Pages

Thursday, November 27, 2014

சிவகங்கைச் சீமை....!


சிவகங்கைச் சீமையின் வீரவரலாற்றினை இதுவரையில் ஜனரஞ்சகமாக வெகுஜனம் அறிந்து கொள்ளும் வகையில் யாரும் பதிவு செய்து வைக்கவில்லை. ஆங்காங்கே சிதறிக்கிடக்கும் வரலாற்றுத் தகவல்களும், ஒரு சில மிக சுவாரஸ்யமற்ற நடையில் எழுதப்பட்ட புதினங்களும், கார்லே, வேல்ஸ் போன்ற வெள்ளைக்காரர்கள் பதிவு செய்து வைத்திருக்கும் சில விபரங்களையும் தாண்டி தொடர்ச்சியான ஒரு நீண்ட நெடிய புதினம் தமிழர்களுக்கு தருவிக்கப்படவே இல்லை. சோழ தேசத்தில் வளர்ந்தவெனினும் அடிப்படையில் நான் பாண்டிய தேசத்தவன். காளையார்கோயிலிலும் மறவமங்கலத்திலும் இன்னபிற சிவகங்கைச் சீமையின் செம்மண் புழுதிகளுக்குள் சுற்றி திரிந்திருக்கிறேன். கருவேல மரங்களுக்கு நடுவே படுத்துக்கிடக்கும் பிரம்மாண்டமான கண்மாய்களில் கண்கள் சிவக்க குளித்து விளையாடி இருக்கிறேன்...

ஒவ்வொரு கிராமத்திற்குள்ளும் இருக்கும் கணக்கில்லாத ஊருணிகளும், காரைக்கற்களால் கட்டப்பட்டு இடிந்து மண்மேடாய்க் கிடக்கும் கற்குவியல்களுக்கு நடுவே ஒளிந்து பிடித்து விளையாடிய போது இவைகளுக்குளெல்லாம் சிவகங்கைச் சீமையின் வீரமிகு வரலாறு உறங்கிக் கொண்டிருக்கிறது என்று நான் அப்போது கருதியதில்லை. காளையார்கோயிலில் விண்ணுயர எழும்பி நிற்கும் கோபுரத்தை தரிசித்து குடும்பத்தினர் எல்லாம் வீட்டுக்கு சென்ற பின், தனியாய் நான் மருதிருவரின் சமாதியைச் சுற்றி வந்திருக்கிறேன்....

காளையார்கோயில் பேருந்து நிலையத்திற்கு நேர் பின்பக்கம் வெங்கடேஸ்வரா திரையரங்கிற்கு செல்லும் வழியில் இடிந்து போய் தனது கடைசி அடையாளத்தையும்  மண்ணிற்கு தின்னக் கொடுத்துக் கொண்டிருக்கும் மருதிருவரின் அரண்மனை மேட்டிற்குள் சென்றமர்ந்து இங்கே தான் அமர்ந்திருந்தீர்களா? இங்கிருந்துதான் வெள்ளைக்காரனை எதிர்த்தீர்களா? கட்டபொம்மனின் தம்பியான ஊமைத்துரை உங்களோடு இங்கேதான் இருந்தாரா? இங்கிருந்து சிவகங்கைக்கு அழைத்துச் சென்றீர்களா? இடுப்பில் வாளணிந்து, தலையில் முண்டாசுக் கட்டி, மீசை முறுக்கி நீங்கள் நகர்வலம் சென்ற போது இந்தக் கோட்டையின் வாயிலில் உங்களைக் காண கூட்டம் முண்டி அடித்திருக்குமே….? குளவைச் சத்தம் விண்ணைப் பிளந்திருக்குமே…? வெற்றி வேல்….வீர வேல் என்ற கோஷம் காளையார்கோயிலை இரண்டாய்ப் உடைத்துப் போட்டிருக்குமே…? இங்கிருந்துதான்….

சாந்துப் பொட்டுத் தள தளக்க!
சந்தனப் பொட்டு கம கமக்க!
மதுரைக் கோபுரம் தெரிந்திடச் செய்த
மருது பாண்டியர் பாருங்கடி......

என்று பெண்கள் பாடத் தொடங்கினரா..….? இப்போது இருக்கும் பாதைகள் எல்லாம் நாளடைவில் நகரப்பெருக்கத்திற்கு ஏற்றார் போல மாறிப்போய்விட்டது. அப்போது மருதிருவர் இந்த வழியாய்த்தான் அரண்மனையை விட்டு வெளியே வந்த்திருக்க வேண்டும். தினமும் காளையார்கோயிலின் கோபுரத்திற்கு முன் வெளியே நின்று காளீஸ்வரா…..என்று சப்தமாய் பிளிறி எல்லாம் வல்ல ஈசனை வழிபட்டு நேரே சென்று காளையார்கோயில் தெப்பக்குளத்தைச் சுற்றிக் கொண்டு சென்று இன்று வேதாந்த மடம் இருக்கும் சாலை வழியே பயணப்பட்டு பருத்திக்கண்மாய் வழியே கிளுவச்சி சென்று கொல்லன்குடி காடுகளுக்குள் புகுந்து கொல்லன்குடி என்னும் ஆயதங்கள் செய்யும், கொல்லர்கள் வாழ்ந்த சிறு நகரத்தைக் கடந்து சிவகங்கைக்குச் சென்றிருக்க வேண்டும்….

இதை எல்லாம் எப்படி நான் சொல்கிறேன்..? இதற்கெல்லாம் ஏதேனும் வரலாற்றுத் தரவுகள் உள்ளனவா? யாரேனும் பதிந்து வைத்து சென்றிருக்கின்றனரா? என்ற கேள்வி ஒன்று எல்லோரிடமும் இந்நேரம் எட்டிப்பார்க்க ஆரம்பித்திருக்கும். மேலே சொன்ன விசயம் மட்டுமில்லை மருதிருவரின் வாழ்கையைப் பற்றிய விபரமான செய்திகள் எதற்குமே சரியான பதிவுகள் கிடையாது.  அப்படி சரியான பதிவுகள் இல்லாமல் போனதற்குக் காரணம் தமிழர்களுக்கு எதிரான ஒரு அரசியல் 1700களுக்குப் பிறகு அதுவும் சீமையைக் கட்டியாண்ட மன்னர் பரம்பரைகளுக்கும், வேலு நாச்சியாருக்கும், அவருக்குப் பிறகு அவரால் அங்கீகரிக்கப்பட்ட மருது பாண்டியர்கள் மீதும் தொடுக்கப்பட்டிக்கிறது என்பதே உண்மை. அதோடு மட்டுமில்லாமல் பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த சோழர்களைப் பற்றியும் அவர்களது ஆட்சி நெறிமுறைகளைப் பற்றியும், கட்டியெழுப்பிய கற்கோயில்களைப் பற்றியும், வெற்றி பெற்ற பிரம்மாண்ட போர்களைப் பற்றியும் ஆராய்ந்தும், எழுதியும், பேசியும், நமது தமிழ்ச் சமூகம் மகிழ்வதில் தவறொன்றுமில்லை என்றாலும்……

இதோ நாம் வாழும் நூற்றாண்டுக்கு வெகு அருகாமையில் வாழ்ந்து வெள்ளையனை அனுசரித்து முதலில் அரசியல் செய்து சிவகங்கைச் சீமை என்னும் வானம் பார்த்த பூமியைச் செழிப்பாய் ஆண்ட ஒரு மாபெரும் மன்னர்களைப் பற்றி ஏதேனும் குறிப்புகளைக் கூட வாசிக்க முடியாத அளவிற்கு ஒரு பெரும் உளவியல் ரீதியான அரசியல் தமிழர் மண்ணில் புகுத்தப்பட்டிருப்பதோடு மட்டுமில்லாமல் மருதிருவரையும் ஏதோ சாதிச் சங்கத் தலைவர்கள் என்ற மட்டோடு அவரைக் கடந்து செல்ல திணிக்கப்பட்டிருக்கும் சித்தாந்தங்கள் எல்லாம் உடைத்தெறியப்பட வேண்டும்.


சீமையின் வரலாற்றோடு எனக்கு தொப்புள் கொடி பந்தமிருக்கிறது. எனது மூதாதையர்கள் வேலு நாச்சியார் என்னும் வேங்கையோடு தோளுக்கு தோளாய் நின்று ஆலோசனைகள் பல சொல்லிய மந்திரிகளாய் இருந்திருக்கிறார்கள். சிவகங்கைச் சீமையின் கதை எங்கள் வீட்டுப் பிள்ளைகளுக்கு சோறு ஊட்டும் போது சொல்லி சொல்லி வளர்க்கப்பட்ட ஒரு கதை. இதனால் வெறுமனே அம்புலிக் கதையாய் உள்ளுக்குள் உறங்கிக் கொண்டிருந்த சீமையின் கதை மெல்ல மெல்ல கண் விழித்து என் ஆழ்மனதிலிருந்து தத்தித் தவழ்ந்து சி வகங்கைச் சீமையின் செம்மண் வரலாறு என்ற புத்தகத்தை வாசிக்கத் தொடங்கிய போது எனக்கு வயது பதிநான்கு. மு. சேகர் எழுதி இருக்கும் சீமையின் வரலாறு அது. அதை வாசித்த பின்புதான் அந்த பூமியில் என்ன என்ன நிகழ்ந்திருக்கிறது என்பதை எல்லாம் உணர முடிந்தது. வேலு நாச்சியாரின் வீரத்தையும், குயிலியின் தியாகத்தையும், மருதிருவரின் நாட்டுப்பற்றினையும், மந்திரி முத்து தாண்டவராயன் பிள்ளையின் அரசியல் சாதுர்யத்தையும், இந்த மனிதர்களுக்கெல்லாம் இழைக்கப்பட்ட அநீதிகளையும் அதுவும் குறிப்பாக மருதிருவருக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளையும் அப்போதிருந்த கும்பினியர்களின் படைத்தளபதி கர்னல் அக்னீயூவினால் நிகழ்த்தப்பட்ட மிகப்பெரிய இனப்படுகொலையையும் அறிந்து துடி துடித்துப் போனேன். ஈழத்தில் நிகழ்த்தப்பட்டதற்கு ஒப்பான மிகப்பெரிய மனிதப் பேரழிவு சிவகங்கைச் சீமையில் நிகழ்த்தப்பட்டிருக்கிறது….

" உனக்கெதிராக வாளுயர்த்தினேன் அதனால் என்னை தூக்கிலிடுகிறாய்… தாராளமாக இட்டுக் கொள், எனக்கு கொடுக்கப்போகும் தண்டனையில் யாதொரு சலுகையும் கொடுக்காதே….
                                                                     ஆனால்…..
என் குலத்துப் பெண்களையும், சின்னஞ் சிறிய பாலகர்களையும் தூக்கிலிட்டுக் கொள்கிறாயே…..அது ஏனடா… ஈன நாயே….? "

என்று வெள்ளைக்காரர்களைப் பார்த்து காறி உமிழ்ந்து விட்டு தூக்கில் தொங்கிய மருது சகோதரர்களுக்கு கொடுக்கப்பட்ட அந்த தண்டனைக்குக் காரணம் அவர்கள் கட்டபொம்மனின் தம்பியான ஊமைத்துரைக்கு அடைக்கலம் கொடுத்தது மட்டும்தான்... என்பதை அறீவீர்களா என் தமிழ் சொந்தங்களே…????!!!!!!! ஆதரவற்று சொந்த மண்ணில் அடைக்கலம் கொடுக்க திராணி இல்லாத கோழை மனிதர்களுக்கு நடுவே, இவருக்கு அடைக்கலம் கொடுத்தால் இன்னதுதான் நிகழும் என்று அறிந்தே வீரக்கரம் நீட்டிய மருது பாண்டியர்களின் வீரத்தை வார்த்தைகளுக்குள் கொண்டு வருதல் கடினம். நாடு பிடிக்க அவர்கள் போர் செய்யவில்லை, பொருள் கவர அவர்கள் யுத்தம் செய்யவில்லை, வீரத்தை எடுத்துக் காட்ட தேசம் விட்டு தேசம் சென்று அவர்கள் கொலைகள் செய்யவில்லை......மாறாக தான் வாழ்ந்த தன் சொந்த மண்ணை அன்னியர் ஆள விடக்கூடாது என்று அவர்கள் போரிட்டார்கள்.

விபரமான சீமையின் வரலாற்றுக்குள் சென்று வேலு நாச்சியாரையும், மருது சகோதரர்களையும் அவர்களை நேரே கண்டவர்கள் பதிவு செய்து வைத்திருக்கும் அவர்களைப் பற்றிய விபரங்களையும் அறிய முற்படும் போது மனம் விம்முகிறது. சீமையில் வாழ்ந்த மனிதர்களின் பெயர்களை வாசிக்கும் போதே " இது ஆதி தமிழினமடா….இதில் கலப்புகளுக்கொன்றும் இடமில்லையடா..." என்று கத்த வேண்டும் என்று தோன்றியது எனக்கு. வேலு நாச்சியாரின் மகள் பெயர் வெள்ளச்சி நாச்சியார், அவரது கணவவர் முத்து வடுகநாதர், மந்திரியின் பெயர் தாண்டவராயன் பிள்ளை, வேலு நாச்சியாரின் பெற்றோர் பெயர்… முத்து சேதுபதி – சங்கந்தி முத்தாத்தாள், மருது சகோதரர்களின் பெற்றோர்கள் பெயர் உடையர் சேர்வை என்னும் மொக்க பழனியப்பன் மற்றும் ஆனந்தாயி….

அது முழுக்க முழுக்க கலப்பில்லாத தமிழர் பூமியாய் இருந்திருக்கிறது. தொன் தமிழர் முறைப்படிதான் அங்கே ஆட்சி அதிகாரம் நிறுவப்பட்டிருக்கிறது. மருதிவரின் கோட்டைக்குள் செல்ல யாதொரு பாதுகாப்பும்  இருந்திருக்கவில்லை.  பொதுமக்கள் எல்லோரும் எப்போது வேண்டுமானாலும் காண முடிந்த மக்களின் தலைவர்கள் அவர்கள். காளையார் கோயிலின் பெயர் திருக்கானப்பேர். இப்போது புரிகிறதா ஏன் மருதிருவரைப் பற்றி அவ்வளவு விமரிசையாக தமிழர்கள் இப்போது பேசுவது கிடையாது, அவர்கள் வாழ்க்கை பற்றிய ஆகச் சிறந்த புதினங்கள் ஏதும் கிடையாது என்று….? தமிழர்களின் வீரம் செறிந்த மண் சார்ந்த, உணர்வு சார்ந்த தொன் இயல்புகளை தமிழர் சந்ததிகள் வாசித்து விடக் கூடாது என்று ஒரு கூட்டம் முடிவெடுத்து தீட்டிய திட்டத்தின் நச்சு விளைவுதான் இது. தமிழர் வாழ்வில் தமிழர்களாய் வாழ்ந்த மக்களை எல்லாம் இயன்ற வரை அந்த ஆதிக்க கரங்கள் அழித்து விட முயன்றதின் விளைவே இன்றைக்கு இந்த சாதாரண கட்டுரையை நீங்கள் ஆவலாக படிப்பதற்குக் காரணம். சிவகங்கைச் சீமையின் கதை வாசிப்பவர்களுக்கு எல்லாம் புதிய செய்தியாய் அதனால்தான் தோன்றுகிறது.

இவற்றை எல்லாம் உடைத்து இயன்ற வரையில் சீமையின் வரலாற்றினை எனது உணர்வெழுச்சியோடு ஒரு நீண்ட ஜனரஞ்சகமான, வெகுஜன புதினமாக என் வாழ்க்கை காலத்திற்குள் எழுதி முடிப்பேன். அதற்காகத்தான் நான் எழுதவே வந்திருக்கிறேன் என்று நான் கருதுகிறேன். இலக்கிய எழுத்துலகிற்குள் நிகழ்ந்து கொண்டிருக்கும் பெரும் அரசியலுக்குள் சென்று சிக்கி விடாமல், ஒரு இருநூறு பேர்கள் மெச்ச ஏதேதோ செய்து வெகுஜனத்திடம் இருந்து விலகிச் சென்று விடாமல் இந்த நீண்ட நெடிய என்னுடைய எழுத்துப் பணி முடிவடைய நான் நம்பியிருப்பது…..என்னுடைய எழுத்தை விரும்பி வாசிக்கும் வெகுஜனத்தினையும், சிவகங்கை மண்ணில் வீரத்தியாகம் செய்து உயிர் நீத்த அத்தனை  தமிழ் உறவுகளின் ஆன்மாக்களின் ஆசிர்வாதத்தையும் தான்….

அதோடு மட்டுமில்லாமல் வீரமங்கை வேலு நாச்சியாரும், அவரது மந்திரி தாண்டவராயன் பிள்ளையும், தன்னிகரில்லாத வீரமாதரசி குயிலியும், மருதுபாண்டியச் சகோதரர்களும், காளையார்கோயில் காளீஸ்வரரும் இதை முழுமையாய் செய்து முடிக்க எனக்கு உதவுவார்கள்!

' தென்பாண்டி நாட்டினிலே, சேதுபதி பூமியிலே
பொன்பூத்த சீமையிது! புகழ்பாடும் சீமையிது!
தெக்கூரும், ஒக்கூரும், சிறுவயலும் பூங்குடியும்
திருப்பத்தூர் நரிக்குடியும், திருமயமும் முக்குளமும்,
நாலுகோட்டை நாடும், நாட்டரசன் கோட்டையதும்
சேர்ந்த பெருமை தரும் சிவகங்கைச் சீமையிது…!
சிவகங்கைச் சீமை…..எங்கள் சிவகங்கைச் சீமை…!!!!! '


காலமே….என் கூட இரு…..!!!!
தேவா சுப்பையா...

3 comments:

”தளிர் சுரேஷ்” said...

சிவகங்கைச் சீமை பற்றியும் மருதுபாண்டியர்கள் குறித்தும் அறிந்து கொண்டேன்! உங்களின் புதினம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்!

'பரிவை' சே.குமார் said...

அண்ணா... ஆரம்பியுங்கள்... உங்கள் புதினம் மூலம் நம் பூமியின் வீர வரலாற்றை அனைவரும் அறியட்டும்...

முனைவர் இரா.குணசீலன் said...

அன்பு நண்பரே நான் காளையார் கோயில் அருகே கல்லல் என்ற ஊரைச் சோ்ந்தவன். என் தந்தை பிறந்த ஊர் காளையார் கோயில் அருகே உள்ள கொல்லங்குடிக்கு அருகில் முத்தூர் என்பதாகும்.

நீங்கள் சொல்வது யாவும் எதிர்காலத்துகுத் தேவையான கருத்துக்கள்.

சிவகங்ககை சீமை என்று ஒரு பழைய படம் வந்திருக்கிறது பார்த்தீர்களா? இல்லையென்றால் பாருங்கள் உங்களுக்கு உதவியாக இருக்கும்.

தங்களால் முடியும். எழுதுங்க நண்பா.
வாழ்த்துக்கள்.