Pages

Thursday, March 31, 2011

தேடல்....31.03.2011!
திருப்பத்தூர் திருத்தளிநாதர் கோவிலாக இருக்கட்டும், அல்லது பிள்ளையார் பட்டி கோவிலாகட்டும் அல்லது காரைக்குடி கொப்புடையம்மன் கோவிலாகட்டும், இல்லை கீழச்சேவல் பட்டி சிவன் கோவிலாகட்டும் கல்லூரி விடுமுறையில் கண்டிப்பாக விடியற்காலையில் அங்கே சென்று விடுவேன்.

கோவிலுக்கு செல்லவேண்டும் என்ற ஈர்ப்பு எப்போதும் எனக்குள் இருந்திருக்கிறது சிறுவயது முதலாகவே, அதுவும் தனியாக கோவிலுக்குச் செல்வதில் எப்போதும் ஒரு லயிப்பும் சந்தோசமும் எனக்கு கிடைத்திருக்கிறது. கோவிலின் பிரகாரத்துக்குள் செல்வதற்கு முன்னாலேயே கொடி மரத்தை வணங்கிவிட்டு வாசல் தாண்டி உள்ளே செல்லும் போது உள்ளே இருந்து வீசும் பழைமையின் வாசமும் பிரமாண்டமான தூண்களுக்கு நடுவே பரவிக்கிடக்கும் இருளும், மனிதர்கள் உரக்க உரக்க பேசுவது கருங்கல் பாறைகளில் பட்டு எதிரொலித்து ஒரு மனக்கிலேசத்தை கொடுப்பதும் தவிர்க்க இயலாதது.

பெரும்பாலும் புராதனமான கோவில்களுக்குள் செல்லும் போது அங்கே காலங்கள் கடந்து வந்து சென்று கொண்டிருக்கும் மனிதர்களின் மன அதிர்களையும் சேர்ந்தே அனுபவித்திருக்கிறேன். கோவில் என்பது ஆழ்மனதினுள் நன்றாகவே பதிந்து போயிருப்பதனாலோ என்னவோ அங்கே ஒரு அதீத பிடிப்பும் விருப்பமும் இயல்பாகவே எனக்குள் நிறைந்து போயிருக்கிறது.

குரோமோசோம்களாய் எனக்குள் பரவி குணமாய் என்னை இயக்கும் ஒரு சக்தியா? இல்லை பிறந்தது முதல் ஓங்கி ஓங்கி ...ஓம் நமசிவாயா என்று தொழுது திருநீறு பட்டையாய் அணிந்து பழகிய பழக்கமா? யார்தான் அறிவார் வாழ்க்கையின் நிகழ்வுகளுக்குக் பின்னால் இருக்கும் சூட்சுமங்களை....

கோவில்களின் உள்ளே சென்று திரும்பும் போது எல்லோரும் சொல்லும் ஒரு வாக்கியம்.... 'மனசுக்கு நிம்மதியா இருந்துச்சுல்ல' என்று.... ஆனால்.. அந்த மன நிம்மதியின் பின்னால் என்ன இருக்கும் என்று ஆராய தொடங்கினேன் நான்.

கோவிலினுள் செல்லும் போது ஒரு உணர்வாய்...நிலையாமை வந்து மனதில் அப்பி கொண்டு விடுகிறது. அந்த நிலையாமையில் எல்லாமே மாயை என்ற ஒரு உணர்வு நடனமாட சுற்றியிருக்கும் எல்லா பிரச்சினைகளும் போலியானவை என்ற எண்ணம் உதிக்க பிரச்சினைகள் நம்மை விட்டு பட்டுப்போய் உதிர்ந்து போவதாய் தோன்றும் அந்த கணத்தில் ஒரு வித அலட்சியம் வந்து விடுகிறது வாழ்க்கைப் பற்றி அதன் பின் இருக்கும் மனோநிலை தெளிவான நிலையில் இருப்பதால் கிடைக்கும் ஒரு உணர்வு இந்த நிம்மதி. மேலும் ஏதோ ஒரு ஒத்ததிர்வு கோவில்கள் முழுதும் பரவி நமது உடலை சுற்றியிருக்கும் அலைகளை சமப்படுத்தி புத்துணர்வு அளித்தலாலும் இந்த நிம்மதி கிடப்பதாக உணர்ந்திருக்கிறேன்.

மற்றுமொரு மகத்தான விசயமுமிருக்கிறது, கோவினுள் இருக்கும் நேரங்களில் வேறு மனிதர்கள் நம்மை ஆளுமை செய்வது இல்லை. நாமும் யாருடனும் பேசுவதும் இல்லை. வேறு மனிதர்கள் பெரும்பாலும் யாராய் வேண்டுமானாலும் இருக்கட்டும் அவர்கள் நம்மோடு தொடர்பு கொள்ளும் போதும் நாம் அவர்களுடம் உரையாடும் போதும் தெரிந்தோ தெரியாமலோ அவர்களின் தெளிவுகளையும், குழப்பங்களையும் சிக்கல்களையும் நமக்குள் பரிமாற்றம் செய்து விடுகிறார்கள்.

தெளிவானவர்களின் கூட்டு எப்போதும் மனதுக்கு ஒரு சந்துஷ்டியை தரும் மாறாக எப்போதும் தன்னை பற்றி எண்ணாமல் அடுத்தவரையே கவனித்துக் கொண்டு அவர்களைப் பற்றிய விசய நாட்டங்களை எடுத்துச் சென்று பரப்புபவர்கள் நம்மிடமும் குழப்பங்களை விதைத்தே செல்கிறார்கள்.

இதை விட்டு வெளியே வருவதும் அவர்கள் பரப்பிய நினைவுகளை அழிப்பதுமே பெரும்பாடாக நமக்கு இருக்கிறது. விழிப்புணர்வோடு இருக்கும் போதே இத்தனை மாற்றங்களை அடுத்தவர் நம் மீது இறக்கிவிடும்போது...விழிப்புணர்வு இல்லாதவர்களின் கதி கிட்டதட்ட மன நலம் குன்றிய நிலைக்குப் போய்.....குழம்பிக் கொண்டேதானே இருக்கும்...?

கோவில்கள் என்பது மதத்திற்கும், கடவுளுக்குமான இடமாக பார்க்கப்பட்டு அப்படியே பழகியும் விட்டோம், ஆனால் கோவில் ஒரு கலாச்சாரத்தின் வெளிப்பாடு. புவியியல் அமைப்பின் படி இந்த மண்ணை சேர்ந்த மனிதர்களின் மனோநிலையை சீரமைக்க இந்த ஒரு அமைப்பு தேவை என்று சூட்சுமமாய் உணர்ந்து வடிவமைக்கப்பட்ட அற்புதமான ஒரு மனோதத்துவ பயிற்சிக் கூடம்தான் கோவில்கள்.

மூடநம்பிக்கைகள் கோவிலுக்குள் மதத்தின் பேரால் நுழையும் முன்னால், கோவில்தான் நமது பலமாயிருந்திருக்கிறது. சந்தோசத்திற்கும் துக்கத்திற்கும் நாம் அங்கேதான் ஓடியிருக்கிறோம். கலை மற்றும் இலக்கிய கூடமாகவும், சமூக கூடமாகவும் கோவில்கள்தான் இருந்திருக்கின்றன. புயல், வெள்ளம் என்ற இயற்கை சீரழிவு சமயத்தில் மனிதர்களை காக்கும் இடமாகவும் இருந்திருக்கின்றன. பிரமாண்டமான கோவில்களுக்குள் செல்லும் போது நான் எல்லாம் சிறு துரும்பு என்ற எண்ணம் வருவதற்காகவும், இந்த பிரபஞ்சம் பிரமாண்டமானது என்று உணர்த்தவும் விரிந்து பரந்து கோவில்கள் கட்டப்பட்டன.

இன்றைய மொபைல் சிம்கார்டுகளுக்குள் இருக்கும் பஞ்சலோகம்தான் கோவிலின் கருவறைக்கு மேலே இருக்கும் கும்ப கலசங்களுக்குள் இருக்கிறது என்று சிம்கார்டினை பகுத்துப்பார்த்த எனது நண்பர் வேதியலார் சசி சொன்னபோது கொஞ்சம் ஸ்தம்பித்துதான் போனேன்!

இந்த சிம்கார்டினுள் இருக்கும் உலோகம் ஒருவித அலைக்கற்றையை பெற்று ஒலியாய் மாற்றிக் கொடுக்கும் வல்லமை கொண்டது என்றால், கோவில் கும்ப கலசங்கள் எந்த மாதிரியான அலைக்கற்றையை பெற்று அதை எந்த வடிவத்தில் மனிதர்களுக்கு கொடுக்கிறது? அந்த ஒத்ததிர்வுதான் மன நிம்மதியா? தெளிவா? தியானமா? ஞானமா? கடவுளா? யார் இந்த தொழில் நுட்பத்தை வடிவமைத்தது அதற்கு ஆகம விதிகள் என்று பெயரிட்டு வைத்தது? கல்லை வணங்கு..இது கடவுள் என்று ஒரு கற்பிதத்தை கொடுத்ததற்கும் பின்னால் மறைந்து கிடக்கும் உண்மைகள் என்ன?

கேள்விகளாய் விரிந்து கிடக்கும் என் எண்ணங்கள் தோன்றியது எல்லாமே கோவில்களில்தான். மனிதர்களை ஒன்று கூட்டும் ஒரு மையமாய் திருவிழாக்களும், ஒற்றுமையை வெளிக்காட்ட தேர் இழுத்தலும் என்று ஒரு சூட்சும அறிவோடு சென்ற எம் கூட்டத்தின் வழியில் தன்னை வதைத்து இறை வழிபாடு செய்யும் ஒரு மூடத்தனம் எப்படி வந்தது என்ற கேள்வியும் என்னை சூழாமல் இல்லை. சங்க காலத்தில் அலகு குத்தியதற்கும் பறவைக் காவடி எடுத்ததற்கும், தீ மிதித்ததற்கும் ஏதேனும் சான்றுகள் பகிர முடியுமா? இல்லையே.... ! இடையில் வந்த மனப்புற்று எங்கே இருந்து வந்தது? யார் விதைத்தது....?

குழப்பங்கள் தனியாக இருந்தால் அடையாளம் கண்டுவிடுவோம் என்று திட்டமிட்டு சரிகளுக்குள் பொய்களை சரி போல நிரப்பிவிட்டனர். அதன் கோளாறுதான் இல்லாத கடவுளை எப்போதே நாம் அறிந்திருந்த போதிலும் மீண்டும் நமக்கு அறிவு கொடுக்க பகுத்தறிவுகள் என்ற பெயரிட்டுக் கொண்டு மனிதர்கள் வரவேண்டியிருந்தது.

நாலுவேதம் ஓதுவீர், ஞானபாதம் அறிகிலீர்
பாலுள் நெய்கலந்தவாறு பாவிகாள்! அறிகிலீர்
ஆலமுண்ட கண்டனார் அகத்துளே இருக்கவே
காலனென்று சொல்லுவீர், கனாவிலும் அஃதில்லையே!

மேலே இருப்பதை சொல்லியிருப்பது சிவவாக்கிய சித்தர்; சொல்லிய காலம் தொன்மையானது. இப்போது சொல்லுங்கள் பகுத்தறிவு இல்லாமலா பாதைகள் வகுத்தார்கள் நமக்கு? காலத்தின் போக்கில் வந்து சூழ்ந்து விட்ட தீமைகளை மதம் என்ற பார்வையால் பார்த்து அங்கே இருக்கும் குற்றங்களே கண்களை மறைக்க நமது தொன்மையான அற்புதங்களை உணர முடியாமலேயே போகிறது.

உண்மையில் நம்மிடம் மதம் என்ற ஒன்றே இல்லை. இது ஒரு நெறிமுறை. அர்த்தங்கள் பொதிந்த வாழ்க்கையை அறிய தொகுக்கப்பட்ட வழிமுறை. கோவில்களுக்குச் செல்வது மூடநம்பிக்கை என்று எண்ணுவது சரியான தெளிவுகள் இல்லாததால் தான், என்னைக் கேட்டால் தெளிவில்லாமல் இப்படி நம்புவதுதான் மூட நம்பிக்கை.

அறிவியல் சொல்ல முயற்சிப்பதை எல்லாம் பாடல்களாக ஆக்கிச் சென்று விட்டனர் பல காலங்களுக்கும் முன்னால்? சிந்தித்து அறிவால்தான் கைக்கொள்ள வேண்டும் சூட்சும நிகழ்வுகளை....யாரும் யாருக்கும் காட்டலாகாது. கோவில்கள் எல்லாம் அற்புதமான சூட்சுமங்கள் நிறைந்த பொக்கிசங்கள்.

நவீனத்தை அங்கே புகுத்தி வேறு வேறு ரீதியில் கட்டமைக்கப்படும் நவீன கோவில்களில் கட்டிட தொழிநுட்பம் தாண்டிய பண்டைய சூட்சும நுட்பங்கள் இருக்குமா என்பது ஐயமே?

அறிவின் தெளிவோடு செல்லும் வாழ்க்கை நகர்வுக்கு யார்தான் தேவை? தேடலாகவே தொடரும் பயணத்தில்...கிடைப்பது எல்லாம் தெளிவுகள்தானே?


தேவா. STuesday, March 29, 2011

வாக்காள பெருமக்களே...!!!!!

கட்டுரைகளையும், கதைகளையும், கவிதைகளையும் கடந்து நாம் பேசிக் கொண்டிருக்கும் போது கிளர்வில்லாத மனோநிலையில் இயல்பாகவே இருக்க முடிகிறது. சுற்றி நடக்கும் சமூக அவலங்கள் ஆக இருக்கட்டும், வாழ்க்கையின் போக்கில் மனிதர்களுக்கு நிகழும் அனுபவங்களாயிருக்கட்டும், அந்த அந்த கணத்தில் காணும் பொழுதில் ஒரு வித கையறு நிலைக்குப் போய் அங்கே இருந்து துளிர்க்கும் கோபம் சீற்றமாகி, சீற்றத்தில் என்ன செய்யலாமென உற்று நோக்க ஒரு ஆழ்ந்த அமைதியில் வாழ்க்கையில் நிகழும் பெரும்பாலான லாப நஷ்டங்களுக்கும், சந்தோச துக்கங்களும் மனித மனங்களில் உள்ள பிரச்சினைகளும் உற்று நோக்கும் கோணமுமே காரணம் என்பது தெள்ளத் தெளிவாக புரிகிறது.

கடந்த வெள்ளியன்று உறவினர் ஒருவரிடம் தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்த போது வரவிருக்கும் தேர்தலில் யாருக்கு வாக்களிக்கப் போகிறீர்கள்? என்று சாதாரணமாகக் கேட்டேன். நடுநிலையான எண்ணம் இருப்பவர்கள் தான் மிகுதியான குழப்பத்தில் இருக்கிறார்கள் என்று சொல்வதை விட வாக்கு கேட்டு வருபவர்களிடம் உச்ச கட்ட எச்சரிக்கையாகவும் இருக்கிறார்கள் என்றும் சொல்ல வெண்டும். இரண்டு பெரும் கட்சிக்காரர்களையும் சொந்த ஊரில் பகைத்துக் கொண்டால் நிம்மதியாக வாழ்ந்து விட முடியுமா என்ன?

பணம் மற்றும் வேறு ஏதேனும் உபகாரங்களை இந்தத் தேர்தலை முன்னிட்டு கொண்டு வருபவர்களை புறக்கணிக்கவும் பயமாயிருக்கிறது, வாங்கவும் மனசாட்சி இல்லை என்று சொன்ன எனது உறவினர், ஏதோ எவன் ஜெயிச்சு வந்தாலும் ஏதோ கொடுக்குறேன்னாச்சும் சொல்றாங்களே... ஏதோ கிடைச்ச வரைக்கும் லாபம். அவனுக சுருட்டுறதுல ஏதாச்சும் கொஞ்சம் கொடுத்தாதான் ஜெயிக்க முடியும்ன்றது கரண்ட் தமிழ்நாட்டு ட்ரண்ட் என்று சொல்லி முடித்தார்.

சமகாலத்தில் நேர்மையாய் வாழ்வது என்பது மிகப்பெரிய கொடுமையான விசயமாய் இருக்கும் போலிருக்கிறது. இலவசங்கள் ஏன் கொடுக்க கூடாது என்று சொல்கிறீர்கள்...? அவனுக எப்படி இருந்தாலும் பணம் சம்பாரிக்காமலா இருப்பானுக மக்களுக்கும் கொடுக்கட்டுமே என்ற மனோபாவத்தில் நிறைய பேர் நினைக்கிற நிலைமை வந்திருப்பது ஒரு வருத்தத்துக்குரிய விடயம்தான்.

ஒரு வட்டத்தை போட்டு அந்த வட்டத்தை சுற்றியே வரவேண்டும் என்று மூளைச் சலவை செய்யப்பட்டு அதற்கு மேல் யோசிக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் ஒரு அவல நிலையைக் காண முடிகிறது. தேர்தல் என்றால் என்ன? அரசு என்றால் யார்? ஏன் அவர்கள் வாக்கு கேட்கிறார்கள் அல்லது ஏன் நாம் வாக்களிக்க வேண்டும்? வாக்களிக்க ஏன் நமக்கு பணம் தரவேண்டும்? பணம் கொடுத்து இவர்கள் வாக்கு பெறுவதால் இவர்களுக்கு என்ன ஆதாயாம்?....

இலவசம் என்றால் அது யாருக்கு கொடுக்கப் படவேண்டும்? ஏன் கொடுக்கப்படவேண்டும்? இலவசம் பெறுபவர்களின் வாழ்க்கைத் தரம் உயர பெறப்படும் பொருட்கள் எவ்விதம் உதவும்? எங்கே இருந்து இலவசங்கள் வருகின்றன? அதற்கான செலவு என்ன? எவ்வளவு வருமானம் மிதம் மிஞ்சி இருந்தால் இலவசங்கள் கொடுக்க ஒரு அரசால் முடியும்?

அவ்வளவு வருமானம் இருந்தால் ஏன் இன்னும் குடிசை வீடுகளும், அடுத்த வேளைக்கு சோறில்லா அன்றாடங்காய்ச்சிகளும் நமது நாட்டில் இருக்க வேண்டும்? கேவலமான குண்டும் குழியுமான சாலைகளும், சாக்கடைகளும் நிறைந்த ஒரு சுகாதாரக் கேடான சுற்றுப்புறம்களும் அப்படிப்பட்ட மித மிஞ்சிய வசதிகளால் சீரமைக்கப்பட கூடாதா?

அரசு பள்ளிகளின் தரம் எப்படி இருக்கிறது என்றும், தனியார் பள்ளிகளின் தரம் என்னவாயிருக்கிறது என்றும் அறிந்திருக்கும் நாம், மிதமிஞ்சிய பணம் வைத்துக் கொண்டு இலவசங்களை கொடுப்பதாக வாக்குறுதிகள் கொடுக்கும் அரசியல் கட்சிகள்....

உலக தரத்தில் இலவசமாய் எம் பிள்ளைகளுக்கு கல்லூரி வரை படிப்பு சொல்லிக் கொடுக்க கூடாதா? எமது அறிவு விருத்தியில் எமது செழுமையில், எமது வருமானத்தில், நாங்களே வாங்கிக் கொள்ள மாட்டோமா மிக்ஸியையும், கிரண்டரரையும், இன்ன பிற பொருட்களையும்...ஏன் காலம் முழுதும் நீங்கள்தான் பிச்சையளிப்பீர்களா....?

ஒட்டிய வயிறோடு, பஞ்சடைத்த கண்களோடு நாங்கள் எல்லாம் ஐயா..சாமி... தரும துரை! பாத்து செய்ங்க மகராசா என்றே கத்திக் கொண்டேயிருக்க வேண்டுமா?

யோசித்துப் பாருங்கள் தோழர்களே!!!!

இன்றைக்கு அரசியலில் வேர்களைப் பரப்பி ஆலமரமாய் விரிந்து பரந்து நிற்பவர்களின் பூர்வீகமும், கடந்த பல ஆண்டுகளாக அவர்களின் வருமானங்களும் எப்படி வந்தன ? அந்த வருமானத்திலிருந்துதான் தழைத்ததா இவர்களின் ராஜ்யங்கள்? நம்மை எல்லாம் பிச்சைக்காரர்களாகவே வைத்திருக்கும் யுத்திதானே இலவச திட்டங்கள்? இலவசமாய் கொடுப்பதாக அறிவித்திருக்கும் பொருட்கள் எல்லாம்...ஆடம்பரப் பொருட்களா இல்லையா? உங்களின் மனசாட்சியைத் தொட்டு சொல்லுங்கள்?

நமது பிள்ளைகள் கல்வி கற்று அவர்களே சம்பாரிக்க வழி செய்தல் தேவையா? இல்லை....கிரைண்டரும் மிக்ஸியும் தேவையா?

இளம் பட்டதாரிகளுக்கு தொழில் செய்ய வங்கிக் கடன்கள் குறைந்த வட்டியில் தேவையா? இல்லை வாஷிங் மெசின் தேவையா?

எப்படி இப்படி ஒரு பகல் வேசம் போட்டு பகிரங்கமாக நம்மை ஏமாற்ற முடிந்தது? அல்லது நாம் எப்படி ஏமாறுகிறோம் என்று யோசித்துப் பார்த்தால் இவர்களின் தொடர்புகள் புரையோடிப் போன புண்ணாய் நமது வீடு வரைக்கும் வந்து சேர்ந்திருப்பதை உணர முடியும். நமது அண்ணண், மாமன், பெரியப்பன், சித்தப்பன், பொண்ணு கொடுத்தவன், எடுத்தவன், பங்காளி என்று நம்மை ஆட்டுவிக்கும் இரு கட்சிக்களுக்குள்ளும் நிரம்பிப் போயிருக்கின்றன நமது உறவுகளும் நட்புகளும்....

அவர்கள் ஆட்சிக்கு வந்தால் நமக்கு நல்லது, இவர்கள் ஆட்சிக்கு வந்தால் நமக்கு நல்லது என்று பேசிப்பேசி நம் சுயநலத்துக்காக எதோ ஒரு கட்சியனை தலையில் தூக்கி வைத்து கொண்டாடி, வட்டத்தை பார்த்து அண்ணே என்றும், மாவட்டத்தைப் பார்த்து தலைவா என்றும் கட்சித் தலைவனைப் பார்த்து கடவுளே என்று கூப்பிட்டு கூப்பிட்டு வாழ்ந்தது போதும் தோழர்களே!!!!!

ஒரு வார்டு மெம்பருக்கு கூட பயந்து பயந்து வாழ்ந்து என்ன சாதித்திக் கிழித்து விட்டோம் இது வரைக்கும்...சொல்லுங்கள்....?

குறுக்குப் புத்தி உள்ளவனையும், அடுத்தவன் உழைப்பில் வாழ நினைப்வனையும், தலைக்கனம் கொண்டவனையும் அரசியல்வாதியாக்கி அழகு பார்த்து விட்டு படித்த இளைஞர்களும், நல்லவர்களும் அரசியல் ஒரு சாக்கடை எங்களுக்கு வேண்டாம் என்று ஒதுங்கிக் கொண்டு இருக்கிறோம். சரியானவர்களால் நிரப்பப்படாத நாற்காலிகளை அயோக்கியர்கள் நிரப்பி விடுகிறார்கள். கொஞ்சம் நேர்மையாய் அரசியல் செய்ய நினைப்பவர்களையும் இப்போதிருக்கும் கட்சிகள் செய்ய விடுவதில்லை.....

இப்போது உள்ள தேர்தலை விடுங்கள்....அதற்கு அடுத்த ஐந்து வருடத்தையும் விட்டு விடுங்கள்....இன்னும் பத்து வருடம் கழித்து யார் நமது நாட்டை ஆளவேண்டும் என்று இப்போதே தீர்மானியுங்கள்....

நீங்கள் தீர்மானிக்க வேண்டிய 2021ன் தமிழக முதல்வர் இப்போது சூழ் நிலையின் காரணமாய் வளராத ஆர்ப்பாட்டங்கள் இல்லாதவராய் இருக்கலாம் ஆனால் அவரின் கொள்கைகள் தீர்மானமாய் இருக்கும் சமயச் சூழ்நிலைக்காக ஏதோ ஒரு கட்சிக்கு இப்போது ஆதரவைத் கொடுத்திருக்கலாம் ஆனால்....எல்லா பக்கமும் வியாபித்து தீமைகளை எரிக்கப்போகும் தலைமை அவருடையது என்று காலப்போக்கில் நீங்கள் உணரலாம்....

இரண்டு திராவிட கட்சிகள், மற்றும் காங்கிரஸ் ஸ்தாபனக் கட்சி தாண்டிய மாற்று அரசியல் கட்சிதான் தமிழ்நாட்டின் போக்கை மாற்றியமைக்கும் என்ற எண்ணத்தினை மனதினுள் கொள்ளுங்கள். இந்த தேர்தலில் ஒன்றும் செய்ய முடியாது இரண்டில் ஒன்றுதான் தேர்ந்தெடுத்தாக வேண்டிய சூழல் .. விருப்பத்தின் படி ஆலோசித்து வாக்களியுங்கள்.. ஆனால் மேலே சொன்ன எண்ணங்களை வெறுமனே உங்களுக்குள் எரியவிடுங்கள்...

தெரிந்தே தேர்ந்தெடுங்கள்! உங்களின் விழிப்புணர்வோடு..அடே.. முட்டாள்களா எங்களை இலவசங்கள் கொடுத்து ஆட்டு மந்தைகளாக்கவா பார்க்கிறீர்கள் என்ற வக்கிரத்தை நெஞ்சில் சுமந்த படி கடந்து வாருங்கள் இந்த கொடுமைகளை...

உற்று நோக்குங்கள், கொள்கை பிடிப்புள்ளவர்கள், தமிழ் நாட்டின் மீதும் தமிழன் மீதும் தீரா பற்றுள்ளவர்கள் எந்த பக்கம் இருக்கிறார்கள் என்று கணித்துப் போடுங்கள். சூழ்நிலையின் காரணமாய் ஏதோ ஒரு பக்கம் அவர்கள் இருக்கலாம்....அப்படியாக கணித்து வாக்களியுங்கள்.

இவ்வளவு நாள் ஏதோ ஒரு மனமயக்கத்தில் செய்த தவறை இன்று தெளிவாக உணர்ந்தே செய்வோம். 50 ஆண்டுக்கும் மேலான காயம் அல்லவா...அத்தனை சீக்கிரம் சரிசெய்ய முடியாது அதற்கு இன்னும் ஒரு 50 வருடமாவது ஆகலாம் தெளிவான நிலையை அடைய..ஆனால் விடாமல் வெஞ்சினத்தை மனதில் கொள்ளுங்கள்.

ம்ம்ம்ம் என் கோபத்தை எல்லாம் எழுத்தாக்கிக் கொண்டே இருந்தால் சீனப்பெருஞ்சுவராய் நீண்டு கொண்டே இருக்கும் வார்த்தைகள். நேற்றே வீட்டுக்குப் போன் செய்து வெளிநாட்டில் இருப்பதால் என்னால் வாக்களிக்க இயலாது என்பதை தெளிவாக சம்பந்தப்பட்ட துறையிடம் பதிந்து விடும் படி அப்பாவிடம் சொன்னேன்...ஒரு கள்ள ஓட்டாவது தவிர்க்கப்படுமே...(என்னாதான் கண்கொத்திப் பாம்பாக கண்காணித்தாலும் எல்லா கலப்படமும் செய்ய அறிந்தவர்கள் ஏராளம்தானே!!!!)

வெளிநாட்டில் இருந்து கொண்டு வாக்களிக்க இயலாதவர்களும், உள்ளூரில் தவிர்க்க முடியாத சூழ் நிலையால் வாக்களிக்க முடியாதவர்களும்...அந்த விபரத்தினை பதிந்து விடுங்கள்.

புரட்சி வெடிப்பது...எங்கே...? எப்படி ? என்ற சந்தேகமே வேண்டாம்..........உங்களுக்குள்ளும் எனக்குள்ளும், இன்னும் நம் நண்பர்களுக்குள்ளும் மூளும் தீ... அழித்துப் போட்டே தீரும் தீமைகளை....! நமது சந்ததிகளாவது ஒரு நேர்மையான, சுகாதரமான, தெளிவான நாட்டில் வாழ வழி செய்வோம்!!!!

மறக்காமல் வாக்களியுங்கள்....விழிப்புணர்வோடு...!


தேவா. S
Saturday, March 26, 2011

காற்று....!
எந்த ஸ்வரத்தினை
ஓதுகிறாய் மரத்திடம் நீ
தலைசயசைத்து...தலையசைத்து...
ரசனையாய் சிரிக்கிறது எப்போதும்!

தண்ணீரைத் தடவிச் செல்லும்
ஸ்பரிச சந்தோசத்தில்
அலை அலையாய்
வெட்கத்தை இறைக்கிறது
அந்த மரத்தோரத்து நதி...!

பூக்களுக்குள் புகுந்து..
மகரந்தங்களை கலைத்துப் போட்டு
வண்டோடு அது கொண்ட காதலை
சொல்லிச் சிரித்தபடி செல்லும்...
இந்த காற்றின் பயணம்தான் ...
எதை நோக்கி...?

புல்லாங் குழலுக்குள் புகுந்து
இசையாய் உடை உடுத்தி
செவிகளுக்குள் பயணப்பட்டு
இசையாய் மயங்க வைக்கிறது ...
மனித மனங்களை...!

ஆக்ரோசங்களை எல்லாம்
தன்னுள் அடைகாத்துக் கொண்டு
சந்தோசங்களை பரப்பும்
காற்றை யார்தான் கட்டிப்போட...?
வயல் வெளிகளுக்குள் புகுந்து
பயிர்களிடம் செய்யும் சில்மிஷங்களை
பகுத்தறிவு கொண்டு
நிறுத்தவா முடியும்?

மனிதருக்குள் புகுந்து
நினைவுகளில் நிறைந்து
உயிராய் ஊடுருவியிருக்கும்
ஓசையற்ற சூட்சுமத்தினை
உணரத்தானே முடியும்...?
கையிலெடுத்து காட்டவா முடியும்...!

எல்லாம் கூட்டிக் கழித்து
விடைகளின் வேரினில்
கிடைக்கும் பதில்களில் இருந்து
எழும் ஒற்றை கேள்வி..இதுதான்...
காற்றுதான் கடவுளா?


தேவா. S


ஆகையால்...!ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை...
காற்றில் பறக்கும் இறகு போல
எங்கோ ஒரு நாள் நான்...
பறந்து போய்விடுவேன்...
நீரில் தோன்றும் ஒரு குமிழி போல
பட்டென்று என்றேனும்...
உடைந்து போய்விடுவேன்...!

கற்பூரங்கள் எரிவது எல்லாம்...
காற்றில் எரியத்தானே? அன்றி...
எரிதலில் இறுமாப்பு கொண்டு
எப்போதும் நிற்பதற்கு அல்ல...!

ஏதோ ஒரு கட்டுக்குள் சிக்கி
அச்சில் ஓடும் பூமிக்கு என்ன
கவலை யாரைப் பற்றியும்?
அது சுற்றும் வரை சுற்றும்
ஈர்ப்புகளில் ஏதேனும் பிழைத்து விட்டால்
மீண்டும் தூசுகளுக்குள் தூசாய்
தன்னை பரப்பிக் கொண்டு
மீண்டும் பரமாணுவாய் வேசமிடும்...!

காற்றும், மழையும், வெயிலும்
சுழற்சியினால் ஏற்படும் சூழ்ச்சிகளேயன்றி
அவையே சூட்சுமங்களா என்ன?
சூத்திரங்கள் அறியா அண்டவெளியின்
பரந்து விரிந்த பிரேதசங்களில்....
மனித கால் தடங்கள் எல்லாம்
மாயையின் உச்சமே...!

ஏதோ ஒரு நெருப்பு என்னை...
எரித்துப் போடும் இல்லையேல்
சிலிக்கனுக்குள் சிக்கி நான்
கால்சியங்களின் எச்சத்தை காட்டிக்
கொண்டு இல்லாத பூமியின்
சொல்லாத பாகமாகப் போகிறேன்....
விலாசமில்லாத இருப்பினிற்குள்
எங்கே இருக்கிறது எனது அடையாளம்...?

ஆகையால்...இதில்
ஆச்சர்யப்பட என்ன இருக்கிறது...?

தேவா. S


கத்திக் கப்பல்...!

ஒரு மழைக்காய் செய்த...
காகித கத்திக் கப்பல் காத்துகிடக்கிறது
பள்ளிக்கூட புத்தகத்துக்கு இடையே...!
ஒவ்வொரு நாளும் வானம் பார்த்து
ஏக்கமாய் புத்தகம் பிரிக்கும்
பொழுதுகளில் கண்ணீரோடு
சாய்ந்து கிடக்கும் கத்திக் கப்பல்
ஏனோ இதயத்தை ரணமாக்கி
சோகமாய் முடங்கியே கிடக்கிறது...!

இன்றாவது மழை வருமா?
ஏக்கமாய் வானம் பார்த்து பார்த்து
சுட்டெரிக்கு சூரியனிடம் ஏனோ
ஒரு கோபத்தோடு எப்போதும்
நடக்கிறேன் நிலத்தில் தெரியும்
என் நிழலை எரித்தபடி!

பெய்யாத மழைக்கு வானமா பொறுப்பேற்கும்?
ஒட்டு மொத்தமாய் பூமிக்கு சவரம் ..
செய்து மொட்டையாக்கி நிறுத்தி வைத்தால்
எங்கே இருந்து ஜனிக்கும் மழை?
யார் கொடுப்பார் அதற்கு விலை?

மரங்களில்லா பூமியில்
மழை ஒரு கனவுதான்....
கரங்கள் இல்லா மனிதனைப் போல
தட்டுத் தடுமாறி சுற்றும் பூமியில்
எல்லா தப்புகளையும் இழைத்து விட்டு
இயற்கையை குறை சொல்லும்
மனிதனை சுயநலவாதி என்பதா?
இல்லை எப்போதும் பொய்க்கும்..
இயற்கையின் பெயரால் இதை...
இறைவனின் பிழை என்பதா?

காற்றோடு கூடி எப்போது...
மேகமாய் சூல் கொண்டு
மழைக் குழந்தைகளை பிரசவித்து
மண்ணுக்கு அனுப்பும் அந்த வானம்?
கனவுகளோடு வழக்கம் போல...
ஒரு கருவினைப் போல சுமக்கிறேன்
என் பள்ளிக்கூட புத்தங்களையும்...
அதனுள் கண்ணீரோடு ...
தண்ணீரில் தத்தித் தாவ...காத்திருக்கும்
என் கத்திக் கப்பலையும்..!

இன்றாவது பெய்யுமா மழை?


தேவா. S

Friday, March 25, 2011

கிராமத்தாய்ங்கதான் நாங்க...!

அட கூட்டம் கூட்டமா சுத்திகிட்டு இருந்த பயலுகப்பா நாங்க....! நீ என்ன நெனைச்சுகிட்டு இருக்க.. டவுனுக்கு வந்து டைய கட்டிகிட்டு டஸ்ஸு புஸ்ஸுனு இங்கிலீசு பேசுறோம்னு பாத்தியா ! அட இது எல்லாம் வேல வெட்டினு வந்ததுக்கு அப்புறமப்பா.. ...! ஊருக்கு பக்கட்டு வந்து பாரு....எப்டி இருக்கோம்னு....

காடு, கரை, வயலு, வாய்க்கா, சேறு, சகதி, வெயிலுன்னு ஒரு மார்க்கமா வாழ்ந்திருக்கோமப்பா....! பாட்டன் முப்பாட்டன்னு மீசைய முறுக்கிகிட்டு திரிஞ்ச பயலுக நாங்க...! அப்டிதானே இருதிருப்பாய்ங்க நெறய ஆளுக....! அட வாழ்க்கை மாத்திபுடிச்சப்பா அம்புட்டையும்....! இங்குட்டு பொழப்பு தலப்ப தேடி வந்தாலும் சாதி சனத்த விட்டுபுட்டு இருக்கமாட்டமப்பா நாங்க....! கோவிலு, திருவிழா, காதுகுத்து, கல்யாணம்னு ஒண்ணு மண்ணுமா சேராம இருக்க மாட்டமப்பா...!

வெள்ளன நாங்க எந்திருக்கிறதுக்கு முன்னாடி ஆடு மாடுகளும், கோழி, சாவல்களும் எழுப்பி விட்டுறுமப்பா எங்கள...! கோழிபெட்டிய எங்கப்பத்தா தொறந்து விட்டா கெக்கரிச்சுகிட்டு போகும்யா அம்புட்டும்ம்ம் நாந்தேன் எப்பவோ கூவிட்டேனேன்னு விடிஞ்சது எனக்குதானே முதல்ல தெரியும்னு திமிரா போகும் பாரு அந்த கருத்த சாவ...! வெள்ளன எந்திரிச்ச திமிறுல்ல நாளு முழுசும் திமிராவே தெரியும்ல...! எங்கய்யா சொல்லுவாரு வெள்ளன எந்திரிச்சா மனுசன் கூட திமிராத் திரியலாம்னு..!

மாடுகளுக்கு எல்லாம் வைக்ககொலைய வைக்கப்பொடப்புல இருந்து அள்ளிகிட்டு வரும்போது வந்துரும்யா சந்தோசம் என் காளைக் கண்டுகளுக்கு...! வைக்கலை போட்டு தின்னு முடிக்கவும் கழனித் தண்ணிக்கு போயி தண்ணி காட்டிகிட்டு இருக்கும் போதே.. காப்பித்தணிய ஊத்திகிட்டு வந்துரும் எங்கப்பத்தா.... ! இப்பதான்ப்பு ஒங்க அத்தைகாரி பாலு பீச்சிகிட்டு இருக்கா... அப்புறமா பாலுகாப்பித் தாரேன் இப்போ வெரசா இந்த வரக்காப்பிய போட்டாந்தேன்னு அது காப்பியா ஆத்துற சுகத்துலயே ஒடம்புக்குள்ள ஒரு சுறுசுறுப்பு வந்துரும்யா...

பத்து ரூவா கொடுத்து பகட்டா இங்க ஓட்டல்ல கொடுக்குற காப்பித் தண்ணியெல்லாம் அட...நாண்டுகிட்டு இல்ல செத்து போகும்.எங்கப்பத்தா கொடுக்குற வரக்காப்பிய கண்டுச்சுனா..! ரொம்ப வெவராமத்தான்யா கணக்கு வழக்கு பாக்க ஊருக்கு ஒரு கணக்கு பிள்ளை, ஊர நிர்வாகம் பண்ண தலையாரின்னு வச்சுப்புட்டு பரம்பரை பரம்பரையா திரிஞ்சுருக்கோம் நாங்க...! இங்கிலீசு டாக்டரு எல்லாம் இப்பத்தானே வந்தாக....அந்த காலத்து வாழ்க்கைக்கு வைத்தியமே தேவையில்லையப்பா...!

மனிசன் இங்கிலீசு மருந்து கண்டு பிடிச்சு அம்புட்டு பக்கியலும் அதை எடுத்துகுற இந்தக் காலத்தில எல்லாம் 50 வயசு 60 வயசுக்குள்ள போயி சேந்திராய்ங்க...! எம் பாட்டன் முப்பாட்டன் எல்லாம் ஜவாப்பா 100 வயசு வரைக்கும் இருந்திருக்காய்ங்கள்ள.. ! வேலை வெட்டினு ஓடிகிட்டே இருப்பாய்ங்கள்ள அதுல திண்ட சோறு செரிச்சு போயி எல்லாமே சத்தா போயி இரும்பு மாதிரி இருப்பாய்ங்கப்பா...

நல்லா சாப்பிடவும் செய்யும் எஞ்சனம்...! அதுல ஒரு விவகாரம் இருக்குப்பு இப்ப.....! நல்லா சாப்பிட நல்லா சமைச்சு போட்டாக ஆத்தாமாருக அந்த காலத்துல...! பொழுதேனிக்கு வயல்ல கடந்து கஷ்டப்பாடு பட்டு வரவ்வைங்களுக்கு குடுக்குற சாப்பாட்டுலயும் சத்து இருந்துச்சு, சாப்புடுற சாமான்லயும் சத்து இருந்துச்சு....

காலையில எங்கய்யா வெள்ளாம காட்டுக்கு போவுறதுக்கும் முன்னால கூழு குடிப்பாக....! கூழை கரச்சு லோட்டால அடிச்சு ஆத்தி ...வாளைபூ சர்வம் மாறி இருக்குற பெரிய செம்புல ரெண்டு செம்பு குடிக்கும் போதே இந்தக் கையில சின்ன வெங்காயம் சிரிச்சிகிட்டு இருக்கும், அதே நேரத்துல எங்கய்யா வவுறு நெறயிற சொகத்துல எங்கப்பத்தா மனசு நெறஞ்சு கிடக்கும் குளுமையில் கொட்டுன நெல்லு மாதிரி.

இரண்டு பொண்டாட்டி கட்டுறது எல்லாம் அப்பம் சகசமான ஒண்ணுதேன்....! சொத்து விட்டு போகக்கூடாதுன்னு அக்காளுந் தங்கச்சியுமே ஒருத்தனுக்கு கட்டி வச்ச கதையெல்லாம் சகசம். அதுண்டு இல்ல அறுத்து கட்டுறதும் அம்ம வம்முசா வழில சகசந்தேன்... ! பின்னே இளாந்தாரி புள்ளைக புருசன் இல்லாம தனியா வாழணுமுல்ல...! இது புருசங்காரன் செத்தா தாண்டு இல்லப்பு....! சரியில்லாத புருசனா இருந்தாலும் சத்தமில்லாம பஞ்சாயத்துல வச்சி தீத்து விட்டுருவகா....

அம்புட்டு சுளுவா ஒண்ணும் செஞ்சுற மாட்டாக..அதுலயும் பல மொற இருக்குல்ல....! படார்னு தீத்துவிட்டுப்புட்டு..வேட்டிய ஒதரிக்கிட்டு போய்ற மாட்டாய்ங்க...! பஞ்சாயத்து தலைவரே தீர்ப்பு சொல்லி முடிச்சாலும் தப்புன்னு தெரிஞ்சா விடாதுய்யா ஊரு சனம்...எதுத்து கேள்வி கேக்கும்ல...! இப்புடி ஊருசனம் மாத்தி எழுதி வச்ச பஞ்சாயத்துக கொள்ளை இருக்கு..

ஒருப்போக்கி தேவராசு விசயத்துல இப்புடி நடந்துச்சு...! புருசன் பொஞ்சாதி ரெண்டு பேருக்கும் பிரிய இஷ்டமில்லைப்பு....! தேவராசு பொஞ்சாதி வீராயியும் நல்ல பொம்பளைதேன் ஆனா அவ ஆத்தாகாரி இருக்காளே..ஆத்தாடி.. நீலி சூலி சூர்ப்பனகை, குள்ளநரிக மூளையெல்லாம் மொத்தமா சேத்தி வச்ச சதிகாரி....!

எவனையோ ஒருத்தன வசதிக்காரப்பயல பாத்துப்புட்டு அவன் காசுல மயங்கி அதுக்கு கட்டிக் கொடுத்த பொண்ண கூட்டியாந்து மனசக் கெடுத்து தேவராச பிடிக்கலேன்னு சொல்லச் சொல்லி பஞ்சாயத்த கூட்டி நிக்கவச்சுப்புட்டா படுபாவி மவ....! வீராயி மனசு முழுசா நெறஞ்சு நிக்கிற தேவராச எப்படி மறப்பா பாவி கழுத...அவளுக்கு அங்குட்டு பாதி மனசு இங்குட்டு அவ ஆத்தாள நினைச்சு பயந்து கிட்டு நின்னுபுட்டா பொசகிட்ட சிருக்கி..! பஞ்சாயத்துல எதுவும் பேசாம நின்னுகிட்டு மூணு வாரமா கடத்திபுட்டா வீராயி.பொருத்து பொருத்துப் பாத்து ஒரு நா வீராயி மூக்க சிந்திக்கிட்டு நின்ன நேரத்துல தீர்ப்ப சொல்லிப்புடுச்சுங்க ஊரு பெருசுங்க...அத்து விட்டுறாம்னு சொல்லி...

எந்திரிச்சானப்பா ஒத்த வீட்டு காளையப்பான்..கேட்டான் ஒரு கேள்வி...' என்ன பஞ்சாய்த்து பேசுரூறீ பொசகெட்ட தனமா.....? சண்டாளி அழுது மூக்கைத் தொடக்கிற நேராமாப்பத்து அத்து விடாலம்னு..! ரெட்டை மாட்டு வண்டி மாறி அச்சு மாறாம ஓடுன வாழ்க்கைய ஒத்த நிமிசத்துல ஒடிச்சி எரிய தெகிரியம் எங்கேருந்து வந்துச்சு...? வீராயி ஆத்தால பத்தி ஒலகத்துக்கே தெரியுமே....

உலகத்துக்கே ரெட்டை கப்பலுல ஆசை வருமாம்..ஒத்த கப்பல்லு ஒலகத்துக்கு சொச்ச கப்பல்லு வீராயி ஆத்தாளுக்கு அம்புட்டு ஆசை புடிச்ச மூதேவி வேற ஒரு காசு கொளுத்த ஆளுக்கு திட்டம் போட்டு கட்டிக் கொடுத்து காசு பாக்க வைக்கிறாய்யா டான்சு....இது தெரியாம என்ன தீர்ப்பு சொல்லுறீக....காயடிக்கிறப்ப கத்துற காளைமாடு கனக்க அன்னிக்கு காளையப்பன் குதிச்ச குதில ஊரே திரண்டு பஞ்சாயத்து தீர்ப்ப மாத்திபுடுச்சுல்ல...'

கிராமத்தாய்ங்க தீர்ப்புன்னு அம்புட்டு சுளுவு இல்லப்பு..! எம்புட்டு சனம் சேந்தி வந்தாலும் மொத்த சனமும் சத்தியத்துக்கு கட்டுப்பட்டு நிக்கிம். சூது வாது தெறியாத மக்க ஒரு சொம்பு தண்ணிய கேட்டியன்னா...இருந்து ரெண்டு நாளு சாப்பிட்டு போங்கப்புன்னு விசனம் இல்லாம சொல்லுவாய்ங்க....

பட்டணத்து வாழ்க்கையில என்னத்த கண்டுபுட்டோம்..காசும் பணமும் சேரச் சேர மனிசன் மிருகம் கனக்கா நாக்க தொங்க போட்டுபுட்டு ஓடிகிட்டு இருக்காய்ங்க....! என்னமோ நாம சூட்டு கோட்டு போட்டுகிட்டு இருக்கும்னு இங்கன இருக்குற பயலுகளுக்கு நம்ம பூர்வீகம் தெரியலப்பு சும்மா..சில நேரத்துல ஒரண்டை இழுக்குறாய்ங்க..! பாசக்கார பயலுகதேன்....அண்ணேனு கூப்பிட்டா தோல்ல தூக்கிட்டு போற பயபுள்ளைகதான் நாங்க...

அதுக்காண்டி கோழைப் பயலுக இல்லேப்பு...வீச்சருவாவையும் வேல் கம்பையும் தூக்கிகிட்டு சுத்தின பயலுக....எல்லாம் வேணாம்னு விட்டுப்புட்டு புள்ளைக்குட்டியள படிக்க வச்சிகிட்டு மீசைய ஒதுக்கி விட்டுப்புட்டு, கிருதவ சிறுசாக்கிகிட்டு.......ஹாய்.. ஹலோ ...ஹவ் ஆர் யூன்னு நாக்கு நுனில பேசிகிட்டு போய்கிட்டு இருக்கோம்..பொழைக்கிற பொழைப்புக்காண்டி...

மத்த படிக்கி உள்ளுக்குள்ள எங்கூரு கருப்பன் சத்தியமா....அட கருப்பன், வீரனாரு எல்லாம் யாருன்னு சொல்லிப்புடுறேன்...? அவுக எல்லாம் அந்த அந்த ஊருக்கு பிரச்சினைனு வந்தப்ப உசுர கொடுத்த புண்ணியவானுக...காலம் வேகமா ஓட ஓட..அல்லாரையும் சாமியாகிபுடிச்சு எஞ்சனம்..ஆனா.....அவுகள மனசுல நினைச்சுகிட்ட ஒரு வீரமும் தெம்பும் எங்கிட்டு இருந்துதேன் கெடைக்கிதோ....

சரி...ரொம்ப நேரமா பேசிகிட்டு இருக்கேன்..........ஒத்த வரில சொல்லிபுடுறேன்........! கிராமத்தான்னு சொல்லிக்கறதுக்கு ரொம்ப பெருமையா இருக்கு பங்காளி...!

அப்போ வர்ர்ர்ர்ட்டா!


தேவா. S


Wednesday, March 23, 2011

அரிமா...!


எமது பிடரி முடி சிலிர்த்து பறக்கிறது காற்றில்...நிதானமான எமது நடையும் பார்வையின் தீர்க்கமும் அறியப்பெறுதல் சாமானியர்களுக்கு சாத்தியமற்றது. எமது கண்களின் தீர்க்கம் பற்றிய கணிப்புகளைப் பற்றி எமக்கு இரையாகிப் போன ஜீவன்களிடம் யாரும் விசாரித்திருக்க வாய்ப்பே இல்லை. ஆமாம் ஒற்றை பாய்ச்சலில் குரல்வளைகளில் கடிபட்டுப் போகும் உயிர்கள் என்ன ஊர்வலங்களா நடத்தும் எமது பற்களின் கூர்மை பற்றி.....

பசிக்கும் போது மட்டுமே புசித்து பழக்கப்பட்டு இருக்கிறோம். எமது இறையையும், இரையையும் யாரும் முடிவு செய்வதில்லை எப்போதும். யாமே கூட தீர்மானிக்க முடியாத எமது தேவையை எப்போதும் எமது பசிதான் தீர்மானிக்கிறது. மெளனத்தில் கழிக்கும் காலங்களில் யாம் எம்மைச் சுற்றி ஊர்வன, பறப்பன தவழ்வன பற்றி எப்போதும் அக்கறைகள் கொள்வதில்லை.

இரைப்பயின் இருக்கம் கொடுக்கும் சுகத்தில் எம்முள் சுற்றிப்பாயும் இரத்ததின் ஓட்டம் ஒரு நதியினைப் போல சலனமின்றி பரவி எமது புத்தியை எப்போதும் குளுமைப்படுத்தியே வைத்திருக்கிறது. ஒரு மோன நிலை, ஒரு ஞான நிலையில் எம்மையே மறந்து யாம் லயித்துக் கிடக்கும் பொழுதுகளில் உலத்தில் இருக்கும் எல்லா உயிர்களும் ஜீவித்திருக்க கொஞ்சம் கால அவகாசம் யாம் கொடுப்பதாக வரலாற்றின் ஏடுகள் சொல்லி கொண்டே வந்திருக்கிறது காலங்கள் தோறும்....

சப்தங்கள் அடக்கி, சுற்றங்கள் சுருக்கி தனித்திருக்கும் யாம் தனித்தன்மை கொண்டவர் தாமென்று யாம் வாய் திறந்து வேறு பகிரவேண்டுமோ? சப்தமின்றி பிரபஞ்ச ஓட்டத்தில் யான் ஜனித்ததை யானே மறந்து லயித்திருக்கும் பொழுதுகளில் எமக்கு எப்போதும் உயிர் பயம் வராது இருத்தல் இந்த ஜகத்திற்கு நலம்.

ஆள் அரவங்கள் கேட்டு கூர்மையாகும் எமது காதுகள்தான் முதலில் கணிக்கும் எம்மைச் சுற்றி நடப்பது எமது எதிரியா? அல்லது தோழமையா என்று, பல நேரங்களில் தோழமையாய் எதிரிகளும், எதிரிகளாய் தோழமைகளும் எமக்கு வாய்ப்பதுண்டு. யாம் எமது உணவு, எமது வேலை என்று எல்லாமே தனியாகத்தான் வாழ காலம் பயிற்றுவித்திருக்கிறது.

யாரும் எமக்கு ஊட்டிவிடப்போவதில்லை, யாரும் எமக்கு உணவைக் காட்டிக் கொடுக்கப் போவதும் இல்லை. எமது உணவின் தூரம் தீர்மானிக்கப்படுவது எமது பசியின் தீரத்தால்தான். வளரும் காலங்களில் எமக்கு பாய்ச்சலே கற்று கொடுக்கப்பட்டு இருக்கிறது. மாறாக பதுங்குதல் என்றால் என்னவென்றறியா எமது பிடரி மயிர்கள் கூறும் இலக்கு இதுதான் என்று, கூறிய கணத்தில் எமது சீற்றத்தில் பல உடல்களை யாம் கூரிக் கிழித்திருக்கிறோம். ஒற்றை பாய்ச்சலில் முதுகெலும்புகளை முறித்துப் போட்டிருக்கிறோம்.

எம் கூட்டம் வலியது, தாய்வழி சமூகத்தின் சுவடுகளை விடாமல் பின்பற்றும் எமது குலத்தில் வேட்டையாடுதல் பெரும்பாலும் பெண்டீர்தான் எமது காவல்களுக்கு மத்தியில் நடக்கும் தீர வேட்டைகளில் தீரத்தோடுதான் நிகழும் எமது உயிர்வாழும் சூட்சுமம். எப்போதும் மறைவுகளில் வாழும் வாழ்க்கை முறைகள் எமக்கு பந்தப்பட்டது இல்லை. மறைந்து வாழும் அவசியமும் தேவையும் எமக்கு எமது எதிரிகள் கொடுப்பதும் இல்லை.

மோனநிலையில் யாமிருக்கும் நேரங்கள் அதிகம். உணவு தேடலும், உண்ணலும், ஒரு தேவையின் பொருட்டு கணப்பொழுதில் முடிந்து விடும். எமது வாழ்வின் பெரும்பகுதி எம்மை மறக்கும் காமமும் எப்போதும் ஏகாந்தத்தில் லயிக்கும் உறக்கமும். தேவைகளின்றி அலைபவனை காட்டிலும் திருப்தியோடு ஓய்வெடுப்பவன் மேலானவன். எம்மை சுறுசுறுப்பில்லாதவனாய் சித்தரிக்கும் சிலருக்கு தெரியும் எமது கர்ஜனைகளின் சப்தம் ஐந்தாறு மைல்கள் கடந்தும் கேட்கும் என்று...

யாம் எழுந்து நின்றால்.....மெல்ல சிலிர்த்து எமது பிடறி மயிர் உலுக்கினால்... மெல்ல.. அடியெடுத்து அசைந்து நடந்தால்....வாய்பிளந்து கர்ஜித்தால்...

துவம்சமாகப் போவது நீயா நானா என்ற பயம் கொள்ளா ஜீவன்களும் உண்டோ...? எமது ஒட்டிய வயிறும்....ஓடும் ஓட்டமும்....பிடறி பிடித்து குரல்வளை கடிக்கும் தீரமும்....சலனமற்ற ஓய்வும்.....தீராக்காதலும் கூடி எமக்கு கொடுத்த பெயர் என்னவென்று சொல்லவும் வேண்டுமோ....?

எமது காதுகள் கூர்மையாகின்றன...சப்தங்கள் எமைச்சுற்றி நகர்கின்றன....வருவது தோழனாய் இருந்தால் எம்மை கடந்து போகும்...வாய்ப்பிருக்கிறது. எதிரியாய் இருந்தால்...அவர்களின் வாழ்க்கையை கடத்தி விட எமக்கும் ஒரு வாய்ப்பிருக்கிறது....

பிடறிகள் சிலிர்க்க..
எமது கர்ஜனைகளின்
சப்தத்தில் அறுந்து போகும்
எமது பகைவர்களின்
உயிர் தொடர்ச்சி...!

தேவைகளே எமது எதிரிகளை சில நேரங்களில் தீர்மானித்தாலும், பல நேரங்களில் எமது எதிரிகளே எமது வீரத்தை செப்பனிட்டு கூர்மையாக்க்குகிறார்கள்...! இவ்வளவும் கூறும் நான் யாரென்றா கேட்கிறீர்கள்....

மானிடர் எமக்கு வைத்த பெயர்...சிங்கம்...!


தேவா. STuesday, March 22, 2011

நின்னையே ரதியென்று....!


தண்ணீர் குடத்தோடு
நீ தலைகுனிந்துதான்
நடக்கிறாய்....
இடுப்பில் இருக்கும்..
குடத்துக்கு என்னவாம் கிண்டல்
என்னை பார்த்து...?
தளும்பி தளும்பி சிரிக்கிறது!

***

இல்லை என்றேன்....
இருக்கிறது என்றாய்!
இருக்கிறது என்றேன்
இல்லை என்றாய்...!
இருந்தும் இல்லாமல்
இருக்கும் காதலை
எப்படித்தான் கண்டு பிடிப்பதாம்....
செல்லமாய் நீ சிணுங்கினாய்..
கம்பீரமாய் வெளிப்பட்டு
சிரித்தது ஒரு ஒய்யாரக்காதல்!

***

ஒரு மரம் துளிர்க்கும் தருணம்;
சாரலாய் முகத்தில் மழைத்துளிகள்
தவழும் பொழுதுகள்;
ஒரு ஊதக்காற்று உடல் ஊடுருவி
உள்ளம் கலைத்து செல்லும்
அந்த அற்புதகணம்;
ஒரு கவிதை எழுதி முடித்து
நிறைவாய் சாய்ந்து நெஞ்சு
நிறையும் நிமிடம்;
யாருமே இல்லாமல் அவளோடு
இருக்கும் மெளனம்;
இன்ன பிற எல்லாம் சேர்ந்ததுதான்
காதலா?

***

கனவுகளில் வடித்த
ஒரு ஓவியத்தை
எப்படி உனக்கு பரிசளிப்பேன்?
என் கவிதைகளில் ஒளிந்திருக்கும்
உயிரை எப்படி நான் அசையவைப்பேன்?
சொல்லாமல் தவிக்கும்
என் காதலின் அவஸ்தைகள் எல்லாம்
ஒரு மழையில் நடுங்கும் குருவியாய்
நடுங்கிக் கொண்டிருப்பதை
எப்படி உனக்கு உணரவைப்பேன்...?
எங்கேயோ இருக்கும் உன்னை
துரத்தி துரத்தி சுற்றி கொண்டிருக்கும்
என் நினைவுகளின் ஸ்பரிசங்கள்
எல்லாம் வார்தைகளற்று ஏக்கமாய்
உன்னை உற்று நோக்கும் நொடியில்
சொல்லித்தான் விடமாட்டாயா
ஒற்றை வார்த்தையில் உன் காதலை...?

***

மனதால் வானத்தின் மேகங்களை
எல்லாம் கலைத்துப் போட்டு
தீட்டி வைக்கிறேன் ஓராயிரம்
ஓவியங்களை தூரிகைகளின்றி...,
எங்கிருந்தேனும் கண்டுவிட மாட்டாயா?
கலைந்து கிடக்கும் வானத்து ஒவியத்தில்
ஒளிந்து கிடக்கும் என் மனதை?


தேவா. S

Monday, March 21, 2011

காங்கிரசை துரத்துவோம்...!#DefeatCongress

நாட்டின் சுதந்திரத்துக்கு போராடினோம் என்ற முத்திரையை இன்னும் முதுகில் சுமந்து கொண்டு, தேசியம் என்னும் பசுத்தோல் போர்த்திய புலியாய் இந்திய தேசத்தில் தன் ஏகாதிபத்திய கால்களை வலுவாக பதித்துள்ள காங்கிரஸ் என்னும் அரக்கனை இந்த தேர்தலில் தமிழகத்தில் தோற்கடித்தால் தான் ஒரு தொன்மையான இனத்தின் பலம் என்ன என்று சர்வதேச சமுதாயத்திற்கு நாம் அறிவிக்க முடியும்.

வரலாற்றின் பக்கங்களில் தமிழன் என்ற ஓர் இனமே இருக்காது என்ற அளவிற்கு வீழ்ச்சிகள் வந்த போதிலெல்லாம் வீறு கொண்டு எழுந்திருக்கிறது தமிழினம் . மதம், மொழி, இனம் என்று எல்லா வகையான சவால்களையும் நாம் காலம் காலமாக எதிர்கொண்டு வந்திருக்கிறோம்.

ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை அடித்து விரட்டிய இந்திய சுதந்திரப்போரின் வீர வரலாற்றின் பக்கங்களில் எடுத்தியம்பி இருக்கும் தமிழர்களின் பங்கு என்னவோ மிகக்குறைவுதான்..ஆனால் எதார்த்தத்தில் அதிகபட்ச தமிழர்கள் தம்மை சுதந்திர போராட்டத்தில் ஈடுபடுத்தி தமது இன்னுயிரை கொடுத்த செயலை எல்லாம் சிறு துரும்பாக மறைத்துப் போட்டு விட்டதும் ஒரு அரசியல் சூழ்ச்சியே....!

' வரி என்று வாய் திறந்தால் அது கிழிக்கப்படும் '

என்று அறைகூவல் விடுத்த சிவகங்கை மன்னர் முத்து வடுகநாத சேதுபதியாயிருகட்டும், ஜான்சி ராணி அளவிற்கு வெளியுலகம் அறியப்படாத வீரமங்கை வேலு நாச்சியாராய் இருக்கட்டும், கப்பலோட்டிய தமிழனையும், பூலித்தேவனையும், வீரன் சுந்தரலிங்கனாரையும், வாஞ்சிநாதனையும் நாம் மறந்து போக காரணமாயிருப்பதற்கு பின்னால் ஏராளமான செய்திகள் வராலற்றின் முதன்மைப்பக்கங்களில் ஏற்றப்படாமலேயே போனதாகவே இருக்கட்டும்...

காலங்கள் தோறும் வஞ்சிக்கப்பட்ட இனமாக தமிழினம் இருந்து கொண்டே இருக்கிறது. காரணம் தமிழர்களின் நம்பிக்கையின் அளவும், விருந்தோம்பலின் அளவும் அவர்களின் கண்களைக் கட்டிப் போட்டு கபடு சூது வாதுகளை அறியாவொண்ணம் தடுத்திருக்கிறது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.

இந்திய சுதந்திர போராட்டத்தின் எச்சமாய் காங்கிரஸ் என்ற கட்சி தமிழகத்தில் ஊடுருவிப் பரவி இன்றளவும் ஏதோ ஒரு வகையில் நினைத்துப் பார்க்கும் அளவில் இருப்பதற்கான ஒரே காரணம் கர்மவீரர் காமராசர். ஆனால் காமராசர் என்ற ஒரு தனி மனிதனின் செயல்களை எல்லாம் காங்கிரஸ் என்று பெயர் பொறித்து, தமது கட்சியின் பிரச்சாரத்தில் எல்லாம் இந்திய தேசிய விடுதலையை பொறித்துக் கொண்டு கயமை நாடகம் ஆடிய காங்கிரஸ் கட்சியில் தலைவர்கள் இருந்தார்கள் என்று சொல்வதை விட முதலாளிகள் இருந்தார்கள் என்றுதான் சொல்லவேண்டும்.

அதுவும் ஈழப்பிரச்சினையில் இந்தியாவை ஆண்ட ராஜிவ் தலைமையிலான காங்கிரஸ் எடுத்த முடிவுகள் எல்லாமே அங்கே அடக்குமுறை செய்யப்பட்டு கொடுமைகளால் சூழப்பட்டு இருந்த தமிழர்களுக்கு உதவும் போக்கில இருக்கவில்லை. ஏனென்றால் தமிழ்நாட்டில் இருந்த எந்த ஒரு காங்கிரஸ் தொண்டனும், தலைவனும் தமிழனாய் இருந்து அடிமட்டத்தில் இருந்த பிரச்சினைகளை மேல் மட்டத்தில் சொல்லி புரியவைக்கவும் இல்லை, அப்படி மாறுபட்டு மேலிடம் நடந்தால் தமிழகத்தில் காங்கிரஸ் என்ற ஒன்றே இல்லாமல் போகும் என்று மிரட்டவும் இல்லை....

இந்திய காங்கிரசின் கட்சித் தலைவர்களும் தொண்டர்களும் 50 வருடத்திற்கும் மேலான சுதந்திர இந்தியாவின் சுகபோகங்களில் ஊறித் திளைத்தவர்கள். தமிழகத்தில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அவர்களுக்கு எப்போதும் கவலைகள் இருந்ததில்லை ஏனேன்றால் தேசத்தின் பெரும்பான்மையான நாட்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது காங்கிரஸ் என்னும் ஒரு கட்சியால் மட்டுமே...அந்த கட்சி எடுத்த மிகைப்பட்ட முடிவுகளின் போக்குதான் இன்றைய இந்தியா....

இன்றைய இந்தியாவின் நிலை பற்றி விவரிக்கவும் வேண்டுமோ...?

காங்கிரஸ் அரசின் வாய் ஜாலம்தான் மதச்சார்பின்மை என்ற ஒரு அஸ்திரம்! காங்கிரசின் வேரில் இருக்கும் தொண்டன் வரைக்கும் ஊறிப் போயிருக்கும் மதத்தன்மையை யாரும் மறுத்தல் ஆகாது. மதச்சார்பின்மை என்பது காங்கிரசின் முழுமையான ஒரு அரசியல் சாதுர்யம்! மதச்சார்பற்ற ஒரு கட்சி தமது நீண்ட நெடும் பயணத்தில் உலகளவில் பெரும்பான்மையான இந்திய சிறுபான்மையினர்கள் யாரையேனும் ஆட்சிப்பொறுப்பில் ஏற்றி இந்திய பிரதமாராக்க நினைத்துக் கூட பார்த்திருக்குமா?

உத்தர பிரேதச அரசினை கல்யாண் சிங் தலைமையிலான பாஜக ஆண்ட போதிலும் பாபர் மசூதி இடிக்கப்படும் நிகழ்வினை மத்திய புலனாய்வுத்துறையினர் மூலம் அந்த சமயத்தில் ஆண்ட நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் அறிந்தே வைத்திருந்தது. இங்கே தான் இருக்கிறது குள்ள நரித்தனம்! காங்கிரஸின் ப்ரீ கேண்ட்ஸ் தான் பாபர் மசூதி இடிப்பினை அரங்கேற்றி அங்கேயும் அரசியல் நிகழ்வாய் தமக்கு நல்ல பெயர் தேடிக்கொண்டது வக்கிர காங்கிரஸ்.

பாபர் மசூதி இடிக்க திட்டம் தீட்டியது ஆர்.எஸ்.எஸ், உடந்தையானது பாஜக ஆனால் அதை மத்தியில் ஆண்ட குள்ள நரித்தன காங்கிரஸ் நினைத்திருந்தால் தடுத்தி நிறுத்தியிருக்கலாம். இந்திய தேசத்தின் அரசியலில் காலுன்றி விரவி நிற்க காங்கிரஸ் மறைமுகமாய் அனுமதித்த இந்த நிகழ்வின் மூலம் மக்கள் மனதில் இருந்து நிரந்தரமாய் தூக்கியெறியப்பட்டது பகிரங்க மதவாதகட்சியான பாஜக!

சீக்கியர்களின் பொற்கோவிலுக்குள் செருப்பு காலோடு சென்று கோவிலினுள் இருந்த சீக்கிய தலைவர் பிந்தரன் வாலே சுட்டுக் கொல்லப்பட்டதும் அதற்கு பழிவாங்கும் விதமாய் இந்திரா காந்தி சுடப்பட்டதும் நாடறிந்தது. சுட்ட மெய்க்காப்பாளனுக்குள் என்னவிதமான நியாயம் இருந்திருக்கும் என்று சிந்திக்கவே விடாமல் மக்களின் புத்தியை மூளைச்சலவை செய்து வைத்த நயத்தில் காங்கிரஸ் ஜெயித்துதான் போனது.

இந்திரா காந்தியின் கொலைக்கு பின்னால் சீக்கிய இனம் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்டாலும் சீக்கிய தலைவர்கள் தமிழக துரோக அரசியல்வாதிகள் போல காங்கிரசிடம் அத்தனை சீக்கிரத்தில் ஒன்றும் விலைபோகவில்லை....ஏதோ ஒரு விதத்தில் சீக்கிய இனத்தை திருப்தி படுத்த காங்கிரஸ் செய்த தொடர் முயற்சிகளின் விளைவு இன்று நமக்கு ஒரு சீக்கிய பிரதமர்....

ஈழத்தில் நடாத்தப்பட்ட வன்கொலைகளின் பின்னால் இந்தியாவை ஆண்ட ஏகாதிபத்திய காங்கிரசின் பழிவாங்கும் நடவடிக்கைகள் இருந்தது என்பது நாளை பிறக்கப் போகும் குழந்தைகளுக்கும் கூட தெரிய வாய்ப்பிருக்கிறது. விடுதலை புலிகளின் ஈழ தேச கனவுகளுக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்த நாடு இந்தியா. இந்திராவும், எம்ஜிஆரும் கொடுத்த ஊக்கத்தில் வெடித்துப் பிறந்த போராட்டத்தின் தலைவர்தான் பிரபாகரன்.

தொடர்ந்து அநீதிகள் இழைக்கப்பட்டுக் கொண்டிருந்த ஒரு சமுதாயம் காந்திய வழியில் போராடிப் பார்த்து சளைத்துப் போய் திலீபன்களை காவுகொடுத்து தமது கையில் ஆயுதம் ஏந்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது. ஒரு வன்முறையை எல்லா நேரங்களிலுமே சத்தியத்தால் வெல்ல முடியாது. (இந்திய விடுதலையை காரணம் காட்ட வேண்டாம்...இந்திய விடுதலை சத்தியாகிரகாத்தாலும் நிகழ்ந்தது, வெள்ளையன் இனி நிர்வாகம் செய்யவேண்டாம் என்று தீர்மானித்ததாலும் நிகழ்ந்தது)

ஒரு வன்முறையை அடக்க இன்னொரு வன்மை தேவைப்படுகிறது. இந்த நோக்கில்தான் ஒவ்வொரு தேசத்தின் இராணுவமும் நிர்மானிக்கப்படுகிறது. தமிழீழ விடுதலைப் போராட்டம் ஒரு எதேச்சையான விசயம். எந்த திட்டமிடலும் இல்லாமல் அடித்துக் கொண்டும், அவமானப்படுத்திக் கொண்டும், கற்பை சூறையாடிக் கொண்டும் இருந்தவனை திருப்பி அடிக்க எடுத்த முயற்சி. சுதந்திர காற்றை சுவாசிக்க நிகழ்த்தப்பட்ட ஒரு உயிர்ப் போராட்டம்.

எங்கேயும் முரணில்லாமல் நகர்ந்து கொண்டிருந்த போராட்டதின் நடுவே நிகழ்த்தப் பெற்ற மிகப்பெரிய ஒரு ராஜதந்திர பிழை ராஜிவ் காந்தியின் கொலை. இங்கே நிகழ்ந்த சறுக்கலை காரணம் கொண்டு ஒரு தேசத்தின் பூர்வாங்க மக்களையே எரித்துப் போட்டு ஈழதேசத்தினை சுடுகாடாக்கி ஈழ மக்கள் அனைவரையும் கொன்று குவிக்க ராஜபக்சேக்கு துணைக்கு போன இந்திய ஆளும் காங்கிரசின் செயல் சரியானதா?

ஒரு இயக்கம் நடத்திய செயலுக்கு தேச மக்களின் உயிர்களை பெண்களென்றும், கர்ப்பிணிகளென்றும், குழந்தைகளென்றும், முதியவர் என்றும், பாராமல் கொன்று குவித்த செயலுக்கு பச்சைக் கொடி காட்டி விட்டு இரத்தம் குடித்து தம் திருப்தியை தீர்த்துக் கொண்ட

காங்கிரஸ் சகிப்புத்தன்மைகள் கொண்ட இயக்கமா?
காந்திய வழி நடப்பவர்களா?
அறம் பற்றி பேச தகுதியானவர்களா?

நெஞ்சில் கைவைத்து சொல்லுங்கள் தோழர்களே??????? மும்பை நகரினுள் நுழைந்து ஈவு இரக்கமின்றி பொது மக்களை சுட்டுக் கொன்ற தீவிரவாதிகள் எப்படி ஊடுருவினார்கள் என்ற கேள்வியை கூட விட்டு விடுவோம்...இன்னமும் கொலைகாரன் அஜ்மல் கஸாப்பை வைத்துக் கொண்டு அழகு பார்க்கிறாயே ஏய் முட்டாள் காங்கிரஸ்.....தமிழன் என்றால் மட்டும் உனக்கு கேவலமா?

மேற்கு வங்கத்தில் கொடுக்கப்பட்ட 65 தொகுதிகளை காங்கிரஸ் ஏற்காவிட்டால் அந்த தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிக்கப்படும் என்று கொக்கரிக்கிறாரே.. மம்தா பானர்ஜி அந்த வீரம் கூட இல்லையே தி.மு.க விடம் என்பதுதானே சக தமிழர்களாய் ஒரு மூத்த அரசியல் தலைவராகிய கலைஞரிடம் தமிழர்களாகிய நாங்கள் எதிர்பார்க்கிறோம்....?

ராஜ தந்திரியான கலைஞரையே தனது கிடுக்கு பிடியில் வைத்திருக்கும் இத்தாலிய மூளையை சின்னா பின்னமாக்க வேண்டும் என்று நினைப்பதில் என்ன தவறு இருக்கிறது எம் தோழர்காள்?

ஒட்டு மொத்த இந்தியாவிலேயே மத்தியில் தனக்கு ஒரு மாற்று கட்சி இருக்க கூடாது என்று காய் நகர்த்தி மாஃபியா தேசத்தில் இருந்து வந்த ஒரு மூளை அசுரத்தனமாய் விசுவரூபம் எடுக்கும் இக்கணத்தில் உறுதி பூண்டு கொள்வோம்....

ஏ....அராஜக திமிர் பிடித்த இரத்தம் குடிக்கும் கங்கிரசே நீ எமக்கு வேண்டாம்......! வேண்டாம் ...! வேண்டவே வேண்டாம்....!

காங்கிரசை தமிழகத்தை விட்டுப் பெயர்த்தெடுக்கும் தீரமுடன் போரில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் நண்பர் கே.ஆர்.பி. செந்தில், கும்மி மற்றும் தம்பி ராஜாராமன் (விந்தை மனிதன்) அனைவருக்கும் வாழ்த்துக்களையும் ஆதரவையும் இந்த கட்டுரை தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறது.

களப்பணியில் இணைய கீழ்க்கண்ட அலைபேசிகளை தொடர்பு கொள்ளவும்.

கேஆர்பி.செந்தில் - 8098858248
விந்தைமனிதன்( ராஜாராமன்) - 9500790916


தேவா. S


Friday, March 18, 2011

தி.மு.க. இல்லேன்னா அதி.மு.க அம்புட்டுதானே?
ஒரு காலத்தில் செம்மையாக வாழ்ந்திருக்கிறோம் தோழர்காள்.....! மன்னர்களின் ஆட்சியில் மாண்பும் வீரமும், ஈரமும், கொடையும், நேர்மையும், ஈகையும் கொண்டு, வந்தாரை எல்லாம் வரவேற்று உணவளித்து....யாரேனும் விருந்தினர் வராவிட்டால் சோர்ந்து போயும் இருக்கிறோம்.

காடு கழனிகளில் ஆடல் பாடலுடன் உழைத்திருக்கிறோம். பெண்டு பிள்ளைகளுடன் ஓடி ஆடி களித்திருக்கிறோம். எதிரி என்றால், போரென்றால் வேலெடுத்து.... வெற்று மார்போடு ஓடிப்போய் எம்மையும் எம் பெண்டுகளையும், ஆ நிரைகளையும் காக்க போர்ப்பரணி பூண்டிருக்கிறோம்.

உலகம் ஆ.. ஊ.. என்று காட்டுமிராண்டியாய் கத்திக் கொண்டிருந்த போது முத்தமிழில் கவி செய்தோம், கதைசெய்தோம் நாடகம் செய்தோம்....

கனக விசயரின் முடித்தலையை நெறித்து கல் கொண்டு வந்து கண்ணகிக்கு கோவில் செய்தோம்; மலைகளே இல்லாத தேசத்தில் முழுக்க முழுக்க கரும் கற்கள் கொண்டு கோவில் செய்தோம்....

கொங்குதேர் வாழ்க்கை என்று இறைவனே வந்து பாடி நெற்றிக்கண் திறந்து எரிக்கும் தருவாய்க்கு முன்பும் குற்றம் குற்றமே என்று சூளுரைத்திருக்கிறோம்....!

எப்படி மாறிப்போனது எமது வாழ்க்கை.....! எமது வாழ்வின் பொக்கிசம் எல்லாம் களைந்து கைக்கூலிகளாய், கருங்காலிகளாய் கைகட்டி வாய்பொத்தி அடிமை வாழ்வு வாழும் மனோபாவத்தை பெற்றுப் போட எம்மின் கலாச்சராத்தோடு கூடிக்கற்பழித்தது எந்த கயவனின் மூளை...!

ஒரு தடவை வரும் தேர்தல் அங்கே எழுதப்படும் விதி எம்மவரின் வாழ்க்கைகள் மீது வைத்த கருங்கல்லாய் நகரமுடியாமல் அழுந்தப் பிடித்து வைத்துக் கொண்டு வாழ்வாதாரத்தை நசுக்கி கொண்டே இருக்கிறது.

எம்மக்களுக்கு வேறு வழியில்லாமல் போனதற்கு காரணம் கடந்த ஐம்பது ஆண்டுகளாக நடந்த மூளைச்சலவை....திராவிட பெயர் சொல்லி எம்மக்களை மடமையாக்கி..... அவர்களின் புத்தியை விரிவாக விடாமல் அடக்கி வைத்த கொடுமை... !

ஒரு பக்கம் தேசியம் பேசும் கோமான்கள்..... மறுபக்கம் திராவிடம் பேசும் பெருமான்கள்...... இவர்களுக்கு இடையில் சிக்கி சின்னாபின்னமாகிக் கிடக்கிறது எம் இனம்.

கற்றவரும், அறிஞர்களுமே கூட யாரைத் தேர்ந்தெடுப்பது என்று தீர்க்கமாக சொல்ல முடியாத ஒரு அவல நிலை. 1977 வாக்கில் அரசியலுக்குள் வந்த எம்.ஜி. ஆர் ஆரம்பித்து வைத்த இலவச பார்முலா...இன்று வரை குட்டி போட்டு பேரன் பிள்ளைகள் பெற்றிருக்கிறது. அவர் சத்துணவு கொடுத்தார் இவர் முட்டை போட்டார்...... அவர் செருப்பு கொடுத்தார்..... இவர் டி.வி கொடுத்தார் அடுத்து வருபவர்கள் வாஷிங் மெசினும்.....லேப்டாப்பும் இணைய கனெக்சனும் கொடுப்பார்கள்...

பிச்சைக்காரர்களாய் நம்மை வைத்திருக்க திட்டம் தீட்டும் அரசியல்வாதிளை எல்லாம் ஓட ஓட விரட்ட என்ன யுத்தி என்று ஆராயாமல் ஒரு கூட்டம் இணையம் என்னும் நவீன ஊடகம் வரை ஏத்தி விட்டு ஆல மரத்தடியில் அமர்ந்து கொண்டு ஆடுபுலி ஆட்டம் ஆடுவது போல எக்காளித்து கேலிகள் செய்து கொண்டு இருக்கிறது.

புதிதாய் ஒரு தலைவனை அடையாளம் காணவும், உருவாக்கவும் வக்கற்ற மூளைகள் மீண்டும் ஒரு சினிமா நடிகனை நம்பிக் கொண்டு அவன் வந்தால் நன்றாக செய்வான் என்று பேசத்துணிந்து இருக்கிறது....!

யார் இந்த விசயகாந்த்.. அரசியல் செய்ய என்ன தகுதியிருக்கிறது? என்ன விதமான கொள்கைகள் இருக்கிறது? மக்களுக்கு என்ன திட்டம் இருக்கிறது? உன் பார்வையில் தமிழகம் இப்போது எப்படி இருக்கிறது..? செல்லுலாய்ட் தந்த்த புதல்வா.........சினிமாவில் நடித்ததே உன் சிறப்பா?????

எப்படி பார்த்தாலும் தி.மு.க அல்லது அ.தி.மு.க.....இந்த இரண்டு கொடுமையில ஒரு கொடுமைதான் கண்டிப்பா ஆட்சியேறும்...............என்பது உண்மை...! தயவு செய்து இந்த முறையாவது எந்த வள்ளல் ஆட்சிக்கு வந்தாலும் சரி..

நியாயமாய் எம்மவரின் வாழ்வாதாரத்தை செழிப்பாக்கும் திட்டங்களோடு நேர்மையாக ஆள்வீர்களா?????????????

தேவா. S

சூரியன்....!பாலகுமாரனை புரட்டிக் கொண்டிருக்கும் போதே ஏதேதோ மாற்றங்கள் உள்ளுக்குள் எனக்கு நடைபெற்றது மறுக்கமுடியாத உண்மை. பலருக்கு அவரின் சமூக நாவல்களில் நாட்டம் அதிகமென்றால் நான் பாலகுமாரனை இறுக்கமாக பற்றிக் கொள்ள தொடங்கியது அவரின் ஆன்மீக ஈடுபாட்டிற்கு பிறகுதான். கல்லூரி காலங்களில் உடன் படிக்கும் பெண் தோழி ஒருவர் கொடுத்து இதையெல்லாம் படிக்க மாட்டியா நீன்னு கேட்டது கூட முக்கியமாக எனக்கு படவில்லை அந்த பெண் யாரோடும் பேசமாட்டாளா என்று கல்லூரியே சீப்பை எடுத்து சீவிக்கொண்டு அவள் பின்னால் அலைந்து கொண்டிருந்ததுதான் எனக்கு முக்கியமாகப்பட்டது.

புத்தகத்தை கையில் வாங்கிக்கொண்டு பாலாவின் புத்தகம் அது என்று சொல்வதை விட்டு விட்டு மாலினி கொடுத்தது அது என்ற பெருமையை என் தலையில் ஏற்றிக் கொண்டு கிட்டத்தட்ட எல்லோரிடமும் சொல்லி முடித்துவிட்டேன். புத்தகத்தை புரட்டவே இல்லை ஆனால் அன்றிலிருந்து பாலாவை படிக்கவேண்டும் என்ற ஒரு ஆவல் என்னுள் கிளைத்து விட்டிருந்தது. இது நடந்தது எனது கல்லூரி முதாலாம் ஆண்டின் இரண்டாம் செமஸ்டரில் அதற்கு முன்னால் தேவிபாலாவும், ராஜேஷ்குமாரும், பட்டுக்கோட்டை பிரபாகரும், சுபாவும் என்னை ஒரு ஏதேச்சதிகார அடக்குமுறையில் அடக்கி வைத்து இருந்தார்கள்

இப்போதூ ஆயிரம் தத்துவார்தமும் உலக திரைப்படமும் பார்த்து புளகாங்கிதம் அடைபவர்களுக்கு எல்லாம் ராஜேஷ் குமாரின் 'விவேக்கும் ரூபலாவும் ' பட்டுக்கோட்டையின் 'பரத் சுசியும் ' சுபாவின் ' நரேன் வைஜையந்தியும் ' தான் ஒரு காலத்தில் ஆதர்ஷன கனவு ஹீரோ ஹீரோயினாக இருந்திப்பார்கள். (உங்களுக்கு இல்லையா... அப்ப சரி...எனக்கு இருந்தார்கள்)

+2 படிக்கும் போது பட்டுக்கோட்டை தலையாரித் தெருவை தாண்டி வடசேரி ரோட்டில் எனக்கு கெமிஸ்ட்ரி மற்றும் கணக்கு ட்யூசன்....! தலையாரித் தெரிவில் அந்த பிரத்தியோக மெடிக்கல் ஷாப்பில் பட்டுக்கோட்டை பிரபாகர் அமர்ந்திருப்பார். அந்த மெடிக்கல் ஷாப் ஒட்டிதான் அவரின் வீடு. அடிக்கடி பார்ப்பேன்...ஏதாச்சும் எழுதிக்கிட்டு இருப்பாரா? என்று ஓராயிரம் தடவை ஆச்சர்யமாய் பார்ப்பேன்...ஆமாம்......அந்த மனிதர்தானே ஏ நாவல் டைம் என்ற ஒரு பாக்கெட் நாவலை முழுதும் ஆக்கிரமித்துக் கொண்டிருந்தார் ஒரு காலத்தில் (இன்னமுமா....????? தெரியவில்லை)

சரி விடுங்க... தஞ்சாவூர் டிக்கெட் எடுத்துட்டு கன்னியாகுமரி போறதே நம்ம வேலையா போச்சு...ஹா...ஹா ஹா... நவ் பேக் டூ பாலகுமாரன்.

இரண்டாவது சூரியன் என்ற அந்த நாவலை அதான் பேர்னு நினைக்கிறேன் தலைப்பில் தவறு இருந்தால் சொல்லுங்க அதற்காக ஒரு மறுப்பு கடிதம் எல்லாம் எழுதி டோண்ட் வேஸ்ட் யுவர் வேலிட் டைம் ப்ளீஸ்...

ஊரேல்லாம் மாலினியிடம் வாங்கிய புத்தகத்தை தம்பட்டம் அடித்ததில் மாலினி என்னை கவனித்ததும் என்னிடம் மட்டும் ஏன் வாசிக்க கொடுக்க வேண்டும் என்று யோசித்து யோசித்து அது காதலாய்த்தான் இருக்க முடியும் என்று கணித்து முடித்திருந்தது அந்த 20 வயது மூளை. உற்சாகமான, மிகைப்பட்டவர்களின் வயிற்றெறிச்சல் கடந்த (அட...!!!!!!! பாலா புத்தகத்துக்காக இல்லை பாஸ்......மாலினி கொடுத்துச்சுல்ல அதான் வயிற்றெரிச்சல்... கண்டுக்காதீங்க) அந்த இரவில் பத்து மணி இரவு உணவு முடித்துவிட்டு அடுத்த நாள் கல்லூரி இருப்பதால் சக ரூம்மெட்ஸ் சீட்டு விளையாடிக்கொண்டு இருந்தார்கள்....!

என்னது கல்லூரி இருந்ததால சீட்டு விளையாடிட்டு இருந்தாங்களா? ஆச்சர்யமா கேக்குற உங்க மைண்ட் வாய்ஸ் அல்ரெடி எனக்கு ரீச் ஆகிடிச்சு பாஸ்.......ஆமாம்......அப்டி கல்லூரி இல்லேனா நெப்போலியனோ, ஜானிவாக்கரோ, வின்டேஜோ..........டீலிங்ல இருந்து இருக்கும்.(கல்லூரி மாணவர்கள் தண்ணியடிப்பது தவறு என்று கூறி கன்ன பின்னாவென டைட்டில் கார்ட் போட்டு எழுத விரும்புபவகள் ப்ளீஸ் கோ எகெட்.....எப்டி நம்ம ரோசனை....??)

சீட்டுக் கச்சேரியின் பந்தயம் ஒண்ணும் மகாபாரத தருமனைப் போல நாடு, வீடு பொண்டாட்டினு எல்லாம் ஒண்ணுமில்ல பாஸ்...தோத்துப் போனவங்க மிச்சமிருக்கிற எல்லோருக்கும் கீழ இருக்குற முத்து அண்ணன் கடையில் பாலும் பச்சை நாடா பழமும் வாங்கிக் கொடுக்கணும் அவ்ளோதான். ஆமாம் கல்லூரி மாணவர்களின் கொண்டாட்டத்திற்கு பின்னால் அல்கொய்தா மாதிரியா திட்டம் எல்லாம் இருக்கும்...?

அந்த வயதின் அதிக பட்ச சந்தோசமே...காதலும் கம்பீரமும்தான். அதை செஞ்சுட்டு போகட்டுமேன்னு எனக்கு ஒரு கருத்து இருக்கு....! ஏன்னா கல்லூரி முடிச்சு வெளில வந்த உடனேதான் சுடுதண்ணி ஊத்துன காக்கா மாதிரி சோம்பிப் போகுதே வாழ்க்கை.....

வேணா ஒண்ணே ஒண்ணு யோசிச்சுப் பாருங்க....! காலேஜ் டேய்ஸ்ன்னு இல்லை ஒரு குறிப்பிட்ட வயசு தாண்டி நல்லா சம்பாரிக்க ஆரம்பிச்சு, உலக விசயம் எல்லாம் கத்துகிட்டு வாழ்க்கை வாழும் போது.....பழைய துள்ளல் இருக்கா உங்ககிட்ட?

நெவர்....காலம் ஸ்ட்ரா போட்டு உறிஞ்சிட்டு.....எல்லோருக்கும் செம ஹல்வா கொடுத்துட்டு போயிருக்கும். அப்போ சந்தோசமா இருந்தவங்க அதே நினைவுல 'ஜிந்தத்தா..ஜிந்தாத்தா.. ஜிந்தாத்ததா தா....'ன்னு ஒரு துள்ளலோட வாழ முயற்சி பண்ணிகிட்டு இருப்பாங்க. பேலன்ஸ் உள்ளவங்க எல்லாம்.....ரெம்ப சீரியஸா வாழ்க்கைய பிடிச்சுத் தொங்கிக்கிட்டு ரூல்ஸ் அண்ட் ரெகுலேசன் பேசிட்டு இருப்பாங்க...

ஏன்னா ஒரு இரண்டாயிரம் மூவாயிரம் வருஷம் வாழப்போறோம் பாருங்க...!(ஹா...ஹா.ஹா..என்ன ஒரு திமிருன்னு யாரோ ஒருத்தர் சொல்றது கேட்டுருச்சு....)

அச்சச்சோ........பேக் டூ மை காலேஜ் டேய்ஸ்....! எல்லோரும் சீட்டு விளையாடிக் கொண்டிருக்க.....டேபிளில் பாலகுமாரன் படபடத்து கொண்டிருந்தார் ஃபேன் காற்றில்.........ஒ.. மாலினி.......நீ கொடுத்த புத்தகம் அல்லவா...என்று காதல் கன்னா பின்னாவென்று தலைக்கேற...

' நான் வாசிக்க
நீ கொடுத்த புத்தகத்தில்
நம் வாழ்க்கை அல்லவா
ஒளிந்து கொண்டிருக்கிறது...'

அப்போ எல்லாம் வருச வருசம் டைரி .....(ம்ம்ம் ஏன் இப்பவும்தான்..இருக்கு ஆனா யாரு எழுதறது...???? ஹா ஹா..ஹா) டைரி வாங்கிடுவேன் 1996 களில் எல்லாம் டைரிதான் எனது வலைப்பூ.......அங்கே நானே வாசகன் அவ்வப்போது யாரேனும் சில முற்போக்கு நண்பர்களும், நான் கொஞ்சம் பந்தா பண்ண நினைக்கும் சில பெண்களும். டக்குனு எடுத்து ச்சும்மா எழுதிட்டே இருப்பேன். பாலா புத்தகத்தை படிக்கும் முன்னே ஒரு கவிதை எழுதி முடிச்சுட்டேன்..எம்புட்டு திமிரு இருக்கும் எனக்கு?

'எலேய்......ட்ரீம் அடிக்காம பொஸ்தகத்தை படிடா மாப்ள....மாலினி கொடுத்ததுல்ல.....ஹி... ஹி... ஹி' சீட்டு விளையாடிக் கொண்டிருந்த கல்லூரித்தோழனின் அடித்தொண்டையிலிருந்து வெளிவந்த குரல் என்னை கலைத்துப் போட்டிருக்கும் என்றா நினைக்கிறீர்கள் ம்ம்ம்ம்ஹும் இல்லை பாஸ்....

' உன் நினைவென்னும்
பக்கங்களையே இன்னும்
புரட்டி முடிக்கவேயில்லை
நீ கொடுத்த புதக்த்தை
எப்படி பெண்ணே.....?

பேனா டைரியில் தில்லானா ஆடிக் கொண்டிருந்தது. அனேகமாக மாலினி அந்த நேரம் நல்லா வயிறு முட்ட சாப்பிட்டுவிட்டு.....போர்வையை இழுத்துபோர்த்திக் கொண்டு தூங்கிதான் கொண்டிருப்பாள் ஆனால் நான் என்னவோ அவள் என்னை நினைத்து நான் என்ன செய்வேன் என்று யோசித்துக் கொண்டிருப்பாள் என்று தோன்றியது. ஆமாம் அப்படி யோசிக்க எனக்கு பிடித்து இருந்தது. எதார்த்தத்தை எல்லாம் தூக்கி குப்பையில் போட்டு விட்டு கனவுகளோடு மல்லுக்கட்டிக் கொண்டிருப்பதுதானே வாழ்க்கையின் சுவாராஷ்யமே..... கரெக்டா பாஸ்?

ஒரு வழியாக இரண்டு கவிதைகளையும் எக்கச்சக்கமான மாலினி பற்றியக் கனவுகளையும் என்னுள் தேக்கிக் கொண்டு என் வாழ்க்கையை மாற்றிப் போடப்போகும் பாலகுமாரனை காதலோடு என் கைகளுக்குள் கொண்டு வந்தேன். காதல் .........என்ற உணர்வை கொடுத்தது மாலினி ஆனால் அந்த காதல் பாலா மீது சீறிப் பாயப் போகிறது.........என்று அறியாமல்...எப்போதும் நான் வாசிக்குமொரு கதையைப் போல எடுத்து வரிகளுக்குள் என் விழிகளை செலுத்தினேன்...

' அது ஒரு காலை நேரம். காகம் ..கா...கா. என்று கத்தியது.... காகங்களில் பலவகை உண்டு..........' முதல் இரண்டு பக்கம் இப்படி காகம் பற்றி விவரித்த அந்த நாவலில் கதை எங்கே? என்று என் சராசரி மூளை என்னிடம் கேள்வி கேட்டு அடம் பிடித்து புத்தகத்தை மூடிவிடு என்று சொன்னது......

ஆமாம் மிகைப்பட்ட மனிதர்களுக்கு ' ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தாராம்........என்று ஆரம்பித்து கடைசியில் ஒரு முடிவு வேண்டும், சுபம் போடவேண்டும் மேலும் வரிசையாக நின்று கதாபாத்திரங்கள் கை கூப்பி வணக்கம் சொல்லவேண்டும்... அதுவும் சுபமான முடிவாய் இருக்கவேண்டும்....அதிலும் சோகமான முடிவென்றால் என்ன இப்படி முடிச்சுட்டாருன்னு ஒரு அங்காலாய்பு வேற...

எல்லாவற்றிலும் முடிவு தேவை என்று எதிர்பார்ப்பது மனித மனத்தின் இயல்பு ஆனால் அனுபவங்கள்தான் ரசனை மிகுந்தவை அது காதலாகட்டும், காமம் ஆகட்டும், வாழ்க்கையாகட்டும் முடிவின் மீது ஏன் கவனம் செலுத்தவேண்டும்? கீதை கூட கடமையைச் செய்.........என்று சொல்லி பலனை எதிர்பார்க்காதே என்று சொல்வதின் சாரம்....ச்ச்சுமா தண்ட கருமாந்திரமா வேலை செய் என்று அல்ல...

ஆனால் முடிவுகளின் மீது எப்போது கவனம் செலுத்தினாலும் ப்ரஸன்ட் போய்விடும் அங்கே ரசனையோடு ஈடுபட முடியாது...! அப்படித்தான் பாலாவும் இன்ன பிற படைப்பாளிகளும் கதை சொல்வதை விட...உங்களை வேறு ஒரு வாழ்க்கைத் தரத்துக்கு கண்டிப்பாக அழைத்துச் செல்வார்கள் வாசித்து முடித்தவுடன் அந்த கதை மறந்து போய் உங்களுக்குள் ஒரு பார்வை தெளிவு இருக்கும். இது ஒரு அசாதாரண புரிதல் அது புரிந்து விட்டால்....போதும். முடிவுகள் முக்கியமெனில் ஏன் முழு சினிமாவை பார்க்கவேன்டும்.... க்ளைமாக்ஸ் பார்த்து மேட்டர் என்னவென்று அறிய முடியாதா......

வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தை சூசகமாய் உங்களின் நடு நெஞ்சினில் கத்தியை இறக்கி ஒரு அறுவை சிகிச்சை செய்வான் ஒரு படைப்பாளி அது உங்களுக்கே தெரியாது. பாலகுமாரன் போலத்தான் பாலுமகேந்திரா சாரும்....அவரின் கதை நேரம் பார்த்தவர்களுக்கும் தெரியும், படங்களைப் பார்ப்பவர்களுக்கும் புரியும். அந்த கதையோ அல்லது படமோ முடியும் போது வாழ்க்கை பற்றிய ஒரு புரிதல் கண்டிப்பாய் இருக்கும்...எனக்கு இருந்திருக்கிறது. உங்களுக்கு இருக்கலாம் இல்லாமல் போகலாம்....இது கூட என் அனுபவ பகிர்வாய் கொள்ளுங்கள்....

நான் வாசித்த பாலாவின் முதல் நாவலான.....இரண்டாவது சூரியனுக்குள் சீறிப்பாய்ந்துகொண்டிருந்தேன்... ! எத்தனை பக்கங்கள் வாசித்தேன் என்று கணக்கிடவில்லை.. ஆனால் வாசிப்பு ஈடுபாட்டுடன் நிகழ்ந்து கொண்டிருந்தது. முழு மூச்சில் முடித்த போது மணி 12:00 நள்ளிரவு.....!

நண்பர்கள் உறங்கி விட்டார்கள்....! மாலினி பற்றிய நினைவுகள் மறைந்து போய் பாலா பற்றிய யோசனை மிகுந்திருந்தது....! எப்படியெல்லாம் யோசிக்கிறாய் மனிதா நீ...?ஆச்சர்யம் தொண்டையடைத்தது!

ஏற்கனவே மாலினிக்காக எழுதிய கவிதையை கொஞ்சம் மாற்றியமைத்தேன்.....

' நான் வாசிக்க
கிடைத்த புத்தகத்தில்
என் வாழ்க்கை அல்லவா
ஒளிந்து கொண்டிருக்கிறது...'

கிறுக்கலாய் திருத்தி விட்டு அடுத்த கவிதைக்குள் நுழைந்தேன்....

உன் புத்தகத்தின்
பக்கங்களையெல்லாம் நான்...
புரட்ட புரட்ட...
உன் எழுத்துக்கள்
என்னை புரட்டுகிறதே
எப்படி பாலா...?

போர்வையை போர்த்திக் கொண்டு நான் நாளைக்கு வேறு பாலா புத்தகம் எடுத்து வாசிக்கவேண்டும் என்று முடிவு செய்து கொண்டிருந்த போதே உறக்கம் என்னை தர தரவென்று இழுத்து சென்று கொண்டிருந்தது.


தேவா. S


Wednesday, March 16, 2011

சவால்....!


மெளனமாக இருந்து விடல் சாலச் சிறந்தது என்று சமீபத்திய நாட்களில் கிடைக்கும் அனுபவத்தின் சாரங்கள் என்னுள்ளே ஏதேதோ எண்ணங்களை கிளைக்கச் செய்து கொண்டே இருக்கின்றன. சராசரியான ஒரு வாழ்க்கை ஓட்டத்தின் அங்கமாயிருக்கும் நாம் தெரிந்தோ தெரியாமலோ ஏதோ ஒன்றை தேடிக் கொண்டே இருக்கிறோம்.

ஒவ்வொரு செயலும் அதன் விளைவுகளும் நமக்கு திருப்தி கொடுப்பதே இல்லை. கொடுக்கிறது என்றூ வாதம் புரிய விரும்புபவர்களுக்கு இந்த இடத்திலேயே பாய் சொல்லிக் கொள்கிறேன்.

காலம் முழுதும் வளைகுடா நாடுகளில் வேலை பார்த்த என் நெருங்கிய உறவினருக்கு இரண்டு மகள்கள். வாழும் வயதில் வாழ்க்கை துரத்த குடும்பத்தை விட்டு விட்டு வெளிநாட்டில் இருந்து உழைத்த அந்த உறவு 24 மாதங்களுக்கு ஒரு முறை இந்தியா வருவதும்.. பின் செல்வது இப்படியான ஒரு 25 வருட வாழ்க்கையிலி ஈட்டி முடித்தது இரண்டு மகள்களின் கல்வியும் அவர்களின் திருமணமும் சென்னை தாம்பரம் அருகே உள்ள சேலையூர் அருகே உள்ள காமராஜபுரத்தில் ஒரு இரண்டு பெட்ரூம் வீடும் என தனது ஓட்டத்தை முடித்த போது அவரின் வயது 60.

ஒரு திருமண விழாவில் சந்தித்த என்னை வீட்டுக்கு வரச்சொல்லி வற்புறுத்த... தாம்பரம் வரை ட்ரெய்னில் போய் பின் பேருந்தில் அவரை பார்க்க நான் பயணித்ததின் பின்னால் சில காரணங்கள் இல்லாமல் இல்லை.....!

காமராஜபுரம்.. ! என் உறவினரின் வீடு.. வீட்டை ஒட்டி ஒரு வாறம் இறக்கி அதில் கொஞ்சம் காய்கறிகளை சில்லறை வியாபாரம் செய்து கொண்டும் அடித்து பிடித்து பெற்றிருந்த ஒரு எஸ்.டி.டி. பூத்தும் அவரின் பொழுதினை போக்குவதற்கு உதவிக் கொண்டிருப்பது யாரும் சொல்லாமலேயே பிடிபட்டது.

தொலைந்து போன வாழ்க்கையைப் பற்றி அவர் புலம்பிக் கொண்டிருந்ததில் பல வருட தீபாவளிகளும், பொங்கல்களும், பல உறவினரின் திருமணங்களும், மரணங்களும் இருந்தது கூட எனக்கு ஆச்சர்யமாகப் படவில்லை அவரின் சொந்த தந்தையின் மரணத்திற்கும் கூட வர இயலவில்லை என்று....சொன்ன போது அவரின் கண்கள் கலங்கி இருந்தன... என் மனமோ எங்கோ வெறித்துக் கொண்டிருந்தது....

காலம் முழுதும் எங்கே ஓடினாய் மானிடா? எதைத் தேடினாய்?

காமராஜ
புரம்...இரண்டு பெட்ரூம் வீடும்.. இரண்டு பிள்ளைகளின் கல்வி திருமணமும் உனது இலக்காய் போனதில் தவறில்லை.. ? நீ சந்தோசமாக இருந்தாயா? என்ற கேள்வியை அசை போட்ட மனது.. அதை வார்த்தையாக்கி கேட்டே விட்டதைக் கண்டு.. மெளனியாக அமர்ந்திருந்த என் உறவின்....பெருமூச்சிலிருந்து தெரிந்தது...அவர் வாழ்க்கையை வாழவில்லை என்று......

ஒரு கப் காஃபியோடு.... அவரின் உடலில் தொற்றிக் கொண்டிருக்கும் முதுமையின் அடையாளமும்.....இன்னும் எதையோ தேடி ஓடிக் கொண்டிருக்கும் ஆற்றாமையும் எனக்கு முழுதும் விளங்கிப் போய்விட்டது.....! அவரையும் அவரின் மனைவியையும் நமஸ்கரித்து விட்டு....

வெளியே வந்தேன்....!

என்ன செய்து கொண்டிருக்கிறது இந்த உலகம்? எங்கே ஓடிக் கொண்டிருக்கிறது....? ஏதோ ஒரு மாய இலக்கினை நோக்கி மூச்சு இறைக்க இரவும் பகலும் ஓடிக் கொண்டே இருக்கிறது? என்ன கிடைக்கப் போகிறது....! மேலே சொன்ன என் உறவு ஒரு உதாரணம்... அவரின் வாழ்க்கையில் குடும்பத்தையும், நாட்டையும் விட்டுப் போனதின் விளைவுகளில் இழந்திருப்பது ஏராளமாக இருக்கலாம்......!

கட்டுரையின் இலக்கு வெளிநாட்டிற்கு சென்று அதனால் சந்தோசங்களை பறிகொடுத்தவர்கள் பற்றிய பார்வை அல்ல...!

மாறாக....

விடிதலும் விடிந்த பின் அன்றாட ஓட்டமும் ஓட்டத்தினூடே ஓராயிரம் பிரச்சினைகளும் கொண்டு ஆடி அலுத்துக் கொண்டிருக்கும் வாழ்க்கையின் மிச்சம்தான் என்ன? இலக்குகள் அற்று வாழ இயலாது பிண்டத்துக்குள் அடைபட்டு நகரும் மனதுக்கோ எப்போதும் எல்லைகள் தேவைப்பட்டுக் கொண்டே இருக்கிறது.

இன்றைய பிரச்சினைகள் நாளை தீரும் என்ற ஒரு வேட்கையோடு பொருளீட்டலில் போட்டி போட்டு நகரும் போது நாம் இழந்து போகும் எதார்த்தங்கள் எத்தனை எத்தனை.....! நித்தம் வானில் காணும் மேகக் கூட்டங்களின் தன்னிச்சையான வர்ண ஜாலம் தப்பியிருக்கிறது, ஒரு மழைக்கு பட்டென்று குடை விரிக்கும் தருணத்தில் மழை மடங்கி குடைக்குள் அடங்கி ஏதோ ஒரு அனுபவத்தை வெறுமனே நகர்த்தி வைத்து விடுகிறது. ஒரு காற்றை சுவாசித்தலும், ஸ்பரிசித்தலும் இயந்திரத்தனமாய் தானே நிகழ்கிறது?

உடலாய் இருக்கும் வரையில் இருக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை இயம்ப யாரலும் முடியாது. தொடர்புகளின்று வாழ்தலும் சாத்தியத்திற்கும் எதார்த்தத்திற்கும் அப்பாற்பட்டது, ஒவ்வொரு செய்கையிலும் பல மனிதர்களின் தொடர்புகள் தன்னிச்சையாய் நம்மீது விழுந்து அவர்களின் குழப்பங்களும், தெளிவுகளும் சேர்ந்தே நம்மை ஆளுமை செய்கின்றன.

ஓராயிரம் புறக்காரணங்கள் நாம் விரும்பியோ விரும்பாமலோ வந்து விழத்தான் செய்யும் நம்மீது. பந்தங்களும் அந்த பந்தங்கள் கொணரும் பொறுப்புகளும் என்று எதையும் மறுத்து ஓடினாலும் அவையும் முரண்களாய் போய்விடும் அபாயமும் இருக்கிறது....? எல்லா கடமைகளையும் நான் அல்லது நீங்கள் செய்யும் அதே வேளையில் நாம் நாமாய் வாழ்ந்திருக்கிறோமா? என்பதுதான் சவால் இங்கே.....

அது என்ன நான் நானாய் வாழாமல் வேறு யாரோவாகவா வாழ்ந்தேன் என்ற கேள்விகள் சட்டென்று கிளைத்து நிற்கும் வேளையில்...ஒரு கணம் எல்லாவற்றையும் நிறுத்துங்கள்....! ஆமாம் சற்றுமுன் எழுந்த கேள்வி உட்படத்தான்....

என்னோடு அமருங்கள்....! உங்களின் அன்றாட திட்டங்களைத் தூக்கி பரணில் போட்டு வையுங்கள், திரும்ப போய் பார்த்துக் கொள்ளலாம். உங்களின் புத்திசாலிதனத்தையும், கேள்விகள் கேட்கும் அறிவையும் தூரமாய் வைத்து விடுங்கள்....! நீங்கள் இப்போது யாருமல்ல..நானும் யாருமல்ல இருவரும் இரண்டு இருப்பு நிலைகள் அவ்வளவே.....!

வாருங்கள் கொஞ்சம் காலாற நடப்போம்....! ஒன்றும் வேண்டாம்.. வெறுமனே என்னோடு நடங்கள்....! எந்த கொள்கைகளும் அடையாளங்களும் இல்லாத நம்முடைய இருப்பு நிலை... மற்றும் சுற்றுச் சூழல்...எதையும் பகிராத ஒரு ஆனந்த மெளனம்...

என்னுள் இருக்கும் சந்தோச அலைகளை என் விழிகளால் பரவவிடுகிறேன்....ஓ.....எவ்வளவு அகண்டு விரிந்த ஆகாயம், அங்கே நமக்கென்னவென்று மிதக்கும் மேகங்கள்...திசைகள் தாண்டி எங்கோ எதற்கோ பறக்கும் பறவைகள், ஏதோ சில சப்தங்கள் அவ்வப்போது வந்து என்னுள் கடக்கின்றன.. .யார் யாரோ என்று மனிதர்களும் என்னை கடக்கிறார்கள்...!

நான் தொடர்பற்று நடக்கிறேன்....

என் நடையின் ஒவ்வொரு அடியும்...நான் இருப்பதை உணர்த்துகின்றன. இந்த நான்... என் பெயரல்ல, என் தொழிலல்ல, என் உறவல்ல, என் எதுவுமல்ல.. இது நானே நான்...! நீங்களும் வாருங்கள் நீங்களே நீங்களாக...! சலமனற்ற ஒரு குளத்தில் யாரேனும் கல்லெறிவது போல ஏதேனும் எண்ணம் கொண்டு விடப்போகிறீர்கள் ஜாக்கிரதை....

எனது இரைச்சல், எனது ஓட்டம், எனது தேடல் எல்லாம் உடலின் நியதி..! என் ஆத்ம நியதியின் அரங்கேற்றம் இங்கே...! சந்தோசங்களின் உச்சம் என்று எதுவும் இல்லை. எந்த புறப்பொருளும் சந்தோசத்தை கொண்டு வந்து என்னுள் இறக்கப் போவதில்லை. எல்லா சந்தோசத்துக்கும் புறம் ஒரு தேவையாயிருக்கிறதே அன்றி புறமே சந்தோசமில்லை.

நமது சந்தோசத்தின் கிரியா ஊக்கி பதுங்கிக் கிடக்கிறது நமக்குள்...! உறக்கத்திற்கும் மாத்திரை போட்டு உறங்கும் பழக்கத்தில் அடிமையானவர்கள் போல...நாமும் புறத்திலிருந்து ஏதோ வந்து சந்தோசம் கிடைக்கும் என்று ஏங்கி ஏங்கி எதை எதையோ தேடித் தேடி பெரும்பாலும் நமக்கு எரிச்சல்தான் வந்து கிடைக்கிறது அல்லது அப்படி நம்மை சந்தோசப்படுத்தும் பொருள் இல்லாவிட்டால் விரக்தி வந்து விடுகிறது...!

நானே நானாக
என் இயல்புகளில்
சிறகடிக்கும் தருணங்களில்
விரிந்து கொண்டேயிருக்கிறது
என் வானம்...!

வாழ்க்கையின் சாயங்களை
எல்லாம் கழுவி விட்டு
வெளுமையின் செழுமையில்
என் மூலக் கருமையில்
என்னை அமிழ்த்தி
திடங்கள் அழிந்து
திடத்தின் மூலச் சத்தில்
முழுதுமாய் நான் நிறையும்
என் ஆழமான கனவு
பலித்துப் போகத்தான் கூடாதா?

பொருள் ஈட்டலின் ஊடேயே நாமே நாமாய் வாழும் சந்தோச நிமிடங்களை அழித்து விட்டு கடைசியில் நமது இலக்கினை ஒரு இரண்டு அல்லது மூன்று பெட்ரூம் வீடு...மணமுடித்து கொடுத்த பிள்ளைகள் வீட்டை ஒட்டிய ஒரு பெட்டிக் கடை, இனிமே எனக்கு என்ன இருக்கு .......காடு வா வா என்கிறது வீடு போ போ என்கிறது என்றில்லாமல்....

எதுவுமே இல்லையெனிலும் ஒற்றை ஆடையை காய வைத்து உடுத்தும் லெளகீக இருப்பே வாய்த்தாலும், என் வாழ்க்கையின் சக்கரவர்த்தியடா நான் என்று இறுமாப்புடன் சப்தமிட்டு சிரிக்கும் சந்தோசம் கொள்வோம்.......!

மன்னியுங்கள்....நான் கொள்கிறேன்.. உங்களுக்கு விருப்பம் இருந்தால் கொள்ளுங்கள்...! இல்லையெனில் பதிவுலகின் கட்டுரைகளில் பத்தோடு ஒண்ணு பதினொண்டு அத்தோடு ஒண்ணு இது ஒண்ணு என்று போய் விடுங்கள்....!

யாதொரு கவலையும் கொள்ளாமல்..நான் சந்தோஷித்தே நகர்வேன்...! ஊராக பேராக நானிருந்தாலும் நானாக நானிருப்பதுதானே இங்கே சவால்....ஹா..ஹா.ஹா!


தேவா. S

Monday, March 14, 2011

தவம்....!

உன்னை தேடும் வேளைகளில்...
வழி நெடுகிலும் பரவவிட்ட
என் இதயத்தின் சப்தமெல்லாம்
மெளனமாய் உன் பெயர் உச்சரிக்கும்
பொழுதுகளிலாவது நினைக்க
மாட்டாயா என்னை?

சராசரியான உன் பார்வை...
காதலாய் எனக்குள் பரிணமித்து
உற்பத்தி செய்த எழுத்துக்களை
சேர்த்துப் பார்க்கும்...பொழுதுகளில்...
வந்து விழும் வரி வடிவத்தில்...
நடைபயிலும் உன் நளினத்தில்
எப்போதும் வார்த்தைகள்...
பிடிப்பட்டதில்லை எனக்கு!

எழுதிய கவிதைகளெல்லாம்
நிராகரிக்கப்படும் பொழுதுகளில்...
மூர்ச்சையான என் காதலும்..
மூர்க்கமான உன் நினைவுகளும்
ஒன்று கூடி என்னை...
கொல்லும் பொழுதுகளிலாவது...
என் நினைவுகளை பரப்புமா உன் மூளை?

உன் விழிகளுக்குள்...
தடுக்கி விழுந்த நானும்....
உனக்காக காத்திருக்கும்
என் கவிதைகளும், காத்திருப்புகளில்...
கழித்துக் கொண்டிருக்கும்..
நாட்களின் விமோசனங்களை...
உன் விழி திறந்து விடுவிக்கும்...
காலம்தான் எப்போது?

ஒரு காதலைச் சொல்ல...
எத்தனை ஜென்மங்களாய்
உன்னைத் தொடருவது...
ஒவ்வொரு முறையும் ...
நிழலாய் என்னருகில் இருக்கிறாய்...
அனலாய் என்னை தகிக்கிறாய்..
மெளனமாய்...என்னைக் கலைக்கிறாய்...!

பொறுமையான பின் தொடர்தலாய்...
மரித்துப் போகின்றன என் நாட்கள்...!
ஒரு முறை என் கண்களைப் பார்...
அதில் ஜென்மாந்திர களைப்பு இருக்கும்...
உனக்கான உயிர் பரவி..
என்னுருவில் அலைகிறது உன் ஆத்மா....
வெளிச்சமும் இருளும்...காற்றும் மழையும்
கணித்துவிட்டன நான் யாரென்று...
கலைந்து அலைந்து கொண்டிருக்கும்
உன் கேசமும் கண்டு பிடித்துவிட்டது
உனக்கானவன் நானென்று....!

ஆனால்....கணிக்கமுடியா..உனக்காக...
இன்னும் எத்தனை ஜென்மமோ....?
இன்னும் எத்தனை அலைதலோ....?

ஒரு ஏக்கத்தோட இருக்குற மாதிரி கவிதை இருந்ததாலேயே எழுதி ரொம்ப நாள் வச்சிட்டேன் என் தொகுப்பிலேயே.... ! ஏன்னா.. மைண்ட் செட் கவிதைக்கு எதிராதான் எப்பவும் இருக்கு மாறக நான் எப்பவுமே இப்டி ஒரு ஃபீல் பண்ணி எல்லாம் கவிதை எழுதினது இல்ல..!

சரி....எப்டியோ தோணிச்சு எழுதிட்டோம்... ட்ரீட் த கவிதை அஸ் கவிதைன்னு சொல்லிட்டு.....போஸ்ட் பண்றேன்.. சோ.. முதல் முறையா என் உணர்வுக்கும் கவிதைக்கும் நோ அட்டாச்மெண்ட் அப்டீன்றத வாசகர்களுக்கு சொல்லிக்கிறது எனக்கு சரின்னு பட்டதால இந்த பாராவ எழுத வேண்டியதாப் போச்சு...!


தேவா. S


Saturday, March 12, 2011

மாத்திப்புடுமா ...உங்க தேர்தலு...?தேர்தல்ல தொகுதி ஒதுக்கீட்டுக்கே இம்புட்டு குழப்பம் பண்றீகளே..? நீங்களுவோ ஒண்ணா சேந்து குத்தாட்டம் போட்டு செயிச்சு நாட்ட வெளங்க வைக்க போறீகளா? கதர் சட்டை போட்ட சோனியா காங்கிரசுக்கு எம்புட்டு ஆசை ....ஆத்தாடி? தொகுதிய மட்டும் வக்கனைய வாங்கி செயிச்சு என்னாத்த பண்ணி கிழிக்கப்போற ஆயா நீயி...?????

ரோட்ல எறங்கி எப்பய்யா போராடீ இருக்கு காங்கிரசு? பாத்தியளா...பாத்தியளா.. தேவையில்லாம சொதந்திரம் வாங்கி கொடுத்தானுவோன்னு சொல்லுறீய? இவனுவளா வாங்கி கொடுத்தானுவ.... பெரிசா தேசிய கொடி கலருக்கு ஒரு கட்சிக்கொடிய வச்சிகிட்டு இவனுவோ அடிக்கிற லூட்டி.....நான் சொல்ல மாட்டேன்.. உங்களுவளுக்கே தெரியும்.

ஏஞ்சாமி இவனுவொளுக்கு வேற கலர்ல எதுனாச்சும் கொடிய மாத்திவுடுங்களேன்....????

அது மட்டும் இல்ல...காங்கிரசுங்கறது சொதந்திரத்துக்கு போராடின கச்சி, அந்த பேர படுவா பயலுவளா நீங்க இனிமே வைக்கப்புடாது வேற என்னாமாச்சும் பேர வச்சி செயிச்சுக்கோங்கடா பயலுவலா? பொறவு...மாகாத்மா காந்தின்றவரு நம்ம தேசப்பிதா அல்லாருக்கும் பொதுவான ஆளு அவரு போட்டாவ போட்டு ஓட்டுக் கேக்கபடாது...இப்படி ஏதாச்சும் ஒரு சட்ட திட்டத்த போட்டு இவனுவள சலிச்சு பிரிச்சு எடுங்கப்பா...! நேத்திக்கு அந்த கச்சில உறுப்பினரா சேந்தவன் கூட தியாகி ரேஞ்சுக்கு கொடுக்குற் பில்டப்பு...சாமியோவ்.. தாங்க முடியலடா ....ங்கப்பா!

காலம் போன காலத்துல இவனுவளுக்குன்னு வந்து மாட்டுனாருய்யா திராவிட திலகம். வாழ்க்க புல்லா முடிஞ்சு மவராசன் நிம்மதியா ரெஸ்ட்டு எடுத்து சொச்ச காலத்தையும் போக்க வேண்டிய நேரத்துல நல்லா கேக்குறாருய்யா டீட்டெயிலு..! ஏஞ்சாமி இன்னுமா பதவி ஆச புடிச்சுகிட்டு உலுக்குது உங்கள? பேயாம மூத்தவரையோ இல்லை எளயவரையோ புடிச்சு தமிழ்நாட்டு சனத்துக்கிட்ட கொடுத்துபுட்டு அக்காடான்னு போயி ரெஸ்ட் எடுக்கலாம்ல... ! உம்ம உயிர எடுக்கறதுக்குன்னே... ஒரு அல்டாப்பு கூட்டணியும் உம்ம பேர கெடுக்கறதுக்கே புள்ள குட்டியளும் ....! ரொம்ப கஷ்டமா இருக்குங்க அய்யா உங்க பொழப்ப பாத்தா...

நாட்டை எத்தனவாட்டியோ ஆண்ட மவராசன், இன்னுமா கிடந்து இப்படி அல்லாடிகிட்டு இருக்கணும்.... கூட்டணி அமைச்சு போட்டு....எந்த தொவுதிய ஒதுக்கணும்னு மறுபடியும் சோனியா காங்கிரசு கிட்ட மல்லுக்கட்டு வேற...! ஐயா சாமி.. இந்த கதர் சட்டை போட்ட டுபாக்கூர் எல்லாம் உம்ம தோள்பட்டையில ஏறி செவிய கடிக்கிறானுவோளே... ! வேணுமுன்னே ஊழலை எல்லாம் நடக்கவுட்டு கம்முனு இருத்துபுட்டு... நல்லா அனுப்புறாய்கய்யா சி.பி.ஐ எல்லாம் உம்ம வீட்டுக்க்கு தேர்தல் நேரமா பாத்து....

தனியா மட்டும் நின்னு இருந்திருக்கணும்....காங்கிரசுன்னு ஒரு கச்சியா இருந்துச்சுன்னு..? கேக்குறமாறி செஞ்சுருப்பானுவ நம்மாளுவ? பெரியவரு, தமிழின தலிவரு இப்போ வேற வழியில்லாம உங்கள பிணைய கைதிமாறி புடிச்சு வச்சுகிட்டு பேச்சு நடத்துறானுவளே ரோமாபுரி காங்கிரசு ஆளுக? உங்க வேதனை ரொம்ப கஷ்டமய்யா சாமி...! எம்புட்டு இருந்து என்னங்கய்யா தமிழ் நாட்ல கூலி வேலை பாத்து பொழைக்கிற் ஒரு சாதாரண பொறப்பு கூட நிம்மதியா உறங்கி நிம்மதியா எந்திருக்கும்... ஆனா...உங்க நெலமை.......?

தொகுதி உடன்பாட்டுக்கு காங்கிரசு ஐவர் குழு அமைச்சு இருக்காம்.. ! ஐ.....!!!!! இந்த ஐவர் குழுக்கும் பின்னால ஐம்பாதாயிரம் குழுவுல்ல இருக்கும். இவனுவ பேசி முடிவு பண்ணி ஐஞ்சு பேறா சேர்றதுக்கே எழவு ஒரு மாசம் ஆவும்.. அப்புறம் எப்புடி பேச்சுவார்த்தை நடத்துறது......? எம்புட்டு அராஜகம், அழிச்சாட்டியம் பண்ணிப்புட்டு.. தெகிரியமா தேர்தல்ல கூட்டணி வச்சுப்புட்டாவோ இந்த காங்கிரசு ஆளுக....

இப்படி நீங்களுவோ பண்ற எல்லா கொழப்பத்தையும் பாத்து அம்புட்டையும் சிக்சரா மாத்த விடுமுறை நாயகி, ஓய்வெடுப்பில் காலம் கடத்திய கழக பெண் சிங்கம், கேப்புடன் கூட கைய கோத்துகிட்டு அடுத்த முதல்வராவே கனவுல சஞ்சரிச்சுகிட்டு இருக்கு...! ஆமாம் இன்னும் தேர்தலுக்கு முன்னால அநேகமா...கொல்லூரு கோவிலுக்கு போவும், அப்புறம் குருவாயுருக்கு போவும்... (பயப்படாதீக செயிக்கிறதுக்கு முன்னால போச்சுன்னா.. ஒண்ணியும் பயம் இல்ல.......ஆனா செயிச்ச பின்னால போயி ஒரு ஆனைக்குட்டியும் வாங்கிவிட்டுச்சுன்னா.............எதிரணிக்காரவுக எல்லாம் எச்சரிக்கயா இருந்துகோங்க....)எப்படியும், ரெண்டு மூணு யாகம் செய்யும்....அட.. எல்லாம் மக்க நல்லதுக்குதான் செய்யிதுன்னு நம்புறீகளா? நம்புங்க .. நம்புங்க..

வேற என்னத்த பண்ணி தொலைக்கிறது?

எஞ்சனம் கொள்ளை பேர கொன்னுப்புட்டு ராட்சனனா ஆச்சி பண்ற ராசபக்சே, எதாச்சும் பண்ணி கொறச்சு சீட்டாசும் புடிச்சுபுடலாம்ன்ற கனவுல சோனியா, எப்படியும் செயிச்சு புடலாம்னு கலிஞர் ஐயா, கேப்புடானாச்சும் காப்பத்தமாட்டாறான்னு செயலலிதா அம்மா, எப்படா எவன்டா செயிப்பான் நாமளும் போயி ஓட்டிக்கிட்டு காசுபாப்போம்னு பாக்குற சந்தர்ப்பவாதிய இவுகளுக்கு நடுவுல...

எப்படியாச்சும் இல்ல ஏதாவது ஒரு வழியில் நல்ல பொழைப்பு பொழைக்கமாட்டமான்னு ஆட்காட்டி விரல நீட்டிகிட்டு (வோட்டு மை வைக்கதான்) புறத்தலா... கைய யாருக்கும் தெரியாம நீட்டிகிட்டு (ஹி ஹி ஹி......அது எதுக்குனு சொல்ல மாட்டம்ல) காத்து கெடக்குது எஞ்சனம்....

ஒண்ணுமே நடக்கப்போறதுல்ல பெரிசா...இருந்தாலும் தேர்தலு ஒரு நல்ல டைம்பாஸ் மக்கா....!

பசிக்கிற வவுத்தையும்
எரியாத அடுப்பையும்
பொழைக்க பொழப்பு இல்லாதவனையும்
ஒதுங்க கூரையில்லவதனையும்
உரம் வாங்க காசில்லாதவனையும்
கடலுக்கு போயி சாகுற உசுரையும்

மாத்திப்புடுமா சாமி உங்க தேர்தலு? இல்லை தெரியாமத்தான் கேக்க்குறேன்....


தேவா. S

Photo Courtesy: Mr. Suresh Babu

Friday, March 11, 2011

ஜப்பானிய அநீதி.....ஒரு கவிதாஞ்சலி!


ஒரு ஆக்ரோஷ அரக்கனாய்
கரையைச் சுவைக்க
கால் பதித்தாயா கடலே?
ஆடும் மனிதர்களுக்குப்...
பாடம் புகட்ட ஆடிக்...
களித்தாயா நிலமே...?

என்ன செய்தோம் என்றுணரும்
தருணம் முன்பே...
நிலத்தை அள்ளிக் குடித்துவிட்டு
உயிர்களை பெயர்த்தெடுக்கும்
உன் அவசரத்தின் மீதான
என் கோபத்தை எங்கே அடுக்குவேன்?

எத்தனை உயிர்கள் போனது...?
கணக்கு வழக்காய் கழித்து
அந்த நினைவுகளை மழித்துக் கொள்ளும்
காலத்திற்கு தெரியுமா
எத்தனை கனவுகளை அழித்தோமென்று?

தனிமையில் துளிர்க்கும்...
என் கண்ணீர்த் துளிகளின் வேர்களின்
மூலம் அறிந்த அண்டமே....
மூலமில்லா பிண்டம் தாங்கிய ஆதியே
எல்லாம் எடுத்துக் கொண்டு
எம் பூமியில் உயிர்களுக்கான
சந்தோசத்தையும் சாந்தியையும்
இறைத்துப் போடு; இல்லையேல்
மொத்தமாய் பூமிப் பந்தை
அகண்டவெளியில் இருந்து..
அறுத்துப் போடு....!

இன்னுமொரு முறை
கொந்தளிக்காதே கடலே...
ஆட எத்தனிக்காதே நிலமே...
உன்னை கட்டுக்குள் கொண்டு
வர யுத்திகள் அற்றுப் போயிருக்கிறோம்...
கால்கள் இருந்தால் கொடு
பிடித்து கண்ணீரால் கழுவுகிறோம்......!

ஜப்பானிய நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் உயிரிழந்த அத்துனை ஆத்மாக்களும் சாந்தியடைய எல்லாம் வல்ல ஏக இறையிடம் எனது ஆழ்ந்த தியானத்தையும், வேண்டுதலையும் சமர்ப்பிக்கிறேன்.


தேவா. S

Thursday, March 10, 2011

எனது தேசத்தின் வேர்கள்.....


ரொம்ப நாளைக்கு முன்னால ஒரு படம் போட்டேன், அதோட இறுதி பாகத்தை எழுதிடலாம்னு நினைச்சப்ப மனசுக்குள்ள ஒரு விசயம் இல்லை..இல்லை இனிமே அது தேவையில்லைன்னு சொன்னிச்சு... சரி போகட்டும்னு விட்டுட்டு அடுத்தவேளைய பாத்துட்டு போய்ட்டேன் ஆனா காலம் என்னை இழுத்து பிடித்து நிறுத்தி...நீ எழுதிதான் ஆகணும்னு சொல்லும் போது........அந்த பிரமாண்டத்துக்கு முன்னால நான் என்னதான் பண்றது....?ட்ரெய்லர் I

ட்ரெய்லர் II

ட்ரெய்லர் III

ட்ரெய்லர் IV

ட்ரெய்லர் V

ட்ரெய்லர் VI

ட்ரெய்லர் VII

ட்ரெய்லர் VIII

ட்ரெய்லர் VIIIB

படம் I


படத்தின் தொடர்ச்சி....

சமீபத்தில் அலுவலக பணி நிமித்தமாக ஒரு நிறுவனத்தின் மானேஜிங் டைரக்டரை சந்திக்க சென்றிருந்தேன்...! தொலைபேசியில் பேசும் போதே கணித்து விட்டேன்.. அந்த தோலின் நிறம் வெள்ளை என்று அது அவரின் மொழிப் பிரயோகத்தின் மூலமாக கணிக்கப்படவில்லை மாறாக பேசிய அவர் பேசிய தொனியின் வாயிலாக உணர்ந்தேன்....

அவரின் அலுவலகத்தில் அவரை சந்திக்க நான் உறுதி செய்த நேரம் 10:30 காலை. 10.25க்கு அந்த அலுவலக கார் பார்க்கிங்கில் எனது காரை நிறுத்தி விட்டு நான் அந்த அலுவலக வரவேற்பறைக்குள் நுழைந்த போது மணி 10:27. என்னுடைய பிஸினஸ் கார்டை அந்த காரியதரிசியின் கைகளில் திணித்த போது... அதிலிருந்த என் பெயரைப் பார்த்த அந்த பெண்ணும் ஒரு வெள்ளையான தோலுக்குரியவர்தான்....!

அம்மணி புன்முறுவலோடு.... தங்களின் முழுப்பெயரும் உங்களின் பிஸினஸ் கார்டில் இல்லை முழுப்பெயர் என்ன? என்று கேட்டார்..... ! அதற்கு பதிலாக நான் சொன்னேன்..." இட் டஸ்ஸின் மேட்டர்.. ஐம் தேவன்.... அண்ட் ஃப்ரம் விச் கம்பெனி தட்ஸ் தேர்.. இன் மை கார்ட்.... தட்ஸ் ஆல்...." என்று சொன்னதற்கு.. அவள் சொன்னாள்... " சாரி.. சார்.. அன்டில் அன்லெஸ் உங்க முழுப் பெயரை கொடுக்காவிட்டால் எனது பாஸ் உங்களை சந்திக்க மாட்டார் என்று சொன்னார்.

சரி.... நான் கொடுத்த பெயரையும் எனது அலுவலக பெயரையும் சொல்லுங்கள். உங்கள் முதலாளி என்னை சந்திக்க வில்லையெனில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை.. ஐ வில் மூவ் பேக் என்று சொல்லிவிட்டு.. அங்கே இருந்த இருக்கைக்குள் புதைந்தேன்....! அச்சு பிறழாத ஆங்கிலத்தில் அழகாக நான் கூறியதை அவளுடைய தலைமையிடம் தெரிவித்து விட்டாள்...

கொஞ்சம் அமைதியாக கழிந்த நிமிடங்கள் கழிந்து......ஐயம் சார்ல்ஸ்....என்று அறிமுகம் செய்து கொண்ட அந்த கனத்த உருவம் ஒரு பிரிட்டிஷ் நேஷனாலிட்டி என்று என் மூளை கணித்து முடித்து இருந்தது. எனக்கு சில வேலைகளை அவர் காண்பிக்க வேண்டும்.. அதனை கணித்து அதை செய்வதற்கு எனது நிறுவனம் எவ்வளவு சார்ஜ் செய்யும் என்று ஆன் த ஸ்பாட் நான் கொட்டேசன் கொடுக்க வேண்டும்....இதுதான் அந்த சந்திப்பின்..அவசியம்...!

என்னை உள் அறைக்கு அழைத்து சென்ற அவர்....விவரிக்கத் தொடங்கினார். இத்தனை ஆர்ட்வொர்க்ஸ் இருக்கிறது அதை இன்ஸ்டால் செய்ய வேண்டும்... இடைவிடாமல் பேசிய அவர் இதை செய்வதற்கு 2000 திர்ஹம்ஸ் தருகிறேன். எப்போது வேலையை ஆரம்பிக்கிறீர்கள் என்று கேட்டார்....! என்னிடம் சில கேள்விகள் இருந்தது... அவர் பேசி முடித்தவுடன்.... நான் கேட்டேன்...உங்களின் பட்ஜட் 2000 திர்ஹம்ஸ் சரிதானே? எனக்கு சில விபரங்கள் இந்த வேலை நிமித்தமாக வேண்டும்... கொடுங்கள் பின் நான் எனது விலையைச் சொல்கிறேன்....என்று சொன்னவுடன்... மிஸ்டர். சார்லஸின் முகம் சிவந்து போய் விட்டது...

லுக்.. ஐம் த பாஸ் ஹியர்....யூ டோண்ட் இன்ட்ராகேட் மீ....அண்ட்.. நான் அதன் விலை இவ்வள்வுதான் என்று சொல்லி விட்டேன்.. 3 மணி நேர வேலை... அவ்வளவுதான் நானே செய்து விடுவேன் என்றார்... ! நான் சரி நீங்களே செய்து விடுங்கள் நான் விலை கொடுக்க வேண்டுமெனில் எனக்கு சில விபரங்கள் தேவை என்று கூறி நான் எனது இருக்கையை விட்டு எழுந்தேன்...

" ஆர் யூ ஃப்ரம் இன்டியா? ....என்று சூழலுக்கு சம்பந்தம் இல்லாத கேள்வியை கேட்டார். யெஸ்... ஐயம்....என்ற பதிலைச் சொல்லிவிட்டு....ஒரு மாதிரி ஏன் இதைக் கேட்டாய் என்பதைப் போல அவரின் கண்களை ஊடுருவிப் பார்த்துக் கொண்டிருந்தேன்....

கனைத்துக் கொண்டு பேசத்தொடங்கியிருந்த ஆந்த ஆணவம் சொன்னது நான் ஒரு பிரிட்டிஷ் காரன்...எங்களின் அனுமானமும் திட்டமிடலும், எப்போதுமே ஒரு இந்தியனை விட மேன்மையானது. இந்தியர்களிடம் ஒழுங்கு இல்லை என்று இந்தியாவைச் சேர்ந்த இங்கிலாந்தில் செட்டில் ஆகியிருக்கும் எனது நண்பர்களே கூறக் கேட்டிருக்கிறேன். உங்களிடம் சுத்தம் இல்லை, நீங்கள் எல்லாம் கூட்டம் கூட்டமாக.. சேர்ந்து முடிவெடுப்பவர்கள். உங்களிடம் தனித்தன்மை இல்லை...இப்போது சொல்... இந்த வேலையை செய்வதற்கு எப்போது வருகிறீர்கள்....நான் வரவேற்பரையில் பணத்தை கொடுத்து விட்டுப் போகிறேன்....வந்து உனது ஆட்களை வாங்கிக் கொள்ளச் சொல், என்று பேசி முடிந்திருந்தார்.

இப்போது நான் சார்ல்ஸ்க்கு நேருக்கு நேராய் நின்றேன்....அவன் முகம் நோக்கி நேருக்கு நேராய் பார்த்து கண்களுக்குள் ஊடுருவிக் கிடந்த ஆதிக்க தேசத்தின் திசுக்களை ஒவ்வொன்றாய் தேடிப் பிடித்தேன். சார்ல்ஸ் என் பார்வையால் கொஞ்சம் சலனப்பட்டு என் உற்று நோக்கலை சமாளிக்க முடியாமல் போனதை உணர்ந்தேன்....மெலிதாய் ஒரு புன்னைகையை அவனுக்கு பரிசளித்தேன்....

" மிஸ்டர். சார்ல்ஸ்..........நான் உன்னுடன் தொழில் செய்ய வந்தேன். நீ வேலை கொடுக்கிறாய். என் நிறுவனம் வேலை செய்யப் போகிறது. நான் என்னுடைய நிறுவனத்தின் பிரதிநிதி. என்னை இந்திய பிரதிநிதியாய் நீங்கள் பார்த்தது முதல் தவறு. மேலும் இந்தியாவினைப் பற்றிய தவறான கற்பிதங்களை உங்கள் மூளையில் ஏற்றி வைத்த என் சக தேசத்து இந்தியனின் தவறு.....

இப்போது உனது வேலைக்கான எனது விலை தோராயமாக திர்ஹம்ஸ் 5000 வரும், உனக்கு விருப்பம் இருப்பின் எனக்கு உனது பர்ஸேஸ் ஆர்டரை அனுப்பி வையுங்கள்...பேமெண்ட் சுட் பீ 100% அட்வான்ஸ் பிஃபோர் த வொர்க் ஓ.கே....! என்று கூறி முடித்து விட்டு...எல்லா பார்மாலிட்டிகளுக்குப் பிறகு....நான் ஒரு விசயம் உங்களிடம் சொல்லவேண்டும் சார்ல்ஸ் என்றேன்...

"இந்தியா பற்றிய கருத்தினை உங்களிடம் தெரிவித்த உங்களின் இந்திய நண்பர்களை நான் இந்தியர்கள் என்று சொல்ல மாட்டேன். உங்களின் தேசத்தில் பிழைப்புக்காக வந்து அங்கேயே தங்கிவிட்ட வேற்று நாட்டவர்கள்தான் எங்களைப் பொறுத்தவரைக்கும். அவர்களுக்கு இந்திய தேசத்தின் ஓட்டைகளும் தெரியும் சிறப்புகளும் தெரியும் ஆனால் சிறப்புகளை உங்களிடம் சொன்னால் அவர்களின் பிழைப்பில் மண் விழுந்து விடுமே...

இந்திய தேசத்தின் சமுதாய அமைப்பு, கலாச்சார கட்டமைப்பு மனிதர்களை முன்னிலைப்படுத்தியது. இங்கே தனித்து இயங்குதல் என்பது பிரபஞ்ச நியதிக்கே முரணாணது. தனித்து எதுவும் இயங்க முடியாது என்ற உண்மையை உணர்ந்த எம் பூர்வீக குடிகள் கூட்டமாய், குழுவாய் ஒருவர் சார்ந்து ஒருவர் வாழும் ஒரு உள் கட்டமைப்பையும் உருவாக்கி சென்றுள்ளனர். திருமணமும், அதற்காக கூட்டமாய் நாங்கள் சேர்தலும், சிரித்தலும், களித்தலும் எமது கலாச்சாரம், நவீனத்தில் எது மாறினாலும் எமது பூர்வம் மாறாது...மாறவும் கூடாது...

எங்கள் ஊரில் தெருவில் ஒருவன் இன்னொருவனை வெறுமனே வதைத்தலை வேடிக்கைப் பார்த்து செல்ல மாட்டோம்...யாரேனும் ஒருவர் நியாயம் கேட்போம். எங்கள் வலுவே அதுதான்.. என்ன ஒன்று நாங்கள் எப்போதும் எங்கள் மேன்மைகள் பற்றி பேசி பெறுமைப்படாமல் சிறுமைகளை எமக்குள் சீர் திருத்த முயலாமல் நாங்களே எங்களைப் பற்றி குறைகள் சொல்லிக் கொண்டு எம்மை எம்மவரிடம் இருந்து வேறு படுத்திக் காட்டி பெருமைகள் பட்டுக் கொள்வோம்.

எமது கலாச்சாரம் என்பது வெறுமனே உறவுகள் மட்டுமல்ல; உணவு, உடை, விழாக்கள், தொழில், ஆன்மீகம் என்று எல்லாம் சேர்ந்த கலவை. இவையெல்லாம் வடிவமைக்கப்பட்டது மனித வளத்திற்கும் மனித நலத்திற்கும்தான்......

நாங்கள் எங்களையும் சமுதாயத்தையும் உற்று கவனித்து வாழ பயிற்றுவிக்கப்பட்டவர்கள். எங்களின் வாழ்க்கைமுறையில் உடல் சாரா சூட்சும நிகழ்வுகள் நிறைய உண்டு அவை எம்மவர்களுக்கே விளங்கா வண்ணம் அவற்றை புகுத்தியிருப்பது எம் மூதாதையரின் நுட்பமான மூளை. உங்களின் மனம் சார் பிரச்சினைகளுக்கு உங்களின் தீர்வுகள் எப்படியாயிருக்கும் என்று என்னால் அனுமானிக்க முடியவில்லை ஆனல் என் தேசத்தில் ஒரு பிள்ளையார் கோவிலில் தேங்காய் உடைத்து விட்டு ஏதோ ஒரு திடத்தில் வாழ்க்கையை நகர்த்தி ஜெயித்தவர்கள் ஏராளம்.

தேங்காய் உடைத்தலின் அறிவியலை ஆராயும் நவீன மூளைகள் அங்கே நிகழ்ந்த மனோதத்துவ நிகழ்வுகள் பற்றி உணர்தல் சாத்தியமற்றதுதான்.

உங்கள் ஊரில் குப்பைகள் இல்லையா சார்ள்ஸ்? மது இல்லையா? விபச்சாரம் இல்லையா? மண முறிவு இல்லையா? சண்டைகள் இல்லியா? வன்முறை இல்லையா? லஞ்சம் இல்லையா? ஏழைகள் இல்லையா? அரசியல் குழப்பங்கள் இல்லையா? குறைகள் இல்லா தேசம் எது சார்ல்ஸ்....?

எல்லாம் நிறைந்ததாய் நீங்கள் சொல்லும் உங்களவர்கள் கடந்த நூற்றாண்டில் இந்தியாவில் கால் பதித்த நோக்கம்தான் என்ன? சுபிட்சங்கள் நிறைந்த தேசம் இந்தியா இப்போது தன் சொந்த மக்களால் அதை உணரமுடியாத வகையில் குழம்பிப் போயிருப்பது ஒரு தற்காலிக நிகழ்வு....அதுவும் மாறும்..."

பேசி முடித்து கையை நீட்டேனேன்... கை குலுக்கலுக்காய்.............புன் முறுவலோடு கை கொடுத்தார் சார்ல்ஸ்...........எனது கொட்டேசனுக்கான அப்ரூவலை மின்னஞ்சல் செய்வதாய் சொன்னார்....!

எனது வாகனம் சாலையில் வழுக்கிக் கொண்டிருந்தது மனம் எங்கோ பறந்து கொண்டிருந்தது. அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும், சிங்கப்பூரிலும், அமீரகத்திலும் இன்ன பிற தேசத்தில் நெடு நாட்கள் வாழ்பவர்களும் குடியுரிமை பெற்றவர்களும்.....சந்தோசமா அங்கேயே உங்கள் சேவையை தொடருங்கள், தவறு இல்லை.

ஆனால்.... இந்தியா பற்றிய வேறு பார்வையை வேற்று தேசத்தவரிடம் பதித்து விடாதீர்கள்....

நமது நாட்டிலிருக்கும் சிறப்புகளை கூறுங்கள்; இந்திய தேசத்தின் கலாச்சாரமும், அதன் மூலமும் உற்று நோக்கி உணரப்படவேண்டியவை இவற்றை விளக்கங்களால் தருவிக்க முடியாது. ஒரு தாயை, அவளின் தாய்மையை, அன்பை உணரத்தான் வேண்டும்....மாறாக ஆராய்ந்து பகுத்துப் பார்த்தால் அங்கே என்ன மிஞ்சும் என்பது எல்லோருக்கும் தெரியும்.

எம்மிடம் குறைகள் இருக்கலாம்....அவற்றை சீர்படுத்த முயலும் அதே நேரத்தில் அவற்றை கூறி எம்மக்களை இழிவு செய்தல் எவ்விதத்தில் சரி...?

நான், எனது தேசம், எனது மக்கள், எனது மண் இந்த அடையாளம் கொண்டு இவ்வுலகை நேசிப்போம்...குறைகள் கடந்த ஒரு தேசத்தினை படைக்கும் ஒப்பற்ற குடிமக்கள் ஆவோம்...!

(படம் முடிந்தது)


தேவா. S

பின் குறிப்பு: இந்த கட்டுரை பகிராத செய்திகளை மேலே இருக்கும் படம் சூட்சுமமாய் விளக்கும் (புரிந்தவர்களுக்கு மட்டும்...)

Photo Courtesy: Mr. Suresh Babu


Monday, March 7, 2011

காதலா...?


உன் நினைவுகள்
விழுங்கிக் கொள்கின்றன..
என் இரவு உறக்கங்களை...
எப்போதாவது கண்ணயரும்..
சில நிமிடங்களிலும்...
கனவுகளில் ஆக்கிரமிக்கும்..
உன்னை என்னடி செய்வது?

***

மழைபெய்யும் பின்னிரவு..
உறக்கம் கொடுக்க முடியா..
தோல்வியில் கிளைத்த..
வெட்கத்தில் என் படுக்கை....!
இறுமாப்புடன்...எக்காளமாய் சிரிக்கிறது...
அடாவடியாய் என்னை ஆக்கிரமித்திருக்கும்...
உன் நினைவுகள்!!!

***

எங்கிருந்தோ காற்றில்....
தவழ்ந்து வந்த புல்லாங்குழலின் இசை...
கூடவே கூட்டிச் சென்று விட்டது...
என் மனதையும்....!

***

பாலையின் மழையாய்
நீ இல்லாத பொழுதுகளில்
எனக்குள் காதலை...பெய்விக்கின்றன
உன் நினைவு மேகங்கள்....!

***


கண்களால் கேள்வி கேட்கிறாய்..
மெளனத்தால் பதில் சொல்கிறாய்
மெலிதான புன்னகை வீசி
என் உயிர் கவர்ந்து செல்கிறாய்
உன்னையே என்னை சுற்ற வைத்து
ஓரக்கண்ணால் பார்த்து
ஒய்யாரமாய் நடக்கிறாய்.....
கையெழுத்தே போடத்தெரியாதவன்
இப்போது கவிதை எழுதுகிறேன்...
மொத்தமாய் சொல்லடி....
என்னை என்ன செய்வதாய் உத்தேசம்?


தேவா. S

Saturday, March 5, 2011

தமிழன் குடி....குன்னக்குடி தானா?தமிழ் நாட்டு அரசியல் ஒரு பக்கம் ஒரு பக்கம் சூடு பிடிக்குதுன்னா.. பதிவுலக அரசியல் மறுபக்கம் அனலடிக்குது...! ஆமாம் இப்ப எல்லாம் பதிவு எழுதுறதும் அதை வெளியிடுறதுக்கும் மூளை வேணுமோ இல்லையோ டெக்னிக் வேணும் போல இருக்கு. சரி...சரி.. எந்தப்பக்கம் இப்ப பாயப்போறேன்னு தானே கேக்குறீக....

பதிவுலகம் சாரா...வாசகர்கள் மீதுதான்..!

ஊரான் வீட்டுப் பிள்ளையா நினைச்சுக்காதீங்க .. உங்க வீட்டுப் பிள்ளையா நினைச்சு (வடிவேலு ஸ்டைல்...) நான் சொல்றத கொஞ்சம் கவனமா கேளுங்க...! ஏன் உங்க ரசனை இப்படி போயிடுச்சு....மக்களே? எப்ப பாத்தாலும் பொழுது போக்குறதுலயே குறியா இருக்கீகளே... எப்ப ஒரு விசயத்தை முழுசா புரிஞ்சு விளங்கிக்க போறீக?

" இந்த பக்கம் போகாதன்னு போர்டு போட்டு இருப்பாங்கே........." அங்குட்டுதான் பூரா சனமும் ஓடி ஓடி பாக்கும்...! பாம்பு வித்தையும், குறளி வித்தையும், பாத்து பாத்து உங்களுக்கு சலிக்கவே இல்லையா? ஆபாசத்தையும் அரசியலையும் ரெண்டு கண்ணா நினைச்சு நீங்க காட்ற அபிமானத்த பாத்த.. இன்னும் நூறு வருசம் ஆனாலும், திருந்தித் தொலையப் போறது இல்லனு தெரியுது.

இரண்டு திராவிட கட்சிக்கு நடுவுலதானே தமிழனோட மொத்த பொழைப்பும் சீரழிஞ்சு கிட்டு இருக்கு... ! தி.மு.க. வந்தா அய்யான்னு சொல்லு அ.தி.மு.க வந்தா அம்மானு சொல்லு.. இது ரெண்டும் ஒழுங்கா சொல்லத் தெரியலேன்னா.. தமிழ்நாட்ல வாழ வக்கத்தவனா போயிற வேண்டியதுதான்.. (சத்தியமா நான் பாட்டாளி மக்கள் கட்சிய குறை சொல்லலீங்க.. யாரும் சண்டைக்கு வந்துடாதீக...)

உங்க அரசியல் புரிதல் லட்சணம்தான் இப்படின்னா வாசிக்கும் அறிவு.. சொல்லவே தேவையில்லை.. அதுக்கு ஆஸ்கார்தான் கொடுக்கணும்.

உதாரணமா.....

" அவளின் வேகமான நடையில் முன்னால் இழுத்து விடப்பட்டிருந்த கேசம் காற்றில் அலைபாயும் வேகத்தில் அவளின் முன்னழகை யாரும் கவனிக்காமல் இருக்க முடியாது. அதுவும் அவள் அணிந்திருந்த வெள்ளை நிற டி சர்ட்டில் லுக் அட் மீ என்ற வாசகம் எல்லோரையும் சிதறடித்துக் கொண்டிருந்தது.

பிரதீப்பின் அருகில் வந்து அமர்ந்தவள்.....தாமதமாய் வந்ததற்கு மன்னிப்பு கேட்கும் விதமாய் பிரதீப்பின் அருகே நெருக்கமாய் அமர்ந்து அவனின் கேசத்தை கலைத்து...காதுகளின் அருகே சென்று ....ஐ எம் சாரி என்று கூறிய வேகத்தில் சூடாய் அவளை உணர்ந்தான் பிரதீப்....கடற்கரை மாலையின் குளுமையையும் தாண்டி அவனுக்குள் சூடு பரவியது...."

இந்த மாதிரி வார்த்தைகளுக்குள் விரசத்தை விரவி விட்டு எழுத்தை வியாபரம் ஆக்கத் தெரியாத படைப்பாளிகளை நீங்கள் ஏறெடுத்தாவது பார்த்து இருக்கீகளா? பார்க்கா மாட்டீக.. உங்களுக்கு தேவை உணர்ச்சியைத் தூண்டும் அப்போ அப்போ பொழுது போக்காய் இருக்க கூடிய.. ஒரு ஃபாஸ்ட் புட் எழுத்து..... ! அம்புட்டுதானே... வேற என்னத்த செய்யப் போறீக....!

இது மட்டுமா.. ஒரு பதிவுக்கு டைட்டில் வக்கிறது கூட உங்க ரசனைக்கு ஏத்த மாதிரி...

"கிலு கிலு கில்மா
நமீதாவின் இடிப்பு சைஸ் சரியானதா?
நடு இரவில் அதிரடி....
கலைஞர் தொலைஞர்
அம்மாவின் அதிரடி யாகம்..."


இந்த ரேஞ்சுல இருந்தாத் தானே நீங்க ஒரு பதிவையாச்சும் ஓப்பன் பண்ணியாச்சும் பாக்குறீங்க...! எழுதுறவங்கள கொற சொல்றதுக்கு யாருக்கும் துப்பு கிடையாது. ஏன்னா நீங்கதான் நல்ல எழுத்தை படிக்கிறது இல்லையே....! இதே நிலைமைய விடாம நீங்க மெயிண்டெய்ன் பண்ணிகிட்டே போனா... எல்லோருமே மஞ்சள் பத்திரிக்கை ரேஞ்சுக்கு எழுத ஆரம்பிச்சுடுவாங்க?

எவனாச்சும் யாரயச்சும் திட்டினாலோ அல்லது அடிச்சிகிட்டு கட்டி உருண்டாலோ வாசகப் பெருமக்களாகிய நீங்க கொடுக்குற ஆதரவு இருக்கு பாருங்க.. நான் ஒண்ணும் சொல்ல மாட்டேன் மக்கா...! ஆமாம் தெருவுல ரெண்டு பேரு அடிச்சுகிட்டாலே செம ஜாலியா இருக்கும்.. .ஓரமா நின்னு அழகா வேடிக்கை பாத்துட்டு.. நமக்கு என்னாச்சுன்னு... தேமென்னு போவோமே....

அதுவும் எழுத்துல இருந்துச்சுன்னா நாங்க என்ன புறக்கணிக்கவா போறோம்...! செம ஜாலி பாஸ்னு வாயை பொளந்துகிட்டு கூட்டமா நின்னு வேடிக்கைப் பார்ப்போம். எங்களுக்கு தேவை டைம் பாஸ்....எப்பவுமே சீரியசா இருக்க முடியாதுன்னு நீங்க சொல்ற லாஜிக் என்னவோ ஓ.கே.தான்...ஆனா நீங்க எப்பவுமே ஜாலியாவும் இருக்க முடியாதுன்ற லாஜிக்கை ஏன் மறந்துடுறீங்க?

"ஊரைத் திருந்த வந்த நல்லவன்" னு ஒரு டைட்டில் வச்சா ஒரு சனமாச்சும் வந்து எட்டிப்பார்க்கும்ன்றீங்க.. நாலு கெட்டவார்த்தையில .. "டேய்..!" " என்னாடா..." " இந்தாங்கடா..." அவனே இவனேன்னு ஒரு டைட்டில் வச்சா...ஊருச் சனமே.. கியூவ்ல வந்து எட்டிப்பார்க்கும்...! ஏன் நாம டிக்கட் போட்டு காசு வசூல் பண்ணினா கூட கூசாம குடுத்துட்டு ஊர் புறணி பேசவும் கேட்கவும்...ஆளுக இல்லனு மட்டும் சொல்லாதீக.....

எதையுமே விட்டுக் கொடுத்துடாதீங்க வாசகர்களே...! இதே மாதிரியான உங்க அகில உலக நேர்மையான பார்வையோடவே நாட்டின் நிகழ்வுகளையும், அரசியலையும், சினிமாவையும், பக்கத்து வீட்டுக்காரனையும் எதிர்த்த வீட்டுகாரனையும், பத்திரிக்கைகளையும், எழுத்தாளர்களையும் ஆதரிச்சுகிட்டே இருங்க....

தமிழன் குடி குன்னக்குடி ஆகி காவடி எடுத்துக்கிட்டே இருக்கட்டும்...!

அப்போ வர்ர்ர்ர்ட்டா...!


தேவா. S