Pages

Friday, April 27, 2012

ஈழப் போராட்டமும் தமிழகத்தின் பிழைப்பு அரசியலும்....!ஏனோ தெரியவில்லை இறைவன் ஒருவன் தனித்து இருந்திருக்க வேண்டுமென்றும், ஒரு மனிதனைப் போல அவ்வப்போது மனிதர்கள் முன் வந்து வந்து போயிருக்க வேண்டுமென்றும் ஒரு பெரு விருப்பம் எனக்கு இப்போது ஏற்பட்டிருக்கிறது.

ஆமாம்....!!! அப்போதுதானே அவன் சட்டையைப் பிடித்து என்னால் கேள்வி கேட்க முடியும்...? என்ன திட்டத்தில் இப்படி அபத்தங்களை மனிதர்களாக்கிப் போட்டு வைத்திருக்கிறாய்? அசிங்கங்ளை புரிதல்கள் என்று அவர்களை கடை விரிக்கச் சொல்லியிருக்கிறாய்? அறிவென்ற போர்வை போர்த்திக் கொண்டு உணர்வுகளை பொசுக்கக் சொல்லியிருக்கிறாய்...? காசு என்னும் அடிப்படையைப் படைத்து மனிதநேயத்தை தடம் புரட்ட சொல்லியிருக்கிறாய்.. என்று...

நான் ஒரு சராசரி இளைஞன். சமூகக் கோபங்களை உள்ளுக்குள் தேக்கி வைத்துக் கொள்ளத் தெரியாத ஒரு பைத்தியக்காரன். அநீதிகளின் முகங்களுக்கு முன் கை நீட்டி கேள்வி கேட்க விரும்பும் ஒரு கலகக்காரன். நான் பிறந்து வளர்ந்த ஒரு மண்ணிற்கு கூப்பிடு தூரத்திலிருக்கும் என் இரத்த உறவுகள், மனிதர்களாய் ஜீவிக்க போராடிப் போராடி செத்து மடிந்த சோகத்தைக் கண்டு வெடித்து அழுதவன்.......அந்த அழுகையின் சப்தத்தை சக மானுடர்களுடன் எழுத்தாகவும், பேச்சாகவும் எப்போதும் பகிர்ந்து கொள்ளத் துடிக்கும் உயிர் திரட்சியில் உணர்வுகள் கூடுதலாய் கொண்ட ஒரு மானுடன்...

ஈழம் என்னும் தேசம் தமிழனுக்கு சொந்தமானது என்ற வரலாற்றை, பெற்ற தாயை விற்று விட்ட சோகத்துக்கு சமமாக நெஞ்சுக்குள் இருத்திக் கொண்டு எம் சொந்த தொப்புள் கொடி உறவுகளுக்கு சமகாலம் பிழைத்துப் போட்டிருக்கும் முரண்களில் இருந்து ஏதோ ஒரு வகையில் விடுதலை கிடைத்து விடாதா என்று பகுத்தறிவு இருந்தும் மூட நம்பிக்கைகளுக்குள் விரும்பியே நுழைந்து ஏதோ ஒரு தெய்வத்தை வணங்கும் ஒரு காட்டு மிராண்டி நான்....

60 ஆண்டுகால ஈழப் போராட்டத்தையும் அப்படியான போராட்டம் தொடங்கிய முதல் இடமான மனிதம் நசுக்கப்பட்ட இடத்தில் படிந்திருக்கும் இரத்தக் கறைளையும், சுவாசிக்க முடியாமல் மூச்சடக்கி உரிமையை இழந்து இறந்து போன மக்களையும் உணர்வாய் தெரிந்து வைத்திருக்கிறேன். வரலாறு கவனமாய் நகர்ந்து, ஒரு இனத்தின் சுதந்திரப் போரட்டம் அறவழியில் இருந்து வலுக்கட்டாயமாக பாதை மாற்றப்பட்டு கருவி ஏந்திப் போராடும் பிரபாகரச் சூரியன்களை விடுதலைப் புலிகளாய் பெற்றுப் போட்டதை சாட்சி கூறும் கோடாணு கோடி உணர்வானவர்களில் நானும் ஒருவன்.

நான் சார்ந்திருக்கும் இந்திய பெரு தேசம் உலக அரசியலில் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள அண்டை நாடுகளிடம் தன் ஏகாதிபத்திய கோரப்பற்களை இதற்கு முன்னமே இருந்த வல்லரசு நாடுகள் செய்தது போலவே தன்னைச் சுற்றியுள்ள சிறு. சிறு நாடுகளின் மீதும் பதித்தது. இது இயல்பு என்று நகர முடியாமல் ஈழப் போராட்டம் என்னும் எம் இனத்தின் விடுதலைப் போராட்டம் இந்திய பெருந்தேசத்தின் கோரப்பற்களுக்குள் சிக்கியதும்....அதன் நீட்சியாக தொடர்ந்து கொடுக்கப்பட்ட ஆதரவு அரசியலும்....

அடிப்படை உரிமைகளோடு தானும் தனது மண்ணில் ஒரு மனிதனாய் தலை நிமிர்ந்து வாழ்ந்து விடலாம் என்ற நியாயமான ஆசையை பேராசையாகக் கொண்டு, எல்லா விதத்திலும் அடக்குமுறையை ஏவி விட்டு, பெண்களையும் குழந்தைகளையும் அழித்தொழித்து ஆதார உரிமைகளைப் பொசுக்கிப் போட்ட சிங்களப் பேரினவாத அரசின் கொடும் கைகளில் இருந்து தப்பிக்க கருவி ஏந்திப் போராடிய எம் மக்களின் மதியை மயக்கியதில் எந்த வித ஆச்சர்யமும் கிடையாது.

பசித்தவனின் வயிற்றுக்கு விதிமுறைகள் கிடையாது என்று போதித்த மனிதரை தேசப் பிதாவாக ஏற்றுக் கொண்டு கருணையை தனது இருவிழிகளிலும் ஏந்தித் திரியும் சத்தியத்தின் தேசமாய் தன்னை உலக அரங்கில் பரிணமித்துக் காட்டிக் கொண்டிருந்த இந்தியாவிற்கு அது ஒரு அரசியல் விளையாட்டு என்ற உபாயத்தை ஈழ தேசம் என்னும் கனவை நோக்கிப் போராடிக் கொண்டிருந்த மாவீரர்கள் அறியாமலில்லை. 

அறிந்திருந்தாலும் வேறு வழியில்லை. இயற்கையின் முரண். வலியவனை அண்டி நகரவேண்டிய உலகாதாய அரசியலோடு கை கோர்த்துச் செல்வது தேவை என்றுதான் இந்தியாவின் அத்தனை உதவிகளையும் தாயின் சேலையைப் பிடித்துக் கொண்டு நகரும் சிறுபிள்ளையாய் பெற்று, 1980களில் இந்தியாவை ஆண்டு கொண்டிருந்த மற்றும் தமிழகத்தை ஆண்டு கொண்டிருந்த தலைவர்களின் பெரும் உதவியோடு.....

சீறிப்பாயும் புலியாய் சிங்களப் பேரினவாத அடக்குமுறை அரசை பல சமர்களில் களமாடி தோற்கடித்து புறமுதுகிட்டு ஓடச் செய்தது பிரபாகரன் உருவாக்கி வைத்திருந்த வீர மறவர்படை.  ராஜிவ் காந்தி கொலை என்னும் ஒரு சம்பவம் தமிழகத்தில் நடந்தேறும் வரையில் ஈழ ஆதரவு என்னும் அரசியலும், அதன் பிறகு ஈழம் பற்றி பேசவே தொடை நடுங்கிப் போய் அப்படி பேசியவர்கள் எல்லாம் சிறையில் தடாவிலும், பொடாவிலும் அடைக்கப்பட்டு ஒரு இனத்தின் விடுதலை பற்றிய பார்வைகள் மறைந்து போவதற்கு ராஜிவ் கொலை பெரும் வகையில் இந்திய அரசுக்குப் பயன்பட்டது என்றுதான் கூற வேண்டும். 

1991 மே 21க்குப் பிறகு முடுக்கி விடப்பட்ட புலன் விசாரணைகளும், ராஜிவ் கொலைக்கு முழுமையான மூலம் யார் யார் என்ற உண்மைகளும், இந்திய தேசத்தின் ஒரு ஒப்பற்ற தேசிய கட்சியின் தலைவர் மரணித்த போது அவர் தலைமை தாங்கிய கட்சியின் தமிழக தலைவர்கள் அத்தனை பேரும் சிறு கீறல்கள் கூட இல்லாமல் தப்பித்ததும்.......சராசரியான பாமரனுக்கும் இன்னமும் புரியாத புதிராய்த்தான் இருக்கின்றன...!!!!

ராஜிவ் கொலையோடு தொடர்புள்ள முழுமையான தொடர்பு நிலைகளையும் அம்பலப்படுத்த சற்றேறக்குறைய 21 ஆண்டுகளாய் முடியாமல் போன கையாலாகாத ஒரு புலனாய்வுத் துறை எந்த அழுத்தங்களால் இந்த வழக்கினை மேற்கொண்டு நகர்த்த முடியாமல் மூச்சு திணறி நிற்கிறது என்று கேள்வி கேட்கவும் பதில் சொல்லவும் யாரும் தயாரில்லை...

சரியான சூழலுக்கு காத்திருந்த ராஜிவின் துணைவியார் சோனியாகாந்திக்கு மேற்சொன்ன விசயங்கள் பற்றியெல்லாம் கவலைகள் இருந்திருக்கும் என்று நாம் எதிர்ப்பார்க்க முடியாது. மாஃபியாக்களை பிறப்பித்த ஒரு தேசத்தின் மூளை நேர்மையாய் சிந்திக்க முடியாதுதான்...ஆனால் இந்தியாவில் பிறந்து வளர்ந்து அதுவும் அவர்களோடு கை கோர்த்து அரசியல் செய்து அதிகாரங்களை பகிர்ந்து கொள்ளும் திராவிட மூளைகளுக்குமா அது தெரியாது...????

காலம் வெகுவேகமாய் கடந்து போனது. அப்படி போகிற போக்கில் ஈழத்தில் லட்ச லட்சமாய் உயிர்களை குடித்து விட்டு கடைவாயில் இரத்தம் ஒழுக.....வெள்ளைக் கொடி ஏந்தி வந்தவர்களை எல்லாம் வீழ்த்தி விட்டோம் என்ற வீர வசனத்தை வெட்கமில்லாமல் பேசி விட்டு ஓடியே போனது. தமிழக தலைவர்கள், தமிழின் பெயரால் பதவி சுகங்களை அனுபவித்தவர்கள் எல்லாம் அதிகாரத்தை தலைக்கு சுருட்டி வைத்துக் கொண்டு மெரீனாக்களில் உண்ணாவிரதப் போராட்டத்தை இரண்டு மூன்று மணி நேரத்துக்குள் அவசர அவசரமாய் தத்தம் வீடுகளுக்குச் சென்று பிள்ளை குட்டிகள், மனைவிகள், மருமகள்கள், பேரன்கள் என்று குடும்பத்தோடு குதூகலித்து இருந்தார்கள்.

புரட்சித் தலைவிகள் எல்லாம் வை.கோக்களை விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாய் பேசியதாலேயே ஒரு வருடத்துக்கும் மேலாக சிறையிலடைத்து விட்டு, புலிகள் என்றாலே தீவிரவாதிகள், அவர்களை தமிழகத்தில் இருந்து அழித்தொழுப்பதே தமது ஆதாரத் தொழில் என்று கங்கணம் கட்டிக் கொண்டு கொடைநாடுகளில் குளிர்காற்றினை உடம்புகளில் பரவவிட்டுக் கொண்டு....உடன்பிறவா சகோதரிகளோடு உறங்கிக் கொண்டிருந்தனர்.

முத்துகுமாரன்கள் செத்து விழுந்து இன விடுதலைக்காய் போராடும் மக்களை அழிக்கும் சிங்களப் பேரினவாத அரசுக்கு கண்டனங்களை தங்களது கருகிப் போன உடலை காட்டி விட்டு மறைந்து போனார்கள். ஆங்காங்கே வெடித்தெழுந்து ஈழத்தில் நடத்தப்படும் கொலை வெறித் தாக்குதல்களை, யுத்த மரபினை மீறிய அசுரனின் தாக்குதலை நிறுத்த வேண்டி போராடிய போது கருணாநிதிகளின் காங்கிரஸ் கூட்டணி கைகள் அவர்களை தேசியபாதுகாப்பு சட்டங்களால் சிறைக்குள் தள்ளவும் செய்தது.

எஜமான விசுவாசம் காட்டிய இந்திய ஊடகங்கள் வால் குழைத்து செய்திகளை அடக்கி வாசித்து தமிழக மக்களிடம் கடைசி வரை ஈழத்தில் நடாத்தப்பட்ட கொடும் செயல்களின் அவலத்தை, அதன் ஆழத்தை கொண்டு சேர்க்கவில்லை. தமிழ் இனம் செத்து விழுந்தது, தமிழினத் தலைவர்கள் ஈழம் சாத்தியமில்லை என்று வாய்க்குள் முணு முணுத்துக் கொண்டே இந்திய தேசத்தின் தலைமகளுக்கு கடிதாசு போட்டுக் கொண்டிருந்தார்களே அன்றி....

' ஏ.....இந்திய தேசமே.....முதலில் ஈழத்தில் நடக்கும் போரினை நிறுத்த வலிமையான அழுத்தங்களை இலங்கை அரசுக்கு கொடு.....!!!! அப்படி நீ கொடுக்கா விட்டால் உன்னோடான மத்திய அரசு கூட்டணியிலிருந்து விலகுவது மட்டுமில்லாமல், அத்தனை தமிழக எம்.பி.க்களையும் ராஜினாமா செய்யச் சொல்வதோடு.....எமது முதன்மை மந்திரிப் பதவியையும் அமைச்சரவையையும் சேர்ந்தே ராஜினாமா செய்வோம்....'

என்று இந்திய அரசை மிரட்டக் கூட முடியாத வகையில் முடங்கிக் கிடந்தது. போர் நடந்த போது எதிர் கட்சித் தலைவராய் இருந்த அதிமுகவின் தலைவர் யுத்தம் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள் என்று கூறிவிட்டு அடுத்த முதலமைச்சர் ஆவதற்கு... போயாஸ் கார்டனில் சண்டி ஹோமம் நடத்திக் கொண்டிருந்தார் 

முடிந்து விட்டது. எல்லாம் முடிந்து விட்டது. எம் இனத்தை முடிந்த வரையில் கொன்றழித்து விட்டு மிச்சமிருப்பவர்களை மனநோயாளிகளாக முள் கம்பிகளுக்குள் இன்னமும் அடைத்து வைத்திருக்கிறான் சிங்களவன். இனக்கலப்பு செய்து சிங்களர்களை மிகுதியாக்க மாமிச உடல்களைக் கொண்டு கற்பழிப்பு யுத்தங்கள் செய்வது, சிறு பிள்ளைகளைக் கொல்வது, இளைஞர்களை கடத்துவது என்று தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது இன்னமும் சிங்களவனின் இன வெறி.....

ஐ.நாக்கள் நிறைவேற்றிய தீர்மானக் குச்சியை உடைத்து பல் குத்திக் கொண்டே கொக்கரிக்கிறார்கள் ராஜபக்சேயும், கோத்தபயாவும் ....ஐ.நா தீர்மானம் எங்களை ஒன்றும் செய்யாது என்று...எவன் என்ன செய்ய முடியும்......? ஐ.நா நிறைவேற்றிய வெற்று தீர்மானத்துக்கு ஆதரவு கொடுக்கவே இந்திய தேசத்தின் கால்களில் விழுந்து புரண்டு தமிழர்கள் கெஞ்ச வேண்டிய நிலமையில்தானே இருந்தோம்...? பிச்சைக்காரனுக்கு பத்து பைசா தர்மம் செய்வது போல இதையாவது ஐ.நாவில் செய்ய முடிந்ததே என்று ஆங்காங்கே இன்னமும் வெட்கமில்லாமல் பேசிக் கொண்டுதானே இருக்கிறோம்...?

சேனல் போர் சேனல் தொலைக்காட்சி காட்டிய காணொளி காட்சிகளாலும், உண்மையான தமிழுணர்வாளர்களின் தொடர் பரப்புரைகளாலும் இப்போது தமிழகம் மெல்ல புரண்டு விழித்தெழுந்து ஈழத்தில் நிகழ்த்தப்பட்ட் கொடும் பயங்கரத்தை மெல்ல மெல்ல உணர்ந்து கொண்டு உணர்வு கொள்ள  ஆரம்பித்திருக்கிறது என்பதை அதிமுக, திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தெளிவாக புரிந்து கொள்ள ஆரம்பித்திருக்கும் காலம் இது. 

விடுதலைப் புலிகளைப் பிடிக்காத ஜெயலலிதா ஈழம் தான் தீர்வு என்று பேசி ஆக வேண்டிய சூழல்....

காங்கிரசோடு கை சேர்த்துக் கொண்டு எல்லா ஆட்டமும் ஆடிய திமுகவிற்கு தெரியாதா விடுதலைப் புலிகளும் மக்களும் வெவ்வேறு அல்ல.........மேலும் பிரபாகரன் என்னும் பெரு வீரன் ஈழம் வேண்டிப் போராடிய மாவீரன் என்று....

போர் நடந்த பொழுதில் மெளனித்து இருந்து விட்டு..இன்றைக்கு மீண்டும் ஈழம்தான் தீர்வு என்ற அரசியலை செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உங்களைக் கொண்டு வந்தது உங்களின் உணர்வு அல்ல........தற்போதைய தமிழக மக்களின் மனோநிலை என்பதை ஒத்துக் கொள்வீர்கள்தானே?

ஒருங்கிணைந்த இலங்கையே தீர்வு என்று முழங்கிக் கொண்டு கோமாளிகளை இலங்கைக்கு அனுப்பி சிங்களவன் காட்டிய திசைகளை எல்லாம் வேடிக்கைப் பார்த்து விட்டு வந்து இங்கே அறிக்கை சமர்ப்பித்து பொய் பரப்புரைகளை செய்யும் காங்கிரசோடு இன்னமும் கை கோர்த்துக் கொண்டு...

ஈழம்தான் தீர்வு என்று சொல்வதில் எப்படி உண்மை இருக்க முடியும் தோழர்களே...? 

சிந்திக்க வேண்டும். 

எப்போதும் போல தமிழக அரசியல் கட்சிகள் மீண்டும் ஈழத்தை தமிழர்களின் உணர்வாய் மாற்றி அவற்றை வாக்குப் பெட்டிகளில் போட்டு நிறைத்துக் கொள்ளத்தான் முயல்கின்றனவே அன்றி.....

வலியாலும், பசியாலும், மன உளைச்சலாலும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் ஈழத் தமிழர்களுக்கு உதவ ஒரு தலைவனையும் தற்போது தமிழகம் கொண்டிருக்கவில்லை என்பதே நிதர்சனமான உண்மை.....

தாய் உறவுகள் அங்கே கொத்துக் கொத்தாய் கொல்லப்பட்டு கருகிக் கொண்டிருந்த போது, பெரும் போராட்டங்களை நடத்தி தமிழகத்தை ஸ்தம்பிக்க வைக்க செய்ய முடியாத கையாலாகாத இரு திராவிடக் கட்சிகளும்........இனி ஈழம்........ஈழம்.....ஈழம் என்று ஓங்கி ஓங்கி கத்திக் கொண்டு இன்னும் ஒரு இருபது முப்பது வருடங்களுக்கு தங்களின் பிழைப்பை ஓட்டுவார்கள் என்பது மட்டும் சத்தியம்.

தெளிவான அரசியல் தலைவர்களை எவ்வளவுதான் முயன்றாலும் அடையாளம் காண முடியாத படி கவர்ச்சி அரசியலைக் கடை பரப்பி வைத்திருக்கும் இரு பெரும் திராவிட குடுமிகளின் காலடியில் அடிமையாய்க் கிடக்கும் தமிழினத்தில் நானும் ஒருவன் என்ற ஒரு குற்ற உணர்ச்சியோடும்....வேதனையோடும் இந்தக் கட்டுரையை நிறைவு செய்வதற்கு முன்னால்.....

தமிழராய் பிறந்த ஒரே காரணத்திற்காக தமிழக அரசியலின் பெரும் பகடைக்காயாய் போன என் தொப்புள் கொடி உறவுகளின் விடியல் தமிழக அரசியல் தலைவர்களைச் சார்ந்து இல்லை என்ற பெரும் உண்மையை வெட்கத்தோடு கூறிக் கொள்கிறேன்.

எது எப்படி இருந்தாலும் மானமுள்ள மிச்ச சொச்ச தமிழர்கள் ஒன்று கூடி ஈழத்தை வென்று எடுக்கப் போவது உறுதி அதற்கு எந்த கரைவேட்டிகளின் அவசியமும் இருக்காது.

தேவா. சு

Tuesday, April 24, 2012

ஆன்மாவின்....பயணம்! இறுதி பாகம்..!
PREVIEW

சராசரியான நிகழ்வுகளில் மிக திருப்தியான ஒருவன்....எல்லாவற்றையும் விட்டு விலகி இருக்க ஆசைப்பட்டு... ஒரு பத்து நாட்கள் வீட்டை விட்டு வெளியேற திட்டமிட்டு கடிதம் எழுதிவைத்து விட்டு வெளியேறுகிறான். அதற்கப்புறமான அவனின் மனோநிலை.. உலகம் பற்றிய பார்வை....இவனைப்பற்றிய உலகத்தின் பார்வை...இப்படியாக நகரும்....கதை.....இந்த ஒன்பதாவது பாகத்திலும் தொடர்கிறது...

திருப்புமுனைகளோடு கூடிய கதை எதிர்பார்த்து படிக்க விரும்புவர்கள்....எனது பதிவுகளை தவிர்த்து விடல் நலம். ஏனென்றால் என் பதிவுகள் முழுக்க முழுக்க என்டர்டெயின்மென்டை நிச்சயமாய் கொடுக்காது.

உங்களின் நேரம் அனுமதிக்கும் பொழுது இதற்கு முன் உள்ள பாகங்களையும் படித்துக் கொள்ளுங்கள்....!

இதுவரை...

பாகம் I
பாகம் II

அப்போது...

எண்ணங்களற்று இருந்தேன், உடலற்று இருந்தேன், உயிர் என்ற ஒன்றை உணர்வாய் கொண்டிருந்தேன். நான் என்ற எண்ணமற்று விரவி, பரவிய எல்லாமாய் ஒட்டு மொத்த நகர்வாய் மிகப்பெரிய இயக்கமாய் ஏதோ ஒரு உத்வேகத்தில் இன்னதென்று சொல்ல முடியா, கேட்க ஆளில்லா வேகத்தில் என்னுள் நானே பல்கிப் பெருகி, நான் வெடித்துச் சிதறி, நானே சுருங்கி, நானே விரிந்து, ஊனாகி, உயிராகி, அசைந்தும் அசையாமலும் சுவையாயும் சுவையற்றதாயும்...குணங்களோடும் குணங்களின்றியும்....ஊ.....ஊ.. ஊ.......ஊ...என்ற ஓசை என்னுள் எங்கும் பற்றி பரவியிருக்க....

அணுக்களாய் அசைந்தும், அசையாமலும் இடமாயும், இடமற்றதாயும் தம்.....தும்....தும்...தம்...தம்.. தம்....இடைவிடாத ஆட்டம்....அது இடைவிடாத ஆட்டமாய் எல்லாம் ஒரு அதிர்வாய்...... ஆனால் ஒரே அதிர்வாய்....நகரும் மிகப்பெரிய பேரானுபவத்தில் விக்கித்துப் போய் கிடந்தது எவ்வளவு நேரம் என்று தீர்மானிக்க முடியாமலிருந்து கொண்டிருக்கையில்....

மெல்லிய தூறல்களாய் உடலை நீர்த்துளிகள் தொட..சிலிர்ப்பாய் அந்த உணர்ச்சியினை உடல் வாங்கி உடலின் செல்கள் வழியே உள்ளுக்குள் கடத்த முழுதாய் விழித்துக் கிடந்த புத்தி புலன்களுக்குள் சுருண்டு கொண்டு மீண்டும் ஸ்தூல உடலுக்குள் உட்புக உடலின் திடன் உணர்ந்து, அழுத்தம் உணர்ந்து மூளையிலிருந்து வெளிப்பட்ட புலன் உணர்வு மனமாய் மாறி விசுவரூபம் எடுக்க ஆரம்பித்த அந்த நொடியில் மெல்ல கண்களைத் திறந்தேன்....

மழை பெய்ய எத்தனித்துக் கொண்டிருந்த அந்தப் பொழுதில், பட்சிகளின் சிறு சப்தத்தினையும் திசை மாறி இடம் பெயர்ந்து இருந்த நிலவினையும் வைத்து இது விடியல் காலை என்று கணித்தேன். மெல்ல கை அசைத்து, கால் அசைத்து முழுதாய் புலன் உணர்வு நிலைக்குள் வந்து  எழுந்து அமர்ந்தேன். ஆழமாய் இழுத்து சுவாசித்தேன். பிராணன் உள்ளுக்குள் சென்று உடலின் நாடிகளையெல்லாம் தட்டி எழுப்பி முடிச்சுகளை எல்லாம் நீவி விட இரத்த ஓட்டம் சுரீரென்று உடலில் அலைந்து பரவ இதயத்தின் துடிப்பு சீரானது. ஈரக் காற்று உடலை ஒற்றி எடுக்க....முழுதாய் விழித்துக் கொண்ட புத்தி....என்னை ஏதேதோ உணர்வுகளுக்கு அனுப்பி வைத்த அந்தப் பெரியவரைத் தேடியது.

என்னைச் சுற்றி யாரும் இல்லை ஆனால் உள்ளுக்குள் அந்தப் பெரியவர் சொன்ன வார்த்தை கம்பீரமாய் ஒலித்துக் கொண்டே இருந்தது. இது....போகனின் பூமி என்றாரே...., அவர் போகரா..? சித்துக்களை உணர்ந்து அந்த சித்துக்களினை ஆத்ம முக்திக்கும் சக மனிதர்களை காலம் காலமாக வழி நடத்தவும், பயன் படுத்தவும் செய்யும் ஒரு சித்த புருசரையா நான் கண்டேன்....!!??? விஞ்ஞான முனி என்று ஆன்மீக ஆராய்ச்சியாளர்கள் கூறும், நவ பாஷணங்களையும் கட்டி அந்த பழனியில் இருக்கும் மருத்துவ குணம் கொண்ட சிலையை எழுப்பி, அந்த நவபாஷண சிலையை வணங்க வருகிறேன் பேர்வழி என்று தத்தம் வேண்டுதல்களை  கொண்டு வரும் மனிதர்கள் நவபாஷண சிலையில் அபிசேகம் செய்யும் நீரை குடிப்பதாலும், அந்த சிலையின் மீது பட்டு வரும் காற்றை சுவாசிப்பதாலும் வியாதிகள் குணமாகட்டும் என்ற பெரு நோக்கோடு சித்து விளையாடிய பெரு முனியையா நான் சந்தித்தேன்...?

சத்திய மார்க்கத்தை போதித்த சுத்த சன்மார்க்கனையா நான் சந்தித்தேன்..? 

கேள்விகள் என்னின் இயல்பிலிருந்து எழ...கேள்விகளை அந்த பெரியவர் விதைத்த ஞானம் என்னும் வாள் கொண்டு அறுத்தெறிந்தேன். அவர் யாரென்ற கேள்வி எனக்கெதற்கு....? அவர் கொடுத்த அனுபவத்தின் சாரம் என்னுள் உள்ளது. என் தேடலின் தூரங்களை சரியாய் அளந்து எனக்கு அவர் காட்டியிருக்கும் பாதை எனக்குள் அனுபவமாய் பதிந்து கிடக்கிறது. அவர் யாராய் வேண்டுமானாலும் இருக்கட்டும்.....இன்னாரென்று அறிவதா இறை...? அல்ல அல்ல....அறிய முடியாதது இறை. அறியும் போது இல்லாமல் போவது இறை.

இறை என்று சொல்வதெல்லாம் இறை அல்ல. இது அல்ல, இது அல்ல என்று நேதி செய்து செய்து இறுதியில் எது இல்லை என்று சொல்ல முடியாததோ அதுதான் இறை. நான் செல்ல வேண்டிய பாதையை எனக்கு தெரிவித்த அந்த பெருஞ்சக்தியை மனம் குவித்து நமஸ்கரித்தேன். பிடிகள் விடுபட்டு ஒரு சுதந்திர புருசனாய் நான் மாறி இருந்தாலும் என்னைச் சுற்றி வாழ்ந்து கொண்டிருக்கும் கபட மூளைகள் கொண்ட மனிதர்களையும், பணம் சேர்த்து விட்டதாலேயே தன்னைப் பெரிய மனிதர்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கும் நரிகளையும், அவைகள் தாம், தாம் என்ற இறுமாப்பில் அடுத்த மனிதரைப் பற்றி பரப்பும் அவதூறுகளையும், தன்னுணர்ச்சி இல்லாமல் புறம் பேசும் கேவலத்தையும், நினைத்துப் பார்க்கையில் முதலில் பெருங்கோபம் வந்தது...

' ஏ.....மனிதர்களே....! உங்களின் இறுமாப்பினை போக்கி அழிக்க, உம்மின் உடலில் வேதனையைக் கூட்ட, நீங்கள் சேர்த்து வைத்திருக்கும் செல்வத்தை இடம் மாற்றிப் போட்டு உங்களுக்கு நிலையாமையைக் காட்ட, உங்களின் பாவச் சுமைகளை உங்களின் சந்ததியினர்க்கு கடத்தி நீங்கள் தப்பிக்காமல், திருப்பி உங்களுக்கே சுமையாக்கி பாடம் புகட்ட, மிருகங்களைப் போல புணர்ச்சிக்காய் மட்டும் ஆணைப் பெண்ணும், பெண்ணை ஆணும் தேடி, பிறகு மண் தேடி, கொண்டிருக்கும் உங்களின் புண் உடல்களை....காயப்படுத்த....

மனமற்று எங்கும் பரந்து விரிந்து இருக்கும் பெருஞ்சக்திக்கு ஒரு கணம் போதும். எல்லா சுயநல எண்ணங்களையும் தூர எறிந்து ஆழ சுவாசித்து அண்ணாந்து பார்த்து பெரும் பிரமாண்டத்தின் சக்தியை உங்களின் மீது பாய்ச்சி....கணத்தில் உங்களை ஆட்டம் காணச் செய்ய முடியும்....

கரைகளை கடலாக்கவும், கடல்களை கரையாக்கவும், தரிசு நிலங்களைச் செழிக்கச் செய்யவும், செழித்த நிலங்களை தரிசாக்கவும், மலைகளைப் பிடுங்கிப் பள்ளத்தாக்குகளில் வீசவும், பள்ளத்தாக்குகளை மலைகளாக்கவும், காடுகளை எரியூட்டவும்....கூட்டம் கூட்டமாக குரூரகளை அழித்துப் போடவும்...அந்தப் பெருஞ்சக்தியால் முடியும்....

இலக்கு மாற்றி பூமிப்பந்தினை சுற்ற வைத்து சூரியனோடு சீறிப் பாய்ந்து மோதச் செய்து மொத்த பூமியையும் பெரும் பிரபஞ்சத்தால் கணத்தில் குடித்து முடிக்கவும் முடியும்....."

என்று எண்ணிய மாத்திரத்திலேயே மீண்டும் அந்தப் பெரியவர் கூறிய வார்த்தை மீண்டும் செவிக்குள் ஒலித்தது. 

இயல்பில் இரு....இயல்பில் இரு.....இயல்பில்......இரு....


நான் இயல்பில் இருக்கிறேன். என் இயற்கையில் இருக்கிறேன். அகப்பட்ட இடத்தில் மிகைப்பட்டதாய் நான் நடக்கமாட்டேன். உடலுக்குள் அடைபட்டு உடலாய் நகர்ந்து, நகர்ந்து என் இயல்பில் நிற்கிறேன். அறியாமல் செய்யும் அத்தனை பேரும் மன்னிக்கப்பட்டுப் போவார்கள் தத்தம் செயல் விளைவை அனுபவித்த பின். இது இயல்பு. நானில்லை, நீயில்லை....அவனில்லை, அவளில்லை இது அருஞ்சக்தியின் பெரும் திருவிளையாடல். என் வலி, என் வாழ்க்கையால் எனக்கு கொடுக்கப்பட்டது, இதை வாங்கி, கொடுத்து இயல்பில் நகர்கிறேன்.

மழை தூறல் சுத்தமாய் நின்று போயிருந்தது. மெல்ல நகர்ந்து வழியில் எதிர்ப்பட்ட ஒரு சிறு ஓடையில் உடல் சிலிர்க்க, மனம் சிலிர்க்க, விழுந்து, விழுந்து குளித்தேன். உடலின் சூடு தணிய, புத்தி குளுமையாக.....நீரை அள்ளி, அள்ளி முகத்தில் அடித்தேன்.....தண்ணீரில் ஊறிக் கிடந்து தண்ணீராகவே நான் கிடந்து.....மெல்ல தலை தூக்கி எழும் சூரியனைக் கண்டு பரவசப்பட்டு எழுந்து நின்று மணிக்கணக்காய் சூரிய நமஸ்காரம் செய்தேன். 

கிடைத்த கிழங்குகளையும், பழங்களையும், பல நேரம் பல இலைகளையும் தழைகளையும், இன்னும் சில நேரம் வெறும் தண்ணீரை மட்டுமே குடித்து, வெற்று மண்ணில் படுத்து புரண்டு, சிறு, பெரு மிருகங்கள் கடந்து செல்கையில் மெளனமாய் அன்பை பரவச் செய்து அவற்றின் சீண்டலில்லா நகர்வுகளில் ஆச்சர்யம் கொண்டு, துன்பப்படுத்தாத வரையில் எந்த உயிரும் நம்மை துன்பப்படுத்துவதில்லை என்று மானுட வாழ்க்கையின் மையம் அறிந்து, பல நேரம் பாறைகளில் மீது சலனமில்லாமல் ஆழமான தியானத்தில் லயித்து....

இலக்கில்லாமல் சுற்றி, சுற்றி, இங்கும் அங்கும் அலைந்து இதுதான் இறையென்று மூளை மடிப்புகளில் படிந்து கிடந்த எல்லா படிமாணங்களையும் எரித்துப் போட்டு, மனிதர்கள் இல்லா, பேச்சுக்கள் இல்லா, பரிமாறல் இல்லா, கேள்வி கேட்பார்கள் இல்லா ஒரு வாழ்க்கையில் தினம், தினம் நான் ஊறி ஊறித் திளைத்துக் கொண்டிருந்தேன். மரங்களும், செடிகளும் கொடிகளும், அருவிகளும், சிறு கற்களும், ஊர்வன, பறப்பன, எல்லாம் மனிதர்களை விட மிகவும் அற்புதமானவை....

அவையவை அவற்றின் ஒழுங்கில் இயங்கிக் கொன்டிருக்கின்றன. தத்தம் வேலை, தன் இயல்பு, தன் வாழ்க்கை என்று ஒரு மிகப்பெரிய புரிதல் இயற்கையிலேயே இருக்கிறது. ஐயகோ!!!! மனிதர்கள் மட்டுமே இயல்பில் இல்லை. அடுத்தவன் வீட்டு உலையில் என்ன இருக்கிறது? அடுத்தவன் என்ன சாப்பிடுகிறான்? அடுத்தவன் எப்படி பணம் சம்பாதிக்கிறான் ? என்றெல்லாம் எப்போதும் மனிதன் ஆராய்கிறான். தன்னை எப்போதும் பிறரை விட அதிகப்படியாக காட்டிக் கொள்ள எப்போதும் மிகப்பெரிய திட்டங்கள் தீட்டுகிறான்...

பெருமை........பெருமை..........பெருமை...........வாய் கோணி எச்சில் ஒழுக செத்து விழப்போகும் பிண்டங்களுக்குப் பெருமை. நான் இதைச் செய்தேன்......அதைச் செய்தேன்....என்று இடைவிடாமல் பெருமை.....மானங்கெட்ட பெருமை. கொளுத்தும் நெருப்பில் உடல் கருகிப் போகையில் பெருமையும் தலைக்கனமும் என்ன ஆகும்? மண்ணில் மட்கிப் போகையில் இறுமாப்பு என்னவாகும்?

வாழும் வரையில் யோசிப்பதே இல்லை.....இடைவிடாமல் பெருமை பேசி பேசி மரணிக்கும் தறுவாயில் மானங்கெட்ட புத்தி யோசித்துதான் என்ன பலன்? நிலையாமையை உணர்ந்துதான் என்ன பயன்? தெரு நாய் செத்துப் போனாலும் இழுத்துக் கொண்டு போய் புதைக்கிறார்கள்.......பெருமை பேசும் பெருந்தலைவரகளையும், தலைக்கனம் கொண்டு மனிதர்களுக்கு கேடு செய்து வாழ்ந்தவனையும் இழுத்துக் கொண்டு போய் புதைக்கிறார்கள். நல்லவனையும் கெட்டவனையும் ருசி பார்ப்பதில் நெருப்புக்கும் மண்ணிற்கும் ஒரு பேதமுமில்லை. எது மிச்சம் என்று கேள்வி கேட்டு பார்க்க முடியாத வாழ்க்கை என்ன வாழ்க்கை...?

என் வேலை முடிந்தது என்று எனக்குள் ஒரு உணர்வு வந்தது எத்தனையாவது நாள் என்று எனக்குத் தெரியவில்லை. வீட்டுக்கு வந்து சேர்ந்ததும் மனைவியும் அம்மாவும் மட்டும் கட்டிப் பிடித்து அழுதார்கள், பிள்ளை தூர நின்று வேடிக்கைப்பார்த்தது, சகோதரர்களும், அப்பாவும் ...தண்டம் தண்டம் பதினைஞ்சு நாள் வெட்டித்தனமா சுத்திட்டு வருது...என்று என்னை பார்த்து தலையிலடித்துக் கொண்டார்கள்.

என்னோடு பிண்டத் தொடர்பு கொண்டவர்கள் அவர்கள். புலன் உணர்வில் என்னை அறிந்தவர்கள் என் உறவுகள். எனக்குள் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தின் அளவினை அவர்களால் உணர முடியாது. அவர்கள் புலன் உணர்வுக்கு நான் எவ்வளவு எட்டுகிறேனோ அதை வைத்து என்னை கணித்து விடுகிறார்கள். நான் யாரென்று எனக்குத் தெரிந்தது அவர்களுக்குத் தெரியாது. அவர்களுக்கு தான் பெற்ற பிள்ளை என்றும் உடன் பிறந்த சகோதரன் என்றும் , கணவன் என்றும், நண்பன் என்றும் ஒரு அளவீடு, அதுவும் அவர்களின் இயல்பில் என்னை உணர்ந்த அளவீடு.....

நான் யாரென்று தெரிய அவர்களுக்கு அவர்கள் யாரென்று தெரிய வேண்டும். பாவம்.....அவர்களுக்குத்தான் அவர்கள் யாரென்றே தெரியாதே....பிறகெப்படி என்னைத் தெரியும்...?

நான் யார் மீதும் கோபமோ எரிச்சலோ படவில்லை. என்னை இகழ்பவர் அவரின் அறிவு நிலையை வெளிப்படுத்துகிறார். புகழ்பவரும் அவ்வாறே... நான் பிரபஞ்ச நியதியை ஒட்டி வாழப்போகிறவன்... என் இயல்பில் நிற்கப்போகிறவன்.... இவர்களுக்காக என் பிரார்த்தனைகளை கூட்டுவேனே அன்றி வார்த்தைகளால் இவர்களுக்கு என் பாடங்களை சொல்ல ஒரு போதும் முயலமாட்டேன்.

அவர்கள் அவர்கள் இயல்பில் இருக்கட்டும். நான் என் இயல்பில் இருக்கிறேன். 

இயல்பில் இரு என்றுதானே....எல்லாம் வல்ல இறை எனக்குப் போதித்தது. இதோ எழுதுவது என் இயல்பு நான் எழுதத் தொடங்குகிறேன். என் இயல்பில் தோன்றுவதை எழுத்துக்களாக கோர்த்து வைக்கிறேன். எந்த வலியுறுத்தலும் இல்லாமல் வாசித்து இயல்பில் விளங்குபவர்கள் விளங்கட்டும்.......

எவ்வளவோ எழுதி இருந்தாலும் பொதுவில் இனி எழுதுகிறேன்...! என் முதல் கவிதையை....நான் எழுதத் தொடங்கினேன்....!

(என் பயணம் முடிந்தது..........உங்கள்....பயணம்...????)


தேவா. சுThursday, April 19, 2012

நானே நானாய்.....!நிலவின் அழகில் தடுமாறி தளும்பி
கிறங்கிக் கிடந்த ஒரு குளக்கரை
இராத்திரியின் நிசப்த நிமிடங்களுக்குள்
நான் ஊறிக் கிடந்தேன்...!

மொழிகளின்றி இரைச்சலாய்
பேசிக் கொண்டிருந்த
தூரத்து மலைகளை
ஒற்றிக் எடுத்துக் கொண்டிருந்த
வாடைக் காற்றின் ஓரத்தில்
ஒட்டிக் கொண்டு பறந்த
ஒற்றைக் குயிலின் சப்தம்
என் காதுகளை தடவிச் செல்கையில்
கிறங்கிக் கிடந்த என் விழிகளை
அடைத்து மூடி எங்கோ
ஒரு கனவு வெளிக்கு
இழுத்துச் செல்ல காத்திருந்த
இமைகளை மெல்ல பிரித்தெடுது
மீண்டும் மூழ்குகிறேன்...
அந்த மோன நிலைக்குள்...!

கேட்கவும் சொல்லவும்
யாருமற்று...
தேவைகள் எல்லாம்
தொலைந்து போன
பிரபஞ்சத்தின் சொர்க்க
இராத்திரியின் நிமிடங்களில்
மானுடனாய் ஜனித்ததின்
அர்த்தங்களை எல்லாம்
கை குவித்து நீர்பருகும்
தாகக்காரனாய் விழி குவித்து
காட்சிகளாய் பருகிக் கொண்டிருந்தேன்..

மெளனத்தின் உச்சத்திற்கு
துணை தேவையில்லை...
சரித்திரத்தின் பக்கங்களுக்குத்தான்
நிகழ்வுகளின் அழுத்தங்களும்
மனிதர்களின் நகர்வுகளும்
அவசியமாகின்றன...

கருக் கூடி ஜனிக்கையில்
உரு மறைந்து மரிக்கையில்
அற்றுப் போகும் வாழ்க்கையில்
இடையில் துளிர்க்கும்
சங்கடங்களை எல்லாம்
வாழ்க்கையென்று கூறும்
மானுடர் விட்டு
நான் தூர நகர்கிறேன்...

எட்டிய வரை வானமுண்டு
கிட்டிய வரை வாழ்க்கை உண்டு
தொட்டுத் தழுவிச் செல்ல
தென்றல் உண்டு...
ரகசியம் பேசிச் செல்ல
படர்ந்து கிடக்கும் பூமியின்
அடர்ந்த ரகசியங்களுண்டு...

விடியலில் சூரியன் வரும்
மனமில்லா மேகங்கள் வரும்...
பறப்பன ஊர்வன எல்லாம்
என்னைக் கடந்து செல்லும்...
பசிக்கையில் கிடைப்பதை
புசிக்கையில் மறந்தே போகும்
அந்த உடலின் தேவை...

மானுடரில்லா வாழ்க்கையில்
நான் யாருமில்லா நினைவுகளில்
என் இருத்தலின் லயித்தலில்
பிரபஞ்ச நகர்தலின்
தாளத்தில் தப்பாமால்
ஆடும் சிவ தாண்டவத்திற்கு
உடலெதற்கு? மனமெதற்கு....
மக்கள்தான் எனக்கெதற்கு...
நானே நானாய்.....நகர்கிறேன்..
நானே யாவுமாகிறேன்...!

தேவா. சுSaturday, April 14, 2012

ஆன்மாவின்.... பயணம்! பதிவுத் தொடர் பாகம் VIII
PREVIEW

சராசரியான நிகழ்வுகளில் மிக திருப்தியான ஒருவன்....எல்லாவற்றையும் விட்டு விலகி இருக்க ஆசைப்பட்டு... ஒரு பத்து நாட்கள் வீட்டை விட்டு வெளியேற திட்டமிட்டு கடிதம் எழுதிவைத்து விட்டு வெளியேறுகிறான். அதற்கப்புறமான அவனின் மனோநிலை.. உலகம் பற்றிய பார்வை....இவனைப்பற்றிய உலகத்தின் பார்வை...இப்படியாக நகரும்....கதை.....இந்த எட்டாவது பாகத்திலும் தொடர்கிறது...

திருப்புமுனைகளோடு கூடிய கதை எதிர்ப்பார்த்து படிக்க விரும்புவர்கள்....எனது பதிவுகளை தவிர்த்து விடல் நலம். ஏனென்றால் என் பதிவுகள் முழுக்க முழுக்க என்டர்டெயின்மென்டை நிச்சயமாய் கொடுக்காது.

உங்களின் நேரம் அனுமதிக்கும் பொழுது இதற்கு முன் உள்ள பாகங்களையும் படித்துக் கொள்ளுங்கள்....!

இதுவரை...

பாகம் I
பாகம் II

இனி...


தொடுத்த கேள்விக்கு பதில் தேடி எங்கும் புறப்பட்டுச் செல்லா மனம்  அந்தப் பெரியவரின் பாதங்களில் ஒரு நாய்க்குட்டியாய் பணிந்து கிடந்தது. அது பூம்பாறைக் காடு என்று அவராலேயேதான் அறிய முடிந்தது. தேடியதைக் கண்டாயா....? என்ற கேள்விக்கு கண்டேன் என்ற பதிலும், காணவில்லை என்ற பதிலும் எனக்குள் மோதி மோதி எதிரொலிக்க..

அவரின் பாதம் பணிந்து என்னை மீறி கை கூப்பினேன்.. ஏனோ ஒரு மனிதரை வணங்குகிறேன் என்ற எண்ணம் சிறிதும் என்னுள் இல்லை. அது பெருஞ்சக்தி...மனமென்ற ஒன்றை கழற்றி எரிந்த பேரிறை என்றே என் உள்ளுணர்வு சொல்ல.. கண்ணீர் வழிய பேச்சற்று  அவரின் அடுத்த மொழிக்காய் ஒரு பிச்சைக்காரனாய் காத்திருந்தேன்...

போகனின் பிரதேசத்திற்குள் வந்து விட்டு நீ வெறுங்கையோடு எப்படி திரும்பிப் போவாய்...நிறைய நிறைய வெறுமை தருகிறேன்...வேண்டுமா...?கேட்டு விட்டு அவர் மீண்டும் இடியாய் அவர் சிரிக்க...? நீங்கள் யார் என்று கேட்க நினைத்தேன்...? பிறகு போகர் சூட்சுமமாய் இந்தப் பிரதேசத்தில் இருப்பதாக சொல்வார்களே? அப்படியென்றால் நீங்கள் போகரா? பிண்ட தேகத்துக்குள் அண்ட சராசரமும் தேக்கிக் கொண்டு நடமாடும் முனியா? சத்தியத்தினை உணர்ந்து சித்துக்கள் மூலம் மக்களிடம் நிலையாமையை எடுத்தியம்பிய எம் பாட்டனார் பதினெட்டு சித்தர்களில் யாரோ ஒருவரா நீங்கள்...?

கேட்க  நினைத்த கேள்விகள் எல்லாம் உள்ளிருந்து புறம் வருவதற்குள் பூமி தொடும் முன் மறைந்து போகும் எரிகல்லாய் பஸ்பமாகிப் போனது...

நீ தேடி வந்திருக்கிறாயே.. என் அருமைப் பிள்ளாய்..! தேடினால் கிடைக்கும் ஒன்றையா நீ தேடுகிறாய்? இங்கிருக்கிறது என்று வந்தாயா? இல்லை அதோ அங்கிருக்கிறது என்று வந்தாயா என்று தூரத்திலிருக்கும் ஒரு மலையைச் சுட்டிக் காட்டி விட்டு....

கூட்டத்திலும் நாட்டத்திலும்
கூடிக் களிக்கும் காமத்திலும்
ஆட்டத்திலும் பாட்டத்திலும்
அசிங்கத்திலும் அழகினிலும்
அன்பிலும் கோபத்திலும்
இருப்பவனிடத்தும் இல்லாதவனிடத்தும்
விரிந்து கிடக்கும் என்
இடம் இதுவென்றா நீ தேடி வந்தாய்.....

முட்டாள்..  முட்டாள்....! உலகை விடாதே.. உறவை விடாதே.. உண்மையை விடாதே....! வாழ்க்கையின் போக்கிலே ஓடு......ஓடு...ஒடு...ஓடி ஓடித் தேய்க்க வேண்டிய தேகத்தை ஓடி ஓடி கரைக்க வேண்டிய கருங்கல்லை உள்ளுக்குள் வைத்துக் கொண்டு பஞ்சைப் போல பறக்க நினைக்கிறாயே...? பஞ்சிற்கு ஒரு இயல்பு, இரும்பிற்கு ஒரு இயல்பு....இயல்பு மாறிப் போனால் எல்லாம் மாறி போகும்...

இயல்பில் நில். செம்மையில் சிற. இருப்பவானா இறைவன்....? சொல் பிள்ளாய்...?

என்னைக் கேட்டு விட்டு மீண்டும் என்னை ஊடுருவிப் பார்க்கையில் அந்த கும்மிருட்டிலும் அவரின் கண்களின் கூர்மை என்னுள் எஞ்சியிருந்த அகந்தையைச் சுட்டு பொசுக்கிப் போட...

மீண்டும் அறியாமையே என் பார்வையில் வெளிப்பட்டதை அவர் உணர்ந்து கொண்டு....

இருப்பவனா இறைவன்....? அவன் இல்லாதவன்..! எப்போதும் இல்லாதவன். கோவிலுக்குள் போய் எதைத்தேடுகிறார்கள் பித்தர்கள்....தெரியுமா அந்த இல்லாதவனை? கடவுள் என்று எவர் எதை சொன்னாலும் அவன் இல்லாதவன் என்றே உரக்கச் சொல். அவன் எப்போதும் இருந்ததில்லை. ....ஹா....ஹா...ஹா.. உரக்க மீண்டும் சிரித்தவர்.

ஆமாம்...அவர் இல்லாதவர்.....இவர்கள் எப்படியெல்லாம் எண்ணுகின்றனரோ அப்படி அவர் எப்போதும் இருந்திராதவர். இல்லாமல் இருப்பதால் அவர் ஒன்றுமில்லதவரா?அவர் இவர் என்று சொல்வது சரியா? அது...அது....அது.. அறியப்பட அறிந்த ஒன்றை வைத்து சுட்டி, சுட்டி, சுட்டி அறிவதால் அது சுட்டியுணரப்படுவதா? சுட்டிக் காட்ட எதுவுமில்லை என்று நீ உணர்ந்து கொள்...

வாழ்க்கையின் தடங்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி. உனது தடத்தில் நீ உறுதியாக நில். இல்லாதவனுக்கு ஏனப்பா அடித்துக் கொள்கிறீர்கள் என்று உரக்கக் கேள், அதே நேரத்தில் அவன் இல்லாமல் இருக்கும் போதுதான் எல்லாமுமாய் இருக்கிறான் என்று சொல். சுட்டுப்படும் பொழுதில் அவன் இல்லை என்று எப்போதும் சொல்லிக் கொண்டிரு.

எல்லாம் தேவை...எல்லாம் தேவை. நான் நீ.. அது, இது, அவன் இவன், அவள், இவள்,  மேல், கீழ், இடம், வலம் என்று எல்லாம் கடந்த பூரணத்தின் தேவைகள் தனித்தனி மானுடர்க்குள் படுத்துக் கொண்டு....தன்னை வீரன் என்கிறது, அழகன் என்கிறது, அமைச்சன் என்கிறது, நடிகன் என்கிறது, புலவன் என்கிறது, முட்டாள் என்கிறது....பிச்சைகாரனாயும் பேரரசனாகவும் அதுவே இருக்கிறது....

இருப்பது எல்லாம் அதுவாய் இருக்கையில் தனியாய் ஒன்றை சொல்லி காட்டுகையில் அது இல்லைதானே....அது இல்லைதானே.. அது இல்லைதானே.....மீண்டும் அவர் சிரித்தார்....

எங்கும் செல்லாதே....எதைத் தேடியும் ஓடாதே...உனக்கான நோக்கங்களும் தூரங்களும் உனக்குள்ளேயே இருக்கிறது. ஓரமாக உட்கார். உன்னைப் பார்...உன் லட்சணத்தை திருத்து. நீயே அவலட்சணம் ஊரிலுள்ள அவலட்சணங்களை பற்றி நீ யாரடா விமர்ச்சிக்க....

நீயா உயிர் கொடுத்தாய் எல்லோருக்கும்? நீயா பூமியைச் சுற்றவைக்கிறாய்...? நீயா எல்லா பருவங்களையும் மாற்,றி மாற்றி மீட்டுகிறாய்? உனது வயிற்றுக்கு உணவை நீயா விளைவிக்கிறாய்....இல்லையே...இல்லையே...எல்லாம் கூட்டின் வெளிப்பாடு அந்த கூட்டின் ஒன்று பட்ட உச்ச நிலை இறைவன்...

தனித்தனியாய் தேடும் அத்தனை பேரும் சாகும் வரை தேடி தேடி நாயைப் போல ஓடி ஓடி.....இன்னதென்று ஏதென்று அறியாது மரித்து பின் சவமாய்  சரிந்து விழுந்து எறும்புக்கும், கரையானுக்கும் உணவாகி அழகு அழகு என்ற பிண்டத்தை விட்டு எங்கெங்கோ அதிர்வாய் அலைந்து வாங்கிய அடிக்கு ஏற்றார் போல இன்னுமொரு பிண்டமெடுத்து அந்த பிண்டத்துக்குள் கிடந்து நாறி....அழுது, சிரித்து, பொய் சொல்லி, உண்மை சொன்னேன் என்று பெருமைப் பட்டு, இயல்பாய் செய்ய வேண்டிய எல்லாவற்றையும் சிறப்பாய் செய்தேன் என்று தன்னைத்  தானே புகழ்ந்து கொண்டு....

எனது வீடு, எனது தெய்வம்,எனது எண்ணம், எனது மொழி, எனது நா,டு என்றெல்லாம் சிற்றறிவு சிறைக்குள் அடைபட்டு ஓடி, ஓடி மீண்டும் மரித்துப் போகப் போகிறார்கள். இப்போது என்ன செய்வது என்று உனக்கு தெரியும்..இடம் மாறாதே...தடம் புரளாதே....

எது செய்தாலும் நீயல்ல...நீயல்ல...நீயல்ல.....நான் என்று கொள்...! நான் யாரென்று கேட்கிறாயா.. நான் இல்லாதவனப்பா...நான் எப்போதும் இல்லாதவன். எல்லாமாய் இருக்கும் எனக்கு என்ன தேவை...நான் இல்லாதவன்...ஆமாம் தேவைகள் இல்லாதவன்!!!

ஐயா அப்போது கடவுள் என்ற ஒருவர் இல்லையா ஐயா...? மெல்ல தைரியத்தை வரவழைத்துக் கொண்டு கேட்டேன்.

கடவுள் ஒன்ற ஒருவர் இருக்க வேண்டும் என்று நீதான் விரும்புகிறாய், ஏன் தெரியுமா உனக்கு மரணம் என்ற ஒன்று இருப்பதால், இந்த பூவுலகில் யாருமே மரணிக்க மாட்டர்கள் என்று இருக்கட்டும்....அப்போது யாருமே இறைவனைத் தேடி அலையப் போவது கிடையாது. மனிதர்களின் மரணபயம் தான் மனசாட்சியாகிறது, மனிதர்களின் மரணபயமே இங்கே கடவுள் என்ற கற்பனைப் பாத்திரமாக விசுவரூபமெடுத்து நிற்கிறது...., மனிதர்களின் மரணபயமே நிறைய உதவிகளை செய்து விட்டு தத்தம்மை புண்ணியம் செய்தவர்களாய் எண்ணி நிறைவு செய்து கொள்கிறது...

மரணம் என்ற ஒன்றை அறிந்திருந்தும், நாளை இருக்கப்போவதில்லை என்று தெரிந்தும் சக மனிதர்களைத் துன்புறுத்தும் ஏமாற்றும் அத்தனை பேரும்.....பெருஞ் சக்தியால் சபிக்கப்பட்டவர்கள். அவர்களின் தூரங்கள் நீட்டிக்கப்படும்.நிலையாமையை உணராமல் இந்த வாழ்க்கை நிரந்தரம் என்று நினைத்து எல்லா இறுமாப்பும் கொள்பவனுக்கும், கடவுள் பெயரைச் சொல்லி பாமரர்களை ஏமாற்றும் பாவிகளுக்கும், மதத்தின் பெயரால் மனிதர்களை அழிக்கும் கொடுங்கோலர்களுக்கும்

தூரங்களை அதிப்படுத்தி, காய்ங்களை ஆழப்படுத்தி நாற்றப் பிண்டத்துக்குள் நாறி நாறி உணர்ந்து தெளியும் வரை ஊர்வலாமாய் தொடரும் இச்சுழற்சி....! நீ பிறப்பறுக்க உன் மனத்தை முதலில் அறு....

இயல்பில் நில்..!

நீங்கள் வணங்குவதெல்லாம் தெய்வமில்லை என்று மூடநம்பிக்கையில் உழல்பவர்களுக்கு எடுத்துச் சொல். சாமியார்கள் என்ற பெயரில் பெரும்பணம் வாங்கும் கொடும் கயவர்களின் முகம் நோக்கி காறி உமிழ்ந்து...ஏன் இந்த கயமைத்தனம் என்று கேள்...!!!!

மக்களை கெடுக்கும் அத்தனை பேரிடமும் சென்று கேள்....அறிந்தேதான் இதை நீங்கள் செய்கிறீர்களா என்று....

நான் செய்தேன்.....நான் செய்தேன்......என்று சொல்பவர்களிடம் சொல்...நீங்கள் தனியாகவா செய்தீர்கள், இது உங்களால் மட்டுமா விளைந்தது என்று.....?

எங்கள் கடவுள், எங்கள் மதம் எங்கள் சாதி என்று கட்டம் கட்டிக் கொண்டு வாழ்பவர்களிடம் சொல் உங்களின் மரணத்திற்கு பிறகு உங்கள் உடலெல்லாம், எந்த சாதிக்கோ மதத்திற்கோ சொந்தமானது அல்ல...அது இந்த மண்ணுக்கு மட்டுமே சொந்தமானது என்று....

பூமிக்கு சூரியன் மூலம், சூரியனுக்கு மூலம்  எதுவென்று கேள்...? கேட்டு, கேட்டு ஆதியாம் ஆதியில், பெரும் பாழ் ஆதி அதாவது தொன்மையான ஆதி ஒன்றை அறிவார்...அந்த ஆதிக்கும் ஆதி உண்டு....அப்போது சக மனிதரைப் பார்த்துக் கேள்....இது என்ன என்று...? ஒன்றுமில்லை என்று உரக்கச் சொல்லும் மனிதர்களிடம் சொல்...இதுதான் இல்லாதது. இவன் தான் இல்லாதவன்....இவனே எங்கும் நிறைந்தவன்....என்று அவர்கள் புத்திகள் அதிர சொல்....

வழிபாட்டுத் தலங்கள் எல்லாம் ஒன்றுமில்லாதவனை அறிய, எல்லாம் அறிந்தவர்கள் சூழலுக்கும் வாழ்க்கைக்கும் ஏற்ப உண்டாக்கி வைத்திருக்கும் பயிற்சிக் கூடங்கள் என்று சொல்....

சொல்....சொல்லி, சொல்லி நீ மறைந்து போ........இல்லாதவனாகி எங்கும் நிறைந்து, உரு அழிந்து பூரணமாகிப் போ....இது உனக்கு விதிப்பட்டது.....!!!!

நன்றாக நினைவு கொள் உனது தேடலில் நீ அடைந்தது இலக்கல்ல.....நீ கண்டிருப்பது வெறும் பாதை....வழிமுறை....அவ்வளவே.....

ஏக இறை உன்னை வழி நடத்தட்டும்.....!!!!!

தலையில் ஓங்கி அடித்து......கட்டை விரலால் என் இரு புருவ மத்தியிலும் கை வைத்து அழுத்தினார்.....என்னுள் ஏதோ ஒன்று தடம் புரள...உயிர் சக்தி சீறிக் கொண்டு எழுந்தது. காலமெல்லாம் பசித்து பசித்து...இரைக்காய் காத்திருக்குமே கொடும் புலி அதன் சீற்றம்....

அந்த சக்தியின் வேகம் தாங்காமல்...மெல்ல என் கண்கள் சொருக.....மெல்ல மெல்ல தரையில் விழுந்து ....நான் சுத்தமாய் மறைந்து போக.............இல்லாதவனாகிப் போனேன்.....

அப்போது.....

(அடுத்த பாகத்தில் பயணம் முடியும்....)


தேவா. சுWednesday, April 11, 2012

அட்ச்சேன்..மூஞ்சி பேந்துடும்....!

மருவாத இல்லாம பேசுன மூஞ்சப் பேத்துடுவேன்...இன்னாடா...இன்னா நெனச்சுகினு கீற...! காத்தால எனிச்சு கடலுக்கு போனா நைட்டு வெளக்கு வக்கிற டைமுக்கு வந்து ஒரு வா சோறு துன்ன முடியல... ங்கோத்தா பொழுதேனிக்கும் பஞ்சாயத்து...

குந்திகினுகிறது கூர வூடு இத்துல ஓன் எடத்துல கொம்ப வெக்க கூடாது வலையபோடக் கூடாது.... இன்னாத்துக்கு பேஜாரு பண்ணிகினு கீற.. எலே பன்னீரு.. வாணாம் போயிரு..அப்பால காது மேல நாலு போட்டேன்...காது பிஞ்சுடும்....ச்ச்சீ போ...

இன்னாட பெரிய மயிரா நீ.. இவுரு பெரிய கலிட்டரு...இவுரு சோறு துன்ன சொல்ல நாங்க ஒண்ணியும் சொல்லக் கூடாது. சொம்மா சீனு போட்டுகினு கீற... இன்னாதுக்குடா ஏன் வூட்டு வாசல்ல வந்து பொருள போடுறீங்கோ.....இருக்கறது தம்மாத்துண்டு இடம்.. என்னமோ சேப்பாக்கம் ஸ்டேடியத்துல குந்திக்கினு குடியிருக்கற மாறி....தெரு வாசல் புல்லா அம்புட்டு பொருளையும் போட்டு வைக்கிறா... நாங்க எல்லாம் துன்ன வேணாம், கழுவ வேணாம்.. ஏன் வூட்டு வாசல்ல ங்கோத்தா இனிமே ஏதாச்சும் பொருளு கெடந்துச்சு.. தூக்கி கடல்ல கடாசிடுவேன்....ஹ..க் ஆம்...மைக்கேலு மயிருன்னெல்லாம் பாக்கமாடேன்...ஆமா

ஏய்... பேமானி....இப்ப இன்னா செஞ்சுட்டாங்க...? இன்னா உள்ள உட்டுகினு மப்புல கூவுறியா..? உட்டேன்.. மவனே மூஞ்சு பேந்துடும்...ச்ச்சீ போ... அப்பால....கயித...எப்ப பாரு பேஜார் பண்ணிகினு...! ஒனக்கு என் மேல படா காண்டு கீது பன்னீரு.. இன்னாடா மைக்கேல் வலை போட்டா மட்டும் வஞ்ஜிரம் மீனும் வவ்வால் மீனுமா வந்து பூந்துகுது... நம்ம போட்டா ஒண்ணியும் வரக்காணமேன்னு ஒனக்கு காண்டு...

இதப் பாரு பன்னீரு.. மனசு சுத்தம் வோணும்.. நீ மாரியாத்தாவ கும்புடுவியோ மேரி மாதாவ கும்புடுவியோ மனசு மயிரு மாதிரி இருந்தா ஒண்ணியும் வேலைக்காவாது.. நாளைக்காச்சும் நல்ல மனசோட கடலுக்குப் போ....எத்துனாச்சும் கெடைக்கும்.. சம்மா... கொரலு கொடுத்துகின்னு...

ஏதோ மெட்ராசுல இருக்கங்காட்டியும் கொஞ்சம் நல்ல சோறு துன்ன முடியுது.....ங்கோத்தா நீ எல்லாம் இராமேசுவரத்துலருக்கணும்...எலங்ககாரன் கொன்னு கடல்ல கடாசிருப்பான்.. வன்ட்டான்...பெரிய கவுர்னரு மாறி.. ச்ச்சே போ....எச்சக்கல...
....

....

....

....

மைக்கேலு ஒனக்கு மருவாத அவ்ளொதான்...ங்கோத்தா ஒன் இஸ்ட்டோரி அல்லாம் எனக்குத் தெரியாதா... ஒழுங்கா பொண்டாட்டி வச்சு குடும்பம் நடத்த தெரியாத நாயி நீ....! நீ எனக்கு ரூல்ஸ் போடுறியா....நான் அட்ச்சேன்.....வாய் வெத்தல பாக்கு போட்டுக்கும் டாபரு...

பார்ரா...இவுருக்கு மட்டும்தான் மஞ்சா சோறு கீது நெஞ்சுல.... எங்களுக்கு எல்லாம் களிமண்ணுதான் கீது.....ப்ப்ப்ப்ப்ப்ப்ளார்..........மயிறு சொல்லிகினே இருந்தா நீ கேக்க மாட்ட..மைக்கேல் பன்னீரை அறைய...

ஏய்ய்ய்ய்ய்ய்ய்ய்...என்ன அட்சிட்டீல்ல ஒன்ன சாவடிக்காம வுடமட்டண்டெஆ... தே***யா பையா டேய்... ...பக்கத்தில் கிடந்த கட்டையை எடுத்து பன்னீர் மைக்கேல் மீது அடிக்க....

கூட்டம் கூடி...அந்தப்பகக்ம் 10 பேர் பன்னீருக்கு சப்போர்ட்டாக வர, இந்த பக்கம் 10 பேர் மைக்கேலுக்கு சப்போட்டாக வர......

' யப்பா பக்கத்து பக்கத்து வூட்ல இருந்துகினு இன்னா பேஜாராகீது ரெண்டு பேரலாயும்...ஏய் மைக்கேலு இனிமே அவனுக்கும் ஒனக்கும் ஒண்ணியும் கெடயாது....ங்கோத்தா இன்னாத்துக்குடா அடிச்சுகிட்டி நாரம்சம் பண்றீங்கோ....

அவன் முஞ்ச நீ பாக்காத.. ஓன் மூஞ்ச அவன் இனி பாக்க வோணாம்....ஒங்க பொருள எல்லாம் ஒங்க எடத்துலயே இஸ்து வைச்சிகினு கம்ம்னு மூடிக்கீனு போங்க.... தெனிக்கும் சத்து சத்து பொழக்கிற பொழப்ப பொழச்சுக்கினு ....இன்னாதுக்குடா அடிச்சுக்கினு சாவுறீங்கோ...

டவுசர் போட்டு இஸ்கூலுக்கு போன டைம்ல இருந்து ரெண்டு பேரும் தோஸ்த்தா இருந்தானுங்கோ புள்ள குட்டின்னு கண்ணாலம்னு கட்டிகினதுகோசரம் ...ஒங்க ராவடி தாங்க முடியல...மயிறு இன்னிமே ஒண்ணியும் வாணாம்...

ஒருத்தன் மூஞ்சில் ஒருத்தன் முழிக்காம போயிகினே இருங்க.. சும்மா சண்ட அத்து இத்துன்னு கூவிகினு அப்பாலிக்கா வந்தா கஸ்மாலம் வெட்டி கடல்ல தூக்கிப் போட்டுட்டு போயிகினே இருப்பேன் ஆமா....

....

....

....

ஏய்....இன்னாடி கயித மாறி நிக்குற.. போய் சொம்புல தண்ணி கொண்டாடி...தொண்ட வலி ங்கோத்தா உசுரு போகுது....' பேசி முடித்து பக்கத்திலிருந்த பொண்டாட்டியிடம் தண்ணீர் கொண்டு வர விரட்டினார்...குப்பத்து பெருசு முத்து மாணிக்கம்...

வலி பரவிய கன்னம் மெலிதாய் வீங்கிப் போயிருக்க, வாய் உதடு கிழிந்து மெல்ல மெல்ல தள்ளாடியபடியே வீட்டுக்குள் சென்றான் பன்னீர்.

கட்டையால் அடிவாங்கி பின் முதுகு கிழிந்து பனியனுக்கு மேல் இரத்தம் கசிய....இடது தோள் பட்டையை பிடித்த படி....வேதனையோடு வீட்டுக்குள் சென்றான்...மைக்கேல்...!

கூட்டம் கலைந்து செல்ல.... முத்து மாணிக்கம் வாசலில் கயிற்றுக் கட்டிலில் படுத்து உறங்கிப் போனார். அந்தப் பகுதியே நன்றாக உறங்கிப் போனதும் சடாரென்று விழித்துக் கொண்டது கடல்...

கடலடி நிலத்தில் மாற்றங்கள் நிகழ....நடுக்கடலில் தவம் கிடந்த கடல் கரையை நோக்கி சீறீப்பாய...

அலைகள் எல்லாம் மலைகள் உயரம் எழும்ப.. தண்ணீரின் தாண்டவம் கரையோரத்து மீனவர்களின் வீடுகளை தட்டியெழுப்ப்பி உயிர் பறித்துக் கொண்டிருந்தது. ஒலமிடக் கூட நேரமில்லாமல் உறக்கத்தினூடான கனவுகளோடு நிரந்தரமாய் பயணிக்க ஆரம்பித்திருந்தன உயிர்கள்...

கடலின் கோர தாண்டவமடங்கிய அந்த விடியலில்....காகங்களும், கழுகுகளும் வட்டமிடும் சுடுகாட்டுப் பொட்டலாய் மாறிப் போயிருந்தது எபிநேசர் குப்பம்....

பன்னீரின் வீடும்... மைக்கேலின் வீடும்....இடம் மாறி இரண்டும் ஒன்றாய் போயிருக்க....

சுற்றிலும் மனித சடலங்கள் எல்லாம் சிதறிக் கிடக்க.......

அருகருகே நேருக்கு நேராய் முகம் பார்த்த படி செத்துக்கிடந்த இரு சடலங்களில் ஒன்று பன்னீர் மற்றொன்று மைக்கேல்...

பெரியவர் முத்து மாணிக்கம் படுத்திருந்த கயிற்றுக் கட்டில் நொறுங்கிப் போய் கிடந்தது....பெரியவர் முத்து மாணிக்கத்தை காணவில்லை....

கடல் முந்தைய நாள் இரவைப் போலவே மறு நாள் காலையிலும் சமாதானமாய் மெளனித்துக் கிடந்தது.


தேவா. சு

Tuesday, April 10, 2012

அலுத்துதான் போகிறது...!
அலுத்துதான் போகிறது
அன்றாட சராசரிகளோடு
நித்தம் மல்லுக்கட்டும்
டைம் டேபிள் வாழ்க்கை!

என்றேனும் ஒரு நாள்
கூடு விட்டு கூடு பாய்ந்து
அந்தக் குயிலுக்குள் ஊடுருவ வேண்டும்
யாருமற்ற வனமொன்றில்
அலுக்கும் வரை கூவி, கூவி
காற்றின் ஸ்பரிசங்களோடு
காதல் செய்ய வேண்டும்!

ஒரு மரத்தின் இலையாய்
மாறி...
ஆடி, அசைந்து நடனமாடி
பழுத்து, சருகாகி
காற்றில் பறந்து
மண்ணில் விழுந்து
மெளனமாய் மட்கியே...
போக வேண்டும்...!

ஒரு மழைக்குப் பின்னான
வானவில்லாய்
கண நேரம் ஜொலித்து விட்டு
வானத்தின் பெருவெளியில்
கரைந்தே போகவேண்டும்

காற்றில் பறக்கும்
ஒரு பஞ்சாய் மாறி
இடம் சென்று; வலம் திரும்பி;
மேலெழும்பி; கீழ் தவழ்ந்து
அங்கும் இங்கும்...
அலைந்து, அலைந்து
உதிர்ந்து போகவேண்டு!

அடர் கானகத்தின்
வெறுமையினை சுமக்கும்
பேரமைதியாய் படுத்துக் கொண்டு
காட்டு மலர்களோடு
சல்லாபிக்க வேண்டும்..!

இப்படியாய்...

எல்லாமாகும் ஏக்கத்தில்
லயித்து, லயித்து
வார்த்தைகளை கோர்த்தெடுத்து
வடிக்கும் கவிதை முடித்த
நிறைவோடு..
மரித்துப் போகவும் வேண்டும்..!

ஆமாம்...

அழுத்துதான் போகிறது
அன்றாட சராசரிகளோடு
நித்தம் மல்லுக்கட்டும்
டைம் டேபிள் வாழ்க்கை!

தேவா. சு

Sunday, April 8, 2012

ஆன்மாவின்.... பயணம்! பதிவுத் தொடர் பாகம் VI I


PREVIEW

சராசரியான நிகழ்வுகளில் மிக திருப்தியான ஒருவன்....எல்லாவற்றையும் விட்டு விலகி இருக்க ஆசைப்பட்டு... ஒரு பத்து நாட்கள் வீட்டை விட்டு வெளியேற திட்டமிட்டு கடிதம் எழுதிவைத்து விட்டு வெளியேறுகிறான். அதற்கப்புறமான அவனின் மனோநிலை.. உலகம் பற்றிய பார்வை....இவனைப்பற்றிய உலகத்தின் பார்வை...இப்படியாக நகரும்....கதை.....இந்த ஏழாவது பாகத்திலும் தொடர்கிறது...

திருப்புமுனைகளோடு கூடிய கதை எதிர்ப்பார்த்து படிக்க விரும்புவர்கள்....எனது பதிவுகளை தவிர்த்து விடல் நலம். ஏனென்றால் என் பதிவுகள் முழுக்க முழுக்க என்டர்டெயின்மென்டை நிச்சயமாய் கொடுக்காது.

உங்களின் நேரம் அனுமதிக்கும் பொழுது இதற்கு முன் உள்ள பாகங்களையும் படித்துக் கொள்ளுங்கள்....!

இதுவரை...

பாகம் I
பாகம் II

இனி...மெல்ல மெல்ல ஆழமான சுவாசத்தோடு ஓ...........ம் நமசிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை யாரோ உச்சரிப்பது தெளிவாய் கேட்ட உடன்.. உடலுக்குள் மின்சாரம் பாய ஆரம்பித்தது. கிட்டத் தட்ட நடு வானுக்கு நிலவு வந்திருந்த நேரம்.... சுற்றிலும் காற்று மெலிதாய் வீசிக் கொண்டிருந்த போதிலும் மரங்கள் எல்லாம் மெளனமாய் உறங்கிக் கொண்டிருப்பதாகவே எனக்குப் பட்டது. மெல்லிய குளிர் என்னை ஒன்றும் செய்யவில்லை. மேலும் காதுகளை கூர்மையாக்கிக் கொண்டேன்...

அந்த இடத்தைச் சுற்றிலும் ஆங்காங்கே சல சலத்து ஓடிக் கொண்டிருக்கும் சிறு சிறு ஓடைகளின் சப்தங்களையும் கடந்து சர்வ சுத்தமாக பளீச் சென்று யாரோ மந்திரம் சொல்லிக் கொண்டிருப்பது இப்போது தெளிவாய் எனக்குக் கேட்டது. வாழ்க்கையின் நிகழ்வுகளை எல்லாம் நாம்தான் செய்து முடிக்கிறோம் என்ற எண்ணத்தை பெரும்பாலும் மனிதர்கள் கொண்டிருக்கிறார்கள்..... ஆனால் எல்லா காரியத்துக்கும் முன்னால் ஒரு காரணம் இருப்பதை சராசரி வாழ்க்கையில் ஓடிக் கொண்டிருக்கும் எவராலும் கணிக்க முடிவதில்லை. அப்படி கணிக்க முடியாத அளவுக்கு வாழ்க்கை போராட்டங்களால் நிரம்பிப் போய்விடுகிறது.

நான் வீட்டை விட்டு வெளியே கிளம்பி வரவேண்டுமென்று எண்ணிய போதே வாழ்க்கையை மறுத்து வெளியே வர நினைத்திருக்கவில்லை. கொடுக்கப்பட்ட வாழ்க்கைக்கு எதிராய் திரும்புதல் பிரபஞ்ச நியதிக்கு முரணாணது அப்படி செய்தால் அது எதிர்மறை விளைவுகளை உண்டாக்கும் என்பதை நான் தெளிவாக உணர்ந்தவனாயிருந்தேன். இருப்பினும் ஏதோ ஒரு உந்து சக்தி இரைச்சலான இயந்திர வாழ்க்கையை விட்டும், சுற்றி இருக்கும் மனிதர்களை விட்டும் நீ போய் வா என்று உள்ளுக்குள் உத்தரவிட்ட போது அதை மறுக்காமல் ஏற்று நடக்க ஆரம்பித்தேன்.

இதோ இப்போது நான் நகரும் திசையில் அமர்ந்திருக்கும் யாரோ ஒருவரை காணவே எனது பயணம் உறுதி செய்யப்பட்டிருக்கிறது என்பதாக உணர்ந்தேன். எனது பாதத்தின் மெல்லிய சப்தங்களை நான் முழுதுமாய் உணர்ந்து முழு உணர்வு நிலையில் அடிமேல் அடி வைத்து நான் அமர்ந்திருந்த பாறையை விட்டு மெல்ல இறங்கி நகர ஆரம்பித்திருந்தேன்...

சில நொடிகளில் சப்தம் இன்னும் துல்லியமாக அருகில் கேட்டது. அப்படி கேட்ட இடத்திற்கு பக்கத்தில் மரங்களில்லாத ஒரு பொட்டல் வெளி கிட்ட தட்ட சமதளமாய் இருந்தது. அங்கே ஒரு சிறு குன்றின் கீழ் நிலவு வெளிச்சத்தில் ஒருவர் அமர்ந்திருப்பது நிழலாய் தெரிய.. எனக்குள் முதலில் பயமும் பிறகு பயத்தை தெளிய வைத்த அறிவும் துளிர்த்துக் கொள்ள...

நான் அந்த மனிதரின் அருகாமையில் சென்றே விட்டேன். கண் மூடி தியானத்திலிருந்த அந்த மனிதர் யார்? யோகியா...? சித்தரா? இல்லை என்னைப் போலவே கானத்திற்குள் அனுபவத்திற்காக நுழைந்தவரா? தொடர்ச்சியாய் எழுந்த கேள்விகளை சட் சட் என்று அறுத்துப் போட்டேன்... 60க்கு மேல் அவருக்கு வயதிருக்கும் என்று மனம் சொன்ன விசயத்தை மூளை கிரகிக்க அதை அங்கேயே அழித்து விட்டு... அவரைப் பற்றிய அபிப்ராயங்களைச் செரித்து விட்டு....

அவரையே உற்று நோக்க அவரின் அருகாமை எனக்கு உதவியது. இவரை எனக்கு முன்பே தெரியும் என்று என்னுள் இருந்து ஆன்மா துள்ளிக் குதித்து ஒரு சொல்ல முடியாத சந்தோச அவஸ்தையில் என்னைத் தள்ள எனக்கு அது ஒரு புது அனுபவமாயிருந்தது. சப்த நாடிகளையும் அந்த மனிதரின் அருகாமை உடைத்துப் போட்டிருக்க....நான் அங்கே இருந்தேன்......அவ்வளவே...!

மனம் குவித்து அவரையோ பார்த்துக் கொண்டிருக்கையில் உள்ளுக்குள் ஒரு படக் என்று ஏதோ நகர மனம் கேவிக் கேவி அழ ஆரம்பித்தது. நான்... இது நான்.. இது நான்.. என்று ஒரு உள் குரல் புலம்ப.... இடுப்புக்கு கீழ் சொல்ல முடியாத ஒரு அவஸ்தை அடிவயிற்றில் முன்னும் பின்னும் ஏற்பட, இருந்தாலும் இறந்தாலும் ஒன்றே....என்ன நிகழ்ந்தாலும் அது விசயமில்லை என்ற ஒரு புரிதல் உள்ளுக்குள் வெளிச்சமாய் பரவ..... மனம் என்ற ஒன்றே இல்லை என்ற விசயம் தெளிவாய் புரிந்தது.

அவரை உற்று நோக்கிய படியே...... கண்கள் விரித்து அவரை முழுதும் உள்வாங்கிக் கொண்டிருந்தேன். ஒவ்வொரு முறையும் அவர் ஓ...........ம் என்று சொல்லும் போது அது அதிர்வாய் என் செவிகளுக்குள் சென்று மூளையிலிருந்து இறங்கி நடு முதுகுக்கு கீழே இருந்த மூலாதரத்தில் மோதி ர்ர்ர்ர்ர்ர்ர்ரும்.............ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ம்.........ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ம் என்று அதிர, அதிர ஒரு மாதிரி ஏதோ ஒன்று நழுவப் போகிறது என்ற உணர்வு ஏற்பட...

உணர்வு, உணர்வாய் நின்று கொண்டிருந்ததே தவிர அபிப்ராயங்கள் எடுத்து அது விரிவடைந்து கற்பனைகளை உள்ளுக்குள் கொண்டு வந்து போடவில்லை. என்னிடம் அப்போது மொழி இல்லை, உருவமும் இல்லை, அவன், அவள், அது, இது, என்பன போன்ற எந்த ஒரு சுட்டுப் பொருளாகவும் நானிருக்கவில்லை....இடம், சூழல், காலம் என்று எதுவும் எனக்கு தோன்றவில்லை. மேல், கீழ், இடம், வலம் என்ற திசைகள் எல்லாம் பட்டுப் போயிருக்க... ஒரு மிகப்பெரிய பேரமைதியினுள்ளே ர்ர்ர்ர்ர்ர்ர்ம்.......ர்ர்ர்ர்ர்ர்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.........ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ம் என்ற ரீங்காரமாய் ஓங்கார அதிர்வாய் என்னை உணர்ந்தேன்.

அவர் ஒரு சிறு கல் பாறையின் மீது அமர்ந்திருக்க அவரின் பாதத்திற்கு அருகே நான் என்ற பதம் மறந்து அமர்ந்திருந்தேன். காலம் என்ற ஒன்று அங்கே இல்லாமலிருந்தது....! எவ்வளவு காலம் சென்றது என்று ஆராய முடியாமல் புத்தி என்ற ஒன்று சத்தியத்தில் ஒன்றிக் கிடக்க.....

சட்டென்று அவரின் மந்திர சப்தம் நின்று போயிருந்ததை உணர முடிந்தது. உணர்வு நிலையிலிருந்து புலன்கள் மீண்டும் ஸ்தூல நிலைக்கு சட் சட்டென்று வர மெல்ல கண்களைத் திறந்து அவரைப் பார்வையால் எட்டிப் பிடிக்க முயன்று கொண்டிருந்த போதே....அவர் கண்கள் விழித்து அமர்ந்திருந்தார்...

நான் அவரைப் பார்த்த அந்த நொடியில் அவரின் வலது முன்காலை எடுத்து என் நடு நெஞ்சில் ஒரு மத்திம வேகத்தில் சடாரென்று ஒரு உதை உதைத்தார்........

அப்படி அவர் உதைத்த நொடியில் உடம்புக்குள் பரவிக் கிடந்த ஒரு அழுத்தம் பளீச்சென்று வெளியேற...விவரிக்க முடியாத ஒரு உணர்வுக்குள் மீண்டும் நான் பயணிக்க ஆரம்பித்திருந்தேன். இதை விவரித்தல் மிகக் கடினம். உதாரணங்களைச் சொல்லி இப்படி இருந்தது என்று சொல்வது கூட ஒரு மாதிரியான மட்டுப்பட்ட நிலையே....

அதாவது... கையில் ஒரு மோதிரத்தை நாம் இட்டிருக்கிறோம் என்று வையுங்கள்...! அது கழட்ட முடியாதபடி கையோடு இறுகிக் கிடக்கிறது என்று எண்ணிக் கொள்ளுங்கள். அப்போது கையில் சோப்பிட்டு மெல்ல மெல்ல அந்த மோதிரத்தை கழட்ட நாம் முயற்சிக்கும் போது அவ்வளவு எளிதில் அது வெளியே வந்து விடாது ஆனால் வலியோடு சேர்ந்து அது விரலை விட்டு மெல்ல மெல்ல நழுவிக் கொண்டு இருக்கும். வேதனை அதிகமாயிருக்கும் ஆனால் மெல்ல மெல்ல அது விரல் விட்டு வெளியே வரும் சுகத்தையும் நாம் உணர முடியும்... ஒரு கட்டத்தில்...

விரல் வலிக்க வலிக்க கழட்ட முயலும் அந்த மோதிரம் வழுக் கென்று வழுக்கிக் கொண்டு விரலை விட்டு முழுதாய் வெளியே வந்து விட....ஒரு வித சுதந்திரம் விரலுக்கு கிடைத்து மீண்டும் தன் இயல்பு நிலைக்கு வரும். அப்படி மோதிரம் விரலை விட்டு வெளியே வரும் கடைசி மணித்துளிகள் மிக மிக முக்கியமானது அந்தக் கணத்தில் ஏற்படும் உணர்வு...அற்புதமானது....

அதேபோலத்தான் அவர் என் நடு நெஞ்சில் கால் பதித்து என்னை பின்னால் தள்ளிய போது உடலுக்குள் அழுந்திக் கொண்டிருந்த ஏதோ ஒன்று பளீச் சென்று நழுவிப்போய்விட விவரிக்க முடியா பரவச நிலையில் நான் பின்னோக்கி விழுந்து வெறித்துக் கிடந்தேன்....


சொப்பனமோ எந்தன் அப்பன் திருவருள்
கற்றிடமோ என்ன அற்புதம் இதுவே
ஆடிய பாதனே அம்பலவானனே
நீ ஆண்ட கருனையை தேறி அறிவெனோ...
என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா
பொன்னப்பன் அல்லவா பொன்னம்பலத்தவா '

கண்களிலிருந்து நீர் வெள்ளமென பெருகி வழிய நான் என்ற ஒன்று செத்துப் போக வேசமெல்லாம் கலைந்து போய் நிர்வாண பரதேசியாய் நெடுவான் கடந்து ஆதியாம் ஆதிக்கும், ஆதியில் அடையாளமின்றி பொருளாய் பொருளற்றதாய், உயிராய் விரவிக் கிடந்து இடைவிடாது சுவசம் என்ற ஒன்றை உள் வாங்கி வெளி விட்டு ஸ்தூல ஜடப் பொருள்களின் எல்லா இயக்கத்திலும் நீக்கமற விரவி இன்னதென்று, ஏதென்று பகிர முடியா விளக்க முடியாத ஒரு பிரமாண்டத்தினுள் பரவிக் கிடந்தேன்.....இங்கே கிடந்தேன் என்ற பதம் வேண்டாம்.. கிடந்தது....

யாரோ என் நெஞ்சு தடவி, நெற்றி வருடி... என்னை இழுத்து அமர வைத்து,,,நடு முதுகில் கை வைத்து நீவி விட்டு.. .கைகளை எல்லாம் தடவிக் கொடுத்து வாஞ்சையோடு என் முன் நெற்றியில் கை வைத்து.... ஓ.....................ம் என்று சொல்லச் சொல்ல மெல்ல மெல்ல உடலுக்குள் திடமாய் ஒரு பிரஞைக்குள் வந்தேன்...

மெல்ல கண்களை அசைத்து என் அருகாமையிலிருந்த அவரை பார்த்தேன்... வாஞ்சையோடு ஒரு தாயாய் பிள்ளையை பார்ப்பது போல பார்த்து....மெல்ல தன் மார்போடு என்னை அணைத்துக் கொண்டார்..!

நான் கேவிக் கேவி அழத் தொடங்கினேன்....

தேடியதை பூம்பாறைக் காட்டிற்குள் கண்டயா...? சிம்ம கர்ஜனையாய் என்னை அவர் அதட்டினார்...


அப்போது...


(பயணம் தொடரும்...)


தேவா. சு