Pages

Sunday, April 8, 2012

ஆன்மாவின்.... பயணம்! பதிவுத் தொடர் பாகம் VI I


PREVIEW

சராசரியான நிகழ்வுகளில் மிக திருப்தியான ஒருவன்....எல்லாவற்றையும் விட்டு விலகி இருக்க ஆசைப்பட்டு... ஒரு பத்து நாட்கள் வீட்டை விட்டு வெளியேற திட்டமிட்டு கடிதம் எழுதிவைத்து விட்டு வெளியேறுகிறான். அதற்கப்புறமான அவனின் மனோநிலை.. உலகம் பற்றிய பார்வை....இவனைப்பற்றிய உலகத்தின் பார்வை...இப்படியாக நகரும்....கதை.....இந்த ஏழாவது பாகத்திலும் தொடர்கிறது...

திருப்புமுனைகளோடு கூடிய கதை எதிர்ப்பார்த்து படிக்க விரும்புவர்கள்....எனது பதிவுகளை தவிர்த்து விடல் நலம். ஏனென்றால் என் பதிவுகள் முழுக்க முழுக்க என்டர்டெயின்மென்டை நிச்சயமாய் கொடுக்காது.

உங்களின் நேரம் அனுமதிக்கும் பொழுது இதற்கு முன் உள்ள பாகங்களையும் படித்துக் கொள்ளுங்கள்....!

இதுவரை...

பாகம் I
பாகம் II

இனி...மெல்ல மெல்ல ஆழமான சுவாசத்தோடு ஓ...........ம் நமசிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை யாரோ உச்சரிப்பது தெளிவாய் கேட்ட உடன்.. உடலுக்குள் மின்சாரம் பாய ஆரம்பித்தது. கிட்டத் தட்ட நடு வானுக்கு நிலவு வந்திருந்த நேரம்.... சுற்றிலும் காற்று மெலிதாய் வீசிக் கொண்டிருந்த போதிலும் மரங்கள் எல்லாம் மெளனமாய் உறங்கிக் கொண்டிருப்பதாகவே எனக்குப் பட்டது. மெல்லிய குளிர் என்னை ஒன்றும் செய்யவில்லை. மேலும் காதுகளை கூர்மையாக்கிக் கொண்டேன்...

அந்த இடத்தைச் சுற்றிலும் ஆங்காங்கே சல சலத்து ஓடிக் கொண்டிருக்கும் சிறு சிறு ஓடைகளின் சப்தங்களையும் கடந்து சர்வ சுத்தமாக பளீச் சென்று யாரோ மந்திரம் சொல்லிக் கொண்டிருப்பது இப்போது தெளிவாய் எனக்குக் கேட்டது. வாழ்க்கையின் நிகழ்வுகளை எல்லாம் நாம்தான் செய்து முடிக்கிறோம் என்ற எண்ணத்தை பெரும்பாலும் மனிதர்கள் கொண்டிருக்கிறார்கள்..... ஆனால் எல்லா காரியத்துக்கும் முன்னால் ஒரு காரணம் இருப்பதை சராசரி வாழ்க்கையில் ஓடிக் கொண்டிருக்கும் எவராலும் கணிக்க முடிவதில்லை. அப்படி கணிக்க முடியாத அளவுக்கு வாழ்க்கை போராட்டங்களால் நிரம்பிப் போய்விடுகிறது.

நான் வீட்டை விட்டு வெளியே கிளம்பி வரவேண்டுமென்று எண்ணிய போதே வாழ்க்கையை மறுத்து வெளியே வர நினைத்திருக்கவில்லை. கொடுக்கப்பட்ட வாழ்க்கைக்கு எதிராய் திரும்புதல் பிரபஞ்ச நியதிக்கு முரணாணது அப்படி செய்தால் அது எதிர்மறை விளைவுகளை உண்டாக்கும் என்பதை நான் தெளிவாக உணர்ந்தவனாயிருந்தேன். இருப்பினும் ஏதோ ஒரு உந்து சக்தி இரைச்சலான இயந்திர வாழ்க்கையை விட்டும், சுற்றி இருக்கும் மனிதர்களை விட்டும் நீ போய் வா என்று உள்ளுக்குள் உத்தரவிட்ட போது அதை மறுக்காமல் ஏற்று நடக்க ஆரம்பித்தேன்.

இதோ இப்போது நான் நகரும் திசையில் அமர்ந்திருக்கும் யாரோ ஒருவரை காணவே எனது பயணம் உறுதி செய்யப்பட்டிருக்கிறது என்பதாக உணர்ந்தேன். எனது பாதத்தின் மெல்லிய சப்தங்களை நான் முழுதுமாய் உணர்ந்து முழு உணர்வு நிலையில் அடிமேல் அடி வைத்து நான் அமர்ந்திருந்த பாறையை விட்டு மெல்ல இறங்கி நகர ஆரம்பித்திருந்தேன்...

சில நொடிகளில் சப்தம் இன்னும் துல்லியமாக அருகில் கேட்டது. அப்படி கேட்ட இடத்திற்கு பக்கத்தில் மரங்களில்லாத ஒரு பொட்டல் வெளி கிட்ட தட்ட சமதளமாய் இருந்தது. அங்கே ஒரு சிறு குன்றின் கீழ் நிலவு வெளிச்சத்தில் ஒருவர் அமர்ந்திருப்பது நிழலாய் தெரிய.. எனக்குள் முதலில் பயமும் பிறகு பயத்தை தெளிய வைத்த அறிவும் துளிர்த்துக் கொள்ள...

நான் அந்த மனிதரின் அருகாமையில் சென்றே விட்டேன். கண் மூடி தியானத்திலிருந்த அந்த மனிதர் யார்? யோகியா...? சித்தரா? இல்லை என்னைப் போலவே கானத்திற்குள் அனுபவத்திற்காக நுழைந்தவரா? தொடர்ச்சியாய் எழுந்த கேள்விகளை சட் சட் என்று அறுத்துப் போட்டேன்... 60க்கு மேல் அவருக்கு வயதிருக்கும் என்று மனம் சொன்ன விசயத்தை மூளை கிரகிக்க அதை அங்கேயே அழித்து விட்டு... அவரைப் பற்றிய அபிப்ராயங்களைச் செரித்து விட்டு....

அவரையே உற்று நோக்க அவரின் அருகாமை எனக்கு உதவியது. இவரை எனக்கு முன்பே தெரியும் என்று என்னுள் இருந்து ஆன்மா துள்ளிக் குதித்து ஒரு சொல்ல முடியாத சந்தோச அவஸ்தையில் என்னைத் தள்ள எனக்கு அது ஒரு புது அனுபவமாயிருந்தது. சப்த நாடிகளையும் அந்த மனிதரின் அருகாமை உடைத்துப் போட்டிருக்க....நான் அங்கே இருந்தேன்......அவ்வளவே...!

மனம் குவித்து அவரையோ பார்த்துக் கொண்டிருக்கையில் உள்ளுக்குள் ஒரு படக் என்று ஏதோ நகர மனம் கேவிக் கேவி அழ ஆரம்பித்தது. நான்... இது நான்.. இது நான்.. என்று ஒரு உள் குரல் புலம்ப.... இடுப்புக்கு கீழ் சொல்ல முடியாத ஒரு அவஸ்தை அடிவயிற்றில் முன்னும் பின்னும் ஏற்பட, இருந்தாலும் இறந்தாலும் ஒன்றே....என்ன நிகழ்ந்தாலும் அது விசயமில்லை என்ற ஒரு புரிதல் உள்ளுக்குள் வெளிச்சமாய் பரவ..... மனம் என்ற ஒன்றே இல்லை என்ற விசயம் தெளிவாய் புரிந்தது.

அவரை உற்று நோக்கிய படியே...... கண்கள் விரித்து அவரை முழுதும் உள்வாங்கிக் கொண்டிருந்தேன். ஒவ்வொரு முறையும் அவர் ஓ...........ம் என்று சொல்லும் போது அது அதிர்வாய் என் செவிகளுக்குள் சென்று மூளையிலிருந்து இறங்கி நடு முதுகுக்கு கீழே இருந்த மூலாதரத்தில் மோதி ர்ர்ர்ர்ர்ர்ர்ரும்.............ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ம்.........ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ம் என்று அதிர, அதிர ஒரு மாதிரி ஏதோ ஒன்று நழுவப் போகிறது என்ற உணர்வு ஏற்பட...

உணர்வு, உணர்வாய் நின்று கொண்டிருந்ததே தவிர அபிப்ராயங்கள் எடுத்து அது விரிவடைந்து கற்பனைகளை உள்ளுக்குள் கொண்டு வந்து போடவில்லை. என்னிடம் அப்போது மொழி இல்லை, உருவமும் இல்லை, அவன், அவள், அது, இது, என்பன போன்ற எந்த ஒரு சுட்டுப் பொருளாகவும் நானிருக்கவில்லை....இடம், சூழல், காலம் என்று எதுவும் எனக்கு தோன்றவில்லை. மேல், கீழ், இடம், வலம் என்ற திசைகள் எல்லாம் பட்டுப் போயிருக்க... ஒரு மிகப்பெரிய பேரமைதியினுள்ளே ர்ர்ர்ர்ர்ர்ர்ம்.......ர்ர்ர்ர்ர்ர்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.........ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ம் என்ற ரீங்காரமாய் ஓங்கார அதிர்வாய் என்னை உணர்ந்தேன்.

அவர் ஒரு சிறு கல் பாறையின் மீது அமர்ந்திருக்க அவரின் பாதத்திற்கு அருகே நான் என்ற பதம் மறந்து அமர்ந்திருந்தேன். காலம் என்ற ஒன்று அங்கே இல்லாமலிருந்தது....! எவ்வளவு காலம் சென்றது என்று ஆராய முடியாமல் புத்தி என்ற ஒன்று சத்தியத்தில் ஒன்றிக் கிடக்க.....

சட்டென்று அவரின் மந்திர சப்தம் நின்று போயிருந்ததை உணர முடிந்தது. உணர்வு நிலையிலிருந்து புலன்கள் மீண்டும் ஸ்தூல நிலைக்கு சட் சட்டென்று வர மெல்ல கண்களைத் திறந்து அவரைப் பார்வையால் எட்டிப் பிடிக்க முயன்று கொண்டிருந்த போதே....அவர் கண்கள் விழித்து அமர்ந்திருந்தார்...

நான் அவரைப் பார்த்த அந்த நொடியில் அவரின் வலது முன்காலை எடுத்து என் நடு நெஞ்சில் ஒரு மத்திம வேகத்தில் சடாரென்று ஒரு உதை உதைத்தார்........

அப்படி அவர் உதைத்த நொடியில் உடம்புக்குள் பரவிக் கிடந்த ஒரு அழுத்தம் பளீச்சென்று வெளியேற...விவரிக்க முடியாத ஒரு உணர்வுக்குள் மீண்டும் நான் பயணிக்க ஆரம்பித்திருந்தேன். இதை விவரித்தல் மிகக் கடினம். உதாரணங்களைச் சொல்லி இப்படி இருந்தது என்று சொல்வது கூட ஒரு மாதிரியான மட்டுப்பட்ட நிலையே....

அதாவது... கையில் ஒரு மோதிரத்தை நாம் இட்டிருக்கிறோம் என்று வையுங்கள்...! அது கழட்ட முடியாதபடி கையோடு இறுகிக் கிடக்கிறது என்று எண்ணிக் கொள்ளுங்கள். அப்போது கையில் சோப்பிட்டு மெல்ல மெல்ல அந்த மோதிரத்தை கழட்ட நாம் முயற்சிக்கும் போது அவ்வளவு எளிதில் அது வெளியே வந்து விடாது ஆனால் வலியோடு சேர்ந்து அது விரலை விட்டு மெல்ல மெல்ல நழுவிக் கொண்டு இருக்கும். வேதனை அதிகமாயிருக்கும் ஆனால் மெல்ல மெல்ல அது விரல் விட்டு வெளியே வரும் சுகத்தையும் நாம் உணர முடியும்... ஒரு கட்டத்தில்...

விரல் வலிக்க வலிக்க கழட்ட முயலும் அந்த மோதிரம் வழுக் கென்று வழுக்கிக் கொண்டு விரலை விட்டு முழுதாய் வெளியே வந்து விட....ஒரு வித சுதந்திரம் விரலுக்கு கிடைத்து மீண்டும் தன் இயல்பு நிலைக்கு வரும். அப்படி மோதிரம் விரலை விட்டு வெளியே வரும் கடைசி மணித்துளிகள் மிக மிக முக்கியமானது அந்தக் கணத்தில் ஏற்படும் உணர்வு...அற்புதமானது....

அதேபோலத்தான் அவர் என் நடு நெஞ்சில் கால் பதித்து என்னை பின்னால் தள்ளிய போது உடலுக்குள் அழுந்திக் கொண்டிருந்த ஏதோ ஒன்று பளீச் சென்று நழுவிப்போய்விட விவரிக்க முடியா பரவச நிலையில் நான் பின்னோக்கி விழுந்து வெறித்துக் கிடந்தேன்....


சொப்பனமோ எந்தன் அப்பன் திருவருள்
கற்றிடமோ என்ன அற்புதம் இதுவே
ஆடிய பாதனே அம்பலவானனே
நீ ஆண்ட கருனையை தேறி அறிவெனோ...
என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா
பொன்னப்பன் அல்லவா பொன்னம்பலத்தவா '

கண்களிலிருந்து நீர் வெள்ளமென பெருகி வழிய நான் என்ற ஒன்று செத்துப் போக வேசமெல்லாம் கலைந்து போய் நிர்வாண பரதேசியாய் நெடுவான் கடந்து ஆதியாம் ஆதிக்கும், ஆதியில் அடையாளமின்றி பொருளாய் பொருளற்றதாய், உயிராய் விரவிக் கிடந்து இடைவிடாது சுவசம் என்ற ஒன்றை உள் வாங்கி வெளி விட்டு ஸ்தூல ஜடப் பொருள்களின் எல்லா இயக்கத்திலும் நீக்கமற விரவி இன்னதென்று, ஏதென்று பகிர முடியா விளக்க முடியாத ஒரு பிரமாண்டத்தினுள் பரவிக் கிடந்தேன்.....இங்கே கிடந்தேன் என்ற பதம் வேண்டாம்.. கிடந்தது....

யாரோ என் நெஞ்சு தடவி, நெற்றி வருடி... என்னை இழுத்து அமர வைத்து,,,நடு முதுகில் கை வைத்து நீவி விட்டு.. .கைகளை எல்லாம் தடவிக் கொடுத்து வாஞ்சையோடு என் முன் நெற்றியில் கை வைத்து.... ஓ.....................ம் என்று சொல்லச் சொல்ல மெல்ல மெல்ல உடலுக்குள் திடமாய் ஒரு பிரஞைக்குள் வந்தேன்...

மெல்ல கண்களை அசைத்து என் அருகாமையிலிருந்த அவரை பார்த்தேன்... வாஞ்சையோடு ஒரு தாயாய் பிள்ளையை பார்ப்பது போல பார்த்து....மெல்ல தன் மார்போடு என்னை அணைத்துக் கொண்டார்..!

நான் கேவிக் கேவி அழத் தொடங்கினேன்....

தேடியதை பூம்பாறைக் காட்டிற்குள் கண்டயா...? சிம்ம கர்ஜனையாய் என்னை அவர் அதட்டினார்...


அப்போது...


(பயணம் தொடரும்...)


தேவா. சுNo comments: