Pages

Thursday, June 26, 2014

தக்க்ஷின் குட் ஈவினிங் - 2இனி...

சேட்டு ரொம்ப நொடிச்சுப் போய்ட்டாப்ல தேவ் தம்பி. ஒங்க கூட இருந்த டீம் எல்லோரும் வேலைய வுட்டுப் போய்ட்டங்க மிச்ச இருந்த யூனியன் ஆட்களால பிரச்சினை வேற எப்ப பாத்தலும் ஸ்ட்ரைக்கு அது இதுன்னு சொல்லிட்டு ஒரே களேபரமா கிடந்துச்சுபா ஓட்டலே...! என்னமோ கோர்ட்ல வேற ஓட்டல் இடத்து மேல பிரச்சினை இருக்கும்ன்னு பேசிக்கிட்டாங்க...அத்தனால மூடிட்டாங்களா இல்ல சேட்டுக்கும் சேட்டு தம்பிக்கும் பெரச்சினையா ஒண்ணியும் தெர்லபா... ஓட்டல் மூடினதுக்கோசரம் நான் லீ மெர்டியன் இஸ்டாண்டுக்குப் போய்ட்டன் பா....

எப்பவாச்சும் ஹரி வருவாப்ள ஓட்டலுக்கு, ச்ச்சுமாங்காட்டியும் ஓட்டல தொறந்து வச்சு கொஞ்ச நேர ஒக்காந்திருந்துட்டு போவாப்ள...ஒனக்கு லக்கு இருந்தா இப்போ கூட அவரு வரலாம்.....

எந்த ஹரி? செஞ்சி ஹரிண்ணாவா? சடாரென்று கேட்டேன்...

அவருதாம்பா சேட்டுக்கு ரைட் ஹேண்ட் கனக்கா இருப்பாப்லயே......

டீ குடித்து விட்டு ஹோட்டல் பக்கம் நாங்கள் இருவரும் வருவதற்கும் அவர் புல்லட்டில் தக்க்ஷின் உள்ளே சென்று இறங்கி நிறுத்தவும் சரியாய் இருந்தது. இந்த வந்துட்டப்ளபா ஹரி.....என்று மதி அண்ணன் சுட்டிக்காட்டிய அந்த புல்லட்டில் வந்தவரை பார்த்தேன்......மதி அண்ணனுக்கு கை கொடுத்து விட்டு மெல்ல அடி எடுத்து வைத்து தக்க்ஷின் காம்பவுண்டிற்குள் நுழைந்தேன்....என்னால் நடக்க முடியவில்லை கால்கள் பின்னி இழுத்தன....

ஹரி அண்ணா என்னைப் பார்க்கவில்லை பைக்க நிறுத்தி விட்டு ஏதோ எடுத்துக் கொண்டிருந்தார்....

அவர் அருகே சென்று....ஹரிண்ண்ண்ண்ண்...ணா.....வார்த்தைகள் தழு தழுத்தன....

ஹரிண்ணா திரும்பினார்..... ! என்னை கண்கள் சுருக்கிப் பார்த்தார்.12 வருடங்கள் என்னும் கால இடைவெளி மனிதர்களை எப்படியெல்லாம் மாற்றும் என்று எனக்குப் புரிந்தது. என்னுடைய 37 வயது எந்த குறையுமின்றி இங்கொன்றும் அங்கொன்றுமாய் தலையிலும் தாடியிலும் எப்படி நரைக்கத் தொடங்கி இருக்கிறதோ, மெலிசாய் இருந்த நான் எப்படி பூசினாற்போல ஆகிப்போய் பல்வேறு அனுபவங்களினால் வாழ்க்கையின் நிலையாமை எப்படி என் முகத்தில் இறுக்கமாய் பரவிக்கிடக்கிறதோ...

அப்படித்தான்....ஹரிண்ணாவும்....காலமும் சூழலும் அவரை வெகுவாய் மாற்றி மத்திம வயதிற்குள் கவனமாய் கொண்டு வந்து நிறுத்தி இருந்தன. உற்றுப் பார்த்தவர்....யோவ்....எப்டிய்யா... இருக்க....என்று கட்டிக் கொண்டார். இருவரும் பரஸ்பரம் விசாரித்துக் கொண்டோம். தேவ்....என்னாய்யா.... அப்டியே இருக்க என்று அவர் சொன்னது பொய் என்று எனக்குத் தெரியும். 2001ல் இருந்த நானில்லை இப்போது. அப்போது இருந்த சந்தோசமும் வாழ்க்கை பற்றிய எதிர்பார்ப்பும் இப்போது என்னிடம் இல்லை. இடம் வலமாகி இருக்கிறது. வலம் இடமாகி இருக்கிறது. கீழ் மேலாகவும், மேல் கீழாகவும் என் வாழ்க்கை மொத்தமாய் மாறிப் போய்விட்டிருக்கிறது. அப்போது எல்லாம் என்னோடு நிறைய பேர்கள் இருந்தார்கள்.

கூட்டம் கூட்டமாய் சுற்றுவதும் பேசுவதும், சிரிப்பதும் மிகுந்திருந்த அந்தக்காலங்களில் அறியாமைப் போர்வையைப் போர்த்திக் கொண்டுதான் நான் சுற்றிக் கொண்டிருந்தேன் என்றாலும் அறியாதவரை இருந்த சந்தோஷம் அறிந்த பின்பு கிடையாது என்பதுதான் உண்மை. எதை அறிந்தேன் என்று இப்போது எனக்குள்ளேயே ஒரு கேள்வி எழுகிறது. எது இல்லையோ அதை அறிந்தேன். எது இருக்கிறதோ அதை அறிந்தேன். இப்போது நிதானப்பட்டிருக்கிறேன். பரபரப்பு எதுவும் கிடையாது மனதிற்குள்....இது மெல்ல மெல்ல பரபரபரப்பு விட்டு நகர்ந்து ஆரவாரம் இல்லாத இடம் நோக்கி நடக்கும் ஒரு நகர்வினைப் போல எனக்குப் படுகிறது. ஒரு திரைப்படத்தின் இடைவேளையைப் போல் இருக்கிறது  என்னுடைய சமகால வாழ்வு.

படம் ஆரம்பிக்கும் போது இருக்கும் உற்சாகம் இடைவேளையில் இருப்பதில்லை. ஆமாம்...முடிவினை நோக்கிய நகர்வுதானே அதற்குப் பிறகு எல்லாமே....

தக்க்ஷினுக்குள் என்னை ஹரிண்ணா அழைத்தார்.  ஆட்டோ டிரைவர் மதி அண்ணன் சொன்னது போலவேதான் ஹரி அண்ணா ஹோட்டல் மூடியதற்கு காரணங்களைச் சொல்லிக் கொண்டே வந்தார். அவருடைய பேச்சிலிருந்து ஏதோ சட்ட ரீதியான பிரச்சினை இருப்பது பிடிபட்டது. ஒவ்வொரு படியாய் ஏறி தக்க்ஷினுக்குள் நுழைந்தேன்...

ரிஷப்சன் கவுண்டருக்குப் பின்னால் ஸ்வாகத் என்ற ஆங்கில பித்தளை எழுத்துக்கள் மங்கலாய் எனக்குத் தெரிந்தன.....10 வருடத்துக்கு முந்திய அதே லாபி....அதே ஷோபாக்கள் மங்கிப் போய் கிழிசலாய்....


மின்சாரம் கிடையாது ஆதலால் வெளியே இருந்த சூரிய வெளிச்சம்தான் எல்லா பொருட்களையும் எனக்கு காட்டியது.  வெள்ளைக்கலர் மார்பில் தரையை பார்த்தேன்.... சோபாவில் ஹரி அண்ணாவிற்கு எதிரில் அமர்ந்தேன். துபாயைப் பற்றியும் வேலையைப் பற்றியும் அவர் என்னிடம் நிறைய கேட்டுக் கொண்டிருந்தார். இருப்பவர்களுக்கு எப்போதும் இருக்குமிடத்தின் மீது ஒரு பிடிப்பும் ஏற்படுவதில்லை. ரதியையே திருமணம் செய்து வீட்டிற்குள் வைத்துக் கொண்டாலும் எதிர்வீட்டு ஜன்னல் மீது ஈர்ப்பு கொள்வதுதானே மனதின் இயல்பு. அரை இருட்டான அந்த ஹோட்டலில் லாபியில் இருந்த அதே ஷோபாவில் நான் 12 வருடங்கள் கழித்து இப்படி ஒரு சூழலில் அமர்வேன் என்று நினைத்துக் கூட பார்த்திருக்க வில்லை.

சோபாவில் சாய்ந்து கண்களை மூடினேன்.... 

எனக்குள் பளீச் சென்று ஹோட்டலில் இருந்த எல்லா விளக்குகளும் எரியக் கண்டேன்.மெலிதான ஊதா நிற புடவையில் இரண்டு பெண்கள் ரிசப்சனில் நின்று கொண்டிருக்க, அதே மெலிதான ஊதா நிறச் சட்டையும் கருப்பு நிற பேண்ட்டும் கருப்பு நிறை டையும் கட்டிக் கொண்டு இன்னொரு பையன் நின்று கொண்டிருக்க....

மெல்லிய இசை ஒன்று அந்த ஹோட்டல் முழுதும் நிரம்பி வழிந்தோடிக் கொண்டிருந்தது. சென்ட்ரலைஸ்டு ஏசியின் மத்திமமான குளிர் என் முகத்தில் சில்லென்று பட்டு என் தலை முடியைக் கோதிக் கொண்டிருந்தது. யார், யாரோ வருகிறார்கள், ரிஷப்சனில் செக்கின் கொடுக்கிறார்கள், சாவியையும் பெட்டியையும் எடுத்துக் கொண்டு பெல் பாய் அவர்களை லிஃப்டில் அழைத்துக் கொண்டு அறைக்குச் செல்கிறான். ஹவுஸ் கீப்பிங்கில் ரூம் ரெடிதானே....விருந்தினர்கள் வருகிறார்கள் என்று சந்தேகம் தீர்த்துக் கொள்கிறாள் ரிஷப்சனில் இருக்கும் பெண்....., காஃபி சாப் நிரம்பி வழிகிறது. புஃபே லஞ்ச்சிற்காக நிறைய பெண்களும் ஆண்களும் வந்து கொண்டே இருக்கிறார்கள், பார்க்கிங் நிரம்பி வழிகிறது....

செக்கியூரிட்டி யாரிடமோ கோபமாய் சண்டையிட்டு அவர்களை ஒழுங்காக வண்டியை நிறுத்துமாறு சொல்கிறார்....

அப்போது தேவ்...சார் ... எம்.டி ஆன் த லைன் என்று டெலி போன் ஆப்பரேட்டர் எனக்கு வந்த காலை ரிஷப்சனில் கொடுக்கிறாள்....

குட் ஆஃப்டர் நூன் சார்.....

யெஸ்.....சார்....காஃபி சாஃப் இஸ் அல் மோஸ்ட் ஃபுல் ஃபார் த புபே லஞ்ச் சார்....

இன் பக்வான் ரெஸ்ட்டரண்ட்.... சம் ஹவ் க்ரவுட் இஸ் தேர்.... பட் தட் ஆல் சோ வில் பி பிசி இன் நூன் டைம் சார்....

....பார்... கிரவுட் இஸ் தேர் சார்.....

....யூ ஆர் ரைட் சார்..... வீ  ஹேவ் பார்ட்டி அட் கங்கோத்ரி  அரொண்ட்  7 பிஎம் ....அண்ட் ஆல் செட்ட்ல்ட் அண்ட் அரேஞ்ட்....

கேஷ் ஃபுளோ....சோ ஃபார் ....1,20,000/- கிரெடிட் கார்ட்....70,000/-  ப்ளாஸ் ரிப்போர்ட் இஸ்......அண்ட்....கன்சாலிடேட் இஸ் சோ ஃபார்....... திஸ்மச் சார்....

எக்ஸ்பெக்டட் கெஸ்ட்ஸ் ஆர் தேர் சார்.. ரூம்ஸ் ஆர் ஃபைன்....

தேங்க் யூ சார்.....யூ  ஆர் வெல்கம்...!!!!!!

தேவ்... தேவ்....என்னாச்சுய்யா... தூங்கிட்டியா....

திடுக்கிட்டு விழித்தேன்....தக்க்ஷின் இருட்டில் கிடந்தது. நெஞ்சு பட படவென்று அடித்தது....எதிரே ஹரி அண்ணா....

இல்லண்னா...கொஞ்சம் உள்ளே சுத்திப் பாக்கலாமண்ணா....ஹோட்டல....? கேட்டேன்...

இல்ல  தேவ் உள்ள கரண்ட் இல்லை... அதோட இல்லாம உள்ள எல்லாம் அப்டி அப்டியே திங்க்ஸ் எல்லாம் இருக்கு சோ... வேண்டாம்... என்றார். அவர் சொல்வதின் அர்த்தம் புரிந்தது. 

வெளில பாக்கலாமாண்ணா....

வா... என்று அழைத்துக் கொண்டு வெளியே வந்தார்.  ஹோட்டல் காம்பவுண்ட்டை அவரோடு சுற்றி வந்தேன். 

எத்தனை இரவுகள், எத்தனை பகல்கள் உன்னை சுற்றி வந்திருப்பேன்...இன்று எல்லாம் தோற்றுப் போன பட்டத்து அரசனாய் நீ படையிழந்து, களமிழந்து, களையிழந்து நிற்க...இப்போதும் உன்னை சுற்றி வருகிறேன்....! எத்தனை கதைகள்தான் எனக்குச் சொல்வாய் காலமே? காட்சிகளும், காட்சி மாற்றங்களும், பிழைகளும், சரிகளும் என்று என்னை திளைக்க திளைக்க என்னைத் தோளில் தூக்கி வைத்துக் கொண்டு சுற்றி வருவதேன் காலமே? என்ன விடை வைத்திருக்கிறாய் எனக்கு? எது நோக்கி நகர்கிறது எனது வாழ்க்கை...?

வேலைக்கு ஆரம்பத்தில் ஒரு ரெளடியாய் என்னை மிரட்டினாயே தக்க்ஷினே....; நாளாக நாளாக ஒரு குழந்தையாய் என் தோளில் ஏறி  படுத்துக் கொண்டதும் நீதானே.....யோசித்தபடியே நடந்து கொண்டிருந்தேன்.

அண்ணாஆஆஆஆ.... நான் போட்ட சப்தத்தில் ஹரிண்ணா திடுக்கிட்டுத் திரும்பினார்....

எம்.டி சாரின் மாருதி ஜிப்ஸி ஜீப் அவர் எப்போதும் நிறுத்துமிடத்திலேயே துருப்பிடித்து, டயர்கள் பிய்ந்து போய் எலும்புக்கூடாய் நின்று கொண்டிருந்தது...!

அண்ணா.. எம்டி சாரோட வண்டிதானே...இது..? என்னாச்சுன்னா? கேட்டேன்....

அவர் ஓட்றது இல்லப்பா அப்டியே விட்டுட்டாரு....வண்டியும் ரிப்பேராச்சு....சரி போகட்டும்னு அப்டீயே விட்டுட்டோம்....

வண்டியினை தடவி பார்த்தேன். சிங்கம் மாதிரி எம்.டி சாரை சுமந்து கொண்டு அந்த காம்பவுண்ட்டிற்குள் வந்த அந்த காலங்கள் நினைவுக்குள் எட்டிப்பார்த்து தேம்பத் தொடங்கின...

எனக்கு மனசு கொள்ளவில்லை.....

அண்ணா ....நாம எம்.டி சார பாக்காலாமா? பிசியா அவர் இருந்தாக் கூட பரவாயில்லண்ணா.. ஜஸ்ட் 5 மினிட்ஸ் பாத்துட்டு அவர் கை பிடிச்சு நன்றி சொல்லி கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்கிட்டு  போயிடுறேன்... தொடர்பில்லாம போச்சுன்னா இவ்ளோ நாள்... அட்லீஸ்ட் ஒரு ரேப்போர்ட் ஆவது மெயிண்டெயின் ஆகும்...

என்னாபா சீரியசாதான் பேசுறியா...? ஒனக்கு ஒண்ணும் தெரியாதா...? தெரிஞ்சு இருக்கும்னுல நான் பேசாம இருந்தேன் இவ்ளோ நேரம்.....

என்னாச்சுன்னா... எனக்கு ஒண்ணும் தெரியாதுண்னா...ஹரிண்ணா முகத்தைப் பார்த்தேன்.


என்னாப்பா இப்டி சொல்றா.... ஆனந்த்குமார் சார் இறந்து போய்ட்டாருப்பா....உனக்கு தெரியாதா?

காலம் என் முகத்தில் பேயாய் அறைய... 

வார்த்தைகளின்றி ஸ்தம்பித்து நின்று கொண்டிருந்தேன்....!


(மீதி அடுத்த பதிவில்....)தேவா சுப்பையா...


Tuesday, June 24, 2014

தக்க்ஷின் குட் ஈவினிங்...!


தக்க்ஷின் குட் ஈவினிங் மே ஐ ஹெல்ப் யூ.....

தட்டுத்தடுமாறி பிபில் டெலிபோன் ஆப்பரேட்டர் போர்டை ஹேண்டில் செய்து கொண்டிருந்த 1998 ஆகஸ்ட் மாதத்தில் ஒரு விநாயகர் சதுர்த்தியின் இரவு அது. முதல் நாள் வேலை அதுவும் வாழ்க்கையின் முதல் முதல் வேலை எவ்வளவு கடினமாய் இருக்குமோ அதை விட பலமடங்கு கடினமாயிருந்தது எனக்கு. கிராமப்புற பகுதிகளிலேயே உயர்நிலைப்பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்பினை முடித்து விட்டு தட்டுத் தடுமாறி ஆங்கிலம் பேசிக் கொண்டிருந்த நான் எவ்வளவு தைரியம் இருந்தால் ஒரு ஸ்டார் ஹோட்டலில் ப்ரண்ட் ஆஃபிஸ் அஸிஸ்டெண்ட் ஆக வேலைக்கு சேர்ந்திருப்பேன். ஏதோ அடிச்சு மாற்றி பேசுவேன் என்றாலும் ஆங்கில புளூயண்ட்சி என்னிடம் மண்டியிட்டு கதறி அழுது என்னை விட்டு விடு என்று கெஞ்சத்தான் செய்யும்.

என்னுடைய முதல் வேலையின் முதல் இரவு. துணைக்கு ஒரு ஆக்ராக்காரன் அசோக் குமார் சிங் என்று....என் வயதை ஒத்தவன் தான் ஆனால் 21 வயதில் என்னிடம் எம்.என் நம்பியாரைப் போல வில்லத்தனம் செய்த ஆங்கிலம் அவன் நாக்கில் 16 வயதுக் குமரிப் பெண்ணாக நர்த்தனம் ஆடியதுதான் காலத்தின் கோலம். அப்போதைக்கு என்னைக் காப்பாற்ற  பாரதத்து கிருஷ்ணனாக அசோக்குமார் சிங்கும் திரெளபதியைப் போல பரந்தாமா என்னைக் காப்பாற்று என்றிருந்த நானும் தத்து பித்து வென்று ஆங்கிலத்தில் அவனிடம் பேசி சமாளித்துக் கொண்டிருந்தேன். அந்த இரவு  இன்னும் கொஞ்ச நேரத்தில் மட்டையாகப் போகும் ஒரு குடிகாரனைப் போல ஆடி அசைந்து நகர்ந்து கொண்டிருந்தது....

ரிஷப்சன் குட் மார்னிங் மே ஐ ஹெல்ப் யூ என்று வரவேற்பரையின் தொலைபேசியில் நான் மல்லுக்கட்டிக் கொண்டிருந்த அந்த விடியற்காலை... பனிரெண்டரை மணிக்கு ஹோட்டலுக்குள் நுழைந்த அந்த மனிதரை எவ்வளவு பிசியாக இருந்தாலும் யாராலும் கவனிக்காமல் இருக்க முடியாது. ஆஜானுபாகுவான நல்ல தடித்த உருவம், அதற்கேற்ற உயரம், அடர்த்தியான தாடி, தாடிக்கு மேல் தொங்கும் கூர்மையான மீசை, புருவ மத்தியில், நெற்றியில், வயலட், மற்றும் சிகப்பு நிற குங்குமம், கழுத்தில் ஸ்படிகமாலை, ருத்ராட்சம், இன்ன பிற மாலைகள், கையில் ரத்தினம் பதித்த மோதிரங்கள்.... வெள்ளை வெளேரென்று சபாரி..... வாயில் மணக்க, மணக்க மாணிக் சந்த்......

சடாரென்று அவர் வரவேற்பரைக்குள் நுழையவும் நான் போனை வைத்து விட்டு குட் மார்னிங் சார் என்று சொன்னேன். என்னருகில் வந்தார் பவ்யமாய் குட் மார்னிங் மிஸ்டர் தேவேந்தர்....ஹவ் ஆர் யூ? என்று கேட்டவுடன் எனக்குத் தூக்கி வாரிப்போட்டது....இது என்னடா வம்பாப் போச்சு இவர பாத்தாலே மிரட்டலா இருக்கே...இவருக்கு எப்டி நம்ம பேரு எல்லாம் தெரியும் என்று யோசித்துக் கொண்டே டெலிபோன் ஆப்பரேட்டர் கேபினில் உட்கார்ந்திருந்த அசோக்குமாரை அதிர்ஷ்ட சாலி தப்பித்தான் என்று நினைத்துக் கொண்டேன்....

ஐய்யம் ஃபைன் சார்.... என்று அழுத்தமான என் தங்கிலீசில் அவருக்கு மறுபடி சொன்ன போது கையை நீட்டி ஹோப் யூ வில் டு த பெஸ்ட் என்று  கை குலுக்கி விட்டு ஹோட்டலுக்குள் சென்றுவிட்டார் அந்த மனிதர்.....

அவர் அந்தப் பக்கம் போனவுடன் பெல் கேப்டன் ராமமூர்த்தி ஓடி வந்தான்.. என்னிடம்... தேவ் சார்.... அது யாரு தெரியுமா அவர்தான் நம்ம ஹோட்டலோட எம்டி.....பேரு....

                                  ஆனந்த்குமார் டியோகார்

என்று சொன்னான்.....! ஹெச். ஆரை முடித்து விட்டு ஜி.எம்மோடு நேர்முகத்தேர்வு முடிந்த பின்பு நேரே வேலைக்கு அழைக்கப்பட்டதால் எனக்கு அவரைத் தெரிந்திருக்கவில்லை. நான் எனக்குப் பின்னாலிருந்த ரிஷப்சன்  சுவரில் பித்தளையில் பாலிஷ் செய்யப்பட்டிருந்த வாசகத்தை மீண்டுமொரு முறை வாசித்தேன்... ” த தக்க்ஷின்”  என்று எழுதி அதன் கீழே ” டியோகார் குரூப் ஆஃப் ஹோட்டல்ஸ்..”  என்று பொறிக்கப்பட்டிருந்தது. ஆனந்த்குமார் டியோகார் தான் அந்த ஹோட்டலின் எம்.டி. நந்தனம் வெங்கட்நாராயணா ரோட்டில் தேவர் சிலைக்கு வெகு அருகில் இருந்த அந்த த்ரீ ஸ்டார் ஹோட்டல்தான் எனக்கு வாழ்க்கையை பிச்சைபோட்டது. வாழ்க்கை என்பது பணம் மட்டுமல்ல, வாழ்க்கை என்பது கற்றுக் கொள்ளல், வாழ்க்கை என்பது நம்பிக்கையோடு இருத்தல் வாழ்க்கை என்பது மற்றவரை மதித்தல், வாழ்க்கை என்பது நாகரீகமாய் இருத்தல், வாழ்க்கை என்பது புதிது புதிதாய் படைத்தல், ரசித்தல்.

எனக்கு எல்லாமே தக்க்ஷின் ஹோட்டல்தான். கூட வேலை பார்த்த மற்ற டிப்பார்மெண்ட் ஆட்கள் எல்லாம் என் ஆங்கிலத்தை அப்போது எள்ளி நகையாடி இருக்கிறார்கள். முதல் ஒரு வருடம் எனக்கு அங்கே நரகமாய் இருந்தது. ஒவ்வொரு நாளையும் அவமானத்தோடு தான் நான் நகர்த்திக் கொண்டிருந்தேன். அஸிஸ்டெண்ட் எஃப் & பி மேனேஜராய் இருந்த ஒரு தங்கத்தமிழன் உன்னை எல்லாம் யார் வேலைக்கு எடுத்தது என்று முகத்திலடித்தாற் போல சொல்லி உன் ப்ரெளனன்சியேஷனே தப்பு தப்பா இருக்கே..... என்று என்னுடன் வேலை பார்த்த ஒரு ஆங்கிலோ இந்தியன் பெண்ணை வைத்துக் கொண்டு கிண்டலடித்தான். என்னை அவன் கிண்டலடித்து அந்த பெண்ணை மடக்கவேண்டும் அவ்வளவுதான்....! அவமானம் பிடிங்கித் தின்றது எனக்கு. 

எனக்கு முந்திய ஷிப்ட்டில் இருந்தவன் ஒரு விருந்தினரின் விமான டிக்கெட்டை ரீகன்பார்ம் செய்யாமல் மறந்து போனதால் ஏற்பட்ட குழப்பத்தை ஆராய்ந்து யார் தவறு செய்தது என்று முடிவெடுக்கும் முன்னரே.... அது நானாய்த்தான் இருக்கும் என்ற அனுமானத்தில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஒரு கெஸ்ட் ரிலேஷன் எக்ஸியூட்டிவ் ப்ரண்ட் ஆஃபீஸ் லாக் புக்கில்...... வரவேற்பாளன் உத்தியோகத்திற்கு நான் லாயக்கற்றவன் என்றும் மேலும் அந்த நட்சத்திர ஹோட்டலில் என் தகுதிக்கு ஒரு வேலையுமே கிடையாது என்றும்  கேவலமாய் எழுதி வைத்திருந்தாள்.....

தவறு என்னுடையது இல்லை என்று புரிந்த பின்னும் நான் போய் அவளிடம் கெஞ்சிக் கேட்டும் அந்த லாக் மெசேஜை அவள் மறைக்கவோ அழிக்கவோ மறுத்து விட்டாள். இதற்கெல்லாம் ஒரே காரணம் எனக்கு ஆங்கிலம் அவ்வளவாக தெரியாத ஒரு கிராமப்புற மாணவனாய் மட்டுமே நான் இருந்ததுதான்.


இத்தனைக்கு நடுவே நான் வேர்பிடித்து அங்கே வளர ஒரே ஒரு காரணம்தான் இருந்தது. அந்த ஒரு காரணம் ஆனந்த்குமார் டியோகார்..... அந்த நிறுவனத்தின் எம்.டி. ஒட்டு மொத்த ஹோட்டலுமே அவருடைய மாருதி ஜிப்ஸி ஜீப்பைக் கண்டாலே அதிரும். ஒரு வார்த்தைப் பிசகினாலும், ஒரு விபரம் தவறாய்க் கூறினாலும் சீட் கிழிந்து போய்விடும் என்ற பயம் எல்லோருக்குள்ளும் இருக்கும். அவர் ஹோட்டலுக்குள் இருந்தாலும், இல்லாவிட்டாலும் 24 மணிநேரம் எப்போது அவர் வருவார் எப்போது போவார் என்பது யாருக்குமே தெரியாததால் ஒரு வித அச்சத்தோடுதான் எல்லோருமே வேலை செய்து கொண்டிருப்பார்கள்.

எம்.டி இஸ் காலிங் யூ..... என்று நுனி நாக்கில் அவருடைய செக்கரட்டரி என்னை ஓர் நாள் அழைத்த போது நான் முதல் ஷிப்ட்டில் இருந்தேன். காலையிலேயே  எதற்கு என்னை கூப்பிட்டிருக்கிறார். இவ்வளவு நாள் அப்படி இப்படி ஓட்டி விட்டோமே என்ற பயத்தோடு மெல்ல மெல்ல பேஸ்மெண்ட்டிற்கு சென்றேன். பேஸ்மெண்டில் இருக்கும் அலுவலகத்தைக் கடந்து அவருடைய கண்ணாடி அறைக்குள் நுழைந்த போது மெல்லிய விளக்கொளியும் அவருடைய நாற்காலிக்குப் பின்னால் வைக்கப்பட்டிருந்த சாமிப்படங்களுக்கு இடப்பட்டிருந்த பூக்களின் வாசமும், ஊது பத்தி வாசமும், கம்பீரமாக வெள்ளை சபாரியில் அமர்ந்திருந்த எம்.டி சாரும், அவர் மென்று கொண்டிருந்த மாணிக் சந்த் குட்காவின் வாசனையும், என்று அந்த சூழல் ஒரு மாதிரி பயத்தையும், நடுக்கத்தையும் எனக்குள் ஏற்படுத்தியது.....

தயங்கியபடியே நின்று கொண்டிருந்தேன்.  சிட்...சிட்..மேன்... என்றார். அமர்ந்தேன்.

ஹவ் லாங் ஆர் யூ வொர்க்கிங் ஹியர்...? அதட்டலாய் கேட்டார்.

இன்னைக்கு அனுப்பிடுவாங்க போல வீட்டுக்கு என்ற பயத்தோடு.... மோர் தென்....சி...ச்சிக்ஸ் மன்ந்த்ஸ் சார் என்றேன்.  வறண்டு போயிருந்த தொண்டையை நனைக்க கூட எச்சில் இல்லாமல் வாய் உலர்ந்து போயிருந்தது.

வாட் யூ வான் டூ ஹேவ்.... காபி... ஆர் டீ.... என்று கேட்டவர்...கெட் டூ காஃபிஸ் என்று ரூம் சர்வீஸுக்கு டயலினார்.

யோவ்... என்னய்யா.. பயந்து நடுங்கிட்டு இருக்க...என்று லோக்கல் தமிழில் பேசிய ஆனந்த்குமார் சார் புனேவுக்கு பக்கத்திலிருக்கும் சங்கிலி என்னும் ஒரு கிராமத்தை சேர்ந்தவராம். சென்னைக்கு வந்து பல வருடங்கள் ஆகிவிட்டது என்பதை அவரது தமிழ் எனக்குச் சொல்லியது...

இல்லை சார்... என்று மீண்டும் தயங்கிய படியே நுனி நாற்காலியில் அமர்ந்திருந்தேன்.

இங்கிலீஷ் தெரியலேன்னா பயப்படக் கூடாதுய்யா.... தெரிஞ்சுக்கணும். டெய்லி எவ்ளோ கெஸ்ட்ஸ் வர்றாங்கோ..., அவுங்க பேசுறத எல்லாம் கவனமா கேட்டுக்க, கூட வேலை பாக்குறவங்க என்ன பேசுறாங்கன்னு கவனி, டெய்லி ஹிண்டு பேப்பர் படி, புரியாத வார்த்தைய எழுதி வச்சுக்க, டிக்சனரியில அர்த்தம் பாரு, அந்த வார்த்தைகள யூஸ் பண்ணி உன்னோட லாக் புக்ல அடுத்த ஷிப்ட் வர்றவனுக்கு லாக் எழுதி வைச்சுட்டுப் போ....

நாய் மாதிரிதான்யா எல்லா விஷயமுமே.... தெரியாதவன், புரியாதவன் வந்தா லொல் லொல்லுன்னு குலைக்கும், பழக்கப்படுத்திக்கிட்டேன்னா... வாலை ஆட்டிக்கிட்டு வந்து காலை நக்கும் அவ்ளோதானே....உன்னோட ஹார்ட் வொர்க்க நான் பாத்துருக்கேன்..... நாலு ஷிப்ட்ன்னாலும் தைரியமா நின்னு கண்டினியூ பண்ற உன்னோட சின்சியாரிட்டிய கவனிச்சு இருக்கேன்....கூட இருக்கவன் எல்லாம் எப்ப யார கால வாரிவிடலாம்னு தான் யோசிப்பான்.... மொத்தத்துல உன் பயத்தை தூக்கி ஓரமா போட்டுட்டு தில்லா வேலையப்பாரு சரியா....என்றார்.

மெல்ல புன்னகைத்த படியே பயத்தோடு காபியை குடித்து முடித்தேன். எழுந்து தேங்க்யூ சார் என்று சொல்லியபடியே கதவைத் திறக்க முயன்ற போது சாக்லேட் பேபி.....என்று அழைத்தார்.... சந்தேகமாய் திரும்பினேன்...

உன்னதான்யா கூப்டேன் போய் ஆக்குபென்ஸி லிஸ்ட்டையும், எக்ஸ்பெட்டட் அர்ரைவல் லிஸ்ட்டையும் எடுத்துட்டு வா என்றார். வெளியே வந்து மெயிண்டெனன்ஸ் டிப்பார்ட்மெண்ட்டை கடந்த போது எம்.டியின் வலது கையாயிருந்த மெயின்டெனன்ஸ் டிப்பார்மெண்டின் எச்.ஓ.டி ஹரி அண்ணா என்னை பார்த்து சிரித்தார். பயப்படாம வேலை பாருய்யா என்று முதுகில் தட்டிக் கொடுத்தார்.  ஹரி அண்ணாதான் எம்டியிடம் என்னைப் பற்றி ஏதோ சொல்லி இருக்க வேண்டும் என்று தோன்றியது எனக்கு....

அவ்வளவுதான்... அன்று முதல் எம்.டி சாருக்கு நான் சாக்லேட் பேபிதான்....! அவர் அடித்த உற்சாக சிக்ஸராய் நான் பறந்து கொண்டிருந்தேன். ஒரு வருடம் முடியும் முன்னரே ப்ரண்ட் ஆஃபிஸ் சூப்பர்வைஸர் ஆக்கினார். ஒன்றரை வருடத்தில் அஸிஸ்டெண்ட் லாபி மேனேஜர் ஆக்கினார். இரண்டு வருடம் முடியும் முன்னரே நைட் டூட்டி மேனேஜர் ஆக்கினார்.  இரண்டு வருடம் முடிந்து ஒரு நாள் நைட் ஷிப்ட் முடிந்து வீட்டுக்கு கிளம்பிக் கொண்டிருந்த என்னை அவருடைய ஜீப்பில் ஏற்றிக் கொண்டு மெளன்ட் ரோட்டிலிருக்கும் ரேமாண்ட்ஸ் ஷோரூம் அழைத்துச் சென்று புதிதாய் பிஸ்கட் கலரில் கோட்டும், சூட்டும் புதிய டைகளும் வாங்கிக் கொடுத்துவிட்டு இன்னைக்கு உனக்கு டே ஆஃப் எடுத்துக்கோ...நாளையில இருந்து மார்னிங் நைன் டூ நைட் நைன் உனக்கு டூட்டி என்று சொன்னார்,  அடுத்த நாள் வேலைக்கு சென்ற போது ப்ரண்ட் ஆபிஸ் மேனேஜர் நீதான் என்றார்.....

என்னை ஏளனம் செய்தவர்கள் எல்லாம் என் முன்னாலேயே பல சூழல்களில் வேலையை விட்டு வெளியேற்றப்பட்டார்கள்.....காலம் வெகு வேகமாய் உருண்டோடியது.

2002ல் துபாய்க்கு வந்த பிறகு எனக்கு தக்க்ஷினில் வேலை பார்த்த அனுபவமே தைரியத்தை கொடுத்தது. புதிய வேலையையும் கொடுத்தது. அப்படி இன்னொரு வேலையில் சேர்ந்த போது யானையைக் கட்டி இழுத்தவனிடம் கொசுவைக் கட்டி இழுக்கச் சொன்னால் என்ன எளிதாக இருக்குமோ அவ்வளவு எளிதாயும் இருந்தது.  எப்போதும் தக்க்ஷினை நினைப்பேன் உடனேயே ஆனந்த்குமார் சாரையும் நினைப்பேன். வருடங்கள் வேகமாய் ஓடின. அதற்குப் பிறகு ஏதோ பிரச்சினை காரணமாக தக்க்ஷின் ஹோட்டல் மூடப்பட்டு விட்டதாக சொன்னார்கள். சொந்தப் பிரச்சினையா இல்லை வேறு ஏதேனும் பிரச்சினையா என்று விசாரிக்க கூட அப்போது யாரும் என்னோடு தொடர்பில் இல்லை. விடுமுறைக்கு ஒவ்வொரு வருடமும் செல்லும் போதும் பூட்டிக் கிடக்கும் தக்க்ஷினின் வாசலில் நின்று ஏக்கமாய் பார்த்துக் கொண்டிருந்து விட்டு கிளம்புவது எனக்கு வழக்கமாய் ஆனது.

ஹோட்டல் இயங்கிக் கொண்டிருந்த போதே அதை அப்படியே மூடியிருப்பார்கள் போல...ஏனென்றால் இன்னமும் அதன் உள்ளே இருக்கும் பொருட்கள் எல்லாம் கண்ணாடிக்கு வெளியே அப்படியே எனக்குத் தெரிந்தன. வெளியே இருந்த பார்த்த போது காஃபி ஷாப்பில் அப்படி அப்படியே எல்லாம் இருப்பது தெரிந்தது. அறைகளின் கர்ட்டெய்ன்ஸ் எல்லாம் அப்படியே கிழிந்து தொங்கிக் கொண்டிருந்தன. பார்த்து பார்த்து பிராஸிங்க் செய்யும் தக்க்ஷின் ஹோட்டலின் பித்தளைப் பெயர் மங்கிப் போய் கிடந்தது. அலங்கார விளக்குகள் தூசு படிந்து ஒட்டடையோடு கருத்துக் கிடந்தன. உள்ளே நுழையும் போதே கண்ணாடிகளை ஒற்றை ஆட்காட்டி விரல் வைத்து இழுத்து பார்த்து சிறிதளவு தூசி இருந்தாலும்  ஹவுஸ் கீப்பிங் சூப்பர்வைசரைக் கூப்பிட்டு திட்டி இருக்கிறேன்...

எனக்குள் சந்திரமுகி படத்தின் ப்ளாஷ் பேக் போல ராஜாதி ராஜ ராஜ மார்த்தாண்ட....என்று கம்பீரமாய் அந்த ஹோட்டல் பீடு நடை போட்ட நாட்கள் நினைவுக்கு வந்தது.

யாரையும் சந்திக்க முடியவில்லை...யாரிடமும் அந்த ஹோட்டல் பற்றி கேட்க முடியவில்லை என்ற ஏக்கத்தோடே  ஒவ்வொரு முறையும் விடுமுறை முடிந்து திரும்பும் எனக்கு இந்த முறை ஒரு ஆச்சர்யம் காத்துக் கிடந்தது.....

வழக்கம் போல விடுமுறைக்கு ஊருக்கு வந்த நான் தக்க்ஷின் ஹோட்டல் பக்கம் வண்டியை திருப்பி  வாசலில் நின்று பார்த்துக் கொண்டிருந்த போது பூட்டிக் கிடந்த அந்த ஹோட்டலின் பக்கவாட்டில் இருந்த டைம் ஆபிஸில் யாரோ ஒரு இந்திகாரன் நிற்பதைப் பார்த்து விட்டேன்....

குடித்திருப்பான் போல அவ்வளவு சப்தமாய்  கூப்பிட்டும் நான் அழைத்தது அவனுக்கு கேட்கவே இல்லை. நான் உச்சி வெயில் பன்னிரென்டு மணிக்கு அவனை அழைத்துக் கொண்டிருந்ததைப் பார்த்த அங்கே நின்று கொண்டிருந்த ஆட்டோக்காரர் என்னை ஏற இறங்க பார்த்தபடி இன்னா சார் வோணும்...... என்று கேட்டார்.

இல்லங்க நான் இங்க வேலை பார்த்தேன். ஓட்டல் மூடிக் கிடக்குது அதான் என்ன விபரம்னு கேக்கலாம்னு என்று இழுத்தபடியே.... அந்த ஆட்டோ டிரைவரைப் பார்த்த எனக்கு.....அவர் முகம் பளீச்ச்சென்று நினைவுக்கு வர..... ” மதிண்ணா.....என்னை தெரியுதா....நான் தேவேந்தர்...இங்க ரிஷப்சன்ல வொர்க் பண்ணினேன்ல....நீதானண்ணா நிறைய சவாரி ஏர்போர்ட்ல இருந்து கொண்டு வருவ... என்னண்ணா இப்டி தலை எல்லாம் நரைச்சுப் போச்சு.....

கண்ணில் பிரகாசம் வந்தவராய் மதி அண்ணன் தன் நரைத்த தாடி மீசையையும், தலை முடியையும் சரி செய்த படியே..... இன்னாபா.... எப்டி கீற...எவ்ளோ நாளாச்சு.....என்னை கட்டிக் கொண்டார்.....! வெகு நாட்கள் கழித்து தொலைந்து போன தொடர்புகளில் யாரேனும் ஒருவரை காணும் போது ஏற்படும் உணர்வுகளை எந்தக் கொம்பனாலும் எழுதிக் காட்ட முடியாது என்று இப்போது இதை தட்டச்சு செய்யும் போது எனக்குப் பிடிபடுகிறது. இங்கே யாருக்கும் யாரையும் அவ்வளவு எளிதாய் அடையாளம் தெரிந்து விடுவதில்லை. கடந்த கால நினைவுகளை மீட்டெடுப்பதற்கு அப்போது நம்மோடு இருந்த யாரேனும் ஒருவர் நமக்கு அவசியமாகிப் போய்விடுகிறார்......! மதி அண்ணனின் கண்களும் கலங்கி இருந்தன...

என்னாச்சுன்னா ஓட்டலுக்கு.......? கேட்டேன்.....

வா வா டீக் குடிச்சுக்கினே பேசலாம்...... என்று எதிரிலிருந்த சிம்லா ஸ்னாக்ஸ்க்கு என்னை அழைத்தார்.

அவர் பேசத் தொடங்கினார்.....எனக்கு கண்கள் கலங்கத் தொடங்கியது.....


(மீதி அடுத்த பதிவில்....)
தேவா சுப்பையா...
Saturday, June 21, 2014

காதல் சாதல் ரெண்டும் ஒன்று என்னே... விந்தையடி?!


ஒரு மாதிரியான தருணம்தான் அது. இமைக்க கூட மறந்து அவளின் விழிகளுக்குள் நான் கிடந்தது. காதலைப் பற்றி என்ன தெரியும் உங்களுக்கெல்லாம் என்ற ஒரு கேள்வி மமதையாய் புத்திக்குள் ஏறி சிவதாண்டவம் கூட அப்போது ஆடிக் கொண்டிருந்தது. காதல் வெளிப்படுவது விழிகளில்தான் என்று மீண்டுமொரு முறை காலம் எனக்கு மெய்ப்பித்தது. இதற்கு முன்பு இரண்டொரு முறை காதல் கண்களுக்குள்ளிருந்து என்னைப் பார்த்து என்ன செளக்யமா என்று கேட்டதும் உண்டு. நிறைய கண்களை நான் கண்டிருக்கிறேன் என்று சொல்லும் போதே ஆண்களின் கண்கள் எல்லாம் உங்கள் மனதில் இருந்து கழன்று போகக் கடவதாக;

ஆண்களின் கண்களைப் பற்றி பெண்கள் அல்லவா சிலாகித்து எழுத வேண்டும் அது பற்றிய கவலை எனக்கெதற்கு? குண்டு கண்கள், கூர்மையான கண்கள், சிவந்த வரியோடிய கண்கள், வெள்ளை வெளேறென்ற தும்பைப்பூ நிற கண்கள், துரு துரு கண்கள், சாந்தமான கண்கள், எப்போதும் கோபமேறிப்போய் உஷ்ணம் வீசும் கண்கள், வசீகரமாய் சொடக்குப் போட்டு அழைத்து இன்று இரவு எதுவும் வேலை இருக்கிறதா என்று கேள்வி கேட்டு சொக்க வைக்கும் கண்கள், எனக்கு ஒன்றுமே தெரியாது என்று அப்பாவியாய் பேந்த பேந்த விழிக்கும் கண்கள் என்று பெண்களின் கண்களைப் பற்றி டாக்டரேட் செய்யும் அளவிற்கு எனக்கு அனுபவம் உள்ளது என்கிற சுயதம்பட்ட நாற்காலியை எடுத்து ஒரு ஓரமாய் வைத்து விடுகிறேன்....

காதலோடு நான் கண்ட அந்தக் கண்களுக்கும் மேலே நான் சொல்லியிருக்கும் கண்களுக்கும் நிறையவே வித்தியாசம் உண்டு. காதல் நிறைந்த கண்கள் கொஞ்சம் மிதமான கண்ணீரில் நீந்தும் மீன்களைப் போலவே துடித்துக் கொண்டிருப்பதாக எனக்குத் தோன்றும். வாழ்வா சாவா என்பது போன்று ஒரு வித படபடப்புடனேயே தனக்குப் பிடித்தவனின் கண்களை பார்த்துக் கொண்டிருக்கையில் அந்த வாஞ்சையை எப்படி வார்த்தைப் படுத்துவது என்று என்னைப் போன்ற கிறுக்கன்களால் மட்டுமே யோசிக்க முடியுமோ என்னவோ....

நான் அவள் விழிகளை பார்த்துக் கொண்டிருந்தேன். அவள் தட்டுத் தடுமாறி பேச முயன்ற அத்தனையையும் இம்மி பிசகாமல் சொல்லிக் கொண்டிருந்த அந்த கண்களுக்குள் மெல்ல மெல்ல ஊடுருவி என் பார்வை பயணித்துச் சென்று ஸ்தம்பித்து நின்றது அவளின் இதயமாயிருந்தது. ஓ....கடவுளே இத்தனைக் காதலையும் சுமந்து கொண்டு எப்படி துடித்துக் கொண்டிருக்கிறது இந்த சிறு இதயம் என்று நான் திணறலாய் யோசித்துக் கொண்டிருக்கையில் வாஞ்சையாய் என் கரம் பற்றிக் கொண்டாள் அவள்.

தேவதை, அழகி, இம்சை, நிலவு, தென்றல், குளிர், நறுமணம், மென்மை, மலர், பட்டாம் பூச்சி, கவிதை, மழை, நனைதல், அருவி, வானம், நட்சத்திரம், யாருமில்லாத பெரும் மெளனம், இளையராஜாவின் ஒரு பழைய பாடல் என்றெல்லம் வர்ணித்து தனக்குப் பிடித்தவளை ப்ரியமான வார்த்தைக்குள் கொண்டு வர எவ்வளவு பிரயத்தனம் செய்திருக்கும் இந்த உலகம் என்று நினைத்த போது உவமைகள் எல்லாம் காகிதப்பூக்களாய் எனக்கு தெரிந்தன. இது வேறு விதமானது என்று எனக்குத் தோன்றியது. இது சுகமும் அல்ல, துக்கமும் அல்ல. இது ப்ரியமானது அல்ல வெறுப்பானதும் அல்ல. இது இனிமையானதும் அல்ல கொடுமையானதும் அல்ல. இது எதுவுமே கிடையாது ஆனால் இது தான் எல்லாமே......!!!!!

அவள் என்னெதிரில் அமர்ந்திருந்தாள். குறைந்து போய்விடாமல் அவளின் முன்பிருந்த முழுக் குவளையில் ததும்பிக் கொண்டிருந்த பழரசம் இன்னமும் அவளின் தொண்டையை நனைத்து நகரும் பாக்கியம் கிட்டவில்லையே என்று கொதித்துக் கொண்டிருப்பது போல தோன்றியது எனக்கு.....

உண்மையில் அப்போது மொழி என்பது அனாவசியமானதாய் எனக்குப் பட்டது. பேசவோ கேட்கவோ நாங்கள் இருவருமே விரும்பி இருக்கவில்லை. மெளனத்தை மென்று கொண்டிருக்கையில் சப்தநாய்களின் குரைச்சல்கள் யாருக்குத்தான் பிடிக்கும்...? நான் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அவள் என்னைப் பார்த்துக் கொண்டிருந்தாள். எனக்கு ஒரு ஓவியம் ஒன்றைக் காலம் தீட்டிக் கொண்டிருப்பதாய் பட்டது. தூரிகைகள் இலக்கற்று பயணிக்கும் அந்த சுகத்தில் நான் தூரிகையாகவும் அவள்  என்னை நனைத்துக் கொண்டிருக்கும் வர்ணக் கலவையாகவும் எனக்குத் தோன்றியது.

இந்தக் காதல் ஏன் எனக்கு மொழி வடிவமாகவோ, அல்லது இசை வடிவமாகவோ அல்லது ஏதோ ஒரு கற்பனை வடிவமாகவோ தோன்றாமல் ஓவிய வடிவமாய் தோன்றுகிறது என்று யோசிக்க முடியவில்லை என்னால்....

அவள் இமைத்தாள்....
தூரிகை நகர்ந்தது....
அவள் சிரித்தாள் ....
தூரிகை நகர்ந்தது....
அவளின் கேசம் காற்றில் பறந்தது
தூரிகை நகர்ந்தது....
விழிகளால் என் விழிகளுக்கு
ஒத்தடம் கொடுத்தாள்....
தூரிகை நகர்ந்தது....
அந்த மாலை நேரத்துக் காற்றில்
திரைச்சீலைகள்...அங்குமிங்கும் பறந்தன....
தூரிகை நகர்ந்தது....,
நான் ஏதுமற்ற தூரிகை...
அவள் எல்லாமான வர்ணக்கலவை...!

எனக்குள் ஒரு காட்சியாய் தைல வண்ண ஓவியமாய் அந்த சூழல் உருவாகிக் கொண்டிருந்தது. இது அழகு. இது மென்மை. இது சுகம். இது நலம் என்றெண்ணியபடியே நான் ஆழமாய் பெருமூச்சு விட்ட போது அவள் சும்மாயிருந்திருக்கலாம்.... எனக்குள் சாதாரணமாய் வெளிப்பட்ட பெருமூச்சு அவளுக்குள்ளும் இருந்து வெளிப்பட்டு அடங்கிய பொழுதில் ஏறி இறங்கிய அவளின் கூர்மையான மார்பின் மீதிருந்து தட தடவென்று நான் கீழே விழுந்து பின் கவனமாய் மேலேறி அவளின் மென் உதடுகளின் மீதமர்ந்து கொண்டு அவள் சுவாசித்தலை மீண்டும் ரசிக்கத் தொடங்கினேன்....

கேட்க யாருமில்லை அங்கே என்பது தெரிந்திருந்ததால் பேச எதுவுமில்லை என்பது இருவருக்குமே தெரியும். விழிகள், இமை, நாசி, காதுமடல்கள், காற்றில் பறக்கும் கேசம், நீளமான கழுத்து, ஆழமான பார்வை....அவள், நான்.....

இதற்கு மேல் அங்கே வேறொன்றும் இல்லை பேசித் தொலைக்க...! பேசி பேசி என்ன செய்து விட்டது இந்த உலகம். காதல் என்று சொல்லி பிள்ளைகள் பெற்றுக் கொள்கிறது. திருமணம் என்று சொல்லி ஒருவரை ஒருவர் சிறையிலடைத்து வைக்கிறது. பொருள், அருள், தேவை, அனாவசியம், அரசியல், தத்துவம், ஆன்மீகம், பக்குவம், பரவசம், புத்தகம் புண்ணாக்கு என்று ஏதேதோ பேசிப் பேசி எப்போதும் இரைச்சலுக்குள் வாழச்சொல்கிறது.....

நானும் நீயும்....நீயும் நானும் 
எங்கிருந்து வந்தோம்....?
யார் சொல்லிக் கொடுத்தது 
நமக்கு சப்தமில்லாத இந்த
ஜீவ இசையை...?

ஜீவன்களுக்கான இசையை எப்போதும்
இசைத்துக் கொண்டிருக்கிறது காலம்
எனக்கு இவள் இசைக்கிறாள்...
அவளுக்காய் நான் இசைக்கிறேன்....
காலங்களைப் பற்றி எங்களுக்கென்ன கவலை
இதோ நகர்ந்து கொண்டே இருக்கிறதே காலம்
இது தானே எங்களைச் சேர்த்தது....
இதுதானே பிரிக்கவும் செய்யும்....
மீண்டும் இதுவன்றி
வேறு எது எங்களை இணைத்து விட முடியும்?

புலன்களுக்குள் பூட்டுப் போட்டுக் கொண்டு வாழும் மானுடர்க்கு நடுவில் திக்குகளற்றுப் பாய்பவர்களுக்கு  ஏது பூட்டு? எது சாவி? உடல் என்பது மனதின் பார்வைதானே...சூட்சுமங்களை இல்லை என்று சொல்லி விட்டால் அவை இல்லை என்றாகி விடுமா என்ன?

மீண்டும் அவள் கரம் பற்றினேன்...
அவள் கண்ணீர் சிந்தினாள்...
என் கைவிரல்களில் சூடாய் பட்டுத் தெரித்தது
யுகங்களாய் இந்தப் பிரபஞ்சத்தில் 
பயணித்துக் கொண்டிருக்கும் காதலின் சூடு
அவள் கண்களிலிருந்து அது ததும்பிக் கொண்டிருந்தது...

எனக்கு என்னவோ செய்தது. கட்டியணைக்க நினைத்தபடி அவளின் தலை தடவினேன்.... வாஞ்சையான காதலனாய் மட்டுமல்ல.....வலி நிறைந்த தகப்பனாயும் கூட....! காதலனாய் இருப்பது சுகம்தான்....அதைவிட பெருஞ்சுகம் அதே காதலிக்கு  தகப்பனாய் இருப்பதும்தான்....

பிரிந்து விட்டோம்....., மீண்டும் சேர்வோம்....!தேவா சுப்பையா...