Pages

Wednesday, May 30, 2012

இசையோடு இசையாக...தொகுப்பு 5!ஆதியிலே இருந்து அசைவற்ற சிவம், சூன்யம், சத்தியம் எப்போது இயங்கத் தொடங்கியதோ அங்கே தொடங்கியது கலை. இல்லாததை சொல்பவன் கலைஞன் ஆனால் அதுவும் முழுமையிலிருந்துதான் வரும். எல்லாமாய் தன்னுள் எல்லாவற்றையும் மறைத்து வைத்திருக்கும் இந்த பிரபஞ்சம் தேக்கி வைத்திருக்கும் ரகசியங்களும் அற்புதங்களும் கோடானு கோடி என்று சொல்வதும் ஒரு மட்டுப்பட்ட நிலைதான்..

நான் ஒரு இசைக்கலைஞன் மனிதர்களை விட ஸ்வரங்களோடு எனக்கு ஸ்னேகிதம் அதிகம். இசையும் பாடலும் எனது இரு கண்கள்....எனது குரல்வளையிலிருந்து வெளிப்படும் சப்தங்கள் எல்லாம் பிராணனிலிருந்து வெளிப்படும் காற்றின் ஏற்ற இறக்கமே...!

ஒரு ராகத்தை ஆரோகணத்திலிருந்து படிப்படியாக அவரோகணத்திற்கு கொண்டு வந்து ஸ்வர சுத்தமாக ஆரோகணத்திற்குக் கொண்டு சென்று விளையாட முழுக்க முழுக்க மூச்சுப் பயிற்சி அவசியம்...பிரணாயமத்தில் சுவாசத்தை கட்டுக்குள் கொண்டு வந்து சப்தத்தினை பயில, பயில குரல்வளையிலிருந்து வெளிப்படும் காற்றின் அளவுகள் தேவைக்கு ஏற்ப ஸ்வரங்களுக்குள் நின்று இராகங்களை மெருகூட்ட...எனது குரல் உங்களுக்குப் பிடித்துப் போகிறது.

முழுக்க முழுக்க பூமியோடு பந்தப்படாத ஒரு சிந்தனைக்குள் வந்து விட்ட பின்னரும் பூமியில் வாழும் ஒரு நிலை கொண்டு இருக்கும் ஆத்மார்த்த கலைஞர்களை பெரும்பாலும் எல்லோரும் சரியாக அடையாளம்  கண்டு கொள்வதில்லை. அப்படியே மிகைப்பட்ட பேர்கள் கண்டு கொண்டு விட்டாலும் அது கலைஞனின் உருவத்தையோ, பின் புலத்தையோ, அவனை ரசிப்பதால் மிகைப்பட்டபேர் தன்னை மதிப்பரென்றோ, அல்லது அவனால் தமக்கேதேனும் ஆதாயம் கிட்டாதா என்றும் ஏதோ ஒரு சுய நலப் போக்கில் அமைந்து விடுகிறது.

ஒரு சரியான கலைஞன் மேற் சொன்ன எல்லாம் அறிந்து, பெரும்பாலும் இவர்களை ஏதோ ஒரு காரணத்தை காட்டி புறம் தள்ளுகிறான், ஆனால் ஒரு படைப்பாளியின் படைப்பு ஜனித்த மூலத்தை கண்டு ரசிக்கும் ஒரு ரசிகனையோ அல்லது ரசிகையையோ....

அவன் அவ்வளவு சாதாரணமாக விட்டு விட முடியாது. ஏனென்றால் அவனிடமிருந்து வெளிப்படும் இசையை அவன் எங்கிருந்து எடுத்தானோ அந்த இடத்தை கண்டு ...இங்கே தானே??? இப்படித்தானே என்று ஆச்சர்யமாய் கண் விரிக்கும் போது இவன் தன்னின் படைப்பிற்கான முழு அங்கீகாரம் கிடைத்த மகிழ்ச்சியில் மேலும், மேலும் தன்னை தனது கலையின் மூலம் அற்புத படைப்புகளாக வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறான்.

இப்படிப் பட்ட இசைக்கலைஞன் நான். எனது வாழ்க்கையில் நுழைந்த சிந்து....இப்படி, அப்படி என்னை ரசித்தவள்,  என் புறச்சூழலை காரணம் காட்டி லோகாதாய மாயங்களுக்கு பயந்து என்னை விட்டுப் போய் விட்டாளென்றால்....... என் கலை எப்படி வாழும்...? என்னை உற்று நோக்கி சீராட்டும் ஒரு விமர்ச்சிக்குமொரு பொக்கிஷம் இல்லையெனில்....என்னவாகும்....?

இந்த மாதிரி பாடல்தான் ஜனிக்கும்....!!!! 

காலத்தால் அழியாத ஓவியம் செய்த பிரம்மா கே. பாலச்சந்தர் சார்......ஜேசுதாஸ் சார், இசை தெய்வம் இளையராஜா சார் மற்றும் இதில் நடித்திருக்கும் சிவகுமார் சார்....கண்களில் ஒத்திக் கொள்ள வேண்டிய ஒரு இசை படைப்பு..!!!! நான் என்ன சொல்லி விடமுடியும்...

எறும்பு வியந்தாலும்...
இமயம் இமயம்தானே...!

இனிமையான இசையால் உங்களுக்கு கிடைக்கப் போகும் அற்புத அனுபவத்திற்கு வாழ்த்துக்கள்.தேவா. S


Friday, May 18, 2012

தமிழரின் தாகம்...தமிழீழத் தாயகம்..!ஒவ்வொரு வருடமும் மே மாதம் ஆரம்பிக்கும் போதே நெஞ்சு பதை பதைப்பதை தவிர்க்க முடியவில்லை. முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்தேறிய பெரும் அவலத்தில் அழிந்த நம் உறவுகளின் அழுகைச் சத்தம் மானமுள்ள தமிழனின் காதுகளில் இன்னமும் எதிரொலித்துக் கொண்டுதான் இருக்கும். அயோக்கித்தனமாய் உலக நாடுகளை ஒன்று சேர்த்துக் கொண்டு பிச்சை எடுத்து ஒரு இன அழிப்பை நடத்தி விட்டு விடுதலைப் புலிகளை ஒழித்து விட்டோம் என்று கொக்கரிக்கிறான் மானங்கெட்ட ராஜபக்சே...!

எத்தனை எத்தனை நிகழ்வுகள்.....2009 மே17, 18, 19 க்குப் பிறகு. பிரபாகரன் இருக்கிறார், இல்லை என்ற வாதங்களில் எல்லாம் இப்போது யாரும் அவ்வளவு அக்கறை எடுத்துக் கொள்வதில்லை. நம்பிக்கை இருப்பவர்களுக்கு அவர் இருக்கும் கடவுளாகிப் போனர். அவர் இருக்கிறார், கண்டிப்பாய் வருவார் என்ற நம்பிக்கை இங்கே ஓராயிரம் பிரபாகரன்களை உருவாக்கிக்தான் கொண்டிருக்கிறது.

பிரபாகரனையும் அவர் கட்டியெழுப்பிய விடுதலைப் புலிகள் இயக்கத்தையும் நேசிக்க நீங்களும் நானும் தமிழனாய்த்தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை, ஒரு நல்ல மனிதனாய் இருந்தால் போதும். நேர்மையான, சுய சிந்தனை உடைய, காழ்ப்புணர்ச்சிகள் அற்ற, உணர்வுகள் கொண்ட ஒவ்வொரு மனிதனும் பிரபாகரன் என்னும் மாவீரனை தனது வழிகாட்டியாக, கடவுளாக பார்க்கத்தான் செய்வார்கள். 

தன் இனம் வாழ வேண்டும் என்று கருவி ஏந்தி போராடி தன் மக்களுக்காகவே வாழ்க்கையை அர்ப்பணித்து கடைசிவரை களத்தில் மக்களோடு மக்களாக நின்ற ஒரு பெருவீரன் மீண்டும் வரவேண்டும் என்று எண்ணுவதில் எந்த தவறும் இல்லை....அவர் இல்லை என்று சொல்பவர்களின் நாக்குகளை வெட்டிப் போடவேண்டும் என்று நமக்குத் தோன்றுவதும் இயல்புதான் என்று வைத்துக் கொள்ளுங்களேன்.

எது எப்படி இருந்தாலும் நடந்து முடிந்த ஈழப்போர் நமக்கு பல பாடங்களைச் சொல்லிக் கொடுத்திருக்கிறது. இந்திய இறையாண்மைக் கத்தியின் பதம் எப்படி இருக்கும் என்று அறிந்தோம், மனித நேயம் முக்கியம் என்று உருவாக்கப்பட்ட ஐக்கிய நாடுகளின் அமைப்பு யுத்த சமயத்தில் எப்படி நடந்து கொண்டது என்றும் அறிந்தோம், இந்திய தேசம் முழுமைக்கும் இருந்த  மக்களும் மற்ற மாநில அரசியல்வாதிகளும் அண்டை தேசத்தில் ஒரு பெரு இன அழிப்பு நடந்த போது என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்று தெளிவாய் உணர்ந்தோம்...

எல்லாவற்றுக்கும் மேலாக எம் தாய்த் தமிழகத்தின் மானமிகு தமிழினத்தின் தலைவர்களும், புரட்சித் தலைவிகளும் தமிழ் இரத்தம் ஈழத்தில் கரை புரண்டு ஓடிக் கொண்டிருந்த போது யுத்தத்தை நிறுத்த என்ன மாதிரியான முயற்சிகளை எடுத்தார்கள் என்பதை நாம் அறிந்ததுதான்...வரலாற்றில் நிகழ்ந்த மிக முக்கியமான விடயம். நயவஞ்சகமாய் தமிழர் நலம் என்பதை வெற்று அரசியலாய் கொண்டிருந்த, சுயநல அரசியல் செய்து சுகபோகங்களில் திளைத்துக் கிடந்த, ஜந்துக்களையா நாம் நமது தலைவர்களாக எண்ணிக் கொண்டு மாற்றி மாற்றி அரியணையில் ஏற்றினோம் என்று எண்ணிய போது அவமானம் பிடுங்கித்தான் தின்றது....!

ஈழத்தில் நடந்த அத்தனை கொடுமைகளையும் உலகெங்கும் இருக்கும் ஊடகங்களும், வலைப்பூக்களும், இணையதளங்களும் தெளிவாய் விளக்கி எழுதிக் கொண்டிருந்த போது தாய்த் தமிழகத்தில் மானாட மயிலாடவும், ஜாக்பாட்டும் பார்த்துக் கொண்டு தாய்த் தமிழன் தொடை தட்டி சிரித்துக் கொண்டிருந்தான். மிகச் சிலரே..........மிக மிகச் சிலரே மக்களிடம் ஈழப்பிரச்சினையை கொண்டு சேர்க்க முயன்ற போதும் அப்போதைய தமிழக அரசு அதை தனது அதிகாரத்தால் முடக்கிப் போட்டது, குரல்வளைகளை நெறித்துப் போட்டது குறிப்பாக தமிழகத்தில் எழுச்சி வந்து விடக்கூடாது என்பதில் கவனமாய் இருந்தது.

தமிழர்களுக்கு முகத்தில் அறைந்தாற்போல எதுவும் நடந்தாலே தவிர....பெரும்பாலும் எதுவும் உறைப்பதில்லை என்ற கூற்றினை உறுதி செய்யும் வண்ணம் முத்துக்குமார் என்னும் ஒரு விதை இந்த பூமியில் கருகி விழுந்த போதுதான் கண் விழித்து பார்த்து .......என்ன ஆச்சு...? ஏன்... தீக்குளிக்க வேண்டும் என்று நாம் கேட்கத் தொடங்கினோம். முத்துக் குமார் செத்துவிழுந்த போதும் இந்திய அரசுக்கு மாமா வேலை செய்த ஊடகங்கள் அதைக் கூட காட்சிப்படுத்தவில்லை.

முடிந்து விட்டது...! எல்லாமே முடிந்து விட்டது.....! இனி அதை பேசி பிரயோசனம் இல்லை நண்பர்களே...! அழுது அழுது கண்கள் சிவந்தது போதும்... இனி மனிதர்களை உற்று நோக்கி அவர்களின் கபட நாடகங்களை அறிந்து சரியான தலைமையை தமிழ் நாட்டில் தேர்ந்தெடுப்பதோடு, இந்திய மைய அரசிலும் வலுவாக அந்த கட்சியை வலிமைப் பெறச் செய்வதுமே  நாம் செய்ய வேண்டிய அரசியல். தமிழகத்தில் இனி தமிழர்களுக்கான ஒரு பாரிய அரசியலை செய்யாமல் எந்த ஒரு கட்சியும் இனி பிழைத்து எழ முடியாது என்பதை ஈழப்போர்தான் முடிவு செய்தது என்பதையும் நாம் உணர வேண்டும்.

ஓட்டுக் கேட்டு வரும் ஒவ்வொரு அரசியல்வாதியும் இனி தனித் தமிழ் ஈழம்தான் தீர்வு என்று பேசுவார்கள்...., நாங்கள் வெற்றி பெற்றால் தமிழர் நலம் பேணப்படும், ஈழத்தின் மக்களின் விடியலுக்கு தனித் தாயகம் பெறுவதற்கு நாங்கள் போராடுவோம் என்று கையேந்திப் பிச்சை கேட்பார்கள். ஆமாம்....ஈழம் மெளனமாய் அதை சாதித்து இருக்கிறது. பிரபாகரன் என்ன சாதித்தான் என்று கேட்கும் நயவஞ்சகர்களிடம் சொல்லுங்கள்...

ஈழம் என்ற ஒரு வார்த்தையை பயன்படுத்தாமல் தமிழகத்தில் எந்த ஒரு அரசியல் கட்சியும் இனி பிழைத்தெழ முடியாது.....என்பதை உறுதி செய்தவன் பிரபாகரன் தான் என்று...! ஈழப்போரில் இரத்தம் குடித்த  கொலைகார காங்கிரஸ் கட்சி....திருடனுக்கு தேள் கொட்டியது போல நின்று கொண்டிருக்கிறது இப்போது..., தமிழகத்தின் தனது கூட்டணி சகாவான திமுகழகத்தின் தலைமை மீண்டும் டெஸோ என்னும் ஈழத்தமிழர் பாதுகாப்பு இயக்கத்தை தூசு தட்டி எடுத்து இருக்கிறது....

கடந்த சட்டசபைத் தேர்தலில் ஜெயலலிதா ஜெயித்திருக்க வேண்டியவரே அல்ல....என்பது ஒவ்வொரு தமிழனுக்கும் தெரியும்....ஆனாலும் மிருகபலத்தோடு ஜெயித்தார் என்பதற்கு முழு முதற்காரணமாக ஈழப்பிரச்சினையில் திமுகழகம் நடந்து கொண்டதுதான் காரணம் என்பது திமுகழகத்தில் இருப்பவர்களுக்கே நன்றாகத் தெரியும். ஊழலை எல்லாம் யோசித்து தமிழன் எப்போதும் பெரிதாய் எடுத்துக் கொண்டதே இல்லை...அப்படி எடுத்துக் கொண்டிருந்தால் புரட்சிச் தலைவி இன்னும் முதல்வராய் புட்பால் மேட்ச் ஆகிக் கொண்டிருக்க முடியாது.....அவ்வளவு மெகா ஊழல்களையும் செய்தவர் அவர் என்பதோடு மட்டுமில்லாமல் இன்னமும் கோர்ட் படியேறிக்கொண்டும் இருக்கிறார்.

திமுகழக ஆட்சியில் நடந்தது என்று சுட்டிக்காட்டும் அத்தனை தவறுகளும் எப்போதும், இப்போதும் ஏன் இன்னும் சொல்லபோனால் இன்னும் அதிகமாகவே அதிமுக ஆட்சியில் நடந்து கொண்டுதானிருக்கிறது என்றாலும்....ஈழப் போர் நடந்து கொண்டிருந்த போது திமுக தலைமை நடந்து கொன்ட விதத்தை மனசாட்சியுள்ள எந்த தமிழனும் ஏற்றுக் கொள்ளமாட்டான்..காரணம் திமுகழகத்தின் மீதும் அதன் தலைமை மீதும் ஒவ்வொரு தமிழனும் வைத்திருந்த எதிர்பார்ப்பும், நம்பிக்கையும் பொய்த்துப் போனதுதான்.

கடந்த சட்ட மன்றத் தேர்தலில் ஈழம் மெளனமாய் தனது ஆளுமையைக் காட்டியது. இனி வரப்போகும் எல்லா தேர்தல்களிலும் ஈழம் தமிழகத்தில் விசுவரூபமெடுக்கும், ஈழம் என்னும் வேரூன்றி தமிழர் நலம் பற்றி பேசாத எவனொருவனும் இங்கே இனி அரசியல் செய்ய முடியாது. காங்கிரஸ் கட்சியே தனித் தமிழ் ஈழத்தை ஆதரித்து பேசினாலும் ஆச்சர்யமில்லை....

2009 மே 17, 18, 19களில் நம் உறவுகள் வெறுமனே மரித்து மட்டும் போய் விடவில்லை, இதோ மானமுள்ள ஒவ்வொரு தமிழனின் நெஞ்சிலும் உயிராய், உணர்வாய் நின்றாடிக் கொண்டிருக்கிறார்கள். ஈழத்தை அரசியலாக்கி ஓட்டுக்களாய் மாற்ற முயலும் நயவஞ்சகர்கள் யார் என்று இனி யாரும் சொல்லி நமக்குத் தெரிய வேண்டியதில்லை, நான்கு நாட்களில் போரை நிறுத்தினேன் என்று விளம்பரம் செய்தவர்களும் போர் என்றால் மனிதர்கள் இறக்கத்தான் செய்வார்கள் என்று சொன்னவர்களும்....ஈழம்......ஈழம்.....ஈழம் என்று இனி விடாமல் முழங்கிக் கொண்டிருப்பார்கள்....! அப்படி முழஙினால்தான் அவர்கள் பிழைப்பு ஓடும்....!

கொலை பாதகங்கள் செய்த கொடும் காங்கிரஸ் கட்சி ஒருங்கிணைந்த இலங்கையில் நாங்கள் தமிழர்கள் நெஞ்சு நிமிர வாழ வைப்போம் எங்களுக்கு வாக்களியுங்கள் என்று நமது கால்களை வந்து நக்குவார்கள்....நாம் ஏமாறக் கூடாது. 

"எங்கள் துப்பாக்கிக்களை நாங்கள் தற்காலிகமாக மெளனிக்கச் செய்கிறோம்.... "

என்று தமிழ் ஈழ தேசிய இராணுவமான விடுதலைப்புலிகள் அமைப்பு அறிவித்து விட்டு ...மொத்தமாய் மெளனித்து விட்டது என்று முட்டாள்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். வெள்ளை கொடி ஏந்தி சென்றவர்களை வதைத்துக் கொன்ற கொடூரத்தையும், வேதியல் கொத்தெறி குண்டுகளை வீசி எம்மக்களை பொசுக்கிப் போட்ட அவலத்தையும், கருகிக் கிடந்த பிள்ளைகளையும், காயம்பட்டு மருத்துவ உதவிக்காய் கெஞ்சிக் கொண்டிருக்கையில் மருத்துவமனையில் குண்டு போட்டு அழித்த மிருகச் செயல்களையும்....

நாம் மறந்து விடக் கூடாது. நம் பிள்ளைகளுக்கு எல்லாம் தமிழ் ஈழத்தில் நடந்த கொடுமைகளையும் அங்கே யார் யார் எப்படி வஞ்சித்தார்கள் என்பதையும், அநீதி எப்படி எல்லாம் ஆட்டிப்படைத்தது என்பதையும் நாம் ஊட்டி வளர்ப்பதோடு.....பிரபாகரன் என்னும் பெரும் வீரன் ஏன் துலக்கு ஏந்தினான்..? எப்படி எல்லாம் நம் இனத்தை நேசித்தான்..?  எவ்வளவு நுட்பமான மூளைக்கு சொந்தக்காரன் அவன், அவனது வீரம் எத்தகையது, பாசம் எத்தகையது..... என்பதை எல்லாம் உணர்வாய் நாம் அறிவித்தே வளர்க்க வேண்டும்.

காலத்தின் போக்கில் எல்லாம் மாறும்........அந்த மாற்றத்தில் நமது உணர்வுகளின் ஒட்டு மொத்த வீரியமும் ஒன்று கூடி நமக்குத் தாய்த் தமிழ் ஈழத்தைப் பெற்றெடுத்து கொடுக்கும் என்ற உறுதியோடு போரின் போது வீரமரணம் அடைந்த எம் இனத்திற்கு வீரவணக்கத்தையும் எமது அஞ்சலிகளையும் செலுத்தி இக்கட்டுரையை நிறைவு செய்கிறேன்.

தமிழரின் தாகம்....தமிழீழத் தாயகம்....!


தேவா. சுSaturday, May 12, 2012

மாயா...மாயா....எல்லாம் மாயா!இல்லாத இடத்திலிருந்து இருப்பவராய் நம்மை ஜனித்துக் கொடுத்தது ஒரு சூனியம். சூனியத்தின் பிள்ளைகள் சூட்சுமத்திலிருந்து பிழிந்தெடுத்த கனவின் வண்ணமய காட்சிகளாகி கை கால்கள் முளைத்து ஐம்புலனென்னும் பொறிகள் கொண்டு பெற்ற அனுபவத்தை மனமாக்கி, புத்தியில் நினைவுகளாய் தவழ்ந்து கொண்டு படைக்கிதிங்கு ஓராயிரம் பொய்மைகளை....

அறிந்திராத கடவுளை அறிந்த பொழுதில் பட்டுப் போய்விடும் அவயங்களை ஏந்திக் கொண்டு அங்கும் இங்கும் வழிபாடுக்காய் கட்டிடங்களையும், கருத்துக்களுக்காய் வேதங்களையும் சுமந்து கொண்டு மதநாடகம் நடத்தும் பித்துக் கூட்டங்கள் பெற்றுப் போட்ட பிள்ளைகள் நிரம்பிய பூமியாய்ப் போனது.....இந்த சுழல் பந்து.

ஆசையின் வேர்கள் நீண்டு கொண்டே இருக்க அதிகாரமென்னும் கொம்புகள் முளைத்து அங்கும் இங்கும் மிருக சாயலில் அலையும் வேடிக்கை மனிதர்கள் போதும் போதுமென்றளவிற்கு பொருள் ஈட்டி பின்னொருநாள் தீக்கிரையாகிப் போகின்றனர் இல்லையேல்...மண்ணில் மட்கிப் புழுவாகி நெளிந்து கொண்டிருக்கின்றனர்....

மறுமையில் சுகமனுபவிக்கும் ஆசையில் மதங்களுக்குள் புகுந்து வேடமிட்டுக் கொண்டு நல்லவர் வேடம் போடும் வேகத்தில் எத்தனை எத்தனை இயல்புகளை உடைத்துப் போடுகின்றனர் இவர்கள்....! இறுமாப்பில் பேசித் திரியும் மானுடர்கள் சாலை கடக்கையில் சட்டென்று ஒரு கன ஊர்தி அவர்கள் மீதேறி இறங்கினால் என்னவாகும்...?

யோசித்துப் பார்க்க நேரமில்லாமல்....தலைகளில் எப்போதும் அரசியல் விதண்டாவாதங்களையும், மதப்பிடிப்புக்களையும், நான் அறிந்தேன், நான் மட்டுமே அறிந்தேன் என்ற இறுமாப்பில் அலையும் மூட கள்ள படைப்பாளிகளையும் என்ன செய்யும் இந்த வாழ்க்கை....?

கழுத்தெலும்புகளை உடைத்து ஒருவேளை பாடம் கொடுக்கலாம், இடுப்பிலிருக்கும் சக்தியினை உறிஞ்சி நிற்க முடியாமலொரு பாடம்கொடுத்து நீ ஒன்றுமில்லை என்றும் சொல்லிக் கொடுக்கலாம், பெரும் காய்ச்சலில் வாய் கசக்க வீட்டு மூலையில் வாய் கோணி படுக்கவைத்து....பல்லிளித்துக் கொண்டே பாடங்கள் சொல்லலாம்...யார் கண்டது..? இறுமாப்பினை அறுத்தெறிய வாழ்க்கை யாதொரு வேடமிட்டும் வரலாம்.....

பகுத்தறிவு புகுத்திக் கொடுத்த விஞ்ஞானத்தின் வெருண்ட ஓட்டத்தில் சமைந்து கிடக்கும் நவீன ஊடகங்களில் ஊர்ந்து செல்லும் மானிடக்கூட்டத்தில் பலர் நாயைப் போலவே திரிகின்றனர். எனக்கு கிடைத்த உருவம் நானா படைத்தது? எனக்கு கிடைத்திருக்கும் சிந்தனைகள் என்ன நான் தனித்தமர்ந்ததால் கிடைத்ததா? எங்கிருந்து வருகிறது மட மானுடர்களுக்கு தான் அழகென்ற மமதையும், தான் அறிவாளி என்ற புத்திக்கோளாறும்....! சுய தம்பட்ட மைதானமாய் போயிருக்கும் சமகால சமூக இணைப்பு வெளிகளில் ஊடுருவிச் செல்லவே கூசித்தான் போகிறது நியாயவான்களின் உடல்கள்...

சுயதம்பட்ட தேற்றத்திற்கா கருத்துப் பகிர்தல்....? வழிகாட்டுபவனுக்கு எப்படி வரலாம் இறுமாப்பு...? வழிகாட்டுகிறேன் என்று கூறுபவன் திருப்தி என்னும் நிறைவை அல்லவா கொள்ள வேண்டும். இருக்கும் வழியை காட்டுவதற்கு பெருமைகள் பேசும் பித்தனை நீங்கள் எப்படி பார்ப்பீர்கள்.....? அல்ப ஜந்துவாகத்தானே....? அப்படியேதான் கருத்துப் பகிர்தலை அகங்காரமாய் எடுத்தியம்பும் வீணர்கள் கூறுவதை எல்லாம் காலம் பல முறை பல சூழல்களில் ஏற்கனவே பகிர்ந்துதானே சென்றிருக்கிறது....

எங்கிருந்து எடுக்கிறான் ஒரு திறமை சாலி தனக்கான திறனை...? இந்த பிரபஞ்சத்தின் அறிவிக்கப்படாத அல்லது அறிந்திடாத மூலைகளிலும் கூட விரவிக் கிடக்கும் பேரறிவுகளில் இருந்துதானே...? பகுத்தறிவும், அஞ்ஞானமும் விஞ்ஞானமும் புதிதாய் உருவானது அல்ல....அது எப்போதும் இங்கே இருப்பது. இவை எல்லாம் ஒன்று கூடிய பிரமாண்டத்தை புரிந்து கொள்கையில், எதை பகிர்ந்தாலும் அதை நான் என்னும் கட்டுக்குள் இருந்து பகிர்ந்தேன் என்ற் அபத்த அறிவு அழிந்தேதான் போகிறது.

வாழ்க்கை எப்போதும் இருப்பது. யாரோ எப்போதோ எழுதியதை நான் இன்று இங்கே எழுதிக் கொண்டிருக்கிறேன். யாரோ செய்த அரசியலை யாரோ இப்போது செய்து கொண்டிருக்கிறார்கள். எவனோ செய்த புரட்சியின் தாக்கத்திலேதானே இந்தப் பூமியில் ஓராயிரம் புரட்சிகள் வெடித்தெழுந்தன...? எல்லா உணர்வுகளின் மூலமும்....ஜனித்த இடமென்று ஒன்று இருக்கும்தானே....? அந்த பெரு உணர்விலிருந்து வெடித்து சிதறிய பிச்சைதானே நீங்களும் நானும் பகிரும், பழகும், செயற்படுத்தும் எல்லா செயல்களும்....

மாயையின் பிள்ளைகளே.......!!!! அழிந்து மட்கப்போகும் ஒன்றுமில்லாததின் சக்கரவர்த்திகளே...!!!! சக்தியை காலம் உறிஞ்சிக் கொண்டபின் பலமின்றி கண்ணீர் வழிய கடந்த காலத்தில் செய்த தவறுகளை எண்ணி கதறப் போகும் பொய்களே....

இறுமாப்புக்களை அழித்தொழியுங்கள்...! இல்லாததிலிருந்து நாம் வந்திருக்கிறோம்.  நாம் யாருமில்லை என்று உணருங்கள். வாழ்க்கை மாயை....! இந்த மாயையிலொரு சண்டையும், வீண் ஜம்பமும் பொய் என்றுணருங்கள்....!

மாயா...! மாயா...! எல்லாம் மாயா..........சாயா...சாயா....எல்லாம் சாயா!

தேவா. சு


Thursday, May 10, 2012

ரகசியத்தின் சுவடுகள்...!
சாத்தானை படைத்த எரிச்சலில்
மனிதனை படைக்கவே கூடாது
என்ற கடவுளின் ஆசையை உடைத்து விட்டு
மனிதனை படைத்தே விட்டான் சாத்தான்...
கடவுளைக் கொன்று விட்டு;
மனிதனோ மீண்டும் மீண்டும்
சாத்தானை படைத்து விட்டு
அதற்கு கடவுள் என்று பெயரிட்டுக் கொண்டிருக்கிறான்;

ஆமாம்...

கடவுளை மனிதன் படைத்து விடக் கூடாது
என்ற கடவுளின் ஆசை தோற்றுப் போனதில்
சாத்தான் மீண்டும் மீண்டும் ஜெயித்துக் கொண்டிருக்கிறான்
கடவுள் என்ற பெயரோடு.....!


                       ***அந்தக் கதையை நான் வாசிக்கையில்
கதையின் நாயகியின் பெயர்
அவளுடைய பெயராய் இருந்தை வாசித்து
புத்தகத்தை மடக்கி விட்டு...
அவளை நினைத்துக் கொண்டிருந்ததைப் போலவே
அந்தக் கதையின் நாயகனும்
கதையில் ஒரு புத்தகத்தை வாசித்து விட்டு
அதில் கதாநாயகியின் பெயர் வந்த இடத்தில்
புத்தகத்தை மடக்கி விட்டு
நான் வாசித்த கதையின் நாயகியை நினைத்துக் கொண்டிருந்தான்...
நானும் அந்தக் கதையின் நாயகனும்
கதையில் வரும் நாயகிகளை நினைக்கவே இல்லை....
கதை முடியும் வரை...!


தேவா. சுWednesday, May 9, 2012

நினைவுத் தேம்பல்கள்..!நினைவுகளின் முனைகள்
மழுங்கிப் போன ஒரு தினத்தில்
ஓய்வாகக் கிடந்தது என் பேனா...
வார்த்தைகளில் ஆக்ரோஷ உரசல்களிலும்
காதல் சரசங்களிலும் அலுத்துப் போயிருந்த
... என் டையிரின் பக்கங்கள்..
கலவி முடித்த பெண்ணாய்
கவிழ்ந்து கிடக்க..
நிரம்பலின் வெறுமையில்
எங்கோ லயித்துக் கிடக்கிறேன்..நான்..!

                    ***


இன்னமும் சொட்டிக் கொண்டிருக்கிறது..
தாழ்வாரத்தில் மழை நீர்...!
மழை பெய்த அடையாளம்
இன்னும் சற்று நேரத்தில் மறையக் கூடும்..
மேகங்கள் விலகி....
பளீரென்று வெயில் அடிக்கலாம்...
பறவைகளும், மனிதர்களும்
தங்கள் கூடு விட்டு 
மீண்டும் இயல்புக்கு திரும்பலாம்...,
எங்கோ தேங்கிக் கிடக்கும் நீரின்
கடைசித் துளியை 
நிலத்தின் உஷ்ணம் விழுங்கியதோடு
மழையின் தடம் மறைந்தே போகலாம்...
ஆனால் சற்று முன்...
இங்கொரு பலத்த மழை பெய்தது...,
அதன் சாரலில் தொட்டு
நான் என் உயிரினை....
நனைத்து நனைத்து...
அவளுக்காய் ஒரு கவிதை 
செய்து கொண்டிருந்தேன்..!


தேவா.  சு

Sunday, May 6, 2012

அதிர வைக்கும் நித்தியானந்தனின் ஆன்மீக அரசியல்...!
" ஆசை அறுமின்...ஆசை அறுமின்....
ஈசனோடாயினும் ஆசை அறுமின்..."

அப்டீன்னு சித்தர்கள் எல்லாம் சொல்லிட்டு இருந்த இடம் தெரியாம வாழ்ந்துட்டு மக்களுக்கு அறிவை கொடுத்துட்டு போய்ட்டாங்க...! இப்ப நித்தியானந்தரு, சத்தியானந்தரு, மதுரை ஆதினம், மன்னார்குடி சாதினம்னு உசுர வாங்குறானுங்க! துறவின்னு சொன்னா என்ன அர்த்தம்னு முதல்ல சொல்லுங்க..... மொதல்ல..? அதுக்கப்புறம் எதை எதை நீங்க தொறந்தீங்கன்னு கொஞ்சம் வாயைத் தொறந்து சொல்லுங்க....

அயோக்கியத்தனம்ங்க......சுத்த அயோக்கியத்தனம். ஊர்ல நாட்ல மனுசன் கஞ்சிக்கும் தண்ணிக்கும் அல்லாடிகிட்டு இருக்கான். வெயில்லயும் வேர்வையிலயும் கை வண்டி இழுத்தும் கட்ட வண்டி ஓட்டியும் ஒரு வேள  சோத்த திங்க நாயா பாடு படவேண்டி இருக்கு. இந்த நாதாரிங்க எல்லாம் தங்கத்துல கிரீடமும், கழுத்து ஜொலிக்க தங்கத்துல ருத்ராட்சங்களையு போட்டுகிட்டு....சிவன் கனவுல வந்தாரு, பார்வதி அம்மா சொன்னிச்சு.. நித்தியானந்தம் தம்பிதான் சரியா வருவாப்ல அதனால ஆதின மடத்துப் பொறுப்ப அவரு கையில கொடுத்துடுங்கன்னு...அதனாலதான்  கொடுத்தோம்னு....

திண்ணாந் திட்டமா போஸ் கொடுத்துக்கிடு பத்திரிக்கைகளுக்கு பேட்டி வேற கொடுக்குறாய்ங்க..! சாமியார்னு சொல்றீங்க....எல்லாத்தையும் தொறந்துட்டு மக்கள் சேவையே மகேசன் சேவைன்னு செய்ய வந்திருக்கேன்னு சொல்றீங்க.. ங்கொய்யால மொதல்ல பொய் சொல்லாம இருக்கணுமேன்ற அறிவு இருக்கா ஒங்களுக்கு எல்லாம்...?

ராஜிவ் காந்தி கொலை வழக்குல தடவியல் விசாரணை செஞ்சு நிறைய துப்புக்களை கொடுத்த ஐயா சந்திரசேகர் நித்தியானந்தர்.....ச்சே....ச்சே...எதுக்கு ர்ர்ர்ர் போடணும்.. நித்தியானந்தன் ரஞ்சிதாவோட இருந்த சி.டிய செக் பண்ணி இது ஒரிஜினல்தான்...ஒரிஜினல்தான்... ஒரிஜனலேதான்னு சொல்லிட்டாரு....

நித்தி அதை எல்லாம் கேக்கமாட்டாராம, அவுரு அமெரிக்காவுல இருந்து ஆளுகள காசு கொடுத்து கூட்டியாந்து பேட்டி கொடுக்குறாப்ல. அந்த டேப்பு போலின்னு..அமெரிக்கவுல இருந்த வந்த ஸ்பெஸல்லிஸ்ட்டே சொல்லிடாருன்னு....! .ஏய்யா...டேப்பு போலியா இல்லையான்னு என்னாத்துக்கு செக் பண்ணி பாத்து சொல்லணும்..ஒன் மொகரக் கட்டைய பாத்தாலே வெளக்கமா தெரியுதே...எது போலி, எது உண்மைன்னு...?

வுட்டா ஊர்ல நாட்ல இருக்க அம்புட்டு பேரையும் அசிங்கப்படுத்துவாய்ங்க போல இருக்கு? எந்த ஆம்பளை பொம்பளை நாட்ல சேராம இருக்காங்க..? நித்தி என்ன தப்பா செஞ்சுட்டாருன்னு நாக்கு மேல பல்லு போட்டு தில்லா கேள்வி  வேற கேக்குறாய்ங்க...

ஏண்டா நீங்க எல்லாம் அறிவோடதான் பேசுறீங்களா...? இல்லை அறிவு கெட்டுப் போய் பைத்தியமே உங்களுக்கு எல்லாம் பிடிச்சு போச்சா...? ஊர் ஒலகத்துல இருக்கவன் எல்லாம் நான் சாமியாரு.. நான் தொறவி...அம்புட்டையும் தொறந்துட்டேன்....நான் பெரம்மச்சாரின்னு சொல்லிட்டா இருகாய்ங்க....?

நித்தி எதுக்கு அவர பெரம்மசாரின்னு சொல்லணும்...? இந்து மதம் இந்து மதம்னு மூச்சுக்கு முன்னூறு வாட்டி சொல்றாரே இந்த தொறவி...இந்து மதத்துல தொறவறம் போய்த்தான் ஆகணும்னு கண்டிப்பாய் எங்க சொல்லி இருக்கு...? எத்தனயோ முனிகளும் ரிஷிகளும் கல்யாணம் கட்டிக்கிட்டு இல்லறத்தானவே வாழ்ந்து இருக்காங்க...

இராமகிருஷ்ண பரமஹம்சர் மாதிரி மகான் எல்லாம் ஒங்கள மாதிரிதான் பிரம்மசாரிகள்னு சொல்லிகிட்டு ஒலகம் புல்லா கிளைகள தொறந்து கிட்டு, குடுமி வளர்த்துக்கிட்டு பரத நாட்டியக் கச்சேரி வச்சாங்களா? நீ போட்டது பிரம்மசாரி வேசம்...நித்தி!!! அதுதான் இயற்கைக்கே பொறுக்காமதானே ஒன்ன இழுத்து நடுத் தெருவுல விட்டு நாக்க புடுங்கிக்கிற மாதிரி அசிங்கப்படுத்துனிச்சு....

அதோட நின்னியா நித்தி நீய்யு...? ஒரு பொய்யை மறைக்க எம்புட்டு பிரஸ்மீட்டு....இந்து மதத்தோட பிரதிநிதி இவரு பரப்பி தான் இந்து மதம் தழைக்கப் போவுது...நீ ஏதோ கத்துக்கிட்டியா ஒரமா ஒதுங்கிப் போவியா....பப்பரப்பான்னு விரிக்கிறான்யா கடைய.....ஒலகம் பூரா....

நித்தியானந்தனும் சரி.. இன்னும் ஆன்மீகம்ன்ற பேர்ல காசு சம்பாரிக்கிர அம்புட்டு பேரும் சரி..இவனுக எல்லம் துறவிகளோ அல்லது ஆன்மீகப் பெரியவர்களோ அல்ல....

ஆன்மீகத்தை கார்பரேட் கம்பெனியாக்கிய அயோக்கியர்கள் இவர்கள்...!

இவர்களின் பின்னால் போய் நின்று கையெடுத்து கும்பிட்டு சாமி என்று  ஆசிர்வாதம் வாங்குறதுக்கு பதிலா 48 தடவை தூக்கு போட்டு சாகலாம்...! கெட்டுப் போன பேர ரிப்பேர் பாக்க மதுரை ஆதினத்துக்கு ரூட் போட்டு பல கோடி ரூபாய கிட்ட தட்ட லஞ்சம் கொடுக்குற மாதிரி கொடுத்து ஆதினமா என்னா ஆக்கிபுடுங்கன்னு மிரட்டாம மெரட்டி போஸ்டிங் வாங்கிப்புட்டு....

சிவன் சொன்னார் கனவுலன்னு மொத்தமா ஒரு பொய்ய சொல்லி ஒண்ணும் தெரியாத பொது மக்கள ஏமாத்துற மொள்ள மாறித்தனத்துக்கு பதிலா வேறா ஏதுனாச்சும் பொழப்பு செஞ்சி  பொழச்சுக்குங்களேன் ...ஆசாமிகளா?

மந்திரத்தையும், ஆன்மீக புத்தகங்களையும், நெட்டுரூ போட்டிகிட்டு, ஆசனங்கள எல்லாம் கத்துக்கிட்டு, பல நாட்டு தத்துவ புத்தகங்களை எல்லாம் படிச்சுக்கிட்டு....உண்மைய வெளங்கியும்.. ஏமாத்துறீங்க பாத்தீங்களா.....ஒங்கள பாத்துதான்யா பாரதி பாடி வச்சுட்டுப் போனான்.....

" படிச்சவன் சூதும் வாதும் பண்ணினா...
போவான் போவான்...ஐயோன்னு போவான்.....! "

நீங்களும் ஐயோன்னு போவீங்க....அதுல எந்த மாத்தமும் கிடையாது. எந்த எந்தக் கருமம் எல்லாம் இந்த நாட்ட விட்டு தீரணும்னு ஐயா பெரியார் மாதிரி ஆளுங்க எல்லாம் போரடினாங்களோ அத்தனை அசிங்கத்தையும் பப்ளிக்கா மைக் போட்டு மேடை போட்டு....டிவி முன்னாடி பகுமானமா பண்றாய்ங்க....

சாதியே இல்லன்னு சொல்லிக்கிட்டு இருக்கோம்...ங்கோயாலா மதுரை ஆதினமா சைவ வேளாளர்தான் வரணும்னு ரூல்ஸ் இருக்குனு எதுக்குறவைய்ங்களும் சொல்றாய்ங்க...? என்ன கொடுமை சார் இது...?

ஆன்மீகத்துல புரிதல் உள்ள பெரியவர்களா வரதுக்கு கூட ஒரு குறிப்பிட்ட சாதியில இருந்துதான் வரணுமா? யார் கேப்பா இதை எல்லாம்....? கேட்டா நம்மள எல்லாருமா சேர்ந்து அடிக்க வருவாய்ங்க...இவிங்களா இந்த சனாதான தர்மம் அப்டீன்ற ஒரு சீரான மனித வாழ்க்கைகாக கோர்க்கப்பட்ட வழிமுறைய அசிங்கப்படுத்தி அழிக்க எல்லா சோலியையும் செஞ்சுபுட்டு.....

நம்மள பாத்து....நாம இந்த வழிமுறைக்கு எதிரானவங்கன்னு ஓங்கி ஒங்கி சொல்வாய்ங்க...? ம்ம்ம்ம்ம் கெட்டது என்னிக்கு நேரா வந்துருக்கு... அது எப்பவும் நல்லவன் வேசம் போட்டுகிட்டு தானே நாடகம் நடத்துது.....

ஏதோ அறிவுக்கு எட்டுனத எழுதிப்புட்டேன்....கேட்டா கேளுங்க.. கேக்காங்காட்டி... ஆதீன மகராசாக்கள பாத்து துன்னூறு வாங்கிப் பூசிக்கிட்டு...........சாமி சாமின்னு கும்புடுங்க...சமூகத்துல வெளங்கி வெள்ளாமை வெளஞ்சுரும்.......!

அப்போ....வர்ர்ர்ட்ட்டா!!!!!!


தேவா. சு


Tuesday, May 1, 2012

அஜித் என்னும் டான்...!

நடிகர்களிடம் எல்லாம் கற்றுக் கொள்ள என்ன இருக்கிறது என்று இறுமாப்போடு எப்போதும் வியாக்கியானம் பேசிச் செல்லும் மேதாவிகள் கூட்டத்திற்குள் போலியாய் இருக்க நான் எப்போதும் விரும்பியது இல்லை. ரஜினியை விழுந்து விழுந்து ரசிக்க வெள்ளித் திரை தாண்டிய அவரின் வாழ்க்கை காரணமாய் இருந்தது. ஒரு பஸ் கண்டக்டராய் இருந்து......

நாட்டில் நடக்கும் எல்லா நிகழ்வுகளுக்கும் குரல் கொடுத்து விட்டார் என்று சந்தோசப்பட்டு ஒரு கூட்டமும் குரல் கொடுக்கவில்லை ஏன் என்று ஒரு கூட்டமும் எப்போதும் விமர்சித்துக் கொண்டே இருக்கும் ஒரு சூப்பர் ஸ்டாராய் மாறி இருக்கிறார் என்றால்....

அவர் கடந்து வந்த தூரத்தையும் அதைக் கடக்க அவர் சந்தித்து இருக்கும் பிரச்சினைகளையும், வலிகளையும், சோதனைகளையும் சேர்த்தேதான் நாம் பார்க்க வேண்டும். சினிமா வாய்ப்புக்கள் சொற்பமாய் கையில் ரஜினி கையில் வைத்திருந்த காலத்தில் எல்லாம் சாப்பிடாமல் வயிற்றில் ஈரத்துணியை கட்டிக் கொண்டு படுத்திருந்த நேரம் எல்லாம் இருந்திருக்கிறதாம்..

வயிற்றில் பசியோடு அண்ணா சாலையில் நடந்து செல்லும் போதெல்லாம் ரஜினி அங்கே வைக்கப்பட்டிருக்கும் மிகப் பிரபல நடிகர்களின் கட் அவுட்டுகளையும் போஸ்ட்டர்களையும் பார்த்துக் கொண்டே நடப்பாராம். கையில் சிகரெட் நெருப்பு புகைந்து கொண்டிருக்கையில் உள்ளுக்குள் ஒரு நெருப்பு புகைந்து கொண்டே இருக்குமாம்.....இன்று சினிமா என்னும் துறையில் அவர் எட்டியிருக்கும் உயரத்திற்கு பின்னால் இத்தனை வலிகளை கடந்த அபார பலம் இருக்கிறது. வெற்றியாளர்கள் எல்லோரும் பல சூழல்களை கடந்து வந்தவர்கள்தான்...

திறமை என்பதை மட்டுமே நம்பி,  விழுந்து, விழுந்து எழுந்து வந்தவர்கள்தான் இங்கே கவனிக்கப்படவேண்டியவர்கள். வறுமையில் இருந்து குறுக்கு வழியில் முன்னேறி பதவிகளையும், உச்சாணிக் கொம்புகளைப் பிடித்தவர்களும், சுற்றி சுற்றி ஆயிரம் சூழல்கள் உதவி செய்ய அந்த சூழலினால் மேலேறி வந்தவர்களையும் காலம் மெல்ல மெல்ல உதறிவிட்டு விடுகிறது....

மாறாக.....

எந்த வித உதவியும் இல்லாமல் போராடி, போராடி நேர்மையாய் மேலேறி வந்தவர்களை எப்போதும் தன் தோள்களில் வைத்தே அது சுமக்கிறது. இப்படித்தான் அஜித்தை பிடிப்பதற்கும் எனக்கு பல காரணங்கள் இருக்கிறது. எல்லா துறையிலும் இப்படியாய் ஆட்கள் இருந்தாலும் சினிமா என்னும் மிகப்பெரிய மக்கள் வசீகர சக்தியில் இருப்பவர்களால் அதிக தாக்கங்கள் நமக்கு கிடைத்து விடுகின்றன. சினிமாதானே என்று யாரேனும் சொல்லிச் செல்வதை என்னால் ஏற்க முடியாது. சினிமா எப்போதுமே வாழ்க்கையின் ஒரு பகுதியாத்தான் இருக்கிறது.

ஒரு நல்ல திரைப்படத்திலிருந்து ஒரு வாழ்க்கை முறை பல நேரங்களில் நமக்கு கிடைத்திருக்கிறது, எவ்வளவு உண்மையோ அதே போல வாழ்க்கையிலிருந்தும் பல திரைப்படங்கள் உருவாகியும் இருக்கின்றன. இதை எப்பவுமே மறுக்கவும், மறக்கவும் முடியாது. பாச மலர் படம் பார்த்து விட்டு தங்கையை உயிருக்கு உயிராய் நேசித்தவனும் இருக்கிறான், நூறாவது நாள் பார்த்து விட்டு பல கொலைகளை செய்தவர்களும் இருக்கிறார்கள்.

சினிமா தாக்கத்தை எப்படி உண்டாக்குகிறதோ அதே வலுவோடு சினிமா நடிகர்களும் கடும் தாக்கத்தை சமூகத்தில் அதுவும் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு சமூகத்தில் கடந்த 50 வருடத்துக்கு மேல்  நிகழ்த்திக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். நாடகத்தன்மையை விட்டு எப்போது எதார்த்த வாழ்க்கைக்குள் சினிமாவை இயக்குனர்கள் கொண்டு வந்தார்களோ அன்றே....தன்னை எப்போதும் திரைக்குள் வைத்துப் பார்த்து ஒப்பிட்டுக் கொள்ளும் ஒரு மனோபாவத்துக்கு மனிதர்கள் வந்து விட்டார்கள்.

நீங்கள் என்ன சினிமாவை பற்றியே பேசிக் கொண்டிருக்கிறீர்கள்..? ஏதேனும் நல்ல புத்தகத்தையோ அல்லது போராடி வென்ற அரசியல் தலைவர்களைப் பற்றியோ, புரட்சிக்காரர்களை பற்றியோ பேசலாமே என்று நீங்கள் கேட்கலாம்......? கேள்வி அறிவின் அடிப்படையில் சரிதான் என்றாலும்,

நான் ஏன் அஜித்தை எடுத்துப் பேசிக் கொண்டிருக்கிறேன் என்றால், ஒரு புத்தகமும் ஒரு சித்தாந்தமும் கொள்கைகளும் கோட்பாடுகளும் அறிவு ஜீவிகளுக்கே உரித்தானது...என்பதை ஒத்துக் கொள்ளும் போது,  பாமரனை, சராசரி மனிதர்களை வசீகரப்படுத்தி ஏதோ ஒரு கருத்தை சினிமா என்னும் ஊடகம் முழுமையாய் அவனுக்குள் எளிதாய் கொண்டு சேர்த்து விடுகிறது என்பதையும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

அஜித் போன்ற நடிகர்களை வெள்ளித் திரை கடந்து சம கால இளைஞர்கள் தன்னம்பிக்கையின் சின்னமாய் பார்க்க வேண்டியது அவசியம் மட்டுமல்ல.....அதே போல எந்த துறையில் நாம் இருந்தாலும் அங்கே ஒரு போர்க் குணத்தோடு போராடி மேலெழும்பி வரவேண்டும் என்ற வைராக்கியத்தையும் நாம் படிக்கவேண்டும். அமராவதி படத்தில் நடித்த ஒரு கெச்செலான சிவந்த தோற்றம் கொண்ட அந்த இளைஞன் தான்.....

இன்றைக்கு தமிழகத்தின் மிகைப்பட்ட இளைஞர்களின் தலையாக இருக்கிறார் என்றால்...

அமராவதியிலிருந்து இப்போது வரவிருக்கும் பில்லா II  வரை அவர் என்ன என்ன செய்தார்? எத்தனை வலிகளை அந்த இளைஞன் சுமந்திருப்பான், கடந்திருப்பான் என்பதையும் சேர்த்தேதான் நாம் பார்க்க வேண்டும். 1996 என்று நினைக்கிறேன் காதல் கோட்டை படம் முடிந்த பிறகு தொடர்ச்சியாய் அஜித்துக்கு தோல்விப் படங்கள்தான்....சீண்ட ஆளில்லை...ஆமாம்... அஜித்தின் அப்பா ஒரு பெரிய டைரக்டரோ தயாரிப்பாளரோ அல்லது அவரது சொந்த பந்தங்கள் எல்லாம் சினிமாத் துறையிலோ இருந்திருக்க வில்லை....

ஒரு மெக்கானிக்காக இருந்த பையன் சினிமாவில் கதாநாயகனாய் வந்து நடித்து தொடர்ச்சியாய் படங்களில் நடித்ததே பெரும் சாதனைதான் என்றாலும் அவருக்கு கிடைத்த அவமானங்களும் முட்டுக்கட்டைகளும் அந்த சாதனையை எல்லாம் சரித்துப் போடத்தான் முயன்றது. தோல்விகளை எல்லாம் அவர் கடந்து கொண்டிருந்த போது கோடாம்பாக்கத்து ஜாம்பவான்களின் அரசியலும் அவரை நிலை தடுமாறவும் செய்து கொண்டிருந்தது. அஜித் என்னும் எந்த வித சினிமா பின்புலம் இல்லாத இளைஞன் வாய் திறந்து எது பேசினாலும் அது மிகப்பெரிய அரசியலாக்கப்பட்டு அவமானமாய் மாற்றப்பட்டு அவரின் கைகளில் திரும்ப கொடுக்கப்பட்டது....

மிரளாமல் எல்லாவற்றையும் சாவகாசமாய் கடந்து வர அஜித் போராடிக் கொண்டிருக்கையில் பைக் ஆக்ஸிடென்ட் ஆகி முதுகெலும்பில் அடிபட்டு இனி அஜித் எழுந்து நடமாடுவதே கடினம் என்பன போன்ற சூழல்கள் எல்லாம் வந்தன. இதோ இன்று தமிழ் சினிமாவின் தடம் பதித்து நிற்கும் மிகப்பெரிய வசூல் சக்கரவர்த்தியாய் மிளிர்கிறார், ரஜினி படத்துக்கு இருக்கும் மிகப்பெரிய ஓப்பனிங்கும், மாஸும்....அஜித்துக்கும்...இன்று...

இது எல்லாம் அஜித்தின் விடா முயற்சியாலும், தனித்தன்மையாலும் தானே ஏற்பட்டது...?!!!!

சினிமாவில் நடிக்கும் ஒரு நடிகன் நான்....என்ற அளவில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று தனது எல்லை எதுவென்று அவர் தெளிவாய் தெரிந்து வைத்திருப்பதால்தான்...கத்துக் குட்டி கலர்க் கலர் நட்சத்திரங்கள் தங்களை சூப்பர் ஸ்டாராய் நினைத்துக் கொண்டு மேடைகளில் ஏறி பக்கம் பக்கமாய் அரசியல் பேசிய போதெல்லாம் அஜித் எப்போதும் மெளனமாகவே இருக்கிறார். 

ஒரு திரைப்படம், அந்த திரைப்படம் முடிந்தால் பெரும்பாலும் அடுத்த திரைப்படம் இப்படித்தான் தனது தொழில் சார்ந்த கூர்மையான நகர்வாக இருக்கிறது அவரின் நகர்வுகள். இடைப்பட்ட காலத்தில் எந்த வித ஆடம்பரமும் விளம்பரமும் வெட்டிப் பேச்சுக்களும் இல்லாததாய் அவரின் வாழ்க்கை இருக்கிறது.

ரஜினியையும், அஜித்தையும் எப்போதும் மனிதர்கள் விமர்சித்துக் கொண்டே இருப்பார்கள். இந்தப் பிரச்சினைக்கு குரல் கொடுக்கவில்லையே ........அந்தப் பிரச்சினைக்கு குரல் கொடுக்கவில்லையே என்று......இதிலிருக்கும் அபத்தத்தை மிகைப்பட்டபேர்கள் புரிந்து கொள்வதில்லை, ஏனென்றால் இவர்கள் எல்லாம் ஒரு நடிகனை நடிகனாய் பார்த்துப் பழக்கப்படாதவர்கள், அவர்களின் உழைப்பின் உயரத்தை சரிபார்த்து அதற்கு பின்னால் இருக்கும் சோகங்களைப் பார்த்து பழக்கப்படாதவர்கள்...

இப்படி பழக்கபடாமல் போனதற்கு ஒரு பெருங்காரணமாய் எம்.ஜி.ஆர் அமைந்து விட்டார். எல்லா வகையிலும் எம்.ஜி.ஆரைப் பிடித்து பார்த்து பார்த்து ரசித்து அவரை தமிழக முதல்வராக்கிய தமிழக மக்கள் அதே வீச்சில் மற்ற நடிகர்களையும் பார்த்து அவர் செய்தது போலவே செய்ய வேண்டும் என்று  எதிர்ப்பார்ப்பால் ஏற்பட்டிருக்கும் ஒரு மூளைக் குழப்ப நோய் இது. 

நீதியரசர்களும், மாவட்டக் கலெக்டர்களும், டாக்டர்களும் தொழிலதிபர்களும், கல்லூரிப் பேராசிரியார்களும் இன்ன பிற தொழில் செய்பவர்களும் தங்கள் வேலையப் பார்த்துச் செல்ல அனுமதிக்கும் என் சமூகம் ஒரு நடிகன் குரல் கொடுக்கவில்லை என்றால்..உடனே கோபித்துக் கொள்ளும்.

செய்யும் செயல்களை படம் போட்டு விளம்பரம் செய்பவன் புகழுக்காய் அதைச் செய்கிறான். செய்யும் செயலின் விளைவுகளை எண்ணி உதவிகள் செய்பவன்  அதை விளம்பரமாக்க விரும்புவதில்லை. இங்கே அஜீத் என்னும் ஒரு சாமானியன் தமிழ் சினிமாவின் 'டான்' ஆனதை ஒரு உதாரண விடயமாக எடுத்துக் கொண்டு நாம் நிறுவ விரும்பி இருப்பது எல்லாம்....

'தகுதி உள்ளவை தப்பிப் பிழைக்கும்' 

என்ற சர்வைவல் தியரிப்படி எத்தனை முட்டுக்கட்டைகள் வாழ்க்கையில் வந்தாலும் அஜித்துகள் அவற்றை எதிர் கொண்டு எதிர்த்து போரிட்டு, தனியாய் நின்று ஜெயித்து எந்த துறையில் இருக்கிறார்களோ அந்தத் துறையின் தலையாக மாறுவார்கள்......இதை யாராலும் மறுக்கவோ மாற்றவோ முடியாது...!

ஏ வாழ்க்கையே....!
வலிக்கும் இரணங்கள் கொடு,
எரிக்கும் வெம்மை கொடு,
துளிர்க்கும் உயிரினை கொடு,
எதிர்த்து அடிக்கும் வீரத்தைக் கொடு
ஜெயிக்கும் போதெல்லாம்
பணிவைக் கொடு.....!

தேவா. S