Skip to main content

சரவெடி...!

















தீபாவளி வந்துருச்சு என்ன செய்யலாம்...???? ம்ம்ம்ம்....எல்லோரும் அடிச்சு பிடிச்சு கேட்டு கிட்டே இருக்குறாங்க? என்ன தீபாவளி ஸ்பெசல்ன்னு... நமக்குத்தான் ஒரு மண்ணாங்கட்டியும் தலைக்கு ஏற மாட்டேங்குது. ஊர்ல இருந்தா ஒரு நாளு லீவு கிடச்சு இருக்கும். காலையில் நிம்மதியா எந்திரிச்சு எண்ணைய தேச்சு குளிச்சுப்புட்டு ஏதோ நாலஞ்சு வெடிய கொளுத்துனோமா, கறிக் கொழம்பையும் தோசையும் சாப்டம்மா, ஏதோ ரெண்டு மூணு டிவில ப்ரோக்கிராம பாத்தமான்னு போயிருக்கும்...

கொண்டாட்டம் எல்லாம் கொண்டாடுற காலம் முடிஞ்சு போச்சா இல்ல நமக்குத்தான் அப்டி தோணுதா, என்ன தீபாவளி? என்ன பொங்கலுன்னு சொன்னா அதுக்கு என்னோட சதி (சரி பாதிங்க தப்பா எடுக்காதீங்க!!!!) சொல்ற பதிலு..... வயசாயிடுச்சுங்க ஒங்களுக்குன்னு...! ஆமா அது ஒண்ணுதான் கொறச்சல் போன்னு சொல்லிட்டு..., யாருக்குத்தான் வயசாகுறது இல்லன்னு மனச தேத்திகிட்டு இருந்தாலும்...

எப்போ யாரு வயசு கேட்டாலும் 34 முடிஞ்சுருச்சு 35 ஜஸ்ட் ஆரம்பம் ஆகியிருக்குன்னுதன சொல்லத் தோணுதே தவற ஆரம்பிச்ச வயச மட்டும் அதிகாரப் பூர்வமா சொல்ற தில்லு ரொம்ப பேருக்கு வரலை என்னையும் சேத்து...!

பேஸ் புக்லயும், மத்த சோசியல் நெட் வொர்க் சைட்டுகளையும் சைட்டுகளை மெயிண்டெய்ன் (தப்பா எடுத்துகாதீங்க போர்வையா..சாரி சாரி கோர்வையா வந்துடுச்சு..)பண்றதுக்காக பிறந்த நாள் தேதிய போடாம விடலாம்னு ரொம்ப பேரு பாத்தாலும், பொறந்த நாளு அன்னிக்கு ஒரு 50 அல்லது 60 பேரு நம்ம வால்ல வந்து "வாழ்! வாழ்" னு வாழ்த்துனாதான திருப்தின்னு சொல்லிட்டு...

பொறந்த தேதியவும் மாசத்தையும் போட்டு வச்சிகிற மாதிரி நாமளும் போடலமான்னு கூட ரோசிச்சேன்.. என்ன கழுத கொறஞ்சுடப் போகுது நாம என்ன சினிமாவுலயா நடிக்க போகுறோம் வயச சொல்லமன்னு, சொல்லி பளிச்சுன்னு போடவும் செஞ்சேன்...! வயசாகுறது ஒரு கம்பீரம்னு எங்கயோ படிச்சு தொலச்சது மெல்ல மெல்ல இப்பதான் தான் புரிய ஆரம்பிச்சு இருக்குது...

ஸ்டாப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்............!!!!!!!!!!!

இது தீபாவளி சிறப்புப் பதிவு, அதனால தீபாவளி பத்திதான் பேசணும்னு சூடம் கொளுத்தி சத்தியம் பண்ணிட்டு எழுத வந்தா...ங்கொய்யால பழக்க தோசத்துல அது எங்கயோ இழுத்துகிட்டு போகுது. கொஞ்ச்சம் அச்சஸ் பண்ணிக்கோங்க...ப்ளீஸ்ஸ்ஸ்! சரமாரியா தீபவாளினா என்ன? எங்க ஊரு தீபாவளி, எங்க மாவட்டம் தீபாவளி, எங்க ஸ்டேட் தீபாவளி, இந்த நாட்டு தீபவளி அந்த நாட்டு தீபாவளின்னு எல்லோரும் கொளுத்திப் போட்டாலும்...

தீபாவளி பல பேரு பர்சுகளுக்கு வைக்கிற வெடி இருக்குப் பாத்தீங்களா அதுதான் செம...!!!! ஆமா ஒரு வாரத்துக்கு முன்னாடியே.. ஐயம் சாரி லேடிஸ் அண்ட் ஜெண்டில் மேன்...., ஒரு மாசம் முன்னாடியே அரிசி வாங்கணும் பருப்பு வாங்கணும், உளுந்து வாங்கணும் எண்ணெய் வாங்கணும், துணி எடுக்கணும், துணி தைக்கணும், பக்கத்து வீட்டு கீதா பட்டு புடவை எடுத்து இருக்கா அதை விட ஜரிகை கூட போட்டு எனக்கு ஒரு பட்டு பொடவ எடுத்தே ஆகணும்னு வீட்ல அம்மணிங்க வைக்கிற டைம் பாம் தான்....தீபாவளி ஸ்பெசல்னு வச்சுக்கோங்க...!

பக்கத்து வீட்டுக்காரனுக்கும், எதித்த வீட்டுக்காரனுக்கும் எங்க இருந்துதன காசு வருதோ தெரியல (அவுங்களும் நம்மள பத்தி எப்படியோ நினைக்கலாம் அதை விட்டு தள்ளுங்க.... முடிஞ்சா அவுங்க ஒரு பதிவு போடட்டும்.. ச்சும்மா நொய் நொய்ன்னுகிட்டு...)வெடிய வாங்குறதும் வெள்ளையடிக்கிறதும் யப்பா முடியலடா சாமி...!!!!

ஒரு விதத்துல காசு புழக்கத்துக்கும், வியாபர பெருக்கத்துக்கும் இந்த பண்டிகைகள் உதவுதுனு சொல்லலாம்.....! மாலா வீட்ல இருந்து முறுக்கு, அதிரசம், லட்டு, பூந்தி, மைசூர் பாக்கு எல்லாம் வந்து இருக்கு, கீதா வீட்ல இருந்தும், ராஜி வீட்ல இருந்தும் , சுரேந்தர் வீட்ல இருந்தும் வந்து இருக்கு....தெருவுல இருக்குற பத்து வீட்ல இருந்தும் வந்துடுச்சுன்னா அம்புட்டுதான்....முடிஞ்சே போச்சு நம்ம வீட்ல...! ஆமாங்க தன்மானப் பிரச்சினையில்லயா...

உடனே பத்து வீட்டு சுவீட்டையும் மிக்ஸ் பண்ணி மாத்தி மாத்தி அனுப்பினா என்னமான்னு எங்கம்மாவ நான் கேட்டதுக்கு அவுங்க மொறச்ச மொறையில் எனக்கு தீபாவளியோட அருமை என்னனு தெரிஞ்சு போச்சு...,! சரி விடு ஜூட்னு ஒவ்வொரு வீட்டுக்கா நம்ம விட்டு பலகாரத்தை எல்லாம் கொண்டு போய் கொடுத்து கீழ விழப் போன நம்ம குடும்ப மானத்த தூக்கி நிறுத்தி நான் காப்பதுனது எல்லாம் ஒரு காலம்ங்க...

இப்பவும் பசங்களுக்கு, நாங்கா பசங்களா இருந்தப்ப சந்தோசமா இருந்த மாதிரியான தீபாவளியா இது இருக்குமான்னு எனக்குத் தெரியலை ஆனா எங்க அப்பா எல்லாம் பண்டிகைன்னு வந்தா எம்புட்டு டென்சன் ஆகி இருப்பாங்கன்னு மட்டும் தெள்ளத் தெளிவா புரியுது.

ஆமா வெடி நிறைய வாங்கிக் கொடுக்காத நீயெல்லாம் ஒரு தகப்பனா...? அப்டீன்ற ரேஞ்சுக்கு தீபவளிக்கு ரெண்டு மூணு நாளைக்கு முன்னாடியே அவங்கள மொறச்சு மொறச்சு பாத்து, அடிச்சு புடிச்சு வெடிகள வாங்கி அத காய வைக்கிறேன் பேர்வழின்னு பக்கத்து வீட்டு மோகன் & சாந்திகிட்ட (ப்ரண்ஸ்ங்க...! ஹி ஹி ஹி)பந்தா காட்டி...

தீபாவளிக்கு எல்லாத்தையும் வெடிச்சு தொலைக்காதடான்னு அக்கா சொல்லிகிட்டே கொஞ்சம் கார்த்தியலுக்கும் எடுத்து ஒதுக்கி வைக்கிறதுக்கு கடும் கண்டனம் தெரிவிச்சு, ஒரு ஒத்த வெடிய வெடிக்க ஒரு தினத்தந்தி புல் பேப்பர எடுத்து கொளுத்தி ரெண்டு கிலோ மீட்டருக்கு அப்புறம் வர்ற நெறுப்புக்கு எதிரா ஒரு அரை கிலோமீட்டர் தள்ளி வெடிய வச்சுட்டு ஓட்டமா ஓடியாந்து காதை பொத்த்கிகிட்டு அது வெடிச்சு விழுகுற பேப்பர் அளவு கம்மியா இருந்தா, கடக்காரனை திட்டிகிட்டே...

ரெண்டு நாளைக்கு வாசல பெருக்குனா அப்புறம் பாத்துக்கன்னு அம்மாவுக்கு வார்னிங் கொடுத்துட்டு....வெடி குப்பை நிறைய கடக்குறது தமிழ் நாட்டு சி. எம் போஸ்ட்ல ஒக்கார மாதிரி நெனச்சுகிட்டு.. இருந்த காலத்துல எல்லாம் நிறைய மனுசங்களும் மனுச தொடர்புகளும் இருந்துச்சுங்க..., அப்படி இருக்கறதெ பண்டிகைகள நிறைவா காட்டவும் செஞ்சுச்சு...

என்ன கருமமோ எவன் வச்ச சூனியமோ எல்லோரும் இப்போ அறிவியல் வளர்ச்சின்ற பேர்ல சுருங்கிப் போயி விர்ச்சுவலா தீபவாளிய கொண்டாடுறாங்க...! தீபாவளி அன்னிக்கு இணையத்து வந்து வாழ்த்து சொல்லாம அது பத்தி ஒரு போஸ்ட் போடாம இருந்தா விக்கிரமாதித்தன் பதில் சொல்லாம இருந்தா தலை வெடிச்சுடும்னு வேதாளம் சொல்ற மாதிரி மனசு கெடந்து லபக் டபக்....லபக் டபக்னு அடிச்சுகிது....

காசா பணமா தட்டி விட்ட நிறைய வாழ்த்து அட்டை கிடைக்கிது. உளமாற, மனமாற அன்பான தீபாவளி வாழ்த்துக்கள்னு இன்னிக்கு மட்டும் சொல்லிட்டு வழக்கப்படி நாளை மறு நாள்ள இருந்து அடுத்தவனுக்கு ஆப்படிக்கிற புத்தி இருந்தா பண்டிகை அன்னிக்கு மட்டும் சொல்ற வாழ்த்து எதுக்கு பதத்துப் போன பட்டாசு மாதிரி...தேவையில்லாமன்னும் தோணுது!

40 பேர சேத்து வச்சிகிட்டு திரட்டிகள்ள ஓட்டு போட்டு என் பதிவதான் எல்லோரும் படிக்கணும்னு சர்வாதிகாரம் பண்ணாம, கருத்து திணிப்பு இல்லாம பொதுவா ஆடம்பரம் இல்லாம கன்ன பின்னானு வெடி வெடிச்சு சத்தம் இல்லாம வாழ்ந்துகிட்டு இருக்க மத்த ஜீவராசிகளுக்கு தொந்தரவு கொடுக்காம, அடுத்த மனுசங்கள உறுத்தாத

ஒரு பண்டிகையா மகிழ்ச்சியா பரஸ்பரம் எல்லோரும் சந்தோசமா கொண்டாட வாழ்த்துக்கள்னு சொல்லிட்டு.. உத்தவு வாங்கிக்கிறேங்க...!!!!

அப்போ வர்ர்ர்ர்ட்ட்டா!!!!!

தேவா. S

Comments

சரவெடி தீபாவளி வாழ்த்துகள்ண்ணே..!! :)
பொறந்த தேதியவும் மாசத்தையும் போட்டு வச்சிகிற மாதிரி நாமளும் போடலமான்னு கூட ரோசிச்சேன்.. என்ன கழுத கொறஞ்சுடப் போகுது நாம என்ன சினிமாவுலயா நடிக்க போகுறோம் வயச சொல்லமன்னு, சொல்லி பளிச்சுன்னு போடவும் செஞ்சேன்...! வயசாகுறது ஒரு கம்பீரம்னு எங்கயோ படிச்சு தொலச்சது மெல்ல மெல்ல இப்பதான் தான் புரிய ஆரம்பிச்சு இருக்குது.///

ம்ம்ம் இது உண்மையிலே சரவெடி தான்.... யாரையோ போட்டு தாக்கி இருக்கீங்க....!!!

தீபாவளி வந்தாலே... முன்னே வந்த தீபாவளி எல்லாம் நினைவுக்கு வருது... ஒவ்வொரு தீபாவளியும் ஒவ்வொரு சந்தோசம் தருது..

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...!!!
தீபாவளி என்பதே தீமைகளை தவிர்த்து நன்மைகளை அடைவதே.
..."அன்பான தீபாவளி வாழ்த்துக்கள்னு இன்னிக்கு மட்டும் சொல்லிட்டு வழக்கப்படி நாளை மறு நாள்ள இருந்து அடுத்தவனுக்கு ஆப்படிக்கிற புத்தி இருந்தா"...
தீமைகளை, எதிர்மறை எண்ணங்களை விட்டொழித்து, நன்மைகளை ஏவி அனைவரையும் சந்தோஷப்படுத்தி வாழ்வோம்
அனைவருக்கும் பொன்னான தீபாவளி நல்வாழ்த்துக்கள்
Mohamed Faaique said…
மூச்சு விடாம எழுதி இருப்பீங்க போல....

உங்கள் சின்ன வயசு தீபாவளி அனுபவம் சூப்பர்’ன்னே!!!
சர வெடி - தூள் கெள்ப்பிட்டீங்க - சத்தம் பலமா இருக்கு - வெடிச்ச பேப்பர் குப்பை கார்த்திகை வரைக்கு பெருக்கக்கூடாது - வூடல் சொலியாச்சா ? இனிய தீபத் திருநாள் நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
வணக்கம்
தங்களுக்கும், தங்களது குடும்பத்தாருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்...
நன்றி !!!
உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள்....
Anonymous said…
இனிய தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள்..
Kousalya Raj said…
அழகான மலரும் நினைவுகள்...

பண்டிகை வந்தால் ஏன் நாம எல்லாம் சிறுவயது நினைவுகளை நினைச்சுகிறோம் ? அது மட்டும் நமக்கு நினைவில் இருப்பதற்கு காரணம் ? இதை பற்றி அடுத்த போஸ்ட் எழுதினா என்ன??! :))

போன வருடம் கொண்டாடிய தீபாவளி ஏனோ நினைவுக்கு வருவதில்லை...அது சிறு வயது கொண்டாட்டத்தை போல் அவ்வளவாக ரசிக்கவில்லை என்பதாலா ??

தீபாவளி முடிஞ்ச மறுநாள் மத்தவீட்டு வாசலையும் பார்த்து அதை விட நம்ம வீட்டு வாசல்ல வெடி குப்பையும் பார்த்து நம்மதுதான் அதிகம் என்று மனசுக்குள்ள சொல்லிகிற சந்தோசம் இருக்கே !? ம்...மறக்கக்கூடிய நாட்களா அவை...?!

சரவெடின்னு போஸ்ட் போட்டு பழைய நினைவுக்கு கொண்டு போய்டீங்க...

//இன்னிக்கு மட்டும் சொல்லிட்டு வழக்கப்படி நாளை மறு நாள்ள இருந்து அடுத்தவனுக்கு ஆப்படிக்கிற புத்தி இருந்தா//

கடைசில மெசெஜ் தேவா டச் !!!

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் அன்பான தீபாவளி வாழ்த்துக்கள் !

துபாய்ல பட்டாஸ் போட முடியாதாமே ...? அப்படியா ?!!
சொர்க்கமே என்றாலும் நம்ம ஊரை போல வருமா ?? :))
//துபாய்ல பட்டாஸ் போட முடியாதாமே ...? அப்படியா ?!!
சொர்க்கமே என்றாலும் நம்ம ஊரை போல வருமா ?? :))//

...அவ்வவ்.. என்னா ஒரு சந்தோசம்!! :)))
என்னங்க இது.. சும்மா 1000 வாலா வெடி மாதிரி வெடிச்சிட்டு போயிட்டீங்க..!

உண்மை தாங்க.. ஒவ்வொரு பண்டிகையின் போதெல்லாம்.. வெளிநாட்டில் வந்து.. இருக்கும் நமக்கெல்லாம்.. வீட்டு நினைப்பும்... மலரும் நினைவுகளும்.. சரளமா சன்மானம் மாதிரி வந்து போகுது.. :)

பட படன்னு பட்டாசு வெடிச்ச மாதிரி... உங்க பதிவு இருக்கு.. தேங்க்ஸ்.

உங்களுக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்..! :)))

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

இரவு...!

இரவுகளின் நீட்சிகள் படம் போல பகலிலும் தொடரும் ஒரு அற்புத அனுபவம் வாய்த்திருக்கிறதா உங்களுக்கு...? ஆமாம் இரவு எப்போதும் அலாதியானது...அதுதான் சத்தியத்தின் முகமும் கூட..வெளிச்சத்தின் மூலம் இருள்....! எல்லா ஒளிகளின் கருவறை. ஆதியில் இருந்தது இருளான சூன்யம்...சுன்யம்னா சலனமற்ற...ஒரு சப்தமில்லா அதுதான் எல்லாவற்றின் கருவறை. எதுவெல்லாம் ஜனிப்பிக்கிறதோ அதுவெல்லாம்...தாய் என்று சொல்வது எல்லாம் பெரும்பாலும் உருவாக்குவதலோடு அரவணைத்தலோடு சேர்ந்துதான் பார்க்கிறோம். பிரபஞ்ச மூலம் தாய். எல்லாவற்றையும் ஜனிப்பித்து, மரணித்து தன்னுள் அடக்கி வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தி. இந்த மூலத்தின் நிறம் இருளான சப்தமில்ல நிசப்தம். இந்த சாயலைத்தான் நான் இரவுகளில் பார்த்து லயித்துப் போய் அதோடு உறவாடுதல் ஒரு அலாதியான சுகத்தை எனக்கு கொடுத்து இருக்கிறது..உங்களுக்கும் கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்......அவரவர் மனோநிலை சார்ந்த விடயம் அது. இச்சைகள் தொலைத்த ஞானி போல சப்தங்கள் தொலைத்த இரவுகளை எப்போதும் காதலிக்கிறேன்.நிலவிருந்தால் ஒரு கதை சொல்லும் நிலவற்றிருந்தால் வேறு கதை சொல்லும்..சிரிக்கும் நட்சத்திர கூட்டமோ...தூரத்த