Pages

Saturday, July 31, 2010

ஹார்மோன் செய்யும் கலகம் தானடா......!காதல்...!

"கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டி விட்டால், மண்ணில் குமரர்க்கு மாமலையும் ஓர் கடுகாம்".

என்று சொன்ன கவிஞனையும், தலைமையின்பம் இது என்று சொன்ன மீசைக்காரனையும் துணைக்கு அழைத்துக் கொண்டு...இந்த ஹார்மோன் கலகத்தை கொஞ்சம் பிரித்து மேயலாம் என்று நினைத்தவுடன்....சட்டென்று ஒரு தொடர் இப்போதுதானே முடிச்சோம்....சரி தைரியமா அடுத்த தொடரை தொடங்கலாம் என்று தீர்மானித்ததின் விளைவு...கலகத்துக்குள் உங்களையும் அழைத்துச் செல்கிறேன்....

"
"
"

ஏதேனும் ஒரு கோவிலுக்குச் செல்லவேண்டும் என்று தீர்மானித்த ஒரு விடுமுறை நாளில்
என் அறையை விட்டு வெளியேறி...என்னுடைய ஸ்பிளண்டரை போரூர் மதானந்தபுரம் கீரீன் அப்பார்மென்ட்ஸிலிருந்து நான் சீற விட்டபோது காலை 11 மணி. எந்த கோவிலுக்குப்போவது என்று தெரியாமல் குழப்பத்தில் விக்னேஸ் அண்ணனை செல் போனுக்குள் கொண்டு வந்தேன்.

" அண்ணே கோவிலுக்கு போலாம்னு கிளம்பிட்டிருக்கேன்...".......என்னது நீயா? எதுக்குப் போற! என்று கேள்விக்குறிக்குப் பதிலாக ஆச்சர்யகுறி போட்ட விக்னேஷ் அண்ணன் தான் வாழ்க்கையில் எனக்குத் திருப்புமுனையாய் இருந்து சத்தியத்தையும் உண்மையையும் தெளிவையும் ஆன்மீகத்தின் சாரத்தையும், இந்து மதம் என்று சொல்லக் கூடிய சனாதான தர்மத்தின் சூட்சுமத்தையையும் விளக்கி...விளக்கி கேள்விகளால் நிரம்பி ததும்பி வழிந்து கொண்டிருந்த எனக்கு வழிகாட்டியவர்.

" தத்தை தத்தை..தத்தை..ஒரு அத்தை பெத்த தத்தை " என்ற ரேஞ்சுக்கு ஒரு பக்கா அக்மார்க் ஹோட்டலியர் நான்....! எனக்குள் 70%திமிரும் 30%அறியாமையும் ஆக்கிரமித்து இருந்த காலங்கள் அவை....! தெரிந்தோ தெரியாமலோ கல்லூரிக் காலங்களில் கூட பயிலும் பெண்களை கவர வேண்டுமென்று அவர்கள் முன் ஜம்பமாக பாலகுமாரன் புத்தகங்கள் எடுத்து சென்று இருக்கிறேன்....எடுத்து சென்ற பாலகுமாரனை விளையாட்டாக புரட்ட அவர் மட்டும் கெட்டியாக என்னைப் பிடித்து கொண்டு கல்லூரி தாண்டியும் என்னைத் தொடர்ந்து கொண்டிருந்தார்.

சரி விக்னேஷ் அண்ணன் பற்றி சொல்ல வந்துட்டு ரூட் எங்க போகுது பாருங்க....விக்னேஷ் அண்ணன் எங்க அத்தானோட நண்பர் சினிமா துறையில் இருக்காங்க...உதவி இயக்குனாராய் இருக்கிறார். இப்போது அவர்தான் மறுமுனையில் கேள்விக்குறிக்கு பதிலாக ஆச்சர்யக்குறி போட்டவர்......!

ஏண்ணே நான் கோவிலுக்கு எல்லாம் போகக்கூடாதா? என்று கேட்டதற்கு 11 மணிக்கு கிளம்புறியே..... 12 மணிக்கு நடை சாத்திடுவாங்களே..முன்னாலயே போகக்கூடாதா?ன்னு கேட்டர்... 10:30க்குதானே எழுந்தேன் அத எப்படி தினசரி காலை 5:30க்கு எழும் விக்னேஷ் அண்ணன் கிட்ட சொல்றது...?" இல்லண்ணே..." என்று வழிந்தேன். சரி சரி நேரா கிளம்பி....கார்வண்னன் அங்கிள் (டைரக்டர் கார்வண்ணனேதான்...எங்க அத்தான் நண்பர்தான் இவரும்) வீட்ல இருக்கேன் வந்துடு....அப்புறமா சாப்பிட்டு விட்டு 3 மணிக்கு மேல கோவிலுக்குப் போகலாம் என்று சொல்லி முடிக்கும் முன்பே மனசு என்னிடம் சண்டை போட ஆரம்பித்து இருந்தது.

" தேவா.... நேரே பிரவுசிங் சென்டர் போ....இல்ல ஸ்பென்சர் போ....அப்படியும் இல்ல.....ஏதாச்சும் ஒரு போனா போட்டு யாரச்சும் ஒரு பொண்ணுக்குகிட்ட பேசிட்டு இரு அந்த .... கார்வண்னன் அங்கிள் வீட்டுக்கு எல்லாம் போகாத....ஏதோ கோவிலுக்கு நீ போகணும்னு ஆசைப்பட்ட அதுல கூடா ஏதாவது உள்குத்து இருக்கும்னு தெரிஞ்சுதான் சரி போகலாம்ணு நினைச்சா ....கார்வண்ணன் அங்கிள் வீட்ல போய்... நீ உக்காந்து கிட்டே இருப்ப அங்க இருக்கிற எல்லாரும் தத்துவம், கார்ல் மார்க்ஸ், லெனின், சிலப்பதிகாரம், யூதர்களின் வரலாறு, பல்லவர்களின் சிற்பக்கலை, ருஷ்ய புரட்சி, பொன்னியின் செல்வன் அது இதுன்னு ஏதேதோ புரியாத பாஷையில் பேசப் போறாங்க அதை ம்ம்ம்ம்ம்ன்னு தெரிஞ்ச மாதிரி கேட்டுகிட்டு தலையாட்டப் போற ....என்னால முடியாது வா....வேற எங்கனாச்சும் போலாம்னு மனசு முரண்டு பிடித்து என்னையே முறைச்சு பார்த்தது.

விக்னேஷ் அண்ணனிடம் இருந்த மரியாதையும்...எங்க அத்தான் மீது இருந்த பயமும் மனசை தோற்கடித்ததின் விளைவு...பக்தவச்சலம் தெருவில் (மாம்பலம் ரயில்வே ஸ்டேசன் பின்னலா இருக்கிற ஏரியா பாஸ்...சரியா அந்த ஏரியா பேர் தெரியல ஆன அந்த ஸ்டாப்..வந்து..ம்ம்ம்ம்ம் அயோத்தியா மண்டபம் ஸ்டாப்) இருந்த கார்வண்ணன் அங்கிள் வீட்டு முன்னால பைக்கை நிறுத்தினேன். மெல்ல கேட் திறக்கும் போதே சப்தம் கேட்டு நெடு நெடுவென்றிருந்த விக்னேஷ் அண்ணன் கதவைத் திறந்தார். பவ்யமாக ஒரு பூனைக் குட்டியைப் போல நடந்து கதவருகே சென்றவுடன் ஸ்னேகமாய் தோளில் கை போட்டு உள்ளே அழைத்துச் சென்றார் விக்னேஷ் அண்ணன்...

மெல்லிய இருளில் அழுந்தாமல் மெலிதாய் பரவியிருந்த அறை விளக்கில் வெளியே இருந்து வந்த எனக்குச் சுத்தமாய் கண்கள் தெரியவில்லை.....சிலீர் என்று ஏசிக் காற்று என் உடல் தழுவி நலம் விசாரித்ததில் உடம்பில் இருந்த வியர்வை எல்லாம் பயந்து ஓடியிருந்தது.....மெல்லிய இசை அறை முழுது வழிந்து கொண்டு இருந்தது.....வரவேற்பறையில் இருந்த சோபாவுக்குள் நான் என்னைப் புதைத்துக் கொண்டேன்....! கையில் ஒரு புத்தகத்தை கொடுத்துவிட்டு 20 நிமிடத்தில் வருவதாக சொல்லிவிட்டு அறைக்குள் சென்ற விக்னேஷ் அண்ணனுக்காக ஒரு குழுவே கதை விவாதாத்திற்காக காத்திருந்தது என்பது எனக்கு அப்போது தெரியாது.

கையில் கொடுக்கப்பட்ட புத்தகத்தை மெல்ல புரட்டிக் கொண்டிருந்தேன்....தாய் என்ற தலைப்பில் மாக்ஸிம் கார்க்கி எழுதியது....ஒரிரு பக்கங்கள் புரட்டிக் கொண்டிருந்த போது....மனம் அங்கிருந்து தாவி அதற்கு முந்தைய நாள் நினைவினைப் பற்றி அசைப்போட்டது....அதன் விளைவுதான் இப்போதைய கோவில் பக்தி என்று எல்லாம் யாருக்கும் தெரியாது...அப்படி என்னதான் நடந்துச்சு...நேற்று?

ஒரு யு டர்ன் பண்ணி அப் பண்ணி என்னொடு ப்ளாஸ்பேக்குக்குள் வாருங்கள்.....ப்ளீஸ்....

அந்த நான்கு நட்சத்திர ஹோட்டலின் ப்ரண்ட் ஆபிஸ் மேனேஜராய் என்னை ஆக்கியதில் அதன் நிர்வாக இயக்குனரின் அன்பும் எனது திறமையும் இருந்தாலும் அதற்கான மெச்சூரிட்டி என்னிடம் சுத்தமாய் அந்த 23 வயதில் இல்லை என்பதுதான் உண்மை. மனசு முழுதும் துடிப்பும், அகங்காராமும், காதலும் ...ஒன்றோடு ஒன்று போட்டி போட்டுக் கொண்டே இருந்ததாலேயே.....எல்லாவற்றையும் ஒரு வேகத்தில் செய்யவேண்டும் என்ற பதட்டத்தில்....துள்ளிக் கொண்டே இருப்பேன். "யு ஆர்....ஆல் வேய்ஸ் இன் ஹரி..." என்று அடிக்கடி சொல்லும் கெஸ்ட் ரிலேஸன் எக்ஸிக்யூட்டிவ் சந்தான கங்குலி மேடம்தான்...எனக்கு எப்போதும் சப்போர்ட்....!

மதிய உணவிற்கு ஏன் டெலிபோன் ஆப்பரேட்டர் கனகா, ரிஷப்சனிஸ்ட் சுனிதா, வித்யா, மற்றும் வின்சென்டை ஒன்றாக நான் அனுப்பினேன்... ? நான் மட்டும் ஏன் தனியாக ப்ரண்ட் ஆபிஸ் கவுண்டரில் நின்றேன்....? அந்த நேரம் பார்த்து ஏன் இந்த தொலைபேசி வந்தது என்று இன்று வரை புரியவில்லை....

கதறிய போனை எடுக்க ஆப்பரேட்டரின் கேபினுக்குள் (ரிசப்சனுக்கு பின்னாலே இருக்கும்) நுழைந்தேன்....." குட் ஆஃப்டர் நூன் தக்க்ஷின் மே ஐ கெல்ப் யூ? பயிற்றுவிக்கப்பட்ட வாடிக்கையாளர் சேவை... நுனி நாக்கிலிருந்து புறப்பட்டு ரிசீவர் வழியே எதிராளியிடம் சென்று சேர்ந்த பின் .....எதிர்பார்க்காத குரல் பதிலாய் என்னைத்தாக்கியது....


" ப்ளீஸ் டோண்ட் கீப் த போன் டவுன்...ப்ளீஸ்....டோண்ட் டிஸ்கனெக்ட் த லைன்....ஸ்பீக் வித் மீ.... ப்ளீஸ்…. ப்ளீஸ் … ப்ளீஸ்" என்று அழுகையும் கெஞ்சலுமாய் என்னிடம் பேசிய குரல்.....தன்னுடைய பெயர் கவிதா என்று அறிமுகப்படுத்திக் கொண்டது..........


திடுக்கிடலோடு....அவள் சொல்வதை கேட்க ஆரம்பித்த எனக்கு தலை சுற்றியது.....!


(காத்திருங்கள்...காதலுக்காக)


தேவா. S

Wednesday, July 28, 2010

சாதியே...உன்னை வெறுக்கிறேன்...பதிவுத் தொடர் முடிவு....!
இதுவரை

பாகம்I
பாகம்II
பாகம்III

இனி...


அக்னி குஞ்சொன்று கண்டேன் -
அதை ஆங்கோர் காட்டில் பொந்தில் வைத்தேன்...
வெந்து தணிந்தது காடு; தழல் வீரத்தில் ...
குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?

கொட்டும் மழையில் நனைய வேண்டுமா? கொடும் தீயில் இறங்க வேண்டுமா? நெஞ்சுக்குள் கைவிட்டு..எமது துடிக்கும் இதயம் பிய்த்து... வீசி எறியவேண்டுமா....?எம்மிடம் ஆயுதம் இல்லாத போதும்.....யாம் இரு கைகள் இழந்து கால்கள் இழந்து முடமாய் தெருவோரத்தில் வெறும் பிண்டமாய் கிடந்த போதிலும்...

உரக்க கத்துவோம்....அண்டம் நடு நடுங்க... அகிலமெல்லாம் கிடு கிடுங்க....ஆழி பேரலை வந்து எல்லாம் அடித்துப் போக.....

" சாதியே.... நீ செத்துப் போ "

உரக்க கத்தி... கத்தி ....எமது குரல்வளைகள் அறுபட்டு குருதியை மண்ணுக்கு கொடுத்து...மாண்டு போவேனும் போவோம்....!

ஒரு போதும் சாதியைக் கைக்கொண்டு வாழ்வெய்தோம்.

எங்கே அந்த முண்டாசுக் கவிஞன்?சாதிகள் இல்லையென்று பாடிவிட்டு, பதினோரு பேரே மொத்தத்தில் வந்து உம்மை தீயிலிட்டு போனதுடன் போய்விடுவாயா நீ......எழுந்து வா...! என் இளைஞர் கூட்டத்தில் நெஞ்சினில் நிறைந்து நில்...! நீ பழகச் சொன்ன ரெளத்ரம் எதற்கு என்று கேட்கிறதே...இன்னும் அறியாமல் ஒரு கூட்டம்...செவிட்டில் அறைந்தார் போல மனதினில் ஆழ விழு.....ரெளத்ரத்தால் சாதியை ஒழிக்க ஒரு போர்ப்பரணி பாடச் சொல்....!

ஓ..யாரது என் சட்டை பிடித்து இழுப்பது....கணியன் பூங்குன்றனாரா....? வாருங்கள் ஐயா...!இன்னுமொருமுறை உரக்கச் சொல்லுங்கள் ...ஒன்றே குலம் என்று.. ஒருவனே தேவனென்ற கூற்று பற்றி எமக்கு கவலையில்லை....! ஒராயிரம் பேர் சாதியில்லை என்று சொல்லிச் சென்ற பின்னும்....இன்னும் எம்மக்களைப் பிடித்துக்கொண்டு.....ஆட்டுவிக்கிறதே சாதி...? அதான் திமிரடக்க தினவெடுத்து நிற்கிறதே எம் தோள்கள்....

வில்லெடுத்து...அம்பெடுத்து...
போரிட்டுக் கொல்வோம்..
நீ..மனிதனெனினும். தெய்வமெனினும்
அல்லையேல் அசுரனெனும் விலங்கெனினும்
உறுதியாய்....!

மறைந்திருந்து எம்மக்கள்...
மனிதில் ஒழிந்திருந்து சீறும் கோழையே...
ஏய்...சாதியே....! வரலாற்றின்..அநீதியே....
சங்கறுப்போம்...உன் கருவறுப்போம்...
காத்திரு கவனமாய்...
எமது காலத்திற்கும்...உன் மரணத்திற்கும்!


சரி இனி...எமது தோழர்கள் கூறிய கூற்றினை கொஞ்சம் உற்று நோக்குவோம்...அவர்களின் உயரிய பொறுப்புணர்ச்சிக்கு நன்றி கூறியபடியே....
தோழர் ஜெயதேவா தாஸ் கூறியது.....

" ஜாதியின் பெயரில் மக்களை அடக்கி ஆண்டதும், அவர்களை தீண்டத் தகாதவர்கள் என்றும், மேல் சாதியினருக்கு நிகரானவர்கள் அல்ல என்றும் அவமானப் படுத்தும் வகையில் நடத்தியதெல்லாம் நிச்சயம் தவறுதான். ஆனால் ஜாதியே வேண்டாம் என்று ஏற்றுக் கொள்ள எல்லோரும் தயாரா? இட ஒதுக்கீட்டை இழக்கத் தாயாரா? இட ஒதுக்கீடு இருக்கும் போதே 2% உள்ள "அவா இவா"-க்கள் 98% சதவிகித மத்திய அரசுப் பணிகளை ஆக்கிரமித்துள்ளனர், இதை நீக்கி விட்டால் சுத்தம், பள்ளி கால்லூரிகளிலோ, வேலை வாய்ப்பிலோ ஒன்றும் மிஞ்சாது. அங்குதான் இடிக்கிறது. "


எல்லாம் தவறென்றால் தோழரே ....அந்த தீமை யாருக்கு வேண்டும்? இது அசிங்கம் என்று அறிந்த பின் அதற்கு அங்கீகாரம் எதற்கு? இட ஒதுக்கீடு ஒரு காலத்தில் பிற்படுத்தப்பட்ட மக்களை மேலே கொண்டு வர உதவிருக்கலாம்...., ஆனால் உண்மையான இட ஒதுக்கீடு எதன் அடிப்படையில் வரவேண்டும்...? இல்லாத பொய்யான சாதியைக் கொண்டா....?

ஆண் பெண் கூடிக்கலந்து ஜனிக்கும் உயிரின் எந்த இடத்தில் சாதி நிர்ணயம் செய்யப்படுகிறது...விந்திலா? அண்டத்திலா? கருவிலா? சூத்திரமே இல்லாத மனிதனை சூத்திரன் என்றும், இன்னபிறவென்றும் பிரிக்கும் சாதியை கற்பித்தது...யார்? மனிதன் தானே...? மனிதனால் உருவாக்கப்பட்டதை மனிதன் அழிக்க முடியாதா?

உண்மையான இட ஒதுக்கீடு பொருளாதாரத்தை வைத்தும் மனிதர்களின் வாழும் சூழலைப் பொறுத்தும் அவர்களின் வாழ்க்கை தடைகளை வைத்தும் வரக்கூடாதா? சாதி என்ற பேயை...இன்னும் அரசியல் கட்சிகள் கைக்கொண்டிருப்பதும், இட ஒதுக்கீடு என்ற ஒரு மாயை உருவாக்கி இருப்பதும்....வாக்குகள் பெற்று அவர்கள் ஆள்வதற்குதானே....அன்றி மக்களின் மீதுள்ள கருணையினால் அல்ல...! அப்படியிருந்தால் நிர்ணயம் செய்யப்படவேண்டியது இட ஒதுக்கீடு அல்ல. சாதியே இல்லாமல் செய்யும் சட்டத் திருத்தம்.

வசதியான பிற்படுத்தப்பட்டவர் என்று சொல்லக்கூடியவர்களுக்கு கிடைக்கும் சலுகைகள் ஏழையான முற்படுத்தப்பட்டவர் என்று சொல்லக்கூடியவருக்கு கிடைக்காமல் போவதில் என்ன தருமம் இருக்கிறது.

பொருளாதாரத்தையும் வாழ்க்கைச் சூழ் நிலையையும் சரியாக கணக்கீடு செய்து கொண்டு வரப்படுவதுதான் இட ஒதுக்கீடு....! அப்படிப்பட்ட ஒன்று இதுவரை வரவில்லை....? என்னுடைய ஆதாரக்கேள்வியான...மனிதன் வாழ்வதற்கு சாதி தேவையா..? இல்லை என்ற பின் மேல் சாதி என்ன கீழ் சாதி என்ன?

தோழர் ஸ்மார்ட் என்பவர் கூறியது...


" எல்லாம் சரி ஒழிக்கப்பட வேண்டியது சாதிதான்.
1) ஆனால் இதில் பெரியார் பெயர் எப்படி வந்தது. அவருக்கும் சாதி ஒழிப்புக்கும் அவ்வளவாக சம்மந்தமில்லையே!
2) நீங்கள் குறிப்பிடும் படி ஒரு சமுகத்தை திட்டச் சொல்லி எந்த சாஸ்த்திரமும் சொல்லாத பொது அதை எதற்கு எரிக்கணும்? ஒரே குழப்பமாயிருக்கே! யார் அப்படி பேசிகிறார்களோ அவர்களை எதிர்ப்பதைவிட்டு சம்மந்தமில்லாமல் வேரயாரையோ எதிர்ப்பதாகத் தெரிகிறது.

பி.கு. பெரியார் ஒரு தனிப்பட்ட ஜாதியை ஒழிக்கத் தான் பாடுபட்டாரே ஒழிய சாதி ஒழிக்க அல்ல "

தீண்டாமை ஒழிக்க பாடுபட்ட பெரியார், கருவறை நுழைவுப் போராட்டம் நடத்திய பெரியார்....சாதியே வேண்டாம் என்று சொன்ன பெரியார்...எப்படி சாதியைப் எதிர்க்கவில்லை என்று சொல்லமுடியும்? என்னைப் பொறுத்த வரை உங்களின் இந்தக் கேள்விக்கு....பெரியாரின் தொண்டர்கள் சரியான புள்ளி விவரத்தோடு பதிலளிக்கக்கூடும்.

இன்னும்...தீவிரமாய் ....சாஸ்திரங்கள் அதன் முலங்கள் என்று நாம் ஆராய்ந்து கொண்டு அதில் இருந்து பதில் பெற முயல்வதைவிட.....சாதி இருப்பதின் அவசியம் என்ன? என்று தான் நான் சிந்திக்கிறேன்.

மனிதன் அறிவால் வேறுபடலாம், குணத்தால் வேறுபடலாம், உடையால் வேறுபடலாம்...ஆனால் பிறப்பால் வேறுபட்டவன் என்று சொல்வது.....முரண்பாடாய் இருக்கிறதே? நான் இன்னார் வீட்டில் பிறந்த உயர் சாதி என்று சொல்லக்கூடிய மடையானாய் இருந்தால் எனக்கு ஒரு மரியாதையும், நான் கீழ் சாதி என்று சொல்ல கூடிய வீட்டில் பிறந்தால் கிடைக்காத மரியாதையும் இந்த சமுதாயத்தின் கற்பிதத்தில் இருந்து நீங்க வேண்டும்.

என் உக்கிரத்தினை எழுத்துக்கள் மூலம் கொண்டு சேர்க்க ஒரு சிறு முயற்சி செய்துள்ளேன்......! என் அறிவும் , நினைவும் மட்டுப்பட்டது....ஒரு கணம் உங்களுக்கு கிடைக்குமெனில் சிந்தியுங்கள்...தோழர்களே....

வாழ்வில் மனிதன் மனிதனாய் வாழ எதற்கு நமக்கு சாதி..?


எம் இளைஞர் கூட்டம் தயாராக இருக்கிறது சாதி அரக்கனை ஒழிக்க....பத்து நூறாகும்... நூறு ஆயிரமாகும் ஆயிரம் லட்சமாய் கோடியாய் மாறும்.... நாங்கள் கேட்பது எல்லாம் ஒன்றுதான்...அது சமூக நல இயக்கமாயிருந்தாலும் சரி....அல்லது அரசியல் கட்சிகளாய் இருந்தாலும் சரி....

" ஒன்று எம்மை தலைமை தாங்கி வழி நடத்துங்கள்.....இல்லை... எம்மை பின்பற்றுங்கள்....வெறுமனே.....எங்களின் எரிமலையை ஒத்த பயணத்தை மறைத்துக் கொண்டு நிற்காதீர்கள்..."

" EITHER LEAD .. OR ….FOLLOW OTHER WISE..GET OUT FROM THE WAY! "

இந்த தொடர் முடிந்தது...ஆனால் அக்னி தொடர்ந்து எரியட்டும்... நியாயமானவர்களின் நெஞ்சில்!தேவா. S

Sunday, July 25, 2010

ஆன்மாவின்....பயணம்! பதிவுத் தொடர் பாகம் IIஆன்மாவின் பயணம் கடந்த மாத இறுதியில் ஆரம்பித்தேன்..... இந்த மாத இறுதியில் இரண்டாம் பாகம்.....! இந்த இடைவெளிக்கு காரணம் எனது ஆன்மாதான்....! ஆமாம் அது பயணப்படும் போதுதான் எழுத முடிகிறது....! இன்று என்ன நினைத்ததோ தெரியாது......என்னை வார்த்தைகளால் நிரப்பி தொடரச்சொன்னது....இதொ தொடர்கிறேன்.....ஆன்மாவின் பயணத்தை....

இதுவரை

பாகம் I

இனி.....


அதிகாலைப் பேருந்து நகர்ந்து கொண்டிருந்திருந்தது. ஜன்னலோரமாய் இருந்த என் மீது பட்ட சீலீர் காற்று என் தேகம் நிறைத்தது. மெல்ல தலை சாய்த்து காற்றின் அன்பினை என்னுள் பரவவிட்டேன். ஒரு வித மெளனம்...என்னுள் நிரம்பி வழிந்தது. காதலோடு இருக்கும் கணங்களும், காதலியோடு இருக்கும் கணங்களும் வேகமாய்த்தான் பறந்து போகின்றன. காற்றுக் காதலியோடு நான் உறாவடிக் கொண்டு இருந்தேன்.... நேரமும் பறந்துதான் போயிருக்கிறது. எப்போது பேருந்து நின்றது என்று தெரியவில்லை...என்னை கட்டிணைத்துக் கொண்டிருந்த காற்று நின்ற அந்தக்கணம் மெல்ல கண்விழித்து பேருந்தில் இருந்து இறங்கினேன்.

இடுப்பில் ஒற்றை நான்கு முழ வேஷ்டி, சுகமான தளர்ந்த நிலையில் ஒரு சட்டை மேனியோடு உறவாடாமல் வெளிக்காற்றோடு உறவாடும் நிலையில், அதிகம் உறுத்தாக ஒரு ரப்பர் செருப்பு. சுமையில்லா ஒரு தோள்பை என்று உடுத்தியிருந்ததும் உள்ளே ஒரு அமைதியைக் கொடுத்தது. பெரும்பாலன நேரங்களில் மனிதர்கள் உடுத்தும் உடை பற்றி ஒரு அக்கறை எடுத்துக்கொள்வது கிடையாது. ஏனோ தானோ என்று உடுத்தி கொள்வது மனதளவில் ஒரு வித மாற்றத்தை உண்டு பண்ணவே செய்கிறது.

நீங்கள் வேண்டுமானால் பளீச் என்று உடுத்திப் பாருங்களேன்...தெளிவாய் ஒரு கம்பீரம் உங்களுக்குள் வரவே செய்யும். கசங்கிய அல்லது அழுக்கான உடையை உடுத்தும் போது ஒரு வித இறுக்கம் நம்மைப் பிடித்துக் கொள்ளும்....இது உடையினால் வந்தது என்று சொல்லமாட்டேன்...ஆனால் உடுத்தியிருக்கும் உடை மனதில் ஒரு விதமான எண்ணத்தை கிளறிவிட்டு அதிலிருந்து ஒரு வித கற்பிதத்தை மூளைக்கு அனுப்பி அதை எண்ணமாக்கி நம்பத் தொடங்கும்...! மனம் மூலம் இயங்கும் மனிதர்களுக்கு உடுத்தும் உடையில் கவனம் தேவை. இதற்குதான் " கந்தையானாலும் கசக்கி கட்டு " என்று கூறியிருப்பார்களோ...?

என்னுடைய உடை என்னை உறுத்தவில்லை, உடுத்தியிருக்கிறேன் அல்லது உடலாய் இருக்கிறேன் என்று எண்ணச் சொல்லவில்லை....காற்றோடு காற்றாய் இருந்தேன்.ஒருவிதமான சுகம் அது. அதை சொல்ல முயல்கிறேன்...அவ்வளவே...விளக்கினேனா இல்லையா என்று தெரியாது...சரி... மேற்கொண்டு நகர்வோம்.

பெரிய பேருந்து நிலையம் அது. இரவு முழுதும் பேருந்துக்காக காத்திருந்தவர்களின் அயற்சி முகங்களும், " விநாயாகனே வினை தீர்ப்பவனே " என்று சப்தமாக டேப் ரிக்காரிடரில் பக்தியை பரவவிட்டு டீ ஆற்றிக் கொண்டிருந்த வியாபாரிகளும் பெட்டிக்கடைகாரர்களும், அதிகாலையிலேயே வேலை நிமித்தம் வெளியூர் செல்ல நின்ற வியாபாரிகளும், குடும்பத்தோடு ஏதோ திருமணத்திற்கோ அல்லது வேறு விசேசத்திற்கோ செல்ல பட்டுபுடவையிலும், மஞ்சள் குளித்து மல்லிகை சூடிய முகங்களும், கும்பகோணம் ஏ.ஆர். ஆர்.பாக்கு கைப்பைகளை கக்கத்திற்கு கொடுத்து நின்று ஒரு பூச்சு கூடுதலாகவே பவுடர் பூசியிருந்த குடும்பத்தலைவர்களும்.....மனிதர்களால் ஓய்வு கெட்டுப்போய் எழுந்து ஓரமாய் நின்ற யாராலும் உரிமைக் கோரப்படாத மாடுகளும் என்று அதிகாலை பஸ் ஸடாண்ட் களை கட்ட ஆரம்பித்த நேரம் அது....


எனக்கென்று ஒரு இலக்கில்லை...! போவதெந்த இடமென்றும் ஒரு கணக்கில்லை....ம்ம்ம்ம்ம் என்ன செய்வது ....எந்த பேருந்து முதலில் நகர்கிறதோ அந்தப் பேருந்து என்று மனம் ஒரு கணக்கு சொன்னது....! அதோ அந்த அரசு பேருந்து நகர தொடங்கி இருக்கிறது....எங்கு போகிறது என்று கேட்காமல் மெல்ல நகர்ந்த பேருந்தில் ஏறி மீண்டும் ஒரு ஜன்னலோர இருக்கையை அந்த கூட்டமில்லா பேருந்து கொடுத்த சந்தோசத்தில் ..... நிதானமாக அமர்ந்தேன்....!

வெளுக்கத்தொடங்கியிருந்தது வானம்......இரவென்ற மாயை அகன்று பகலென்ற மற்றுமொரு மாயைக்குள் உலகம் கற்பிதம் கொண்டு நுழைய தயாராய் இருந்தது.....! நகரம் கடந்து விளை நிலங்கள் இரு புறமும் விரியத் தொடங்கி இருந்தது.....! பசுமையான வயல்கள்.....பரந்து விரிந்து என்னுள் பரவி நானும் பரந்து விரிந்து ஒரு மிகப்பெரிய நிலமானேன்.....

சுகாமாய்த்தானிருக்கிறது ஒரு நிலமாய் நான் மாறிப்போயிருந்ததில்.....என் மேனியெங்கும் பசுமை...கற்களுக்கும் முற்களுக்கும் நானே தாய்....! மெல்ல நகரும் நீர் நிறைந்த வாய்க்கால்கள் என்னை சந்தோசப்படுத்தும் என் பிள்ளைகள்... ஆகா..இந்த மண் புழுக்கள் என் மேனிக்குள் ஊறும் போது சொல்லமுடியா சுகமாய்.. நான் குதுகலித்தேன். என்னுள் இருந்த ஈரத்தை புல் பூண்டுகள் உறிஞ்சி எடுக்கும் போது எல்லாம் நிலை கொள்ள முடியாமல் உல்லாசமாய் திணறினேன். என்னுள் பரவியிருந்த விதைகளை நன்றாக பரவும் படி கொஞ்சம் கிளர்ந்து இடம் விட்டேன்.

காதலாய்...மேலே வானத்தைப் பார்ப்பேன் எப்போதும்.....ஆமாம் அந்தக் காதலில் ஓடோடி வந்து ஒரு மழையாய் என்னைக் கட்டியணைத்து திக்கு முக்காட செய்துவிடுமே அந்த மேகங்கள்.......ம்ம்ம்ம்ம் எங்களின் கூடலில் பிறக்கும் இந்த ஜகம் எங்கும் ஒராயிரம் உயிர்கள்...

ஹலோ.....தம்பி....ஹலோ.....தம்பி....யோவ்.....யோஓவ்.. யாரோ உன்னை உலுக்கிக் கொண்டிருந்ததை மெலிதாய் உணர்ந்தேன்....மிக சத்தமாய் என்னை முதுகில் அடித்து உலுப்பிய பின்னும் என் புறம் இருந்த காட்சிகளும்....அகத்தில் நிலமாய் நான் மாறிப் போயிருந்த உணர்வு நிலையும் மெல்ல கலையத் தொடங்க....

சாந்தமாய் தலை திருப்பினேன்! மீண்டும் அந்த நபர் சப்தமாய்....யோவ்...என்று அதட்டினார்.....(பயணம் தொடரும்...)


தேவா. S

Wednesday, July 21, 2010

வாய்மை...!மேகங்கள் தொலைந்து போயிருந்த அந்த பளீர் வானத்தில் சூரியன் ஏதேச்சதிகாரம் செய்து கொண்டிருந்தபோது காலை மணி 10:30. நிழல் தேடி என்னுடைய பைக்கை நிறுத்தி விட்டு நிமிர்ந்து பார்த்த போது வழக்கமான பரபரப்போடு இருந்தது அந்த வட்டாட்சியர் அலுவலகம்.

வெளியே மிகைப்பட்ட கிராமத்து மக்களும் வெள்ளை வேஷ்டி சட்டை பெரியவர்களும் காம்பவுண்ட் முக்கில் இருந்த டீக்கடையின் வியாபரத்துக்கு பெரிதும் உதவிக் கொண்டிருந்தனர். மெல்ல திரும்பி நான் பார்க்க என்னை விண்ணப்பம் ஏதும் பூர்த்தி செய்யணுமா என்ற ரீதியில் தரையில் சிறு மேசை வைத்து இருந்த ஒரு மத்திம வயது மீசைக்காரர் மடக்கி விடப்பட்ட முழுக்கை சட்டையின் மடிப்பை சரி செய்து கொண்டே பார்த்தார். நான் அவரையும் மரங்களில் கூச்சலிட்டுக் கொண்டிருந்த காகங்களையும் சட்டை செய்யாமல் அலுவலத்துக்குள் நுழைந்தேன்.

ரேசன் கார்டில் முகவரி மாற்றம் செய்து வாங்க வேண்டி வந்திருந்த என்னை விடுங்கள் எனது பக்கதில் காத்திருந்த அந்த பெரியவரை கவனியுங்கள்....! வாழ்க்கையின் ஒட்டத்தில் எத்தனையோ முகங்களை நாம் பார்த்தாலும் ஒரு விவசாயியின் முகத்தை நாம் எளிதாக அடையாளம் காண முடியும்.

இயற்கையோடு பழகி பழகி ஒரு வித மரியாதையும், நன்றி நவிழலும் சாந்தமும் இயல்பாகவே வந்து விடுகிறது. அதே போலத்தான் சீற்றமும்...இயற்கையின் சீறலைப் போல் நிலை கொள்ள முடியாத அளவிற்கு வெளிப்பட்டு விடுகிறது. பயிர் பச்சைகளை நேசிப்பது போலத்தான் மனிதர்களையும் நேசிக்கிறார்கள்.

உலகிற்கே பசியாற்றக்கூடிய தானியங்களை விளைவிக்கிற விவசாயி தான் செய்யும் தொழில் பற்றி எப்போதும், எங்கேயும் யாரிடமும் அகந்தையாய் பேசியதும் கிடையாது கர்வம் கொண்டதும் கிடையாது. மாறாக தான் விளைவிக்கும் நெல்லுக்கும் புல்லுக்கு யாரையோ விலை நிர்ணயம் செய்யச்சொல்லிவிட்டு குடவுனில், அல்லது வியாபாரியிடம் விற்று விட்டு ஒரு ஓரமாய் ஒதுங்கிக் கொள்ளும் சகாப்த புருஷர்கள் அவர்கள்...

சாந்தமாய் என் பக்கத்தில் பெஞ்சில் அமர்ந்திருந்த பெரியவரின் தோளும் சட்டை சுறுக்கங்களும் எதில் சுருக்கம் அதிகம் என்று போட்டி போட்டுக் கொண்டிருந்தன. காலவெள்ளத்தில் அடித்துக் கொண்டு போனது போக மீதி இருந்த முடிக்கும் முறையாய் எண்ணெயிட்டு இருந்தார்....ஆனால் அது கலைந்து போயிருந்ததில் தான் அழகும் அலட்சியமும் இருந்தது. வெகு நேரமாய் பெஞ்ச் விட்டு எழுவதும் இரண்டடி முன்னால் போவதும் பின் வேஷ்டியை சரி செய்து கொண்டு பின்னால் வருவதும் பின் அமருவதுமாக இருந்தவரிடம் ஏதோ ஒரு தயக்கமும் கையில் ஒரு பிளாஸ்டிக் பையும் இருந்தது ஆனால் காலில் செருப்பில்லை

கோணத்தை கொஞ்சம் மாற்றி அதே அறையில் எதிரில் இருக்கும்
மேசையில் இருப்பவரைப் பாருங்கள். நெற்றியில் பட்டை இட்டு இருந்த அவர் வாயில் வெற்றிலை பாக்கு மென்று கொண்டிருந்தார். மடித்து மேலெற்ற பட்ட சட்டை...மூக்கின் நுனியில் குடியிருந்த கண்ணாடி....ஒரு அலட்சிய பார்வை கால் மேல் கால் இட்டு, சுற்றி குப்பையாய் குடியிருந்த ஓராயிரம் பைல்கள், மேசை முழுதும் குவிக்கப்பட்டு இருந்த தாள்கள்....பக்கவாட்டு பரணில் இருந்த லெட்ஜர்கள்....பக்கத்தில் இருந்த மேசைகளுக்கு 11 மணியாகியும் வராதாத சக அலுவலர்கள் என்று எல்லாவற்றுக்கும் மத்தியில் 100% அரசு அலுவலர்தான் என்று நிரூபித்தபடி அமர்ந்திருந்த அவர் என்ன பொறுப்பு வகிக்கிறார் என்று ஊகிக்க முடியவில்லை.

ஒரு அதட்டலாய் " என்னய்யா வேணும் உனக்கு.....? என்ற ஒரு உரத்த கேள்விக்கு பயந்தவராய் திடுக்கிட்டு எழுந்த பெரியவர் " புள்ளக்கி கண்ணாலம் ஆயி தனிவூட்டுக்கு போயிட்டாங்க...அதுக்கு தனி ரேசன் கார்டு கேட்டு இருந்த்தோம்யா....எல்லா பேப்பரும் ரெடி ஆயிட்டுது இன்னைக்கி வந்து கடுதாசிய வாங்கிட்டு போன்னு ஐயா சொன்னருங்க....என்று சொல்லிவிட்டு பக்கதில் இருந்த காலி டேபிளை காட்டினார் பெரியவர். ம்ம்ம்ம் தனி ரேசங்காட...சரி... எங்க உம்புள்ள? என்று கேட்ட அரசு அதிகாரிக்குத் தெரியாது வயக்காட்டில் நிற்கும் பெரியவரின் மகனைப்பற்றி......"ஐயா அவன் வெள்ளாமக்காட்டில இருக்காங்க.... நான் கையெழுத்து போட்ட பேப்பர வாங்க வந்தேனுங்க... என்று கம்மிய குரலில் சொன்னார் பெரியவர்.....

சரி..சரி....போய்ட்டு ஒரு ரெண்டு மூணு நாளு கழிச்சு வா...பக்கதுல இருக்கிற ஐயா மெட்டாராஸ் போயிருக்காரு வந்தவுடனே....வந்து பாருங்க.... என்ற ஒரு அலட்சிய பதிலை கேட்டவுடன்.....மாதங்களாய் நடந்து ஊர் தலையாரி, ஆர். ஐ...அவரு இவுரு அந்த அத்தாட்சி இந்த அத்தாட்சி என்று அலைந்து திரிந்த பெரியவரின் விரக்தி குரல்..ஐயா எப்போ வருவாருங்க....? என்றூ கேட்ட கேள்விக்கு...."யோவ் அது எல்லாம் தெரியாது....போய்ட்டு ரெண்டு மூணு நாள் கழிச்சி வான்னா வாய்யா....எங்களுக்கு எம்புட்டு வேலை இருக்கு....ஒரு தடவ சொன்னா வெளங்காது உனக்கு என்று காதில் பேப்பரை விட்டு குடைந்த படி வெற்றிலை எச்சில் தெரிக்க கத்தினார் அந்த அதிகாரி....

ஏய்யா அவரு இல்லேன்னா நீங்க உதவி செய்யுங்க..இல்லேன்னா வேற யார பாக்கணும்னு சொல்லுங்க...எதுக்கு வையுறீங்கன்னு பெரியவர் கெஞ்சவும்.....ஆங் அப்டின்னா.... மறுபடியும் விண்ணப்பம் பூர்த்தி பண்ணிட்டு வி.ஏ.ஓ, ஆர்.ஐ எல்லோரு கிட்டயும் சான்றிதழ் வாங்கிட்டு உன் மகனோட கல்யாணபத்திரிக்கை, அதை பதிவு செஞ்ச சான்றிதழ் எல்லாம் கொண்டுட்டு வா..என்று சொல்லிவிட்டு...ஏதோ முக்கிய வேலை இருப்பதை போல சீட்டை விட்டு எழுந்து தன்னுடைய வேஷ்டியை சரி பண்ணி விட்டு மீண்டும் சீட்டில் அமர்ந்தவரின் முன்னாலேயெ "அவசரம்" என்று பிரிக்கப்பட்ட கோப்பு ஒன்றரை மணி நேரமாய்...அவரிடம் அல்லாடிக்கொண்டிருந்தது.

பெரியவர் சூடாகி கத்த தொடங்கினார்....ஏய்யா என்ன எங்கள பாத்த இளக்காரமா இருக்கா....எம்புட்டு நாள அலைஞ்சு இன்னைக்கு வாங்க வரச்சொன்னதாலதான்யா வந்தேன்...காலைல ஒரு ட்ரிப்...அப்புறம் சாங்காலம் 5 மணிக்குன்னு ரெண்டு தடவதா பஸ் வருது .....வயக்காட்டு வேலய எல்லாம் விட்டுப்புட்டு ....அவருடைய கூச்சலில் அவர் ரொம்பவே பாதிக்கப்பட்டு இருந்தார் என்பது உணர முடிந்தது.

அவர் பேச்சுக்கு பின்...எழுந்து நின்று கத்தினார் அந்த அதிகாரி....யோவ்...எனக்கு ஒண்ணும் தெரியாது வெளில போய்யா என்று அடிக்க வருபவர் போல கிட்ட வந்து பெரியவரின் நெஞ்சில் கை வைத்து தள்ள..தடுமாறிய பெரியவர்...மெல்ல சுதாரித்து...கோபத்தில் அந்த அதிகாரியை நோக்கிப் பாய... அதற்குள் அந்த அதிகாரி...சரேலென்று வெளியே...போனார்....இரு இரு வர்றேன்னு.... ! ஒரே சப்தம் பக்கத்து அறையில் இருந்த சில அலுவலர்கள் வந்த்து எட்டிப் பார்த்து விட்டு சென்றனர்....

வெளியே போய்விட்டு திரும்ப வந்த அந்த அரசு அலுவலர்....வேகமாய் உள்ளே வந்தார்....இருய்யா இரு...இப்ப வருவாய்ங்க... அவய்ங்க கிட காமின்னு சொல்லிட்டு...மீண்டும் வெளியே வேகமா போனார்....

"தம்பி....இவிய்ங்க அநியாயம் தாங்க முடியலைப்பான்னு" முதன் முதலாக என்னிடம்
பேசினார் அந்த பெரியவர்.....சட்டென்று நிறுத்தினார்....வெளியே போயிருந்த அரசாங்கம் ஒரு 30 நிமிடம் கழித்து துணைக்கு ஒரு போலீஸ் கான்ஸ்டபிளோடு வந்ததில் வட்டாட்சியர் அலுவலகத்தின் பக்கதிலேயே தான் போலீஸ் ஸ்டேசன் என்பதை உணர முடிந்தது.

ஆபிஸ்லயா வந்து கலாட்டா பண்ற? என்று கழுத்தை பிடித்து இழுக்காத குறையாக பெரியவரையும்....முறைப்பாய் என்னையும் வாங்க தம்பி ஸ்டேசனுக்கு...என்ன நடந்துச்சுன்னு சொல்லுங்கன்னு அழைத்தது காவல்துறை. எனக்கு தெரிந்த வரை இந்திய நீதித்துறையின் வேரே சாட்சிகள்தான்......50 பேர் பொய் சாட்சி சொல்லிட்டா...அந்த கேஸ்....ஜெயிச்சுடும்ன்றது எல்லா இந்திய குடிமகன்களுக்கும் தெரியும்.....! பெரியவரும் தம்பி.. ஒரு எட்டு வாங்க தம்பி....திட்டுனதும் இல்லாம, வந்த வேலயும் முடியாம...போலிசு கிட்ட வேற கம்ப்ளெய்ன் பண்ணி இருக்காரு தம்பினு கலங்கி போய் சொன்னதில் அவருடைய வறுமையும் இயலாமையும் வெளியே வந்து வழுக்கி விழுந்ததை உணர முடிந்தது.

கவலைப்படாதீங்க...ஐயான்னு அவரின் தோள் தொட்டு நானும் பெரியவரும் போலிஸ்காரருடன் போய்க்கொண்டு இருந்தோம் அரசாங்க அதிகாரி யாரோ ஐயாவிடம் சொல்லிட்டு வர்றேன்னு சொன்னதை காவல் துறை உடனே அனுமதித்தது.

காவல்துறை.....அலுவலகத்திற்கு சென்றவர்களுக்குத் தெரியும் வெள்ளை வேட்டிகளுக்கு என்ன மரியாதை....பேண்ட் சட்டைகளுக்கு என்ன மரியாதை , கசங்கிய சட்டைகளுக்கு என்ன மரியாதை என்று...........பெரியவரை அதட்டலோடு ஒரு ஒரமாய் அமரச் சொன்னார்கள்....வரப்போகும் காவல்துறை ஐயாவிற்காக நானும் காத்திருந்தேன்...ஒரு ஓரமாய் ஒற்றைக்காலை சுவற்றில் சாய்த்து ஒற்றைக்காலில் தரையில் பதித்து....

ஒரு சிறிய சலனத்திற்கு பிறகு வந்த ஐயா..முறைப்பாய் போய் தன் இருக்கையில் அமர்ந்தார்.....! அதட்டாலாய் என்னயா கேஷு என்று கான்ஸடபிளிடம் கேட்க...விவரம் சொன்னார் சின்ன ஐயா....! யோவ் இங்க வாங்கய்யா...என்று என்னையும் சேர்த்து காக்கவேண்டிய தெய்வம் அதட்டலாய் கூப்பிடாது...." அரசு அதிகாரிகிட்ட அலுவலகத்திலேயே பிரச்சினை பண்றியா....என்ன திமிருய்யா உனக்கு...." பெரியவர் தெளிவாய் எல்லாம் சொல்லி முடித்தவுடன்....கவருமெண்டுனா அப்படித்தான் முன்ன பின்ன இருக்கும்ம்ம் அதுக்காக கத்துவிய்யா..? அடிக்க போனியா...ம்ம்ம் அதட்டலுக்குப் பின் பெரியவர் என்னை கை காட்டினார்... தம்பிகிட்ட வேணும்னா கேளுங்கய்யா....

என்னய்யா நடந்துச்சு....? என் பக்கம் கேள்வியை திருப்பினார் காவல்துறை அதிகாரி.... " ஆக்சுவலி வாட் கேப்பன்ட் சார்.... இவரு வந்து.... என்று மிகைப்பட்ட ஆங்கில வார்த்தை கலந்து பேச வைத்து விட்டது என்னுடைய நான்கு நட்சத்திர ஹொட்டலின் ஃப்ரண்ட் ஆஃபிஸ் உத்தியோகத்தின் பழக்கம்...!

அவ்வுளவுதான் ....மீசை துடிக்க என்னிடம் கேட்டர்....அந்த அதிகாரி..." தம்பி வெளிநாடுங்களா...? என்றார் .... நான் சொன்னனேன் இல்ல சார்....என்றேன்.....அப்புறம் அதிகமா ஆங்கிலம் பேசுறீங்க... தமிழ்ல சொல்லுய்யா என்று அதட்டினார்.....தமிழ்லதானே பேசினோம்....னு யோசிச்ச என் மரமண்டை...இடையில் ஆங்கிலம் புகுத்தி பேசியதை உணராமல் இருந்தது. " சாரி சார்" என்று மீண்டும் ஆரம்பித்து....(மறுபடியும் ஆன்கிலமா..அடங்கொன்னியா..!!!) பெரியவர் மீதிருந்த நியாயத்தை சொல்லி முடிப்பதற்குள்....போலிஸ் அதிகாரியே சொல்லிவிட்டார் பெரியவர் மீதுதான் தப்பு என்று.....

சரி... அரசு அதிகாரியை அடிக்க முயற்சித்ததா கேஸ் போடவா....? என்று அதட்டினார்... எனக்கு நிஜமாவே பெரியவர் மீது பாவமும் மனதுக்குள் பயமும் வந்தது....! சார்....ஒரு நிமிசம் நான் வெளில போய்ட்டு வர்றேன்...(அப்பாகிட்ட போன் பண்ணி பேசுவோம்....என்ற எண்ணத்தில்) என்று சொன்னவுடன்...முகம் சிவந்தது காவல்துறைக்கு....தம்பி ...வெளில போய்...அவரு..இவருன்னு யார்கிட்டயாச்சும் சொல்லி போன் வந்துச்சு...... அப்புறம்...உன்னையும் ஐயாவோட சேத்தி உள்ள வைக்க வேண்டும் என்று என் எண்ணத்தை உடைத்தார்...!

அட என்னடா இது கொடுமை என்று எண்ணிக் கொண்டிருந்த போது வயிற்றில் அமிலங்கள் சுரக்க ஆரம்பித்ததை உணர முடிந்தது....மணிக்கட்டை திருப்பி மணி பார்த்த போது மதியம் 2:30ஐ காட்டியது....அதே நேரத்தில்....காலையில் சண்டையிட்ட அரசு அலுவலர் உள்ளே வருவதை கவனித்தேன்...!

போலீஸ்காரர்கள் கொடுத்த மரியாதையிலும் பேச்சிலும் அவர்களின் உறவும்...அந்த அதிகாரிக்குப் பின் ஏதோ ஒரு கரை வேட்டி இருக்கிறது என்பது ஆணவத்திலும்...சொல்லாமலேயே உணர முடிந்தது....! பஞ்சாயத்து பேசி பெரியவர்....அந்த அரசு அலுவலரிடம்..மன்னிப்பு கேட்டார்....மேலும் கேஸ் போடாமல் இருப்பதற்காக கேட்கப்பட்ட சில காந்தி படம் போட்ட விவசாயியின் வேர்வைத்துளிகள்....கை மாறின.....வெளிறிப் போன முகத்துடன்...வெளியே... வருவதற்கு முன்...போய்ட்டு வர்றேன் ஐயா என்று இன்ஸ்பெக்டரை பார்த்து சொன்ன பெரியவரை பார்த்து எனக்கு அழுகையும் ஆத்திரமும் வந்தது......

ஒரு இறுக்கத்துடன் வெளியே வந்தோம்...!பெரியவர்....கைகளை பிடித்துக் கொண்டு...அழுகாத குறையாக அந்த இறுக்கத்திலும் நன்றி கூறியது....அவரின் உள் இருந்த பிரமாண்டமான மனித நேயத்தைக் காட்டியது.....! மெல்லிய குரலில்... நீங்க ஒரு ரெண்டு நாளு கழிச்சு வந்து பாருங்கய்யா.... அந்த அதிகாரி வந்தவுடன் உங்க பேப்பர்ஸ் வாங்கிக்கிடுங்க..என்று சொன்னேன்....!

சராசரி ஒரு இந்திய இளைஞன்... வேறு என்னதான் சொல்லமுடியும்....?

பெரியவரை..என்னுடைய பைக்கிலேயே கொண்டு போய்... பஸ்ஸ்டாண்டில் விட்டேன்.... ! எந்த ஒரு முடிவும் எட்டாமல் ....கையிலிருந்த காசும் போய்....... நின்ற பெரியவரிடம்..கேட்டேன்...! பஸ் சுக்கு காசு இருக்குங்களா ஐயா....? அதை காதில் வாங்கதவராய்....தம்பி.. ஒரு டீ சாப்பிட்டுட்டு போ தம்பி என்று நன்றி சொல்ல முயன்றார்.....! இல்லங்கய்யா... பரவாயில்லை என்று சொன்னவுடன்.. பக்கத்து கிராமமான தனது ஊரின் பெயரைச் சொல்லி சாப்பிடாறப்புல வாங்கய்யா.ன்னு என்னுள் பாசத்தைக் கொட்டினார்....

கையை அவர் அழுந்த பிடித்திருந்தார்.....! அன்பு அவரிடம் இருந்து என்னிடம் அந்த அழுத்ததின் மூலம் பாய்ந்து கொண்டிருந்தது. ஐயா.. ஒரு மூணு நாள் கழிச்சு வந்து பாருங்கய்யா.... உங்க கடிதாசிய அந்த ஆபிசர் கிட்டயே வாங்கிக்குங்க....மீண்டும் சொன்னதையே திரும்ப சொன்னேன்! கும்பிட்டார்.... பெரியவர்..... 5 மணி நேர அனுபவத்திற்கு பிறகு வீடு நோக்கி சென்று கொண்டிருந்தேன் நான்.....காற்று எதிர் திசையில் இருந்து முகம் கிழித்தது....மனம் சுருண்டு போய் என்னையே பார்த்துக் கொண்டிருந்தது..........

அரசு அலுவலகங்களில்....வாடிக்கையாளர் சேவை என்றால் என்ன என்று இதுவரை யாருக்கு சரியாக பயிற்றுவிக்கப்படவில்லை அல்லது யாரும் சரியாக பயிலவில்லை.....! அரசாங்க அதிகாரிகள் எல்லாம் பொதுமக்களின் சேவையாளர்கள்...என்ற மனப்பாங்கு மாறியது எப்போது? அல்லது ஏன்?

காவல்துறை முதல் அத்தனை அரசு சார் அலுவலகங்களும் பொதுமக்களிடம் எதிர்பார்ப்பது என்ன? விவாசாயம் செய்து பயிர் பச்சையோடு பழகிய வெகுளி மனிதர்களுக்கு சேவை செய்யத்தானே நீங்களும் உங்கள் கல்வியும்? இல்லை உங்களின் ஜம்பத்தை காட்டவா?

ஒரு வீட்டைக் காக்க செக்கியூரிட்டி..அந்த செக்கியூரிட்டிக்கு வீட்டு முதலாளிதான் சம்பளம் கொடுக்கிறார். நேரிடயான தொடர்பு என்பதால் அங்கே முதலாளிக்கு மரியாதை கொடுக்கும் செக்க்யூரிட்டி... தன்னுடைய பணியில் கவனமாகவும் இருக்கிறார்....இல்லை என்றால் வேலை போய்விடும் என்ற பயம் இருக்கிறது.....

ஆனால்...

காவல்துறையாகட்டும்...அல்லது மற்ற அரசு சேவை நிறுவனங்களாகட்டும் இவர்களுக்குக் மறைமுகமாய் சம்பளம் கொடுப்பது யார்? நாம்தானே.....ஏன் அவர்களுக்கு பயம் இல்லை....அரசு என்பது மக்கள் சாரா ஒன்றா?

தனியார் பேருந்து, தனியார் பள்ளிகள், இன்னும் எல்லா தனியார் நிறுவனங்களும் பொறுப்பாய் இருக்கும் போது.....அரசு சார் நிறுவனங்களில் எல்லாம் ஏன் பொது மக்களை மதிப்பதே இல்லை?

ஊருக்குப் போன அலுவலர் திரும்ப எப்போ வருவார்? என்று கேட்டது அந்த பெரியவரின் குற்றமா? இல்லை...அலட்சியமாய் கால் மேல் கால் போட்டு மாட்று வழி சொல்லாமல் திமராய் பதில் சொன்ன அந்த அரசு அலுவலரின் குற்றமா? இல்லை அரசு அலுவலரை தாக்குவது தவறு என்ற நியதியை விசாரிக்காமல் உபோகித்த காவல்துறையின் குற்றமா? தீர்வு சொல்வதற்கு நமது நாட்டில் ஆட்களும் சட்டமும் இல்லவே இல்லையா?

குப்பையாய் கிடக்கிறதே உங்கள் அலுவலகம்....தூசு படிந்த கோப்புகள் மலை மலையாய்.... , இல்லாத டேபிள்களுக்கு மின் குழலும், மின் விசிறியும் ஓடுகிறதே......? அரசு அலுவல தொலைபேசிகளின் கட்டணங்கள் சரிபார்க்கப்படுகிறதா? ம்ம்ம்ம்ம்...போய்ப்பாருங்கள் தோழர்களே....ஏதாவது ஒரு அரசு அலுவலகத்துக்கு.......? ஏன் நாமும் நம் நாடும் முடங்கிக் கிடக்கிறோம் என்று அப்பட்டமாய்த் தெரிய வரும்........

......
......

வீட்டில் பைக்கை நிறுத்தி ஸ்டாண்ட் போட்டேன்....! வாசலிலேயே...அப்பா வழி மறித்தார். என்ன ஆச்சு? ரேசன் கார்டில் அட்ரஸ் சேஞ்ச் பண்ண கையெழுத்து வாங்கிட்டியா....? கோபமாய் கேட்டார்....! இல்லப்பா....என்று சொல்லி முடிவதற்குள்...வெட்டிப் பயடா... நீ உன்னைய நம்பி ஒரு வேலை கொடுத்தேன் பாரு.... எங்க போய் சுத்திட்டு வர்ற....? நானே போய் நாளைக்கு வாங்கிக்கிறேன்....என்று சொன்னவர்....போ ...போ...போய் சாப்பிடு ...அதயாச்சும் ஒழுங்கா செய்....விலகி வாசலுக்கு வழி விட்டார்.... நான் சொல்வதற்கு என்ன இருக்கு...? மெளனமாய் வீட்டிற்குள் சென்றேன்......


பக்கத்து அறையில் ....தம்பி படித்து கொண்டிருந்தான்......

" சத்ய மேவ ஜெயதே... என்றால்...வாய்மையே வெல்லும்.....! எப்போதும் உண்மையும் சத்தியமும் பேச வேண்டும்....அதுவே நமது அரசாங்கத்தின் முக்கிய கொள்கை....இதைத்தான்....வள்ளுவர்....

வாய்மை எனப்படுவது யதெனில்........"

எனக்கு ஒரே குழப்பம்...இவன் படிப்பதும் உணர்வதும்...... நாளை இவனை கெடுக்குமா....இல்லை நல்வழிப்படுத்துமா?..........ம்ம்ம்ம்ம்ம்

" தம்பி சாப்பிட வாப்பா" அம்மாவின் குரல் என்னை கலைத்தது........... இதோ குளிச்சுட்டு வந்துர்றேன்மா......குளியலறைக் கதவை ஓங்கி சாத்தினேன்......கோபமாய்...!

வேறு என்னதான் செய்ய முடியும்? நீங்களே சொல்லுங்கள்....


பின்குறிப்பு: மிகைப்பட்ட அரசு அலுவலர்கள் நேர்மையாகவும் நியாயமாகவும், நடந்து கொண்டுதானிருக்கிறார்கள் ஆனல் புரையோடிப் போயிருக்கும் ஒரு சிலரைப் பற்றிதான் கட்டுரை விவரிக்கிறது. ஒட்டு மொத்த அரசு அலுவலர்களையும் தவறாக எண்ணக் கூடாது என்ற எண்ணத் தெளிவையும்....விளக்கத்தையும் பதியவிழைகிறேன்!

தேவா. S

Monday, July 19, 2010

படைப்பு.....!வார்த்தை இல்லா வார்த்தை பேச வேண்டும்; அதில் யாரும் சொல்லாத சொற்கள் கொண்டு நான் நிரப்பவேண்டும்; இல்லாத கருத்தை நான் பகிர வேண்டும்; மொழியற்ற மொழி ஒன்றை கற்க வேண்டும் அதில் சொல்லாத மேன்மைகள் நான் சொல்லவேண்டும்.

படித்தன எல்லாம் சுமையாகிப் போயின; பகிர்ந்தவை எல்லாம் எண்ணமாக உருக்கொண்டு திடமாகிப்போயின; திட்டமெல்லாம் கலைந்து கொண்டே இருந்தன; மனிதரெல்லாம் மாண்டு கொண்டே இருந்தனர்; பொருளான எல்லாம் பொருளற்று போனது; பொருளற்றது எல்லாம் பொருளாகிப் போனது. விந்தை மனமோ அதற்கு ஆயிரம் கற்பிதங்கள் கொண்டது.

வீசும் காற்றும், கொட்டும் மழையும், பளிச்சிடும் மின்னலும், வெக்கையான வெயிலும், மரமும், செடியும், கொடியும் ,விலங்கும், பறவையுமென பரவி விரிந்த இவ்வுலகில் பார்த்தவை எல்லாம் அழியும் என்ற விந்தை வாழ்க்கைக்கு விளக்கங்கள் கேட்டு, பெற்று பொதி சுமக்கும் மனிதராய் ஆகிப்போய் ஒரு நாள்.... அந்த ஒரு நாள்... மறு பக்கம் கிடக்கும் எலும்புத் துண்டினை கவ்வ நினைத்து சாலை கடக்கும் நாய் சட்டென வந்த ஒரு கன வாகனத்தில் அடிப்பட்டு உயிர் விடுவது போல முடிந்து போகிறதே எம் வாழ்க்கை....

மிச்சமில்லை சொச்சமில்லை மொத்தமாய் கொண்டு போய்க் கொண்டு இருக்கின்ற வாழ்க்கையில், அறிஞர் என்றும், ஞானி என்றும், விஞ்ஞானி என்றும், தலைவர் என்றும், மன்னரென்றும் கூவி கூவி மார்தட்டி மாண்டு கொண்டிருந்தனர் மனிதரெல்லாம்.இவர் சென்றவிடம் எதுவன்றியாமல், எரிந்து போன அல்லது மண்ணோடு மட்கிப் போனதே இவரின் இறுதியென்றால் கூவி... கூவி... நான் இன்னாரென்று கூறுவதின் அர்த்தம்தான் என்ன?

இன்னதென்று அறிவேனில்லை; என்னவென்றும் புரிவேனில்லை ஆனால் நித்தம் நான் கட்டும் வேசத்துக்கொன்றும் குறைவு இல்லை. ஒரு நாளேனும் தனித்தமர்ந்து சிந்திப்பெனில்லை, வெட்டவெளி ஆகாயம் உற்று நோக்குவேனில்லை உருத்தெரியாமல் அழிவெய்யும் தேகத்தின் செயல் பாடு அறிவேனில்லை.

கற்பனையாய் யாரோ நானென்ற ஆத்திர அறிவகன்ற ஒரு கற்பனை வாழ்க்கை குதிரையில் பயணம் செய்யும் ஒரு மூடனாய்...என்னையே ஏமாற்றி ஏமாற்றி....பகலெல்லாம் ஜம்பம் பேசி...போகும் இடமெல்லாம் தடையின்றி புலன் பறக்கவிட்டு தெருவோர நாய் போல வாய்பிளந்து மூச்சிறைக்க கடந்து இரவென்னும் மற்றுமொறு ரகசியத்துக்குள் நுழைந்து பேய் போல பிணம்தழுவும் ஒரு காமம் கொண்டு அதற்கும் காதலென்ற வெற்றுப் பெயரிட்டு பூதமாய் உறங்குவேன் கடை வாய் எச்சில் ஒழுக மற்றுமொரு விடியலுக்காய் பொய்மையில் கரைத்த என் ஜம்பங்களின் விற்பனைக்காய்...

ஒரு புள்ளியாய் நான் கரைந்து போய்...போக்கிடம் இல்லாத ஒரு வெற்று பொருளற்ற பொருளாய், நிறமற்ற நிறமாய், சுவையற்ற சுவையாய், என்றுதான் கரையுமோ என் ஜீவன். சிறுவனாய் மிட்டாய்க்கும், தெருவோர விளையாட்டுக்கும் ஆசைப்பட்டு, பதின்ம வயதில் எதிர் பாலார் மீதிருந்த ஈர்ப்பினில் ஆசைப்பட்டு, இளைஞனாய் பதவிக்கும் பகட்டுக்கும் காமத்துக்கும் ஆசைப்பட்டு, மத்திம வயதில் தலைமுறைக்கு வேண்டுமென செல்வம் சேர்க்க ஆசைப்பட்டு, நரையோடிப் போய் நாடி தளர்ந்த வயதினில் மீண்டும் இளமைக்கு ஆசைப்பட்டு....மாயா புள்ளியை நோக்கி ஓடி ஓடி உடலில் பல நோய் சேர்ந்து....மரணிக்கும் முன்பு என்ன நிகழ்கிறதென்றறிய ஒரு தடிமனான மூளை கொண்டு....மரித்துப் போவதுதான் வாழ்க்கையோ.....?

பொய்மையில் சேராமல் நித்தம் உள் நோக்கி என்னின் தவம் அறிந்து வாழ்வின் பொருளறிந்து ஒரு மெல்லிய மலர் மலர்ந்து விதை பரப்பி பின் மடிவதுபோல நிகழாதோ எம் வாழ்க்கை? எம் மூளையின் மடிப்புகளி எத்தனை சிந்தனைகள் இருந்து என்ன பயன்? கோடி கோடி செல்வம் சேர்த்துதான் என்ன பயன்? எம்மின் கல்வியும் செல்வமும் ஆக்கமும் புறத்திலிருக்கும் எம்மை ஒத்த மானிடருக்கு பயன் தராவிடில் அவற்றை பெறுவதின் நோக்கம்தானென்ன? எம் இரைப்பை நிரப்பி எமக்கு வேண்டுவோர் இரைப்பை மட்டும் நிரப்பும் சுயநலம்தானா வாழ்க்கை?

உடலெல்லாம் அக்னி தின்னும் முன் அல்லது மண் அரிக்கும் முன் மரணித்த உடனே எடுக்கச் சொல்லியிருக்கிறேன் என்னின் உடலின் பாகமெல்லாம். எதுவெல்லாம் பயன் தருமோ அதுவெல்லாம் கொள்ளுங்கள்...என்ற சாசனம் எழுத்தில் உறுதி செய்து உறவுகளிடம் சமர்ப்பித்தேன்....! எமது கண்களும், சிறு நீரகமும், இன்னும் என்னவெல்லாம் உதவுமோ அத்தனையும் பிய்தெடுத்து உபயோகம் கொள்வீர் ஏனெனில் யாம் கொனர்ந்தெதென்று எதுவுமில்லையன்றோ?

இதைக் கூட மிகைப்பட்ட செயலென்ற ஒரு வேசம் கட்டி காண்பித்த மமதை கொண்ட மானம் கெட்ட மனதோடு சண்டையிட்டு...எம்மின் இவ்வறிவிப்பு மிகைப்பட்ட மனிதரின் சிந்தனைகளை உயிர்ப்பிக்கும்.....அந்த உயிர்ப்பிப்பில் கோடணு கோடி கண்கள் பார்க்கும்....., மனிதம் வாழும்....என்ற எண்ணம் திண்ணமானதின் விளைவு இக்கட்டுரை......

என்னவெல்லாம் செய்ய இயலும்? இயன்றவரை செய்வோமே....அதுவன்றி வெறுமனே மரித்துப் போனால்.....எதற்குதான் இந்த படைப்பு.....?தேவா. S

Saturday, July 17, 2010

எனது ஆன்மீகப் பயணம்....!


எங்கிருந்து தொடங்க...என்னுடைய ஆன்மீகப் பயணத்தை? பிறப்பிலிருந்தா? இல்லை கருவாய் ஜனித்த பொழுதா? இல்லை அதற்கு முன்பு சக்தியாய் அணுக்களாய் நான் விரவியிருந்த காலமில்லா காலத்திலிருந்தா? சரியான கட்டுரை வடிக்க சரியான மனோ நிலை வேண்டும். சரியான மனோ நிலைக்காக காத்திருந்தேன்....வானம் பார்த்த பூமியில் மழைக்காய் காத்திருக்கும் விவசாயி போல... ! ஒரு மழை அடித்துப் பெய்யும் அந்த தினம்தான் வானம் பார்த்த விவசாயி வாழ்க்கையின் தவம் முடிந்த வரம்.....!

இன்று என்னுடைய வரம்.....

சிவனைத் தொழும் சிவகோத்திரம்....பரம்பரை பரம்பரையா வெண்ணீறு தரித்து " தென்னாடுடைய சிவனே போற்றி எந் நாட்டவர்க்கும் இறைவா போற்றி" என்ற சப்தமான குரல்களை பிறந்தது முதல் கேட்டு வளர்ந்த ஒரு புறச்சூழல். காலையிலும் மாலையிலும் "கந்தர் சஷ்டி கவசமும் " " ஏறு மயில் ஏறி விளையாடும் முகம் ஒன்று" என்று கணக்கில்லா சாமி படங்கள் இருந்த பூஜை அறையில் ஒங்கி ஓங்கி உரக்க வழிபடுவது என....எல்லாமே வளர்ப்பிலேயே உடன் வளர்ந்ததேயன்றி இன்றுதான் ஆரம்பித்தது என்று தெளிவாக சொல்லத் தெரியவில்லை எனது ஆன்மீகப் பயணம்.

தோட்டத்தில் தட்டான் பிடிக்கும் ஒரு 12 வயது சிறுவனான...என்னிடம் தட்டானை கொல்லாதே அடுத்த பிறவியில் நீ தட்டானைப் பிறப்பாய் தட்டான் உன்னைத் துன்புறுத்தும் என்று அப்பத்தா கேட்ட அடுத்த வினாடியில், போன பிறவியில் தட்டான் என்னை அடித்திருக்குமோ என்று அனிச்சையாய் எழுந்த கேள்வியை என்னால் மறுக்க முடியவில்லை.

சொர்க்கம் நரகம் பற்றிய கதைகளில் இரவுகளில் உறக்கம் வராமல் தவித்து கனவில் வந்த எண்ணெய் கொப்பரையையும் அதில் தள்ளப்படுகிற மனிதர்களின் அலறல்களையும், சுற்றி நின்று பயமுறுத்தும் கொம்பு வைத்த பல் நீண்ட அரக்கர்களையும் கண்டு பலமுறை நான் உறக்கத்திலிருந்து அலறி எழுந்த போது என்னின் பயம் நீக்க அப்பா....."மந்திரமாவது நீறு " என்று திரு நீற்றுப் பதிகம் பாடி ஓங்கி தலையில் திருநீரால் அடித்து அந்த நடுநிசி உறக்கம் கலைத்து நெற்றியில் விபூதி பூசிய நேரங்களில் எல்லாம் பயம் குறைந்து கண்ட கனவினை வெளியே சொல்லாமல்.... அப்பா பாடிய மந்திரம் இருக்கு, நெற்றியில் விபூதி இருக்கு என்ற தைரியத்தில் உறக்கம் என்னைத் தழுவ நிம்மதியாக உறங்கிய தருணங்களில் எனக்குத் தெரியாது இவை எல்லாம் மனித பயம் போக்க, நம்பிக்கை கொடுக்க மனிதனால் உருவாக்கப்பட உத்தி என்று....

வளர வளர.....கேள்விகளால் நான் நிரம்பி வழிய பதிலே இல்லாமல் மௌனமாய் சாமிப் படங்களைப் பார்த்து விட்டு மிகைப்பட்ட கேள்விகளை தெரிந்த பெரியவர்களிடம் " சாமிக்கு எதுக்கு கண்ணு, கை எல்லாம் இருக்கணும் அவுங்களுக்கு தான் சக்தி இருக்கே" நினைச்சா நினைச்சது கிடைச்சுடாதா என்ற கேட்டு வைக்க... பதில் தெரியாத அல்லது சொல்ல விரும்பாத பெரியவர்களின் முறைப்புகளும், இவன் உருப்படமாட்டான் அதிக பிரசங்கித்தனமா பேசுறான் என்று அப்பாவிடம் வத்தி வைத்த அம்பவங்களுக்கும், சமுதாயத்திற்கும் பயந்து என்னுள்ளே அடக்கிய கேள்விகளும், கேலிகளும் லட்சத்தை தாண்டும்.


மிகைப்பட்ட இஸ்லாம் நண்பர்கள் எனக்கு... அவர்களிடம் இருந்து தனித்து தெரியக் கூடாது என்று நான் விபூதி பூசுவதை விடுத்து அவர்களில் ஒருவாராய் இருந்த எனது பதின்ம வயதுகளில் உருவமில்லா கடவுள் கொண்ட இஸ்லாம் என்னை ஈர்க்கவே செய்தது. அவர்களிடம் இருந்து வித்தியாசப்படாமல் இருக்க எனக்கு இஸ்லாம் பற்றிய அறிவு வேண்டும் என்று விளையாட்டாய் முகமது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாற்றை எடுத்து படித்து முடிக்கும் முன்பு கண்கள் கசிந்து உள்ளம் உருகி திருகுர் ஆனை படித்தே ஆக வேண்டும் என்ற வேட்கையில் எடுத்து படிக்க ஆரம்பித்த நான்....படுத்துக் கொண்டு படித்தேன் பின் ஏன் மெல்ல எழுந்தேன்....அமர்ந்தேன்....பின் பவ்யமாக அந்த வேதத்தை மேலான ஒரு மேசையில் இருந்து வாசிக்க ஆரம்பித்தேன்....என்று தெரியாமல் தொடர்ந்து வாசித்தேன்...

" இறைவன் உருவமில்லாதவன்; அவன் ஆணுமில்லை; பெண்ணுமில்லை; அலியுமில்லை "

ஏதோ ஒன்று உள்ளிருந்து மெல்ல நகர....என் மூலக் கேள்விக்கு பதில் மங்கலாய் தெரிந்த போது எனக்கு வயது 18. அது +2 பரீட்சை முடிந்த மே மாத விடுமுறை. வெயில் வெளியேயும் எனக்கு உள்ளேயும் சுட்டெரித்தது. இறைவன் என்று ஒருவன் இருந்தால் அவன் எல்லோருக்கும் பொது.....சரிதானே...? அவன் வெவ்வேறாக இருக்க சாத்தியம் இல்லை என்ற எண்னம் என் சிற்றறிவுக்குள் எட்டிப்பார்த்தது..

இதனைத் தொடர்ந்து அடுத்த படியாக பைபிளுக்குள் மூழ்கி வெளியே வந்த பின் இயேசு கிறிஸ்துவின் மலை உபதேசமும், கருணையே வடிவான இயல்பும், மனிதர்களை நேசிக்கும் மகத்துவமும் உணர முடிந்தது. மிக அதிகமாக கிறிஸ்துவைப் படித்த பின்பு, இயேசு கிறிஸ்து மிக சந்தோசமான மனிதராக, எப்போதும் மக்கள் கூட்டத்துடன் கூடிக்களித்தவராக, அன்பே வடிவானவராக, இருந்திருக்கிறார். அவரின் சித்தாந்தம் பழைமைவாதிகளான யூதர்களுக்கு பிடிக்காமல் சிலுவையில் அறைந்திருக்கின்றனர். ஆனால் சந்தோசமான ஒரு புருஷனை ஏன் சோகமாக படங்களில் காட்டவேண்டும் என்ற கேள்வியும் என் மூளைக்குள் எழுந்ததை என்னால தவிர்க்க முடியவில்லை.

என்னைச் சுற்றியிருந்த மூன்று மிகப்பெரிய மதங்களை என் அறிவுக்கு விளங்கினாலும்... மூன்றின் மூலமும் ஒன்றுதான் என்று எனக்குள் இருந்த ஒன்று நம்பத்தொடங்கியது...இது மனசு சொல்லும் நம்பிக்கையில்லை...ஒரு குழந்தையைப் பார்த்தால் தோன்றுமே சந்தோசம் அது போல...கன்று பசுவிடம் பால் குடிக்கும்போது ஏற்படுமே ஒரு பரவசம் அது போல உணர்ந்தேன். ஆனால் கேள்விகள் தொடர்ந்து கொண்டுதான் இருந்தது. ஏன் வேறு வேறு பாதைகள்....? மதங்கள் சொல்வது போல சொர்க்கம் நரகம் உண்டா? அப்புறம் கடவுள் ஏன் புராணத்திலும் வரலாறுகளிலுமே இருக்கிறார் நம் முன் அல்லது இது வரை அவர் வந்ததை பல பேர் ஒரு சேர ஏன் பார்க்கவில்லை?

பார்த்தவர் எல்லாம் தான் தனித்து பார்த்ததாக கூறும் சூட்சுமம் என்ன? அதை அப்படியே பின்பற்றாமல் அறிவியலோடு சேர்த்து கடவுள் இருப்பை புரிந்து கொள்ள வேண்டும் என்று என்னுடன் சண்டையிட்டதின் விளைவு....... ஐன்ஸ்டீன், நீல்ஸ்போர், டார்வின், காரல் மார்க்ஸ், லெனின், நீட்ஸே, ப்ரெடரிக் ஏங்கல்ஸ், சிக்மண்ட் ப்ராய்டு, லாவோட்சூ, கன்பூசியஸ், ஓஷோ, பாலகுமாரன், சுஜாதா, பெரியார், விவேகாந்தர், என்று தொடர்ந்து படிக்க வைத்தது. பெரியாரின் கொள்கைகளையும் ஏன் கடவுள் இல்லை என்று அவர் கூறினார்....? மேலும் இப்படி பகிரங்கமாய் கூறியும் ஏன் அந்தக் கொள்கை வேரூன்ற வில்லை.....மனிதர்கள் ஆன்மீக ஈடுபாடும், கோவில்களும் சர்ச்சுகளும் மசூதிகளும் ஏன் அதிகரிக்கின்றன....என்ற கேள்விகளுடன் கல்லூரி வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருந்த போது நான் சந்தித்தவர் தான்

செல்வமணி மாமா....

பலகேள்விகளுக்கு செவுட்டில் அறைந்தது போல இவர் சொன்ன பதில்களும், எதற்கு கோவில் என்று இவர் கொடுத்த விளக்கங்களும், உருவமில்லா ஏதோ ஒன்றை நோக்கி இழுத்துச் செல்லவும் அதே நேரத்தில் சக மனிதனிடம் சந்தோசமாய், பாசமாய், மனிதர்களுக்குள் பிணக்கு வராமல் இருக்க பாமர மக்களுக்காக விபரம் தெரிந்த ஞானிகளாலும், சத்தியம் உணர்ந்த மகான்களாலும் வடிவமைக்கப்பட்ட வழிமுறைகள்தான் மதங்கள் என்றும் சொர்க்கம் நரகம் என்று சொன்னால் மனிதன் சகமனிதனை ஒழுங்காய் நடத்துவான், மேலும் தண்டனைகள் கிடைக்கும் என்று பயந்து கட்டுப்பாடுகளுக்குள் நடப்பான் என்றும்...மதங்கள் உருவான நோக்கமே...மனிதம் செழிக்கத்தான் என்றும்.....வரிசையாக ஒவ்வொன்றாய் அவர் சொல்லிச் செல்ல...என்னுள் இருந்த எல்லா கற்பனைக் கட்டிடங்களும் தூள் தூளானதும்.....தவிர்க்க முடியாத என் வாழ்வின் தருணங்கள்......

ஒரு சக்தி ஓட்டம் நம்மைச் சுற்றி இருக்கிறது மனிதனாய்....விலங்காய்...இயற்கையாய்...இன்னும் எது எதுவாகவோ.....இதை நாம் உணரமுடியும், பார்க்க முடியும் அதனால் இந்த சக்தி ஓட்டத்தை மறுப்பதற்கில்லை. அதே நேரத்தில் வாகன நெரிசல் உள்ள சாலைக்கு சாலைவிதிமுறைகள் எத்தனை அவசியமோ அத்தனை அவசியம்தான் மதங்கள் காட்டியிருக்கும் நெறி முறைகள்......பயிலும் வரை நெறிமுறைகளும் அவசியம்.... பயிற்றுவிப்பானும் அவசியம்.....ஆனால் பயிற்சி இருந்தால் அங்கே புரிதல் இருக்கும் புரிதலின் படி தானாக எல்லா வேலைகளும் நடக்கும்.

பிரேக் இட வேண்டிய இடத்தில் பிரேக் இடவும், வேகம் கூட்ட வேண்டிய இடத்தில் கூட்டியும், குறைக்க வேண்டிய இடத்தில் குறைத்தும், பெட்ரோல் போடவேண்டும் என்ற இடத்தில் பெட்ரோல் இட்டும் சீராக இயக்கம் இருக்கிறது. ஆனால் அதற்காக விதிமுறைகள் அறிந்த வண்டி ஒழுங்காய் ஓட்டும் சிலரை மட்டும் கணக்கில் கொண்டு விதிமுறையே வேண்டாம் என்று சொல்ல முடியுமா? அப்படி இருந்தால் எத்தனை கொடுமையான விபத்துக்கள் நடக்குமோ...கற்பனை செய்து பார்க்க முடியாது அல்லவா?

அப்படிப்பட்ட விதிமுறைகள்தான் மதங்கள்...தெளிவான பார்வையும் பயிற்றுவிப்பும் பக்கத்தில் இருக்கும் மனிதனின் வலியும் தெரிந்து விட்டால் பயணத்தில் சறுக்கல் இல்லை......பாமர மனிதனை பயிற்றுவிக்கவும், மனிதநேயத்தோடு வாழச் செய்யவுமே மதங்கள்......! சம காலத்தில் நம்மை நாமே துன்புறுத்திக் கொண்டு மதம் என்ற ஒரு கோட்பாடுக்குள் சிக்கி சக மனிதனை நேசிக்க முடியாமல் என் தெய்வம் இது, என் சாதி இது என்று மட்டுப் படுத்தி சக மனிதனை இழிவு படுத்துவோமேயானால்....எந்த மதத்தையும் எந்த வேதத்தையும் பின் பற்றுகிறோமோ அவற்றின் முதல் எதிரி நாம்தான்....

சக மனிதரை நேசிக்கச் சொல்லித்தான் எல்லா மதங்களும் கடவுளரும் சொல்கிறார்கள்......! சக மனிதரை இயல்பாகவே நேசித்து கருணையுடன் வாழத்தொடங்கி நாம் யார்? எங்கு சொல்கிறோம் என்று விசாரணையோடு தேடலை உள் நோக்கி நகர்த்துவோம்......அப்படிப் பட்டவருக்கு விதிமுறைகளும், கற்பிதம் கொள்ள கடவுளரும் தேவையில்லை என்பது எனது எண்ணம்.....

என் கேள்வி எல்லாம் ஒன்றே ஒன்றுதான்...

"பாஸ் பண்ணாத பையனுக்கு தான் 10 ட்யூசன்......100 மார்க் வாங்குபவனுக்கு எதற்கு ட்யூசன்?"

பின்குறிப்பு: நண்பர் கே.ஆர்.பி. செந்திலுக்கு..... இப்படி ஒரு தலைப்பில் எழுதச் சொன்னால் நான் தொடராகத்தான் எழுத வேண்டும்.....ஹா...ஹா...ஹா...ஏனெனில் எனது ஆன்மீகப் பயணம் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. பல தரப்பட்ட அனுபவஙக்ள் இன்று வரை நிகழ்ந்து கொண்டேதான் இருக்கிறது. நாளைய தெளிவுகள் நேற்றைய நம்பிக்கைகளை தகர்க்கலாம் தகர்க்காமலும் போகலாம். மிக சுருக்கமாக ஓரளவிற்கு என் தெளிவினை எழுதியிருக்கிறேன்.

இது என்னுடைய பார்வையின் தெளிவு மட்டுமே....!

ஆறறிவு என்ற அக்னி தாண்டி....வெளியேற வேண்டும்....அப்போது வெளிப்படும் சத்தியத்தின் பரிமாணங்கள்!!!தேவா. S

Tuesday, July 13, 2010

தேடல்.....13.07.2010!
உங்களைப் பார்த்தால் நாத்திகர் போலத் தெரிகிறதே? சமீபத்தில் ஒரு நண்பர் என்னிடம் கேட்ட கேள்வி இது. நான் நாத்திகனா? இல்லை என்னை நாத்திகனாக நீங்கள் நினைக்கிறீர்களா? இது நான் அவரிடம் கேட்ட கேள்வி. அவர் சொன்னார் உங்களின் எழுத்துக்களைப் பார்த்தால் நீங்கள் கடவுள் இல்லை என்று சொல்வது போல எனக்குத் தோன்றியது அதுதான் கேட்டேன் என்று சொன்னார். அது அவரின் தீர்மானிப்பு அல்லது நண்பரின் மூளை அவருக்கு ஏற்படுத்திய சவுகரியம் அதை என் மீது திணித்து சரி என்று உணரும் பட்சத்தில் தமது தீர்மானிப்புக்கு இரை கிடைக்க செய்யும் முயற்சிதான் இந்தக் கேள்வி. நான் எப்படி இன்னொருவரின் அனுமானத்திற்கும் எதிர்பார்ப்புக்கும் பதில் சொல்வது.

இது ஒரு வகை என்றால்....இன்னொரு சகோதரர் என்னிடம் வேறொரு நாள் வந்து நீங்கல் கடுமையான ஆன்மீகவாதி போலத் தெரிகிறதே....சிவபுராணம் பற்றிச் சொல்கிறீர்கள், கோவில் எதற்கு என்று சொல்கிறீர்கள், சிவவாக்கியர் பற்றி பேசுகிறீர்கள் ம்ம்ம்ம் எப்படி மூட நம்பிக்கைகளுக்குள் விழுந்து இப்படி போலியை நம்புகிறீர்கள்....பகுத்தறிவு ஒன்று இருக்கிறது அதை உங்களைப் போன்றவர்களே...விட்டு விட்டால் என்ன அர்த்தம்....? என்று கேட்டார். மறுபடியும் இதுவும் அனுமானம் அல்லது அவரின் தீர்மானத்தை சரி என்று உறுதி செய்ய மனது எடுக்கும் முயற்சி...சரியா?

வாழ்க்கையை வாழ....குறைந்த பட்சம் மனிதனாக இருந்தால் போதாதா? ஒன்று கடவுள் ஆதரிப்பாளாரக இருந்து அதைப் பற்றி தத்துவங்கள் பயின்று....கடவுள் இருக்கிறார் என்று உறுதி செய்ய ஒராயிரம் புராண உதாரணங்கள் மற்றும் கதைகள், நம்பிக்கைகள்...என்று எல்லாம் தெரிந்து எல்லாவற்றுக்கும் கடவுள் மேல் பாரமிட்டு....தங்களை தாமே அறிந்து கொள்ளாமல் வேறு எவர் பின்னோ ஓட வேண்டும். அதிர்ஷ்டவசமாக நூற்றில் ஒருவர் தன்னைப் பின் தொடர்பவர்களை நல்வழிப் படுத்தி உள் நோக்கி அவர்களை சிந்திக்க வைத்து தான் யார் என்று முதலில் ஆராயச் சொல்லி எந்த வித கட்டணமும் இன்றி வழி நடத்துதலை செய்து விடும் அற்புதமான ஆசிரியர் ஆக இருக்கிறார்.

மீதமுள்ள 99 பேரும் தன்னுடைய புலமையை, கற்றறிந்த நூல்களின் தத்துவங்களைச் சொல்லி மக்களை மயக்கி தன்னை ஒரு மிகப்பெரிய சக்தியாய் காட்டிக் கொண்டு, பிரச்சினைகளுக்கு நடுவே நகரும் சாமானிய மக்களிடம் ஒரு மிகப் பெரிய வசீகரத்தை உண்டாக்கிக் கொண்டு தங்களின் அறிவுத் திறனால், சொற்பழிவாற்றும் திறனால் மிகப்பெரிய மாயையை உண்டாக்கி தங்களின் வாழ்க்கையை சுபிட்சமாக ஆக்கிக் கொள்கின்றனர்.

சுமார் ஒரு லட்சம் பேர் போய் ஒரு சாமியாரிடம் குறைகள் சொல்லி ஆசிர்வாதம் கேட்கும் போது ஒரு ஆயிரம் பேரின் பிரச்சினை ஆட்டோமேடிக்காக அவரவரின் சூழலுக்கும் திறனுக்கும் ஏற்ப தீர்ந்து விடுகிறது. பிரச்சினை எங்கு ஆரம்பிக்கின்றது என்றால் இந்த ஆயிரம் பேரிடம் இருந்துதான்...ஆமாம் இந்த ஆயிரம் பேரும் தான் கடவுளாய் நம்பும் சாமியார்தான் தீர்த்து வைத்ததாய் நம்பத்தொடங்குகிறார்கள்,..இந்த ஆயிரம்பேர்தான் டி.வியிலும் பத்திரிகைகளிலும் பேட்டி கொடுத்து அந்த தனிப்பட நபரின் துதி பாடுகிறார்கள். இந்த ஆயிரம் பேர் மேலும் பல்லாயிரக்கணாகான ஆட்களை அவர்கள் பின்பற்றும் சாமியாரிடம் இழுக்கிறார்கள்.

ஆனால் நிஜத்தில் கடவுள்தன்மையை விட்டும், வாழ்க்கையை விட்டும் வேறெங்கோ சென்று விடுகிறார்கள். கடவுள் பக்தி என்ற போர்வையில் உண்டியலில் காசு போடுபவர்கள் தெருவில் பிச்சை எடுக்கும் குழந்தைகளுக்கும், வறியவர்களுக்கும், முதியவர்களுக்கும் ஒன்றும் கொடுப்பதில்லை. தியானம் கற்கவும், யோகா செய்யவும் லட்சங்களில் செலவு செய்பவர்கள் எத்தனையோ ஏழைக் குழந்தைகளுக்கு கல்விச் செலவினை ஏற்கலாம்....இது இது...இந்த இடத்தில்தான் கடவுள் பெயர் சொல்லிக் கொண்டு கடவுளுக்கு எதிராக செயல்படுவதாக எனக்குப் படுகிறது.

உங்கள் கடவுள் இருக்கிறார் என்றே வைத்துக் கொள்வோம்...அவர் பணக்காரர்களை அதிக பணம் செலுத்தினால் ஸ்பெசல் தரிசனம் செய்ய அனுமதித்து வறுமையான மக்களை பின்னே கூட்டத்தில் நிற்க வைத்து தரிசனம் செய்தால் அவர் நியாயமானவரா? நீங்களே சொல்லுங்கள்.... ! கடவுள் ஒருக்காலும் அப்படி இருக்க முடியாது அப்படி இருந்தால் அவர் கடவுளாக இருக்க முடியாது...... அதானால் தான் மிகைப்பட்டவர்க்ள் நம்பிக் கொண்டிருக்கும் அல்லது பின்பற்றிக்கொண்டிருப்பது தங்கள் மனதின் நிர்ணயத்தையும், சுயகருத்துக்களையுமேயென்றி கடவுளை அல்ல.....

யோகாவும், தியானமும் இந்தியாவின் பூர்வாங்க சொத்து....இதை படித்து அறிந்து கற்றவர்கள் ஏதோ ஒரு நியாயமான கட்டணம் கேட்டால் பரவயில்லை....சிவசூத்ரம் கற்க...லட்சங்களில் காசு...???? எப்படி மனிதர்களே இவர்களோடு ஒத்துப் போகிறீர்கள்....? கடவுள் என்று இருந்தால்..அவரின் கோபம் முதலில் தன்னை பின்பற்றுகிறேன் என்று சொல்லிக் கொண்டு அவரின் பெயரை கெடுக்கும், அரசியல் செய்யும் ஆத்திகர்களை அழிப்பதில்தான் இருக்கும்....

கடவுள் மறுப்புக் கொள்கை கொண்டவர்கள் ஆராய்ச்சியிலும் தேடலிலும் இருக்கிறார்கள் என்றுதான் சொல்வேன்...இறுதி உண்மை பற்றி அறியும் மிகுந்த வேட்டையோடு தேடுகிறார்கள் ஆனால் என்ன ஒன்று ...ரொம்ப உக்கிராமாக தேடுகிறார்கள்.....அந்த உக்கிரத்தில் அவர்களின் சாடல்கள் எல்லாம் மூட நம்பிக்கைகளை பின்பற்றும் மனிதர்ள் மீது ஆக்ரோஷமாய் பாய்கிறது....அவர்கள் வழிபடும் கடவுள் மீது இன்னும் ஆக்ரோஷமாய் பாய்கிறது. பல நேரங்களில் அவர்களின் தேடல் மட்டுப்படும் அளவிற்கு இவர்களும் கருத்துக்களை சுமந்து கொண்டு கடவுள் மறுப்பு என்று மட்டுப்பட்டு விடுகின்றனர்...இப்படி மட்டுப்படும் போது பிரபஞ்ச ஆராய்ச்சி அல்லது தேடலுக்கு புறமாகி விடுகிறார்கள். ஆனால் பல வகையிலும் சத்தியத்திற்கு அருகில் இருக்கிறார்கள் என்றுதான் சொல்வேன்......

இன்னும் சொல்லப்போனால்..... நாத்திகனாகவும்...அல்லது ஆத்திகனாகவும் இருப்பதை விட்டு விட்டு...குறைந்த பட்சம் மனிதர்களாக இருந்து சகமனிதனை நேசித்து....சக ஜீவராசிகளை நேசித்து ஒவ்வொரு உயிருக்கும், வெளிப்பாட்டுக்கும் ஒரு மதிப்பு கொடுத்து....இயல்பாய் சுவாசிப்பது போல எதார்த்த வாழ்வு வாழ்வது.....எவ்வளவு அழகானது....

ஆமாம்..... நான் ஆத்திகனுமில்லை... நாத்திகனுமில்லை......சக உயிர்களை மதிக்கத் தெரிந்த...வாழ்க்கையை வாழும் சாதாரண மனிதன்!

பின் குறிப்பு: நண்பர் கே.ஆர்.பி செந்தில் " எனது ஆன்மிகப் பயணம்" என்ற பெயரில் தொடர் பதிவு கேட்டிருந்தார். அடுத்த பதிவில் அது பற்றி எழுதுகிறேன்.

தேவா. S

Photo Courtesy: Ms. Ramya pilai

Sunday, July 11, 2010

ஆடுவோம்...பாடுவோம்...கொண்டாடுவோம்!

எல்லா ஆர்ப்பாட்டங்களும், கூச்சல்களும், சந்தோசங்களும்....ஒழிந்த பின் கிடைக்கும் வெறுமை அசாத்தியமனது. நிறைய கூடி, நிறைய கழித்து அந்த ஆர்ப்பாட்டம் அடங்கும் தருணங்களில் சுவைக்கும் நிசப்தத்தையும் அமைதியையும் சுவைத்து பார்த்து இருக்கிறீர்களா?

வெறுமனே இருக்கும் பொழுதுகளை விட கொண்டாட்டங்கள் மிக முக்கியம் வாய்ந்தன. நமது கலாச்சாரத்தில்... நமது கலாச்சாரம் என்று மட்டுப்படுத்துவது கூட அறிவீனம்தான்...ஒட்டு மொத்த மனித இனத்திற்குமே கொண்டாட்டங்களும், கூத்தும் கேளிக்கைகளும் அத்யாவசியமானதின் அவசியமென்ன? விருந்தினர்களால் நிரம்பி இருக்கும்
நமது வீடு அவர்கள் எல்லாம் கிளம்பிப் போனபின் எப்படியிருக்கும்.....வெறுமையாய் இருக்குமல்லவா?

பல நேரங்களில் கொண்ட்டாங்கள் பற்றிய கற்பனையிலேயே அந்த வெற்றிடத்தை சுவைக்க மறந்திருப்போம்...சரியா? ஒரு விருந்து, ஒரு விழா...ஒரு கூட்டம், ஒரு கேளிக்கை, நடந்து முடிந்த கிடைக்கு அமைதிதான் முதற்பொருளாய் இருக்கும் என்று நினைக்கிறேன். இந்த முதற் பொருளின் பொருட்டுதான் எல்லா மனித அவசியங்களும் ஏற்பட்டிருக்க வேண்டும். இங்கே மிகைப்பட்ட பேரை நட்பாயும் உறாவாயும் கொண்டவர்களுக்கு....பிரிவு ஒன்று வந்துதானே ஆக வேண்டும்....?

காலமெல்லாம், பிரிவையும் இறப்பையும், இழத்தலையும் அடுத்த நிகழ்வின் தொடக்கமாய் கொள்ளாமல் அவற்றை கடந்த காலத்தோடு தொடர்பு படுத்தி அந்த நினைவுகளிலேயே அந்த, அந்த தருணங்களின் சந்தோசங்கள் மனிதனால் காலமெல்லாம் தொலைக்கப்பட்டு வந்து இருக்கின்றன. ஓ...அப்படியானால் கடந்த காலத்தை பற்றி நினைக்கவே கூடாதா என்று யாரோ கேட்பது எனக்கும் கேட்கிறது....! ஒரு வேளை உங்களின் நிகழ்காலத்தோடு கடந்த காலம் தொடர்புடையது என்றால் கடந்த காலத்தை நினைவில் கொண்டு வருவதில் தப்பேதும் இல்லை என்றுதான் நினைக்கிறேன்.

மனிதமனம் மீண்டும் மீண்டும் கேளிக்கைகளையும், சந்தோசத்தையும் கூட்டத்தையும் விரும்புவதற்கு உண்மையான காரணம் அதற்கு பிறகு கிடைக்கும் வெறுமையை சுவைக்கத்தான். ஆனால் ஏன் நிகழ்கிறது....? ஒவ்வொரு நிகழ்விற்கும் பிறகு அந்த நிசப்தத்தை யாரும் கவனிப்பதில்லை. மீண்டும் அந்த சந்தோசம், மகிழ்ச்சி நோக்கி பயணிக்கவே விரும்புகிறார்கள்....ஆனால் அந்த விருப்பம் அடுத்த முறையாவது அந்த கேளிக்கைகளுக்குப் பிறகு... கிடைக்கும் நிசப்தத்தையும் அமைதியையும் சுவைக்க முடியுமா என்ற மறைமுக விருப்பம்தான்.

ஒரு மதிய நேரத்தூக்கத்திற்கு பிறகு ஒரு நாள் மாலை 4 மணிக்கு எழுந்தேன். ஏதோ ஒன்றுமே இல்லாதது போல ஒரு உணர்வு இருந்தது மெல்லிய சோகம் ஒன்று என்னுள் குடி கொண்டிருந்தது போல உணர்ந்தேன். அதை இடைவிடாது தொடர்ந்து கவனிக்க கவனிக்க அது சோகம்....!எல்லாவற்றிலும் இருந்து பகல் நேரத்தில் விடுபட்டிருந்த மனம் சட்டென்று இயங்கமுடியாமால் என்னையே பார்த்துக் கொண்டு இருந்ததை உணர்ந்தேன்.......

நான் மனதைப் பார்க்க, மனம் என்னைப் பார்க்க...மூன்றாவது ஒரு விசயம் ஏதும் இன்றி ஒரு வித சோம்பலோடு கூடிய நிசப்தம் இருந்தது. அது மனதோடு பழக்கப்படாததாய் இருந்ததால்....எப்போதும் வேறு ஒன்றின் தொடர்பிலேயே இருந்து பழக்கப்பட்டு இருந்ததால்..அதனை சோகம் என்றும், யாருமில்லை உன்னோடு என்றும் என்னிடம் விவரித்த மனம் அந்த சூழலின் அர்த்தம் விளங்காமல் மெல்லிய சோகத்தை படரவிட்டு என்னை ஏமாற்றியதைக் கண்டறிந்தேன்.

மனதின் குரலை சட்டை செய்யாமல் அந்த நேரத்தை நீட்டித்து நீட்டித்து....அந்த நான் மட்டும் இருந்த நிலையை...அணு அணுவாய் பருகத்தொடங்கினேன்.....ரசித்து ரசித்து.....சுவைத்து சுவைத்து நீண்டு கொண்டிருந்த நிமிடங்கள் மணி ஆனது. அப்படிப்பட்ட தருணங்களை விட்டு வெளிவரும் போது .....மூன்றாவது விசயத்தோடு, பொருளோடு, அல்லது மனித மனதோடு தொடர்பு கொள்ளும் தருணஙகலில் மனம் மிகவும் உற்சாகமாயும், வேகமாயும் புரிதலோடும், இன்னும் நேர்த்தியாகவும் தொடர்பு கொள்ளும் விசயத்தையும் கவனித்தேன். எங்கே இருந்து கிடைத்தது....இந்த துள்லலும் உற்சாகமும்....? அந்த வெறுமையில் இருந்து..... எங்கே இருந்து கிடைத்தது வெறுமை....? கூடிக் களித்ததில் இருந்து......

"உவப்பத் தலைகூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில்''

வள்ளுவனின் வாக்கின்படி உள்ளப் பிரிதலில் ஒரு சுகம் இருந்திருக்க வெண்டும் அதனால் தான் கற்றறிந்த (கல்வி - அனுபவக்கல்வி அல்லது இறக்கும் வரை படிக்கும் பாடங்கள்) புலவர்கள் உவப்ப, உவப்ப தலைகூடி விட்டு அதாவாது முதலில் சொன்னேனே....அந்த ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் எனக் களித்துவிட்டு..... நிறைய பேறை சந்தித்து மகிழ்ந்து பின் ............அந்த நினைவுகளை நெஞ்சில் தேக்கி.....வெறுமையை உணரத்தான்...உள்ளப் பிரிகிறார்.....

வாழ்க்கையை ....ஆடுவோம்.....பாடுவோம்...கொண்டாடுவோம்...........கொண்டாடி திளைத்து....அதன் எச்சமாய் இறுதியில் கிடைக்கும் நிறைவென்னும் வெறுமையையும் சுவைத்து சுவைத்து... நிசப்தமாக தொடரட்டும் கொண்டாட்டம்... தொடர்ந்து தொடர்ந்து...தொடர்ந்து கொண்டிருக்கும் பேரமைதியின் இரைச்சலில் கரைத்துக் கொள்வோம்..............!


தேவா. S

Saturday, July 10, 2010

பிரபஞ்ச பேரியக்கம்...!


எங்கும் வியாபித்தும் எனைச் சுற்றியும் இருக்கும் பிரபஞ்ச பேரியக்கமே...என்னுள்ளும், எனைச் சுற்றியிருக்கும் எல்லா உயிருகளுக்கும் தங்கு தடையின்று, மாசு மருவின்றி..குறைவில்லாமால் சுவாசிக்க விரவியிருக்கும் காற்றே...கனிகளாய், காய்களாய், ஜீவன்களாயும், எம்மையும் எம்மைச் சுற்றியும் பரவியிருக்கும் இருப்பே...

எங்கும் நீக்கமற நிறைந்து எல்லா பொருளிலும் பொருளற்றதிலும் இயங்கிக் கொண்டிருக்கும் அணுக் கூட்டமே...! மையத்தில் ஏதுமற்ற ஒன்றை...சுற்றி வரும் நியூட்ரானே...புரோட்டானே....எலக்ட்ரானே, அணுவாய் நீங்கள் எல்லா பொருளிலும் நீக்கமற நிறைந்து இயங்கி இயங்கி....பேரியக்கமாய் நிகழ்ந்து நிகழ்ந்து...கல்லாய், மண்ணாய், கடலாய், விண்ணாய், இயற்கையாய், சொல்ல முடிந்தன சொல்ல முடியாதன...கண்டன...காணமுடியாதன என்று எல்லம் உள்ளடக்கி எங்கே நகர்ந்து கொண்டிருக்கிறாய்...பேரியக்கமே....?

உன்னை நம்புகிறார் சிலர்....அபத்தம் அபத்தம்...எப்படி நம்புவது...? நம்புவது என்ற வார்த்தை தடம் பொய்யன்றோ....? உண்டான ஒன்றை..காணாமல் அல்லது உணராமல் இருப்பவர்தானே நம்புகின்றனர். ஆமாம்... என் சுவாசிப்பை ஏன் நான் நம்பவேண்டும்...? அது இடையறாது நிகழ்வதுவன்றோ...எமது இருப்பை ஏன் நம்பவேண்டும்? யான் இருப்பது எமக்கு மிகத்தெளிவாய் தெரியுமன்றோ? எமதிருப்பை ஏன் நம்பவேண்டும்...மாறக உணர்த்தானே வேண்டும்...உணரும் பட்சத்தில் அதை ஏன் நான் நிரூபிக்க வேண்டும்....உணர்ந்தேன்.... உணர்ந்தேன்...அந்த ஆனந்த திளைப்பன்றோ...உச்சம்....உச்சத்தில் நின்று விட்டு ஏன் சிற்றின்பம் நோக்கி பாயவேண்டும்....! விளக்கம் கேட்பவரும் உணர்ந்தாலன்றோ அறியமுடியும்...விளக்கம் விவாதம் எல்லாம்...சத்தியத்தை விட்டு தூரவன்றோ கூட்டிச் செல்லும்.

நம்பிக்கையாளார்கள் எல்லாம் உன்னை வெவ்வேறாக எண்ணி தமது கற்பனையில் எதேதோ கொண்டு நம்புகிறார் பிரபஞ்ச பேரியக்கமே உனக்கும் நம்பிக்கையாளர்களுக்கும் வெகு தூரம்....உன்னை உணரும் தருணத்தில்...இப்பிரபஞ்சத்தின் பேரியக்கத்தை அறியும் பட்சத்தில், சுற்றியிருக்கும் சக்தி ஓட்டத்தை விளங்கும் நேரத்தில்..... நம்பிக்கை பொடிபட்டுப் போகும்....யாமறிந்ததை...யாம் நம்பத்தேவையில்லை....யாம் அறிவோம்.. என்ற நிலை வருமே...அது வரையில்...

நம்பிக்கையாளர்கள் எல்லம் உனக்குத்தூரமே....

மட்டுப்பட்ட அறிவு எமது அறிவு பிரபஞ்ச பேரியக்கமே....! இரவும் பகலும் பொய்யென்ற அறியாத மனம் கொண்டவர் நாங்கள்! பறக்கும் பூமிப் பந்தின் வேகம் எமக்கு தெரியாது. அதே பூமிப் பந்து சற்றே கொஞ்சம் சாய்ந்து சுற்றுவதால்தான் எமக்கு பருவ நிலை மாற்றங்கள் ஏற்படுகின்றன என்ற அறிவும்..ஏன் பூமி சூரியனை சுற்ற வேண்டும்...? ஏன் சூரியன் எல்லாவற்றையும் இழுத்துப் பிடித்து வைக்க வேண்டும் என்பதும் எமக்குத் தெரியாது.


மொத்த பூமியின் 71% நீர் விழுங்கி...மீதமுள்ள...29% சிறிய நிலப்பரப்பில் இருந்து கொண்டுதான் நாங்கள் நாடுகளை பிரித்துக்கொண்டு, சாதிகளை வகுத்துக்கொண்டு, ஆக்கிரமிப்புகளை நடத்திக்கொண்டு..அத்து மீறல்களும் அன்பும் செய்து கொண்டு மனிதம் மனிதம் என்று ஏதேதோ சிந்தாங்கள் எல்லாம் சொல்லிக் கொண்டு கருத்துக்களை பேசி விவாதித்து..எல்லாம் அறிந்தது போல வாழ்க்கையினை நகர்த்திக் கொண்டிருகிறோம்...எங்களால் எப்படி பிரபஞ்சத்தின் மூலமும் சூட்சுமமும் உணரமுடியும்? விடைகாண எம்மின் இருப்பன்றோ முதலிம் யாம் உணர வேண்டும்?

அறிவியல்..அறிவியல்...அறிவியல் என்று சொல்லி ஒவ்வொரு முறையும் எம்மின் உணர்தலின் நுட்பத்தையும் புரிந்து கொள்ளுதலின் சக்தியையும் இழந்து கொண்டுதானிருக்கிறோம் பூமியின் மையத்தில் என்ன உள்ளது என்றும்.. ஆர்டிக் பனிபிரதேசங்களின் என்ன இருக்கிறது என்றும் அறியவே...முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறது எமது மூளைகள்..எங்களிடம் போய் பிரபஞ்சமூலம் பற்றிக் கேட்டால் என்ன சொல்வது?

மட்டுப்பட்ட கட்டுபாடு கொண்ட எமது புலன்களின் எல்லையே எமது அறிவு....எமது புலன்கள் தொட முடியா கோடானு கோடி விசயங்களை உன்னுள்ளே வைத்துக்கொண்டு, எம்மையும் உம்முள் அடக்கிக்கொண்டு மெளனாய் எங்கு நகர்ந்து கொண்டிருக்கிறாய் பிரபஞ்ச பேரியக்கமே ? அறிவியல் உன்னின் அருகிலே கூட வரவில்லை...உம்மின் சுட்டு விரல் கூஉட (எடுத்துக் காட்டுக்காக சுட்டு விரல் சொல்கிறேன்....யாரும் கை விரலை கற்பனை செய்யவேன்டாம்?) தொடவில்லை.....விளக்கமுடியா உன்னை பொருளாக்கி இல்லை என்றும்...உருவமாக்கி கடவுள் என்றும்... நித்தம் புலம்பிக் கொண்டு நகர்ந்து கொண்டிருக்கிறோம்........எதை நோக்கியோ...


மக்கள் என்பது மனிதர்களின் கூட்டம்...........தனித்து காட்டமுடியுமா? எப்படி காண்பித்தாலும்....தனி தனியின் கூட்டத்தைதான் காட்ட முடியும்.........!

தோப்பு...என்றால் மரங்களின் கூட்டம்.....தனித்து காட்டமுடியுமா? எப்படி காண்பித்தாலும்...அது தனியின் கூட்டுதான்......

கடவுளைக் கட்டமுடியுமா....? முடியாது....தனியாய் ஒன்றைக் காட்டி இது கடவுள் என்று சொல்லமுடியாது. கடவுள் (பிரபஞ்ச பேரியக்கம்) ஒரு நபரல்ல...தோப்பு போல, மக்கள் போல...எல்லாம் உள்ளடக்கியதின் கூட்டுதான் கடவுள் (பிரபஞ்ச பேரியக்கம்)......

வாழ்க்கையை காட்ட முடியுமா? முடியாது வாழ்வதுதான் வாழ்க்கை....அது போலத்தான் கடவுளும்....அசையும் அசையா எல்லாம் உள்ளடக்கிய ஒரு மிகப்பெரிய

பிரபஞ்ச பேரியக்கமே...உனக்கு பெயரே இல்லை என்பதுதானே....சத்தியம்!

வேறு என்ன பெயர் வேண்டுமானாலும் வைத்துக்கொள்வோம்....ஆனால் அதன் இயல்பும் பொருளும் மாறாமல் மனதில் இருந்தால்...சரிதானே..!

ஆடி ஓடி களைத்து...
எம்மில் எம்மை தொலைத்து...
வயோதிகமெடுத்து
முட்டி வலித்து...
இடுப்பெலும்பு வலிக்க...
ஆசைகள் எல்லாம்
எம்மை பூதங்களாய்...
ஆக்கிரமித்து..
பேசவும், கேட்கவும்...
ஆளின்றி..மூலையிலே
முடங்கி முடங்கி
முனங்கி...முனங்கி...
கற்பனைக் கடவுளர்
எல்லாம் என்னை
அச்சுறுத்த.....மயங்கி...
வியர்த்து....வரப்போகும்
மரணத்துக்காய்... நான் கழிக்கும்
நேரத்திலாவாது ஒழியுமா...
இந்த பாழாய்ப் போன....
பகட்டு மனம்?


தேவா. S

Monday, July 5, 2010

சாதியே....உன்னை வெறுக்கிறேன்....பதிவுத் தொடர் III !


போர்க்களம் போலத்தான் வாழ்க்கையும் எல்லா பிரச்சினைகளையும் எதிர்கொண்டு, எதிர்கொண்டு அடிவாங்கி,அடி கொடுத்து, அழுது,சிரித்து எல்லா பாவங்களோடும் நகரவேண்டியதாயிருக்கிறது. எப்போதும் கடந்த காலத்தை எண்ணி சந்தோஷப்படும் மனம்.. ஏன் நிகழ்காலத்தில் நிற்க மறுகிக்கிறது...? மேலும்...ஏன் எதிர்காலத்தை எண்ணிப் பயப்படுகிறது என்று...புரியாமல் எதற்காகவோ நொந்து எதற்காகவோ சந்தொஷப்பட்டு நகர்ந்து கொண்டிருக்கிறோம்...!

சாதி பற்றி எழுதவேண்டும் என்று சாந்தமான மனோ நிலையில் முடிவு செய்து எழுதலாம் என்று அமர்ந்தால்.....காதலாய் கவிதைகள் வந்து விழுகிறது....உற்று...உற்று நோக்கினால் என்னையே ஏளனம் செய்து சிரிக்கிறது என் மனோ நிலை! அதானால்தான் காத்திருக்க வேண்டியதாகிவிட்டது! இன்று ஒரு இறுக்கம் என்னைச் சூழ....இறுக்கத்தில் சாதிக்கு எதிரான சீற்றம் என்னை மீறி....வெளிப்பட...

இதோ....

இதுவரை

பாகம்I
பாகம்I I

இனி...

மனித வரலாற்றின் மிகப்பெரிய அபத்தம் அல்லது சதி இந்த சாதி! நூற்றாண்டுகள் ஆகியும் இன்னும் ஒரு தொடர்ந்து கொண்டிருக்கும் ஒரு தொற்று நோய் சாதி.....! ஆமாம் அந்த தொற்று நோயின் விளைவு காமாட்சி அண்ணனை சட்டையை கழற்ற வைத்திருந்தது....! நீங்க ஏண்ணே சட்டைய கழட்டுறீங்க...?என்ற கேள்விக்கு...அவர் அளித்த பதில் இன்னும் என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது...ஆமாம்...யாரோ ஒருவர் அந்த ஊரில் இறந்துவிட அன்று இவர் சட்டையோடு வயலுக்குச் சென்று கொண்டிருந்திருக்கிறார். அப்போது எதிரே வந்த மேல் சாதி என்று எண்ணிக்கொண்டும் சொல்லிக் கொண்டும் திரிகிற- ஒருவர்...ஏன்டா..ஊர்ல இழவு விழுந்து கிடக்குது.... நீ சட்டையப் போட்டுகிட்டு சந்தோசம் கொண்டடுறியோன்னு கேட்டு...காறித் துப்பி..அடித்ததை கண்ணீரை மறைத்துக் கொண்டு...மெல்லிய குரலில் சொல்லி விட்டு ..என்னை விட்டுத்தள்ளி வேகமாய் நடக்க ஆரம்பித்தார்.....

விக்கித்துப் போய்... நான் மாமா வீடு நோக்கி சென்று கொண்டிருந்தேன்...பாதி பேர் சட்டையில்லாமலும்...மீதி பேர் சட்டையுடனும் தெருவில் நடந்து கொண்டிருந்ததையும் நான் கவனிக்கத் தவறவில்லை... ! வீட்டுக்குள் நுழைந்த என்னை வரவேற்ற அத்தையும் அவர்களது பிள்ளைகளையும் பார்த்து மெலிதாய் சிரித்து வைத்த நான் முதலில் கேட்ட கேள்வி...மாமா எங்க போய்ட்டாரு?ன்னு கேட்டேன்...? அந்த இறந்த வீட்டுக்கு சென்றதாக அறிந்து கொண்டேன்......காத்திருந்தேன்...! அந்த ஊர் பெரிய மனிதரில் ஒருவர்தானெ என்ன சொல்வார் என்று பார்ப்போம் என்று....சில உக்கிரமான கேள்விகளுடன்...


எதுக்கு மாமா? காமாட்சி அண்ணன் மட்டும் சட்டையை கழட்டணும்....? சரி துக்கம்னு சொன்னா எல்லோருக்கும் தானே....ஒரு லாஜிக்கா இருக்கணும்னா. .ஊர்ல இருக்க எல்லோரும் கழட்ட வேண்டியதுதானே.....? குளித்து விட்டு வந்த மாமாவை குளுமை அடங்கும் முன் உஷ்ணப்படுத்தினேன்....! முறுக்கிய மீசைகள் எல்லாம் மிரட்டத்தான் வேண்டுமா? சத்தியம் பேசாதா? வெள்ளைச் சட்டைகளும் வேட்டிகளும் தெருமுனைகளில் வீராப்பு பேசவும்....புஜபலம் காட்டவும்...மேடைகளில் முழங்கவும் தான? நீதி, அனீதி பற்றியெல்லாம் பேசாதா?

" அப்பு....இது காலம் காலமா பழகி போன ஒண்ணு....அவுக இப்படித்தேன் இருக்கணும்னு பெரியவுக சொல்லியிருக்காக...சட்டைய கழட்டணும்னு யாரும் சொல்லல அவுகளாத்தேன் செய்யுறாக...மரிவாதைப்பு...அம்புட்டுதேன்ன்னு சொல்லி விட்டு... நீங்க இன்னும் சாப்பிடலையன்னு..போய் சாப்பிடுங்கன்னு சொல்லிட்டு அவர் .. வேகமாக... ஏய் தம்பிக்கு சப்பாடு கொண்டு வா என்று அத்தைக்கு கட்டளையிட்டதிலிருந்து அவருக்கு இந்த பேச்சில் அக்கறை இல்லை என்று புரிந்து விட்டது.

அதுக்கப்புறம் நான் விருந்து சாப்பிட்டது...ஊர் சுத்துனது எல்லாம் இப்போ விசயம் இல்லை... ஆன...எனக்குள்ள " வேக வேகமா ஒரு வித பதட்டத்தோட காமாட்சியண்னன் சட்டையை கழட்டியது " இன்னும் மறக்க முடியல.....

ஒரு நாள் ஒரு நாள் வெயில்ல ஊர சுத்திட்டு...வந்தப்ப..பேச்சம்மை அக்கா வீடு பக்கமா இருக்கேன்னு அங்க போயி ….”பேச்சம்மை அக்காவிடம் ஒரு சொம்பு தண்ணி கொடுங்கக்கா...இந்த பக்கமா வந்தேன் ஒரே தாகமா இருக்குன்னு கேட்ட பின் அந்த அக்காவின் முகத்தில் நான் பார்த்தது ஒரு நூற்றாண்டு ஆச்சர்யத்துடன் கூடிய அதிர்ச்சியும் மலர்ச்சியும்....." !

எங்க வீட்ல எல்லாம் குடிப்பீகளா"ன்னு அவுங்க கேட்டப்ப என்னடா இது மனுசப் பொறப்புன்னு தோணுச்சி..." ஏங்க்கா நீங்க என்ன விசமா கொடுக்கப் போறீக? தண்ணிதானக்கா என்று கேட்டதற்கு பேச்சம்மை அக்கா பத்து தடவ சொம்ப கழுவிட்டு தொடச்சிட்டு பாத்து பாத்து மூணு தடவ தண்ணிய கீழே ஊத்திப்புட்டு.." தும்பு (தூசி) கிடந்துச்சி தம்பி"னு சொல்லிகிட்டு தண்ணிய கொடுத்தப்ப அவுங்களுக்கு ஒரு சந்தோசம் இருந்துச்சு பாருங்க...என்னோட முதுகு தண்டு சில்லிட்டுப் போச்சு.....

நம்ம வீட்ல குடிக்கிற தண்ணி இவ்ளோ சுத்தமா இருக்குமான்னு நானே கேள்வி கேட்டு கிட்டு... நான் குடிச்ச தண்ணீல வயிறு மட்டு நிறையல...என் மனசும்தான்....! இன்னும் எத்தனை... எத்தனையோ சாதிக் கொடுமைகளை பற்றி ரொம்ப விலாவாரியா நான் சொல்லிகிட்டே போறதுல அர்த்தம் இல்ல பாஸ்....! அப்படி சொன்னா அது உணர்ச்சிய தூண்டுமே தவிர நாம் எல்லோரும் மனிதர்கள் என்ற உணர்வினை தூண்டாது.....!

கொடியன் குளத்தில் நடந்த பிரச்சினையையும்..., தீண்டாமை காரணமா ரெண்டு கிளாசுல டீ குடுத்ததையும்...பேசி பேசி... நகர்ந்துகொண்டே இருக்கிறது வாழ்க்கை......! சாதியே இல்லாத திராவிட இனத்தின் தொடர்ச்சியில் எந்த இடத்தில் சாதி என்ற சதி வலை பின்னப்பட்டது என்று விவாதிப்பதும்....வரலாற்றுப் பிழைகளை பிரித்தெடுத்துப் பார்ப்பதும் கட்டுரையின் இலக்கல்ல....

ஆனால்...எதை சொல்ல நினைத்தேனோ....எது நமது இலக்கோ அதற்கான உந்து சக்தியாய் இரண்டு பின்னூட்டங்கள் யரோ இரு தோழர்களால் இடப்பட்டு இருக்கின்றன....

அந்த பின்னூட்டங்களை கையில் எடுத்து கொண்டு....மீண்டும் ஆக்கப்பூர்வமாக நமது இலக்கு நோக்கி டாப் கியரில் பயணிப்போம் தோழர்களே....

பின்னூட்டம் 1

K.ஜெயதேவா தாஸ் கூறியது.....

" ஜாதியின் பெயரில் மக்களை அடக்கி ஆண்டதும், அவர்களை தீண்டத் தகாதவர்கள் என்றும், மேல் சாதியினருக்கு நிகரானவர்கள் அல்ல என்றும் அவமானப் படுத்தும் வகையில் நடத்தியதெல்லாம் நிச்சயம் தவறுதான். ஆனால் ஜாதியே வேண்டாம் என்று ஏற்றுக் கொள்ள எல்லோரும் தயாரா? இட ஒதுக்கீட்டை இழக்கத் தாயாரா? இட ஒதுக்கீடு இருக்கும் போதே 2% உள்ள "அவா இவா"-க்கள் 98% சதவிகித மத்திய அரசுப் பணிகளை ஆக்கிரமித்துள்ளனர், இதை நீக்கி விட்டால் சுத்தம், பள்ளி கால்லூரிகளிலோ, வேலை வாய்ப்பிலோ ஒன்றும் மிஞ்சாது. அங்குதான் இடிக்கிறது. "

பின்னூட்டம் 2

ஸ்மார்ட் என்பவர் கூறியது...

" எல்லாம் சரி ஒழிக்கப்பட வேண்டியது சாதிதான்.
1) ஆனால் இதில் பெரியார் பெயர் எப்படி வந்தது. அவருக்கும் சாதி ஒழிப்புக்கும் அவ்வளவாக சம்மந்தமில்லையே!
2) நீங்கள் குறிப்பிடும் படி ஒரு சமுகத்தை திட்டச் சொல்லி எந்த சாஸ்த்திரமும் சொல்லாத பொது அதை எதற்கு எரிக்கணும்? ஒரே குழப்பமாயிருக்கே! யார் அப்படி பேசிகிறார்களோ அவர்களை எதிர்ப்பதைவிட்டு சம்மந்தமில்லாமல் வேரயாரையோ எதிர்ப்பதாகத் தெரிகிறது.

பி.கு. பெரியார் ஒரு தனிப்பட்ட ஜாதியை ஒழிக்கத் தான் பாடுபட்டாரே ஒழிய சாதி ஒழிக்க அல்ல "

இவர்களின் பின்னூட்டங்கள்தான் நாம் பயணிக்க வேண்டிய..விவாதிக்க வேண்டிய இலக்கு....! அரோக்கியமான விவாத களமாக, அறிவுசார் களமாக இது சென்று கொண்டிருக்கிறது என்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கும் அதே தருணத்தில்..மேலும், மெலும் சிந்தனையைத் தூண்டச் செய்யும் அளவிற்கு பின்னூட்டமிட்ட தோழர்களுக்கு நன்றி சொல்லி....அடுத்த பதிவில் கிட்டதட்ட நமது இலக்கினை ஏக தேசமாக நெருங்கி விடுவோம் என்ற உறுதியோடு... காலஙகள் தாண்டி புரையோடுப் போயிருக்கும் ஒரு விசயம் ...அன்போடு காத்திருங்கள்...அடுத்த பதிவிலே... நிறைவினை எட்டுவோம் என்ற உறுதியோடு....இப்பொது தற்காலிகமாக நிறுத்துகிறென்!

(நெருப்பு....இன்னும் பரவும்)தேவா. S

Sunday, July 4, 2010

ஓவியம்...!

வர்ணங்களின் ஆதிக்கத்தில்...
மறைந்தே போய்விட்டது ...
நான் வரைய நினைத்த ஓவியம்....
கூட்டத்தில் தொலைந்த....
குழந்தையைப் போல....
தேடித் தேடி...அலைந்து...
ஒராயிரம் திருத்தல்களுக்குப் பிறகும்
வர்ணங்களில் கரைந்தே,...
போய்விட்டது...அது!

வார்த்தைகளின் அலங்காரத்தில்...
எப்போதும் தொலைந்து போகிறது...
ஆழ்மனதின்....எண்ணங்கள்..
சக்கையாய் எழுத்துக்களை
துப்பிவிட்டு...சாற்றினை
ஊற்ற மறுக்கிறது மனது!
ஒரு சேவல் கூவிய விடியலில்
தொடங்கிய என் முயற்சிகள் ...
கிணற்று தவளையாய்....
பாதி ஏறி...மீண்டும்...
மீண்டும்...விழுகின்றன...
ஏறிய இடத்திலேயே.....!

எங்கிருந்தோ வந்த..
ஒரு தாலாட்டுச் சப்தம்...
என்னுள் இன்னும்...
உக்கிரமாய் நெருப்பேற்ற...
எண்ணியதைச் சொல்ல ...
முயன்று..முயன்று...மெதுவாய்..
ஜன்னல் திறக்கிறேன்...!

காத்திருந்த...காதலியாய்....
கட்டியணைக்கிறது...
நிலவின்...கிரகணங்கள்......
என் நிலை புரிந்தது போல...
மெல்ல சிரிக்கிறாள்... நிலா மகள்!
நடுநிசி நிசப்தத்தின் அடாவடியில்...
ஒரு ராட்சசனாய்..எழுந்து நின்று...
சமாதி நிலைக்குள்
எனைத்தள்ளி...
சப்தமாய் சிரிக்கிறது...
நான் பகிர நினைக்கும்...
மெளனம்!

கூர் மழுங்கிய ஆயுதம்தான் வார்த்தைகளும் இன்ன பிற விசயங்களும். எப்போதும் நாம் நினைப்பது ஒன்று வெளிப்படுத்துவது ஒன்று....மனிதர்கள் புரிந்து கொள்வது ஒன்று...!இப்படியாக வெளிப்பட்ட அல்லது வெளிப்படுத்த நினைக்கும் எல்லாமே...முழுதுமாய் வெளிப்படுவதே இல்லை.

ஓராயிரம் கருத்துக்களும் தத்துவங்களும், இருந்தாலும் ஒன்று கூட இதுவரை சொல்ல வந்ததை வெளிப்படையாக வெளிப்படுத்தியிருக்குமா? என்பது சந்தேகமே...புரிதல் என்பது முழுக்க முழுக்க பார்வையாளனின் மனோபாவம் பொறுத்த ஒரு விசயமே அன்றி வேறு ஒன்றுமே இல்லை. நமக்குள்ளேயே இருக்கிற அந்த புரிதலை வெளிக் கொணர நெம்பு கோலாய் வார்தைகள் சில நேரம் இருக்கும்...! ஏதோ ஒரு மனிதரோ, ஒரு பாடலோ, ஒரு இசையோ, ஒரு தத்துவமோ ஒரு கேள்வியோ, ஒரு நிகழ்வோ, ஒரு சூழலோ... நம்மைப் பிடித்துத் தர தரவென்று இழுத்துச் சென்று ஆழ்மனதில் போட்டு இதோ...பார்...இது தான் நீ என்று ஒரு வெறுமையைக் காண்பிக்கும்....!

அப்படிப்பட்ட ஒரு வெறுமையை ஓவியத்தில் சொல்ல நினைத்து, வார்த்தைகளுக்குள் முயன்று...போராடி போராடி கடைசில் தான் தோற்று...அவன் கண்ட வெறுமையே அவனை ஜெயித்து விடுகிறது...! அந்த ஜெயிப்பில் வென்றது வெறுமையாயினும்....அதன் ஜீவரசத்தை முழுதாய் அனுபவித்து தனக்குள்ளேயே...தேக்கி வைத்து....பிடிபட்ட உண்மையுடன் மெளனமாய் நகரப்போவது என்னவோ அவன் தான்....!

பசியாறி...பசிமாறி.... நிறைவாய்.... நிறைவுக்குள் போன பின்....சொல்லவும் கேட்கவும் ஆள் இல்லாத தருணங்களில் எதைச் சொல்ல...யாரிடம் சொல்ல....?

இனித்துக் கொண்டே இருக்கிறது...சுவைமாறா..ஒரு நெடும் இன்பம் நெஞ்சுக்குள்.....! நீங்களே உங்களுக்குள் தேடித் தேடி .... நீங்களே பருகுங்கள்..... நானும் எத்தனை முறைதான் தவறான ஓவியத்தையே உங்களுக்கு காண்பிப்பது....!


தேவா. S

Saturday, July 3, 2010

வலி.....!
நல்லா தலைய கீழே குனிங்கடா...தெருமுனைச் சுவரோரம் ஒளிந்து நின்று கொண்டிருந்த நான்கு பேரையும் தலைமை தாங்கிய சந்துரு கனத்த குரலில் கரடு முரடாய் ஆணையிட்டான். 7 மணி மாலைக்கு அடிபணிந்திருந்த பகலும் குறைந்திருந்த மக்கள் நடமாட்டமும் அது ஒரு சிற்றூர்தான் என்று கட்டியம் கூறிக் கொண்டிருந்தன. இவ்வளவும் சொல்லிவிட்டு அவர்கள் கையில் வைத்திருக்கும் உருட்டுக்கட்டைகள் பற்றி எப்படி சொல்லாமல் விடுவது...? எல்லாமே சவுக்கு கட்டைகள் நேர்த்தியாய் கைகளில் பிடிக்கும் படி யாரோ கலைநயத்தைக் காட்டியிருந்தார்கள்.....

உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்..... சத்தம் போடாதீங்க...பார்ட்டி வருது....என்ற சந்துருவின் கிசுகிசுப்பான குரல் கேட்ட மற்ற நால்வரும் கூர்மையானார்கள்...மெல்ல தங்களைத் தயார் படுத்திக் கொண்டார்கள்...! முன்னால் நின்றிருந்த சந்துருவின் லுங்கி தொடை வரை ஏறி இருந்ததை சொல்ல மறந்து விட்டேன்...மடித்துக் கட்டிய லுங்கியை சரிபார்த்தபடி....கண்களில் ரெளத்ரத்தைக் கொண்டு வந்து கொண்டிருந்தான் சந்துரு..... வக்கா***..... தமிழகத்தின் பிரபல கெட்ட வார்தையை உதிர்த்த வாய் பற்களையும் சேர்த்து கடிக்கத் தொடங்கியது.... வந்துட்டான்டா...

சந்துருவின் உத்தரவிற்கு பிறகு புலிப்பாய்ச்சல் பாய்ந்த நால்வருடன் சந்துருவும் சேர்ந்து... உருட்டுக்கட்டைகளை உபோயோகம் செய்ததில் மில்லில் வேலை விட்டு திரும்பிக் கொண்டிருந்த மணி அடி வாங்கிக் கத்திக் கொண்டிருந்தான்... இருட்டில் யார்? என்ன என்று புரிந்து கொள்ள முடியாமல் ..யார்ராராரா.. நீங்க என்று மணி போட்ட சப்தம் கூட வெளியே வரவில்லை.

ஊமை அடியாக உருட்டுக்கள் பாய்ந்ததோடு மட்டும் இல்லாமல் கெட்டவார்த்தைகளோடு கூடி...ஆளாட சேக்குற ஆளு....இவுரு ஆளு சேத்து வேலைக்கு போகலேன்னா...என்ன கிழிஞ்சுடப் போகுது....முதலாளியோட **** தலை முடியின் வேறு பெயர் சொல்லி அதை பிடிங்கக் கூட முடியாதுடா என்று சொல்லி கட்டையால் மணியின் காலில் ஓங்கி ஒங்கி அடித்தான் சந்துரு... கோபத்தில் கட்டையை ஓங்கும் போது சந்துருவின் முதுகில் சுரீர் என்று ஏதோ பிடித்ததை அடிக்கும் மும்முரத்தில் கவனிக்கவில்லை அவன்....

மில் முதலாளியை எதிர்த்து கேள்வி கேட்டதற்கான பதிலடி இது என்ற மங்கலான நினைவோடு மயங்கிச் சாய்ந்தான் மணி. சுமார் 20 வது அல்லது 25 நிமிடத்தில் எல்லாம் முடிந்துவிட...சப்தம் கேட்டு யார் யாரோ ஓடிவர....பைக்கில் ஏறிப்பறந்தான் சந்துரு...அந்த 4 பேரும் இரண்டு வண்டிகளில்.. வெவ்வேறு திசைகளில் பறக்க...

சந்துரு வீடு நோக்கி வண்டியை திருப்பினான்....அடித்தவன் பெயர் கூட சரியாக நினைவில் இல்லை சந்துருவிற்கு...! சம்பவம் நடந்த இடத்தில் சந்துருவின் ஆள் ஒருவன் சந்தடி இல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தான்....அடிப்பட்டவனின் காயம் எவ்வளவு என்று சந்துருவிடம் வந்து சொல்ல...அதற்கு பிறகு சந்துரு...போய் மீதிப் பணத்தை அந்த மில் முதலாளியிடம் வாங்க வேண்டும்.

அடிதடியை ஒரு தொழிலாய் செய்யும் கூலிகளின் கூட்டத்தில் சந்துருவும் ஒரு பிரஜை. அவனுக்கு தெரிந்ததெல்லாம் வெட்டு, குத்து....யார் எவர் என்ற நியாயம் இவனுக்கு பெரிய விசயம் இல்லை. அடிச்சா காசு வரணும் இல்லேண்ணா வேல சொன்னவனயே போட்டுட்டு வர்ற அளவிற்கு தில்லான 45 வயது இளைஞன் (அப்ப்டிதான் சந்துரு சொல்வது வழக்கம்)....! இப்போது கூட அப்படித்தான்....யாரென்றே தெரியாத மணியின் ஒரு கை மற்றும் காலை உடைக்க வேண்டும்...உயிருக்கு எந்த ஆபத்தும் வரக்கூடாது ஆனால் அவன் மீண்டும் வேலை செய்யக்கூடாது அந்த அளவிற்கு அடி இருக்கணும்...மினிமம் ஒரு கையும் காலும் உடையணும்..இது தான் டீல்.

வீட்டு வாசலில் பைக்கை ஆஃப் செய்த சந்துரு செல் போனை எடுத்து .....என்ன ஆச்ச்சு...? ஆஸ்பிடல்ல அட்மிட் பண்ணிட்டங்களா...?ம்ம்ம்ம் நினைவு திரும்பலையா....ம்ம்ம்ம்......கையும் காலும் வராதா...எலும்பு பயங்கரமா ஒடைஞ்சு இருக்குன்னு டாட்டர் சொல்றாரா?ம்ம்ம்ம்ம்....சரி எந்த ஆஸ்பிட்டல்...?ம்ம்ம் நீ இடத்தை விட்டு கிளம்பு...காத்தால....வூட்டாண்ட வா.....இணைப்பைத் துண்டித்தான்...!

மீண்டும் டயலினான்.........ஐயாவா........முடிஞ்சுருச்சுங்க...! இப்போதாங்க நம்ம பையன் ஆஸ்பிடல்ல இருந்து போன் பண்ணினான்.....ஆமாங்க...கால்லயும், கையல யும் எலும்பு ஒடைஞ்சு இருக்காமுங்க ...! ஹி...ஹி...ஹி......சரிதானுங்க.. அப்போ பேலன்ஸ் துட்டு....... சரிங்க ஐயா...காலைல வாரேங்க....வச்சிடட்டுங்களா.....! இணைப்பை துண்டித்தான்.....முதுகில் ஏற்கெனவே ஏற்பட்டிருந்த சுரீர் இன்னும் கொஞ்சம் டீட்டெய்லாக பரவியிருந்ததில் கையை தூக்க முடியவில்லை சந்துருவால்......

இரவு 11 மணி தூங்கமுடியாமல் சந்துரு துடித்துக் கொண்டிருந்தான்.... முதுகில் வலி.....வலி....வலி....உயிர் போனது சந்துருவுக்கு....! திடமான கணவன் துடித்துக் கொண்டிருப்பதை பார்த்த மனைவி கோமதியும் கதறி அழுது கொண்டிருந்தாள்....என்னாச்சுங்க...என்ன்னங்க....குறிப்பிட்ட இடைவெளியில் தாலியை எடுத்து கண்களில் ஒற்றிக் கொண்டிருந்தாள்.....பக்கத்தில் நின்று கொண்டிருந்க்ட 9 வது படிக்கும் மகளும் 5வது படிக்கும் மகனும் பாவாமய் பார்த்துக் கொண்டிருந்தனர்.....

" இந்த எழவு எடுத்த வேல வேண்டாம்னு எத்தன தடவ சொல்றது என்று பவ்யமாய் அழுது கொண்டே...முதுகினைத் தேய்த்த மனைவியை முறைத்தான் சந்துரு.....சரி சரி போய் படுங்க... நான் பாத்துக்குறேன்...என்று எல்லோரையும் விரட்டிவிட்டான்....!

எல்லோரும் போய் விட்டார்கள்....ஆனால் சந்துருவிற்கு வலி மட்டும் போகவில்லை. கோபத்தில் அவன் ஓங்கி ஓங்கி அடித்ததில் அவனின் முதுகு தசை பிரண்டு ஏதோ எக்குத்தப்பாய் நடந்திருந்தது அவனுக்கு புரியவில்லை. ஏனென்றால் அவனுக்கு அவன் வலியவன்...யாரும் எதுவும் செய்ய முடியாது அவனை....என்று ரொம்ம கூலாக நினைத்துக் கொண்டு இருப்பவன்.....

ம்ம்ம்ம்ம்ம்மாமா.....இப்போது வாய்விட்டே அலறினான். நடு நிசி ஒரு மணி கடந்து இருந்தது. வலி ஒரு வேதனையான விசயம்..! மனிதாரய் பிறந்த ஒவ்வொருவருக்கும் இது நிச்சயமாய் வேறுபடுவதில்லை. எல்லோருக்கும் பாராபட்சமாய் ஒரே விதமான வேதனையை கொடுக்கும் சமத்துவவாதி இந்த வலி. வலியின் அதிகரிப்பில் எல்லோருக்கும் ஏற்படுவது உயிர்பயம்... !

நமக்கு ஏதாவது ஆகிவிட்டால்....என்ன ஆகும்....இந்த கோணத்தில் தான் நம்ம சந்துருவும் நினைத்துக் கொண்டிருந்தான்...! நாளை எனக்கு ஏதாவது ஆகிவிட்டால்....என் பொண்டாட்டி புள்ளைங்க.. எப்படி சாப்பிடும்...! எத்தனை பேரை அடிச்ச கை இது....! இது விழுந்து விட்டால்...கற்பனையில் அவனது மனைவி, மகள், மகன் மூன்று பேரும் கிழிந்த உடைகளோடு வேலைக்குப் போவது போலவும்...கஷ்டப்படுவது போலவும்....ஐயோ தாங்க முடியாத முதுகு வலியோடு அவனது எண்ணங்களும் சேர்ந்து கொண்டு தொந்தரவு செய்ய...புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தான் சந்துரு…

மணி எத்தனை ஆச்சுன்னே தெரியவில்லை....யோசித்துக் கொண்டே இருந்த சந்துரு விற்கு....கண்களில் நீர் கசிந்தது.....திடீர்னு எழுந்து மெல்ல அமர்ந்தான்......மூளைக்குள் எல்லா பல்பும் பளீச் பளீச் சென்று எரிந்தது..... ! இந்த முதுகு வலிக்கே என்னோட உயிர் போற மாதிரி வலிக்கிதே....சாயங்காலம் யாருண்னே தெரியாத ஒரு பயல அடிச்சமே....கைலயும் கால்லயும் எலும்பு ஒடைஞ்சு கிடக்கானே...அந்த பயலுக்கு எப்படி வலிக்கும்......சிந்திக்க சிந்திக்க...அவனுக்குள் இருந்த மிருகம் மெல்ல இறக்கத்தொடங்கியிருந்தது.....மனிதம் மலரத்தொடங்கி இருந்தது....

எனக்கு வலிச்ச மாதிரிதாண்ணே அவனுக்கும் வலிச்சுருக்கும்....என்னவிட பலமா...ஐயோ...கடவுளே என்ன கொடுமை இது....! அவன் எவ்ளோ கெட்டது செஞ்சாலும் முதல்ல நமக்குச் சம்பந்தம் இல்ல... ரெண்டாவது பேசி சரி பண்ணியிருக்கலாமே.....மனுசங்கதானே.. நாம...! பேசி பேசி எல்லாத்தயும் தீக்க முடியாதா....மகமாயி....என்று ஒரு தெய்வம் பெயர் கத்தியதில் அவனுக்குள் ஏதோ ஒரு பயம் வந்ததைத் தெளிவாக உணரமுடிந்தது.

எனக்கு வலிக்ககூடாது ...என் சொந்தகாரங்களுக்கும் என் உறவுகளுக்கு வலிக்கக் கூடாதுன்னு நெனைக்கிற நான்....சம்பந்தமில்லாத ஒரு மனுசனுக்கு வலிக்கும்னு ஏன் நினைக்கிறது இல்ல?....அவனுக்கும் புள்ள குட்டிக இருக்குமே....பொஞ்சாதி இருக்குமே...அதுக இவன் வேலக்கி போகலேன்னா எப்படி சாப்பிடுங்க...? கசிந்து கொண்டிருந்த அவனின் கண்ணீர்....இப்போது கங்கையாய் பெருக்கெடுத்து ஓடியதில் வலியின் வேதனையும் இருந்தது...!

முதல்ல மனுசன மனுசன் ஏன் அடிக்கணும்....? ஏன் கொல்லணும்? புடிக்கலேன்னா சொல்லி பேசி ...எடுத்து சொல்லி மாத்தலாம்ல.....அப்படியும் மாறலேண்ணா அவன விட்டு விலகி அவன் இல்லேண்னு ஒரு வாழ்க்கை வாழலாம்ல....எப்படி ஒரு மனுசன் இன்னொருத்தன தண்டிக்கிறது.....அவனுக்கும் வலிக்கும்ல.......!எல்லோருக்கும் உடம்புதானே....இந்த... நேரம் ... நான் அடிச்ச ஆளு வலில துடிச்சுட்டு இருப்பானே.....அவனுக்கும் வலிக்குமே......ஓவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் என்று சத்தம் போட்டு அழுதான் சந்துரு....அதிகாலை உறக்கத்திலிருந்த குடும்பத்தாருக்கு அது கேட்கவில்லை...

யாரையுமே மனசு நோகுறபடி பேசக்கூட கூடாது....புடிக்கலேன்னா ஒதுங்கிக்கணும்...வார்த்தையால கூட அடுத்த மனுசனுக்கும் மனசுல வலி வரக்கூடாது.....

படுக்கையில் இருந்து வேதனையோடு எழுந்த சந்துரு....பீடியை பற்றவைத்தான்....அதிகாலை ஆக்ஸிஜனை அவன் வெளிவிட்ட புகை தொந்திரவு செய்ய ஆரம்பிதிருந்தது....! சட்டையை மாட்டிக் கொண்டு மணி பார்த்தான்....சந்துரு...! மணி பார்த்த 15 நிமிடத்தில் பைக்கை அவன் ஸ்டார்ட் செய்யும் போது மணி அதிகாலை 3:20......

"ஏங்க......எங்க கிளம்பீட்டீங்க...கலைலயே.....ராத்திரி புல்லா வலி வலின்னு துடிச்சீங்க....செத்த வந்து படுங்கங்க...." மனைவியின் சப்தம் கேட்டு திரும்பியவன்.... " இரு புள்ள பக்கத்துல ஆஸ்பிடல் வரை போயிட்டு வந்துடுறேன்....." சப்தமாய் சொல்லிவிட்டு கேட் திறந்து வெளியே வந்து கியர் மாற்றி ஆக்ஸிலேட்டரை முடிக்கினான்.......முதுகில் இருந்த வலி மெல்ல எட்டிபார்த்தது....அதை அவன் மனது அடக்கி சமாதானம் செய்தததில்....வலி தெரியவில்லை சந்துருவிற்கு.......வண்டி பறந்து கொண்டிருந்தது...அதிகாலை நிசப்தத்தை கிழித்தபடி....

கடைசிவரை....அடிபட்டு ஆஸ்பிடலில் கட்டு கட்டி கிடந்த மணியின் மனைவிக்குப் புரியவில்லை...விடியக்காலையில் எதுக்கு லுங்கி கட்டிட்டு ஒரு ஆள் வரவேண்டும்? வந்து மணியைப்பார்த்து கதறியழ வேண்டும்....? யாரு? யாருண்ணு கேட்க கேட்க பதில் சொல்லாமல் கையில் இரண்டு நூறு ரூபாய் கட்டுக்களை கொடுத்துவிட்டு வேகமாய் போகணும்.....? மணியின் நண்பர்கள் என்றும் சொல்லவும் முடியாது.....இதுக்கு முன்னால் பார்த்தது கூட கிடையாது....! குழம்பிக் கொண்டிருந்த மணியின் மனைவி....ஆண்டவா...கையில காசில்லாம....புலம்பிகிட்டு இருந்த் எனக்கு இப்படி ஒரு கருணை காட்டிட்ட....என்று.....ஏதோ ஒரு தெய்வத்திற்கு.... கண்ணீரோடு நன்றி செலுத்திக் கொண்டிருந்தாள்.......


தூரத்தில்....சேவல் கூவியது மெலிதாய் கேட்டது.......பாதித் தூக்கத்தில் கட்டுக்களோடு வலியோடு படுத்திருந்த மணிக்கு........

"கொக்கரக்....கோ......கொக்கரக்...கோ.....கொக்கரக்..கோ....."


தேவா. S

Thursday, July 1, 2010

கலையப் போகும் வேஷங்கள்....!


சுற்றி சுற்றி பார்க்கிறேன்.... மொத்தமாய் என்னிடம் வந்து மோதும் எண்ணங்களில் இருந்து வரும் வார்த்தைகளின் வீச்சு என்னை எப்போதும் மனம் என்ற பெயரில் ஆளுமை செய்து கொண்டிருக்கிறது. அவ்வப்போது ஏதோ ஒரு கட்டளை உள்ளிருந்து ஆணையிட... இது அது என்று சுற்றி சுற்றி செயல்கள் செய்யும் பொம்மையாய் இருக்கும் இவ்வுடலையும் என்னையும் பிரித்துப் போட்டு மூன்றாவதாய் ஏதோ ஒன்று ஆளுமை செய்கிறதே அது என்ன?

நான் என்று கூறுவது என்னுடைய மனமாய் இருந்த போதும் அதையும் தாண்டிய வேறு ஏதோ ஒன்று பின்னிருந்து இயக்கிக்கொண்டே இருக்கிறது. பல நேரங்களில் மறுத்து மனம் அதன் போக்கில் ஓடுகிறது சில நேரங்கலில் அதன் போக்கிலேயே நிற்கிறது. அதன் போக்கில் எடுத்த முடிவுகள் ஒரு வித திருப்தியை உடனே கொடுப்பதையும் உணர முடிகிறது. தங்கு தடையில்லாமல் எல்லா நேரங்களிலும் வார்த்தைகளுக்குள் நுழைந்து எண்ணமாய் மனமாய் அது இருந்ததில்லை ஆனால் அது ஒரு குளிர் சாதன அறையின் குளிர் போல என்னுள் விரவி கிடக்கிறது.

இது... அது என்று என்னால் சுட்டியுணரப்படாததாய் மனதுக்கும் அன்னியப்பட்டதாய்..விரவியிருக்கும் அதற்கு ஆட்டம் என்று எதுவுமில்லை. எப்போதும் சாந்தமாயும் சலனமற்றும் எப்போதா முன்பிருந்த நிலை போலவே இருக்கிறது....ஆடி...ஆடி...மனது அடங்கும் போது மெளனமாய் அதன் இருப்பு காட்டுகிறது. நிலையாமல் இவ்வுலகம் விட்டு நகரும் பொருள்கள் காணும் போது எல்லாம் நெஞ்சின் ஓரம் சிலிர்ப்பாய் அதன் இருப்பு காட்டும் அவ்வளவே...! மற்றபடி அது மனம் பேசுவது போல என்னோடு பேசுவது இல்லை.

சிறுவயது முதல் நான் நடந்தாலும் ஓடினாலும் அசையாமல் அந்த ஒன்று சலனமில்லாமல் என்னையே கவனித்து வந்து இருக்கிறது....! நான் மழலையாய் இருந்தபோதும் சரி...சிறுவனாய் இருந்த போதும் ஏன் இன்று வரை அதனிடம் எந்த ஒரு மாற்றமும் இல்லை. சொல்லவதற்கு வார்த்தைகள் தேடிக்கொண்டேதான் எழுதுகிறேன்...ஆனால் இதுவரை ஒரு சொல் கூட கிடைக்கவில்லை....! நல்ல வெயிலில் தாகத்தோடு வந்து நீர் அருந்தி .....தாகம் தீர்ந்த நிறைவைப் போல மனம் அடங்கும் நேரமெல்லாம்..மெளனமாய் அதை உணர முடிகிறது.

சந்தோஷமான தருணங்கள் என்று மனம் மகிழும், உடல் மகிழும் நேரங்களில் அதன் சாரத்தை வாங்கிக் கொண்டும், சோகமான, வெறுமையான தருணங்களின் சாரத்தை வாங்கிக் கொண்டும் சலனமின்றி அது இருக்கிறது. சலனமற்று இருந்தாலும் புலன்களின் மூலம் மனதை அலையவிட்டு அலையவிட்டு...ஏதேதோ அனுபங்களை பெற்றுக் கொள்வதில் முனைப்போடு இருக்கிறது. இதற்கு மனது மிக உதவி செய்கிறது. எப்போதோ ஆசை பட்டதை எல்லாம் அடையவும், மறுத்ததை எல்லாம் ஆராயவும் இப்படி செய்து கொண்டே இருப்பாதாக தோன்றுகிறது. இப்படி தோன்றுவதையும் மனதின் மூலம் மூளைக்குச் சொல்லி மூளையின் மூலம் ஒரு அழுத்தம் கொடுத்து இந்த கட்டுரை செய்யவேண்டும் என்று ஒரு தன்முனைப்பைக் கொடுத்து எழுதச் செய்து விட்டு அது மெளனமாய் இருக்கிறது.

ஒரு நிறமில்லாமல் குணமில்லாமல் உடல் முழுதும் விரவி இது அது என்றில்லாமல் இருக்கும் அது...ஆழ்ந்து நோக்கும் தருணங்களில், மனது ஒடுங்கும் தருணங்களில் மட்டுமே வெளிப்படுகிறது. வெளிப்படும் தருணங்களில் அதன் அதீத சக்தியை கண நேரங்களில் உணர்ந்தாலும் அதன் விளைவு ஒரு மெல்லிய உணர்வாய் தொடர்ந்து கொண்டிருப்பதாய் தோன்றுகிறது. கண்ணாடியை மறைத்து இருக்கும் தூசு போல.. மனம் தொடர்ந்து அங்கும் இங்கும் ஓட....உடலும் அதன் பின் ஓடி, ஆடி, அழுது, சிரித்து.... அனுபங்களை சேர்த்து களைக்கும் போது உள்ளிருந்து மெதுவாய் தூசி நகர்ந்து கண்ணாடியில் பிம்பம் மங்கலாய் தெரிவது போல அதை மங்கலாக பார்க்க முடிகிறது.

அப்படி மங்கலாய் தோன்றும் நேரங்களில் எல்லாம்....மறைவாய் கேள்விகள் எழுகிறது....ஏன்...?ஏன்...?ஏன்...? இந்த ஆட்டம்? எதை நோக்கி ஓட்டம்....ஏன் இந்த கொக்கரிப்பு....? ஏன் இந்த வீராப்பு....என்று கேள்விகள் எழுப்பி தூசிகளை துடைத்து மெலிதாய் வெளிவருகிது. அப்படிப்பட்ட தருணங்கலிள் நெஞ்சடைத்து...தொண்டை வறண்டு...கண்கள் சொருகி...மூச்சு சீராகி....எங்கிருந்தோ ஏதோ ஒன்று அழுத்தம் கொடுக்க...கண்கள் கண்ணீரை கொண்டுவருகின்றன....! ஏதோ ஒன்றின் மீது நன்றி உணர்ச்சி வருகிறது...எதை நோக்கியோ வணக்கம் செய்யவேண்டும் என்று தோன்றுகிறது..இந்த சலனமற்ற நிலைக்கும்....புறத்தில் இருக்கும் ஆட்டத்திற்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை.

கோவிலுக்குப் போய்...போய்....அங்கு உள்ளே இருப்பது கடவுள் என்று நம்பி... நம்பி....வழிபட்டு வழி பட்டு...உள்ளே இருப்பது கல் அதற்கு எப்படி சக்தி வரும் என்று கேள்வி கேட்டு ...அந்த கோவிலின் பிராமண்ட மூலையில் ஒரு ஓரத்தில் அமர்ந்து கண்மூடி கேள்விகள் கேட்டு..கேள்விகள் கேட்டுக் கொண்டிருக்கும் போது...உள்ளிருக்கும் உள்ளே இருந்து அது கிசுகிசுக்கும்...இங்கு வருவது என்னை பார்ப்பாதற்கு என்று ....!அப்படிப்பட்ட தருணங்களில் கருவறைக்குள்ளிருப்பதும் எல்லோருக்குள்ளும் மறைந்து இருந்து இயக்குவதும்...ஒன்றே தான் என்றுணர்ந்து...அந்த பிரமாண்ட சக்கியில் மயங்கி...இருக்கும் போது மீண்டும் கண்ணீர் வரும்.....! நீதானா.. நீதானா? என்று கேள்வி கேட்டுக் கொண்டும் சுற்றும் முற்றும் பார்க்கும் போதுசுற்றி நிற்கும் மனிதர்களுக்குள்ளும் சூட்சுமமாய் அது இருப்பதும் மெலிதாய் தெரியவரும்.

வெயிலின் உக்கிரத்தில் மயக்கம் போட்டு ரோட்டோரத்தில் விழுந்து கிடந்த பெரியவரை பார்த்தவுடன் ஓடோடி வந்து தூக்கி தண்ணீர் தெளித்து பதறிய அனைவரிடத்திலும் அது இருந்தது....கடவுளென்றும், கோவிலென்றும் சமூகப் பணியென்றும், காமமென்றும், காதலென்றும், பகைமையென்றும், சுற்றி நிகழும்...எல்லா விஷயங்களும் அதனை அறியும் பொருட்டே நிகழ்கின்றன...! இருக்கு... என்று சொல்பவரும் இல்லை என்று சொல்பவரும் இரண்டும் பொய் என்றறியர் மாறாக இதை உணரும் பொருட்டே....ஜென்ம ஜென்மமாய் ஆதரித்து மறுத்து, மறுத்து..ஆதரித்து என்று....தொடருகிறது வேஷங்கள்........

ஏதோ ஒன்று நிகழும் உங்களுக்குள்ளும்...எனக்குள்ளும்....அப்போது கண்டிப்பாய்.... கலையும் இந்த..வேஷங்கள் எல்லாம்!
தேவா. S