Pages

Thursday, November 27, 2014

சிவகங்கைச் சீமை....!


சிவகங்கைச் சீமையின் வீரவரலாற்றினை இதுவரையில் ஜனரஞ்சகமாக வெகுஜனம் அறிந்து கொள்ளும் வகையில் யாரும் பதிவு செய்து வைக்கவில்லை. ஆங்காங்கே சிதறிக்கிடக்கும் வரலாற்றுத் தகவல்களும், ஒரு சில மிக சுவாரஸ்யமற்ற நடையில் எழுதப்பட்ட புதினங்களும், கார்லே, வேல்ஸ் போன்ற வெள்ளைக்காரர்கள் பதிவு செய்து வைத்திருக்கும் சில விபரங்களையும் தாண்டி தொடர்ச்சியான ஒரு நீண்ட நெடிய புதினம் தமிழர்களுக்கு தருவிக்கப்படவே இல்லை. சோழ தேசத்தில் வளர்ந்தவெனினும் அடிப்படையில் நான் பாண்டிய தேசத்தவன். காளையார்கோயிலிலும் மறவமங்கலத்திலும் இன்னபிற சிவகங்கைச் சீமையின் செம்மண் புழுதிகளுக்குள் சுற்றி திரிந்திருக்கிறேன். கருவேல மரங்களுக்கு நடுவே படுத்துக்கிடக்கும் பிரம்மாண்டமான கண்மாய்களில் கண்கள் சிவக்க குளித்து விளையாடி இருக்கிறேன்...

ஒவ்வொரு கிராமத்திற்குள்ளும் இருக்கும் கணக்கில்லாத ஊருணிகளும், காரைக்கற்களால் கட்டப்பட்டு இடிந்து மண்மேடாய்க் கிடக்கும் கற்குவியல்களுக்கு நடுவே ஒளிந்து பிடித்து விளையாடிய போது இவைகளுக்குளெல்லாம் சிவகங்கைச் சீமையின் வீரமிகு வரலாறு உறங்கிக் கொண்டிருக்கிறது என்று நான் அப்போது கருதியதில்லை. காளையார்கோயிலில் விண்ணுயர எழும்பி நிற்கும் கோபுரத்தை தரிசித்து குடும்பத்தினர் எல்லாம் வீட்டுக்கு சென்ற பின், தனியாய் நான் மருதிருவரின் சமாதியைச் சுற்றி வந்திருக்கிறேன்....

காளையார்கோயில் பேருந்து நிலையத்திற்கு நேர் பின்பக்கம் வெங்கடேஸ்வரா திரையரங்கிற்கு செல்லும் வழியில் இடிந்து போய் தனது கடைசி அடையாளத்தையும்  மண்ணிற்கு தின்னக் கொடுத்துக் கொண்டிருக்கும் மருதிருவரின் அரண்மனை மேட்டிற்குள் சென்றமர்ந்து இங்கே தான் அமர்ந்திருந்தீர்களா? இங்கிருந்துதான் வெள்ளைக்காரனை எதிர்த்தீர்களா? கட்டபொம்மனின் தம்பியான ஊமைத்துரை உங்களோடு இங்கேதான் இருந்தாரா? இங்கிருந்து சிவகங்கைக்கு அழைத்துச் சென்றீர்களா? இடுப்பில் வாளணிந்து, தலையில் முண்டாசுக் கட்டி, மீசை முறுக்கி நீங்கள் நகர்வலம் சென்ற போது இந்தக் கோட்டையின் வாயிலில் உங்களைக் காண கூட்டம் முண்டி அடித்திருக்குமே….? குளவைச் சத்தம் விண்ணைப் பிளந்திருக்குமே…? வெற்றி வேல்….வீர வேல் என்ற கோஷம் காளையார்கோயிலை இரண்டாய்ப் உடைத்துப் போட்டிருக்குமே…? இங்கிருந்துதான்….

சாந்துப் பொட்டுத் தள தளக்க!
சந்தனப் பொட்டு கம கமக்க!
மதுரைக் கோபுரம் தெரிந்திடச் செய்த
மருது பாண்டியர் பாருங்கடி......

என்று பெண்கள் பாடத் தொடங்கினரா..….? இப்போது இருக்கும் பாதைகள் எல்லாம் நாளடைவில் நகரப்பெருக்கத்திற்கு ஏற்றார் போல மாறிப்போய்விட்டது. அப்போது மருதிருவர் இந்த வழியாய்த்தான் அரண்மனையை விட்டு வெளியே வந்த்திருக்க வேண்டும். தினமும் காளையார்கோயிலின் கோபுரத்திற்கு முன் வெளியே நின்று காளீஸ்வரா…..என்று சப்தமாய் பிளிறி எல்லாம் வல்ல ஈசனை வழிபட்டு நேரே சென்று காளையார்கோயில் தெப்பக்குளத்தைச் சுற்றிக் கொண்டு சென்று இன்று வேதாந்த மடம் இருக்கும் சாலை வழியே பயணப்பட்டு பருத்திக்கண்மாய் வழியே கிளுவச்சி சென்று கொல்லன்குடி காடுகளுக்குள் புகுந்து கொல்லன்குடி என்னும் ஆயதங்கள் செய்யும், கொல்லர்கள் வாழ்ந்த சிறு நகரத்தைக் கடந்து சிவகங்கைக்குச் சென்றிருக்க வேண்டும்….

இதை எல்லாம் எப்படி நான் சொல்கிறேன்..? இதற்கெல்லாம் ஏதேனும் வரலாற்றுத் தரவுகள் உள்ளனவா? யாரேனும் பதிந்து வைத்து சென்றிருக்கின்றனரா? என்ற கேள்வி ஒன்று எல்லோரிடமும் இந்நேரம் எட்டிப்பார்க்க ஆரம்பித்திருக்கும். மேலே சொன்ன விசயம் மட்டுமில்லை மருதிருவரின் வாழ்கையைப் பற்றிய விபரமான செய்திகள் எதற்குமே சரியான பதிவுகள் கிடையாது.  அப்படி சரியான பதிவுகள் இல்லாமல் போனதற்குக் காரணம் தமிழர்களுக்கு எதிரான ஒரு அரசியல் 1700களுக்குப் பிறகு அதுவும் சீமையைக் கட்டியாண்ட மன்னர் பரம்பரைகளுக்கும், வேலு நாச்சியாருக்கும், அவருக்குப் பிறகு அவரால் அங்கீகரிக்கப்பட்ட மருது பாண்டியர்கள் மீதும் தொடுக்கப்பட்டிக்கிறது என்பதே உண்மை. அதோடு மட்டுமில்லாமல் பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த சோழர்களைப் பற்றியும் அவர்களது ஆட்சி நெறிமுறைகளைப் பற்றியும், கட்டியெழுப்பிய கற்கோயில்களைப் பற்றியும், வெற்றி பெற்ற பிரம்மாண்ட போர்களைப் பற்றியும் ஆராய்ந்தும், எழுதியும், பேசியும், நமது தமிழ்ச் சமூகம் மகிழ்வதில் தவறொன்றுமில்லை என்றாலும்……

இதோ நாம் வாழும் நூற்றாண்டுக்கு வெகு அருகாமையில் வாழ்ந்து வெள்ளையனை அனுசரித்து முதலில் அரசியல் செய்து சிவகங்கைச் சீமை என்னும் வானம் பார்த்த பூமியைச் செழிப்பாய் ஆண்ட ஒரு மாபெரும் மன்னர்களைப் பற்றி ஏதேனும் குறிப்புகளைக் கூட வாசிக்க முடியாத அளவிற்கு ஒரு பெரும் உளவியல் ரீதியான அரசியல் தமிழர் மண்ணில் புகுத்தப்பட்டிருப்பதோடு மட்டுமில்லாமல் மருதிருவரையும் ஏதோ சாதிச் சங்கத் தலைவர்கள் என்ற மட்டோடு அவரைக் கடந்து செல்ல திணிக்கப்பட்டிருக்கும் சித்தாந்தங்கள் எல்லாம் உடைத்தெறியப்பட வேண்டும்.


சீமையின் வரலாற்றோடு எனக்கு தொப்புள் கொடி பந்தமிருக்கிறது. எனது மூதாதையர்கள் வேலு நாச்சியார் என்னும் வேங்கையோடு தோளுக்கு தோளாய் நின்று ஆலோசனைகள் பல சொல்லிய மந்திரிகளாய் இருந்திருக்கிறார்கள். சிவகங்கைச் சீமையின் கதை எங்கள் வீட்டுப் பிள்ளைகளுக்கு சோறு ஊட்டும் போது சொல்லி சொல்லி வளர்க்கப்பட்ட ஒரு கதை. இதனால் வெறுமனே அம்புலிக் கதையாய் உள்ளுக்குள் உறங்கிக் கொண்டிருந்த சீமையின் கதை மெல்ல மெல்ல கண் விழித்து என் ஆழ்மனதிலிருந்து தத்தித் தவழ்ந்து சி வகங்கைச் சீமையின் செம்மண் வரலாறு என்ற புத்தகத்தை வாசிக்கத் தொடங்கிய போது எனக்கு வயது பதிநான்கு. மு. சேகர் எழுதி இருக்கும் சீமையின் வரலாறு அது. அதை வாசித்த பின்புதான் அந்த பூமியில் என்ன என்ன நிகழ்ந்திருக்கிறது என்பதை எல்லாம் உணர முடிந்தது. வேலு நாச்சியாரின் வீரத்தையும், குயிலியின் தியாகத்தையும், மருதிருவரின் நாட்டுப்பற்றினையும், மந்திரி முத்து தாண்டவராயன் பிள்ளையின் அரசியல் சாதுர்யத்தையும், இந்த மனிதர்களுக்கெல்லாம் இழைக்கப்பட்ட அநீதிகளையும் அதுவும் குறிப்பாக மருதிருவருக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளையும் அப்போதிருந்த கும்பினியர்களின் படைத்தளபதி கர்னல் அக்னீயூவினால் நிகழ்த்தப்பட்ட மிகப்பெரிய இனப்படுகொலையையும் அறிந்து துடி துடித்துப் போனேன். ஈழத்தில் நிகழ்த்தப்பட்டதற்கு ஒப்பான மிகப்பெரிய மனிதப் பேரழிவு சிவகங்கைச் சீமையில் நிகழ்த்தப்பட்டிருக்கிறது….

" உனக்கெதிராக வாளுயர்த்தினேன் அதனால் என்னை தூக்கிலிடுகிறாய்… தாராளமாக இட்டுக் கொள், எனக்கு கொடுக்கப்போகும் தண்டனையில் யாதொரு சலுகையும் கொடுக்காதே….
                                                                     ஆனால்…..
என் குலத்துப் பெண்களையும், சின்னஞ் சிறிய பாலகர்களையும் தூக்கிலிட்டுக் கொள்கிறாயே…..அது ஏனடா… ஈன நாயே….? "

என்று வெள்ளைக்காரர்களைப் பார்த்து காறி உமிழ்ந்து விட்டு தூக்கில் தொங்கிய மருது சகோதரர்களுக்கு கொடுக்கப்பட்ட அந்த தண்டனைக்குக் காரணம் அவர்கள் கட்டபொம்மனின் தம்பியான ஊமைத்துரைக்கு அடைக்கலம் கொடுத்தது மட்டும்தான்... என்பதை அறீவீர்களா என் தமிழ் சொந்தங்களே…????!!!!!!! ஆதரவற்று சொந்த மண்ணில் அடைக்கலம் கொடுக்க திராணி இல்லாத கோழை மனிதர்களுக்கு நடுவே, இவருக்கு அடைக்கலம் கொடுத்தால் இன்னதுதான் நிகழும் என்று அறிந்தே வீரக்கரம் நீட்டிய மருது பாண்டியர்களின் வீரத்தை வார்த்தைகளுக்குள் கொண்டு வருதல் கடினம். நாடு பிடிக்க அவர்கள் போர் செய்யவில்லை, பொருள் கவர அவர்கள் யுத்தம் செய்யவில்லை, வீரத்தை எடுத்துக் காட்ட தேசம் விட்டு தேசம் சென்று அவர்கள் கொலைகள் செய்யவில்லை......மாறாக தான் வாழ்ந்த தன் சொந்த மண்ணை அன்னியர் ஆள விடக்கூடாது என்று அவர்கள் போரிட்டார்கள்.

விபரமான சீமையின் வரலாற்றுக்குள் சென்று வேலு நாச்சியாரையும், மருது சகோதரர்களையும் அவர்களை நேரே கண்டவர்கள் பதிவு செய்து வைத்திருக்கும் அவர்களைப் பற்றிய விபரங்களையும் அறிய முற்படும் போது மனம் விம்முகிறது. சீமையில் வாழ்ந்த மனிதர்களின் பெயர்களை வாசிக்கும் போதே " இது ஆதி தமிழினமடா….இதில் கலப்புகளுக்கொன்றும் இடமில்லையடா..." என்று கத்த வேண்டும் என்று தோன்றியது எனக்கு. வேலு நாச்சியாரின் மகள் பெயர் வெள்ளச்சி நாச்சியார், அவரது கணவவர் முத்து வடுகநாதர், மந்திரியின் பெயர் தாண்டவராயன் பிள்ளை, வேலு நாச்சியாரின் பெற்றோர் பெயர்… முத்து சேதுபதி – சங்கந்தி முத்தாத்தாள், மருது சகோதரர்களின் பெற்றோர்கள் பெயர் உடையர் சேர்வை என்னும் மொக்க பழனியப்பன் மற்றும் ஆனந்தாயி….

அது முழுக்க முழுக்க கலப்பில்லாத தமிழர் பூமியாய் இருந்திருக்கிறது. தொன் தமிழர் முறைப்படிதான் அங்கே ஆட்சி அதிகாரம் நிறுவப்பட்டிருக்கிறது. மருதிவரின் கோட்டைக்குள் செல்ல யாதொரு பாதுகாப்பும்  இருந்திருக்கவில்லை.  பொதுமக்கள் எல்லோரும் எப்போது வேண்டுமானாலும் காண முடிந்த மக்களின் தலைவர்கள் அவர்கள். காளையார் கோயிலின் பெயர் திருக்கானப்பேர். இப்போது புரிகிறதா ஏன் மருதிருவரைப் பற்றி அவ்வளவு விமரிசையாக தமிழர்கள் இப்போது பேசுவது கிடையாது, அவர்கள் வாழ்க்கை பற்றிய ஆகச் சிறந்த புதினங்கள் ஏதும் கிடையாது என்று….? தமிழர்களின் வீரம் செறிந்த மண் சார்ந்த, உணர்வு சார்ந்த தொன் இயல்புகளை தமிழர் சந்ததிகள் வாசித்து விடக் கூடாது என்று ஒரு கூட்டம் முடிவெடுத்து தீட்டிய திட்டத்தின் நச்சு விளைவுதான் இது. தமிழர் வாழ்வில் தமிழர்களாய் வாழ்ந்த மக்களை எல்லாம் இயன்ற வரை அந்த ஆதிக்க கரங்கள் அழித்து விட முயன்றதின் விளைவே இன்றைக்கு இந்த சாதாரண கட்டுரையை நீங்கள் ஆவலாக படிப்பதற்குக் காரணம். சிவகங்கைச் சீமையின் கதை வாசிப்பவர்களுக்கு எல்லாம் புதிய செய்தியாய் அதனால்தான் தோன்றுகிறது.

இவற்றை எல்லாம் உடைத்து இயன்ற வரையில் சீமையின் வரலாற்றினை எனது உணர்வெழுச்சியோடு ஒரு நீண்ட ஜனரஞ்சகமான, வெகுஜன புதினமாக என் வாழ்க்கை காலத்திற்குள் எழுதி முடிப்பேன். அதற்காகத்தான் நான் எழுதவே வந்திருக்கிறேன் என்று நான் கருதுகிறேன். இலக்கிய எழுத்துலகிற்குள் நிகழ்ந்து கொண்டிருக்கும் பெரும் அரசியலுக்குள் சென்று சிக்கி விடாமல், ஒரு இருநூறு பேர்கள் மெச்ச ஏதேதோ செய்து வெகுஜனத்திடம் இருந்து விலகிச் சென்று விடாமல் இந்த நீண்ட நெடிய என்னுடைய எழுத்துப் பணி முடிவடைய நான் நம்பியிருப்பது…..என்னுடைய எழுத்தை விரும்பி வாசிக்கும் வெகுஜனத்தினையும், சிவகங்கை மண்ணில் வீரத்தியாகம் செய்து உயிர் நீத்த அத்தனை  தமிழ் உறவுகளின் ஆன்மாக்களின் ஆசிர்வாதத்தையும் தான்….

அதோடு மட்டுமில்லாமல் வீரமங்கை வேலு நாச்சியாரும், அவரது மந்திரி தாண்டவராயன் பிள்ளையும், தன்னிகரில்லாத வீரமாதரசி குயிலியும், மருதுபாண்டியச் சகோதரர்களும், காளையார்கோயில் காளீஸ்வரரும் இதை முழுமையாய் செய்து முடிக்க எனக்கு உதவுவார்கள்!

' தென்பாண்டி நாட்டினிலே, சேதுபதி பூமியிலே
பொன்பூத்த சீமையிது! புகழ்பாடும் சீமையிது!
தெக்கூரும், ஒக்கூரும், சிறுவயலும் பூங்குடியும்
திருப்பத்தூர் நரிக்குடியும், திருமயமும் முக்குளமும்,
நாலுகோட்டை நாடும், நாட்டரசன் கோட்டையதும்
சேர்ந்த பெருமை தரும் சிவகங்கைச் சீமையிது…!
சிவகங்கைச் சீமை…..எங்கள் சிவகங்கைச் சீமை…!!!!! '


காலமே….என் கூட இரு…..!!!!
தேவா சுப்பையா...

Saturday, November 22, 2014

வேங்கைகளின் மண்...4 !இனி.....


கெளரீ...விடியற்காலை பிரயாணம் உனக்கு ஒன்றும் உபாதை தரவில்லையே... காதலோடு தன்னுடன் குதிரையில் வந்த கெளரி நாச்சியாரைப் பார்த்து கேட்டார் மன்னர் முத்து வடுகநாதார். ராணியாரையும், மன்னரையும் பின் தொடர்ந்து மூன்று குதிரைகளும், அவர்களுக்கு முன்னால் இரண்டு குதிரைகளும் காற்றில் பறந்து கொண்டிருந்தன. சிவகங்கைச் சீமை வானம் பார்த்த பூமிதான் என்றாலும் முத்துவடுகநாதர் ஒவ்வொரு கிராமத்திலும் ஆறேழு ஊருணிகளையும் கிராமத்து எல்லையில் மிகப்பெரிய கண்மாய்களையும் வெட்டுமாறு ஆட்களைப் பணித்திருந்தார்.

செம்மண் பூமியில் ஆற்றுப்பாசனம் இல்லாவிட்டாலும் பெருங்கேணிகளும், தேக்கி வைத்த மழைநீரை அடைத்து நின்ற பெருங்கண்மாய்களும் விவசாயத்தை செழிப்பாய்த்தான் வைத்திருந்தன. கார்காலம் தொடங்குவதற்கு முன்பு நெல்லும், கார்காலத்திற்கு பின்பு அறுவடை முடிந்த பின்பு மீண்டும் நிலத்தை உழுது பண்படுத்தி மிளகாய், கம்பு, கேழ்வரகு, திணை, நிலக்கடலை, எள் போன்ற தானியங்களும் தொடர்ந்து அந்த மண்ணிலே பயிரிடப்பட்டன. சீமை ஓடுகளாலும் நெருக்கமான முறையில் பனை ஓலைகளாலும் வேயப்பட்ட வீடுகளின் கூரைகள் இருந்தன. சாணம் மொழுகிய வீடுகளின் உள்ளும் புறமும் மாக்கோலங்கள் இடப்பட்டிருந்தன. வீடுகளும் வீட்டை ஒட்டிய மிக நீண்ட மாட்டுத் தொழுவங்களும், ஆடுகள், மாடுகள் கோழிகளோடு வாழும் மனிதருமாய் ஒரு இயல்பான இயற்கை சார் வாழ்க்கை நடந்து கொண்டிருந்தது சீமை முழுதும். 

விவசாயக் கலப்பைகள் செய்யும் கொல்லர் பட்டறையை கடந்த போது, நிறைய கலப்பைகளை செய்யும் படி சீமை முழுதும் அறிவுறுத்தி இருக்கிறேன் கெளரீ... விவசாயம் செய்பவர்கள் அதிகரித்து விவசாயக் கலப்பைகளின் தேவை எந்த ஒரு தேசத்தில் அதிகரிக்கிறதோ அங்கே மக்கள் குறைவில்லாத வாழ்க்கையை வாழ்கிறார்கள் என்று அர்த்தம்.  சோழ தேசத்தில் ஆற்றுப்பாசனம் இருப்பதால் அவர்களால் எளிதாய் விவசாயம் செய்து விட முடிகிறது....

ஆனால்...

நம்மைப் போன்ற வானம் பார்த்த பூமியில் வாழும் மக்களின் உணவுத்தேவையை, உற்பத்தியை அதிகரிக்க துல்லியமான செயற்திட்டங்களை நாம் செயற்படுத்திக் கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது. சீமை முழுதும் இருக்கும் கண்மாய்களை கோடைக் காலங்களில் தூர் வாரி மழைக்காலங்களில்  அவற்றை நீரினைத் தேக்கி வைக்கும் பெருங்கலன்களாக நாம் மாற்றி வருகிறோம். தமிழர் பூமியில் நம் சீமையில் மட்டும்தான் வேறெங்கும் காண முடியாத பெருங்கரைகளைக் கொண்டக் கண்மாய்களை வெட்டி உயர்த்தியிருக்கிறோம். எந்த ஒரு அரசு அல்லது அரசன் மக்களின் உணவுத் தேவையை, பூர்த்தி செய்ய திட்டங்கள் தீட்டுகிறானோ அவனை மக்கள் எப்போதும் போற்றிக் கொண்டேயிருப்பார்கள்....! 

உணவுதான் வாழ்க்கையின் பிரதானம் கெளரீ. பசியோடு இருக்கும் ஒருவனால் எந்தச் செயலும் செய்ய முடிவதில்லை. பசி தீர்ந்தால்தான் உயிர் அடுத்தடுத்த விசயங்களைப் பற்றிச் சிந்திக்க ஆரம்பிக்கும். உணவுக்குப் பிறகு உறக்கம். உண்டு, உறங்கி செழிப்பாய் இருக்கும் ஒருவனால்தான் அடுத்தடுத்த சுகபோகங்களை நோக்கி நகர முடிகிறது. தேவையான அளவு உணவும் அதை அடுத்த தேவைகளும் பூர்த்தியானால் மனிதன் தன் சக மனிதர்களுக்கு தொல்லைகள் கொடுக்காமல் இருக்க முடியும். அடிப்படையில் திருப்தியின்மையிலிருந்துதான் கெளரி எல்லா பிரச்சினைகளுமே தொடங்குகிறது. கீழை நாட்டைச் சேர்ந்த நமக்கு நமது மூதாதையர்களால் அகம் சார்ந்த வாழ்க்கை போதிக்கப்பட்டிருக்கிறது. எல்லா அசாதாரண சூழல்களிலும் திருப்தியை நோக்கி நகர்வது எப்படி என்பதுதான் நமக்குச் சொல்லிக் கொடுக்கப்பட்டிருக்கும் பாலபாடம். 

வெள்ளையர்களைப் பார், அவர்களின் தேசத்தில் திருப்தியுற்று அவர்களால் இருக்க முடியவில்லை. அவர்களுக்கு திருப்தி என்றால் என்னவென்றே தெரியாது. ஆசையும், ஆதிக்க மனப்பான்மையும் அவர்களின் ரத்தத்தில் கலந்த ஒன்று. நன்றியுணர்ச்சியும், உறவுகள் மீது நம்பிக்கையும் அவர்களுக்கு அதிகம் கிடையாது. புறம் சார்ந்த வாழ்க்கை அவர்களுடையது. அதனால்தான் வியாபாரம் செய்ய வந்த இடத்தில் இப்படி ஆதிக்க மனப்பாங்கு கொண்டு அலைகிறார்கள். பயம் மிகுந்தவனே பாதுகாப்பிற்காக என்ன என்ன செய்து கொள்ளலாம் என்று திட்டமிடுகிறான். பயமே பாதுகாப்பு என்ற பெயரில் புதிய புதிய போர்க்கருவிகளை தயாரிக்க வைக்கிறது. நமது போர் என்பது வீரம் சார்ந்தது இதில் தந்திரம் என்பது மிக மிகக் குறைவு. நமது போர்கள் திட்டமிடலின் பெயரிலும், வியூகங்கள் வகுப்பதன் பெயரிலுமே பெரும்பாலும் முன்னெடுக்கப்படுகிறது. வாள் வீசி எதிரியை நேருக்கு நேர் சந்திப்பதற்குப் பெயர்தான் வீரம். 

போர் என்பதை முன்பே அறிவித்து போர் செய்யப்போகும் களம் இதுவென்று முடிவு செய்து, பெண்கள், குழந்தைகள், முதியவர்களை பாதுகாப்பாய் அனுப்பி விட்டு போர்புரிந்து வெல்வதுதான் நமது போர்முறை. அதோடு மட்டுமில்லாமல் நாடு பிடிக்க வேண்டி பாண்டியர்கள் அதுவும் சீமைக்காரர்கள் ஒரு போதும் இன்னொரு நாட்டை தாக்கி அழிப்பது கிடையாது. பொருள் வேண்டி புகழ் வேண்டி ஒரு போதும் சீமைக்காரர்கள் இன்னொரு நாட்டை பிடித்தழிப்பது கிடையாது. நமது போர் என்பது துரோகத்தை அழிப்பதும், பாதுகாப்பை நிலைநிறுத்தவும் வேண்டிதான் எப்போதும் நிகழ்கிறது கெளரி.....


மன்னர் முத்துவடுகநாதர் பேசிக் கொண்டே வந்ததை ராணி கெளரி நாச்சியார் வைத்த கண் வாங்காமல் கேட்டுக் கொண்டே வந்தார். முத்துவடுகநாதர் அற்புதமான பேச்சுத் திறமை கொண்டதால்தானே... காளையார்கோயிலில் அவரைக் கண்டவுடன் காதலில் விழுந்தார் கெளரி நாச்சியார். கெளரீ ....என்ன அமைதியாய் வருகிறாய் என்று கெளரி நாச்சியாரின் மெளனத்தை உடைத்தார் மன்னர் முத்துவடுகநாதர். இல்லை மன்னா... உங்களின் சத்தியமான வார்த்தைகளுக்குள் தேன் குடித்த வண்டாய் நான் மயங்கிக் கிடந்ததால் ஒன்றும் பேசத் தோன்றவில்லை.  அன்றொரு பொழுதில் உங்களை முதன் முதலில் கண்டு நான் காதல் வயப்பட்டதும், நம் காதலை அறிந்து அக்கா வேலுவே நம்மை சேர்த்து வைத்ததும் எனக்கு சட்டென்று நினைவுக்கு வருகிறது. கொல்லன்குடிக்குதானே திருமணம் முடிந்து என்னை முதன் முதலில் அழைத்து வந்தீர்கள்....? வெட்கத்தோடு கேட்ட கெளரிநாச்சியாரை பார்த்து புன்னகைத்தபடியே குதிரையை செலுத்திக் கொண்டிருந்தார் மன்னர் முத்துவடுக நாதர்.

கொல்லன்குடி அரண்மனைக்கு மன்னரின் வருகை முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டிருந்ததால் அரண்மனை முழுதும் நிறைய தீபங்கள் ஏற்றி வெளிச்சமாக்கப்பட்டது. மன்னரும்,ராணியும் தங்கப்போகும் அறைக்குள் நறுமணப்புகை இடப்பட்டது. படுக்கைகள், மெத்தை விரிப்புகள் ரத்தின கம்பளங்கள் விரித்து அலங்கரிக்கப்படது. கொல்லன்குடி நகரத்தின் எல்லையிலிருந்து சாலை முழுதும் தண்ணீர் தெளிக்கப்பட்டு அழகிய கோலங்கள் இடப்பட்டிருந்தன. சாலையின் இரு பக்கத்திலும் வரிசையாய் முதலில்  தாரை தப்பட்டைகளும், கொம்பு ஊதுபவர்களும், மிருதங்கம் வாசிப்பவர்களும், நாதஸ்வரம் ஊதுபவர்களும், அதன் பிறகு தமுக்கடிப்பவர்களும், செண்டை மேளம் வாசிப்பவர்களும், பறை அடிப்பவர்களும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர். மன்னரும் ராணியும் கொல்லன்குடிக்குள் நுழையும் போது ஆரம்பித்து தொடர்ச்சியாய் அவர்கள் அரண்மனையை அடையும் வரையில் குலவை இட பெண்கள் வரிசையில் நிறுத்தப்பட்டிருந்தனர். 

ஆங்காங்கே... குடம் குடமாக, பாலும், மோரும், பானகமும், பழங்களும், தட்டில் நிரப்பப்பட்டு எங்கு நின்று மன்னர் எது கேட்டாலும் கொடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. கொல்லன்குடி நகர நிர்வாகி சொக்கப்பன் மன்னரையும் ராணியையும் வரவேற்க கையில் பூமாலைகளுடன் பரிவாரங்களுடன் நின்றிருந்தார். ஊர் முழுதும் ஆவாரம்பூ, மல்லிகை, கனகாம்பரம், செவ்வந்தி, கதம்பப் பூக்களாலும் தென்னங்குருத்துக்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன. நொங்கும், பனங்கிழங்கும், தேனும், பாலும், பழங்களும், பணியாரம், தேன்குழல், முறுக்கு, அதிரசம், தேனப்பம் போன்ற உணவுப் பொருட்கள் குடம் குடமாய் அரண்மனைக்குள் மன்னருக்காகவும் ராணிக்காகவும் சென்று கொண்டிருந்தன. 

யாருக்கும் சொல்லப்படவேண்டாம் என்று சொன்னேனே.. ஏன் இவ்வளவு வரவேற்பு ஏற்பாடுகள் என்று நகர நிர்வாகி சொக்கப்பனை அன்பாகக் கடிந்து கொண்டபடியே அரண்மனைக்குள் சென்ற மன்னர்.... நான் காளையார்கோயிலுக்கு மாலை செல்லப்போவது பற்றி யாருக்கும் தெரியக்கூடாது, இவ்வளவு வரவேற்பு ஏற்பாடுகளும் கூடாது, நானும் என் உடன் வந்த ஐவரும் மட்டும் சென்று அங்கே செய்ய வேண்டிய காரியங்களைச் செய்து கொள்கிறோம்...சரிதானே....?

என்று அதட்டலாய் நகரத்து நிர்வாக அதிகாரி சொக்கப்பனிடம் ஆணையிட்டார்.

அதில்லை மன்னா....வேலு நாச்சியார் தாய்தான்...என்று ஏதோ சொல்லவந்த சொக்கப்பனை...நான் சொல்வதைச் செய் என்று கட்டளையிட்டு மன்னர் அனுப்பி வைத்த அதே நேரத்தில்...

கொல்லன்குடி காட்டுப் பகுதிக்குள் மாமரத்தடியில் கோமணத்தோடு படுத்திருந்த வீர முத்தானந்தம் என்னும் சித்தர் படக்கென்று எழுந்து உட்கார்ந்து......

ஓ....கோ....இதுவும் நடத்துவாயோ சிவனே நீ.............????!!!!! என்று கொல்லன்குடி காடதிர கர்ஜிக்க.... சுற்றி இருந்த மரத்திலிருந்த பட்சிகள் எல்லாம் சப்தம் கேட்டு பயந்து கீச்சிட்டு கத்த, காட்டு நரிகள் உடன் ஊளையிடத் தொடங்க.... வீர முத்தானந்தம் எழுந்து காடதிர கையிலிருந்த உடுக்கையை அடித்தபடி ஆட ஆரம்பித்திருந்தார்....

இதுவும் நடக்குமோ ஈசனே....????
எதுவும் நடத்துவாயோ மோசனே....?!!!!
உயிரெங்கே போகுமோ...?
அப்போதுணர்வெங்கே போகுமோ...????!!!
இதுவெல்லாம் வெறுங்கனவென்றே ஆகுமோ.....
இதுவும் நடக்குமோ...ஈசனே....!!!!????


சித்தரின் ஆட்டத்தில் கிடுகிடுத்துக் கொண்டிருந்தது கொல்லன்குடிக் காடு....!(புரட்சி இன்னும் வெடிக்கும்....)
தேவா சுப்பையா...


Thursday, November 20, 2014

வேங்கைகளின் மண்...3 !


இனி.....


இருள் சூழத் தொடங்கி இருந்தது. கருவேலம் காடுகளுக்கு நடுவே முட்களை விலக்கியபடி அந்த உருவம் வெற்றியூர் கிராமத்தை நோக்கி மெளனமாய் நடந்து கொண்டிருந்தது. முன்னால் இருவர் கையிலிருந்த நீண்ட கோலினால் செடி கொடிகளை விலக்கியபடி சென்று கொண்டிருக்க அவருக்குப் பின்னால் இருவர் சுற்றும் முற்றும் பார்த்தபடி நடந்து சென்று  கொண்டிருந்தனர்.

ஐயா தீபம் கொளுத்தனுங்களா? முன்னால் சென்று கொண்டிருந்தவர்களில் ஒருவன் அவரைப் பார்த்து திரும்பி கேட்ட போது வேண்டாம் என்று சைகையால் சொல்லி விட்டு தலைக்கு மேலே ஒளி வீசிக் கொண்டிருந்த நிலவைக் காட்டி அது போதுமென்று சைகையால் சொன்னார். வருடத்தில் மூன்று மாதங்களும் கோடையில் அவ்வப்போது பெய்யும் மழையையும் மட்டும் பார்த்திருந்ததால் அந்த கோடை மாதத்தில் செம்மண் நன்றாகவே இறுகிப் போய்கிடந்தது. சர சரவென்று சப்தம் கேட்கும் போது மெல்ல நின்று நிதானித்து நிலவு வெளிச்சத்தில்  மின்னும் உடலோடு நகர்ந்து செல்லும் சர்ப்பங்களை மெளனமாய் அவர்கள் கடந்து சென்று கொண்டிருந்தார்கள்.
                                       
                                                                        ***

ஏப்பு நம்மூரு கதை சொல்லி வெளக்கு பொருதுன ஒடனே வந்து கதையச் சொல்வாப்ளேல்ல... இன்னிக்கு என்ன வெளக்கு வச்சு இம்புட்டு நேரமாச்சு ஆளக் காணோம், கள்ள கிள்ள குடிச்சுப்புட்டு போதையில படுத்துட்டாப்லயா....

கூட்டத்தில் ஒருவர் சப்தமாய் கேட்க கூட்டம் கேலியாய் சிரித்தது.

கோடாங்கிய அப்டி எல்லாம் சொல்லாதீகப்பா வேற யாரோ ஒரு பெருசு மங்கலத்துப் பக்கம் கதை சொல்றவராம் அவரு நம்மூரு வழியா சங்கராதிபதி காட்டுப்பக்கம் ஏதோ சோலியா போறாராம்பா அவருதேன் இன்னிக்கு நமக்கு கதை சொல்லப் போறாரு....

அடியெளவே நம்ம கோடாங்கி கதையக் கேட்டு கேட்டு பொசக்கெட்டுப் போயி கிடக்குற நம்மளுக்கு புதுசா ஒருத்தரு வந்து கதை சொன்னா நல்லாத்தேன் இருக்கும்.... புகையிலையை மென்றபடி ஒரு அப்பத்தா கனைத்தபடியே சொன்னது....

இந்த வந்துடாப்ளப்ப கோடாங்கி, கூட நாலஞ்சு பேரு வாராகளே... அந்தப் பெரியவருதேன் கதை சொல்லப் போராறா....சட்டுப் புட்டுன்னு சொல்லுங்கப்பு காலையில வெள்ளன வயலுக்குப் போகணும் சோலி கிடக்கு.... இருமியபடியே சொன்ன அந்த பெரியவரை பார்த்து கையமர்த்தினார் கோடங்கி.

இப்ப நம்மூருக்கு வந்திருக்க பெரியவரு கதை சொல்லுவாரு... சத்தம் கித்தம் போடாம பேயாம கதைய கேளுங்க சனங்களே............... சப்தமாய் பெருங்குரலெடுத்து சொல்லி விட்டுக் கோடங்கி பெரியவருக்கு வழி விட்டார். பெரியவரோடு வந்த மற்ற நான்கு பேரும் ஓரமாய் போய் கூட்டத்தோடு கூட்டமாய் நின்று கொண்டனர்.

ஏப்பு பந்தத்த பெரிசா எரியவுடுங்க அம்மூருக்கு வந்திருக்க பெரியவருக்கு தண்ணிங்கிண்ணி ஏதாச்சும் கொடுங்க... கூட்டத்திலிருந்து யாரோ குரல் கொடுக்க....

சீமையின் பெருமக்களே வணக்கம்!!!!!  ஒங்கூரு கோடாங்கி என்னோட தூரத்து சொந்தம், வேற சோலியா இங்கிட்டுப் போறப்ப இன்னிக்கு ராவைக்கு கதை சொல்லிட்டு போங்களேன்னு கேட்டாரு அதனால நான் இங்க வந்திருக்கேன்....

முத்துக்கருப்பா, பேச்சித்தாயி, குன்னக்குடி முருகா.... காளையார்கோயிலு காளீஸ்வரா.... எஞ்சாமி எல்லாம் என் முன்ன வந்து நில்லுங்க...இப்ப நான் ஒரு கதை சொல்லப் போறேன்.. கதை சொல்லப் போறேன்.. கதை சொல்லப் போறேன்....

பெருங்குரலெடுத்து அந்தப் பெரியவர் கதை சொல்ல ஆரம்பித்திருந்தார்.....

மன்னர் முத்துவடுகநாதத் தேவர்.. தன்னுடைய முதல் மனைவி வேலு நாச்சியாரையே பார்த்துக் கொண்டிருந்தார். ஏன் வேலு எதற்காக காளையார் கோயிலுக்குச் செல்ல வேண்டாம் என்று கூறுகிறாய்...? எனக்கு இந்த வாழ்க்கையின் அவசர அலுவல்களுக்கு நடுவே கிடைக்கும் மிகப்பெரிய ஒரு நிம்மதி ஈசன் சன்னதிதான். அவ்வப்போது அங்கே சென்று வருவதால் மிகப்பெரிய புத்துணர்ச்சியை நான் பெறுகிறேன். நீயும் என் கூட வா, கெளரியையும் உடன் அழைத்துக் கொள்வோம். காளீஸ்வரனை மனதார கும்பிட்டு வருவோம்.

இல்லை தேவரே..... இது சரியான காலச் சூழல் கிடையாது. இப்போதுதான் நம்மை ஆக்கிரமிக்க முற்பட்ட கும்பனியர்களின் படையை நாம் தோற்கடித்து வெற்றி வாகை சூடியிருக்கின்றோம். ஆதிக்க மனப்பான்மையும் குறுக்குப் புத்தியும் கொண்ட கும்பினியர்கள் படைகள் சமாதானமாய்ப் போவதாய் நம்மிடம் கூறி இருப்பதை நாம் நம்பலாகாது. சிறிது காலம் நாம் அமைதியாயிருந்து குள்ள நரிகளின் செயல்பாட்டினைக் கண்காணித்து அதன்படி நம் நகர்வினைத் தீர்மானித்தலே சரியான விடயம்.

சமாதானம் பேசியிருப்பதை எப்படி வேலு நாம் நம்பாமலிருப்பது? எதிரியாய் இருந்தாலும் சமாதானம் என்று வந்த பின்பு தொடர்ச்சியாய் விரோதப் போக்கினை நாம் மேற்கொள்வது நமது மரபல்லவே.... எப்படியாயினும் மருது சகோதரர்களின் கீழ் நமது பெரும்படை எப்போதும் தயார் நிலையிலேயேதானே இருக்கிறது....

இராமநாதபுரம் சீமை மீட்பில் நமக்காய் போர்க்களத்தில் உயிர் நீத்த வீரமறவர்களின் சமாதியில் மரியாதை செலுத்தி விட்டு அவர்களின் மனக்கேதம் தீர ஈசனை வழிபட்டு வருவோம் வா... கும்பினியர்கள் நமது வலிமையை இப்போது அறிந்தவர்களாயிருக்கிறர்கள். இனி நாம் வரி கொடோம் என்பதையும் தெளிவாய் உணர்ந்தவர்களாயிருக்கிறார்கள் ஆபத்து ஒன்றுமில்லை.... வா வேலு போய் வரலாம்.....

மன்னர் முத்துவடுகநாத சேதுபதி வேலு நாச்சியாரிடம் சமாதானம் பேசினார். 

நீங்கள் ஒரு முடிவெடுத்து விட்டால் அதிலிருந்து பின் வாங்க மாட்டீர்கள் என்பதை நானறிவேன் தேவரே...! நீங்கள் வேண்டுமானால் கெளரியை அழைத்துக் கொண்டு காளையார் கோயில் சென்று வாருங்கள். உங்களுடன் ஒரு சிறுபடையையும் துணைக்கு அழைத்துச் செல்லுங்கள். எனக்கு மனதுக்கு ஏதோ சரி இல்லை என்று படுகிறது. நான் சிவகங்கையிலேயே இருக்கிறேன்.....

கெளரீ...நீ மன்னரோடு காளையார்கோயில் சென்று பத்திரமாய் திரும்பி வா....வேலு நாச்சியார், கெளரி நாச்சியாரைப் பார்த்து சொன்னார்.

நான் மன்னரோடு சென்று பத்திரமாய் திரும்பி வருவேன் அக்கா.... புன்னகையோடு பதில் சொன்னார் கெளரி நாச்சியார்.

வேலு.... சிறு படை ஒன்றும் வேண்டாமே கண்மணி. காரணமின்றி நான் படைகளோடு சென்றால் கும்பினியர்கள் தேவையில்லாத குழப்பம் அடைவார்கள், ஆதலால் ஒரு ஐந்து பேரை மட்டும் எங்களோடு அழைத்துச் செல்கிறேன். எல்லாம் சரியாய் நடக்கும், நீ ஒன்றும்  கவலையுறாதே...... என்று மன்னர் முத்துவடுகநாதர் சொன்னதற்கு அரைமனதோடு சம்மதம் சொன்னார் சிவகங்கை மண்ணின் வீரத் தாய் வேலு நாச்சியார்.

கெளரீ.... நாளை அதிகாலையில் நாம் சிவகங்கையிலிருந்து காளையார்கோயில் நோக்கிச் செல்வோம். உடையணன், திருப்பன், செல்லமுத்து, மாணிக்கம், சேர்வை உடன் எனது இரு மெய்க்காப்பாளர்களோடு செல்வோம், வழியில் கொல்லங்குடி அரண்மணையில் தங்கி இளைப்பாறி விட்டு மாலையில் போரில் இறந்த வீரர்களின் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தி விட்டு காளீஸ்வரனை வணங்க செல்வோம்....

என்று கூறி விட்டு வேலு நாச்சியாரைப் பார்த்து வேலு இரண்டு குதிரைகளில் நாங்கள் பயணிக்கிறோம் அதுவே போதுமானது. தேரோ அல்லது பல்லக்கோ வேண்டாம்...பிரயாண ஏற்பாடுகளை மந்திர தாண்டவராயன் பிள்ளையிடம் கூறி செய்யச் சொல்....மருதுபாண்டிய சகோதரர்களுக்குச் செய்தியனுப்பி படைகளை எப்போதும் தயார் நிலையில் வைத்திருக்கச் சொல்.....

விடியலில் எழவேண்டும் அதனால் நான் உறங்கச் செல்கிறேன் என்று விடுவிடுவென்று கூறி விட்டு அந்தப்புரத்திற்குள் சென்றார் மன்னர்.

சிவகங்கை அரண்மனை.. நகரத்தின் மையத்தில் கடுமையான காவலோடு அன்றிரவு உறங்கச் சென்றது....


(புரட்சி இன்னும் வெடிக்கும்...)
தேவா சுப்பையா...Saturday, November 15, 2014

குணா....!


இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று.

கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல ரசாயன மாற்றங்களுக்கு எது காரணம் என்றெல்லாம் யோசித்து அந்த உணர்வுகளை மனதைக் கடந்து வெளிப்படுத்த முயலும் போது ஆன்மீகம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தினால்தான் என்ன? பயன்படுத்தாமல் இருந்தால்தான் என்ன? 1992ல் அதாவது 24 வருடங்களுக்கு முன்பே கமல் குணா என்ற திரைப்படம் மூலம் பேச முயன்றிருக்கும் இரசவாதம் இதுவாய்த்தான் இருக்க வேண்டும் என்று கமல்ஹாசன் எதை நினைத்தார் என்று எனக்குத் தெரியவில்லை ஆனால் இத்தனை வருடங்கள் கடந்து அந்தத் திரைப்படம் ஏற்படுத்தும் அதிர்வலைகளையும், உணர்வெழுச்சிகளையும் இன்னதுதான் என்று வரையறுத்து என்னால் கூறமுடியவில்லை.

ஒரு படைப்பாளி ஏதோ ஒன்றைப் பேச வருகிறான். அப்படி பேச வருவதற்கு அவனுக்கு ஏதோ ஒரு தாக்கமிகு நிகழ்வு காரணமாயிருக்கிறது ஆனால் அவன் பதிவு செய்யும் படைப்பு வேறு ஒரு பரிமாணத்தில் அவன் பெற்ற தாக்கங்களை உள்ளடக்கிக் கொண்டு அவனின் அனுபவங்களோடு வெடித்துச் சிதறி வேறு ஒரு புதியதாய் பரிணாமிக்கிறது. குணா திரைப்படத்தில் கதாநாயகனான குணாவை மனநிலை சரியில்லாதவராய் அவரைச் சுற்றி இருப்பவர்கள் நினைப்பதாய் கதை சொல்லிக் கொண்டே சென்றாலும் திரைப்படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் குணாவைச் சுற்றி இருக்கும் ஒவ்வொரு கதை மாந்தரும்தான் மனநிலை சரியில்லாதவர்களாய் இருக்கிறார்கள் என்பதை மறைமுகமாய் விளக்கிக் கொண்டே செல்கிறார் கதாசிரியர். தன்னுடைய பிறப்பே பிடிக்காத ஒருவன், தன்னுடைய சூழலை வெறுக்கும் ஒருவன் அதை விட்டு விடுபட்டு ஒரு பரிபூரண தெளிவான மனோநிலைக்குள்ளும், சூழலுக்குள்ளும் பயணிக்க அவனுக்குள் யாரோ தோற்றுவித்த அபிராமி உதவுவாள் என்று கருதுகிறான். அபிராமி என்ற பிம்பம் அவன் மனதில் பரிபூரணமாய் நிறைந்து நின்று காதலாய் மாறி என்றோ ஒரு நாள் அவனுக்கான அபிராமி வந்து தகப்பன் யாரென்றே தெரியாத அவனை, தவறான தொழில் நடத்தும் தாயிடமிருந்து, உடலை விற்றுப் பிழைக்கும் கஷ்டங்கள் நிறைந்த பல பெண்களுக்கு நடுவே வாழ்வதிலிருந்து, தினமும் பணம் கொடுத்துவிட்டு பெண்களை மிருகமாய் புணர்ந்து செல்லும் அழுக்கு மனிதர்களிடமிருந்து, தவறான தொழில் செய்யும் தன்னைச் சுற்றி இருக்கும் அனைவரிடமுமிருந்து விடுதலையாக்கி கொண்டு செல்வாள் என்று நம்புகிறான்.

குணாவிற்கு டாக்டர் நல்லவாராய்த் தெரிகிறார், ரோசி நல்லவள் என்றாலும் அவள் சூழ்நிலைக்காக  உடலை விற்பது அவனுக்குப் பிடிக்கவில்லை. அம்மா மீது வெறுமனே பாசம் மட்டுமே  இருக்கிறது. மொத்தமாய் இந்த அடையாளத்தை  எல்லாம் தொலைத்து விட்டு தனக்குள் இருக்கும் ஆழமான உணர்வுகளுக்குள் வாழ ஆசைப்படும் குணா போன்ற கதாபாத்திரங்களைப் படைத்தல் மட்டும் பெரிய விசயமில்லை, அந்த பாத்திரத்தின் தன்மைக்கு ஏற்றார் போல சரியான அளவுகளில் வசனங்களும் எழுதப்படத்தானே வேண்டும். குணாவிற்காக பாலகுமாரன் எழுதி இருக்கும் வசனம் வெற்று வார்த்தைகள் கிடையாது. குணா பேசும் ஒவ்வொரு வசனத்தையும் பாலகுமாரனை அன்றி வேறு யாராலும் இவ்வளவு சிறப்பாய் எழுதி இருக்கவும் முடியாது. ஒவ்வொரு வசனமும் அந்த கதாபாத்திரத்தோடும் காட்சியமைப்போடும் மட்டும் தொடர்புடையது கிடையாது.

சூட்சுமமாய் ஒவ்வொரு வசனமும் விவரிக்க முடியாத வெளிக்குள் நம்மைக் கூட்டிச் சென்று நம் வாழ்க்கை என்று கருதிக் கொண்டிருக்கும் இந்த தினசரி நிகழ்வுகளில் எத்தனையோ முரண்பாடுகள் கொண்ட மனிதர்களுக்கிடையே வாழ்ந்து கொண்டிருக்கும் நமது கறைபடிந்த அவல நிலையை எடுத்துரைக்கிறது. தனக்குள் தானே முரணாய் நின்று கொண்டு ஒட்டு மொத்த பிரபஞ்ச இயக்கமும் இருப்பதை இருக்கிறதா என்று வேவு பார்த்துச் சரி செய்து கொண்டே அசுர வேகத்தில் யுகங்களாய்ப் பயணித்துக் கொண்டிருக்கிறது. இப்படி அசுரவேகத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் இந்த பேரியக்கத்தின் ஆதி இயல்பு எந்த வித சரிபார்த்தலும் அற்றது. கற்றுக் கொள்ள அங்கே எதுவுமில்லை, கற்றுக் கொடுக்கவும் யாருமில்லை. மனம் இல்லை.இயக்கம் இல்லை. அங்கே இருந்த ஒரே ஒரு உணர்வு காதல். காதல்தான் பிரபஞ்சத்தின் ஆதி உணர்வு. காதலோடு நின்று போகும் எல்லா விசயங்களும் சுவாரஸ்யப் பெருங்கடல்கள் தாம். அங்கே சந்தோசம் மட்டுமே நிலைத்து நின்று கொண்டிருக்கிறது. 


காதல் என்ற உணர்வே இன்று வரை இந்தப் பிரபஞ்சத்தை இழுத்துப் பிடித்து எல்லா சமமற்ற நிலைகளையும் சரி செய்து கொண்டே பயணித்துக் கொண்டிருக்கிறது. காதல் என்ற உணர்வைத் தாண்டி மீதி எல்லாமே இங்கே வியாபாரம்தான். இதைக் கொடுத்தால் அதைத் தருவாயா? அதைச் செய்தால் எனக்கு என்ன கிடைக்கும்? என்ற எதிர்பார்ப்புகள் நிறைந்த வியாபாரம். இங்கே ஆன்மீகம் என்ற விசயம் எப்படித் தவறாகப் பிரயோகம் செய்யப்பட்டு சிதைந்து கிடக்கிறதோ அதைப் போலவேதான் காதல் என்ற வார்த்தையும் ஏதேதோ காரணங்களுக்காய் பயன்பாடு செய்யப்பட்டு சிதைந்து கிடக்கிறது. தொடுவது காதலாகாது. பிள்ளைகள் பெற்றுக் கொள்வது மட்டும் காதலாகாது. பொருளீட்டுவது மட்டும் காதலாகாது ஆனால் இங்கே எல்லா விசயத்திற்கும் காதல் பயன்பட்டுக் கொண்டிருக்கிறது. காதலைச் சொல்லி கல்யாணம், பிள்ளைப் பேறு, பிள்ளைகளை வளர்த்தல், சொத்து சேர்த்தல், இன்பம் துய்த்தல், வியாபாரம் செய்தல் என்று இங்கே எல்லாமே காதலை உள்ளாடையாக உடுத்திக் கொண்டு மேலே பட்டுப்புடவையையும், பட்டு வேட்டியையும், அங்கவஸ்திரத்தையும், நகை நட்டுக்களையும் போட்டுக் கொண்டு ஆர்ப்பாட்டம் செய்கின்றன.

காதலின் பொருட்டு நிகழும் எதற்கும் காதலைத் தவிர வேறொன்றுமே தேவை கிடையாது. காதலிக்க மட்டுமே உன்னை காதலிக்கிறேன் என்று சொல்லும் எவனும் அல்லது எவளும் குணாவாகத்தான் பார்க்கப்படுவார்கள். குணா அபிராமியைத் தன்னை மீட்டெடுத்து கொண்டு சென்று பேரன்பில் திளைக்க வைக்கும் ரட்சகியாய்த்தான் தன்னுள் வரிந்து கொள்கிறான். அவனுக்கு அபிராமிதான் எல்லாமே. இப்படியான ஒரு மனோநிலைக்கு அவன் வருவதற்கு தன்னை விடுவித்துக் கொண்டு எங்கோ சென்று விடத் தோன்றுவதற்கு அவன் எப்போதோ வாசித்து மனனம் செய்த அபிராமி அந்தாதி உதவ அபிராமி என்னும் பெண் அவனுக்குள் காதலாய் உருவமற்று அலைய ஆரம்பிக்கிறாள். குணாவால் உறங்க முடியாது, சரியாக உண்ண முடியாது, அவனால் சராசரி மனிதனாய் இருக்கவும் முடியாது. 

அவனுக்கு அபிராமி வேண்டும், அபிராமியைக் காணும் வரை அவனால் சராசரியாக இருக்க முடியாது ஏனென்றால் அபிராமி அவனை மீட்டெடுத்து சிக்கலில்லாத வாழ்க்கைக்குள் கூட்டிச் செல்லப் போகும் ஒரு சாமி. எதேச்சையாய் நிகழும் சம்பவங்களும், சுயநலத்துக்காய் குணாவைப் பயன்படுத்திக் கொள்ள விரும்பும் மனிதர்களும் குணாவை அபிராமி என்னும் காந்தத்தை வைத்து இரும்பை இழுப்பது போல இழுத்து காரியங்கள் சாதித்துக் கொள்ள, எதேச்சையாய் குணாவின் அபிராமி தேடலில் வந்து சிக்கிக் கொள்கிறார் அந்தப்படத்தின் கதாநாயகி ரோஷிணி. அவ்வளவுதான் அந்த கணத்தில் நிகழும் யாவும் குணாவிற்கு அவளை அபிராமியாய் அடையாளம் காட்ட....தன் தேடல் நிறைவு பெற்ற பெருமகிழ்ச்சியில் " பார்த்த விழி பார்த்த படி பூத்து இருக்க " என்று அவன் ஆனந்தக் கூத்தாடுகிறான். 

கமல்ஹாசன் என்னும் பிரம்மாண்டக் கலைஞனுக்குச் சொல்லியும் கொடுக்க வேண்டுமா என்ன?  முக்தி, பேரின்பம், பரவசம் இவற்றை எல்லாம்
வார்த்தைகளாகப் படித்து விட முடியும், அதை அடைந்தவர்கள் அதை எப்படி சொல்ல முடியும்? கூடலின் உச்சத்தை சரியாய்ச் சொல்ல எந்த வார்தைக்குத்தான் தைரியம் இருக்கிறது? வெயிலை, கடும் குளிரை, தாகம் தீர்த்துக் கொண்ட அந்த நிறைவை எப்படி வார்த்தைப்படுத்த அல்லது எப்படி காட்சிப்படுத்த? என்று தெரியாமல் மிகையானவர்கள் குழம்பிக் கிடக்க, பேரின்ப நிலையை எய்திய ஞானியர்கள் தத்தமது பரவச நிலையை எடுத்துரைத்தல் அஞ்ஞானம் என்று ஒடுங்கிக் கொள்ள, தேடலில் இருக்கும் என்னைப் போன்றவர்களுக்கு கமல்ஹாசன் என்னும் கலைஞன் ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதி. தனக்குள் இருக்கும் பெண்ணைத் தனக்குள் இருக்கும் ரட்சகியைக் கண்ட அந்த நொடி எப்படி இருக்கும்? அவளோடுதான் இனி என் வாழ்வு சிறக்கப் போகிறது, பிறப்பிலிருந்து என் மீது படிந்து கிடக்கும் பெருஞ்சுமை ஒன்று அழிந்து கரையப்போகிறது என்று அவன் நினைத்து பரவசப்படும் அந்த மோட்ச நிலையக் காணவேண்டுமெனில் நீங்கள் ஓய்வான தொந்தரவற்ற ஒரு சூழலில் பார்த்த விழி பார்த்தபடி பூத்து இருக்க என்ற பாடலைக் காணொளியாகப் பாருங்கள். 


தான் காதலிப்பவளுக்கு தன்னுடைய நிலையை எடுத்துச் சொல்லும் ஒரு சராசரி மனோநிலையில் குணா அங்கே இல்லை. குணாவை யாரென்றே தெரியாத கதாநாயகி ரோஷிணிக்கும் குணாவிற்கும் உள்ள ஒரே தொடர்பு குணாவிற்கு அவள் அபிராமி என்பது மட்டுமே. குணாவின் மனம் எங்கெங்கெல்லாம் சஞ்சரித்திருக்கிறது அவனுக்கு அபிராமி எப்படியானவள் என்பதை எல்லாம் விளக்கிச் சொல்லும் லெளகீக விசய ஞானம் கொண்டவன் அல்ல குணா. எடுத்துச் சொல்வதும், விளக்கிச் செயல்கள் செய்வதும் ஏதேதோ நாடகங்கள் நடத்தி, கொடுத்து, எடுத்துக் கொள்ளத் தெரிந்தவனல்ல குணா. அவனுக்குத் தெரிந்தது, அவனிடம் உள்ளதெல்லாம் ஒன்றே ஒன்றுதான் அதன் பெயர் காதல். அந்தக் காதலும் கூட எதையோ எதிர்பார்த்து வந்ததல்ல அது ஒரு முக்தி அவனுக்கு. காட்சிகளின் ஓட்டத்தில் குணா தான் அபிராமி மீது வைத்திருக்கும் அன்பினை இயல்பாய் வெளிப்படுத்த வெளிப்படுத்த அந்த சுத்தமான காதல் அந்தக் கதாநாயகிக்கும் பிடிபடாமல் போகிறது. அவளின் பார்வையிலும் அவன் பைத்தியக்காரனாய்த்தான் தெரிகிறான். கபட கூட்டுகளும்,குறுக்குப் புத்தி சிந்தனைகளும் இல்லாத ஒவ்வொருவரும் இந்த சமூகத்தின் முன்பு பைத்தியக்காரர்கள் தானே...?!

குணா என்னும் திரைப்படம் சிக்கலான படமாய், புரிந்து கொள்ள முடியாத ஒரு திரைப்படமாய், எங்கிருந்தோ வெளிநாட்டுத் திரைப்படத்தைக் காப்பியடித்துக் கொண்டு வந்தது என்றெல்லாம் குறைகள் சொல்லப்பட்டாலும் குணாவில் கமல் பேசி இருக்கும், சொல்ல முயன்றிருக்கும் சித்தாந்தம் சிந்தனைகளுக்கு எல்லாம் அப்பாற்பட்டது. சூட்சுமமான பல விசயங்களைத் திரையில் கொண்டு வருவது அத்தனை சாதாரணமான விசயமில்லை என்றாலும் இதைச் செய்ய கமல் போன்ற அறிவு ஜீவிகளால் மட்டுமே எளிதாக முடிகிறது. அடிப்படையில் தவறான ஒரு அரக்க மனிதனை அடித்து மரத்தில் சொருகி சர்வ சாதரணமாய்ச் சாகடிக்கும் அதே குணாவால் ஒரு சிட்டுக்குருவியின் மரணத்தை தாங்கிக் கொள்ள முடியவில்லை. இங்கேயும் ஒரு உயிர், அங்கேயும் ஒரு உயிர்தான் என்றாலும் உயிரின் தன்மை அதன் குணம் இரண்டும் வெவ்வேறு, சிட்டுக்குருவி யாருக்கும் துன்பம் செய்யாத பேராசைகள் இல்லாத மனமற்ற நிலையில் வாழும் ஒரு ஜீவன் ஆனால் இஸ்மாயில் என்னும் கதாபாத்திரம் மனிதனாய் இருந்தாலும் வஞ்சங்கள் நிறைந்தவன், சுயநலத்துக்காய் மனிதர்களுக்குத் துன்பங்களைச் செய்து கொண்டிருப்பவன் என்பதால் அவன் மரணம் குணாவைப் பாதிக்காமலேயே போகிறது. ஆறறிவு என்பது வெறுமனே ஒரு எண்ணிக்கைதான் என்பதை இங்கே நம்மால் உணர முடியும்.

இயல்பாகவே அமானுஷ்யத்தன்மைப் படர்ந்து கிடக்கும் கொடைக்கானல் காடுகளைத் தேர்ந்தெடுத்திருப்பது இந்தப் படத்திற்கு கூடுதல் வலு சேர்த்திருக்கிறது. மனிதர்கள் இல்லாத இடங்களில் எல்லாம் கட்டற்ற ஒரு பெரும் சுதந்திரம் பரந்து விரிந்துதான் கிடக்கிறது. சமூக வாழ்க்கைக்குள்தான் ஓராயிரம் கட்டுப்பாடுகளும் பொதுப்புத்தியின் திணிப்புகளும் என்பதை எண்ணி பார்க்கும் போது அயற்சியாய்த்தானிருக்கிறது. காட்சிகளின் ஓட்டத்தில் அபிராமியாய்த் தன்னை உணரத் தொடங்கி,பொய்யான சமூக அடையாளத்திலிருந்து மெலிதாக விடுபட்டு குணா அபிராமியை எப்படி பார்த்தானோ அதே போல கதாநாயகியான ரோஷிணியும் பார்க்க ஆரம்பிக்கும் இடத்தில் மெலிதாய் தெய்வீகம் தனது முடிச்சவிழ்த்துக் கொண்டு பூவின் மொட்டாய் தன் இதழ்களை விரிக்கிறது. 

எனக்குத் திருப்பிக் கொடுக்க
வேறு ஒன்றும் வேண்டாம் காதலியே, நீ மீண்டும் என்னை காதலாய்ப் பார்;
உன் விழிகளால் என்னை விழுங்கு,
ஆழமாய் சுவாசி; இடைவெளி விட்டு அமர்ந்து கொள்; 
நீ கவிதைகள் சொல்; நான் உனக்கு கதைகள் சொல்கிறேன்;
நீ புறத்தை அறித்தெறி; புது கனவுலகிற்குள் உன்னைக் கூட்டிச் செல்கிறேன்;
நீ ப்ரியத்தை எனக்கு சுவாசமாய்க் கொடு...
நான் என் ஜீவனை உன் இதயத் துடிப்பாக்குகிறேன்,
நீ என் ரட்சகி; காதலால் என்னை ஆட்கொண்ட ராட்சசி
விடியாத இரவுகளுக்குள்ளும், முடியாத பகல்களுக்குள்ளும்
என்னைக் இழுத்துச் சென்று கரைத்துப் போடும்
என் கனவு தேவதையே வா....
என் கவிதைகளின் கருப்பொருளே வா...

சலனமற்ற ஒரு நதியின் நகர்வைப் போல குணாவுக்குள்ளும் அபிராமிக்குள்ளும் காதல் மெல்ல மெல்ல நகர்ந்து பேரன்புக் கடல் நோக்கிச் செல்லும் காட்சி விவரணைகள் எல்லாமே கவிதைகள் தாம். குணாவும் அபிராமியும், அபிராமியும் குணாவுமாய் மாறிப் போக தொல்லைகள் நிறைந்த இந்த வியாபார சமூகத்திற்குள் அவர்கள் வாழத் தகுதியற்றவர்களாகிப் போகிறார்கள். வில்லனை மலை உச்சியில் இருந்து தூக்கி அடித்து விட்டு "த்த்தூ... மனுசன்" என்று குணா காறி உமிழ்வது குறுக்குப் புத்திகள் கொண்ட 24மணி நேரமும் பலன்களை எதிர்பார்த்து வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த எச்சில் சமூகத்தைப் பார்த்துதான் என்பது எத்தனை பேருக்குப் புரிந்திருக்கும் என்று தெரியவில்லை. கடைசியில்....அபிராமி  இறந்து போனதை நம்ப மறுக்கிறான் குணா, அவள் இறப்பை மறுக்கிறான், அது ஒரு பொய் நிகழ்வு என்று நிராகரிக்கிறான், ஏனென்றால் அவன் காதலும், காதலியும் பரம நித்யமானவர்கள், அவர்களுக்கு அழிவென்பதே கிடையாது, அது ஒரு நாளும் இல்லாமல் போகாது என்பதை குணா ஆழமாய் நம்புகிறான். 

புண்ணியம் செய்தனமே மனமே புதுப் பூங்குவளைக்
கண்ணியும் செய்ய கணவரும் கூடி நம் காரணத்தால்
நண்ணி இங்கே வந்து தம் அடியார்கள் நடு இருக்கப்
பண்ணி நம் சென்னியின் மேல் பத்ம பாதம் பதித்திடவே

இடங்கொண்டு விம்மி இணை கொண்டு இறுகி இளகி முத்து
வடங்கொண்ட கொங்கை மலை கொண்ட இறைவர் வலிய நெஞ்சை
நடங்கொண்ட கொள்கை நலம் கொண்ட நாயகி நல் அரவின்
படம் கொண்ட அல்குல் பனி மொழி வேதப் பரிபுரையே.....

என்ற அபிராமி அந்தாதிப் பாடலை வலியோடு குணா உச்சரிக்க.... மனிதர்களால் உணர்ந்து கொள்ளப் படாத அந்த நித்யக் காதல் மானுட வாழ்க்கை என்னும் மரணத்திலிருந்து விடுபட்டு பேரமைதியை முட்டி மோதி மீண்டும் தன் ஆதி சொரூபத்திற்குள் மீள் பிறப்பு எடுத்துக் கொள்கிறது. வணிகரீதியாய் குணா தோல்விப்படமாய் இருக்கலாம் ஆனால் கமலஹாசன் என்ற கலைஞன் சொல்ல வந்த செய்தி என்னவென்பதை விளங்கிக் கொண்ட எங்களைப் போன்ற பல குணாக்களை இந்தப்படம் இறுகத் தழுவி வாழ்க்கைச் சிக்கல்களிலிருந்து விடுவித்து அழைத்துச் சென்று மாபெரும் வெற்றியைத்தான் அடைந்திருக்கிறது. திரைப்படம் முழுதும் பின்னணி இசையாகவும், தெய்வீகமான பாடல் மெட்டுக்களாலும் தனது ஆளுமையைச் செலுத்தியிருக்கும் இளையராஜா என்னும் பிரம்மாண்டம் இந்த விடுபடலை மிகப்பெரிய ஒரு சுகானுபவமாக்கியும் இருக்கிறது.

நிஜத்தில் மனிதர்கள் உணர்ந்து கொள்ள குணா ஒன்றும் சராசரியான மனிதக் காதலைச் சொல்லும் படமில்லை என்பது உண்மைதான்!!!!!

தேவா சுப்பையா...Thursday, November 6, 2014

கனவு வியாபாரம்...!


எந்தச் சொல்லில் இருந்து தொடங்குவது என்று தெரியாமல் ஆரம்பிக்கும் என்னுடைய எல்லா ஆக்கங்களும் யாருக்காக ஆரம்பிக்கிறது? அது எங்கே செல்கிறது? யாருக்கான பொருள் அதில் நிரம்பிக் கிடக்கிறது என்பதெல்லாம் எனக்குத் தெரியவே தெரியாது. ஒவ்வொரு முறையும் பார்வையற்ற ஒருவனைப் போல எனக்குள் புதைந்து கிடக்கும் கனவுகளையும், வலிகளையும், சந்தோசத்தையும் தடவித் தடவிப் பார்த்து அதன் அர்த்தம் விளங்கி மெல்லமெல்ல இதுதான் இன்னதுதான் வரைகிறோம் என்று தெரியாமல் உருவமற்ற ஓவியத்தை வரைந்து கொண்டிருக்கும் ஓவியனின் தூரிகையிலிருந்து சிதறும் எந்த வித உத்தேசமும் இல்லாத வர்ணங்களாய்த்தான் இந்த சொற்கள் வந்து விழுந்து கொண்டிருக்கின்றன.

திடீரென்று ஒரு மழை நேரத்து மாலை எனக்கு நினைவில் வரும். மாலைக்குப் பின்னால் அடர்த்தியாய் நின்று கொண்டிருக்கும் இருட்டு நினைவுக்கு வரும், நான் நடந்து கொண்டிருப்பது ஒற்றையடிப்பாதையாய் இருக்கும். துணைக்கு யாரோ ஒரு மூதாட்டி தலையில் முந்தானையைப் போட்டு மழையைச் சமாளித்தபடி மெல்ல மெல்ல நடந்து கொண்டு பழங்காலத்து அவளின் கதைகளை அப்போது எனக்குச் சொல்லிக் கொண்டு வருவாள். மின்சார விளக்குகள் இல்லாத அந்த இருள் சூழ்ந்த பயணத்தில் மழைக்காலத்து தவளைகளின் சப்தங்கள் இன்னும் ஒரு அடர்த்தியான அமானுஷ்யத்திற்குள் என்னைக் கொண்டு போய் தள்ளி விடும்...

சடாரென்று எனக்கு இறந்து போன என் தாத்தாவின் அன்றைய தினம் நினைவுக்கு வரும். நாடியோடு சேர்த்து தலையில் கட்டுக் கட்டி, நெற்றியில் காசு வைத்து அரிக்கேன் விளக்கு வெளிச்சத்தில் பெண்கள் சுற்றி உட்கார்ந்து வைத்த அந்த ஒப்பாரி நினைவுக்கு வரும்.  சுவரோரமாய் சாய்த்தி வைக்கப்பட்டிருக்கும் தாத்தாவின் சடலம் அதற்கு முதல் நாள் உயிரோடு இருந்த அந்த முதியவரைப் பற்றி ஆழமாய் எண்ண வைக்கும். எங்கே போனார் அவர் இன்று? எங்கே போயிருக்கும் அந்த உயிர் என்று வாசலில் நின்று அந்த கிராமத்து இருட்டு வானத்தை பார்த்து ஏங்கிக் கொண்டிருப்பேன் நான். அழுகையும், இயலாமையும், வாழ்க்கையின் நிச்சயமற்றத் தன்மையும் சேர்த்து என்னை பிசைய.... அனிச்சையாய் கடவுளே... என்ற வார்த்தை வாய்க்குள்  இருந்து எட்டிப்பார்க்கும். கடவுள் என்பது மனித சோகங்களில் இருந்து விடுபட கண்டிபிடிக்கப்பட்ட ஒரு உபாயமா? பகிர்தலுக்கு யாருமில்லையென்று போய்விடக்கூடாது என்று மனிதர்க்கு மனிதர் செய்து வைத்த ஒரு யுத்தியா...?

யோசித்துக் கொண்டே அந்த ஒற்றையடிப் பாதையில் நான் நடந்து கொண்டிருக்கையில் என் கூட நடந்து வந்த அந்த மூதாட்டியின் குரல் நின்று வெகு நேரம் ஆகி போனது அப்போதுதான் என் நினைவுக்கு வந்து திரும்பிப் பார்க்கையில் அங்கே யாருமில்லாமல் சுடுகாட்டு கொட்டகை ஒன்றில் ஒரு பிணம் எரிந்து கொண்டிருப்பது துல்லியமாய் தெரியும். எரியும் அந்தப் பிணம்தான் அந்த மூதாட்டியாய் வந்ததா என்ற கேள்வி ஒன்று பசியோடு கட்டுச் சோத்து மூட்டை ஒன்றைப் பிரிக்கும் வழிப்போக்கனைப் போன்று அதுவரையில் படித்து மூளையில் சேமித்து வைத்திருக்கும் பல மர்மக்கதைகளையும் மெல்ல மெல்ல அவிழ்க்க ஆரம்பிக்கும். பயம் கழுத்துக்கு கீழே பின் புறத்தில் அவஸ்தையாய் பயணித்துக் கொண்டிருக்கும் போதே இரத்தம் உடம்புக்குள் ஜிவ்வென்று கீழிருந்து மேலும், மேலிருந்து கீழாய் பாயத் தொடங்குகையில்....

காக்க காக்க, கனகவேல் காக்க, நோக்க நோக்க நொடியில் நோக்க என்று வேறு ஒரு யுத்தி உள்ளுக்குள் எழுந்த பயத்தை அடக்க வீறு கொண்டு எழும். முருகன் தமிழ்க்கடவுளாம், முருகன் தமிழர் பெருந்தலைவனாம், குறிஞ்சி நிலத்தை ஆண்ட வீர தீர பராக்கிரமசாலி அல்லவா அவர்...? சூரபத்மனை வதம் செய்த மாவீரன் அல்லவா...? யாருக்கும் அஞ்சாத அவர் கையில் கேடயம் கூட வைத்துக் கொண்டு சண்டையிட மாட்டாராம் ஒரு கையில் வாள், இன்னொரு கையில் வேல்....வா மோதிப் பார்த்து விடுவோம் என்று தொடை தட்டி சீறிப்பாய்வானாம் அந்த சிங்கார வடிவேலன்....

கையிலிருக்கும் வேலின் வடிவம் ஆணின் விந்தணுவை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டதாம். வேலின் நுனி எப்படி கூறாய்  இருக்கிறதோ அப்படித்தான் விந்தணுவின் தலைப்பகுதி இருக்குமாம். வேகமாய் சீறீப்பாயும் கோடாணு கோடி விந்தணுக்களில் எது வேகமாய் சென்று பெண்ணின் கரு முட்டையை துளைத்து உட்செல்கிறதோ அதுவே உயிராகிறது. அதுதான் வெல்கிறது. நிஜத்தில் எது வெல்கிறதோ அதுவே வேல் என்று பெயர் மருவி அழைக்கப்பட்டதாம். எது வெல்கிறதோ அது வேல். விந்தணுவைப் போன்று வடிவமைக்கப்பட்டதால் அது வேல் ஆனதாம்..... வெற்றி வேல்...வீரவேல்... வெற்றி வேல் வீர வேல்..... என்று முருகனின் படைகள் போருக்குச் செல்லும் போது கத்திக் கொண்டுதான் சென்றிருக்கும்....

சூரபத்மனை அழிக்க...அவனை வென்று ஜெயிக்க, இயங்காமல் இருக்கும் சத்தியத்தை உசுப்ப.....வெற்றி வேல்..வீர வேல்...வெற்றி வேல் வீரவேல்....சப்தமாய் நானும் கத்திக் கொண்டு எனக்கு ஏற்பட்ட பயத்தை விரட்ட முயலும் போது...சடாரென்று  அங்கிருந்து நினைவு கழன்று கொண்டு மெல்ல என் மார்பினில் கேவிக் கொண்டிருப்பவளின் தலை கோதிக் கொடுத்துக் கொண்டே எனது பக்கவாட்டில் இருகும் உடை வாளைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கும். மீண்டு வருவேன் என்று காதல் எனக்குச் சொல்லும், ஆனால் விடியற்காலையில் நிகழப்போகும் அந்த உக்கிரப் போரோ என் உயிரைக் குடித்தாலும் குடித்து விடலாம் என்று எதார்த்தம் புத்திக்குள் சோழி போட்டுப் பார்த்து விளையாடிக் கொண்டிருக்கும்....


வாசலில் கால் மாற்றி, மாற்றி உறங்காமல் நிற்கும் என் புரவியைப் போல மனதுக்குள் திமிர் கோரப்புலியாய் உறுமிக் கொண்டிருக்கும். நீங்கள் திரும்பி வருவீர்களா...? எனக்கு அச்சமாயிருக்கிறது என்று தேம்பிக் கொண்டிருப்பவளை வாரி இழுத்து அணைத்து கீழுதடு பற்றி, கழுத்து முகர்ந்து, கூந்தல் ஒதுக்கி ஒரு உக்கிரக் கூடலை முடிவு செய்து முன்னேறிக் கொண்டிருக்கையிலேயே அவளின் காதுகளுக்குள், போரிடுவது எனது வாழ்க்கை... வெற்றியோ தோல்வியோ, வாழ்வோ சாவோ வாழ்வின் கடைசித் தருணம் வரை நான் வாள் வீசிக் கொண்டே இருக்க வேண்டும். நான் வாள் வீசுவது நின்று போனால் எப்படியும் என் தலை யாரோ  ஒருவனின் வாள் வீச்சுக்கு இரையாகிப்போகும்....

எல்லா போர்களும் வீரத்தை நிலைநாட்டுவதாய் எடுத்தியம்பிக் கொண்டாலும் அவை நிஜத்தில் உயிர் பயத்தின் உச்சமென்று அறிவாய் பெண்ணே....., காதல் கொள்தலும் காதலின் பொருட்டு தீராக் காமம் கொண்டு மிருகமாய் உன்னை வேட்டையாடுவதும் உயிர் வாழ்தலை உறுதிப்படுத்திக் கொள்ளவும், எனக்குப் பின்னால் என் வித்து காலங்காலமாய் இந்த உயிர் பந்தில் ஜீவித்து நிற்க வேண்டும் என்ற பெரும் யாக்கையை தீர்த்துக் கொள்வதற்காகவும்தான்... இந்த வாழ்க்கையே பழி தீர்த்துக் கொள்தலில்தான் உருண்டு கொண்டிருக்கிறது....

ஒன்றிற்காக ஒன்று இன்னொன்றிற்காக இன்னொன்று, இதைச் செய்தாயா, நான் இதைச் செய்கிறேன், நீ அதைச் செய்தாயா மாறாக நான் வேறு ஒன்றைச் செய்கிறேன் பார் என்று மாறி மாறி பழி தீர்த்துக் கொள்தல் சாத்வீகமாகவோ, இல்லை பெரும் வன்முறையாகவோ நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. உன்னோடான கூடல் ஒரு பழிதீர்த்துக் கொள்ளல், விடியலில் நிகழ்வது எதுவாகவோ இருக்கட்டும், இந்த உக்கிரப் போரில் எமது பெரும்பபடைகள் வெல்ல வேண்டுமென்பது மட்டுமே எனது லட்சிய்ம். இப்பொழுது, திசைகளைக் கிழித்துக் கொண்டு சென்று எதிரியின் உடலைக் கிழித்தெறிதல் எப்படி என்ற கணக்கீடுகளை நான் செய்தாக வேண்டும்....

அவளை ஆக்கிரமிக்கத் தொடங்குவேன். துடி துடித்து தீர்த்துக் கொள்ளும் மூர்க்க காமம் நிறைந்த புத்திதான் ஒரு போராளியை தீரமுள்ளவனாய் ஆக்கும்.

யுத்தம் தொடங்கி இருந்தது. அம்புகளை அவர்கள் சாரை சாரையாக தொடுத்துக் கொண்டிருந்தார்கள், ஆக்ரோசமாய் படைகள் முன்னேற அவர்கள் தடுத்து நிறுத்தினார்கள். அடி வாங்க வேண்டி இருந்தது அடி வாங்கிய பின் அதைத் திருப்பி கொடுக்கும் போது அந்த அடி இன்னமும் உக்கிரமாய் எதிரியின் மீது விழுந்தது. எதிரியின் வேகம் அதிகமாயிருந்த போது பணிந்து போவது  போல கொஞ்சம் அடங்க வேண்டிய அவசியமும் ஏற்பட்டது. எதிரி அடித்து அடித்து ஓய்ந்து களைத்து போக மீண்டும் தாக்குதல்..... வெற்றி வேல்.... வீர வேல்... வெற்றி வேல் வீர வேல்....

படை வீரர்கள் அடித்து துவம்சம் செய்தபடியே வேலோடு சீறிப்பாய.... போரின் போக்கு மாறிப் போனது... இன்னும் சற்று நேரத்தில் யுத்தம்முடிந்து போகலாம்... துள்ளலோடு பாய்ந்து ஓடி எதிரியின் இலக்கை கண்டு பிடித்து, எதிரியோடு நேருக்கு நேர் நின்று போரிட்டு வெற்றியின் உச்சத்தில் கதறியபடியே..... உடல் துடிக்க வாள் வீசிக் கொண்டிந்த போதே.....சரேலென்ற எதிரியின் வாள் என் கழுத்தில்  பதிய.....

என் குரல்வளை வெட்டுப்பட்டு.... இரத்தம் கழுத்தின் கீழ் கொப்பளிக்க.... சரெலென்று புரவியிலிருந்து கீழே குப்புற விழுந்தேன்.... இதோ நின்று போகப் போகிறது என்வாழ்க்கை, உடல் துடிக்க, ரத்தம் பெருக்கெடுத்து ஓட.... கால்களும் கைகளும் துடி துடிக்க...போர்க்களத்தின் சப்தம் மெல்ல மெல்ல ஒடுங்கி போக பெரும் மயான அமைதிக்குள் நான் விழுந்து கொண்டிருந்தேன். முந்தைய இரவில் அவளின் கழுத்தில் முகம் புதைத்து துடி துடித்துக் கிடந்த கூடலின் உச்சம் என் நினைவுக்குள் பளீச் சென்று கண நேரம் வந்து போக....அந்த சூன்யத்திற்குள் நான் காணாமல் போனேன்....

கையிலிருந்த சிகரட்டை மீண்டுமொரு முறை ஆழமாக இழுத்துப் புகைத்து சமகாலத்திற்குள் மெல்ல மெல்ல ஒரு படிக்கட்டில் இறங்கி வருவது போல இறங்கி வந்து கொண்டிருந்தேன். வாழ்க்கை வாழ்க்கை என்று எல்லோரும் கணத்துக்கு கணம் மரணித்துக் கொண்டல்லவா இருக்கிறார்கள்...? மரணம் என்ற இருண்ட பிரதேசத்துக்குள் விழுந்த பின்பு மரணம் மரணம் என்று வாழத்தொடங்குவோமோ என்னவோ.... எங்கெங்கோ இழுத்துச் செல்லும் நினைவுகளை எழுத்தாக்குபவனுக்கு இலக்கு இதுதானென்று எதுவும் இருக்குமா என்ன...? மீண்டுமொரு கனவுலகிற்குள் சஞ்சரிக்க என் புரவி தயாராகிக் கொண்டிருந்த போது....

குதித்து ஓடி வந்து எதார்த்த வாழ்க்கைக்குள் தற்காலிகமாக  ஒளிந்து கொண்டு விட்டேன்...!
தேவா சுப்பையா...