Pages

Saturday, August 27, 2016

யார்தான் நீங்கள்?!


நான் யாரோவாய் இருந்த பொழுது நீங்கள் வந்தீர்கள். முகத்தில் புன்னகையை பூசியபடி வெகுநேரம் பேசிக் கொண்டிருந்தோம் நாம்.  அதற்கு முன்பெப்போதோ நாம் பார்த்திருக்கிறோம் என்று கூறிய படியே என் கோப்பையிலிருந்த பானத்தை நீங்களாகவே பருகத்தொடங்கினீர்கள், கதைகளை கேட்டபடி கதைகள் சொன்ன உங்களை ஆச்சர்யமாக பார்த்துக் கொண்டிருந்த போதே எழுந்து என் கைகளை கோர்த்துக் கொண்டீர்கள். நாம் நடக்க ஆரம்பித்திருந்த புள்ளியில் துளிர்த்துக் கொண்டது என்னவென்று தெரியாமல் திகைப்போடு இருந்த என்னை யாரோவாகவே ஆசுவாசப்படுத்தினீர்கள், கடந்தகாலத்தைப் பற்றியோ நிகழ்காலத்தை பற்றியோ அல்லது எதிர்காலத்தைப் பற்றியோ இல்லாமல் காற்றில் நடந்த படி கதைத்துக் கொண்டிருந்த அந்த நிமிடங்களில் எனக்குள் எழுந்த கேள்வியெல்லாம் ஒன்றே ஒன்றுதான்...

யாரோவான என்னை யாரோவான நீங்கள் யாராக கருதியிருப்பீர்கள்?

யோசித்துக் கொண்டேயிருந்த போது சடாரென்று இருள் சூழ்ந்த அந்த நிலம் பேரமைதியாய் ஆனது. என்னருகிள் நீங்கள் நீங்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கும் அந்த யாரோ அப்போது அங்கு இல்லை. சின்ன சின்ன பூச்சிகளின் சப்தம் எனக்கு தெளிவாய் கேட்டது, காற்றின் சப்தம் கேட்க மனித சப்தங்கள் இல்லாத வெளிக்குள் நீ செல்ல வேண்டும் என்று எங்கோ படித்ததை ஊ.... ஊ என்று சப்தமிட்ட காற்று உறுதி செய்தது. செவிகளை கூர்மையாக்கிக் கொள்வதைத் தவிர எனக்கு வேறொன்றும் தோன்றவில்லை அப்போது. காற்றின் சப்தமும் நின்று போக மெல்ல என்னை சுற்றி கேட்ட  மெல்ல உஸ்ஸ் உஸ்ஸ் என்ற சப்தத்தோடு அரவங்கள் கடந்து போயின. துணை தேடியும் இரை தேடியும் அவற்றின் நகர்வு இருப்பதாகப்பட்டது.

யாரென்று என்னை அறிய என்னைச் சுற்றி இருக்கும் எவற்றுக்கும் அக்கறை இல்லாதது போலவே எனக்கும் அக்கறை இல்லை என்று மீண்டும் நீங்கள் என்னிடம் சொன்னபோது விடிந்திருந்தது. நான் எப்படி யாரோவோ அப்படித்தான் நீங்களும் யரோ அது பற்றி எனக்கு அக்கறை இல்லை...

ஆனால் இவ்வளவு நேரம் எங்கே போயிருந்தீர்கள்? என்று கேட்டபோது என் கைகளை ஆதரவாய் நீங்கள் பற்றிக் கொண்டீர்கள்?

அது அதற்கு முன்பு பற்றிக் கொண்ட கையைப் போல இல்லாமல் இன்னும் மிருதுவாய் இருந்தவுடன் நிமிர்ந்து உங்கள் முகம் பார்த்தேன்

ஆமாம் நீங்கள் யாரோதான்...!தேவா சுப்பையா...


Friday, July 22, 2016

கபாலி... மாற்று சினிமாவின் குரல்!ரஜினி படத்துக்கு என்றில்லை எந்த ஒரு படத்துக்குமே விமர்சனம் என்று நான் எழுதுவதில்லை. விமர்சன அரசியல் எனக்கு எப்போதும் பிடிப்பதில்லை. ஒருவரின் புரிதல் இன்னொருவரோடு எப்போதுமே ஒத்துப் போகாது. அதிர்ஷ்டவசாமாய் ஒத்துப்போகும் அலைவரிசைகளே இங்கே குழுக்களாய் மாறுகின்றன. என்னுடைய பார்வை, புரிதல், அனுபவம் இந்த மூன்றையும்தான் எப்போதும் திரைப்படங்கள் பற்றிய பார்வையாக நான் எழுதுவேன். கருத்துப் பகிர்வு, கருத்துத் திணிப்பு இரண்டுக்கும் இருக்கும் வித்தியாசத்தில்தான் நாகரீகம் என்ற சொல் எப்போதும் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கும்.

கபாலி தமிழ்ப்படம்தான் என்றாலும் கதையின் களம் வேறு நிலம். முழுமையாய் கபாலியை ரசிக்க கொஞ்சமல்ல நிறையவே மலேசிய தமிழர்களின் பேச்சு வழக்கு, மலேசியாவின் வரலாறு, நிலத்துண்டாடல், தோட்டத் தொழிலார்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி, போராட்டங்கள், வர்க்கப் பிரிவுகள் என்று தொடங்கி இன்று வரை அந்த மண்ணில் நடக்கும் எல்லாவிதமான சமூகக் குற்றங்கள் வரை தெரிந்திருப்பதோடு ஓரளவிற்கு அவர்கள் பயன்படுத்தும் வட்டார வழக்குச் சொற்களையும் நாம் தெரிந்திருக்க வேண்டும். இதுவெல்லாம் அதிகம் புரியாத வேறு நிலம் சார்ந்த தமிழர்களுக்கு கொஞ்சம் இந்தப் படத்தோடு ஒட்டிக் கொள்ள கால அவகாசம் தேவைப்படத்தான் செய்கிறது. படத்தோடு ஒன்ற நம்மிடம் இருப்பது ரஜினி என்னும் மந்திரம் மட்டுமே, அந்த மந்திரமும் அந்த வேலையை பொறுமையாய் திரையில் செய்து விடுகிறது.

ரஜினியின் மாஸ் ஸ்டைலைத் தொட்டுக் கொண்டு ஒரு கேங்ஸ்டர் கதையை வித்தியாசமான காமம் கடந்த ஒரு 50+ காதலை வைத்து நெய்து, மனித ஏற்றத்தாழ்வுகள் பற்றி பேச நினைத்த தன்னுடைய வேட்கைக்கு ஒரு களமாய் ஒட்டு மொத்த திரையையும் பயன்படுத்தி கொண்ட இயக்குனர் ப. ரஞ்சித் வெகு நிச்சயமாய் பாராட்டுக்குரியவர். கபாலி படம் வெளியாவதற்கு கொஞ்ச நாள் முன்புதான் நான் இயக்குனர் ரஞ்சித்தின் பேட்டிகளை பார்த்தேன். வெகு நேர்த்தியான புரிதலும், மிகவும் விசாலமான பார்வையும் கொண்டதாக அவை இருந்தன. அடிப்படையில் அவருக்குள் இருந்த அந்த சமூக ஏற்றத் தாழ்வுகளின் மீதிருந்த கோபம் அவரை நிறைய புத்தகங்களை வாசிக்க வைத்திருக்கிறது. அழுத்தி வைக்கப்பட்ட ஒரு சமூகத்திலிருந்து மேலெழும்பி அதற்கு முன்பு வலுவான பொருளாதார மற்றும் மனோபலத்துடன் இருக்கும் ஒரு சமூகத்துடன் மோத எவ்வளவு வலு வேண்டும் என்பதை என்னால் நினைத்துக் கூட பார்க்கவே முடியவில்லை. பொருளாதார பலத்தை அரசின் திட்டங்களும் அதனால் கிடைக்கும் சூழல்களும் மாற்றினாலும் காலங்கள் கடந்து அவர்களுக்குள் அடங்கிக் கிடக்கும் அடக்கப்பட்ட உணர்வும் தாழ்வு மனப்பான்மையும் அகல வேண்டுமெனில் நிறைய சவாலான சூழல்களை அவர்கள் எதிர்கொள்ளவும் வேண்டும். இப்படியான ஒரு சமூகச் சூழலில் திரைத்துறையில் மேலெழும்பி வந்து தன்னை நிலைநிறுத்திக் கொண்ட இன்னும் வலுவாய் கால் பதிக்க காத்திருக்கும் கனவுகள்  நிறம்பிய ஒரு இளைஞர்தான் இயக்குனர் ப. ரஞ்சித்.


ஒடுக்கப்பட்ட சமூகம் தங்களை மீட்டெடுத்துக் கொள்ள எப்போதும் கலைகளைதான் முதல் ஆயுதமாக பாவிக்கும். கலைகளினால் ஏற்படும் மீட்சி சமூகத்தில் பெருந்தாக்கங்களை உருவாக்கி புரட்சியை ஏற்படுத்துகிறது. புரட்சி சமூகத்தை மெல்ல மெல்ல மாற்றுகிறது. தெருவில் இறங்கிப் போராடுவது ஒரு வழிமுறை என்றால் திரையில் இறங்கிப் போராடுவது வேறுவகை போரட்ட வழிமுறை என்பதனை அறிக; ப. ரஞ்சித் என்னும் கலைஞன் சூப்பர் ஸ்டார் ரஜினி என்னும் பிரம்மாண்ட கலைஞனிடம் கபாலியின் கதையினை கூறிய பின்பு அதை ரஜினி கேட்டு கொஞ்ச நஞ்சமல்ல முழுக்க முழுக்க தன்னை தன் மிகப்பெரிய சூப்பர் மாஸ் ஹீரோ இமேஜை தியாகம் செய்து விட்டு இது போன்ற படங்களில் நடிக்க காரணம்.....

ஏதோ ஒரு வகையில் இந்த சமூகத்தில் மாற்றம் வந்து விடாதா என்று எண்ணிய ஒரு இளைஞனின் புரட்சி எண்ணம் வீழ்ந்து விடக்கூடாது என்பதுதான். திரைப்படம் பிற்பாடு வணிக நோக்கத்தோடு அதிகமாய் விளம்பரபடுத்தப்பட்டது என்றாலும், இதில் அதிக வருமானம் பார்க்க எல்லா யுத்திகளையும் அதன் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு செய்தார் என்ற போதிலும்....

பலநேரங்களில் தவறான தயாரிப்புகள் விளம்பரங்களால் முக்கியத்துவம் பெற்று சீரழிந்து போவது போல கபாலியால் ஒரு அபத்தம் நிகழாது என்ற விசயம் நமக்கெல்லாம் ஆறுதல்தான் ஏனென்றால் இங்கே விதைக்கப்பட்டிருப்பது நற்வித்து. ரஜினி அறிமுகமாகும் ஆரம்ப காட்சியிலிருந்தே  எந்த ஒரு மிகைப்படுத்துதலும் இல்லாமல்  மிக மெதுவாகவே ஆனால் கூர்மையாகவே கதை நகர்கிறது. ரஜினியை முழுதாய் அபகரித்துக் கொள்ளாமல் அவர்களது ரசிகர்களுக்கும் தீனி போடவேண்டும் என்பதற்காக அட்டகாசமான காட்சிகள் இந்தப்படத்தில் நிறையவே உண்டு என்றாலும் இது பாட்சா போன்று ஹீரோயிசத்துக்கான படமல்ல. இது ஹீரோவை மையமாய் வைத்து சொல்லும் கருத்தை ஹீரோயிசமாய் கொண்ட கதைக் களம். 

64 வயதில் என்ன ஒரு பாடி லாங்வேஜ், என்ன ஒரு சுறுசுறுப்பு எல்லாவற்றுக்கும் மேலாய் என்ன ஒரு ஸ்டைல்? நீலாம்பரியின் டயலாக்தான் நினைவுக்கு வருகிறது ஆமாம் வயதானாலும் அவரது கம்பீரமும், ஸ்டைலும்.....ஹும்கூம்....கொஞ்சம் கூட குறையவே இல்லை அவரிடம். மிகக் கவனமாய் எந்த ஒரு மிகைப்படுத்துதலும் சூப்பர் மேஜிக்கும் இல்லாமல் இயல்பாய் ரஜினி தனது பாத்திரத்தை கையாண்டிருக்கும் விதமும் அவரது நடிப்பும் சூப்பர் ஸ்டார் என்றால் என்ன? யார் என்ற கேள்விக்கு தெளிவாய் விடை சொல்லி இருக்கின்றன. மனைவியைப் பிரிந்த சோகத்தையும் மீண்டும் வெகு நாள் கழித்து தன் மனைவியை பார்க்கும் போது ஏற்படும் உணர்வையும் வெகு இயல்பாய் வெளிப்படுத்தி பின்னி பெடலெடுத்திருக்கிறார் மனிதர். 

நான் மேல வருவேண்டா, முன்னேறுவேண்டா, கோட்டும் சூட்டும் போட்டுக்கிட்டு உங்க முன்னாடி கால்மேல கால் போட்டு உட்காருவேண்டா.....பிடிக்கலேன்னா சாவுங்கடா...

நீ ஆண்ட பரம்பரை டா.........நான் ஆளப்பொறந்த பரம்பரைடா........

என்று உணர்ச்சி பீறிட சூப்பர் ஸ்டார்  பேசும் டயலாக்தானே ரஞ்சித் பரம்பரை பரம்பரையாய் அடிமைப்பட்டுக் கிடக்கும் இனத்தின் ஆதாரக்குரல், இதை திரையில் நிகழ்த்திக் காட்டுவதுதானே அதுவும் ஒரு உச்ச நட்சத்திரத்தை பேச வைப்பதுதானே உனது கனவு.....? என்று கேட்டு பாரட்டத்தான் தோன்றுகிறது நமக்கு.

கபாலியில் நடித்ததோடு சூப்பர் ஸ்டார் நின்று விடக்கூடாது. இதே போன்று ரஜினி என்றால் யார்? அவரது நடிப்பின் முழுப்பரிமாணம் என்ன என்று எடுத்து சொல்லும் நிறைய கதாபாத்திரங்களை அவர் செய்ய வேண்டும். எங்கேயோ கேட்டகுரல், புவனா ஒரு கேள்விக் குறி, முள்ளும் மலரும்.....என்று பார்த்த ஒரு ரஜினியை ஒரு ரசிகனாய் வெகு காலம் கழித்து திரையில் ரசித்த திருப்தியை எப்படி எழுதுவது என்று எனக்கு தெரியவில்லை. வெறுமனே எதையோ எதிர்ப்பார்த்து அது இல்லை என்று இந்த அவசர கதியில் ஏதோ ஒரு கருத்து தெரிவிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் நகைச்சுவையாய் இணையத்தில் கருத்து தெரிவிக்கும் அத்தனை பேரும் கபாலி சொல்லவரும் அரசியல் என்ன? சூப்பர் ஸ்டார் என்னும் சிங்கம் தன் பிடரி சிலிர்த்து நடித்து கர்ஜித்திருக்கும் அந்த நடிப்பின் சுவை என்ன என்பதை நிதானமாய் பார்த்தால் எல்லோருடைய ஆழ்மனதிலிருந்தும் வெளிபடும் உண்மை காபலி போன்ற படங்களை நாம் வரவேற்றுதான் ஆகவேண்டும் என்று சொல்லும். 

மேலிருந்து கீழ் பார்த்து தமிழ்த்திரைப்படங்கள் பேசிய வர்க்க அரசியலை நாம் உண்மையென்று நம்பிக் கொண்டிருந்தோம். கீழை மேலாய் மாற்றி மேலை கீழாய் ஆக்காமல் சரி சமமாய் வைத்துக் கூட பார்க்க திரணியற்ற தொடர் தமிழ் சினிமா மரபில் வரவேற்கத்தகுந்த புரட்சிகரமான தனது கருத்துக்களை மிக தைரியமாய் முன்னெடுத்த இயக்குனர் ப. ரஞ்சித் பாரட்டுக்குரியவர், இந்தக் கதைக்கருவில் தனது இமேஜ் பற்றிக் கவலைப்படாமல் முழுமையாய் தன்னை ஒப்புக் கொடுத்து நடித்த சூப்பர் ஸ்டார் ரஜினி மிகவும் போற்றுதற்குரியவர்.

இது போக படத்தின் இசை,ஒளிப்பதிவு, பாடல்கள் மற்றும் திரைப்படத்தில் நடித்த அத்தனை கலைஞர்களுமே பாரட்டுதற்குரியவர்கள்தாம்.

கபாலியின் தீம் நெருப்பு...அந்த நெருப்பு கனலாய் படம் முழுதும் பரவி இருக்கிறது. அதை உணர்வாய் பற்ற வைத்துக் கொண்டு சமூக மாற்றத்துக்கான வித்தாய் பார்ப்பதும் அல்லது வெறும் சிகரெட்டுக்கான நெருப்பாய் பார்ப்பதும்...பார்ப்பவர்களின் மனோநிலையைப் பொறுத்த விசயம்.

-தேவா சுப்பையா...


Thursday, July 21, 2016

கபாலியும் ரஜினி எதிர்ப்பு அரசியலும்...!


ரஜினி படத்துக்கான ஓப்பனிங் என்பது இன்று நேற்று உருவான விசயம் கிடையாது. ஊடகப் பெருக்கம் நிறைந்த இக்காலத்தில் நம்மைச் சுற்றி நிகழும் எல்லா நிகழ்வுகளுமே அதன் வேர் வரை விபரமாக பல கோணங்களில் இப்போது நமது முன் கடை விரிக்கப்பட்டு விடுகிறது. சேட்டிலைட் டிவிகளைக் கடந்து சோசியல் மீடியாக்களும் விசுவரூபம் எடுத்து நிற்கும் இந்தக்காலக்கட்டத்தில் ஒரு மாஸ் ஹீரோவின் மாஸ் என்டெர்யெனிங் மூவி ரிலீஸ் என்பது கண்டிப்பாய் மிகப்பிரம்மாண்டமானதாய்தான் இருக்கும்.

ஒரு படம் வெற்றியடைந்து விட்டால் அந்த முழு வெற்றியையும் படத்தின் மொத்த டீமும் தூக்கிச் சுமக்கும் அதே வேளையில் படம் படு தோல்வியடைந்து விட்டால் அந்த தோல்வியின் சுமையை படத்தின் கதாநாயகனும் அந்தபடத்தின் தயாரிப்பாளரும் மட்டுமே தூக்கிச் சுமக்க வேண்டியிருக்கும். பாபாவாய் இருந்தாலும் சரி லிங்காவாய் இருந்தாலும் சரி அந்த படத்தின் வியாபார ரீதியிலான சுமையை சரி செய்ய வேண்டிய பொறுப்பு ரஜினிக்கு இருந்தது, அதை அவர் செய்தார்.

கபாலிக்கு இன்றைக்கு இருக்கும் இந்த கிரேட் மாஸ் ஊதிப் பெரிதாக்கப்பட்டதாய் பேசிக் கொள்கிறார்கள் ஆனால் நிஜத்தில் சமகால ஊடகப்பெருக்கமும் ரஜினி என்னும் சூப்பர் பவரும் ஒன்றாய் சேர்ந்ததின் விளைவுதான் இவ்வளவு கோலாகலத்துக்குமே காரணம். இன்றைக்கு நேற்று இல்லை 1991 ல் தளபதி வெளியாவதற்கு முன்பு இவ்வளவு தனியார் தொலைக்காட்சிகளும், இன்ன பிற சோசியல் மீடியாக்களும் இல்லாத காலத்திலேயே தளபதி அட்டகாசமான ட்ரெண்ட் ஆனது. தளபதி தொப்பி, தளபதி டிஷர்ட், தளபதி பேக்பேக்ஸ், தளபதி ஸ்டில்ஸ் அடங்கிய காலண்டர் என்று எல்லாமே விற்றுத் தீர்ந்தது. தளபதி இல்லையேல் தீபாவளி இல்லை என்றெல்லாம் ரசிகர்களால் அச்சிடப்பட்ட போஸ்டர்கள் தமிழகமெங்கும் ஒட்டப்பட்டன. ரஜினி எப்போதும் தமிழ் சினிமாவின் தவிர்க்கப்பட முடியாத ஒரு மாஸ் என்பது இப்போது இங்கே சமூக பிரக்ஞை என்ற பெயரில் அவதூறு பேசிக் கொண்டிருக்கிறார்களே அவர்களுக்கும் நன்றாகத் தெரியும்.

எதை மக்கள் ரசிக்கிறார்களோ எதை அதிகம் பேர் பார்ப்பார்களோ அதை பயன்படுத்தி பணம் சம்பாரிப்பது என்பது மார்கெட்டிங் யுத்தி. கமர்சியல் உலகத்தில் இதுவெல்லாம் சர்வசாதரணம், இந்தியா என்றில்லை எங்கெல்லாம் தமிழர்கள் இருக்கிறார்களோ, எங்கெல்லாம் தமிழர்களை வைத்து பொருளீட்ட முடியும் என்று எந்த ஒரு நிறுவனமம் நினைக்கிறதோ அவர்கள் அப்போதைய ட்ரெண்ட்டை , கவர்ச்சியைக் கையிலெடுத்துக் கொள்ளத்தான் செய்வார்கள்.

கபாலிதான் இப்போதைய ட்ரெண்ட் அதை வியாபரிகள் பயன்படுத்திக் கொள்ளாமல் இருந்தால் தான் அவர்களுக்கு தொழில் சார்ந்த சிந்தனை இல்லை என்று அர்த்தம். இங்கே அடிப்படையில் மிகைப்பட்டவர்களுக்கு இருப்பது வயிற்றெரிச்சல், ஆழ்மனதின் பொறாமை அதனால்தான் அர்த்தமில்லாத கோரக் கேள்விகள் புரையோடிப்போன மனதிலிருந்து எழுகின்றது. அசிங்கமான அடிப்படை எண்ணம்தான் திருட்டுத்தனமாக இந்தபடம் வந்து யாரும் திரையரங்கிற்கு செல்லாமல் படம் தோல்வியடையவேண்டும் என்று எண்ண வைக்கிறது. பொறுக்கித்தனமான எச்சிக்களை புத்திதான் ப்ரிவியூ ஷோவில் உட்கார்ந்து கொண்டு மொபைலில் கபாலி ஓப்பனிங் காட்சியை எடுத்து இணையத்தில் வைரலாக்குகிறது. சென்னை வெள்ளத்தில் ரஜினி என்ன செய்தார் என்பது அப்போதே ஊடகங்களில் செய்தியாய் வெளிவந்தது. பத்துலட்சம்தானே கொடுத்தார் என்று கேள்வி கேட்கும் குரூர புத்திகள் தங்கள் பர்சிலிருந்து ஒரு ரூபாயைக் கூட கொடுக்க மனமில்லாதவைகள் என்பதோடு மட்டுமில்லாமல் சென்னை வெள்ளத்தின் போது ராகவேந்திரா மண்டபத்திலிருந்து எத்தனை கோடி ரூபாய் மதிப்புள்ள உதவிப் பொருட்கள் சென்றன என்பதை வேண்டுமென்றே மறைத்துக் கொண்டு பேசும் ஈனத்தனமும் கொண்டவை.

ஒரு சாதாரண கண்டக்டராய் இருந்து இன்றைக்கு தமிழகத்தின் அசைக்க முடியாத சக்தியாய் இருக்கும் ரஜினி யாரோ ஒரு முகம் தெரியாத மனிதராய் இருந்து இந்த சூப்பர் ஸ்டார் இடத்தைப் பிடிக்க கொடுத்திருக்கும் உழைப்பும், இவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டாராய் ஆனபின்பும் இருக்கும் அவரது எளிமையும் இது எல்லாவற்றுக்கும் மேலாய் அவரின் அட்டகாசமான ஸ்டைலும் ஸ்பீடும்தான் ஒவ்வொரு ரசிகனையும் காந்தமாய் இன்னமும் அவரை விட்டு நகராமல் இழுத்துப் பிடித்துக் கொண்டிருக்கிறது.

விமர்சனங்கள் ரஜினிக்கும் ரஜினி ரசிகர்களுக்கும் புதிதல்ல பல காலகட்டங்களில் பல விதமான் சூழல்களை கடந்து வந்ததைப் போல இந்தச் சூழலையும் அவர்கள் எளிதாய் கடந்து வந்து விடுவார்கள். கபாலி ரஜினியின் படங்களில் கண்டிப்பாய் ஒரு மிகப்பெரிய மைல்கலாய் இருக்கும் என்பது வரப்போகும் வாரங்களில் எல்லோருக்கும் தெரியும்.தேவா சுப்பையா...


Tuesday, July 5, 2016

யாரோ....யார் யாரோ...?!


நான் யாரென்று கேட்கிறீர்களா? தெரியவில்லை. என் பெயரும், ஊரும் சுற்றமும் என் நினைவிலிருந்து அழிக்கப்பட்டு விட்டது அல்லது யாரோ அழித்து விட்டார்கள். இப்போது நடந்து கொண்டிருக்கிறேன் கொஞ்சம் முன்பு படுத்திருந்தேன் அதன் முன்பு எங்கோ போய்விட்டு வந்திருந்தேன். வேறு ஒன்றும் என்னைப் பற்றி எனக்கு சரியாய் சொல்லத் தெரியவில்லை.

வெகு காலம் முன்பு இந்த வீதியில் நடந்து பயின்ற ஞாபகமொன்று மட்டும் மெலிதாய் என் நினைவிலிருந்தபடியால் இந்த வீதிக்குள் நடந்து கொண்டிருக்கிறேன். ஒருவேளை இந்த வீதியாய் அது இல்லாமலுமிருக்கலாம் யாரவது வந்து என்னை யார் என்று கேட்டு விடாத வரைக்கும் எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை.

ஒரு மாடு ஒன்று என் முன்பு வந்து நின்றது. அது முறைத்துப் பார்ப்பது போல தோன்றியது. உற்றுப் பார்த்த போது அதுவும் என்னைப் போலவே வெறுமனே நின்று கொண்டிருக்கிறது என்று புரிந்தது. ஏனோ தெரியவில்லை அதன் கண்கள் என்னைப் பார்த்து நீ யாரென்று கேட்பதாகத்தான் எனக்குத் தோன்றியது. நீ யார் என்று அதனிடம் மெல்ல கேட்டேன். அது மெளனமாய் நின்றது.

நீ மாடு என்பது உனக்குத் தெரியுமா? இல்லை நான் உன்னிடம்  நீதான் மாடு என்று சொன்னால்தான் புரியுமா? உன்னை பொறுத்தவரை எப்படி நீ இருக்கிறாயோ அதே போல நானும் இருக்கிறேன். நீயும் காலத்தை கழித்து மரணத்தை முத்தமிடுவாய் நானும் அப்படியே. மாட்டின் கழுத்தை இறுக்க கட்டிக் கொண்ட போது யாரோவாக நின்ற அந்க்ட மாடு என்னை நீ யாரோ என்று சொல்வது போல மெல்ல நகரத் தொடஙியது.

நானும் மெல்ல அந்த இடம் விட்டு நகர்ந்தேன்.

யாரோவாக வாழ்வெதென்பது
ஆரம்பத்தில் இருட்டில் 
நடப்பது போலத்தான்
கொஞ்சம் கலக்கமாயிருக்கும்
வெளிச்சம் பயின்ற விழிகள்
இருள் கண்டு மிரளும்
விழிகள் என்பதே காட்சிகளைக்
காணும் கருவிதானே..
இருளில் எதற்கு விழிகள்
என்ற உண்மை செவுட்டில் அறையும் போது
இருள் நிஜமான 
வெளிச்சமாய் மாறும்...

இருள்தான் சுதந்திரம்
கருமைதான் பொருளற்றது
யாதுமற்றதுதான்
யாரோவாக ஆகமுடியும்
சிவனுக்கு கருப்பு பிடிக்குமாம் என்று சொல்லும் போதே சிவன் வேறு கருப்பு வேறு என்றுதானே பொருள்வருகிறது. சிவனே கருப்பு, கருப்பே சிவன். ஆழ்ந்த பொருள் கொண்ட இல்லாமைதான் அவன். இல்லாமல் இருப்பவன். 

நானும் கூட யாரோதான்....இல்லாமையில் வீழ்ந்தவன் என்று எழுதலாம் இல்லை விழுந்தவன் என்றும் கொள்ளலாம். விழுவதை விட வீழ்வதுதான் சிறப்பாய் எனக்கு படுகிறது. விழும் போது அங்கே இன்னும் சக்தி மிஞ்சி நிற்கிறது...வீழும் போது மொத்தமாய் எல்லாம் அழிந்தொழிந்து போகிறது.

யாரோவானவனுக்கு எழுதுவது என்னும் தேவை இருக்கிறதா என்ன? அப்படி ஒன்றும் கிடையாது... முன்பே சொன்னது போல இது நடந்து பழகிய வீதி...ஆடிய காலும், பாடிய வாயும் மட்டும்தான் சும்மா இருக்காதா என்ன...

கையும் கூடத்தான்....
-தேவா சுப்பையா...

Monday, March 28, 2016

கோதை...!


வானிடை வாழும் அவ் வானவர்க்கு
மறையவர் வேள்வியில் வகுத்த அவி
கானிடைத் திரிவது ஓர் நரி புகுந்து
கடப்பதும் மோப்பதும் செய்வது ஒப்ப
ஊனிடை ஆழி சங்கு உத்தமர்க்கு என்று
உன்னித்து எழுந்த என் தட முலைகள்
மானிடவர்க்கு என்று பேச்சுப் படில்
வாழகில்லேன் கண்டாய் மன்மதனே...

என்று சடாரென்று சொன்னாளாம் கோதை. கேட்ட விஷ்ணு சித்தருக்கு தலை சுற்றியே போய்விட்டதாம், பெருமாளைப் போய் எப்படியம்மா என்று கலங்கி நின்ற பொழுதியில் கோதை உறுதியாய் சொல்லி விட்டாளாம். நான் மணமுடித்தேன் என்றால் அது அந்த அரங்கனைத்தான் மணமுடித்தேன் என்று அவள் சொன்ன போது அரங்கனே விஷ்ணு சித்தரின் கனவில் வந்து கோதை சூடி பார்த்த மாலைதான் வேண்டும் என்று கேட்டதும் அவரின் நினைவுக்கு வந்ததாம். 

ரங்கநாதன் மீது கொண்ட காதலின் காரணமாய் கோதை  என்னும் ஆண்டாள் எழுதித் தீர்த்த பாசுரங்களில் செந்தமிழ் மீதேறி காதலும் பக்தியும் விளையாடும் பேரனுபவத்தை வாசிக்கும் போது நம்மாலும் உணர முடியும். ஆண்டாளை அரங்கனே ஆட்கொண்டு மணமுடித்தான் என்று ஆண்டாளின் கதையை மனதிற்குள் அசை போட்டபடி அமர்ந்திரந்தேன். இன்னும் சரியாய் ஒன்றரை மணி நேரம் இருந்தது எனது அதிகாலை மூன்றரை மணி விமானத்திற்கு....

தூக்கத்தோடு எல்லோரும் விழிப்பாய் இருந்த அந்த நேரத்தில் நான் கண் மூடி ஆண்டாளைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன். எவ்வளவு பிரேமை இந்த ஆண்டாளுக்கு கண்ணன் மீது அவளின் காதலை உடல் சார்ந்தே மிகையாய் அவள் வெளிப்படித்தியிருக்கும் அழகில் கொஞ்சமும் மிகாத இளம் பெண்ணிற்குரிய தேவையும் தேடலும் சேர்ந்தேதானே இருந்திருக்கிறது. வெறும் பக்தி என்று விபூதியும் குங்குமமும் பூசிக் கொண்டு ஊரை ஏமாற்றவில்லை கோதை என்னும் அந்த ஆண்டாள். அவள் காதலை தன் பருவத்திற்கேற்ற மனோநிலையில் எவ்வளவு அழகாய் வெளிப்படுத்தியிருக்கிறாள். சுத்த பிரேமையில் இருந்திருப்பாள் போலும் என்று ஆண்டாளாய் மாறி அந்த பிரேம நிலையிலிருந்து பார்த்தால் இந்த உலக நியதிகள் எல்லாம் எவ்வளவு மட்டுப்பட்டதாய் தோன்றும் என்று யோசித்துப் பார்த்தேன்....

குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டிலின்மேல்
மெத்த பஞ்சசயனத்தின் மேல் ஏறிக்
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்
வைத்துக் கிடந்த மலர்மார்பா...."

என்றெல்லாம் எழுதி கிறங்கி கிடந்த பெண் எப்படி சராசரியான மானுட வாழ்வில் தன்னை இணைத்துக் கொள்ள முடியும்? முக்தியைத் தேடிய மனதின் பிம்பவடிவம் கண்ணன், பிரபஞ்சத்தில் இல்லாத  தன்மையோடு புணர்ந்து அழிக்க நினைத்த பெருங்காதலி ஆண்டாள் என்று யோசித்தபடி நானிருந்த இருக்கையில் நன்றாக சாய்ந்து அமர்ந்து கொண்டேன். பாக்கெட்டில் பாஸ்போர்ட் பத்திரமாக இருக்கிறதா என்று பார்த்த போது மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால் என்று காதுக்குள் ஆண்டாளே பாடுவது போல எனக்குத் தோன்றியது....

சென்னை விமானநிலையத்தின் கூரைகள்தான் அடிக்கடி பெயர்ந்து விழுந்து விடுகின்றன ஆனால் சென்ட்ரலைஸ்டு ஏர்கண்டிஷன் எல்லாம் தரமானதாய்தான் இருக்கிறது.... மார்கழி குளிர் போலவே அவ்வளவு குளிர். நான் டீ சர்ட்டை இறக்கி விட்டு கைகளை குறுக்காக கட்டிக் கொண்டு கண்கள் மூடி தூங்கும் தூங்காமலும் எனது விமானத்தின் அழைப்பிற்காக காத்திருந்தேன் ஆண்டாளின் நினைவோடு...

எக்ஸ் க்யூஸ்மீ ப்ளீஸ் என்று அழைத்த பெண் குரலைக் கேட்டு ஒரு வேளை ஆண்டாளாயிருக்குமோ என்று எனக்குள்ளிருந்த ஆண்டாளின் பிரேமை சுவாரஸ்யப்படுத்த மெல்ல கண் விழித்துப் பார்த்தேன்...

பக்கத்து இருக்கையிலிருந்த பெண்... ட்யூ ஹேவ் எ லைட்டர் ப்ளீஸ் என்று கேட்டாள்...

நோ என்று நான் சொல்வதற்கு முன் என் பக்கத்து இருக்கையிலிருந்தவன் லைட்டரை எடுத்துக் கொடுக்க வாங்கிக் கொண்டவள்... டூ யூ ஸ்மோக் என்று மறுபடி கொஸ்டினாள்..., எப்போதாவது புகைக்கும் பழக்கம் கொண்ட எனக்கு அப்போது புகைக்க வேண்டும் என்று தோன்றியதற்கு இரண்டு காரணங்கள் உண்டு ஒன்று குளிர் இன்னொன்று அப்போதைய மனோநிலை...

பரஸ்பரம் எங்கு செல்கிறோம் என்று தகவல்களை பார்மாலிட்டியபடி இருவரும் புகைக்க ஆரம்பித்தோம். தமிழ் மீது பற்று அதிகம் என்று சொன்னபடி தன் கையிலிருந்த  ஏதோ ஒரு கவிதைத் தொகுப்பினை என்னிடம்  கொடுத்தாள் அவள்...

வாங்கி புரட்டிக் கொண்டிருந்த எனக்குள்....

வையத்து வாழ்வீர்காள் நாமும்நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
பையத் துயின்ற பரம னடிபாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம்முடியோம்...

என்று ஆண்டாள் பாடியது மட்டுமே கேட்டது.... எதிரில் புகைத்துக் கொண்டிருந்தவளை பற்றிய யாதொரு யோசனைகளுமற்று....கண்களை மூடி சாய்ந்து சரிந்தேன்.

ஆண்டாள்களும் அவ்வப்போது வந்து போவர்கள் போலும் இந்த பூமிக்கு....!
தேவா சுப்பையா...