Pages

Friday, June 15, 2018

தேடல் - 1


காரணமின்றி காரியமில்லை

எத்தனை எழுத்தாளர்களை கடந்து வந்த போதும் பாலகுமாரனை விட்டு நகர மறுக்கிறது மனசு. காரணம் ஆன்மீகம். இலக்கியம் என்பது மானுடவியல் சார்ந்தது. ஆன்மிகத் தேடல் இந்த வாழ்வோடு மட்டுமா தொடர்புடையது?

சென்னைக்கு வேலைதேடி பெட்டியோடு பேருந்து ஏறிய போது பெட்டிக்குள் துணிமணியோடு பாலகுமாரனின் நாவல்களும் என்னோடு வந்தன. நிறைய பெட்டிகள் இப்படித்தான் பயணித்தன என்பதை பின்னர்தான் தெரிந்து கொண்டேன். கடவுள் கடவுள் என்று பேய்ப்பிடித்து அலைந்த பொழுது பாலகுமாரனின் நாவல்கள்தான் பொறுமையாய் பாடமெடுத்தன.

பாலகுமாரனை பார்க்க வேண்டுமென்றல்லாம் எனக்கு ஆசை கிடையாது. அடுத்தடுத்து வெளிவரும் அவரது பல்சுவை நாவல்களை வாங்கிப் படித்து விடவேண்டும் அவ்வளவுதான். ஒரு பிரதோஷ மாலையில் மயிலாப்பூர் கபாலிஸ்வரர் கோயிலின் வெளி மண்டபத்தில் தேமேவென்று உட்கார்ந்த்திருத பொழுது பாலகுமாரன் யாரோ இருவருக்கு பூம்பாவை கதை சொல்லிக் கொண்டிருப்பதை பார்த்தேன். ஓடிப்போய் உங்கள் வாசகன் சார் நான் என்றெல்லாம் சொல்லத் தோன்றவில்லை.

வெள்ளை வேட்டி சட்டை தாடி குடுமி சகிதமாய் அவர் உள்ளும் புறமும் உருமாறிக் கொண்டிருந்த நேரம். பிரதோஷ தரிசனம் முடித்து அவர் ஸ்கூட்டியில் போய்விட்டார். அவ்வளவுதான் பாலகுமாரனுக்கும் எனக்குமான ஸ்தூல தொடர்பு. பட்டினத்தார் கோயில், வாலிஸ்வரர் கோயில், முண்டக்கன்னி அம்மன் கோயில், காரைக்கால் அம்மையாரை  பார்க்க திருவாலங்காடு, ஒற்றீஸ்வரர் கோயில், திருவண்ணாமலை, கும்பகோணம் பக்கத்தில் பாடகச்சேரி, பார்த்தசாரதி கோயில், சுசீந்தரம் தாணுமலயன் கோயில், கரூர் கல்யாண பசுபதீஸ்வரர், நெரூர் சதாசிவ பிரம்மந்திரர் என்று சுற்றி விட்டு கோடி முறை போன தஞ்சை பெரியகோயிலுக்குள் உடையார் படித்து விட்டு நுழைந்த போது சோழப் பேரரசு……..சோழம்…சோழம்…சோழம்….என்று யாரோ காதுக்குள் கத்த வாளால் கேடயத்தை அடித்து சப்தமெழுப்புவாக எல்லாம் தோன்றியது.

உடையார் அவ்வளவு ஆழம். எனக்கு இலக்கியமெல்லாம் தெரியாது. வாழ்க்கை தெரியும். வாழ்க்கையின் முன்னும் பின்னும் என்னவாயிருக்கும் என்று தேடத் தெரியும். பாலகுமாரனின் எழுத்து ஆன்மீகத்தை எழுதத் தொடங்கிய போது அவரைக் காதலிக்கத் தொடங்கியவன் நான். இங்கே அனேகருக்கு வேறுவிதம். இருந்து விட்டுப் போகட்டும். எனக்கு இப்படி.

கோயிலின் நடை சாத்திவிட கோயில் முழுதும் சுற்றி வந்தேன். நாங்கொடுத்தனவும், அக்கன் கொடுத்தனவும் பெண்டு பிள்ளைகள் கொடுத்தனவும், உடையார் ராஜராஜத் தேவர் என்ற எழுத்துக்களை எல்லாம் படிக்க முடிந்தது. கல்வெட்டு வாசிப்பில் பாண்டித்திய இல்லை, பாமரத்தனம்தான்.

தஞ்சை மாறிவிட்டது. கோயில் மட்டும் பத்தாம் நூற்றாண்டின் பழமையோடு ஊருக்கு நடுவே, மனிதர் வந்தனர், வணங்கினர், சுற்றினர் சென்றனர் என்று சொல்லிக் கொண்டே இருக்கிறது. இது ஒன்று போததா வாழ்க்கையை சொல்ல. யாரோ கட்ட எவர் எவரோ வந்து செல்ல, ஏதேதோ பேச, வாழ்க்கை நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. ஒரே மாதிரியாய் அல்ல, வெவ்வேறாய்.

கோயிலுக்கு பின் மண்டபத்தில் தலைக்கு பையை வைத்து கோபுரத்தை பார்த்தபடி தூங்கி விட்டேன். தோளைத் தொட்டு ஒருவர் எழுப்ப திடுக்கிட்டு விழித்தேன்…தாடியும் மீசையுமாய் ஒரு பெரியவர், அழுக்கு சட்டையோடு நின்று கொண்டிருந்தார்.
கோயில்ல தூங்கலாமா? என்று அதட்டல் வேறு...

எழுந்து அமர்ந்தேன்.
பக்கத்தில் அமர்ந்தார்.
சொன்னேன்.
சிவன பிடிக்குமா?
ஆமாம்.
அப்போ எல்லாம் முடிஞ்சுது, நீ கெளம்பு.
என்ன சொல்வதென்று தெரியாமல் அவரைப் பார்த்துக் கொண்டிருந்தேன். 
பேசத் தொடங்கினார்...-எழுதுவேன்...தேவா சுப்பையா
15.06.2018x

No comments: