Pages

Sunday, September 21, 2014

பிரதோஷம்...!


எப்போது இருந்து பிரதோஷம் அன்று விரதம் இருக்கத் தொடங்கினேன் என்பது எனக்கு நினைவில் இல்லை. சிவபக்தன் என்று என்னை சொல்லிக் கொள்வதிலும் சிவபூஜை செய்வதிலும் எனக்கு ஏன் அதிக ஆர்வம் உண்டானது என்று இதுவரையில் எனக்குத் தெரியாது. சிவன் என்று சொன்ன உடனேயே எனக்குள் சர்வ நாடியும் ஒடுங்கிப் போகும். அங்கே இங்கே என்று அலைந்து கொண்டிருக்கும் மனது ஒடுங்கிக் கொள்ளும், நெஞ்சு அடைக்கும் ஏதோ ஒன்று உள்ளுக்குள் மட மடவென்று உடையும். அப்படி உடைந்து எல்லாம் நொறுங்கி விழுந்த பின்பு....

என்னப்பன் அல்லவா... என் தாயுமல்லவா...
பொன்னப்பன் அல்லவா பொன்னம்பலத்தவா...

என்று உள்ளுக்குள் புலம்பத் தொடங்கி விடுவேன். புலம்பல் நின்று போன பின்பு நினைக்க எதுவுமின்றி ஒரு புள்ளியில் மனம் ஸ்தம்பித்து நிற்க பீறிட்டு அழுகை வரும். அழுகையை கட்டுப்படுத்தாமல் கேவிக் கேவி அழுதிருக்கிறேன். அழுகையோடு சேர்ந்து ஏன் இப்டி எல்லாம்? ஏன்? ஏன்? ஏன் என்று ஒரு கேள்வி அடி நெஞ்சை அழுத்திக் கொண்டே இருக்கும். எதற்காக ஏன் என்று கேட்கிறேன் என்றும் எனக்குப் பிடிபடாது, ஆனால் மானசீகமாய் சிவனை ஒரு உருவாய் நினைத்து பாதங்களைப் பிடித்து ஏன்...? ஏன் என்று கதறி இருக்கிறேன். 

ஏன் என்று எதைக் கேட்டேன் என்று தெரியாமலேயே...இருக்கையில் அதற்கு ஒரு பதில் கிடைக்கும். அந்த பதிலில் ஒன்றுமே இருக்காது. இதுதான் பதிலா? என்று கூடக் கேட்கத் தோன்றாமல் வெறுமனே இருந்து விடுவேன். மீண்டும் சிவ வழிபாடு, மீண்டும் உள்ளுக்குள் ஏதோ ஒன்று தடம் புரண்டு உடைதல், மீண்டும் அடிநெஞ்சிலிருந்து அழுகையோடு ஏன்..? ஏன்...? என்றொரு கேள்வி...பின் வெறுமையான பதிலுக்குள் போய் விழுதல்...என்றுதான் தொடர்ந்து கொண்டிருக்கிறது எனக்கும் சிவனுக்குமான தொடர்பு. இதுவெல்லாம் என்ன? ஏன் செய்கிறேன்? என்ற ஆராய்ச்சிக்குள் நான் செல்ல விரும்புவதே இல்லை. மீண்டும் மீண்டும் தீராக் காதல் கொண்டு இதைத்தான் செய்து கொண்டிருக்கிறேன். என் வழிபாடு என்பது இத்தோடு முடிந்து போய்விடுகிறது. தனியாய் தியானம் என்று எதுவும் செய்வதில்லை. ஒரு நாளின் பெரும்பாலான நேரத்தில் புறம் நோக்கி ஓடாத மனது....மூச்சை உள் இழுத்து வெளியே விட்டு, பின் உள் இழுத்து வெளிவிடும் இந்த உடம்பை கவனித்தபடியே இருக்கிறது....

யார் யாரோ வருவார்கள், பேசுவார்கள், சிரிப்பார்கள், வாழ்த்துவார்கள், திட்டுவார்கள், ஏளனம் செய்வார்கள், புகழ்வார்கள், பாராட்டுவார்கள், இகழ்வார்கள், உதவி கேட்பார்கள், உதவி செய்வார்கள், அறிவுரை சொல்வார்கள், அறிவுரை கேட்பார்கள், புதுப் புது செய்திகள் சொல்வார்கள், உற்சாகமூட்டுவார்கள், எரிச்சலூட்டுவார்கள், அன்பாய் இருப்பார்கள், வெறுப்பை உமிழ்வார்கள்.....

எல்லாவற்றையும் வெறுமனே கடந்து செல்லும் போது ஒரு மலையைப் போல என்னை நான் உணர்வேன். வெயிலையும், குளிரையும், மழையையும், காற்றையும் மலை கண்டு கொள்வதில்லை. மலையின் அமைதியும், பொறுமையும், எந்தவித கருத்துக் கோட்பாடுகளுக்குள் சிக்கிக் கொள்ளாத அதன் தனித்தன்மையும் என்னை எப்போதும் கவருவதுண்டு. மலைகள் எல்லாம் இந்த பிரபஞ்சத்தின் ஆழமான உண்மையைத்தான் யுகங்களாய் நமக்குச் சொல்லிக் கொண்டிருக்கின்றன. அவற்றின் இருப்புதான் நமக்கான செய்தி. அவை இருக்கின்றன. அந்த இருத்தலில் இல்லாமை என்பது மறைந்தே இருக்கிறது. 

மலைகளின் ரசவாதம் மிகவும் நுட்பமானது. மலையை சிவனாகவே கருதி வழிபடுவது எனக்குத் தெரிந்து இரண்டு இடத்தில்தான். ஒன்று திருவண்ணாமலை இன்னொன்று கைலாயம். இரண்டு இடத்திலும் மலைதான் சிவம். சிவம்தான் மலை. பேருண்மையும் பெரு ஞானமும் இந்த மலைகளில் ஒளிந்து கிடக்கின்றன. ஜீசஸ் கிரைஸ்ட் சொன்னது போல கேட்டால் கிடைக்கும், தட்டினால் திறக்கும், தேடினால் அடையமுடியும். வாழ்க்கையின் நுட்பமே அதுதான். எதை விரும்பிச் செல்கிறோமோ அது சம்பந்தமான விசயங்கள் நம்மைச் சூழ்ந்து கொள்ளும். டாஸ்மாக் சென்று தினமும் மதுவருந்தினால் மது அருந்தும் ஒரு பெருங்கூட்டம் நமக்கு நண்பர்களாகிவிடும். இப்படித்தான் பக்தி, பணம், தத்துவம், தேடலில் இருப்பவர்களுக்கு அது சம்பந்தமாகவே நண்பர்கள் கிடைக்கிறார்கள். நண்பர்களால் சூழல்கள் உருவாகிறது. சூழல்கள் வாழ்க்கையாக மாறுகிறது. இதைத்தான் சைவ சித்தாந்தம்...

எது மிகையாகிறதோ அது அதுவாகிறது என்று எளிமையாய்க் கூறுகிறது.

விடம் அருந்திய நீலகண்டன் பிரதோஷ தினத்தன்று நந்தி தேவரின் இரு கொம்புகளுக்கு இடையே நின்று அருள் புரிகிறார் என்றும் பிரதோஷ காலமான மாலை 4:30லிருந்து 6 மணி வரை நந்தியிடம் வேண்டிக் கொள்ள எல்லா விதமான சங்கடங்களிலுமிருந்தும் தோஷங்களிலிருந்தும் சிவன் நம்மைக் காத்தருளுகிறார் என்று புராண விளக்கங்கள் கூறுகின்றன என்றாலும்...

வளர்பிறையில் ஒரு நாள், தேய்பிறையில் ஒரு நாள் என்று மாதத்திற்கு இருமுறை காலையிலிருந்து எந்தவித உணவும் அருந்தாமல் வெறுமனே நீரை மட்டும் பருகியோ அல்லது பருகாமலோ உற்று நோக்கும் போது உடலுக்குள் இருக்கும் அசையாத் தன்மையின் பெரு மெளனம் என்னவென்று விளங்க ஆரம்பிக்கிறது. எப்போதும்  சக்தி ஓட்டமாய் இருக்கும் நம் உடல் பிரதோஷ தினத்தில் சலனமின்றி ஒடுங்கி நின்று விசுவரூபமெடுக்கும் சிவத்தை, அந்த சிவத்தின் பேரமைதியிலிருந்துதான் உடலின் சக்தி தோன்றியது என்ற  உண்மையை சக்தி உணர ஆரம்பிக்கிறது....

எப்போதும் இயங்கிக் கொண்டிருக்கும் சக்தி அந்த சக்திக்கு தேவையான உணவு உட்கொள்ளாத தினத்தன்று... தன்னை விட வலிவான சிவத்தின் மெளனத்தை காதலோடு உற்று நோக்க ஆரம்பிக்கிறது. சிவத்தின் பெருங்கருணையும் எப்போதும் சக்தியோடு இரண்டறக் கலந்து நிற்கும் அதன் பேரன்பை வியப்போடு நோக்குகிறது சக்தி. 

நீதானா...? அது நீதானா?  என் கனவுகளின் ஆதாரம் நீதானா? என் கற்பனைகளின் வேர் நீதானா? என் சுவாசத்தின் பிராணன் நீதானா? என் வாழ்க்கை நீதானா? நீ இல்லையென்றிருந்தால் நான் என்னவாகியிருப்பேன்..? என் காதல் என்னவாகியிருக்கும்? என் உணர்வுகள் என்னவாகியிருக்கும்...? நித்தம் நித்தம் நான் கண்டு ரசிக்கும் காட்சிகள் என்னவாகியிருக்கும்...? எப்போதும் நான் கேட்டு ரசிக்கும் இசையும், கவிதைகளும் என்னவாகியிருக்கும்....? முழு நிலவென்று ஒன்று இருந்திருக்குமா? ஒளி தரும் சூரியன் தான் உயிர் கொண்டு தினம் சுட்டிருக்குமா..? சுகமாய் மேனித் தடவிச் செல்ல தென்றலென்ற ஒன்று இப்புவியில் வலம் வந்திருக்குமா? அல்லது புவி என்ற ஒன்றுதான் தனியே இருந்திருக்குமா? 

காதலே....,பெருங்கருணையே... சிவனே..... என்று உடலுக்குள்ளிருக்கும் சக்தி ஒடுங்கி நின்று ஆச்சர்யமாய் எதுவுமற்ற பேரமைதியை ரசிக்க, ரசிக்க.... விரதமிருக்கும் அந்த தினம் அற்புதமான அனுபவமாகிப் போகிறது. இதுதான் பசியா? வயிறு பசியாய் இருக்கும் போது இப்படி எல்லாம் நிகழுமா? உண்டால்தான் வாழ்க்கையா? இல்லையென்றால் துடித்து அடங்கி விடுமா இந்த வாழ்க்கை என்றெல்லாம்  மேலதிக கேள்விகளை விரதநாட்கள் நம்முள் உலுக்கி எழுப்பி விடுகின்றன.

நோன்பிருத்தல் இதனால்தான் எல்லா மண்ணிலும், பலவகைப் பட்ட மனிதர்களுக்கும் கட்டாயமாக்கப்பட்டது. இயந்திரத்தனமாய் நோன்பிருக்காமல் நோன்பு அல்லது விரதத்தின் மேன்மையை விளங்கிச் செய்யும் போது சிவம் என்னும் பேருண்மையின் அதிர்வுகள் எத்தகையது என்பதை சக்தி நிலையிலிருந்தபடியே நம்மால் உணர முடியும். ஒரு வருடத்தில் 24 நாட்கள் பிரதோச தினத்தன்று இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை உண்ணாமல் நோன்பிருக்கும்போது.....

சிவம் மேலோங்கி நிற்க....சக்தி சலனமில்லாமல் சிவத்தை வியந்து பார்க்கிறது. இந்த வியத்தலில் சக உயிர்களின் பசியையும், பசித்திருக்கும் உயிர்களுக்கு உணவிடுதலின் அவசியமும் என்னவென்றும் தெளிவாய் ஒரு புரிந்துணர்வுக்குள் வரவும் செய்கிறது. பிரதோஷம் என்பது புராணங்கள் கூறும் ஒரு கதைக்கான தொடர் நிகழ்வாக இருந்து விட்டுப் போகட்டும் அது நம்பிக்கைகளோடு தொடர்புடையது... என்பதால் அதை விவாதத்திற்கு அப்பாற் வைத்து விடுவோம்....

ஆனால்....


உண்ணாமல் பசியடக்கி, பசியை உற்று நோக்கி புலன்கள் புறத்தில் பாய சக்தி இல்லாமல் போக உள் நோக்கி உள்ளுக்குள்ளிருக்கும் பேரமைதியை ஒரு சீரான கால இடைவெளியில் செய்ய இது போன்ற தினங்கள் சூட்சுமமாய் நமக்கு உதவத்தான் செய்கின்றன. பிரதோஷம் என்பது ஒரு குறியீடு. ஒரு குறிப்பிட்ட நாளில் இந்த நோன்பிருக்க வகுக்கப்பட்ட ஒரு பயிற்சி முறை. இதை தெளிவாய் உணரும் பட்சத்தில் 

மனசெல்லாம் மார்கழி தான்
நம் கனவெல்லாம் கார்த்திகை தான்....!


சம்போ...!!!
தேவா சுப்பையா...


Tuesday, September 16, 2014

ஆஸ்கார் இசையும்.... தமிழ்நாட்டுப் பாமர ரசிகனும்..!


ரோஜா படம் வந்தப்பவேன்னு நான் எழுத ஆரம்பிக்கும் போதே 'ஜா'வுக்கு பதிலா 'சா' போட்டு ரோசான்னு எழுதலையே இது தப்பு இல்லையான்னு எனக்குள்ள ஒரு கவுலி கத்துது பாருங்க அந்த கவுலிக்குப் பேருதான் தமிழ்ப்பற்று. தூய தமிழ்ல தூபம் போடுறேன்னு சொல்லிக்கிட்டு வீட்ல பிள்ளைங்க கிட்ட அமெரிக்கன் ஸ்டைல்ல பேசி ட்ரெயினிங்க் கொடுக்குற அப்பாடக்கர் எல்லாம் இல்லைங்க... நான். அதுக்காக கொஞ்சம் கூட அப்டி இப்டி பாக்காம ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஆபீசரா (அச்சச்சோ... மறுபடி ஆங்கிலம்) இருக்கறதுலயும் எனக்கு உடன்பாடு இல்லை.

இந்த ரெண்டாவது பாரா ஆரம்பிக்கும் போதே என் பிரச்சினை என்னன்னு கேட்டீங்கன்னான்னு சிம்பு மாதிரி ஒரு சொம்பு டைப்ல ஆரம்பிக்கலாம்னு நினைச்சு அப்புறம் அதை கைவிட்டத உங்ககிட்ட எல்லாம் நான் சொல்லியே ஆகணும். சொல்லியே ஆகணும்னு சொல்லும் போது சொல்லுக்கு 'சொ' போடாம ஜொ போட்டா எப்டி இருக்கும்? ரொம்ப கேவலமா இருக்கும்ல...? இப்போ என் பிரச்சினை என்னன்னானு சரியா ஆரம்பிச்சு நான் ஸொல்ல வந்ததை ஸொல்லிடுறேன். ரகுமான் சார பத்திப் பேச வந்துட்டு நீ ஏண்டா தமிழ்ல எழுதறதப் பத்தி பேசிட்டு இருக்கேன்னு கேக்குறீங்களே... ? நீங்க மட்டும் ஏன் எழுத வந்தவன பாத்து பேச வந்தேன்னு கேள்வி கேக்குறீங்க...?  

ரோஜா படம் வந்தப்பவேன்னு மறுபடியும் இந்தக் கட்டுரையோட முதல் பாராவுக்கு உங்களை எல்லாம் ஈவு இரக்கம் இல்லாம கூட்டிட்டு போற என்னை கொஞ்சம் சகிச்சுக்கோங்க... மக்கள்ஸ்! ரோஜா படம் வந்தப்பவே எனக்கு... அடுத்தடுத்து ரகுமான் சார் எப்போ மியூசிக் போடுவார், அவர் மியூசிக் போட்ட படம் எப்போ ரிலீஸ் ஆகும்னு ஒரே ஒரே ட்ரீம்ஸா இருக்கும். காதல் ரோஜாவே பாட்டை பார்ட் பார்ட்டா கேட்டு ஹம்மிங்கோட காலர தூக்கி விட்டுக்கிட்டு உள்ளுக்குள்ள இருந்த காதலுக்கு உரம் போட்டு வளர்த்த கதைய இன்னிக்கு ஏதாச்சும் ஒரு நெடுந்தொடர் எடுக்குற டீம் கிட்ட கொடுத்தோம்னா சன் டிவில அட்டகாசமா 1200 நாள் ஓடுற ஒரு நாடகம் ரெடி. ரகுமானோட சவுண்ட் எஃபகட்ஸ்யும், மிக்ஸிங்கும் மேஜிக் பண்ணி நம்மள எல்லாம் தூக்கிக்கிட்டு ஏதோ ஒரு மாயஜால உலகத்துக்குள்ள கொண்டு போய் விட்டுடும். அதுக்கப்புறம் அது சிக்குபுக்கு ரயிலே ஆக இருக்கட்டும் இல்ல உசிலம்பட்டிப் பெண் குட்டியாகட்டும் மனசு ச்ச்சும்மா தில்லானா ஆடும். 

புதுப் புது பாடகர்கள அவர் அறிமுகப்படுத்தி புதிய குரல்களை தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு கொண்டு வந்தது எல்லாம் சரிதான்னாலும் ரகுமானோட காலத்துலதான் தமிழ இங்கிலீஸ்லயோ இல்லை வேற மொழியிலயோ எழுதி வச்சுக்கிட்டு பாடகர்கள் பாடுற ஒரு ட்ரெண்ட்... செம்மையா டெவலப்பானுச்சு. பாடகன்னா உச்சரிப்பு தெளிவா இருக்கணும் அதுவும் தமிழ் மாதிரி செம்மையான ஒரு மொழியை தாய்மொழியா கொண்ட மக்களுக்கு ரகுமான் உதித் நாரயணன் மாதிரி ஆளுக வச்சு செஞ்சுப் போட்ட உப்புமா என்னவோ ருசியாத்தான் இருந்துச்சு ஆனால்.... அவர் ' கொன்டு மல்லி ரெண்டு ரூபாய் உன் கொந்தால் ஏறி உதிரம் பூ கோடி ரூப்பாய்னு' பாடினத கேட்டுட்டு அப்டியே அதை உல்டா அடிச்சு பேச ஆரம்பிச்சுது பாத்தீங்களா ஒரு தலைமுறை அங்கதான் கண்ணுக்குத் தெரியாத ஒரு கிருமி மெல்ல நம்ம வழமைக்குள்ள ஊடுருவி பேச்சுத் தமிழுக்கு கொஞ்சம் பெண்ட் எடுக்க ஆரம்பிச்சுது...

ரகுமான் மட்டுமே இதைச் செஞ்சார்னு சொல்ல வரலை ஆனா அவர் நிறைய செஞ்சார்.  போறாளே பொன்னுத்தாயின்னு கணீர் குரல்களை பாடவச்சு தேசியவிருதுகள எல்லாம் வாங்க வச்ச அதே ரகுமான் புதுப் புதுக் குரல்களை கொண்டு வர்றேன் பேர்வழின்னு மொழியை சரியா உச்சரிக்காத பாடகர்களை தன் இசைக்கு ஏத்த மாதிரி வளைச்சுக்கவும் செய்தார்ன்றதுதான் வருத்தமான உண்மை. தமிழ் மொழியை சரியா உச்சரிக்காத வசனங்கள் நிரம்பிய தமிழ்ப்படத்தை  தமிழ்நாட்ல ஓட்ட முடியுமா? ஆங்கில கலப்புங்கறது ஒரு மாதிரியான வலின்னு சொன்னா தமிழை வேறு ஒரு பாவத்தில் பேசுவது இன்னொரு மாதிரியான கொடுமை. 


ஆரம்ப கால ரகுமான் தமிழ்நாட்டிற்குள் இசையமைத்துக் கொண்டிருந்தார், இப்போது உலக இசையமைப்பாளர் என்பதெல்லாம் சரிதான். அப்டி உலக மக்களுக்காக உலகத்தரத்தோட அவர் ஆல்பங்கள வெளியிட்டு அதை வியாபாரமாக்கிக் கொள்ளட்டும் ஆனா தமிழ் நாட்ல தமிழர் மண்ணுல தமிழர்களுக்காக வெளியிடப்படுற திரைப்படங்கள்ள உலகத் தரம்ன்ற பேர்ல அன்னியமான இசையை  அறிமுகம் செய்றது என்னைய மாதிரி பாமரத் தமிழர்களுக்கு செய்ற துரோகம் இல்லையா ரகுமான் சார்...? மானூத்து மந்தையில மாங்குட்டி பெத்தமயிலேன்னு நீங்க போட்ட ட்யூன கேட்டுக்கிட்டும், பாடிக்கிட்டும் இங்க சைக்கிள்லயும், மாட்டு வண்டியிலயும் பஸ்லயும் போன பயலுக எத்தனையோ பேரு...! எங்க ஊர்ல நாங்க பாக்கற படத்துக்கு கொஞ்சமாச்சும் தமிழப்பயலுவ மனசுல நிக்கிற மாதிரி இசைமைச்சா கொறஞ்சா போய்டுவீங்க...? 

ஆஸ்கார் பரிசு வாங்கிக்கிட்டு சென்னை வானூர்தி நிலையத்துல இறங்கி இந்த ஊரு சாலையிலதான சார் நீங்க உங்க வெளிநாட்டு கார ஓட்டிக்கிட்டுப் போனீங்க...? கோடம்பாக்கத்துல இருக்க சுப்பாராய நகர்லதான சார் அந்த ஆஸ்கார் அவார்ட வச்சி இருக்கீங்க..? ஆரம்ப காலத்துல வந்த அத்தனை ரகுமான் பாட்டுலயும் புதுமையும் தெளிவும் இருந்துச்சு. இப்போ சமீபமா எந்திரனுக்கு கொஞ்சம் முன்னாடி, ஆரம்பிச்ச அவரோட உலகத்தரம் 'கடல்' வழியா பயணிச்சு இப்போ.....ஐ படத்துல விஸ்வரூபம் எடுத்து தாண்டவம் ஆடிட்டு இருக்கு.

எங்கூருக்கு போகணும்னா சிவகங்கையில இருந்து காளையார்கோயில் போற பஸ்ல ஏறி கொல்லங்குடின்னு சொல்லிட்டு ஒரு சின்ன டவுன்ல இறங்கணும் அதத் தாண்டி அந்த கருவ முள்ளுக்காட்டுக்குள்ள ஒரு நாலஞ்சு மைலு கம்மாக்கரை ஓரமாவே நடந்து போனம்னா இன்னமும் பேருந்து வசதி இல்லாத கடை கண்ணி இல்லாத அந்த கிராமத்தைப் பாக்க முடியும். காலையில இருந்து அந்த வானம் பாத்த பூமியில வேல செஞ்சுட்டு, வத்திப் போயி கிடக்குற கம்மாய ஏக்கமா வேடிக்கை பாத்துக்கிட்டே.. ரெண்டு தூத்த எப்பப் போடும்னு வேடிக்கைப் பாத்துக்கிட்டே நான் சொன்னேனே அந்த கொல்லங்குடிக்கு சாய்ங்காலமா டீ காப்பி குடிச்சுப்புட்டு பிஞ்சு நொஞ்சு கிடக்குற தினத்தந்தி பேப்பர வாசிக்க வர்ற எங்கூரு ஆளுக....

ஏப்பு சாயக்கடக்காரரே ஏதாச்சும் நல்ல பாட்டா சவுண்டு வச்சுப் போடுங்கன்னு சொன்னா....

அதுக்கு அந்த சாயக்கடைக்காரரு ....கசடதபற... ஞமண நமனன்னு ஆரம்பிக்கிற 'ஐ' படத்துப் பாட்டப் போட்டு அதுக்கப்புறம் வலிப்பு வந்த மாதிரி கத்துற இடத்துல சவுண்ட்ட கூட வச்சா...என்ன ஆகும்னு யோசிச்சுப் பாருங்க....! யெப்பே ரேடியாப் பொட்டியா  அமத்துறியா இல்லை தூக்கிப் பொட்டு உடைக்கவான்னு தானா கேப்பாங்க..? அப்டி பாட்டும் புரியாம இசையும் புடிக்காம சாந்தமான புரியற மாதிரி பாடல்கள கேக்கணும்னு ஆசைப்படுறது எப்டி தப்பாகும்? இந்த மண்ணுல பொறந்த மனுசன் இந்த மண்ணுக்குரிய பாட்ட இந்த மண்ணுலதானே கேக்க ஆசைப்படுவான்...? உங்க கார்ப்பரேட் இசையப்பத்தி அவனுக்கு என்ன கவலை இருக்கு...?

தமிழ் பாரம்பரியத்தை எல்லாம் பின்பற்றி இசை அமைக்கக் கூட தேவையில்லை..., எஸ்பிபி, ஜேசுதாஸ் போன்ற ஜாம்பவான்களை ஓரம் கட்டிட்டுக் கூட போங்க, லபோதிபோன்னு என்ன ப்யூசனா வேணும்னாலும் அது இருந்துட்டுப் போகுது ஆனா....

குறைஞ்ச பட்சம் பாடலோட மொழி புரியற அளவுலயாவது இசை இருந்தா பாமர ரசிகர்களாலயும் அது ரசிக்கப்படும் அவ்வளவுதான். இப்டி எல்லாம் எழுதினதால ரகுமான் சாரோட இசைக்கு நான் எதிரின்னு எனக்கு முத்திரைக் குத்திடாதீங்க ஏன்னா...

ரோஜா படம் வந்தப்பவேன்னு நான் எழுத ஆரம்பிக்கும் போதே 'ஜா'வுக்கு பதிலா 'சா' போட்டு ரோசான்னு எழுதலையே இது தப்பு இல்லையான்னு எனக்குள்ள.....


.....மறுபடியும் முதல்ல இருந்தான்னு தானே யோசிக்கிறீங்க...இதோட டீல் முடிஞ்சுடுச்சு நீங்க உங்க பயணத்தை தொடருங்க மக்கள்ஸ்ஸ்ஸ்!!!!
தேவா சுப்பையா...
Thursday, September 11, 2014

பாரதியின் கண்ணம்மா...


கண்ணம்மா போல ஒரு பெண் கிடைப்பது மிகக் கடினம்தான். அதுவும் பாரதி போன்ற ஒருவன் கண்ணம்மா என்ற பெண் நிஜத்தில் உடன் இல்லாமல் எவ்வளவு துன்பப் பட்டிருப்பான் என்பதை எண்ணிப் பார்க்கும் போதே பெரும் வலியாய் இருக்கிறது. கண்ணம்மாவைப் பற்றிய கற்பனையோடுதான் பாரதி செல்லம்மாவின் பிடித்திருந்திருக்க வேண்டும். பாவம் செல்லம்மா நொடிக்கொரு முறை திசை திரும்பும் ஏகாந்தக் கனவுகள் கொண்டப் பாரதியோடு அவள் எப்படித்தான் சகித்துக் கொண்டு வாழ்ந்தாளோ...? பாரதி ஒரு முரட்டு மதம் கொண்ட யானை.  திபுதிபுவென்று அவனைச் சூழ்ந்து கொள்ளும் உணர்வுக் குவியல்களுக்கு நடுவே அவன் மூழ்கித் திளைத்துக் கொண்டிருக்கையில் வீட்டில் அரிசி இருக்கிறதா.. இல்லையா? மிளகாய் எப்போது தீர்ந்து போனது...? வீட்டு வாடகை கொடுத்தோமா, இல்லையா என்பதெல்லாம் அற்ப விசயங்களாய்த்தானே தோன்றும்...?

செல்லம்மாவால் பாரதியை எதிர்கொள்ளவே முடியவில்லை.   பாரதி போன்ற மனிதன் இப்போது இருந்திருந்தால் சராசரி பெண்ணொருத்தி குடும்பம் நடத்தி குழந்தை பெற்றுக் கொண்டு சகித்துக் கிடந்திருப்பாள் என்றா நினைக்கிறீர்கள்? பாரதி போன்ற ஒருவனை மணம் முடித்த மூன்றாம் நாளே விவாகாரத்து செய்து விட்டு வேறு வேலை ஏதேனும் பார்க்கச் சென்றிருப்பாள் அவள், காரணம் இந்த உலகம் செல்லம்மாக்களால் நிறைந்தது. திருமணம், வாழ்க்கை, பொருளீட்டல், பிள்ளைகள், பின் அவர்களுக்கான சொத்து சேர்த்தல், சமூகத்தால் கட்டமைக்கப்பட்ட மானம், மரியாதை, எதிர் வீடு, பக்கத்து வீடு, சொந்த பந்தங்கள், விசேஷங்கள் இதற்குள் வாழ்ந்து தொலைக்க வேண்டிய நிர்ப்பந்தம் செல்லம்மாக்களுக்கு இருப்பதில் ஆச்சர்யமில்லைதான் என்றாலும் துரதிர்ஷ்டவசமாக பாரதிகள் அதற்கு சரிப்பட்டு வரமாட்டார்கள்.

மாதமாதம் சம்பளம் வாங்கித் திட்டம் போட்டு செலவு செய்து, சுற்றி இயங்கும் உலகத்தில் எவன் செத்தாலும் பிழைத்தாலும் ஒரு கவலையுமின்றி பக்கத்து வீட்டில் இழவு விழுந்திருந்தாலும் தன் உறக்கத்தைப் பற்றியும் தன் உணவைப் பற்றியும்  மட்டுமே கவலைப்படும் செல்லப்பன்கள்தான் செல்லம்மாக்களுக்கு சரிப்பட்டு வருவார்கள். பாரதியால் செல்லம்மா மிகவும் சிரமப்பட்டது உண்மைதான். பாரதியை தனக்குப் பிடித்த செல்லப்பனாக மாற்ற முயன்று முயன்று அதில் தோல்வியுற்று அதனால் பாரதியைப் பிரிந்து பலநாட்கள் அவள் வாழ வேண்டியதாயும் இருந்தது. அவளைப் பொறுத்த வரைக்கும் அவளது வாழ்க்கை, பிள்ளைகள், குடும்பம் இது பற்றி கவலைப்படாத ஒரு பொறுப்பற்ற கணவன் தான் பாரதி. இந்த சமூகத்தின் முன்னால் பித்தம் தலைக்கேறிய பிழைக்கத் தெரியாத ஒரு மனிதன் பாரதி...அவ்வளவுதான்.

பாவம் பாரதி... அவன் வாழ்ந்து முடிக்கும் வரை அவனை சரியாய்ப் புரிந்து கொண்டு சமூக முன்னேற்றத்திற்கு மட்டும் பயன்பட்டுக் கொண்டிருந்த அந்த காட்டாற்றில் சிறு வாய்க்கால் வெட்டி லெளகீகத்திற்கும் பயன்படுத்திக் கொள்ளும் கண்ணமாவை அவன் கண்டிருக்கவே இல்லை. கண்ணம்மாவை பாரதி தன் கவிதைகளில் மட்டுமே தேடியடைந்தான். அவனுடைய முரட்டுக்காதலை அவளால் மட்டும்தான் எதிர்கொள்ள முடியும். அவள் மட்டும் நிஜத்தில் இருந்திருந்தால் அவனின் பித்து நிலையில் நிரம்பிக்கிடந்த பேரழகினை ரசித்து, அணைத்து ஆசுவாசப்படுத்தி சமகாலத்தில் நிறுத்தி வைத்து பெரும்பயனை இன்னும் அதிகமாக அனைவருக்கு பெற்றுத் தந்திருப்பாள். பாரதியின் கவிதைகள் என்று இன்று நாம் படித்துக் கொண்டிருக்கும் எல்லாமே அவன் பேரறிவுக் கடலின் சிறுதுளிகள்தாம். அவன் புரட்சிக் கவிதைகளையும் பெண்ணடிமைப் பாடல்களையும், நாட்டு விடுதலைப் பாடல்களையும் படைத்துக் கொண்டிருந்த போது....அவன் வீட்டு அடுப்பில் பூனைகள் உறங்கிக் கொண்டிருந்தன.

பசித்த வயிறு பற்றிய கவலைகள் கிடையாது பாரதிக்கு, அவன் கவலை எல்லாம் பசித்திருந்த அவன் கனவுகளைப் பற்றியதுதான். அடுத்த வேளை சோற்றுக்கு அவன் வழியில்லாமல் இருந்த போதுதான்....''வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும் இங்கு வாழும் மனிதர்க்கு எல்லாம்..." என்று எழுதினான். 

நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்,
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்,
திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்...

என்று தனக்குள் இருந்த கண்ணம்மாவின் சாயலைத்தான் அவன் கவிதைகள் என்று படைத்து வைத்தான். பாரதி தன்னுள் படைத்துக் கொண்ட கண்ணம்மாவும் அவளின் மாசற்ற காதலும் இல்லாது போயிருந்திருந்தால் இன்னும் அவன் வாழ்க்கை சிரமப்பட்டிருக்கக் கூடும்.  புறத்தில் எங்கும் காண இயலாத லெளகீக கபடங்கள் அற்ற அவளை நல்ல உயிரே கண்ணமா என்று அதனால்தான் விளித்தான். அவள் யாரோ ஒரு கணவனுக்கு சராசரி மனைவியாக விரும்பாத புத்தம் புதுக் குணங்களும், அறிவும் நிரம்பிய புதுமைப் பெண். பாரதி செல்லம்மாவோடு வேண்டுமானால் குடும்பம் நடத்தி இருக்கலாம் ஆனால் கண்ணம்மாவோடு மட்டும்தான் வாழ்ந்தான். பாரதியின் காதல் எந்த வித எதிர்பார்ப்புகளுமற்றது, அதை நிஜத்தில் ஒரு சராசரிப்பெண்ணால் எதிர் கொள்ளவே முடியாது. நிஜத்தில் யாரோ ஒரு பெண் பாரதியின் காதலை எதிர்கொள்ளும் வாய்ப்பு பெற்றிருந்தாளேயானாள்அவள் மூர்ச்சையாகிப் போயிருப்பாள்.....

ஆனால்.....ஒரு கண்ணம்மா அதைச் சரியாக எதிர்கொள்வாள். அவளுக்குத் தெரியும் பாரதியின் காதல் எத்தகையது என்று...,பாரதி கொடுக்க கொடுக்க வாங்கி நிரப்பிக்கொள்ளத் தெரிந்த அற்புதப் பெண் அவள். பாரதியால் கண்ணம்மாவிற்கு லெளகீகச் சங்கடங்கள் வந்திருக்கவே வந்திருக்காது. கண்ணம்மாவால் பாரதியின் படைப்புலகம் இன்னமும் சிறப்பானதாய் வீரியமிக்கதாய் இருந்திருக்கும். பாரதி தன்னுடைய புறம், அகம் இரண்டிலும் சக்கரவர்த்தியாய் வாழ்ந்திருந்திருப்பான். பாரதியும் கண்ணம்மாவும் கணவன் மனைவியர் அல்லர், அவர்கள் காதலர்கள். கணவன் மனைவி என்ற நியதியே காதலோடு வாழ்வதற்காக உண்டாக்கப்பட்டதுதான் என்னும் போது எப்போதும் காதலோடு இருப்பவர்கள் கணவன் மனைவி என்று தங்களை அறிவித்துக் கொள்ளும் அவசியமற்றுப் போகிறார்கள். 

கண்ணம்மாவின் சுதந்திரமான, சிந்தனையும் பேச்சும், உணர்வுமே பாரதியின் காதல். பாரதியின் கிளர்ந்தெழுந்த ஏகாந்தச் சிந்தனைதான் கண்ணம்மாவின் காதல். இரண்டு உயிர்கள், எதிர் எதிர் துருவங்களை வெவ்வேறு விருப்பங்களை ரசித்து ஏற்றுக் கொள்ளும் இடம் வெகு வசீகரமானது. அந்த வசீகரத்தில் சிக்குண்டு ஆசை தீர கண்ணம்மாவைக் காதலித்து மோனத்தில் மூழ்கிக் கிடந்தான் பாரதி. அவனால் நேரத்திற்கு உண்ண முடியவில்லை, கண்களைத் திறந்து சமகாலத்திற்குள் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியவில்லை, அப்படி இந்த லெளகீக உலகத்திற்குள் வர அவனுக்குப் பிடிக்கவும் இல்லை. வாழ்க்கையின் சமன்பாட்டுக்குள் வர முடியாமல் அவன் திணறிய போதெல்லாம்....கண்கள் மூடி....

சுட்டும் விழிச்சுடர் தான் - கண்ணம்மா !
    சூரிய சந்திர ரோ ?
வட்டக் கரிய விழி, கண்ணம்மா !
    வானக் கருமை கொல்லோ ?
பட்டுக் கருநீலப் - புடவை
    பதித்த நல் வயிரம்
நட்ட நடு நிசியில் - தெரியும்
    நட்சத்திரங்களடீ !


என்று கண்ணம்மாவிடம் பேசிக் கொண்டிருந்தான். பெரும் நீட்சியாய் புகழோடு அறிவோடு செழிப்பாய் சென்றிருக்க வேண்டிய பாரதியின் வாழ்க்கை எதார்த்தத்தில் கண்ணம்மாவின் துணையில்லாமல் போனதால் 39 வயதில் மரித்துப் போனது.

எத்தனையோ கனவுகளை தன்னுள் விதைத்து  அதிலிருந்து விளைந்த ஓராயிரம் உணர்வுகளைப் பிழிந்து தமிழ்ச் சமூகத்தின் விசால பேரறிவுக்கு கொடுத்துச் சென்றிருக்கிறான் பாரதி. பாரதி வாழ்ந்த வாழ்க்கையினையும் யாராலும் இனி வாழ முடியாது அவன் புனைந்த கவிதைகளைப் போலவும் ஒருவனாலும் இனி புனைய முடியாது. பாரதியின் மரணம் இந்த லெளகீகச் சங்கடங்களிலிருந்து அவனுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய விடுபடல். 

உடலால் நம்மை விட்டு நீங்கி இருந்தாலும் தன் ஏகாந்த கனவுலகில்...

கூடிப் பிரியாமலே ஓரி-ராவெலாம்
கொஞ்சிக் குலவி யங்கே
ஆடி விளை யாடியே,-உன்றன் மேனியை
ஆயிரங் கோடி முறை
நாடித் தழுவி மனக்-குறை தீர்ந்து நான்
நல்ல களி யெய்தியே
பாடிப் பரவசமாய்-நிற்கவே தவம்
பண்ணிய தில்லை யடி....

என்று கவிகள் பல பாடி தன் நித்யக் காதலியான கண்ணம்மாவுடன் என்றென்றும் ஜீவித்துக் கொண்டுதானிருப்பான் அந்த முண்டாசுக் கவி.தேவா சுப்பையா...Monday, September 8, 2014

கடவுளை....எங்கே தேடுவேன்...?!


அறிதல் என்பது அறிவு. அத்தோடு நின்று போயிருக்க வேண்டிய வாழ்க்கையில் எத்தனை விவரித்துப் பார்த்து அபத்தங்களுக்குள் போய் விழுந்திருக்கிறேன் என்று யோசிக்கிற போது எனக்கு சிரிப்புதான் வருகிறது.. சாக்கடைக்குள் போய் விழுந்து புரண்டு  கொண்டே இது சரி அது தவறு என்று பேசிக் கொண்டிருந்க கடந்த காலப் பொழுதுகளை இப்போது நினைவுகூரும் போது கொஞ்சம் கூச்சமாய்த்தான் இருக்கிறது. கடவுள் தேடல் என்ற ஒன்று எனக்குள் ஆரம்பித்த போது நிச்சயமாய் என்னைப் போலவும் உங்களைப் போலவும் சித்தரிக்கப்பட்டிருந்த கடவுளர்களில் யாரையேனும் ஒருவரை எப்படியாவது கண்டுவிடலாம் என்றுதான் நான் நம்பினேன்.

கோயில்களுக்குச் செல்வதும் உற்று, உற்று கருவறைக்குள் இருக்கும் சிலைகளைப் பார்ப்பதும் கண்களை மூடிக் கொண்டு பிள்ளையாரப்பா காப்பாத்து, முருகா காப்பாத்து, சிவனே காப்பாத்து, காளியாத்தா காப்பாத்து என்று சும்மா இருக்கும் போதே காப்பாத்து காப்பாத்து என்று வேண்டிக் கொண்டிருக்கிறேன். பத்து வயசு பையனுக்கு ஏன் காப்பாத்துப்பான்னு கடவுள வேண்டிக்கன்னு சொல்லிக் கொடுக்குறோம்ன்ற யோசனை இல்லாம, என்னை சுத்தி இருந்த சமூகம் கடவுள் முன்னால நின்னு தன்னை காப்பாத்தச் சொல்லி கதறிக்கிட்டு இருந்ததையே பாத்து பாத்து வளர்ந்திருக்கிறேன் நான். எதிர்த்த வீட்டு எபிநேசர் சார் கூட சர்ச்சுக்கு போனப்பவும் இதே கதைதான் அங்க சிலுவையில அறையப்பட்ட ஜீசஸ் முன்னால இதே காப்பாற்றும் ஆண்டவரே.. அப்டீன்ற கோஷம்...

யார் கொல்ல வந்தா இவுங்கள எல்லாம்...? சும்மா இருக்கும் போதே ஏன் இப்டி காப்பாத்த சொல்லி வேண்டிகிறாங்கன்றதுதான் அப்போ எனக்குள்ள இருந்த ஒரே மெய்ஞ்ஞானக் கேள்வி...!

இஸ்லாம் பத்தி அதிகம் தெரிஞ்சுக்காம வளர்ந்த நான் ஒரு நாள் எதையோ பாத்துப் பயந்துட்டேன்னு சொல்லிட்டு பள்ளிவாசல்ல போய் தண்ணி தெளிச்சு ஓதினா சரியாகும்னு யாரோ சொன்னதால எங்க ஊர்ல இருந்த பள்ளிவாசலுக்குப் பக்கத்து தெரு உசேன் மாமா கூட போக வேண்டியதாப் போச்சு. பள்ளி வாசல்ல கை, கால், முகமெல்லாம் சுத்தம் பண்ணிக்கிட்டு தொழுகைக்குப் போறதுக்காக உள்ளயே ஒரு பெரிய நீர்தொட்டி மாதிரி ஆழம் இல்லாம கட்டி வச்சிருக்கத நான் அதிசயமா பார்த்தேன். ஒரு குட்டிக் குளம் மாதிரி இருந்த அந்த நீர்த்தொட்டி ஓரமா என்னை உட்கார வச்சி ஏதேதோ துவாக்கள அரபியில சொல்லி ஓதி என் முகத்துல அந்த தண்ணிய தெளிச்சி மூணு தடவை ஊதுன அந்த பாவாவ அஜ்ரத்னு அங்க இருந்த எல்லோரும் கூப்ட்டாங்க.

ஏசுவோட கோயில்ல ஏசு இருந்தார், நாம போற கோயில்ல எல்லாம் ஏதோ ஒரு சாமி இருந்துச்சு இந்தக் கோயில்ல அல்லா சாமி எப்டி இருக்கும்னு பாத்துடணும்னு எனக்கு ஆசை ஆசையா இருந்துச்சு. அந்த அஜ்ரத் என் கன்னத்தை தடவி பயப்படக்கூடாது தம்பி... அல்லா இருக்கான் எல்லாத்தையும் பாத்துக்குவான்னு சொல்லி என் கையை இறுக்கமா பிடிச்ச பிடிதான் கடவுள்ன்றதை எல்லாம் நான் ரொம்ப லேட்டாதான் புரிஞ்சுக்கிட்டேன். ஓதி முடிச்சதும் நான் உசேன் மாமா கைய பிடிச்சுக்கிட்டு அஜ்ரத் தூக்குச் சட்டியில ஓதிக் கொடுத்த தண்ணிய எடுத்துக்கிட்டு பள்ளி வாசல விட்டு வெளில வர்றதுக்கு முன்னாடி.....

அல்லா சாமிய எப்டியாச்சும் பாக்கணும்னு எனக்கு ஆசையா இருந்துச்சு. உசேன் மாமா.... உசேன் மாமா... எனக்கு அல்லா சாமிய பாக்கணும்னு அவர் கையப் பிடிச்சு இழுத்துக் கேட்டப்ப... சிரிச்சுக்கிட்டே என்னை கூட்டிக்கிட்டுப் போய் எதுவுமே இல்லாம வெறுமையா இருந்த ஒரு சுவத்தோட வளைவ காட்டி இந்த பக்கம்தான் எல்லோரும் அல்லா சாமிய கும்பிட்டு வேண்டிக்குவாங்கன்னு சொன்னாரு. ஏன் மாமா அல்லா சாமிக்கு உருவம் இல்லையான்னு எந்த வித அறிவும் இல்லாத சின்ன என் பிஞ்சு மனசுல ஞானக் கேள்விய விதைச்ச இஸ்லாத்தையும் அந்த வழிமுறைய உண்டாக்கி மனுசங்களுக்கு கொடுத்த ரசூலல்லாவையும்(ஸல்) இந்தப் பிறவி முழுசும் என்னால மறக்க முடியாது. எப்டிதான் இருந்தாலும் கடவுளுக்கு உருவம் இல்லேன்னு சொன்ன கருத்தை என் மனசு ஏத்துக்கல அப்போ...., அல்லா சாமிக்கு ஒரு உருவம் இருந்தா நல்லாத்தானே இருக்கும்னு சொல்லி ஏதேதோ உருவத்தை அல்லா சாமிக்கு கொடுத்து நான் மனசுக்குள்ள ரசிச்சுக் கூட பாத்து இருக்கேன். 10 வயசுல எனக்கு கடவுள உருவமா நினைச்சுக்கிறது ரொம்ப வசதியா இருந்துச்சு.


அன்னிக்கு பள்ளி வாசல்ல முகத்துல தெளிச்ச தண்ணியோட பயம் ஓடி ஒளிஞ்சு போய் நான் தூக்கத்துல அலறி எந்திரிக்கிறத விட்டுட்டேன். அல்லா சாமிதான் அதுக்கு காரணம்னு ரொம்ப நாள் என்னை நினைக்க வச்ச அந்த பாவா மாதிரி எத்தனையோ பேர் அறியாம, புரியாம இருக்கவங்களுக்கு நம்பிக்கையா இருக்கறது எவ்ளோ நல்ல விசயம்ணு தோணிச்சு எனக்கு.
+2 படிக்கும் போதுதான் எனக்குள்ள விசய ஞானம் கொஞ்சம் கொஞ்சமா உள்ள இறங்க ஆரம்பிச்சு இருந்துச்சு. தேடித் தேடி புத்தகங்கள வாசிச்ச காலம் அது. கடவுள் தரிசனம் கிடைக்காமலேயே போயிடுமோன்னு பயந்துகிட்டு நான் செஞ்ச கள்ள தியானங்கள் கணக்கிலடங்காதவை. எதைப்பத்தியுமே யோசிக்காம ஏதாவது ஒரு பொருளை நினைவுல வச்சுக்கிட்டு உக்காருங்க, கூடுமான வரைக்கும் ஏதாச்சும் உங்களுக்குப் பிடிச்ச கடவுள மனசுல நினைச்சுக்கோங்கன்னு எனக்குச் சொல்லிக் கொடுத்த குருதான் நான் கண்ண மூடுன உடனேயே வந்தாரே ஒழிய நான்  மனசுக்குள்ள கொண்டுவர முயற்சி பண்ணின முருகன் வரவே இல்லை. ஏதோ ஒரு அதிய ஒளி வட்டம் தலைக்கு மேல வந்த மாதிரி நானே முடிவு பண்ணிக்கிட்டு வராத பத்மாசனத்தை வலுக்கட்டாயமா போட்டு உக்காந்துகிட்டு ஓம்....நமசிவாயன்னு உள்ளுக்குள்ள ஒங்கி ஓங்கி கத்தி மனச ஒருநிலை படுத்த எடுத்த முயற்சி எல்லாம் படுதோல்வியாதான் போச்சு.

வள்ளலாருக்கு மட்டும் தரிசனம் கொடுத்தீங்கள்ள நீங்க...? அருணகிரி நாதருக்கும் இன்னும் எத்தனையோ யோகிகளுக்கும், சித்தர்களுக்கும் காட்சி கொடுத்த நீங்க ஏன் எனக்கு கொடுக்க மாட்டேன்றீங்கன்னு ஒரு நாள் விடியக்காலையில எந்திரிச்சு சாமிப்படங்கள் முன்னாடி நின்னுக்கிட்டு அழுகை மாட்டாம நான் சண்டை கூட போட்டு இருக்கேன். இருந்தா நீ வா....ன்னு சொல்லி சங்கல்பம் எடுத்து நான் கண் மூடி உக்காந்தப்ப எல்லாம்.... இருக்கேன் நான் வர்றேன்னு சொல்லாம சொல்லி என் கையையும் காலையும் கடிச்ச கொசுக்கூட்டம்தான் அதிகம். காலேஜ்ல படிக்கிறப்ப இந்த பைத்தியக்காரத்தனம் வேற விதமா பார்ம் ஆகிப் போகி விடியக்காலையில பிள்ளையார்பட்டி கோயிலுக்குப் பின்னாடி இருக்க துக்குணுன்டு பாறை மேல ஈர வேஷ்டியோட வெத்து உடம்போட உக்காந்து சம்போ மகாதேவான்னு மனசுல நினைச்சுட்டே இருந்தப்ப....

கடவுள் வந்து பக்தா... கண்களைத் திற...

உனது தியானத்தால் மெச்சினோம்... என்ன வரம் வேண்டும் கேள்...? அப்டீன்னு என்கிட்ட கேட்டமாதிரியே எனக்குத் தோண....அதிர்ச்சியில வாய் பிளந்து இவர் என்ன சாமி முருகனா? சிவனா? இல்லை பெருமாளான்ற டவுட்ல....மயிலு இல்லை அதனால் முருகன் இல்லேன்னு  சொல்லிடலாம் கழுத்துல பாம்பும் இல்ல அதனால சிவனும் கிடையாது, சரி நெத்தியில நாமம் எதுவும் போட்டு இருப்பாரான்னு பாத்த அதுவும் இல்ல, அப்போ பெருமாளாவும் இருக்க வாய்ப்பு இல்ல...யானைத் தலை இல்லாததால இது பிள்ளையாரும் கிடையாது....

வெள்ளை வேட்டி சட்டை, நெத்தியில பட்டையோட வந்திருக்கவரு யாரா இருப்பாருன்னு யோசிச்சுட்டே இருந்தப்ப..அட....டா இவரு இவர் நம்ம பிஸிக்ஸ் புரஃபசர் மாதிரியில்லன்னா இருக்காருனு ஒரு டவுட் வர..., ஞாயித்துக் கிழமை காலையிலயே கோயிலுக்கு வந்த பிஸிக்ஸ் புரஃபசர் அரசரத்தினம் சார்.....டேய்.. என்னடா இது காலங்காத்தால....எக்ஸாம்க்கு எல்லாம் படிச்சுட்டியா.. இல்லையா... ? ஸ்டடி ஹாலிடேய்ஸ்ல கற்பக விநாயகரை வேண்டிட்டா பரீட்சை நல்ல எழுதிடலாம்னு முடிவு பண்ணிட்டியா என்னன்னு கேட்டு சத்தமா சிரிக்க வேற செஞ்சார். சாட்சாத் அந்த ஆண்டவன் வருவான்னு தியானம் பண்ண உக்காந்தா இந்த அரசரத்தினம் சார் ஏன் வரணும்...னு நினைச்சுக்கிட்டே.... இல்ல சார் ... சாமி கும்பிடத்தான் வந்தேன்னு சொல்லிட்டு நான் வழிஞ்ச வழிசலைப் பாத்துட்டு அவர் கிளம்பிப் போய்ட்டார்.

இப்டி என் கடவுள் தேடல் ஏகக் களேபரமா ஆரம்பிச்சு அங்க ஓடி....சிவபுராணம் படிச்சு, சிவராத்திரிக்கு கண் முழிச்சு, சிவஞான போதத்திலிருந்து சைவ சித்தாந்தம் வரைக்கும் படிச்சு, ஓஷோ சாரோட ஹெல்ப்போட இஸ்லாம், இந்து, கிறிஸ்தவம், பெளத்த தத்துவ கடல்கள கடந்து கரையேறி வர பாலகுமாரன் சார்ன்ற போட் ரொம்பவே எனக்கு உதவி பண்ணுச்சு. தேடல வழி நெடுக சம்சாரியாவே நீ தேடுடா அம்பி.....நீ சம்சாரி, இதை விட்டுட்டு ஓடினே...கேலியா ஆகிடும் வாழ்க்கைன்னு திருவொற்றியூர் கோயில்ல எப்பவும் சந்திக்கிற நடேசன் அய்யர் சொல்லிட்டு கைய பிடிச்சுக்கிட்டே ரொம்ப நேரம் மண்டபத்துல என் கூட இருப்பார். நடேசன் அய்யர் செத்துப் போனப்ப மயிலாப்பூர்ல இருக்க அவரு வீட்டுக்குப்போய் ரொம்ப நேரம் உக்காந்திருந்துட்டு தகனம் எல்லாம் செஞ்சு நடேசன் ஐயர சாம்பலா பாத்தப்ப....ஒரு நிமிசம் ஸ்தம்பிச்சுப் போச்சு எனக்கு.

என்ன பேசி என்ன...? ஒரு பிடி சாம்பல்தாண்டா அம்பி நாம எல்லோரும்னு அடிக்கடிச் சொன்னவர் சாம்பலா போய்ட்டார். அவர் அப்டி சொன்னதைக்  கேட்ட இந்த தறுதலையும் ஒரு நாள் சாம்பலாத்தான் போகப் போறான் இதை படிக்கிற பெரியவாக்களான உங்களைப் போலவே....


இப்போ என்னோட தேடல் நின்னு போய்டுச்சா இல்லை தொடர்ந்துகிட்டே இருக்கான்னு எனக்குத் தெரியலை. அப்டி யோசிக்கக் கூட முடியாத அளவுக்கு வாழ்க்கையை பரமபதம் ஆடிட்டு இருக்கான் பரமன், உருவமில்லாதவன், அங்கிங்கெங்கும் வியாபித்துக் கிடப்பவன், ஆணுமில்லாதவன், பெண்ணுமில்லாதவன், அலியுமில்லாதவன், யாருக்கும் பிறக்காதவன், யாரையும் பெற்றுக் கொள்ளாதவன், ஆதியில் வார்த்தைகளோடு இருந்தவன், அந்த வார்த்தையாகவே இருந்தவன், தன்னுள் இருந்து சகலத்தையும் ஜனிப்பித்தவன்....

வேதங்களை எல்லாம் விளையாடக் கொடுத்து விட்டு வேடிக்கை மனிதர்களாய் நின்று வேடிக்கைப் பார்ப்பவன்..., எழுதுபவன், வாசிப்பவன், வாசிக்காதவன்....

தேடிக் கொண்டுதான் இருக்கிறேன் இன்னமும்..... இந்த தேடல் நின்று போகவே போகாது. இது அனாதியானது.... யாராலும் தொடங்கப்படவும் இல்லை... எப்போதும் இது முடியப் போவதும் இல்லை...


சம்போ மகாதேவா... யா அல்லாஹ் என் தேவனே என்னைக் கடைத்தேற்றும்....!
தேவா சுப்பையா...
Photo Courtesey: Ashok Arsh