Skip to main content

கிராமத்தாய்ங்கதான் நாங்க...!

















அட கூட்டம் கூட்டமா சுத்திகிட்டு இருந்த பயலுகப்பா நாங்க....! நீ என்ன நெனைச்சுகிட்டு இருக்க.. டவுனுக்கு வந்து டைய கட்டிகிட்டு டஸ்ஸு புஸ்ஸுனு இங்கிலீசு பேசுறோம்னு பாத்தியா ! அட இது எல்லாம் வேல வெட்டினு வந்ததுக்கு அப்புறமப்பா.. ...! ஊருக்கு பக்கட்டு வந்து பாரு....எப்டி இருக்கோம்னு....

காடு, கரை, வயலு, வாய்க்கா, சேறு, சகதி, வெயிலுன்னு ஒரு மார்க்கமா வாழ்ந்திருக்கோமப்பா....! பாட்டன் முப்பாட்டன்னு மீசைய முறுக்கிகிட்டு திரிஞ்ச பயலுக நாங்க...! அப்டிதானே இருதிருப்பாய்ங்க நெறய ஆளுக....! அட வாழ்க்கை மாத்திபுடிச்சப்பா அம்புட்டையும்....! இங்குட்டு பொழப்பு தலப்ப தேடி வந்தாலும் சாதி சனத்த விட்டுபுட்டு இருக்கமாட்டமப்பா நாங்க....! கோவிலு, திருவிழா, காதுகுத்து, கல்யாணம்னு ஒண்ணு மண்ணுமா சேராம இருக்க மாட்டமப்பா...!

வெள்ளன நாங்க எந்திருக்கிறதுக்கு முன்னாடி ஆடு மாடுகளும், கோழி, சாவல்களும் எழுப்பி விட்டுறுமப்பா எங்கள...! கோழிபெட்டிய எங்கப்பத்தா தொறந்து விட்டா கெக்கரிச்சுகிட்டு போகும்யா அம்புட்டும்ம்ம் நாந்தேன் எப்பவோ கூவிட்டேனேன்னு விடிஞ்சது எனக்குதானே முதல்ல தெரியும்னு திமிரா போகும் பாரு அந்த கருத்த சாவ...! வெள்ளன எந்திரிச்ச திமிறுல்ல நாளு முழுசும் திமிராவே தெரியும்ல...! எங்கய்யா சொல்லுவாரு வெள்ளன எந்திரிச்சா மனுசன் கூட திமிராத் திரியலாம்னு..!

மாடுகளுக்கு எல்லாம் வைக்ககொலைய வைக்கப்பொடப்புல இருந்து அள்ளிகிட்டு வரும்போது வந்துரும்யா சந்தோசம் என் காளைக் கண்டுகளுக்கு...! வைக்கலை போட்டு தின்னு முடிக்கவும் கழனித் தண்ணிக்கு போயி தண்ணி காட்டிகிட்டு இருக்கும் போதே.. காப்பித்தணிய ஊத்திகிட்டு வந்துரும் எங்கப்பத்தா.... ! இப்பதான்ப்பு ஒங்க அத்தைகாரி பாலு பீச்சிகிட்டு இருக்கா... அப்புறமா பாலுகாப்பித் தாரேன் இப்போ வெரசா இந்த வரக்காப்பிய போட்டாந்தேன்னு அது காப்பியா ஆத்துற சுகத்துலயே ஒடம்புக்குள்ள ஒரு சுறுசுறுப்பு வந்துரும்யா...

பத்து ரூவா கொடுத்து பகட்டா இங்க ஓட்டல்ல கொடுக்குற காப்பித் தண்ணியெல்லாம் அட...நாண்டுகிட்டு இல்ல செத்து போகும்.எங்கப்பத்தா கொடுக்குற வரக்காப்பிய கண்டுச்சுனா..! ரொம்ப வெவராமத்தான்யா கணக்கு வழக்கு பாக்க ஊருக்கு ஒரு கணக்கு பிள்ளை, ஊர நிர்வாகம் பண்ண தலையாரின்னு வச்சுப்புட்டு பரம்பரை பரம்பரையா திரிஞ்சுருக்கோம் நாங்க...! இங்கிலீசு டாக்டரு எல்லாம் இப்பத்தானே வந்தாக....அந்த காலத்து வாழ்க்கைக்கு வைத்தியமே தேவையில்லையப்பா...!

மனிசன் இங்கிலீசு மருந்து கண்டு பிடிச்சு அம்புட்டு பக்கியலும் அதை எடுத்துகுற இந்தக் காலத்தில எல்லாம் 50 வயசு 60 வயசுக்குள்ள போயி சேந்திராய்ங்க...! எம் பாட்டன் முப்பாட்டன் எல்லாம் ஜவாப்பா 100 வயசு வரைக்கும் இருந்திருக்காய்ங்கள்ள.. ! வேலை வெட்டினு ஓடிகிட்டே இருப்பாய்ங்கள்ள அதுல திண்ட சோறு செரிச்சு போயி எல்லாமே சத்தா போயி இரும்பு மாதிரி இருப்பாய்ங்கப்பா...

நல்லா சாப்பிடவும் செய்யும் எஞ்சனம்...! அதுல ஒரு விவகாரம் இருக்குப்பு இப்ப.....! நல்லா சாப்பிட நல்லா சமைச்சு போட்டாக ஆத்தாமாருக அந்த காலத்துல...! பொழுதேனிக்கு வயல்ல கடந்து கஷ்டப்பாடு பட்டு வரவ்வைங்களுக்கு குடுக்குற சாப்பாட்டுலயும் சத்து இருந்துச்சு, சாப்புடுற சாமான்லயும் சத்து இருந்துச்சு....

காலையில எங்கய்யா வெள்ளாம காட்டுக்கு போவுறதுக்கும் முன்னால கூழு குடிப்பாக....! கூழை கரச்சு லோட்டால அடிச்சு ஆத்தி ...வாளைபூ சர்வம் மாறி இருக்குற பெரிய செம்புல ரெண்டு செம்பு குடிக்கும் போதே இந்தக் கையில சின்ன வெங்காயம் சிரிச்சிகிட்டு இருக்கும், அதே நேரத்துல எங்கய்யா வவுறு நெறயிற சொகத்துல எங்கப்பத்தா மனசு நெறஞ்சு கிடக்கும் குளுமையில் கொட்டுன நெல்லு மாதிரி.

இரண்டு பொண்டாட்டி கட்டுறது எல்லாம் அப்பம் சகசமான ஒண்ணுதேன்....! சொத்து விட்டு போகக்கூடாதுன்னு அக்காளுந் தங்கச்சியுமே ஒருத்தனுக்கு கட்டி வச்ச கதையெல்லாம் சகசம். அதுண்டு இல்ல அறுத்து கட்டுறதும் அம்ம வம்முசா வழில சகசந்தேன்... ! பின்னே இளாந்தாரி புள்ளைக புருசன் இல்லாம தனியா வாழணுமுல்ல...! இது புருசங்காரன் செத்தா தாண்டு இல்லப்பு....! சரியில்லாத புருசனா இருந்தாலும் சத்தமில்லாம பஞ்சாயத்துல வச்சி தீத்து விட்டுருவகா....

அம்புட்டு சுளுவா ஒண்ணும் செஞ்சுற மாட்டாக..அதுலயும் பல மொற இருக்குல்ல....! படார்னு தீத்துவிட்டுப்புட்டு..வேட்டிய ஒதரிக்கிட்டு போய்ற மாட்டாய்ங்க...! பஞ்சாயத்து தலைவரே தீர்ப்பு சொல்லி முடிச்சாலும் தப்புன்னு தெரிஞ்சா விடாதுய்யா ஊரு சனம்...எதுத்து கேள்வி கேக்கும்ல...! இப்புடி ஊருசனம் மாத்தி எழுதி வச்ச பஞ்சாயத்துக கொள்ளை இருக்கு..

ஒருப்போக்கி தேவராசு விசயத்துல இப்புடி நடந்துச்சு...! புருசன் பொஞ்சாதி ரெண்டு பேருக்கும் பிரிய இஷ்டமில்லைப்பு....! தேவராசு பொஞ்சாதி வீராயியும் நல்ல பொம்பளைதேன் ஆனா அவ ஆத்தாகாரி இருக்காளே..ஆத்தாடி.. நீலி சூலி சூர்ப்பனகை, குள்ளநரிக மூளையெல்லாம் மொத்தமா சேத்தி வச்ச சதிகாரி....!

எவனையோ ஒருத்தன வசதிக்காரப்பயல பாத்துப்புட்டு அவன் காசுல மயங்கி அதுக்கு கட்டிக் கொடுத்த பொண்ண கூட்டியாந்து மனசக் கெடுத்து தேவராச பிடிக்கலேன்னு சொல்லச் சொல்லி பஞ்சாயத்த கூட்டி நிக்கவச்சுப்புட்டா படுபாவி மவ....! வீராயி மனசு முழுசா நெறஞ்சு நிக்கிற தேவராச எப்படி மறப்பா பாவி கழுத...அவளுக்கு அங்குட்டு பாதி மனசு இங்குட்டு அவ ஆத்தாள நினைச்சு பயந்து கிட்டு நின்னுபுட்டா பொசகிட்ட சிருக்கி..! பஞ்சாயத்துல எதுவும் பேசாம நின்னுகிட்டு மூணு வாரமா கடத்திபுட்டா வீராயி.பொருத்து பொருத்துப் பாத்து ஒரு நா வீராயி மூக்க சிந்திக்கிட்டு நின்ன நேரத்துல தீர்ப்ப சொல்லிப்புடுச்சுங்க ஊரு பெருசுங்க...அத்து விட்டுறாம்னு சொல்லி...

எந்திரிச்சானப்பா ஒத்த வீட்டு காளையப்பான்..கேட்டான் ஒரு கேள்வி...' என்ன பஞ்சாய்த்து பேசுரூறீ பொசகெட்ட தனமா.....? சண்டாளி அழுது மூக்கைத் தொடக்கிற நேராமாப்பத்து அத்து விடாலம்னு..! ரெட்டை மாட்டு வண்டி மாறி அச்சு மாறாம ஓடுன வாழ்க்கைய ஒத்த நிமிசத்துல ஒடிச்சி எரிய தெகிரியம் எங்கேருந்து வந்துச்சு...? வீராயி ஆத்தால பத்தி ஒலகத்துக்கே தெரியுமே....

உலகத்துக்கே ரெட்டை கப்பலுல ஆசை வருமாம்..ஒத்த கப்பல்லு ஒலகத்துக்கு சொச்ச கப்பல்லு வீராயி ஆத்தாளுக்கு அம்புட்டு ஆசை புடிச்ச மூதேவி வேற ஒரு காசு கொளுத்த ஆளுக்கு திட்டம் போட்டு கட்டிக் கொடுத்து காசு பாக்க வைக்கிறாய்யா டான்சு....இது தெரியாம என்ன தீர்ப்பு சொல்லுறீக....காயடிக்கிறப்ப கத்துற காளைமாடு கனக்க அன்னிக்கு காளையப்பன் குதிச்ச குதில ஊரே திரண்டு பஞ்சாயத்து தீர்ப்ப மாத்திபுடுச்சுல்ல...'

கிராமத்தாய்ங்க தீர்ப்புன்னு அம்புட்டு சுளுவு இல்லப்பு..! எம்புட்டு சனம் சேந்தி வந்தாலும் மொத்த சனமும் சத்தியத்துக்கு கட்டுப்பட்டு நிக்கிம். சூது வாது தெறியாத மக்க ஒரு சொம்பு தண்ணிய கேட்டியன்னா...இருந்து ரெண்டு நாளு சாப்பிட்டு போங்கப்புன்னு விசனம் இல்லாம சொல்லுவாய்ங்க....

பட்டணத்து வாழ்க்கையில என்னத்த கண்டுபுட்டோம்..காசும் பணமும் சேரச் சேர மனிசன் மிருகம் கனக்கா நாக்க தொங்க போட்டுபுட்டு ஓடிகிட்டு இருக்காய்ங்க....! என்னமோ நாம சூட்டு கோட்டு போட்டுகிட்டு இருக்கும்னு இங்கன இருக்குற பயலுகளுக்கு நம்ம பூர்வீகம் தெரியலப்பு சும்மா..சில நேரத்துல ஒரண்டை இழுக்குறாய்ங்க..! பாசக்கார பயலுகதேன்....அண்ணேனு கூப்பிட்டா தோல்ல தூக்கிட்டு போற பயபுள்ளைகதான் நாங்க...

அதுக்காண்டி கோழைப் பயலுக இல்லேப்பு...வீச்சருவாவையும் வேல் கம்பையும் தூக்கிகிட்டு சுத்தின பயலுக....எல்லாம் வேணாம்னு விட்டுப்புட்டு புள்ளைக்குட்டியள படிக்க வச்சிகிட்டு மீசைய ஒதுக்கி விட்டுப்புட்டு, கிருதவ சிறுசாக்கிகிட்டு.......ஹாய்.. ஹலோ ...ஹவ் ஆர் யூன்னு நாக்கு நுனில பேசிகிட்டு போய்கிட்டு இருக்கோம்..பொழைக்கிற பொழைப்புக்காண்டி...

மத்த படிக்கி உள்ளுக்குள்ள எங்கூரு கருப்பன் சத்தியமா....அட கருப்பன், வீரனாரு எல்லாம் யாருன்னு சொல்லிப்புடுறேன்...? அவுக எல்லாம் அந்த அந்த ஊருக்கு பிரச்சினைனு வந்தப்ப உசுர கொடுத்த புண்ணியவானுக...காலம் வேகமா ஓட ஓட..அல்லாரையும் சாமியாகிபுடிச்சு எஞ்சனம்..ஆனா.....அவுகள மனசுல நினைச்சுகிட்ட ஒரு வீரமும் தெம்பும் எங்கிட்டு இருந்துதேன் கெடைக்கிதோ....

சரி...ரொம்ப நேரமா பேசிகிட்டு இருக்கேன்..........ஒத்த வரில சொல்லிபுடுறேன்........! கிராமத்தான்னு சொல்லிக்கறதுக்கு ரொம்ப பெருமையா இருக்கு பங்காளி...!

அப்போ வர்ர்ர்ர்ட்டா!


தேவா. S


Comments

//பட்டணத்து வாழ்க்கையில என்னத்த கண்டுபுட்டோம்..காசும் பணமும் சேரச் சேர மனிசன் மிருகம் கனக்கா நாக்க தொங்க போட்டுபுட்டு ஓடிகிட்டு இருக்காய்ங்க....! என்னமோ நாம சூட்டு கோட்டு போட்டுகிட்டு இருக்கும்னு இங்கன இருக்குற பயலுகளுக்கு நம்ம பூர்வீகம் தெரியலப்பு சும்மா..சில நேரத்துல ஒரண்டை இழுக்குறாய்ங்க..! பாசக்கார பயலுகதேன்....அண்ணேனு கூப்பிட்டா தோல்ல தூக்கிட்டு போற பயபுள்ளைகதான் நாங்க...//

நல்ல எழுத்து நடை தேவா..!

கிராமத்தான்னு சொல்லிக்கறதுக்கு ரொம்ப பெருமையா இருக்கு பங்காளி
Kousalya Raj said…
கிராமத்துக்குள் போயிட்டு வந்த மாதிரி இருக்கு. கருப்பன், வீரன் பற்றிய வரிகள் அழகு. மண் மணக்கும் கிராமங்களில் இருக்கிறது நம் நாட்டின் உயிர்த்துடிப்பு.

இவ்வளவு அற்புதம் கொட்டிக்கிடக்கும் கிராமத்தை ஏன் நாட்டுப்புறம் என்று ஒதுக்குகிறது இந்த பட்டணம் ?!!

கிராமத்தின் பெருமையை நாள் பூரா பேசிட்டு இருக்கலாம் போல...

ஆன்மிகம்,கவிதை ,இலக்கியம்,நவீனம் எழுதும் பேனா இப்படியும் எழுதும் ...நிரூபிக்கிறது இந்த பதிவு...!!

கிராமத்தின் மேல் இருந்த மதிப்பு இன்னும் அதிகமாகிறது.

பாராட்டுகள்.
ஏனுங்க.. இப்பிடி மூச்சு விடாம பேசி.. எனக்கும் ஊரு நெனப்பு.. வர வச்சிப் புட்டீக.. ஹ்ம்ம்..

நீங்க பேசுறத கேக்கும்போது... அப்படியே நம்ம ஊரு சனங்க கண்ணு முன்னாடி வந்து போகுதுங்க..

அருமையா சொல்லிப்புட்டீகப்பு..! :)
காடு கழனியெல்லாம்
கண்ணு முன்ன கொண்டு வந்து..
நாடித் துடிப்பெல்லாம்..
நாட்டு நெனப்பில்..
நனச்சிப் போட்டீங்களே...!

...எப்பவும் போல் ரசித்தேன்..! :-))
Chitra said…
நல்லா சாப்பிடவும் செய்யும் எஞ்சனம்...! அதுல ஒரு விவகாரம் இருக்குப்பு இப்ப.....! நல்லா சாப்பிட நல்லா சமைச்சு போட்டாக ஆத்தாமாருக அந்த காலத்துல...! பொழுதேனிக்கு வயல்ல கடந்து கஷ்டப்பாடு பட்டு வரவ்வைங்களுக்கு குடுக்குற சாப்பாட்டுலயும் சத்து இருந்துச்சு, சாப்புடுற சாமான்லயும் சத்து இருந்துச்சு...


......சொல்ல வந்ததை பளீர்னு சொல்லிட்டீக!
Chitra said…
அதுக்காண்டி கோழைப் பயலுக இல்லேப்பு...வீச்சருவாவையும் வேல் கம்பையும் தூக்கிகிட்டு சுத்தின பயலுக....எல்லாம் வேணாம்னு விட்டுப்புட்டு புள்ளைக்குட்டியள படிக்க வச்சிகிட்டு மீசைய ஒதுக்கி விட்டுப்புட்டு, கிருதவ சிறுசாக்கிகிட்டு.......ஹாய்.. ஹலோ ...ஹவ் ஆர் யூன்னு நாக்கு நுனில பேசிகிட்டு போய்கிட்டு இருக்கோம்..பொழைக்கிற பொழைப்புக்காண்டி...


......அப்படி போடு அருவாளை! :-)
ஊரும் உறவும் பேச்சும் வழக்கும் எல்லாருக்கும் ஹோம் சிக் வர வெச்சுடுச்சு போங்க...:(((

வெள்ளந்தியான எழுத்து நடை... படிக்க படிக்க சலிக்கலை.... ரெம்ப நல்லா இருக்குங்க Brother...:)
ஹேமா said…
பழைய ஞாபகங்களைக் கிளறிவிட்டீர்கள் தேவா.அம்மம்மா, தாத்தா,நாச்சாரம்வீடு,மாட்டுத் தொழுவம்,இலையான்,நுளம்பு எல்லாமே !

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்...

மகள்...!

காற்றில் பறக்கும் பட்டம் போல நகர்ந்த வாழ்வின் பரிணாமங்களை மொத்தமாய் மாற்றிப் போட்டவள் அவள்.....!!!!!!! என் தெளியாத நினைவுகளை தெளியவைக்கும் வினையூக்கியாய் மொத்த வாழ்வையும் செரித்துப் போட ஜனித்து வந்தவளை வாரிசென்றும், மகளென்றும் வாழ்க்கை சொன்னாலும்..... எனக்கு எப்போதுமே ஒரு குழந்தையாய் அவளைப் பார்க்கத் தோன்றியது இல்லை..... வாழ்க்கை என்னை படமாக வரைந்து அதை அரைகுறையாய் நிறுத்தி வைத்திருந்த பொழுதில் அதை பூரணமாக்க இறைவன் அனுப்பி வைத்த தூரிகை அவள்....! அவள் கேள்விகளுக்கு பதில் அளிப்பதை விட கேள்வியின் ஆழங்களில் சிக்கிக் கொண்டு மேலே வர முடியாமல் நான் போராடிய தருணங்கள்தான் அதிகம்..... இரவும் பகலும் ஏன் வரவேண்டும்....? மேகங்கள் கொஞ்சம் தாழத்தான் பறந்தால் என்ன? நாங்களும் விளையாடுவோமே... இறந்தால் நாம் எங்கு போவோம்..... இறந்துதான் போவோம் என்றால் ஏன் டாடி பிறக்க வேண்டும்? கடவுள் இருக்கிறது என்றால் ஏன் டாடி யாரும் பயப்படுவதில்லை.....? வயதுக்கு மீறிய கேள்விகளா? இல்லை.. இந்த வயதில் நாம் குறை அறிவோடு இருந்தோமா என்ற சந்தேகங்களை சர்வ சாதரணாமாய் விதைத்துக் கொண்டே விளையாடச் சென்று விடுவாள் அவள். இங்கே விளையா...

அவள்....!

அந்த கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும் மாணவன் சுரேஷ். கல்லூரியில் சேர்ந்த ஆரம்பத்திலிருந்த கூச்சம் எல்லாம் போய் விட்டது அவனுக்கு. இப்பொதைய நாட்கள் நண்பர்கள், பாடம், கல்லூரி என்று கலை கட்ட ஆரம்பித்து விட்டது. +2 முடித்து கல்லூரியில் சேரும் எல்லா மாணவர்களுக்குமே வாழ்வின் அடுத்த நிலையான கல்லூரி வாழ்க்கை ஒரு சந்தோசமான விசயம்தான். வாழ்வின் அடுத்த கட்டம் ஒரு பள்ளி என்ற கட்டுண்ட நிலையில் இருந்து கொஞ்சம் சுதந்திரமான மரியாதை கிடைக்க கூடிய தான் பட்டம் பயில்கிறோம் என்ற ஒரு மமதையுடன் கூடிய சந்தோசம் என்று களை கட்டும் நாட்கள் அவை. அப்போதுதான் தலை முடியின் அலங்காரம் மாறும். சட்டை பேண்டின் விதிமுறைகள் மாற்றி அமைக்கப்படும். ஒரு சில நோட்டு புத்தகங்கள் கூடியிருக்கும் நண்பர்கள் கூட்டம் என்றும் ஒரு வித மிடுக்கு இருக்கும் அதுவும் இருபாலர் பயிலும் கல்லூரி என்றால் சொல்லவே தேவையில்லை. மேலே சொன்ன எல்லாம் இரு மடங்கு ஆகும். இந்த வாலிப களேபரத்தில் கல்லூரியும் படிக்கும் பாடமும் மைக்ரோ லெவலிலும் இன்ன பிற விசயங்கள் மேக்ரோ லெவலிலும் இருக்கும். இப்படிபட்ட ஒரு நியதிக்கு சுரேஷ் மட்டும் என்ன விதிவிலக்கா? கல்லூரி மாணவன் என...