Pages

Tuesday, August 28, 2012

வேங்கைகளின் மண்... 2 !அதிர்ந்து கொண்டிருந்தது காடு. அணியணியாய் அங்கே நின்று கொண்டிருந்த மக்களின் கண்களில் பரவிக் கிடந்த அக்னியில் வீரமும், வேட்கையும் நிரம்பியிருந்தன. சிவந்து போயிருந்த அவர்களின் கண்களும் வெயிலில் கருத்துப் போயிருந்த தேகமும் காற்றில் பறந்து கொண்டிருந்த எண்ணையைப் பார்க்காத கேசமும் அடிபட்ட தங்களின் வலிக்கு வஞ்சம் தீர்க்க துடி, துடித்துக் கொண்டிருந்தன.

போராளிகள் எல்லோரும் அப்படித்தான்!!!! சொந்த மண்ணை துரோகிகள் கபடமாய் கூட்டு சேர்ந்து களவாடிக் கொண்டு வென்று விடுவது வெறும் மண்ணை மட்டுமல்ல, அந்த மண்ணில் காலங்காலமாய்  வாழ்ந்த மனிதர்களின் உரிமைகளை, கனவுகளை, பெருமைகளை எல்லாம் சேர்த்துதான் எடுத்துக் கொள்கிறார்கள். ஒவ்வொரு விதையும் ஒவ்வொரு மண்ணில் ஆழமாய் வேரூன்றி செழித்து வளரும். தட்ப, வெட்ப பூகோள ரீதியாய் ஒவ்வொரு மண்ணுக்கும் ஒரு இயல்புண்டு. 

ஒவ்வொரு மண்ணிலும் அந்த அந்த மண்ணிலிருந்து கிடைத்த தாதுப் பொருட்களை காய்களாகவும், கனிகளாகவும், மாமிசமாகவும், நீராகவும் உட்கொண்டு அந்த மண்ணில் படுத்து, புரண்டு பேசி சிரித்து, கூடிக் களித்து, நுரையீரல்கள் ததும்ப ததும்ப பிராணனை சுவாசித்து வளரும் மக்களுக்கும் அந்த  அந்த மண்ணுக்கும் நிறையவே தொடர்புண்டு.

செம்மண் காடுகளில் வளரும் செடிகள் கரடு முரடானவை. அவை கடுமையான கோடையை எதிர்த்து வாழ வேண்டிய சூழலை இயற்கை கையளித்து விடுகிறது. மரம், செடி, கொடிகள் விலங்குகளுக்கே அப்படி என்றால் மனிதர்களுக்கு.... ? எந்த மண்ணில் தந்தையின் ஜீவ சத்து உற்பத்தியாகிறதோ, தாயின் அண்டம் உருக்கொள்கிறதோ அந்த, அந்த இயல்பினை மனிதர்கள் தவறாமல் கொண்டிருக்கிறார்கள். உணர்வாய் தன் சொந்த மண்ணை நேசிக்கும் இயல்பினை மனிதர்கள் தமக்குள் கொண்டிருக்கிறார்கள்.

பிழைப்புக்காய் அங்கும் இங்கும் ஓடும் சுயநல மனிதர்கள் தங்களின் உயிரையும் வாழ்வாதாரத்தையும் பற்றி மட்டுமே கவலைகள் கொண்டு எல்லா சூழலுக்கும் ஒத்துப் போய் வாழவும் பிடிக்காத மனிதர்களின் கால்களைத் தடவி தமக்கான ஆதாயத்தை பெறவும் செய்கிறார்கள். இங்கே சுயநலத்தேவைகளுக்காக இவர்களின் சுயம் பட்டுப் போய் வயிறு வளர்க்கும் உபாயம் மட்டுமே மேலோங்கி நிற்கிறது.

போராளிகள் எப்போதும்  மண்ணின் விடுதலைக்காய் போராடுகிறார்கள். ஒரு பிடி மண்ணை கூட மாற்றான் கவர அவர்களின் மனம் விட்டுக் கொடுப்பதே இல்லை. வீர மறவர்களை என்று கயவர்கள் நேருக்கு நேர் நின்று போர் புரிந்து வென்றிருக்கிறார்கள்....? குறுக்கு வழியில் பெறும் வெற்றிகளையும் உலகம் வெற்றி என்று பார்க்கும் தவறான போக்குகள் பல நேரங்களில் மனித மனங்களை மயக்கி தோற்றவன் நீதிக்கு எதிரானவன் என்று எண்ண வைக்கின்றன.

சிவகங்கைச் சீமையின் வீர மறவர்களை ஆங்கிலேயப் படையினர் கபடமாய் வெற்றி கொண்டு ஏழு ஆண்டுகள் ஆகியும் இன்னமும் சுதந்திர வேட்கை அந்த மண்ணின் மைந்தர்களிடம் சற்றும் குறைந்து விடவில்லை. வெள்ளையர்களிடம் இருந்து தலைமறைவாகி விருப்பாட்சிப் பாளையத்தில் தஞ்சம் அடைந்திருந்த அவர்களின் போர்ப் பயிற்சி காடுகளுக்கு நடுவே பெரும் வயல்வெளிகளுக்கு நடுவே கரடுமுரடாய் நடந்து கொண்டிருந்தது.

' வெல்வோம்....வெல்வோம்..சீமையை வெல்வோம்.....

 செங்குருதி கொடுத்தேனும் தாய் மண்ணை வெல்வோம்....

குள்ள நரிக் கூட்டத்திடம் வேங்கைகள் பணிந்து போகுமோ....? '

உரக்க சப்தம் விண்ணை பிளந்து கொண்டிருக்க உச்சி வானில் சூரியன் நடுக்கத்துடன் அதை கவனித்துக் கொண்டிருந்தான்.

ஒரு படைப் பிரிவுக்கு வளரி வீச கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்த ஆஜானுபாகுவான அந்த மனிதரின் கண்களில் வெளிப்பட்ட ரெளத்ரம் அவர் பயிற்சி கொடுத்த மறவர் கூட்டத்தின் கண்களிலும் வெளிப்பட்டது. வளரியை எடுத்து, வலது கையில் பிடித்து அதை காற்றின் திசையைக் கணித்து கையை பின் இழுத்து அளவு பார்த்து இலக்கை குறிபார்த்து.... காளீஸ்வரா...... என்று கண்களை மூடி ஜெபித்து.... ஓங்கி காற்றில்  அவர் வீச.....

இலக்கில் இருந்த ஒரு பதுமையின் தலை கொய்து, பின் காற்றில் மிதந்து அந்த களறி மீண்டும் அவரின் கைகளுக்கே வந்தது......

கூட்டம் கரகோஷித்து.... பெரிய மருது வாழ்க வாழ்க....!!!! என்று முழங்க...தினவெடுத்திருந்த தோள்களுக்குச் சொந்தமான அந்த வேங்கை முறுக்கேறிய தனது  புஜங்களில் படிந்திருந்த வேர்வையை துடைத்த படியே தனது கம்பீரமான மீசையை முறுக்கிக் கொண்டு கர்ஜிக்கத்த் தொடங்கியது....

என் அன்பான சீமையின் மக்களே.....! களறியைக் கையாலும் போது உங்கள் கவனம் கிஞ்சித்தேனும் வேறெங்கும் சிதறி விடக்கூடாது, இலக்கினை கூர்மையாய் குறிபார்க்கும் அந்த தருணத்தில் கண நேரத்தில் உங்களின் மூச்சு சீராய் இருக்கிறதா என்று கவனித்து, நேர்கோட்டில் புத்தி, மனம், உடல் மூன்றையும் நிறுத்தி சலனமில்லாமல் நமது சீமையின் விடுதலையை மட்டுமே நினைவில் நிறுத்தி....இந்த களறி இலக்கின் தலை கொய்து மீண்டும் வரவவேண்டும் என்ற ஒற்றை புள்ளியில் நின்று.....அண்ட சராசரத்தின் மூல நாயகனின் பெயர் சொல்லி....காளீஸ்வரா...என்று முழு பலம் கொண்டு வீசுங்கள்....

அப்படியாய் வீசுவதற்கு முன் காற்றின் திசை எங்கிருந்து எங்கு நகர்கிறது என்று ஓரளவிற்கு கணித்து உங்களின் இருப்பிடத்தை முன்னமே தெளிவாய் முடிவு செய்து கொள்ளுங்கள்....காற்றின் திசையைக் கணிக்கும் யுத்தியை உங்களுக்கு எல்லாம் நான் ஏற்கெனவே கற்றுக் கொடுத்திருக்கிறேன். உடலுக்குள்  மனமாய் நீங்கள் நகர்ந்து கொண்டிருக்கும் வரையில் உங்களை பற்றிய நினைவுகளையும், உங்களுக்குத் தேவையான விசயங்களையும் மட்டுமே மனம் நினைவு கொள்ளும்....

காது மூடி, மூச்சடக்கி மனம் நகர்த்தி மனமாய் நிற்காமல், புத்தியாய் நிற்காமல், உணர்வாய் நீங்கள் நிற்கும் போது.. பிரபஞ்சத்தின் எல்லா இயல்புகளும் உங்களுக்குள் தஞ்சமாகும்....அப்போது பெரும் சக்தியாய் நீங்கள் மாறி விடுவீர்கள்.... பிறகென்ன....எதிரிகளின் தலைகள் நமது காலடியில்தானே......?

பெருஞ் சப்தத்தோடு பெரிய மருது பேசிக் கொண்டிருந்தை தூரத்தில் வாள் பயிற்சிக் கொடுத்துக் கொண்டிருந்த மந்திரி தாண்டவராயன் பிள்ளையும், சிலம்பு வாத்தியார் இடத்தில் நின்று பயிற்சிக் கொடுத்துக் கொண்டிருந்த சின்ன மருதுவும்...., திருப்பாசேத்தி அரிவாள் படைக்கு பயிற்சிக் கொடுத்துக் கொண்டிருந்த மருதமுத்துவும், மல்யுத்த படைக்கு பயிற்சிக் கொடுத்துக் கொண்டிருந்த வெற்றி வீரனும்.....மெளனமாய் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.... செம்மண் புழுதி பறக்க உடையாள் பெண்கள் படை வாள் வீசிக் கொண்டே அவர்களுக்கு பயிற்சிக் கொடுக்கப்போகும் தலைமைக்காய்  காத்திருந்தது....

விருப்பாட்சி பாளையத்தை ஆண்டு கொண்டிருந்த கோபால நாயக்கர் தன்னாலான உதவியைச் சீமை மக்களுக்குச் செய்து கொண்டிருக்கிறோம் என்ற பெரும் சந்தோசத்தில் உதய மர நிழலில் கம்பீரமாய் நின்றிருக்க.....

வெள்ளை புரவியொன்று... பெரும் கனைப்போடு அந்த பயிற்ச்சிக் களம் அருகே வந்து கொண்டிருந்தது....! புரவி நெருங்க நெருங்க..களத்தில் நின்று கொண்டிருந்த பல்லாயிரக்கணக்கான வீர மறவர்களும், பெண் வேங்கைகளும், பயிற்சி கொடுத்துக் கொண்டிருந்தவர்களும் சப்தமின்றி அமைதியானார்கள்....

ஆயிரம் சூரியனை விழுங்கிய கொடும் புலி ஒன்று, பசித்துப் பசித்து இரைக்காய் காத்துக் கிடந்து ஏதேனும் ஒரு இரை அதனிடம் எதிர்ப்பட்டால் எப்படி தீரமுடம் பாய்ந்து ஒற்றை அடியில் தன் இலக்கை வீழ்த்துமோ அதே தீரத்துடன்.....ஒட்டு மொத்த உலக ஆண்களையும் நிற்கவைத்து வீரமென்றால் என்னவென்று கற்றுக் கொடுக்கும் குணத்தினை இயல்பாய்க் கொண்டு...., எதிராளியின் நாவுகள் என்ன மொழி பேசினாலும் பதில் கொடுக்கும் பேரறிவும்,  பரந்து விரிந்த கனவுகளும், மானுட நேசமும், மண்ணின் மீதான பற்றும் தனது பேரழாகாய்க் கொண்ட.....

பெண் வேங்கையொன்று புரவியிலிருந்து குதித்து திம் என்று மண்ணில் கால் பதிக்க.....

' வீர மங்கை வேலு நாச்சியார் வாழ்க.....வாழ்க.....

 குலம் காக்க வந்த பராசக்தி வாழ்க..வாழ்க....

 வீரமறவர்களின் குல தெய்வமே வாழ்க வாழ்க.....'

கோஷம் விண்ணைப் பிளக்க....இடைவாளில் ஒரு கை வைத்து சிம்மமென நடந்து வந்து மருது சகோதரர்களுக்கும், மந்திரி தாண்டவராயன் பிள்ளைகும், கோபால நாயக்கருக்கும் இன்ன பிற.... பயிற்சித் தலைவருக்கும் வணக்கம் தெரிவித்து.....

திரண்டு நின்ற போராளிகளை பார்த்து.....கையசைக்க....அங்கே உற்சாக வெள்ளம் கரை புரண்டு ஓடிக்  கொண்டிருந்தது....!

மருது சகோதரர்களை பார்த்து..... குயிலி எங்கே...? என்று கேட்டு புருவத்தை உயர்த்தியது இந்திய தேசத்தில் வெள்ளையருக்கு முதல்  எதிராய் முதல் குரலை உயர்த்திய முதல் பெண் வேங்கை......

(புரட்சி இன்னும் வெடிக்கும்...)


தேவா. S
Saturday, August 25, 2012

வேங்கைகளின் மண்.....!வரலாற்றின் மறக்கப்பட்ட அல்லது மறைக்கப்பட்ட பக்கங்களாய் வீரம் மிகுந்த சிவகங்கைச் சீமையின் சுதந்திரப்போர் அமைந்து போய்விட்டது. அந்த மண்ணைச் சேர்ந்த மக்கள்  உண்மைகளை சரியாக முன்னெடுத்து பொதுவெளிக்கு கொண்டு வரவில்லையா? இல்லை ஆதிக்க அரசியல் அந்த முயற்சிகளை எல்லாம் சாய்த்துப் போட்டுவிட்டதா என்ற கேள்விகள் எல்லாம் ஏதோ ஒரு சோகத்தை உள்ளுக்குள் பரவவிடுவதை தவிர்க்க முடியவில்லை.

வாழ்க்கையில் வெறுமையை நிறைய அனுபவித்து வாழ்ந்து கொண்டு உப்புக்காற்றையும், உறைக்கும் வெயிலையும் உடலில் வாங்கிக் கொண்டு கரடுமுரடான  செம்மண் பூமிக்குள் எப்போதும் வானம்பார்த்து வாழும் வீர மைந்தர்களை பதிவு செய்து கொள்வதில் வரலாற்றுக்கும் ஒரு மாற்றாந்தாய் மனப்பான்மைதான் போலும்....

சுதந்திரப்போராட்ட வரலாற்றை இந்திய தேசம் பக்கம் பக்கமாய் எழுதி நிரப்பிக் கொண்டு போனால் போகிறது என்று மிச்சமிருக்கும் உணவினை பிச்சைக்காரனுக்குப் போடும் எஜமானனாய் சிவகங்கைச்சீமைக்கும் கொஞ்சம் இடம் கொடுத்திருக்கிறது. இந்த மண்ணின் மக்களும், இந்த மண்ணிலிருந்து மேலெழும்பி பிரபலமான மனிதர்களும் சிவகங்கைச் சீமையை எப்போதும் வெளி அரங்கில் பிரதிபலித்ததில்லை. அரசியல் பலம் பெற்றோரும், அதிகார பலம் பெற்றோரும், பண பலம் பெற்றோரும்  வாழ்வின் ஓட்டத்தில் தங்களின் சட்டைப் பைகளிலேயே கவனத்தை பெரும்பாலும் கொண்டிருந்த காரணத்தால் இந்த செம்மண் சீமையில் படிந்து கிடக்கும் இரத்தக்கறைகளை ஏறெடுத்துப் பார்க்க அவர்களுக்கு நேரம் இருந்திருக்கவில்லை.

வெள்ளையர்களை எதிர்த்து போர்முழக்கமிட்ட முதல் குரலுக்கு சொந்தக்காரர்களான இந்த மண்ணின் மைந்தர்கள் போற்றப்பட வேண்டியவர்கள் என்பதில் யாதொரு ஐயமுமில்லை. கருவேலங்காட்டுக்குள் அனல் பறக்கும் வெயிலுக்குள் அடர்த்தியான அந்த மண்ணின் காற்றில் பரவிக் கிடக்கும் அதிர்வுகள் ஏதேதோ கதைகளைச் சோகமாய்ச் சொல்லத்தான் செய்கின்றன.

வழக்கம் போல விடுமுறைக்குச் சென்ற என் கையில்  எதிர்பாராமல் கிடைத்த வேலு நாச்சியார் என்னும் புத்தகத்தை வரி விடாமல் இரவு பகலாய் வாசித்ததில் அங்கே சொல்லப்பட்டிருந்த புள்ளி விபரங்கள் எனக்கு வேலு நாச்சியாரைப் பற்றி எழுத உதவப் போகிறது என்பதை வாசிக்க தொடங்கிய மூன்றாவது கணத்தில் புரிந்து கொண்டேன். புத்தகத்தின் ஆசிரியர் சீமையின் எல்லா பகுதிகளுக்குள்ளும் சுற்றித் திரிந்து புதிய புதிய தகவல்களை நுணுக்கமாய் பதிவு செய்திருந்ததை வாசித்து வாசித்து என் கண்கள் பள பளக்கத் தொடங்கியிருந்தன. மனிதர்கள் எவ்வளவு வீரத்தோடும் போர்க்குணத்தோடும் மதிநுட்பத்தோடும் வாழ்ந்திருக்கிறார்கள் என்ற பிரமிப்பிலிருந்து வெளியே வரவே முடியவில்லை.

வீரமிகுந்த செம்மண் பூமியின் வரலாறு என்று ஏற்கெனவே காளையார்கோவிலைச் சேர்ந்த திரு. மு. சேகர் எழுதிய புத்தகத்தை நான் வாசித்திருக்கிறேன். அதையும் உள்ளடக்கி திரு. ஜீவபாரதி அவர்கள் எழுதியிருக்கும் இந்த புத்தகம் ஒரு கதை என்ற அளவில் தனது எழுத்து நடைக்குள் முடங்கிப் போய் தாக்கத்தை எதிர்ப்பார்த்த அளவு கொடுக்க முடியாமல் போனது மட்டுமே ஒரு குறையாக நான் பார்க்கிறேன்.

சிறுவயதிலிருந்தே சிவகங்கைச் சீமையின் வீரவரலாறும் எமது வீடுகளில் சோறோடு சேர்த்து எங்களுக்கு ஊட்டப்பட்டிருக்கிறது. வேலு நாச்சியாரின் பிரதான அமைச்சராய் இருந்த முத்து தாண்டவராயன் பிள்ளையை பற்றியும் அவரின் மதி நுட்பம் பற்றியும், வீரம் பற்றியும் அவரது பேத்தி வாயிலாக கேட்டு விட்டு தன் பெரிய அப்பத்தா கிழவி சொன்னதாய் என் அம்மா சொன்னதை எல்லாம் கட்டுரையை வாசிக்கையில் என்னால் நினைவு கூற முடிந்தது.

ஏதோ ஒரு முடிச்சு சிவகங்கைச் சீமைக்கும் என் ஜீவனுக்கும் இருப்பதாய் நான் இந்தக் கணம் வரை நம்புகிறேன். அதனாலேதானோ என்னவோ என்னுடைய வலைப்பூவின் முகவரியும் மருதுபாண்டியானது போல....

இனி... 

நான் அறிந்த வரலாற்றின் மூலம் வேலு நாச்சியார் என்னும் பெண் வேங்கையை உங்கள் கண் முன் கொண்டுவரவேண்டிய பெரும் பொறுப்பு எனக்கு இருப்பதாய் நினைக்கிறேன். இதற்காய்  நான் எப்போது நேசிக்கும்  எல்லாம் வல்ல தென்னாடுடைய சிவனும், சிவகங்கை அரண்மனையில் குடி கொண்டிருக்கும் அம்மா இராஜ இராஜேஸ்வரியும் என் உடன் நின்று...... இந்த சிறுவனுக்கு உதவுவார்கள் என்று நம்புகிறேன்....!

வரப்போகும் நாட்களில்..சீமைக்குள் செல்வோம்....!


தேவா . SFriday, August 24, 2012

இருப்பது ஒன்றுதான்.... !


ஆடிய காலும், பாடிய வாயும் எப்போதும் ஓய்ந்திருக்காது, ஏனென்றால் அது ஒரு வேட்கை. எழுதுவதும் அப்படித்தான் நிகழ்வுகளை உள்வாங்கிச் செரித்து அதை அனுபவமாக்கிப் பார்க்கும் ஒரு வித்தை.  ஒவ்வொரு வரிகளையும் நகர்த்தும் போது உள்ளுக்குள் நடக்கும் மாற்றங்களை நாம் உற்று நோக்கி அனுபவமும் புரிதலும் வார்த்தையாய் வந்து காகிதத்தின் வெள்ளைப் பக்கங்களில் எழுத்துக்களாய் மோதும் தருணம் சுகமானது. இறை தேடல் என்பதை இரை தேடல் என்று விளங்கிக் கொண்டிருப்பேனோ என்னவோ பசித்து உண்டு, பின் உண்ட சுகத்தில் லயித்துக் கிடந்து பின் மீண்டும் பசிக்க, மீண்டும் புசித்து.....

இப்படியான தொடர் நிகழ்வான பெரும் பயணத்தில் கண்டடையப்போவது எதுவுமில்லை என்ற ஒரு நிதர்சனம் அழுத்தமான கீறலாய் உள்ளுக்குள் பதிந்து போய்க் கிடக்கிறது. வலி என்பது எப்படி ஒரு உணர்வோ அதே போல விளக்க முடியாததாய் இது போன்ற அனுமானங்கள் கொஞ்சம் கொஞ்சமாய் பார்வையை தெளிவாக்கிக் கொண்டிருக்கிறன. கடவுளென்ற பெருஞ்சக்தி எப்போதும் தனித்து வந்து பக்தா தந்தேன் அபயம் என்று சொல்லி வரங்கள் கொடுத்ததாய் புராணங்களில் இருக்கிறது. கண்டேன் என்றவரால் எல்லாம் ஊருக்கும் உலகத்துக்கும் நான் காட்டினேன் என்று சொல்ல முடியவில்லை.

நம்மை சுற்றி நிகழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கையை புரிந்து கொள்ள எந்த ஒரு முயற்சியும் எடுக்காமல் அதை கவனித்துக் கொண்டிருக்கையில் ஒரு விதமான தாளகதியில் நமக்குள் ஒரு நாட்டியம் தொடங்கி விடுகிறது. பலவிதமான உணர்வுகளை பாவங்களாக வெளிப்படுத்தும் ஒரு கலையே பரதம் என்னும் நாட்டியம். பரதமுனி படைத்த ஒரு ஒப்பற்ற கலை. மனித உணர்வுகளை நுணுக்கமாக உடனுக்குடன் முகத்தில் கொண்டு வந்து அபிநயம் பிடித்து தாளகதிக்கு ஏற்றவாறு....

தகதிமி..தகதோம்.. தகதிமி தகதோம்...தகிட..தகிட தகிட... என்று கை வீசி கால் தூக்கி ஆடும் சுகம் என்னவென்று பரதம் ஆடுபவர்களைக் கேட்டுப்பாருங்கள். பரதம் என்று மட்டுமில்லை.. நடனங்கள் எல்லாமே அப்படித்தான். ஆடி ஆடி கூச்சலிட்டு அதிர்ந்து அடங்கும் தருணத்திற்காகத்தான் ஆட்டமே என்று உணரும் போது ஆடுதல் என்பது தேடலாயும் அதன் பின்னான நிறைவு அந்த தேடலை நிறைவு செய்யும் மன உணர்வாயும் அமைந்து போய்விடுகிறது.

நாமும் ஆடிக் கொண்டு சுற்றி நடக்கும் ஆட்டத்தை வாழ்க்கையிலும் ரசிக்க முடியும். சமூக முரண்கள், சிறப்புகள், பிரபலங்களின் தலைக்கனங்கள், தலைக்கனம் இல்லா பணிவுகள், தொடை தட்டி கொக்கரித்து  வீரவசனம் பேசும் நிலையில்லாத உடல் வலிவுகள், குறுக்குப் புத்திகள், காதல்கள், காமங்கள், கவிதைகள், கட்டுரைகள், கதைகள், ஓவியங்கள், கடவுள் மறுப்பு, முரட்டுத்தனமான கடவுள் பக்தி, விஞ்ஞானம், அஞ்ஞானம், ஆன்மீகம், பிறப்பு, இறப்பு, சிரிப்பு, சோகம் என்றெல்லாம் ஒவ்வொரு பாவம் காட்டும் வாழ்க்கையின் ஆட்டமே நடராஜரின் தத்துவமாகிறது. 

ஒற்றைக்கால் தூக்கி கை ஆட்டி.... ஏதேதோ மாயைகளை காலுக்கடியில் போட்டு மிதித்து, ஆடுவதும் அஞ்ஞானமே என்று சொல்லும் ஒரு தத்துவ வடிவம் அது. சனாதான தருமத்தின் வேர்கள் எங்கிருந்து புறப்பட்டன என்று யாருக்கும் தெரியாது. அவை சூட்சுமமானவை. யாராலும் ஆக்கப்படாமலும், அழிக்கப்படாலும் அது ஒரு தத்துவமாய் காலங்கள் தாண்டி நின்று கொண்டு மனித குலத்தின் ஆன்ம வளர்ச்சிக்கு பல வழிகளில் உதவிக் கொண்டுதானிருக்கும்.

காலத்தின் போக்கில் மதமென்ற பெயரில் ஆதிக்க சக்திகள் நடத்திக் காட்டிய வேடிக்கை கூத்துக்களை எதிர்க்கவும் சனாதான தர்மமே உதவியிருக்கிறது. ஆமாம்...தற்போதுள்ள எந்த ஒரு சமகாலத்து நவீன மதங்களும் கடவுள் மறுப்பை தனது அங்கமாக்கிக் கொள்ளும் துணிச்சல்கள் இல்லாதவை. நாத்திகம் எனும் கடவுள் மறுப்பும் சனாதான தருமம் எனப்படும் தத்துவத்தின் பகுதியே என்பதை உணரும் இடத்தில் இது எவ்வளவு ஒரு சுதந்திரமான தருமம் என்பதை தெளிவாய் உணரமுடியும்.

உலகமெங்கும் விரவிக் கிடக்கும் வாழ்வியல் நெறிமுறைகளை வகுத்தவர்களுக்கு வழிகாட்டியாய் கீழை நாட்டு தத்துவங்கள் எப்போதும் உதவி இருக்கின்றன. பூகோள ரீதியாய் மனிதர்கள் தத்தமது தட்ப வெட்பத்துக்கும் சூழலுக்கும் ஏற்ப பிரிந்து உணவு உடை இன்னபிற பழக்கவழக்கங்களையும், சகமனிதரை தொடர்பு கொள்ளும் சப்த முறைகளையும் தத்தமது சூழலுக்கு ஏற்ப உருவாக்கிக் கொண்டனர்.

மரங்களில்லா பாலை நிலங்களில் சூட்டில் வாழும் மனிதர்கள் சக மனிதரை அழைத்துப் பேசவும், தூரத்தில் நிற்பவரை அழைக்கவும் மென்மையான சப்தங்கள் உதவாது. மென்மையாய் வெளிப்படும் அவர்களின் சப்தங்களை காற்று களவாடிச் சென்று விடுமாதலால்..... அவர்கள்  அடித் தொண்டையிலிருந்து சப்தம் செய்ய வேண்டியதாயிற்று, கண்ணிலும், உடலிலும் முகத்திலும் மணல் காற்று எப்போதும் மணலை அள்ளி வீசிக் கொண்டே இருக்குமாதலால் இயற்கையிலேயே உடல் முழுதும் மறைத்து காது மறைத்து உடையணியும் பழக்கமுறைக்கு அவர்கள் தள்ளப்பட்டார்கள்.....

குளிரான பூமியில் ஜனித்த மனிதன், குளிரைத்தாங்கவே கழுத்து இறுக்கி  உடையணிந்து, தலையை மறைத்து கையுறை அணிந்து, காலுறை அணிந்து வாழவேண்டிய அவசியம் ஏற்பட்டுப் போனது. அவன் செய்யும் சப்தங்களால் உடலுக்கு வெப்பத்தை பெற்றுக் கொள்ள வேண்டிய அவசியமும் அவனுக்கு இருந்தது. அதனாலேயே அதிக அழுத்தம் கொடுக்காத ஸ்ஸ்ஸ்ஸென்று அடிக்கடி சப்தம் செய்யும்படியான ஒரு வித சப்தமுறையை தனது தொடர்புக்கு  வைத்துக் கொண்டான்.

தொடர்ச்சியான அவனது பழக்க வழக்க முறைகள் பூகோள அமைப்பினால் இயல்பிலேயே அவனுக்குள் தோன்றி பின்பற்றப்பட்டு தொடர்ச்சியான அவனது அடையாளமாக கொள்ளப்பட்டது. இதைத்தான் நாம் கலாச்சாரம் என்று கூறுகிறோம். உணவு மனித உடல் கூறையும், புத்தி கூர்மையையும் தீர்மானிக்கும் ஒரு மிகப்பெரிய காரணி. புத்தியை சூடுபடுத்தாத, தானியங்களையும், இன்ன பிற உணவுகளையும் உண்ட மனிதர்கள் அதிகமாய் சிந்தித்தார்கள். இயல்பிலேயே அடுத்த, அடுத்த கட்டத்திற்கு பயணிக்கும் மனித மனதின் உதவியோடு அவர்கள் தங்கள் உள்ளமையின் தேடலை அவர்கள் சென்றடைந்தார்கள்.

எனது மொழி, எனது நாடு, நான் சிறப்பானவன் என்று கூறி கொடி பிடிக்கும் போக்குகள் எல்லாம் ஏதோ நமது மிகப்பெரிய சிறப்பாய் பார்க்கும் ஒரு தன்மை ஒடுங்கி மொழியும், கலாச்சாரமும், இன்ன பிற விசயங்களும் இயற்கை நமக்குப் போட்ட பிச்சை என்று எண்ண வேண்டும். இப்படி எண்ணும் போது மொழிக்காகவும், மதத்திற்காகவும், இனத்திற்காகவும் நாம் பெருமைப் பட்டுக் கொள்வதும், சக மனிதரை அதை வைத்து சிறுமைப்படுத்துவதும் எவ்வளவு பெரிய புரிதலற்ற விசயங்கள் என்பது புலப்படும்.

வாழ்க்கையின் இயங்குதன்மையோடு சேர்ந்து சனாதான தர்மம் மனிதன் சுமூகமாய் வாழ பல வழிகளைச் சொன்னது. இயற்கையோடு சேர்ந்த ஒரு வாழ்வு. இருப்பதை ஏற்றுக் கொள்ளும் தெளிவினைச் சொல்லும் ஒரு தத்துவமுறை. சிவம் என்னும் பேருண்மை சக்தியாய் எங்கும் இயங்கிக் கொண்டிருக்கிறது என்று கூறி....வாழ்க்கையை விட்டு விலகி வாழ ஒரு சூத்திரமும் வாழ்க்கையோடு சேர்ந்து வாழ ஒரு சூத்திரமும் சொல்லிக் கொடுத்திருக்கும் ஒரு ஒப்பற்ற தந்திரம். மனத்தால் வாழ்பவர்களை நெறிப்படுத்த ஓராயிரம் வழிமுறைகள். கட்டுக்கள் உடைத்தவர்களை கை கொடுத்து அரவணைத்துக் கொள்ளும் ஒரு சுதந்திரம்...... என்று சுதந்திரத்தின் சுகத்தை போதித்ததோடு.. உலகில் பல நாடுகளில் பலவேடமிட்டு, பல பெயர்களோடு தனது தத்துவத்தின் பகுதிகளை அந்தந்த மனிதர்களுக்கு போதித்துக் கொண்டும் இருக்கிறது.....

இருப்பது ஒன்றுதான்.... அதுவே உலக இயக்கமாகிறது.... அதுவே பிரபஞ்சத்தின் மூலமாகிறது. நானாகிறது, நீங்களாகிறது, இந்த கணத்தைக் கடந்து அடுத்த கணத்திற்குள் நுழைகிறது, இந்தக்கட்டுரையை வாசித்து சரி என்கிறது, தவறென்கிறது.....

நீ யாரென்று அதனிடம் நாம் கேள்வி எழுப்பினால்

திறந்த வெளியில் மிதந்து 
போகும் இறகு நான்...
கனத்த இரவில் ஒளிந்து கிடக்கும்
நிசப்தம் நான்...
பெரு மழையில் ஓரத்தில்
சிலிர்த்து இரையும் சாரல் நான்...
நான் யாரென்று கேட்டால்
வார்த்தைகளுக்குள் ஊடுருவி
அர்த்தங்களில் விளங்கிக் கொள்ளும்
உணர்வுகளையும் கடந்த
அரூபமானவன் நான்...!

என்று கூறிவிட்டு இந்தக் கட்டுரயை இத்தோடு முடித்துக் கொள்ளவும் கூடும்...!

தேவா.  S


Tuesday, August 21, 2012

போகிற போக்கில்....!

காலைப் பேருந்து என்பதால் இருக்கை பிடித்து அமர்வதில் சிக்கல் ஒன்றும் பெரிதாய் இருக்கவில்லை. வண்டிய எடுங்கண்ணே... நேரம் ஆச்சு அடுத்த காரு வந்துருச்சுல்ல....

அதிகாரமாய் சப்தம் போட்டு அதட்டிக் கொண்டிருந்த அந்த குரலுக்கும் கெச்சலான லொட லொட சட்டை போட்ட நபருக்கும்  சம்பந்தமில்லை. கையிலொரு நோட்டும் பேனாவுமாய் பரபரப்பாய் இருந்த அவர்தான் டைம் கீப்பர் என்று புரிந்து கொள்ள முடிந்தது. வண்டி பேருந்து நிலையத்திலிருந்து மெல்ல நகர, நகர வெளியே காத்திருந்த காலை நேர காற்றும் சடாரென்று ஜன்னல்கள் வழியே பேருந்துக்குள் ஏறிக் கொள்ள...நான் ஜன்னலை வெறித்துக் கொண்டிருந்தேன்.

எல்லாவிதத்திலும் முன்னேறி விட்டோம் என்று புஜம் தட்டிக் கொண்டு, வல்லரசுதானே நாம் என்று நம்மை நாமே கேட்டு, கேட்டு நம்பிக் கொண்டிருக்கும் நமது தேசத்தின் குடிமகன்கள், பேருந்து நிலையத்திற்கு எதிராகவே மூக்கைத் துளைக்கும் சாக்கடையில் பிரஞை இன்றி மூத்திரம் கழித்துக் கொண்டிருந்தனர்.... இருந்தாலும் ஒவ்வொருவரிடமும் இருக்கும் அலை பேசியில் ஏதோ ஒரு அலைக்கற்றை உலகத்தை கொண்டு வந்து அவர்கள் முன் இணையம் என்ற பெயரில் கடை பரப்பிக் கொண்டுதான் இருக்கிறது. முன்னேறிய சமூகம்தான் ஆனால் தெருவில் மூத்திரம் கழிக்கும் பாரம்பரியக் கோளாறை மாற்றிக் கொள்ள இதுவரையில் நமக்கு ஒரு யோக்கியதையும் இல்லாமல் போய் விட்டது.

சமூகம் என்பது எல்லாம் தானே....? நானும் தானே...? டீ குடித்த கோப்பையை காற்றில் வீசி எறிந்து விட்டு சுதந்திர பூமியில் சத்திய புருசனாய் என் ஐக்கியத்தை நான் உறுதி செய்து கொண்டேன்.  பட்டுக்கோட்டையிலிருந்து அறந்தாங்கி முக்கம் வரை முனகிக் கொண்டே சென்ற பேருந்தினை கியர் மாற்றி உறுமச்  செய்து முன்னேறிக் கொண்டிருந்த டிரைவர் அண்ணன் முதலில் ஒற்றைக் கையில் ஸ்டேரிங்கை பிடித்துக் கொண்டு பாக்கெட்டில் எதையோ அவசரமாய் துலாவிக் கொண்டிருந்தார்....கதறிக் கொண்டே கையோடு வந்த அலைபேசியில் யாரோ டிரைவர் அண்ணனை சொடுக்கு போட்டு அழைத்துக் கொண்டிருந்தார்கள். 

"நைட்டுக்கு வண்டிய விட்டு இறங்குவேண்ணே... ச்ச்சே....ச்சே.. நான் ஒரு 10 மணிக்கா உங்க கடைக்கி வர்றேன்... .....அட என்ன பொசுக்குன்னு இப்டி சொல்லிட்டீக காரு ஓட்டுறப்ப போன எடுக்க முடியாதுண்ணே அதான் எடுக்கல.. இப்ப கூட ஓட்டிக்கிட்டேதான் பேசுறேன்....தப்பா எடுத்துக்குறதிய அண்ணே...

10 மணிக்கு வட்டிக் காசோட கடைக்கி வர்றேண்ணே....." சொல்லி கொண்டே எதிரில் வந்த லாரியை லாவகமாக கடந்த படி செல் போனை சட்டை பைக்குள் தூக்கி எறிந்து விட்டு கர்ச்சீப்பால் நெற்றி வியர்வையை துடைத்தபடி.. ஆக்ஸிலேட்டரை அழுத்த வண்டி உறுமிக் கொண்டு முன்னேறிய அந்த நொடியில்...எனக்கு முன் சீட்டில் இருந்த பெரியம்மா கைப்பைக்குள்ளிருந்து அவருடைய செல்போனை எடுத்தார்

"எலேய் ராசு.... நாந்தாண்டா சேவாத்தா பேசுறேன்...! காலையில வெரசா கெளம்பி வந்துட்டேன்...கீழா நிலைக் கோட்டை முருகாயி இருக்கால்ல... அவ பெரிய மயன் சுப்பு வண்டியில அடிபட்டு செத்துப் போனானாமுடா...!!!! நேத்து நைட்டு மயிலு போன் போட்டு சொன்னா.. அதான் பொசுக்குன்னு கிளம்பி ஒடியாந்திட்டேன்....

.........இல்லையிடா மூத்தவன்...மலேசியா போயிட்டு வந்தான்ல அவந்தேன்...அடுத்த வருசம் கல்யாணம் பண்னனும்னு பேசிக்கிட்டாக....சண்டாளப் பய...போய்ச்சேந்துட்டான் போ....

.....போன் பேசிக்கிட்டு வண்டி ஓட்டிக்கிட்டு போனானாம்... எதித்தாப்ல வந்த கார்காரனுக்கு வெலகுறப்ப ரோடு வழுக்கி விட்டு காருக்குள்ள தானா விழுந்து செத்துப் போனானாம்....,  டேய்.. ராசு.. சாயங்காலத்துக்கு எடுத்துருவாய்ங்க நான் வர ராத்திரி ஆயிறும்...ஒங்க மாமாவுக்கு கூப்புட்டேன் போன எடுக்கல....நீ செத்த நம்ம வீட்டுக்கு போயி சிலிண்டர ஆப் பண்ணிட்டனா இல்லையான்னு பாத்து ஆஃப் பண்ணிடுப்பு....

ம்ம்.. நான் வைக்கட்டா..."

சேவத்தா பெரியம்மா  போனை சாதரணமாய் வைத்து விட்டு சாலையை வெறிக்க, எனக்குள் செத்துப் போன சுப்பு வந்து உட்கார்ந்து கொண்டான். யார் என்னவென்றே தெரியாது இருந்தாலும் யாரோ ஒரு இளைஞன் பைக் ஓட்டிக் கொண்டு செல்லும் போது கவனமில்லாமல் செல் போன் பேசிக் கொண்டே செத்துப் போயிருக்கிறான். அவன் ஒரு சமூக சேவகனாய் இருக்கலாம், கடுமையான தொழிலாளியாய் இருந்திருக்கலாம், பெரிய முதலாளியாய் இருக்கலாம், எதிர்காலத்தைப் பற்றி ஏதேதோ கனவுகளோடு வண்டியின் ஆக்ஸிலேட்டரை முறுக்கி இருந்திருக்கலாம், கெட்டவனாக இருந்திருக்கலாம், பணக்காரனாக இருந்திருக்கலாம், ஏழையாக இருந்திருக்கலாம், அவனுக்காக யாரேனும் காதலி காத்திருந்து இருக்கலாம், வீட்டில் அம்மா சோறு வடித்து குழம்பு வைத்து பரிமாற காத்திருந்து இருக்கலாம்....

அவன் இறந்த தினத்தின் இரவில் நண்பர்களோடு அவன் மூக்கு முட்டக் குடித்து, இரண்டாம் ஆட்டம் சினிமா பார்க்க நினைத்திருக்கலாம், இல்லை அடுத்த நாள் காலையில் ஏதேனும் கோவிலுக்கு செல்ல திட்டமிட்டு இருக்கலாம், அவன் படித்த ஏதோ ஒரு புத்தகத்தின் மடித்து வைத்த பக்கம் அவன் வந்து வாசிப்பான் என்று காத்திருந்து இருக்கலாம்....

ஆமாம்... எல்லாவற்றுக்குமான வாய்ப்பினை வாழ்க்கை கண நேரத்தில் விழுங்கித் தொலைத்து விடுகிறது. ஒரு நொடியில் எல்லாம் புரண்டு போக பிணமாய் கிடக்கும் சுப்புவுக்காக மனது கனத்துப் போனது. செத்துப் போன சுப்புவுக்காக வருத்தப்பட்டாலும், அவன் இடத்தில் என்னை வைத்துப் பார்த்து மனம் பயந்து போகவும் செய்தது....

" அண்ணே... இந்த நோட்டை கொஞ்சம் வச்சுக்கங்களேன்...." 

சட்டென்று ஒரு குரல் என்னைக் கலைத்துப் போட பேருந்து ஏதோ ஒரு நிறுத்தத்தில் நின்று கிளம்பிய போது ஏறிய  ஒரு கல்லூரி செல்லும் பெண் என் கையில் நோட்டை திணித்திருந்தாள்...! ராதிகா, தேர்ட் இயர் பி.காம், என்று அறிமுகப்படுத்திக் கொண்ட அந்த நோட்டுப் புத்தகங்கள் என் கல்லூரிக்காலத்திற்கு என்னை இழுத்துச் செல்ல முயன்று கொண்டிருந்த நேரத்தில்.... ஏ.. காதல் ஒன்று ... என்று அழைப்பு ஓசையாய் ஏதோ ஒரு செல் போன் இசைக்க...ராதிகா செல்போனை காதில் வைத்துக் கொண்டிருந்தது....

" ச்சீ...ச்சி.. .அப்டி இல்லப்பா... ஹேய்....நீ சும்மா இருக்க மாட்ட...! நான் அப்படி சொன்னேன்னா...அது அப்டி சொல்லுச்சு என்கிட்ட...அதை உன்கிட்ட நான் சொன்னேன்....ச்சும்மா கிண்டல் பண்ணிட்டே இருடி.. அதை விடு....

டெஸ்ட்டுக்கு எப்டி பிரிப்பரேசன் எல்லாம் பண்ணி இருக்க, ராத்திரி புல்லா படிக்கவே இல்லடி... வீட்ல ஒரு பக்கம் டிவிய போட்டு கொல்றாய்ங்கண்ணா.. இன்னொரு பக்கம் ஆடி மாசத்துல திருவிழா கொண்டாடுறம்னு ரேடியாவ போட்டு முச்சந்திக்கு முச்சந்தி கொல்றாய்ங்க....நேத்து நைட்டு எங்கூரு  மாரியம்மன் கோவில்ல திரை கட்டி படம் வேற போட்டாய்ங்க....

இந்த கூத்துக்கு நடுவுல அது வேற இடை இடையில் எஸ். எம். எஸ் ஆ அனுப்பிக்கிட்டு இருக்கு... எனக்கு ஒரு மாதிரியா இருக்குடி....ஒரு வார்த்தையல எப்டிடி பதில் சொல்றது.......சீச்ச்ச்சி எனக்கு பிடிக்குதுன்னு நான் சொல்லவே இல்லேயேப்பா...இன்னிக்கு சாயந்திரம் வந்து அது பேசுறேன்னு சொல்லி இருக்கு......"

தொடர்ந்து ராதிகா பேசிக் கொண்டிருந்தது. நான் கவனத்தை ஜன்னல் பக்கம் திருப்பினேன்.... சாலையைக் கடக்கும் 10 மனிதரில் ஏழு பேர் அலை பேசியோடு பந்தத்தில்தான் இருந்தார்கள். வாழ்க்கையின் மறுக்க முடியாத சக்தியாய்ப் போய் விட்ட அலை பேசி மனிதர்களின் மூன்றாவது கையாய் ஆகிப் போய் விட்டது.

மாடு வாங்க சென்று கொண்டிருந்த பெரியப்பாவும், மருந்து வாங்க மதுரை சென்று கொண்டிருக்கிறேன் என்று சோகத்தை பகிர்ந்து கொண்டிருந்த அண்ணனும், ஒங்க ஊர்ல மழையா.. எங்கூர்ல நேத்து சரியான மழை என்று சொல்லி விட்டு... அடுத்த தெரு ஜோதிக்கு யாரையோ சேத்து வைத்திருக்கிறாள் என்று ஊர்வம்பினை பேசிக் கொண்டிருந்த ஒரு அக்காவும், நேத்து அவரு போன் பண்ணினாருப்பா.. வெள்ளிக்கிழமை லீவுதானே என்று தன் வெளிநாட்டுக் கணவனின் அழைப்பினை தந்தையிடம் பகிர்ந்த மகள் என்று அலை பேசிக்குள் மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.

ஒரு பதினைந்து வருடத்துக்கு முன்பான என் பெரும்பாலான பேருந்துப் பயணங்கள், சக பயணிகளுடன் பேச்சுக் கொடுத்து ஏதோ ஒரு சமூகப் பிரச்சினையைப் பற்றி பேசிக் கொள்வதிலும், பரஸ்பரம் எந்த ஊர் என்ன என்று விசாரித்துக் கொண்டு நகர்வதுமாக இருந்தது. இப்போது அலை பேசிக்குள் உலகமே வந்து விட்டதால் சுற்றி இருக்கும் மனிதர்களை யாருமே கவனிப்பது கூட இல்லை. இது வரமா..? சாபமா என்று எனக்குச் சொல்லத் தெரியவில்லை.....யோசித்துக் கொண்டே  இருக்கையில்.....என் செல் போன் சிணுங்க....

" அறந்தாங்கி தாண்டியாச்சுப்பா....ஹம்ம்.... ஒரு பதினோரு மணிக்கு காளையார் கோயில் போயிடுவேன்.....சரிப்பா....பெரியப்பாட்ட பேசுறேன்....எங்க.. எங்க... பழனியாண்டி புஞ்சையில இருந்து கருக்குவா செய் வரைக்குமா... சரி, சரி சரி சர்வையர கூப்டு அளக்கச் சொல்லலாம்.. ஹ்ம்ம் சரிப்பா....

சின்னம்மாவ பாத்துட்டு வர்றேன்.. சரி சரி.. நீங்க சொல்லீட்டீங்கதானே....ஹம்ம்ம் அப்டியே போன போட்டு கோயிலுக்கு வர்ரம்னு மாமாகிட்டயும் சொல்லிடுங்க....இல்லப்பா.. இன்னும் சாப்டல... காரைக்குடில போய் பாத்துக்குறேன்.....ஆங்...சாரி...." 

நான் பேசிக் கொண்டிருந்தேன்.....வண்டி நகர்ந்து கொண்டிருந்தது....கூடவே வாழ்க்கையும்.....


தேவா. S


Saturday, August 4, 2012

நினைவுகளோடு....

அழுத்தமாய் நீ கொடுத்துச் சென்ற
முத்தத்தின் அதிர்வுகள் சிதறிக்கிடக்கும்
புத்திக்குள் ஒரு இராட்சசியாய் அமர்ந்து கொண்டு
காதல் மொழி பேசுகிறாய் நீ....
கடைசியாய் நீ பார்த்துச் சென்ற கூர்மையான பார்வையை
மொழி பெயர்க்கும் முயற்சியோடு
பேனாவுக்கும் வெள்ளைக் காகிதத்துக்குமான
இடைவெளியில் உன் நினைவுகளோடு
அலைந்து கொண்டிருக்கிறேன் நான்....!

விடியலைத் துப்பிச் சென்ற இரவொன்று
உயிர் மாற்றி உடல்களுக்குள் புகுத்தி விட்டு
இயல்பாய்தான் அந்த பொழுது விடிந்ததாய்
அழுத்தமாய் சொன்ன பொய்யை....
உன் விழி நீரால் நீ அழித்து அழித்து
என் உயிர் பற்றி நகர்ந்து விட்டாய்
நானோ....
மத யானையாய் அலையும்
ஒரு தீராக் காதலை உயிராய் ஏந்திக் கொண்டு
மெளனமாய் வெற்று வானத்தின் நட்சத்திரங்களை
எண்ணிக் கொண்டிருக்கிறேன்....
உன் நினைவுகளோடு....!

தேவா. S

Thursday, August 2, 2012

இது உயிருள்ள மண்...இங்கே ஜீவன் இருக்கிறது.....!
ஒரு மாதிரி நெகிழ்வாகத்தான் இருந்தது மூன்று வருடங்கள் கழித்து மீண்டும் ஊருக்கு வந்த அனுபவம். கூர்மையாய் கவனித்துப் பார்த்த போது ஏர்கிராஃப்ட் விட்டு வெளியே வந்து சென்னையில் பரவிக் கிடந்த பிராணனை நாசிக்குள் ஆழமாய் சுவாசித்த அந்த கணம் கருப்பையிலிருந்து வெளி வந்து முதல் சுவாசத்தை ஏற்றுக் கொண்ட ஒரு குழந்தையாய் மனம் குதுகலிக்கத்தான் செய்தது.

பிராணான் என்பது வெறும் பிராணன் அல்ல. இதை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும். உலகமெங்கும் பிராணன் என்னும் ஆக்சிஜன் ததும்பி நிரம்பி வழிகிறதுதான் நான் இல்லை என்று சொல்லவில்லை ஆனால் ஒவ்வொரு மண்ணிலும் அது பல அதிர்வுகளை தன்னுள் ஏந்திக் கொண்டு வித்தியாசமாய்த் தானிருக்கிறது. பெரும்பாலும் நாம் இதை கவனிப்பதில்லை. நாம்  ஏதேதோ சிந்தனைகளில் பொதுவாய் சூட்சும விசயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து நின்று கூர்ந்து கவனிக்காமல் அடுத்த அடுத்த நிகழ்வுகளை நோக்கி நகர்ந்து விடுகிறோம்.

சென்னை விமான நிலையத்தில் பணி செய்பவர்கள் அத்தனை பேரும் பரபரப்பாய் இருந்தாலும் எனக்கு அவர்கள் உள்ளுக்குள் நிதானமாய் இருப்பதாய் தெரிந்தார்கள். என்னோடு உடன் வந்த அத்தனை பயணிகளும் ஏதோ ஒரு அவசரத்தில் இயந்திரதனமாய் இருந்து கொஞ்சம் கொஞ்சமாய் ஒரு நிதான உலகத்திற்கு வந்து கொண்டிருப்பதாகவும் எனக்குப் பட்டது.

இந்தியா சொர்க்க பூமி என்று நான் சொல்லி  முடித்த உடனேயே அறிவியல் வளர்ச்சியையும், நவீன வசதிகளையும், சுத்தத்தையும், வைத்து ஏதேதோ அளவீடுகள் செய்து கொண்டு இது சொர்க்கமல்ல என்று கூறி அரசியல்வாதிகளின் தகிடு தத்தங்களையும் சேர்த்து எடுத்துக் கொண்டு, குண்டும் குழியுமான சாலைகளையும், வாகன நெரிசல்களையும், குடிசைகள், ஏழைகள், சாக்கடைகள், நட்ட நடு சாலையில் அலையும் மாடுகள், வால் குலைத்து எச்சில் இலைகளுக்காய் சுற்றி திரியும் நாய்கள், பேரம் பேசும் ஆட்டோ ஓட்டுனர்கள், தூசியான மாநகரப் பேருந்துகள், நெரிசல்கள் நிறைந்த சாலைகளில் கண்ட இடத்தில் காறி உமிழும் அழுக்கு  மனிதர்கள், தெய்வ தரிசனத்துக்காய் காத்திருப்பது போல டாஸ்மாக்களின் வாசலில் நூறும் இருநூறுமாய் கசங்கிப் போய் கையில் வைத்துக் கொண்டு என்னபா இது ஒரிஜினல் சரக்குதானே....? என்று பேரம் பேசி மலர்ச்சியாய் வாங்கிச் செல்லும் பெரிசுகள்,இளசுகள், குடு குடு தாத்தாக்கள்...,

டீசல் புகைக்கு நடுவே டீசல் இல்லாத வண்டியை ஓரம் கட்டி விட்டு அழுக்கு காலி பாட்டில்களோடு சாலை தடுப்புக்களை தாண்டிக் குதிக்கும் மனிதர்கள், ஒரு வழிச் சாலையில் எதிர் திசையில் வந்து விட்டு அதட்டி நிறுத்தும் காவலர்களிடம் இயல்பாய் விளக்கம் கொடுக்கும் மனிதர்கள், ஸ்கூட்டிகளில் பறக்கும் முகம் மறைத்த சுடிதார்கள், கார்களினுள் ஏசியை நுகர்ந்தபடி நகரத்தின் யாதொரு சந்தடியையும் நேரடியாக உணராமல் ஏ.ஆர் ரகுமானையோ, இளையராஜவையோ உள்ளுக்குள் வழிய விட்டபடி பறக்கும் பணக்காரர்கள்....என்று....

பிளாட்பாரத்து கையேந்தி பவன் முதல் ஐந்து நட்சத்திர ஹோட்டலின் நவநாகரீக ரெஸ்ட்டராண்டுகள் வரை......நமது ஊரில் சுற்றி சுற்றி வாழ்க்கை வழிந்து கொண்டிருக்கிறது. மரணம் என்பது அறியப்படாத ஒன்று. அறியப்படுவது வாழ்க்கை. இந்த வாழ்க்கைதான் நம்மை ஆத்ம திருப்தியுடன் நகர்த்திச் செல்கிறது. சலித்துக் கொண்டேனும் தினசரியை நகர்த்தும் ஒரு அழுக்குப் பிச்சைக்காரனுக்கு கூட நமது ஊரில் வாழ்க்கை படியளக்கப்பட்டிறுக்கிறது.

வாழ்க்கை என்பது முழுதாய் அந்தக் கணத்தை வாழ்வது....ஒரு தெருவோர கோவிலில் வேண்டிக் கொண்டு கன்னத்தில் போட்டுக் கொண்டு பிள்ளையாரைப் பார்த்து தோப்புக் கரணம் போடுவது, பள்ளிவாசலில் இருந்து வெளியே வந்த உடனேயே....அஸ்ஸலாமு அலைக்கும்....எப்டி இருக்கீக....என்று குசலம் விசாரித்துக் கொண்டே மாரிமுத்துவின் விட்டு கல்யாணத்தில் போய் சாப்பிட்டு விட்டு மொய் போட்டு விட்டு வருவது....., சர்ச்சிலிருந்து வெளியே வந்து ப்ரதீபோடு ஊர் சுற்றச் செல்வது...., கோபமோ, எரிச்சலோ, சண்டையோ, சந்தோசமோ, அகங்காரமோ அதை இயன்ற வரையில் இயல்பாய் வெளிப்படுத்துவது, போலியாய் ஹாய், பாய் சொல்லி விட்டு மன இறுக்கத்தோடு ஏதோ ஒரு மாய இலக்கை நோக்கி ஓடுவது அல்ல....

ஆமாம் இங்கே வாழ்க்கை இருக்கிறது அதுவும் ததும்ப ததும்ப....வழிந்தோடிக் கொண்டிருக்கிறது. இது உயிருள்ள பூமி. துடிப்புள்ள மண். இங்கே புறத்தில் கண்ணுக்குத் தெரியாத நிறைய சூட்சும விசயங்கள் அதிர்வுகளாய் பரவிக் கிடக்கிறது. அவை ஆன்மாவோடு நேரடி தொடர்பில் இருப்பவை. மனதை ஒரு கருவியாய் பயன்படுத்துபவனுக்கு இந்த அதிர்வுகள் ஆத்மார்த்தமாய் பிடிபடுகின்றன. மனதை தானாய் நினைத்து நகர்பவனுக்கு அவனை அறியாமலேயே  வாழ்க்கையின் போக்கில் இந்த அதிர்வுகள் ஒரு நிதானத்தை உண்டு பண்ணி விடுகின்றன. இயந்திரமாய் வேலை செய்கிறேன் என்று நீங்கள் சொன்னாலும் நிங்கள் ஒரு முழு இயந்திரமாய் ஆகி விடாமல் இந்த அதிர்வுகள்தான் உங்களைப் பார்த்துக் கொள்கின்றன.

நான் விழிகள் விரிய சென்னையின் நெரிசலை சுகமாய் அனுபவித்துக்  கொண்டிருந்தேன். உடலுக்கான சுகம் குறைவாய் இருந்தாலும் ஆன்மாவை ஒரு பரம சுகம் தாயாய் தலை கோதி வருடி விட்டுக் கொண்டிருந்தது. நான் ஆழமாய் நிதானமாய் சுவாசித்தேன். பிராணன் உள்ளே செல்ல செல்ல புத்தி குளுமையாகி எண்ணங்கள் சலனமின்றி நகர்ந்தன. என்னை சுற்றிலும் நானே பரவி நின்றிருந்தேன். சுற்றிச் சுற்றி மனிதர்கள், ஒவ்வொரு மனிதரையும் போர்வையாய் சூழ்ந்து கொண்டு ஒரு வாழ்க்கை அதன் மேல் மாயையாய் ஒரு சந்தோசமோ அல்லது வலியோ உடன் பயணித்துக் கொண்டிருந்தது.

வாழ்க்கைக்காக வேறு தேசம் நான் சென்றதின் பின்புலத்தில் பொருள் ஈட்ட வேண்டும் என்ற பொதுப்புத்தி கோரமாய் கொம்பு முளைத்து நின்றது தெரியாமல் அந்த சுழலுக்குள் அகப்பட்டு பொருள் தேட சென்றது தவறுதானே என்று இங்கேயே பெரும் பொருள் ஈட்டிக் கொண்டிருப்பவர்கள் சட்டையப் பிடித்து என்னை கேள்வி கேட்பதை பல பேரை சந்தித்த போது என்னால் உணர முடிந்தது.

அரசியல் பற்றிய தெளிவுகளும் விவாதங்களும், இணையவெளிகளில் உலாவும் வசதி படைத்த மனிதர்களின் பொழுது போக்குகள்தான் என்பதும், சமூகம் என்பது இதை விட்டு வெகு தூரத்திலே இருக்கிறது என்பதும்,  சாதரண மக்கள் தங்களின் வாழ்க்கை அவலங்களுக்கு யாரையும் குற்றம் சொல்லி விவாதிக்கும் விசய ஞானமும், கருத்து செறிவும் இல்லாதவர்களாக, தங்களின் முன்று வேலை சோற்றினையும், பிரச்சினை இல்லாத வாழ்க்கையையும் குறி வைத்தே நகர்பவர்களாக இருக்கிறார்கள் என்பதும் தெள்ளத் தெளிவாக புலப்பட்டது.

சமூகத்தின் பிரச்சினைகளை பேச முற்படும் போது எங்கே தனது கையிலிருக்கும் உணவு தட்டிப் பறிக்கப்பட்டு விடுமோ, தனது வாழ்க்கை சீரழிந்து விடுமோ என்று பயந்து கொண்டு அனுசரித்து வாழும் ஒரு மனோ நிலைக்கு மக்கள் வந்து வெகு காலம் ஆகி விட்டதும், அவர்களின் அரசியல் என்பது தேர்தலின் போது வாக்கு செலுத்துவதோடு முடிந்து போய் விடுகிறது என்பதும் தெளிவாய் தெரிந்தது. மேலும் இந்த ஆட்சி சரி இல்லை என்று உள்ளுக்குள்ளேயே நொந்து கொண்டு அடுத்த ஆட்சியில் மாற்றி வாக்களிக்கலாம் என்ற ஒரு வழமையான மனோநிலையில் இருக்கிறார்கள் மெஸ்மரிசம் செய்தது போல...

நாம் தேர்ந்தெடுத்த ஆட்சி இது, நமது வாக்குகளை பெற்று ஆட்சி நடத்தும் கட்சி இது....குறைகளை அதிரடியாக எடுத்துச் சொல்லி போராடுவோம்... என்று யாருமே எண்ணுவதில்லை. இப்படியாய் என்ன அவர்களின் சமூக சூழ்நிலை சுத்தமாய் அவரகளை விடுவதும் இல்லை.

ஒரு புண்ணிய பூமியின் ஆத்மார்த்த மனிதர்கள் நாம் என்ற பெருமிதம் கூட யாரிடமும் இல்லை. ஏனென்றால் அது அவர்களுக்கு தத்தமது பூர்வீக பெருமைகளைப் பற்றி தெரியவே தெரியாது. மிகையான சுதந்திரத்தில் ஏதேதோ செய்து கொண்டு நிம்மதியாய் இருக்க அவர்களுக்கு இங்கே இருக்கும் அதிர்வுகள் துணை செய்கின்றன. இப்படியான அதிர்வுகள் சரியாய் இருக்க இன்னமும் வலுவான ஆன்மீகம் சார்ந்த மனிதர்கள் இங்கே இருக்கிறார்கள். பல வழிப்பாட்டுத் தலங்களில் இருந்து புராதான அலை வீச்சுக்கள் ஒரு தாயாய் இந்த மண்ணை தாங்கிப் பிடித்துக் கொண்டு  இருக்கின்றன.

மனிதர்கள் மதத்தையும், சாதியையும், ஏதோ ஒரு கண் மூடித்தனமான அரசியல் சார்பினையும் தூக்கி எறிந்து விட்டு ஆத்மார்த்தமான ஆன்ம விழிப்பு என்னும் தன்னை உணரல், தான் யாரென்று ஆத்ம விசாரம் செய்தல், வாழ்க்கையோடு இணைந்திருந்தே வாழ்க்கையை ஒரு மூன்றாவது மனிதனாய் வேடிக்கைப்பார்த்தால், சுவாசம் என்றால் என்ன என்று அறிந்து சரியாய் உடலுக்குள் பிராணனை ஆழ்ந்து சுவாசித்தல், பேச்சினை குறைத்து செயல்களால் உணர்வினை வெளிப்படுத்தி சக மனிதனிடம் அன்பு காட்டுதல் என்று இந்த சமூகம் மாறும் போது உலகத்தில் இருக்கும் மானுடர்களுக்கு எல்லாம் நாம் ஒரு முன் மாதிரியாய் மாறும் வாய்ப்பிருக்கிறது...., இப்படியெல்லாம் இருந்ததால் பழந்தமிழரின் வாழ்வு செழித்து இருந்தது என்பதை நாம் இன்று வரலாறாய் அறிந்து கொள்கிறோம்.

ஆன்ம விழிப்பு என்பது ஏதோ  ஒரு சித்தாந்தம் அல்ல. அது உலகில் இருக்கும் எல்லா சித்தாந்தங்களையும் உடைத்துப் போட்டு விட்டு மனிதரை மனிதராய் பார்க்கும் ஒரு நிகழ்வு....

நான் பேசிக் கொண்டேயிருப்பேன்.. என்பதால் சடன் ப்ரேக் போட்டு இங்கேயே நிறுத்திக் கொள்கிறேன், மற்றபடி.....ஊர் சுற்றிக் கொண்டிருக்கிறேன், கோவில் கோவிலாய் போய் ஏதோ ஒரு இருட்டு மூலையில் அமர்ந்து கொள்கிறேன்...காலார நடந்து வழிந்து கொண்டிருக்கும் வாழ்க்கையை பருகிக் கொண்டிருக்கிறேன்....

ஆமாம்...இது உயிருள்ள மண்...இங்கே ஜீவன் இருக்கிறது.....!

தேவா.  S