Pages

Thursday, January 30, 2014

மடை திறந்து... தாவும் நதியலை நான்!


சொகுசு வாழ்க்கை  வாழ புரவிகள் ஒரு போதும் பிறப்பெடுப்பதில்லை. சொடுக்கி விட்டால் காற்றில் பாயும் வித்தை செய்ய பிறந்தவை சோம்பித்திரிந்தாதாய் சரித்திரமும் இல்லை. வாழ்க்கையே ஓட்டம் தான் என்று அறிந்து பிறந்தவை அவை. எந்தத் திசை என்று தெரியாமல் சொடுக்கி விட்டால் ஓடும் என் வார்த்தைகளையும் நான் புரவிகளைப் போலத்தான் கருதிக் கொள்வேன். குதிரையிலேறி பயணிக்கையில் ஏற்படும் கம்பீரமும் திமிரும், கர்வமும் எழுதும் போதெல்லாம் என் மீதேறிக் கொள்ளும். குதிரை ராஜவாகனம். கம்பீரத்தின் குறியீடு. விழுந்த நொடியில் மீண்டெழும் மிருகம் அது.

சாத்திரம் பேசுறாய்....கண்ணம்மா  என்றொரு புரவியொன்றிலேறி புரவியின் விருப்பத் திசையில் நான் பயணித்த கதையொன்று என்னிடம் இருக்கிறது. அதில் வரும் பத்மா இந்த சமூகத்தைச் சேர்ந்த சமகாலத்தை சேர்ந்த பெண் தான். அவள் காமத்தை பேசுகிறாள் அந்தக் கதையில் கற்பென்று மனிதர்கள் கட்டியெழுப்பியிருக்கும் பொய்யை தன் கால்களால் எட்டி உதைக்கிறாள்.  காமத்தைப் பற்றிய புரிதலற்றுக் கிடக்கும் பிண்டங்களின் புத்தியில் படிந்து கிடக்கும் ஆபாசக் கறைகளைப் பார்த்து காறி உமிழ்கிறாள். அவள் அவனுக்குப் பிடித்தவனுடன் கூடுகிறாள். கூடல் செய்யாத மனிதருண்டோ இப்பூமியில்..?  பின் ஏன் கூடலை கலை நயத்தோடு பேச மறுக்கிறீர் என்று ஒழுக்கக் கூரைகளில் ஏறி நின்று கூவும் சேவல்களின் குரல்வளைகளை நெறித்துக் கொன்றும் போடுகிறாள் அவள்.

திருமணத்திற்கு முன் காமம் தவறென்று சட்டம் இயற்றி இருக்கும் ஒழுக்க சீலர்களிடம் திருமணத்திற்குப் பிறகு வரைமுறையற்ற காமம் என்பது சரிதானா? என்று கேள்வியைத் தூக்கிப் போட்டு சதிராட விடுகிறாள். கண்ணகிகளுக்கு கற்பரசி என்று கோயில் கட்டி வணங்கியது பெண்களுக்குச் செய்த துரோகம் என்று சொல்லும் அந்த கதையின் நாயகி பெயர் பத்மா. வெறுமனே ஏதோ ஒரு பெயர் சூட்ட வேண்டம் என்று பத்மா என்று பெயர் சூட்டப்பட்டவள் அல்ல. மலர்ந்த செந்தாமரையை ஒத்த புத்தி கொண்டவள். அந்த புத்தியில் கிளர்ந்தெழுந்த ஞானம் கொண்டவள். இருப்பதை இயம்பும் செம்மை கொண்டவள். இருக்கும் சமூகம் சாக்கடையெனினும், சகதி நிறைந்த பார்க்க முடியாத இடமாயினும் தன் புரிதல் தண்டுகளால் உயர்த்திக் கொண்டு விரிந்து பரந்த்து சிரிக்கும் தாமரையாய் பரந்து விரிந்த வானின் முழுமையை வாங்கிக் கொள்ளும் திமிர் கொண்டவள்தான் பத்மா.

மாதவி கொண்டிருந்தது காதல். அந்தக் காதலினால் அவள் கொண்டது காமம். காதலால் நெகிழ்ந்தும் நெகிழ்ந்து அங்கே அனிச்சையாய் பூத்துச் சிரித்த காமத்தை போற்ற திரணியற்ற என் சமூகம் திருமணமென்னும் பந்தத்தில் தாலிக்கயிறு என்னும் அடையாளத்தைச் சுமந்து கொண்டு காமத்தில் தொடங்கும் முதலிரவும் அந்த காமத்தினால் பிறக்கும் காதலும் கொண்ட கண்ணகிகளை கற்புக்கரசி என்று போற்றச் செய்கின்றன. கண்ணகிகளை நீங்கள் போற்றிக் கொள்ளுங்கள் அதில் பிழையில்லை, ஆனால் தயவு செய்து மாதவிகளை ஏளனமாகப் பார்க்காதீர்கள்.

“ கண்ணகிகள் கற்பு பற்றி பேசிப் பேசி..
திருமண பந்தத்துக்குள் தேடும் காமத்தை
மாதவிகள் காதலாய் மெளனித்து..மெளனித்து...
காமத்துக்குள் எரித்துப் போடுகிறார்கள்
கண்ணகிகளை....”

என்று பேசும் பத்மாவை விளங்கிக் கொள்ள கொஞ்சம் நமக்குள் இருக்கும் திணிக்கப்பட்ட பொதுபுத்திகளை எல்லாம் தளர்த்திக் கொள்ளத்தான் வேண்டும். இருண்ட அறைக்குள் இருந்து இருந்து பயின்ற விழிகளுக்கு வெளிச்சம் கூசுகிறதென்று சூரியனை அணைத்து விடமுடியுமா…? அது போலத்தான் பழகிவிட்டதென்று இருளில் இருந்து கொள்கிறேன் என்பவர்களின் அறியாமையை தன் சுடர் மிகு அறிவால் விரட்டப் பார்க்கிறாள் பத்மா.

என் கதையில் பத்மா தன் காதலனோடு திருமணத்திற்கு முன் கூடுகிறாள். அந்தக் கூடலை எந்த ஒரு உறுத்துதலும் இல்லாமல் நளினமாய் சொல்லி முடித்த கதைதான் சாத்திரம் பேசுகிறாய் கண்ணமா என்னும் கதை. கண்ணமா சாத்திரம் பேசினால் யார் ஒப்புக் கொள்வார்கள்…? அதுவும் எப்போதும் தங்களை பூட்டி வைத்துக் கொண்டு பொய்விழிகளால் வாசித்து கருத்தெடுத்துக் கொள்ளும் மனிதர்களுக்கு எப்படி பிடிபடுவாள் என் கண்ணம்மா? 

எழுத்து.காமில் இந்தக் கதையை பகிர்ந்திருந்தோம். அந்தக் கதையை அந்தத் தளத்திலிருந்து நீக்கி விட்டு எனக்கு வந்த மின்னஞ்சலை உங்களிடம் பகிரத்தான் வேண்டும். ஏனென்றால் கலை என்பதை வக்ர உள்ளதோடு பார்க்கும் போது அங்கே படைப்பாளி சிதைக்கப்படுகிறான். மனிதர்கள் சிந்தித்து தெளிவுறா பக்கமாய் இருக்கும் காமத்தை நெருப்பில் நடக்கிறோம் என்று தெரிந்தே ஆபாசத்தை எட்டிப் பிடித்துவிடாமல் சொற்களை செதுக்கிய சிற்பியை சிரச்சேதம் செய்த எழுத்து. காமின் வன்முறையான மின்னஞ்சலை நீங்கள் பார்த்தே ஆக வேண்டும்.
இதோ….

“ 
எச்சரிக்கை

எழுத்து குழுமத்திலிருந்து பேசுகிறோம். 

http://eluthu.com/kavithai/174899.html

மேல்காணும் உங்களுடைய படைப்பை நங்கள் அழித்துவிட்டோம். இனிமேல் விதிமுறை மீறிய இது போன்ற படைப்புக்களை சமர்பிக்காதீர்கள். மீறினால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்

– யமுனா   ”

யாருக்கு எச்சரிக்கை செய்கிறீர்கள் சகோதரி…? வார்த்தைகளை மூளையிலிருந்து பிழிந்தெடுத்து வாசிப்பாளனை புதிய திசைக்கு அழைத்துச் செல்ல விரும்பும் படைப்பாளிக்கு நீங்கள் கொடுக்கும் பரிசுதான் இந்த எச்சரிக்கையா…..? கஜூராஹோவில் செதுக்கிக் கிடக்கும் சிற்பங்கள் எல்லாம் ஆபாசமா அல்லது கலையா? பாரத தேசத்தின் பரந்து விரிந்த பகுதிகளுக்குள் ஊடுருவிக் கிடக்கும் சனாதான தருமம் என்னும் வழிமுறையில் வடித்தெடுக்கப்பட்ட கோயிற் சிற்பங்களில் நிறைந்து கிடப்பது சமூகத் தீங்கா? அல்லது நளினத்தை எடுத்தியம்ப விரும்பிய கலையார்வம் கொண்டவனின் கலை படைப்பா…?

நீங்கள் என்னைப் போன்ற படைப்பாளிகள் மீது நடவடிக்கை எடுத்துதான் ஆகவேண்டும். ஆமாம்…சீர்கெட்டுப் போய்கிடக்கும் இந்த சமூகத்தில் அன்றாடம் நிகழ்ந்தேறும் பாலியல் வல்லுறவுகளைத் தட்டிக்கேட்டுப் போராட நாதியற்ற சமூகத்தில்….நீங்கள் என் போன்றோர் காமத்தை தெளிவாய் பயிற்றுவித்து புரிதலை இந்தச் சமூகத்தின் அடுத்த தலைமுறையினருக்காவது புகுத்தலாமே என்று எண்ணியதற்காக வேணும் நீங்கள் நடவடிக்கை எடுத்துதான் ஆகவேண்டும் சகோதரி. துலாக்கோல் போல் சீர்த்துக்கிப் பார்க்கும் திறம் வேண்டும் என்பதெல்லாம் வார்த்தைகளாகவே இருந்து விட்டுப் போகட்டும். தெளிவினை புகட்டும் கற்பு நெறி கொண்ட படைப்பாளிகளுக்கு நீங்கள் எச்சரிக்கை கடிதமெழுதி சீர்கெட்டுப் போகவிருக்கும் சமூக சீரழிவினை தடுத்து நிறுத்தியிருப்பதாய் நினைத்தும் கொள்ளுங்கள். அதில் தவறொன்றும் இல்லை ஆனால்…..

ஒரு கடிதத்தை எழுதி அனுப்பும் முன் அதை பெறும் நபர் யாராய் இருக்கக் கூடும் என்று சிறிதேனும் அனுமானம் கொள்ளுங்கள். உங்கள் எச்சரிக்கையும், நடவடிக்கையும் என்ன மாதிரியான எண்ண அதிர்வுகளை ஏற்படுத்தி எதிராளியை  காயப்படுத்தும் என்பதை சிந்தித்துப் பாருங்கள். ஒரு தளத்தின் நிர்வாகக் குழு என்பது சரி தவறுகளை தீர்மானிக்கும் வல்லமை கொண்டதுதான் என்பதில் மாற்றுக் கருத்துக்கள் கிடையாது என்னும் அதே நேரத்தில்….

ஒரு விசயத்தை எப்படி மறுப்பது, எப்படி உங்கள் தளத்தின் கொள்கையை நிறுவி சொல்ல விரும்பியதை நாகரீகமாய் சொல்வது என்பதை எல்லாம் யார் உங்களுக்குக் கற்றுக் கொடுப்பது….? தடித்த வார்த்தைகளையும் மிரட்டும் எழுத்து வடிவங்களையும் கண்டு சத்தியம் எப்போதும் பின்வாங்கிக் கொள்ளாது. சுற்றும் பூமியை எந்த சட்டம் போட்டும் யாரும் நிறுத்த முடியாது. பருவ காலங்களுக்கு பாடம் சொல்லிக் கொடுத்து வேறு சமயம் வா என்று யாரும் அறிவுறுத்தல் செய்யவும் முடியாது.

அதே போலத்தான் எம் மொழியும், எம் மொழியால் அகண்டு விரிந்த எம் அறிவும் பார்வைகளும், அதனால் விளைந்த தெளிவும் எம் உயிரோடு ஒட்டிக் கிடப்பவை. எரிமலைகள் ஒரு போதும் தீக்குச்சிகளைப் பார்த்து பயந்தது கிடையாது. பாட்டில் குற்றமுண்டு என்று கூறி இறைவனையே புறம் தள்ளி நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று உரக்க உரைத்த நக்கீரனின் நாவில் நின்ற எம் தமிழ்த் தாயே எம் எழுத்திலும் ஆட்சி செய்கிறாள் என்ற உண்மை உணர்க!

மன்னவனும் நீயோ வளநாடும் உன்னதோ 
உன்னையறிந் தோதமிழை ஓதினேன் - என்னை 
விரைந்துஏற்றுக் கொள்ளாத வேந்துண்டோ உண்டோ 
குரங்குஏற்றுக் கொள்ளாத கொம்பு (கம்பன்)
தேவா சுப்பையா…


Monday, January 27, 2014

நாளும் எனக்கொரு சேதி சொல்லும்..!


பிடித்தமான பெண்ணை சந்திக்க வருகையில் வரும் கவனத்தோடு எழுத அமர வேண்டியிருக்கிறது. மனக் கிறக்கத்தோடு பேசிக் கொண்டிருக்கையில் இடையில் வேறு எந்தத் தொந்தரவும் வந்து விடக்கூடாது. காதலோ, ஊடலோ அந்தக் கணத்தை கட்டெறும்புகள் வந்து மொய்ப்பது போல எந்த ஒரு மனிதத் தொந்தரவும் நம்மை தொட்டு விடக்கூடாது என்றுதான் காதலர்கள் ஒதுங்கிக் கொள்கிறார்கள். தங்களை எல்லா சூழல்களிடமிருந்தும் ஒளித்துக் கொள்கிறார்கள். மெரீனா பீச்சை மேம்போக்காக நான் சுற்றுவதுண்டு. நேரம் காலம் கிடையாது. இன்னும் சொல்லப் போனால் அது சுற்றுதல் கிடையாது. 

மேய்ச்சல்.

மேய்ச்சல் என்றால் என்ன தெரியுமா? அப்படியே அலைந்து  கொண்டிருப்பது. கிடைக்கும் தேவையானவற்றை வாய் வைத்து கடித்து இழுத்து புசித்து மென்று கொண்டே தினவெடுத்து திரிவது. மேய்ப்பனாயும் இருந்து கொண்டு மேய்பவனாயும் நான் இருந்திருக்கிறேன். காதலிப்பவர்களின் உலகமே தனிதான். அங்கே என்ன மிகுந்திருக்கும் எது நலிந்திருக்கும் என்று கணக்குப் போட்டே பார்க்க முடியாது. சொல்வதையே திரும்ப திரும்பச் சொல்லிக் கொண்டு...கெஞ்சிக் கொஞ்சி கிடக்கும் அந்த நிமிடங்கள் போலத்தான் சொர்க்கம் (என்ற ஒன்று இருந்தால்) இருக்க வேண்டும்.  அது அதிரகசியமானது. வெகு சுவாரஸ்யமானது. இன்னும் சொல்லப் போனால் ஏதோ ஒரு மையம் இல்லாமல் அங்கே பரிமாறுதல் நடந்து கொண்டிருக்கும். அங்கே அவனும் அவளும் மட்டுமே....பேசுபொருள், படுபொருள், கருப்பொருள் எல்லாமே.....

எழுதுவது எனக்கு அப்படித்தான் இருக்கிறது. மனிதர்களை விட்டு தள்ளி வந்து வெகு சுவாரஸ்யமாய் தட்டச்சு செய்ய ஆரம்பிக்கும் நொடி என்றோ ஒரு நாள் யாரோ ஒரு பெண்ணுக்காக காத்திருந்ததை புத்தியிலிருந்து ஒப்பிட்டுக் கொள்கிறது. ஆமாம் இரண்டும் ஒன்றுதான். இந்த உலகத்தின் அத்தனை சந்தோசங்களையும் நாம் ஒப்பிட காதலையும், காமத்தையும்தான் பெரும்பாலும் அளவுகோலாக வைத்திருக்கிறோம். இப்படி எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு எழுத ஆரம்பித்தவுடன்...வார்த்தைகள் சில நேரம் கோபித்துக் கொண்டு முரண்டு பிடிக்கும். காலையிலிருந்து கருக்கொண்ட ஒரு விசயம் அதை அப்போதே எழுதினால் என்ன என்று கன்னம் இடித்து கேள்வி கேட்டு ஒழுங்கெடுக்கும்.., என்னை விட உனக்கு இந்த வெளி வாழ்க்கை முக்கியமா என்ன? என்று சீறும்....

சமகால புற வாழ்க்கையைப் பற்றி ஏகாந்தத்திற்கு ஒரு கவலையும் இல்லை. இன்னும் சொல்லப் போனால் அதற்கு லெளகீகமே அனாவசியம். சிறகு அசைத்தால் பறக்க வேண்டும்.  பறந்து, பறந்து திசைகளற்று சுற்றித் திரிந்து விட்டு மீண்டும் நாம் கால் பதித்து பூமியில் இறங்கி நடந்து  வீடு திரும்புகையில் கத்தரிக்காய் என்ன விலை என்று பார்த்து வாங்க வேண்டி இருக்கும். பால் கேனை வாங்கும் போது தேதி பார்த்து வாங்க வேண்டும்...எக்ஸ்பயரி தேதி நாளையோ  அல்லது மற்றைய நாளோ இருக்கும் ஒரு பால் கேனை வாங்கிச்சென்றால் வீட்டில் இருக்கும்....எதார்த்தம் கன்னத்தில் குத்திக் கேள்விகள் கேட்கும்......”சொன்ன சாமான் அஞ்சு அதுல ரெண்ட மறந்துட்டு வர்றீங்க....?” என்று சொல்லி எதுக்குதான் நீங்க லாயக்கு என்பது போல ஜாலம் காட்டும்...., ஜாடை பேச்சு பேசும்...,

வண்டி சாவியை எங்கோ வைத்து விட்டு நாம் தேடிக் கொண்டிருக்கையில் கொஞ்சம் கூட கவனம்கிடையாது.... என்று நம் கவனத்தின் மீது கத்தி வைக்கும்..., இது போதாதென்று எத்தனை முறை அழைத்தாலும் நீ ஏன் என்னை திரும்ப அழைப்பதில்லை என்று நம் மறதியை தலையிலடித்து  நண்பர்கள் கூட்டம் நமக்குச் சொல்லும்....” கட்டுரை எழுதவோ கவிதை எழுதவோ உனக்கு நேரமிருக்கிறது....ஒரு போன் பண்ணி பேசினா என்ன கொறஞ்சா போய்டுவ...” உறவுகள் கோபமாய் கண்களை உருட்டும்....

இது எல்லாம் போக மாதம் மாதம் சம்பளம் கொடுக்கும் உத்தியோகம் எப்போதும் தோளில் அமர்ந்து கொண்டு செவியைக் கடித்துக் கொண்டிருக்கும். செய்யாமல் விட்டால் உன் ஏகாந்தத்தின் குடலை உருவி மாலை போட்டு விடுவேன் என்று லெளகீகம் மிரட்டலாய் கொக்கரிக்கும்.....

என்ன செய்ய....? எழுதுவது என்பது ப்ரியமான வேலையாய் இருந்தாலும்....கற்பனை உலகில் சஞ்சரித்து புற உலகின் தொடர்புகளை அறுத்துக் கொண்டு எழுத அமரும் ஒரு எழுத்தாளனுக்கு ஆயிரம் சங்கடங்கள் இருக்கத்தான் செய்கின்றன. எல்லா சூழலையும் சமப்படுத்தி வைத்து விட்டு எழுத அமர்ந்தால் இது காலையில் உனக்குள் விழுந்த விதை....இது நேற்றிரவு  நான் உனக்கு சொன்ன என்னுடைய வலி....இது முந்தாநாள் நீ  கண்ட கனவு....இது  அன்று படித்த புத்தகத்தின் தாக்கம் ....வரமாட்டேன் போ என்று எழுத்து முரண்டு பிடிக்கும்....என்னை பணப்பிசாசே எழுதுவதை விட உனக்கு என்ன வேலை....போ...போ.... லெளகீகத்தையே கட்டிக் கொண்டு அழு...என்று தன் கதவடைக்கும். 

லெளகீகத்திற்கு ஏகாந்த உலகம் எப்படி விளங்காதோ அதே மாதிரி ஏகாந்த உணர்வுகளுக்கு, எழுத வேண்டும் படைக்க வேண்டும் என்ற எண்ணத்திற்கு  லெளகீகம் சுத்தமாய் விளங்காது. இரண்டுக்கும் நடுவே ஒரு படைப்பாளி....சரி சமமாய் பயணிக்க வேண்டும். பொருள் இல்லாவிட்டால் ஏகாந்த உணர்வுகள் என்பதைக் கொடுக்கும் சூழல் வரவே வராது. அதே மாதிரி ஏகாந்த உணர்வு என்னும் கிளர்ந்த மன எழுச்சி இல்லாமல் நான் இருந்தால் நான் என்ற ஒருவனே இருக்க முடியாது. அப்போது லெளகீகம் என்ற பதமே அற்றுப் போகும். இரண்டும் வேண்டும். இரண்டையும் தட்டிக் கொடுத்து செல்பவர்கள் அல்லது அப்படி சென்றவர்கள் ஜாம்பவான்கள். வெற்றியாளர்கள்.

சமீபத்தில் நடந்து முடிந்த சென்னை புத்தகக் கண்காட்சியும் அதற்கு இள, திட, முதிர் எழுத்தாளர்கள் போட்டி போட்டு செய்த விளம்பரங்களும், கூட்டம் கூட்டமாய் சேர்ந்து கொண்டு குழு மனப்பான்மையோடு பிடித்தவர்களை ஏற்றிக் கொண்டதும், பிடிக்காதவர்களை இறக்கியதும், பதிப்பகங்களின் ஆளுமையும், எழுத்தாளர்களின் ராயல் டி பிரச்சினைகளும்... என்னைப் போன்ற எழுதிப் பழகுபவர்களுக்கு மிகப்பெரிய மிரட்சியைக் கொடுத்தன. சாதாரண வாசகனுக்கு எதை வாங்கிப் படிப்பது என்று மிகப்பெரிய ஒரு குழப்ப சூழலை இந்த புத்தக கண்காட்சி கொடுத்திருக்கக் கூடும். வாங்கிய புத்தகங்களை எல்லாம் பட்டியலிட்டுக் கொண்டு ஒரு கூட்டம், இது இது வாசிப்பில் இருக்கிறது என்று ஒரு கூட்டம்...., இதை எல்லாம் தவற விடாதீர்கள் என்ற பட்டியல் ஒரு பக்கம்..., பிரபல எழுத்தாளர்களும் பதிப்பகத்தாரும் பரிந்துரை செய்யும் பட்டியல் இன்னொரு பக்கம்... என்று இணையம் அல்லோலகல்லோலப்பட்டது.

கிட்ட தட்ட புத்தகம் வாசிக்கும் பழக்கம் இல்லாதவர்கள் எல்லோரும் எதற்குமே லாயக்கு இல்லை என்று குற்ற உணர்ச்சி கொள்ளும் அளவிற்கு இந்த சோ கால்ட் படைப்பாளிகளின் விளம்பரங்கள் இருந்தன. என்னைப் பொறுத்த அளவில் எந்த எழுத்தை ஒரு வாசகன் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை படைப்பாளிகளும், பதிப்பகத்தாரும் முடிவு செய்யக் கூடாது.

ஒரு நல்ல புத்தகம் சந்தையில் அறிமுகமானால் மட்டும் போதுமானது. மீதி அதன் விற்பனையை அந்த புத்தகமே செய்து கொள்ளும். வாங்கி வாசித்தவர்கள் அதற்கு தன்னிச்சையாய் விளம்பரம் செய்வார்கள். எழுதுவது கலை. அதை வியாபாரம் செய்ய எழுதுபவனே முன் நிற்கக் கூடாது. அது வேறு யாரோலோ செய்யப்படவேண்டும். ஆரம்ப கட்டத்தில் ஒரு எழுத்தாளன் தன்னை அறிமுகம் செய்து கொள்ள தன் கையிருப்பில் தன்னை வெளிப்படுத்தி கொள்ள நினைப்பதில் தவறில்லை என்றாலும் வியாபாரம் செய்வதும் விளம்பரம் செய்வதும் அவனாயிருக்கக் கூடாது. 

எது தோணுகிறதோ அதை எழுதும் பக்குவத்தை, தாக்கம் கொடுத்த நிகழ்வுகளை எழுத்தாக்கும் திறனை.......வியாபாரம் கெடுத்து விடுகிறது. வியாபாரம் வேறு, கலை வேறு, படைப்பது வேறு, சந்தைப்படுத்துவது வேறு. எத்தனை புத்தகம் விற்கும் என்ற எண்ணத்தில் எழுத அமரும் ஒருவன் தன் வருமானத்தை மையப்படுத்தி நகர்கிறான். அங்கே ஒரு திட்டமிடுதல் வந்து விடுகிறது. அது படைப்பை சீர்குலைக்கும். என் திருப்தியில் எழுதினேன்....நான்கு புத்தகம் விற்றது என்றாலும் நல்லது. இதுதான் நான் சார்ந்திருக்கும் சமூகம். இந்த சமூகம் எதை விரும்புகிறதோ அதை என்னால் எழுத முடியாது. எனக்கு என்ன தோன்றுகிறதோ எந்த திசையில் என் மனப்புரவி அலைகிறதோ அதை நான் படைப்பேன். இந்த இறுமாப்பு இல்லாத கலைஞன்...வயிற்றுப் பிழைப்புக்காய்...எழுத்து என்ற பெயரில் உங்களிடம் தன் தந்திரத்தையே முன் வைக்கிறான்.

பிழைப்பு வேறு எழுத்து வேறு.... என்று பயணிக்கும் போது... எழுத்து அங்கே எழுத்தாக தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது.

பிறகென்ன.....

உடையார் படித்து முடித்து ராஜராஜத்தேவரின் மரணத்தையும், பஞ்சவன்மாதேவியின் மரணத்தையும் தாங்க முடியாமல் திக்பிரமை பிடித்துப் போய் கிடக்கிறேன். உடையார் படிக்கும் போது நிறைய இடங்களில் அலுப்பு வந்தது எனக்கு, பாலகுமாரனின் டச் விரல் விட்டு எண்ணும் இடங்களில்தான் இருந்தது. அது பற்றி பின்வரும் நாட்களில் எழுதுவேன். வாசித்து முடித்தவுடன் நிறைய செய்திகளை சொல்லி என்னை வெவ்வேறு திசைகளுக்கு விரட்டியிருக்கிறார் என் குரு பாலகுமாரன் என்றுதான் எனக்கு தோன்றியது. உடையாரின் இறுதியில் கங்கை கொண்ட சோழன் வீறு கொண்டு எழுகிறார். ராஜராஜச் சோழனின் ஆட்டம் முடிந்த பொழுதில் இராசேந்திர சோழனின் ஆட்டம்  தொடங்குகிறது....! 

தஞ்சை கோயிலில் இருக்கும் யாளி வரிசைகளைப் பற்றி அறிந்து பின் அவற்றை தேடி இணையத்தில் பார்த்து, இன்னும் அதிகமாக யாளிகள் பற்றி வாசித்துக் கொண்டிருக்கிறேன். அடுத்த கட்டுரையில் நம் புராணங்களில் வரும், கோயில்களில் இருக்கும் யாளி என்னும் மிருகத்தைப் பற்றி என் பார்வையை பதிகிறேன்...! 


ப்ரியங்களும் நன்றிகளும்...தேவா சுப்பையா...
Sunday, January 19, 2014

காலமென்னும் நதியினிலே...!


எழுதும் போது பாலகுமாரன் சார் எவ்வளவு  கஷ்டப்பட்டு இருப்பாரோ தெரியவில்லை.....ஆனால் அதைப் படித்து முடிக்க நான் கிட்ட தட்ட 2 வருசம் ஆகிவிட்டது. உடையார் ஆறாவது பாகத்தைப் முடித்து விட்டு அதை விட்டு விலகி வர முடியவில்லை. விடுமுறைக்கு வீட்டுக்கு வந்து பின் மறுபடி கல்லூரிக்கோ இல்லை வேலைக்கோ வேறு ஊருக்கு கிளம்பும் போது ஒரு மாதிரி ஏக்கமாக இருக்குமே அது மாதிரி இருந்தது. புத்தகத்தை எடுத்து மடக்கி வைக்க மனதே வரவில்லை.அது கதையல்ல ஒரு வாழ்க்கை. அழகிய ஒரு கலாச்சாரம். ராஜராஜசோழன், பஞ்சவன் மாதேவி, இரேஜேந்திரச் சோழர், பிரம்மராயர் கிருஷ்ணர் ராமன் அவருடைய மகன் அருண்மொழிப் பட்டன், வல்லவராயர் வந்தியத் தேவர், பெருந்தச்சர் குஞ்சரமல்லன், வினோதகப் பெருந்தச்சன்...., 

எல்லாவற்றுக்கும் மேலாக கருவூர்த் தேவர்... கதையின் ஆதர சக்தியாய் இருக்கும் நிசும்ப சூதனி....இப்படியாய் விரிவடைந்து கொண்டே செல்லும் ஆதிக்கம் நிறைந்த பாத்திரப்படைப்புகள் முதல் தெருவில் சாதாரணமாய் வணிகம் செய்யும் மனிதர்கள், அவ்வப்போது சண்டையிடும் மறவர்கள் என்று மனம் முழுதும் மனிதர்கள் வியாபித்து நின்று கொண்டிருக்கிறார்கள்.

முழுதாய் இந்த நாவலை வாசித்து முடித்த பின்பு ஒரு நாவல் எப்படி எழுதப்படுகிறது? அதன் நகர்வுகள் என்ன மாதிரியாக இருக்கிறது? எப்படி ஒரு கதையை நெய்து கொண்டு செல்வது, பாத்திரப்படைப்புகளின் கூர்மை எப்படி இருக்கவேண்டும்..? எடுத்துக் கொள்ளும் களமும் சூழலும், செய்தியும் என்ன மாதிரியான தாக்கத்தை வாசகனுக்குக் கொடுக்க வேண்டும்? ஒரே நேர்கோட்டில் இல்லாத பல்வேறு தளங்களில் கதை பயணிக்கும் போது எப்படி அதை முடிச்சுட்டு கோர்வையாக சொல்ல வேண்டும்..? எதைப் பேச வேண்டும்...? எதை விட வேண்டும்...? எந்த இடத்தில் ஆதரக் கருத்துகளை தரவுகளின் அடிப்படையில் பேச வேண்டும்......? எந்த இடத்தில் கற்பனையைச் சேர்க்க வேண்டும்..? பல்வேறு பட்ட பாத்திரப்படைப்புகளின் அடிப்படையில் பார்வைகளைப் பதியும் போது அந்தப் பாத்திரப்படைப்போட தனித்தன்மையை எப்படி வெளிப்படுத்திக் காட்டுவது.....என்பதை எல்லாம் கற்றுக் கொள்ள முடிந்தது.

இது எல்லாவற்றுக்கும் மேலாக சிறுகதை, அனுபவக் கட்டுரைகள், சமூகம் சார்ந்த சிந்தனைகள் என்பதை சாதரணமாக உள்ளுக்குள் தோன்றும் தாக்கங்களின் அடிப்படையில் படைத்து விட முடியும். இதற்கு ஓரளவிற்கு அனுபவமும் அந்த அனுபவம் கொடுத்த புரிதலும், தெளிவும் அன்றாட வாழ்க்கையில் நம்மைச் சுற்றி நிகழும் விசயங்களை உற்று நோக்கும் கூர்மையும் மட்டும் இருந்தால் போதும். கூடவே நிறைய புத்தகங்களை வாசிக்கும் போதும், நல்ல திரைப்படங்களை பார்க்கும் போதும் நமக்கு நிறைய செய்திகள் உள்ளுக்குள் தோன்றும் அதன் அடிப்படையிலும் நாம் ஏதோ ஒன்றை எழுதி விட முடியும்.

இப்படித்தான் இவ்வளவு நாள் நான் என்னுடைய வலைத்தளத்தில் எழுதி வந்திருக்கிறேன்....ஆனால் இவற்றை எல்லாம் கடந்த ஒரு அர்ப்பணிப்பும், உழைப்பும், படைக்க வேண்டியதின் பொருட்டு ஒரு தேடலும் வேட்கையும் வேண்டும் என்பதை நிறைய மூத்த எழுத்தாளர்களின் படைப்புகளின் மூலம் நான் கற்றுக் கொண்டிருக்கிறேன். உடையார் ஒரு வரலாற்று புதினம் மட்டுமல்ல.....பாலகுமாரன் என்ற மனிதரின் கடும் உழைப்பு என்பதை உணர முடிந்தது. ஒரு எழுத்தாளன் வியாபாரியாகவும் தன்னை வரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. இப்படியான வியாபரத்தில் தன் சுயத்தை இழந்து விடாத ஒரு தெளிவும் மிக மிக அவசியமாயிருக்கிறது. 

சமகாலத்தில் நிறைய பேர்களுக்கு எழுதும் ஆசை வந்திருக்கிறது. தற்போது சென்னையில் நடக்கும் புத்தக கண்காட்சியில் நிறைய இளம் எழுத்தாளர்களின் புத்தகங்கள் வெளியாகி சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கின்றன. எழுத்தாளனுக்கு என்று கட்டியமைக்கப்பட்டிருந்த தொன் மரபுகளை எல்லாம் இளையர்கள் இன்று சர்வ சாதரணமாய் உடைத்துப் போட்டிருக்கிறார்கள். இலக்கியம் என்பது பாமரனுக்கு வெகு தூரமானது என்பது போன்ற மாயப் பிம்பங்கள் வரும் காலங்களில் இந்த எழுச்சியினால் வெகு நிச்சயமாய் கலைந்து போய்விடும். பிளாக் என்னும் வலைத்தளத்தில் நமக்குப் பிடித்தது பிடிக்காதது  என்று எல்லாவற்றையும் பதிவு செய்து கொண்டிருந்த எனக்கு....

என் எழுத்து ஒற்றை பரிமாணத்தில் ஒரே ஒருவனின் பார்வையாய் மட்டும் இது இருக்க கூடாது என்று தோன்றிய இடம்தான் எனது பரிணாம வளர்ச்சி என்று நினைக்கிறேன். நிறைய புத்தகங்கள் வாசிக்கப்படாமல் என்னிடம் இருக்கின்றன. நிறைய மனிதர்களைப் பற்றியும் படிக்க வேண்டி இருக்கிறது. பொருள் ஈட்ட வேண்டி ஓடும் ஓட்டம் ஒரு நாளின் மிகுதியை விழுங்கி விடுகிறது. நம்மைச் சார்ந்திருக்கும் குடும்ப உறவுகளோடு செலவிடும் நேரம் மீதியை விழுங்கி விடுகிறது இதற்கு அப்புறமாய் இந்தப் பரந்து விரிந்து கிடக்கும் வாழ்க்கை சமுத்திரத்திற்குள் நான் மூழ்கித் திளைக்க வேண்டும். யாரோ ஒருவன் தெரியாமல் ஒன்றும் சொல்லவில்லை...கற்றது கையளவு கல்லாதது உலகளவு என்று.....இங்கே நான்(ம்) கற்றது கையளவு கூட கிடையாது...என்பதுதான் உண்மை.

தானியம் பொறுக்கும் குருவியின் கூர்மையோடு, தேர்ந்த சிற்பி ஒரு கல்லை உயிராக்கும் சிரத்தையோடு செதுக்கும் சிற்பத்தைப் போன்று இனி எழுத வேண்டும் என்று தோன்றுகிறது. ஏனோ தானோ என்று எழுதிச் செல்வதிலும் பொருள் ஈட்டுவதற்காய் நிறைய பேரை ஈர்க்கும் வகையில் வசீகரச் சித்து விளையாட்டுக்கள் விளையாடவும் எனக்கு விருப்பமில்லை. பெண்ணின் அவயங்களைப் பற்றி வக்ரமாய் எழுதுவதோடு இல்லாமல், தொடர்ச்சியாய் இயல்பாய் பேசுகிறேன் பேர்வழி என்று அபத்தங்களை தனது பேஸ்புக் சுவற்றில் கிறுக்கிக் கொண்டிருக்கும் ஒருவருக்கு ஏராளமான ரசிகர்கள். 

அவரது புத்தகத்தை ஒரு முன்னணி பதிப்பகமும் வெளியிட்டு விட்டது. அதற்கு விளம்பரம், விழா என்று பணம் புகுந்து விளையாடியது அங்கே...!ஈக்கள் இனிப்பை மட்டும் தேடிச் செல்வதில்லை என்பதையே இந்த நிகழ்வு எனக்கு உணர்த்தியது. ஒரு எழுத்தாளன் தரமான படைப்புகளைக் கொடுக்க வேண்டும். என் புத்தகம் மட்டும் விற்க வேண்டும் என்பதைக் கடந்து எதை நான் இங்கே பதிவு செய்கிறேன் என்பதும் மிக முக்கியமாகிறது. எனது எழுத்து நான் வாழ்ந்த கலாச்சாரத்தின் பிரதிபலிப்பு. எத்தகைய ரசனை கொண்ட மக்கள் வாழ்ந்தார்கள் எதை ரசித்தார்கள் என்பதற்கான சான்று. அடுத்த தலைமுறையினர் சிலாகித்துப் பேச இங்கே அற்புதமான உணர்வுகளை நாம் விட்டுச் செல்லவேண்டும். ஒவ்வொரு படைப்பாளிக்கும் இந்த தார்மீக கடமை இருக்கிறது. நல்ல படைப்புகளே தனது சந்ததிகளை வழிநடத்திச் செல்கிறது.

என்னுடைய வலைத்தளத்தை வாசிக்கும் நண்பர்கள் உங்களின் அனுபவங்களை என்னோடு பகிர்ந்து கொள்ளத் தயங்காதீர்கள். தாக்கம் கொடுத்த நிகழ்வுகளையும் பகிரலாம் என்று நீங்கள் நினைக்கும் அனைத்துச் சம்பவங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்....ஏன் தெரியுமா?

எழுதுவது என்பது தனக்குத் தெரிந்ததை ஊருக்குச் சொல்லிச் செல்வது மட்டும் கிடையாது. அகண்டு பரந்து விரிந்த இந்த பிரபஞ்சத்தில் அமைதியாய் சுற்றிக் கொண்டிருக்கும் இந்த பூமியில் எல்லா உயிராகவும் இருந்த பார்க்க வேண்டிய ஒரு பெருவேட்கை எழுத்தாளனுக்கு இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். நான் பல நாட்கள் ஒரு பசுவாய் மாட்டுக் கொட்டகையில் நின்றிருக்கிறேன். இரவுகளில் உறங்கக் கண் மூடும் பொழுதில் ஈக்கள் உடலின் மீது ஏறி விளையாட, வாலால் அவற்றை விரட்டிக் கொண்டு, தோலை உலுக்கி அவற்றை உடல் விட்டு உதிர்த்துக் கொண்டும்.....ஈரமண்னில் கால் மடக்கி அமர்ந்து கொண்டு எண்ணங்கள் ஏதுமில்லாமல் இரைப்பையிலிருக்கும் உணவை மீண்டும் வாயில் எடுத்து அரைத்துக் கொண்டே.....

கண் மூடி லயித்திருந்திருக்கிறேன்.

ஒரு தெரு நாயாய் பலர் கல் எறிய ஓடி இருக்கிறேன்.  மனிதர் உணவு கொடுத்து தலை தடவும் போது தோன்றும் இனம் புரியாத பரவசத்துக்காய் வால் குலைத்து என் உணர்வினை வெளிப்படுத்தியுமிருக்கிறேன். சாலையோர கடையில் விற்பனை செய்பவனாக, ஒரு விலை மாதுவாக, மது அருந்தி விட்டு கொடுமை செய்யும் ஒரு குடும்பத் தலைவனாக, வியாபாரியாக, அரசியல்வாதியாக, கொலைகாரனாக, நடிகனாக, பைத்தியக்காரனாக, ஒரு ஆத்திகனாக, நாத்திகனாக தீவிரவாதியாக........

மெளனமய் படுத்துக் கிடக்கும் மலையாக, ஆர்ப்பரிக்கும் கடலாக,  ஒரு பெண்ணாக, கடவுளாக, மிருகமாக.....

இருந்து பார்க்க ஏற்படும் ஆசையே எழுத்து. இங்கே சுயத்தை மையமாய் வைத்துக் கொண்டு உடல் தாண்டி வெவ்வேறு இடங்களுக்குப் பயணித்து, அனுபவித்து அதை மீண்டும் ஒரு முறை மாடு அசை போடுவது போல அசை போட்டுப் எழுதிப் பார்ப்பதில் ஒரு சுகமிருக்கிறது. ஒரு மனிதன் அவனது உடல் சார்ந்த அனுபவங்கள் என்று குறுக்கிக் கொள்ளாமல்.....

எல்லாமாய் இருந்து பார்க்க விரும்பும் ஒரு தேடலின் விளைவே இங்கே நான் தட்டச்சு செய்து கொண்டிருப்பது. எந்த அவசரமும் இல்லை. யாருடனும் போட்டியிட வேண்டிய நிர்ப்பந்தமும் இல்லை....தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கும் இந்த கால நதியில் புதிது புதிதாய் ஏதோ ஒன்றை படைத்தளிக்கும் பெரு விருப்பம் மட்டுமே என்னிடம் ஒட்டிக் கொண்டிருக்கிறது. 

சமகாலச் சங்கடங்களை எல்லாம் சமாளித்து....நிறைய வாசிக்க நிறைய எழுத, நிறைய பயணிக்க , நிறைய மனிதர்களைச் சந்திக்க காலம் எனக்கு வரம் அருளட்டும்...!தேவா சுப்பையா...
Sunday, January 12, 2014

கனவுப் பூ - 2மாதவிக்கு சுரீர் என்று வலி எடுத்தது....அம்ம்ம்ம்ம்ம்மா......சப்தமாய் கத்தினாள்...! சாம்பசிவம் பதறி எழுந்தார்.

என்னாச்சும்மா....ஏய்....எந்திரிடி....மனைவியை பிடித்து உலுக்கினார்...சரசு வேகமாய் எழுந்தாள்...

என்னத்தா...? வலி எடுக்குதா....மாதவியின் தோள் பிடித்து கேட்டாள்.

ஆமாம்மா பாத்ரூம் போகணும்....

கைத்தாங்கலாய் பிடித்து வாஷ்ரூமில் உட்கார வைத்தாள்.

மாதவிக்கு வலி அதிகமானது. இடுப்பு எலும்பு மெல்ல விலகுவதைப் போல தோன்றியது. அந்த வலியை அவளால் தாங்க முடியவில்லை. 

....ஏங்க... போய் முருகேசன எழுப்பி ஆட்டோவ எடுத்திட்டு வாங்க....சரசு ஓலமிட்டாள்.

மூணாவது தெரு முருகேசனின் ஆட்டோ வீட்டு வாசலில் வந்து நின்ற போது அதிகாலை இரண்டரை மணி.

சுதா...அக்காவோட சீல துணிமணி நைட்டி எல்லாம் எடுத்து பைல வச்சு எடுத்துட்டு வாம்மா...

எதித்த வீட்டு ஜோசப் அம்மாவ எழுப்பி கூட்டிட்டு வாடி சுதா....சரசு கத்தினாள்.

முன் சீட்டில் சாம்பசிவம் டென்சனாய் அமர்ந்திருந்தார். 

மாதவி பிறந்து கையில் கொண்டு வந்து நர்ஸ் கொடுத்த நினைவு புத்திக்குள் அவருக்கு எட்டிப்பார்த்தது. பெண் பிள்ளைகள் அப்பாவின் செல்லமாய் வளர்கிறார்கள். மாதவியும் அப்படித்தான். தகப்பன்களின் வலி மிகுந்த தருணம் தன் மகளின் பிரசவ வேதனையை பார்த்து சகித்துக் கிடப்பது. இது தன் மனைவி பட்ட வேதனையைப் பார்த்து பட்டதை விட பத்து மடங்கு அதிகமானது.

தோளில் தூக்கிப் போட்டு வளர்த்து, சாப்பாடு ஊட்டி விட்டு, கேட்டதெல்லாம் வாங்கிக் கொடுத்து பத்து வயது வரைக் கட்டிப்பிடித்து உறங்கும் மகள்களை 13 வயசுக்குப் பிறகு தலை தடவி...என்னடா கண்ணு என்று ஆசையோடு அணைத்துக் கொள்ள மட்டுமே தகப்பன்களால்  முடிகிறது. தன் மகளின் மீது உயிரையே ஒரு தகப்பன் வைத்திருந்தாலும்.....

அவள் வளர வளர அவளைத் தூர நின்று ரசிக்கும் ஒரு துர்ப்பாக்கிய நிலை தகப்பனுக்கு வந்து விடுகிறது. மகள்கள் அப்பாக்களின் இறக்கி வைக்க முடியாத பேரன்புச் சுமைகள். திருமணம் செய்து கொடுத்து விட்டு யாரோ போல ஒரு தகப்பன் நடந்து கொள்ள வேண்டும். ஒரு தாய் அதாவது பெண் இந்தச் சூழலை எளிதாக கடந்து வந்து விடுகிறாள். அது நமது சமூகத்தில் அவளுக்கு ஏற்கெனவே பழக்கப்பட்ட அறிமுகமான ஒரு விசயம். தன் வீட்டை விட்டு கணவன் வீட்டுக்கு வரும் போதே அவளுக்குத் தெரிந்து போய் விடுகிறது.....

23 வருடங்கள் பாசம் பாரட்டி என் வீடு என் வீடு என்று வாழ்ந்தது பொய்யாய்ப்  போய் விட்டது. இங்கே எல்லாம் மாறும் எதுவும் நிரந்தரம் இல்லை என்ற நிலையாமையை ஒரு பெண்ணின் ஆழ் மனது தன்னிச்சையாய் கிரகித்து வைத்துக் கொள்கிறது....ஆனால் ஒரு ஆண் அப்படி அல்ல....

அவனுக்கு எல்லாமே எப்போதும் வேண்டும். யாரையும் விட்டுக் கொடுக்க அவன் அவ்வளவு எளிதாய் இறங்கி வந்துவிடுவதில்லை. இப்படி இருப்பதனாலேயெ அவனால் தன் மகளை மணமுடித்துக் கொடுத்துவிட்டு யாரோ போல திரும்பி வரவேண்டும் என்ற உண்மையை ஏற்றுக் கொள்ள அவ்வளவு எளிதாக முடிவதில்லை. அதிகாரமாய் தன்னை ஆளுமை நிறைந்தவனாய் காட்டிக் கொள்ளும் ஆண் உண்மையில் ஒரு பெண்ணை விட பலவீனமானவன். ஒரு பெண்ணின் தைரியம் ஒரு போதும் ஒரு ஆணுக்கு வந்து விடவே விடாது. 

ஆண் எப்போதும் வீரமாய் இருப்பது போல நடிக்கிறான்....! பெண் கோழையாய் இருப்பது போல நடிக்கிறாள். பெண் அவன் நடிப்பதை விரும்புகிறாள். ஆண் தான் நடிப்பதை உண்மை என்று நம்பிக் கொண்டு பெண்களை பலவீனமானவர்களாக கருதிக் கொள்கிறான்.

சாம்பசிவம் கலங்கிப் போயிருந்தார்.

ஆட்டோவின் பின் சீட்டில் நடுவில் மாதவியும் ஒரு பக்கம் சரசுவும் இன்னொரு பக்கம் எதிர்வீட்டு ஜோசப் அம்மாவும் பக்கவாட்டு கம்பியில் சுதாவும் உட்கார்ந்திருந்தனர்.

                                                                        ***

ஆயிர பாம்புகள் கொத்துவது போன்றது அது. உயிர் போய்விட்டால் கூட தேவலாம் என்று கூடத் தோன்றும் நேரமது. மூச்சு விட முடியாமள் திணறினாள் மாதவி. ஆழமா மூச்சு இழுத்து விடம்மா....கொஞ்சம் பொறுத்துக்க தாயி....

ஜோசப் அம்மா......ஐந்து பிள்ளைகள் பெற்றவள் நிதானமாய் மாதவியின் தலை தடவினாள்.

அடி வயிறு கனமாயிருந்தது......வலி அதிகரித்துக் கொண்டே இருந்தது. மாதவி....பிரதீப்பை நினைத்தாள்....கண்ணீர் வழிந்தது.

வயித்துல காது வச்சுக் கேளுங்களேன்..... ஒரு மாதிரி குறு குறுன்னு ஓடுதுங்க....நான்கு மாதம் முன்பு பிரதீப்பிடம் சொன்னது நினைவு வந்தது.

டேய்...பையா....என்னை மாதிரியே இருக்கணும் அம்மா மாதிரி நாட்டியா இருக்க கூடாது....

ஓய்,,,,,என்ன மாதிரி என்ன நாட்டி....???? பிரதீப்பின் காது பிடித்து திருகினாள்...மாதவி.

அது என்ன பையன்னு முடிவே பண்ணிட்டீங்களா...பொண்ணா இருந்தா....என்ன பண்ணுவீங்க....?

பையனா இருந்தா...குமணன்...பெண்ணா இருந்தா குழலி....? எப்டி இருக்கு என் பேர் செலக்சன்...?

பேசுறது பாதி இங்கிலீஸ்..பாதி தமிழ்....பேர் மட்டும்...தமிழ்ப் பேரா சொல்றீங்க...எப்டிங்க.. புலவரே...? பிரதீப்பை சீண்டினாள்...

ஹ்ம்ம்ம்ம் பாக்குற உத்தியோகம் பிஸினஸ் டெவலப்மெண்ட்....ஏர்லைன்ஸ்ல இன்ட்டர் நேசனல் மார்க்கெட்டிங் செய்யணும்....தமிழ் பேசுறதாம்....தமிழ்நாடு பார்டர் தாண்டினா ஒருத்தனும் தமிழ்ழ பேச மாட்டேன்றானடி ...என்ன என்ன பண்ண சொல்ற...

நான் எல்லாம் ஆங்கிலமோகம் இருந்த ஒரு காலச்சூழல்ல இருந்து இங்கிலீபீசு பேசுறதே பெருமைன்னு சொல்லி சொல்லி வளர்ந்தவனாக்கும்....

                                                                      ***

அம்மா ரொம்ப வலிக்குதும்ம்மா.....வீறீட்டாள் மாதவி.

குன்னக்குடி முருகா....எம்புள்ளைய காப்பத்துப்பா.....அழுதபடியே இரண்டு ரூபாயை படக்கென்று காணிக்கையாக முந்தானையில் முடிந்து கொண்டாள் சரசு. மாதவியின் திமிறலை ஆட்டோ தாங்க முடியாமல் குலுங்கியபடியே....அந்த மருத்துவமனையின் முன்னால் போய் நின்றது.

அதிகாலையிலும் சுறு சுறுப்பாய் இருந்தது அந்த மருத்துவமனை.

சுபா மேடம் அன்எக்ஸ்பெக்டடா....ஒர் அவசர வேலையா சொந்த ஊர் போய்ட்டாங்க...சார்....மிஸ் கிருத்திக்கா சுப்ரமணியன் அவுங்களுக்கு பதிலா...ஒங்க டாட்டர் கேஸ அட்டெண்ட் பண்ணுவாங்க....

நுனி நாக்கில் பயிற்றுவிக்கப்பட்டிருந்த நளினத்தோடு சொல்லி முடித்திருந்த ரிசப்சனிஷ்டைப் பார்த்து கை எடுத்து கும்பிட்டார் சாம்பசிவம்.....

சீக்கிரம்மா....என் பொண்ணு துடிச்சுட்டு இருக்காம்மா வலியில.....

சார் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க சார்.....இப்டி அழுது ஆர்ப்பாட்டம் பண்ணாதீங்க இட் வில் எஃப்கட் அதர் பேஷண்ட்ஸ்....கண்டிப்பு குரலில் அதட்டியபடியே ஒரு நர்ஸ் சாம்பசிவத்தைக் கடந்து மாதவி இருந்த அறைக்கு ஓடினாள்...!

மருத்துவமனைகள் எந்த சென்டிமெண்டும் எப்போதும் இருப்பது கிடையாது. அது வலியையும், வேதனையையும், பிறப்பையும் இறப்பையும் என்று சந்தோசத்தையும் துக்கத்தையும் பார்த்து பார்த்து சலித்துப் போன மனிதர்கள் நிரம்பியது. மனித உடலோடு பழகிப் பழகி மனிதர்கள் எல்லாம் அவர்களுக்கு ஒரு கேஸ் என்னும் அளவைத் தாண்டி அதிகமாய் நினைக்க முடிவதில்லை. அப்படி நினைத்து அவர்கள் வருந்தியும் மகிழ்ந்தும் கொண்டிருந்தால் அவர்களால் வேலை செய்யவும் முடியாது.

டாக்டர் கிருத்திகா சுப்ரமணியன் குன்னக்குடி முருகனாய் தெரிந்தார் மாதவியின் குடும்பத்திற்கு.....

சரசு டாக்டரை கை எடுத்து கும்பிட்டாள்....அம்மா.. என் மகளுக்கு தலைப்பிரசவம்மா....

கொஞ்சம் வெயிட் பண்ணுங்கம்மா..ப்ளீஸ்....அதிகம் பேசாமல்...அறைக்குள் சென்றார் மருத்துவர்.

லேபர்  ரூமிற்குள்...மாதவியின் உடை எல்லாம்  கழற்றப்பட்டு.....நிர்வாணாமான அந்தக் கணத்தில் பிரதீப்பின் நினைவு வந்தது மாதவிக்கு. முதல் முதலாக உடை இல்லாமல் அவன் முன் நின்ற பொழுது....புத்திக்குள் எட்டிப்பார்த்தது....! தாயிடம் தந்தையிடம், இன்னும் எல்ல உறவுகளையும் விட கணவன் என்னும் உறவு உயர்ந்தது. தாயிடமும் சொல்லக் கூச்சப்படும் விசயங்களை கணவனிடம் மட்டுமே பெண்களால் பகிர்ந்து கொள்ள முடிகிறது.

மாதவிக்கு அழுகை வந்தது. பச்சை நிற அங்கியை போட்டு விட்டிருந்தார்கள்....தலை முடியை கட்டி பின்னலாக்கி இறுக்க கட்டிவிட்டார் ஒரு நர்ஸ்...! உடம்பு முழுதும் மாதவிக்கு மழிக்கப்பட்டது......

இங்க பாரும்மா....ஏற்கெனவே....டெலிவரி டேட் தாண்டி போயிடுச்சு ஒரு பத்து நிமிசம் பார்ப்போம்....இல்லேன்னா ஆப்பரேசன் பண்ணிடுவோம்....டாக்டர் மாதவியின் அம்மாவிடம் சொல்லிக் கொண்டிருந்தார்....

உள்ளே....

வேகமாய் மூச்சிழுக்கச் சொல்லி ஆழமாய் மூச்சை வெளியேற்றபடியே மூச்சால் அடி வயிற்றை உந்தித் தள்ளச் சொல்லிக் கொடுத்து கொண்டிருந்தாள்...நர்ஸ்.....

மாதவி திணறினாள்....பிரதீப்.....பிரதீப்.....பிதற்றினாள்...

சரி...சரி... நீங்க கையெழுத்துப் போடுங்க.....நர்ஸ் சொன்ன இடத்தில் கையெழுத்திட்டார்...சாம்பசிவம்....

மாதவியின் முதுகுத்தண்டும் இடுப்பும் சேரும் இடத்தில் சொருகப்பட்டது அந்த ஊசி.....

அம்ம்ம்ம்ம்ம்ம்ம்மாமாஆஆஆஆஆஆஅ.............வீறிட்டாள்.

கண்கள் சொருகியது.....! ஒரே இருட்டாய் இருந்தது....தன்னைச் சுற்றிலும் இருந்த மனிதர்கள் மங்கத் தொடங்கினார்கள்......வலி வலி வலி...வலி....

வலி மெல்ல மெல்ல மறையத் தொடங்கியது....! மாதவி இருட்டுக்குள் விழுந்தாள்....மனம் மட்டும் இயங்கிக் கொண்டிருந்தது. புறம் இருட்டில் ஒளிந்து போக......

மாதவி உள்ளுக்குள் உணர்வுகளால் கேவிக் கொண்டிருந்தாள்....

" ஏண்டா என்ன விட்டுப் போன பிரதீப்......காலையில போய்ட்டு வர்றேன்னு சொல்லிப் போனவன....சாயந்திரம் பொட்டலாமா கட்டிக் கொண்டாந்து போடுவாங்கன்னு தெரியாமப் போச்ச்சேடா.....

நீ இல்லாம எப்டிடா வாழப் போறேன்....உன் உயிர என் வயித்துல கொடுத்துட்டு...என்னை விட்டு தூரமா போயிட்டியே....என்னால இப்போ சாகவும் முடியலையே.......

பிரதீப்.....பிரதீப்....பிரதீப்.....உள்ளுக்குள் அலறினாள்.....மாதவி..."


ஏம்மா....எந்திரி...எந்திரி...உனக்குப் பையன் பொறந்திருக்கான் பாரு....! நர்ஸ் அதட்டி கன்னத்தில் அடித்து எழுப்பினாள்.... 

மாதவி....மாதவி....

மாதவி எழுந்திரிக்கவில்லை...!

பூமி முழுதும் பூக்கள் பூத்துக் கொண்டே இருக்கின்றன....! எத்தனைப் பூக்களைப் பார்த்தாலும் பிடித்தாலும் ஒவ்வொருக்குள்ளும் பிடித்த ஒரு பூ இருக்கத்தான் செய்கிறது. அந்தப் பூ எப்போதும்  தனக்கு மட்டுமே பிடித்ததாய் தன்னிடம் மட்டுமே இருக்க வேண்டும் என்ற ஆசை இல்லாமல் யாரும் இருக்க முடியாது.

அதிசயமா அந்தக் கனவுப்பூ சிலருக்கு வாழ்க்கையில் தனக்குப் பிடித்த உறவாய் அமைந்து விடுகிறது. இல்லாத பூவை கனவினில் நினைத்து நினைத்து வாழப் பழகியவர்களுக்கு....கிடைத்து விட்ட கனவுப் பூவை இழப்பதில் விருப்பமில்லை.....

அப்படி இழந்து விட்டால்....அவர்களுக்கு இருப்பதிலும் விருப்பமில்லை...!

தன் கனவுப் பூவைத் தேடி மாதவி பயணிக்கத் தொடங்கி இருந்தாள்....!

சரசுவும்....சாம்பசிவமும்....நெஞ்சில் அடித்துக் கொண்டு அழுது கொண்டிருந்தார்கள்...!தேவா சுப்பையா....

கனவுப் பூ - 1


சுவற்றில் சாய்ந்திருந்தாள் மாதவி. இடுப்பு லேசாக வலிப்பது போல இருந்தது. எப்போ வலி வந்தாலும் உடனே ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிட்டு வந்துடுங்க ஏன்னா இதுதான் அவுங்களுக்கு டைம்.....ஏம்மா மாதவி...வலி அதிகமாச்சுன்னா....வந்துடு சரியா...? பனிக்குடம் உடைஞ்சா வெளில வர்ற லிக்விட் கொஞ்சம் பிசு பிசுப்பா கெட்டியா இருக்கும்...உடனே கெளம்பி வந்துடுங்க...... காலையில் டாக்டர் சுபா சொன்னதை நினைத்துக் கொண்டாள்.

சுவற்றில் வாகாக சாய்ந்து உட்கார்ந்திருந்த மாதவி வயிற்றை தடவிப் பார்த்தாள். உள்ளுக்குள் ஒரு ஜீவன் வெளியே வர துடித்துக் கொண்டிருப்பதை உணர்ந்தாள். கீழே தரையில் தலைக்கு கை கொடுத்தபடி படுத்திருந்த அம்மாவையும், அப்பாவையும் பார்த்தாள். எழுப்புவோமா....என்று யோசித்தாள். இப்பதானே லேசா சுரீர்னு வலிக்கிற மாதிரி இருக்கு.. இன்னும் வலி கொஞ்சம் கூட போனிச்சின்னா எழுப்பலாம்...யோசித்தவள்....

சுதா.. சுதா என்று மெல்லிய குரலில் அவள் தங்கையை அழைத்தாள். வாரிச் சுருட்டி எழுந்த சாம்பசிவம்...ஏத்தா.. என்ன வேணும்......?

இல்லப்பா கொஞ்ச வெந்நீர் வேணும்....குடிக்க...

சரசு ஏய்...சரசு...பிள்ளை வெந்நீர் கேக்குற பாரு........சொல்லிக் கொண்டே மணி பார்த்தார். இரவு பதினொன்று ஆக...15 நிமிடம் என்று காட்டியது.

நீ படும்மா........தேவைப்பட்டா எழுப்புறேன் உன்னைய.....வெந்நீரை குடித்தபடியே மாதவி சொன்னாள். கவலையாய் அவளைப் பார்த்துக் கொண்டிருந்த சரசுவுக்கு தூக்கம் கண்ணைச் சுழற்றியது. ஒரு வாரம் தூக்கமே இல்லத்தா....அம்மா கொஞ்சம் அசந்துட்டா கூட அதட்டி எழுப்புத்தா....

சரசு மறுபடி சாய்ந்தாள்...உறங்கிப் போனாள். சாம்பசிவம்...மகளைப் பார்த்தபடியே...உறங்கிப் போனார்.

மாதவி சுவற்றில் சாய்ந்தபடியே வயிற்றைத் தடவிக் கொண்டிருந்தாள்.

                                                                          ***

ஏண்டி... எத்தனை பேரு கால்ல விழறது...? செம்ம டயர்டா இருக்கு எனக்கு... நான் தூங்கிடுவேன் பரவாயில்லையா...? பிரதீப் கேட்ட கேள்வியின் அர்த்தத்தை உள் வாங்கிக் கொண்டாள் மாதவி. ச்ச்சே...ச்ச்சே... எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லப்பா...நானும் தூங்கதான் வெயிட்டிங்...தலை குனிந்தபடியே சொன்னாள்.

ஏன் மாமா...சின்ன வயசுல இருந்தேதான் தெரியும்ல...உங்களைத்தான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னு அப்புறம் என்ன எனக்கு த்ரில்லு இருக்கப் போகுது...?

அடிப்பாவி...மகளே த்ரில் இல்லாமத்தான்..வந்து இருக்கியா...? இன்னிக்கு ஃபர்ஸ்ட் நைட் நமக்கு...

அதான் யாரோ தூங்கப் போறேன்னு சொன்னாங்களே....? மாதவி நகைகளை கழட்டியபடியே ப்ரதீப்பை வம்புக்கிழுத்தாள்.

அப்டீ எல்லாம் சொல்லி எஸ்கேப் ஆக முடியாது...மகளே.. ..ப்ரதீப் மாதவி தோளில் கை போட்டான். 

மாமா....என்ன அதுக்குள்ள...இப்டி....சரி...என்னை ஏன் மாமா புடிக்கும் உங்களுக்கு...?

இந்த உலக மகா கேள்விய எத்தனை  காலத்துக்கு நம்ம சமூகம் சுமக்கப் போகுதோ ஹா...ஹா.. மாதவி பிடிக்கிறதுக்கு என்ன காரணம் வேணும்..? பிடிக்கும்னா பிடிக்கும்...அவ்ளோதான்..!

இன்னொன்னு சொன்னா கோச்சுக்க மாட்டியே....தங்கம் நீ...? 

என்ன மாமா...சொல்லுங்க...? பிரதீப்பின் அணைத்தலுக்கு உடன்பட்டு அவன் கைக்களுக்குள்ளிருந்து  முகம் பார்த்து நெருக்கமாய் கேட்டாள் மாதவி....

கல்யாணம் எதுக்கு பண்ணிக்கிறோம் தெரியுமா?

வாழ்றதுக்கு...அப்பாவியாய் உதடு சுளித்தபடி சொன்னாள் மாதவி.

ஹம்ம்ம்க்கூம்ம் கல்யாணம் பண்ணாட்டி எல்லாரும் செத்துப் போய்டுவாங்களா என்ன...? அப்பவும் வாழத்தானே செய்வாங்க லூசு...

அச்ச்சோ மாமா அப்டி எல்லாம் இல்லை...சரி நீங்க சொல்லுங்க....

எம்.பி.ஏ இன்டர்நேசனல் மார்க்கெட்டிங் சப்போர்ட் பண்ணலியா மாதவி செல்லம்...இந்த கேள்விக்கு பதில் சொல்ல....

படிக்கிறது....படிக்க...நீங்க கேட்டதுக்கும் இன்டர்நேசனல் மார்க்கெட்டிங்கும் என்ன சம்பந்தம் மாமா இருக்கு...? அவன் மார்பில் செல்லமாய் குத்தினாள்.

கல்யாணம் பண்ணிக்கிறது...செக்ஸ் வச்சுக்க.......பிரதீப் மாதவியைப் பார்த்தான்.

ச்ச்சீ..போ மாமா...ஏன் அப்டி சொல்றீங்க...? ஏன் கல்யாணம் பண்ணிக்கலேன்னா செக்ஸ் வச்சுக்க முடியாதா...? ப்ரதீப்பை மடக்கினாள்...மாதவி...

வச்சுக்கலாம். பட்...இதுல ஒரு கம்ஃபோர்ட் இருக்கு. அப்டியே செக்ஸ் வச்சுக்கிட்டு குழந்தை பெத்துக்கிட்டு அது என் வாரிசுன்னு சொல்லி பெருமைப்பட்டுக்கலாம். அப்புறம் அந்த வாரிசுக்காக வாழ்றேன்னு சொல்லி ஏதோ ஒரு அர்த்தத்தை உருவாக்கிக்கலாம்...அதே நேரத்துல....எல்லோரும் இப்டி வாழ்றது ரொம்ப சிறப்புன்னு சொல்லி வச்சுட்டுப் போய்ட்டாங்க....

ஒருத்தனைப் பார்த்து ஒருத்தன்...அவனைப் பார்த்து இன்னொருத்தன்னு எல்லோரும் இந்த சமுதாயத்துல நாங்களும் ஒரு அங்கம்னு ஆணித்தரமா சொல்லிக்க...இப்டி மேரேஜ்.....அப்டி இப்டீன்னு....

இதே இன்னிக்கு உன் கழுத்துல தாலி கட்டி உன்னை தொடப்போறேன்..இதை போன வாரம் செஞ்சிருந்தா தப்புன்னு நீயே சொல்லுவ...? சரியா?

ஆமா....முறைப்படி எல்லாம் நடக்கணும்ல....மாதவி சீரியசாய் பதிலினாள்.

அந்த மொறை ஊர்ல இருக்க எல்லோர்கிட்டயும் நாங்க கல்யாணம் கட்டிக்கிட்டோம்..அதுக்கப்பறம் செக்ஸ் வச்சுக்கப் போறோம்னு மறைமுகமா பர்மிசன் கேக்குறதுதானே...?

ஹூ த ஹெல் ஆர் தே...அவுங்க கிட்ட பெர்மிசன் வாங்கி.... நாங்க முறைப்படி சேர்றோம்னு ஏன் சொல்லணும்.....? புடிச்சு இருக்கு சோ வேணும்னா ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிட்டு....போய்ட்டே இருக்கலாம்ல....

ஹ்ம்ம்ம்ம் மாமா நீங்க எல்லாம் இங்க இருக்க வேண்டிய ஆளே இல்லை.....எது எப்டியோ...எனக்கு இங்க நிறைய நல்லது கெட்டதுகள இந்த சமூகம் சொல்லிக் கொடுத்து இருக்கு...நல்லது கெட்டதுன்னா..இந்த சமூகந்தான் நம்ம பின்னாடி வந்து நிக்கப் போகுது..சோ...அவுங்கள அனுசரிச்சு ஒரு கட்டுப்பாட்டுக்குள்ள வாழ்றது எனக்குப் பிடிச்சு இருக்கு....தட்ஸ் ஆல்....

எம்.பி.ஏ. இன்டர்நேசனல் மார்க்கெட்டிங் நிஜமாவே இப்போ கம்பீரமா எந்திருச்சு நின்னு கர்ஜிக்குதுடி.....பிரதீப் மாதவியை அணைத்தான்.

மாமா....எது எப்டி இருந்தாலும் உன்னை எனக்குப் பிடிக்கும் மாமா...அந்த நெருக்கம்...அவளை ஒருமையில் பேச வைத்தது.

பேரச் சொல்லியே கூப்டுடி செல்லம்...ஐ டோண்ட் மைண்ட்.....கலாச்சாரம் மண்ணாங்கட்டின்னு காலையில எழுந்து என் காலைத் தொட்டு கும்பிட்டு தாலிய எடுத்து கண்ணுல ஒத்திக்க கூடாது....சரியா....

மாமா...டோண்ட் வொர்ரி...அப்டி எல்லாம் நீங்க கேட்டாலும் செய்ய மாட்டேன்...ஓகேயா....மாதவி சிரித்தாள்.

அன்பாய் பிரதீப் அவளை அணைத்துக் கொண்டான்.

ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் மிக முக்கியமான ஒரு இரவாக முதலிரவு அமைந்து போய்விடுகிறது. ஒரு பெண்ணை ஆணும், ஆணைப் பெண்ணும் எதிர்கொள்ளும் வசீகர ராத்திரி அது. பிரபஞ்ச சுழற்சியின் அடிப்படை இனவிருத்தி. தன்னை பல்கிப் பெருக்கிக் கொள்ளல். விரிந்து கொண்டே செல்லும் இந்த பிரபஞ்சத்தின் மைய அச்சு காமம். தன்னை விஸ்தாரித்துக் கொள்ளல். இப்படியான அர்த்தம் நிறைந்த காமத்தை சரியான விதத்தில் தெளிவோடு, புரிதலோடு, நிதானத்தோடு, அணுகும் போது வாழ்க்கை பற்றிய புரிதலை மனிதர்களால் பெற முடிகிறது. அத்தனை ஜீவராசிகளிலும் தான் யார் என்ற சுய உணர்வை மனிதனே பெற்றிருக்கிறான். அப்படி தன்னையும் தன்னைச் சுற்றி இருப்பவற்றையும் பகுத்தறிந்து புரிந்து கொள்ளும்  தன்மையை தான் செய்யும் செயலின் முழு சந்தோசத்தை, வலியை, துக்கத்தை ஆச்சர்யத்தை அவனால் வாங்கிக் கொள்ள முடிகிறது.

விலங்குகளின் காமம் வேறு வகை. அங்கே உணர்விலிருந்து உணர்ச்சி பிறக்க உணர்ச்சியோடு அது முடிந்து போகிறது. நான் இங்கே இவ்விதம் இவளை அல்லது இவனைப் புணர்கிறேன். இதில் எனக்கு இவ்வளவு சந்தோஷமாகிருக்கிறது. இங்கே என் உடன் இருக்கும் இவனோ அல்லது இவளோ என்னவள், என்ற ஒரு உரிமையோடு காமம் மனிதர்களுக்கு ஒரு இறுமாப்போடு கூடிய சந்தோசத்தைக் கொடுக்கிறது ஆனால் விலங்குகளிடம் உணர்ச்சியே மேலோங்கி நிற்கிறது. கூடி முடிந்த பின்பு அந்த உணர்ச்சி வடிந்து போக திசைக்கொன்றாக பிரிந்து செல்லும் விலங்குகளைப் போன்றல்ல மனிதர்கள்...

காமம் அனுபவமாய் புத்தியில் ஊறிப் போய் அந்த புரிதல் கொடுக்கும் தெளிவில் வாழ்க்கை பற்றிய நிதானம் பிறக்கிறது. காமத்தை சரியாய் அணுகாத மனிதர்கள் மிகப்பெரிய குழப்பத்திற்கு ஆளாகிப் போகிறார்கள். விலங்குகளைப் போல புணர்ந்து விட்டு மனிதர்களைப் போல வாழ அவர்கள் விரும்பி இரண்டுக்கும் நடுவில் ஒரு அகோர வாழ்க்கையை இயற்கை அவர்களுக்குப் படியளந்து விடுகிறது. திருமணம் சடங்குகள், என்பதெல்லாம் ஒரு மனிதனைப் பயிற்றுவித்து ஒரு சீரான இயக்கத்தில் இருக்க வைக்க விபரம் தெரிந்தவர்கள் செய்து வைத்த ஒரு ஏற்பாடு.

இயற்கை சுதந்திரமனது ஆனால் சீரான ஒரு கட்டுப்பாடு கொண்டது. ஏனோ தானோ என்று பிரபஞ்சத்தில் எதுவுமே கிடையாது என்றுதான் விஞ்ஞானம் சொல்கிறது. அணுக்களின் உள்ளே மையக்கருவைச் சுற்றி வரும் புரோட்டானும் எலக்ட்ரானும் கூட சீரான அதிர்வுகளோடு ஒரு ஒழுங்கில்தான் சுற்றி வந்து கொண்டிருக்கின்றன. முறையற்ற யாவும் விபரீதத்தையும் பேராபத்தையும் எதிர்விளைவுகளையும் உருவாக்கும்.

நன்மை, தீமை என்பது வேறு. அது மனிதர்களுக்கு மட்டுமே உரித்தான லெளகீக வார்த்தை. நேர், எதிர் விளைவுகள் என்பது வேறு. இதில் யாரும் பலன் பெறுவதோ அல்லது இழப்பதோ என்ற எந்த எதிர்ப்பார்ப்புகள் இருப்பதில்லை. செடி வளர்ந்தால் பூ பூத்தால், காயானால் அது ஒரு இயக்கம். அது நேர்மறையானது. அது பட்டுப் போனால் அழுகிப் போனால் மண்ணோடு மண்ணாக மட்கிப் போனால் அது எதிர்மறை இயக்கம். இரண்டுமே இயக்கம். ஒன்றில் இருக்கும் சுமூக விளைவு இன்னொன்றில் இருப்பது இல்லை. இயக்கத்தில் அதன் விளைவில் மனிதர்களுக்கு நற்பலன் இருந்தால் அது நன்மை  என்றாகிறது.

பிரதீப்பின் முழு ஆளுமைக்குள் வந்திருந்தாள் மாதவி. காமத்தை காதலோடு செய்யும் போது அங்கே கச்சேரி களை கட்டி விடுகிறது. மூர்க்கமாய் காதலை தெரிவிக்க ஒரு வழிமுறையாய் காமம் இருக்க...அங்கே தாள வாத்தியங்கள் ஒரே சீராக ஒலிக்க ஆரம்பிக்கிறது. அவள் விட்டுக் கொடுத்தாள்...இவன் முன்னேறினான்....அவன் மூர்க்கமானான்...இவள் முடங்கிக் கிடந்தாள்.....

ஆணும் பெண்ணும் தங்களின் படைப்பின் அர்த்தம் தீர்க்க அங்கே போராடிக் கொண்டிருந்தன. பிரிந்த இரண்டு சேர துடித்துக் கொண்டிருந்தது.

வெளியே மழை பெய்ய ஆரம்பித்திருந்தது. அடை மழை. திருமணத்திற்கு வந்திருந்தவர்கள் எல்லோரையும் பந்தலில் இருந்து விரட்டியது மழை. இடி இடித்தது. மின்னல் வெளிச்சத்தில் மறுபடி விடிந்து விட்டதோ என்று ஆடு மாடுகள் பயந்து போய் கத்தின. முரட்டுத்தனமாய் பெய்த மழைக்கு ஏற்றார் போல காற்றும் பலமாக வீசியது.....புயல் எதுவும் வந்துவிட்டதோ என்று பயந்து போய் இடி இடித்த போதெல்லாம்...அர்ச்சுனன் மேல் பத்து...என்று யாரோ சப்தமாய் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

அடித்துப் பெய்த மழை விடியல் காலையில் பளீச் என்று விட்டிருந்தது. தாவரங்கள் எல்லாம் தளர்ந்தும், மலர்ந்து மழையை வாங்கிக் கொண்ட சந்தோசத்தில் அந்த அதிகாலையில் சிலிர்த்து நின்றன. பூமியில் ஒரு குளுமை பரவி இருந்தது. 

பிரதீப் மாதவியின் மீதிருந்து இறங்கி புரண்டு படுத்தான்...மாதவிக்கு ஏதோ ஒரு உணர்வு ஒன்று அடிவயிற்றில் மின்னலாய் வெட்டியது. மனம் யோசிக்க ஏதுமற்று வெறுமையில் இருந்தது. அவளின் உடலுக்குள் ஏதோ ஒரு மாற்றம்...அடிவயிற்றில் ஒரு நிறைவு....ஏற்பட்டது. நிதானமாய் படுத்திருந்தாள். ஒருக்களித்து தன் புருசனின் நெஞ்சில் படுத்தாள்...

எவ்ளோ ப்ரியமான புருசன் எனக்கு கிடைத்திருக்கிறான். முரடன்....டேய்  முரடா......என்னடா செஞ்ச என்ன....? மெதுவாய் அவன் காதில் கிசு கிசுத்தாள்....காது கடித்தாள்...

பிரதீப் பிரஞ்ஞையற்றுக் கிடந்தான். உடலும் மனமும் அடங்கிக் கிடந்தன....அரை விழியால் கிறக்கமாய் அவளைப் பார்த்தான். இழுத்து....அணைத்துக் கொண்டு உச்சியில் முத்தமிட்டான்...!


(தொடரும்...)தேவா சுப்பையா...Wednesday, January 8, 2014

தல Vs தளபதி தலைப்பொங்கல் யாருக்கு...?


விஜயின் தலைவாவையும், அஜித்தின் ஆரம்பத்தையும் பார்த்த மிரட்சியில் இருந்து இன்னும் மீளவே இல்லை நான். இரண்டு படமுமே அவ்வளவு கொடுமையானது. இரண்டும் நன்றாகத்தானே இருந்தது என்று தல, தளபதியின் ரசிகர்கள் வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம், ஆனால் என்னை போன்ற சராசரி சினிமா ரசிகர்களுக்கு அவை இரண்டும் கெட்ட கனவுகள்.

தலைவா படம் பார்க்க நள்ளிரவுக் காட்சிக்கு ரிசர்வ் செய்து பார்க்கச் சென்றேன். அதிகாலை 2 மணிக்கு படம் ஆரம்பித்த பத்து நிமிடத்தில் பல்லைக் காட்ட ஆரம்பித்தது. ரஜினி பார்முலா எல்லாம் ரஜினிக்கே இனிமேல் ஒத்து வராது என்னும் உண்மையை இப்போது  நடிக்கும் நடிகர்கள் குறிப்பாய் விஜய் உணரவேண்டும். எம்.ஜி.ஆர் பார்முலாவை தூசு தட்டி ரஜினி ஆட்டம் காட்டிய காலம் மலையேறிப் போய்விட்டது. இது  ‘ஆம் ஆத்மி’ களின் காலம். மக்களைத் திரட்டிப் போராட்டம் நடத்தி மக்களின் வழிகாட்டுதலோடு நடுத்தர வர்க்கம் அதிகாரத்தை கையிலெடுக்க ஆரம்பித்தாகி விட்டது. திரையில் தன் அரசியல் தலைவனைத் தேட வேண்டிய எந்த ஒரு நிர்ப்பந்தமும் இப்பொது தமிழ் மக்களுக்கு கிடையாது.

விஜய் தலைவாவில் அரசியல் பேச முயன்று மாண்புமிகு முதல்வர் அம்மாவின் பெருங்கருணையால் பந்தாடப்பட்டு படத்தை வெளியிடவே குட்டிக்கரணம் அடிக்க வேண்டி இருந்தது. இவர் எப்படி திமுக, அதிமுக என்னும் ராட்சச கட்சிகளை எதிர்த்து நிற்க முடியும்? விஜய் அண்ட் டீம் பரீசிலனை செய்து தங்களின் அரசியல் கனவுகளில் இருந்து விடுவித்துக் கொண்டு ஒழுங்காக நடிக்க ஆரம்பித்தால் தமிழ் சினிமாவுக்கு அட்டகாசமாய் ரஜினிக்குப் பிறகு எல்லோரும் விரும்பும் ஒரு சூப்பர் ஸ்டார் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

நாயகன், தளபதி, அமரன், இப்படி தமிழ் சினிமா காறித் துப்பின விசயத்தை விஜய்காக புத்தம் புதிதாய் எடுத்துக் கொடுப்பது போல டைரக்டர் கதை சொன்ன போது இளைய தளபதி தயிர் வடை சாப்பிட்டுக் கொண்டிருந்தாரா என்ன..? தலைவா என்னும் உலக மகா மொக்கையை கொடுத்த விஜயின் ஜில்லா ஏதோரு வகையில் கல்லா கட்டும் என்று எனக்குள் ஏதோ ஒரு பட்சி சொல்கிறது. இந்தப் பாழாய்ப் போன பட்சி தலைவாவுக்கும் இப்படித்தான் சொன்னது. இந்த முறைய் பட்சி சொல்வது பலிக்க வில்லை என்றால் எங்கள் ஊர் கருப்பசாமிக்கு பட்சியைப் பலி கொடுக்கலாம் என்று தீர்மானித்திருக்கிறேன்.

போன படத்தில்  தளபதி ஒரு வாயிற் காப்போன் அளவு கூட கம்பீரமாயில்லாமல் நம் எல்லோருக்கும் தலைவலியைக் கொடுத்ததுதான் மிச்சம். இது ஒரு புறமிருக்க தலயின் ஆரம்பமாவது நன்றாக இருக்குமா என்ற பேராவலில் டோரண்ட்டிலிருந்து தரவிறக்கம் செய்து ஆரம்பத்தை பார்க்க ஆரம்பித்தேன். ஆரம்ப காட்சிகளில் அசத்தலாய்  இருந்த படம் போகப் போக அம்புலிமாமா கதை போல பல்டி அடிக்க ஆரம்பித்தது. பில்லா 2 பார்த்தது இன்பம் என்றால் ஆரம்பம் பேரின்பம் என்றுதான் சொல்ல முடியும். நீங்க ஏன் சார் லாஜிக் எல்லாம் பாக்குறீங்க...சினிமாவை சினிமாவா மட்டும் பாருங்க என்று ரசிகப் பெருமக்கள் எங்களைப் போன்ற போரடிச்சா சினிமா பாக்குற அசமந்தமான ரசிகர்களைப் பார்த்துக் கேட்கக் கூடும்...

எவ்ளவுதான் சகித்துக் கொண்டு படத்தைப் பார்ப்பது..? துபாய்க்கு வந்து வங்கியின் மேலாளரை மயக்கமடைய வைத்து விட்டு துபாய் ரோடுகளில் அஜித் பைக் ஓட்டுவார் என்பதற்காகவே காரை எல்லாம் எடுத்து ஓரமாய் வைத்து விட்டு அவரை பைக் ஓட்ட வைத்து அவர் பின்னால் எங்களை ஓட வைத்து....சர்வ சாதாரணமாய் பணத்தை அஜித்தின் கணக்கிற்கு மாற்றிக் கொள்வதையும், இந்தியா பாகிஸ்தான் எல்லை வரை காட்சிகள் நீண்டு ஜித்து விளையாடி இருப்பதையும் எப்படி ஒத்துக் கொள்ளச் சொல்கிறீர்கள்..? அஜித் தான்,  தலதான்...தன் உழைப்பால் முன்னேறியவர்தான் அதற்காக...மொக்கை கதைகளை எல்லாம் நன்றாக இருக்கிறது என்று சொல்லி கை தட்டி ஆராவரமா செய்ய முடியும்..?

லட்சக்கணக்கில் தங்களுக்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டத்திற்கு இப்படித்தான் தலயும், தளபதியும் படம் நடித்துக் கொடுப்பார்கள் என்றால் வெகு விரையில் அந்த ரசிகர்கள் கூட்டம் அவர்களை விட்டு விலகிப் போய்விடும் என்ற உண்மையை இந்த சூப்பர்  ஹீரோக்கள் உணரவேண்டும். எம்ஜிஆர் படத்தைக் கையில் பச்சைக் குத்திக் கொண்டு எம்ஜிஆரைக் கடவுளாகக் கருதி வாழ்ந்த உணர்வுப்பூர்வமான ரசிகர்கள் கூட்டம் ஒன்றும் இப்போது கிடையாது. இது உலகமயமாக்களின் மயக்கத்தில் சிக்குண்டு கிடக்கும் இளையர்களைக் கொண்ட சமூகமாய் மாறிக் கொண்டிருக்கிறது. திரைப்பட நடிகனுக்காய் கொடி பிடிக்கும் வேகம் முன்பைப் போல இல்லை. திணறடிக்கும் மூர்க்கம் எல்லாம் இப்போது ஒடுங்கிப் போய்விட்டது. பெரும்பாலான இளையர்கள் இப்போது ஐயா நம்மாழ்வாரைப் போற்றுகிறார்கள். அவரைப் பற்றி பேசுகிறார்கள். யார் அரசியல் தலைவர்கள்...? யார் தகிடுதித்தங்கள் என்று மனக்கணக்குப் போட ஆரம்பித்து விட்டார்கள். இந்திய தேசத்தின் தலைநகரில் என்ன மாதிரியான மாற்றம் நிகழ்ந்திருக்கிறது என்று பார்த்து அதை ஏன் நம் தமிழகத்தில் நிகழ்த்த முடியாது என்றெல்லாம் யோசிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

திரைப்படத்தில் வடிமைக்கப்படும் கதாநாயகப் பிம்பத்திற்கும் சாதாரண வாழ்க்கைக்கும் ஒரு தொடர்பும் இல்லை என்று அறிந்தவர்களாக இருக்கிறார்கள்.  ரஜினி, கமலுக்குப் பிறகு அடுத்த மாற்றாய் பிரகாசிக்க ஆரம்பித்திருக்கும் விஜயும், அஜித்தும் கவனித்து தரமான பொழுது போக்கு படங்களை கொடுத்தாக வேண்டியிருக்கிறது. விஜய் டிவியில் ஒரு சாதரண ஆங்கராய் இருந்த சிவகார்திகேயனின் படங்கள் இப்போது நூறு நாள் தாண்டி ஓடுகிறது. விஜய் சேதுபதி போன்ற மூன்றாம் கட்டத்தில் இருந்த நடிகர்கள் முதல் கட்ட நடிகர்களாகி தொடர்ச்சியாய் வெற்றிப்படங்களை கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள்.

2013 ஆம் ஆண்டில் ரசித்துப் பார்க்கக் கூடிய படங்களாய் சிவகார்த்திகேயனின் படங்களும், விஜய் சேதுபதியின் படங்களும் இருந்தன. தலயும், தளபதியும் தமிழ் மக்களின் முன்பு தலை சிறந்த நடிகர்கள் என்ற இடத்தை இன்னும் பிடிக்கவே இல்லை. சில, பல விருதுகளை வாங்கி அவர்கள் தங்களை இன்னும் நிரூபிக்க வேண்டியிருக்கிறது. அஜித்தைப் பொறுத்த வரையில் அவருக்கு அரசியல் ரீதியாய் தன்னை வார்த்துக் கொள்ள விருப்பமில்லை என்றாலும் அவருக்கும் தன்னை ரசிகர்களும், மற்ற சினிமாக்காரர்களும் தல, தல என்று புகழ்வது பிடித்திருக்கிறது. அந்த போதையில் வந்த கடந்த இரண்டு படங்களும் படுகேவலமாகவும் இருந்தது. இப்படி எல்லாம் நான் சொல்கிறேன் என்று ஆரம்பம் படத்தின் பாக்ஸ் ஆஃபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா என்று என்னிடம் ஆரம்பிக்க வேண்டாம்....

8 கோடி பேர் இருக்கும் ஒரு மாநிலத்தில் 1 கோடி பேர் படம் பார்த்தாலே அது பாக்ஸ் ஆபிஸ் ஹிட்தான் என்ற அரதப் பழசான உதாரணங்களை பிறகு நான் சொல்ல வேண்டி வரும்.

விஜய்க்கு என்று தனியாய் நாம் எதுவும் சொல்ல வேண்டியது இல்லை. தினமும் அம்மா ஜெயலலிதாவின் புகைப்படத்தை எடுத்து ஒரே ஒரு தரம் அவர் பார்த்தால் மட்டும் போதும் அவரது தலைவா பட அனுபவமே அவருக்குப் புத்தி புகட்டும்.

நிற்க..!

இந்தப் பொங்கலுக்கு வெளியாகப் போகும் அஜித்தின் வீரமும், விஜயின் ஜில்லாவும் ஒரே ரேஞ்சில் கல்லா கட்டும் என்றே நான் நினைக்கிறேன். வீரம் பாடல்கள் எல்லாம் சரவெடி என்றால் ஜில்லா பாடல்கள் எல்லாம் அதிரடி. வீரம் படத்தின் டீசர் அஜித் ரசிகர்களை முறுக்கேற்றி விட்டிருக்கிறது. கிராமத்துப் பின்னணியைக் கொண்ட கதையில் அஜித் நடித்திருக்கிறார். இந்தப் படத்தாக அவர் கோட்டை எல்லாம்  கழற்றி வைத்து விட்டு வேட்டி சட்டையில் நடித்திருப்பது ஒரு ப்ளஸ். அஜித் தன்னை இந்த மண்ணின் மைந்தராக காட்டிக் கொள்ளக் கூடிய படம் ஏதேனும் ஒன்றாவது வராதா என்று ஏங்கிக் கொண்டிருந்த என்னைப் போன்றோருக்கு அட்டகாசத்துக்குப் பிறகு....வீரம் ஒரு அந்த ஏக்கத்தை தீர்த்து நிச்சயமாய் ஹிட்டடிக்கும் என்றே நினைக்கிறேன்.

முன்பெல்லாம் சாதரணமாகவே விஜய் படத்தில் பாடல்கள் பின்னி பெடல் எடுக்கும். இடையில் அவரது  படத்தின் பாடல்களில் ஏற்பட்ட அந்தத் தொய்வினை தூக்கி நிறுத்தி இருக்கும் டி. இமானுக்கு விஜய் கடமைப் பட்டிருக்கிறார். விஜய் சொந்தக் குரலில் பாடி இருக்கும் பாடல் அட்டகாசம். மொத்தத்தில் எல்லா பாடல்களும்....தமிழ் நாட்டின் பட்டி தொட்டி எங்கும் ஒலிக்கப் போவது என்னவோ நிஜம்....!

பார்க்கலாம்.....

வரப் போவது தலப் பொங்கலா? இல்லை  தளபதிப் பொங்கலா.... அல்லது தலதளபதி பொங்கலா...? இல்லை வெண்பொங்கலா என்று...தேவா சுப்பையா...

Friday, January 3, 2014

மதயானைக் கூட்டம்...!


இயக்கம் விக்ரம் சுகுமாரன் என்ற அறிவித்தலோடு படம் முடிந்து போய்விடுகிறது. நள்ளிரவில் படம் பார்த்து முடித்திருந்தேன். கடைசிக் காட்சியில் கழுத்தில் வளரி வாகாய் உட்கார்ந்து கொண்டிருக்கையில் மூச்சுக்குழல் அறுபட்டு பார்த்தியாய் நடித்த கதிர் திணறிக் கொண்டிருந்த காட்சி என் மனதை அறுத்துக் கொண்டிருந்தது. கம்ப்யூட்டரை ஷட் டவுன் செய்து விட்டு பால்கனிக்கு வந்தேன். நள்ளிரவு ஷார்ஜா நேசனல் பெயின்ட்ஸ் பகுதி நானெல்லாம் உறங்கமாட்டேன்... உள்ள போடா என்று என்னைப் பார்த்து அதட்டியது. என் வீட்டிலிருந்து பார்த்தால் பழைய எமிரேட்ஸ் ரோடு தற்போதைய ஷேக் முகமது பின் சையித் ரோடு தெரியாது...ஆனால் அதில் அசுரத்தனமாய் விடிய விடிய அலைந்து கொண்டிருக்கும் வாகனங்களின் சப்தம் துல்லியமாய் கேட்கும்.

என் வீட்டிலிருந்து வலது புறம் பார்த்தேன் ஷார்ஜா யுனிவர்சிட்டி தூரமாய் தெரிந்தது. ஆறாவது மாடியிலிருந்து தற்கொலை செய்து கொண்டால் உயிர் போகுமா..? போகாதா என்ற ஒரு எண்ணம் விபரீதமாய் உள்ளுக்குள் எட்டிப் பார்த்த போது நான் கீழே சிதறிக் கிடந்த வாகனங்களை பார்த்துக் கொண்டிருந்தேன். பகல் நேரத்தில் அத்தனை வாகனங்களும் பிழைப்பு நோக்கி ஓடிவிடும். வாகன உரிமையாளர்கள் எல்லாம் காக்கை குருவிகளாய் அப்பார்மெண்ட் உலகத்திற்குள் ஏதேதோ கற்பனையில் உறங்கிக் கொண்டிருப்பார்கள். என்னைப் போல யாரேனும் ஓரிருவர் இந்த இயந்திர வாழ்க்கையிலிருந்து வலுக்கட்டாயமாய் தங்களைத் துண்டித்துக் கொள்ள இரவுகளில் வாழ்ந்து கொண்டிருக்கலாம்.

எனக்கு சிகரெட் பிடிக்கும் பழக்கம் கிடையாது. இருந்தாலும் கல்லூரிக் காலத்தில் புகை பிடித்த அனுபவம் இப்போதும் புத்திக்குள் அலைந்து கொண்டுதானிருக்கிறது. ஐஸ்கட்டியைப் போல இருந்த அந்த குளுமையான சூழலுக்கு புகைத்தால் தேவலாம்  என்று எனக்குத் தோன்றியது. வானம் பார்த்தேன். பூமியிலிருந்து முடிந்தவரை மெர்க்குரி பல்புகளின் வெளிச்சம் வானத்தில் வியாபித்துக் கிடந்தது. அதையும் கடந்து ஆழமான கருமையோடு வானமும், நட்சத்திரங்களும்....மெளனமாய்....என்னைப் பார்த்துக் கொண்டிருந்தன...!

பதினைந்து வருடமாக எனக்கும் வானத்துக்கும் இருக்கும் நட்பு அலாதியானது. அந்த வசீகர இரவின் பேரமைதியைக் கிழித்துக் கொண்டு மதயானைக் கூட்டம்  படம் மீண்டும் புத்திக்குள் வந்து ஜதி சொல்ல ஆரம்பித்தது. எனக்குத் தெரியும் அந்த ஜதி ஒரு ரசிக்கும் நடனமாய் முடியாது. அது ரெளத்ரமாய் மாறி ஒரு ருத்ர தாண்டவத்தை எனக்குள் நிகழ்த்துமென்று....ஆதலால் மென்மையாய் அந்த திரைப்படம் கொடுத்த தாக்கத்தை சாதி பற்றிய எனது கொள்கைப் பார்வைகளை தூரமாய் வைத்து விட்டு அசை போட ஆரம்பித்தேன்.

எனக்கு மிக நெருக்கமான பல நண்பர்கள் படத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த கள்ளர்கள் சாதியைச் சேர்ந்தவர்கள். இராமநாதபுரம், சிவகங்கை மதுரை மாவட்டங்களில் முக்குலத்தோர்கள்அதிகம். கள்ளர், தேவர், மறவர்....இந்த மூன்று பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கும் வலுவான வரலாற்றுப் பின்புலங்கள் இருக்கின்றன. நான் கல்லூரியில் படித்த போது ஒரு நண்பனின் வீட்டுக்கு திருவிழாவிற்காக சென்றிருந்தேன். நிறைய நண்பர்கள் அவன் தோட்டத்து வீட்டில் இருந்த போது நான் நண்பனோடு அவன் வீட்டுக்குச் சென்றேன். வாசலில் இருந்த அவனின் அப்பத்தாவைப் பார்த்து..கும்பிடுறேன்..அப்பத்தா என்று சொன்னேன்.

" ஏப்பா....நீங்க என்ன ஆளுக...?" பளீச் என்று அந்த அப்பத்தா தூக்கிப் போட்ட கேள்வி எனக்குள் விழுந்து என்னை ஏதோ செய்தது. சங்கடமாய் நண்பனைப் பார்த்து நெளிந்தேன். அட....உள்ள வாடா மாப்ள என்று அவன் சைகை செய்ய....நான் வீட்டுக்குள் நுழைய முயன்றேன்..." ஏப்பு ...கேட்டுக்கிட்டே இருக்கேன் போறியளே.." அந்த அப்பத்தாவின் கணீர் குரலில் இருந்த ஆளுமையை என்னால் மீற முடியவில்லை. அந்த அப்பத்தாவிடம் எல்லாம் சாதியை ஏன் கேக்குறீங்க என்று சண்டையிட்டு எனக்குள் இருக்கும் பாகுபாடுகளற்ற சமூகப் பார்வையை சொல்லி விவாதிக்க முடியாது என்று தோன்றியது...

அதே நேரத்தில் அங்கே இருக்கும் சூழலை உடைக்கவும் விரும்பாமல்....இல்லப்பத்தா இந்தா வாரேன்....என்று சொல்லிவிட்டு நண்பனின் வீட்டுக்குள் சென்றேன். வீட்டில் உள்ளவர்களிடம் அறிமுகப்படுத்திக் கொண்டு மீண்டும் நண்பனின் தோட்ட வீட்டிற்கு செல்ல வாசலுக்கு வந்த போது...

" கள்ளன் மறவன் கனத்ததோர் அகமுடையான்......." என்று ஆரம்பித்து அந்த அப்பத்தா ஏதோ சொல்லிக் கொண்டிருந்தது. " ஏன் மாப்ள இன்னுமா இப்டி எல்லாம் இருக்காக.." என்று நான் நண்பனிடம் கேட்ட 1996 ஆம் வருடம்...இப்போது எனக்கு அந்தக் காலமாய் போய்விட்டது...ஆனாலும் இந்த சாதியை  வைத்து பேசும் இயல்புகளும் அதனால் கொள்ளும் பெருமைகளும் இன்னும் தீர்ந்து போகவில்லை. அடிப்படையில் வாழும் வாழ்க்கை முறை நமது குணத்தை தீர்மானிக்கிறது. ஜீன்களின் தாக்கமும் புறச்சூழலும் ஒரே நேர்கோட்டில் அமைந்து போக....அங்கே ஒரு மனிதனின் இயல்பு தீர்மானிக்கப்படுகிறது.

போரில் ஈடுபட்டு, போருக்காகவே தங்களை தயார் செய்து கொண்ட, ஊர்க்காவல் செய்த, மிருகங்களை வேட்டையாடிக் கொண்டு வர, பயப்படாத ஒரு கூட்டத்தின் ஜீன்கள் பாரம்பரியமாய் கட்டியமைக்ப்பட்டு....பரம்பரைகளுக்குள் செலுத்தப்பட அந்த குணத்தை பிரித்து எடுத்துக் கொண்டு சாதி என்னும் கட்டமைப்பை உருவாக்கி விடுகிறார்கள். இங்கே ஒரு சாதியை மையப்படுத்தி தேனி மாவட்டத்தில் நிகழும் தன்முனைப்பு போராட்ட வடிவமாக மதயானைக்கூட்டம் படத்தை இயக்குனர் வடிவமைத்திருக்கிறார். என்னிடம் கேட்டால் மதுரை, இராமநாதபுரம், சிவகங்கைப் பகுதியிலிருக்கும் பல்வேறு பிரிவுகளுக்குள் இருக்கும் மிகையான மனிதர்களின் குணமாய்த்தான் நான் இதைப் பார்க்கிறேன். சோ கால்ட் ஏதோ ஒரு சாதி என்னும் அடைப்புக்குள் இந்தப் படத்தில் உலாவும் கதைமாந்தர்களின் குண இயல்புகளை அடைத்து விடமுடியாது.

வறட்சியான பூமி அது. வானம் பார்த்த வாழ்க்கை அது. மதுரை மாவட்டத்தின் ஒரு சில கேரளாவை ஒட்டிய பகுதிகள் கொஞ்சம் செழுமையாய் இருக்கும். அதுவும் முல்லைப் பெரியாறு அணையின் உதவியால், வைகையின் கருணையால், மற்றபடி வானம் பார்த்த பூமியின் வாழ்க்கையே மிகப்பெரிய போராட்டம் நிறைந்ததுதான். போராட்டங்களில் எல்லாம் மிகப்பெரிய போராட்டம் உயிர்ப்போராட்டம். உணவுக்காய் மேற்கொள்ளும் முயற்சிகள். அடிப்படை வாழ்க்கைக்காக, வாழ்வுரிமைக்காக இயற்கையோடு மல்லுக்கட்டும் மனிதர்களுக்குள் ரெளத்ரம் எப்போதும் ததும்பிக் கொண்டே இருக்கிறது.

எதோடு நாம் அதிகம் இருக்கிறோமோ அதன் அருமை நமக்குத் தெரியவே தெரியாது. திருவண்ணாமலையில் வசித்து வருபவனுக்கு அந்த கோயிலும் மலையும் அவ்வளவு பெரிய உணர்வைக் கொடுத்து விடாது. தஞ்சாவூரில் வசிக்கும் எத்தனை பேர் தஞ்சை பெரிய கோயிலை தினசரி கடந்து போய் வந்து கொண்டிருக்கிறார்கள் தெரியுமா? தஞ்சையிலிருந்து திருவண்ணாமலைக்குச் சென்று ஆகா....என்று கை கூப்பி வணங்குவார்கள். கிரிவலம் செல்வார்கள். பொதுவாக நிதம் பழக்கத்திலிருக்கும் ஒன்று எவ்வளவு அரியதாய் இருந்தாலும்....எளிதாய் பார்க்க முடியும், கேட்க முடியும், கிடைக்கும் என்பதால் அதன் சுவாரஸ்யமும் அருமையும் கொஞ்சம் குறைந்துதான் போகும்.

உயிர் பிழைப்பதே வாழ்க்கை. அதற்காக வானம் பார்த்தலும், மழை பொய்த்தால் ரெளத்ரம் கொண்டு போர்கள் செய்வதும், தன் வீட்டுப் பிள்ளை உண்ண ஒண்ணும் இல்லாத போது செல்வச் செழிப்போடு இருப்பவனின் பொருள் கவர்ந்து கொண்டு வருதலும் சர்வ சாதாரணமான விசயங்கள். என் வாழ்க்கை இப்படியாயிருக்கிறதே....என் உறவுகளும், என் மக்களும் ஒன்றுமில்லாமல் இருக்கிறார்களே..என்ற கோபம் கொலைகள் செய்யவும் வைக்கிறது. பாண்டிய தேசத்தின் போர்கள் எல்லாம் நாடு பிடிக்கவும் தன்னுடைய அதிகாரத்தைக் காட்டவும் பெரும்பாலும் நிகழவில்லை. அங்கே நடந்த போர்கள் எல்லாம் தன்னை தற்காத்துக் கொள்ள அல்லது பழி தீர்த்துக் கொள்ள....என்றுதான் வரலாறு சொல்கிறது.

அப்படிப்பட்ட ஒரு கலாச்சார பரவல்கள் கொண்ட மண்ணில் இருக்கும் மனிதர்கள் அத்தனை பேருக்கும் ஒருவித கோபம் கெளரவம் என்ற பெயரில் எப்போதும் மூக்கு நுனியிலேயே இருக்கும். அதை மதயானைக் கூட்டம் கொஞ்சமும் பிசிறில்லாமல் தெளிவான திரைக்கதையின் மூலம் அழுத்தமாய் பதிவு செய்திருக்கிறது.

கழுத்தில் பாய்ந்து கிடக்கும் வளரியை எடுக்க வரும் தனது அப்பாவின் மூத்த தாரத்தை வெறுமையாய் பார்த்துக் கொண்டே.....அந்தக் கையைத் தட்டிவிடும் பார்த்தி கேரக்டர்....அந்த கையைக் கோபமாய் தட்டிவிடும் இடத்தில்......உயிர் எல்லாம் எங்களுக்கு....மயிறு மாறிடா....என்று அழுத்தமாய் சொல்லிவிடுகிறது. படத்தின் மொத்த கருவே அந்த ஒரு காட்சியில் விளக்கப்பட்டு விடுகிறது. கதிர் அச்சு அசலாக தெக்குச் சீமைப் பையனாகவே அவர் மாறி முதல் படத்திலேயே ஹிட்டடித்திருப்பது பாராட்டுக்குரியது.

கல்லூரியில் ஒரு சண்டையின் போது பாண்டியராஜா என்ற என் நண்பனுக்கு தலையில் அடிப்பட்டு விட்டது...! சரி அவனை வீட்டில் விட்டு வருவோம் என்று நானும் இன்னொரு நண்பனும் சாயல்குடிக்கு பயணப்பட்டோம். அவன் பெயர் பாண்டியராஜா... அவன் அப்பா பெயர் சண்முகராஜா...

ஒரு தெருவின் தலைவாசல் அவன் வீட்டு முகப்பு என்றால் கொல்லைப் புறம் அடுத்த தெரு. வீட்டுக்குள் செல்ல முகப்பில் செருப்பினை கழட்டிக் கொண்டிருந்தோம். தலையில் கட்டோடு பாண்டியராஜா திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருந்தான்...." மாப்ள கீழ விழுந்துட்டேன்னு சொல்லுங்கடா...ப்ளீஸ்டா சண்டையில அடிப்பட்டேன்னு அப்பாக்கிட்ட சொல்லாதீங்கடா..." திருப்பத்தூரிலிருந்து சாயல்குடி வரை கிளிப்பிள்ளையைப் போல சொல்லிக் கொண்டிருந்தான்...

மீசையை முறுக்கியபடியே....அப்பா வந்தார். என்னாச்சுப்பா என்று அவர் என்னிடம் கேட்ட உடனேயே உண்மையைச் சொன்னேன்....காலேஜ்ல சண்டைப்பா...அதுல ஒருத்தன் ராஜாவ அடிச்சுட்டான்....வேற ஒன்ணும் இல்ல மூணு தையல் போட்டு இருக்குப்பா அதான் விட்டுட்டுப் போலாம்னு வந்தோம்....

"ப்ப்ப்ப்ப்ப்ளார்ர்................" என்று ஒரு அறை விழுந்தது பாண்டியராஜாவுக்கு....ஏண்டா மானங்கெட்ட நாயே....அடி வாங்கிட்டு வந்து இருக்க......போய் உன்னை அடிச்சவன் மண்டைய உடைச்சு கையக்கால உடைச்சுப் போட்டுட்டு வா....வக்காளி வெக்கங்கப்பட்ட பயல பெத்துருக்கேனடா....த்த்தூ........." காறித்துப்பினார்...ராஜா மீது....

இல்லப்பா...என்று அவரை சமாதானப்படுத்தி வீட்டுக்குள் கூட்டிச் செல்வதற்குள் பெரிய பாடாகிவிட்டது. 

இரவு உணவு அருந்தும்  போது பாண்டியராஜாவின் இரண்டு சகோதரிகளும் அம்மாவும் என்னிடம் சொன்னார்கள்...."தம்பியளா திரும்ப போகும் போது நாலு பயலுகள கூட அனுப்புறேன்...ராசாவ அடிச்சவன காமிச்சு மட்டும் கொடுங்க...மிச்சத்த அவிங்க பாத்துக்கிடுவாய்ங்க...

வேண்டாம்மா....காலேஜ்ல சஸ்பெண்ட் பண்ணி வச்சு இருக்காங்க...அந்தப் பையனை...." மென்று விழுங்கிக் கொண்டே சொன்னேன்.

"சஸ்பெண்ட் பண்ணிப்புட்டா வலி தெரியாதுல்லப்பு....பொளக்க மறுக்கா போட்டாத்த்தேன்.. அடங்குவாய்ங்க...."

இது நடந்து கிட்டத்தட்ட இப்போது 17 வருடம் ஆகிப் போய்விட்டது.  மதயானைக் கூட்டம் மீண்டும் என் பழைய நினைவுகளை கிளறிவிட்டது. இன்னமும் இந்தியா குறிப்பாக தமிழகம் சாதியைச் சுமந்து கொண்டு அலைகிறது. அரசு அலுவலகங்களுக்குச் சென்றால் என்ன சாதி நீ என்று கேட்கிறார்கள்...? கையெழுத்து வாங்க செல்பவன்....அந்த ஆபீசர் என்ன சாதி என்று கேட்கிறான்...? அடிச்சவன் என்ன சாதி என்று காவல்துறை புகார் அளிக்கப் போனால் கேட்கிறது...

சாதி பார்த்து தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்துகிறார்கள்...., சாதிக்காரன் வோட்டு என்று இன்னமும் பேசிக் கொண்டிருக்கிறார்கள், சாதி, சாதி என்று மனிதர்கள் வாழ்வியல் சூழல்களையும், வளர்ந்த முறையையும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு இன்னமும் மீசை முறுக்குகிறார்கள்....

திராவிட இயக்கங்கள் இல்லாமல் மட்டும் போயிருந்தால் என்னவாயிருக்கும் என்று யோசித்துப் பார்க்கவே எனக்கு தலை சுற்றியது....

மணியைப் பார்த்தேன்....! 

இரண்டே கால் என்று காட்டியது. விடிந்ததும் ஓட வேண்டும் வேலைக்கு....துபாய் அசுரகதியில் இயங்க ஆரம்பித்திருக்கிறது மீண்டும்....

ஆமாம்....

எக்ஸ்போ 2020ஐ வென்றிருக்கும் இந்த தேசம்...உலகமெங்கும் வசிக்கும் எத்தனையோ மனிதர்களுக்கு சாதி மத வேறுபாடுகளின்றி வாழ்க்கையைப் படியளக்கப் போகிறது...!
தேவா சுப்பையா