Pages

Saturday, April 30, 2011

தேடல்...30.04.2011

ஒரு மழை அடித்துப் பெய்து முடித்த பின் பளீச் சென்று கழுவி விட்ட தார்ச் சாலைகள் போலவும், கரும் மேகங்கள் கலைந்த வானம் போலவும் இருக்கிறது மனது. கடந்த மூன்று மாதங்களாக இந்த ஒரு மனோநிலைக்கு நான் வரமுடியாமல் போனதற்கு காரணம் புறச்சூழல், உணவு மற்றும் ஒரு அலட்சியம்.

எப்போது எல்லாம் அகங்காரம் அற்றுப் போய் நான் நிற்கிறேனோ அப்போது எல்லாம் இப்படி ஒரு நிலை எய்துவதும் பல நாட்கள் இப்படியே நீடிப்பதும், எப்போது மாறியது என்று தெரியாமல் ஒரு வித இறுக்கம் உள்ளே பரவிப் போவதும், ஐந்து கால் (அது என்ன ஐந்து கால்? மனதுக்கு ஆயிரம் கால் கூட இருக்கும்) பாய்ச்சலில் மனம் புறம் நோக்கி ஓடுவதும் நடந்தேறிப் போகிறது.

மனித மூளை வற்றாத ஜீவ நதி, சரியான விகிதத்தில் ஆக்ஸிஜன் செல்லும் போது சரியான நினைவலைகளை அது கிளறி விடுகிறது. சரியான அளவில் ஆக்ஸிஜன் செல்ல சரியான அளவில் சுவாசிக்க வேண்டும். சரியான அளவில் சுவாசிக்க புறச்சூழலின் தாக்கம் சரியாக இருக்க வேண்டும். மனம் சம நிலையில் இருக்க வேண்டும். எல்லோரும் சுவாசித்துக் கொண்டுதான் இருப்போம் ஆனால் சுவாசிக்கும் வேகம் சீராயிருக்காது.

அகங்காரம் உள்ள மனம் கொண்டவர்களின் உடலில் எப்போதும் உஷ்ணம் கூடுதலாகவே இருக்கிறது. இந்த உஷ்ணத்தின் காரணமாக சுவாசிக்கும் வேகம் அதீத கதியில் நடக்கும் அப்போது சுவாசிக்கும் பிராணானும் உள்ளே இழுத்த வேகத்தில் சூடாக உள்ளே செல்கிறது. உஷ்ணமான பிராணன் எப்போதும் ஒருவித எரிச்சலுடன் எண்ணங்களை பரவ விடுகிறது.

இன்னும் சிலர் ஆழ சுவாசிப்பதே இல்லை மேலோட்டமாகவே சுவாசித்து குறைந்த அளவே ஆக்ஸிஜனை உள்ளே அனுப்பி நினைவுகளின் வலுவும் குறைந்தே இருக்கிறது. சுவாசம் சீராக இருக்க புத்தி குளுமையாய் இருக்கிறது. பதட்டமில்லாத மூளையில் இருந்து தெளிவான எண்ணங்கள் பிறக்கின்றன. ஒரு பிரச்சினையும், அதன் மூலமும் அதன் தீர்வுகளும் தெளிவாகவே தெரிகின்றன.

தற்போது நான் கண்டு உணர்ந்து கொண்டிருக்கும் ஒரு மிகப்பெரிய சமுதாய சீர்கேடு என்னவென்றால் இணைய உலகம் என்ற மாயாலோகத்தில் மனிதர்களைப் பற்றியும் சூழலைப் பற்றியும் கற்பனையிலேயே கணித்து, கற்பனையில் ஒரு உலகம் தோன்ற அதில் லயித்து அங்கே இருந்து முடிவுகளை மிகைப்பட்ட மனிதர்கள் எடுக்கிறார்கள்.

இந்த விர்ச்சுவல் நினைவுகள் அத்தனையும் பொய்யானது என்பதை என்னால் அறுதியிட்டு கூற முடியும். இப்படி கற்பனையில் ஒரு உலகம், அங்கே அரசன், அங்கே ஞானி, அங்கே ஒரு விகடகவி, அங்கே ஒரு அமைச்சர், அங்கே ஒரு இளவரசன், இளவரசி, கதாநாயகன், கதாநாயகி, காதலி, ரெளடி, வில்லன், பொறுக்கி என்று ஒரு பெரிய மாயா பஜாரே இங்கே நடக்கிறது.

எதிரில் இருக்கும் சகோதரனும், சகோதரியும் பிள்ளைகளும், கணவனும், மனைவியும் ஆபத்தான சூழ்நிலைகளும், சந்தோச சூழ்நிலைகளும் இந்த கனவு உலகத்தின் முன்னால் வெறும் புள்ளியாய் இரண்டாம் தர வாழ்க்கையாய் போய் விடுகிறது. பொய்யின் முன்னால் எதார்த்தம் மண்டியிட நமக்கே தெரியாத ஒரு புற்று நோய் நிஜ வாழ்க்கையை அரிக்கத் தொடங்கியிருப்பதை உடனடியாக உணர முடியாது. ஆனால் இதன் விளைவுகள் கடுமையானவை என்பதை என் உறவுகளுக்கும், நட்புகளுக்கும் சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.

கற்பனையில் கவிதை படைக்கலாம், கதை எழுதலாம், கட்டுரை எழுதலாம் ஆனால் வாழ முடியாது என் சொந்தங்களே!!!! வாழ்க்கையின் எதார்த்த பக்கங்களில் கற்பனைக்கு வேலையே இல்லை. மன விவரித்தல்களில் அகப்பட்டு எங்கோ சென்று விடாதீர்கள்...இங்கே நாம் நம்பிக்க் கொண்டிருக்கும் சில அங்கீகாரங்கள் எல்லாமே வெற்று ஜோடனைகள்.....!

நமது நிகழ்காலம் மட்டுமே நிஜம். இங்கே நேரம் போக பொழுது போக்குவது தவறல்ல..ஆனால் இதை வாழ்க்கையாக பார்க்க ஒரு பக்குவமும் உயர்தர புரிதலும், அனுபவமும் தேவை. நாகரீக உலகின் ஒரு ஒப்பற்ற வெளியில் இருக்கும் ஒரு அபாய புள்ளியினை உற்று நோக்க மறவாதீர்கள்.

பாருங்களேன் நான் ஏதோ சொல்ல எங்கோ வந்து விட்டேன் எப்படியிருந்தாலும் ஏதோ ஒன்று மனதில் அழுந்திக் கிடந்தது அதை கூறிவிட்டேன்.

அதே போல ஒரு படைப்பாளியைப் பற்றியும் அதீத கற்பனையும் கொள்ளாதீர்கள் படைப்பினை ரசிக்கும் போது அதை படைப்பாளின் வாழ்க்கையோடு சம்பந்தப்படுத்தி விடாதீர்கள். குறிப்பாக ஒரு காதல் கவிதை எழுத வேன்டுமெனில் நான் அதற்குண்டான மனோநிலைக்குப் போனால் போதும், ஒரு பாடலோ, ஒரு படமோ, ஒரு கவிதையோ அல்லது கடந்த கால நிகழ்வோ இத்தைகைய சிந்தனைக்கு உரமாய் போய்விடுகிறது. இங்கேதான் கற்பனை சிறகை விரித்து ஏகாந்த வானில் பறக்க முடியும். ஒரு காதல் கவிதையை ஏக்கத்தில் எழுதி விடுவதாலேயே அவன் காதல் ஏக்கத்தில் இருக்கிறான் என்ற எண்ணமும் தவறே...

நீங்கள் என்னை சக்கரவர்த்தியாக பாவித்தீர்களேயானால் சீக்கிரமே என்னை பிச்சைக்காரன் என்று கூறப் போகிறீர்கள். என்னை பிச்சைக்காரன் என்று நினைத்தால் என்னை சக்கரவர்த்தியாக பார்க்கப் போகிறீர்கள். ஆகையால் எந்த அனுமானமும் கொள்ளாதீர்கள். கட்டுரைக்குள் ஏதேனும் கருத்து கிடைத்தால் அதில் ஏதேனும் அர்த்தம் இருந்தால் எடுத்துக் கொள்ளுங்கள். இல்லையேல் நேரே குப்பைத் தொட்டிக்கு கட்டுரையை அனுப்பி விட்டு அடுத்த வேலையைப் பாருங்கள். படைப்பாளியோடு தொடர்பே படுத்தாதீர்கள்!

ஆன்மீகத் தேடலில், அந்த ஆசையில் எனக்கு கிடைக்க வேண்டிய நான் அடைய வேண்டி வழிமுறைகளை நான் எழுத்தாக்கி இருக்கலாம். நான் பயிற்சி எடுக்கும் களமாக வலைப்பூ இருக்கலாம். முழுமையை நோக்கிய எனது பயணத்தில் இவை எல்லாம் எனக்கு மைல் கற்கள். நான் முழுமையாயிருந்தால் ஏன் கணினையைத் தட்டிக் கொண்டு, கதையும், கவிதையும் எழுதிக் கொண்டு இருக்கப் போகிறேன்?

எவ்வளவு காலம் இவையெல்லாம் தொடருவேன் என்று எனக்குத் தெரியாது ஆனால் அதிக எண்ணிக்கையில் கட்டுரைகள் கொடுப்பதிலும், அதிக வாசிப்பாளனைப் பெறுவதிலும் இல்லை என் திருப்தி....! மொத்தமாய் எனக்கு போதும் என்று தோன்றும் அன்று திரும்பிக் கூடப் பார்க்காமல் இவை எல்லாம் விட்டு போகத்தான் போகிறேன்.

அதுவரையில் அது நிகழ காத்திருக்கிறேன்!

சீக்கிரம் வா மழையே
உப்புக் கல்லாய் இருக்கும்
என்னை கரைத்தே ...
போட்டு விடு!


தேவா. S

Wednesday, April 27, 2011

நினைவுகள்...!


தனிமையில் எழுதிக் கொண்டிருக்கிறேன்
உன்னோடான நாட்களின் நினைவுகளை...
பக்கங்கள் எல்லாம் வார்த்தைகளை
நான் எழுத எழுத அவை ..
வார்த்தைகளை விழுங்கிவிட்டு கனவுகளை
நிரப்பிப் போட்டு சிரிக்கின்றன?

நான் நிமிர்ந்து வானம் நோக்குகிறேன்..
இருளுக்கு முந்திய அந்தி நேரத்து
ஒப்பனையில் மின்னும் ஒரு ஓற்றை நட்சத்திரம்
உன்னோடு ஒரு நாள் பேசி சிரித்ததை
பளீச் சென்று என் புத்திக்குள் பாய்ச்சி விட்டு...
எதுவுமறியாதது போலவே ஒளிர்கிறது...!

நான் மீண்டும் பேனாவினை விரட்டுகிறேன்
பளீச் சென்ற காகிதச் சாலைக்குள்
என் வார்த்தைகளை தேடி..
மீண்டும் என் மூளைக்குள் பயணிக்கிறேன்..
மூளையின் திசுக்களுக்குள்ளிருந்து...
வரும் சப்தமான விசும்பல்களில்
உன் குரலோசையே கேட்கிறது...!
வார்த்தைகளை தேடி வந்தவன்
வழி தடுமாறி நிற்கிறேன்.. என்னுள்ளேயே!!!

கவிதையை காலத்திடம் தொலைத்து விட்டு...
வார்த்தைகளுக்கு வர்ணம் அடிக்கும்
என் மடைமையின் விளிம்புகளில் எல்லாம்
உன்னோடன நாட்களை தொலைத்த
சோகங்கள் எல்லாம் ஒன்று கூடி
என்னை எள்ளி நகைக்கின்றன!

உன்னோடான வாழ்க்கையை...
மெல்ல மெல்ல நினைவுகளிலிருந்து
உருவி என்னுள் நிறைத்து
ஒற்றையாய் வாழ நினைக்கும்
ஏக்கங்கள் எல்லாம் ஒன்று கூடி...
மீண்டும் என்னை தூண்டுகின்றன...
ஏதாவது ஒரு கவிதை எழுதேன் என்று....

இதோ..

தனிமையில் எழுதிக் கொண்டிருக்கிறேன்
உன்னோடான நாட்களின் நினைவுகளை...


தேவா. S


Monday, April 25, 2011

ஹாய்...25.04.2011!
ஹாய்...! எப்டி இருக்கீங்க? நலமாக இருக்கீங்களா? கட்டுரைகளுக்கும், கவிதைகளுக்கும் இடையே நின்று பேசும் போது வரைமுறைகள் இருப்பதாலேயே ஹாய் என்ற தனி தொகுப்பினை வெளியிட நேர்ந்தது என்று ஏற்கனவே கூறியிருக்கிறேன். இதில் என்ன வசதி என்றால் நாம் ஒரு சில நிர்ப்பந்தங்களை தவிர்த்து விட்டு .. மேடைப்பேச்சு போன்று...."நான் என்ன கூறுகிறேன் என்றால் " என்ற ரீதியில் வசனப்படுத்த வேண்டிய அவசியம் கிடையாது.

இப்படியே போய்க் கொண்டிருக்கும் ஹாய் பகுதியின் அடுத்த பரிமாணமாக ஹாய் பகுதில் எழுதுவதோடு மட்டுமில்லாமல் அதை ஆடியோ போட்காஸ்ட்டாக (Podcast) போடலாமே என்று நிறைய நண்பர்கள் வலியுறுத்தினார்கள். சோ.. சீக்கிரமே ஹாய் ஆடியோ வடிவத்தில் வருவதற்கான ஏற்பாடுகளை நண்பர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள்.

சரி...சரி..எவ்வளவோ பண்றோம் இதைப் பண்ணமாட்டமா? அப்டீன்னு ஒரு தைரியம்தான்.. ஏன் கேக்க ஆளு இல்லானு நினைச்சிட்டியா அப்டீன்னு தானே கேக்குறீங்க? அதான் நீங்க இருக்கீங்களே...ஹா ஹா ஹா....

சரி இப்போ ஸ்ட்ரெய்ட்டா.....மேட்டருக்கு வருவோம்...

கண்ணால் காண்பது, காதால் கேட்பது, உடலால் உணர்வது என்று முழுக்க முழுக்க புலன் வயப்பட்ட வாழ்க்கைதானே எல்லோருக்கும் பரிச்சயமாகியிருக்கிறது. புலன்கள் வெளியே ஓடி எதையோ பார்த்து எதையோ கேட்டு எதையோ நுகர்ந்து, எதையோ ஸ்பரிசித்து அதை மூளைக்கு செய்திகளாய் அனுப்பும் அதன் பொருட்டு நமது வாழ்க்கை நகரும் என்பது இயல்பான ஒன்று. ஒவ்வொரு மனிதனின் அறிவும் அவனது புலன்களின் எல்லையிலேயே மண்டியிட்டு விடுகிறது.

சிலருக்கு அதிக எல்லைகள் கொண்ட அறிவு இருக்கிறது. சிலருக்கு குறுகிய எல்லைகள் கொண்ட அறிவு இருக்கிறது. நானும் நீங்களும் கண்டிருப்பது நமது புலன்களின் எல்லையே ஆனால் அதனை தாண்டியும் வாழ்க்கையிருக்கிறது விசயங்கள் இருக்கிறது. இங்கே அறுதியிட்டு பேசும் பேச்சுக்கள் எல்லாம் மடைமை என்று ஏன் நமக்கு பிடிபடுவதில்லை?

தான் வாசித்த புத்தகங்களும் அதன் கருத்துக்கள் மட்டுமே தமது அறிவு என்று சிலர் இயம்பித் திரிவதை பார்த்தால் பாவமாக இருக்கிறது. நமது இருப்பும், சுற்றங்களின் இருப்பும் பற்றி உணர்ந்து கொள்ளும் பக்குவம் இருக்கிறதா முதலில் என்று யோசிக்க வேண்டும். காலங்கள் தோறும் கருத்துக்களை சொன்ன தத்துவவாதிகளும், ஆன்ம கருத்துக்களை சொன்ன ஆன்மீகவாதிகளும் தம்மின் சூழல், மற்றும் தாம் அனுபவித்து உணர்ந்த வாழ்க்கை இதன் பொருட்டுதானே தமது கருத்துக்களை பகிர்ந்து சென்றிருப்பர்.....

எவர் எது கூறியிருப்பினும் அதை சமகாலத்தோடு சேர்த்து ஒப்பிட்டு பார்த்து அறிவுக்கும் நாம் வாழும் சூழலுக்கு எது ஒத்து வருகிறதோ அதை பின்பற்றி எது ஒவ்வவில்லையோ அதை நிராகரித்துப் போவதில் என்ன சிரமமிருக்கிறது. எவரிடமும் வாய் திறக்க் முடியவில்லை...ஓராயிரம் உதரணங்களும், அவர் கூறிவிட்டார் இவர் கூறிவிட்டார் என்று அத்தாரிட்டி எடுத்து அதை நமக்கு தேவையில்லாதா கருத்தாய் இருந்தாலும் சுமந்து கொண்டு அறிவு அடிமைகளாய் நகர்ந்து கொண்டிருக்கிறது சம காலச்சமுதாயம்....!

அறிவு விசாலமாவது எப்போது தெரியுமா? கற்றதை நமக்கு ஏற்றார் போல விளங்கி நடக்கும் போதும் மற்றும் நாம் விரும்பும் சூழலை புறத்தில் நாம் மற்றவருக்கு படைக்கும் போதும் தான். இவ்விரண்டும் இல்லாத எல்லாமே மூளைகளல்ல பாழும் கிணறுகள் என்று தைரியமாக பகிரலாம். எழுத்தாளர் பாலகுமாரனை பற்றி ஒருவர் என்னிடம் கேட்டார்? ஏன் அவருக்கு இரண்டு மனைவிகள் இருக்கிறார்கள்? இவரெல்லாம் ஒரு எழுத்தாளரா இவர் சொல்வதை எல்லாம் நாம் கேட்க வேண்டுமா என்று....

ஒரு வாதத்திற்கு சண்டை போடவேண்டுமெனில் நானும் திருப்பி கேட்டிருப்பேன்.. 3 அல்லது 4 பேரை திருமணம் செய்து கொண்டவர்களை எல்லாம் அரசாள விட்டு விட்டு வாழ்க, ஒழிக கோசம் போட்டு நகர்ந்து கொண்டிருக்கும் ஒரு சமுதாய ஓட்டத்தில் பாலகுமாரன் இரண்டு மனைவிகள் கொண்டதை ஏன் பெரும்பிழையாக பார்க்கிறீர்கள் என்று....

ஆனால் நான் அப்படி கேட்கவில்லை மாறாக அவரின் இரண்டி மனைவியரும் உங்களிடம் வந்து ஏதாவது பாலாவைப் பற்றி குறை கூறினார்களா? இல்லை பாலகுமாரன் உங்களிடம் குடும்பம் நடத்த சிரமமாக இருக்கிறது என்று எதுவும் கூறினாரா? அவர்கள் வாழ்க்கையை அவர்கள் சுகமாக வாழும் போது உங்களுக்கு ஏன் தேவையில்லாத கேள்விகள்...என்று சொல்லி விட்டு வந்தேன்...

தத்தம் கை கால்களில் நீண்டிருக்கும் நகங்களை சீராக வெட்டி சுத்தமாயிருக்கத் தெரியாது ஆனால் உலகத்தில் இருக்கும் எல்லோருடைய வாழ்க்கைக்கும் தீர்ப்பு சொல்ல சரவணா ஸ்டோர்க்கு சென்று கொண்டிருப்பார்கள். அட...சரவணா ஸ்டோருக்கு எதுக்கு என்று கேட்கிறீர்களா...? சொம்பு வாங்கத்தான்...!

தீர்வுகளை எப்படி சொல்லவேண்டும் அல்லது எங்கிருந்து ஆரம்பிக்க வேண்டும் என்ற தெளிவில்லாதவர்கள் எல்லாம் உலகத்திற்கு பாடம் சொல்லும் நாட்டாமைகள் ஆகிவிடுகிறார்கள். முரணிலிருந்து எப்படி தெளிவை ஆரம்பிக்க முடியும்? தெளிவைச் சொல்ல தெளிவிலிருந்துதானெ செயல்கள் தொடங்கப்பட வேண்டும்.

சூழலும் வாழ்க்கையும் வசதியாய் ஒரு இடத்தில் உட்கார வைத்து விட அந்த அதிகாரத்தில் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்று முடிவு கட்டிவிடுகிறார்கள். உலகில் இருக்கும் எல்லோரும் என்னைப் போலவே இருக்க வேண்டும் அல்லது எனது சித்தாந்தத்தோடு ஒத்துப் போகவேண்டும் என்று நினைக்கும் மூளைகள்தான் முட்டாள்களுக்குச் சொந்தமானவை....

நாம் கொண்டிருக்கும் கருத்துக்களின் மூலம் ஏதோ ஒரு படிப்பினையை நமது மூளை கிரகித்து வைத்திருப்பதால்தான் அதையே பிடித்து கொண்டு தொங்குகிறது. அது மட்டுமன்றி ஒவ்வொரு மனிதனின் மூளையும் தான் செய்வது சரி என்றுதான் சிந்திக்குமாம்....! இப்படி சிந்திப்பதாலேயே ஒட்டு மொத்த உலகமும் ஒழுங்கின்றி இயங்குவதாய்த் தோன்றுமாம்....

நாம் உதராணமாய் கொள்ளும் சீர்திருத்தவாதிகளும் புரட்சியாளர்களும் தங்களை தமது கருத்துக்களுக்கு முதற் பலியாக்கிவிட்டுத்தானே வீதிக்கு வந்தார்கள் கருத்து தெரிவிக்க...! சமகாலத்தில் அப்படியா நடக்கிறது....? நாம் நாலு பேரை திட்டினால் அவன் சரியில்லை, இவன் சரியில்லை என்றால் குறைந்த பட்சம் என் முதுகை நீங்கள் பார்க்க மாட்டீர்கள் அல்லவா? மேலும் நான் என்னை நல்லவனாக காட்டிக்கொள்ள இது ஒரு வாய்ப்பு அல்லவா....?

நேற்று சத்ய சாயி பாபா மரணமடைந்து விட்டார். சரி...ஒரு மனிதர் மரணித்து விட்டார் என்றளவில் மட்டுமே பார்க்கப்பட வேண்டிய விடயம் அது.....அவரின் மரணத்தை வைத்து அவரைக் கடவுளாக கொண்டிருந்தவர்களை சாடும் தருணமாக மாற்றிக் கொண்டு கருத்துக்களை தெரிவித்திருப்பது அறிவின் சொச்சமா இல்லை அறியாமையின் உச்சமா?

அவர் தன்னை கடவுளாக சொன்னதும், அவரை பின்பற்றி மூடத்தனமாக அவரைக் கடவுள் என்று வழிபட்டவர்களுக்கு அவர் கடவுள் இல்லை என்று நிறுவ மரணம் மட்டும்தான் உங்களுக்கு கிடைத்த வலுவான ஆதாரமா? சத்தியத்தில் தன்னை கடவுளின் தன்மையாக...பிரபஞ்ச சக்தியின் பகுதியாக கருதியவர்கள் தன்னை வணங்குவதை எப்போதும் ஆதரிக்க மாட்டார்கள், அவர்களுக்கு கூட்டமும் பேரும் புகழும் தேவையில்லை.....காலங்கள் தாண்டிய ஒரு இயக்கத்தின் மூலத்தை உணர்ந்தவர்கள்....இங்கே உண்டக்கட்டிக்கும்....உருளைக்கிழங்கிற்கும் வந்து நிற்கப்போவதில்லை...!

வாசித்த புத்தகங்களும், கருத்துக்களை ஆயிரக்கணக்கானவர்கள் முன் வசியப்படுத்தும் வகையில் கூறி மோடி மஸ்தான் வேலை செய்பவர்கள் தன்னை கடவுளாக சொல்லிக் கொள்வதும் தவறு....அவர்களை கடவுளர் என்று பின்பற்றுவதும் தவறு....! அதே போல ஒருவர் கடவுள் தன்மை உடையவர் அல்லர் ஏனென்றால் அவர் சுவாசம் முட்டி சாதரணமாகத் தானே இறக்கிறார், அவருக்கும் பசிக்கிறது, அவரும் அழுகிறார் என்று கூறுவதும் தவறு என்று நான் அத்தாரிட்டி எடுத்து சொல்லலிங்க பாஸ்...இது என்னோட கருத்து.

சத்திய சாயிக்கள் வேண்டுமானால் பகட்டாய் வாழ்க்கை நடத்தி மக்களுக்கு தம்மை கடவுளர் என்று சொல்லி மாய்ந்து போயிருக்கலாம். அப்போதும் கூட அவரின் கொள்கைகளுக்கு முரண்பட்டு இன்று அனுதாபங்களைத் தெரிவிப்பவர்கள் அவர் உயிரோடு இருக்கும் போது போர்ப்பரணி பாடி மக்களை திருத்த ஏதேனும் முயற்சி எடுத்திருப்பார்களா என்றால் கிடையாது....!

மரணம் எல்லோருக்கும் வரும்...! தோன்றின மறையும் ...மறைந்தன தோன்றும் இது விதி....! பட்டினத்தாரும், அருணகிரி நாதரும், வள்ளலாரும், மறைந்துதான் போனார்கள்.புத்தனும், 18 சித்தனும் மரணித்துதான் போனார்கள். அவர்களுக்கும் இதே ரீதியிலான பஞ்சாயத்தைதான் கூட்டுவார்கள் போலும்..! இப்போது கூட பாருங்கள் சொல்லும் கருத்தின் உட்பொருள் அறியாது நீ என்ன சத்திய சாயிபாபவின் ஃபாலோயர்தானே.. முட்டாளே.. மூடநம்பிக்கையி கொண்டோனே..........என்று பொரிந்துதான் தள்ளப்போகிறார்கள் அறிவு ஜீவிகள்...!

அவர் கடவுள் இல்லை ..என்றுதான் நானும் சொல்கிறேன். அவர் கடவுள் தன்மை கொண்டிருந்தால் அவர் தன்னை கடவுள் என்றே சொல்லியிருக்க மாட்டார் என்று தான் அறுதியிட்டு சொல்கிறேன்.. ஆனால் மரணத்தை வைத்து ஒரு மனிதரின் புனிதத்தன்மையை நீங்கள் எப்படி கணிக்கிறீர்கள் என்றுதான் கேட்கிறேன்? விவேகானந்தரும் இராமகிருஷ்ண பரம ஹம்சரும் மரணித்துதான் போனார்கள்....இங்கே உங்களின் தியரி வொர்க் அவுட் ஆகுமா?

ஒரு சாய்பாபாவின் மரணத்தை முன்னிறுத்தி ஆன்மீகத்தின் வேரினை பெயர்க்க முடியுமா என்ன? அந்த மறைமுக முயற்சிதான் இப்போது ஆங்காங்கே நிகழ்ந்தேறிக் கொண்டிருக்கிறது. மூட நம்பிக்கைகளை வலியுறுத்தாமல் முற்போக்கு சிந்தனை கொண்ட பகுத்தறியும் தன்மைகளையும் தன்னின் பகுதியாக கொண்ட சாதாரணன் தான் ஆன்மீகவாதி.

ஆன்மீகவாதி என்றவுடன் காவி உடையும், வாயிலெடுக்கும் லிங்கமும், விபூதியும், இன்ன பிற மோசடிகளும் நினைவுக்கு வருவதுக்கு காரணம் பார்த்து பழகிப் போன பொது புத்தி.....

எங்கிருந்தோ எங்கோ வந்து விட்டேன்.......ம்ம்ம்ம்ம்ம் சரி, என்னை சரி செய்யவே நான் காத தூரம் செல்ல வேண்டும்..! மற்றவர்களுக்கு என்னுடைய....கருத்துக்களை பரிந்துரைதான் செய்ய முடியுமேயன்றி..அத்தாரிட்டி எடுத்து சொல்ல முடியாது ஏனென்றால்...

இந்த உலகில் எத்தனை கோடிகள் மனிதன் இருக்கிறானோ அத்தனை மனங்களும், நம்பிக்கைகளும் அவரவரின் சூழலுக்கு ஏற்ப ஏற்பட்டிருக்கின்றன்..அதை களைவதற்கு முன் அவர்க்கு தெளிவான என் நிலையை புரியவைகக் முடியுமா என்று யோசிக்க வேண்டும்....அதற்கு நான் தெளிந்திருக்க வேண்டும்....! நீங்களே யோசித்து நீங்களே தீர்மானியுங்கள்

டைம் ஆச்சு பாஸ்.............அடுத்த ஹாய் பகுதியில் சந்திப்போம்...!

அப்போ..........வர்ர்ர்ர்ட்ட்டா!


தேவா. SThursday, April 21, 2011

இமைகளைக் கடக்கும் கனவுகள்...!

தொல்லை

உனக்காக ஒரு கவிதைக்காக
வார்த்தைகளை நான் தேடும்...
பொழுதிலாவது கொஞ்சம்
குறுக்கும் நெடுக்குமாய்
நினைவுகளில் நடந்து...
என்னை கலைக்காமலிரேன்!

***

சபதம்

இரு இரு...
உன் மெளனத்தை..
என் மெளனத்தாலேயே
உடைக்கிறேன்!

***

கோபம்

எல்லோரையும் நேராகவும்
என்னை மட்டும் கடை கண்ணாலும்
நோக்கும் உன் விழிகளுக்கு
ஏனிந்த ஓர வஞ்சனை?

***

சந்தோசம்

எல்லோரிடமும் பேசி
என்னோடு பேசாமல் போனால்
பேசாமல் போய் விடுமா
நம் காதல்?
நீ உதடுகளுக்கு காவல் போட்டாய்
கண்களின் வழியே
கள்ளத்தனமாய் அது
எட்டிப் பார்க்கிறதே
என்னடி செய்வாய்?

***

தூரம்

நீயும் நானும் அருகருகே...
நம் காதலைப் பற்றிய
அதீத கற்பனையில்
நம்முள் நிறைந்த காதல்
உனக்கும் எனக்குமான
இடைவெளிகளில் நிரம்பி ததும்ப
நெருக்கத்தில் தொலையும் காதலை
தூரங்களில் தானே ரசிக்கிறோம்?

***

சோர்வு

உன்னை காதலிக்கிறேன்
என்று சொல்லத் தெரியாமல்
எத்தனை கவிதைகளைதான்
நானும் எழுதுவது?
எல்லா கவிதைகளும்
காதல் மாதிரி ஒன்றை சொல்லிவிட்டு
கவனமாய் காதலை சொல்லாமல்
விட்டு விடுகிறது!


தேவா. S


Wednesday, April 20, 2011

என்னதான் செய்வாய் நீ...?
இரு இதய துடிப்புகளுக்கு
இடையே நிசப்தமாய்
பரவிக் கிடக்கிறது
உன் நினைவுகள்..!

ஒரு பேய் மழை
மனதுக்குள் இடியாய் பெய்து
வார்த்தைகளில் சாரலாய்
அள்ளித் தெறிக்கும் கவிதைகளை
நான் உன் மீதான காதல் என்கிறேன்!!!!

சாலையோரப் பேருந்தில்
ஜன்னலோரம் உன்னைக் கண்டு
சட்டென்று கூப்பிடத் தோன்றிய
ஆசையை அடக்கிக் கொண்டு
தூரமாய் உன்னை ரசித்து
நகர்கிறது என் சுவாரஸ்ய புத்தி!

அடிக்கடி மணி பார்க்க
நீ உன் மணிக்கட்டை பார்க்கும்
பொழுதில் மட்டும்
நேருக்கு நேராய் உன் முகம் பார்த்து
நெற்றியிலிருக்கும் வியர்வையை
என் நினைவுகளால் துடைக்கிறேன்!

தொட்டு விடும் தூரத்தில்
இருக்கும் உன்னை
எட்ட நின்று காணும் பொழுதுகளில்
இரு சிறகுகள் முளைத்து
மேக வானில் பறக்கிறேன்..!

ஒரு புல்லாங்குழலின்
இசையின் மீதமர்ந்து
எட்ட முடியாத் திசைகளையும்
கடந்தே விடுகிறேன்..!

எதிர் பாராமல்
உன்னைக் காணும்
அந்த தினத்தின் வினாடிகளில்
என்னதான் செய்வாய் நீ
என்றென்ணும் கனவுகளில்
கடக்கிற நிகழ் கால
நிமிடங்களுக்குத் தெரியுமா
நம் கண்களில் துளிர்க்கும்
கண்ணீரில் படிந்திருக்கும்
ஒரு களங்கமற்ற காதலைப் பற்றி?


தேவா. SMonday, April 18, 2011

பேயி இருக்கா இல்லியா...?!இருட்ட ஆரம்பிச்சுருச்சு மழைக் காலம்னாலே இப்படித்தேன் 7 மணிக்கே கரும் கும்ம்னு ஆயிடும். எல்லா கருமாந்திரமும் பேசுறாய்ங்க நம்ம ஊருக்கு இன்னும் பஸ்ஸு ஒண்ணு விட ஒரு நாதி இல்ல. ஒய்யவந்தான் போற காரு ஒண்ணு இருக்கு அதான்ப்பு டவுனு பஸ்ஸு, அந்த வண்டிக்காரவுகளா பாத்து மனசு வச்சி பெரிய கருவ மரம் ஒண்ணு இருக்கும் ரோட்டோரமா நம்ம ஊருக்குப் போற பாதையில அதையே இஸ்டாப்பிங்கா நினைச்சு இறக்கி விடுவாய்ங்க...நாம அந்த கருவைக்கு பின்னால இருக்குற ஒத்தயடிப்பாதைய புடிச்சி ஒரு 3 மைல் நடக்கணும்....

மேலத்தெரு மாணிக்க மாமா நல்லாத்தான் நடவுடையா இருந்தாப்ல...! நேத்து கம்மாயில குளிச்சுபுட்டு வீட்டுக்கு வந்த மனுசன் நெஞ்சு வலிக்கிதுத்தா... கொஞ்சம் வென்னிரு கொடுன்னு அவரு மக சின்னது கிட்ட கேட்டுருக்காரு..அம்புட்டுதேன்! தூக்கியாந்து சிவங்ஙே (சிவகங்கை)... ஆஸ்பத்திரில போட்டுட்டாக! மாரடைப்பு வந்துருக்குன்னு சொல்லி பொறவு காப்பாத்தி புட்டாங்கே...!

என்ன ஒண்ணு அந்த கிறுக்குப் பய நடராசு மக கல்யாணம் சாரிக்க (விசாரிக்க) வந்த ஆட்டோக்காரப் பய ஊருக்குள்ள நின்னுகிட்டு இருந்தான்...! வெரசா தூக்கியாந்து பொழைக்க வச்சாச்சு... இல்லேன்னா மனுசன் போய்ச் சேந்து மூணு நாளாயிருக்கும்...! ம்ம்ம் ச்சும்மா பேச்சுக்குத்தேன் சொல்றேன் 70 வயசானாலும் மாணிக்க மாமா மனுசன் விருச்சி கம்பு மாறி கனம் இல்லாமத்தேன் இருப்பாப்ல...நல்லா இருக்கணும் புண்ணியவான்..! புள்ள குட்டிக்காரன்...மக மக்க கலியாணத்த பாத்துடாப்லனா அப்புறம் ஒண்ணுமில்ல...

பஸ்ஸ காணமேப்பு இன்னமும் அப்பிய கார்த்திய மாசத்துல வானத்த நம்ப முடியாது எப்ப வேணும்னாலும் தொரத்தொரன்னு ஊத்த ஆரம்பிச்சுடும். நான் கூட எங்காத்தாகிட்ட சின்னதுல கேட்டிருக்கேன் வானத்த எவனும் பொத்து கித்து விட்டுட்டானா...ஒழுகிகிட்டே இருக்குன்னு, அதிலயும் மழ நேரமுன்னா கார்க்காரப் பயலுக எப்பவும் லேட்டாத்தேன் வருவாய்ங்க....!

6:30 மணி பஸ்ஸுக்குதான் வெரசாத்தென் ஒடியாந்தேன், ஆனா என்ன காலக் கெரகமோ என் நேரமோ? அந்த காரு வரவே இல்லென்னு சொல்றாய்ங்க! சுத்தியிருக்கிற ஆளுகள்ல நம்மூரு ஆளுக ஒருத்தனையும் காணோம்...! ஒய்யவந்தான் வண்டி போயிருச்சாண்ணே...கெச்சலா இருந்த பெரியவரு என்னிய வந்து கேக்குறாரு... ! அதுக்குத்தனுங்கய்யா நானும் காத்துக் கெடக்குறேன்...ன்ன்னு சொல்லிபுட்டு அண்ணாந்து வானத்த பாத்தேன்...ம்ம்ம்கூம் விடாதுப்பே.. விடாது பொழுது விழுந்த வானம்...விடவே விடாது...

ஆனா அது இல்ல என்னோட யோசனை... என்னோட கவலையெல்லாம் இந்த இருட்டுக்குள்ள அம்மூரு சுடுகாட்ட வேற நான் தாண்டி போகணும்.அத நெனச்சாதேன்..ஈரக்கொல ஆடுது...! ஆத்தி...கூதக் காத்து வேற அடிக்கிது...அப்பவே எங்காத்தா சொல்லிச்சு..பொக்குனு போய்ட்டு வந்துருப்புன்னு....ம்ம்ம்ம் என் காலவெனை...என்ன செய்ய...?


போன வாரம் தூக்கு மாட்டி செத்துப் போன காரை விட்டு முத்தண்ணன் வேற பேயா சுத்துறதா நேத்து சுப்பிரமணி பய சொல்லாம இருந்தா கூட கொஞ்சம் தெம்பா இருந்திருப்பேன். இப்ப அது வேற பயந்து வருதுன்னு யோசிச்சுகிட்டு இருக்கப்பவே ஏண்ணே கல்ல (கடலை) சாப்பிடுங்கண்ணே வறுத்தது.. சூடா இருக்குண்ணே மழ நேரத்துக்கு நல்லா இருக்கும்ணேன்னு ஒரு சிண்டுப் பயவுள்ள இந்த குளிருலயும் கல்ல வித்துகிட்டு என்னைய கூப்பிடுது..பாவம் அவன் பொழப்பு.. ! பள்ளிக் கொடத்துக்கு போகாம புள்ள குட்டிய இப்படித்தேன் சீரழியுதுக....டவுனு பக்கந்தேன் கவனிச்சு பாப்பக போலிருக்கு புள்ளைக்குட்டிய வேல வெட்டிக்கி போகக்கூடாதுன்னு...சரி அதை விடுங்க...

மழை பெய்ற நேரத்துல ஒரு சுருளு கடலைய வாங்கி சூடா கையில கொட்டி தோள உதுத்து அப்டியே காத்துல ஊதிப்புட்டு.....சூடா வாயில ரெண்டு ரெண்டா போடணும்ணே... ரெண்டு ரெண்டா...கூடப் போட்றக்கூடாது...! மழை வெளியே நச நசன்னு பெய்யிறப்ப எல்லாம் எங்காத்தா கல்லய என்ன செய்யும் அவிச்சி புடும்...தண்ணியும் கடலையுமா உப்ப போட்டு ரெண்டு போவினில போட்டு கொடுக்கும். கல்லைய உடைச்சுதானே நீங்க சாப்புடிவிய? நாங்க தோள உறிக்காம அப்படியே ஈரத்தோட வாயில போட்டு அப்புடியே சூட்டோட உறிஞ்சி அந்த கல்லையில சாந்து இருக்கும் பாருங்க உப்புத் தண்ணி அத சூடா ஒரு உறிஞ்சி உறிஞ்சி புட்டு...அப்பறமா கல்லைய உடைச்சு..அவிச்ச பருப்ப எடுத்து மறுவடிக்கும் ரெண்டு ரெண்டா வாயில போட்டு அதக்கிகிட்டு ...நம்ம கூட்டாளிமாருக..இல்லன்னா அத்த மாருக.. பக்கத்து வீட்டு ஆளுக எல்லாம் ஒண்ணா ஒக்காந்து மழய வேடிக்க பாத்துகிட்டே திம்போம்...!

கல்லைய தின்னுகிட்டு இருக்கப்பவே காரு வந்துருச்சு...ஆத்தே இங்கன நின்னா அம்புட்டு சனமும் இந்த வண்டிக்கிதானா? அடிச்சி புடிச்சு ஏறிபுட்டேன்....ஆனா இடம் கிடைக்கல.. அது கிடக்குது கழுத...இடங் கிடைக்கலேன்னா...போய்ட்டு போகுது...அடிச்சு பத்துங்கப்பு வண்டியன்னு நினைச்சுகிட்டெ ஒரு இண்டுல நின்னுகிட்டேன். என் மனசு பூரா செத்துப் போன காரவீட்டு முத்தண்ணன் வேற ரொம்பவே பயமுறுத்திகிட்டு இருந்தாரு. அவரு மட்டுமா போன ஒரு வருசத்துல செத்துப் போன பக்கிய எல்லாம் மொத்தமா மனசுக்குள்ள வந்துருச்சுக...!

மிலிட்ரிகாரு பொண்டாட்டி மருந்த குடிச்சப்ப.... அங்கனகுள்ள அப்போதைக்கு நாந்தேன் ஆம்பள இருந்தேன்....! வீட்டுக்குள்ள இருந்து அலறி அடிச்சிகிட்டு போயி போனைப் போட்டு பக்கத்து டவுனுல இருந்து ஆட்டோ வர்றதுக்குள்ள போயி சேந்துட்டா மகராசி...! 45 வீடு இருக்குற ஊருக்கு என்னடா ஆஸ்பத்திரி கேக்குறியன்னு ஒரு தடவ மருவாதி இல்லாம பேசி புட்டாரு செயிச்சுப் போன எம்.எல்.ஏ...!

கொஞ்சப் பேருதேன் இருக்கோம்னு காருக்காரப் பயலுகளும் ஊருக்குள்ள வர்ரது கிடையாது. கவர்மெண்டும் பாதைய சரி செஞ்சு கொடுக்கல... வண்டிப் பாததேன் (பாதை) இருக்கு. அதுவும் ரெண்டு பக்கமும் கருவ முள்ளு உங்கைய கிழிக்கவா இல்லா கண்ண குத்தவானு இளிச்சுகிட்டு நிக்கும். அப்பப்ப என்னிய மாறிப் பயலுக எல்லாஞ் சேந்து அத கழிச்சு போடுவோம்...!

நான் பத்தாப்பு படிக்கிம் போதே எங்கய்யா தவறிப் போயிட்டாருண்ணே....படிப்பு நின்னு போச்சு. ஆத்தாவும் நானும் சேந்து ஒழச்சு ஒழச்சு...ரெண்ட அக்காளுகள கட்டிக் கொடுத்துப் புட்டு இருக்குற ஒத்த தங்கச்சிக்கு இந்த உடம்ப கடம்பால அடிச்சு வெள்ளாமை பாத்துகிட்டு இருக்கோம். 25 வயசான என்னப்பு...ரெண்டு மூணு பொம்பளப் புள்ளைய கூட வளந்துட்டேனா...அதனால கொஞ்சம் பயந்த சுபாவந்தேன் நான். அதுவும் இந்த பேயி பிசாசுண்ணா ஆத்தி..இப்பவே நெஞ்சுக்குள்ள கருக்குன்னு வருது....

' ஏய்.. வண்டி நின்னு எம்புட்டு நேரமாச்சு யாருப்பா...சிலுக்கப்பட்டி கருவமரம் ..கேட்டது.. எறங்குய்யா வெரசா..." கண்டக்டரண்ணண் விட்ட சவுண்டுல காது சவ்வு அந்து போச்சு...! இந்தா இறங்கிட்டேண்ணேன்னு...சொல்லிகிட்டே படிக்கட்ட விட்டு எறங்குன உடனே... பஸ்ஸு போயிருச்சு....

இப்ப நான், கரு கும்முனு இருட்டு...கருவ மரம் அப்புறம் கருவைக்கு புறத்தாடி இருக்குற எங்கூருக்கு போற நொடிச்சுப் போன வண்டிப்பாதை இதா இருக்குறோம். என்ன என்னமோ கத்துதுக...வண்டு, தவளை காட்டுக்குள்ள கிடக்குற குள்ள நரிக எல்லாமே! நிலவடிக்கும் ஒடியாந்திரலாம்னு கை லைட்டு கூட கொண்டு வரலப்பு....கத்தி அழுகணும்னு ஆச...ஆனா அழுகுற சத்ததுல தூங்கிகிட்டு இருக்குற பிசாசு பேயிங்க எதுனாசும் கெளம்பிருச்சுகன்னா....அது வேற இருக்குள்ள...

கூதக்காத்து சுத்தி சுத்தி அடிக்கிது... முடியாம கெடக்குற புள்ள நைய்யி நைய்யின்னு அழுகுற மாறி தூத்த வேற போடுது. ஏப்பா.. டேய் உங்க சங்காத்தமே வேணாம்னு எங்க்கிட்டு போய் ஒளிஞ்சுச்சோ இந்த நிலவு..நான் நடக்குற சத்தம் எனக்கே கேக்குது...! அட இது என்ன இது சில்லு வண்டு சத்தமா இல்ல கொலுசு சத்தமா...கூப்புடாம கொல்லாம மிலிட்டரிகாரன் பொண்ட்டாடி வேற தலைய விரிச்ச மேனிக்கி மனசுக்குள்ள வந்து சிரிக்கிது....இந்தா.. இன்னும் கொஞ்ச நேரதுல்ல ஊருச் சனத்தையே வச்சு எரிச்ச சுடுகாடு வேற வரப் போகுது...

நெஞ்சாங் கொல படக்கு படக்குனு அடிக்க்குது.. ஈரல் அந்து கீழ..கீழ விழுந்துடுமோன்னு ப்யந்து வருது...! ஆத்தே.....தப்பு பண்ணிட்டோம்டா...இன்னும் தங்கச்சிய கட்டிக் கொடுக்கல வயசான ஆத்தா வேற இருக்கு...எங் குடும்பத்த யாரு காப்பாத்துவா ? பேயி கீயி அடிச்சு கொன்னு புடுச்சுன்னா செத்துல போயிருவேன். இல்லை அடிக்காம கொள்ளாம மச்சு வீட்டு பத்மினி அக்காவுக்கு புடிச்ச மாறி புடிச்சுகிட்டு நம்மள இத்தினி இத்தினியா கொல்லுமோன்னு நெனச்சிகிட்டு இருக்கும் போதே சட்டைய புடிச்சி ர்ர்ர்ர்ர்ரப்ப்ப்ப்ன்னு இழுத்த்துச்சு........

என்னமோ ஒண்ணு...ஏய்...........யார்ராது என் சட்டையன்னு..கத்திகிட்டு கைய வச்சி வெலக்கி விடயில கையில சட்டையில் ஆப்டுகிட்டு இருந்த கருவ முள்ளு கைய கீறி விட்ருச்சு....ஏய்...கருப்பு சாமி எங்கொல சாமிடோய்..என்ன ஒண்ணும் பண்ண முடியாதுப்பேன்ன்னு நான் கத்துன கத்துல நடுக்காடே ரெண்டு பட்டுத்தேன் போயிருக்கும்....

மாரநாட்டு கருப்ப சாமி காப்பாத்தேய்ய்ய்ய்ய்ய்ய்ன்னு கத்திகிட்டே விட்டேன் சவாரில......காத்தா பறந்து வந்து என்னய காப்பாத்து சாமீன்ன்னு சொல்லும் போதே ஒரு தெகிரியம் வந்துச்சு..இருந்தாலும் விடல ஓட்டத்த....காட்டுமிராண்டி மாறி கத்திகிட்டு ஓடி கீழ கிடந்த பள்ளத்த பாக்காம அதுல இடறீ விட்டு குப்புற அடிச்சு விழுந்து கம்மா மேட்ல இருந்து உருண்டு, கல்லு கரணி எல்லாம் மேல குத்தி உடம்பு பூரா சேறும் சகதியுமா இருக்கையில தங்கச்சிக்கு வாங்கியாந்த ஃபேரண்ட் லவ்லி கிரீமயும், மதகுபட்டி ஐயா கட அல்வாவையும் விடாம புடிச்சுகிட்டேன். எந்திரிச்சு சுதாரிச்சுகிட்டு ஓடலாம்னு பாத்தா ச்ச்சும்மா குப்புன்னு மல்லிய பூவு வாசம் வெற அடிக்குது......மெரண்டு போயி பொம்பள பேயி வந்துருச்சுடோய்ய்ன்னு மனசுக்குள்ள நெனைச்சுகிட்டு மறுக்கா ஓட்டமா ஓடி கருவாட்டு பொட்டல் கிட்ட வந்து நிக்கையில மூச்சு எறக்கிது பாருங்க....

இன்னும் கொஞ்ச தூரந்தேன்....நான் திரும்பி பாக்காம வெரசா நடக்க ஆரம்பிச்சேன். ஒடியாந்த ஓட்டத்துல சுடுகாட்ட தாண்டி வந்தத நெனக்கையில ...அட சுடுகாட்ட தாண்டிட்டமப்பான்னு ஒரு அசட்டு தெகிரியம் வந்துச்சு...! ஊருக்குள்ள நுழையறதுக்கு முன்னாலயே கண்ணுக்கு ஒசராமா இருக்குற எங்கய்யா வச்ச ஒத்த பன மரம் கண்ணுக்குத் தெரியும். அந்தா தெரியுது பாருங்க...எந்த சாமி புண்ணியமோ வந்து சேந்துட்டேன் சாமி! அந்த ஒத்த பனை இருக்குள்ள அதுக்கப்புறம் ஒரு கொல்லகா (கொல்லைக் கால்வாய்) இருக்கு...அதுல தண்ணி மழ நல்லா அடிச்சி பேஞ்சிச்சின்னா வரும். இப்ப தண்ணி இருக்காது...மழதான் பெய்யவா வேணாமான்னு பூசாரிகிட்ட சோழி போட்டு கேக்குற மாறி கேட்டுக்கிட்டு இருக்கே....

வீட்டுக்கு முன்னாடி கொஞ்ச தூரத்துல இருக்குற கவர்மென்டு டீப் லைட்டுக்கு கீழ வந்து சட்டை வேட்டிய சரி செஞ்சுகிட்டேன்! கழுத்துல கருவ முள்ளு இழுத்து விட்டது எரிஞ்சுகிட்டே இருந்துச்சு...சரி...அது என்ன கழுத...கொஞ்சம் வேப்பெண்ணைய தேச்சா போகுது மூதேவின்னு நினைச்சுகிட்டு...உரப்பு ஆன கைய தடவிகிட்டு, தலைய சரி செஞ்சுகிட்டு வீட்டுக்குள்ள் போறதுக்குள்ள ஆத்தாளும் தங்கச்சியும் வாசல்லயே காத்துகிட்டு நிக்கிறாக.....! "என்னண்ணே சட்ட துணிமணியெல்லாம் சகதியாயிருக்கு"ன்னு தங்கச்சி வேற கேட்டு வேற தொலச்சிபுட்டா..? ஏப்பு என்ன ஒரு மாறியா இருக்க? இன்னியாரத்துல போவேணாம்னு எம்புட்டு தடவ சொன்னேன் இரு காப்பி தண்ணி கொண்டாரேன்னுட்டு ஆத்தா அடுப்படிக்குள்ள போயிருச்சு....

அட அது ஒண்ணுமில்ல தங்கச்சிமா கார்காரங்கே எல்லாம் ஒழுங்காவா வண்டி ஓட்டுறாய்ங்க....சேத்த அடிச்சிபுட்டு போய்ட்டாய்ங்கே...இந்தாமா இந்த பைய புடி...நீ கேட்டு விட்ட சாமான் எல்லாம் இருக்குமான்னு சொல்லிட்டு பைய கொடுத்து கொஞ்ச நேரத்துல அவ கேட்டா "....ஏண்ணே எங்கண்ணே மல்லியப் பூவு? வாங்கியார மறந்துட்டியா" ன்னு? வாங்கியாந்தனத்தா.........உள்ளுக்கு இல்லியா? ம்ம்ம் எங்க போச்சு...அட.... கம்மாக்கரையில் உருளும் போது மல்லியப்பூ வாசம் அடிச்சுதே..அது பொம்பளைப் பேயி இல்லையா...நம்ம வாங்கியாந்த மல்லியப்பூ அங்க வெளிய விழுந்துதான் பேயா மெறட்டுனுச்சா? அடக் கருமாந்திரமேன்னு....நானே சிரிச்சிகிட்டு இல்லத்தா...அண்ணன் மறந்துட்டேன் போலன்னு சொல்லிபுட்டு ....

'ஏத்தா தங்கச்சி வென்னீரு போடுத்தா அண்ணே குளிக்கிறேன்.. மேலு காலு எல்லாம் பெல்லா (பொல்லாத) வலி வலிக்கிது....'ன்னு சொல்லி புட்டு கொல்லக் கடவுல போயி ஆத்தா கொடுத்த பா லுகாப்பிய குடிச்சிகிட்டு யோசிச்சேன்...

'பேயி இருக்கா இல்லையா? யாரும் பாத்துருக்காகளா இல்லையா?' அட எனக்குதேன் தெரியல சிவங்கே (சிவகங்கை) பஸ் ஸ்டாண்ட்ல இருந்து கூடவே வரீகளே நீங்கதேன் சொல்லுங்கப்பு.....?.அட உங்களத்தேன் கேக்குறேன்..........? என்னது எம்பேரு என்னவா............அட போங்கப்பு...பதில கேட்டா எம்பேர கேட்டுகிட்டு...........அத எல்லாம் தேவாகிட்ட கேளுங்க....அவருக்குத்தான் தெரியும் எம்பேரு எல்லாம்...!

சரி விடுங்கப்பு... பதில சொல்லுங்க....

" பேயி இருக்கா இல்லியா "


தேவா. SSaturday, April 16, 2011

பொய்களே....பொய்களே....!

ஆர்ப்பரிக்கும் அலைகளும் பெயர்த்தெடுத்து தூக்கிச் செல்லும் காற்றும் சேர்ந்த ஆள் அரவமற்ற கடற்கரை. கண்ணுக்கெட்டிய தூரம் வரை விரிந்து பரந்த நீல வானம் 4 மணி சூரியனின் உபாயத்தில் பளிச்சென்று இல்லாத நீல நிறத்தை இருப்பதைப் போலவே காட்டிக் கொண்டு இருந்தது. இடை இடையே தவழ்ந்து செல்லும் வெள்ளை வெளேர் மேகங்கள் குறிக்கோளற்று நகர்ந்து கொண்டிருந்தன.

மனிதர்களற்ற ஒரு வெளியைத் தேடி தேடி காத்திருந்து வார இறுதிகளில் இப்படி என்னை தனித்திருத்திக் கொள்ளும் நேரங்கள் எல்லாம் நேரமற்றுதான் நகரும். வெறுமனே லயித்துப் போய் அலைகளை வேடிக்கைபார்த்துக் கொண்டிருந்தேன். எனக்குள் இருந்த ஒரே பயம் யாரும் மனிதர்கள் வந்துவிடக் கூடாது. என்பதுதான். பரந்த கடல்வெளியில் என்னை தொலைத்து நான் கிடக்கும் பொழுதில் எண்ணத்தோடு மனிதர்கள் வந்து விடுவார்கள். அதிகப்பிரசங்கித் தனமாக ஏதாவது பேசுவார்கள்... வேண்டாம்.வேண்டாம்.....வேண்டவே வேண்டாம்!

உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் உலகின் கலப்பெனக்கு வேண்டாம். உத்தமொருவரும் வேண்டாம், தீயவரொருவரும் வேண்டாம்.. இன்னும் சொல்லப் போனால் யாரும் எனக்கு வேண்டாம். சம்மணமிட்டு அமர்ந்தேன். அப்படி அமர என் உடை எனக்கு செளகரியமாய் உதவியது. உடையும், நடையும் உறவுகளும், உணவும் நமது உள் அமைதியை அவ்வப்போது கூட்டி குறைக்கும் காரணிகள். இறுக்கமான உடைகள் எப்போதும் உடல் மீதுள்ள அகங்காரம் கூட்டுபவை. அவை எப்போதும் ஒரு விறைப்புத் தன்மையோடு கூடிய அகங்கார மனோநிலையை கொடுக்கும். தளர்ந்த கூடிய மட்டும் தெளிவான எளிமையான உடைகள் மன ஓட்டத்தைச் சாந்தப்படுத்தும்.

உயிர் அல்லது ஆத்மா கொஞ்சம் மேலேறி வந்து திடப்பட்டு மனமாய் மாறி நின்று கட்டுக்களின்றி அலை பாய்ந்து முதலில் உடல்தான் தானென்று கற்பனைகள் கொள்ளத் தொடங்கியதன் அடுத்த நிலைதான் உடைதான் தானென்று நம்புவது. உடுத்தும் உடைக்கு ஏற்ப தன்னைப் பற்றிய உயர்வும் தாழ்வும் மனிதர்களுக்கு சட்டென்று வந்து விடுகிறது.

என்னுடைய உடை தொள தொளவென்றிருந்த ஒரு பைஜமா அதுவும் வெள்ளை நிறம். எனக்கு எந்த உறுத்தலையும் கொடுக்காமல் உடையென்ற ஒரு அகங்காரம் தொலைந்து மனம் என்ற நிலைக்கு ரிவர்ஸ் கியரில் போனது. மனம் என்ற ஒன்றினை குழி தோண்டி எனது தினசரி வேலைகக்ளுகு நடுவே அவ்வப்போது புதைக்கும் வழக்கம் எனக்கு இருக்கிறது. அந்த பழக்கம் மனதை வேகமா தள்ளிவிட்டு உள்ளுக்குள் இன்னும் வேகமாக செல்ல எனக்கு உதவியது.

நல்ல பாம்பின் விசத்தை தினசரி உடம்பில் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து விட ஒரு கட்டத்தில் பாம்பு நம்மை தீண்டினாலே நம்மை அந்த விசம் ஒன்றும் செய்யாது. அதுபோலத்தான் பழக்கத்தின் படி எல்லா செயல்களையும் நம்மருகே வைத்துக் கொள்ளவும் முடியும் தீர்த்துக் கட்டி தூர எறியவும் முடியும். வேகமாக ஓடிக் கொண்டிருக்கும் பொழுதுகளின் இடையிடையே மனதை நிறுத்தி, நிறுத்தி, பயின்று, பயின்று மனமற்று இருப்பது எளிதாகவே எனக்கு கை கூடிப் போனது.

ஏன் மனமற்று இருக்கவேண்டும்? என்ற கேள்வி பல நேரம் எனக்கும் உதித்ததுண்டு. ஆரம்ப காலங்களில் இப்படிப்பட்ட கேள்விகளோடு நான் மல்லுக் கட்டி புத்தங்களில் விடை தேட முயன்று இயலாமல் ஆங்காங்கே கிடைத்த கருத்துக்களை உட்கொண்டு செரித்து கிடைத்த தெளிதலில் மனம் என்பது பற்றை வளர்த்து போலியான எல்லா நிகழ்வுகளையும் நிரந்தரமாய் நம்பவைக்கும் ஒரு சூட்சும இயந்திரம் என்பது விளங்கப்பட்டது. நான் தானே எல்லாமே செய்கிறேன்..அதெப்படி நான் செய்தேனென்று நம்பாமல் இருக்க முடியும் என்றுதனே கேட்கிறீர்கள்?

நன்றாக யோசித்து சொல்லுங்கள் உங்கள் வாழ்வில் ஏற்பட்டிருகும் எல்லா நிகழ்வுகளும் உங்களால் மட்டுமா நிகழ்ந்தது? உங்களின் செயலுக்குப் பின்னே எத்தனை புறக்காரணிகள் இருந்திருக்கின்றன என்று கணக்குகள் கூட்டிப் பார்த்திருக்கிறீர்களா?

ஒவ்வொரு செயலுக்கும் பின்னால் நாம் எதிர்பார்த்தே இல்லாத அளவிற்கு நமக்கு ஆயிரம் ஒத்தாசைகள் மறைமுகமாக நடந்திருக்கும்...நாம் கவனித்திருக்க மாட்டோம். செயலின் உச்சத்தில் போய் நின்று கொண்டு நான் செய்தேன்..!.நான் செய்தேன்...! என்று கொக்கரிப்போம்...நிஜத்தில் நானென்ற ஒன்றே கிடையாது என்றறியாமல்....

எப்போதும் நான்...நான் என்று வாழ்ந்து எல்லாவற்றிலும் இறுமாப்பு கொண்டிருக்கும் நம்மிடம் ஒரு நாள் எல்லாவற்றையும் வைத்து விட்டுப் போ என்று கேட்குமே மரணம்... அன்று என்ன செய்யப் போகிறோம் நண்பர்களே?

ஒவ்வொருவரும் மரணம் என்பது இப்போது எனக்கு வராது என்று வேண்டுமனால் நினைத்துக் கொள்ளுங்கள் ஆனால் அது உங்களுக்கு வெகு அருகிலேயேதான் நின்று கொண்டிருக்கிறது என்பதையும் மறக்க வேண்டாம்.

அப்படியானால் உங்களின் கூற்றுப்படி நாங்கள் மகிழ்ச்சியாகவே இருக்க கூடாதா? என்ற கேள்வி ஒன்று மிச்சமாய் மனதிற்குள் இருந்து எட்டிப் பார்க்கிறதா? ம்ம்ம்ம்... எட்டிப்பார்த்துதான் ஆகவேண்டும்..திடமான மனம் இப்படி கேள்வி எழுப்பித்தான் ஆகும்.

தன்னுடைய விருந்தினராய் வந்திருந்த ஒரு துறவி கேளிக்கைகளும், விளையாட்டிலும், பெண்களோடு பழகுவதிலும் லயித்துப் போய் கிடந்ததை கண்ட அந்த நாட்டின் அரசன் அவர் துறவிதானா? என்று சந்தேகித்தான்...! சந்தேகித்ததோடு நிற்காமல் துறவியை அழைத்து கேட்டும் விட்டான்....! உடனே துறவி கூறினார்.... மன்னா என்னுடன் வாரும் என்று அரசனை அழைத்துக் கொண்டு அந்த நாட்டின் எல்லை வரை சென்று எல்லையில் நின்று கொண்டு தன்னுடைய பட்டு ஆடை, அணிகலன்கள் எல்லாம் களைந்து விட்டு, ஒரு சிறு கோவணத்தோடு நாட்டு எல்லையை விட்டு நகர்ந்து அடுத்த நாட்டிற்குள் நின்று கொண்டு ... அரசே...என்னைப் போலவே எல்லாம் களைந்து விட்டு என்னோடு வாருங்கள் என்று அழைத்தான்.

மன்னன் மிரண்டு போனான்...! அவனால் செல்ல முடியவில்லை. காரணம் அவன் ஒரு அரசன் என்றே நம்பிக்கையை ஆழமாக விதைத்துப் போட்டு இருந்தது அவனது மனது. ஸ்தூல உடலால் நகர முடிந்தாலும் சூட்சும மனம் அவனை கட்டிப்போட்டு வைத்திருந்தது. அரசனாகவே உறங்கி, அரசனாகவே உண்டு, அரசனாகவே உடுத்தி, இது என் நாடு, நான் அரசன் என் சொத்து என்று ஏற்படுத்தி வைத்திருந்த கற்பிதங்கள் அவனை நகர விடவில்லை.

ஆனால் துறவி அந்த அரசனை விட அதிக அளவில் எல்லா சந்தோசத்தையும், அனுபவித்த போதும், பட்டாடைகள் உடுத்திய போதும், பெண்களோடு சல்லாபித்திருந்த போதும் எதுவும் எனதில்லை என்ற தெளிவினைக் கைக்கொண்டு மனமின்றி அனுபவித்தான்....! துறவியைப் பொறுத்த வரைக்கும் அவன் யாருமில்லை மேலும் அவனுக்கு கிட்டிய எல்லாம் வாழ்வின் கூட்டு நிகழ்வில் கிட்டியது. எல்லாம் என்னால் விளைந்தது என்ற சிறு புத்தியை எப்போதோ கடந்து இருந்தான் அந்த துறவி...!

இப்போது சொல்லுங்கள் எத்தனை பேர் அரசனைப் போல கற்பிதங்கள் கொண்டு வாழ்கிறீர்கள்? கற்பனையில் தன்னை யாரோ என்று கற்பித்துக் கொண்டு நான் யாராக்கும் என்று இறுமாப்பு கொண்டிருக்கிறீர்கள்? நாட்டின் எல்லையில் அந்த துறவி கேட்டது போல அந்திமத்தில் மரணுமுறும் தறுவாயில் மரணம் கேட்கும் கொடு எல்லாவற்றையும் என்று...? என்ன செய்யப் போகிறீர்கள்? முடியாதென்றால் முடியுமா? இல்லை என்றால் விடுமா?

' இரவல் தந்தவன் கேட்கின்றான் அதை
இல்லையென்றால் அவன் விடுவானா?
உறவைச் சொல்லி அழுவதனாலே
உயிரை மீண்டும் தருவானா?
கூக்குரலாலே கிடைக்காது - இது
கோர்ட்டுக்குப் போனால் ஜெயிக்காது - அந்தக்
கோட்டையில் நுழைந்தால் திரும்பாது '

துறவியிடம் காலம் கணக்கு கேட்கும் போது ...........சஞ்சலமில்லாமல் கொடுத்து விட்டு அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துதானே விடுவார்? அவர் மனமற்றவர், அகங்காரம் தொலைத்தவர்....!

இதோ நான் மனம் தொலைக்கும் பயிற்சிக்காக மனிதர்களை விட்டு அலையடிக்கும் இந்த கடற்கரையில் ஒதுங்கியிருக்கிறேன்....! நானில்லை... எதுவும் என்னால் இயன்றதில்லை எல்லாம் ஒரு கூட்டு நிகழ்வு...! பித்து மனமே ஓடி ஒளி .....! மனம் சுருண்டு புத்தியை பார்த்தது...புத்தி மனதைப்பார்த்தது...கேள்விகளும் பதிலுமில்லை அங்கே நானே இல்லை....!

ஏய்.. பரந்து விரிந்த நீலப் பொய்களே....
உமக்கு கடலென்றும் வானென்றும்
யாம் கற்பிதம் கொண்ட மூலப் பொய்களே
ஆழப் பொய்களே....ஞாலப் பொய்களே...
மெய்யென்ற பொய் கொண்டு...
நோக்கும் நான் யார்?
மெய்யில்லாத நீங்கள் யார்?

கண்களுக்குள் வானமும், கடலும் நுழைந்து கொள்ள மெல்ல சொருகிக் கொண்டிருந்தது அது. மூச்சு சீராக... எங்கோ இருந்தேன் ஆனால் இல்லாமல் இருந்தேன்...! மனமற்ற வெளியில் ஒரு மந்தைக் கூட்டதிலுள்ள ஆடாய் ஒரு நகர்தலோடு இலகுவாகிக் கிடந்தேன்... நிறங்கள் கடந்த குணங்கள் கடந்த பெருவெளி அது.....! மனம் இல்லை அங்கே...! காலம் நின்று போயிருந்தது...

என் தேடலின் தூரங்கள் எல்லாம் புள்ளியில் சுருங்கிப் போயிருந்தது....! எப்போது கண்விழித்தேனோ அப்போது விழித்தேன்..உடலுக்குள் வந்து சுருண்டு கொண்டேன்...மீண்டும்....மெல்ல நடந்தேன்... மனம் மெலிதாய் துளிர்த்திருந்தது ஆனால் வலுவில்லமால் கிடந்தது....! நீலப் பொய்யும் ஆழப்பொய்யும்...கருமை நிறம் கொண்டிருந்தன...! அப்போதுதான் முளைத்த சில நட்சத்திரங்கள் பிரகாசமாய் ஜொலித்துக் கொண்டிருந்தன....!

ஒற்றை முறுக்கலில் என் இரு சக்கர வாகனம் சீறிப்பாய இடதில் திரும்பி நேராய் சென்று....வலப்பக்கம் திரும்பி....மெயின் ரோட்டில் என்னை இணைத்துக் கொண்டேன்....இரைச்சலான சென்னையின் வாழ்க்கை மீண்டும் என்னை ஸ்தூலப்படுத்த கடிகாரம் பார்த்தேன்..காலம் நகரத் தொடங்கியிருந்தது....இரவு மணி 8:30

" டேய் டாபரு...........வீட்ல சொல்லிகினு வந்துட்டியா....ஒழுங்கா போடா பேமானி.... ' என்று தலையிலிருக்கும் ஒன்றின் பெயர் சொல்லி யாரோ ஒரு ஆட்டோகாரன் யாரையோ திட்டியது என் காதில் விழுந்தது....

நான் வண்டியை விரட்டத் தொடங்கியிருந்தேன்...!

தேவா. SWednesday, April 13, 2011

என் வானமும் நானும்....!
வெகுதூரம் வெளியே வந்துவிட்டேன். சப்தங்களில்லா மையத்தில் என் ஏகாந்த கனவுகளோடு நானே என்னில் இருந்த திசைகளும், காலமுமற்ற என் சுயத்தை விட்டு நகர்ந்துதான் வந்துவிட்டேன். தெரிந்தோ தெரியாமலோ ஒவ்வொரு முறையும் என்னை ஏமாற்றி கொண்டு இந்த இரைச்சலோடு கூடிய சராசரி வாழ்க்கைக்கு நடுவே விட்டு விட்டு பல்லிளித்து பரிகாசிக்கிறது மனப்பேய்.

வாசிப்பும் வாசிப்புகளின் ஆழமும் சேர்ந்து கருக்கொண்ட்ட எண்னங்களை எல்லாம் மெல்ல துடைத்தழித்துவிட்டு அதன் சாரத்தோடு சாறாக ஊறிக் கிடந்தவனை, புத்தகத்தில் படித்த தத்துவங்களை எல்லாம் வாழ்க்கை வீதிகளில் கொண்டு வந்து வைத்து மனித வாழ்க்கைக்கு தீர்வுகளைச் சொல்லும் மேதாவிகளின் உலகத்துக்கு கொண்டு வந்து நிறுத்தியே விட்டது காலம்.

இப்போது சுதாரிக்க விடில் நான் எப்போதும் இந்தக்கூட்டத்தில் ஒருவானாய் ஆகிப்போய்விடுவேன். இருட்டில் பொருளை தொலைத்து விட்டு வெளிச்சத்தில் தேடும் மனிதர்களும் அவர்களின் சித்தாந்தகளும், அதை நிறுவ இவர்கள் கொடுக்கும் தேற்றங்களும், மறுதலைகளும் விளக்கங்களும் என்னைச் சூழ்ந்து கொண்டு மரணம் தாண்டியும் என்னை தொடரும் அவலம் எனக்கெதற்கு?

இந்த புத்திமான்களின் கத்தி வீசும் தத்துவ வீதியில் ஒரு நாள் பசிக்கிறது என்றேன்... பசி என்றால் என்ன என்று பல மணிநேரம் பேசினார்கள். பசியின் மூலம் சொன்னார்கள், பசியுள்ள தேசத்தினை எல்லாம் பட்டியலிட்டார்கள், பசிக்கு யார் காரணம் என்றார்கள், இன்னும் சில பேர் படைத்தவனென்று ஒருவனில்லை இருந்தால் யாரையும் பசியோடு விட்டிருக்க மாட்டான் என்றூ பகுத்தறிவு வாதம் செய்தார்கள்.....

' யாருமே ஒரு வாய் உணவையும் கொடுக்கவில்லை, உணவை அடையும் வழியையும் பகிரவில்லை '

என்னை முன்னிலைப்படுத்த என் தன்முனைப்பை கூராக்கி நான் பெரிய மேதை என்று சமுதாயத்திற்கு காட்ட எனக்கெதற்கு ஒரு மூளை. உலகெல்லாம் அலைந்து திரிந்து அறிவை வளர்த்து நான் அறிஞன் என்ற ஏட்டுச் சுரைக்காய் வைத்துக் கொண்டு கறி எப்படி சமைப்பது?

கற்க கசடற என்ற இரு வார்த்தைகளுக்கு பின்னால் இருக்கும் பொருள் புரியாது வள்ளுவனின் வாழ்க்கையை ஆராய்ந்து முப்பாலுக்கும் விளக்கம் கொடுத்து தொடை தட்டி, தட்டிப் பேசி என்ன சாதிக்கப்போகிறேன் நான்? கூட்டம் கைதட்டும், விசிலடிக்கும், ஆனால் என் யோக்கிதை எனக்குத்தானே தெரியும். கற்றவற்றில் எல்லாம் இருந்து சரிகளை விளங்கியவனா நான்? மாசில்லாமல் கற்றவனா நான்? இதை ஆராயவே நேரமில்லாத போது ஊருக்கு கற்றுக் கொடுக்கும் மனோபாவம் எங்கிருந்து துளிர்த்தது எனக்கு?


கற்றபின் நான் அதற்கு தக நடந்தேனா? இதை என்னிடம் கேள்வியாய் கேட்டேனே? வாசித்த வேகத்தில் அதை வெளியே வந்து நான் இதை வாசித்தேன் அதை வாசித்தேன் என்று பேசினேனே நான் அதற்கு தகந்தேனா? இல்லையே? நான் என்னைப் பார்க்கும் கலையை விட்டு விட்டு...என்னை சரி செய்துகொள்ளும் யுத்தியை வெற்று விசய ஞானப்புத்தியிடம் தோற்க விட்டு விட்டு ஊரையல்லவா பார்க்கத் தொடங்கிவிட்டேன்.


சுய ஒழுக்கத்தின் மூலம் என்றால் என்னவென்று கடை வீதிகளிலா கோனார் நோட்ஸ் உரை போட்டு கிடைக்கும் அல்ல.. அல்ல அது என்னுள் ஜனித்து என்னை சாந்தப்படுத்தி என் செயல்களில் வெளிப்படவேண்டியது. கூச்சலான உலகத்தின் கோணல்களை சரி செய்ய முயலும் மனிதர்கள் முதலில் தத்தம் அகத்தினுள் நுழைந்து தம்மை சரி செய்தல் வெண்டும்....நான் என்னை சரி செய்யவேண்டும்....!

எனது வானம மிகப்பரந்தது...அங்கே கோடாணு கோடி நட்சத்திரங்கள் கண் சிமிட்டி ஜீவனோடு சிரித்துக் கொண்டிருக்கின்றன. சப்தமின்றி நான் வான் பார்க்க...பார்க்க பரந்து விரிந்த பிரமாண்டத்தின் முன்னால் மானுட பிண்டமாகிய நான் ஒன்றுமில்லாதவனாகிப் போய்விடுகிறேன். ஒன்றுமில்லாதவனுக்கு ஏன் கோபம்? அகங்காரம், நான் என்ற ஆணவம்? என்ற கேள்விகள் துணைக் கேள்விகளாய் ஜனித்து ஏதொ ஒரு தெளிவினை கொடுக்கின்றன. இப்படிப்பட்ட கேள்விகளும் பதில்களும் ஒவ்வொரு மனிதனும் கேட்டு கேட்டுதானே தெளிவு பெற முடியும்?

மனிதன் தனக்குத் தானே கேள்விகள் கேட்டு சரி செய்து முன்னேற வேண்டும். சூழல்கள் எல்லோருக்கும் வெவ்வேறு விதமான பாடங்களைக் கற்றுக் கொடுக்கின்றன. மனிதர்களின் பார்வைகள் வீச்சிற்கு ஏற்றவாறு அதை அனுபவமாக்கிக் கொள்வது அவரவரினின் மனோபக்குவத்திற்கு ஏற்றார் போலத்தானே அமைகிறது. யாரும் யாரிடமும் பேசியோ, அல்லது எழுதியோ, அல்லது வேறு ஏதேனும் செய்தோ மாற்றமுடியாது. அவரவரின் பக்குவ நிலைக்கும் தேவைக்கும் ஏற்ப விசயங்களை வாங்கிக் கொள்கிறார்கள்.

ஒரு மனிதனின் பேச்சோ எழுத்தோ அதை வாங்கிக்கொள்ளும் மனிதருக்கு தாக்கத்தை கொடுக்காதவரை மாற்றம் சாத்தியம் இல்லை. ஏற்கனவே மனதினுள் பல்லாயிரம் கற்பிதங்களைக் கொண்டிருப்பவர்களின் பார்வைகள் செம்மைப்பட எல்லா கருத்துக்களையும் விட்டு வெளியே வருவது மட்டுமே அவசியமாகிறது. வெற்று வானத்தையும் வெள்ளை நிலவையும் பார்க்க, ஒடும் நதியில் முங்கிக் குளிக்க, அரச மரத்தின் காற்றை ஆழமா ஊடுருவி வாங்கிக்கொள்ள, ஒரு சந்தைக்கடை இரைச்சலில் மனித இருப்புகளை வாங்கிக் கொள்ள, ஒரு பசுமாட்டின் சாந்தத்தினை உணர, ஒரு ஆட்டின் அழகினை ரசிக்க...............எந்த தத்துவம் தேவை சொல்லுங்கள்...?

நாம் எப்போதும் நாமாய் இருப்பது இல்லை. கற்பனைகளில் எப்போதும் நாம் வேறு ஒருவராய்த்தான் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறோம். இவர் சொன்னது அவர் சொன்னது என்று நம்முள் ஏற்றி வைத்திருப்பது எல்லாமே கற்றை கற்றையாய் குப்பைகள். எப்போது எது பேசினாலும் எதார்த்தை விட்டு விட்டு புள்ளி விபரங்களை இறைக்கும் ஒரு எந்திர வாழ்க்கையின் உச்சத்தில் எல்லா கருத்துக்களோடுமா என்னை வழியனுப்பி வைக்கும் இந்த உலகம்? அரைஞான் கயிற்றைக் கூட அறுத்தெரிந்து உருத்தெரியாமால் ஆகப்போகும் இந்த மட உலகத்தின் மூளைகளை எல்லாம் கரையான் தானே அரிக்கப்போகிறது....?

கற்பதில் குற்றமற்று கற்கவும் கற்றபின் சுய பார்வை கொள்ளவும் தன்னைத் தானே உற்று நோக்க வேண்டும்...புறம் நோக்கியே பாயும் மனித மனது ஊருக்குக் உபதேசம் செய்யும் முயற்சிகளின் பின்னணியில் தன்னை நல்லவனாக காட்டும் விருப்பங்கள் மிகுந்திருப்பது மிகையாத்தானே இருக்கிறது.

வாள் வீசியே மரித்த
தலைமுறை கடந்த
ஜீன்களின் கூட்டங்கள்
பதித்துப் போட்டிருக்கும்
குணாதிசயங்கள் யார் சொல்லியும்
கேட்காமல் எப்போதும்
வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது
நேர்மறை திமிர்களாய்!

தலைக்கனங்களை உணர்ந்த
மாத்திரத்தில் தலை கொய்து
காலடியில் போட்டு மிதிக்கும்
எண்ணம் எதேச்சையாகவே
தோன்றுவது என் புத்திக் கோளாறா
இல்லை புலன்களின் பாய்ச்சலில்
புகுந்து கொண்ட எதார்த்தமான
உண்மைகளை வெளிப்படுத்தும் யுத்தியா?

கற்றதெல்லாம் இறுமாப்பாய் மாறி
வார்த்தைகளில் கர்வத்தை பரவவிட்டு
அறியா பாமரர்களின் கழுத்தை
நெறிக்கும் வழிமுறைதான் புத்தியெனில்
இப்போதே அதை தீயிடத் துணியும்
முதல் மூடனாக நானிருக்க ஆசையே...!

தத்துவங்களும் புள்ளிவிபரங்களுமே
எப்படி வாழ்க்கையின் தீர்வாகும்?
வயிற்றுப் பசியின் காரணத்தை...
அறிவியல் மூலத்தை விவரிக்கும் பொழுதில்
ஏழைகளின் பசிகள்
தானே தீர்ந்து போகுமா என்ன?

எல்லாம் கடந்து இயல்பாய் செயலுறும் போதும் அதை பகிரவேண்டிய தேவைகளற்று, ஒரு குழந்தையைப் போல சிரித்து, கனமின்றி கவிதயான மனம் கொண்ட பார்வைகள் கொண்டு, தீமையை அழிப்பதில் தீமையைவிட கொடுமையாய் நின்று நானாக நானிருத்தல்தானே விடுதலை....!

இதோ மெல்ல மெல்ல உள் நகர்ந்து, புறக்கூச்சல் ஒழித்து விட்டு நானாயிருக்கும் என் தனித்தலில் கிளைக்கத் தொடங்கிருக்கும் மூலத்தில் ஜனித்தலுக்கும், மரித்தலுக்கும் அப்பாற்பட்டு நான் வெறுமனே கிடக்கிறேன்.


இதோ இக்கணமே நிகழந்துவிட்டது என் ஆனந்த விடுதலை....!


தேவா. S

Monday, April 11, 2011

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே.....!

வெயிலு கொளுத்த ஆரம்பிச்சுருச்சு இல்ல...! எது சரியா நடக்குதோ இல்லையோ பூமி சுழற்சியும் இயற்கையும் அதன் அளவில் சரியான செயல்களை செஞ்சுகிட்டுதான் இருக்கு. யார் சொன்னாலும் கேக்குமா இயற்கை...? கேக்காது அதுக்கு தன்னுடைய செயல் செய்வதற்கான கூட்டு சூழல்தான் முக்கியம். அது எப்டி இருக்கோ அதை கேட்டு செஞ்சுகிட்டு போய்கிட்டே இருக்கும்...!

ஜப்பான்ல வந்த சுனாமிய பிரிச்சு எடுத்து வச்சு தனித் தனியா பாத்தா அது கொடுமை அது வலி. இயற்கையின் முன்னால் அது ஒரு செயல் அவ்வளவே! பூமியின் அடி ஆழத்தில் இருக்கும் அடுக்குகள் நகர உள்ளுக்குள் இருக்கும் கடல் கொஞ்சம் வெளில எட்டிப்பாத்து ஹாய் சொல்லிட்டு போகுது....அந்த மாற்றம் மனிதர்களின் செயலுக்கு எதிர்மறையா போய்டுது அதனால திட்டி தீத்துடுறோம் ....ஏய் கடவுளே, ஏ இயற்கையே அப்டின்னு கண்டமேனிக்கு கூச்சல் போடுறோம். அது நம்ம ஆதங்கம ஆனா இயற்கைக்கு அது பத்தி எல்லாம் கவலை இல்லை இந்த ஒட்டு மொத்த பிரபஞ்ச இயக்கத்துக்கு இது தேவையா இருக்கு.

இப்படி இயற்கையோட ஒரு நிகழ்வுக்கு நாம ஆடிப் போயிடுறோம், ஆனா பல சமயத்துல சரியான மழையா, நல்ல விளைச்சலா, மனித மூளைகளில் சிந்திக்கும் திசுக்களாய் இருந்து புதிது புதிதாய் கண்டு பிடித்து அதுக்கு விஞ்ஞானம்னு பேரிட்டு நமக்கு கொடுக்கும் நிகழ்வாய், வற்றாத ஆறுகளாய், நல்ல மனிதர்களை பிறப்பிக்கும் சக்தியாய், மனிதர்களுக்கு நேர்மறையான செயல்களை செய்யும் போது அதில் மகிழ்ந்து போகும் நாம் இயற்கையை சீராட்ட மறக்கிறோம். ஆனால் அப்போதும் இயற்கை தன்னளவில் தானே ஒரு புன்முறுவலோடு இயங்கிக் கொண்டுதான் இருக்கிறது.

தீமையும், நன்மையும் மனித பார்வைகளிலும் மனித தேவைகளிலும் இருக்கிறதே அன்றி நிஜத்தில் அப்படி ஒன்றுமில்லை. மிகைப்பட்ட மனிதர்கள் சுயநலமானவர்களாக ஆகிவிட்டால் அவர்களின் நன்மைகள் வேறு, அவர்களின் தீமைகள் வேறு. தன்னலமில்லாதவர்களாக மிகைப்பட்டவர்கள் இருந்தால் அங்கே பார்க்கப்படும் பார்வை வேறு.

இருவேறு வழிமுறைகள் இருக்கின்றன ஒன்று நமக்கு பிடித்தது. மற்றொன்று எல்லோருக்கும் நன்மை பயப்பது. நமக்கு பிடித்தது எல்லா நேரமும் மிகைப்பட்ட மனிதருக்கு நன்மையை கொடுக்கும் என்று சொல்ல முடியாது. எல்லோருக்கும் பிடித்தது நமக்கு நன்றாக வரும் என்று சொல்லவும் முடியாது. ஒரு விதமான விசால பார்வையும் தெளிவுகளும் இருக்கும் போது இந்த இரண்டும் ஒத்துப் போகும் ஒரு அதிசயம் நடக்கும். அப்படி ஒத்துப் போன மனம், மற்றும் பார்வையைக் கொண்டு சமுதாயப் பணி ஆற்ற வருபவர்களின் செயல்கள் இயற்கையை ஒத்து தானிருக்கும்.

ஒரு செயலை செய்துவிட்டு அதனால் பாதிக்கப்படும் குறைகள் கூச்சலிடுவது பற்றியும் இவர்களுக்கு கவலையில்லை. மிகைகள் முக ஸ்துதி பாடி பாராட்டுவதைப் பற்றியும் இவர்களுக்கு கவலையில்லை....! செயல் செய்வதோடு இவர்கள் பணி முடிவடைகிறது அதற்கான பலனை எதிர்பார்த்து கற்பனைகளில் எப்போதும் லயிப்பது இல்லை.

இப்போ மேட்டருக்கு வர்றேன்.....

தமிழ் நாட்டில் அடித்தட்டு மக்களில் ஆரம்பித்து தலைமைப் பொறுப்பில் இருக்கும் பெரிய தலைவர்கள் வரைக்கும் இந்த சுயநலப் பேய் பிடித்து ஆட்டாமல் இல்லை. அதனால்தான் மக்களை திருப்திபடுத்த இலவசங்களையும், இன்ன பிற விசயங்களையும் அரசியல் கட்சிகள் இன்று நமது முன் லேகியம் விற்பவர்களைப் போல கடைவிரித்து வைத்துக் கொண்டு கூவி கூவி ஓட்டு சேகரிக்கிறார்கள்.

ஒரு ரூபாய் அரிசி கொடுப்பதை சாதனை என்று பார்ப்பதுதானே இப்போது மிகைப்பட்டவர்களின் பார்வை. இந்த பார்வையை கொஞ்சம் மாற்றுங்கள்....

" நான்கு, ஐந்து அல்லது பத்து ரூபாய்க்கு அரிசி விற்றால் வாங்க முடியாத சூழல் இருப்பவர்களை உருவாக்கியது யார்? வாங்கும் திறனற்றுப் போய்தானே 1 ரூபாய் அரிசியை மக்கள் வாங்குகிறார்கள்? நீங்களும் அதை பெரிய சாதனையாகச் சொல்கிறீர்கள்? உங்கள் அரசின் நடவடிக்கைகளும் கொள்கைகளும் சரி என்றால் 1 ரூபாய்க்கு எல்லா கடையிலும் அரிசி விற்க வேண்டும். மேலும் அப்படி இருப்பது ஒரு சாதாரண நிலையாக பார்க்கப்படவேண்டும் அப்படி இருந்தால்தானே உண்மையிலேயே சீரான வளர்ந்த ஒரு சூழலில் நாம் இருப்பதாக ஆகும்?

தமிழகத்துக்கு இலவசங்களை அறிவிக்கும் அரசு, கடன்களை தள்ளுபடி செய்யும் ஒரு அரசு, அதே தமிழ்நாட்டுக்கு எவ்வளவு கடன் இருக்கிறது? அந்த கடன் எங்கிருந்து வந்தது என்று வடிவேலுகளை விட்டு குத்தாட்டம் போட்டு சொல்லச் சொல்லுமா?

ஒரு சரியில்லாத அரசியல் கட்சித் தலைவனான விஜயகாந்தை விமர்சிப்பதே, திட்டுவதே எம்மக்களுக்கு நல்லது செய்தது ஆகிவிடுமா? "

அறிஞர் அண்ணாவிடம் தி.மு.க என்ற ஆயுதம் இருந்தது அதை சரியாக உபோயகப்படுத்தி தன்னுடைய பெருங் கனவினை செயல்படுத்தி மக்களை சரியாக வ ழிநடத்தும் முன் போய் சேர்ந்து விட்டார் அந்த தலைவர். அவரின் பேச்சுக்களின் ஆழமும் பார்வையும் இன்று அவரை பின்பற்றி வருகிறேன் என்று கூறும் எந்த தலைவர்களிடமாவது இருக்கிறதா?

அறிஞர் அண்ணாவிற்கு பிறகு அரசியல் களத்தில் சினிமா கவர்ச்சியோடு இறங்கிய எம்.ஜி.ஆர். தொடர்ந்து ஆட்சி பீடத்தில் இருந்தது கூட ஒரு வித மாயை கட்டவிழ்த்து விட்டிருந்ததால்தான் என்றாலும் கூட ஏழை எளிய மக்களுக்கு முன்னால் ஒரு நிஜ தலைவனாக ஏழைப் பங்காளனாக கட்டிக் கொண்டாதோடு மட்டுமில்லாமல் தனது அரசியல் சாதுர்யத்தால் காங்கிரஸ் என்ற கட்சிக்கு இருந்த ஓட்டு வங்கியை சரியாக தனது கட்சியின் வளர்ச்சிக்கு பயன்படுத்தியும் கொண்டார்.

தமிழக வாக்களர்கள் அறிவுசார் வாக்காளர்களாக வழி நடத்தி செல்லப்பட்டிருக்கவேண்டும். அறிஞர் அண்ணா அதைத்தான் செய்ய விரும்பினார் ஆனால் எம்.ஜி.ஆரின் காலத்திலிருந்து அது உணர்ச்சி சார் சமுதாயமாக மாற்றப்பட்டு விட்டது. பெரும்பாலும் எம்.ஜி.ஆருக்கு செலுத்தப்பட்ட வாக்குகள் எல்லாமே நன்றிக் கடன்கள்தான்.

எம்.ஜி.ஆரின் மறைவுக்கு பின்பு அதிமுக வலுவிழந்து இரண்டாக பிரிந்திருந்த நேரத்தில் அரியணையை ஆசையோடு கட்டியணைத்தார் கலைஞர் கருணாநிதி. அரசியல் நாடகத்தில் காங்கிரசின் எதேச்சதிகார கை அப்போதைய பிரதமர் சந்திரசேகரை தூண்டிவிட...1989ல் சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி சீறிப்பாய்ந்து தி.மு.க அரசினை கலைத்துப் போட்டது 356வது சட்டப்பிரிவு.

அதன் பிறகு தொடர்ச்சியாக 1991ல் அ.திமு.க (ராஜிவ் அலை), 1996ல் தி.மு.க (ஜெ. ஊழல் எதிர்ப்பலை) 2001ல் அதிமுக (கூட்டணி பலம் + கைதுகளுக்குப் பிறகு ஜெவின் மீது ஏற்பட்ட பச்சாதாபம்) 2006ல் மீண்டும் திமுக (கூட்டணி பலம் + விஜயகாந்த் என்ற ஒரு முரண்பாடு அரசியலுக்குள் வந்து பிரித்துப் போட்ட வாக்குகள்)

என்று கடந்த காலங்களில் தொடர்ந்து மாறி மாறி ஆட்சிகள் வந்திருப்பதில் பயந்துதான் ஒரு மைனாரிட்டி அரசாக காங்கிரசோடு கைகோர்த்த தி.மு.க. நலத் திட்டங்களை மக்களுக்காக நிஜமாவே நிறைவேற்றியதும் மறுக்க முடியாத உண்மை. தி.மு.க அரசு மக்களை கவர அதிடியான திட்டங்களை இடைவிடாது செயல்படுத்தினாலும் ஈழப்பிரச்சினையில் காங்கிரசின் நிலைப்பாட்டை எதிர்க்க முடியாமல் அதன் கரங்களை தமிழ்நாட்டு கூட்டணி அரசியல் கட்டிப்போட்டிருந்தது மட்டுமில்லாமல் சில சுகபோகங்களை தி.மு.கவின் தலைமை இழக்கவும் விரும்பவில்லை.அதோடு மட்டுமில்லாமல் மத்தியில் வலுவிழந்து போன பாரதிய ஜனதாகட்சியும் ஒரு காரணம்.

எதிர்கால மத்திய அரசியலுக்கும், மாநில அரசியலுக்கும் சேர்த்தே திட்டங்கள் தீட்டிய மு.க. ஈழப்பிரச்சினையில் குரங்கு அசைத்த ஆப்பாய் நன்றாக மாட்டிக் கொண்டுதான் விட்டார் என்பதை தி.மு.க உயர் நிர்வாகிகளே இன்று ஒத்துதான் கொள்கிறார்கள். காங்கிரசுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி கொண்டிருக்கும் தமிழர் சார் அமைப்புகளும், சீமான் போன்ற தலைவர்களும் நிஜத்தில் காங்கிரசுக்கு ஒரு பிரச்சினையில்லை ஆனால் இப்போது அவர்கள்தான் தி.மு.கவின் தலைவலி.

தனது சாதனைகளை மட்டும் முன்னெடுத்து வைத்து இனி செய்யப்போகும் நலத்திட்டங்களை விளம்பரப்படுத்தி, கூட்டணி ஒற்றுமையோடு இருக்கும் தி.மு.க அரசு ஈழப்பிரச்சினையையும், இராமேஸ்வரம் மீனவர் பிரச்சினையையும், ஸ்பெக்ட்ரம் ஊழலையும் மறந்துவிட்டு வாக்களியுங்கள் என்று கேட்கிறது?

2001 - 2006 வரை ஆட்சி செய்து விட்டு பின் ஆட்சியை இழந்த ஜெயலலிதாவிற்கு கனவிலும் கூட உதித்திராத இலவச திட்டங்களை கொடுத்து செயல்படுத்திவிட்ட கருணாநிதியை எதிர்கொள்ள இந்த தேர்தலில் ஜெயித்து தானும் மக்களுக்கு இலவசங்களை வாரி வழங்கி கருணாநிதியை ஓவர்டேக் செய்யவேண்டும் என்ற எண்ணம் மிகுந்திருப்பது அவரின் காப்பியடிக்கப்பட்ட தேர்தல் அறிக்கையிலேயே தெரிகிறது.

இந்த வகையில் தமிழக ஊழலுக்கு அச்சாரம் போட்டு தொடங்கி வைத்து அதை பின்பற்றி 1991களில் ஜெயலலிதா ஊழலில் கொடி கட்டி பறந்து பின் அந்த ட்ராக்கை மாற்றிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் இலவசங்களை கொடுத்து மக்களை மயக்கும் ஒரு வசியத்தை செய்யும் ஒரு புது ட்ரண்டினைத் தொடங்கி வைத்த பெருமையும் தமிழினத் தலைவரையே சேரும்.

தான் ஆட்சி அமைத்தே ஆகவேண்டும் என்று ஒரு முட்டாளோடு கூட்டணி அமைத்து 41 இடங்களையும் கொடுத்து வை.கோ போன்ற 100% அக்மார் அரசியல்வாதிகளை மதிக்காமல், கண்டுகொள்ளாமல் விட்டு விட்ட ஜெயலலிதா சுயநலத்தின் உச்சத்தில் இருக்கிறார் என்று யாரும் சொல்லித் தெரிந்து கொள்ள வேண்டியது இல்லை.

மீண்டும் தமிழக தேர்தலில் தி.மு.க ஜெயித்தால்..........தன்னை அசைக்க முடியாத சக்தியாய் கருதிக் கொண்டு மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்தும் அதே வேளையில் தமது சொந்த பந்தங்களை எல்லாம் இன்னும் வலுவாக்கிவிடுவார் கருணாநிதி. காங்கிரஸ் கட்சியும் தமிழின அழிப்பு என்பது எல்லாம் எங்களை ஒன்றும் பாதிக்காது.... தமிழன் எங்கள் தலையிலிருக்கும் ஏதோ ஒன்றுக்கு சமம் என்று எண்ணும் மனோபாவத்தில் இந்த வெற்றியினை காரணம் காட்டி எதிர்கால மத்திய அரசுக்கான தேர்தலில் பகடைக்காய்களை விளையாடும் அதற்கு தி.மு.கவும் துணை போகும்.!

ஜெயலலிதா என்னும் ஒரு எதேச்சதிகார மனோபாவம் கொண்ட அ.தி.மு.க தலைமையேறினால் இலவசங்கள் சகட்டு மேனிக்கு கிடைக்கும், மக்களை வசீகரிக்க எல்லா உத்தியையும் குறைவில்லாமல் செய்யப்போகும் இவர் மக்களின் பிரச்சினைகளுக்கு சரியான தீர்வுகளை சொல்லப் போவதுமில்லை. பெரும்பான்மையோடு வெற்றிப் பெற்றால் விஜயகாந்த்களை செவுட்டில் அறைந்து வெளியேற்றப்போவதும் உண்மை.

ஈழப்பிரச்சினைக்கும், தமிழனுக்கும் பெரிதாக எதுவும் செய்யப் போகாத ஜெயலலிதா முடிந்த வரைக்கும் கலைஞர் குடும்பத்தை நடுத்தெருவுக்கு இழுக்க முயற்சிப்பார், ஏனென்றால் பழி வாங்குதல் அவரின் பிறவிக் குணம்...! இதுதான் அதிமுக ஜெயித்தால் நடக்கும்.....

இப்படிப்பட்ட சூழலில் தேர்தலை எதிர்கொள்ளப்போகும் என் இனம்....என்ன செய்யப்போகிறது என்பது மில்லியன் டாலர் கேள்வியாய் இருக்கிறது. கணிக்க முடியாத ஒரு களமாய் இந்த தேர்தல் 2011 இருக்கிறது என்பதே உண்மை....!!!

காத்திருப்போம்...தமிழகத்தின் தலையெழுத்தை அடுத்த 5 ஆண்டுகளுக்கு எழுதப்போகும் ஆண்டவன் யாரென்று அறிய...

இயற்கையின் ஓட்டத்தில் எது நிகழ்ந்தாலும் அது பிரபஞ்ச சுழற்சிக்கு தேவையானதாகவே கருதிக் கொள்வோம்!!!!!

தேவா. S

பின் குறிப்பு: தமிழகத்துக்கு சரியான தலைவன் கிடைக்க இன்னும் இரண்டு. மூன்று சட்டமன்ற தேர்தலை கடந்து செல்லவேண்டிய துர்பாக்கிய நிலையில் எம் இனம் இருக்கிறது என்ற உண்மையை உணர்ந்து கையறு நிலையில் பதியப்பட்ட பார்வைதான் இது.

Thursday, April 7, 2011

பரமசிவம் தாத்தா....என் ஹீரோ!


கற்றை முடியை கையால்...
கலைத்து சற்றே நிமிர்கையில்...
கண்ணாடிக்குள்ளிருந்து கண்ணடித்து
வெளுப்பாய் பார்த்து சிரித்தன
சில வெள்ளை முடிகள்!

கறுப்பு ராஜ்யத்துக்குள்...
காலம் அனுப்பி வைத்த...
பளீச்சிடும் படை வீரர்களாய்
தம்மை மறைத்து மெலிதாய் சிரித்து
சூட்சுமமாய் வாள் சுழற்றி
சொல்லாமல் சொல்லின...
காலத்தின் கணக்கினை.....!

எதிர் வீட்டு சம்பசிவம் தாத்தா....
என் அப்பா, என் மாமா என்று...
வாங்கிய வெளுமையினை
சாயங்களால் ஏமாற்றி
கருப்பாய் வெளுப்பை
அவ்வப்போது தோற்கடித்திருந்தாலும்
முழுதும் வெளுத்த தலையுடன்
எப்போதும் நடக்கும் பக்கத்து வீட்டு
பரமசிவம் தாத்தாதான்
என் ஆதர்சன ஹீரோ!

சொடக்கு போட்டு....
காலம் அழைத்து கொடுக்கும்
பரிசினை மறைத்து வைக்கும்
மடைமையில் எப்படி விடியும்
மீண்டும் இளமை?

என் நரைத்த தலையை
முழுதாய் காணும் ஏக்கத்தில்
மீண்டும் மீண்டும்
கனவுகளில் பறக்கிறேன்...
கேசத்தினை....கலைத்து கலைத்து...
கணக்குகள் கூட்டி காதலாய்...
காத்திருக்கிறேன் கருப்பினை
கடக்கும் என் வெள்ளை நாட்களுக்காக!

மிச்சமும் எப்போது வெளுக்குமென்ற
என் கனவுகளின் பின்னால்...
காலம் கடக்கும் ஆசையொன்றுளதை
யார்தான் அறிவார்?

தேவா. S


Wednesday, April 6, 2011

மகளே.. என் செல்வ மகளே..!


கல்யாணம் பண்ணிக்கிற அத்தனை ஆம்பளைகளும் ஒரு வித ஈகோவோடதான் பண்ணிக்கிறாங்கனு நான் சொல்ற வார்த்தையில் ஈ.கோன்னு சொல்ற வார்த்தை ரொம்ப பேர சங்கடப்படுத்தலாம் ஆனால், ஈகோன்னு நான் சொல்றது ஒரு வித ஆணுக்கே உரிய ஹீரோத்தனத்தை...

காலம் காலமா சினிமாவுல ஆண்களளை ஹீரோவா பாத்துட்டு, எப்பவும் ஒரு கூட்டத்தையே அடிச்சு துவம்சம் பண்ணி, வயதான அம்மா, அப்பா, அப்புறம் தங்கை, காதலின்னு எல்லோரையும் காப்பாத்தி கை புடிச்சு கூட்டிட்டு ஜம்பமா வரத பாத்து பாத்து...ரத்ததுல ஊறிப்போயி இருக்கற விசயம். ஆண் அப்டின்னு சொன்னா.. எல்லாத்தையும் பாத்துக்குவான் எல்லா பிரச்சினையும் தீத்துடுவான் அப்டீன்னு ஒரு பொது புத்தியோட சேர்ந்த சூழல் நமக்குள்ள ஆழமா பதிஞ்சு போயிடுச்சு.

அதுவும் நாம ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு அப்புறம் பின்பற்றிக் கொண்டிருக்கும் ஒரு போலியான கலாச்சாரத்துல பெண் என்பவள் குடும்பத்தலைவியா இருக்குறதுதான் சரி அப்டீன்னு ஒரு முடிவு பண்ணி....இந்த இடத்துல ஒரு சின்ன விளக்கம் கொடுக்க விரும்புறேன்....அதாவது குடும்பத்தலைவின்னா வீட்டு வேலைகள் செய்து, சமைத்து, கணவனுக்கும் பிள்ளைகளுக்கும் பணிவிடை செய்து, வேறு ஆண்களுடன் பேசுவது தவறென்று போதிக்கப்பட்டு, குனிந்த தலை நிமிராமல் வெளியில் செல்லும் போது கணவன் பின்னாலேயே சென்று கணவன் பின்னாலேயே வந்து..இப்படியாக நீளும் இத்தியாதிகளை எல்லாம் ஓரளவிற்கு இப்போ கடந்து வந்திருக்கிறோம் என்றாலும்...

திருமணம் என்ற பந்தத்திற்கு பிறகு அதுவும் மிகுதியாக புதிதாக திருமணமான ஒரு ஒன்று அல்லது இரண்டு வருடத்திற்குள் புரிந்தவர்கள் கூட மாட்டிக் கொண்டுவிடும் ஒரு இடம் இருக்கிறது. புரியாதவர்கள் இறுகிப்போய் வாழ்க்கை முழுதும் மாட்டிக் கொண்டு விடுகிறார்கள். என்ன அந்த புரிதல் என்ன அந்த புரியாமை...?

திருமணம் செய்து கொடுத்தபின் அந்த பெண்ணை தனது சொந்தமாக, தனது காதலாக, தனது உரிமையாக பார்ப்பதில் தவறுகள் இல்லை என்று கொள்ளும் அதே நேரத்தில் அங்கே பொசசிவ்னெஸ் என்ற அரக்கன் சில நேரம் பெண்களிடமும் பழக்கத்தின் காரணமாக பல நேரம் ஆண்களிடம் விளையாட்டுகள் காட்டுகிறது. ஆணுக்கும் பெண்ணுக்கும் நடக்கும் இப்படிப்பட்ட நிகழ்வுகளில் மிகுதியான பாதிப்புக்குள்ளாவது பெண்களாயிருப்பதை கணக்குகள் கூட்டி பெண்களை மையப்படுத்தி இக்கட்டுரையை நகர்த்த வேண்டியதை அவசியமாகக் கொள்கிறேன்.

நமது சமூக அமைப்பின் படி பெண் தனது வீட்டாரை விட்டு கணவனோடு வந்துவிடுவது இயல்பான ஒரு விசயமாக பார்க்கப்பட்டாலும் உளவியில் ரீதியாக ஒரு வீட்டில் 23 வருடங்களை ஆடிப்பாடி, கொண்டாடி விட்டு புதிதாய் ஒரு வீட்டிற்குள் அடியெடுத்து வைக்கும் பெண்களின் மனோநிலை எப்படியிருக்கும் என்று இதுவரைக்கும் சரியான ஒரு பார்வை இல்லாமல் போனதற்கு பின்புலமாய் பெண்ணடிமை மனோபாவம் இருந்ததும் ஒரு காரணம். பெண்ணடிமைத்தனம் முற்றிலுமாய் தீர்ந்து போய்விடவில்லை அதன் கருஞ்சிவப்பு நிறம் வெளுத்துதான் போயிருக்கிறது என்பதற்கு அவரவர் மனசாட்சிகளே சிறந்த ஆதாரம்.

திருமணமான புதியதில் கணவனைக் கைப்பிடித்து ஒரு வீட்டிற்குள் நுழையும் பெண்ணை தனது மருமகளாக அந்த வீட்டின் பெண்ணாக உரிமைகள் கொடுக்கும் அதே நேரத்தில் அவளது பிறந்த வீட்டு பாசத்தையும், பிறந்த வீட்டில் உள்ளவர்கள் பெண்ணின் மீது வைக்கும் பாசத்தையும் தேவையில்லாத ஒரு விடயமாக பார்க்கும் ஒரு கண்ணோட்டம் இயல்பாகவே வந்துவிடுவதற்கு காரணம் இவள் வீடு இனி கரம்பிடித்தவனின் வீடு, அந்த வீட்டின் நலனைப் பற்றியே இவள் இனி நினைக்க வேண்டும் என்ற ஒரு மனோபாவம் புகுந்த வீட்டில் உள்ளவர்களுக்கு இருக்கிறது. இதற்கு காரணம் காலங்களாய் பின்பற்றி வந்த பொது புத்தி.

ஒரு ஆண் தனது குடும்பத்தாருடன் உறவாட, தனது பெற்றோரின் குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்வது கடைமையாக கொள்ளப்படும் ஒரு சமூக கட்டமைப்பில் பெண் தனது பெற்றோர்களைப் பற்றி நினைப்பதும் தன் பிறந்த வீட்டில் தொடர்ச்சியாக ஒரு மாதம் இருந்து வரலாம் என்று எண்ணுவதும் பெரும் குற்றமாக பார்க்கப்படுவதோடு மட்டும் அல்லாமல் சில கணவர்கள் அதை தங்கள் தனிப்பட்ட இருவரின் காதலுக்கே எதிரான செயலாக பார்க்கும் மனோ பாவமும் இருக்கிறது.

ம்ம்ம்...கொஞ்சம் நடைய மாத்திக்கிறேன்...

கல்யாணம் பண்ணி மனைவிய வீட்டுக்கு கூட்டிட்டு வந்து நமக்கு புடிச்சதெல்லாம் செய்யணும், நமக்கு பிடிச்ச மாதிரி ட்ரஸ் பண்ணனும், லிப்ஸ்டிக் போடக்கூடாது, இன்னும் சில இடத்துல கொஞ்சம் பளிச்சுனு ட்ரஸ் பண்ணக்கூடாது....சந்தோசமா சிரிச்சு பேசக்க்கூடாது....!!! இந்த சந்தோசமா சிரிச்சு பேசக்கூடாதுங்கறதுக்கு பின்னால இருக்குற வக்கிரம் என்ன தெரியுமா? வேண்டாம் அது பத்தி விலாவரியா பேசி ட்ராக் மாற வேண்டாம்....

இன்னும் தமிழ் நாட்டின் புற நகரங்களில் எத்தனை வீடுகளில் பெண்கள் வேலைக்கு செல்வதையும், துணிகரமாய் தனித்தியங்குவதையும் ஆதரிக்கும் கணவன்கள் இருக்கிறார்கள்? மாமனார் மாமியார்கள் இருக்கிறார்கள்? மாறிடுச்சுன்னு நாம சொல்றது ஒரு அதிக பட்சமா 30% இருக்குமா பாஸ்...? அதுக்கும் மேலயா இருந்திடப் போகுது?...திருமணம் என்ற சடங்கிற்கு பிறகு நீ மனைவி நான் கணவன், இது நமது சமூகம் இப்படித்தான் இயங்கவேண்டும் என்ற கட்டுப்பாடுகளை முழு மனதோடு ஏற்கும் மனோபாவம் இருவருக்குமே இருக்க வேண்டும். இங்கே திணித்தல்களோ கட்டாயப்படுத்துதலோ இருக்க கூடாதுதானே?

'அம்மாவிற்கு வேலை செய்ய முடியவில்லை அதனால எனக்கு கல்யாணத்துக்கு பெண் பாத்துகிட்டு இருக்காங்க.....'என்று சொல்லும் என் சக தோழர்களுக்கு நான் சொல்வது ஒன்றுதான்....பெண் பார்த்து திருமணம் முடிப்பது என்பது வீட்டு வேலை செய்ய என்று ஒரு மனோபாவத்தை மாற்றுங்கள், திருமணம் செய்வதின் நோக்கத்தை சரியாக கொள்ளுங்கள் , திருமணத்திற்கு பிறகு வீட்டில் உள்ளவர்களுக்கு உதவுதல் அல்லது வீட்டு வேலைகள் செய்வது என்பது இயல்பாய் நிகழும். இங்கே பெரிய வித்தியாசம் இல்லாதது போலத் தோன்றினாலும் வித்தியாசம் இருக்கிறது. எடுத்துக்கொள்ளும் மனோபாவங்கள் கடைசி வரை நமதுள் நின்று வழி நடத்தும்...என்பது மறுக்க முடியாத உண்மை....!

பெரும்பாலும் ஆண்கள் திருமணத்திற்கு பிறகு செக்யூரிட்டி ஆஃபீசர்களாகவே மாறி விடுகிறார்கள்...இதற்கு ஏற்கனவே மூளையில் ஏற்றி வைத்திருக்கும் கற்பிதங்கள் தப்பாமல் உதவி செய்கின்றன. இதைச் செய்யாதே! அதைச் செய்யாதே என்று தடைகள் போடும் அதே வேளையில் கொஞ்சம் பெண்களின் ஆலோசனைகளைக் கேட்டும், தனித்தியங்கச் சொல்லியும் பாருங்கள் ஆச்சர்யப்படும் வகையில் அவை நமது செயல்களை விட சிறப்பாகவே இருக்கும்.

காலப்போக்கில் பெண்களும் இதற்கு அட்ஜஸ்ட்ச் செய்து வாழத்த் தொடங்கி விடுதலும் சாதாரணமாக நிகழ்ந்து விடுகிறது.

ஆனால்....

மறுமுனையில் இருக்கும் பெற்றோர்...அதுவும் பெண்ணை பெற்று சீராட்டி தாலாட்டி கொஞ்சி குலாவி தலைவருடி, அவள் தவழ்வதைப் பார்த்து, நடப்பதை பார்த்து சிரிப்பதை பார்த்து, ஓடுவதை பார்த்து, தோளோடு கட்டிக் கொண்டு தன் சூட்டில் உறங்க வைத்து....

சூடாமணியே...
என் செளந்தர சுந்தரியே
என் குலம் தழைக்க வந்த
குல விளக்கே...
அம்மா, பெண்ணே, தாயே
என் கண்ணே, உயிரே.....

இரவும் பகலும் ஒரு தகப்பனாய், தாயாய் சீராட்டி, அவள் கண்ணில் தூசு விழுந்தால் இதயம் கசிந்து, கைப்பிடித்து உலகம் சொல்லி, ஊரைச் சுற்றி, அவள் நடக்க, அவள் பேச, அவள் சிரிக்க என்று வாழ்க்கையை எல்லாம் அவளின் அசைவுகளுக்குள் சூட்சுமமாய் நிறைத்து விட்டு.... அவள் மெல்ல வளர்கையில் பிரமித்து, முதன் முதலாய் அவள் நீண்டாதாய் பின்னலிடும் நேரத்தில் வியந்து, வாழ்க்கையின் அர்த்தங்கள் விளங்கி...என் மகளே.. என் மகளே... என்று சீராட்டி பூச்சூடி..........அத்தனை நினைவுகளையும் நெஞ்சுள்ளே தேக்கிவைத்து.. அவளுக்கென்று வரன் பார்த்து....

அம்மா, மகளே....இவள் தானம்மா உன் கணவன், இவன் தானம்மா உன் வாழ்க்கை, நான் உன் தகப்பனம்மா, உன்னை வளர்த்த ஒரு பிரியமுள்ள பித்தனம்மா, உன்னை மறவாமல் என்னுள்ளே வைத்திருப்பேனம்மா, உன் வாழ்க்கை இனி வேறு, உன் உலகம் இனி வேறு உன் கணவனே இனி உனக்கு தாயாய் தகப்பானாய் இருப்பானம்மா...தந்தை என்னும் உறவுக்கு இனி அங்கே வரவொன்றில்லையம்மா...

காலச்சக்கரத்தின் தன் சுழற்சியில் இனி உன்னை தூர நின்றே பார்க்கும் பாக்கியமே அறமாகப் எனக்குப் போனதம்மா...

உன்னை சீராட்டி வளர்த்த
நினைவுகளை எல்லாம்
என்னுள் காலமெல்லாம் சுமக்கும்
ஒரு சந்தோசக் கூலியம்மா
உன் தகப்பன்!

பிஞ்சாய் உன்னை பொத்தி எடுத்து, என் தோள் சுமந்து, உன் வலி பொறுக்க முடியாத போதெல்லாம் உனக்காக கதறியழுது, காலமெல்லாம் உன்னோடு வரும் பாக்கியமற்று இதோ உன்னை கைப்பிடித்து கொடுக்கிறேனம்மா....

அப்பா மகனே, என் மருமகனே....காலமெல்லாம் என் கண்ணுள் சுமந்த கவிதையை, நான் வடித்த அற்புத ஓவியத்தை, என் செப்புச் சிலையை, என் உயிர் சுமக்கும் என் தாயை உனக்கு தாரமாக்கி தந்தேனப்பா...! அவள் கண்கள் சிவந்து அழும் நேரங்களிலெல்லாம் என் உயிரே போய் திரும்புமப்பா...! உள்ளங்கையில் சுமந்த என் குழந்தையை உன்கையில் கொடுக்கிறேனப்பா...."

இதுதான் அந்த மறுமுனை இந்த மறுமுனை பற்றி சொல்லில் கொண்டு வந்து விளக்க முடியுமா? என்று எனக்கு தெரியவில்லை ஆனால் இந்த மறுமுனை நோக்கி நான் நகர்ந்து கொண்டிருக்கிறேன்.. என்னுள் கலக்கமும், ஒரு பயமும் இருக்கிறது. நாளை என் மகளின் கணவன் யாராய் இருப்பான்? எந்த வீடு புகப்போகிறாள் இவள்? அந்த வீடு அவளை அடக்கி ஆளுமா? இல்லை எதார்த்த வானில் சிறகடிக்க விடுமா? தகப்பனாய் என் பாசங்கள் புரிந்து என்னை அவளோடு அளாவளாவ விடுமா? இல்லை பொது புத்திகள் எல்லாம் சேர்ந்து என்னை அவளை காணவிடாமலேயே தடுக்குமா? கண்டாலும் வார்த்தைகளை ஒதுக்கி விட்டு பரஸ்பரம் மட்டுமே பேசவைக்குமா?

எனக்குத் தெரியாது.

என் மனைவியிடம் பல முறை நானே கூறியிருக்கிறேன் ...திருமணமானால் கணவன் தான் எல்லாமே..அப்புறம் என்ன அப்பா, ஆட்டுக்குட்டி என்று....அவளும் என் மீதுள்ள காதலில் மாறிவிட்டாள்....! ஆனால் அந்த தகப்பன்....இன்னமும் தன் மகளுக்கு நேராக தொலைபேசி செய்தால் மாப்பிள்ளை ஏதும் நினைத்து விடுவாரோ என்று எப்போதும் எனக்கு தொலை பேசி செய்து விட்டு பிறகு பக்கதில் என் மனைவி இல்லாவிட்டால்...என்னிடம் அனுமதி பெற்று அவளிடம் பேசும் வழக்கத்தை எனது திருமணமாகிய இந்த ஏழு வருடத்தில் கடந்த ஒன்றரை வருடமாகத்தானே நான் உடைத்துப் போட்டேன்......

நானேல்லாம் படித்தவன், நானெல்லாம் புதிய தலைமுறைகள் பற்றி பேசுகிறேன், நானெல்லாம் முற்போக்குவாதி, நானெல்லாம் ஒரு சீர்திருத்தவாதி, என்று என்னையே எரித்து எரித்து இன்னமும் மாறமுடியாமல் சமுதாய கட்டமைப்பு என்னும் ஒரு முள்வேலி என்னை குத்திக் கிழிக்கிறது, உடலெல்லாம் இரத்தம் வழிய நான் மாற்றத்துக்கு என்னை உட்படுத்திக் கொண்டிருக்கிறேன்............

ஒரு கணவனாய் விளங்க வைக்க முடியாத விசயங்களை காலம் ஒரு பெண்ணின் தகப்பனாய் குறைவில்லாமல் போதித்துக் கொடுக்கிறது என்பது முக்காலமும் உண்மை.


தேவா. S

Saturday, April 2, 2011

சுவாசமே...காதலாக...! தொகுப்பு: 9அது ஒரு நெடிய இரவு ஆனால் கணத்தில் கழிந்துதான் போய் விட்டது. நினைவுகளில் தான் அதன் நீட்சியும் நிகழ்வுகளும் வானில் மிதக்கும் மேகமாய், நீரில் நீந்தும் மீன்களாய் என்னுள் நகர்ந்து கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு கடத்தலிலும் மீண்டும் மீண்டும் இழுத்து பிடித்து நிறுத்தி மீண்டும் மீண்டும் காண்கிறேன் உன்னோடு கழிந்த அந்த கனவு இராத்திரியை...!!!!

நீயும் நானும் தொட்டு விடும் தூரத்தில் இருந்தும் தொடுதலை புறம்தள்ளி மெல்லிய வெளிச்சத்தில் வார்த்தைளாலேயே தழுவிக் கொண்ட அற்புத கணம்..! உனக்கு பிடித்த இசை அறை எங்கும் பரவியிருக்க எனக்குப் பிடித்த வானத்தை ஜன்னல் வழியே ரசித்துக் கொண்டு உன்னோடு பேசிக் கொண்டிருந்த ஒரு நீண்ட இரவு அது..!

எதற்கோ சிரித்தாய், எதற்கோ அழுதாய், எதற்கோ ஆச்சர்யப்பட்டாய், எதற்கோ கோபப்பட்டாய், எதற்கோ அமைதியானாய் ரசிப்பின் உச்சத்தில் லயித்துக் கிடந்த என் அற்புத உணர்வுகளின் சங்கமத்தில் எனக்குள் கிளர்ந்த உணர்வுகளை நான் காதலென்றேன் இல்லை இல்லை கடவுளென்றாய் நீ!

நீண்டுக் கொண்டிருந்த அந்த இரவினை அலட்சியமாய் ஆக்கிரமித்த உன் அழகினை வார்த்தைகளுக்குள் கொண்டுவர முடியாமல் தடுமாற்றமாய் ஏதேதோ உளறி கடைசியில் என் பெயரே நான் மறந்தது நினைவிருக்கிறதா?

விடியாமல் இருந்தாலென்ன...? என்றாய். நீ விலகாமல் இருப்பாயா...? என்றேன் நான்...!உன் கண்களால் என் கண்கள் ஒத்தி சத்தியாமாய் விலகேன் என்ற பின் புன்னைகயாய் படர்ந்த என் காதல் வார்த்தைகளாய் கருக் கொண்டு ஒரு கவிதையாய் இதோ.. இதோ... ஜனித்தே விடுவேன் என்று என்னை மிரட்டியதை உணர்ந்தேதான் வெள்ளை பேப்பரையும் பேனாவையும் ஒரு பிரசவம் பார்க்கும் தாதி போல என்னிடம் வைத்தாயா?

கிறுக்கலாய் என் காதல் போதையை பேதை உன் முன்பு ஒரு காகிதத்தில் கவிதையாய் அரங்கேற்றுக் கொண்டிருதேன்.நீ ரசிப்பாய் காகிதத்தை கவிதைக்காய் பார்த்தாய். நான் காதலாய் உன் கலைந்த கேசத்தை பார்த்தேன். இரவு எப்போதும் அழகானது ஆழமானது அதை இன்னும் அலங்கரித்து எனை மூர்ச்சையாக்காமல் விடமாட்டேன் என்ற கங்கணம் கட்டிக் கொண்டு உன் அருகாமை என்னிடம் போட்டியிட்டு கொண்டிருந்தது.

வாழ்க்கையில் எல்லாமே அழகுதான். ஆமாம் அத்துமீறல்கள் இல்லாமல் சூழலுடன் பொருந்தியிருத்தல் அழகுதானே. அவசரங்கள் கொண்ட மனிதர்கள் வேகத்தில் மோகத்தில் தொலைத்த அழுக்குகளைப் போட்டு நிரப்பி வைக்க இன்னொரு பூமி வேண்டுமே பெண்ணே....! காமத்தை துடைத்து விட்டு காதலோடு கழிந்து கொண்டிருந்ததுதானே அந்த இரவின் புனிதம்...!

சப்தமில்லா அந்த இரவில் பூமி சுழற்சியின் சூட்சுமத்தில் ஜனித்த உயிர்கள் எல்லாம் உறக்கத்தில் வாழ்க்கையை கழித்துக் கொண்டிருந்த போது உன்னோடான இருப்பில் வாழ்க்கையை அளந்து கொண்டிருந்தேன் நான். காமமென்ற பூட்டினை போட்டு பூட்டி காதலை சிறை வைத்து விட்டு நிம்மதியை தேடும் மானுடர்களிடமிருந்து எப்படி பூக்கும் மனிதம்? மோகத்திற்காக காதலை ஒரு புழுவைப் போன்று தூண்டிலில் சொருகி காமமென்னும் மீனை தேடிக் கொண்டிருக்கும் மனிதர்களுக்கு உயிரோடு கிடைக்கும் காமத்தையும் காப்பாற்றத் தெரியாது, காதலையும் சீராட்டத் தெரியாது...!

எதார்த்தமாய் சப்தமின்றி நீ வார்த்தைகளை இறைத்து கொண்டிருந்தாய்.. நான் தானியம் பொறுக்கும் குருவியாய் செவிகளுக்குள் உன் வார்த்தைகளை வாங்கி மூளையில் சேமித்துக் கொண்டிருந்தேன். உன்னை பிடிப்பதற்கு என்ன காரணமாயிருக்கும் என்று யோசித்திருக்கிறேன் பல முறை ஆனால் அந்த கேள்வியின் முடிச்சவிழ்ந்த அந்த இராத்திரியில் நான் ஸ்தம்பித்துதான் போனேன்...!

புறத்தில் அழகாயிருக்கும் ஒரு அபத்தத்தை உடன் வைத்திருப்பது ஆபத்தென்று அறியாதவனில்லை நான் ஆனாலும் பெரும்பாலும் மனித மூளைகள் கூட்டிக் கழித்து நேசிப்பது புற அழகினையும் அந்த அழகின் மூலம் அடைய நினைக்கும் காமத்தினையும்...

ஆனால்..

புறம் ஒரு காரணமாய் இருக்கலாம் ஆனால் அகம் தெளிவான ஒரு துணையிடம் இருந்து விட்டால் ஒரு ஆணிடமிருந்து பெண்ணும், பெண்ணிடமிருந்து ஆணும் அறிய வேண்டியவை ஏராளம். மூளையை சிறையிலிட்டு ஓராயிரம் கற்பிதங்கள் கொண்டிருக்கும் மனிதர்களுக்கு எல்லாமே அபத்தம்... ஆனால் உடல் தாண்டிய, உருவம் தாண்டிய சூட்சும உணர்வுகளை தேடிப் பிடித்து தன்னுள் நிறைத்துக் கொள்ளும் சூட்சுமங்கள் அறிந்தவர்கள் மிகக் குறைவு...

நான் யோசித்துக் கொண்டே இருந்தேன்....எதார்த்தமாய் நீ கேள்வி கேட்டாய்? உன் காதல் கவிதைகளில் பெரும்பாலும் இருக்கும் பெண் யாரென்று...? கேள்விக்கான பதிலை எடுத்து வர ஆழ் மனதிற்குள் சீறிப் பாய்ந்தேன்..! அந்த கணத்தில் என்னை நான் மறந்து, புறம் மறந்து பதிலைக் கைக் கொண்டு சலனமில்லா பதிலாய் நானே மாறிப் போனேன்....!

' எமது கவிதைகளின் கரு காதலாய் இருக்கும் பட்சத்தில் அதற்கு எப்போது ஒரு பெண் அவசியம் இல்லை. கவிதை சமைக்க காதெலென்ற ஒற்றை உணர்வு ஊற்றாய் எம்முள் பிராவாகமெடுக்க பாலினத்தின் தேவைகள் எல்லாம் அற்றுப் போய் எம்முள் இருக்கும் எப்போதும் விலகாப் பெண்ணை உற்று நோக்கியே யாம் கவிதைகள் படைக்கிறோம். பெண்ணின் இயல்பில்லா ஆண் மகனுமில்லை....ஆணின் இயல்பில்லா பெண்மகளும் இல்லை.

ஏதோ ஒரு காலத்தில் எமது அறிவுகள் குளத்துக்குள் நீச்சலடிக்கும் மீன் குஞ்சாய் பரிணாமம் கொண்டிருந்த சமயத்து எமக்கு பெண்ணென்ற பொருளே மையமாய் இருந்திருக்கலாம். பேறறிவுக் கடலுக்குள் யாம் வந்து விழுந்த கணத்தில் பாலினம் பார்த்து கவி செய்யும் வழக்கம் அவ்வப்போது பழக்கத்தின் காரணமாய் வந்து போனாலும் மிகையாய் யாம் செய்யும் கவிகளுக்கு யாமே கரு...! எம்மில் இருக்கும் பெண்மையே உரு.....!

விவரங்கள் அற்ற மானுடர்களுக்கு எப்போதும் பெண்ணொன்று வேண்டும் மையமாய்; அந்த கருவினை சுவராகக் கொண்டு சித்திரம் வரைதல் தவறென்றும் பகிரல் ஆகாது. அது ஒரு நிலை. உயரம் தாண்டும் பந்தயத்தில் எட்டவொண்ணா உயரங்களை தாண்டியவனுக்கு அது ஒரு கலை. யாம் கடந்து விட்டோம். எம்மில் நிறைந்து விட்டோம்...!

கவிசெய்ய பெண்ணென்று ஒன்று இனி எமக்குத் தனித்து தேவையில்லை....எம்முள்ளும், எமைச் சுற்றியும் நிறைந்து கிடக்கும் பிராணனின் போக்கில் எமது மூளைகளிலிருந்து ஜனிக்கிறது காதல்...இதற்கு எதற்கு புறத்தில் எனக்கு ஒரு தேடல்?

யாம் எம்மையும் எமக்குள் இருக்கும் காதலையும் பெண்ணாய் சித்தரித்து கற்பனை என்னும் எதார்த்தத்தில் தான் செய்கிறோம் கவிதைகள்...."

மொழியாய் வடிவம் கொண்ட விடையை வாங்கிச் சிரித்துக் கொண்ட காதல் பெண்ணே உன்னையும் என்னுள் இருந்துதானே படைத்தேன்...? இந்த நீண்ட இரவை கழித்தேன் என்று நான் கூறி முடிக்கையில் சூரியன் வருவதற்கு சில நாழிகைகளே இருந்தது....

என்னோடே இருப்பேன்; எனை விட்டு விலகேன் என்ற வார்த்தைகள் பகின்ற நீ சூட்சுமமாய் என்னுள் போய் ஒளிந்து கொண்டாய்.....! நானே நீயானாய், நீயே நானானேன்...காதலும், நானும், சூழலும் ஒன்றாய்ப் போனோம்....!

இப்போதெல்லாம் எப்போது அழைத்தாலும் சொடுக்கும் நேரத்தில் நீ வருவாய் காதலாய் எனை நிறைப்பாய்...! என் கவிதைகளுக்குள் நித்தியமாய், பெண்ணாய் உன்னை கற்பித்துக் கொள்வதில் எம்மைத் தாண்டிய வாசிப்பாளர்களுக்கு எளிதாய் புரிய வைக்கும் யுத்தியை மறைத்து வைத்திருக்கிறேனன்றி வேறு என்ன தான் தேவையிருக்கிறது எனக்கு...?

சுவாசமே எமக்குள் காதலாகிறது....! காதலே எம்மை சுவாசிக்கிறது...!


(இன்னும் சுவாசிப்போம்....)


தேவா. S