Pages

Thursday, March 27, 2014

யாத்திரை....!


கடும் சூடு நிறைந்த பொட்டல் வெளி அது. சுற்றிலும் செம்மண் சரளைக் கற்களும் ஆங்காங்கே முட்கள் நிரம்பிய கருவேலம் மரங்களும், சப்பாத்திக் கள்ளிகளும் மட்டுமே நிரம்பிக் கிடந்தன. அந்த புளிய மரத்தின் கீழ் நான் நின்று கொண்டிருந்தேன். கண்ணுக்கு எட்டிய தூரத்தில் இரண்டு மண் மேடுகள் சுற்றிலும் செங்கல் வைத்து அடுக்கி வைக்கப்பட்டிருக்கிறது. இடது புறம் அப்பத்தாவும் வலதுபுறம் தாத்தாவும் அங்கேதான் புதைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் வசித்த வீடு எனக்குப் பின்னால் கொஞ்ச தூரத்தில் அதுவும் கண்ணெதிரேயே தெரிந்தது. எனக்கு முன்னால் அவர்களின் சமாதியும், பின்னால் அவர்கள் வாழ்ந்த வீடும், நடுவில் நானும்..... சுற்றிலும் இருந்த பனைமரங்கள் அனலாய் வீசிய காற்றோடு ஏதோ பேசிக்கொண்டிருந்தன. தாத்தா நட்டு வைத்த மரங்கள்தான் அவை அத்தனையும்...

வானம் பார்த்த பூமியின் புஞ்சைக்காடு பார்ப்பதற்கு அவ்வளவு சுகமாய் ஒன்றும் இருக்காது. பயன்படுத்தாத தரிசு நிலங்கள் தோறும் வகை தொகை இல்லாமல் முட்களும், கரம்பைகளும் பெயர் தெரியாத பல செடிகளும் இஷ்டப்படி வளர்ந்து கிடக்கும். எது வருமோ அது வளரும். என் பூர்வீக வீட்டுக்கு பின் இருக்கும் இந்த புஞ்சைக் காட்டில் முன்பு எப்போதோ கடலை, எள், மிளகாய் எல்லாம் பயிரிட்டுக் கொண்டிருந்ததை அடிக்கடி அப்பத்தா சொல்லிக் கொண்டிருந்த 1990களில் மனதால் கூட நாங்கள் அந்த ஊரில் வசிக்காமல் அப்பாவின் வேலை நிமித்தம் இடம் பெயர்ந்திருந்த ஊரின் வாழ்க்கைக்குள் அகப்பட்டுக் கிடந்தோம். அப்பத்தாவிற்கு மீண்டும் பழைய வாழ்க்கை திரும்பாதா என்ற ஏக்கம் நிறைய இருந்தது. வீடு விட்டுப் போன எல்லா பிள்ளைகளும் மீண்டும் கிராமத்து வீட்டுக்கு வந்து விடமாட்டார்களா என்று கடைசி வரை எதிர்பார்த்து தோற்றுப் போனாள் அவள்.  தாத்தா சாகும் வரை செய்து கொண்டிருந்த அரைகுறை விவசாயம் தாத்தாவிற்குப் பிறகு பங்குக்கு விடப்பட்டு பங்கு போடுபவர் கொடுக்கும் நெல் ஏனோ தானோ என்று வீடு வந்து சேர்ந்து கொண்டிருந்தது. அதுவும் கொஞ்ச காலம்தான்....

தொடர்ச்சியாய் மழை இல்லாமல் போனது. மழை இல்லாமல் போனதால் அங்கிருந்த மனிதர்கள் வெவ்வேறு வேலைகளுக்காய் நகரங்களைத் தேடி ஓடினார்கள். அப்படியாய் ஆட்கள் இடம் பெயர்ந்ததால் அரைகுறை விவசாயம் செய்யவும் ஆட்கள் கிடைக்காமல் போனது. வேலைக்கு ஆட்கள் வந்த காலம் போய் என் நிலத்துக்கு நீ வந்து வேலை பார் உன் நிலத்துக்கு நான் வந்து வேலை பார்க்கிறேன் என்ற நிலை ஏற்பட்டதால், ஆட்களை வைத்து வேலை ஏவி விவசாயம் பார்த்தவர்களுக்கு அந்த சூழல் வசதியில்லாமல் போனது. எல்லா நிலங்களும் பங்குக்கு, பங்குக்கு என்று விடப்பட்டு பங்குக்கு எடுத்தவரால் விவசாயம் செய்ய வேலை ஆட்கள் இல்லாமலும், மழை இல்லாமலும் நிறைய நிலங்கள் கைவிடப்பட்டன. ஐப்பசி கார்த்திகையில் பெய்யும் மழையில் கண்மாய் கொஞ்சமாவது நிறையும். நிறைந்த கண்மாயில் பாதியை நிலம் உறிஞ்சிக் குடித்து விடும், மீதியை சித்திரை வைகாசிக்கு முன்பே சூரியனின் உஷ்ணம் எடுத்துக் கொண்டுவிடும் விளைவு பாலம் பாலமாய் வெடித்த தரையோடு கண்மாய் சூம்பிப் போய் கிடக்கும்....


அது எல்லாம் ஒரு காலம். வானம் பார்த்த பூமி இது என்று கொஞ்சமாவது கரிசனத்தோடு மழை பெய்த காலம்  எல்லாம் மலை ஏறிப் போய்விட்டது இப்போது. ஆற்று பாசனம் என்ற பெயரில் எப்போதாவது வந்து தொண்டை நனைத்து விட்டுப் போகும் வைகைக்கு என்ன ஆயிற்று என்று எப்படி அந்த குக்கிராமத்து மனிதர்களுக்குத் தெரியும்...? 

என் பூர்வீக வீட்டில் யாரும் இல்லை இப்போது. அது பூட்டிக் கிடக்கிறது. வீட்டிற்குள் கொஞ்ச நேரம் சுற்றி வரலாம் என்று வீடு நோக்கித் திரும்பினேன். என் சட்டையைப் பிடித்து இழுத்த கருவேலம் முள் ஒன்று ஏனோ அப்பத்தா என் முகவாய்க் கட்டையை பிடித்து முன்பொரு நாள் திருப்பியதை ஞாபகப்படுத்தியது.வெள்ளைப் பருத்தி வேட்டியும், தலை வழியே மாட்டும் வெள்ளை முழுக்கை சட்டையுமாய் நெற்றி நிறைய விபூதியோடு தாத்தாவின் வாசம் எனக்கு புத்திக்குள் பரவியது. தாத்தாவிற்கு ஏறு நெற்றி. அப்பாவுக்கும் அப்படித்தான், எனக்கும் அப்படித்தான். நெற்றி அகலமாய் இருக்கணும்பா அப்பத்தான் கை நிறைய துண்ணூறு எடுத்து பூசிக்க முடியும் என்று அம்மா அடிக்கடி என்னிடம் சொல்லும். ஏறு நெற்றி விபூதி பூச வசதியானது. எனக்கு  எட்டு வயதானபோது தாத்தா இறந்து போய்விட்டார் என்றாலும்...

எனக்கு அவரை நன்றாய் நினைவில் இருக்கிறது இப்போதும். ஓம் நமசிவாய என்ற ஐந்தெழுத்தை எனக்கு அவர்தான் சொல்லிக்கொடுத்தார். அந்த மந்திரத்தை முதலில் அவர் சொல்லக் கேட்டதுதான் இப்போதும் என் நினைவில் இருக்கிறது. என்ன ஏது என்று தெரிந்தும், தெரியாமலும் தலைமுறைகளாய் அந்த மந்திரம் இடைவிடாது எங்களால் உச்சரிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறது. வீட்டுக்குள் போய்விட்டு வருகிறேன் என்று ஏனோ அப்பத்தாவின் சமாதியிடம் சொன்னேன். அப்பத்தாவிடம் சொன்னால் தாத்தாவிடம் சொன்னது போல....

அப்பத்தாவை கடைசி காலம் வரை தாத்தா அதட்டிக் கொண்டேதான் இருப்பார். சிவகாமி என்னும் அப்பாத்தாவின் பெயரை அவர் சிவந்தாயி என்றுதான் கூப்பிடுவார். அதட்டி அதட்டி அவர் பேசுவதும் அப்பத்தா அவருக்குப் பணிந்து பணிந்து ஒடுவதும் என்று எல்லாமே ஒரு வித நடிப்புதான். அவர்களுக்குள் அன்பு நிறையவே இருந்தது. அவர் அதட்டுவதைப் போல அப்பத்தாவுக்கு அடங்குவார், அப்பத்தா அடங்குவது போல அவரை ஆள்வார். பொதுவாக கணவன் மனைவிக்கிடையே இப்படி ஒரு கட்டமைப்பை  நம் சமூகம் திட்டமிட்டே உருவாக்கி வைத்திருக்கிறது. மேலோட்டமாக நம் சமூகக் கட்டமைப்பை பார்த்தால் பெண்களை ஆண்கள் அடக்கி ஆள்வது போலத் தோன்றும் நிஜத்தில் அது உல்டாவாகத்தான் பெரும்பாலும் இருக்கிறது. இது நம் சமூகத்தை உணர்வுப்பூர்வமாய் ஆழ்ந்து உற்று நோக்கினால் விளங்கும். இது போக விதிவிலக்கான விசயங்கள் இந்த உலகின் எல்லா மூலைகளிலும் இருக்கத்தான் செய்கின்றன.

கொல்லைக் கதவினைத் திறந்து வீட்டிற்குள் நுழைந்தேன். மனிதர் வசிக்காத இடங்களுக்குள் எல்லாம் ஒருவிதமான அமானுஷ்யமான தெய்வீகத்தன்மை உட்புகுந்து விடுவதாகவே நான் கருதுகிறேன். வீட்டிற்குள் இருந்த பேரமைதி மனசை ஏதோ செய்தது. எத்தனையோ பேருக்கு சமைத்துப் போட்ட அந்த அடுப்படியில் மண் அடுப்புகள் இன்னும் ஏழு தலைமுறையின் பசியைத் தீர்க்க நாங்கள் தயார் எங்கே போனீர்கள் மனிதர்களே என்று என்னைப் பார்த்து ஏளனமாய் சிரிப்பதைப் போல இருந்தது. ஓடு வேய்ந்த அந்த வீட்டின் ஒவ்வொரு பனைமர உத்திரங்களும் தாத்தா வைத்த மரங்கள்தானாம். ஓடுகளும், செங்கல்லும் நாட்டரசன் கோட்டை செட்டியார்களிடம் சொல்லி வைத்து வாங்கியதாம், இது போக கண்ணாடிகளும், ஜன்னல் கதவு, அலமாரி பலகைகளும் பர்மா தேக்கில் செய்தது என்று அடிக்கடி அப்பத்தா சொல்லும். சுவற்றில் கை வைத்து தேய்த்துப் பார்த்தேன் சில்லென்று இருந்தது. சுவற்றில் சாந்து பூசி கடைசியில் வளவளப்பிற்கு முட்டையின் வெள்ளைக்கருவை ஊற்றி தேய்ப்பார்களாம்....

அடுப்படிக்கு அப்புறம் ஒரு இரண்டாம் கட்டு இருக்கிறது அதன் இரண்டு புறமும் இரண்டு பெரிய அறைகள். ஒற்றைப் பலகையால் ஆன கனமான கதவு அது. இரண்டு அறைகளுக்குள்ளும் இப்போதும் விளக்கு இல்லையென்றால் உச்சிப் பகலில் கூட நடுநிசியைப் போல இருட்டாயிருக்கும். எனக்கு விபரம் தெரிந்த பின்புதான் கரண்ட் இழுத்தோம் வீட்டிற்கு அதுவரையில் அரிக்கேன் விளக்குதான். பழைய பாட்டில்களுக்குள் சீமை எண்ணையை ஊற்றி அதன் மூடியில் ஓட்டை போட்டு சீலைத் துணியை திரியாக்கி காண்டா விளக்கு செய்யும் வேலையை அப்பத்தாதான் சொல்லிக் கொடுத்ததாம் அந்த கிராமத்துக்கு. வீடு முழுதும் வேப்பம் பலகைகளை மேலே வைத்து அடைத்திருப்பதால் வீடுஎப்போதும் குளுமையாகவே இருக்கும்.

யாருமில்லாத அந்த வீட்டிற்குள் தனியாய் நின்று கொண்டிருந்தேன். எங்கே எல்லோரும் போனார்கள்...? எங்கே இங்கே நிலை கொண்டிருந்த வாழ்க்கை? இரவும் பகலும் நிரம்பி வழிந்த வீடு எப்படி வெறிச்சோடிப் போனது? யோசித்துக் கொண்டே ஹாலின் ஓரத்தில் இருந்த எச்சிப் பலிங்கானைப் பார்த்தேன். தாத்தா வெற்றிலை போட்டு துப்ப அதில் மண் நிரப்பிக் கொடுப்பார்கள். சிறுவயதில் பார்த்திருக்கிறேன். பானைகள். சட்டிகள், அலுமினியம், மண் மற்றும் பித்தளைப் பாத்திரங்கள், அண்டாக்கள், ட்ரங்க் பெட்டிகள், குளுமை எனப்படும் நெல் கொட்டும் பத்தாயம், எல்லா சுவாமிகளும் நிறைந்த பூஜை அறை என்று மெளனமாய் ஏதேதோ கதைகள் சொன்ன வீடு என் காலத்திற்குப் பிறகு அதன் பழமையைக் நினைவு கூறக் கூட ஆளில்லாமல் போகப்போகிறது. 

தாத்தாவின் புகைப்படங்கள் நிறைய வீட்டில் இருக்கிறது. அவர் அப்பத்தா கூட இருந்து எடுத்த புகைப்படத்தில் எல்லாம் கர்ண கம்பீரமாய் நாற்காலியில் அமர்ந்திருக்கிறார். மனைவி பக்கத்தில் நின்றால் என்ன அவளை சட்டை எல்லாம் நான் செய்வது இல்லை என்பது போல ஒரு அலட்சியமான பார்வையோடு அவரும், எனக்கு எல்லாமே அவர்தான் என்பது போல அப்பத்தாவும் ஒரு புகைப்படத்தில்  நின்று கொண்டிந்தார்கள். கண்டாங்கி சேலையோடு அள்ளிக் கட்டிய தலையோடு காதில் தொங்கட்டான், மூக்கில் புல்லாக்கு, மூக்குத்தி, அழுத்தம் திருத்தமாய் விபூதி, குங்குமம் என்று அப்பத்தா தான் எவ்வளவு அழகு. அப்பத்தா இளமையில் அவ்வளவு அழகாய் இருந்திறது. அத்தனை உயரம் இல்லை என்றாலும் இரண்டு ஆளை தனியாய் நின்று அடித்துப் போடுமளவிற்கு கட்டுமஸ்தான உடல்....

அப்பாவின் இளவயது புகைப்படம் அத்தனையும் என் மூத்த தம்பியைப் போலவே இருந்தது. முறுக்கிய மீசையோடு அப்பாவும் அம்மாவும் இருந்த அந்த புகைப்படம் அவர்கள் திருமணம் முடிந்த பின்பு எடுத்ததாய் இருக்க வேண்டும். அந்தக் கால சிவாஜியும் சரோஜாதேவியும் சட்டென்று என் நினைவுக்கு வந்தார்கள்.... அத்தைகள், மாமாக்கள், சித்தப்பாக்கள், அத்தை பிள்ளைகள், மருமகன்கள்.... என்று எல்லா உறவுகளும் ஹால் சுவரெங்கும் புகைப்படங்களில்....

தாத்தா எப்போதும் படுக்கும் இடத்தில் போய் அமர்ந்து கொண்டேன். இப்போது தாத்தாவும் இல்லை, அப்பத்தாவும் இல்லை, அப்பாவும் இல்லை....

ஆதாரமில்லாத ஆதாரத்தோடு அந்தரத்தில் நிற்பது போலத் தோன்றியது

சுவற்றில் கன்னத்தை வைத்து அழுத்திக் கொண்டேன். சில்லென்று சுவர் என் கன்னத்தில் பட அந்த வீடு என்னை அணைத்துக் கொண்டது போலத் தான் உணர்ந்தேன். வாழ்க்கை சுழற்சி... இதுதான் நான் என்னைத் தெரிகிறதா என்று என்னை பார்த்து கேட்டு விட்டு எனக்காய் காத்திருப்பது போலத் தோன்றியது....

நான் தேம்பி அழுது கொண்டிருந்தேன்.....

காலம் சரியாய் என்னை விட்டால் எங்கே நான் இறக்க வேண்டும் என்று மட்டும் புரிந்தது எனக்கு.

அப்பத்தா, தாத்தாவின் சமாதிக்கு போக எழுந்தேன்.... அந்த மண்ணுக்குள் புதைந்து கொள்ளும் வரம் மட்டும் காலம் எனக்கு கொடுத்தால் போதுமென்ற எண்ணத்தோடு கால்களை அழுந்தப் பதித்து நடந்து கொண்டிருந்தேன்....!

பாசம் உலாவிய கண்களும் எங்கே? 
பாய்ந்து துழாவிய கைகளும் எங்கே?
தேசம் அளாவிய கால்களும் எங்கே?
தீ உண்டதென்றது சாம்பலும் இங்கே 

கண்ணில் தெரிந்தது காற்றுடன் போக
மண்ணில் பிறந்தது மண்ணுடன் சேர்க
எலும்பு சதை கொண்ட உருவங்கள் போக
எச்சங்களால் அந்த இன்னுயிர் வாழ்க...! (வைரமுத்து..)
தேவா சுப்பையா...

Tuesday, March 25, 2014

MH 370 ஒரு அவிழ்க்க முடியாத ரகசியம்...!


ஒவ்வொரு முறை நண்பர்களையும், உறவுகளையும் சந்தித்திப் பிரியும் போது இன்முகத்தோடே செல்ல வேண்டுமென்று என் அப்பா அடிக்கடி கூறுவார். நிதர்சனமில்லாத இந்த வாழ்க்கையில் எது வேண்டுமானலும் அடுத்த கணம் நிகழலாம் என்ற ஒரே ஒரு உண்மையைத் தவிர வேறு பெரிய உண்மை ஒன்றும் கிடையாது. 

எம்.எச் 370 விமானத்தில் பயணித்தது 239 வெவ்வேறு வாழ்க்கைகள். அண்ணன்கள், தம்பிகள், அக்காக்கள், பெரியப்பாக்கள், சித்தப்பாக்கள், மகள்கள், மகன்கள், கணவன்கள், மனைவிகள், அதிகாரிகள், தொழிலதிபர்கள், பணியாளர்கள், என்று பல்வேறு அடையாளங்களோடு அதில் பயணித்தது வாழ்க்கை. உற்சாகமாய் வழியனுப்பி வைத்தது எத்தனை உறவுகளோ? உற்சாகமாய் வரவேற்க காத்திருந்தது எத்தனை உறவுகளோ? எத்தனை பேரின் சந்தோசங்கள் இன்று நிலைகுலைந்து போயிருக்கிறது என்று எண்ணிப் பார்க்கவே முடியாத ஒரு பெருந்துயரம் இது.

ஒவ்வொரு வாக்குறுதிகள் கொடுக்கும் போதும் குறிப்பாக ஒவ்வொருமுறை விமானத்தில் ஏறும் போதும் இன்ஷா அல்லாஹ் என்ற வார்த்தை எனக்குள் அசரீரியாய் கேட்டுக் கொண்டிருக்கும். பால்யத்திலிருந்து நான் வளர்ந்த, என்னை வளர்த்த சமூகம் அது ஆதலால் இஸ்லாத்தின் மீது அதிக பிடிப்புகள் எனக்கு உண்டு. சாந்தியையும் சமாதனத்தையும் பார்ப்பவர் மீதெல்லாம் நிலவ வேண்டிக்கொள்ளும் பெருங்கருணை கொண்ட மார்க்கம் அது. இன்ஷா அல்லாஹ் என்ற வார்த்தையின் பொருளை  மனிதர்கள் உணர்ந்து கொள்ள இந்த நிகழ்வின் மூலம் இயற்கை கடுமையான போதனையை நடத்தி இருக்கிறது. அதி நவீனமான போயிங் 777 எனப்படும் ராட்ஷச  விமானம்தான் அது. தொழில்நுட்பபெருக்கம் நிறைந்த இந்த வாழ்க்கையில் மில்லி மீட்டர் மில்லி மீட்டராய் பிரித்து மேய்ந்து தவறுகள் எதுவும் இல்லாமல், உறுதியான இறுதி அறிவிப்பு விமானக் கட்டுப்பாட்டு அறையிலிருந்து வந்த பிறகுதான் இந்த உலகத்தில் அத்தனை விமான நிலையங்களிலும் இருந்து விமானங்கள் பறக்கவே ஆரம்பிக்கின்றன....

விமானம் பறக்க ஆரம்பித்து அது இலக்கைச் சென்று அடையும் வரையில் தரையிலிருக்கும் கட்டுப்பாட்டு அறைகளைத் தொடர்பு கொண்டிருக்கும் வகையில் எல்லா நவீன அம்சங்களும் இப்போது உண்டு. பிறகு எங்கே நிகழ்ந்தது பிழை? எப்படி மறைந்தது விமானம்? எங்கே கிடக்கிறது அதன் உடைந்த பாகங்கள்....? கடலிலா? காடுகளிலா? கட்டாந்தரையிலா? மலைகளுக்கு நடுவா? அல்லது மொத்தமாய் எங்கே போனது அந்த விமானம்? எங்கே போயினர் அந்த விமானத்தில் பயணித்த அத்தனை பேரும்....? கேள்விகளுக்கு விடை தெரிந்தால் மட்டுமே திருப்தியடைந்து கொள்ளும் மனித மனங்கள் குழம்பித்தவித்தன. பலவிதமான அனுமானச் செய்திகளை வெளியிட்டும் கேட்டும் திருப்திப்பட்டுக் கொண்டிருந்தன. உலக நாடுகள் எல்லாம் இந்த பூமியைத் தங்கள் சக்திக்கு மீறி சல்லடை போட்டு சலித்தும் பார்த்துவிட்டன....

ஆனால்...எம்.எச் 370 என்னும் அந்த விமானத்தைக் கண்டுபிடிக்கவே முடியவில்லை.

கடந்த சில வாரங்களாய் இந்த விமானம் பற்றிய பல அனுமானச் செய்திகளை எந்த உணர்ச்சியுமின்றி திக்பிரமை பிடித்தது போல கேட்டுக் கொண்டிருந்த விமானத்தில் பயணித்தவர்களின் உறவுகள் வெடித்து அழும்படியான செய்தியை மலேசியப் பிரதமர் நேற்று வெளியிட்டிருக்கிறார். இந்தியப் பெருங்கடலில் எம்.எச். 370 விபத்துக்குள்ளாகி மூழ்கி மறைந்து விட்டதென்றும் அதில் பயணித்த யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்றும் அவர் அதிகாரப்பூர்வமாய் அறிவித்ததும் அது இந்த உலகத்தின் மீதே இடியை இறக்கியது போலத்தான் இருந்தது. அறிவியல் இந்த பிரபஞ்சத்தின் கால் தூசியைக் கூட தொட்டுவிட முடியாது என்பதுதான் இதன் மூலம் நிரூபணமாகி இருக்கிறது.


மலேசியப் பிரதமர் இப்போது வெளியிட்டிருக்கும் அறிவிப்பு ஆதாரப்பூர்வமானதோ, அறிவியல் ரீதியானதோ அல்லது ஆராய்ச்சியின் முடிவோ அல்ல அது அனுமானத்தின் மூலம் அறிவிக்கப்பட்ட முடிவு. நம் வாழ்க்கையின் பெரும்பகுதி இப்படித்தான் இருக்கிறது நண்பர்களே...! எல்லாவற்றுக்கும் ஆதரத்தை தேடும் மனித மனம் பல இடங்களில் திகைத்துப் போய் விடையற்று நின்று போகையில்தான் எல்லாம் வல்ல பெருஞ்சக்தியின் திருவிளையாடல் எவ்வளவு வலிமையானது என்பது மெலிதாய் பிடிபட ஆரம்பிக்கிறது. சந்திரனுக்கும், செவ்வாய்கிரகத்துக்குப் போய் ஆராய்ச்சி செய்யும் அகில உலக விஞ்ஞான மூளைகள் இந்த பூமிக்குள் எங்கோ கிடக்கும் ஒருவிமானத்தை கண்டுபிடிக்க முடியாமல் திணறிப்போய் நிற்பதைப் பார்க்கும் போது அறிவியலை மையமாக வைத்து பிரபஞ்ச பெருஞ்சக்தியைப் பற்றி வாதிட்டுக் கொண்டிருப்பவர்கள் எவ்வளவு பெரிய அறியாமையில் இருக்கிறார்கள் என்றும் உணரமுடிகிறது.

மனித மூளைகளால் எட்டமுடியாத இடத்திற்கு எல்லாம் அவனின் உள்ளுணர்வுகள் பயணிக்கும். உள்ளுணர்வு என்பது விஞ்ஞானம் அல்ல அது மெய்ஞானம். உள்ளுணர்வு தெளிவாய் வேலை செய்ய நான் இன்னார் என்ற அகங்காரம் அற்ற உள்பார்வை வேண்டும். பார்க்கும் பொருளாய் இருக்கும் போது பார்வை தேவையில்லாமலேயே பல விசயங்களை உணர முடியும். அதாவது இருந்ததனை இருந்தது போல் இருந்து பார்க்கும் ஆன்மீக டெக்னிகாலிட்டியை அறிவியல் உணர்ந்து அதன் கூடவே பயணிக்க இனி பழகிக் கொள்ள வேண்டும். 

வாழ்வின் நிதர்சனமற்ற தன்மையை அறிவியலார், நவீனத்தின் உதவியோடு மானுடர்களுக்கு அதை ஒரு பெருஞ்செய்தியாய் இடைவிடாது அறிவித்துக் கொண்டே இருக்க வேண்டும். முடநம்பிக்கைகளுக்குள் மனிதர் விழுந்து கடவுள் பெயரால் போரிட்டுக் கொள்ளாத, கொலைகள் செய்யாத, பிளவுபட்டு நிற்காத சமூகத்தை உருவாக்க அரசுகளும் முயல வேண்டும். திருக்குர்-ஆனின் ஆயத்து ஒன்றில் வருவது போல இந்த பூமி எங்கும் ஓராயிரம் அத்தாட்சிகளை பேரிறை விட்டுவைத்தும், புதிது புதிதாய் சூழல்களின் மூலம் உருவாக்கிக் கொண்டும் இருக்கிறது....

விடியலில் எழுந்து உணவு உண்டு விட்டு மதிய உணவினை கண்டிப்பாய் நான் உண்ணுவேன் என்று ஒரு மனிதன் எண்ணிக் கொள்ளலாம் அது அவனது நம்பிக்கை. நம்பிக்கைகள் ஒரு புறமும் சாத்தியங்கள் மறுபுறமும் நிறைந்து கிடக்கும் இவ்வாழ்க்கையில் சாத்தியக்கூறுகளே எப்போதும் வெல்கின்றன. அப்படியாய் சாத்தியக்கூறுகள் வெல்லும் போதெல்லாம் அதை தனது நம்பிக்கை, விடாமுயற்சி, திட்டமிடல் என்று மனிதன் விளங்கிக் கொள்கிறான். எத்தனையோ கனவுகளோடு எம்.எச் 370 விமானத்தில் பயணித்தவர்கள் விமானத்தோடு கடலுக்குள் மூழ்கி இருக்கலாம் என்ற அனுமானத்தோடு இந்த நிகழ்வினை முடிவினுக்கு கொண்டு வர மலேசியா முயன்றிருக்கிறது. அதிக பயணிகள் தங்களின் நாட்டவராய் இருப்பதால் இந்த மலேசிய அறிவிப்புக்கு....சீனா ஆதராம் கேட்டிருக்கிறது.....


எது எப்படியோ கண்களால் காணப்படாதவரை, விமானத்தின் பாகங்களை பரிசோதித்து அறிந்து அது எம்.எச் 370 என்னும் அலுமினியப் பறவைதான் என்று அறிவியலார் உறுதி செய்யாதவரை அந்த விமானத்தின் பயணிகள் அத்தனை பேரும் நித்திய ஜீவன்களாய் இந்த பூமியில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கப் போகிறார்கள். ஏதோ ஒரு காலத்தில் விமானம் பற்றிய ரகசியத்தை இந்த பூமி வாய் திறந்து அறிவிக்கக் கூடும் அன்று அறிவியல் சில மைக்ரோ மில்லி மீட்டர்கள் முன்னேறியும் இருக்கக் கூடும்....

அது வரையிலும் அதற்குப் பிறகும்.....இந்த மானுடச் சமூகம் புரிந்து கொள்ள இயலாத இந்த வாழ்க்கை விளையாட்டின் அமானுஷ்யத் தன்மையை மறந்து விட்டு...நான் யார் தெரியுமா என்று மார் தட்டி கொக்கரித்துக் கொண்டே ஜனித்து மரித்து, மரித்து ஜனித்துக் கொண்டே இருக்கும்...!தேவா சுப்பையா...
Saturday, March 22, 2014

பேசுவது யார்...கடவுளா?


எந்த நுனியை பற்றிக்கொள்வது என்பது தான் தெரியவில்லை. ஏதோ ஒரு நுனியைப் பற்றிக்கொள்ள அது எங்கோ இழுத்துச் சென்று விடுகிறது. இப்போது கூட அப்படித்தான்... எந்த ஒரு முகாந்திரமும் இல்லாமல் ஏதோ ஒன்றை படைக்க விரும்பும் பிரயத்தனத்தோடு இதை எழுதிக் கொண்டிருக்கிறேன். அலாதியான விசயங்களை எல்லாம் வார்த்தைப் படுத்த முடியாது என்றாலும் அந்த அனுபவத்தை எப்படியாவது பதிவு செய்து வைத்து விட வேண்டும் என்ற விருப்பம் எப்போதும் ஒரு படைப்பாளிக்கு உண்டு. கனவுகளில் சில பூக்களை நான் காண்பதுண்டு. அந்த பூக்களையும் விவரிக்க முடியாத சில பிரதேசங்களையும், எப்போதும் யாரிடமாவது காட்ட வேண்டும் என்ற ஆவலை என்னால் தடுக்க முடிவதேயில்லை.

அதிகாலையில் எழுந்த கொண்ட பின் மெலிதாய் சில கனவுகள் வந்து என் மனக்கதவினைத் தட்டும். யாருமற்ற சமவெளியில் எந்த வித நோக்கமுமின்றி நான் நடந்து கொண்டிருந்த.. அந்த பொழுதுகள் சட்டென்று எனது புத்திக்குள் எட்டிப் பார்க்கும். சமகாலத்தோடு தொடர்பு இல்லாத அந்த பொழுதுகளையெல்லாம், நான் ஒரு எறும்பு இரை சேர்ப்பது போல மெல்ல மெல்ல சேர்த்து என் நினைவுகளுக்குள் பதுக்கி எடுத்து வைத்துக்கொள்வேன்.

எப்போதாவது ஏதாவது எழுத வேண்டும் என்று தோன்றும் பொழுது திட்டங்களில்லாமல்தான் என் பேனாவையும், வெள்ளை காகிதத்தையும் எடுத்துக்கொண்டு நான் அமர்வதுண்டு. அப்போதெல்லாம் எனக்குள் பதுங்கிக் கிடக்கும் இத்தகைய உணர்வுகள் மெல்ல மெல்ல எழுந்து வீட்டிற்கு வந்த முகமறியாத, யாரென்றறியாத ஆணைக் கூச்சத்தோடு கதவுகளுக்கு பின் நின்று எட்டிப்பார்ப்பது போல.... ஒவ்வொன்றாய் எட்டிப்பார்க்கும்.

அவற்றிடம் என்னை யாரென்று அறிமுகம் செய்து மெல்ல மெல்ல என்னை பரிட்சயப்படுத்திக்கொண்டு அவைகளோடு மெல்ல, மெல்ல நான் சம்பாஷணையைத்  தொடங்கும் போது  அவை தயங்கித் தயங்கி கேள்விக்கு விடையறியாத மாணவனாய் குழப்பமான விழிகளோடு என்னுடன் பேச ஆரம்பிக்கும். இப்படித் தயங்கித் தயங்கி தொடங்கும் தட்டுத் தடுமாறிய பரிமாறல்கள் ஒரு பேராசிரியரைப் போல போகப்போக மிகப்பெரிய விரிவுரையே எனக்கு நடத்தும்.  

இல்லாததில் இருந்து எல்லாமே தோன்றியதாமே... என்று என்னிடம் கேள்வி கேட்டு என் கற்பனையைக் கொஞ்சம் உசுப்பேத்தி விடும். அப்போது நட்சத்திரங்கள் இல்லாத வானத்தில் சிறகுகள் இல்லாமல் நான் மிதந்து கொண்டிருப்பேன். அது ஆழ்கடலில் மிதப்பதைப் போல இருக்கும். மெல்ல மெல்ல எட்டிச்சென்று ஏதோ ஒரு விஷயத்தை பிடித்து விடுவோம் என்ற கனவோடு நான் பிரக்ஞையற்று கற்பனையில் ஆழ்ந்திருப்பது உண்டு.. நீரில் மீன்கள் மிதப்பது போல. இது தான் இன்னதுதான் என்று அறிவதற்கு முன்பே ஏதோ ஒரு புறச் சூழ்நிலை என்னை வெளியே கொண்டு வந்து போட்டுவிடக்கூடாது என்ற கவனத்தோடு நான் பறப்பதாலேயே பல நேரங்களில் என் சிறகினை இழந்து விடுகின்றேன். 


இது இன்னது தான் என்று அறியாமல் எதையோ ஏதேதோ உணர்வுகளோடு பிரக்ஞை அற்று செய்யும்போது அது முழுமை ஆகிறது. யாருமற்ற ஒரு அருவிகள் நிறைந்த ஒரு மிகப்பெரிய கானகத்தினுள் நான் சென்று கொண்டிருந்தேன். காற்றின் சலசலப்பும், மரத்திலிருந்து விழும் சருகுகளின் சப்தமும், பறவைகளின் கீச்சொலியும் தாண்டி அங்கே வேறெதுவும் எனக்கு கேட்க வில்லை. அருவியொன்று தபதபவென்று விழுந்து கொண்டிருந்தது. இயற்கையில் தண்ணீர் பாறையில் மோதி தானே தனக்கு எழுதிக்கொள்ளும் கவிதைதான் அருவி என்பது. கவிதை என்பது எப்போதும் யாரோ யாருக்காகவோ எழுதுவதாக ஆகிவிடாது. மனிதர்கள் எழுதும் கவிதை மட்டும் அவர்களின் மனதைக் கடந்து யாருக்கோ எழுதுவது போல.. அவர்களிடமிருந்து பிரிந்து நின்று துவைதமாகிப் போகிறது.

இயற்கை அப்படி அல்ல அது தனக்கு தானே கவிதையை எழுதிக் கொள்கிறது. ஒரு மழை கவிதை என்று மனிதனுக்குப் படும். அந்தக் கவிதை அவனை உணர்ச்சியின் உச்சத்திற்கு கூட்டிச்சென்று ஏதேதோ உணர்வுகளை கிளறி விடவும் கூடச் செய்யலாம் ஆனால் ஒரு மழை ஒருபோதும் தன்னை வேறு யாருக்காகவும் வரைந்து  கொள்வதில்லை. மழை தனக்குத் தானே கவிதையாகிறது. இசை தனக்குத் தானே இசையாகிறது... ஒரு மெல்லிய தென்றல் காற்று தனக்குத்தானே தென்றலாகிக் கொள்கிறது இப்படித்தான் படைப்பு என்பது எதன் பொருட்டோ நிகழாத போது அது அதற்கே கவிதையாகிப் போகிறது. கவிதை என்பது திட்டமிடல் அல்ல. அது அந்தக் கணத்தின் வலி. அந்தக் கணத்தின் சந்தோசம். அனிச்சையாய் நிகழும் கூடல். அழுந்தப் பதியும் முத்தம். அடர் மெளனம். கேட்க முடியாத சப்தம். வரைமுறைகளற்ற இயக்கம். அது திமிர். அது கர்வம். அது கடவுள். மொத்தத்தில் அது எப்போது நிகழும் என்று யாருக்குமே தெரியாது. தென்றலாய் வருடிக் கொண்டே பெரும்புயலாய் அது அடித்து தீர்க்கும். இன்பம் என்ற மானுடர் கர்வத்தின் மீது நரக நெருப்பாய் எரிந்து அடங்கமாட்டேன் என்று அழிச்சாட்டியம் செய்யும். யாருக்காவும் அது நிகழ்வதில்லை.  

யாருக்காகவோ என்று ஏதோ ஒன்றை நாம் செய்யும் தருணத்தில் அங்கே எதிர்பார்ப்பு நிறைந்துவிடுகிறது. எதிர்பார்ப்பு திட்டமிடலைக் கொடுத்து விடுகிறது.. திட்டமிடல் வியாபாரத்தை புகுத்தி விடுகிறது.. வியாபாரம் பொருளாதாயத்தைக் கொண்டு வந்து நிறுத்தி விடுகிறது. பொருள் மமதையைக் கொடுத்து அறியாமையில் தள்ளி விடுகிறது. அறியாமை ஞானத்திற்கு எதிர்பதம். ஞானம் பேரின்பத்தின் உச்சம். அறியாமை நரகம்...!

கவனமின்றி நான் எழுதிக்கொண்டிருக்கும் இந்த வரிகளும் கூட ஒரு புரவியில் ஏறி திசைகளற்று எங்கோ செல்லும் ஒரு போர்வீரனின் மனநிலையை ஒத்ததுதான். ஏதோ ஒரு போர் எங்கோ இருக்க வேண்டும்.. ஏதோ ஒரு யுத்தம். யார் எதிரி என்றே தெரியாது, எதற்காகப் போர் என்றும் தெரியாது.. ஆனால் போரிட வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இங்கே பயணத்தை செலுத்திக் கொண்டிருக்கிறது.

இலக்குகளின்று செல்லும் இந்த பயணம்..... கனவுகளுக்கு கூட்டிச் செல்லும். கனவுகளோடு கற்பனை வானத்தில் நாம் பறக்கலாம். ஆமாம்.. நீரில் மிதப்பதைப் போல...! புரியாமல் எதை எதையோ எழுதி வைத்து விட்டு அதைப் புரிந்துகொள்ள செய்யும் எல்லா முயற்சிகளையும் இந்த கட்டுரையிலும் நான் செய்து கொண்டிருக்கிறேன்..!

ஓ..கனவுகளே....
நீங்கள் கலைந்து போய் விடுங்கள்...
எனக்கான சித்திரத்தை...
நானே வரைந்து கொள்கிறேன்....
எனக்கான பாடலை நானே பாடிக்கொள்கிறேன்...!
என் பிரக்ஞை நிலைக்குள் 
வந்து விடாதீர்கள்...கற்பனைகளே..
அது வெண்ணிறமானது; அடர் கருப்பானது
ஒளியையும் இருளையும் அளவுகோலாக்கி
கணிக்க இயலாதது...!

இதோ நான் மரிக்கப் போகிறேன். கனவுகளோடு நான் சுற்றித் திரிந்ததெல்லாம் போதும். என் உடலை சர்வ நிச்சயமாய் நீங்கள் எரியூட்டிவிடுங்கள். என் வார்த்தைகளைத் தவிர நான் இருந்தேன் என்பதற்கான எந்த அடையாளத்தையும் நான் விட்டுச் செல்ல விரும்பவில்லை. என்னை எரியூட்டும் முன்பு என்னை ஒரு வெண்ணிற துணியால் மூடிவையுங்கள். எத்தனையோ வர்ணங்களில் எனக்குள் வட்டமிட்டுக் கொண்டிருக்கும் எண்ணங்கள் எல்லாம் அந்த வெண்மை நிறத்துக்குள் கரைந்து காணாமல் போகட்டும். தணலை மூட்டி அதி உக்கிரமாய் தீயை மூட்டி இந்த உடலை பஸ்மாக்கிப் போடும் உதவியை மட்டும் நீங்கள் செய்து விடுங்கள்.....காற்றில் கரைந்து எங்கெங்கோ பரவி சாம்பலாய் இந்த உடல் மறைந்து போகட்டும்....

நான் இப்போது பிரக்ஞை நிலையில்
தூளி உறங்கும் குழந்தையாய்
புரண்டு கொண்டிருக்கிறேன்.... 
ஓ...பிரபஞ்சமே....
நீ தாலாட்டை நிறுத்தி விடாதே....!தேவா சுப்பையா...

Thursday, March 20, 2014

நந்தி....!


எப்போதாவதுதான் வாய்க்கிறது இப்படியான மனோநிலை அடைமழைக் காலத்தில் இருண்டு இடக்கும் பகல் பொழுதில் மழைச்சாரலை உள்வாங்கியபடி திண்ணையில் அவித்த கடலையை அனுபவித்து கொறிப்பது போல. மழையின் தாளத்தை கேட்டிருக்கிறீர்களா நீங்கள்? தப.. தப.. தப்... தப...தப என்று ஒவ்வொரு மழைத் துளியிலும் நிலம் தொட்டு பின் மீண்டும் துள்ளி எழும் காட்சியைக் கண்டிருக்கிறீர்களா? அலாதி என்பதின் அர்த்தம் அப்போதுதான் விளங்கும். எங்கோ வெறித்தபடி பிடித்த இசையைக் கேட்டுக் கொண்டு ஒரு போர்வைக்குள் சுருண்டு கிடக்கும் கதகதப்பு நிமிடங்களைப் போல இருக்கிறது இன்று எனக்கு.

பேச ஏதுமில்லா தருணங்கள் எப்போதும் வந்து போகுமென்றாலும் எண்ணவே ஏதுமில்லா தருணத்தில் விழுந்து கிடப்பது வரம்தானே. மாட்டினைப் பார்த்திருக்கிறீர்களா? மேயும் போதும் நிதானமாயிருக்கும், ஓடும் போதும் நிதானமாயிருக்கும், வண்டியில் கட்டி ஓட்டினாலும் நிதானமாய் இருக்கும், உழவுக்கு கொண்டு சென்றாலும் நிதானமாயிருக்கும்.  நான் சிறுவயதில் சொந்த கிராமத்துக்கு செல்லும் போதெல்லாம் மேய்ச்சலுக்கு சென்றிருக்கிறேன். மாடு மேய்க்கதாண்டா நீ லாயக்கு என்று என்னை நிறைய பேர்கள் திட்டி இருக்கிறார்கள் சிறுபிராயத்தில். அவர்கள் திட்டியது போலவே நடந்து தொலைத்திருக்கக் கூடாதா என்று ஒரு ஏக்கம் வருகிறது இப்போது. மாடு மேய்த்தல் வெகு சுகமானது. பசுக்களையும், எருதுகளையும், எருமை மாடுகளையும், மொத்தமாய் ஓட்டிக் கொண்டு போய் புற்கள் நிரம்பிய இடத்தில் மேய விட்டு விட்டு மரத்தோர நிழலில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் சுகத்தினை வார்த்தைகளில் கொண்டு வந்து விடமுடியாது....

செவளை, கருப்பு, வெள்ளை, மோளை, தெப்பப் பசு, வீரன், சோம்பை, நோஞ்சான்.....பேர் சொல்லி அவற்றை அழைத்து ஓய்ய்ய்ய்ய் எங்ங்குட்டு போற மூதேவி... கண்ணுக்குத் தெரியாம ஓடிப்போயிட்டு பொழுது சாஞ்ச பெறகும் ஒன்னியத் தேடிக்கிட்டுத் திரிய முடியுமா....இங்குட்டு வாஞ்ச...என்று அவற்றை அன்பொழுகும் கோபத்தோடு கம்பெடுத்து மெலிதாய் வாலுக்கு அருகே முதுகில் அடித்து திருப்பும் மோது....சில நேரம் அடி சுளீர் என்றும் விழுந்து விடும்..... பாவமாய் நம்மை பார்த்தபடி ...ம்ம்ம்ம்ம்ம்ம்மா என்று அடித் தொண்டையிலிருந்து அவை கத்தும் போது நம் ஈரக்கொலையில் போய் அது சுளீர் என்று வலியாகும்.

ஆடுகளின் கண்கள் கொஞ்சம் போதையிலிருப்பது போலவே இருக்கும். ஒரு குடிகாரனைப் போல கொஞ்சம் மிதப்பில் இருக்கும் ஆடுகளின் கண்களில் ஒரு வெள்ளந்தித்தனம் இருக்காது. அவை சொக்கிப் போய்தான் எப்போதும் இருக்கும். மாடுகளின் கண்களில் பேரமைதி இருக்கும். கோபத்தைக் கூட நிதானமாய் காட்டத் தெரிந்த ஒரே மிருகம் மாடுதான். சொரசொரப்பான நாக்கினை முதலில் நீட்டி புல்லை தடவி இழுத்து முன் பற்களால் கடித்து இழுத்து வாய்க்குள் போட்டு அரைத்து சொடுக்கிடும் நேரத்திற்குள் இரைப்பைக்குள் தள்ளிவிடும். கூர்மையாய் ஒரு செயலை அனுபவித்து செய்கையில் அதில் வேகம் இருந்தாலும் நிதானம் கிடைத்து விடுகிறது. நிதானம் என்பது வேகத்தின் எதிர்ப்பதம் அல்ல. அது குழப்பத்தின் எதிர்ப்பதம்.

மாடு அசைபோடுவது போல வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்கிறது எனக்கு இப்போது. எங்கும் பார்க்காமல் மெலிதாய் கண்களை மூடிக் கொண்டு அவ்வப்போது மேலே உட்காரும் எறும்பு, ஈக்களை, சிறு சிறு பூச்சிகளை வாலாலும், தோலை உலுப்பியும் விரட்டிக் கொண்டு கால்கள் மடக்கி எங்கோ எதற்கோ என்னவோ நிகழட்டும் இந்தக் கணத்தில் இந்த உணவை மென்று கூழாக்கி அசைபோடுவதே என் வேலை. எத்தனை அதிசயம் வேண்டுமானாலும் இந்த உலகில் நடக்கட்டும். கட்டுக் கட்டாய் எத்தனை புற்கட்டுக்களை என் முன் போட்டாலும் நான் கவலைப் படமாட்டேன் என்பது போல அசை போடும் மாடுகளைப் போல...

வாழ்க்கையை அசைபோடத் தெரிந்துவிட்டால் வாழ்க்கையின் அழகு என்ன என்பது தெரிந்துவிடும். போன வாரம் சந்தித்து வெகு நாட்கள் ஆன நண்பர்கள் சிலரை சந்திக்க நேர்ந்தது. என்னுடைய நண்பர்களில் பெரும்பாலானோர்கள் தேடலில் இருப்பவர்கள். வாழ்க்கை பற்றி,  மதங்களைப் பற்றி, பல்வேறு கொள்கைகள், சித்தாந்தங்களைப் பற்றி, கடவுளைப் பற்றி நாங்கள் வெகு நேரம் மணிக்கணக்காக முன்பெல்லாம் பேசுவோம். அது ஒரு மாதிரியான காலம். என்னவோ ஏதோ என்று பதறிப் பதறி எதையோ ஒன்றை நிறுவி எல்லாம் தெரியும் என்று சொல்லிக்கொள்ள முனைந்த ஒரு பருவம். ஒட்டு மொத்த பிரபஞ்சத்தையும் ஒரு சிறு மெதுவடையாய் நினைத்துக் கொண்டு காகிதத்தில் வைத்து என்னை பிழிந்த அறியாமை நிறைந்த காலம். தர்க்கத்தின் மூலம் சத்தியத்தை நிறுவ விரும்பிய தன்முனைப்பும், எதிராளியின் நம்பிக்கையினை உடைத்தெறிய முனைந்த பைத்தியக்காரத்தனமும் மிகுந்து கிடந்த நாட்கள் அவை.

ஓஷோ மெல்ல மெல்ல என்னுள் புகுந்து கொண்டிருந்த அந்த 2002 ஆம் ஆண்டில் தொடங்கி 2004 வரை தொடர்ச்சியாய் ஓஷோவைத்தான் அதிகம் படித்துக் கொண்டிருந்தேன். அதன் நீட்சியாகத்தான் தத்துவங்கள், இதிகாசங்கள், புராணங்கள், கொள்கைகள், இன்ன பிற நிறுவல்களை  விட்டு எல்லாம் என்னால் வெளியே வர முடிந்தது. சுதந்திரம் என்பது எதையோ எல்லையில்லாமல் பின்பற்றுவது அல்ல, பின்பற்ற ஒன்றுமே இல்லை என்பதைத் தெரிந்து கொண்டு எதையுமே பின்பற்றாமல் இருப்பது. ஒரு முழு சுழற்சிக்குப் பிறகு சற்றேறக்குறைய பத்து வருடங்களுக்கு பிறகு அதே நண்பர்களை சந்தித்த போது.....

ஏன் யாரையும் இப்போதெல்லாம் அடிக்கடி தொடர்பு கொள்வது கூட இல்லை என்று கேட்டார்கள். அவர்களின் உரிமைக்குப் பின்னால் இருந்தது பேரன்பு. தொடர்பு கொள்வதும் கொள்ளாததும் பிடித்தலிலும் பிடிக்காததிலுமா இருக்கிறது? ஒவ்வொருவரின் வாழ்க்கையும் ஒவ்வொரு விதம். என் வாழ்க்கை என்னவிதம் என்றே எனக்குச் சொல்லத் தெரியாத ஒரு மனோநிலையில் நான் வாழ்ந்து கொண்டிருப்பதை எப்படி அவர்களுக்கு நான் சொல்வது. சிரித்தபடியே ஒன்றுமில்லை சும்மா அப்படீயே போய்க்கொண்டிருக்கிறது பொழுது என்று நான் சொன்னதற்கு மழுப்பாமல் பதில் சொல்லுங்கள் என்று நிர்ப்பந்தக் கத்தியை என் கழுத்தில் உரிமையோடு வைத்தது நண்பர்கள் கூட்டம். நிஜமாகவே என்னிடம் பதில் ஏதும் இல்லை. சொல்ல ஒன்றுமே இல்லை என்பதை சொன்னால் யாரும் நம்புவதும் இல்லை. நிஜமாகவே யாருக்கான செய்தியும் என்னிடம் இல்லை. சமகால எந்த நிகழ்விலும் எனக்குப் பிடிப்பே கிடையாது என்றேன்...அவர்களிடம்.

இப்போது எந்த திசையில் பயணம்? ஓஷோதான் இன்னமுமா என்று பழைய கொட்டிலுக்குள் என்னை வா வா என்று அழைத்த நண்பரின் கையை ஆதரவாய் பற்றிக் கொண்டு சொன்னேன் நான் எதையுமே பின்பற்றுவது கிடையாது நண்பா இப்போது. எனக்கு மதமோ, சாதியோ, சித்தாந்தமோ, கொள்கையோ, கட்சியோ எதுவுமே கிடையாது. நான் வாழ்கிறேன். பிடித்ததை செய்யும் போதே அது பிடிக்காமல் போய்விடுகிறது. பிடிக்கவில்லை என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே அது பிடிக்க ஆரம்பித்து விடுகிறது. குளிரில் நின்று கொண்டு வெயிலை நினைத்து ஏங்குவதும், வெயிலில் நின்று கொண்டு குளிரை நினைத்து ஏங்குவதும்தான் இங்கே அனேகரின் வாழ்க்கையாய் இருக்கிறது. எனக்கு எதுவும் வேண்டாம். ஒவ்வொரு நாளும் எந்த திசையில் என்னை விரட்டுகிறதோ அங்கே ஓடிக் கொண்டிருக்கிறேன்.

நீங்கள் சரி, நான் தவறு அல்லது நான் சரி நீங்கள் தவறு என்ற கோட்பாடுகளுக்குள்ளும் நான் வர விரும்பவில்லை. என்னை யாரோவாகவோ நீங்கள் பார்க்காதீர்கள். இதோ இந்த சரீரத்துக்குள் கொஞ்ச நாள் வாழ்ந்து போக வந்த ஒரு ஜீவன் என்று மட்டும் கருதுங்கள். பிழைப்புக்காய், உயிர் வளர்க்க இந்த வேஷம். இந்த வேஷம் கொஞ்ச நாளில் மாறும் என்றேன். நேரம் கிடைக்கும் போது வாருங்கள் நீங்கள் குழம்பிப் போயிருக்கிறீர்கள் என்று சொன்ன அந்த நண்பர்கள் அனைவருமே நல்லவர்கள். அன்றும் தேடலில் இருந்தார்கள், இன்றும் தேடலில் இருக்கிறார்கள். நாளையும் தேடிக் கொண்டிருப்பார்கள். 

போதும். வயிறு நிரம்பி இருக்கிறது. மேய்ச்சல், மேய்ச்சல் என்று புற்களையும், முட்களையும், தழைகளையும் இழைகளையும் திகட்ட திகட்ட தின்றாகி விட்டது. நான் அசைபோட்டுக் கொண்டிருக்கிறேன் இப்போது. நல்லதோ, கெட்டதோ தின்றது எல்லாம் புத்தி என்னும் இரைப்பையில் கருத்துக்களாய் படிந்து கிடக்கிறது. மீண்டும் அவற்றை எல்லாம் நினைவுபடுத்தி, அசைபோடுவதுதான் வேலை இனி. எது, எது எப்படியோ அவற்றை அப்படியே அசைபோட்டுக் கூழாக்கி செரித்து எரித்து விட வேண்டும். ஒன்றும் இருக்கக் கூடாது மிச்சமாய். ஒரு நாள் ஏதோ ஒரு விறகு அடுக்கின் மீது தீக்கு இரையாகிப் போகும் இந்த உடல், அல்லது பூமியின் ஏதோ ஒரு பகுதியின் மண் அரித்து தின்றுவிடும். எல்லா நினைவுகளையும் அசைபோட்டுக் கொண்டே ஒரு கோயில் காளை மாதிரி சிவனே என்று சிவன் முன் நந்தியாய் நான் கிடக்கிறேன்.

ஒட்டு மொத்த பிரபஞ்சமும் என் முன் சிவனாய் விரிந்து கிடக்க....கேட்கவும் சொல்லவும் எதுவுமற்று வெறுமனே அசைபோட்டுக் கொண்டிருக்கிறேன்.... இந்த வாழ்க்கையை வெறுமையாய் பார்த்தபடியே.....


எல்லாம் கொஞ்ச காலம்தான்...!தேவா சுப்பையா...

புகைப்படம் உதவி: சசிதரனின் பேஸ்புக் பக்கம்Sunday, March 16, 2014

மரத்தடி...!


கவிதை எழுதலாமா?  காஃபி குடிக்கலாமா? எதுவும் செய்யாமல் வெறுமனே பால்கனிக்குப் போய் வேடிக்கை பார்க்கலாமா? இல்லை ஏதேனும் புத்தகத்தின் இரண்டு மூன்று பக்கங்களைப் புரட்டிவிட்டு அதன் தாக்கத்தில் எங்கோ போய் விழுந்து புரண்டு கொண்டிருக்கலாமா? பிரியமான இசையைக் கேட்கலாம் கூடத்தான்.  தமிழின் ஆகச்சிறந்த படங்களின் தொகுப்பினை சேமித்து வைத்திருக்கும் போல்டர் கூட புஷ்டியாகிவிட்டது. பற்றாக்குறைக்கு நண்பர்கள் குறிப்பிட்டுச் சொல்லி பார்க்க சொன்ன உலகத் திரைப்படங்கள் வேறு கூடிக் கொண்டே போகிறது. யூ ட்யூபில் பார்த்து பார்த்து தொகுத்து வைத்திருக்கும் பாடல்களை, இன்னபிற காணொளிகளையும் கேட்டு முடிக்க தொடர்ச்சியாய் ஒருவாரம் கூட ஆகலாம்.

யூ ட்யூப் தொகுப்பில் இன்னதுதான் இருக்கிறது என்று சொல்ல முடியாது. ராஜா சார், ரகுமான், எம்.எஸ்.வி, தியாகராஜ பாகவதர் என்று தொடங்கி கெனி ஜியின் சாக்ஸ்போன்,  பெஸ்ட் ஆஃப் மொசார்ட், பண்டிட் ஹரிபிரசாத் செளரஷ்யாவின் புல்லாங்குழல், யார் யாரோ வெறுமனே பாடி தொகுத்து வைத்திருக்கும் கர்நாடக சங்கீதத் தொகுப்பு, இஷா அமைப்பினரால் கம்போஸ் செய்யப்பட்ட பாடல்கள், சைவ சித்தாந்தம் பற்றிய தொகுப்புகள், உலகின் புகழ்பெற்ற மேடைப் பேச்சுக்கள்,   இதைக் கேளுங்கள் நன்றாயிருக்கும் என்று கூறி அவ்வப்போது நண்பர்கள் கொடுத்த இணைப்புகள், குன்னக்குடி வைத்தியநாதன், மதுரை சோமு என்று எப்போது எது பிடிக்குமோ அதை தொகுத்து வைத்துக்கொண்டு பொறுமையாய் பிறகு மாடு அசை போடுவது போல ஒவ்வொன்றாய் கேட்பதும் எனக்குப்பிடிக்கும். ஒவ்வொரு முறையும் தொடர்ச்சியாய் கேட்க விடாமல் வேறு ஏதாவது ஒரு இடையூறு வந்துவிடுவதால் இதுவரையில் முழுமையாய் அவற்றையும் கேட்டு முடிக்க முடியவில்லை. 

ஏதோ ஒன்றை செய்யலாம். இல்லை எதுவும் செய்யாமல் சிவனே என்று உட்கார்ந்திருக்கலாம். சுற்றி ஓராயிரம்  விசயங்கள் நடந்து கொண்டேயிருக்கின்றன. எதைப் பற்றியும் யோசிக்காமல் இருப்பதே நலம். இந்த உலகத்துக்குள் கொண்டு வந்து நிறுத்தி விவாதம் செய்ய வைக்காத எதையும் நான் செய்யத் தயார்தான். இப்படி இருப்பதாலேயே நண்பர்களோடு கூட பேசுவதற்கு எனக்கு ஒன்றுமே இருப்பதில்லை. வெகு நேரம் பால்கனியில் அமர்ந்து அதிகாலை வானத்தின் நீல நிறத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். எந்த செய்தியும் என்னிடம் இல்லை என்று வானமும் என்னைப் [போலவே மெளனமாய் இருந்தது. தூரத்தில் ஒரு குட்டி மேகம் நடைபயிலும் குழந்தையைப் போல தத்தித் தத்தி மிதந்து கொண்டிருந்தது. என்ன இருக்கும் இந்த வானத்தின் முடிவினில்? எங்கே செல்லும் இந்த அகண்டவெளி என்று நான் சிறுவயது முதலே யோசித்துக் கொண்டிருக்கிறேன். பதில் ஒன்றும் கிடைக்காதுதான் ஆனால் யோசிப்பது சுகமாய் இருக்கிறது எனக்கு. விடுமுறை நாளில் அதிகாலையில் வேலை ஏதும் இல்லாமல் என்னைப் போல எழுந்து கொள்ளும் பைத்தியக்காரர்கள் வேறு யாரும் இருக்கிறார்களா என்று பார்த்துக் கொண்டே நடக்கலாம் என்று கீழே இறங்கினேன்.

இரவின் வாசனையோடு மெலிதாய் விடிந்து கொண்டிருந்தது பொழுது. முழு இரவும், முழுப் பகலும் ஒருவிதமானது என்றால், விடிந்தும் விடியாத அதிகாலையும், மெல்ல இருட்டத் தொடங்கும் அந்திப் பொழுதும் வேறு விதமானது. வசீகரமான அந்தக் கலவை எனக்குப் பிடிக்கும். ஒரு ஓவியன் வர்ணங்களை குழப்பி புது நிறத்தை பெற முனைவது போல இருக்கும் இரவின்நுனியும் பகலின் முடிவும். வேலை நாட்களில் மனிதர்களோடு பேசி, ஓடி, ஆடி, கோபப்பட்டு, சிரித்து, நடித்து, ஏமாந்து, ஏமாற்றி, மிகப்பெரிய நாடகத்துக்குப் பிறகு அசுரத்தனமாய் மாலைப் பொழுதை கடந்து வரவேண்டி இருக்கும். ரசிக்க அப்போது ஒன்றுமே இருக்காது. இப்போது எல்லாம் வாரத்தில் ஒரு நாளாவது ஓய்வாய் இருந்துவிட மாட்டோமா என்று ஏங்கியபடியேதான் நான் ஓடிக் கொண்டிருக்கிறேன். ஓய்வு என்பது விடுமுறை என்று என்னால் எடுத்துக் கொள்ள முடியாது.  ஓய்வு என்பது இடையூறு இல்லாமல் பிடித்த விசயத்தில் லயித்துக் கிடப்பது. 

யோசித்துக் கொண்டே மெல்ல நடந்து கொண்டிருந்தேன். ஆள் அரவமற்ற தெருக்களுக்குள் அதிகாலையிலேயே எழுந்து கொண்ட பட்சிகள் உணவு தேட வெளியே பறப்பதற்கு முன்பாக மரங்களிலமர்ந்து காச் மூச் என்று கத்திக் கொண்டிருந்தன. அவை மகிழ்ச்சியாக  ஒன்றை ஒன்று கொஞ்சிக் கொண்டிருக்கலாம், அதிகாலையிலேயே பசி எடுத்த குஞ்சுகள் அம்மா பறவையையோ அல்லது அப்பா பறவையையோ பார்த்து பசியில் விய்யா.. விய்யா என்று கத்திக் கொண்டிருக்கலாம். குஞ்சுப் பறவையைத் தன் சிறகால் அணைத்து இதோ உணவோடு வந்துவிடுகிறேன் என்று தாய்ப்பறவை அலகால் முத்தமிட்டுக் கொண்டிருக்கலாம், காதல் பறவைகள் உரசிக் கொண்டு உலக மொழிகளில் இதுவரையில் எழுதப்படாத கவிதைகளைப் பரிமாறிக் கொண்டிருக்கலாம், வலியால் சிலதும், கோபத்தில் சிலதும் கத்திக் கொண்டிருக்கலாம்....

வழி நெடுக மரம். மரம் முழுதும் பறவைகள். ஒவ்வொரு மரத்திலும் ஒவ்வொரு வாழ்க்கை. ஒவ்வொரு விடியல். ஒவ்வொரு பிழைப்புப் போராட்டம். நடந்து கொண்டே வெகுதூரம் வந்து விட்டேன். ஒரு மரத்தின் தடித்த வேரின் மீது போய் அமர்ந்தேன். மரத்தின் மீது வாட்டமாய் சாய்ந்து கொண்டேன். பச்சையாய் ஈரத்தோடு இருந்த மரத்தின் பட்டைகள் செதில் செதிலாய் வெடித்துக் கோடுகள் ஆழமாய் இருந்தன. பழைய மரம் போல இருக்கிறது. எனக்கு என் அப்பத்தாவின் நியாபகம் சட்டென்று வந்தது. நகரத்தின் மரங்களும், கிராமத்தின் மரங்களும் ஒரே செய்தியைத்தான் ஒரே உணர்வைத்தான் தருகின்றன. மரங்கள் என்ன மனிதர்களா? இடத்திற்கு இடம், சூழலுக்குச் சூழல் தன்னைத் தானே மாற்றிக் கொண்டு, ஏமாற்றி வாழ்ந்து செல்ல.

எங்கு நட்டாலும் மரம் மரம்தான். கார்பன் மோனாக்சைடை உமிழ்ந்து காற்றை மாசுபடுத்த ஆயிரம் வாகனங்களை மனிதன் கண்டுபிடித்து அதை அறிவியல் சாதனை என்று மார்தட்டிக் கொள்வதைப் போல மரங்கள் மார்தட்டிக் கொள்வதில்லை. அவை போதும் போதும் என்னுமளவிற்கு அவற்றின் கடைசிக் காலம் வரை மனிதர்கள் சுவாசிக்க ஆக்ஸிஜனை கொடுத்துக் கொண்டே இருக்கின்றன. மனிதர்களுக்குத்தான் கொஞ்சம் கூட நன்றி விசுவாசம் இருப்பது கிடையாது. இயற்கையின் பிச்சையில் வாழ்ந்து கொண்டு எல்லாம் இவனே செய்தது போல இறுமாந்து கொள்கிறான். பாவம் மரங்களும் இன்ன பிற தாவரங்களும். அவை ஒரு மனிதனை உருவாக்கி, சுமந்து, பின் அவன் மரணிக்கும் வரை அவனோடே பயணிக்கின்றன. பின்னொரு நாள் ஏதோ ஒரு மரம் விறகாகி பின் அது உயிரற்ற மனிதனின் உடலோடு பஸ்பமாகி தன் வாழ்க்கையின் இறுதியை எட்டிப் பிடித்து வேறு வடிவம் எடுத்துக் கொள்கிறது. மரங்கள் எரியும் போது மரங்கள் அழுவதில்லை ஏனென்றால் அவை வாழ்வில் ஊறிக் கிடப்பவை. இருப்பதும் இல்லாததும் பெரியவிசயம் இல்லை அவற்றுக்கு மனிதர்களைப் போல.

நான் நீண்ட பெருமூச்சோடு மரத்தின் வேர்களுக்குள் கிடந்தேன். விடியற்காலையில் இப்படி மரத்தின் மடியில் ஓய்ந்து கிடப்பது சுகமாயிருந்தது. குருக்கத்தியில் நான் என் வீட்டுப் பின்புறத்து தோட்டத்தில் இருக்கும்  பருத்த புளிய மரத்து வேர்களுக்கு இடையே இப்படி கிடப்பதுண்டு என்பதை இங்கே தட்டச்சு செய்து முடிக்கும் போதுதான் குருக்கத்தி பற்றி தெரியாதவர்களுக்கு என்னவென்று தெரியும் குருக்கத்தி பற்றி என்று யோசிக்கிறேன்.  தொடர்ச்சியாய் என்னை வாசிப்பவர்களுக்கு குருக்கத்தியையும் என்னையும் பிரித்துப் வைத்து பார்க்கக் தெரியாது. குருக்கத்தி என் பூர்வீக குக்கிராமம். நகரத்தில் மூச்சு திணற பிழைத்துக் கொண்டிருக்கும் இந்த கிராமத்தானின் மூதாதையர்கள் மண்ணோடு  கட்டிப் புரண்ட இடம். கொத்திக் கொண்டும், உழுது கொண்டும், விதைத்துக் கொண்டும் கண்மாய்க் கரையோரம் படுத்துறங்கி வற்றி போன கண்மாய் தூர்ந்து போவதற்கு முன்னாலாவது வா மழையே.... என்று ஏக்கமாய் வானம் பார்த்த மனிதர்கள் அவர்கள். செம்மண் சரளையும், கருவேல மரங்களும் இப்போதும் என்னிடம் ஊருக்குச் சென்றால் நிறைய பேசுவதுண்டு. நிறைய வலிகளையும் அந்த வலிகளோடு வாழ்க்கையை கொண்டாடிய மனிதர்களையும் பற்றி அதிகம் புரிந்து வைத்திருப்பவை அவைதான். மழை பெய்தாலும் அவற்றுக்குத் தெரியும், மனிதன் மரித்தாலும் அவற்றுக்குத் தெரியும்.

என் உடலுக்குச் சொந்தமான பூமி அது. அங்கேதான் இந்த உடல் காற்றாயிருந்தது, மண்ணில் தாது சத்துக்களாய் கிடந்தது. விதையாயிருந்தது. பழமாயிருந்தது, காய்கறிகளாயும் இழை, தழையாயும் இருந்தது. அங்கிருந்துதான் இந்த உடல் கிடைத்தது. சொந்த ஊர் என்பது வெறுமனே முன்னோர்கள் வாழ்ந்து மரித்த இடம் மட்டுமல்ல. அது இந்த உடலாய் ஆவதற்கு முன்பு  பல்வேறு சத்துப் பொருட்களாயும் இந்த சதைக் கோளம் பரவிக்கிடந்த இடம். எந்த பாட்டன் வைத்த மரம் என்று யாரும் சொன்னதில்லை ஆனால் எல்லோரும் என் வீட்டு பின்னாலிருக்கும் அந்த மரத்தடியில் விளையாடி இருக்கிறார்கள். இன்னமும் போதும் போதுமென்னும் அளவிற்கு காய்த்துக் கொடுக்கிறது அந்த புளியமரம்.

முன்பெல்லாம் ஏதோ ஒரு புத்தகத்தோடு அந்தமரத்தின் வேர்களுக்குள் நான் ஒடுங்கிக் கிடப்பேன்.  மிக பாதுகாப்பான ஒரு கதகதப்பான இடமாய் அது இருக்கும். தாயின் கருவறையில் மிதந்து கிடக்கும் சிசுவாய் அங்கே நான் எண்ணமற்ற வெளியில் மிதந்து கிடந்திருக்கிறேன். மரத்தின் வேர்களுக்குள் போய் அமர்ந்த அடுத்த நொடியில் மனம் நின்று போகும். மரம் இருக்கும். மரம் மட்டுமே இருக்கும். மீண்டெழுந்து நான் பல நாட்கள் உடல் புகுந்திருக்கிறேன். பட்டை பட்டையாய் இருக்கும் அந்த மரத்தினூடே எறும்புகள் ஊர்ந்து கொண்டிருக்கும், சிறு பூச்சிகள், மரம் முழுதும் பறவைகள், என்று மிகப்பெரிய சம்சாரி அந்த மரம். பெரிய கை. என் வீட்டுக் கொல்லையில் நின்று கொண்டு பலரின் மரணத்தை அறிந்து வைத்திருப்பவள். பல திருமணங்களை பார்த்து ரசித்திருப்பவள். சண்டைகளையும் சச்சரவுகளையும் பார்த்து பார்த்து புரிந்து வைத்திருக்கும் அனுபவஸ்தி.

ஏப்ப்ப்பத்தா......என்ன செஞ்சுகிட்டு இருக்க நீய்யி.....என்று கேட்டுக் கொண்டேதான் அவளருகே செல்வேன். கை வைத்து மரத்தை தடவி, கன்னத்தோடு கன்னம் வைத்து கொஞ்சம் மரத்தை விரலால் சுரண்டி, அதன் பச்சைத் தன்மையை விரலுக்குள் வாங்கி முகர்ந்து, புளிக்கும் காயையும், இனிக்கும் பழத்தையும் எடுத்து ஆவலாய் கடித்து தாயின் முலை பற்றி இழுத்து பாலருந்தும் குழந்தையாய் நான் உண்டிருக்கிறேன். அது வெறுமனே பார்ப்பவர்க்கு  ஒரு மரம். அதை வெறுமனே பார்த்தபடி ஆயிரமாயிரம் எண்ண ஓட்டத்தோடு எல்லோரும் ஓடிக் கொண்டிருக்கலாம். அந்த மரம் மட்டுமல்ல இந்த உலகிலிருக்கும் எந்த மரமும் ஒரு மரம் மட்டுமல்ல. அங்கே அதைச் சுற்றி ஒரு வாழ்க்கை நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இளைப்பாற எத்தனையோ ஜீவன்கள் அதன் நிழலிலும் அதன் மீதிலும் வந்து அமர்ந்து கொண்டே இருக்கின்றன.

எவ்வளவு நேரம் ஆனது என்று யோசிக்காமல் என் நகரத்து விடுமுறை தினத்தின் காலையில் அந்த மரத்தின் மடியில் கால் நீட்டி சாய்ந்தமர்ந்திருந்தேன். புத்தகம் படிப்பதைக் காட்டிலும், இசையைக் கேட்பதைக் காட்டிலும், தத்துவம் பேசுவதைக் காட்டிலும், கடவுள் தேடுகிறேன் என்று மமதை மொழியை மனதோடு பேசிக் கொண்டிருப்பதைக் காட்டிலும்....... மொழியற்ற இயற்கைக்குள் விழுந்து கிடப்பதே பெரு ஓய்வு என்று எனக்குத் தோன்றியது.

இனி ஓய்வென்று கான்கிரீட் சுவர்களுக்குள் அமர்ந்து கொண்டு ஏதேதோ செய்வதைக் காட்டிலும், ஞானம் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை ஏதோ ஒரு மரத்தடியில் விழுந்து கிடப்போம் என்று யோசித்தபடியே....

எழுந்து வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.  மரங்கள் எல்லாம் மெளனமாயிருந்தன.


தேவா சுப்பையா...


Wednesday, March 12, 2014

கணக்குல புலி...!


கணக்குன்னாலே நமக்கு ஏழாம் பொருத்தம். தர்க்க ரீதியா ஏன் எதுக்குன்னு விளக்கம் கொடுக்க முடியாத எந்த விசயமா இருந்தாலும் என் மூளைக்குள்ள அவ்ளோ சீக்கிரம் ஏறாது. ட்ரிக்காணாமேட்ரியும், அல்ஜிப்ராவும், தேற்றமும், மறுதலையும் மண்ணாங்கட்டியையும் கண்டாலே எனக்கு எப்பவுமே அலர்ஜி. இந்த லெட்சணத்துல ப்ளஸ் ஒன் படிக்கும் போதே ப்ளஸ் டூவுக்கு ட்யூசன் வேற. க்ளாஸ்ல எக்ஸ்ப்ரஸ்  வேகத்துல பாடம் நடத்துறப்ப நம்பியார், பி.எஸ். வீரப்பா கணக்கா மிரட்டுற வாத்தியாருங்க எல்லாம் இன்டிவிஜுவலா ட்யூசன் போறப்ப அவுங்க ட்யூசன் க்ளாஸ்ல எம்.ஜி.ஆரா மாறி "நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே..."ன்ற ரேஞ்ச்சுக்கு கொஞ்சிக் குலாவுவாங்க. மாசக்கடைசியில ட்யூசன் பீஸ் லேட்டாயிடுச்சுன்னா புருசன் மேல கோபமா இருக்குற பொண்டாட்டி மாதிரி மூஞ்ச தூக்கியும் வச்சுக்கிடுவாங்க....!

விஜயகுமார் சார்கிட்டதான் நான் கணக்கு ட்யூசன் போனேன். பிசாசு எங்க இருந்தாலும் அது பிசாசுதானே...? அது க்ளாஸ் ரூம்ல மட்டும்தான் பிசாசா என்ன? எனக்கு ட்யூசன்லயும் கணக்கு பிசாசாதான் தெரிஞ்சுது. இந்தக் கொடுமையில வீட்ல வேற டாக்டர் ஆகலேன்னா கூட பரவாயில்லை எப்டியாச்சும் இன்ஜினியர் ஆகிடுவீல்ல..????!!!!!! அதுவும் கூட ஆகலேன்னா நீ எதுக்கும் லாயக்கு இல்லேன்னு ஒரு இக்கு வச்சே பேசிட்டு இருப்பாங்க. நானும் காலையில அஞ்சரை மணிக்கு  SPT பஸ்ஸ பிடிச்சு பட்டுக்கோட்டை போயி ஆறரை டூ ஏழரை பிஸிக்ஸ்க்கும், ஏழரை பிடிச்ச கணக்குக்கு ஏழரை டூ எட்டரைக்கும் ஓடி முடிச்சுட்டு அப்புறம் லபோ திபோன்னு ஸ்கூல்குள்ள போவேன். சாயந்திரம் நாலரை டூ அஞ்சரை கெமிஸ்ட்ரி, அஞ்சரை டூ ஆறரை பயலாஜி ட்யூசன். காலையில வெள்ளன எழுந்திரிச்சு ரேஸ்ல ஓடுற மாதிரி ஓடிட்டு க்ளாஸ்ல போய் உக்காந்து எங்க பாடம் கவனிக்கிறது. கிளாஸ் முழுக்க நல்லா படிக்கிற பசங்க ஒரு 10 பேரும் நல்லா படிக்கிற மாதிரி நடிக்கிற என்னை மாதிரி மிச்சப் பேரும் இருப்போம். எல்லோருக்குமே  ஒரே டாக்டர், இன்ஜினியர் கனவுதான்.

பப்ளிக் பரீட்சை அன்னிக்கு முதல் நாள் என்னோட எக்ஸாம் ஹாலுக்குள்ள நுழைஞ்சப்பவே என்னோட இன்ஜினியர் கனவு தடதடன்னு ஒடைஞ்சு விழுந்து மண்ணோடு மண்ணாகி சாம்பலாப் போச்சு. பின்ன என்னா சார்? எக்ஸாம் ஹாலுக்குள்ள என்ட்டர் ஆகும் மெயின் டோர் கடந்து உள்ள போனா டோர் ஓரமா முன்னாடி க்ளாஸ் போர்ட ஒட்டின டெஸ்க் என்னோடது. எனக்கு முன்னாடி சுவர்தான். எனக்குப் பின்னால பாதை அதுக்கப்புறம் வேற ஒரு கண்டத்துல உட்காந்து இருக்க மாதிரி அடுத்த பையன்.  எனக்குன்னே போட்டு வச்சமாதிரி இருந்த அந்த டெஸ்க் மேலதான் என் விதி டிஸ்கோ ஆடிட்டு இருந்துச்சு. சரி கருமம் தொலையிது சைட்ல எவனாச்சும் உருப்படியான ஆளு இருந்தா பாத்து எழுதியாச்சும் கட் ஆஃப் மார்க்காவது எடுத்து செல்ஃப் பினான்ஸ் காலேஜ்ல பி.இ சேந்துடலாம்னு லெஃப்ட்ல திரும்பினா அங்க என்ன பாத்து ஈ..ஈ..ஈ..ன்னு இளிச்சுக்கிட்டு இந்திரஜித். அடக் கருமாந்திரம் புடிச்சவனே உன்னிய ஏன்டா என் கூட போட்டாய்ங்க உன் தலையில ஒரு ரூபா வச்சு பட்டுக்கோட்டை மணிக்கூண்டுல ஏலத்துக்கு விட்டா கால்ரூபாய்க்குதானடா உன்னைய கேப்பாய்ங்க... உன்னிய வச்சு நான் என்னடா பண்றதுன்னு யோசிச்சுட்டே சோகமா இந்திரஜித்த பாத்தேன்.

”ஆளு....கொஞ்சம் டவுட் கேட்டா எனக்கு காட்டு ஆளு...., நீ நல்லா படிப்பேன்னு எனக்குத் தெரியும் ப்ளீஸ்(???!!!!!)....” ன்னு என்னை பாத்து கெஞ்சுன இந்திரஜித்த பாத்தா எனக்குப் பாவமா தெரிஞ்சுது. என் கெட்அப்ப வச்சு என்னைய நம்பிட்டு இருக்கானே நாதாறின்னு உள்ளுக்குள்ள ஒரு சந்தோசம் வந்தாலும், பில்டப் எங்கயாச்சும் பரீட்சை எழுதுமா? கெட்அப் வந்து மார்க் வாங்குமா? தென்னாடுடைய சிவனே இது என்ன சோதனை, என்னை எப்டியாச்சும் ப்ளஸ் டூ பாஸ் பண்ண வைக்க வேண்டியது உன் பொறுப்புன்னு வேண்டிக்கிட்டே தமிழ் பரீட்சைய எழுதினேன். மொதல்ல உயிரோட இருக்கணும் அப்புறம்தான் மத்த விசயம் எல்லாம். அது மாதிரி பி.இ ஆவது புடலங்காயாவது... எப்டியாச்சும் பாஸ் பண்ணினா சரிதான்னு நினைச்சு தமிழ் ஃபர்ஸ்ட் பேப்பரையும் செகண்ட் பேப்பரையும் எழுதி முடிச்சேன். தமிழ்லதான் நாம விளையாடுவோமே.... அதைப் பாத்து இந்திரஜித் என் அழெகுல மயங்கி ரொம்பவே சந்தோசப்பட்டுட்டான். ” சில்லி சில்லி தமிழ் கேள்விக்கே திணறி நிக்குறியே இந்திரஜித்து, கணக்குப் பரீட்சை அன்னிக்கு நாம என்னடா பண்ண போறோம் நான் பெத்த மக்கான்னு....”  உள்ளுக்குள்ள அழுதுகிட்டே மூக்க உறிஞ்சிக்கிட்ட்டே தங்கப்பதக்கம் சிவாஜி கணக்கா கொஞ்சம் ஸ்டடியாவே ரெண்டு பரீட்சையும் எழுதி முடிச்சேன்.

கணக்கு பரீட்சை பத்தி கவலைப்படாதீங்க நான் இருக்கேன்ன்னு விஜயகுமார் சார் ட்யூசன்ல சொன்னதை கேட்ட உடனே ஆபத்பாண்டவா அனாதை ரட்சகா..... பரப் பிரம்மமேன்னு கால்ல விழுந்து சரணாகதி ஆகாத கொறையா அவர் கொடுத்த நாலு மாடர்ன் கொஸ்டின் பேப்பரையும் பொட்ட தட்டுத் தட்டி நடு ராத்திரியில பேப்பரைக் கொடுத்தா கூட கடகடன்னு எழுதிக் குடுத்துடுற அளவு செம்மையா டெவலப் ஆகி இருந்தேன். விஜயகுமார் சார்....இந்த நாலு மாடல் கொஸ்டீன் பேப்பரையும் படிச்சவன்...200 க்க்கு 190 இல்ல....அப்டீன்னு சொல்லி கொஞ்சம் கேப் விட்டு...எங்களை எல்லாம் பாத்து ஒரு அசால்ட்டா ஒரு லுக் விட்டுட்டு.....

ஏன் சென்ட்டமே எடுக்கலாம்னு மீசைய முறுக்கிட்டு சொன்னப்ப... அடா..அடா... இவரல்லவோ வாத்தியார், இப்படி ஒரு ஆசான் கிடைக்க என்ன தவம் செய்தேன்... யான்னு ஆனந்தக் கண்ணீரே வந்துடுச்சு எனக்கு. விட்றா...விட்றா.... நாம எல்லாம் இன்ஜினியர் ஆகாம வேற எவன் ஆவான்ன்னு சொல்லி பி.இ ல என்ன க்ரூப்ல ஜாயின் பண்ணலாம்னு எல்லாம் யோசிக்க ஆரம்பிச்சுட்டேன்.

மூன்றாம் பிறை படத்துல கமல் நரிக் கதை சொல்வாருல்ல ஸ்ரீதேவிக்கிட்ட 

” ஹஹஹ நான் ஆண்டவன் அனுப்பிய புருஷன்
ஹஹஹ ஹஹஹ உங்களை ஆள வந்திருக்கும் அரசன்”

அதே டோனோட திமிரா சட்டைக் காலர தூக்கிவிட்டு நடந்துகிட்டு இருந்தேன். ஏன்னா விஜயகுமார் சார் கொடுத்த நாலு கொஸ்டின் பேப்பர் மாடலும் எனக்கு அத்துப்படி. அவரே சொல்லிட்டார் இதை விட்டு வேற கேள்வி கேக்க எவனாலயும் முடியவே முடியாதுன்னு. சோ.. செம்மயா ஒளிமயமான எதிர்காலம் என் கண் முன்னாடி அப்பவே தெரிய ஆரம்பிச்சுடுச்சு. நான் வேற எதையுமே படிக்காம காலையில, நைட்ன்னு நாலு கொஸ்டின் பேப்பர் மாடலயே ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ளான் பண்ணி படிச்சுட்டு இருந்தேன்.

ஒரு நாள் மேகம் இடித்தது, மின்னல் வெடித்தது, காற்று அடித்தது, காடு துடித்தது,  நிலம் அசைந்தது, மழை பொழிந்தது...கணக்குப் பரீட்சையும் வந்தது. இஸ்ட தெய்வம் அத்தனையும் வேண்டிகிட்டு நெத்தி நிறைய திருநீறு குங்குமத்தோட பரீட்சை எழுதப் போற பேனா, பென்சில், ரப்பர், ஜாமிண்ட்ரி பாக்ஸ் இப்டி எல்லாத்துக்கும் விபூதி, குங்குமம், சந்தனம் வச்சு முட்டி, முட்டி மோதி, மோதி சாமி கும்பிட்டு யார்கிட்டயும் பேசாம ஜெகஜோதியா பரீட்சை ஹாலுக்குள்ள நுழைஞ்சேன். பக்கத்துல இந்திரஜித் தெம்பா உக்காந்து இருக்கறத பாத்து எனக்கு ஆச்சர்யம். என்ன ஆளு தில்லா இருக்க? கணக்குடா இன்னிக்குன்னு அவனைப் பாத்து சோகமா கேட்டேன். இந்திரஜித் என்ன பாத்து கண்ணடிச்சு ஆளு இன்னிக்கு உனக்கு டவுட் வந்தா நான் காட்டுறேன்டா நீ கவலைப்படாதன்னு கண்ணடிச்சான்.

என்னாடா சேதின்னு கேட்டதுக்கு, சட்டை காலரை காட்றான் அதுக்குள்ள பிட். பெல்ட்க்குள்ள பிட், சாக்ஸ்குள்ள பிட், பெல்ட் பக்கல்ஸ்க்குள்ள பிட் இப்டி உடம்பு ஃபுல்லா பிட் வச்சுக்கிட்டு ஒரு சூசையிட் பாம்ப் மாதிரியே வந்திருந்தான். எனக்கா சந்தோசம் தாங்கல விஜயகுமார் சார் கொடுத்த நாலு மாடல் கொஸீன் பேப்பர் + இந்திரஜித்தோட பிட்டுகள் மூலமா கிடைக்கப் போற ஸ்கோர்ன்னு.... ஒரு அரசியல்வாதி மாதிரி கூட்டணிக் கணக்குப் போட ஆரம்பிச்சேன்....

ஜாங்கு சக்கு ஜஜாக்கு சக்கு  ஜாங்கு சக்க சா.... உள்ளுக்குள்ள ராக்கம்மா கையத்தட்டுப் பாட்டு அதாவே பாட ஆரம்பிச்சுடுச்சு.


கொஸ்டின் பேப்பர வாங்கிப் பாக்குறேன்... கண் எல்லாம் இருட்டிக்கிட்டு தலை சுத்துது எனக்கு. வயிறு ஒரு மாதிரி இழுக்குது . இது 1992ஆம் வருசம் +2 பப்ளிக் எக்ஸாமுக்கு அடிச்ச கொஸ்டின் பேப்பரான்னு எனக்கு ஒரு டவுட் ஏன்னா... அதுல விஜயகுமார் சார் கொடுத்த மாடல் கொஸ்டின்ஸ்ல இருந்து ஒரு புண்ணாக்குமே வரலை... பாவி மனுசா நம்பி கழுத்தறுத்திட்டியேய்யா..... எனக்கு ஜுரம் வர மாதிரி ஆகிடுச்சு....

அடங்கொக்கமக்கா....பி.எ.  இல்லை பி.எஸ்ஸி கூட ஜாயின் பண்ண முடியாது போலயே... மறுபடி கணக்குக்கு மட்டும் அட்டம்ட் எழுதணுமோ? அப்பா வீட்டுக்குள்ளயே நுழைய விடமாட்டாரே...? நினைக்கவே வயித்துல புளிய கரைக்க... டக்குன்னு இந்திரஜித்த பாத்தேன். இந்திரஜித் இருக்கான் அவனை வச்சு ஏதாச்சும் ஒப்பேத்துவோம்  பிட் எல்லாம் நிறைய வச்சு இருக்கான்னு யோசிச்சுட்டு இருந்தப்பவே டக்குன்னு எங்க ஸ்கூல் ஹெச்.எம் தேவாசீர்வாதம் சார் எங்க ஹாலுக்குள்ள வந்துட்டாரு. பயலுவளா ஒழுங்கு மரியாதையா பரீட்சை எழுதணும்னு ஃபார்மலா சொல்லிட்டு ஹால விட்டு வெளில போனவரு மறுபடி திரும்பி வந்து.....

ஏண்டா இந்திரஜித்து நீ இந்த ஹால்லயா எழுதுற...? நீ பிட் இல்லாம வரமாட்டியடா எங்க இங்குட்டு வா.... அப்டீன்னு கூப்ட்டு... இந்திரஜித்த குனிய வைச்சு, நிமிர வச்சு,  தலைகீழா நிக்க வச்சு, பெல்ட்ட அவுக்க வச்சு செக் பண்ணினா......ச்ச்சும்மா மழை மாதிரி கொட்டுது பிட்டு.  ஒரு பிட்டு விடாம அம்புட்டையும் எடுத்துட்டு இந்திரஜித்த குனிய வச்சு மடேர்....மடேர்....மடேர்ன்னு முதுகுல நாலு சாத்து சாத்திட்டு...” பள்ளிக்கூடம் பேரக் கெடுக்க வந்தியா நாயி மரியாதையா பரீட்சை எழுதுன்னு” சொல்லிட்டுப் போய்ட்டாரு.

இரண்டு செகண்ட்ல எல்லாம் நடந்துருச்சு. என் பக்கத்துல பல்லு புடுங்கின பாம்பா இந்திரஜித். அடப்பாவி மகனே ராஜா மாதிரி வந்தியேடா காலையில இப்டி பஞ்சர் ஆன ட்யூப் மாதிரி கிடக்கியேடான்னு என் விதிய நொந்துகிட்டு இனி நானாச்சு இந்த கொஸ்டின் பேப்பராச்சு பரீட்சையாச்சுன்னு முடிவு பண்ணி ஏதோ எழுத ஆரம்பிச்சப்ப.....

”இந்த நாலு கொஸ்ஸீன் பேப்பர் மாடலையும் சரியா ப்ராக்டீஸ் பண்றவன்... 200க்கு 190 இல்லை..... ஏன் சென்டமே எடுக்கலாம்..”னு விஜயகுமார் சார் சொன்னது காதுல அசரீரியா கேட்டுச்சு.....! பயபுள்ள ட்ட்யூசன் பீஸ்ஸுக்காக ஓவர் பில்டப் கொடுத்து நம்மள கவுத்திப்புடுச்சேன்னு.... சோகமா ஏதோ கொஞ்சம் நஞ்சம் தெரிஞ்ச கேள்விகளா பாத்து மெல்ல மெல்ல பாஸ்மார்க் நோக்கி நான் முன்னேறிக்கிட்டு இருந்தேன். அப்போதைக்கு ஒரே இலட்சியம் 70 மார்க் எப்டியாச்சும் எடுத்துடனும் அவ்ளோதான்.

ஆளு... ஆளு எனக்கும் காட்டு ஆளுன்னு எனக்குத் தெரியாத கேள்விக்கு எல்லாம் இந்திரஜித் என்னை நோண்டிகிட்டே இருக்கத பாத்த ஹால் சூப்பர்வைசர் இந்திரஜித்த கூப்டு பின்னால ஒரமா ஒரு டெஸ்க்ல ஒக்கார வச்சுட்டார். இனிமே எல்லா பரீட்சையும் நீ இங்க இருந்துதான் எழுதணும்னு ஹெச். எம்கிட்ட சொல்றேன்ன்னு சொல்லி சொன்னதை செஞ்சும் புட்டாரு. இந்திரஜித்துக்கு அது வரமா சாபமான்னு எனக்கு அப்போ புரியல.அதுக்கப்புறம் ரிசல்ட் வந்தப்புறம் க்ளாஸ்ல எவன் என்ன ஆனான்னு எல்லாம் ஆராய்ச்சி பண்ண காலம் விடலை. 

110 மார்க் வாங்கி எப்டியோ ஒரு லக்குல நான் ப்ளஸ் டூ பாஸ் பண்ணி திருப்பத்தூர் அப்ஸால பி.எஸ்ஸி கெமிஸ்ட்ரியும் ஜாயின் பண்ணிட்டேன். பர்ஸ் இயர் பர்ஸ்ட் செமஸ்டர் லீவுக்கு திருப்பத்தூர்ல இருந்து பட்டுக்கோட்டைக்கு பஸ்ல வந்துட்டு இருந்தேன். அறந்தாங்கி பஸ் ஸ்டாண்ட்ல டீ குடிக்க வண்டி நிறுத்தி இருந்தாங்க. டீயை வாங்கி ஒரு வாய் உறிஞ்சுனப்ப யாரோ முதுகுல பளீச்ச்ச்னு அடிச்சு என்னை திருப்ப...

ஆளு எப்டி இருக்க..? வாயெல்லாம் பல்லா....இந்திரஜித் நின்னுகிட்டு இருந்தான் அங்க. என்ன மச்சி நீ எப்டி இருக்கன்னு திரும்ப கேட்டுட்டு? நான் திருப்பத்தூர்ல ஜாயின் பண்ணி இருக்கேன்டா? நீ எந்த பஸ்ல வந்த? ஊருக்கு வர்றியா இல்லை எங்க போற...?ன்னு அவன்கிட்ட மட மடன்னு கேட்டேன். நான் கீழக்கரை போறேன் ஆளு அங்கதான் படிக்கிறேன்னு அவன் சொன்ன உடனேயே எனக்கு கணக்குப் பரீட்சை நினைப்புக்கு வந்துடுச்சு. சமாளிச்சுக்கிட்டு நீ என்ன படிக்கிறடான்னு கேட்டதுக்கு....கீழக்கரைலதான் ஆளு பி.இ அப்டீன்னு அவன் சொல்லவும் எனக்கு தூக்கி வாரிப் போட்டுச்சு....

ஓய்...எப்டிடா....? நீ தேவாசீர்வாதம் சார்கிட்ட அடி வாங்கிட்டு உன்னை ஓரமா தூக்கி உக்கார வச்சாங்க..? நீ மொதல்ல பாஸ் பண்ணினியான்னே தெரியலையேடான்னு கேட்டேன். 

அட நீ வேற ஆளு பின்னாடி பக்கம் ஓரமா உக்கார வச்சாருல்ல..., அடிச்சுச்சு எனக்கு பம்பர் குலுக்கல். நான் நடராஜன்கிட்ட அவருக்குத் தெரியாம பேப்பர வாங்கி, வாங்கி எழுதினேன்டா....160 கணக்குல....அப்டி இப்டி அடிச்சு புடிச்சு கொஞ்சம் பணத்தைக் கொடுத்து சதக் இன்ஜினியரிங் காலேஜ்ல சேந்துட்டேன்...ஹி...ஹி....ஹின்னு சிரிச்சுட்டே சொன்னான்...நல்ல வேளை நான் உன் பக்கத்துல ஒக்காரல மச்சி....அவ்ளோதான் நானும் அப்புறம் பி.எ.வோ பிஎஸ்ஸியோ படிச்சு குப்பைக் கொட்டி இருக்கணும்....

இந்திரஜித் சத்தமாய் சிரிச்சுட்டு இருந்தான்.

எனக்கு சிரிக்கிறதா அழுகுறதான்னே தெரியலை. அப்போ அவனுக்கு பாய் சொன்னதோட ரெண்டு பேரும் ஆளுக்கொரு திசையில பிரிஞ்சுட்டோம். 

இப்போ இந்திரஜித் யு.எஸ்ல ஏதோ ஒரு சாப்ட்வேர் கம்பெனில வேலை பாத்துட்டு இருக்கானாம்....சாரி...சாரி.. இருக்காராம்.தேவா சுப்பையா....


Sunday, March 9, 2014

நிலா... நீ வானம் காற்று மழை....!


வார்த்தைகள் எல்லாம் தொலைந்து போய்விட்டன. உனக்காக எழுதிய என் கவிதைகளிலிருந்து சொற்களை எல்லாம் பிடுங்கி எடுத்து வானில் பறக்க விட்டு விட்டேன். உன்னை பற்றி நினைப்பதையும் குறைத்துக் கொண்டு விட்டேன். அழுத்தமான அழுகைக்குப் பிறகு ஓய்ந்து கிடக்கும் விழிகளோடும் சோர்ந்து போன இமைகளோடும் அடிக்கடி வானத்தில் அலைந்து கொண்டிருக்கும் மேகங்களை வேடிக்கை  பார்ப்பது என் வாடிக்கையாகி விட்டது. என் வீட்டுத் தோட்டத்தில் நேற்று மொட்டு விட்டிருந்த ரோஜா இன்று காலை விரிந்து பூத்திருந்ததைப் பார்த்தவுடன் சட்டென்று வந்த உன் ஞாபகத்தை சுமந்து கொண்டிருக்க முடியாது என்று இதோ வழக்கம் போல எழுத ஆரம்பித்து விட்டேன்.

இந்த உலகின் எந்த மூலையில் நீ வாழ்ந்து கொண்டிருக்கிறாய் என்று எனக்கு தெரியாவிட்டாலும் ஏதோ ஒரு கணத்தில் குழந்தையாய் உன் நினைவுகள் ஓடி வந்து என்னைக் கட்டிக் கொள்கின்றன. அவற்றை அள்ளி எடுத்து என் தோளில் போட்டுத் தட்டிக் கொடுத்தபடியே விழிகள் கலங்க உன்னை பற்றி எண்ணத் தொடங்குகிறேன். மாலை வேளைகளில் நாம் நடந்து சென்ற நகரத்தின் தெருக்களில் நான் இப்போதும் நடந்து செல்வதுண்டு. நாம் அமர்ந்திருந்த பூங்காக்கள், உணவருந்திய இடங்கள், ஒரு கோப்பை காபியோடு  ஒரு நாளின் பெரும்பகுதியைக் கடத்திய காஃபி ஷாப்கள், ஷாப்பிங் மால்கள் என்று எல்லா இடத்திற்கும் தனியே செல்லும் போதெல்லாம் கடந்த காலம் என் வீட்டு வாசலில் வசந்த காலத்தில் பூத்துக் குலுங்கிய கொன்றை மரத்தின் மலர்கள் போல என் முன் கொத்து கொத்தாய் மலர்ந்து கிடக்கும்.

எப்படியோ இந்தத் திருமணங்கள் தோற்றுப் போனாலும் காதல் மட்டும் கடைசி வரை தோற்காமல் கடுமையான கூட்டத்திலும் உயிரைப் பற்றிய கவலையின்றி புட் போர்ட் அடிக்கும் ஒரு கல்லூரி மாணவனின் உற்சாகத்தோடு என்னையும்  தொற்றிக் கொண்டேதான் வருகிறது. ஏதோ ஒன்றை உன் நினைவுகளோடு எழுதிக் கொண்டே இருக்கும் இந்த சுகத்தை திருமண பந்தம் கொடுத்திருக்குமா என்று எனக்குத் தெரியாது. ஒருவேளை சுதந்திரம் என்ற பெயரில் அது என்னை விதிமுறைகள் நிறைந்த ஏதோ ஒரு உலகத்திற்குள் தள்ளிவிட்டு கணவன் என்ற பெயரில் உரிமைகளைச் சுமக்கும் பொதி மாடாய் கூட ஆக்கி இருக்கலாம்.

காதலாய் நீ ரசித்த என் கோபம் திருமணத்திற்குப் பிறகு உனக்கு எரிச்சலாகியிருக்கலாம். எப்போதும் ஒரே திசையில் பயணிக்காத என் சுபாவம், நிமிடத்துக்கு நிமிடம் இலக்கில்லாமல் பறக்கும் என் எண்ணப்பறவைகள், பொருளாதாயம் பற்றி யோசிக்காத என் கவிதைப் புத்தி, எப்போதும் கனவில் மிதக்கும் என் ஆசைகள், என்று எல்லாமே உன்னை நரகத்தில் தள்ளி இருக்கலாம். மின்சாரம் இல்லாத இரவினில் கேண்டில் டின்னர் சாப்பிட்டதாய் சந்தோசப்பட்டுக் கொள்ளும் என் மகிழ்ச்சி உனக்கு பைத்தியக்காரத்தனமாய் தெரிந்திருக்கலாம். மிதமிஞ்சிய விவரிப்புகளையும், அளவுக்கு அதிகமான பெருமிதங்களையும் நான் கண்டும் காணாத மாதிரி செல்வது உனக்கு எரிச்சலை வரவைத்திருக்கலாம்...

காமத்தை இருட்டில் பிணம் தழுவும் நிகழ்வு போல கடந்து செல்ல விரும்பாத என் நிதானம்  உன்னை எரிச்சல் படுத்தியும் இருக்கலாம். நான் வாழ்க்கையை வாழ்க்கையாக வாழ விரும்பி அதை காதலோடு நகர்த்திக் கொண்டு போவதற்கு என்னுடன் யாருமே இல்லாமல் இருப்பதுதான் நல்லது என்று இப்போது உணரும் அதே வேளையில், ஒரு வேளை நீயும் என்னைப் போலவே ஒரு பைத்தியக்காரத் தன்மையோடு இந்த வாழ்க்கையை அணுகி இருப்பாயோ என்றும் யோசித்துக் கொள்கிறேன். முழுக்க முழுக்க இந்த வாழ்க்கையை நேர்கோட்டில் அணுகக் கூடாது என்று நான் சொன்னபோது நீ அதை ஆமோதிக்கவும் செய்திருக்கிறாய். 

நான் உன்னை நேசிப்பதற்கு  உன்னுடைய மெளனம் காரணமாயிருந்தது. நாம் பிரிந்து போவதற்கு இந்த சமூகம் காரணமாயிருந்தது. பெற்றவர்களே பிள்ளைகளின் வாழ்க்கையை தீர்மானிக்க வேண்டும் என்ற நம் சமூகப் பார்வையில் எனக்கு தவறிருப்பதாக தெரியவில்லை. அதே நேரத்தில் பிள்ளைகளுக்குப் பிடித்த துணையை ஏன் தன் சாதிக்குள் மட்டும் தேடிக்கொள்கிறார்கள் என்ற வெறுப்புதான் என்னிடம் மிகுந்திருக்கிறது. உனது சாதி உன் பெற்றோரின் மானமாயும் உன்னிடம் பாசமாயும் வேசமிட்டுக் கொண்டது. வேசங்கள் என்ன செய்துவிடும் என் சுயத்தை...? இதோ சுதந்திர வானில் பறக்கும் என் திருப்தியைக் கொடுத்துவிடுமா வாழ்க்கை புழுதியில் கட்டுப்பாடு கோடுகள் போட்டு வாழும் பூச்சிகளுக்கு?

திருமணம் புதுப்பெண்ணை வேலை ஏவும் மாமியாரைப் போன்று காதலை அதிகாரம் செய்து ஓரமாய் உட்கார வைத்து விட்டு அடுத்தவருக்காக நம்மை வாழச் சொல்லி பயிற்றுவிக்கிறது. இன்னும் சொல்லப் போனால் திருமணம் புத்திசாலித்தனத்தால் உருவாக்கப்பட்டது.. ஆனால் வாழ்க்கையோ மிகவும் பைத்தியக்காரத்தனமானது. நேர்கோட்டில் சீராய் எல்லாம் எப்போதும் நிகழும் என்று நம்மால் கூறவே முடியாது. பிரபஞ்ச பெருவெடிப்பிலிருந்து இன்றைய காலம் வரை எது எப்போது நிகழும் என்று வரையறுத்து கூறவே முடியாது. இயற்கையின் உன்மத்தமான போதையை பதிவு செய்யும் வேலைக்காரனாய் இருக்கிறது இன்றைய அறிவியல். எது நிகழ்கிறதோ அதை நிகழ்ந்த பின் ஆய்வு செய்யும் அறிவியல் பிரபஞ்ச கிறக்கத்தை வேடிக்கை பார்க்கும் ஒரு சிறு துறும்பு. ஒரு நிகழ்வு இடமாய் செல்வது போல சென்று, வலமாய் திரும்பி மேலெழும்பி பறந்து சென்று பின் கீழ் விழுந்து மொத்தமாய் மறைந்து போய்விடுவதற்கு எல்லாம் சாத்தியக்கூறுகளும் இங்கே இருக்கின்றன.

கற்பனைகளில் ஆசைகளைத் தேக்கிக் கொண்டு இங்கே எனக்கு நீ.. உனக்கு நான் என்று வாழ்வது சுகம் என்றாலும் அதை ஒரு வட்டத்துக்குள் நிறுத்தி வைத்து செய்வது என்பதில் என்ன சுவாரஸ்யம் இருக்கிறது? பூமி சூரியனை தன் இஷ்டப்படிதான் சுற்றி வருகிறது. அது அப்படி சுற்றுவதற்கு முன்பே யாரோ இங்கே ..." ஏய் பூமியே நீ சரியாய் 365 1/4 நாட்களுக்குள் சுற்றி வரத்தான் வேண்டும் ” என்று ஆணையிட்டிருக்க முடியாது.  அப்படியே ஆணையிட்டு சுற்றி வா என்றாலும் சொல் பேச்சைக் கேட்டு சுற்றிவர பூமி என்ன மனிதர்களைப் போல லோகாதாய லாபங்களை கணக்குப் போட்டு கள்ளத்தனமாய் செயல்கள் செய்யும் வக்கிர மனமா கொண்டிருக்கிறது?


ஒருவேளை என்னோடு நீயிருந்திருந்தால் பூமி சூரியனைச் சுற்றிவருவது போல தன்னிச்சையாய் இருந்திருக்கும் நமது வாழ்க்கை.. சட்டென்று கோடாணுகோடி வருடங்கள் கழிந்து சூரியனின் ஈர்ப்புவிசையிலிருந்து விடுபட்டு ஆனந்தமாய் எங்கோ மோதி வெடித்துச் சிதறுவது போல நானும் நீயும் சுகமாய் இறந்து போயிருந்திருக்கலாம். காதல் காதலைத்தான் போதித்தது. இப்போதும் காதலைத்தான் போதித்துக் கொண்டிருக்கிறது.  அது ஒருபோதும் திருமணத்தைப் போதித்திருக்கவில்லையாதலால்...

காதலால் நான் நிரம்பிக் கிடக்க உன்னைப் பற்றிய நினைவுகளே எனக்கு போதுமாயிருக்கிறது பெண்ணே...!!!!

வாஞ்சையாய் எந்த நோக்கமுமின்றி பிரபஞ்ச வெளியில் மிதக்கும் பூமிப்பந்தை போல உன் நினைவுகளை ஏந்திக் கொண்டு நானும் மிதந்து கொண்டிருக்கிறேன் இந்த பூமிப் பந்தில்.... 

என் கோடைக்காலங்களில்
நான் குளிரினை அனுமதிப்பதேயில்லை
குளிர் காலங்களில் 
வெயிலினை இம்மியேனும் நான் அனுமதிக்காததைப் போல;
காற்றடிக்கும் காலங்களில்
மிதக்கும் ஒரு இறகு போல 
இங்குமிங்கும் நான் அலைகையில்
எனக்கு குளிரின் நியாபகமோ அல்லது
வெயிலைப் பற்றிய கனவோ வருவதில்லை...!
ஏன் இயங்கிக் கொண்டிருக்கிறது
இந்த முழுப் பிரபஞ்சமென்ற கேள்வியை
உடைத்து பார்த்தால்தான் தெரியும்
என் காதலுக்கும், இந்த வாழ்க்கைக்குமிருக்கும் தொடர்பு..!

எழுதுவதை நிறுத்திவிட்டேன். யாருமற்ற இந்த இரவின் தனிமை கொஞ்சம் சப்தமாகவே என்னை  அழத் தூண்டியது. இல்லாமையின் பேரமைதிக்குள் இருக்கும் ஒரே ஒரு வஸ்து காதல் அந்த காதலை நெஞ்சோடு அணைத்தபடியே தேம்பிக் கொண்டிருந்தேன்...


அவள் உறங்கிக் கொண்டிருக்கலாம்.தேவா சுப்பையா....
Thursday, March 6, 2014

சத்குரு...!


பரந்து விரிந்த இந்தப் பிரபஞ்சத்தில் ஒரு புள்ளியாய் ஜனித்து தனித் தனி உடம்புக்குள் வியாபித்து நின்று கொண்டு உலகத்தின் மையமாய் தன்னைக் கருதி நகரும் இவ்வாழ்க்கையின் மையம் என்று ஒன்றும் கிடையாது....

என்றாலும்....

குருநிலை என்பது ஒரு கற்பனை மையம். எதுவமற்ற தன்மைக்கு, அடையாளம் இல்லாத ஒன்றுக்கு ஒரு அடையாளம் வைத்துக் கொண்டு நகரும் சுவாரஸ்யம். இல்லை என்பதை சொல்லும் ஒரு விசயத்தை, இல்லாமலேயே போவோம் என்ற உண்மையோடு வாழும் சத்தியத்தைப் பற்றிக் கொள்ளுமொரு தந்திரம். மனிதர்களாய் இருக்கும் போது இன்னொரு மனிதனே இந்த தந்திர உபாயத்தை சரியாகச்  செய்ய உதவ முடியும். குருநிலை என்பது இன்னொரு மனிதராய்த்தான் இருக்க வேண்டும் என்று யாதொரு நிர்ப்பந்தமும் இல்லை. ஒரு மலையாய் இருக்கலாம். நெருப்பாய் இருக்கலாம். சிலையாய் இருக்கலாம். பரந்து விரிந்த வான் வெளியாய் இருக்கலாம்... ஏன் இன்னும் சொல்லப் போனால் ஒன்றுமில்லாத அந்த பேருண்மைக்குள் கூட்டிச் செல்லும் வேறு எதுவாய் வேண்டுமானாலும் இருக்கலாம்....

அது பின்பற்ற விரும்பும் மனிதரின் பக்குவத்தை பொறுத்த விசயம் என்றாலும் இன்னொரு மனிதர் நமக்கு குருவாய் அமைவது சுகம். புலன்களால் இயங்கிக் கொண்டிருக்கும் அந்த மனிதர் சத்தியத்தை, சாந்தத்தை, பேரமையில் லயித்துக் கிடந்து அந்த உண்மைக்குள் நாம் எப்படி வரவேண்டும் என்று தன் வார்த்தைகளாலும் செய்கையாலும், ஆட்டத்தாலும், பாட்டத்தாலும் கொண்டாட்டத்தாலும் விவரித்துக் கொண்டே இருக்கிறார். ஒரு பேராசிரியர் போல வாழ்க்கையின் எல்லா பக்கத்தையும் விவரித்துக் கொண்டே செல்லும் அந்த மனிதர் எந்த வகையிலும் தன்னை சக மனிதர்களிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டிக் கொள்ள விரும்புவதே இல்லை. சுற்றி இருக்கும் மனிதர்களின் போற்றலும் தூற்றலும் அவர்களை ஒன்றும் செய்வதுமில்லை. இன்னும் சொல்லப் போனால் அவர்கள் போதனை செய்ய விரும்புவது என்று ஒன்றுமே இல்லை. கேள்விகள் இல்லாத இடத்திற்கு அவர் நம்மை தள்ளி விடவே எப்போதும் முயல்கிறார்.

ஆன்மீக தத்துவங்களை இங்கும் அங்கும் தேடித் தேடி அலைந்து கொண்டிருந்த என் பெரும் தேடலில் குரு என்று யாரையும் மனதால் வரிந்து கொள்ள முடியவில்லை. ஒவ்வொரு சூழலிலும் ஒவ்வொருவர் ஒவ்வொரு திறப்புக்களை எனக்கு கொடுத்தார்கள். பல நேரங்களில் சூழல் எனக்கு குருவாயிருந்தது. சூழல்களையும், அனுபவத்தையும் குருவாய் மையப்படுத்திக் கொண்டுதான் பெரும்பாலும் நான் நகர்ந்திருக்கிறேன். இது எனக்குள் நானே மூழ்கி மூழ்கி, ஒவ்வொரு சுவராய் போய் மோதி அடிபட்டு பின் இது வழியல்ல என்று வேறு வழி நோக்கி நகர்வதைப் போன்றது. இந்தப் பயணம் சுவாரஸ்யமானது என்றாலும் இது முழுக்க முழுக்க நம் சூழலை மையப்படுத்தியே நகரவேண்டிய நிர்ப்பந்தத்தை எனக்கு கொடுத்தது. சூழல் என்பது ஒரே எண்ண ஓட்டத்தோடு எப்போதும் இருப்பது கிடையாது ஆதலால்....புறச் சூழலுக்கு ஏற்றார் போல தாளம் எனக்குள் தப்பிப் போனதும் உண்டு.

என்ன இருக்கிறது இங்கே? இறப்பதற்கு முதல் நிமிடம் வரை பொருள் தேடி ஓடும் மிருக வாழ்க்கை வாழ எனக்கு எதற்கு மனித தேகம்? சத்தியம் எதுவென்று சுட்டிக்காட்டுமொரு ஆன்மாவைக் கொண்டவன் நான் தவறு என்று தெரிந்தும் எப்படி லெளகீக ஆதாயத்துக்காக ஒரு மனிதரை நான் ஆதரிக்க முடியும்? கடவுள் வழிபாட்டினை பெருமையாய் பேசிக் கொள்ளும் ஆன்மீக முற்றல்கள் எனக்கு எப்படி குருவாக முடியும்? காழ்ப்புணர்ச்சிகள் கொண்ட மனிதர்களும், தன்னை மற்றவரிடம் இருந்து மேலானவராய்க் காட்டிக் கொள்ள விரும்பும் மனிதர்களையும் நான் பின்பற்றினால் வேறு ஒரு மனிதருக்கு நான் கதாநாயக வடிவம் கொடுத்து ரசிக மனோபாவத்தில் அல்லவா கைதட்டி போற்றலையும் தூற்றலையும் செய்ய வேண்டும்.

எனக்கு மட்டுமே சக்தி இருக்கிறது. நான் உங்களை விட சிறப்பானவன் என்று சொல்லிக் கொள்ளும் ஒருவரை எப்படி நான் குருவாய் ஏற்றுக் கொள்ள முடியும்? நான் எந்த கட்டுப்பாடுகளுக்குள்ளும் போக விரும்பாதவன் ஆதலால் நிறைய அமைப்புகளை, வழிமுறைகளை, காலை மாலை வழிபாடுகளை, நிர்ப்பந்திக்கப்பட்ட மதம் சார்ந்த கோட்பாடுகளை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நான் ஒரு சுதந்திரப் புருசன். விதிமுறைகளுக்குள் வாழ முடியாத ஜனனம் என்னுடையது. என்னை பேருண்மைக்குக் கூட்டிச் செல்லும் குருவே எங்கிருக்கிறீர் நீர்? உம்மைச் சுற்றி கோடி பேர்கள் இருந்து கொண்டு புகழ்பாடுவது போல என்னால் இருக்க முடியாது? ஆனால் மானசீகமாய் என்னை உங்களுக்குச் சமர்ப்பணம் ஆக்கிக் கொள்வேன். உங்கள் வார்த்தைகள் என்னை வழிநடத்தட்டும். உங்கள் ஞான வெளிச்சத்தில் எனக்குள் இருக்கும் அஞ்ஞான இருட்டு அகலட்டும். புறத்தில் கதாநாயகத் துதி செய்யும் மனோபாவம் அற்ற எந்த வசீகரமும், புனைவுமற்ற கரடுமுரடான பாறை நான். என்னை இப்படியே தூரத்தில் நிறுத்தி வைத்து உம்முடைய மெளனத்தால் எனக்கு தீட்சை கொடும் குருவே...

என்னை ஏன் இதைச் செய்யவில்லை, அதைச் செய்யவில்லை என்று கேள்விகள் எதுவும் கேட்காமல் ஒரு சிறுபிள்ளையாய் பெரு மைதானத்தில் ஓடச் செய்யும் ஐயனே. எனக்கு ஏற்படும் இடர்ப்பாடுகளை எனக்கு பாடமாக்கு...., என் காயங்களை ஆழப்டுத்து, வலிகள் இரணமாய் என் உயிர் வரை பாயட்டும். வலித்து வலித்து அதில் லயித்து லயித்து நான் மீண்டெழுந்து கொள்கிறேன். என்னை வழி நடத்துவது உமது மெளனமாய் மட்டும் இருக்க வேண்டும். நான் விழுந்தவுடன் தூக்கி என்னை எழுப்பி விட உமது கரங்கள் எனக்கு வேண்டாம் என் குருவே...., ஆனால் எழுந்து நிற்கும் என் திடத்தில் சூட்சுமமாய் நீ கரைந்து நில். இந்த பூமியின் ஏதோ ஒரு பாகத்தில் நீங்கள் வசித்துக் கொள்ளுங்கள் என் குருவே, உங்களை பார்க்காமலேயே கூட நான் இருந்து கொள்கிறேன். உங்கள் அர்த்தம் இல்லாத, அழுத்தம் இல்லாத, எதுவுமற்ற வார்த்தைகள் என்னை வழி நடத்தட்டும். இந்த பூமிப்பந்து முழுதும் நீங்கள் வீசி எறியும் அன்பு பூக்கள் என் மீது விழும் பாக்கியம் இருந்தால் மட்டும் போதும் எனக்கு...

அப்படியான குருவை நான் தூர இருந்து பார்த்தாலே போதும். நான் என்னும் என் தன்முனைப்பை, எனது அன்பை, எனது காதலை, அவர்பால் நான் கொண்ட நேசத்தை, அவரிடம் சமர்ப்பித்து விட்டு, அவரின் இருப்புத்தன்மை எனக்கு போதித்திருக்கும் சத்தியத்தை மட்டும் எடுத்துக் கொண்டு நன்றியுணர்சியோடு நான் நகர்ந்து விடுவேன். இப்படியெல்லாம் எனக்குள் எண்ணியிருந்தது போல ஒரு குரு எனக்கு கிடைப்பார் என்று நான் முன்பு நம்பவில்லை. காரணம், துதி செய்தலை, சீடர்கள் குருவிடம் அடிபணிந்து நிற்கும் வழமையை, எங்கு சென்றாலும் குரு நாமம் சொல்லி அதை எல்லோருக்குள்ளும் கொண்டு செல்ல முயலும் ஒரு பரப்புதலை அல்லது எப்போது பார்த்தாலும் குரு என்ற அடைப்புக்குள் நின்று கொண்டு பரந்து விரிந்த பேருண்மையை ஒரு மட்டுக்குள் வைத்து பேசும் போக்கினைத்தான் பெரும்பாலும் நம் சமூகம் கொண்டிருக்கிறது.

என்னால் அப்படி இருக்க முடியாது. வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு சத்சங்க கூட்டம் இருக்கிறது வராமல் இருந்து விடாதே அப்படி வராமல் போனால் நல்லதல்ல என்று போதனைகள் செய்யும், மிரட்டும், என்னை ஒரு அடைப்புக்குள் வைக்கும் எந்த இடத்திலும் என்னால் இருக்க முடியாது. ஒருவேளை அப்படி அடைப்புக்குள் கட்டுப்பாட்டுக்குள் விதிமுறைகளுக்குள் இருக்க வேண்டும் என்பது குருவாக்கு அது நல்லது என்று என் மூளை சலவை செய்யப்பட்டாலும் நான் மீண்டும் எழுந்து நிற்பேன். ஏனென்றால் என்னால் ஒரு மனிதரை பிரபஞ்சமாய் காண முடியாது. மிகைப்பட்ட பேருக்கு அது எளிய வழி. 

இது எளிய வழி என்றாலும் இதில் இருக்கும் ஒரு ஆபத்து என்னவென்றால் ஹீரோ வொர்ஷிப்பிற்குள் மாட்டிக் கொண்டு அதற்கு மேல் செல்ல முடியாமல் கடைசிவரை சீட மனோபாவத்தில் கற்றுக் கொடுக்க ஒருவர் இருக்கிறார் என்ற எண்ணத்தோடே துவைதியாகவே மரித்துப் போவது ஆனால் அடிப்படையில் நான் அத்வைதி. அத்வைதமே சத்யம் என்று உணர்வுப் பூர்வமாய் நம்புபவன். சைக்கிள் ஓட்ட கற்றுக் கொடுக்க நமக்கு ஒருவர் வேண்டும். சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொண்டவுடன் கற்றுக் கொடுத்தவர் மீதிருக்கும் அன்பு மாறாது. அவரைப்பற்றி நாம் எப்போதும் நினைப்போம். அவர் இல்லை என்றால் என்னால் சைக்கிள் ஓட்டியிருக்கவே முடியாது என்றில்லை என்றாலும் அவரைப் போல சொல்லிக் கொடுத்திருக்க வேறு யாராலும் முடியாதுதான். எவ்வளவு வாஞ்சையாய், எவ்வளவு அன்பாய், துல்லியமாய், தலை தடவி, நெஞ்சு தடவி எனக்கு சைக்கிள் சொல்லிக் கொடுத்தார் அவர்.

சைக்கிள் தன்னிச்சையாய் ஓடிக் கொண்டிருக்கும் நான் ஓட்டிக் கொண்டிருப்பேன். எனக்கு கற்றுக் கொடுத்த குரு என்னுள் அன்புப் பிரவாகமாய் இருக்க நான் பெரும் நன்றியுடன் இருப்பேன் அப்போது. இது இது இது.... எனக்கு வாய்த்திருக்கிறது இப்போது. இங்கும் அங்கும் தடுமாறி கற்று, விழுந்து, எழுந்து எந்த உறுத்துதலும் இல்லாமல் என்னுள் வானத்திலிருந்து இறங்கும் பனியைப் போல, உடல் தழுவிச் செல்லும் தென்றலைப் போல, இனிமையான இசை கொடுக்கும்  அலாதியான உணர்வு போல, கூடலின் உச்சத்திற்குப் பிறகு கிடக்கும் பிரஞ்ஞைநிறை அனுபவம் போல, இந்தத் தேதி, இந்த நாளில் , இந்த மணியில், இந்த நொடியில், இந்த கணத்தில் இந்த பூ பூத்தது என்று  எப்படி வரையறுத்துக் கூற முடியாதோ அப்படி....

என்னுள் பரிபூரணமாய் மலர்ந்திருக்கிறார்...சத்குரு ஜக்கி வாசுதேவ்.

சூட்சும தீட்சை பெற்ற பேறு பெற்றேன். அகம் ஆய்ந்து கொண்டிருக்கையில் வாஞ்சையாய் தலை தடவி கனிவாய் சிரித்த அவரின் முகம் கண்டேன். புலனுணர்வுக்கும் அதற்கும் யாதொரு தொடர்பும் கிடையாது. கட்டுப்பாடுகளற்ற பெருவெளியில் நீ எப்படி வேண்டுமானாலும் சுற்றித் திரி. பிரபஞ்ச நியதியை மட்டும் நினைவில் கொள் என்று அவரது விழிகள் எனக்கு சொன்னதே அன்றி வாய் திறந்து அவர் என்னிடம் எதுவும் பேசவேயில்லை. நிர்ப்பந்திக்காத அன்பு பேரின்பம். தொடர்பு இல்லாத தொடர்பு சுகமானது. வார்த்தைகளில்லாத உரையாடல் பெருங்களிப்பானது. பாலகுமாரன் என்னும் எழுத்துப் பிரவாகம் என்னை வழிநடத்திச் சென்றது. இதோ இன்று ஏதோ ஒரு பெருங்கடலில் விழுந்து கிடக்கும் நிலையில் விழிகள் பெருகி ஓட....

இப்போது பிறந்த பிள்ளையாய் வாஞ்சையோடு சத்குருவின் ஆட்காட்டி விரலை என் பிஞ்சுக் கைகளால் பற்றிக் கொள்கிறேன்.


சத்குருவே நமஹ...!!!!!!!!! குருவருள் என்னை இனி வழிநடத்தும்.....தேவா சுப்பையா...
Tuesday, March 4, 2014

சாக்தனானேன்...!


சைவம் என்பது பிறப்பால் பின்பற்ற நிர்ப்பந்திக்கப்பட்ட வழிமுறையாய் எனக்கு ஆகிப் போனதால் சைவம் பற்றி அறிந்து கொள்ள நிறைய நாட்கள் மெனக்கெட்டு இருக்கிறேன். அம்மாவின் தாத்தா எங்கள் பாட்டையா காலம் வரை கடுமையான சைவர்கள் நாங்கள். தலைவாசல் ஒரு தெருவிலும் கொல்லைப்புறம் அடுத்த தெருவிலும் இருக்கும் அம்மாவின் பூர்வீக வீட்டின் நடு ஹாலில் ஆளுயர தட்சிணாமூர்த்தி படம் தேக்கு மரத்தால் பிரேம் போடப்பட்டு பிரம்மாண்டமாய் இருக்கும். குரு நிலையை போதிக்கும் அந்தப்படத்தை நான் அதற்கு முன் யார் வீட்டிலும் பார்த்திருக்கவில்லை. ஞானம் என்றால் என்னவென்று வார்த்தைகளின்றி நேரடியாய் விளக்கும் நுட்பங்கள் நிறைந்த படம் அது. ஒரே ஒரு சித்திரத்தில் ஒட்டுமொத்த பிரபஞ்ச தன்மையையும் கொண்டு வந்தது யார்? யார் இதை யோசித்தது? தட்சிணாமூர்த்தியின் தத்துவத்தை வார்த்தைகளால் சொல்லவே முடியாது.

வார்த்தைகளால் விளக்க முற்பட்ட மாத்திரத்தில் அந்த உண்மை உடைந்து போய்விடும். இந்த உண்மையைத்தான் உலகம் முழுதும் வெவ்வேறு வடிவில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். எல்லா சமூக அரசியலுக்கும் பின்னால் இந்த தத்துவமே வெகு ஆழத்தில் ஒளிந்து கொண்டிருக்கிறது. கவிதைகளுக்குள்ளும், கதைகளுக்குள்ளும், மனிதர்களின் எல்லா உணர்வுகளுக்கும் பின்னாலும், இன்ன பிற சமூக சிந்தனைகளுக்குள்ளும் அடிப்படையாய் தட்சிணாமூர்த்தி தத்துவமே விளங்குகிறது. இந்த தத்துவமே உலகம் முழுதும் பரந்து விரிந்து கிடக்கும் மானுட சமூகத்திற்கு அந்த அந்த நிலத்தின் வேதங்களாய் எழுந்து நின்றது. இருந்ததனை  இருந்தது போல இருந்து காட்டிய வேதநாயகனாய் ஒரு உயர்சிறப்பில் மனிதர்களுக்கு விளங்கும் வகையில் ஒரு பால்வகையைச் சுட்டி அதை சித்திரப்படுத்த வேண்டும் என்று நினைத்தவர் சர்வ நிச்சயமாய் வெகு அற்புதமான மனிதராய் இருந்திருக்க வேண்டும்.

சனாதான தருமம் நேரடியாய் சத்தியத்தை ஒரே ஒரு படத்தில் பளீச் என்று சொல்லியிருப்பது எனக்கு வெகு வியப்பாய் இருந்தது. எத்தனையோ புத்தகங்களை வாசித்து, வழிபாடுகள் செய்து, மந்திர ஜபங்கள் செய்து, தவங்கள் செய்து கடுமையாய் முயற்சித்து, சொர்க்க நரகங்கள் சொல்லி மனிதர்களை மிரட்டி சாந்தப்படுத்தி இதை உணரத்தான் இங்கே எல்லாமே செய்யப்பட்டது. வாழ்க்கையின் எல்லா சுக துக்க அனுபவங்களும் இந்த உண்மையைதான் நமக்கு மெலிதாய் காலங்கள் தோறும் உணர்த்திக் கொண்டிருக்கின்றன. மாரியம்மன் கோயில் திருவிழாவும், முருகன் கோயில் காவடியும், பிரதோஷ விரதமும், புனிதவெள்ளியும், கிறிஸ்துவின் பிறப்பும், இஸ்லாமின் அடி ஆழமும் இந்தத் தத்துவத்தை வலியுறுத்தவே எல்லா சட்ட திட்டங்களையும் எழுதி வைத்தன. ஏதோ இருக்கிறது என்று சொல்லி சொல்லி எல்லா சமூகத்து வழிமுறைகளும் மனிதர்களை அன்பாய் இருக்க சொல்லி போதித்து பேரமைதிக்குள் அவர்களைப் பிடித்து தள்ளவே முயன்றன.

மதங்கள் என்றில்லை, சித்தர்களும், நாயன்மார்களும், பிறவி மூலம் அறிந்த பித்தர்களும் ஒவ்வொரு விதத்தில் இதையே செய்ய முயன்றனர். வள்ளலார் வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடச் சொன்னார். வாடி வாடி அழுது அந்த வாடிய பயிருக்கு தண்ணீர் ஊற்றி அந்தப் பயிர் நனைந்து வேர்கள் நீரினை உறிஞ்ச மெல்ல சிலிர்த்து பசுமையாய் நிமிர்ந்து நின்று அன்பாய் நம்மை பார்த்து சிரிக்கையில் நம் மனம் படக் என்று ஒடுங்கிக் கொள்கிறது. நான் நீரூற்றினேன். நீர் பூமியிலிருந்து கிடைத்தது. பூமியிலிருந்தல்லவா நீயும் வளர்கிறாய். நீர் பூமி கொடுத்தது. பயிர் பூமியிலிருந்து வளர்வது. நான் இந்த பூமியிலிருந்து வந்தவன். இந்த பூமிப் பந்து ஆகாசத்தில் மிதப்பதற்கு முன்பு சூரியனாய் இருந்தது. இந்த சூரியன் சூரியனாய் ஆவதற்கு முன்பு தூசுக்களாலும் இன்ன பிற வாயுக்களாலும் நிரம்பி இருந்தது. இந்த தூசுக்களும் பலவிதமான வாயுக்களும் இந்த பிரபஞ்சத்திலிருந்து தோன்றின. இவை எல்லாம் தோன்றுவதற்கு முன்பு பிரபஞ்சம் சும்மாதானே இருந்திருக்கும். ஒன்றுமில்லாமல் மெளனமாய் இருந்திருக்கும். சப்தமில்லாமல், அசைவு இல்லாமல் சலனமில்லாமல் ஒரு பேரமைதி. அடர் கருமை. அது இருந்தது. சரி எப்படி இருந்தது? அது இருப்பது போல இருந்தது. 

இருப்பது போல என்றால்....என்ன? அது எப்படி இருந்ததோ அப்படி. இதைப் பற்றி கூடுதலாய் சொல்ல முடியாது. அது இருந்ததனை இருந்தது போல இருந்து காட்டியது. அந்த இருத்தலை நாம் பார்த்தோ, படித்தோ, விவாதித்தோ அறிந்து கொள்ள முடியாது. சரி அப்படி என்றால் எப்படித்தான் நாங்கள் அறிந்து கொள்வது என்று கேட்கிறீர்களா? அதை அறிந்து கொள்ள அந்த குணமற்ற, நிறமற்ற, சுவையற்ற, அதிர்வற்ற,  சலனமற்ற தன்மையாய் நாம் இருந்துதான் பார்க்க முடியும். இருந்து பார்க்க எல்லாம் விடவேண்டும். ஒன்றுமில்லாத தன்மையை உணர ஓராயிரம் கருத்துக்களை ஏற்றுக் கொள்தல் சரியான வழிமுறையா? 

ஒன்றுமில்லை என்று சொல்லாமல் சொல்ல, இருந்ததனை இருந்தது போல இருந்து காட்டியதை விளக்க ஒரு படம். பாட்டையா இந்தப் படத்தை ஏன் வைத்திருந்தார் என்று நான் கேள்வி கேட்டு அதற்கு பதில் சொல்லும் பக்குவத்தோடு வீட்டில் யாரும் இப்போது இல்லை. எல்லோருக்கும் அது ஒரு படம் என்ற அளவோடும், நல்லது கெட்டதுக்கு அந்தப் படத்தின் முன்பு நின்று வேண்டிக் கொள்வதோடும் முடிந்து போகிறது. சத்தியம் மட்டும் வாங்கும் பாத்திரத்திற்கு ஏற்றார் போலத்தான் எப்போதும் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது. ஏதேதோ கருத்துக்கள் கொண்டிருப்பவர்களிடமும், யாரோ சொன்னதை நம்பி கற்பனையில் காலத்தைக் கழித்துக் கொண்டு இருப்பவர்களிடமும் சத்தியம் அதிகம் பேசுவதில்லை. அதிகம் பேசுவதில்லை என்பதை விட எதிர்த்து விவாதம் செய்வது இல்லை என்று சொல்லலாம்.

விவாதத்தால் இங்கே வெல்ல ஒன்றுமே கிடையாது. எல்லாம் சரி என்று நிறுவி பேசும் ஒரு எதார்த்தத்தில்தான் இங்கே எல்லாமே இருக்கிறது. அதனால் சத்தியம் எப்போதும் புரிதல் இல்லாதவர்களைப் பார்த்து புன்முறுவல் பூத்தபடியே இருக்கிறது. திருத்தவேண்டும் சரியைச் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று எந்த ஒரு அவசரமும் அதற்கு இல்லை. ஏன் தெரியுமா? தவறுகள் வலிகளைக் கொடுக்கும் வலிகள் அனுபவத்தைக் கொடுக்கும். அனுபவம் புரிதலைக் கொடுக்கும். புரிதல் தெளிவினைக் கொடுக்கும். தெளிவு சத்தியத்தை நோக்கி இழுத்துச் செல்லும். சிலருக்கு ஒரு சறுக்கல்  புரிதலை கொடுத்து விடும். பலர் மேலும் மேலும் அடிபட்டு ஜென்மங்களாய் இந்தப் புரிதலுக்காக அதிர்வு கொண்ட ஆன்மாவாய் பயணிக்க கூடும்.

சிவம், சைவம் வாழ்க்கை முறையாகிப் போன பின்பு சாக்தம் எனப்படும் சக்தி வழிபாடு பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வமில்லாமல் போயிருந்தது எனக்கு. ஆதிநிலையிலிருந்து கொண்டிருக்கையில் அதுவே உண்மை என்று புரிந்து கொண்டிருந்த எனக்கு சாக்தம் என்பது வேறு எதாகவோ பட்டது. இதனாலேயே விபூதியைத் தவிர வேறு எதுவும் பூசமாட்டேன். எரிந்து போன பிணத்தின் சாம்பல் வெண்ணிறம். விபூதியும் வெண்ணிறம். நானும் ஒரு நாள் வெண் சாம்பலாவேன். குங்குமம் எதற்கு..? சிவப்பு எதற்கு? ரத்தத்தின் நிறம் எதற்கு? அடர் வசீகரம் எதற்கு நெற்றியில், சூடு தணிந்துதானே...வெண்ணிறம். உஷ்ணமான செந்நிறம் எனக்கெதற்கு என்று ஒதுங்கி இருந்திருக்கிறேன்.

சாக்தம் சிவனின் பெரும் தாண்டவம் என்பதை எனக்கு காலம்தான் உணர்த்தியது. சிவனின் இயங்கு நிலையே சக்தி. சூடு. அனல். அதிர்வு. உயிராய் உடலுக்குள் இருக்கும் போது லெளகீகத்தின் வேகத்தில் ஓடிக் கொண்டிருக்கும் போது சட்டென்று ஓட்டத்தை நிறுத்தினால் தடுக்கித்தான் விழவேண்டும். நான் ஓட்டத்தை நிறுத்தி தடுக்கி விழுந்தேன். ஓட்டம் சுத்தமாய் நின்று போக வேகமாய் ஓடவேண்டும். வேகமான ஓட்டத்திற்குப் பிறகு அது நின்று போகும் போது அது பூரணமாகும். ஓட்டம் சக்தி. பூரணம் அல்லது அமைதி சிவம்.

சிவத்தின் தன்மையை ஆண்கள் தாங்கி இருக்கிறார்கள். ஆண்கள் அடிப்படையில் இயங்காப் பொருள்கள். சூழல்தான் ஒவ்வொரு ஆணையும் இயக்குகிறது. சூழல் பெரும்பாலும் வாழ்க்கை என அறியப்படுகிறது. வாழ்க்கை என்பது ஒரு ஆணுக்கு பெண்ணோடு நிகழ்வது. நேர், எதிர் சக்திகள். இது ஈர்க்க அது அது நோக்கிப் பாய்கிறது.  அதிர்வு நிலையிலிருக்கும் சிவமாய் பெண்கள் இருக்கிறார்கள். பெண்களிடம் அந்த ஓட்டம் அதிகமாயிருக்கிறது. இயக்கம் பெண். தீச்சுவாலயாய் பெண் இருக்கிறாள். ஆண்கள் இந்த உலகத்தில் அதிகம் இயங்குகிறார்கள். அப்படி இயங்குவதற்கு காரணம் பெண்கள். எப்படி இந்த வசீகரம் வந்தது? 


வெறுமனே காமத்திற்காக என்று சொல்லிவிட முடியாது. இயக்கத்தின் தன்மை அடிப்படையில் பெண்களிடம் மட்டுமே இருக்கிறது. வேகமாய் இயங்கும் ஆண்கள் ஆண்களாய் தோற்றத்தில் இருந்தாலும் அவர்கள் பெண்களே...! உலகில் சாதித்திருக்கும் அத்தனை ஆண்களிடம் நிரம்பிக் கிடப்பது பெண் தன்மையே! இளகு தன்மையே இயங்கும். பெண் தன்மை என்பது இளகிய தன்மை. அப்படியான ஆண்கள்தான் வெற்றியாளர்களாக பரிணமிக்கிறார்கள். பெண்தன்மை இல்லாமல் வெற்றி பெறும் ஆண்கள் சர்வாதிகாரிகளாக மாறிப் போகிறார்கள். அவர்களிடம் கருணையோ, நீதியோ, சத்தியமோ, இருப்பதில்லை.

சாக்தம் இயக்கத்தின் குறியீடு. இயக்கம் என்பது நெருப்பு. நெருப்பின் அம்சம் குங்குமம். யோசித்துக் கொண்டிருந்த போதே சைவனாயிருந்த நான் ஒற்றைப் பாய்ச்சலில் சாக்தனாகிப் போனேன். திருவேற்காடு போயிருந்த போது அது நிகழ்ந்தது. கருவறைக்குப் பக்கத்தில் அமர்ந்து சக்தி மந்திரங்களைக் கேட்க கேட்க அந்த அதிர்வுகளால் சூடேறிப் போயிருந்த உஷ்ணமான சூழலும், அக்னியாய் இருந்த அந்த கருவறையும் மின்னலைப் போல என்னை தாக்கிய பொழுதில் சாக்தம் என்பது வாழ்தல். சாக்தம் என்பது அன்பு செய்தல்.

சாக்தம் என்பது அந்த சாக்த தன்மை நிரம்பிக் கிடக்கும் பெண்களை புலன்களைக் கடந்து உணர்தல், சாக்தம்  என்பது அம்மா, தாய், போராட்ட குணம் என்று உணர முடிந்தது. வாழும் வரை சாக்தம் வேண்டும். இது சிவனின் இன்னொரு கோலம். தன்னில் பாதியென்று தன்னைத்தானே அவன் சொல்லியிருக்கிறான். நான் எப்படி இதை விட்டு தூர போனேன் என்று நினைத்த போது அது என் அறியாமை என்று புரிந்தது.

யோசித்தபடியே குங்குமத்தை எடுத்து நெற்றியில் அப்பிக் கொண்டேன். குங்குமம் இயக்கத்தின் குறியீடு. இருக்கும் வரை இயங்குவேன், அதி உஷ்ணமாய் இயங்குவேன், சீற்றமாய் நகர்வேன் என்று தன்னைத் தானே தயார்படுத்திக் கொள்ளும் ஒரு சூட்சுமம். இருந்ததனை இருந்தது போல இருந்து காட்டுவது என்பது பேரமைதியை விளக்க மட்டுமல்ல, இயங்கும் தன்மையை விளக்கவும்தான் என்று எனக்குத் தோன்றியது. கோயிலின் ஓரத்தில் இருந்த ஒரு தூணில் சாய்ந்து கண்களை மூடினேன். 

கோயிலும், சிலைகளும், சுட்டிக் காட்ட எதுவுமில்லா பெருவெளிக்குள் தூக்கி வீசப்பட்டேன்....! 

சாக்தம் வாழ்வு. சிவம் நிறை வாழ்வு. 

வீடு வந்தவுடன் ஒன்று மட்டும் புரிந்தது, ஓட்டம் நிறுத்த வேண்டுமெனில்.... இன்னும் வேகமாக ஓடவேண்டும். ஓட ஆரம்பித்திருக்கிறேன். ஆமாம்... நானும் சாக்தன்தான்...!தேவா சுப்பையா...

Saturday, March 1, 2014

அழியாத கோலங்கள்...!


ஷோபாவின் பெயர்தான் டைட்டிலில் முதலில் காட்டப்படுகிறது. பிறகு அறிமுகம் பிரதாப் போத்தன், அதன் பிறகு மீதி எல்லோரும். இசை இளையராஜா என்று நினைத்தேன் ஆனால் அவர் இல்லை சலீல் செளத்ரியாம். மனிதர் பின்னி எடுத்திருக்கிறார். படம் பார்க்க ஆரம்பித்த போதே ஏன் டைட்டில் போடும் போதே ஒரு பாடல் வரவேண்டும் அதுவும் ஒரு ஆழமான வலியை கிளறும் நினைவுகள் கொண்ட பாடல் எதற்காக என்று யோசித்தபடியே தான் படம் பார்க்க ஆரம்பித்திருந்தேன். படம் முடியும் போதும் அதே பாடல் மீண்டும் ஒலிக்க படம் நிறைவடைந்து கதை திரைக்கதை, வசனம், ஒளிப்பதிவு, இயக்கம் என்று பாலுமகேந்திரா சாரின் பெயர் வழக்கம் போல.... பின் படம் முடிந்து விட்ட போதுதான் ஆரம்பத்திலும் முடிவிலும் ஒலித்த அந்தப் பாடலின் அர்த்தம் விளங்கியது.

அழியாத கோலங்கள் என்றில்லை பாலு சாரின் எல்லா படமுமே பார்த்து முடித்த பின்பு ஒரு கதையோ அல்லது கவிதையோ, திரைப்படமோ இப்படித்தான் இருக்கவேண்டும் என்று அழுத்தமாய் எனக்குத் தோன்றும். ஒரு படைப்பு பற்றி பார்த்து முடித்த பின்போ அல்லது வாசித்து முடித்த பின்போ ஒன்றுமே நமக்குத் தோன்றக் கூடாது. ஒரு மெல்லிய வலியோடு எங்கோ நாம் சிறகடித்துப் பறக்க வேண்டும். சந்தோசமோ, துக்கமோ, கண்ணீரோ, சிரிப்போ ஒரு படைப்பின் மூலம் நமக்குள் எட்டிப் பார்த்து விடவே கூடாது. ஏதோ ஒரு புது திசைக்கு நம்மை அது  கூட்டிச் சென்று விடவேண்டும். நமக்குள் இருக்கும் எல்லா எண்ணங்களையும் அந்த படைப்பு சுத்தமாய் துடைத்து அழித்து விட்டு நமக்குள் பேரமைதியை ஊற்ற வேண்டும். பாலு சார் ஒரு ஆழமான மனிதர். மனித அன்புகளுக்குள் கட்டுண்டு கிடந்த ஜீவன் அது. இழந்து இழந்து அந்த இழப்பு கொடுத்த வெறுமைக்குள் லயித்துப் புரண்டு, புரண்டு படைத்த ஒரு மகா கலைஞன் அவர்.

ஷோபாவை அவர் காதலித்ததும் ஷோபா பாலுசாரின் அன்பிற்கு பாத்திரமானதும் தவிர்க்க முடியாத ஒன்று.  அப்படி ஒரு பெண்ணை பாலு சார் பார்த்துக் கிறங்கித்தான் போயிருப்பார். அவருக்கு ஷோபா ஒரு பெண்ணே அல்ல. அதுதான் அவரே கூறுவாரே ஷோபா இந்த பூமிப்பந்திற்கு வந்து சென்ற தேவதை என்று. தன்னை வெளிப்படுத்தி தான் இருப்பதை அழுத்தமாய் தெரிவித்து விட்டு தன் இல்லாமையையும் ஆழமாய் பதிவு செய்து சென்ற ஒரு எரிநட்சத்திரம் என்றுதான் அவர் ஷோபாவை சொல்கிறார். ஷோபா அவருக்கு அவர் நித்தம் காணும் வானத்தின் வித்தியாச கோணத்தைப் போன்றவள், மரங்கள் அடர்ந்த பகுதியில் படிந்து கிடக்கும் பெரு நிழலைப் போன்றவள், ஓடும் ஆற்றில் ததும்பி நகரும் அலை அவள், பட்டாம்பூச்சியின் படபடப்பும், புற்களின் மீது படிந்திருக்கும் பனித்திவலைகளும் எப்படியோ அப்படித்தான் ஷோபா பாலு சார்க்கு. ஷோபா ஒரு அதிசயம். அத்தனை ஒரு இயல்பான பெண்ணை அதுவரையில் அவர் பார்த்திருக்கவே இல்லை. ஏன் அவர் மட்டுமா மொத்த தமிழ் ரசிகர்களும்தான்.

முள்ளும் மலரும் படத்தில் ஷோபாவை வைத்து பாலுமகேந்திரா சார் சூட் பண்ண வேண்டும். அந்த மகாகலைஞன் அவளை எப்படி எல்லாம் ரசித்தான் என்பதை ஸ்தூல உணர்வுகள் கடந்து அறிந்து கொள்ள நீங்கள்  “அடிப்பெண்ணே பொன்னூஞ்சல் ஆடும் இளமை” பாடலை இன்னுமொரு தடவை பார்த்து விடுங்களேன். அப்படி பார்க்கும் போது உங்களின் புறத்தொடர்புகளையும் முள்ளும் மலரும் படத்தின் கதையையும் தூக்கி தூர வைத்துவிடுங்கள். அங்கே நீங்கள், இசை, பாடல் வரிகள், ஷோபா, மற்றும் காட்சிகள் அதை தவிர வேறு ஒன்றையுமே அந்த சூழலுக்குள் கொண்டு வராதீர்கள். இப்போது புரிந்து கொள்வீர்கள் பாலுமகேந்திரா ஷோபா மீது கொண்டிருந்தது என்ன என்று....

வாழ்க்கையில் ஏற்படும் முரண்களுக்கும் அதன் விளைவுகளுக்கும் யாரும் விதி விலக்கல்ல. பாலுசாரும் கூட. அதனால் அவர் வாழ்க்கையின் ரகசிய பக்கங்களுக்குள் சென்று ஆராய்ச்சி செய்து என்ன நிகழ்ந்தது என்றறியும் பொது ஜனத்தின் புரையோடிப்போன புத்தி என்னிடமில்லாததால் பாலுசாரின் காதல் எவ்விதமானது என்பதை என்னால் தெளிவாய் உணர முடிகிறது. ஷோபாவை பொறுத்தவரைக்கும் அவர் மீது படிந்து கிடந்த வசீகரத்துக்கு காரணம் அவருக்கு நடிக்கவே வராது என்பதுதான். நடிக்கத் தெரியாமல் அந்த சூழலுக்குள் விழுந்து தன்னை முழுதுமாய் அந்த கதைக்குள் நுழைத்துக் கொண்டு அவர் வாழ்ந்து விடுகிறார். அது இயல்பான வெளிப்பாடு. ஒப்பனைகள் இல்லாத உண்மை. அழியாத கோலங்களில் அவர் இந்து டீச்சராய் வருகிறார்.

கெளரி சங்கர் என்னும் விடலைப் பையன் அவர் மீது தன் பருவ மாற்றத்தால் ஆசை வைக்க அதை பற்றிய எந்த பிரஞ்ஞையுமின்றி அவனை ஒரு சிறுவனாகவே பாவித்து இந்து டீச்சரான ஷோபா நடித்திருப்பது சத்தியமாய் நடிப்பு கிடையாது. அது ஒரு விதமான வாழ்க்கை. வாஞ்சையாய் இப்படி தன்னை விட ஆறேழு  வயது குறைந்த பையனிடம் ” என்னம்மா கெளரி என்னாச்சு மழையில நனைஞ்சுட்டு நிக்குற வா வா... வா குடைக்குள்ள வா..”  என்று ஷோபா அழைப்பது அன்பின் உச்சத்தில். அவளுக்கு அவன் மீது எந்த ஒரு உறுத்தலும் ஏற்படவில்லை. ஏற்படவும் படாது. அவளுக்கென்று காதலன் பிரதாப் போத்தன் இருக்கிறார். தனக்கென தன் காதலுக்கென ஒருவன் இருக்கும் போது இன்னொருவரிடம் ஒடித்து நடித்து ஓடி ஒளிய என்ன இருக்கிறது....?

அன்பு மட்டுமே அங்கே சீறிப்பாயும். ஷோபா இந்து டீச்சராய் சீறிப் பாய்ந்திருக்கிறார். படம் பார்த்துக் கொண்டே இருந்த எனக்கு சட்டென ஆனந்தவள்ளி டீச்சரின் நியாபகம் வந்தது. அது காதலும் கிடையாது. காமமும் கிடையாது. ஏனென்றால் காமம் என்றால் என்னவென்று 13 வயதில் இருக்கும் கட்டுப்பாடுகள் நிறைந்த வாழ்க்கைக்குள் இருக்கும் ஒருவனுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சரியாய் ஹார்மோன்களின் மாற்றங்கள் தொடங்கி இருந்த அந்த வயதில் எனக்கு எட்டாம் வகுப்பில் பாடமெடுக்க வந்த ஆனந்தவள்ளி டீச்சரை நிறையவே பிடிக்கும். ஏதாவது உதவி என்றால் ஓடிப்போய் நான் செய்திருக்கிறேன். அதிகபட்சம் டீச்சருக்கும் நம்மை பிடிக்கும் என்று நினைக்கும் போதே ஒரு சந்தோசம் கிடைக்கும். அவ்வளவுதான் அதற்கு மேல் கூட்டியோ குறைத்தோ அந்த உணர்வைச் சொல்ல முடியாது. டீச்சர் ட்ரெயினிங் முடித்து விட்டு அப்போதுதான் சேர்ந்த ஆனந்தவள்ளி டீச்சரிடம் ஏற்பட்ட ஈர்ப்பு என்ன விதமானது என்று இன்று வரை என்னால் கணிக்க முடியவில்லை. டீச்சரைப் பொறுத்தவரை நான் ஒரு டவுசர் போட்ட சின்னப்பையன் அவ்வளவுதான்.

அப்படி சின்ன பையனாய் இருந்ததாலேயே வாஞ்சையோடு காது திருகி என்ன மிஸ்டேக் பண்ணி இருக்க பார் என்று உரிமையோடு சொல்லிக் கொடுக்கவும் செய்வார். ஒரு நாள் கையில் பிரம்பு வைத்து அடித்து விட்டார் என்று ஒருவாரம் அவரை நான் திரும்பிப் பார்க்கவே இல்லை. பிறகு கூப்பிட்டு என்னை சமாதானம் செய்த பின்பு சாரி டீச்சர் என்று நான் சொன்னதைப் போல இந்தப் படத்திலும் கெளரி சங்கர் டீச்சரிடம் சாரி கேட்கிறான். தமிழ் டீச்சர் அவர். புராணக்கதைகளோடு சேர்ந்து நிறைய வரலாற்றுக் கதைகளையும் வகுப்பறையில் சொல்லிக் கொடுத்த ஆனந்தவள்ளி டீச்சர் இப்போது எங்கிருக்கிறார் என்று எனக்குத் தெரியாது ஆனால் அன்றைக்கு அவர் மீதிருந்த ப்ரியம் நிஜம். பதின்மத்தின் தடுமாற்றம். கட்டுப்பாடுகள் கொண்ட சமூக வாழ்க்கையினூடே கட்டுப்பாடுகளின்றி சுரக்கும் இரசாயனத்தினுள் சூட்சுமமாய் ஒளிந்திருந்த ஆதியின் குணம் அது. 

பதின்மத்தின் குறுகுறுப்பில் ஆற்றில்  குளிக்கும் பெண்களை யார் பார்க்காமல் இருந்திருப்பார்கள்? ஏடா கூடமான புத்தகங்களையும் படங்களையும் வகுப்பறைக்கு கொண்டு வரும் ஒரு முத்திப் போன நண்பன் இல்லாத பதின்மம் யாருக்கேனும் இங்கு உண்டா? மீசை அரும்புகையில் ஒரு தலையாய் காதலிக்காத பாவாடை தாவணிகள் இல்லாமல் போயிருந்தால் அது எப்படி பதின்மமாகும்? கனவில் தேவதைகள் வரிசையாய் நின்று கோரசாய் பாடல் பாடாத வாலிபம் எப்படி வீரியமானதாய் இருக்க முடியும்? யாரோ ஒரு கோகிலாவோ, ராஜியோ, உமாவோ, சித்ராவோ இல்லாமல் பதின்மத்தைக் கடந்தேன் என்று யாரேனும் ஒரு ஆண் சொன்னால் அது ஹார்மோன்களின் குறைபாடு என்றுதான் நான் சொல்வேன். பெண்களின் பதின்மத்தை பற்றி நான் எழுத விரும்பவில்லை. யாரேனும் ஒரு பெண் அதை எழுதினால் தான் சரியாய் இருக்கும்.

ஒரு டீச்சருக்கும், சாருக்கும் (இரண்டு பேருமே டீச்சர்தான் என்றாலும் எங்களுக்கு டீச்சர் என்பது பெரும்பாலும் பெண்பால்தான். ஆண்களை சார் என்றோ வாத்தியார் என்றோ சொல்லும் வழக்கம் இன்றும் நம்மிடம் உண்டுதானே...?!!!!) இருந்த வரைமுறையற்ற உறவினை பள்ளியிலேயே நேராய்க் கண்ட பின்பு உடம்பு சூட்டோடு தினமும் அதுபற்றி நண்பர்களிடையே பேசிப் பேசி மேலதிக விபரம் சொல்ல ஆளில்லாமல் திணறி நின்ற பதின்மம் எவ்வளவு வசீகரமானது. அழிக்க முடியாத அழியாத கோலங்களில் ரசனையாய் அதை சொல்லியிருக்கும் பாலு மகேந்திரா சாரை ஏன் நான் தீரத் தீரக் காதலிக்கிறேன் என்று உங்களுக்கு இப்போதாவது புரிகிறதா? அழியாத கோலங்களில் வெண்ணிற ஆடை ராமமூர்த்தி திருமணம் ஆகாத ஒரு முதிர்கண்ணன். வரும், செல்லும் பெண்களிடமெல்லாம் அதனாலேயே ஜொள்ளு விடும் ஒரு சபலக் கேஸ். படத்தில் அவர் ஒரு போஸ்ட் மாஸ்டர். அந்த ஊரிலேயே கொஞ்சம் அப்படி இப்படி இருக்கும் ஒரு பெண் மணியார்டர் அனுப்ப வருவார். அப்போது வெண்ணிற ஆடை மூர்த்தி சில்மிஷமாய் பேசிக் கொண்டிருப்பார். 

அந்தக் காட்சியில் பின்னணியில் ஏதோ ஒரே ரிதமில்... கொண்டீரே..... கொள்ளை கொண்டீரே....என்று ஒரு பாடல் ரேடியோவில் போய்க் கொண்டிருக்கும். நானும் படம் பார்த்த போதே மீண்டும் மீண்டும் ரீவைண்ட் செய்து அது என்ன பாடல் என்று முயன்று...தோற்று.....முயன்று...மறுபடியும் தோற்று...கடைசியில் பாடல் வரிகளை குத்து மதிப்பாய் எடுத்து கூகிளில் தேடிப் பார்த்தால் எம்.கே.டி. தியாகராஜ பாகவதரின் ஒரு பழைய பாடல். அட்டகாசமான அந்த பாடல் வெண்ணிற ஆடை மூர்த்தி அந்தப் பெண்ணிடம் சில்மிஷம் செய்து கொண்டிருக்கும் சூழலுக்கு ரம்யமாய் பொருந்திப் போகும். ஒவ்வொரு காட்சிக்கும் ஒவ்வொரு சூழலுக்கும் எது வேண்டும் என்று பாலுசார் எவ்வளவு ரசனையாய் முடிவெடுக்கிறார் என்று எனக்கு ஆச்சர்யமாய் இருந்தது.


நிறைய பணம் போட்டு எது எதையோ காட்டினால்தான் படம் ஓடும் என்ற ஒரு சூழலை உருவாக்கியிருக்கும் இந்தத் தலைமுறை இயக்குனர்கள் எல்லாம் ரசிகர்களை சுத்தமாக கெடுத்து வைத்திருக்கிறார்கள் என்றுதான் நான் சொல்வேன். சர்க்கஸ் காட்டுவது போலத்தான் இப்போது வரும் படங்கள் எல்லாம் பெரும்பாலும் இருக்கின்றன. விஸ்வரூபம் படம் எல்லாம் வெறும் டெக்னிகல் சர்க்கஸ்தான் என்று எனக்கு விளங்கியது. ஒரு ஆறு, ஒரு ஏரி, மரங்கள் சூழ்ந்த சாலை, வயல்வெளிகள், வாய்க்கால்கள், பூக்கள், வானம், உறுத்தல் இல்லாத வீதிகள், வீடுகள், இயல்பான சினிமாத்தனம் இல்லாத மனிதர்கள்  அவ்வளவுதான் அழியாத கோலங்கள் படம் முழுதும்....

கமல் நடித்திருக்கிறார் என்பதை படம் ஆரம்பிக்கும் போதும் முடியும் போதும் மட்டுமே உணர முடிகிறது. கமல் அலுவலகத்திற்கு வருகிறார். அலுவலக வேலைகளுக்கு நடுவே அவருக்கு வந்த கடிதங்களைப் பார்க்கிறார். அதில் ஒன்று  அவரது பால்ய சினேகிதன் பட்டாபி எழுதியது. இந்து டீச்சர் இறந்துப் போய்ட்டாங்கடா.... என்று பட்டாபி கடிதத்தில் சொல்கிறார். கடிதத்தை வாசித்து விட்டுபத்து நிமிடம் என்னை யாரும் தொந்தரவு செய்யாதீர்கள் என்று அலுவலகத்தில் சொல்லி விட்டு தனது நாற்காலியில் கமல் சாய்கிறார்....

மொத்த படமும் ப்ளாஷ் பேக்.....

விடலைப் பருவத்தில் மூன்று நண்பர்கள் வருகிறார்கள் , கெளரிசங்கர், பட்டாபி மற்றும் ரகு கூடவே இந்து டீச்சர். ப்ளாஷ் பேக்கில் ரகு என்னும் நண்பன் இறந்து போகிறார். ப்ளாஷ் பேக் முடிந்து மீண்டும் அமைதியாய் திரைக்குப் பின்னால் பாடல் ஒலிக்கிறது. கமல் சோகமாய் தன் நாற்காலியில் சாய்கிறார். காதலும் காமமும், பாசமுமாய் பார்த்த இந்து மதி டீச்சர் இறந்து விட்டதாய் கடிதம் சொல்கிறது. கடிதத்தை எழுதியது பட்டாபி..... மிச்சமிருக்கும் கெளரிசங்கர் தான் கமல் என்று புரிந்து கொண்டேன்.

அவ்வளவுதான் படம் முடிந்து விட்டது....!

இனிக்கும் வாழ்விலே என் சொந்தம் நீ
எனக்குள் வாழ்ந்திடும் என் தெய்வம் நீ
பிறக்கும் ஜென்மங்கள்....
பிணைக்கும் பந்தங்கள் என்றென்றும் நீ

படம் முடிந்து இதோ இந்த வரிகளை எழுதும் இப்போது வரை உள்ளுக்குள் அழுது கொண்டிருக்கும் இந்த வரிகளோடு கடந்து வந்த என் வாழ்க்கையின் அழியாத கோலங்களை அசை போட்டுக் கொண்டிருக்கிறேன்.....தேவா சுப்பையா...