Pages

Saturday, March 31, 2012

ஆன்மாவின்.... பயணம்! பதிவுத் தொடர் பாகம் VI
PREVIEW

சராசரியான நிகழ்வுகளில் மிக திருப்தியான ஒருவன்....எல்லாவற்றையும் விட்டு விலகி இருக்க ஆசைப்பட்டு... ஒரு பத்து நாட்கள் வீட்டை விட்டு வெளியேற திட்டமிட்டு கடிதம் எழுதிவைத்து விட்டு வெளியேறுகிறான். அதற்கப்புறமான அவனின் மனோநிலை.. உலகம் பற்றிய பார்வை....இவனைப்பற்றிய உலகத்தின் பார்வை...இப்படியாக நகரும்....கதை.....இந்த ஆறாவது பாகத்திலும் தொடர்கிறது...

திருப்புமுனைகளோடு கூடிய கதை எதிர்ப்பார்த்து படிக்க விரும்புவர்கள்....எனது பதிவுகளை தவிர்த்து விடல் நலம். ஏனென்றால் என் பதிவுகள் முழுக்க முழுக்க என்டர்டெயின்மென்டை நிச்சயமாய் கொடுக்காது.

உங்களின் நேரம் அனுமதிக்கும் பொழுது இதற்கு முன் உள்ள பாகங்களையும் படித்துக் கொள்ளுங்கள்....!

இதுவரை...


இனி...


நான் காட்டுக்குள் மெல்ல மெல்ல முன்னேறிக் கொண்டிருந்தேன். என் வீடு என்னைத் தேடி அல்லோலகல்லோலப் பட்டுக் கொண்டிருக்கும் என்று எனக்குத் தெரியும். அது பற்றிய எண்ண விவரணைகளுக்குள் செல்லாமல் மெல்ல சமகாலச் சூழலுக்குள் ஒரு சர்ப்பத்தைப் போல புத்தியை தவழவிட்டேன். அடர்த்தியாய் விரிந்து சென்று கொண்டிருந்த மலைச்சாரல் பாதை அது...! ஆங்காங்கே சிறு சிறு சுனைகள் ரகசியமாய் பாறைகளின் இடுக்குகளில் இருந்து கசியும் நீரினால் உருவாகி அவ்வப்போது கால்களை சில்லிடச் செய்தாலும்....

அடர்த்தியான சுற்றுப் புறக் குளிரில் அந்த குளுமை தனித்து ஒன்றும் தெரியவில்லை. சாந்தமாய் இருந்த மனதுக்கு கிடுக்குப் பிடி போட்டு அதன் மீது ஏறி ஆத்மா சவாரி செய்து கொண்டிருந்தது. ஒரு முரட்டுக் குதிரையை கடிவாளத்திற்குள் கொண்டு வந்து தனது இஷ்டப்படி சவாரி செய்வதற்கு குதிரை ஓட்டுபவனிடம் வெறுமனே முரட்டுத் தனமும் கையில் சாட்டையும் இருந்தால் மட்டும் போதாது. 

மூர்க்கமாக நடந்து கொண்டு முரட்டுத் தனமாய் குதிரையைக் கையாளும் போது அது எதிர்த்து மீண்டும் மூர்க்கம் காட்டும். குதிரையை அடக்க, அடக்க திமிறும்...அடக்குகிறேன் பேர்வழி என்று சாட்டையை சொடுக்கினால் வலி தாங்க முடியாமல் அது தறிகெட்டு ஓடும். ஓடும் வேகத்தில் தாறுமாறாய் நம்மை கீழே தள்ளி விட்டு சவாரி செய்யும் ஒரு சுகானுபவத்தை சிதைத்தேவிடும்...

முரட்டுக் குதிரையைக் கூட அடக்கி ஆள்வன் முதலில் குதிரையை பற்றி தெளிவந்தவனாய் அறிந்தவனாய் இருக்க வேண்டும்.  முரட்டுக் குதிரையை அதன் போக்கில் ஓடவிட்டு சலனமில்லாமல் முதலில் சவாரி செய்யவேண்டும், அங்கும் இங்கும் அலையும் குதிரை தன் ஆவல் தீர அங்கும் இங்கும் ஓடி...ஓடி மூச்சிறைத்து களைத்து ஓயும் வரை கடிவாளத்தை கெட்டியாய் பிடித்தபடி குதிரையின் அங்குல அங்குலமான, அசைவுகளை கவனித்தபடி அதனை சமாதனப்படுத்தியபடியே அதன் மீது அமர்ந்து,  எப்படி எல்லாம் கீழே தள்ள முயலுகிறது, அதன் உச்ச பட்ச வேகம் எவ்வளவு என்ற கணக்கீட்டோடு அதன் பிடரியை தடவி ஆசுவாசப்படுத்தி மெல்ல, மெல்ல குதிரைக்கு பரிச்சையமானவனாய் நம்மை ஆக்கிக் கொள்ள வேண்டும், குதிரையோடு சினேகமாகும் வித்தை இது.

ஓடி ஓடி சலிக்கும் குதிரை மெல்ல, மெல்ல மூர்க்கம் குறைந்து, தன் மீது இருப்பவனை உணர ஆரம்பிக்கும், மூச்சிறைத்து அது நிற்கும் போது அதற்கு தண்ணீர் காட்டி, உணவு கொடுத்து தாடை தடவி, முதுகினை கைகளால் உரசி, வயிற்றினை தட்டிக் கொடுத்து ஸ்னேகமாக்கிக் கொள்ள நேர்மறையான அதிர்வுகளை ஏற்றுக் கொண்டு அதன் மூர்க்கம் தணிந்து மெல்ல, மெல்ல தன்னை நேசிப்பவனுக்கு அது அடி பணிய ஆரம்பிக்கும். இங்கே அடக்குதல் என்ற ஒன்று கிடையாது. அறிதல் என்ற ஒன்றே இருக்கிறது. குதிரையை அறிந்து அணுக, அது பணிந்து, சொற்படி கேட்கும்.

மனமும் அப்படித்தான். அதை எதிர்த்து முரண்டு பிடிக்க நம்மை தறிகெட்டு எங்கெங்கோ அழைத்துச் செல்கிறது. கீழே தள்ளிவிடுகிறது. கோரமான எண்ணங்களை வேகமாய் பரப்புகிறது. சஞ்சலப்படுத்திக் கொண்டே இருக்கிறது. மாறாக ஸ்னேகமாய் மனதை உற்று நோக்கி, என்னதான் உனக்குவேண்டும் என்ற ஒரு வாஞ்சையோடு பார்க்கையில் அது ஒரு நாய்க்குட்டியாய் வால் குலைக்கிறது. நான் இப்போது என்ன செய்ய வேண்டும்...? என்று பாவமாய் நம்மை பார்க்கிறது அப்போது போடவேண்டும் கடிவாளத்தை, ஆத்மா என்னும் உள் உணர்வை உசுப்பிவிட்டு மனதின் மீது ஏறி மெல்ல மெல்ல புலன்களை விட்டு கழன்று உள்நோக்கி பயணிக்க பயணிக்க....

ஆத்மாவானது மனதின் துணை கொண்டு மனமற்ற வெளிக்குள் வந்து நிற்கிறது. அப்படியான நிலையில் மனம் என்ற ஒன்றும் ஆன்மா என்ற ஒன்றும் இல்லாமல் போக சுற்றி இருக்கும் எல்லாமே ஒன்றாகிப்போக கேட்கவும் பார்ப்பவனும் இல்லாமல் வெறும் ஒலியும் பார்வையும் மட்டுமே மிஞ்சுகிறது. இங்கு யார் பார்க்கிறார்கள்..? தெரியாது...ஆனால் வெறுமனே பார்வை இருக்கிறது. இங்கே யார் கேட்கிறார்கள்....? தெரியாது. வெறுமனே சப்தம் இருக்கிறது. யார் அனுவிக்கிறார்கள்...? அதுவும் தெரியாது. இங்கே அனுபவித்தல் மட்டும் நிகழ்கிறது. புலன்கள் இல்லை ஆனால் அவற்றினால் ஏற்படும் அனுபவம் அனுபவித்தலாய் நிகழ்ந்து கொண்டிருக்கிறது...

சரி.. இது எப்போது நிகழும்? மனதை அறிந்து ஆன்மாவால் அதை முடுக்கிவிட்டு மெல்ல மெல்ல புலன்கள் கடந்து புறச்செயல்கள் மறக்கும் போது நிகழும். அதற்கு என்ன செய்ய வேண்டும்? மனதை அறிய வேண்டும். சரி மனதை அறிய என்ன செய்யவேண்டும்? ஒரு நாளில் ஒரு அரைமணி நேரமாவது தனியாய் இருக்கவேண்டும். தனியாய் இருக்கையில் என்ன செய்ய வேண்டும்..? ஒன்றும் செய்யவேண்டாம். ஒன்றும் செய்யாமலிருத்தல் என்றால் என்ன? வெறுமனே தன்னையே உற்று நோக்குதல். தன்னை உற்று நோக்கையில் என்ன நிகழும்? எப்போதும் வெளியில் உள்ள புறக்காட்சிகளை பார்த்து அதில் பயணித்து அது பற்றி அபிப்ராயம் தெரிவிக்கும் மனம் தன்னைத் தானே முதன் முதலில் பார்க்கும் போது என்ன சொல்வது ? என்ன அபிப்ராயம் சொல்வது என்று தெரியாமல் முதலில் திகைக்கும்...

சரி பிறகு..?

பிறகு  தன்னைப் பற்றிய அபிப்ராயங்களை வேகமாக ஏதேதோ சொல்வது போலச்  சொல்லி ஏதோ ஒரு ஓட்டையின் மூலம் மீண்டும் புறம் நோக்கி பாய முற்படும். சரி .அப்போது என்ன செய்யவேண்டும்.... ? மீண்டும் தன்னையே பார்க்கவேண்டும். இது நீடிக்க, நீடிக்க மனம் அலுத்துப் போய் சுருண்டு போய் சொல்ல செய்திகள் ஏதுமின்றி புலன்களை எல்லாம் உள்ளிழுத்துக் கொண்டு உள்நோக்கி நகரும். உணர்வோடு கலந்து மனம் பயணிக்கையில் மனம் என்ற ஒன்றே இல்லை என்பது தெளிவாகும்

இப்படித்தான் மனம் என்னும் புரவி மீது என் ஆன்மா ஒரு சக்கரவர்த்தியைப் போல பயணித்து அந்த மலைப்பாதையை விழிகளால் சுகித்து சுகித்து உடல் மறந்து ஒரு ஏகாந்த லயிப்பில் அந்த அனுபவத்தை ரசித்துக் கொண்டே வந்தது. அங்கே ரசனை என்ற ஒன்று மட்டுமே இருந்தது. கேட்கவும் பகிரவும் யாருமில்லை.

மலைச்சாரல் சரிவுகளில் நடந்து சிறிது சமப்பட்ட இடத்துக்கு வந்து நான் நின்ற போது சூரியன் அவசர அவசரமாய் கீழிறங்கிக் கொண்டிருந்தான். வானத்தில் நட்சத்திரங்கள் மெல்ல சிரிக்க ஆரம்பிக்க ஒரு நெடிய மரத்தின் கீழ் வந்து நின்றேன். சுற்றிலும் பறவைகளின் சப்தம் காதுகளுக்குள் ஊடுருவி என்னை கடந்து சென்று கொண்டிருக்க...மெல்ல மெல்ல ஆன்மாவை கீழே தள்ளி விட்டு மனக்குதிரை மீண்டும் பழக்கட்ட விசயங்களை செரித்துப் போட்டு புலன்களின் வழியே வெளியே பயணிக்க ஆரம்பித்து இருந்தது....

தடுக்க முடியவில்லை. தடுக்கவும் கூடாது. முரண்டு பிடித்தால் வேகமாய் ஓடும் பிசாசு அது. மெளனமாய் மனதை வேடிக்கை பார்க்கையில் அது என்னை பயமுறுத்த தொடங்கியிருந்தது. காட்டு மிருகங்கள் வந்து என்னை  கொன்றாலும் கொன்று விடும் என்று பயமுறுத்தியது. 

வீட்டில் சுகமாய் பஞ்சு மெத்தையில் குளிரூட்டப்பட்ட அறையில் காதுவரை கம்பளிப் போர்த்திக் கொண்டு தொலைகாட்சியில் நிகழ்ச்சிகளை மாற்றிக் கொண்டே தூங்கலாமே என்ற சுகானுபவத்தை கொண்டு வந்து என் முன் போட்டு திரும்ப வீட்டுக்கே போய்விடுவோம் என்று கெஞ்சியது. உறவுகளின் முகத்தை எல்லாம் மெல்ல ஒவ்வொன்றாய் காட்டி முதுகு தண்டினை சில்லிடச் செய்து.. வா ஊருக்கே ஓடிவிடுவோம் என்று கெஞ்சியது....

சலனமில்லாமல் எல்லாவற்றையும் உள்ளுணர்வால் கவனித்துக் கொண்டிருக்கையில், என் கண்களில் இருந்து கண்ணீர் மெல்ல மெல்ல கரை புரண்டோட, லெளகீக பந்தங்களின் கட்டுக்கள் எவ்வளவு உறுதியானவை என்றும் அவை எப்படி எல்லாம் கட்டிப்போட்டு வைத்திருக்கின்றன என்றும் தெளிவாய் புரிய இரத்த ஓட்டம் தாறுமாறாய் ஓட, நெஞ்சின் ஓரத்தில் ஒரு வலி வந்து போனது அது நெஞ்சு முழுதும் ஒரு கனத்தை பரவவிட.......

நான் மெல்ல நகர்ந்து கொஞ்சம் உயரமய் இருந்த ஒரு சிறு குன்றினைப் போல இருந்த பாறை மீது ஏறி அமர்ந்தேன். முழுதுமாய் இருட்டி விட நிலவின் ஒளி தனது அதிகாரத்தை பூமியெங்கும் செலுத்த ஆரம்பித்து இருந்தது. ஏதேதோ வினோத சப்தங்கள் அந்த காட்டுக்குள் கேட்கத் தொடங்க...., மலைப் பிரதேசத்துக்குரிய எல்லா குணங்களோடும் அந்த பகுதி கடுமையாய் குளிர ஆரம்பித்திருந்தது. இடைவிடாத சில் வண்டு சப்தங்களை விட வேகாமாய் வீசும் காற்றின் சப்தம் ஊ..ஊ.. .ஊ என்று அமானுஷ்யமாய் என்னை கடந்து செல்ல.. மனம் மேலும் என்னை பயமுறுத்தியது...

கையிலிருந்த பையிலிருந்து சிறு துணியை எடுத்து பாறையின் மீது விரித்தேன். அதன் மீது சம்மணமிட்டு அமர்ந்தேன்......! மெல்ல மூச்சினை உள்ளே இழுத்து நிதானமாய் ஆழமாய் சுவாசித்தேன். வெகு நிதானமாய் மூச்சினை வெளியே விட்டேன்.  மீண்டும், மீண்டும் இதையே செய்ய.. மனம் சட்டென்று நின்று மூச்சினை பார்க்க ஆரம்பித்தது. உள்ளே இழுத்தலையும், வெளியே விடுதலையும் ஆற அமர வெகு நிதானமாக செய்யச், செய்ய மனம் மறுபடியும் வேசத்தை கலைத்து விட்டு உள்ளுக்குள் வந்து ஒரு ஓரமாய் அமர்ந்து கொண்டு சலனமில்லாமல் சுவாசத்தையே பார்த்துக் கொண்டிருந்தது....

உடலென்னும் உணர்வையும் கடந்து நான் எவ்வளவு நேரம் அப்படியே இருந்தேன் என்று எனக்குத் தெரியவில்லை... வெறும் சுவாசமாக மட்டுமே நான் நின்று கொண்டிருந்தேன்....

அப்போது........

மெலிதாய் காற்றில் கலந்து......ஒரு மனித சப்தம் என் செவிகளுக்குள் ஊடுருவ...திடுக்கிட்டு கண் விழித்தேன்.. ! ஆமாம் அது மனித சப்தம்தான்...இந்த நடுக்காட்டில்.. யாராயிருக்கும்...?

அந்த சப்தத்தை இன்னும் கூர்மையாய் கேட்க ஆரம்பித்தேன்....


(பயணம் தொடரும்...)


தேவா. சுSunday, March 25, 2012

ஆன்மாவின்.... பயணம்! பதிவுத் தொடர் பாகம் V
ஆன்மாவின் பயணம் என்னும் இந்த தொடரின் நான்காவது பாகத்தை நான் எழுதியது 2011 ஜனவரி மாததில்....! அதன் பிறகு ஒவ்வொரு சந்தர்ப்பங்களின் போதும் அதன் அடுத்த அடுத்த பாகங்களை எழுத வேண்டும் என்று தோன்றவில்லை....மனதில் தோணும் போது எழுதலாம் என்று வலுக்கட்டாயமாய் வார்த்தைகளைப் பிடித்து நான் இழுத்துக் கொண்டு வர முயலவில்லை.

இதோ அதன் ஐந்தாம் பாகத்தை நான் வெளியிடும் காலச் சூழல் முற்றிலும் மாறிப் போயிருக்கிறது. கடந்த ஒரு வருடத்தில் என்னைச் சுற்றிலும் ஏகப்பட்ட மாற்றங்கள். இப்போது ஏற்பட்டிருக்கும் புரிதல் அசாத்தியமானது...

கடந்த சில வருடங்களாக தொடர்ந்து என்னோடு பயணிப்பவர்கள் வெகு சிலரே...! பலர் வந்தனர்....சென்றனர்...! சென்றவர்களை எல்லாம் ஏதோ ஒரு சூழலால் உந்தப்பட்டு சென்றவர்கள். உடன் வந்துக் கொண்டிருப்பவர்கள் எல்லாம் ஏதோ ஒரு சூழலில் உந்தப்பட்டு தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள்..நாளை அவர்களும் செல்லவும் கூட செய்யலாம்...!

ஒரு அலாதியான அனுபவத்தை வார்த்தைகளாக்கும் முயற்சியாய் இந்தக் கட்டுரையை எழுத முற்பட்டு இந்த கட்டுரையை எழுதும் சூழலே ஒரு மிகப்பெரிய அனுபவமாய் ஆகிப்போனது...!

ஆமாம்....வாழ்க்கை எப்போதும் ஒரே மாதிரி இருப்பதில்லைதானே..!

தொடர்ந்து பயணிப்போம்...

PREVIEW

சராசரியான நிகழ்வுகளில் மிக திருப்தியான ஒருவன்....எல்லாவற்றையும் விட்டு விலகி இருக்க ஆசைப்பட்டு... ஒரு பத்து நாட்கள் வீட்டை விட்டு வெளியேற திட்டமிட்டு கடிதம் எழுதிவைத்து விட்டு வெளியேறுகிறான். அதற்கப்புறமான அவனின் மனோநிலை.. உலகம் பற்றிய பார்வை....இவனைப்பற்றிய உலகத்தின் பார்வை...இப்படியாக நகரும்....கதை.....இந்த ஐந்தாவது பாகத்திலும் தொடர்கிறது...

திருப்புமுனைகளோடு கூடிய கதை எதிர்ப்பார்த்து படிக்க விரும்புவர்கள்....எனது பதிவுகளை தவிர்த்து விடல் நலம். ஏனென்றால் என் பதிவுகள் முழுக்க முழுக்க என்டர்டெயின்மென்டை நிச்சயமாய் கொடுக்காது.

உங்களின் நேரம் அனுமதிக்கும் பொழுது இதற்கு முன் உள்ள பாகங்களையும் படித்துக் கொள்ளுங்கள்....!

இதுவரை...


இனி...

பேருந்தில் ஏறிய சில நொடிகளில் மனதிலிருந்து வெளிப்பட்ட அதிர்வுகள் மீண்டும் என்னை கீழே இறங்கச் சொன்ன போது வத்தலகுண்டு கடந்து கொடைக்கானல் மலையில் ஏறும் முஸ்தீபோடு பேருந்து ஒரு உறுமலோடு நகர்ந்து கொண்டிருந்தது...! எங்கே செல்லவேண்டும் என்று கண்டக்டர் என்னிடம் கேட்கவும்...அடுத்த ஊரில் இறக்கிவிடுங்கள் என்று சட்டைப்பையில் கை நுழைத்து கிடைத்த ரூபாய் காகிதங்களை அவரின் கையில் திணிக்கவும்...கண்டக்டர் என்னை ஏற இறங்கப் பார்த்தார்.

ஆமாம்...இருந்த 75 ரூபாயையும் சொச்சத்தையும் அவரின் கையில் திணித்தால் அவர் அப்படித்தானே பார்ப்பார்....! மிச்ச ரூபாயை கையில் திணித்த படி மிரட்சியான பார்வையை பரவவிட்ட படி டிக்கட்டை கொடுத்து விட்டு நகர்ந்து விட்டார். இயல்புகள் என்று இந்த உலகம் ஒன்றினை எப்போதும் பிடித்து வைத்திருக்கிறது. அந்த இயல்புகளை விட்டு கடந்து நிற்கும் மனிதர்களை பெரும்பாலும் அது ஆச்சர்யமாய்த்தான் பார்க்கிறது. புத்திக்குள் கோடுகள் கிழித்துக் கொண்டு எல்லைகளால் நிரம்பிப் போயிருக்கும் ஒரு வாழ்க்கை கொடுத்த அலைகழிப்பிலிருந்து விடுபடவே நான் வீடு விட்டு நகர்ந்து வந்திருக்கிறேன் என்பது கண்டக்டருக்கு எப்படி தெரியும்..!!!!

பணம் என்பதை எப்போதும பெரும் பொருட்டாக எல்லோரும் நினைக்க ஆரம்பித்தார்களோ அன்றே உறவுகள் என்னும் தொடர்புகள் மெல்ல மெல்ல பட்டுப் போகத் தொடங்கி விட்டன. மனித வாழ்வின் சுமூக இயங்கு நிலைக்காக யாரோ பண்டமாற்றாய் வைத்து இருந்த ஒரு பழக்கம் இன்று நாட்டுக்கு நாடு பணமாய் மாறி மனிதர்களை இயக்கும் மந்திரவாதியாய் மாறிப் போய் நிற்கிறது. கோடி ரூபாய் இருந்தால் அவன் கோமான் என்று கையெடுத்து கும்பிடும் சம்பிரதாயச் சுற்றுக்கு ஆசைப்பட்டு மனிதர்கள் பணத்தின் பின்னால் ஓடிக் கொண்டேருக்கிறார்கள்.

அடிப்படையில் மனித தேவை என்பது மரியாதைதான். அடுத்தவன் தன்னைப் பற்றி மரியாதையாக நினைக்க வேண்டும். எப்போதும் தன்னை புகழவேண்டும். அதற்கு என்ன என்ன செய்ய வேண்டுமோ அத்தனை செயல்களையும் மனித மனம் மறைமுகமாய் அரங்கேற்றிக் கொள்கிறது. படைப்பில் அறிவாளிகள் என்றும் முட்டாள்கள் என்றும் யாரும் கிடையாது. சந்தர்ப்பங்களை சரியாக பயன்படுத்திக் கொள்கிறவனையும், தேவையான விசயத்தில் கூர்மையாய், கவனமாய் செயல்படுகிறவனையும் நாம் அறிவாளிகள் என்கிறோம். ஒரே செயலை மீண்டும் மீண்டும் செய்து அதனால் துல்லியமான முடிவுகளைப் பெற்றுத் தருவகிறவர்களை திறமைசாலிகள் என்கிறோம் அவ்வளவுதான்...!

வாழ்க்கையை கூர்மையாய் கவனித்து வாழ்பவன்...கவனிக்காமல் ஏனோதானோ என்று வாழ்பவன். இந்த இரண்டு வகைக்குள்தான் திறமைசாலிகளும், திறமையற்றவர்களும் இருக்கிறார்கள். நன்மை செய்ய வேண்டும் என்று ஒரு கூட்டம் இடைவிடாது கற்பித்துக் கொண்டிருக்கிறது. கற்பித்தால் தன்னை உலகம கவனிக்கும் என்று இடைவிடாமல் விளம்பரமும் செய்து கொண்டிருக்கிறது.

அறச்செயல்களின் பலன்கள் தானே வெளிப்பட்டு எங்கும் தானியங்கியாய் பரவிக் கொள்ளும் என்ற இயற்கையின் விதியறியா மூடர்கள் அதை விளம்பரம் செய்து கொள்கிறார்கள். புகைப்படங்கள் எடுத்து புகழ் பாடிக் கொள்கிறார்கள். இது அகங்காரத்தின் வெளிப்பாடு..தர்ம சிந்தனைக்கு எதிரானது.

தங்களை பற்றி கட்டியம் கூறிக் கொண்டே கட்டியம் கூற தன்னைச் சுற்றி ஒரு கூட்டத்தையும் வைத்துக் கொள்வதைப் போல ஒரு ஈனப் பிழைப்பு கிடையாது. வாழ்க்கை மிக அழகாக இயற்கையால் நடத்திச் செல்லப்படுகிறது. மனிதர்கள் அதை பெரும்பாலும் சிதைக்கிறார்கள். தியானம் என்பது சலனமில்லா மனித மனத்தின் தெளிவு. இதைக் கற்றுக் கொடுக்கிறேன் என்று சொல்வதும் தவறு .. கற்றுக் கொடு என்று கேட்பதும் தவறு. ஒவ்வொரு ஆர்ப்பாட்டத்திற்கும், ஒவ்வொரு கூச்சலுக்கும், ஒவ்வொரு மனிதக் கூட்டங்களின் சந்திப்புக்களுக்கும் பிறகு ஒரு மனிதன் என்ன நிகழ்கிறது தானே உற்றுக் கவனிப்பானாயின் தியானம் என்னும் நிகழ்வு அவனுக்கு சிறகுகள் பூட்டி எங்கோ தூக்கிச் செல்லும்.

ஆர்ப்பாட்டங்கள் கடந்த தனிமையில் கிடைக்கும் ஒரு பேரனுபத்தை சோகம் என்று கருதி மனிதன் அதை நிராகரிக்கவே முயலுகிறான். அங்கே சற்று கூடுதல் கவனம் செலுத்தி நிற்பானாயின் அவன் தேடிக் கொண்டிருக்கும் நிம்மதியின் நுனி அங்கே இருப்பதை உணர்ந்து கொள்வான். ஆமாம் அங்கேதான் காலம் தன் சுட்டு விரலை நீட்டிக் கொண்டிருக்கிறது. நாம் செய்ய வேண்டியது எல்லாம் அதை வெறுமனே பற்றிக் கொள்ள வேண்டியது மட்டுமே...!

நினைவுகள் இல்லாத, புறச்சூழல்கள் கடந்த ஒரு வெளியில் எல்லா உணர்வுகளையும் ஏந்திப் பிடித்தபடி அடடே.... அடடே... அடடே...என்று ஆனந்தத்தில் லயித்து பின் ஒருவன் மீண்டும வெளிவரும் போது சராசரி வாழ்க்கையில் இருக்கும் அபத்தங்கள் புலப்படும். தன் கையை ஊண்டி தானே கரணம் பாய வேண்டும். இங்கே உதவி என்ற வார்த்தையே அபத்தம். ஒவ்வொரு சூழலும் ஒரு குரு. ஒவ்வொரு அனுபவமும் ஒரு உதவி.

நான் வாழ்க்கையைப் பிடிக்காமல் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. வாழ்க்கையை இன்னும் தெளிவாக வாழவே வீட்டை விட்டு வெளியேறினேன். துறவி என்ற முத்திரையை உடனே எனக்கு இந்த சமுதாயம் குத்தி எனக்கு ஒரு காவி சட்டையையும், வேஷ்டியையும் கொடுத்து ஒன்று தூற்றும் அல்லது போற்றும். பெரும்பாலும் இந்த இரண்டுக்கும் அப்பாற்பட்ட ஒரு இடத்திலேயே மெய்யான ஞானம் ஒளிந்து கிடக்கிறது.

மாமரத்தில் மாங்காய்கள் காய்ப்பதும், தென்னை மரத்தில் தேங்காய்கள் வருவதும் இயல்பு மற்றும் நியதி. இதில் எது மாறினாலும் மாற விரும்பினாலும் அது அபத்தம். மனிதர்களும் அப்படித்தான் எல்லோருக்கும் ஒரு பொதுவான நியதியை வகுக்கவே முடியாது....ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு வகை, ஒவ்வொரு சூழலையும் அவன் வாங்கிக் கொள்ளும் விதமும் வெவ்வேறு ... இதில் எங்கே இருந்து பொதுவன நியதிகளை நாம் பிறப்பிப்பது..

அதிர்ஷ்டவசமாய் யாரோ ஒருவர் அல்லது இருவரின் மனோநிலைகள் ஆச்சர்யமாய் ஒத்துப் போக வாய்ப்புகள் உண்டு அவ்வளவுதான்!

நின்ற படியே பேருந்தில் என் எண்ணங்கள் எங்கோ பறந்து கொண்டிருக்க. உடலுக்குள் மீண்டும் என் புத்தியை திணித்துக் கொள்ள நான் முயன்ற போது.... பேருந்தின் நடத்துனர் மெல்ல என் தோள் தட்டினார்.. தம்பி.. இது மூணாவது தடவையா உங்கள கூப்புடுறேன்...என்று ஏதோ ஒரு ஊர் பெயரைச் சொல்லி அதுதான் அடுத்த ஸ்டாப்பிங்க் என்று கூறி படியை நோக்கி இறங்கச் சொல்லி கையைக் காட்டினார்....

மேற்கு தொடர்ச்சி மலைகளின் நீட்சி தமிழ்நாட்டுக்குள் எட்டிப்பார்த்திருக்கும் ஒரு இடம் கொடக்கானல் மலைகள்.....இயற்கையின் ஆசிர்வாதத்தில் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்த மலைச்சரிவின் காற்று என்னை இறுகத் தழுவி கொடுத்த வரவேற்பில் நான் திக்கு முக்காடிப் போயிருந்தேன்.

பேருந்து என்னை சட்டை செய்யாமல் மலை நோக்கி மேலேறே.. அந்த குக்கிராமத்தில் இருந்த மனிதர்கள் தங்கள் வேலைகளுக்காய் அங்கும் இங்கும் நகர்ந்து கொண்டிருந்த அவசரத்தில் என்னை கவனிக்கவில்லை. நான் மீண்டும் பேருந்து வந்த வழியே சரிவில் அந்த கிராமத்தை விட்டு மெல்ல வெளியேற ஆரம்பித்தேன்...

20 நிமிட நடையில் சுத்தமாய் மனிதர்கள் தொலைந்து போயிருக்க...சாலையின் இடது புறச் சரிவில் மெல்ல இறங்கி மரங்களினூடே நடக்க ஆரம்பித்தேன்...

மதியம் கடந்திருந்த அந்த நேரத்தில் மணி எத்தனையாயிருக்கும், நான் எங்கே போகிறேன்? ஏன் போகிறேன்? யாரை பார்க்க போகிறேன்..? என்றெல்லாம் உங்களுக்கு எப்படித் தெரியாதோ அது போலத்தான் எனக்கும் தெரியாது....

புதருக்குள் ஒரு மிகப்பெரிய சாரைப்பாம்பு என்னை சட்டை கூட செய்யாமல் வேகமாய் நகர்ந்து கொண்டிருந்தது..

உள்ளுக்குள் சில்லிட்ட பழக்கத்தின் வாசம் மெல்ல ஒரு பயத்தை உடம்பு முழுதும் பரவ விட..... புத்தி அதை வெட்டி வீழ்த்தியது...

நான் காட்டுக்குள் முன்னேறிக் கொண்டிருந்தேன்....

(பயணம் தொடரும்...)


தேவா. சு


Friday, March 23, 2012

திக்.. திக்... இரவில்...!
இன்னிக்கு ராத்திரி நான் மட்டும் வீட்ல தனியா தங்கணும் அவ்வ்வ்வ்வ்வ்! எல்லா நண்பர்களும் விடுமுறைக்காக ஊருக்குப் போயிருக்கும் இந்த சீக்கிரமே இருட்டி ரொம்ப லேட்டாய் விடியும் மார்கழி மாத சென்னையில் காமராஜபுரம் உள்ள ரொம்பவே ரிமோட்டா இருக்குற ஏரியாவுல வீடு பாக்க வந்தப்பவே ப்ரண்ட்ஸ் கிட்ட சொன்னேன்.... டேய்.. என்னங்கடா இது ஒரு வீட்டுக்கும் இன்னொரு வீட்டுக்கும் ஒரு தொடர்பே இல்லை... தள்ளி தள்ளி தூரமா இருக்குன்னு...எவனாவது காது கொடுத்து கேட்டானா...?

எனக்கு வேணும்..? எனக்கு வேணும்...? திமிராவே எப்பவும் பேசிப்பேசி அந்த பில்டப் என்னைய கொண்டு வந்து விட்டு இருக்க இடத்த பாத்தீங்களா? பக்கத்துல ஒரு பழைய வீடு கொஞ்சம் தள்ளி, அதுவும் தெருவுல இருந்து கால நேர அந்த வீட்டுக்குள்ள வச்சிடலாம். அந்த வீட்டுக்கு பின்னால பெரிய காடு மாதிரி மரம் மட்டை எல்லாம்..இருக்கறது எல்லாம் பிரச்சினை இல்லைங்க அந்த வீட்ல ஒரு ரெண்டு மூணு வருசமா யாருமே இல்லையாம்....! 

செம பழைய வீடு...! அதோ அந்த தெரு முனையில இருக்கு பாருங்க ஒரு பெரிய வீடு அந்த வீட்ல இருக்க எஸ்தர் ஆண்ட்டி சொன்னாங்க அங்க யாரோ தூ.....க்க்க்க்கு போட்டு செத்துப் போய்ட்டாங்களாம்...அதனால யாரும் தங்கறது இல்லப்பான்னு... இது எல்லாம் அப்போ நாலஞ்சு பேரு ப்ரண்ஸோட இருந்தப்ப நினைவுக்கு வந்து தொலைக்குதா.. ங்கொய்யால தனியா இருக்கும் போது சரியா குறிபார்த்து பிரெய்ன அட்டாக் பண்ணுது...

நாங்க இருக்குற வீட்டுக்கு முன்னால பெரிய காலி இடம்.. வெளியில கல் ஊண்டி கம்பி போட்டு இருப்பாங்க.. அந்த எடத்துக்கு சொந்தக்காரங்க. சேலையூர்ல இருக்காங்க வாரவாரம் இல்ல ரெண்டு வாரத்துக்கு ஒரு தடவை வருவாங்க வந்து செடி கொடிய எல்லாம் எண்ணிட்டு யாருகிட்டயுமே பேசாம உர்ர்ர்ர்ன்னு போய்டுவாங்க... அதுவும் பேச்சிலர் பசங்க தங்கி இருக்காங்கன்னா.. ஏந்தான் இந்த பேமிலி மேன்ஸ்க்கு எல்லாம் இப்புடி டக்ஸ்ட்டன் ஆகுதோ...???!!!!!

தப்பானவங்க எங்க இருந்தாலும் தப்பானவங்கதான்... அவனுக்கு கல்யாணம் ஆச்சா? ஆகலையா? ஆம்பளையா, பொம்பளையா, வயசாளியா, இளந்தாரியா அது ஒண்ணுமே மேட்டர் இல்ல பாஸு..... ச்ச்ச்சும்மா கல்யாணம் ஆகாத பசங்களா..அப்போ வீடு தரமுடியாதுன்னு சொல்ற ஹவுஸ் ஓனர்ஸ எல்லாம் பாத்த.. என்ங்கடா உங்க ஸ்ட்ட்ரேட்டஜின்னு கேக்கத்தோணும்...! என்ன பண்ணி தொலைக்கிறது அவன், அவன் அனுபவம் அப்புடி...? நாம எல்லாம் எங்க பொறந்தோம் எப்புடி வளர்ந்தோம்னு வரலாற எடுத்து படிச்சாத்தானே இவிங்களுக்குத் தெரியும்...(கொஞ்சம் ஓவரா போய்ட்டேனோ பாசு.. ?ஹி ஹி போற போக்குல கண்டுக்காதீங்க..!!!!)

அவ்வ்வ்வ்வ்வ்வ் நான் பாட்டுக்கு உளறிகிட்டு இருக்கேன் பாருங்க... மணி ஒன்பதே முக்கால் ஆச்சு.. நானும் எம்புட்டு நேரம்தான் தைரியமா இருக்க மாதிரியே நடிக்கிறது... ! எங்க தெருவுல (தெருவாம் தெரு.. காடு சார்..அது...!!!!!) இருக்குற ரெண்டு வீட்ட பத்தி சொல்லிட்டேன். இன்னும் ரெண்டு வீடு எங்களுக்கும் உனக்கும் எந்த ஒட்டும் உறவும் கிடையாதுன்ற மாதிரி மூஞ்சிய திருப்பிகிட்டு அங்கிட்டு இருக்கு.. அந்த ரெண்டு வீட்லயும் காலேஜ்ல படிக்கிற பொண்ணுங்க இருக்கதால.. எங்க கூட அன்னம் தண்ணி பொழங்க மாட்டோம்னு அவுங்க கொல தெய்வத்துக்கு சத்தியம் பண்ணி இருக்காய்ங்க...(என்னமோ அந்த புள்ளைகள கட்டி நாங்க ஊருக்கு கூட்டிக்கிட்டு போவோம்னு கங்கணம் கட்டிகிட்டு மெட்ராசுக்கு வந்த மாதிரி....அட..அட்லீஸ்ட் நாங்க அப்டீ இல்ல சார்னா நம்பவா போறாய்ங்க...!!!!) 

வரும் போதே காமராஜபுரம் பஸ்டாண்டல மாரிமுத்து அண்ணன் கையேந்தி பவன்ல வஞ்சனை இல்லாம சாம்பாருக்குள்ள இட்லிய முக்கு, முக்குனு முக்கி மொக்கு, மொக்குன்னு மொக்கிட்டு வந்துட்டேன்.. இன்னிக்குனு எனக்கு பர்ஸ்ட் ஷிப்ட் டூட்டி.....(என்ன வேலை பாக்குறேன்னு சொல்ல ஆரம்பிச்சா கதை படிக்க முடியாது பரவாயில்லையா...!!! ஹி ஹி) நைட் ஷிப்டே போட்டு இருக்கலாம்னு தோணிச்சு....

வீட்டுக்குள்ள வரும் போதே காம்பவுண்ட் கேட் எல்லாம் பூட்டி, வெளிக்கதவையும் பூட்டி... எல்லா ஜன்னலையும் பொத்தி பொத்தி அடைச்சு.. கொல்லைக் கதவை பத்து தடவை தாப்பால அழுத்திப்பார்த்து மோடிட்டு லைட்ட எல்லாம் அணைச்சுட்டு டிவி பாத்துட்டு இருக்கும் போதே பத்து தடவை ஜன்னல் கிளாஸ் வழியா வெளியில தெரு விளக்கு வெளிச்சம் எட்டிப்பாக்குறத பாத்து பாத்து.. அந்த ப்ரோஸ்ட்டட் கிளாஸ் வழியா ஒண்ணும் வெளிய தெரியலேன்னாலும்.. கதவ தொறந்து தொறந்து எல்லாம் ஓ.கேயான்னு பாத்துட்டே இருந்தேன்...

ஏண்டா நீ என்ன லூசா... போர்வைய போத்திகிட்டு தூங்க வேண்டியதுதானேன்னுதானே நீங்க கேக்குறீங்க.. எப்டி சார் தூங்க முடியும்...? மைடியர் லிசா வீடு மாதிரி வீடு சார்.. மேல் போர்சன் ஹவுஸ் ஓனர் பூட்டி சாவிய கொண்டு போய்ட்டாரு.. அங்க யாருமே இல்லை.. ரெண்டு பெட்ரூமும் ஆளுக இல்லாம.... ஹா.. ஹான்னு பி.எஸ். வீரப்பா மாதிரி சிரிச்சுகிட்டு இருக்கு....

கிச்சன் பக்கம் போகவே பயமா இருக்கு.. இந்த டிவி மட்டும் இல்ல அவ்ளோதான், அவ்வ்வ்வ்வ் மாரநாட்டு கருப்பு என் தலை மாடு நின்னு காப்பாத்து சாமின்னு நெத்தி நிறைய விபூதி அள்ளி பூசிகிட்டு.. போர்வைய போத்திகிட்டு.. சன்டிவி, ராஜ்டிவி, ஜெயா டிவி...விஜய் டிவி, சன் நியூஸ்ன்னு மாத்தி மாத்தி எம்புட்டு நேரம் பாத்துகிட்டு இருக்கறது...

கை தவறி எச். பி. ஓ சேனல வச்சு தொலைச்சுட்டேன்... அதுல ஒரு கொலைகார மூவிய போடுற நேரமா இதுன்னு தெரியாம போட்டுகிட்டு இருந்தாய்ங்க... ஆணியே புடுங்க வேணாம்னு பெட்ரூம்ல படுக்காம ஹால்லயே இழுத்து போத்திகிட்டு டிவிய அமத்திட்டு.... மெல்ல மேல விட்டத்த பாத்தேன்... ஃபேன் சுத்துற சுத்துல ஃபேனோட நடு மையத்துல..ஹி ஹி ந்னு ஒ எப்பவோ எங்கயோ பாத்த ஒரு பேய்படத்துல வந்த பேய் மாதிரியே.....அவ்வ்வ்வ்வ்வ்

பேய் இருக்கோ இல்லையோ .....அது பத்தி பிரச்சினை இல்ல.... இருந்தா அது சாமிக்கு பயப்பட்டுத்தான் ஆகணும்... இல்லையா... நான் தலை மாட்ல முருகன் படமும் சிவன் படமும் வச்சு இருக்கேன்.கழுத்துல ருத்ராட்சம் போட்டு இருக்கேன்.....ஆ...ஆவ்....கொட்டாவி வந்துடுச்...ச்ச்ச்ச்ச்சு.............

சத்தம் கேட்டு நான் முழிச்சப்போ..... டக்குன்னு மணி எத்தனைன்னு பார்த்தேன்.. இரண்டே முக்கால்...வீட்டு வாசல்ல ஏதோ பேச்சுக்குரல் கேட்குது....மெல்ல எழுந்து போய் ஜன்னலை தொறக்க போனேன்.... நோ......டோண்ட்ன்னு உள்ள இருந்து ஒரு எச்சரிக்கை மணி அடிக்க எனக்குள்ள இருந்த அசகாய சூரன் ஜன்னல் கதவை தொறக்க என்னை அனுமதிக்கல...

ஒரு ஏழு எட்டு பேரு என் வீட்டுக் காமப்வுண்ட் பக்கம்.. நின்னுகிட்டு எங்க வீட்ட காட்டி காட்டி ஏதோ பேசிட்டு இருந்தது..  ப்ரோஸ்டட் விண்டோ க்ளாஸ் வழியா அசங்க மசங்கலா தெரிஞ்சுது...! போச்சுடா வந்துட்டாய்ங்க.. ஆளு இல்லாத வீடுன்னு தெரிஞ்சு, இல்ல நாம மட்டும் இருக்கோம்னு நோட்டம் பாத்துட்டு வந்துட்டாய்ங்க.. அவங்க அத்தனை பேரு.. நான் தனியாளு....என்ன பண்ண போறேன்....???? எப்படி சமாளிக்கப் போறேன்...?

உடம்பு வியர்க்கத் தொடங்கியது...நடு ராத்திரி.. யாருக்காச்சும் போன் பண்ணனும்னு பயத்துல தோணவே இல்லை.. ! நான் எப்டி தப்பிக்கிறது..? இல்லை உள்ள வந்து இங்க இருக்குற டிவிக்கும், பிரிட்ஜுக்கும் காம்பரமைஸ் ஆகாம என்கிட்ட எவ்ளோட பணம் இருக்குனு கேட்கலாம்.. நானும் என் பர்ஸ்ல இருக்குற மூவாயிரத்து முன்னூத்தி முப்பத்தி ஆறு ரூபா எழுவத்தஞ்சு காச எடுத்து கொடுக்கவும் செய்யலாம், என் வாட்ச், கழுத்துல இருக்க செயின் இதையும் கொடுத்துடலாம்... ஆனா என்னடா வேற ஒண்ணும் இல்லயான்னுனு சொல்லிட்டு கத்தியால குத்த வந்தா.........சார் வெளில நிக்கிற என் பைக்கையும் என் ப்ரண்டோட பைக்கையும் எடுத்துக்குங்க சார்னு சொல்லலாம்....

ப்ரண்டோட கப்போர்ட்-குள்ள என்ன இருக்குன்னு தெரியல அதையும் எடுத்துகிட்டு என்ன விட்டுட்டு போவாய்ங்களா..? 24 வயசுல என் ஆயுசு இப்டி காமராஜபுரத்துல அனாதையா ஒத்த வீட்ல திருட்டுப்பய கையாலயா போகணும்....? நெஞ்சு படக்.. படக் என்று அடிக்க...

பேன் காத்தை எல்லாம் சட்டை பண்ணாமல் பனியன் நனையத் தொடங்கி இருந்தது....வெளில இருந்து பேசிட்டு இருந்த ஆளுல வாட்ட சாட்டமா இருந்த ஒரு ஆளுகிட்ட கொஞ்சம் குட்டையா கட்டையா இருந்தவரு..நம்ம வீட்டை காட்டி என்னமோ சொல்ல...அவரு வெளி கேட் கிட்ட வந்து அதை திறக்க ட்ரை பண்ணிட்டு இருந்தாரு....

ஹ்ம்ம்ம்.. இனிமே பாத்துட வேண்டியதுதான் வாழ்வா சாவான்னு.... உடம்புக்குள் ஒரு சூடு பரவ.. திலீப் ரூமுக்குள்ள போயி அவனோட கிரிக்கெட் பேட்ட கையில எடுத்துக்கிட்டேன்.. ஐ திங்க் இவனுக தில்லான திருடனுக போல....,  கதவை உடைச்சு நேராவே வராய்ங்க.. பிக்காஸ் பக்கதுல யாரும் இல்லன்னு  தைரியம்.. 

லெட் சீ... கதவை உடைச்சு உள்ள வரும் போது உள்ள வர்றவனுக்கு தலையில்ல டமால்னு ஒரே அடி.... இடது பக்கம் செவுள்ள ஒரு அடி பேட்டால.. அடுத்து செகண்ட் பர்சன் .. தேர்ட்.....எப்படியும் ஒரு மூணு பேரை அடிச்சுட்டு... வெளில ஓடிட வேண்டியதுதான்....

வாழ்வா.. சாவா? வீட்ல வச்சிருக்க ஒரே ஒரு கத்தி பச்சை மிளகாய கூட சரியா வெட்டாம இருக்கறது இப்போ எனக்கு எரிச்சலா இருந்துச்சு.....! ச்ச்சே ஒரு ஆயுதம் கூட இல்லாம தங்கி இருக்கோமேன்னு முத முறையா ஒரு வன்முறை புத்தியில ஏறி நின்னு கேள்வி கேக்க...

மெல்ல முன் ஜன்னல் வழியா வெளியில பாத்தேன்.. ஒரு ஆளு காம்பவுண்ட் ஏறி குதிச்சுட்டான்....ம்ம்ம்... வாடா... வா.நீ எனக்கு எமனா ? நான் உனக்கு எமனா பாத்துடலாம்....காம்பவுண்ட் உள்ள வந்தவன்.. நேரா வந்து கதவை தட்ட ஆரம்பிச்சுட்டான்...

ம்ம்ம்ம்ம்ம்ம் அவன் கதவை தட்டினா நான் தொறந்துடுவேனா......ராஸ்கல்! நான் ரெடியாகி நின்றேன்..! உடம்பு முழுதும் அந்த மார்கழி மாத அதிகாலை மூணு மணிக்கும் வியர்வை ஊற்றியது....

கதவை தட்டி பார்த்தவன்.. மறுபடி கொஞ்ச நேரம் நின்னுட்டு.. காம்பவுண்ட் ஏறி வெளில போயி... மிச்ச இருக்க ஆளுங்க கிட்ட ஏதோ சொல்ல...

கூட்டமா எல்லோரும் மறுபடி வந்த வழியில திரும்பி போனாங்க....!!! மறுபடி என்ன பிளானோட வரப்போறங்கன்னு தெரியலை.. மே பி டோர உடைக்க ஏதாச்சும் மெட்டிரியல் எடுத்துட்டு வருவாங்கன்னு என் புத்தி சொல்ல...

கதவு ஓரமா குத்துக்காலிட்டு பேட்டோட உட்கார்ந்தேன்.. அழுகையும் ஆத்திரமுமா வந்துச்சு....!!! தனியா தங்கினது எவ்ளோ தப்பு.... அம்மா...சட்டென புத்திக்குள் வந்து போனாள்....

கதவு ஓரமா காலை நீட்டி உட்கார்ந்த படியே.......ரொம்ப அலார்ட்டா....
...
....
...
...
மறுபடி கதவை டமால் டாமல்னு தட்ற சத்தம்....ஓ.....மை காட் ரொம்ப சத்தமா தட்றாய்ங்க.... தே ஆர் பேக்ன்னு சொல்லிட்டு கண்ண முழிச்சு பாத்தா பங்குனி வெயிலு பல்ல கழட்டிகிட்டு அடிக்கிற மாதிரி ஒரே வெளிச்சம் வீடு புல்லா....! அட இது என்னாது இது....வால் கிளாக்ல மணி பார்த்தேன்.. மணி பத்தரைன்னு பளீச்ச்னு செவுள்ள அறைய....ஞாயிற்றுக் கிழமை காலை என்னை எந்திரிடா நாயேன்னு மனசுக்குள்ள ஒரு உதை உதைக்க.. 

அட எப்போ தூங்கினேன்.? எங்க அந்த திருடங்க.. ? பக்கத்துல கிரிக்கெட் பேட் பவ்மயா படுத்து இருந்துச்சு....

அட கதவை யாரோ தட்றாங்களே... இன்னும்... ! டக்குன்னு பேஸ் வாஸ் பண்ணிட்டு தைரியாம கதவை தொறந்தேன்.. வெளியில மத்திம வயசுல ஒருத்தர் நின்னுகிட்டு இருந்தாரு... காம்பவுண்ட் வெளியில ஒரு ஆறு, ஏழு பேரு நின்னுகிட்டு இருந்தாங்க... பக்கத்துல ஒரு லாரி....

தம்பி காம்பவுண்ட் கதவை கொஞ்சம் தொறங்களேன்.... மத்திம வயதில் இருந்தவர் சொல்ல.. சரிங்கண்ணே என்று சொல்லி விட்டு கதவை திறந்தேன்...

" இந்த பக்கத்து வீடு நம்ம வீடுதேன்... நான் சிங்கப்பூர்ல இருந்தேன்... இப்பத்தான் வந்து ரெண்டு மூணு நாளாச்சு...! வீட்ட இடிச்சுபுட்டு புதுசா கட்டப் போறோம் தம்பி... அதான் செங்கல இறக்கி வைக்க நம்ம வீட்டு முன்னாடி எடம் இல்ல தெருவுல இறக்கி வச்சா பயலுக களவாண்டுட்டு போயிடுவாய்ங்க... 

நம்ம வீட்டு காம்பவுண்ட் உள்ள விசாலமா எடம் இருந்துச்சு... நேத்து ராத்திரி போன... போட்டு சல்லிசா செங்கல் வந்து இருக்கு ரெண்டு லோடு போட்றுவம்னு சொன்னாய்ங்க.. ! உங்க கிட்டயும் பெர்மிசன் கேக்க பகல் நேரத்துல முடியல நீங்க எல்லாம் வேலைக்கு போய்டுறீங்க... சரி ஞாயித்து கிழமை லீவு நாளு பெர்மிசமன் கேட்டுகலாம்னா.. நேத்து நைட் பன்னெண்டு மணிக்கு திடீர்னு லோடு வந்துடுச்சு...

நைட் வந்து கதவை தட்டிப் பாத்தோம்...! தம்பி நல்ல தூக்கத்துல இருந்து இருப்பீக போல....மன்னிச்சுடுங்க தம்பி அவசரம்..."ன்னு சொல்லிட்டு அந்த கருப்பையா அண்ணன் சிவகங்கை பக்கம்தான் சொந்த ஊரு அவருக்குன்னு சொல்லவும்... 

கைய கொடுத்துப்புட்டு....சரிங்கண்ணேன்னு சொல்லிகிட்டே...... நான் தலைய சொறிஞ்சுகிட்டு.....ரொம்ப நேரம் ஏன் கேன மாதிரி நின்னுகிட்டு இருந்தேன்னு கருப்பையா அண்ணனுக்குத் தெரியாது.......

ஆனா.... 

ஒங்க எல்லாருக்கும் தெரியும்.....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ! 

வெளில சொல்லிடமாட்டீங்களே.......

அப்போ வர்ர்ர்ர்ட்ட்ட்டா....!!!

தேவா. சுTuesday, March 20, 2012

தோற்கவிடு காலமே...!


அடிக்கடி என்னை தோற்கவிடு காலமே
அப்போதுதான் துரோகிகளின் கோரமுகங்களையும்....
நட்புகளின் ஆதரவுக்கரங்களையும்
என்னால் சரியாக பற்றிக் கொள்ள முடிகிறது...
எனக்கு வலிக்கும் இரணங்களைக் கொடு.....
அப்போதாவது என்னை நேசிக்கிறவர்களை
நான் நேசிக்கிறேனா என்று பார்க்கிறேன்...?

என்னை முகத்தில் அறைந்து காயப்படுத்து காலமே...
எனக்காக எத்தனை கண்கள் கண்ணீரை சுமந்திருக்கின்றன
என்று பார்த்தாவது அறிவு வரட்டும் எனக்கு...
என்னை அடித்து துவம்சம் செய்; தோல்விகளால் குளிப்பாட்டு;
அப்போதாவது வெற்றிகளின் போது...
என்ன செய்யவேண்டும் என்று எனக்கு புரியட்டும்!

நெருப்பில் எரிந்து கொள்கிறேன்
இரணத்தில் வெந்து கொள்கிறேன்
எரிச்சலில் நொந்து கொள்கிறேன்
எனக்கு தோல்விகளைப் புகட்டு காலமே....
அப்போதாவது என் வெற்றிகளில்...
நான் மனிதர்களை சரியாய் கணிக்கிறேனா என்று பார்க்கிறேன்...!

வலிகளை வலிமையாக்கும் வித்தையோடுதான்
என்னை நீ படைத்தளித்தாய் என்று
சில சூழல்களுக்கும் மனிதர்களும் நான் பாடம் புகட்ட வேண்டும்
என் வெற்றியின் உச்சத்தில் முகஸ்துதி மனிதர்களை
என் காலுக்கு செருப்பாக்குகிறேன்...;
முன் பேசி பின் இகழ்ந்தவர்களின்
நரம்புகளை அறுத்து உனக்கு ஒரு மாலை செய்து தருகிறேன்
இடுப்பெலும்புகளை உடைத்து
முதுகெலும்புகளில் கோர்த்து உன் கால்களில் சமர்ப்பிக்கிறேன்
அதனால் என்னை தோற்கவிடு காலமே...
ஏனெனில்...
இந்த உலகமே பெருமூச்செறியும்...
பிரமாண்டமான அசுர வெற்றி கொள்ளவேண்டும் நான்..!


தேவா. சுSunday, March 18, 2012

காய்கள் நகர்த்தும் காங்கிரஸ்! ஐ.நாவில் அரங்கேறப் போகும் இலங்கை எதிர்ப்பு நாடகம்...!


ஈழத்தில் போர் உக்கிரமாக நடந்து கொண்டிருந்த போது ஒரு மிகப்பெரிய நாடகத்தை அப்போது பாரளுமன்றத் தேர்தலை சந்திக்க காத்துக் கொண்டிருந்த ஆளும் காங்கிரசு கட்சி மேற்கொண்டதை எம் மக்கள் மறந்திருக்க மாட்டார்கள்.

போரின் இறுதி நிலை என்று இலங்கை இராணுவம் அறிவித்து இந்தியாவின் உதவியுடன் தமிழ் மக்களை துவம்சம் செய்து கொண்டிருந்த போது தமிழகத்தில் காங்கிரசின் கூட்டணிக்கட்சித் தலைவரான திரு. கருணாநிதி அவர்களின் தலைமையில் உண்ணாவிரதம் என்னும் ஒரு தற்காலிக நாடகத்தை சென்னை மெரினாவில் அரங்கேற்றிக் கொண்டே போரை இலங்கை அரசு நிறுத்தி விட்டதாக கூறி இந்திய ஊடகங்களைக் கொண்டு பரப்புரை செய்தது இந்திய அரசு. தமிழர்களாகிய நாமும் வாய் பிளந்து அட தமிழினத்தலைவரின் உண்ணாவிரதத்திற்கு இவ்வளவு சக்தியா என்று ஆச்சர்யமாய் பார்த்துக் கொண்டிருந்த போதே....

பாரளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளிவரும் வரை தற்காலிக போர் நிறுத்தம் செய்து வைத்திருந்த இலங்கை பேரினவாத அரசு காங்கிரசு கட்சி மீண்டும் ஆட்சி பீடம் ஏறிய உடனேயே.. மீண்டும் தனது கோரத் தாக்குதலை தொடங்கியது. மே மாதம் 16 ஆம் தேதி 2009ல் பாரளுமன்றத்திற்கான முடிவு தெரிந்த உடனேயே இலங்கைக்கு க்ரீன் சிக்னலை ஆளும் காங்கிரஸ் அரசு கொடுக்க திட்டமிட்ட படி மே 17,18,19 களில் முள்ளிவாய்க்காலில் கொன்று குவிக்கப்பட்டனர் தமிழர்கள்.

காங்கிரஸ் அரசு ஆட்சிக்கு வந்தால் தமிழர்கள் காப்பாற்றப்படுவார்கள் என்ற நம்பிக்கையிலும், திராவிட முன்னேற்றக்கழகம் என்னும் பாரம்பரிய தமிழர் கட்சியோடு கூட்டு வைத்திருப்பதால் தமிழர் நலம் பேணப்படும் என்ற ஆசையாலும், பாரதிய ஜனதா என்ற மதவாதக் கட்சியின் மீது இருந்த நம்பிக்கையின்மையினாலும் காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களித்த தமிழக மக்களின் வாய்களுக்கு வாய்க்கரிசியைப் போட்டுவிட்டு உற்சாகமாய் பதவியேற்றுக் கொண்டது ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் அரசு...

மே 13 ஆம் தேதி பராளுமன்றத் தேர்தலில் தமிழர்களை காங்கிரஸ் கூட்டணி அரசு காக்கும் என்ற மாயை உண்டாக்க ஒரு நாடக உண்ணாவிரதம் ஏப்ரல் 27ல் அரங்கேற்றப்பட்டு..... தேர்தல் முடிவு வரும் வரையில் காத்திரு இலங்கையே என்று ஒரு ரகசிய கட்டளை இடப்பட்டு மே 13ல் தேர்தல் முடிந்து 16 ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடன்....ஆட்சியிலேறிய காங்கிரஸ் கொடுத்த சமிஞையை கண்டு கொலை வெறித் தாக்குதலை நடத்தி போரை முடிவுக்கு கொண்டு வந்தது கபட இலங்கை அரசு...!

கருணாநிதி உண்ணாவிரதம் இருந்த போது நாடகத்தை முன்னின்று நடத்திய அதே தமிழ்த் துரோகி ப.சிதம்பரம், தமிழ்நாட்டில் காங்கிரஸ் என்னும் கட்சி தடமில்லாமல் போய்க்கொண்டிருப்பதை கண் கூடாக கண்டு, மீண்டும் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை எப்படி தலையெடுக்க வைப்பது? அப்படி வைத்தால் தானே மிச்சமுள்ள தன் வாழ்நாளின் பிழைப்பு ஓடும் என்று ரொம்பவே கவலைப்பட்டுக் கொண்டிருந்தார்.

காங்கிரஸ் மேலிடத்திற்கோ தனது கோரப்பற்கள் தமிழக மக்களுக்கு தெரிந்து விட்டதே இனி என்ன செய்வோம் என்று திருடன் கையில் தேள் கொட்டியது போல செய்வதறியாது விழி பிதுங்கி தமிழகத்தைப் பொறுத்தவரைக்கும் வரப் போகிற நாடளுமன்றத் தேர்தலில் நாம் அம்பேல்தான் என்ற முடிவுக்கு வந்தேதான் விட்டது.

இப்படியன சூழலில் அமெரிக்கா உதவியுடன் ஐ.நாவில் நிறைவேற்றப்பட உள்ள இலங்கைக்கு எதிரான மனித உரிமை மீறல் மற்றும் போர்க்குற்றங்கள் பற்றிய தீர்மானத்தைப் பற்றி பரபரப்பாகவே நாம் பேசிக் கொண்டும் ஆங்காங்கே படித்துக் கொண்டும் இருக்கிறோம். உணர்ச்சியின் உச்சத்தில் உலக நாடுகள் எல்லாம் ஆதரிப்பதோடு இந்தியாவும் ஆதரிக்க வேண்டும் என்று குரல் எழுப்பிக் கொண்டும் இருக்கிறோம்.

அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தில் என்ன இருக்கிறது என்று நம்மைப் போன்றவர்களுக்கு தெளிவாகத் தெரியாது ஆனால் ஆளும் இந்திய அரசுக்கும், மெளனமாய் வேடிக்கைப்பார்க்கும் இலங்கை அரசுக்கும் தெளிவாய்த் தெரியும் இந்த தீர்மானத்தை நிறைவேற்றுவதால் தமிழரின் ஆதாரக் குரலான தனித் தமிழ் ஈழம் என்பதை பெற முடியாது. அதுவுமில்லாமல் சர்வ தேச சமுதாயம் விவாதிக்கபோவது போர்குற்றங்களை விசாரிக்க சிங்கள பேரினவாத அரசு நியமித்த நல்லிணக்க குழு என்னும் கொலைகாரன் நியமித்த கொலைகாரக் குழு கொடுத்திருக்கும் அறிக்கையின் முடிவுகளை செயல்படுத்தக் கூறியும், மேலும் தெளிவாக விசாரிக்கக் கோரியுமே இவர்கள் நிறைவேற்றப் படும் தீர்மானம் கோரப்போகிறது...!

இப்படியான சூழலில் சில கேள்விகளை உங்களுக்காக இந்தக் கட்டுரை முன் வைக்கிறது...

1) போர்க்குற்றம் செய்த சிங்கள பேரினவாத அரசுக்கு இந்த தீர்மானம் நிறைவேற்றபட்டால் என்ன மாதிரி நெருக்கடிகள் ஏற்படும் என்று ஏன் நாம் ஒருவர் கூட ஆய்வு செய்யவில்லை?

2) இந்த தீர்மானம் நிறைவேறினால் தமிழ் ஈழ அரசு அமைய என்ன வாய்ப்புகளை சர்வதேச சமுதாயம் நமக்கு கையளிக்கப் போகிறது என்ற கேள்வி ஏன் நமக்கு எழவில்லை?

3) அத்தனை பெண்களை, முதியவர்களை, குழந்தைகளை கொன்றழித்த மாபாவிகளுக்கும் உடன் துணை புரிந்தோர்களுக்கும் என்னவிதமான தண்டனையை இந்த சர்வதேச வல்லாதிக்க நாடுகள் கொடுக்கப் போகின்றன?

இதற்கெல்லாம் பதில் எந்த தமிழனுக்காவது தெரியுமா? தெரியாதுதானே...? இந்திய ஊடகங்களின் தொடர் பரப்புரைகளால் நாம் இப்படி எல்லாம் கேள்விகள் கேட்க மறந்து இந்தியா ஆதரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை மட்டுமமே எழுப்பி வருகிறோம்? அப்படி ஆதரிக்காவிட்டால் ஆளும் காங்கிரஸ் தமிழர் விரோதகட்சியய் பார்க்கப்படும்....என்று மிரட்டியும் கொண்டிருக்கிறோம்...

நயவஞ்சக காங்கிரசுக்குத் தெரியும் இந்த தீர்மானத்தை நாம் ஆதரித்தாலும், எதிர்த்தாலும் இலங்கைக்கு எந்த ஒரு பாதகமும் இல்லை என்று...இருந்தாலும் இந்த நெருப்பினை ஊதி ஊதி இந்தியாவில் குறிப்பாய் தமிழர்கள் மத்தியில் பெரிதாக்கிய இந்த குள்ள நரி காங்கிரஸ்.....தாங்கள் இலங்கைக்கு எதிராக நடக்கமாட்டோம் என்பது போல ஒரு தோற்றத்தை எஸ்.எம். கிருஷ்ணா மற்றும் ப்ரணாப் முகர்ஜிக்கள் மூலம் பாரளுமன்றத்தில் அரங்கேற்றியது.

அதே நேரத்தில் இந்திய ஊடகங்களை குறிப்பாக தமிழக செயற்கைக் கோள் தொலைக்காட்சிகளுக்கான பிடியை மெல்ல தளர்த்தி விடவும் செய்து இது வரையில் இந்தியாவில் வெளியிடப்படமல் இருந்த கிட்டத் தட்ட தடை செய்து வைக்கப்பட்டிருந்த சானல் 4ன் இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற காணொளிகளை பரப்பிக் கொள்ள அனுமதியும் கொடுத்ததை அடுத்து தமிழக தனியார் தொலைக்காட்சிகள் தங்களின் தமிழர் ஆதரவுப் போக்கினை உணர்சிப் பூர்வமாக ஆனால் ரொம்பவே காலம் தாழ்த்தி காட்டிக் கொள்கிறோம் என்ற வெட்கம் இலலமல் காட்டி கொண்டன.

இதன் தொடர்ச்சியாக திமுகழக எம்.பிக்கள் யாருமே எதிர்பாராத விதமாக இந்தியா தீர்மானத்தை ஆதரிக்கவேண்டும் என்று புலிப்பாய்ச்சல் பாய்ந்தனர். இதன் பின்ணயில் இருக்கும் மிகப்பெரிய சூழ்ச்சி அரசியலும், காங்கிரஸ் கட்சியின் இராஜ தந்திர நடவடிக்கையையும் எம் மக்கள் அறிந்திருக்கவில்லை...!

இதோ....மார்ச் 23 மூன்றில் அமெரிக்கா கொண்டுவரபோகும் தீர்மானம் ஐ.நாவில் அரங்கேறப்போகிறது....! காங்கிரசும் திமுகவும் திட்டமிடப்பட்ட நாடக காட்சிகளின் மூலம் காய் நகர்த்தும் வேலைகளை தொடங்கி விட்டன...

இனி இந்தக்கட்டுரை கூறப் போவது எதுவும் நிகழாவிடில் நானும் உங்களோடு சேர்ந்து மிகவும் சந்தோசப்படுவேன் ஆனால் நடந்து விட்டால்.....துரோகிகளை, அடையாளம் கண்டு கொள்ள வேண்டியது நமது கடமையாகிறது.

தந்திரம் 1

மார்ச் 20 ஆம் தேதி கூடும் திமுக உயர்நிலைக் குழுவில் ஆளும் காங்கிரஸ் கட்சி ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்காவிடில் திமுகழகம் ஆதரவை வாபஸ் பெற்றுக் கொள்ளும் என்று முடிவெடுக்கப்படும்.( ஏற்கெனவே இந்தியா ஆதரிக்கும் என்ற தகவல் கிடைத்ததன் பேரில்)

இந்தியா ஆதரவு தெரிவித்தவுடன் ஆளும் காங்கிரஸ் கட்சி தமிழர்களுக்காக இந்த நிலைப்பாட்டை எடுக்க திமுக தான் காரணம் என்று மக்களிடையே பரப்புரை செய்து தங்களின் தமிழர் ஆதரவு போக்கினை வலுப்படுத்திக் கொள்வதோடு காங்கிரசடோன உறவை தொடரவும் இந்த தீர்மான ஆதரவு நிலைப்பாட்டையே காரணமாய்ச் சொல்லும்.

தந்திரம் 2

ப. சிதம்பரத்தின் வற்புறுத்துதலின் பேரில் இந்திய அரசு இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்தது என்று செய்திகள் வரும் (இதற்கு தூபம் போடும் வகையில் செய்திகள் வர ஆரம்பித்து விட்டன).

தமிழர்களுக்கு எந்த வகையிலும் உதவப் போகாத போலியான ஒரு தீர்மானத்தை ஆதரித்ததை பெரிதாக விளம்பரம் செய்து தமிழ் நாட்டில் ப. சிதம்பரத்தை வைத்து தன்னுடைய அடுத்த இன்னிங்ஸை காங்கிரஸ் ஆடத்துவங்கும். ஈழத்தமிழர்களுக்காக இந்தியா ஐ.நாவில் இலங்கையை எதிர்த்ததை பரப்புரை செய்து தமிழர் ஆதரவு என்னும் அரசியலை அரங்கேற்றி மக்களை வளைக்கும். இதற்கு திராவிட முன்னேற்றக் கழகமும் முழு மூச்சாய் உதவி செய்யும்.

ஏற்கெனவே அலங்கோல ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் அதிமுகவை வேரோடு சாய்த்தெறியும் திமுக பிரகாசமான எதிர்கால அரசியலில் இன்னும் வேகமாய் முன்னேறிச் செல்லும்...!

மக்களாகிய நாம் என்ன செய்வோம்...?

இந்த இராஜதந்திர அரசியலில் சிக்குண்டு அன்னை சோனியாவின் காங்கிரசு மீண்டும் ஆட்சிக்கு வந்தால்தான் நாடு நலம் பெறும், நல்லாட்சி நடை பெறும், தமிழர்கள் வாழ்வார்கள்...(அதுதான் ஐ.நாவிலேயே இலங்கைக்கு எதிராய் வாக்களித்து விட்டார்களே..!!!) என்றெல்லாம் பேசிக் கொண்டு ஈழப்பிரச்சினையையும், அங்கே நிகழ்த்தப்பட்ட இன அழிப்பையும், வக்கிர கொலைகளையும் மறந்து விட்டு....

ஆளும் இந்திய (2013க்கு அப்புறமும்) காங்கிரஸ் நடத்தும் போலி நாடங்களைப் பார்த்து மகிழ்ந்தும், கொந்தளித்தும் கொண்டு ஆட்டு மந்தைகளாய்

' பாரத் மாத கீ ஜெ.....' என்று கோசம் போட்டுக் கொண்டு நம்து இந்திய தேச உணர்வை தொடர்ந்து காட்டிக் கொண்டிருப்போமே அன்றி....

" ஏண்டா நாய்களா.................கொத்து கொத்தாய் என் இனம் செத்து விழுந்தப்ப என்னாடா செஞ்சு கிழிச்சீங்க.....இப்ப வந்து ஆடுறீங்க ??????" என்று கேட்கவா போகிறோம்....தேவா. சு


பின் குறிப்பு: ஆட்சிப் பொறுப்பில் ஏறியதிலிருந்து தமிழர் ஆதரவுப் போக்கு நாடக காட்சியமைப்புகளில் அதீத கவனம் செலுத்திக் கொண்டு தனது நிர்வாகத் திறமையின்மையால் தமிழக மக்களை தத்தளிக்க வைத்துக் கொண்டிருக்கும் தமிழக ஆளும் அதிமுக அரசு.....


பிரதமருக்கு கடிதங்களை தொடர்ச்சியாக அனுப்பிக் கொண்டும்...இலங்கையை எதிர்த்துக் கொண்டும் தனது ஈழ ஆதரவு வேசத்தை மிக கவனமாகவே போட்டுக் கொண்டிருக்கிறது..

கடந்த ஆட்சியில் எதிர்கட்சியாக அறியப்பட்ட அதிமுக என்னும் பெருங்கட்சி, ஈழப் போரின் போது எந்தவித அழுத்தமான போராட்ட முன்னெடுப்புகளையும் எடுக்காமல், போர் என்றால் மனிதர்கள் மரிக்கத்தானே செய்வார்கள் என்று கூறிய சவுடால் பேச்சுக்களையும் நாம் மறக்கலாகாது...!
Saturday, March 17, 2012

தேடல்....17.03.2012!
ஏதோ ஒரு புள்ளியை நோக்கி நகரும் மெல்லிய விளக்கொளியாய் நகரும் உள்ளமையோடு உடலென்னும் மாற்றமெய்தும் பிண்டத்தோடு சேர்ந்து பயணிக்கிறேன். நான் யாரென்று கேட்பவர்களிடம் இன்னாரென்ற பொய்களைப் பகிர்ந்து, பகிர்ந்து, உடலின் இன்பங்களையும் துன்பங்களையும் அனுபவித்து அதன் சாரத்தை ஏந்திக் கொண்டு ஏதோ ஒரு விடியலுக்காய் வாழ்க்கை செலுத்தும் திசையில் பறந்து கொண்டிருக்கிறேன்.

நேற்றைய உண்மைகள் இன்றில் பொய்யாய் மாறி நாளைய பொய்களை இன்று உண்மைகளாய் தொடர்ந்து பகிர்ந்து கொண்டிருக்கும் மடமையை ஏற்றுக் கொண்டு எப்போதும் ஏதோ ஒன்றை சொல்ல நினைத்து, சொல்லி, அப்படி சொல்லிய விடயங்களில் திருப்தியுறாமல் மீண்டும் மீண்டும் சறுக்கி விழுந்து கொண்டே இருக்கிறேன். நிசப்தத்தின் சுவையை நான் பருகி இருந்தும் பேரமைதியின் சாயலோடு நான் சுகித்திருந்தும், இன்னமும் என்னை பேசவும் எழுதவும், மனிதர்களோடு அளாவளாவச் செய்து கொண்டிருக்கும் கர்மாவின் ஆளுமையினை, ஏதோ ஒரு செயலின் விளைவினை என்னால் தடுக்கவே முடியவில்லை.

என்னுள் உயிரென்றும், உணர்வென்றும் உடலாய் இயங்கிக் கொண்டிருக்கும் இந்த சக்தி ஏதோ ஒரு கடும் தாகத்தில் ஏதேதோ வலுவான செயல்களைச் செய்து ஓங்கி அடித்து அதிகாரமாய் வாழ்ந்து, அடிப்பட்டு, அந்த அனுபவ வலிகளைச் செரித்துக் கொள்ள இந்தப் பிறப்பென்ற ஒன்றாய் மலர்ந்திருக்கிறது. ஒரு பேருந்துக்காய் காத்திருக்கும் பத்து நிமிட இடைவெளியில் அவசர அவசரமாக பருகும் தேநீர் போல வேக வேகமாய் நான் கடந்து கொண்டிருக்கிறேன் இந்த பிறப்பின் சம்பங்களை...

பிடித்து நின்று இங்கே வாழ்வதில் அர்த்தமொன்றுமில்லை என்று தெளிவாக தெரியும் போதே சக ஜீவராசிகளுடன் ஒரு சுமூக வாழ்கையை வாழ்ந்து விட்டுப் போகவேண்டும் என்ற யாக்கையின் விளைவுகளையே ஒரு பிச்சைக்காரனைப் போல எதிர்பார்த்து எதிர்பார்த்து பயணிக்கிறேன்.

அழுத்தமாய் பல சூழல்கள் என் உச்சி முகர்ந்து முகவாய் பிடித்து கண்களை ஊடுருவி ஒரு தாயின் வாஞ்சையோடு தலைகலைத்து மார்போடு என் முகம் சேர்த்து மகனே சமப்பட்டுப் போ, என் பிள்ளையே நீ ஆசுவாசப்படு, மெளனத்தில் நீ கரைந்து போ என்று நெஞ்சு தடவி என் உயிரை வருடிக் கொடுத்து, சுவாசத்தை சீராக்கி, உடல் கடந்த உணர்வு நிலைக்கு கைப்பிடித்து கூட்டிச் சென்று இங்குதான் நீ இருப்பாய், இதுதான் உடல் கடந்த வாழ்க்கையில் எதிர்ப்பார்ப்புகள் அற்ற ஏகாந்தத்தில் பாலினங்கள் கடந்து, அசையும் அசையா வஸ்துக்கள் தாண்டிய உணர்வுப் பெருவெளி என்று கற்பித்துக் கொடுத்தும் இருக்கின்றன.

இன்னபிற சூழல்கள் முகத்தில் நேராய் அறைந்து உதடுகள் கிழிந்து போக உடலெல்லாம் முட்களால் கீறி இரணப்படுத்தி, எட்டி நெஞ்சில் உதைத்து வலியென்னும் உடல் வேதனையை ஆழமாகச் சொல்லி அழுத்தமாய் திடப்பட்டு, கோபத்துக்குள்ளும், சந்தோசத்துக்குள்ளும், காமத்திற்குள்ளும், காதலுக்குள்ளும், கடவுள் என்னும் மாயைக்குள் திளைக்க வைத்தும் விடுபட வைத்தும், பந்த பாசங்களை நெஞ்சுக்குள் நிறுத்தி வைத்து அவற்றின் மூலம் மாய உணர்வுகளை மனதுக்குள் ஏற்றி வைத்து, பிறப்புகளுக்கு சந்தோசப்பட்டும், இறப்புகளுக்கு கதறி அழுதும், வஞ்சிப்புகளுக்கு ரெளத்திரம் கொண்டும் நகரச் சொல்லிக் கொடுத்துக் கொண்டும் இருக்கின்றன...

மனதை கடந்து நிற்க அறிந்த எனக்கு மனிதர்களைக் கடக்க முடியாதபடி பிறப்பிலேயே சூட்சும முடிச்சுக்கள் இட்டு என்னை உயிருள்ள பிண்டமாய் வெளித்தள்ளி இருக்கிறது இந்த இயற்கை. தன்முனைப்பு என்னும் கொடும் விசத்தை கடந்து நிற்கையில் தன் முனைப்புகள் கொண்ட மனிதர்களோடு வாழ்வது மிகக் கொடுமையானது.

மனிதர்களின் கோபங்களும் ஆச்சர்யங்களும், சந்தோசங்களும், தேடல்களும் எதிர்பார்ப்புகளும் நான் பல ஜென்மங்களில் கண்டது. நான் என்று இங்கே கூறுவது எனது உடலோ அல்லது இந்தப் பெயரோ அல்லது பதவியோ அல்ல எனக்குள் உள் நின்று அசையாமல் எல்லா நிகழ்வுகளின் சாரத்தையும் வாங்கிக் கொள்ளும் ஒரு சக்தி.

அது எப்போதும் அப்படியே இருந்திருக்கிறது. அதன் வீரியத்தால் ஏதேதோ அனுபவங்கள் தங்கி இருந்த இடத்துக்கும் வஸ்துக்கும் ஏற்றார் போல ஏற்பட்டு அதன் சாரம் மட்டும் பதிவுகளின்றி ஒரு புரிதலாய் வாங்கிக் கொள்ளப்பட்டு இருக்கிறது. இது எப்படி என்றால் ஒரு முள் குத்திய உடன் காலில் ஏற்படும் வலியை உடல் வாங்கி அனுபவித்து கிரகித்துக் கொள்கிறது அது பதிவாய் மூளையில் பதிந்து போய் விடுகிறது. வலியை உள்வாங்கி அதனால் ஏற்பட்ட அனுபவங்களை உள்ளுக்குள் ஏற்பட்ட மாற்றங்களை வார்த்தைகளால் விஸ்தாரிக்க முடியாது. வலிக்கிறது என்று சொல்ல முடியும் ஆனால் வலி கொடுத்த உணர்வுகளை எத்தகையது என்று விளக்க முடியாது..

ஆழ்ந்த உறக்கத்தை எப்படி சொல்லிக் காட்டுவது அது உடலுக்கு ஏற்பட்ட அனுபவமெனில் விஸ்தாரிக்கலாம் ஆன்மாவின் அனுபங்களை விஸ்தாரிக்க முடியாது. வலி உடலின் அனுபவம் அதனால் ஏற்பட்ட உணர்வு ஆன்மாவின் அனுபவம். காமத்தில் இயங்கும் போது உடலின் செயல்பாடுகளை விவரிக்க முடியும் நான்கு பாகம் புத்தகம் கூட எழுத முடியும் ஆனால் உச்சத்தை உச்சம் என்னும் நான்கு எழுத்துகளுக்குள் தேக்கி விட முடியாது அது எப்படி இருந்தது என்று பகிர இயலாது. அது ஆன்ம அனுபவம். தாகமும் பசியும் உடலின் தேவை, ஆனால் உணவையும் தண்ணீரையும் அருந்திய பின் ஏற்படும் நிறைவு ஆன்மாவின் அனுபவம்...

இப்படி வாழ்க்கையின் நகர்வுகளில் ஆன்ம அனுபவத்தை மிகுதியாக தேடித் தேடி செயல் புரிந்து, புரிந்து ஆன்ம நிறைவினை எட்டிப் பிடிக்கும் இடத்தை வார்த்தைகளில் கொண்டு வர இயலாது. உடலின் தேவைகளை, மனதின் ஆசைகளை லாவகமாக திருப்பி அடித்து அதை ஆன்ம அனுபவமாக மாற்றிக் கொள்வது ஒரு வித்தை. எதிர்பார்த்து கட்டுக்களுக்குள் நின்று செய்யும் செயல்கள் வெறும் உடலின் அனுபவமாய் மாறி கடை வாயில் எச்சில் ஒழுகும் நாயாய் வாயில் இரத்தம் வரும் வரையில் எலும்பினை கடித்து இழுத்துக் கொண்டிருப்பதற்கு சமம்.

பக்தியும் கடவுளும் மனதின் தேவைகள் எனில் கடவுளரைக் கடந்த சடங்குகளைக் கடந்த, மதங்களை அதன் தத்துவங்களைக் கடந்த இடம் மிக மிக உயிர்ப்பானது, பசுமைனாது. இந்த இடத்தை எட்டிப் பிடிக்கும் போதுதான்....

ஒரு சந்தோச சங்கீதம் நம்முள் கேட்க ஆரம்பிக்கிறது. காற்றில் தலையசைக்கும் செடியாய், மழையில் சொட்ட சொட்ட நனையும் ஒரு மரமாய், இடுக்குகளில் கண் மூடி சுகமாய் தூங்கும் ஒரு பூனையாய், அதிகாலையில் சிலிர்த்து எழும் ஒரு சேவலாய் வாழ்க்கையின் இயல்புகளோடு கலந்து வாழ்ந்து அதை விட்டு வெளியேறுகையில் எந்த ஒரு கோரமான அனுபவங்களும் அலைக்கழிப்புகளும் இன்றி விரல் நகம் களைவது போல உடல் களைந்து செல்ல முடியும்.

இன்னமும் மதங்களைப் பிடித்துத் தொங்கிக் கொண்டும் கடவுளைக் கொடுமையான தண்டிப்பவராக எண்ணி பயந்து கொண்டும் மன இறுக்கத்தோடு யாரோ ஒருவர் என்னை தண்டிப்பார் என்று பயந்து பயந்து வாழ்வதில் எனக்கு சம்மதமில்லை. பக்குவப்படாத வரையில் கடவுளும் மதங்களும் இங்கே அவசியமாகின்றன.

புளியங்காய் பழுத்த பின் அந்த ஓட்டிற்கு யாதொரு அவசியமும் பயனும் இல்லை. அதே நேரத்தில் ஒரு காலத்தில் அந்த பழத்தை அந்த ஓடுதான் காத்தது என்பதையும் மறுப்பதற்கில்லை. இந்தப் புரிதல் வரும் வரை மனிதன் ஏதேதோ சொல்லி, அழுது புரண்டு பல கதைகளையும் தத்துவக் குப்பைகளையும் பேசி நகரவேண்டியதுதான்....

அதுவும் நியதிதான்.

யாரும் யாரையும் மாற்ற இயலாது. நான் சொல்லி ஒருவன் மாறினான், அவன் சொல்லி நான் மாறினேன் என்பது எல்லாம் சுத்தப் பொய். அவர் கூறினார், மாறும் தன்மை என்னில் இருந்தது என் விழிப்புணர்வு நிலையில் நான் ஆராய்ந்து பகுத்தறிந்து அறிவுக்கு எட்டும் இடத்தில் நாமே மாறுகிறோம். இதுவும் நியதிதான்...

பல பரிமாணங்களில் பயணிக்கும் வாழ்க்கையில் ஒரு மொட்டாய் வெடித்து, மெல்ல மெல்ல மலர்ந்து, கடும் வெயிலையும், குளிரையும் அனுபவித்து .....மெல்ல மெல்ல கருகி....சப்தமில்லாமல் சருகாகி மண்ணோடு மண்ணாகிப் போவேன்.....அவ்வளவே....

நான் இருந்தேன் என்பதும் உண்மை....இல்லை என்பதும் உண்மை....!

நான் நகர்ந்து கொண்டிருக்கிறேன்....


தேவா. சு


Thursday, March 15, 2012

ராஜபக்சே என்னும் மிருகமும் திட்டமிட்ட இன அழிப்பும்...!
உறங்காத இரவாக கடந்த இரவு அமைந்து போனதில் எனக்கு யாதொரு வருத்தமுமில்லை. எரிச்சலான கண்களை கடந்து உள்ளுக்குள் பரவி நிற்கும் நெருப்பின் வெம்மையில் எங்கணம் வரும் உறக்கம்...?

துபாய் நேரப்படி 2:55 அதிகாலைக்கு சானல் 4ன் வீடியோ காட்சிகளுக்கு விழிகளை கொடுத்து விட்டு சொல்ல முடியாத வார்த்தைகளோடு இதோ என் ஆதங்கத்தை எழுத்தாக்க வந்திருக்கிறேன்....! ஆமாம் சாமானியத் தமிழனாகிய என்னைப் போல எத்தனையோ பேர்கள் தங்களின் ஆதங்கங்களை, வலிகளை கண்ணீராகவும், கூக்குரலாகவும், எழுத்துகளாகவும், நீண்ட நெடிய மெளனங்களாகவும், சித்த பிரமை பிடித்தவர்களாக உலகின் எல்லா மூலைகளிலும் வெளிப்படுத்திக் கொண்டுதான் இருப்பார்கள்....

ஜனித்து விழுந்த பொழுதில் 'அம்மா....' என்று கத்திய தாயின் கூக்குரலை கேட்டுக் கொண்டே " ங்ங்கா...! என்று வீறிட்டு...ம்ம்மா என்று என் தாய் மொழியில் சப்தமிட்டு இந்த உலகோடு பந்தப்படுத்திக் கொண்டவர்கள் கொண்டவர்கள் நாம். உயிரோடு சேர்ந்து உச்சரிப்பாக உள்ளுக்குள் உணர்வாய் ஊறிப்போன ஒப்பற்ற ஒரு மொழி பேசும் மிக நீண்ட வரலாற்றுக்கு சொந்தக்காரர்கள் நாம்....

இதோ நம் சொந்த இனம் காப்பாற்ற வக்குகள் அற்று கொடும் அரக்கர்களால் நம் பக்கத்து தேசத்தில் கொன்றழிக்கப்பட்ட போது, அதற்கு நாம் சார்ந்திருக்கும் இந்தியா என்னும் தேசமும் துணை நின்ற போது, கபட குள்ள நரி மூளைகள் கொண்ட பிறப்பில் குற்றமிருக்கும் தமிழர்கள் என்ற பெயரிட்டுக் கொண்ட பேடிகள் எல்லாம் அதிகாரத்திலும் அரசியல் போகத்திலும் இருந்து கொண்டு கொடியவர்களுக்கு துணை போன போது....

ஊமைகளாய் எல்லாவற்றையும் வேடிக்கைப் பார்க்கும் வெகு ஜன மக்களில் நாமும் இருந்தோம். ஒப்பற்ற வீரம் செறிந்த மானுடக் கூட்டத்தின் உரிமைப் போரட்டத்தை ஓநாய்கள் எல்லாம் ஒன்று கூடி தோற்கடித்ததை காலத்தோடு சேர்ந்து நாமும் சாட்சியாய் கண்டு கொண்டோம். ஒரு உயிர் அல்ல, இரு உயிர் அல்ல... லட்சோப லட்சம் உயிர்கள் ஈழ மண்ணிலே அடித்து நொறுக்கி துவம்சம் செய்யப்பட்டு, பச்சிளம் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என்று கொன்றழிக்கப்பட்டதை கனத்த இதயத்தோடு நம் மரணம் கடந்தும் நமது நினைவுகள் ஏந்திதான் செல்லும்....

எம் மக்களை எல்லாம் சண்டையில்லாத பகுதி என்று திட்டமிட்டு ஒரிடத்தில் குவித்து, கொத்துக் கொத்தாய் கொன்றழித்திருக்கும் சிங்களவனின் இனமே ஜென்ம ஜென்மாய் இனி சபிக்கப்பட்ட ஒரு இனமாய் போகட்டும். அவனுக்கு உடன் துணை நின்றோர், மற்றும் ஈழ மக்களை வைத்து அரசியல் செய்து எச்சில் சோறு தின்று சுகபோகங்களை பதவிகளின் மூலம் அனுபவிக்கலாம் என்று கணக்குப் போடும் தமிழக, இந்திய அரசியல்வாதிகள் அத்தனை பேரும் நாசமாய் போகட்டும்....

அழுது அழுது கண்ணீர் வரண்டு போய் விட்டது உறவுகளே...! இனி நீதியைக் கேட்டு நாம் யாரிடமும் செல்ல வேண்டியது இல்லை. இந்தியாவில் எவன் காலில் விழுந்து கதறினாலும் அவன் ஈழத்தை வைத்தும், ஈழ மக்களின் துன்பங்களை வைத்தும் அரசியல் செய்யும் பிச்சைக்கார பிழைப்பை செய்யத்தான் பார்க்கிறான். சானல் 4ன் வீடியோ காட்சிகள் யாரோ ஒரு வெள்ளைக்காரனால் எடுக்கப்பட்டு நியாயங்களைப் பற்றி பேசுகிறது ஆனால் நான் சார்ந்திருக்கும் இந்திய தேசத்தின் அதிகாரவர்க்கமோ....கொலைகாரனோடு உறவு கொண்டாடிக் கொண்டு இரக்கமற்ற அரக்க மனிதர்களாக நடந்து கொள்கிறது.

இந்திய தேசத்தின் பிராதான மந்திரிகளான, மன்மோகன் சிங், பிரணாப் முகர்ஜி, எஸ்.எம். கிருஷ்ணா, மற்றும் ப.சிதம்பரம் போன்றவர்கள் வீட்டில் நடக்கும் எதிர்மறை நிகழ்வுகள் அவர்களுக்கு வலி என்றால் என்ன என்று கோரமாய் பாடம் புகட்டட்டும். ராஜபக்சேயும், கோத்தபயேவும் எவ்வளவு கோரமாய் மடிகிறார்கள் என்பதை சொல்ல முடியாத வியாதிகளையும், வலிகளையும், வேதனைகளையும் தாங்கிக் கொண்டு வந்தேறி சோனியா பிராட்டியார் பார்த்து ரசிக்கட்டும்....

ஈழ விடுதலைப் போரை பயங்கரவாதிகளின் போர் என்று வர்ணிக்கும் நாக்குகளுக்கு சொந்தக்காரர்கள் எல்லாம் சத்தியத்தை அறிய மறந்து பித்தர்களாய் தெருவெங்கும் திரியட்டும். அம்மா, அப்பா, மனைவி, பிள்ளைகளோடு களத்தில் நின்று கடைசி வரை போராடிய ஒரு மாவீரன் பேசும் மொழியைப் பேசும் பேறு பெற்றேன் என்பதிலும் அவன் பிறந்த ஒரு இனத்தின் விழுதாய் நானும் நீங்களும் இருக்கிறோம் என்பதிலும் நாம் பெருமிதப்பட்டுக் கொள்ளலாம். ஒரு தலைவன், மக்களோடு மக்களாக களத்தில் நின்று கடைசி வரைபோராடியிருக்கிறான் என்றால் அவனது பராக்கிரமம் எப்படியானது? வீரம் எத்தகையது....?

அவனா(ரா) பயங்கரவாதி...?

பிரபாகரன் என்ற மாவீரனோடு சேர்ந்து ஒட்டு மொத்த தமிழினமும் வரலாற்றில் நின்று விட்டது. இந்த உலகில் கடைசித் தமிழன் என்று ஒருவன் இருக்கும் வரை அவன் கூடவே பிரபாகரன் என்னும் பெயரும் எப்போதும் நிலைத்து நிற்கும். தமிழன் என்று சொன்னால் அனிச்சையாக எல்லோருக்கும் பிரபாகரன் என்ற பெயரும் கூடவே நினைவுக்கு வரத்தான் செய்யும்.

அன்பான தமிழக அரசியல்வாதிகளே, அரசியல் கட்சிகளைச் சார்ந்த அறிஞர் பெருமக்களே.....! மத்திய அரசிடம் போய் இனியும் பிச்சை கேட்காதீர்கள். டர்பனுக்குள் தலையையும் மனித நேயத்தையும் சேர்த்தே மறைத்துக் கொண்டு பதவிக்காய் பிச்சைப் பிழைப்பு பிழைக்கும் மன்மோகன் சிங்குகளிடமும், வந்தேறி சோனியாவிடமும் இனி கையேந்தி நிற்காதீர்கள்....! இனியாவது சுயமரியாதையான தமிழர்களுக்கான அரசியலை நேர்மையாய் முன்னெடுத்துச் செல்லுங்கள்...!

உலகமே மொழியற்று திரிந்த போது அறிஞர்கள் கூட்டத்தைக் கொண்டு முச்சங்கம் வைத்து நடத்திய பெருங்கூட்டம் நாம்.. இன்று பிச்சைக்காரர்களாய் பாரளுமன்றத்தில் கூச்சலிடுகிறோம்...கேட்பார் யாருமுண்டா?

பனிரெண்டு வயது பாலகனான தம்பி பாலச்சந்திரனை துளைத்த துப்பாக்கி தோட்டாக்களுக்கு கூட வாயிருந்தால் கதறி அழுதிருக்கும்...! அவன் நம் தமிழ்ப் பிள்ளை அல்லவா? அவன் மட்டுமா எத்தனையோ ஆயிரக்கணக்கான சிறார்கள் வெளியேயும், கருவிலேயும் வைத்து அழிக்கப்பட்டு இருக்கிறார்களே....???!

ஈழம் என்பது வேறு நாட்டவர் பிரச்சினை என்று கூறும் மாண்பு கெட்ட போக்கினை விட்டு விட்டு அது தமிழர் பிரச்சினை, அது நமது தொப்புள் கொடி உறவுகளின் பிரச்சினை என்ற ரீதியில் இனியாவது பார்ப்பீர்களா?

சர்வதேச சமுதாயத்தினை கடைசிவரை உள்ளே விடாமலேயே, பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் தமிழர்களை மொத்தமாக செல்லவிட்டு கூண்டோடு அழித்துக் கொன்றிருக்கும் இலங்கை அரசோடு கை கோர்த்துக் கொண்டிருக்கும் இந்திய பேரரசில் எதிர்காலத்தில் எவ்வளவு வலிமையான பங்கெடுப்பை தமிழகம் தன்னிச்சையாக எடுக்க முடியும் என்று பார்த்து பார்த்து காய் நகர்த்தவேண்டியதுதான் தமிழக அரசியல் கட்சிகளின் செயல்பாடாய் இருக்க வேண்டும்.

தமிழர் பிரச்சினையை மையப்படுத்தி ஒட்டு மொத்த தமிழர்களின் குரலும் எந்த கூட்டு அரசியலும் இன்றி தன்னிச்சையாக பாரளுமன்றத்தில் இடிமுழக்கமாய் முழங்க வேண்டும். அத்தகைய கட்சிகளை தமிழர்கள் அடையாளம் கண்டு தேர்ந்தெடுக்க வேண்டும்.

ஆளும் இத்தாலிய காங்கிரஸ் இந்திய தேசம் என்ற போர்வயீல் இன்று தமிழர்களைக் கிள்ளுக் கீரையாகத்தான் நினைக்கிறது. அதற்கு இராமேஸ்வரத்தில் கொல்லப்பட்ட மீனவர்களைப் பற்றியும் கவலை இல்லை, ஈழத்தில் கொல்லப்பட்ட லட்சோப லட்சம் மக்களைப் பற்றியும் கவலை இல்லை....காரணம் காலம் காலமாக கூழைக் கும்பிடு போட்டு கூட்டணி அரசியலுக்குள் குடும்பம் நடத்தும் கோழைகளாக அவர்கள் நம்மைப் பார்த்ததுதான்...

இனி....

ஈழத்தில் நடத்தப்பட்ட சமூக அநீதிகளைப்பற்றி காங்கிரஸ் அரசிடம் மன்றாடுவதையும், கெஞ்சுவதையும் விட்டு விடத்தான் வேண்டும். ஈவு இரக்கமற்றவர்களிடம் போய் கருணையைப் பற்றி பேசி பிரயோசனம் இல்லை....!காங்கிரஸ் இலலத ஒரு அரசு இந்தியாவை ஆள்வதை நிர்ணயம் செய்ய வேண்டிய தலையாய கடமை தமிழனாய் பிறந்த ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. மானமுள்ள ஒவ்வொரு தமிழனும் இப்படித்தான் சிந்திக்க வேண்டும்.

இன்னமும் சர்வதேச சமுதாயத்தில் மனித நேயம் உள்ள மனிதர்கள் இருக்கிறார்கள், சானல் 4 போன்று இன்னும் எத்தனையோ மனித நேயம் கொண்ட மனிதர்கள் புற்றீசல் போல வந்து கொண்டே இருப்ப்பார்கள், அநீதிக்காய் சில நாடுகள் கூட்டு சேரும் போது நீதிக்காய் கூட்டு பல நாடுகள் ஒன்று சேரும்.....அதன் நீட்சியில்

தமிழீழத் தாயகத்தின் ஒப்பற்ற விடியல் மலரும்...!

கண்ணீரினைத் துடைத்தெறிந்து விட்டு அறிவுப் புரட்சி செய்யவேண்டிய காலம் இது. சிங்களப் பொருட்களை எந்த வடிவத்தில் வந்தாலும் தமிழர்கள் நுகரக் கூடாது. ஒருங்கிணைந்த இலங்கையே சிறந்தது என்று எவன் கூறிக் கொண்டு வாக்குகள் கேட்டு வந்தாலும், தமிழர்களுக்கான சிறந்த வாழ்க்கையை ஒருங்கிணைந்த இலங்கையில் அமைத்துக் கொடுப்போம் என்று அவன் கூறினாலும் மெளனமாய் மனதுக்குள் அவனை காறி உமிழ்ந்து விட்டு உங்களின் அடுத்த வேலையைப் பார்க்க சென்று விடுங்கள்....

சொந்த நாட்டின் மக்களை கொன்று குவித்தவர்கள், நமது அக்கா, தங்கை, அம்மாக்களின் கற்பழித்த கொடும் நாய்கள், நமதுபிள்ளைகளை கொன்றழித்த மாபாவிகள் ஒருக்காலமும் நமது மக்களுக்கு சம உரிமையான வாழ்க்கையை கொடுக்கமாட்டார்கள் என்பதை தெளிவாக உணருங்கள்...!

இந்தகட்டுரையின் மூலம் வேறு ஒரு திட மனோநிலைக்கு நாம் சென்றாக வேண்டும் என்ற சிறு நெருப்பினை பற்ற வைத்திருக்கிறேன்....! இனி நாம் செய்யவேண்டியது எல்லாம்....

தமிழர்களுக்கான, தமிழர் நலம் பேண்டும் உண்மையான ஒரு அரசியல் கட்சியின் பின் திரளுவதும்.....காங்கிரஸ் என்னும் ஒரு இயக்கத்தை தமிழகத்திலிருந்து வேறோடு அழித்தொழிப்பதும்தான்....அதை எம் இளைய சமுதாயம் சர்வ நிச்சயமாய் செய்து முடிக்கும் என்ற நம்பிக்கையை ஏந்திய படி கனத்த இதயத்தோடு கட்டுரையை நிறைவு செய்கிறேன்.

" கொலை வாளினை எடடா!
மிகுகொடியோர் செயல் அறவே!
குகைவாழ் ஒரு புலியே!
உயர் குணமேவிய தமிழா!
தலையாகிய அறமே
புரிசரி நீதி உதவுவாய்! சமமே
பொருள் சனநாயகம் எனவே
முர சறைவாய்! "தேவா. சு

Saturday, March 10, 2012

சும்மா இரு... சொல் அற...!சப்தமில்லாமல் ஒரு மூலையில் அமர்ந்திருந்தேன். யாரோடும் எதுவும் பேசப் பிடிக்கவில்லை....எதுவும் தோணவும் இல்லை. சுற்றி இருந்த எல்லோரும் ஏதோ ஒரு வேலையைச் செய்து கொண்டிருந்தனர். எப்போதும் எல்லோருக்குள்ளும் ஏதோ ஒரு பரபரப்பு இருப்பதும் அப்படியான பரபரப்பிற்காய் ஏதேதோ இலக்குகள் வெளியில் காத்துக் கிடப்பதும் எனக்குப் புரிந்தது.

எனக்கு இந்த வாழ்க்கையில் பிடிப்பு ஏற்படாமல் ஏன் போனது...? என்பதற்கு தனிப்பட்ட காரணங்களை என்னால் எடுத்துப் பார்த்து கோர்த்து சொல்ல முடியவில்லை. பிடிக்கவில்லை...அவ்வளவுதான். என்னைச் சுற்றி எல்லோரும் பேசிக் கொண்டே இருக்கிறார்கள்...ஆனால் கவனிக்க கூட எனக்குப் பிடிக்கவில்லை.

பக்கத்து வீட்டு தாத்தாவுக்கு வயது 70 தாண்டிவிட்டது. அப்படி  அதிகம் வயதானதாலேயே தனக்கு எல்லாம் தெரியும் என்று வருவோர் போவோரிடம் எல்லாம் அலட்டிக் கொண்டு..... என் அனுபவம்தாண்டா உன் வயசு என்று இடைவிடாமல் சொல்லுவார்...

உலக அரசியலைப் ஒரு கை பார்க்கும் என் அக்கம் பக்கத்து வீட்டு அங்கிள்களும், என் அப்பாவும் தங்களின் கருத்துக்களை எல்லாம் உலக இறுதி உண்மைகளாக எப்போதும் அறிவித்துக் கொண்டு இருப்பார்கள். வாசித்த செய்திகள், அனுபவங்கள் கொடுத்த புரிதல்கள், மற்றும் தனக்குள் தோன்றும் கற்பனைகள் எல்லாவற்றையும் திரட்டி வைத்துக் கொண்டு ஒவ்வொரு மனிதனும் தன்னின் புலமையை பேச்சுக்களில் எடுத்து இயம்பி தன்னை மிகப்பெரிய அறிவாளியாக காட்டிக் கொள்ள இடைவிடாது முயல்கிறான்...

சரி நானும் இப்படி எல்லாம் என்னுள் நினைத்துக் கொள்கிறேனே..., அப்படி என்றால் நானும் பெரிய மேதாவியாய் என்னைக் காட்டிக் கொள்ள முயல்கிறேனோ...? ம்ம்ம்ஹும்..... நான் யாரிடமும் பேசவில்லை. யாரிடமும் பேச பிடிக்கவில்லை. நான் என்னுள் பேசிக் கொள்கிறேன். அதை அவ்வப்போது எழுதிப்பார்க்கிறேன். அவ்வளவுதான்...

எல்லோருக்கும் ஏதோ ஒரு கருத்து சொல்லவேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. அப்படியாய் சொல்லும் கருத்தில் பெரும்பாலும் மற்றவர்களைக் குறை சொல்லும் போக்கு மிகுந்திருக்கிறது. அப்படி குறை சொல்லும் போது மறைமுகமாய் தன்னை நல்லவன் என்று அறிவித்துக் கொள்ளும் ஒரு சுய தம்பட்டம் இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது...

அவ்வப்போது பிறரை பாராட்டவும் செய்கிறார்கள். அப்படி பாரட்டும் போது கூட வெகு சிலரே ஆத்மார்த்தமாக வியந்து, கைகொட்டி சிரித்து ஆச்சர்யமாய் ஒரு குழந்தையைப் போல வாய் பிளந்து பாரட்டுகிறார்கள். மிகையானவர்கள் பாராட்டும் இடம் என்பது... கூட...நான் பாராட்டுகிறேன், நான் எவ்வளவு பெரிய மனிதர் என்று பார்த்துக் கொள்ளுங்கள் உலகத்தீரே என்று அறிவிக்கும் பொருட்டே செய்கின்றனர்..

பகிர்தல் என்பதன் அர்த்தம் இங்கே தொலைந்து போய்விட்டது. ஒரு மனிதனுக்குள் தாக்கம் கொடுத்த விடயங்களை சக மனிதர்களிடம் பகிரலாம், நகைச்சுவையாய் அடுத்த மனிதரை சிரிக்க வைக்கும் கருத்துக்களைப் பகிரலாம், அல்லது புதிய தகவல்களை தெரிவிக்கும் வகையில் பகிரலாம்...

இப்படியாய் பகிர்தல் என்பது எதிராளிக்கு பயனுள்ள வகையில் இருக்க வேண்டும் என்ற தர்மத்தை மறந்து விட்டு....ஒலைப்பெட்டிக்குள் புகுந்த ஓணான் போல எல்லோரும் ஏதோ பேசிக் கொண்டு இருக்கிறார்கள்.

கற்றுக் கொள்ள நம்மைச் சுற்றி குறைவான மனிதர்களே இருக்கிறார்கள், ஆனால் கற்றுக் கொடுக்க நிறைய பேர்கள் இருக்கிறார்கள். சமூகத்தில் பாதிக்கப்பட்டிருக்கும் மனிதர்களை விட அவர்களுக்குச் சேவை செய்கிறேன் என்று கிளம்பியிருக்கும் மனிதர்கள் அதிகமாகத்தான் இருக்கிறார்கள். பகிர்தலில் தங்களின் அனுபவத்தையும் அறிவையும் பகிர யாரும் தயாரில்லை...

நீ இப்படி இரு...அல்லது அப்படி இரு...., இது தவறு, இது சரி, என்று புள்ளி விபரங்களை வளர்ந்திருக்கும் நவீன ஊடகங்கள் மூலம் தெரிந்து வைத்துக் கொண்டு ஒரு புலமை நாடகம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். பக்கத்து வீட்டுக்காரனையும் எதிர்வீட்டுக்காரனையும் யாரென்று தெரிந்து கொள்ளாமல், உறவுகளை சரியாக பயன்படுத்துவது எப்படி என்ற புரிதல் இல்லமால்....

சகோதரத்துவத்தையும் அன்பையும் பற்றி எழுதியும் பேசியும் என்ன லாபம் இருக்கிறது..?

நான் மெளனித்து விட்டேன். காரணம் எனக்கு அர்த்தமற்றப் பேச்சுக்களில் நேரத்தை விழுங்கும் அரட்டைகளில் அக்கறை கிடையாது. வாழ்க்கையில் எனக்கு ஒரு பிடிப்பு கிடையாது என்று சொன்னேன் அல்லவா...

ஆமாம் எதையும் தலைக்கு எடுத்துக் கொண்டு அதை பிடித்துக் கொண்டு கனமாய் நான் நகரவிரும்பவில்லை.  ஒரு மெல்லிய மனிதனாய், எளிதான வாழ்க்கையை வாழ்வதில் எனக்கு யாதொரு சிக்கல்களும் இல்லை. முரண்களை ஏற்படுத்திக் கொள்பவர்கள் நாமே....

இந்தக்கணத்தில் நான் இடும் முடிச்சு அடுத்த கணத்தில் எனக்கு இரணத்தைக் கொடுக்கிறது. இந்தக் கணத்தில் நான் முடிச்சிட்டுக் கொள்ளாமல் நகர்ந்து கொண்டே இருந்தால் எனக்கு வலிகளோ இரணங்களோ வரப்போவதில்லை...! புரிதலின்மையால் கடந்த கால முடிச்சுக்கள் கொடுத்திருக்கும் இரணங்கள் இன்னும் வலித்துக் கொண்டே இருக்கின்றன...அதே நேரத்தில் கடந்த காலத்தில் செய்த சில இலகுவான காரியங்கள் என்னை காற்றில் சிறகடித்துப் பறக்கவும் செய்கின்றன....

மெல்லிய ஒரு குறுஞ்சிரிப்பு எப்போதும் என் முகத்தில் வந்து அப்பிக்கிடக்கிறது. அது எப்படி சாத்தியமானது தெரியுமா....? மனிதர்களை எளிமையாக கர்வமின்றி கையாள ஆரம்பித்த போதுதான். இயல்பாய் சிரித்து ... அன்பை பகிர்ந்த போதெல்லாம், என் சுற்றமும் நட்பும் அதையே எனக்குச் திரும்பச் செய்தது....

ஒரு சில கரடு முரடான கடும் பாறைகளிடமும் நான் மென்மையாகவே நடந்து கொண்டிருக்கிறேன். தப்பித்தும் இருக்கிறேன். ஆமாம் பாறைகளில் வேகமாக மோதினால்...வலி நமக்குத்தானே அதிகம்...

உலகம் எப்போதும் போற்றியும் தூற்றியும் நகர்ந்து கொண்டே இருக்கிறது. மனிதர்கள் வருகிறார்கள், செல்கிறார்கள்...வாழ்க்கையும் ஓடிக் கொண்டே இருக்கிறது. கருத்துக்களால் என்னை யாரும் நிரப்ப முயலாதீர்கள்....அதே நேரத்தில் என் கருத்துக்களை ஏற்றுக் கொண்டுதான் ஆகவேண்டுமா என்றும் என்னிடம் கேட்காதீர்கள்....

என்னை ஒரு புத்தி சுவாதினமானவனாய் என்னைப் பாவித்துக் கடந்து சென்று விடுங்கள். எனக்கு பேச்சும் பிடிக்கவில்லை. பேசவும் பிடிக்கவில்லை.  உலகப்பிரச்சினைகளை உரசிப்பார்த்து அதை உங்களின் பொழுது போக்காய் ஆக்கிக் கொள்ளுங்கள்....

நான் வழியில் கிடக்கும் முட்களையும், கற்களையும் பொறுக்கி எடுத்துக் கொண்டே நகர்ந்து கொண்டிருக்கிறேன். தலை சிறந்த மனிதராய், ஊர் போற்றும் வள்ளலாய், புகழ் பெற்ற தலைவராய், மக்கள் மண்டியிட்டு வணங்கும் மிகப்பெரிய ஆன்மீக தலைவராய்.....

நீங்கள் வாழ்ந்து விட்டு வாருங்கள்....

நான் நினைவுக்குப்பைகளை தூர எறிந்து கொண்டே ஏதோ ஒரு சங்கீதத்தைப் பாடிக்கொண்டு என் வழியில் நகர்கிறேன்...! 

இப்படியாக......

நினைத்துக் கொண்டே இருந்த எனக்குள் எண்ணங்கள் எல்லாம் சட்டென்று ஒரு கணத்தில் நின்று போக.....சலனமில்லாத ஒரு பேரமைதி என்னை சூழ்ந்து கொண்டது. கண்கள் மேல் நோக்கி மிருதுவாய் சொருகிக் கொள்ள.....புறக்காட்சிகள் அறுபட....செவிவழிச் செய்திகளும் மூளைக்குள் சென்று பயனற்று மடங்கி மரித்து விழ...

சுவாசத்தின் சப்தம் மட்டுமே என்னைச் சுற்றி நிறைந்திருக்க.....அந்த விடுமுறை நாளின் மாலையை நான் இல்லாமல் நான் கடந்து கொண்டிருந்தேன்....பேச்சற்று...!


தேவா. சு
Monday, March 5, 2012

ஆகையால்....

அந்த கவிதையின் இறுதியில்
சூசகமாய் காதலைச் சொல்லியிருந்த
வரிகளை அவள் வாசித்துவிட்டு
என்னை காதலிக்கத் துவங்கியிருக்கலாம்;
வெறுக்கத் துவங்கியிருக்கலாம்
மெளனமாக இருக்கலாம்,
கோபமாக இருக்கலாம்,
சிரித்திருக்கலாம்;
புரியாமலேயே விழித்திருக்கலாம்;
எதிர்பார்த்திராமல் அழுதிருக்கலாம்;
மீண்டும் வேறு கவிதைக்காக காத்திருக்கலாம்;
அல்லது....
அந்த வரிகளை சாதாரணமாக
கடந்தும் போயிருக்கலாம்...;
ஆனால்...
நான் அவளுக்காக இன்னொரு
கவிதையை எழுதி விட்டு
மீண்டும் இறுதி வரியில்
அவள் என்னை காதலிக்கிறாளா..?
என்று அறிய முயலும்...
அர்த்தத்தோடு முடிக்க
முயன்று கொண்டிருக்கிறேன்...!


தேவா. சு


உதிரும் நினைவுகள்...

அந்தக் கனவில்தான்
உன்னை கடைசியாக நான் கண்டது;
மெல்ல தோள் சாய்ந்து
கைகளுக்குள் கை கொடுத்து
நெருக்கமான மெளனத்தை
இருவருமே மொழிபெயர்த்துக் கொண்டிருந்தோம்!

பெருவெடிப்பாய் விம்மி அழத்தோன்றிய
என் ஏக்கத்தின் நுனியில் அமர்ந்திருந்த
கண்ணீர்த் துளிகளில் கரிப்பாய்
பரவிக் கிடந்த என் காதலுக்கு
உன் உதட்டுச் சிரிப்பால் ஒத்தடங்கள் கொடுத்தாய்...

உறக்கம் தொலைத்து விழிகளை
வெறுமனே மூடிக் கொண்டு
உன் நினைவுகளோடு புரண்டு கொண்டிருந்த
பல கொடும் அரக்க ராத்திரிகள் கொடுத்த
கோரச் சுவடுகளை
உன் அருகாமையிலான அந்தப் பகல்
சாந்தமாய் கொன்று போட்டது....
தலை கோதி நீ பரவவிட்ட தாய்மையின்
அடர்த்தியில் உன் நினைவுகளைச் சப்பிக் கொண்டே
ஒரு குழந்தையாய் உறங்கியே போனேன்
சிறு விசும்பலோடு....
...
....
....
...
அதுதான் உன்னை கடைசியாக
நான் கண்ட கனவு...
பின் உன்னை சுத்தமாய் மறந்து விட்டேன்
இந்த கவிதையை எழுத ஆரம்பிக்கும் வரை...,
இதோ...
எழுதி முடித்து விட்டு
மீண்டும் விலகிச்செல்கிறேன்...
இன்னொரு நாள் உன் நினைவுகள்
வந்து என்னுள் படபடக்கலாம்....
அப்போது ஒரு கவிதையை எழுதி விட்டு
மீண்டும் ...
உன்னை மறந்து போகக் கூடும்...!


தேவா. சு


Saturday, March 3, 2012

கிழியட்டும் இத்தாலிய காங்கிரஸின் இந்திய முகமூடி....!

ராஜிவ் கொலை என்னும் ஒற்றை விடயத்தைக் கடந்து ஒரு நியாயமான காரணத்தை சொல்ல இயலுமா என் இந்திய தேசமே... உன்னால்...ஏன் நீ  கொலைவெறி பிடித்து மனிதர்களை கொன்றழித்த இலங்கை என்னும் ஒரு தேசத்தை ஆதரிக்கிறாய் என்பதற்கு....

உலகெங்கும் இருக்கும் மக்கள் புத்திகளால் மற்ற நாடுகளை நோக்கினாலும் பாரதம் என்னும் பழம்பெரும் தேசம் எப்போதும் தன் இதயத்தாலேயே மற்ற நாடுகளையும் மனிதர்களையும் பார்த்திருப்பதை யார் உனக்கு சொல்வார் இத்தாலிய மூளையால் சிதைக்கப்பட்ட என் உயிர் இந்தியாவே....?

வணிகம் செய்ய வந்தவன் மெல்ல, மெல்ல ஊடுருவி சற்றேறக்குறைய 300 வருடங்கள் ஆண்டிருக்கிறானென்றால் அங்கே வீழ்ந்து போனது இந்தியனின் வீரம் அல்ல விசுவரூபமெடுத்த் நின்ற அவனின் விருந்தோம்பலும், அயலானையும் நேசித்து நம்பிய நேசமும்தானே....! சொந்த நாட்டிற்குள் தனது பூட்ஸ் கால்களால் அழுந்தப் பதிந்த எதேச்சதிகார ஏகாதிபத்திய ஆட்சியை நடத்தி சொந்த நாட்டு மக்களையே அடிமைகளாக்கி வைத்திருந்த மனிதர்களை....

அஹிம்சை வழி கொண்டு, தடியடி வாங்கி, சகித்து சகித்து, அமைதி வழியில் போராடி பெற்ற காந்தியின் தேசமிது என்று நம்பித் தானே.. தென்கோடியில் வசிக்கும் மிகைப்பட பேர்களைக் கொண்ட தொன்மையான ஒரு தேசிய இனத்தின் மக்களாகிய நாங்கள் இந்தியர்கள் என்று எங்கள் குரல்வளைகள் கிழிந்து போக தொண்டை நரம்பு புடைக்க உணர்ச்சிகளை எங்கள் புத்தியில் வைக்காமல் உணர்வாய் இதயத்தில் வைத்து

நாங்கள் இந்தியர்கள்...! நாங்கள் இந்தியர்கள்...! நாங்கள் இந்தியர்கள்....! என்று பாரதத்தின் வட மூலையான காஷ்மீரமும் அதிர உரக்க கூச்சலிட்டோம்...!

புத்தனின் தேசமிது, கருணையின் பூமி இது என்று தாயின் முலைப்பாலோடு  சேர்த்து சேர்த்து இந்திய தேசியம் என்னும் தேசப்பற்றினை எமக்குள் ஊட்டி வளர்த்து, இந்திய தேசம் அநீதிக்குப் போகாது, இந்திய தேசம் சத்தியத்தின் சொரூபம், நமது தேசத்தின் சக்தி மிகுத்த வார்த்தை

 " சத்ய மேவ ஜெயதே " என்னும் வாய்மையே வெல்லும் என்ற அக்னி வார்த்தை....

நாங்கள் எப்போதும் சமாதானத்தை விரும்பும் ஒரு ஒப்பற்ற தேசத்தின் குடிமக்கள், எங்கள் வீரம் எல்லாம் எம்மைச் சீண்டுபவரின், அத்துமீறுபவரின் தலைகளைக் கொய்து போடவே என்று இறுமாப்புக்கள் கொண்டிருந்தோம்...! மகாத்மாவாய் இருக்கட்டும், அல்லது இந்திராகாந்தியாய் இருக்கட்டும், வட மாநிலங்களில் நடந்த தொடர் குண்டு வெடிப்புகளாய் இருக்கட்டும், பஞ்சாப் கலவரமாய் இருக்கட்டும்,   கார்கில் போராக இருக்கட்டும், பாராளுமன்ற தாக்குதலாய் இருக்கட்டும்...., பாகிஸ்தானோடான போராய் இருக்கட்டும், சீனாவோடான சீறலாய் இருக்கட்டும்....

நீ நேர்வழியில் நிற்பாய் என்றுதானே என் தேசமே எங்கள் குருதிகளை கொட்டிக் கொடுக்க கூட நாங்கள் தயாராய் நின்றோம்....

என்ன செய்தது என் தமிழினம்...? ராஜிவ் காந்தி என்னும் ஒரு தலைவரைக் விடுதலைப்புலிகள் கொன்றார்கள் என்ற குற்றச்சாட்டினை முன்னிறுத்தி அதுவும் அந்த கொலை வழக்கின் வேர்கள் எங்கெல்லாம் சென்றிருக்கின்றன, யாரெல்லாம் இதில் சம்பந்தப்பட்டவர்கள் என்று தீர விசாரிக்க வக்கில்லாத நீதித்துறையையும் புலனாய்த்துறையையும் வைத்துக் கொண்டு.....

ராஜிவ் படுகொலையின் போது தமிழகத்தின் தலைவர்கள் எல்லாம் உடனிருந்தும் குண்டு வெடித்த போது அந்த காங்கிரசு கட்சியின் மானமிகுத தலைவர்கள் எல்லாம் எப்படி ராஜிவ் காந்தியோடு உடன் இல்லாமல் போனார்கள் என்றெல்லாம் ஆராயமுடியாமல்.....

வழக்கினை இன்னமும் தெரு முச்சந்தில் நிறுத்தி முக்காடு போட்டு மூடிவிட்டு... முள்ளி வாய்க்காலில் ஒன்றரை லட்சத்திற்கும் மேலான எம் தமிழ் மக்களை அழித்தொழித்த ஈன அரக்கன் ஆளும் தேசத்தை போர்க்குற்றம் புரிந்த தேசம் என்று உலக நாடுகளின் முன்பு நீ அறிவிப்பாய் என்று பார்த்தால் ..

" மனித உரிமை மீறல்கள் தொடர்பாக எந்த ஒரு குறிப்பிட்ட நாட்டிற்கு எதிராகவும் தீர்மானம் நிறைவேற்றப்படுவதை ஏற்க முடியாது என்று..." சத்தியசீலனை போல நீ அதர்மத்தின் பக்கம் நின்று அறைகூவல் விடுத்திருக்கிறாய்....

இது நியாமா? நீதியா? சொல்லுங்கள் என் தேசத்தை காப்பேன், என் தேசத்தின் மக்களின் உணர்வுகளை மதிப்பேன் என்று சத்தியம் செய்து ஆட்சிப் பொறுப்பேற்ற ஆளும் காங்கிரசு கட்சியினரே....?

ஏழரை கோடி தமிழர்களும் மண்டியிட்டு இறைஞ்சினோம், தமிழினத்தின் இருபெரும் கட்சிகளான் திராவிட முன்னேற்றக் கழகமும், அண்ண அதிராவிட முன்னேற்றக் கழகமும் வலுவான கோரிக்கையை வைத்து மன்றாடின....

இந்திய முகமூடி அணிந்த இத்தாலிய காங்கிரசே..... ஏழரை கோடி தமிழர்களின் உணர்வுகளை நீ குழிதோண்டி புதைத்து விட்டாய்.....! உலகிற்கே மானுட நேயத்தையும், விருந்தோம்பலையும், கலைகளையும் கற்றுக் கொடுத்த ஒரு மிகப்பெரிய தேசிய இனத்தை நீ இனமாக பார்க்காமல், நீ தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கும் இந்திய தேசம் என்னும் பெயர்ப்பலகையின் ஆதாரப்பூர்வ குடிமக்கள் என்ற உணர்வை மதிக்காமால் எங்கள் உணர்வுகளை உன் அதிகாரம் என்னும் பூட்ஸ் காலால் போட்டு நசுக்கி விட்டாய்....

எம்மோடு இரத்த பந்தம் இல்லாத தேசங்கள் எல்லாம் அறிவிக்கின்றன.... இலங்கை ஒரு போர்க்குற்றம் செய்த நாடு....இலங்கை அதிபர் ராஜபக்சே ஒரு போர்க்குற்றவாளி....இலங்கையில் நடந்தது போர் அல்ல அது இன அழிப்பு என்று....

சத்திய தேசத்தின் முத்திரையோடு நீ மட்டும் இன்று இந்தியா என்ற முகமூடிக்குள் நின்று கொண்டு அதை ஏற்க மறுப்பது ஏன்...? என் தேசத்தின் ஆதார உணர்வு இரக்கம் என்பது, என் தேசத்தின் இதயத்துடிப்பு என்பது.....வீரத்தையும் தியாகத்தையும் ஒருங்கே கொண்டது என்பதான் என் தேசத்தின் வரலாறு....

இத்தாலியத்தின் ஆக்கிரமில் இதோ இன்று என் இந்திய தேசம் அடிமையாய் கண்ணீர் விட்டு கதறிக்கொண்டிருக்கிறது....! இத்தாலிய காங்கிரசின் அதிகார வரம்பிற்குள் இந்தியா என்னும் தேசத்தின் தொன்மயான வேர்கள் செத்துப் போய்விட்டன அல்லது கொன்றழிக்கப்பட்டன...! இந்திய தேசத்தின் சுயத்தை மாற்றிய இத்தாலிய காங்கிரஸ்.....சர்வ நிச்சயமாய் இந்த தேசத்திலிருந்து அழித்து ஒழிக்கப்பட வேண்டியது....

இறந்து போன ஐயா ராஜிவ்காந்தி உயிரோடு இருந்திருந்தால் கூட இந்த மாதிரியான சூழலில் சர்வ நிச்சயமாய் இலங்கையை போர்க்குற்றம் செய்த நாடு என்று அறிவித்து சாட்சியம் கூறியிருப்பார்....

காரணம்..ராஜிவ் காந்தி என்னும் மனிதர் ஒரு சுத்தமான இந்திய தாய், தந்தையருக்குப் பிறந்தவர்....ஆனால்.....இன்று....மாபியாவின் தேசத்திலிருந்து வந்த ஒரு சைத்தான் எம் தேசத்தின் சுயத்தை பிளந்தெறிந்து விட்டது. வரலாற்றில் வழமையாய் நிகழ்ந்தது போலவே காட்டிக் கொடுக்கும் எட்டப்ப இந்தியர்கள் இன்று அடிவருடிகளாக மண்டியிட்டுக் கிடக்கின்றனர்....

விழித்துக் கொள்ளுங்கள் எம் மக்களே....!

குழந்தைகளையும், கர்ப்பிணிகளையும், முதியவர்களையும், பெண்களையும், அப்பாவி பொதுமக்களையும் கொத்துக் கொத்துக்களாக குண்டுகளை வீசி கொலைசெய்தவனுக்கு ஆதரவு தெரிவுக்கும் இந்திய சோனியா காங்கிரசின் கொடும் முகத்தை நீங்கள் காணப்பெறுவீர்களாக.....

காணொளிகளில் எல்லாம் நமது அக்கா, தங்கைகளின் உடைகளைக் களைந்து அவர்களை நிர்வாணப்படுத்தி கற்பினைச் சூறையாடிய கொடும் விலங்குகளுக்கு அடைக்கலம் கொடுத்து ஆதரிக்கும் காங்கிரசு கட்சியின் கோரமுகத்தினை நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள்....

பள்ளிக்குச் செல்லும் சிறார்கள் பதுங்கு குழியில் ஒடுங்கிக் கொண்டிருக்கையில் குண்டு வீசிக் கொன்ற கொடிய ஈனர்களோடு கைகுலுக்கிச் சிரிக்கும் காங்கிரஸ் என்னும் அரக்கனை மனதிலே உறுதியாய் இறுத்தி வைத்துக் கொள்ளுங்கள்....

லட்சக்கணக்கான மக்கள் தங்களின் சொந்த மண்ணில் மனநிலை சரியில்லாதவர்களாக பிரஞையற்று நடைபிணமாக அலைவதையும், கருவில் இருக்கும் குழந்தைக்கு சொந்தக்காரன் தன் கணவனா இல்லை தன்னை சீரழித்த கொடும்பாவி சிங்களவனா என்று சிந்திக்க கூட திரணியில்லாமல் அலையும் தொன்மையான தமிழ் இனத்தின் கற்பு நெறி கொண்ட பெண்களையும் மனதிலே தேக்கி வைத்துக் கொள்ளுங்கள்....

ஐ.நா மனித உரிமைகள் மாமன்றத்தில் இந்தியா என்னும் என் தேசம் தமிழின அழிப்பு நடத்திய கொடியவன் ராஜபக்சேயை ஆதரிப்பதை வரலாறு கவனமாக தனது குறிப்பில் ஏற்றிக் கொள்ளட்டும்......

ஏனைய உறுப்பு நாடுகளான அமெரிக்க ஐரோப்பிய நாடுகளின் ஆதரவில் இலங்கை ஒரு போர்க்குற்றம் புரிந்த நாடு என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டு,. இலங்கை அரசின் மீது விசாரணை நடக்கட்டும் என்று அத்தனை தமிழகளும் உளமாற நம்புவோமாக....!!!!

கண்ணீரை எல்லாம் உள்ளுகுள் தேக்கி வைத்து இந்த கணத்தின் உணர்ச்சிகளை வெளியே சென்று விடாமல் அப்படியே அடைத்து வைத்து வருகின்ற பாரளுமன்றத் தேர்தலிலே....தமிழர்களாகிய நாம் அத்தனை பேரும்.....

காங்கிரசு கட்சியின் முகத்திரையை கிழித்து தமிழகத்தில் ஒரு இடம் கூட வரமுடியால் விரட்டி அடித்து இந்திய சமூகத்திற்கு முன்பு ஒரு மானமுள்ள தமிழர்கள் கூட்டம் நாம் என்பதை நிரூப்பதை நமது தார்மீகக் கடமையாகக் கொள்வோம்....என்ற சூளுரையோடு கட்டுரையை நிறைவு செய்கிறேன்....!

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் தர்மம் மறுபடியும் வெல்லும்...!


தேவா. சு.