Pages

Sunday, March 9, 2014

நிலா... நீ வானம் காற்று மழை....!


வார்த்தைகள் எல்லாம் தொலைந்து போய்விட்டன. உனக்காக எழுதிய என் கவிதைகளிலிருந்து சொற்களை எல்லாம் பிடுங்கி எடுத்து வானில் பறக்க விட்டு விட்டேன். உன்னை பற்றி நினைப்பதையும் குறைத்துக் கொண்டு விட்டேன். அழுத்தமான அழுகைக்குப் பிறகு ஓய்ந்து கிடக்கும் விழிகளோடும் சோர்ந்து போன இமைகளோடும் அடிக்கடி வானத்தில் அலைந்து கொண்டிருக்கும் மேகங்களை வேடிக்கை  பார்ப்பது என் வாடிக்கையாகி விட்டது. என் வீட்டுத் தோட்டத்தில் நேற்று மொட்டு விட்டிருந்த ரோஜா இன்று காலை விரிந்து பூத்திருந்ததைப் பார்த்தவுடன் சட்டென்று வந்த உன் ஞாபகத்தை சுமந்து கொண்டிருக்க முடியாது என்று இதோ வழக்கம் போல எழுத ஆரம்பித்து விட்டேன்.

இந்த உலகின் எந்த மூலையில் நீ வாழ்ந்து கொண்டிருக்கிறாய் என்று எனக்கு தெரியாவிட்டாலும் ஏதோ ஒரு கணத்தில் குழந்தையாய் உன் நினைவுகள் ஓடி வந்து என்னைக் கட்டிக் கொள்கின்றன. அவற்றை அள்ளி எடுத்து என் தோளில் போட்டுத் தட்டிக் கொடுத்தபடியே விழிகள் கலங்க உன்னை பற்றி எண்ணத் தொடங்குகிறேன். மாலை வேளைகளில் நாம் நடந்து சென்ற நகரத்தின் தெருக்களில் நான் இப்போதும் நடந்து செல்வதுண்டு. நாம் அமர்ந்திருந்த பூங்காக்கள், உணவருந்திய இடங்கள், ஒரு கோப்பை காபியோடு  ஒரு நாளின் பெரும்பகுதியைக் கடத்திய காஃபி ஷாப்கள், ஷாப்பிங் மால்கள் என்று எல்லா இடத்திற்கும் தனியே செல்லும் போதெல்லாம் கடந்த காலம் என் வீட்டு வாசலில் வசந்த காலத்தில் பூத்துக் குலுங்கிய கொன்றை மரத்தின் மலர்கள் போல என் முன் கொத்து கொத்தாய் மலர்ந்து கிடக்கும்.

எப்படியோ இந்தத் திருமணங்கள் தோற்றுப் போனாலும் காதல் மட்டும் கடைசி வரை தோற்காமல் கடுமையான கூட்டத்திலும் உயிரைப் பற்றிய கவலையின்றி புட் போர்ட் அடிக்கும் ஒரு கல்லூரி மாணவனின் உற்சாகத்தோடு என்னையும்  தொற்றிக் கொண்டேதான் வருகிறது. ஏதோ ஒன்றை உன் நினைவுகளோடு எழுதிக் கொண்டே இருக்கும் இந்த சுகத்தை திருமண பந்தம் கொடுத்திருக்குமா என்று எனக்குத் தெரியாது. ஒருவேளை சுதந்திரம் என்ற பெயரில் அது என்னை விதிமுறைகள் நிறைந்த ஏதோ ஒரு உலகத்திற்குள் தள்ளிவிட்டு கணவன் என்ற பெயரில் உரிமைகளைச் சுமக்கும் பொதி மாடாய் கூட ஆக்கி இருக்கலாம்.

காதலாய் நீ ரசித்த என் கோபம் திருமணத்திற்குப் பிறகு உனக்கு எரிச்சலாகியிருக்கலாம். எப்போதும் ஒரே திசையில் பயணிக்காத என் சுபாவம், நிமிடத்துக்கு நிமிடம் இலக்கில்லாமல் பறக்கும் என் எண்ணப்பறவைகள், பொருளாதாயம் பற்றி யோசிக்காத என் கவிதைப் புத்தி, எப்போதும் கனவில் மிதக்கும் என் ஆசைகள், என்று எல்லாமே உன்னை நரகத்தில் தள்ளி இருக்கலாம். மின்சாரம் இல்லாத இரவினில் கேண்டில் டின்னர் சாப்பிட்டதாய் சந்தோசப்பட்டுக் கொள்ளும் என் மகிழ்ச்சி உனக்கு பைத்தியக்காரத்தனமாய் தெரிந்திருக்கலாம். மிதமிஞ்சிய விவரிப்புகளையும், அளவுக்கு அதிகமான பெருமிதங்களையும் நான் கண்டும் காணாத மாதிரி செல்வது உனக்கு எரிச்சலை வரவைத்திருக்கலாம்...

காமத்தை இருட்டில் பிணம் தழுவும் நிகழ்வு போல கடந்து செல்ல விரும்பாத என் நிதானம்  உன்னை எரிச்சல் படுத்தியும் இருக்கலாம். நான் வாழ்க்கையை வாழ்க்கையாக வாழ விரும்பி அதை காதலோடு நகர்த்திக் கொண்டு போவதற்கு என்னுடன் யாருமே இல்லாமல் இருப்பதுதான் நல்லது என்று இப்போது உணரும் அதே வேளையில், ஒரு வேளை நீயும் என்னைப் போலவே ஒரு பைத்தியக்காரத் தன்மையோடு இந்த வாழ்க்கையை அணுகி இருப்பாயோ என்றும் யோசித்துக் கொள்கிறேன். முழுக்க முழுக்க இந்த வாழ்க்கையை நேர்கோட்டில் அணுகக் கூடாது என்று நான் சொன்னபோது நீ அதை ஆமோதிக்கவும் செய்திருக்கிறாய். 

நான் உன்னை நேசிப்பதற்கு  உன்னுடைய மெளனம் காரணமாயிருந்தது. நாம் பிரிந்து போவதற்கு இந்த சமூகம் காரணமாயிருந்தது. பெற்றவர்களே பிள்ளைகளின் வாழ்க்கையை தீர்மானிக்க வேண்டும் என்ற நம் சமூகப் பார்வையில் எனக்கு தவறிருப்பதாக தெரியவில்லை. அதே நேரத்தில் பிள்ளைகளுக்குப் பிடித்த துணையை ஏன் தன் சாதிக்குள் மட்டும் தேடிக்கொள்கிறார்கள் என்ற வெறுப்புதான் என்னிடம் மிகுந்திருக்கிறது. உனது சாதி உன் பெற்றோரின் மானமாயும் உன்னிடம் பாசமாயும் வேசமிட்டுக் கொண்டது. வேசங்கள் என்ன செய்துவிடும் என் சுயத்தை...? இதோ சுதந்திர வானில் பறக்கும் என் திருப்தியைக் கொடுத்துவிடுமா வாழ்க்கை புழுதியில் கட்டுப்பாடு கோடுகள் போட்டு வாழும் பூச்சிகளுக்கு?

திருமணம் புதுப்பெண்ணை வேலை ஏவும் மாமியாரைப் போன்று காதலை அதிகாரம் செய்து ஓரமாய் உட்கார வைத்து விட்டு அடுத்தவருக்காக நம்மை வாழச் சொல்லி பயிற்றுவிக்கிறது. இன்னும் சொல்லப் போனால் திருமணம் புத்திசாலித்தனத்தால் உருவாக்கப்பட்டது.. ஆனால் வாழ்க்கையோ மிகவும் பைத்தியக்காரத்தனமானது. நேர்கோட்டில் சீராய் எல்லாம் எப்போதும் நிகழும் என்று நம்மால் கூறவே முடியாது. பிரபஞ்ச பெருவெடிப்பிலிருந்து இன்றைய காலம் வரை எது எப்போது நிகழும் என்று வரையறுத்து கூறவே முடியாது. இயற்கையின் உன்மத்தமான போதையை பதிவு செய்யும் வேலைக்காரனாய் இருக்கிறது இன்றைய அறிவியல். எது நிகழ்கிறதோ அதை நிகழ்ந்த பின் ஆய்வு செய்யும் அறிவியல் பிரபஞ்ச கிறக்கத்தை வேடிக்கை பார்க்கும் ஒரு சிறு துறும்பு. ஒரு நிகழ்வு இடமாய் செல்வது போல சென்று, வலமாய் திரும்பி மேலெழும்பி பறந்து சென்று பின் கீழ் விழுந்து மொத்தமாய் மறைந்து போய்விடுவதற்கு எல்லாம் சாத்தியக்கூறுகளும் இங்கே இருக்கின்றன.

கற்பனைகளில் ஆசைகளைத் தேக்கிக் கொண்டு இங்கே எனக்கு நீ.. உனக்கு நான் என்று வாழ்வது சுகம் என்றாலும் அதை ஒரு வட்டத்துக்குள் நிறுத்தி வைத்து செய்வது என்பதில் என்ன சுவாரஸ்யம் இருக்கிறது? பூமி சூரியனை தன் இஷ்டப்படிதான் சுற்றி வருகிறது. அது அப்படி சுற்றுவதற்கு முன்பே யாரோ இங்கே ..." ஏய் பூமியே நீ சரியாய் 365 1/4 நாட்களுக்குள் சுற்றி வரத்தான் வேண்டும் ” என்று ஆணையிட்டிருக்க முடியாது.  அப்படியே ஆணையிட்டு சுற்றி வா என்றாலும் சொல் பேச்சைக் கேட்டு சுற்றிவர பூமி என்ன மனிதர்களைப் போல லோகாதாய லாபங்களை கணக்குப் போட்டு கள்ளத்தனமாய் செயல்கள் செய்யும் வக்கிர மனமா கொண்டிருக்கிறது?


ஒருவேளை என்னோடு நீயிருந்திருந்தால் பூமி சூரியனைச் சுற்றிவருவது போல தன்னிச்சையாய் இருந்திருக்கும் நமது வாழ்க்கை.. சட்டென்று கோடாணுகோடி வருடங்கள் கழிந்து சூரியனின் ஈர்ப்புவிசையிலிருந்து விடுபட்டு ஆனந்தமாய் எங்கோ மோதி வெடித்துச் சிதறுவது போல நானும் நீயும் சுகமாய் இறந்து போயிருந்திருக்கலாம். காதல் காதலைத்தான் போதித்தது. இப்போதும் காதலைத்தான் போதித்துக் கொண்டிருக்கிறது.  அது ஒருபோதும் திருமணத்தைப் போதித்திருக்கவில்லையாதலால்...

காதலால் நான் நிரம்பிக் கிடக்க உன்னைப் பற்றிய நினைவுகளே எனக்கு போதுமாயிருக்கிறது பெண்ணே...!!!!

வாஞ்சையாய் எந்த நோக்கமுமின்றி பிரபஞ்ச வெளியில் மிதக்கும் பூமிப்பந்தை போல உன் நினைவுகளை ஏந்திக் கொண்டு நானும் மிதந்து கொண்டிருக்கிறேன் இந்த பூமிப் பந்தில்.... 

என் கோடைக்காலங்களில்
நான் குளிரினை அனுமதிப்பதேயில்லை
குளிர் காலங்களில் 
வெயிலினை இம்மியேனும் நான் அனுமதிக்காததைப் போல;
காற்றடிக்கும் காலங்களில்
மிதக்கும் ஒரு இறகு போல 
இங்குமிங்கும் நான் அலைகையில்
எனக்கு குளிரின் நியாபகமோ அல்லது
வெயிலைப் பற்றிய கனவோ வருவதில்லை...!
ஏன் இயங்கிக் கொண்டிருக்கிறது
இந்த முழுப் பிரபஞ்சமென்ற கேள்வியை
உடைத்து பார்த்தால்தான் தெரியும்
என் காதலுக்கும், இந்த வாழ்க்கைக்குமிருக்கும் தொடர்பு..!

எழுதுவதை நிறுத்திவிட்டேன். யாருமற்ற இந்த இரவின் தனிமை கொஞ்சம் சப்தமாகவே என்னை  அழத் தூண்டியது. இல்லாமையின் பேரமைதிக்குள் இருக்கும் ஒரே ஒரு வஸ்து காதல் அந்த காதலை நெஞ்சோடு அணைத்தபடியே தேம்பிக் கொண்டிருந்தேன்...


அவள் உறங்கிக் கொண்டிருக்கலாம்.தேவா சுப்பையா....
1 comment:

ஜீவன் சுப்பு said...

//ஒருவேளை சுதந்திரம் என்ற பெயரில் அது என்னை விதிமுறைகள் நிறைந்த ஏதோ ஒரு உலகத்திற்குள் தள்ளிவிட்டு கணவன் என்ற பெயரில் உரிமைகளைச் சுமக்கும் பொதி மாடாய் கூட ஆக்கி இருக்கலாம்.//

EXACTLY CORRECT ...