Pages

Sunday, February 12, 2012

உடையாரின் அதிர்வலைகள்...12.02.2012கொஞ்சம் நாளாகிதான் விட்டது உடையார் பற்றி எழுத ஆனால் வாசிக்காமல் இருக்கவில்லை தொடச்சியாக ஒரு நகரப் பேருந்து செல்லும் வேகத்தோடு ஒரு நாளைக்கு இரண்டு பக்கங்கள் வாசிப்பதும், பின் அந்த வாசிப்பில் லயித்துக் கிடப்பதும் என்று மெல்ல மெல்ல நகர்ந்து கொண்டுதான் இருக்கிறேன்.

ஒரு பரபரப்போடு தொடங்கிய முதல் பாகத்தில் ராஜ ராஜ சோழனின் அதிரடியான ஆளுமை என்னவென்று புரிந்தது ஆனால் போகப் போக  ஒரு மனிதனின் மகா வெற்றிக்கு எத்தனை நல்ல மனிதர்களின் கூட்டு மற்றும் எதிரிகளின் சூழ்ச்சிகள் தேவை என்று தெளிவாக உணர முடிந்தது.

வெற்றிகளைக் குவித்து மிகப்பெரிய புகழுடன் இருக்கும் ஒரு பேரரசனுக்கு ஒரு கோயில் அதுவும் பிரமாண்டமாய் செய்ய வேண்டும் என்று தோன்றிய இடத்தை உற்று கவனிக்கையில்தான் வாழ்க்கையின் மிக முக்கியமான ஒரு விடயத்தை புரிந்து கொள்ள முடிந்தது அதாவது  திருப்தியின் அளவு பொருளோ, புகழோ, அல்லது போகமோ அல்ல...திருப்தியின் உச்சம் என்பது தன்னை உணர்தல் என்று....

தன்னைச் சுற்றிலும் பல தொழில்களை செய்யும் மக்களைத் கொண்டிருந்த இராஜ இராஜசோழன் என்னும் சக்கரவர்த்தி அத்தனை பேரையும் கையாளும் விதத்தை எழுத்துச் சித்தர் வெளிப்படுத்தியிருக்கும் விதம் மிக அலாதியானது. வாசிக்க வாசிக்க சுகமானது. கருமார்கள் எனப்படும் ஆயுதம் செய்யும் தொழிலைச் செய்யும் மக்களை நேசிக்கும் புலிக்குட்டி என்று வர்ணிக்கப்படும் இராசேந்திர சோழனின் வேகத்தையும், இராஜ இராஜசோழனின் அனுபவம் செறிந்த நிதானம் கொண்ட தெளிவையும் வார்த்தைகளுக்குள்  எப்படி கொண்டு வந்தார் பால குமாரன்....?

சிறுவயதில் முதன் முதலாய் நீங்கள் அனைவரும் யானையைப் பார்க்கும் போது எப்படி பார்த்து இருப்பீர்கள்....ஆ.ஆ.....ஆ........ என்று வாய்பிளந்து...அட இது என்ன விலங்கடா..இது இவ்வளவு பெரிதாய்? இவ்வளவு வலிதாய், அட இது என்னடா காது இவ்வளவு பெரிதாயிருக்கிறதே...? அட இது என்ன நாசியா....?அதன் பெயர் துதிக்கையா....இவ்வளவு நீளமா..? என்றெல்லாம் வியந்து பார்த்திருப்போம் தானே...?

அப்படியான ஒரு ஆச்சர்யத்தோடே நான் வாசித்துக் கொண்டிருப்பதால் என்னால் அதை விட்டு வெளியே வந்து ஒன்றும் தனியே பகிர முடியவில்லை. 

கருமார்கள் எனப்படும் ஆயுதப் படைக்கலன்களை செய்பவர்களை இராசேந்திர சோழன் மிகவும் நேசிக்கிறார். காரணம் இராசேந்திர சோழன் ஒரு மிகப்பெரிய போர் வீரன். சோழர்களின் ஆயுதங்களை வடிவமைப்பதில் இருக்கும் நேர்த்தியின் பலன நேரடியாக அவர் அனுபவித்து இருக்கிறார். போர்க்களத்தில் யானை மீது ஏறி அமர்ந்து வாள் உயர்த்தி எதிர்ப்படைகளுக்குள் உள் நுழைந்து செல்லும் போது....

படைகளை பிளந்து கொண்டு முன்னேறுகையில் போர் வீரனின் கையிலிருக்கும் ஒரே நம்பிக்கை ஆயுதம். மழையைப் போல சீறிப்பாயும் எதிரிகளின் அம்புகளுக்கு நடுவே முன் செல்லும் போது தன் கையிலிருக்கும் வாளை வீசி எதிரியின் தலை கொய்கையில் வாளின் நேர்த்தியும் அதன் கூர்மையும் உடனே, உடனே தனது வேலையை முடித்து விட வேண்டும்.சண்டையைப் பொறுத்த வரை வேகம்  முக்கியமல்லவா...? வேகத்தை ஆயுதங்களின் நேர்த்தியின்மை கெடாமல் காக்குமெனில் அதைச் செய்தவனை ஒரு போர் வீரன் எப்படி போற்றுவான்....?

இராசேந்திர சோழன் தான் ஒரு போர் முடிந்து வந்து தனது தலை மற்றும் உடல் கவசத்தை எடுத்து தமது தளபதிகளிடம் காட்டுகிறார். அந்த கவசங்களின் எல்லா பாகங்களிலும் சிறிது கூட இடைவெளியின்றி எதிரிகளின் அம்புகள் துளைத்து எடுத்து இருந்தும் ஒரு அம்பு கூட அந்த கவசத்தைக் கடந்து அவரின் உடல் தொடவில்லை....! அவ்வளவு நேர்த்தியாக ஆயுதத்தை வடிவமைத்து இருந்தனர்...கருந்தட்டாங்குடியில் வசித்த கருமார்கள்.

கருமார்களின் தொழில் பக்தி ஒரு வீரனை வலுவுள்ளவனாக்கி வெற்றியைத் தேடித் தருகிறது. தேசத்தின் வெற்றிக்கு மறுக்கமுடியாத ஒரு காரணமாய் கருமார்கள் இருக்கையில் அவர்களை ஏன் சீராட்டக் கூடாது....? இது இராசேந்திர சோழனின் எண்ணமாயிருந்திருப்பதில் தவறுகள் ஏதும் இருக்க முடியாது தானே...?

நூறு பேர் சேர்ந்து நின்றால் அது எவ்வளவு பெரிய ஒரு கூட்டமாய் நமக்குத் தெரியும்...? ஒரு பத்தாயிரம் பேரை அதுவும் போரில் வெற்றி கொண்ட  கங்க தேச, சாளுக்கிய, சேர, பாண்டிய தேசத்து வீரர்களை திறந்த வெளி பொட்டலில் திருவொற்றியூரில் அடைத்து வைத்து அவர்களை பராமரிப்பது என்ன சாதாரண காரியமா? இரேசேந்திர சோழன் அதை மட்டும் செய்யவில்லை.தன் தந்தையின் கோவில் கட்டும் பணிக்கு உதவப் போவது மனித வளம் மட்டுமே என்று உணர்ந்து....

சிவபணியில் ஈடுபடுத்தி கொள்பவர்கள் தஞ்சை செல்லலாம், ஒருவேளை வரவிருப்பமில்லையெனில் உங்களுக்கு இப்போதே விடுதலை தருகிறேன் என்று கூறி அப்படி சென்ற சொற்பமான பேரை மட்டும் விட்டு விட்டு மீதமிருந்த அதிகமான அடிமை வீரர்கள் தானே விரும்பி வரும் வகையில் அவர்களுக்கு சுதந்திரம் கொடுத்து தஞ்சைக்கு அனுப்பி வைத்திருக்கிறார் என்றால்..., இராசேந்திரன் எவ்வளவு பெரிய வீரனென்று நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை.

வெற்றிக் கொள்பவன் மட்டுமல்ல வீரன்....! தோல்வியுற்ற மனிதர்களை மனித நேயத்தோடு நடத்துபவன் தான் மாவீரன்...! இராசேந்திரா சோழன் மாவீரன்..!

அடிமை வீரர்களை அனுப்பி விட்டு தஞ்சைக்கு வரும் வழியில் தனக்குப் பிடித்த கருமார்களை குடந்தைக்கு அருகில் சந்திக்கும் இராசேந்திர சோழன்..., அவர்களின் கோரிக்கையான தாங்களும் முப்புரி நூல் (பூணுல்) அணிய வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்றி வைப்பதாக தரையில் அடித்து புழுதி பறக்க...சங்கல்பம் செய்கிறார்....

சனாதன தர்மத்தின் அடிப்படையில் ஆட்சி செய்து வந்த சக்கரவர்த்தி இராஜ ராஜ சோழனே எதிர்ப்பார்க்காத ஒரு விடயத்தை இராசேந்திர சோழர் சத்தியம் செய்து கொடுத்ததை எவருமே எதிர்ப்பார்க்கவில்லைதான்..உடையார் இராஜ இராஜத் தேவர் உள்பட..

நிறைய அந்தணர்களைக் கொண்ட சோழ தேசத்தில்......கருமார்கள் முப்புரிநூல் அணிந்தால் அவர்கள் முகம் சுழிப்பார்களே...! அந்தணர்கள் நேரடியாக மோத மாட்டார்களே....உள் நாட்டு குழப்பங்கள் உண்டு பண்ணுவார்களே.....பேசிப் பேசி ஒருவரை ஒருவர் மோத விடுவார்களே...

இப்படியெல்லாம்....என் எழுத்துலக குருநாதர் பாலகுமாரன் விவரித்துக் கொண்டே செல்வார். பாலகுமாரனும் ஒரு பிராமணர்தான் என்றாலும் பிராமணர்களைப் பற்றி அக்கு வேறு ஆணிவேறாக பிரித்து மேய்ந்து இருப்பத் ஆச்சர்யம் இல்லைதான் என்றாலும் எதிர்மறையான கருத்துக்களை எழுத ஒரு துணிச்சல் வேண்டுமே....>

என்னை பொறுத்த வரையில் பாலகுமாரன் மதம், சாதி எல்லாவற்றையும் கடந்த நிலையில் தற்போது இருப்பவர் என்பதை தெளிவாக நான் அறிவேன். அது மட்டுமல்ல உடையார் என்னும் நாவலை வெறும் கதையைச் சொல்வது போல சொல்லிச் செல்ல வெறும் கதாசிரியரால்  முடியும்...ஆனால் பாலகுமாரன் அங்கே வாழ்ந்திருக்கிறார். நம்மையும் எழுத்துக்கள் என்னும்கை பிடித்து அந்த கால கட்டத்திற்குள் வாழ அழைத்துச் செல்கிறார்.

இராஜ இராஜ சோழன் தலைவன் என்றால்........இராசேந்திர சோழன் புரட்சித் தலைவன்..என்றுதான் சொல்ல வேண்டும்.

ஆமாம்....சாதி சமய வேறுபாடுகள் கடந்து அந்த காலத்திலேயே கருமார்களின் சேரியில் அப்போதே அமர்ந்து உணவு உட்கொள்ளவும், அவர்கள் வீட்டில் படுத்துறங்கவும் செய்தவன் புரட்சித் தலைவன் தானே...

தலைவருக்கும் புரட்சித் தலைவருக்கும் நடக்கும் தீப்பொறி பறக்கும் மோதல்களை வரும் வாரங்களில் பார்ப்போம்....!

கல்வெட்டு:

“ நாம் எடுப்பிச்ச திருக்கற்றளி ஸ்ரீராஜராஜீச்சரமுடையார்க்கு நாங்குடுத்தனவும், நம் அக்கண் கொடுத்தனவும் நம் பெண்டுகள் குடுத்தனவும் மற்றும் குடுத்தார் குடுத்தனவும் ஸ்ரீவிமானத்தின் கல்லிலே வெட்டுக என்று திருவாய் மொழிந்தருள, கல்லில் வெட்டின. யாண்டு இருபதாவது நாள் முன்னூற்றொரு பத்திரண்டினால் உடையார் ஸ்ரீராஜராஜதேவர் குடுத்த ஸ்ரீபலி எழுந்தருளும் பொன்னின் கொள்கை தேவர் ஒருவர் ஆடவல்லான் என்னுங் கல்லால் நிறை எண்ணூற்றிருபத்தொன்பதின் கழஞ்சேய் முக்காலே மூன்று மஞ்சாடி நாளதினாலேயே டுத்த பொன்னின் பத்மாஸன ஸ்ரீபலி தலம் ஒன்று மேற்படி கல்லால் நிறை தொள்ளாயிரத்து தொன்னூற்றைய்ங் கழஞ்சரையே நாலுமஞ்சாடி”.


சோழம்...! சோழம்...! சோழம்...!

தேவா. சு2 comments:

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

புரட்சித் தலைவர்... இராஜேந்திர சோழரைப் பற்றி.. பாலகுமாரன் அவர்களின் எழுத்தில்.. நீங்கள் ரசித்ததைப் பகிர்ந்த விதத்தில்.. எனக்கும் உடையார்... படிக்க.. மற்றும் மேலும் தெரிந்து கொள்ள ஆவல் வந்து விட்டது.. விரைவில் படிக்கிறேன். உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

ரசிகன் said...

மண்ணை வெல்ல வாள் கொண்டு இரை தேடும் கடற்புலியும், விண்ணை வெல்ல கலை கொண்டு இறை தேடும் அருண்மொழியும் செய்யவிருக்கும் விவாதம் காண மூன்றாம் பாகம்தான் நானும் தொடரவிருக்கிறேன்.. உங்கள் அதிர்வலையின் பலத்தை ரிக்டரில் அளந்து நீங்கள் அறிய முடியாது.. எனவே பின்னூட்டம் மூலம் தெரிவிக்கிறேன்.. உங்களால் அறிமுகம் செய்யப்பட்ட உடையார், பால குமாரன் அவர்களின் புத்தகங்களை தேட வைத்திருக்கிறார்.. நன்றி.