Pages

Thursday, May 2, 2013

சித்திரமே செந்தேன் மழையே...!படுக்கையிலிருந்தபடியே ஜன்னலைத் திறந்து பார்த்தேன். மழை சோ... வென்று பெய்து கொண்டிருந்தது. சூரியனை வரவே விடக் கூடாது என்ற பிடிவாதத்தில் மேகங்கள் அடர்த்தியாய் அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தன. விடியற்காலை மழை எப்போதுமே வசீகரமானது. எனது படுக்கையை ஜன்னலின் ஓரத்தில் ஒட்டினாற்போலத்தான் போட்டு இருப்பேன். ஜன்னலைத் திறந்தால் தெருவோரம் இருக்கும் ஒரு செம்பருத்திச் செடி சிலிரிப்பாய் சிரிக்கும். மழையில் நனைந்தபடியே சபிக்கப்பட்ட மானுடா எழுந்து வெளியே வாடா என்று  என்னைப் பார்த்துக் கண்ணடித்தது.

நான் ஜன்னலோரம் தலை நகர்ந்து போர்வையைப் போர்த்திக் கொண்டே மழையின் வாசத்தை நுகர ஆரம்பித்தேன். மழை குளிர்ச்சியானது மட்டுமல்ல, மழை சிலிர்ப்பானது மட்டுமல்ல, மழை சந்தோசமானது மட்டுமல்ல, மழை வாசனையானதும் கூட. மழை பெய்து கொண்டிருக்கும் போது சில்லென்றிருக்கும்  ஜன்னலின் கம்பிகளை கன்னத்தோடு வைத்து தேய்த்துப் பார்த்திருக்கிறீர்களா நீங்கள்? மழையின் சிதறலை வாங்கிக் கொண்டு இரும்பிலிருந்து பிறக்கும் ஒரு உயிருள்ள வாசம் உடலின் எல்லா பாகங்களையும் சிலிர்க்க வைக்கும்.

மரத்தின் தலையில் விழும் தண்ணீர், அதன் இலைகள், கிளைகள், என்று உடல் முழுதும் மழையை வாங்கிக் கொண்டு பச்சையாய் ஒரு வாசத்தைப் பரப்பி நமது ஜீவனை கிளர்ச்சி அடைய வைக்கும். மண்ணின் வாசம் எல்லோரும் அறிந்ததே..தென் மாவட்டங்களில் இருக்கும் சில அப்பத்தாக்கள் மழைக்குப் பிறகான மண்ணின் வாசத்தில் மயங்கி செக்கச் சிவந்த அந்த மண்ணை ஆவலில் எடுத்துப் பிசைந்து தின்று கூட விடுவார்கள் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன்.

தலையைச் சுற்றி முக்காடு போட்டுக் கொண்டு பாதி உறக்கத்தில் மழையை இடுங்கிய கண்களில் பார்த்துக் கொண்டிருந்த என்னை முழுதாய் விழிப்பு நிலைக்கு கொண்டு சென்றது மழை. மழையை வேடிக்கைப் பார்க்கத் தொடங்கி இருந்தேன். வயிற்றுப் பிழைப்புக்காய் வாரம் முழுதும் ஓடுகையில் காலம் வாழ்க்கையை முழுதாய் தின்று ஏப்பம் விட்டு விடுகிறது. வார இறுதிகள் மட்டுமே ஜீவனுள்ள மனிதர் நாம் என்று கொஞ்சமேனும் உணர வாய்ப்பளிக்கிறது. அதுவும் இந்த வார இறுதி கடவுளின் ஆசிர்வாதத்தோடு தொடங்கி இருக்கிறது. 

மழையை வேடிக்கைப் பார்ப்பது போல வேறு மிகப்பெரிய சுகம் ஏதும் இந்த உலகில் இருக்கிறதா என்ன என்று நினைக்கத் தோன்றியது. சட, சடவென்று மேகம் மண்ணிற்கு மாறுவேடம் போட்டுக் கொண்டு மழையாய் இறங்கி பூமியை ஆசையாய் அணைக்கும் வேகத்தைப் பார்த்து அது வேகமா இல்லை மோகமா என்று எனக்கு ஒரு சந்தேகம் வந்தது. மழையில் நனைவது வேறு... அது வேறு மாதிரியான அனுபவம்... ஆனால் மழையை  வேடிக்கைப் பார்ப்பது வேறு. மழையில் நனைகையில் மழைத்துளிகளின் சிலிர்ப்பை உடல் வாங்கிக் கொள்ள மெல்ல மெல்ல தண்ணீர் உடல் நனைத்து, உள்ளம் நனைத்து ஒரு பரமானந்தத்திற்குள் நம்மைத் தள்ள மழை, மழை, மழை , மழை என்று மழையாகவே நாம் மாறி விடுவோம்.

வேடிக்கைப் பார்த்தல் என்பது ஈடுபடுதல் இல்லை. எந்த ஒரு நிகழ்விலும் உட்சென்று ரசிக்கும் போது ரசனை என்ற ஒன்று தனியே தெரிவதில்லை. ரசனை என்பது லெளகீகத்திற்கே உரித்தான ராஜ சொல். படைப்பவனுக்கு நிகழ்வது எல்லாமே அவன் இயல்பில் நிகழ்வது. படைப்பவர்கள் ரசிப்பவர்களாக இருக்கவேண்டும் என்ற கட்டாயம் இருக்க முடியாது. பெரும்பாலும் புதியதைப் படைப்பதில் இருக்கும் சுகத்தில்... ரசிப்பதில் முழுமை இல்லாமல் போய் விடும். ரசனையற்றவன் எப்படி படைக்க முடியும்..? என்று தானே கேட்கிறீர்கள்...

ஒன்றை இங்கே கவனிக்க வேண்டும். ரசனையாய் படைக்கத் தெரிந்த நிறைய பேருக்கு ரசிக்கத் தெரியாது. ரசிப்பில் மனம் நிற்காமல் புதிது புதிதாய் படைக்கவே அவர்களின் மனம் விரும்பி நகர்ந்து கொண்டே இருப்பதால் அவர்களுக்கு நின்று நிதானிக்க அவகாசம் கிடைப்பது இல்லை. முழுதாய் ரசிக்க முடிந்தவன் படைப்பவனையும் விட ஒரு படி மேல் என்று தான் நான் சொல்வேன். மழை என் முன் நர்த்தனமாடிக் கொண்டிருந்தது. மழையோடு எந்தத் தொடர்பும் இல்லாமல் வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்.

மழை மண்ணில் பட்டு தெறித்து எழும் சப்தத்தை விழி மூடி செவிகளுக்குள் ஊற்றிக் கொண்டேன். ஈடுபாடு இல்லாத ரசனை என்பது பிரபஞ்சத்தின் வெகு சூட்சுமமான காதல் ரகசியம். தொடர்பற்று எங்கும் பரவிக்கிடக்கையில் புலன்கள்  எல்லாம் நம்மோடு பேசும், உடலுக்குள் இருக்கும் ஒவ்வொரு சக்கரமும் மெல்ல மெல்ல திறந்து கொள்ள மூலாதாரத்திலிருந்து அதிர்வுகள் நகர்ந்து நகர்ந்து விசுத்தியை தொடும் போது காதுகள் அடைத்துக் கொண்டு மெல்ல, மெல்ல உடல்  நமக்கு மறந்து போகும். விமானத்தில் பறக்கும் போதும் உயரமான இடத்திற்கு லிப்டில் செல்லும் போதும் காதுகள் அடைத்துக் கொள்ளுமே அப்படியாய் காது அடைத்துக் கொண்டு புருவமத்தியில் ஆக்ஞா சக்கரம் கடக்கும் நொடியோடு சர்வமும் அடங்கிப் போக சஹஸ்ரத்தில் போய் ஜீவன் மோத.... புறத்தில் வழிந்தோடும் பெரு மழையைப் போல புத்திக்குள் ஏதேதோ அமிலங்கள் சுரந்து குளுமை பரவ....

கண்டதைப் பற்றிய கவனமற்று கண்டதை கண்டதாக, காண்பவர் யாரென்ற பிரக்ஞையற்று காணும் நிகழ்வொன்றோடு நாம் பிணைந்து கிடப்போம். விழி விரித்து மழையை உள்வாங்கிக் கொண்டிருந்தேன். ஒரு காலத்தில் மழையைக் கொண்டாடிய சமூகம் நமது சமூகம். வானம் பார்த்த பூமியிலிருந்து ஜனித்து வந்தவன் நான் என்பதால் எனக்கு மழையின் அவசியம் என்னவென்று தெரியும். மேகம் கருக்கும் போது அது எப்படி எங்களின் உயிர் நிறைக்கும் என்பதை வார்த்தைகளுக்குள் கொண்டு வர முடியாது.

மழை எங்களின் உயிர். மழையை... மழையாய் இப்போது வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறேன். தேவைகள் வேறு விதத்தில் பூர்த்தியாயிருப்பதால் இப்போது நான் ரசிப்பதற்காக மட்டுமே மழை பெய்து கொண்டிருக்கிறது. விவசாயத்திற்குள் வாழ்க்கையை வைத்திருக்கும் வானம் பார்க்கும் மனிதர்கள் மழையை மண்ணில் தேக்கி வைத்துத்தான் தங்களின் வாழ்க்கைக்கு உத்தரவாதமளித்துக் கொள்வார்கள். மழை பெய்தால்தான் விவசாயம். மழை பெய்தால்தான் உணவு. மழை பெய்தால்தான் எல்லாமே. மழை பெய்யவேண்டும் என்பதற்காக மரம் வளர்ப்பார்கள். மழையைக் கொண்டு வரும் மரங்களை தெய்வங்களாகப் பார்ப்பார்கள்.

அரசமரம் நட்டு வைத்து அதிலே கடவுளைக் குடிவைப்பார்கள், ஆலமரம் வைத்து ஊர்ப் பிரச்சினைகளை அங்கே அமர்ந்து கூடிப்பேசி தீர்ப்பார்கள், வேப்பமரத்தை கடவுள் என்றே வணங்குவார்கள், பூவரசை வளர்க்கையில் பின்னால் வீடுகட்டலாம் என்றும், வேம்பு மருந்து என்றும் பனையும் தென்னையும் பணப்பயிர் என்றும்....

வளைத்து வளைத்து மரம் வளர்ப்பார்கள்... ஏனென்றால் மழைக்கு மரம் வேண்டும். மழை மனிதனுக்கு வேண்டும். சிக்கலில்லாத வாழ்க்கைக்கு செல்வம் வேண்டும் செல்வம் உள்ள வாழ்க்கையில் குறைகள் இருக்காது என்பதோடு மட்டுமில்லாமல் இயற்கையிடம் கையேந்திப் பெற்ற பொருளால் நான் என்ற அகங்காரமும் இருக்காது. அகங்காரம் இல்லாத இடத்தில் அன்பு நிறைவானதாய் இருக்கும், நிறைவான அன்பு சந்தோசத்தைக் கொடுக்கும்.

மழை....பிரபஞ்ச பெருஞ்சக்தியின் கருணை...! மழை மனிதனின் உயிர்....மழையை மனிதன் இப்போது வேடிக்கை  பார்ப்பதும் இல்லை, மழைக்காய் மனிதன் காத்திருப்பதும் இல்லை. மழை இப்போதெல்லாம் ஆச்சர்யமாய் போய் விட்டது. மழை பெய்தால் ஹையோ மழை பெய்கிறது என்று பத்து பேரிடம் சொல்வதற்காக மனிதர்கள் அலைகிறார்கள். சொல்லி சொல்லி மழையை ரசிப்பதாய் அலட்டிக் கொள்கிறார்களேயன்றி மெளனமாய் அமர்ந்து மழையை ரசிக்க யாருமற்று பெரும்பாலும் அனாதையாய்ப் பெய்கிறது மழை. மரங்களை வெட்டிய மனிதர்களை இயற்கையும் பழிக்குப் பழி வாங்கிக் கொண்டிருக்கிறது. காற்றின் போக்கு மாறும் போது மட்டும் கடமைக்கு வந்து ஊரைப் பழிவாங்கி விட்டு கோபமான விருந்தாளியாய் வேறு திசை நோக்கி ஓடிப் போகிறது அது.

யோசித்தபடியே புரண்டு படுத்து போர்வையை விலக்கினேன் ஜன்னலோரமாய் கன்னத்தில் கைவைத்து அமர்ந்தேன். மழை விடுவதாய் இல்லை. நானும்  மழையை விடுவதாய் இல்லை. எப்போது மழை நிற்கிறதோ அப்போது தொடங்கட்டும் எனது பொழுது...

மழையை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தேன்...!


தேவா. S


6 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ரசித்தேன்...

ஜீவன்சுப்பு said...

உச்சி வெயிலில் உழன்று கொண்டிருக்கும்பொழுது, மென் சாரலில் நனைந்த ஓர் அனுபவம்.

சாரலாய் ஆரம்பித்து , புயலாய் மாறி இதமான காற்றோடு இனிமையாய் முடியும் ஒரு மழைப்பதிவு.
அழகு ...! அழகு ...! அழகு ...!

//மழை பெய்து கொண்டிருக்கும் போது சில்லென்றிருக்கும் ஜன்னலின் கம்பிகளை கன்னத்தோடு வைத்து தேய்த்துப் பார்த்திருக்கிறீர்களா நீங்கள்? //

நிறைய முறை அனுபவித்திருக்கிறேன் ...! ஒரு கன்னத்தில அறைந்தால் மறு கன்னத்தை காட்டு என்று ஏசு சொன்னதை போல ... ஒரு கன்னத்தை கம்பியோடு வைத்து ஆழந்து அனுபவித்து பின் மறு கன்னத்தை வைத்து .... அடடா அடடடடா ...! சில்லிட்டு...சிலிர்த்துப்போகும் ஓர் அற்புத அனுபவம் .

மழை பெய்து ஓய்ந்த ஒரு மதிய வேளையில் , அவசர அவதியாக நடந்து போய்க்கொண்டிருக்கும் பொழுது , ஏதோ ஒரு பெயர் தெரியாத மரத்தின் கிளை ஒன்றிலிருந்து ஒரு சொட்டு மழைத்தண்ணீர் நம் தலை மேல் விழுந்து அப்படியே உள்ளூர ஊடுருவிச்செல்லும் பாருங்கள். அப்பப்பா....! என்னவென்று சொல்ல ....! அந்த அனுபவத்தை வார்த்தகளில் அடைக்க முடியாது ...!

// ரசிக்க யாருமற்று பெரும்பாலும் அனாதையாய்ப் பெய்கிறது மழை.//

அனாதைகளின் அழுகுரலுக்கு செவிசாய்க்க யாரிருக்கிறார்கள் ....?


// எப்போது மழை நிற்கிறதோ அப்போது தொடங்கட்டும் எனது பொழுது...// ரசனையின் உச்சம் ...!

இதோ எனக்கு பிடித்த என்சுவாசக்காற்றே வின் சின்ன சின்ன மழைத்துளிகளை செவிகளில் பெய்யவிட்டு ....நானும் ரசிக்கிறேன் மழையை.....!

திண்டுக்கல் தனபாலன் said...

// அப்படியே ஓடிச்சென்று கட்டியணைத்து , உச்சி முகர்ந்து, நச்சென்று முத்தமிடத்தோன்றியது அந்த அழகான ரசனைவாதிகளின் கரங்களுக்கு... ///

ரசனைவாதி நீங்கள் தான்...!!!

என்ன செய்ய உத்தேசம்...? உங்களின் பதில் என்ன...? ஹிஹி.... வாழ்த்துக்கள்...

நான் எழுத நினைத்தை (புரிதலுக்கு நன்றி... புரியுமா...? ஒரு வட்டத்தில் இருப்பவர்களுக்கு புரிய வாய்ப்பில்லை... [உண்மை] ) என் இனிய நண்பரின் ரசனையில் : http://jeevansubbu.blogspot.com/2013/07/blog-post_23.html

சுபத்ரா said...

மழையை நானும் விடுவதாய் இல்லை//

ம்ம்ம்ம்... எல்லோருக்கும் இந்த ரசனை அமைவதில்லை. அமைந்த எல்லோருக்கும் அதை இவ்வாறு எழுதி வெளிப்படுத்தவும் தெரிவதில்லை.

படைப்பவனை விட அதை ரசிப்பவன் மேல் என்ற கருத்தோடு நான் உடன்படுகிறேன் (உங்களது இந்தப் படைப்பை நான் மிகவும் ரசித்தேன் என்ற கருத்தோடு) :):):)

சுபத்ரா said...

அனாதைகளின் அழுகுரலுக்கு செவிசாய்க்க யாரிருக்கிறார்கள் ....?//

@ஜீவன், அண்ணா, அனாதைகள் எப்போதும் அழத்தான் வேண்டும் என்பது இல்லை :)

Sasi Kala said...

மழையை இப்போது யாரும் வேடிக்கை பார்ப்பதும் இல்லை.. இயந்திரத் தனமாகி விட்ட மனிதர்களுக்கு நடுவே இப்படி ரசனைமிக்க உங்கள் வரிகளால் தான் மழையும் வருகிறது.