Pages

Wednesday, October 26, 2011

பார் காலமே.. பார்...!

எம் சிறகினை முறித்துப் போட்டாய் காலமே...
கால்கள் கொண்டு திக்குகளெட்டும்
நடந்து காட்டினோம்...!
பேச்சற இரு என்று எம் நாவினை
நீ வெட்டி போட்டாய் காலமே...
எம் மெளனத்தால் அன்பென்னும்
பூக்களை எம்மைச் சுற்றி
கோடிக்கணக்கில் மலரச் செய்தோம்...!

எம் விழிகளை குருடாக்கினாய் காலமே...
இருளென்னும் கருமையில்
கலங்காது நின்று வர்ணங்களை
எம் புத்தியில் தேக்கி வைத்து
எமக்குள் யாமே மகிழ்ந்து காட்டினோம்!

சோகங்களை கொடுத்தாய்; பொருளாதாய உலகில்
மனிதர்களின் கோர முகங்களைக் காட்டினாய்;
பாசமென்னும் மாயையின் ஆழத்தைக் அறிவித்தாய்;
சுற்றி சுற்றி மாயைகள் விரட்ட
ஓடும் கால்களுக்கு எல்லாம்
எம்மை சொந்தமாக்கி விட்டு எக்காளமிட்டு சிரித்தாய்....!

என்னதான் செய்து விடுவாய் காலமே...நீ?
காலனை அனுப்பி எம்மை மரணிக்கச் செய்யும்
முன்பு நான் காலத்தை நிறுத்தி வாழ்பவன்
என்ற சத்தியம் உணர்..!

பொய்களின் நகர்வுகளில்
எமக்கு சமைக்கப்படும் சங்கடங்கள்
எல்லாம் சத்திய அக்னியில் எரிந்தே போகும்
என்ற நிதர்சனம் அறி!

கோபங்கள் கொள்ளும் மூளைகள்
எல்லாம் சதைக் கோளங்களாகி
புழுக்களைப் பிறப்பித்து மண்ணில்
மட்கி மறையும் என்பதை தெளி..!

எம்முள் படிந்து கிடப்பது
பரந்து கிடக்கும் சத்தியத்தின்
சப்தமிலா அணுத்துகள்கள் என்னும்
மூலம் உணர்; உணரலை அதிர்வுகளாக்கு;
அதிர்வுகளை எம்மைச் சூழ்ந்த
மானுட புத்திகளில் உணர்வுகளாக்கு...
நினைவு பக்கங்களை எல்லாம் திருத்தி எழுது;
சுவாசங்களாய் ஊடுருவி
எம்மின் செழுமையை மானுட
நாடிகளுக்கு நளினமாய் எடுத்துச் சொல்;
ஆழ்ந்த உறக்கங்களில் கனவுகளாய் போ
நிதர்சனத்தின் வடிவங்களை
செவுட்டில் அறைந்து பாடமாய்ச் சொல்!

ஐம்புலன் கொண்டு அகந்தை தேக்கி
வாழும் சக மானுடனல்ல...
நான் என்ற உண்மையை உரை;
பொருட்களின் கூட்டும், கூட்டுப் பொருட்களும்
ஜனித்ததின் மூலத்தை உணர்ந்தவெனென்று
மென்மையாய்ச் சொல்...!

மரணம் அறிந்தவன் என்று உரக்க உரை;
மமதை அழித்தவன் என்று அதிர்ந்து சொல்;
இறுதியாய்க் கேள்...
அவன் உங்களையும் அவனாய்த்தான்
பார்க்கிறானென்ற உண்மை
உங்களுக்குத் தெரியுமா என்று?

வார்த்தைகளையும், எழுத்துகளையும்
சத்தியத்தை சொல்லும் சப்தங்களையும்
எளிதில் மனிதர்கள் கொன்றுதான் போட்டு விடுகிறார்கள்....

இனி....

என் மெளனத்தை என்னதான் செய்கிறார்கள்
என்று நானும் பார்க்கிறேன்...,
நீயும் பார் காலமே...பார்!

தேவா. S

Tuesday, October 25, 2011

சரவெடி...!

தீபாவளி வந்துருச்சு என்ன செய்யலாம்...???? ம்ம்ம்ம்....எல்லோரும் அடிச்சு பிடிச்சு கேட்டு கிட்டே இருக்குறாங்க? என்ன தீபாவளி ஸ்பெசல்ன்னு... நமக்குத்தான் ஒரு மண்ணாங்கட்டியும் தலைக்கு ஏற மாட்டேங்குது. ஊர்ல இருந்தா ஒரு நாளு லீவு கிடச்சு இருக்கும். காலையில் நிம்மதியா எந்திரிச்சு எண்ணைய தேச்சு குளிச்சுப்புட்டு ஏதோ நாலஞ்சு வெடிய கொளுத்துனோமா, கறிக் கொழம்பையும் தோசையும் சாப்டம்மா, ஏதோ ரெண்டு மூணு டிவில ப்ரோக்கிராம பாத்தமான்னு போயிருக்கும்...

கொண்டாட்டம் எல்லாம் கொண்டாடுற காலம் முடிஞ்சு போச்சா இல்ல நமக்குத்தான் அப்டி தோணுதா, என்ன தீபாவளி? என்ன பொங்கலுன்னு சொன்னா அதுக்கு என்னோட சதி (சரி பாதிங்க தப்பா எடுக்காதீங்க!!!!) சொல்ற பதிலு..... வயசாயிடுச்சுங்க ஒங்களுக்குன்னு...! ஆமா அது ஒண்ணுதான் கொறச்சல் போன்னு சொல்லிட்டு..., யாருக்குத்தான் வயசாகுறது இல்லன்னு மனச தேத்திகிட்டு இருந்தாலும்...

எப்போ யாரு வயசு கேட்டாலும் 34 முடிஞ்சுருச்சு 35 ஜஸ்ட் ஆரம்பம் ஆகியிருக்குன்னுதன சொல்லத் தோணுதே தவற ஆரம்பிச்ச வயச மட்டும் அதிகாரப் பூர்வமா சொல்ற தில்லு ரொம்ப பேருக்கு வரலை என்னையும் சேத்து...!

பேஸ் புக்லயும், மத்த சோசியல் நெட் வொர்க் சைட்டுகளையும் சைட்டுகளை மெயிண்டெய்ன் (தப்பா எடுத்துகாதீங்க போர்வையா..சாரி சாரி கோர்வையா வந்துடுச்சு..)பண்றதுக்காக பிறந்த நாள் தேதிய போடாம விடலாம்னு ரொம்ப பேரு பாத்தாலும், பொறந்த நாளு அன்னிக்கு ஒரு 50 அல்லது 60 பேரு நம்ம வால்ல வந்து "வாழ்! வாழ்" னு வாழ்த்துனாதான திருப்தின்னு சொல்லிட்டு...

பொறந்த தேதியவும் மாசத்தையும் போட்டு வச்சிகிற மாதிரி நாமளும் போடலமான்னு கூட ரோசிச்சேன்.. என்ன கழுத கொறஞ்சுடப் போகுது நாம என்ன சினிமாவுலயா நடிக்க போகுறோம் வயச சொல்லமன்னு, சொல்லி பளிச்சுன்னு போடவும் செஞ்சேன்...! வயசாகுறது ஒரு கம்பீரம்னு எங்கயோ படிச்சு தொலச்சது மெல்ல மெல்ல இப்பதான் தான் புரிய ஆரம்பிச்சு இருக்குது...

ஸ்டாப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்............!!!!!!!!!!!

இது தீபாவளி சிறப்புப் பதிவு, அதனால தீபாவளி பத்திதான் பேசணும்னு சூடம் கொளுத்தி சத்தியம் பண்ணிட்டு எழுத வந்தா...ங்கொய்யால பழக்க தோசத்துல அது எங்கயோ இழுத்துகிட்டு போகுது. கொஞ்ச்சம் அச்சஸ் பண்ணிக்கோங்க...ப்ளீஸ்ஸ்ஸ்! சரமாரியா தீபவாளினா என்ன? எங்க ஊரு தீபாவளி, எங்க மாவட்டம் தீபாவளி, எங்க ஸ்டேட் தீபாவளி, இந்த நாட்டு தீபவளி அந்த நாட்டு தீபாவளின்னு எல்லோரும் கொளுத்திப் போட்டாலும்...

தீபாவளி பல பேரு பர்சுகளுக்கு வைக்கிற வெடி இருக்குப் பாத்தீங்களா அதுதான் செம...!!!! ஆமா ஒரு வாரத்துக்கு முன்னாடியே.. ஐயம் சாரி லேடிஸ் அண்ட் ஜெண்டில் மேன்...., ஒரு மாசம் முன்னாடியே அரிசி வாங்கணும் பருப்பு வாங்கணும், உளுந்து வாங்கணும் எண்ணெய் வாங்கணும், துணி எடுக்கணும், துணி தைக்கணும், பக்கத்து வீட்டு கீதா பட்டு புடவை எடுத்து இருக்கா அதை விட ஜரிகை கூட போட்டு எனக்கு ஒரு பட்டு பொடவ எடுத்தே ஆகணும்னு வீட்ல அம்மணிங்க வைக்கிற டைம் பாம் தான்....தீபாவளி ஸ்பெசல்னு வச்சுக்கோங்க...!

பக்கத்து வீட்டுக்காரனுக்கும், எதித்த வீட்டுக்காரனுக்கும் எங்க இருந்துதன காசு வருதோ தெரியல (அவுங்களும் நம்மள பத்தி எப்படியோ நினைக்கலாம் அதை விட்டு தள்ளுங்க.... முடிஞ்சா அவுங்க ஒரு பதிவு போடட்டும்.. ச்சும்மா நொய் நொய்ன்னுகிட்டு...)வெடிய வாங்குறதும் வெள்ளையடிக்கிறதும் யப்பா முடியலடா சாமி...!!!!

ஒரு விதத்துல காசு புழக்கத்துக்கும், வியாபர பெருக்கத்துக்கும் இந்த பண்டிகைகள் உதவுதுனு சொல்லலாம்.....! மாலா வீட்ல இருந்து முறுக்கு, அதிரசம், லட்டு, பூந்தி, மைசூர் பாக்கு எல்லாம் வந்து இருக்கு, கீதா வீட்ல இருந்தும், ராஜி வீட்ல இருந்தும் , சுரேந்தர் வீட்ல இருந்தும் வந்து இருக்கு....தெருவுல இருக்குற பத்து வீட்ல இருந்தும் வந்துடுச்சுன்னா அம்புட்டுதான்....முடிஞ்சே போச்சு நம்ம வீட்ல...! ஆமாங்க தன்மானப் பிரச்சினையில்லயா...

உடனே பத்து வீட்டு சுவீட்டையும் மிக்ஸ் பண்ணி மாத்தி மாத்தி அனுப்பினா என்னமான்னு எங்கம்மாவ நான் கேட்டதுக்கு அவுங்க மொறச்ச மொறையில் எனக்கு தீபாவளியோட அருமை என்னனு தெரிஞ்சு போச்சு...,! சரி விடு ஜூட்னு ஒவ்வொரு வீட்டுக்கா நம்ம விட்டு பலகாரத்தை எல்லாம் கொண்டு போய் கொடுத்து கீழ விழப் போன நம்ம குடும்ப மானத்த தூக்கி நிறுத்தி நான் காப்பதுனது எல்லாம் ஒரு காலம்ங்க...

இப்பவும் பசங்களுக்கு, நாங்கா பசங்களா இருந்தப்ப சந்தோசமா இருந்த மாதிரியான தீபாவளியா இது இருக்குமான்னு எனக்குத் தெரியலை ஆனா எங்க அப்பா எல்லாம் பண்டிகைன்னு வந்தா எம்புட்டு டென்சன் ஆகி இருப்பாங்கன்னு மட்டும் தெள்ளத் தெளிவா புரியுது.

ஆமா வெடி நிறைய வாங்கிக் கொடுக்காத நீயெல்லாம் ஒரு தகப்பனா...? அப்டீன்ற ரேஞ்சுக்கு தீபவளிக்கு ரெண்டு மூணு நாளைக்கு முன்னாடியே அவங்கள மொறச்சு மொறச்சு பாத்து, அடிச்சு புடிச்சு வெடிகள வாங்கி அத காய வைக்கிறேன் பேர்வழின்னு பக்கத்து வீட்டு மோகன் & சாந்திகிட்ட (ப்ரண்ஸ்ங்க...! ஹி ஹி ஹி)பந்தா காட்டி...

தீபாவளிக்கு எல்லாத்தையும் வெடிச்சு தொலைக்காதடான்னு அக்கா சொல்லிகிட்டே கொஞ்சம் கார்த்தியலுக்கும் எடுத்து ஒதுக்கி வைக்கிறதுக்கு கடும் கண்டனம் தெரிவிச்சு, ஒரு ஒத்த வெடிய வெடிக்க ஒரு தினத்தந்தி புல் பேப்பர எடுத்து கொளுத்தி ரெண்டு கிலோ மீட்டருக்கு அப்புறம் வர்ற நெறுப்புக்கு எதிரா ஒரு அரை கிலோமீட்டர் தள்ளி வெடிய வச்சுட்டு ஓட்டமா ஓடியாந்து காதை பொத்த்கிகிட்டு அது வெடிச்சு விழுகுற பேப்பர் அளவு கம்மியா இருந்தா, கடக்காரனை திட்டிகிட்டே...

ரெண்டு நாளைக்கு வாசல பெருக்குனா அப்புறம் பாத்துக்கன்னு அம்மாவுக்கு வார்னிங் கொடுத்துட்டு....வெடி குப்பை நிறைய கடக்குறது தமிழ் நாட்டு சி. எம் போஸ்ட்ல ஒக்கார மாதிரி நெனச்சுகிட்டு.. இருந்த காலத்துல எல்லாம் நிறைய மனுசங்களும் மனுச தொடர்புகளும் இருந்துச்சுங்க..., அப்படி இருக்கறதெ பண்டிகைகள நிறைவா காட்டவும் செஞ்சுச்சு...

என்ன கருமமோ எவன் வச்ச சூனியமோ எல்லோரும் இப்போ அறிவியல் வளர்ச்சின்ற பேர்ல சுருங்கிப் போயி விர்ச்சுவலா தீபவாளிய கொண்டாடுறாங்க...! தீபாவளி அன்னிக்கு இணையத்து வந்து வாழ்த்து சொல்லாம அது பத்தி ஒரு போஸ்ட் போடாம இருந்தா விக்கிரமாதித்தன் பதில் சொல்லாம இருந்தா தலை வெடிச்சுடும்னு வேதாளம் சொல்ற மாதிரி மனசு கெடந்து லபக் டபக்....லபக் டபக்னு அடிச்சுகிது....

காசா பணமா தட்டி விட்ட நிறைய வாழ்த்து அட்டை கிடைக்கிது. உளமாற, மனமாற அன்பான தீபாவளி வாழ்த்துக்கள்னு இன்னிக்கு மட்டும் சொல்லிட்டு வழக்கப்படி நாளை மறு நாள்ள இருந்து அடுத்தவனுக்கு ஆப்படிக்கிற புத்தி இருந்தா பண்டிகை அன்னிக்கு மட்டும் சொல்ற வாழ்த்து எதுக்கு பதத்துப் போன பட்டாசு மாதிரி...தேவையில்லாமன்னும் தோணுது!

40 பேர சேத்து வச்சிகிட்டு திரட்டிகள்ள ஓட்டு போட்டு என் பதிவதான் எல்லோரும் படிக்கணும்னு சர்வாதிகாரம் பண்ணாம, கருத்து திணிப்பு இல்லாம பொதுவா ஆடம்பரம் இல்லாம கன்ன பின்னானு வெடி வெடிச்சு சத்தம் இல்லாம வாழ்ந்துகிட்டு இருக்க மத்த ஜீவராசிகளுக்கு தொந்தரவு கொடுக்காம, அடுத்த மனுசங்கள உறுத்தாத

ஒரு பண்டிகையா மகிழ்ச்சியா பரஸ்பரம் எல்லோரும் சந்தோசமா கொண்டாட வாழ்த்துக்கள்னு சொல்லிட்டு.. உத்தவு வாங்கிக்கிறேங்க...!!!!

அப்போ வர்ர்ர்ர்ட்ட்டா!!!!!

தேவா. S

Saturday, October 22, 2011

வார்த்தைகளற்ற மொழிகள்!


மொழி - I


மூச்சுக் காற்றின் ஓசை
கேட்கும் தருணங்கள்;
காதோரம் காற்று சொல்லிச்
செல்லும் ரகசியத்தின் கூச்சங்கள்;
கடும் காய்ச்சல் ஓய்ந்து
போன தினத்தின் அயற்சியான
எண்ணமற்ற நினைவுகள்;
விடியலில் எழுந்து மீண்டும்
போர்வை போர்த்திக் கொண்டு
உறங்கத் தொடங்கும் அதிகாலை
பகுதி விழிப்பு நிலையின் ஓரங்கள்;
கூச்சலற்று தனித்தமரும்
தருணங்கள் கொடுக்கும் ஞானங்கள்;

அவள் விழிகளிலிருந்து புறப்பட்டு
என் விழி சேர்கையில் காதலாய்
உருமாறி சிறகு முளைக்க வைக்கும்
பார்வை வீச்சுக்களின் தாக்கங்கள்;
நிலை குலைத்துப் போடும் வாழ்க்கையின்
வலிகள் அழுந்தப் பதிக்கும் தடங்கள்;
கெட்ட சொப்னங்கள் கிழித்து
தாயின் மடி தேடி எழுந்து
கண்ணீரோடு நெஞ்சு கட்டிக் கொண்டு
பால்யத்தை கனவு காணும் இரவுகள்;
லெளகீக துரத்தல்களில் பணத்திற்காய்
பிசாசாய் வேலை செய்யும்
அலுவலக அயற்சிகள் ஏற்றி வைக்கும்
மனச் சுமைகள்; மூளை அழுத்தங்கள்.....

என்று

என் அனுபவித்தல்களின் ஆழங்களில்
நான் மட்டுமே தனியாய்தானிருக்கிறேன்...
என் இருப்பினைச் சுமந்த படி....!

***

மொழி - II

கடந்து போன
ரயிலொன்றின்
தூரத்து சத்தம் சுமந்து
வந்த காற்று..
விட்டுச் செல்கிறது
அடர்த்தியான நிசப்தத்தை!

வெறித்த விழிகளில்
வழிந்தோடும்
தண்டவாளங்கள் சப்தமின்றி
பகிரும் மொழிகளில்
எதிர்ப்படுகின்றன எத்தனையோ
முடிந்து போன பிரயாணங்கள்!


தேவா. S


Friday, October 21, 2011

மெளனத்தின் சப்தம்...!
வெறுமையாய், ஒற்றை சொல் கூட மனதிலே உதிக்காத தன்னிச்சை சூழ்நிலைகளை எல்லாம் மேலோட்டமாய் பார்த்தால் அது வலி. ஆழ உணர்ந்து பார்க்கையில் அது சுகம். வலிகள் எல்லாம் சுகம். நாம் வலிகளை வேண்டாமென்றே பழகி விட்டோம் அதனாலேயே அவற்றை விட்டு ஓடி விடவே நினைக்கிறோம். ஆமாம் நீண்ட மெளனங்களும், ஆட்கள் அற்ற தனிமையும் மனிதர்களோடு திரிந்து திரிந்து பேசி பேசி கிடந்து விட்டு சட்டென்று ஏற்பட்டால் ஒரு பயம் ஏற்படத்தான் செய்யும்.

நிஜத்தில் மனிதர்களுக்கு பூக்கும் மெளனங்கள் எல்லாம் பெரும்பாலும் மெளனங்களாய் இருப்பது இல்லை. அவை தனிமை என்று முத்திரை குத்திக் கொண்ட போலிகளாய்த் தானிருக்கின்றன. தனிமையில் இருக்கும் மனிதர்களின் மனம் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கும் அல்லது கிழக்கு மேற்காக, வடக்கு தெற்காக பயணித்துக் கொண்டே இருக்கும். இது பற்றிய ஒரு புரிதல் இல்லாமலேயே தனிமையில் இருந்ததாகவும் மெளனத்தில் லயித்திருந்ததாகவும் பல கதைகள் சொல்லும்.

மெளனம் பகிர முடியாதது. அது சோகத்தின் உச்சமாய்த் தெரியும் ஆனால் அதுதான் சந்தோசத்தின் முதல் நுனி. இங்கும் அங்கும் அலைந்து திரிந்து வியாக்கியானங்கள் பேசும் எல்லோருக்குமே தெரியும் அவையெல்லாம் பொய் என்றும் நாமெல்லாம் நடிக்கிறோம் என்றும்.....இயல்பில் லயித்துக் கிடக்கும் போது பகிர்தல் இல்லை.

எனக்கு ஏதோ ஒன்றினை உங்களுக்குச் சொல்லத் தோன்றுகிறது என்னும் இடத்தில் என்னை உங்களிடம் பகிங்கரப் படுத்தவே எண்ணுகிறேன். என்னை உங்களிடம் எடுத்தியம்பி நான் மிகப் பெரிய அவதாரப் புருசனென்று காட்டும் ஒரு மறைமுக முயற்சி. இது தவறு என்று கூறவில்லை. ஆனால் இதுதான் திரும்ப திரும்ப எல்லோரும் செய்கிறோம் இதன் ஆழத்தில் இருப்பது நமது இருப்பினை எடுத்துக் காட்ட வேண்டும் என்ற ஒரு தன்முனைப்பு.....

சமுதாயத்தின் முரண்களுக்கு காரணம் மனிதர்கள் என்றுதானே நாம் நினைக்கிறோம். சிலர் கெட்டவர்கள் சிலர் நல்லவர்கள் என்று தானே எண்ணுகிறோம்...ஆனால் அது ஒன்றும் முழுமையான உண்மை அல்ல. அது மேலோட்டமான லெளகீக எண்ணத்தின் ஓட்டத்தில் சரி என்று கொள்ளலாம் ஆனால் உண்மையில் முரண்கள் என்பவை இயற்கையே....! எதையும் முழுதாய் மாற்றி விட முடியாது என்று தெரிந்தும் மாற வேண்டும் அல்லது நல்லது நடக்க வேண்டும் என்று நாம் கூறுவது நாம் நமது தன்முனைப்பைக் காட்டிக் கொள்ளத்தான்.

தன்முனைப்பு என்பது எல்லோருக்கும் பொது. பெரும்பாலும் அது ஒத்த திசையை நோக்கியே செல்கிறது. அந்த திசைக்குப் பெயர் திருப்தி. உங்களின், எனதின் திருப்தி ஏதோ ஒரு செயலைச் செய்வதில் இருக்கிறது. அது நல்ல செயலாய் இருக்க வேண்டும் அல்லது அப்படி நல்ல செயல்கள் என்று சமுதாயத்தால் புத்திக்குள் திணிக்கப்பட்டு இருக்க வேண்டும்.

பெரும்பாலும் பொது புத்திகள் சொல்லிக் கொடுத்திருக்கும் திருப்திகளுக்கு மாறாக செயல் செய்பவர்களை நாம் ஏற்றுக் கொள்வதில்லை. பொது புத்திக்கும் மிகைப்பட்ட மனிதர்களுக்கு ஒத்து வராத செயல்களைச் செய்பவர்களை நாம் எப்போதும் சமுதாயத்தை விட்டு பிரித்து அவர்கள் தவறு செய்கிறார்கள் என்ற் கூறி விடுகிறோம்.

அவர்களின் செயல்களில் இருக்கும் நியாங்களை எப்போதும் நாம் ஆராய்வது கிடையாது. ஒவ்வொருவரின் திருப்திகளின் திசைகள் வேறு....வேறாய் இருக்கும் அதனாலேயே செயல்களின் தன்மைகளும் மாறுபாடு கொண்டதாகவே இருக்கிறது. ஆழத்தில் பார்த்தால் செயல்கள் செய்து கொண்டே இருப்பது கூட ஒரு வித குறைதான். பூரணத்தில் நிகழ்வுகள் இல்லை. அது முழுமையானது.

நகரும் வாழ்க்கையில் நாம் செய்யும் செயல்கள் எல்லாமே நாம் இருக்கிறோம் என்பதை வலுவாக இந்த உலகிற்கு அறிவிப்பதற்காகவே செய்கிறோம். இருக்கும் ஒன்றை இருக்கிறது இருக்கிறது என்று அறிவித்தல் மடமை என்று உணரும் தருணத்தில் ஒரு குழந்தையாய் வந்து இறுக்க அணைத்துக் கொள்ளும் மெளனத்தில் மொழியில்லை, பெயரில்லை, பொருளில்லை, நிறமில்லை குணமில்லை. அது அகண்ட வெளி...! அது சிவம். சக்தி ஒடுங்கிக் கிடக்கும் இடம் அல்லது இயங்க விருப்பமில்லாத இடம்.

எழுதுவதும், எழுதுவதை பலர் வாசிக்க வேண்டும் என்று எண்ணுவதும் நான் இப்படி எழுதுவேன் என்று இறுமாந்து கொள்வதும் குறைகள். வாசித்து, வாசிப்பவர்கள் பயனடைவார்களே...என்று கூட ஒரு கேள்வி நமக்குள் எழும். அந்த கேள்வியின் பின் புலத்தில் கூட தன் முனைப்புதான் இருக்கும். வாசித்து எத்தனை பேர் மாற முடியும். நிஜத்தில் யாரையும் யாரும் மாற்ற முடியாது....என்ற உண்மை உரைக்கும் இடைத்தில் வார்த்தைகள் புத்திக்குள் சிக்கிக் கொண்டு வெளியே எழுத்தாக வர மறுக்கின்றன.

வாசிப்பாளனுக்குள் இருக்கும் மனோ அமைப்பு தேடல், விருப்பம் இவைதான் எழுத்தினை உணர வைக்கும்.கலீல் ஜீப்ரான் சொன்னது போல காணும் காட்சியில் இல்லை விளக்கம்....ஆனால் பார்க்கும் மனிதனின் புத்தியில் இருக்கிறது. எழுதி நான் திருத்தினேன்...நான் சொல்லி இவன் மாறினான்...என்பது எல்லாம் வெளிபூச்சு ஜோடனைகள். நான் மாற...எனக்குள் இருக்கும் அமைப்பு உதவி செய்தது வெளியே இருந்து வரும் விடயம் அதை வேண்டுமானால் வேகமாக நகர வைக்க ஒரு ஊக்கியாய் இருந்திருக்கலாம். அவ்வளவே...!

பார்வை தெரிந்தது.....பார்ப்பதற்கு யாருமில்லை........பார்ப்பவனும் யாருமில்லை என்பதுதான் புத்தன் உணர்த்தி சென்ற விடயம். தெளிவுகளின் உச்சம் சாந்தம். சாந்தத்தின் உச்சத்தில் மனம் வேலை செய்வது இல்லை. மனம் ஒடுங்கிய இடம் மெளனம். மெளனத்தை பகிர முடியாது. முழுமையை நோக்கி நகரும் ஒரு ஓட்டத்தில் எழுதுவதும் ஒரு குறையான விடயமே.....!

ஒவ்வொரு முறை எதாவது எழுத வேண்டும் என்று எனக்கு தோன்றும் இடங்கள் எல்லாம் நான் கூனி குறுகி போகுமிடங்கள். தனிமையில் இருக்கும் போது அந்த ஏகாந்தத்தை எழுத்தாக்க வேண்டும் என்று எண்ணுமிடத்தில் என் லயித்தல் பறிபோகிறது. இன்னும் சொல்லப் போனால் இது ஒரு வியாதியாகவே தொற்றி கொண்டிருக்கிறது. அதனால்தான் அடிக்கடி சொல்வேன் படைப்பவனை விட ரசிப்பவன் ஆசிர்வதிக்கப்பட்டவன்.

நமக்கு ரசனைகள் எல்லாம் இயல்பாய் வந்து செல்வதில்லையே...அதை எழுத்தாக்க வேண்டும், பகிர வேண்டும் என்ற ஒரு கலப்பட கண்ணோட்டத்தில்தானே நிகழ்கிறது. வானம் வெளுத்திருக்கிறது. பூமி பூத்திருக்கிறது. மனிதர்கள் அங்கும் இங்கும் அலைகிறார்கள்..

வண்ணத்துப் பூச்சிகள் அதிக உயரம் செல்லாமல் இங்கும் அங்கும் செடிகளில் அமர்வதும் பறப்பதுமாய் இருக்கின்றன. சில பறவைகள் மரங்களிலும், சில அங்கும் இங்கும் சிறகடித்துக் கொண்டிருக்கின்றன...., யாரோ ஒருவன் ஒரு தெரு நாயை கல் விட்டு அடிக்கிறான் அது கத்திக் கொண்டே ஓடுகிறது....., வேறொருவன் மனிதர்களுக்கு நடுவே செல்லும் தன் சைக்கிளின் பெல்லை ஓயாமல் அடித்துக் கொண்டே செல்கிறான்...

ஒரு பேருந்து செல்கிறது, அடிக்கும் காற்றில் தெருமுனையில் குவிக்கப்பட்ட குப்பைகள் காற்றில் பறப்பதை ஆழமாய் ஒரு வயதானவர் சுருட்டினை புகைத்த படியே வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்....

இப்படியான நிகழ்வுகளை ரசிப்பவன் ரசித்து அதை உள்வாங்கி நகர்ந்து விடுகிறான். நாம் அதை பார்த்து விட்டு இதை எப்படி எழுதலாம் என்று யோசிக்கிறோம். ஒரு புகைப்படக்கலைஞன் தன் ரசிப்பினை தான் ரசிப்பதை விட அதை எப்படி காட்சியாக்கலாம் என்று யோசிக்கிறான். ஒரு இசைக் கலைஞனுக்கு அந்த சூழல் ஏதோதோ உணர்வுகளை பரப்பிப் போட அவன் அதை ஸ்வரமாக்குகிறான்...ஒரு பத்திரிக்கையாளன் அதை செய்தியாக்குகிறான்....ஒரு அரசியல்வாதி அரசியலாக்குகிறான்...

இங்கே சொல்லுங்கள்.... யார் சூழலை அனுபவிப்பது? படைப்பாளியா? அல்ல அல்ல......ரசிப்பவன் ரசிக்கிறான். அப்படி ரசித்ததை எந்த வித பெரிது படுத்தலும் இல்லாமல் விட்டு விட்டு அடுத்த வேலையை பார்த்துக் கொண்டு நகர்ந்து விடுகிறான். ஆனால் படைக்கிறேன் பேர்வழி என்று படைத்து விட்டு அதை தலையில் சுமந்து கொண்டே அலைகிறோம் ..இது எப்படி நிறையாகும்....?

கலைஞர்கள் எல்லாம் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்..ஆனால் வாழ்க்கையை முழுமையாய் ரசிக்கிறார்களா? என்பதற்கு மனசாட்சியோடு கூடிய பதில் சொன்னால் இல்லை என்று தான் சொல்ல முடியும். அவரவர் துறை சார்ந்த விடயங்களை வேகமாக உள்வாங்கும் திறன் கொள்கிறார்கள் அப்படி திறன் கொள்வதும் தம்மை எடுத்தியம்பி வெளிப்படுத்திக் காட்டவே....என்ற ஒரு சர்ச்சைக்குரிய கருத்தையும் வைக்கிறேன். இது சரியாயிருக்கலாம் அல்லது தவறாய் இருக்கலாம் ஆனால் எனது பார்வை இதுதான்.

அனுபவத்தை ஆனந்தத்தை ரசிக்கையில் அது ரசனையோடு போய் விடுமெனில் அது பற்றிய நிகழ்வுகளை மொழிப்படுத்துதல், அல்லது காட்சிப்படுத்துதல் என்னுமிடத்தில் தான் இரசித்தது இதைச் செய்யத்தான் என்றாகி விடுகிறதுதானே...?

மீண்டும் புத்தருக்கு வருகிறேன்...அதனால்தான் புத்தர் எதையுமே பகிரவில்லை. லாவோட்சூ எதுவும் சொல்ல விரும்ப வில்லை. அவரை வலுக்காட்டயப்படுத்தி எழுதச் செய்யப்பட்டதுதான் தாவோயிசம். அந்த தாவோவும் மிக தெளிவாய் நான் மேலே சொன்ன விடயத்தைத்தான் கூறியிருக்கும்.

ஆகா மொத்தம் குறைகள் இருப்பதால் பேசிக் கொண்டும் எழுதிக் கொண்டும் இருக்கிறேன்.....! முழுமையில், புரிதலில் பேச்சும் எழுத்தும் நிற்கும். அப்படி நிற்பது திருப்தியின் அளவைப் பொறுத்து மாறுபடும். திருப்தி இல்லாதவரை எல்லாம் தொடரும்...நான் எதை எதையோ கிறுக்கிக் கொண்டிருப்பதைப் போல....!

விரைவில் திருப்தியின் நுனி தொடுகையில் மெல்ல மெல்ல இயக்கம் நிற்கும்.....பின் பகிர ஒன்றுமிருக்காது...பகிர ஒருவரும் இருக்கவும் மாட்டார்கள்....அதனை முழுமை எனலாம். அல்லது மெளனம் எனவும் கூறலாம். கூடிய விரைவில் மெளனிப்பேன்....அதற்கு இந்த பிரபஞ்ச பேரியக்கம் எனக்கு சர்வ நிச்சயமாய் உதவும்....!

எங்கோ ஆரம்பித்து எதிலோ முடித்து விட்டேன்.......நோ..இஸ்யூஸ்.......திட்டமிடாமல் நகர்வதுதான் இயல்பு....!

அப்போ....வர்ர்ர்ர்ட்ட்டா!!!!!


தேவா. S

Monday, October 17, 2011

சுவாசமே...காதலாக...! தொகுப்பு: 11


உனக்குத் தெரியாது என்ன விதமான கிரியா ஊக்கியாய் நீ இருக்கிறாய் என்று.... உன்னை பின் தொடர்ந்து நான் வந்த நாட்களில் எல்லாம் ஒரு வித பட படப்போடுதான் நடந்திருக்கிறேன். ஏதோ ஒரு கணத்தில் மெலிதாய் உன் இரட்டைப் பின்னலை சரி செய்தபடி ஓரக்கண்ணால் நீ பார்க்கும் அந்த நிமிடத்தில் என் இரத்தமெல்லாம் வேகமாய் இதயத்துக்குள் சென்று அங்கிருந்து அவசரமாய் சுத்திகரிக்கப்பட்டு பம்ப் செய்பட்டு உடலெல்லாம் அதீத கதியில் பரவும் பொழுதில் என்னுள் பெருமூச்சாய் நிறைந்து கிடக்கும் உன்னிடம் சொல்லாத என் காதல்....

ஒரு பேப்பரில் ஐ லவ் யூ என்று நான் கிறுக்கலாய் எழுதி எழுதிப் பார்த்து எழுதியதில் சிறந்ததை கையில் வியர்வை நனைய உன்னிடம் கொடுக்க ஓராயிரம் முறை முயன்று, முயன்று கடைசியில் கொடுக்காமலேயே கிழிந்து போனது எல்லாம் மேலும் மேலும் என்னுள் ஆழமாய் உன் நினைவுகளை ஊடுருவத்தான் செய்தது பெண்ணே...!!!

நண்பர்கள் கூட்டத்துக்கு நடுவேயான அரட்டையில் உன்னைப் பற்றிய பேச்சுக்களில் அவர்களின் ஆலோசனைகளை நம் காதலுக்கு வள்ளல்களாக அவர்கள் வாரி வளங்கும் கணங்களில் என் புத்தியில் மட்டும் எதுவுமே சிக்காமல் உன் இரு துறு துறு விழிகள் மட்டுமே நிறைந்து நின்றிருக்கிறது.

உன் நினைவுகளோடு ஒவ்வொரு முறையும் நான் கேட்கும் ஏதோ ஒரு பாடலில் பரவிக் கிடக்கும் காதலில் தவறாமல் அங்கும் இங்கும் நீ நடந்து கொண்டிருக்கும் அழகை நான் விழித்துக் கொண்டே கனாக் கண்டிருக்கிறேன்...! உன்னிடம் சொல்லாமல் கொள்ளாமல் என்னுள் கருக் கொண்ட காதல் எப்போதேனும் வெளிப்பட்டுத்தானே ஆகவேண்டும்...

உனக்காக என்னுள் சூழ் கொண்ட காதல் குழந்தையை எந்த சூழலிலும் வேறு யாருக்கேனும் நான் கொடுத்து விடாமல் இருக்க வேண்டும் என்பதில் நானும் கற்புக்ரசனாகத்தான் பெண்ணே இருக்கிறேன்.....

அறிவியலின் மூலத்தையும், ஆன்மீகத்தின் ஆழத்தையும், புவியின் தன்மையையும், காலங்கள் கடந்து பரவிக் கிடக்கும் உலக வரலாற்றினை விரல் நுனியில் அறிந்து வைத்தும், கவிதைகளின் மூலத்தில் ஒரு காம உச்சத்தினை ஒத்த நளினத்தை மறைக்கத் தெரிந்தும், கோபங்களில் ஒரு வரிப்புலியாய் வெஞ்சினம் கொள்ள அறிந்தும்....

என்னுள் நிறைந்து கிடக்கும் காதலை உன்னிடம் சொல்ல ஒரு வார்த்தையை கொடுக்காமல் தமிழ்த்தாயும், உன்னருகில் வந்தவுடன் என் வலுவிழந்து போகும் மாயத்தை நீயும்... கொண்டிருப்பது ஒரு வஞ்சிப்புதானே?

ஓராயிரம் முறை என் தலை கலைத்து வாருகிறேன்......!!! பழைய பைக்தான் இருந்தாலும் மீண்டும் மீண்டும் துடைக்கிறேன்....இரவில் வரும் நிலாவோடு சண்டையிடுகிறேன்.... நீ அழகில்லை என்று...!!! ஒரு தென்றல் என்னைச் தீண்டிச் செல்லும் போது எத்தனை தடிமன் உனக்கு என்று சிடு சிடுக்கிறேன், ஒரு மேகம் மலை முகட்டில் தத்தி தத்தி ஏறும் காட்சியைக் கண்டு ஏளனம் செய்கிறேன்...எதுவுமே உன் போல அழகு இல்லைதானே பெண்ணே....

நீ எப்போதும் என் நினைவுகளில் இருக்கிறாய், தினமும் என்னைக் கடக்கிறாய்...! என்னைச் சுற்றியிருக்கும் சூழலே உன்னால் அழகாகிப் போனது......நானோ ஒரு கர்ப்பிணியைப் போல கவனமாய் காதலை என்னுள் தேக்கி வைத்து கற்பனையாய் கொட்டி வைத்திருக்கிறேன் எனக்குள் காதலை...

அது எப்போதும் உன்னை பற்றிய அதிர்வுகளை எனக்குள் சுகமாக பரப்பிக் கொண்டே இருக்கிறது. என் ஏகாந்த கனவுகளுக்கு சிறகு கொடுக்கும் உன் கவிதைகளும் என்னோடான உனது ஆரோக்கியமான வாதங்களும் என்னை ஏதோ ஒரு கிரகத்து வாசி போல ஆக்கித்தான் விடுகிறது.

கவிதைகளும் இலக்கியங்களும் நமது விவாதத்துக்குள் வந்து விழும் பொழுதில் எப்போதும் அதை நான் விவரிக்க நீ எதிர்க் கொள்ளும் எதார்த்தமே தனிதான். பெண்ணோடான ஒரு உறவு ஏதேதோ காரணங்களுக்காக தொடரும் லெளகீக உலகில் உன் அறிவோடு கூடிக் களித்ததில் என் அகங்காரம் அடங்கித்தான் போனது. பேசி பேசி உனக்கு விளக்க வேண்டும் என்று நான் நினைத்த எல்லாவற்றையும் உன் மெளனத்தால் அழித்து தெளிவுகளைப் பற்றிய தீட்சை கொடுத்த குரு நீ.

எதுவுமே உன்னிடம் மிகுந்து போய் நான் இதுவரை கண்டதில்லை உன் அழகு உள்பட. திருத்தமாய் உன்னை தீட்டிய தூரிகைக்கு சொந்தகாரனின் ஜீன்களும், புறச்சூழலும் எவ்வளவு செம்மையாய் இருந்திருக்கும்? என்று என் மூளை கணக்குகள் போட்டிருக்கிறது. இயல்பிலேயே நளினம் கொண்ட உன் பெண்மைக்கு மெருக்கூட்டும் உன் அறிவு என் முதற்பார்வையில் சிக்கி அதன் பின் உன் புற அழகை இலவசமாய் எனக்கு கொடுத்தது.

நினைவுகளில் உன் கரம் பற்றிக் கொள்கிறேன்..எங்கெங்கோ கூட்டிச் செல்கிறாய்...நான் அதிசயத்து நடக்கிறேன்....!!!! எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் நமக்குள் மூண்டுவிட்ட காதலை என்னால் சொல்ல முடியவில்லை என்று உன்னிடம் சொன்ன போது காதல் என்பது சொல்லி விடுவதால் மற்றும் நிறைந்து விடாது அது புரிந்து கொள்ளப்பட வேண்டியது, வெறும் வார்த்தைகளை உமிழ்ந்து விட்டே வேறு கற்பிதங்கள் கொள்ளும் சராசரி நிகழ்வுகள் நமக்கு வேண்டாமே என்றாய்...

இதோ தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கிறது உனக்கும் எனக்குமான காதல், எந்த வலியுறுத்தலும் எந்த எதிர்பார்ப்புகளுமின்றி ஒரு வாசம் பரப்பும் ஒரு மலரின் இயல்போடு தொடர்ந்து...ஆமாம்... காதலின் வலுவை சப்தமின்றி சொல்லிக் கொடுத்த நீ கூட ஒரு மெளன குருதான்....!

என் மெளனங்கள் சூழ்ந்த பொழுதுகளில் எல்லாம் உருவங்களற்று பரந்து விரிந்து கிடக்கிறது உன் நினைவுகள் ஒரு வெட்ட வெளி வானமாய்....

இதோ நீ இன்று இல்லை...இருந்தாலும் வானத்தில் பரவிக் கிடக்கும் நட்சத்திரங்களைப் போல நானும் காதலால் நிரம்பித்தான் கிடக்கிறேன்!தேவா. S


Sunday, October 16, 2011

புள்ளையாரப்பா....!


காரைக்குடிக்கு இதுக்கு முன்னாடி நீங்க வந்திருக்கிறீயளா.. என்னனு எனக்குத் தெரியாது. காரைக்குடி பழைய பஸ் ஸ்டாண்ட் தாண்டி நேரா போற கட வீதிக்கு பர்ஸ்ட் பீட்டுன்னு பேரு. பர்ஸ்ட் பீட்டுக்கு அங்கிட்டு காப்பித்தூள் வாசனையோட கடைத் தெருவ நீங்க தாண்டி போகும் போதே நாலு ரோடு பிரியும். லெப்ட்ல திரும்பி போனியனாக்கும் பெரியார் சிலை வரும் அது நாடிக்கே போனியன்னா புது பஸ்ஸ்டாண்டு அத விட்டுத்தள்ளுங்க ....,

நீங்க ரைட் சைட்லயும் போக வேணாம், என் கூட ஸ்ட்ரெய்ட்டா வாங்க. நடு செண்ட்டர்ல கொடைக்குள்ள நிக்கிற போலிஸ்காரவுகள கண்டுக்காம, ரைட் சைட்ல டாக்ஸிக் காரப்பயலுக நிப்பாய்ங்க அவிங்களயும் பாக்காம என் பொறத்தாடியே வாங்க.. டாக்சிக்காரய்ங்கள ஏன் பாக்க வேணாம்னு சொன்னே தெரியுமா? அப்புறம் வண்டி வேணுமாண்ணேனு கேட்டுக்கிட்டே வந்து ஒரண்டை இழுத்தாலும் இழுப்பாய்ங்க...அதுக்குத்தேன்...

இந்த முக்குல திரும்புனியன்னா ரைட் சைட்ல வர்றதுதேன் கொப்புடையம்மன் கோயிலு, இந்த கோயில்ல சாமி கும்பிட வந்தப்ப என்னிய புடிச்ச, என் காலேஸ்ல படிக்கிற சனியனத்தான் இப்ப பாக்கப் போறோம். எங்க வீடு இருக்கறது மானகிரில நான் படிக்கிறது அழகப்பா காலேஷ்ல எம்பேரு சிவராமன்...சரியா? கேக்குறதுக்கு முன்னாடியே கொடுப்பமுள்ள டீட்டெய்லு...

என்னிய நம்பி கதைய கேட்டுகிட்டு இம்புட்டு தூரம் நீங்க வந்திட்டிய ஆனா..., என்னிய ஒரு ரெண்டு வருசமா லவ் பண்றேன்னு சொல்லிப்புட்டு இப்ப மாட்டேங்கிறாங்க இவ..!!! இப்ப நான் இவன்னு சொன்னது கவிதாலத்தேன்....கவிதா கவிதான்னு கூப்புட்டு கூப்புட்டு எம்புட்டு கவித எழுதியிருப்பேன்.. இப்ப நொடிச்சிகிட்டு மாட்டேங்குது லூசுப்பயவுள்ள...

அந்தா, அந்த அங்கு விலாஸ் ஓட்டல்லதேன் அவ எனக்காண்டி வெயிட் பண்ணிட்டு இருக்காளாம். போய்ட்டு பாத்துட்டு வந்திர்றேன்...நீங்க புறத்தாடியே வந்து ஏதாச்சும் ஒரு டேபிள்ள ஒக்காந்து வேடிக்க மட்டும் பாருங்கப்பு.... நம்மள தெரிஞ்ச மாதிரி காட்டிகிறாதிய...

அங்குவிலாஸ் ஓட்டலுக்குள்ள வந்து கல்லாப்பெட்டில இருந்த ஒனரையும் அவரு நெத்தியில இருந்த துண்ணூத்து பட்டையையும், கல்லாப்பொட்டிக்கு பொறத்தாடி இருந்த முருகன், கணேசரு, காமட்சி, சிவன், பெரிய கருப்பன், சின்ன கருப்பன் எல்லா சாமியவும் தாண்டி ஓட்டலுக்குள்ள இருந்து வந்த பூரிக் கிழங்கு வாசனை ஆளத்தூக்கி சாப்பிடத்தேன் செஞ்சுச்சு.....

4 மணிக்கு பக்கோடா போட்ருவாய்ங்க, சூடா தோச கொடுப்பாய்ங்க அதுக்கு காரச்சட்டினி, கொத்த மல்லி சட்டினி, புதினா சட்டினி, தக்காளி சட்டினி, சாம்பாருன்னு அலப்பறைய கூட்டுவாய்ங்க... செட்டி நாடுல்லப்பு....சாப்பாட்டு சவட்றனைக்கு ஒரு கொறச்சலும் இருக்காது....

கவிதாலக் காணமேன்னு தேடிக்கிட்டு இருந்தப்ப, உள்ளுக்கு இருந்த இருவத்தஞ்சு டேபிள்ள கடைசி டேபிள்ள ஒடுங்கிகிட்டு ஒக்காந்து இருந்துச்சு பயவுள்ள. பட்டணத்து புள்ளக் குட்டிய மாதிரி அம்புட்டு தெகிரியமா எல்லாம் நாங்க லவ் பண்ண முடியாதுப்பு. எவனாச்சும் மாமேன், மச்சினன், அங்காளி, பங்காளின்னு பாத்துப் புட்டாய்ஙக்ன்னா ஊருக்குள்ள ஏழரைய கூட்டிப் புடுவாய்ங்க..ஆமா!

எனக்கும் பயந்தேன்.. கெதக்கு கெதக்குனு இருந்துச்சு.. என்ன செய்ய? காதலிச்சு தொலைச்சாசுல்ல...! நேர போயி கவிதாலுக்கு எதித்தாப்ல உக்காந்தேன்...

இஞ்சருல்ல ....! என்ன தலைய குனிஞ்சு கிட்டு ஒக்காந்திருக்க...? என்ன சாப்புடுற சொல்லுன்னு வீராப்பா சொல்லிப்புட்டு மணி பர்சுல இருந்த 200 ரூவாய நினைச்சுகிட்டேன்...அப்புடியே மணி பர்ச தொட்டும் பாத்திக்கிட்டேன். லேசா ஒரு டவுட்டு காச வச்சமா பர்சுலன்னு...இருக்கும் இருக்கும் எங்க போயிறப்போகுது கழுத...

அப்புறமும் ஒரு டவுட்டு.. இவ என்ன 200ரூவாய்கு மேலயா தின்டு புடப் போறா...ன்னு யோசிச்சுக்கிட்டே... ஏய்.. என்னலே கேட்டுகிட்டே இருக்கேன்..ஒம் பாட்டுக்கு பேசாம இருக்க....பேசுல....கொஞ்சம் பெலக்கா பேசினேன்...!

இல்ல செவராமா..., நம்ம ரெண்டு பேரும் கட்டிக்கிற முடியாதுடா. எங்கய்யா, எங்க அய்த்த மயனுக்குத்தேன் என்னிய கட்டிக் கொடுப்பேன்னு சொல்லிப்புட்டாருடா....! நான் மாட்டேன்னு சொல்லி...கெடந்து கதறி அழுது பாத்துடேன்டா... ! ஏண்டி எடுபட்ட செறுக்கி யாரையும் லவ்வு கிவ்வு பண்ணுறியா? ஒன்னிய காலேசுக்கு அனுப்பிச்சதுதேன் நாஞ்செஞ்ச தப்பு.. தலைக்கு பூவ வச்சிகிட்டு கண்ணாடி முன்னாடி ஒரு மணி நேரம் நின்னப்பவே நெனச்சேன்னு சொல்லிக்கிட்டு எங்கம்மாவும் வெளக்கமாத்த எடுத்து அடிச்சு புடிச்சுடா...

எங்கய்யா.....சொல்லுறாக...." ஏத்தா அப்புடி காதல் கீதல்னு என்னமாச்சும் இருந்த சொல்லிருத்தா...அது எல்லாம் நமக்கு சரிபட்டு வராது அப்பறம் நான் நாண்டு கிட்டே செத்துப் போவேன்" னு சொல்லிகிட்டு நெஞ்சுல அடிச்சுகிட்டு அழுகுறாருடா....

ஏண்டி என்னமாச்சும் ஆக்கெட்ட (ஆக்ட்) கொடுத்த வக்காலி கொண்டே புறுவேன்னு எங்கண்ணே ஈசங்காட்டு கொறப் பய மாறிக்கி கத்துறான்...

வேண்டாம் செவராமா...! என்னிய மறந்துட்டு நீ வேற யாரயச்சும் கட்டிக்கடா, என்னால ஒன்னிய மறக்க முடியாது இருந்தாலும் அவிங்கெளுக்கு சேதி தெரிஞ்சு போச்சுன்னா கொண்டே புடுவாய்ங்க....

அவ பாட்டுக்கு பட படன்னு சொல்லிபுட்டு கேவி கேவி அழுகுறத பக்கத்துல இருந்த சப்ளையர் வேடிக்க பாத்துக்கிட்டு வேற நிக்குறான்...! எப்பே.....என்ன குறு குறுன்னுன்னு பாத்துகிட்டு இங்க நிக்கிறிய, ரெண்டு காப்பி வெரசா கொண்டாங்கன்னு அவன பத்தி விட்டுட்டு மணிய பாத்தேன்...சாயங்காலம் 4:30 ஆயிப்போச்சு....என்னம்மாச்சும் சாப்டுகிட்டே பேசுற மாறி சேதியா சொல்லிருக்கா இவ..ம்ஹூம் எல்லாம் எங்கெரகம்...பர்ஸிலிருந்த 200 ரூவா மெல்ல என்னிய பாத்து சிரிச்சதுதேன் மிச்சம்.

இவளுக்கு என்ன பதில நாஞ்சொல்லுறது....எனக்கு வேற கண்ணுல தண்ணி வந்துடுச்சு...! ஏய் இஞ்சருல்ல கவிதா ... தலைய நிமிரு புள்ள..., உன்னியத்தேன் உசுருக்கு உசுரா நான் லவ் பண்றேன்னு ஒனக்கே தெரியும்ல. வேற யாரையும் நிமிந்த்து கூட பாத்தது இல்லயில நானு..! இன்னும் ஒரு வருசம் நம்ம காலேஸ் முடியிற வரைக்கிம் இழுத்து வைய்யி அதுக்கப்பறம் நானே உன்ன கூட்டிட்டு போயி கல்யாணம் பண்ணிறேன். அம்ம படிப்பு முடிஞ்சுருச்சுன்னா எங்கப்பாருகிட்ட சொல்லி நான் கூட்டியாந்து ஒனக்கு தாலி கட்டுறேன்.. செத்த பொறுல....

கெஞ்சி கேட்டுட்டு அவ மொகத்த பாத்தேன். கவிதா அழகுதேன்....! துறு துறுன்னு அங்கிட்டும் இங்கிட்டும் பாக்குற கண்ணு, எடுப்பான மூக்கு, கண் மைன்னு ரொம்ப லெட்சணமானவதேன்... தலை முடி கொஞ்சம் கொறவுதேன்...ஆனா பாவட தாவணி கட்டிகிட்டு அவ நடந்து வந்தான்னா.. கொப்புடையம்மன் கோயிலு தெப்பத் திருவிழா தேரு வர்ற மாதிரி அப்படி ஒரு அழகு. காலேஸ்ல பயலுக எல்லாம் ரூட்டு விட்டு பாத்தாய்ங்க.. அது என்னவோ நம்ம கையில வந்து நின்னுருச்சு....

கவிதா கண்ண தொடச்சிகிட்டு மறுவடிக்கும் பேச ஆரம்பிச்சா..."அது இல்ல செவராமா அய்த்த மயன கட்டலேன்னா கூட பரவாயில்லயாம்டா, வேற எவன பாத்து எங்கய்யாவும் அம்மாவும் சொல்றாகளோ அவுகளதேன் கட்டணுமாம்....எனக்கு வேற வழி தெரியலடா செவராமா. நீ படிச்சி நல்ல புள்ளையா பத்து கட்டிக்க இந்த சிறுக்கி மவளுக்கு நீ கொடுத்து வைக்கலேன்னு நெனைச்சுக்கிறேன்னு தேம்பிகிட்டே சொன்னிச்சு கவிதா.

காப்பிய வச்சிட்டு அங்கனகுள்ளயே நின்னுக்கிட்டுருந்த சர்வர மொறச்சு பாக்கவும் அவன் அங்கிட்டு போனான். திரியுறாய்ங்கப்பா ஊரு ஒலகத்துல எவன் என்ன பண்றான்னு பாக்க மெல்ல முனகிகிட்டே.. கவிதால பாத்தேன். இஞ்சருலே காப்பிய குடில மொதல்ல.... அது எப்டில பொசுக்குன்னு சொல்லிப்புட்ட நீ வேற யாரயாச்சும் கட்டிக்கண்னு... பயலுகன்னா என்ன ஒனக்கு அம்புட்டு எளக்காரமா? ஒரு காதல் தாண்டியேய்....!!!! உன்னையவே நினைச்சுகிட்டு மீதி வாழ்க்கையை ஓட்டிபுட்டு போயிருவேன்....

உங்கய்யாகிட்ட சொல்லி அழுது கிழுது கொஞ்சம் டைத்த இழுத்துப் போடு பொறவு பாத்துகிருவோம். ஒம் மேல சத்தியமா சொல்லுறேன் ஒன்னிய விட்டுட்டு வேறு பொம்பள புள்ளைய நான் ஏறடுத்து கூட பாத்தது கிடையாது ஆமா...! சரி நேரம் ஆயிப்போச்சு பொம்பளப்புள்ள காணோம்னு தேடப் போறாய்ங்க...நீ கெளம்புல அதட்டலாய் சொன்னேன்.

செவராமா என்னிய மறந்துரு செவராமான்னு சொல்ல முடியல என்னாலா, ஆனா இந்த கட்டை வேகுற வரைக்கும் உன்னியத்தான் நெனைக்கும். முதல்ல மாறி நான் போன் பேச முடியாது செவராமா, உன்ன பாத்து பேசுறதும் கஷ்டம்தேன்.... உன்னையவே நெனச்சுகிட்டு இருப்பேன்...எங்கன இருந்தாலும்...

கவிதா குடிச்ச காப்பி டம்ளர் காலிய எம் முன்னால கெடக்கு. அவ அழுத, அழுக என் ஈரக் கொலைய புடிச்சிகிட்டு இருக்கு....கவிதா போய்ட்டா.... ! எல்லாத்தையும் கொட கொடன்னு கொட்டுபுட்டு போய்ட்டா...! ச்சே என்ன வாழ்க்கையிடா.... ? சரி மனசு சரியில்ல புள்ளையார் பட்டி கோயிலுக்கு போயிட்டாச்சும் வருவம்னு நெனச்சுக்கிட்டு...

கல்லாவில் காசு கொடுத்துட்டு மறுக்கா நடந்தேன்.... பர்ஸ்ட் பீட், காபித்தூள் வாசம், பழைய பஸ் ஸ்டாண்ட்....! அட ஷ்யாம் பஸ் வருது... காலேஸுக்கு மத்தியானம் நான் போகலை. இந்த காலேஸ் முடிஞ்சு வர்ற பஸ்தேன்...! பிள்ளையார் பட்டி வழியா திருப்பத்தூரு போற வண்டி...! எங்க காலேஸ் புள்ளைக, பயலுக எல்லாம் இதுலத்தேன் போவாய்ங்க...

ஷ்யாமில் ஏறி முன்னாடி படிகட்டு ஓரமா நின்னுகிட்டேன். செக்கர் அண்ணே.. நல்லாயிருக்கியளானு கேட்டுகிட்டே கண்டக்கடர பாத்து வணக்கம் பாசுன்னு ஒரு சல்யூட்ட போட்டுகிட்டு இருக்கயிலயே...

இரண்டாவது சீட்ல இருந்த மஞ்சக் கலர் தாவணிய எதார்த்தமா பாத்தா.. அதுவும் என்னியதான் பாக்குது...ஏய் இது பர்ஸ்ட் இயர் சுவாலஜில சேந்திருக்கிற கீதவுள்ள!!!! ஆமா புள்ளையார் பட்டின்னு பையலுக சொன்னாய்ங்க...ன்னு யோசிச்சுக் கிட்டு இருகையிலயே.. அது என்னைய பாத்து சிரிச்சுருச்சு..அட... இதுல பேக் ரவுண்டல பாட்டு வேற பஸ்ல..." அடடா மழைடா அடை மழைடா..."ன்னு .. நானும் சிரிச்சு வச்சேன். நான் சிரிச்ச உடனேயே கைய நீட்டி என் பொஸ்தகத்த கேட்டுச்சு நானும் வேகமா கொடுத்தேன்....

அப்புறமென்ன புள்ளையார் பட்டி போற வரைக்கிம், நான் தலைய கையால கோதிகிட்டே கீதால பாக்க, கீதா என்னஉஅ பாக்க....படக்குன்னு புள்ளியார் பட்டி வந்துருச்சு...! " எங்க இங்குட்டு வந்திருகீக ஐயான்னு" அது என்னத்தேன் கேட்டுச்சுன்னு தெரியாம பொஸ்தகத்த வாங்கிகிட்டு தேங்க்ஸ்ங்கன்னு சொன்னேன்...

என்ன இங்கிட்டுன்னு கேட்டேன்னு மறுக்கா கேட்ட உடனேதான் கோயிலுக்கு வந்தேன்னு தத்து பித்துன்னு ஒளறி வச்சேன்....என்ன என்னமோ அது பேச...நான் கேட்டுகிட்டே கோயிலு பக்கமா போக கூடவே கீதாலும் வந்துச்சு...

நான் யார்கிட்டயும் இது வரைக்கும் இவ்ளோ க்ளோசா பேசுனது இல்ல சிவராமன் சார்னு கீதா சொன்னப்ப.. ரொம்ப சந்தோசமாத்தேன் இருத்துச்சு....பதிலுக்கு நானும் தான் யார் கிட்டயும் பேசுனது இல்லன்னு சொல்லி முடிக்கையில கவிதா நெனப்பு மெல்ல எட்டிப் பாத்துச்சு மனசுக்குள்ள....! தெப்பக் குளத்து முக்கு வரைக்கு வந்துட்டு லெப்ட்ல திரும்பி வீட்டுக்கு போயிருச்சு கீதா....

போறதுக்கு முன்னாடி அடிக்கடி பேசுவோம்னு வேற சொல்லிட்டு போயிருச்சு...! நான் கோயில பாக்க போய்கிட்டு இருந்தேன்.. புள்ளையாரப்பா... என்ன இது... இப்ப மனசு பூர கீதா, கீதா கீதான்னு பொலம்புதேன்னு யோசிச்சுகிட்டே கோயில் வாசல்ல செருப்ப விடும் போது

" ஏய் இஞ்சருல்ல கவிதா ... தலைய நிமிரு புள்ள..., உன்னியத்தேன் உசுருக்கு உசுரா நான் லவ் பண்ணிகிட்டு இருக்கேன்னு ஒனக்கே தெரியும். வேற யாரையும் ஏறெடுத்தும் பாத்தது இல்ல புள்ள..! " கவிதா கிட்ட சொன்னது பெலக்கா மனசுக்குள்ள கேட்டிச்சு...

இருந்தாலும் கீதா கிட்ட பேசிகிட்டு வந்ததும் நல்லாத்தேன் இருந்துச்சு....

அட...என்னப்பு நீங்க மொறைக்கிறீக...?

அங்கு விலாசு ஓட்டல்ல, ஒரு ஓரமாத்தேன் ஒங்கள ஒக்காரச் சொன்னேன்..பிள்ளையார் பட்டி வரைக்கும் ஆரு ஒங்கள வந்து வேவு பாக்கச் சொன்னாக....? போங்கப்பு போயி வேற சோலி இருந்தா பாருங்க...நாங்க கோயிலுக்கு சாமி கும்பிட போறமாக்கும்....

புள்ளையாரப்பா...........எல்லாத்தையும் காப்பாத்து சாமீமீமீ......!!!!! பஸ்ல கவிதா போய்கிட்டு இருக்கும்.. கீதாவும் வீட்டுக்கு போயிருக்கும்ல..யோசனை பண்ணிகிட்டே...

கோயிலுக்குள் நுழைந்தே விட்டேன்...!


தேவா. SSaturday, October 15, 2011

கடந்து போம்...!

எழுதத் தோன்றாத வார்த்தைகளை தேடிக் கோர்த்துக் கொண்டிருக்கிறேன் ஒரு குருடனைப் போல.....! இரைச்சலே வேண்டாம் என்று எழுதத் துணியும் மனதுக்கு கூட சுற்றிலும் ஒரு இரச்சலின் அதிர்வுகள் தேவைப்படத்தான் செய்கிறது. கூட்டத்திற்கு நடுவில் நின்று கொண்டு,நான் தனி, நான் தனி என்றும் கூறும் நடிப்புக்கள் எல்லாம் தள்ளி விடப்பட்ட தனிமையில் மூச்சு திணறித்தான் போகின்றன. தொண்டை அடைக்க, கண்கள் பிதுங்க மானுடக் கூட்டங்களை சப்தமின்றி தேடத் தொடங்கும் மாய மனதின் மனதினை தொட்டு நிறுத்தி கேள்வி கேட்கும் பொழுதுகளில் தெரிகிறது உண்மை மமதை என்னவென்று....

யாருமே இல்லாமல் வாழ்வது நிம்மதியென்று யாரேனும் பகிர்ந்தால் அவர் கூறுவது பொய்யென்று கூறி நான்கு கசையடிகள் கொடுங்கள். மனிதனாய் ஜீவித்ததின் தாத்பரியமே கூடிவாழ்தல். இப்படியாய் கூடி வாழும் பொழுதுகளில் நெஞ்சு நிறைக்கும் நினைவுகளை மனிதர்களுக்கு கொடுத்து மனிதர் சூழ மமதைகள் அழிந்து கிடைக்கும் அமைதிதான் சத்தியத்தின் சொந்த வீடு.

மாறாக மனிதர்களை வெறுத்து, வாழ்க்கையை புறம் தள்ளி வெளியே அமைதியைக் கொண்டு வர முயன்று நம்மைச் சுற்றிலு மயான அமைதியை நாம் உருவாக்கி விடலாம் ஆனால் உள்ளே பேரிறைச்சல் பேயாய் கூவிக் கொண்டுதானிருக்கும்.

சாந்தமும் சந்தோசமும் உள்ளே நிரந்தரமாய் குடியேற வேண்டுமானல் புறத்தில் எப்போதும் நிசப்த நிமிடங்களாகவே இருக்க வேண்டிய அவசியமில்லை என்பதை அறிக எம் மக்களே..! சுற்றியுள்ள மனிதர்களை நேசித்தலும் தத்தம் கடமையினை செவ்வன செய்வதுமாக நகர்கையில் இந்த அழுத்தங்கள் தாண்டி நாம் வந்து விழும் ஒரு பரந்த வெளிதான் நிம்மதி.

இந்த மெளனம் சப்தங்கள் கழிந்தது அல்ல....சப்தங்கள் கடந்தது. அழிந்தது அல்ல ஆனால் நிறைந்தது. செயல்களின் நிறைவுகள் கொடுக்கும் நிரந்தர மெய்யின் நிதர்சனத்தை ஒருவன் ருசிக்க வேண்டுமெனில் அவன் சமுதாய ஓட்டத்தின் அங்கமாயிருக்க வேண்டும்.

இதனால்தான் பெரும்பாலும் பணத்தை வைத்துக் கொண்டு அமைதியைத் தேடி ஓடுபவனுக்கு அவன் சுவிட்ச்சர்லாந்தில் ஆழமான அமைதி சூழ்ந்த இடத்தில் வசிக்கும் போதும் கிடைப்பதில்லை. பெரும்பாலான கிராமங்கள் நிசப்தங்களின் தொட்டிலாய்த்தான் இருக்கிறது ஆனால் அங்கிருக்கும் மனிதர்கள் நிம்மதியாய் இருக்கிறார்களா? ஆனால் பகல் முழுதும் ரிக்சா வண்டி ஓட்டி விட்டு இரவுகளில் சென்னையின் மண்ணடி, போன்ற நெரிசலான பகுதிகளில் தெரு முனைகளில் ரிக்க்ஷா வண்டிக்குள் கிடந்து உறங்குபவர்களை பாருங்கள்.....சலனமின்றி உறங்கிக் கொண்டிருப்பார்கள்.

அவருக்கு லெளகீக சங்கடங்கள் இல்லை என்று கூற இயலாது. இருக்கும் ஆனால் நிம்மதியும் இருக்கும். நிம்மதி என்பது நிறைவாய் நாம் அடுத்தவரை நடத்துதலிலும், நாம் நடந்து கொள்வதிலுமிருந்து விளையும் நன் முத்து. எனக்குத் தெரிந்து மிகைப்பட்ட பேர்கள் வாழ்க்கையில் பொருளாதார பலம் பெறவும், தன்னை அடுத்தவன் மதிக்க வேண்டும் என்பதற்காகவும் விவரம் தெரியாமல் ஒரு ஓட்டத்தை ஆரம்பிக்கிறார்கள்.

நாளடைவில் ஓடிக் கொண்டிருக்கிறார்கள்....ஓடிக் கொண்டிருக்கிறார்கள்......நிறுத்தவே முடியாத ஒரு நிலையை அவர்கள் அடைந்து விடுகிறார்கள். நின்று விட்டால் உயிர் போய் விடுமோ? யாரும் தம்மை மதிக்க மாட்டார்களோ என்று பயந்து ஓடி ஓடி நிற்பதையே மறந்து மூச்சிறைக்க ஓடுவதையே வாடிக்கையாக்கிக் கொண்டார்கள்.

இவர்களுக்கு உட்காரத் தெரியாது. உட்காரவும் முடியாது. காரணம் மனோவசியக் கட்டு அப்படி. காசு கொடுத்து எங்காவது இத்தனை மணி நேரம் உட்காருவேன் என்று உட்காருகிறேன் பேர்வழி என்று மீண்டும் மீண்டும் தமது கடிகாரத்தையே பார்த்துக் கொள்கிறார்கள் இன்னும் எவ்வளவு நேரம் இருக்கிறது தனது ஓய்வு முடிய என்று..., ஆக மொத்தம் அங்கும் அவர்களுக்கு ஓய்வு இல்லை.

ஒரு மாதிரியான விளையட்டு இந்த வாழ்க்கை இதில் ஏறி அடிக்கிறேன் பேர்வழி என்று போய்க் கொண்டே இருப்பதால் ஒன்றும் பெரிதாய் விளைந்து விடப் போவது இல்லை. ஏறிப்போய் அடிப்பதுபோல அடித்து ஆடுவது போல ஆடி..நடித்து மீண்டும் ஒரு இயல்பு நிலைக்குத் திரும்பி விடவேண்டும். வாழ்க்கையின் தேவைகளை யார் தீர்மானிப்பது?

நமது தேவைகளை நாமே தீர்மானிப்போம் என்று ஒரு உறுதி மொழி எடுத்துக் கொள்ளுங்கள். ஊர் நம்மை தீர்மானித்தால், நாம் என்ற தனித்தன்மை இல்லாமல் ஒரு தெருமுனையில் இருக்கும் குப்பைத் தொட்டி போலத்தானே ஆகி விடுகிறோம்....? யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் கொட்டலாம்....என்பது போல...

ஒரு கட்டத்தில் தேவைகள் நிறைவேறிய பின்பு எதையெல்லாம் வாழ்க்கையை வெல்ல, நம்மை சமப்படுத்திக் கொள்ள யுத்திகளாக பயன் படுத்தினோமோ அவற்றை எல்லாம் திருப்பிக் கொடுக்க பழகிக் கொள்ள வேண்டும். ஆசை, கோபம், காமம், ருசி, வேகம் என்று எல்லாவற்றையும் மெல்ல மெல்ல வாழ்க்கையிடம் திரும்ப கையளித்து விட வேண்டும். முழுமையான நிதானம் ஏற்பட்டு, அங்கே மனிதர்களுக்கு பகிர நம்மிடம் அன்பைத் தவிர வேறொன்றுமே இருக்கக் கூடாது. ஆமாம் ஓடி, ஓடி மெல்ல மெல்ல ஓட்டத்தை குறைத்து நிற்பது எப்படி என்று கற்றுக் கொள்வது ஒரு கலை.

விமானம் பறந்து வந்து ஓடு களத்தில் சரலென்று பாய்ந்து வேகமாய் ஓடி பின் வேகம் குறைந்து மெதுவாய், மிக மெதுவாய், மிக மிக மெதுவாய் நகர்ந்து ஒரு கட்டத்தில் நின்று விடத்தானே செய்கிறது. மனிதர்கள் வாழ்க்கையும் அப்படித்தான்....ஆனால் என்ன ஒன்று பலர் லேன்டிங் எப்படி செய்வது என்று தெரியாமல் முட்டி மோதி வாழ்க்கையின் மொத்த பறத்தலையுமே எரித்து விட்டு நிம்மதியின்றி போய் விடுகிறார்கள்.

எவ்வளவு தூரம் பறந்தோம், எவ்வளவு சவால்களை மேற்கொண்டோம் என்ற நமது திறமைகளின் மொத்தம் முழுமடையும் இடம் எது? வெற்றிக்கரமான லேன்டிங் தானே? ஆனால் பாருங்கள் வாழ்க்கையை முடிக்கும் போது எத்தனை மன அழுத்தத்தோடு மனிதர்கள் இருக்கிறார்கள்? முடிவு என்பது நிறைவு. இறுதி என்பது முழுமை. மனித வாழ்க்கையின் இறுதியில் மனிதர்கள் நிறைவாய் இருப்பது என்பது மிக மிக குறைவே....!

எனக்குத் தெரிந்த ஒருவர் இறக்கும் முன்பு வரை கறி வேண்டும், கோழி வேண்டும், சாப்பாடு வேண்டும் என்று கேட்டுக் கொண்டே இருப்பார். இது அவரின் அந்திமத்தில் நிகழ்ந்தேறிய ஒரு கொடுமை. 75 வயதில் படுத்த படுக்கையில் இருந்த போது அவரைக் காண வந்த உறவினர்கள் அனைவரிடமும் தலைக்கறி குழம்பு வச்சு கொண்டு வாங்க, கோழிக் குழம்பு எடுத்துட்டு வாங்க என்று கூறிக் கொண்டே இருப்பார். அப்படி அவருக்கு வைத்துக் கொடுக்கும் எதையுமே அவரால் உண்ண முடியாது. காரணம் அது அவரின் உடல் தேவை அல்ல மனதின் தேவை....

ஆமாம் என் உறவுகளே...! உடல் ஒத்துழைக்காத போதும் மனம் போடும் பேயாட்டத்தால் மிகப் பெரிய கொடுமையினை அனுபவித்தே ஆகவேண்டும், அதிலிருந்து விடுபட நிறைவு வேண்டும். நிறைவுக்கு புரிதல் வேண்டும். புரிதலுக்கு மன அமைதி வேண்டும். மன அமைதிக்கு நிலையாமையை உணர்தல் வேண்டும். நிலையாமையை உணர வரலாற்றினை உற்று நோக்க வேண்டும். வரலாறு எப்போதும் மாவீரர்களையும், பெரும் குருமார்களையும், பேரழிகிகளையும், பேரரசர்களையும் கொடுமையான மிருகங்களையும், கருணை வள்ளல்களையும் தின்று செரித்திருக்கிறது.

இதில் நாம் உணர வேண்டியது..........இப்படியான மனிதர்கள் எல்லோரும் கடந்த காலத்தில் இருந்தார்கள். இன்று இல்லை. நாம் இன்று இருக்கிறோம் நாளை இருக்க மாட்டோம் என்ற நிதர்சனத்தை தான். உணர்தலில் பிறக்கும் தெளிவில் ஆழமாய் வாழ்க்கையின் பொருளை உணரும் வாய்ப்பு கிடைக்கலாம். கிடைக்காமலும் போகலாம். ஏன் கிடைக்காமல் போகலாம் என்று கூறிகிறேன் என்றால் அது உங்களின் பக்குவத்தைப் பொறுத்தது. உங்களின் பக்குவம், உங்களின் ஜீன்கள் மற்றும் புறச் சூழலின் தாக்கத்தைப் பொறுத்தது.

வாங்கும் நிலத்திற்கு ஏற்றார் போலத்தானே பலன்..! தெளிவுகளை கைக் கொள்ள, கொள்ள தொடர்புகளை நிறைவாக பயன் படுத்தி மனிதர்களை ஆழ உணர்ந்து சரி தவறுகளை சீர் தூக்கி பார்த்து ஒரு நிகழ்வையோ அல்லது மனிதரையோ கடக்கும் போதுதான் நிதர்சனமான பேரமைதி கிடக்கிறது. இதை மறுத்து என்ன செய்தாலும் மீண்டும் உங்கள் நினைவுகள் ஒரு கூட்டத்தை கூட்டும், நீங்கள் தனியாக இமய மலையில் இருந்தாலும் இந்த எண்ணக் கூட்டங்கள் விடவே விடாது.

நீண்ட நெடிய பிரபஞ்ச ஓட்டத்தில் அனுபவமே....உணர்தலாய் இருக்கிறது. உங்களின், எனது அனுபவங்களை உற்று நோக்கி புரிதலாக்கி...சப்தங்கள் கழியாத ஆனால் கடந்த ஒரு பேரமைதிக்குள் பிரவேசிப்போம்..........

அதுவரை...

சுற்றி நிகழும் நிகழ்வுகளை எல்லாம் மெளனமாய் உள்வாங்க்கி கொண்டு புரிதலோடு கடந்து போவோம்...!!!!


தேவா. S

Sunday, October 9, 2011

அவள் வரலாம்..!
நினைவுகளை ஏந்தி
காத்திருக்கிறேன்...
மீண்டுமொருமுறை
அவள் எனைக் காண வரலாம்...
என்னுள் ஏகந்தக் கனவுகளைப்
பரப்பிப் போட்டு
பழுப்பேறிப் போயிருக்கும்
என் நாட்களுக்கு
வர்ணங்கள் தீட்டலாம்..!

எரிந்து போன விறகின்
கடைசி முயற்சியாய்
மெலிதாய் துளிர் விடும்
சிறு கங்கினைப் போல
கனன்று கொண்டிருக்கும்
என் காதல் அவள்
சுவாசத்தை எரிதிரவமாக்கி
மீண்டு அனல் பரப்பி
பற்றிப் பரவலாம்...!

நீண்டு கொண்டே இருக்கும்
பொழுதுகளின் மடிப்புகளில்
குற்றுயிரும் குலை உயிருமாய்
முனகிக் கொண்டிருக்கும்
காதலை அவள் ஒரு வேளை
அவள் விழிகளை என்னுள்
ஆழப் பதித்து மீட்டும் எடுக்கலாம்...

அயற்சியில் அமிலம் சுரக்கும்
புத்தியில் நினைவுகள்
மெல்ல மெல்ல மரிக்கையில்
அவள் வரவுக்காய் வீதியில்
படிந்து கிடக்கும் விழிகளோடு
காத்துக் கிடக்கிறது
என் உயிரும்..அவள் மீதான காதலும்...


தேவா. S

Friday, October 7, 2011

த்புக்....த்புக்...த்புக்....!

பிரிட்ஜ்ஜை திறந்து வாட்டர் பாட்டிலை எடுத்தேன், தொண்டைக்குள் சிலீரென்று ஊடுருவி இதயத்தை வேகமாக துடைத்துக் கொண்டு வயிற்றுக்குள் பரவி கொடுத்த சுகத்தை கண் மூடி அனுபவித்தேன்..மூளையின் செல்கள் எல்லாம் அபர்ணா.. அபர்ணா....அபர்ணா என்று துடித்துக் கொண்டிருந்தது....

இரத்த ஓட்டம் அதிகமாகி கண்கள் சிவக்க வாட்டர் பாட்டிலை பிரிட்ஜுக்குள் வைத்து விட்டு கதவை ஓங்கி சாத்தினேன்...! சென்ட்ரலைஸ்ட் ஏசியை துச்சமாக மதித்தப்படி வியர்வை முன் நெற்றியில் துளிர்த்தது. டேவிட் நேற்று கொண்டு வந்து கொடுத்த சைலன்ஸர் பொருத்தப்பட்ட பிஸ்டல் டைனிங் டேபிளில் அப்பாவியாய் படுத்துக் கிடந்தது. வெளிநாட்டுப் பொருள் மட்டுமில்லாமல் எல்லா விதமான விசயங்களையும் சப்ளை செய்வதில் டேவிட் நம்பர் ஒன் மட்டுமில்லை கழுத்தை அறுத்தாலும் உண்மையை வெளியே துப்பாத கற்புக்கரசன்.

வாட்ச்சை திருப்பி மணி பார்த்தேன் இரவு 8 மணிக்கு இன்னும் ஐந்து நிமிடமாகும் என்று எனது டைட்டன் வாட்ச் துல்லியமாக காட்டிக் கொண்டிருந்தது. அவள் ஜிம்மில் இருப்பாள் வீட்டுக்கு வர 9 மணி ஆகும். நான் 8:30க்கு கிளம்ப நேரத்தை மூளையில் குறித்துக் கொண்டேன்...

ஆமாம் எதுக்கு போறேன்னு கேக்குறீங்களா....! நான் அபர்ணாவை கொல்லப் போகிறேன்....! யெஸ்... ஐம் கோன்ன கில் தட்....ச்ச்சீட்....ப்ளாக் ஷீப்....!!!!

காதலிக்கிறேன்னு சொல்லிட்டு ஒரு வருசமா என் கூட சுத்திகிட்டு இருந்தவ ஒரு மாசமா என்கிட்ட பேசுறது இல்லை. என் கண்ணு முன்னாடியே ஆபிஸ்ல இருக்குற கண்ட கண்ட கம்மனாட்டிங்க கூட எல்லாம் ஈன்னு இளிக்கிறதும், குழைஞ்சு குழைஞ்சு பேசுறதும்....ஓ மை காட்.. என்னால முடியல

நான் கோபப்படுவேன் ஆனா அவளத்தான் சுத்தி சுத்தி வருவேன் பட் இப்போ என்னோட பொறுமை எல்லாம் போய்டுச்சு, ஒண்ணு அவ என் கூட இருக்கணும் இல்ல சாகணும்.....! இப்போ அந்த சாவ கொடுக்குற பொறுப்ப கடவுள் என்கிட்ட கொடுத்து இருக்கான். இந்த பதினைஞ்சு நாள்ல ஒரு ஆயிரம் தடவையாச்சும் அவளோட செல் நம்பர் ட்ரை பண்ணி பாத்துருப்பேன்..ஹவ் மணி டைம்ஸ் ஷி டிஸ்கனெக்ட் த லைன் தெரியுமா உங்களுக்கு....?

ஐடி ல இருக்குற காய்ஸ் எல்லாம் மோசம்னு அடிக்கடி சொல்லுவா,அவ என்னோட டீம்ல இல்ல வேற டீம் அப்டி இருந்தும், நான் ஒரு டீம் லீடர்ன்னு கொஞ்சம் கூட ஒரு ஈகோ இல்லாம அவ கூட பழகி இருக்கேன். ஒரு நாள் பைக்ல மாயாஜால் போய்கிட்டு இருக்கும் போது பைக்ல போறது..இட்ஸ் போரிங் டார்லிங் மோர் ஓவர் பெயின் புல்னு அவ சொன்ன வார்த்தைய கேட்டு பேங்க்ல கார் லோன் போட்டு இந்த ஸ்கார்ப்பியோ தடியன கொண்டு வந்து நிறுத்தினேன். வாடகை வீட்ல தங்கினா சரியா வராதுன்னு இதோ இந்த க்ரீன் பார்க் அப்பார்ட்மென்ட்ஸ்ல மறுபடியும் லோன் போட்டு வீடு வாங்கினேன்....

வீட்ட பாத்து, பாத்து நாளைக்கு அவ வரப்போற வீடாச்சேன்னு இன்ட்ரியர் எல்லாம் பண்ணி வச்சேன்...! ஏன்டி அபர்ணா தனியா நீ மட்டும் வாடகை கொடுத்து தங்கி இருக்க?உனக்கு மட்டும் எதுக்கு தனி ப்ளாட்ட்னு சண்டை போட்டேன், பேசாமா என் கூடவே வந்து தங்கிடுன்னு சொன்னப்ப....அவ..நோ....நோ...டார்லிங் அது எல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம்னு சொன்னது ரொம்ப புடிச்சு இருந்துச்சு....

உதடு தாண்டி அவளை நான் ஸ்பரிச்சது கிடையாது. ஒரு நாள் நைட் அவ வீட்ல தங்குற ஒரு சிச்சுவேசன் வந்தப்ப கூட இந்த இடியட் இவ்ளோ பெர்பக்ட்டா நடந்துக்குவன்னு எக்ஸ்பெக்ட் பண்ணலன்னு அவளே சொல்லி இருக்கா...

அப்டி எல்லாம் இருந்த என்னை டாமிட்....நோ எக்ஸ்க்யூஸ்!!!!! அவ என்ன விட்டு போறத என்னால அலோ பண்ண முடியாது.. நெவர்....! 8:15ல் நின்று கொண்டிருந்தது கடிகாரம். டைனிங் டேபிள் அருகில் வந்தேன். அப்பாவியாய் என்னைப் பார்த்து சிரித்தது குட்டிப் பிசாசு... மெல்ல பிஸ்ட்டலை கையிலெடுத்தேன்....! செல்ல பொம்ரேனியன் நாய்க்குட்டியாய் கைக்குள் படுத்து கொண்டது. மெல்ல வருடிக் கொடுத்தேன்.... ட்ரிக்கர் நுனி என்னைப் பார்த்து சிரித்தது..எப்போது இழுப்பாயடா என் செல்லக் காதலா என்று முத்ததுக்கு ஏங்கும் காதலியின் உதடுகளாய் சிணுங்கிக் கொண்டிருந்தது

வெயிட்...வெயிட்..இன்னும் கொஞ்ச நேரம்தான்....அந்த கள்ளியின் உயிர் குடிக்கும் வேலையை உங்களிடம் விட்டு விடுகிறேன். மெல்ல பிஸ்டலை திறந்து புல்லட்ஸை செக் பண்ணிக் கொண்டேன். சைலன்ஸ்சர் சரியாக பொறுந்தியிருக்கிறதா என்று பார்த்தேன்...ஒரு நடிகையின் லோ ஹிப்பில் உட்கார்ந்திருக்கும் ஜீன்ஸ்பேன்டின் பெல்ட் போல கன கச்சிதமாய் சைலன்ஸர் உட்கார்ந்திருந்தது. உயிரே போனாலும் உன்னைக் காட்டிக் கொடுக்கமாட்டேன் என்று எஜமான விசுவாசம் காட்டியது....

யெஸ்.. ஐ நீட் தட்....!

டிஸ்யூ பேப்பர் எடுத்து பிஸ்டலை ரேகை படிமாணமில்லாமல் கன கச்சிதமாய் துடைத்தேன். கையில் லெதர் க்ளவுஸ் எடுத்து அணிந்தேன். பிரிட்ஜ் மீது இருந்த நைக் கேப் எடுத்து தலையிலணிந்தேன். ரெடி....மூவ்.... மணி இரவு 8:20

வீட்டைப் பூட்டினேன்...!

மீண்டும் ஒரு முறை பூட்டை இழுத்துப் பார்த்தேன்...லிப்டை தவிர்த்து விட்டு ஸ்டெப்ஸில் இறங்கினேன். இரண்டு மாடி இறங்கத் தெரியாத சோம்பேறி தடியனா நான்... இல்லை இல்லை ஒரு கொலை செய்யப் போகும் தில்லான இளைஞன்...! ஜீன்ஸ் பேண்டின் முன் பாக்கெட்டில் ஐ போனை திணித்துக் கொண்டேன்....! இறங்கி எனது அப்பார்மெண்ட் கீழ் வந்தேன் காருக்கு அருகில் செல்வதற்கு முன்னால் டேவிட்டிடம் மதியம் வாங்கியிருந்த இம்போர்ட்டட் டன் ஹில் பாக்கெட்டில் இருந்து ஒன்றை உருவினேன்...உதட்டில் பொருத்தினேன்....க்ளப் என்ற ஒரு தட்டுதலில் சிகரட்டுக்கு நெருப்பை மாற்றி விட்டு அணைந்து கொண்டது லைட்டர்.....

ஆழமாய் இழுத்து புகைத்தேன்.............யு சுட் நாட் பிஹேவ் லை திஸ் ......மை டியர் அபர்ணா...!!!!! எனக்கு கல்தா கொடுத்து விட்டு வேறு ஒருவனோடு உன்னை வாழ விடுவேனா.....இதோ.. இதோ ஐம் ஆன் மை வே டு பிரசண்ட் யூ த டெத்......நிக்கோடின் பரவிய புத்தி பரபரத்தது.....! சிகரெட்டை முழுதாய் அனுபவித்து விட்டு தாவி ஏறினேன்.. வண்டிக்குள்...

ஆசையாய் சிணுங்கும் மனைவி போல வண்டி சிணுங்கிக் கொண்டே உறுமி கிளம்ப சூடு பரவத் தொடங்கியது வண்டியின் என்ஜினுக்குள்ளும், எனக்குள்ளும், முன் பாக்கெட்டில் துருத்திய செல் போனை எடுத்து பக்கத்து சீட்டில் போட்டேன்...

மதானந்தபுரம் தாண்டி ஐந்தாவது நிமிடத்தில் போரூர் ஜங்சன் வந்தது சந்தடிகளைக் கடந்து வண்டியை பறக்க விட்டேன்...இராமவரம் தாண்டும் போது மணி 8:50.....எல்லோரும் வீடுகளுக்குள் அடையத் தொடங்கியிருந்த நேரத்தில் நான் பறந்து கொண்டிருந்தேன் கொலை செய்ய...

நந்தனம் சிக்னலில் நின்று கொண்டிருந்த போது வியர்க்கத் தொடங்கியிருந்தது. வண்டியின் ஏசியை கூட்டி வைத்தேன்...அதை சட்டை செய்யாமல் முன் நெற்றியில் முத்து முத்தாய்....வழிந்த வியர்வையைத் துடைத்துக் கொண்டேன்....சிக்னல் பச்சைக்கு மாற லெப்ட் திரும்பி வெங்கட் நாராயணா ரோட்டினுள் நுழைந்தேன். இதோ...இதோ வரப்போகிறது அந்த துரோகியின் வீடு....! வண்டி திரும்பிய மூன்றாவது நிமிடத்தில் வலது பக்கத்தில் பெட்ரோல் பாங்க் தாண்டி திருப்பதி தேவஸ்தானம் கோவிலுக்கு எதிராக இருந்த குண்டூர் சுப்பையா ஸ்கூல் ஓரமா வண்டியை நிறுத்தி அணத்தேன்....!

டேஸ்போர்டில் இருந்த பிஸ்டல் இப்போது என் இடுப்புக்கு இடம் மாறி இருந்தது. மெல்ல வண்டியிலிருந்து இறங்கி..பின்னோக்கி நடந்தேன். மறுபடி பெட்ரோல் பம்ப்...பெட்ரோல் பம்ப் ஒட்டி இடது புறம் திரும்பி, வலது புறம் இரண்டாவது காம்பவுண்ட்" பிரார்த்தனா அப்பார்ட்மெண்ட்ஸ்...."

செக்கியுரிட்டி கவனிக்காத நேரத்தில் பூனையாய் உள்ளே நுழைந்தேன். படியேறினேன் மூன்றாவது மாடியில் 310ம் எண் டோரின் அருகே வந்தேன்.....மெல்ல கதவினை தள்ளிப்பார்த்தேன்...உள் தாழ்ப்பாள் போட்டிருந்தாள்..!வேறு எவன் உள்ளே இருக்கானோ...திருட்டு த்த்தே....ஒரு கெட்டவார்த்தையை தேவையில்லாமல் உதிர்த்தெறிந்தேன். எவன் இருந்தாலும் சரி கூட ரெண்டு புல்லட்ஸ் தட்ஸ் ஆல்...

எப்போதோ எனக்கு கொடுத்த ஒரு ஸ்பேர் கீயை பத்திரமாக வைத்திருந்தேன்..மெல்ல கதவு திறந்தேன்...உள்ளே நுழைந்து பெட்ரூம் கதவோரம் இருந்த பீரோவுக்கு பின்னால் ஒளிந்து கொண்டேன்....! பாத்ரூமில் ஷவரோடு சேர்ந்து அவள் பாடிக் கொண்டிருந்தாள்...

நான் காத்திருந்தேன்..!

இதோ வந்து விட்டாள்....பெட் ரூம் உள்ளே வந்தவள் அணிந்திருந்த ஒற்றை டவல் இப்போதோ எப்போதோ விழுந்து விடும் போல இருந்தது ஆமாம் அப்படித்தான் பிடித்திருந்தாள்...டவலைத் தாண்டிய பாகங்களுக்குள் அனிச்சையாய் புத்தி எட்டிப்பார்க்க...ச்ச்ச்சே என்ன மானங்கெட்ட புத்தி....புத்தியை உலுப்பி நேராய் நிறுத்தினேன்..யெஸ் அவளைக் கொன்று போட்டே ஆகவேண்டும்.......சீ இஸ் ஏன் ஈவிள்........டாக்....

துண்டை அணைத்தபடி பெட்டில் எனக்கு முதுகாட்டி அமர்ந்தபடி அவளது செல் பேசியை கையில் வைத்துக் கொண்டு நிமிண்டிக் கொண்டிருந்தாள்...ஏதோ டைப் செய்கிறாள்...ம்ம்ம்ம் யாருக்கு உன் புதிய காதலனுக்கா....முடிக்கட்டும் முடித்து விட்டு திரும்பட்டும்....முகத்துக்கு நேரே துரோகி......யூ ப்ளடி சீட் கத்திட்டு சுட்டுத் தள்றேன்...

அபர்ணா திரும்பவில்லை...அவளின் முதுகில் முத்து முத்தாய் கோர்த்திருந்த துடைக்கப்படாத தண்ணீர் வழிந்து கொண்டிருந்தது, உயரத் தூக்கிக் கட்டிய பின் தலை முடியின் பிசிறுகள் ஈரத்தில்பட்டு நனைந்து என்னவோ மனதைச் செய்ய...நோ....நோ...நான் புத்தி மாறக் கூடாது.....என்று உள்ளுக்குள் என்னை வார்ன் செய்து கொண்டேன்....

செல் போனுக்கு அவள் முத்தம் கொடுத்து விட்டு.. பெட்டில் வீசியெறிந்தாள்....தட்ஸ் இட்...........என்னால் முடியவில்லை..யாரோ ஒரு பரதேசிக்கு என் முன்னாலேயே மெசேஜ் அனுப்பிட்டு....முத்தம் வேறு..........ஐ கான்ட் டாலரேட்....பிஸ்டலை அவள் கழுத்துக்கு குறி வைத்தேன்....ட்ரிக்கரை இழுத்தேன்..... மூன்று முறை...

த்புக்.....

த்புக்....

த்புக்....


சப்தமில்லாமல் அவள் உயிர் குடித்த தோட்டாக்கள் அவளது கழுத்திலிருந்து இரத்தத்தை வழிய விட்டன.....மேலே நிலை குத்திய பார்வையோடு கையால் பிடித்திருந்த டவல் அவிழ்ந்து போக அழகாய் செத்துப் போயிருந்தாள் அபர்ணா....

டன்......!

புயலாய் வெளியே வந்தேன். எனது சூ தடங்கள் இல்லாமல் பார்த்துக் கொண்டேன்....! கதவைப் மீண்டும் பூட்டினேன்....! மீண்டும் பூனை போல வெளியே வந்தேன்..மறுபடியும் மெயின் ரோட்டை தொட்டேன்....மீண்டும் ஒரு டன் ஹில் என் உதட்டில்.....நிக்கோடின் மூளைக்குள் பரவியது...நாளை போலிஸ் என்கொயரி வரலாம்..! அப்பாவியாய் அழுது நடித்து விடலாம் ஒரு மாதமாய் எனக்கு தொடர்பே இல்லை சார்னு......இது உண்மைன்னு ஒட்டு மொத்த ஆபிசும் சாட்சி சொல்லப் போகுது...! போன கையோட பிஸ்டலை எரிச்சுடணும்.....புத்தி வேகமாய் கணக்குப் போட்டது...

மீண்டும் ஸ்கார்ப்பியோ தடியனை உசுப்பி ரிவர்ஸ் எடுத்து க்ளட்ஸ் மிதித்து கியர் போட்டு ஆக்ஸிலேட்டர் கொடுக்கையில்.....ஓ......என் செல் போன் எங்கே என்று முன் பாக்கெட்டை தொட்டுப் பார்த்தேன். ஒரு வேளை அபர்ணா வீட்டிலேயே......ஓ மை காட்....என்று புத்தி பதறிய போது பக்கத்து சீட்டில் செல் போன் சிரித்துக் கொண்டிருந்தது......! ஓ.. தேங்க் காட்...வண்டியை ஜி. என் செட்டி ரோட்டில் நான் பாய விட்டுக் கொண்டிருந்த போது மணி சரியாய் பத்து....ஒரு கையால் ஸ்டேரிங் பிடித்த படி செல்லை எடுத்துப் பார்த்தேன் எதுவும் கால்ஸ் மிஸ்ட் ஆகி இருக்கிறதா என்று.....

வாட்.............?????????? டென் மெசெஜஸ்............தட் டூ ஃப்ரம் அபர்ணா???????????

பர்ஸ்ட் மெசேஜ்:

என் செல்ல தீபக்......!!!!ஐ மிஸ் யூ டா.. அடிக்கடி கோபப்படுற அதனால உன்னை விட்டு விலகி இருக்குற மாதிரி இருந்தா ஸ்டில் இன்னும் லவ் அதிகமாகும்னுதான்...நான் அப்டி நடந்துகிட்டேன்.....பட் இட்ஸ் வெரி ஹார்ட் டியர்.....என்னால முடியலை...! உன்னோட கால்ஸ் எல்லாம் நான் அவாய்ட் பண்ணினது நினைச்சு நினைச்சு...ஐ ஃபீல் வெரி பேட்..நாளைக்கு ஆபிஸ்ல உன்ன கட்டிப் பிடிச்சு முத்த கொடுத்து கால தொட்டு சாரி சொல்லப் போறேன் கண்ணா...

என் புஜ்ஜிப்பா........! ஸ்வீட் ட்ரீம்ஸ்டா..........ஐ மிஸ் யூ டா செல்லம்............! ஐ லவ் யூடா என்று முடிந்திருந்த அந்த மெசேஜ் தாண்டி மிச்சமிருந்த 9 மெசேஜசும் ஐல் லவ் யூ, ஐ லவ் யூ என்று டைப் பண்ணியிருந்தாள்........

ஓ......மை காட்.........அபர்ணாஆஆஆஆஆஆஆஆஆஆஆஅ ஸ்டேரிங் கண்ட்ரோமை முழுதாய் விட்டிருந்தேன்...........எதிரில் தண்ணி ஏத்திட்டு வந்த டேங்கர் லாரி அசுர கதியில்...........ஓ........ஓஒ........முழுதுமாய் எனது கண்ட்ரோல் போனது.......

டமால் டாமால்...........டும்............டமால்.........

ஸ்டேரிங்கில் சாய்ந்த படி உயிர் விட்டிருந்தான் தீபக்...
.....
.....
......

ங்கொய்யாலா எல்லா க்ரைம் நாவலும் இப்படித்தான் முடிக்கிறானுக....15 ரூபா வேஸ்ட்டா போச்சே என்று கடிகாரத்தை பார்த்தான் சுரேஷ்... மணி இரவு 11 ஐக் காட்டியது....!

" ஏங்க வந்து படுங்களேங்க....காலையில ஆபிஸ் போக வேணாமா..? "

சுரேஷின் மனைவி சந்திரா அதட்டினாள்...!

க்ரைம் நாவலை தூக்கி விசிறியடித்து விட்டு ..காலை ஆறு மணிக்கு அலாரத்தை வைத்து விட்டு...பெட்ரூமில் போய் படுத்த மூன்றாவது நிமிடத்தில் உறங்கிப் போனான் சுரேஷ்....!


தேவா. S

Thursday, October 6, 2011

போராளி....!
சற்றே ஒதுங்கி நில்லுங்கள்...
எம் ஏகாந்தக் கனவுகளே....!
நிரந்தரமாய் ஓய்வெடுங்கள்
புத்தி உலுக்கும் மாயைகளே...!
நிஜத்தில் எம் முன்...
ஒரு களம் உண்டு...
அங்கே எம் தலை கொய்யும்
தீரத்துடன் சுடும் அக்னியாய்
பல உண்மைகளுமுண்டு...

தூர நில்லுங்கள் வார்த்தைகளே
அவசரமாய் தாளிட்டுக் கொள்ளுங்கள்
எம் எழுதுகோல்களே..
ஏகாந்த உணர்விற்கு என்னை
எடுத்துச் செல்லாதீர் எம் கனவுகளே
என்னை கொஞ்சம்
எதார்த்ததில் நகர விடுங்கள்..!

முழு நிலவினை பார்க்காதீர்
எம் கண்களே...
சுவாசம் நிரப்ப கொஞ்சம்
பிராணன் கொடுத்து
என் மேனி தொடாமல்
ஒதுங்கிச் செல் காற்றே
நான் என் நிதர்சன
போர்க்களத்தில் வாள் வீச வேண்டும்!

சிலாகித்து சிலாகித்து
புல்லரித்து போன உடலைத்
தவிர என்ன கொடுத்து விட்டாய்
மழையே நீ?
நினைவுகளை புரட்டிப் போட்டு
கனவுப் பக்கங்களில்
குதிரையேறி உலகை வலம்
வரச் செய்ததில் என்ன
நிதர்சனத்தைப் படைத்து விட்டாய்
எம் நினைவுகளே...!

என்னை மறந்தே போ..
என் காதலே...!
மயக்கத்தைக் கொடுத்து
தனிமையில் பல நினைவுகள் கொடுத்து
உன்னால் விளைந்தது
சில, பல கவிதைகளும்
உறவென்ற சில சுமைகளும்தானே...
நிஜம் சுட்டெரிக்கும் பொழுதில்
உடன் வரா நீ...
எனைவிட்டு நகர்ந்தே நில்
எப்போதும்..!

என் வியர்வையில்...
நான் குளிக்கிறேன்...
சூட்டில் என் பாதங்களுக்கு
வலுவூட்டுகிறேன்...!
என் இரப்பை சுருங்கிக் கிடக்கையில்
புத்தி எப்படி சிறகு விரிக்கும்...?

அதனால்...

சற்றே ஒதுங்கி நில்லுங்கள்...
எம் ஏகாந்தக் கனவுகளே....!
நிரந்தரமாய் ஓய்வெடுங்கள்
புத்தி உலுக்கும் மாயைகளே...!
நிஜத்தில் எம் முன்...
ஒரு களம் உண்டு...
அங்கே எம் தலை கொய்யும்
தீரத்துடன் சுடும் அக்னியாய்
பல உண்மைகளுமுண்டு...


தேவா. S


Wednesday, October 5, 2011

ஹாய்.....05.10.2011கொஞ்சம்..இல்லை இல்லை ரொம்பவே நாளாச்சு ஹாய் எழுதி...! ஏன்னு தெரியல. ஒரு மாதிரி அளாவளாவ மனசு கொஞ்சம் இளகி இருக்கணும் ஆனா அப்டி இல்ல எனக்கு கொஞ்ச நாளா. காரணம் என்னனு எதாச்சும் ஒரு விசயத்த சொல்ல முடியாது பட் நிறைய நிகழ்வுகளைக் ஒண்ணு சேத்து ஒரு மாதிரி இரிட்டேசன் அவ்ளோதான்...! ஓடிட்டே இருக்குற வாழ்க்கை எங்க போகுதுன்னு தெரியாது ஆனா இயங்கிக் கிட்டே இருக்கோமேன்னு ஒரு மாதிரி அலுப்பு தோண ஆரம்பிச்சுடுச்சு..! யெஸ்... வயசாகிடுச்சுன்னு கூட சொல்லலாம்.

வயசு என்பது வாழ்க்கையின் தொகுப்பு. அனுபவங்களின் சேர்மானம். பத்து வயசுல எது தேவையோ அது பதினைஞ்சு வயசுல மாறிப் போயிருக்கு, பதினைஞ்சு வயசுல எது தேவையோ அது இருபத்தஞ்சு வயசுல மாறிப் போயிடுது. ஆனா ஒவ்வொரு வயசும் ஒவ்வொரு வருசமும் சம்மட்டியால் அடிச்சு, அடிச்சு நம்மை செம்மை படுத்திக்கிட்டே இருக்கு. மொத்தத்துல பாத்தீங்கன்னா ஒவ்வொரு அனுபவமும் கூடக் கூட தனியா நிக்கணும் அப்படீன்ற ஒரு எண்ணம்தான் அதிகமா இருக்கு. கூட்டம் கூட்டமா சுத்தி அலைஞ்சது பேசுனது சிரிச்சது எல்லாம் ஒரு கட்டத்துல பொய் ஆகிடுது இல்லீங்களா?

பணம்தான் வாழ்க்கையை ஆளுதுன்னு என்னோட இந்த 34 வயசுல எனக்குத் தோணுது (எந்த வயசா இருந்தாலும் அதான் முக்கியம்ன்னு சொல்றீங்களா...சரி ரைட்டு....) கல்யாணாம் ஆகுறதுக்கு முன்னாடி அதாவது ஒரு 27 வயசுல பணம் எல்லாம் ஒரு மேட்டரா அப்டீன்ற மாதிரி தோணிச்சு. ஆமாம் பணம் எல்லாம் ஒரு மேட்டர் இல்லை எப்போ தெரியுங்களா? நம்ம பாக்கெட்டும் பேங்க் பேலன்ஸ்சும் புல்லா இருக்குறப்ப, ஆனா அதே கொஞ்சம் தலை கீழா மாறிடுச்சுன்னு வச்சுக்கோங்க....

நேத்து வரைக்கும் உங்களையும் என்னையும் ராஜான்னு கூப்பிட்ட இந்த ஊரும் சனமும் டேய்ன்னு கூட கூப்பிடும். காரணம் பணமே உலகை ஆள்கிறது. அன்பு ஆளும் இல்லைன்னு சொல்லலை பட் பணமே பிரதானம். அன்பு வச்சுகிட்டு கால் கிலோ கத்திரிக்காய் யாரும் கொடுக்க மாட்டங்கதானே? ஹா ஹா ஹா ! அதே மாதிரி அதிகாரம்னு ஒண்ணு அதை வச்சுகிட்டு அழிச்சாட்டியம் பண்ணி பணம் சம்பாரிக்கலாமே தவிர வெறும் அதிகாரத்த வச்சுகிட்டும் ஒண்ணும் பண்ண முடியாதுன்றதும் உண்மை.

அடிச்சு பிடிச்சு ஓடி ஓடி பணம் சேக்குறதுலயே உலகத்துல இருக்குற எல்லா மனுசங்களும் செய்றாங்க. நானும் செய்றேன் நீங்களும் செய்றீங்க....சரியா ! இங்கே வாழ்வின் மிச்சம் என்னனு ஒரு கேள்வி எல்லோருக்கும் தோணுறது இல்லை பட்..நமக்கு அடிக்கடி தோணுது...? மில்லியன் டாலர் பேங்க் பேலன்ஸ் வச்சிருந்தா நான் நிம்மதியா இருக்க முடியுமா? முடியாது. பணம் சேக்குறதோட அடிப்படை பேஸ் எண்ணமே உயிர் பயம்னு நான் சொன்னா நம்புவீங்களா?

காசு பணம் இல்லாம சாப்பிடக் கூட ஒண்ணும் இல்லாம செத்துடுவோமோன்னு ஒரு பயம். இந்த உயிர் பயம் மட்டும் இல்லேன்னு வச்சுக்கோங்க.. கடவுளும் இல்லை காசும் இல்லை. இந்த ரெண்டையும் மனுசன் பிடிச்சுகிட்டு தொங்குறதுக்கு காரணமே மரண பயம்தானுங்க. ஒவ்வொரு மனுசனும் மரணம் வேண்டாம்னுதான் நினைக்கிறான் ஆனா அதான் ஏன்னு எனக்குப் புரியலை. உலகத்துல வாழ்ற வாழ்க்கை என்னமோ ரொம்ப சிறப்பா இருக்க மாதிரி.........ஹா ஹா ஹா வாழணும் அல்லது வாழ்றோம் என்பது எல்லாம் சரி ஆனால் மரணத்தை பாத்து பயந்தா எப்டிங்க?

இப்டி எழுதிட்டு இருக்க எனக்கும் ஒரு ஏழாவது மாடியில இருந்து தரைய பாத்தா பயமாத்தான் இருக்கு, கார்ல வேகமா போகும் பொது சர்ர்ர்ர்ர்னு ஒரு பெரிய ட்ரெய்லக்ர் க்ராஸ் பண்ணிப் போகும் போது, அடிச்சிருந்தா என்ன ஆகும்னு புத்தி கணக்குப் போட்டுப் பாக்குது. இப்டி பாக்கும் போதே சர்ர்னு ரத்தம் ஜிவ்வுன்னு உடம்பு பூரா பரவி இதயத்தை லபக் டபக்குனு துடிக்க வைச்சுகிட்டு இருகும் போதே டக்குனு ரெண்டு முகம் கண்ணு முன்னாடி வந்துட்டுப் போகுது அதுவும் சிரிச்சுக்கிட்டே....

ஒண்ணு மனைவி, இன்னொன்னு என் பொண்ணு...

ஏன்? அப்பா அம்மா தம்பி உறவுகள் நட்புகள் எல்லாம் வரலையான்னு கேட்டீங்கன்னா வரலைன்னுதான் சொல்லுவேன். இன்னமும் ரஜினிகாந்த், ஏ.ஆர்.ரகுமான், கமலஹாசன், பாலகுமாரன் சார், இளையராஜா சார் எல்லாம் கூட எனக்கு ரொம்ப பிடிச்சவங்கதான்...ஆனா அந்த பிடிப்புக்கள் தேவையின் அடிப்படையில் புத்திக்குள்ள புகுந்து இருப்பது. மனைவியும் குழந்தையும் என்னைச் சார்ந்து இருப்பவர்கள்.

நான் இல்லேன்னா கூட தே வில் லிவ்...அவுங்க லைஃப் மூவ் ஆகும். பட் இட் மேக்ஸ் டிப்பரண்ட் இல்லையா? மனைவி கூட அடுத்த லேயர்தான் ஆனால் குழந்தை நேரடியாக பாதிக்கப்படுவாள். மே பீ பெட்டர் லைஃப் கூட வாழலாம், பட் ஸ்டில்... பாதிப்பு மனோதத்துவ ரீதியாய் அதிகம் தானுங்களே?

மேல நான் சொன்னது ஒரு உதாரணத்துக்குதான் சொன்னேன் சீரியசா எடுத்துக்காதீங்க..!!!! ஏன் சொன்னேன்னா? வாழ்க்கையில அலசி ஆராய்ஞ்சு பாத்தீங்கன்னா சில பற்றுக்கள்தான் நம்மை இழுத்துப் பிடித்து பூமியோட பந்தப்படுத்தி வச்சு இருக்கு. அந்த பற்ற நாம அறுத்தெரிய முடியாது, விட்டு ஓட முடியாது. அதை அழகா பூர்த்தி செய்துட்டுதான் போகணும் அந்த பூர்த்தி செய்தலை நிறைவு செய்ய வாழ்க்கை, லெளகீகம், பொருளாதாரம், ஓட்டம், திட்டம், அலுவலகம் வேலை, ட்ராபிக், பாஸ், டென்சன்....இப்டி எல்லாம் கடந்த்து போக வேண்டியிருக்குங்க..!

ஒவ்வொரு மனித வாழ்க்கையும் சம்திங்க் ஸ்பெசல்ன்னு நாம நினைச்சுக்கிறதுக்கு வேணும்னா சுவாரஸ்யமா இருக்கலாம். தப்பு இல்லை சுவாரஸ்யத்துக்காக அப்டீ நினைச்சுக்கோங்க, ஆனா ஒவ்வொரு வாழ்க்கையும் தனித்தனியா எடுத்துப் பார்க்காமா இதை ஒட்டு மொத்த பிரபஞ்ச சுழற்சியாத்தான் பாக்கணும். அதாவது இரண்டு மெயின் பாயிண்ட்சுக்காகத்தான் எல்லாமே நடக்குதுன்னு நான் சொல்லுவேன்....

1) அகண்டு விரிதல் (பல்கிப் பெருகுதல்)

2) சுருங்கிச் ஒடுங்குதல் (ஒற்றை புள்ளிக்குள் அடைதல்)

பிரபஞ்சம் பல்கிப் பெருகவே எங்கும் ஒரு ஈர்ப்பினை பரப்பி வைச்சுருக்குங்க. சூரிய குடும்பத்துல இருக்குற ஈர்ப்பும், தொடர்பும் போல எல்லா இடத்திலும் ஒரு விசை அழுத்திப் பிடித்தோ அல்லது அறுத்து எறிஞ்சுக்கிட்டோ வேலை செஞ்சுகிட்டு இருக்கு. விதையா, செடியா, மரமா, பூவா, காயா இப்டி... கல்லாய் மண்ணாய் மலையாய்......இது தொடர்ந்துகிட்டே வந்து மனுசனுக்குள்ள காமமா உக்காந்துகிட்டு இருக்கு. இந்த காமத்துக்கு மார்க்கெட்டிங் பண்றதாலேயே காதல்னு ஒண்ணு தனியா இல்லைன்னு நினைச்சுடாதீங்க.

இது காமத்துக்கு மார்க்கெட்டிங் பண்ணி பல்கிப் பெருகுதலுக்கு உதவிட்டு கூடவே அழகான ஆன்மப் புரிதலா, செயல்களைக் கடந்த தெளிவா, பால் கவர்ச்சி தீர்ந்த ஈர்ப்பாய், இசையாய், ஆழமான சுவாசித்தலாய், வயிற்றுப் பசியடக்கும், தாகம் தீர்க்கும் நிறைவாய் இருந்துகிட்டுதாங்க இருக்கு ....அதுக்கு பேரு காதல்னு சொல்லுங்க.. பக்தின்னு சொல்லுங்க கடவுள்னு சொல்லுங்க இல்லைன்.." சிங்வாகே" ன்னு கூட ஒரு புது பேரு வச்சுக்கோங்க...

மார்க்கெட்டிங் முடிச்சு ஒவ்வொரு விடயமா பூர்த்தியாகிப், பூர்த்தியாகி அடங்கி ஒடுங்குதல்ன்ற ஸ்டேஜ்ஜுக்கு ஒவ்வொரு நிகழ்வையா அனுப்பிக்கிட்டு இருக்கு இந்த சுழற்சி...இப்படி சுத்தி, சுத்தி போய்கிட்டு இருக்கே ஏன்னு தெரியுமா? சுத்தாம இருக்கத்தான்.... ! அட இது என்ன கொடுமை சுத்தாம இருக்கணும்னா டக்குனு நிக்க வேண்டியதுதானே இந்த பிரபஞ்சம் அப்டீன்னு கேக்குறீங்களா?

ரொம்ப சாதாரணமாவே ஒரு உதாரணம் சொல்றேன்,தப்பா எடுத்துக்காதீங்க, .... பூனைக்கு பாலு சுடணும்ங்க!!! சுட்டாதான் பால்னாலே பயப்படும். அதுமாதிரி வாழ்க்கையை முழுமையா எல்லாமே.. அனுபவிக்கணும்ங்க, அந்த அனுபவிப்பில் உணர்தல் தெளிதல் விசயங்கள் நடக்கணும்...., அப்போதான் இந்த சுழற்சி நிற்கும்.

அடடே இது ஒண்ணும் பிரமாதம் இல்லேன்னு மனுசங்க நினைச்சு ஓரமா உட்கார்ந்து உள்ள பாக்க ஆரமிச்சாங்கன்னா.. எல்லோருக்கும் வாழ்க்கைன்றது காலி டப்பான்னு தெரிஞ்சு போச்சுன்னா....

இன்னும் சொல்லப் போனா எட்டி, எட்டி ஒரு சுவத்துக்கு அப்புறம் என்ன இருக்குன்னு பாக்குற வரைக்கும் தான் உங்க மனசுல அந்த பக்கத்துல யானை இருக்கோ, டைனசர் இருக்கோன்னு கற்பனை தோணும்... ஒரு கட்டத்துல ஒண்ணுமில்லைன்னு தெரியும். அப்புறம் என்ன பண்ணுவீங்க...? ஒண்ணுமில்லைன்னு ஓரமா உக்காந்துடுவீங்க....அவ்ளோதான்!!!!

எம்பி எம்பி குதிச்சு பாத்துகிட்டு இருக்கவங்ககிட்ட போய் சொல்லுவீங்க...ஒன்றுமில்லையப்பா...இப்டித்தான் பட்டணத்தார் சொன்னாரு, வள்ளலார் சொன்னாரு, அருணகிரி நாதர் சொன்னாரு..கேளுங்கப்பான்னு சொல்லிட்டு நந்தனார் பாட்டாவே பாடுனார்ன்னு சொல்லி

" என்னப்பன் அல்லவா
என் தாயுமல்லவா
பொன்னப்பன் அல்லவா
பொன்னம்பலத்தவான்..
சத்தியமோ எந்தன்
அப்பன் திருவருள்" ன்னு சொல்லுவீங்க...!

இந்த உலகம் ஒண்ணு உங்களை கும்பிட்டு உங்களை கடவுளாக்கும், இல்லை பைத்தியக்காரன்னு பட்டம் கட்டும்...அம்புட்டுதான்...!

சரிங்க....! நான் வந்து ரொம்ப நேரமாச்சு....! நீங்க கேக்குறீங்கன்றதுக்காக நான் பேசிகிட்டே இருக்க கூடாது இல்லீங்களா...! வீட்ல இருக்குற எல்லோருக்கும் எனது அன்பான வாழ்த்துக்களையும் நேசத்தையும் தெரிவியுங்க, அடுத்த ஹாய்ல சந்திக்கலாம்...!

அப்போ வர்ர்ர்ர்ட்ட்டா......!!!!!


தேவா. S

Monday, October 3, 2011

செல்லரிக்கும் கனவுகள்..!


தொன்மத்தின் வாசனைகள்
துருத்தும் எலும்பாய்
எட்டிப்பார்த்த ஒரு இராத்திரியின்
வானத்திலிருந்து வழிந்த
நியான் ஓளியின் வெளிச்சத்தில்
மரணித்துக் கொண்டிருந்தேன் நான்..!

உயிரின் பிசிறுகள் விசிறியடிக்கப்பட்ட
அகண்ட வெளியில் கரித்துக் கொண்டிருந்த
கூக்குரல்களினூடே பயணித்துக்
கொண்டிருந்த ஏதேதோ
அதிர்வுகள் என் உயிர் நகர்த்தும்
ஆசையில் இச்சையோடு
என்னை புணர்ந்து கொண்டிருக்கையில்
மூளை மடிப்புகளிலிருந்து
சாயம் போய் வழிந்து கொண்டிருந்த
நினைவுகளின் எச்சத்தில்
மெலிதாய் எதிரொலிக்கிறது
ஒரு மெல்லிய தாலாட்டு..!

அடர்த்தியான இரவினை
கெட்டியாக்கிக் கொண்டிருந்த
கருமையினூடே மெல்ல நகர்ந்து
அரவமாய் உடல் நெளித்து
நகர்ந்து நகர்ந்து ஜென்மங்களில் ஏந்தி வந்த
உணர்வோடு நியூரான்களை
கடந்து செல்லும் கலர்க் கனவுகளை
அரிக்கும் கரையான்கள்!

மெலிதாய் இழையோடும்
புழுக்களோடு மட்கத் தொடங்கியிருந்த
உடலருகே திப்பி திப்பியாய்
இறைந்து கிடக்கும் சில காதல்களும்
காமங்களும், இச்சை தாண்டிய
கடவுள் தேடு கனவுகளும்
சூட்டில் பட்ட நீராய் ஆவியாகி
மறைதலோடு மறைந்தே போகிறது
எல்லாமும்...!


தேவா. S