய்கிறார்கள்.

எழுதுபவன் தனது ப்ரியத்தை எழுத்தில் கரைத்து எழுத வாசிப்பவனால் அந்த ப்ரியத்தை உணரமுடிகிறது. நிறைய பேர் வாசிக்க அந்த ப்ரியம் திரும்ப எழுதியவனுக்குப் போய்ச் சேருகிறது. அங்கீகாரம், பட்டம், பதவி, கூட்டம் இவை எல்லாம் கடந்து ஒரு மனிதனுக்கு தேவை எவ்வளவு பேர்கள் அவனை நேசிக்கிறார்கள் என்பதே...

எழுதுவது ஒரு தவம். இங்கே பொருளீட்ட வேண்டும் என்ற எண்ணத்தோடு, புகழ் பெறவேண்டும் என்ற ஆசையோடு மட்டும் எழுத வருபவர்களை எழுத்து தூக்கி விடுவது போல தூக்கி விட்டு சறுக்கி விழச்செய்து விடுகிறது. தலைக்கனத்தோடு வருபவர்கள் தலைகுப்புற விழுந்து விடுகிறார்கள். தன்னை மிகச்சிறந்த எழுத்தாளன் என்று பிரகடனப்படுத்திக் கொள்ள வருபவர்களின் புத்தியிலிருந்து கற்பனாதேவி இறங்கிப் போய்விடுகிறாள். பிறகு இவர்கள் கற்பனையை எழுத முடியாமல் கர்வத்தை எழுதுகிறார்கள். வாசிப்பவன் கர்வத்தை வாங்கிக் கொண்டு பின் காறி உமிழாமல் என்ன செய்வான்.....?

வாழ்க்கை ஒரு அழகிய கவிதை அதில் அர்த்தங்கள் தேடுவது அபத்தம். வாழ்க்கையை  அதன் பரிபூரணத்தை வெறுமனே வாசித்து விட்டு, ரசித்து நகர்ந்து விடுதல் சுகம். பட்டாம் பூச்சியைப் பார்க்க மட்டுமே உங்களுக்கு அனுமதி... அதன் அழகை ரசித்தபடியே நகர்ந்து விடுங்கள்...அதைப் பிடித்து அதன் இறகிலிருக்கும் வர்ணத்தைப் பற்றி ஆராய்ந்து குரூரத்துக்குள் விழுந்து விடாதீர்கள்.

மீண்டும் கட்டுரையின் ஆரம்ப வரிகளுக்கு வருகிறேன். தொடர்ச்சியாய் இனி ஹார்மோன் செய்யும் கலகம்தானடா தொடரை (?!) எழுதுகிறேன் யாரேனும் ஒரு பத்து பேர் வாசிப்பீர்கள் என்ற நம்பிக்கையோடு. முந்தைய பாகங்களை இந்த சுட்டியை சொடுக்கி வாசித்துக் கொள்ளுங்கள். 

அந்தக் கதையில் வேறு என்ன இருக்கப் போகிறது...

என் வாழ்க்கையின் 
திரும்பிய பக்கமெல்லாம் 
எதிர்ப்படுவது...
காதலும் கடவுளுமன்றி 
வேறெதுவுமில்லை....!

வாழிய நலம்....!


தேவா. SSaturday, May 18, 2013

முள்ளிவாய்க்கால் சோகம்...நான்காமாண்டு நினைவுநாள்!நான்காண்டுகள் ஓடோடி விட்டன. ஆறாத வடுக்களாய் இன்னமும் நம்முள் பரவிக்கிடக்கும் சோகச் சுவடுகளை காலம் எப்போதும் அழித்து விடமுடியாது. உலகில் இருக்கும் தொன்மையான கட்டிடங்கள், பறவைகள், விலங்குகள், நினைவுச் சின்னங்கள் எல்லாம் போற்றிப் பாதுகாக்கப்படவேண்டும் என்று மனிதம் பெருமைப் பேசிக் கொண்டிருந்த போதே மூவாயிரம் ஆண்டுகளுக்கும் மேலான மூத்த மொழி பேசி வாழ்ந்த ஒரு தேசிய இனம்  கொத்து கொத்தாக ஈழத்தில் இன்றுதான்  அழித்தொழிக்கப்பட்டது. அடிப்படையில் சுதந்திரமாய் தன் சொந்த மண்ணில் வாழ விரும்பிய ஒரே காரணத்திற்காக போராடிய மக்களை அநீதி கொன்றழித்ததை  பதிந்து கொண்டு காலம் தலைகுனிந்து கொண்டது.

சொந்த மண்ணில் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்ட பூர்வகுடிகளின் வாழ்வியியல் உரிமைப் போரட்டத்தை தீவிரவாதம் என்று முத்திரை குத்திய மிருகங்கள் இதோ நம் கண் முன்னே ஆர்ப்பட்டமாய் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். சர்வதேசம் எப்போதுமே வெட்கக்கேட்டினை தனது முகத்தில் வடுக்களாய் ஏந்தியபடியே நகர்ந்து கொண்டிருக்கிறது. வரலாற்றை திருப்பிப் பார்த்தால்  சத்தியமும் நீதியும் எவ்வளவு ஜெயித்திருக்கிறதோ அதற்குச் சரிக்கு சமமாக அல்லது கூடுதலாக அநீதியும் அடக்குமுறையும் ஜெயித்திருக்கிறது. மனிதநேயம் என்னும் வார்த்தை எப்போதும் சாதகபாதகங்களைப் பார்த்தே பயன்படுத்தப்பட்டுமிருக்கிறது.

பொதுமக்களையும், குழந்தைகளையும், முதியவர்களையும், அதுவும் பெண்களை வன்புணர்ச்சி செய்தும் சிங்களவன் செய்த கொலைகளை படங்களாகாவும், காணொளியாகவும் கண்ட பின்னரும் விழித்துக் கொள்ளாத சர்வதேசத்தின் மனிதநேயம் இனி இருந்தால்தான் என்ன செத்தால்தான் என்ன? அன்பும் கருணையும், சகிப்புத்தன்மையும் கொண்ட இந்தியப் பேரரசு தனது அண்டை தேசத்தில் நடாத்தப்பட்ட பெரும் இன அழிப்பினை அதுவும் தனது தேசத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஏழரை கோடி தமிழர்களின் தொப்புள்கொடி உறவுகள் கொன்றழிக்கப்பட்டதை குரூரமாய் அனுமதித்ததும் அதை தடுத்து நிறுத்தாமல், தட்டிக்கேட்காமல் இன்னமும் கள்ள மெளனம் சாதிப்பதும் தமிழகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் அத்தனை தமிழர்களுக்கும் செய்த ஒரு வரலாற்று துரோகம்.

வரலாற்றில் தமிழன் எப்போதுமே இரண்டு பிரிவாய்த்தான் இருந்திருக்கிறான். அநீதியை எதிர்த்துப் போராட ஒரு கூட்டம் இருந்தால் அவனைக் காட்டிக் கொடுக்க ஒரு கூட்டம் அவன் கூடவே வளர்ந்து வரும். தங்களின் வயிறு வளர்க்க மானத்தைக் கூட அது இழக்கும். மானத்தை விற்று தங்களையும் தங்களின் குடும்பத்தினரையும் காத்துக் கொள்ள ஈழத்தில் போராடிய மக்களுக்கு நடுவே ஒரு கூட்டமும், தாய்த்தமிழகத்தில் ஒரு கூட்டமும் அது போல இருந்தது. அந்தக் கூட்டம் தமிழர்கள் முன் தாங்களும் தமிழர்கள்தான் என்று நீலிக் கண்ணீர் வடித்தபடியே திரைக்குப் பின்னால் எல்லா நாடகங்களையும் அரங்கேற்றியும் கொண்டது.

இதோ நான்காண்டுகளைக் கடந்து விட்ட இந்தச் சூழலில் தாய்த்தமிழகத்தில் ஈழம் நிஜமான உணர்வாளர்களால் எந்த வேகத்தில் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறதோ அதே அளவு போலிகளாலும் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. எத்தனை பிரச்சினைகள் தமிழகத்தில் இப்போது விரவிக் கிடந்தாலும் ஈழத்தைப் பேசாமல் எந்த ஒரு அரசியல்வாதியும் அரசியலை செய்ய முடியாது என்னும் ஒரு அசாதரண சூழலை ஈழ மண்ணில் உயிரிழந்த எம்மக்களின் மகத்தான தியாகம் இன்று உருவாக்கிக் காட்டி இருக்கிறது. போர் என்றால் உயிர் இழப்பு இருக்கத்தானே செய்யும் என்று சொன்னவர்களும், மழை விட்டாலும் தூவானம் விடாது என்று சொன்னவர்களும் இன்று ஈழம், ஈழம் என்று குய்யோ முறையோ என்று கதறிக் கொண்டிருக்கிறார்கள்.

தொண்டைகளைச் செருமிக் கொண்டு பல தீர்மானங்களை ஈழமக்களுக்கு ஆதரவாக நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்கள், இந்தியப் பேரரசுக்கு அழுத்தங்கள் கொடுக்கிறார்கள். கண்டனங்களைத் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆதரவை வாபஸ் வாங்கிக் கொள்கிறார்கள். மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சி இதனால் தமிழகத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறது...

என்றாலும் கொத்துக் கொத்தாய் வேதியல் குண்டுகளை போட்டு வெள்ளைக் கொடிகளை ஏந்திவந்தவர்களையும் கனரக ஆயுதங்களைக் கொண்டு சிங்களப் பெளத்த பேரினவாத அரசு அழித்துக் கொண்டிருந்த போது தமிழகத்தின் இருபெரும் அரசியல் கட்சிகள்  வீதியில் இறங்கி தமிழகத்தை ஸ்தம்பிக்க வைக்காமல் அடக்கி வாசித்த அசிங்கத்தையும் வலியோடு நாம் நினைவு கூற வேண்டி இருக்கிறது.

ஈழத்தின் போரட்டத்தை தயவு செய்து  ஆயுதம் ஏந்திய அகிம்சைக்கு எதிரான போராட்டமாய் பார்த்து விடாதீர்கள் தோழர்களே...!!! தந்தை செல்வா என்னும் ஈழத்து காந்தி அகிம்சை வழியில் போராடிப் போராடி அகிம்சை என்பது மனிதர்களுக்கான போரட்டம் மிருகங்களுக்கானது அல்ல என்று உணர்ந்த பொழுதில் வேறு வழியின்றி அடித்த வலியைத் தாங்காது திருப்பி அடித்தவர்கள் நாம் என்பதை உணருங்கள்.

தமித்தாய்க்கு நூறு கோடி ரூபாய்க்கு சிலைவைக்க திட்டங்கள் தீட்டப்படும் இதே நாம் வாழும் காலக்கட்டத்தில்தான் தமிழ் பேசிய ரத்தமும் சதையுமான நமது உறவுகள் கொன்றழிக்கப்பட்டனர் என்ற உயிர் உறைக்கும் உண்மையை அறியுங்கள்! ஈழத்தமிழர்களின் போராட்டம் தமிழர் வரலாற்றில் வீரம் செறிந்த பக்கங்களில் பொறிக்கப்படவேண்டிய ஒரு போராட்டம் என்பதையும் அதை வழிநடத்திய நமது அண்ணன் பிரபாகரன் தான் என்றென்றும் தமிழகளின் நலம் விரும்பிய தலைவன் என்றும் நமது பிள்ளைகளிடம் அழுத்திச் சொல்லுங்கள்.

வரலாறு என்பது எங்கோ யாரோ எழுதுவது அல்ல தொடர்ச்சியாய் நம் நினைவுகளில் ஊறிக் கிடப்பது. ஒவ்வொரு மே 17 மற்றும் 18களில் நிகழ்ந்தேறிய இன அழிப்பில் வீரச்சாவடைந்த நம் உறவுகளுக்கு ஒவ்வொரு வருடமும் மறக்காமல் நமது அஞ்சலிகளைச் செலுத்துவதோடு ஜனநாயக ரீதியில் நமது வஞ்சத்தை தீர்த்துக் கொள்ளவேண்டும் என்பதையும் எப்போதும் நினைவு கொள்ளுங்கள்.

தமிழர் நலம் பேசுகிற, தமிழர் வாழ்வுரிமை பற்றிய தொலைநோக்குப் பார்வைகள் கொண்ட, தனித்தமிழ் ஈழத்திற்கு ஆதரவு கொடுக்கிற அரசியல் கட்சிகளை மட்டுமே தமிழத்தில் ஆதரியுங்கள். வீதி இறங்கிப் போராடும் அரசியல் நாடக சக்திகள் சாதாரண மக்களாகிய நம்மை  நீங்கள் என்ன செய்து சாதித்தீர்கள் என்று  கேலிகள் செய்யக் கூடும்..... இணையத்தில் எழுதி என்ன கிழித்து விடுவீர்கள் என்று நம்மை ஊனப்படுத்தி இணையப்போராளிகள் என்று ஏளனம் செய்யக்கூடும்....

அவர்களின் பிரச்சாரங்களையும் பரப்புரைகளையும், காலில்  போட்டு மிதியுங்கள்...!!!! உங்களின் மனசாட்சியிடம் கேள்விகள் கேட்டு....யார் தமிழர் நலம் விரும்பிகள்...?யார் தமிழர்களின் வியர்வையை மூலதனமாக்கி நாடகமாடுகிறார்கள் என்பதை கணியுங்கள். ...!

நான் என்னை சேர்ந்த பத்து பேரிடம் சொல்வேன்...நீங்கள் உங்களைச் சேர்ந்த பத்து பேரிடம் சொல்வீர்கள்....சிறுகச் சிறுக நமது உணர்வுகள் பற்றிப் பரவும். வீதி இறங்காமலேயே....மேடை நாடகங்கள் நிகழ்த்தாமலேயே....மெளனமாய் வரவிருக்கும் நாடாளுமன்றத்தேர்தலில் நமது உணர்வுகளைப் வெளிப்படுத்துவோம்.

ஆயிரம் பேர்கள் இந்தக்கட்டுரையப் படித்து தமிழகமெங்கும் பரவி இந்தக்கருத்துக்கள் சென்று சேரப்போவதில்லை ஆனால் என்னைச் சேர்ந்த ஒரு பத்து பேர் வாசிக்க அதில் ஒருவர் உணர்வு பெறக்கூடும்...என்ற விருப்பத்தையே இங்கே எழுத்துக்களாக்கி இருக்கிறோம்...! காலம் எல்லாவற்றையும் மாற்றும் சக்தி கொண்டது...நம்மை  கீழே இறக்கி வைத்த காலம் மீண்டும் நம்மை மேலே ஏற்றும்....அன்று தமிழர்கள் கொடி...பட்டொளி வீசி பறக்கும்...!

மே17, 18ல் முள்ளிவாய்க்காலில் வீரச்சாவடைந்த அத்தனை தமிழ் உறவுகளுக்கும் வீரவணக்கங்கள்!!!!


தேவா. SThursday, May 16, 2013

புத்தனின் கனவு...!மேகங்களுக்கென்று திசையொன்றும் இருப்பதில்லை
காட்டு மலர்கள்  யார் பார்க்கவும் பூப்பதுமில்லை
ப்ரியங்கள் என்னும் விதையில்
விரிந்து கிடக்கிறது அகண்டப் பெருவெளி...!
இரவுகளை உடுத்திக் கொண்டு
வருவதெல்லாம் பகல்களென்றும்
பகல்களுக்குள் படுத்திருப்பது இரவென்றும்
யார்தான் அறிவார்..?
கனவுகளை எல்லாம் விழிகளொன்றும் காண்பதில்லையே...
அவை புலனறிவுக்கு அகப்படாத
புத்த நிலையின் தத்துவ விளக்கங்கள்தானே....!
பெயரில்லாத ஒன்றுக்கு
எத்தனை பெயரிட்டாலும்
அது பெயரில்லாததே....
திட்டமிடாத புத்தி
எந்த திசையைத்தான் கால்களுக்குச்
சொல்லிக் கொடுத்து விட முடியும்..?


தேவா. SThursday, May 9, 2013

யாசகன்...!வீதியிலிறங்கியாயிற்று. தீர்மானத்திலொரு மாற்றமுமில்லை. கடமைகளென விதிக்கப்பட்ட பொய்களை புள்ளி விபரத்தோடு தீர்த்துமாயிற்று. தேவைகளை தீர்த்த பின்பு யாருக்கும் தேவையில்லாதவனாய் என்னை மாற்றிக் கொண்டாயிற்று. உயிரைச் சுமந்து கொண்டிருக்கிறேனென்ற கள்ளப் பெருமிதம் கொண்ட உடலைப் பொதியெனச்  சுமந்து சிரித்தபடியே உயிராய் கிளம்பியாயிற்று.

கால்களின் திசைகளை தயவு செய்து கணித்து விடாதே என் புத்தியே, கனவுகள் என்று எந்தக் கருத்தையும் விஸ்தரித்துப் பார்த்து விடாதே என் மனமே..! நான் காலப் பள்ளத்தை அறிவினை உடைத்தெறிந்து தாண்டி இருக்கிறேன். கற்பிதங்கள் கொண்ட வாழ்க்கையை தீயிட்டுக் கொளுத்திய திருப்தியில் நடந்து கொண்டிருக்கிறேன். வாழ்க்கையின் வடிவம் தேவைகளில் இல்லை. வாழ்க்கையின் வடிவம் தேவைகளற்றது. நிபந்தனைகளற்றது... கொள்கைகளற்றது... சிந்தனைகளற்றது. துள்ளியோடும் புள்ளி மானின் தேவைகளை தீர்த்துக் கொள்ள அது யாதொரு கருத்தும் எடுத்துக் கொள்வதில்லை. இட்ட பிச்சையை புசிக்கும் ஞானத்தை பேரிறை இயற்கையாக்கி வைத்துவிட்டு மனிதனை மட்டும் செயற்கையாக்கி வைத்து விட்டது.

எங்கோ செல்லட்டும் என் பயணம். யாருக்காகவும் இல்லாது மரிக்கட்டும் எனது உயிர். ஏதோ ஒரு கானகத்தினூடே செல்லரித்துப் போகட்டும் இந்த உடல். யாசகனுக்கு என்ன திட்டம் வேண்டி இருக்கிறது. இட்டால் பிச்சை, இடாவிட்டால் பசி. எந்தச் செடியும் காய்கறியை விற்பனைக்காய் உற்பத்தி செய்வதில்லை. எந்த சுனையும் பொருள் வாங்கிக் கொண்டு தாகம் தீர்ப்பதில்லை. விளைபவைக்கு என்ன வியாபார யுத்தி தெரியும்? இயற்கையை செயற்கையாக்கி வர்ணமடித்து, அலங்காரம் செய்து நான் செய்தேன் என்று கூறி பெருமையடித்துக் கொள்வதைத் தவிர வேறு என்ன தெரியும் இந்த மனிதர்களுக்கு..?

இருந்ததைதானே நீ கூட்டிக் கழித்து கண்டேன் என்கிறாய்..? எல்லாவற்றையும் நீ கூட்டிக் கழிக்கிறாய் உன்னை யார் கூட்டிக் கழித்தது...? உன் ஒவ்வொரு இதயத் துடிப்பிற்கும் இடைப்பட்ட பேரமைதியில் படுத்துக் கிடப்பது யார்...? நான் யாசகன். எனக்கு மனிதர்களின் கூட்டு தேவையில்லை. அடர் கானகங்களில் வழிந்தோடும் நீர் என்னிடம் என்ன பேரம் பேசி விட்டா தண்ணீர் குடிக்கச் சொல்லப் போகிறது...? பறிக்க ஆளின்றி மண்ணில் விழுந்து கிடக்கும் கனிகள் என்ன.. நம்மிடம் காசு கொடுத்து விட்டு கை வை என்றா சொல்லப் போகிறது...?

வாழ்க்கை உங்களுக்கு அருளப்பட்டது. நீங்கள் வாழ்க்கையை நாசப்படுத்தினீர்கள். இப்படியாய் வாழ்க்கையை நாசப்படுத்தி விட்டு அதை வரலாறு என்றீர்கள். மனிதர்கள் மனிதர்களை அடக்குவதைப் பெருமை என்றீர்கள். வலு உள்ளவனைத் தலைவன் என்றீர்கள்..., அழகாயிருந்த எல்லாவற்றையும் ரசிக்க மறந்து அடைய நினைத்தீர்கள்...

உங்களைச் சுற்றி வெளிச்சத்தை ஏற்படுத்தி சந்தோசத்தை எல்லா பாகங்களிலும் நிறைத்து வைத்திருந்தது இயற்கை என்னும் பேரிறை.. நீங்கள் கட்டுப்பாடுகளைப் போட்டுக் கொண்டு ஒழுக்கம் என்னும் பொய்யைச் சுமந்தபடியே எல்லா வெளிச்சத்தையும் அணைத்து விட்டு இருளில் புலம்பிக் கொண்டிருக்கிறீர்கள்...!  இயற்கைக்கு தெரியாத ஒழுக்கமா என்ன? பூமியின் ஒழுக்கத்தில்தான் உங்களின் இரவும் பகலும் தனக்கு 24 மணிநேரம் என்று கணக்கிட்டுக் கொண்டது. அது சூரியனை சுற்றும் ஒழுக்கம் தான் உங்களின் வருடமாகிப் போனது..?

அதன் ஒவ்வொரு நகர்வும் உங்களுக்கு காலங்கள் என்று போதிக்கப்பட்டது. இயற்கையின் ஒழுக்கம் உங்களுக்கு வாழ்க்கையைக் கொடுத்தது. நீங்கள் உருவாக்கிய ஒழுக்கங்கள் உங்களைப் பைத்தியக்காரர்களாக்கி வைத்திருக்கிறது. ஆமாம்...

நாடென்று ஒரு ஒழுக்கம் உண்டாக்கி எல்லைகளை வகுத்துக் கொண்டீர்கள். என்னவாயிற்று..? எல்லைகள் கடந்து கால்கள் பதித்தால் மிருகமென மாறி உயிர் பறித்துக் கொண்டீர்கள். மொழியென்ற ஒரு ஒழுக்கத்தை பின்பற்றி பெருமைகள் பேசிக் கொண்டீர்கள். என்ன ஆனது..? உங்கள் மொழியே பிராதனமென்று கூறி சக மனிதரிடம் வன்மம் கொண்டீர்கள். மதமென்ற ஒரு ஒழுக்கத்தையும், சாதியென்ற ஒரு கட்டுப்பாட்டையும் ஏற்படுத்திக் கொண்டு மனிதரை மனிதர் ஈனப்படுத்தி கொலைகள் செய்து கொண்டீர்கள்? இப்படி எதை எதையெல்லாம் ஒழுக்கம் என்று இயற்றினீர்களோ அவை எல்லாம் உங்களின் அழிவுக்கான மரண சாசனம் ஆகிப் போய்விட்டது.

வழிமுறையை சொன்ன ஞானிகளை எல்லாம் கொன்று போட்ட உங்களின் ஒழுக்கங்கள், பல ஞானிகளின் கூற்றை வசதிக்கேற்ப மாற்றிக் கொண்டு விட்டு அந்த அயோக்கத்தனத்திற்கு துணையாய் அவர்களின் பெயர்களை போட்டுக் கொண்டது.

இதோ...உங்கள் ஒழுக்கங்களை எல்லாம் என் காலடியில் போட்டு மிதித்து விட்டேன். இப்போது நான் ஒரு யாசகன். யாசகம் என்பது பிச்சை அல்ல. யாசகம் என்பது வாழ்க்கை. யாசகம் என்பது தியானம். யாசகம் என்பது தான் யாருமல்ல என்னும் அகங்காரம் அழிக்குமொரு வித்தை. சூரியனிடமிருந்து  பெற்ற பூமியின் யாசகத்தில் பகல்களைக் கொண்டாடும் பிச்சைக்காரர்கள்தானே இந்த பூமி முழுதும் நிரம்பிக் கிடக்கிறார்கள். என் வார்த்தைகளை  எல்லாம் எரித்து விட்டேன். என் சொற்கள் எல்லாம் பட்டுப் போய்விட்டன. என்னைச் சுற்றிலும் என்னை அடையாளம் காண எந்த மனிதரின் அவசியமும் எனக்குத் தேவையில்லை. போதும் நான் புலனறிவோடு வாழ்ந்தது.

எப்போதும் பேசாத மலைகள், எப்போதும் பேசும் மரங்கள், பாதுகாப்புக்காய் வன்மம் கொள்ளும் விலங்குகள், யாருக்காகவும் நிற்காத நதி என்று என் முன் எதிர்ப்படும் எதுவுமே என்னிடம் நான் யாரென்று விசாரிக்கப் போவதில்லை. நான் யாருமில்லை என்பதை மனிதர்களிடம் சொல்லி சொல்லி நான் அலுத்துப் போய்விட்டேன். மனிதர்களின் ஆறாம் அறிவுக்கு எட்டாத பகுத்தறிவின் உச்சம் மட்டுப்பட்ட நிலையிலிருக்கும் யாவும் விளங்கி நடக்கும் விந்தையை என் விழிகளால் வாங்கிக் கொள்ளப் போகிறேன்.....

தொப்புள் கொடி அறுத்து நான் விட்டுப் பிரிந்த பெற்றவளின் நினைவுகளை எத்தனை முயன்றாலும் அறுக்க முடியாத அஞ்ஞானத்தின் ஓரத்தில் ஒட்டிக் கொண்டிருக்கும்  பிரபஞ்சத்தின் மூலத் தொடர்பை, கருவறைக்குள் மிதந்து கொண்டிருக்கையில் உணவு கொடுத்த பெருங்கருணையின் அன்பை, அப்போது என் உடல் நிறைத்த பிராணனை... இதோ.. இதோ நான் பரிபூரணமாய் அனுபவிக்கத் தொடங்கி விட்டேன்....

எங்கிருந்து பிச்சை இடுகிறானோ அந்தக் கருணா மூர்த்தி... இதோ புலன்களை எல்லாம் பூட்டிக் கொண்டு தொடங்கி விட்டது இந்த யாசகனின் பயணம்....

அவித்தை அழிக்கும்
வித்தைக்காய்...
கொண்டேன்
ஒரு ஜட சரீரம்...!

வித்தையானவன்
வித்தையறிந்தவன் சித்தம்
இதுவெனெ கிடந்து
போக எத்தனிக்கையில்
நித்தம் நடந்திடும் 
நாடகங்களில் பித்தனாகிறேன்
நான்!

என்று தொடங்கியோ..?
என்று முடியுமோ...?
இந்த சத்து சித்துவின் ஆனந்தம்!
பற்று கொண்டு நான்
வாழ்ந்து அழிகையில்
வந்து போகுமோ 
ஒரு காரணம்?


தேவா. SSunday, May 5, 2013

சிறகுகள் இன்றி பற...!இரண்டு பெண்களை அஃபிசியலாய் கடந்த பின்பு ) தன்னுடைய 50+ல் நிஜமான காதலுக்குள் விழுந்திருக்கிறார் முன்னொரு நாளில் காதல் இளவரசன் என்றழைக்கப்பட்டு இப்போது உலகநாயகனாயிருக்கும் ஜீனியஸ் கமல்ஹாசன். எத்தனையோ படங்களில் காதலை நடித்துக்காட்டிய அந்த மாபெரும் கலைஞனை காதல் பூரணமாய் ஆக்கிரமித்து இருந்ததை சமீபத்தில் கண்ட நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியின் மூலம் அறிய முடிந்தது.

திருமணம்தான் காதலின் உச்சம், அதுவே காதல் வென்றதின் அடையாளம் என்று இன்னமும் சொல்லிக் கொண்டிருப்பவர்களைப் பார்த்தால் எனக்குப் பாவமாய்த்தான் இருக்கிறது. நான் +2 படித்துக் கொண்டிருந்த போது ஜுவியில் காதல்படிக்கட்டுகள் என்று பிரபலங்களைக் கொண்டு எழுதப்பட்ட கட்டுரை வெளிவந்துக் கொண்டிருந்தது. ஜூவி வந்தவுடன் அடித்துப் பிடித்து வாங்கி வரிவிடாமல் வாசித்து காதலை உள்ளுக்குள் கோடையில் தண்ணீரைப் பிடித்து சட்டைக்குள் ஊற்றிக்கொள்ளும் உற்சாகத்தோடு வாசித்தும் முடிப்பேன்.

வைரமுத்து எப்போதுமே காதலை வார்த்தைப்படுத்துவதில் இராட்சசன். அவரது வரிகளை வாங்கிக் கொண்டவர்களின் விழிகளில் ' காதல் பூ ' பூக்காமல் இருந்தால் அவர்கள் ஒன்று மொழியறியாதவர்களாக இருக்க வேண்டும்...இல்லையேல் மனம் வறண்டவர்களாயிருக்கவேண்டும். ஏனென்றால் எந்தச் செடி மழைக்கு மறுபதில் சொல்லாமல் இருந்திருக்கிறது. பூவாகவோ, காயாகவோ அது தன் மெளனத்தை உடைத்துதானே ஆகவேண்டி இருக்கிறது.

வைரமுத்துவிற்குப் பிறகு இன்னமும் நினைவில் இருக்கும் காதல் படிக்கட்டுகள் நடிகர் பார்த்திபன் எழுதியது. சட் சட் என்று வெடித்துப் பூக்கும்  மொட்டுக்களை பார்க்கும் போது என்ன பரவசம் தோன்றுமோ அதே அளவு பரவசத்தை பார்த்திபனின் வார்த்தைகள் நமக்குள் இறக்கிவைக்கும். சுமை தூக்கிச் செல்லும் ஒரு கூலியொருவன் உச்சி வெயிலில் ஒரு மரத்தடியில் சுமையை இறக்கி வைத்து விட்டு வயிறு நிறைய நீர் பருகி மரத்தின் வேரில் சாய்ந்து கொள்ளும் சுகத்தைக் காதல் படிக்கட்டுகள் கட்டுரை தப்பாமல் எனக்குக் கொடுத்திருக்கிறது.

பார்த்திபனின் சீதாயணம் அப்படித்தான் இருந்தது. அவரது காதல் வென்றது என்று நான் நினைத்துக் கொண்டிருக்கையில் சிலவருடங்கள் கழித்து அது தோற்றுப் போனதாய் உலகம் அறிவித்தபோது அதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. காதலை ஒரு திருமணத்தின் மூலம் ஜெயிக்கவைப்பதும், பிறகு திருமணம் முறிந்தவுடன் அதைத் தோற்கவைப்பதும் இந்த சமூகத்தின் ஒரு பொய் விளையாட்டு. காதலுக்கும் திருமணத்திற்கும் எந்த ஒரு சம்பந்தமும் இருக்க முடியாது என்றுதான் நான் சொல்வேன். நீங்கள் காதலித்தவரை திருமணம் செய்து கொள்கிறீர்கள். திருமணம் செய்துகொள்வது எதற்கு என்று நான் கேட்டால் காதலிக்க என்று எத்தனை பேரால் பதில் சொல்ல முடியும்?

அப்படியே காதலிக்க திருமணம் செய்துகொள்கிறேன் என்று கூறுபவர்கள் ஏற்கெனவே காதலித்துக் கொண்டுதானே இருந்தார்கள்...? பிறகு திருமணம் எதற்கு..? என்னைப் பொறுத்தவரை திருமணம் என்பது ஒரு சமூக ஒழுங்கு. ஒழுங்கிலும் காதல் இருக்கலாம் அவ்வளவுதான். அதற்காக இந்தக் கட்டமைப்பில் இல்லாதது எல்லாம் காதலற்றது என்று பழிசுமத்துவதில் என்ன நியாயம் இருக்கிறது? இன்னும் சொல்லப்போனால் மரணம் என்ற ஒன்று இல்லாவிட்டால் எப்படி கடவுள் அவசியமில்லாதவராகிப் போவாரோ....அப்படியே காமம் என்ற ஒன்று இல்லாவிட்டால் இங்கே காதல் என்ற வார்த்தை அவசியம் இல்லாமலேயே கூட போயிருந்திருக்கும்.

இப்போது கமல் கெளதமிக்கு துணை. கெளதமி கமலுக்குத் துணை. ஒருவரின் வலிகளை வாங்கிக் கொண்டு, பலவீனங்களைப் புரிந்து கொண்டு, நிபந்தனைகளற்று அவரால் எதுவுமே பதிலுக்கு செய்ய முடியாது என்றாலும் யார் ஒருவரை நாம் நேசிக்கிறோமோ அங்கே காதல் விஸ்வரூபமெடுத்து நிற்கிறது. கடவுள் என்ற இதுவரை நான் காணாத அந்த ஒரு பிம்பம்  வாழ்க்கையாய் என் முன் விரிந்து கிடக்கிறது. 

நான் கீழே விழுகையில் என்னை தாங்கிப் பிடிக்கும் நிலமாயும், தாகத்தில் தண்ணீராயும், வயிற்றின் பசியடக்கும் உணவாயும் உலகத்து அதிசயங்களையும் முரண்களையும் கண்டு வாய்பிளந்து சிலாகிக்கையில் கிறங்க வைக்கும் உணர்வாயும் எனக்குள் பரவி அந்த பிம்பம் என்னை எப்போதும் நேசித்துக் கொண்டே இருக்கிறது....அதனால் எனக்கு கடவுள் என்ற மாயாபிம்பத்தின் மீது காதல் இருக்கிறது. நான் வெறுத்தால் என்னை தூக்கி வீசி எறிந்து விடுமா இந்த பூமி...? சுமந்து கொண்டுதானே சுற்றும்....!

காதலிக்க நம்மைக் கடந்த வேறொன்று வேண்டும். அது மனிதராகவும் இருக்கலாம், அவ்வளவுதான். பெரும்பாலும் வெவ்வேறு எதிர்ப்பார்ப்புகளோடு இணைபவர்களை விட்டு காதல் ஓடி ஒளிந்து கொள்ள அங்கே வியாபாரம் மட்டுமே நடக்கிறது. எனக்குப் பிடித்த மாதிரி நீ இரு, உனக்குப் பிடித்தமாதிரி நான் இருக்கிறேன் என்று சொல்லிக் கொண்டு தியாகிகளாய் வாழ்ந்து கொண்டு, சுயவிருப்பங்களைக் குழிதோண்டி புதைத்துக் கொள்ளும் வைபவத்தைதான் இங்கே பெரும்பாலும் காதல் என்று சொல்கிறார்கள்.

உனக்குப் பிடித்தமாதிரி நீ இருப்பதையே நான் காதலிக்கிறேன் என்று எத்தனை பேரால் தன் துணையைப் பார்த்து சொல்ல முடியும்..? பெரும்பாலும் கட்டுப்பாடுகள் எல்லாமே பயமும் அடக்குமுறையும் கொண்ட மனதிலிருந்தே பிறக்கின்றன.

கமலும், கெளதமியும் நிஜமான காதலர்களாய் இணைவதற்கு அவர்களின்  அனுபவம் துணை நின்றிருக்கிறது. காலம் ஆசானாய் இருந்திருக்கிறது. இரண்டாவது மனைவியையும் பிரிந்த தனிமையில், ஏற்கெனவே வாழ்க்கை நிராகரித்துவிட்ட புற்றுநோயில் இருந்து மீண்டு கொண்டிருக்கும் ஒருவரை தன் தோளோடு சேர்த்துக் கொண்டு தானும் விழாமல், அவளும் விழாமல் தாங்கிப் பிடிக்கும்...சுகத்தை காதலென்று சொல்லாமல் வேறு எதைக்காதல் என்று சொல்வதாம்...?

கமலுக்கும், கெளதமிக்கும் திருமணம் என்னும் சடங்கிற்குப் பின்னால் இருக்கும் பொய்மை என்னவென்று தெரிந்திருக்கும். அவர்கள் அந்த சடங்கிற்குள் மீண்டும் செல்லவிரும்பவில்லை. அந்த சடங்கு இருவருக்கும் பிள்ளைகளை மட்டும் கொடுத்துவிட்டு கரைந்து போய்விட்டதோடு  மிகப்பெரிய புரிதலை அவர்களின் இயல்பிலேயே நிறைத்தும் சென்று விட்டது..! இனி எதற்கு திருமணம் என்ற ஒன்று தனியே...அவர்களுக்கு அவசியமா என்ன?

திணிக்கப்பட்ட அன்பு எப்போதும் வெறுப்பாகவே முடிகிறது. கற்பிக்கப்பட்ட போலி ஒழுக்க நெறிகளைச் சிலுவைகளாய் சுமந்து கொண்டு காதலாய் இருப்பதைப் போலக் காட்டிக்கொள்வதை விட....

கட்டுக்கள் அற்ற பெருவெளியில் யாருமற்ற தனிமையில் நம் ஏகாந்தச் சிறகுகளோடு நாமே நாமாய் எதிர்பார்ப்புகளற்ற காதலோடு இலக்குகளின்றி பறப்பதே சுகம்...! இப்படியான நிலையில் வெற்றியும் இல்லை தோல்வியுமில்லை...!

" கணங்கள் தோறும் கலைத்துக் கொள்ளும் ஒப்பனைகளில்....இடம் வலமாய், வலம் இடமாய், மேல் கீழாய், கீழ் மேலாய், மாறி, மாறி சுயமென்ற ஒன்றே எனக்கில்லை என்று என்று அறுதியிட்டுக் காலம் கூறினாலும்...

சார்ந்தியங்கும் சாங்கியத்தில் ஒளிந்திருக்கும் மூலவனின் இயல்புகள்.இல்லாத காலப்பெருவெளிக்கு முன்பும், பின்பும்.....ஒன்றென்று அறிக எம் மக்காள்....! "


தேவா. SSaturday, May 4, 2013

பாபாஜியும்...பாட்டாளிமக்கள் கட்சியும்...!மகா அவதார் பாபாஜி புகைப்படத்தில் புன்னகைத்தபடியே இருக்கிறார். பாபாஜியை தனது திரைப்படத்தின் மூலம் அறியாதவர்களுக்கு அறிமுகப்படுத்திய ரஜினியும் இப்போது மெளனமாய் வேறு வேலைகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். ஆமாம் பாபா திரைப்படம் வெளிவந்து இப்போது 9 வருடங்கள் முடிந்திருக்கிறது. பாபா திரைப்படம் சரியாக ஓடவில்லை. வாங்கிய பணத்தை ரஜினி திருப்பிக் கொடுக்குமளவிற்கு நஷ்டம் ஏற்பட்டது. ரஜினியின் வளர்ச்சியைக் கண்டு பொறாமைப் பட்ட அத்தனை பேரும் ரஜினியை வசைபாட அது ஒரு தகுந்த தருணமாயிருந்தது. நிஜத்தில் ரஜினி அப்போது விழுந்திருந்தார் என்பதும் உண்மையே.

லெளகீகத்தின் மொழியாக்கத்தில் அது தோல்விப்படம் என்று சொல்லிக் கொள்ளலாம்....ஆனால் ஆன்மீகப்பார்வையில் மகாஅவதார் பாபாஜி ரஜினிக்கு மிகப்பெரிய ஆன்மீக உயரத்தைக் கொடுத்த திருப்பங்கள் நிறைந்த சூழல் அது.  இந்த ஒரு படத்தால் ரஜினி யாருமில்லை, அழிந்து விட்டான் என்று சொன்னால் இத்தனை வருடம் தான் நடித்துப் பெற்ற புகழ் எனக்குத் தேவையில்லை என்று ரஜினியே பேட்டிக் கொடுக்கவேண்டிய சூழல் கூட ஏற்பட்டது.

மகாஅவதார் பாபாஜியை ரஜினி மூலம் அறிந்து கொண்ட, ஆன்மீகத் தேடலில் இருந்த சாமனியர்களுக்கு பாபா திரைப்படம் ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதம்தான். ரஜினியின் வாழ்க்கையை இன்னும் மெருகேற்ற இந்தப் படத்தை ஒரு மையப்புள்ளியாய் மகாஅவதார் பாபாஜி பயன்படுத்திக் கொண்டார். ப்ரியமுள்ள சீடர்களை ஒரு குரு எப்போதும் கைவிடுவதில்லை என்பதோடு மட்டும் இல்லாமல் ஆன்மீகத்தை அவ்வளவு எளிதாய் கமர்சியலாய் கொண்டு சேர்த்துவிடவும் முடியாது என்ற பாடத்தையும் அந்தப் படத்தின் மூலம் தனது சீடனுக்கு உணர்த்தவும் செய்தார். சத்தியத்தை உணர்ந்த ஞானியர்கள் கூட ஆன்மீகத்தை கமர்சியலாக்கும் இடத்தில் சறுக்கி விழுந்து அவமானப்பட நேரிடுகிறது.

பாபா திரைப்படம் வணிகரீதியாய் வெற்றி பெறாமல் இருந்தால்தானே பாபாஜியை ரஜினி இன்னும் நெருங்க முடியும். படத்தின் தோல்வியை விமர்சித்த 10ல் ஒருவர் பாபாஜியை மட்டும் மேலதிகமாக தெரிந்து கொள்ள முடிந்ததே அன்றி அந்தப்படத்தில் ரஜினியைப் பற்றி பேச ஒன்றுமே இல்லாமலும் போனது. இதுதான் அந்தப் படம் வெளி வந்ததின் விதி. ரஜினிக்கு இந்த அனுபவம் வேண்டும் என்று மகாஅவதார் பாபாஜி நினைத்தது தூய உள்ளம் கொண்ட ஒரு சீடனுக்கு குரு கொடுத்த பரிசு.

இப்படியான ஒரு ஆன்ம நியதியில் பாபாஜி தமிழகத்தின் கடைக்கோடியில் இருக்கும் ஆன்மத்தேடல் உள்ள மனிதனுக்குள்ளும் புகுந்து அதிசயங்கள் நிகழ்த்த ரஜினையை கருவியாக்கிக் கொண்டிருக்கையில் கடந்தகால கர்மபலன்களின் விளைவாக இந்த நிகழ்வின் இடையில் வந்து விழுந்தவர்கள்தான் பாட்டாளி மக்கள் கட்சியினரும், ஐயா ராமதாஸும், அண்ணன் அன்புமணி ராமதாசும்...

புகை பிடிக்கும் காட்சி இருக்கிறது அதை வெட்டி விடுங்கள் என்று ரஜினியிடம் அழுத்தம் திருத்தமாக கூறி அதன் சமூக நலனை தெரிவித்து இருப்பார்களேயானால், ரஜினி சர்வ நிச்சயமாய் அந்த காட்சிகளைக் கத்தரித்துப் போட்டுவிட்டு படத்தை ஓடவிட்டிருப்பார். வீரப் பரம்பரையில் வந்த அண்ணன்கள் அப்படி செய்யவில்லை. திரைப்படம் ஓடுவதை தடுத்தனர்.  தியேட்டர்களை உடைத்தனர். ரஜினி ரசிகர்ளை அடித்தனர். எந்தவித காழ்ப்புணர்ச்சிகளும் கருத்து மாறுபாடுகளும் கொண்டிராத பாபாஜியின் பக்தரான, ஆன்ம விழிப்பு கொண்ட ரஜினியை நிந்திக்கவும் செய்தனர்.

ஆன்மீக விழிப்பு கொண்டு தனது வேலையைப்பார்த்துக் கொண்டு ஒதுங்கி வாழும் சாது இந்த ரஜினிகாந்த் என்பது உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்? இதை சொல்லும் போதே அவரது கடந்தகாலத்தை பெயர்த்தெடுத்துக் கொண்டு வந்து விவாதிக்க நீங்கள் நினைத்தால் ஐயம் சாரி....ஐயம் நாட் யுவர் கப் ஆஃப் டீ...தோழர். உங்களிடம் விவாதிக்க நான் தயாரில்லை. நீங்கள் வேறு கடை பார்க்கலாம். ரஜினி ஒரு சாது. அவர் ஒரு போதும் அரசியலுக்கு வரவிரும்பவில்லை. ரசிகர்களின் பெரு விருப்பத்தை ஏற்று அவர் 1996 தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸோடு இணைந்து  நின்றிருந்தால் ஒருவேளை தமிழக முதல்வர் கூட ஆகி இருக்கலாம்.

ஆனால்....

ரஜினி மறுத்தார். ஏன் தெரியுமா? அவர் பேரமைதியை, பிரபஞ்சத்தில் படர்ந்திருக்கும் ஆழமான அன்பை, நிம்மதியை ருசிக்கத் தொடங்கி வெகுநாள் ஆகி விட்டிருந்தது. புகழின் உச்சத்தில் இருந்த ரஜினிக்கு முன்னால் இயற்கை வைத்த கேள்வி....அடுத்தது என்ன...? என்பது...., பணம், புகழ், குடும்பம், வாழ்க்கை, நண்பர்கள், ரசிகர்கள், என்று எல்லாவற்றிலும் நிறைவைக் கொண்ட ஒருத்தனுக்கு அடுத்து என்ன வேண்டும்....?

அடுத்தது ஒன்றும் இல்லை. இந்த லெளகீகத்தில் எதைத் தொட்டாலும் அது மேலும் இரண்டு மடங்கு பிரச்சினையைக் கொண்டுவந்து மனநிம்மதியைக் கெடுக்கும் என்பதை அவர் உணர்ந்தவராயிருந்தார். அடுத்தவருக்கு உதவி செய்வதை வெளியில் சொல்லவேண்டிய அவசியம் இல்லை என்று அவர் தெளிந்தவராயிருந்தார். மொழி, நாடு, மதம் என்ற கட்டமைப்புகளை எல்லாம் கடந்த ஒரு மனிதன் தான் என்று அறிந்திருந்தார். அவர் நிம்மதி என்னும் புலிவாலைப் பிடித்திருந்தார். அது அவரை முழுதுமாய் ருசி பார்க்கத் தொடங்கி இருந்தது.

பாட்டாளி மக்கள் கட்சியின் ரஜினி எதிர்ப்பு பாபா திரைப்படத்தில் அமைந்திருந்த காட்சிக்கான எதிர்ப்பாய் மாறி மறைமுகமாய் பாபாஜிக்கான எதிர்ப்பாய் மாறி இருந்ததை அப்போது ரஜினி உள்பட யாரும் உணர்ந்திருக்கவில்லை. அந்தக்காட்சியை பின் வெட்டுவதற்கு ரஜினி ஒத்துக் கொண்டதோடு, இனிவரும் திரைப்படங்களில் புகைபிடிக்கமாட்டேன் என்றும் ரஜினி அறிவித்து அப்போதைய பிரச்சினைக்கு முற்றுப் புள்ளி வைத்திருந்தார்.

ரஜினி அதை ரஜினியின் பிரச்சினையாய் நினைத்து அதற்கு அடுத்து வந்த பாரளுமன்றத் தேர்தலில் பாட்டாளிமக்கள் கட்சியினர் போட்டியிட்ட 6 தொகுதியிலும் அவரது ரசிகர்களை பாமகவினருக்கு எதிராய் களம் இறக்கிவிட்டார் ஆனால் ரஜினியின் பாமக  எதிர்ப்பு அப்போது செல்லுபடியாகவில்லை. 6 தொகுதிகளிலும் பாமக வென்றது. காலம் மேலும் ரஜினியை சப்தமில்லாம இருக்கும்படி கட்டளையிட்டது.

ஆமாம்....ரஜினிக்கும் பாட்டாளி மக்கள் கட்சிக்கும் என்ன பிரச்சினை...? அது பாபாஜிக்கும் பாட்டாளிமக்கள் கட்சியைச் சேர்ந்த தோழர்களுக்குமான பிரச்சினை அல்லவா? இடையில் ரஜினி ஏன் கோபப்படவேண்டும். பாபாஜி ரஜினியை மெளனமாக்கி விட்டு அவர்கள் சொன்ன சத்தியத்தை மட்டும் நீ பின்பற்று என்ற கட்டளையோடு அந்த சூழலை முடித்துவைத்தார்.

பாபாஜி என்று நான் இங்கே அடிக்கடி குறிப்பிட்டிக் கொண்டிருப்பது ஒரு முழு சத்தியத்தைப் பற்றி, பிரபஞ்சத்தின் மூல உண்மையைப் பற்றி, சிவத்தைப் பற்றி..

பாபாஜியின் கணக்கு....அது. பட்டயம் எடுத்தவன் பட்டயத்தாலேயே அழிவதற்கு முன்னால் ரஜினியைப் பற்றி தரக்குறைவாக விமர்சித்த அன்பு மணி ராமதாஸ் ஐயா அவர்களே தனது வாயால் ரஜினையை வாயரப் புகழவைத்த அந்த பெருஞ்சக்தி சுமார் ஒன்பது வருடங்கள் கழித்து இப்போது சப்தமில்லாமல் ஆணவக்காரர்களை துவம்சம் செய்யத் துவங்கி இருக்கிறது. வாழ்க்கையில் கணக்கு என்ற ஒன்று இல்லாமல் எதுவும் இல்லை. கொடுத்தவன் திரும்பப் பெற்றே ஆகவேண்டும். வாழ்க்கையின் எல்லா நிகழ்வுகளுக்குமே காரணம் உள்ளது. என்ன ஒன்று நாம் சந்தோசத்தையும் துக்கத்தையும் அனுபவிக்கும் போது எதனால் இது நிகழ்கிறது என்று ஆராய முற்படாமல் கொண்டாட்டத்திலோ அல்லது துக்கத்திலோ மூழ்கிவிடுகிறோம்.

பாட்டாளி மக்கள் கட்சி என்னும் சாதிக்கட்சியின் இன்றைய அசாதாரண சூழலுக்கும், அந்த கட்சியினை சார்ந்தவர்களின் மன உளைச்சல்களுக்கும் பல்வேறு கடந்த கால முறையற்ற செயல்கள் காரணமாய்  இருக்கின்றன. எப்போதுமே இறை என்னும் பெருஞ்சக்தி நமது வாழ்வில் நிகழும் எல்லா செயல்களுக்கும் காரணத்தை நமக்குள் மனசாட்சியாய் நின்று உணர்த்தத்தான் செய்கிறது. சப்தமற்ற மனோநிலையும் ஆழமான பார்வைகளும் கொண்டவர்களுக்கு தங்களுக்கு நிகழும் எல்லா செயல்களுக்குமான காரணங்கள் தெளிவாய் புரிந்துவிடுகின்றன...

தடிமனான மனத்தைக் கொண்ட அகங்காரம் கொண்ட மனிதர்களுக்கு சூட்சுமமாய் பழைய வழக்குகள் தூசு தட்டி எடுக்கப்பட்டு அதனால் சிறையிலடைக்கப்பட்டு இப்போதாவது என்னைப் புரிந்து கொள் என்று சத்தியம் மார் தட்டி மீசை முறுக்கி உணர்த்தவும் செய்கிறது. 2004ல் செய்த தவறு மீண்டும் 2013ல் விழித்துக் கொண்டு பழி வாங்குகிறது என்றால் இங்கே எல்லாம் வல்ல ஒரு சக்தியின் ஆட்டத்தை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.

கர்மபலன் என்பதற்கு ஒரு சிறு எடுத்துக்காட்டுதான் இன்றைக்கு பாமகவின் மீது புலிப்பாய்ச்சலாய் பாய்ந்திருக்கும் பல  வழக்குகளும்....

இது எல்லா மனிதர்களுக்கும்,  எல்லா சூழல்களுக்கும் பொருந்தும். 

பாபா படத்தின் போது பதியப்பட்ட வழக்கு இப்போது ராமதாஸ் ஐயாவை  உள்ளே தள்ளும் என்று ரஜினி நினைத்துக் கூட பார்த்திருக்கமாட்டார். அவர் மெளனமாய் தன் வேலைகளை பார்த்துக் கொண்டிருக்கிறார்.

ஆமாம்....

ரஜினிக்கும் பாமகவிற்கும்  பிரச்சினையா என்ன...? 

கிடையவே கிடையாது....

காலங்காலமாய் சத்தியத்துக்கும் அசத்தியத்துக்கும்தான் பிரச்சினை.....!

 " யதா யதா ஹி தர்மஸ்ய க்லானிர்பவதி பாரத
  அப்யுத்தானமதர்மஸ்ய ததாத்மானம் ஸ்ருஜாம்யகம் "


தேவா. S
Thursday, May 2, 2013

சித்திரமே செந்தேன் மழையே...!படுக்கையிலிருந்தபடியே ஜன்னலைத் திறந்து பார்த்தேன். மழை சோ... வென்று பெய்து கொண்டிருந்தது. சூரியனை வரவே விடக் கூடாது என்ற பிடிவாதத்தில் மேகங்கள் அடர்த்தியாய் அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தன. விடியற்காலை மழை எப்போதுமே வசீகரமானது. எனது படுக்கையை ஜன்னலின் ஓரத்தில் ஒட்டினாற்போலத்தான் போட்டு இருப்பேன். ஜன்னலைத் திறந்தால் தெருவோரம் இருக்கும் ஒரு செம்பருத்திச் செடி சிலிரிப்பாய் சிரிக்கும். மழையில் நனைந்தபடியே சபிக்கப்பட்ட மானுடா எழுந்து வெளியே வாடா என்று  என்னைப் பார்த்துக் கண்ணடித்தது.

நான் ஜன்னலோரம் தலை நகர்ந்து போர்வையைப் போர்த்திக் கொண்டே மழையின் வாசத்தை நுகர ஆரம்பித்தேன். மழை குளிர்ச்சியானது மட்டுமல்ல, மழை சிலிர்ப்பானது மட்டுமல்ல, மழை சந்தோசமானது மட்டுமல்ல, மழை வாசனையானதும் கூட. மழை பெய்து கொண்டிருக்கும் போது சில்லென்றிருக்கும்  ஜன்னலின் கம்பிகளை கன்னத்தோடு வைத்து தேய்த்துப் பார்த்திருக்கிறீர்களா நீங்கள்? மழையின் சிதறலை வாங்கிக் கொண்டு இரும்பிலிருந்து பிறக்கும் ஒரு உயிருள்ள வாசம் உடலின் எல்லா பாகங்களையும் சிலிர்க்க வைக்கும்.

மரத்தின் தலையில் விழும் தண்ணீர், அதன் இலைகள், கிளைகள், என்று உடல் முழுதும் மழையை வாங்கிக் கொண்டு பச்சையாய் ஒரு வாசத்தைப் பரப்பி நமது ஜீவனை கிளர்ச்சி அடைய வைக்கும். மண்ணின் வாசம் எல்லோரும் அறிந்ததே..தென் மாவட்டங்களில் இருக்கும் சில அப்பத்தாக்கள் மழைக்குப் பிறகான மண்ணின் வாசத்தில் மயங்கி செக்கச் சிவந்த அந்த மண்ணை ஆவலில் எடுத்துப் பிசைந்து தின்று கூட விடுவார்கள் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன்.

தலையைச் சுற்றி முக்காடு போட்டுக் கொண்டு பாதி உறக்கத்தில் மழையை இடுங்கிய கண்களில் பார்த்துக் கொண்டிருந்த என்னை முழுதாய் விழிப்பு நிலைக்கு கொண்டு சென்றது மழை. மழையை வேடிக்கைப் பார்க்கத் தொடங்கி இருந்தேன். வயிற்றுப் பிழைப்புக்காய் வாரம் முழுதும் ஓடுகையில் காலம் வாழ்க்கையை முழுதாய் தின்று ஏப்பம் விட்டு விடுகிறது. வார இறுதிகள் மட்டுமே ஜீவனுள்ள மனிதர் நாம் என்று கொஞ்சமேனும் உணர வாய்ப்பளிக்கிறது. அதுவும் இந்த வார இறுதி கடவுளின் ஆசிர்வாதத்தோடு தொடங்கி இருக்கிறது. 

மழையை வேடிக்கைப் பார்ப்பது போல வேறு மிகப்பெரிய சுகம் ஏதும் இந்த உலகில் இருக்கிறதா என்ன என்று நினைக்கத் தோன்றியது. சட, சடவென்று மேகம் மண்ணிற்கு மாறுவேடம் போட்டுக் கொண்டு மழையாய் இறங்கி பூமியை ஆசையாய் அணைக்கும் வேகத்தைப் பார்த்து அது வேகமா இல்லை மோகமா என்று எனக்கு ஒரு சந்தேகம் வந்தது. மழையில் நனைவது வேறு... அது வேறு மாதிரியான அனுபவம்... ஆனால் மழையை  வேடிக்கைப் பார்ப்பது வேறு. மழையில் நனைகையில் மழைத்துளிகளின் சிலிர்ப்பை உடல் வாங்கிக் கொள்ள மெல்ல மெல்ல தண்ணீர் உடல் நனைத்து, உள்ளம் நனைத்து ஒரு பரமானந்தத்திற்குள் நம்மைத் தள்ள மழை, மழை, மழை , மழை என்று மழையாகவே நாம் மாறி விடுவோம்.

வேடிக்கைப் பார்த்தல் என்பது ஈடுபடுதல் இல்லை. எந்த ஒரு நிகழ்விலும் உட்சென்று ரசிக்கும் போது ரசனை என்ற ஒன்று தனியே தெரிவதில்லை. ரசனை என்பது லெளகீகத்திற்கே உரித்தான ராஜ சொல். படைப்பவனுக்கு நிகழ்வது எல்லாமே அவன் இயல்பில் நிகழ்வது. படைப்பவர்கள் ரசிப்பவர்களாக இருக்கவேண்டும் என்ற கட்டாயம் இருக்க முடியாது. பெரும்பாலும் புதியதைப் படைப்பதில் இருக்கும் சுகத்தில்... ரசிப்பதில் முழுமை இல்லாமல் போய் விடும். ரசனையற்றவன் எப்படி படைக்க முடியும்..? என்று தானே கேட்கிறீர்கள்...

ஒன்றை இங்கே கவனிக்க வேண்டும். ரசனையாய் படைக்கத் தெரிந்த நிறைய பேருக்கு ரசிக்கத் தெரியாது. ரசிப்பில் மனம் நிற்காமல் புதிது புதிதாய் படைக்கவே அவர்களின் மனம் விரும்பி நகர்ந்து கொண்டே இருப்பதால் அவர்களுக்கு நின்று நிதானிக்க அவகாசம் கிடைப்பது இல்லை. முழுதாய் ரசிக்க முடிந்தவன் படைப்பவனையும் விட ஒரு படி மேல் என்று தான் நான் சொல்வேன். மழை என் முன் நர்த்தனமாடிக் கொண்டிருந்தது. மழையோடு எந்தத் தொடர்பும் இல்லாமல் வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்.

மழை மண்ணில் பட்டு தெறித்து எழும் சப்தத்தை விழி மூடி செவிகளுக்குள் ஊற்றிக் கொண்டேன். ஈடுபாடு இல்லாத ரசனை என்பது பிரபஞ்சத்தின் வெகு சூட்சுமமான காதல் ரகசியம். தொடர்பற்று எங்கும் பரவிக்கிடக்கையில் புலன்கள்  எல்லாம் நம்மோடு பேசும், உடலுக்குள் இருக்கும் ஒவ்வொரு சக்கரமும் மெல்ல மெல்ல திறந்து கொள்ள மூலாதாரத்திலிருந்து அதிர்வுகள் நகர்ந்து நகர்ந்து விசுத்தியை தொடும் போது காதுகள் அடைத்துக் கொண்டு மெல்ல, மெல்ல உடல்  நமக்கு மறந்து போகும். விமானத்தில் பறக்கும் போதும் உயரமான இடத்திற்கு லிப்டில் செல்லும் போதும் காதுகள் அடைத்துக் கொள்ளுமே அப்படியாய் காது அடைத்துக் கொண்டு புருவமத்தியில் ஆக்ஞா சக்கரம் கடக்கும் நொடியோடு சர்வமும் அடங்கிப் போக சஹஸ்ரத்தில் போய் ஜீவன் மோத.... புறத்தில் வழிந்தோடும் பெரு மழையைப் போல புத்திக்குள் ஏதேதோ அமிலங்கள் சுரந்து குளுமை பரவ....

கண்டதைப் பற்றிய கவனமற்று கண்டதை கண்டதாக, காண்பவர் யாரென்ற பிரக்ஞையற்று காணும் நிகழ்வொன்றோடு நாம் பிணைந்து கிடப்போம். விழி விரித்து மழையை உள்வாங்கிக் கொண்டிருந்தேன். ஒரு காலத்தில் மழையைக் கொண்டாடிய சமூகம் நமது சமூகம். வானம் பார்த்த பூமியிலிருந்து ஜனித்து வந்தவன் நான் என்பதால் எனக்கு மழையின் அவசியம் என்னவென்று தெரியும். மேகம் கருக்கும் போது அது எப்படி எங்களின் உயிர் நிறைக்கும் என்பதை வார்த்தைகளுக்குள் கொண்டு வர முடியாது.

மழை எங்களின் உயிர். மழையை... மழையாய் இப்போது வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறேன். தேவைகள் வேறு விதத்தில் பூர்த்தியாயிருப்பதால் இப்போது நான் ரசிப்பதற்காக மட்டுமே மழை பெய்து கொண்டிருக்கிறது. விவசாயத்திற்குள் வாழ்க்கையை வைத்திருக்கும் வானம் பார்க்கும் மனிதர்கள் மழையை மண்ணில் தேக்கி வைத்துத்தான் தங்களின் வாழ்க்கைக்கு உத்தரவாதமளித்துக் கொள்வார்கள். மழை பெய்தால்தான் விவசாயம். மழை பெய்தால்தான் உணவு. மழை பெய்தால்தான் எல்லாமே. மழை பெய்யவேண்டும் என்பதற்காக மரம் வளர்ப்பார்கள். மழையைக் கொண்டு வரும் மரங்களை தெய்வங்களாகப் பார்ப்பார்கள்.

அரசமரம் நட்டு வைத்து அதிலே கடவுளைக் குடிவைப்பார்கள், ஆலமரம் வைத்து ஊர்ப் பிரச்சினைகளை அங்கே அமர்ந்து கூடிப்பேசி தீர்ப்பார்கள், வேப்பமரத்தை கடவுள் என்றே வணங்குவார்கள், பூவரசை வளர்க்கையில் பின்னால் வீடுகட்டலாம் என்றும், வேம்பு மருந்து என்றும் பனையும் தென்னையும் பணப்பயிர் என்றும்....

வளைத்து வளைத்து மரம் வளர்ப்பார்கள்... ஏனென்றால் மழைக்கு மரம் வேண்டும். மழை மனிதனுக்கு வேண்டும். சிக்கலில்லாத வாழ்க்கைக்கு செல்வம் வேண்டும் செல்வம் உள்ள வாழ்க்கையில் குறைகள் இருக்காது என்பதோடு மட்டுமில்லாமல் இயற்கையிடம் கையேந்திப் பெற்ற பொருளால் நான் என்ற அகங்காரமும் இருக்காது. அகங்காரம் இல்லாத இடத்தில் அன்பு நிறைவானதாய் இருக்கும், நிறைவான அன்பு சந்தோசத்தைக் கொடுக்கும்.

மழை....பிரபஞ்ச பெருஞ்சக்தியின் கருணை...! மழை மனிதனின் உயிர்....மழையை மனிதன் இப்போது வேடிக்கை  பார்ப்பதும் இல்லை, மழைக்காய் மனிதன் காத்திருப்பதும் இல்லை. மழை இப்போதெல்லாம் ஆச்சர்யமாய் போய் விட்டது. மழை பெய்தால் ஹையோ மழை பெய்கிறது என்று பத்து பேரிடம் சொல்வதற்காக மனிதர்கள் அலைகிறார்கள். சொல்லி சொல்லி மழையை ரசிப்பதாய் அலட்டிக் கொள்கிறார்களேயன்றி மெளனமாய் அமர்ந்து மழையை ரசிக்க யாருமற்று பெரும்பாலும் அனாதையாய்ப் பெய்கிறது மழை. மரங்களை வெட்டிய மனிதர்களை இயற்கையும் பழிக்குப் பழி வாங்கிக் கொண்டிருக்கிறது. காற்றின் போக்கு மாறும் போது மட்டும் கடமைக்கு வந்து ஊரைப் பழிவாங்கி விட்டு கோபமான விருந்தாளியாய் வேறு திசை நோக்கி ஓடிப் போகிறது அது.

யோசித்தபடியே புரண்டு படுத்து போர்வையை விலக்கினேன் ஜன்னலோரமாய் கன்னத்தில் கைவைத்து அமர்ந்தேன். மழை விடுவதாய் இல்லை. நானும்  மழையை விடுவதாய் இல்லை. எப்போது மழை நிற்கிறதோ அப்போது தொடங்கட்டும் எனது பொழுது...

மழையை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தேன்...!


தேவா. S