Pages

Friday, May 21, 2010

இலக்கில்லாத பயணம்...!
கட்டாய நகர்த்தலாய்....
நகர்ந்து கொண்டிருக்கிறது....காலம்
இந்தக் கணத்திலேயே....
இழுத்து பிடித்து நிறுத்திவிட...
ஓராயிரம் முறை முயன்று.....
தோல்வியின் வெட்கத்தில்...
துவண்டு போய் கிடக்கிறது மனது!

கடந்ததெல்லாம்...
மரத்தில் அடித்த ஆணியாய்...
பிடிங்கிய பின்னும் வடுக்களை...
சுமந்து கொண்டு நினைவுகளாய்..
ஏதேதோ நினைத்தும் ....
மறக்காமல் வேறு
எங்கேயோ கொண்டுபோய்...
நிறுத்தி விடுகிறது எதிர்காலம்!

இரவும் பகலும்..போட்டி போட்டு
நாட்களை பின் தள்ளிவிட...
கடலில் மிதக்கும் கட்டை போல
இலக்கில்லாத பயணமாய்....
நித்தம் காற்றடிக்கும் திசையின்
நகர்தலைத்தான்.. வாழ்க்கை
என்று கற்பிக்கிறது....மானுடம்!

எந்த ஒரு அர்த்தமும் இல்லாவிட்டாலும் கற்பனைகளில் மனிதனுக்கு ஏதோ ஒன்று தேவைப்படுகிறது. ஆத்மார்த்த கேள்விகளும் பதில்களும் தனக்குள்ளேயே இருக்கும் போது புறத்தில் கடவுள் என்று விசயம் தேவைப்படுகிறது. டண் கணக்கில் காதல் அவனுக்குள்ளேயே இருக்கிறது இருந்தாலும் புறத்தில் ஒரு சக்தி ஆண் என்றும் பெண் என்றும் ஒரு தூண்டுதலுக்காய் தேவைப்படுகிறது.

வினையூக்கிகளே இப்போது மொத்த வினையாய் பார்க்கப்படுவதால் செயலின் விளைவுகள் மறக்கப்படுகின்றன. ஒரு அனுபவம்தான் கடவுளும் காதலும் இன்ன பிற விசயங்களும்...தனக்குள் ஆழ்ந்து கொண்டே இருக்கும் மனிதனுக்குள்....உருவமற்ற கடவுளும், உடலற்ற காதலும் தோன்றிக்கொண்டே இருக்கும்...அதவாது புறத்தில் இருக்கும் விசயங்களின் இனிமை ஒரு மிட்டாய் சாப்பிடுவது போல இனிப்பு மிட்டாய் முடிந்தவுடன்...போய்விடும். அகத்தில் ஏற்படும் இனிப்பு தீரவே தீராது அது இனித்துக்கொண்டே இருக்கும் ஒரு பேரின்பம். நிரந்தர தித்திப்பில் இருப்பவனுக்கு மிட்டாயில் இருக்கும் பொய்மை தெரியும். இதை தெரிந்தவன் கடமைக்காக மிட்டாய் சாப்பிடுவானே அன்றி ஆவலில் அல்ல!

சூரியனும் நிலவும் காலங்கள் கடந்து பல மனிதர்களைப் பார்த்தது... தன்னில் இருந்து பிய்த்தெரிந்த பிச்சைதான் பூமியும் இன்ன பிற கோள்களும் அதுவும் கூட சூரிய குடும்ப அளவில்....சூரியன் எங்கே இருந்து வந்த பிச்சை என்று தெரியவில்லை. ஆனால் நமது ஆட்டமும் பாட்டமும் கெளரவமும், அகங்காரமும் சூரியனையும் நிலவையும் ஒரு அம்புலியாய் எண்ணி விடுவதில்லையா? என்றாவது இவற்றின் பிரமாண்டத்தை நாம் சிந்தித்திருக்கிறோமா? கோடாணு கோடி இனங்களையும், போர்களையும், சக்கரவர்த்திகளையும், சாம்ராஜ்யங்களையும்...மனிதன் காடுமேடுகளில் உடையில்லாமல் அலைந்த காலம் முதல்.....கண்டிருக்கின்றன இந்த சூரியனும் சந்திரனும் ஆனால் அவை நமக்கு அம்புலிகள்!

நோக்கமற்றதுதான் வாழ்க்கை...பள்ளியில் படிக்கும் போது கல்லூரியும், கல்லூரி படிக்கும் போது வேலையும், வேலை கிடைத்த பின் திருமணமும், திருமணத்திற்கு பிறகு..குழந்தைகளும்....என்று இலக்குகள் மாறி பயணித்தாலும்....எது நிம்மதி.....என்ற கேள்வி மட்டும் கூடவே பயணிக்கும்....இலக்குகள் ஒரு சுழற்சி என்பதை விளங்கிக் கொண்டு நிம்மதி அடையும் இலக்கில் அல்ல பயணத்தில்தான்....என்பது பிடிபடவேண்டும்! அதற்காகத்தான் கடவுளும் வேதங்களும் மதங்களும் கூட தோன்றியிருக்கலாம் ஆனால் இப்போது அவற்றையும் கூட மட்டுப்படுத்தி விட்டான் மனிதன்.

ஏனென்றால்........உண்மையில்... இலக்கு என்று எதுவும் இல்லை!

பயணம்தான் சந்தோசம்!


தேவா. S

10 comments:

மதுரை சரவணன் said...

உண்மை நண்பரே...வாழ்த்துக்கள்

Chitra said...

நோக்கமற்றதுதான் வாழ்க்கை...பள்ளியில் படிக்கும் போது கல்லூரியும், கல்லூரி படிக்கும் போது வேலையும், வேலை கிடைத்த பின் திருமணமும், திருமணத்திற்கு பிறகு..குழந்தைகளும்....என்று இலக்குகள் மாறி பயணித்தாலும்....எது நிம்மதி.....என்ற கேள்வி மட்டும் கூடவே பயணிக்கும்....இலக்குகள் ஒரு சுழற்சி என்பதை விளங்கிக் கொண்டு நிம்மதி அடையும் இலக்கில் அல்ல பயணத்தில்தான்....என்பது பிடிபடவேண்டும்! அதற்காகத்தான் கடவுளும் வேதங்களும் மதங்களும் கூட தோன்றியிருக்கலாம் ஆனால் இப்போது அவற்றையும் கூட மட்டுப்படுத்தி விட்டான் மனிதன்.

ஏனென்றால்........உண்மையில்... இலக்கு என்று எதுவும் இல்லை!

பயணம்தான் சந்தோசம்!....... interesting.....

Finally, the page loaded up without any delay and problem. :-)

soundar said...

வாழ்க்கை...பள்ளியில் படிக்கும் போது கல்லூரியும், கல்லூரி படிக்கும் போது வேலையும், வேலை கிடைத்த பின் திருமணமும், திருமணத்திற்கு பிறகு..குழந்தைகளும்....என்று இலக்குகள் மாறி பயணித்தாலும்....எது நிம்மதி.....என்ற கேள்வி மட்டும். இந்த வாழ்கை குழந்தைகள் படிப்பு வேலை திருமணம் இப்படி தொடரும் ஒரு சுழற்சி போல்

dheva said...

நன்றி சரவணன்....!

dheva said...

சித்ரா @ பெரும்பாலும் உங்கள் பின்னூட்டத்திற்கு பிறகுதான் படைப்பு முழுமை அடைகிறது. நன்றிகள்!

dheva said...

சவுந்தர் @ நன்றி நண்பரே!

VELU.G said...

//
ஏனென்றால்........உண்மையில்... இலக்கு என்று எதுவும் இல்லை!

பயணம்தான் சந்தோசம்!
//

சரியாகச் சொன்னீர்கள் நன்பரே, பயணம் தான் வாழ்க்கையே. ஆனால் எல்லோரும் ஏதோ ஒரு இலக்கை நோக்கி செல்வது போல் ஒரு மாயையிலேயே உழல்கிறோம்

தமிழ் அமுதன் (ஜீவன்) said...

ஒரு குறிப்பிட்ட நிலைக்கு பிறகு கடமைகளை நிறைவேற்றுவதே..! இலக்காகி விடுகிறது ...!

அப்போது சில சமயங்களில் பயணத்தில் சந்தோஷங்கள்
குறுக்கிடும் ..! கடமையின் பொருட்டு அதை கூட முழுமையாக அனுபவிக்க முடிவதில்லை..!

G.Ganapathi said...

உலகில் எந்த மொழியில் கேட்டாலும் இனிமையான வார்த்தை பயணம் எப்படி வேண்டுமாலும் சொல்லி பாருங்களேன் . இழவுக்கு போகும் பயணத்தில் கூட ஒரு சிறு சந்தோசத்தை அந்த பயணம் தறும் எத்தனை துக்கம் இருந்தாலும்

க.பாலாசி said...

//இலக்கில்லாத பயணமாய்....
நித்தம் காற்றடிக்கும் திசையின்
நகர்தலைத்தான்.. வாழ்க்கை
என்று கற்பிக்கிறது....மானுடம்!//

உண்மைங்க... என்னதான் ஒரு இலக்கை நோக்கி நகர்ந்தாலும் காற்றின் விசை சற்றேனும் கூடுதலாகிவிடின் மீண்டும் திசைமாறும் நம் இலக்கு...

//தனக்குள் ஆழ்ந்து கொண்டே இருக்கும் மனிதனுக்குள்....உருவமற்ற கடவுளும், உடலற்ற காதலும் தோன்றிக்கொண்டே இருக்கும்... //

//நிரந்தர தித்திப்பில் இருப்பவனுக்கு மிட்டாயில் இருக்கும் பொய்மை தெரியும்//

//இலக்குகள் ஒரு சுழற்சி என்பதை விளங்கிக் கொண்டு நிம்மதி அடையும் இலக்கில் அல்ல பயணத்தில்தான்....என்பது பிடிபடவேண்டும்! //

நல்லாவே அழுத்தமா சொல்லியிருக்கீங்க... ஒரு மிடுக்கான எழுத்து நடை.. ரசிக்கவைக்கிறது..

பயணத்தினை ரசித்தோமாயின் இலக்காகும் பயணமே... மிக அழகாக சொல்லியிருக்கீங்க...