Pages

Tuesday, February 28, 2012

இசையோடு இசையாக..தொகுப்பு 4 !அயற்சியான நாட்கள், அழுத்தம் கொடுக்கும் நினைவுகள், புத்தியைப் பிழியும் சூழல்கள், மனிதர்களோடான சந்தோசங்கள், கோபங்கள், துக்கங்கள், சிரிப்புகள், அழுகைகள், எரிச்சல்கள், எதிர்பார்ப்புகள், அலைக்கழிப்புகள், ஆர்வங்கள், பரபரப்புகள், குற்ற உணர்ச்சிகள், தற்பெருமைகள், தாழ்வு மனப்பான்மைகள், சாந்தங்கள், அமைதிகள், கனத்த மனோநிலைகள், ப்ரியங்கள், நட்புகள், காதல்கள்....

விரிந்து கொண்டே இருக்கும் ஒவ்வொரு நாளும் உப்பு மூட்டை சுமப்பது போல சுமந்து செல்கிறது. சுமையாய் நம்மைத் தூக்கிச் செல்கிறதே இந்த வாழ்க்கை என்று கருணை பொங்கும் போதே... நடு முதுகெலும்பு முறியும் படி படாரென்று கீழே " பொத் " என்று சுடும் வெயிலில் போட்டு விட்டு கை கொட்டி அதுவே சிரிக்கவும் செய்கிறது.

வெறும் காலோடு சூட்டில் ஓடி வருபவனை ஒற்றை மரத்தின் நிழல் எப்படி வாரியணைத்து நிழலுக்குள் தஞ்சம் கொடுத்து குளுமையான காற்றைக் கொடுக்கிறதோ அப்படியான அதிர்வுகள் மிகுந்த சில மணி நேரங்களை விரித்துப் போடும் இந்த இரவை எப்படிக் காதலிப்பது என்று சொல்லத் தெரியாமல் வார்த்தைளைத் தட்டச்சு செய்து நான் விளையாடிக் கொண்டிருக்கிறேன்.

வாழ்க்கை அழகானது. சிலருக்கு அதிசயமானது, சிலருக்கு மிகக் கொடுமையானது, இன்னும் பலருக்கோ பிடிபடாதது என்று விவரித்துக் கொண்டே வார்த்தைகளினூடே நான் வழுக்கிக் கொண்டு செல்ல முடியும்...ஆனால் என்னைப் பொறுத்தவரை ரொம்பவே சவாலானது. "ப்ப்ப்ளார்" என்று முதுகில் அறைந்து விட்டு ஓடி விடுகிறது, துரத்திப் பிடித்து நான் தோற்பேன் என்னும் இடத்தில் ஜெயித்து மறுபடி....வாழ்க்கைக்கு " ப்ப்ப்ப்ளார் " என்று ஒன்று கொடுத்து விட்டு நகர்கையில்...

கண நேரத்தில் கண் இமைக்கும் முன்பு கழுத்திற்கு ஒரு மயிர் இடைவெளியில் பளீச் என்று ஒரு வாள் வீசிப் பார்க்கிறது.... சரலேன்று விலகி வாள் வீசிய வாழ்க்கையின் பிடறி பிடித்து உலுக்கி முதுகில் குத்தி விரட்ட வேண்டியதாகிறது. இப்படியான சவால்களை கடந்து கடந்து களைப்பாறும் நேரங்களின் அழகும் நேர்த்தியும், ஓய்வும் இன்னும் வலுவாக ஓடச் சொல்லி வற்புறுத்திகிறது.

எல்லா இடர்பாடுகளையும் இரசித்து, இரசித்து, முன்னேறி, முன்னேறி இந்த விளையாட்டு கொடுக்கும் சுகம் அலாதியானது மட்டுமல்ல அசதியானதும் கூட.

 அசதிக்கும், மூளைச்சூட்டிற்கும் பிறகு, மெல்ல நிதானப்படுத்திக் கொண்டு ஒரு கட்டுரையிலோ, கவிதையிலோ, கதையிலோ மூழ்கும் நிமிடங்கள், அல்லது ஏதேனும் ஒரு பாடலை காதுகளால் சுகித்து சுகித்து அந்த இசை என்னும் போதையில் ஊறித் திளைத்து களைப்பினை எல்லாம் நீக்கி உற்சாகத்தில் ஒரு மாதிரியான தொய்வான நிலையில் நிறைய சக்திகளை பெற்றுக் கொண்டிருக்கையில் அது அடுத்த நாளை எதிர்கொள்ள எடுத்துக் கொள்ளும் பயிற்சி அல்லது உடலுக்குள் சக்தி நிறைத்தல் என்று எண்ணும் போது....சந்தோசம் இன்னும் இருமடங்காகிறது.

இப்படித்தான், ஏதேதோ பாடல்களை கண்களால் அளந்து கொண்டு நகர்ந்த பொழுது இந்த பாடலுக்குள் உள் நுழைந்து மயக்கும் குரல் மெல்ல என் செவிகளை வருடிக் கொடுத்து, புத்திக்குள் ராஜா சாரின் இசையை வழியவிட்டு, பாடல் முடிய, முடிய மீண்டும் மீண்டும் கேட்டு, கேட்டு உடல் முழுதும் இசை போதை பரவ...பாடலை விட்டு வெளியே வரமுடியாமல் சிக்கிக் கொண்டு தவிக்கிறேன்....

ஒரு காதல் அதை கடந்து விசுவரூபமெடுத்து நிற்கும் காமம், வேகம், மோகம், என்று எல்லாம் கலந்த ஒரு முரட்டு உணர்வை இசைக்குள் கொண்டு வரவேண்டும். காதலை சரியாய் வெளிப்படுத்த வார்த்தைகளின் அர்த்தங்களைக் கடந்த மிருதுவான குரலும், காமத்தை பிரமாண்டப்படுத்திக் காட்ட இசை அரசனின் இசைக்கச்சேரியும் என்று......

இந்தப் பாடல் முழுதும் மதமதப்பாய் காமமும், மலர்ச்சியாய் காதலும், ஒன்று கூடி, நம்மை இழுத்துச் செல்லும் தூரங்கள் வார்த்தைகளுக்குள் கண்டிப்பாய் கொண்டு வரமுடியாதவை.

இப்படி எல்லாம் உணர்வுகளை இசைவாத்தியங்களில் இருந்து இறக்குமதி செய்ய முடியுமா....? என்று ஆச்சரியமாய் கேட்டும் மனதை மண்டியிடத்தான் செய்துவிடுகிறது இசைச்சக்கரவர்த்தியின் இந்தக் இசைக்காவியம்....

அடா....அடா.....அடா....இவ்வளவு தூரம் வந்துட்டு அப்புறம் என்னங்க.......பாட்டுக்குள்ள வாங்க....! தேவா. சு


Friday, February 24, 2012

விடுமுறை நாளொன்றில்.....!காலையில் கண்கள் விழித்த போதே மூளையைப் பற்றிக் கொண்ட ஒரு பரபரப்பை அட.. இன்று ஞாயிற்றுக் கிழமை விடுமுறை என்று உடனே அணைத்துப் போட்டேன். வழக்கமாய் காலையில் அரக்கனைப்போல எழுப்பி விடும் அலாரத்தை சமாதானமாய் பார்த்தேன் மணி 7 ஆக இன்னும் ஐந்து நிமிடம் என்று சாதுவாய் சொன்னது.

படுக்கையில் புரண்டேன்....உடலெல்லாம் கடுமையான ஒரு வலி இருந்தது. மெல்ல கைகால்களை நீட்டி சோம்பல் முறித்து உடலை வளைத்து கோணி ஏதேதோ செய்து கொண்டிருந்தேன் ஆனால் சுத்தமாக படுக்கையில் இருந்து எழ மனதே இல்லை. பெட்சீட்டை எடுத்து காலில் இருந்து இழுத்து தலைவரை முக்காடு போல போர்த்தி காதுகளை இறுக்க அடைத்து ஜனவரி மாதக் குளிர் கண்ணாடி ஜன்னலைத் தாண்டி உள்ளே வந்தாலும் எனக்குள் செல்ல முடியாதவாறு தடையிட்டேன்...

உறக்கம் முழுதாய் வரவில்லை இருந்தாலும் கண்களை மூடிக் கொண்டு அப்படியே வெறுமனே படுத்திருப்பது சுகமாய் இருந்தது. தனியாக இருப்பது ஒரு மாதிரி கஷ்டம்தான் என்றாலும் அது ஒரு மாதிரி வலியோடு கூடிய சுகம்தான். சுகம் என்பதை விளங்கிக் கொள்ள மனம் ஒத்துக் கொள்ளாது. ஏனேன்றால் மனதுக்கு தனியே இருப்பது எப்போதும் பிடிக்காது. அது கூட்டத்திற்கு நடுவே நின்று எப்போதும் கெக்கே பிக்கே என்று வாய் இளித்து கோணி சிரித்து தன்னை எப்போதும் மானுட கூட்டத்தின் மையம் என்று நிறுவவே முயன்று கொண்டிருக்கும். 

மேதாவித் தனத்தைக் காட்ட எப்போதும் தனது புலமையைக் கடை பரப்பும். ஒரு என்சைக்கிளோபீடியாவைப் போன்று விபரங்களை மனிதர்களிடம் வாரி இறைத்து உள்ளுக்குள் நான் இம்புட்டு செய்திகளை தெரிஞ்சவனாக்கும் என்று சந்தோசப்பட்டுக் கொள்ளும். இந்த அற்ப சுகத்தை விளங்கிக் கொண்டு அதில் இருக்கும் மடமை விளங்கி விட்டால் தனிமையின் உன்னதத்தை மனம் விளங்கிக் கொள்ளும்...

மனம் அடங்க அறிவுரைகள் உதவாது. மனம் அடங்க அனுபவித்தலும், உணர்தலும், சலனமில்லாமல் வேடிக்கைப் பார்த்தலுமே உதவுகிறது. நாம் எப்போதும் நம்மை வேடிக்கை பார்ப்பது கிடையாது. எப்போதுமே வேடிக்கை பார்ப்பதை மற்றவர்களிடமே நிகழ்த்துகிறோம். அதனாலேயே நம்மைப் பற்றிய புரிதல் இல்லாமல் போய்விடுகிறது.

விடுமுறை என்றால் நாய் போல சுற்றி இருக்கிறேன். சினிமா, பீச், நண்பர்கள் சந்திப்பு, பார்ட்டி, என்று மூச்சிறைக்க சுற்றி விட்டு இரவு பதினோரு மணிக்கு படுக்கையில் விழும்போது விடுமுறையை ஏதேதோ செயல்களால் அனுபவிக்காமல் விட்டது போலத் தோன்றும். புறம் நோக்கிய பாய்ச்சலில் புலன்களுக்கு நாம் சந்தோசத்தை கொடுக்கிறோம்... ஆனால் எப்போதும் ஆத்ம திருப்திக்காக ஏதாவது செய்திருக்கிறோமா என்று துல்லியமாக யோசித்துப் பார்த்தால்... உதட்டைப் பிதுக்கி நோ.....அப்டினா என்ன பாஸ் என்றுதான் கேட்க தோன்றும்....

ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் தொழில் மேம்பாட்டு அதிகாரியாக இருக்கிறேன். என்ன முழிக்கிறீங்களா...? அதான் பிஸினெஸ் டெவலப்மெண்ட் எக்ஸ்கியூட்டிவ்....! ஊரைச் சுற்றி கொண்டே இருக்கையில் ஓராயிரம் மனிதர்களை நான் சந்திக்க வேண்டிய உத்தியோக அவசியத்தின் பின்னால் கண்ணில் தெரியாத விற்பனை இலக்கு நின்று கொண்டு பயமுறுத்தும். ஒவ்வொரு நிறுவனத்திடமும் முன் அனுமதி வாங்கி அவர்களிடம் சென்று நான் படித்த எம்.பி.ஏ என்னும் பட்டப்படிப்பின் அறிவுச் சாரத்தையும் என் நிறுவனம் கற்றுக் கொடுத்த தொழில் நுட்பங்களையும் பயன்படுத்தி, அவர்களை எங்களது வாடிக்கையாளராக்க வேண்டும்...

வாடிக்கையாளரான பின்னால் எங்கள் நிறுவனத்தோடு அக்ரீமண்ட் அது இது என்று இத்யாதிகளை முடித்து விட்டு கடைசியில் காசோலை வாங்கிக் கொண்டு வந்து நான் பணி செய்யும் நிறுவனத்தில் கொடுக்கும் வரை நமது பொறுப்புதான். வாராவாரம் நடக்கும் தொழில் மேம்பாட்டுக் கூட்டத்தில் மேலாளர் வைக்கும் ரிவிட்... அடுத்த வாரம் நாம் வேலையில் இருப்போமா இல்லையோ என்ற மறைமுக பயத்தை மூளைக்குள் பரவவிட்டு அதை இரத்த அழுத்தமாய் மாற்றி உடம்பு முழுதும் பரவவிடும்.

படுக்கையில் படுத்துக் கொண்டு அலுவலக தினத்தின் அன்றாடப்பகுதிக்கு உங்களையும் சேர்த்துக் கூட்டிச் சென்ற என் மூளையை வன்மையாக கண்டித்து விட்டு விடுமுறைக்குள் நுழைவோம்...

பொதுவான என் ஆர்ப்பாட்டங்களை எல்லாம் குறைத்துக் கொண்டு மனிதத் தொடர்புகளை மெல்ல மெல்ல விடுமுறை தினத்தில் உள்ளிழுத்துக் கொண்டு அன்றைய தினத்தை நிஜமான ஒரு விடுமுறையாய் ஆக்கிக் கொள்வதில் கிடைக்கும் சந்தோசம் இருக்கிறது பாருங்கள்....அது எதோடும் ஒப்பிடமுடியாது....

சிங்கப்பூரில் இருக்கும் அக்காவும் அத்தானும் வருடம் ஒரு முறை வந்து போகும் இந்த போரூர் பிளாட்தான் என்னுடைய ஜாகை.  யாருமே கிடையாது... நானே ராஜா....நானே மந்திரி...நானே எல்லாம்...! கல்யாணம் ஆகுறவரைக்கும் நீ என் ஜாய் பண்ணுடா ராஜான்னு அக்கா அடிக்கடி கொடுக்கும் மிரட்டலின் பின்பக்கம் எப்படி இருக்கும் என்பதை திருமணம் ஆனவுடன் பார்த்துக் கொள்ளலாம் என்று அது பற்றி அதிகம் யோசிப்பது கிடையாது.

பத்து மணிக்கு படுக்கையை விட்டு எழுந்து பிரஷ் செய்து விட்டு முகம் கழுவி, பால்கனிக்கு வந்து நின்றேன்... ஞாயிற்றுக் கிழமையை பக்கத்து வீட்டுப் பிள்ளைகள் எல்லாம் விளையாட்டாய் கழித்து கொண்டிருக்கையில், அவ்வப்போது பார்த்துக் கொள்ளும் அந்த அப்பார்ட்மென்டின் அங்கிள்ஸ் எல்லாம் கீழே மரத்தடியில் நின்று இந்திய அரசியலை ஒரு காட்டு காட்டிக் கொண்டிருந்தனர்.

ஞாயிற்றுக் கிழமை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தயவு தாட்சணியமின்றி எல்லா வீட்டு தொலைக்காட்சிகளும் காற்றில் பரவவிட கூடவே விடுமுறை தினத்தின் ஸ்பெசல் சமையலும் ஒவ்வொரு வீட்டிலிருந்தும் வெளியேறி மூக்கைத் துளைத்துக் கொண்டிருந்தது

கீழ் வீட்டு மாமி.....குப்பையைக் கொட்ட வெளியே வந்தவள்....ஏண்டா அம்பி காத்தால எழுந்து இன்னும் குளிக்கவே இல்லையாடா நீ....லீவு நாளுதானே.. தனியாத்தானே இருக்கே ....காத்தால எழுந்து மாமா கூட கோயிலுக்கு போயிட்டு வந்தா என்ன? என்று உரிமையோடு  கேட்டு விட்டு அந்த ஐம்பது வயதிலும் தனது சுறுசுறுப்பை எனக்கு விளம்பரப்படுத்தாமல் படுத்தி விட்டு உள்ளே சென்று விட்டாள்....

வாரம் முழுதும் நாயாய் எல்லோரும் உழைக்கிறார்கள். வாரக் கடைசியில் அதை கழிப்பதற்கு பிசாசாய் திட்டமிடுகிறார்கள். அலுத்து சலித்து விட்டு இரவு நடு ஜாமத்தில் கதவு திறந்து அடுத்த தினத்தை நொந்து கொண்டு மரக்கட்டையாக படுக்கையில் சரிகிறார்கள்.

வெளியே செல்லாமல் இருக்க முடியாது என்பதை ஒத்துக் கொள்கிறேன். அதற்காக மாதம் முழுவதுமா...? இன்னும் சொல்லப்போனால் வீட்டு அத்தியாவசிய வேலைகளை முடிக்க கூட ஒரு வாரம் விட்டு ஒரு வாரம் அந்த வேலைகளைச் செய்யலாம். தவிர்க்க முடியாத குடும்பத்தேவைகளுக்கு நாம் நேரம் செலவிடத்தான் வேண்டும்....

அது இல்லாமல் வெறுமனே வீக் எண்ட் பிளான் போடுகிறவர்களைப் பார்த்து நான் ஆச்சர்யப்பட்டுதான் இருக்கிறேன்.

விடுமுறை என்பது வழக்கமான பரபரப்புகளை மூளைக்கு கொடுக்காமல் நாம் எடுக்கும் ஓய்வு. அந்த ஓய்வு என்பது ஒரு பேட்டரி ரீசார்ஜ் போலத்தான் இருக்க வேண்டும் என்பது எனது பார்வை. தவறாகக் கூட இருக்கலாம்....

பதினோரு மணிக்கு கொஞ்சம் பசி எடுத்தது...கொஞ்சம் தண்ணீர் குடித்து விட்டு, குளிக்கப் பிடிக்காமல் ஹாலில் இருந்த சோபாவில் வந்து அமர்ந்தேன். டிவியைப் போடு என்று சொன்ன மனதை அடக்க முடியாமல் எல்லா சேனலையும் ஒரு முறை சுற்றி விட்டு என்னுடைய அலை பேசியை எடுத்துப் பார்த்தேன்...15 மிஸ்ட் கால்ஸ்.....

எல்லா அழைப்பும் ஒவ்வொரு முறை அழைக்கப்பட்டது. அவசரமாய் பேசவேண்டியவர்கள் இல்லை. அவசரமாய் இருந்தால் என் விடுமுறை தினத்தில் எனக்கு என் நண்பர்கள் தொலை பேசியில் அழைத்து தொல்லை கொடுக்க மாட்டார்கள். இரண்டு வரியில் ஒரு குறுஞ்செய்தி அனுப்பி விசயத்தை தெரிவித்தால் நான் திரும்ப கூப்பிடுவேன்....அதுவும் விசயத்தின் முக்கியத்துவத்தை பொறுத்து....

இல்லையேல்.....விடுமுறையில் தொலைபேசியோடு பந்தமில்லாமல்தான் இருப்பேன். ஆமாம் வாரம் முழுதும் அதோடு கட்டிக் கொண்டுதானே அழுகிறோம்.

வாழ்க்கையின் நிலைப்பாடுகளை சூழலைப் பொறுத்துதான் நாம் எடுக்கிறோம். ஆனால் எந்த நிலைப்பாடாய் இருந்தாலும் சரி அது நமக்கு ஆத்ம திருப்தியைக் கொடுக்க வேண்டும். மாறாக அயற்சியைக் கொடுக்கிறது என்றால் அந்த உறவுகளும், சூழலும் கண்டிப்பாய் பரீசிலிக்கப்பட வேண்டியவையே....

வீட்டினை சுத்தம் செய்து விட்டு துவைத்துப் போட்டிருந்த துணிகளை எல்லாம் மடித்து வைத்தேன். கையில் எனக்குப் பிடித்த ஒரு புத்தகத்தை எடுத்து வைத்து மேய்ந்து கொண்டிருக்கையிலேயே  உறக்கம் மெல்ல மீண்டும் கண்களை இறுக்க.... வயிறு இதுக்கு மேல் பொறுக்க முடியாது என்று சமையலறைக்கு விரட்டியது. இரண்டு நிமிடத்தில் செய்யும் நூடுல்சை ஒரே நிமிடத்தில் செய்து துணைக்கு கொஞ்சம் ஊறுகாய், ஒரு ஆம்லெட் என்று ஒரு பதினைந்து இருபது நிமிடத்தில் பசியடங்கிப் போனது. 

அவ்வளவுதான்...! 

பசி என்பது உடலின் தேவை. உடலின் சக்தி பரிமாற்றத்துக்கு நாம் எடுத்துக் கொள்ளும் ஊட்டம். அதை சரியான விகிதத்தில் எடுத்துக் கொண்டால் போதும் இதற்காக மெனக்கெட்டு தேடி தேடிப் போய்  அங்கே அங்கே சாப்பிட்டு அங்காலாய்த்து நாக்கை வளர்த்துக் கொள்வது கிடையாது. தேவைக்கு உண்பவன் என்ற அளவிலேயே ருசியை நான் பார்க்கிறேன். நன்றாக இருக்கிறது என்று விரும்பி விரும்பி சாப்பிடுபவர்களின் வயிறு நிறைந்த உடன்... அந்த உணவு தேவாமிர்தமாய் இருந்தாலும்....வேண்டாம் என்றுதான் சொல்லியாக வேண்டும்....

ஒரு குட்டித் தூக்கத்தோடு மதியத்தைக் கடந்து 4 மணிக்கு சில்லென்று தலைக்கு தண்ணீரை வாங்கிக் கொண்டு குளித்து முடித்தேன். மதிய உறக்கத்திற்கு பிறகான மாலைக் குளியல் நிஜமாகவே சுவர்க்கம்தான். உடம்பு முழுதும் ஒரு வித மதமதப்பு இருக்கும். சில்லென்று தண்ணீர் பட்டவுடன் பட்டென்று புத்தி விழித்துக் கொள்ள உடம்பு முழுதும் ஒரு உற்சாகம் பரவ ஒரு வித சோம்பல் கலந்த புத்துணர்ச்சியில் ஒருவிதமான சுகம் கிடைக்கும் ......அனுபவித்துப் பாருங்கள்..!

5 மணிக்கு வேஷ்டியை உடுத்திக் கொண்டு செருப்பிட்டு வீட்டுக் கதவை அடைக்கப் போகையில் பக்கத்து வீட்டு லாரன்ஸ் மாமா... வேகமாய் ஓடி வந்து அவர் வீட்டுக் கதவை திறந்து கொண்டிருந்தார். மறுபடி போணும் சதீஷ்.... காலைல வெளில போனோம்....ஈவினிங் ஷோ படம் பார்க்க ரிசர்வ் பண்ணின டிக்கெட் எடுக்காம போய்ட்டேன்....அதான்....கதவை மோதிக் கொண்டு உள்ளே ஓடினார்....

படியிறங்கி கீழே வந்தேன்....! பகுருதீன் அண்ணன் கடை வாசலுக்குப் போன உடனேயே வாங்க சாமியார் சார்....பட்டினியா கிடந்து யாருக்கு காசு சேக்குறீங்க என்ற நக்கலோடு சூடாய் டீயை என்னிடம் நீட்டினார். சிரித்தபடி டீ கிளாசுக்கு உதடு கொடுத்து மெல்ல உறிஞ்சினேன்.... ஜனவரி மாத மாலை நேரத்து ஞாயிற்றுக் கிழமை சென்னை குளுமையாய் ஓய்வாய் கிடந்தது...., பரபரப்பில்லாமல் கேசம் கலைத்த காற்று உடலுக்குள் புகுந்து சில்மிஷங்கள் செய்து விட்டு என்னையே சுற்றிச் சிரித்துக் கொண்டிருந்தது.......

தொண்டையை இனிப்பும் ஒரு துவர்ப்பும் கலந்த டீ சுகமாய் கடந்து செல்ல உடம்பெல்லாம் ஒரு வித சூடு பரவியது. கடைசி உறிஞ்சலில் காலியான கோப்பையை பகுருதீன் அண்ணனிடம் சில்லறையோடு கொடுத்து விட்டு....பேருந்து பிடித்து ஒரு 30 நிமிடத்தில் கோவூர் வந்து விட்டேன். கோவூர் சுந்தரேஸ்வரர் கோயில் ஏழாம் நூற்றாண்டில் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்டது. சுந்தரேஷ்வரர் அல்லது திருமாணீஸ்வரர் என்று சிவனை இங்கே அழைக்கிறார்கள்.

வார இறுதியாதலால் கூட்டம் கொஞ்சம் மத்திமமாய் இருந்தது. மூலவரை சம்பிரதாயமாக சந்தித்து விட்டு... சுற்று ஓரமாய் இருந்த மண்டபத்தில் போய் அமர்ந்தேன். குண்டு பல்பின் மங்கிய மஞ்சள் ஒளி ஏதோ மனசை செய்ய.....

சம்மணமிட்டேன்....! மெல்ல கண்களை மூடி....கோயிலின் அதிர்வுகளை உள்வாங்கிக் கொண்டு , மெல்ல நகர்கையில், இரைச்சலான வாரநாட்களும் டை கட்டிக் கொண்டு ஒரு ஆக்ரோஷ விலங்காய், சென்னை நகரின் பரபரப்பான வாகன நெரிசலுக்குள் பைக்கை நுழைத்து வளைத்து, கோணி மாணி நகர்ந்து, பேசி சிரித்து, பொய் சொல்லி, மெய் சொல்லி, சத்தியம் செய்து, கூவி கூவி என்னை முன்னிலைப்படுத்தி, யார் யாருக்கோ முகஸ்துதி பாடி.....திட்டு வாங்கி, பாராட்டுக்கள் வாங்கி, பெண்களிடம் குழைந்து, ஆண்களிடம் பெருமை பேசி......

கச கசவென்று என்ன ஒரு வாழ்க்கை..?  தினசரி இப்படி நகர்வது எல்லோருக்குமே வாடிக்கையாகிப் போய்விட்டது.....இது வாழ்க்கை இது இப்படித்தான் ஆனால் இந்த சுழற்சி ஏன்? எங்கே செல்கிறது....? எப்படி விடுபடுவது...? ஏன் இது எனக்குப் பிடிக்கவில்லை....?

கேள்விகளைக் கடந்த போது.....ஒரு பெரிய வெட்டவெளிக்குள் வந்து விழுந்தேன். அங்கே மெளனமே பதிலாய் ஒன்றுமில்லை என்றது. ஆழமாய் மூச்சினை இழுத்து சுவாசித்தேன்....உள்ளே இழு...த்....து........வெளியே மெதுவாய் வி....ட்...டு.... மாறி மாறி மூச்சு உள்ளே போய், போய் வெளியே வர....

முதுகெலும்பு நேராக உடல் நேரானது. முதுகெலும்பின் நுனியில் மெல்ல ஒரு வலி பளீர் என்று பரவ.....உடலின் இருப்பு மட்டும் உணர்ந்து....சூழல் உணர்ந்து, சுற்றி இருக்கும் சப்தங்கள் உணர்ந்து....நான் இருந்தேன். உருவம் இல்லாமல் மிக அழகாய் என்னை நான் உணர்ந்தேன் அந்த உணர்தலில் பெறும் வெறுமையாய் நான் படர்ந்தேன். சுகமாய்....ஒரு பஞ்சு காற்றில் பறப்பது போல...காற்றில் நீந்திக் கொண்டிருந்தேன். ஒரு கட்டத்தில் பஞ்சும் மறைந்து போக வெறுமனே நீந்துதல் மட்டும் நிகழ.....
....
....
....
....

மெல்ல கண் விழித்து....உறுதியான அமைதியை உணர்ந்தபடி மெல்ல எழுந்து நடந்தேன். உடலுக்குள் சக்தி ஏறிப்போயிருக்க அப்படி சக்தியும் தன்னம்பிக்கையும் ஏற கோயிலைப்படர்ந்திருந்த ஏதோ ஒரு சக்தி உதவியிருப்பதை உணர முடிந்தது. 

இரவு உணவை முடித்த திருப்தியில் மெல்ல படுக்கையில் விழுந்து....காலை 5மணிக்கு அலாரத்தை வைத்தபடி....மெளனமான நிறைவோடு நான் உறங்கியே போனேன்...!


தேவா. சு
Monday, February 20, 2012

அரசியல் என்னும் ஆயுதம்....! ஒரு கனவுப் பார்வை..!
வித்துக்கள் எல்லாம் வெற்று வித்துக்களாய் எந்த வித திட்டமிடலும் இன்றி இந்த தேசத்தில் விதைக்கப்படுவதாலேயே...வாழ்வியல் தேவைகளை அவை எதிர் கொள்ளும் போது அதை நேருக்கு நேராய் சந்திக்கும் திராணிகளற்று மடங்கி மட்கிப் போகின்றன.

கல்வி என்னும் கட்டாய வழிமுறையை மானுடரின் வாழ்க்கையில் உண்டாக்கி வைத்திருப்பதின் நோக்கம் இன்று சிதைந்து போய் கிடக்கிறது. கல்வியின் நோக்கம் மருவிப் போய் இன்று பொருள் ஈட்டும் ஒற்றை நோக்கை மட்டுமே எமது பிள்ளைகளிடம் புத்திகளில் புகுத்திக் கொண்டிருக்கிறது. 

பொருள் ஈட்டும் தொழில்நுட்ப, அறிவியல், பொருளாதார, நிர்வாக தொடர்பான பாடங்களை பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பயிலும் எமது பிள்ளைகள், கல்லூரியை விட்டு வெளியே வரும் பொழுது ஒவ்வொரு துறையிலும் மிகப்பெரிய விற்பன்னராய்த்தான் வருகின்றனர்....தொழில்நுட்பத்திலும் விஞ்ஞானத்திலும் தேர்ந்தவர்களாக, கணிணி அறிவுடன், அறிவியல் பார்வைகளுடன் நுனி நாக்கு ஆங்கிலத்துடன்....எல்லாவகையிலும் பொருளாதார பலத்தை கூட்டவே தங்களது நகர்வுகளை அமைத்தும் கொள்கிறார்கள்....

ஆனால்....

அரசியல் கல்வி என்னும் மிகப்பெரிய விடயத்தை எம் பிள்ளைகள் தமது வாழ்க்கையின் எந்த நிலையிலும் முறைப்படி அறிய முடிவதில்லை.  பட்டப் பிரிவில் அரசியல் விஞ்ஞானம் என்ற பாடம் இருந்தாலும் அதை மிகைப்பட்டவர்கள் எடுத்து படிப்பது கிடையாது என்பதோடு அங்கே கற்றுக் கொடுக்கப்படும் அரசியல் கல்வி முழுமையான தேசத்தின் போக்கை ஒரு மாணவன் உணர எந்த வகையிலும் உதவுவதும் கிடையாது.

இந்தியா என்னும் மிகப்பெரிய ஜனநாயக நாடு பல்வேறு வகையான அரசியல் கட்டுக்கள் கொண்டது. அரசியல் இல்லாமல் யாதொரு சிறு துரும்பும் நம்மைச் சுற்றி நகர்வதில்லை என்று இருக்கும் போது அரசியல் என்னும் கூற்றினை உணரவும் அறியவும் எம்பிள்ளைகள் சார்ந்திருக்க வேண்டியது ஏற்கெனவே இங்கே அரசியல் என்று பெயர் சூட்டி மானுடர்கள் அரங்கேற்றிக் கொண்டிருக்கும் கூத்துக்களைத்தான்..!

அரசியல் பாடம் என்பது ஒவ்வொரு மாணவனுக்கும் கட்டாயப் பாடமாய் ஆக்கப்படுவதோடு ஒவ்வொருவரும் தனது மாணவப் பருவத்திலிருந்தே தானும் தன்னைச் சுற்றி இயங்கும் அரசோடு எல்லாவிதத்திலும் தொடர்புடையவர்களே என்ற எண்ணத்தை இந்தக் கல்வி திண்ணமாய் மாணக்கர்களின் மனதில் விதைக்க வேண்டும்.

புள்ளி விபரங்களையும், வரலாற்று அரசியல் நிகழ்வுகளையும் அரசியல் செய்வதற்காகவே இன்றைய அரசியல்வாதிகள் தெரிந்து வைத்திருக்கின்றனர். இது அவர்கள் சார்ந்திருக்கும் துறை ஆதலால் அவர்கள் தங்களைக் காத்துக் கொள்ளவும், தங்களை நியாயப்படுத்தவும் எல்லாவிதமான நுணுக்கங்களையும் சுற்றிச் சுழன்று தங்களின் விரல் நுனியில் தேக்கிக் வைத்துக் கொள்கின்றனர், ஆனால் சாதாரண மக்கள் இந்த அரசின் அசைக்க முடியாத ஒரு அங்கமாயிருந்தும் தனக்கும் அரசுக்கும் இருக்கும் தொடர்பினை தனது விரல் நுனியில் ஒரு கருப்பு மையை வைத்துவிட்டு தேர்தலில் வாக்கு  செலுத்துவதோடு முடித்துக் கொள்கிறார்கள்.

சாதாரண எல்லா மக்களும் தன்னை ஆண்ட, ஆள்கின்ற, ஆளப்போகின்ற கட்சிகளின் செயல்பாடுகளையும் செயல் திட்டங்களையும் சுய ஆர்வமாகவே தனது வாழ்க்கையின் பகுதியாய் தெரிந்து வைத்திருக்க வேண்டும். ஐந்தாண்டுகள் தன்னை ஆளும் அரசு என்ன மாதிரியான நிர்வாகத் திட்டங்கள் செய்கிறது? வரவு செலவு அறிக்கை தாக்கல் செய்யும் போது வரவு எவ்வளவு? செலவு எவ்வளவு? எங்கே இருந்து நமக்கு இலவசங்கள் வருகின்றன? எங்கே வரிச்சுமைகள் நமக்கு கூட்டப்படுகின்றன? ஏன் கூட்டப்படுகின்றன..? என்ன மாதிரியான தொலை நோக்குப் பார்வைகளை இந்த அரசு கொண்டிருக்கிறது...

என்றெல்லாம் ஆராய்வது சர்வ சாதாரணமாய் எம் மக்களிடம் நிகழவேண்டும். எந்த துறையைச் சார்ந்தவராய் இருந்தாலும் தெரு முனைகளிலும், குழாயடிகளிலும், வீட்டு வாசலில் கதையடிக்கும் போதும், சமூக தளங்களில் அரட்டை அடிக்கும் போதும் , தொலை பேசியில் நண்பர்களிடமும், உறவுகளிடமும் உரையாடும் போதும் தன்னிச்சையாய் இது அரசியல் என்பதை தமது சுவாசமாக கொண்டிருக்க வேண்டும்.

இது எல்லாம் இப்போது நிகழ்கிறதா? கிடையவே கிடையாது. 

அரசியல் என்பது அரசியல்வாதிகளுக்கு மட்டும் சொந்தமானது என்றெண்ணிக் கொண்டு மக்கள் அவர்களைப் பற்றிய புரணிகளைப் பேசிக் கொண்டு அப்படி பேசுபவர்களின் வாய்களைப் பார்த்து ரசித்து விட்டு இன்னும் பத்து பேரிடம் பொழுது போக அரட்டை அடித்து விட்டு பின் குப்புறப் படுத்து குறட்டை விட்டு உறங்குவதும்தானே நடந்தேறிக் கொண்டிருக்கிறது.

இவையெல்லாம் கண்டிப்பாய் மாற வேண்டாமா?

என்னுடைய துறை இது இல்லை என்று ஒரு மருத்துவரும், ஒரு பொறியாளரும், ஒரு கணிணித்துறையில் இருப்பவரும், மளிகைக்கடை வைத்திருப்பவரும், காய்கறி விற்பவரும் ஒதுங்கிச் செல்வதால்தானே...

எந்த அரசு என்ன செய்தது? எந்த அரசியல்வாதி என்ன செய்தார் என்பதை தெளிவாக நாம் உணர முடியாமல் மீண்டும் மீண்டும் தவறு செய்தவர்களையே அரியணை ஏற்றிக் கொண்டிருக்கிறோம்? அரசியல் என்பதை நாம் நமது வாழ்வியலாகப் பார்க்காமல் அதை பொழுது போக்கும் இடமாக வேடிக்கைப் பார்க்கும் ஒரு கேளிக்கையான நிகழ்வாகத்தான் பார்க்கின்றோம்....என்பதை நாம் மறுக்க முடியாதுதானே?

கல்வி கற்கும் மாணவர்களுகு அரசியல் விருப்ப பாடமாயிருக்க கூடாது என் அன்பான தோழர்களே...! அரசியல் என்பது மேல்நிலைப் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் கட்டாயப்பாடமாய் இருக்க வேண்டும். இந்திய அரசியலைக் கல்லாமல் ஒரு மாணவனும் கல்லூரியை முடித்து விட்டு வெளியே வரக்கூடாது என்ற நிலை வரவேண்டும். அரசியல் பாடத்திற்கான தேர்வு முறைகள் எப்போதும் இருப்பது போல கேள்விக்கு பதில்கள் எழுதி ஒரு காகிதத்தை கட்டி கொடுத்து விட்டு செல்வது போல இருக்க கூடாது....


தேர்வு முறைகள் குழு விவாதம் மற்றும் கருத்தரங்குகளில் கேள்வி பதில்களை நேரடியாகக் கேட்டுப் பெறுதல், மற்றும் சூழல்களைக் கொடுத்து அதற்கு முடிவெடுக்கச் சொல்லுதல், மொழிவளம், போன்றன சார்ந்தும் இருக்க வேண்டும். அரசியல் கட்டாயப் பாடம் ஆகும் போது அதுவும் அதை பயிற்றுவிக்கும் ஆசிரியர்களாக தேர்ந்த பல தரப்பட்ட அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பொறுப்பில் இருப்பவர்களைக் கொண்டு செய்யும் போது மாணவப் பருவத்திலேயே ஒவ்வொருவரிடமும் அரசியல் அறிவு வேரூன்றத்தானே தொடங்கும்.

கட்சிகளைச் சார்ந்திருக்கவும், அதிகாரத்தில் பங்கெடுத்துக் கொள்ளவும், பதவிகளைப் பயன்படுத்தி வாய்ப்புக்களைப் பெற்றுக் கொள்ளவுமே மிகையாக சமகாலத்தில் அரசியல் என்னும் விடயம் பயன்படுகிறது அல்லது அப்படியாய் ஆக்கிவிட்டார்கள். 

இது ஒரு போலியான ஜனநாயகம் அல்லவா?

ஒரு தேசத்தின் மக்கள் அரசியல் சார்ந்து வாழும் வாழ்க்கையில் அரசியல் தெளிவு பெற்றவர்களாக இருக்க வேண்டும். கட்சிகளை நடத்தும் மனிதர்கள் மட்டுமே அரசியல் அறிவு பெற்றவர் என்ற நிலை மாறி இந்த தேசத்தில் எல்லா நிலையிலும் இருப்பவர்களுக்கும் அரசியல் அறிவு கட்டாய அறிவாய் புகுத்தப்படவும் வழிமுறைகளை நாம் கொண்டு வரவேண்டும். 

என் பிரியமான தோழர்களே....அரசியலை விட்டு விலகிச் செல்லாதீர்கள்...! அரசியல் என்பது நம்மோடு பின்னிப் பிணைந்தது. கால் கிலோ கத்திரிக்காய் வாங்குவதற்கு முன் ஆயிரத்தெட்டு சோதனைகள் செய்து விலையை சரிபார்த்து கடைக்காரரிடம் பேரம் பேசி வாங்குகிறோம் ஆனால் ஒவ்வொரு ஐந்தாண்டுகளும் நம்மை ஆட்சி செய்யும் அரசியல்வாதிகளை பற்றி நாம் அதிக அக்கறை கொள்வதும் கிடையாது... அவர்கள் என்ன மாதிரியான அரசியலை முன்னெடுக்கிறார்கள் என்று கவனிப்பதும் கிடையாது.

இந்தியா போன்ற தேசங்களின் ஜனநாயகம் என்பது ஒரு ஐநூறு அறுநூறு அதிகாரமிக்க அரசியல் மற்றும் தொழில் சார்ந்த முதாலாளிகளையும் அவர்களால் கொண்டு வரப்படும் பன்னாட்டு இறக்குமதி பொருள்களையும், அவற்றை நுகரும் எந்த ஒரு அரசியல் விழிப்புணர்வும் இல்லாத மக்களையும் மிகையாக உள்ளடக்கியது என்பதை என்றாவது நாம் உணர்ந்திருக்கிறோமா?

இது மிகப்பெரிய தவறல்லவா....? 

இந்த ஆர்வமின்மையும், அரசியல் என்பது யாருக்கோ சொந்தமானது என்று எண்ணும் போக்கும்....நம்மை அதாலபாதாளத்தில் தள்ளி விட்டு எப்போதும் யாரோ ஏதோ சூழலுக்கு ஏற்றார் போலச் சொல்வதை கேட்டு நகரும் ஒரு மூடத்தனமான நிலைக்கு தள்ளி விட்டு விடும்தானே...?

மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் எல்லா துறையினருக்கும அரசியல் பாடம் கட்டாயமாக்கப்பட வேண்டும் மேலும் பல்வேறு விதமான தொழில் செய்யும் மக்களிடையே அரசியல் விழிப்புணர்ச்சியை சமுதாய நல்நோக்கர்களும் ஆளும் அரசும் ஒரு வேள்வியாய் செய்ய வேண்டும் என்ற கனவை இந்தக் கட்டுரை இணையத்தை சூழ்ந்திருக்கும் எம் உறவுகளின் முன் ஒரு விதையாய் விதைத்து தற்காலிகமாய் தன் வாய்மூடிக் கொள்கிறது.

அரசியல் நமது உயிர் மூச்சு....! அரசியல் அறிவது நமது கடமை...! அரசியலில் ஈடுபடுவது நமது உரிமை....!


தேவா. S

Friday, February 17, 2012

விடியட்டும் ஒரு அரசியல் புரட்சி........!இணையத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் அரசியல் கட்சிகளின் பரப்புரைகளை கவனமாய் உள்வாங்கிக் கொண்டு தெளிவுகளை உணர்ந்து கொண்டு தெளிவின்மைகளை அறுத்தெறிந்து வெளியே வரவேண்டிய மிகப்பெரிய சவால் இன்றைய அதுவும் இணையத்தை வலம் வரும் தமிழ் இளைஞர் கூட்டத்திற்கு இருக்கிறது என்ற ஒரு வேண்டுகோளினை சிவப்புக் கோடிட்டுக் காட்டி விட்டு கட்டுரையைத் தொடர்கிறேன்....!

சம காலத்தில் அரசியலை காழ்ப்புணர்ச்சிகளின் களமாய் ஆக்கி வைத்திருக்கும் இன்றைய மக்கள் தலைவர்களைக் கண்டு என் தேசத்து இளைஞன் அரசியல் என்றாலே சாக்கடை என்றும், அரசியல் களம் என்பது பொய்யும், புரட்டும், தனிமனித தாக்குதல்களும் கொண்ட மரியாதையற்ற ஆதிக்க சக்திகளின் இடம் என்று நினைத்து ஒதுங்கி ஒதுங்கிப் போனதன் விளைவாய் எதைச் சம்பாதித்திருக்கிறோம் தெரியுமா....?

மிரட்டும் தாதாக்களின் அடாவடிகளையும், பொருளைக் கொண்டு மனிதர்களை மிரட்டி அல்லது மூளைச்சலவைகள் செய்து வாக்குகள் பறிக்கும் பெருங்கூட்டத்தையும் நம்மைச் சுற்றி மிகுந்து போக வைத்திருக்கிறோம். உண்மையான தமிழர் நலம் காண இன்று களத்திலிருக்கும் எத்தனை கட்சிகள் முனைகின்றன...? அப்படியாய் முனைகிறோம் அல்லது செய்தோம் என்று சொல்பவர்கள் செதுக்கி வைத்திருக்கும் செம்மைகளின் விளைவுகள் என்ன....?

அரசு +இயல்... என்னும் அரசியல் என்பது மிகப்பெரிய கலை. அது மக்களுக்கான இயல். மக்களுக்கான சேவைகள் செய்யும் மனிதர்கள் தங்களை தங்களின் செயல்பாட்டினை அர்ப்பணிக்கும் ஒரு புனிதமான களம். இங்கே களமாடிக் கொண்டிருக்கும் வசீகர சக்திகள் கட்டியெழுப்பி இருக்கும் அரசியல் என்பது மக்களுக்கானது அல்ல..அது மக்களை நடு நடுங்க வைத்துக் கொண்டிருப்பது....

ஆதி சமுதாயத்தில் மனிதன் விலங்குகளை ஒத்து திரிந்து மெல்ல, மெல்ல பண்பட்டு கல்லின் உபயோகம் அறிந்து, நெருப்பின் பயன் புரிந்து, இரும்பின் வலிமை உணர்ந்து பிறகு தன்னை உணர்ந்து தான் தனித்து இயங்க இயலாது, தான் ஒரு சமூகம், சமூகத்தை சார்ந்த வாழ்க்கையே எமக்குச் சிறந்தது என்று தெளிந்து.....

அப்படியான தெளிதலில் தன் கூட்டத்தில் வலிவாய் இருந்தவன், தம்மையும் தம் சமூகத்தினரையும் காப்பான் என்று அவனை மன்னன் என்றும் அரசனென்றும் வணங்கி எம்மை, எமக்கான வாழ்க்கையை நீ நிர்வாகம் செய்...! உமக்கு எம்மாலான எல்லா ஒத்துழைப்பையும் நல்குவோம் என்று சிரம் பணிந்து தமக்குள் தாமே ஒரு தலைவனை ஏற்றுக் கொண்டு மன்னாராட்சி என்ற மாண்பினை படைத்தனர்...

காலத்தின் போக்கில் கிடைத்த புரிதல்கள், மானுடரின் புத்தியில் இன்னும் தெளிவென்னும் தீபத்தை ஏற்றி வைக்க விடிந்த ஒரு ஓப்பற்ற ஞானம்தான் மக்களாட்சி என்னும் ஜனநாயகம். மக்களால் மக்கள் பிரச்சினைகளை தீர்க்க ஒரு குழுவினை மக்கள் தேர்ந்தெடுத்து.. நீவீர் எம்மை ஆளும்...! இது நமது நாடு, நாங்கள் உமது மக்கள்....எம்மை நிர்வாகம் செய்ய உம்மை தேர்ந்தெடுக்கிறோம் என்ற மக்களாட்சி என்னும் ஒரு ஒப்பற்ற நிலைக்கு நகர்ந்தனர்....!

மக்களைக் காக்க காவல்துறை, நட்டின் எல்லைகளைக் காக்க இராணுவம், இப்படியாக மக்களின் குறைகளைத் தெருவுக்கு தெரு தீர்த்து வைக்க உறுப்பினர்கள் என்று ஆரம்பித்து சட்டமன்றம், பாராளுமன்றம், மந்திரிகள், முதலமைச்சர், பிரதமர் என்று இந்த கட்டமைப்பு விரிந்து பரந்து பிரமாண்டமாகிறது.

ஏன் இந்த பிரமாண்டம்...? யாருக்காக இந்த கட்டமைப்பு....? 

மக்கள் நலனுக்காக....மக்கள் பிரச்சினைகளைத் தீர்க்க....மக்களிடம் அமைதியை நிலை நாட்ட, மக்களின் அடிப்படைத் தேவைகளை தேர்ந்த நிர்வாகத் திறமையால் செம்மையாய் வழி நடத்த.....

இதற்குத் தானே...அரசியல்....? எம் நலம் பேணத்தானே அரசியல் தலைவர்கள்...? எம்மைக் காக்கத்தானே காவல் துறை...? எமக்காகத் தானே இத்தனை துறைகள்...?

ஆனால்...

என்ன நிகழ்ந்தேறிக் கொண்டிருக்கிறது இப்போது...? அரசியல் என்னும் புனித வாளினை கையில் வைத்துக் கொண்டு சாதாரண மக்களை மிரட்டுவதும், ஒரு அரசியல்வாதி என்று தன்னை கற்பிதம் செய்து கொள்பவனை அதிகாரங்கள் குவிந்த ஒருவனாய் பார்த்து மக்கள் கூழைக் கும்பிடுகள் போடுவதும்...? மனுக்கள் கொடுத்து ஐயா.. தர்ம ராசா... எங்களுக்கு வழிகாட்டு என்று கெஞ்சுவதும்.....வெள்ளை வேட்டி சட்டைகள் கட்டிக் கொண்டு தேவ தூதர்களாய், வேற்று கிரக வாசிகளைப் போல நடந்து கொண்டு சாதாரண மக்களை கேவலமாக அரசியல்வாதிகள் பார்ப்பதும் என்று...

சீர்கெட்டுப் போய் அரசியல் என்பதற்கு ஒரு தெளிவில்லாத முரட்டு உதாரணத்தை சமகால அரசியல் வல்லாதிக்க சக்திகள் நிர்ணயம் செய்து கொண்டிருப்பது சரியான ஒரு நகர்வா...சொல்லுங்கள் என் தேசத்து இளைஞர்களே..?

மன்னராட்சி நடந்த கலத்திலேயே.... மக்களை மாண்போடு நடத்தி ஜனநாயகத்தை வேரூன்றச் செய்து, பெண்களை எல்லாம் அதிகாரிச்சிகளாக்கிப் பார்த்து அதிகாரங்களைக் கொடுத்து, மக்கள் கருத்தினை கேட்டு, மக்களுக்கான அரசு என்பதை மனதிலாக்கி, நல்லாட்சி கொடுத்த தமிழனின் பாரம்பரியத்தையும், அவனின் வீரத்தையும், மாண்பினையும் ஒழுக்கத்தையும் இந்த நவீன காலத்தில் ஜனநாயகம் என்னும் நாகரீக அரசியலைக் கைக்கொண்டிருக்கும் அரசியல் தலைவர்கள் செய்கிறார்களா?

பேருந்திலேயே பயணித்துப் பார்த்திராத, சாலைகளில் மக்களோடு நடந்து பழகிடாத, இரு சக்கர வாகனங்களை நெரிசலில் ஓட்டியோ அல்லது பயணித்தோ பார்த்திராத....மக்களோடு மக்களாக பழக திராணியற்ற,  அரசியல் கட்சியின் தலைவர்களும், தலைவிகளும் என்ன தீர்வினை நமக்குச் சொல்லி விடப் போகிறார்கள்...என் அன்புத் தோழர்களே..?

சமகாலத்தில் நம்மைக் காக்க அவதாரம் பூண்டிருக்கும் இந்த தலைவர்கள் எல்லாம் யார்? இந்த தலைவர்கள் மற்றும் தலைவிகளின் நதி மூலம் ரிஷி மூலம் என்ன? எந்த எந்த தொழில் செய்து எப்படி இப்படியான ஒரு வசதியான வாழ்க்கையை எட்டிப் பிடித்தார்கள்...? இவர்களின் வருமானத்திற்கு இப்படியான ஒரு மிகப் பெரிய ஆசிர்வாதம் எங்கே இருந்து கிடைத்தது...? 

யாரேனும் சொல்ல முடியுமா?

நம் அப்பாக்களின் காலத்திலிருந்த அரசியல் தலைவர்கள் இப்படி இருந்திருக்கவில்லை என்பதை நாம் அறிந்தவர்களாயிருக்கிறோமா என் தோழர்களே..? காமராசர் என்னும் மிகப்பெரிய மனிதர் தமிழகத்தின் முதல்வராய் இருந்தார்...தன் சொந்த வீட்டுக்கு குடிநீர் குழாயை தன் வயதான தயாருக்கு அதிகாரிகள் முதல்வரின் தாயார் என்ற காரணத்தினால் போட்டுக் கொடுத்ததை கழட்டி திரும்பக் கொடுக்க சொன்னார்....

காரணம்...காமராசரின் தாய்க்கு மட்டுமல்ல அந்த தெருவில் இருக்கும் அத்தனை பேருக்கும் வீட்டுக்குள் தண்ணீர்க் குழாய் வரும் போது தன் வீட்டுக்கும் வரட்டும் என்ற எண்ணம்தானே...? முதல்வரின் தாயார் என்பதால் எந்த ஒரு அதிகார துஷ்பிரயோகம் நடந்து விடக்கூடாது என்ற புனிதமான அரசியல் நல்நோக்குதானே...?

பேரறிஞர் அண்ணா முதல்வராய் இருந்த போது வாழ்ந்த வீட்டிற்கு ஒரு முறை நான் செல்லும் வாய்ப்புக் கிடைத்தது....அங்கே அண்ணாவின் வளர்ப்பு மகனான திரு. பரிமளம் அண்ணாத்துரையை காணும் வாய்ப்பும் கிடைத்தது. சாதாரண ஒரு வாழ்க்கை நிலையில் தன் சொந்த தொழில் மூலம் பொருள் ஈட்டி வாழும் ஒரு காலத்தின் கட்டாயத்தில் அவரை விட்டுச் சென்றிருக்கிறார் அறிஞர் அண்ணா..., காரணம்..அண்ணா அவர்கள் செய்ததும் மாசற்ற தெளிவான அரசியல்...! வாரிசுகளைக் கொண்டு வர அவர் விரும்பவில்லை....வாய்ப்புக்களும், திறமைகளும் இருந்தால் அவர்களே மேலே ஏறி வருவார்கள் என்ற மாபெரும் எண்ணம்....

அறிஞர் அண்ணாவும், ஐயா காமராசரும் போன நூற்றாண்டைச் சேர்ந்தவர்கள் இல்லை என் அன்பானவர்களே..இதோ இப்போது நம் அப்பாக்களின் காலங்களில் நாம் பிறப்பதற்கு முன்னால் வாழ்க்கையை முடித்துக் கொண்டவர்கள்....!

அந்த அரசியலையா இப்போது அவர்களின் பெயர்களைத் தாங்கிப் பிடித்துக் கொண்டு அரசியல் செய்யும் தலைவர்கள் செய்கிறார்கள்...? இல்லைதானே....தோழர்களே...????

தமிழனின் வீரமும், மானமும் தன்மானமும் எத்தகையது என்று நான் சொல்லி என் சமூகம் அறிய வேண்டியது இல்லை...! ஒவ்வொருவரின் உள்ளேயும் தன்மானமும் சுயமரியாதையும் மரபணுக்களாய் விதைக்கப்பட்டுதான் இருக்கிறது. கூடவே இந்த மரபணுவோடு நமது கூடுதலான நன்றியுணர்ச்சியும், சேர்ந்தே விதைக்கப்பட்டு இருப்பதுதான் தற்போதைய நமது பிரச்சினையே....

நமது நன்றியுணர்ச்சியை, தமிழுணர்வை, நமது வீரத்தை, நமது பாரம்பரியத்தை வைத்தே நம்மை ஒரு மகுடிக்கு மயங்கிய பாம்பாய் மயங்கவைத்து, இலவசங்களை வாரியிறைத்து அப்படி வாரிக் கொடுப்பதை என்னமோ அவர்களின் அப்பன் வீட்டு சொத்தில் இருந்து கொடுப்பது போல ஒரு மாயக்கட்டினை காட்டி நம்மை மயங்க வைத்து...இன்று வால் குழைத்து வாழ்க,  ஒழிக கோஷம் போடும் ஒரு நாயாய் நம்மை மாற்றி வைத்திருக்கிறார்கள்....

என் தேசத்து இளைஞனே...நாயல்ல நாம்.....! வேங்கைககளின் கூட்டம்....உலகமெல்லாம் கட்டியாண்ட பாரம்பரியத்தின் வித்து...., உலகமே மொழியற்று காட்டுமிராண்டிகளாய்த் திரிந்த போது கவி செய்த பெருங்கூட்டம்....முத்தமிழை சுவாசித்து....செந்தமிழை புத்தியில் ஏந்திக் கொண்டிருக்கும் 54,000 வருடங்களுக்கும் முந்தைய தொன்மையான தேசிய இனம்......

நீங்களும் நானும்....என்ன வேண்டுமானாலும், படிப்போம்...., நேர்மையான எந்த தொழில் வேண்டுமானாலும் செய்வோம்...ஆனால் அரசியல் என்னும் ஒரு படி நிலையை கண்டிப்பாக விட்டுக் கொடுக்காமல் நமது பங்களிப்பினைக் சரியாய் செய்வோம்..!

அரசியலுக்குள் சரியானவர்கள் இல்லாததால் அது சரி இல்லாதவர்களின் கூடாரமாக...அவர்கள் சொல்வதே வேத வாக்காக நாம் நம்பும் ஒரு மாய கட்டமைப்பாக இருக்கிறது. அரசியல் எனக்குப் பிடிக்காது என்று கூறும் சகோதர்களே......அரசியல் இல்லாமல் நானும் நீங்களும், நம் பிள்ளைகளும் எப்போதும் இருக்கப்போவது இல்லை என்பதை உணருங்கள்...!

அனுபவக் கல்வியையும், ஏட்டுக் கல்வியையும், வாழ்க்கையின் எல்லா படி நிலைகளிலும் கற்றுணர்ந்த ஆன்றோர்களே..., இணையத்தைச் சுற்றி வரும்ச் சிங்க நிகர் இளைஞர் கூட்டமே... தெளிவாக இரு.....! நீ புரிதலோடு இரு....! எந்த மாயக்கட்டிலும் சிக்கி விடாதே.....

சரி தவறுகளை நாம் நேருக்கு நேராய் கண்களை பார்த்துக் கேட்க வேண்டுமெனில்....அரசியல் என்னும் ஆயுதத்தை சரியாக நாம் பயன்படுத்த வேண்டும்...! தேர்தல் என்னும் நெருப்பினை சரியாய் நம் தேசத்து மக்களிடம் பற்ற வைக்க வேண்டும்....! சம கால அரசியல் கட்சிகளை விட்டு வெளியே நின்று கவனிப்போம்...அரசியல் புரட்டுக்களைக் கூறி வசியம் செய்ய வரும் போது கவனமாய் இருப்போம்.

சரியான தலைவனும், மிகச்சரியான அரசியல் கட்சியும்....மக்கள் நலனையே நாடுவார்கள். அப்படியான ஒரு தலைவன் மக்களோடு மக்களாய்த்தான் இருப்பான்.., தமிழகம் நிஜமாகவே மின் பற்றாக்க்குறையால் பாதிக்கப்படுகிறது என்றால் அதைச் சரி செய்யும் வரை...சரசாரி மனிதர்கள் வாழும் தமிழகத்தின் ஏதோ ஒரு பகுதியில் வசித்து அந்த பாதிப்பில் தன்னையும் பங்கெடுத்துக் கொள்ளச் செய்வான்....

ஒரு ரூபாய்க்கு அரிசி கொடுக்கும் ஒரு நல்ல தலைவன்...தன் வீட்டில அந்த அரிசியைத்தான் பொங்கிச் சாப்பிடுவான்.....அவன் எப்போதும் மக்களின் பிரச்சினைகளை அடையாளம் கண்டவனாக... மக்களுக்கான ஒரு தலைவனாய் எப்போது தன் வாழ்க்கையை மக்களுக்கு அர்ப்பணித்திருப்பான்....

தெளிவுகளை கைக் கொள்வோம்...! இணையைத்தை சூழ்ந்திருக்கும் அரசியல் ஆபத்துக்களை தெளிவாக்கும் வண்ணம் இந்தக் கட்டுரை என்னும் சிறு நெருப்பு இங்கே கொளுத்தப்படுகிறது..இங்கே எழுதிப் பயனில்லை என்று கூறும் புரட்டு வாதங்களை தூர குப்பையில் எறிந்து விட்டு.....

இயன்ற வரையில் இந்த விழிப்புணர்வுத் தீயைப் பற்றிப் பரவச் செய்யுங்கள் என்ற வேண்டுகோளோடு கட்டுரையை நிறைவு செய்கிறேன்.....! 

நாமார்க்கும் குடியல்லோம்......நமனை அஞ்சோம்....!


தேவா. S


Wednesday, February 15, 2012

சரணாகதி....!சில நேரங்களில் வாழ்க்கையின் போக்கு நமக்கு பிடிபடுவதில்லை.  திட்டமிட்டு செய்தேன் என்று சொல்வது எல்லாம் வாழ்க்கையின் போக்கோடு பொருந்தி நடக்கும் ஒரு சில செயல்களைத்தான் மற்றபடி ஒரு ஆற்றில் மிதக்கும் மரக்கட்டையைப் போலத்தான் வாழ்க்கையின் நகர்வு இருக்கிறது.

வாழ்க்கையிடம் சரணாகதி அடைந்து விடுதல் தான் மிகப்பெரிய புரிதல். இடமாக திரும்பி நகரவேண்டிய இடத்தில் இடதிலும், வலதாக திரும்ப வேண்டிய இடத்தில் வலதிலும் நகரவேண்டியது இயக்கத்தின் அலைதலைப் பொறுத்ததுதானே அன்றி..நம்மால் ஆனது என்று சொல்லுமிடம் மிகப்பெரிய பைத்தியக்கார மனதின் போலியான வேசம்.

சரணாகதி என்பது என்பதின் தூய தமிழாக நான் நினைப்பது ஒப்புக்கொடுத்தல். இந்த ஒப்புக் கொடுத்தல் என்னுமிடம் வேசம் போடும் இடம் அல்ல, மாய வார்த்தைகளைக் காட்டி வசீகரிக்கும் வித்தையல்ல, காரியம் ஆகவேண்டி காலைப் பிடிக்கும் யுத்தியும் அல்ல....ஒப்புக் கொடுத்தல் என்பது மிகப்பெரிய புரிதல். தான் எதைச் சார்ந்திருக்கிறோமோ அல்லது எவரிடம் நம்மைக் முழுதுமாய் அர்ப்பணிக்கிறோமோ அந்த செயலிலோ அல்லது மனிதரிடமோ நாம் வைக்கும் நம்பிக்கை.

நம்பிக்கை இல்லாமல் சந்தேகத்தோடேயே வாழும் வாழ்க்கை ஒரு சபிக்கப்பட்ட வாழ்க்கை. தன் மீதும் தனது தீர்மானித்தின் மீதும் அவநம்பிக்கை கொண்ட மனிதர்கள்தான் எதிலுமே நம்பிக்கை இல்லாமல் இருப்பார்கள். கணிக்கத் தெரிந்த மனிதன், விசுவாசத்தாலும், புத்தியினாலும் மனிதர்களை எளிதில் கணிக்கிறான். அந்த கணித்தலை புரிதலாக்கி, புரிதலை நம்பிக்கையாக்கி தன்னை ஒப்புக் கொடுக்கிறான் அல்லது சரணாகதி அடைகிறான்.

வாழ்க்கையிடம் சரணாகதி அடைதலும், இறைவன் என்ற ஒரு மறை பொருளிடம் சரணாகதி அடைதலும் ஒன்றுதான். பிறப்பையும், இறப்பையும் உணர்ந்தவன், சக மனிதர்களின், காலத்தின் மற்றும் சூழல்களின் நகர்வுகளை உணர்ந்தவன், வாழ்க்கையின் அடர்த்தி என்னவென்று பிடிபட்டுப் போய் வாழ்க்கையிடம் தன்னை சரணாகதி கொடுக்கிறான். என் செயல்களைச் செம்மையாய்ச் செய்வேன். வாழ்க்கை என்ன வேண்டுமானலும் கொடுக்கலாம்...எனது விருப்பு வெறுப்புக்கள் இன்றி அவற்றை ஏற்று நகர்வதே எனது புரிதல் என்ற நகர்வுதான் வாழ்க்கையிடம் தன்னை ஒப்புக் கொடுத்தல் ஆகிறது...

தன்னை தானே மனிதர்கள் பெரும்பாலும் புரிந்து கொள்வது இல்லை. தனது தகுதிகளாக ஏதேதோ குப்பைகளை கட்டி தலையில் வைத்துக் கொண்டு ஏலம் போடும் மடத்தனத்தையே மிகைப்பட்ட பேர்கள் செய்வதால் அவர்களால் வாழ்க்கையைப் புரிந்து கொள்ளுதல் என்பது கடைசி வரை இயலாமலேயே போகிறது.

வாழ்க்கையைப் புரியவில்லையா... சரி, இதோ இங்கே வா... இதோ பார் இவர்தான் உன் கடவுள் இவரைப் பற்றிக் கொள். இவரிடம் உன் குறைகளைக் கூறு, இவர் சரி செய்வார் என்று ஒரு மாற்று வழியை மன திடம் இல்லாதவர்களுக்கும், வாழ்க்கையைப் புரியாதவர்களுக்கும் சில நல்லவர்கள் உண்டு பண்ணிச் சென்றிருக்கின்றனர். இதைச் சரியாக புரிந்து கொண்டு தன்னை இறைவனிடம் சரணாகதி கொடுத்து திருப்தியின் எல்லையை தொட்டவர்களும் இருக்கின்றனர்....

இந்த வழி முறையிலும் சறுக்கி விழுந்து விலங்குளைப் போல அடித்துக் கொண்டு கடைசிவரை ஒரு மிருகத்தைப் போல வாழ்ந்து மரித்தவரும் இருக்கின்றர்.

இந்த இரண்டு வழிமுறைகளையும் கடந்த ஒரு மிக உன்னதமான வழிமுறைதான் மனமற்ற நிலையில், இப்பிரபஞ்சத்தின் எல்லா நகர்வுகளும் தன்னோடு தொடர்புள்ளது என்று புரிந்து தனக்கும் தன்னைச் சுற்றியிருப்பவர்களுக்கும் சரியான பாதையைக் காட்டும் ஒரு குருவிடம் தன்னை ஒப்புக் கொடுத்தல்.

குருநிலை என்பது ஆதியில் இருந்த சூன்யத்திற்கும் முன்பிருந்த ஒரு கருத்து வடிவம். குரு நிலை என்பது மேலே சொன்ன இரண்டு வழி முறைகளையும் விட மிகவும் எளிதானதும், மிகப்பெரிய புரிதலைத் தரக்கூடிய ஒரு உன்னத வழிமுறை. காரணம்....இங்கே உருவமாக குரு இருப்பார் ஆனால் அவர் உருவமற்றதை அடைய அல்லது உணர, அதாவது நமது உண்மை இருப்பை அறிய வழிகாட்டவும் செய்வார்.

இங்கே குருவின் விரலினை சந்தேகத்துடன் பிடிக்கும் ஒருவன் புலியின் வாயில் சிக்கிய இரையாய் குருவாலேயே அழித்தொழிக்கப் படுகிறான். அதாவது மனமற்ற நிலையில் பிரபஞ்சத்தின் இருப்பாய் இருப்பவர்தான் குரு...! இப்படியான குருவை தனது சுயநல பயன்பாட்டுக்குப் ஒரு பொருளாய் பயன்படுத்த நினைக்கும் ஒருவன்..தனக்கு தானே அந்த விளைவினைப் பெற்றுக் கொள்கிறான்.

வானத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டு காறி உமிழும் ஒருவனின் நிலையை, பிரபஞ்ச இருப்பில் இருப்பவர்களை வியாபரத்திற்காக பயன்படுத்தும் போது அப்படி பயன்படுத்துபவனே வியாபாரமாகிப் போகிறான்.

எப்படிப் பார்த்தாலும் சரணாகதி என்று சொல்லுமிடம் ஒருவனின் நம்பிக்கையின் உச்சம். நான் வாழினும், கொடுமையாய் வீழினும் நான் பற்றிய கையை விடேன் என்று ஒருவன் சரணாகதி அடைவதற்கு முன் தன் தீர்மானத்தின் மீது நம்பிக்கையுள்ளவனாக இருக்க வேண்டும்.

தன்னை சரியாகப் புரிந்து கொள்ளதாவன், தெளிவில்லாவதன், முட்டாள், மடையன், மூர்க்கன், மூட நம்பிக்கையை பின் பற்றுபவன், பேராசைக்காரன், முன் கோபி, பொறாமைக்காரன், தற்பெருமை பேசுபவன் இவர்களால் சரியான படி வாழ்க்கையையோ, இறைவனையோ, அல்லது குருவையோ உணரவே முடியாது. இப்படி தன்னை ஒரு தெளிவில்லாதவனாக வைத்துக் கொண்டு இவர்கள் பற்றும் கரம் ஒரு திருடனுக்கும், ஏமாற்றுக்காரனுக்கும், ஆன்மீகம் என்ற பெயரில் திருட்டு போகத்தில் திளைப்பவனுக்கும் சொந்தமானதாகியே போகிறது.....

இதையும் அவர்கள் சரணாகதி என்றே கூறுவார்கள்...ஆனால் அது ஒரு ஞானத் திருட்டு அல்லது குருட்டுப் புரிதல் என்றே கூறவேண்டும். இப்படியான ஒரு செயல் சரணாகதி அல்ல...கிட்டத் தட்ட தற்கொலை.

தன்னை உணராதவன் இந்த உலகத்தில் தெளிவான காட்சிகளை காண முடியாது. சரியான மனிதர்களைப் புரிந்து கொள்ளவும் முடியாது. ஒரு மாதிரியான மன நிலை பேதலித்தது போல ஒரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு தன்னைப் பற்றியும், தன் செயல்கள் பற்றியும் இடைவிடாது பேசிக் கொண்டே ஒரு கட்டத்தில் வாழ்க்கையின் இறுதியை எட்டி மரணித்துப் போகிறார்கள்.

என்னை சரணாகதி கொடுத்திருக்கிறேன்...இந்த மனிதரிடமோ அல்லது விசயத்திடமோ அல்லது செயலிடமோ நான் முழுமையாய் நம்பி என்னை கொடுத்திருக்கிறேன். நான் சார்ந்திருக்கும் விடயம் என்னை கடைத்தேற்றும் என்று கூறுபவர்கள் அத்தனைப் பேரும் முதலில் தங்களைப் புரிந்து கொள்ளுதல் அவசியம்....

அப்படியான புரிதலில்.......நீங்கள் வாழ்க்கையிடமோ, புரிதலுடன் கூடிய ஒரு கருது பொருளான கடவுளிடமோ அல்லது தெளிந்து விளங்கிய ஒரு குருவிடமோ உங்களை ஒப்புக் கொடுக்கும் போது...

எவ்வளவு பிரச்சினைகள் வந்தாலும் ஒரு சிம்மமாய் அதை அறுத்தெறிந்து வெளியே வருவீர்கள் என்பது முக்காலமும் உண்மை.

தேவா. சு

பின் குறிப்பு: வாழ்க்கையும், இறைவன் என்ற ஒரு கருது பொருளும் கூட குரு நிலையின் செயல் வடிவங்களே...!Sunday, February 12, 2012

உடையாரின் அதிர்வலைகள்...12.02.2012கொஞ்சம் நாளாகிதான் விட்டது உடையார் பற்றி எழுத ஆனால் வாசிக்காமல் இருக்கவில்லை தொடச்சியாக ஒரு நகரப் பேருந்து செல்லும் வேகத்தோடு ஒரு நாளைக்கு இரண்டு பக்கங்கள் வாசிப்பதும், பின் அந்த வாசிப்பில் லயித்துக் கிடப்பதும் என்று மெல்ல மெல்ல நகர்ந்து கொண்டுதான் இருக்கிறேன்.

ஒரு பரபரப்போடு தொடங்கிய முதல் பாகத்தில் ராஜ ராஜ சோழனின் அதிரடியான ஆளுமை என்னவென்று புரிந்தது ஆனால் போகப் போக  ஒரு மனிதனின் மகா வெற்றிக்கு எத்தனை நல்ல மனிதர்களின் கூட்டு மற்றும் எதிரிகளின் சூழ்ச்சிகள் தேவை என்று தெளிவாக உணர முடிந்தது.

வெற்றிகளைக் குவித்து மிகப்பெரிய புகழுடன் இருக்கும் ஒரு பேரரசனுக்கு ஒரு கோயில் அதுவும் பிரமாண்டமாய் செய்ய வேண்டும் என்று தோன்றிய இடத்தை உற்று கவனிக்கையில்தான் வாழ்க்கையின் மிக முக்கியமான ஒரு விடயத்தை புரிந்து கொள்ள முடிந்தது அதாவது  திருப்தியின் அளவு பொருளோ, புகழோ, அல்லது போகமோ அல்ல...திருப்தியின் உச்சம் என்பது தன்னை உணர்தல் என்று....

தன்னைச் சுற்றிலும் பல தொழில்களை செய்யும் மக்களைத் கொண்டிருந்த இராஜ இராஜசோழன் என்னும் சக்கரவர்த்தி அத்தனை பேரையும் கையாளும் விதத்தை எழுத்துச் சித்தர் வெளிப்படுத்தியிருக்கும் விதம் மிக அலாதியானது. வாசிக்க வாசிக்க சுகமானது. கருமார்கள் எனப்படும் ஆயுதம் செய்யும் தொழிலைச் செய்யும் மக்களை நேசிக்கும் புலிக்குட்டி என்று வர்ணிக்கப்படும் இராசேந்திர சோழனின் வேகத்தையும், இராஜ இராஜசோழனின் அனுபவம் செறிந்த நிதானம் கொண்ட தெளிவையும் வார்த்தைகளுக்குள்  எப்படி கொண்டு வந்தார் பால குமாரன்....?

சிறுவயதில் முதன் முதலாய் நீங்கள் அனைவரும் யானையைப் பார்க்கும் போது எப்படி பார்த்து இருப்பீர்கள்....ஆ.ஆ.....ஆ........ என்று வாய்பிளந்து...அட இது என்ன விலங்கடா..இது இவ்வளவு பெரிதாய்? இவ்வளவு வலிதாய், அட இது என்னடா காது இவ்வளவு பெரிதாயிருக்கிறதே...? அட இது என்ன நாசியா....?அதன் பெயர் துதிக்கையா....இவ்வளவு நீளமா..? என்றெல்லாம் வியந்து பார்த்திருப்போம் தானே...?

அப்படியான ஒரு ஆச்சர்யத்தோடே நான் வாசித்துக் கொண்டிருப்பதால் என்னால் அதை விட்டு வெளியே வந்து ஒன்றும் தனியே பகிர முடியவில்லை. 

கருமார்கள் எனப்படும் ஆயுதப் படைக்கலன்களை செய்பவர்களை இராசேந்திர சோழன் மிகவும் நேசிக்கிறார். காரணம் இராசேந்திர சோழன் ஒரு மிகப்பெரிய போர் வீரன். சோழர்களின் ஆயுதங்களை வடிவமைப்பதில் இருக்கும் நேர்த்தியின் பலன நேரடியாக அவர் அனுபவித்து இருக்கிறார். போர்க்களத்தில் யானை மீது ஏறி அமர்ந்து வாள் உயர்த்தி எதிர்ப்படைகளுக்குள் உள் நுழைந்து செல்லும் போது....

படைகளை பிளந்து கொண்டு முன்னேறுகையில் போர் வீரனின் கையிலிருக்கும் ஒரே நம்பிக்கை ஆயுதம். மழையைப் போல சீறிப்பாயும் எதிரிகளின் அம்புகளுக்கு நடுவே முன் செல்லும் போது தன் கையிலிருக்கும் வாளை வீசி எதிரியின் தலை கொய்கையில் வாளின் நேர்த்தியும் அதன் கூர்மையும் உடனே, உடனே தனது வேலையை முடித்து விட வேண்டும்.சண்டையைப் பொறுத்த வரை வேகம்  முக்கியமல்லவா...? வேகத்தை ஆயுதங்களின் நேர்த்தியின்மை கெடாமல் காக்குமெனில் அதைச் செய்தவனை ஒரு போர் வீரன் எப்படி போற்றுவான்....?

இராசேந்திர சோழன் தான் ஒரு போர் முடிந்து வந்து தனது தலை மற்றும் உடல் கவசத்தை எடுத்து தமது தளபதிகளிடம் காட்டுகிறார். அந்த கவசங்களின் எல்லா பாகங்களிலும் சிறிது கூட இடைவெளியின்றி எதிரிகளின் அம்புகள் துளைத்து எடுத்து இருந்தும் ஒரு அம்பு கூட அந்த கவசத்தைக் கடந்து அவரின் உடல் தொடவில்லை....! அவ்வளவு நேர்த்தியாக ஆயுதத்தை வடிவமைத்து இருந்தனர்...கருந்தட்டாங்குடியில் வசித்த கருமார்கள்.

கருமார்களின் தொழில் பக்தி ஒரு வீரனை வலுவுள்ளவனாக்கி வெற்றியைத் தேடித் தருகிறது. தேசத்தின் வெற்றிக்கு மறுக்கமுடியாத ஒரு காரணமாய் கருமார்கள் இருக்கையில் அவர்களை ஏன் சீராட்டக் கூடாது....? இது இராசேந்திர சோழனின் எண்ணமாயிருந்திருப்பதில் தவறுகள் ஏதும் இருக்க முடியாது தானே...?

நூறு பேர் சேர்ந்து நின்றால் அது எவ்வளவு பெரிய ஒரு கூட்டமாய் நமக்குத் தெரியும்...? ஒரு பத்தாயிரம் பேரை அதுவும் போரில் வெற்றி கொண்ட  கங்க தேச, சாளுக்கிய, சேர, பாண்டிய தேசத்து வீரர்களை திறந்த வெளி பொட்டலில் திருவொற்றியூரில் அடைத்து வைத்து அவர்களை பராமரிப்பது என்ன சாதாரண காரியமா? இரேசேந்திர சோழன் அதை மட்டும் செய்யவில்லை.தன் தந்தையின் கோவில் கட்டும் பணிக்கு உதவப் போவது மனித வளம் மட்டுமே என்று உணர்ந்து....

சிவபணியில் ஈடுபடுத்தி கொள்பவர்கள் தஞ்சை செல்லலாம், ஒருவேளை வரவிருப்பமில்லையெனில் உங்களுக்கு இப்போதே விடுதலை தருகிறேன் என்று கூறி அப்படி சென்ற சொற்பமான பேரை மட்டும் விட்டு விட்டு மீதமிருந்த அதிகமான அடிமை வீரர்கள் தானே விரும்பி வரும் வகையில் அவர்களுக்கு சுதந்திரம் கொடுத்து தஞ்சைக்கு அனுப்பி வைத்திருக்கிறார் என்றால்..., இராசேந்திரன் எவ்வளவு பெரிய வீரனென்று நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை.

வெற்றிக் கொள்பவன் மட்டுமல்ல வீரன்....! தோல்வியுற்ற மனிதர்களை மனித நேயத்தோடு நடத்துபவன் தான் மாவீரன்...! இராசேந்திரா சோழன் மாவீரன்..!

அடிமை வீரர்களை அனுப்பி விட்டு தஞ்சைக்கு வரும் வழியில் தனக்குப் பிடித்த கருமார்களை குடந்தைக்கு அருகில் சந்திக்கும் இராசேந்திர சோழன்..., அவர்களின் கோரிக்கையான தாங்களும் முப்புரி நூல் (பூணுல்) அணிய வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்றி வைப்பதாக தரையில் அடித்து புழுதி பறக்க...சங்கல்பம் செய்கிறார்....

சனாதன தர்மத்தின் அடிப்படையில் ஆட்சி செய்து வந்த சக்கரவர்த்தி இராஜ ராஜ சோழனே எதிர்ப்பார்க்காத ஒரு விடயத்தை இராசேந்திர சோழர் சத்தியம் செய்து கொடுத்ததை எவருமே எதிர்ப்பார்க்கவில்லைதான்..உடையார் இராஜ இராஜத் தேவர் உள்பட..

நிறைய அந்தணர்களைக் கொண்ட சோழ தேசத்தில்......கருமார்கள் முப்புரிநூல் அணிந்தால் அவர்கள் முகம் சுழிப்பார்களே...! அந்தணர்கள் நேரடியாக மோத மாட்டார்களே....உள் நாட்டு குழப்பங்கள் உண்டு பண்ணுவார்களே.....பேசிப் பேசி ஒருவரை ஒருவர் மோத விடுவார்களே...

இப்படியெல்லாம்....என் எழுத்துலக குருநாதர் பாலகுமாரன் விவரித்துக் கொண்டே செல்வார். பாலகுமாரனும் ஒரு பிராமணர்தான் என்றாலும் பிராமணர்களைப் பற்றி அக்கு வேறு ஆணிவேறாக பிரித்து மேய்ந்து இருப்பத் ஆச்சர்யம் இல்லைதான் என்றாலும் எதிர்மறையான கருத்துக்களை எழுத ஒரு துணிச்சல் வேண்டுமே....>

என்னை பொறுத்த வரையில் பாலகுமாரன் மதம், சாதி எல்லாவற்றையும் கடந்த நிலையில் தற்போது இருப்பவர் என்பதை தெளிவாக நான் அறிவேன். அது மட்டுமல்ல உடையார் என்னும் நாவலை வெறும் கதையைச் சொல்வது போல சொல்லிச் செல்ல வெறும் கதாசிரியரால்  முடியும்...ஆனால் பாலகுமாரன் அங்கே வாழ்ந்திருக்கிறார். நம்மையும் எழுத்துக்கள் என்னும்கை பிடித்து அந்த கால கட்டத்திற்குள் வாழ அழைத்துச் செல்கிறார்.

இராஜ இராஜ சோழன் தலைவன் என்றால்........இராசேந்திர சோழன் புரட்சித் தலைவன்..என்றுதான் சொல்ல வேண்டும்.

ஆமாம்....சாதி சமய வேறுபாடுகள் கடந்து அந்த காலத்திலேயே கருமார்களின் சேரியில் அப்போதே அமர்ந்து உணவு உட்கொள்ளவும், அவர்கள் வீட்டில் படுத்துறங்கவும் செய்தவன் புரட்சித் தலைவன் தானே...

தலைவருக்கும் புரட்சித் தலைவருக்கும் நடக்கும் தீப்பொறி பறக்கும் மோதல்களை வரும் வாரங்களில் பார்ப்போம்....!

கல்வெட்டு:

“ நாம் எடுப்பிச்ச திருக்கற்றளி ஸ்ரீராஜராஜீச்சரமுடையார்க்கு நாங்குடுத்தனவும், நம் அக்கண் கொடுத்தனவும் நம் பெண்டுகள் குடுத்தனவும் மற்றும் குடுத்தார் குடுத்தனவும் ஸ்ரீவிமானத்தின் கல்லிலே வெட்டுக என்று திருவாய் மொழிந்தருள, கல்லில் வெட்டின. யாண்டு இருபதாவது நாள் முன்னூற்றொரு பத்திரண்டினால் உடையார் ஸ்ரீராஜராஜதேவர் குடுத்த ஸ்ரீபலி எழுந்தருளும் பொன்னின் கொள்கை தேவர் ஒருவர் ஆடவல்லான் என்னுங் கல்லால் நிறை எண்ணூற்றிருபத்தொன்பதின் கழஞ்சேய் முக்காலே மூன்று மஞ்சாடி நாளதினாலேயே டுத்த பொன்னின் பத்மாஸன ஸ்ரீபலி தலம் ஒன்று மேற்படி கல்லால் நிறை தொள்ளாயிரத்து தொன்னூற்றைய்ங் கழஞ்சரையே நாலுமஞ்சாடி”.


சோழம்...! சோழம்...! சோழம்...!

தேவா. சுSaturday, February 11, 2012

பகிர முடியாத வார்த்தைகள்....!இயல்புகளை விவரிக்க முயலும் வார்த்தைகள் தோல்விகளையே எப்போதும் தழுவுகின்றன. கற்பனைக்கு நிறைய பொய் தேவைப்படுகிறது. நிஜமோ நேருக்கு நேராய் நம்மை எப்போதும் எதிர்கொள்கிறது. சிறகடிக்கும் மனம் இளைப்பாறுவது என்னவோ எதார்த்தத்தில் தான்...

என் கவிதை சாலைகளிலின் விளிம்புகளில்தான் அவள் எப்போதும் எனக்காக காத்திருப்பாள் நிஜமென்னும் உணர்வுகளை ஏந்திப் பிடித்தபடி. வர்ணிக்க கூடியது எல்லாம் விவரிக்க முடிந்தது. விவரிக்க முடியாதது வார்த்தைகளுக்குள் எப்போதும் வந்து விழுவதில்லை. காதலை விவரிக்கலாம்...கடவுளை...? பூமியை விவரிக்கலாம் அதன் மூலத்தை மொழி பெயர்க்கலாம்.. ஆனால் பிரபஞ்சத்தை அதன் ஆழத்தை எப்படி மொழியாக்கம் செய்வது..?

விரல் விட்டு எண்ணக் கூடியது எல்லாம் கடந்த பிரமாண்டத்தை உணர்தலே மிகப்பெரிய விடயம். அதை உணர்ந்தவன் அதில் லயித்துக் கிடப்பான் ஒரு நிரம்பி வழியும் பாத்திரத்தைப் போல..., அவனில் இருந்து தெறித்து விழுவது  யாவுமே நிரம்பி பின் வழிவதுதான். 

எப்போது உள் நிறைந்து கிடப்பவது, எப்போதும் வெளியில் வர முடியாதது.  காந்தத்தின் அதிர்வுகளாய் உடலுக்குள் மையம் கொண்டிருப்பதை எப்போதும் காட்சிப்படுத்துவதிலும் கவிதைப் படுத்துவதிலும்..நாம் வெற்றி கொள்ள முடியாது.

வண்ணக் கலவைகளை எடுத்து விசிறும் தூரிகைகளுக்கு ஒவியத்தின் அழகைப் பற்றி என்ன கவலை? தூரிகையின் விசிறிலே அதன் விஸ்தாரமே ஓவியம். வர்ணங்களை கரைத்துக் கொடுத்து அதில் ஊறிக் கிடந்து ஒரு ஓவியத்தை படைத்த திருப்தியில் தூரிகைகள் எப்போதும் சந்தோசித்துக் கிடக்கின்றன....அவை ஓவியமாக எப்போதும் முயல்வதே கிடையாது...

இப்படித்தான் காதலுக்கு ஒரு கருப்பொருளாய் ஒரு காதலி அவளே கைத்தளம் பற்றிய ஒரு வாழ்க்கைத் துணை என்று நகரும் போது, தனித்து பகுத்து பிரித்து எப்படி எழுதுவது...

இயல்பை வெளிப்படுத்துதல் ஒரு போதும் கவிதையாவதில்லை...! நிறைவுகள் எப்போதும் காவியங்கள் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொள்வதும் இல்லை. தீரத் தீர எரியும் பெருங்கனலில் எரிதல் மட்டும் நிகழும்....! அப்படியான ஒரு வாழ்க்கையின் மிகப்பெரிய எரிதலில் எல்லாவற்றையும் சேர்த்துக் கொண்டு நகரும் ஒரு பெருஞ்சக்தியாக ஒவ்வொரு ஆணுக்கும் ஒரு பெண் அமைகிறாள்.

எனக்கான நகர்வில் ஒரு சப்தமான மெளனத்தை நான் என் வாழ்க்கைத் துணையாக கொள்ள வெண்டியிருந்தது. நாம் பேசிப் பேசி சாதிக்க நினைத்ததை எப்படி ஒரு பெண்ணால் சப்தங்களற்று இறுக்கமான மெளனங்களால் மட்டுமெ வெற்றிக் கொள்ள முடிகிறது என்ற குழப்பமே எனக்கு இன்னும் தீரவில்லை....

ஆனால்...

காலம் என்னை வார்த்துக் கொண்டிருக்கிறது. காலம் என்னை புடம் போட்டுக் கொண்டிருக்கிறது. என்னைச் சுற்றி இருக்கும் சக மனிதர்களை அடையாளம் காட்டிக் கொண்டிருக்கிறது. என்னோடு அழுகிறது. என்னோடு சிரிக்கிறது. என்னோடு பட்டினிக் கிடக்கிறது.  என் சந்தோசங்களை எப்போதும் தூர நின்று ரசிக்கிறது...

காலம் எப்போதும் நம் கூட இருப்பது...! அது நம் ஜனித்து விழுந்த நொடியில் இயங்கத் தொடங்கிய ஒரு மறைமுக வஸ்து ஆனால் ஒவ்வொருவரின் திருமணத்திற்குப் பிறகும் ஒரு பெண்ணுக்கு அது ஆணாகவும், ஒரு ஆணுக்கு ஒரு பெண்ணாகவும் தன்னை பரிணமித்துக் கொள்கிறது....!

மானுடர்கள் இதை உற்றுக் கவனிப்பதில்லை. நான் நின்று நிதானித்து ஒரு குருடன் வாகனங்கள் நிறைந்த சாலையைக் கடக்கும் பொறுமையோடு இதை உணர்ந்திருக்கிறேன். வலியை வாங்கிக் கொள்ளவும், வலிகளை போக்கி விடவும் இந்தத் துணை காலம் காலமாக நம் சமூகம் மட்டுமில்லை...உலகத்தில் எல்லா சமூகத்திலும் உதவியிருக்கிறது.

பந்தங்களை, உறவுகளை, வெறுமனே கருவிகளாக பாவிக்கும் மனிதர்கள் இதனைப் பெரும்பாலும் உணர்வதில்லை..ஆனால் வாழ்க்கையை உணர்ந்து நகரும் போது திருமண பந்தத்தில் ஒரு பெண்ணின் ஆளுமை என்ன என்று ஒரு ஆணாலும், ஒரு ஆணின் தேவை என்ன என்று ஒரு பெண்ணாலும் தெளிவாக உணர முடியும்...

காலங்கள் நகர, நகர என் புத்திக்குள் தேங்கிக் கிடந்த ஆணாதிக்க சமுதாயத்தின் திடம் எல்லாம் மெல்ல, மெல்லக் கரைய,  திருமணம் சடங்குகள் எல்லாம் கடந்த ஒரு துணையாக என் மனைவியை நான் பார்க்கத் தொடங்கினேன் அல்லது உணரத் தொடங்கினேன்...

மாயைகள் எல்லாம் உடைந்து போக.... ஒரு கோப்பை தேநீரை எதிர் எதிரே அமர்ந்து பருகும் ஒரு சுகத்தில் பக்கதில் இருக்கும் இருப்பினை உணர்தலே மிகப்பெரிய பாக்கியம், ஆறுதலான ஒரு தோள் சாய்தலே மிகப்பெரிய நிம்மதி.

தேவைகளற்ற ஒரு அன்பில் காதல் மிளிர்கிறது. அப்படியான தேவைகள் எல்லாம் தீர மிகப்பெரிய புரிதலும்...., பல தரப்பட்ட சூழல்களை நாம் கடக்கவும் வேண்டியிருக்கிறது.

பகிரமுடியாத அன்பாய் பரவும் காதலில் இருப்பு மட்டுமே இருக்கிறது...அங்கே வார்த்தைகளோ வசீகரமோ எப்போதும் இருப்பதில்லை...! காதலோடு இருக்கும் போது அதை விவரிக்கவும் வார்த்தைகள் இல்லை...!

பொய்யைப் பகிர்ந்து மெய்யை எப்போதும் என்னோடே நான் சுமக்கிறேன்....! ஆமாம் வாழ்க்கையின் அனுபவங்கள் எப்போதும் சுகமனவை ஆனால் பகிர முடியாதவைதானே...!!!!

ப்ரியங்களுடன்...

தேவா. சுThursday, February 9, 2012

கற்பூரக் கனவுகள்...!வெறிச்சோடிக் கிடக்கும் ஒரு ஆள் அரவமற்ற சாலையாய் கிடக்கிறது மனது. காலத்தின் நகர்வுகள் திணிக்கும் மனோநிலைகள் மறுக்க முடியாதவை. இயல்புகளைக் ஆக்கிரமித்துக் கொள்ளும் சூழல்களை எல்லாம் மெளனமாய் வேடிக்கைப் பார்க்கிறது உள்ளுக்குள் எப்போதும் விழித்துக் கிடக்கும் ஒரு நெருப்பு.

எப்போதும் பராக்குப் பார்த்துக் கொண்டு ஏதோ ஒன்று எழுதக் கிடைக்கும் அல்லது எழுதவேண்டும் என்ற மனோநிலைக்கு ஒரு மிகப்பெரிய முற்றுப் புள்ளி வைத்ததோடு மனிதர்களோடு இயங்கி மனித மனோநிலைகள் சாராமல்,  நிர்ப்பந்தங்கள் அகன்ற ஒரு வெளியில் வந்து விழுந்து கிடக்கிறேன் என்பது ஒரு விதமான சந்துஷ்டியைக் கொடுக்கிறது.

சமூகம் எப்போதும் எதிராளியை அவனின் போக்கிலேயே ரசித்தது  கிடையாது. அது எப்போதும் தனது தேவையை முன்னிறுத்தியே தனது தொடர்புகளை விஸ்தரித்துப் பார்க்கிறது. ஒவ்வொருவரும் தன்னை மையப்படுத்தி வாழும் வாழ்க்கையில், மனமற்று மனதின் மையப்புள்ளியை உடைத்துவிட்டு பரந்து வாழும் ஒரு நிலை உண்மையில் வரம்தான் என்றாலும் இந்த சமூகத்தோடு சேர்ந்து நகரும் போது அது சாபமாகிவிடுகிறது.

ஆசைகள் எல்லாம் தன்னின் திருப்தியை நோக்கியதாய் இருக்க வேண்டும் என்று எவரும் நினைப்பதில்லை. தான் எந்த ஒரு நிலையில் இருந்தாலும் இந்த சமூகம் தன்னை மதிக்க வேண்டும், தன்னைப் போல மிக்காரும் ஒப்பாரும் இல்லை என்று சக மனிதன் போற்ற வேண்டும் என்பதற்காகவே மிகைப்பட்ட மனிதர்கள் தங்களின் இலக்கினை தீர்மானித்துக் கொள்கிறார்கள்.

இலக்குகளின்றி பயணிக்கும் அல்லது வாழ்க்கையின் சாரத்தை விளங்கி தன்னை உணர்ந்து நகரும் எவனொருவனும் இந்த சமூகத்தோடு சேர்ந்து வாழ முடியாதவனாகிப் போகிறான். இது வாழ்க்கை, இங்கே இப்படித்தான் நகரவேண்டும் என்ற பொய் வேடங்களைப் போட முடியாமல் சத்தியத்தின் சுவையை உணர்ந்தவனாய் அவன் தனித்து இயங்கவே விருப்பங்கள் கொள்கிறான்.

மனிதர்களின் குரூரங்களும், பகட்டான நடவடிக்கைகளும், விளம்பரமான வாழ்க்கை முறையும், சாதித்து விட்டேன் என்று அறைகூவல் விடும் கூக்குரல்களும், மாயை என்பதை அவன் தெளிவாகவே உணர்ந்திருக்கிறான். இதனாலேயே புற வாழ்க்கையில் பல சங்கடங்களை எதிர் கொள்ள வேண்டியும் இருக்கிறது.

சப்தமில்லா ஒரு மனதில் சிறு குண்டூசியின் அதிர்வு கூட அதிரடியானதுதான். வெண்மையான ஒரு தூய ஒரு பரப்பில் சிறு துறும்பு கூட மிக மிகப் பெரிய அழுக்குதான். இதனாலேயேதான் மனிதர்கள் இல்லா ஒரு இடம் நோக்கி ஒரு மனிதன் ஓட வேண்டியிருக்கிறது. இவன் வாழ்க்கையை மறுத்து ஓடுபவதாக சராசரியான மனோநிலைகள் கூறி அதை வாதிட்டு வெல்லவும் முடியும்..ஆனால் அவன் வாழ்க்கையை மறுத்து வாழ்க்கையை விட்டு விலகுவதில்லை.

மாறாக....

வாழ்க்கையை உணர்ந்தே அதை விட்டு விலகுகிறான். நிலையாமையைக் உணர்ந்தவன் நிலையான பொருள் எதுவென்று தன்னுள் கேட்டுக், கேட்டு அதன் விடையைத் தேடி மெல்ல எல்லாம் புறம் தள்ளி விட்டு நகர்கிறான். கூச்சல்களும், கிண்டல்களும், ஆணவப் பேச்சுக்களும் குழப்பமான மன அதிர்வுகளும் அவனுக்கு தேவையில்லாததாகிப் போகிறது.

ஒரு வெள்ளைச் சுவரின் அடுத்தப் பக்கத்தில் ஏறிப்பார்க்க ஆசைப்பட்டு பலர் பகிரதப் பிரயத்தனம் செய்கிறார்கள். அப்படி ஏற முயலும் அத்தனை பேருக்கும் சுவற்றுக்கு அந்தப் பக்கம் ஏதோ ஒன்று இருக்கும் என்கிற ஒரு சுவாரஸ்யம் இருக்கத்தான் செய்யும். தான் மட்டுமே முந்திப் பார்க்க வேண்டும் என்று தன்னைச் சுற்றி இருக்கும் ஒவ்வொருவரையும் தள்ளி விட்டு, அடித்து மோதி முண்டிக் கொண்டு, போட்டிகள் போட்டுக் கொண்டு ஒவ்வொருவரும் முயன்று கொண்டிருக்கையில்.....

அந்தப்பக்கம் என்ன இருக்கும் என்று உறுதியாய் தெரிந்த ஒருவன் என்ன செய்வான்...? இந்தப் போட்டியில் ஈடுபடுவானா? சக மனிதரை திட்டுவானா...?தான் பெரிய வலுவுள்ளவன் என்று கொக்கரிப்பானா? தன் ஆணவத்தை வெளிக்காட்டுவானா? 

அப்படி எல்லாம் செய்ய மாட்டான் தானே...?

ஏனென்றால் மறுபக்கம் ஒன்றுமில்லை என்று அவனுக்குத் தெரியும். அப்படி தெரிந்ததாலேயே அவன் மெளனித்து நிற்பான். முயற்சிகள் செய்தால் அந்தச் சுவரை கடத்தல் கடினம் என்று தெரிந்து முயற்சிகளை விட்டு, விட்டு அவன் தனக்கு கிடைத்த இடத்தில் தனக்கான வாழ்க்கையை வாழத் தொடங்குகிறான். ஏனென்றால் முயற்சிகள் அற்றுப் போகும் போது அந்த சுவருக்கு அப்பாலிருக்கும் வெறுமைக்கு  தன்னாலேயே போய்விடுவோம் என்று அவனுக்குத் தெரியும்.

கிடைத்திருக்கும் வாழ்க்கையை அன்பாய், அமைதியாய் வாழத் தெரியாமல் மிருகமாய் நகரும் சக மானுடக் கூட்டத்தைப் பார்த்து அவர்களுக்காய் இவன் பிரார்த்திக்கிறான். அவர்கள் மனம் அமைதி பெற இவன் தியானிக்கிறான். பொருள் சேர்த்து, புகழ் சேர்த்து ஒரு மனிதன் இவ்வுலகில் நிம்மதியடைய முடியாது என்பதை அவன் திண்ணமாய் உணர்ந்திருக்கிறான்.

உலகில் மனிதன் தேடுவது நிம்மதி. கடவுளாய், மதமாய், சாதியாய், தத்துவமாய் பொருளாய், காதலாய், காமமாய், புகழாய், சண்டையாய், ஆக்கிரமிப்பாய், சமூக சேவையாய் இவ்வுலகின் ஒவ்வொன்றையும் மனிதர்கள் நுகர்ந்து, நுகர்ந்து கடைசியில் அவர்கள் சென்று அடைய வேண்டிய இடம் நிம்மதியான ஒரு வாழ்க்கை. ஆனால் பாவம் யாருக்குமே தெரியாது எதையும் சேர்க்க, சேர்க்க நமக்கு நிம்மதி கிடைக்காது என்று... 

ஆனால் ஒவ்வொன்றாய் விட, விடத்தான் நமக்கு அந்த நிம்மதி கிடைக்குமென்று....எத்தனை பேருக்குத் தெரியும்?

இந்த உலகில் நிம்மதியில்லாத மனிதர்களாய் நான் அறிவது மிகப்பெரிய பணக்காரர்களையும், புகழ் பெற்றதாய் தங்களை எண்ணிக் கொண்டு கனத்த தலையோடு நடமாடும் மனிதர்களையும்தான். இவர்கள் எல்லோரும் தங்களை யாரோ என்று மனதால் கற்பித்துக் கொண்டே காலெமெல்லாம் வாழ்கிறார்கள்...

மரணிக்கும் தருவாயில் ஒரு தெரு நாயும் தானும் ஒன்றுதான் என்று உணரும் போது அதிர்ந்தே போகிறார்கள்.

என்னைச் சுற்றியும் ஒரு ஓட்டமும், போட்டியும் எப்போதும் சூழ்ந்து கொள்கின்றன அது வாழ்க்கையின் மறுக்கமுடியாத சூழ்ச்சி. இந்த சூழ்ச்சியை விட்டு நான் நகரவே விரும்புகிறேன். என்னைச் சுற்றிய இரைச்சல்களிடம் எல்லாம் கை கூப்பி மனமார வேண்டுகிறேன் என் அமைதிக்கு உதவுங்கள், நீங்களும் அமைதியாயிருங்கள். நாம் பெறுவதற்காக வரவில்லை கடப்பதற்காக வந்திருக்கிறோம்...

சத்தியமாக உங்களை வழிநடத்துகிறேன் என்று பணம் கேட்பவர்களை விட்டு நீங்கள் எப்போதும் விலகியே இருங்கள். ஏனென்றால் உங்கள் வழியை யாரும் காட்டவே முடியாது. பிரபஞ்ச சக்தியின் அற்புதத்தில் ஒவ்வொரு படைப்பும், ஒவ்வொரு மனிதனும் ஒரு வகை, ஒவ்வொரு சூழலும் ஒரு தினுசு, நீங்கள் உங்களை உணர்ந்தால் தான் உங்களின் பாதை உங்களுக்குத் தெரியும்....

மேலும் இங்கே நல்லவர்கள் மற்றும் கெட்டவர்கள் என்று யாரும் கிடையாது. நன்மை, தீமை என்று எதுவும் கிடையாது, உங்கள் கடவுள் என் கடவுள் என்று எதுவும் கிடையாது...

இருப்பதெல்லாம் வாழ்க்கை என்னும் ஒன்றே... அந்த வாழ்க்கையை எவ்வளவு திருப்தியாய், மனமகிழ்ச்சியாய் வாழ்ந்து நகர்கிறோம் என்பதே மையப் பொருள்...! 

எங்கோ நகர்ந்து ஏதோ ஒரு இடத்தில் தற்காலிகமாய் நான் இப்போது நிலைத்திருக்கிறேன். இந்த நிலையில் எந்த நிர்ப்பந்தங்களும் இல்லாமல் இருக்கிறேன். வாழ்க்கை கொடுத்த சூடு இன்னும் ஆறவில்லை, மனிதர்கள் கொடுத்த வடு இன்னும் இரணமாயிருக்கிறது.....

காயங்கள் ஆறும் வரை, கடந்தகால நினைவுகள் மறையும் வரை....ஒரு கற்பூரமாய் நான் எரிந்துதான் ஆகவேண்டும்...

ஆமாம் எரிந்தால்தான்.....நான் கரைந்து மறைய முடியும்....!


தேவா. S


Friday, February 3, 2012

அந்திமத்தின் விடியல்...!


இன்னும் சற்று நேரத்தில் நான் மரணித்து விடக் கூடும். தளர்ந்து போன கால்கள் துவண்டு கிடந்தன, இடுப்பில் சுத்தமாய் திடமில்லை. கைகளில் சக்தியில்லை. பிராணனை மூளைக்குள் செலுத்தி, திசுக்களில் பரப்பி பிராணனின் பொலிவினை எப்போதும் என் விழிகள் பளபளப்பாய் காட்டியிருக்கின்றன....ஆனால் இதோ என் விழிகளிலும் ஜீவனில்லை இப்போது...

கடந்த ஒரு மாதமாய் விடிகிறது.....இருள்கிறது....விடிகிறது இருள்கிறது அவ்வளவே. நினைவுச் செல்களில் நான் சேர்த்து வைத்திருக்கும் கடந்த கால நினைவுகள் எல்லாம் மீண்டும் ஒரு முறை ஒரு புத்தகத்தின் பக்கங்களைப் புரட்டுவதைப் போல புரட்டிப்பார்த்துக் கொண்டிருக்கின்றன.

ஏதேதோ செய்தேன்...யார் யாரிடமோ சினேகம் கொண்டிருந்தேன். அப்போதெல்லாம் என்னைச் சுற்றி நிறைய மனிதர்கள் இருந்தார்கள். ஒரு சினிமாப்படத்தின் காட்சிகளாய் எல்லாம் நடந்தன....நகர்ந்தன. முதன் முறையாய் மெல்ல அடியெடுத்து வைத்து நான் நடை பழகிய என் குழந்தைப் பருவத்தில் நடப்பதும், ஓடுவதுமே எனக்கு மிக அதிகமான சந்தோசமாய் இருந்தது.

காலம் நகர, நகர சந்தோசம் என்பது வேறு வேறாக எனக்கு கற்பிக்கப்பட....வளர்ந்தேன் வாழ்ந்தேன்....! இதோ என் அந்திமத்தில் ஒரு கிழிந்த துணியாய் இந்த சுவற்றோரம் முடங்கிக் கிடக்கிறேன். முதுமை என்னைத் தொடத் தொட எனக்கான அங்கீகாரத்தை உலகம் கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்திக் கொண்டது. பிள்ளைகளும், சுற்றங்களும், என்னை ஒய்வெடுக்கச் சொல்லியே வற்புறுத்தின. பேசும் வார்த்தைகளை எல்லாம் கேட்க யாரும் இல்லை....! வாய் திறக்கும் போதே அது அடைக்கப்பட்டது. 

தனிமை என்னை சூழ்ந்தது. எனக்கென வாழ்க்கைத் துணையாய் வந்தவள் வழியிலேயே என்னை விட்டுச் சென்றுவிட்ட அன்று தனிமையோடு ஒரு சூன்யம் பேரமைதியாய் என்னில் படர்ந்தது. இப்போது எப்படி பால்யமும், பதின்மமும் இளமையும் என்னைச் சுற்றி இருப்பவர்களுக்கு பரபரப்பாய் இருக்கிறதோ...அதைவிட அதிகமான பரபரப்பில் நான் இருந்திருக்கிறேன்.

காதலை நெஞ்சுக்குள் உணர்வுகளாய் தேக்கிக் கொண்டு திமிர் கொண்டு திரிந்திருக்கிறேன். பிடித்த பெண்ணையே திருமணம் செய்து கொண்டவுடன் அந்த திமிரின் அளவு இன்னும் ஏறிப்போனது. காதலும், காமமும் சேர்ந்து வாழ்க்கையின் பக்கங்களை சந்தோச வர்ணங்களால் தீட்டித் தீட்டி இன்னும் என் வாழ்க்கையை அழகாக்கியது. நான் அப்போதெல்லாம் அதிகம் பேசுவேன். ஒரு தொழில் ரீதியான எழுத்தாளன் இல்லையென்றாலும் ஏதோ அவ்வப்போது தோன்றும் உணர்வுகளை கொட்டி கிறுக்கியும் வைப்பேன். 

அதோ அந்தப் பரணில் கிடக்கும் பெட்டியில் தூசிகளுக்கும் குப்பைகளுக்கும் நடுவில் புதைந்து கிடக்கிறது நான் எழுதி கவிதைகளும் கட்டுரைகளும். பல முறை அதை குப்பையில் எரிந்து விட என் மருமகளும் மகனும் முடிவெடுத்தபோது ஒரு பிச்சைக்காரனாய் கெஞ்சி கெஞ்சி அவற்றை காப்பாற்றி வைத்திருக்கிறேன்.  நான் எப்படி எழுதினாலும் என் மனைவி ரசித்திருக்கிறாள். அவளின் நினைவுகளை எல்லாம் அவளின் மரணத்திற்குப் பிறகு என் கண்ணீரோடு சேர்த்து காகிதத்தில்தான் கரைத்திருக்கிறேன்.

இளமையில் உடலின் உள்ளே சுரக்கும் சுரப்பிகளின் வேகம் அதிகாயிருக்கும். பிராணனை அழகாக, அதிகமாக சுவாசிக்க எனக்குத் தெரியுமாதலால் நான் வேகமாக சிந்திக்கவும், பேசவும் செய்வேன். என்னைச் சுற்றி இருக்கும் நேசிப்புகளை எல்லாம் ரசித்திருக்கிறேன். எதிரிகளை எல்லாம் என்னை முதலில் அடிக்க விட்டிருக்கிறேன். அப்படி அடிக்க விடுவது எனக்கு வலிக்கட்டும் என்றுதான்....அப்படி வலித்தால்தான் என்னால் சரியாய் அவர்களுக்கு திருப்பிக் கொடுக்க முடியும். சில நேரம் மனிதர்கள் என் எதிரியாயும் பலநேரம் காலம் என் எதிரியாயும் இருந்திருக்கிறது....வலிக்க வலிக்க வாங்கிக் கொண்டு வலிக்க வலிக்க கொடுக்கவும் செய்திருக்கிறேன்.

எல்லா நேரங்களிலும் தனிமை எனக்கு இளமையில் சந்தோசத்தை கொடுத்திருக்கிறது. அதனாலேயே தனிமையில் நான் இருந்து விடலாம் என்று நினைத்தது மிகப்பெரிய தவறு. இளமையில் தனிமை, அமைதி என்று தேடிய என்னால் முதுமையில் நிஜமான தனிமையையும் பேரமைதியையும்....எதிர் கொள்ள முடியவில்லை. சுற்றி சுற்றி கோடிப் பேர் இருக்கையில் தனிமையைத் தேடுகிறேன் என்று கூறுவது  ஒரு போலி வேசம். அதை நான் என் இளமையில் குறையில்லாமல் போட்டிருக்கிறேன்...!

நிராகரிப்பின் நிமிடங்களை யாருமற்ற தனிமைகள்...வலுக்கட்டாயமாக திணிக்கும் போது அது ஒரு மிகப் பெரிய வலி. என்னால் இயன்ற போது தியானம் செய்து பழகி இருக்கிறேன். இப்போது கண்களை மூடி தியானிக்கலாம் என்று யோசிக்கும் போது மூளை ஒத்துழைக்க மறுப்பதோடு மட்டுமில்லை...என் கடந்த காலப் புரிதல்களில் புத்திக்குள் படுத்து கிடக்கும் கடவுள்களைத் தொட்டு எழுப்பி,யார் யாரையோ எருமையில் ஏற்றி வந்து எனக்கான பாசக் கயிற்றை வீசிப்பார்க்கிறது....

இமைகளை ஒன்று சேர்த்து கண்களை மூடவே பயமாயிருக்கிறது. இமைகள் இரண்டும் மூடும் போது அது மிகப்பெரிய பாராங்கல்லை எடுத்து விழிகளின் மீது வைத்தது போல கனக்கிறது. இதற்கு பயந்தே கண்களை நான் மூடுவதில்லை. யார் யாரோ என்னைப் பார்க்க வருகிறார்கள். உருவம் தெரிகிறது ஆனால் யாரென்று மூளையைத் தொட்டு நினைவுப்பகுதியைச் சரிபார்க்க முயலுகையில் வழுக்கி விழுந்து விடுகிறேன். அனேகமாய் என் நினைவுப்பகுதியிலிருக்கும் செல்க்கள் செத்துப் போயிருக்க வேண்டும் இல்லை செயலாற்ற முடியாமல் இருக்க வேண்டும்.

யாரையும் எனக்கு இப்போது தெரிவதில்லை. என் புத்திக்குள் இரண்டு பேரை மட்டுமே.. நான் நினைவு கொள்கிறேன். ஒன்று என் மனைவி...இன்னொன்று என் மகன். கட்டிப் பிடித்து, சீராட்டி பாரட்டி வாந்த வாழ்க்கை அல்லவா...? எப்படி மறக்கும்...?

ஒரு நாள் எனக்கு வேலை அயற்சியில் ஒரு கையும் காலும் வலிக்கிறது என்று சொல்லி விட்டு நான் நான் உறங்கி விட்டேன். நடு இரவில்  யாரோ கால் அமுக்குவதைப் பார்த்து திடுக்கிட்டு எழுந்து பார்த்தபோது கண்கலங்கியபடி என் கால்களை என் மனைவி பிடித்து விட்டுக் கொண்டிருந்தாள். அவளுக்கும் நான் இதை செய்வது உண்டு ஆனால் நான் செய்கிறேன் என்ற ஒரு உணர்வினைத் தேக்கிய படி செய்யும் ஒரு பரோபாகரம் அது. அதற்கான அங்கீகாரத்தை தேடும் ஒரு மறைமுக முயற்சி எப்போதும் என்னிடம் இருக்கும்...

ஆனால் அவள் அப்படியல்ல...

என்னை அன்பு செய்யவே பிறந்தவள். உயிரில் நிறைந்தவள். என் கவிதைகளின் கரு. இறக்கும் வரை என்னை விட்டால் வேறெதுவும் தெரியாமல் இருந்து விட்டவள். எத்தனையோ பெண்களைக்  நான் கடந்து வந்திருந்தாலும் அவையெல்லாம் எனக்கு முளைத்த கனவுச் சிறகுகள்...ஆனால் அவள் என் எதார்த்த உலகின் பாதங்களாய் என்னை ஏந்திச் சென்றிருக்கிறாள்.

சுற்றி இருந்த எல்லோரையும் காலம் மிச்சமில்லாமல் கொண்டு சென்ற போது அவ்வளவாக கலங்காத நான்...என் அவள் என்னை பிரிந்த அந்த கணத்தினை விவரிக்க வார்த்தைகளின்றி என் விழி நீராய் வடிக்கத்தான் முடியும். சந்தோசங்களை பகிர நிறைய பேர்கள் என்னோடு இருந்த போது என் கஷ்டங்களை என்னோடு பங்கிட்டுக் கொண்டவளை எப்படி விட்டு விடும் இந்த மனது....?

முதுமை அழகானது...ஆழமானது! புரிதல் இருக்கும் பட்சத்தில் அது அற்புதமானது.....ஆனால் எப்படி பார்த்தாலும் அந்திமம் கொடுமையானது. சூன்யத்தின் அடர்த்தி நம்மை சூழும் போது, உயிரோடு இருக்கும் போதே மனிதர்கள் நம்மை நிராகரித்து உலகத்திலிருந்து ஒதுக்கி ஒரு மூலையில் கிடத்தி விடும் போது பேச்சுத் துணைக்கு கூட ஆட்களின்றி வெறும் வாயை மென்ற படி வானத்தை வெறித்துப் பார்த்தபடி மூன்று வேளை உணவுக்கும் இயற்கை உபாதைகளைத் தீர்க்கவும்தான் இந்த உடம்பு என்று ஆகிப் போகும் போது....அது எப்படி இனிமையாகும்....?

ரசித்தலும், அனுபவித்தலும் அந்திமத்தில் சாத்தியப்படாமல் போய்விடுவதற்கு புரிதலில்லாத வாழ்க்கை காரணமாய் ஆகி விடுகிறது. மரணத்தின் பக்கத்தில் நின்று கொண்டு, அதாவது அடுத்த நகர்வு மரணம் என்று தெரிந்த பின் மனம் மரணத்தைத்தான் ஆராயுமே அன்றி.....வாழ்க்கையை ரசிக்க முயலாது. நானும் மரணத்தை பால்யத்திலும், பருவத்திலும் ஆராய்ந்திருக்கிறேன் ஆனால் அதுவெல்லாம் யாருக்கோ நிகழுவதாய் மனம் கற்பனை செய்து கொண்டு தேடிப்பார்த்த நாடகங்கள்...

இதோ என் உயிரின் அடுத்த நகர்வு மரணம்.அது இருளாய் இருக்குமா? ஒளியாய் இருக்குமா? மரணிக்கும் போது வலிக்குமா? கடவுளர்கள் இருப்பார்களா...? இல்லையா...? என் உறவுகள் எல்லாம் அங்கிருக்குமா? எனக்கு தெரியவில்லை மனம் கனக்க தலை பாரமாக நடு  நெஞ்சுக்கூட்டுக்குள் ஒரு கடுமையான வலி பரவியது.

பரணில் அழுக்குக் கட்டாய் நான் வாசித்த புத்தகங்களும்....எழுதிய கட்டுரைகளும், கவிதைகளும் என்னைப் பார்த்து சிரித்தன...கூடவே வாழ்க்கை முழுதும்.....ஒவ்வொரு சூழலிலும் நான் யார் தெரியுமா ....? நான் யார் தெரியுமா ....?என்று உரக்க கேட்டு சண்டையிட்டதும், பல நேரங்களில் மனதுக்குள் நான் யாரோ என்று நினைத்துக் கொண்டு இறுமாப்பாய் இருந்ததும் சட்டென்று புத்திக்குள் எட்டிப்பார்த்தன...

இதோ...வலியோடு, அழுக்குகளோடு, ஒரு குப்பைக்காகிதமாய், நாற்றத்தோடு, முடிகள் கொட்டி, பற்கள் விழுந்து விழித்திரைகளிள் ஒளியிழந்து, இடுப்பில் உரமின்றி வாய் கோணிப்போய் எச்சில் வடிய அதை துடைக்கும் திரணியுமற்று......கடந்த காலத்தை எல்லாம் கனவு கண்டு கொண்டிருக்கும் ஒரு நாற்றப் பிண்டம் நான்.... 

மரணித்த கொஞ்ச நேரத்தில் பிணம் நான். நான் செய்த நன்மைகளையும் தீமைகளையும் பற்றி இந்த உலகம் பேசும். அப்படி பேசினால் எனக்கு என்ன? பேசாவிட்டால் எனக்கென்ன...ஒன்றுமில்லை....

இலக்கில்லா ஒரு பயணத்தில் நடுவில் நிறையவே இறுமாப்புடன் நடந்து கொண்டதும்,  மனிதர்களிடம் சண்டையிட்டதும், தலைக்கனங்கள் கொண்டதும், நிறைய பேரிடம் பேசாமல் இருந்ததும் நான் இழந்தவை அவ்வளவே....

வாழும் வரை எத்தனை பேரை நட்பு கொன்டோம், எவ்வளவு பேசி சிரித்தோம், எத்தனை பேரை சந்தோசப்படுத்தினோம்.....இது மட்டுமே மிச்சம். அதுவும் வெற்று நினைவுகளான மிச்சம்....!

அடிவயிறு கலங்கியது...உள்ளுக்குள் ஒரு உஷ்ணம் பீறிட்டு....உடம்பு முழுதும் வலியாய்ப் பரவியது. நரம்புகள் இழுத்துக் கொள்ள இரத்த ஓட்டத்தின் வேகம் மெல்ல மெல்ல தடைப்பட...நுரையீரல் சுவாசிக்க திராணியற்று சுருங்க, இதயத்திற்கு இரத்த ஓட்டம் தடைப்பட....மெதுவாய் அதன் துடிப்பினை நிறுத்த...புத்திக்கு பிராணன் கிடைக்காமல் மெல்ல மெல்ல ஒரு விளக்குகள் அணைவது போல மின்சாரம் அறுந்து விழ.....வாய் கோணிக் கொள்ள ஏதோ ஒன்று நிகழப்போகிறது என்று மனமாய் நின்று நான் பதற....

எதுவுமே தோன்றாமல்....என்ன செய்வது என்று தெரியாமல் உயிர் திகைத்து நிற்க....ஆயிரம் ஊசிகளை உடல் முழுதும் குத்தியது போன்ற ஒரு வேதனையில்...துடி துடித்து மேல் விட்டத்தை விழிகளாய் பார்த்தபடி...மெல்ல மெல்ல....நான் அடங்கிக் கொண்டிருந்தேன்....

.....


தேவா. S


பின்குறிப்பு: 

ஒவ்வொரு இழப்பும், ஒவ்வொரு மரணமும், ஒவ்வொரு பிரிவும் புதிய விசயங்களாய் பரிணமிக்கிறது. ஒரு அந்திமம் என்பது மரணத்தோடு முடிவதில்லை அது வேறு ஒரு பரிணாமத்தில் பிறக்கிறது. 400 பதிவுகளையும் ஒரு அந்திமமாய் கடந்து மீண்டும் மீண்டும் வெவ்வேறு எழுத்துகளாய் பிறக்க காரணமாய் சில காரியங்கள் என்னைச் சுற்றி நிகழுகின்றன. 

ரசனையான விழிகளுக்குச் சொந்தமான அத்தனை பேர்களும்தான் அந்த காரியமாய் நின்று மீண்டும் மீண்டும் ஏதோ ஒன்றை நான் படைக்க காரணமாகின்றனர். படைப்பவன் ஒரு வெற்றுக் கருவி....கர்த்தாவாக இருப்பது...எல்லாம் வல்ல வாசிப்பாளர்களே...!

எனது அன்பான நன்றி + வணக்கங்கள்!