Pages

Sunday, October 31, 2010

முடிச்சு....!

ஒரு தார்ச்சாலையும், கொளுத்தும் உச்சிவெயிலும், இறுகக் கட்டிய கழுத்து டையும் வெறுமையான எதிர்காலமும் எப்போதும் வெறுப்பாய் பார்க்கும் மனிதர்களும்...டார்கெட் நோக்கி துரத்தும் படியளக்கும் முதலாளிகளும் எப்போதும் அறிந்ததில்லை திருமணத்திற்காக காத்திருக்கும் என் அக்காவையும் கடந்த மாதம் ரிட்டயர்ட் ஆன என் அப்பாவையும், எட்டாம் வகுப்பு படிக்கும் என் தம்பியையும்.....

கல்லூரிக்கு அனுப்பியதே மிகப்பெரிய சாதனையாகவும் பெற்ற பி.காம்., பட்டமே மிகப்பெரிய அங்கீகாரமாகவும் நினைத்த என் குடும்பத்தினரின் ஒரே நம்பிக்கை நான். நான் பெற்ற பட்டம் முன் அனுபவம் இல்லை என்பதால் நிராகரித்த
மிகைப்பட்ட பன்னாட்டு நிறுவனங்களும் சரி....இன்னும் அடி மாட்டு விலைக்கு வேலைக்கு கூப்பிட்டு ஓரிரு மாதங்கள் சென்று சம்பளம் கொடுக்காமால் ஏமாற்றிய உள்நாட்டு முதலாளிகளும் சரி....

என்னால் சரியாக புரிந்து கொள்ள முடியாதவர்கள்....அவர்களின் வேலை கொடுப்பதற்கான அளவீடு என்ன என்பதும் அறிந்து கொள்ள நான் முயலவில்லை காரணம் என் வீட்டின் பசி.

ரிட்டயர்மெண்ட் ஆன அப்பாவின் பணம் வீடுகட்ட வாங்கிய கடனுக்கு போதுமானதாக இருந்தது. நான் கூட கேட்டேன்.. கடன் வாங்கி அப்படி என்னத்த வீடு கட்டணும்னு....? பதிலாக அக்காவின் திருமணம் என்ற ஒன்றை சொன்னார்கள். ஆமாம் சொந்த வீடு இருந்தால்தான் மாப்பிள்ளை கொடுப்பார்களாமே....? சேலையூர் தாண்டி காமராஜபுரம் பக்கத்தில் எப்போதோ அப்பா கூட்டாக பணம் போட்டு வாங்கிய இடத்தில் ஒரு குருவிக் கூடு எங்களுக்கு சொந்தமாவதற்கு மேற்கொள்ளப்பட்ட சிரமங்களை சொல்லி மாளாது....

ஒரு வாட்டர் ப்யூரிஃபையர் விற்கும் கம்பெனி மாத டார்கெட் இவ்வளவு என்றும் ரூபாய். 4,000 சம்பளத்துக்குதான் உன் பி.காம் டிகிரி வொர்த் என்றும்.. அக்கவுண்ஸ்ல வேலை வேணும்ன அக்கவுண்ட்ஸ் பத்தி முன் அனுபவம் வேணும்னு சொல்லிடுச்சி.... நான் எங்க போறது முன் அனுபவத்துக்கு? 6 மாசம் முன்னால டிகிரி முடிச்சவனுக்கு எப்படி கிடைக்கும் முன் அனுபவம்?

கிண்டி பிரிட்ஜ்ல ஏறி இறங்கிக் கொண்டிருந்தேன்.... சென்னை வெயில் கொளுத்தியது....அக்னி நட்சத்திரமா இருக்கட்டும் இல்லா ஏதாவதா இருக்கட்டும் என்னைய மாதிரி ஒரு வேலை செய்றவங்க நிலைமையெல்லாம் ரொம்ப கஷ்டம்டா சாமி....!

தூசும் புகையும், ஆட்டோகாரர்களின் அலட்சியமும் , பேருந்துகளின் சீற்றமும், பார்த்துக் கொண்டே நடந்து கொண்டிருந்த எனக்கு பைக்கின் முன்னால் ஒரு குழந்தையும் பின்னால் அவரது மனைவியும் அவரது கையில் ஒரு குழந்தையும் வைத்துக் கொண்டு கிண்டி பிரிட்ஜ் இறக்கத்துல தத்தளித்துக் கொண்டிருந்த நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவரை பார்க்க நேர்ந்தது.

எல்லோருக்கும் பழகிப் போய்ட்விட்டது எப்போதும் அட்ஜஸ்ட் பண்ண முடியாத வாழ்க்கை என்று எதுவுமில்லை. எல்லாம் பழக்கத்தின் அடிப்படையில் உண்டாவது.
என்னால் இப்படி இருக்க முடியாது.... அப்படி இருக்க முடியாது என்று சொல்வது எல்லாம் ஒரு வசதிக்காக....!

கால் நீட்ட இடம் இருக்கிற வரைக்கும் நீட்டலாம்... இடிச்சா மடக்கிங்க வேண்டியதுதான்.....உச்சி நேரம் நெருங்கி பசி வயித்த கிள்ளுது சார்.. நான் சைதாப்பேட்டை அடையாறு பக்கம் போய் சுத்தணும்... வீடு வீடா கதவ தட்டி காலிங் பெல் அமுக்கி.....ரொம்ப கஷ்டம் சார்......பிச்சைகாரங்க கூட ஒரு வேளை சாப்பாடு இல்லண்ணா ஒரு எட்டணா போட்டு அனுப்புறாங்க.....

நாம போய் பெல்ல அடிச்சாலே....சில பேருக்கு வருது பாருங்க கோவம்.....! ஆமா சார் லாஸ்ட் வீக்... அண்ணா நகர்ல ஒரு நாய அவுத்து விட்டாங்க சார்...நல்ல வேளை நான் கேட்டுக்கு வெளில நின்னேன்...அது அவுங்க பிரைவேட் டைம்ங்களாம்....ரெஸ்ட் எடுக்குற நேரமாம்....

என்னா சார் பண்றது... அவுங்க ஓய்வு எடுக்குற நேரத்துல ஏதாச்சும் வாங்கணும்னு முடிவு பண்ணி வாங்கினாதானே சார்....நாம ஒரு 5 மணி நேரமாச்சும் நாம நிம்மதியா தூங்க முடியும்.....! சார்ந்து வாழ்ற வாழ்க்கைனு படிக்கிறாங்க.... சொல்றாங்க...ஆனா.....அது எல்லாம் வசதிக்கு ஏத்தாப்லதான் ....துட்டு இருக்குறா ஆள துட்டு இருக்கவன் ஃபிரண்ட் ஆக்கிக்குவான்....ஹக்கூம்......

காலைல இருந்து எதுவும் சாப்டல...ஒரு டீயும் வடையும் துன்ன போறேன்....உங்களுக்கு வேணுமா சார்....? வாணாமா.... சரிங்க சார்...

ஜஸ்ட் இந்த வாட்டர் ப்யூரிஃபையர் வேணுமானு பாருங்க.....அட வாங்க வாணாம் சார்...! ஜஸ்ட் ஃப்ரவுசர்தானுங்களே....வச்சுக்கோங்க....வேணும்னா இந்த செல்லுல கூப்பிடுங்க.....சரிங்களா?

அப்புறம் மறக்காம வீட்டம்மாகிட்ட எல்லாம் சொல்லுங்க சார்... வாணாம்னா "டபார்"னு கதவை அடைக்காம....கொஞ்சம் அப்பால போனதுக் கோசரம் அடைக்க சொல்லுங்க சார்....!

ஒவ்வொரு நாளும் கழுத்துல " டை " கட்றப்ப போடுற முடிச்சு வெறும் முடிச்சு இல்ல சார்...வாழ்க்கை போட்டு இருக்க முடிச்சு.....வெளில பாக்கிறப்ப அலங்காரமா தெரியலாம்..அதுக்கு பின்னால இருக்குற வேதனைகள் யாருக்கும் தெரியாது சார்...!

அப்போ பாக்கலாம் சார்.... ..மறக்காம கால் பண்ணுங்க..உங்களுக்கு மெட்டிரியல் தேவைப்பட்டா......

(ஒரு டீக்கடையில் ஒதுங்கி கொண்டது இந்தியாவின் வருங்காலம்...)


தேவா. S

Saturday, October 30, 2010

பதிப்பு...!

மறத்தலுக்கு சாத்தியமற்ற
முதலாய் அழுந்தப் பெற்ற
ஈரமேறிய அந்த
முத்த பதிப்பின் கிளர்ச்சி
நிமிடங்களை வடிக்க
ஏதேனும் மொழியிருக்கிறதா?

மெத்தென பற்றி
உயிர் பறித்த அந்த
கலப்பு நிமிடங்களில்
உந்தப் பட்ட காமத்தின்
வெம்மையில் ஜென்மங்களாய்
கற்க மறந்த பாடத்தின்
பக்கங்கள் மீண்டும் திறக்க...
பற்றுதலுக்காய் துவளும்...
கொடி போல.. கிறங்கிக்
கிடந்த நிமிடங்களின்
சாயலில்தான் சொர்க்கம்
என்ற சூத்திரத்தின்
மூலம் பிறந்திருக்குமோ...!

வசீகர பரிமாற்றத்தின்
அழுத்தமான பற்றியிழுப்பு
முன் பின்னாய்...கலைத்துப் போட்ட
அந்த முதல் நாளின்...
தனித்த இரவில்
பிறழ்ந்து போன உறக்கத்தில்
ஏக்கமாய் என்னுள் நிறைந்த
சூட்சும காதல் இட்ட முடிச்சுகள்
கடத்திசெல்கின்றன ..
மீண்டும் மீண்டும்
அந்த முத்த நிமிடங்களுக்கு...!


தேவா. S

Friday, October 29, 2010

நான்......!

விண்ணப்பம்:

இந்த ஒரு கட்டுரையை எல்லோரும் வாசித்து விட்டு ஏன் இப்படி எழுதியிருக்கிறீர்கள்? இதற்கு என்ன அர்த்தம் என்று கேட்க விரும்பினால்....கட்டுரைக்கான விளக்கம் அளிக்கிறேன்.

ஏன் எழுதினாய்? என்று கேட்டால் பதில் இல்லை. ஆதாரம் கேட்டால் இல்லவே இல்லை. படிக்கும் போது இதில் ஏதாவது ஒன்று ஆமாம் சரி என்று உள்ளுக்குள் சொன்னால் சரி எனக் கொள்ளுங்கள். இல்லை என்றால் இல்லை என்று கொள்ளுங்கள். வலியுறுத்தலுக்கும் கட்டுரைக்கும் சம்பந்தமே இல்லை.

எனது யாக்கைகளை கட்டுரையாக்கும் மனோ நிலையில் அதை சந்தைப்படுத்துதலை விட.... விரும்பியவர் படிக்கட்டுமென்ற நோக்கிலும் மேலும் கிளர்ந்து எழுந்த நிலையில் எனக்குள் தோன்றியதை எழுதி வைப்பதின் மூலம் யாராவது வாசித்து விட்டு இதை இப்படி எழுதியது தவறு என்று சொல்லி கற்றுக் கொடுப்பதின் மூலம் தெரிந்து கொள்ளும் விதமாக, கற்றுக் கொள்ள ஒரு கருவியாக இப்படிப்பட்ட கட்டுரைகளை எழுதுகிறேன்.

வாசித்துதான் ஆகவேண்டும் என்றோ நிர்பந்தங்கள் எப்போதும் வைத்தது இல்லை..ஆனால் என்னுள் தோன்றிக் கிளைத்த எண்ணங்களை எழுதி பார்க்கும் ஒரு சிறுவனாய் எழுதுகிறேன்.

புரியவில்லை என்றால் மன்னித்து விடுங்கள். திருத்தங்கள் இருந்தால் கூறுங்கள்...மண்டியிட்டு... திருத்திக் கொள்கிறேன். திருத்திக் கொள்ளுதல் எனக்கான கல்வி. அந்தக் கல்வியை மனமுவந்து தெரிந்து கொள்ள ஆவலாயிருக்கிறேன்.

விளக்கம்:

மரணித்த ஒரு ஆத்மா.. தடிமனற்று மீண்டும் பிறப்பெய்ய உந்து சக்திகள் குறைந்த பக்குவத்தில் இருக்கும் அந்த ஆத்மா என்ற அதிர்வு பிரபஞ்ச மூலத்தோடு கலந்து கரைந்து எதுவுவமற்றுப் போகிறது. அப்படி எல்லாமாய் மாறுவதற்கு முந்தைய இடைப்பட்ட நிலை எப்படி இருக்கும்...

இதோ...

சரேலென்று விழுந்த வெளிச்சக்காட்டுக்கு முன்பான இருண்ட நெடும் பயணத்தில் கருமையும் வெளுமையும் சொல்லவொண்ணா நிறங்களும் இட வலம் மாற்றி ஒரு சுழல் போல என்னை சுழற்றியடித்த சுழலுக்குள் நானிருந்தேன்.

உடல் தொலைத்த அந்த அற்புத கணம் ஒரு அனுபவமாய் தேங்கிக் கிடந்த ஒரு தெளிவான பிரஞை மட்டும் என்னை வழி நடத்த காற்றே இல்லாத ஒரு வெற்றிடத்தில் நீரில் நகரும் குமிழி போல நீந்திக்கொண்டிருந்தேன். நகர்தல்… நகர்தல் என்று புள்ளியற்ற இலக்குகள் அற்ற ஒரு நகர்தலற்ற நகர்வில் எப்போதும் உடைந்து விடும் என்ற ஒரு சுதியோடு என் உள்முனைப்பு இருந்து.

அது இப்போதே உடைந்தால் என்ன...மிச்சமிருக்கும்? சொச்சத்தோடு சேர்ந்தால் என்ன வாகும்? என்ற குறு குறுப்பிலும் துறு துறுப்பிலும் இருந்த நிலையை விவரிக்கும் எல்லாமே பொய்யாகி விடுமென்ற எண்ணத்தின் மிச்சமிருந்தது ஆனால் அது கூடலில் தொலைக்கும் உச்சத்தை ஒத்ததாக இருந்தது. ஒத்ததாகத்தானே அன்றி அதுவல்ல.

ம்ம்ம்ம் ….இன்னும் இன்னும் இன்னும் இன்னும் இப்போதோ, அல்லது எப்போது என்னில் ஒட்டியிருக்கும் எதோ ஒரு உள் முனைப்பு என்னை விட்டு நகரப்போகிறது. நகர்ந்த கணத்திலே ஒட்டிக்கொண்டிருக்கும் எல்லாம் ஒழியப்போகிறது என்ற ஒரு எண்ணம் மெலிதாய் இருந்தது.

உடலாய் இருந்த காலத்தில் ஏற்பட்ட அவஸ்தைகளின் சாரம் மத்திம நிலையில் ஒரு உறுத்தலாய் இருந்தது. ஒரு குணமற்ற நிறமற்ற இந்த இருப்பா இத்தனை வேசங்களிட்டது.

வேசங்களிட்டு வேசங்களிட்டு, அப்படி ஒரு தடிமன் கொடுத்த அழுத்த விளைவில் எத்தனை முறை விசையின் எதிர்விசையாய் உந்தப்பட்டு உயிர் சுழற்சி எடுத்து தடிமன் குறைக்க அனுபவப்பட்டு, அனுபவத்தை உணர்தலில் கொஞ்சம் கொஞ்சமாய் தடிமன் குறைந்து…

வேறு சில அனுபவங்களில் அகங்காரப்பட்டு தடிமன் கூடி அந்த தடிமனில் மேலும் அனுபவம் என்று சுழன்று சுழன்று சுழற்சியில் சந்கோசமும் துக்கமும் என்று ஏராளாமான இல்லாத விசயங்களைப் விவரித்துப் பார்க்க மனமும், இழுத்து கொண்டு வந்து சேர்க்க புலன்களும் என்று ஒரு ஆர்ப்பாட்ட வாழ்வு....

புல்லாகி, பூடாய், புழுவாய், மரமாகி
பல்விருகம் ஆகி, பறவையாய், பாம்பாகி,
கல்லாய், மனிதராய், பேயாய், கணங்களாய்
வல் அசுரர் ஆகி, முனிவராய் தேவராய்
செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள்
எல்லா பிறப்பும் பிறந்து இளைத்தேன்....

மெய்யாகிய சத்தியமே.. எல்லா உயிராயும் எல்லாவற்றிலும் இருக்கும் சக்தியே.....உள் முனைப்பே, கோபம், காமம், பசி, உறக்கம் என்று உயிர்களின் புலன்வழிச் செயலாய் இருக்கும் மூல உண்மையே…

இந்த நான்கையும் உணரவைக்க ஆறாம் அறிவாய் இருந்து எல்லாம் விவரிக்க வைக்கும் மனிதராயும் மனிதரின் அனுபவமாயும் எல்லாமாய் இருந்து இயங்கும் பேரியக்கமே....

எல்லாம் கரைந்து... கற்பனைகள் ஒழிந்து பிறப்புகளின் அனுபவம் போதித்த அறிவில் திண்ம அறிவு அழிந்து, எல்லாம் அதுவாய், அதுவே எல்லாமுமாய் உணர்ந்து பிறப்பறுக்கும் பிஞ்ஞகனாய் அதுவே இருந்து பிறப்பாயும் அதுவே நிறைந்து, இதோ உணர்தலுக்கும், உணர்தலற்ற தன்மைக்குமிடையே ஒரு மத்திம நிலையில்....

மீண்டும் ஜனிப்பதற்கான பதிவுகளும் திடனும் எதிர் விசையும் அற்று அதுவே அதில் அழியும் அந்த கணத்தின் நெருக்கத்தில்.....

மங்கலாய் மெலிதாய் மெல்லிய விளக்கு அணையப் போவது போல் இப்போதோ, அப்போதோ, அல்லது எப்போதோ நடக்கப்போகும் அந்த நிகழ்வில் என்ன நிகழும் என்றறியாது ஒரு குறு குறுப்ப்பா ஒரு அதிர்வூற்றாய்....உர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்ற ஒரு ரீங்காரதோடு..உம்ம்ம்ம்ம்ம் என்ற ஓசை கவனிப்போடு....

புலன்கள் அறவே இன்றி உணர்வே புலனாக மாறி எல்லாம் உணர்தலில் உறைக்க... இதோ இதோ.. ஏதோ ஒன்று நழுவ.. ஏதோ ஒன்று..விடுபட.. இதோ... இதோ... இதோ...

வெடித்து சிதறிய
சிதறலெல்லாம் நான்...
கோடி கோடி விண்மீண் நான்
அண்ட சராசரத்தின்
அங்கமெல்லாம் நான்..
பால்வீதிகளின் பெளத்ர புருஷன் நான்
விரிந்து நெடும் பிரம்மம் நான்
ஆதி அதி மூலம் நான்
இருண்ட பாகமெல்லாம் நான்
வெளிச்சத்தில் வீற்றிருக்கும்
பொய்யெல்லாம் நான்...
பொய்யில் ஒளிந்திருக்கும்
சத்தியமெல்லாம் நான்....!
என்னை மறுக்கும்
உயிர்களின் மூலம் நன்
என்னை நேசிக்கும்
பொய்களின் மூலமும் நான்!

சக்தி நான், சக்தியின் அதிர்வு நான், அதிர்விலிருந்து வெளி வரும் சப்தம் நான், சப்தம் தாண்டிய ஒளி நான். நான் இல்லாதா இடமும் நான், இருக்கும் இடமும் நான்...."

மூலத்தில் கலந்த ஒன்று மூலமாகிப் போனது. தேடித் தேடி தேடிய பொருளும் கிடைத்த பொருளும் ஒன்றானது. பார்வை தெரிய...பார்ப்பதற்கு ஒன்றுமில்லா கேட்பதற்கு யாருமில்லா எல்லாமாகிய அது எக்காலாமும் மெளனாமாய் ஒரு சக்தி ஓட்டதில் ஓடிக் கொண்டிருக்கிறது.

கண்டவர் விண்டிலர்; விண்டவர் கண்டிலர்!

தேவா. S

Wednesday, October 27, 2010

ஹார்மோன் செய்யும் கலகம் தானடா......பதிவு தொடர் II !

கொஞ்சம் பிரேக் வேணும்னுதான் விட்டேன்.. இந்த தொடருக்கு...ஏன்ன்னு கேக்குறீங்களா? ஏன் எதுக்குன்னு தெரிஞ்சா நாம ஏன் இப்படி இருக்கோம்...தோணிச்சு அவ்ளோதான்...! ஆனா ரொம்ப ஷார்ப்பாவும் இதுல ஒரு விசயம் கண்டிப்பா போய் சேரணும்னு மனசு சொல்லிக்கிட்டே இருக்கு. சரி அது என்ன விசயம்...? யாருக்கு தெரியும் திட்டம் போட்டா பாஸ் எல்லாம் நடக்குது ஹா.. ஹா..ஹா...போற போக்குல எங்கயாச்சும் அதுவா கிடைக்கும்... !

அத அப்போ பாக்கலாம்.. ! இப்போ....ஹார்மோன் செய்யும் கலகத்தை பாருங்க.....

கடந்த பதிவின் முடிவில்....

" ப்ளீஸ் டோண்ட் கீப் த போன் டவுன்...ப்ளீஸ்....டோண்ட் டிஸ்கனெக்ட் த லைன்....ஸ்பீக் வித் மீ.... ப்ளீஸ்…. ப்ளீஸ் … ப்ளீஸ்" என்று அழுகையும் கெஞ்சலுமாய் என்னிடம் பேசிய குரல்.....தன்னுடைய பெயர் கவிதா என்று அறிமுகப்படுத்திக் கொண்டது..........

திடுக்கிடலோடு....அவள் சொல்வதை கேட்க ஆரம்பித்த எனக்கு தலை சுற்றியது.....!

இனி..(ச்சே மெகா சீரியல் பாக்குறது எப்படி உதவுது பாருங்க...)

யெஸ்.. சொல்லுங்க.. என்ன வேணும் உங்களுக்கு? நான் போனை வைக்கலை சொல்லுங்க என்று கேட்டேன்....(இந்த இடத்துல அசலா எம்.ஜி.ஆர் படத்துல கதாநாயகிக்கு ஆறுதல் சொல்லி வீரம் காட்டுவார்ல அதே ஹீரோத்தனம்.....) அதற்கு மறுமுனையில்....அந்தப் பெண்...சார் நான் குயின் மேரீஸ்ல பர்ஸ்ட் இயர் படிக்கிறேன்.. (நல்ல கவனிங்க.. என்ன மேஜர்னு சொல்லல..பதட்டத்திலயும் அம்புட்டு தெளிவு)....

என்னை தேர்ட் இயர் ஸ் டூ டண்ட்ஸ் ரேக்கிங் பண்றாங்க.. ஒரு யெலோ பேஜஸ் எடுத்து ஒரு நம்பர் ச்சூஸ் பண்ணி அதுக்கு கால் பண்ண சொன்னாங்க அதுல உங்க ஹோட்டல் நம்பர் வந்துடுச்சு... !

எனக்கு ரொம்ப பயமா இருக்கு...இப்போ நீங்க ஃபோன வச்சுட்டா.. வேற நம்பர் கொடுத்து பேச சொல்லுவாங்க..ப்ளீஸ்..ப்ளீஸ்... ப்ளீஸ்… உங்க குரல கேட்டா நீங்க ரொம்ப நல்லவர் மாதிரி இருக்கு ( எப்படி போகுது பாருங்க கதை!!!!!) சோ.. பேசுங்க..... , சிணுங்கலோடு கூடிய ஒரு மெல்லிய சோகத்தோடு அந்த பெண் பேசியிருக்காவிட்டாலும் என் மனது அப்படி கற்பனை செய்து கொண்டது.

கொஞ்ச நேரம் நான் சமாளித்து பேசினேன்.. பிறகு ஒரு நன்றி நவிழலுடன் அந்தப் பெண் தொலைபேசி இணைப்பை துண்டித்த பொழுதில் கூட என் மூளையின் புட்டமன், இன்சுலா பகுதிகள் ரொம்ப நல்ல பிள்ளையை போல நடந்து கொண்டன...அதற்கு காரணம்... அது மதிய உணவு நேரமாயிருந்ததால்...வயிற்றில் சுமந்த அமிலம் அதை ஒரு எரிச்சலோடு குடல்களுக்குள் பரவவிட்டு அதற்கு பெயர் பசி என்று மனதுக்குள் சொன்னது.

சாப்பிட போன ரிசப்சனிஷ்ட்ஸ் மற்றும் டெலி போன் ஆப்பரேட்டர் எல்லாம் திரும்பி வர....அவர்களை விட்டு விட்டு...ரெஸ்டரண்டுக்குள் நுழைந்தேன் நான்! வயிறு பசிக்கும் போது மனிதன் துடி துடித்துப் போகிறான். செரித்து இரத்ததுக்குள் சக்தியாய் மாறி பரவிய உணவுப் பொருட்கள் உடலின் பல்வேறு இயக்கத்துக்கும் அந்த சக்தியை செலவழித்து மீண்டும் உடல் இயங்க சக்தி குறைவு ஏற்படும் போது உடலின் இயக்கம் சீராக இல்லாமல் தளர்ந்து போக மீண்டும் சக்தி வேண்டி வயிற்றில் உணவினை செரிக்கவேண்டி சுரக்கப்படும் அமிலத்தன்மை ஒரு வித வலி போன்ற எரிச்சலை உண்டாக்குகிறது. அதுதான் பசி. பசியின் தேவை..உடலுக்கான சக்தி...உடலின் சக்தியின் தேவை உயிர் வாழல்.

இப்படி சுற்றி வளைத்து பார்த்தால் நமது எல்லா தேவைகளின் மூலமும் உயிர்வாழல் என்ற ஒரு புள்ளியில் வந்து நிற்கும் ஆனால் உயிர் என்றால் என்ன என்று ஒரு கண நேரம் கூட நாம் சிந்தித்து பார்ப்பது கிடையாது. சிந்திக்க வேண்டிய அவசியம் இல்லை என்று மனித அகந்தை தப்பாமல் சொல்லிக் கொடுக்கிறது. இந்த அகந்தைதான்....மாயா!

சாப்பிட்டு முடித்து மீண்டும் ஹோட்டல் லாபிக்கு வரும் வரை நான் நார்மலாகத்தான் இருந்தேன் அதாவது டெலிபோன் ஆப்பரேட்டர் கனகா என்னை அழைக்கும் வரை.....

" சார் ... தேர் வாஸ் எ கால் ஃபார் யூ ஃப்ரம்... மிஸ். கவிதா ஃப்ரம் க்யூன் மேரிஸ்....அன்ட் சி செட் ஷி வில் கால்யூ பேக் இன் 20 மினிட்ஸ்.........."

கவிதா மீண்டும் எனக்கு கால் பண்ணி இருக்கா திரும்ப 20 மினிட்ஸ்ல எனக்கு கால் பண்ணுவான்னு கனகா சொல்லி முடித்த வார்த்தைகள் என் கதுகளின் வழியே பயணப்பட்டு மூளையினுள் சென்று உறங்கிக் கொண்டிருந்த....மூளையின் பகுதிகளை தட்டியெழுப்பிய கணத்தில் டெஸ்டோஸ்டிரானும், ஈஸ்ட்ரோஜனும் எனக்குள் பொங்கிப் பரவ...

அந்த பரவல் கொடுத்த சுகத்தில் லயிப்பில் இரத்த ஓட்டம் வேகமாக....இதயத்தின் இரத்த வரத்து அதிகரித்து லப்...டப் அதிகமாக.....மூச்சின் இயக்கம் அசாதரணமாய் மாறி சூடாக கண்களுக்குள் இரத்தம் ஏற...எல்லாம் சேர்ந்து ஒரு அவஸ்தையை நெஞ்சிலோ அல்லது தொண்டையிலோ கொடுக்க.........இதோ...இதோ தொலை பேசி அழைப்பில் எனக்காக கவிதா காத்திருப்பதாக சொன்ன 45 வயது ஆன டெலி போன் ஆப்பரேட்டர் கனக கடந்த இரண்டு வருடங்களில் அன்று மிக அழகாய் என் கண்களுக்குத் தெரிந்தார்.....

ஒரு பதட்டோதோடு தொலைபேசியை காதருகே காதலோடு (டெஸ்டோஸ்டிரான், ஈஸ்ட்ரோஜன் வேலையேதான்....) கொண்டு சென்று.. என் ஹலோவை சுகமாய் பரவவிட்டதற்கு பதிலாய்... ஹலோ...ஐயம் கவிதா ஹியர்.. என்று அவள் சொல்லி முடித்ததுதான் உலகின் தலை சிறந்த வாக்கியமாக அந்த கணத்தில் எனக்குப் பட்டது.....தொடர்ந்தது அந்த இசைக்கச்சேரி...

" தேங்க்யூ சோ மச் தேவா.. யூ ஆர் சச் எ கிரேட் பெர்சன்... எனக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல.. சப்போஸ்.. நீங்க என்கிட்ட பேசாம இருந்திருந்தீங்கன்னா. வேற யாருக்காச்சும் போன் பண்ண சொல்லி நான் நல்லா மாட்டியிருப்பேங்க.... " என்று இசைத்து விட்டு.....அப்புறம் உங்கள பத்தி சொல்லுங்க... என்று கேட்டது...."

“ மொழியற்ற மனிதனாய்
திசையற்ற பறவையாய்
ஓசைகள் அற்ற உலகமாய்
எனக்குள் இருந்த அமைதியில்
பேசுவது எப்படி? "

திக்கித் திணறி தமிழ் எனக்குள் தடம் புரண்டது...ஆங்கிலமோ ஒரு மூலையில் உட்கார்ந்து அழுது கொண்டிருந்தது....! ஏதோ பேசினேன்.. என்னவென்று மூளையில் ஏறவில்லை....ஆனால்.. கடைசியாக அவள் சொன்னது மட்டும் உள்ளுக்குள் அச்சாய் பதிந்து போயிருந்தது....

"ஈவ்னிங் காலேஜ் முடிஞ்சு வந்து நான் உங்களுக்கு ஒரு 6 மணிக்கு கால் பண்றேன்.." சொல்லி விட்டு அவள் துண்டித்த தொலைபேசி இணைப்போடு... உலகத்தோடான எனது தொடர்பு அறுந்தது போயிருந்தது

ஓ.. மை.. காட்..........வாட் இஸ் திஸ்.... யார் இவள் ஏன்? இப்படி.....

மனம் என்னை கேட்காமல் எங்கேயோ பறந்து கொண்டிருந்தது... நானோ கோபமாய் மெதுவாய் நகர்ந்து கொண்டிருந்த கடிகாரத்தை முறைத்தவனாய்.. லாபியில் இருந்த சோபாவில் போய் விழுந்தேன்.. 6 மணிக்கான அவளது மறு தொலைபேசியை எதிர் நோக்கியவனாய்....

(காத்திருங்கள்...காதலுக்காக)


தேவா. S

Tuesday, October 26, 2010

தில்...!நீ என்னவாக விரும்புகிறாய்...? சிவ்கேரா ஒரு செமினாரில் எழுப்பி கேட்ட கேள்வி இது. நான் திரு திரு வென்று முழித்துக் கொண்டு இருந்தேன்.....என்னை விட்டு விட்டு பக்கத்தில் இருப்பவரை எழுப்பி கேட்டார்.....வாட் டூ யூ வாண்ட் டூ பிக்கேம் அ? அவர் சொன்னார்.... நான் ஒரு தொழிலதிபர் ஆக விரும்புகிறேன்.......! விடவில்லை சிவ்கேரா....இப்போது நீங்கள் அதற்கு என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்...?

இப்போது இருவருமே திரு திருவென்று முழித்தோம்.....

தொழிலதிபர் ஆக விரும்பியவரிடம் அதற்கான திட்டமிடல் இல்லை....என்னிடமோ குறிக்கோளே இல்லை...? இருவருமே எப்படி ஜெயிக்கப் போகிறீர்கள்....? மெளனமாய் நின்றிருந்தோம்.......

குறிக்கோள் இல்லாமல் எங்கே பயணிக்கிறீர்கள்? புரிதலோடு வாழ்க்கையின் நிலையாமையை விளங்கிக் கொண்டிருக்கும் நாம் வாழும் வரை வாழ்ந்துதான் ஆக வேண்டும்......அதில் மாற்றமில்லை. இடைப்பட்ட இந்த நேரத்தில் எங்கு பயணிக்கிறோம்...என்று தெரியாமலேயே செல்வதை விட.... இன்னவாக ஆவேன்....என்ற எண்ணத்தோடு....அதற்கான செயல் திட்டத்தை அன்றாடத்தில் எப்படி கடைபிடிக்கிறோம் என்று நம்மை நாமே கேள்வி கேட்டுக் கொள்ள வேண்டாமா? முகத்தில் அறைந்தார் யூ கேன் வின் என்ற அதிகபட்சமாக விற்பனையான புத்தகத்தை எழுதிய சிவ்கேரா.

புகழ் என்ற ஒன்றிலும் புகழ்ச்சி என்ற ஒன்றிலும் மட்டுப்பட்டு நின்றவர்கள் வாழ்வில் படுகேவலமாக தோற்று இருக்கிறார்கள். மேலும் ஒரு திறமைசாலியை 100பேர் கேவலப்படுத்தினாலும் திறமைசாலியின் திறமைகள் வெளிப்பட்டே தீரும். இந்த இடத்தில்தான் ஒரு விசயம் கவனமாக அறியப்படவேண்டும் செல்ப் எஸ்டீம் என்ற தன்னைப்பற்றிய சுய மதிப்பீடு சரியாக இருக்கிறதா என்பது உணரப்படவேண்டும். இதை சரியா புரிஞ்சுக்க தெரியலேன்னா.. ஓவர் கான்பிடென்ட் என்ற கிணத்துக்குள்ள போய் விழ வேண்டியதுதான்.

தெளிவான குறிக்கோள்கள் மேலும் அதற்கான திட்டமிடல்கள் அது நோக்கிய அன்றைய நகர்வு அதாவது.. எனது குறிக்கோளுக்காக ஒவ்வொரு தினமும் நான் என்ன செய்கிறேன்? என்பதும் முக்கியமாகிப் போகிறது. போராட்டங்கள் நிறைந்த வாழ்க்கையில் தடைகள் ஓராயிரம் இருக்கத்தான் செய்கின்றன....

அந்த தடைகளும் சதையினை தாண்டி எலும்பினை குத்தும் வேதனையை கொடுக்கின்றது....இங்கே தானிருக்கிறது சூட்சுமம் ...சாதரணமாக இங்கே தான் துவண்டு விழுந்து சோர்ந்து விடுகிறோம்... ஆனால் மாறாக ஒரு வித திமிரும் கோபமும் இங்கேதான் வரவேண்டும்....!

எங்கே விழுகிறோமோ.. அங்கே விசுவரூபம் எடுத்தாக வேண்டும். நம்மை சிதைப்பதற்கென்றே எதிர்மறை சிந்தனையாளர்களும், சூழ் நிலைகளும் கூட விசுவரூபம் எடுக்கும்...ஆனால்....ஏய் வாழ்க்கையே.... நீ என்னை என்ன செய்து விடுவாய்...? கோடாணு கோடி மனிதர்கள் வந்தனர் சென்றனர்...! எம்மை சுற்றியிருக்கும் எல்லா உயிர்களுக்கும் ஒரு வாழ்க்கை இருக்கிறதெனில் எனக்கான வாழ்க்கையை மறுத்து விடுமா ? இந்த பூமியின் சுழற்சி...

என் பாதச் சுவடுகளின்
வெறித்தனமான அழுத்த ஓட்டங்களின்
விளிம்பில்..காத்திருக்கிறது...
நான் கடக்கப் போகும்..இலக்குகள்

வெளிச்சமும் இருளும்
குழப்பி கிடைத்த
மங்கலான ஒரு அந்திமம்
தந்த இருட்டின் நுனியில்
வெடித்து சிதறும்
எனக்கான சூரியக் கதிர்கள்....!

திட்டமிடலும், செயலாக்காலும் மட்டுமல்ல....தோழா.. சரியான தேர்ந்தெடுத்த நட்புகளும் நமது வெற்றியின் காரணிகள். வாழ்வில் சில பொழுது போக்குக்காகவும், நம் மூளையை சுத்திகரித்துக் கொள்ளவும்தான்...அதுவே வாழ்க்கையாகக் கொண்டால் அது பெரும் அபத்தம்.

தண்ணீரில் நடக்கும் ஒருவன் மாதத்துகு ஒரு முறை 30 நிமிடம் அதை செய்யலாம் அது வித்தை. அந்த வித்தைக்கு மரியாதையும் சன்மானமும் கிடைக்கும். ஆனால் அதுவே பிழைப்பாகுமா...? வாழ்வின் வெற்றிக்கான விதிமுறைகள் எப்பவும் எதார்த்தமானவை...அவை தப்பாமல் எல்லா நிகழ்வுகளையும், வலியையும் கடக்க வைக்கும்.

என்னிடம் நண்பர் ஒருவர் கேட்டார்.. தினமும் பதிவெழுதி விடுகிறீர்களே...அன்றாட வேலைகளுக்கு நடுவே உங்களுக்கு எப்படி நேரம் கிடைக்கிறது என்று....! நண்பரின் கூற்று தவறு நான் தினமும் பதிவுகளை வெளியிடுகிறேன்... ஆனால் தினமும் எழுதுவது கிடையாது....ஒரு வார இறுதியின் கேளிக்கைகளுக்குப் பிறகான பின்னிரவில் பெரும்பாலும் விழித்திருப்பேன்...தோன்றுவதை எல்லாம்....அப்போதே எழுதுகிறேன்......மேலும் தனித்து இருக்கும் நேரங்கள் எல்லாம்.....ஏதாவது தோன்றிக் கொண்டேதானிருக்கிறது....!

என் எழுத்துக்கான கருவை நான் பெரும்பாலும் புறத்தில் தேடுவது மிகக் குறைவு........! அதனால் என்னோடு நானிருக்கும் நிமிடங்களை வடிப்பதற்கு அதிக பிராயத்தனம் செய்வது இல்லை. சொல்லி முடித்தவுடன்....ஏற இறங்க பார்த்து விட்டு போய்விட்டார் அவர்.

பாருங்க செமயா ட்ராக் மாறி போய்ட்டேன்........ஓ.கே.....லெட்ஸ் கம் பேக்...

வாழ்வின் ஓட்டத்தில் வாள் வீசும் வீரனாய் போரடிக் கொண்டுதான் இருக்கிறோம்... ! இதில் வெற்றி பெற்றவர்கள் எல்லோருக்கும் ஒரே ஃபார்முலாதான் இருந்திருக்கிறது....

1) நேரம் தவறாமை
2) துல்லியமான இலக்கு
3) இலக்கு நோக்கிய பயணம்
4) செயல் திட்டங்களும் செயல்படுத்தலும்
5) தெளிவு

இப்படி பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். ஆசியாவின் சூப்பர் தொழிலதிபர் கலாநிதி மாறன்.....இவரது வெற்றிக்குப் பின்னால்..அரசியலும், பணபலமும் இருப்பதாக மிகைப்பட்ட பேர்கள் நினைக்கிறார்கள்...அப்படியில்லை.....கலாநிதி மாறன் ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்திருந்தாலும் தொழிலதிபராகி இருப்பார்......காரணம்....அவருடைய பார்வையும், இன்னோவேட்டிங் ஐடியாவும், அட்டிடியூட் என்னும் மனப்பாங்கும்தான் காரணம்...........

வெற்றிக்கான ஒரு வெரி சிம்பிளான சூத்திரம்: நமக்குள்ள பாஸிட்டிவ் எண்ணங்கள வளர்த்துகிறதோட, அடுத்தவங்கள பத்தின நெகட்டிவ் தாட்ஸ மைன்டல இருந்து ரிமூவ் பண்றது.....!

ஆமாம் சார்.....ரொம்பவும் மன உறுதியோட மனசு புல்லா நம்பிக்கையோ வாள் வீசிக் கொண்டிருக்கும் போராளிதான் நானும்...

எது எப்படி இருந்தாலும் ஜெயிக்கணும்....!ஜெயிப்பேன்....!

நீங்களும்தான் பாஸ்....ஜெயிக்கணும்...ஜெயிப்பீங்க...!

ஏன்னா நமக்குள்ளே இருக்குறது சாதாரண தில் இல்ல செம தில்லு.....!


தேவா. S

Monday, October 25, 2010

இதோ...!
வார்த்தைகளுக்குள் அர்த்தம் தேடித் தேடி வார்த்தைகள் கொடுக்கும் உணர்வுகள் இழந்து எப்போதும் ஒரு கதை அல்லது கட்டுரை அல்லது ஒரு நிகழ்வு அல்லது ஒரு ஆரம்பம் அல்லது ஒரு முடிவு .. தேடி சுவையான எழுத்துப் பட்சணங்களின் மீது ஆசை கொண்டு இந்த கட்டுரைக்குள் நுழைபவர்களுக்கு .....முதலிலேயே சொல்லிவிடுகிறேன்....

எச்சரிக்கை...!!!!

ஆபத்தான வளைவுகளுக்குள் பயணப்படுவது உங்களுக்கு சிரமமாயிருந்தால்
... இப்போதே திரும்பிச் செல்வது உத்தமம்.

எனக்குள் பற்றி பரவியிருக்கும் இந்த இறுக்கத்தின் மூலம் என்ன? அவ்வப்போது வந்து தொண்டை அடைத்து கண்களில் கண்ணீர் நிறைத்து கலக்கமாய் நெஞ்சை பிசைந்து ஏதோ ஒன்று செய்கிறதே அது என்ன? கருவினில் இருந்த பொழுதுகள் முற்றிலுமாய் மறந்து போனாலும் எப்போதாவது இருளின் ஆளுமைக்குள் நிற்கும் போது சட்டென்று ஏதோ ஒரு அனுபவம் சாட்டையை சரெலென்று சொடுக்கிவிட்டது போல உடம்பு அதிர்கிறதே அது என்ன?

கேள்விகள்...கேள்விகள்...கேள்விகள்...என்று கேள்விகளில் இருந்து ஜனித்த பதில்களின் நுனியில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கும் அறியாமையின் கொடூர முகம் கண்டு பட்டுப்போன கேள்விகளெல்லாம் என்னை கேலிப்பொருளாய் பார்க்கும் தருணத்தில் எது அபத்தம்? எது சத்தியம்? என்று தெரியாமால் குழப்ப வாசலில் என்னை தொலைத்த பொழுது திறந்த கதவின் பெயர்தான் கடவுளா?

இயல்பாய் நகரும் வாழ்வின் ஓட்டத்தில் இளைப்பாறும் பொழுதுகளில் அர்த்தமற்று தெரியும் ஓட்டங்களின் அதிர்வுகள் எல்லாம் சிதறிய வண்ணங்களாய் என்னைச்சுற்றி பரப்பிய ஓவியங்களில் நான் அமிழ்ந்து இட வலம் மறந்து பின் ஓவியமும் மறைந்து எச்சத்திலிருக்கும் ஒரு ஏகந்த இருப்பின் அமைதியில் சூன்யத்தின் வேர் பிடித்துவிட்டாதாக கருதும் பொழுதுகளில் ஒரு கூட்டமும் ஒரு நெரிசலும், எங்கேயோ அசுர கதியில் பறக்கும் ஒரு லாரியின் ஹாரன் சப்தமும் என்னை சுடு வெயில் கொண்ட பகல் பொழுதுக்குள் தள்ளிவிட்டு....

சட்டென பருமனான வாழ்க்கை ரோலரை என் மீது ஏற்றி இறக்கும் பொழுதினை எதார்த்தம், உண்மை என்று சொல்லி எனக்காக பரிதாபப்படும் சக ஜன கூட்டங்களின் கூற்றுகள் எல்லாம் பொய்யா இல்லை மெய்யா என்று தெரியாமலேயே என் தேகம் நசுங்கிப் போகிறதே?

ஒரு எறும்பிடம் நான் பேசிக் கொண்டிருந்த பேச்சின் சாரத்தில் அந்த சிற்றுயிரின் எண்ணங்கள் என்னவாயிருக்கும் என்று ஆராய முற்பட்ட அந்த கணத்தில் ஏதோ ஒரு பேருண்மையின் அறியப்படாத சூத்திரத்தின் சுவடுகளை சுமந்து கொண்டிருந்த அந்த சிற்றுயிரின் அடர்த்தியில் நான் என்னை மறந்த பொழுதில்.....

....வயிறு முட்ட குடித்து, நெஞ்சு முட்ட உண்டு, கூடுமான வரை காமம் என்ற கடவுளை உடல் போகம் என்ற மாயைக்குள் அடைத்து தீர்ப்பதாய் நினைத்து தீய்ந்து கொண்டிருக்கும் என்னை ஒத்த சக ஆறறிவு பிராணிகளிடமிருந்து நான் வேறுபட்டுத்தானே போகிறேன்?

என் மிச்சமும் சொச்சமும் வெட்ட வெளியின் சத்தியத்தை நிறைக்கத்தான் போகின்றன என்பதை அறிந்தும் இதோ வந்து கலந்து கொள்கிறேன்...என்னை நானே மயங்கச் செய்து......சப்தமிட்டு சிரிக்க....கோபமிட்டு கொக்கரிக்க.. திட்டமிட்டு பொருள் சேர்க்க...வெட்கமின்றி அறியா காமம் செய்ய......இதோ வந்து விட்டேன்...!


தேவா. SSunday, October 24, 2010

ஹாய்....24.10.2010!


எப்பவுமே... ஏதோ ஒண்ண சொல்ல வந்துட்டு மேடையில நின்னு பேசுற அரசியல்வாதி மாதிரி ஆ.. ஊ..ன்னு கருத்துக்களை தொண்டை கிழிய கத்தி கர்ஜித்து, அடித்து உக்கிரமாக பேசி...ஹா.. ஹா. ஹா. ரொம்ப காமெடி லைஃபா இருக்குள்ள....சரி எல்லாத்தையும் தூக்கி ஓரமா போடுங்க...

வாங்க.. உக்காருங்க.. ! நல்லாயிருக்கீங்களா? வீட்டுல எல்லாம் நல்லா இருக்காங்களா...? என்ன சாப்பிடுறீங்க? டீயா? இல்லை காஃபியா? அட.. டீயா... சரி சரி.... நானும் டீதான் குடிக்கிறது. கம்மியா ஒண்ணும் இல்ல நிறைய...என்ன ஒரு மாதிரியா டையர்டா இருக்கீங்க.. இந்தாங்க.. இந்த தண்ணில முகத்தை கழுவிட்டு கொஞ்ச சில்லுன்னு இந்த தண்ணியவும் குடிங்க....!

செம காத்து அடிக்குதுல்ல...ஆமாம்....ஏகாந்தமா நாம் இப்படி ஒரு மாலைப் பொழுதுல கயித்து கட்டில எடுத்து போட்டு வாசல்ல உக்காந்து பேசிக்கிட்டு இருக்கறத பாத்துதான் சுத்தி இருக்கிற இந்த மரமெல்லாம் சந்தோசத்துல இந்த ஆட்டம் ஆடுது....

ஆமாங்க கொஞ்சம் போரடிச்சுதான் போச்சு.. வலைப்பூக்களில் நடக்கும் சில அத்துமீறல்களையும் இன்னும் சில அநாகரீகமான செயல்களையும் பாத்து....! அதான் எதுக்கு இந்த ஓட்டம் ஓடி...எந்த ரேஸ்ல மெடல் வாங்க போறோம்னு கூட சில நேரம் தோணுதுங்க.!

ரொம்ப கண்ணியமான படைப்பாளிகள் நிறைஞ்ச ஒரு இடம்னு ஆரம்பத்துல இருந்த எண்ணம் எல்லாம் மண்ணா போச்சுங்க...ஆமாங்க...! என்ன ஆச்சர்யமா பாக்குறீங்க... கூட்டம் சேர்ந்து மொய்க்கணும்னுதான் நிறைய பேரு நினைக்கிறாங்களே தவிர... என்ன விக்கிறோம்னு மறந்து போய்ட்டாங்க...! ஏன்னா நல்லது கெட்டது எது செஞ்சாலும் நியாயப்படுத்தி பேச தான் ஆயிரயம் புள்ளி விவரங்கள் இருக்குங்களே....!

இப்போ சந்தன கடத்தல் வீரப்பன் செஞ்சது நியாயம்னு கோவில் கட்டி கும்பிடச்செய்யுற அளவுக்கும் வாதம் செஞ்சு நிரூபீக்கலாம்....அப்புறம் மும்பைல எல்லாரையும் கொன்னானே அந்த பையன் பேரு என்ன? என்னவோல்லா...ம்ம்ம்ம்ம்ம் ஆங்.. அஜ்மல் கசாப் அவன் செஞ்சது நியாம்னும் வாதம் பண்ணலாம்....ஆனா அது சரி ஆகுமாங்க...இல்லேல்ல ... நம்ம மனசுக்கு தெரியும் நாம செய்றது நல்லதா கெட்டதான்னு....

ஊருப்பக்கம் பாத்தீங்கன்னா.. காலையில் 11 மணி காட்சிக்கு கூட்டம் அலைமோதும்... இப்போ எல்லாம் அப்படி தனியா ஒரு படம் தேவையில்ல அத தமிழ் சினிமாவே செஞ்சுடுது. இங்க ஒரு விசயம் கவனிக்கனும்...காமம் தப்புனு யாரும் சொல்ல வரல ஆனா.. காமத்த கத்துக் கொடுக்கவும் அதை சரியா பதின்ம வயதில் இருக்கவங்களுக்கு புரியவைக்கவும் சொல்லிக் கொடுக்குறவங்களுக்கு என்ன அருகதை இருக்குன்னு யோசிக்கணும்...சரிங்களா?

இல்லேன்னா தெருவோரத்துல கூத்து காட்டுற மோடி மஸ்தான் வித்தை மாதிரிஆயிப் போயிடும்....கிளர்ச்சியை உண்டு பன்ணாத புரிதலை பயிற்றுவிக்கும் காமத்தை எழுதுலாம் தப்பில்ல...

இதுல ஒரு விசயம் பாருங்க...என்னோட வலைப்பூவை..என் பொண்ணு எடுத்து படிக்கணும், என் தம்பி, தங்கச்சிங்க, எங்க அம்மா, சித்தி , பெரியப்பான்னு எல்லோரும் எடுத்து படிக்கணும் அப்படின்ற எண்ணத்துலதான் நான் எழுதுறேன்....எல்லோரும் எழுதணும்னு வலியுறுத்தல.. நான் எழுதுறேங்க....... அவ்ளோதான்!

வலைப்பூக்கள்ள மட்டும் இல்ல இணையத்த தட்டினா....வாரப்பத்திரிக்கைகள திறந்தா எல்லாமே...ஜிகினா ஒட்டுன பாய்சன் தான்...! அதனலாதான் சொல்றேன்...பெத்தவங்க புள்ல குட்டியல விட்டு தூரமா போயிடாதீங்க..அரவணைச்சு எல்லாத்தையும் புரிய வைக்கவேண்டியது நம்ம கடமைங்க....!

ஊர கொற சொல்லி என்னத்த பண்ண போறோம்? என்னங்க... நம்ம வூட்டு செவரு வெள்ளையா இருக்கானு ஒவ்வொருத்தரும் பாக்கணும்....

எல்லா இடமும் நாறிப் போய் கிடக்கு நானும் அசிங்கம் பண்ணின என்ன தப்புனு ஒரு கேள்வி கூட நியாமா வர்ற மாதிரி மாறு வேசம் போட்டு வரும்ங்க..யோசனையே பண்ணாம வெட்டித்தள்ளிடுங்க...!

பேச்சு சுவாரஸ்யத்துல சொல்ல மறந்துட்டேன்.....அந்த ஓரமா நிக்குது பாருங்க ரோசா செடி...நேத்துதாங்க பூத்துச்சு....! ஆமாங்க செடியா வாங்கியாந்து அது ஒரு நா மொட்டு விட்டு பூக்குற போது கிடைக்கிற பரவசம் இருக்குங்களே....அடா...அடா..அடா...! அதோ அதுக்கு பின்னால் நிக்கிறாளே அவ சிகப்பு ரோசாங்க..பாசாக்காரி...கிட்ட போனாளே துள்ளுவா......

பேச்சு சுவாரஸ்யத்துல டீய வச்சுபுட்டிங்க....அட டீய குடிங்க...ஆறிட போகுது.....

அப்புறம் ஒரு முக்கியமான விசயத்த சொல்லிபுடுறேன்...! வலைப்பூ வாசிக்கிற வாசகர்கள்...நல்ல எழுத்துக்கு சொந்தக்காரங்க மேலும் ரொம்ப எதார்த்தமா எழுதுறாங்கன்னு, அவங்க குணமும் அப்படி இருக்கும்னு நினைச்சு ஏமாந்து போய் உறவ வளர்த்துகிட்டு.. .. நிஜம்ன்ற நெருப்பு கனவுங்கற தோட்டத்த எரிக்க்கிறத தாங்கிக்க முடியாம கஷ்டப்படுறாங்க......! நல்ல எழுத்துகள படிங்க....ஆன எழுத்தாளன் எழுதுற மாதிரி எல்லாம் நல்லவனா இருப்பானு நினைச்சு ஏமாந்து போயிடாதீங்க....இதுல உசாரு வேணும்.....!

ஏன்னா..கண்ணு முன்னாலா பாத்து பாத்து வாங்குற கத்திரிக்காய வீட்டுக்கு கொண்டு வந்து வெட்டிப்பாத்தாலே பூச்சி இருக்குது...! பெரும்பாலன நேரத்துல எழுதற எழுத்துக்கும் எழுத்தாளனுக்குமே சம்பந்தமே இருக்காதுங்க...! காணமா இருக்குற நேரத்துல மனசு ஓவரா கற்பனை பண்ணும் அது ஏமாற்றமா போயிடக் கூடாதுங்க..! அம்புட்டுதேன்....

சோறு சமைக்கச் சொல்லிட்டேன்... நீங்க இருந்து சாப்பிட்டு புட்டுதான் போகணும்....சரீங்களா.....தம்பி சமீரயும் வரச் சொல்லியிருக்கேன்...இன்னிக்கு அவனுக்கு பிறந்த நாளு....அவனும் வந்த உடன் எல்லோருமா சேர்ந்து இரவுச் சாப்பாட ஒண்ணா சாப்பிடுவோம்...ஆமாங்க உறவுகளோட வாழ்ற வாழ்க்கையே ரொம்ப அலாதியானதுதான்....!

கொஞ்சம் நீங்க ரெஸ்ட் எடுங்க.... அதோ அந்த அலமாரில புத்தகம் எல்லாம் இருக்கு வேணும்னா எடுத்து படிங்க....! நான் கொஞ்சம் தோட்டம் வரைக்கும் வெரசா போயிட்டு ஒடியாந்திறேன்....!


அப்போ....வர்ர்ர்ர்ட்ட்டா!


தேவா. S

Saturday, October 23, 2010

பேச்சு....!


தினம் தினம் நிறைய மனிதர்களை சந்தித்துக் கொண்டே இருப்போம்.ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியாய் ஒவ்வொரு விதமான அதிர்வலைகளை பரப்புபவராக இருக்கிறார்கள். சாந்தமாய் கருணையாய்,எல்லா திறன்களையும் உள்ளடக்கி அமைதியாய் பதிலளிக்க கூடியவராய் ஆழ்ந்த அமைதிக்கு சொந்தக்காரராய் அன்பை பகிர்பவராய் சிலர் இருந்து விடுகிறார்கள். பல நேரங்களில் இப்படிப்பட்ட மனிதர்களைச் சந்திக்கும் பொழுது என் மீது எனக்கு ரொம்பவே வெறுப்பு வருகிறது.

முயற்சிகள் செய்பவனாகவும், அகங்காராம் அழியாதவனாகவும், அதிர்ந்த பேச்சுக்கு சொந்தக்காரனாகவும், எல்லாம் எனக்குத் தெரியும் என்று காட்டிக் கொள்பதில் முனைப்பு உள்ளவனாகவும் அப்படிக் காட்டிக் கொள்வதற்காகவே நிறைய பேசுபவனாகவும் பல நேரங்களில் இருந்து விடுகிறேன். எப்படி மாறுவது என்று சிந்திப்பதில் கூட வந்து அமர்ந்து விடும் கர்வத்தை நான் எங்கே போய் கரைப்பது?

சிலரை ரோட்டில் சந்தித்து அவசர வேலைகளுக்கு நடுவே பேசிக் கொண்டே இருப்போம். அந்த மனிதர் நிறைய அன்பினையும் அமைதியையும், சந்தோசத்தையும் நமக்கு பரப்பிக் கொண்டே இருப்பார். நேரம் போவதே தெரியாமல் இன்னும் ஒரு 5 நிமிடம் பேசலாம் என்று எண்ணி எண்ணி நேரத்தை நாம் நீட்டித்துக் கொண்டே இருப்போம். இதற்கு அந்த மனிதரின் ஆழ்ந்த எண்ணமும் நம் மீது உள்ள விருப்பமும் அகந்தையற்ற மனமும்தானே காரணமாக இருக்க முடியும்.

இதற்கு மாறாக சிலரை பார்த்தால்.. அச்சச்சோ.. இவனா இவன் கிட்ட மாட்டின போச்சே என்று அலறி அடித்துக் கொண்டு ஓடுவோம். அப்படியே அவரிடம் மாட்டிக் கொண்டால் அவரின் சுயதம்பட்டம், மற்றும் அகந்தையான பேச்சு என்று எல்லாமே நம்மை எண்ணை சட்டியில் வைத்து பொறிப்பது போல பொறிக்க எப்போடா போவோம் என்று தோணும். இதற்கு காரணம் எதிராளியின் சுயவிமர்சனம்.. ஒரு ஆல் இந்தியா ரேடியோ விளம்பரம் மாதிரி தன்னைப்பற்றி அவர் அடித்துக் கொள்ளும் தம்பட்டத்தில் நம்மை கீழே தள்ளும் முயற்சிகள் இருப்பதுதான்.

வழியில் ஒரு நண்பரை பார்த்திருக்கிறார் மிஸ்டர் எக்ஸ். மிஸ்டர் எக்ஸ் ஹாய் ... ! ஹலோ சொன்னதோடு சரி.. மத்த படி வழியில் சந்தித்த அந்த நபர் விடாமல் ஒரு 1 மணி நேரம் அவரைப்பற்றியும் அவரது வீர தீர பரக்கிரமங்கள் பற்றியும் பேசிக் கொண்டே இருந்து இருக்கிறார். நமது நண்பர் எக்ஸின் காதில் ரத்தம் வராதது ஒன்று தான் குறை. ஒரு மணி நேரம் கழித்து பேசி முடித்த அந்த வழிப்பறி நண்பர்.. ( வழியில் சந்தித்து நமது நேரத்தை பறிப்பவரை இப்படித்தானே அழைக்க முடியும்...அவ்வ்வ்வ்வ்வ்) எல்லாம் பேசி விட்டு சொன்னாராம்.. நான் என்னைப் பற்றி பேசி முடித்துவிட்டேன்.. இனி நீங்கள் என்னைப் பற்றி பேசுங்கள் என்று........????!!!! நம்ம நண்பர் மிஸ்டர் எக்ஸ் தலை சுற்றி மயக்கமே போட்டு விழுந்து விட்டாராம்.

நான், நான் என்று அதிர்ந்து அதிர்ந்து தன்னைப் பற்றி பேசிப் பேசி வெற்றிலைப் போட்டுக் கொள்பவர்களுக்கு அதில் பயங்கர சுகம்... ஆனால் பாவம் கேட்பவர்கள் காதுகள் தான் ரத்த பெருக்கெடுத்து ஓடும்.

உலகம் பரந்து விரிந்தது. இதில் நீங்களும் நானும் வெறும் புள்ளிகள். எப்போ பார்த்தாலும் நம்மை முன்னிலைபடுத்தி வாழும் வாழ்க்கை எல்லோருக்கும் நலம் பயக்காது. எதிரில் காணும் மனிதரின் நலம் விசாரித்தலும் அவர்களின் பிரச்சினைகளை செவி கொடுத்து கேட்டலும் அக்கறையாக பதிலளித்தலும், இயன்ற அளவு அவர்களோடு செய்திகளை பகிர்ந்து கொள்ளுதலும் மேலும் அவர்களின் அனுமதியோடு பேசுதலும் நல்ல பண்பாக இருக்குமென்று நினைக்கிறேன்.

எவ்வளவுதான் பயிற்சி இருந்தாலும் பாழாய்ப்போன இந்த மனசு காலேஜ் கட்டடிசிட்டு தியேட்டர் போயி சினிமா பாக்குற மாதிரி.... நம்மளயே ஏமாத்திட்டு திமிரு பேச்சு பேச ஆரம்பிக்கிது...

இப்போ எல்லாம் செம கோவம் வருது சார் எனக்கு...? நானே மனசப்பாத்து கேள்வி கேட்டுக்குறேன்... என்ன அருகதை இருக்கு உனக்கு? இவ்ளோ மமதை உனக்கு? அப்துல் கலாம் மாதிரி பெரிய பெரிய அறிஞர்கள் எல்லாம் அதிர்ந்து கூட பேசுறது இல்லை. ஆனா நாக்கு இருக்குன்றதாலேயே நீ என்ன வேணா பேசுவியா? நீ பேசுறத ரெக்கார்ட் பண்ணி வச்சு கேட்டுப்பாரு... உனக்கு என்னா தெரியும்னு உனக்கே தெரியும்........

ஆமா சார் இப்டி எல்லாம் பேசி பேசிதான் சரி பண்ணிக்க ட்ரை பண்ணிகிட்டு இருக்கேன்........ ! பெரிய மேதை ஆகலேன்னா கூட பரவயில்லை.... நம்மள பாத்து யாரும் ஓடி ஒளியாம இருந்தா சரிதான்......

இப்போ கூட பாருங்க... உங்கள நிக்க வச்சு போடு போடுன்னு போட்டுகிட்டு இருக்கேன்.....! சாரி சார் தப்பா எடுத்துக்காதீங்க...ஓடி எல்லாம் ஒளிய வேணாம்.... நானே கிளம்புறேன்....!


அப்போ நான் வர்ர்ர்ர்ட்டா!


தேவா. S

Wednesday, October 20, 2010

இருப்பு...!
தூசுகளாய் மாறி
நான் கரைந்து போய்
எங்கேயோ பிறந்திருந்த
பொழுதற்ற பொழுதுகளில்
முழுதாய் நான்
அடர்ந்து போயிருந்தேன்

வெளிச்சமும் இருட்டும்
எனது இயல்பாய் போன
தேசமற்ற ஒரு தேசத்தில்
நான் கரைந்து போயிருந்தேன்.
ஆகா.. காதலற்ற காதலாய்...
நான் நிறைந்து போயிருந்தேன்!

பஞ்சுப் பொதி ஒத்த..
மேகக் கூட்டத்தினுள் அடர்ந்த
நீர்த்திவலைகளாய் நான்
நிறைந்து போயிருந்தேன்...
பற்றிப் பரவும் காற்றின்
வீச்சில் அலைகளாய்
நான் கலைந்து போயிருந்தேன்..!

ஒரு முட்டை ஓட்டுக்குள்
சூடான ஒரு கருவாய்
நான் இறைந்து போயிருந்தேன்...
எங்கேயோ ஊறும்
ஒரு ஆட்டு மந்தையின்
நெருக்கத்தின் இடைவெளிகளில்
நான் கலந்து போயிருந்தேன்...!

சுவாசம் தப்பவிட்டு
சுவாசிக்கும் ஒரு ஜீவனாய்
நான் விரிந்து போயிருந்தேன்..
பெய்யும் மழையை ....
வாங்கும் ஒரு நிலமாய்
நான் குழைந்து போயிருந்தேன்...!

இல்லாமல் எங்கும்
இருக்கும் சுகத்தில்
நான் கிறங்கிப் போயிருந்தேன்...
அந்த நித்திய இருப்பில்
நான்.. எங்கும் எப்போதும்
இல்லாமல் இருந்து போயிருந்தேன்...!

அப்போது நான்
சுகமாய் இறந்து போயிருந்தேன்!


தேவா. S

சுடலை...இறுதி பாகம்!

இதுவரை

இனி...

நல்ல வேல வெரசா வந்த ரெண்டு ஆளுக பிடிச்சு கொண்டு போய்ட்டாக... அந்த ரெண்டு பிசாசுகளையும். வீட்டு திண்ணையிலதேன் நின்னாக சுப்பையாவும் அவுக அப்புவும் ...!

செவ செவன்னு வந்தாருப்பா கருப்பையா பிள்ளை.. ! ஆத்தேய்..........எம்புட்டு உசரம், பவுனு கலரு, கொண்டையா மாறி தோல்ல கிடக்குற முடில இடை இடையே கொஞ்சம் நரை...வெத்தலை பாக்கு போட்டு செவந்து போயிருந்த உதடு.. முரட்டு மீசை, மிரட்ற கண்ணு... வெள்ள வேட்டி.. மேல ஒரு துண்டு...இம்புட்டு பெரிய செயினு எல்லாமா தங்கத்துல போடுவாக....!!!!சுப்பையா இன்னும் ஆச்சர்யத்தில் இருந்து வெளியே வரவில்லை.

"ஏப்பே.. என்ன அங்கனாதான நின்னுகிட்டு...உள்ள வாம்ல...." அவரு கொடுத்த சத்ததுல பேசாம உள்ளே போனாக சுப்பையவும் அவுக அப்புவும்."

வீட்ல வேலைக்கின்னே பத்து ஆளுக, அடி புடி சன்டைக்கின்னே பத்து ஆளுக இருப்பாக தம்பி...! அண்ணனுக்கு கண்டில (இலங்கை) கடை இருக்கு நல்ல யாவாரம். அடிக்கடி மலேசியா போய்ட்டு வருவாக.....! நாம சாப்பிடும் போது சோறு போனிச்சில்ல உன்னைய தண்டி டிப்பன் கேரியர்ல சுப்பையாவின் உயரத்தை காட்டி பேசிக் கொண்டிருந்தார்....அவுக அப்பு...! அந்த டிப்பன் கேரியர் அவுக மயன் சிரமட்டானுக்கு போகுதுப்பே....!


சிரமட்டானுக்கு எதுக்கு வேல வெட்டி....? அவன் நாட்டரசன் கோட்டையில் கிளப்புல சீட்டு விளையாடிகிட்டு இருப்பான்.....! காசும் சோறும் வீட்ல இருந்துதேன் போகுதுன்ன்னு அப்பு சொல்லிக் கொண்டே போனார்....!கொள்ளை காசு இருக்குப்பா..அதேன் அவுக அப்படி இருக்காக....நாம எல்லாம் வயக்காட்டுல இறங்கி வேல செஞ்சாதேன் நமக்கு மூணு வேல கஞ்சியாச்சும் கிடைக்கும்.....பேசிக் கொண்டே இருந்தார் சுப்பையாவின் அப்பு...கேட்டுக் கொண்டே நடந்தான் சுப்பையா.

சுப்பையாவுக்கே நல்லா தெரியும்...கருப்பையா பிள்ளை ஊருக்குள்ள வாராறுன்னா...கிளுவச்சி தாண்டி வண்டி வரும் போதே மாடுக வர சலங்க சத்தம் கேக்க அரம்பிக்கும்! ஊருக்குள்ள இருக்குற மக்கமாருக்கெல்லாம் கிறுக்கு புடிக்க ஆரம்பிக்கும். கூட்டு வண்டி வச்சு இருக்கவக அப்போ எல்லாம் பெரிய ஆளுக...!எல்லாரும் தட்டு வண்டிதான் வச்சு இருப்பாக அதுவும் வெள்ளாம வெளச்சலுக்ககாக... கூட்டு வண்டி வச்சி இருக்கவக பயணப்பட மட்டும்தேன்........

இரட்டை மாட்டு வண்டி பூட்டி, மாட்டுக் கொம்புகளுக்கு பூண் போட்டு கழுத்துல சலங்கை கட்டி வந்திருச்சுயா வண்டி ஜோரா ஊருக்குள்ள! சனமெல்லாம் திரண்டு நிக்கிது ரெண்டு பக்கமும் கருப்பையா பிள்ளைய பாக்க....! அவரு வருவாருன்னே எடுக்காத ரங்கூன் கம்பளத்த எடுத்து விரிச்சு, வீடு முன்னால சாணி தெளிச்சு கோலம் போட்டு....யாரு வந்தாலும் எடுக்கதா பீங்கான் பலிங்கத்த (வெற்றிலை எச்சில் துப்பும் பாத்திரம்) எடுத்து வெச்சு வீடு தொடச்சி....வெத்திலைய பரப்பி வச்சு குடிக்க பானகம் கரைச்சு வச்சு காத்தே கிடக்குது சுப்பையாவோட வீடு…!

கருப்பையா பிள்ளை வந்து வண்டிய விட்டு இறங்குறதும், அவரையும் அவரோட பெண்டையும் ஊருசனம் வாய்பிளந்து வேடிக்கை பார்க்குறதும் அவர் உக்காந்து வெத்திலை போட்டுகிட்டு செவக்க செவக்க அவரோடு கண்டி கடை பத்தியும், மலேசிய பயணத்தையும் பத்தி சொல்றதையும்னு... ஊரு சனமே வாய பொளந்து கிட்டு கேக்குறதை விட அவரு உடுத்தியிருக்கிற பட்டு சட்டையையும் வேட்டியையும் அங்கவஸ்திரத்தையும், கழுத்து செயினையும் பாக்க நிக்குற கூட்டம்தான் அதிகமிருக்கும்....

வந்துட்டு போகும் போது கை நெறய எல்லாருக்கும் காசு கொடுத்துட்டு போவாரு கானா ரூனா..ஆமாம் அப்படித்தேன் ஊரு சனமே கூப்பிடும்....! போய் ரெண்டு நா வரைகும் ஊருக்குள்ள பேச்சு இருக்கும் கானா ரூன வந்தாரப்பே.. நான் பாத்தேனப்பே.. என்ன மனுசன் தெரியுமான்னு முக்குக்கு முக்கு நின்னு பேசிக்கிட்டு இருப்பாக....

இப்படியே போன வாழ்கையில் எவமுட்டு கொள்ளி கண்னு பட்டிச்சோ..தெரியல ..!சுப்பையாவுக்கு அரச புரசலா வீட்டுல பெரியவுக பேசுற பேச்சுல இருந்து ஏதோ புரிஞ்சுச்சு.. கானா ரூனவுக்கு தொழிலு நொடிச்சு போச்சாம், கண்டி கடைய கூட வித்துப்புட்டாறாம்...மலேசியாவுல யாரோ கொடுக்கவேண்டிய காச ஏச்சுபுட்டாகளாம்...இப்படி கேட்டுகிட்டே இருந்த சுப்பையாவுக்கு ஒரு நா கானா ரூனா சம்ஸாரம் தவறிப்போச்சுன்னு அப்பும் ஆத்தாளும் அழுதுகிட்டு பருத்திகம்மாயிக்கு ஓடுனத பாத்து வெலவெலத்து போச்சு.....!

ஆத்தி...ஒரு மனுசன கடவுளு எம்புட்டுதேன் சோதிப்பாரு.....ன்னு பயந்தே போனான் சுப்பையா...

கானா ரூனா சம்ஸாரம் தவறி ஒரு மாசத்துக்குள்ள பருத்திகம்மா வீட்டயும் கடங்காரவுக கிட்ட கொடுத்துபுட்டு...புள்ளையள எல்லாம் கானா ரூனா அக்கா வீட்டுக்கு சீமைக்கு அனுப்பி விட்டதா சொன்னாக....

ஒரு நா சுப்பையா சோட்டு பயலுக கூட வெளையாடிக்கிட்டு இருந்தான் தெருவுல.....! அட..யரோ ஒரு கிறுக்குப்பய கையல் குச்சியோட ஒத்த கோமணத்தோட தாடியும் மீசையுமா வாறனப்பா ஊருக்குள்ள...வெளயாட்ட நிறுத்தி புட்டு புள்ளக்குட்டியெல்லாம் போய் அவன சுத்தி சுத்தி ஏசுதுக...கத்தி கத்தி பரிகாசம் பண்ணி விளையாடுதுக....

"கோவணாண்டி.. கோவணான்டி...கொட்டங்குச்சி கையில வச்சிருக்க கோவணான்டி" ன்னு பக்கிய பாட்ட வேற பாடுதுக......

மெல்ல போயி சுப்பைய குறு குறுன்னு பாத்தான் அந்த பைத்தியத்த......

"யப்பே......கானா ரூனாவுல்லா வந்திருக்காருன்னு......"

கத்திக்கிட்டு வீட்டுப்பக்கம் பரிஞ்சு ஓடியே போனான் சுப்பையா....! கொஞ்ச நாளாவே.. வீட்ட வித்துப்புட்டு சீமை பக்கம் போறேன்னு சொல்லிட்டுப் போன கானா ரூனாவ அதுக்கப்புறம் யாருமே காங்கல...!இப்போதேன் கிராமமே கூடி நின்னு காங்குதுக.....!

சுப்பையாவோட அப்பு எம்புட்டோ மல்லுக்கு நின்னு வீட்ட்டுக்கு வாங்கனேன்னு கெஞ்சி பாத்தாரு..ம் ஹும் ஒண்ணும் கத நடக்கல! கருப்பையா பிள்ளை கலரு மங்கிப் போயி..கண்ணு எல்லாம் குழிஞ்சு போயி, கன்னம் ஒட்டிப்போயி .. கம்பங்கதிரு போல கொளுத்து நின்ன மனுசன்.. கருக்கருவாமாறி கருத்துப் போயி இருக்காரப்பா.....

" ஏப்பே அவரு கிறுக்கோண்டு போயிட்டாருப்பே...." விட்டுத் தள்ளுங்க ...அப்போ அப்போ....காணுற ஆளுக கஞ்சிய தண்ணீய கொடுக்கணும்னு முடிவு பண்ணிப்புட்டு கலைஞ்சே போச்சு....ஊரு சனம்...!

நிதமும் சுப்பையா கானா ரூனாவ தெருவுல காங்குறதும்...வீடு வீடா போயி கான ரூனா சோறு வாங்கி உங்கறதும்னு ஓடிகிட்டே இருந்தச்சு பொழுது. சுப்பையா மட்டும் நினைப்பான் இடைக்கி இடைக்கி....எப்படி இருந்த மனுசன்..ஊரே கூடி வேடிக்கை பாத்த ஆளு....இப்போ சீண்ட கூட நாதி இல்லாமே எல்லாம் தோத்துப்புட்டு இப்படி கிறுக்கோண்டு அலையுதே...தெருவுல....


" ஏ சாமிகளா....எங்களா போனீக....மனுசப் பொறப்ப இப்படி சீரழியற பொறப்பா படச்சிபுட்டு...எங்களா சாலியா இருக்கீக....! வருசமான பொங்க ஆடு கோழின்னு பழிகொடுக்குறம்லா.....! பூசை, மாலைன்னு போங்க............சாமீகளா... நீங்க ஏக்கிறீக.......மனுசப்பய எல்லாம் ஏமாந்து நிக்கிறாய்ங்க.....! நெசமாவே நீங்க இருந்தா இந்த மனுசன இப்படி சீரழிப்பியலா...மூச்சுக்கு முன்னுறு தடவ.........நமச்சிவாயா நமச்சிவாயான்னு சொன்ன மனுசன இப்படி கோவணத்தோட கிறுக்கோண்டு போக வச்சுபுட்டியளே..." சுப்பையாவுக்கு ஆத்திரமும் அழுகையும் வெடித்துக்கொண்டு வந்தது.

காசு இருக்கப்ப பேதில போவாய்ங்க வந்து வேடிக்க பாத்தாய்ங்ஙே...! ஆகா ஓகோன்னு முகத்துக்கு நேர பேசுனாய்ங்க...காசு இல்லேன்னா..மதிக்கமாட்டாய்ங்க... ! எலே மக்கா வாங்க.. இந்தா கானாரூனா வந்து இருக்காரு.. புளிய மரத்தடியில சுருண்டு படுத்து கிடக்காரு....! வர்றவன் போறவனுக்கெல்லாம் அள்ளி கொடுத்த மனுசன்.. இந்தா புழுதில கிடக்காரு....வாங்க மக்கா...! ஒரு நாதியும் வராது...கானாரூனாகிட்டதான் காசு இல்லையே....இப்ப...!

ரெண்டு மூணு நா புளிய மரத்தடில கிடந்த மனுசன் நாலாம் நா படக்குன்னு செத்துப்போனாரு...! என்ன நினைச்சு உசுர விட்டாரோ மகராசன்...

"ஆண்டு அழிஞ்சு போச்சே...
அயிர மீனு காஞ்சு போச்சே....
கொளத்து தண்ணியெல்லாம்...
கோடையில வத்திப் போச்சே....
ஊர ஆண்ட மகராசான்
உடம்ப விட்டு உசுரு போச்சே!

ஆடி ஆத்தி.....ஆத்தி...ஆத்தி..ஆத்தி...ஆத்தி...!"

சுப்பையாவோட அப்பத்தா நெஞ்சுல அடிச்சுகிட்டு அழுதத சுப்பையா இன்னும் மறக்கல......!

" ஏய் தம்பியோவ்.... நான் பொணத்த எரிக்க போறேன் நீ கெளம்பு ராசா" சுப்பையாவோட நினைவை அசைச்சுப் போட்டாரு.......மாசானம்...! அண்ணே செத்தவடம் இருந்து பாத்திட்டு போறேண்ணே....! கெஞ்சலுக்கு வழி விட்டு... மாசானம் பேசாம சோலிய பாக்க போனாரு....

கொளுந்து விட்டு நெருப்பு மனுச உடம்பு மேல பத்துறதா கண்ணு கொட்டம பாத்துகிட்டே இருந்தான் சுப்பையா...! டப் டப்னு சத்தம் வந்துச்சு செத்த வடத்துக்குள்ள..மாசானம் சொன்னாரு.. தம்பி நரம்பு எல்லாம் இறுக்கமாகி அறுகுது பத்தியான்னு சொல்லிப்புட்டு..

கெக்க.. கெக்க கெக்கன்னு வேகமா சிரிச்சாரய்யா மாசானம்... !

அப்பதேன் பொணத்த பாத்து கூட பயப்படாத சுப்பையா கெலுக்குன்னு பயந்தே போனான்....! சுதாரிச்சிகிட்டு மறுக்கா சிரிச்சு வச்சான்…! தம்பி.. இப்ப உடம்பு எந்திரிக்கும் பாருன்னு சொல்லிகிட்டே நரம்பு எல்லாம் இறுக்கமாயி வெறச்சு எழுந்த பொணத்துல.......

" நெஞ்சுல ஒரு அடி......! காலு முட்டிக்கு பக்கத்துல ஒரு அடி......! கம்புல அடிச்ச வேகத்துல சொன்னாருப்பா மாசானம்....அம்புட்டுதேன்..... மனுசப்பய பொறப்புன்னு....." சொல்லிப்புட்டு.... பைக்குள்ல வச்சிருந்த உடுக்கைய எடுத்து....மனுசன் அடிச்சாரு பாருங்க...

" த்துதும்..தும்..தும் தும்..த்த்தும்தும் தும் த்தும் தும்தும்....த்துதும் தும் தும்.. தும்ம் தும்த்துதுதும் "

நாடி நரம்பு எல்லாம் எந்திருச்சு நின்னு ஒரு ஆட்டம் உள்ளுக்குள்ளேயே நடந்துச்சு சுப்பையாவுக்கு...!

உலகமே ஆட்டம்...! உலகமே ஓட்டம்....! எல்லாமே...எல்லாமே கண்ணுக்கு தெரியுற எல்லாமே...ஓண்ணுவிடாம ஒழிஞ்சு போகும்....! இந்த உடுக்கைல வர்ற சப்தம் மாறி... அழுத்தமா அடிச்சு சப்தமா வெளிய வந்து காத்துல கரைஞ்சு மெலிஞ்சு கரைஞ்சு போற மாதிரி....

மனுசப்பய வாழ்க்கையும் ...ஆர்ப்பட்டமா அழுத்தமா ஆரம்பிச்சு....மெலிஞ்சு ஒழிஞ்சு தேஞ்சு போகுகுப்பேய்....!..... சப்தத்துக்கு அர்த்தம் இருக்கா...? இல்லை.. ஆன சப்தம் இருக்கு..! காத்துல கேக்குற வரைக்கும் ஓசை... கரைஞ்சு போனா... ஒண்ணுமில்ல...!

எங்க போச்சு ஏன் மறஞ்சு போச்சுன்னு என்னிக்காச்சும் ஆராஞ்சு இருக்கமா இல்லைல..அது மாதிரிதான்.. மனுச வாழ்க்கையும்...செத்துப் போனா போய்ட்டான்...அம்புட்டுதேன் அவனாச்சு.. அவன் உடம்பாச்சு அவன் உசுராச்சு...! என்னத்துக்கு ஆராய்ச்சி? என்னதுக்கு களவாணித்தனமான கற்பனை....போங்கப்பே...போங்க.... ! சுப்பையாவுக்குள்ள என்ன என்னமோ தோணிச்சு....

" எலேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் சுப்பையோவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்! "

துரத்துல ஆத்தாவோட (அம்மா) குரலு காத்துல சுப்பையாவ தேட ஆரம்பிச்ச நேரம்.....பதில் கொரல் கொடுத்தான் சுப்பையா ....

" இதோ வாரேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன் ஆத்த்த்தோவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!"

சுப்பையாவின் சத்தம் காற்றை கிழித்துக் கொண்டு போனது ஆனால் மாசானம் உடுக்கை அடியை நிறுத்த வில்லை......! கிளம்புறேன் அண்ணே சுப்பையா சொன்னது மாசானம் காதில் ஏறவில்லை....அவர் தன்னிலையில் இல்லை எனபது சுப்பையாவுக்கு புரிந்தது...

வீடு நோக்கி இருட்டில் நடந்து கொண்டிருந்தான் சுப்பையா...........காற்றில் உடுக்கை சப்தம் கேட்டுக் கொண்டே இருந்தது...........

" த்துதும்..தும்..தும் தும்..த்த்தும்தும் தும் த்தும் தும்தும்....த்துதும் தும் தும்.. தும்ம் தும்த்துதுதும் "தேவா. S

Tuesday, October 19, 2010

சுடலை...!
எல்லோரும் போய் விட்டார்கள் சுப்பையாவை தவிர. அந்த கார்கால 7 மணியில் கிராமத்து இருட்டு கருமையை எனக்கென்ன என்று பரவவிட்டு இருந்தது. சுப்பையாவை கவனிக்கமால இருந்த மாசனாம் தன்னுடைய வேலையில் மும்முரமாயிருந்தார். கட்டுக்களை எல்லாம் பிரித்துக் மேலே சமமாக சாணி ராட்டிகளை அடுக்கிக் கொண்டிருந்தார்.

குய்யோ முறையோ என்று உறவுக் கூட்டம் கதறுவதும் பின் கடைசியில் மாசானத்தின் பொறுப்பில் விட்டு விட்டு வீடு போய்ச் சேருவதும் இன்னிக்கு நேத்தா பார்க்கிறார் மாசானம்.

எத்தனையோ உடல்கள் வருகின்றன எரித்து... எரித்து அந்த எரித்தலில் ஒரு புரிதல் ஏற்பட்டு வாழ்க்கையில் ஒரு நிதானத்துக்கு வந்த மாசானம் இருட்டில் தகர கொட்டகை ஓரமாய் அமர்ந்திருந்த 15 வயது சுப்பையாவை அப்போதுதான் கவனித்தார்....! அட..சுப்பையா.. என்னப்பு.. நீ போகலியா? கேள்வியில் ஆச்சர்யத்தை திணித்து சுப்பையாவை உற்றுப் பார்த்தவராய் கேட்டார் மாசானம்.

இல்லண்ணே என்ன செய்வீகன்னு பாக்க ஆசையா இருந்துச்சு.. அதாண்ணே... சுப்பையாவின் பதில் கேட்டு மாசானம் சிரித்த சிரிப்பில் பக்கத்து மரத்தில் இருந்த பறவைகள் பயந்து போய் கத்த தொடங்கின. ஏய் தம்பி கிறுக்கு புடிச்சு போச்சா..சுடுகாட்ல உக்காந்து கிட்டு என்ன கேள்வி கேட்டுகிட்டு.... ? உங்க அப்பு ஆத்தாக்கு தெரிஞ்சா வைவாக (திட்டுவாங்க) நீ வெரசா கிளம்பப்பே.... எனக்கு கொள்ளை வேல கிடக்கு....

அது ஒண்ணுமில்லண்ணே ஒரு நாத்து இருந்து சும்ம பாக்றேண்ணே....ன்னு சுப்பையா அவரின் சம்மத்தை வலுக்கட்டாயமாக பெற்றுக் கொண்டன்....! அட என்ன தம்பி சரி இருங்க ஆன எரிய ஆரம்பிச்ச உடனே வெரசா போய்டனும். சரியா....! இங்க பிசாசுங்க இருக்கு என்று சொல்லிவிட்டு அவர் வேலையில் மும்முரமானார்.

சுப்பையா உள்ளுக்குள்ளே சிரித்துக் கொண்டான். பிசாசு... இருக்கா? ஹா..ஹா..ஹா...செத்த மனுசந்தானே பிசாசா வருவான்....வரட்டும் வரட்டும் அப்படி ஒரு வேலை வந்தா நான் பேசி சமாளிச்சுகிறேன். இருக்குற மனுசன் கிட்டதான் பிரச்சினை எப்பவும் பின்னால குத்தறதுக்கும், புறணி பேசுறதுக்கும், காசு பணம் சேக்கவும் ஆட்டமா ஆடுவாய்ங்கே.. செத்த பின்னானாடி என்னத்த செய்ய போறனுக வரட்டும் வரட்டும்..மனதுக்குள் சொல்லிக் கொண்டே... எரியூட்டப் போகும் அந்த உடலின் மீது மனதை செலுத்தினான் சுப்பையா....

கருப்பையா பிள்ளை.....ஆமாம்..." கண்டி முதலாளி பருத்திக்கண்மாய் கருப்பையா பிள்ளை" அப்படின்னு சொன்ன...குருக்கத்தி, விட்டனேரி, பருதிக்கண்மாய், கிளுவச்சி, ஒருபோக்கி, பாப்பான் கண்மாய், கொல்லங்குடி, நரிக்குடி, நாட்டரசன் கோட்டை, காளையார்கோவில் வரைக்கும் படு பேமஸ். தெரியாத ஆளு இல்லை. சுப்பையாவுக்கு 7 வயசு ஆன 1954ஆம் வருசத்துல தான் நல்லா விவரம் தெரிஞ்சு வேடிக்கை பார்க்க ஆரம்பிச்சான் சுப்பையா. இவனுக்கு பெரியப்பாரு முறை வேணும்.

வானம் பாத்த பூமி மக்க...எப்பவும் வெதைய விதைச்சுப் புட்டு அண்ணாந்து பாத்துகிட்டே திரியுங்க...எப்பாடா வான ராசா கண்ண தொறப்பாரு...எம் புஞ்சைகாட்டு புள்ளையலுக்கு எல்லாம் மழையா வந்து விழுந்து எங்க வயித்துப் பாட்ட தீப்பாருன்னு ஏங்கிகிட்டு அலையிற சனம், கம்மாயில இருக்குற சொச்ச தண்ணிக்கும் முறை வச்சி தொறந்து விட்டு புட்டு கம்மா தண்ணி கொறய கொறய வயித்துல நெருப்பெரிய ஆரம்பிக்கும்...கண்ணுல மிரட்சியா...ஏப்பே... இன்னிக்கு நாளைக்கு மழை தண்ணி விழுகுமா?ன்னு ஒருத்தர ஒருத்தரு கேக்கவும்...விழுமப்பா...நேத்து காயஓடை பக்கமெல்லம் நல்ல மழை விழுந்துருக்குப்பா... மங்கலம் கம்மா பாதிக் கம்மா பெருகிருச்சாம்பா...! நமக்கும் விழும்பா...ஒருத்தரை ஒருத்தர் கேள்வி கேட்டு பதில் சொல்லி ஒரு மிரட்சியான வாழ்க்கை...

சில நேரம் விளையும் பல நேரம் விளையாது இருந்தாலும் வாழ்க்கையை சமமாக பார்க்கும் மனம் கொண்டவர்கள். இவர்களுக்கு மத்தியில் கண்டி கருப்பையா பிள்ளை ஒரு ஆதர்சன கதா நாயகன் தான் எல்லோருக்கும்.

சுப்பையாவுக்கு பெரியப்புதானே...அதுவுமில்லாம சுப்பையாவோட அப்பு ரங்கூன் போறதுக்கு முழுக்காரணமே கருப்பையாபிள்ளைதான். முத தடவை சுப்பையா.. அவுக அப்பு கூட பருத்திகண்மாய்க்கு கருப்பையாபிள்ளை வீட்டுக்கு போனதே பெரிய அனுபவம்தான்...!

1 கிலோ மீட்டர் சதுர பரப்புக்குள் கருவ முள் அடஞ்ச வேலி. பெரிய மூங்கிப்படல் அடஞ்ச கதவு.. அதாண்டி உள்ள போனா..ரெண்டு பாக்கமும் நெறய தென்னங்கண்டுக (மரம்) அத தாண்டி அதோ உள்ள தெரியுதப்பா பெரியா கோட்ட மாதிரி வீடு.....சுப்பையா திணறிப்போய் பார்த்துக் கொண்டிருந்தான்.

மனிசங்க இப்படியும் கூடவா வாழ்வாய்ங்க.....சுப்பைய அவுக அப்பு கைய கெட்டிய பிடிச்சுகிட்டு நடந்து போக சொல்ல எங்கே இருந்தோ வந்துசுப்பா.. ரெண்டு நாட்டு நாய்க.. ஒண்ணு ஒண்ணும் ஒரு கன்டுகுட்டி பெருசல.. வெல வெலத்து போன சுப்பையா.. கண்ண மூடிக்கிட்டு மாரநாட்டு கருப்பே.. எங்கள காப்பாத்து சாமீன்னு வேண்ட ஆரமிச்சுட்டான்.. நாய்க ரெண்டும் பாஞ்சுகிட்டு வருதுக....வெரசா.......


(பதிவின் நீளம் கருதி....இதன் இறுதி பாகம் நாளை..........!!!)


தேவா. S

Monday, October 18, 2010

இயமம்....!


சப்தமின்றி அடங்கிப் போ...! சரித்திரங்கள் படித்து மடங்கிப் போ! வாசித்து வாசித்து தொலைந்து போ! அகந்தை அடக்கி அழிந்து போ...! மனதோடு பேசிக் கொண்டிருந்தேன் நான். மமதை கொள்ளாதே மனமே... தும்பிலும் சிறிய செயல்களை முன்னிலைப்படுத்தாதே மனமே...!

வரலாற்றில் பெரும் பங்கு ஆற்றியவர் யாரும் இன்று இல்லை.

விசுவ ரூபங்கள் என்று மனிதர்கள் நினைத்து எடுத்த அவதாரங்கள் எல்லாம் அழிந்து போய்விட்டன. வாழ்வின் அத்தியாயங்களில் இடம் பிடிக்க நினைத்து அவர்கள் செய்த பிரமாண்டங்கள் எல்லாம் கட்டிடங்களாகவும், வழிபாட்டுத்தலங்களாகவும்,குளங்களாகவும், ஆறுகளாகவும் இருந்தாலும்...அவையும் புவியின் ஓட்டத்தில் திசைகள் மாறி ஒரு நாள் சுக்கு நூறாகலாம்.

கவிதைகள் செய்தவர் கலைந்து போயினர்;போரில் வெற்றி வாகைகள் சூடியவர்கள் மாய்ந்து போயினர்; அழகாய் நின்ற பேதைகள் எல்லாம் நெருப்பின்,மண்ணின் அகோரப்பசியில் செரித்துப் போயினர். காலங்கள் தோறும் மானுடர்கள் சாரை சாரையா வந்து ஜகதல பிரதாபங்கள் செய்து, செய்ததாய் நினைத்து....வாரிசுகளாய்,வாழ்க்கையாய் எழுதி வைத்த, சேர்த்து வைத்த எல்லாமே எடுத்துச் செல்ல முடியாமல் போய்ச் சேர்ந்து விட்டனர்.

இருக்கும் வரை ஆடிப்பாடி ஏமாற்றும் என் மனமே.. ! கொஞ்சம் அடங்கிப் போ.... என்னுள் அமிழுந்து போ,,,! கூடுமான வரை தொலைந்து போ.....!

இப்படி நான் எனக்குள் பேசிக் கொண்டிருந்த 2002 ஆம் வருடத்தின் மாலை 3 மணியில் இருந்த இடம் எது தெரியுமா? எல்.ஐ.சி. அருகே இருந்த பஸ்டாப்.....! வெயில் போய் விடவா ..போய் விடவா என்று கேலி செய்தும்...மாலையின் குளுமை வந்து விடவா… வந்து விடவா என்றும என்னை பரிகசித்தும் கொண்டிருந்த ஒரு சூழல்...

என்னுடைய வார விடுப்பு நாளான திங்கள் கிழமை அது....! (அது ஏன் திங்கள் கிழமைன்னு ஆராய்ச்சி பண்ண வேண்டாம்.. மக்கா.. மெயின் ரூட்ட பிடிங்க..) சென்னை சுறு சுறுப்பாக ஓடிக் கொண்டிருந்த அந்த வேலை நாளில்... நீ என்ன லூசு மாதிரி எல்.ஐ.சி. ஸ்டாபிங்கல பண்றன்னு கேக்குறீங்களா?

சும்மாயிருந்த என்னை விக்னேஷ் அண்ணன் உசுப்பி விட்டு... உசுப்பி விட்டு…. எதேதோ சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார். அவரது கைங்கர்யத்தில் விவேகாந்தரின் வாழ்க்கை வாழ்க்கை வரலாற்றை படித்து விட்டு...இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி....இதில் மனம் போய் ஒன்றிக் கொள்ள....

இயமம் - விட வேண்டிய கெட்டப் பழக்கங்களை விடல்.

நான் இயமத்தில் இருந்தேன். இயமம் பழகும் பயிற்சியிலேயே ஏராளமாக வழுக்கல்களும் சறுக்கல்களும் இருந்தது. விக்னேஷ் அண்னன் சொன்ன படி .....புறச்சூழலை சரியாக வைத்துக் கொண்டால் இயமம் கைகூடும் என்ற கூற்று என் சிற்றறிவுக்கு எட்ட...

இதோ திருவல்லிக்கேணி பார்த்தசாரதியையும், பாரதி சுற்றித் திரிந்த வீதிகளையும் போய் பார்க்கலாமே என்று ஒரு நோக்கத்தில்........பேருந்துக்காய் காத்துக் கொண்டிருந்ததின் பின்ணணியில் வலுக்கட்டாயமாக பைக்கை எடுக்காமல் வந்த என் மீது கோபமும் வந்தது. கெட்டவிசயங்கள் எது என்றே இன்னும் பிடிபடவில்லை. அதிலேயே குழப்பம்..அப்புறம் எப்படி விடுவது....என்ற ஆதங்கம் வேறு......(மனசு எப்டி எல்லாம் ஏமாத்துது பாருங்க...பாஸ்)

பின்னாளில் இந்த எல்லா கொள்கைகளும் உடைந்து சுக்கு நூறானது வேறு விசயம்.

பேருந்து வருவதற்கு முன்னால் பேருந்தை எதிர் நோக்கிதானே காத்திருக்க வேண்டும்...........! ஐ மீன் பேருந்தை தானே பார்க்க வேண்டும்...பக்கத்தில் இருக்கும் பிங்க் சுடிதாரை ஏன் அடிக்கடி பார்க்க மனம் தூண்ட வேண்டும்? மேலும் அந்த பிங்க் சுடிதாரை கவரும் படி எனது பாடி லாங்க்வேஜ் கூட ஏன் சரேலென்று மாற வேண்டும்.......

அப்படி மனம் என்னை தூண்டிய போதுதான் முதல் மூன்று பாராக்களை நான் எனக்குள் சொல்லிக் கொண்டு இருந்தேன்...அதை பார்த்துதான் நீங்க எல்லாம் என்னை லூசு என்று சொன்னீங்க......!

இப்போ புரியுதா? நம்மளை சரிபடுத்திக்க அடிக்கடி இப்படி புலம்ப வேண்டியிருக்கு...அப்படி புலம்புற நேரத்துல சரியா நீங்க வந்துடுறீங்க...என் டைம்…பாஸ்! நான் என்ன பண்றது.....? ஹா.. ஹா.. ஹா…

ம்ம்ம்ம்ம்ம் ஒரு நிமிசம் இருங்க பாஸ்...ஏதோ ஒரு பஸ் வருது.....ஓ.. யா..... !திருவல்லிகேணி பஸ்தான்....சரிங்க.. நான் கிளம்புறேன்.......ஓ அடக்கடவுளே அந்த பிங்க் சுடிதாரும் அதே பஸ்ல ஏறுது.......! பின்னால திரும்பி என்ன வேற பாக்குது......!

சரி பாஸ் நான அபீட் ஆகுறேன்....என்ன ஒண்ணு பஸ்ஸுக்குள்ள என்ன நடக்குதோ அதைப் பொறுத்துதான் நான் கோவிலுக்கு போறேனா....இல்ல...அதுக்கு பின்னால இருக்குற பீச்சுக்கு போறேனான்னு தெரியும்... (அப்புறமா சத்தியமா கோவிலுக்குதாங்க போனேன்)

ஹா..ஹா..ஹா... இயமம் அப்டீன்ற விட வேண்டிய தீய செயல்களை விடுறதுக்கே இவ்ளோ பஞ்சாயத்து? ம்ம்ம்ம் முதல்ல எது தீயதுன்னு நான் தீர்மானிக்கனும்...ஐயோ...பேசிட்டே இருக்கேன் பஸ் போகுது பாஸ்.....

நாம என்னிக்கு பாஸ் நிக்குற பஸ்ல ஏறி இருக்கோம்...? ஓடற பஸ்ல ஏறி எக்குத்தப்பா கைய கால ஒடச்சிகிறதுதானே...பெரிய பந்தாவா இருக்கு ஊருக்குள்ள....மீ எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப் ஃபார் நவ்........ கேட்ச் யூ ஆல் லேட்டர்.....!

அப்போ வர்ட்டா....!


தேவா . S

Sunday, October 17, 2010

முரண்...!

ஒரு காற்றின் வீச்சில்
கலைத்தலுக்கு
உடன்பட்டு பறக்கிறது
யாரோ இட்ட மாக்கோலம்...!

சருகாய் மாறிய பின்
சலனமின்றி மண்ணை
நோக்கிப் பாய்கிறது
முன்னாள் பசும் இலை!

வேரறுந்த பின்னால்
வெட்கம் ஏதுமின்றி
மண்ணில் சாய்ந்து
மட்கிப் போகிறது
ஒரு விருட்சம்!

இரத்தமும் சதையும்
கொடுக்கும் உன்மத்தத்தில்
ஏதோ ஒரு நினைவோடு
உடல் விட்டுப் போகின்றன
ஐந்தறிவு....உயிர்கள்...!

நிகழ்வுகளின்
தொடர்ச்சியில் அற்றுப்போகும்
இறுதிகளில் எப்போதும்
இருப்பதில்லை கண்ணீரும்
கதறல்களும்..!

வகுக்கப்பட்ட
வரைமுறைகளிலிருந்து
கிளைக்கும் இறுக்கமான
கதறல்களோடு துக்கம்..
என்ற பொய்மையில்
எப்போதும் அறிவிழந்து
நிற்கின்றன ஆறறிவு ஜீவன்கள்...!


தேவா. S

Saturday, October 16, 2010

விதை....!
எனக்குள் திறன் இருக்கிறது! எனக்குள் திறன் இருக்கிறது..! எனக்குள் திறன் இருக்கிறது...! நான் சக்தி மிகுந்தவன்! நான் சக்தி மிகுந்தவன்! நான் சக்தி மிகுந்தவன்...! என்னிடம் நேர்மறையான அதிர்வலைகள் இருக்கின்றன.....!

என் பார்வையின் மிகுதியில் சிக்குவது எல்லாம் பாஸிட்டிவான விசயங்கள்..மட்டுமே...! எல்லா சூழ்நிலைகளுக்கும் தீர்வினை எட்டும் தீர்க்க முடிவுகள் மட்டுமே நான் எடுக்கிறேன் கூறுகிறேன்!

மனிதர்களை குழப்பத்தில் ஆழ்த்தும் விசயங்களையும் சிக்கலை கொடுக்கும் விசயங்களையும் எப்போதும் சொல்வதை தவிர்க்கிறேன். என்னிடமிருந்து வாழ்த்துக்களும், பரஸ்பரம் அன்பும், விசாரிப்புகளும் அலைகளைப் போல பரவிக் கொண்டே இருக்கின்ற. ஒரு புல் பிளேட் பிரியாணி சாப்பிடும் ஆசையில் என் கண்ணெதிரில் இருக்கும் கஞ்சியையும், கருவாட்டுத் தொக்கையும் ருசிக்க மறக்கும் முட்டாள் மனிதனல்ல நான்....!

ஊரின் விடியலுக்கு போராடக்கூடிய பெரிய செயல்கள் செய்ய முடியாவிட்டாலும் ஒரு மண் பானை வாங்கி நீர் ஊற்றி வீட்டுக்கு வெளியே தெருவில் வந்து செல்லக்கூடிய மனிதர்களின் தாகம் தணிக்க வைக்கும் அளவிற்கு திறனுள்ளவன்தான்......... நான்.......!

என்ன மக்கா.. அப்படியே கட்டுரைக்குள்ளே போய்ட்டீங்களா...? சரி வெளில வாங்க இப்போ நாம உக்காந்து பேசுவோம். மேலே சொன்ன மாதிரி தினமும் மனசுக்குள்ளே சொல்லிகிட்டே இருந்த நேர்மறையான எண்ணங்கள் நமக்குள்ளே ஆட்டோமேட்டிகா வரும்னு சொல்றாங்க....அது எப்டிப்பா வரும்.. மாயமா மந்திரமா..?

இப்டி சூடு...

எதை வலுவாக திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டு இருக்கிறோமோ அது உண்மை என்று மனது நம்புகிறது. மேலும் மனம் முடிவு செய்யும் தீர்மானமான முடிவுகள்தான் செயலாக மாறுகிறது. உதாரணமாக பக்கத்தில் இருக்கும் பெட்டிக்கடைக்கு சென்று வாழைப்பழம் வாங்கவேண்டும் என்று நாம் முதலில் நினைக்கிறோம்.

வெறுமனே முதலில் நினைப்பது மனதில் நிகழ்கிறது. அது தீர்மானமான பின்னால்...கடைக்கு சென்று வாழைப்பழம் வாங்கி வருகிறோம். ஸ்தூலமான இந்த உடலை மனதில் தோன்றும் சூட்சுமமான தீர்க்கமான எண்ணம்தானே வழி நடத்துகிறது.

அப்படித்தான் திரும்ப திரும்ப எதை நம்பிறோமோ (தீர்க்கமாக) அதை வாங்கிக் கொள்ளும் ஆழ் மனது...அதை ஒரு கட்டத்தில் செயல்படவைக்கிறது. அதாவது நாமே அதை செய்கிறோம். நாம் செய்ய வேண்டியதை பெரும்பாலும் செய்யாமல் காலத்தையும் நேரத்தையும் குறை சொல்லிக் கொண்டே இருக்கிறோம். இப்போதிருக்கும் நமது நிலைக்கு காலம் கடந்த காலத்து நமது செயல்கள்தான் காரணம்....என்பதில் எந்த மாற்றமும் இருக்க முடியாது. அப்படி என்றால் நமது எதிர்காலத்தை தீர்மானிக்கபோவது எது? நம்து நிகழ்காலத்து செயல்கள்தானே....?

நிகழ் காலத்தில் என்ன செய்து கொண்டிருக்கிறோம்.. தட்ஸ் த மில்லையன் டாலர் கொஸ்ஸின்?

புறச்சூழ்நிலை, பணவசதி, நமது பிரச்சினைகள் எல்லாம் ஒரு மாயை....அதிலிருந்து நமது கன்ஸ்டரக்டிவான ம்ம்ம்ம் தொடர்ச்சியான பாஸிட்டிவ் செயல்கள் மூலம் வெளி வர முடியும் என்று தான் சொல்கிறார்கள். ஒரு விசயத்தை எடுத்துப் பார்த்தால் வெற்றி பெற்றவர்களுக்கு எல்லாம் ஒரே ஃபார்முலாதான் இருந்திருக்கிறது. அவர்கள் எப்போதும் தங்களின் செயல்களிலும் நேரத்திலும் கவனம் வைத்திருந்ததோடு மற்ற மனிதர்களின் நிறையை பற்றி மட்டுமே பேசி இருக்கிறார்கள்.

என்னிடம் நண்பர் ஒருவர் கேட்டார்... நீ நிலையாமை பற்றியே நிறைய பேசுகிறாய்.... உடல் பொய்..எல்லாம் மாயை என்று அடிக்கடி சொல்கிறாய் நீ எப்படி நேர்மறை சிந்தனை உடையவனாவாய் என்று.....

சரி நிலையாமை பற்றி பேசுவதும் நேர்மறை என்பதை நண்பர் அறிந்திருக்கவில்லை... !
நிலையாமை உணர்ந்தால் கர்வம் போகும். கர்வம் இல்லை என்றால் அன்பு பெருகும். அன்பு பெருகிறானால் செய்யும் செயல்களில் ஈடுபாடு அதிகரிக்கும். ஈடுபாடு அதிகரித்தால்... புரடக்டிவிட்டி என்னும் உற்பத்தி திறன் அதிகரிக்கும்.

உற்பத்தி திறன் அதிகரித்தால்... லாபம் கிடைக்கும். லாபத்தினால் பொருள் கிடைக்கும். பொருளினால் இம்மை வாழ்க்கை அல்லது இந்த லெளகீக வாழ்க்கையின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். உடல்சார் தேவைகளும் சுற்றங்களின் தேவைகளும் பூர்த்தி செய்யப்படும் போதும் மனம்.. அடுத்து என்ன என்று ஆராயும் அங்கே.... நமக்கு தேவையான அல்லது எப்போதும் உண்மையான பேருண்மை வெளிப்படும்....இப்போ சொல்லுங்க... நிலையாமை எப்படி எதிர்மறையை போதிக்கும்....அது நேர்மறையின் நிழல்தானே....?

நேர்மறயான எண்ணம் இருந்ததால்தனே... ரூஸ்வெல்ட்.. சக்கர நாற்காலியில் அமர்ந்து கொண்டு அமெரிக்க ஜனாதிபதியாயிருந்தார்?

நேர்மறையான எண்ணம் இருந்ததால் தானே.. .மகாத்மா காந்தி.... நாம் சுவாசிக்கும் சுதந்திர காற்றினை நமக்கு கொடுத்தார்...

மொத்த ஆய்வுக் கூடமும் எறிந்த போது எடிசன் கவலைப்படவில்லை....என் தவறுகள் எரிந்து கொண்டிருக்கின்றன என்றார்...! அந்த நேர்மறைப் பார்வைதானே....இன்று எல்லோருடைய வாழ்க்கையிலும் வெளிச்சம் கொடுத்திருக்கிறது...

வலைப்பூக்களிலும், இணையங்களிலும் மிகுதியாக நிறைந்திருப்பது.....இளைஞர்கள். இளைய இந்தியா.. இன்று குழுமியிருக்கும் இடம்.. இணையம்.....! இதன் பயன்பாடுகள் நேர்மறையாகவும்... பயனுள்ள வகையிலும்...சக்தி மிகுந்ததாகவும் மாற....மிகுதியான விழிப்புணர்வு தேவைப்படுகிறது.

இங்கே... எழுத்துரிமை, பேச்சுரிமை, சமூகக் கூட்டுறவு என்று எல்லாமே இருக்கிறது.. ! கண்ணிமைக்கும் நேரத்தில் உலக செயல் பாடுகள்.. மனித மூளைகளின் கவனித்திற்கு வந்து விடுகிறது ஆனால் அணுகும் முறைக்கும், பயன்பாடுகள் பற்றிய தெளிவுக்கும் நேர்மறையான சக்தி மிகுந்த பார்வை தேவைப்படுகிறது.

நேர்மறையான ஒரு பாசிட்டிவ் அவுட் லுக் என் தேசத்து இளைஞனின் உடனடித் தேவை! இயன்ற வரை அரசும்..., தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும், சமூக நல் நோக்கு ஆர்வலர்களும்..இது பற்றிய விழிப்புணர்வினை விதைத்துக் கொண்டே இருக்க வேண்டும்...!!!

IF WE ARE NOT PART OF THE SOLUTION, THEN WE ARE THE PROBLEM!!!!

எமது வெற்றியை நாளைய சரித்திரம் சொல்லும்......! இப்படை தோற்கின் எப்படை வெல்லும்....!


தேவா. S

Thursday, October 14, 2010

ரஜினி...!ராமராஜ் அண்ணன் டிக்கட் வாங்கிட்டேன்னு சொன்ன உடனேயே பி.பி ஏறிப்போச்சு...எதுக்கா?

எந்திரன் பார்க்கதான்...அச்சோ.... மறுபடி ஒரு ரிவியூவான்னு தலைய சொறிய ஆரம்பிச்சுட்டீங்களா மக்கா? எச்சூஸ்மி... இது ரிவியூ இல்ல.. வழக்கமான ஒரு கண்மூடித்தனமான ரசிகனின் அனுபவம் அம்புட்டுதேன்...! வாங்க மக்கா சேந்து போவோம் அபுதாபிக்கு? அபுதாபிக்கு எதுக்கா? அட அங்க தான் படம் பார்க்க போறோம்....

வியாழக்கிழமையே விழாக்கோலம் பூண்டு இரவு 9 மணிக்கு கீயை முடுக்கியதில் சந்தோசமாக உயிரை உடம்பு பூர பரப்பியது நம்ம வாகனம்...ஏனோ தெரியவில்லை உடம்பு முழுதும் ஒரு உற்சாக தேனி உள்ளே புகுந்து கொண்டு சுற்றி சுற்றி வந்தது போல ஒரு குறுகுறுப்பு....!

விடிஞ்சா கல்யாணம்.. எலேய். என்ன இப்படி மச மசன்னு நிக்குற.. சோலிய பாருலேன்னு கத்துவாங்களே கல்யாண வீட்டுல....அது மாதிரியும் அப்புறம் ஒரு படத்துல... பார்த்திபன் சொல்வாறே.. ரம்பாவ பாத்துட்டு...சார்.....ரம்ப்பா சார்.. சாப்பிடுது சார்.. சிரிக்குது சார்ன்னு ஒரே ஆச்சரியமா.. அது மாதிரிதான்.. என் நிலைமையும்... ரஜினிங்க... எங்க தலைவர்ங்க....விவரம் தெரிஞ்ச நாள் முதலா அவர்தாங்க... எனக்கு ஆதர்சன ஹீரோ.. அறிவுக்கு எட்டாத விசயமா இருந்தாலும் ரொம்ப சந்தோசமா இருக்குமுங்க..ரஜினிங்க.. இஹ் ஹா.. ஹா..ஹா…..!

என்னடா லூசு மாதிரி சிரிக்கிறேன்னு பாத்தீங்களா.. அப்படிதான் இருந்தேன் அந்த முதல் நாள் இரவில்.. விடிஞ்சா தியேட்டர்... தலைவர்.. படம்.. ! நைட் 11 மணிக்கு ராமராஜ் அண்ணன் வீட்டுக்கு போயாச்சு. அண்ணன் தூத்துகுடில கமல் ரசிகர் மன்ற தலைவரா இருந்தவரு..என்னய மாதிரி எக்சைட்மெண்ட் எல்லாம் இல்லாம..தம்பி.. அதிகமா எதிர்பார்க்காத சுட்டி டி.வி பாக்க போற மாதிரி நினைச்சுகிட்டுதான் நான் இருக்கேனு ஒரு குண்டை கூட தூக்குப் போட்டாரு...!

இருந்தாலும் எனக்கு பக்கத்துல தூணு மாதிரி மாப்பிள்ளை ராமகிருஷ்ணன்.. இருந்தாரு...சென்னைல ஒரு ரஜினி படம் விடாம பாலாபிஷேகம் செஞ்ச வீரத்திருமகன். அப்பவே முடிவு பண்ணிட்டோம்.. அவர் என் பக்கதுலதான்னு...ஏன்னா எனக்கு விசில் அடிக்க தெரியாது.. ஆனா மாப்பிள்ளை பட்டய கிளப்புறதா எனக்கு சத்தியமே பண்ணிகொடுத்தாரு...!

காலையில் எல்லோருக்கும் முன் எழுந்து லேப்டாப்பை எடுத்து தட்டி இன்ட்லிக்குள் நுழைந்தவுடன் பங்காளி ப்ரியமுடன் வசந்த் முத நாளே படத்த பாத்துட்டு வந்து என் பி.பியவா எகிறவைக்கணும்.....ஒரு வரி விடாம 5 தடவ படிச்சேன்....சூடு அதிகாமானது. காலையிலேயே ஒப்பன் பண்ணிட்டியா ராமராஜ் அண்ணன் பாசத்தையும் கண்டிப்பையும் சேர்த்து காதுகளுக்குள் ஊற்றினார்.
10 மணி தியேட்டர்....இந்த பக்கம் அண்ணன் அந்த பக்கம் மாப்ஸ்.... நடுவில் நான்....! எங்க வீட்டு தங்கமணிய உசாரா அண்ணி கூட 3 சீட் தள்ளி உட்கார சொல்லிட்டேன்......ஆமாம் நம்ம பண்ற ரவுசு தாங்காமாட்டாங்க... !

டைட்டில் போட்டாங்க எல்லாம் சரி.....படம் ஆரம்பிச்ச முத சீன்ல வந்துச்சு பாருங்க ஷங்கர் மேல ஒரு கோபம்...இப்படியாங்க அறிமுகம் படுத்துறது தலைவர யாரோ மூணாவது மனுசன் மாதிரி....மே பீ கதைக்கும் களத்துக்கும் சரியா பொருந்தி இருக்கலாம்.. எனக்கு நோ.. நோ.. நோ.... என்னால ஏத்துக்க முடியல.. இருந்தாலும் அதுக்கும் சப்தம் போட்டு வாயில கைய வச்சுகிட்டு லபோதிபோன்னு கத்தியது வேறு விசயம். சரி அடுத்த அடுத்த சீன்ல ரோபோ ரஜினி வருவாரு கலக்குவாருன்னு ஒரு நம்பிக்கையில காட்சி நகர்வுகளை கவனித்து கொண்டு இருந்தேன்...

அடச்சே.. ஐ டோண்ட் கேர் எபோட் டெக்னிகாலிட்டி பார்ட்.......! நான் என்ன ஆராய்ச்சி பண்ணவா தியேட்டருக்கு வந்து இருக்கேன்...ரஜினி படம் பாஸ்..........! எந்திரத்தனமாய் இருந்த படத்தில் ட்ரெய்ன் பைட்டில் கூட என் ரஜினி மொத்தமாய் தொலைந்து போயிருந்தார். ரஜினி முகத்தை மட்டும் யூஸ் பண்ணி சங்கர் தனது பசியை தீர்த்துக் கொண்டிருப்பதாக என் ரஜினி ரசிகனின் மூளை சொன்னது.....

காதல் அணுக்கள் பாட்டில் ரஜினியின் அழகை அள்ளி அள்ளி பருகிய நான் ( ஐ ஹோப் என்னை போன்ற ரசிகர்களும்தான்...)அதற்காக மட்டும் வரவில்லை..ஆக்ரோசமான ரஜினியை தேடி தேடி இடை வேளை வரை அலுத்துப்போய்விட்டது...! ராமராஜ் அண்ணன் கொடுத்த பெப்சி ஏமாற்றமான மனதை தாண்டி வயிற்றுக்குள் சென்றும் அதன் சுவை தெரியவில்லை...

இடைவெளிக்கு அப்புறம்....ரோபோ ரஜினியை டிஸ்மேண்டில் செய்து குப்பையில் போட்டு, அந்த குப்பையில் இருந்து ரோபோவாக வந்து காரில் வந்து படுத்துக்கொள்ளும் கடப்பாரையில் காதுகுத்தும் வைபோகமும் இனிதே நடந்து முடிந்தது.

நான் காத்திருந்தேன்...........

வாவ்........வில்லானாக மாறி தலைவர் சிரித்த நேரத்தில் நானும் சிரித்தேன்.. இஃஹாஹாஹாஹாஹா...என்ன ஸ்டைல் என்ன டயலாக் டெலிவரி.. என்ன ஃபயரு..........தலைவாவாவாவாவாவா.... ! தியேட்டர் வெகு நேரத்துக்கு அப்புறம் அதிர ஆரம்பித்தது.

" அச்ச்சோ வசிகரன் இங்க இல்ல போல இருக்கு சனா" தலைவர் திரையில் அசத்திக் கொண்டிருக்க.. மீண்டும் என் ரஜினி கிடைத்த ஒரு சந்தோசம் எனக்கு.... ரோ........போ என்று பழிப்பு காட்டி பளீச்சென்று வெளியே வந்து விழுந்த ரஜினி ஸ்டைலும் சரி......" சோல்ஜர்ஸ் ரொட்டேட் யுவர் ஹெட்ஸ்.." குரலில் இருந்த கம்பீரம்.... " மே.. மே.. மே..." என்று ஆடு போல கனைத்து வசீகரனின் தலையில் கையை வைத்து சிரிக்கும் இடமும் சரி.......இது....இது இது .. இது தான் ..ரஜினி ......ஏன் சங்கர் படம் ஃபுல்லா எங்க தலைவர .... இப்படி யூஸ் பண்ணாம விட்டுட்டீங்க...ம்ம்ம் ச்சே.. என்று ஒரு ஆதங்கம் வேறு...

அதே மாதிரி கடைசி சீன்ல தன்னைதானே டிஸ்மேன்டில் செய்துட்டு பாவமா ஒரு மூஞ்சிய வச்சுக்கிட்டு டையலாக் டெலிவரி செய்யும் இடத்துலயும் சரி..........

ரஜினி .....இஸ் ரஜினிதான்......

என்ன மொத்ததுல ஒரு மூணு நாளு சீன்ல மட்டும் தலைவர பாத்துட்டு... படம் புல்லா அவர வெறுமனே ஒரு பொம்மைய போல பாத்துட்டு வர.. மத்தவங்களுக்கு ஓ.கே.. ஆனா என்ன மாதிரி சின்னவயசுல இருந்து ரஜினினா ஸ்டைலு, ஃபைட்டு, ஸ்பீடு, பவர்னு பாத்த ரசிகர்களுக்கு பிடிச்சு இருக்குமான்றது சந்தேகம்தான்.....எனக்குள் ஒரு ஏமாற்றம் இருந்தது...!

ஷங்கர்.........கலா நிதிமாறன்.......ஐஸ்வர்யா ராய்......150 கோடி... பிரமாண்டம்.......ஹாலிவுட் ரேஞ்ச்..........படம் சூப்பர் ஹிட்.....ஏ.ஆர். ரகுமான்......வைரமுத்து............சூப்பர் லொக்கேசன்ஸ்.....டெக்க்னிகலி அச்சீவ்ட்........இந்தியாவின் பிரமாண்டாம்.......

எல்லாம் சரிங்க.........எங்க தலைவர காணமே படம் புல்லா.. ?

படத்துல ரஜினி எங்கே?

படம் முடிஞ்சு ரொம்ப நேரம் தம்பி வாலண்டோ கேட்டுட்டு இருந்தான் ஏன்னா ஒரு மாதிரியா இருக்கீங்கன்னு…? ஒண்ணுமில்லைப்பான்னு சொன்னேன்.. ஆனா இன்னிக்கு தெரிஞ்சு இருக்கும் ஏன் ஒரு சோகம்னு.......ஹா...ஹா..ஹா..ஹா..!

அப்போ வர்ர்ர்ர்ட்டா...!


தேவா. S

Wednesday, October 13, 2010

சுகம்...!முன்பெல்லாம் நிறைய பேசிக் கொண்டிருப்பேன்,இப்போது எல்லாம் எழுதிக்கொண்டே இருக்கிறேன்.பேச்சின் ஒலி வடிவம் இப்போது வரி வடிவமாயிருக்கிறது.

சரி எதற்கு எழுத வேண்டும்? எழுத்தின் மூலம் எங்கே செல்கிறது பயணம்? எழுத்தின் மூலம் எழுத்தில்லாத இடத்திற்கு....! ஆமாம்..எழுதி எழுதி எல்லாம் மறக்கவேண்டும். அன்றாட வாழ்க்கை ஏற்றி வைக்கும் சுமைகளே டன் டன்னாக இருக்கும் அதே நேரத்தில் அறிந்து கொண்டது அதற்கு மேல் சுமையாயிருக்கிறது.

லோடு வண்டியில் இருந்து ஒவ்வொன்றாய் இறக்கி வைத்து விட்டு கடைசியில் வண்டியையும் சேர்த்து அழித்து விட்டு எதுவுமற்றுப் போகவேண்டும். இதுதான் இலக்கு என்றாலும் விருப்பபடாமல் நிறைய சேர்த்து வைத்துக் கொண்டு விட்டதாக படுகிறது.

நான் வாழும் வாழ்க்கை நான் விரும்பி வாழ்வதா இல்லை திணிக்கப்பட்டதா என்று பார்க்கும் போது பெரும்பாலும் திணிக்கப்பட்ட வாழ்க்கை வாழ்வதாகவே எனக்குப் படுகிறது. சமூகம் சார்ந்த ஒரு வாழ்வியல் அமைப்பில் பெருமபாலும் அடுத்தவர்களுக்காக சந்தோசப்பட்டு அடுத்தவர்களுக்காக கோபப்பட்டு என்று பெரும்பாலும் வாழ்ந்து கொண்டிருப்பதாகவே படுகிறது.

எந்த செயல் நடந்தாலும் அல்லது நம்மிடம் சொல்லப்படும் எல்லா கருத்துக்களும் சரி என்றோ தப்பு என்றோ ஒரு பதில் சொல்லி ஆகவேண்டியிருக்கிறது. இதிலிருந்து கொஞ்சம் நகர்ந்து நீங்கள் சொன்னதை நான் முழு மனதோடு கூர்ந்து கவனித்துக் கேட்டுக் கொண்டேன். மிக்க நன்றி ஆனால் எனக்கு கருத்து சொல்ல இதில் ஒன்றும் இல்லை ஆனால் கவனித்துக் கொண்டேன் என்று ஒரு நண்பரிடம் அவர் கூறிய ஒரு காசிஃப் (வம்பு) பற்றி நான் கூறிய போது, நண்பருக்கு கோபம் வந்தது எனக்கு ஆச்சர்யத்தை வரவழைத்தது.

இது என்ன ஒளிந்து கொள்ளும் முயற்சி? செய்தியை கேட்ட நீங்கள் இது சரி அல்லது தப்பு என்று கூட பதில் சொல்ல திரணியற்றவரா? என்று எனக்குள் நான் பாதுகாப்பாய் தேவைப்பட்டால் முக்கியமான விசயங்களுக்கு உபோயோகம் செய்யலாம் என்று வைத்திருந்த கோபத்தை எடுக்குமாறு மறைமுகமாக தூண்டினார்.

எனக்கு சிரிப்பு வந்தது. மீண்டும் சொன்னேன் இதில் கருத்து சொல்ல ஒன்றும் இல்லை தயவு செய்து என்னிடம் எதுவும் திணிக்காதீர்கள் என்று....அவர் அடுத்த மனிதரிடம் போய் என்னை லூசு என்று சொல்லியிருப்பார்..அது பற்றியும் எனக்கு கவலை இல்லை....ஏனென்றால் அதுவும் அவரின் கருத்துதானே...

நான் என்னை மாதிரி இருப்பதுதானே அழகு? எனக்கு எதற்கு வேறு முகங்கள்?

எட்டாவது படிக்கும் போது ஒரு சம்பவம் நடந்தது. எங்க தெருவில் இருக்கும் பசங்க எல்லாம் மைதானத்தில் கிரிக்கெட் விளையாடுவோம்...அப்போது பக்கத்து தெருவில் இருந்த டீமோடு மோதியதில் அவர்கள் ஜெயித்து விட்டார்கள். விளையாட்டு முடிவில் சண்டை வந்து விட்டது. நல்ல வாக்குவாதம் நானும் எதிரணிக்கு எதிராக அம்பயர் அவுட் கொடுத்தது தப்பு என்று வாதிட்டு விட்டு வந்து விட்டேன்.

என்னைப் பொறுத்த அளவில் அந்த பிரச்சினை அந்த மைதானத்தை விட்டு வெளியே வரும்போதே முடிந்து விட்டது ஆனால் எனது நண்பர்கள் எப்போதும் இதைப் பற்றியே பேசுவதும் சதித்திட்டங்கள் தீட்டுவதும், எங்களை தோற்கடித்த அணியில் இருக்கும் ஒவ்வொருவரையும் பற்றி தவறாக பேசுவதும் என்று தினமும் புகைய வைத்துக் கொண்டிருந்தனர். எனக்கு பிடிக்காததால் நான் விளையாடப் போவதையே குறைத்துக் கொண்டேன்.

விடுமுறை தினங்களில் அம்மா கண்டிப்பாய் மதியம் என்னை உறங்க சொல்வார்கள். அப்படி உறங்கி ஒரு 4 மணி மாலைக்கு எழும்போது ஒரு வித மெல்லிய சோகம் போன்ற உணர்வு இருக்கும் மனதில். நான் வெறுமனே வீட்டு வாசப்படியில் போய் அமர்ந்து கொண்டு அந்த உணர்வினை என்னவென்றே சொல்லவும், புரிந்து கொள்ளவும் முடியாமல் அனுபவித்துக் கொண்டு இருப்பேன்.

மாலை வெயில் தணியும் நேரத்தில் ஆனந்தமாய் இருக்கும் அந்த உணர்வு வெளியில் இருக்கும் எதுவோடும் தொடர்பு இல்லாமல் வெறுமையாய் ஒரு ஆராதனை நடத்திக் கொண்டு இருக்கும்.

எதுவுமே கேட்கப் பிடிக்காமல், பேசப் பிடிக்காமல் அதை அனுபவித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் தான் நண்பர்கள் ஊர் வம்பை பேசுவதற்கு என்னை வலுக்கட்டாயமாக இழுப்பார்கள். அவர்கள் இப்படி பேசுவதில் வசதியாய் பழகிப் போய்விட்டார்கள் மேலும் இப்படி அடுத்தவர் பற்றி குற்றம் குறை கண்டு பேசுவதில் தன்னை நல்லவன் என்று காட்டும் முயற்சிதான் இருக்கிறது.

நான் நல்லவன் என்று காட்ட ஏன் ஊரில் இருப்பவன் எல்லாம் அயோக்கியனாக இருக்கவேண்டும்? நான் மட்டும் நல்ல செயல்கள் செய்தால் போதாதா? என்று கேள்வி எனக்குள் எப்போதும் அலை மோதும். தேவையான விசயங்களை பேசுவதில் தவறு இல்லை. சம்பந்தமே இல்லாத மனிதர்களைப் பற்றி பேசுவதும் பொறாமை கொள்வது.. இட்ஸ் நாட் மை கப் ஆஃப் டீ..... எனக்கான செயல் அல்ல அது....!

எனக்குப் பிடித்த படம், எனக்குப் பிடித்த பாடல், எனது கவிதை எனது தேடல், எனது பக்தி, எனது காதல் எல்லாம் அடுத்தவரின் விருப்பு வெறுப்புக்கு ஏற்றவாறு இருக்க வேண்டும் என்று எந்த தேவையும் அவசியமும் இல்லை ஆனல் சக மானுடரை அது பெரும்பாலும் துன்புறுத்தாமலும் பாதிக்காமலும் இருந்தாலும் சரிதன்.

எனது வலைப்பக்கம் கூட அப்படித்தான்... சந்தோசத்திற்காக செல்லும் ஒரு பூங்கா போல.. ஒரு கடற்கரை போல, ஒரு இயற்கை எழில் கொஞ்சும் இடம் போல, வலைப்பக்கத்தை விட்டு வெளியேறும் போது ஒரு சுகமான அனுபவத்திற்கும், சில நேரங்களில் சிந்தனையை தூண்டும் படியும் இருக்கும் படியாக கவனமாக பார்த்துக் கொள்கிறேன்.

நம்மைச் சுற்றி இருப்பவர்களுக்கு கோடி ரூபாய் கொடுக்க முடியாது. வாழ்வியல் முறை அதற்கு உதவாது.........ஆனால் ஆனந்தத்தையும், திருப்தியையும்.. நேர்மறையான அதிர்வுகளையும் கண்டிப்பாய் கொடுக்கமுடியும். இட்ஸ் நாட் காஸ்டிங் எனிதிங்.......

விருப்பப்பட்ட வாழ்க்கை வாழும் அதே நேரத்தில் அது அடுத்த மனிதருக்கும், சமுதயத்திற்கும் அதனால் பாதிப்பு இல்லாதவாறு பார்த்துக் கொள்ளல் நலம்.

சரிங்க நான் வர்றேன்... என் வீட்டுத் தோட்டத்தில் நிறைய ரோஜாப்பூக்கள் பூத்திருக்கின்றன...அவைகளோடு கொஞ்சம் பேச வேண்டியிருக்கிறது...!

அப்போ வர்ர்ர்ர்ட்டா!


தேவா. S

Monday, October 11, 2010

உயிர்...!


ஏன் இவளின் உணர்வுகள் என்னை இப்படி புரட்டிப் போட வேண்டும் என்பது சமீபத்திய ஆச்சர்யம்...! ஆனால் ஆரம்பம் முதலே எனக்கு ஏற்பட்டிருந்த பிணைப்பு...மேலும் மேலும் அதிகரித்துக் கொண்டே இருப்பதில் ஆச்சர்யமும் ஒரு வித சிலிர்ப்புடன் கூடிய பயமும் இருப்பதை மறுப்பதற்கில்லை.

என் விடியலில் அவள் முகம் பார்த்துதான் எழுகிறேன்...! என் இரவுகள் அவள் இல்லையென்றால் எப்படியிருக்கும் என்று எண்ணிக் கொண்டிருக்கும் போதே மிகப்பெரிய ஒரு கேள்விக் குறி வந்து அந்த எண்ணத்துக்கு அருகே வந்து விழுந்து விடுகிறது.

ஒரு நாள் அவளை கவனியாதது போல நான் வேறு வேலையாயிருந்தேன்...என்னருகே வந்து பின்னால் என்னைக் கட்டிக்கொண்டு அந்த இரவின் குளுமைக்கு குளுமை சேர்த்த அவள்..ஏன் இன்னும் உறங்க வரவில்லை? என்று என் காதோரோம் கிசு கிசுத்தாள்....எனக்கு கொஞ்சம் வேலை இருக்கிறது என்று அலட்சியமாகவே சொல்லிவிட்டு நான் ஏதோ எழுதிக்கொண்டிருந்தேன்.. பின் கவனம் எல்லாம் என் எழுத்தில் மீது ஆதிக்கம் கொள்ள நேரம் அதில் காணமால் போகத் தொடங்கியது....

அயர்ச்சியில் நான் நேரத்தை நோக்கிய போது அது நள்ளிரவு 12 க்கு கால் மணி நேரமே இருப்பதாக காட்டிக் கொண்டிருந்து. விளக்கை அணைத்து விட்டு படுக்கையில் போய் விழுந்த நான் .......புரண்டு படுத்து திரும்பிய போது..அவள் அப்போதும் விழித்துக் கொண்டிருப்பதை பார்த்து அவளின் தலை கோதி ..உனக்கு உறக்கம் வரவில்லையா...? என்று கேட்டதற்கு அவள் சொன்ன பதிலில் அதற்கப்புறம் என் தூக்கம் கபளீகரம் ஆனது.

ஆமாம் என்னருகாமையில்லாமல் அவளுக்கு உறக்கம் வராதாம். இப்படி பல நாட்கள் உறங்காமல் காத்திருந்ததைக் சொல்லக் கேட்ட என் கண்கள் கசிந்தது அவளுக்குத் தெரியாது… ஆனால் அவள் உச்சியில் முத்தமிட்டு தலை கோதி உறங்க வைத்து அவள் உறக்கத்தின் ஆழத்தினை நான் ரசித்திருக்கிறேன்.

அப்படி ரசிக்கும் போதெல்லாம் வாழ்வின் அடர்த்தியும் இருத்தலின் அர்த்தமும் மெலிதாய் என்னைச் சுற்றி உணர்வுகளாய் கவிதைகள் எழுத ஆரம்பிக்கும். ஒரு அதிகாலை உறக்கத்தில் அவள் கலக்கமாய் என்னைத் தேடி கைகளால் என் கழுத்து வளைத்து கட்டியணைத்த தருணத்தில் கலக்கமாய் என் இருப்பை உணர்ந்திருக்கிறேன்.

ஒவ்வொரு விடியலிலும் எனக்கு முன்னே எழுந்து விடும் அவள்… நான் எழும் வரை என்னையே சுற்றி சுற்றி வருவதும்… எழுந்த பின் கண்கள் மலர சிரித்து குட்மார்னிங் சொல்வதும் என்று எல்லா செயல்களும் என் உயிர் கரைக்கத்தான் செய்கின்றன.

வார இறுதியில் உறுதியாய் கேட்பாள் .. உங்களுக்கு ஏதேனும் வேலை இருக்கா இந்த விடுமுறையில்? நீங்கள் எங்காவது வெளியில் போவீர்களா? என்று...பல நேரங்களில் அவளின் எதிர்ப்பார்ப்புகள் பற்றி கவலைப்படாமல் ஊர் சுற்றிய நான் அவள் நான் இருக்கும் நேரங்களில் உயிர்ப்போடு இருக்கிறாள் மேலும் இல்லாத போது சோர்ந்து போய் விடுகிறாள்... என்பதை அறிந்து துடி துடித்துப் போனேன்.

அவளுக்கு தமிழ் வாசிக்கத் தெரியாது. ஆனால் என்னுள் எப்போதும் நுழைந்து கொண்டு என் எழுத்துக்களை கதையாய் கேட்டுத்தெரிந்து கொள்வதில் அவளுக்கு இருந்த ஆர்வத்தின் பின்னணியில் என் மீதான அதீத காதல்தனே இருந்திருக்கிறது.

எப்போதும் அவளை அழைத்துச் செல்வதற்காக அங்கே நான் வருவேன்.... அவள் எப்போதும் காத்திருக்கும் அறையில்தான் காத்திருப்பாள். வரவேற்பறையிலிருந்து கொஞ்சம் நடந்துதான் நான் உள்ளே செல்லவேண்டும்.......ஆனால் கடந்த சில நாட்களாக அவள் வரவேற்பரையில் எனக்காக கத்திருந்தது பற்றி பெரிதாக நான் அலட்டிக் கொள்ளாமல் வழக்கப்படி அவளை அழைத்துக் கொண்டு வந்து கொண்டிருந்த போது....

என்ன சார் கால் எப்படி என்று எனது கால் வலியை வரவேற்பரையில் இருந்த பெண் கேட்டதும் ஆச்சர்யத்தில் மூழ்கிய நான்… எனக்கு கால் வலிக்கும் நான் அதிகம் நடக்க கூடாது என்று அவளுக்கு தெரிந்த மொழியில் சண்டையிட்டு என் கால் வலியைச் சொல்லி....யாரையுமே அனுமதிக்காத நிர்வாகம் அவளை அங்கே அமரச் சொன்னதின் பின் புலத்தில் மறைந்திருந்த அன்பு என் மரித்தலுக்கும் பின் அவளையே தேடும்.

நேற்று அவள் காரில் பின் பக்க கதவினை திறந்து ஏறும் போது.... நோ.. நோமா.. என்று நான் சொல்லி அவளை முன்னால் அழைத்து.....

" ஏம்மா.... நீ இனிமே...குழந்தை இல்லை சிறுமி....(யூ ஆர் நாட் எ பேபி... நவ் யூ ஆர் எ கேர்ள் ரைட்) எனக்கு பக்கத்து சீட்டில் முன்னால்தான் இனி நீ அமர வேண்டும்" என்று உன் உச்சி முகர்ந்து உனக்கு ஷேக் ஹேண்ட் கொடுத்து கட்டியணைத்து முன்னிருக்கையில் உன்னை அமரச் சொன்னபோது குட்டிக் கண்களால் எனைபார்த்து சிரித்து....கன்னத்தில் அழுத்தமான முத்தமிட்டு வழி நடுகிலும்... ஐ லவ் யூ டாடி.....இல்ல... இல்ல...... அப்பான்னு சொல்லிக்கொண்டே உன் பள்ளி வரை வந்தாயே....

என் மகளே......ஐந்து வயதில் என்னை ஆட்டுவிக்கும் ஏழாம் அறிவே....! என் உயிரே...! பெண்மையின் புனிதம் போதிக்கும் ஞான குருவே....கற்றுக் கொடும்மா.. இன்னும்... நான் கற்றுக் கொண்டே...இருக்கிறேன்..........!தேவா. S

Sunday, October 10, 2010

ரோ..........போ.....!

JUST....COMMERCIAL BRAKE BOZZZZZZZ........!


எந்திரன் பார்த்த எபக்ட் போகல...அது பத்தி ரிவியூ எல்லோரும் அடிச்சு பிடிச்சு எழுதிகிட்டு இருக்காங்க எல்லோரும் ஆடி அடங்கட்டும் அப்புறம் ஒரு ரசிகனோட பார்வை என்னனு சொல்லலாம்னு நினைச்சுட்டு இருந்தேன்...ஆனா அதுக்குள்ள எந்திரன் தீம் எனக்குள்ள நுழைஞ்சு என்ன என்னமோ பண்ண ஆரம்பிச்சுடுச்சு....விளைவு.. உங்களதான் பாதிக்கும்.

ஆமாம் எனக்கு யாரு இருக்கா நான் எங்க போவேன் மக்கா.....

அது ஒரு ஆடிட்டோரியம் எல்லா பொது மக்களும் இருக்கும் மேடையில் நான் உருவாக்கிய வாரியர் என்ற வலைப்பூவினை கூட்டிக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறேன். மூத்த பத்திரிக்கையாளர்களும் சில வலைப்பக்கங்களுக்கு சொந்தக்காரர்களும் அமர்ந்திருக்கிறார்கள் என் எந்திரனை ச்சே..ச்சே.. என் வாரியரை சோதிப்பதற்காக... வாரியர் நான் உருவாக்கிய என்னுடைய பிரதிபலிப்பு ஆனால் நான் அல்ல...இவன் மிகைப்பட்ட விசயங்கள் தெரிந்தவன்.

மனிதர்களுக்கு விழிப்புணர்வை ஊட்டுவது மட்டுமல்ல இவன் வேலை சரியான அளவில் ஆன்மீகத்தையும், காமத்தையும், காதலையும் பற்றி விளக்குவதும் இவனது வேலை. பெரிதாக சாதிக்க வேண்டும் என்ற நோக்கில் அக்னியை நெஞ்சில் கொண்டு இருப்பவன். இவனை ஒரு ஜனரஞ்சக மக்கள் ஊடகமாக ஏற்றுக் கொள்வதற்காக இன்று மக்கள் முன்னால் கேள்விகள் கேட்க பத்திரிக்கையாளர்கள் குழு.....அமர்ந்திருக்கிறது....

சரி வாங்க ஸ்டேஜ்க்கு போகலாம் இப்போஒ..........

ஹாய் குட் ஈவினிங் எவரி படி... இப்போ என்னோட எந்திரன்.. ச்சே...ச்சே...வாரியர்உங்ககிட்ட பேசுவார்....

வணக்கம்! என் பெயர் வாரியர். ஸ்பீட் அன் லிமிட்டேட்....பவர் அன் லிமிட்டேட்.....

கூகிளின் கண்டு பிடிப்பு.....

ஸ்பீட் நம்ம இன்ன்டர் நெட் ஸ்பீட் பொறுத்தது...

மெமரி... அன் லிமிட்டேட்...

ரிஸ்ட்ரிக்ஸன் - நத்திங்

லிமிட் - ஸ்கை இஸ் த லிமிட்

ஆம்பிசன் - எல்லாவற்றிலும் விழிப்புணர்வு கொண்டு வருவது. குறைந்த பட்சம் முயற்சி செய்வது

பதிவுகளின் எண்ணிக்கை - கூடிக்கொண்டே இருக்கும்...

நண்பர்கள் - கணக்கு வழக்கு இல்லை....

எதிரிகள் - எதிர் காலத்தில் நண்பர்கள் ஆகப் போகிறவர்கள்.

(சுற்றிலும் கரகோஷம்)

சரி இப்போ கேள்வி நேரம்... என் வாரியர் கிட்ட கேள்விகள் கேட்கலாம்..... பத்திரிக்கை துறை நண்பர்களை பார்த்து நான் புன்னகைக்க...கேள்வி நேரம் தொடங்குகிறது...

நபர் 1: கடவுள் யாரு?

வாரியர்: எப்போதும் இல்லாமல் இருப்பவர்

நபர் 1: புரியலையே..... கொஞ்சம் விபரமா சொல்லு.....வாரியர்…..

வாரியர்: சாரி…..! இப்போ இந்த மேடையில சன் டிவி. ஸ்டார் டி.வி, இன்னும் எல்லா சேனல்ஸ்சும் இருக்கா இல்லையா...?

நபர் 1 : இல்லை.

வாரியர்: இருக்கு சார் ஆனா வேறு பார்மேட்ல அலை வடிவமா இருக்கு. ஆனா அதுக்கான இன்ஸ்ட்ரூமென்ட் இருந்த ரிசீவர் இருந்த அந்த அலை வடிவம் பொருள் வடிவமா தெரியும்....கடவுளும் அப்படித்தான் இருக்கார் எல்லா இடத்திலயும் அதுக்கான ரிசீவர் மனுசங்ககிட்ட இருந்தா பிம்பமா தெரிவாரு. ஏம் ஐ ரைட் சார்?

நபர் 1 : வெல்டன் வாரியர். ஐ அக்ஸப்ட் யூ.

வாரியர் : நெக்ஸ்ட்

நபர் 2: காதல் என்பது பற்றி கொஞ்சம் சொல்லு...?

வாரியர்: காதல் எப்போதும் நமக்குள்ளே இருக்குது ஆனால் அதை அடையாளம் தெரிஞ்சுக்க வெளில இருந்து ஒரு போர்ஸ் தேவைப்படுது. பெரும்பாலும் அது பெண்ணிடம் இருந்து காமம் என்ற மலருக்குள் ஒளிந்திருக்கும் வாசம் போல வருகிறது. விளங்கிக் கொள்ள விளங்கிக் கொள்ள காதல் எல்லாவற்றின் மீதும் உண்டாகிறது. செடியிடம், மரத்திடம், சக மனிதரிடம் எல்லாவற்றிலும்.

நபர் 2 : ஓ.கே. டன்!

வாரியர்: நெக்ஸ்ட் கொஸ்டீன் ப்ளீஸ்....

நபர் 3: உன் கருத்துக்களால இந்த சொசைட்டில மாற்றம் வரும்னு நினைக்கிறியா வாரியர்?

வாரியர்: நான் மாற்றுவேன்னு சொல்லல....மாறிடும்னும் சொல்லல...ஆன மாறணும் அப்படீன்றது என்னோட ஆசை. காலத்துக்கும் அழியாம ஒரு வலைப்பூவா நின்னு நான் சொல்லிகிட்டே இருப்பேன். என்னை உருவாக்கியவர் அழிவார் ஆனால் கருத்துக்கள் இருக்கும் விரும்பியவங்க படிப்பாங்க...இது ஒரு திருப்தி....ஆனால் ஏதோ ஒரு காலத்தில் எல்லாம் மாறும் அன்று அநீதிகள் அழியும்.

நபர் 3: ஓ.கே. வாரியர் டன்.

நபர் 1 : ஓ... மூணு கேள்வியே போதும் வாரியர்.. உங்கள ஜனரஞ்சகமான வலைப்பக்கம்னு நாங்க அறிவிக்கிறதா முடிவு பண்ணியிருக்கோம்....

என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது எனக்குள் சந்தோசம் பீறிட்டது... 2006 ல ஸ்டார்ட் பண்ணி கனவுகளோட காலத்த கழிச்சு 2010 மார்ச்சுல இருந்து உருவாக்குன என் வாரியர பார்த்து நான் சந்தோசப்பட்டுக் கொண்டிருந்த அந்த நேரத்தில்.. .

" வெயிட் எ செகண்ட் "

என்று ஒரு பெரிய குரல் கேட்க மொத்த கூட்டமும் ஸ்டேஜில் இருந்த பத்திரிக்கையாளர்களும் திரும்பிப் பார்த்த இடத்தில்...........

" தம்பி சிரிப்பு போலிஸ்......................!!! "

டேய் தம்பி நீ எங்கடா.. இங்க.. நான் கேட்டு முடிக்கவும்...

ஹா.. ஹா..ஹா.. அண்ணே கமிட்டில நானும் இருக்கேன். என்னோட முடிவும் கேட்டுதான் கமிட்டி உங்கள் வாரியர் ஜனரஞ்சகமான வலைத்தளமானு முடிவு சொல்லணும்...! நான் அப்ரூவல் பண்றதுக்கு முன்னாடி ...ஒரு சின்ன டெஸ்ட் வச்சுக்கலாமா? கண்ணடிச்சுட்டு பயபுள்ள சிரிக்கிறான் என்ன பாத்து.....!

நான் பதட்டத்துடன்...டேய்..டேய்.தம்பி....என்னடா பண்ண போற உன் கேன தனத்தால என் உழைப்ப கெடுத்துடாதடா, நான் உன் அண்ணன்டா........ன்னு மெல்ல அவன் காதுகிட்ட போய் சொன்னேன்....!

அண்ணன் தம்பி எல்லாம் வீட்ல பிரதர்.. இப்படிச்சூடுன்னு சொல்லிட்டு.....

" ஏய் சின்னப் பையா...."

என்று கூட்டத்தில் இருந்த ஒரு 15 வயது பையனை கூப்பிட்டான் ரமேஷ். அந்த பையன் மேடை ஏறி வந்தவுடன்....." டேய் தம்பி...... நம்ம வாரியர் சொன்னது உனக்கு ஏதாச்சும் விளங்குச்சு......? கேள்வியை முடிக்கும் முன்பு...அந்த பையன்....

" ஒண்ணுமே விளங்கல அண்ணா.... தலை சுத்துது....குறிப்பா அவங்க பேசுன மொழியே புரியல " என்று சொன்னதை கேட்டு விட்டு சரி நீ போ தம்பி என்று சொன்ன சிரிப்பு போலீஸ் (சரியான திருட்டு போலீஸ்.. எனக்கு அவ்ளோ ஆத்திரம் வருது....)

" வாரியர் ஜனரஞ்சகமான சைட்னு அப்ரூவ் பண்ண முடியாதுங்கண்ணா.. சாரி..! ஒரு எழுத்து எல்லாருக்கும் புரியணும். மக்கள் ரசிக்கணும். கருத்து சொல்லுங்க வேணாம்னு சொல்லல ஆன அதை எளிமைப்படுத்தி பட்டி தொட்டியெல்லாம் புரியுறமாதிரி சொல்லுங்க...!

நீங்க பாட்டுக்கு மேல்தட்டு மக்களுக்கும் மேதாவிகளுக்கும் எழுதிட்டு போனீங்கன்னா....சராசரியா விசயம் தெரிஞ்சு மேலே வரணும்னு ஆசைப்படுற மனிதர்கள் என்ன செய்வாங்க....? அவங்க கையை பிடிச்சு கூட்டிடு போற மாதிரி எழுதுங்க....! எழுத்து என்பது எண்ணத்தை பகிர்வது அது அடுத்த மனிதரின் மனதுக்கு உள்ளே சென்று மாற்றங்கள் செய்வது. அதை உங்க விருப்பபடி எழுதுங்க வேணாம்னு சொல்லல.....ஆனா....

எல்லோருக்கும் புரியுற மாதிரி எளிமையாவும்...., எல்லா நேரமும் தத்துவம், கருத்துன்னு போய் விழுந்துட்டு இருக்காம சிரிக்கிற மாதிரியும், எழுதுங்க...எல்லாம் சேர்ந்ததுதான் வாழ்க்கை....! அறிவாளி மட்டும் இந்த பூமிக்கு சொந்தகாரர்கள் இல்லை முட்டாள்களுக்கும் சரி பங்கு இருக்குண்ணா"

சொல்லி முடித்தான் சிரிப்பு போலிஸ். நான் மெல்ல அவனருகே போய்.. ஆரத்தழுவி.. தம்பி..வாரியர்க்குள்ள ஜனரஞ்சகத்தை கொண்டு வரேன்...என்னால முடிந்த அளவுக்கு அவனை ஏழைப்பங்காளனா மாத்துறேன்.....அதுக்கு அப்புறம்....உன் முன்னாடி கொண்டு வர்றேன் அப்புறம் சொல்லு. சரியா?

ஆனா ஒண்ணு தம்பி....ஒவ்வொரு வாட்டியும் என் மேல இருக்குற அன்புல வாரியர்க்கு வந்து என் பேரை மட்டும் படிச்சுட்டு போய்ட்டே இருந்த.....உன் நேர்மைய நான் பாராட்டுறேன்....

வாரியர் ஜனரஞ்சகமா இன்னும் எல்லோரையும் ரீச் பண்ண வச்சிட்டு....அப்புறம் வர்றேன்..அதுக்குள்ள் நீயும் கொஞ்சம் தமிழ் கத்துக்க.............

அப்போ வர்ட்ட்ட்ட்ட்டா...............!


தேவா. S

Saturday, October 9, 2010

தேடல்...09.10.2010!


மொட்டை மாடி.. நிலா இல்லாத வானத்துடன் கோடாணு கோடி நட்சத்திரங்கள் கண் சிமிட்ட எனக்காக காத்திருந்தது. படிகளில் ஏறி அந்த சில்லென்ற மொட்டை மாடியை நான் வெற்றுடம்போடு தொடும் நேரங்களில் நீண்ட நாள் பார்க்காத காதலியை ஆரத்தழுவுவது போல ஆனால் அதை விட பன்மடங்கு இன்பமான ஒரு அனுபவம் நேரிட்டுப் போகிறது.

சுற்றியிருக்கும் அடர்த்தியான தென்னை மரங்களும், அந்த பத்து மணி இரவில் உறங்கிப் போன எல்லா பறவைகளுக்கு மத்தியில் ஒரு சில மெலிதாய் குரலெடுத்து பேசிக் கொண்டிருப்பதும்...தூரத்தில் வயல் வெளிகளுக்கு இடையே ஊர்ந்து செல்லும் ஊர் கடைசிபேருந்தின் சப்தமும் என்று....எல்லாம் மெலிதாய் அடங்கிக் கொண்டிருக்கும் வேளையில்....

எமது கச்சேரி அரங்கேற்றம் துவங்க ஆரம்பித்து இருந்தது. கருமையான வானத்தில் மிளிரும் நட்சதிரங்கள்......! யார் சொன்னது நிலவோடு இருக்கும் வானம் மட்டுமே அழகென்று...ஹா..ஹா..ஹா.. கொஞ்ச அந்த கூற்றை தூக் கி தூர போடுங்கள் தோழர்களே... !

நிலவற்ற வானம் இன்னும் அழகாய்த்தானிருக்கிறது.....

ஒளியின் ஆளுமையின்றி....
கண் சிமிட்டி ஒளிரும்
ஓராயிரம் நட்சத்திர கூட்டம்...
அடர்தியான கருப்பு நிறத்தில்
வசிகரீக்கும் வானம்....
கருமையை மேலேயிருந்து
பெய்யாத மழையாய்
பூமிக்கு பெய்வித்து
சொல்லாமல் சொல்லியது...
ஓராயிரம் ரகசியங்களை…!

ஏன் தெரியுமா இருள் அழகு...? அதில் அமைதி அழகாக ஒளிந்திருக்கிறது. ஒரு ஆழ்ந்த கருமை மிக வசீகரமானது. மனிதர்களின் பொதுபுத்தியில் வெண்மை அழகு என்று காலம் காலமாக பொதியப்பட்டுள்ளது. வெண்மைதான் தூய்மை என்று......இது மூளையில் காலம் காலமாக பொதிந்துள்ளதால்...எல்லோரின் மனமும் அதை நம்பிக் கொண்டு கருமையை அதற்கெதிராய் பார்க்கிறது.

கார்மேகம் பார்த்திருக்கிறீர்களா? தன்னுள் நீரை தேக்கிவைத்து ஒரு வித கவர்ச்சியான கருமையுடன் நகர்வதை? இனியேனும் பார்க்க தவறாதீர்கள். கருமை வெளிவிடும் நிறம் அல்ல அது எல்லாவற்றையும் உள்வாங்கிக் கொண்டு எல்லா ரகசியங்களும்
பொதிந்த ஒரு ஞானத்தின் நிறம்.

மெல்ல மெல்ல மொட்டை மாடியில் நடந்து கொண்டு என் சிற்றறிவால் பேரறிவை விழுங்க முயற்சித்துக் கொண்டிருந்தேன்.....! ஓராயிரம் செய்திகளையும் ரகசியங்களையும் தன்னுள் வைத்துக் கொண்டு மெளனமாய் பூமியின் சுழற்சியை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது இந்த வெட்டவெளி.....

தன்னிலிருந்து ஜனிப்பிக்கப்பட்ட அண்ட சராசரங்களையும் தன்னில் உள்ளடக்கி மெளனமாய் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. இதில் ஒன்று மட்டும் உணர முடிந்தது அல்லது என்னுள் இருந்து உடைந்து விழுந்தது என்னவென்றால்...

சொல்லி புரியவைக்கும் அல்லது தெளிய வைக்கும் அத்தனை முயற்சிகளும் இந்த உலகத்தில் பயனற்றது. எந்த ஒரு விசத்தையும் ஒரு மனிதன் கேட்கிறான்....விவாதிக்கிறான் ஆனால் மாறினான் என்றால் அது புறத்தில் இருந்து புகுத்தப்பட்டதால் அல்ல மாறாக அகத்தில் இருந்து உணரப்பட்டது.........! அகத்தில் உணரப்படாத மாற்றமென்பது நடிப்பு, வேசம், பொய், என்று சொல்லிக் கொண்டே போகலாம்.....

ஒற்றை துண்டை விரித்து.....படுத்துக்கொண்டு நேருக்கு நேராய் இருண்ட வானத்தை பார்க்கிறேன்.... என் நெஞ்சோடு மோதி முகத்தில் பரவி எனக்குள்ளும் பரவுகிறது அந்த பிரமாண்டம். ஒரு நட்சத்திரம் பிரகாசமாய், மற்றொன்று மங்கிய நிலையில், ஒன்று நகர்ந்து கொண்டு (அது செயற்கை கோளோ இல்லை வேறு எதுவோ..யாமறியேன் பராமரமே...) என்று குவிந்து கிடந்த நட்சத்திரங்களுக்கு நடுவே...ஒரு மூன்று நட்சத்திரங்களை ஒரே நேர்கோட்டில் நான் எப்போதும் கண்டிருக்கிறேன்...ஆனால் இப்போதுதான் ஆழ்ந்து கவனிக்கிறேன்....!

ஓ விண்மீண்களே.....! நீங்கள் எல்லாம் பூமி என்ற ஒன்றும்...சூரியன் என்ற ஒன்றும் உருவாவதற்கு முன்பே அங்கேதான் இருந்தீர்களா? இப்போது நீங்கள் பூமியாக எங்களை பார்க்கும் இடத்தில் முன்பு என்னவிருந்தது? வெற்று சூன்யமா? இல்லை வேறு ஒரு ஏதேனும் எங்களைப் போன்ற எல்லாம் அறிந்ததாய் நம்பிக் கொண்டிருந்த மானிடரோடு சுற்றிக் கொண்டிருந்ததா?

பூமியே இல்லாத போது பொய்யான நாடுகளும், மத, சாதி பேதங்கள், ஏழை பணக்காரன், கடவுள், வழிபாடு என்று ஒன்றூம் இருந்திருக்காது தானே?

என்ன சிரிக்கிறாய் வெட்டவெளியே? நாளை நானும் பின்னொரு நாளில் பூமியும் காணாமல் போய் உன்னில் கரைவோம் என்கிறாயா? வாஸ்தவம்தான்...ஆனால் உன்னை வெறும் அம்புலியாக நினைக்கிறது மானுடம்...ஹா...ஹா..ஹா...! மனிதரில் மிகச் சிலரே உன்னை உற்று நோக்கி தெளிவு அடைகிறார். மிகைப்பட்ட மானுடர்களுக்கு நீ, கவிதையாகவும், கட்டுரையாகவும், இன்னும் பலமில்லாத ஒரு பொம்மையாகவும்தான் படுகிறாய்.....

ஒரு நட்சத்திரத்தை நான் உற்று நோக்குகிறேன், இயன்ற அளவு வானத்தை என் கண்களால் குடிக்க முயல்கிறேன்....இந்த முயற்சிகளின் மத்தியில் ஒற்றை நட்சத்திரம் மட்டுமே என் கண்களில் நிலை கொண்டு.....சுற்றியிருந்த எல்லாம் மறைந்து, மறந்து... கண்கள் நிலை குத்தி...அப்படியே பார்த்து பார்த்து.....இமைகள் கவிழுந்து...உறக்கத்திற்கு முன்பான ஒரு நிலையில்..........

வெளியே பார்த்த மொத்த இருளும், மொத்த வெளியும் உள்ளே கண்கள் மூடியதும் இருளாய் என்னை சூழ்ந்திருப்பதை கண்டு பிரமித்துப் போன நான்..........பிரமிப்பில் உறங்கியே போனேன்.....!தேவா. S

Friday, October 8, 2010

நுனி....!எல்லாம் ஒழித்து
நான் ஒளிந்து கொள்ள
செய்யும் முயற்சிகள் எல்லாம்
தெளிவாய் காட்டிக்கொடுக்கின்றன...
என் இருப்பின் அடர்த்தியை...!

விரட்டும் வாழ்க்கையில்
மிகைத்திருக்கும் பொய்களின்
ஆட்டங்கள் சொல்லாமல்
சொல்கின்றன...இருத்தலில்
இருக்கும் இல்லாமை நிறங்களை!

ஜனித்த நாளின் பின்னணியில்
எப்போதும் ஒலிக்கும்
என் தாயின் பிரசவ வேதனையில்
அறுக்கப்பட்ட தொப்புள் கொடியோடு
தொலைந்து போன ஆதியின்..
கதகதப்பு சூட்டை தேடி
ஓடும் ஓட்டத்தின் இடையில்
வயதாய் கணக்கு கொள்கிறது காலம்!

இருண்ட அறையில்.....
இருந்த காலங்கள் மீண்டும் மீண்டும்
முட்டி மோத அடிக்கடி அமரும்
தியானங்களில் எப்போதாவது
தொடமுடிகிறது கருவறை வாசத்துக்கு
முன்னான....இருப்பின் நுனியை...!


தேவா. S

Wednesday, October 6, 2010

ஏகாந்த வெளியில்.....!

முயற்சி சிறகுகளை
பூட்டிக் கொண்டு விட்ட
என் பயணத்துக்கான
தொடங்குதல்களில்
சுருண்டு கிடக்கின்றன
தோல்விக்கு அச்சாரம்
இட்ட வெற்று நினைவுகள்!

வானம் தொடப்போகும்
என் வாழ்வின் முழு வீச்சு
தெரியாமல்...கேலியாய்
கூச்சலிட்ட சுவற்று பல்லியும்,
தெருவோரம் நின்று
எப்போதும் ஏளனமாய்
பார்க்கும் ஒரு தெரு நாயும்
முகங்களை திருப்பிய
இடமெல்லாம்... என் உத்வேகத்தின்
சக்தி பரப்பியிருந்த
சந்தோச வெளிச்சத்தில்
கண்கள் கூசிக் கிடந்தன...!

உயர பறக்க துணைக்கு
நின்ற ஒரு பறவை தன் சிறகசைப்பில்
எனக்கான வாழ்த்தைக் காற்றில்
எழுதுவதை கண்டு...
இரு மேகங்கள் உரசி...
வாழ்த்துக்களாய்
அனுப்பி வைத்தன
சில தூரல்களை!

பட்டாம் பூச்சிகள் எல்லாம்
என் தோள் தொட்டு
யாரும் அறியாவண்ணம் தாம்
உண்ட தேனின் சாற்றினை
என் உதடுகளில் தடவி....
ஒரு இனிப்பு முத்தம் பகின்ற
ஆனந்தத்தில்...உச்சி நோக்கி
பறந்ததில்...உணர்ச்சிவசப்பட்ட
பூக்கள் எல்லாம் காதலாய்
என்னைப்பார்த்து கண்ணடித்தன....!

ஒரு நதி.. செல்லும் போதே...
என்னை காதலோடு...
கழுத்து திருப்பி பார்த்துக்கொண்டே
உற்சாகத்தில் கரை புரண்டு ஓடியதில்
நீர் குடித்துக் கொண்டிருந்த
“ஆ “ க்களும் ஆடுகளும்
தலை நிமிர்த்தி பார்வையால்
என்னை பரவசத்தில் ஆழ்த்தி
அன்பை பொழிந்தன...!

இயலாமையை எரித்த
அந்த நொடியில் வெளிப்பட்ட
மாலை நேரத்து முழு நிலவு
காதலோடு என்னை கை நீட்டி
வெற்றியின் உயரத்தை கடந்து
வரப்போகும் எனக்காக
முத்தங்கள் பகிர காத்திருக்கிறது...

என் முயற்சி சிறகுகளை
மெல்ல அசைக்கிறேன்...
காத்திருந்த காற்று
காதலோடு என்னை கடத்தியும்
சிறகடிப்பில் நான் கிறங்கியும்
இதோ தொடங்கி விட்டது
என் ஏகாந்த பயணம்...!

* * *

என் உணர்வுகளை புரட்டிப் போட்ட நட்புகளுக்கும், உறவுகளுக்கும்...என் அன்பான நமஸ்காரங்கள் மற்றும் நன்றிகள் கோடி.....!

தம்பி செளந்தர்

நண்பன் தவ்லத்

தம்பி இம்சை& மாப்ஸ்டெரர்

தம்பி செல்வா

தம்பி சிரிப்பு போலிஸ்

நண்பர் எல்.கே

தம்பி ஜீவன்பென்னி


மாப்ஸ் சிறுகுடிராமு

தம்பி அருண் பிரசாத்

தம்பி வெறும்பய(ஜெயந்த்)

தம்பி விஜய்தேவா. S