Pages

Monday, January 27, 2014

நாளும் எனக்கொரு சேதி சொல்லும்..!


பிடித்தமான பெண்ணை சந்திக்க வருகையில் வரும் கவனத்தோடு எழுத அமர வேண்டியிருக்கிறது. மனக் கிறக்கத்தோடு பேசிக் கொண்டிருக்கையில் இடையில் வேறு எந்தத் தொந்தரவும் வந்து விடக்கூடாது. காதலோ, ஊடலோ அந்தக் கணத்தை கட்டெறும்புகள் வந்து மொய்ப்பது போல எந்த ஒரு மனிதத் தொந்தரவும் நம்மை தொட்டு விடக்கூடாது என்றுதான் காதலர்கள் ஒதுங்கிக் கொள்கிறார்கள். தங்களை எல்லா சூழல்களிடமிருந்தும் ஒளித்துக் கொள்கிறார்கள். மெரீனா பீச்சை மேம்போக்காக நான் சுற்றுவதுண்டு. நேரம் காலம் கிடையாது. இன்னும் சொல்லப் போனால் அது சுற்றுதல் கிடையாது. 

மேய்ச்சல்.

மேய்ச்சல் என்றால் என்ன தெரியுமா? அப்படியே அலைந்து  கொண்டிருப்பது. கிடைக்கும் தேவையானவற்றை வாய் வைத்து கடித்து இழுத்து புசித்து மென்று கொண்டே தினவெடுத்து திரிவது. மேய்ப்பனாயும் இருந்து கொண்டு மேய்பவனாயும் நான் இருந்திருக்கிறேன். காதலிப்பவர்களின் உலகமே தனிதான். அங்கே என்ன மிகுந்திருக்கும் எது நலிந்திருக்கும் என்று கணக்குப் போட்டே பார்க்க முடியாது. சொல்வதையே திரும்ப திரும்பச் சொல்லிக் கொண்டு...கெஞ்சிக் கொஞ்சி கிடக்கும் அந்த நிமிடங்கள் போலத்தான் சொர்க்கம் (என்ற ஒன்று இருந்தால்) இருக்க வேண்டும்.  அது அதிரகசியமானது. வெகு சுவாரஸ்யமானது. இன்னும் சொல்லப் போனால் ஏதோ ஒரு மையம் இல்லாமல் அங்கே பரிமாறுதல் நடந்து கொண்டிருக்கும். அங்கே அவனும் அவளும் மட்டுமே....பேசுபொருள், படுபொருள், கருப்பொருள் எல்லாமே.....

எழுதுவது எனக்கு அப்படித்தான் இருக்கிறது. மனிதர்களை விட்டு தள்ளி வந்து வெகு சுவாரஸ்யமாய் தட்டச்சு செய்ய ஆரம்பிக்கும் நொடி என்றோ ஒரு நாள் யாரோ ஒரு பெண்ணுக்காக காத்திருந்ததை புத்தியிலிருந்து ஒப்பிட்டுக் கொள்கிறது. ஆமாம் இரண்டும் ஒன்றுதான். இந்த உலகத்தின் அத்தனை சந்தோசங்களையும் நாம் ஒப்பிட காதலையும், காமத்தையும்தான் பெரும்பாலும் அளவுகோலாக வைத்திருக்கிறோம். இப்படி எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு எழுத ஆரம்பித்தவுடன்...வார்த்தைகள் சில நேரம் கோபித்துக் கொண்டு முரண்டு பிடிக்கும். காலையிலிருந்து கருக்கொண்ட ஒரு விசயம் அதை அப்போதே எழுதினால் என்ன என்று கன்னம் இடித்து கேள்வி கேட்டு ஒழுங்கெடுக்கும்.., என்னை விட உனக்கு இந்த வெளி வாழ்க்கை முக்கியமா என்ன? என்று சீறும்....

சமகால புற வாழ்க்கையைப் பற்றி ஏகாந்தத்திற்கு ஒரு கவலையும் இல்லை. இன்னும் சொல்லப் போனால் அதற்கு லெளகீகமே அனாவசியம். சிறகு அசைத்தால் பறக்க வேண்டும்.  பறந்து, பறந்து திசைகளற்று சுற்றித் திரிந்து விட்டு மீண்டும் நாம் கால் பதித்து பூமியில் இறங்கி நடந்து  வீடு திரும்புகையில் கத்தரிக்காய் என்ன விலை என்று பார்த்து வாங்க வேண்டி இருக்கும். பால் கேனை வாங்கும் போது தேதி பார்த்து வாங்க வேண்டும்...எக்ஸ்பயரி தேதி நாளையோ  அல்லது மற்றைய நாளோ இருக்கும் ஒரு பால் கேனை வாங்கிச்சென்றால் வீட்டில் இருக்கும்....எதார்த்தம் கன்னத்தில் குத்திக் கேள்விகள் கேட்கும்......”சொன்ன சாமான் அஞ்சு அதுல ரெண்ட மறந்துட்டு வர்றீங்க....?” என்று சொல்லி எதுக்குதான் நீங்க லாயக்கு என்பது போல ஜாலம் காட்டும்...., ஜாடை பேச்சு பேசும்...,

வண்டி சாவியை எங்கோ வைத்து விட்டு நாம் தேடிக் கொண்டிருக்கையில் கொஞ்சம் கூட கவனம்கிடையாது.... என்று நம் கவனத்தின் மீது கத்தி வைக்கும்..., இது போதாதென்று எத்தனை முறை அழைத்தாலும் நீ ஏன் என்னை திரும்ப அழைப்பதில்லை என்று நம் மறதியை தலையிலடித்து  நண்பர்கள் கூட்டம் நமக்குச் சொல்லும்....” கட்டுரை எழுதவோ கவிதை எழுதவோ உனக்கு நேரமிருக்கிறது....ஒரு போன் பண்ணி பேசினா என்ன கொறஞ்சா போய்டுவ...” உறவுகள் கோபமாய் கண்களை உருட்டும்....

இது எல்லாம் போக மாதம் மாதம் சம்பளம் கொடுக்கும் உத்தியோகம் எப்போதும் தோளில் அமர்ந்து கொண்டு செவியைக் கடித்துக் கொண்டிருக்கும். செய்யாமல் விட்டால் உன் ஏகாந்தத்தின் குடலை உருவி மாலை போட்டு விடுவேன் என்று லெளகீகம் மிரட்டலாய் கொக்கரிக்கும்.....

என்ன செய்ய....? எழுதுவது என்பது ப்ரியமான வேலையாய் இருந்தாலும்....கற்பனை உலகில் சஞ்சரித்து புற உலகின் தொடர்புகளை அறுத்துக் கொண்டு எழுத அமரும் ஒரு எழுத்தாளனுக்கு ஆயிரம் சங்கடங்கள் இருக்கத்தான் செய்கின்றன. எல்லா சூழலையும் சமப்படுத்தி வைத்து விட்டு எழுத அமர்ந்தால் இது காலையில் உனக்குள் விழுந்த விதை....இது நேற்றிரவு  நான் உனக்கு சொன்ன என்னுடைய வலி....இது முந்தாநாள் நீ  கண்ட கனவு....இது  அன்று படித்த புத்தகத்தின் தாக்கம் ....வரமாட்டேன் போ என்று எழுத்து முரண்டு பிடிக்கும்....என்னை பணப்பிசாசே எழுதுவதை விட உனக்கு என்ன வேலை....போ...போ.... லெளகீகத்தையே கட்டிக் கொண்டு அழு...என்று தன் கதவடைக்கும். 

லெளகீகத்திற்கு ஏகாந்த உலகம் எப்படி விளங்காதோ அதே மாதிரி ஏகாந்த உணர்வுகளுக்கு, எழுத வேண்டும் படைக்க வேண்டும் என்ற எண்ணத்திற்கு  லெளகீகம் சுத்தமாய் விளங்காது. இரண்டுக்கும் நடுவே ஒரு படைப்பாளி....சரி சமமாய் பயணிக்க வேண்டும். பொருள் இல்லாவிட்டால் ஏகாந்த உணர்வுகள் என்பதைக் கொடுக்கும் சூழல் வரவே வராது. அதே மாதிரி ஏகாந்த உணர்வு என்னும் கிளர்ந்த மன எழுச்சி இல்லாமல் நான் இருந்தால் நான் என்ற ஒருவனே இருக்க முடியாது. அப்போது லெளகீகம் என்ற பதமே அற்றுப் போகும். இரண்டும் வேண்டும். இரண்டையும் தட்டிக் கொடுத்து செல்பவர்கள் அல்லது அப்படி சென்றவர்கள் ஜாம்பவான்கள். வெற்றியாளர்கள்.

சமீபத்தில் நடந்து முடிந்த சென்னை புத்தகக் கண்காட்சியும் அதற்கு இள, திட, முதிர் எழுத்தாளர்கள் போட்டி போட்டு செய்த விளம்பரங்களும், கூட்டம் கூட்டமாய் சேர்ந்து கொண்டு குழு மனப்பான்மையோடு பிடித்தவர்களை ஏற்றிக் கொண்டதும், பிடிக்காதவர்களை இறக்கியதும், பதிப்பகங்களின் ஆளுமையும், எழுத்தாளர்களின் ராயல் டி பிரச்சினைகளும்... என்னைப் போன்ற எழுதிப் பழகுபவர்களுக்கு மிகப்பெரிய மிரட்சியைக் கொடுத்தன. சாதாரண வாசகனுக்கு எதை வாங்கிப் படிப்பது என்று மிகப்பெரிய ஒரு குழப்ப சூழலை இந்த புத்தக கண்காட்சி கொடுத்திருக்கக் கூடும். வாங்கிய புத்தகங்களை எல்லாம் பட்டியலிட்டுக் கொண்டு ஒரு கூட்டம், இது இது வாசிப்பில் இருக்கிறது என்று ஒரு கூட்டம்...., இதை எல்லாம் தவற விடாதீர்கள் என்ற பட்டியல் ஒரு பக்கம்..., பிரபல எழுத்தாளர்களும் பதிப்பகத்தாரும் பரிந்துரை செய்யும் பட்டியல் இன்னொரு பக்கம்... என்று இணையம் அல்லோலகல்லோலப்பட்டது.

கிட்ட தட்ட புத்தகம் வாசிக்கும் பழக்கம் இல்லாதவர்கள் எல்லோரும் எதற்குமே லாயக்கு இல்லை என்று குற்ற உணர்ச்சி கொள்ளும் அளவிற்கு இந்த சோ கால்ட் படைப்பாளிகளின் விளம்பரங்கள் இருந்தன. என்னைப் பொறுத்த அளவில் எந்த எழுத்தை ஒரு வாசகன் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை படைப்பாளிகளும், பதிப்பகத்தாரும் முடிவு செய்யக் கூடாது.

ஒரு நல்ல புத்தகம் சந்தையில் அறிமுகமானால் மட்டும் போதுமானது. மீதி அதன் விற்பனையை அந்த புத்தகமே செய்து கொள்ளும். வாங்கி வாசித்தவர்கள் அதற்கு தன்னிச்சையாய் விளம்பரம் செய்வார்கள். எழுதுவது கலை. அதை வியாபாரம் செய்ய எழுதுபவனே முன் நிற்கக் கூடாது. அது வேறு யாரோலோ செய்யப்படவேண்டும். ஆரம்ப கட்டத்தில் ஒரு எழுத்தாளன் தன்னை அறிமுகம் செய்து கொள்ள தன் கையிருப்பில் தன்னை வெளிப்படுத்தி கொள்ள நினைப்பதில் தவறில்லை என்றாலும் வியாபாரம் செய்வதும் விளம்பரம் செய்வதும் அவனாயிருக்கக் கூடாது. 

எது தோணுகிறதோ அதை எழுதும் பக்குவத்தை, தாக்கம் கொடுத்த நிகழ்வுகளை எழுத்தாக்கும் திறனை.......வியாபாரம் கெடுத்து விடுகிறது. வியாபாரம் வேறு, கலை வேறு, படைப்பது வேறு, சந்தைப்படுத்துவது வேறு. எத்தனை புத்தகம் விற்கும் என்ற எண்ணத்தில் எழுத அமரும் ஒருவன் தன் வருமானத்தை மையப்படுத்தி நகர்கிறான். அங்கே ஒரு திட்டமிடுதல் வந்து விடுகிறது. அது படைப்பை சீர்குலைக்கும். என் திருப்தியில் எழுதினேன்....நான்கு புத்தகம் விற்றது என்றாலும் நல்லது. இதுதான் நான் சார்ந்திருக்கும் சமூகம். இந்த சமூகம் எதை விரும்புகிறதோ அதை என்னால் எழுத முடியாது. எனக்கு என்ன தோன்றுகிறதோ எந்த திசையில் என் மனப்புரவி அலைகிறதோ அதை நான் படைப்பேன். இந்த இறுமாப்பு இல்லாத கலைஞன்...வயிற்றுப் பிழைப்புக்காய்...எழுத்து என்ற பெயரில் உங்களிடம் தன் தந்திரத்தையே முன் வைக்கிறான்.

பிழைப்பு வேறு எழுத்து வேறு.... என்று பயணிக்கும் போது... எழுத்து அங்கே எழுத்தாக தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது.

பிறகென்ன.....

உடையார் படித்து முடித்து ராஜராஜத்தேவரின் மரணத்தையும், பஞ்சவன்மாதேவியின் மரணத்தையும் தாங்க முடியாமல் திக்பிரமை பிடித்துப் போய் கிடக்கிறேன். உடையார் படிக்கும் போது நிறைய இடங்களில் அலுப்பு வந்தது எனக்கு, பாலகுமாரனின் டச் விரல் விட்டு எண்ணும் இடங்களில்தான் இருந்தது. அது பற்றி பின்வரும் நாட்களில் எழுதுவேன். வாசித்து முடித்தவுடன் நிறைய செய்திகளை சொல்லி என்னை வெவ்வேறு திசைகளுக்கு விரட்டியிருக்கிறார் என் குரு பாலகுமாரன் என்றுதான் எனக்கு தோன்றியது. உடையாரின் இறுதியில் கங்கை கொண்ட சோழன் வீறு கொண்டு எழுகிறார். ராஜராஜச் சோழனின் ஆட்டம் முடிந்த பொழுதில் இராசேந்திர சோழனின் ஆட்டம்  தொடங்குகிறது....! 

தஞ்சை கோயிலில் இருக்கும் யாளி வரிசைகளைப் பற்றி அறிந்து பின் அவற்றை தேடி இணையத்தில் பார்த்து, இன்னும் அதிகமாக யாளிகள் பற்றி வாசித்துக் கொண்டிருக்கிறேன். அடுத்த கட்டுரையில் நம் புராணங்களில் வரும், கோயில்களில் இருக்கும் யாளி என்னும் மிருகத்தைப் பற்றி என் பார்வையை பதிகிறேன்...! 


ப்ரியங்களும் நன்றிகளும்...தேவா சுப்பையா...
1 comment:

”தளிர் சுரேஷ்” said...

எழுத்தின் ஈர்ப்பு அப்படி! அருமையான பகிர்வு! நன்றி!