Pages

Friday, March 29, 2013

தேவனே.....என்னைப் பாருங்கள்...!
புனித வெள்ளி அதிர்வுகள் நிறைந்த ஒரு நாள். சத்தியத்தை உலகம் நிராகரித்ததும், அந்த நிராகரித்தலை உயரிய புரிதலுடன் சத்தியம் ஏற்றுக் கொண்டதும் நிகழ்ந்தேறிய ஒரு அற்புத நாள். பைத்தியக்கார உலகிற்குள் வந்த தேவனின் புனிதத்தை ஏற்றுக் கொள்ள முடியாத மனித மிருகங்கள் அவரைச் சிலுவையில் ஏற்றி மகிழ்ந்த நாள். தேவன் ஒரு போதும் அவர்களை விரோதமாக பார்த்தவரில்லை. அவர் தேவன். தேவாதி தேவன். உள்ளவருக்கும், இல்லாதவருக்கும், நல்லவருக்கும் கெட்டவருக்கும் அவர் தேவன்.

அவரின் பிறப்பே ஒரு அதிசயம். மிகப்பெரிய அறிவிப்புகளை இந்த பிரபஞ்சம் தாங்கிப் பிடித்து உலகத்துக்கு அவரது வருகையினை தெளிவாக்கிய பின் தான் அந்த பாலகனை இந்த உலகிற்கு தருவித்தது. அந்த புனிதனைப் பெற்ற பின்பு அவள் கன்னி மேரி ஆனாள். கன்னித் தன்மை என்பது உடலோடு சம்பந்தப்பட்டது அல்ல அது உணர்வோடு தொடர்புகள் கொண்டது. மரியாள் புனிதமான உணர்வுகளோடு என்றும் ஜீவித்திருக்கும் கண்ணியத்தை ஏந்திக் கொண்டு புனிதமானவளானாள். பிறக்கும் போதே தனது தாய்க்கு புனிதத்தைக் கொடுத்து யுகங்களாய் காலம் எல்லா நினைவுகளையும் செரித்துக் கொண்டு முரட்டுத்தனமாய் நகர்கையில் தன்னோடு சேர்த்து தன்னை பெற்ற தாய்க்கும் ஒரு மிகப்பெரிய இடத்தை வரலாற்றில் பதிய வைத்த தேவன் அவர்.

இந்த உலகம் ஒருக்காலும் தேவனாகிய இயேசு கிறிஸ்துவை மறுக்க முடியாது. வாழ்க்கையின் ஓட்டத்தில் ஆன்ம ரீதியான புரிதல்களை பெற்று நாம் நகர அவரது வாழ்க்கையில் ஓராயிரம் செய்திகள் பரவிக் கிடக்கின்றன. இந்த உலகம் முழுவதிலும் பரவி வாழும் கிறிஸ்தவர்களுக்கும், பாதிரியார்களுக்கும், மத குருமார்களுக்கு மட்டும் அவர் சொந்தமானவர் அல்ல...!!! இந்த பூமியில் இதுவரை ஜனித்த, இன்னமும் ஜனிக்கப்போகிற எல்லா ஜீவன்களுக்கும் வழிகாட்டும் தேவாதி தேவன் அவர்.

அவரது மந்தையிலிருக்கும் ஆடுகளுக்கு அவரைப்பற்றிய கவலைகள் ஏதும் இருந்திருக்க முடியாது. இன்னமும் சொல்லப் போனால் அவர் தேவன் என்றே அவைகள் புரிந்திருக்கவும் வாய்ப்பில்லை. இருந்தாலும் அவற்றை நெறிப்படுத்தவும், வழிகாட்டவும் கருணையுள்ளம் கொண்ட அந்த மேய்ப்பன் தவறுவதில்லை.  இன்னும் சொல்லப் போனால் இயேசு கிறிஸ்து, கிறிஸ்துவம் என்னும் ஒரு மதத்தையே ஸ்தாபிக்கவேயில்லை. தன்னுடைய கருத்துக்களையும் ஒரு வேதமாக தொகுக்க வேண்டும் என்றும் எண்ணியிருக்கவே இல்லை.  ஜீசஸின் சீடர்களே அவரைப் பற்றிய சரியான புரிதல் இல்லாதவர்களாகத்தான் இருந்திருக்கிறார்கள்.

ஏன் இதைச் சொல்கிறேன் என்றால்...தேவனின் வார்த்தைகள் மிகவும் ஆழமானவை. அவை எல்லாமே சூட்சுமக் குறியீடுகளாய்த்தான் அவரிடமிருந்து வெளிப்பட்டுக் கொண்டிருந்தன. ஆதியிலே தேவனிடம் வார்த்தை இருந்தது என்று பழைய ஏற்பாடு கூறும் ஒரு பதமே போதும் இந்த பிரபஞ்சத்தின் மூலத்தைப்பற்றி தெளிந்து கொள்ள. வார்த்தை என்பது சப்தம். அசைவற்று இருந்த சூன்யத்தில் முதலில் ஏற்பட்ட சப்தமும் பின் வெளிப்பட்ட பெரு வெடிப்பான தீப்பிழம்புமே பிரபஞ்ச விரிவாக்கத்தின் ஆதி என்று சனாதான தருமத்தின் மூலம்  சொல்கிறது. 

" ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அவர் ஆதியிலே தேவனோடிருந்தார்.சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை "

அவர் இல்லாமல் ஒன்றும் உருவாகவில்லை என்னும் வார்த்தைகள் தியானிக்கப் படவேண்டிய வார்த்தைகள். வெளிப்பட்டது எல்லாம் பரப்பிரம்மம். இருப்பது ஒன்றுதான் என்று சைவ சித்தாந்தம் சொல்வதை பைபிளும் சொல்கிறதா இல்லையா? ஏனேன்றால் சத்தியம் என்பது ஒன்றுதான் அது உங்களுக்கு ஒன்றாய் எனக்கு ஒன்றாய் இருக்க முடியாதுதானே..? இதை மேலும் உறுதிப் படுத்த

ஏனென்றால் அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது; பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான சகல வஸ்துக்களும், சிங்காசனங்களானாலும், கர்த்தத்துவங்களானாலும், துரைத்தனங்களானாலும், அதிகாரங்களானாலும், சகலமும் அவரைக்கொண்டும் அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது. (யோவான்.1.1)

சகலமும் அவருக்குள் தான் சிருஷ்டிக்கப்பட்டது. அவர் வேறு இந்த பிரபஞ்சம் வேறல்ல. இருப்பது எல்லாம் அவருக்குள்...என்று பைபிள் கூறுகிறது என்றால்....நம்மைச் சுற்றி பரந்து விரிந்திருப்பது எல்லாம் யார்....? நீங்களும் நானும் யார்?  இப்படியான செய்தியை கொண்டு வந்த வல்லமை கொண்ட தேவன் யார்...?

உடலுக்குள் வந்திருந்த தன்னை யாரென்று உணர்ந்த பிரம்மாண்டமே....ஜீசஸ்!!!!!

ஜீசஸை கைது செய்ய கெத்சமனி தோட்டத்திற்கு யூதர்கள் வந்த போது தன் சீடர்கள் புடை சூழத்தான் அவர் அமர்ந்திருந்திருக்கிறார். யூதாஸ் வெறும் முப்பது வெள்ளிக் காசுகளுக்காக தன்னுடைய குருவை காட்டிக் கொடுத்திருக்கிறான் என்றால் அவனுடைய புரிதல் எத்தகையது என்று நீங்கள் உணர்ந்து கொள்ளுங்கள். சீடர்கள் அத்தனை பேருமே ஜீசஸை விட்டு பயத்தில் ஓடி விட்டார்கள். தலைமைச் சீடன் என்று அறியப்படும் பேதுருவிடம் முன்னமே ஜீசஸ் தெளிவாய் கூறி விடுகிறார் விடிவதற்குள் என்னை மூன்று முறை நீ யாரென்று தெரியாது என்று மறுப்பாய் என்று. பேதுருவும் மறுக்கிறார். இங்கே தனது சீடர்களின் வல்லமை என்ன, ஆன்ம வலு என்ன என்று தெரியாமல் தேவன் அவர்களை தன்னிடம் வைத்திருக்கவில்லை.

அவர்கள் தேவனை நேசித்தார்கள். அன்பு இருந்தது. அறிவு இல்லை. அறிவு என்பது ஞானம். அவர்கள் பிசைவதற்கு இளகான மாவாய் இருந்தார்கள். எழுத இடம் இருக்கும் வெள்ளைக் காகிதமாய் இருந்தார்கள். ஜீசஸை மட்டும் அப்போது சிலுவையில் அறைந்து துன்பப்படுத்தி இருக்காவிட்டால்....இன்று பெரும் ஞானத்தால் இந்த உலகை கட்டிப்போட்டு அன்பும் சகிப்புத்தன்மையும் மேலோங்கி இருக்க அவர் ஏதேதோ செய்து கூட இருக்கலாம். அவருக்குப் பின் அவருடைய சீடர்கள் அதை செய்யும் வண்ணம் ஜீசஸ் கண்டிப்பாய் அதை செய்து இருப்பார். அவர் பூனைகளைப் புலிகளாகும் அளவிற்கு வல்லமைக் கொண்டவர்.

உலகமெங்கும் காணும் ஜீசஸின் படங்கள் அவரை சோகமானவராய் காட்டுகின்றன. ஜீஸஸ் சந்தோசத்தின் உச்சத்தை தன்னுள் தேக்கி அலைந்த சக்தி மிகுந்த பிரமாண்ட ஆன்மா என்பதை உணர  அவருடைய வாழ்க்கைக்குள் விழிப்புணர்வோடு நாம் செல்ல வேண்டி இருக்கிறது. கூட்டம், கூட்டமாய் மக்களோடு மக்களாக அந்த பிரம்மாண்டம் அன்பை பகிர்ந்து அலைந்திருக்கிறது. திராட்சை ரசத்தோடும், அப்பத்தோடும், மிகுந்த உற்சாகத்தோடும் ஆன்ம ஒடுக்கம் கொண்ட மனிதர்களை அவர் தேடித் தேடிச் சென்று பேசினார். யாரையும் எதற்கும் கவலைப் படவேண்டாம் என்று சொல்லி வலுவூட்டிய அவர் எல்லோருமே தேவனுடைய பிள்ளைகள் என்று கூறி ஆன்மாவை ஒளியுறச் செய்தார். சூட்சும வார்த்தைகளைச் சொல்லி மனிதர்களை சிந்திக்க வைத்தார்.

கீழை நாட்டு விஞ்ஞானமான அஷ்டமா சித்திகளை எல்லாம் அவர் தனக்குள் அடக்கி வைத்திருந்திருக்கிறார். பிரபஞ்சத்தில் அலைந்து கொண்டிருக்கும் அதிர்வுகளை தனது விரல் நுனிக்கு கொண்டு வந்து அவர் குருடர்களை பார்க்க வைத்ததும், செவிடர்களை கேட்க வைத்ததும்.....சாதாரண அறிவுக்கு எட்டவில்லை என்றாலும்...அவை எல்லாம் நடந்திருக்க ஓராயிரம் சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. பலவீனப்பட்ட மக்களைத் தேடித் தேடி சென்று அவர்களோடு இரவு பகலாய் திரிந்தவர் ஜீசஸ். 

சாதாரண மக்களுக்கு தனது ஞானத்தை கொண்டு செல்வதற்கான படிநிலைகளில் அவர் இருந்த போது மூடர்களால் அவர் அந்த சமுதாயத்தை விட்டு களையப்பட்டார். அவரை சுதந்திரமாக விட்டிருந்தால் பைபிள் என்ற ஒன்றின் அவசியமே இன்று இல்லாமல் போயிருந்திருக்கும். இருந்ததனை இருந்தது போல அவர் இருந்து காட்டியிருந்திருப்பார். புத்தகங்களைச் சுமந்து கொண்டு வேத விளக்கம் கேட்டுக் கொண்டு புத்தகத்துக்குள்ளும், கட்டிடங்களுக்குள்ளும் கடவுளைத் தேடும் வேலையே இருந்திருக்காது. பீட்டர் ஃபவுலுக்கும் இன்ன பிற போதகர்களுக்கும் வேலை இல்லாமல் போய்....பாதிரியார்களே இல்லாமல் இருந்திருப்பார்கள்.

உங்களில் யார் எல்லோருக்கும் தாழ நின்று ஊழியம் செய்கிறீர்களோ அவரே எனக்குப் பிறகு உங்கள் அனைவரையும் வழி நடத்துவார் என்று ஜீசஸ் சொன்னதை மெய்ப்பித்து நடைமுறையிலும் கொண்டு வந்திருப்பார். சனாதான தருமம் சொல்ல நினைத்ததை, புத்தரும், மகாவீரரும் உணரவைக்க முயன்றதை....லாவோட்சூவூம், கன்பூசியசும் வெளிப்படுத்த முயன்றதை....இன்னும் இந்த உலகத்தில் இருக்கும் அத்தனை மதங்களும் குருமார்களும் போதித்துக் கொண்டிருப்பதை, போதிக்க நினைத்ததை.....

சர்வ நிச்சயமாய் ஜீசஸ் குட்டிப் பிள்ளைகளுக்கு மிட்டாய் கொடுப்பது போல அவர் சொல்லிக் கொடுத்திருந்திருப்பார். 

அதோ அந்த வானத்துப் பறவைகளைப் பாருங்கள் அவை விதைப்பதும் இல்லை....அறுப்பதும் இல்லை....களஞ்சியத்தில் சேர்ப்பதும் இல்லை உங்கள் விண்ணகத் தந்தை அவற்றுக்கு உணவளிக்கிறார்....என்று அவர் சொல்லும் வார்த்தையில் உளவியல் ரீதியாக பலவீனப்பட்ட மனிதர்கள் விஸ்வரூபமெடுத்து எழுந்து நிற்கும் சூத்திரம் இருக்கிறதா இல்லையா?

தேவனின் வார்த்தைகள் வீணாக எல்லோரும் பேசுவதைப் போன்று வெளிப்பட்டிருக்க வில்லை. அவையாவுமே தீர்க்க தரிசனம் கொடுக்கும், தனிமனித எழுச்சியை தரும் புரட்சி வார்த்தைகள். காட்டுப்பூக்களை பார்க்கச் சொல்லும் தேவன் அவற்றின் அழகை பாருங்கள்...நீங்கள் அரசனாகக் கருதும் சாலமனின் பட்டாடைகள் கூட இவ்வளவு அழகானதாய் இருக்க முடியாது....

மறுநாள் அடுப்பிலே எறிந்தால் எரிந்து போகக்கூடிய புற்களுக்கு கூட இப்படியான ஒரு அழகினை அந்த இயற்கை கொடுத்திருக்கிறதே...அதை விட அறிவு கொண்ட மனிதர்கள் நீங்கள்....தாழ்வு மனப்பான்மை கொள்ளலாமா? கவலைப்படலாமா? இப்படி எல்லாம் கேள்விகள் கேட்ட ஜீசஸ் ஏதோ ஒரு மதத்திற்கு சொந்தமானவராய் எப்படி இருக்க முடியும்...

அது பிரம்மாண்டம். பெருஞ்சத்தியம். தன்னை முட்கிரீடங்கள் வைத்து, தான் வாழ்ந்த சமூகம் காறி உமிழ்ந்த போதும் அறியாமல் தவறு செய்யும் அந்த ஆன்மாக்களுக்காக அவர் வருந்தி அவர்களை மன்னிக்கும் படி பேரிறையை இறைஞ்சுகிறார் என்றால்...உள்ளது அழியாது; இல்லாதது தோன்றாது..என்னும் தத்துவத்தை அவர் உணர்ந்தவர் தானே..? உனக்குள்ளும் எனக்குள்ளும் இருப்பது ஒன்றே...உடல் சார்ந்த அனுபவங்களும், உடலை உருவாக்கிய ஜீன்களும் நம்மை வெவ்வேறாய் பிரித்து வைத்து இருக்கின்றன என்ற உண்மையை உணர்ந்த புனிதர்தானே அவர்..?

தேவனை ...மதத்திற்குள் மட்டுப்படுத்தி விடாதீர்கள் மனிதர்களே...!!!!! அவர் அகில உலகமும் போற்ற வேண்டிய சத்திய புருசர். தேவன் சுமந்த 
காரணத்தால்....இன்னமும் சிலுவைகள் அவரின் பெயராலேயே அறியப்படுகின்றன. தண்டனைகளுக்கான கொடும் கருவியான சிலுவைகள் அன்பின் வடிமாய் அடையாளம் பெற்றுக் கொண்டன.  சாதாரண மரச் சிலுவைகளே தேவனைச் சுமந்ததால் பரிசுத்தமடைந்து ஆயிரம், ஆயிரம் ஆண்டுகளாய் புனிதத்தின் அடையாளமாய் இன்னமும் நிற்கிறது என்றால்....

பரிசுத்த தேவனை நம் இதயத்தில் சுமக்கும் போது, அவரின் ஆன்மீக விஞ்ஞானத்தை உணர்ந்து வார்த்தைகளின் ஆழத்தை அறியும் போது...அதற்கான விளைவுகள் நமக்கு கிடைக்காமலா போய்விடும்....?

ஜீசஸ் கிரைஸ்ட் என்னும் தேவன் சிலுவையில் அறையப்பட்ட பின்பு உயிர்த்தெழுந்தார் என்பதையும், சிலுவையில் அறையப்பட்ட பின்பு காப்பாற்றப்பட்டு அவர் முன்னமே வந்து சென்றிருந்த காஷ்மீருக்கு வந்து தியானம் செய்து பின் வயதாகி சமாதியானார் என்பதையும் நான் புறந்தள்ளுகிறேன்....

என்னைப் பொறுத்த வரையில் சிலுவையில் அறையப்பட்டது வரை....அந்த தேவனின் வாழ்க்கையிலும் வார்த்தைகளிலும் அறியப்படவேண்டிய பொக்கிஷங்கள் நிறைய நிறைய இருக்கின்றன...அந்த அதிசயத்துக்குள் சுற்றித் திரியும் அலாதியான சந்தோசத்திலேயே நான் இருந்து கொள்கிறேன் ஏனேன்றால் தேவன் விவாதிக்கப்பட வேண்டியவர் இல்லை...ஆன்மாவினுள் உணரப்படவேண்டியவர்....!!!!

“நாளைக்காகக் கவலைப்படாதீர்கள். ஏனெனில் நாளைய கவலையைப் போக்க நாளை வழி பிறக்கும்." - மத் 6: 24-34


தேவா. SFriday, March 22, 2013

பரதேசி....!தடித்த தோல் எனக்கில்லை. உலக இலக்கியங்களையும், திரைப்படங்களையும் அவ்வப்போது கடந்து சென்றாலும் புத்தியின் தடிமன் கூடிப் போவதுமில்லை. விசால அறிவுகள் எவ்வளவு அபத்தமானது அது எப்படி வாழ்வின் அழகியலைச் சிதைக்கின்றன என்பதை பரதேசி திரைப்படத்தைப் பற்றிய ஜாம்பவான்களின் பார்வைகளில் இருந்து புரிந்து கொண்டேன். வானவில்லுக்கு இன்னமும் ஆச்சர்யமாய் வாய் பிளந்து அதன் வர்ண ஜாலத்தில் நான் திணறிப் போய் நிற்கிறேன்...

தினசரி சூர்ய உதயத்தின் போது வானம் நடத்தும் ஜாலங்களில் மயங்கிக் கிடக்கிறேன். மொட்டுக்கள் எல்லாம் பூவாகும் தருணம் எதுவாயிருக்கும் என்று மூளையை கசக்கிக் கொண்டிருக்கிறேன்....புற்களின் மீது அழுந்தக் கால் பதிந்து கடந்து செல்லும் பூனையொன்றை வம்புக்கிழுத்து....ஏய் புற்களை மிதிக்காதே என்று பொய்யாய் அதட்டி சிரிக்கிறேன், அந்தப் பூனையின் ப்ரியத்தை விழிவழியே பெற்றுக் கொண்டு நன்றியை விழி வழியே நானும் கொடுக்கிறேன்...இப்போது சொல்லுங்கள் பரதேசி என்னும் திரைப்படம் என்னை என்ன செய்து இருக்கும் என்று..? எதிர்பார்ப்பு என்பது கடந்த கால நிகழ்வுகளின் திணிப்பு.  அதுவும் பாலா என்னும் மனிதர் தனது திரைப்படங்களின் மூலம் பதிவு செய்யும் அமானுஷ்ய உணர்வுகளை ஏந்திக் கொள்ளும் எதிர்ப்பார்ப்பு என்க்குள் மிகையாய் இருந்தது உண்மைதான்.

மனிதர்களை வைத்துக் கொண்டு உளவியலை மையப்படுத்திய சமூகப் பார்வைகளை அழுத்தம் திருத்தமாகச் சொல்ல சமகாலத்தில் பாலாவை விட்டால் வேறு யாரும் இல்லை என்பது எனது அபிப்ராயம். அவரது கதைக்களம் எப்போதுமே நாம் அன்றாடம் கடந்து செல்லும் ஆனால் பார்க்க விரும்பாத மனிதர்களை பற்றியதாய்த்தான் இருக்கும். விஞ்ஞானத்தின் வளர்ச்சியில் அசுரத்தனமாக எதுவேண்டுமானாலும் முன்னேறலாம். மனிதன் தன்னை நாகரீகமாக காட்டிக் கொண்டு மாறியதாக நடிக்க வேண்டுமானால் செய்யலாம். அடிப்படையில் அவனது ஆதி குணங்கள் அவனை விட்டுப் போகாது என்பன போன்ற மறைமுக செய்திகளை செவுட்டில் அறைந்து எப்போதும் போல இந்தப்படத்திலும் பாலா சொல்லி இருக்கிறார்.

நாஞ்சில் நாடனின் இயல்பான வசனமும், பாலாவின் எதார்த்தமான திரைக்கதையும்,  அதர்வாவின் நேர்த்தியான நடிப்பும் மூலக்கதையான எரியும் பனிக்காடு என்னும் நாவலை திரையில் பாலாவின் பாணியில்  பிம்பமாக்கியிருக்கிறது.இளையராஜா அளவிற்கு இல்லை என்று தோன்றினாலும்..... மிகப்பெரிய குறையில்லாமல் பாடல்களையும், திரையிசையையும் கட்டி இழுத்துச் சென்று ஈடு கொடுத்திருக்கும் ஜி.வி. பிரகாஷும்....தெறிக்கும் வார்த்தைகளைக் கொண்டு...உணர்ச்சிப் பிழம்பாய் பாடல்களை எழுதியிருக்கும் வைரமுத்துவும் பாராட்டுக்குரியவர்கள். வலிக்கும்  உண்மையை திரைக்கதை பேசிக் கொண்டிருக்கையில் அதர்வாவின் தாடி வளர்ந்திருக்கிறதே தலை முடி வளரவில்லையே என்று யோசித்து குற்றம் சொல்லும்  குரூரம் எனக்குள் இல்லை. ஒட்டுப் பொறுக்கியாகவே வாழ்ந்திருக்கும் அதர்வாவும் 1930கள் வாக்கில் காட்டப்படும் அந்த கிராமமும் எப்படி இவ்வளவு சுத்தமாய் இருக்கிறது என்று ஆராயும்...ஒரு விஞ்ஞானியின் மனப்பான்மை எனக்கு சுத்தமாய் இல்லவே இல்லை.

அந்த கிராமத்து மக்களின் வாழ்வின் ஒரு ஸ்லாட் எனக்கூடிய ஒரு சிறு காலகட்டத்தைப் பதிவு செய்திருக்கும் பாலா அதை மகிழ்ச்சி நிறைந்ததாய் காட்டி இருக்கிறார். அதர்வா விறகு உடைத்து விட்டு கூலிக்காக கெஞ்சும் இடத்தில் மிகத்தெளிவாய் புரிகிறது நமக்கு அவர் சார்ந்திருக்கும் சிறு கிராமத்து மக்கள் அத்தனை பேரும் வர்க்க ரீதியாய் ஒடுக்கப்பட்டவர்கள் என்று..... வேலை பார்த்தவனுக்கு கூழை குடித்து விட்டுப் போடா என்று டீக்கடைக்குள் நின்று விரட்டுபவன் வெள்ளைக்காரன் இல்லை... அவனும் அதே சமூகத்தில் வாழும் ஒரு மனிதன் தான். பொருளாதாரம் என்பது எப்போதுமே காலத்தின் முன்பு நிறைவானதாக இருப்பது இல்லை. மனித சமூகம் சிறப்பான வாழ்க்கையை நோக்கி எப்போதுமே நகர்ந்து கொண்டுதான் இருந்திருக்கிறது.

கிராமங்களில் இருந்து பட்டணம் நகரும் மனிதர்களில் தொடங்கி, என்னைப் போல பிழைப்புக்காய் அயல் தேசத்தில் வருடங்களை நாட்களைப் போல கடத்திக் கொண்டிருக்கும் அத்தனை மனிதர்களுக்கும் இது தெளிவாய்ப் புரியும். அதர்வாவுக்கும் வேதிகாவுக்குமான காதல், வேதிகா கர்ப்பமாவது, அதர்வா ஊர் மக்களோடு பிழைப்புக்காய் கங்காணி விரித்த வலையில் சிக்கி தேயிலைத் தோட்டத்துக்கு செல்வது என்று கதையை நீங்கள் திரையில் பார்த்துக்கொள்ளுங்கள் அல்லது ஏற்கனவே பார்த்து கூட இருப்பீர்கள்.


நடிப்பு என்பது உடலின் மொழி. உணர்வுகளின் ஸ்தூல வடிவம். அதர்வா வைரமாய் ஜொலிப்பதின் பின்னணியில் பாலா பளீச் என்று தெரிகிறார். அதர்வாவின் வசன உச்சரிப்புகள் அத்தனை எதார்த்தமாய் இல்லை என்றாலும்.... அதுவெல்லாம் திரைக்கதைக்கு முன்னால் ஒன்றும் பெரிய குறையாய் தெரியவில்லை. எந்த ஒரு விசயத்தையும் நாம் காணும் போது வெறுமனே பார்வையாளனாக மட்டும் இருந்து விடக்கூடாது. இங்கே சினிமா விமர்சனம் எழுதிய, பாலாவை குறை சொன்ன அத்தனை பேரும் காலரியில் இருந்து வெறுமனே சினிமாவை பார்த்த பார்வையாளர்கள். ஒவ்வொரு காட்சியையும் தங்களின் மூளையால் பார்த்த இயந்திரங்கள் அவர்கள். எல்லாவற்றையும் தங்களின் அறிவில் ஏற்கெனவே இருந்த விசயங்களோடு ஒப்பீடு செய்து பார்த்து தங்களை திரையை விட்டு வெகு தூரத்தில் நகர்த்தி வைத்துக் கொண்ட ஜீவிகள்.... அறிவு ஜீவிகள்.

நான் என்ன சொல்கிறேன்....ஒரு புத்தகமோ அல்லது திரைப்படமோ உங்களை அந்தக் கதைக்குள் இழுத்துச் செல்ல முயலுகிறது என்றால் விலக்காமல் உட்சென்று விடுங்கள். அதர்வாவின் இடத்திலோ இல்லை பிழைப்பு தேடி செல்லும் அந்த மக்கள் கூட்டத்தில் ஒருவராகவோ உங்களை கண நேரம் இருத்திப் பாருங்கள், நீங்கள் மீண்டு வெளியே வருவது கடினம். அதுவும் அழுத்தமான பாலா போன்ற படைப்பாளிகளின் திரைப்படங்கள் கண்டிப்பாய் நம்மை வெளியே விடவே விடாது. அப்படி இருக்கையில் நீங்கள் முரண்கள் என்று சொல்லும் எதுவுமே அங்கே இருக்கவே இருக்காது. எஸ்டேட்டிற்குள் சென்ற முதல் நாள் இரவில் மாடுகளை கொட்டத்துக்குள் அடைப்பது போல மனிதர்களை கங்காணியின் கூட்டம் அடைத்த பின், அந்த இரவை விடிய வைக்கும் பெரும் சங்கினை ஒருவன் விடியற்காலையில் ஊதிய போது...

அந்த சங்கின் சப்தத்திற்கு அலறி எழும் சாலூர் மக்களை பார்த்த போது என்னை மீறி கண்ணீர் எட்டிப்பார்த்தது. எப்போதும் அதிகாலையில் என்னை எழுப்பி விடும் என் வீட்டு அலாரத்தை  பார்த்த போது எனக்குள் ஒரு பயம் வந்து ஒட்டிக் கொண்டது. காலம் மாறி இருக்கிறது. சூழல் மாறி இருக்கிறது. நவீனம் என்ற பெயரில் எல்லாம் மாறி இருக்கிறது ஆனால்  அதே வாழ்க்கை மாறாமல் எல்லா இடத்திலும் அழுத்தமாய் பரவிக் கிடக்கிறது. அதுவும் சொந்த நாட்டை விட்டு வெளிநாட்டில் இருக்கும் என்னைப் போன்றவர்கள் எங்களை அதர்வாவோடு ஒப்பீடு செய்து பார்க்கையில் நிஜமாகவே மீளமுடியாத சூழலுக்குள் நாங்கள் சிக்கிக் கிடப்பதை எண்ணி மிரண்டு போனேன். பொருளாதார தேவைகள் ஏற்படுத்தி வைத்திருக்கும் நிர்ப்பந்தங்களோடு, தேவைகள் தீராமல் மாறிக் கொண்டே இருக்க...சம காலத்தை விட்டு மீள முடியாமல் மீண்டும் மீண்டும்  காலம் என்னும் கங்காணி எங்களை இந்த சூழல் என்னும் எஸ்டேட்டை விட்டு வெளியே வரவிடாமல் ஏதேதோ கணக்குகளை, கடன்களை சொல்லி.... இங்கேயே பிடித்து வைத்திருக்கிறான்.

இது வெளிநாட்டில் வாழும் என்னைப் போன்றவர்களுக்கு மட்டுமில்லை ஊரில் இருந்து கொண்டே சொந்த மண்ணை விட்டு பிழைப்பு தேடி நகரம் நோக்கி நகர்ந்த அத்தனை மனிதர்களுக்கும் பொருந்தும் என்றாலும் ஊரில் இருக்கும் போது அதே சமூக சூழலில் வாழ்வதால் கொஞ்சம் எல்லாமே அனுசரித்துப் போகும்.

எங்களுக்கு எல்லாம் கல்யாணம், காட்சி, திருவிழா, மரணம், தீபாவளி, பொங்கல், இன்ன பிற விழாக்கள் எதுவுமே இல்லை என்பது உங்களுக்குத் தெரியுமா? கடிகார முட்களுக்கு நடுவே அவசரகதியில் எங்கள் பண்டிகைகள் எல்லாம் காலண்டரில் மட்டுமே படுத்துக் கொண்டு பல் இளித்துக் கொண்டிருக்கின்றன. ஏன் இதை எல்லாம் சொல்கிறேன் என்றால்....

பாலாவை, பரதேசி என்னும் அற்புதமான கலைப்படைப்பை குறை சொல்லும் இரும்பு இதயங்களும், கருங்கல் மூளைகளுக்கும் இவை எல்லாம் உரைக்க வேண்டும் என்றுதான்....

எப்படிப் பார்த்தாலும் எரியும் பனிக்காடு என்னும் நாவலை தனது பாணியில் அழுத்தமாய் திரையில் பதிவு செய்தமைக்காக பாலா பாராட்டுக்குரியவர். கடைசி காட்சியில்....அதர்வா அந்த எஸ்டேட்டிலிருக்கும் ஒரு மிகப்பெரிய பாறையின் மீது அமர்ந்து கதறுவது எத்தனையோ சமகால கார்ப்பரேட் அடிமைகளின் கதறல் ஒலிதான். இன்னமும் அந்தக் கதறல் ஒலி காதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. நடு இரவில் படம் பார்த்து முடித்ததோடு என் மகளைக் கட்டிக் கொண்டு நானும் காலத்திடம் தேம்பிக் கொண்டிருந்தேன்....

" நியாயமாரே........இரக்கங்காட்டுங்க...நியாயமாரே............சாதிசனத்தைப் பார்க்கணும் நியாயமாரே......!!!! ஒரு பாவமும் பண்ணலயே நியாயமாரே.....!!!!!


ஹேட்ஸ் ஆஃப்...பாலா சார்!!!!!! 


தேவா. S
Wednesday, March 20, 2013

ருத்ராட்சம்....!எந்தப் பரதேசியைப் பற்றி எழுத? என்று யோசித்துக் கொண்டிருக்கையில் மீண்டும் சடாரென்று கடந்து போன அந்த அதிர்வுகள் நிரம்பிய மஹாசிவராத்திரிக்குள் விழுந்து விட்டேன். சனிப் பிரதோஷமும், அதனையடுத்த மகா சிவராத்திரியும் எங்கிருந்தோ என்னைத் தேடி வந்த ஒரு முக ருத்ராட்சமும், அதை அணிய ஷீரடியில் இருந்து யார் மூலமாகவோ வந்த கருப்பு கயிறும் என்னோடு ஒட்டிக்கொள்ள....முழுமையான அதிர்வுகளில் நான் நிரம்பி வெறுமையில் பரதேசியாக நின்றிருந்தேன்.

சிறுவயதில் இருந்தே சிவனைப் பிடிக்கும்.  சிவனைப் பிடித்ததால் ருத்ராட்சமும் பிடிக்கும். ருத்ரனின் நெற்றிகண்ணில் இருந்து வந்த நெருப்பு பொறிதான் ருத்ராட்சம் என்று புராணங்கள் மூலமாக ஒரு நெருப்பினை எனக்குள் செல்வமணி மாமா ஏற்றி வைக்க, ரஜினியும் ருத்ராட்சம்  அணிகிறார் என்ற ஈர்ப்பு என்னை இழுத்து வைக்க....20 வயதில் ஐந்து முக ருத்ராட்சத்தை ஒரு காது குத்துக்காக அழகர்கோவில் போன போது வாங்கி அணிய ஆரம்பித்தேன். ருத்ராட்சத்திற்கு என்ன சக்தி இருக்கிறது என்றெல்லாம் ஆராய முற்படாத ஒரு மனது அப்போது. ருத்ராட்சத்தை நல் ஒழுக்கத்தின் அடையாளமாக மட்டும் அறிந்து அதை நான் அணிகிறேன் என்று என் வயதை ஒத்தவர்களிடம் விளம்பரம் செய்து கொள்ளும் மனோநிலை மட்டுமே என்னிடம் இருந்தது.

பிரதோஷ விரதமும் ருத்ராட்சமும் என்னை இப்படி ஏதோ ஒரு விதத்தில் பிடித்துக் கொள்ள, கூட்டமில்லாத சிவாலயங்கள் என்னை ஏனோ அதிகமாய் வசீகரிக்கத்தன. இப்போது சிவ வழிபாட்டில் நிறைய பேர்கள் ஈடுபடுகிறார்கள். சிவனை லெளகீகத்துக்கும் சொந்தமனவர், என்ற மதரீதியான அடையாளம் பரப்பப்பட்ட போது நிறைய பேர்கள் குறிப்பாக, நாகாத்தம்மன் கோயிலையும், மேல் மருவத்தூர் ஆதிபராசக்தியையும் வணங்கிக் கொண்டிருந்த பக்திக் கூட்டம் சிவாலயங்களை பிரதோஷ தினங்களில் நிரப்பத்  தொடங்கி இருந்தது.

சிவம் என்னும் சத்தியத்தை, முழுமையை உருவம் கடந்து, அருவம் உடைத்து உணர்வாய் உணரத் தொடங்கி இருந்த போது, நான் ஒற்றீஸ்வரர் கோயிலுக்குச் சென்று கொண்டிருந்தேன். திருவொற்றியூர் எனக்குப் பிடித்த இடமாய் போயிற்று, காளையார்கோயில் காளீஸ்வரர் சன்னதியும், திருப்பத்தூர் திருத்தளிநாதர் சன்னதியும், முசிறி கைலாச நாதர் சன்னதியும் நான்  காதலோடு சுற்றித் திரிந்த இடங்கள். அப்போது சிவன் எனக்குள் சம்மணமிட்ட உருவமாய் அந்த அந்த கற்பகிரகங்களுக்குள் நின்று ஏதேதோ கதைகள் சொல்வார். கண்மூடி ஏதோ ஒரு தூணருகே அமரும் தருணங்களில் இன்னதென்றே தெரியாத பெரும் பிணியாய் சமகால வாழ்வு தெரிய என்னவென்று அறிய முடியாமல் கண்ணீர் வழிய பைத்தியக்காரனாய் ஓம் நமசிவாய என்னும் ஐந்தெழுத்தை ஓதிக் கொண்டே இருந்திருக்கிறேன்.

ஒற்றீஸ்வரர் கோயிலுக்குப் போகும் போது அப்படி அல்ல. வேறு ஒரு புரிதல் இருந்தது. அந்தப் புரிதலுக்கு பாலகுமாரனின் எழுத்து எனக்கு உதவியது. இருளில் வழிகாட்டும் கை விளக்காய் அவரின் சிந்தனைகள் என்னை வெளியே வரவிடாமல் உள்ளுக்குள் தள்ளியது. பட்டினத்தாரும், அருணகிரி நாதரும், இரமண மகரிஷியும், சேஷாத்ரி சுவாமிகளும், பதினெட்டுச் சித்தர்களும், 64 நாயன்மார்களும், சிவபுராணமும் சைவ சித்தாந்தமும் விவேகானந்தரும்.... எனக்கு துணையாய் இருந்தனர்.

மணிக்கணக்கில் ஒற்றீஸ்வரர் முன் அமர்ந்து சிவபுராணம் சொல்லி, வெறுமனே சுவாசிக்கும் ஒரு ஜந்துவாய் எண்ணங்களற்று கிடந்து வரும் சுகம் எனக்குச் சொர்க்கமாகத்தான் இருந்தது. கொடுத்தலும் பெறுதலும் அல்ல ஆன்மீகம். வெறுமனே இருத்தல். இப்படி வெறுமனே இருத்தல் உள்ளதை உள்ளபடி பார்க்க வைக்கும். உள்ளதை உள்ளபடி பார்க்கும் போது அப்படியாய் பார்ப்பதில் இருக்கும் சத்தியம் புரியும். சத்தியத்தை உணரும் போது நாம் என்ன செய்யவேண்டும் என்ற தெளிவு வரும். தெளிவான செயல்கள் சரியான விளைவுகளைக் கொடுக்கும். சரியான விளைவுகள் நிம்மதியைத் தரும். நிம்மதி....நான் உடலென்ற நிலை கடந்த பேருண்மைக்கு கூட்டிச் செல்லும்.

பேருண்மைக்கு கூட்டிச் சென்றால் என்னவாகும்....? 

தெரியவில்லை. அதை நோக்கிய நகர்வுதான் 35 கழிந்து 36 ஆம் வருடத்திற்குள் என்னை கூட்டி வந்து நிறுத்தி இருக்கிறது. ருத்ராட்சம் ஐந்து முகம் யார் வேண்டுமானலும் அணியலாம். எந்த செயல் செய்தாலும் அகம் சுத்தமாய் இருக்க வேண்டும். அகச் சுத்தம் புறச்சுத்ததை தானியங்கியாய் நிறுவும். புறமும், அகமும் அழகாக வாழ்க்கை அழகாகிப் போகும். புறச்சுத்தம் மட்டும் இருந்து அகம் சுத்தமில்லாதவர்கள் மனநோய்க்கு ஆளாக நேரிடும். ருத்ராக்க்ஷம் மின் காந்த அதிர்வுகள் கொண்டது அது நேர்மறையான அதிர்வுகளை அணிந்திருபவர்களுக்கு கொடுக்கிறது. இப்படி எல்லாம் விபரம் அறிந்தவர்கள் கூற அதை ஆன்மா எந்த வித ஆராய்ச்சிக்கும் உட்படுத்தாமல் ஏற்றுக் கொள்ள தொடங்கியது என் ருத்ராட்ச பயணம்.

ஒருமுக ருத்ராட்சம் சிவனின் அம்சம். கூர்மையானது. நீயும் நானும் ஒரு சத்தியம்தான் என்றாலும் உன்னையும் என்னையும் யார் யாரோவென்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஒருமுகம் என்பது எண்ணங்களை குவிக்க குவிக்க ஒற்றைப் புள்ளியில் நினைவுகள் ஓடி ஒளிய உள்ளுக்குள் ஏற்படும் பிரமாண்டம். வெற்றிடம். வெற்றிடம் என்பது ஒரு முகத்தின் நுனி. ருத்ராட்சம் உன்னையும் என்னையும் உள்நோக்கி பயணிக்க வைக்கும் ஒரு சூட்சுமத்தின் ஸ்தூலக் குறியீடு. ஒவ்வொரு முகத்திற்கும் ஒவ்வொரு அதிர்வு. ஒரு முகத்தின் அதிர்வுகள் கூடுதல்.

அதை வாங்கிக் கொள்ளும் தன்மை பாத்திரத்துக்கு இருக்க வேண்டும். நீ ஒரு முகம் ருத்ராக்க்ஷம் அணிய வேண்டும் என்று விலை கொடுத்து வாங்கலாம்...ஆனால் அணிய முடியாது. சத்தியத்தை ஏற்றுக் கொண்டு அசத்தியத்தை செய்தால் அப்படி செய்பவனுக்கே அது அழிவு. இன்னும் சொல்லப் போனால்....ஒரு முகம் ருத்ராட்சத்தை நீ அணியவேண்டுமானால் நீ அதை தேர்ந்தெடுக்கவே முடியாது. காலச் சூழலும் உனது பக்குவமுமே உன்னை  ஒரு முகத்திடம் கொண்டு சேர்க்கும்...அதுவரையில் இட்ட பிச்சையை புசித்து வாழ்ந்து வா....

ஒற்றீஸ்வரர் கோயிலில் ஒரு யோகி கூறியதை ஆன்மா உள்வாங்கிக் கொள்ள இட்ட பிச்சையைப் புசித்து நடந்து கொண்டிருந்த என்னிடம் இப்போது ஒரு முகம் வந்து சேர்ந்து விட்டது. நேபாளம், இந்தியா, சிங்கப்பூர், மீண்டும் இந்தியா வழியாக துபாய் வந்து சேர்ந்த கதையை நான் இப்போது சொல்லப் போவதில்லை. அது விதி. பரதேசம் போகவேண்டிய பரதேசியின் விதி. இழுத்துச் செல்லும் சக்தியோடு ஓடிக் கொண்டிருக்கும் ஒரு ஆன்ம பயணத்தில் ஒரு மைல்கல். அஹம்ப்ரமாஸ்மி....நீயே கடவுள்.. பிறகு ஒருமுக ருத்ராட்சம் என்ன செய்து விடும் என்ற புரிதலான கேள்விகள் எல்லாம்....ஏறி வந்து மறைந்து போக படிகள் வேண்டாமா? மேலேற்றி விட கைகள் ஏதும் இல்லாமல், வழித்தடங்கள் இல்லாமல் ஏறிச்  சென்றுதான் விடமுடியுமா? என்ற எதிர்கேள்விகள் கேட்ட போது செத்துப் போய்விட்டன.

உணர்வு நிலை என்னும் சூட்சுமத்தின் ஸ்தூல அடையாளம் இது. சிவம் என்னும் சலனமற்ற சூன்யத்தின் சக்தி குறியீடு. போகிக்கும். யோகிக்கும் மத்தியில் இஸ்லாம் வர்ணிக்கும் ஸிராத்துல் முஸ்தகீம் என்னும் மயிரினும் மெல்லிய பாலத்தை நான் இப்போது கடந்து கொண்டிருக்கிறேன்.

கடந்த பிரதோஷ தினத்தில் என்னோடு ஒட்டிக் கிடந்த ஐந்து முகம் என்னை விட்டு பிரிய உடல் பிரிந்த ஆன்மாவாய் என்னோடு ஒட்டிக் கொண்டது இந்த ஒருமுகம். இருந்த உயிரின் தடிமன் இன்னும் இன்னும் அழுத்தமாய் படர்ந்து கொள்ள மனம் உள்முகமாய் இன்னும் ஆழமாய் திரும்பிக் கொண்டது. உடலை சூழ்ந்து கொண்ட அதிர்வுகள் எங்கிருந்து பிறந்தன என்று என்னால் யோசிக்க முடியவில்லை....ஆனால் இன்னும் எதார்த்தமாய் அழுத்தமாய் தரையில் எனது கால்கள் பதிய நின்று கொண்டேன். நகர்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கைக்கு இன்னுமொரு உந்து சக்தியாய் எனக்கு இந்த ஒருமுகம்  கிடைத்திருக்கிறது.

ஒருமுகம் ஏதோ ஒன்றை எனக்குச் செய்து விடும் என்று உங்களுக்கு இங்கே நான் சொல்ல வரவில்லை.....எப்படி ஒரு காந்ததிற்கு ஈர்ப்பு நிறைந்த அதிர்வுகள் இருக்கிறதோ அப்படியான அதிர்வுகளை இந்த ருத்ராட்சமும் கொண்டிருக்கிறது என்ற உண்மையை உணர்ந்ததின் அடிப்படையில் இங்கே பதிவு செய்கிறேன். அதற்கு மேலதிகமாக எதை நான் சொன்னாலும் அது முழுமையைச் சொன்னதாகாது. முன்னும் பின்னும் அலையும் மதயானையைப் போல காலம் நம்மிடம் பிரமாண்டப்பட்டுப் போயிருந்தாலும் நிஜத்தில் அப்படி ஒன்றுமே இல்லை என்பதை உணரும் கணம் ரொம்பவே வித்தியாசமானது.

பக்தி என்பதும், கடவுள் என்பதும் படி நிலைகளாக இருந்தாலும் அவை கொண்டு சேர்க்கும் இடம் சர்வ நிச்சயமாய் நாம் கொண்டிருக்கும் எண்ணங்களுக்கு எல்லாம்  அப்பாற்பட்டது. பிரமாண்டம் என்ற சொல்லை கேட்டு விட்டு அதையும் மட்டுப்படுத்திதான் மனது கற்பிதம் கொள்ளும். சொல்வது எல்லாமே சத்தியத்தைப் போன்றதுதானே அன்றி சத்தியம் வேறாகவே இருக்கிறது எப்போதும். எனது சுமையை ஒரு கூலியாய் நான் சுமந்து நகர்கையில் சுற்றியிருக்கும் கூலிகளின் சுமை தூக்கும் அனுபவங்களும் எனதாகிப் போகிறது. உயிரோடு இருக்கும் வரையில் நாம் எடுத்து வைத்து பேசிக் கொண்டிருக்கும் பல பிரச்சினைகள் இறந்த பின்பு காணாமலேயே போக....மிச்சமிருக்கும் ஏதோ ஒன்று உறுத்தலாய் அதிர்வுகளாய்தொடர்ந்து கொண்டே இருக்கிறது. 

வாழும் வரை வாழ்க்கையை ஏதோ ஒரு கனவில் வாழ்ந்து விட்டு மரித்துப் போகும் அவல நிலையை விட்டு அந்தப் பெருஞ்சக்தி என்னை இப்போது நகர்த்தி வைத்திருக்கிறது. லெளகீகத்தின அவசியம் எனக்கு அவசியமற்றதாகவும், எனது அவசியம் லெளகீகத்துக்கு அனாவசியமாகவும் இருக்க....

யாருமற்று வந்த நம்மை யாருமற்று கொண்டு செல்ல அதோ காத்துக் கிடக்கிறது காலம். உற்றார், உறவினர், வந்தவன் போனவன், ஏழை பணக்காரன், நல்லவன், கெட்டவன், அதிகாரி, அமைச்சன், அடிமைகள், அறிவாளிகள், முட்டாள்கள்.. என்று எல்லோரையும் மென்று தின்று விட்டு நகரப்போகிறது அது....

இந்த உலகத்திற்குள் நான் வந்து ஏற்றுக் கொண்டிருக்கும் பாத்திரத்தை குறையில்லாமல் செல்ல வேண்டும் என்ற சிரத்தையோடு நகர்ந்து கொண்டிருக்கிறது இந்தப் பரதேசியின் பொழுதுகள்...அவ்வளவே...!

ஓடமுள்ள போதெலாம் ஓடியே உலாவலாம் 
ஓடமுள்ள போதெலாம் உறுதிபண்ணிக் கொள்ளலாம் 
ஓடம் உடைந்தபோது ஒப்பிலாத வெளியிலே 
ஆடுமில்லை கோலுமில்லை யாருமில்லை யானதே....!


தேவா. S

Sunday, March 17, 2013

திராவிடக் கட்சிகளும்... திக்குத் தெரியாத தமிழர்களும்!
டோரன்ட்டில் எல்லா படத்தையும் உடனே உடனே ரிலீஸ் செய்து விடுகிறார்கள். சமீபத்தில் தொடர்ச்சியாக மூன்று படங்கள் பார்த்தேன். ஹாட்ரிக் ஃப்ளாப் மூவீஸ். முதல் முப்பது நிமிடத்துக்குப் பிறகு எனக்கு படம் பார்க்கும் பொறுமை  சுத்தமாய் இல்லாமல் போய் விட்டது. எழுந்து போய் பால்கனியில் வெறுமனே உட்கார்ந்து வானம் பார்த்துக் கொண்டிருப்பதை விட்டு விட்டு என்ன இது அபத்தம் என்று மிச்ச படத்தை சக தர்மினியிடமும், மகளிடமும் விட்டு, விட்டு எழுந்து வந்து விட்டேன்.

ஆதி பகவான், சந்தமாமா, ஒன்பதுல குரு என்ற மூன்று படங்களையும் தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு  படைத்தளித்த படைப்பாளிகளுக்கு எனது வந்தனங்கள். மெனக்கெட்டு அதைப் பற்றி உங்களிடம் பேசிக் கொண்டிருந்தால் பிறகு எனக்கு ' 7 அப்' போ அல்லது ஸ்பைரைட்டோ வாங்கி, கிளாஸில் ஊற்றி லெமனும், சால்ட்டும் போட்டு நீங்கள் கொடுத்து என் வயிற்றுக் குமட்டலை சரி செய்ய வேண்டி இருக்கும் என்பதால்.. மூன்று படங்களையும் நான் உங்களை சாட்சியாக வைத்து இப்போதே மறந்து விடுகிறேன்.

நிறைய எழுதுவதற்கு போதும், போதுமென்று சுற்றிலும் ஓராயிரம் சம்பவங்கள் நடந்து கொண்டிருந்தாலும் எல்லாமே செவியோடு செய்தியாய் நின்று விட்டு பிறகு டாட்டா  பை..பை.. என்று கிளம்பி விடுகின்றன. தாக்கத்தைக் கொடுக்கும் படியாய் ஒரு மனிதரையும், ஒரு புத்தகத்தையும், ஒரு சினிமாவையும்  ரொம்ப நாளாய் நான் பார்க்காமல் இருக்கிறேன் என்பதுதான் உண்மை. ஈழப்பிரச்சினைக்காக மாணவர்கள் வெகுண்டெழுந்து நடத்திக் கொண்டிருக்கும் மாணவப் போராட்டங்களைத் தவிர வேறெதிலும் எனக்கு ஒரு ஈர்ப்பு இல்லை.

ஈழப்பிரச்சினையை பொறுத்தவரை இன்று எல்லா அரசியல் கட்சிகளும் ஈழத்தைப் பற்றி பேச வேண்டிய நிர்ப்பந்தத்தை உருவாக்கிக் கொடுத்தது மிருகத்தனமாய் போரை நடத்திய கொடூரன் ராஜபக்சேதான். எந்த ஆயுதத்தை நாம் எடுக்க வேண்டும் என்பதை நமது எதிரியே தீர்மானிக்கிறான் என்ற கூற்று இப்போது மெய்ப்பட்டுப் போயிருக்கிறது. ஈழம் தமிழக அரசியல் போக்கினைத் தீர்மானிக்கும் மிகப்பெரிய சக்தியாய் விசுவரூபமெடுத்திருக்கிறது...! ஈழம் பற்றி பேசாமல் யாரும் இனி தமிழகத்தில் அரசியல் நடத்த முடியாது...!

ஆனால்...

கொஞ்சம் பின்னோக்கிப் பார்த்தீர்களேயானால், மூன்றாவது ஈழப்போர் நடந்து கொண்டிருந்த போது தமிழகத்தின் மிகையான முக்கிய அரசியல் கட்சிகள் ஏதோ ஒப்புக்காக சில போராட்டங்களை அரசியல் சுயலாபத்திற்காக முன்னெடுத்துக் கொண்டிருந்தனவே அன்றி உணர்வுப் பூர்வமாய் யாரும் அப்போது ஈழத்தை பார்க்கவில்லை. அப்போதைய ஆளுங்கட்சியான திமுக செய்த எல்லா பிளக் அண்ட் வைட் அரசியல் ஸ்டண்ட்களும்...ஏனோதானோ என்று மக்களை குறைத்து மதிப்பீடு செய்து ஏமாற்றி விடலாம் என்ற ரீதியில்தான் இருந்தது....!!!! இதில் கொடுமை என்னவென்றால் அந்த ஸ்டண்ட் அடித்து அரசியல் செய்யும் மனோபாவத்தை விட்டு அவர்கள் இன்னமும் வெளியே வராததுதான். சமூக ஊடகங்களின் மூலம் உலகமே சிறு கிராமமாய் மாறிப் போயிருக்கிறது. ஆன்லைனில் இருப்பவர்கள் ஆஃப் லைனில் இருப்பவர்களிடம் பேசுவார்கள்...

இணையப் போராளிகளுக்கும், உறவுகள், நண்பர்கள் இருக்கிறார்கள். விர்ச்சுவலாய் பேசிக் கொண்டாலும் இரத்தமும் சதையும் கொண்ட மனிதர்களே இங்கே உலாவுகிறார்கள் என்பதை எல்லாம் கொஞ்சம் இவர்கள் யோசித்துப் பார்க்க வேண்டி இருக்கிறது. இணையம்.. என்ன செய்யும்..? அல்லது என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதை இன்னும் பத்து வருடங்கள் கழித்து தெளிவாய் அரசியல்வாதிகள் புரிந்து கொள்வார்கள். 

இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்ற ரீதியில் பேசி ஓட்டுக் கேட்டு வென்ற அதிமுகவின் தலைமை ஒரு சில நிலைப்பாடுகளை ஈழத்துக்கு ஆதரவாக எடுப்பது போல எடுத்து திமுகவை பிடித்து கீழே தள்ளி தங்களை நிலை நிறுத்திக் கொள்ள முயன்றதே அன்றி....உண்மையான ஈழ ஆதரவு என்பது அம்மையாரைப் பொறுத்தவரை ஜீரோ பர்ச்ன்டேஜ்தான். போர் நடந்த போது தமிழகத்தில் அதிமுக எத்தனை அதிரடியான போராட்டங்களை அந்த மக்களுக்காக நடத்தியது...? போர் நடந்த போது அதிமுக தலைமை என்ன செய்து கொண்டிருந்தார்...? என்பன போன்ற கேள்விகள் எல்லாம் இன்னமும் நம்மிடம் மிச்சமிருக்கின்றன....

திமுக., அதிமுக என்ற இரு நாடகக் கம்பெனிகளின் கையில் சிக்கிக் கொண்டு தமிழக மக்கள் பேய் முழி முழித்துக் கொண்டிருப்பதை சாதகமாக்கிக் கொண்டுதான் காங்கிரஸ் உள்பட மற்ற எல்லா தமிழக அரசியல் கட்சிகளும் தங்களின் நகர்வுகளைத் தீர்மானித்துக் கொள்கின்றன, மாறாக தமிழக மக்கள் எதிர்ப்பார்க்கும், ஸ்திரமான ஒரு மாற்றுக் கட்சியாய் தங்களை முன்னெடுத்து மேலேறி வர சமகாலத்தில் யாருமே இல்லை என்பதே நிதர்சனம்.

விஜயகாந்த் எல்லாம் அரசியல் நடத்தி, தலைமை தாங்கி நமக்கு விமோசனம் வாங்கித் தந்து விடுவாரா என்ன...? திமுகவையும் அதிமுகவையும் ஒரு பங்கில் வைத்துக் கொண்டாலும் சர்வ நிச்சயமாய் விஜயகாந்த் எல்லாம் நிராகரிக்கப்பட்டே ஆகவேண்டும். எனக்கு தனிப்பட்ட விருப்பு வெறுப்பெல்லாம் இல்லை அவர் மீது....இருந்தாலும்.. என்ன கொள்கை இருக்கிறது அவரிடம்..? ஏன் அவரை நாம் மாற்று சக்தியாக பார்க்க வேண்டும்...? என்ற கேள்விகளுக்குத்தான் பதில் தெரியவில்லை.

குடிக்க தண்ணீர் இல்லை என்றால் மாற்று என்று கூறி வாழ்வதற்கு ஆசைப்பட்டு விசம் குடித்து செத்து விடுவோமா என்ன....? அப்படி விசம் குடித்து சாக முடிவெடுத்தால் அது எத்தகையதோ அத்தகையது... விஜயகாந்தை ஆதரிப்பது என்பது...!!!!!?

தமிழகத்தின் இப்போதைய தேவை வலுவான மாற்று சக்தி. இளையர்களை வழி நடத்தக் கூடிய தெளிவான அரசியல் பார்வைகள் கொண்ட திடமான கொள்கைகள் கொண்ட ஒரு தலைவர். இப்படியான ஒரு இளைஞர் இருந்தார். அவரையும் நேரத்தே காலத்தே தலைவராக்கி, தமிழகத்தின் முதல்வராக்கிப் பார்க்காமல் ...காங்கிரஸோடு கை கோர்த்துக் கொண்டு சடு குடு ஆடி...சறுக்கி விழுந்தவராய் ஆகி விட்டார் கலைஞர். தமிழக அரசியலை இப்படி ஆளுமை செய்தவரும் இல்லை..அசிங்கப்பட்டவரும் இல்லை. ஸ்டாலினை முன்னிறுத்தி, காங்கிரசை செருப்பால் அடித்து துரத்தி விட்டு...திமுக வரும் பட்சத்தில்...., தமிழர் நலனை நிஜமாய் உற்று நோக்கி நகரும் பட்சத்தில், அடுத்த இருபது வருட அரசியலை திமுகவால் கண்டிப்பாய் தீர்மானிக்க முடியும்....

ஆனால்.. இதெல்லாம் நடக்குற காரியமாகத் தெரியவில்லை.....

அது போகட்டும்...

சரியான வழிகாட்டுதலும் தலைவர்களும் இல்லாமல் அனாதைப் பிள்ளைகளாக நம் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. ஈழத்தாய் அதை அதிகாரத்தால் நசுக்கி அழித்துக் கொண்டிருக்கிறார். அவரின் முக்காடு விலகி இருக்கிறது.....! உண்மையான தமிழின ஆதரவாளர்கள் அரிதாரமிட்டு தமிழர் ஆதரவு நாடகம் நடத்துபவர்களை அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்.

சரி கட்டுரையின் முதல் பாராவிற்கே மீண்டும் வந்து விடுகிறேன் . டோரண்டில் எல்லா புதுப் படமும் உடனே உடனே வந்து விடுகிறது. மூன்று சூப்பர் ஹிட் மொக்கைப் படங்களுக்குப் பிறகு....பாலாவின் பரதேசியை பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது. கடந்த வாரம் முழுதும் பாலாவை கஞ்சி காய்ச்சிய க்ரீன் கிராஸ் (மிருகங்களுக்கு ப்ளூ க்ராஸ்னா.. மனுசங்களுக்கு க்ரீன் க்ராஸா இருக்கப்படாதா என்ன....? ஆனைக்கு தெலுங்குல அர்ரம்ன்னா.. குதிரைக்கு குர்ரம்தானே...!!!!!) மெம்பர்ஸ் எல்லாம் இப்போது வாய் பிளந்து படம் நல்லா இருக்காம்ல என்று ஆங்காங்கே பேசிக் கொண்டிருக்கிறார்கள்...

அவன் அடித்த தடி ஒரிஜினலா டூப்ளிக்கேட்டான்னே தெரியாம....பொங்குன பொங்கல்களுக்கு எல்லாம் மெளனமாய் பாலா என்னும் படைப்பாளி பதில் கூறியிருக்கிறான். கதை யார் வேண்டுமானாலும் எழுதலாம்....அதை திரையில் காட்சியாய் கொண்டு வரும் சிரமத்தை, வலியை ....வார்த்தைகளுக்குள் கொண்டு வர முடியாது...

பரதேசியைப் பார்த்து விட்டு விமர்சனம் எல்லாம் நான் எழுதப்போவது இல்லை, எனக்குள் நிகழும் மாற்றங்களை பதிவு செய்ய முயல்கிறேன்.....அவ்வளவுதான்.....

அப்போ.....வர்ர்ர்ர்ர்ர்ட்ட்டா..!


தேவா. S
Monday, March 11, 2013

அடக்க நினைத்த அரசு.....கொதித்து எழுந்த மாணவர்கள்! தொடரும் போராட்டம்...இதே வேலையை கருணாநிதி செய்திருந்தால், தமிழினத் துரோகி என்று மூலைக்கு மூலை நின்று முன்னூறு முச்சந்திப்  போராளிகள் கொக்கரித்து இருப்பார்கள்.  இப்போது ஜெயலலிதா செய்ததால்  சட்டம் ஒழுங்கை சீராக பார்த்துக் கொள்ள சரியான நடவடிக்கை எடுத்திருக்கிறார் என்று ஒரு சாராரும்,  இல்லை.. இல்லை மத்திய அரசு கொடுத்த அழுத்தத்தினால் மட்டுமே அவர் இப்படி ஒரு முடிவு எடுத்திருக்கிறார் என்று இன்னொரு சாராரும்....கருத்துச் சொல்வதைப் பார்த்தால்..

தமிழனின் சூடு சொரணை எல்லாம் இளிச்சவாயர்களைப் பார்த்துதான் புலிப்பாய்ச்சல் பாயுமோ என்ற ஐயம் கூட எனக்குத் தோன்றுகிறது. கருத்துப் போராளிகள் பொதுவெளியிலும், இணையத்திலும் இப்படி பம்முகிறார்கள் என்றால் ஊடகங்கள் கூட தங்களின் கண்டனக்குரலை வலுவாக எழுப்பாமல்...கள்ள மெளனம் சாதிக்கின்றன.

என்ன அநியாயம் இது...?

ஈழத்தில் அநீதி நடந்திருக்கிறது என்பதை ஒத்துக் கொள்ளும் முதல்வர் ராஜபக்சேயை போர்க்குற்றவாளி என்று அறிவிக்கச் சொல்கிறார். அமெரிக்காவின் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று அவரது கட்சி எம்பிக்கள் பாரளுமன்றத்தில் போர்க்கொடி உயர்த்துகின்றனர். தமிழகத்துக்கு இலங்கையர்கள் விளையாட வருவார்கள் என்று சொல்லி ஆசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்தமாட்டேன் என்றும் சொல்லி விட்டார்...., இப்படி எல்லா விதத்திலும் ஈழப்பிரச்சினையில் தமிழக முதல்வரின் நிலைப்பாடு, சாகும் வரை உண்ணாவிரதம் இருந்த தம்பிகளின் நிலைப்பாட்டோடு ஒத்துதானே போகின்றது...?

குறைந்த பட்சம் யாரேனும் ஒரு அமைச்சரை அனுப்பி நான்கு நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வந்த மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்து கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என்ற ரீதியில் வாக்குறுதியைக் கொடுத்து சூழலை சரி செய்யாமல்.....பாசிச பற்களைக் கொண்டு போராடிய இளையர்களை கடித்துக் குதறியது எந்த விதத்தில் நியாயம்..? உண்ணாவிரதம் என்பது மகாத்மா காந்தியடிகள் வகுத்துக் கொடுத்த சத்திய வழிமுறை, அதை ஆங்கிலேயர்களே மிகக்கண்ணியமாக கருதி மகாத்மாவின் போராட்டங்களை ஏற்றுக் கொள்ளவும் செய்தார்கள்....

அந்தப்  புனிதரை தேசப்பிதாவாக கொண்ட நம் தேசத்தில் ஒரு நேர்மையான போராட்டத்தை இப்படித்தான் முரட்டுத்தனமாக காவல்துறையை வைத்து அடக்குவதா? 

ஈழத்தைப் பற்றி பேசியதற்காகவே ஒரு வருடத்திற்கும் மேலாக வைகோவை பொடாவில் அடைத்து வைத்திருந்ததையும் மக்கள் மறக்கவில்லை, ஈழத்தை கடுமையாக எதிர்க்கும் சோ போன்றவர்களோடு முதல்வர் கொண்டிருக்கும் நட்பு எத்தகையது என்பதை யாரும் அறியாமலும் இல்லை....மேலும் இப்போது ஈழ ஆதரவு என்ற உங்களின் குரலின் மூலம் நாதியற்று நின்ற தமிழினத்தின் வாக்குகளை எல்லாம் வசூலித்துதான் அரியணை ஏறினீர்கள் என்பதும் பச்சைப்பிளைக்கு கூடத் தெரியும்

காலம் இப்போது உங்கள் காலடியில் கால்பந்து போல பணிந்து  கிடக்கிறது முதல்வர் அவர்களே!!! உங்கள் கோட்டுக்குள் நிற்கிறது பந்து. 2016 வரையிலும் எந்த திசைக்கு வேண்டுமானாலும் நீங்கள் பந்தை அடித்து விளையாடுங்கள்....

2009 பாரளுமன்றத் தேர்தலில் இவர்களுக்கு வாக்களித்தால் ஈழத்தில் போர் நிறுத்தப்படுவதோடு இந்தியாவிலும் ஒரு மதச்சார்பற்ற அரசு உருவாகும் என்ற இந்திய கூட்டு மனோபவத்தின் படி ஒவ்வொரு தமிழர்களும் வாக்களித்து எங்களுக்கு நாங்களே வாக்கரிசி போட்டுக் கொண்டதின் விளைவு.....

எங்கள் பிள்ளைகளின் வெற்று உடம்புகளில் சிங்களக் காடையர்களின் துப்பாக்கிக் குண்டுகள் இறங்கின, எமது சகோதரிகள் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளானார்கள், இராசாயன குண்டு வீசி பாதுகாப்புப் பகுதியிலேயே பாதுகாப்பாய் சமாதியாக்கப்பட்டன எமது உறவுகளின் உடல்கள், இறந்த உடல்களைப் புணர்ந்தும், புணர்ந்த உடல்களைப் படமெடுத்தும் வெளியிட்டு தனது கோரப்புத்தியை காட்டினான் ஈன சிங்களக் நாய்....

ஒரு விடுதலைப் போராட்டம் உலக நாடுகள் எல்லாம் ஒன்று கூடி நின்று இந்திய தேசத்தின் உதவியோடு மிதித்து நசுக்கி அழிக்கப்பட்டது. .......!!!!! இத்தனைக்கும் பிறகு தாய் தமிழகத்தில் எங்கள் எதிர்ப்பினை காட்டக் கூட கூடாது என்றா எப்படி முதல்வர் அவர்களே.....?!!!!  எப்படி பார்த்தாலும் நேற்றைய போராட்டத்தை கண்டு எதற்காக மற்ற கட்சிகள் பயந்தனவோ அதே பயத்தில்தான் ஆளும் கட்சியான நீங்களும் பயந்திருக்கிறீர்கள்...! ஆமாம்  அமைதியாய் நடந்த போரட்டத்தால் என்ன சட்டம் ஒழுங்கு கெட்டுவிடும் என்று பயந்து இப்படியான அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டீர்கள்....?

சமூகப் பிரச்சினைகளுக்கு மக்கள் போராடினால் அதுவும் மாணவர்கள் போராடினால்....பிறகு நாம் அரசியல் செய்ய இங்கு என்ன இருக்கிறது என்ற பயம் எல்லோரையும் போல உங்களுக்கும் வந்திருக்காவிட்டால்தான் அது ஆச்சர்யம். முத்துக்குமாரன்களும், செங்கொடிகளும் எரிந்து போயிருக்கலாம்....ஆனால் இனி தமிழ்  பிள்ளைகள் யாரும் தங்களை அவ்வளவு சீக்கிரம் கொளுத்திக் கொண்டு மாய்ந்து போய்விட மாட்டார்கள். 

எட்டு பேரின் உண்ணாவிரதத்தை அதிகாரம் கொண்டு தடுக்க முயன்றீர்கள்....இதோ பற்றி எரிந்து கொண்டிருக்கிறது தமிழ்நாடு இன்று..... 8 இப்போது 27 ஆக உயர்ந்திருக்கிறது, 27 என்பது 100 ஆகும்...100 லட்சமாகி கோடிகளில் நின்று கொண்டு புரட்சி முழக்கமிடும்....அப்போது என்ன செய்வீர்கள் என்று பார்க்கலாம்...?


தேவா. S
Friday, March 8, 2013

ஒரு கோப்பை தேநீர்.....!
தேநீரைப் பருகும்
இடைவெளிகளில்
முதல் மிடறுக்கும்
அடுத்த மிடறுக்குமிடையில்
காதுக்குள் ஏதேதோ கிசு கிசுக்கிறார்...
நீங்கள் எப்போதும்
தேடும் கடவுள்...!

***

எப்போதும்...
தேநீர் தீர்ந்தவுடன்
கோப்பைக்குள் வந்து
படுத்துக் கொள்கிறது
எங்கும் நிறைந்த
ஏகாந்தப் பெருவெளி...!

***

தேநீர் கோப்பை
காலியாகி விட்டது...
எனக்குள்
மெளனமாய் நிறைந்திருக்கிறது
தேநீர்....!


***

என் கவனமெல்லாம்
தேநீரில் இல்லை
ஆனால்..
கோப்பையை எப்படி ஏந்துவது
ஒவ்வொரு பருகுதலின்
இடைவெளிகளில்...
எங்கே லயித்துக் கிடப்பது
என்பதில்தான்...!

***

தேநீர் அருந்திக்
கொண்டிருக்கிறேன்...
நானுமில்லை...
தேநீருமில்லை...!

***

கோப்பையில்
தேநீரை எடுத்து
தேநீரை மட்டும்
பருகிக் கொண்டிருக்கிறேன்...
வெளியே போய்விட்ட
எண்ணங்களுக்கு
எப்படித் தெரியும்
எனது ஏகாந்தம்...!


தேவா. S
Saturday, March 2, 2013

சந்திரமுகி.....!விவரிக்க முடியாத ஒரு உணர்வுதான் இந்த பூர்வ ஜென்மம் என்பது. ஆதாரத்துடன் நிரூபிக்க எந்த உணர்வுப் பூர்வ நிகழ்வுகளும் தங்களை முன்னிலைப்படுத்திக் கொள்வதில்லை. ஆதாரப்படுத்தி விட்டால் அது உணர்வு நிலை என்னும் உயரிய நிலையிலிருந்து இழிந்ததாகி விடுகிறது. அமானுஷ்ய விசயங்கள் எனப்படும் மனித உணர்வுகளுக்குப் புலப்படாத பல நிகழ்வுகளை இயல்பிலேயே தெரிந்து கொள்ளும் ஆர்வம் எனக்கு இருந்திருக்கிறது. வாழ்க்கைக்கு முன்னும் பின்னும் அடர்த்தியாய் ஏதோ ஒன்று இருக்கிறது என்று நான் பலமுறை உணர்ந்திருக்கிறேன். எனது உணர்வு எனது மனதின் கற்பனை என்று பகுத்தறிவு சொன்னாலும், கற்பனையும் உணர்வுதானே என்று பகுத்தறிவையும் ஆளும் ஒரு சக்தி எனக்குச் சொல்லி இருக்கிறது.

பூர்வ ஜென்மம் என்னும் அடிப்படையை எனக்கு உறுதியாய் நம்ப வைத்தது கீதை என்னும் ஞானக் கடல்தான். கீதை சொல்லப்பட்ட சூழலை மறுத்துப் பேசும் யாரும் கீதையிலிருக்கும் கருத்துக்களை மறுத்துப் பேச முடியாது. யார், யாருக்கு எங்கே சொன்னது என்ற விரிவாக்கத்தை விமர்சிக்கலாம் ஆனால் கீதையின் சாராம்சத்தை, அதன் அடிப்படையை அது சொல்லி இருக்கும் சூட்சும உணர்வுகளை மறுக்கவே முடியாது. பகுத்தறிவின் உச்சம் அது. 

யதா யதா ஹி தர்மஸ்ய க்லானிர்பவதி பாரத
அப்யுத்ததானமதர்மஸ்ய ததாத்மானம் ஸ்ருஜாம்யஹம்
பரித்ராணாய ஸாதூநாம் வினாசாய ச துஷ்க்ருதாம்
தர்ம ஸம்ஸ்தாபனார்த்தாய ஸம்பவாமி யுகே யுகே... 

மேலே கூறப்பட்டிருக்கும் நான்கு வரிகளும் வெறுமனே ஏதோ நான்கு வரிகள் என்ற அளவில் கடந்து செல்ல முடியாததாய் இருக்கிறது. தர்மத்தை நிலை நாட்ட எப்போதும் ஒரு ஆன்மா உருவாக்கப்படுகிறது. தர்மத்தை உறுதியாய் ஸ்தாபிக்க யுகம், யுகமாய் நான் தோன்றுகிறேன். இங்கே பகவான் கிருஷ்ணர் அர்ஜுனருக்கு இதை உபதேசித்தார் என்ற காட்சி விரிவாக்கத்திற்குள் நான் செல்ல விரும்பவில்லை. யுகம் என்பது பிரபஞ்சத்தின் சுழற்சியை புலன்களுக்கு புரிய வைக்க கையாளப்பட்ட சூட்சும வார்த்தை. யுகம் என்பது காலம் அல்ல.. யுகம் என்பது சூழல். இங்கே நானே என்று சொல்வது யாரோ ஒரு கிருஷ்ணர் மீண்டும் மீண்டும் அவதரிப்பது அல்ல. சத்தியம் என்னும் தத்துவம் மீண்டும் மிண்டும் தோன்றுவது. 

கீதை மறுபிறப்பைப் பற்றி பேசுகிறது. ஒரு ஆன்மா உடலுக்குள் சக்தியாய் தங்கி இருந்து பலவிதமான அனுபவங்களை பெற்று அந்த அனுபவச் சாரத்திற்கு ஏற்றார்  போல வேறு உடலை சக்தி வடிவில் சென்றடைகிறது. யார் இதை தீர்மானிப்பது என்ற கேள்விக்கு யார் பூமியின் சுழற்சியை தீர்மானித்தார்களோ, யார் சூரியனிலிருந்து பூமியையும் இன்ன பிற கோள்களையும் பிய்த்தெறிந்தார்களோ அவர்களே இதையும் செய்திருக்க முடியும் என்று எனக்குத் தோன்றியது. அதாவது யாரும் செய்யத் தேவையில்லாத தன்னிச்சை நிகழ்வு என்று பகுத்தறிவில் இதை மொழிப்படுத்திக் கொள்ளலாம். இரண்டு பங்கு ஹைட்ரஜனும் ஒரு பங்கு ஆக்ஸிஜனும் சேர்ந்தால் தண்ணீர் கிடைக்க வேண்டும் என்பது அல்ல நியதி. இரண்டும் சேர்ந்ததால் கிடைத்தது தண்ணீர். ஏதேதோ சேரச்சேர ஏதேதோ கிடைத்தது. பிரபஞ்சத்தின் மொத்த நிகழ்வுகளும் முடிவை நோக்கிய ஒரு பயணம் அல்ல.

நிகழ நிகழ உங்களின் எனதின் முடிவுகள் கிடைத்தன. கிடைக்காமலிருக்கவும் சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. பள்ளத்தை நோக்கி நீர் எப்படி செல்கிறது? அதற்கென்று என்ன நியதி இருக்கிறது. பூமிக்கு என்று ஒரு ஈர்ப்பு விசை எப்படி வந்தது..? அப்படியாய் இந்த உடலுக்குள் அனுபவம் பெற்ற ஆன்மாவும் இருட்டில் பயணிக்கும் வெளிச்சமாய், இடமிருந்து வலம் சுற்றும் பூமியாய் வேறு உடலை எடுக்கவும் செய்கிறது. சக்தி ஏதேதோ அனுபவ அதிர்வுகளைக் கொண்டிருக்க அந்த அனுபவ அதிர்வுகள் மொத்தமாய் கரையும் வரை...உடல் தேடும் ஒரு பயணமும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

உள்ளது அழியாது, இல்லாதது தோன்றாது. இது சைவ சித்தாந்த தத்துவம் என்றால், பின்னாளில் ராபர்ட் ஹூக் என்னும் அறிவியலார் இதை  ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது. ஒரு ஆற்றல் இன்னொரு வகை ஆற்றலாக மாறிக் கொண்டுதான் இருக்கும் என்று ஆற்றல் அழியாமை விதி என்று அறிவிக்கிறார். இராபர்ட் ஹூக்கை நீங்கள் நம்புவீர்கள் ஏனென்றால் அது அறிவியல். சைவ சித்தாந்தத்தை நம்ப மாட்டீர்கள் ஏனென்றால் அதை அறிவாய் பார்க்க முடியாத அளவிற்கு மதம் என்னும் மாயை உங்கள் கண்களை மறைத்து வைத்திருக்கிறது.

உடல் விட்டு பயணிக்கும் இந்த ஆன்மா என்னும் சக்தி அலைகள் பெரும்பாலும் பழைய உடலைப் பற்றிய நினைவுகளை மறந்து வெறும் அனுபவ அதிர்வுகளாய் வேறு ஒரு உடல் தொட்டு பூர்வ ஜென்ம அனுபவத்திற்கும், உறைந்திருக்கும் கருவில் இருக்கும் பாரம்பரிய அணுக்களுக்கும் ஏற்றார் போலும், புலன்கள் மூலம் பெறும் அனுபவத்திற்கு ஏற்றார் போலும், தன்னை புதிய உயிராய் பரிணமித்துக் கொள்கிறது. ஆதி குணங்களை ஆன்மா எப்போதும் மறக்காமல் அதை வெளிப்படுத்தவும் செய்வதால்தான்..ஒரே வீட்டில் பிறந்த நான்கு பிள்ளைகளின் விருப்பங்களும் வெவ்வேறாய் இருக்கிறது. நிறைவேறாத சுழற்சியை அனுபவத்தின் மூலமாய் அடுத்தடுத்து பெற முயலும் ஆன்மாவைத்தான்...

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்அசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத்தாவர சங்கமத்துள்....

எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்
மெய்யேஉன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்.....

என்று மாணிக்கவாசகர் சிவபுராணத்தில் கூறுகிறார். பூர்வ ஜென்ம உடல் வாசனையோடு மறு பிறப்பு நிகழவும் சாத்தியமிருக்கிறது. சந்திரமுகியை மணிச்சித்ரத்தாழ் ஆக பார்த்த போதே எனக்கு விளங்கி விட்டது.  மணிச்சித்திரத் தாழின் கதாசிரியர் யாரென்று எனக்குத் தெரியவில்லை ஆனால் அது அற்புதமான கலைப்படைப்பு. தமிழில் சூப்பர் ஸ்டாருக்காக திணிக்கப்பட்ட காட்சியமைப்புகள் நிறையவே மசாலா வாசத்தை வீச வைத்து விட்டது. மலையாளத்தில் கதையின் ஆழத்தை ரசனையாய் அதன் ஓட்டத்திலேயே கூறியிருப்பார்கள். மலையாள சினிமா இப்போது மாறிப்போய் விட்டது. முன்பெல்லாம் தனது கலாச்சார செழுமைக்குள் நின்று கொண்டுதான் அவர்கள் இசையமைக்கவும், கதை செய்யவும் செய்வார்கள். 

ஷோபனா நாகவள்ளியாய் மாறி நிற்கும் இடத்தில் எனக்கு மயிர்க் கூச்செறிந்தது என்னவோ உண்மைதான். நாகவள்ளி என்னும் தமிழச்சியின் ஆவி ஷோபனாவிற்குள் புகுந்து விட்டது என்று நாம் நினைக்க மருத்துவ ரீதியாய் அது ஆவி அல்ல அகு ஒரு பர்சனாலிட்டி டிஸ்ஆர்டர் என்று மணிச்சித்திரதாழ் சொன்னதும் கூட சரிதான். அது டிஸ்ஆர்டர்தான். உள்ளுக்குள் ஏற்பட்ட அதிர்வுகளின் பிறழ்ச்சிகளே.... நாகவள்ளியாகவும், சந்திரமுகியாகவும் மாறி நிற்கின்றன.  சந்திரமுகியாய் தன்னை நம்புவதாக அந்த பாத்திரம் விவரிக்கப்பட்டது. அந்த கற்பனையை உடைக்க.... வேட்டையன் ராஜாவை கொல்லவேண்டும் என்று அறிவியல் மூலமாக விவரித்து அதைச் செய்து அந்த டிஸ்ஆர்டரை சரி செய்வதாய் படம் சொன்னாலும்....

சந்திரமுகியும் நாகவள்ளியும் பர்சனாலிட்டி டிஸ்ஆர்டரை ஏற்படுத்தக் கூடிய அளவிலான ஆன்மாக்களாய்த்தான் எனக்கு தெரிந்தார்கள். பூர்வ ஜென்மத்தில் தனது காதலனைக் கொன்று போட்டு தன்னை அடைய நினைத்த ஒருவனை பழி தீர்க்க நினைப்பதற்கு நிறையவே சாத்தியக்கூறுகள்... பாதியில் உடலை விட்டுப் பயணப்பட்ட ஆன்மாவிற்கு இருக்கிறது. சந்திரமுகி என்னும் உடலுக்குள் ஏற்பட்ட வெறி, கோபம், உக்கிரம்....உன்னை நான் பழி தீர்ப்பேன் என்னும் ஆக்ரோசத்தோடு பயணப்பட்ட அந்த அதிர்வு மறு பிறப்பு எடுக்க சாத்தியக்கூறுகள் அற்றது. மறு கருவினை ஒரு ஆன்மா தொட வேண்டுமானால்  அது முன் ஜென்மத்து உடலின் நினைவுகள் தீர இல்லாமல் இருக்க வேண்டும். முன் ஜென்மத்து உடலின் நினைவுகள் இருக்கும் வரை அது பிரேத ஆத்மாதான். பிரேதத்தை தானாய் நினைக்கும் ஆன்மா அது.

ஏற்கெனவே கற்பனைகளும், செய்திகளை விவரித்துப் பார்க்கும் மனோநிலையும் கொண்ட ஒரு பெண்ணை அந்த ஆன்மா தேர்ந்தெடுத்துக் கொண்டதில் யாதொரு ஆச்சர்யமும் கிடையாது. ஷோபனாவும், ஜோதிகாவும் அப்படியான ஒரு இளகிய மனோநிலை கொண்ட பாத்திரப்படைப்புகள்தான். அது தான் முதலிலேயே சொன்னேன்.. சந்திரமுகியின் மூலமான மணிச்சித்திரத்தாழின் கதாசிரியர்... ஆகச் சிறந்த படைப்பாளி அதுவும் இந்த படைப்பை தனது புலனுணர்வுக்கு அப்பாற்ப்பட்டே அவர் எழுதி இருக்க வேண்டும்....

மீண்டும் தனது பூர்வ ஜென்மத்தை  நினைத்து மானசீகமாய் சலங்கை கட்டி தன் காதலனுடன் ஆடி சந்தோசப்பட்டுக் கொண்டிருக்கும் அந்த பிரேத ஆத்மாவின் நகர்வுகளை சரி செய்ய வந்த டாக்டரை தனது எதிரியாக பாவித்து அவனையே பூர்வ ஜென்மத்து வேட்டையனாகவும் வரிந்து கொள்வது பிரேத ஆத்மாவின் கோபத்தை தீர்த்து கொள்ள ஒரு வழியாகவும் இங்கே சொல்லப்பட்டிருக்கிறது. இங்கே மனோதத்துவ ரீதியாய் டாக்டர் சொல்லும் விசயத்தைதான் எந்த ஒரு ஆன்மப் புரிதல் கொண்ட பூர்வ ஜென்மத்தை நம்புவர்களும் சொல்லி இருப்பார்கள்...

வேட்டையன் செத்தால் பிரேத ஆத்மா திருப்தியுறும்...அப்படி கோபம் தீர்ந்து விட்டால் தன்னை பிரேதமாக கற்பனை செய்து கொள்ள வேண்டிய அவசியமற்றுப் போய் அந்த அனுபவத்தையும் அதிர்வுகளாய் எடுத்துக் கொண்டு தகுந்த கருவினை நோக்கி சந்திரமுகியின் ஆன்மா சீறிப்பாயும். தன்னை உடலாய் நினைத்து வாழ்ந்து மரணிக்கும் மனிதர்கள் உடலை விட்ட பின்பும் தன்னை உடலாய் நினைத்துக் கொண்டே இருக்க...அந்த கனவு முடிவதே இல்லை. உடல் இல்லாமலேயே வலியும் வேதனையும் உணர்வாய் இருக்க...அது நரகமாகிப் போகிறது. கனவிலே பாம்பு நம்மை கொத்த துரத்திக் கொண்டு வருகிறது என்று வைத்துக் கொள்வோம்...பயந்து அலறி உடல் இருப்பதால் எழுந்து விடுகிறோம்... ! உடல் இல்லாவிட்டால் என்ன ஆகும்..பாம்பு துரத்திக் கொண்டே இருக்கும் நாம் பயந்து ஓடிக் கொண்டே இருப்போம்....

எண்ணைச்  சட்டியில் போட்டு வறுத்துக் கொண்டே இருப்பார்கள் நாம் வறுபட்டுக் கொண்டே இருப்போம். பாம்பும் தேளும் பூராணும் கடிக்க கடிக்க வலியால் துடித்துக் கொண்டு இருப்போம்....! என்ன கருடபுராணம் நினைவுக்கு வருகிறதா...? எக்ஸாட்லி சேம் பாஸ்....!!!!!

தான் யார், ஏன் வந்தோம், மரணம் என்றால் என்ன..? ஏன் பிறந்தோம்...? எங்கே செல்கிறோம்? எது வாழ்க்கை?  இங்கே எல்லாமே மாயை, நிம்மதிதான் வாழ்க்கை. தியானம் செய்ய தனித்தமர்வது போலத்தான் இறந்த பின்னும் இருக்கும் என்பதால் தினமும் தனித்து அமர நேரம் ஒதுக்கி நான் அமர்ந்தால் என்ன? எனக்கு கொடுக்கப்பட்டது எல்லாம் ஹைட்ரஜனும் ஆக்ஸிஜனும் கூடிக் கிடைத்த தண்ணீர் போன்ற எதேச்சையான நிகழ்வுகள். இதற்கு ஏன் நான் கர்வம் கொள்ள வேண்டும்..? நான் என்பது உடல் அல்ல, மனமல்ல, பெயரல்ல, பதவி அல்ல.. எனக்கு நிகழ்வது எல்லாம் கூட்டு நிகழ்வின் பகுதி என்று நாம் உணர, உணர...

ஒரு சருகு உதிர்வது போல ... நிகழ்ந்து விடுகிறது நமது மரணம். அடர்த்தியான எண்ணங்கள் இல்லாமல் எதுவுமற்றுப் போக வேண்டுமா? இல்லை கம்பம் இல்லா காகம் போல அமர எந்த ஒரு இடமும் இல்லாமல் சுற்றிக் கொண்டே இருக்க வேண்டுமா...?இதை தீர்மானிக்க வேண்டிய இடத்தில் நாம் இருப்பதால் நாம்தான் கடவுள், கடவுள் என்று ஒன்று தனித்து இல்லை என்றும் நான் சொல்வேன்...!

எதை நீ கொண்டு வந்தாய், அதை நீ இழப்பதற்கு?
எதை நீ படைத்திருந்தாய், அது வீணாவதற்கு ?
எதை நீ எடுத்துக் கொண்டாயோ
அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
எதைக் கொடுத்தாயோ
அது இங்கேயே கொடுக்கப்பட்டது.
எது இன்று உன்னுடையதோ
அது நாளை மற்றொருவருடையதாகிறது
மற்றொரு நாள், அது வேறொருவருaடையதாகும்.  


தேவா. S