Pages

Wednesday, July 25, 2012

இசையோடு இசையாக...தொகுப்பு 7!வாழ்க்கை எப்போதும் மிகப்பெரிய போர்க்களமாய் விரிந்து கிடக்கிறது. காதலென்னும்  வலுவான உணர்வும் எப்போதும் நெஞ்சின் ஓரத்தில் ஒரு எரிமலையாய் உள்ளுக்குள் உடன் குமுறிக் கொண்டுமிருக்கிறது. தினவெடுத்த தோள்களும், உன்மத்தம் கொண்ட புத்தியும் எப்போதும் எதிரிகளாய் சூழ்ந்து நிற்கும் சூழல்களை ஒரு கணமேனும் தாமதிக்காமல் வெட்டி விடும் வேகத்தில் வெறியேறிப் போய் கிடக்கிறது. 

ஏதேனும் ஒரு எதிர் கேள்வியை வாழ்க்கை கேட்டு முடிக்கும் முன்னால் அந்தக் கேள்வியைப் பெயர்த்தெடுத்து நொறுக்கி இருந்த இடம் தெரியாமல் ஆக்கி விட்டு மீண்டும் மனப்புரவியிலேறி நான் விரைந்து கொண்டிருக்கிறேன். நான் தோற்றுப் போவேன் என்று மிகையானவர்கள் தீர்மானித்து முடித்து என் உடலை இறந்து போன சடமாய் எண்ணி புதைப்பதா? எரிப்பதா என்று அவர்கள் பட்டி மன்றங்கள் நடத்திக் கொண்டிருக்கும் போதே நான் விசுவரூபமெடுத்து எழுகிறேன். ஒரு இடத்தில் விழுந்து வேறொரு இடத்தில் எழுந்து நிற்கும் கோழையல்ல நான் என்பதை அக்கணமே அறுதியிட்டு நான் எங்கே விழுந்தேனோ அங்கேயே பிரமாண்டமாய் எழுந்து நிற்கிறேன்....

வா..... வாழ்க்கையே ...வா...! வரிசையாக சூழல்களை என்னிடம் அனுப்பு. என்னை எள்ளி நகையாடிய மனிதர்களையும், நான் வேரறுந்து வீழ்ந்து விட்டேன் என்று எக்களித்த முரடர்களையும், நான் தாழ விழுந்து கிடந்த போது என் தேகத்தில் தத்தமது பாதங்களை அழுந்தப் பதிந்து நடந்து ஒரு அற்பனாய் என்னை மதித்த மனிதர்கள் கூட்டத்தையும் என்னிடம் இப்போது வரச் சொல்....

நான் சராசரி மனிதனா இல்லை மாவீரனா என்று காட்டுகிறேன்...! பெரும்பாலும் அவர்களோடு நான் போரிடப்போவதில்லை... என் கர்ஜ்னையே அவர்களின் சமாதிகளை தன்னிச்சையாக எழுப்பிக் கொடுக்கும்.

இனி விடியப்போகும் பகல்கள் எல்லாம் எனக்கானவை.... மலரப்போகும் இரவுகள் எல்லாம் எனக்கானவை...! ஆமாம்.....இது எனது முறை. மனிதர்களின் இகழ்ச்சிகளை எல்லாம் என் காலடியில் நான் இப்போது மிதித்து நிற்கிறேன், என்னை முகஸ்துதி செய்யக் காத்திருக்கும் கூட்டத்தின் குரல்வளைகளில் சரியாய் சொருகுவதற்காக என்னிடம் காத்திருக்கின்றன கூரான கத்திகள்....

வாழ்க்கையின் ஓட்டத்தில் ஏற்றமும் இறக்கமும் இயல்படா மூடர்களே....!!!சூழல்கள் எல்லாம் மனிதர்களை திடமாக்கும் காரணிகளடா நீசர்களே....!!!! புறம் பேசிப்  பேசி உங்கள் நாவுகள் எல்லாம் நீண்டு வளைந்து கிடக்கின்றன .. அடுத்தவர் பற்றிய சொரணை கெட்ட கதைகளில் சுகம் கொண்டவர்களின்   நீண்ட நாவுகள் எல்லாம் சர்வ நிச்சயமாய் அறுத்தெறியப்படவேண்டியவைகள் என்பதில் மாற்றுக் கருத்துக்கள் இருந்தால் நீங்களும் உங்கள் அடிகளை பின்னோக்கி வைத்து திரும்பிச் செல்வது உத்தமம்.

நெருப்பாய் எரித்துப் போடும் சூழல்களை எனக்கு விதைத்துப் போட்ட ஏக இறையே.. உனக்கு கோடாணு கோடி நமஸ்காரங்கள்....நான் நெருப்போடு போராடி போராடி நெருப்பாய் நான் மாறிப்போன அதிசயம் நிகழ நீயே எனக்கு சூத்திரதாரியானாய்....

தகுதி உள்ளவை எல்லாம் தப்பிப் பிழைக்கும். இது உலக நியதி. அப்படியாய் தப்பிப் பிழைத்து வீறு கொண்டு ரெளத்ரத்தை புத்தியில் சுமந்து வாழ்க்கையை வெல்லும் தீரமான உக்கிரத்துக்குப் பின்னால் மென்மையான காதல் ஒன்று எப்போதும் ஒரு தாயைத் தேடும் குழந்தையாய் கை நீட்டிக் காத்திருக்கவும் செய்கிறது. 

காதலை கொடுக்கவும், காதலைப் பெறவும், அன்பில் நனையவும், அன்பாய் மாறவும், எதிர்பார்ப்பில்லாத உள்ளத்தை தொடும் ஒரு அரவணைப்பையும் நேசத்தையும், தாயாய் தலை கோதி நெஞ்சோடு சேர்த்து கொடுத்து  போரட்டங்கள் எல்லாம் ஒரு பெரும் நிம்மதிக்காத்தான், தேடல் எல்லாம் திருப்தியின் உச்சத்திற்குத்தான்.... 

கரடு முரடான வாழ்க்கையை ஒரு போராளியாய் கடந்து செல்வது எப்போதும் கரடு முரடாய் சுற்றித் திரிவதற்கு அல்ல...காதலில் நிறைந்து காதலாய் மாறி..........பிரமாண்டப் பிரபஞ்சத்தில்  முற்றிலுமாய் கரைந்து போக....என்று

இந்த ஆசை மறைமுகமாய் எப்போதும் துரத்த, எதிர்ப்படும் வாழ்க்கையின் இன்னல்களை துவம்சம் செய்து....நாம் நகரும் போதும் ஒரு ப்ரியமான காதல் எப்போதும் நம்மை துரத்தித் துரத்தி.......

' ஆசை ஆசை ஆசை மகதீரன் நீ தொட....
ஆசை தீர தோகை உனை நாளும் கொஞ்சிட
தினம் மாலை நேரம் காணும் தோற்றம் யாவும் நீயடா
இனி மேலும் மேந்து நின்ற வஞ்சி 
மாமன் தோளை சேர வேலி ஏது.....'

என்று கேள்வி கேட்கவும் செய்கிறது.....! 


கேட்குதா இல்லையான்னு நீங்க வேணா பாட்ட கேட்டுட்டு முடிவு பண்ணுங்களேன்..!


தேவா. S


Monday, July 23, 2012

லீலை படம் பார்த்தாச்சு.....!படம் ஆரம்பித்து மூணாவது சீன்லயே விளங்கிடுச்சு. இந்தப் படம் நமக்கு ரொம்ப பிடிக்கும்னு.....சப்தங்கள் அதிகமில்லாத பில்டப் சுத்தமாவே இல்லாத இந்த மாதிரி படங்கள் எனக்கு ஏன் பிடிக்குதுன்னு யோசிச்சு யோசிச்சு படத்த நான் மிஸ் பண்ண விரும்பாம ஒரு ஜம்ப் பண்ணி ஸ்கிரீன் ஓரமா ஒரு ஸ்டூல் போட்டு நான் வேடிக்கை பார்க்க ஆரம்பிச்சுட்டேன்...

எதார்த்தத்தை எடுத்துக் காட்ற எந்தப்படமும் ஒரு சாமானியனோட வாழ்க்கையோட ஒத்துப் போகத்தான் செய்யும். லீலை படத்தோட ஹீரோவா நல்லவேளையா ஏற்கெனவே திரையில அராத்துப் படிக்கிற எந்த ஒரு ஜிப்பா ஜிம்ப்ளாகோவையும் போடாமல் கார்த்திக்கை ச்ச்சூஸ் பண்ணி இருப்பதுதான் படத்தோட ஸ்பெசாலிட்டி. அட நீங்க வேற எனக்கு அந்தப் படத்துல நடிச்ச யாரோட பேரும் தெரியாது. அதானால் ஓடிப்போய் ஏற்கனவே விமர்சனம் எழுதினவங்க பக்கத்தை ஒரு தபா கட கடன்னு படிச்சுட்டு வந்து அவுங்க பேரையெல்லாம் மனப்பாடமா அடிக்கணும்ன்ற தேவையுமே இல்லை... அவுங்க கேரக்டர் பேரையே யூஸ் பண்ணிக்கிறேன்....ப்ளீஸ்....

படம் ஆரம்பிச்சு கருணை மலர்ன்ற கேரக்டர் கார்த்திக்க லெப்ட் ரைட் வாங்கும் போதும், கார்த்திக் கருணை மலரோட தோழிகள காதலிக்கிறேன்னு சொல்லிட்டு ஏதேதோ காரணத்துக்காக கழட்டி விடும் போது, அந்த கருணை மலர் கோபப்பட்டு எரிச்சல் அடைஞ்சு கார்த்திக் மீது கர்ண கொடூரமாய் கோபப்படுறதையும் பார்த்த உடனேயே தெரிஞ்சு போச்சு ....

ரெண்டு பேரும் ரொம்ப ஸ்ட்ராங்கா லவ் பண்ணப் போறாங்கன்னு. வாழ்க்கையில எல்லாமே எல்லோருக்கும் ஒரே மாதிரியாதான் நடக்கும் ஆனா அதை எப்டி நாம பாக்குறோம்ன்ற இடத்துலதான் வாழ்க்கையோட சுவாரஸ்யம் இருக்கு...

வைரமுத்து கவிதையில சொல்ற மாதிரி...மழையை யாரிங்கு மழையாய்ப் பார்த்தது....வியாபாரிக்கு அது ஒரு சனியன், பள்ளிப் பிள்ளைகளுக்கு அது அன்றைய விடுமுறை...இப்டி அப்டி ஒவ்வொருத்தருக்கும் அது ஒரு மாதிரியான உணர்வினை அவுங்க, அவுங்க தேவைக்கு ஏத்த மாதிரி கொடுக்குது. ஆனா மழையை யாரிங்கு மழையாய்ப் பார்த்ததுன்ற  கேள்விக்குப் பின்னாடி ஆழமான வாழ்க்கை இருக்குறதா நான் நினைக்கிறேன்.

மழையை ரசிக்கலாம், வாசலிலோ அல்லது ஜன்னலின் ஓரத்திலோ அமர்ந்து கொண்டு அடித்துக் கொண்டு தெருவில் ஓடும்  மழை நீரோடு சேர்ந்தே நாமும் நகரலாம். வயதானாலும் கூட ஒரு சிறு கப்பல் செய்து விட்டுப்பார்க்கலாம், மழையை செல்லமாய் தடவிக் கொண்டே சாரலை முகத்தில் சிலீரென்று வாங்கிக் கொள்ளலாம், தாழ்வாரத்து நீரை கையேந்தி உள்ளங்கைக்குள் வாங்கி மகிழலாம், மழையோடு தொடர்பற்று ஒரு சிறு கம்பளிக்குள் கதகதப்பாய் நுழைந்து கொண்டு மழையோடு அன்னியப்பட்டு மழையை சுற்றி வளைத்து அனுபவிக்கலாம்....

சுற்றி இருக்கும் யாரைப்பற்றியும் கவலை இல்லாமல் கை விரித்து ஒரு காதலியாய் மழையைக் கட்டியணைத்து வரை முறை இல்லாமல் சில்மிஷங்கள் செய்யலாம்....என்ன ஒன்று இதை எல்லாம் செய்ய நாம் மழையை மழையாய்ப் பார்க்கவேண்டும்.

காதலைக் கூட இயந்திரத்தனமாய் செய்யும் ஒரு சமூக வாழ்க்கை இங்கே புகுத்தபட்டு விட்டதுதான் சமகாலத்தின் பெருந்துயரம். ஐ லவ் யூ என்ற வார்த்தையை அவசரமாய் பரிமாறி விட்டு அடுத்த கட்டத்திற்கு நகரும் அவசியத்தை அவசரமாய் மூளை செய்து விடுவதால் இன்னமும் நிறைய பேர் காதலிக்கிறோமென்றும் காதலிக்கப்படுகிறோம் என்றும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். 

நான் சொல்வதில் உடன்பாடு இல்லை என்று கூறுபவர்களில் எத்தனை பேர் காதலியின் கையை குறைந்த பட்சம் ஆதரவாய் உங்கள் கையோடு பிடித்துக் கொண்டு உள்ளங்கையில் உங்கள்  அன்பை மிருதுவாய் அவளுக்குச் சொல்லி இருக்கிறீர்கள்....

கவிதை எழுதத் தெரிந்த கவிஞர்களில் யார் யார் உங்கள் காதலியின் உள்ளங்கையில் ஏதேதோ கவிதையாய் கிறுக்கி ரசித்திருக்கிறீர்கள்..? காதல் என்றாலே நிதானமானது. இந்தப் படம் கூட அதைத்தான் மெளனமாக சொல்ல முயன்றிருப்பதாக எனக்குப்படுகிறது.

கல்லூரிக் காலங்களில் கார்த்திக்னா சுத்தமா பிடிக்காத கருணை மலர், வேலை பார்க்கும் இடத்தில் மீண்டும் தொலை பேசி மூலமா பேசுற வாய்ப்பு வர்ற போதும் அதே கோபத்தோட கருணை மலர் எதிர்கொள்றதும், மறுபடி நம்ம ஹீரோ சண்டை போட்டுட்டு போனை வைக்கிறதும் அப்புறம் கருணை மலரை அவளுக்குத் தெரியாம பார்த்துட்டு புடிச்சுப் போய் காதல் வர்றதும், கார்த்திக்னு தெரிஞ்சா காதலிக்க மட்டான்னு சொல்லிட்டு சுந்தர்னு பேர வச்சிகிட்டு மலரை லவ் பண்றதும்னு சொல்லிட்டு  எல்லாத்துக்குமே கார்த்திக்க நேரா மலர் பார்க்கலை அப்டீன்ற ஒரு விசயம் செமையா ஹெல்ப் பண்ணுது.

கார்த்திக்னு சொன்னா நிரகரிச்சுடுவாளோன்னு சொல்லிட்டு, சுந்தரா மலரை விட்டு பிரிஞ்சு போக நினைக்கிற கார்த்திக்,  கார்த்திக்கா சுந்தருக்கு சப்போர்ட் பண்ணி பேசி நானே சுந்தர் கிட்ட உன்னை கூட்டிட்டு போறேன் மலர்னு சொல்லிட்டு கார்த்திக்கா தன்னை அறிமுகப்படுத்திகிற இடத்துல பேரை மாத்தி லவ் பண்ணினதுதான் தான் மறைச்ச விசயம்னு சொல்லாம சொல்லி....மலரும் கார்த்திக்கும் ஒண்ணா சேர்ற இடம்....சினிமா.

நான் இதை பத்தி இங்க பேச வரல.

காதல் வாழ்க்கையை மென்மையாக்குகிறது. பார்க்கும் சராசரி விசயங்களையும் ஆச்சர்யமாய் விழிகள் விரித்து உள்வாங்கிக் கொள்கிறது. ஒரு பட்டாம் பூச்சியாய் சிறகடித்துக் கொண்டே இருக்கிறது. ஒரு முத்தத்தை கூட பகிராமல் எப்போதும் ஒரு தூரத்திலேயே தொடர்ந்து பயணிக்கும் காதல் வெகு சுவாரஸ்யமானது. பார்வைகளால் தீண்டித் தீண்டி காதல் என்ற விசயம் உடலுக்குள் தீயாய்ப் பரவ அந்த லயிப்பில் மனம் ஒருமித்துக் கிடப்பது அலாதியானது. மன்னிப்பு கேட்பதையும் மன்னிப்பதையும் காதலே கற்றுக் கொடுக்கிறது. மனித நேயம் என்னும் விதையை பரப்பிப் போட்டிருக்கும் மிகப்பெரிய விருட்சம் காதல். 

காதலில் கேட்கவும் கொடுக்கவும் ஒன்றுமே இல்லாமல் காதல் மட்டுமே எஞ்சி நிற்கிறது. 

என்னதான் காதலுக்கு ஓராயிரம் விளக்கங்கள் கொடுத்தாலும்...அது எப்போதும் ஆதரவுக்காய் சாயும் ஒரு தோளாய் பெரும்பாலும் இருப்பதோடு சந்தோசங்களை அது எப்போதும் ஆரவாரமாய் எதிர்கொள்வது இல்லை மாறாக மெளனமாய் மனதுக்குள் அசை போட்டு ஆழமாய் அனுபவிக்கிறது.....இந்த லீலை படத்தை நான் பார்த்து ரசித்தது போல....

முடிஞ்சா நீங்களும் பாருங்க......


தேவா. S


பின் குறிப்பு: படத்தை பார்க்க சொன்ன மாப்ஸ் டெரர் பாண்டியனுக்கு ஒரு நன்றி கார்ட் போடலேன்னா  அப்புறம் என்ன மரியாதை...! Saturday, July 21, 2012

அவளுக்காக ஒரு கவிதை....
இந்த கவிதையை
அவள் வாசித்து விடக்கூடாது
என்று யோசித்தபடியேதான்
எழுதத் தொடங்கியிருக்கிறேன்....!
நீங்களும் இதை வாசித்து விட்டு
அவளிடம் சொல்லாமலிருக்க வேண்டுமே
என்ற கவலையோடும்,
அவளைப் பற்றிய குறிப்புக்கள் எங்கேனும்
எதேச்சையாக எட்டிப்பார்த்து விடுமோ
என்ற பயத்தோடும் ஒவ்வொரு எழுத்தையும்
ஒரு காட்டு யானையை கட்டி இழுத்து வரும்
பிரயாசயையுடன்  கவனமாய்
அடுக்கிக் கொண்டிருக்கிறேன்,
எது எப்படி ஆனாலும்....
இந்தக் கவிதையை வாசிக்கும் யாரும்
அவளிடம்  மறந்தும் கூட சொல்லி விடாதீர்கள்...
நான் அவளுக்காக கவிதை ஒன்றை
எழுதி இருக்கிறேன் என்று....


தேவா. S


Tuesday, July 17, 2012

இசையோடு இசையாக...தொகுப்பு 6!இதோ உன் நினைவுகளை எனது வார்த்தைகள் ஒரு பட்டத்து அரசியை சுமந்து வரும் பணியாட்களைப் போல மிக கவனமாக சுமந்து வருகின்றன. விழிகளால் நீ இமைத்து, இமைத்து என்னை அணைத்துக் கொள்ளும் அன்பில், நான் உன் விழியாக இருந்து எப்போதும் நீ இமை பிரிக்காமல் ஆழ்ந்து உறங்கும் அற்புத தருணங்களில், உனக்கான கனவுகளை நான் காணும் பாக்கியத்தை பெறுவதே இந்தக் கணத்தில் எனக்குப் பேராசையாய் இருக்கிறது.

நீ, உனக்கு என்று எதை நான் எழுதினாலும் அந்த வாக்கியம் முற்றுப் பெறாமல் முற்றுப் புள்ளிகளை எல்லாம் விழுங்கிக் கொண்டே ஒரு அசுரனாய் நீண்டு கொண்டிருக்கிறது. என் கேசம் கலைத்து நீ விளையாடிய போது, உனக்கு நான் சொன்ன கவிதையை நீ உன் கையெழுத்தால் எழுதி என்னிடம் காட்டிய பொழுது உன் கையெழுத்து  இருந்த அழகில் என் கவிதை பொருள் இழந்து, உப்பில்லா பண்டமாய் சுவை இழந்து காகிதத்தில் இருந்து இறங்கி தற்கொலை செய்ய முயன்ற பொழுதில் பொருளில்லா விட்டால் என்ன அழகிருக்கிறதே என்று கர்வமாய் என்னை பார்த்ததாய் நான் உன்னிடம் கூறிய போது....

நீ சப்தமாய் சிரித்தாய்..!!!! நான் கவிதையின் காட்சி வடிவத்தைப் பார்த்து விட்டேன் என்று ஆர்க்கிமிடிஸ் போல யுரேகா யுரேகா என்று சந்தோசத்தில் குதித்த போது என் உற்சாகம் அங்கே ஆடையில்லாமல் கட்டுக்களை உடைத்துக் கொண்டு ஓட ஆரம்பித்ததை நீ வெட்கத்துடன் பார்த்து கொண்டிருந்தாய். நான் லெளகீக ஆடைகளைக் களைந்து முக்தியடைந்த முனிவனானேன்...!

ப்ரியங்களை, ப்ரியங்கள் என்றுதான் சொல்ல முடியும். ப்ரியங்களின் உச்சங்கள் அவற்றை விவரிக்க முடியாமல் மெளனித்து விடுகின்றது. அங்கே சொல்லவும், கேட்கவும் ஒன்றும் இல்லாமல் போய் விடுகிறது. 

உன் மீதான் ப்ரியத்தின் உச்சத்தில் நான் மெளனித்து இருந்ததைப் போலத்தான் நீயும் என் மீதான ப்ரியத்தில் மெளனித்து இருந்தாய் என்று மூர்க்கமாய் உன்னோடு நான் இயங்கிக் கொண்டிருக்கையில் நீ முச்சிறைக்க சொன்னதை என்னால் ஆமோதிக்கத்தான் முடிந்ததே அன்றி அதை வார்த்தையால் சொல்ல முடியாத நிலையில் நானிருந்ததை என் உதடு கவ்வி நீ ஏற்றுக் கொண்டாய். காதல் எங்கே தொடங்கும் என்று தெரியாது ஆனால் நல்ல காதல் எப்போதும் காமத்தை தொட்டு மீண்டும் காதலில் தான் முடியும் என்று நான் சொன்னதற்கு நீ அப்போது கெட்ட காதல் என்னவாகும் என்று கேட்டாய்...

காமத்தில் ஆரம்பித்து வெறுப்பில் முடியும் என்றேன்...! 

ஆமாம் காமம் எப்போதும் உடலின் இச்சையப் போக்கவே உதவுகிறது. காமத்தின் உச்சத்தில் அது தொலைந்து போகவும் செய்கிறது. எது தேவையோ அது முடிந்தவுடன் அது ஒரு வணிகத்தின் சாயலில் வணிகமாகவே முடிகிறது ஆனால் காதல் தொடங்கும் இடத்தில் காமத்தின் சாயல் கூட தோன்றுவதில்லை. அங்கே அன்பு என்னும் பெரு விருப்பம் ஒரு மலைப்பாம்பாய் சுற்றி வளைத்து இறுக்க இறுக்க அந்த அன்பில் திக்கித் திணறித் திணறி அதை வெளிக்காட்ட கடைசியில் மலர்ந்தே விடுகிறது காமமென்னும் வாசம் வீசும் காதல் மலர். 

இங்கே தேவைகள் எல்லாம் அன்பாய்  இருக்கிறது. காமத்தைக் கடக்க காதல் வசதியான துடுப்பாகிறது. கடந்தே முடித்தவுடன், காமம் என்னும் கடலுமில்லை, துடுப்பென்ற காதலுமில்லை, நானும் இல்லை, நீயும் இல்லை....பேரமைதி, பெரு இன்பம் என்று கூறி விட்டு நான் சப்தமாய் சிரித்தேன்...., நீ என்னை இறுக அணைத்திருந்தாய்....துடுப்புகள் அசைய துவங்கியது மீண்டுமொரு முறை நமது காதல் பயணம்....

' மங்கைக்குள் காதலெனும்.. 
கங்கைக்குள் நான் மிதக்க...
சங்கமங்களில் இடம் பெறும் 
சம்பவங்களில் இதம் இதம்
மனத்தால் நினைத்தால் இனிப்பதென்ன....'


என்று எங்கெங்கோ கூட்டிச் செல்லும் மயக்கும் இசைக்கு ஈடு கொடுக்கும் குரல்களும் வரிகளும் என்று 1970களின் இளையராஜா, எஸ்.பி. பாலசுப்பிரமணியம், வாணி ஜெயராம் என்ற ஜாம்பவான்களின் கூட்டணி நம்மை கட்டி இழுத்துச் சென்று வேறு ஏதோ ஒரு கிரகத்தில் இறக்கி விட்டு விட... திரும்ப வர வழி தெரியாமல் வாலியின் வார்த்தைகளே துணை என்று நாம் அங்கேயே கிடக்க வேண்டியதுதான்....

' நெஞ்சத்தில் பேர் எழுதி
கண்ணுக்குள் நான் படித்தேன்
கற்பனைகளில் சுகம் சுகம்
கண்டதென்னவோ நிதம் நிதம்
மழை நீ, நிலம் நான், மயக்கமென்ன...'

தேவா. S


Photo Courtesy: Kaviyam 


Monday, July 16, 2012

இது பில்லா - 2 விமர்சனமில்லை....!நான் பில்லா படம் 2 படம் பார்த்து விட்டேன். டான், தலை, கேங்கஸ்ட்டர், கடத்தல் மன்னன் என்பதற்கான அர்த்தங்களை எல்லாம் தெரிந்து கொண்டேன். நான் வாழ எத்தனை பேரை வேண்டுமானலும் நான் கொல்வேன் என்ற உயரிய தத்துவத்தைப் புரிந்து கொண்டேன். கடத்தலும் கொலையும், அதுவும் துப்பாக்கியால் டப்பு... டப்பு என்று சுட்டுக் கொண்டே பறக்கும் ஒரு ஆக்ரோச வீரமும் என் மனதை கவர்ந்திருந்தன.

படம் ஆரம்பித்த கொஞ்ச நேரத்தில் டேவிட் பில்லா ஆயுதங்கள் இருக்கும் ஒரு கன்சைன்மெண்ட்டை எடுக்க செல்கிறேன்  என்று  போகும் போது மெல்ல கண்ணயர்ந்து விட்டேன். அதுவரையில் என்னை விழுங்கி விடக் காத்திருந்த தூக்கம் முழுதாய் என்னை நித்திரைக்குள் கட்டி இழுத்துச் சென்று விட்டது.

ஆழ்ந்த உறக்கத்தில் எனக்கொரு கனவு வந்தது. கனவில் கடவுள் வந்தார். அவர் முகத்தைப் பார்க்க எனக்குப் பிடிக்கவில்லை. எனக்கு டேவிட் பில்லாவைப் பற்றியே நினைவு ஓடிக் கொண்டிருந்தது. எவ்வளவு பெரிய வீரன். பஞ்ச் டயலாக் என்று தமிழ் சினிமா கதாநாயகர்கள் எல்லாம் அவ்வப்போது ஏதாவது ஒரு வரியை அடித்து விடுவார்கள், ஆனால் டேவிட் பில்லா வாயைத் திறந்தாலே பஞ்ச் என்று அவரின் டயலாக் முழுவதையுமே பஞ்ச்சாய் மாற்றிய வசனகர்த்தா எவ்வளவு உயர்ந்தவர். 

ஈழத்திலிருந்து அகதியாய் வருவதைப் போல பில்லாவை காட்டியிருக்க வேண்டாமோ.. என்று எனக்குத் தோன்றியது.  ஈழத்திற்காக பில்லா போராடியதைப் போல படம் எடுத்து இருக்கலாமோ என்று கரடு முரடாக யோசித்தேன். 

தன்மானமுள்ள தமிழர் கூட்டம் அதை பார்த்து ரசிக்காது என்பதோடு மட்டுமில்லாமல் இறையாண்மை கொண்ட ஒரு தேசம் காஷ்மீரில் கொத்துக்கொத்தாய் மனிதர்களைக் கொன்று அவர்களின் உரிமைப் போரட்டத்தை ஒடுக்கும். வேறு ஒரு தேசத்துக்குள் இராணுவத்தை அனுப்பி நாட்டை தனியாய் பிரித்துக் கொடுக்கும், ஆனால் பில்லா தமிழர் விடுதலைக்குப் போராடினான் என்று படம் எடுத்தாலே பாய்ந்து வந்த்து பிய்த்துப் போட்டு பெட்டிக்குள்ளேயே அதை முடக்கிப் போடும்.

அந்தப் படத்தின் தயாரிப்பாளர் பிழைப்புக்காய் படம் எடுத்திருக்கிறார். பிழைத்து விட்டுப் போகட்டும். அஜித் என்னும் மாஸ் உள்ள நடிப்பு அரக்கனை இன்னமும் நன்றாய் பயன்படுத்தி இருக்கலாம் என்று தோன்றியது. டேவிட் பில்லாவாய் அஜித்தை மாற்றி விட்டேன் பேர்வழி என்று படம் முழுதிலுமே அஜித்தையே உலாவ விட்டிருக்கிறார் திறமையுள்ள டைரக்டர். 

அழகான டேவிட் பில்லாவை நிறைய பெண்கள் ரசிக்கக் கூடும், திரையில் அவரின் சீற்றத்தை தலையின் ரசிகர்கள் ஆர்ப்பரித்து வரவேற்கக் கூடும், ஆனால் என்னைப் போல மொக்கைச் சாமிகள்  என்ன செய்வது என்று தெரியாமல் எப்போது இண்டர்வெல் வரும் என்று காத்திருந்து ஒரு பெப்சியைக் குடித்த நிறைவும் சீக்கிரமாய் தீர்ந்து போக படம் பார்க்க எடுத்த டிக்கட் தீயாய் பாக்கெட்டைச் சுட எழுந்து செல்ல மனமில்லாமல் பாதி சீட்டில் அமர்ந்து கொண்டு அடுத்தடுத்தாவது ஏதாவது நன்றாய் நடந்து விடாதா என்று ஏக்கப் பெருமூச்சுதான் விட்டுக் கொண்டிருந்தோம்.

டேவிட் பில்லா என்னும் கருணை கொண்ட மனிதர் வாழ்வில் நேர்வழியில் போராடி மேலே ஏறிவர அவரின் ஒவ்வொரு நொடியையும் அவரே செதுக்கி செதுக்கி பிரயசைப்பட்டு இப்படி உயர்ந்திருப்பது எவ்வளவு பாரட்டுக்குரியது. நான் யோசித்துக் கொண்டிருந்தேன். டேவிட் பில்லாக்களின் உலகம் கன கம்பீரமானது அங்கே சட்டம் ஒழுங்கு சடு குடு ஆடிக் கொண்டிருக்கும் காவல்துறைகள் கடலை மிட்டாய் தின்று கொண்டிருக்கும்.

ஒரு டான் சகலவிதமான திறமைகளும் கொண்டவனாய் இருப்பதோடு பிகினிப் பெண்களோடு ஒரு நீச்சல் குளத்திலோ அல்லது கடற்கரையிலோ அலட்சியமாய் ஒரு கூலரோடு படுத்துக் கிடக்க வேண்டும், உடன் பத்து பாடிகார்டுகள் இருப்பதும் இங்கே அத்தியாவசியமாகிறது.

நான் பிரமிப்போடு யோசித்துக் கொண்டிருந்தேன்.....

கடவுள் என் தோள் தொட்டார். கடுப்பாய் திரும்பி பார்த்தேன். அவர் கையில் ஒரு  துப்பாக்கி இருந்தது. இப்போது கடவுள் டேவிட் பில்லாவின் சாயலில் இருப்பதாக எனக்குத் தோன்றியது. மெலிதாய் கடவுளை பார்த்து சிரித்தேன்.  கடவுள் என்னைப் பார்த்து முறைத்தார். அவர் தான் மட்டும் வாழப் பிரியப்படுவதாக சொன்னார். எனக்கு முதலில் தூக்கி வாரிப்போட்டாலும் இப்போது டேவிட் பில்லாவின் முழுச்சாயலும் கடவுளுக்கு கிடைத்து விட்டதாக எனக்குத் தோன்றியது. நான் கடவுளின் முன்பு ச்சே...ச்சே...டேவிட் பில்லாவின் முன்பு மண்டியிட்டேன்.....

தலை...........வா என்று கத்தினேன். நீ கன்னெடுத்தாலே மாஸ் தல(லை)வா.....என்று நான் போட்ட சப்தத்தில் பிரபஞ்சத்தின் அமைதி கலைந்து விடக்கூடும் என பயந்து டேவிட் பில்லா தன் உதட்டின் மீது ஒற்றை விரல் பொருத்தி உஸ்ஸ்ஸ்ஸ் என்று சப்தம் என்று சைகைகாட்டி என்னை சப்தம் போடாமலிருக்கச் சொன்னார்.

எனது நிம்மதி எனக்கு முக்கியம். இந்த பிரபஞ்சமே எனது நிம்மதி. இதன் அமைதியை நீ கெடுத்தால் என்று கோபமாய் கத்தி கொண்டே எனது தலையில் தனது கன்னை (கண்ணை இல்லங்க.. கன்னை...) வைத்தார். எனக்கு எனக்கு தலை சுற்றியது. கடவுள் டேவிட் பில்லாவாய் மாறிவிட்டார் என்று என்னால் சந்தோசப்பட முடியவில்லை....

என்னோடா வாழ்க்கையில ஒவ்வொரு நிமிசமும் நான் செதுக்கினதுடா....உன்னையும் நீ வாழ்ற பூமியையும் சேத்து நான் தான்டா படைச்சது........என் நிம்மதிக்கே நீங்க எல்லாம் சவால் விட்டா... உங்கள அழிக்கிறதுதாண்டா எனக்கு  மொதோ வேலை....என்று தனக்கு கிடைக்க வேண்டிய பாலாபிஷேகம் யாரோ ஒரு நடிகனுக்கு கிடைத்த கடுப்பை கோபமாய் வெளிப்படுத்தினார்.

கடவுள் முதலில் பூமியை நோக்கி தன் துப்பாக்கியை நீட்டினார்....அது ஏதோ ஒரு தியேட்டரில் ஓடிக் கொண்டிருந்த சினிமாவை திரையில் குறிவைத்தது. திரையில் டேவிட் பில்லா துப்பாக்கியோடு கடவுளுக்கு குறி வைத்துக் கொண்டிருந்தார். ட்ரிக்கரை மெல்ல இழுத்த மூன்றாவது நொடியில் தியேட்டரோடு சேர்ந்து பூமி பஸ்பமாகிப் போனது கண்டு நான் பயந்தே போனாலும் நான் இறக்கவில்லையே என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டேன். 

முழுதாய் பெருமூச்சினை இழுத்து வெளியிடாத நிலையிலேயே  எனது தலைக்கு கடவுள் ஒரு புல்லட்டை பரிசளித்தார். தலைக்குள் மூளை சுக்கு நூறாய் உடைந்து சிதற நான் கதறியபடியே...

படக்கென்று கண் விழித்த போது திரையில் நிஜ(!!!????) பில்லா சண்டை போட்டுக் கொண்டிருந்தார். கோடாணு கோடி தலை ரசிகர்கள் விசிலடித்தும் கைதட்டியும், ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தனர். அடுத்த ஷோவுக்கு வெளியே இன்னமும் ரசிகர்கள் வெளியே காத்திருப்பதாகவும் அவர்கள் பாலாபிஷேகம் செய்து கொண்டிருப்பதாகவும் பக்கத்தில் பேசிக் கொண்டிருந்தார்கள்...., எனக்கு கனவில் வந்த கடவுள் நினைவுக்கு வந்தார்.

திரையிலோ தலையை டானாக சித்தரித்துக் காட்ட படத்தின் டைரக்டர் அவரைப் பல கொலைகள் செய்ய வைத்துக் கொண்டிருந்தார். ஹெலிகாப்டர் பறந்தது, அரசியல்வாதிகளையும் போட்டி துரோக(!!!!???) டான்களையும் டேவிட் பில்லா போட்டுத் தள்ளிக் கொண்டிருந்தார். இடையில் தூங்கி விட்டதால் கதையைப் பிக் அப் பண்ண முடியாதோ என்று பயந்து கொண்டிருந்தேன் ஆனால் அப்படி ஒன்றும் நடந்து விட வில்லை. இல்லாத ஒன்று எப்படி நடக்கும் என்று எனக்குள் நானே ஆறுதல் சொல்லிக் கொண்டேன்.

பெரிய விமானத்தில் டேவிட் பில்லா ஏறி அமர்ந்து விட்டு இது ஆரம்பம் என்று சொல்லிக் கொண்டிருக்கையில் படம் முடியும் தருவாயை எட்டி விட்டது. நான் எழுந்திருக்க முயன்றேன்....

ஆனால்...

விமானம் பறந்து கொண்டிருக்கையில் டான், தலை, கேங்க்ஸ்ட்டர் பில்லா ஹாயாக சீட்டில் ரத்தக்காயத்தோடு சாய்ந்து கிடந்தார்....

மிச்சம் சொச்சம் படத்தில் நடித்தவர்களை எல்லாம் பில்லாவின் ஆட்கள் பட்...பட்...என்று போட்டுத் தள்ளிக் கொண்டிருந்தார்கள்...

படம் முடிந்து விட்டது. என்னோட வாழ்க்கை கூட நானா பாத்து பாத்து செதுக்குனதுதான்டா...........ஆனா அதுக்கு நிறைய பேரோட உதவி தேவைப்பட்டுச்சுடான்னு கத்தலாம் என்று யோசிதேன்.....ஆனால் அது அடுத்த தலைமுறையினருக்கு தவறமான செய்தியைக் கொண்டு சேர்த்து விடும் என்று தொண்டைக்குள்ளேயே சப்தத்துக்கு சமாதி வைத்தேன்.

ஆனா படத்துக்கு நடுவில் நான் கண்ட கனவில் என் தலையில டேவிட் பில்லா சுட்டது...ச்ச்ச்சே...ச்ச்ச்ச்சே.....கடவுள் சுட்டதால் தலை வலி விண் விண் என்று வலிக்க ஆரம்பித்தது....' நல்ல வேளை ' தலை '  க்கு வந்தது தலைப்பாகையோட போச்சே...' என்று எண்ணிக் கொண்டு

வீட்டுக்கு வந்து கொஞ்ச நேரத்தில் நண்பனிடம் இருந்து போன்...........' டே.....மச்சான் வர்றியா பில்லா 2 போகலாம்? என்கிட்ட டிக்கட் இருக்கு என்று என்று.............

நான் போனைத் தூக்கி தரையில் ஓங்கி அடித்து......மெல்ல மெல்ல...டேவிட் பில்லாவாய் மாறத்தொடங்கியிருந்தேன்....!


தேவா. S


Thursday, July 12, 2012

கனவுகள் ததும்பட்டும்.....!
நிஜங்கள் எப்போதும் எதார்த்தப் போர்வை போர்த்திக் கொண்டு இயல்புகளை வெளிக்காட்டினாலும் கனவுகளில் எப்போதும் சிறகடித்து எங்கெங்கோ பறக்க முடியும் ஒரு வாய்ப்பினையும் சேர்த்தேதான் பிரபஞ்சம் நமக்கு கொடுத்திருக்கிறது. இயல்புகளை அவ்வப்போது மென்மையாய் மறந்து விட்டு கனவுகளுக்கு வர்ணம் தீட்டி தீரத் தீர காதலிக்க நான் எப்போதும் தயங்குவதில்லை. 

ஒரு மழை, எங்கோ வேகமாய் செல்லும் வெண்மேகம், பேசாமல் பூத்துச் சிரிக்கும் ஏதோ ஒரு பூச்செடி, சல சலத்து ஓடும் ஒரு ஓடை, அடர் கானகம், யாரென்றே தெரியாமல் நம்மை வசீகரிக்கும் பேருந்தின் ஜன்னலோர ஒரு பெண்ணின் முகம், காதலிக்க விரும்பி காதலைச் சொல்ல முடியாமல் தவிக்கும் தவிப்பு... மதிய உறக்கத்திற்குப் பின்னான ஒரு ஆழமான அழகிய சோகம்....அந்த சோகத்தை சூழ்ந்திருக்கும்  ஒரு அடர்த்தியான மெளனம்....

என்று எப்போதும் எங்கோ இழுத்துச் செல்லும் வாழ்வின் ரகசியங்களை மனதுக்குள் இருத்திக் கொண்டு நாம் என்ன வேண்டுமானலும் செய்யலாம்.... என்ன ஒன்று அதற்காக புறத்தொடர்பினை நாம் அறுத்துக் கொண்டுதான் ஆக வேண்டும். தத்துவங்களையும் கோட்பாடுகளையும், விவாதங்களையும் விட்டொழிக்கும் அந்தக் கணத்தில் காதல் ஒரு அரக்கனாய் விசுவரூபமெடுத்து நிற்பதை நம்மால் தவிர்க்க முடியாது ...

காதலால் நிறைந்து கிடக்கையில் சூரியனின் கதிர்களின் ஓரங்களில் கை தேய்த்து விளையாடலாம், மேகங்களின் மீது மல்லாந்து படுத்துக் கிடந்து வானத்தின் நீல நிறத்தில் நாம் கரைந்து போகலாம், மரங்களின் மீது ஒரு சிறு பூச்சியாய் ஊர்ந்து செல்லலாம், ஒரு வண்ணத்துப் பூச்சியாய் பூக்களை தொட்டும் தொடாமலும் மென்மையாய் புணர்ந்து சென்று ஜடங்களை ஜடங்கள் ஆளும் மானுட காமங்களுக்கு சவுக்கடிகள் கொடுத்து பாடங்கள் சொல்லலாம்...

ஏன்....யாருமற்ற சாலையில் நடந்து செல்கையில் தூரத்தில் பறந்து செல்லும் நாரைக் கூட்டங்களை உதடு குவித்து விசிலடித்து நம்முடன் கண்மாய்களுக்கு குளிக்க கூட்டிச் செல்லலாம்.... என்ன செய்ய முடியாது நம்மால்....? காதலாய் இருக்கையில் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்...! வேண்டுமென்றால் யாரேனும் ஒரு பெண்ணைக் கூட லெளகீகமாய் காதலித்துக் கூட பார்க்கலாம்...., அவளின் கை பற்றி மென்மையாய் நம் ஸ்பரிசம் கொடுத்து அவளின் ஸ்பரிசத்தை உள்ளங்கை  இளஞ்சூட்டிலிருந்து கைப்பற்றி உயிருக்குள் மாற்றிக் கொண்டு அவளுக்கு கவிதைகள் கூட சொல்லலாம்...அட நிஜமாய் கவிதையாய் கவிதை சொல்லலாம்..

' தத்தித் தத்தி...
தானியம் பொறுக்க வரும் குருவியாய்
காதலில் திக்கித் திணறி எட்டிப் பார்க்கும் 
என் வார்த்தைகளைத்தான்
நீ கவிதை என்கிறாய்...! '

என்று நம் சுவாசத்தை வார்த்தைகளாக்கி காதலிக்காய் கடை விரிக்கலாம். ஆமாம் கனவுகள் சுகமானது, நிஜத்துக்கு எப்போதும் வெகு தூரமானது. நிஜம் ஒரு போதும் கனவின் பாதங்களைக் கூட தொட முடியாது. அது எப்போதும் எதார்த்தம் பேசும், விளக்கம் கேட்கும், அதற்கு எப்போதும் முரட்டுத் தனமான சாட்சிகளிலும், கரடு முரடான உண்மைகளிலுமே கவனமிருக்கும். மறந்தும் கூட புன்னைகைக்க தெரியாத நிஜத்தை விட எப்போதும் நேசிக்கும் கனவுகள் வசீகரமானவை.

கற்பனைக்கு அடுத்த வீடு கனவுகள் என்று கொண்டால் கற்பனையும் கனவும் சேர்ந்த கூட்டுக் கலவைதான் காதல். காதல் எப்போது நமக்குள் மிகையாகிறதோ அப்போதெல்லாம்  இப்படி கிறுக்கிக் கொண்டு கூட நாம் இருக்கலாம். 

யார் தடுப்பது? நமது எல்லைகளை தீர்மானிக்க  ஒரு இலக்கு இல்லாத போது நாம் மேற்கே பறந்து சட்டென்று தாழ இறங்கி, ஒடும் ஒரு நதியின் மீது பட்டும் படாமல் நடந்து, ஒரு கருநீலக் கடலின் ஆழத்தில் சென்று மண்ணள்ளி வந்து சுடு பாலைவனத்தில் தூவி, பாலைவனச் சூட்டை உடலில் ஏந்திச் சென்று ஒரு வயல் வெளியின் வரப்பின் மீது நின்று கொண்டு கூவும் குயிலை சண்டைக்கு இழுத்து விட்டு, ஊர்ந்து செல்லும் ஒரு சர்ப்பத்தின் முதுகிலேறி அதன் புற்றுக்குள் சென்று சுகமாய் முடங்கிக் கிடந்து அரை குறை தூக்கத்தில் அதிசமாய் ஒரு கனவு காணலாம்....

' அந்தக் கனவில்...
தேவதைகள் நம் காதுகளில்
கிசு கிசுப்பாய் ஏதேதோ..
ரகசியங்கள் சொல்லி முடிக்கையில்
காதலோடு அவற்றின் இடை வளைத்து
உதட்டில் முத்தமிட்டு 
உடம்பில் பரவும் மின்சாரத்தில்
ஒரு சில் வண்டாய் மாறி
ஏதோ ஒரு மலரில் தேன் குடித்து
கிறக்கத்தில் ஒரு 
புல் தரையில் தடுமாறி அலையலாம்....!

ஆமாம் நான் சொல்வது நிஜம்தான், கனவுகள் நிஜம்தான். நிஜத்தில் உங்களுக்கு பணம் தேவை, பொருள் தேவை, இடம் தேவை, அனுமதி தேவை, மனிதர்களின் அனுசரணை என்னும் அவஸ்தவைகள் எல்லாம் தேவை..! உங்களுக்கு திக்குகள் மறந்து உற்சாகமாய் அலைய விருப்பமா?இல்லை கடிகாரத்துக்குள் வாழ்க்கையை அடைத்து விட்டு கரன்சி நோட்டுக்களுக்காய் ஓடி ஓடி...  வாழ்க்கையை லயித்து வாழ்வது என்றால் என்னவென்று  தெரியாமல் மரிக்க விருப்பமா?

பொருள் ஈட்டுதலையும் புகழுக்காய் அலைதலையும் யார் வேண்டுமானலும் செய்யலாம். மீண்டும் மீண்டும் செய்யும் ஒரு வேலையை முழுக்கவனத்தோடு வலிகள் தாங்கி வரும் யாருமே வெற்றியாளர்கள்தான். அதற்கு ஒரு சூத்திரம் இருக்கிறது...,பல சூது வாதுகளும் இருக்கிறது, ஆனால் பணம் இருப்பவன் எல்லாம் சக மனிதரில் மேம்பட்டவன் என்றொரு எண்ணம் உங்களுக்கு இருக்குமெனில் அதை சட்டென்று இப்போதே  உடைத்துப் போடுங்கள்...

எத்தனை வேகமாய் ஓடினாலும் இயந்திரங்கள் எல்லாம் இயந்திரங்கள்தான், அட்டவணைக்குள் வாழ்க்கையை அடைத்துக் கொண்டு வெற்றியடைய வழி சொல்பவர்கள் எல்லாம் என்றாவது ஒரு நாள் அவர்கள் வீட்டு வாசலில் நிற்கும் ஒரு மரத்தை நலம் விசாரித்து இருப்பார்களா? அவர்கள் தோட்டத்துப் பூக்களோடு கை குலுக்கி இருப்பார்களா? பக்கத்து வீட்டுக்காரரின் பெயர் தெரியாமல் வாழும் ஒரு வாழ்வியல் முறையில் இவர்கள் எப்படி இதை எல்லாம் செய்திருக்க முடியும்..?

ஓ...கடவுளே...என்னை ஒரு பட்டாம் பூச்சியாக்கி ஏதேனும் ஒரு வெட்டவெளியில் விட்டு விடு...., திசைகளை மறந்து விட்டு  நான் அங்குமெங்கும் திரிந்து விட்டு களைத்துப் போகையில் என் சிறகு  மடக்கி எங்கோ ஒரு இடத்தில் விழுந்து கிடக்கிறேன்...விழுந்த இடத்தில் மூச்சிறைக்க லயித்துக் கிடக்கிறேன்....!

கனவுகளை தொலைத்து விடாதீர்கள் மனிதர்களே...! அது மனித இருப்பின் சூட்சும சொர்க்கம்...! வார இறுதியிலாவது கனவுகளுக்கு நேரம் ஒதுக்குங்கள். கற்பனைகளில் ஒரு ஆடகவோ, மாடாகவோ, புல்லாகவோ, புழுவாகவோ, பூனையாகவோ சட்டென்று மாறுங்கள்..., யாரையேனும் காதலியுங்கள், காதலில் வெற்றி பெறுங்கள் அல்லது தோற்றுப் போங்கள்.., மனதால் அழுங்கள் அப்படி அழுததை எண்ணி சிரியுங்கள்...விடியலை அந்திக்கும் அந்தியை விடியலுக்கும்  மாற்றிப் போட்டு விளையாடுங்கள்...

மொத்தத்தில் நான் மனிதனே இல்லை என்று உரக்க கூவி கை விரித்து சிரியுங்கள்...! கனவுகளால் வாழ்க்கை ததும்பட்டும், கற்பனைகளில் லயித்து மெருகேற்றிக் கொள்ளும் மூளை எதார்த்ததில் வெற்றிகளைக் குவிக்கட்டும்...அப்படியாய் வெற்றியை குவிப்பது மீண்டும் கனவுகளில் லயிப்பதற்காய் இருக்கட்டும்.....

ஆமாம்....

கனவுகள்....மனித வாழ்க்கை என்னும் இருப்பின் சூட்சும சொர்க்கங்கள்...!


தேவா. S


Tuesday, July 10, 2012

நான் ' ஈ ' விமர்சனம்(மா?) ..!?
ரொம்ப சீரியசாவே போய்ட்டு இருக்கே லைஃப்ன்னு சொல்லிட்டு...நெட்ல ஏதாச்சும் படம் பாக்கலாம்னு எந்த சைட்லடா மாப்ள புது படமெல்லாம் பாக்க முடியும்னு நண்பன் ஒருவனுக்கு போனப் போட்டுக் கேட்டா....திருட்டு விசிடி.காம்னு ஒண்ணு இருக்கு மாப்ள, அதுலதான் உடனே உடனே புதுப் புது படமா போடுறாய்ங்கன்னு சொன்னான்...! 

ஓகோ இந்த புகை பிடிக்காதீர்கள்னு போட்டுட்டு சிகரெட் விக்கிறாய்ங்களே அது  மாதிரி..., குடி குடியை கும்மி அடிக்கும்னு போர்ட்ல போட்டுட்டு கவர்மெண்ட்டே சாராயம் விக்குறாங்களே...கேட்டா காந்தியோட தேசம், புத்தனோட பூமின்னு அகராதி பேசுவாய்ங்களே......, அது மாதிரி திருட்டு விசிடி.காம்னு பேர தைரியமா வைச்சுக்கிடுட் புதுப் புது படமா இறக்குவாய்ங்க போலன்னு நெனச்சுக்கிட்டு....

சைட்ட ஓப்பன் பண்ணின அன்னிக்கு முதல் நாளு ரிலீசான " நான் ஈ..."  படம் அதுக்குள்ள அங்க அப்லோட் பண்ணி இருந்தாய்ங்க..! ப்ரிண்டும், சவுண்டும் செம ஜோரா இருந்ததால மேற்கொண்டு படத்த பார்த்தேங்க. திருட்டு விசிடி.காம்ல திருட்டுத்தனமா படம் பார்த்தது தப்பா ரைட்டன்ற வாக்குவாதத்தை எல்லாம் வேற பதிவுல வச்சுக்கலாம் பாஸ்.... இப்போ படத்த பத்தி பேசுவோம் வாங்க...

அட ...யாருப்பா அது கூட்டத்துல இருந்து சவுண்ட கொடுக்குறது...?  "ஊர் ஒலகத்துல நெறைய பேரு விமர்சனம் எழுதுறாய்ங்க நீயுமாடா டவுசருன்னு...." ! அட நீங்க வேற நான் எப்போ இது விமர்சனம்னு சொன்னேன்...? நாங்க எல்லாம் நாலாவது, அஞ்சாவது படிக்கும் போது எங்கள எல்லாம் சுத்தி  ஒக்கார வச்சுக்கிட்டு ஜெகநாதன்னு ஒரு பையன் கதை சொல்லுவான் பாருங்க...

அவன் சொல்ற கதைய கேட்டுட்டு படம் பார்த்தீங்கன்னா சத்தியமா ங்கொப்புறானே ஒங்களுக்கு படம் சுத்தமா புடிக்கவே புடிக்காது அவன் அம்புட்டு அருமையா கதை சொல்லி இருப்பான்னா பாருங்களேன். கதை சொல்றதுல, கேக்குறதுல இருக்க ஒரு சுகமும், எதார்த்தமும் கதையை விமர்சிக்கும் போது இருக்காதுன்றது என்னோட தனிப்பட்ட அபிப்ராயம்.

இப்பத்தானே சேட்டிலைட் டிவி லொட்டு லொசுக்குன்னு இம்புட்டு வந்து கிடக்கு. நான் சின்ன புள்ளையா இருந்த அந்தக் காலத்துல....(எங்க காலத்துல எல்லாம் இப்புடி ஒண்ணும் இல்லப்புன்னு எங்கப்பத்தா சொல்ற மாதிரியே சொல்றேன் பாருங்க...) தூர்தசன் கூட எட்டிப்பார்க்காத ஒரு ரம்யமான காலத்துல, பள்ளிக்கூடம் விட்டு வந்த உடனே பைக்கட்ட தூக்கி திண்ணையில எறிஞ்சு புட்டு இருட்டுற வரைக்கும், கல்லா மண்ணா விளையாடிட்டு, இருட்டுன அப்புறம் வெயிலா, நிழலான்னு வெளிச்சத்தையும் இருட்டையுமே மெயின் ஆப்ஜக்கட்டா வச்சு வேர்க்க விறுவிறுக்க விளையாடிப்புட்டு...

கரும் கும்ன்னு இருட்டுன அந்த எட்டு மணி ராத்திரிக்கு சாப்பாடு எல்லாம் முடிச்சுப்புட்டு.... ஏய் அப்பத்தா ஏதாச்சும் கத சொல்றியா இல்லையாடி கெளவி நீன்னு செல்லமா அவுங்க கண்டாங்கி சேலை முந்தானிய எடுத்து முண்டாசு கட்டிக்கிட்டு பக்கத்து வூட்டு பக்கியலையும் கூப்டு சுத்தி ஒக்காந்தம்னா....

நாலணாவுக்கு வாங்கியாந்த களிப் பாக்க உடைச்சு வாயில போட்டுக்கிட்டு கொஞ்சமா பொகையிலைய உருட்டி கடைவாயில வச்சு உறிஞ்சிக்கிட்டு எங்கப்பத்தா கதை சொல்ல ஆரம்பிக்கும் பாருங்க...

செக்கச் செவேர்னு இருப்பாருப்பு அந்த ராசான்னு சொல்லும் போதே செக்கச் செவேர்னு ராசா (அட. ஸ்பெக்ட்ரம் ஆ. ராசா இல்லேங்க நெச ராசா...) நம்ம மனசுக்குள்ள வந்து நிப்பாரு...,


ஆளுப்பேரு இல்லாத வனாந்திரக் காட்டுக்குள்ள ராசா ஒத்தையில போகையில காத்து சல சலன்னு  அடிச்சுச்சாம், காஞ்சு கிடந்த சருகு எல்லாம் காத்துல பர பரன்னு பறந்து போயிருக்கு ராசாவுக்கு, தூரத்துல கருப்பா ஒரு உருவம் ராசா கண்ணுல தட்டுப்பட்டிருக்கு அப்பு....ன்னு  கெளவி சொல்லி முடிக்கையில சுத்தி இருந்த புள்ளக் குட்டிங்க எல்லாம் அப்பத்தா கெளவி மடியிலயும், காலுக்குள்லயும் கைக்குள்ளையும் அணைஞ்சாப்ல ஒக்காந்து இருக்குங்க...

கதைய பாதியில நிறுத்துன கெளவி விளம்பர இடைவேளை மாதிரி ஒரு வெத்தலைய எடுத்து நல்லா நீவி விட்டு காம்ப கிள்ளி என் வாயில திணிச்சுப்புட்டு, மெல்ல சுண்ணாம்ப தடவி களிப்பாக்க சேத்து வாயில மடிச்சு போட்டுக் குதப்பிட்டு மறுபடி கதை சொல்ல ஆரம்பிக்கிறதுக்குள்ள சுத்தி இருக்க அம்புட்டு பேருக்கும் ஈரக்கொலை ஆடிப்போயி அந்த கருப்பு உருவம் என்னவா இருக்கும்னு ஏதேதோ கற்பனைக்கு எல்லாம் போயி அப்பத்தாவோட வாய பாத்துக்கிட்டே இருப்போம்....

படமா பார்க்கும் போது பாக்குற காட்சிக்குள்ள சிக்கிக்கிட்டு அது பின்னாடியே ஓடுற நம்ம புத்தி ஒரு அடிமை வேலைதான் பாக்குது, ஆனா கதை கேக்கும் போது ஒரு ராஜா குதிரையில போற மாதிரி நம்ம மூளை கம்பீரமா கதைய கற்பனை செஞ்சு நமக்கு எப்டி எல்லாம் வசதியோ அந்த திசையில எல்லாம் சிட்டா பறக்குது....அந்த லயிப்பே தனிதான் போங்க...

பொதுவா ஏதோ ஒரு விசயத்தை விமர்ச்சிக்கிறேன் அப்டீன்னு சொல்லிட்டு நாம பேனா மூடிய திறக்குறது ஒரு மாதிரியான வன்முறையாத்தான் நான் பாக்குறேன். உள்ளத் உள்ளபடி சொல்லி நான் விமர்சிக்கிறேன் அப்டீன்றது எப்டீங்க பொதுவான கருத்தா இருக்கும்? ஒரு படம் பார்த்தேன் அதை ஒரு கதையா சுவாரஸ்யமா இப்படி நான் புரிஞ்சுக்கிட்டேன் அப்டீன்றதோட நிறுத்திக்கிட்டா ஒரு டீசன்ஸி இருக்கும்னு நினைக்கிறேன். 


அதுக்கு அடுத்த லெவலுக்குப் போயி கதை இப்படி வந்து இருக்கலாம், திரைக்கதை இப்படி வந்து இருக்கலாம்னு, மியூசிக் இந்த  இடத்துல சொதப்பல், கேமரா இன்னும் நல்லா இருந்து இருக்கலாம், படம் சொதப்பல் ஊத்தல் என்று பொதுவுல சொல்ற கருத்து என்ன பண்ணுதுன்னு கேட்டீங்கன்னா....

ஒரு வெவரமும் இல்லாம படிக்கிற அத்தனை பேரையும் படம் சரி இல்லேன்ற ஒரு மனோநிலைக்கு மனோதத்துவ ரீதியா இழுத்துக்கிட்டு போகுது. அதனால படம் பாக்கணும்னு நினைச்சு இருக்கவங்க கூட பாக்காம போயிடலாம், ஒரு வேளை அவுங்க பார்த்து இருந்தா அவுங்களுக்குப் படம் புடிச்சு கூட இருக்கலாம்...

எனக்கு படுமொக்கைன்னு தோணுற படம் எங்க எதுத்த வீட்டுக்கார அங்கிளுக்கும் ஆண்ட்டிக்கும் ரொம்ப பிடிச்சு இருக்குன்னு சொல்லி இருக்காங்க...! அவுங்க படு மொக்கைன்னு பீல் பண்ற படம் எனக்கு ரொம்பவே பிடிச்சு இருந்து இருக்கு...! பிரபலமான ஊடகங்கள் எல்லாம் படம் செம ஊத்தல்னு சொல்லி விமர்சனம் எழுதிட்டு இருக்கும் போது படம் தியேட்டர்ல கலெக்சன் பிச்சு உதறிக்கிட்டு இருக்கும்.... செம சூப்பர் படம்னு விமர்சனம் எழுதி இருப்பாங்க பார்த்தா தியேட்டர்ல கூட்டமே ஈ ஆடாது.....


அட....... ' ஈ ' ன்னு சொன்ன உடனேதான் ஞாபகம் வருது.....

ஓ...மை காட்......நாம இந்த கட்டுரைய எழுதினதோட நோக்கமே நான்....ஈ படத்த பத்தி உங்க கிட்ட சொல்றதுக்குதானே....பாத்தீங்களா? எங்க ஆரம்பிச்சு எங்க முடிச்சுட்டேன்னு....கொடுமை..! சரி விடுங்க நான் ஒண்ணும் கதை எல்லாம் சொல்லல எனக்கு படம் ரொம்ப புடிச்சு இருந்துச்சு...செம ரகளைன்னு  வச்சுக்கோங்களேன்...! நீங்களும் பாருங்க உங்களுக்குப் பிடிக்கலாம் பிடிக்காமலும் இருக்கலாம்.....

அப்போ வர்ர்ர்ர்ட்ட்டா....!


தேவா. SSaturday, July 7, 2012

ஈ(ழ)ன பிழைப்பினை நிறுத்துங்கள் அரசியல்வாதிகளே....!அவர்கள் அடிமைப்படுத்தப்பட்டார்கள். உரிமைகள் பறிக்கப்பட்டார்கள். தொன்று தொட்டு அந்த மண்ணை ஆண்ட ஒரு நீண்ட நெடிய பரம்பரையினர் என்றாலும் இழி பிறப்பினராய் கருதப்பட்டார்கள். இடையிலே வந்த பிறப்பிலே கோளாறு இருக்கும் பெயர் சொல்லி அழைக்க முடியாத இழி குலத்தவர்களின் அரசியல் சூழ்ச்சியில் சிக்குண்டு மிருகங்களை விட கேவலமாய் நடத்தப்பட்டார்கள்.

தெருமுனையில் ஆண்களையும் பெண்களையும் நிர்வாணமாய் நிற்க வைத்து அசிங்கப்படுத்தியும், பிள்ளைகளுக்கு முன்னால் தாயின் கற்பை சூறையாடியும், சொந்த சகோதரர்களின் முன்பு சகோதரிகளின் கற்பை சூறையாடிம், பச்சிளம் பிள்ளைகளை கொதிக்கும் தாரில் தூக்கிப் போட்டு கொன்றும் அவர்கள் வெறியாட்டம் ஆடினார்கள்.

காரணம் அவர்கள் சிங்களவர்கள். உயர்வானவர்கள். அடக்கப்பட்டு மிதிக்கப்பட்டவர்கள் தமிழர்கள். இழி குலத்தவராய் கருதப்பட்டவர்கள்.

இப்படியான சூழலில் தொடங்கிய ஒரு  போராட்டம் அறவழியில் போராடி போராடி களைப்புற்று இறுதியில் வேறு வழியின்றி ஆயுதம் ஏந்திய போராட்டமாய் வெடித்தது. கருப்பையிலிருந்து ஜனித்து விழுந்த ஒவ்வொரு பிள்ளையும் அழுவதற்குப் பதிலாக புலிகளாய் கர்ஜனை செய்தபடியே பிறக்கவும் செய்தனர்.

ஆமாம்..அவர்கள் போராடினார்கள். கழுத்திலே சயனைடு குப்பிகளோடு மரணத்தை சட்டைப் பாக்கெட்டில் வைத்துக் கொண்டு, ஏதோ ஒரு கணத்தில் நாம் இறப்போம், அப்படி இருக்கும் வரை  எம் தேசத்தின் விடியலுக்காய் களமாடிக் கொண்டே இருப்போம் என்ற உறுதியை திடமாய் கொண்டிருந்தனர். சிறுவர், சிறுமியர், பெண்கள், ஆண்கள் என்ற எந்த ஒரு பாகுபாடுகளுமின்றி.. நடந்து பழக ஆரம்பித்த உடனேயே ஆயுதமேந்த வேண்டும், அடிமைத்தளை போக வேண்டும் என்ற நெருப்பினை நெஞ்சில் ஏந்தியிருந்தனர்.

அவர்களுக்கு தலைவன் என்றொருவர் இருந்தார். அவரும் அந்த மக்களுக்கு நடுவிலே கடும் காட்டிலே வாழ்க்கையையே விடுதலைப் போரட்டத்திற்காய் அர்ப்பணித்து இருந்தார். அவர் எப்போதும் மக்களை வைத்து யாதொரு பிழைப்பு அரசியலையும் நடத்தி இருக்கவில்லை. பணத்திற்காகவும் பதவிக்காகவும் அரசியல் தேவடியாத்தனங்கள் செய்து கொண்டிருந்த மிருகமான ராஜபக்சேயோடு கை குலுக்க அவர் விரும்பியதே இல்லை. 

ஏதோ ஒரு பதவியைப் பெற்றுக் கொண்டு பிள்ளைகளை அயல் நாட்டில் படிக்க வைத்துவிட்டு சுற்றுப் பயணங்கள் சென்று உல்லாசமாய் இருப்பதில் அந்த தலைவனுக்கு ஒரு போதும் விருப்பம் இருந்ததில்லை.

அவன் சினிமாவில் நடிக்க வந்து விட்டு அந்த நடிப்பால் மக்களை வெள்ளித் திரையின் மூலமாக சேர்த்து விட்டு கவர்ச்சி அரசியல் செய்து மக்களின் தலைவனாகவுமில்லை, யாரோ ஒரு தலைவனை அண்டிப் பிழைத்து அவனின் புண்ணியத்தால் சேர்ந்த கூட்டத்தில்  அந்த தலைவனின் பெயர் சொல்லி அரசியல் செய்யவும் இல்லை. சொத்து குவிப்பு வழக்கு ஒன்றும் அவன் மீது இருக்கவில்லை. கோர்ட்டுகளின் படியேற வேண்டிய அவசியமும் அவனுக்கு இருந்திருக்க வில்லை. 

இருந்த பிள்ளைகளை சமரில் பலி கொடுக்கும் தீரம் மட்டுமே அவனிடம் இருந்தது மாறாக வளர்ப்பு பிள்ளைகளை வயதான காலத்தில் சுவீகரித்து விட்டு பட்டாடைகளும், தங்க நகைகளும் இட்டு அவனோ அவனின் குடும்பத்தினரோ பவனி வரவில்லை...! பிள்ளைகளுக்களுக்கு பதவி வேண்டி எவர் காலையும் அவன்  தொட்டு கெஞ்சி இருக்கவுமில்லை.

அவனுக்கு அவன் இனம் முக்கியமாயிருந்தது. சுதந்திரக்காற்றை தான் சுவாசித்து தன் மக்களுக்கும் கொடுக்கும் உத்வேகம்  அதிகமிருந்தது. இனத்தின் எதிரியாய் தன் குலத்தில் தழைத்தவர்களையும் அவன் கொன்றழித்த போது அவற்றை கொலைகள் என்றும் சகோதர யுத்தம் என்றும் துரோகிகள் சொன்னார்கள், நாங்கள் அவற்றை வதங்கள் என்று சொன்னோம்.

அவன் மக்களை போராட்டத்திற்கு பிரியாணி பொட்டலத்தையும் குவார்ட்டர் பாட்டிலையும் கொடுத்து எப்போதும் அழைக்கவில்லை. போராட வந்தால் உயர் பதவிகள் கொடுப்பேன் என்று எந்த ஒரு சில்லறைத்தனமான அரசியலையும் நடத்தி இருக்கவில்லை.

காலையில் சிறை நிரப்பி மாலையில் வீடு செல்லலாம் என்ற எந்த ஒரு உத்திரவாதமும் கொடுத்திருக்கவில்லை. மண்டபங்களில் அடைபட்டு, டீயும் வடையும் உண்டு விட்டு எப்படியும் விடுதலையாவோம் என்றறிந்த பொய்யான போராளிகளை அவரன் கொண்டிருக்கவில்லை. ஐந்து வருடங்கள் தொடர்ச்சியாய் சிறைப்படுவோம் என்று அறிந்தாலும், உயிரே போகும் என்று தெரிந்தாலும் அவர்கள் யாதொரு இடர்பாடுகளுமின்றி களமாடும் நெஞ்சுரத்தைக் கொண்டிருந்தனர்.

அவனின் சமர்களில் கையிழந்தோர், காலிழந்தோர், விழி இழந்தோர் அதிகமிருந்தாலும் உயிர் இழந்தோரே இன்னும் அதிகமிருந்தனர். 

அந்த புலிக்கூட்டம் எப்போது தங்களின் வெற்றிகளை வெற்றிகள் என்று அழைத்துக் கொள்ளவும் இல்லை, புரட்சி செய்து எழுச்சி செய்த பெரும்படை என்று அரற்றிக் கொள்ளவும் இல்லை. அவர்கள் போராடினார்கள் அவ்வளவுதான் அந்த போராட்டம் தங்களை நிலை நிறுத்திக் கொள்வதற்காகவும், உரிமைகளைப் பெற்று சுதந்திர மனிதராய் வாழ்வதற்கான ஒரு இலக்கு நோக்கிய இலட்சியத்தைதான் கொண்டிருந்தது.

எல்லாம் சரியாயிருந்தும் அந்த போராட்டம் அவ்வப்போது விழுவதும், எழுவதுமாய் இருக்கையில் ஒரு கட்டத்தில் முழுதாய் முறியடிக்கப்பட்டதற்கான ஒரு சூழல் அமைந்து போனதுக்கு காரணமாய்.....

" இன அழிப்பிற்கு எதிரான ஒரு உக்கிரபோராய்  அது இருக்கும் போதே தான் பேசும் அதே மொழியைப் பேசும் தொட்டடுத்த தேசத்தில் தமிழ் பேசும் மாநிலத்தில் இருக்கும் தமிழர் கூட்டமும், அந்த தமிழர் கூட்டத்தை வைத்துக் கொண்டு அரசியல் பிழைப்பு நடத்தும் அரசியல் கூத்தர்களாலும் உதவப்பட்டு தாங்கள் வென்று விடக்கூடும் என்று மலைபோல் அவர்கள் நம்பியதும் ஆகிப் போனது....

ஒரே காலத்தில் ஒரு இனம் மானத்தோடு போராடியதும், ஈனப்பட்டு அடிமை அரசியல் நடத்தியதும் இருவேறு தேசங்கள் என்ற அடைப்புக்குள் நடந்தேறியதை வரலாறு வேதனையோடு குறிப்பெடுத்துக் கொண்டது."

ஈழத்தில் மானத்திற்காய் தமிழன் போராடிக் கொண்டிருந்த போது, தமிழகத்தில் அரசியல் சுயநலத்திற்காய் வேட்டி, சேலைகளை எல்லாம் கழற்றி இந்திய தேசத்தின் ஒருமைப்பாடு என்ற மாயையின் காலடியில் வைத்து விட்டு, கூட்டாட்சி தத்துவத்தின் வகை தொகை தெரியாத தமிழக அரசியல் கட்சிகள், கூட்டணி ஆட்சி என்ற ஐஸ்கிரிமை சப்பிக் கொண்டே நடுவண் அரசுகளில், பங்கேற்று தங்களின் பிழைப்பினை உறுதி செய்து கொண்டன.

செத்து விழுந்த போராளிகளின் எண்ணிக்கையை எப்போதும் கணக்கிட்டு பார்த்து தமிழுக்காய், தமிழ் இனத்தின் விடுதலைக்காய் இவன் உயிர் கொடுத்தான் என்று அவனின் புகழ் பாட முடியாத என் ஈனத் தமிழ் இனம்....

இன்று எத்தனை வாக்குகள் வித்தியாசத்தில் வென்றேன் என்பதை கின்னஸ் ரெக்காரிடில் பொறித்துக் கொள்ள விரும்பும் குறுக்கு வழிகளில் வென்ற அரசியல் புரட்சித் தலைவிகளையும்....

அறிவிக்கப்பட்ட போராட்டத்தில் பங்கேற்று  ஒரு நாள், மிஞ்சினால் இரண்டு நாள் என்று கணக்குகள் கூட்டிக் கொண்டு அரசுக்கு எதிரான போரட்டங்களில் தத்தம் கட்சிகளின் சார்பாக கலந்து கொண்டு அப்படி கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கையினை கூட்டிக் கழித்து விளம்பரம் செய்து.....நாங்கள் இன்னமும் உயிரோடு இருக்கிறோம் என்று மார்தட்டிக் கொள்ளும் தமிழினத் தலைவர்களையும்....

பார்த்துக் கொண்டு பகிர்வதற்கு வார்த்தைகளின்றி வலிகளால் நிரம்பிப் போன இதயத்தோடு ஈழத்து மண்ணில் மறைந்து போன மாவீரர்களுக்காய் கண்ணீர் வடிக்கத்தான் முடிந்தது.

ஈழம் என்ற வார்த்தையை உச்சரிக்கும் அருகதைகளை தமிழக அரசியல் கட்சிகள் இழந்து வெகு நாட்களாகி விட்டது என்ற வெட்கங் கெட்டதனத்தையாவது தற்போதைய தமிழக அரசியல் கட்சிகள் உணர்ந்து கொண்டு, 9 சிங்கள வீரர்களுக்கு விமானப் படை பயிற்சி அளிப்பதை வீறு கொண்டு எதிர்க்கும் மானங்கெட்ட வீரத்தை எல்லாம் மறந்து விட்டு....

குறைந்த பட்சம் தமிழக மக்களுக்கான ஒரு சுய மரியாதை அரசியலையவது செய்ய முன் வரவேண்டும்...!

ஈழம் தன்னால் பிறக்கும்...!!!!! கொஞ்சம் நஞ்சம் மானமுள்ள தமிழர்  கூட்டம் அதை வென்றெடுக்கும்....!!!!! மனித நேயமுள்ள சர்வதேச சமுதாயம் அதற்கு உதவும்...!

ஜெயலலிதாக்களும், கருணாநிதிகளும், திருமாவளவன்களும், சீமான்களும்... தத்தமது உடைகளை திருந்த அணிந்து கொண்டு கெளரவமாய் வாழ முற்படுதலே நலம்... மாறாக ஈழ நேசம் என்ற வேசம் போடும் கயவாலித்தனத்தை செய்து தங்கள் அரசியல் பிழைப்புகளை நடத்த முயன்றால்....எல்லாம் வல்ல இயற்கை அவர்களை அழித்துப் போடும் என்பது மட்டும் உறுதி....!


தேவா. S


பின்குறிப்பு: எப்போதும் காங்கிரஸ் கட்சியை வேரோடு அழிப்பதும், எதிர்ப்பதும் ஒவ்வொரு தமிழனின் உயிர்க் கொள்கையாய் இருப்பதால்....காங்கிரஸ் என்னும் கட்சியைப் பற்றி தனித்துக் கூற இங்கு ஒன்றுமில்லை.


Friday, July 6, 2012

இந்த கணம் இருக்கிறது உயிர்ப்போடு.....!
தகிடு தத்தம் ஆடும் வாழ்க்கையின் சுவாரஸ்யம்தான் என்ன? சடரென்று முகத்திலறைந்த கேள்விக்கு பதிலும் அதே வேகத்தில் கிடைத்தது. வாழ்க்கையின் சுவாரஸ்யமே வாழ்வதுதான்.. என்ற பதில் சுவாரஸ்யத்தை எங்கோ தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு மிக சாதரணமாய் தெரிவதாலேயே பதிலை மாற்ற முடியாது பாஸ்....!

வாழ்க்கையின் சுவாரஸ்யம் வாழ்வது....!

இந்தக் கணத்தில் மூழ்கிக்கிடப்பது. ஒரு இசையோ, ஒரு பாடலோ, ஒரு திரைப்படமோ, ஒரு கவிதையை வாசித்தலோ அல்லது எழுதுதலோ, மனதுக்குப் பிடித்த புத்தகத்தை வாசித்து வாசித்து அதை புத்திக்குள் அதக்கிக் கொண்டு அசை போட்ட படியே புத்தகத்தை நெஞ்சின் மீது வைத்துக் கொண்டு பாதி உறக்கத்திற்குள் சென்று மீண்டெழுந்து மீண்டும் வாசித்தலோ, மனதுக்குப் பிடித்த பெண்ணோடு வார்த்தைகளுக்கு சிறகு பூட்டி பறக்க விட்டு பேசிக் கொண்டிருத்தலோ, பார்த்துக் கொண்டிருந்தலோ, முத்தமிடுதலோ அல்லது புணர்தலோ.....

ஒரு செடியின் சிறு துளிர் பார்த்து சில்லிட்டு நிற்பதோ, பூவின் மொட்டு வெடிக்கும் தருணத்திற்காய் நிமிடங்களைக் கடத்திக் கொண்டு காத்திருத்தலோ, வானத்தில் நீந்திக் கொண்டிருக்கும் மேகங்களை விழிகளால் தடவித் தடவி அதன் வடிவங்களை மனதில் வரைந்து பார்த்து ஏதோ ஒரு உருவத்தோடு ஒப்பிடுவதோ, கோபமாய் இருப்பதோ, சிரிப்பதோ, கவலையாய் இருப்பதோ, அழுவதோ, வண்டி ஓட்டிக் கொண்டிருப்பதோ, நடப்பதோ, உறங்குவதோ இல்லை தனியாய் பாத்ரூமில் பிடித்த பாடலைப்  பாடியபடி உடல் நனைய ஷவருக்குள் நனைந்து கிடப்பதோ, பிடிக்காத ஒருவருடன் மூச்சிறைக்க சண்டை போடுவதோ....

அல்லது மேலே சொன்ன எதுவும் செய்யாமல் இப்படி எழுதிக் கொண்டிருப்பதோ அல்லது இதை வாசித்துக் கொண்டிருப்பதோ என்று நாம் இந்தக் கணத்தில் இருக்கலாம்தானே...?

தர்க்கங்களையும் தத்துவங்களையும் எரித்து விட்டு அது பற்றிய சிந்தனைகள் அற்ற கொழுக் மொழுக் என்று ஆரோக்கியமான சப்தமாய் வாய் விட்டு சிரிக்கும் மனம் கொண்ட மனிதர்களை மட்டும் கொண்ட பூமி ஒன்று வேண்டும் என்பதுதான் எனது முதலும் கடைசியுமான ஆசையுமாய் இந்தக் கணத்தில் தோன்றுகிறது. ஆராய்ச்சியும் விவாதங்களும் எப்போதும் முடிவடையப் போவது இல்லை. இறுதி வரை தேடி அடைய முடியாத உண்மையாய் வாழ்க்கை இருக்கும் போது அதன் ஆதி முடிச்சும், இறுதி முடிச்சும் எப்போதும் அடைய முடியாதது  என்று உணர்ந்த பின்பு....

இந்தக் கணத்தில் பரிபூரணமாய் நாம் நமது அரியாசனம் ஏறலாம்தானே? வெறுப்பிலேயே நகரும் வாழ்க்கையின் மறுப்பக்கத்தில் ஆசைகள் நிறைந்திருக்கின்றன. வானம் நீல நிறம், கடல் உப்புக் கரிக்கிறது, பூக்கள் பரவசமாய் தினம் மலருகின்றன. வானத்தில் சிறகடிக்கும் பறவைகள் அந்த நிமிடத்தின் நகர்தலோடு ஒன்றிப் போய் இருக்கின்றன. அதோ அந்த நதி இப்போது நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த மரங்கள் காற்றோடு ஏதேதோ பேசி சிரித்து தலையசைத்துக் கொண்டிருக்கின்றன. இந்த கணம் அவை எப்படி இருக்கின்றன என்பதை எதிர்காலத்தோடு தொடர்பு படுத்திக் கொள்ளாமல் இருப்பதால் அவற்றின் மகிழ்ச்சியும் பரிபூரணமாயிருக்கிறது.

என் அலுவலக வரவேற்பரைக்குப் பின்னால் இருக்கும் கண்ணாடி ஜன்னலுக்குப் பின்னால் ஒரு மத்திம உயரத்திலான  செடி இருக்கிறது. அது என்ன செடி என்று எனக்குத் தெரியாது. தினமும் காலையில் வரும் போது அதை பார்ப்பேன். அது சிறு சலனத்தோடு மெலிதாய் தலையசைத்துக் கொண்டிருக்கும். முன் பகலில் மீண்டும் பார்ப்பேன்...அது மெல்ல தலையாட்டி சிரித்துக் கொண்டிருக்கும்.

நேரம் ஆக, ஆக எனது சக்தி எல்லாம் எங்கெங்கோ விரையமாகி, எது எதற்கோ நான் கோபப்பட்டு, தொலை பேசியில் அலுவலக விசயம் பேசும் போது வீட்டை நினைத்தும், அமைதியாய் இருக்கையில் அடுத்த அடுத்த நாளுக்கு செய்ய வேண்டிய ஏதோ ஒன்றை பற்றி கவலைப்பட்டும், முக்கியமான மின்னஞ்சல்களைத் தட்டச்சும் நேரத்தில் வொர்க் ஷாப்பில் இருக்கும் தொழிலாளர்களுக்கு என்ன என்ன சொல்ல வேண்டும் என்று திட்டமிட்டுக் கொண்டோ இருந்து எதை எதைச் செய்கிறோமோ அப்போது அதில் லயிக்காமல், எப்போதும் ஒரு வேலையின் போது வேறு எதோ ஒன்றைப் பற்றியே எண்ணி எண்ணி.....

அந்த அந்த கணங்களின் முழுமையை கவனமில்லாமல் தொலைத்திருக்கிறேன். உணவருந்தும் போது கூட அசுர கதியில் அதையும் ஒரு இயந்திரத்தைப் போல செய்து விட்டு மறுபடியும் ஓடி, ஓடி அங்கும் இங்கும் நகர்ந்து... ஒவ்வொரு நொடியையும் அந்த அந்த நொடியோடு தொடர்புள்ள செயல்களோடு முழுதுமாய் பந்தப்படுத்திக் கொள்ளாமல் ஒரு மேலோட்டமான வாழ்க்கையைத்தான் நகர்த்தி இருக்கிறேன்.

கடுமையான அலுவல் சுமைகளில் மூளையின் இரத்த அழுத்தம் கூடிப்போய் ஏதோ வேலையாக மீண்டும் பிற்பகலிலோ அல்லது மாலையிலோ அந்த வரவேற்பரைக்கு சென்று பின்னால் இருக்கும் செடியைப் பார்ப்பேன்...அது அப்போது அடிக்கும் காற்று எப்படி அடிக்கிறதோ அதற்கு ஏற்றார் போல வேகமாகவோ அல்லது மெதுவாகவோ தலையசைத்தபடி சிரித்துக் கொண்டிருக்கும் காலையில் இருந்த அதே புத்துணர்ச்சியோடு.....

நான் காலையில் புத்துணர்ச்சியாய் இருப்பேன்....மதியம் கொஞ்சம் ப்யூஸ் போய்....மாலையில் மொத்தம் ட்ரெயின்ட் அவுட் ஆகி.....பல்வேறு மனோநிலைகளில் ஒரே செடியைப் பார்க்க அந்த செடி ஒரே மாதிரியாய்தான் காலையில் இருந்து மாலை வரை இருக்கும்.  ஒரு நாள் திடீரென்று காலையில் பார்த்தால் அந்த செடியைக் காணவில்லை. என்ன ஆகி இருக்கும் என்று ஒரு ஆர்வத்தில் அலுவலக காம்பவுண்ட் விட்டு வெளியே வந்து பார்த்தால் தொலைபேசி வேலை செய்தவர்கள் அங்கே வேலை செய்ய வேண்டி அந்த செடியைப் பறித்துப் போட்டு இருந்தார்கள்...

உயிரற்றுக் கிடந்த அந்த செடியைப் பார்க்கையில் மனதை ஏதோ செய்தது. அது துள்ளிச் சிரித்து எப்போதும் தலையாட்டி தலையாட்டி காற்றுக்கு ஏற்றார்போல குதுகலித்து இருந்த உற்சாகம் சட்டென்று புத்திக்குள் எட்டிப்பார்க்க...நான் சோகமாய் திரும்பி நடக்கத் தொடங்கி சில நொடிகளில் மீண்டும் திரும்பி அந்த செடியைப் பார்த்தேன்....அப்போது வீசிய ஒரு மெல்லிய காற்றுக்கு அதன் உயிரற்ற இலைகள் வேகமாய் தலையசைத்து மீண்டும் மகிழ்ச்சியாய் ஆடிக் கொண்டிருந்தது....

ஒரு இரண்டு மூன்று நாள் கழித்து மீண்டும் சென்று பார்த்த போது அந்த செடி பரிபூரணமாய் கருகிப் போய்.... மண்ணோடு மண்ணாய் கலந்து முழுமையாய் மாறிப்போயிருந்தது. 

அவ்வளவுதான். 

வாழும் வரை வாழ்க்கை. அது முடிந்த பின்பு... எல்லாம் முடிந்து விடவில்லை. வேறு விதமான வாழ்க்கை.... என்று எதைச் செய்தாலும் அதன் முழுமையில் இருக்கும் நம்மை விட குறை அறிவு கொண்ட உயிர்களைப் போல ஏன் நம்மால் இருக்க முடியவில்லை? நமக்கு மனம் இருக்கிறது. அவற்றுக்கு மனம் இல்லை என்பது பரிணாம வளர்ச்சியில் நமக்கு கிடைத்த உச்ச நிலை அல்லவா? அத்தகைய மனம் முழு பலத்தோடு இல்லாமலேயே முழுமையான ஒரு அர்ப்பணிப்பினை விலங்குகளும், மரங்களும், செடிகளும், கொடிகளும்  செய்யும் போது மனம் என்ற ஒரு மிக அருமையான ஒரு வேலைக்காரனை வைத்துக் கொண்டு இந்த வாழ்க்கையை நம்மால் ஏன் சந்தோசமாக கழிக்க முடியவில்லை...?

முழுக்க முழுக்க கற்பனையை இறைத்துக் கொட்டி எதிர் காலத்துக் கனவுகளுக்குப் பயணப்படும் மனதை இந்தக் கணத்தில் நிறுத்திப் பாருங்கள்....! எதிரே வரும் மனிதருக்கும், காணும் காட்சிகளுக்கும் யாதொரு கருத்துக்களும் கொடுத்துப் பார்க்கதீர்கள்....! சிரிக்க வேண்டிய நேரத்தில் யாரோடும் சண்டையிட்டதை நினைக்காதீர்கள்...அதே போல சண்டையிடும் போது.....சிரித்தும் விடாதீர்கள்...ஆக்ரோஷமாய் சண்டையிடுங்கள்.

பைபிளில் ஜீசஸ் கிரைஸ்ட் தனது சீடர்களிடம் சொல்வதாக ஒரு வரி வரும்.... 

" அழகாய் பூத்திருக்கும் லில்லி மலர்களைப் பாருங்கள், அவற்றை யாரும் நூற்பதும் இல்லை நெய்வதும் இல்லை, இருந்தாலும் பேரரசர் சாலமனின் உடுத்தியிருக்கும் பட்டாடைகளை விட அதி அவை சிறந்தவைகளாக இருக்கின்றன...."

இவை சாதாரன வரிகள் இல்லை. ஆழ்ந்து தியானிக்க வேண்டிய வரிகள். அந்த கணத்தில் நிறைந்து இருக்கும் எல்லாம் பரிபூரணமானவை, ஒப்பற்றவை, அழகானவை அவை மலர்களாய் இருந்தாலும் சரி.....மனிதர்களாய் இருந்தாலும் சரி.....

நான் இருக்கிறேன்..நீங்கள் இருக்கிறீர்கள்.....இந்த கணமும் இருக்கிறது உயிர்ப்போடு.....


தேவா. S