
சுற்றி சுற்றி பார்க்கிறேன்.... மொத்தமாய் என்னிடம் வந்து மோதும் எண்ணங்களில் இருந்து வரும் வார்த்தைகளின் வீச்சு என்னை எப்போதும் மனம் என்ற பெயரில் ஆளுமை செய்து கொண்டிருக்கிறது. அவ்வப்போது ஏதோ ஒரு கட்டளை உள்ளிருந்து ஆணையிட... இது அது என்று சுற்றி சுற்றி செயல்கள் செய்யும் பொம்மையாய் இருக்கும் இவ்வுடலையும் என்னையும் பிரித்துப் போட்டு மூன்றாவதாய் ஏதோ ஒன்று ஆளுமை செய்கிறதே அது என்ன?
நான் என்று கூறுவது என்னுடைய மனமாய் இருந்த போதும் அதையும் தாண்டிய வேறு ஏதோ ஒன்று பின்னிருந்து இயக்கிக்கொண்டே இருக்கிறது. பல நேரங்களில் மறுத்து மனம் அதன் போக்கில் ஓடுகிறது சில நேரங்கலில் அதன் போக்கிலேயே நிற்கிறது. அதன் போக்கில் எடுத்த முடிவுகள் ஒரு வித திருப்தியை உடனே கொடுப்பதையும் உணர முடிகிறது. தங்கு தடையில்லாமல் எல்லா நேரங்களிலும் வார்த்தைகளுக்குள் நுழைந்து எண்ணமாய் மனமாய் அது இருந்ததில்லை ஆனால் அது ஒரு குளிர் சாதன அறையின் குளிர் போல என்னுள் விரவி கிடக்கிறது.
இது... அது என்று என்னால் சுட்டியுணரப்படாததாய் மனதுக்கும் அன்னியப்பட்டதாய்..விரவியிருக்கும் அதற்கு ஆட்டம் என்று எதுவுமில்லை. எப்போதும் சாந்தமாயும் சலனமற்றும் எப்போதா முன்பிருந்த நிலை போலவே இருக்கிறது....ஆடி...ஆடி...மனது அடங்கும் போது மெளனமாய் அதன் இருப்பு காட்டுகிறது. நிலையாமல் இவ்வுலகம் விட்டு நகரும் பொருள்கள் காணும் போது எல்லாம் நெஞ்சின் ஓரம் சிலிர்ப்பாய் அதன் இருப்பு காட்டும் அவ்வளவே...! மற்றபடி அது மனம் பேசுவது போல என்னோடு பேசுவது இல்லை.
சிறுவயது முதல் நான் நடந்தாலும் ஓடினாலும் அசையாமல் அந்த ஒன்று சலனமில்லாமல் என்னையே கவனித்து வந்து இருக்கிறது....! நான் மழலையாய் இருந்தபோதும் சரி...சிறுவனாய் இருந்த போதும் ஏன் இன்று வரை அதனிடம் எந்த ஒரு மாற்றமும் இல்லை. சொல்லவதற்கு வார்த்தைகள் தேடிக்கொண்டேதான் எழுதுகிறேன்...ஆனால் இதுவரை ஒரு சொல் கூட கிடைக்கவில்லை....! நல்ல வெயிலில் தாகத்தோடு வந்து நீர் அருந்தி .....தாகம் தீர்ந்த நிறைவைப் போல மனம் அடங்கும் நேரமெல்லாம்..மெளனமாய் அதை உணர முடிகிறது.
சந்தோஷமான தருணங்கள் என்று மனம் மகிழும், உடல் மகிழும் நேரங்களில் அதன் சாரத்தை வாங்கிக் கொண்டும், சோகமான, வெறுமையான தருணங்களின் சாரத்தை வாங்கிக் கொண்டும் சலனமின்றி அது இருக்கிறது. சலனமற்று இருந்தாலும் புலன்களின் மூலம் மனதை அலையவிட்டு அலையவிட்டு...ஏதேதோ அனுபங்களை பெற்றுக் கொள்வதில் முனைப்போடு இருக்கிறது. இதற்கு மனது மிக உதவி செய்கிறது. எப்போதோ ஆசை பட்டதை எல்லாம் அடையவும், மறுத்ததை எல்லாம் ஆராயவும் இப்படி செய்து கொண்டே இருப்பாதாக தோன்றுகிறது. இப்படி தோன்றுவதையும் மனதின் மூலம் மூளைக்குச் சொல்லி மூளையின் மூலம் ஒரு அழுத்தம் கொடுத்து இந்த கட்டுரை செய்யவேண்டும் என்று ஒரு தன்முனைப்பைக் கொடுத்து எழுதச் செய்து விட்டு அது மெளனமாய் இருக்கிறது.
ஒரு நிறமில்லாமல் குணமில்லாமல் உடல் முழுதும் விரவி இது அது என்றில்லாமல் இருக்கும் அது...ஆழ்ந்து நோக்கும் தருணங்களில், மனது ஒடுங்கும் தருணங்களில் மட்டுமே வெளிப்படுகிறது. வெளிப்படும் தருணங்களில் அதன் அதீத சக்தியை கண நேரங்களில் உணர்ந்தாலும் அதன் விளைவு ஒரு மெல்லிய உணர்வாய் தொடர்ந்து கொண்டிருப்பதாய் தோன்றுகிறது. கண்ணாடியை மறைத்து இருக்கும் தூசு போல.. மனம் தொடர்ந்து அங்கும் இங்கும் ஓட....உடலும் அதன் பின் ஓடி, ஆடி, அழுது, சிரித்து.... அனுபங்களை சேர்த்து களைக்கும் போது உள்ளிருந்து மெதுவாய் தூசி நகர்ந்து கண்ணாடியில் பிம்பம் மங்கலாய் தெரிவது போல அதை மங்கலாக பார்க்க முடிகிறது.
அப்படி மங்கலாய் தோன்றும் நேரங்களில் எல்லாம்....மறைவாய் கேள்விகள் எழுகிறது....ஏன்...?ஏன்...?ஏன்...? இந்த ஆட்டம்? எதை நோக்கி ஓட்டம்....ஏன் இந்த கொக்கரிப்பு....? ஏன் இந்த வீராப்பு....என்று கேள்விகள் எழுப்பி தூசிகளை துடைத்து மெலிதாய் வெளிவருகிது. அப்படிப்பட்ட தருணங்கலிள் நெஞ்சடைத்து...தொண்டை வறண்டு...கண்கள் சொருகி...மூச்சு சீராகி....எங்கிருந்தோ ஏதோ ஒன்று அழுத்தம் கொடுக்க...கண்கள் கண்ணீரை கொண்டுவருகின்றன....! ஏதோ ஒன்றின் மீது நன்றி உணர்ச்சி வருகிறது...எதை நோக்கியோ வணக்கம் செய்யவேண்டும் என்று தோன்றுகிறது..இந்த சலனமற்ற நிலைக்கும்....புறத்தில் இருக்கும் ஆட்டத்திற்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை.
கோவிலுக்குப் போய்...போய்....அங்கு உள்ளே இருப்பது கடவுள் என்று நம்பி... நம்பி....வழிபட்டு வழி பட்டு...உள்ளே இருப்பது கல் அதற்கு எப்படி சக்தி வரும் என்று கேள்வி கேட்டு ...அந்த கோவிலின் பிராமண்ட மூலையில் ஒரு ஓரத்தில் அமர்ந்து கண்மூடி கேள்விகள் கேட்டு..கேள்விகள் கேட்டுக் கொண்டிருக்கும் போது...உள்ளிருக்கும் உள்ளே இருந்து அது கிசுகிசுக்கும்...இங்கு வருவது என்னை பார்ப்பாதற்கு என்று ....!அப்படிப்பட்ட தருணங்களில் கருவறைக்குள்ளிருப்பதும் எல்லோருக்குள்ளும் மறைந்து இருந்து இயக்குவதும்...ஒன்றே தான் என்றுணர்ந்து...அந்த பிரமாண்ட சக்கியில் மயங்கி...இருக்கும் போது மீண்டும் கண்ணீர் வரும்.....! நீதானா.. நீதானா? என்று கேள்வி கேட்டுக் கொண்டும் சுற்றும் முற்றும் பார்க்கும் போதுசுற்றி நிற்கும் மனிதர்களுக்குள்ளும் சூட்சுமமாய் அது இருப்பதும் மெலிதாய் தெரியவரும்.
வெயிலின் உக்கிரத்தில் மயக்கம் போட்டு ரோட்டோரத்தில் விழுந்து கிடந்த பெரியவரை பார்த்தவுடன் ஓடோடி வந்து தூக்கி தண்ணீர் தெளித்து பதறிய அனைவரிடத்திலும் அது இருந்தது....கடவுளென்றும், கோவிலென்றும் சமூகப் பணியென்றும், காமமென்றும், காதலென்றும், பகைமையென்றும், சுற்றி நிகழும்...எல்லா விஷயங்களும் அதனை அறியும் பொருட்டே நிகழ்கின்றன...! இருக்கு... என்று சொல்பவரும் இல்லை என்று சொல்பவரும் இரண்டும் பொய் என்றறியர் மாறாக இதை உணரும் பொருட்டே....ஜென்ம ஜென்மமாய் ஆதரித்து மறுத்து, மறுத்து..ஆதரித்து என்று....தொடருகிறது வேஷங்கள்........
ஏதோ ஒன்று நிகழும் உங்களுக்குள்ளும்...எனக்குள்ளும்....அப்போது கண்டிப்பாய்.... கலையும் இந்த..வேஷங்கள் எல்லாம்!
தேவா. S
Comments
//அப்படி மங்கலய் தோன்றும் நேரங்களில் எல்லாம்....மறைவாய் கேள்விகள் எழுகிறது....ஏன்...?ஏன்...?ஏன்...? இந்த ஆட்டம்? எதை நோக்கி ஓட்டம்....ஏன் இந்த கொக்கரிப்பு....? ஏன் இந்த வீராப்பு....என்று கேள்விகள் எழுப்பி தூசிகளை துடைத்து மெலிதாய் வெளிவருகிது. அப்படிப்பட்ட தருணங்கலிள் நெஞ்சடைத்து...தொண்டை வறண்டு...கண்கள் சொருகி...மூச்சு சீராகி....எங்கிருந்தோ ஏதோ ஒன்று அழுத்தம் கொடுக்க...கண்கள் கண்ணீரை கொண்டுவருகின்றன....!//
அருமையான கேள்வி நிறைந்த வரிகள்,
//கோவிலுக்குப் போய்...போய்....அங்கு உள்ளே இருப்பது கடவுள் என்று நம்பி... நம்பி....வழிபட்டு வழி பட்டு...உள்ளே இருப்பது கல் அதற்கு எப்படி சக்கி வரும் என்று கேள்வி கேட்டு ...அந்த கோவிலின் பிராமண்ட மூலையில் ஒரு ஓரத்தில் அமர்ந்து கண்மூடி கேள்விகள் கேட்டு..கேள்விகள் கேட்டுக் கொண்டிருக்கும் போது...உள்ளிருக்கும் உள்ளே இருந்து அது கிசுகிசுக்கும்..இங்கு வருவது என்னை பார்ப்பாதற்கு என்று .//
மிக அழகான உணர்வுகள் நிறைந்த மனதின் வெளிப்பாடு..எழுத்தில் வடித்த விதம் மிக அருமைங்க அண்ணா..
இன்னும் நிறையா முறை படித்துவிட்டு இன்னும் நிறையா பின்னூட்டம் இடுகிறேன் ..இப்போதைக்கு கொஞ்சம் தான் இந்த சிறுவனுக்கு புரிந்தது அண்ணா ....
பெரியார் கண்ட பாதையை கலைஞரும், வீரமணியும் சிதைத்து விட்டனர்.. பணம் சேர சேர அதைக் காப்பாற்றிக் கொள்ள என்ன வேண்டுமானாலும் செய்கின்றனர்..
மார்கெட்டிங் எல்லா இடங்களிலும் புகுந்துவிட்டன...
எல்லோருக்குள்ளும் தோன்றும் ஆனால் எழுத்துவடிவத்தில் கொண்டுவருவது சிலரால் மட்டுமே முடியும்..
நன்று..
இது உங்கள் எழுத்தில் எளிமையாக வந்துள்ளது.
மிக்க மகிழ்ச்சி தேவா !!!
வாழ்த்துகள்
ஆன்மா, அறிவு என்பதை எல்லாம் சரியாக புரிந்து கொள்வதும், புரிந்து கொண்டதை எழுத்தில் கொண்டுவருவதும் சற்றுக் கடினமானதே..
இது உங்கள் எழுத்தில் எளிமையாக வந்துள்ளது.
--shyssian
....... சிஷ்யா ..... இன்று முதல் நீங்க குருவாயிட்டீங்க..... அருமையா கருத்துக்களை அள்ளி வீசி இருக்கீங்க.... சூப்பர்!
:)
சீக்கிறம் வெளிய வாங்க. ரிலாக்ஸ் தேவா! :))
ரொம்ப நல்லா இருக்கு தேவா..
உங்க எழுத்து, மனதை தொடும் வண்ணம் அழுத்தமா இருக்குங்க.
நன்றி :)
காத்திருப்போம் அதுவரை...