Pages

Monday, May 31, 2010

அறைவீடு - பதிவுத் தொடர் முடிவு!

ஒவ்வொரு பதிவிட்ட பின்பும் தோன்றும்..... அட ஜெய்லானியும் ஜெயந்தியும் நமக்கு விருது கொடுத்தார்களே (ஜெ.ஜெ), சக பதிவர்கள் எல்லாம் இதுக்கு விழாவே எடுக்குறாங்களே நாம ஒரு நன்றி கூட சொல்லவில்லையே என்று....விருது கொடுத்து ஊக்குவித்த... நல்ல இதயங்களுக்கு என் நன்றிகளை காணிக்கையாக்குகிறேன்!

சரி....அறைவீட்டுக்குள் நுழைவோமா......

இதுவரை - http://maruthupaandi.blogspot.com/2010/05/blog-post_28.html


இனி....


தூசு வாசனையும், காற்றுபுக வசதியில்லா அந்த அறையில் நிரம்பி வழிந்த ஒரு நூற்றாண்டு வாசனையும் எனக்குள் ஒரு வித...பயம் கலந்த ஒரு எதிர்பார்ப்பை உருவாக்க இருட்டில் தட்டுத் தடுமாறி....அறையின் சுவிட்ச் போர்டை தேடி...அந்த 60 வால்ட் மஞ்சள் குண்டு பல்புக்கு உயிர் கொடுக்கிறேன்...அது திக்கி திணறி ஒரு மஞ்சள் நிறத்தை சிறிய அறை எங்கும் பரப்ப...அறையின் வலது புற மூளையில் ஒரு மண்ணால் ஆன குதிர் என்று சொல்லக்கூடிய நெல் கொட்டி வைக்கும் பாத்திரம் அதை ஒட்டி ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கப்பட்டிருக்கும் மண்பானைகள்....இடது புற மூளையில்
வரிசையாய் ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கப்பட்ட ரங்கு பெட்டிகள்....கதவு திறந்தவுடன் அதன் பின்புறத்தில் ஒரு சட்டை மாட்டும் பழைய காலத்து சட்டம்...அதன் ஓரத்தில் ஏதோ ஒன்று கம்பு போல சுற்றி வைக்கப்பட்டு இருந்தது....மெல்ல போய் அந்த துணியால் சுற்றி வைக்கப்பட்டு இருந்த அந்த பொதியை பிரித்தேன்.....அதன் உள்ளே...வேல் கம்புகள்..சுளுக்கி....பெரிய உறையிலிட்ட வாள் என்று ஆயுதங்கள் மொத்தமாய் துணியில் சுற்றப்பட்டு ஒரு ஓரத்தில்......அதற்கு எதி மூலையில் நிறுட்தி வைக்கப்படு இருந்க நெல் அளக்கும் மரக்கா!


பாதுகாப்புக்காய்....ஏராளமான இது போன்ற விசயங்கள் எல்லோரு வீட்டிலும் அந்த கால்த்தில் இருக்குமாம்.....அதன் பயன்பாடு நமக்கு குறைவு அதனால்தான் ரொம்ப காலம் முன்பே பகுதி அழித்து விட்டோம். இது கூட சுமர் ஒரு 70 வருடமாக எடுக்கப்படவில்லை பெரும்பாலும் நெடும் பயணங்களில் கள்வரிடமிருந்து தற்காத்துக் கொள்ள இவை பயன்படும் எனைறு பின்னர் என் அப்பா விளக்கம் கொடுத்தார்.

இப்போது அந்த துணி பொதியை ஓரங்கட்டிவிடுவோம்....அந்த மேலே இருக்கும் ரங்குப்பெட்டியில் என்ன இருக்கிறது என்று பார்ப்போம் என்று மனதிட்ட கட்டளையை ...கைகள் செயல் படுத்த தொடங்கி 5 நிமிடம் ஆகிவிட்டன. சிறிய போராட்டத்திறுகு பிறகு அந்த பூட்டு வெட்கிப்போய் வழி கொடுக்க....திறக்கப்பட்ட பெட்டியினுள்... நான் பார்த்ததை எனக்கு முன் போட்டியிட்டு பார்க்க வந்தது எனது கண்ணீர்....அப்பத்தாவின் சீலைத்துணியில் காதோலோடு முடிந்து வைக்கப்பட்ட தாத்தாவின் வைரக்கடுக்கண்...! தாத்த இறந்தபின் பல நேரங்களில் அப்பத்தா உறங்கும் போது இந்த சீலைத்துணியை தலைமாட்டில் வைத்துக் கொண்டிருந்ததை நான் பார்த்து இருக்கிறேன் வெற்றிலைப் பொதி என்று நினைத்திருக்கிறேன்.....இப்போதுதான் தெரிகிறது.....காமம் பட்டுப் போன சுத்த காதல் அது என்று....! பெரும்பாலும் காதல் உடல் இச்சைகள் தீர்ந்த பின் தான் நெருப்பில் இட்ட தங்கமாய் ஜொலிக்கிறது.

உடம்பு முறுக்கில், உடலில் இருக்கும் சுரப்பிகளின் களியாட்டம் காதலை கைகட்டி வாய்பொத்தி ஒரு மூளையில் உட்காரவைத்து விட்டு நான் தான் காதல் என்ற வேசம் கட்டி தனது இச்சைகளை எல்லாம் தீர்த்துக் கொள்கிறது காமம். அதுவே காதல் என்பதைப் போல் எல்லொரையும் நம்ப வைக்கிறது. உடலில் வலிவு குறைந்து....உடல் ஒடுங்கும் சமயத்த்தில் தள்ளாடிப் போகிறது காமம்....அந்த நேரத்தில்தான் தன் பலம் காட்டுகிறது காதல். காமத்தை புறம் தள்ளி கணவன் மனைவியின் இருப்பில் அர்த்தம் பொதிந்து வாழ்வின் மீதிப்பகுதியில் ஆட்சி செய்து....ஆக்ரோசமாய் வாழ்கிறது காதல்....அந்த காதலின் ஆக்ரோசம் தான் தாத்தாவின் கடுக்கனை அவர் இறந்தபின்னும் தலைமாட்டில் வைத்து தனது ஆளுமையை செய்து அன்பாய் உருகியிருக்கவேண்டும். அதன் பிறகு அப்பத்தாவின் திருமண புடவை, தாத்தாவின் வேட்டி, அங்கவஸ்திரம் அவரின் மூக்கு கண்ணாடி...இப்படி பார்த்த நான் ...அந்த பாவி மக அப்பத்தா தாத்தாவின் பிஞ்ச செருப்ப ஒரு மூலைல வச்சிருந்தத பாத்து நான் விக்கித்துப் போனேன்.

இப்போது எல்லாம் நாகரீகம் என்ற பேரில் புருசனும் பொஞ்சாதியும் எப்பவும் ஒருத்தரை ஒருத்தர் உரசிகிட்டும்...டார்லிங் டார்லிங்ன்னு கொஞ்சுனாலும் அதுல எவ்வளவு எதார்த்தமான அன்பு இருக்கும்னு தெரியலங்க...! ஆனா.....அந்தக்காலத்தில் புருசன் முன்னால பொஞ்சாதி வராம இருந்தாலும் இம்புட்டு காதோலோட இருந்திருக்காங்கனா....வெளி வேசம் போடாமலேயே..உள்ளேயே நேசிச்சு நேசிச்சு......தன்னுடைய நேசிப்பை ஆறு ஏழு பிள்ளைகளா பெத்து காமிச்சு...புருசனுக்கு பணிவிடை செய்வதிலும் வயக்காட்டில் ஒத்தாச செய்வதிலும் காமிச்சு சரிக்கி சமமா ஒரு சம்சாரிய இருக்கிறா பாருங்க....அந்த காதல் என்னவிதம்னு புரியலங்க...!


அடுத்த பெட்டியில் ஒரே கடிதாசிங்க.....ரங்கூன் 1935 என்ற தேதியிட்ட ஒரு கடிதம்...அந்த காலத்தில் பெரும்பாலான் நமது மக்கள் பொருளீட்டிய ஒரு இடம்...."மகா கனம் பொருந்திய ஷிரி ராஜ ராஜஷ்ரி சிரஞ்சீவி மாப்பிள்ளைக்கு உங்களின் மாமனார் ரங்கூனில் இருந்து எழுதி கொள்வது இந்த கடிதத்தை சிவகாமி அம்மையாரிடம் படித்து காண்பிக்கவும் மேலும் இந்த கடிதாசி கண்டியில் (இலங்கை) கடை வைத்திருக்கும் வெங்கடாசலம் முதலியார் வசம் கொடுத்தனுப்புகிறேன்" என்ற ரீதியில்......போனது....! இப்படி நிறைய கடிதாசிகள் பல்வேறு வகையான வாழ்க்கை நிகழ்வுகளை சந்தோசத்தை துக்கத்தை வெளிக்காட்டியதும்....மேலும் நான் கண்ட சில அவர்களின் ஆபரணப்பொருட்களும் இன்ன பிற விசயங்களும் எனக்கு முக்கியாமாக படவில்லை......மாறாக.....

மனிதர்கள் அனைவரும் தமக்கென்று ஒரு தனிப்பட்ட வாழ்க்கையை யாரும் அறியாமல் ஒளித்து வைத்துக்கொண்டு இது என் பிரைவசி என்று வாழ்கிறார்கள் ஆனால் கடைசிவரை அதைக்கட்டிக் காக்க முடியாமல் காலம் எல்லாவற்றையும் அக்கு வேறு ஆணி வேறாக பிரித்துபோட்டு விடுகிறது. இதுவரை தன்னுடைய அறை என்று நம்பி கட்டிக் காத்துக் கொண்டிருந்த தாத்தாவும் இல்லை அந்த கட்டிக் காத்தலை தொடர நினைத்த அப்பத்தாவும் இல்லை ஆனால் அவர்களின் பொருட்களும் அந்த அறையும் இப்போதும் இருக்கிறது. பார்த்து பார்த்து கட்டினாராம் வீட்டை பர்மா தேக்கு இத்தனைக்கு இத்தனை அடி...ஏய் அங்க சாந்த ஒழுங்க பூசு அப்படி இப்படி என்று ஆளுமை செய்து கட்டிய வீடு இருக்கிறது ....தாத்தா இல்லை.

கோடி ஆண்டுகள் வாழ மனிதனுக்கு விருப்பம் அதன் பொருட்டுதான் இடம் வாங்கி குவித்தலும், கட்டிய வீடுகளுக்கும் பிறக்கும் பேரக்குழந்தைகளுக்கும் தன் பெயரை வைத்தலும் என்று...தன்னுடைய ஆளுமையை தான் காலம் கடந்து வாழவேண்டும் என்ற ஆசையை நிறைவேற்றிக் கொள்கிறான். ஒரு நாள் எனது கடைசி அத்தை உள்ளே வந்தற்கு சத்தமிட்ட தாத்தாவும் அதை அங்கீகரித்த பாட்டியும் தங்களது உடைமைகளை எல்லாம் பொதுவில் விட்டு விட்டு போய் சேர்ந்து விட்டார்கள் அதை யார் ஆளப் போகிறார்கள் என்று கூட அவர்களுக்குத் தெரியாது.....ஆனால் வாழும் வரை அதன் மீது ஒரு ஆளுமையோடு இருந்துவிட்டார்கள்...இன்று...எல்லாம் பொய்யாய் போனது.....பொதுவில் போனது.....


இன்னும் வாசலில் குடும்பத்தார் பேசிக் சிரித்துக் கொண்டிருந்தனர்.... நான் கொல்லைக்கு வந்து தோட்டத்தில் இருந்த தாத்தா, அப்பத்தாவின் சமாதியை பார்த்துக் கொண்டிருந்தேன்....! வெளியே ஒரு அத்தை " அது நானும் எங்க வீட்டுக்காரருக்கும் சேர்ந்து எங்க விருப்பபடிதான் எங்க பெட்ரூம் கட்டினோம்...அந்த டைல்ஸ் தான் போடணும் நாங்க தேடித் தேடி........" உரக்க பேசிக் கொண்டிருந்தார்கள்......எங்கேயோ இருந்து ஒரு குயில் யாருமே கவனிக்கலயா என்ற ஆதங்கத்தில் மீண்டும் மீண்டும் கூவிக் கொண்டிருந்தது....சிலீர் காற்று என் முகம் தடவிச் செல்ல....மனதோடு சேர்ந்து கையில் கனத்தது அறைவீட்டுச் சாவி!

பளீரென்று திறந்து கிடந்தது....அறைவீடு......!
தேவா. S

Sunday, May 30, 2010

நட்ப கூட கற்பு போல எண்ணுவேன்!
நட்பு பற்றி எதுவும் எழுதுவதில்லை என்பது... சிங்கப்பூரில் இருந்து என் நண்பன் சிறுகுடி ராமு அவ்வப்போது என் மீது வைக்கும் குற்றச்சாட்டு.

ஓராயிரம் நண்பர்கள் நம்மைச்சுற்றி இருந்தாலும் மிகைப்பட்ட பேர்கள் நம்மால் நேசிக்கப்படுபவர்களாக இருப்பார்கள் ஆனால்... நம்மை நேசிப்பவர் என்பவர்கள் அதிக பட்சமாக ஒருவர் அல்லது இருவராயிருக்க முடியும். இது அடையாளம் காண்பதற்கரிய ஒரு கடினமான விசயம்தான் என்றாலும் காலத்தின் ஓட்டத்தில் எல்லாம் கற்பூரமாய் கரைந்து விட ஏதோ ஒரு சுடர் மட்டும் ஒளி விட்டு வீசிக் கொண்டிருக்கும். அந்க ஒளி மழையிலும், காற்றிலும், புயலிலும் நம்மைச் சுற்றி வெளிச்சம் வீசிக் கொண்டிருப்பதை சட்டென்று ஏதோ ஒரு கணத்தில் உணர முடியும் அப்படிப்பட்ட என்னைச் சுற்றிய வெளிச்சம்தான்..........


சலீம்இப்போது கூட இப்படி நான் எழுதுவதை அவன் மிகைப்படுத்தி கூறுவதாக கூறி நிராகரித்து விட்டு அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை என்று சாதாரணமாய் சொல்லக் கூடிய அளவிற்கு நட்புக்கரசன் அவன். நல்ல நண்பனுக்கான அளவீடு என்ன...? நான் சொல்கிறேன்....

1) ஒட்டு மொத்த உலகமும் என்னை மீது களங்கம் கற்பித்து அதற்கான ஆதரங்களைத் திரட்டிக் கொடுத்தாலும்...தனி ஒருவனாய் ஒட்டு மொத்த உலகத்திடமும் தனி ஆளாய் வாதிடுவான் ....அவனைப்பற்றி எனக்குத் தெரியும்...உங்கள் வேலையைப்பார்த்துக் கொண்டு செல்லுங்கள் என்று...!


நட்பு என்பது நம்பிக்கை.... !


கடுமையான சூழல்களிலும் அவனின் செயல்பாட்டிலும் முடிவெடுத்தலிலும் எனக்குள் தோன்றிய விசயம் இது!

2) எந்த சூழலிலும் தன்னால் நேசிக்கப்படுபவர் எந்த கஸ்டமும் படக் கூடாது என்று நினைப்பது உண்மையான நேசிப்பு இதற்கு என்ன பெயர் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள்... நட்பு..காதல்...பாசம்... எதுவேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள்... நான் வைத்திருக்கும் பெயர்....சலீம்! என்னை இதுவரை தர்மசங்கடமான சூழ் நிலைக்கு எப்போதுமே அவன் உட்படுத்தியது இல்லை. ஏதாவது தேவை என்றால்... கூட...என்னிடம் கேட்காமல்...என்னுடைய எல்லா தேவைகளையும் நான் கேட்காமலேயே பூர்த்தி செய்வான்....!

நட்பு என்பது நேசித்தல்!

3) ஒரு முறை தூக்கத்தில் எனக்குப் புறையேறி... நான் மூச்சுத்திணறிக் கொண்டிருந்த போது....அவசரமாய் எழுந்து தண்ணீர் கொடுத்து, முதுகு தட்டி..என்னை ஆசுவாசப்படுத்திய போது ....எப்போதும் தைரியமான அவனின் கண்களில் கண்ணீரைப் பார்த்த போது அம்மாவின் ஞாபகம் என்னைக் கேட்காமலேயே வந்தது...!


நட்பு என்பது தாய்மை!

4) கொளுத்தும் ஏப்ரல் மாத வெயிலில் வேலை தேடி நான் வெளியே சென்று விட்டு மதியம் மூணு மணி வாக்கில் அறைக்குள் நுழையும் போது எனக்காக உணவு வாங்கி வைத்து விட்டு அலுவலகத்தில் இருந்து போன் பண்ணி சாப்பிடாம இருக்காத... சாப்பிடு கண்டிப்பாக வேலை கிடைக்கும் அத பத்தி கவலைப்படாத என்று சொல்வான்...!


நட்பு என்பது மனோதைரியம்!

5) ஒரு நாள் அவனுக்கு கையில் சிறிய ஆபரேசன் செய்ததை நேரே பார்த்து நான் ஒரு மயக்க நிலைக்கு வந்த போது தன் வலியை மறைத்துக் கொண்டு நீ போய் வெளியே உட்காருடா....என்று தன்னுடைய தைரியத்தை எனக்கு கொடுத்தான்...!


நட்பு என்பது தியாகம், விட்டுக் கொடுத்தல்., சந்தோசப்படுத்துதல், இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்!

இன்றுவரை ....எதையுமே எதிர்பார்க்காமல் வாரத்திற்கு இருமுறை பேசினாலும் அர்த்தம் பொதிந்தவனாய் நிழல் போல தொடர்ந்து கொண்டிருக்கிறான் என் நண்பன்! இன்னும் சொல்லப் போனால் எனக்கான தற்போதைய எல்லாவற்றுக்கும் அவனே...காரணம்! அதிகம் நான் சொல்வதை அவன் விரும்பப் போவதில்லை...ஏனென்றால் புகழ்ந்தால் தொடரும் நட்பல்ல இந்த நட்பு...! என் மீது தவறென்றால் தனியாக கூப்பிட்டு காட்டு காட்டென்று காட்டிவிடுவான்....! எவ்வளவு திட்டினாலும் எதார்த்தமாய் தோளில் கை போட்டு ஆறுதலாய் அந்த விசயத்தை உள்ளே புகட்டி விடுவான்! என் வாழ்வின் சாரதி......என் சலீம்...! இன்னும் ஒரு 7 ஜென்மம் நான் பிறந்தாலும் அவனளவுக்கு நான் இருப்ப்பேனா என்பது சந்தேகம்....!

என்னோடு சேர்ந்து நீங்களும் வாழ்த்துங்கள் அவனுக்கான இந்த பிறந்த தினத்தில்.....!


30.05.2010தேவா. S

Saturday, May 29, 2010

அறைவீடு.....!


.எப்போது எது வேண்டுமானாலும் எங்க தாத்த கிட்டதான் கேக்கணும்..அரிசி வேணும்னாலும் சரி...பருப்பு வேணும்னாலும் சரி... எண்ணை வேணும்னாலும் சரி..அறவீடு என்று சொல்லக் கூடிய அந்த பிரத்தியோகமான சிறிய அறையின் சாவி தாத்த கையிலதான். 75 வயசனாலும் அவரது பேச்சில் நிதானம் குறையவில்லை! நெடு நெடு உயரம் செக்க செக்க சிவந்த மேனி..... முன் நெற்றியில் ஏறிய வழுக்கை வெள்ளை வெளெர் முடி கழுத்தில் ஒற்றை ருத்ராட்சம்...முன் நெற்றி முழுதும் பட்டையய் பூசிய திரு நீறு. தலை மட்டும் லேசாய் ஆடத்தொடங்கியிருந்தது.

சின்ன வயதில் விடுமுறைக்கு தாத்தா வீட்டுக்கு போன உடனேயே அவர் கிட்டதான் எல்லோரும் போவோம்... ! என்னுடைய கையை அழுந்த பிடித்து நல்லாயிருக்கியா அப்புன்னு அவர் கேட்பதிலும் கையின் அழுத்தத்திலும் அவரின் அன்பு தெரியும். 6 பெண் பிள்ளைகளும் அதற்கப்புறம் எங்க அப்பாவும் பிறந்ததனால் அவருக்கு ஆண் பிள்ளைகள் என்றால் பிரியம் என்று அம்மா சொல்ல கேட்டிருக்கிறேன். அதுவும் மகன் வயித்து பேரன் என்பதால் தாத்தவின் பிரத்தியோக அன்பு எனக்கு கிடைக்கும்.

அதிகாலையில எழுந்துடுவாரு எத்தன மணின்னு சொல்ல முடியல எனது அரைத்தூக்கத்தில்...."தென்னாடுடைய சிவனே போற்றி! எந் நாட்டவருக்கும் இறைவா போற்றி" என்று கூறி கம கம என்று அவர் விபூதி பூசுவதை பார்த்திருக்கிறேன். காலை எழுந்தவுடன் அவர்களின் ஒழுக்கம் அது என்று பின்பு புரிந்து கொண்டேன். வீட்டில் எல்லோரும் 4 அடி தள்ளி நின்றுதான் பேசுவார்கள்.

ஒவ்வொரு முறையும் அப்பத்தா...ஏதாவது கேட்க அவர் அதட்டலோடு அறவீட்டு கதவு திறந்டு யாரும் உள்ளே பார்க்காத அளவிற்கு கதவை சாத்திவிட்டு உள்ளே போய் அரிசியோ பருப்போ எடுத்துக் கொடுப்பார். அவர்தான் கொடுக்கவேண்டும் இல்லையென்றால் அனாவசியாமாய் விரையம் செய்து விடுவார்கள் என்பது அவருடைய எண்ணம். இருட்டில் லந்தர் வெளிச்சத்தில் அவரு உள்ளே நிற்கும் போது அவரின் வைரகடுக்கண் தோடு மின்னுவதை நான் ஒளிந்து இருந்து பார்த்து இருக்கிறேன். அவருக்கு உடல் நலன் சரியில்லாத நேரத்திலும், மேலும் அப்பாத்தவின் சில தேவைகளுக்கும் அப்பத்தா மட்டும் அறவீட்டுக்குள் சென்று வருவதை கவனித்து இருக்கிறேன்.

எப்பவும் தாத்தாவின் இடுப்பில் இருக்கும் அறவீட்டு சாவி....உள்ளே என்னதான் இருக்கும் என்ற குறு குறுப்பு எனக்கு அதிகமாகவே இருந்தது. ஒரு தடவை என் கடைசி அத்தை உள்ளே போய் விட...." உன்ன யாரு உள்ளே வரச் சொன்னது என்று " தாத்த போட்ட கூச்சலில் மீதமுள்ள யாருக்கும் அந்த பக்கம் கூட போக தோணவில்லை.


அவரை பொறுத்தவரை அது ஒரு ஒழுக்கம். அவர்களின் பிரைவசி அங்க என்ன இருக்குன்னு உங்களுக்கு என்ன அக்கறை அப்படிங்கிற ஒரு கோபம்! கோடி கோடியா ஒண்ணும் இல்ல அப்பு...எதுக்கு அவசியம் இல்லாம எதுக்கு வரணும்கிறேன்..அப்படின்னு அப்பாகிட்ட சாந்தமாய் தாத்தா விளக்கம் கொடுப்பதையும் நான் கவனித்திருக்கிறேன். 1981 கடைசியில வீட்டுக்கு கரண்ட் இழுத்த சமயத்தில் கூட வயரிங் ஆளு உள்ள போறதயும் வெளில வரதயும் ஒரு பதை பதைப்போடு பார்த்துக் கொன்டிருந்தார் தாத்தா....! சாணம் மெழுகிட்டு இருந்ததாப்ப ஒரு பூச்சு பொட்டு வராது..... நோய் நொடி எதுவும் வராது எதுக்கு சிமிண்ட் போடணும்கிறன்னு அவர் கேட்ட போது ....எனக்கு ஒன்ணும் புரியல.

1982 ஒரு மார்கழி மாதத்துல தாத்தா சிவலோக பதவி அடஞ்சுட்டார்.....! வீட்டுத் தோட்டத்தில் அவரை அடக்கம் செய்தோம் அவரின் வேண்டுகோளுக்கிணங்க...ஒரு பிரின்சிபில் மேன்...! வீட்டுக்கு வந்து முதல் காரியம எங்க அறவீட்டு சாவின்னு தேடிய போது ....அது அப்பத்தாவின் இடுப்பில் ஏறி இருந்தது. அந்த சாவிய கொடுங்க அப்பத்தான்னு கேட்டப்ப அத்தன துக்கதுலயும் .....ஏன் அப்பு என்ன வேணும் சொல்லு நான் தாரேன்னுச்சுப் பாருங்க....! மீண்டும் அவர்களின் அந்த உறுதியான ஒரு பிரைவசி விளங்கியது. அதற்கு மரியாதை கொடுத்து யாரும் அதைகேட்பதையே மறந்து போனோம்.

காலங்கள் ஓடி ஓடி...2000 வருடத்திறுகு கொண்டு வந்து எங்களை நிறுத்திய சமயத்தில்....அப்பத்தா மட்டும் தான் வீட்டில் இருந்துச்சு....மகள்கள் எல்லாம் திருமணத்திற்கு பிறகு சென்றுவிட....அப்பாவும் நாங்களும் அப்பாவின் வேலை நிமித்தம் வேறு இடத்தில் இருக்க..... நடை உடையா இருந்த அப்பத்தா ஒரு மார்ச் மாதம் இறந்து போய் விட்டார்கள்.

இறுதி சடங்குகள் எல்லாம் முடிந்து உறவுகள் எல்லாம் வெளியில் அமர்ந்து பேசி கொண்டிருந்தனர்....6 அத்தைகளும் அவர்களின் பிள்ளைகளும், என் அப்பாவும் எனது குடும்பமும் வெளியே பேசி கொண்டிருந்தார்கள்....! கல்யாண சாவு இதுப்பா ஒரு அத்தை அப்பாவிடம் சொல்லி கொண்டிருந்தார்...எத்தனை பேரன் , பேத்திகள்....! ஒரு கட்டத்திற்கு மேல் இறப்பை உறவுகளே அங்கீகரிக்கின்றனர்.....!அழுகை எல்லாம் நின்று...ஒரு புரிதல் வந்து விடுகிறது என்று எண்ணிக் கொண்டிருந்த என் முன்....ஆணியில் அறவீட்டு சாவி......ஆடிக்கொண்டிருந்தது. எஜமானர்களின் இடுப்பை அலங்கரித்து தனக்க்கு என்று ஒரு தனியடம் வைத்திருந்த சாவி.....யார் எஜமானர் என்று தெரியாமல் தற்காலிகமாய் ஆணியில் ஆடிக் கொண்டிருந்ததா.....அல்லது அழுகையில் விசும்பிக் கொண்டிருந்ததா என்று தெரியவில்லை.

ஒ.....ஓஒ.... பிரைவசி...பிரைவசி என்று மனிதர்கள் போற்றிக் கொண்டிருந்த..... அந்த பிரைவசி இப்போது என் கண் முன்னே ஆடிக் கொண்டிருந்தது.....எல்லோரும் மறந்து போன அல்லது அவர்களின் சுவரஸ்யத்து தீனி போடாத அறவீட்டு சாவி......இப்போது என்கையில்......! பெரிய விசயங்கள் ஏதும் இல்லாவிட்டாலும்....என்னதான் இருக்கிறது என்று பார்ப்போம் என்ற அரைகுறை புரிதலுடன் கூடிய மனதுடன்.......அறவீட்டை திறந்தேன்.....எனது காதுகளில் " தென்னாடுடைய.......தாத்தாவின் குரல் ஒலிக்க..மனம் இருட்டில் பள பளக்கும் அவரது வைரத்தோட்டை நினைவு படுத்த.....மிக நீளமான கனத்த சாவி கையில் கனக்க.....கூடவே சேர்ந்து மனமும் கனக்க...

" கிறீச்.......கிறீச்......."சப்தத்தோடு......பெரிய.தேக்கு மர பூண் போட்ட கதவு திறந்து வழிவிட....உள்ளே செல்கிறேன்.(பதிவின் நீளம் கருதி இப்போதைக்கு நிறுத்தி.....கண்டிப்பா அடுத்த பதிவில் முடிச்சிடுறேங்க........)தேவா. S

Wednesday, May 26, 2010

சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா.... பதிவுத் தொடர் IVஇடைவிடாத தொடர் நிகழ்வுகளும் எண்ணங்களும் ஏதேதோ திசையில் எப்போதும் இழுத்துச் செல்லும் அப்படித்தான் இந்த தொடரையும் தொடரவிடாமல் எங்கெங்கேயோ சென்று விட்டேன்...சரி..மீண்டும் ஒரு யூ டர்ன் அடித்து தொடருக்குள் நுழைவோம். பிளேடுடன் நான் வேறு ரொம்ப நேரம் ஸ்டில் பொசிசனில் எவ்வளவு நேரம் நிற்பது....

இது வரை

பாகம் I - http://maruthupaandi.blogspot.com/2010/05/blog-post_02.html
பாகம் II -http://maruthupaandi.blogspot.com/2010/05/ii.html
பாகம் III- http://maruthupaandi.blogspot.com/2010/05/iii_07.html


இனி....

அறைக் கதவை தாளிட்டுக் கொண்டு பிளேடையே பார்த்துக்கொண்டிருந்த நன் வலது கை ஆட்காட்டி விரலுக்கு அருகே பலமுறை பிளேடை கொண்டுபோனாலும் கையை வெட்டிக்கொள்ள முடியாமல் ஏதோ ஒன்று பின் இழுத்தது அதற்கு பெயர் பயமா அல்லது ஆழ்மனது எனக்கு அறியாமல் தடுத்ததா?என்று எனக்குத் தெரியவில்லை. பிளேடால் கையை வெட்டினால் வலிக்கும் என்று நன்கு அறிந்திருந்த மனதை ரஜினி ரசிகன் என்னு ஒரு கவர்ச்சி மெல்ல மெல்ல பின்னுக்குத் தள்ளியது.


மெல்ல கைகளால் வலிக்காதவாறு பிளேடால் வலது கை ஆட்காட்டி விரலால் சுரண்டினேன் (வெட்ட வில்லை...) ஏன்னா வலிக்கும்னு தெரியும் ஆனாலும் வலிக்காம இரத்தம் வந்து அதிலே இருந்து எழுதணும் இது போலியான மனசு எனக்கு சொன்ன விசயம் ஓ...மெல்ல சுரண்டியதில் விரல் லேசாக கீறப்பட்டு லேசாக இரத்தம் வெளியே வந்தது ஆகா....இது போதும் என்று கொஞ்சமாய் வந்த விரலை அமுக்கி அமுக்கி..... ஒரளவுக்கு எழுதி விட்டேன்.....

" ரஜினி வாழ்க" என்று.... ! ஒரு வெற்றியுடன் யாருமறியாமல் குறைந்த அளவு வலியில் எழுதிய அந்த எழுத்துக்களைப் பார்த்து என்னை நானே பெரிய ரசிகனாக நினைத்துக் கொண்டேன் பெரிய தியாகி ரேஞ்சுக்கு மனசு கற்பனை செய்து விவரித்துப் பார்த்தது...அந்த விவரிப்பே எனக்குள் என்னைப்பற்றி பெரிய பச்சாபத்தை உண்டு பண்ணியது. நான் பெரிய சாதனை செய்து விட்டதாக கற்பனை செய்து கொண்டதை மனம் நிஜம் என்று நம்பத்தொடங்கியது. அன்புள்ள ரஜினிகாந்தே ஆசையில் ஓர் கடிதம் என்ற ரேஞ்சில் ஆரம்பித்து மாவீரன் படத்தை 10 தடவை பார்த்தேன் (பார்த்தது 1 தடவை அதுக்கும் அப்பா கிட்ட அடி வாங்கி கெஞ்சி கூத்தாடி படம் பார்க்க நான் பட்ட பாடு.....) என்று கோழிக் கிறுக்கல் கையெழுத்தில் கிறுக்கி அந்த லெட்டர் கவரை போஸ்ட்டும் செய்துவிட்டேன்.


ஒரு சாதாரண ரசிகனாய் இருந்து லெட்டர் எழுதி ரஜினியின் பதில் பெறுவதற்கு எத்தனை எத்தனை வேடிக்கைகள், ரஜினியிடம் இருந்து லெட்டர் வந்து விட்டால் அதை எல்லோரிடமும் காட்டி பெருமை அடித்துக்கொள்வதில் எவ்வளவு மும்முரம்.....எங்கே கோளாறு ரஜினி என்ற நடிகனிடமா? இல்லை அந்த நடிகனின் புகழோடு என்னை இணைத்துக் கொண்டு நான் பிரபலமாகும் முயற்சியா? என் எதிர்பார்ப்பை, நான் பிரபலமாவதை ரஜினியின் பதில் கடிதம் தீர்மானிக்கும் என்ற காரணத்தால் தினசரி வரும் தபால்காரரை எதிர்பார்த்து காத்திருப்பேன். அது ஒரு மே மாதம் என்பதால் பள்ளி விடுமுறை நேரம் மதியம் 2 மணிக்கு வரும் தபால்காரருக்காக தவமிருக்க ஆரம்பித்தேன்.....


நாட்கள் ஓடிக்கொண்டே இருந்தன...அந்த ஒரு நாள் என் கையில் ஒரு கடிதம் கொடுக்கப்பட்ட நொடியில் தபால்காரர் உலகின் தலை சிறந்த மனிதராக எனக்குப்பட்டார்! ஆமாம் ரஜினியிடம் இருந்து பதில் கடிதம்ங்க......இறக்கை இல்லாமல் பறந்தேன் தெரு முழுதும் கேட்குபடி....

" ரஜினீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ லெட்டர் வந்துருச்சுடோய் " கத்திக் கொண்டே வீட்டுக்குள் போய்... கவரை பிரித்து பார்த்கேன். அதில் அன்புள்ள .. என்பதும் மற்ற பாகங்கங்கள் (ரஜினியின் கையெழுத்து உள்பட ) எல்லாமெ ஏற்கெனவே பிரிண்ட் செய்யப்பட்டது என்னுடைய பெயரை மட்டும் பேனாவால் எழுதி இருந்தார்கள்....அதுவும் ரஜினிதான் எழுதியிருப்பாரா என்பதும் சந்தேகமே....இருந்தாலும் எனக்கு அது ஒரு மறக்க முடியாத வெற்றி நாளாய் அமைந்து போனது. மாலை நேரம் லெட்டரை என்னுடைய சட்டையில் வைத்து குத்திக் கொண்டு திரியாத குறையாக எல்லோரிடமும் காண்பித்தேன். பக்கத்து வீட்டு பாபுவை அதாள பாதாளத்திற்கு தள்ளி விட்டு .. நான் மட்டுமே ரஜினியின் ஏகபோக ரசிகன் என்று நினைத்துக் கொண்டேன்.

லெட்டர் வந்ததாலேயே நான் ரஜினிக்கு நெருக்கமாகிப் போனதாய் உணர்ந்தேன். இப்படித்தான் ரசிகனாய் இருக்கும் அத்தனை பேரும் தனக்கும் தன்னுடைய அபிமான நட்சத்திரத்துக்கும் ஒரு தனிப்பட தொடர்பு இருப்பதாய் கற்னையில் எண்ணிக் கொண்டு திரையில் அவர்கள் கூறும் மாயாஜால வாத்தைகளை உண்மை என்றும் நம்பிக் கொண்டு, திரையில் ஆட்டோ ஓட்டி, வண்டி இழுத்து , கூரை வீட்டில் வாழும் தன்னுடைய அபிமான நட்சத்திரங்களை.... ஏழைப்பங்காளனாக எண்ணிப் பார்க்கிற மனோபாவம் கிட்டதட்ட தமிழ் நாட்டில் மிகைப்பட்ட ரசிகர்களுக்கு இருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை ஆனால் அபிமானங்களின் நிஜ வாழ்க்கைக்கும் நமது கற்பனைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

என்னுடைய எட்டு வயதில் நானும் அப்படித்தான் எனது அபிமான நட்சத்திரத்தை எனது பக்கத்து வீட்டு மாமாவைப் பார்ப்பது போல ரசித்துக் கொண்டிருந்தேன். அப்போது அடுத்த வாரிசு படம்தான் என்று நினைக்கிறேன்....அது வெளிவந்து ஓடிக் கொண்டிருந்தது.....அந்த காலகட்டத்தில் தான் பக்கத்து வீட்டு மீனாக்கா வந்து அந்த செய்தியை என் தலையில் இடி போல இறக்கினார்கள்.....


ஓ......என்ன செய்வது என்றறியாமல்....அழுகை என் அனுமதியின்றி...கண்களில் கண்ணீரைக் கொண்டு வந்தது.....அப்போது......


(தொடர்ந்து வருவான் ரஜினி ரசிகன்....)தேவா.S

Monday, May 24, 2010

தேடல்.....!

விவரிக்க முடியாத ஒரு மனோ நிலையில் ஏதோ ஒரு நிகழ்வு மனசை காயப்படுத்திய அந்த வேளையில் வரும் கண்ணீரை எழுத்துக்களாக்கிப் பார்த்த போது தடுக்கி விழுந்த வேகத்தில் ஒரு எதார்த்த பதிவராகிப் போனேன். எத்தனை எழுத்தாளர்களை கடந்து சென்ற போதும் பாலகுமாரானை இதுவரை விடாத மனசைப் பார்த்து எனக்கு ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது.

இயல்பான எழுத்தா, காதலைச் சொல்லும் பாங்கா, காமத்தையும் பெண்ணடிமைத்தனத்தையும் சரியாக புரிந்து கொள்ளச் செய்த விதமா? கடவுளைப் பற்றி கற்றுக் கொடுத்த கற்பிதமா? எதில் லயித்துப் போனேன் என்று தெரியாத அளவிற்கு இன்று வரை இந்த பாலகுமாரன் மீதான காதல் தொடர்ந்து கொண்டிருக்கிறது.


மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் ஒரு கூட்டமில்லாத மாலை வேளையில் அவரை பார்த்த போது நேரே போய் பேச முடியவில்லை. யாரோ இருவருக்கு திருஞான சம்பந்தர் பற்றி அவர் விவரித்து பூம்பாவை என்ற பெண்ணின் சாம்பலைக் கொண்டு தேவார பதிகம் பாடி உயிர்ப்பித்தது பற்றி விவரித்துக் கொண்டிருந்தார். நான் அவர்களுடன் சம்பந்தப்படமால் அந்த விளக்கத்தை தூர நின்று கேட்டுக் கொண்டிருந்தேன். அவருக்கு அறியாமலேயே அவரின் அருகாமையை நன்றாக அனுபவித்தேன். கோவில் விட்டு போகும் போது இயல்பாய் ஒரு ஸ்கூட்டியில் சாதரணமாய் போய் விட்டார்.

எத்தனை எத்தனை படைப்புகள்....படைத்திருந்தாலும் அவருக்கும் அதற்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லாத மாதிரி....ஸ்கூட்டியில் பறந்தே போய்விட்டார். ஒவ்வொரு சென்னை பயணமும் இவரைச் சந்திக்க முடியாமல் இன்னும் முற்று பெறவில்லை...அடுத்த முறை கட்டாயம் சந்திக்க வேண்டும் என்று கண்டிப்பாய் எண்ணி மற்ற வேலைகளால் சந்திக்க முடியாமல் போவது என்னுடைய இயலாமை.


இவருடைய பேய்க்கரும்பு நாவலை படித்து விட்டு திருவொற்றியூரில் இருக்கும் பட்டினத்தார் சமாதியை மீனவ குடிசைகளுக்கு நடுவே தேடிக் கண்டு பிடித்து கோவிலினுள் போய் அமர்ந்த அன்று பாலகுமாரனின் எழுத்தில் படித்த ஒரு வெறுமையை உணர்ந்தேன். சிறிய கோவில் உள்ளே ஒரு சிவலிங்கம் அங்கேதான் பட்டினத்து அடிகள் சமாதியானாராம் வேறு ஒன்றும் இல்லை. வெறுமனே உட்கார்ந்திருக்க...வெறுமனே ஆகிவிடுவோம்....ஆர்பாட்டம் உள்ள கோவில்களில்தான் பெரும்பாலும் மக்கள் பேரம் பேசிக் கொண்டிருப்பார்கள்....அல்லது வேறு ஏதோ ஒன்று நிகழ்வதாகத்தான் எனக்குப் படுகிறது. பட்டினத்து அடிகள் கோவிலில் வந்து அவரின் வாழ்வு பற்றி எண்ணிப்பார்க்கும் அளவிற்கும் மானசீகமாய் அவருடன் பேசவும் ஒரு மனோ நிலை வேண்டும். இங்கு வந்து போனல் ஒரு வேளை எதுவும் கிடைக்காது என்று எண்ணி யாரும் வருவதில்லையோ என்று கூட எண்ணத் தூண்டியது. அங்கே அமர்ந்திருந்த ஒரு சில மணி நேரமெல்லாம்.... என்னுள் இடைவிடாது.....

"காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே"

என்று இடைவிடாது சொல்லிக் கொண்டே இருந்தேன். ஒன்றுமிலையப்பா என்று பட்டினத்தார் வேறு மெளனமாய் கடற்காற்றின் மூலமாக வீசி வீசி பேசிக் கொண்டிருந்தார். நிலையாமையை உணர்வதற்கு பயப்படும் மக்கள்.. இங்கு வரவும் பயப்படுகிறார்கள். இன்றிருக்கும் எல்லாம் நாளை நம்மை விட்டுப் போகும் என்று உணர்ந்தால் எல்லோரிடமும் அன்பாய் இருக்கும் ஒரு ஒப்பற்ற நிலை எய்த முடியுமே...எல்லாம் எனது, நான் .. நான் எனும் வாழும் மனிதர்களுக்கு .....


" பிறக்கும் பொழுது கொடு வந்த தில்லை, பிறந்து மண்மேல்

இறக்கும் பொழுது கொடு போவ தில்லை; இடை நடுவில்

குறிக்கும் இச் செல்வஞ் சிவன் தந்த தென்று கொடுக்க அறியாது

இறக்குங் குலாமருக் கென்சொல்லுவேன் ? கச்சியேகம்பனே "


தீர்க்கமாய் அவர் சொல்லிச் சென்றது எனது காதில் விழுந்து ஓலித்துக் கொண்டே இருந்தது. அந்த சூழலும் பட்டினத்தாரும் மிகவும் எனக்கு சினேகமாகிவிட எழுந்து வர மனமில்லாது அங்கேயே கிடந்தேன். நம்மைச் சுற்றி நகரும் மக்கள் எல்லாம் ஏதோ ஒரு அதிர்வலைகளோடு சென்று கொண்டிருக்கிறார்கள் ...அவர்களது அதிர்வலைகள் எதிரில் உள்ளவரையும்...சுற்றி உள்ளவரையும் கடந்து சென்று கொண்டிருக்கின்றன். அவற்றின் பாதிப்பும் மற்றவர்களை மனத்தளவில் பாதிக்கிறது. அதனால்தான் வழிபாட்டுத்தலங்களுக்கு சென்று திரும்பும் போது நேர்மறையான ஒரு மனோபலம் நமக்கு கிடைக்கிறது ஏனென்றால் வழிபாட்டுத்தலங்களுக்கு வருபவர்கள் குறைந்த பட்சம் தான் நன்றாக இருக்க வேண்டும் என்றாவது எண்ணிக் கொண்டு வருவார்கள் அல்லாவா? எதிர்மறை எண்ணம் உள்ளவர்கள் எதிர்மறையான அலைகளை பரவவிட்டுச் செல்வார்கள். அதனால்தான் சிலரை பார்த்தால் நேரம் போவது தெரியாமல் பேசிக் கொண்டிருப்போம், வேறு சிலரைப் பார்த்தல் ஓட்டமாய் ஓடி விடத் தோன்றும்.


இதை ஏன் சொல்கிறேன் என்றால் யாருமற்ற இந்த பட்டினதார் கோவில் போன்ற இடங்களுக்கு வந்து சென்றால்...எந்த எண்ணமும் ஏற்படுவதில்லை...அதாவது மனமற்ற ஒரு நிலை எளிதாக கிடைக்கிறது. ஏனென்றால் எந்த பேரமும் நாம் நடத்துவதில்லை.....


அட நான் பாட்டுக்கு பேசிகிட்டே இருக்கேன் .... நேரமாச்சுங்க.....அடுத்த தேடலில் சந்திப்போம்!


தேவா. S

Sunday, May 23, 2010

இராவணன்...!


காலங்கள் தோறும் வஞ்சிக்கப்பட்ட ஒரு இனமாய் திராவிட இனம் இருந்து வந்திருக்கிறது. செய்தி பரிமாற்றங்களாய் இருக்கட்டும் நாட்டில் செயல் படுத்தப்படும் நல திட்டங்களாய் இருக்கட்டும்....ஏன் பிரதமர் பதவியாய் இருக்கட்டும் இவை எல்லாம் நமக்கு நேரடியாக மறுக்கப்படாவிட்டாலும் தேர்ந்த காய் நகர்த்தல்கள் மூலம் மாற்றிவைக்கப்பட்டுள்ளன.

புராணங்கள் என்று நமக்கு போதிக்கப்படும் எல்லாவற்றிலும் திராவிடனைப்பற்றிய வெளிப்பாடு கொஞ்சமும் நாம் எதிர் பாராத வகையில் இருந்தாலும் பழக்கப்படுத்தப்பட்ட ஒரு மூளைச்சலைவியினால் நாமும் அதை சரியென எடுத்துக் கொண்டு அறிவுக்கு எட்டாத விசயங்களை கூட ஒத்துக் கொள்கிறோம். சர்ச்சைக்குரிய ஒரு களம்தான் இது என்பதில் மாற்றமில்லை, என்னுடைய கண்ணோட்டம் தவறாக இருக்கலாம் உங்களின் பின்னூட்டங்களின் மூலம் தெளிவான ஒரு நிலை கிடைக்கலாம் என்ற ஆவலில்தான் இப்போது நான் நமது சூப்பர் கதா நாயகனான....இரவணேஸ்வரன் எனப்படும் சக்கரவர்த்தி இராவணனை மீண்டும்......உயிர்ப்பிக்கிறேன்........

திருநெல்வேலியிலிருந்து புலம் பெயர்ந்து சென்ற தமிழ் நாட்டின் சைவ குலம் சேர்ந்த இராவணேஸ்வரன் அடிப்படையில் தமிழன் திராவிடன். கடுமையான சிவபக்தன் பத்து தலைகளுக்கு இருக்கும் மூளையை ஒருசேர பெற்ற பராக்கிரமசாலி நீதியோடு லங்கா தேசத்தை ஆட்சி புரிந்து வந்த கருணாமூர்த்தி. வால்மீகி இராமாயணம் மற்றும் கம்பராமாயணம் இவை இரண்டையும் ஆதாரமாககொண்டே நமக்குள் கேள்விகள் எழுகின்றன்.....மிகச்சிறந்த ஆட்சி புரிந்த இராவணனின் லங்காபுரியில் மாட மாளிகைகளும் கூட கோபுரங்களும் இருந்திருக்கின்றன.

எல்லா சிறப்பும் கொண்ட ஒரு திராவிட சைவனை ஆரியம் ஒன்று சேர்ந்து வஞ்சித்து அரக்கனாக்கியதை இன்னும் நாம் ஒத்துக்கொண்டு ஏதெதோ பேசிக்கொண்டிருக்கிறோம். அறிவில் சிறந்தவர்களே...மனிதனும் விலங்கும் சேர்ந்து நடத்திய போர் இராமாயணம் என்று எப்படி ஏற்றுக் கொள்கிறீர்கள்? இராமபிரானும் லட்சுமணனும் திராவிட தேசத்திற்குள் நுழைந்த சமயத்தில் கிஸ்கிந்த தேசத்தை ஆண்டது வானரங்களா? எப்படி இது சாத்தியம் வடக்கே மனிதனும் தெற்கே வானரங்களும் ஆட்சி புரிந்தன என்று பகிங்கரமாய் ஒரு திராவிட அவமதிப்பைனை அரங்கேற்றி இருக்கும் இந்த புராணங்களை எப்படி கண்மூடித்தனமாக ஏற்றுக் கொள்வது?


திராவிடனெல்லாம்...வானரங்கள்...வாலியும் சுக்கிரீவனும் மாமன்னர்களாக சித்தரிக்கப்படாவிட்டால் கூட பரவாயில்லை ஒரு மனிதனாக கூட சித்தரிக்கப்படாத அவலம்....! இரமானை மிகச்சிறந்த அவதார புருசன் என்று காட்ட முயன்ற முயற்சியில் திராவிடனெல்லாம்...வானரமாயும் அரக்கனாயும் மாறிப் போன அதிசயம் நடந்தேறியதில் வியப்பில்லை. இராவணன் சீதையை தூக்கிச் சென்றது அவளது அழகில் மயங்கி அவளை மணக்க அல்ல...என்பதை நாம் தெளிவாக விளங்கிக்கொள்ளவென்டும். லட்சுமணனின் மீது விருப்பம் கொன்ட சூர்ப்பனகையை அவமானப்படுத்தி (மூக்கை அறுத்தது எல்லாம் புராண விவரிப்புகள்) திருப்பி அனுப்பியவுடன், சூர்ப்பனகையை பிடிக்கவில்லையெனில் மறுத்திருக்கலாமே அன்றி அவமானப்படுத்துதலை எப்படி ஏற்றுக் கொள்வது என்று ராம லட்சுமணர்களுக்கு பாடம் புகட்டவே சீதையை கொண்டு சென்றான் இராவணன். அவன் தங்கைக்கு ஒரு தலை சிறந்த அண்ணன் வேறு என்ன செய்வான்?


அரக்கன், பெண்ணாசை பிடித்தவன் என்று வர்ணிக்கும் புராணங்கள் தான் கவர்ந்து சென்ற பெண்ணின் மீது ஒரு சுண்டு விரல் கூட படாமல் பத்திரமாக வைத்திருந்தவன் பாடம் புகட்ட கொண்டு சென்றானா? இல்லை பெண்ணாசை பிடித்து கொண்டு சென்றானா? நீங்களே தீர்மானியுங்கள். ஒப்பற்ற வீரன் இராவணனை திராவிடர்கள் (வானரப்படை என்று விவரிக்கிறார்களே அது நாம்தான்) உதவியுடன் சென்று வென்று விட்டதாக அறியமுடிகிறது. இராவணின் அழிவிற்கு பின் தெற்கு பகுதிகள் ஆரியர்களின் தாக்குதலுக்கு உள்ளாகின மேலும் வட இந்தியாவில் இருந்து நிறைய ஆரியர்கள் திராவிட பகுதிகளுகு குடியேறி மிகைப்பட்ட திரவிடர்களுக்கு ஆரிய விதிமுறைகள் புகுத்தப்பட்டன. சாதி சமயம் என்றால் என்னவென்று தெரியாத திராவிட மக்களை சாதி சமய அடிப்படையிலான ஒரு சமுதாயமாக செய்யும் தொழிலின் அடிப்படையில் பிரித்தாளப்பட்டனர்.


தாய்வழிச் சமூகமான திராவிட இனம் நாளடைவில் தந்தை வழி சமூகமாக மாற்றப்பட்டடது அதன் காரணமாக பெண் அடிமைப்படுத்தப்பட்டாள்....இப்படியாக இரவணேஸ்வரன் என்ற ஒரு தலை சிறந்த திரவிட சைவ மன்னனை கொன்றழித்து விட்டு பின் என்ன பாவம் தீர ஒரு சிவனை வழிபட வேண்டியிருக்கிறது. இராவணனை கொன்றழித்த நோக்கமும், அவனின் சகோதரனை அவனிடம் இருந்து பிரித்து உபாயங்களை அறிந்து கொன்ற முறையும் போரிட்ட விதமும் போருக்கு ஆட்கள் சேர்க்க அண்ணன் தம்பி (வாலி மற்றும் சுக்ரீவன்)களை பிரித்தாண்டு வாலியை மறைந்து இருந்து கொன்றமையும் தானே குற்ற உணர்ச்சிகுள் விழச் செய்து இராமேஸ்வர ஸ்தலம் உருவக வழிசெய்தது? நல்லது செய்தால் ஏன் பாவ மன்னிப்பு? நடந்தது வதம் அல்ல...ஒரு கோர இன அழிப்பு!

எல்லா பராக்கிரமும் கொண்டிருந்த இராவணேஸ்வரன் சீதை சிறைச்சேதம் தான் செய்து வைத்திருந்தான் கவர்ந்து செல்லவில்லை. சிறைச்சேதம் என்றாலும் அசோகவனத்திலே சகல விதமான மரியாதையுடன் அவளை நடத்தியதாக அறிய முடிகிறது. இதில் எந்த புனைதலும் இருப்பதற்கான சாத்தியம் இல்லை ஏனென்றால் மரியாதையுடன் நடத்தவில்லையெனில் அவள் மரியாதையாக திரும்ப கிடைத்திருக்கவும் வாய்ப்பில்லை. இவ்வளவு கண்ணியமான இராவணன் அரக்கனாகிவிட்டான்...ஆனால்... கட்டிய மனைவி மீது நம்பிக்கை இல்லாது அவளை தீக்குளிக்க சொன்னவர்.....தெய்வமாகிவிட்டார். எப்படி இருக்கிறது கதை?

சைவம் உருவமற்ற கடவுளை போதித்தது....அன்பே கடவுள் என்றது.....

"ஓசையுள்ள கல்லை நீர்
உடைத்து ரண்டாய் செய்துமே
வாசலில் வைத்த கல்லை
மழுங்கவே மிதிக்கிறீர்
பூசனைக்கு வைத்த கல்லில்
பூவும் நீரும் சாத்துறீர்!
ஈசனுக்கு உகந்த கல்லு
எந்த கல்லு சொல்லுமே!"

என்ற உயரிய சித்தந்தம் போதித்தது ஆனால் அந்தோ பரிதாபம் இந்த உயரிய நெறி சமைத்தவர்கள் குரங்காகவும், அரக்கனாகவும் போனதுதான் தாங்க முடியாத கொடுமை!


நமது காலத்திலும் கூட ஒரு இராமாயாணம் நடந்திருக்கிறது.....வடக்கிருந்து வந்த வீரர்கள் யார்......? வானரங்கள் யார்? அழிக்கப்பட்ட திராவிட மன்னன் யார் என்று நீங்களே ஊகித்துக் கொள்ளுங்கள்...

ஓரு விசயம் மட்டும் மாறாமல் இருக்கிறது.....தமிழன் எப்போதும் புத்திசாலியாகவும்.....அதே நேரத்தில் ஏமாளியாகவும்....காலங்கள் கடந்து வீர நடை போட்டுக் கொண்டிருக்கிறான் என்பது மறக்கவும் மறுக்கவும் முடியாத உண்மை!


தேவா. S

Saturday, May 22, 2010

அது அதுவாகவே...இருக்கிறது... !
அது அதுவாகவே...இருக்கிறது...
அலட்டலும்...அறிமுகமுமின்றி..
தேவைகளை எல்லாம் சூன்யமாக்கி
சலமின்றி...அது இருக்கிறது.
விதிகளை எல்லாம் புறம்தள்ளி....
புலன்களுக்கு புலப்படாத...
ஒரு புன்னகையுடன்!

ஆர்ப்பாட்டமான மனதுக்குதான்....
எல்லாம் தேவையாகி இருக்கிறது...
கடவுளையும் சேர்த்து....
மெல்ல மெல்ல நிகழும்
நிகழ்வுகளோ..எல்லாவற்றையும்
உடைத்துப் போட்டு விடுகிறது...
பல நேரங்களில் கடவுளையும் கூட!

கேள்விகள் கேட்கும் மனதுக்கு
எப்போதும் புரிவதில்லை...
பதில்கள் இல்லையென்று...!
பதிலே இல்லாமல் கேள்விகளே...
பதிலாய் மாறும் விந்தைதான்...
பல நேரங்களில் புரியாமல்...
தர்க்க வாய்ப்பாட்டுக்குள்
தள்ளிவிடுகிறது மனிதனை!

ஆசைகளின் விளிம்புகள்
எல்லாம் அறியாமையிலிருந்து
எட்டிப்பார்க்க....
மரணத்தை மறுக்கும்...
மனிதனுக்கு தேவைப்படுகிறது...
ஆத்திகமும் நாத்திகமும்....!
மற்றபடி...அது அதுவாகவே...இருக்கிறது...!

எப்படி வேண்டுமானால் கற்பிதங்கள் கொள்ளுங்கள் மனிதர்களே....! உங்களின் எந்த செயலும் அல்லது சொல்லும் அதை பாதிப்பதில்லை...இன்னும் சொல்லப்போனால் உங்களின் அறியமையையும் தர்க்கங்களையும், பல விதமான நம்பிக்கைகளையும் உள்ளடக்கி அது....ஆனந்தத்தில் சலனமின்றி சந்தோசித்து இருக்கிறது.

விடைதேட முயலும் மனம்தான் நடுக்கடலில் தவிக்கும் படகு போல தத்தளிக்கிறது...கடல் என்னவோ அந்க படகையும் சேர்த்துக் கொண்டு ஒரு புரிதலோடு மெளனமாய்த்தானிருக்கிறது...! ஏனென்றால் கடலுக்குத் தெரியும்...காற்றடித்தால் கரை சேரும்...இல்லை எனில் அங்கேயே இருக்கும். கடலை பொறுத்த மட்டில் இரண்டும் ஒன்றுதான்....! எதிர்பார்க்கும் மனிதர்களுக்குத்தன் எல்லா அலைச்சல்களும்..! மனமில்லாத மிருங்கங்கள் கூட இயற்கையின் பகுதியாகி விடுகின்றன....ஆனால் மனிதனோ.... எப்போதும் சுமந்து கொண்டிருக்கிறான் கற்பனைகளையும்...கற்பிதங்களையும்...

எது எப்படி ஆனாலும் சரி....


"அது அதுவாகவே...இருக்கிறது...!"


தேவா. S

Friday, May 21, 2010

இலக்கில்லாத பயணம்...!
கட்டாய நகர்த்தலாய்....
நகர்ந்து கொண்டிருக்கிறது....காலம்
இந்தக் கணத்திலேயே....
இழுத்து பிடித்து நிறுத்திவிட...
ஓராயிரம் முறை முயன்று.....
தோல்வியின் வெட்கத்தில்...
துவண்டு போய் கிடக்கிறது மனது!

கடந்ததெல்லாம்...
மரத்தில் அடித்த ஆணியாய்...
பிடிங்கிய பின்னும் வடுக்களை...
சுமந்து கொண்டு நினைவுகளாய்..
ஏதேதோ நினைத்தும் ....
மறக்காமல் வேறு
எங்கேயோ கொண்டுபோய்...
நிறுத்தி விடுகிறது எதிர்காலம்!

இரவும் பகலும்..போட்டி போட்டு
நாட்களை பின் தள்ளிவிட...
கடலில் மிதக்கும் கட்டை போல
இலக்கில்லாத பயணமாய்....
நித்தம் காற்றடிக்கும் திசையின்
நகர்தலைத்தான்.. வாழ்க்கை
என்று கற்பிக்கிறது....மானுடம்!

எந்த ஒரு அர்த்தமும் இல்லாவிட்டாலும் கற்பனைகளில் மனிதனுக்கு ஏதோ ஒன்று தேவைப்படுகிறது. ஆத்மார்த்த கேள்விகளும் பதில்களும் தனக்குள்ளேயே இருக்கும் போது புறத்தில் கடவுள் என்று விசயம் தேவைப்படுகிறது. டண் கணக்கில் காதல் அவனுக்குள்ளேயே இருக்கிறது இருந்தாலும் புறத்தில் ஒரு சக்தி ஆண் என்றும் பெண் என்றும் ஒரு தூண்டுதலுக்காய் தேவைப்படுகிறது.

வினையூக்கிகளே இப்போது மொத்த வினையாய் பார்க்கப்படுவதால் செயலின் விளைவுகள் மறக்கப்படுகின்றன. ஒரு அனுபவம்தான் கடவுளும் காதலும் இன்ன பிற விசயங்களும்...தனக்குள் ஆழ்ந்து கொண்டே இருக்கும் மனிதனுக்குள்....உருவமற்ற கடவுளும், உடலற்ற காதலும் தோன்றிக்கொண்டே இருக்கும்...அதவாது புறத்தில் இருக்கும் விசயங்களின் இனிமை ஒரு மிட்டாய் சாப்பிடுவது போல இனிப்பு மிட்டாய் முடிந்தவுடன்...போய்விடும். அகத்தில் ஏற்படும் இனிப்பு தீரவே தீராது அது இனித்துக்கொண்டே இருக்கும் ஒரு பேரின்பம். நிரந்தர தித்திப்பில் இருப்பவனுக்கு மிட்டாயில் இருக்கும் பொய்மை தெரியும். இதை தெரிந்தவன் கடமைக்காக மிட்டாய் சாப்பிடுவானே அன்றி ஆவலில் அல்ல!

சூரியனும் நிலவும் காலங்கள் கடந்து பல மனிதர்களைப் பார்த்தது... தன்னில் இருந்து பிய்த்தெரிந்த பிச்சைதான் பூமியும் இன்ன பிற கோள்களும் அதுவும் கூட சூரிய குடும்ப அளவில்....சூரியன் எங்கே இருந்து வந்த பிச்சை என்று தெரியவில்லை. ஆனால் நமது ஆட்டமும் பாட்டமும் கெளரவமும், அகங்காரமும் சூரியனையும் நிலவையும் ஒரு அம்புலியாய் எண்ணி விடுவதில்லையா? என்றாவது இவற்றின் பிரமாண்டத்தை நாம் சிந்தித்திருக்கிறோமா? கோடாணு கோடி இனங்களையும், போர்களையும், சக்கரவர்த்திகளையும், சாம்ராஜ்யங்களையும்...மனிதன் காடுமேடுகளில் உடையில்லாமல் அலைந்த காலம் முதல்.....கண்டிருக்கின்றன இந்த சூரியனும் சந்திரனும் ஆனால் அவை நமக்கு அம்புலிகள்!

நோக்கமற்றதுதான் வாழ்க்கை...பள்ளியில் படிக்கும் போது கல்லூரியும், கல்லூரி படிக்கும் போது வேலையும், வேலை கிடைத்த பின் திருமணமும், திருமணத்திற்கு பிறகு..குழந்தைகளும்....என்று இலக்குகள் மாறி பயணித்தாலும்....எது நிம்மதி.....என்ற கேள்வி மட்டும் கூடவே பயணிக்கும்....இலக்குகள் ஒரு சுழற்சி என்பதை விளங்கிக் கொண்டு நிம்மதி அடையும் இலக்கில் அல்ல பயணத்தில்தான்....என்பது பிடிபடவேண்டும்! அதற்காகத்தான் கடவுளும் வேதங்களும் மதங்களும் கூட தோன்றியிருக்கலாம் ஆனால் இப்போது அவற்றையும் கூட மட்டுப்படுத்தி விட்டான் மனிதன்.

ஏனென்றால்........உண்மையில்... இலக்கு என்று எதுவும் இல்லை!

பயணம்தான் சந்தோசம்!


தேவா. S

Thursday, May 20, 2010

உன்னை மறுக்கிறோம்...காலமே...!வல்லூறுகள்...வகுத்தளிக்க....
எமக்கு ஒரு வாழ்க்கையா?
குள்ள நரிகள் தலைமை தாங்க....
வேங்கைகள் பணிந்து செல்வதா...
பிழைத்துப் போன வரலாற்றுக்கு
எம் தமிழனம் பழியாவதா?
உன்னை மறுக்கிறோம்...காலமே...
எம் எதிரிகள்..கருவறுக்கிறோம்...காலமே!

எமக்கான மண்ணில்...
யாரடா... நீ ஆட்சி செய்ய....?
எம் மக்கள் கண் பார்க்க...
உம் பார்வை எமக்கெதற்கு.....
கற்பு நெறி கொண்ட...எம் பெண்டிர்க்கு
கறுப்பு ஆடுகள்...காவலெதற்கு...!
உன்னை மறுக்கிறோம்...காலமே...
எம் எதிரிகள்..கருவறுக்கிறோம்...காலமே!

மார்பகம் உறிஞ்சி...உறிஞ்சி....
மரித்த தாயென்றரியாது..
தவித்த எம் குழந்தைகள்...எல்லாம்...
மரத்துப் போய்விடும்...அல்லது
நீதி மரித்துப் போய்விடும் என்றா நினைத்தாய்?
வெற்று மோகத்திலில்லாது.
தமிழ் ஈழ தாகத்தில்....இனி...
தழைக்கும் என் சந்ததி...!
உன்னை மறுக்கிறோம்...காலமே...
எம் எதிரிகள்..கருவறுக்கிறோம்...காலமே!

போர் முடிந்த்து போனதனால்...
எம் வடு மறைந்து போகுமா....
கல்லறையான எமது....உறவுகள்..
கண் முன் இனி தோன்றுமா...?
நீவீர் வென்று விட்டோம் ..
என்று சொன்னால் - அது
வெற்றியென்றாகுமா?
உன்னை மறுக்கிறோம்...காலமே...
எம் எதிரிகள்..கருவறுக்கிறோம்...காலமே!

வரலாற்றின்..பக்கங்களில்...
திருத்தங்கள் செய்து வை...!
எதிரியின் விலா எழும்புகளை..
தேடி எடுத்து..வென்றது தமிழனென்று...
பொன்னெழுத்தில் பொறித்துவை....
தற்போதைய..உன் செயலை....
நிரந்தரமாய்....மறுக்கிறோம்...காலமே...
எம் எதிரிகள்..கருவறுக்கிறோம்...காலமே!தேவா. S

Wednesday, May 19, 2010

தமிழீழம் வென்றெடுப்போம்....!


என்னமோ...விடுதலைப்புலிகளை கூண்டோடு அழித்து விட்டோம்...வெற்றி கண்டு விட்டோம் என்று கொக்கரிக்கிறாயே...ராஜ பக்ஸே உன் கூட சேர்ந்து உன் ராணுவமும் கொக்கரிக்கிறதே...உங்களுக்கு எல்லாம் வெட்கமாக இல்லையா? உள் நாட்டுக்குள் விடுதலை கேட்டு தார்மீக அடிப்படையில் உங்களின் அராஜகம் தாங்காமல் போராடிய ஒரு இளைஞர் கூட்டதை அழிக்க.....உலக நாடுகள் எல்லாம் வரவேண்டும் என்றால்....மறவர் படையின்...மரத் தமிழனின் வீரம் எத்தகையது என்று நாம் உணர முடியும்.

வல்லரசுக் கனவோடு....இன்னும் ஊழல் நிறைந்த சாக்கடை அரசியல் நடத்தி கொண்டு....மகாத்மாவின் பெயரை சொல்லிக் கொண்டு.......பழிவாங்கும் உணர்வையும் மென்று வெற்றிலை போட்டு தன் மேலேயே...உமிழ்ந்து கொண்ட....பாரதமே.... நீங்கள் எதையும் சாதித்து விட வில்லை....என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்....மேலே...சீனாகாரன் வருவான் உங்களை கேள்வி கேட்க....அப்போது முடிந்தால் பதில் சொல்லுங்கள்...! இலங்கையில் நீங்கள் செய்திருப்பது....முரசு கொட்டிய வெற்றியில்லை....கேவலமான.....அசிங்கம்.....தரும புத்திரர்களே.....ஏன் சகுனியைப் போல் நடந்து கொண்டீர்கள்....வாழ்விழந்த மக்களின் சாபம்..என்னவெல்லாம் உங்களை செய்யுமோ?

இப்படி சீனாகாரனிடமும், பாகிஸ்தான்காரனிடமும்...பிச்சை எடுத்து ஒரு.... இன அழிப்பை நடத்திவிட்டு என்ன கொக்கரிப்பு வேண்டி கிடக்கிறது? வரலாற்றில்...ஒரு முக்கியமான விசயம் நடந்தேறி விட்டது....அதில் தமிழனின் பராக்கிரமம்....பொன்னெழுத்தில் பொறிக்கப்பட்டு விட்டது. அது என்ன தெரியுமா? ஒரு உள் நாட்டிற்குள் உரிமை கேட்டு போராடிய குழுவை ஒழிப்பதற்கு...உலகமே திரண்டு வந்து....சண்டையிட வேண்டிய நிலைமை....என்றால்....தமிழனின் வீரம் எத்தகையது என்று சொல்லத்தேவையில்லை....

தனியே....ராஜ பக்ஸேயும் அவரது....கூட்டணியும் போரிட்டு இருந்தால்.....சிங்களவனின்...சாம்பல் கூட மிஞ்சி இருக்காது...இந்த உண்மை உலகத்துக்கே தெரியும்.......! காலச்சக்கரம்...தன் சுழற்சியை...இன்னும் நிறுத்த்திவிடவில்லை....அந்த சுழற்சியில்...சூழ்ச்சி வேர்கள் கட்டாயம் அறுந்து போகும்.....!

முட்டாள் சிங்களவன் ஒரு பிரபாகரனை..ஒழித்துவிட்டதாய்...கொக்கரிக்கிறான்......ஆனால் ஒவ்வொரு உண்மைத் தமிழனும் இன்று பிரபாகரனாய் மாறி நிற்கிறான்...தமீழீழம் வென்றெடுக்க.....!


தேவா. S

Monday, May 17, 2010

மறந்தால் நாம் தமிழரில்லை...!


ஒரு வருட காலம் ஆகிவிட்டது....இன்றோடு.. கடந்த மே 18 ஆம் தேதி முள்ளிவாய்க்காலில் நடந்த கொடுமை ஜென்ம ஜென்மமாக தமிழனின் கண் முன் நின்று ஆடிக் கொண்டே இருக்கும், ஆண்களையும் பெண்களையும் கொன்று குவித்து உலக நாடுகளுடன் சேர்ந்து ஒரு வெறியாட்டம் ஆடி..போர் மரபுகளை எல்லாம் உடைத்து....தமிழனின் ரத்தம் குடிக்கப்பட்ட நாள்.

கேணல் சூசையின் கடைசி பேச்சினை நான் யூ ட்யூப் வழியாகக் கேட்டேன்.....காட்சிகள் இப்போதும் கண் முன் விரிந்து நிற்கிறது.....

" எங்களுக்கு உலக நாடுகள் உதவ வேண்டும்....எங்கு நோக்கிலும் விமானங்கள் குண்டுகளை இட்டு தமிழர்களின் உயிரை குடித்துக் கொண்டிருக்கிறது...எங்கு பார்த்தாலும் பிணங்கள் ...இரத்தம்... பச்சிளம் குழந்தைகள் தாய்மாரை இழந்தும்...பெண்கள் குழந்தைகளை இழந்தும்....கைகால்கள் இல்லாமல் பெண்களும், குழந்தைகளும், முதியவர்களும்....ஆண்களும் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். வரலாற்றில் பெரிய பிழையை இலங்கை அரசு செய்து கொண்டிருக்கிறது....."

சர்வதேச சமுதாயமே சரணடைகிறோம் என்று அழைப்பு விடுத்தார் கேணல் சூசை,

மன்னிப்பும் மனிதனேயமும் தமிழன் உலகிற்கு கற்றுக் கொடுத்த பாடங்கள்....! அதை சரியாக படிக்காத சர்வதேச சமுதாய்ம்....கொன்றழித்தது.....தமிழனோடு சேர்த்து அவன் படித்துக் கொடுத்த பாடங்களையும். " கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தகுடி " என்ற பெருமையோடு...கல்லுக்குள்ளும் மண்ணுக்குள்ளும் புதையுண்டு போயின நமது உறவுகள்!

தமிழ் பேசினதாலேயே....தமிழன் என்பதாலேயே....அழிக்கப்பட்ட ஒரே இனம் நமது இனம் தான். இந்த பகிங்கர இன அழிப்பை தாய் தேசத்து தமிழன் உணர விடாமல் வேகமாய் காய் நகர்த்தி தமிழ் நாட்டு ஊடகங்களை எல்லாம் தமது கட்டளைகளால் கட்டி வைத்தது ஆளும் அரசு கட்சிகள்....! தன் சொந்த இனத்தை எதிரிகள் சொக்கட்டான் ஆடிய வேளையில் மானாட மயிலாட பார்த்து விட்டு தேசியம் பேசிக் கொண்டிருந்தான் தாய்த்தமிழன்.

அரசியல் கட்சிகள் எல்லாம் வேக வேகமாய்....தமது ஓட்டு வலைக்கு ஈழத்தமிழன் என்று பெயரிட்டு...பகிங்கர பிச்சையை ஆரம்பித்தன. எதிர்கால அரசியல்வாதிகள் என்று சொல்லக்கூடிய.... நடிகர் நடிகைகள் ஒரு பக்கம், அரசியல்வாதிகள் ஒரு பக்கம் என்று தமது பிரபல்யம் என்று சொல்லக்கூடிய மிகப்பெரிய வியாபர உத்தியின் மூலப்பொருளாக தமிழன் வைக்கப்பட்டான். அப்பாவி முத்துக்குமரன்கள் தன்னை தீவைத்து கொளுத்திக் கொண்டு.....இந்த கயவர் பூமியில் இருந்து புறப்பட்டு போய்விடுவோம் என்று போய்விட்டான்.

இன அழிப்பின் உக்கிரத்தில் தமிழக அரசியல்வாதிகள் நினைத்திருந்தால் எத்தனையோ தமிழர்களின் உயிரை காப்பாற்றி இருக்கலாம்...கையில் பதவி இருந்தவர்கள் எல்லாம்....கடிதம் எழுதியும், தந்தி கொடுத்தும் கொண்டு உண்ணாவிரத மேடைக்காட்சிகளை அரங்கேற்றிக் கொண்டிருந்த போது அடி பட்ட தமிழன் தண்ணீர் இல்லாமலும், மருத்துவ உதவி இல்லாமலும் அலறிக் கொண்டிருந்தான்.

போர் நிறுத்தம் என்ற..இந்திய அரசின் அரசியல் உபாயத்தை சரியாக பின்பற்றி....தேர்தல் முடியும் வரை காத்திருந்த......ராஜபக்ஸே.......! தேர்தல் முடிவுகளுக்குப்பின் தற்காலிகமாய் அணிந்திருந்த மனித முகமூடியை கழட்டிவிட்டு மீண்டும் ஒரு உக்கிர தாக்குதல் நடத்தினார்! ஆளும் கட்சியினருடன் கூட்டணி வைத்த காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால்....கண்டிப்பாய் ஈழத்தில் போர் நிறுத்தம் வரும் என்று மனப்பால் குடித்த தமிழன் முகத்தில் பூசப்பட்டது கரி. தமிழரைக் கொண்டே...தமிழரை அழிக்கும் உத்தியை அறிந்து வைத்திருந்தது இத்தாலியமும் இந்தியமும் கலந்த மூளை....தமிழன் நொறுக்கப்பட்டான். வரலாற்றில் மருது பாண்டியர்களுக்கும், பூலித்தேவனுக்கும், கட்டபொம்மனுக்கும், வீரன் சுந்தரலிங்கத்துக்கும் என்ன நடந்ததோ.... அதை மறுக்காமல் வரலாறு ஈழத்தமிழனுக்கும் வழங்கி தனது வேலையை செவ்வனே முடித்துக்கொண்டது...

காலம் கடந்துவிட்டது ...தோழர்களே.... இதை வெறுமனே....ஒரு நினைவு கூறும் ஒரு கட்டுரையாக நினைக்காமல்....இதை உங்களுக்குள் விதையாக விதைத்து வைக்கிறேன். ஒவ்வொரு தமிழனும் தனது சந்ததியினருக்கு நம் இனம் வஞ்சிக்கப்பட்டதையும்..... நமது மக்கள் விரட்டப்பட்தையும்....கதையாய் பாடலாய் சொல்லுங்கள்.......முள்ளிவாய்காலில் பலியான பல்லாயிரக்கணக்கான நமது உறவுகளின் ஆன்மா சாந்தியடைய.....எல்லம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்வதோடு......


வரிப்புலியின்....வெஞ்சினத்தை நெஞ்சினில் கொள்வோம்!தேவா. S

Sunday, May 16, 2010

" இரண்டு இட்லி கொடுப்பா...."
வாழ்வின் எல்லா நிகழ்வுகளுக்கும் காலமே நாம் வாழும் காலத்திலேயே பதில் சொல்லி விடுகிறது. நம்முடைய அன்றாட நெரிசலில் சிக்கி கொண்டு அந்த இரைச்சலில் காலத்தின் பதிலை கேட்காமலும் கவனிகாமலும்தான் விட்டு விடுகிறோமே தவிர.....காலம் பதில் சொல்லாமல் எப்போது இருந்ததில்லை.

சின்ன வயதில் எப்போதும் ஏதாவது கேட்டு பெற்றோர்களை நச்சரிக்காதவர்கள் என்று யாரும் இருக்க முடியாது....எல்லா நேரங்களிலும் நாம் கேட்டது கிடைப்பதில்லை... மிகைப்பட்ட நேரங்களில் மறுக்கப்பட்டிருக்கிறது... அதனால் நிறைய கோபம் அப்பா அம்மா மேல வரும். எனக்கு அப்படித்தான்.....அப்ப செய்யும் எந்த செயலும் அர்த்தம் விளங்காமல்... கோபம் வரும்.

எதுக்கு 10 ஃபேன் போட்டுகிட்டு படுக்கணும்... பெட்ரூம்ல ஒரு பேன் ஹால்ல ஒரு ஃபேன்னு ஏன் இப்படி....? அந்த ஃபேன ஆஃப் பண்ணு...இந்த லைட்ட ஆஃப் பண்ணுனு ஏன் இப்படி தொல்ல பண்றாரு...? மனுசனுக்கு வாழ்க்கைய வாழவே தெரியல.. எப்போ பாத்தாலும் கஞ்சத்தனம்தான்... ! அம்மாகிட்ட கூட...ஏன் இவ்வளவு பழைய சாதம் மிஞ்சுது? கொஞ்சமா சாதம் செய்யக்கூடாதா என்று நாங்கள் எல்லாம் இட்லி சாப்பிடும் போது..... அவர் அந்த பழைய சாதத்தை சாப்பிடும் போது பத்திகிட்டுதான் வரும்...ஏன் தான் வாழ்க்கையை வாழாம இப்படி எல்லாம் இருக்காரோ என்று.....

ஒரு நாள் நாங்க தீபாவளிக்கு ஜவுளி எடுத்துட்டு ....இரவு நேரமாச்சுன்னு ஹோட்டலுக்குப் போய் சாப்பிட்டு போகலாம்னு முடிவெடுத்தோம்..என்னோட அந்த 15 வயசிலும் ஹோட்டலுக்கு போறதுன்னா ஒரு சந்தோசம் தான்..... ஆர்டர் எடுக்க ஆளு வந்தாரு... நானும் அக்காவும் போட்டி போட்டு கிட்டு...எனக்கு ஒரு பூரி செட்டு அப்புறம் ஒரு மசாலா தோசைன்னு ...டம்ளரை (அருண் ஹோட்டலில் திருடியது என்று எழுதி வைத்திருப்பார்கள்...அவ்வளவு நம்பிக்கை மனிதர்கள் மீது இது பற்றி பேசினால் தனியா ஒரு பதிவு எழுத வேண்டி வரும்) அக்காவும் அம்மாவும் ஏதேதோ ஆர்டர் செய்ய....பேரர் அப்பா முகத்தை பார்த்து என்ன வேண்டும் என்று கேட்பார்....அவர் என்ன சொல்லப் போகிறார் என்பது...எங்களுக்கு .....மில்லியன் டாலர் கேள்வி....ஒண்ணும் வேணம்னு வழக்கம் போல சொன்னாலும் நானும் அம்மாவும் அக்காவும் விடுவதாயில்லை....எப்பவாச்சும் தானே ஹோட்டலுக்கு வர்றோம்...ஏதாவது ஆர்டர் பண்ணுங்கனு ஃபிரசர் கொடுக்க....கடைசியில் வேறு வழியில்லாமல்.....


" இரண்டு இட்லி கொடுப்பா...."

ச்சே......என்ன இவர் இவ்வளவு உணவு வகை இருந்தாலும்...கஞ்சத்தனமாக மீண்டும் ரெண்டு இட்லியோடு போதும்னு சொல்றாரே....என்று நினைத்தாலும்.... நம்ம பூரி செட்ட ஒரு வெட்டு வெட்டுவோம் என்ற ஆர்வத்தில் ....உப்பலான அந்த சூடான பூரியின் வருகைக்காக காதலோடு காத்திருந்தேன்...

காலங்கள் உருண்டோடியது ஒரு கணத்தில் நிகழ்ந்து விட்டது....அந்தக் காட்சி மாற்றம் என்னை துபாயில் கொண்டு வந்து விட்டு விட்டது...

ஒரு நாள் நானும் எனது மனைவியும் 5 வயது எனது மகளும் மாதக் கடைசியான ஒரு வெள்ளிக்கிழமை காலையில் கோவிலுக்கு சென்று விட்டு.....திரும்பும் போது....கலை 8 மணிக்கு ஹோட்டலில் சென்று சாப்பிடலாம் என்று மகளும் மனைவியும் வற்புறுத்த.....வேண்டாம் என்று என் பர்சில் இருந்த 100 திர்ஹம்ஸ் என்னிடம் ரகசியமாய் சொல்ல...

நான் வீட்டில் போய் சாப்பிடலாம் என்று சொன்னதற்கும் மனைவியும் மகளும் ....அப்படி என்ன மிச்சம் பிடித்து என்ன செய்யப்போகிறோம் என்று சொல்ல....விளைவு....வசந்த பவன் டேபிளில்....இரண்டு பேருக்கும் பிடித்தமான உணவுகளை ஆர்டர் செய்தாகிவிட்டது.....பேரர்...என் முகத்தைப் பார்க்க....பர்ஸில் இருந்த 100 திர்ஹம்ஸ் மிரட்ட ஆரம்பித்தது...மாதக் கடைசி வேறு......வேறு எதேனும் செலவு 2 மூணு நாளில் வந்தால் என்ன செய்வது....என்ற அந்த மிரட்டலுக்கு அடி பணிந்து.......எனக்கு எதும் வேண்டம்மா... நீங்க சாப்பிடுங்க என்று மறுத்தேன்........

அட.....எப்பவாச்சும் தானே ஹோட்டலுக்கு வர்றோம்...ஏங்க இப்படி என்று..... மனைவியும்....டாடி...ஏன் டாடி இப்படி இருக்கீங்க..... பூரி செட் சாப்பிடுங்க என்று 5 வயது என் மகளும் வற்புறுத்த.....பர்ஸில் இருந்த 100 திர்ஹம்ஸின் மிரட்டலுக்கு பணிந்த படி.....மெல்ல சொன்னேன்........

" இரண்டு இட்லி கொடுப்பா...."

அப்பாவின்....கடந்த கால எல்லா செயலும் அர்த்தம் பொதிந்ததாய் என் கண் முன் வர....மொபைல் போனை எடுத்து....ஊருக்கு போன் செய்தேன்...அப்பாவிற்கு,,,,, அப்பா மறுமுனைக்கு வர.....என்ன தேவா எப்படியிருக்க....என்று கேட்பற்கு முன்னாலேயெ தழு தழுத்த குரலில் சொன்னேன்...

"என்னை மன்னிச்சுடுங்கப்பா....என்று....... " அவருக்கு ஏன் அந்த மன்னிப்பு என்று புரிந்திருக்காது....ஆனால்....இதைப்படிக்கும் வளரும் பிள்ளைகளுக்கு புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

தேவா. SSaturday, May 15, 2010

கலைக்கப்படும் கனவுகள்...!


அத்து
மீறி அடுத்தவர் வாழ்க்கையிலும் விருப்பு வெறுப்பிலும் மூக்கு நுழைத்து கருத்துக்களை திணிப்பது நமது கலாச்சாரமாய் ஆகிவிட்டது என்று கூட சொல்லலாம்...! பக்கத்து வீட்டுக்காரன் என்ன சம்பாதிக்கிறான்...அவன் பையன் +2 வில் எத்தனை மார்க்? அவரது மகள் யாரையும் காதலிக்கிறாள் என்று எத்தனை எத்தனை அத்துமீறல்கள் நடக்கின்றன நமது சமுதாயத்தில்...!


தன்னைப்பற்றி சிந்திக்க திரணியில்லாமல் தான் தோன்றித்தனமாக அடுத்தவரை பற்றி சிந்திக்கவும் விமர்சனம் செய்யவும் ரொம்ப வசதியாய் பழகிக் கொண்ட ஒரு வக்கிரபுத்திதான் அடுத்தவன் கதை பேசுவது..... அது அலுவலகம் ஆகட்டும் டீக்கடை ஆகட்டும்... வீட்டு வாசலில் அமர்ந்கு பேசும் பெண்களாகட்டும், குழாயடியில் தண்ணீர் பிடிக்கும் அந்த நேரத்தில் பத்து வீட்டு சமாச்சாரத்தை பலகாரம் செய்யாவிட்டால் இவர்களுக்கு தூக்கம் வராமல் போனது வியாதியா? இல்லை சமுதாயத்தை பிடித்துள்ள பிணியா?


நண்பர்கள் கூட்டத்தோடு பேசிக் கொண்டிருந்த ஒரு கல்லூரி விடுமுறை தினத்தில் ஒரு பெண் அவளுக்குப் பிடித்த ஆடையை...ஒரு ஸ்கர்ட்டும் டி சர்ட்டும் அணிந்து கொண்டு தன்னுடைய கணவனுடன் ரோட்டில் செல்கிறாள்.. கையிலும் இடுப்பிலுமாக இரண்டு குழந்தைகள் ...பக்கத்தில் இருக்கும் நண்பர் ஒருவர் சொல்கிறார்....ஒரு கேவலமான வார்த்தையை கூறி இவள் கண்டிப்பாய் அப்படி பட்டவள் என்று அடித்து சொல்வேன் என்று...... !

ஏன் அவள் உடுத்தி செல்லும் அவனது கணவனுக்கு ஒத்துக் கொள்கிறது....அவளும் அது பற்றி ஒரு அக்கறை இல்லாமல் சாதரணமாய் அந்த பெண்ணும் சென்று விட்டாள் ஆனால் சமுதாயம் அது பற்றி ஒரு பார்வை வைத்திருக்கிறது....இப்படி உடுத்தினால் இப்படி பட்டவள் ...அப்படி உடுத்தினால் அப்படிபட்டவள் என்று அடுத்தவரின் பிரைவசி என்று சொல்லக்கூடிய தனி உரிமையில் அத்து மீறி நுழைந்து ஆர்ப்பாட்டமாய் சோபா போட்டு உட்கார்ந்து கொள்வது என்று அத்துமீறல் தொடர்ந்து கொண்டிருக்கிறது.


பல நேரங்களில் திரையில் தோன்றும் நட்சத்திரங்களின் சொந்த வாழ்க்கையில் தனது மூக்கை நுழைத்து மீடியாவும் காசு பார்த்து இருக்கிறது. அரசியல்வாதிகள் கூட கருத்துப்போரை மறந்து அடுத்தவரின் சொந்த வாழ்க்கையினை விமர்சிக்கும் போக்கில்தான் பெரும்பாலும் ஆர்வம் காட்டி இருக்கிறார்கள். அடுத்தவன் வாழ்க்கை பற்றி .. ஏன் இவ்வளவு அக்கறை நமது மக்களுக்கு? ஒருவனின் சொந்த விசயங்கள் அடுத்தவனையோ அல்லது சமுதாயத்தையோ பாதிக்காத போது திரை யை விலக்கிப்பார்த்து உள்ளே இருக்கும் விசயங்களை விமர்சிப்பது....அ நாகரீகம் என்று எப்போது இந்த சமுதாயம் உணரும்?


கணவன் மனைவியாய் இருந்தாலும்...அல்லது பெற்றோர் குழந்தைகளாய் இருந்தாலும் சரி... நட்பு வட்டாரமாய் இருந்தாலும் சரி... அவர் அவருக்கு இருக்கும் அந்த வெற்றிடத்தை அவர்களின் சந்தோசத்தை கலைக்க முயலாமல்....அந்த வெற்றிடத்தால் அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் தொந்தரவு ஏதும் இல்லை எனும் பட்சத்தில் அதை ரசித்து அல்லது பிடிக்கவில்லையெனில் விலகி வாழ்ந்தால் எவ்வளவு சுகமாயிருக்கும்!


அத்துமீறலும் அனுமதியின்றி நமக்கு எது தேவையென அடுத்தவர் கூறுவது...... நமக்கு பிடித்ததை விமர்சிப்பது..மற்றவருக்கு பிடித்ததை நம் மீது திணிப்பதும் வலியுறுத்துவது....உடனடியாக யாரும் நிறுத்தப் போவதில்லை...இருந்தாலும்...இந்த கவிதையின் மூலம் எனது ஏக்கத்தை கோபமாக்கியிருக்கிறேன்....

எமது எல்லைகளுக்குள்...
அத்துமீறும்...அதிகாரம்
கொடுத்தது யார் தோழர்களே...
எமக்கான மைதானத்தில்...
உங்களின் விளையாட்டை...
எப்படி நான் அனுமதிப்பது?

என் கனவுகளுக்கு...
கலர் கொடுக்கவும்...
கருப்புவெள்ளையாக்கவும்..
உங்களை தூரிகை...
தூக்கச் சொன்னது யார்?

உங்களின் அனுமதி....
எமது தோட்டத்தினை....
பார்வையிடவும் ....
பார்த்து ரசிக்கவும் மட்டுமே...
எமது தோட்டத்திற்கு...
வெளியே இருத்திக் கொள்ளுங்கள்..
உங்களின் திருத்தங்களை!


ஒரு நாள் எமது சபை...
ஞானத்தை....பேசும்...
ஒரு நாள் காமத்தை பேசும்...
பல நாள் காதலில்...கிடக்கும்...
ஒரு சில நாள்....
வார்த்தைகளின்றியே நகரும்..
அது பற்றி உங்களுக்கு...
என்ன ஆராய்ச்சி?

எமது வெற்றிடத்தில்....
உங்களுக்கான..அனுமதி....
நிரந்தரமாய் மறுக்கப்பட்டது....!
சந்தோசங்களை... நீட்டித்தும்...
துக்ககங்களை...அறுத்தெரிந்தும்....
தொடரும் எமது தினசரிகளில்...
உங்களின் கருத்து குப்பைகளை...
களைவதிலேயே....
கலைந்து போகின்றன...
என்னின் கனவுகள்!


தேவா. S

Friday, May 14, 2010

சந்தியா குட்டியின் பிறந்த நாளும்... நம்ம ஊர் நினைவுகளும்...!

துபாயிலிருந்து அபுதாபிக்கு சென்று கொண்டிருக்கிறேன்....பாலைவனத்துக்கு நடுவே.... எப்படி இந்த சாலைகளை தரமானதாக உருவாக்கிஅதை பராமரிக்கிறார்கள் என்று வியந்து கொண்டே வண்டியை ஓட்டிக் கொண்டிருக்கிறேன்.....உச்சி நேரத்தில் பயணம் செய்ய வேண்டும் வழியில் நமது ஊர் உணவுகள் கிடைக்காது என்பதால் துபாயில் இருந்தே...சரவண பவனில் தயிர் சாதமும், சாம்பார் சாதமும் வாங்கிக் கொண்டு சென்றோம்.

நல்ல உச்சி வெயில் எங்காவது வண்டியை நிறுத்திவிட்டு மதிய உணவை முடிக்கலாம்.....என்று நிறுத்த நிழல் கூட இல்லையே என்று எண்ணிக்கொண்டு இருக்கும் போது சரலென்று...மனம் ஊரை நோக்கி பறந்ததது... நம்ம ஊரில் எல்லாம் ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்கு செல்லும் வழி நெடுகிலும் எத்தனை மரங்கள் இருக்கும்....சாலையே தெரியாத அளவிற்கு....எவ்வளவு நிழல் இருக்கும்.....சாலை அப்படி இப்படி இருந்தாலும்.....ஒரு உயிர்ப்பை நமது ஊரில் பார்க்க முடியும்....

ஊர் என்றால் ஒரு கண்மாய்க்கரை ஓர மரமாக வண்டியை நிறுத்திவிட்டு....உணவை முடித்துவிட்டு.....கண்மாய் தண்ணீரில் பாத்திரம் கை எல்லாம் கழுவி விட்டு...எவ்வளவு வெயிலாய் இருந்தாலும் குளு குளு காற்று வீசும் மரத்தினடியில் கொஞ்ச நேரம் ஆழ்ந்து சுவாசித்தால் எவ்வளவு ஆசுவாசமாயிருக்கும்....

வழி நெடுகிலும் கிராமங்களும்....மனிதர்களும்...வாழ்க்கைமுறைகளும் நாம் வேடிக்கையாக பார்த்துக் கொண்டே செல்லலாம்....பள்ளி செல்லும் குழந்தைகளும்....குறுக்கே வரும் மாட்டு வண்டியும்....ஒவ்வொரு சிற்றூரையும் கடந்து செல்லும் போது காணும் டீக்கடைகள்...வாசலிலும் சுற்றிலும் நிற்கும் மனிதர்கள்...முரட்டு மீசையும்... நரைத்த முடியும்....சட்டையில்ல உடம்பில் கம்னியூஸ்ட் சிவப்பு துண்டும் அணிந்த பெரிசுகளும்...மொத்தத்தில்....ஒரு பால்காரரின் மணி ஓசையும், ரோட்டில் யாரோ யாரிடம் சண்டை போடுவதையும் நாம் தவிர்க்காமல் நாம் காணமுடியும்.....

எங்கும் மனிதர்கள்...வெற்றிலை குதப்பிய ஆண்கள் பெண்கள்...காக்கா..குருவி...ஆடு...மாடு.......பாங்க்......பாங்க்....பாங்க்..........ஏதோ ஒரு ஹாரன் ஒலி...என்னை திரும்ப...துபாய் டு அபுதாபி சாலைக்கு மீண்டும் கொண்டுவர......ஏக்கம் கலையாமல் சாலை ஓரமாக இருந்த வண்டியை டபுள் பார்க்கிங்க் இட்டு விட்டு.....வெயில் உள்ளே வராமல் ஏ.சி. யை கூடுதலாக வைத்துவிட்டு....வாங்கி வந்த தயிர் சாதத்தை....காலி பண்ணி விட்டு...மீண்டும் வண்டியை உசுப்பேற்றி அபுதாபி நோக்கி வண்டியை சீர விட்டேன்...

அச்சச்சோ.....எதுக்கு அபுதாபி போறேன்னு சொல்லவே இல்லையே...... நம்ம ராமராஜ் அண்ணன் (குடும்ப நண்பர்) பொண்ணு சந்தியாகுட்டிக்கு பிறந்த நாள்ங்க....15.05.2010 அன்னைக்கு 8 வயது ஆகிறது இந்த பட்டாம் பூச்சிக்கு.....வாழ்த்த போறேங்க.....


குட்டிப்பெண் சந்தியாவை .....என்னோடு சேர்ந்து.... நீங்களும் வாழ்த்துங்களேன்.....!

Wednesday, May 12, 2010

காலத்தின் சாட்சி....!

நண்பர் ஜீவன் (தமிழ் அமுதன்) சொல்லித்தான் என்னுடைய " பணம் தேவையில்லை மனமே போதும்" என்ற கட்டுரை விகடன் குட் பிளாக்ஸ் வரிசையில் வந்திருகிறது என்று தெரியும். எழுத்தின் வீச்சில் என்னுடைய வலைப்பூ தீப்பிடித்து எரிவததோடு வலைப்பூவினை விட்டு விட்டு வெளியேறும் போது ஒரு சிறு பொறியை கொண்டு செல்லுமானால் அது எழுத்தின் நோக்கதிற்கு கிடைத்த வெற்றி.

என்னைப்பற்றி அறிவதைவிட....என் எழுத்துக்களின் பின் புலத்தில் இருக்கும் வீச்சு முழுதாய் ஒருவரிடம் சென்றடைந்தால் அதுவே நிம்மதி....! ஆதங்கங்களை.... மனித அவலங்களை மக்களிடம் கொண்டு செல்லும் ஒரு ஒப்பற்ற வேலையை இன்று நமக்கு ஊடகங்கள் செய்கின்றன. நல்ல எழுத்துக்களை விரும்பிப்படிக்கு வாசகர்களின் வட்டம் அதிகரிக்க வேண்டும் ஆனால் அதற்கு எதிர்மறையாக ....உணர்ச்சி சார்ந்த விசயங்களுக்கும், மதம் சார்ந்த விசயங்களுக்கும், சினிமா சார்ந்த விசயங்களும் மக்கள் அதீத ஆர்வம் காட்டுவதற்கு காரணம்.... அறிவின் விரிவாக்கத்திற்கு என்று சொல்ல முடியாது.. .மிகைப்ப்ட்ட நேரங்களில் இவை எல்லாம் உணர்ச்சியினை தூண்டி விட்டு.... மனிதர்களை செயல் படச் செய்வதாகவே எனக்குப் படுகிறது.

சில நண்பர்கள் விரும்பிப்படிக்கிறார்கள் என்னை கேட்காமலேயே பதிவுகளுக்கு வாக்குகளும் பின்னூட்டங்களும் இடுகிறார்கள் .... வாக்குகளை எதிர்பார்த்து வாசகருக்கு எது தேவை என்று பார்த்து பார்த்து யோசித்து அலங்காரங்கள் கூட்டி எப்போதும் பதிவு எழுதுவதில்லை..! பெரும்பாலும் ஆதங்கங்கள் ஏற்படும் போது எல்லாம்.....அதை வெளிப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் எழுதிவிடுபவன் மற்றபடி வாசகரை அபகரிக்க வேண்டும் என்ற.... நோக்கில் எழுதும் எழுத்து வியாபரியும் அல்ல...ஓட்டுக்காய் வாக்காளனிடம் கையேந்தும் அரசியல்வாதியுமல்ல!

நம்மைச் சுற்றி நடக்கும் ஓராயிரம் அநீதிகளை பார்த்துக் கொண்டு சும்மா செல்லாமல் எழுதியாவது வைப்போமே என்ற எண்ணத்தில் நான் கிழிக்கும் சிறு சிறு தீக்குச்சிகள் தான் வலைப்பதிவுகள் .....! பதிவுகளை பாராட்டும் சிலரை விட..... என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரியவில்லை என்று கேட்டவர்கள் தான் அதிகம். என்னுடைய ஒரு பதிவுத் தொடருக்கு (சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா) ஒருத்தர் கமெண்ட் போட்டிருந்தார்... அதை பதிவில்தான் போட வேண்டும் கமெண்டில் போடக்கூடாது என்று அப்போதே முடிவெடுத்தென்....அது....

" டேய் பன்னாட....எப்படா திருந்தப் போறீங்க"ன்னு

ஒரு பெயரில்லாமால் கருத்து தெரிவித்திருந்தார் அவர் தான் உண்மையான வாசகர்....ஒன்றிப் போய்விட்டார் கட்டுரையோடு சேர்ந்து அதில் லயித்து அதில் ஏற்பட்ட ஆதங்கம்...சரி....இது போல ஒவ்வொருவரும் தனக்குள் கேட்டுக்கொள்ள வேண்டும் என்றுதான் கட்டுரையே ஆரம்பித்தேன்.... ! அவரின் கமெண்ட் என் கட்டுரையின் அபார வெற்றி! அவருக்கு எனது நமஸ்காரங்கள்!

கடந்த பதிவினை படித்து விட்டு நண்பர் ஒருவர் சிங்கப்பூரிலிருந்து ஆன்லைனில் தொடர்பு கொண்டு....கட்டுரையை பார்த்தேன்....தமிழிசில் ஓட்டுப் போட்டு விட்டேன் என்றார்... ! எனக்குள் சந்தோசமில்லை...ஒட்டு என்பது கட்டுரையில் திளைத்து அதற்கான நன்றி நவிழல் மேலும் மிகைப்பட்ட பேருக்கு கொண்டு சேர்க்கும் ஒரு முயற்சி...அவ்வளவே...! அது எந்த அளவிலும் எழுத்தாளனை பாதிக்க கூடாது.....பாதித்தால்.. நல்ல எழுத்துக்களை வெளிக்கொணர முடியாது....என்பது எனது கருத்து....மீண்டும் ஒரு தீக்குச்சி கிழிப்பது போல இந்தப்பதிவும்....! தீ பரவலாம் அல்லது ...என்னோடனே அணையாலாம்... ஆனால் ஒரு விசயம் ....எனக்குள் ஏற்படும் எண்ணங்களை பதிவாக்கும் காலத்தின் சாட்சிகளில் நானும் ஒருவன்!

தேவா. S

Tuesday, May 11, 2010

அந்த ஒருவர்... யாராய் வேண்டுமானாலும் இருக்கலாம்......


வானவில் போலத்தான் வாழ்க்கையின் நிகழ்வுகளும் கண நேரத்தில் கண் முன் தோன்றி மறைவது போல எத்தனை எத்தனை நிகழ்வுகள் நம் கண் முன்னே தொன்றி மறைந்து விடுகின்றன சில நிகழ்வுகள் எத்தனை காலம் ஆனாலும் ஆறாத வடுவாய் நம் நெஞ்சில் சில ஞாபங்ககளை விட்டுச் செல்கின்றன. அவற்றின் படிப்பினைகளும் எப்போதும் சேர்ந்தே நம்முடன் பயணிக்கின்றன....

சென்னையில் ஒரு நான்கு நட்சத்திர ஓட்டலின் ரிசப்ஷனிஸ்டாக நான் வேலை செய்து கொண்டிருந்தேன்....! பலதரப் பட்ட மனிதர்கள் ....ஆடம்பரமான உலகம் "கெஸ்ட்ஸ் ஆர் ஆல்வேய்ஸ் ரைட் " என்ற மனதில் பதிவு செய்யப்பட்ட வாசங்களுடன் பணியாற்ற வேண்டியது எமது கடமை.

அறையில் ஹாட் வாட்டர் (hot water) vaரவில்லையென்றாலும் சரி, ரூம் சர்வீஸின் காஃபியில் சர்கரை அளவு குறைந்தாலும் சரி...அறையில் ஏசி க்காற்றின் குளுமை குறைஞ்சாலும் சரி.... முதலில் பந்தாடப்படும் இடம் ப்ரண்ட் ஆபீஸ் (FRONT OFFICE). கோபமாய், குளுமையாய், எரிச்சலாய், சோகமாய், பதட்டமாய், ஆடம்பரமாய், பகட்டாய், சந்ஷோசமாய் என்று எல்லா தரப்பினருடனும்.. .புன்னகை புரிந்து நடந்து கொள்ளும் ஒரு இடம்.

பார் க்கு ரெகுலராய் வரும் ஒருவர் வெளியில் சென்று இரவு பத்து மணிக்கு மேல் ஆட்டோ ஓட்டுபவர் அவர் இருக்கும் பகுதிக்கு வரமறுத்ததால் .....ரிஸப்சனுக்கு வந்து ஹோட்டலின் செலவிலேயே.. சைதாப்பேட்டை போலிஸ் ஸ்டேசனுக்கு போன் செய்து என்னைப்பற்றி கம்ப்ளெய்ன் செய்த சம்பவங்களும் நடந்திருக்கிறது. அவரது கோபத்துக்கு காரணம் ஆட்டோகாரர் வரமறுத்த பின் ஏற்பட்ட அவமானத்திற்கு நாங்கள் (ஹோட்டல்)தான் காரணம் என்ரு குடிகார மூளை சொல்லியிருக்கலாம். அப்போது கூட அவரிடம் சிரித்த முகத்தோடுதான் பேச வேண்டும் (என்ன கொடுமை சார் இது)

அன்று இரவு நேர பணியில் இருந்த எனக்கு தூக்கம் கண்ணை சுழற்றிக்கொண்டு வந்தது.... நள்ளிரவு (அது அதிகாலைதான்) 1 மணிக்கு காலையில் வரக்கூடிய எக்ஸ்பெட்டட் அரைவல் லிஸ்ட் பாத்துட்டு ரூம்ஸ் எல்லாம் ரெடி பண்ணச்சொல்லிட்டு கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்கலாம் என்று டெலிபோன் ஆப்பரேட்டர் கேபினுக்குள் நுழைய சென்ற சமயம் 1 கார் வேகமாய் எங்களின் வளாகத்துக்குள் வந்தது....

ஓ....இப்போ போய் கெஸ்ட் வர்றாங்களே தூக்கம் போச்சேன்னு நினைச்சுகிட்டு மறுபடியும் ரிஷப்ஸன் கவுண்டர் உள் வந்தேன்...4 ஆண்கள் நல்ல உயரம்... கழுத்தில் தடிமனான தங்க செயின் ப்ரேஸ்லெட் என்று...வாக்கின் கெஸ்ட்ஸ் (walkin guests) அவர்களுக்கு விஷ் பண்ணி விட்டு ஜி ஆர் சி (guest registration card)புக்கை எடுத்து கொடுத்தேன் பூர்த்தி செய்வதற்காக ...............பூர்த்தி செய்து முடித்தவுடன்...சார்...கேன் ஐ ஹேவ் சம் அட்வான்ஸ் சார் (வாக்கின் கெஸ்ட் ......கட்டாயம் வாங்க வேண்டும் - நிர்வாகம்)....கேட்டவுடன் கருப்பாய் இருந்தவர் முகம் சிவந்து அவரது மலேசியன் பாஸ்போர்ட்டை எடுத்து தூக்கி வீசினார்... நான் யார் தெரியுமா....ஐயம் ய மலேசியன் சிட்டிசன் சில்லித்தனமாய்....என்னிடம் அட்வான்ஸ் கேக்கிறியா....என்று..அந்த நள்ளிரவில் ஹொட்டலே அதிரும் படி கத்தினார்.....யூ....ப்ளடி.. ... (சொல்ல கூடாத வார்தை....)


நான் ஸ்மைல் பண்ணிகிட்டே....சாரி சார் ...என்னோட நிர்வாகத்தின் விதிமுறைகள் அப்படி.....என்று சொல்லி முடிவதற்குள் மறுபடியும் வாட்..ப்ளடி....(சொல்ல முடியாத வார்தை..) ஹோட்டல் என்று சராமரியாய் மலேசிய ஆங்கிலத்தை என் முகத்தில் காரி உமிழ்ந்தார்....எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை....ஏன் என்மீது கோபப்படவேண்டும்...அப்படி தனிப்பட்ட முறையில் நாம் ஒன்றும் செய்யவில்லையே என்று எண்ணிக் கொண்டிருக்கும் போது....கெஸ்ட் ரிஜிஸ்ட்ரேசன் கார்டு என்று சொல்லக்கூடிய.... ஜி.ஆர்.சி. புத்தகத்கை எடுத்து கிழித்து என்மீது வீசிவிட்டு மூன்றாம் முறையாக...அம்மாவை தொடர்பு படுத்தக்கூடிய அந்த ஆங்கில கெட்டவார்த்தையை என்மீது வீசிவிட்டு....கூட வந்தவர்களோடு திரும்பி போய்விட்டார்.....


அப்படியே நின்னு அவர பாத்துட்டே இருக்கேன்...என் தூக்கம் முற்றிலும் கலைந்து போய்விட்டது....ஏன் ஏன் ஏன்...இப்படி எனக்குள் கேட்கும் போதே...அவர்கள் வந்த கார் ஹோட்டல் வளாகத்தை விட்டு வெளியே செல்கிறது.......அந்த நொடி....................டமால்......என்ற சத்தம்.....வெங்கட் நாராயணா சாலையில் அதிவேகமாக வந்த அதிகாலை தண்ணீர் லாரி.....அந்த காரில் மோதி......வேகமாய் ஹோட்டலை விட்டு வெளியே வந்து செக்கியிரிட்டியோடு நொறுங்கிப் போன மாருதி எஸ்டீம் ஐ பார்க்கிறேன்...காரினுள் டார்ச் அடித்துப் பார்த்தால் சற்று முன் என்னிடம் சண்டையிட்டு சென்ற மனிதர் ரத்த வெள்ளத்தில்....ஓ......கடவுளே என்று பதறியடித்துக் கொண்டு ஆம்புலன்சுக்கு சொல்லி....போலீசுக்கு சொல்லி..என் ஹோட்டல் நிர்வாகத்திற்கு சொல்லி....என்கொயரி அது இது என்று.....விடியல் காலை 7 மணிக்கு தகவல் கேள்விபட்டேன் என்னிடம் சண்டையிட்ட நபரும்...பின்னால் இருந்த மற்றொருவரும் ஸ்பாட்லேயே..இறந்து விட்டதாக்.....எனக்குள் இரத்தம் உறைந்து போனது இப்போது இந்த வரிகளை டைப் பண்ணும் போது ஞாபகம் வருகிறது....மனம் சலனமின்றி....கடந்த இரவு நடந்த விசயங்களை விவரித்துப் பார்க்கிறது...

ஏன் என்னிடம் கோபத்தோடு போய் இறந்து போனாய் மனிதா? எந்த பிறவியில் உன்னிடம் மீதி வைத்திருந்தேன்.... இன்று வந்து....என்னிடம் தீர்த்து விட்டு இறந்து போனாய்? இன்று வரை எந்த கணமும் ஒரு மனிதரை விட்டு நீங்கும் முன் சந்தோசமாய் நீங்குவது என்று நினைத்துக் கொண்டேன்...மிகைப்பட்ட பேரை நான் பார்க்கும் போது எல்லாம் வலியுறுத்துவேன்...விடை பெறும் போது அழகாக...அன்பாக விடைபெறுங்கள்...அது எதிரியாய் இருந்தாலும் கூட....அடுத்த கணம் என்ன வென்று அறியாமுடியாத வாழ்வில் எதுவும் நடக்கலாம்.....!

அந்த ஒருவர் யாராய் வேண்டுமானாலும் இருக்கலாம்......அலுவலக ப்யூனாய் இருக்கலாம் பூ விற்கும் அம்மாவாக இருக்கலாம்....டீ கொடுக்கும் பையனாய் இருக்கலாம்....பேருந்தில் முறுக்கு வியாபாரம் செய்பவராக இருக்கலாம்..... நம்மால் முடியவில்லை என்றால் அன்பாய் மறுத்து விடுங்கள்...... நட்பாய், உறவாய் .....யாராய் வேண்டுமானலும் இருக்கலாம்...விலகும் நேரம்....அன்பாய் விலகுங்கள்!

அன்பும் சிவமும்
இரண்டென்பர் அறிவிலர்
அன்பும் சிவமும்
ஒன்றாவதை யாரும் அறிகிலர்
அன்பும் சிவமும் ஒன்றாய்
அறிந்த பின்....அன்பே சிவமாய்
அமர்ந்திருந்தாரே!- தேவா

Monday, May 10, 2010

கடவுள் ஏன் இருக்க கூடாது?


வாழ்வின் எல்லா விசயங்களும் ஏதோ ஒரு இலக்கு நோக்கிப் பயணிப்பதை நாம் அனைவரும் உணர்ந்திருந்தாலும் சுழற்சியின் வேகத்தில் ஓடி கொண்டிருக்கும் மனதுக்கு நின்று நிதானிக்க மிகைப்பட்ட நேரங்களில் தெரிவதில்லை. ஏதோ ஒரு இறப்பு, ஒரு தோல்வி, அல்லது இழப்பு என்று மனிதனுக்கு வரும் கணங்களில் மட்டும் இந்த மனசுழற்சி மெதுவாய் நின்று ....என்ன இது வாழ்க்கை என்ற எண்ணமும் ஏன் இப்படி எல்லாம் நகர வேண்டும்? மேலும் எதை நோக்கி நகர்கிறோம் என்ற கேள்வியும் நெஞ்சை கவ்விப்பிடிக்கின்றன.

மீண்டும் ஏதேனும் ஒரு மாய நிகழ்வின் மூலம் வெளியே வந்தவுடன் இந்தக் கேள்விகள் அறுபட்டுப் போய் வழக்கமான ஓட்டத்தில் ஓடிக் கொன்டிருகிறோம். இந்த நிகழ்வு மீண்டும் மீண்டும் ஆயிரம் முறை நிகழ்ந்தாலும்...எதை நோக்கிப் போகிறோம் என்ற கேள்வி மறந்து மட்டும் போகிறது....ஆனால் ஒரு சிலருக்கு மட்டும் வெளியே ஓராயிரம் இரைச்சல்கள் இருந்தாலும் ஆழ்மனதில் எதை நோக்கிப் போகிறோம் என்றும் ஏன் போகிறோம் என்ற கேள்வி கரைதொடும் அலைகள் போல மீண்டும் மீண்டும் அடித்துக் கொண்டுதானிருக்கிறது.

கடவுள் என்ற விசயத்தைப் பொறுத்த வரைக்கும் இன்று வரை மனிதர்கள் ஒரு குழப்பத்தில் தானிருக்கிறார்கள், ஒரு சாராருக்கு கடவுள் நம்மைப் போல இருக்கவேண்டும், ஒரு சிலருக்கு கடவுள் நிறைய பேர், ஒரு சாராருக்கு கடவுள் உருவமில்லாதவர் ஆனால் வேறு உருவமானவர்... ஒரு சிலருக்கு வழிப்பாடுகளே கடவுள் மொத்தத்தில் அவர் அவர் மனதை எது திருப்தி படுத்துமோ அது அவருக்கு கடவுள் ஆனால் ஒரு இடத்தில் எல்லோரும் ஒத்துப் போவர்கள் அது கடவுள் பிரமாண்டமானவர்....அதை மட்டும் அனைவரும் ஒத்துக் கொள்வார்கள்.

இந்த குழப்பம்தான் நாத்திகவாதம் பேசுபவர்களின் மிகப் பெரிய + பாயிண்ட் என்று கூட சொல்லலாம். மதம்தான் கடவுள் பற்றியும் பேசுகிறது அதே மதம் தான் சட்டதிட்டங்கள் இட்டு மனிதன் தன் மதத்தை விட்டு வெளியே செல்லாத வன்ணம் மூட நம்பிக்கைகளையும் சாதிகளையும் தீண்டாமையும் போதிக்கிறது அதற்கு விளக்கங்கள் கூட கொடுக்கிறது. புராணங்கள் என்ற நீதிக் கதைகளை எல்லாம் உண்மையாய் நடந்த விசயம் என்று யார் நம்புகிறார்களோ இல்லையோ அது கடவுள் மறுப்பாளர்களுக்கு ஒர் வசதியான ஆயுதமாகக் கூட போய் விட்டது.


காஞ்சி சங்காராச்சாரியாரையும், கல்கியும், நித்யானந்தனும் ஆன்மீகப்பாதையில் சென்று வழுக்கி விழுந்து கடவுளால் பழிவாங்கப்பட்டவர்கள்.....ஆமாம் அப்படித்தான் எடுத்துக் கொள்ளவ் வேண்டும். விளக்க முடியாத விசயத்தை இவர்கள் வியாபாரம் ஆக்கியதுதானே இவர்களின் வழுக்கல்கள், முற்றும் துறந்தவனுக்கு எதுக்கு கோடிகளும் புகழும் ! காணாததை கண்டவர்கள் .....கண்டதை சொல்ல முடியாது..... ஒழுக்க நெறிகளில் வாழ்ந்து காட்டி தன்னின் வாழ்க்கையை அடுத்தவருக்கு படிப்பினையாய் ஆக்குவதை விட்டு விட்டு இவர் தம்மைக் கடவுளர் என்று எண்ணி மாயையில் விழுந்ததுதான் வழுக்கல்.


பதஞ்சலிதான் யோக சூத்திரத்தை உருவாக்கியவர்... அதை கற்றறிந்த ஆன்மீக முனி என்றால் ஏன் காசுவாங்க வேண்டும்....சிவசூத்திரம் உருவாக்கியவர் யார் என்று நமக்கு சரியாகத்தெரியாது ஆனால் அதை படித்து விட்டு பயிற்றுவிக்க லட்சங்களில் கட்டணம்....பயிற்சியில் தவறு இல்லை...அதை பயிற்றுவித்தலை வியாபாரமாக்கியது தான் வழுக்கல். தந்திரா என்ற காமம் சார்ந்த தியானம் இல்லறத்தானுக்கு கொடுக்கப்பட்ட ஒரு வழிமுறை,முறைப்படி ஒரு பெண்ணை மணம் புரிந்து ஆன்மீக பயணம் மேற்கொள்ளும் போது உபோயோகம் செய்ய வேண்டிய ஒரு சாதனை முறை...! காம உணர்வுகளே எனக்குள் எழவில்லை நான் பிரம்மச்சாரி என்று சொல்லி விட்டு பின் ஆராய்ச்சி செய்தேன் என்று சொல்வது மிகப்பெரிய பித்தலாட்டம்...! உங்களை யாரேனும் திருமணம் செய்யக்கூடாது என்று சொன்னார்களா? சந்தோசமாய் திருமணம் செய்து கொண்டு ஆராய்ச்சியை அணு அணுவாய் செய்திருக்கலாமே...!


ஆன்மீகப்பாதையில் ஓராயிரம் வழுக்கல்கள் கடவுளை கற்பிக்கும் முறையிலும் மனிதர்களுக்கு ஓராயிரம் குழப்பங்கள்...இவை எல்லாம் சாதகமாய் போய்விட்டன கடவுள் மறுப்பாளர்களுக்கு! இதனாலேயெ கடவுள் இல்லை என்று ஓங்கி ஓங்கி கத்துகிறார்கள். நம்மைச் சுற்றி கோடானு கோடி விசயங்கள் நடக்கின்றன..ஆராய்ந்து அடைந்து விட முடியாதவாறு பிரபஞ்சம் இருக்கிறது... நாம் எல்லோரும் கூட பிறக்கிறோம், சிரிக்கிறோம், அழுகிறோம் ...இறக்கிறோம்....ஏதோ ஒன்று இருக்கிறது .... அதனால்தான் எல்லாம் நடக்கிறது. அறிவியல் எப்போதுமே...எப்படி நிகழ்கிறது என்று மட்டுமே விளக்கமுடியும் ஏன் நிகழ்கிறது என்று விளக்க முடியாது. இப்படி இருக்கையில் ஏதோ இருக்கிறது என்ற நம்பிக்கைகையில் கடவுளைப்பற்றியும் மதங்களைப்பற்றியும் ஆராயாமல் அல்லது மறுக்காமல் ஒருவர் மேல் அன்பு வைத்து உதவி செய்து ஒரு நிறைவன வாழ்வாய்...வாழ்ந்து..பழுத்து விழும் பழம் போல முழுதாய்....வாழ்வை நிறைவு செய்வோம்.


குழப்பங்களுக்க்குள் சிக்காமல்....கடவுள் இல்லை என்றும் மறுக்காமல்... கடவுள் ஏன் இருக்க கூடது? என்ற கேள்வியோடு வாழ்வைத் தொடர்ந்தால் அதுவே உண்மையான ஆன்மீகம் இல்லை இல்லை அதுவே உண்மையான.....இருத்தல்!

தேவா. S

Saturday, May 8, 2010

சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா.... பதிவுத் தொடர் III


ரொம்ப நாளா விசிலோடு காத்திருக்கும் புலவன் புலிகேசிக்கும்.....என் நண்பன் சிறு குடி ராமுவிற்கும் நன்றி கார்டு போட்டபடி....சீனுக்குள் போவோமா.....


இது வரை
பாகம் I - http://maruthupaandi.blogspot.com/2010/05/blog-post_02.html
பாகம் II -http://maruthupaandi.blogspot.com/2010/05/ii.html

இனி.....

அப்பா உள்ளே வந்து விட்டார்.... நான் நிமிர்ந்து அவர் முகத்தை பாரத்து....தைரியத்தை வரவழைத்துக் கொண்டு என் ரஜினியை நினைத்துக் கொண்டு....வாயைத் திறந்து ரஜினிய உங்களுக்கு ஏன் பிடிக்காது என்று .................கேட்க நினைத்து வாயைத் திறந்தால்.....சத்தம் தொண்டையை விட்டு வெளியே வருவதற்குள் மீண்டும் உள்ளேயே சென்று விட்டது....ரேவதி தேவர் மகனில் சொல்வது போல வெறூம் காத்து தான் வருது....!

உலக அப்பாக்களுக்கு ஒரு விசயம் நான் சொல்ல விரும்புகிறேன், தயவு செய்து மீசையை பெரிதாக வைக்காதீர்கள்...! அப்பா கிட்ட வந்து...என்னடா....என்ன ஒழுங்கா படிக்கிறியான்னு அதட்ட...படிக்கிறேன்பா என்று நான் சொன்னது கூட கீச்சுக் குரலில் தான் வந்தது....ச்சே.....எங்கே போச்சு என் வீரம் எல்லாம் என்று நான் குனிந்த படி யோசிக்கும் போது.....

கிச்சனிலிருந்து அம்மா....ஏங்க...தம்பி ( நான் தான்) உங்கள தேடிட்டு இருந்தாங்க....என்று ஞாபமாய் சொல்ல...(ரொம்ப தேவை) விட்டு விட்டுப் போன அப்பா திரும்ப வந்து என்னடா...என்னை தேடுனியாமே....ன்னு கேட்க...சும்மா கேட்டேங்கப்பா..என்று சொல்லி சமாளித்து விட்டேன். இரவு போர்வையை போத்திக் கொண்டு தீவிர யோசனையில் இருந்தேன்...மனசு முழுதும் ரஜினி... எனக்கு ரஜினி பிடிக்கும் என்ற எண்ணமே.... பக்கத்து வீட்டு பாபுவிடமும் அப்பாவிடமும் நான் தோற்று விட்டேன் என்று எண்ணத் தூண்டியது....பதிலடி கொடுக்கணும்....! நல்லவனுக்கு நல்லவன் படம் ஞாபகம் வந்தது....ரஜினி அடிவாங்கிட்டு வீட்டுக்கு வந்துட்டு...திரும்ப போய் பதிலடி கொடுக்கிற சீன் எல்லாம் என் ஞாபகத்துக்கு வருது....அப்போ ஒரு முடிவு எடுத்தேன்....ரஜினிக்கு லெட்டர் எழுதணும்னு....எனக்கு மட்டும் ரஜினிகிட்டே இருந்து பதில் வ்ந்துச்சுன்னா.....அது போதும்.....இப்படி யோசனை பண்ணிட்டே...எப்போ தூங்கினேன்னு எனக்கு தெரியல....

என்னைச் சுற்றி இருந்த பெரியவர்கள் எல்லாம் என்னைச் சீண்டுவதற்காகவே ரஜினியை பற்றி தாறுமாறாக பேச எனக்கு ஏன் அப்போது கோபம் வந்தது என்று இப்போது எண்ணிப் பார்க்கிறேன், அப்போது ரசனை என்பது அறிவினைக் கொண்டு ஆராய்ந்து வரவில்லை....அது சினிமாவை சினிமாவாகத்தான் பார்த்தது....ரஜினியை நடிகனாகத்தான் பார்த்தது. அது வேறு எது மாதிரியும் விவரித்துப் பார்க்கவில்லை. சினிமா பார்க்க தியேட்டருக்கு சென்றால் சந்தோசமாய்.....படம் நகர்கிறதா நமது பொழுது கழிகிறதா....என்றூ மட்டுமே நினைத்தது....! சினிமா தியேட்டரில் போய்....தமிழக முதல்வரை அது தேடவில்லை....! வாழ்க்கை வேறு பொழுது போக்கு வேறு என்று எண்ணியதுதும் கூட ஒரு காரணம், மேலும் நடிகனுக்கு ரசினகாய் இருக்க ஆசையாய் இருந்தது...தொண்டனாய் அல்ல...

சினிமா சினிமாதான்....அதை வாழ்க்கையோடு சம்பந்தப்படுத்தி பார்க்கும் போதுதான் பிரச்சினை ஆரம்பிக்கிறது...இன்று எல்லா நடிகனும் கெட்டு குட்டிச்சுவராய் போனதற்கு காரணம் கேவலமான ரசிகர்கள்தானே? நடிகனைத் தலைவனாக்கும் போதுதான் அபத்தங்கள் ஆரம்பிக்கின்றன...! நல்ல திரைப்படங்கள் வருவது நடிகன் கையிலா இருக்கிறது ... நண்பர்களே...? சிந்தித்துப் பாருங்கள்....அது... நல்ல ரசிகனின் கையில் தான் இருக்கிறது...! சினிமாவின் மூலமாய் தலைவர்களாகத் துடிப்பவார்களை இனம் கண்டு கொண்டு அவர்களை எல்லாம் வீட்டுக்குத் திருப்பி அனுப்ப வேண்டுமா? அரசியல் வேறு சினிமா வேறு.....இரண்டும் இரு வேறு துறைகள் என்று ஏன் தமிழ் நாட்டு சினிமா ரசிகன் இதுவரை உணரவே இல்லை?

சரி.. நம்ம மேட்டருக்கு வருவோம்.....ரஜினிக்கு லெட்டர் எழுத உதவி செய்தது....3 வீடு தள்ளி இருந்த பாப்பா அக்கா தான் அவுங்க சொன்னாங்க ஒரு நாளைக்கு ஆயிரம் பேர் ரஜினிக்கு லெட்டர் எழுதுவாங்க...உன்னோட லெட்டர படிச்சி திரும்ப லெட்டர் போடணும்னா... நீ வித்தியசமா ஏதாவது செய்யணும்னு....அதற்கு சொன்ன மலிவான ஐடியா...ரத்ததுல லெட்டர் எழுதுறது.....7 வயசுல அதில இருந்த முட்டாள்தனம் எனக்குத் தெரியல....

வீட்டின் அறைக்குள் சென்று கதவைத் தாளிட்டுக் கொண்டேன்....என் எதிரே...டிம்மி சீட் லெட்டர் எழுத....மறு கையில் அப்பா ஷேவ் பண்ண வைத்திருந்த....பிளேடு.....


(தொடர்ந்து வருவான் ரஜினி ரசிகன்....)


தேவா. S

Wednesday, May 5, 2010

பணம் தேவையில்லை மனம் போதும்.....!காட்சி 1

இடம்: துபாய் International Airport

நேரம்: இரவு 20:30

நிகழ்வு 1

கொழும்பு வழியாக திருச்சி செல்லும் ஏர் லங்கா.. விமானத்துக்காக லக்கேஜ் ஸ்கேனிங் வரிசையில் நான் குடும்பத்துடன்... ஹேண்ட் பேக் தோளிலும் கையிலும் என்னிடம் என் மனைவியிடம் ஒரு கையில் பேக் மறு கையில் குழந்தை... ஓடோடி வருகிறார் அந்த பிலிப்பினோ....பணியாளர்....வெயித் மேதம் ..ஐ கெல்ப் யூ.... (wait madam, i help you) என்று சொல்லிக் கொண்டே...என்னிடம் இருந்தும் என் மனைவியிடம் இருந்தும் பேக்கை வாங்கி ஸ்கேன் மெஷினுள் வைத்து மீதியுள்ள லக்கேஜ் எல்லாம் எடுத்து வைக்க உதவி செய்கிறார்... நான் நன்றி சொல்ல முயல்வதற்குள்....அவர் சொல்கிறார்...தேக்யூ சார்...தேக்யூ மேடம்!

நிகழ்வு 2

போர்டிங் போடுவதற்காக நிற்கிறோம்....வெயிட் எல்லாம் சரியாக இருக்கிறது....ஒரு லக்கேஜ் மட்டும் 30 கிலோவிற்கு அதிகமாக இருக்கிறது...விமான விதிமுறைகள் படி.... நான் கொண்டு செல்ல முடியாது.... அதனால் அந்த பேக்கிங் செய்யப்பட்ட லக்கேஜை பிரித்து வேறு ஒரு சிறிய பேக்கில் மாற்றிக் கொள்ள வேண்டும் அப்போது நேரம் 21:20 எனது விமான நேரம் 23:00....கைக்குழந்தையோடு மனைவி....ஒரு ஓரமாய் என்ன செய்வதென்றறியாமல் விழிக்கிறார்....எங்கிருந்தோ ஓடி வருகிறார் ஒரு பாகிஸ்தானி பட்டான்...க்யா... முஸ்கீலே சாப்... என்று கேட்கிறார் எனக்குத் தெரிந்த அரை குறை இந்தியில் விளக்கியதை விளங்கிக் கொண்டு... என்னை போய் அருகில் இருக்கும் ஒரு டூட்டி ஃப்ரீ கடையில் சிறிய பேக் ஒன்று வாங்கிவரச் சொல்லி....விட்டு எனது பதிலுக்கு காத்திராமல் என்னுடைய லக்கேஜை... பிரிக்க ஆரம்பிக்கிறார்...! பிறகு... நான் கொண்டு வந்த பேக்கிற்கு சில பொருட்களை மாற்றிவிட்டு.... பழை பேக்கிங்கை சரியாக கட்ட எனக்கு உதவி செய்து விட்டு... அபி.. அச்சா ஹே சாப்..ன்னு சொல்றார்... நான் அவருக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று எண்ணிய போது .....அல்லா...கரீம் சாப் ந்னு சொல்லிட்டு... சிரித்துக் கொண்டே ஓடிவிட்டார் அந்த கூலித் தொழிலாளி!


நிகழ்வு 3

சுமார் 22:30 பாஸ்போர்ட் கண்ட்ரோலில் மிகப்பெரிய வரிசையில் நேரம் அதிகமாகிவிட்ட டென்சனில் நானும் என் மனைவியும் குழந்தையும்...அந்த வரிசையில்....எப்படியும் நேரம் ஆகிவிடுமே என்ற கவலை வேறு.....அப்போது அங்கே மேற்பார்வையில் ஈடு பட்டிருந்த அதிகாரி (அரபி) ஒருவர்.... நாங்கள் கைக்குழந்தையோடு இருப்பதை பார்த்து விட்டு....வரிசையை விட்டு விட்டு நேரே கவுண்டருக்கு அழைத்தார்.... நேரே செல்லுங்கள் என்று கூறி சைகையில் சொன்னார்... நன்றியோடு அவரது முகத்தை நோக்கிவிட்டு.அந்தப் பகுதியையும் கடந்து சென்றோம்

காட்சி 2

திருச்சி விமான நிலையம்
நேரம்: காலை 7 மணி


நிகழ்வு 1


தாய் நாட்டை வானத்திலிருந்து பார்த்த உடனேயே...இரவு முழுதும் பயணம் செய்த அயர்ச்சி எல்லாம் போக...விமான நிலைய ஓடுதளத்தில் இருந்து இறங்கி.....திருச்சி விமான நிலையத்தின் உள்ளே நுழைகிறோம்....தொடர்ச்சியான பயணமும் சீதோஷ்ண மாற்றமும் என் குழந்தைக்கு காய்ச்சலை ஏற்படுத்தி விட்டது, அழுது கொண்டிருந்த அவளை தோளில் தூக்கிய படி ஒரு கையில் ஹேண்ட் லக்கேஜ் எடுத்த படி குடியேற்றப் பகுதியினுள் நுழைகிறோம்...

...துபாய் ஏர்போட்டில் உயர்தர நவ நாகரீகமாக நடந்து கொண்ட நமது குடிமக்கள்..தாய் நாடு வந்த வுடன் மிருகங்கள் ஆகி விட்டார்களா என்று திடுக்கிடலோடு பார்த்தேன்....ஆமாம்....யாரும் லைன் ஃபார்ம் பண்ணவும் இல்லை...சீர் படுத்தவும் யாரும் இல்லை...சினிமா தியேட்டர் கவுண்டர் போல வலிவுள்ள ஆட்கள் எல்லாம் முண்டி அடித்துக் கொண்டு குடியேற்ற அதிகாரியை சூழ்ந்து கொண்டிருந்தார்கள் அவரும் எந்த அக்கறையுமின்றி கையில் கிடைத்த பாஸ்போர்டை வாங்கி அதட்டோடு ஏதோ கேட்டு கேட்டு ஸ்டாம்ப் செய்து கொண்டிருந்தார்.

நான் துபாய் குடியேற்ற அதிகாரி வழிவிட்டு அனுப்பினாரே என்ற எண்ணத்தில்....குழந்தையோடு அவரிடம் சென்று....சார்...குழந்தைக்கு உடல் நலம் சரியில்லை....கொஞ்சம் எங்களை அனுமதிக்கிறீர்களா என்று கெஞ்சும் தோரணையில் கேட்டவுடன்....என்னை முறைத்துப் பார்த்து....போங்க சார்...போங்க...போய் லைன்ல நில்லுங்க...கொஞ்ச நேரம் காத்திருக்க மாட்டீர்களா? என்று அதட்டினார்.....லைன் எங்க சார் இருக்குன்னு கேட்க நினைத்த நான்....பேசாமல் சென்று ஒரு மூலையில் நின்று விட்டேன்.....கூட்டம் போகட்டும் என்று......

நிகழ்வு 2

குடியுரிமைப் பகுதியில் கேட்கப்பட்ட எல்லா கடுமையான கேள்விகளையும் (கடைசியா எப்போ போனீங்க....? இந்தியாவில் உங்கள் வீட்டு முகவரி என்ன போன்ற....கஷ்டமான) கடந்து சுங்கம் எனப்படும் கஸ்டம்ஸ் பகுதிக்கு வந்தோம்...மீசை முறுக்கிய படி இருந்த அதிகாரி.....என்ன வேல்யூ ஆன பொருள் ஏதும் இருக்கா....(என் மனைவி நகையை மறந்து போய்ட்டேன்..) என்று கேட்டார் நான் அப்படி எல்லாம் ஒண்ணும் இல்ல சார்ன்னு சொன்னேன் சரி நீங்க போகலாம்னு சீல் குத்தி அனுப்பினார்.

ஸ்கேன் செய்யும் போது அவர்களுக்கு பெட்டியில் இருக்குன் நகை கண்ணில் பட்டு விட்டது... என்ன சார் நகை கொண்டு போறீங்க...இந்த பக்கம் வாங்கன்னு கூப்பிட்டவர்....என் மனைவியை பார்த்துட்டு..உங்க பேமிலியா...ன்னு கேட்டார்... ஆமாங்கன்னு சொன்னேன்....இங்க இருந்து அவுங்க போட்டுடு வந்ததுங்கன்னு சொன்னேன்...! சரி சரி போங்கன்னு சொன்னார்...அப்பாடா இவராச்சும் விட்டாரேன்னு வந்தா... பின்னால தனியா வந்து.... வழக்கமான கடமையை ஆற்ற ஆரம்பித்தார்...என்ன கேட்டார்னு எழுத விரும்பலை (சென்ஸார்)


நிகழ்வு 3

ஒவ்வொரு லக்கேஜ் ஆக எடுத்து வைத்துக் கொண்டிருதேன்....தானாகவே வந்த ஒரு விமான நிலைய உதவிப் பணியாளர்.....விடுங்க...சார்.... நான் எடுத்து வைக்கிறேன்.... நவுருங்க சார்ன்னு சொல்ல சொல்ல கேட்காம....எடுத்து வைத்து வலுக்கட்டாயமாக வண்டியையும் தள்ளிக் கொண்டு.... வெளியே வந்தார்....ச்சே....எவ்வளவு நல்ல மனிதர்கள் நம்ம ஊரிலும் இருக்கிறார்கள் என்ற எண்ணம் நிற்பதற்கு முன்னல்...வாசல் வருவதற்கு முன்னாலேயே (வெளியே நம்ம ஆளுங்க எல்லாம் நிப்பாங்கள்ள!) காசு கொடு(!!!) சார் என்றார்...சரி உதவி செய்திருக்கிறார் என்ற எண்ணத்தில்.....20 ரூபாய் எடுத்துக் கொடுத்தேன்....அதைக் கேவலமாக பார்த்த படி... என்ன இது....? என்று அலட்சியமாய் கேட்டார்....150ரூபாய் வாங்குறது எப்பவும்.... நீ (!!!) 100 கொடு போதும் என்று கட்டளையிடுவது போல வாக்குவாதத்தில் இறங்கினார்.....100ரூபாய் கொடுத்து விட்டு மேற்கொண்டு வண்டி தள்ள முற்பட்டவரை தடுத்து விட்டு நானே வண்டி தள்ளிக் கொண்டு என் மனைவியின் முகத்தைப் பார்த்தேன்....அவள் பாவமாய் என்னைப் பார்த்தாள்.....எங்களுக்குள் ஏதேதோ கேள்விகள் இருந்தாலும்......விடை தெரியாமல் ஏர்போட்டை விட்டு வெளியே வந்தோம்.......மெளனமாய்....

உறவுகளைப் பார்த்தவுடன் இவை எல்லாம் மறந்து போனாலும்....1 வருடமாக தொடர்ச்சியாய் என்னுள் கேள்விகள் சில மட்டும் இருந்தன....அதை உங்கள் முன் இன்று இறக்கி வைக்கிறேன்....

1) யாரோ ஒரு பிலிப்பினோவும்......பாகிஸ்தானியும் பாசத்தொடு உதவும் போது எம்மக்கள் பொருளுக்காய் மனிதாபிமானம் காட்டுவது அவன் தவறா இல்லை....இப்படி அவனை அலைய விட்ட அரசாங்கத்தின் தவறா?

2) கரிசனத்தோடு....ஃபேமிலியா சார் என்று கேட்டு மேற்கொண்டு செல்ல அனுமதித்த சுங்க அதிகாரி..இனாம் வாங்க அனுமதித்தது அவரது குடும்ப சூழ் நிலையா? இல்லை என்னைப் போல் வெளி நாட்டிலிருந்து வந்த மக்கள் தங்கள் சுய நலத்துகாக கொடுத்து கொடுத்து பழக்கியதன் காரணமா?

3) அதிகாரி என்றாலே நமது நாட்டில் ஏன் அதட்டுகிறார்கள்? இது பள்ளியில் இருந்தே ஆசிரியரிடம் கற்று வந்த பழக்கமா? இல்லை.....தங்களுக்குத்தான் எல்லாம் தெரியும் என்ற ஆணவமா? உங்கள் துறையின் அதிகாரிதானே நீங்கள் ....வேறு துறையில் உங்களுக்கு எல்லாம் என்ன தெரியும்?

4) பொருளாதர ரீதியாக துபாய் போன்ற நாடுகள் முன்னேறி இருக்கின்றன.....ஆனால் இங்கே நான் குறிப்பிட்ட எந்த விசயத்திலும் பொருள் இல்லை மனிதவளமும்... நேயமும் பற்றிய விசயங்கள்தானே....அப்படியானால் பொருளாதரத்தை பொறுத்துதான் மனித நேயம் கூடவா?

5) வெளி நாட்டில் இருக்கும் வரை அந்த அந்த நாட்டின் சட்ட திட்டங்களை மதிக்கும் நமது மக்கள் நம்ம ஊருக்கு வந்தவுடன்....ஏன் அதிக ஆடம்பரம் காட்டுவதும்.....மேலும் நமது சட்டதிட்டங்களை கேவலமாக பேசுவதுமாக ஒரு அதிக பிரங்கித்தனம் காட்டுகிறார்கள். சர்வதேச சமுதாயம் கற்றுக்கொடுத்த நல்ல விசயங்களை ஏன் நீங்கள் நமது ஊரில் பின் பற்றுவதில்லை?

என்னைப் பொறுத்த அளவில் அன்பு காட்டவும் , அரவணைக்கவும்....ஆறுதலாய் பேசவும்.... இருக்கையில் இருந்து எழுந்து பெரியவர்களுக்கும், கர்ப்பிணிகளுக்கும், குழந்தை வைத்துள்ளவர்களை அமரச் செய்யவும்......பணம் தேவையில்லை.....மனம் போதும்!தேவா. S

Tuesday, May 4, 2010

எரிமலைகள் வெடிக்கட்டும்...! பதிவுத் தொடர் முடிவுஇதுவரை

பாகம் I

பாகம் II

இனி...


ஈழப்போரட்டம்.....என்பது ஒரு தனி நாடு கோரும் மக்களின் போராட்டம் என்பதைக் காட்டிலும் அது அண்டை நாடுகளின் உதவியுடன் முறியடிக்க முயன்ற நயவஞ்சக செயல் என்பதுதான் இப்போது உள்ள பிரச்சனை...

நீ என்னை அடி... ஆனால் நேர்மையாக அடி.....ஆனால் முதுகில் குத்தாதே....100 பேர் சேர்ந்து ஒருவனை அடிப்பது எமக்கு தர்மம் இல்லை....!! எல்லாவற்றிலும் ஒரு மரபை கொண்டது தான் தமிழ்ச் சமுதாயம்....எங்களுக்கு எல்லாம் யுத்த மரபு என்று ஒன்று தெரியும்...அது வெள்ளை கொடி பிடித்து வந்தவனை சுட்டுக் கொல்லாது....அது எதிரியாய் இருந்தாலும் அவனுக்கும் பசிக்குமே என்று கவலைப்படும்.... நாகரீகத்தை உலகிற்கு சொல்லிக் கொடுத்த ஒரு இனத்தை இன்று அடக்குமுறையால் நசுக்கி இருக்கிறது இந்த சர்வதேச சமுதாயம்.

ஆயுதங்கள் தூக்க வேண்டிய துர்பாக்கிய நிலைமையினை உருவாக்கிய மிருகங்கள் இன்று அஹிம்சை பற்றி எல்லாம் போதனை செய்கின்றன்.....! புத்தரை வழி படும் இந்த மேதாவிகள் எங்கு பார்த்தாலும் பெளத்த கோவில்களாய் எழுப்பி வருகிறார்களாம் ...எதற்கு...வன்முறையை புத்தருக்கும் போதிக்கவா....? தயவு செய்து புத்தனை தொடர்வதாய் இனியும் சொல்லாதிருங்கள் அது புத்தருக்கு நீங்கள் செய்யும் அவமானம்....!


மெளனமாய் அறவழியில் போராடி உண்ணா நோன்பிருந்து உயிர் துறந்தானே...தீலீபன் அப்போது தெரியவில்லையா....காந்தீய வழியையும் இவர்கள் காலில் இட்டு மிதித்துக் கொன்றது....! வன்முறை எந்த விசயத்துக்கும் தீர்வாகாது என்பது சொல்ல வேண்டுமானால் நல்ல வாக்கியமாக இருக்கலாம்...ஒரு மிகப் பெரிய வன்முறையை அழிக்க....கண்டிப்பாய்.... நாமும் வன்முறை செய்தே ஆக வேண்டும்...இதையே....பரமாத்மா...கீதையில் சொன்னால் வேத வாக்கியமாய்... எடுத்து கண்ணில் ஒற்றிக் கொள்வீர்கள்...பிரபாகரன் ஆயுதமேந்தினால்...அது வன்முறை....? எத்தனை கயமைத்தனம்....?

வன்முறை உலகெங்கும் உள்ளது நண்பர்களே.... அது அரசாங்கங்களின் கீழ்.... இராணுவமாக..காவல்துறையாக எப்போது எல்லாம் அந்த அந்த நாடுகளின் பாதுகாப்புக்கும், இறையண்மைக்கும் ஊறு ஏற்படும் போது எல்லாம்....இந்த வலிய சட்டப்படி அங்கீகரிக்கப்பட்ட வன்முறைகளை ஏவி விட்டு அடக்குமுறையை கையாளுகிறார்கள்...! அதே போலத்தான்....தமிழர்களின், தன்னோடு வாழும் சக மனிதர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு அவர்களின் இறையாண்மைக்கும், பாதுகாப்புக்கும் ஊறு வந்த போது, கண்ணெதிரே...தனது சகோதரிகளின் கற்பு சூறையாடப் பட்ட போது ....வேகத்தில் ...ஆத்திரத்தில்.....போராட ஆரம்பித்தவன் தான் ஈழத்தமிழன்.

நீங்கள் யாரும் அவனுக்கு உதவாவிட்டால் கூட பரவாயில்லை....., போரில் நசுக்கப்பட்டு....மனிர்களாய் வாழ்வதற்கேயுரிய மனோ நிலையில் இருக்கும் மக்களைப் பார்த்து உங்களுக்கு பச்சாதாபம் கூட வரத்தேவையில்லை...., இனத்துக்காக போராடிப் போராடி நசுங்கி ஒடுங்கிப் போன ஒரு வயதான மூதாட்டியை நாட்டினுள் நுழைய அனுமதிக்காத உங்களின் இறையாண்மைப் பற்றி கூட கவலை இல்லை....ஆனால்....

தயவு செய்து.......


" அவன் போராட்டத்தின் நோக்கு தவறென்று சொல்லாதீர்கள் "

சூழ்ந்த கடல் என் கடல் - அதைச்
சூழ்ந்த நிலம் என் நிலம் - இதைச்
சேர்ந்த புலம் என் குலம் - நினைச்
சார்ந்த ஈழம் தமிழ் ஈழம் - என
விண்ணைக் கவர்ந்த குரல்வளை நெரிக்கப்பட
மயானமாகிக் கிடக்கிறது என் தேசம்.!
( நன்றி: மயோ மனோ)

கதறிக் கொண்டு இருக்கிறது...தமிழினம்....உலகெங்கும்....! தெரியாமல்....தலை அரிக்கிறது என்று...கொள்ளிக்கட்டையை எடுத்து தலை சொறிந்து விட்டார்..திருவாளர் ராஜ பக்ஸே.....! இது ஒரு இனத்துரோகம்....முள்ளிவாய்காலில் மறித்த உயிர்களை எத்தனை எத்தனை அதை வேன்டுமானால்....வல்லரசுகளின் உதவியோடு மறைக்கலாம்....

ஆனால் எரிமலைகள் தொடர்ந்து வெடிக்கும்...அதில் அநீதிகள் எல்லாம் பொசுங்கும்..வல்லரசுகள் மெல்லரசுககளாகும்.....தமிழனின் கொடி...அகிலம் எல்லாம் பறக்கும்....வரலாறே...உனது செங்கோலை உயர்த்திப் பிடித்து காத்திரு...எமது வெற்றிச் செய்தியை உலகிற்கு அறிவிக்க...!

" தர்மத்தின் வாழ்வு தனை சூது கவ்வும் ......தர்மம் மறுபடியும் வெல்லும்....!"

(அத்தியாங்கள் ....முற்றும்.....ஆனால்...வரலாறு தொடரும்...)தேவா. S

Monday, May 3, 2010

சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா.... பதிவுத் தொடர் IIகண்ணா வாழ்கையில ஒரு விசியத்த..கண்டிப்பா தெரிஞ்சுக்கணும் எப்பவுமே ஒரே ரூட்ல நாம போனா ரெடிமேடா நமக்கு ஒரு பேர வச்சி....ஓரங்கட்டிடுவாங்க...லைஃப்ப எப்பவுமே...லைவா வச்சிக்கணும்....சரி...இப்போ...ஸ்ட்ரெய்ட்டா..மேட்ட்ருக்கு வர்ர்ட்டா....

இதுவரை....

பாகம் I - http://maruthupaandi.blogspot.com/2010/05/blog-post_02.html

இனி...

என் வீட்டுக்கு ரெண்டு வீடு முன்னாலயே...பாபுவோட வீடு இருக்கு... வந்த போஸ்ட் மேன் முதல்ல பாபுகிட்ட போய் அவனுக்கு கார்டு எல்லாம் கொடுத்துட்டு எங்க வீட்டு வாசலுக்கு வந்து என் கையில ஒரு 21 கார்டு கொடுத்தாரு....5 ரஜினி படம்...ஒரு பிள்ளையார் படம்..3 முருகன் பாக்கி எல்லம் இயற்கை காட்சிகல், பொங்கல் ..பானைன்னு...கொடுமையா...! அடப்பாவிகளா....இப்படி ஏமாத்திட்டீங்களேன்னு....மனசுல நினைச்சிகிட்டு..பாபு கிட்ட போயி மெல்ல கேட்டேன் ..உனக்கு பொங்கல் வாழ்த்து என்ன படம்டா வந்து இருக்குன்னு....அவ்ளோதான்...

அவன்...டொட்டடாயியியியியியியிங்ங்ங்ங்ங்ங்ங்ன்னு மியூசிக் கோட எடுத்து ஒண்ணு ஒண்ணா என் முன்னால போடுறான் ஒண்ணு..ரெண்டு...மூணு......மொத்தமா 17 ரஜினி படம்...ஒண்ணு ஒன்ணும் ஒரு ஸ்டைலா....என்னோடா...ரஜினி அவன் கையில நிறைய நிறைய இருந்தத பாத்துட்டு அழுகையே வந்துடுச்சு...அதவிட இந்த பாபு காட்டின பிலிம் இப்போ நினைச்சாலும் எனக்கு அழுகையும் ஆத்திரமுமா இருக்கு...ஓட்டப்பந்தயத்துல கடைசில ஓடிவந்த பையன் மாதிரி நின்னேன்....!

நேரே அனுப்பிச்ச ஓவ்வொருத்தரா போய் கேள்வி கேக்க ஆரம்பிச்சேன்...மணிரத்தனம் படம் மாதிரி...ஏன்க்கா...ஏண்ணே... ஏன்...ஏன்..ஏன்?எனக்கு மட்டும் ஏன் ஓரவஞ்சனைனு கேட்டேன்...எல்லோரும் சிரிச்சுட்டு சொன்ன பதில் எங்க அப்பாவ எனக்கு வில்லனா ரெண்டு செகன்ட்ல மாத்திடுச்சு....ஏன் தெரியுமா...ரஜினி வாழ்த்து அட்டையை அனுப்பிச்சா எங்க அப்பாவிற்கு பிடிக்காதாம்.....! இன்னைக்கு ராத்திரி...அப்பா வரட்டும்.. நேருக்கு நேரா...அவர்கிட்ட...கேட்டுட வேண்டியதுதான்...ஆஃபிஸ் முடிஞ்சு வரட்டும்....யூனியன் ஆஃபிஸ்ல அக்கவுண்டென்ட்னா என்ன கொம்பா?னு நினைச்சேன்....

வீட்டுக்குள்ள நுழையும் போதே ஸ்டைலா ரஜினி மாதிரி ஸ்பீடா போனேன்(அப்படீன்னுதான்... நானா நினைச்சுக்கிறேன்....விட்டுறங்களேப்பா..)அம்மாகிட்ட...போய் அப்பா எப்போமா வருவர்னு கேட்டேன்...அம்மா முறைச்சு பாத்து...என்ன இது அதட்டலா கேக்குற..எப்பவும் வர்ற மாதிரிதான் வருவாரு...ஏண்டா....?அப்படின்னு கேட்டாங்க... நான் அம்மாவோட...செல்லம்..அதனால அதே திமிரோட.....சொன்னேன்...அத எல்லம் உன்கிட்ட சொல்லிட்டு இருக்க முடியாதுன்னு சொல்லிட்டு ஹாலுக்கு போனேன் அங்க என் அக்கா வேற எப்ப பாத்தாலும் புக்க எடுத்து வச்சுட்டு படிச்சிட்டே இருக்கறதால.... நானும் படிச்சே ஆகணும் (என்ன கொடுமை சார்....இது ஒரு ரஜினி ரசிகனப் போய் படி படின்னு சொல்றாங்களே....)ஒப்புக்கு நானும் ஒரு புக்க (வரலாறுன்னு நினைக்கிறேன்...அதுலதான கதை இருக்கும்) எடுத்து வச்சு படிச்சேன்...இல்ல... இல்ல படிக்கிற மாதிரி நடிச்சேன்....!

இரவு மணி 7 வாசல்ல பைக் சத்தம் ...ம்ம்ம்ம்....அப்பாதான்...வரட்டும் வரட்டும்.....ரஜினி பிடிக்காதம்ல....உங்களால எனக்கு எவ்ளோ அவமானம்...கேட் திறக்கும் சத்தம்....ம்ம்ம்ம் பயப்படக்கூடாது..... நான் யாரு....ரஜினி...(ரசிகன் இல்ல...ரஜினியேதான்)...சும்மா விடமாட்டேன்...அநியாயத்தை தட்டிக் கேப்பேன்...செருப்பு கழட்டும் சத்தம்...வாங்க....வாங்க....உங்களுக்காகத்தான் காத்திட்டு இருக்கேன் (எவ்ளோ ரஜினி படம் மைன்ட்ல மனப்பாடமா இருக்கு)....


அப்பா வீட்டுக்குள்ள வந்திட்டார்......அப்போ.....


(தொடர்ந்து வருவான் ரஜினி ரசிகன்....)


தேவா. S


பின் குறிப்பு: விசில் எல்லாம் எடுத்து ரெடியா வச்சுக்குங்க.....

Sunday, May 2, 2010

சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா....

இது ஒண்ணும் சொந்தக் கதை சோகக் கதை இல்லங்க முடிக்கிறதுக்கு முன்னால கண்டிப்பா பஞ்ச் பண்ற மாதிரி மேட்டர் இருக்குன்னு..உறுதியா சொல்லிக்கிறேன்.... தைரியமா...மேலே படிங்க....!எந்த வயசுல இருந்து நான் ரஜினி ரசிகன்னு எனக்கு தெரியல இப்போ கூட நினைச்சு பாக்கும் போது சரியா ஞாபகம் இல்ல.....யாராவது விருந்தாளி வரும் சமயதுல..அம்மாவும் சரி அப்பாவும் சரி...ரஜினி மாதிரி...சிரிப்பான்னு சொல்லுவாங்க... நானும் இடுப்புல ஒரு கைய வச்சுகிட்டு ஹா...ஹா.......ஹா...ன்னு விபரம் தெரியாம சிரிச்சு வைப்பேன்.... இடுப்புல கைய வச்சுக்கிறதும்...தலை முடிய கோதி விட்டுக்கிறதும்....என்னைய கேக்காமலேயே...எனக்கு வந்துடுச்சு.....


ஏதாவது ரஜினி படம் வந்துச்சுன்னா ரஜினி பேண்ட் போட்டு நடிக்கிறாரா..இல்லை...வேஷ்டி கட்டி நடிக்கிறான்னு...யாரவது பெரியவங்ககிட்ட....இல்ல சினிமா போஸ்டர்னு என்னோட முதல் ஆர்வம் அதில்தான் இருக்கும்....ஏன் தெரியுமா? வேஷ்டி கட்டி நடிச்ச....சண்டை அவ்வளவா இருக்காது அப்படீன்றது...அப்போ என்னோட எண்ணம்....அதனாலதான் அப்போ வந்த முரட்டுக்காளை எல்லாம் எனக்குப் பிடிக்காது....பாயும் புலி, தனிக்காட்டு ராஜா, துடிக்கும் கரங்கள்ன்னு ரஜினியோட சூப்பர் பைட் படமெல்லாம்..என் கனவுல எல்லாம் வரும்.....

நானும் பாபுவும்...(என்னோட....பக்கத்து வீட்டு ஸ்னேகிதன்) ரஜினி மாதிரியே...தலை சீவுறது....சட்டை பட்ட்டன் எல்லாம் தொறந்து விட்டுக்கிறதுன்னு சொல்லிட்டு ஒரு பெரிய போட்டியே நடக்கும் ...எனக்கும் 7 வயசு பாபுவிற்கு....8 வயசு....! ரஜினி படம் சேர்க்குறதுல எங்க ரெண்டு பேருக்கும் பயங்கர போட்டியே நடக்கும்....எந்த புக்குல ரஜினி படம் இருந்தாலும்....கிழித்து.....உடனே என்னோட கலெக்க்ஷன்ல வச்சுடுவேன்....! தெருவுல....போகும் போது எல்லாம் குப்பையை எல்லாம் கிளறிக்கிட்டே போவேன்.....ஏதாவது ரஜினி படத்தை பார்த்தல்....ரெண்டு பேரும் புலிப் பாய்ச்சல் பாய்ஞ்சு.....எடுப்போம்.....! என் மனசுல..... நான் ரஜினி ரசிகன் இல்ல.... நான் தான் ரஜினியே....பாபுவும் அப்படித்தான்.....!

பொங்கல் பண்டிகை வருதுன்னு வச்சுக்கங்க....எங்க தெருவுல....இருக்கிற எல்லா வீட்டுக்கும் போய் கெஞ்சி கெஞ்சி....சொல்லிட்டு வருவேன்....அண்ணா அண்ணா என்க்கு ரஜினி படம் போட்ட அட்டி அனுப்புங்கண்ணா.....அக்கா...அக்கா...ப்ளீஸ்க்கா மறந்திடாதீங்கன்னு சொல்லிட்டு வருவேன்.....போஸ்ட்மேன் வந்து குடுக்கும் போது ரஜினி படமா எனக்கு வரணும்....ஹா...ஹா....ஹா....ஆனா இந்த பாபு பயலுக்கு வர்ற வாழ்த்து அட்டை....எல்லாம் வேறு ஏதாச்சும் வரணும்....அவன் முன்னாடியே.... என்க்கு பாத்தியா...எல்லாமே....ரஜினி படம்னு தம்பட்டம் அடித்து பந்தா பண்ணணும்.....!

ஆனா...போஸ்ட்மேன் வந்தார்....வரிசையா எல்லோருக்கும் வாழ்த்து அட்டைகளை கொடுத்துக் கொண்டே வந்தார்.......அப்போ.....(தொடர்ந்து வருவான் ரஜினி ரசிகன்....)தேவா. S


பின் குறிப்பு: எல்லோரை விடவும் சித்ரா இந்த பதிவினை விரும்பி படிக்க போகிற பதிவர் என்று சகலமானவர்களுக்கும் அறிவித்துக் கொள்கிறேன்.

Saturday, May 1, 2010

மே தினம்......
மே தின...
விழா கொண்டாட்டம்....
நள்ளிரவு தாண்டியும்...
ஆட்டம் பாட்டத்துடன்!
மைக் செட் மாரியும்....
மேடை பிரிக்க...
மைக்கேலும்...
தெருவொராம்
பசியோடு....!
உழைக்கும் வர்க்கதிற்கு.....வாழ்த்துக்கள்!

தேவா. S