Pages

Friday, September 30, 2011

உடையாரின் அதிர்வலைகள்...30.09.2011!அதிர்வு I

அதிர்வு II


மனதைப் பிசைந்துகொண்டிருக்கிறது உடையார் நாவல். விளையாட்டாய் நான் தொட்ட எல்லாமே ஏதோ ஒரு தளத்திற்கு என்னை தர தரவென்று இழுத்துச்சென்று மூர்ச்சையாக்கி வாழ்வின் அடுத்த பாகத்திற்கான புரிதலை என்னுள் திணித்து பிரமாண்ட மெளனத்தைக் கொடுத்து விட்டுச் செல்லும். இங்கே கவனிக்க வேண்டிய மிக முக்கியமான விடயம். ஒரு மெளனம் கடும் தடிமனாய்அடர்ந்தது என்று ஒவ்வொரு முறையும் எண்ணும் போதும் அதை விடஅடர்த்தியாய் மீண்டுமொரு மெளனம் கிடைக்கும்.

அப்படியான ஒரு தளத்திற்கு ஒவ்வொரு முறையும் பாலாவின் எழுத்து என்னை இழுத்துச் சென்று இருக்கிறது. இதோ உடையாரின் மூலம் மீண்டுமொரு மெளனம். கதையை மட்டும் வாசிக்க எப்போதும் வெறும் புத்தகம்வாசிப்பவனல்ல நான். மாறாக அதன் பின்னணியில் ஒளிந்து கிடக்கும் ஒருமிகப்பிரமாண்ட வாழ்க்கையை ஒரு சக்கரவர்த்தியின் ஆசையினை, அவன் கோயில் செய்த பின்னணியினை அதை எழுத்தாக்கிய என் எழுத்துலக தகப்பன் அய்யா பாலகுமரனை மொத்தமாய் உள்வாங்கிக் கொண்டு பேச்சற்றுகண்ணீரோடு கசிந்து உருகிக் கிடக்கிறேன்.

என்ன அய்யா வாழ்க்கை வாழ்கிறோம் நாம் இப்போது? என்ன அய்யா கலாச்சாரம்பற்றி பேசுகிறோம்? நிஜத்தில் கலாச்சரம் என்றால் என்னவென்றறியாமல்நவீனத்தின் பின்னால் ஓடிக்கொண்டு நம்மை நாகரீகத்தின்உச்சத்திலிருப்பவர்களாய் ஒரு மன மயக்கம் கொண்டு இருக்கிறோம்அவ்வளவே. நாகரீகம் என்பது வெறுமனே உடையா? நடையா? புத்திகளுக்குள்ஏற்றி வைத்திருக்கும் விசய ஞானமா? புலமையா? இசையா? மொழியா? கலையா?

அல்ல அல்ல.... அது வெறுமனே விடயங்களை செய்வதல்ல. வெறுமனேபுறத்தை நோக்கிய ஒரு தொடல் அல்ல...நாகரீகம் என்பது உடையாலும், உணவாலும்,கலையாலும், பண்பாட்டாலும், வாழ்வியல் முறைகளாலும் சகமனிதனை மதித்தல். நாகரீகம் என்பது மனித நேயம். நாகரீகம் என்பது வசதிவாய்ப்புகளோ அறிவியலோ அல்ல.. நாகரீகம் என்பது அடுத்தவரின் சுயத்தைமதித்து நடத்தல்.

பத்தாம் நூற்றாண்டில் எம் பெருமான் ஸ்ரீ இராஜ இராஜ உடையார் காலத்தில்இருந்த நாகரீகத்தின் பழுப்பேறிய பாகங்களின் சிறு முனையேனும் தற்போது இல்லை என்றுதான் கூறவேண்டும். மக்களை சுபிட்சமாக நடத்தத் தெரிந்த ஒருஅரசன் செல்வச் செழிப்போடு அவர்களின் வாழ்க்கையை புறத்தில் அழகாக்குகிறான். தேவைகள் எல்லாம் அற்றுப் போய் நிறைவாய் தன் மக்கள் வாழ தன் வீரத்தையும் விவேகத்தையும் விதைத்து தேசத்தின் எல்லைகளைவிரிவு படுத்தி கட்டுக்கோப்பான எதிரிகளின் பயமில்லாத ஒரு தேசமாக்குகிறான்.

புறத்தில் அழகான வாழ்க்கைத் தேவையான எல்லா விடயங்களையும் பூர்த்திசெய்த பின் இவர்களின் அகத்திற்கு என்ன செய்யமுடியும் என்று உடையார் இராஜ இராஜத் தேவர் சிந்திக்க அவருள் எழுந்த பிரமாண்டம்தான் இராஜ இராசேச்வரம்என்னும் தஞ்சை பெரிய கோயில். கோயில் கட்டவேண்டும் என்று தீர்மானித்த பின்பு அதற்கான திட்ட வரைவுகளை திரைச்சீலையில் வரைந்து சிதம்பரத்தில்இருந்து தேவரடியார்கள் மூலமாக தஞ்சைக்கு கொணரும் வழியில் அதைக்கொண்டு வரும் மாட்டு வண்டிகள் ஆற்றில் சிக்கிக் கொண்டு விடுகின்றன.

இங்கே தேவரடியார்கள் சோழர்காலத்தில் மிகப்பெரிய இயங்கு சக்தியாய்இருந்ததைக் கவனிக்க முடிகிறது. இந்த மாட்டு வண்டிகள் சிக்கிக் கொண்டனஎன்றவுடன் விடயம் கேள்விபட்டு அங்கே வருகிறார் சோழ தேசத்தின்சேதுபதியான பிரம்மராயர் எனப்படும் கிருஷ்ணன் ராமன். பிறப்பால் ஒருஅந்தணர் ஆனால் வாள் ஏந்தும் சேனாதிபதியாகி சோழ தேசத்தை தனதுஅசாதரண திட்டமிடல்களால் காத்து வரும் பராக்கிரமசாலி. ஒரு மன்னன்திறமையாக நகர அவனின் முழுமையான அன்பில், அவனைச் சுற்றி மிகதிறமையான ஆட்கள் நிறைந்து போய் விடுகிறார்கள். அப்படித்தான் இராஜஇராஜத் தேவரை சுற்றி சுற்றியே சிந்திக்கும் பெருமக்கள் அவருக்கு அற்புதமானஒரு அரணாய் அமைந்து போய் விட்டார்கள்...!

கோவில் செய்ய வேண்டும் என்ற இராஜ இராஜனின் கனவினை சமகாலத்தில்வாழ்ந்த மக்கள் அதை ஒரு தேவையற்ற வேலையாகவும் கருதியிருக்கவாய்ப்புண்டு. எல்லா வசதிகளும் நவீனங்களும் உள்ள தற்காலத்தில் கூடஇப்படியான ஒரு செயல் திட்டத்தை முடிப்பது எவ்வளவு சிரமம் என்பதை நான்சொல்லித் தெரிய வேண்டியது இல்லை. ஏழு பனை உயரத்தில் ஒரு கோயில். அதுவும் முழுக்க முழுக்க கல்லால் செய்ய வேண்டும் என்று சொன்ன போதேசுற்று வட்டாரத்தில் மலைகளே இல்லாத ஒரு இடத்திலிருந்து இதை எப்படிசெய்யப் போகிறார்? என்றுதான் அனைவரும் பிரம்மித்திருக்கத்தான் வேண்டும்.

ஆனால் எல்லாம் வல்ல இறையை சிவனாய் தன்னுள் உருவேற்றிக் கொண்டுதானே தன்னுள் தானாகி அந்த பிரமாண்டத்தை உணர்ந்த உடையார் தன்னின்புரிதலை, தான் கண்ட பிரமாண்டத்தை ஒரு கோவிலாக்கிச் செல்ல வேண்டும்என்பதில் தீவிரமாய் இருந்திக்கிறார். அய்யனின் மனம் முழுதும் சிவன், சிவன், சிவன், என்று அந்தப் பேரிறையே எப்போதும் மூச்சாயிருந்திருக்கிறது. திக்குகளெட்டும் வெற்றி வாகைச் சூடிய ஒரு பேரரசன், எதிரிகளுக்கு சிம்மசொப்பனமாய் விளங்கிய ஒரு பராக்கிரமசாலி தன்னின் சுயத்தை தொட்டுஈசனவனை விளங்கிக் கொள்ள அதனால் ஏற்பட்ட அன்பில், நெகிழ்ச்சியில்கருணையில் அந்த சூட்சும உணர்வின் ஸ்தூல வடிவமாய் இன்று நின்றுகொண்டிருக்கிறது தஞ்சை பெரிய கோயில்.

தனது மனைவியரை எல்லாம் அழைத்து அமரச் செய்து அவர்களோடு அமுதுண்டுகண்ணப்ப நாயனார் கதையை பகிர்ந்து," நில்லு கண்ணப்ப " என்று இறைவன்திண்ணன் என்னும் வேடுவனை கண்ணப்ப நாயனார் ஆக்கிய இடத்தை சொல்லிகசிந்து கண் கலங்கி நிற்கிறார் உடையார். ஒரு மனிதன் வாழ்க்கையில் எப்போதுநெகிழ முடியும் தெரியுமா? அவனின், அவனைச் சுற்றியுள்ள வாழ்க்கையின்நிலையாமையை விளங்கிய பின்புதான் நெகிழ்ச்சி என்பதை ஒரு மனிதன்உணர்ந்து உருக முடியும்.

சோழ தேசத்தின் எல்லைகள் விரிந்து பரந்து கிடந்தன. வீரமும், செல்வமும், கல்வியும் கரை புரண்டுக் கொண்டிருந்தது, ஸ்ரீ இராஜ இராஜத் தேவரைச்சுற்றிலும் அற்புதமான மனிதர்களை இந்த பிரபஞ்சம் படைத்து அவனின்மிகப்பெரிய இலட்சியத்தை எல்லாம் அடைய வழி வகை செய்திருந்தது. ஆனால்பெருவுடையத் தேவரோ நிலையாமையைத் தெளிவாக உணந்தவராய்இருந்திருக்கிறார்.

செல்வத்தையும், பொருளையும் வீரத்தையும் காலம் புசித்துச் செரித்து விட்டுப்போய்விடும். ஒரு மன்னன் இவ்வளவு வீரனாய் இருந்தான், இவ்வளவுதேசங்களை வெற்றிக் கொண்டான் என்பது வெறுமனே ஒரு செய்தியாய் மட்டும்காலம் விட்டுச் செல்லத்தான் வாய்ப்பிருக்கிறது. ஆனால் அவனே மிகப்பெரியஆன்ம பலம் கொண்டவனாய் நின்று தான் ஒன்றுமில்லை என்று எண்ணி தனதுஆற்றலை தனது பராக்கிரமத்தை எல்லாம் உடைத்தெறிந்து விட்டு பிரபஞ்சம்என்னும் பிரமாண்டத்தை ஒரு கோயில் வடிவிலாவது செய்து விட்டுப்போகவேண்டும் என்று ஒரு குழந்தையைப் போல பிடிவாதமாய் நின்று தன்னைசுற்றி இருந்த மக்களை எல்லாம் இந்த செயலுக்காய் பணி செய்ய வைத்துஆன்மம் என்னும் ஒரு சங்கமத்தில் எல்லோரையும் ஒன்றுசேர்த்திருக்கிறானென்றால்...

இந்த பூமி உள்ள வரை பெருவுடையார் ஸ்ரீ இராஜ இராஜத் தேவரும், தஞ்சைப்பெரிய கோயிலும் சோழர் நாகரீகமும், அவருடன் உறுதுணையாய் கூட இருந்த பெருமக்களும் எல்லோரின் நினைவிலும் இருந்துதான் ஆக வேண்டும். இது காலத்தால் அழியாதது. காலத்தை வென்றது. காலம் தோற்றுப் போய் சுருங்கிநின்று கோயிலை அதனை ஆக்கிய பெருவுடையத்தேவரை தானே தன்னைஆக்கிக் கொண்டது. எல்லாம் வல்ல ஒன்று எல்லாம் வல்லதாகி இன்று அதுவேறு, காலம் வேறு என்று பிரித்தறிய முடியாமல் இணைந்து பிணைந்துநிற்கிறது.

நிறைய நிறைய பேசுமளவிற்கு உடையாரில் பல கோணங்களில் சோழர்களைபற்றியும் பெருவுடையத் தேவரைப் பற்றியும் அய்யா திரு. பாலகுமாரன் அவர்கள் பேசியிருக்கிறார்கள். ஒவ்வொரு வார்த்தையும் ஒவ்வொரு வாக்கியமும்ஒவ்வொரு விடயமும் ஆழ அமிழ்ந்து பொருளுணர்ந்து சுவை உணர்ந்து அதில்மூழ்கி எண்ணமற்று கடும் ஆழமான ஒரு தியான நிலைக்குக் கூட்டிச் சென்றுவெவ்வேறு காட்சிகளை எடுத்தியம்பிக் கொண்டிருக்கிது.

ஒரு நாளைக்கு இரண்டு பக்கங்கள் வாசித்து விட்டு ஒரு வாழ்க்கை முழுதும்யோசித்துக் கொண்டிருக்க வேண்டுமோ என்ற பயம் கூட வருகிறது. இரண்டாம் பாகத்தின் இறுதியில் இராஜ இராஜ பெருந்தச்சரோடு கருவூர்த் தேவர் கோயில்கட்டும் வேலைகளை பற்றிய திட்டங்களைக் கேட்டுக் கொண்டிருக்கையில்கொஞ்சம் பொறுங்கள்.... இதோ வந்து விடுகிறேன் என்று அனுமதி கேட்டு விட்டுவந்து இதை எழுதுகிறேன்..!

திரு. பாலகுமாரன் அவர்கள் வரலாற்றை உள்வாங்கி, கோயில் செய்த தொழில்நுட்பத்தை யோசித்து, எல்லா செய்தி தொகுப்புகளையும் ஆதாரத் தரவுகளாகமனதிலாக்கிக் கொண்டு அதன் பின் சூட்சுமமாய் சோழர் காலத்துக்குச் சென்றுஅங்கே நின்று கொண்டு எல்லாமவற்றையும் விவரிக்கிறார். ஒவ்வொருபாத்திரத்திலும் அவர் உடலற்று விரவி அந்த பாத்திரமாகவே நின்று பேசும்இடங்களில் இரத்தமும் சதையுமாய் அந்த அந்த பாத்திரங்களின் குணாதிசயங்கள்எழுத்தின் மூலம் வெளிப்படுவதை தெளிவாய் உணர முடிகிறது.

நான் இன்னும் உடையாரைப் பற்றியும் அதன் ஆழமான வீச்சுக்கள், நாகரீகம், பாத்திரங்களின் படைப்புக்கள், தெய்வங்களின் பலம், கருவூர்த் தேவர் என்னும்குருவின் தீர்க்கம், பிரம்மராயரின் பராக்கிரமம், இராசேந்திர சோழனின் வீரம், அருண் மொழி பட்டரின் விவேகம், பஞ்சவன் மாதேவியின் தீரம், கோவிலைச்செய்யும் இராஜ பெருந்தச்சரின் தொழில் நுட்பம், செம்பியன் மாதேவியின்மரணம், சேரதேசத்து அந்தணர்களின் கடிகை என்னும் போர் பயிற்சி களத்தின்ஆழம், இன்னமும் 10,000 சேர, சாளுக்கிய, பாண்டிய, கங்க நாட்டு போர்அடிமைகளின் மனோநிலைகள், தேவரடியார்கள், சிற்பிகள் பற்றியவிவரணைகள், கருந்தட்டாங்குடி கருமார்கள், சோழ தேசத்துஅதிகாரிச்சிகள்..........மேலும் ஒவ்வொரு பக்கத்திலும் நிறைந்திருக்கும்பெருவுடையத்தேவரின் ஆளுமை...

இப்படி எல்லாம் ஒன்றுமே பேச ஆரம்பிக்கவில்லை...! காலம் செலுத்தும்திசையில் என் எழுத்துலக குருநாதரின் ஒரு மிகப்பெரிய படைப்பினை வாசிக்கும்பாக்கியத்தையும் அதனால் ஏற்படும் உணர்வுகளை எழுத்தாக்கும் திறத்தையும்கொடுத்த எல்லாம் வல்ல ஏக இறை தெளிவாய் வழிகாட்டும், என்று தீர்க்கமாய்நம்புகிறேன். இன்னும் விரிவாக பேசலாம் அடுத்த அடுத்த பாகங்களில்...


" ஸ்ரீராஜராஜீச்சரமுடையார்க்கு நாங்குடுத்தனவும், நம் அக்கண் கொடுத்தனவும்நம் பெண்டுகள் குடுத்தனவும் மற்றும் குடுத்தார் குடுத்தனவும் ஸ்ரீவிமானத்தின்கல்லிலே வெட்டுக என்று திருவாய் மொழிந்தருள, கல்லில் வெட்டின. யாண்டுஇருபதாவது நாள் முன்னூற்றொரு பத்திரண்டினால் உடையார் ஸ்ரீராஜராஜதேவர்குடுத்த ஸ்ரீபலி எழுந்தருளும் பொன்னின் கொள்கை தேவர் ஒருவர் ஆடவல்லான்என்னுங் கல்லால் நிறை எண்ணூற்றிருபத்தொன்பதின் கழஞ்சேய் முக்காலேமூன்று மஞ்சாடி நாளதினாலேயே டுத்த பொன்னின் பத்மாஸன ஸ்ரீபலி தலம்ஒன்று மேற்படி கல்லால் நிறை தொள்ளாயிரத்து தொன்னூற்றைய்ங்கழஞ்சரையே நாலுமஞ்சாடி”.

சோழம்...! சோழம்....! சோழம்....!

(இன்னும் அதிரும்....)


தேவா. S
Thursday, September 29, 2011

இல்லாதது...!

தொலைந்து போன ஒருவனின்
எழுதப்படாத கவிதைகள்
இல்லாத காதலிக்காய்
காற்றில் கரைந்து கிடக்கலாம்;

உணர்வற்ற உயிர் சுமக்கும்
அணுத் திரட்சிகளில்
அமிழ்ந்து கிடக்கும்
வண்ணக் கனவுகளில்
யாரேனும் ஒளிந்து கிடக்கலாம்;

ஜனித்தலுக்கு முன்னான
ஒரு கலைந்த நிலையில்
நினைவுகளை எல்லாம்
அலைகளாய் பரவவிட்டு
திரட்சியாய் மறைந்து கிடக்கலாம்!

உச்ச சப்தத்தில்
வெடித்து சிதறிய அதிர்வுகள்
நிசப்த்த தாதுக்களாய்
பரவிக் கிடக்கையில்
ஒன்றுமே அங்கே நிகழவில்லை
என்று மெளனம் சாட்சியளிக்கலாம்..

யார் கண்டார் உருவற்றத்தின்
சூட்சும திருவிளையாடலை?
கேட்பதும் பேசுவதும் உணர்வதும்
கடந்த உலகினை யோசிக்கும்
வலுவற்று, உடலென்னும் பொதிக்குள்

இதோ...

அமிழ்ந்து கிடக்கிறேன்...!
அழுத்தமாய் நான் என்ற உணர்வோடு
திரிந்து நடக்கிறேன்....;
புலன்கள் கடந்த வாழ்க்கை
இல்லையென்று புனைந்து திரிகிறேன்...
அதையே புரிதல் என்கிறேன்..
பின்னொரு நாள்
மொத்தமாய் கரைந்து போகிறேன்...!


தேவா. S

Wednesday, September 28, 2011

பயணம்....!

அது ஒரு பேருந்துப் பயணம் என்று ஒற்றை வரியில் நான் சொல்லி நிறுத்தி விடமுடியாது. இரவின் ஆளுமையோடான ஒரு பிரபஞ்சத்தின் வசீகர இராத்திரி அது. இரவு என்பதை விட இராத்திரி என்னும் வார்த்தைக்கு வசீகரம் கூடுதலாய் இருப்பதாக நான் உணர்ந்ததுண்டு.

எங்கே செல்கிறேன்? ஏன் செல்கிறேன்? என்பதெல்லாம் சராசரி வாழ்வியல் கணக்குகளுக்கு வேண்டுமானால் உதவலாம் ஆனால் பயணத்தை கவனிப்பதில்தானே அலாதி சுகம்..! அப்படியான கவனத்திற்கு கருவாய் இருந்து விட்ட இந்த பேருந்து பயணத்தில் நான், குறைந்த எண்ணிக்கையிலிருந்த பயணிகள் நடத்துனர், ஓட்டுனர்...

மற்றும் என் ஜன்னலோர இருக்கை, வெளுத்த வானத்தில் அழுத்தமாய் இருந்த நிலா.....!

உலகம் உறக்கத்திற்கு செல்லும் பொழுதுகளில் பூமியின் ஒரு பகுதி பிரஞையோடு எப்போதும் விழித்துக் கொள்ளும். மனித மூளைகளின் அதிர்வுகள் எல்லாம் மயனா அமைதியில் நித்திரை என்னும் மயக்கத்தில் கிடக்கும் போது உரிமையாய் இயற்கையோடு காதல் கொண்டு களித்திருக்கும் இந்த பூமி. அது சுற்றிச் சுற்றி இரவினைத் தேடி ஓடுவதெல்லாம் இப்படியான காதலுக்குத்தானோ என்று நான் எண்ணி ஆச்சர்யப்படும் வகையில்தான் இருந்தது அந்த ரம்யமான இரவின் நகர்வு...

காட்டு வழிப்பாதையில் பேருந்து மெதுவாய் ஊறும் பொழுதில் பேருந்தின் ஒற்றை என்ஜின் சப்தம் மட்டும் மனதோடு துணைக்கு வர, விளக்குகள் அணைக்கப்பட்ட பேருந்து என்னும் அறிவியல் ஜந்துவினுள் மெல்ல தலை எட்டிப்பார்க்கும் நிலவினை நீங்கள் ரசித்திருக்கிறீர்களா? வெட்கத்தோடு மெல்ல அடி எடுத்து காதலன் முகம் பார்க்கும் ஒரு காதலியை அது ஒத்திருப்பதை என்றாவது உணர்ந்திருக்கிறீர்களா?

பேருந்தின் ஜன்னலினூடே மெல்ல படர்ந்து என் மீது விழுந்து கிடந்த நிலவின் கிரணங்களை சுகமாய் ஏந்திக் கொண்டு முழு நிலைவினை நான் உற்று நோக்கிக் கொண்டிருந்த போது உள்ளுக்குள் ஒளிந்து கிடந்த என்னவளின் நினைவுகள் மறைந்து நின்று எட்டிப்பார்க்கும் குழந்தையாய் மூளைக்குள் பரவத் தொடங்கியிருந்தது.

ஜன்னலோரக் காற்று முகத்தில் மோதி நிலவின் கிரணங்களை ஏந்திக் கிடக்கும் என்னை கோபத்தில் சீண்டிப்பார்த்து நானும்தான் இருக்கின்றேன் என்று படபடப்பாய் ஏதோ பேசிக் கொண்டிருக்கையில் ஜன்னலின் வழியே சிரித்துக் கொண்டிருந்த வயல் வெளிகளும், பிள்ளைகளை எல்லாம் உறங்க வைத்து விட்டு விழித்திருக்கும் தாயாய் பறவைகளை எல்லாம் தூங்க வைத்து விட்டு மெளனித்து நிற்கும் மரங்கள் என்று எல்லாமே எவ்வளவு ஆத்மார்த்தமானவை...!!!

கிட்டத்தட்ட எல்லோருமே உறங்கிக் கொண்டிருந்த அந்த பேருந்தில் ஓட்டுனர் மட்டும் விழித்திருந்தார் என்று நான் சொல்லும் போதே உங்களுக்குச் சிரிப்புதானே வருகிறது..ஆமாம் அவரும் சற்று தள்ளி அமர்ந்து முன் படிக்கட்டு ஓரமாய் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த என்னை பார்க்க... என்னண்ணே ? என்று கேட்டேன்...

என்ன பொழப்பு தம்பி டிரைவர் பொழப்பு, நேரத்துக்கு தூங்க முடியாது எந்திரிக்க முடியாது. வண்டி ஓட்டுற அலுக்கையில் வண்டிய விட்டு எறங்குனாலே ஒடம்பு எம்புட்டு அலுக்கையா இருக்கும் தெரியுமாப்பா...

ஓட்டுனரின் வார்த்தைகள் என்னை தர தரவென்று ஏகாந்த மனோநிலையில் இருந்து எதார்த்தத்திற்கு இழுத்து வந்தன....!

ஆமாண்ணே கஷ்டம் தாண்ணே என்று நான் சொல்லி முடித்தவுடன்..

கண்டக்டர்க கூட அப்ப அப்ப கண்ண பொத்திக்கலாம் தம்பி ஆன நம்மளால முடியாதுல்ல....!சிவங்கேல எடுக்குற காருப்பா... திருச்சி போயி சேரும் போது விடியக்கால மணி ரெண்டு மூணு ஆயிடும், அப்புறம் ஒரு 2 அவர் ரெஸ்ட் இருக்கும் மறுக்கா காலையில திருச்சில எடுக்குற காரு சிவங்க வரும் போது பதினொன்னு பன்னடரை ஆயிரும்...

கியரு ஆக்ஸிலேட்டரு கிளட்ச், கூட்டம் சாட்டம் ரோடு, மாட்டு வண்டி, மனுசன் புள்ளக்குட்டிய பேத்தனமா ஓட்டுற மத்த கார்க்காரய்ங்கன்னு சொல்லி எல்லாமே புத்திக்குள்ள் ஓடிக்கிட்டே இருக்கும் எங்கன 2 அவர் ரெஸ்ட் எடுக்குறது. பேருக்குத்தான் கண்ண மூடுவோம் தம்பி ஆனா எங்குட்டு தூங்குறது...?

சோலியத்த சோலிப்பா இது. வீட்டுக்கு போன கெரண்ட காலுக்கு மேல வலி எடுக்கும் பாரு, உக்காந்து உக்காந்து முதுகு வலி மட்டுமில்லப்பா மூலச் சூடும் வந்துடுச்சு. வீட்டுக்கு போனா அக்கடான்னு படுக்கவா முடியும்னு நினைக்கிறீக... வயசுக்கு வந்த பொண்ணு இருக்கு காலேசுக்கு படிக்குது. பய இப்பத்தான் பன்னென்டாவது படிக்கிறான், இளையவன் எட்டாவது படிக்கிறான்..

எப்டியாச்சும் படிச்சு நல்ல உத்தியோகத்துக்கு போகட்டும்னு பிரயாசப்படுறேன்... கடவுள் விட்ட வழி...., எங்கப்பா புள்ளக்குட்டியலும் படிக்கிதுக அதுகளுக்கு நம்ம கஷ்ட நஷ்டம் எல்லாம் தெரியறது இல்ல...52 வயசாச்சு.. ஏதோ ஓடுது வண்டி...!

நான் இமைக்காமல் அவரைப் பார்த்துக் கொண்டே வந்தேன் அவர் இடைவிடாமல் பேசிக் கொண்டே வந்தார்...

ரெண்டு வருசத்துக்கு முன்னாடி ஒரு பெரிய ஆக்ஸிடண்ட் வேற தம்பி ஒரு லாரிக்காரன் இடிச்சுப்புட்டு போய்ட்டான்.. ஒரு வருசம் ஆச்சு எந்திருச்சு நடமாட... ! இன்னும் கூட வலி இருக்குப்பா கிளட்ச மிதிக்கும் போதெல்லாம் நடு இடுப்புல்ல சுருக்கு சுருக்குனு வலிக்கும்.. ! வண்டி ஓட்ற வேலை பாக்க சுளுவா இருக்க மாதிரி தெரியும்...ம்ம்ம் வேண்டாம் சாமி எம் புள்ளக்குட்டியளாச்சும் நல்ல பொழப்பு பொழைக்கட்டும்.

ஒரு நா புதுக்கோட்டையில ஏதோ கச்சிக்காரய்ங்க மறியல் பன்ணிகிட்டு இருந்தாய்ங்க. கவர்மென்டு பஸ்ஸு போய்த்தான் ஆகணும்னு கம்பெனில சொல்லிப்புட்டாக, நானும் போய்ட்டேன்... கலெக்ட்டர் ஆபிஸ் முக்குல நிப்பாட்டி வயசு வித்தியாசம் பாக்காம சட்டைய புடிச்சி அடிச்சுப் புட்டாய்ங்க..ஏண்டா நீ என்ன பெரிய வெண்ணையான்னு கேட்டுகிட்டே ஒருத்தன் செருப்பாலேயே அடிச்சான் தம்பி...

யாருன்னு காங்குறது? எங்க கம்ப்ளெய்ன் பண்றது....வாங்கி கட்டிகிட்டு மறுக்கா வண்டிய ஓட்டிகிட்டு போனேன்....!

ஏன் தம்பி என் கதைய சொல்லி உன் தூக்கத்த கெடுத்துப்புட்டேன் போலயே....! கண்டக்டர் பயலும் பாவம் தூங்கவாண்ணேனு? கேப்பான் சரி தூங்கிக்கடான்னு சொல்லிடுவேன்.. நம்ம கஷ்டம் நம்மளோட அவனாட்டும் தூங்கட்டுமே... ஆளுக வந்தா எந்திரிச்சு டிக்கட் போடுவான்... ! சூதானமா இடை இடை ஊருகள்ள ஆளுகல எறக்கியும் விட்றுவான்.....

தூக்கம் வந்துருச்சு அதான் உங்க கிட்ட பேசிகிட்டே வந்தேன்..... திருமயம் தாண்டிட்டோம் தம்பி... அந்த கோட்டைய தாண்டிட்டோம்னா ஒரு மோட்டல் ஒண்ணு இருக்கு நிறுத்துறேன்... வாங்க சாயா குடிச்சுட்டு போவோம்....

சரி அண்ணே என்று நான் சொல்லி முடித்த ஐந்தாவது நிமிடத்தில் மோட்டல் வந்தது.... ! டீயை சூடாக குடித்துக் கொண்டிருந்த என்னிடம் நான் பாலுதான் தம்பி குடிக்கிறது உடம்பு சூடாயிடக் கூடதுல்ல என்று சிரித்துக் கொண்டே பால் கிளாசை ஆட்டி ஆட்டி குடித்துக் கொண்டிருந்தார்.....

மீண்டும் பேருந்து...! ஓட்டுனர் அண்ணன் இப்போது பேசவில்லை ஏதோ சிந்தனையோடு பேருந்தினை வேகமாக ஓட்டிக் கொண்டிருந்தார்....

நான் மெளனமானேன்...ஜன்னலில் நிலா சிரித்துக் கொண்டிருந்தது....காற்று முகத்தை கிழித்துக் கொண்டிருந்தது......நட்சத்திரங்கள் அழகாய் கண்சிமிட்டிக் கொண்டிருந்தது...!

இரவு அழகானதுதான், இரவுப்பயணமும் ரம்யமானதுதான் ஆனால்.....டிரைவர் அண்ணனுக்கு...?

மனசு வலித்தது... ! ஜன்னலில் சாய்ந்தபடி ஏதோ ஒரு சோகத்தில் உறங்கியே போனேன்..!


தேவா. SSaturday, September 24, 2011

தேடல்.....24.09.2011!

தெளிவான ஒரு விடயத்தை வழங்கிய புத்தனை இந்திய தேசம் தவற விட்டு விட்டது அல்லது தவற விடப்பட்டது என்று நினைக்கும் போது கொஞ்சம் வருத்தமாகத்தான் இருக்கிறது. கடவுள் என்ற ஒன்றினை தகர்த்தெறிந்து தானே தன்னை உணர்தலை வாழ்க்கையாய் வாழ்ந்து விட்டுப் போன ஒரு புருசனை சிலை வடித்து வணங்கி அவரின் பெயர் சொல்லி புத்த மதம் என்றாலும் அதுவும் புத்தனுக்கு எதிரானதே...!

புத்தர் என்ன தான் போதித்தார்? என்றுதானே கேட்கிறீர்கள், அவர் ஒன்றுமே போதிக்க வில்லை என்று நான் சொல்வது உங்களுக்கு முட்டாள்தனமாய் தெரியும் ஆனால் அதுதான் உண்மை. காலங்களாய் போதிக்கிறேன் போதிக்கிறேன் என்று நமக்குள் ஏற்றி வைத்த மூட்டைகளை எல்லாம் இறக்கி வைக்க ஒரு பாதையை அவர் காட்டியிருக்கிறார் என்று வேண்டுமானால் சொல்வேன்.

தேவை என்பது எப்போதும் துன்பத்தை தராது. ஆனால் ஆசை என்பது கட்டாயமாய் துன்பத்தை தரும் என்று அவர் கூறியதன் பின்புலத்தில் தேவை வேறு ஆசை வேறு என்று உணர்வதற்கே பல காத தூரம் சிந்தனையை செலுத்தி பின் அறுக்க வேண்டும். பசி என்பது தேவை ருசி என்பது ஆசை. காமம் என்பது தேவை குரோதம் என்பது ஆசை, உறக்கம் என்பது தேவை சோம்பல் என்பது ஆசை...

இப்படியாக வகைப்படுத்திக் கொண்டே செல்லலாம். இந்திய தேசம் புத்தரை ஏன் தவற விட்டது? என்ற கேள்விக்குப் பின்னால் பலரின் பிழைப்பு ஒளிந்திருக்கிறது. பூசாரிகள், மதத்தலைவர்கள், சாதிப் பிரிவுகள் என்று எல்லோரும் தமது கல்லாவினை கட்ட புத்தர் உதவவேயில்லை.

உலகம் மாயை என்று அவர் ஒரு போதும் சொன்னதில்லை. உலகின் மீது நீ வைக்கும் பற்றுதான் மாயை என்றார். கடவுள் ஒருவர் இல்லை என்றும் இருக்கிறார் என்றும் அவர் பகிரவே இல்லை. ஏனென்றால் அப்படியான வாதமே தவறென்பது அவருக்குத் தெரியும்.

மதத்தின் பெயரால் இன்று இத்தனை அயோக்கியதனங்களும் உருவெடுத்திருப்பதற்கு காரணம் கடவுள் என்ற ஒரு புரட்டு என்று சொன்னால் நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா அல்லது என்னை அடிக்க வருவீர்களா? கோவில்களின் தாத்பரியங்களை விளங்கிக் கொள்ளாமல் அங்கே யாரோ ஒருவர் இருப்பதாகவும் அவரோடு நேரடித் தொடர்பு கொண்டவர்களாக பூசாரிகளையும் சாமியார்களையும் ஏற்றுக் கொள்வதும் அறீவீனம் என்று நான் சொன்னால் என்னை ஏற்றுக் கொள்வீர்களா இல்லை அடிக்க வருவீர்களா?

நீங்கள் என்ன செய்தாலும் சரி நீங்கள் சொல்லும் கடவுள் இது வரை உங்களிடம் நேரே வந்ததே கிடையாதுதானே....! யாரோ ஒரு சாமியார் தாடியை வளர்த்துக் கொண்டு உங்களை ஆசிர்வாதம் செய்வது மட்டும் தொடர்ச்சியாய் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. கோவில்கள் மனதை ஆராயும் ஒரு கருவியாய் செயல்படுகின்றன என்பதை கடைசி வரை நம்மை உணரவிடாமல் இருப்பதே பூசாரிகளின் வேலையாய் இருக்கிறது.

கடவுள் என்ற கொள்கை போலியானது ஆனால் நமது உணர்வு என்பது எப்போதும் உண்மையானது அதற்கு எந்தப் பெயரையும் புத்தர் வைக்க விரும்பவில்லை. இரு...இருப்பதை அறி. அறிந்ததை தெளி தெளிந்ததை வாழ்வாக்கு வாழ்க்கை விட்டு விலகாதே என்பது எவ்வளவு நிதர்சனமோ அவ்வளவு நிதர்சனமானது புத்தர் என்ற உண்மையும்.

பிரபஞ்சம் என்பது எங்கோ இருப்பது போன்ற ஒரு மாயையை நமது மனது ஏற்படுத்திக் கொண்டே இருக்கும். நாம் எப்போதும் அங்கேதான் இருக்கிறோம் என்று அது உணர்த்துவதே இல்லை இதை உணர விடாமல் நம்மை பல கொள்கைகளும் சித்தாந்தங்களும் இழுத்துப் பிடித்து வைத்திருக்கின்றன.

சக மனிதனை இழிவு செய்ய மதங்களும் கடவுளும், கொள்கைகளும் நிகழ்த்தும் கொடுமையினைக் கண்ட தந்தை பெரியார் அவர்கள் மிகக் கடும் சினம் கொண்டு சொன்ன வார்த்தைகள்தான்...

கடவுள் இல்லை; கடவுள் இல்லை; கடவுள் இல்லவே இல்லை; கடவுளைக் கற்பித்தவன் காட்டுமிரண்டி; போதித்தவன் அயோக்கியன்; அதை நம்புவன் மடையன் என்று...!

ஆமாம் உங்கள் கடவுள் சாதி பிரிவுகளுக்கு உதவுகிறார், சக மனிதனை அடிமைப்படுத்த உதவுகிறார், உங்களைச் சிந்திக்க விடுவதில்லை, பரிகாரங்கள் கேட்கிறார் என்றால் ஒவ்வொரு நியாயவானும் மேற்கொண்ட கூற்றை சொல்லித்தான் ஆகவேண்டும்.

சுபிட்சமான வாழ்க்கையை வாழ உதவாத ஒன்று கடவுளாய் இருக்குமெனில் அதை தூக்கி எறிந்து விட்டுத்தான் நாம் வரவேண்டும். போதனைகள் மனித வாழ்க்கையை நல் வழிப்படுத்த வேண்டும் மாறாக சீர்குலைக்கிறது எனில் அவை போதனைகளா? அல்லது இரத்தம் குடிக்கும் வழிமுறைகளா?

புத்தர் போதிக்க வில்லை உங்களையும் என்னையும் வாழச் சொல்கிறார். காட்டு மிராண்டியாய் இருந்த மனிதன் நாகரீகம் என்ற ஒன்றை கைக்கொண்டு மேலேறி வர எந்த கடவுளும் உதவவில்லை மாறாக தன்னைப் பற்றிய சுய சிந்தனையே உதவியிருக்கிறது என்பதை மாறி வரும் வாழ்க்கையில் நிகழும் எல்லா சம்பவங்களும் சாட்சியாக கூற ஏதோ ஒன்றை ஏன் பிடித்து தொங்கிக் கொண்டிருக்க வேண்டும் என்பதுதான் கேள்வி...?

கடவுள் இல்லை என்று கூறுவதும் இருக்கிறார் என்று கூறுவதும் மனித அகங்காரத்தைதான் வளர்த்துப் போடுகிறது. அறிந்தேன் என்பதை அறியாது இருக்குமிடத்தில் மலரும் பரிபூரணத்தை ருசிக்க மனித மனத்துக்கு எப்போதும் திடனில்லை அதனால்தான் அது கடவுள் என்னும் ஒரு சுவரை பிடித்துக் கொண்டே இருக்கிறது.

கடவுள் இல்லை என்று கூறி ஏதோ ஒன்றை நிறுவ போராட வேண்டாம் இருக்கிறது என்று கூறியும் உருண்டு புரள வேண்டாம் மாறாக வாழ்க்கையை வாழ முயற்சி செய்யுங்கள் பரிபூரணமான ஒரு விழிப்பு நிலையில் இதை தான் புத்தர் உணர்த்தினார்.

காட்டு மிராண்டிகளாக இருந்த ஒரு சமுதாயத்தை சீர் தூக்கி ஒரு வழித்தடத்தில் நிற்க வைக்க இந்து என்னும் சனாதன தர்மம் உதவியது. அதை இன்னமும் கைப்பிடித்துக் கொண்டு செல்வது நாகரீகம் முன்னேறி ஏரோ பிளேனில் செல்லும் காலத்திலும் கட்டை வண்டியில் ஏறிச் செல்வதற்கு சமம். சனாதான தருமத்தில் சொல்லப்பட்டிறுக்கும் நிறைய விடயங்கள் மனம் என்ற ஒன்றை மனிதன் அறிய கொடுக்கப்பட்ட பயிற்சிகள்....

பயிற்சிகளிலேயே நின்று விடாமல் அதை தாண்டிய பயன்பாட்டிற்கு வித்திட்டது புத்தமதம். சனாதான தருமத்தின் ஆழத்தில் மறைந்து ஒளிக்கப்பட்டிருந்த ஒரு அற்புதத்தை புத்தர் பேரறிவு என்ற ஞான ஒளியால் வெளியே கொண்டு வந்தார், ஆனால் அது பலபேரின் பிழைப்பில் மண் போட்டு விடும் அபாயம் இருப்பதை தெளிவாக உணர்ந்த ஒரு கூட்டத்தினர் சாதுர்யமாக இந்த மண்ணில் இருந்து புத்தரின் போதனைகளை முறித்தெறிந்து விட்டனர்.

புத்தரை பின்பற்றுகிறேன் என்று அவரை ஏற்றுக் கொண்ட தேசங்களிலும் மீண்டும் தத்தம் பிழைப்பினை முன்னிறுத்தி புத்த மதத்தின் பெயராலேயே மீண்டும் வேறு திசைக்கு மனிதர்கள் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

உள்ளுணர்வை கவனியுங்கள்; அது இசைக்கும் கீதத்தினை கேளுங்கள், வாழ்க்கை விட்டு நீங்கள் எங்கும் சென்று விடவில்லை. ஒரு காற்றில் கொடி அசைவது போல, பூக்கள் பூப்பது போல, காற்றில் பரவும் நறுமணத்தைப் போல இசைவாய் வாழ்க்கையை வாழுங்கள்...

மனமென்ற ஒன்றினை அறியுங்கள் அதற்காய் மாதத்தில் ஒரு நாளாவது மெளனமாயிருங்கள். எப்போதும் அடுத்தவரோடு பேசி பேசி அலுக்கவில்லையா உங்களுக்கு....? தினமும் சிறிது நேரமேனும் உங்களோடு பேசுங்கள்....

வாழ்க்கை நகர்விற்கு பொருள் அவசியம். பொருளை பிரதானமாகக் கொண்ட உலகில் பொருளை மாயா என்று கூறுவதும் மடத்தனம். பொருளைக் கைக்கொள்ள மனதால் திட்டமிடுங்கள் தேவைகளை எடுத்து வரிசைப்படுத்துங்கள்.....பொருளை சேர்க்கும் எல்லா வழிமுறையும் நமக்கு நிம்மதியைத் தருகிறதா என்றூ பார்த்து, பார்த்து செயல் செய்யுங்கள்...

நான் இப்படித்தான் என்ற கட்டினை உடைத்து எறியுங்கள், மனித சமுதாயத்திற்கும் இந்த வாழ்க்கைகும் தீங்கு தரும் எல்லா விடயங்களையும் கொளுத்தி எரியுங்கள், உண்மையான பரிகாரங்கள் நமக்குள் நம்மை சீர் திருத்தும் படி இருக்கட்டும்.

பேசிக் கொண்டே ....இதோ நான் யாரிடமோ பேசுவது போல எனக்குள்ளேயே பேசிக் கொள்கிறேன்.....என்னை உற்று நோக்குகிறேன். மாறும் தன்மையுள்ள வாழ்க்கையில் சூழலுக்கு ஏற்ப எல்லாம் மாறுகிறது. வார்த்தைகளால் மனிதர்களை மாற்றுவதும், நாம் மாறுவதும் இயலாத ஒன்று என்பதை காலம் காலமாய் இயற்கை போதித்து வந்து இருக்கிறது

மாறாக அனுபவங்களை செரித்து உள்வாங்கிக் கொள்ளும் போது அவை தெளிவாக அடுத்த நிலைக்கு கூட்டிச் செல்லும் ஆசானாய் இருக்கின்றன. எல்லா தொடர்புகளோடும் இயங்கும் இந்த தருணத்தில் நான் என்னை அறிகிறேன்...என்னை அறிய எனக்கு மனம் ஒரு ஆயுதமாய் இருக்கிறது....

நான் இருக்கிறேன்...சுவாசத்தோடு சேர்ந்து எப்போதும் என்னை கவனித்தபடி....அழுந்த பதியாத எண்ணங்களை அழித்தபடி....தொடர்கிறேன் என் தேடலை...


தேவா. S

Monday, September 19, 2011

புவனா...!என்ன மாஸ்டர் அமைதியா உட்கார்ந்து இருக்கீங்க? ஏதாச்சும் பேசுங்க மாஸ்டர் என்று நான் சொன்னதை மாஸ்டர் காதில் வாங்கிக் கொண்டு வாங்காததைப் போல அமர்ந்திருந்தார்.

மாஸ்டர் ஒருவர் தான் என்னை சரியாக புரிந்து வைத்திருக்கும் ஒரு மனிதராய் நான் இதுவரையில் நினைத்துக் கொண்டிருப்பது. அவருக்கும் புரியவில்லை எனில் அதுக்காக கவலைபடும் ஜென்மமா இந்த புவனா?

ஏம்மா புவனா என்னை நீ ஏன் மாஸ்டர்னு கூப்பிடுற உனக்கும் எனக்கும் 7 அல்லது எட்டு வயசு வித்தியாசம்தான இருக்கும்..! ஒரு வேளை பேர் சொல்லி கூப்பிட பிடிக்கலேன்னா அண்ணானு கூப்பிடலாம்ல....மாஸ்டர் கேட்டார்.

அடா அடா என்ன மாஸ்டர் இப்படி ஒரு கேள்வி கேட்டுட்டீங்க? நான் எதுக்கு உங்கள அண்ணானு கூப்பிடணும்...! அண்ணானு கூப்பிடலாம் மாஸ்டர் ஆனா எனக்கு பிடிக்கலை...! அப்டி உண்மையா கூப்பிட நினைக்கிறவங்க கூப்பிடலாம் எனக்கு என்னமோ அப்டி தோணல... ஒரளவுக்கு நான் மதிக்கிற மனுசன் நீங்க எனக்கு வயசு 27 உங்களுக்கும் 34 அப்டீன்றதால அண்ணாவோ, சாரோ, மாமாவோன்னு முறை வச்சி கூப்பிட நான் எப்பவும் விரும்பியது இல்லை....

அப்போ, அப்போ ஏதோ நான் சொல்றதை புரிஞ்சுக்கிறீங்க எனக்கு சப்போர்ட் பண்றீங்க கத்தும் கொடுக்கிறீங்க, உறவே இல்லாத ஒரு உறவா இருக்கட்டும்னுதான் நான் உங்களை மாஸ்டர்னு கூப்பிடுறேன். நாளைக்கே நீங்க என்ன பாக்க வரலேன்னா கூட நான் கவலைப் படமாட்டேன் மாஸ்டர்...

வந்தா ஏதோ இலக்கிய நயமா பேசலாம், கவிதை சொல்லுவீங்க, ஏதோ வாழ்க்கை விளக்கங்கள் சொல்வீங்க, நானும் என்னோட பார்வைகள சொல்லுவேன்.. அவ்ளோதான் வரலேன்னா நான் பாட்டுக்கு இன்னும் ஜாலியா காத்து வாங்கிட்டு, ரெண்டு பொட்டலம் சுண்டலுக்கு காசு கொடுக்கறத ஒரு பொட்டலத்துக்கு கொடுத்தோம்டா, 5 ரூபாய் மிச்சம்னு ஏகாந்தத்தை அனுபவச்சுட்டு பஸ் பிடிச்சு வீட்டுக்கு போய்கிட்டே இருப்பேன்...

ஏன் புவனா அப்டீ சொல்ற உனக்கு சென்டிமென்டே கிடையாதா என்னா? ஒரு வேளை நாளைக்கு நான் செத்துப் போய்டுறேன்னு வச்சுக்க...அப்ப எப்டீ நீ ஃபீல் பண்ணுவ?

நீங்க செத்துட்டா....ம்ம்ம் ஐயம் சாரி மாஸ்டர் இந்த கேள்விக்கு உங்க வைஃப்தான் பயந்து அலறணும் அல்லது கண்ணீர் விடணும். ஒரு வேளை நானே உங்க வைப்ஃபா இருந்தா கொஞ்சம் திங்க் பண்ணுவேன் இப்டி ஒருத்தர் இருந்தாரேன்னு.... கொஞ்ச நேரத்துல வயிறு பசிக்க ஆரம்பிச்சுடும்...மாஸ்டர மறந்துட்டு பசிக்குது என்னடா சாப்பிடலாம்னு தேடி ஓட ஆரம்பிச்சுடுவேன்...ஹா ஹா ஹா!

எல்லாத்தையும் விட, எல்லோரையும் விட, மனுசனுக்கு தான் அப்டீன்றது தான் மெயின் மாஸ்டர். என்ன ஒண்ணு எப்பவுமே பிறருக்காக வாழ்ற மாதிரி நடிக்கிற ஒரு ஆட்டு மந்தைக் கூட்டத்துக்குள்ள எல்லோரும் சுத்திகிட்டு மே மே..ன்னு கத்திக்கிட்டு இருக்காங்க...

என்னையும் மே மேன்னு கத்த சொல்றீங்களா? பி பிராக்டிகல் மாஸ்டர்...!

அப்டி இல்லை புவனா பாசம்னு ஒண்ணு இருக்கும்ல? என்னைய விடு உன்னோட சொந்தக்காரங்களுக்கு நடந்தாக் கூட இப்டிதான் நடந்துக்குவியா?

மாஸ்டர் உண்மையான பாசம் பொய்யான பாசம்னு ஒண்ணுமே உலகத்துல கிடையாது. இன்னும் சொல்லப் போனா பாசம்ன்றது ஒரு குறிப்பிட்ட காலத்துக்கான தேவைன்னு சொல்லலாம். ரொம்ப சென்டிமென்ட்டா அம்மாவோட பாசம் பொய்யா? ன்னு கேள்வி எல்லாம் கேக்காதீங்க...

சுட்டுப் போட்டாலும் என்னால அறிவை விட்டு வெளியில நின்னு பேச முடியாது. அம்மாவாவே இருந்தாலும் அம்மாவுக்கு பிடிக்காம நடந்து கிட்டீங்கன்னா அவுங்களே உங்களுக்கு எதிரி ஆயிடுவாங்க...

இது எல்லாம் விட்டுத்தள்ளுங்க மாஸ்டர். நம்ம வாழ்க்கைல ஒரே ஒரு உன்னதமான விசயம் தொடர்புகள். இப்படியான தொடர்புகள் இல்லாம வாழ முடியாது. அந்த தொடர்புகள் என்ன தொடாத மாதிரி நான் தொடர்புகள வச்சுக்கிறேன். அவ்ளோதான்...

ஒருவேளை நான் சொல்றது உங்களுக்கும் இந்த உலகத்துக்கும் பிடிக்காம இருக்கலாம்...மே.. பீ நீங்க அப்டீ இருங்க ! தப்பு இல்லை. ஆனா என்னை ஏன் அப்படி நீ இல்லன்னு கேக்காதீங்க...!

நான் நானா இருக்கேன் மாஸ்டர்....!

சொல்லிவிட்டு மாஸ்டரை பார்த்தேன்.... காற்றில் கேசம் பறக்க எங்கேயோ வெறித்துக் கொண்டிருந்தார். மாஸ்டர் அழகுதான் ஆனால் ரசிக்க கூடிய, வேண்டிய இடத்துல இருந்து எல்லோத்தையும் அவர் ரசிக்கிறதால அத்துமீறாத அந்த வசீகரம் எனக்குப் பிடிச்சு இருக்கு. இப்படி பிடிச்சு இருக்குன்னு சொல்றதுக்கெ பயப்படறவங்க இருப்பாங்க...

கேட்டா... சமுதாயம் கட்டமைப்புன்னு நிறைய விறகு கட்டைகள எடுத்து நம்மள சுத்தி அடுக்கி வச்சு எப்படா எரிக்கலாம்னு பாத்துட்டு இருப்பாங்க..? எனக்கு பயம் இல்லை பிடிக்கும்னா பிடிக்கும்னு சொல்லிட்டு போய்கிட்டே இருப்பேன்.... ! இதை மாஸ்டர்கிட்டயே நேரா சொல்லி இருக்கேன்...

ஒரு நாள்...இது காதலா இருக்குமா மாஸ்டர்னு கேட்டப்ப? மாஸ்டர் சொன்ன பதில்தான் அவர இன்னும் அறிவார்த்தமா பாக்க வச்சுது...

ஏன் புவனா? காதலா இருந்தா என்ன இல்லன்னா என்ன? ரசிக்கிற வரைக்கும் ரசனைகள் கண்ணியமானவைகளா இருக்கணும்னு அவ்ளோதான் ன்னு சொன்னாரு பாருங்க... அங்கதான் மாஸ்டரோட தெளிவு புரிஞ்சுது...! அவர் கல்யாணம் ஆனவர், அவருக்கு குழந்தை இருக்கு அப்டீன்றது எல்லாம் எனக்கு கூடுதல் விபரங்கள், ரசனையான மனுசன் அவருக்கே அவரோட வாழ்க்கையை ரசனையா வச்சுக்கத் தெரியும் , அப்டீன்றதால அது பத்தி ஏதாவது சொல்லி என் மூக்கை எப்பவும் நான் நுழைக்கிறது இல்லை...

இன்னும் சொல்லப்போனா அவர் ஒரு ஆண், நான் ஒரு பெண் இப்டி ஒரு கனக்ட்டிவிட்டில நாங்க பாக்குறதோ பேசுறதோ கிடையாது. அவர் என்னையும், நான் அவரையும் உணர்வுகளால சுவாரஸ்யப்படுத்துறதால... பழகுறோம்...

இந்த சுவாரஸ்யம்ன்ற விசயத்துல பெரும் பங்கா இருக்குறது என்ன பத்தி அவர் தேவையில்லாம அதிகம் தெரிஞ்சுக்கவோ அல்லது அறிவுறுத்தவோ அல்லது அவர் கூடவே நான் இருக்கணும்ன்ற பிடிவாதமோ இல்லை. அதே மாதிரிதான் எனக்கும்....

சமயத்துல நானும் மாஸ்டரும் மாதக்கணக்கா கூட சந்திக்காம இருந்து இருக்கோம் சமயத்துல கேப்பே இல்லாம மணிக்கணக்கா கூட பேசி இருக்கோம்..இது ரெண்டுக்குமே காரணத்தை நாங்க தேடிகிட்டது இல்லை.

என் யோசனையைக் கலைத்துப் போடும் படியா மாஸ்டர் என்னைப் பாத்து புன்னகைத்தார். என்ன மாஸ்டர் சிரிக்கிறீங்க...? நான் கேட்டேன்...

இல்லை புவனா? பெரும்பாலும் பெண்கள் ஆணாதிக்க சமுதாயம்னு சொல்லிக்கிறாங்க, ஆனா ஒரு காலத்துல ஆண்கள் திட்டம் போட்டு நல்ல வசமாவே பெண்களை அடிமைப்படுத்தி தனக்கு கீழ வச்சுக்கணும்னு நினைச்சாங்க.. ! இப்பவும் சிலர் அப்டி இருக்காங்க...

இப்டி நான் சொல்லும் போதே இன்னொரு விசயத்தையும் உன்கிட்ட சொல்லணும், அதாவது பெண்கள்லயே இன்னும் நிறைய பேரு பெண் அப்டீன்னா என்னனு தெரியாமதான் ஆணாதிக்கத் திமிரை ஒடுக்குவோம்னு கோசம் போடுறாங்க?

ஒரு பெண் தான் விடுதலை பெற்றதா எதைச் சொல்றா தெரியுமா?

எதை மாஸ்டர்...? கேள்வியாய் பார்த்தேன்...

ஒரு ஆணைப் போல தான் நடந்துக் கொள்வதாலும், உடுத்துவதாலும், பேசுவதாலும் கால் மேல கால் போட்டு சபையில் உக்காருவதாலும் தான் சுதந்திரமாய் இருப்பதா நம்புறா? அப்டியும் இருக்கலாம்....

ஆனா,

ஒரு பெண் தன்னை பெண்ணா 100 சதவீதம் வெளிப்படுத்திக்க எல்லா விதமான சாத்தியக்கூறுகளையும் எடுத்துக் கொண்டு தானே தானாக தன்னை வெளிப்படுத்திக்கிற இடம்தான் உண்மையான புரிதல்னு நான் நினைக்கிறேன் புவனா.

அப்சலுயூட்லி கரெக்ட் மாஸ்டர்...! பாரதி திமிர்ந்த ஞானச் செறுக்கோட இருக்க சொன்னான்....ஆனால் ஞானத்தை விட்டுட்டு திமிரை மட்டும் வசதியா தலையில தூக்கிட்டு போறது நிறைய பேருக்கு ஈசியா இருக்கு மாஸ்டர்.. ஹா ஹா...ஹா....!

நான் ஒண்ணு சொல்லவா மாஸ்டர்...?

சொல்லு புவனா...... மாஸ்டர் அனுமதித்தார்...

போன வாரம் என்னை பொண்ணு பாக்க ஒருத்தர் வந்தார்...! ரொம்ப கேசுவலா பேசிட்டு இருந்தவர்.. ஒரு உண்மைய உன்கிட்ட சொல்லணும் புவனா.... அதை சொல்றது என் கடமைன்னு நான் நினைக்கிறேன்...னு சொன்னார். நான் சரி சொல்லுங்கன்னு சொன்னதும்..., அவர் சொன்னார்..

என்னோட பாஸ்ட் லைஃப்ல பல பெண்களோட எனக்கு உறவு இருந்துச்சு, அதுல ஒரு மூன்று நான்கு பெண்கள் கூட ரொம்ப நெருக்கமான உறவும் ஏற்பட்டுச்சு..., ஆனா இப்போ இல்லை புவனா.....நான் உன்கிட்ட உண்மையா இருக்கணும்னு நினைக்கிறேன் அதான் சொல்லிட்டேன்.. ! நான் உன்கிட்ட மறைக்க விரும்பலை....உண்மையா இருக்க விரும்புறேன்னும் சொன்னார்....

நான் பதிலுக்கு அட பரவாயில்லை மிஸ்டர் ரகு. எனக்கு அதுல எந்தப் பிரச்சினையும் இல்லை. நீங்க சொல்றத நான் கேட்டுக்கிட்டேன் உங்க பெருந்தன்மையான பகிர்தலுக்கு எனது பாராட்டுக்கள்னு சொல்லிட்டு....

நான் ஒரு விசயம் சொல்லணும்..சொல்லலாமான்னு கேட்டேன்....! சரி புவனா...கோ எகெட்னு சொன்னார் அந்த எதார்த்தவாதி....

லுக் மிஸ்டர் ரகு....! எனக்கு கூட நிறைய பாய் பிரண்ட்ஸ் இருக்காங்க, அதுல ரென்டு மூணு பேர் கூட இல்லை ஒரே ஒருத்தர் கூட கொஞ்சம் நெருக்கமா நான் பழகி இருக்கேன்.. அதாவது நீங்க குறிப்பிட்ட அதே ரேஞ்ச்ல..

ஆனா இனிமே அது மாதிரி எல்லாம் நடக்காது... ! திருமணம்னு ஒண்ணு ஆன உடனே ஒரு கட்டுக்குள்ள உங்கள மாதிரியே நானும் வந்துடுவேன் .. நீங்க இதை கேசுவல எடுத்துக்கணும்னு சொன்னேன்....

ஹா ஹா ஹா இன்ட்ரஸ்டிங் புவனா? அதுக்கு என்ன சொன்னார் ரகு...?

நான் தொடர்ந்தேன்...கல்யாணம் நின்னு போச்சு மாஸ்டர்... ஹா ஹா...! ஒரு பொண்ணு இப்டி இருக்கக் கூடாதாம்.....உலக சம்பிரதாய சட்டத்துல ஆண்களுக்கு மட்டும் இப்படி அதிகாரம் இருக்காம். அதை அவுங்க ஒத்துக்கிடும் போது அது பெருந்தன்மையாம்.. நாங்க கடவுளின் அவதாரமா அவரைப்பார்த்து எல்லோர்கிட்டயும் அவர் எவ்ளோ நல்ல மனசு உடையவர் தெரியுமான்னு கொண்டாடணுமாம்...

டாமிட்.... அவன் சொன்ன உண்மைய நான் ஏத்துக்கணும்.. ஆனா நான் சொன்ன பொய்யை அவனால ஏத்துக்க முடியாது.. இதைத் தான் நான் கன் வச்சு சூட் பண்ணனும்னு சொல்றேன் மாஸ்டர்...!

எனக்கு பிடிச்சு இருக்குன்னு வச்சுக்கோங்க ஒரு ஆணோட என்னால க்ளோசா இருக்க முடியும்.. அது எப்ப வேணா நான் செய்யலாம்....அதுக்கு கல்யாணம் கத்திரிக்கா ஒண்ணும் எப்பவுமே தடை கிடையாது மாஸ்டர்....

சரி எது? தப்பு எது? ன்னு முடிவு பண்ண வேண்டியது தனித் தனி மனுசங்க? எனக்கு என்னமோ நிறைய ஆம்பளைங்க கல்யாணம் பண்ணிகிட்டு செக்கியுரிட்டி ஆபிசர்ஸ் மாதிரி வைஃப்ங்கள சுத்தி சுத்தி வர்ற மாதிரிதான் தோணுது...

பொண்ணுங்களும் தாலிய எடுத்து கண்ணுல ஒத்திகிட்டு சாகுற வரைக்கும் நான் உனக்கு உண்மையா இருக்கண்டான்னு ஒவ்வொரு தடவையும் ப்ரூப் பண்ணிகிட்டே இருக்காங்க....

நான்சென்ஸ்...! இயல்பா வாழ முடியாதா மாஸ்டர்...?

நான் பேசி முடிக்கவும் மாஸ்டர் கை தட்டினார்....! இப்டி இருக்கணும் புவனா.... இயல்பா ஆணும் பெண்ணும் இல்லாம இருக்கறதுக்கு நிறைய காரணம் இருக்கு...அதைப் பத்தி அடுத்து நாம மீட் பண்றப்ப பேசலாம்...

ஆனா நீ பேசுறத எல்லாம் பாத்துட்டு உனக்கு திமிர் ஜாஸ்தின்னு இந்த உலகத்துல 99% சொல்லுவாங்க...ஆனா இப்டி இருக்கறதுதான் இயல்புன்னு நான் சொல்வேன்...

ஒரு வேளை நான் பொண்ணா இருந்தா உன்ன மாதிரி இருந்திருப்பேனான்றதும் டவுட்.. அதனாலேயே உன்னை உன் செயலை ரசிக்க முடியுது என்னால..

ம்ம்ம்.... டைம் ஆச்சு ஒரே விசயம் சொல்லிட்டு கிளம்பலாம்...! என்னோட கொலிக் ஒருத்தன் என்ன பாத்து கேட்டான்...ஏண்டி இவ்ளோ திமிரா இருக்கியே... ஆம்பளைங்க நாங்க சட்டைய கழட்டிப் போட்டுட்டு....ரோட்ல நடப்போம் உன்னால முடியுமாடி? ன்னு...

நான் சொன்னேன்...இல்லடா என்னால முடியாது சத்தியமா முடியாது ஒத்துக்குறேன்.

ஆனா நீ ஆம்பளைதானே..... உன்னால எல்லாமே முடியும்ல..... ஒரு மாசம் டெய்லி புடவை ஜாக்கெட் போட்டுகிட்டு, வளையல் போட்டுகிட்டு , அல்லது சுடிதார் போட்டுகிட்டு உன்னாலே ஆபிஸ்க்கு வர முடியுமாடா?ன்னு கேட்டுட்டு

என்னால பேண்ட் சர்ட் போட்டுகிட்டு ஆயுசு பூரா வரமுடியும்னும் சொன்னேன்.....

ஹி ஹி ஹின்னு சிரிச்சுட்டு போய்ட்டான் மாஸ்டர்...!

செய்ய முடியுமான்னு கேட்டா? அது மாதிரி ஆயிரம் நாமளும் திருப்பி கேக்கலாம்ல மாஸ்டர்.

ஆணாதிக்கம் மட்டும் இருக்குன்னு நான் சொல்ல வரலை மாஸ்டர், பெண்களுக்கும் பெண்ணா இருக்கறதுன்னா என்னனு முழுசா தெரியலை...! இப்டியே பேசிட்டு இரு, தனியா போகும் போது நாலு பேரு சேந்து உன்னை நாசம் பண்ணப் போறாங்கன்னு எங்கம்மா சொல்றதுக்கு பின்னாடி கடைஞ்செடுத்த பொது புத்திதான் இருக்கு மாஸ்டர்...

ஏன்னா.....நாலு பேரு ஒண்ணா சேந்தா ஒரு ஆம்பளைய கூடத்தான் என்ன வேணா பண்ணலாம்....ஹா ஹா ஹா!

மாஸ்டர் இருட்டிடுச்சு மணி 8 ஆகப் போகுது எனக்குப் பிரச்சினை இல்லை.....உங்க வைஃப் உங்களத் திட்டப் போறாங்க கிளம்பலாம் மாஸ்டர்..!

பேசி முடித்தேன்....!

சரி புவனா கிளம்பலாம் பாத்து போ... கேட்ச் யூ வென் எவர் இட்ஸ் பாஸிபிள்....

பை...சொன்னார்....!

கவலைப்படாதீங்க மாஸ்டர்.. சின்ன சைஸ் கத்தி, பிளேடு எல்லாம் ஹேண்ட் பேக்ல இருக்கு.... சீக்கிரமே கைத்துப்பாக்கி ஒண்ணு வாங்கி வச்சுக்கலாம்னு இருக்கேன்.... ஹா ஹா ஹா!

தூரத்தில் கடல் வானில் இருந்த நட்சத்திரங்களைப் பார்த்து ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தது.

" உலக வாழ்க்கையின் நுட்பங்கள் தேரவும்,
ஓது பற்பல நூல்வகை கற்கவும்,
இலகு சீருடை நாற்றிசை நாடுகள்
யாவுஞ் சென்று புதுமை கொணர்ந்திங்கே
திலக வாணுத லார்நங்கள் பாரத
தேச மோங்க உழைத்திடல் வேண்டுமாம்;
விலகி வீட்டிலோர் பொந்தில் வளர்வதை
வீரப் பெண்கள் விரைவில் ஒழிப்பராம்..."


....பாரதி எனக்குள் மீசை முறுக்கிப் பாடிக் கொண்டிருந்தான்...நான் நடக்கத் தொடங்கினேன்!


தேவா. S


Saturday, September 17, 2011

சிலிர்ப்பு
ஏதோ இரையைக்
கவ்விச் செல்கின்றன
எறும்புகள் சாரை சாரையாக
ஏதேதோ கனவுகளுடன்;
கனவுகளோ,கற்பனைகளோ
நிதர்சனமென்பது
யாராலும் மிதிபடாதவரை...


***

முடிவுகளில்
பெரும்பாலும் ஒன்றுமில்லை
என்பதே விதியாகிறது...,
இருந்தாலும்
எல்லாவற்றிலும்
முடிவையே தேடியே...
இடைப்பட்டதின்
லயிப்பு சுகக்தை
தொலைப்பதே
வாடிக்கையாகிவிட்டது
இவர்களுக்கு!

***

பெருங்கனவொன்றில்
நான் அந்த
நதியாய் நடித்துக்
கொண்டிருந்தேன்
நதி நானாய்
இயல்பிலிருந்தது!

***

வண்ணத்துப் பூச்சிகள்
எவ்வளவு உற்சாகமாய்
சிறகடிக்கின்றன...,
கடந்த காலங்கள்
எல்லாம் அவற்றை
ஒன்றும் செய்வதே இல்லை!

***

சட சடவென்று
வீசிய காற்றில்
மட மட வென்று
முறிந்தது
நெடு நெடுவென்றிருந்த
கனத்த மரம்.

***

தூண்டில் போட்டு
காத்திருக்கிறான்
வெகுநேரமாய்....
ஏதாவது கிடைக்கலாம்
இல்லாமலும் போகலாம்!
காத்திருந்த
நினைவுகள் மட்டுமே...
மிச்சம்!


தேவா. SFriday, September 16, 2011

மிருக ஆட்டம்...!
என்றேனும் ஒரு நாள்
அச்சினை மாற்று ...
ஏதேனும் கோள்களோடோ
அல்லது சூரியனோடோ
மோதிச் சாம்பலாய்
உதிர்ந்தே போ பூமியே!!!!!

எப்போதும் மெளனத்தை
போதிக்காதீர்கள் மனிதர்களே
சப்தங்களாய் திரிந்து
செவிப்பறைகள் கிழிம் வரை
கூச்சலிட்டு எமது
குரல்வளைகள் கிழிந்தே
போகட்டும் ஒரு நாள்...!

உணர்வாய் நின்று
ரெளத்ரத்தில் குளித்து
இயல்பாய் எம்மை கோபங்கள்
கொண்டு சீறிப்பாய
எம்மை பணித்துப் போங்கள்
கடவுளரே...!

பூக்களை யாம் பூஜித்து
வர்ணித்தெழுதிய வார்த்தைகளே...
சற்றே எம்மை விட்டு...
கலைந்தே போங்கள்...,
கடும் பாறைகளை நான்
தீரத் தீர காதலித்து...
எம் கண்ணீராலவாது ஒரு
கவிதை செய்ய வேண்டும்..!

புல்வெளிப் பயணங்களை
ஒத்தி வையுங்கள் எமது கால்களே..
நாம் பாலை வெயிலில்
பாதங்கள் சூடேற
நடந்து பயில வேண்டும்,
குளிரினை ரசித்து
சுகத்தில் லயித்துக் கிடக்கும்
எமது தோற்களில்
சூரிய சூட்டினால்
நிறைய தழும்புகள் வேண்டும்...!

மன்னிப்புக் கொடுத்து கொடுத்து
மரத்து போயிருக்கும்
எம்மை கடவுளாக்கும் நினைவுகளை
செதுக்கி எறிந்து விட்டு
ரெளத்ரத்தால் தவறுகளை
கொன்றழிக்கும் மிருக குணம் கொண்டு...
ஜகத்தினை மிரட்டிப் புரட்டிப் போடும்
ஒரு மிருக ஆட்டம்...
நான் ஆட வேண்டும்..!


தேவா. S

Wednesday, September 14, 2011

மழை.....!


சப்தமாய் பெய்த ஜன்னலோர மழையில் மறந்தே போனது..என் பேருந்துப் பயணம்...!

மனிதர்கள் சட சடவென்று கதவடைத்து மழையோடான உறவினை வேண்டாமென்று முறித்துக் கொண்டு பேருந்துக்குள் பதுங்கி ஏதேதோ மழைக் கதைகளை சப்தமாய் பேசி சிரிக்கையில் வெளியில் நிஜ மழை... மரம் செடிக் கொடிகளோடு.. சப்தமாய் பேசி சிரித்தது.. மனிதர்களை பற்றியாய் இருக்குமோ?

கண்களை ஜன்னலின் வழியே பரவ விட்டு மழையின் சாரலை உடலில் வாங்கிக் கொண்டு மெல்ல எட்டி இரு கை மழை நீரை தீர்த்தமாய் பாவித்து என் முகம் துடைக்கையில் பக்கத்தில் அமர்ந்திருந்த என் சக பயணிக்கு...., ஒன்று நான் பைத்தியக்காரனாய் இருந்திருக்க வேண்டும் இல்லையேல் வேற்றுக் கிரக வாசியாய் தெரிந்திருக்க வேண்டும். ஏனென்றால் அவரின் பார்வை அப்படி...!

சன்னலை இறக்கி விடப்பா... என்ற அவரின் குரலை பார்வையால் சாந்தப் படுத்தினேன். வார்த்தைகளின் பயன்பாடு பெரும்பாலும் பயனளிப்பதில்லை. எண்ணங்களை தொண்டைக்குள் வைத்து வழி மாற்றம் செய்து அதை சப்தமாக்கி பேச்சாக்காமல் பார்வையாக்கி கூட இருந்தவரின் விழிகளுக்குள் இறக்கி அவரைச் சப்தமின்றி சாந்தமாக்கினேன்..!

எப்போதும் தானே பெய்கிறது மழை என்று கேட்பவர்களிடம் நான் ஒரு கேள்வி கேட்பேன்...? எல்லோருக்கும் தானே குழந்தை பிறக்கிறது....? உங்களுக்குப் பிறந்து விட்டதில் மட்டுமென்ன உங்களுக்கு அப்படி ஒரு சந்தோசம்...? மழை பூமிக்கு குழந்தை....! காற்றோடு கூடி கருவுற்று எப்போதும் ஜனித்துக் கொடுக்கிறாள் மேகத்தாய்...., நீங்கள் ரசிக்கா விட்டால் போங்கள்...

தாவி வரும் குழந்தையை வாங்கிக் கொள்ளாமல் கதவடைக்கிறார்களாம் கதவு...! யாரப்பா அது வண்டியை நிறுத்துங்கள்...நான் மழையில் நனைய வேண்டுமென்று என் பயணத்தை அவசரமாக ஒத்தி வைத்துள்ளேன்...!

முழுப் பைத்தியத்தை எல்லா தெளிவானவர்களும் சேர்ந்து வண்டியிலிருந்து இறக்கி விட அந்த பிற்பகலில் நான் நின்று கொண்டிருந்த இடமும் நானும் முக்கியமாய் எனக்குப் படவில்லை.... என்னை நனைக்கும் மழையே எனக்கு முக்கியமாய் பட்டது....! பளிச்சென்று ஒரு மின்னல் வெட்டி என்னைப் பார்த்து சிரித்து... வா மானிடா...வா...வா என்று கூறிக் கொண்டிருந்த போதே கனைத்துச் சிரித்தது ஒரு பேரிடி...

மின்னலோ இடியோ தாக்கி விடும் அதனால் மழை நேரத்தில் புறம் போகாதீர்கள் என்று எச்சரிக்கை செய்பவர்கள் எல்லாம் ஏதேனும் வாகனம் வந்து மோதிவிடும் என்று சாலையில் நடவாதவர்களா என்ன? அபத்தங்களை எல்லாம் சொல்லி எம்மை மட்டுப் படுத்தாதீர்கள்....மனிதர்களே!

கைகளைக் குவித்தேன்... நிறைத்தது மழை! என் உச்சி நனைத்து காது மடல்களில் ஊர்ந்து கண்களைத் தடவி முன் மார்பில் முத்தமிட்டு பின் முதுகை வருடி என்னை மொத்தமாய் இம்சை செய்து கொண்டிருந்தத மழை மழலையா? அல்லது காதல் கொண்ட குமரியா?...சர்ச்சையாய் ஏதோ ஒன்று மனதிற்குள் தொண்டையில் சிக்கிய முள்ளாய் சிக்கிக் கொள்ள விக்கித்துப் போய் வானத்தை அண்ணாந்துப் பார்த்து கொஞ்சம் மழை நீரை குடித்து என்னை ஆசுவாசிப்படுத்திக் கொண்டிருக்கையிலேயே தடமின்றி என் தாயின் நினைவும் வந்து போனது....

மனமுருகி உடல் நனைந்து மழையிடம் கெஞ்சத் தொடங்கி இருந்தேன்.... என்னோடு பேசு மழையே.....!!!! என்று கேட்ட மாத்திரத்தில் மழை தன் விளையாட்டை கனமாய் தொடங்கியிருந்தது....தரையெல்லாம் தண்ணீர்.....தார்சாலையினூடே தாள கதியோடு ஜதி சொல்லிய படி நடனமாடிக் கொண்டிருந்த மழையை.... என் மனதுக்குள் வாங்கிக் கொண்டு...மெளனமாய் நடந்து கொண்டிருந்தேன்...!

வாழ்வின் அற்புதம் ஏனோ மனிதர்களால் காலம் காலமாய் புறக்கணிக்கப்படுகிறது. யாரங்கே? யாரது குடையை கண்டு பிடித்தவன்? அவனை இழுத்து வந்து மழையில் மகிழ்ந்து மகிழ்ந்து இன்புற்று களித்து சிரித்து களைக்கும்வரை கட்டிப் போடுங்கள்...என்று சப்தமாய் நான் போட்ட சப்தத்தைக் கேட்டு சாலையோரத்திலிருந்த சில மரங்கள் என் மீது பூக்களைச் சொரிந்து கிளைகளை அசைத்து கைகொட்டிச் சிரித்து ஆமாம் ஆமாம் என்றன...

மண்ணில் விழுந்த கவிதைகளை வரி விடாமல் வாசித்துக் கொண்டே ஏதோ ஒரு மரத்தடியில் மணிக்கணக்காய் நான் அமர்ந்திருந்தேன்...

கண்களை மூடி என்னுள் இருந்த எல்லா சப்தங்களையும் நிறுத்தி, மனதின் ஓசைகளை ஒற்றை பார்வையில் எரித்துப் போட்டு.....புலன்களை குறிப்பாக செவியினை கூர்மையாக்கி.....மழையினை கவனிக்கத் தொடங்கினேன்....!

சோ............சோ.................சோ............என்று ஒற்றை சுரத்தை இடைவிடாமல் ஓதிக் கொண்டு....மண்ணோடு, மரத்தோடு, கலந்து சூழலை குளுமையாக்கி....பறவைகள் விலங்குகளை எல்லாம்....பாசமாய்த் தேடிக் கொண்டு போய் உடல் நனைத்து சந்தோசப்பட்டுக் கொண்டிருந்த மழையை மனிதர்கள் மட்டும் மிகையாக மறுப்பவர்களாக இருந்தார்கள்....!

ஆரோக்கியமான மனிதர்களே... மழையை மறுக்காதீர்கள்..! மழை உங்களின் ஜீவனை நிறைக்கும்....! நனையக்கூட வேண்டாம்... மழை முடியும் வரை வேடிக்கையாவது பாருங்கள்..உங்களுக்கு நேரமிருப்பின்....

சப்தங்கள் எல்லாம் ஒடுங்க.. மழையில் உடல் நனைய...உடலில் இருந்து வெளிப்பட்ட ஏதோ ஒன்று உடலுக்கு அன்னியமாய் நின்று மழையையும் உடலையும் வேடிக்கைப் பார்த்தது. மழையும் உடலும் மரமும், செடியும் கொடியும் பாம்பு, பூச்சிகளும் எல்லாமே ஒன்றாய்த்தானிருந்தன...எது நான் என்று உடலை விட்டுப் பிரிந்து நின்று கேள்வி கேட்கையில்...எல்லாமே நான் என்ற பதில் வார்த்தையாய் தோன்றாமல் உணர்வாய் பரவி விரவிக் கிடந்தது...

பரவி விரவிகிடந்தேன்...நான் மழை...நான் மேகம்...நான் நீர்...நான் மண்.. நான் சக மானுடர், நான் மலை, நான் எல்லாம்....! எல்லாம் அறுபட... உணர்வாய்... ஒற்றை புள்ளியில்...எவ்வளவு நேரம் நின்றேன்....என்று அறியும் முன்... ஏதோ ஒரு பெரும் சப்தத்தில் எல்லாம் கலைந்து உடலுக்குள் ஓடி வந்து புகுந்து கொண்டது அந்த அங்கிங்கெனாதபடி இருந்த பிரபஞ்ச நான்.....

மழை நின்றிருந்தது...! மனம் மகிழ்ச்சியாயிருந்தது.... குனிந்து அழுத்தமாய் மண்ணுக்கு ஒரு முத்தமிட்டேன்...வானத்தை விழிகளால் தொட்டேன்..மரம் செடி கொடிகளை கைகளால் தடவினேன்....

மெல்ல நடக்கத் தொடங்கினேன்....!

ஏதேனும் ஒரு பேருந்து வரும்... மீண்டும் தொடருவேன்...என் லெளகீகப் பயணத்தை.....


தேவா. STuesday, September 13, 2011

கரைகிறேன்....!

இந்தக் கணத்தை பூரணமாய் ரசிக்கும் ஒரு மனிதன் நான். முக்காலமும் தெரிந்து கொள்வதில் எனக்கு விருப்பமில்லை. வார்த்தை அலங்காரங்களைக் கொண்டு என்னை எடுத்தியம்ப நான் விரும்புவதில்லை எல்லா அலங்காரச் சொற்களையும் தயவு செய்து என் வீட்டு வெளியே உங்களின் காலணிகளைக் கழட்டிப் போடுவதைப் போல கழற்றி எரிந்து விட்டு என்னிடம் வாருங்கள்.

ஆசைகள் அற்றவன் நான் என்று சொல்லி உங்களின் ஆச்சர்யத்தை பரிசாய்ப் பெற எந்த விதமான முட்டாள்தனமான செயல்களிலும் நான் ஈடுபடப்போவதில்லை. நான் இருக்கிறேன்....இதுதான் எனது சத்தியம். எனது உணர்வுகள் பரிசுத்தமானவையாக இருக்க ஒவ்வொரு நொடியிலும் தானியம் பொறுக்கும் ஒரு சிட்டுக் குருவியாய் என் நினைவுகளை நானே அலசுகிறேன் அவ்வளவே....

பசிக்கும் போது புசிக்கிறேன். புலால் உண்ணேன் என்று ஒரு கருத்தினை நான் உங்களிடம் பகிரேன். இன்று புலால் உண்கிறேன். நாளை உண்ணாமலும் இருப்பேன். அப்படி உண்ணாமல் இருக்க புலால் மீதான ஆசையே வரக்கூடாது என்பதற்காக விரும்பியே உண்கிறேன். வேண்டாம் என்று ஒதுங்கி நிற்கையில் ஒரு பொருளின் மீது ஆசை வந்தால், அதை திருட்டுத் தனமாய் நான் அடக்கிக் கொண்டு உங்களிடம் உத்தமன் என்று பெயரெடுக்க முனைந்தால் அதில் என்ன நேர்மை இருக்கிறது.

நான் உங்களுக்காக வாழ வில்லை. எனக்காகத்தான் நான் வாழ்கிறேன் என்று சொல்லும் போதே என்னை சுயநலவாதி என்று சொல்ல நீங்கள் கற்பிதம் கொண்டிருக்கும் விடயங்கள் தூண்டி விடும். என்னளவில் என் பசி, என் தாகம், என் தூக்கம், எனது சந்தோசம், எனது துக்கம் என்று நான் திருப்திப் படவேண்டும் முதலில்...நான் நிறைந்து வழியும் போதுதானே அதை மற்றவர்களுக்குப் பகிர முடியும்.

நான் அடிப்படையில் அன்புள்ளவனாக இருக்க வேண்டும். அன்பில் நானே என்னை நேசித்து நிரம்பி வழிந்தால்தானே...நான் அன்பைப் பகிர லாயக்கானவன். என்னளவில் நான் வெறுப்பாய் இருந்து கொன்டு உங்களுக்கு அன்பு பற்றிய பாடத்தை எடுக்க வந்தால் நான் எவ்வளவு பெரிய முட்டாள். அதனால் நான் என்னை முதலில் நேசிக்கிறேன். நான் விழிப்புடன் இல்லாத விடயங்களை அனுபவமில்லாமல் தத்து பித்து வென்று உங்களிடம் கூறி கூட்டம் சேர்த்தால் அதனால் என் நிம்மதியல்லவா குலைந்து விடும்.

வாழ்க்கையில் பொருளும், இடமும், அடிப்படை வசதிகளும் அவசியம். எனக்கான பொருளினைத் தேடிப் பிடித்து பெற்றுக் கொள்ள எல்லா வாய்ப்புக்களையும் சூழல் எனக்கு வழங்கி இருக்கிறது. அதை வைத்து நான் என்னை முன்னேற்றிக் கொள்வேன். அதனால்தான் நீங்கள் நிபந்தனைகள் வைத்து உங்களின் வாழ்க்கை வசதிகளைப் பெருக்கிக் கொள்ளும் ஒரு இடமாக கோவிலைப் பார்க்கிறீர்கள், உங்களுக்கு எல்லாவற்றையும் கொடுக்கப் போகும் ஒருவராக இறைவனைப் பார்க்கிறீர்கள்.....

தெளிந்த வாழ்க்கை வாழ நாமே போதுமானவர்களாக இருக்கும் போது எப்படி உதித்தது இந்த இறைவன் என்ற ஒரு யுத்தி என்று யோசித்துப் பார்க்கையில் அங்கே மன வலுவில்லாதவர்களைப் பயிற்றுவிக்க ஒரு பெரும் தந்திரம் செய்யப்பட்டிருப்பதையும் அறிய முடிந்தது. யாம் யாமாய் இருக்கிறோம்...இது எமது இயங்கு விதி..! நீவீர் உமது உள்ளமையோடு இருக்கிறீரா? உமது சுயத்தோடு இருக்கிறீரா என்பது உமது சமத்து....

இருக்கும் வரையில் இருப்போம். இல்லாத அன்று இல்லாமல் போவோம் என்று எண்ணும் போது பெரும்பாலும் இருக்கும் வரையில் வாழ்க்கையை வாழத்தான் மனம் ஆசை கொள்கிறது. இங்கே ஆசையை ஒழி என்று கூறிய இடமும், அத்தனைக்கும் ஆசைப்படு என்று கூறிய இடமும் சட சடவென்று உடைந்து நொறுங்கத்தான் செய்கின்றன.

தேவையின் அடிப்படையில் ஆசைப்படு என்ற ஒற்றை வார்த்தையை யாம் எமக்கான வார்த்தையாய் எடுத்துக் கொண்டிருக்கிறோம். தேவை என்று கூறியவுடன் எதனுடைய தேவை என்று ஒரு கேள்வியும் வருகிறதா? என உடல் தேவையா? மனத்தேவையா? அல்லது சூழலின் தேவையா? என்று ஒரு கணம் யோசிக்கிறேன்...

பசி எதன் தேவை? கண் இமைத்தலும் சுவாசித்தலும் எதன் தேவை? தாகம் எதன் தேவை? தூக்கம் எதன் தேவை? தாகம் எதன் தேவை? மழை எதன் தேவை? காற்று எதன் தேவை? பள்ளம் நோக்கிய நீரின் ஓட்டம் எதன் தேவை? கனத்தால் மழை பெய்யும் மேகத்தின் செயல் எதன் தேவை? பூமியின் இயக்கம் எதன் தேவை? சுனாமியும் பூகம்பமும் எதன் தேவை?

இப்படியான தேவைகள் எல்லாம் எதன் பொருட்டு நிகழ்கின்றன? இயங்குவியலின் விதிகளில் பிரபஞ்சதின் இயக்கத்திற்கு ஏதோ ஒரு வகையில் இவை எல்லாம் தேவை. இவை எல்லாம் ஒரு தனி நபருக்கான தேவைகள் அல்ல. அப்படித்தான் நமது செயல்களும் இருக்க வேண்டும். நீங்களும் நானும் ஒரு கூட்டு இயக்கத்தின் பகுதி....அந்த முழுமையின் இயக்கத்திற்கு தேவையானவை எல்லாமே பிரபஞ்சத் தேவைகள்.

கண் விழித்து ஒருவர் படித்துக் கொண்டிருக்கிறார்....அதே நேரத்தில் கண் விழிக்க முடியாமல் ஒருவர் உறங்கிக் கொண்டிருக்கிறார், இன்னொருவர் செகன்ட் ஷோ சினிமா பார்த்துக் கொண்டிருக்கிறார். இந்த மூன்றினையும் மூன்று வெவ்வேறு நிகழ்வுகளாக நீங்கள் பார்க்கலாம். ஆனால் இந்த மூன்றும் பிரபஞ்சத்தின் இயக்கத்திற்கு அவசியமாகிப் போகிறது.

மனித மனங்களின் இயக்கம் பிரபஞ்ச இயக்கத்திற்கு முரணாகப் போகும் போது அங்கே எதிரிடையான செயல்கள் நிகழ்கின்றன. கோபம், சண்டை, எரிச்சல், வன்முறை, அடக்குமுறை, ஆதிக்கம், அடுத்தவரை துன்புறுத்துதல், பெருமை பேசுதல், அடுத்த மனிதரை மதியாமை, பொய் சொல்லுதல், கோள் மூட்டுதல், புறம் பேசுதல், கொலை செய்தல், இவை எல்லாம் பிரபஞ்ச இயக்க விதிக்கு எதிராய் இருப்பதால்....

இவை பிரபஞ்சத்தின் இயக்கத்தை எதிர் திசையில் பயணிக்க வைக்க முயல்கின்றன. ஆனால் பிரபஞ்சத்தின் நேரியக்கம் இவற்றை எல்லாம் ஒழித்து அழித்து கரைத்து விட்டு நேரே தன் இயக்கத்தை தொடர்கிறது.

மேலே கூறியதின் சிறிய சாராம்சம்தான் " பட்டயம் எடுத்தவன் பட்டயத்தாலேயே அழிவான் " என்னும் விடயம். இன்ன பிற எதிர்மறையான மனிதர்களும் நிகழ்வுகளும் இயற்கையால் அழிக்கப்பட்டு அவை நேர் இயக்கமாய் மாற்றம் கொள்கின்றன. ஒரு மனிதன் புறம் கூறிக் கொண்டே இருந்தால் அவன் அப்படி புறம் கூறுவதாலேயே...துன்பங்களை விளைவுகளாகப் பெற்று அதை அனுபவித்து உணார்ந்து நேரிடையான நல்ல செயல்களைச் செய்யத் தொடங்குவான்.

இப்படியாக பிரபஞ்ச இயக்கமே எல்லாவற்றையும் கட்டியாள்கிறது. இடையறாதா சக்தி ஓட்டம் எங்கும் நிகழ்கிறது. அது நகர்ந்து கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு மனிதர்களும் மனிதர்களற்ற பொருள்களும் அணுக்களின் தொகுப்பே. ஒவ்வொரு அணுவிலும் இயக்கம் இருந்து கொண்டே இருக்கிறது. மையக் கருவினை சுற்றி, சுற்றி புரோட்டானும் எலக்ட்ரானும் ஓடிக் கொண்டே இருக்கின்றன. இது நான், நீங்கள் அந்த கல், இந்த மண், தூசு துரும்பு, என்று எல்லாவற்றிலும் நடந்து கொண்டே இருக்கிறது.

அணுவின் உள்ளே அணுவானது பொருளாயும் பொருளற்றதாயும் இருக்கிறது. அப்படி பொருளாய் இருக்கும் நேர், எதிர் மின் அயனிகளைச் சுற்றி வரச் செய்ய வெற்றிடம் உதவுகிறது. அதாவது வெற்றிடமே இயக்கத்திற்கு உதவுகிறது. இந்த வெற்றிடமே வெட்டவெளி.

ஒரு அறைக்குள் நீங்களும் நானும் சுற்றி வரக் காரணம் எது...? அந்த அறையில் இருக்கும் வெற்றிடம். வெற்றிடத்தை எல்லாம் நிரப்பி விடுங்கள். உங்களால், என்னால் நகர முடியுமா? முடியாதுதானே? இயக்கத்திற்கு பொருள் இல்லாத வெற்றிடம் அவசியம். பிரபஞ்ச நகர்வில் இந்த வெற்றிடமே இயக்கத்தினை தீர்மானிக்கிறது.

எல்லாமான அது எதுவுமே இல்லாமல் இருப்பதோடு எல்லாமாகவும் இருந்து இயங்கச் செய்கிறது அப்படி இயங்க..எதுவே இல்லாமல் இருக்கும் வெற்றிடம் உதவுகிறது.

வெற்றிடம் - சிவம்

பொருள் அல்லது அணுக்கள் - சக்தி

சிவ சக்தி நடனமே நிகழ்கிறது என்ற் இதைத்தான் கூறுகிறார்கள். அர்த்த நாரீஸ்வரராய் வரைந்து காட்டியிருப்பது வெறும் ஆண் பெண் உடல்கள் அல்ல. இந்தப் பிரபஞ்சம் பொருளாயும் பொருளற்றதாயும் இருக்கிறது என்பதன் ஸ்தூல வெளிப்பாடு அது.

இப்படி என்னளவில் நானே என்னுள் மூழ்கி ஏதோ ஒரு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருகையில் அதை கிறுக்கவும் செய்து கொண்டிருக்கிறேன். இதை எல்லோரும் வாசிக்க வேண்டும் என்ற ஆவலை நான் எப்போதும் ஏற்படுத்திக் கொள்வது இல்லை. காரணம் விருப்பமுள்ள விழிகள் பதியட்டும். விருப்பமற்ற விழிகள் வெறெங்காவது செல்லட்டும் என்ற எண்ணமே மேலோங்கி நிற்கிறது.

எழுத்துக்கள் எல்லாம் புறத்திலிருந்து புறப்பட்டு எமது அகத்திலே ஏறும் போது அது அனுபவமாகிறது ஆனால் எமது அகத்திலிருந்து வெளிப்பட்டு புறத்திற்கு செல்லும் போது அந்த அனுபவம் அழிந்து போகிறது...!

அழிக்க அழிக்க...மெல்ல அமிழ்ந்து மொத்தமாய் நான் கரையத்தானே வேண்டும்..!


தேவா. SThursday, September 8, 2011

வெற்றி...!கொஞ்சம் நின்னு யோசிச்சுப் பாத்தா ஒவ்வொரு தடவை இங்க எழுதறதுக்கும் மன நிம்மதிக்கும், மன ஒருநிலைப்பாட்டுக்கும் ரொம்பவே நெருக்கம் இருக்கு. காரணம் எழுத்துக்களை தேடி வெளில ஓடுற இடம் இல்லை இது,எழுத்துக்களை எனக்குள்ள தேடுற இடம்.

நேராவே சிந்திச்சு நேராவே வாழ்றது எப்பவுமே ரொம்ப கஷ்டமான விசயம்னு சின்ன வயசுல இருந்து படிக்கும் போதும் சரி, வேற பெரியவங்க அதை சொல்லும் போதும் சரி அது கொஞ்சம் விளையாட்டாத்தான் தெரிஞ்சுச்சு, ஆனா சரிய சரின்னு சொல்லி, தப்ப தப்புன்னு சொல்லி, டக்கு டக்குன்னு நம்மள சத்தியத்தோட ஒத்துப் போக வச்சு வாழ்ற ஒரு வாழ்க்கை நமக்கு ஈசியா வேணா இருக்கலாம் ஆனா கூட வாழ்ற மனுசங்களுக்கு அது ரொம்ப தொந்தரவா இருக்கு.

ஏதேதோ சொல்றோம், ஏதேதோ எழுதுறோம் ஆனா கனவுலயும் கூட அடுத்த மனுசன தொந்தரவு பண்ணக்கூடாதுன்னு ரொம்ப கவனமா போகும் போதே பளீச்னு தலையில அடிச்சு காலம் சொல்லிக் கொடுக்குது " டே.....மடையா....சத்தியத்த தான்டா சத்தியத்தால சந்திக்கணும். அநியாயத்த அட்டூழியத்த, வன்முறைய நீ அதே ரேஞ்ச்ல தாண்டா போயி ஃபேஸ் பண்ணனும்னு ....

வாழ்க்கையில் எல்லாத்துக்கும் ஒரு விளைவு இருக்குங்க...! கட்டைய தொட்டாலோ, சுவத்த தொட்டாலோ அதுக்கு ஒரு விளைவு, ஆனா அதே மூட்ல கரண்டையோ அல்லது நெருப்பையோ தொட்டா அதுக்கு ஒரு விளைவுன்னு கண்டிப்பா ஒவ்வொரு செயலுக்கும் ஒவ்வொரு மாதிரியான விளைவை வாழ்க்கை தெளிவா திருப்பிக் கொடுத்துட்டுதான் இருக்கும்.

பூனை வால மிதிச்சா அது மியாவ்னு கத்திட்டு வாலை சுருட்டிக்கிட்டு ஓடிடும். அதே சமயம் புலி வால மிதிச்சா, வாலை சுருட்டிகிட்டு ஓடுமா...என்ன? நெவர்.....ஒரே பாய்ச்சல்ல குரல்வளைக்குத்தான் போகும் புலியோட பல்லு...!

எப்பவுமே வாழ்க்கை கத்துக் கொடுக்குது. இப்பவும் அதான் செஞ்சுட்டு இருக்கு. ஒரு எலிக்கு பூனைதான் பலசாலின்னு தெரியும். அதுக்கிட்ட போயி ஓராயிரம் தடவை அதுகிட்ட பூனையவிட புலி பலசாலின்னு சொன்னா...எலிக்குப் புரியாது. காரணம் பூனைதான் எலிய பிடிக்குது, அதனால பூனையைப் பார்த்தான் எலிக்கு பயம். புலிக்கு எலிய பத்தி கவலையே இல்லை. எலிக்கும் புலிய பத்தி கவலையும் இல்லை.

காரணம் இரு வேறு நோக்கங்கள். இரண்டும் இரண்டி நோக்கத்தையும் இன்னொன்னு கிட்ட நிறுவ வாதடினிச்சுன்னு வச்சுக்கோங்க சாகுற வரைக்கும் ரெண்டுக்கும் ரெண்டோட நோக்கமும் நிறைவேறப்போறது இல்லை. பெஸ்ட் புலி, எலிய மறந்துட்டு....தன் இரையைத் தேடிப் போறதுதான்...!

இப்படித்தான் பல நேரங்கள்ல நாம யாரு? நம்ம நோக்கம் என்ன அப்டீன்னு தெரிஞ்சு இருந்தும் தேவையில்லாத வேலைகளை நிறையவே பாத்துகிட்டு இருப்போம். அடிப்படையில் ஒவ்வொரு மனிதனுக்கும் குணம் என்ற விசயம் இருக்கிறது. அந்த குணம் என்ற விடயம் குரோமோசோம்களில் ரொம்ப ஸ்ட்ராங்கா பதியப்பட்டு காலம் காலமா மூததையர்கள் மூலமா ஜீன்களா நமக்குள்ள இருக்கு...

அது மட்டும் இல்லாம ஒவ்வொரு தனி மனுசனையும் இந்த ஜீன்களின் தாக்கத்தையும் தாண்டி புறச்சூழல்னு ஒரு விசயமும் ச்ச்சுமா அப்டியே புரட்டிப் போட்டுது. காலெமல்லாம் எல்லாமே வாழ்க்கையில மறுக்கப்படாம கிடச்சு இருந்துச்சுன்னா அவனோட குணம் ஒரு மாதிரியாவும்...

அடிச்சு தொரத்தி அநீதி இழைக்கப்பட்டவனோட குணம் ஒரு மாதிரியாவும், எப்பவுமே எல்லாமே கிடைச்சு வாழ்றவனோட குணம் ஒரு மாதிரியும்னு சூழலுக்கு ஏற்ப ஒவ்வொருவருக்கும் ஒரு குணம் இருக்கு. எல்லோரும் சமமாய் இருக்க முயற்சி பண்ணலாம்..........வாழ்க்கையின் தரங்களில் எல்லோரும் சுபிட்சமாய் இருக்கவேண்டும் என்று முயற்சி பண்ணலாம்...

ஆனால்....நெஞ்சு நிமித்தி பிரச்சினைய எதிர் கொண்டு வா.....என்று கூப்பிடுவேன் மேலும் எதுவா இருந்தாலும் என்னிடம் வந்துதானே ஆகவேண்டும் அப்படி ஒரு பிரச்சினை வரும்போது நேருக்கு நேராய் நான் போராடி பாத்துக்குறேன்னு நினைக்கிறவங்களும் இருக்காங்க....

ஓ.. நீ என்ன இப்டியா சொன்ன.. இரு இரு.. உன்னை என்ன பண்றேன் பாருன்னு முன்னால் போகும் போது முதுகுல குத்திட்டு போறவங்களும் இருக்காங்க...

வாழ்க்கை எல்லாம இருக்கு, எல்லோருமா இருக்கு. இங்க எது தேவையோ அதை அந்த சூழலுக்கு ஏற்ப நாம படிப்பினையா எடுத்துக்குறோம். எப்படித்தான் வாழ்ந்தாலும் பெரிய வீரனாய் இருந்தாலும் பணக்காரனாய் இருந்தாலும், அதிகாரம் கொண்டவனாய் இருந்தாலும்..

ஊரே ஒருத்தனை பார்த்து நடு நடுங்கினாலும் கடைசியில் இடுப்புல இருக்குற அரைஞான் கயிறையும் அறுத்தெரிஞ்சுட்டு மண்ணப் போட்டு புதைக்கவோ அல்லது எரிக்கவோ போறாங்க. அந்த டைம்ல போயி, இல்ல... இல்ல இவரு பெரிய ஆளு, இவரு இவ்ளோ ஜெயிச்சு இருக்காரு அல்லது இவ்ளோ தோத்து இருக்காரு இவரு மேல மண்ணு போடாதீங்க, இவரு பெரிய் கோடிஸ்வரன் இவர எரிக்காதீங்கன்னு சொன்னா அதுல லாஜிக் இருக்கா?

காலம் மாவீரர்களையும், திருடர்களையும், பணக்காரர்களையும் தனித்தனியே பார்ப்பதில்லை மாறாக சமமாய் விழுங்கிக் கொண்டேதான் செல்கிறது. யாரும் மிச்சமாக முடியாது.

லைஃப் வில் சூட் ஈச் அண்ட் எவரி இன்டிவிஜுவல்...

சாகுறதுக்கு முன்னால ஒரு மனுசனோட அந்திமத்துல கண்ண மூடினா, அங்கே மனமற்ற ஒரு தியான நிலையில் உடல் கடந்த ஒரு பேரனுபவம் வரவேண்டும். அப்போ போய் சிக்கன் பிரியாணி சாப்பிடலையே...இப்போ இருந்தாலும் சாப்பிட முடியாதே....! ஊரெல்லாம் இடம் வாங்கிப் போட்டேனே யாரு அதையெல்லாம் அனுபவிப்பா....! எவ்ளோ பெரிய வீடு கட்டினேன் இதை எல்லாம் விட்டுட்டு போகப் போறேனே ஐயோ......நான் என்ன செய்வேன்...

அங்க இப்டி பொய் சொன்னேனே, இங்க இப்டி பந்தா பண்ணினேனே, எப்பவுமே மமதையில் மனுசங்க முகத்தைப் பாத்தா சிரிக்க கூட இல்லையே...இப்ப நான் திரும்ப வாழ முடியுமா? எப்ப பாத்தாலும் தலைக்கனத்தோட இருந்துட்டேனே....! எத்தனை பேரப் பாத்து புறம் பேசி இருப்பேன்..எத்தனை பேரை கிண்டல் பண்ணி இருப்பேன், எத்தனை பேரு குடிய கெடுத்து, ஊரை அடிச்சு உலையில போட்டேன்...ஐயோ நான் யாருக்குமே நல்லது பண்ணலையே.....

கை வலிக்குதே... கால் வலிக்குதே.. உயிர் எப்டி போகும்? எமன் எருமையில் வருவானா? இல்லை ஏரோப்பிளேன்ல வருவானான்னு யோசிச்சுக்கிட்டே...காலமெல்லாம் மனதைக் கட்டுப்படுத்து கட்டுப்படுத்துன்னு எத்தனையோ பேரு சொன்னாங்களே... ! ஒரு நாளாச்சும் நான் என்ற் அகந்தை இன்றி சம்மண கால் இட்டு என்னையே நான் உத்து பாத்து இருப்பேனா..

கண்ணு இருட்டுதே, தொண்டை வரளுதே, பேச முடியலையேன்னு, புத்தியில இருக்குற நினைவு எல்லாம் கடந்த கால தவறுகளை நினைத்து நினைத்து ஏங்கி ஒரு துன்பத்தை கொடுக்குது பாத்தீங்களா....

இது போக தனியா ஒரு நரகம் வேணும்னு நினைக்கிறீங்க?

குறைந்த பட்சம் வாழ்க்கையின் நிலையாமை என்னனு தெரிஞ்சு போச்சுன்னா, அடுத்தவங்களை நிந்திக்கிறத நிறுத்திட்டு, நாம ஊர்ல இருக்கவன் எல்லாம் பாத்து நம்மள பெரிய ஆளுன்னு சொல்லணும்னு வாழமா நம்ம ஆத்ம திருப்திக்காக வாழ ஆரம்பிச்சுடுவோம்...

அப்டி இருக்கும்போது மரணம்னா என்னனு தெரியும்....! உடலின் வலிகளையும் சேத்து உள்வாங்கி திருப்தியா வாழ்ந்த நினைவுகளோடு...மனதை சாந்தப்படுத்திக்கிட்டே....

நான் வாழ்றதுக்காக பொறந்தேன்.......நல்லா வாழ்ந்துட்டேன் போங்கடா.... இனி என்ன ஆனா என்ன? அப்டீன்னு ஒரு நிம்மதியோட போய்ச் சேருவோம் பாத்தீங்களா... அது தாண்டி ஒரு சொர்க்கம் இருந்தா என்ன இல்லாட்டி என்ன?

வாழ்க்கை என்பது வாழ்வதற்கே...! இங்கே அடுத்தவர்களை நிந்திக்காமல் நிம்மதியாக நிறைவாக வாழ்ந்துட்டு போறவங்கதான் நிஜமா ஜெயிக்கிறாங்க..! அப்டி இல்லாம ஓடி ஓடி பணம், பொருள் எல்லாம் தேடினாலும்...நிம்மதியில்லாம வாழ்ந்துட்டு....மனசு அலைஞ்சு திரியும்போது வாழ வந்த வாழ்க்கையை முழுமைய வாழாம தோத்துப் போயிறாங்க...!

நான் வாழப் பிறந்திருக்கிறேன்....! அதனால் முழுமையாக வாழ்க்கையை வாழ்கிறேன்.

தேவையும் அவசியத்தோட நான் செய்ற செயல்கள் எல்லாமே எனக்குள்ள ஆணவமா பதியறது இல்லை...! எல்லாத்தையும் கடந்து போய்கிட்டே இருக்கேன்...அப்டீன்னு நினைச்சுகிட்டு வாழ்க்கையைப் பக்குவமா வாழ முயலும் இந்தத் தருணம்...ரொம்ப சேலஞ்ச் ஆனது..! ஏன்னா அது நம்ம நிம்மதிய கெடுக்குற செயல்களை எப்போதும் நம்ம முன்னாடி இறைச்சுக்கிட்டேதான் இருக்கு....

ஆனா....

நான் வாழ்க்கையை முழுமையா நிம்மதியா வாழணும்..அப்பத்தான் நான் ஜெயிச்சவன் ஆகிறேன்...!

அட என்ன இது நான், நான்னு பேசிட்டு இருக்கேன்.......அது தப்புங்க... நாமன்னு சொல்லணும்ல. நாம வாழ்க்கைய வாழப் பிறந்து இருக்கோம், கண்டிப்பா நிம்மதியா வாழ்வோம் இந்த வாழ்க்கையை ஜெயிப்போம்....!

அதுதான் வெற்றி...!


அப்போ வர்ர்ர்ர்ட்ட்டா!!!!


தேவா. SSaturday, September 3, 2011

கனவிலாவது...?
நேற்றைய கனவும்
உன்னால்தான் நிரம்பி வழிந்தது,
வழக்கம் போல நெருக்கமாய்
தூரத்தில்தான் அமர்ந்திருந்தாய்,
வழக்கம் போல காதலை
மெளனத்திற்கு இரையாக
இருவருமே போட்டுக் கொண்டிருந்தோம்!

ஏதேனும் செய்திகளை
உன் விழிகள் எனக்குப் பகிருமா?
என்று உற்று நோக்கினேன்
அது காதலைத் தவிர
வேறொன்றும் பகிரேன் என்று
பிடிவாதம் பிடித்தது...!

என் மெளனத்துக்கு காரணத்தை
நீயும் மெளனத்தால் தேடியது
போலவே நானும் தேடியதில்
குடி கொண்டிருந்த நிசப்தத்தில்
பரவிக் கிடந்த அதிர்வுகளோடு
சப்தங்களை அதிகமாக்கிக்
கொண்டிருந்த நமது இதய துடிப்பும்
அன்னிய தேசத்து எல்லையை
கடந்து செல்லும் அவஸ்தையோடு
தொண்டையை கடக்கும்
அவ்வப்போது நாம் விழுங்கும் உமிழ்நீரும்
சேர்ந்தேதான் காதலை கனப்படுத்தின...!

நான் உன்னை காதலிக்கிறேன்
என்று சொல்லப்போவதில்லை
என்பதைப் போல...
நீயும் சொல்லப்போவது இல்லை
என்பதை உரக்க கட்டியம்
கூறிக் கொண்டிருந்த
மெளனத்தை உடைக்கும் முயற்சியில்
முதலில் எட்டிப் பார்த்த
உனது உதட்டோரப் புன்னகையில்
நான் உடைந்தேதான் போனேன்..!

ஏதாவது சொல் என்றேன்...
போகவா என்றாய்....!
சொல் என்றுதானே சொன்னேன்...
கொல் என்றா சொன்னேன்?
வார்த்தைகளை வாங்கிக் கொண்டு
நீ கணீரென்று சிரித்தாய்
நான் சிதறிக்கிடந்தேன்..!

கலைந்து போன கனவில்
நிஜத்தை தொலைத்த வெறுமையோடு
விடியப்போகும் பொய்மையில்
உன்னை சந்திக்கையில்....
இப்போதாவது உன் காதலைச் சொல்லேன்
என்று என் மெளனத்தால்
உன் மெளனம் மோதி
ஒரு கேள்வி கேட்கிறேன்...
நிஜத்தில் நீ மெளனித்தாலும்
பரவாயில்லை,
அடுத்த கனவிலாவது சொல்
நான் உன்னை காதலிக்கிறேன் என்று!


தேவா. S
Thursday, September 1, 2011

கஜமுகன்....!
நிறைய பேருக்கு பிடித்த கடவுள் என்று சொன்னால் அது விநாயகர்தான். கணேசா, கணேசா என்று தலையில் குட்டிக் கொள்வதும், தோப்புக் கரணம் போட்டு வணங்குவதும் என்று என்னதான் செய்தாலும் விநாயகர் எல்லோருக்கும் செல்லப்பிள்ளைதான். எல்லா செயலுக்கும் முன்பு விநாயகப் பெருமானை வணங்கி விட்டுத்தான் வேலைகளை துவக்குகின்றனர்.

பூஜைகள் செய்யும் போது மஞ்சளால் பிடித்து சிறிய பிள்ளையாரை செய்து அதை வணங்கி எல்லாம் சரியாக நடக்க உதவவேண்டும் என்று வேண்டியும் கொள்கிறார்கள். இது மட்டுமல்ல மற்ற எல்லா கடவுள்களின் வடிவங்களையும் விட பிள்ளையாரின் வடிவம் கஜ முகத்தையும் மனித உடலையும் கொண்டிருப்பதால் கூடுதல் ஈர்ப்பு அனைவருக்கும்....ப்ரண்ட்லி காட் என்று கூட சொல்லலாம்.

புராணங்களில் விநாயகர் பற்றி நிறைய கூறியிருப்பார்கள். சரி...அது ஓ.கே.... அதையும் மைண்ட்ல வச்சுக்கோங்க நான் சொல்றதையும் கொஞ்சம் யோசிச்சுக்கோங்க...!

அதாவது....

எதுவுமற்ற பூரணமான சூன்யத்திலிருந்து பிரபஞ்சம் என்ற ஒன்று ஜனிப்பதற்கு முன் வெளிப்பட்ட சப்தம் ஒங்காரம் என்றழைக்கப்படும் அ + உ +ம் என்ற மூன்றின் கூட்டான ஓம் என்னும் நாதம். இந்த சப்தம் தான் ஆதியில் இருந்தது அதாவது முழு முதலில் தோன்றிய ஓங்கார சப்தத்தை நினைவில் கொள்ள கொண்டுவரப்பட்ட ஒரு மெட்டிரியல் தோற்றம்தான் பிள்ளையார். அவரின் முகம் மற்றும் துதிக்கை எலாம் சேர்த்து வைத்துப் பார்த்தால் ஓங்காரத்தை நினைவு படுத்தும்.

இப்போ சொல்லுங்க....எல்லா வேலையும் செய்றதுக்கு முன்னால ஏன் விநாயகரை கும்பிடுறாங்கன்னு? அதாவது முழு முதலாய் ஆதியில் வெளிப்பட்ட ஓங்காரத்துக்கு ஒரு தேங்க்ஸ் சொல்லிட்டு என்னுடைய செயலும் செம்மையாய் நிறைவேற உடன் நிற்க வேண்டும் பெருஞ்சக்தியே அப்டீன்ற ஒரு ரிக்வெஸ்ட் கொடுத்துட்டு அந்த பூஸ்ட்லயே நாம வொர்க் பண்ணிடலாம்.

அடுத்து பெரிய காதுகள், கேள்வி ஞானம் நிறைய வேணும் அப்டீன்றத தெளிவா சொல்றதுக்கான ஒரு சிம்பல். பேசிட்டே இருக்கறவங்களை விட மெளனமா கேக்குறவங்க நிறைய பக்குவமா இருப்பாங்கதானே...> இதைதானே வள்ளுவர் கூட "செல்வத்துட் செல்வம் செவிச் செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை...." ன்னு கூட சொல்லி இருப்பாங்க....

பெரிய தலை - மிகப்பெரிய கேள்வி ஞானம் இருப்பவர்களின் புத்தி மிகப்பெரியாதாய் இருக்கும் அப்டீன்றத சொல்லாமல் சொல்றதா வச்சுக் கோங்க. (விலங்குகளில் டால்பினுக்கு அடுத்த அறிவாற்றல் கொண்டது யானை)

துதிக்கை - மூச்சு என்பது மிக முக்கியம். நம்மில் நிறைய பேர் சரியாகவே சுவாசிப்பது இல்லை. சுவாசம் நமது எண்ணங்களோடு சம்பந்தப்பட்டது அதனாலதான் கோபமா இருக்கும் போது ஒரு வித சுவாசமும், சந்தோசமா இருக்கும் போது ஒரு வித சுவாசமும், காமத்தில் இருக்கும் போது ஒரு மாதிரியும், காதலில் இருக்கும் போது ஒரு மாதிரியும் சாந்தமா இருக்கும் போது ஒரு மாதிரியும் நம்ம சுவாசம் இருக்கும். (வேணும்னா நீங்க உங்க சுவாசத்தை கவனிச்சுப் பாருங்களேன்..)

இங்கே சுவாசம் என்பதை ஆழமா சுவாசிக்கணும் அப்டீன்னு சொல்றதுக்கு காரணம் இருக்கு. அதாவது ஆழமா சுவாசிக்கும் போது ஆக்ஸிஜன் உடம்புக்குள்ள போய் எல்லா நாடிகளுக்குள்ளும் சீரா பரவி...அவற்றின் இயக்கத்தை முடுக்கி விடுது.

நாடிகள் ஒழுங்கா இயங்கும் போது சீரான இரத்த ஓட்டம் ஏற்படுவதோட நம்ம உடல்ல இருக்குற சுரப்பிகள் எல்லாம் சரியா வேலை செய்ய ஆரம்பிக்கும். மூலாதாரத்துல ஆரம்பிச்சு சகஸ்கரம் வரைக்கும் எல்லா சக்கரங்களும் விழிச்சுக்கணும்னா சுவாசம் சீரா இருக்கணும்.

மிக நீண்ட துதிக்கையினால் சுவாசிக்கும் யானைகள் எல்லாம் ஆழமான சுவாசத்தை மேற்கொள்வதால் பெரும்பாலும் அவை நிதானத்தில் இருக்கின்றன. (மதம் பிடிச்சா என்ன ஆகும்னு கேக்கப்பிடாது...முரண் எல்லாத்துலயும்தான் இருக்கு..)அதனால ஆழமா சுவாசியுங்கன்னு சொல்ற ஒரு சிம்பலா துதிக்கையும்...

அது மட்டுமல்லாமல் முழுக்க, முழுக்க பார்ப்பதை மட்டுமே வைத்து எதையும் நம்பக்கூடாது. காணும் காட்சிகளை மட்டுமே வைத்து உண்மை நிலையை அறிய முடியாது, விசாரித்து தெளிந்து உணர்ந்தே உண்மையை உணர முடியும் (கவனிக்க, உண்மை என்பது அறிவது அல்ல உணர்வது) என்பதை உணர்த்த சிறிய கண்களையும் கொண்டிருக்கிறார் கஜமுகனான விநாயகப் பெருமான்.

விநாயகரை வணங்கும் போது தலையில் குட்டிக்கொள்வது விளையாட்டுக்காக இல்லை அதாவது முன்நெற்றியில் இருக்கும் அமிர்த நாடியை இரண்டு கைகளாலும் தட்டி உசுப்பி விடும் போது அற்புத நினைவாற்றல் நமக்குக் கிடைக்கிறது.

தோப்புக் கரணம் போடுங்கன்னு நமக்குச் சொல்லிக் கொடுக்க ஒரு ஆப்ஜக்ட்டா விநாயக்பெருமானை வச்சு சொல்லிக் கொடுத்துட்டாங்க. நாமளும் காலம் காலமா தோப்புக்கரணம் போட்டுட்டு போய்கிட்டே இருக்கோம். நிறைய பேரு இதை கிண்டல் கூட செஞ்சு இருக்காங்க...

ஆனால்... மேலை நாட்ல இருக்கவங்க எல்லாம் இதை ஆராய்ந்து, இதற்கு பின்னால இருக்குற அறிவியல் பூர்வமான விளைவுகள் என்னவென்று தெளிவா கண்டு பிடிச்சு சொன்னதுக்கு அப்புறம்தான் நம்ம ஆளுகளுக்கு அடடே....இது இப்டியான்னு யோசிக்கத் தோணியிருக்கு.

லாஸ் ஏஞ்சலைச் சேர்ந்த உடற்கூற்று வைத்தியர் எரிக் றொபின்ஸ் (Dr.Eric Robins) தோப்புக்கரணப் பயிற்சியால் மூளையிலுள்ள நரம்புக் கலங்கள் சக்தி பெறுவதாக கூறுகிறார். பரீட்சையில் குறைந்த புள்ளிகளை எடுத்த மாணவன் தோப்புக்கரணப் பயிற்சியின் பின் நல்ல புள்ளிகளைப் பெற்றதாகக் காட்டுகிறார்.

யேல் பல்கலைக்கழக (University of Yale) நரம்பியல் நிபுணர் யூஜினியஸ் ( Dr.Eugenius Aug) அங் இடது கையால் வலது காதையும் வலது கையால் இடது காதையும் பிடித்துக் கொள்வதால் அக்குபஞ்சர் புள்ளிகள் தூண்டப்படுவதுடன் மூளைக்கலங்களும் சக்தி பெறுவதாகக் கூறுகிறார்.

சரி அதையெல்லாம் விடுங்க....மண்ணை எடுத்து பிள்ளையார் செஞ்சு அதை மூணு நாள் வச்சு இருந்துட்டு மறுபடியும் கடல்ல கொண்டு போய் ஏன் தூக்கி போடுறாங்க தெரியுமா? எதுவுமே நம்மகிட்ட இருக்கப் போறது இல்லை இந்த வாழ்க்கையில், எல்லாமே ஆர்ப்பாட்டமா வந்து உருவமா வெளிப்பட்டு விட்டு மீண்டும் தன்னுடைய பழைய நிலைக்கே திரும்பி போய் உருவமில்லாம ஒண்ணுமே இல்லாம ஆகிடும் அப்டீன்றத சிம்பாலிக்காச் சொல்லத்தான்...!

அட விநாயகர் சதுர்த்தியும் அதுவுமா ரொம்ப பேசிட்டு இருக்கேன்ல..........போங்க போங்க போய் விநாயகரைக் கும்பிடுங்க.......ஆனா தெளிவா விளங்கிகிட்டு கும்பிடுங்க...!

அனைத்து உறவுகளுக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்!

அப்போ வர்ர்ர்ர்ட்டா!

தேவா. S