Pages

Thursday, September 30, 2010

நடை...!நான் அந்த நதிக்கரையின் ஓரமாய் நடந்து கொண்டிருந்த மாலைப் பொழுதில்....காற்றில் பறந்து வந்த சருகு ஒன்று தோள் தொட்டு தொடர்ந்து கொண்டிருந்தது அதன் பயணத்தை....!

வளைந்து சாய்ந்திருந்த நாணல்களின் தொடலில் சிணுங்கிக் கொண்டே ஒடிக் கொண்டிருந்தது நதி. நதியோரத்தில் வரிசையாயிருந்த மரங்களின் அழகில் வசீகரமாய் இருந்த அந்த மாலையின் ரம்யத்தை கூட்டவே ஒரு ஊதல் காற்று ஊடுருவி பரவிக் கொண்டே இருந்தது.

பொதுவாக மாலை வேளையில் அந்த நதிக்கரை ஓரம் மனிதர்கள் வருவதில்லை..என்பது எனக்கு மிக சாதகமாய் போய்விட்டது. என்னை மறந்து சில மணிகள் நான் நடக்கும் நேரங்களில் கலர்கலாய் கனவுகள் பூக்கும். சிலாகித்து சிலாகித்து ஒவ்வொரு அடியும் எடுத்து வைத்து நடக்கும் தருணத்தில் ஏதோ ஒன்று உற்சாகமாய் உடல் விட்டு வெளியே பறந்து இன்னிசையாய் ஒரு கீதமிசைக்கும்.

என்னோடு நானே இருக்கும் அற்புத கணங்கள் அடிக்கடி கிடைப்பது இல்லை ஆனால் அப்படிப்பட்ட தருணங்களுக்காக சில சமயம் மாதக்கணக்கில் கூட காத்திருந்து இருக்கிறேன். இப்போது நானும் நானும்... என்னுடைய என்னை நோக்கிய உற்று நோக்கல் நிகழ்ந்து கொண்டிருந்தது.

எப்படிப்பட்ட ஒரு படைப்பு மனிதன்... யார் படைத்தார் என்ற கேள்வி ஆபத்தான விவாதத்திற்கு கூட்டிச் செல்லும் என்பதால் கேள்வியை அப்படியே காற்றில் பறக்கவிட்டு....மேற்கொண்டு நகர்வோம்...! சுற்றிலும் இருக்கும் எல்லாவற்றையும் உள் வாங்கிக் கொண்டு உணரும் போது ஏற்படும் அனுபவத்திற்கு பேர்தானே பரவசம்.....

பசுமையான மரங்கள், மனதை மயக்கும் ரம்யமான மாலைப் பொழுது....கிறீச்சிடும் பறவைகள் ஒலி..இதற்கிடையே.. நதியோரம் மேய்ச்சலுக்கு நின்று கொண்டிருந்த கறவைகளும், எருதுகளும், ஆடுகளும் வீடு திரும்பிக் கொண்டிருக்கும் ஒரு வித ஓட்டமும் அதன் பிண்ணணில் அவற்றின் கழுத்து மணிகளும், குரலோசைகளும், வயலில் நாட்டியம் பயின்று கொண்டிருந்த காற்று என்று எல்லாம் ஒன்று கூடி ஒரு ஆச்சர்யமான ஓவியமாய் ஆளுமை செய்து கொண்டிருந்தன. அந்த சூழ் நிலையை மேலும் மையல் கொள்ளச்செய்ய.. பறவைகள் எல்லாம் தங்களின் வீடு திரும்பலில் அன்றைய நாளில் நடந்ததைப் பற்றி பேசி சிரித்துக் கொண்டிருந்தன.

அதோ...அதோ... அங்கே பாருங்கள் அந்த சிட்டுக்குருவியை....என்னே அருமையாக நதியில் தன்னை நனைப்பதும் மீண்டும் கரையில் வந்து சிறகை உலர்த்துவதும் என்று ஒரு கவிதை எழுதிக் கொண்டிருந்தது எப்படி நீரினுள் இருந்த மீன்களுக்கு தெரிந்தது என்று தான் நான் போயிருந்தேன். ஆமாம் அவை தவணை முறையில் தாவிக் குதித்து சிட்டுக்குருவியை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருப்பதை என்னவென்று சொல்வதாம்?

நான் நடந்து கொண்டுதானிருந்தேன்.... ஒவ்வொரு அடியிலும் என் உயிருப்பும் இருப்புத்தன்மையும் இருப்பதை உணர்ந்தேதான் நடந்தேன்...குறைவற கிடைத்த ஆக்சிஜன் என்னின் நினைவுகளை உயிர்ப்பித்துக் கொண்டே இருந்ததோடு இல்லாமல் ஆழமான ஒரு சுவாச அனுபவத்தையும் கொடுத்துக் கொண்டுதானிருந்தது.

வாழ்வின் ஓட்டத்தில் நிகழும் அனுபவங்கள் மனிதர்களின் மூளையில் கறையை படிய வைத்து விடுகிறது. எல்லாவற்கும் ஆராய்ச்சிகளும் தத்துவங்களும் பேசிக் கொண்டு எதார்த்தத்தை தொலைக்கும் எந்திர மனிர்களை பார்த்து வியந்த நான்.....என்னை சுற்றி பறந்த பட்டாம் பூச்சிகளைப் பார்த்து மகிழ்ந்தேன்.

அடுத்த கணம் என்ன நிகழும் என்ற அறிவில்லா அறிவு பெற்ற ஐந்தறிவு ஜீவனின் சிறப்பு ஆறாமறிவால் பகுத்துப் பார்க்கப்படுவதில் எனக்கு சிரமம் இருப்பதாகப் படுவது என் குறை அறிவா? இல்லை நிறை அறிவா? எனக்குள் மோதிய கேள்வியை சிதறடித்தே போட்டது அந்த மாலையின் வானத்தில் பரவியிருந்த செம்மையான ஓவியம்.....அதற்கு பின்னால்....பிரிய மனமில்லாமல் பிரிய எத்தனித்த ஒரு ஆரஞ்சு பழ சூரியன்....

புலன்கள் புதுப்பிப்பட்டது எனக்கு…நிறைவில் இருந்த நான் நதிக் கரையோரம் இருந்த கல்லில் அமர்ந்து எவ்வளவு நேரம் ஆகிப் போனது என்பதை என்னைச் சூழ்ந்திருந்த இருட்டு உணர்த்திய பின்பு....

மெல்ல எழுந்து வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தேன்....வாழ்வின் அற்புதங்களைத் தேக்கியபடி....


தேவா. S

Wednesday, September 29, 2010

வேர்.....!
நேற்றின் ஞாபகங்கள் எப்போதுமொரு சுகமான ஒத்தடங்களை கொடுத்துக் கொண்டே இருக்கின்றன. அடித்து செல்லும் காலவெள்ளத்தில் மிதக்கும் ஒரு சருகாய் நானும் மிதந்து கொண்டிருக்கிறேன்.

அது ஒரு சராசரியான இரவு பத்து மணி நான் மட்டும் வாசலில் அமர்ந்திருக்கிறேன். தெருமுனையிலிருக்கும் அரசமரம் அதன் கீழிருக்கும் பிள்ளையார்.... இருட்ட்டாய் இருந்ததால் அந்த நாள் அமாவசையாய்தானிருக்கும் என்று நானே நினைத்துக் கொள்கிறேன் ஆனால் அது பெளர்ணமிக்கு முந்தைய நாள்.

தூரத்தில் ஒரு நாய் குலைக்கும் சப்தம் தெளிவாய் கேட்டதில் இரவின் அடர்த்தி என்ன என்று மனதுக்கு பட்டது. கிராமங்கள் பெரும்பாலும் இரவு 9 மணிக்கு எல்லாம் அடங்கி விடுகின்றன......! ஆள் அரவமற்ற தன்மையின் வீரியத்தை பிள்ளையார் கோவில் அரசமரத்தின் சருகுகள் கீழே விழும் காட்சி கூர்மை உணர்த்தியது.

மனிதர்கள் இருந்தால் நாம் எப்போதும் அவர்களைப் பற்றியே சிந்திப்போம். யாருமற்றுப் போனால் சிறிய சிறிய ஈ, எறும்பு, இலை, மரம், என்று நம்மைச் சுற்றி உயிர்ப்போடு ஓராயிரம் விசயங்களை கவனிக்க ஆரம்பிப்போம். வெற்றுடம்புடன் ஒற்றை துண்டோடு அமர்ந்திருந்த என்னுள் ஒரு இறுக்கம் பரவ காரணம் இருந்தது.

ஆமாம்... வீட்டினுள் என் அப்பத்தா... தனது அந்திமத்தைக் கடத்திக் கொண்டிருக்கிறாள். எதிர் வீடான அத்தை வீட்டில் அப்பா, அம்மா, தம்பிகள் எல்லாம் உறங்கியே போய் விட்டனர்....அப்பா மட்டும் போய் படுடா தம்பி என்று சொல்லி விட்டு அவரும் உறங்கிப் போனார். நானமர்ந்து இருந்த என் பூர்வீக பிரமாண்ட வீட்டின் நடு ஹாலில் என் அப்பத்தா மட்டும் தனியே...

சற்று முன் அவளின் அருகில் அமர்ந்திருந்தேன்.....அவளின் கண்களின் மிரட்சியில் வாழ்ந்த வாழ்க்கைப் பற்றிய ஏக்கமும், என்ன நிகழ்கிறது அவளுக்கு என்று புரிந்து கொள்ளமுடியாத விரக்தியும் சேர்ந்தே தெரிந்தது...82 வயது வாழ்க்கை அவளை
கிழிந்த கந்தல் துணி ஆக்கி வைத்திருந்தது.

சம்சாரி..... அவள்..... 6 பெண் பிள்ளைகளும் ஒரு ஆணும் பெற்று 15 வருடத்துக்கு முன்பே தாத்தவை பறிகொடுத்து.. எல்லோரையும் கட்டிக் கொடுத்து எல்லோரு ம் பேரன் பேத்திகளும் பிள்ளைகள் பெற்றதை கண்டு பூரித்து வாழ்ந்த சம்சாரி அவள்.

தாத்தா வயலில் உழும் போது ஒரு நாள் காலில் ஏதோ ஒன்று கிழித்து விட...அவரை அமரச் சொல்லிவிட்டு வயலில் இறங் கி மாடு ஓட்டியவள். கணீர் குரலுக்கு சொந்தக்காரி...ஏலேய்......சின்னையாயாயா யாயாயாயாயாயா அவள் குரலெடுத்து கூப்பிட்டால் அந்த கிராமம் மட்டுமல்ல...3 மைல் தூரத்துக்கு எல்லோருக்கும் கேட்கும்.....! அவளின் நடை பற்றி அவளே சொல்லக் கேட்டு இருக்கிறேன்.

தாத்தாவிற்கு இரண்டு ஊர் விவசாயம். பருத்திக் கண்மாயில் கொஞ்சம் நிலங்களும் அங்கு போனால் வந்தால் தங்குவதற்கு ஒரு வீடும் உண்டு. அங்கே உழவு நடக்கும் நேரத்தில் வீட்டிலிருந்து 4 மைல் இருக்கும் அந்த ஊருக்கு நடந்தே செல்வாளாம் அப்பத்தா....!

காலையில் தாத்தாவிற்கு சோறு எடுத்துக் கொண்டு... மதியத்துக்கு இங்க இருக்குற புள்ளக்குட்டியளுக்கு சோத்த அடுப்பில ஏத்தி வச்சிட்டி பருத்திக் கண்மாயிக்கு போயி உங்க அய்யாவுக்கு சோறு கொடுத்துட்டு உலைய இறக்கி வைக்க திரும்பி வந்திடுவேன்ல....அவளின் வேகம் மெலிதாய் பிடிபடும்.

உங்க அய்யா கம்மா கரையில் குளிச்ச்சிட்டு அவுக தலை முடியை சிக்கெடுத்து கிட்டே வருவாக...காதுல வைர கடுக்கண் சொலிக்கும் பாரு.....சொல்லும் போதே பள பளக்கும் அவளின் கண்கள் காதலை அப்பட்டமாய் வெளிப்படுத்தும்.

திடமான பெண்மணி அவள்...! வீட்டில் ஒரு நாள் திருடன் வந்துவிட...அவனை தனியே விரட்டிப்பிடித்து......மல்லுக்கு நின்று...ஆட்களை கூச்சலிட்டு அழைத்து அவனை நையப்புடைக்க வைத்தவள்.

இன்று சுருங்கிப் போய் கிடக்கிறாள்...மெல்ல மீண்டும் உள்ளே சென்று பார்க்கிறேன்... பிரமாண்ட ஹாலின் ஓரத்தில் 60 வால்ட் மஞ்சள் பல்ப் வெளிச்சத்தில்..அந்த வீட்டின் மகாராணி...கிழிந்த துணியாய்...!

சிரமமில்லாமல் இருப்பதற்காக மொட்டையடித்து வளர்ந்த வெள்ளை வெளிர் தலை முடி..! எவ்வளவு வனப்பானவள் என் அப்பத்தா? பழையப் போட்டோக்களில் பார்த்திருக்கிறேன்....

அழகுச் சிலை அவள். அவளின் அழகிற்கு கூடுதல் அழகாக அந்த ஒற்றை மூக்குத்தி இன்னும் வசீகரம் கொடுக்கும்.....ம்ம்ம்ம்ம் காலம் எல்ல வடுக்களையும் அவள் மேல் ஏற்றி அவளின் உருமாற்றி....எல்லாம் தின்று விட்டு... எச்சத்தை போட்டதை போல அந்திமத்தில் கொண்டு வந்து கிடத்தி விட்டு காத்திருக்கிறது...மொத்தமாய் கொண்டு செல்ல...

அவள் அருகினில் செல்கிறேன்....கண்களை மூடிய பாவனையில் இருந்தவள் அரவம் கேட்டு மெல்ல விழிக்கிறாள்....ஏதோ சொல்ல முற்படும் விழிகள்...சொல்ல முடியாமல் கண்ணீராய் வழிகிறது வார்த்தைகள். கலங்கும் என் கண்களோடு கைக்கொண்டு துடைக்கிறேன்....அவளின் கண்களை....!

நான் கிளைத்து வளர...
விதை கொடுத்த மரம்...
பட்டழிந்து போகும் முன்னே...
பசுமையான என்னைக் கண்டு....
என்னவெல்லாம் நினைத்ததோ...!
என் தகப்பனை எனக்கு....
தருவித்த தெய்வமே...
எங்களின் கண்ணெதிர் மூலமே.....!
என் குலம் சுமந்த கோவிலே....
என்னவென்று சொல்வேனடி..
வேடிக்கை வாழ்க்கைப் பற்றி....?

என்னால் தாங்க முடியாத அந்த அழுகை வெளிப்பட்டு அவளுக்கு பீதியை மேலும் கொடுக்க விரும்ப வில்லை என் மனது.

" அப்பத்தா......லைட்ட அமர்த்தவா....தூங்குறீங்களா நீங்க....? கேட்டேன். " வேம்பாபாபா.. வேம்பாபா....வேம்பா (வேணாம்பா)..... பமக்குபா.. பமக்குபா...பமக்குபா..(பயமாயிருக்குப்பா...)...வாய்குழறி ஏதேதோ சொன்னாள்....

அழுத்தமாய் வாழ்கையை வாழ்ந்தவள் அவள். மரணத்தை எதிர் கொள்ளவே முடியாமால் மருகிப்போயிருக்கிறாள். இன்னும் ஆடு மாடுகள் கட்டியதையும், சம்சாரியாய் நின்று பொறுப்புகளை வகித்ததையுமே மனதில் கொண்டு அடுத்த கட்ட நகர்வை எதிர் கொள்ள முடியாமல் தவிக்கிறாள்.

அன்று மதியம் வீட்டு வாசலில் எல்லா உறவுகளும், அவளது எல்லா பிள்ளைகளும் அவளது மரணத்திற்காக எங்கெங்கோ இருந்து வந்து காத்திருக்கிறார்கள். எல்லோருக்கும் வெவ்வேரு சூழ் நிலைகள் பிரச்சினைகள் இருப்பதால்... அவர்கள் இந்த இறப்பை கூட எதிர்ப்பார்க்கிறார்கள்....கல்யாண சாவு என்று பேசிக் கொள்கிறார்கள். கூட்டத்தை விட்டு சற்று தூரத்தில் இருந்தேன் அவர்களை கவனித்துக் கொண்டு...

"ஏம்பா.. பெளர்ணம வருதுப்பா.. அது வரைக்கு தாங்காதுப்பா...." பெரிய அத்தை....அப்பாவிடம் சொல்லிக் கொண்டிருந்தாள். " ஏம்பா தம்பி..சும்மா மச மசன்னு நிக்கிறியே...ஆளுகள விட்டு வெறகு வெட்டிப் போடச் சொல்லுப்பா...ஆளுப் பேரு வந்த பொங்கிப் போடணும்ல" இது...சின்ன அத்தை...." அப்படியாக்கா சரி.. இந்த பழசோலிய வர சொல்லியிருக்கேன் நாளைக்கு வெட்டச் சொல்றேன் விறக..." இது என் அப்பா........!

ஒரு கட்டத்தில் பெற்ற பிள்ளைகளே முடிவு செய்கின்றனர்.....தாயாய் இருந்தாலும் போய்ச்சேரட்டும் என்று...! காரணம் இப்போது அவர்கள் காண்பது வேறு உருவம்... குழந்தைப் பருவத்தில் பார்த்த “ஆத்தா” இல்லை....! ஒரு வேளை காலம் உருவை மாற்றுவது இது போன்ற நிகழ்வுகளை தாண்டிப் போவதற்குதானோ...என்று நினைத்தேன்...

மதிய நினைவுகளில் இருந்து வெளியே வந்தேன்........! அப்பத்தா இப்போது என் கையை பிடித்துக் கொண்டிருந்தாள்...அழுத்தமாக.... நான் அவள் தலையில் கைவைத்து தலையை வருடிக்கொண்டிருந்தேன்...........உஷ்ணம் அதீதமாக இருந்தது.

மனசுக்குள் அவளோடு பேசினேன்...." அப்பத்தா இப்போ உங்களுக்கு வேறு ஒரு அனுபவம் கிடைக்கப் போகுது. தயவு செஞ்சு பழசு எல்லாம் அழிச்சுடுங்க.....இனி வேறு விதம்...அது எப்படின்னு எனக்கு தெரியாது.....உங்களை எது இங்க கொண்டு வந்துச்சோ அது பாத்துக்கும். நீங்க வரும்போதும் யாரும் இல்ல...போகும் போதும் யாரும் இல்ல...ப்ளீஸ் எதுவும் உங்களது இல்லை.....இல்லை ...இல்லை...." சொல்லி முடித்து மணி பார்த்தேன்..அது அதிகாலை 1 மணியை தொடப்போனது.

அவளது கையைப் பிரித்து விட்டு......திணைக்கு வந்து படுத்திருத்த அத்தையிடம் நான் தூங்கபோறேன்ன்னு நீங்க...பாத்துக்கோங்க னு சொல்லிட்டு....வெளியில் கிடந்த மாட்டு வண்டியில் தலை சாய்த்து கண்களை மூடும் முன் ஒரு முறை அப்பாத்தா இப்போ என்ன நினைச்சு கிட்டு இருப்பாங்க? என்று நினைத்தேன்

உறக்கம்...என் அனுமதியின்றி...என்னை இழுத்துச் சென்றது............

............
............
.............
..........
...........

சப்தம் கேட்டு எழுந்தேன்...........கூக்குரல். ஒப்பாரி...எல்லோரும் வீட்டுக்குள் கதறவும்...எதிர்வீடு பக்கது வீடுகள் அரக்க பறக்க ஒடி வரவும்.......அந்த அதிகாலையில் ஒரே....பரபரப்பு.....மெல்ல நடந்து வீடு நோக்கி வந்தேன்.......அப்பா என்னை கட்டியணைத்து.....

" அப்பத்தா நம்மளை விட்டுட்டு போயிருச்சுப்பா" கதறினார்.

மெல்ல அவரை ஆசுவாசப்படுத்தி விட்டு.....பின்புறம் இருக்கும் தோட்டத்துக்கு வந்தேன்.....வானம் மெல்ல வெளுக்கத் தொடங்கியிருந்தது......

யாரோ இரவு முழுதும் உறங்காத ஒரு குழந்தைக்கு.........தூரத்தில் தாலாட்டு பாடிக்கொண்டிருந்தது.....லேசாய் காதில் வந்து விழுந்தது......

" ஆராரோ ஆரிராரோ.....என் கண்ணே நீயுறங்கு......"

அப்பத்தா கண் முன் வந்தாள்... புரிஞ்சுதுப்பா...புரிஞ்சுதுப்பா.....சிரித்துக் கொண்டே.....சொல்வதைப்போல தோன்றியது.....

நான் திடமாய் வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தேன்...!


தேவா. S

Tuesday, September 28, 2010

ஏக்கம்...!மாமிசமும் இரத்தமுமில்லா
ஒரு இடம் தேடிய எனது
ஓட்டத்தில் எப்போதும்
தூக்கிச் செல்லும்...
தோல்பை கொடுக்கும்
கனத்தில்...தடைப்பட்டுப்
போகிறது எனது நகர்தல்...!

என்னுள் இருந்து
ஏதேதோ சிந்திக்கும்
குழைவான திடப்பொருள்தான்
நானென்று சொல்லும்
சித்தாந்தங்களை எல்லாம்..
செதுக்கி எறிந்துவிட்டு...
கூடு விட்டு பறக்கத் துடிக்கிறது
என் ஆத்மா...!

எல்லாம் கடந்து.....
எங்கேயோ நான் இருந்து......
காற்றைப் போல பரவி
கட்டில்லாமல் சிதறி
ஓசைகள் தாண்டிய..
சப்த இறக்கங்களில்
நான் சரிந்து கொண்டே போய்....
நிசப்த பள்ளத்தாக்கில்
நிரந்தரமாய் வசிக்கும்....
ஆசையெல்லாம்...பெருமூச்சுகளில்...
வெளிப்படுகிறது எப்போதும்...
ஏக்கங்களின் வெளிப்பாடாய்....!


தேவா. S

Monday, September 27, 2010

காதல்...!


NOTHING.....BUT JUST THE NEXT ISSUE....!


பெரிதும் சிறிதுமாய் அவ்வப்போது வந்து ஆக்கிரமித்து கொண்டிருக்கும் கற்பனைகளின் ஓட்டத்தில் என்னின் சுயம் தொடும் முயற்சிகளின் ஓட்டத்துக்கு நடுவே அவ்வப்போது வந்து ஆக்கிரமித்துக் கொள்கிறது காதலென்னும் உணர்வு. உருவமாய் பயிற்றுவிக்கப்பட்ட காலத்திலிருந்து இன்று வரை தவறாமல் என் இதயம் துளைக்கும் தோட்டாவாய் எண்ணங்களை கிளர்ந்தெளச் செய்யும் கிரியா ஊக்கியாய் இருக்கும் வீரியமான அந்த விசையின் ஆதி முடிச்சு எங்கே போடப்பட்டது அல்லது எப்போது போடப்பட்டது?

ஏதோ ஒரு கணத்தில் என் இதயத்தின் முதல் துடிப்பு ஆரம்பித்த அந்த நொடியில் துளிர்த்திருக்கும் என்ற நம்பிக்கையில்லை...ஏனென்றால்.. என் இதயத்தின் கடைசி துடிப்பில் அது மரித்து விடும் என்ற வாதத்தில் செத்துவிடும் காதல் என்ற உணர்வு..ஆனால் அப்படி அல்ல.. அது எப்போதும் சாகாது...! வெளிச்சத்தில் இருந்தாலும் ஓடி ஒளிந்து இருட்டு தேடும்....ஒளி காணா மனிதன் போல எப்போதும் மறைந்து நின்று விளையாடுவதே பழக்கமாய்ப் போன இந்த காதல் படுத்தும் பாடுகளை...என்னவென்று சொல்வது..?

யாருமற்ற தனிமை என்றால் காதலுக்கு கொள்ளைப் பிரியம்...! ஆமாம் அந்த கணங்களில் தான் என் மனதிலிருந்து சீறிப்பாய்ந்து எண்ணமாய் கிளைத்து ஏதோ ஒன்றை எழுது என்ற உந்துதலை மூளைக்கு அனுப்பி கைகளின் வழியே வந்து வழிவாள் என் காதல் என்னும் என் காதலி....!

எழுத எழுத என்னை ஏங்க வைத்து உலகின் உச்ச இன்பங்களை எல்லாம் காலடியில் போட்டு பொடிப்பொடியாக்கி நானும் அவளும் நடத்தும் கூடல்களில் தெரித்து விழும் வித விதமாய் எமது எழுத்து குழந்தைகள்....! காலம் என்ற ஒன்றை அழித்து விட்டு காதல் என்ற ஒன்றை எல்லா திசையிலும் நிறுவிவிட்டு... என்னை அவள் தழுவுதலும் நான் அவளைத் தழுவுவதும் என்று கடந்து கொண்டிருக்கும் பொழுதுகளில் பரிமாறிக் கொள்ளும் எமது முத்தங்களைத்தான் உலகம் கவிதை என்கிறது.

எமது பால்யத்தில் தாயின் வழியே வந்த அவள், பதின்மத்தில் தொடங்கி பல காலம் பெண்களின் மூலம் வந்து எம்மை ஆக்கிரமித்து வித விதமாய் ஆட்டிவித்தாள்....! ஏதோ ஒரு காலத்தில் கடவுளாய் மாறி பக்தி என்ற வேசமிட்டு....அவள் பயிற்றுவித்துக் கொடுத்ததுதான்....ஸ்லோகம், தியானம், ஞானம் எல்லாமே......

பின்னர் கற்றுக் கொடுத்தவளே அத்து மீறி அத்தனையும் அறுத்துப் போட்ட அதிசயமும் நடந்ததது....! எல்லாமாகி என்னுள் நிறைந்து நின்று கொண்டு இனி காணும் பொருளிலெல்லாம் நான் இருப்பேன் என்று சொல்லாமல் சொல்லி சூட்சுமமாய் என்னுள் மறைந்து கொண்டாள்...

எனக்குள் இருந்து ஒரு நறுமணமாய் வீசி எங்கும் தன்னின் இயல்புகள் பரவச்செய்யும் அவள்...மிகச்சிலரிடம் இருந்தும் என்னை எதிர் கொள்வதும் உண்டு....! அப்போதைய எதிர்கொள்ளலில் அந்த அந்த நபர்களின் நேசமாயும் அது மாறிப்போனதும் உண்டு. அந்த நேசத்தில் மறைந்திருப்பவளும் அவள்தான்.....

வாழ்க்கை துணையிடமிருந்து எப்போதும் வீசிக் கொண்டே இருக்கும் அந்த உணர்வுக்கு பின்னால் சிறிய எதிர்பார்ப்புகள் நிறைந்தும், கட்டுப்பாடுகள் நிறைந்தும் போயிவிடுவதால் அதன் இயல்பில் கொஞ்சம் கலப்போடு வெளிப்பட்டு விடுகிறாள். கலப்பு இருந்தாலும் அதன் ஆளுமை என்னவோ வார்த்தைகளுக்குள் வடிக்கவியாலாதது....

மொத்த எதிர்பார்ப்பும் உருகிப் போகும் முதுமையில் ஒரு பட்டத்து அரசியாய் ஒளிர்வாள் அவள்...!

ஒரு மழை பெய்யும் போது ஓடி வந்து என் நெஞ்சு நிறைப்பாள்! மண்ணிலிருந்து வரும் வாசத்தின் ஊடே எனக்கான காதலையும் சேர்த்து பரப்புவாள்....! மழைத்துளியில் நான் நனையும் நேரம்...காதல் என்ற அவள் என்னைக் கட்டியணைத்து என்னில் கரைந்து இல்லாமால் இருப்பாள்...!

உணர்வான அவளை உணர்ந்த பின் தான் பாரதி பாடியிருக்க வேண்டும் இவள் தான் தலைமை இன்பம் என்று.....

உயிர்ப்போடு என்னோடு இருப்பவள் ஒரு பாடல் கேட்கும்போதும், ஒற்றை நிலவாய் என்னை சில்லென்றூ ரசிக்கும்போதும், ஒரு கவிதையிலும், காத்திருத்தலிலும், நட்பிலும், உறவிலுமாய் என்னை சீராட்டி சீராட்டி... என்னுள் இருக்கும் உந்து சக்தியாய் இருந்து கற்பதருவாய் களங்கமில்லாமல் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறாள்....

பல நேரங்கள் நாங்கள் மணிக்கணக்காய் பேசுவோம்....சில நேரம் மெளனத்தில்...அப்படியே கடந்து செல்வோம்....!

கட்டுப்பாடுகளும், உத்தரவுகளும் இல்லாத நுண்ணுணர்ச்சியாய் என்னுள் நிறைந்து இருக்கும் காதலே....! பிரபஞ்சத்தின் ஆதியே...! என்னின் உடல் மரிப்புக்கு பின்னும் என்னோடு பின்னி பிணைந்து புணர்தலாய் தொடரபோகும் மூல வித்தே....!

உருவங்களின்றி என்னை ஆட்கொண்டிருக்கும்... பாலினம் சாரா...அறிவே! என் சுவாசத்தில் இருக்கும் சீரான அதிர்வே.....! என்னுள் எப்போதும் நிறை...என்னை சுற்றி எல்லாவற்றையும் நிறை....!

கேள்வியும் பதிலுமற்ற..என் கவிதைகளின்..
கருவினுள்...சிசுவாய் இருக்கும்…
ஜடத்தின் அசைவற்ற உணர்வுகள் எதையுமே...
வெளிப்படுத்த முடியா பிண்டமாய்
இருப்பதானால் ..செயலற்றதா என் காதல்....?
...
...
...
...

இல்லை...அது ஜீவனுள்ள குழந்தை...!


தேவா. S

Sunday, September 26, 2010

பப்பு....!
காலையிலிருந்து பப்புவிற்கு தலை சுற்றியது, வயிறு குலைந்தது, மயக்கம் வந்தது, ஒரு மாதிரி...சுழற்றி, சுழற்றி அடித்தது....என்ன ஆச்சுன்னு கேக்குறீங்களா?

மேலே படிங்க....பாஸ்....

பப்புவுக்கு தினம் ஒரு பதிவு எழுதி போஸ்ட் பண்ணனும் அப்படி இப்படி ஏதேதோ எழுதி போஸ்ட் பண்ணி ஓட்டிக்கிட்டிருந்த அவனுக்கு அன்னிக்கு என்ன எழுதறதுன்னு தெரியல.....ஏதாச்சும் எழுதியாகணுமேன்னு ஒரே டென்சன்.. என்னமோ இவன் கூவி உலகம் விடியப் போறாப்புல ஒரு நினைப்பு.....

சொக்கா........பதிவு எழுத ஒரு வலி சொல்ல மாட்டியான்னு கத்தாத குறைதான்....! தூங்கி எழுந்த உடனே அடிக்கிற அலாரத்தை ஆஃப் பண்ணும் போதே நினைச்சான்....அலாரம் டைம்பிக்ஸ் பத்தி எழுதலாமா.....காலையில எப்படி தொந்தரவு கொடுக்குதுன்னு.....ம்ம்ம் சரியா அது பத்தி ஒண்ணும் மேட்டர் கிடைக்காததால அத ஸ்கிப் பண்ணிட்டான்...

குளிக்க பாத்ரூம் போனான்...பைப்புல தண்ணி வந்த வேகத்துல நினைச்சான்... சரி தண்ணீர் சேமிப்பை பத்தி எழுதலாமான்னு,,ம்ம்ம்ஹீம்...அது பத்தியும் ஒண்ணும் சரியா தோணலை....! சாப்பிடும் போது நினைச்சான்... இட்லிக்கு தொட்டுக்க ஏத்த சட்னின்னு ஒரு சமையல் குறிப்பாச்சும் போடுவமான்னு ... உடனே அவுங்க அம்மாவ கூப்பிட்டு ஏம்மா இந்த தேங்காய் சட்னி எப்படி வைக்கிறதுன்னு கேட்டான்? எதுக்குடா கேக்குறன்னு அவுங்க அம்மா கேட்டாங்க? பதிவுல போடபோறேன்னு சொன்னதுதான் தாமதம்......போடா போ வெட்டிப்பயலே..ஆபிஸ்ல போய் வேலைய பாருடான்னா...சமையல் குறிப்பு போடப்போறானாம்னு அவுங்க மூஞ்சிய காட்டினாங்க....

பப்புவிற்கு கண்கள் இருண்டே போச்சு....அச்சோ.. நான் பெரிய பதிவராச்சே.....அத காட்டியே ஆகணுமே... ( ஒரு நாதி கூட சீண்டாது அது வேற விசயம்...) என்ன பண்ணலாம்? இந்த நினைப்புலயே...வண்டி ஓட்டிகிட்டு போனவன ரெட் சிக்னல கவனிக்கல....டிராபிக் கான்ஸடபிள் கிட்ட....100 ரூபாய் துட்டு கொடுத்துட்டு... மறுபடியும் பைக் ஸ்டார்ட் பன்ணியவனுக்கு சரி... இந்த லஞ்சம் கொடுக்குறது பத்தி எழுதலாம்னு நினைச்சான்... ஆனா அது பத்தி ஷங்கர் ஏற்கனவே 'இந்தியன்'ல டீட்டெய்ல சொல்லிட்டதால அது பத்தியும் எழுத முடியல....

வீடு புல்லா புக்கு வாங்கி வச்சிருப்பான் பப்பு..ஆனா எடுத்து தொட்டு கூட பாக்க மாட்டான். ஃப்ரியா வலைப்பூவும் தமிழ்ழ டைப் பண்ண சாப்ட்வேறும் கிடைச்சதும் தான் தாமதம்....தென்னைமரமும் அதன் பயன்களும்னு ஸ்கூலுல எழுத சொன்னதையே ஒழுங்கா எழுதாத பப்பு... இன்னிக்கு என்னன்னமோ எழுத ஆரம்பிச்சுட்டான்....

உலகப்பிரச்சினைக்கு எல்லாம் தீர்வு சொல்றதுக்கு இவனுக்கு மெளசும் கீபோர்டும் போதும்னு நினைச்சுகிட்டு...... காஷ்மீர்ல இருந்து கன்னியாகுமரி வரைக்கும் ஏதாவது நடந்த போதும் போஸ்ட் போட்டுடுவான். என்ன ஏது எழுதனும்னு ஒரு வரைமுறை இல்லை...எதாச்சும் எழுதணும்....அதுதான் பப்பு ஸ்டைல்...!

அப்படிப்பட்ட பப்புக்கு அன்னிக்கு பருப்பு வேகாம போச்சு.... ஒரு சாச்சுரேசன் பாயின்ட் வந்து என்ன எழுதறதுன்னு தெரியாமா இதோ ஆபிஸ்ல வந்து வண்டிய நிறுத்துறான் பாருங்க.....ஏற்கனவே 30 நிமிசம் லேட்டுன்னு கூட தெரியல பப்புவிற்கு.....

ஆபிசுக்கு உள்ள போன பப்புவை மேனேஜர் கூப்பிட்டனுப்பினாரு... பப்பு ஸ்டைலா மேனஜர் ரூம்குள்ள போனான்.....ஒரு 20 நிமிசம் கழிச்சு வெளில வந்தான்... அக்கவுண்டண்ட் என்னாச்சுன்னு? கேட்டாரு பப்புகிட்ட... லேட்டா வந்தேன்னு கும்மிட்டாரு மேனேஜர்னு சொன்னவன்..இந்த மேனஜர பத்தி ஒரு பதிவு எழுதி வஞ்சம் தீர்க்க்கணும்னு நினைச்சு சந்தோசப்பட்டான் ஆனா ஒரு வேளை மேனேஜர் போஸ்ட எடுத்து படிச்சா என்னாகும்னு பயந்து அதையும் கைவிட வேண்டியதா போச்சு......

இதே நினைப்புலயே...ஏகப்பட்ட தவறுகளும் வாங்கிக் கட்டிக் கொள்ளுதலும்னு பாப்புவுக்கு நாள் ஓடிட்டே இருந்துச்சே தவிர பதிவு போட ஒரு மேட்டரும் கிடைக்கல...!

நொந்து போன பப்புவிற்கு டக்குனு ஐடியா வந்துச்சு.......சரி....இன்னிக்கு பதிவு போடமுடியாத அளவு ஆணின்னு சொல்லி ஒரு பதிவு போடுவம்னு யோசிச்சு டைப் பண்ணும் போதே.... இம்பார்டண்டா பாஸ் பண்ண வேண்டிய பைலை மேனஜருக்கு பாஸ் பண்ண மறந்துட்டான்......அப்புறம் என்னா....ஏதேதோ பிரச்சினை ஆகி....மறுபடியும் இப்போ ஜெனரல் மேனேஜர் கும்மு கும்ம்ம்னு கும்மிட்டாரு.

நல்லா வாங்கிகட்டிகிட்டு வெளில வந்த பப்புவுக்கு அடுத்த சோதனை.....ஆமாம் அவன் சிஸ்டத்துல கொஞ்சம் நஞ்சம் தேத்தி வச்சிருந்த ஒரு மொக்கை போஸ்டும் சேவ் பண்ணததால....சிஸ்டம் ரீ ஸ்டார்ட் ஆனதுல மறைஞ்சு போச்சு.....

டென்சன் ஆயிட்டான் பப்பு...இந்த லட்சணத்துல....பப்பு வோட இரண்டு ஃப்ரண்ட்ஸ் வேற...என்ன பப்பு....போஸ்ட் என்னாச்சு...னு போன போட்டு கேட்டு வேற உசுப்பேத்தி விட்டுடானுக......(அவனுக வேணும்னே உசுப்பேத்தியது பப்புவிற்கு எப்படி தெரியும்...... நம்ம ஆளுதான் பாப்புலாரிட்டிக்கு அடிமையாச்சே...!!!)

சரி ஏதாச்சும் எழுதணும்னு பிளாக்க ஓப்பன் பண்னிய பப்புவை மேனேஜர் கையும் களவுமா பாத்துட்டு....காட்டு காட்டுனு காட்டிட்டாரு! ஒரு 30 இமெயில்ஸ (ஒரு ரிப்ளை மட்டும் 2 பக்கம் வரும்..அவ்வ்வ்வ்வ்வ்வ்) கொடுத்து.... இன்னும் ஒன் அவர்ல எல்லோருக்கும் போயாகணும்னு கத்திட்டு...போனபோது மணி மாலை 6 .......!

ஆமாங்க...

பப்பு கிட்ட இருந்து போஸ்ட் எதிர்ப்பாக்காதீங்க இன்னிக்கு...பையன் காலைல இருந்து நொந்து நூடுல்ஸ் ஆகி....இப்போ டொக்கு டொக்குனு கீ போர்ட தட்டிகிட்டு உக்காந்து இருக்கான்.....


இனிமே போஸ்ட் போடுவே... போஸ்ட் போடுவே.... பப்பு தலையில அடிச்சிகிற மாதிரியே.....தட்டிகிட்டு இருக்கான் கீ போர்ட...உங்களுக்கு சத்தம் கேக்குதா?

டொக்...டொக்..டொக்.........தேவா. S

Saturday, September 25, 2010

ஆன்மாவின்....பயணம்! பதிவுத் தொடர் பாகம் III

PREVIEW

சராசரியான நிகழ்வுகளில் மிக திருப்தியான ஒருவன்....எல்லாவற்றையும் விட்டு விலகி இருக்க ஆசைப்பட்டு... ஒரு பத்து நாட்கள் வீட்டை விட்டு வெளியேற திட்டமிட்டு கடிதம் எழுதிவைத்து விட்டு வெளியேறுகிறான். அதற்கப்புறமான அவனின் மனோநிலை.. உலகம் பற்றிய பார்வை....இவனைப்பற்றிய உலகத்தின் பார்வை...இப்படியாக நகரும்....கதை.....இந்த மூன்றாவது பாகத்திலும் தொடர்கிறது...

திருப்புமுனைகளோடு கூடிய கதை எதிர்ப்பார்த்து படிக்க விரும்புவர்கள்....எனது பதிவுகளை தவிர்த்து விடல் நலம். ஏனென்றால் என் பதிவுகள் முழுக்க முழுக்க என்டர்டெயின்மென்டை நிச்சயமாய் கொடுக்காது.


உங்களின் நேரம் அனுமதிக்கும் பொழுது இதற்கு முன் பாகங்களையும் படித்துக் கொள்ளுங்கள்....!

பாகம் I

பாகம் II


இனி...


உலுக்கி எழுப்பியவர்...யாரென்று திரும்பி பார்த்தேன்...." எங்கேயா போகணும்...? பஸ்ல ஏறினா தூங்கிட வேண்டியது.... டிக்கட் எடுய்யா என்று கேட்டவரை அமைதியாய் பார்த்தேன்...! யோவ் டிக்கட் எடுய்யா உறுமிய கண்டக்டரை உற்று நோக்கினேன்....எங்க போகணும் சொல்லு? அவர் என்னை கேள்வி கேட்டார்.....? எங்க போறீங்க நீங்க.. நான் திருப்பி கேட்டேன்...?

யாருய்யா நீ ? காலங்காத்தால உசுர எடுக்குற....என்னிய பாத்து எங்க போறன்னு கேட்ட மொத ஆளு நீதான்யா..கண்டக்டர் தலையிடித்துக் கொண்டு சிரித்தார்....! இல்லங்க.. பஸ் எங்க போகுது.....? திண்டுக்கல்....போகுது அவர் சொன்னார்.... நானும் திண்டுக்கல் தான் போறேன்....டிக்கட் வாங்கி பாக்கெட்டில் வைத்துக் கொள்ளவும் ஒரு வினோத ஜந்துவைப் போல என்னைப் பார்த்துக்கொண்டு கண்டக்டர் நகரவும் சரியாக இருந்தது.

மீண்டும் ஜன்னல் வழியே பார்வையையை வீசிவிட்டு புறம் அறுக்கத்தொடங்கினேன்....!

என்னுடைய கேள்வி நடத்துனரை நிச்சயாமாய் அதிர்வுறத்தான் செய்திருக்கும்.. எங்கே போக வேண்டும் என்ற இலக்கு இல்லாமல் பயணிக்கும் ஒரு மனிதனிடம் கேட்ட கேள்வி என்பது அவருக்கு தெரியாது.....பேருந்து நகர்ந்து கொண்டிருந்தது..... எங்கே போகிறேன்.. ? தெரியாது...ஆனால் போகிறேன்...

வாழ்வின் எல்லாபக்கங்களையும் தீர்மானித்து தீர்மானித்து அந்த தீர்மானித்தல்களிலும் திட்டங்களிலும் ஒரு அலுப்பு தட்டி போயிருந்தது.. ஆனால் இன்றைய நகர்வில் ஒரு புத்துணர்ச்சி இருந்தது. கிராமாம் கிராமமாக, சிற்றூர் சிற்றூராக பேருந்து நிற்பதும், மனிதர்கள் ஏறுவதும் இறங்குவதுமாக இருந்தார்கள்.

ஒவ்வொருவரும் ஒரு தேவையின் பொருட்டு பயணிக்கிறார்கள்....இன்னும் சொல்லப்போனால் ஒவ்வொருவரும் ஒரு சூழ்நிலைக்குள் சிறைப்பட்டு இருக்கிறார்கள். மற்ற மனிதர்களை பார்க்கும் போது தமது சூழ்நிலையின் பாதிப்போடுதான் பார்க்கிறார்கள். இப்படிப்பட்ட பார்வையாளாயே.. எதிராளியினை எடைபோடும் அல்லது மனோ நிலையை உணரும் சக்தியை இழக்கிறார்கள்.

எல்லா சூழ்நிலைகளையும் மனதிற்கு அப்பாற்படுத்திவிட்டு மனிதர்களை பார்ப்பது ஒரு வித்தை. அப்படிப்பட்ட பார்வையில் எதிராளியின் உணர்வுகளும், குழப்பங்களும், பயமும் நமக்கு எளிதாக தெரிந்து விடுகின்றன. எல்லா சூழ்நிலையையும் புறம் தள்ளிவிட்டு வந்திருந்த எனக்கு... எந்த கற்பனைகளும், காட்சி சார்ந்த விவரிப்புகளும் இல்லாததனால் என் மனம் வெறுமனே மற்றவர்களை ஆராய்ந்து கொண்டிருந்தது.

மனம் ஒன்று நம்மை பற்றிய சிந்தனைகளை விவரித்துக் கொண்டே இருக்கும்.. அது இல்லையென்றால்.. புறம் நோக்கி பாயும்.. .! மனம் எப்போதும் நிலையானது அல்ல அது இயங்கிக் கொண்டே இருப்பது... இப்பொது வெவ்வேறு மனிதர்களின் மனதுக்குள் புகுந்து ஆராயத்தொடங்கியது....காட்சிகளின் வழியே மனம் எனக்குள் விவரிப்பை நடத்தியது...

வழியில் ஒரு சிற்றூரில் பேருந்து நிறுத்தப்பட்டது... காலை 9 மணி உணவுக்காக....! எல்லோரும் இறங்க.. ஜன்னலின் வழியே வெளியில் தட்டுப்பட்ட ஒரு டீக்கடையை கவனித்தது மனது. ஒர் பெரியவர் நரைத்த முரட்டு மீசை, தோலில் ஒரு துண்டு, சட்டை இல்லாமல் அமர்ந்து பேப்பர் படித்துக்கொண்டிருந்தார். பழுப்பேறியிருந்த வேட்டியும், கலைந்த கேசமும் அலட்சியமான விழிகளும் வாழ்க்கையை படித்து வந்தவன் நான் என்று கட்டியம் கூறின.....

நான் இப்போது இலக்கில்லாமல் பயணிக்கும் தீர்மானத்தோடு வீடு விட்டு எங்கோ போய்க் கொண்டிருக்கிறேன்....ஏதோ ஒரு அனுபவத்திற்காக...! சரி.. ஒரு வேளை நான் அந்த பெரியவராய் இருந்தால் எனது அடுத்த நகர்வு என்ன? எனது சந்தோசம் என்ன? எனது நாளைய விடியலில் நோக்கம் என்ன? எது என்னை சந்தோசப்படுத்தும்?எது என்னை கோபப்படுத்தும்? ஒரு சட்டையை எடுத்து பார்த்து பார்த்து போட்டு ...மடிப்பு கலையாமல் அணிந்து, தலைவாரி அலங்காரமாய்..அடுத்தவர் நம்மை பார்ப்பார்கள் என்று கவனம் கொண்டு செல்லும் உலகத்தின் மத்தியில்....

சட்டையில்லாமல் ஒரு ஒற்றைத்துண்டோடு, கலைந்த கேசத்தோடு,அந்த பேப்பரை வாசிப்பதிலும் சுற்றியிருப்பவர்களிடம் பேசுவதிலும்....கையிலிருக்கும் அந்த டீயை உறிஞ்சி குடிப்பதில் எத்தனை ஒரு சந்தோசம்.... அவருக்கு....! அவருக்கு எது சொல்லியது... அடச்சே.. போங்கப்பா.... நான் எப்படி இருந்தா என்ன..? என்று....

கடந்து வந்த அனுபவமா? இல்லை வாழ்க்கை பற்றிய அலட்சியமா? இல்லை.... வெயிலில் கறுத்த தேகம் தந்த வைராக்கியமா....? டீ குடித்து முடித்து பற்ற வைத்த சுருட்டை.... அனாசயமாய் ஊதிக் கொண்டே... எழுந்து போய்க் கொண்டிருந்தார்....அந்த பெரியவர்...! 60 வதுகளை கடந்திருப்பார்....உறுதியான அவரின் உடல் சொன்னது அவர் கடும் உழைப்பாளி என்று.....

நான் அவராய் இருந்தால்...அடுத்து என்ன செய்வேன்? ஆசைகள் என்ன? என் மனம் அதற்கு மேல் நகர பக்குவப்படவில்லை.....ஆனால் பேருந்து மீண்டும் நகரத்தொடங்கியது.....! மனிதர்கள்.....மனிதர்கள்... மனிதர்கள்... சுற்றிலும்...ஒவ்வொரு ஆசைகள், ஒவ்வொரு பயணங்கள்..... ஓ...... ஆனால் ஒன்று பொதுவானது... ஒவ்வொரு மனிதனும் தனது..... உள் முனைப்பை...தனது ஆத்மாவை சீராட்டிக்கொண்டிருக்கிறான்...!

என்னதான் தியாகியாயிருந்தாலும்... நான், தான் என்பதை எப்போதும் விட்டுக் கொடுக்காது ஆன்மா...எல்லாம் உதறியவர்களுக்கு மட்டும் ஒருவேளை அந்த உள் முனைப்பு இல்லாமல் இருக்கலாம்..ஆனால் பரவலான ஒரு விசயம் தன்னை முன்னிலைப்படுத்தி மனிதன் நகரும் நகர்வு......பேருந்து வேகமாய் சென்று கொண்டிருந்த அதே வேளையில்....

முழுதாய் விழித்திருந்த அவனின் வீடு.... அவனை காணாமல்.. அவன் எழுதிய கடிதத்தைப் படித்து விட்டு அல்லோலகல்லோலப் பட்டுக்கொண்டிருந்தது......


(பயணம் தொடரும்...)


தேவா. S

Friday, September 24, 2010

சிறகு....!இட வலம்....மேல் கீழ்
கோணல் நேர்.. கிறுக்கல்
இஷ்டங்களின் படி...
விசிறியடிக்கும் தூரிகைகளின்
வீச்சில்...வந்து விழும்...
வகை வகையான...ஓவியங்களின்
கலைந்த காட்சிகள் எல்லாம்
எப்போதும் எள்ளி நகைக்கின்றன
ஒழுங்குகளின் இறுக்கதிலிருக்கும்
அறியாமை முடிச்சுகளை பார்த்து...!

கலைத்து போடலின் ...
உச்சத்தில்..வெளிப்பட்ட
என் ஒவியத்தின் அழகில்
வெட்கி ஓடுகிறது...அழுத்தமாய்
மனதில் இருந்த
கட்டுப்பாட்டு அழுக்குகள்...!

கலைந்து கிடக்கும்
ஓவியத்தின் தடங்களில்
உயிர்ப்பாய் நிறைந்திருக்கும்
வரைமுரையற்ற வர்ணங்களின்
கூடல்களின் நிறைவுகளில்
மெலிதாய் வெளிப்பட்டுக் கிடக்கிறது
ஒரு எல்லைகளற்ற....ஆனந்தம்!

கலைந்ததின் ஆட்சியில்
செத்துப் போன விதிமுறைகளை
புறம்தள்ளி நகர்ந்து விட்டு...
சலனமின்றி கடக்கிறேன்...
இரைச்சலின் எல்லைகளை
ஒழுங்கற்றதுகளின் சிறகுகளோடு...!...!


தேவா. S

Wednesday, September 22, 2010

பிரம்மா...!

நித்தம் நடக்கும் நாடகத்தில்... நானும் ஒரு நடிகன்......! அரிதார பூச்சுக்களில் அழுந்தியிருக்கும் என் முகம்...சுயம் தேடும் ஓட்டத்தில், வேசமெல்லாம் கலைத்தெறிந்து மொத்தமாய் தொலைந்து போக.....யாக்கைகள் கொண்டு....

சுடலையில் பொடி பூசி.....
பாதங்களின் அதிர்வுகளில்
அண்ட சராசரம் கிடு கிடுங்க...
அகிலமெல்லாம் நடு நடுங்க...
என் உடலின் நரம்புகள்
கிழித்தறுத்து மாலைகளாக்கி....
என்னை தொலைக்கும் வேகத்தில்
நான் நடத்தும் தாண்டவங்களில்...
ஆடி, ஆடி,,,,ஆட்டதிலமிழ்ந்து..
ஆடுபவன் தொலைந்து.....
எச்சமிருக்கும் ஆட்டத்தின் அதிர்வுகளாய்...
நான் காணாமால் போகும்...
முயற்சிகளுக்காய் நித்தம் தொடர்கிறது....
என் ருத்ர தாண்டவம்....!

என் பயணம்...அடைதலை நோக்கியதானதல்ல....ஆனால் அது கடந்து செல்வதை நோக்கியது....! படைப்பினை நடத்தும் மூல சக்தியின் கிளைகளையும் தழைகளையும் பற்றி, பற்றாமல் படர்ந்து தெரிந்து கொள்ள எனக்குள் என்னை செலுத்திய பயணத்தில் கிளைத்த எண்ணங்களை...எழுத்துக்களாய் கோர்த்து முடித்து இதோ எதார்த்த உலகிற்கு கொண்டு வருகிறேன்....

என் கதையின் எல்லா மாந்தர்களும் போலியான அரிதாரப்பூச்சுக்களில் எதார்த்த உலகம் அறியாத பொய்மையை பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். எழுத்துக்களுக்குள் எப்போதும் வந்து உட்கார்ந்து விடும் கற்பனைகளை கலைய விரும்பி எடுக்கும் முயற்சிகள் எல்லாம்....வெட்ட வெட்ட உயிர்க்கும் அமீபாவாய், மறுக்க மறுக்க கிளைக்கும் எண்ணமாய் மீண்டும் மீண்டும் சாயங்களை பூசி உண்மைகளோடு சேர்ந்து அவற்றுக்கு இன்னும் அழகு சேர்க்கின்றன...கற்பனையில் தோன்றும் வண்ணங்கள்.

எப்போதும் ஏதாவது தோன்றிக்கொண்டிருக்கும் மூளையின் செல்களில் எங்கே கலந்திருக்கிறது இந்த கற்பனைகள்......? வடிவமில்லாமல் திசுக்களாய் அலையும் இவைதானே.... ஒரு ஒவியனின் கைகளின் வழியே வர்ணங்களை விசிறியடித்து விதவிதமாய் ஜாலங்கள் காட்டும் சித்திரமாகவும்..., இசைக்கலைஞனின் நெஞ்சத்தில் இராகங்களாகவும், ஒரு எழுத்தாளனின் எழுத்தின் கருவாகவும், வெளிப்படுகிறது. வற்றாத நதியாய், ஜீவனுள்ள கருவாய்.. கிளைத்து வரும் எண்ணங்களின் வெளிப்பாட்டில் வெளியே வரும் படைப்புகளோடு படைப்பாளியும்தானே மிளிர்கிறான்....?

எப்போதும் முறுக்காய் திரிந்த பாரதியின் பாக்கெட்டில் பைசாக்கள் இருந்ததில்லை ஆனால் அவன் கண்களில் ஒளி இருந்தது....! அந்த படைப்பாளியின் வீட்டில் அடுப்பெரியவில்லை ஆனாலும் அவன் சொன்னான்... " எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா......" என்று.. அவனின் கற்பனையில் அவன் சக்கரவர்த்திதான்.....! எதார்த்த வாழ்க்கையில் பட்டினி கிடந்த அவன் உடல் அதே நேரத்தில்.. எங்கோ ஒரு மூலையில் மனிதர்கள் அடிமைப்படுத்தப்பட்டதற்காக கவிதைகள் எழுதியது.....!

ஏன் இந்த முரண்.. ? பாரதி பிறப்பிலேயே எண்ணங்கள் கிளர்ந்த நிலையில் பிறந்த ஒரு மனிதன்....! அவனுள் எல்லா சக்கரங்களும் அவன் அறியாமலே விழித்துக் கொண்டிருந்திருக்கின்றன. இப்படித்தான் ஆன்மீகம் அவற்றை சக்கரங்கள் என்று சொல்லும் போது அவை எல்லாம் கட்டுக்கதை என்று சொல்லும் மனிதர்கள் அதை அறிவியல் க்ளாண்ட்ஸ் (சுரப்பிகள்) என்று சொல்லும் போது ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

அறிவியல் கூட ஒரு வகையில் மூட நம்பிக்கைதான்....! என்ன நான் சொல்வது வேடிக்கையாக இருக்கிறதா? ஆமாம் அறிவியல் ஒன்றை கண்டுபிடிக்கும் ...கொஞ்ச நாட்கள் ஆன பின்பு அதை மாற்றிச் சொல்லும்.... மாற்றிச் சொல்லும் போது ஏற்கனவே நாம் நம்பியிருந்தது மூட நம்பிக்கைதானே....?

உலகின் கடைசிக் கூறு அணு என்று அறிவியல் கூறி அதை பகுக்க முடியும் என்பதை கண்ட போது அது மூட நம்பிக்கைதானே...? பூமி சூரியனை சுற்றுவதும் மூட நம்பிக்கைதான்...! ஆமாம் மூலத்தின் ஈர்ப்பில் சுற்றி வரும் பூமி ஒரு நாள் அச்சில் இருந்து விலகும் அன்று பூமியும் சூரியனும் இருக்கவே இருக்காது அப்போது... நாம் எல்லாம் சேர்ந்த இந்த பூமியும் சூரியனும் இன்ன பிற கோள்களும் தூள் தூளாகி நொறுங்கும் போது எல்லாமே மூட நம்பிக்கைதானே?

எல்லாம் மூட நம்பிக்கை என்று சொல்லிவிட்டு... ஏதேதோ செய்து கொண்டிருகிறோம்.. கற்பனைகள் எல்லாமே.... இருப்பதில் இருந்து வருவது. இல்லாமல் எப்படி கற்பனைகள் வரும்...குறைந்த பட்சம் சாத்தியக்கூறுகளாவது இருக்கவேண்டும். இப்படித்தான் கவிதையிலும் கட்டுரையிலும் கதையிலும் வந்து விழும் அலங்காரங்களில் பொய்மையும் கற்பனையும் இருந்தாலும் அவை பொய்யானவை அல்ல....!

எல்லா கற்பனைகளும், விவரித்தல்களும் கிடைக்கப்பெறும் இடம் ஆழ்மனம்.

யாருமே வரையாத ஒரு ஓவியத்தை ஓவியனின் மூளையின் எந்த பாகம் சிந்திகிறது.........? அதன் வர்ண கூட்டு என்ன? நெளிவு சுளிவு என்ன என்று எது தீர்மானிக்கிறது......? ஒரு பேருந்தையும், விமானத்தையும், விளக்கையும் கண்டு பிடித்தவனுக்கு உள்ளே எது சொல்லியது இப்படி ஒன்று வேண்டுமென்று...?

சிக்கலான அதி நுட்பமான விசயங்கள் ஆழ்மனதிலிருந்து... ஏற்கெனவே அறிந்த ஒரு விசயத்திலிருந்துதானே வர முடியும்? மனமறியாத ஒன்றை, உடலறியா ஒன்றை...மூளை அறியா ஒன்றை....எப்படி செய்கிறான் மனிதன்?

பிரபஞ்ச மூலத்தோடு நெருங்கியவன்தான் படைப்பாளி.....! ஆமாம் எல்லோரும் பார்ப்பதில் இருந்து எல்லோரும் சிந்திக்க முடியாத ஒன்றை சிந்திப்பவன்....தான் உருவாக்குபவன்....இந்த வல்லமை எல்லா மனிதர்களுக்குள்ளும் இருந்தாலும் அதை பயன்படுத்தி மூல உண்மையின் அருகே போய்.....அதன் அடி ஆழத்தில் இருந்து உணர்வை எடுத்து வந்து அதை பொருளாக்கி காட்டுகிறவன் தானே... பிரம்மா?

கலைஞர்கள் இன்னோவேசன் உள்ள மனிதர்கள், காண்பதில் புதிதை வெளிக் கொண்டு வருபவர்கள், வெறும் கற்களில் கலை நயம் கொண்டு வருபவர்கள்...இப்படி சொல்லி கொண்டே போகலாம்............பொதுவில் கிளர்ந்தெழுந்த மனதின் உணர்வுகளை....ஆழ்கடல் சென்று மூச்சடக்கி கொண்டு வரும் முத்து போல கொண்டு வந்து சக மனிதர்களுக்கு அதை சமைத்து கொடுப்பவர்கள்தான் படைப்பாளிகள்..........!

வலியின் மூலத்தை வார்த்தைகளுக்குள் கொண்டு வரவும், சந்தோசத்தை இசையில் பரவ விடவும், உணர்வுகளை ஓவியமாக்கவும் தெரிந்தவன் கலைஞன்....

ஆடலாய், பாடலாய், கவிதையாய், கட்டுரையாய், ஓவியமாய், நாடகமாய், இசையாய், சிற்பமாய், இன்னும் எதுவெல்லாம் உலகம் தாண்டி மனிதனின் பார்வை தாண்டி போய்....கருத்துக்களை கொண்டு வந்து சாமானியனுக்கு தருகிறதோ..... அதை குறைந்த பட்சம் குறை கூறாமல் இருப்போம்.

படைப்பாளிகளாய் உருவெடுப்போம்...! படைக்கும் பிரம்மாக்களின் உணர்வுகளை மதிப்போம்......!

" மானஸ சஞ்சரரே ப்ரம்மணி மானஸ சஞ்சரரே.............."


தேவா. S

Tuesday, September 21, 2010

காவியம்...!புழுதி கிளப்பும் புரவிகளின்
குளம்படிச் சப்தங்களின்
பின்னணியில் ஒளிந்திருக்கும்
யுத்தத்தில் லயித்திருக்கும்
மனதில் அவ்வப்போது
வந்து செல்லும் நினைவுகளில்
ஒட்டியிருக்கும் ஒரு புன்னகை
என் உடலின் இரணங்களையும்
கடந்து கிளர்த்தெழச் செய்கிறது
விவரிக்க முடியாத உணர்வுகளை!

தலைகள் உருளும் களத்தில்
கையில் வாளும் நெஞ்சில்
காதலும் கொண்டு முன்னேறிச்
செல்லும் என் புரவியின்
பிடரியில் அடர்ந்திருக்கும்
ரோமங்களின் கலைதலோடு
சேர்ந்தே என் மனசு கலைக்கிறது
உன்னோடு கூடியிருந்த..
போருக்கு முந்தைய அந்த
கெட்டியான இரவு...!

வீசும் வாள்களில் தாழ விழும்
தலைகளில் வெல்லப்போவது
நானென்று அறிந்த வீரம்
என் உயிர் சேமிக்கும்
வேகத்துடன் தீரம் காட்டும்
போர்களின் பிரமாண்ட
வெற்றிகளுக்குப் பின்
சப்தமின்றி ஒளிந்திருக்கிறது...
ஒரு காவியக் காதல்...!


தேவா. S

விவரிப்பு...!


விவரித்தல்களில் தோற்றுப்போன
வார்த்தைகளின் தற்கொலைகளில்
பூக்கும் மெளனங்களின் எச்சத்தில்
விளையும் சொல்ல முடியா
உணர்வுகளின் பிளம்புகளில்
பற்றும் தீயின் பரவுதலில்
தகிக்கிறது என் உடம்பு...!

ஒரு நெரிசலில் இருந்து
விடுபட்ட புறப்பாடுகளில்
தேங்கிகிடக்கும் அனுபவங்கள்
கொடுக்கும் விஸ்தாரிப்புகள்
மீண்டும் மீண்டும் என்னை
கீழே இழுக்கும் முயற்சிகளுடனான
போராட்டங்களுக்கு நடுவே
பூக்கும் கனவுகளின் நிஜத்தில்
முளைக்கும் சிறகுகள்..
தூக்கிச் செல்கின்றன...
எட்டப்படாத உயரங்களுக்கு!

எங்கிருந்தோ வேகமாய்
வந்த ஒரு காற்று...
வேகவேகமாய் கலைத்துப்போடும்
மணல்கள் வரையும் ஓவியங்கள்
விதவிதாமாய் கலைதலில்
மறைந்திருக்கு காற்றின்
சந்தோசமும்....ஓவியங்களின் உயிர்ப்பும்
மறக்காமல் கொடுக்கும் உணர்வுகளில்
பற்ற ஏதுமில்லா கொடிபோல
பரவிக் கிடக்கும் எண்ணங்களில்
ஒளிந்து கிடக்கிறது தோற்றுப்போன
ஓராயிரம் விவரித்தல்கள்...!தேவா. S

Sunday, September 19, 2010

சுவாசமே...காதலாக...! தொகுப்பு: 4


வேறு ஏதாவது எழுதலாம் என்று நினைக்கிறேன்.. மீண்டும் மீண்டும் நீயே வந்து இடைமறித்து என் எழுத்துக்களை தகர்க்கிறாய்...! இது நேற்று உன்னிடம் சண்டையிட்டதின் நீட்சியா? இல்லை உன்னை மறக்க நினைக்கும் என்னின் தோல்வியா…? விடையறியாமல் விட்டத்தை நான் பார்த்துக் கொண்டிருந்த பொழுதில் சிம்மாசனமிட்டே என்னுள் அமர்ந்து விட்டாய்...!

உன்னை மறக்க விரும்புகிறேன் என்று உன்னிடம் சொல்லிய அந்த கணத்தில் நான் அப்படி சொல்ல விரும்பாமல் சொல்கிறேன் என்பதை என் கண்கள் உன்னிடம் காட்டியிருக்க வேண்டும்...! என்னை உற்று நோக்கி கண்ணீருடன் சேர்த்து காதலையும் வெளிப்படுத்திவிட்டு... நீ நகர்ந்து விட்டாய்...! உன்னை ஸ்தம்பிக்கச் செய்திருந்த காதல் இப்போது நீ இல்லாத வேளையில் உன் நினைவுகளை அள்ளிக் கொட்டி என்னை மிரட்டிக் கொண்டிருக்கிறது!

மீண்டும் கடைசியாய் உன்னை சந்தித்த அந்த கல்லூரி மாலையில்...உன் மீதான என் அக்கறை குறைவதை நீ வார்த்தை மத்தாப்புகளாய் மாற்றி கோப அக்னியாய் வெடித்து சிதறிய அந்த தருவித்தல்களில் உண்மையில்லை என்று நான் உரைத்து உரைத்து.... என் உரைத்தல் உன் செவி சேராமால் உறைந்து... விழிகளாலும் வார்தைகளாலும் நீ என்னை விளாசிய அந்த கணத்தில்....காதலின் இன்னுமொரு முகம் பார்த்து மிரண்டு போயிருந்தேன் நான்.......!

போராட்டத்தில் என் வார்த்தைகள் தோல்வி கண்டு புறமுதுகிட்டு எனக்குள் பாய்ந்து உன்னை சேமித்து வைத்திருந்த என் இதயத்தை குத்தி கிழித்து குதறியதில் மூர்ச்சையாதலின் அருகாமைக்கு சென்ற நான்......

உன்னை விட்டு விலகியிருக்க விரும்புகிறேன் என்ற ஒற்றை வார்த்தையில் உன் கண்களில் வழிந்த கண்ணீரில் என் காதலை கரைத்து விட்டு.... வீட்டுக்கு வந்தால் நீ விசுவரூபமெடுத்து நிற்கிறாய். நான் உன்னை மறக்க வேண்டும்...சந்தேகத்தில் உன்னிடம் இருந்து கிளைத்த வேர்களை வெட்டி வீழ்த்திய பின்னும் இன்னும் உன் மீதான கோபம் என்னோடு சினேகத்தில் இருந்தது....

காதல் என்பது ஒரு சத்திய பிரமாணம்...அதில்....சந்தோசக் குழந்தைகள் பிறக்க வேண்டும் சந்தேகக் குழந்தைகள் அல்ல...! காதல் என்பது எல்லா சமயத்திலும் நேசித்தல்... தனக்கு பாதகமான நேரத்தில் நிந்தித்தல்....அல்ல....! காதல் கண்ணீரை துடைப்பது அது கண்ணீரை வரவழைக்க அல்ல...! காதல் இல்லாத மனிதர் இல்லை... குழந்தையாய் இருக்கும் போது தாயிடமும், மணமுடித்த பின் கணவன் மனைவியிடமும்... புரிதலில் எல்லா உயிர்களிடத்தும் தோன்றும் ஒரு உணர்வு காதல்.....

பெரும்பாலும் ஒரு பெண்ணுக்கு ஆணையும், ஆணுக்கு பெண்ணையும் கொண்டு காதல் என்ற உணர்வு வருவது எளிது....இந்த எளிமையையில் சிக்கிய மனம் கொடுத்த விஸ்தாரிப்புதான் காதலனும் காதலிகளும், காதல்களும்...... தொடர்ச்சியாக வெறுமையில் இருந்து படையெடுத்து வந்த வார்த்தைகள் நெருப்பு பிழம்புகளை உமிழ்ந்து கொண்டிருந்தன....கூடவே மறக்க நினைத்த உன் நினைவுகள் என்னை சுற்றி நாட்டியம் ஆடிக்கொண்டிருந்தன...!

கனவுக்கும், எதார்த்தத்துக்கும் நடுவே நான் தடுமாறிக் கொண்டிருந்த போது.... இடையில் வந்த குறுஞ்செய்திக்காக........ அலைபேசி கெஞ்ச... கையிலெடுத்த அலைபேசியில் .....வரிவடிவில் நீ...காதலை.....பரவவிட்டிருந்தாய்....! வாசித்து முடித்தவுடன் உன் கோபத்தின் அறியாமையை உணர்த்தி விட்ட வெற்றிக் களிப்பில் இருந்த குறுஞ்செய்தியை ஒரு போல்டருக்குள் தள்ளிவிட்டு....மீண்டும் உன்னை நினைக்க மறுத்து நினைவலைகளை வேறு பக்கம் திருப்ப முயன்ற போது... பாவமாய் வந்து நீ கெஞ்சும் காட்சியில் என்னை பறி கொடுத்து விடுவேனோ என்று பயந்து....அந்த வெள்ளிக்கிழை இரவு பத்து மணிக்கு நான் மொட்டை மாடிக்கு போயிருக்க கூடாதுதான்...

எலி வாய்க்கு பயந்து புலி வாயில் சிக்கியவன் கதையாய்... அந்த நிலவற்ற இரவின் கருமையை கிழித்துக் கொண்டு நிசப்தத்தில் ஊற்றெடுத்து பொங்கிய உன்னோடான சந்தோச நாட்கள்.. எனக்கு சிரிப்பு வந்தது...என்னை நினைத்தே.....

உன்னை நினைக்ககூடாது என்ற எண்ணம் திண்ணமானதின் முதல் வினாடியில் இருந்து கடந்து சென்ற கடைசி வினாடி வரை இடைவிடாது வியாபித்து நின்ற உன் நினைவுகள் வென்று விட்டதாகத்தானே அர்த்தம்.....?

பிரியங்களின் பிறப்பிடம் ஒரு வேளை பிரிவாய்த்தான் இருக்குமோ...? ஊடலில் காதல் இருமடங்காகி விடுகிறதே... அது எப்படி? ஒரு வேளை பிடிக்கவில்லை என்றால் நெருங்கித்தான் பழக வேண்டுமோ? விட்டு விலகக் கூடாதோ?.... எண்ணங்கள் வேகமாக சென்று கொண்டிருந்த போதே.... உன்னை பார்க்க வேண்டும் என்ற ஆவலில் திங்கட்கிழமை நோக்கி முன்னேறியது புத்தி...

விடுமுறையான இரண்டு தினங்கள் இருண்ட தினங்கள் தான் ... கை கொட்டி சிரித்தது.. தூரத்தில் இருந்து ஒரு சிறு நட்சத்திரம்...மெல்ல வீசிய காற்று.. மீண்டும் என்னை கலைத்துப் போட... உன்னை காணும் அந்த திங்களில் என்ன செய்வாய்....? கண்ணீருடன்
.. சாரி என்பாயா? இல்லை கவனிக்காதது போல உன்கைகள் பற்றி...என் நேசித்தலை நான் சொல்வேனா? இப்போதே துடிக்கும் இதயம் அப்போது நின்று போய் விடுமோ? என்ற அச்சம் வேறு அறியாமையில் இருந்து கிளைத்தது....

யோசிக்காமல் அலைபேசியை கையிலெடுத்து.... குறுஞ்செய்தியை... டைப் பண்ண ஆரம்பித்தேன்...

"ஐ.. டூ.....லவ்.. யூ....டார்லிங்....!"

மெசேஜ் சென்ட்... என்ற வாக்கியத்தில் செத்துப் போயிருந்த நமது கோபம் பிறக்க வைத்திருந்தது....இன்னும் மிளிர்வான.. உன்னோடான காதலை....!


தேவா. S

Saturday, September 18, 2010

மறதி...!

என் மரித்தலுக்குப் பின்னான
உங்களின் வருகையில்
என்னிடமிருந்து உதிரப் போகும்
ஆழ்ந்த மெளனத்தில்...
இதுவரை நான்...
சொன்னது எல்லாம்...
பொருளிழந்து போகும்...!

உறவுகளின் ஒப்பாரிகளுக்கு
மத்தியில் கிடத்தப்பட்டிருக்கும்
நானென்று கருதியதின்...
மீதிருந்து வீசும் தாய்ப்பாலின்
வீச்சத்தில் நினைவுக்கு வருகிறது
இப்பிறப்பின் துவக்கம்...!

கனவுகளாய் எழுதி வைத்த...
எழுத்துக்கள் ஊர்வலமாய்
என்னைச் சுற்றி வந்து..
என்னின் உயிருதெழுதலுக்கான
பேச்சுவார்த்தைகளின் தோல்வியில்
வாசிப்பாளனின் மனதிலேயே..
போய் முடங்குகின்றன மீண்டும்...!

மீண்டும் என் தாயின் கருவறை
தேடிய பயணம் கொடுக்கப் போகும்
மண்ணறையில் நானில்லா நான்
தனித்திருந்து மட்கும் நேரத்தில்
நானாகிய நான் பயணிக்கும்
உருவமில்லா பயணித்தில்...
உமது கண்ணீர்கள் குறுக்கிட்டு
வெளிப்படுத்தும் காதலுக்காய்...
அன்புக்காய் மீண்டுமொருமுறை..
பிறப்பெய்ய எத்தனிக்கும் வினாடியில்
வந்து விழும் வெளிச்சம்..
மரித்தலே சிறத்தல் என்று
சொல்லாமல் சொல்லி.......
பால் வீதிகளுக்குள் பறக்கவைத்த
பரவசத்தில்....மறந்துவிட்டது....
எனக்கு எல்லாமே...!


தேவா. S

ஹாய்.....!ஒவ்வொரு முறை கட்டுரைகளை எழுதிவிட்டு கட்டுரைக்குள்ளேயே நின்று ஏதோ கருத்துக்களை சொல்லிவிட்டு போவது வழக்காமான நிகழ்வாகிவிட்டது. கட்டுரைகளின் கருத்துக்களுக்கு நன்றி சொல்வதும் சொல்லும் கருத்துக்களைப் பற்றி சிந்திப்பதும் ஒரு தனி நிகழ்வாகவே பெரும்பாலும் அமைந்து விடுகிறது. பெரும்பாலும் வாசகர்களிடம் பேசுவது என்பது இல்லாமையால் ஏதோ ஒரு நெருக்கம் விடுபட்டுப் போவதாக உணர்ந்தேன். அதனால் அடிக்கடி கருத்துக்களை தாண்டி நாம் சந்தித்துக் கொள்ளும் நிகழ்வுகள் இருக்க வேண்டும் என்று எண்ணியதின் விளைவு,,,இதோ உங்களோடு பேசிக் கொண்டிருக்கிறேன்.

கருத்துக்கள் கட்டுரைகள், கவிதைகள், உணர்ச்சி பூர்வமான விவாதங்கள் இதற்கு பின்னால் மனிதம் மனிதத்தோடு கைகோர்க்கும் உன்னதமான விஷயம் மறைமுகமாகவே நடந்து கொண்டிருக்கிறது. ஆன் லைனில் சந்துக் கொள்வதும், வலைப்பூக்களில் எழுதுவதும் தாண்டி உறவுகள் ஆரோக்கியமாக கைகோர்க்கப்பட்டு எதார்த்த வாழ்கையின் தூண்களாக மாறவேண்டும். சிக்கல் இல்லாத உறவுகளாக அமைவதில் நல்ல சமுதாயம் அமையும்.


எழுதிக் கொண்டே இருப்பதற்கு நிறைய தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. வாசிப்பது எல்லாம் நமக்குள் விழுந்து கிரக்கிக்கப்பட்டு செரித்து புரிதலில் இருந்து வேறு விதமாய் உயிர்த்தெழுந்து வெளிவருகிறது. கற்றுக் கொள்வதற்கு நிறைய பேரிடம் பேச வேண்டியிருக்கிறது. நிறைய அனுபவங்களை உள்வாங்க வேண்டியிருக்கிறது.

நம்முடைய பிரச்சினைகளையும் அடுத்தவர் பிரச்சினைகளையும் கூர்ந்து கவனித்து நமது தவறுகளையும் அடுத்தவரின் தவறுகளையும் எவ்வளவுதான் உள்வாங்கினாலும் மீண்டும் தவறு நிகழ்வது தவிர்க்க முடியாததாய் இருப்பதை உணரும் போது ஆச்சர்யமாயிருக்கிறது...! சறுக்கல்களும் தவறுதலும் மனித இயல்புகள் அவை மாறாது என்றும் தவறுகளை உணர்தலிலும் மீண்டும் அதே தவறு நிகழாது கவனிப்பதிலும் தெளிவாய் இருப்பவர்கள் நல்ல மனிதர்கள் ஆகிப் போகிறார்கள்.


நானும் ஏதேதோ எழுதுகிறேன். முகம் பார்க்காத உறவுகளின் வாசிப்புகளும் நேசிப்புகளும் வியக்க வைக்கிறது. ஆன்மீகத்தை தவறாக மதத்தோடும் கற்பனை கடவுளரோடும் தொடர்புபடுத்தி ஒரு ஏமாற்ற வாழ்க்கை வாழும் மனிதர்களுக்கும், விசயம் தெரிந்தவர்கள் தம்மை கடவுளரோடு தொடர்பு படுத்தி எம்மக்களை ஆட்டுமந்தைகளாக்கி வைத்திருப்பதில் இருக்கும் கோபத்தில் ஆன்மீகம் சார் கருத்துக்களை எழுதுகிறேன்.

ஆன்மீகம் சார் கருத்துக்களை சொல்லும் போது புறத்தில் இருகும் அன்றாட வாழ்க்கையில் பார்க்கும் பொருள்களை வைத்து உதாரணம் சொல்ல முடியாது...அகம் நோக்கிய திருப்புதலுக்கு கொண்டு சொற்களை பிரோயோகம் செய்யும் போது....வாசிப்பாளனின் மனம் உள் நோக்கி திரும்ப தயாராகி தன்னை உற்று நோக்கும் போது என் கட்டுரை புரிகிறது.

அப்படி உள் நோக்கி திரும்ப மனம் பெரும்பாலும் யாருக்கும் ஒத்துழைக்காது. மனம் வெளியேதான் ஓடும்...அதை உள் நோக்கி திருப்ப மனதில் அமைதியும் பொறுமையும் தேவையாயிருக்கிறது... ஆனால் பரபரப்பு வாழ்க்கையில் அப்படி இருப்பது குதிரைக் கொம்புதான்.... அதனால் என் கட்டுரையின் சாரங்கள் பிடிபடுவது கடினமகிப் போகிறது.

எளிமையாக சொல்ல முயற்சித்தாலும், எளிமை என்பது பழக்கம் சார்ந்த அனுபவம் சார்ந்த ஒன்றுதான். எவ்வளவுதான் எளிமை என்று 10 பிள்ளைகள் பெற்றவள் சொன்னாலும் முதல் பிள்ளை பெறுபவளுக்கு அது கடினம்தான். புரிதலுக்கு அனுபவம் முக்கியமாகிறது. அனுபவத்திற்கு பொறுமை காரணமாக அமைகிறது. பொறுமைக்கு மன அமைதி காரணமாயிருக்கிறது. மன அமைதிக்கு நம்ம நாமே பார்த்துக் கொள்வது காரணமாகிறது. நம்மை நாமே பார்த்துக் கொள்வதா? அப்டீன்னா?

24 மணி நேரத்தில் 18 மணி நேரம் சுற்றி இருக்கும் எல்லாவற்றையும் பற்றி சிந்திக்கிறோம். இன்னும் சொல்லப் போனால் மிச்சமிருக்கும் 6 மணி நேர தூக்கத்திலும் கூட அதுதான் நடக்கிறது. நான் என்ன சொல்கிறேன்… ஒரு நாளைக்கு 20 நிமிசம் ஒதுக்கி....... அந்த நேரத்தில் வேறு எதைப் பற்றியும் எண்ணாமல் நம்மை பற்றியும் நமது உடலின் இயக்கம் பற்றியும் என செய்து கொண்டிருக்கிறோம், எங்கே போய்க் கொண்டிருக்கிறோம் என்பது பற்றி சிந்திப்பதில் என்ன சிக்கல் இருக்கிறது?

நமக்குள் நடக்கும் விசயங்கள் பிடிபட...கர்வம் என்பது சுக்கு நூறாகும். கர்வம் என்ற உடன் ஒரு கதை நினைவுக்கு வருகிறது. ஆபிரஹாம் லிங்கன் அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருந்த போது அமெரிக்க பாராளுமன்றத்தில் எதிர்கட்சி வரிசையில் இருந்த ஒருவர் லிங்கனை அவமானப்படுத்த வேண்டும் என்று ஏதோ விசயம் பற்றி பேசும் போது இடையில் " உங்கள் தந்தை தைத்துக் கொடுத்த செருப்பு இன்றளவும் என்னிடத்தில் உள்ளது என்று சொன்னாராம்" இப்படி சொல்வதின் மூலம் லிங்கன் ஒரு செருப்பு தைப்பவரின் மகன் என்று ஏளனம் செய்வதே சொன்னவரின் மனதில் இருந்தது.

லிங்கன் அதை பொறுமையாக கேட்டுவிட்டு..." ஓ அப்படியா...! என் தந்தை தைத்துக் கொடுத்த செருப்பு இன்னும் அப்படியே இருக்கிறதா? பழுதாகாமல் இருக்கிறதா ? என் தந்தையின் தொழில் நேர்த்தி அப்படி " என்று சொல்லிவிட்டு மேலும்..." இனி அந்த செருப்பு பழுதடைந்தால் என்னிடம் கொண்டு வாருங்கள் நான் சரி செய்து தருகிறேன் " என்று சாதாரணமாகவே சொன்னாராம்....!

அவர் ஆபிரஹம் லிங்கன்....! தெருவில் அலைந்து கொண்டிருந்த போதே.. தான் ஒரு அமெரிக்க ஜனாதிபதியாகி அடிமை முறைகளை நீக்குவேன் என்ற கனவு கொண்டவர். அவரிடம் கர்வம் இல்லை. ஆனால்...இன்று...கத்துக்குட்டிகளும், கரப்பான் பூச்சிகளும், மீசை இருப்பதாலேயே தன்னை புலி என்று கருதிக் கொள்ளும் பூனைகளும் காட்டும் மமதை இருக்கிறதே.....அதை சொல்லில் வடிக்க முடியாது. மனிதர்களின் மமதையும் தலைக்கனமும் அவர்களை வேறோடு சாய்க்கும்.

அட.....இப்போ கூட நான் ஏதோ கருத்து சொல்ல வரலை பாஸ்....! இந்த கட்டுரையில் எந்த கருத்தும் இல்லை... நான் உங்ககிட்ட பேசிட்டு இருக்கேன்....! நம்ம பங்காளி வசந்த் ( நான் உங்க உறவுக்காரன் அப்பு)சொன்னது மாதிரி...பாட்சா மாதிரி ஹிட் படம் கொடுங்க பங்காளி, புரியாத பாபா மாதிரி ஏன் எழுதணும்னு சொன்ன கருத்துக்களும், மின்னஞ்சலில் வரும் அறிவுரை மற்றும், விமர்சன கருத்துக்களையும் செவி கொண்டு கேட்டு கவனமாகவே நடை பயில்கிறேன்.

ஒரு விசயம் மட்டும் உண்மை பாஸ்..... என்னாதான் தெரிஞ்சுகிட்டதா மனசு நினைச்சுகிட்டாலும் இன்னும் ஒண்ணுமே தெரியாதவனாய்....ஒரு புள்ளியாய்...பிரபஞ்சத்தின் முன் நின்னுட்டு இருக்கோம் பாஸ் எல்லோரும்....

நல்ல கட்டுரைகளை படிக்கணும்....! நல்ல கட்டுரைகளை எல்லோரும் எழுதணும்...! 60 பேருக்கு கமெண்ட் பண்ணினா... 30 பேர் நிச்சயமா வருவாங்கன்ற நிலை மாறி.... ஆரோக்கியமான சூழ்நிலை வரணும். அவ்ளோதான்.. மத்தபடி... இது கட்டுரை இல்லை.....அதனால ஒரு டைட்டில்குள்லே அடைக்க முடியாது..... அடிக்கடி சந்திப்போம் பாஸ் இந்த “ ஹாய்....” மூலமா...!

வாழ்வில் எல்லா வளமும் பெற்று எல்லோரும் இன்புற்று இருப்போமாக..!


தேவா. S

Thursday, September 16, 2010

சாரல்...!விருப்பம்


உனக்கு காபி பிடிக்கும்
எனக்கு டீ பிடிக்கும்
நான் காபி; நீ டீ....!
***


முரண்


இருக்கவா போகவா
என்றாய்...
வாழவா சாகவா என்றால்
என்ன நான் சொல்வது?
***


விடை

ஒரு ஓவியம் வரையச் சொன்னாய்
உன் பெயர் எழுதினேன்....
ஒரு கவிதை கேட்டாய்
உன் ஒவியம் வரைந்தேன்...
ச்சோ ஏன் இப்படி ...என்று
உதடு சுழித்தாய்...
பதிலே கேள்வி கேட்டால்
எப்படி பதில் சொல்ல?
***


நிஜம்

இன்னொரு முறை ...
என் பெயர் சொல்லி அழை...
என் உயிர்ப்பை...
உறுதி செய்து கொள்கிறேன்...!
***


ஆச்சர்யம்!

விலகிப் போகிறாய்...
என்றுதான் நினைக்கிறேன்...
விலகி நிற்கும் தூரங்களிலும்
காக்க வைத்திருக்கும் காலங்களிலும்
விசுவரூபமாய் வியாபித்து ...
நிற்கிறாயே எப்படி?
***

கவிதையா அப்டீன்னா?
ஆச்சர்யமாய்.. நீ கேட்டு...
ஒரு நொடியில் பட படவென
இமைத்து....லட்சம் கவிதைகள்
சொல்கிறாயே அது எப்படி?
***

புதிர்

உன் விழிகள்....
எல்லோரையும் பார்ப்பதற்கும்...
என்னை மட்டும் தவணை முறையில்
கொல்வதற்குமா?

***

கவிதை

...ஷ்..ஷ்.ஷ்...சத்தம் போடாதீர்கள்..
அவள் வருகிறாள்...
நான் தொலையப் போகிறேன்...!
***

காதல் என்பது ஒரு உணர்வு காற்று மாதிரி பரவி விரவியிருக்கும் .... மனதை திறந்து வைத்திருக்கும் வேளைகளில் அது நம்மை ஆக்கிரமிப்பதை யாராலும் தடுக்க முடியாது.... அந்த ஆக்கிரமிப்பில் மலரும் பூக்களின் நிறங்கள்.. நமது கற்பனையையும் மிகைத்தவை....! சப்தமில்லாமல்... மெல்ல நுழையுங்கள் உங்களின்...அந்த வெட்ட
வெளி இருப்புத்தன்மைக்குள்...!


தேவா. S

Tuesday, September 14, 2010

முகவரி...!
விலாசங்கள் தொலைத்த
வழிப் போக்கனாய் தேடல்களில்
மிகைத்திருக்கும் அறியாமையில்
கிளர்ந்தெழும் எண்ணங்களை
மேய்ப்பதிலேயே முடங்கிக்...
போகிறது பொழுதுகள்....!

மரிக்கும் மனிதர்களில்
மறைவாய் ஒளிந்திருக்கும்
தொலைந்து போன முகவரிகளை
தேடி எடுக்கும் முன்பே...
கலைத்துப் போடும் ...
கனவு வாழ்க்கையின் வண்ணங்களில்
மெய் சிலிர்ப்பதில்...
மீண்டும் மீண்டும் தொலைகின்றன...
தேடிப் பிடிக்கும் முகவரிகள்...!

காலத்தின் போக்கில்
கைக்கொள்ளப் போகும்
முகவரியைக் வாசித்து...
அடையப் போகும் இலக்குகளின்
இல்லாமையில்...தேடிய முகவரிகள்
விலாசம் இழக்கும் பொழுதுகளில்....
உயிர்தெழும் உண்மைகள்
எழுதும் ஓராயிரம் முகவரிகள்...
மீண்டும் தயாரகும் தொலைதலுக்காய்...!


தேவா. S

Monday, September 13, 2010

சினேகம்...!


எப்போதாவது...வந்து செல்கிறது...
உன் நினைவுகள்...!
கடந்தகால விதைத்தலின்
விசுவாசமாய்....!
மெலிதாய் கிளர்ந்தெழும்.. நினைவுகளூடே....
மெளனமான பார்வையால்..
நம் கடந்த கால...சந்தோசங்களை
அவ்வப்போது வாரித்தெழிக்கிறாய்....!

எதிர்பார்ப்பே இல்லாமல் ....
நேசித்ததின் அடையாளமாய்...
இன்னமும்....ஒரு எதார்த்த
பிம்பமாய்... என்னை வலம்
வரும் உன் நினைவுகளோடு...
உன் பெயர் சொல்லி...
அழைத்து வாஞ்சையோடு...
என்னருகே இருத்தி...
என் பேத்தியின் தலை தடவும்
பொழுதுகளில்..கோர்க்கும்...
கண்ணீரில் ஒளிந்திருக்கிறது...
இத்தனை காலம் உன்னிடம்
சொல்லாத என்....வயதான காதல்!


காதல் என்பது பல நேரங்களில் ஒரு தயக்கத்திலேயே சொல்ல முடியாமல் போகும் அளவிற்கு காலத்தின் கணக்குகள் இருக்கும். சொல்லாத காதல்கள் சொல்லாததால் இல்லை என்றாகிவிடுமா? வாழ்வின் பல நேரங்களில் கடந்து வந்த நேசங்களின் நினைவுகள் மரிக்கும் வரை மனதை விட்டு அது அகலாது,

பொய்யாய் ஓராயிர மறைத்தல்களை கைக்கொண்டு வாழ்க்கையின் படிகளை கடந்து கொண்டுதானிருப்போம்...கடக்கும் பொழுதுகளில் ஏதோ ஒரு கணங்களில் விடாமல் தொடர்ந்து கொண்டிருக்கும் சில நினைவுகள் நினைவுகளை வலுக்கட்டாயமாக கொண்டு வராமலேயே ஒரு வித ஏக்கத்தின் சாயலை உணர்வு நிலையில் நின்று ஒரு வித சந்தோசத்தை உடலெல்லாம் பரவசெய்யும் கண்ணிய மிக்க உறவுகள் இல்லாமல் யாரும் இருக்க முடியாது....?

மென்மையாய் இருக்கும் இந்த உணர்வுகளை உணர்ந்தவர்... தனிமையிலேயே சிரித்துக் கொள்ளவும் நேரிடலாம்......இல்லை என்று சொல்பவர்கள்...ஒரு கோப்பை சூடான தேனீரோடு கொஞ்சம் தனிமையில் போய் வானம் பார்த்து அமருங்கள்....உங்களுக்கான அனுபவம் வாய்க்கலாம்...!


தேவா. S

ஓட்டு....!

வரப்போகிறது தேர்தல்... தயாரா மக்களே....?

யாரைத் தேர்ந்தெடுப்பது என்ற உமது முடிவுகள் பெரும்பாலும் தீர்மானிக்கப்படுவது அரசியல்வாதிகளின் கடைசி நேர அணுகுமுறைகளில்...? யாரைத் தேர்ந்தெடுப்பது என்று நீங்கள் தீர்மானிக்க முடியாத அளவிற்கு குழப்பத்தில் உங்களை இருத்தி வைத்திருக்கும் மீடியாக்களும், அரசியல்வாதிகளும் அப்படி செய்ததின் பலனை அனுபவிப்பதில் காட்டும் போட்டிகளில் மதி மயங்கி நீங்கள் செய்யப் போவது அடுத்த ஐந்தாண்டுகளுக்கு உங்களை காக்குமா? இல்லை புலம்பிக் கொண்டே ரோடுகளில் பித்தர்களாக அலைய வைக்குமா? யாருக்கு தெரியும் உங்களுக்கு மட்டுமே....

கடை பரப்பி கலர் கலராய் காட்சி செய்து எம்மக்களை முட்டாள்களாக்கும் அந்த ஒரு நாளில் முட்டாள் ஆவதில் ஆர்வம் கொண்டு சில நூறு ரூபாய்களை பெற்றுக்கொண்டு அன்றைய தின சந்தோசத்தில் தன்னை தொலைத்து ஜன நாயகத்துக்கு சவுக்கடி கொடுக்கப்போவது யார்? வேற்று கிரகவாசிகளா? இல்லை குறை சொல்லி புலம்பித் திரியும் மகா பொதுஜனமாகிய நாம்தான்...

தீர்மானிக்க முடியாத அளவிற்கு நிரப்பப்பட்டு இருக்கும் பசியும், வேலை வாய்பின்மையும் இன்ன பிற பிரிவினைகளும் மக்களை சிந்திக்க விடாமல் மைண்ட் இலுயூசன் என்று சொல்லக் கூடைய பிழையான காட்சியை கற்பிதம் செய்யக் கொடுத்து அதன் போக்கில் முட்டாள்தனமான முடிவுகளை நோக்கி ஆட்டு மந்தைகளாய் செல்லும் நிலையும் தேர்ந்த அரசியல் விற்பன்னர்களால் மக்களின் மூளைகளுக்குள் செலுத்தப்பட்டிருக்கிறது.

திரையில் தோன்றும் காட்சிப் பிம்பம் நிஜத்தில் எமது துயர் நீக்கும் என்ற மாயையில் இருந்த மக்களின் தெளிவுகள் இன்று வேறு விதத்தில் சிதறடிக்கப்படுகின்றன. கூட்டத்தில் ஒருவனாய் நின்று சிந்திக்காதீர் மானுடரே...! பூசியிருக்கும் எல்லா சாயங்களையும் கொடும் தீயில் போட்டெரியும், ஏற்றிருக்கும் வேசங்களை கலைத்துப் போடும், எல்லா துவேசங்களையும் தூர எறிந்து விட்டு.. சொந்த சுய லாப நஷ்ட கணக்குகளை அழித்துவிட்டு....

உம்மை பெருந்திரளாய்...எண்னி எல்லோரின் நன்மைக்கும் சேர்த்து ஒற்றை தீர்மானம் எடுப்பீர்...!அந்த ஒற்றை தீர்மானத்தை வரும்தேர்தலில் தேர்ந்த அரசியல்வாதிக்கான வாக்காய் மாற்றுவீர். ஜனத்திரள் நீவீர்....உமக்கு ஊழியம் செய்யும் மனிதனை தேர்ந்தெடுப்பதில் அலட்சியம் காட்டி, அலட்சியம் காட்டி...குனிந்த நமது முதுகுகள்..மண்ணோடு மண்ணாகி மட்கிப் போவதற்கு முன்.....அதிரடியாய் நிமர வேண்டாமா? அந்த அதிரடியில் அவலங்கள் ஒழிந்தே போக வேண்டாமா?


இலக்குகளை சரியாக தீர்மானிக்க புறத்திலே எழும் கூச்சல்களையும், கெஞ்சல்களையும் மட்டறுப்பீர் மானுடரே...! அறிவில் சிறந்த மூத்த குடி நாம்... உலகம் மொழியற்று திரிந்த போது கவி செய்த பெருங்குடி நாம்....! உற்றுப் பார்த்து கயவரின் இரத்தம் குடிக்கும் கலையறிந்தவர் நாம்...!

நாம் பலமில்லாதவர்கள் அல்ல தோழர்களே நமது பலம் மறக்கடிக்கப்பட்டிருக்கிறது. மலையைப் பெயர்த்து வீசும் ஆற்றல் கொண்ட நம்மை புல் தடுக்கினால் விழுந்து விடுவீர் என்று பயமுறுத்தல்களில் நிறுத்தி வைத்திருகின்றனர்....கபட மூளை கொண்ட மானுடர்....! நம்மை நயவஞ்சகத்தில் ஆளுமை செய்யும் தேவ தூதர்கள் ஜனித்து வெளிப்பட்டது ஒரு கருவறையில் இருந்துதான்...மரித்து மடியப் போவது ஒரு மண்ணறையில் தானே...தோழர்களே.....?

நம்மை ஆளுமை செய்யும் மூளைகளை ஒத்ததுதான் நமது மூளைகளும்....விழித்தெழுவீர் தோழர்களே...! தேர்தல் என்பது ஒரு நாள் கூத்தல்ல....அது நமக்கு ஊழியம் செய்ய நாம் வைக்கப் போகும் ஊழியர்களுக்கான 5 வருட ஒப்பந்தம். வரி வடிவில் சேரும் கஜானா...மக்களுக்கு திரும்ப முறைப்படுத்தி செய்ய நாம் நியமிக்கப் போகும் மனிதர்களின் தேர்தல் அறிக்கைகளை கிழித்தெறியுங்கள்... தேவைகளை ஆராய்ந்து அறிவுப் பெருக்கத்துக்கும் ஆற்றல் பெருக்கத்துக்கும் உதவுமாறு செய்வீர்களா என்று உறுதி கேளுங்கள்.....!

உறங்கியது போதும் தோழர்காள்... நமது முன்னோர்கள் எல்லம்...தானே மாறும், மாறும் என்று காத்திருந்து, காத்திருந்து மண்ணோடு மண்ணாக மட்கிய வேட்கைகள் இன்னும் உலவிக் கொண்டிருக்கிறது காற்றில்...! நாம் நாம் என்று நின்று விடாமல்... நாளை.. நமது சந்ததியினரின் தெளிவான வாழ்க்கைக்கும், சுகாதரமான மேம்பட்ட வாழ்க்கைக்கும் சேர்த்து வைக்கும் செல்வம் மட்டும் உதவாது....! விழிப்புணர்வை நமக்குள் திணிக்கும் அதே நேரம்..வளரும் நமது பிள்ளைகளுக்கும் இயன்றவரை உறவுகளுக்கும்....சொல்லிக் கொடுப்போம்....!

அரசியல்வாதிகளுக்கும் நமக்கும் தொடர்பு இல்லை என்றும் அரசியல் சாக்கடை என்றும், அரசியல் பேசமாட்டேன் என்றும் ஒதுங்காமல் முறையான ஜன நாயக அரசியல் எல்லோரும் அறியவேண்டிய ஒன்று என்பதை உணர்ந்து..... ஜன நாயக தேசத்தின் ஒப்பற்ற குடிமக்கள் ஆவோம்.... நமது ஓட்டுரிமையை சரியாக பயன்படுத்துவோம்.....!

சங்கே முழங்கு சங்கே முழங்கு....! சங்கே முழங்கு சங்கே முழங்கு.....!

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று....

சங்கே முழங்கு! சங்கே முழங்கு!


தேவா. S

Saturday, September 11, 2010

அவள்....!அந்த கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும் மாணவன் சுரேஷ். கல்லூரியில் சேர்ந்த ஆரம்பத்திலிருந்த கூச்சம் எல்லாம் போய் விட்டது அவனுக்கு. இப்பொதைய நாட்கள் நண்பர்கள், பாடம், கல்லூரி என்று கலை கட்ட ஆரம்பித்து விட்டது.

+2 முடித்து கல்லூரியில் சேரும் எல்லா மாணவர்களுக்குமே வாழ்வின் அடுத்த நிலையான கல்லூரி வாழ்க்கை ஒரு சந்தோசமான விசயம்தான். வாழ்வின் அடுத்த கட்டம் ஒரு பள்ளி என்ற கட்டுண்ட நிலையில் இருந்து கொஞ்சம் சுதந்திரமான மரியாதை கிடைக்க கூடிய தான் பட்டம் பயில்கிறோம் என்ற ஒரு மமதையுடன் கூடிய சந்தோசம் என்று களை கட்டும் நாட்கள் அவை.


அப்போதுதான் தலை முடியின் அலங்காரம் மாறும். சட்டை பேண்டின் விதிமுறைகள் மாற்றி அமைக்கப்படும். ஒரு சில நோட்டு புத்தகங்கள் கூடியிருக்கும் நண்பர்கள் கூட்டம் என்றும் ஒரு வித மிடுக்கு இருக்கும் அதுவும் இருபாலர் பயிலும் கல்லூரி என்றால் சொல்லவே தேவையில்லை.

மேலே சொன்ன எல்லாம் இரு மடங்கு ஆகும். இந்த வாலிப களேபரத்தில் கல்லூரியும் படிக்கும் பாடமும் மைக்ரோ லெவலிலும் இன்ன பிற விசயங்கள் மேக்ரோ லெவலிலும் இருக்கும். இப்படிபட்ட ஒரு நியதிக்கு சுரேஷ் மட்டும் என்ன விதிவிலக்கா? கல்லூரி மாணவன் என்ற ஒரு மிகப் பெரிய கண்ணுக்கு தெரியாத பாரம் தலையை கனக்க செய்யாமல் இல்லை......

வழக்கம் போல கல்லூரிக்குள் நண்பர்களோடு சென்று கொண்டிருந்த சுரேஷ் பேச்சு மும்முரத்தில் எதேச்சையாக கவனிக்க காரணமாகியிருந்தது அவளின் கண்கள்.....சட்டேன்று ஏதோ ஒன்று நெஞ்சை இறுக்கிப் பிடிக்க மீண்டும் பார்த்தான் சந்தேகமாக.....ஆமாம் அவள் இவனைத்தான் பார்க்கிறாள்....!

மீண்டும் மீண்டும் உறுதி செய்து கொண்டவன் ஒரு வளைவு தாண்டி அவள் சென்று மீண்டும் திரும்ப வந்து இவனைப் பார்த்து செல்வது கண்டு தரையில் நிற்க முடியவில்லை...உற்சாகத்தில் கத்தினான்..டேய் மச்சான்.....அவ என்ன பாத்துட்டே போறாடா...பறந்து கொண்டிருந்தான் சுரேஷ். நண்பர்களின் விசாரித்தலில் அவள் மூன்றாமாண்டு வணிகவியல் படிப்பதை அறிய அதிக நேரம் பிடிக்கவில்லை அவனுக்கு....

தினமும் அவளை கவனிக்க ஆரம்பித்தான்...ஒரு வித மலர்ச்சியை பரவவிட்டுக் கொண்டு இவனை பார்ப்பதை இப்போது அவனது நண்பர்களும் பார்க்கத் தொடங்கினர். "மச்சான்... நீ ரொம்ப லக்கிடா அவ உன்னையதான்டா பார்க்கிறா...என்ன தேர்ட் இயர் படிச்சா என்ன மச்சி பிரச்சைனை 2 வருசம்தானடா சீனியர் ஸ்டில் சீ இஸ் ப்ரெட்டி டா....உனக்கு ஏத்த ஜோடிடா மச்சான்.. ம்ம்ம்ம் நமக்குதான் ஒண்ணும் சிக்க மாட்டேங்குது" வித விதமாய் நண்பர்கள் கூட்டம் சுரேஷை ஏற்றி விட்டது.

இப்படித்தான் வாழ்வின் ஓட்டத்தில் பலர் வருவர் நமது வாழ்க்கையில்..என்ன காரணம் என்று நாம் ஆராயக் கூட முடியாத அளவிற்கு இருக்கும் முக ஸ்துதிகள். ஒருவர் நம்மை புகழ்கிறார் என்றால் நின்று கவனிக்க வேண்டிய இடம் அது. தகுதிகள் எப்போதும் கூடவே இருப்பது அதை பிறர் சொல்லி நாம் உணரும் போது வார்த்தைகளை புறத்திலேயே நிறுத்தி விட்டு.... ஒரு புன்னகையோடு அதை கடந்து செல்ல வேண்டும்.

பெரும்பாலும் புகழ்ச்சிக்கு பின்னால் காரியங்கள் ஒளிந்திருக்கிறது...அல்லது காரணமின்றி ஒருவரை புகழ்வதில் தனக்கும் அதில் ஒரு பங்கு உண்டு என்ற சொறிதலில் சுகமடையும் ஒரு சுய நலமும் இருக்கிறது. பெரும்பாலும் நலவிரும்பிகள் புகழ்தலோடு ஒரு எச்சரிக்கையையும் அதை தக்க வைக்கும் கட்டுப்பாட்டையும் விதைத்தே செல்கிறார்கள்.

இப்படி மேலே சொன்ன ஏதோ ஒரு விசயத்துக்காக சுரேஷ் புகழப்பட்டான். அந்த புகழ் அவனுக்குள் தீயை கிளறி விட...அவள் பார்வையையே குட்டிப் போட்ட நாயாய் சுற்றி வந்தான். அந்த கிறுக்கில் ...வார்தைகள் தாறுமாறாய் வந்து விழ...விழுந்தது எல்லாம் ... கவிதையாய்.... நண்பர்களால் புகழப்பட்டது.

கிறக்கத்தில் உறக்கம் போனது....இப்போது எல்லாம் நண்பர்கள் இல்லாத போதும் அவள் இருக்கும் வீட்டை வலம் வர ஆரம்பித்தான் சுரேஷ். அவ்வப்போது காணும் அவளையும் அவளது பார்வையையும் வாங்கிக் கொண்டு காற்றில் பறந்து கொண்டிருந்தான்.

நகர்ந்து கொண்டிருந்த நாட்களும் நண்பர்களின் உந்துதலும் அவளிடம் போய் காதலை சொல்லவேண்டும் என்ற எண்ணத்தை திடபடுத்தியதின் விளைவு அவளின் முன் கொண்டு போய் நிற்கவைத்தது...அந்த மதிய உணவு இடைவேளையில் எடுத்த முடிவு...திக் திக் அனுபவமாக அவளை லைப்ரேரிக்கு செல்லும் அந்த ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் சந்தித்து மனதில் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு திக்கி திணறி...சொன்னான்...


" நல்லா இருக்கீங்களா....என்று கேட்டான்... அவள் மெளனமாய் தலையசைத்து...அவனை மலர்ச்சியாய் பார்த்தாள்.." மெல்லிய குரலில் சொன்னான்..."எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும்ங்க....." அவள் சிரித்தாள்...சரி...என்று சொல்லி மீண்டும் அவனை பார்த்தாள்...அவன் உடைந்து நொறுங்கிக் கொண்டிருந்தான்.....மெலிதாய் கிசு கிசுப்பாய்....சொன்னான் நான் உங்களை நேசிக்கிறேன்ங்க..ஆக்சுவலி ஐ லவ் யூங்க என்று..சொல்லிவிட்டு தலையை குனிந்து கொண்டான்.....!

அவள் ஆழமாய் அவனை ஊடுருவிப் பார்த்தாள்....பின் மெதுவாக சொன்னாள்.... என் வீடு உனக்குதான் தெரியும்தானே.....? இன்னிக்கு ஈவ்னிங் என்னோட வீட்டுக்கு வா.....என்று....சொல்லிவிட்டு வருவேல்ல என்று அவன் முகம் பார்த்தாள்...

அவன் மெல்ல தலையசைத்தான்....சரிங்க வர்றேன்....ஆனா வீட்ல எப்படி? என்று இழுத்தான். அவள் பரவாயில்லை வா...என்று சொல்லி விட்டு...மெல்ல திரும்பி நடக்க ஆரம்பித்தாள்.

சுரஷுக்கு 19 வயதில் இது ஒரு வித்தியாசமான உணர்வுதான்....! ஒரு கனவைப் போல கடந்துபோயிருந்த அந்த நிமிடங்களை இழுத்து பிடித்து நிறுத்தி வைத்து மீண்டும் மீண்டும் அந்த சூழலுக்குள்ளேயே கிடந்தன் சுரேஷ்.

மெல்ல காற்றில் பறப்பது போல நடந்து அவனுக்காக காத்திருந்த நண்பர்கள் கூட்டத்திற்குள் வந்தான்....ஹேய்....மச்சா நீ கில்லிடா... செம பிகருடா.....அவ.....உனக்கு மச்சம்டா..கூட்டம் கை குலுக்கி கும்மாளமிட்டது. எல்லாம் சரிடா மச்சான் வீட்டுக்கு வர சொல்லியிருக்காளேடாடன்னு இழுத்த சுரேஷை கூட்டம் மோட்டிவேட் செய்தது ...

"டேய் மச்சான் ...சில பொண்ணூக எல்லாம் இப்படித்தான்...வெளில சுத்த கூச்சப்படுவாங்க....வீட்டுல கூட்டிடுப் போய் கிளாஸ்மெட்டுனு சொல்லிட்டு பாதுகாப்பாவே பேசுவாங்க..... நீ போடா மச்சான் ... ஜமாய்.. நாளைக்கு பார்ட்டி கொடுக்கணும் அப்புறம் புல் ஸ்டோரியும் சொல்லணும் ...மறைச்சே.அவ்ளோதான் பாத்துக்க... " ஆளாளுக்கு ஒன்று சொல்ல... சுரேஷ்...அந்த மாலை நேரத்தை பற்றிய திட்டமிடலில் இருந்தான்........


6 மணி மாலை...அவள் வீட்டருகே...பைக் நிறுத்தி விட்டான் சுரேஷ்....."மச்சான் ஜமாய்டா" யாரோ ஒரு நண்பன் சொன்னது காதில் வந்து தேவையில்லாமல் ஒலித்தது. மெல்ல பயந்து கொண்டு வீட்டு வாசலில் போய்... நின்றான். காலிங் பெல்லை அடிக்க கை போனது....அப்புறம் யோசித்தான்...சரி போய் விடலாமா...எதுக்கு தேவையில்லாம அவுங்க வீட்ல போய்.....ம்ம்ம்ம் இரண்டு அடி திரும்பி பைக் நோக்கி நடக்க ஆரம்பித்தான்....

பிறகு நின்றான்....சரி சும்மாவா வரச் சொல்லியிருப்பா...ஏதாவது பிடிக்கவில்லை என்றால் அப்போதே சொல்லியிருப்பாளே.. மனம் அவனை தேற்றியது. மீண்டும் அவள் வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

காலிங் பெல்...அமுக்கியவுடன் உள்ளே ஒரு எலக்ட்ரானிக் குருவி இவனது வருகையை தெரிவிக்க....உள்ளிருந்து காலடி சத்தம் கதவருகே நடந்து வருவது கதவு திறக்கப்படும் ஓசையும் கேட்ட சுரேஷின் லப்...டப் பின் வேகம் ...அதிகரித்தது.............

பளீரென்று நின்ற கதவுகளுக்குப் பின்னால்...........

அவள்

"உள்ளே வாங்க....." மிருதுவான அழைப்பு....வெளித் திண்ணையிலிருந்து உள்ளே அழைப்பாள் என்று எதிர்பார்க்காத அவன் இன்னும் வேகமான இதயதுடிப்புக்கு சொந்தமானவன் ஆனான். வீட்ல என்று இழுத்தான்.......அவள் தொடர்ந்தாள்....அம்மா கோவிலுக்கு போய் இருக்காங்க....அப்பா...வேலை முடிந்து வர மணி எட்டு ஆகும்..........என்று சொன்னவள் நிறுத்தினாள்....

மீண்டும் அவனை உள்ளே வாங்க என்று அழைத்துக் கொண்டு அந்த...அறையை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.......

சுரேஷுக்கு ஒரு மாதிரி வியர்க்க ஆரம்பித்தது...என்ன இது வீட்டுக்குள் அழைத்து வேறு ஒரு அறைப்பக்கம் போகிறாளே என்று எண்ணிக் கொண்டிருக்கும் போதே அவள் அறைக்கதவை திறந்து உள்ளே சென்று விட்டாள்....! சுரேஷ் கதவுக்கு இரண்டு அடி முன்னாலேயே நின்று கொண்டான்...

உள்ளே இருந்து குரல் கொடுத்தாள்......வாங்க உள்ளே..... அவள் அவனை கூப்பிட்டாள். மெல்ல நடந்து கதவு கடந்து உள்ளே போனான் சுரேஷ்....

உள்ளே.......

அது...அவர்களின் பூஜை அறையாயிருந்தது.....சாமி படங்கள் துணியிட்டு மறைக்கப்பட்டு இருந்தது...........பளீரென்று சாமி படங்களை மறைத்திருந்த துணியை விலக்கினாள்.....எல்லா சாமிப்படங்களோடு சேர்ந்து பக்கத்து ஓரத்தில்.....இருந்த புகைப்படத்தின் கீழே ....தோற்றம் மறைவு...அட...என்ன இது...இந்த பையன் என்னை மாதிரியே... இருக்கானே என்று நினைத்துக் கொண்டு அவளை ஓரக்கண்ணால் பார்த்தான்.....

அவள் அழுது கொண்டிருந்தாள்.......சுரேஷ் அவளிடம் என்னாச்சுங்க...உடைந்த குரலில் கேட்டான். அவள் அழுகை இரண்டு மடங்காகியது......அழுது முடிக்கும் வரை சுரேஷ் மெளனமாய் நின்று கொண்டிருந்தான்....மீண்டும் சுவற்றில் இருந்த அந்த போட்டோவை பார்த்தான்.....

அவள் பேசத் தொடங்கினாள்.....அவன் என் தம்பி.....! .என் தம்பி என்றால் எனக்கு உயிர்..... நானென்றால் அவனுக்கு உயிர் ..அவள் விவரித்து முடிக்கையில்.....தாறுமாறாக...யாரோ ஓட்டி வந்த வாகனம் நடை பாதை ஓரமாக அவன் பைக்கை நிறுத்தி பக்கத்தில் பூ வாங்கிக் கொண்டிருந்த அவனின் அக்காவிற்காக காத்திருந்த பொழுதில்.... இவன் மீது மோதி அந்த இடத்திலேயே துடி துடித்து இறந்தது.... மேலும் அதை அவள் கண் முன்னே கண்டதையும் சொன்னதை சுரேஷால் ஜீரணிக்கவே முடியவில்லை.

அவள் அழுகையோடு தொடர்ந்தாள்.... நீ மட்டும் இல்லை தம்பி...இன்னும் என் தம்பியை ஒத்த வயதில் அவனை போலவே இருக்கிறவங்கள பாத்தா என் தம்பி ஞாபகம் வந்துடும். அதுவும் நீ அவனை மாதிரியே இருப்பதால் என் தம்பி இருந்தால் இப்படிதானே பேசுவான் ..இப்படிதானே சிரிப்பான் என்று வைத்த கண் வாங்கமல் பார்த்திருக்கிறேன்.....ஆனால் அதில் பாசம்தான் தம்பி இருந்திருக்கு..... காதல் இல்லை.... !

நான் உன்னை கவனிப்பதை உனக்கு தெரியாமலேயே தான் ரொம்ப நாளா செஞ்சுகிட்டு இருந்தேன்...ஆனால் நீ கவனிச்சது லேட்டாதான் புரிஞ்சுகிட்டேன். நீ என்னை கவனிச்சப்புறமும்...என்கிட்ட தவறா எதுவும் பேசலன்னு தெரிஞ்சதும் உன்னை பார்த்து அதே வாஞ்சையோடு சிரிக்க ஆரம்பிச்சேன்....

ஆனா....எனக்கு இப்போ இருக்குற உலக பத்தி நல்லா தெரியும்பா...ஒரு பொண்ணு ஒரு ஆணை பார்த்தாலே ஏன்? ஏன்னு அதுக்கு ஒரு அர்த்தம் கற்பித்து களங்கம் கற்பித்து ஒரு தவறான ஒரு பார்வையைதான் சமுதாயம் பதிக்கிறது.

இப்போ கூட நீ புரிஞ்சுகிட்டியான்னு எனக்கு தெரியல.....ஆனா ஒரு பெண் ஆணோட பேசினாலே அதை காதலாகவும் காமத்தோடும் சம்பந்தப்படுத்திதான் எல்லோரும் சிந்திக்கிறாங்க? வகுப்பறையில் கூட படிக்கிற பசங்க கிட்ட எல்லாம் என்ன நல்லா இருக்கியானு சினேகமா கேட்ட கூட ஒண்ணு அவுங்க தப்பா நினைச்சு நான் அவுங்கள லவ் பண்றேன்னு நினைக்கிறாங்க இல்லேன்னா...கூடப்படிக்கிற பொண்ணூக எல்லாம் என்னடி லவ்வானு கிண்டல் பண்றாங்க.......

இது பெண்களுக்கு மட்டும் இல்லைப்பா... நிறைய ஆண்கள் கூட பெண்களை இதே ரீதியில் பார்க்கலாம்...தம் உறவுக்கார பெண்ணாக, எங்கேயோ சந்தித்த நபராக, தனது தங்கையைப் போல அல்லது அம்மா அக்கா போல இருக்கிறாளே என்ற ரீதியில் பார்க்கலாம்...!

ஒரு பெண் ஆணையும் அல்லது ஆண் பெண்ணையும் பார்க்க....இயல்பாய் ஒரு முகம் பிடித்த மாதிரி இருந்தா எந்த எண்ணமும் இல்லாம பாக்கிறது எல்லம் எப்படிப்பா...? காதலாவும் காமமாவும் ஆகும்...? ஆன மிகைப்பட்ட பேரு இப்படி தவறா நடக்கிறதால....,உறவுகளை சின்னாபின்னமாக்குவதால எல்லோருமே இப்படி பயந்து பயந்து வாழ்றது எப்படிப்பா சரியாகும்?

என் தம்பி மாதிரியே இருந்த உன்னைப் பார்த்ததில்....எனக்குள் காதல் துளி கூட இல்லவே இல்லப்பா...ஆனா உன்னை பார்ப்பதில் இருக்கும் பிடிப்பும் உண்மைதன்......

அவள் சொல்லி முடித்துவிட்டு...சுரேஷை பார்த்தாள்.......


"கரெக்டுதானுங்க அக்கா........" தெளிவான குரலில் தீர்க்கமாய் சொன்னான் சுரேஷ்.

அவனுக்குள் இருந்த பழமையும் அறியாமையை கொழுந்து விட்டு எறிந்து கொண்டிருந்தது. ஒரு பெண்....என்றவுடன் மனம் போடும் வித்தைகள்தான் எத்தனை? கற்பனைகள் எத்தனை......விவரித்து பார்த்து நாமேதானே நம்மை ஏமாற்றிக் கொள்கிறோம்.

வாழ்க்கையில் நம்மை சுற்றி இருப்பது மனிதர்களும் இயற்கையும்.....இதோடு தானே வாழ வேண்டும்.....! பிடிக்கும் விசயங்களை எல்லாம் பிடித்தலோடு வைத்துக் கொள்வது நல்லது....மற்றவரோடு நமது பிடித்தல்களை தொடர்புபடுத்தி அவர்களை நிர்பந்திக்கும் போதுதானே..எல்லா பிரச்சினையும்......!

தொடர்புகளையும் பார்வைகளையும் வைத்து....கணித்தல் தவறு. இனி யாரையாவது பிடித்தால்...கற்பனையை வளரவிடுவது மடைமை ...மாறாக உண்மையை உடனுக்குடன் அறிவது... நல்ல சமுதாயத்தை உருவாக்கும். நமது கலச்சாரம் ஒராயிரம் விசயங்களை நமக்கு சும்மா விளையாட்டுக்கு சொல்லிச் செல்லவில்லை எல்லாம் படிப்பினைகள்.....

சுரேஷ்...அவள் குரல் கேட்டு கலைந்தவனாய்...அவளின் கரம் பற்றி ரொம்ப நன்றிங்க அக்கா....கொஞ்சம் தண்ணி கொடுங்க குடிக்க....

சுரேஷின் தெளிவை உணர்ந்தவளாய்.....உள்ளே சென்றாள் அவள்.


பைக்கின் கிக்கரை சுரேஷ் உதையும் போது...மணி 7:05 ......ஆக்ஸிலேட்டரின் முறுக்கலில் அடி பணிந்த பைக் பறக்க தொடங்கியது.....

"மச்சான் ஜமாய்டா.." யாரோ நண்பன் சொன்னது காதில் ஒலித்தது.....

ஆமாம்டா....ஜாமயிச்சுட்டேன்.....அவன் புரிதலுக்கு நன்றியாக காற்று அவன் கேசம் கலைத்து கொஞ்சிக் கொண்டிருந்தது...வீடு நோக்கி பறந்துகொண்டிருந்தது பைக்.....!


தேவா. S

Wednesday, September 8, 2010

பாபு....!விடிந்து விட்டது....என்பதை உணர்ந்த பாபு ஏன் விடிந்தது என்று கவலையாய் எண்ணத் தொடங்கியிருந்த மனோ நிலைக்கு காரணம் இருக்கிறது. கல்லூரி படிப்பு முடித்து விட்டு ...அடுத்து என்ன? என்ற கேள்விக்குறிக்கு பின்னால் என்ன என்று தெரியாமல்....வந்தவர்கள் போனவர்கள் எல்லாம் ஆளுக்கு ஒரு யோசனையை சொல்லி... வேதியல் பட்டதாரியான அவனை கொத்தி.. குதறிக் கொண்டிருந்தார்கள்......!

சந்தோசமாய் கழிந்த கல்லூரி நாட்கள் போய்விட்டதே என்ற மிரட்சியில் இருந்து மீண்டு வரமுடியாத பாபுவின் முன்னால் பக்கது வீட்டுக்காரர்களும், எதிர் வீட்டுக்காரர்களும் கூடிக் கலந்து இருக்கும் இந்த சமுதாயம் ரொம்பவே பயமுறுத்தியது...பற்றாக்குறைக்கு ஒரு ஓரத்தில் தொங்கிக் கொண்டிருந்த கல்லூரி காதல் வேறு ரொம்பவே அவனை தொந்திரவு படுத்தியது.


துரை… என்ன இன்னும் தூக்கமா...காலையில எழுந்து ஏதாச்சும் உருப்படியா செய்றானா பாரு... நேரத்திலேயே எழுந்து செய்ய வேண்டிய வேலைகளை செய்யணும் வேலை இருக்கோ இல்லையோ.....காலையில எழுந்துடனும்...அலுவலம் செல்ல தயாரகிக்கொண்டிருந்த அப்பாவின் வசவுகள்...பழகிப் போன ஒன்றுதான்...!

படுக்கையில் காபி கொண்டு வந்து கொடுத்த அம்மா சொன்னாள்… எழுந்து குளிச்சுட்டு வாப்பா...சீக்கிரம் என்று சொல்லி விட்டு அடுக்களைக்கு பறந்தாள்......காபி டம்ளர் காலியானவுடன்..... என்னசெய்வது அடுத்து ....ம்ம்ம்ம்ம்...இரண்டு நாளில் சென்னைக்கு செல்லவேண்டும் அங்கு இருக்கும் நண்பனின் அண்ணன் ரூமில் தங்கி வேலை தேடவேண்டும்....

ஆமாம்...என்ன வேலை தேடுவது....? நான் படித்த கல்லூரியில்...வேதியல் ப்ராக்டிகல் வகுப்பில் கூட எல்லா மாணவர்களையும் வைத்துக் கொண்டு விரிவுரையாளரே...பென்சாயிக் ஆசிட் ப்ரிபேரசன் செய்து விடுவார்...எங்களுக்கு நோட்ஸ் வைத்துதான் படிக்க சொல்வார். சால்ட் அனாலிஸிஸ் மற்றும் டைட்ரேசன் செய்வது இது இரண்டு மட்டும்தான் நாங்கள் செய்யும் ப்ராக்டிகல்.

வேதியல் படித்து அதில் முதல் வகுப்பில் பாஸ் பண்ணியிருந்தாலும்...கணக்கும் பிசிக்சும் ஆன்சிலரியாய் இருந்தாலும்...எல்லாமே... எங்களைப் பொறுத்த வரைக்கும்...பரிட்சைதான்...மார்க்தான்..! +2 வரைக்கும் தமிழ் மீடியம் படித்து விட்டு....கல்லூரியில் ஆங்கிலம் என்பது...புரபசர் கொடுக்கும் நோட்ஸ்தான்...அந்த நோட்சே எழுத முடியாமல் நிறைய பேர்....

பாடம் நடத்தும் விரிவுரையாளரும்...தமிழில்தான் நடத்தி நோட்ஸ் கொடுப்பார். விளங்கி படிப்பவர்கள்... +2 வரைக்கும் ஆங்கில வழி கற்றவர்கள்தான்...எங்களுக்கு அது மனப்பாடம் செய்யவேண்டிய நிலைதான்....தெர்மோடனமிக்ஸும், ஆர்கானிக், இன் ஆர்கானிக் எல்லாம் எனக்கு எப்படி வாழ்க்கையை போதிக்க போகிறது....ம்ம்ம்ம் சேல்ஸ் ரெப் ஆகலாம்..ஆனால் ஆங்கிலம் சரளமாக பேச வேண்டும்.... நான் சரளமாக பேசமுடியாமல் போனதற்கு என் சூழலும் ஒரு காரணம்...கல்லூரி வந்துதான் ஆங்கிலத்தை ஒரு சப்ஜக்டாக பார்க்த நாங்கள் ஒரு புது விலங்கை போல தொட்டு தொட்டு பார்ப்பது போல பார்த்து ஆச்சர்யமாய் ஆங்கிலம் பேசுபவர்களோடு பழக ஆரம்பித்தோம்...

கெமிஸ்ட்ரி படித்து பர்ஸ்ட் கிளாசில் பாஸ் பண்ணியாச்சு....? அடுத்து என்ன செய்வது? வேலை தேடு.....இதுதான் பதில்....கிராமப்புற மாணவனுக்கு நகரத்து மாணவனுக்கு கிடைக்கும் விசய ஞானம் கிடைப்பது இல்லை...பெரும்பாலும் ஆளுக்கொரு யோசனை சொல்லி குழப்பத்தில் தள்ளி விட்டு...கல்லூரியில் படிக்கும் போது இருந்த திமிர் அடித்து நுரைத்து கரையும் நேரங்களில்....பெரும்பாலும் கண்ணீரோடு...ஜன்னல் கம்பிகளை பிடித்துக்கொண்டு...என்ன வாழ்க்கை இது என்று எண்ணும் தருணங்களில்....எல்லாமே விரக்தியாய்.......

படிக்க வைத்த பெற்றோருக்கு மார்க் வாங்கும் வரை கல்வி கற்க உதவி செய்யத் தெரியும்...சமுதாயத்திற்கு குறை சொல்லவே மட்டுமே தெரியும்.... வேலை கொடுக்கும் நிறுவனங்களுக்கு முன் அனுபவம் இருக்கானு கேட்க மட்டும் தெரியும்..?
….
…..
……
சென்னை செல்லும் பேருந்தில் அமர்ந்து விட்ட பாபுவிற்கு கண்ணீர் மல்க விடை கொடுத்த அப்பா தைரியமா வேலை தேடு.... கிடைச்சுடும்...போனவுடனே கம்ப்யூட்டர் க்ளாஸ் சேந்துடு என்று யாரோ சொன்ன அறிவுரையை ஏற்றுக் கொண்டு நாங்கள் எடுத்த முடிவையும் வலியுறுத்தினார்! அம்மாவின் அழுகை இரணப்படுத்தியது....அவளின் முந்தானைக்குள்ளேயே வளர்ந்தவன்... வாழ்க்கையின் அவசியம் விரட்டும் விரட்டலில் யார்தான் நிற்க முடியும்...ஓடிக்கொண்டேதான் இருக்கமுடியும் என்று அறியாத பாபு...கண்ணீரோடு....கையசைக்க பேருந்து ஓடத் தொடங்கியிருந்தது....

வேதியல் படித்து விட்டு....இனி கம்ப்யூட்டர் க்ளாசில் சேர்ந்து கொண்டே..வேலை தேட வேண்டும்....மிரட்சியில்....இருந்தான் பாபு.....அம்மா..அப்பாவை நினைக்கும் போது.... நெஞ்சு ஒரு பக்கம் அடைத்தது.... அம்மா அணைத்தும் அப்பா பிடித்து தள்ளி தனியே நிற்க சொல்லியும் வாழ்க்கையை சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள்...

அரை குறை ஆங்கிலமும், பெட்டியில் இருக்கும் பட்டமும் என் சொத்து....வாழ்க்கை எப்போதும் தட்டில் இலை போட்டு எல்லாவற்றையும் உன் காலடியில் கொண்டு வந்து வைக்காது...உன் உணவிற்கும் வாழ்க்கைக்கும் நீ போராடித்தான் ஆக வேண்டும்.....அப்பா அடிக்கடி சொல்வார்....!

சும்மா எதுவும் கிடைத்தால்....அது நிலைக்காது அல்லது அதன் உயர்வு உனக்கு தெரியாது.......அடித்து பிடித்து.....ஓடு.... உன் இலக்கை அடைந்த பின் உனக்கு மமதை வராது.....அம்மா சொன்னது......

எது எப்படி இருந்தாலும் சரி..என் வழி முறைகளை நான் பார்த்துக் கொள்கிறேன்..... எனக்கு எது வேண்டும் எனக்கு தெரியும்...அதை எப்படி கொண்டு வருகிறேன் என்ற வழிமுறை என்ன்னைச் சார்ந்தது....ம்ம்ம்... நான் பார்த்துக் கொள்கிறேன்....! பாபுவுக்குள் இருந்த திமிர் வேறு வடிவம் எடுத்தது....எல்லோருக்கும் ஒரு வாழ்க்கை இருந்தால் எனக்கான வாழ்வு என்று ஒன்று இருக்காதா....என்னை பற்றி நானே தீர்மானிக்கிறேன்.... கன்ணாமூச்சி ஆடும் என் வாழ்க்கையை நானே கண்டு பிடிக்கிறேன்....!

சமுதாயமும், கல்வி முறையும், வழிகாட்டுதல் இல்லாமையும்....குறைகளாக இருக்கட்டும் அதை சொல்லி சொல்லி சொறிந்து புண்ணை பெரிதாக்காமல்................ நான் நிறைவானவன் இந்த குறைகள் என்னை ஒன்றும் செய்து விடாது....திமிர்...தன்னம்பிக்கை என்ற வேசம் கட்டியிருந்தது...பாபுவிற்குள்....

சைதாப்பேட்டை எல்லாம் இறங்கு....கண்டக்டரின் குரல் உறங்கியவர்களை எழுப்பியது....விழித்திருந்த...பாபு... தாவி இறங்கினான்........சூட்கேசோடு மெல்ல நடக்க ஆரம்பித்தான்......அவனுக்கான அற்புத வாழ்க்கைகையும்....எதிர்காலத்தையும் ஒளித்து வைத்துக் கொண்டு...மெளனமாய் ஒரு புன் முறுவலோடு விடியத் தொடங்கியிருந்தது சென்னை......

" பூட்டிய இருப்புக் கூட்டின் கதவு
திறக்கப் பட்டது! சிறுத்தையே வெளியில்வா!
எலிஎன உன்னை இகழ்ந்தவர் நடுங்கப்
புலிஎனச் செயல்செய்யப் புறப்படு வெளியில்!
நம்பினை பகலினை நள்ளிருள் என்றே
சிம்புட் பறவையே சிறகைவிரி! எழு!
சிங்க இளைஞனே திருப்புமுகம்! திறவிழி! "


பின் குறிப்பு: கல்லூரி முடித்து வேலை தேடும், முரண்பாடுகளில் சூழலில் இருக்கும் எல்லா தம்பிகளுக்கும் இது சமர்ப்பணம்....!


தேவா. S

Monday, September 6, 2010

சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா?.....பதிவுத் தொடர் முடிவு!


ரஜினி படம் ரிலீஸ் மாதிரிதான் ரஜினி பற்றிய தொடரும்....ரொம்ப இடைவெளி விட்டு காத்திருக்க வேண்டியிருக்கிறது. அனேகமாய் இந்த பதிவோட இந்த தொடர் முடிவடையும்னு நினைக்கிறேன்...எழுத விசயங்கள் இருக்கின்றன என்பதை விட நமது யாக்கை எந்த தளத்தில் இருக்கிறது என்பதே முக்கியம்... நான்...பற்றில்லாமல் படர விரும்புவதே காரணம்.... சரி வாங்க தொடருக்குள் போவோம்...

இதுவரை

பாகம் I

பாகம் II

பாகம் III

பாகம் IV

பாகம் V


இனி....


சடாரென்று கதவைத் திறந்து வந்து பார்த்தால் கேட்டுக்கு வெளியே அப்பா வந்து கொண்டிருந்தார்.....கதவைத் திறந்து வீட்டுக்குள் பாய்ந்தேன்... டேப் ரெக்கார்டர் அணைக்கப்பட்டு...எல்லோரு கையிலும் கணக்கு நோட்டும் புத்தகமும் இருந்தது. அப்பா உள்ளே நுழையும் போது ஒரு குரூப் ஸ்டடிக்கான எல்லா தகுதியோடும் அந்த சூழல் இருந்தது. ரஜினியும் தளபதியும் உள்ளே போய் ஒளிந்த இடம் தெரியவில்லை.

தளபதி கேசட் வெளியீடு போலத்தான் எந்த ரஜினி படம் வந்தாலும் ஒரு வித பரபரப்பு தொற்றிக் கொள்ளும். தளபதி ரிலீஸ் நேரத்தில் நாங்கள் +1 படித்துக் கொண்டிருந்தோம்.... காலை 9 மணிக்கு பள்ளிக்கு செல்வது போல கிளம்பி யூனிபார்மோடு நாங்கள் போய் நின்றது அண்ணபூர்ணா தியேட்டர் டிக்கட் கவுண்டர்.. நாங்க மட்டும்தான் வந்து இருக்கோம்னு பார்த்தா... இருக்குற பசங்க புல்லா எங்க ஸ்கூல் பசங்க....காக்கி பேண்ட் வெள்ளை சட்டைனு பட்டுக்கோட்டை பாய்ஸ் ஹை ஸ்கூலே அங்கதான் இருக்கு.... என் கூட இருக்குற நண்பர்கள் எல்லாமே.. கமல் ரசிகர்கள்... நான் மட்டும் ரஜினிய ரசிக்கவும்..அவனுக எல்லாம் ரஜினிய ஓட்டவும் நிக்கிறானுக....

அடிச்சி புடிச்சி தியேட்டர்குள்ள போயாச்சு.... திரையில ரஜினின்னு வந்தவுடனே... நான் கத்திய கத்து எடுபடுறதுக்குள்ள தியேட்டரே கிழியுது... பின்னால இருந்து யாரோ... வருங்கால முதல்வர்.. ரஜினின்னு சொல்ல...வாழ்கனு கோசம்... என் பக்கதுல இருந்த தவ்லத்(நண்பன்)என் தொல்லை தாங்காமா சீட்ட மாத்திக்கலாமானு பாக்குறான்.. அவுங்க எல்லாம் கமல் ரசிகராம் டிசெண்டாதான் இருப்பாங்கனு வேற என்னைய எரிச்சல் படுத்துறான்... நான் கோபத்துல அப்டின்னா தியேட்டர விட்டு எழுந்து வெளியே போடான்னு அவன்கிட்ட சொன்னேன்...என்னை அவ்ளோ இன்டீசண்டா என் நண்பர்கள் அதுக்கு முன்னால பாத்து இருக்க மாட்டங்கனு நினைக்கிறேன்.....

பர்ஸ்ட் சீன்.. தலைவர்... ப்ளு கலர் சட்டை....மழைல ஒருத்தன அடிக்கிற சீனு.. அடி வாங்குறவனோட... முதுகு பக்கம் கேமரா இருக்கும் ரஜினி தெரியமாட்டார்.. மெல்ல மெல்ல கேமரா சுழன்று... ரஜினியின் முகம் புல் ஸ்கிரீன் முழுசா.....

சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஸ்டாடடடடடார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.....தலைவாஆஆஆஆ...................


தொண்டைதான் கொஞ்சம் கிழிஞ்சு போகட்டுமேன்ற அளவிற்கு... எல்லோரும் கத்த..... தியேட்டர்....அதிருந்தது.....ஜாங்கு ஜக்கு ஜஜக்கு ஜக்கு ஜாங்கு ஜக்கு ஜா
ஓகே....ரஜினியின் ஆட்டம் கண்டு மிரட்சியில் ஆடத்தொடங்கியிருந்த 100 பேரில் நானும் ஒருத்தன்....


" நட்புன்னா...என்னனு தெரியுமா உனக்கு......? நண்பன்னா என்னனு தெரியுமா உனக்கு......சூர்யான்னா என்னனு தெரியுமா உனக்கு.....? " திரையில் ரஜினி கேட்க... வாழ்க்கையில் மறக்க முடியாத டயலாக்காய் மாறிப் போனது....

இதுதான் ரஜினிங்க...

அந்த மூமென்ட்ல சந்தோசமா இருந்தமா.. 100ரூபாய் டிக்கட் கொடுத்து பாக்க போற இல்ல 1000 ரூபாய் டிக்கட் எடுத்து பாக்கப் போற என்னை மாதிரி ரசிகர்கள் ரஜினி கோடிஸ்வரன் ஆகணும்னா நினைச்சுகிட்டு தியேட்டருக்கு போறோம்? இல்லை பாஸ்... நாம சந்தோசமா படம் பாக்கணும்னுதானே போறோம்....

ஆனா ரஜினியோட வாழ்கைக்கும் அவரு சோத்துக்கு நாமதான் உப்பு போட்ட மாதிரி அத்தாரிட்டி எடுத்துகிட்டு பேசுவோம்... தமிழ் மக்கள் உப்பை தின்னவர், நன்றி கெட்டவர்னு எல்லாம் பேசும் மனிதர்களின் சுயநலம்தான் டண் டண்ணா இருக்கும்...ஒரு பெட்டிக்கடை வச்சு பொருள் விக்கிற மனுசன் லாபம் சம்பாரிக்கணும்னு நினைக்கும் போது ரஜினி மாதிரி நடிகர்கள் லாபம் சம்பாரிக்கணும்னு நினைக்கிறதுல என்னதப்பு இருக்குன்னு தெரியல.....


ரஜினிக்கு ஏற்பட்டிருக்க்கும் டிமாண்ட்.....மக்களால் உருவாக்கப்பட்டது....! பாபா ஓடலை..ரஜினியின் நஷ்டத்துக்கு யாரு வருத்தப்பட்டா....? அதைத்தான் சொல்றார் அவர்.. .ஒரு நடிகனை திரையில ரசிங்க...வீட்டுக்கு கூட்டிட்டு வராதீங்க...!அம்மா அப்பாவ கவனியுங்கன்னு சொல்றார் நமக்கு கோவம் வருது.. ! அரசியலுக்கு வந்தா ரசிகர்கள்னு பேர சொல்லிகிட்டு நமக்கு ஏதாச்சும் ஆதாயம் கிடைக்குமான்னு எதிர்பார்த்துதானே அவர அரசியலுக்கு வர சொல்றாங்க.... ?

மீடியா தன்னோட சுய லாபத்துக்குதானே அவரை ஃப்ளாஸ் பண்ணி நீயூஸ் போடுறாங்க? அவர் எத்தனை தடவைதான் சொல்றது.. நான் அரசியலுக்கு வரலை...வரலைன்னு, திரையில பேசுறத நீங்க நம்பாதீங்கன்னு... இதுக்கு மேல ஒரு மனுசன் எப்படிதான் சொல்றது...

இத்தனை கோடி தமிழர்கள் இருந்துகிட்டு பக்கத்து நாட்டுல தமிழன கொன்னழிச்சப்பா ஒண்ணும் செய்யமுடியல! அரசாங்கம்...கை கட்டி மத்திய அரசுக்கு கடிதாசி எழுதிகிட்டு இருந்துச்சு...ஆனா எந்த பிரச்சினையாய் இருந்தாலும் ரஜினி ஒரு கருத்து சொல்லலேன்ன இல்ல சொல்லிட்டா அவர் வேற்று மாநிலக்காரர்னு சொல்லி அல்லோலகல்லோல படுத்த வேண்டியது....

சினிமா நடிகர்கள் சினிமால சிகரெட் குடிக்க கூடாது மது அருந்த கூடாதுன்னு சொல்ற அரசியல் தலைவர்கள் எத்தனை பேரு குடிக்காம இருக்காங்க? எத்தனை பேரு டாஸ்மாக் வாசல்ல உக்காந்து அறப்போராட்டம் நடத்தி இருக்காங்க?

மக்களே...!பத்திரிக்கைகளே...! இன்ன பிற ஊடகங்களே...! இவர்கள்தான் நாட்டை திருத்த வந்த அரசியல்வாதிகள் இவர்களிடம் எதிர்பாருங்கள் தமிழகத்தின் எதிர்காலத்தை... ஏன் ஒரு சினிமா நடிகனிடம் அதுவும் அரசியலுக்கு வரமாட்டேன் என்று சொல்லும் நடிகரிடம் எல்லாம் எதிர் பார்க்கிறீர்கள்...? படம் பிடிக்கவில்லை என்றால் தியேட்டர் விட்டு குப்பைக்கு போகும் நேரத்தில் வாழவைக்கும் தெய்வங்கள் போய் தோற்றுப் போய் பிச்சை எடுக்கும் நடிகரை காப்பாற்றவா போகிறார்கள்....? இல்லையே....

3 மணி நேரம் படம் பார்த்து விட்டு ஒரு நடிகனின் வாழ்க்கையையே குத்தகை எடுத்து அலசும் அநியாயம் இங்குதான் நடக்கிறது, கேட்டா பொது வாழ்க்கைனு வந்துட்டா விமர்சனத்தை தாங்கிதான் ஆகணும்னு அதிக பிரசங்கித்தனமான பேச்சு வேற...

அவர் படத்தை பத்தி விமர்சனம் செய்யுங்க....தவறானா கருத்து சொன்னா கிழி கிழின்னு கிழிங்க..ஆனா...அவர் வீட்டு பெட்ரூம் தலையணை கவர் கலர் சரியில்லைன்ற ரேஞ்சுக்கு போய்.....பர்சனல் விசயங்களை செய்தியா மாற்றுவது.....கேவலாமான செயல் என்ற எண்ணம் கூட இல்லாமல் இருப்பதற்கு பொது புத்தி கற்பித்திருக்கும் சில தவறான கற்பிதங்கள் தானே காராணம்?

அந்த பொது புத்தியும் கற்பிதமும் ரஜினியின் மகள் திருமணம் வரை வந்து விமர்சிக்கிறது.


சூப்பர் ஸ்டார் யாருன்னு கேட்டா.................


தன்னுடைய திறமையால் ஸ்டைலால், நடிப்பால், உச்சத்துக்கு வந்தாலும்...அது பற்றிய அகங்காரம் இல்லாமல் இருக்கும் ஒரு மனிதர்.....அவர் வேலைய அவர் பாத்துட்டு இருக்கார்.... டைம் பாஸுக்கு படம் பாத்துட்டு வீட்டுக்கு வந்து நம்ம வேலைய பாக்காமா அவரை குறை சொல்லிட்டு இருக்கோம்...

புடிச்சா படம் நல்லா இருக்கு இல்லேனா மறந்துட்டு அடுத்த வேலைய பார்க்கமா சினிமா தியேட்டரை கட்டி இழுத்து வீட்டுக்கும் ஆபிசுக்கும் கொண்டு வந்தா நம்ம பொழப்ப யாரு பாஸ் பாக்குறது?


(முற்றும்)தேவா. S

Sunday, September 5, 2010

இரவு...!


சுருண்டு கொண்ட புலன்களில்
மடிந்து போன புற இயக்கத்தின்
எச்சதில் மீந்திருக்கும்....
அடர்த்தியான மெளனத்தில்
புலன்கள் தீட்டிய ஓவியங்களின்
வர்ணங்கள் காற்றில் மிதக்கும்
கனவுகளாய் வழிந்தோட
சுவாசத்தின் துணையோடு
ஆக்சிஜன் சேமிக்கும்...
மூளைகளுக்குள் எப்போதாவது...
நான் இருப்பேன்...
நிறைவேறாத ஆசைகளுடன்...

இமை கவிழும் நேரத்தில்
கருமையாய் எனைச் சூழும்
மெய்மையை பொய்மை என்று
கட்டியங்கூறும் விடியலில்
புறம் பாயும் புலன்களின்
கூட எழும் அகங்காரங்களில்
எப்போதும் மறந்து போகிறது
சவமாய் நான் கிடந்த....
முந்தைய இராத்திரி.....!


ஒவ்வொரு இரவின் உறக்கத்தையும் தப்பாமல் மறந்து விடுகிறோம். உறக்கத்தின் விளிம்புகளின் நின்று கொண்டு என்றாவது என்ன நிகழ்கிறது உறக்கத்தில் என்று பார்த்திருப்போமா? அப்படி பார்க்கும் தருணத்தில் தெரியும் வெளிச்சம் என்பது பொய்.... கருமையான இருள் எனது மெய்யென்று.

மாற்றி மாற்றிப் பழக்கம் கொண்டதாலேயே...... எதார்த்தமான உண்மைகளை எப்போதும் ஒதுக்கியே வைத்து வேண்டுமென்று மறக்கிறோம். உறக்கம்...என்பது ஓய்வு மட்டுமல்ல... நிலையான ஒன்றை உணரவைக்க தினம் எடுக்கும் ஒரு பயிற்சி...!


தேவா. S

Saturday, September 4, 2010

" இரு....! "

கடவுளே...வினாயகா, முருகா, பெரமையா, ஏழுமலையானே, சரஸ்வதியே, லட்சுமி தாயே, பார்வதி தாயே, அய்யனாரே, வெட்டுடையாள் காளியே, கோட்டை மாரியம்மா, ஆதி பராசக்தி அம்மா, காத்தழிக்கும் என் சிவனே, அல்லா, இயேசு, புத்தா, என் குலம் காக்கும் மாரநாடு கருப்பு........என்னையும் என் குலத்தையும், என் சுற்றத்தையும், எல்லா மக்களையும் சந்தோசமாக இருக்கச் செய் ஆண்டவனே.......................................!

ஓங்கி ஓங்கி வேண்டி, எத்தனை கோவில்கள் போனாலும் முட்டி முட்டி வேண்டி, சூடமேற்றி, சுற்றி வந்து, தேங்காய் உடைத்து, மொட்டை அடித்து, காது குத்தி, அங்க பிரதட்சணம் செய்து, மாலை போட்டு, சர்ச்சில் போய் பிரேயர் செய்து, வசனங்கள் சொன்னவுடன் பழக்கப்பட்ட பைபிளுக்குள் இருந்து வாசகம் எடுத்து படித்து, திரு குர் ஆனின் தாத்பரியங்கள் விளங்கி ரசூலின் தியாகத்தில் உருகி, தொழுகையை விளங்கி ஐந்து நேரத்தில் என்னை அர்பணித்து, தம்ம பதத்துக்குள் புகுந்து, சென்னுக்குள் ஊடுருவி, லவோட்சூவின் தாவோயிசமும் கன்பூசியசின் தத்துவத்துக்குள்ளும் பரவி, ஐன்ஸ்டீனையும், ஹைசன் பெர்க்கையும் இன்ன பிற அறிவியலர்களையும் துணைக்கழைத்துக் கொண்டு, நீல்ஸ் போரின் ஆட்டம் மாடல் விளங்கி, ப்ராய்டின் மனோதத்துவ பகுப்பியல் பயின்று, ........என்று என் எல்லா பயணித்திலும் தொடர்ந்து கூட பயணித்த ஒன்றை கண்டு கொண்ட கணத்தில்.....என்னை விட்டு மேலே சொன்ன எல்லாம் கழன்று போயின.....!

கடவுள் மனித வசதி....! எனக்கும் ரொம்ப வசதியாய் இருந்த ஒரு ஊன்று கோல். கடவுள் என்ற ஒன்றை மனிதன் கற்பிக்காமல் போயிருந்தால் மனிதம் என்னவோ ஏதோ என்று கட்டுப்பாடின்றி இன்னும் கேவலமாய் சிதறிப்போயிருக்கும். கடவுளும் மூட நம்பிக்கைகளும் கொடுத்து இருக்கும் தீங்குகளை விட அது இன்னும் பல மடங்காய் இருந்திருக்கும்.

ஒரு பகலில் தம்பி தவறுதலாய் ஆர்.எஸ் பதி மருந்தை எடுத்து குடித்து விட்டான். என் கண்ணதிரே பார்த்துக் கொண்டிருந்த நான் சிரித்துக் கொண்டிருந்தேன்....ஏனென்றால் ஆர்.எஸ் பதி ஒன்றும் செய்யது என்று... நானும் அக்காவும் கிண்டல் செய்து சிரித்துக் கொண்டிருந்தோம். அப்போது அவன் வயது 13 எனக்கு 19.....அந்த கணத்தில் எங்கள் கண் முன்னாலேயே அவன் கண்கள் சொருகி துடிக்க ஆரம்பித்தான்....சடாரென்று வாரி கையிலெடுத்துக் கொண்டு பக்கத்தில் இருந்த மருத்துவமனைக்கு ரோட்டில் பைத்தியக்காரனாய் ஓடினேன்....

மருத்துவரின் முதலுதவி... அவன் காப்பாற்றப்பட்டான். அந்த கணம் எங்கள் கையில் எதுவுமில்லை.... கொண்டு சேர்த்த நேரத்தில்....மருத்துவரிடமும் சரணாகதி அடைந்தோம். சரணாகதி என்பது புத்தியில் ஒன்றுமில்லாமல் மொத்தமாய் இன்னொருவரிடம் தன்னை கொடுப்பது. இன்னொருவர் மீது ஏற்படும் நம்பிக்கை அது. நம்மால் ஒன்றும் ஆகாது என்ற இடத்தில், அவர் என்ன வேண்டுமானலும் செய்யட்டும் அவரால் எனக்கு தீங்கு வராது என்பதுதான் சரணாகதி. மருத்துவர் கடவுளாய் எனக்கு தெரிந்தாலும்...மனம் ஏற்கவில்லை ... கடவுள் வேறு என்ற கணக்கு ஏற்கனவே மூளையில் பதிந்திருந்ததால்....!

அன்றைய இரவு ரொம்ப அடர்த்தியாய் இருந்தது எனக்கு. வீட்டுக்கு வந்தும்...என் குற்ற உணர்ச்சி என்னை குத்தியது. எவ்வளவு பெரிய காரியம் நான் நினைத்தால் தடுத்திருக்கலாம்...மயிரிழையில் தப்பியிருக்கிறான் என் தம்பி...இல்லை என்றால் என்னவாகியிருக்கும்...? இன்னும் பயம் என்னை முழுதாய் விடவில்லை. எல்லோரும் உறங்கிய பின்னும்.... நான் லைட்டை அணைக்காமல்...தம்பியின் தலை மாட்டில் அமர்ந்து சத்தமாய்...பாடத் துவங்கினேன்....

" சஷ்டியை நோக்க சரவண பவனார்...சிஷ்டருக்குதவுஞ்....செங்கதிர் வேலோன்....

...................
..............
..............
காக்க..காக்க கனகவேல் காக்க... நோக்க நோக்க நொடியில் நோக்க...தாக்க தாக்க தடையற தாக்க....."

இந்த வரிகளை கடக்கும் போது எனக்கு கண்ணீர் வந்தது. கண்ணீரின் பின் புலத்தில் ஏதோ ஒன்று வந்து என்னை காக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் ஏதோ ஒன்று இருப்பதை போலவும் அது நிச்சயமாய் உதவும் என்ற நம்பிக்கையும் நன்றியுணர்ச்சியும் இருந்தது. மனதில் தைரியம் பிறந்தது.

இரவு விடிந்து விட்டது. யாவரும் நலம். ஏதோ ஒரு கடவுள் காப்பாற்றியது என்பதை விட அந்த சூழலில் கந்தர் சஷ்டி கவசம் எனக்கு பிடிமானமாய் இருந்தது. எது வேண்டுமானாலும் நடந்திருக்கலாம்...ஆனால் அந்த தருணத்தின் பிடிமானம் அது...இன்றைய தெளிவுக்கு வழி அது.....!

கடவுளும் நானும் ரொம்ப தூரமாயிருந்தோம் வழிபாடுகளும் நேர்ச்சைகளும், இருந்த போதும் கடவுளை சிலையாய் மட்டுப்படுத்தி அறிந்த போதும், ஆனால் இன்று நானும் கடவுளும் நண்பர்களாய் நித்தம் பேசிக்கொண்டு இருக்கிறோம்.

தவறான காரியம் செய்யும் போது உள்ளே இருந்து தடுக்கிறார்... நான் கவனித்து மாற்றிக்கொள்கிறேன். படங்களாகவும் சித்திரங்களாகவும், சிலையாவும் இருந்து யாரோ என்னவோ என்று எண்ணிய இறை எல்லாம் பனி உருகுவது போல உருகி என் சுவாசமாய் மாறி எனக்கு இன்று தோழன். தோழனாய் ஆக நான் கடந்து வந்த படி எனக்கு உதவியது.

ஒவ்வொரு படியிலும் கேள்வி கேட்டு விளங்கி ஆராய்ந்து.... வாழ்வில் இரண்டற கலந்த ஒன்றை அறிய கோவில்களும், புராணங்களும், உபனிடதங்களும் வேதங்களும் உதவின..... இன்று நானே சைக்கிள் ஓட்டுகிறேன்......இருந்தாலும் சைக்கிள் கற்றுக் கொள்ளும் போது கீழே விழுந்ததையும், கற்றுக் கொடுத்தவனையும் மனதில் தேக்கியே வைத்திருக்கிறேன் நினைவுகளாக.......எந்த கணத்தில் ஓட்டத் தொடங்கினேன் தெரியாது....ஆனால் கற்றுக் கொண்டு விட்டேன்.

நான் விளங்கியதை எல்லோரும் விளங்க வேண்டும் அல்லது விளங்க வைக்கவேண்டும் என்ற ஆர்வக் கோளாறில் கூவி கூவி வாதம் செய்து வாதம் செய்து ..... என் வீட்டில் இருப்பவர்களுக்கே, என் தம்பிக்கே, என் அக்காவுக்கே.. என்னால் விளக்கத்தை புகுத்த முடியவில்லை. மற்றவர்களுக்கு எப்படி? இந்த கேள்வி எழுந்த கணத்தில் எல்லோருக்கும் புரியவைக்க வேண்டும் என்று நினைத்த மமதை பட்டுப் போனது.

ஏன் இப்படி இருக்கிறார்கள் என்ற கேள்வியின் விடையாய் சைக்கிள் பயின்று கொண்டிருக்கிறார்கள் என்ற பதில் கிடைத்தது..... நிச்சயமாய் சைக்கிள் சொந்தமாய் ஓட்டுவார்கள்...ஒட்டும் வரை பயிற்சி...ஓட்டக் கற்றுக் கொண்டபின்.....தூரம் கடக்கும் ஆவலில் போய்க் கொண்டே இருப்போம்.....அப்போது யார் கற்றார் யார் கற்கவில்லை என்ற கேள்வியும் உடையும்.

பிரகாஷ் ராஜ் தனது சொல்லாததும் உண்மையில் சொல்லியிருப்பார்.......ஒருவரின் நம்பிக்கையை நீங்கள் உடைக்க முற்படும் முன்பு உங்களால் வேறு நம்பிக்கையை சொல்லி கேட்பவரை உணரவைத்து புரிதலை ஏற்படுத்த முடியுமெனில் நமது கருத்தை சொல்லலாம்.... அந்த வலு கேட்பவருக்கும் சொல்பவருக்கும் இல்லையெனில்...தேவையில்லாத குழப்பத்தை அல்லவா கேட்பவருக்கு நமது கருத்துக்கள் ஏற்படுத்தும்?

தான் செய்யும் பரத்தையர் தொழிலில் திருப்தியுற்று சந்தோஷமாயிருக்கும் இருக்கும் ஒருத்தியை சந்திக்கும் ஒரு கற்றறிந்த அறிவாளி...அவள் செய்யும் தொழிலின் அபத்தங்களை விவரித்து முடிக்கிறான். அவள் செய்வது குற்றம் என்று மனதில் பதிய வைக்கிறான். அவள் பரத்தை என்றறியாமல் அவளிடம் காதல் கொண்ட அவன் பரத்தை என்றறிந்த உடன் அவளை தொடாமலேயே...உறங்குகிறான்.

மறு நாள் காலையில் அவள் குற்ற உணர்ச்சியில் தூக்கில் தொங்கி விடுகிறாள்.....! அவள் செய்யும் தொழிலில் அவள் சந்தோசமாக இருந்தாள் என்பது உண்மை...குற்றமென்பது சமுதாய பார்வையென்றாலும் அவளளவில் அவள் மகிழ்ச்சியாய்தானிருந்தாள்....அதை குற்றமென்று கூறிய மனிதன் அதற்கு மாற்று வழி சொல்லாமலும் அதிலிருந்து விடுபடுவது எப்படி என்று சொல்லாமலும், தானும் மணமுடிக்காமல் போனதாலும்.....அவள் தூக்கில் தொங்கி விட்டாள்....இப்படியாக போகும் அந்தக் கதை....

இப்படித்தான் நமது நம்பிக்கைகளை அடுத்தவர் மீது திணித்து ஒரு நாளைக்கு எத்தனையோ பேரை மனதளவில் நாமும் தூக்கிலிட்டுக் கொண்டிருக்கிறோம். கடவுள் பற்றிய எனது மிகைப்பட்ட கட்டுரைகள் நிறைய பேருக்கு நான் புரிய வைக்க முற்படுவதில்லை. காரணம் குறைந்த பட்சம் அவர்களின் நம்பிக்கையை உடைக்க வேண்டாம் என்ற ஒரு எண்ணம்தான்....!

புரிதல் இல்லாவிட்டாலும் என்றாவது ஒரு கேள்வி எழும் அந்த கணத்தில் எல்லாம் புரியும் அன்று என்னுடைய என்றில்லை எவருடைய விளக்கமும் தேவையிருக்காது என்பதுதான் உண்மை. அந்த புரிதல் கேள்விகள் கேட்டு தானே தோன்ற வேண்டுமேயன்றி... நாம் எப்படி பூ பூக்க வைப்பது. பூத்தால் ரசிக்க மட்டுமே முடியும். பூ பூக்க சாதகமான சூழ் நிலை வரும் வரை காத்திருத்தல்தான் நலம்...பூத்துதான் ஆக வேண்டும் என்ற ஆவலில் நான் செய்யும் முயற்சிகள் என்னை இன்னும் பைத்தியக்காரனாக காட்டும்.

கடவுள் ஏன் தீமைகளை செய்கிறார்? மன நலமில்லாமால் குழந்தைகள் பிறக்க வைக்கிறார்? பூகம்பத்தை வரவைக்கிறார்? ஆழிப்பேரலை என்னும் சுனாமியை வரவைத்து கொலை செய்கிறார்? என்று..ஓராயிரம் கேள்விகள் மனிதருக்கு.....ஏற்படுகிறது.

இவை கடவுள் என்ற விசயத்தை ஒரு தனி நபராக பார்க்கும் போது ஏற்படும் மனப்பிறழ்ச்சிகள். அழகிய மலர்களையும், மனிதர்களையும், ஆறுகளையும் இயற்கையையும், இசையயையும், கவிதையையும், இன்னும் எத்தனையோ நல்ல விசயங்கள் என்று நீங்கள் நம்புவதையும் யார் படைத்தது....? தீமை விளைவிப்பது மட்டும் கடவுள் என்று பார்க்கும் மனித மனங்கள் நன்மைகளை தானே நிகழ்வதாக நம்புகிறது....

இரண்டையும் ஒருவர்தான் செய்திருக்க வேண்டும்...அது கடவுளெனினும், இயற்கையெனினினும் ....! நமக்கு நிகழும் நிகழ்வுகள் ஏனென்று கூர்ந்து பார்த்தால் நாமும், நம்மைப் போன்ற மனிதர்களும் காரணமாயிருப்பதும் தெரியவரும்.

விழிப்புணர்வு நிலை குறைந்தவர்களே பெரும்பாலும் பிரச்சினைகளுக்குள் சிக்கிக் கொள்கின்றனர்....! சுற்றியுள்ள மனிதர்களின் விழிப்புணர்வற்ற நிலையும் நம்மை பாதிக்கிறது.... ! தினமும் காரில் செல்லும் போது எலக்ரானிக் போர்டில் துபாய் டிரான்ஸ்போர்ட் அத்தாரிட்டி..ஒவ்வொரு வாசகம் டிஸ்ப்ளே செய்வார்கள்....இன்று நான் கண்டது....

" BEWARE OF OTHER'S MISTAKE "

என்னுடைய தவறு மட்டுமல்ல....அடுத்தவரின் தவறும் என்னைப் பாதிக்கும்...அதனால் முழு பிரஞை ஆகிய எனது விழிப்புணர்வு நிலை உச்சத்தில் இருக்கும் போது என்னுடைய தவறையும்....அடுத்தவர் தவறையும் பெரும்பாலும் தவிர்க்கமுடியும். இந்த இருத்தல் அல்லது விழிப்புணர்வு நிலையை அல்லது பிரஞை நிலையை அடைய தவிர்க்க முடியாமல் பயணிக்க வேண்டிய களம் கடவுள் என்ற தளம்.

இந்த தளம் இல்லாமலேயே விழிப்புணர்வு நிலையை எட்டியவர்கள் உண்மையில் கொடுத்து வைத்தவர்கள் என்று தான் சொல்வேன்.... அதாவது... கடவுள் என்பது ஒரு வழிமுறை....!

என் கடவுள் என்னிடம்.... நானும் அதுவும் நெருக்கமாய் இருக்கிறோம்....!

நானும் கடவுளும் தோழர்கள்....!(இதுதானே தொடர் பதிவின் தலைப்பு)

என் இருப்புத்தனமையே கடவுள்... நானே என் இருப்பு....! " இரு... " இந்த கணத்தில் முழு விழிப்புணர்வோடு..எல்லாம் விளங்கும்...!

தொடர் பதிவுக்கு அழைத்த என் தம்பி செளந்தருக்கு நமஸ்காரங்கள்....!


தேவா. S