Pages

Saturday, April 14, 2012

ஆன்மாவின்.... பயணம்! பதிவுத் தொடர் பாகம் VIII
PREVIEW

சராசரியான நிகழ்வுகளில் மிக திருப்தியான ஒருவன்....எல்லாவற்றையும் விட்டு விலகி இருக்க ஆசைப்பட்டு... ஒரு பத்து நாட்கள் வீட்டை விட்டு வெளியேற திட்டமிட்டு கடிதம் எழுதிவைத்து விட்டு வெளியேறுகிறான். அதற்கப்புறமான அவனின் மனோநிலை.. உலகம் பற்றிய பார்வை....இவனைப்பற்றிய உலகத்தின் பார்வை...இப்படியாக நகரும்....கதை.....இந்த எட்டாவது பாகத்திலும் தொடர்கிறது...

திருப்புமுனைகளோடு கூடிய கதை எதிர்ப்பார்த்து படிக்க விரும்புவர்கள்....எனது பதிவுகளை தவிர்த்து விடல் நலம். ஏனென்றால் என் பதிவுகள் முழுக்க முழுக்க என்டர்டெயின்மென்டை நிச்சயமாய் கொடுக்காது.

உங்களின் நேரம் அனுமதிக்கும் பொழுது இதற்கு முன் உள்ள பாகங்களையும் படித்துக் கொள்ளுங்கள்....!

இதுவரை...

பாகம் I
பாகம் II

இனி...


தொடுத்த கேள்விக்கு பதில் தேடி எங்கும் புறப்பட்டுச் செல்லா மனம்  அந்தப் பெரியவரின் பாதங்களில் ஒரு நாய்க்குட்டியாய் பணிந்து கிடந்தது. அது பூம்பாறைக் காடு என்று அவராலேயேதான் அறிய முடிந்தது. தேடியதைக் கண்டாயா....? என்ற கேள்விக்கு கண்டேன் என்ற பதிலும், காணவில்லை என்ற பதிலும் எனக்குள் மோதி மோதி எதிரொலிக்க..

அவரின் பாதம் பணிந்து என்னை மீறி கை கூப்பினேன்.. ஏனோ ஒரு மனிதரை வணங்குகிறேன் என்ற எண்ணம் சிறிதும் என்னுள் இல்லை. அது பெருஞ்சக்தி...மனமென்ற ஒன்றை கழற்றி எரிந்த பேரிறை என்றே என் உள்ளுணர்வு சொல்ல.. கண்ணீர் வழிய பேச்சற்று  அவரின் அடுத்த மொழிக்காய் ஒரு பிச்சைக்காரனாய் காத்திருந்தேன்...

போகனின் பிரதேசத்திற்குள் வந்து விட்டு நீ வெறுங்கையோடு எப்படி திரும்பிப் போவாய்...நிறைய நிறைய வெறுமை தருகிறேன்...வேண்டுமா...?கேட்டு விட்டு அவர் மீண்டும் இடியாய் அவர் சிரிக்க...? நீங்கள் யார் என்று கேட்க நினைத்தேன்...? பிறகு போகர் சூட்சுமமாய் இந்தப் பிரதேசத்தில் இருப்பதாக சொல்வார்களே? அப்படியென்றால் நீங்கள் போகரா? பிண்ட தேகத்துக்குள் அண்ட சராசரமும் தேக்கிக் கொண்டு நடமாடும் முனியா? சத்தியத்தினை உணர்ந்து சித்துக்கள் மூலம் மக்களிடம் நிலையாமையை எடுத்தியம்பிய எம் பாட்டனார் பதினெட்டு சித்தர்களில் யாரோ ஒருவரா நீங்கள்...?

கேட்க  நினைத்த கேள்விகள் எல்லாம் உள்ளிருந்து புறம் வருவதற்குள் பூமி தொடும் முன் மறைந்து போகும் எரிகல்லாய் பஸ்பமாகிப் போனது...

நீ தேடி வந்திருக்கிறாயே.. என் அருமைப் பிள்ளாய்..! தேடினால் கிடைக்கும் ஒன்றையா நீ தேடுகிறாய்? இங்கிருக்கிறது என்று வந்தாயா? இல்லை அதோ அங்கிருக்கிறது என்று வந்தாயா என்று தூரத்திலிருக்கும் ஒரு மலையைச் சுட்டிக் காட்டி விட்டு....

கூட்டத்திலும் நாட்டத்திலும்
கூடிக் களிக்கும் காமத்திலும்
ஆட்டத்திலும் பாட்டத்திலும்
அசிங்கத்திலும் அழகினிலும்
அன்பிலும் கோபத்திலும்
இருப்பவனிடத்தும் இல்லாதவனிடத்தும்
விரிந்து கிடக்கும் என்
இடம் இதுவென்றா நீ தேடி வந்தாய்.....

முட்டாள்..  முட்டாள்....! உலகை விடாதே.. உறவை விடாதே.. உண்மையை விடாதே....! வாழ்க்கையின் போக்கிலே ஓடு......ஓடு...ஒடு...ஓடி ஓடித் தேய்க்க வேண்டிய தேகத்தை ஓடி ஓடி கரைக்க வேண்டிய கருங்கல்லை உள்ளுக்குள் வைத்துக் கொண்டு பஞ்சைப் போல பறக்க நினைக்கிறாயே...? பஞ்சிற்கு ஒரு இயல்பு, இரும்பிற்கு ஒரு இயல்பு....இயல்பு மாறிப் போனால் எல்லாம் மாறி போகும்...

இயல்பில் நில். செம்மையில் சிற. இருப்பவானா இறைவன்....? சொல் பிள்ளாய்...?

என்னைக் கேட்டு விட்டு மீண்டும் என்னை ஊடுருவிப் பார்க்கையில் அந்த கும்மிருட்டிலும் அவரின் கண்களின் கூர்மை என்னுள் எஞ்சியிருந்த அகந்தையைச் சுட்டு பொசுக்கிப் போட...

மீண்டும் அறியாமையே என் பார்வையில் வெளிப்பட்டதை அவர் உணர்ந்து கொண்டு....

இருப்பவனா இறைவன்....? அவன் இல்லாதவன்..! எப்போதும் இல்லாதவன். கோவிலுக்குள் போய் எதைத்தேடுகிறார்கள் பித்தர்கள்....தெரியுமா அந்த இல்லாதவனை? கடவுள் என்று எவர் எதை சொன்னாலும் அவன் இல்லாதவன் என்றே உரக்கச் சொல். அவன் எப்போதும் இருந்ததில்லை. ....ஹா....ஹா...ஹா.. உரக்க மீண்டும் சிரித்தவர்.

ஆமாம்...அவர் இல்லாதவர்.....இவர்கள் எப்படியெல்லாம் எண்ணுகின்றனரோ அப்படி அவர் எப்போதும் இருந்திராதவர். இல்லாமல் இருப்பதால் அவர் ஒன்றுமில்லதவரா?அவர் இவர் என்று சொல்வது சரியா? அது...அது....அது.. அறியப்பட அறிந்த ஒன்றை வைத்து சுட்டி, சுட்டி, சுட்டி அறிவதால் அது சுட்டியுணரப்படுவதா? சுட்டிக் காட்ட எதுவுமில்லை என்று நீ உணர்ந்து கொள்...

வாழ்க்கையின் தடங்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி. உனது தடத்தில் நீ உறுதியாக நில். இல்லாதவனுக்கு ஏனப்பா அடித்துக் கொள்கிறீர்கள் என்று உரக்கக் கேள், அதே நேரத்தில் அவன் இல்லாமல் இருக்கும் போதுதான் எல்லாமுமாய் இருக்கிறான் என்று சொல். சுட்டுப்படும் பொழுதில் அவன் இல்லை என்று எப்போதும் சொல்லிக் கொண்டிரு.

எல்லாம் தேவை...எல்லாம் தேவை. நான் நீ.. அது, இது, அவன் இவன், அவள், இவள்,  மேல், கீழ், இடம், வலம் என்று எல்லாம் கடந்த பூரணத்தின் தேவைகள் தனித்தனி மானுடர்க்குள் படுத்துக் கொண்டு....தன்னை வீரன் என்கிறது, அழகன் என்கிறது, அமைச்சன் என்கிறது, நடிகன் என்கிறது, புலவன் என்கிறது, முட்டாள் என்கிறது....பிச்சைகாரனாயும் பேரரசனாகவும் அதுவே இருக்கிறது....

இருப்பது எல்லாம் அதுவாய் இருக்கையில் தனியாய் ஒன்றை சொல்லி காட்டுகையில் அது இல்லைதானே....அது இல்லைதானே.. அது இல்லைதானே.....மீண்டும் அவர் சிரித்தார்....

எங்கும் செல்லாதே....எதைத் தேடியும் ஓடாதே...உனக்கான நோக்கங்களும் தூரங்களும் உனக்குள்ளேயே இருக்கிறது. ஓரமாக உட்கார். உன்னைப் பார்...உன் லட்சணத்தை திருத்து. நீயே அவலட்சணம் ஊரிலுள்ள அவலட்சணங்களை பற்றி நீ யாரடா விமர்ச்சிக்க....

நீயா உயிர் கொடுத்தாய் எல்லோருக்கும்? நீயா பூமியைச் சுற்றவைக்கிறாய்...? நீயா எல்லா பருவங்களையும் மாற்,றி மாற்றி மீட்டுகிறாய்? உனது வயிற்றுக்கு உணவை நீயா விளைவிக்கிறாய்....இல்லையே...இல்லையே...எல்லாம் கூட்டின் வெளிப்பாடு அந்த கூட்டின் ஒன்று பட்ட உச்ச நிலை இறைவன்...

தனித்தனியாய் தேடும் அத்தனை பேரும் சாகும் வரை தேடி தேடி நாயைப் போல ஓடி ஓடி.....இன்னதென்று ஏதென்று அறியாது மரித்து பின் சவமாய்  சரிந்து விழுந்து எறும்புக்கும், கரையானுக்கும் உணவாகி அழகு அழகு என்ற பிண்டத்தை விட்டு எங்கெங்கோ அதிர்வாய் அலைந்து வாங்கிய அடிக்கு ஏற்றார் போல இன்னுமொரு பிண்டமெடுத்து அந்த பிண்டத்துக்குள் கிடந்து நாறி....அழுது, சிரித்து, பொய் சொல்லி, உண்மை சொன்னேன் என்று பெருமைப் பட்டு, இயல்பாய் செய்ய வேண்டிய எல்லாவற்றையும் சிறப்பாய் செய்தேன் என்று தன்னைத்  தானே புகழ்ந்து கொண்டு....

எனது வீடு, எனது தெய்வம்,எனது எண்ணம், எனது மொழி, எனது நா,டு என்றெல்லாம் சிற்றறிவு சிறைக்குள் அடைபட்டு ஓடி, ஓடி மீண்டும் மரித்துப் போகப் போகிறார்கள். இப்போது என்ன செய்வது என்று உனக்கு தெரியும்..இடம் மாறாதே...தடம் புரளாதே....

எது செய்தாலும் நீயல்ல...நீயல்ல...நீயல்ல.....நான் என்று கொள்...! நான் யாரென்று கேட்கிறாயா.. நான் இல்லாதவனப்பா...நான் எப்போதும் இல்லாதவன். எல்லாமாய் இருக்கும் எனக்கு என்ன தேவை...நான் இல்லாதவன்...ஆமாம் தேவைகள் இல்லாதவன்!!!

ஐயா அப்போது கடவுள் என்ற ஒருவர் இல்லையா ஐயா...? மெல்ல தைரியத்தை வரவழைத்துக் கொண்டு கேட்டேன்.

கடவுள் ஒன்ற ஒருவர் இருக்க வேண்டும் என்று நீதான் விரும்புகிறாய், ஏன் தெரியுமா உனக்கு மரணம் என்ற ஒன்று இருப்பதால், இந்த பூவுலகில் யாருமே மரணிக்க மாட்டர்கள் என்று இருக்கட்டும்....அப்போது யாருமே இறைவனைத் தேடி அலையப் போவது கிடையாது. மனிதர்களின் மரணபயம் தான் மனசாட்சியாகிறது, மனிதர்களின் மரணபயமே இங்கே கடவுள் என்ற கற்பனைப் பாத்திரமாக விசுவரூபமெடுத்து நிற்கிறது...., மனிதர்களின் மரணபயமே நிறைய உதவிகளை செய்து விட்டு தத்தம்மை புண்ணியம் செய்தவர்களாய் எண்ணி நிறைவு செய்து கொள்கிறது...

மரணம் என்ற ஒன்றை அறிந்திருந்தும், நாளை இருக்கப்போவதில்லை என்று தெரிந்தும் சக மனிதர்களைத் துன்புறுத்தும் ஏமாற்றும் அத்தனை பேரும்.....பெருஞ் சக்தியால் சபிக்கப்பட்டவர்கள். அவர்களின் தூரங்கள் நீட்டிக்கப்படும்.நிலையாமையை உணராமல் இந்த வாழ்க்கை நிரந்தரம் என்று நினைத்து எல்லா இறுமாப்பும் கொள்பவனுக்கும், கடவுள் பெயரைச் சொல்லி பாமரர்களை ஏமாற்றும் பாவிகளுக்கும், மதத்தின் பெயரால் மனிதர்களை அழிக்கும் கொடுங்கோலர்களுக்கும்

தூரங்களை அதிப்படுத்தி, காய்ங்களை ஆழப்படுத்தி நாற்றப் பிண்டத்துக்குள் நாறி நாறி உணர்ந்து தெளியும் வரை ஊர்வலாமாய் தொடரும் இச்சுழற்சி....! நீ பிறப்பறுக்க உன் மனத்தை முதலில் அறு....

இயல்பில் நில்..!

நீங்கள் வணங்குவதெல்லாம் தெய்வமில்லை என்று மூடநம்பிக்கையில் உழல்பவர்களுக்கு எடுத்துச் சொல். சாமியார்கள் என்ற பெயரில் பெரும்பணம் வாங்கும் கொடும் கயவர்களின் முகம் நோக்கி காறி உமிழ்ந்து...ஏன் இந்த கயமைத்தனம் என்று கேள்...!!!!

மக்களை கெடுக்கும் அத்தனை பேரிடமும் சென்று கேள்....அறிந்தேதான் இதை நீங்கள் செய்கிறீர்களா என்று....

நான் செய்தேன்.....நான் செய்தேன்......என்று சொல்பவர்களிடம் சொல்...நீங்கள் தனியாகவா செய்தீர்கள், இது உங்களால் மட்டுமா விளைந்தது என்று.....?

எங்கள் கடவுள், எங்கள் மதம் எங்கள் சாதி என்று கட்டம் கட்டிக் கொண்டு வாழ்பவர்களிடம் சொல் உங்களின் மரணத்திற்கு பிறகு உங்கள் உடலெல்லாம், எந்த சாதிக்கோ மதத்திற்கோ சொந்தமானது அல்ல...அது இந்த மண்ணுக்கு மட்டுமே சொந்தமானது என்று....

பூமிக்கு சூரியன் மூலம், சூரியனுக்கு மூலம்  எதுவென்று கேள்...? கேட்டு, கேட்டு ஆதியாம் ஆதியில், பெரும் பாழ் ஆதி அதாவது தொன்மையான ஆதி ஒன்றை அறிவார்...அந்த ஆதிக்கும் ஆதி உண்டு....அப்போது சக மனிதரைப் பார்த்துக் கேள்....இது என்ன என்று...? ஒன்றுமில்லை என்று உரக்கச் சொல்லும் மனிதர்களிடம் சொல்...இதுதான் இல்லாதது. இவன் தான் இல்லாதவன்....இவனே எங்கும் நிறைந்தவன்....என்று அவர்கள் புத்திகள் அதிர சொல்....

வழிபாட்டுத் தலங்கள் எல்லாம் ஒன்றுமில்லாதவனை அறிய, எல்லாம் அறிந்தவர்கள் சூழலுக்கும் வாழ்க்கைக்கும் ஏற்ப உண்டாக்கி வைத்திருக்கும் பயிற்சிக் கூடங்கள் என்று சொல்....

சொல்....சொல்லி, சொல்லி நீ மறைந்து போ........இல்லாதவனாகி எங்கும் நிறைந்து, உரு அழிந்து பூரணமாகிப் போ....இது உனக்கு விதிப்பட்டது.....!!!!

நன்றாக நினைவு கொள் உனது தேடலில் நீ அடைந்தது இலக்கல்ல.....நீ கண்டிருப்பது வெறும் பாதை....வழிமுறை....அவ்வளவே.....

ஏக இறை உன்னை வழி நடத்தட்டும்.....!!!!!

தலையில் ஓங்கி அடித்து......கட்டை விரலால் என் இரு புருவ மத்தியிலும் கை வைத்து அழுத்தினார்.....என்னுள் ஏதோ ஒன்று தடம் புரள...உயிர் சக்தி சீறிக் கொண்டு எழுந்தது. காலமெல்லாம் பசித்து பசித்து...இரைக்காய் காத்திருக்குமே கொடும் புலி அதன் சீற்றம்....

அந்த சக்தியின் வேகம் தாங்காமல்...மெல்ல என் கண்கள் சொருக.....மெல்ல மெல்ல தரையில் விழுந்து ....நான் சுத்தமாய் மறைந்து போக.............இல்லாதவனாகிப் போனேன்.....

அப்போது.....

(அடுத்த பாகத்தில் பயணம் முடியும்....)


தேவா. சு2 comments:

ஜா.முஹையத்தீன் பாட்ஷா said...

//மனிதர்களின் மரணபயம் தான் மனசாட்சியாகிறது, மனிதர்களின் மரணபயமே இங்கே கடவுள் என்ற கற்பனைப் பாத்திரமாக விசுவரூபமெடுத்து நிற்கிறது...., மனிதர்களின் மரணபயமே நிறைய உதவிகளை செய்து விட்டு தத்தம்மை புண்ணியம் செய்தவர்களாய் எண்ணி நிறைவு செய்து கொள்கிறது.// அருமை..

தொடர் அருமையாக வந்திருக்கிறது. எல்லாம் ஆழமான உண்மைகள். நம் அனைவரையும் சூழ்ந்துள்ள அந்த தூய பேருண்மையே ஆசிர்வதிக்கட்டும். பிரிவாயிருந்தால் தானே தனியே ஆசிர்வதிக்க என்று நீங்கள் கேட்பது தெரிகிறது பிரிவில்லை தான் ஆனாலும் மேலும் மேலும் இல்லாமல் போய் சத்தியமாகட்டும்.

தேவா சதா இந்த அதிர்விலேயே இருப்பதை அவரின் எல்லா தொடர் பதிவுகளும் நமக்கு சுட்டத்தவறுவதில்லை. வாழ்க!

More Entertainment said...

hii.. Nice Post

Thanks for sharing

For latest stills,videos visit ..

www.ChiCha.in

www.ChiCha.in