Pages

Wednesday, August 27, 2014

கதை திரைக்கதை வசனம் இயக்கம்!


விஜய் அஜீத்துக்கு எல்லாம் பிடிச்ச லூசு சூர்யாவுக்கும் பிடிச்ச கதைதான் அஞ்சானோட சோகக்கதை. ராஜு பாய் வாய்ல குச்சியோட சுத்துறாரே வாய்க்குள்ள இருக்க குச்சி வாய்ல குத்திடாதேன்னு தான் பதற முடியுதே தவிர அதைப் போய் எப்டிங்க ஸ்டைல்னு எடுத்துக்குறது? கருமம் பிடிச்ச அதை எல்லாம் எப்டிங்க ஸ்டைல்னு சொல்லி படமா எடுத்திங்க லிங்குசாமி. தலைவால விஜய் என்ன கொடுமை பண்ணினாரோ அதே கொடுமைல கொஞ்சம் ஆனியன் கேரட் எல்லாம் தூவி அஞ்சான்ல சூர்யா பண்ணி இருக்காரு....

வில்லன் யாருன்னு தெரிஞ்சு போச்சு, ப்ரண்ட கொன்னவன ராஜு பாய் திரும்ப வந்து கொல்லுவாப்ளன்றது ஒண்ணுந் தெரியாத பாப்பா சமந்தாவுக்கே தெரியும் போது நமக்கெல்லாம் தெரியாதா? என்ன துப்புக் கெட்ட படத்தை எடுக்க இம்புட்டு துட்டு செலவு பண்ணி இருக்காய்ங்களேன்னு நினைக்கிறப்பதான் கப்புன்னு தொண்டைய அடைக்குதுங்க...

இவங்களுக்கு எல்லாம் சூப்பர் ஸ்டார் மாதிரி மாஸ் ஹீரோவா ஆகணும்ன்ற ஆசை இருக்கே தவிர கதைய கேட்டு நடிக்கணும்ன்ற அறிவு இல்லாமலேயே போய்டுது. ராஜு பாய்... ராஜு பாய்னு... ஸ்கீரீன் புல்லா கூவுறானுங்கோ, எனக்கு என்னமோ பாஷா பாய் பாஷா பாய்னு தான் கேட்டுகினே இருந்துச்சு. தன்ன ராஜு பாய் கிடையாது ராஜு பாயோட ப்ப்பிரதர்ன்னு காட்டிக்கிட புருவத்துல ஒரு மெகா மேஜிக் மேக்கப் போட்ருக்கானுங்கோ பாருங்க சூர்யாவுக்கு.... ங்கொய்யால ஒங்களுக்கெல்லாம் ஆஸ்கார்தாண்டா கொடுக்கணும்...

தேவையில்லாம அதிகமா பேசி நம்ம எனர்ஜிய வேஸ்ட் பண்ணமா அஞ்சான விட்டுட்டு அப்டியே கதை திரைக்கதை வசனம் இயக்கத்துக்குள்ள போலாம் வாங்க...

அஞ்சானைத்தான் கடிச்சு துப்பி சூப்பு வச்சு சாப்டாச்சு. படம் நல்லா இல்லை விமர்சிச்சோம் அது எல்லாம் சரி. நல்லா இருக்க பார்த்திபன் சார் படத்தை இன்னாத்துக்கு வளிச்சுக்கினு வேணும்னே நல்லா இல்லேன்னு எழுதணும்னு கேக்குறேன்? இணையத்துல இருக்க அஞ்சான்கள் படுத்துற பாட்டுக்கு அஞ்சான் படமே தேவலாம் போல... ஆமாம் பின்ன படத்துல எல்லா கேரக்டரும் பார்த்திபன் சாரு மாதிரியே பேசுறாங்களாம்... பின்ன அவரு டைரக்ட் பண்ணின படத்துல அவரு மாதிரி இல்லாம மணிரத்னம் சார் படத்துல வர்ற மாதிரியா பேசுவாங்க...? வண்டி வண்டியா டர்னிங் பாயிண்ட்ஸ்கள ஏத்தினு, ட்விஸ்ட்டு ட்விஸ்ட்டுன்னு சொல்லி ட்விஸ்ட் பொங்கல் வச்சி, கொஞ்சம் சோகம் கொஞ்சம் காதல், இப்டி அப்டின்னு ஆத்து ஆத்துனு ஆத்தி கதை சொல்றேன் பேர்வழின்னு உலக சினிமாப்படங்கள பாத்துட்டு இங்க வந்து வாந்தியெடுக்குற லோ கிரெடிட் கிரியேட்டர்ஸ்ங்களுக்கு எல்லாம் சுளுக்கு எடுத்து வுட்டுருக்கிற பார்த்திபன் சார பாத்தா கொஞ்சம் பொறாமையாய்தான்பா இருக்கு......

தேவர் பிலிம்ஸ் காலத்துல இருந்து அரைச்ச தேங்காயை அரைக்கிறத பார்த்து புளிச்சுப் போய் கிடந்த மனுசங்களுக்கு அடச்ச்சே கதையும் வேணாம் ஒரு மண்ணாங்கட்டியும் வேணாம் ஜாலியான திரைக்கதை இருந்தாப் போதும்பான்னு எதிர்பாத்தவங்களுக்கு எல்லாம்.. கதை திரைக்கதை வசனம் இயக்கம் நிஜமாவே ஒரு திருவிழா பாஸ்...! பார்த்திபன் சார்கிட்ட பிடிச்ச விசயமே மனுசன் ரவுண்ட் த க்ளாக் காதலோடேயே இருக்கறதுதான்...

காதலோடு இருக்கவங்களால மட்டும்தான் தீரத் தீர வாழ்க்கையை அனுபவிச்சு வாழ முடியும்ன்றப்ப... காதலிச்சு கட்டிக்கிட்ட மனைவிய என்ன என்ன பண்ணுவாங்கன்னு யோசிச்சு எல்லாம் நாம பாக்க வேணாம். சாதாரணமா பார்த்திபன் சாரோட படங்கள பார்த்தாலே போதும். இந்தப் படத்துலயும் அப்டித்தான் அட்டகாசமான ஒரு கணவன் மனைவிய நமக்கு அறிமுகம் செஞ்சு வக்கிறாரு. தாலிய எடுத்து கண்ல ஒத்திக்கிட்டு நெத்தி நிறைய குங்குமம் வச்சுக்கிட்டு, தலை நிறைய பூ வச்சிகிட்டு, ரெடிமேடான சினிமா மனைவிகளை பார்த்து பார்த்து போராடிச்சுப் போச்சுப்பா...ன்னு புலம்பிட்டு இருக்க அடுத்த ஜெனரேசன் மக்கள்ஸ்......

உங்களுக்காகவே  புத்தம் புது கலர்புல்லான கணவன் மனைவி இந்த படத்துல கலக்கோ கலக்குன்னு கலக்குறாங்க. மனைவிக்கு கால் பிடிச்சு விடுறதை பெருசா பேசி அதை எல்லாம் ரொம்ப பெரிய விசயமா தியாகமா காட்டிக்கிற கணவன்மார்களே.... உங்களுக்கு எல்லாம் டாட்டா பை..பை....சி யூ....


படுக்கை அறையை ஒரு கவிதைப் புத்தகமாக்கிக் கொள்ளுங்கள்...
எழுத விரும்பும் கவிதைகளை........
உங்களுக்குப் பிடித்த வர்ணங்களில் வானவில்லாய் வரைந்து பாருங்கள்...
உங்கள் மனைவியின் காதருகே சென்று....
ஐ லவ் யூ என்று சொல்லி, சொல்லி அலுப்பு கொடுக்காதீர்கள்...
அவள் காலருகே சென்றமர்ந்து ஒரு முறையேனும் 
அவள் பாதத்தில் முத்தமிட்டு அவள் கொலுசொலிக்குள் 
தொலைந்து போக முயற்சி செய்யுங்கள்....
அன்பாய் இருப்பதாய் சொல்லி அடுத்த கட்டத்திற்கு
பாய முயலும் இயந்திர உலகத்தில்...
நீங்கள் விடிய விடிய அவள் உறங்குவதைப் பார்த்து ரசியுங்கள்....
காதலென்பது கூடல் மட்டுமல்ல...
காதலென்பது ஊடல்...
காதலென்பது விவாதித்தல்
காதலென்பது கட்டியணைத்தல்
காதலென்பது விலகி நிற்றல்...
காதலென்பது....காத்திருத்தல்...
காதலென்பது விழுந்து விழுந்து பேசுதல்.....
காதலென்பது பேசிக் கொள்ளாமல் தினமும் முறைத்தல்...
பிடிக்கும் என்று  சொல்லி சொல்லி
வார்த்தைகளால் நாம் செய்த அலங்காரங்கள் போதும்...
அவளுக்குத் தேவை...
விடியலில் ஒரு பெட் காஃபி...
முடியுமா உங்களால்...????!

படத்தைப் பத்தி பேசிட்டு இருக்கும் போதே அது எங்கேயோ நம்மள கூட்டிட்டுப் போய் ஏதேதோ யோசிக்க வைக்குது பாத்தீங்களா.. அதான் ஒரு படைப்பாளியோட வெற்றி. தமிழ் சினிமா இதுவரைக்கும் தனக்குன்னு காப்பாத்தி வச்சிருந்த மரபுகள எல்லாம்  தூக்கிப் போட்டு உடைச்சுட்டு... ரிலாக்ஸ்டான அடுத்த தலைமுறைக்குள்ள மெதுவா தன் முதல் அடியை எடுத்து வச்சிருக்குன்னு தான் சொல்லணும்...

பார்த்திபன் சாரோட கதையை அதாவது தனக்கு கதை கிடைக்கலையே அப்டீன்ற கதையை, அப்டி கதை கிடைக்காம பட்டுட்டு இருந்த அவஸ்தையை ஒரு படமா எடுத்தா என்னன்னு அவர் யோசிச்ச இடம்தான் அவர் அடிச்சு இருக்க இந்த சிக்ஸர்....! எல்லா கேரக்டர்ஸ்மே நச்சு நச்சுன்னு அவர் தேர்ந்தெடுத்து இருக்க விதம் அட்டகாசம். அதுவும் ரெண்டு கண்லயும் ததும்பி வழியுற போதையோட ஒரு அட்டகாசமான கதாநாயகி தமிழ் நாட்டுக்குள்ள என்ட்ரி ஆகி இருக்காங்க...வாழ்த்துகள் அகிலா கிஷோர்...!


தம்பி ராமையா சமீபமா வந்த எல்லா படத்துலயும் செம ஸ்கோரர்தான். மனுசன் இந்த படத்துல வசனத்தோட சேர்த்து அப்பாவியான முகபாவத்தை அப்பப்போ காட்டி அடிச்சு தூள் கிளப்பி இருக்கார். அதுவும் தேவர் பிலிம்ஸ்ல படங்கள்ள எல்லாம் யானை ஓடுனாலும் ஒரே மியூசிக், குரங்கு ஓடுனாலும் ஒரே மியூசிக்ன்னு அவர் கமெண்ட் அடிக்கிறதும் அதுக்கு அப்புறம் பேக்ரவுண்டல.. அதே மியூசிக்க தம்பி ராமையா வரும்போது எல்லாம் டடண் டண்.... டடண் டண்ன்னு போட்டு கலாய்க்கிறதயும் செம்ம ஜாலியா சில்லுன்னு ஒரு மிராண்டா குடிச்சுக்கிட்டே ரசிக்கலாம் பாஸ். படத்தோட க்ளைமாக்ஸ் அக்மார்க் பார்த்திபன் ரகம்....!

திரைக்கதை, வசனம் இயக்கம் (கதைதான் இல்லையே பாஸ்...! ) அடுத்த தலைமுறையினருக்கான சிம்ப்பிள் மூவி....

மொத்தத்துல ....அடி தூள்...!!!!!!!!
தேவா சுப்பையா...

Monday, August 25, 2014

உன்னை நான் தேடித் தேடி....!


உனக்குப் பிடித்த பாடல்கள் என்று நீ குறிப்பிட்டிருந்த எல்லா பாடல்களையும் மீண்டுமொரு முறை நான் கேட்டுக் கொண்டிருக்கிறேன். எந்த கவலையுமின்றி உன்னோடு பேசிக் கொண்டிருந்த அந்த நாட்களுக்குள் என்னை பிடித்து தள்ளி விட்டு விளையாடிக் கொண்டிருந்தன ஒவ்வொரு பாடலும்...

சொர்க்கத்திற்குள் சுகமாய் நாம் சுற்றித் திரிந்த அந்த நாட்களும் அந்த நாட்களை அசைபோடும் இந்த நாட்களையும் விட வேறு ஏதேனும் சிறப்பாய் இருக்க முடியாது. வாசனையான பெண்ணொருத்தி, கிறக்கமான விழிகளோடு தொட்டு விடும் தூரத்தில் அமர்ந்திருக்கும் ஒரு பெளர்ணமி ராத்திரியில் கிறக்கமாய்  அதை அனுபவிப்பவனின்  மனோநிலையில் இப்போது நான் இருந்து கொண்டிருக்கிறேன்... ததும்பி வழியும் காமத்தின் அடுத்த முடிச்சு எந்த நொடியில் அவிழும் என்பதை எப்படி வரையறுக்க முடியாதோ அப்படித்தான்  கவிதை ஒன்று உருப்பெறுவதும்....

நான் எழுதுவதற்காக....
என் நோட்டுப் புத்தகத்தை திறந்திருந்தேன்....
என் பேனாவிலிருந்து அவிழ்ந்து விழத் தொடங்கி இருந்தன வார்த்தைகள். 
உன்னோடு பேசிக் கொண்டிருப்பதை போல தோன்றியது எனக்கு....
இப்போதெல்லாம் உன்னோடு பேச வேண்டுமானால்
நான் ஏதாவது எழுதி எழுதித்தான் பேசிக் கொண்டிருக்கிறேன்...
மெளனமாய் நீ கேட்டுக் கொண்டிருப்பாய் என்ற 
கற்பிதத்தில் வெட்கத்தோடு  எழுதிக் கொண்டிருக்கும் சுகத்தை....
இதை கவிதையென்றெண்ணி வாசிக்கும்
யாரேனும் பெறக்கூடுமா ...என்பது சந்தேகம்தான்...

கவிதை என்பது யாரோ வாசிப்பதற்காகத்தான் இருக்க வேண்டுமா என்ன..? உன்னை அணைக்கவும், முன்நெற்றியில் முத்தமிடவும், சப்தமில்லாமல் பேசும் உதடுகளில் என் விரல் வைத்து அழுத்தி ஸ்பரிசிக்கவும், போதையான விழிகளுக்குள் விழுந்து மிதந்து கிடக்கவும் எனக்கு கவிதை உதவுகிறது. ஏதோ ஒன்றை கிறுக்கிக் கொண்டு எதிர்பாராமல் ஒன்று புத்திக்குள் உதயமாகும் அந்தக் கணத்தில் உன் முந்தானையால் என் முகம் மூடி  உன் மடியில் விழுந்து கிடப்பது போல உணர்வேன்....! அழுத்தமாய் பேனாவை காகிதத்தில் பதிய வைத்து என் சுவாசத்தின் ஏற்ற இறக்கம் மாறுவதை கவனித்தபடியே எழுதிக் கொண்டிருப்பது எத்தனை சுகமானது தெரியுமா?

நிறைய பாடல்கள் நீ பிடிக்கும் என்று கூறியிருக்கிறாய். பாடல்கள் உன் நினைவினைக் கொடுக்க,  உன் நினைவு என்னை ஸ்பரிசித்துப் பார்க்க கவிதை எழுதச் சொல்கிறது. நீ இல்லாத நாட்களில் உன்னை தேடிக் கொண்டே இருக்கிறேன் என்று கூறினேன். யாரோ யாரையோ தேடுவது, யாருக்கோ யாரோ தேவையாய் இருப்பது எவ்வளவு சுகமான அனுபவம் தெரியுமா? என்றாய்... நீயும் என்னை தேடுவாயா என்று கேட்டேன்.... என் இருப்பு வேண்டும் என்று விரும்புவாயா என்று  கேட்டேன்....

இந்தக் கணத்தில் மூழ்கிக் கிடக்கையில்
என்னோடு நீ இருக்கையிலும் கூட
உன்னை நான் தேடுகிறேன்....
என்னை எனக்குள் நீ தேடுவது போல...
தேடல் என்பது இல்லாத 
ஒன்றைத் தேடிச் செல்வது அல்ல...
அது இருப்பதற்குள் இல்லாத ஒன்றை
பித்துப் பிடித்தது போல தேடி அலைவது...
நீ கவிதை சொல்வாய்...
நான் கனவுகளில் உன்னைத் தேடுவேன்...
ஏதேனும் கதைகள் சொல்வாய்...
அதன் கருவினில் நாம் இருக்கிறோமா 
என்று தேடுவேன்....

எப்போதும் பெறுதல் சுகமல்ல. பெற்றாலும் அங்கே இழக்க ஏதேனும் இருக்க வேண்டும். இருக்கிறது என்ற திருப்தி கற்பனைச் சிறகுகளை வெட்டி விட்டு கூண்டுக்குள் நம்மை போட்டுப் பூட்டி வைத்து காலையில் கொஞ்சம் இரை கொடுக்கும், மதியம் கொஞ்சம், மாலை கொஞ்சம் என்று கொடுத்து தாகம் தீர்க்க அவ்வப்போது நீர் கொடுக்கும் அவ்வளவுதானே.......?!

சிறகுகள் விரித்து எங்கே.. எங்கே.. எங்கே எனக்கான வாழ்க்கை...? எங்கே எனக்கான பூமி...? எங்கே எனக்கான மலர்கள்.....? எங்கே எனக்கான சமவெளிகள்...? எங்கே எனக்கான அருவி.....? எங்கே எனது கடல்கள்? எங்கே எனக்கான நிலம்.... என்று தேடி தேடி அலையும் சுகத்தை நிறைவு ஒரு போதும் கொடுத்து விடாது. நிறைவு என்பது நின்று போவது. தேவைகளோடு இருப்பதே சுகம். பிரிந்து விடுவோம் என்று எண்ணியே ஒன்றாய் வாழ்வது தவம். இங்கே இது எப்போதும் என்னிடம் இருக்கும் என்று உணர்ந்து விட்டால் அப்படி எது நம்மிடம் இருக்கிறதோ அதன் மீது ஒரு அலட்சியம் வந்து விடுகிறது. இல்லை என்ற உடனேயே.. எங்கே எங்கே என்று பட படக்கும் பட்சி.... இதோ எடுத்துக் கொள் என்றவுடன்.. அவ்வளவு தானா. ... என்று சுவாரஸ்யம் இழந்து போய்விடுகிறது...

இப்போது சொல்.... எப்போதும் தேடுதல் இருக்கத்தானே வேண்டும்....? தேடும் வரையில்தான் சுகம். தேடல் நின்று போன இடத்தில் சுவாரஸ்யம் நின்று போகிறது. குறையோடு இருத்தலும் ஒரு வரம்தான். ஞானியை விட அஞ்ஞானி ஒரு குறுகுறுப்போடு துறு துறு வென்று இருக்கிறான். அறியாமை அழகு. படபடவென்று அவள் என்னிடம் கூறியது எல்லாம் எனக்குள் தூரத்து வானின் நட்சத்திரமாய் புத்திக்குள் ஒளிர்ந்து கொண்டிருந்தது.

காதல் நோய்க்கு மருந்து தந்து
நோயைக் கூட்டுமே.....

ஸ்ரேயா கோஷலின் குரல் ராஜா சாரின் இசைக்குள் வளைந்து நெளிந்து கொண்டிருந்தது. ஒரு பாடலை கேட்ட மாத்திரத்தில் எப்படி காதல் உணர்வு நமக்குள் பற்றிகொள்கிறது...?  அல்லது பற்ற வைக்கப்படுகிறது....? என்று விழிகளால் என்னை பற்ற வைத்துக் கொண்டே அவள் கேள்வி கேட்ட தினம் இன்னும் பசுமையாய் இருக்கிறது எனக்குள். காதலை எப்படி வரையறுக்க..? எழுதித் தீர்க்க முடியாத இந்த வாழ்க்கையின் பெரும் பக்கங்களில் வாசித்து தீர்க்க முடியாத அளவு காதலும் காதலைப் போன்றவைகளும் நிரம்பிக் கிடக்கிறது. காதலின் ஆதி வடிவமே சப்தம்தானே? எதுவுமில்லாமல் இருந்த ஒன்று பல்கிப் பெருகி விரிய பெருங்காதல் கொண்டுதானே அதிரத் தொடங்கியது.. அதிர்வு தானே சப்தம். சப்தம்தானே இசை. இசைக்கு வளைந்து கொடுப்பதுதானே கவிதை. கவிதைக்கும் இசைக்கும் மயங்கிக் கிடப்பதென்பது..... ஆதி உணர்வில் கலந்து கிடப்பது போன்றதுதானே? 

பேசிக் கொண்டே நாம் கரைத்த நிமிடங்களை எல்லாம் மெல்ல மெல்ல மீட்டெடுத்து இப்போது நினைவு ஊஞ்சலில் என்னை ஆட்டிக் கொண்டிருந்தது காதல். பிரஞ்ஞை நிலையில் அவள் என் முன் விழி விரித்து எல்லாம் கேட்டுக் கொண்டிருக்க....

உனக்கான நிமிடங்களில் எல்லாம்
என்னோடு நீ இருக்கவில்லைதான் என்றாலும்
இந்த வாழ்க்கையும்... சூழலும்
அடித்துப் பெய்யும் மழையும்...
அலைந்து திரியும் மேகங்களும்
காற்றுக்கு தலையசைக்கும் கனத்த பூக்களைச் சுமக்கும் செடிகளும்
ஊர்ந்து செல்லும் அரவமும்,
கனைத்து ஓடும் குதிரைகளும்
படர்ந்து சிரிக்கும் கொடிகளும்.... பறந்து திரியும் பறவைகளும்
எப்போதும் என்றென்றும்...
உன் இருப்பை எனக்குத் தெரிவிக்கத்தான் செய்கின்றன...

என்றாலும் என் உடனில்லாத உன்னைத் தேடிக் கொண்டுதானிருக்கின்றேன்... நித்தம் நித்தம் விடியலிலும்.... விடியல் மடங்கிக் கொள்ளும் அந்திகளிலும்....

'என் வீட்டில் இரவு... அங்கே இரவா
இல்லை பகலா எனக்கும் மயக்கம்...'


இன்னொரு பாடலில் என் தேடல் தொடர்ந்து கொண்டிருந்தது....
தேவா சுப்பையா...Saturday, August 23, 2014

வெற்றுக் காகிதங்கள்...!எல்லாவற்றையும்
ஒரு கவிதையால்...
எப்போதும்
சொல்லிவிட முடிவதில்லை...

வெயில் சூட்டில் கால் கடுக்க
வெகு தூரம் நடந்து பின் இளைப்பாறும்
ஒரு மர நிழல்
கொடுக்கும் நிறைவினை...

கனவுகளில் துரத்தித் திரிந்த
காதலியொருத்தியை ஒத்தவள்
சட்டென்று நம்மை
யாரோவாய் கடந்து செல்லும்
அவஸ்தை மிகு
படபடப்புக்களை....

கடைசியாய் முகம் பார்த்துக் கொள்ளுங்கள்
என்ற கூச்சலில் கூட்டத்துக்கு
நடுவே நின்று நம் ப்ரிய உறவுகளின்
முகங்களை சிதைக்கு நடுவில்
காணும் பேரவலத்தை....

பிரிந்து விட்ட காதலியை
யாரோ ஒருத்தி போல
எங்கோ சந்தித்து விட்டு....
பேச ஒன்றுமில்லாமல் தவித்து நிற்கும்
அந்த பேரவஸ்தைக் கணங்களை...

அறுந்து போன பட்டத்தின்
நூல் பிடிக்க பின் ஓடி
எட்டிப் பிடிக்க முயலுகையில்
அது கைவிட்டுப் போகும்...
கலக்க நிமிடங்களை...

என்று....
எல்லாவற்றையும்
ஒரு கவிதையால்....
எப்போதும்...
சொல்லிவிட முடிவதில்லை....!தேவா சுப்பையா...Monday, August 18, 2014

கோணல் மாணலாய் ஒரு கதை - 2
இனி...


ரமேஷுக்கு என்னைத் தெரியாது. நீ மட்டும் வந்தேன்னு சொல்லி சமாளிச்சுடு சுமதி. ஏற்கெனவே அவனுக்கும் உனக்கும் நிறைய மிஸ் அண்டர் ஸ்டாண்டிங்.. .. .அண்ட்... யூ கேன் கோ வித் ஹிம் .....

ஹெல்மெட்டை எடுத்துக் கொண்டு கிளம்ப முற்பட்டேன்.... சுமதி... எழுந்து நின்று அவசரமாய் என் பின்னந்தலைக்குள் கை கொடுத்து கலைத்து....கண் கலங்கியபடியே...சாரிடாமா.... ஐயம் வெரி சாரி.... ஐ டோண்ட் வாண்ட் யூ டூ லீவ் லைக் திஸ்....பட்ட்ட்ட்ட்.....இழுத்தாள்....

இட்ஸ் ஓ.கே சுமதி....நான் கிளம்புறேன்.. டேக் கேர்...... சொல்லி விட்டு வேகமாய் வெளியே வந்தேன்...நான் வெளில வர்றப்ப...ரமேஷ் ஹோட்டல் உள்ளே போனான். ரமேஷ் யார்னு எனக்குத் தெரியும். சுமதி போட்டோவுல காட்டி இருக்கா... ஆனா நான் யார்னு ரமேஷ்க்கு தெரியாது. தெரியாமல் இருந்தது பெரிய பிரச்சினையை இப்போது சரிக்கட்டி இருக்கறதா எனக்குத் தோணுச்சு....

ரூமிற்கு சென்று கொண்டிருந்தேன்.

என்ன மாதிரியான லைஃப் இது...? என்னோட கேரக்டர்தான் என்ன...? அவள் பொண்டாட்டி, அவன் புருசன்....இடையில நான் யாரு...? நான் ஏன் சுமதிய கூட்டிட்டு வரணும்...? உதவி பண்ண வந்தேனா...? இல்லை அவளோட சூழல்ல அவ என் மேல காட்டுற பாசத்தை, அவளுக்கும் அவ ஹஸ்பண்ட்டுக்கும் இருக்குற பிரச்சினையை நான் அட்வாண்டேஜா எடுத்துக்கப் பார்க்கிறேனா?

எனக்கு சுமதியை பிடிக்குதா? பிடிச்சா நான் அவளை காதலிக்கணுமா? நான் எப்படி அவளைக் காதலிக்கிறது அவளுக்குதான் ஏற்கெனவே கல்யாணம் ஆகிடுச்சே... அதுவும் காதல் கல்யாணம்...? மாஞ்சு மாஞ்சு காதலிச்சவங்க ஏன் இப்போ எலியும் பூனையுமா ஆகணும்...? ரமேஷ்க்கு ரொம்ப பிடிக்குகோ சுமதிய? அப்டி ரொம்ப பிடிச்சா தீரத் தீரக் காதலிக்கக்தானே வேணும்..? ஒரு வேளை ரொம்பப் பிடிச்சா டவுட்டும் கூடவே வருமோ...? அந்த டவுட்டதான் பொசஸிவ்னெஸ்னு சொல்லிக்கிறாங்களோ...? அவ புருஷன் கூட அவ போகப் போறா...இங்க எனக்கு ஏன் பொசஸிவ்னெஸ் லேசா தலை தூக்கிப் பார்க்கணும்...?

சுமதிக்கு என்னை பிடிக்கிறதால...? அவ அவ எல்லாத்தையும் விட்டுட்டு என் கூட வரணும்னு  ஆசைப்படுறேனோ...? அந்த ஆசைக்கு பெயர் காதலா? இல்லை உடல் கவர்ச்சியா....? உடல் கவர்ச்சின்னா.... நேரடியா வீட்டுக்கு வான்னு சொன்ன நிறைய பேர நான் புறக்கணிச்சேன்.... நான் புறக்கணிக்க காரணம் பயமா...? பயத்துக்கு காரணம் என் குடும்பம்.., என் அம்மா, என் அப்பா....அவுங்க மரியாதை....

ஆமாம்.. நான் பயந்தாங்கொள்ளிதான். என் பயந்தான் என்னைய எப்பவும் காப்பாத்தி இருக்கு. இப்போ கூட பயந்துகிட்டுதான் வேகமா அந்த இடத்தை விட்டு நகர்ந்து வந்துட்டேன்.....

இரண்டு பாட்டில் பியர் உள்ளே  போனதும், சுமதியும், அவளது காதலும் ரமேஷும், உத்தியோகமும் இந்த உலகமும் மெல்ல மெல்ல மறையத் தொடங்க....தூங்கிப் போனேன் நான்...!

ஒரு அஃபயர் ஏற்படுறதுக்கான எல்லா சாத்தியக்கூறுகளும் எனக்கும் சுமதிக்கும் இருந்தது என்னவோ உண்மைதான்....ஆனால்...ஏதோ ஒரு விசயம் கடுமையா என்னை மேலதிகமா போக விடாம தடுத்துடுச்சு. ஒரு நாள் உடம்பு சரி இல்லேன்னு சொன்னாலும் என்னைத் தேடி ரூமுக்கு வர்ற அளவுக்கு  பாசம் வச்சிருந்த சுமதியோட அந்த பாசத்தை ரசிக்க முடிஞ்ச எனக்கு அதுக்கு மேல ஒண்ணுமே தோணலன்றதுதான் உண்மை.....

.....
....
.....

ரமேஷ் மறுமுனையில் ஏதேதோ பேசிக் கொண்டிருந்தான்....

ரமேஷ் ... நிஜமா என்னோட போட்டோ சுமதி கிட்ட எப்டி போச்சுண்ணு தெரியலை...பட்....கண்டிப்பா நத்திங் டு வொர்ரி...காலையில எனக்கு 7 மணிக்கு டூட்டு முடியும் நான் உங்களை எங்க வந்து சந்திக்கட்டும் சொல்லுங்க.....?அப்டீன்னு ரமேஷ்கிட்ட சொன்னேன்...! இல்ல சார்  நான் உங்களை சந்திக்க வரலை...ஐ யம் சாரின்னு ரமேஷ் அதை நிராகரிச்சப்ப எனக்கு இன்னும் கில்ட்டி கான்ஸியஸ் அதிகமாயிடுச்சு....

ரமேஷ் ப்ளீஸ் ட்ரை டூ அண்டர் ஸ்டேண்ட்.....நான் பேசிக் கொண்டிருந்த போதே என்னை இடை மறித்தான் ரமேஷ்..

இனிமே சுமதி டூட்டிக்கு வரமாட்டா சார்.... அவ்ளோதான்....சொல்லிவிட்டு சடாரென்று போனை  கட் செய்திருந்தான்.

ரமேஷின் இடத்திலிருந்து யோசித்துப் பார்த்தேன்...அது இரணமாயிருந்தது...! சுமதி இனிமேல் டூட்டிக்கு வரமாட்டாள்ன்னு அவன்  சொன்னது எனக்கு கொஞ்சம் ஆறுதலா இருந்தாலும் கஷ்டமாவும் இருந்துச்சு...

சம்பந்தம் இல்லாம ஒரு வாழ்க்கைக்குள்ள ஏற்பட்ட பிரச்சினைக்கு காரணமாயிட்டமேன்னு வருத்தமும் பட்டேன். ஆக்சுவலா நெக்ஸ்ட் டே என்னை டூட்டி ரிலிவ் பண்ண சுமதிதான் வரணும்.... ஆனா வரமாட்டான்னு ரமேஷ் சொல்லிட்டான்......

மார்னிங் ஷிப்ட்டும் கண்டினியூ பண்ணித் தொலைக்கணுமேன்னு புதுக்கவலை ஒண்ணு ஏற்கெனவே இருந்த கடுப்புக்கு பெப்பர் தூவி இன்னும் எரிச்சலூட்டியது. பிடித்தல் எப்போதும் ஒரு இடத்தில் மட்டும் குவிந்து கிடக்க முடியாது என்பதுதான் நிதர்சனம் ஆனாலும் இங்கே சமூகம் போட்டு வைத்திருக்கும் செயல் திட்டம் அதற்கு நேர் மாறானது. 

விருப்பங்களை ஒளித்து வைத்துக் கொண்டு வாழும் ஒரு செயற்கை வாழ்க்கை இங்கே இயற்கை என்றாகி விட்டது. நிஜம் அப்படியானது அல்ல. நிஜம் பூ பூப்பதைப் போன்றது. அங்கே எந்த வித அத்து மீறலும் இல்லை. ப்ரியமாய் இருப்பதற்கும் நேசிப்பதற்கும் காமம் என்ற ஒன்று தேவையே இல்லை. அது இல்லாமல் இருக்க முடியாது என்று எண்ணுபவர்களுக்கு ஆண் பெண் உறவு அபத்தமாய்த் தெரிகிறது. ஏனென்றால் காமம் ஒரு வக்கிர மிருகம் அது எப்போது பாயும் என்றே சொல்லவே முடியாது. வசம் இழக்கும் நிமிடங்களில் எந்த வரைமுறையையும் அது கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. 

அந்த மிருகத்தை அடக்காமல் விட்டு விட்டால் அது வால் குலைத்து நாயாய் ஒடுங்கி, கரைந்து காணாமல் போகும். அடக்க அடக்க...எகிறிப் பாய்கிறது. பல்லைக் காட்டி கோரமாய் உறுமுகிறது. வேஷமிட்டுக் கொண்டு வந்து நட்பு என்கிறது, காதல் என்கிறது, கடவுள் என்கிறது, தத்துவம் பேசுகிறது, கவிதைகள் எழுதுகிறது, தியானம் செய்கிறது, அரசியல் பேசுகிறது. மனிதத் தன்முனைப்பின் கடைசி நுனி காமம். காமமே புகழ் வேண்டுமென்று ஓடவைக்கிறது, பணம் வேண்டும் என்று ஆட வைக்கிறது. நியதிகள் அதை அடக்க அடக்க...சீறிப்பாய்ந்து கடை வாயில் எச்சில் ஒழுக அலைந்து கொண்டிருக்கிறது. கட்டுப்பாடுகள் இல்லை என்றால்....கவனிக்க நாதி இல்லை என்றால்....காமம் தன்னாலேயே செத்துப் போகும். கற்பனைதான் காமத்தீக்கு எப்போதும் பெட்ரோல் ஊற்றி எரிய விடுகிறது. இதுதான் இது என்ற புரிதலை சிறுவயதில் இருந்தே இயல்பாக்க....அங்கே கற்பனை மிருகத்திற்கு வேலையில்லாமல் போய் காமம் கைக்குழந்தையாய் ஆகி விடுகிறது.

கோபமாய் அதை உற்று உற்றுப் பார்க்க... அது வெறி கொண்டு ஆடத்தான் செய்கிறது.

விடிய ஆரம்பிச்சு இருந்துச்சு.....சுமதி வரமாட்டாள்.  முந்தைய இரவு ரமேஷ் பேசியது மனசை அறுத்துக் கொண்டே இருந்தது..! ஆப்பரேட்டர் கேபினுள் கதவை ஒருக்களித்து சாத்தி  வைச்சுட்டு கொஞ்சம் ரிலாக்ஸ் செய்ஞ்சுட்டு இருந்தேன்... 

முதுகில் யாரோ தட்டினார்கள்... 

7 மணி ஷிப்ட்டுக்கு  6:30 க்கே வந்திருந்தாள் சுமதி.

ஏய்....நீ எப்டி....? குழப்பமாய் கேட்டேன்.

என்னைப் பார்த்து அவள் புன்னகைத்தாள்.

இல்லை சுமதி நேத்து நைட் ரமேஷ்......? என்கிட்ட.... சொல்லி என்னை முடிக்கவிடவில்லை அவள்.

அவன் கிடக்கான் லூசு....லாக் மெசேஜ்ல எதுவும் இம்பார்டெண்ட் இருக்கா...? அதை சொல்லு முதல்ல ....கேட்டாள்.

ஓய்ய்.....என்ன நீ...  நான் கேட்டுட்டே இருக்கேன்... பதில் சொல்லாம....இப்டி வேற எதையோ பேசிட்டு இருக்க...? என் போட்டோ எதுக்கு உன் பர்ஸ்ல வச்சு இருக்க...? நீ என்ன லூசா...? ரமேஷ்கிட்ட பேசினதுல இருந்து எனக்கு எவ்ளோ டென்சனா இருந்துச்சு தெரியுமா?

ஆமா உன் போட்டோதான்...ஐடி கார்டுக்காக கொடுத்துட்டுப் போனீல முந்தா நாள்...அதுல ஒண்னு எக்ஸ்ட்ரா இருந்துச்சு....இந்தா பாத்தியா...இந்த வெங்கடாசலபதி போட்டோவுக்கு பின்னால உள்ள உன் போட்டோவ வச்சு இருந்தேன்....

வழக்கப்படி நேத்து சண்டை....ஒரு விசயத்துக்காக சாமி மேல சத்தியம் பண்ணச் சொன்னான்...நான் பர்ஸ எடுத்து வெங்கடாசலாபதி மேல கை வச்சு நான் உயிரா நினைக்கிற சாமி சத்தியமா நான் அதை செய்யலன்னு சொன்னேன்....

ஏண்டி பொய் சொல்றன்னு சொல்லிட்டு உனக்கு எல்லாம் சாமி படம் ஒரு கேடான்னு கேட்டுக்கிட்டே பர்ஸ பிடுங்கி சாமி போட்டோவ தூக்கிப் போட வெளில எடுத்தான்....

அப்போ...நிஜ சாமி போட்டோ வெளில வந்து விழுந்துடுச்சு.....ஹா.. ஹா...

எப்பவும் அவனுக்கு என் மேல  ஒரு டவுட் இருந்துட்டே இருந்ச்சு....நேத்து அது க்ளியர் ஆகிடுச்சு.....அவ்ளோதான்...!

டூட்டிக்கு போகக் கூடாதுன்னு சொன்னான்...சர்தான் போடான்னு சொல்லிட்டு வந்துட்டேன்டா....கண்கள் கலங்கி இருந்தன சுமதிக்கு.

ஏன் இப்டி சுமதி...? கேட்டேன்.

எப்பவும் சந்தேகம் அது உண்மையாவே இருந்துட்டுப் போகட்டுமேடா....

பிடிச்சுதான் எடுத்து வச்சிருந்தேன் உன் போட்டோவ..... இப்போ என்னான்ற அது என் இஷ்டம் உன்னைத் தொந்தரவு பண்ணினா கேளு....டூட்டி முடிஞ்சுதுல ....போய்க்கிட்டே இரு.....

ரிசப்சன் கவுண்ட்டர் விட்டு வெளியே போகும் வழியைக் காட்டினாள்....

சுமதி.....ஆயிரம் இருந்தாலும் ஹி இஸ் யுவர் ஹஸ்பண்ட்....சொல்லி என்னை முடிக்க விடவில்லை அவள்....

தோடா....வந்துட்டாரு வள்ளலாரு......போடா போ போய் தூங்கற வழியப் பாரு....எனக்குத் தெரியும் நான் என்ன பண்றேன்னு....அவள் கண்களைத் துடைத்துக் கொண்டாள்....

வெளியே வந்து டைம் ஆபிசில் கார்ட் பன்ச் அவுட் செய்தேன். ...

வாழ்க்கை எனக்கு புரியவில்லை.....அது ஒரு குழப்பமானதாய் தெரிந்தது.

சரி புரியாததாகவே இருக்கட்டும்......ஏன் இதில் தெளிவைத் தேடவேண்டும் என்றும் தோன்றியது.

தூக்கம் கண்களைச் சுழற்ற....வீடு நோக்கி விரைந்து கொண்டிருந்தேன்...!தேவா சுப்பையா...


Saturday, August 16, 2014

கோணல் மாணலாய் ஒரு கதை....!


கரடு முரடா சில விசயங்கள எழுதணும்னு தோணிட்டே இருக்கு எனக்கு. ஏதோ கணக்குக்கு எழுதி வச்சமா, வார்த்தைகளால விளையாடினமான்னு இல்லாம வாழ்க்கைக்குள்ள ஒரே பாய்ச்சல்ல பாய்ஞ்சு முங்கி முங்கி ஏதேதோ எழுதணும் பாஸ். கதைக்கான எந்த ஒரு வரையறையும் இல்லாம ஒரு கதை இருக்கணும். கோட்பாடுகளை எல்லாம் கையெடுத்துக் கும்பிட்டு கொஞ்சம் ஓரமா உக்காருங்க அண்ணாச்சிகளா டீ வாங்கியாறேன்னு சொல்லிட்டு...., முழுப்பரீட்சை லீவு விட்ட முத நாள் சாங்காலம் பைக்கட்ட வீட்டுக்குள்ள தூக்கி எறிஞ்சுப்புட்டு....

ஹோ......லீவு விட்டாச்ச்ச்ச்ச்ச்சு டோய்ன்னு....... தெருவே அதிர்ர மாதிரி ஓடுவோம்ல அந்த மாதிரி தப தப தன்னு எங்கிட்டாச்சும் ஒரு திசை பாத்து பிச்சிக்கிட்டு பறக்கணும்னு ஆசையா இருக்கு.  நம்ம சொந்த அனுபவங்கள பிரதி எடுத்துக் கொள்ளும் போது கிடைக்கிற சந்தோஷம்....தண்ணிக்குள்ள முங்கி,எந்திரிச்சு அப்புறம் மறுபடி முங்கி எந்திரிச்சு... அங்கிட்டு இங்கிட்டு ஓடி....தாவிக் குதிச்சு உடம்பு முழுசும் ஊறிப் போய் கிடக்குறப்ப ஒரு போதை வருமே...அந்த போதை ....அந்த போதைதான் எழுதுறப்ப கூட எனக்கு கிடைக்குது. 

நான் ஆரம்பப்பள்ளியில படிச்சப்ப பள்ளிக்கோடத்துக்கு எதித்தாப்ல இருந்த துக்குணூண்டு பூவரச மர நிழல்ல பயிறு, சோளம், நாவற்பழம்  எல்லாம் கூறு கட்டி வித்த ஆத்தாவுக்கு அப்டி அந்த வயசுலயும் வியாபாரம் செய்ய காரணமா இருந்தது உழைக்கணும்ன்ற ஆசையா இல்லை வறுமையான்னு தெரிஞ்சுக்காம விட்டுட்டோமேன்னு நடு ராத்திரியில எந்திரிச்சு உக்காந்து யோசிச்சு இருக்கேன்.  உடம்பெல்லாம் மாவு பறக்க அந்த முதுமையிலயும் ஒரு ஓட்ட சைக்கிள்ள சாக்குப் பையில கோல மாவு வச்சு இழுத்துக்கிட்டு கோல மாவு...கோல மாவேன்னு அவர் போட்டிருக்க மூக்கு கண்ணாடில படிஞ்சு கிடந்த மாவு தூசியை துடைக்க கூட நேரமில்லாம வேகாத வெயில்ல வந்து போன அந்த அழுக்கு மனுசன் எங்க போனான் இப்போ? சாகுற வரைக்கும் மூட்டைத் தூக்குறவனாவும்,  அவன் பொண்டாட்டி வீட்டு வேலை செய்றவளாவும் இருந்துட்டு செத்துப் போன நாகர்கோயில் தாத்தா குடியிருந்த புறம் போக்கு இடத்துல கவர்மெண்ட் ஆஸ்பத்திரி வந்துருச்சு இப்போ....

அண்ணே கஞ்சா குடிக்காதீங்கண்னேன்னு சொல்லிட்டு இருக்கும் போதே....கேக்காம அதை உள்ளங்கையில கொட்டிக்கிட்டு புகையில பிரிச்சுக் கொட்டின காலிசிகரட்டை பொறுமையா நிரப்பிக்கிட்டே.....போடா தம்பி போய் வேலைய பாரு...நீ வரவேணாம்னு சொன்னா நான் வரலைன்னு என் காலேஜ் டைம்ல ஹாஸ்டலுக்கு வந்து போற சிக்கந்தர் அண்ணன்....நான் ஏன் கஞ்சா குடிக்கிறேன் தெரியுமான்னு கஞ்சா குடிச்சுக்கிட்டே சொன்ன விசயங்கள....என்னோட நான் புதைச்சுக்கிட்டு செத்துப் போய்டுறதா அப்டியே...?

மாப்ள...ரம்பா..ரோஜா, ஐஸ்வர்யா ராய் எல்லாம் பத்து நாள் குளிக்காம பல்லு விளக்காம ஈறும் பேனுமா வந்தா அப்புடியே பாத்து ரசிப்பியளா மாப்ள...?அழகுன்னா என்னாண்டு நினைக்கிற நீய்யி? ஊளைப் பிண்டங்கள், நாறும் சவங்கள்னு சொல்லிட்டு பட்டினத்தார் பாட்ட ராகமாவே பாடிக்காட்டுற செல்வமணி மாமா சொல்லித்தான் மரப்பசு நாவலையும் ஒரு புளிய மரத்தின் கதை நாவலையும் நான் படிக்கவே ஆரம்பிச்சேன்...! அந்த நாவல்கள்தான் ராஜேஸ்குமாருக்கு அப்புறம் பாலகுமரனுக்கு முன்னாடி நான் படிச்ச நாவல்கள். இப்போ யோசிச்சுப் பாத்தா... 

எவ்ளோ நாவல்கள் என்னைச் சுத்தி நடந்து இருக்கு, எத்தனை கதைகளை நான் கடந்து வந்து இருக்கேன்றது எனக்கே ஆச்சர்யமா இருக்கு. கதைகளும் கவிதைகளும் வாழ்க்கைக்குள் இருந்தே கிடைக்கின்றன. சொந்த அனுபவங்கள் இல்லேன்னா சுத்தி இருக்கவங்களுக்கு நடந்த விசயங்கள் இது கூட ரெண்டு டீஸ்பூன் கற்பனை, ஒரு டீஸ்பூன் பைத்தியக்காரத்தனம், ஒரு கைப்பிடி எதார்த்தம், ரெண்டு சிட்டிகை விருப்பங்கள், கால் ட்யூஸ்பூன் எரிச்சல்  கொஞ்சம் சந்தோசம், கொஞ்சம் துக்கம் போட்டு இறக்கினா சுட சுட கதை ரெடி.

கவிதை எழுதணும்னா....முழுக்க முழுக்க கற்பனையை 10 லிட்டர் ஊத்தி, முட்டாள்தனத்தையும், எதார்த்தத்தையும் சரிசமமா கரைச்சு தாளிக்காம இறக்கி வச்சோம்னா ஆச்சு....! எல்லோருக்கும் நடக்குற விசயங்கள் அப்போ அப்போ அது சாதரணமாத்தான் தெரியும் ஆனா அதை விட்டு கொஞ்சம் விலகி நின்னு அப்டி நடக்குற விசயங்களுக்குள்ள இருக்குற புதிர் தன்மைய, குழப்பத்த, கோணல் மாணல்களை ரசிக்கிறப்ப....வாழ்க்கை ரொம்பவே அழகாயிடுது....!

அப்படி ஒரு கோணல் மாணலுக்குள்ள போலாம் வாங்க......

அன்னிக்கு எனக்கு நைட் ஷிப்ட். 9மணிக்கு ரிஷப்சன் கவுண்டர் உள்ள போன உடனேயே....ஆப்பரேட்டர் கேபின்ல போன்.........கொய்ய்ய்ய்ய்ய்ங்ன்னு கத்த ஆரம்பிச்சுடுச்சு.  குட் ஈவினிங் மே ஐ ஹெல்ப்ப்யூன்னு கேட்ட எனக்கு அதுக்கப்புறம் தலை சுத்தாதது ஒண்ணுதான் குறை....

யார்கிட்ட பேசணும்னு கேட்டா மறுமுனையில இருக்கவன் என்கிட்டதான் பேசணும்னு சொல்றான்....நான் தான் பேசுறேன்னு சொன்ன உடனேயே....செருப்பால அடிக்கிற மாதிரி கேட்டான் பாருங்க....என் பொண்டாட்டி உங்க போட்டோவ எதுக்கு சார் அவ பர்ஸ்ல வச்சு இருக்கான்னு....

எனக்கு திகீர்னு தூக்கிப் போட்டுச்சு.......! எக்ஸ் க்யூஸ் மீ....யார்பேசுறீங்கன்னு எச்சிலை முழுங்க முடியாம முழுங்கிக்கிட்டே கேட்டேன்....

ஐயம் ரமேஷ்...உங்க கூட ப்ரண்ட் ஆஃபிஸ்ல வேலை பாக்குறாளே சுமதி அவளோட ஹஸ்பண்ட்ன்னு அவன் சொன்னப்ப...கிட்ட தட்ட எனக்கு  ஹார்ட் அட்டாக்கே வந்துடுச்சு....

ரமேஷுக்கும் சுமதிக்கும் லவ் மேரேஜ்தான்னு எனக்குத் தெரியும். எட்டாவது படிக்கிறப்ப லவ் பண்ண ஆரம்பிச்சவங்க ப்ளஸ் டூ படிக்கிறப்ப வீட்டை எதித்துக் கிட்டு கல்யாணம் பண்ணிக்கிட்டு சேர்ந்து வாழ ஆரம்பிச்சாங்க. சரண்யாவுக்கு மூணு வயசு ஆகும் போது ரெண்டு பேரு வீட்லயும் காம்ப்ரமைஸ் ஆகி இவுங்கள ஏத்துக்கிட்டாங்க. அதுக்கு அப்புறம்தான் நிஜப் பிரச்சினை ஆரம்பிச்சுச்சு  அவுங்க வாழ்க்கையில!  சுமதி மாநிறமா இருந்தாலும் பார்க்க லட்சணமா இருக்க பொண்ணுதான் தெலுங்கு பேசுற மாதிரி தமிழையும், தமிழ் பேசுற மாதிரி இங்கிலீசையும் தடால் படால்னு பேசுற கேரக்டர். ரெண்டு பேரும் ஒரே ஷிப்டல வேலை பாக்குறப்ப அவ சொந்தக் கதை சோகக்கதை எல்லாம் சொல்லி புலம்பித் தீத்துடுவா....

ரமேஷ்தான் டெய்லி அவளக் கொண்டு வந்து ட்ராப் பண்ணுவான், கூட்டிக்கிட்டுப் போவான். சுமதி டூட்டில இருக்கப்பவே நூறு கால் பண்ணிடுவான் ரமேஷ். என்ன பண்ற சாப்டியா? அது என்னாச்சு இது என்னாச்சுன்னு கேள்வி மேல கேள்வி கேட்டுட்டே இருப்பான்...இப்போ எக்ஸாக்ட்டா என்ன பண்றன்னு கேட்டுட்டே இருப்பான். 

எப்பவும் செக்கியூரிட்டி ஆபிசர் மாதிரியே சுத்தி சுத்தி வர்ராண்டா.... செம்ம கடுப்பாகுது....ஒரு சுதந்திரமே கிடையாது. காலையில இருந்து வேலை பாக்குறோம்....டெய்லி கூட படுத்துக்கன்னு சொல்றது கூட தப்பு இல்லடா...ஆனா அலுத்து சலிச்சு ஒரு நாள் ரெண்டு நாள் படுக்க போகலேன்னு வச்சுக்க.... அவ்ளோதான்...

உனக்கு என்னைப் பிடிக்கலையாடி....?ன்னு கேட்டு லபோ திபோன்னு கத்த ஆரம்பிச்சுடுவான். வேலைக்கு போகாம வீட்ல இருந்து தொலக்கிறேன்னு சொன்னா வருமானம் பத்தல... யுரேகா ஃபோர்ப்ஸ்ல சேல்ஸ் எக்ஸியூட்டிவா வேல பாத்து  கோட்டையா கட்ட முடியும்....? டேய் நான் ஒரு ஸ்டார் ஹோட்டல் ரிஷப்சனிஸ்ட்டுடா... நான் ப்ரஸண்ட்டப்ளா இருக்கணும்...இல்லை என்ன வேலைய விட்டுத் தூக்கிடுவாங்கன்னு எத்தனை தடவை சொன்னாலும் கண் மைய கொறச்சுப் போட்டுக்க....லிப்ஸ்டிக் எதுக்கு அடிக்கிற மாதிரி? பேசியல் எதுக்கு? த்ரட்டிங் எதுக்குன்னு அவன் கேக்குற கேள்விகளுக்கு நடுவுல வாழ்ந்து வாழ்ந்து அலுத்துப் போச்சுன்னு அவ புலம்புறத கேக்குறதே எனக்கு வாடிக்கையாப் ஆயிடுச்சு...

ஒரு நாள் எங்க ரெண்டு பேருக்குமே டூட்டி நாலு மணிக்கு முடிஞ்சு போச்சு வெளில வந்து பைக்க நான் உதைஞ்சுட்டு இருந்தப்ப....என்னைக் கொஞ்சம் சுமதி கேட்டப்ப மணி ஈவினிங் நாலே முக்கால். ரமேஷ்க்கு மீட்டிங் இருக்காம்... மீட்டிங் முடிச்சுட்டு வர ஏழு மணி ஆகுமாம் அதுவரைக்கும் ஹோட்டல்லயே வெயிட் பண்ண சொல்றாண்டா....என்னால முடியாது என்றாள்...

சரி வான்னு சொல்லி அவளை வண்டில ஏற்றிக் கொண்டு கிளம்பினேன்...


ரொம்ப குளிருதுடா... கேன் வீ கேவ் சம்திங்க் என்று சுமதி கேட்டதற்காக நான் வண்டியை கிண்டியில் ஒரு ரெஸ்ட்டாரண்டில் நிறுத்திய போது தூற ஆரம்பித்த மழை சோ.....ன்னு அடித்துப் பெய்ய ஆரம்பித்திருந்தது.  மழையும் ஒரு பெண்ணோட அருகாமையும் என்னை எதுவும் செய்யலேன்னு சொன்னா அது சுத்தப் பொய். சுமதி பேசிக் கொண்டே இருந்தாள். டீக்குடிக்கிறது எப்பவுமே அலாதியான சுகம்தான் எனக்கு. சுட சுட ஆவி பறக்க டீய  கையில வச்சுக்கிட்டு எங்கயோ எதையோ யோசிச்சுக்கிட்டே ஊதி ஊதி பொறுக்குற சூட்டோட வாய்க்கு கொண்டு வந்து ஆற அமர நிதானமா மிடறு மிடறா டீயை விழுங்குறப்ப சூடான டீ நெஞ்சுக்குள்ள போய் வயித்தைத் தொட்டு பரவுறத பொறுமையா நான் வேடிக்கைப் பாக்குறதும் உண்டு.

ஏதோ ஒரு நிம்மதிய, ஏதோ ஒரு ஏக்கத்தை, எப்டி எப்டியோ ஆன சில கனவுகள, பல நேர இனம் புரியாத ஒரு மகிழ்ச்சிய, சில நேரம் கண்ணீர் சிந்துற அளவுக்கான சோகங்களை நான் அந்த கணத்துல அனுபவிச்சுகறதும் உண்டு. நீரின்றி அமையாது உலகுன்ற மாதிரி எனக்கு டீ இன்றி அமையாதுன்னு வச்சுக்கோங்களேன்... சுமதியின் பேச்சு நட்போட எட்ஜ்ல நின்னுகிட்டு இருந்துச்சு அதுக்கு அந்தப்பக்கம் ஒரு மைக்ரோ மில்லி மீட்டர் நவுந்துச்சுன்னா... தட்ஸ் ஆல்....

ஏதேதோ  விபரீதங்கள் நடக்க ஆரம்பிச்சுடும்னு எனக்கு தோணிச்சு. 

எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும்டா...ஏன்னா எதா இருந்தாலும் பொறுமையா கேட்டுக்குற நீன்னு அவ சொன்னப்ப அவளை உத்துப் பாத்தேன்..சுமதி உணர்ச்சிப் பெருக்கில் இருந்தாள். வெளியே பெய்ற மழையும், அந்த ஒரு மச மசப்பான சாயந்திர நேரத்தின் இருளும், அவளுக்குள்ள டன் டன்னா கொட்டிக் கிடந்த சமகாலத்தோட அதிருப்திகளும் கையில ஈட்டியோட என்னை குறிப்பாத்துட்டு இருந்த மாதிரி எனக்குத் தோணிச்சு. அந்த சூழல் எனக்கு ரொம்ப புடிச்சு இருந்துச்சு ஆனா ரொம்பவே பயமாவும் இருந்துச்சு. 22 வயசுல 21வயசு பொண்ணுக்கிட்ட உக்காந்து பேசுற அப்டி ஒரு சூழல் எல்லோருக்கும் வரணும். வந்தாத்தான் அது என்ன மாதிரியான சந்தோசம், அல்லது பயம் அல்லது விபரீதம் அப்டீன்றது புரியும். 

ரமேஷ் உன்னைத் தேடுவானே....சுமதி....கிளம்பலாமா....?

நான் கேட்ட போது மழை இன்னும் ஆக்ரோஷமாய் நீங்க முடிவு பண்றப்ப எல்லாம் நான் எப்டிடா சட்டுன்னு விட்டுப் போறது... எனக்கு எப்பத் தோணுதோ அப்போ போவேன்னு சொல்லாம சொல்லிட்டு இருந்துச்சு. ராமவரத்துல விட்டாப் போதும்ல....

கேட்டுக் கொண்டே சிகரெட்டை எடுத்து பற்ற வைத்தேன்.......

அடப்பாவி சிகரெட் எல்லாம் குடிப்பியா....? பொய் கோபம் காட்டினாள் சுமதி....

புகை உள்ளுக்குள் சென்று நிக்கோடினை ரத்தத்தில் கலக்கத் தொடங்கியபோது சுமதி எனக்கு அழகாகத் தெரிந்தாள். அவளை பார்த்து புன்னகைக்கத் தோன்றியது. புன்னகைத்தேன். வெட்கப்பட்டாள்....

ப்ரியங்களைப் போர்த்திக் கொண்டு விட்டால்...அப்போதுதான் வெட்கக் குளிர் நமக்குள் எடுக்க ஆரம்பிக்கிறது....யோசித்துக் கொண்டே.... வா சுமதி.... கிளம்பலாம் என்று சொன்ன போது....

அச்சச்ச்சோ... ரமேஷ் வர்ராண்டா....., வாசலில் பைக்கை நிறுத்திக் கொண்டிருந்தவனைக் காட்டி பதறினாள் சுமதி....(இன்னும் கோணலாகும்......)தேவா சுப்பையா....


Tuesday, August 12, 2014

சூப்பர் ஸ்டார்...!டிவிடியைத் தட்டி மீண்டுமொருமுறை ஜானி படத்தைப் பார்க்க ஒரு கோப்பை தேநீரோடு அமர்ந்தேன். எத்தனை முறை நனைந்தாலும் அலுக்காத மழையைப் போல எப்போது பார்த்தாலும் ஒரு சந்தோஷ வெளிக்குள் தரதரவென்று இழுத்துச் செல்லும் மென்மையான திரைப்படம் அது. அடுத்த சூப்பர் ஸ்டார் ஆக வெட்கமில்லாமல் ஆசைப்படும் சமகாலத்து கத்துக்குட்டி நடிகர்களையும், வியாபாரத்திற்காக சர்வே நடத்தி பரபரப்பு கூட்டிக் கொள்ளும் ஊடகங்களையும் நினைத்துக் கொண்டேன்.... எனக்கு சிரிப்பு வந்தது. எவ்வளவு பெரிய ஆளுமை இந்த ரஜினி? வெறுமனே மாஸ் ஹீரோவாய் தன்னைக் காட்டிக் கொள்ள மசாலா படங்களில் நடித்து ரஜினியை போல வர விரும்பும் நடிகர்கள் ரஜினியின் எல்லா படங்களையும் பார்த்து இருப்பார்களா என்பது சந்தேகம்தான்.

ரஜினிக்கு முன்னால் கொடிகட்டிப் பறந்த எம்.ஜி.ஆர் தனக்கென ஒரு பாணியை வைத்திருந்தார். ஏழைப்பங்காளனாக தன்னை திரையில் வரிந்து கொண்ட எம்.ஜி.ஆர் படங்களின் பாடல்கள் எல்லாமே கொள்கை விளக்கப் பாடல்கள் போன்றுதான் இருக்கும். ' நான் உங்கள் வீட்டுப் பிள்ளை இது ஊரறிந்த உண்மை' என்ற ரீதியில் திரையில் ஆடிப்பாடிய எம்.ஜி.ஆர் 'நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால் ' என்று ஏழை மக்களை மீட்க வந்த ரட்சகராய் தன்னைக் காட்டிக் கொண்டார். எம்.ஜி.ஆர் பார்முலா அவரது காலத்தில் அவருக்கு கை கொடுத்தது.  எம்.ஜி.ஆர் படங்களும் சக்கைப் போடு போட்டன. ஒரு காட்சியில் கூட புகைக்காமல், மது அருந்தாமல் தன்னை ஒரு அக்மார்க் நல்ல பிள்ளையாக காட்டிக் கொண்ட எம்.ஜி.ஆர் ஃபார்முலா எம்.ஜி.ஆருக்கு மட்டுமே க்ளிக்கானது. 

அதற்குப் பிறகு வந்த நடிகர்கள் எம்.ஜி.ஆர் மாதிரி மேக்அப் போட்டார்கள், எம்.ஜி.ஆரைப் போலவே பாட்டெழுதிக் கொண்டார்கள், அடுக்கடுக்காய் வசனம் பேசினார்கள்.. ஆனால் எம்.ஜி.ஆரைத்தான் மக்களுக்குப் பிடித்ததே அன்றி எம்.ஜி.ஆரைப் போன்றவர்களை அல்ல என்பதால் அப்படி நடித்தவர்களை எல்லாம் கவனமாக வீட்டுக்கு அனுப்பி வைத்தார்கள் தமிழ் ரசிகர்கள். ரஜினி நடிக்க வந்த போதே வாயில் சிகரெட்டோடு வந்தார். தமிழ் சினிமா ரசிகர்கள் தங்கள் மனதில் வைத்திருந்த கதாநாயக பிம்பங்களை எல்லாம் தூக்கிப் போட்டு உடைத்தார் ரஜினி.


அபூர்வ ராகங்களில் கேட்டை  திறந்து கொண்டு ரஜினி வந்த போதே தியேட்டரில் விசில் பறந்ததாம். யார் இந்த ஆள் இப்படி ஒரு முரட்டுத் தனமான வேகத்தில் நடிக்கிறாரே...வசனம் பேசுகிறாரே...? என்று அப்போதைய சினிமா உலகமும் மெல்ல முணுமுணுக்கத் தொடங்கியது. எம்.ஜி.ஆர் என்ன என்ன செய்தாரோ அதற்கு நேர் எதிராய் ரஜினி நடிக்கத் தொடங்கினார். எம்ஜிஆரின் தலைமுடியில் ஒரு முடி கூட படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை ஆடாது அசையாது. ரஜினியோ அறிமுகம் ஆன போதே பரட்டைத் தலையோடு அறிமுகம் ஆனதோடு.... நொடிக்கு ஒரு முறை முடியை தன் கை கொண்டு கலைத்துக் கோதியும் கொண்டார்.

ரஜினி தலை கலைத்து முடிகோதும் ஸ்டைலைப் பார்த்து அசந்து போனது தமிழ் சினிமா. சிகரெட்டை வைத்துக் கொண்டு அவர் செய்த அட்ராசிட்டியை எல்லாம் யாராலும் அடக்க முடியவில்லை அப்போது. ரஜினி என்ற பிம்பம் மிருகத்தனமாய் வளரத்தொடங்கியது. வில்லனாய் நடித்த ரஜினி ஹீரோவாய் நடிக்கத் தொடங்கினார். தமிழ் சினிமாவில் கதாநாயகர்களுக்கான புதிய திறப்பு ஒன்று உருவானது. ரஜினி ஒரு நாளும் மக்கள் திலகமாகவோ அல்லது நடிகர் திலகமாகவோ உருவாக நினைக்கவில்லை. ரஜினி ரஜினியாக தன்னை வெளிக்காட்டிக் கொண்ட போது அவரது மின்னல் நடிப்பால் கட்டுண்டு தானே வந்து ஒட்டிக் கொண்ட பட்டம் தான்.....

                                                      சூப்பர் ஸ்டார்....பட்டம்.

ரஜினிக்கு முன்னால் சூப்பர் ஸ்டார் என்ற அடைமொழியோடு யாரும் எப்படி இல்லாமல் இருந்தார்களோ அதே மாதிரி ரஜினிக்குப் பிறகும் சூப்பர் ஸ்டார் என்ற அடைமொழியோடு யாரும் இருக்கவும் முடியாது. அது அவரது நடிப்பிற்கு, ஸ்டைலிற்கு, மாஸ் ஹிட்ஸ்களுக்காக கிடைத்த பட்டம்.  ரஜினி மாதிரி வர நினைப்பவர்கள் எல்லாம்  எம்.ஜி.ஆர் மாதிரி ஆக நினைத்தவர்கள் மாதிரி மக்களால் நிராகரிக்கப் பட்டிருக்கிறார்கள், நிராகரிக்கப் படுவார்கள். இன்னும் சொல்லப் போனால் எவ்வளவு பெரிய நம்ப முடியாத டுபாக்கூர் காட்சிகளாய் இருந்தாலும் அதை ரஜினியைக் கொண்டு செய்வித்தால் அதை நம்ப ரசிகர்கள் தயாராய் இருந்தார்கள். அதுதான் இன்றளவும் ரஜினி ரசிகர்கள் மனதில் செய்து வைத்திருக்கும் மிகப்பெரிய மேஜிக்.


ஜானி எனது திரையில் ஓடிக் கொண்டிருந்தது. ஜானியும் அர்ச்சனாவும் சந்தித்துப் பேசும் காட்சியில் தனக்குப் பிடித்த பாடகி தனக்காக பாடுவதை அனுபவித்து ரசித்துக்  கொண்டிருந்தார் ரஜினி. எத்தனை உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறது அந்த முகம். எத்தனை வசீகரம் அந்தக் கண்களில்....நிஜமாய் காதலில் மிதந்து கொண்டிருந்தது ரஜினியின் கண்கள். ரஜினியின் வேலை அந்தப் பாடலை கேட்க வேண்டியது மட்டுமே....காட்சிக்கும் பாடலுக்கும் உயிர் கொடுத்துக் கொண்டிருந்தார் ராஜா சார். அனுபவித்தல் என்பது உணர்வோடு தொடர்புடையது அதை யாராலும் விளக்க முடியாது என்ற போதிலும் ஒரு கலைஞன் அந்த உணர்வினை மிக எளிதாக வெளிப்படுத்தி விடுகிறான். எழுத்தோ, பேச்சோ, நடிப்போ அதில் வெளிப்படும் உணர்வு அந்த கலைஞனின் ஆழமான மன உணர்வுகளோடு தொடர்புடையதாய் இருக்க வேண்டும். ரசிப்பினை எப்படி நடிப்பாக்குவது? ரசனையை எப்படி மொழியாக்குவது? லயித்தலை எப்படி திரைப்படுத்துவது? 

' நீரோடை போலவே என் பெண்மை
நீராட வந்ததே என் மென்மை
சிரிக்கும் விழிகளில் ஒரு மயக்கம் பரவுதே
வார்த்தைகள் தேவையா.....'

என்று ஏக்கங்கள்  நிறைந்த கண்களோடு ஸ்ரீதேவி திரையில் பாடிக் கொண்டிருந்தது எத்தனை நிஜம்...? எப்படி ரஜினி சார் ஆக்சன் ஹீரோ என்ற கட்டுக்குள் நீங்கள் வந்து சிக்கிக் கொண்டீர்கள் என்று ரஜினியிடம் கேட்கத் தோன்றியது எனக்கு.

சிறுவயது முதல் ரஜினியின் ஆர்ப்பாட்டமான ஆக்சன் திரைப்படங்களால் ஈர்க்கப்பட்டு வளர்ந்திருந்த எனக்கு ரஜினி இன்னும் கதையம்சங்கள் கொண்ட ஜானி, முள்ளும் மலரும், ஆறிலிருந்து அறுபது வரை போன்ற படங்களில் எல்லாம் நடித்திருந்தால் தமிழ் சினிமாவுக்கு இன்னும் நிறைய வசீகரமான கலை படைப்புக்கள் கிடைத்திருக்கக் கூடும்.  ஜானியில்  குற்ற உணர்ச்சியோடு வாழும் கதாபாத்திரமாக ரஜினி அலட்டல் இல்லாமல் நடித்திருக்கும் ஒவ்வொரு காட்சியையும் பார்த்து பார்த்து செதுக்கி இருப்பார் மகேந்திரன் சார்.

நேற்று வந்த ஜிகிர்தாண்டா படத்தைப் போய் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் கார்ப்பரேட் விமர்சகர்களை எல்லாம் பார்த்தால் எனக்கு சிரிப்பாய்த்தான் இருக்கிறது.

ஜானியில் மொத்தம் மூன்று கதாநாயகிகள். இரண்டு கதாநாயகர்கள். இரண்டு பேரும் ரஜினிதான். ஜானி கதாபாத்திரம் சூழ்நிலையால் ஏமாற்று வேலைகள் செய்யும், வித்யாசாகர் கதாபாத்திரம் முடிவெட்டும் வேலை செய்யும் ஒரு கஞ்சத்தனம் கொண்ட எதார்த்தமாய் வடிவமைக்கப்பட்ட ஒன்று. ஆரம்ப காட்சிகளில் ஜானி கெட்டவர், வித்யாசாகர் நல்லவர். ஏமாற்று வேலைகள் செய்யும் ஜானியை.. அடக்க ஒடுக்கமான பாடகி அர்ச்சனாவான ஸ்ரீதேவி காதலிக்கிறார். நல்லவரான வித்யாசாகரை அதிக ஆசைகள் கொண்ட பாமா காதலிக்கிறாள். 

நல்லவரான வித்யாசாகர் கெட்டவராய் மாறுவதும் சூழலால் ஏமாற்று வேலை செய்யும் ஜானி நல்லவராய் மாறுவதும் கதையின் ஓட்டத்தில் நிகழ்ந்து விடுகிறது. ஸ்ரீதேவிக்கும் ஜானிக்கும் இடையேயான அந்த நட்பு அழகான காதலாய் மாறுவது கவிதையாய் மலருகிறது திரையில். மென்மையான உணர்வுகளை ரஜினியைப் போன்று வேறு யாராலும் நளினமாய் வெளிக்காட்ட முடியுமா என்பது சந்தேகம்தான். கமலின் காதல் காட்சிகளில் காதலுக்குப் பின்னால் மெலிதான காமமும் கூடவே நிழலாய் தொடர்ந்து கொண்டே இருக்கும். இறுக்கமான அணைத்தல்களும் அழுத்தமான உதட்டு முத்தங்களும் என்று கமல் நடித்ததை வைத்துதான் அவருக்கு காதல் மன்னன் என்று பட்டமெல்லாம் கூடக் கொடுக்கப்பட்டது.....


ஜானி படத்தை ஊன்றிப் பார்த்தால் புரியும் ரஜினிதான் காதல் மன்னனும் கூட என்று. விரசமில்லாத காதலை சொல்லும் ரஜினியின் விழிகளும் அவரது உதட்டோரத்தில் ஒளிந்து கிடக்கும் புன்னகையும் ஓராயிரம் செய்திகளை அதைப் பார்க்கும் ஆண்களுக்கே கொடுக்கும் போது பெண்களுக்குக் கொடுக்காதா என்ன....? எல்லாவிதமான நடிப்புத் திறனும் கொண்ட ரஜினி என்ற சிங்கம் தன் ரசிகர்கள் விரும்புகிறார்கள் என்றுதான் அசாகாயசூர மசாலா படங்களில் எல்லாம் நடிக்க ஆரம்பித்தது. ரஜினி படத்தில் நடித்தால் மட்டும் போதும் கதையாவது மண்ணாங்கட்டியாவது என்று அலறி அடித்துக் கொண்டு நூறுநாளைத் தாண்டி ஓடிய அவரின் படங்கள் அனேகம்.  தமிழ் சினிமாவின் பிடறியைப் பிடித்து உலுக்கிய பாட்சாவைப் போலெல்லாம் இனி ஒரு தமிழ்ப்படம் வந்து இனி எப்போது தமிழ் ரசிகர்களை ஆனந்தக் கூத்தாட வைக்கப் போகிறது என்று சொல்லுங்கள் பார்க்கலாம்...? 

ரஜினி என்னும் மனிதர் சூப்பர் ஸ்டாரானது எப்படி என்பதற்கான ஒரு சின்ன ப்ரிவியூதான் இந்தக் கட்டுரை. காலங்கள் கடந்தும் தமிழ் மண்ணின் மறுக்கவோ மறக்கவோ முடியாத அசாத்தியமான பிம்பம் ரஜினி என்னும் பிரம்மாண்டம். தொடர்ச்சியாய் மூன்று வெற்றிப்படங்கள் கொடுக்க முடியாத வெத்துவேட்டுக்கள் எல்லாம் படத்திற்கு தலைவா என்று பெயரிட்டுக் கொண்டால்....எங்கள் தலைவர் ஆகி விடுவார்களா என்ன...?

சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு ஆசைப்படும் ஸ்கூல் பாய்ஸ்கள் முதலில் சூப்பர் ஹிட் படங்களைக் கொடுக்கட்டும்....அப்புறம் கனவு காணலாம் சூப்பர்ஸ்டார் ஆவது பற்றி எல்லாம். தமிழ் சினிமாவைப் பொறுத்த வரையில் ஒரே ஒரு சூப்பர்ஸ்டார் ரஜினி மட்டுமே என்பதைக் காலம் கத்துக் குட்டிகளுக்குத் தெளிவாய் கத்துக் கொடுக்கும் என்பதோடு மட்டுமில்லாமல் எத்தனை பெரிய சூறாவளி வந்தாலும் ரஜினி உருவாக்கி வைத்திருக்கும் வெற்றிகளின் சிகரத்தை தொட்டுவிட முடியாது என்பதே நிதர்சனம்.தேவா சுப்பையா...Sunday, August 3, 2014

அப்பத்தா...!


ஏம்பா... ரவைக்குத் தங்கிட்டு காலையில போனா என்ன....? கெஞ்சலாய் மகனின் முகத்தைப் பார்த்த மரகதத்திற்கு 70 வயதிருக்கும். 

ஏண்டி நாம வேணும்னா இருந்துட்டு காலையில போவோமா...? கிசுகிசுப்பாய் மனைவியிடம் போய்க் கேட்டார் பழனி.

என்னங்க கூறுகெட்டத்தனமா பேசிக்கிட்டுஇருக்கீங்க. உங்க ஆத்தாள பாக்கணும்னுதானே இம்புட்டு தூரம் திருச்சில இருந்து வந்து இருக்கோம். இந்தப் பட்டிக்காட்டுல புள்ளக்குட்டிகளை வச்சுக்கிட்டு எப்படி இருக்கறது? வெளிநாட்ல இருந்து வந்துட்டு இங்க எப்டி இருப்பாக நம்ம மகளும் மருமகனும்...? பத்தாக்குறைக்கு கைப்புள்ளைய வேற கைல வச்சு இருக்கா....அவ, குளிக்க வைக்க ஒண்ணுக்கும் வசதி இல்ல இங்க...

பக்கத்துல ஆறு கிலோமீட்டர்லதான் டவுன்ல என் தங்கச்சி வீடு இருக்கு அங்க போய் படுத்து இருந்துட்டு நாளைக்கு சாங்காலமா ஊருக்கு கிளம்பிப் போவோம்...

பழனியால் மனைவியை எதிர்த்துப் பேச முடியவில்லை. பேச முடியாமல்தான் நிறைய பழனிக்கள் தங்களின் வாழ்க்கையின் பிற்பகுதியை கழித்துக் கொண்டிருக்கிறார்கள். பெண்ணடிமைப் பேச்சு எல்லாம் ஒரு காலம் வரைக்கும்தான் பரபரப்பாய் நம் ஊரில் பேசப்படுகிறது. ரெண்டு பிள்ளை பெற்றவுடன் பெண் மெல்ல மெல்ல தனது கிடுக்குப் பிடியைப் போட்டு ஆளுமையைத் தொடங்குகிறாள். 40 வயதுக்கு மேலான வாய்பேசக் கூடிய கணவர்களை விரல் விட்டு நாம் எண்ணி விடலாம்.

ஏண்டி... நாங்க அக்கா தங்கச்சிங்களோட சேத்து ஆறேழு பேரும் இங்கதானடி வளர்ந்தோம்...! காலையில வந்து கொல சாமி கும்பிட ஆத்தாள கூப்டுக்கிட்டுப் போனோம்...இப்டி திரும்பி வரையில சாங்காலம் 4 மணிக்கு அத கொண்டாந்து வுட்டுட்டுப் போறது சரி இல்லேல்ல.... 

என் உத்தியோகத்தை கட்டிக்கிட்டு நான் திருச்சியிலயே கிடக்கேன்...அங்கனயும் கூட்டியாந்து வச்சிகிட முடியலை. அதுவும் வந்து அங்க இருக்க மாட்டேங்குது... வந்து இருந்தாலும் ஏதாச்சும் கரைச்சல் வந்துடுதுன்னு பயந்துதானே.... அது பாட்டுக்கு தனியாக் கிடக்கு இந்த கருவக் காட்டுக்குள்ள....

இன்னிக்கு ஒரு நாளு மருமவனும் மகளும் இங்க இருக்க மாட்டாகளா என்ன...? பழைய வீடுதான்...எங்கய்யாவோட ரத்தின கம்பளி,மெத்தை எல்லாம் மெச்சு மேல   இருக்கு விரிச்சுப் படுத்துகிடலாம்.....பர்மாக்காரு வீட்ல பெரிய டேபிள் பேனு இருக்காம் அதை வாங்கியாந்து போடச் சொல்லலாம். அவுக இங்க ஹால்ல படுத்துக்கட்டும் நாமளும் பயலுகளும் வெளிய திண்ணையில படுத்துக்கிடுவோம்.... ஆத்தா ஆசைப்படுதுடி.....

பழனி தயங்கித் தயங்கி சொன்னார்.

இந்தா பாருங்க... பொச கெட்டத்தனமா மறுக்கா மறுக்கா பேசிக்கிட்டு இருக்காதீக....எனகு கெட்ட கோவம் வரும் பாத்துக்கோங்க...! ஊர்ல இருந்து வந்தவக இந்த மொட்டப் பட்டிகாட்டுக்கு வந்ததே பெருசு...வேணும்னா நீங்களும் உங்க மயன்களும் இருந்துட்டு வாங்க.. நான் எம்புள்ளைய கூட்டிக்கிட்டு எந்தங்கச்சி வீட்டுக்குப் போறேன்....

மகள்கள் தான் அம்மாக்களுக்கு எல்லாமே...! மகன்கள் மீது பாசம் இருந்தாலும் எப்படியாவது அவர்கள் பிழைத்துக் கொள்வார்கள் என்றே அம்மாக்கள் பெரும்பாலும் எண்ணுகிறார்கள். மகள்களின் கணவன்களை கவனிப்பதில் தகப்பனை விட தாயே எப்போதும் முன் நிற்கிறாள். தன் மகளை நன்றாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் விழுந்து விழுந்து மருமகன்களுக்கு வேலை செய்யும்  தாய்மார்கள் தமிழகம் முழுதும் காலம் காலமாய் பிறந்து கொண்டேதான் இருக்கிறார்கள். தன் மகள்கள் மீது பாசம் வைக்கும் அம்மாக்கள் ஏனோ  தனக்கு வரும் மருமகள்களின் அம்மாக்களும் அதே பாசம் இருக்கும் என்பதை வசதியாய் மறந்து கொள்கிறார்கள்...!

பழனியை ஏசிக் கொண்டிருந்தாள்....சரசு....

ஏப்பா ஒரு வா காப்பித்தண்ணி குடி....இந்தாத்தா நீயும் எடுத்துக்க......

மரகதம் வந்ததும் பேச்சை நிறுத்திக் கொண்டாள் சரசு.

ஏம்ப்பா....ராவைக்கு இருந்துட்டு வெள்ளனப் போப்பா....சோலையம்மாவக் கூப்டு  கோழிய கவுத்துப் போடச் சொல்லுறேன்....ஒரு வாய் எல்லாரும் ராத்திரி சாப்டுட்டு போங்கய்யா....

அத்தே.....உங்க பேத்தி பேரன் எல்லாம் ஊர்ல இருந்து வந்து இருக்காக. அதுகளப் பாருங்க வீட்டுக்குள்ளக் கூட வராம வெளிலயே நிக்குதுக காத்துக்காக..., அதுக எப்டி ராத்திரிக்கு இங்க தங்குங்க....? அதனால நாங்க போய்ட்டு இன்னொரு நாளைக்கு வர்றோம்....சரியா.... கைப்புள்ளைய வேற வச்சிருக்காள்ள ஒங்க பேத்தி....

சரசு சொன்னதைக் கண்களைச் சுருக்கிப் பார்த்தாள் மரகதம். தலை மெலிதாய் ஆடத்தொடங்கி இருந்த மரகதம் அந்தக் காலத்து மனுஷி என்று குறிப்பிட்டுச் சொல்லும் படியான பழமையை இன்னமும் உடையிலும் உள்ளத்திலும் கொண்டிருப்பவள். காது வளர்த்து பெரிய புடம் போட்டிருப்பாள் முன்பெல்லாம். புருசன் செத்துப் போனதுக்கப்புறம் இருந்த நகை எல்லாம் எங்கே போனது என்றே தெரியவிலை. மெலிந்த தேகத்தோடும் தள்ளாத முதுமையோடும் தன் மனைவியிடம் கெஞ்சிக் கொண்டிருந்த  தன் தாயைப் பார்த்து வருத்தப்பட்டான் பழனி.

காலம் எல்லாவற்றையும் மாற்றி விடுகிறது. சூழல்களே எது அவசியம் அல்லது அனாவசியம் என்று தீர்மானிக்கிறது. முதன்மைத் தேவைகளாய் இருப்பது தேவையற்றதாகவும் தேவையற்றதாய் இருப்பது தேவையானதாகவும் காலத்தின் போக்கில் மாறிப் போகிறது.

ஆத்தா நான் இருந்துட்டு நாளைக்கு காலையில போறனாத்தா....அவுக டவுன்ல சரசுவோட தங்கச்சி வீட்டுக்கு போறாகளாம் ...தொண்டை அடைக்க அம்மாவின் கையைப் பிடித்துக்  கொண்டு சொன்னான் பழனி....

ஓ.....அவுக போறாகளாக்கும்....சரி... நீ இருக்கியா.....சரிப்பா....என்றால் மரககம். முதுமை பெரும்பாலும் வாதிடுவதில்லை, அது சகித்துக் கொள்கிறது, விட்டுக் கொடுக்கிறது, இனி என்ன இருக்கு எனக்கு என்றே அது எப்போதும் யோசிக்கிறது.

மகன்களை இருக்கச் சொல்லிக் கேட்டார் பழனி. இங்க எல்லாம் எப்டிப்பா தங்குறது செம போர் என்று இரண்டு மகன்களும் மறுத்து விட....

இன்னோவா புழுதியைக் கிளப்பிக் கொண்டு அந்தக் கிராமத்தை விட்டு சர்ர்ர்ர்ர்ர்ர்ரென்று கிளம்பியது.

எப்பு...இருய்யா.....சோலையம்மாவ கூட்டியாரேன்...கூட மாட ஒத்தாசை செய்வா சமைக்கிறதுக்கு....

மகன் தன் கூட இருந்த மகிழ்ச்சி மரகதத்தின் ஓட்டத்தில் தெரிந்தைப் பார்த்து ரசித்தபடி கண்கலங்கி நின்றிருந்தார் பழனி.

இரவு சாப்பாடு தடபுடலாய் நடந்து கொண்டிருந்தது சரசுவின் தங்கை வீட்டில். அக்காவின் மருமகன் அதுவும் மலேசியாவிலிருந்து வந்திருக்கிறார் என்றவுடன் வீடு பிசாசாய் பறந்து பறந்து உபசரித்துக் கொண்டிருந்தது. பழனியின் இரண்டு மகன்களோடு சரசுவின் தங்கை மகன்கள் இருவரும் ஜோடி சேர்ந்து கொள்ள வீட்டு மாப்பிள்ளையோடு அரட்டைக் கச்சேரியும் கிண்டலும் கேலியுமாய் இருந்தது அங்கே....

ஏக்கா உம்புருசன அங்க விட்டுட்டு வந்த...அந்தக் கிழவிக்கு என்ன புள்ள மேல இம்புட்டு பாசம்...? புள்ளக்குட்டியளோட சந்தோசமா இருக்கட்டும்னு விடுறாளா பாரு....இந்தக் கிழவி? ஆண்டு முடிச்சமா ஒரு மூலைய கொடுத்து ஒடுங்கணமான்னு இல்லாம... காலமெல்லாம் எல்லாத்தையும் மகளுகளுக்குச் செஞ்சுபுட்டு இப்ப என்னத்தா மகன் மேல பாசம் புதுசா....ஒத்த மயன பெத்தமே அவனுக்கு கூடக் கொறச்சு சொத்த எழுதி வைப்போம்னு இல்லாமே... அம்புட்டு சொத்தையும் சரி பாதியால பிரிச்சுக் கொடுத்தா....

சரசுவும் சரசுவின் தங்கையும் மரகதத்தை காய்ச்சிக் குடித்துக் கொண்டிருந்த அதே நேரத்தில்....

ஆத்தா ரொம்ப நாளு இருக்க மாட்டேய்யா....எங்கூட வந்து இருந்துருய்யா....இல்லை என்ன கூட்டிக்கிட்டுப் போய் ஒங்கூட வச்சுக்கய்யா.....நான் ஒண்ணும் வாயவே தொறக்கல இனிமே.... இடை இடையில நம்மூருக்கு கூட்டியாந்து விட்டுட்டுக் கூட்டிட்டுப் போ.....

ஏய்யா...நாம எம்புட்டு பேரு இருந்த வீடு....? ஒங்கப்பு செத்ததுக்கு அப்புறம் செவத்துக்கு இம்புட்டு வெள்ளச்  சுண்ணாம்ம்பு கூட அடிக்க முடியலயப்பா...நீ, அக்கா தங்கச்சிகன்னு ஒக்கலும் பக்கலுமா நாம இருந்த நெனப்பு இந்த நெஞ்ச அறுக்குது ராசா....

ராத்திரிக்கு இம்புட்டு கஞ்சித்தண்ணி காச்சி நானா குடிச்சுப்புட்டு கீழ சாயையில எம்புட்டுப் பேருக்கு ஒல வச்ச அடுப்பு இப்படி ஓய்ஞ்சு போச்சே...., எம்புள்ளக் குட்டி எல்லாம் வரிசையா இந்த  ரூம்பு பூரா படுத்து இருக்குமே....எஞ்சாமி ஏதாச்சும் கதைகள எல்லாம் சொல்லி அதுக கிட்ட பேசிக்கிட்டே இருக்குமே....

அட பக்கியா எம்புட்டு நேரம் பேசுவீக....? படுத்து தூங்குக...காலையில வெரசா எந்திரிச்சு கொல்லக்காட்டுக்கு போகணும்னு நிதமும் கத்துவேனே..........இப்படி ஒத்தையில கிடக்குறேனேன்னு நினைச்சு நினைச்சு நெஞ்சே வெடிச்சு போகுதப்பு....

தனிமை கொடுமையானது. அதுவும் கூட்டம் ஆட்டமாய் நின்று சம்சாரியாய் வாழ்ந்த மரகதம் போன்றவர்களுக்கு மிகவும் கொடுமையானது. காலச் சக்கரம் திக்குக்கு ஒருவராய் உறவுகளை பிய்த்து எறியும் போது அந்த அந்த சூழலில் வாழும் பிள்ளைகள் அந்த மாற்றத்தை ஏற்று வாழும் அதே நேரத்தில் எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் சொந்த கிராமத்தின் நாலு சுவர்களுக்குள் இருக்கும் மரகதம் போன்றவர்களுக்கு  என்ன இருக்க முடியும் வாழ்க்கையின் மாற்றாக...?

இரவு வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள் தாயும், மகனும்...!

                                                                    ***


இந்த ஊர்ல இருக்க தியேட்டர்ல பழைய படம்தான் போட்டு ஓட்டுவாய்ங்க அத்தான்....நாம காரைக்குடி போயிரலாம் அரை மணி நேரம்தான் ட்ராவல்...அங்க போய் படம் பாத்துட்டு வருவோம்...

பெண்கள் எல்லோரும் வீட்டிலேயே இருந்து கொள்ள, மச்சான்களைக் கூட்டிக் கொண்டு சினிமாவுக்கு கிளம்பினார் சரசுவின் மருமகன். ஏங்க வண்டிய நீங்க ஓட்டாதீங்க ஆமாம் சொல்லிட்டேன்......மகள் மருமகனை அதட்டுவதை ரசித்தபடியே..அதெல்லாம் ஒந்தம்பிக இருக்காய்ங்க பாத்துக்குறுவாய்ங்கத்தா வந்து படு என்று மகளிடம் சொன்ன சரசுவுக்கு சந்தோசம் தாங்கவில்லை....

மூத்தவனே நீ வண்டிய எடுடா....சரசு மூத்த மகனிடம் சொல்ல....

மூத்தவனே வண்டியை எடுக்க வண்டி கிளம்பியது.


                                                                        ***

சினிமா பார்த்து விட்டு நள்ளிரவில் திரும்பிக் கொண்டிருந்தது அந்த இன்னோவா.  

ஏண்ணே.... எப்படி இருந்தாலும் அப்பா காலையில எந்திரிச்சு பஸ் பிடிச்சு தானே சின்னம்மா வீட்டுக்கு வரணும்...?

பழனியின் இரண்டாவது மகன் வண்டி ஓட்டிக் கொண்டிருந்த மூத்தவனைப் பார்த்துக் கேட்டான். மாப்பிள்ளையும் சின்னம்மா மகன்களும் பகுதி உறக்கத்தில் இருந்தனர்.

ஆமாடா... அதுக்கென்ன இப்போ...?

நம்ம போற வழியில ஒரு மூணு கிலோமீட்டர் தான அண்ணே.... வண்டிய அப்பா ஊருக்குள்ள விடு... நாம அப்பாவையும் கூட்டிக்கிட்டுப் போயிருவோம்....

ஓ...அப்டீன்றியா... நீ சொல்றதும் சரிதான்... அப்பாவ கூட்டிக்கிட்டுப் போய்டுவோம்...டா.... எனக்கும் அங்க அப்பாவ ஒத்தையில விட்டுட்டு வந்தது ஒரு மாதிரியாத்தான் இருந்துச்சு.....

வண்டி மரகதம் வீட்டின் முன் நின்றது. 

எல்லாரும் வண்டியில இருங்க... நான் போய் அப்பாவ கூட்டியாறேன்... இறங்குனா நேரமாயிரும்....

மூத்தவன் வண்டியை விட்டு இறங்கினான். 


இருட்டு அடர்த்தியானது ஆனாலும் கிராமத்து இருட்டு இன்னும் அடர்த்தியானது. கிராமத்து இருளில்தான் வானம் இன்னும் வசீகரமாய் இருக்கும். நட்சத்திரங்கள் தெளிவாய் கண்ணடித்துச் சிரிக்கும். ஊதக்காற்று உடம்புக்குள் நுழைந்து கிச்சுக் கிச்சு மூட்டும். எங்கோ  தூரத்தில் ஒரு நாய் ஊளையிடும் அந்த ஊளைச் சத்தம் தூரத்து மரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் ஒரு கிழிந்த துணியைப் பேய் என்று மனதுக்கு அடித்துச் சொல்லும். சில் வண்டுகளின் சப்தம் யாரோ தூக்குப் போட்டு இறந்து போன ஒரு பெண் ஆவியின் கொலு சப்தமாய் இருக்குமோ என்று  எண்ண  வைக்கும்.....

அக்கம் பக்கத்து வீடுகளில் கட்டப்பட்டிருக்கும் மாடுகளில் ஏதோ ஒன்று சடாரென்று எழுந்து நின்று வாலைத் தூக்கி சாணி போட்டு மூத்திரத்தை சட சடவென்று பெய்யும்....அந்த சப்தத்தைக் கேட்டு கோழிக் கூட்டிற்குள்....மெல்ல சுதாரித்து தன் குஞ்சுகளைப்  பாதுகாத்தபடி கொக்கரிக்க ஆரம்பிக்கும்....

காகம் ஒன்று புளியமரத்தின் மீதிருந்து அந்த இரவின் அமைதியை கலைக்காதபடிக்கு கா.........என்று மெலிதாய் கரைந்து விட்டு அடங்கிக் கொள்ளும்....

ஜாமத்தில் யார் வீட்டிலோ மலரும் மல்லிகையின் வாசம்....பேய் இல்லேன்னு யார்ரா சொன்னது என்று புத்திக்குள் படித்த கதைகள் மூலமாய் நம்மை பயமுறுத்தும்.....

தாழ்ப்பாள் போடாதிருந்த வீட்டின் கதவை மெல்ல திறந்தான் பழனியின் மூத்த மகன். பெரும்பாலும் கிராமத்து வீடுகளில் வீட்டை அடைத்துப் பூட்டிக் கொண்டு படுக்கும் பழக்கம் கிடையாது. " வரப்போற திருடன் தாழ்ப்பா போட்டிருந்தா என்ன போடாட்டி என்ன....எப்டி வேணும்னாலும் வருவான்" என்று அடிக்கடி மரகதம் சொல்வதுமுண்டு. அதுவும் போக கிராமத்தில் திருடச் செல்வதற்கு அத்தனை துணிவு திருடர்களுக்கும் கிடையாது. மூணாவது சந்தில் ஓடினால் எட்டாவது சந்தில் வைத்துப் பிடித்து நையப்புடைத்து விடுவார்கள் என்ற பயம்தான் அதற்குக் காரணம்.

அரிக்கேன் வெளிச்சத்தில் அப்பத்தாவும்......அப்பாவும் படுத்திருப்பதை பார்த்தான்.

பழனி அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார்...., மகனோடு உறங்கிக் கொண்டிருந்த மரகதத்திற்கு பேரன் வந்தது கூட தெரியவில்லை....

எப்பா.....எப்பா....எந்திருங்கப்பா.... மெல்ல பழனியை உலுக்கினான். ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த பழனி பதறி எழுந்தார்....

மகனைப் பார்த்ததும்...என்னப்பா இன்னியாரத்துல ஒண்ணும் பிரச்சினை இல்லையே.... பயந்து போய் கேட்டார்....

ஆள் அரவம் கேட்டு  மரகதம் எழுந்து விளக்கைப் போட்டாள்.

இல்லப்பா....படம் பாத்துட்டு வந்தோம்....நேரமாச்சு....நம்மூரு தாண்டிதான் சின்னம்மா ஊருக்குப் போகணும் அதான் ஒங்கள கூட்டிக்கிட்டுப் போகலாம்னு.....

பழனி மணி பார்த்தார்... விடியற்காலை இரண்டரை.

ஏத்தா....நான் வேணா போகட்டுமா....? காலையில எந்திரிச்சு காருக்கு தானே போகணும்.... இப்ப போனா இவிங்க கூட வண்டிலதானா போயிருவேன்....

செரிப்பா....போய்ட்டு வாய்யா..... அதுக காரக் கொண்டாந்துருசுக... செத்தவடத்துல விடியப்போகுது..... மகனை ஏக்கத்தோடு பார்த்தபடி சொன்னாள் மரகதம்.

வேட்டியைச் சரி செய்து கொண்டு சட்டையை எடுத்துப் போட்டார் பழனி.

நான் வர்றத்தா.....அடுத்த மாசம் லீவுக்கு வர்றேன்... வந்து ஒண்ணைக் கூட்டிக்கிட்டுப் போறேன்.... சரியா.... சொல்லிக் கொண்டே ஐநூறு ரூபாயை  மரகதத்தின் கையில் வைத்து திணித்தார்....

அப்பா.....டைம் ஆச்சுப்பா.............. வாசலில் நின்று கத்தினான்....மூத்தவன்.

இன்னோவா அந்த கிராமத்தின் விடியற்காலையை மாசுபடுத்தியபடி....சென்று மறைந்தது....!

மரகதம் வீட்டிற்குள் வந்து படுத்திருந்த இடத்தில் சுவற்றில் சாய்ந்தபடி உட்கார்ந்தாள். அவள் மகள்களின் நியாபகம் வந்தது.....புருசன் நினைப்பு வந்தது........சற்று முன் பழனி படுத்திருந்த இடத்தைத் தடவியபடியே....நான் பெத்த மக்கா.........., உங்க எல்லாரையும் தொலைச்சுட்டேனடா........

நெஞ்சில் அடித்துக் கொண்டு...சப்தமில்லாமள் வெடித்து அழத்தொடங்கி இருந்தாள்....!!!!

அப்பா....எப்டிப்பா எங்கள விட்டுட்டு அப்பத்தாக் கூட தங்கிட்ட....போப்பா.... உனக்குப் பாசமே இல்லை....எங்களுக்கு எல்லாம் உன்னைய ஒத்தையா வுட்டுட்டு வந்துட்டோம்னு எம்புட்டு கஷ்டமா இருந்துச்சு தெரியுமா....

பழனியின் இரண்டாவது மகன்......பழனியின் கையை இறுக்கமாய் பிடித்துக் கொண்டான்....

தூரத்தில் ஒரு நட்சத்திரம் கொஞ்சம் கொஞ்சமாய்.... மறையத் தொடங்கி இருந்தது.......

ஒன்றும் பேசத் தோன்றாமல் வெறித்துக் கொண்டிருந்தார் பழனி....!

வண்டி சீறிப்பாய்ந்து கொண்டிருந்தது...!
தேவா சுப்பையா....