Pages

Wednesday, August 31, 2011

உடையாரின் அதிர்வலைகள்...31.08.2011!

அதிர்வு I

உடையாரை தொட்டு வாசித்து அதில் நுழைந்ததற்கு பின் மனதினுள் சென்று உட்கார்ந்து கொண்ட சொல் " கற்றளி ".

தஞ்சாவூருக்கு அடிக்கடி செல்லும் நான் காளையார்கோவிலுக்கும் செல்வேன். காளையார்கோவில் மருதுபாண்டியர்களால் கட்டப்பட்டது. அந்த கோவிலின் ராஜ கோபுரம் கூட மிகப்பெரியதாய்தான் இருக்கும். கோபுரத்தின் கீழ் நின்று அண்ணாந்து பார்க்கும் போது மேகங்களின் நகர்வில் கோபுரம் கீழே விழுவது போல ஒரு பிரமை தோன்றும்.

காளையார் கோவிலுனுள் அங்குலம் அங்குலமாக சுற்றியிருக்கிறேன். தூண் தூணாக, சுவர் சுவராக தடவித் தடவி அந்தக் கோவிலின் பழைமை நிறைந்த வாசனைகளை என்னுள் ஆழ சுவாசித்து செலுத்தியபடி மருதிருவர் சிலைகளையும் வியந்து போய் பார்த்திருக்கிறேன். அவர்களின் புஜத்தில் அணியக்கூடிய தண்டை போன்ற இரும்பாலான ஒன்றையும் பார்த்திருக்கிறேன்.

அதன் தடிமனும் அகலமும் பார்த்து அதை எடையை அனுமானத்தில் கொண்டு வந்து நிறுத்தி இத்தனை உறுதியான வலுவான ஒரு அணிகலனைத் தம்மின் புஜத்தில் அணிந்திருப்பார்களெனில் அவர்களின் உடல் உறுதி எப்படி இருந்திருக்கும் என்று வியந்திருக்கிறேன்.

வீரம் என்பது வெறும் உடல் உறுதி மட்டுமல்ல அது விவேகத்தையும் விட்டுக் கொடுத்தலையும் உள்ளடக்கியது என்று என்று மருதிருவரின் கதைகளில் வரும் நிறைய சம்பவங்களை உணர்ந்திருக்கிறேன்.

திருவாங்கூர் மகராஜாவிடம் போய் தமது வீரதீர பராக்கிரமங்களைக் காட்டி வளறி வீசி, நேருக்கு நேராய் தனியாளாய் நின்று பெரிய மருது புலியோடு சண்டையிட்டு அதை கொன்று பல்வேறு அசாத்தியமான செயல்களைச் செய்து பரிசாய் சில பொருட்களையும் கடனாய் பெரும் பணத்தையும் பெற்று வந்தனர் என்று வரலாறு கூறுகிறது. அப்படியாக திரட்டி வந்த பணத்தை வைத்து சிவகங்கைச் சீமையை நிர்வாகம் செய்ய எத்தனிக்கையில் ஆற்காட்டு நவாப்பின் தூண்டுதலால் கும்பெனியர்கள் படையால் மீண்டும் ஒரு போர் வரும் சூழல் சீமைக்கு வருகிறது.

பெரிய மருது சீற்றமுடன் போரிட எத்தனித்திருக்கிறார், ஆனால் சின்ன மருதுவோ அதை தடுத்து, எட்டு ஆண்டுகளாக சீமையில் வாழும் மக்கள் பல்வேறு போர்கள் மற்றும் தலைமைகளின் மாற்றங்களால் கொடுமையான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள், எனவே மக்களின் நலத்தை முன்னிருத்தி தற்சமயம் ராஜதந்திர உபாயமாக நாம் கர்னல் புல்லட்டனை சந்தித்து கப்பம் கட்டி விடுவோம் என்று கூறி, அதன் படியே தாங்கள் மிகவும் கஷ்டப்பட்டு புரட்டிய பெரும் பணத்தை கப்பமாக கட்டி விட்டு அதன் பிறகு நாட்டின் வளர்ச்சிப் பணிகளில் ஈடுபட்டதாகவும் வரலாறு கூறுகிறது.

இங்கே ஒரு தலைவன் விட்டுக் கொடுத்து அடிபணிந்து போவது போலத் தெரிந்தாலும், இதுதான் மிகச்சரியான ஒரு தலைமைத்துவத்தின் இயல்பு. தான், தான் என்ற அகங்காரம் கொண்டு எந்த ஒரு தலைவனும் இருத்தல் ஆகாது என்பது மட்டுமல்ல.

ஒரு தலைவன் என்பவன் மிகைப்பட்ட மக்களுக்கு வழிகாட்டும் பெரும் பொறுப்பிலும் இருக்கிறான். அவனின் செயல்களின் முடிவு அமைதியையும் சந்தோசத்தையும், சுபிட்சத்தையும் மக்களுக்கு கொடுக்க வேண்டும். வழுக்கும் நிலத்தில் எதிர்த்து நின்று பார்ப்பவன் முட்டாள். வழுக்கும் நிலத்தில் சறுக்கிக் கொண்டு போகத் தெரிந்தவன் சமயோசிதவாதி.

இப்படியாக ஏராளமான நினைவுகளை இந்தக் கோவில் எனக்குள் விதைத்திருக்கிறது.

151 அடி கொண்ட ராஜகோபுரத்தை பார்த்து வியந்திருக்கிறேன். 216 அடிகள் உயரம் கொண்ட தஞ்சாவூர் கோவிலைப் பற்றியும் எனக்குத் தெரியும் என்றாலும் வெறுமனே நினைப்பேன்...ஏன் காளையார் கோவில் கூட உயரமான கோபுரம் கொண்டிருக்கிறது.

இது ஏன் தஞ்சாவூர் கோவில் அளவிற்கு பிரசித்தி பெறவில்லை. நிறைய சுற்றுலா பயணிகள் வருவதில்லை? ஒரு வேளை இதன் பின் புலத்தில் அரசியல் இருக்குமோ? ஒருவேளை இந்த பிராந்திய மக்கள் இதை சரியாக விளம்பரப்படுத்த வில்லையோ என்றெல்லாம் நினைத்து நிறைய பேரிடம் கேட்டும் இருக்கிறேன்....

ஆனால்...அதற்கான பதிலாய் தஞ்சை பெரிய கோவில் விமானத்தின் நிழல் கீழே விழாது என்ற ஒற்றைக் காரணத்தைதான் மிகைப்பட்ட பேர்கள் கூறினார்கள். மேலும் பெரிய நந்தி உள்ளது என்றும் மொக்கையாய் சில விபரங்கள் அறியப் பெற்றேன். சரியானவர்களை நான் கேட்கவில்லை என்றும் கூட கூறலாம். தஞ்சாவூர் கோவிலுக்கும் செல்லும் போது எல்லாம் பக்தி என்னும் ஒரு உணர்வு மட்டுமே ஆட்கொண்டு இருந்ததால் அப்போதெல்லாம் கேள்விகள் நிறைய எனக்குள் எழவில்லை.

கோவிலைச் சுற்றிய பிரகாரங்களில் எல்லாம் அமர்ந்திருக்கும் காதலர்களையும் சுவர்களில் எழுதப்பட்டிருக்கும் பரீட்சை நம்பர்களையும், மற்றும் அவரவர் வேண்டுதல்களையும் பார்த்து விட்டு வெகு நேரம் பிராகரத்தினுள் இருக்கும் புல் தரையில் அமர்ந்து வெற்று வானத்தைப் பார்த்து விட்டு....எதிர்காலம் பற்றிய ஏதோ ஒரு கனவினில் அந்த இடத்தின் உன்னதத்தைத் தொலைத்து விட்டு வந்திருக்கிறேன்.

ஆனால்..உடையாருக்குள் மூழ்கி, நான் மூச்சடைத்து நகர்ந்த பொழுதில் என்னால் ஒரு இடத்தில் இருக்க முடியவில்லை. இராஜ இராஜேச்வரம் என்ற அந்த பெரியகோவிலிடம் எனக்கு ஏற்பட்ட ஈர்ப்பு, எனது பதின்மங்களில் ஏற்பட்ட எதிர்பாலின ஈர்ப்பில் ஏற்படும் ஒரு கவர்ச்சியினை ஒத்து இருந்தது. இந்த விசை என்னை இழுத்துப் பிடித்து கோவிலைப் பற்றிய என் எண்ணங்களை அதிகப்படுத்தி இந்தக் கோவிலையே பித்தனாய் சுற்றி வரச்செய்தது.

மேலும் புத்தகத்தின் பக்கங்களை நகர்த்த, நகர்த்த பெரும் காதலால் என்னை ஈர்த்துக் கொண்டது பெருவுடையார் இராஜ இராஜத்தேவரால் செய்யப்பட்ட இந்தக் கோயில். பசியற்று, மொழியற்று, பித்தனாய் தேடித் தேடி வெவ்வேறு புத்கங்களையும் இணையப்பக்கங்களையும், புகைப்படங்களையும் காணொளிகளையும் பார்த்துக் கொண்டே இருக்கும் என் மனம்....தஞ்சை கோவிலை விட்டு நகராமல் கெட்டியாய் அதைக் கட்டிப் பிடித்துக் கொண்டு, கண்களில் நீர் ததும்ப....

அருள்மொழி வர்மன் என்னும் கேரளாந்தகன், சிங்களாந்தகன், மும்முடிசோழன், சிவபாதசேகரன், திருமுறை கண்ட சோழன், சத்திரிய சிகாமணி, ராஜாஸ்ரயன், ஐயன் பெருவுடையத் தேவரை எண்ணி உருகத் தொடங்கியது....

" கற்றளிக் கோவில்...."

என் ஐயனே, பெரும் பராக்கிரமத்தால் பல தேசங்களை வென்ற பெருவுடையத்தேவனே....! உனக்குள் என்ன தோன்றியப்பா ஏழு பனை உயரத்தில் இப்படி ஒரு பெரும் கோவிலை கட்டினாய்? எல்லா சுகங்களையும் குறைவர கொண்டிருந்த சோழ தேசத்தின் பெரும் சக்கரவர்த்தி நீ....! கடல் கடந்து சென்றும் வெற்றிக் கொடிகளை நாட்டி வந்த வீரனை பிள்ளையாய் கொண்டிருந்த பெரும் தகப்பன் நீ....

எங்கே & எப்போது தொடங்கியதப்பா உனது சிவ பற்று...? ஈசனவன், இறைவனவன் எல்லாம் வல்லவன் என்று அந்த ஏக இறையை உன்னுள் நீ உணர்ந்து அந்த பிரமாண்டத்தை பொருளாக்கி காட்ட முயன்றாயா செல்வனே...?

என் மனம் இடைவிடாது பிதற்றிய படியே இருக்கிறது. காளையார் கோவில் வேறு. தஞ்சை கோவில் வேறு....மனம் கூவி கூவி சத்தியத்தை என்னுள் ஊற்றியது.

காளையார் கோவில் கட்டப்பட்டது 1780 களுக்குப் பிறகு அதுவும் செங்கற்களால் ஆனது ஆனால் தஞ்சாவூர் கோவில் பத்தாம் நூற்றாண்டில் உருவானது.....மட்டுமல்ல மலைகளே இல்லாத தஞ்சாவூர் மாவட்டத்தில் முழுக்க முழுக்க கருங்கல்லால் செய்யப்பட்ட கோவில். சோழர்களின் காலத்தில் தமது ஆளுகையில் இருந்த மிகைப்பட்ட கோவில்கள் கற்றளிக் கோவில்களாய் மாற்றப்பட்டன.

மிகப்பெரிய பார வண்டிகளில் புதுக்கோட்டை திருச்சி பகுதிகளில் இருந்து நித்தமும் கருங்கற்களை கொண்டு வந்து குவித்து இவ்வளவு மிகப்பெரிய கோயிலை உருவாக்க முழுக்க முழுக்க பயன்பட்டது மக்கள் வளம்.

கருவறைக்கு மேலே இப்படி ஒரு ஏழு பனை உயரம் கொண்ட கோவிலைச் செய்ய பெருவுடையார் திட்டமிட்ட காலத்தோடு ஒப்பிட்டு நினைத்துப் பார்க்கையில் இது சாத்தியமே இல்லை என்ற எண்ணம்தான் நாம் அந்த காலத்தில் வாழ்ந்திருந்தால் நமக்குத் தோன்றியிருக்கும். பரந்து விரிந்து தனது ராஜ்யத்தை விரித்துப் போட்ட இராஜ இராஜ சோழனின் உள்நோக்கிய பார்வையால் ஏற்பட்ட தேடலில் உருவானதுதான் இராஜ இராஜேச்வரம் எனப்படும் பிரமாண்டம்.

ஏற்கனவே தலைமைத்துவத்தைப் பற்றி கூறினேன் தானே....? இதோ...இதோ...பெருவுடையத்தேவரை கொஞ்சம் எண்ணிப் பாருங்கள்...! முழுக்க முழுக்க மனித உழைப்புகளாலும், ஒத்துழைப்புகளாலும் உருவான இந்த பெரிய கோவில் எத்தனை மனிதர்களை ஒன்றிணைத்ததால் நடந்தேறியிருக்கும்?

அதுவும் தமது சொந்த தேசத்து மக்களோடு வேற்று தேசத்தை வென்று அதனால் பிடித்து வந்த 10,000 சாளுக்கிய, பாண்டிய, சேர தேசத்து அடிமைகளையும் இந்தப் பணியில் ஈடுபடுத்தி, கருமார்கள், சிற்பிகள், தேவரடியார்கள், வண்டி ஒட்டுனர்கள், உணவு சமைப்பவர்கள், சுத்தம் செய்பவர்கள், அமைச்சர்கள், மந்திரிகள் என்று பெரும் மக்கள் சக்தியை ஒருங்கிணைத்து ஒரு செயலை வெற்றிக் கரமாக செய்து முடித்திருக்கிறார் எனில்...

எப்போது சீற்றமாயிருந்திருப்பார்? எப்போது விட்டுக் கொடுத்துப் போயிருப்பார்? எதைக் கண்டு தயங்கி இருப்பார்? எதைக் கண்டு வியந்திருப்பார்? யாரை எப்படி எல்லாம் கணித்திருப்பார்? நிதியைக் கையாள என்ன விதமான நிலைப்பாடுகள் கொண்டிருப்பார்? அதே சமயம் இவ்வளவு பெரிய அரும் பணியைச் செய்யும் போதே எதிரிகளிடம் இருந்து தற்காத்துக் கொள்ள தேசத்தின் எல்லைகளில் என்ன மாதிரியான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து வைத்திருந்திருப்பார்?

சோழப் பேரரசில் எத்தனையோ ஒற்றர்கள் இருந்திருக்கிறார்கள். பஞ்சவன் மாதேவியின் கீழ் பல குழுக்களாய் ஒற்றர்கள், சேனாதிபதி பிரம்மராயர் கிருஷ்ணன் ராமரின் கீழ் பல ஒற்றர்கள், அவரின் மகன் அருண் மொழியின் கீழ் ஒற்றர்கள், இளவரசர் இராஜேந்திரச் சோழனின் ஒற்றர்கள், தனிப்படட் முறையில் பெருவுடையாருக்கென ஒற்றர்கள்......

என்று எத்தனையோ ஆயிரம் ஒற்றர்கள் தனித்தனியே தேசமெங்கும் வியாபித்து இருந்தாலும் அவர்களின் ஒற்றை நோக்கம் இராஜ இராஜ சோழன் என்னும் பெரும் தலைவனின் நலனையும் அவனின் எல்லா செயல்களுக்கும் உறுதுணையாய் இருந்தது என்பதும் மிக ஆச்சர்யமான விசயமென்றால்....இப்படியாக அத்தனை பேரையும் வசீகரித்து வைத்திருந்த ஐயன் இராஜ இராஜன் எவ்வளவு பேராற்றலும், பேரன்பும், பெருங்கருணையும்,பராக்கிரமும் கொண்டிருந்திருப்பார் என்று எண்ணிப்பாருங்கள்.....!

கருவூர்த் தேவர் என்ற குருவின் ஆலோசனைகளை ஏற்குமிடத்தில் சிறு குழந்தையாய் இராஜ இராஜன் என்னும் பேரரரசன் கைகட்டி, வாய் பொத்தி நின்று விடயங்களை உள்வாங்கிக் கொள்ளும் இடத்தில் தமது செல்வமும், சக்தியும் பதவியும் வெறும் தூசு என்றுதானே நினைத்திருப்பார்.....

எழுத்துச் சித்தர், என்னை எப்போதும் சூட்சுமமாய் வழி நடத்தும் திரு. பால குமாரன் என்னை கை கூட்டி சிறு பிள்ளையாய் சோழ ராஜ்யத்துக்குள் கூட்டிச் சென்று கொண்டிருக்கிறார். ஒவ்வொரு இடமாய் எனக்குச் சுட்டிக் காட்டி இது இப்படியப்பா ....அது அப்படியப்பா என்று ஒரு தகப்பனாய் வழி காட்டுவதோடு மட்டுமில்லாமல் உள்நோக்கிய எனது ஆன்மீகப்பார்வைக்கு பேருதவியாயும் இருக்கிறார்.....

பிரமாண்டத்தை செய்தவர் ஒருவர்....அந்த பிரமாண்டத்தை பிரமாண்ட வார்த்தைகளாக்கி காட்டுபவர் ஒருவர்......ஒரு சிறுவனாய்....வாய் பிளந்து ஆச்சர்யங்களை உள்வாங்கி, ஏதேதோ அமானுஷ்ய விடயங்கள் என்னுள் பூத்துச் சிரிக்க...சலனமற்று வாசித்துக் கொண்டிருக்கிறேன்...நான்...!

சோழம்..! சோழம்...! சோழம்..!

(இன்னும் அதிரும்...)


தேவா. S

பின் குறிப்பு: "பாண்டிய குலாசனி வளநாட்டு தஞ்சாவூர் கூற்றுத்துத் தஞ்சாவூர் நாம் எடுப்பிச்ச திருக்கற்றளி ஸ்ரீராஜராஜீஸ்வரமுடையார்,'' என்று, இப்பெரும் கோவிலைக் கட்டியதை பெருமிதத்தோடு கூறுகிறது கல்வெட்டு.

அடித்தளம் முதல் சிகரம் வரை கற்களைக் கொண்டு கட்டப்பட்டதால் இக்கோவில், "கற்றளி' என அழைக்கப்படுகிறது.Monday, August 29, 2011

மிச்சமென்ன....?
அலுத்துதான் போகிறது
சராசரி அன்றாட....
அட்டவணைகளுக்குள் சுழலும்...
இந்த இயந்திர வாழ்க்கை!

நேரங்களுக்குள் ஒளிந்து கொண்டு
கண்ணடித்து சிரிக்கும்..
வாழ்க்கையின் இதழோரங்களில்
படிந்திருக்கும் சோகத்தில்
தொலைந்து போய் கிடக்கிறது
என் சுயம்....!

யாருமற்ற வனமொன்றில்
ஒரு பேடைக்குயிலாய்
நான் கூவி கூவி
காற்றோடு சல்லாபித்து
தீரக்காதலோடு..
திக்குகளின்று பறக்க
ஆசைகள் கொண்டிருந்தேன்..!

ஆனால்..

அலார ஒலியோடு
அலறலாய் விடியும் பொழுதுகள்
சக்திகளை உறிஞ்சிக் கொன்டு
கசங்கலாய் என்னை
இரவுகளிடம் ஒப்படைக்கும்
வழமையில் அது கரைந்தே போனது..!

ஒரு மரத்தின் இலையாய்...
ஜனித்து காற்றில் ஆடி
அசைந்து விளையாடி
மனமற்ற திசுவாய் மழையில்
திளைத்து குதித்து,
வெயிலைக் காய்ந்து அனுபவித்து
தடமில்லாமல் மரமிலிருந்து
ஒரு நாள் சருகாய் கழன்று
மெளனமாய் மண்ணில்
மட்கி மடியும்
பெருங்கனவுகள் கொண்டிருந்தேன்...

ஆனால்...

இரைச்சலான மனிதர்களின்
புத்திகளிடம் இருந்து என்னைக்
காத்துக் கொள்ளும் முயற்சிகளில்
விழிப்பான நிலையில்தான்
ஏதேதோ எண்ணங்களோடு
நகர்ந்து, அவசரமாய் விடிகிறது
என் நீண்ட இரவுகள்!

ஒரு காற்றாய் நதியின்
மேனி தடவி மெல்ல நகர்ந்து
சிலிர்ப்பாய் அலைந்து திரிந்து
மானுட நாசிகளுக்குள் சென்று
எங்கே இருக்கிறது உயிரின்
உள் முடிச்சு என்றறியும்
ஆசைகள் கொண்டிருந்தேன்...

ஒரு வயல் வெளியில்
சிறு பூவாய் யாரும் கவனியாமல்
பூத்து சிரித்து....தலையசித்து
மடிய நினைத்திருந்தேன்..

ஆனால்...

விரிந்த விழிகளில் தேங்கிக்
கிடக்கும் கனவுகளோடு
வெளுத்த வானத்தை பார்ததபடி
நகரும் என் வார இறுதிகளோ
வரப்போகும் வாரத்திற்கான
திட்டமிடுதல்களாய் எப்போதும்
தொலைந்தேதான் போகிறது...!

மிச்சமாய் என்னவிருக்கும்
என்று உடைக்கும் கேள்விகளை
நித்தம் சுமந்து கொண்டு
தேடலாய் நகரும் பொழுதுகளின்
இலக்குகளில் எங்கோ
ஒளிந்து கிடக்கிறது கட்டுக்களை
உடைத்தெறிந்து ஒற்றைப் பாய்ச்சலில்...
மொத்தமாய் கரையப் போகும்
சுவடுகளற்ற எமது சுயம்...!


தேவா. S

Sunday, August 28, 2011

காந்தி தேசமே! கருணை இல்லையா...?தங்கபாலு என்ற தகர டப்பா வாய் திறந்து நேற்று தத்து பித்து என்று உளறியிருக்கிறது. பிழைப்பிற்காக ஒரு கட்சியில் சேர்ந்து கொண்டு தனது சுகங்கள் எள் அளவேனும் குறையக் கூடாது என்று அடைக்கலம் புகுந்திருக்கும் திருவாளர் தங்கபாலு நேற்று மீடியாக்களின் முன் திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார்.

பேரறிவாளன், சாந்தன், முருகன் மூன்று பேரையும் தூக்கிலிட்டே ஆகவேண்டுமாம். அப்படி செய்தால்தான் ஜனநாயகம் காப்பற்றப்படுமாம். என்னே அறிவு...! என்னே புலமை! மெச்சி மெச்சி பாராட்ட வேண்டுமோ இந்த முட்டாள்தனத்தை...?

நீதிகள் என்பவை சாட்சிகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுபவை என்பதை இந்திய தேசத்தில் பாமர மனிதனும் அறிவான். சாட்சிகள் எப்படி உருவாகிறார்கள் என்பதை பச்சைப் பாலகர்களும் அறிவர்.

ஜனநாயகத்தினைப் பற்றி பேசும் திருவாளர் தங்கபாலு...எந்த ஜனநாயகத்தின் அடிப்படையில் அதிகாரப்பூர்வ கைது செய்யாமல் மல்லிகையில் வைத்து பேரறிவாளனை 8 நாட்கள் சித்ரவதை செய்து அதன் பின் நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றார்கள் என்று கூற முடியுமா?

முன்னுக்கு பின் முரணாக செய்திகள் இருக்கும் ரகோத்தமனின் அதிகாரப்பூர்வ கருத்துக்களை தங்கபாலுகள் வாசிக்கவில்லையா இல்லை வாசிக்கத் தெரியாதா? ராஜிவினைக் கொல்ல பயன்பட்ட வெடிகுண்டின் பெல்ட்டினை செய்தது யார்? என்று இதுவரைக்கும் துப்பு துலக்க முடியாத துப்பு கெட்ட புலனாய்வுத் துறை பேரறிவாளன் அதற்குத்தான் பேட்டரி வாங்கிக் கொடுத்தார் என்று கூறுவது அபத்தத்திலும் அபத்தம்.

விடுதலை பத்திரிக்கைக்காக பணி புரிந்த பேரறிவாளனும், அய்யா பெரியாரின் கொள்கைகளை பின்பற்றி வந்த பேரறிவாளனின் குடும்பத்தினரும் மட்டுமல்ல இன்னும் தமிழகத்தில் இருக்கும் லட்சோப லட்ச மக்களும்தான் விடுதலைப்புலிகளையும் அவர்களின் ஈழப்போரட்டத்தையும் ஆதரித்தார்கள். அப்படி ஆதரித்த அத்தனை பேருக்கும் தெரியுமா விடுதலைப்புகள் இராணுவ நடவடிக்கையாக ராஜிவினைக் கொல்லபோகிறார்கள் என்று...?

1991க்கு முன்பு இருந்த தமிழகத்தின் நிலையை சற்றே அனைவரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஈழப்போராட்டம் என்பது இந்திய அரசால் ஊக்குவிக்கப்பட்டதும், விடுதலைப் புலிகளுக்கு நிதி உதவிகள் கொடுக்கப்பட்டதும், இராணுவ பயிற்சிகள் கொடுக்கப்பட்டதும் என்று குறையற நடந்தேறியதை யாராலும் மறுக்க இயலுமா?

தங்கபாலுகளின் சொந்தங்களில் யாரேனும் ஒருவர் வேளச்சேரிக்கு செல்லும் பேருந்துக்கு யாரேனும் ஒரு விடுதலைப்புலிக்கு வழிகாட்டியிருந்தால் அவர்களை தூக்கில் போடலாமா? பசிக்கிறது எங்கே சாப்பாடு கிடைக்கும் என்று ஒரு ஈழத்தமிழர் கேட்டால் உணவு கொடுத்தவருக்கு தூக்கு என்று சொல்வது என்ன நியாயம்? இது என்ன மானங்கெட்ட ஜனநாயகம் இதற்கு நீங்கள் கொடிபிடிக்கிறீர்கள்.

ராஜிவ் கொலையினைப் பற்றி மூன்றே பேருக்கு மட்டும்தான் தெரியும் என்று காதுகள் செவிடாகும் படி சிபிஜ கூறுகிறதே....? தங்கபாலுவின் காது என்ன செவிடா? அல்லது வேண்டுமென்றே தமது வசதிக்காக செவிடைப் போல நடிக்கிறாரா? யாருக்குமே தெரியாது என்று இந்திய புலனாய்வு தனது மூளையை செதுக்கி வெளியிடும் அறிக்கைகளையும் தாண்டி, இந்தக் கொலையினை அறிந்தேதான் பேரறிவாளன் உதவினார் என்று கூறுவது எவ்வளவு பெரிய மடத்தனம்...?

கொலை செய்யவேண்டும் என்பவன் கொலை செய்யும் போது மூளைகள் மடங்கி உணர்ச்சியின் உந்துதலில் மிருகத்தனமாய் ஒரு படுகொலையைச் செய்கிறான். அவன் மனிதனல்ல மிருகம்....என்றே வைத்துக் கொள்வோம். கொலையானவர் தான் கொல்லப்படுகிறோம் என்றறியாமலேயே கொல்லப்படுகிறார்.

இப்படியான சூழலில் இதனோடு தொடர்பு கொண்டவர் என்று தண்டித்து தூக்கிலேற்றப் போகும் ஒருவர் கொலைக்குற்றத்தோடு நேரடி தொடர்புடையவர் அல்லது கொலை என்று தெரிந்தே நோக்கத்தில் குற்றத்தை ஏந்தியிருப்பவர் என்றால்...கூட....தெரிந்தே நாம் சட்டத்தின் மூலம் ஒரு கொலையைச் செய்வது சரியா?

பேரறிவாளன் என்பவர் குற்றத்தோடு நேரடி தொடர்பில்லாதவர். குற்றம் நடக்கப்போகிறது என்றே அறியாதவர். இவருக்குத் தூக்கு என்பது....

மறுக்கப்பட்ட நீதி...!

தங்கபாலு போன்ற அரசியல் தலைவர்கள் தாங்கள் சார்ந்திருக்கும் கட்சிக்கு விசுவாசமாய் நடந்து கொள்வதாக நினைத்துக் கொண்டு ஜனநாயகத்திற்கு புது வடிவங்கள் கொடுக்க முயலலாம்.

தான் இறக்கப் போகிறோம் என்று அறியாமல் ஒரு உயிர் பிரிவது வேறு. அதற்கு நாள் நட்சத்திரம் குறித்து நேரம் குறித்து துள்ளத் துடிக்க உலகறிய தூக்கிலிடுவது வேறு. அடிப்படையில்....மன்னிக்கவும், குற்றவாளிகளை குற்றத்தின் தன்மையை உணர்ந்து கொள்ளவும் செய்யும் வகையில் தீர்ப்புக்கள் இருக்க வேண்டும். ஆயுள் வரை, இறக்கும் வரை ஒரு மனிதனை சிறையிலடைக்கலாம், கடுமையான வேலைகளைச் செய்யச் சொல்லி அவன் மூலம் ஏதேனும் உற்பத்திகளைப் பெருக்கலாம்...

ஆனால் உயிர் எடுக்கும் தூக்கு தண்டனை என்பது, மனோநிலை குன்றிய ஒரு சமுதாயத்தில் எவனோ எழுதி வைத்து விட்டுப் போன பழிக்குப் பழி வாங்கும் ஒரு குரூரம்.

துள்ளத் துடிக்க உயிர்களுக்கு (பெயர், ஊர், நாடு, மொழி, எல்லாம் நீக்கி விடுக) உங்களைக் கொல்லப்போகிறோம் தயாராகுங்கள் என்று கூறுவது மிகப்பெரிய மனிதக் கொடூரம்....!

உயிர்கள் வாழப் படைக்கப்பட்டவை அதை எந்த மனிதனாயினும் ஒரு மனிதனின் உடலில் இருந்து பிரிக்க அனுமதியில்லை. அப்படி சிலர் செய்கிறார்கள் என்றால் அவர்கள் சபிக்கப்பட்டவர்கள். எனது நாடும் அரசாங்கமும் மக்களும் கோடாணு கோடி ஆண்டுகள் சுபிட்சமாய் வாழ வேண்டும். எனது சமுதாயத்தின் மீது எந்த ஒரு கறையும் படியக்கூடாது...என்ற எண்ணம் கொண்டோரெல்லாம் இந்தக் கொலைகளுக்கு எதிராய் போராடித்தான் ஆகவேண்டும்.

சகிப்புத்தன்மையையும், சத்தியாகிரகத்தையும் கற்று கொடுத்த தேசப் பிதாவினை ஈன்ற தேசம் இது. ஆயிரம் இன்னல்களுக்கு மத்தியிலும் அறப்போராட்டங்கள் செய்து வளர்ந்த நாடு இது....

வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடிய ஜீவகாருண்ய பெருமான் வள்ளலாரையும், கொல்லாமை என்னும் அதிகாரம் கொண்ட வள்ளுவப்பெருந்தகையும், உயிர்களிடத்தில் அன்பு வேண்டும் என்றும் கூறிய புத்த பெருமானும் கூறிய கருத்துக்களால் தெளிர்ந்து மிளிர்ந்து நிற்கும் தேசமிது.

தேவையின் அடிப்படையில் தர்மத்தை நிலை நாட்ட கத்தியினை எடுக்கலாம் என்று பயிற்றுவித்திருக்கும் ஒரு ஆத்மார்த்த பூமியில் அதனை தவறாக கற்பிதம் கொண்டு அப்பாவிகளை அடித்து உதைத்து சித்ரவதை செய்து 20 வருடங்களாக வழக்கினை விசாரிக்கிறேன் பேர்வழி என்று சீரழித்து...

மனித மனங்களை உடைத்து, தனிமைச்சிறையில் அடைத்து, வேதனைப்படுத்தி தினம் தினம் சாகடித்து, உற்றோர், பெற்றோர் உறவினர், சக தேசத்து மக்கள் என அனைவரையும் கலங்கடித்து, அவர்களின் இளமையும், வாழ்க்கையும் அட்டையாய் உறிஞ்சிக் கொண்டு....

ஒரு நடை பிணமாய் கூட சிறைக்குள் வாழ அனுமதிக்காமல் ஒரு தேசம் அவர்களை தூக்கில் போடுமெனில் அது எப்படி தர்மமாகும்...?

இதுதான் நீதியா? தர்மமா? சத்தியமா?

காலத்தின் கைகளில் இந்தக் கேள்விகளை ஒப்படைத்து விட்டு...மெளனமாய் காத்திருக்கிறேன்... உங்களோடு நானும்...!


தேவா. S

Thursday, August 25, 2011

பூரணம்...!


முன் பல்லை காட்டிய படி நாணிக் கோணி இழுத்துக் கொண்டு யாரிடம் கேட்கிறாய் என் மனமே நான் யாரென்று??? நான் யாரென்றறியாமல் நீயென்று சொல்வெனென்று மனப்பால் குடிக்கிறாயா? மட மனமே? நீ கொண்ட கற்பிதங்களையும் நீ ஜனித்த இடத்தின் வேர்களின் மூலங்களையையும் படைத்தவனை பார்த்து கேட்கிறாயே கேள்வி...!

அகந்தையை தன்னுள் அடக்கி தன்னை மறந்த மானுடர்களின் வரிசையில் என்னை சேர்க்க நினைக்கும் உன்னை வென்று போவது மட்டுமல்ல.....நான் ....மயங்கிக் கிடப்பதும் நான்..தான்..!

தோட்டத்து வேலிகளுக்குள் ஊர்ந்து செல்லும் அரவம் நானே. நிலச் சூட்டின் தன்மையை உள்வாங்கிக் கொண்டு தானென்ற தன்னுள் தவழ்ந்து செல்லு தவம் போன்ற வாழ்கை அது. தோட்டத்துக்குள் வேர்பிடித்து நிற்கும் செடிகளும் கொடிகளும் நானே...!

எமது கால்களைப் பரப்பி நீர்க்கால்களை தேடி நிலத்துக்குள் சென்று விரிந்து பரந்து பிடிப்புக் கொண்டு நிலத்தின் குளுமையோடு உறவாடுவதோடு நில்லாமல் விடியலில் ஜனிக்கும் சூரியனின் வெம்மையை எட்டிப் பிடித்து உணவுக்கான சக்தியை வாங்கி எமக்குள் நாமே நின்று வாழ்ந்து பின்னொரு நாள் சலனமற்று காய்ந்து கருப்போவதும் யார்?

மருகிப் போய்தான் பல்கி விரிந்தேன். நித்திய இருளில் நிரந்தரமாய் தியானித்துக் கிடக்கையில் என்னுள் நானே ஆழ்ந்து அமிழ்கையில் சப்தங்களின்றி சமைந்து கிடக்கையில் வேண்டுமென்றேதான் விருப்பத்தினை எனக்குள் விரித்துப் போட்டேன். சப்தமானேன்...!

எப்படி.....தெரியுமா?

அது இருளில் இருந்து ஜனித்த சப்தம்...என்னின் அமைதியை கிழித்து முதன் முதலின் என்னை காண அவித்தைக்குள் நான் அடி எடுத்து வைத்த அற்புதக் கணமது. இதோ...இதோ இன்று மனமான நீ, நீ என்று உன்னை செல்லும் உன் உடலுக்குள் மூச்சுக்காற்றாய் சென்று ஆழச் சுவாசிக்கையில் மூலாதாரத்தை முட்டி மோதி இடைவெடாமல் இறைத்துப் போடுகிறதே ஒரு சப்தம்...அ...உ....ம் அது என்ன அலங்கார ஓசையா..? அல்ல... அல்ல....

அது ஆதியில் யாம் எம்மில் வெளிப்படுத்திய சப்தத்தின் தொடர்ச்சி.

என்னுள் இயங்கிக் கிடக்கும் எல்லாம் இந்த சப்தத்தின் முடிச்சினை தன்னுள் தேக்கி வைத்திருப்பது உனக்குத் தெரியுமா?சப்தமாய் வெளிப்பட்டு காலங்களற்று யாம் சப்தமாகவே அதிர்ந்து அதிர்ந்து, அந்த அதிர்வுகளின் உராய்வுகளில் வெளிப்படுத்திப் போட்ட பிந்து என்னும் ஓளியினை, சக்தியினை எம்முள் இருந்து பரப்பிப் போட்டோம்.

நாதமும் பிந்துவும் கலந்து லயித்துக் கிடந்த பரமானந்தத்தில் யாம் தோற்றுவித்த ஒவ்வொன்றும் எம்மில் ஜனித்து, ஜனித்த வேகத்தில் தம்மை வேறாய் உணர்ந்து ஓடும் ஓட்டத்தில் எம்மை யாமே அறியும் பயணத்தில் தெறித்து விழுந்தன அண்ட சாராசரமும், உமக்கு புலப்படும் பால்வேதிகளும், கோள் வெளிகளும்....இன்ன பிற சொற்களுக்குள் கொண்டு வர இயலா எமது இயல்புகளும், சூத்திரங்களும்....

தேற்றன் யார்? என்று மனமே நீ கேள்! உன்னுள் ஆழ்! தேற்றத்தின் தெளிவு யார் ? என்று கேட்டு கேட்டு, கேட்டு முட்டி மோதி உடைந்தே போ.. மனமே...நீ! சுத்த மாயையாய் யாம் வெளிபட்டு நின்ற சக்தி வடிவத்தின் சீற்றத்தில் தெறித்து விழுந்த கோடாணு கோடி நட்சத்திரங்களில் ஒன்று நீ காணும் சூரியன் எனும் என் சூட்டு வடிவம்...

காலங்கள் கடந்து எரிந்து, எரிந்து ஒரு கணத்தில் எம்மில் இருந்து தூக்கியெறிந்த பிண்ட தூசுகள் எல்லாம் அவற்றின் மூலக்கருத்தான சூரியனின் அச்சுப் பிடிப்பில் சுற்றி வர, சுற்றி வர, சூடு தணிந்து போனவை அந்த, அந்த சூழலுக்குள் அகப்பட்டுப் போக அப்படியே எம்முள் இயங்கி வர, பூமி என்னும் நெருப்பின் பக்குவத்தில் எமது பரிமாணத்தில் கூடிக் கலந்து எமது சக்தி அணுக்கள் எல்லாம் கூடிக் கலந்து பரப்பிப் போட்டதுதான் பிரணானும், நீரும்...சூடு தணிந்த நிலமும்...

கணக்குகள் இட்டா யாம் எம்முள் இவற்றை ஜனிப்பித்தோம் அல்லது எம்மை கற்பித்து ஏதோ செய்ய வேண்டும் என்ற யாக்கையிலா....? அல்ல அல்ல.. யாமே எம்மில் எல்லாமாய் இருந்து ஆடிக் களிக்கும் எமது தீரா ஆட்டத்தின் தேடல் இது, நான் கடலானேன், மண்ணானேன், மரமானேன், நீரும் நிலமும் சேர்ந்த பகுதிகளில் இருந்து ஏதோ ஒரு யாக்கையில் இயக்கத்தினை உட்கொண்ட சிறு உயிரானேன்...

எமது ஆற்றலின் இயக்க வடிவினை எல்லாம், இயங்கும் எல்லாம் தம்முள் பொருத்திக் கொண்டு தானாய் இயங்கையில், அதிசயமய் மானுடர்களுக்குள் தோன்றிய அவித்தையின் சூட்சும பரிமாணம் மனமானது. அதுவே இன்று என்னை யாரென்று என்னிடமே கேள்வி கேட்கிறது.

புல்லாய், பூடாய், பல் விருகமாய், பறவையாய், பாம்பாய், கல்லாய், மனிதராய், பேயாய், கணங்களாய், வல் அசுரர் ஆகி, முனிவராய்த் தேவராய்...எல்லாமாய் யாம் இருந்து சூட்சும இயங்கு நிலையில் நகரும் பொழுதுகளில் மானுடராய் அகப்பட்டு நகரும் எமது நாடகத்தில் யாமே சுகிக்கிறோம், யாமே நடிக்கிறோம், யாமே கோபிக்கிறோம், யாமே அசைக்கிறோம், யாமே தண்டிக்கிறோம், யாமே சந்தோசத்தில் குதிக்கிறோம் யாமே சோகத்தில் துவள்கிறோம்...

கேள்வி கேட்பவனாயும், பதில் சொல்பவனாயும், நேருக்கு நேராய் மோதுபவனாயும், ஒளிந்து நின்று அடிப்பவனாயும், அவச்சொற்கள் பேசுபவனாகவும், சுபச் சொற்கள் பேசுபவனகவும் ஆணாகவும், பெண்ணாகவும் அலியாகவும் எல்லாமாய் யாமே இயங்குகிறோம்.

மானுடர் என்னும் பக்குவத்தில் யாம் வெளிப்படும் தன்மைகள் கூடுதலாய் மிகுந்திருக்கிறது. மனம் என்ற ஒன்றினை நகர்த்தி விட்டு உயிர் என்ற படிமாணத்தில் தன்னை புகுத்திக் கொள்ளும் எல்லா மானுடரும் தன்னை தான் என்ற பெயரினுள்ளோ, தொழிலினுள்ளோ, உறவினுள்ளோ, உருவத்திற்குள்ளோ அடைத்துக் கொள்வதில்லை. உடல் கடந்து சத்திய சொருபத்தின் நிலையினை உணர்கையில்...

சுற்றி நிகழும் சூதுகளின் சூத்திரங்கள் தெரிகிறது. முரண்களின் மூலம் தெரிகிறது. பிரபஞ்ச நியதி என்னும் எமது இயக்கவிதிகளுக்கு முரண்பட்ட மனிதர்கள் மனதுக்குள் நின்று மடங்கிப் போகையில் அவர்களிடம் ஸ்தூலமாய் செல்லாமல் சூட்சுமமாய் மாற்றங்களை ஏற்படுத்துகிறார்கள்.

முரண் பட்ட மனிதர்களையும் மனித வாழ்க்கையை சுமுகமாய் நகர விடாதவர்களையும், மனிதர்களுக்குப் பின்னால் அவர்களைப் பற்றி குறை சொல்பவர்களையும் அவதூறு சொல்பவர்களையும், தன்னைப் போல தன்னை ஒத்து வாழும் மானுடர்களை துர் வார்த்தைகளால் துன்பபடுத்தியும், உடலால் வதைக்கவும் நினைப்பவர்களையும்.....

தத்தம் இடத்திலே அமர்ந்து மனம் விலக்கி, மூச்சினை உக்கிரமாக உற்று நோக்கி பிரபஞ்சம் என்னும் தன் ஆதி இயக்க நிலையின் சமன் பாடுகளைக் கூட்டிக் குறைத்து தவறிழைத்தவன் கதறிக் கதறி, முட்டி மோதி அழுது புரண்டு தன்னின் தவறினை உணரும்படி தண்டிக்கிறார்கள். இது பிரம்ம சொரூப இயல்பின் வெளிப்பாடு. மனமற்ற மனிதர்கள் யாவரும் நானே.....! ஒரு நாள் பூமியை அசைத்து யாம் விளையாடுவது வெறும் நிகழ்வல்ல அது எமது தேவையின் வடிவம்....

ஒரு நாள் ஆழக்கடலை நிலங்களுக்குள் பரவ விட்டுப் பார்ப்பதை தேவையற்ற நிகழ்வாய் மனித மனங்கள் எண்ணலாம்....எமது ஒட்டு மொத்த நகர்வுக்கும் அது தேவை, ஆனால் நோக்கமில்லை. எமது செயல்கள் எல்லாம் முழுமையான எம்மின் நகர்வே...

இப்படியேதான் மனமற்ற மனிதர்களுள் இருந்து முரண்பட்ட மனிதர்களையும் புரட்டிப் போடுகிறோம். சொர்க்க, நரகங்கள் என்ற பொய்யினைச் சொல்லி மனிதர்கள் மனம் ஒடுங்கி மனம் மறப்பார்கள் என்று விளையாடி பார்க்கிறோம். முரண்படும் மனிதர்களின் வாங்கும் தன்மைக்கு ஏற்ப பாடங்கள் கொடுத்து அவர்களை உணர்வு நிலைக்கு கொண்டு வருகிறோம்.

மனிதர்கள் சமப்பட்டு இருந்தால் எமது உற்று நோக்கில் எல்லாம் சரியாகும். அழுந்திக் கிடந்து முரண்டு பிடிப்பவனின் முதுகெலும்புகள் முறிக்கப்பட்டு வாழ்க்கை தடம் புரட்டப்பட்டு, நிலையாமையை ஆழமாக அவனின் ஜீவனுக்குள் உணரச் செய்து அழியும் உடலை அலைக்கழித்து அசாதரண பாடங்களும் எடுக்கிறோம்.

மட மனமே யாரிடம் வந்து கேட்கிறாய்......நீ யாரென்று... ? ஓடி ஒளி, தேடித் தெளி! அடங்கி ஒடுங்கு.....! நான் யாரென்று உன்னிடம் உரைத்தவை யாவும் சொற்பமே....கேள்விகளற்று அடங்கையில், எமது முழுமையில் நீ கரைகையில் உன்னிடம் சொல்ல நானுமில்லை நீயுமில்லை.....

மிச்சமில்லாத எல்லாமே நீயும் நானும்...!

பூரணம்.......சம்பூரணம்.....!


தேவா. S


Saturday, August 20, 2011

தேடல்....20.08.2011!என்னிக்கு பொறக்கறதுக்கு முன்னால எங்க இருந்தேன்னு யோசிச்சேனோ? அன்னிக்கே இறந்ததுக்கு அப்புறம் எங்க போவோம் அப்டீன்ற கேள்வியும் அட்டை மாதிரி கூடவே ஒட்டிக்கிடுச்சு. பொறந்து ஒரு மூணு வயசு அல்லது நாலு வயசு வரைக்கும் இந்த பூமில தான் இருந்தோம். அது எல்லாம் அம்மா நம்ம கிட்ட சொல்லும் போதுதான் தெரிய வருது.

அதாவது, உயிர் இருந்துச்சு, உடல் இருந்துச்சு, சுவாசிச்சோம், எல்லா வேலைகளையும் செய்தோம் ஆனா அது நமக்குத் தெரியாது. உணர்ந்து கூட சொல்ல முடியாது. இப்டி நமக்குத் தெரியல அல்லது உணரமுடியல அப்டீன்றதால நாம இல்லனு சொல்ல முடியுமா? முடியாது. நாம இருந்தோம்...மூளையில எந்தவித அனுபவப் பதிவுகளும் இல்லாம கற்பிதங்களும் இல்லாம, அதன் வளர்ச்சி விகிதம் ஏதோ ஒரு நிலையில இருக்க, நாம இருந்தோம்...!

காலப்போக்குல நமக்குள்ள பலவிதமான கற்பிதங்களை கிரகிச்சுக்கிட்ட மூளை மனம் அப்டீன்ற ஒரு மாயமான ஒரு ஸ்தூல வஸ்து மூலமா எல்லாத்தையும் கிரகிச்சுக் கிட்டு ஐம்புலன்கள் மூலமா கிடைச்ச அனுபவத்தை எல்லாம் மூளையில தேக்கி வச்சுக்கிட்டு அந்த அனுபவத்தின் மொத்ததையும் நமக்கு அடையாளத்துக்கு வச்ச ஒரு பேரையும் தலையில தூக்கிக் கிட்டு நான் யாரு தெரியுமா? நான் யாரு தெரியுமான்னு? ஊரைப்பாத்து கேள்வி கேட்டுகிட்டு புஜபலம் காட்டுது...!

இப்போ என்ன சொல்றேன்ன்னா..., அடிக்கடி நான் யாரு தெரியுமான்னு மூணாவது மனுசன பாத்துக் கேக்காம, நான் யாரு தெரியுமான்னு நம்மளை பாத்தே கேட்டோம்னா அந்த கேள்விக்கு பதில் கிடைக்கிறது சிரமம்ன்றது நமக்குத் தெரிஞ்சு போயிடும். ரமண மகரிஷி நான் யாருன்னு உங்களுக்குள்ள கேளுங்கன்னு சொல்லிட்டு அது பத்தி விளக்கத்தையும் கொடுத்துட்டு அவுங்க யாருன்னு தெரிஞ்சுகிட்டு கரைஞ்சு போய்ட்டாய்ங்க...

நாமளும் இதை பத்தி எல்லாம் தெளிவா நோட்ஸ் எடுத்துக்கிட்டு பேசலாம். எதிராளிய சாச்சுப் போடுற அளவுக்கு விசய ஞானத்தோடு பேசி மிகப்பெரிய ஞானி அல்லது மேதைன்ற நிலைக்கு கூட வரலாம். எல்லோரும் நம்மள சீராட்டலாம், பாராட்டலாம்...!

ஆனா..... நமக்குத் தெரியுமா நாம யாருன்னு? இந்த சிம்பிள் கொஸின்னுக்கு பதில் தெரியாம....ஊருக்கே பெரிய தலைவரா இருந்து அல்லது வழிகாட்டியா இருக்கேன்னு சொல்றதுல இருக்க பொய் என்ன? பித்தலாட்டம் என்ன? அப்டீன்னு வேற யாரும் நமக்குச் சொல்லாமலேயே நமக்கே தெரிஞ்சுடும்.

கட்டுக்களை போடப் போட பிரச்சினை தாங்க..! எல்லாத்தையும் விட்டுட்டு மலை மேல போயி யாரும் இல்லாம சாமியாரா நான் இருக்கப் போறேன்னு ஒருத்தர் இருக்கறதுல தப்பு இல்லை. அப்டீ ஒரு நியதில அவுங்க வெளிப்பாடு இருந்துச்சுன்னா ப்ளீஸ் கோ எகெட்....

துறவறம் மற்றும் எல்லாம் விட்டு போனவங்க, எல்லோருடைய வாழ்க்கையையும் பார்த்தீங்கன்னா இயற்கையே அப்படி அவுங்களை படைச்சி இருக்கும். எனக்குத் தெரிஞ்ச இரண்டு எடுத்துகாட்டுக்கள் சொல்றேன்...1 ) நரேந்திரனாக பிறந்த விவேகானந்தர் 2) பகவான் இரமண மகரிஷி...

இரண்டு பேருடைய வாழ்க்கையுமே அவுங்க பிறப்புல இருந்தே எல்லாத்தையும் விட்டு அவுங்களை வெளில கூட்டிட்டு வந்து இருக்கும். சரி... ரமண மகரிஷி 10 வயசுல திருவண்ணாமலைக்கு ரயில் ஏறிப் போய் பாதாள லிங்கர் குகையில பல நாட்கள் சமாதி நிலையில இருந்தாங்க. நானும் ரயில் ஏறிப் போயி உட்கார்ந்து பாக்குறேன்னு ஒருத்தன் அவரோட வாழ்க்கையை காப்பி பேஸ்ட் பண்ணனும்னு நினைச்சா....அவனோட லைஃப் கண்டிப்பா கரப்ட் ஆகித்தான் போகும்.

நாம பிறக்கும் போதே அம்மா, அப்பா, தம்பி, அக்கா இப்படி வீட்டுக்கு மூத்த பிள்ளையா பிறந்ததுக்கு அப்புறம் சன்னியாசம் போறேன்னு சொல்றது நமக்கு கொடுத்திருக்கிற டாஸ்க்க கம்ளீட் பண்ணாம வேற வேலைய பாக்க போற மாதிரி. இப்டி இந்த லெளகீக பந்தங்களோடு சேர்ந்து வாழ்ந்து கர்மாவ கழிச்சுட்டு, நம்மளை கரைச்சுட்டு போறதுதான் சரியான மார்க்கம்.

இயற்கையில ஒருத்தரோட கருத்தை நாம உள்வாங்கிக் கிட்டு நம்மோட செயல்களை செம்மைப் படுத்திக் கிட்டு நாம நம்மளப் போலத்தான் பரிணமிச்சுக் காட்டணும். இன்னொருத்தர் மாதிரி காப்பி பேஸ்ட் லைஃப் வாழ நினைக்கும் போதுதான் பிரச்சினையும் புரிதலின்மையும் ஸ்டார்ட் ஆகுது பாஸ்!

என்னை மாதிரி நான் மட்டும்தான் இருப்பேன். நான் யாரு மாதிரியோ இருக்க முயற்சி பண்ணினா அதுக்கு பேரு வேசம். ஏற்கனவே பிறப்பு, வாழ்க்கை, பணம், பந்தம்னு ஒரு வேசம் போட்டுகிட்டு இருக்கும் போது ஏன் இன்னொரு வேசம்? மிகப்பெரிய குழப்பமா போயிடுமே அது.

தீடீர்னு ரெண்டு நாளைக்கு முன்னால ஒரு விசயம் எனக்குத் தோணிச்சு. தேடல் முடியும்னு நினைக்கிறோம் பாருங்க அப்போதான் டாப் கியர் போட்டு மறுபடியும் தொடங்குது....ஹா ஹா ஹ! அதாவது பூமி, கர்மா, மறு பிறப்பு இப்டி எல்லாம் யோசிச்சு பேசிட்டு இருக்கோம்...

1) உள்ளது அழியாது இல்லாதது தோன்றாது. ஒவ்வொரு செயலுக்கும் எதிர்வினை உண்டு அந்த அடிப்படையில மனிதன் மீண்டும் பிறந்து தன்னோட கர்மாவை கழிச்சுட்டு தானே தன்னில் சமாதி அடைஞ்சு டாஸ்க் கம்ளீட் பண்ணிடுவாங்கன்னு சில பேர் நம்புறாங்க...!

2) செத்ததுக்கு அப்புறம் ஒண்ணுமே இல்ல ராஜா....அவ்ளோதான் அப்டீனு சில பேர் நம்புறாங்க..! அதாவது கடவுள் வேணும் அப்டீன்றது மனிதன் ரொம்ப நாள் இங்க வாழணும் அப்டீன்ற ஆசையில அல்லது மறுமை இருக்குதுன்னு சொல்றது எல்லாம் செத்ததுக்கு அப்புறமும் ஒரு வாழ்க்கையை வரிஞ்சுகிட்டு தான் வாழ ஆசைப்படுற ஒரு விருப்பத்தை இப்டி வெளியிட்டு இருக்காங்க...

சொர்க்க நரகம் எல்லாம் ஒரு செட் அப். இங்க ஒழுங்க வாழறதுக்கு ஏற்பாடு பண்ணி வச்ச ஒரு சப்ஜெக்ட்ஸ் அப்டீன்னு சொல்றவங்களும் இருக்காங்க...

3) சில பேருக்கு கடவுள் கண்டிப்பா வேணும். அப்டீ இல்லன்னா அவுங்க ஏற்படுத்தி பின்பற்றிக் கிட்டு இருக்க எல்லாமே டக்கு டக்குனு ஒடைஞ்சு பொயிடும்ல சோ.. அதை விட்டுக் கொடுக்க முடியாது.

இப்டி எல்லாம் பல கருத்துக்கள் இருக்கும் போது நாம என்ன பண்ணலாம்னு இது எல்லாத்தையும் உள்வாங்கிக் கிட்டு யோசிச்சுட்டு இருந்தப்ப...

முதல் பாயிண்ட் சயின்ஸோட சேத்து யோசிக்கச் சொன்னாலும் அதை அசைச்சுப் பாக்குற மாதிரி ஒரு கேள்வி வந்துச்சு...அதாவது

ஒவ்வொருத்தரும் இறந்து போயி மறுபடியும் பூமில தன் அனுபவங்களுக்கு ஏத்த மாதிரி உடம்பு எடுத்து கர்மாவ கழிக்கணும்னு வச்சுக் கோங்க....ஒரு நாள் பட்டுன்னு பூமி மத்த கோள்களோட மோதியோ அல்லது சூரியனோட மோதியோ உடைஞ்சு போச்சுன்னு வச்சுக்கோங்க....

கர்மா படி பிறக்குற ஆத்மாக்கள் எல்லாம் எங்க சார் பிறக்கும்? பூமியே இல்லையே அப்போ என்ன ஆகும்...? அப்டீன்ற மாதிரி தோணிச்சு. இந்தக் கேள்வி பர்ஸ் மெத்தட கொஞ்சம் ஒடைச்சு அடுத்த லெவலுக்கு ஏதாச்சும் பதில் இருக்கான்னு தேடலை முடுக்கி விட்டு இருக்கு.

செகண்ட் ஆப்சன் இருக்கு பாத்தீங்களா.. இது பர்ஸ்ட் ஆப்சனோட பதிலாவும் இருக்கு, அதே நேரத்துல ச்ச்சும்மா பொறந்து ஒரு பூமி ஒரு வாழ்க்கை அப்டீன்னு ஒரு செட் அப் இருக்கறதோட மட்டும் போயிடாது மனித அறிவுக்கு எட்டாத வேற ஏதாச்சும் இருக்கும் அப்டீன்ற ரேஞ்சலயும் யோசிச்சுப் பார்க்க வைக்குது.....

தேர்ட் ஆப்சன நம்பிக்கை இருக்கவங்கள சிதைக்காம அது உங்க விருப்பம் நீங்க பின்பற்றிக் கோங்கன்னு சொல்லிட்டு........நான் அதை கம்ளீட்டா நிராகரிக்கிறேன். ஏன்னா எனக்கு தனியா கடவுள் அப்டீன்னு ஒருத்தர் தேவையுமில்லை. அப்படி ஒருத்தர் இல்லைன்னும் நல்லாவே தெரியும்....

முடியும், முடியும் தேடிகிட்டே இருக்கறது செம அலாதியான ஒரு விசயம். இப்போதைக்கு தேடலோட சேத்து கொடுக்கப்பட்ட வாழ்க்கையை நிறைவா வாழவும். தேவையில்லாம அடுத்த மனுசங்களை ஆராயதவனாகவும், எதிர் மறையான எண்ணங்களை சேமிக்காதவனாகவும், என்னை சுற்றி இருக்கும் எல்லோருடைய நல்ல மற்றும் சூது வாதுகள், திமிர்கள், புஜம் தட்டி கொக்கரிக்கும் கோபங்கள்....என்று சத்திய மற்றும் அசத்தியங்கள் அத்தனையும் ரசித்து கடந்து போகக்கூடியவனாகவும் இருக்கிறேன்......

எந்த எண்ணங்களையும் சேர்க்காமல்....நகர்ந்து கொண்டே இருக்கும் வாழ்க்கையில் முடிவில்லாமல் தொடர்கிறது என் தேடல்...!


தேவா. SWednesday, August 17, 2011

வெட்டுடையாள்.....!


நிகழ்வுகளை எல்லாம் உணவாய் உட்கொண்டு எப்போதும் போல காலம் இயங்கிக் கொண்டிருந்த தென் தமிழகத்தின் சற்றேறக் குறைய 350 வருடங்களுக்கு முந்தைய ஒரு அந்தி நேரம்...இரவு கருமைப் போர்வையை மெல்ல போர்த்தி விட்டு பூமியை உறங்கச் செய்ய எல்லா முஸ்தீபகளோடும் இருந்தது....

சிவகங்கைச் சீமையில் காளையார்கோவில் தாண்டி நமது மேனியைக் கிழிக்கும் கருவேலங் காட்டு முட்களையும், கரடு முரடான முட்புதர்களையும், செம்மண் சரளைக் கற்களையும் தாண்டினால் அரியக்குறிச்சியை அடைந்து விடலாம்...!

மாலை சற்று தாண்டி இரவினை அடைந்த உடனேயே இரவு உணவு முடித்து சிறார்கள் எல்லாம் தத்தம் வீட்டுக்கு முன்னிருக்கும் பொட்டலில் காண்டா விளக்கு வெளிச்சத்தில் விளையாட, காண்டா விளக்குகளைச் சுற்றி சிறு சிறு பூச்சிகளும், வண்டுகளும் விளையாட, பெருசுகளும், சிறுசுகளும், பெண்டுகளும், எல்லாம் சேர்ந்து ஊர்க்கதையை பேசிக் கொண்டிருக்கையில்....

தனியாக அமர்ந்திருந்த படி வானத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டு ஊர்ப் பெருசுகள் கூறிக் கொண்டிருந்த கதையை கேட்டுக் கொண்டிருந்தாள் 14 வயதான உடையாள்.....

" யப்பே.....ராசாவ கொன்னு புட்டாய்ங்க அப்பே....! பத்து பேரு சேந்து நின்னாலும் வெட்டி சாச்சு புடும் மவராசன குண்டு வச்சி கொன்டு புட்டாய்ங்கே மண்ணா போறவங்கே...." சீனிச்சாமி அய்யா சொல்லிக்கிட்டு இருக்கறது உடையாளுக்கு தெளிவா கேக்குது....

" நிமிந்து நடக்கையில
நெஞ்சழக பாத்திருக்கேன்...
பாஞ்சு கத்தி வீசையில
கையழக பாத்திருக்கேன்...
மீசை முறுக்கிலயே...
கொள்ளை சனம் சொக்கிடுமே
தர்ம மகராசா ஆவி பிரிஞ்சு
போயிருச்சே...!

பொழுதெல்லாம் மானம் பாத்த பூமியில நாத்து நட்டுப்புட்டு வந்த ஒடம்பு வலியும், ராசாவ கொன்னுப் புட்டாங்களே அப்டீங்குற வேதனையிலும் கேவி கேவி அழுதுகிட்டே ஒப்பாரி வக்கிற பொன்னத்தாவ மெல்ல திரும்பிப் பாக்குறா உடையாள்...

ஏட்டி... எதுக்குடி கொன்னாய்ங்க ராசாவ....????? எடுபட்ட பொறுக்கி நாய்ங்க...? யாரு அவெங்க......? பொண்டுக சேலைக்குள்ள போயி ஒளிஞ்சுகிட்டாய்ங்களா சீமைக்கார வீராதி சூராய்ங்க அல்லாரும்....? சிறுக்கிப் பயலுக ஒருத்தனுமா கூட நின்னு அம்ம ராசாவ காக்கல...?....செவந்து போன கண்ணோடா.. அள்ளிக் கட்டுன முடியோட சீறீ நின்னு உமையாள் கேக்குற கேள்விய பாத்து பயந்து நடுங்குதய்யா சனம்....

" ஏ புள்ள ஒமையா....செருக்கி மவனுவ நேரா வந்து மல்லுக்கு நின்னாய்ங்கன்னா ராசாவோட ஒத்த ஓங்குல ஒம்பொது தல உருளும் புள்ள...காளீஸ்வரர கும்பிட போனவர ஒளிஞ்சு குண்டு போட்டு சுட்டு கொன்னுருக்கான் வெள்ளக்கார நாய் பய....

ஒத்தைக்கு ஒத்த வந்த அம்ம வூட்டு எருமைக் கண்ணுக்குட்டிக்கு பதில சொல்ல முடியாத பக்கிப் பயலுக பதிங்கி கொன்னுருக்காய்ங்க.....! ராச வடுக நாதரு ஒடம்புல குண்ட வாங்கிக் கிட்டு வேங்கையா சரிஞ்சுட்டாரு புள்ள......" கண்ணத் தொடச்சிக்கிட்டு கதருறாரு வண்ணான் வீட்டு மாசானம் அண்ணன்....

கேட்டுக்கிட்டே.. இருந்த உடையாள்...வெலம் வந்தவ போல " ஏய்யா அய்யனாரு கோயிலு கோடங்கி....அம்மூரு அய்யனாரு 400 வருசமா இங்கன இருக்காரு...காப்பத்தறாருன்னு தலைய விரிச்சுப் போட்டுகிட்டு குறி சொல்றீகளே....? எவனோ ஒரு எடுபட்ட பய வந்து அம்மூரு ராசாவ அம்மூரு கோயில்ல வச்சி கொன்னுபுட்டு போயிட்டான்...எங்க இப்ப போச்சு அய்யனாரு சாமி...?

வெதைக்கிறோம், உழுகுறோம், வெள்ளாமை வெளைக்கிறோம், ஆடு மாடுகளோட சேந்து மண்ணோட மண்ணா கருகுறோம்....ஒறைக்கிறய வெயிலையும் உப்புக் காத்தையும் ஒடம்புல வாங்கிக்கிட்டு கருவ காட்டுக்குள்ளையும் ஈச்சம் புதருக்குள்ளையும் நாம பொழச்சு கடக்கறதுக்கு காரணமே வடுக நாத ராசாதேன்....

எந்த கெடவுல இருந்தோ வந்த கண்டார....பயலுக அம்ம மண்ணுல வந்து மானங்கெட்ட பொழப்பு பொழைக்கிறாய்ங்க....! பெத்த தாய கூட்டிக் கொடுக்குறது போல வேற சீமையில இருக்க ராசக்களும் கூட சேந்திகிட்டு நம்மளதானா காட்டிக் கொடுக்கிறாய்ங்க....

ஒருத்திக்கு முந்தான விரிச்சு பெத்த புள்ளைக எல்லாம் இப்புடி ஊரு பேரு தெரியாத செறுக்கி மவனுககிட்ட கையக்கட்டி நிக்கிறாய்ங்களே....???? சாமி பூதம் காத்து கருப்பு எல்லாம் எங்க போயிருச்சுக இப்ப....

நாச்சியா தாயிக்காச்சும் நல்ல உசுர கொடுத்து ஆயிச கொடுத்து சீமைய காப்பத்தலேன்னா இருக்குல்ல சேதி....அய்யனாரு கோயிலாச்சும் ஆட்டுக் குட்டி கோயிலாச்சும் அடிச்சு ஒடைச்சுப் புடுவேன் ஒடைச்சு எல்லாத்தையும்....

ஏட்டி பொண்டுகளா! ஏய் ஆம்பளையளா! வெவசாயம் பாக்குறேன்...வேலைய பாக்குறேன்னு மூணு வேலை திண்டுபுட்டு, பொண்டாட்டியள கட்டிப் புடிச்சு தூங்குனா மட்டும் ஒங்க பொழுது போயி சேந்துடும்னு நினைக்காதிய....ஆளுக்கொரு சுருளு கத்திய இடுப்புல எப்பவும் வச்சிகிறுங்க... எடுபட்ட வெள்ளைக் காரப்பய... வந்து என்னமாச்சும் கேட்டாக்கா....உசுரு மசுறுக்கு சமானம்னு கத்திய அவன் நெஞ்சுல எறக்கீருங்க...அப்பு...."

மொத்தமா 50 வீடுகளே இருக்குற அரவக்குறிச்சி ராத்திரி எட்டு மணியில அப்பத்தான் கண்ண மூடி ஒறங்க போனிச்சி....ஒடையாளோட சத்தத்துல இரண்டு முணு புள்ளைக்குட்டிய தூக்கத்துல எந்திரிச்சு யம்ம்மேன்ன்னு கத்தயிலயே....சுப்பிரமணி வீட்டு மாடுகளும் பஞ்சாரத்துல கடந்த சேவலு கோழியளும்....இப்பத்தானே கண்ணசந்தோம் அதுக்குள்ளயுமா விடிச்ஞ்சுறுச்சுன்னு நெனைச்சு கத்திக்கிட்டெ எந்திரிச்சுருச்சுக....

" ஏ புள்ள ஒடையா...ஒனக்கு எப்பவும் நாயம்தான் நேர்மதான் புடிக்கும்னு எங்களுக்கு நல்லாவே தெரியும்டி ஆத்தா....! எங்களுக்கு எல்லாம் சூட்ட போட்டு இழுத்து விட்ட மாறி நல்லாசொன்னே சேதி.....! ஏப்பா வேலை வெட்டிக்கி போகயில.....வெவகாரமா எவனாச்சும் வந்தா அவிங்கள வெட்டிப் போடுங்கப்பா....ஒடையா சொல்றதுலயும் நெசம் இருக்கு...

அம்ம மண்ணுல வந்து அம்ம ராசாவ அடக்கணும்னு நெனச்சா அவன் எவனாயிருந்தாலும் அவன் மசுர அத்து புடுவோம் அத்து....! சரி எல்லோரும் போயி படுங்க....பொழுது ஆயி போச்சு....! ஏன் புள்ள ஒடையாள் என்ன நட்ட நடு ராத்திரில இப்படி நிக்கிற போயி படு தாயி...கோழி கூப்புட நீ ஆடு மாடு பத்திட்டு போற புள்ள....நேரத்துல போயி படு....

ஏய் கல்யாணி ஒம் மக ஒடையாள கூட்டிகிட்டு போயி தூங்கு...." அப்புடீன்னு கைம்பொண்டாட்டி கல்யாணிய பாத்து ஊரு பெருசு மாரிமுத்து வேலார் சத்தமா பேசங்காட்டியும் கூடியிர்ந்த சனம் எல்லாம் மனச கனக்க வச்சிக்கிட்டு மெல்ல மெல்லமா தூங்க போயிடுச்சுக....

ஒடையாளுக்குத் மாத்திரம் தூக்கம் வரலை. கண்ண பொத்துறா...ராசவ கொன்ன பாவிங்க ராணி நாச்சியாரயும், மருது ஐயாங்களையும் டமார் டாமர்னு வெடிய வச்சி கொல்றதும்...செவகங்க சீமையே தீயில எறியறதும்....! மண்ணுக்கு சொந்தமான மனிசங்க எல்லாம் பிச்சைக்காரய்ங்களப் போல அலையிறதும் வெள்ளக்காரப் பயலுக சிரிக்கிறதும் குடிக்கிறதும், சின்ன பொம்பளப் புள்ளைகள கொண்டு போயி சீரழிக்கிறதும்...அவிங்க கூட கூட்டமா சிரிச்சிகிட்டே கூட்டிக் கொடுத்த அம்ம சீமை பய புள்ளைக அலையிறதும்னு ஒரே...இரத்தக்காடா அம்புட்டும் நெனவுல வருது....

நேர்மை இல்லாத மனிசங்க எவனா இருந்தாலும் அவங்கள கொன்டா என்ன? கழுத்த கடிச்சி துப்பி இரத்தத்த குடிச்சா என்ன? இடுப்பு எலும்ப ஒடைச்சா என்ன? பொய் சொல்றவன் குடல கிழிச்சு பல்லுல வச்சி கடிச்சு இழுத்தா என்ன? ஒழிஞ்சு நின்னு ஏமாத்தி அடிக்கிறபய குடிய எல்லாம் கெடுத்தா என்ன....?

துரோகம் பண்ற பயலுக எல்லாம் துரோகத்தாலயே சாகணும்! அனியாயம் செய்றவன் எல்லாம் அனியாயமா போகணும்...! பொய்யச் சொல்லி ஏமாத்துரவன் வாழ்க்கை எல்லாம் நாசமா போகணும்...., மனிசப்பய அடுத்த மனிசன மதிக்காம எகத்தாளமா பேசுனான்னா அவ பொழப்பு எகத்தாளமா போயிடணும்....

காசுக்குதானே இம்புட்டு வெறியாட்டம்...., காசு, காசுனால மண்ணு, மண்ணுனால பொண்ணு, பொண்ண மயக்க புகழு.........புகழுக்காண்டி பித்தலாட்டம்....ஏய்..............ட்ட்ட்ட்ட்டேய்.................ஒங்கள கொன்னு இரத்ததக் குடிக்கிறேன்டா......

கத்திகிட்டு முத்ததுல படுத்துக் கிடந்த ஒடையா கண்ணு மூடி தூங்கியே போனா...ஆனா கண்ணுல இருந்து கொடம் கொடமா ஊத்துதய்யா கண்ணீரு..!

எப்ப விடிஞ்சுச்சு...எப்ப ஒறங்குனான்னு ஒடையாளுக்குத் தெரியாது....! எந்திரிச்சு எல்லா சோலியவும் முடிச்சுப் புட்டு....ஊருல இருக்க ஆடு மாடுகள பத்திக்கிட்டு..அய்யனாரு கோயிலு பொட்டலு தாண்டி விட்டனி கம்மாக் கரை இறக்கத்துல ஆடு, மாடுக அம்புட்டையிம் எறக்கி மேச்சலுக்கு விட்டுப் புட்டு..கம்மாக்கரை நெடுகுலயும் இருக்குற மண்டிப்போன ஈச்சம் பொதறு ஓரமா...மண்ண கெளச்சு குச்சில கெளறிக்கிட்டு இருந்தவளுக்கு மொத நா ராத்திரி நடந்த அம்புட்டும் மனசுல ஓட ஆரம்பிச்சிரிச்சு....

வெலம் வந்தவ மாறி ஓடி அய்யானரு கொயிலு பொட்டலுக்கு வந்து நின்னா ஒமையா...., அங்கிட்டும் இங்கிட்டும் தேடி கூரன கல்லு ஒண்ண கொண்டாந்து....அய்யானாரு க்க்கு முன்னாடி இருக்குற பெரிய சரள கல்லு மேல வச்சி....காதுல போட்ருந்த இரட்டை வளையத்துல ஒண்ண கல்லு மேல வச்சி...இன்னொரு கூரான கல்லால அவ ஒங்கி அடிச்சிதலுல தங்க வளையம் ரெண்டா ஒடைச்சி விழுந்துச்சு அங்கிட்டு ஒண்ணு இங்கிட்டு ஒண்ணா...

" தப்பு பண்ணுறவன்....கெடும்பு நினைக்கிறவன்...சூது வாது பண்றவன் எல்லாம் கெட்டுச் சீரழியணும்....அய்யானாரேன்னு ஒங்கி ஒடையாள் கத்தும் போதே...காத்த கிழிச்சிக்கிட்டு....பறந்து வந்திச்சி...அஞ்சாறு குதிரைங்க...

ஒண்ணுல நாச்சியா தாயி.....! இன்னும் ரெண்டு குதிரையில மருது சாமிங்க....அப்பறம் ரெண்டு மூணு ஆளுக....ஒடையாளுக்கு யாருன்னு தெரியள...குதிரைங்க வேகமா போகயில நாச்சியா தாயி ஒடையாள பாத்து மெல்ல சிரிக்கையில.... ஒடையாளுக்குள்ள மனசுல கெதக்குன்னு பட்டிச்சி இது நாச்சியா அம்மாவத்தான் இருக்கணும்னு....! அவுக குதிரைங்க போன தெசைய பாத்து கையெடுத்து கும்பிட்டுக்கிட்டே...

நாட்டரசன் கோட்டை பக்கட்டு பரிஞ்சு போற குதிரைகள பாத்த மேனிக்கு நின்னவ அய்யனாரு கோயிலயும்...மறு கண்ணால பாத்துக்கிட்டே அவளயே மறந்து நின்னுகிட்டு இருந்தவளுக்கு எம்புட்டு நேரம் போச்சுன்னே தெரியல....

மறுபடிக்கும் குதிரைங்க சத்தம் கேக்க ஆரம்பிச்சத்தும் திடுக்குனு புத்தில என்னமோ ஒறைக்க மெல்ல திரும்பி பாக்குறா...ஒரு இருவது, முப்பது குதிரைகல்ல ஆளும் பேருமா சட சடன்னு ..அவ கிட்டக்க வந்துட்டாக

வந்தவெங்கள்ள பாதி ஆளுக வேற நாட்டு ஆளுக...மிச்ச ஆளுக எல்லாம் நம்ம ஆளுகன்னு உடையாள் யோசிச்சிட்டு இருக்கும் போதே....அவள சுத்தி வளைச்சிட்டாக அம்புட்டு பேரும்....

சுத்தியும் ஆளுக நிக்கயில முதல்ல தெகைச்சுப் போன உடையாளுக்கு அப்பறம பயம் விட்டுப் போச்சுது..." ஏய் யாரு நீங்க எல்லாம் வழிய விட்டு வெலகுங்க சோலி கெடக்குனு"ன்னு சொல்லிட்டு நகரப் போனவள....

"ஏய் நில்லுன்னு " தடுத்து நிறுத்தினான் ஒரு தடியன்....

"இந்தப் பக்கம் வேலு நாச்சியார், சின்ன மருது, வெள்ளை மருது போனத பாத்தியா? " கரகரன்னு கேள்விய கேட்ட உடனே வந்துச்சு கோவம் உடையாளுக்கு...." அட பொசகெட்ட பயலே...! எங்கிட்ட எதுக்கு கேக்குற....? நீயெல்லாம் ஒரு செம்மம்....வெள்ளைகாரப் பயலுக கூட சேந்து கிட்டு நம்ம ராணிய தேடுறியே கொல்றதுக்கு.......ஒங்காத்தாள போயி காட்டிக் கொடுடா...நாயே..."அப்டீன்னு கத்திக்கிட்டே....அந்த தடியன் நெஞ்சுல கைய வச்சி தள்ளிகிட்டு கூடி நிக்கிற ஆளுகள விட்டு வெலகப் போனா...உடையாள்...

வெரசா வந்த இன்னொருத்தன்....இடுப்புல இருந்த கத்திய கொண்டாந்து...உடையாளோட முகத்துக்கிட்ட வச்சு..மறு கையாள அவ தலை முடிய புடிச்சி இழுத்து நங்குன்னு....சரளைக் கல்லா கிடந்த பொட்டல்ல தூக்கி வீசினான். "ஏய் இப்ப சொல்ல போறீயா இல்லையா...? இந்த பக்கம் குதிரையில ஆளுக போனத பாத்தியா? பொட்டப் புள்ளேன்னு பாக்குறேன்...அந்தா அங்கிட்டு குதிரையில உக்காந்திர்க்கறது யாரு தெரியுமா வெள்ளைக்கார துர ஐயா....நீ சொன்னியினா...ஒனக்கு என்ன வேணுமோ அம்புட்டையும் கொடுப்பாரு....! இந்த ஊரையே ஒனக்கு கொடுப்பாரு ம்ம்ம்ம் சொல்லு...." கத்திய எடுத்துக் கிட்டு உடையாள் கிட்ட போகயில.

சிங்கம் மாதிரி எந்திருச்சு நின்னா உடையாள்...

" எடுபட்ட நாய்ங்களா....கத்திய காட்டி மெரட்டினா பயந்துடுவேன்னு நெனைச்சீகளா...! பயக்க மட்டேன்ப்பு...,ஆளுக நடமாட்டம் இல்லாத காட்டுக்குள்ள பொம்பளப் புள்ளைய அடிக்கிறீகளே....த்த்து...தூ.........! சீமையையும் காட்டிக் கொடுத்துப் புட்டு அக்கா தங்கச்சியா நெனைக்க வேண்டிய என்னைய மாறி பிள்ளைகளையும் அடிக்கவா செய்றீக.....? ஓன் வீட்டுப் புள்ளைகள....யாரச்சும் அடிச்சு மிதிச்சா என்னாட செய்வீக...! கூறு கெட்ட மொட்டயா போயிருவாய்ங்களா.....எல்லோரும் நல்லா கேட்டுக்கிடுங்க....

வீரம் வெளஞ்ச சிவசங்க சீமையோட செம்மண்ணுல பொறந்தவ இந்த ஒடையா....! இப்ப கூட என் இடுப்புல சூரி கத்திய வச்சி இருக்கேன்... எடுத்து ஒங்க நெஞ்சுல எறக்க இம்புட்டு நேரம் கூட ஆகாது....! நானெல்லாம் பொறந்த பொறப்புல எந்த குத்தமும் இல்லை...! ஊர கட்டி ஆண்ட சீமான ஒளிஞ்சு நின்னு கொன்ன பயலுகள பாத்து எனக்கு என்ன மசுத்துக்குடா பயம் வரணும்....ஒண்ணு சொல்றேன்....எல்லோரும் கேட்டுக்குறுங்க....

வேலு நாச்சியா தாயிம், மருது அய்யாங்களையும் நான் என் ரெண்டு கண்ணால பாத்தேன்...ஆனா ஒங்க கிட்ட எங்கிட்டு போனாகன்னு சொல்ல முடியாதுப்பே....

ஒங்க சோலி மசுர பாத்துக்கிட்டு எங்குட்டாச்சும் போய் தொலைங்க....! நாங்க எல்லாம் வேயில்லயும் வெக்காலத்திலயும் ஆடு மாட்ட பத்தியாந்து நல்ல பொழப்பு பொழச்சு வாழ்றவங்க.......ஒங்கல மாறி ஊரான் வீட்டு சொத்த ஏச்சு பொழைச்சு திங்கிற பலசாதி ஆளுக நாங்க இல்ல...."

கோபமா பேசிக்கிட்டு இருந்த உடையாள கழுத்த பிடிச்சு கீழ தள்ளி கொத்தா முடிய புடிச்சு தூக்கி....கன்னத்துல பளார் பளார்னு அறையுறான் இன்னொரு எடுபுடி...ஆளாளுக்கு அடிச்சு தள்ளி, முகமெல்லாம் ரத்தமா..கையெல்லாம் இரத்தமா...துணியெல்லாம் கிழிஞ்சு....கெடக்குற ஒடையாளா காப்பத்த வராம எல்லாத்தையும் மெளனமா வேடிக்கை பாத்துகிட்டு இருக்காரு...அந்த ஊரு அய்யனாரு...!

" என்ன வேணா பண்ணிக் கேளுங்கடா....என்னைய........எனக்கு நாச்சியா போன வழி தெரியும்...! ஆன ஒங்க கிட்ட சொல்ல முடியாதுடா....எடுபட்ட நாய்களா....! " மறுபடிக்கும் வேகமாக அடித்தொண்டையில இருந்து கத்தி சொன்னா உடையாள்....

பொன்னுக்கும், பொருளுக்கும், மண்ணுக்கும் ஆசப்பட்டு பெத்த தாயி மாறி இருக்க அம்ம மண்ண காட்டிக் கொடுக்குற நீங்களும் சரி....எந்தக் கடவுல இருந்தோ வந்து எங்க வூட்டு உப்பை திங்க வந்த எச்சக்கலை நாயி வெள்ளக்காரனும் சரி...... என் மசுறுக்கு சமானமுடா....! நெசம் என்னிக்கும் அழியாதுடா...அநியாயம் பண்றவங்கே எல்லாம் சீரழிஞ்சு சின்னா பின்னமா வம்சக்கூறு இல்லாம அழிஞ்சு போவியடா...."

மண்ணை அள்ளி தூத்திகிட்டே.....இரத்தம் வடியிற உடம்போட, கிழிஞ்சு போன மேல் சட்டையும் பாவடையுமா நின்னுகிட்டு பேசிக்கிட்டே இருந்தா ....!

இப்ப உம்மைய சொல்லல உன்ன கொன்னு புட்டுதான் மத்த சோலிய பாக்க போவோமுடி....ன்னு சொல்லிகிட்டு ஒருத்தன் கத்தியோட உடையாள் கிட்ட பாஞ்சு போகவும்...! அவள கொல்லச் சொல்லி வெள்ளைக்காரன் ஒருத்தன் அவுக பாசையில சொல்லவும்.....

" என்னைய கொல்லுங்கடா.... கொல்லுங்கடான்னு............ஆனா தப்பு பண்ணுறவனெல்லாம் மொட்டியா போவியடா....பச்சப்புள்ள நானு என்னைய அடிச்சவென் எல்லாம் கெட்டு சீரழிஞ்சு போவியடா...! தப்பு பண்ணிட்டு அலையுறவங்கெ எல்லாம் அழிஞ்சே போவியடா......

என்னிய கொல்லுங்கடா...........நான் செத்தாலும் சீவன் பிரிஞ்சாலும் அனியாயத்த செய்யிறவன் குடிய அழிச்சு நாசமாக்குவேன்.......நல்லவங்க கண்ணுத்தண்ணி எப்பவும் பாழாப்போகாதுடா......"ன்னு அடித்தொண்டையில உடையாள் கத்திகிட்டு வரையிலயே..........கழுத்துல ஓங்கி வீசிப்புட்டானாய்ய வாளு கத்திய ஒரு தடியன்..கழுத்து வேறமுண்டம் வேறாயா போயி விழுந்து கடக்குறா உடையாள்.....

தலையையும் முண்டத்தையும் காலால எத்திப்புட்டு சீறிப்பாஞ்ச்சு வேலு நாச்சியா மகராசிய தேடிக்கிட்டு கெளம்பிட்டாய்ங்க வெள்ளக்கார கூட்டத்தோட கலந்து இருக்க சீமைக்கார ஆளுகளும்...

வெட்டுப்பட்ட உடையாள் ஒடம்பு கெடந்து துடிக்க..கண்ணு ரெண்டும் தெறந்த மேனிக்கு தலை தனியா கெடக்க....

பெரிய காத்து அடிக்க....சுத்தி வந்து நின்னு கதறுதக அவ மேச்சு வந்த ஆடுக மாடுக எல்லாம்....! வெட்டுபட்ட உடையாள்.....வெட்டுடையாள்......உடம்பு மெல்ல மெல்ல அடங்கி ஒடுங்கி செத்தே போனா......!

உடையாள் இறந்து கண நேரத்தில் பெரும் சக்தி சீற்றமாய் வெளிப்பட்டது அவளின் உடலில் இருந்து உயிர் என்னும் சக்தி.....பெரும் சீற்றமாய் மண்ணை வாரித்தூற்றியது.....! அங்கும் இங்கும் அலைந்தது.....!

" நான் இங்கேதான் இருப்பேன்.........இந்த அய்யனார் கோயில் வாசல்லயேதான் இருப்பேன்.....தர்மம் அழிஞ்சு போயி அனியாயம் நடக்குதுன்னு எவன் என்கிட்ட வந்தாலும் தப்பு பண்ணியவனை தண்டிப்பேன்..!குடி கெடுத்தவன் குடிய சக்தியா நின்னு நானும் கெடுப்பேன்...! சத்தியத்த எவன் எவன் ஏசுறானோ அவனையெல்லாம் ஏதோ ஒரு ரூபத்துல ஏசிப் பார்ப்பேன்....!

நான் இப்ப உடையாள் இல்லை.., நான் இப்போ உடம்பு இல்லை..! நான் இப்போ மனசு இல்லை...! நான் சக்தி.....நான் அங்கும் இங்கும் எங்கும் பரவிக் கிடக்கிற பெருஞ்சக்தி...! நான் தனித்தவள் இல்லை.....எல்லாமே நான்...! நானே எல்லாம்.....வேலு நாச்சியார தேடிக்கிட்டு போயிருக்க அத்தனை பேரும் நாசமா போவானுக.....! என் மண்ண எடுக்கவ் வந்த அத்தனை பேரும் வேண்டாம் நீங்களே வச்சுக்கங்கன்னு கொடுத்துட்டு போயிடுவாங்க....

அந்தா.....அந்த ஈச்சம் பொதருதான் நான் ஒரு அடையாளத்துக்காக ஒதுங்கப் போற இடம். அய்யனாருக்கு பூசை பண்ற பூசாரிங்களே....காலம் காலத்தும்..என்ன பத்தி அல்லோருக்கும் சொல்லுவாங்க....!

நீதி என்னடா...நீதி...? நான் கொடுக்குறேன் நீதி இங்க...! பிரபஞ்ச சுழற்சியில அசைக்க முடியாத சத்தியமா நின்னு...சரி பண்றேன்......! இந்த மண்ண மிதிச்சுட்டு எவன் போனாலும் அவன் என் கதைய கேப்பான்....! என் கதைய கேட்டாலே அவனுக்குள்ள மனோதைரியமா நான் உடனே குடியேறுவேன்....

ட்ட்ட்ட்ட்டேடேய்ய்ய்ய்ய்......நான் வெட்டுடையாள்டா.....! தப்பு பண்ணிட்டு தைரியமா திரியற அத்தனை பேரையும் வெட்டும் உடையாள்டா...........! "

சீற்றமான சக்தி அங்கேயே ஈச்சம் புதர் மண்டிக்கிடந்த.....அய்யனார் கோவிலிலேயே நின்று கொண்டது. பின்னாளில்...எட்டு வருடங்கள் கழிந்து ஹைதர் அலி, திப்பு சுல்தான் இவர்களின் உதவியோடு சிவகங்கைச் சீமையை இராணி வேலு நாச்சியார் மருது பாண்டியருடன் மீட்டெடுத்த போது, மருது சகோதர்களால் உடையாளின் கதையை கேள்விப் பட்டு....வெட்டுடையாளுக்கு அய்யனார் கோவில் திடலிலேயே கோவில் கட்டச் செய்து....தங்களைக் காட்டிக் கொடுக்காத உடையாளின் கோவிலுக்குத் தன்னின் வைரப் பதக்க தாலியை நன்றிக் காணிக்கையாகவும் செலுத்தியிருக்கிறார். இது உண்மை. இன்னமும் இராணி வேலு நாச்சியாரின் தாலி சிவகங்கை தேவஸ்தானம் வெட்டுடையார் காளி கோவிலில் இருக்கிறது.

சில இடங்களில் விவரனை வசதிக்காக புனையப்பட்டிருக்கிறதேயன்றி இது வெறும் கதை அல்ல.....வரலாறு....!

(சிவகங்கையிலிருந்து காளையார்கோவில் வழியாக தொண்டி செல்லும் எல்லா பேருந்துகளும் கொல்லங்குடி என்னும் நிறுத்ததில் நிற்கும். கொல்லங்குடியில் இருந்து ஒரு 4 கிலோ மீட்டர் என்று நினைக்கிறேன்..உள்ளாக இருக்கிறது அரியாக் குறிச்சி வெட்டுடையார் காளி திருக்கோவில். பக்தி ஆன்மீகம் என்பதை எல்லாம் விட்டு விட்டாலும்...ஒரு வரலாறு நிகழ்ந்தேறிய இடம் என்ற அளவிலாவது இயன்றால் போய் பார்த்து வாருங்கள்.....! உடையாள் உங்களோடு பேசலாம்...மன பாரங்கள் தீரலாம்...உங்களுக்கு நம்பிக்கை இருந்தால்...)தேவா. S
Monday, August 15, 2011

ஆனந்த சுதந்திரம்....!எப்படி பார்த்தாலும் சுதந்திர தினத்தோட ஏற்பட்டிருந்த பிணைப்பு சம காலத்தில் கொஞ்சம் நீர்த்து போயிருக்கோன்னு எனக்கு ஒரு டவுட்....! சரி... சரி சமீப காலமா ஒரு 10 வருசமா சுதந்திர தினம் அன்னிக்கு எக்ஸாட்டா ஊர்ல இருந்தது இல்ல அப்டீன்றதால இதை எப்டீ நீ சொல்லலாம்னு கேக்குறீங்களா...? நாம டெய்லி ஊரோட டச் பேஸ்ல இருக்கோம்ல பாஸ் அந்த ஒரு புரிதல்ல சொல்றேன்....! சரி அதை விடுங்க...

சின்ன வயசுல ஸ்கூல்ல கொடியேத்தி மிட்டாய் கொடுப்பாங்க...அன்னிக்கு ஸ்கூல் லீவு இந்த ரேஞ்ச்ல அறிமுகப்படுத்திகிட்ட நம்ம தேசத்தின் சுதந்திர தினம், வசீகரிக்கும் நம்ம நாட்டு தேசியக் கொடிய பாக்குறப்ப இன்னும் கொஞ்சம் த்ரில்ல அதிகமாக்கி கொடுக்கும். எனக்கு எப்போ ரொம்ப சந்தோசமா இருக்கும்னு கேட்டீங்கன்னா...

கொடியை முடிச்சு போட்டுக் கட்டி அது உள்ள பூ (எங்க ஸ்கூல்ல காகிதப் பூ போடுவாங்கனு வச்சுக்கோங்களேன்...) எல்லாம் போட்டு ஹெட் மாஸ்டர் கயித்த மெல்ல மெல்ல இழுக்கும் போது அந்த கொடி மேல ரீச் ஆகி பூ எல்லாம் கீழ கொட்டும் பாருங்க....ச்சும்மா எல்லோரும் சேந்து கை தட்டி.. ஆரவாரமா இருக்கும்...

தேசிய கீதத்தை தனியா எல்லாம் உக்காந்து மனப்பாடம் பண்ணியது இல்லங்க நானு....அது ஸ்கூல் முடியறப்ப எல்லோரும் கோரஸா பாடுறத கேட்டு, கேட்டு வார்த்தைகள் புத்திக்குள்ள ஆட்டோமேட்டிக்கா ஏறி உக்காந்துடுச்சு...! இப்பவும் சுதந்திர தினம்னா தட்டு நிறையா கலர்க் கலரா பரவிக் கிடக்கிற ஆரஞ்சு மிட்டாய்தான் நினைவுக்கு வருது....ஆரஞ்சு பழ கலர் மாதிரி இல்ல ஆரஞ்சு சுளை மாதிரி...

5வது படிக்கிற வரைக்கும் எனக்கு ஸ்கூல்ல கொடி ஏத்தி முடிஞ்ச உடனே தப தபன்னு எங்க அப்பா ஆபிசுக்கு ஓடி வருவேன் (ஊராட்சி ஒன்றிய அலுவலகம்........நான் எங்கப்பா ஆபிசுன்னுதான் சொல்லுவேன்....என்ன பண்ணுவீங்க...?) அங்க கொடி ஏத்துற அந்த இடம் செம சூப்பரா இருக்கும். ஆக்சுவலா இந்தியாவோட முழு ஷேப்பையும் சிமிண்ட்ல கட்டி சுத்தி ரவுண்டா...சின்ன சுவர் திண்டு மாதிரி வச்சு இருப்பாங்க... அந்த இந்தியா டைப்ல இருக்குற சிமிண்ட் செட்டப்ல (ரொம்ப பெரிசாவே இருக்கும்ங்க...) நடு மத்தியில அதாவது நம்ம புது டில்லி இருக்குற இடத்துல இருந்து பெரிய இரும்பு கொடி மரம் இருக்கும்....

ஆபிஸ் ஸடாஃப் எல்லாம் வரிசயா நிக்கறதோட கூடவே என்னய மாதிரி விடுத்தான்களும் ஊர்ல இருக்க சிறுசு பெருசுகளும் நிக்கும்...ஆபிஸ் பிடிஓ...பெரும்பாலும் கொடி ஏத்துவாங்க சில நேரங்கள்ல ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் (சேர்மன்) கொடி ஏத்துவாங்க....

சோ...மறுபடியும் " தாயின் மணிக்கொடி பாரீர் அதை தாழ்ந்து பணிந்து " ன்னு கோரஸ் பாட்டு பிறகு..." ஜன கண மன....." மறுபடி ஆரஞ்சு மிட்டாய்....நம்ம பாக்கெட் இன்னும் கொஞ்சம் பெரிசாயிடும்....

ரெண்டு கடவாயிலயும் மிட்டாய ஒதுக்கி வச்சிகிட்டு....சட்டைய இழுத்து இழுத்து கால்சட்டை பைய மறச்சுகிட்டு..மெதுவா வீட்டுக்கு வரும் போது கேப்பேன்........" ஏன்டா பாபு.....எதுக்குடா டெய்லி கொடி ஏத்தி மிட்டாய் கொடுக்க மாட்டேங்குறாங்கன்னு...." பாபு எங்க பக்கத்து வீட்டு என்னுடைய பால்யத்தின் ரொம்ப திக்கான நண்பன். இந்த கேள்வி கேக்குறப்ப எனக்கு ஒரு 10 வயசும் பாபுவுக்கு 11 வயசுன்னும் வச்சுக்கோங்களேன்....

" ஏம்பி ....டெய்லி கொடி ஏத்துவோ, அதுல பெரச்சினை இல்ல....முட்டாய்க்கு யாரும்பி காசு கொடுப்போ.... காசு செலவாவும்ன...அதான் வருசத்துக்கு ஒரு தடவ ஏத்துறவோ..." கூலா சொல்லிட்டு அவன் பாக்கெட்ல இருந்து இரண்டு கைப்புடி முட்டாய எடுத்து வாயில போட்டுகிட்டு.......அடுத்து எங்க என்ன வெளையாட போகலாம்னு மோகன், சாகுல், பார்த்திபன், சுடர்மணி, சுரேஷ் இப்டி எல்லா பசங்களையும் ஒண்ணு சேத்து...

வெள்ள கலர் சட்டை தெருப்புழுதி கலர் ஆவுற வரைக்கும் ஆடிப்புட்டு மத்தியானம் பசிக்கிற நேரத்துல வீட்ல போயி சாப்டு புட்டு மறுபடி வெளிய கெளம்பிடுவோம்.........அட லீவு இல்ல...எப்புடி வீட்ல இருக்கறது....

காலம் காலமா இப்படி போயிட்டு இருந்த சுதந்திர தினம். ஆறாவது படிக்கும் போது கொஞ்சம் மாறிப் போச்சு,......பாரதியின் பாடல்களில் விஞ்சி நிற்பது நாட்டுப் பற்றா? அல்லது மொழிப்பற்றா?ன்னு ஒரு பேச்சுப் போட்டி...சுப்பிரமணி சார், கருப்பையன் சார், குஞ்சு சார், துரைராஜ் சார் அப்புறம் கொடியேத்த கூப்டு இருந்த ஊரு பெரியவங்க எல்லோரு முன்னாடியும் பேசணும்...ஊருச் சனமே காந்தாரியம்மன் கோவில் திடல்ல உக்காந்து பார்க்கும்....இப்டி எல்லாம் ஒரு மிகப்பெரிய பில்டப் ஓட.... நான் இந்த தலைப்புல எழுதிக் கொடுங்கன்னு சொல்லி பானுமதி டீச்சர் கிட்ட கேட்டு வாங்கி டிம்மி சீட்ல ரெண்டு சீட் புல்லா எழுதிக் கொடுத்ததை மொத்தம்...8 பக்கம்....பொட்ட தட்டு தட்டி வரி விடாம மனப்பாடம் பண்ணி....பேசி பேசி ....

அப்போ, அப்போ கைய மேலதூக்கி பேசணும்டா...எல்லோரையும் பாத்து பேசணும் பயப்படக்கூடாது...இப்டி எல்லாம் அப்பா சொல்லிக் கொடுத்ததை உள் வாங்கிக் கிட்டு...என்னை எதுத்து போட்டியா பேசுற மிச்ச எல்லோரும் சீனியர் என்பதையும் பட படபோட உணர்ந்து கிட்டு..(என்ன சீனியர்...........அவுங்க எல்லாம் எட்டாப்பு நான் ஆறாப்பு அம்புட்டுதேன்..)பேச்சுப் போட்டிக்கு ரெடியாயிட்டேன்.

எனக்கு அதுதான் பர்ஸ்ட் பேச்சுப் போட்டி அப்டீன்றதாலா இன்னமும் பசுமையா நினைவுல இருக்கு......! சுதந்திர தினம் அன்னிக்கு வழக்கம் போல கொடியேத்தியாச்சு.....மிட்டாய் கொடுத்தாச்சு...நானும் வாங்கியாச்சு ஆனா டென்சன்ல சாப்பிட முடியலை....

திடல்ல செம கூட்டம்.. ஸ்டூடண்ட்ஸ், ஊர் சனங்க...எல்லோரும் உக்காந்து கிட்டு இருக்காங்க..! எனக்கு என்னவோ மகனே நீ பேசுடி ? என்னத்த பேசி கிழிக்கப்போறன்னு எல்லோரும் என்னையே பாக்குற மாதிரி ஒரு ஃபீலிங்கு....! தலைய குனிஞ்சுகிட்டு.. கையில டீச்சர் கொடுக்கையில நல்லா இருந்த பேப்பரு என் கையில நொஞ்சு தொஞ்சு போயி...தொடக்க கல்வி அலுவலர், ஊர் தலைவர், தலைமை ஆசிரியர், கொடியேத்த வந்த கெஸ்ட் எல்லாம் பேசி முடிச்சு....

போட்டி தொடங்குச்சு....

காந்திமதி, கவிதா, செந்தில் குமார், விக்னேஷ்....இப்டி எல்லோரும் போய் பேசிட்டு வந்து உக்காந்துட்டாங்க....இதே ஸ்பீட்ல என் பேரையும் கூப்டுட்டாங்க....நான் வேணா இப்டியே ஸ்டேஜ் பின்னால ஓடிப்போய்டவான்னு கேக்காத குறையா..1986 ஆகஸ்ட் 15 ஆம் தேதி முத முறையா மைக் கிட்ட போயி நின்னேன்....

துரைராஜ் சார் ஒரு வார்த்தை மறக்காம என்ன நினைவுல வச்சுக்க சொன்னாரு....உன் எதித்தாப்ல இருக்க எவனுக்கும் ஒண்ணும் தெரியாதுடா... உனக்குதான் தெரியும், நீ அவுங்களுக்குச் சொல்ற..இதை மட்டும் மனசுல வச்சுக்க....அவ்ளோதான் நீ ஆட்டோமேட்டிக்கா பேசுவன்னு சொன்னத அப்டியே புத்தில கொண்டு வந்துகிட்டென்...

எனக்கு ஒரு கோபம் வந்துச்சு...என்ன பேசுறேன்னு வேடிக்கை பாத்து சிரிக்க வந்தா இருக்கீங்க.....அப்டீன்ற மாதிரி....

" துலாக் கோல் போல் நடு நிலை தவறாத மாண்பு மிகு நடுவர் அவர்களே......."

அப்டீன்னு ஸ்டார்ட் பண்ணி............" பாரதியின் பாடல்களில் விஞ்சி நிற்பது நாட்டுப் பற்றே.....!!!! நாட்டுப் பற்றே...!!! நாட்டுப் பற்றே....!!!" இப்டி முடிக்கிற வரைக்கும் ஏனோ ஒரு கோபம் எனக்குள்ள பரவிக் கிடந்தது.

பேசி முடிச்சு எல்லோரும் கைதட்டியும் நான் ஒரு பயத்தை கடந்த நிலையில் போயி மறுபடியும் ஸ்டேஜ்ல உட்கார்ந்துகிட்டேன். அதுக்கப்புறம் துரை ராஜ் சார்..நான் தான் ஃபர்ஸ்ட் பிரைஸ்னு சொல்லி அறிவிச்ச போதுதான் தெரியும்...ஓ.கே..நமக்கு பேச வருது.. நாம பேசலாம்னு....

அந்த போட்டியில பரிசா கொடுத்த ஒரு எவர் சில்வர் தட்டும், பாரதியாரோட கவிதைகள் புக்கும் என்னால மறக்க முடியாத ஒண்ணு. பாரதியார் கவிதைகள் இன்னும் என்கிட்ட இருக்கு ஆனா...எவர் சில்வர் தட்டு என்னாச்சுன்னு எங்க அம்மாவதான் கேக்கணும்...

இதை ஏன் சொல்றேன்னா.. பால்யப்பருவத்தில ஏதோ ஒரு ரீதியில நமக்குள்ள நுழைஞ்சுடுற தேசப்பற்று சரியான வழியில ஒரு பதின்மத்துல எல்லாம் வழி நடத்தப்படுறது இல்லை. நான் எட்டாவது படிக்கிற வரைக்கும் ஸ்கூல் பிரேயர்ல உறுதி மொழி என்னைய தான் சொல்ல சொல்லுவாங்க..!

"இந்தியா என் தாய் நாடு; இந்தியர் யாவரும் என் உடன் பிறந்தோர்..என் தாய் திரு நாட்டை நான் உளமாற நேசிக்கிறேன் "

இப்டி சொல்லி சொல்லி ஒரு வித பிடிப்பு அதிகமாவே இருக்கும் நாட்டு மேல..! ஆனா +1, +2 படிக்கும் போது சுதந்திர தினம் வந்தா ஸ்கூலுக்கே போறது இல்ல அன்னிக்கு கட் அடிச்சிட்டு சினிமா பாக்கப் போறது, காலேஜ் டைம்ல சுதந்திர தினம்னா காலேஜ்க்கே போறது இல்லை இப்டி ஒரு அலட்சியம் வந்ததுக்கு காரணம் வயசா? புறச் சூழலா? அல்லது ஒரு கண்டிப்பு இல்லாம இருந்ததா? என்னனு எனக்குத் தெரியாது....

ஆனா சின்ன வயசுல இருந்து இந்தியான்னு சொன்னா ரொம்ப க்ளியரான ஒரு ஹீரோவத்தான் மனசுல ஏத்தி வச்சு இருந்திருக்கோம். வெள்ளை புறாவையும் அமைதியையும் சகிப்புத்தன்மையையும் கொண்ட ஒரு தேசமா மனசுல உருவேத்தி வச்சி இருக்கோம்.

மகாத்மா காந்தி பத்தின படம் பாத்ததுக்கு அப்புறம் இந்திய சுதந்திரப் போராட்டம் எவ்வளவு வலி மிகுந்ததுன்னு புரிஞ்சுக்க முடிஞ்சுது. இப்போ எல்லாம் ஸ்கூல் பசங்கள இப்டி சினிமாக்களுக்கு கூட்டிட்டு போறாங்களான்னு எனக்குத் தெரியாது பட்.........இப்டி சுதந்திரப் போராட்டத்தப் பற்றிய சினிமா பாக்கும் போது ரொம்ப பவர் புல்லா நம்ம மனசுல உண்மைகள் தெரிய ஆரம்பிக்கும் மற்றும் தேடலை ஊக்குவிக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை.

இந்தியன் அப்டீன்னு சொல்றதுல எவ்ளோ பெருமைப் படுவேனோ அதே மாதிரி தமிழன் அப்டீன்னு சொல்லிக்கிறதுல பெருமை + திமிர் இருக்கும் எனக்குள்ள...! அது என்னவோ தெரியலை.. அது தப்பான்னு கூட எனக்குத் தெரியாது. .தமிழன் அப்டீன்னு சொன்னா ரொம்ப அறிவாளி, பாரம்பரியம் மிக்கவன், அட்டகாசமான மொழிக்கு சொந்தகாரன், இலக்கியம் கலைன்னு கொடி கட்டி பறந்தவன், வெளி நாடு எல்லாம் போய் அடிச்சு ஜெயிச்சு நம்ம கலாச்சாரத்த பரவ விட்டவன், திருக்குறளுக்கும், ஐம்பெருங்காப்பியங்களுக்கும் சொந்தகாரன், அக நானூறு புற நானுறு கொண்டவன்.....,

ஆன்மிகத்தில் உலகத்துக்கே தெரியாத விடயங்கள் எல்லாம் கண்டு தெளிந்தவன்...அப்டீன்ற ஒரு திமிர் எதார்த்தமாவே எனக்குள்ள இருக்கு.......அது எப்பவுமே இருக்கும்னு வச்சுக்கோங்களேன்..!

இந்தியா அப்டீன்னு விழுந்து, விழுந்து நான் நேசிக்கிறது ஒரு தமிழனா இருந்துதான்னும் சொல்லலாம். அப்டி விழுந்து விழுந்து நேசிக்க அப்ப இருந்த தலைவர்கள் கட்சிகள் எல்லாமே ஒரளவிற்கு ஒழுங்கா இருந்ததும் ஒரு காரணம். கார்கில் வார் வந்த போதும் சரி......பாபர் மசூதி இடிக்கப்பட்ட போதும் சரி.....மும்பை குண்டு வெடிப்பு போதும் சரி........இந்தியா அணு குண்டு வெடிச்ச போதும் சரி ஒரு இந்தியனா நின்னுதான் யோசிச்சு இருக்கேன்....

இந்தியா பாகிஸ்தான் கூட சண்டை போட்டு பங்களாதேச பிரிச்சு கொடுத்துச்சுன்னு படிச்சப்ப ஒரு சூப்பர் ஹீரோவதான் பாத்து இருக்கேன்...! ராஜிவ் காந்திய தமிழ்நாட்ல படுகொலை செஞ்சப்ப...அதுவரைக்கும் வீட்ல பீரோல்ல வச்சிருந்த பிரபாகரன் சின்ன சைஸ் காலண்டர் (ஸ்கூல்ல வித்தாங்க...)எடுத்து கிழிச்சுப் போட்டு இருக்கேன்...

ஆனா...ஈழப் போர் நடக்கும் போது அங்க கொத்துக் கொத்தா பொதுமக்கள, பெண்கள, குழந்தைகள, வயசானவங்கள அரக்கன் ராஜபக்சேயின் அரசு கொன்னு குவிச்சுட்டு இருந்தப்ப அதுக்கு பின்னால பலமா இந்தியாவோட கைகள் இருந்துச்சுன்றத இன்னமும் என்னால ஜீரணிக்க முடியலை...

(நடை மாத்தியே....ஆகணும் நான்....)

என் தேசம் அனியாயத்துக்குப் போகாது....! என் தேசம் குற்றங்களையும் தவறுகளையும் நேருக்கு நேர் நின்று கேட்குமேயன்றி கபடமாய் சுற்றி வளைத்துப் போய் பழி வாங்காது..என்றெல்லாம் எண்ணியிருந்த போது ஈழத்தில் அதுவும் அப்பாவிகளை கொல்வதில் இந்தியாவின் பெரும்பான்மையான மூளைகள் ஈடுபட்டிருந்ததும் உதவிகள் செய்ததும் ஏற்றுக் கொள்ளவே இயல வில்லை.

விட்டுக் கொடுத்தலும் சகிப்புத்தன்மையும், அன்பும் நேசமும், நமது தேசத்தின் அதிமுக்கியமான் கொள்கைகளாய் இருந்த போதிலும் இப்படியான செயல்களை நிகழ்த்தப்பட்டு இருப்பதின் பின்னணியில் கபட மூளைகள்தான் இருந்திருக்கின்றன, சுயநல அரசியல்தான் இருந்திருக்கிறது. இவர்களே என் தேசமல்ல.....இவர்கள் தற்காலிகமாக அதிகாரங்களை கையில் வைத்துக் கொண்டு.....தமது பழிவாங்கும் அரசியலை செய்திருக்கிறார்கள் என்றும் உணர முடிந்தது.

கோபம் எல்லாம் தேசத்தை ஆளும் கட்சியின் மீதுதான் வந்ததே தவிர என் தேசத்து மீது அல்ல....! எவ்வளவு அற்புதமான தேசம் இந்தியா...! எவ்வளவு வேறுபட்ட மக்கள்......எத்தனை மொழிகள்...! எப்படிப்பட்ட கலாச்சாரம்...! எப்படிப்பட்ட உன்னதமான வரலாறு.....எவ்வளவு புத்திக் கூர்மையுள்ள மக்கள்....எவ்வளவு படித்த இளைஞர் கூட்டம்.....

விட்டு விடக்கூடாது என் தேசத்தை, விட்டு விடக் கூடாது நமது பெருமைகளை....! தேசத்தில் இருக்கும் அத்துனை நடுநிலை வாதிகளும், நியாயவான்களும் முற்போக்கு இளைஞர் கூட்டமும் சேர்ந்து சரியான அரசுகளை நிர்மாணிக்க தெளிவுகளை மக்களுக்கு புகட்டல் வேண்டும். காழ்ப்புணர்ச்சி அரசியலை வேரறுக்க வேண்டும்....

செங்குருதிகளைக் கொடுத்து..... அடி உதைகளை வாங்கி...போராடிப் பெற்ற சுதந்திரம் என் தேசத்தின் சுதந்திரம். எமது விடுதலையை, எம் மூதாதையரை நினைத்து நாங்கள் எப்படி பெருமைப் படுகிறோமோ அதே போல எம்மை நினைத்து எம்பிள்ளைகள் பெருமைப்பட வேண்டும். எம் பிள்ளைகள் வாழ நல்லதொரு தேசமாகவும் எந்த கறைகளுமற்ற ஒரு உன்னத தேசமாகவும் போற்றப்பட வேண்டும்....

இந்தியா என்பது தேசம் மட்டுமல்ல...உலக மக்களுக்கு எல்லாம் ஒரு எடுத்துக்காட்டு......! பல தரப்பட்ட மக்களோடு ஒன்று பட்டு விட்டுக் கொடுத்தலை கற்றுக் கொண்டு வாழ கற்றுக் கொண்ட நாடு.....! காஷ்மீரில் இருக்கும் ஒருவனும் தென் கன்னியா குமரியில் இருக்கும் ஒருவனும் சரளமாய் எங்கு வேண்டுமானலும் சென்று வரலாம்.......யாரேனும் கேட்டால்.......நம்மிடம் இருக்கும் ஒற்றை பதில்....

" இந்தியன் " என்ற ஒரு பெருமைக்குரிய அடையாளம்...!

சரியில்லாத அரசியல்வாதிகளால் ஏற்பட்டிருக்கும் முரண்பாடுகளால் சீற்றம் கொண்ட சிலர் மாநிலங்கள் எல்லாம் சிதறுண்டு தனி தனியாய் இருந்தால்தான் நல்லது என்று கூற்று உணர்ச்சியின் அடிப்படையில் சரியானது போன்று தோன்றினாலும் சற்றே அபத்தமானது. சேர்ந்து வாழ்தல் மட்டுமே சிறப்பு...!

நேர்மையில்லாத அரசியல்வாதிகளால் நமது தேசத்தின் பிடிப்புக்கள் வழுக்கிக் கொண்டு போகாமல்....இந்தியா என்ற ஒற்றை வார்த்தையில் ஒப்பற்ற குடிமக்களாய் சரியான தலைவர்களை தேர்ந்தெடுப்போம்........ஒப்பற்ற தேசத்தின் உயரிய குடிமக்கள் ஆவோம்...!

அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள்...!


தேவா. S

Friday, August 12, 2011

அற்புத நடனம்..!
நிறைய நிறைய கனவுகளோடு கலர்க் கலரான ஆசைகளோடு ஒரு பட்டாம் பூச்சி மாதிரி இந்த பூமியில் பட படன்னு சிறகடிச்சு பறந்துட்டே போய்ட்டே இருக்கணும்னு இப்போ எல்லாம் தோணுது. வாழ்க்கையில் நமக்கு நிறைய சந்தோசமான நிகழ்வுகள் நடக்கிறது, சந்தோசமான நிகழ்வுகளை எல்லாம் நாம தள்ளி வச்சுட்டு அழுத்தி பிடிச்சு கஷ்டங்களையே நினைச்சுகிட்டு ஒரு வித சலிப்போடு வாழ்க்கைய நகர்த்திட்டு போய்கிட்டு இருக்கோம்.

கொஞ்சம் மாத்தி போட்டு கஷ்டங்களை எல்லாம் ஓரமா வச்சிக்கிட்டு ஒரு யூஸ் அண்ட் த்ரோ பொருளா நினைச்சு அனுபவிச்சுட்டு அப்புறமா தூக்கி கடாசிட்டு போய்கிட்டே இருக்கணும். வாழ்க்கையோட ஒவ்வொரு கணமும் மிக அற்புதமானது. வெயில் அடிக்குது, மழை பெய்யுது, இரவும் பகலும் சேர்ந்து ஒரு வித தாள கதியில எல்லாத்தையும் நகர்த்திக்கிட்டு போய்கிட்டே இருக்கு.

இதுல நான் நானா வாழறதுக்காக ரொம்ப சந்தோசப்படாம வேறு எதை எதையோ எல்லாம் எதுக்கு நினைச்சுகிட்டு ஒரு ஏக்கத்தோடயே, அது இல்லையே இது இல்லையேன்னு குற்ற உணர்ச்சியோட வாழணும்?

எனக்கு எது கிடைக்கணும் அப்டீன்னு முடிவு பண்றது நானாவே இருக்கணும். புறச் சூழலும் வேறு மனிதர்களுமா இருக்கவே கூடாதுன்னு தீர்மானமான ஒரு பாலிசி வச்சிகிட்டு இருக்கும் போது எது நம்மள என்ன பண்ணிடும்? என்கிட்ட இருக்குற பொருளையும் அந்தஸ்தையும் வச்சு இந்த சமூகம் என்ன மதிக்கணும்னா ஐ யம் வெரி சாரி.. ...அப்படிப்பட்ட சமூகத்துல வாழ்றத விட நான் காட்ல மிருகமாவே திரியறதுல ரொம்ப சந்தோசமா இருப்பேன்.

மரியாதை நமக்கு அடுத்தவங்க கொடுக்கணும் அப்டீன்னு எதிர்பார்த்து போலியான வேசத்தை வெளியில போட்டு கிட்டு தம் பிடிச்சு பிடிச்சு வாழ்றதுல என்ன திருப்தி இருக்கப்போகுது. 1000 பேர் வெளில நம்மள வாழ்த்தினாலும் நம்ம யோக்கியதை என்னனு நமக்கு தெரியுமே. மனித சிக்கல்களுக்குள்ளும், தர்க்கங்களுக்குள்ளும் சிக்கி சின்னா பின்னம் ஆகாமல் என் வானில் நானே நானாய் சிறகடிக்கிறேன்.

என்னோட கையை என்னோட முகத்தை மணிக்கணக்கா பாத்து ரசிச்ச பால்யமும் பதின்மமும் எனக்கு இப்ப ரொம்ப அழகா தெரியுது. பொருளாதாரம் என்று வரும் இடத்தில் கர்வங்களும், பித்தலாட்டங்களும், புகழ்ச்சிகளும், மேதாவித்தனங்களும் ஒண்ணா சேர்ந்து கிட்டு நம்ம தன் முனைப்பை ரொம்ப திடப்படுத்திப் போட்டுடுது.

இப்டி இருந்தா மரியாதை, அப்டி இருந்தா புகழ், அப்டீன்னு ஒரு போட்டி மனப்பான்மை வந்து என்னைய இந்த உலகம் ஒரு அந்தஸ்தோட பாக்கணும் நான் காலாட்டிக்கிட்டு கையை உயர்த்தி ச்சே...ச்ச்சே...நான் அப்டீ எல்லாம் நீங்க சொல்ற மாதிரி பெரிய ஆளு எல்லாம் இல்லங்க...சாதாரணமான ஆளுதான்.. நீங்க என்ன புகழாதீங்கன்னு ஒரு போதையில எல்லாத்தையும் உள் வாங்கி கிட்டு கண்கள் சொருக பதில் சொல்லணும்.... !

ச்ச்ச்சீ என்ன வாழ்க்கை இது....? எச்சில் பாத்திரத்தில் பிச்சை எடுத்து பிழைத்து விட்டு தெருவோர குப்பைத் தொட்டி நிழலில் நிம்மதியாக உறங்குவது இதற்கு எவ்வளவோ மேல் அல்லவா?

எது செய்தாலும் அது எனக்கு ஒரு அங்கீகாரத்தை கொடுக்க வேண்டுமென்று நினைக்கும் போது செய்யும் செயலை நாம் செம்மையாக செய்வதை விட அங்கீகாரத்தை அடைவதற்கான குறுக்கு வழிகள்தான் நமக்கு அதிகம் தோன்றுகின்றன. பொருள் ஈட்டுவது வாழ்க்கையை வாழத்தான் என்பதை மறந்து விட்டு பொருள் ஈட்டுவேன் என்று கங்கணம் கட்டிக் கொண்டு வாழ்க்கையை இழத்தல் எவ்வளவு மடமையான விடயம்.

இரண்டு துடுப்புக்கள் வேண்டும் படகை செலுத்த, சில சூழல்களில் ஒன்று கூட போதும். படகை செலுத்த வசதியாய் இருக்கிறதே என்று ஆயிரம் துடுப்புக்களை கையில் வைத்திருந்தால் படகையும் செலுத்த முடியாது. துடுப்புக்களின் கனத்தில் படகும் கவிழ்ந்து விடும்.

பணம் பொருள் எல்லாம் துடுப்பு போல, வாழ்க்கை படகு போல இங்கே நமது பயணமும் இலக்கும்தான் முக்கியமே தவிர துடுப்புதான் முக்கியம் என்பது போல எண்ணிக் கொண்டு துடுப்பு சேர்ப்பவர்களை பார்த்தால் சிரிப்புதான் வருகிறது.

இது ஒரு பக்கம் என்றால் எனக்கு இந்த ஆறு என்று ஒன்றில்லை, படகு என்றும் ஒன்றில்லை என்று எனக்குத் தெரியும் அதனால் துடுப்பே வேண்டாம் என்று படகில் ஏறி ஜலத்தில் மூழ்கி இறப்பவர்கள் ஒரு பக்கமும் இருக்கிறார்கள்.

வாழ்க்கையை கடக்கத்தான் உயிர் ஜனித்தது. இதை எப்படி கடக்க வேண்டும் என்று அறிதல் ஒரு வித்தை. வித்தையை அறிந்தால் துடுப்பினை வேண்டுமென்றால் போடலாம்.. வேண்டாமென்றால் நிறுத்தலாம், படகினை எத்திசைக்கு வேண்டுமோ அத்திசைக்கு செலுத்தலாம்... ஒரு கட்டத்தில் படகையும் துடுப்பையும் தூக்கி எறிந்து விட்டு அடுத்த கட்டத்திற்கு நகரலாம்.

பிடிச்ச மாதிரி வாழ்க்கைய வாழ்ந்துட்டு செத்து போகறதுக்கு எனக்கு எதுக்கு ஊர்ல இருக்குற ஓராயிரம் ஏச்சும் பேச்சுக்களும் அப்டீன்னு கூட சில நேரம் நினைக்கிறது உண்டு.

ஒரு பட்டாம் பூச்சியின்
சிறகடிப்பில் லயித்து லயித்து
இதோ முளைத்தே விட்டது
எனக்கான சிறகு....!

எங்கே செல்ல வேண்டும்
என்ற இலக்குகளற்று
நகரும் என் பயணங்களில்
விரிந்து கிடக்கிறது
என் உலகம்!

ஏதேனும் ஒரு பூ வரலாம்
கண நேரம் நான் களைப்பாரலாம்
பல நேரம் பறந்து திரியலாம்
ஏதோ ஒரு நாள் எதுவுமற்று
மரித்து மட்கி மண்ணாக
மாறவும் செய்யலாம்!

யாருக்கு என்ன கவலை...?

(அட கட்டுரை முடிய போகுதுங்க....கொஞ்சம் நடைய மாத்திக்கிறேன்...சீட் பெல்ட் போட்டுக்கோங்க...இப்போ உள்ளுக்குள்ளேயே நாம டேக் ஆஃப் ஆக போறோம். அதுக்கப்புறம் நீங்களே பறந்துக் கோங்க!)

நகரும் பொழுதுகள் நகர்ந்து கொண்டே இருக்கிறது. நடக்கும் நிகழ்வுகள் நடந்து கொண்டே இருக்கிறது. ஜீசஸ் கூறியது போல உனது இன்றைய தினத்தைப் பற்றி நீ எண்ணி அதை முழுமையாக வாழக் கற்றுக் கொள். உனது நாளையை அந்த நாளே பார்த்துக் கொள்ளும்.

திட்டமிடுதல் என்பதை நாளையோடு தொடர்பு படுத்தாதே அதை இன்று செய்வதாய் மட்டும் எண்ணிக் கொள்... ஏனெனில் நாளை என்பது உறுதியில்லாத ஒரு சாத்தியமே..அது விடியலாம் விடியாமலேயும் போகலாம்...

நீ இன்றில் மூழ்கு; வாழ்வென்னும் அற்புத நடனத்தில் இன்றே உன்னைத் தொலை; இந்தக் கணத்து சந்தோசங்களே நிஜம்...! சிக்கல் இல்லாத மனித மனங்களை கொண்டவர்கள் சொர்க்கங்களில் வாழ்கிறார்கள்..!

வாழ்க்கையை ரசிப்போம் நித்தம் நம்மை சூழ்ந்திருக்கும் பெருங்கருணையின் பேரானந்தத்தில் லயிப்போம்..!


தேவா. SSunday, August 7, 2011

தெரு...!வாழ்க்கையின் அற்புதமான தருணங்களை எல்லாம் வாழ்வின் ஓட்டத்தில் இழந்து போய் விட்டோமோ..? என்று யோசித்த படி வாசலில் நான் அமர்ந்திருந்த போது மாலை மணி 6 இருக்கும். வார இறுதி நாள், நாளை ஞாயிறு எல்லோருக்கும் விடுமுறை நாள். எனக்கு ஒரு பழக்கமிருக்கிறது அதாவது வாசல் படியில் உட்கார்ந்து தெருவினை வேடிக்கைப் பார்த்துக் கொண்டே தேநீர் அருந்துவது என்பது எனக்கு பிடித்தமான விடயம்.

சூடான தேநீரை உதடுகளால் மெல்ல உறிஞ்சி கோப்பையிலிருந்து வாய்க்கு இடமாற்றம் செய்யும் அந்த தருணத்தில் தேநீரின் மணத்தை உள் வாங்கிக் கொண்டு சூடான தேநீரின் மெல்லிய சூடு முகத்தில் மெலிதாக பரவ வாய்க்குள் சென்ற தேநீர் உள்நாக்கு தாண்டி வெப்பமாய் தொண்டையை கடக்கும் பொழுது கிடைக்கும் திருப்திதான் தேநீர் அருந்துவதின் குறிக்கோள் என்பது மாதிரி மிக சிரத்தையாக தேநீரை உறிஞ்சிக் கொண்டிருந்தேன்.

வெறிச்சோடிக் கிடந்த என் தெருவினை சூரசம்ஹாரம் செய்து சப்தமில்லாமல் கிட என கட்டளை பிறப்பித்து விட்டு வீடுகளுக்குள் சர்வாதிகார ராஜ்யம் நடத்திக் கொண்டிருந்தன இரண்டு மிக முக்கிய சாதனங்கள். ஒன்று செயற்கைகோள் தொலைக்காட்சி, மற்றொன்று கணிணிக்குள் உலகை ஏலம் விட்டு மனித மூளைகளுக்குள் கற்பனை சாம்ராஜ்யம் நடத்திக் கொண்டிருக்கும் இணையம்.

எல்லா வேலைகளையும் செய்யும் பெரியவர்கள் எல்லோரும் மையமாய் மனதினுள் வைத்திருக்கும் இந்த இரண்டு மையம் தாண்டி சிறுவர்களை கட்டுப்படுத்த கையடக்க போர்ட்டபிள் விளையாட்டுக் கருவியும், இன்ன பிற இணைய விளையாட்டுக்களும்...இதைத் தாண்டிய சிலரின் அவசரமான கேளிகைப் பயணங்கள் திரையரங்குகளையோ அல்லது உணவு விடுதிகளையோ நோக்கி நகர்ந்து விட இதோ வெறிச் சோடி கிடக்கிறது என் வீதி....

வார இறுதியில் இப்படி என்றால் வார நாட்களைப் பற்றி என்ன சொல்வது....? இன்று விடுமுறையை இயந்திரமாய் ஓடிக் கழிப்பவர்கள்..வேலையை ஓய்வாகவா செய்வார்கள்? இதை விட அசுரத்தனமாய் அது இருக்கும்...!

நான் சிறுவனாய் இருந்த போது எல்லாம் இப்படி கிடையாது. இந்த 34 வயது என்னை வளர்த்திருக்கிறதா? அல்லது சீரழித்திருக்கிறதா? என்று கேட்டால், வாழ்க்கை மேம்பட்டிருக்கிறது என்று ஒரு காரணத்தை நவீன வசதிகளை வைத்துக் கொண்டு கூறினாலும், மனதளவில் நான் உள்பட அனைவரையும் பரம ஏழையாகத்தான் வைத்திருக்கிறது சமகாலச் சூழல்.

அப்போது எல்லாம் விடுமுறை என்றால் மனிதர்களை காணுதல், மனிதர்கள் கூடுதல், குடும்ப உறவுகள் சுற்றி அமர்ந்து பேசி சிரித்தல், உறவினர் வீடுகளுக்குச் செல்லுதல், சிறுவர்களும் சிறுமிகளும் சேர்ந்து கேளிக்கை விளையாட்டுக்கள் விளையாடுதல் என்று ஓய்வு நேரம் மனிதக்கூட்டுகளாகவே கழியும்...

என் அம்மா இரவு 7மணிக்கு எல்லாம் சமையல் முடித்து வாசலுக்கு வருவது போலத்தான் எதிர்த்த வீட்டு அய்யர் வீட்டு அம்மாவும், சுகுணா அக்கா, வைதேகி அக்கா, கண்ணா அண்ணா, ஜெயா அக்கா, பக்கத்து விட்டு அருள் அண்ணன், இந்த பக்கத்து வீட்டு பாபு பய, கடைசி வீட்டு மீனா அக்கா, சுரேந்தர், டிரைவர் பையன் சிவா, டைப்பிஸ்ட் பையன் ரகு, இப்படி தெருவில் எல்லா பட்டாளங்களும் கொஞ்சம் சீனியராக இருக்கும் ஒரு அண்ணாவோ அக்காவோ வழிகாட்ட...விளையாட்டுக்கள் களை கட்டும்....

பாலம்மா, எங்க அம்மா, ஜோயல் அம்மா இன்னும் தெருவில் இருக்கும் எல்லா அம்மாக்களும் வாசலில் மாலை நேரத்தில் வரும் முல்லை பூவையோ அல்லது கொல்லையில் இருந்து பறித்த டிசம்பர் பூவையோ கட்டிக் கொண்டு ....ஏதேதோ கதைகள் பேசிக் கொண்டிருப்பார்கள்.

அப்பாக்கள் எல்லாம் அமைதியாக திருச்சிராப்பள்ளி வானொலியையோ, இலங்கை ஒளிபரப்பு கூட்டு ஸ்தாபனத்தின் நிகழ்ச்சிகளையோ அல்லது விவித பாரதியையோ கேட்டுக் கொண்டும் ஏதேனும் பத்திரிக்கைகளை மேய்ந்து கொண்டோ, இரவு 8:40 தூர்தர்ஷன் செய்திகளுக்காக காத்துக் கொண்டோ இருப்பார்கள்....இல்லை கடைகளுக்குச் சென்று வார இறுதிக்குத் தேவையானவற்றை வாங்குவதற்கும், அல்லது பிள்ளைகளை கூப்பிட்டு வைத்துக் கொண்டு விளையாடுவதற்கும் தயாராகி இருப்பார்கள்...

எத்தனை விளையாட்டுக்கள் இருந்தனஅப்போது எல்லாம், கிளிக்கோடு, கல்லா மண்ணா, ஒளிஞ்சு பிடிச்சு விளையாடும் விளையாட்டு.....எவ்வளவு சந்தோசமாய் கண்ணாமூச்சி ரே...ரே காதடைபார் ரே என்று யாரோ ஒரு அண்ணாவோ அக்காவோ கண்ணை பொத்தி விட ஒவ்வொருத்தராய் கண்டு பிடித்து வர வேண்டும்....!

வீட்டு வாசலிலிருக்கும் 60 வால்ட் பல்ப் வெளிசத்தில் கிச்சுக் கிச்சு தாம்பலாம்....கிய்யான் கிய்யான் தாம்பலம் என்று மணலை குவித்து குச்சியை ஒளித்து வைத்து விளையாடுவோம். கால்களை நீட்டி எல்லோரும் உட்கார்ந்து கொண்டு அக்கா...அக்கா ஈர்வேலி (சீப்பு மாதிரி இருக்கும் தலையில் இருக்கும் ஈறினை எடுக்க மரத்தால் செய்யப்பட்ட ஒன்று ..பெரும்பாலும் எல்லோரின் வீட்டிலுமிருக்கும்)... என்று ஒரு விளையாட்டு.... என்று கேளிக்கைகளுக்கு பஞ்சமே இல்லை....

இன்று எங்கே போனது எங்களது கேளிக்கைகளும் சந்தோசங்களும்...? அதே தெருதான்...அடுத்த அடுத்த சிறார் கூட்டம் பிறந்து வளர்ந்து மிகவும் ஒரு குறுகிப் போன தான் மட்டும் பொழுது போக்கும் கேளிக்கைகளை பழகிக் கொண்டு விஞ்ஞானம் வளர்ந்து விட்டது என்று சொல்லி பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

எது எப்படி இருந்தாலும் விஞ்ஞானம் நவீனமென்று நாம் கூறிக் கொண்டாலும், மனிதர்கள் மனிதர்களோடு அளாவளாவி வளர்ந்த ஒரு வாழ்க்கை தொலைந்து போயிருக்கிறதா இல்லையா? யாருமே எதார்த்தமாய் இல்லாமல் போய் விட்டதற்கு காரணம்தான் என்ன? எல்லோரும் ஒரு வித மன நெருக்கத்தில் இருக்கிறார்களே ஏன்?

எங்க பக்கத்து விட்டு சங்கர் பையன்...உலகத்தில் இருக்கும் எல்லா மனிதர்களைப் பற்றியும், நிகழ்வுகளைப் பற்றியும், அப் டூ டேட் ஆக பேசுகிறான். அவனுக்கு தெரியாத புத்தகங்களும், தத்துவங்களும், சித்தாந்தங்களும் கிடையாது என்பது உண்மைதான் அவன் புத்திசாலிதான்...

ஆனால்...

தன் பக்கத்து வீட்டுக்காரன் யார் என்ன என்று கூட தெரியாமல் இருக்கிறானே? அது எந்த விதத்தில் நியாயம்? எதேச்சையாக அவன் வீட்டுக்கு போன மூணாவது வீட்டு கோபு மாமாவை ஹூ ஆர் யூ என்று கேட்டிருக்கிறான்...? இவனைப் போன்றவர்கள் வளர்ந்திருக்கிறார்களா? இல்லை சிதைந்திருக்கிறார்களா? ஒரு குழப்பமாய்த்தான் இருக்கிறது...

அதோ என் தெரு முனையில் பூட்டிக் கிடக்கிறது பாருங்கள் ஒரு கடை அதுதான் நாடார் கடை. ஒரு ஐந்து வருடத்திற்கு முன்னால் நீங்கள் வந்து பார்த்திருக்க வேண்டும். மாலை நேரம் என்றால் நாடார் கடையில் கூட்டம் களைகட்டி நிற்கும்.....! ஏதாவது சாமான் வாங்கப்போனால் சிரிக்க, சிரிக்க பேசிக் கொண்டே சுக துக்கங்களை விசாரித்துக் கொண்டே அவர் சுருள் போட்டு சாமான்களைக் கட்டிக்கொடுக்கும் லாகவமே தனிதான்....

" ஏக்கா சாப்புடியளா...என்ன வேணும் வெல்லமா... இந்தா தாரேன்," " என்னண்ணே சீனியா போட்டுறுவம்.....காப்பில சீனி நெறய போட்டுக் குடிக்காதியண்ணே சக்கர வியாதி வரும்......," "ஏம்மா பாப்பா ஒனக்கு என்ன கருவாடா....? எங்க அம்மாள காணோம் தனியா வந்திருக்க சில்லறைய பாத்து எடுத்துட்டு போத்தா," " டே முருகேசு...நாரயணன் அண்ணே வந்துருக்காரு பாரு அந்த சேர எடுத்துப் போட்டு பேப்பர கையில கொடு....ஏண்ணே டீ சொல்றேன் சாப்பிடுங்க.." " ஏத்தா காசு இல்லன்னா என்ன நாளைக்கி கொடு.. " " என்னண்னே பாக்கி ரொம்ப நிக்கிதே ஒண்ணாம் தேதி செட்டில் பண்ணிடுங்க...அப்பதானே நம்ம பொழப்பு ஓடியடையும்...."

இப்படியெல்லாம் மனிதர்களோடு அளவளாவி வாழ்க்கையோடு கலந்து தானும் பிழைத்து எல்லோரிடமும் வியாபரமும் நடத்தி வந்தார். ஊரெங்கும் மூளைக்கு ஒரு சூப்பர் மார்க்கெட் கடைகள் வந்து கவர்ச்சிக்கரமான செல்புகள், கலர் கலர் லைட்டுக்கள், பாக்கெட்டில் அடைத்த பொருட்கள் ரெடி மேட் சிரிப்போடு யூனி பார்ம் அணிந்த பணியாட்கள் என்ற் நவீனத்தின் பகட்டில் அவரின் பழுப்புக் கலர் மான் மார்க் சியாக்காய் போட்ட முண்டா பனியன் வியாபாரம் தொலைந்தே போய் விட்டது...

நாடார் கடையில் விலை படிமாணமாய் இருந்தாலும், மனித தொடர்புகள் வலுவாய் இருந்தாலும் அவரால் ஜெயிக்க முடியவில்லை காரணம் கவர்ச்சி வியாபார யுத்தி மனிதர்களை அடித்து இழுத்துச் சென்றதுதான். இன்றைக்கும் நீங்கள் கிராமங்களில் அல்லது தெரு முக்கில் இருக்கும் ஏதோ ஒரு மளிகைக்கடைக்கு அல்லது காய்கறிக் கடைக்குச் சென்று பாருங்கள்...அங்கே வியாபாரம் தாண்டிய ஒரு வாழ்க்கை இருக்கும்...

ஆனால் சூப்பர் மார்க்கெட்டுக்களில் வியாபரம் மட்டும் இருக்கும். இயந்திரங்கள் போலே உள்ளே செல்வோம், இயந்திரங்கள் போலே பொருட்களை எடுப்போம், காசு கொடுப்போம் இயந்திரமாய் வீட்டுக்கு வந்து விடுவோம். நான் சூப்பர் மார்க்கெட் வியாபாரிகளை குறை கூறவில்லை அங்கே மனித உறவுகள் விரிவடைவதற்கான சாத்தியங்கள் மரத்துப் போய்விட்டன என்றுதான் கூறுகிறேன்.

எல்லா விரிவாக்கத்தாலும் என்ன சாதித்து விட்டோம்....? மனிதர்களை மனித உறவுகளை நாம் மேம்படுத்த இயலவில்லை. மனதுக்குள்ளேயே ஒரு பரபரப்புக் கொண்ட ஒரு சமுதாயமாய் போய் விட்டோம். என்னதான் நீங்கள் தேவி தியேட்டர் ஏசி யில் போய் உட்கார்ந்து பாப்பார்ன் வாங்கிக் கொண்டு படம் பார்த்தாலும் அது.....மாலை 7 மணிக்கு மாட்டு வண்டி கட்டிக் கொண்டு கிராமத்து டெண்ட் கொட்டகைக்குப் போய் மணலை அள்ளிக் குவித்து உட்கார்ந்து படம் பார்க்கும் அந்த த்ரில்லுக்கு முன்னால தூசுதான்...

நவீனத்தை ஏற்றுக் கொள்ளும் அதே நேரத்தில் வாழ்க்கையை தொலைத்து விட்டு நாம் அறிவு சார்ந்த சமுதாயம் என்று மேடைகளில் பேசிக் கொண்டு ஒரு மன இறுக்கம் கொண்ட மனிதர்களாய் மாறிப் போனது காலத்தின் கோலம் தான்.

சக மனிதரைப் பார்த்து சிரிக்க முடியவில்லை. எப்போதும் பார்மாலிட்டி என்னும் சம்பிரதாயப்பேச்சு......சென்டி மீட்டர்களில் அளவெடுத்த சிரிப்புக்கள், நேரத்துக்குள் அடைத்துக் கொண்டு அவசர கதியில் முடியும் உறவுகளோடான ஒரு இயந்திரத்தனமான சந்திப்புக்கள்....என்று இறுகி இறுகி இன்று மன அழுத்தத்தின் உச்சத்தில் நம் சமுதாயம் இருக்கிறது.

வெட்ட வெளி வானத்தை ரசித்துப் பார்த்து நாட்கள் ஆகிப்போன மனிதர்கள், இன்று இணையத்தில் வந்து விர்ச்சுவல் வானத்தையும், செடி கொடிகளையும் ஆறுகளையும் மனிதர்களையும் தேடுகிறார்கள்.....!

எல்லா பயன்பாடுகளும் மனித உறவுகளை, வாழ்க்கையை செம்மையாக்க பயன்படுமெனில் அந்த பயன்பாட்டில் ஒரு அர்த்தம் இருக்கிறது மாறாக அது சிதைக்கிறது எனில் அப்படிப்பட்ட பயன்பாடுகளை கட்டிக் கொண்டு அழுவதை விட செத்து பிணமாய் போவதே மேல்.....

நான் யோசித்து கொன்டு அமர்ந்திருந்தேன். வானத்தில் பூத்திருந்த நட்சத்திரங்கள் சினேகமாய் என்னைப்பார்த்து சிரிக்க எனக்கு பக்கத்தில் வந்து துணையாய்ப் படுத்துக் கிடந்தது அந்த பெளர்ணமி நிலவின் ஒளி.....

வீட்டிக்குள்ளிருந்து அம்மாவின் குரல்.....சப்தமாக..." மணி எட்டாயிடுச்சு லூசுப்பய மாதிரி தனியா ஒக்காந்து என்னடா பண்ற...உள்ள வாடா....டீவில ஏதோ போட்டிருக்கான் பாரு..." என்று கூப்பிட்டாள்....!

நான் தெளிவானவனாக மாற " இதோ வர்றேன்மா ...." என்று கூறிக் கொண்டு வீட்டிற்குள் சென்றேன்.

தெரு வெறிச்சோடி கிடந்தது.....


தேவா. S


Thursday, August 4, 2011

எழுத்து....!

" அ " என்று கைப்பிடித்து எழுத என்று என் அன்னை பயிற்றுவித்தாளோ அன்றிலிருந்து இன்றுவரை எழுத்தினை நேசிக்கிறேன். ஏதோ ஒன்றைக் கிறுக்கும் மனோபாவம் இன்று தொடங்கியது அல்ல. காலத்தின் போக்கில் அவை கரும் பலகையாகவும், நோட்டுப் புத்தகங்களாகவும், இன்று இணையத்தில் தட்டச்சாகவும் பரிணமித்திருக்கிறது.

சிலேட்டில் எழுதிப் பழகிய காலங்களில் சிலேட் குச்சிதான் எனது நண்பன். சாக்பீசை எப்போதும் நான் நேசித்தது கிடையாது. ஏனென்றால் அது எப்போதும் ஆசானின் கையிலிருந்து மிரட்டும் ஒரு வஸ்தாகவே எனது மூளையில் இன்னமும் பதிந்து போயிருக்கிறது. அதுமட்டுமில்லாது அதன் தடிமனான அச்சு வெளியாக்கத்தை விட மெலிதான சிலேட்டுக் குச்சியின் அச்சு விரும்பத் தக்க வகையில் இருக்கும்.

ஆசிரியருக்குத் தெரியாமல் சாக்பீஸ் எடுத்து சிலேட்டில் அவர்கள் இடும் மதிப்பெண்ணை திருத்தி 100க்கு 79 எடுத்த மார்க்கினை 99 என்று மாற்றம் செய்து வீட்டில் காண்பிக்கையில் பால பருவத்தின் கையெழுத்து அதிர்வினை விளங்கிக் கொண்டு அடி வாங்கிய நாளும் சரி....

பள்ளியில் ப்ராக்ரஸ் ரிப்போர்ட்டில் இங்க் ரீமூவர் வைத்து ஆசிரியர் கொடுத்த மார்க்கை மாற்றி கூடுதல் மார்க் இட்டு அப்பாவிடம் கையெழுத்து வாங்கி விட்டு மீண்டும் அழிக்க முற்படுகையில் இங்க் ரிமூவரின் ஆசிட் ப்ராக்ரஸ் ரிப்போர்ட்டை மெலிதாய் ஒரு ஓட்டை போட்டு விட மிஸ்டர் பீன் மாதிரி பதறிப்போய் வேறு வழியில்லாமல் ஆசிரியரிடம் கொடுத்து அடி வாங்கிக் கொண்ட போதும் சரி..

எனக்கு எழுதுவது எப்போதுமே பிடித்துதானிருந்திருக்கிறது. இணையத்தில் அதுவும் தமிழில் முதன் முதலில் தட்டச்சு செய்த போது அது வரையில் ஆங்கிலத்தில் மட்டுமே கணிணிக் கண்ணாடிக்குள் அதிகாரம் செய்து கொண்டிருந்த எழுத்துக்கள் என் தாய்த் தமிழில் வந்து கண்ணடித்து சிரித்த போது நான் நிஜ காதல் கொண்டேன்.

பேனா பிடித்து அழுத்தி எழுதும் போது கிடைக்கும் உணர்வை விட தட்டச்சு செய்யும் போது மென்மையாய் இன்னும் வேகமாய் உணர்வுகள் பீறிட்டு வருவது எனக்கு மட்டுமே தோன்றுகிறதா அல்லது எல்லோருக்குமே அப்படித்தானா என்று எனக்குத் தெரியவில்லை.

எழுத்து என் நேசம். நான் எழுத்தாளன் என்ற எந்த ஒரு அடையாளத்துக்குள்ளும் வராமால் என் காகித ராஜ்யத்துக்குள் எப்போது நினைத்தாலும் படையெடுத்து சென்று எழுத்து வீரர்களை ஆக்கிரமிக்கச் செய்து வெள்ளைத் தாள்களை வென்றெடுப்பது என் வழமையில் ஒன்று....! அன்று வெள்ளைத் தாள்...இன்று இணையம் மற்றும் வலைப்பூ...

ஏதோ ஒன்று சொல்லத் தோன்றிக் கொண்டே இருக்கும் ஆனால் இன்னது என்று தெரியாது. அந்த உத்வேகத்தின் உயிர் முடிச்சு நேரடியாய் தட்டச்சில் ஏறும் போது நானும் உடன் இருந்து வாசித்திருக்கிறேன். இது கொஞ்சம் பைத்தியக்காரத்தனமாக கூட தோன்றலாம்.. ஆனால் இதுதான் உண்மை....!

எழுத்துக்களை வாசித்து மட்டுமல்ல எழுதியும் நாம் பயிலலாம். எழுதி, எழுதி எல்லாம் இறைத்து விட்டு வெறுமையாய் இருப்பது எழுதுவதை விட இன்னமும் அழகானது என்று இப்போது கற்றுக் கொண்டிருக்கிறேன். புறம் நோக்கிய நகர்தலுக்கு சில எழுத்துக்கள் பயன்படும்...! சமூக பிரச்சினைகளையும் தீர்வுகளையும், எழுதும் போது உள்ளமையில் மூழ்கிக் கிடந்து அதை விட்டு வெளியே வந்து அவற்றைப் பற்றி பேசவேண்டும்.

அதாவது... நமது வீட்டினுள் ஆழமாய் தனிமையில், நமது விருப்பப்படி இருக்கும் போது யாரேனும் நம்மை பார்க்க வந்து விட்டால், பதறி எழுந்து உடை உடுத்திக் கொண்டு...சட்டை பட்டனை போட்ட படி கலைந்து இருக்கும் தலையை கையால் வாரிக் கொண்டு....என்ன சார் எப்டி இருக்கீங்க என்று கேட்டுக் கொண்டு வந்து நலம் விசாரிப்போம். வந்திருப்பவர் ஏதேதோ பேச நாமும் பேச முழுக்க முழுக்க லெளகீகம் என்னும் கடலுக்குள் விழுந்திருப்போம்.

வந்த விருந்தினர் போனவுடன் மீண்டும் நம் பழைய நிலையை அவ்வளவு எளிதாய் அடைய முடியாது, ஏனென்றால் வந்தவர் விதைத்துப் போனவை எல்லாம் நம்முள் எண்ணங்களாய் ஓடிக் கொண்டிருக்கும் மீண்டும் நமது ஓய்வு நிலைக்குச் செல்ல சில மணி கூட நேரங்கள் ஆகலாம்....

இப்படித்தான் பொது பிரச்சினைகளை எழுதும் போது மனமற்ற மையத்திலிருந்து வெளியில் வந்து எழுத வேண்டியிருக்கிறது. அப்படி எழுதும் போது வாழ்க்கையை மட்டும் வாழ்ந்துகொண்டு பொருளாதய உலகத்தில் கொடிகட்டிப் பறக்கும் சீமான்கள் நம்மை எளிதாய் சீண்டிப்பார்த்தும் விடுகிறார்கள்..., அதே நிலையில் இருந்து நாம் கொடுக்கும் பதில்கள் கண்டிப்பாய் அவர்களை புரிதலுக்கு கொண்டு வந்து விடுவதில்லை.

" சப்தங்கள்...சப்தங்களின் முன் தோற்கும் "

என்பதை நாம் அறியாமலில்லை. ஸ்தூலத்தின் தீர்வுகளை நான் பெரும்பாலும் தீர்க்குமிடம் சூட்சுமம். ஆயிரம் வார்த்தைகள் செய்யாத விசயத்தை ஆழமான மெளனங்கள் சாதித்து விடும் என்பது உறுதியான விடயம்.

சப்தமில்லாத எழுத்துக்கள் ஒரு வகை தியானம்தான். வாழ்க்கையில் தியானம் என்பது ஒரு வித தனிப்பட்ட செயலாக மனிதர்கள் பார்க்கும் படியான ஒரு சூழலை மனிதனை திருத்த வந்த மதங்கள் போதித்து விட்டன. உண்மையில் முழுமயாக வாழ்வதுதான் தியானம். வாழ்க்கையின் இந்த தருணத்தை நான் முழுமையான ஒரு சந்தோச நிகழ்வாய் அல்லது ஏதோ ஒரு துக்க நிகழ்வாய் எதிர் கொள்ளும் போது அதை முழுமையாக அனுபவித்தல்தான் தியானம்.

மனிதர்களுக்கு எப்போதும் மரணம் பற்றிய பயம். இதுதான் ஆழமாய் உள்ளே இருந்து எல்லா செயல்களையும் செய்ய வைக்கிறது. முழுமையாய் வாழ்க்கையை வாழ்பவனுக்கு பயம் ஏதும் இல்லை. எந்த உறுத்தலும் இல்லாமல் இறக்க தயாராகவே இருக்கிறான். சாக்ரடீஸ் கூறியது போல

" வாழ்க்கையை நான் முழுமையாக வாழ்ந்து விட்டேன். எனவே இறப்பு பற்றி எனக்கு யாதொரு கவலையும் இல்லை. ஒரு வேளை மரணத்துக்குப் பிறகு ஒரு வாழ்க்கை இருக்குமெனில் அதையும் நான் முழுமையாக வாழத்தான் செய்வேன்..."

என்ற எண்ணம் கொண்டவர்களே வாழ்க்கையை முழுமையாக புரிந்து கொண்டு இந்த கொண்டாட்டதை அனுபவித்து வாழ்கிறார்கள். வாழ்க்கையை அனுபவிக்க உயரிய புரிதல் தேவை, உயரிய புரிதலை சூழ்நிலைகளும், மனிதர்களும், நல்ல புத்தகங்களும் அளிக்கின்றன...இவற்றை கிரகித்த மூளை சமப்பட்டு போய்...

கிரகாசாரத்தை அனுபவமாக்கிக் கொண்டு ஆழமான எழுத்தாய் வெளிப்படுகிறது. எழுத்து ஆத்மாவை சுத்தப்படுத்துகிறது. பரிபூரணத்தை நோக்கி நகரவைக்கிறது. ஒரு தவத்தைப் போல ஒவ்வொரு தடவையும் ஏதோ ஒன்றினை எழுதி முடிக்கையில் திருப்தி கிடைக்கிறது. இந்த திருப்தி பூர்வாங்க நிலையை ஒத்திருக்கிறது. சமநிலை ஆன மனது சலனமின்றி அங்கிங்கெனாதபடி விரிகிறது....

இப்படியாகத்தான் எழுத்தினை நானும், என்னை எழுத்தும் பிடித்துக் கொண்டிருக்கிறோம். வெளிப் பார்வைகளுக்கு கிறுக்கலாய், கேலியாய், சராசரியாய் தென்பட்டாலும் எழுதுவதை இந்த ஒரு அணுகுமுறையோடு தொடரும் போது கிடைக்கும் அலாதியான பரவசத்தை எப்படி விட்டுக் கொடுக்க முடியும்.....?

காலத்தோடு ஒத்திசைந்து தொடரும் இந்த பயணம் என்று முடியும் என்று அறிய முடியாமலேயே....அதன் வேகத்தில் ஒரு நாள் நின்று போகும்.....!

அன்று முழுமையில் நானே நானாய் இருப்பேன்...!


தேவா. S

Monday, August 1, 2011

கழுகு என்னும் போர்வாள்....!ஒரு கணம் நின்று நிதானித்த நினைவுகளின் ஆழங்கள் சமப்பட்டுப் போய்க்கிடந்த ஒரு விடியலில், மிகைப்பட்ட மனித முரண்களின் இருப்பிடம் எது? என்று ஆராயத்தொடங்கியிருந்தது என் மூளை. தீரா தாகத்தில் தேகம் தகிக்க இரு குவளை குளிர் தண்ணீரால் தற்காலிக உடல் சூடு தணிந்தது ஆனால் உள்ளச் சூடு?

வழி தவறிப் போயிருந்தால் வழிகாட்ட முடியும் ஆனால் நானும் என்னைப் போன்ற என் நண்பர்களும் வாழ்க்கை மாறிப் போனதற்கு யார் காரணம்? வகுப்பறையில் ஆசிரியரின் மிரட்டலுக்கு பயந்து படிக்கச் சொல்லிக் கொடுத்த சமூக சூழ்நிலை வீட்டில் பொருளாதாரம் வேண்டி படிக்க பயின்று கொடுத்தது.

என் தகப்பனுக்கும் எனக்குச் சொல்லிக் கொடுத்த ஆசிரியருக்கும் ஏற்கனவே அவர்கள் வாழ்ந்து வளர்ந்த சூழலும், பழக்கப்பட்டுப் போயிருந்த பொது புத்தியும் சாட்டைகளாய் தங்களின் கையிலிருக்க அதை வீசி, வீசி, ஓடு... ஓடு.... என்று துரத்த அடிக்குப் பயந்து ஓடி வந்து சேர்ந்த இலக்கில் இருந்த எல்லாமே என்னின் குணாதிசயத்துக்கு முரண்பட்டு இருந்தது.

நான் நானாக வளர்வதில் இந்த சமுதாயத்திற்கு எந்த ஒரு சம்மதமும் இல்லை. இதற்கெல்லாம் காரணம் என்ன? என்று யோசிக்க புரிதலின்மை மேலும் சமுதாய நிர்ப்பந்தம் என்ற இரு வார்த்தைகள் என்னுள் பூத்துச் சிரித்தன.

பக்கத்து வீட்டுக்காரன் டிவிஎஸ் 50 வாங்கிவிட்டான் என்ற ஒரே காரணத்திற்காக தனக்கு தேவையில்லாத ஒரு வாகனத்தை என்று ஒருவன் கடன் கொடுத்து வாங்கி தன் வீட்டு வாசலில் நிறுத்துகிறானோ அங்கே மீண்டும் கிளர்ந்தெழுகிறது புரிதலின்மை. இந்த வாழ்க்கை எனது வசதிபோல ஆனால் சத்தியத்துக்கு உட்பட்டு மூன்றாம் மனிதருக்கு இடைஞ்சல் கொடுக்காமல் வாழ வேண்டும் என்று ஏன் இதுவரையில் என் சக மானுடர்க்கு புரியவில்லை என்று தோன்றிய கேள்வியைக் கேட்க கேட்க எனக்கு சமுதாயம் கொடுத்த பெயர் திமிர் பிடித்தவன்.

வீட்டிலிருக்கும் குப்பைகளை எல்லாம் ஒரு இடத்தில் கொட்டவும் அதை துப்புரவு செய்ய ஒரு நெறிமுறைகளும் இல்லாமல் இருந்த போது அரசு இயந்திரங்களின் செயல்பாடுகள் என்ன என்று வாசிக்கத் தோன்றியது. நம்மிடம் சட்டமிருக்கிறதும், நம்மிடம் சிஸ்டம் எனப்படும் ஒழுங்கு முறைகள் இருப்பதும் அதை செயல்படுத்த ஜனநாயக ரீதியாக மனிதர்களும் அரசு அதிகாரிகளும் இருப்பதும் அறிந்து ஆச்சர்யத்தில் திகைத்தேன்...!

ஆனால்..

பின்பற்ற ஒரு மனிதர் கூட இல்லையே என்று எண்ணி கூச்சமும் வேதனையும் பட்டேன். 100 கோடி பேருக்கு மேலிருக்கும் தேசத்தின் உள்நாட்டு தேவைகளை உள்நாட்டில் உள்ளவர்களே உற்பத்தி செய்வதின் மூலம் நமது தேசத்தின் பணப்புழக்கம் அதிகமாகியிருக்க வேண்டும் ஆனால் ஆகவில்லை. ஏன் என்று சாமானியர்கள் சிந்திக்க கூட அருகதையில்லை என்று ஒரு சூழல் நமக்கு விதைக்கப்பட்டிருக்கிறது.

இந்த தேசத்துக்கும் தனி மனிதனுக்கும் உள்ள ஒரே தொடர்பு தேர்தலில் வாக்களிப்பது மட்டுமே என்ற ஒரு புரையோடிப் போன ஒரு மனோவசியம் மிக நேர்த்தியாக நமக்கு நிகழ்ந்தேறியிருக்கிறது. அரசியல் என்றால் சாக்கடை என்றொரு படிமாணமும் என் தேசத்து இளைஞனின் மூளையில் இலச்சினை குத்தப்பட்டிருக்கிறது. இப்படி குத்தியவர்கள் எல்லாம் அரசியலால் ஆதாயம் அடைந்தவர்கள் என்று கொள்க;

நமது ஊர் கடைத்தெருவில் விற்கும் வியாபாரி பொருளை அதிக விலை வைத்து விற்கிறார் என்று நம்மைச் சுற்றி இருப்பவர்களிடம் எல்லாம் சுட்டி அவரைக் குறை சொல்லி கிண்டல் செய்து சிரித்திருப்போம் அவரைப் பேராசைக்காரர் என்று வசை பாடியிருப்போம் ஆனால் ஒரே ஒரு முறை அந்தக் கடைகாரரின் கண்களை நேருக்கு நேராய் பார்த்து ஐயா தங்களின் விலை கூடுதலாய் இருக்கிறது, ஏன் இப்படி கூடுதலாய் விற்கிறீர்கள்? என்று நம்மின் நிலைப்பாட்டை கூறியிருக்க மாட்டோம்.

இந்த சமுதாயத்தில் எல்லோரும் கருத்து சொல்ல வேண்டும். ஏதோ ஒரு கட்சியையோ அல்லது சித்தாந்தத்தையோ இறுகப் பிடித்தப்படி தான் சார்ந்திருக்கும் அமைப்பின் எல்லா முரண்களையும் சகித்துக் கொண்டு வாழ வேண்டும்....சுற்றியுள்ள மனிதர்களுக்கு எல்லாம் இப்படி இருங்கள், அப்படி இருங்கள் என்று சொல்வதோடு மனித செயல்பாடுகளால் விளையும் முரண்களை எல்லாம் கேலி பேசி சிரிக்க வேண்டும் என்றே பயிற்றுவிக்கப் பட்டு பழக்கப்பட்டு விட்டோம் ஆனால்.. தன்னை உற்று நோக்கி சரி செய்துகொள்ள எந்த ஒரு நிலைப்பாட்டினையும் நாம் கொண்டிருக்க வில்லை...!

மக்கள் என்றும் சமுதாயமென்றும் நாம் கூறுமிடத்தில் இவர்தான் சமுதாயம், அவர்தான் மக்கள் என்று சுட்டிக் காட்ட இயலுமா? தனி மனித தொகுப்புதான் சமுதாயம், தனி மனித தொகுப்புதான் மக்கள்...

என்னை இந்த சமுதாயத்திலிருந்து நான் விடுவித்துக் கொண்டு தனித்தமர்ந்து கருத்து சொல்லி ஒரு மாற்றம் வரவேண்டும் என்று சூளுரைத்தால் அதன் பின்னணியில் இருக்கும் அபத்தம் என்னவென்று நான் சொல்லித் தெரிய வேண்டாம். முதலில் நான் மாற வேண்டும் பிறகு ஊரைப் பற்றி சிந்திக்க வேண்டும்.

" உழைத்து வாழ வேண்டும் என்று பொதுவில் சொல்ல வருபவன் முதலில் உழைப்பிற்கே தன்னை அர்ப்பணித்துக் கொண்டவனாயிருக்க வேண்டும்..."

தனக்கென்று ஒரு சுய தன்மை இல்லாமல் சமுதாயத்தை குற்றம் சொல்வது மிகப் பெரும் தீங்கான ஒரு செயல். இயன்றவரையில் தன்னையும் சுற்றுப்புறத்தையும் சரி செய்ய ஒவ்வொரு மனிதனும் தன்னார்வம் கொண்டவராய் இருத்தல் வேண்டும்...

" இதற்கு தேவை முழுமையான விழிப்புணர்வு...."

கொஞ்சம் நடை மாற்றிக் கொள்கிறேன்... ஏனென்றால் கழுகு இப்போது உள்ளே வருகிறது.

கட்டுக்குள் நின்று கவனிப்புகளை கூர்மையாக்காமல் மேம்போக்காய் வாழ்ந்துவிட்டு போவதிலென்ன நிம்மதியிருக்கிறது உனக்கு என்று எம்மை உற்றுப் பார்த்து எரித்து விடுவது போல எமதின் உள்ளமை கேள்வி கேட்ட கணத்தில் ஜனித்தது கழுகு என்னும் ஒரு போர்வாள் எமது கையில்...

இங்கே சத்தியத்தின் மூலமென்ன, பிரச்சினைகளின் வேர்தான் என்ன? எங்கே ஜனிக்கிறது மனித அபத்தம்? எம்மக்களின் தீராப்பிரச்சினைகளுக்கு எதுவெல்லாம் காரணம் என்று சிந்தித்த நொடியில் நவீன தொழில் நுட்ப பயன்பாட்டில் இலவசமாய் எல்லா இடத்திலும் இயங்கிக் கொண்டிருக்கும் வலுவான ஆயுதத்தை எமது கையில் எடுத்தோம்...

அதற்கு கழுகென்று பெயரிட்டோம்....

விழிப்புணர்வு என்னும் ஒற்றை நோக்கை இரு விழிகளுக்கு மத்தியில் கருத்தாய் வைத்து முதலில் விழிப்புணர்வு என்றால் என்ன என்று போதிக்க போதிய திரணியை எம்மிடம் சேர்க்க ஒத்த கருத்துள்ள இறகுகளை ஒன்றிணைத்தோம்...

ஒவ்வொரு இறகுகளாய் ஒன்றிணைந்து எமதின் சிறகான பின்பு விழிப்புணர்வு என்னும் ஒற்றை உயிர் ஏந்தி இன்று கழுகினை சிறகடிக்கச் செய்து கொண்டிருக்கிறோம்... உச்சத்தில்...!

தான் யாரென்றும், தன்னின் கடமைகள் யாதென்றும், தம்மின் பொறுப்புக்கள் என்னவென்றும் மனிதர்கள் தங்களின் குடிமையியல் பற்றி அறியவொண்ணா வண்ணம் சிதறிக் கிடக்கும் சித்தாந்தங்களும், கட்சிகளின் கொள்கைகளும் மனிதர்களின் மனோ நிலையை ஆக்கிரமித்துக் கொண்டு தெளிவான பார்வைகளை பார்க்க விடுவதே இல்லை.

ஏதோ ஒரு நிலைப்பாடும், கொள்கைகளும் எல்லா சூழலுக்கும் பொருந்தி வராது என்பதை என் சக மானுடர் அறிய வேண்டும். இனி வரும் காலங்களில் கட்சிகளுக்குள் தொண்டர்களும், சித்தாந்தக் கொட்டிலுக்குள் அடைபெற்றுக் கிடக்கும் மனிதர்களும் இருத்தலே கூடாது.

சூழலுக்கு ஏற்ப உண்மைகளை பயன்படுத்தும் யுத்தியை எம் மக்களுக்கு பயிற்றுவிக்க வேண்டும். சரிகளையும் தீமைகளையும் கணிக்க வேண்டிய இடத்திலா இன்று நாம் இருக்கிறோம்...? இல்லையே, குறைந்த தீமை எதில் உள்ளது என்று தானே இன்று வாதிட்டு கொண்டிருக்கிறோம்.

சக மனிதரை மதிக்கத் தெரியாத, சக மனிதரை அன்புடன் நடத்தத் தெரியாத, வாழ்க்கையின் சுபீட்சத்துக்கு உதவாத எந்தவொரு கருத்தாய் இருந்தாலும் அதை தீயிட்டுக் கொளுத்துவோம். எதிரே வரும் மனிதரிடம் சினேகமாய் சிரிக்கச் சொல்லித் தராத எந்த ஒரு தலைவனையும் நாட்டை விட்டே துரத்துவோம்.

என் வீடு, என் வாசல், என் மக்கள், என்று நம்மை சரி செய்யும் செயல்களால் சுற்றியிருப்பவர்களுக்குத் தீமை ஏற்படுமெனில் நாம் செய்வது சரியா என்று கேள்விகளை நமக்குள்ளேயே கேட்டுக் கொள்வோம். இதைத்தான் கழுகு விவாதக் குழுவும், கழுகு வலைப்பூவும் செய்து கொண்டிருக்கிறது. முரண்கள் இருந்தால் நயமாய் தனி மனித உணர்வுகளைப் பாதிக்காத வகையில் கூறுங்கள் மனிதர்களே....

எம்மின் தவறுகள் உங்களால் திருத்தப்படுமெனில் நாங்கள் பாக்கியவான்கள்.

அதே நேரத்தில் முரண்களைச் சுமந்து கொண்டு வந்து கொட்டி விட்டு இதை நீங்கள் பின்பற்ற வேண்டும் என்று கூறி வெற்று வியாக்கியானங்களை எம்மீது விசிறியடிக்க யாரேனும் முயன்றால்... அறிவென்னும் வாள் எடுக்க நாம் தயங்கப்போவது மட்டுமில்லாமல், எந்த நிலையில் இருந்து முரண்கள் வருகின்றனவோ அதே நிலைக்குச் சென்று அவற்றை அழித்தொழிக்கவும் தயங்கப் போவதும் இல்லை.

கழுகு என்னும் போர்வாளின், பால பருவத்து பணியாக இணைய பயனீட்டாளர்களிடம் விழிப்புணர்வையும், நாம் வாழும் சமுதாயத்தில் காணப்படும் முரண்களையும் எடுத்தியம்பி வருகிறோம். முழுக்க முழுக்க சிதறிக் கிடக்கும் இளையர்கள் நிறைந்த தமிழ் இணைய உலகினுள் சத்தியத்தை கூறி அவர்களை ஒன்றிணைத்துக் கொண்டிருக்கிறோம்.

போராட்டங்கள் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும், என்று கணித்துக் கொண்டு அதே முறைகளை நீங்கள் இதுவரையில் பின்பற்றி இருக்கிறீர்களா? என்று வரும் கேலிகளால் நிறைந்த கேள்விகளை இழுத்துப் பிடித்து வளைத்து நெளித்து மீண்டும் அவற்றை கேட்டவர்களுக்கே பரிசளிக்கிறோம்.

காலங்கள் தோறும் பிரச்சினைகளைத் தீர்க்க தெருவில் இறங்கி வாழ்க, ஒழிக கோஷம் போட்டு எத்தனை பிரச்சினைகளை நாம் வேரறுத்துள்ளோம்? எல்லா பிரச்சினைகளுக்கும் கோசங்கள் இடுவதும், சாலை மறியல் செய்வதும் உண்ணாவிரதம் இருப்பதும் தீர்வாகாது என்பதோடு மட்டுமில்லாமல் எமது போராட்ட வடிவங்கள் கற்பனையிலும் உதித்திராத வகையில் நவீன தொழில் நுட்பத்தையும், மக்களின் அறிவுத்திறனையும் கொண்டு செயல்படும் விதத்தில் இருக்கும் என்றும்,

ஒவ்வொரு தனிமனிதரும் செம்மைப்பட்டு போகையில் எமது போராட்ட வடிவங்கள் அடக்குமுறை செய்பவரையும், எதேச்சதிகாரம் செய்யும் மனிதர்ளையும், சுயநல அரசியல்வாதிகளையும் அதிரடியாய் ஆட்டம் காண வைக்கும் என்பதையும் உறுதியாக அறுதியிட்டு அறிவிக்கிறோம்.....

இன்று 35 பேர்களாய் வியாபித்து நிற்கும் இந்த சக்தி, லட்சங்களாய், கோடிகளாய்ப் பற்றிப் பரவும். ஆமாம்.....நெருப்பின் இயல்பு பற்றிப் பரவுவதுதானே...!

சமுதாய நேர் நோக்காளர்களையும், இனி வரும் சந்ததியினராவது செழிப்புடன் வாழ ஆத்மார்த்தமாக ஏதேனும் செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்ட சிந்தனாவாதிகளையும், சுயநல அரசியலால் விக்கித்துப் போயிருக்கும் பொதுநல வாதிகளையும் இரு கரம் கூப்பி, நீட்டி கழுகு விவாதக்குழு அழைக்கிறது....

எந்த விதமான ஒரு நிர்ப்பந்தமுமின்றி...தீரத் தீர கழுகினை கேள்வி கேளுங்கள்...பதில்களால் நீங்கள் திருப்தியுறும் வரை.., கழுகு என்னும் போர்வாள் யாரோ ஒரு தனிப்பட்ட மனிதருக்கோ ஒரு அமைப்புக்கோ சொந்தமானது அல்ல...! இது ஒவ்வொரு மானுடரின் கையிலும் பள பளக்க வேண்டிய விழிப்புணர்வு வாள்...!

கழுகு யாரின் செயலோ அல்லது யாருக்கோ ஆன செயலோ அல்ல இது நமக்கு, நாமே செய்யும் விழிப்புணர்வு போர். இதில் உங்களையும் இணைத்துக் கொள்வது உங்களின் தார்மீகக் கடமை என்று உணருங்கள்...!

கழுகோடு இணையுங்கள்...! விழிப்புணர்வுற்ற சமுதாயத்தின் அங்கமாயிருங்கள்...!

கழுகு விவாதக் குழுவில் இணைய இங்கே அழுத்தவும்...!

கழுகு பற்றிய மேலதிக விபரங்கட்கு kazhuhu@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு உங்களின் கேள்விகளை அனுப்புங்கள்!


தேவா. S