Pages

Monday, February 25, 2013

மொழியற்றவனின் வார்த்தைகள்....!நவீனத்தின் நிழலில் அமர்ந்து கொண்டு நான் ஆன்மீகம் பேசுவது கொஞ்சம் பிற்போக்காகத்தான் இருக்கும். அறிவியலை அடையாளமாக்கிக் கொண்டு, இருப்பதை இல்லை என்று மறுப்பவர்களுக்கு கடவுள் என்ற பதமும், ஆன்மா என்ற சொல்லும் மிகுந்த கேலிக்குரியதாய் கூடத் தெரியலாம். எந்த இடத்தில் ஆன்மீகம் பாமரனைச் சென்றடைய யுத்திகள் செய்ததோ அந்த யுத்திகளைக் கொண்டு மேலேறி வராமல் அந்த யுத்திகளுக்கு யுத்திகள் செய்து மூடநம்பிக்கைகளை தங்களின் பைத்தியக்காரத்தனத்தில் இருந்து மேலேற்றிக் கொண்டு வந்து விட்டார்கள் மிகைப்பட்ட மனிதர்கள். மூடநம்பிக்கைகளும், பகட்டு பக்திகள் மட்டுமே புறத்தில் தெரிய....

ஆன்மீகம் என்ற சொல் பகுத்தறிவுக்கு வெகுதூரமாய் போய்விட்டது...!

கடவுளை மறுப்பது பகுத்தறிவு என்று சிந்தனையின் உச்சத்தில் மனிதனின் மனமொரு செய்தியைப் பகிர அதையே அறிவின் உச்சம் என்று நம்பி விட்டான் ஆனால் கடவுள் என்றால் என்ன என்று கூடுதல் கேள்வியொன்றை எழுப்பி மறுப்பதற்கு என்ன இருக்கிறது என்று ஆராய இருப்பதெல்லாம் இருப்பதாகிப் போக எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ளவேண்டிய கட்டாயத்தை  நாம் எட்டிப்பிடிக்க முடியும். இந்த எட்டிப்பிடித்தலை நான் ஆன்மீகம் என்று சொல்லலாம், நான் ஆன்மீகம் என்று சொல்கையில் அந்தச் சொல்லை எடுத்துக் கொண்டு போய் ஏதோ ஒரு மதத்திற்குள்ளோ அல்லது கொள்கைக்குள்ளோ அடைத்துப் போட்டு விட்டு நான் சொல்ல வரும் ஆன்மீகத்தை நீங்கள் மறுதலிக்கவும் செய்யலாம்.

என் கேள்வி எல்லாம் என்ன தெரியுமா? எதை நீங்கள் மறுக்க முடியும் இந்த உலகத்தில் என்பதுதான்? உங்களின் பிறப்பு நிகழவே இல்லை என்று உங்களால் மறுக்க முடியுமா? இறக்கவே மாட்டேன் என்று மறுக்க முடியுமா? பசியை, கோபத்தை, தாகத்தை, காமத்தை எதை மறுக்க முடியும் நம்மால்? நம்மைச் சுற்றி இருக்கும் எல்லாவற்றையும் ஏற்று நகரத்தான் நம்மால் முடியுமே அன்றி எதையும் மறுத்து நகர முடியாது. அடிப்படையில் நிறைய முரண்களும், பித்தலாட்டங்களும் சர்வதேச சமூகத்தில் அரங்கேறி விட்டன கடவுளின் பெயரால்....

பாவம் கடவுள் என்னும் பதம். 

அது ஆத்திகர்களாலும், நாத்திகர்களாலும் எப்போதும் பந்தாடப்பட்டுக் கொண்டே வந்திருக்கிறது. கடவுள் என்ற பெயரை புரிதலில்லாத மூடர்கள் முறையற்ற தங்களின் சுயலாபத்திற்காய் பயன்படுத்தியிருக்கலாம் என்றாலும் மானுட வாழ்க்கையில் கடவுள் என்னும் பதம் முரண்களை விட அதிக அளவு நன்மைகளையே செய்திருக்கிறது. கடவுள் என்பது தனி மனித திருப்தி என்ற ஒரு உரிமையை எப்போதும் சமூக சீர்திருத்தவாதிகள் என்று சொல்லும் முற்போக்கு வாதிகள் பறித்து விடவே முடியாது. கடவுளின் பெயரைச் சொல்லி இங்கே நிகழ்ந்தேறிக் கொண்டிருக்கும் வன் கொடுமைகளை தடுக்கவேண்டிய கண்டிக்கவேண்டிய எல்லா சமூகப் பொறுப்புகளும் ஆன்ம ரீதியான புரிதல் கொண்ட எல்லா மனிதர்களுக்கும் அதிகமாகவே இருக்கிறது என்று நான் கருதுகிறேன். இங்கே ஆன்மீகம் என்பதின் பெயரால் நிகழ்ந்தேறிக் கொண்டிருக்கும் மனோதத்துவ முரண்களை முறியடிக்கவேண்டிய கடமையும் உண்மையான ஆன்மப் புரிதல் கொண்டவர்களுக்கே இருக்கிறது.

கடவுள் மறுப்பாளர்கள் கடவுளை மறுப்பதிலும், மூடநம்பிக்கைகளை ஏளனப்படுத்திவதிலுமே நேரத்தை செலவழித்து விடுகிறார்களே அன்றி....தனி மனித ஒழுங்கு, ஆன்மப்புரிதல் போன்றவற்றைப் பற்றி அதிகம் பேச முடியாதவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் ஒரு போதும் சூட்சுமம் என்னும் புலன் உணர்வுக்கு அப்பாற்பட்டதை நம்பத்தயாரில்லை. பூமி சுற்றுவதை இவர்கள் நம்புவார்கள். சூரியனை அது சுற்றி வருவதையும் இவர்கள் நம்புவார்கள். சூரியனுக்கும் பூமிக்க்கும் இருக்கும் ஈர்ப்பு எப்படிப்பட்டது அல்லது ஏன் ஈர்க்க வேண்டும் என்பதைப் பற்றி அதிகம் பேசமாட்டார்கள்.

எப்படி நடந்தது என்று கூறுவார்கள் ஆனால் ஏன் நடக்கவேண்டும் என்று யோசிக்க மாட்டார்கள்.அவர்களுக்கு வாழும் வரை வாழ்க்கை இருக்கிறது என்பது வரை மட்டுமே நம்பிக்கை இருக்கிறது. மரணமும் ஜனனமும் சும்மா ஒரு உல்ல்லுலாய்க்கு இங்கே ஏற்படுகிறது பிறகு ஒன்றுமே இல்லை என்று இவர்கள் கூறுவதை அறிவின் பார்வையாக ஏற்றுக் கொண்டு என்னால் நகர முடிவதில்லை. என் மனம் கேள்விகள் கேட்டுக் கொண்டே இருக்கிறது..? ஏன்....ஏன்..? என்று கேட்டு கேட்டு....கேள்வி கரைந்து போக ஏற்படும் வெற்றிடத்தில் எல்லா ரகசியத்தையும் உணர்ந்து கொள்ள முடிகிறது. அது என்ன ரகசியம்..?

பூமிக்கும் சூரியனுக்கும், சூரியனுக்கும் பிரபஞ்சத்திற்கும் இருக்கும் ஈர்ப்பினை ஒத்த ரகசியம் அது. சொல்லிவிட்டால் அது ரகசியம் அல்ல.....!

எந்த ஒரு நாளில் கடவுள் என்பது தனி நபரல்ல என்ற புரிதல் எனக்கு ஏற்பட்டதோ, எந்த ஒரு நாளில் சரியான சுமூக இயங்குதலோடு மனதினால் நான் நான் என்று செய்யும் செயல்கள் எல்லாம் என் மரணத்தின் போது என்னை துன்புறுத்தும் என்று புரிந்து கொண்டேனோ..., எந்த ஒரு கணத்தில் உறவுகள், இரத்த பாசம், நட்பு என்னும் தொடர்புகள் எல்லாம் சூழல்கள் உருவாக்கும் மாயஜாலங்கள் என்று எனக்குப் புரிந்ததோ..., எந்த ஒரு நாளில் நான் வெறுமையான ஒரு கூடு, என்னைச் சுற்றி நிகழும் யாவும் என் கடந்தகாலத்தின் தொடர்ச்சிகள், என் எதிர்காலம் என்பது கடந்த காலமும், நிகழ்காலமும் புணர்ந்து ஜனிக்கும் ஒரு சூழல் என்பது விளங்கியதோ.... 

அந்த நாளில் எனக்கு யாரிடமும் எதுவும் சொல்லப் பிடிக்கவில்லை. யாரிடமும் எதுவும் கேட்கவும் பிடிக்கவில்லை. இந்தப் போலி சுழற்சியின் தர்மநியாங்கள்  மீண்டும் மீண்டும் இங்கே பிறப்பதோடு தொடர்புடையது. என் எண்ணங்கள் எனக்கு விளைவுகளை ஏற்படுத்திக் கொடுக்கின்றன. பிறந்து, உலகத்துக்கே சக்கரவர்த்தியாகி, இன்பம் துன்பம் எல்லாம் நுகர்ந்து, புகழையும் பணத்தையும் சேர்த்து நான் என்ன செய்யப் போகிறேன்...? எனக்குப் பிறகு யார் யாரோ என்னைப் பற்றி பேசிக் கொண்டே இருக்க வேண்டும் என்ற என் மரணபயத்தின் நீட்சிதான் நான் இந்த சமூகத்தில் ஓடும் ஓட்டம்.

என்னைப் பற்றி நல்லவிதமாய் கோடி பேர்கள் பேசிப் பேசி....அவர்களும் மரித்து...இறுதியில் இந்த சுழற்சி வேறொன்றாய்த்தான் மாறும். நம்மைச் சுற்றி நிறைய வலைகள் பின்னப்பட்டு விட்டன. இந்த நொடியில் இறக்கி வைக்கும் வார்த்தைகள் கூட என் பெரும் பயணத்தை கடக்கும் ஒரு சிறு செயல்தானே அன்றி.. எதையும் விளக்கவோ நிறுவவோ முற்படும் கருத்துக்களின் கோர்வை அல்ல. இவை எல்லாமே வெற்றுக் குமிழிகள்.

நகர்ந்து கொண்டே இருக்கும் நீர்க்குமிழிகள் ஏதோ ஒரு கணத்தில் உடைபட்டுப் போகும். இந்த வார்த்தைகள் உங்களுக்குள் கரைந்து போகவேண்டும் என்பதே எனது ஆசை. இங்கே வாசித்து சிலாகிக்க ஒன்றுமில்லை. ஆச்சர்யப்பட்டு கூக்குரலிட்டு உற்சாக நடனமிட என்னிடம் கவர்ச்சியான லெளகீகம் இல்லை. ஏதேதோ விசயங்களை இணையத்தில் தேடி எடுத்துக் கொடுக்கும் புள்ளி விபரங்களோ, இல்லை எதைப் படித்ததின் தாக்கமோ என்னிடம் இல்லவே இல்லை...

ஆனால்...

என் வார்த்தைகள் உங்களின் அந்திமத்திற்கு உங்களை ஒரு வேளை கூட்டிச் செல்லக் கூடும். தனியே வந்து தனியே செல்ல வேண்டிய பயணத்தினூடே இருக்கும் இறுக்கங்களை உடைத்துப் போடக்கூடும், உங்களின் பெயர் கடந்து, தொழில் கடந்து, பாலினம் கடந்து, உலகத்தின் எல்லா கோட்பாடுகளையும் கடந்து, தடைகளை எல்லாம் உடைத்துப் போட்டு உங்களுக்குள் இருக்கும் என்னையும், எனக்குள் இருக்கும் உங்களையும் அடையாளப்படுத்தக் கூடும். அப்படியான அடையாளப்படுத்துதலில்...

என் பரிசுத்த அன்பும் உங்களின் பரிசுத்த அன்பும் நான், நீ என்னும் எல்லைகளை உடைத்து விட்டு அன்பு என்னும் பெரும் உணர்வாய் அலை அலையாய் இந்தப் பிரபஞ்சப் பெருவெளியெங்கும் பரவி சிவமாய் விசுவரூபமெடுத்து நிற்கக்கூடும். இந்த அன்பு சிவமாக, சிவம் அன்பாக...பேரானந்தத் தாண்டவமொன்று இந்த பிரபஞ்சமெங்கும் நிகழக் கூடும்.

சிவம் என்னும் வார்த்தை உங்களின் எனதின் ஆதி உணர்வைக் கிளறக்கூடியது.சிவம் என்பது பெயர் அல்ல. சிவம் என்பது பொருள் அல்ல. சிவம் என்பது உருவம் அல்ல. சிவம் என்பது மனிதரல்ல....சிவம் என்பது கடவுள் அல்ல....

சிவம் என்பது இந்தப் பிரபஞ்சமெங்கும் பரவிக் கிடக்கும் ஒரு உணர்வு நிலை. பிரபஞ்சத்தோடு நமக்கு தொடர்பு இல்லாமல் எப்படி இருக்கும். இந்த பேரியக்கத்தின் ஒரு நிலைத்தோற்றம் தானே நாம்...! சிவம், சிவம் என்று சொல்லி சொல்லி...ஒற்றை முனையில் நினைவினை மடக்கி உள்ளுக்குள் செல்ல புறத்தின் தொடர்பறுந்து போகிறது. வாழ்க்கையை வாழ எத்தனை முரண்களைச் சந்திப்பது? இருப்பவனாக இருப்பதற்கு ஓடிக் கொண்டே இருக்கும் போது ஏற்படும் அயற்சியின் முடிவில் ஏற்படும் விரக்தியை மிகச்சரியாய் இப்படி எழுதி முடித்த பின்பு மறுபடியும் என் ஓட்டம் தொடங்கியாக வேண்டும்...

என் கடவுள் தேடலும், நான் புரிந்த வாழ்க்கையும் எனக்கு நிம்மதியை பெரும் மோட்சத்தைக் கொடுக்க காத்துக் கொண்டிருக்க...என்னை பக்குவப்படுத்த என் லெளகீகமும் வெறித்தனமாய் காத்துக் கொண்டிருக்கிறது. சுற்றிச் சுற்றி ஆயிரம் பேர் இருந்தாலும், என்னுடன் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் என் உள்ளமை...., இங்கே நான் நான் என்று எழுதிக் கொண்டிருக்கும் உணர்வு...உடல் மரணித்த அடுத்த நொடியில் என்னாகும்? யோசித்துப் பார்த்தால் நிறைய பதில்கள் உங்களைப் போல எனக்கும் கிடைக்கின்றன...

ஆனால்....மெளனமும், நிதானமும், தெளிவும்....மட்டுமே என்னோடு இப்போது மிச்சமிருக்கின்றன. நான் யாதொரு மதத்தையும் சாராதவன் இப்போது... எனக்கு எந்த ஒரு அடைப்புகளும் இல்லை, இந்த சமூகத்தின் எல்லா கோட்பாடுகளையும், அறிவுகளையும், தத்துவங்களையும் நான் புறக்கணிக்கிறேன்....

நான் சுதந்திரமானவன்!!!!

ஆமாம்....அடித்தால் அழும், அணைத்தால் சிரிக்கும் குழந்தையின் சுதந்திரத்தை ஒத்தது என் சுதந்திரம். புத்தகத்துக்குள் நான் இனி வாழ்க்கையை தேடப்போவதில்லை, சக மனிதர்களின் வாயிலிருந்து எனக்கான சந்தோசத்தை இனியும்  திருடப் போவதில்லை...

நான் இருக்கிறேன்....அவ்வளவுதான்...!!!!!


தேவா. STuesday, February 19, 2013

ஈழப்படுகொலைகளும்....இந்தியாவின் கூட்டு மனசாட்சியும்...!எதையும் இங்கே நிறுவி பேசுவது கடினமாக இருக்கிறது. எல்லா செய்திகளையுமே மேம்போக்காக பார்ப்பவர்களாகவும், பொழுது போக்குக்காய் பேசுபவர்களாகவுமே மிகையான பேர்கள் இருப்பதால் ஆழமான உட்விசயங்களில் இருக்கும் சத்தியங்கள் ஆழத்திலேயே செத்துப் போய்விடுகின்றன. நம்மைச் சுற்றி நிகழும் செயல்களின் சரி தவறுகளை ஆராய எதையும் சாராத மனோநிலையில் இருக்கவேண்டும்.

தூக்கு தண்டனைகள் தொடர்ச்சியாக நிறைவேறிக் கொண்டிருக்கும் ஒரு காலச்சூழலில் தூக்கு தண்டனைகள் கூடாது என்று சொல்லும் இடம் மிகப்பெரிய புரிதலோடு கூடிய தெளிவு நிலை. தண்டனையே வேண்டாம் என்பதுதான் தவறு. அதுவும் நமது தேசத்தில் விதிக்கப்படும் தூக்கு தண்டனைகள் வேடிக்கையானவை. பெரும்பாலும் அரசியல் உள்நோக்கம் கொண்டவை.

அஜ்மல் கசாப்பை தூக்கிலேற்றி விட்டதோடு தீவிரவாதத்தின் அடிவேரினை இந்திய தேசம் வேரறுத்து விட்டது என்று நீங்களும் நானும் நம்பிக்கொண்டு ஒரு சூப்பர் ஹீரோவாக இந்தச் செயலை செய்தவர்களை நாம் பார்க்கிறோம் அல்லவா? அஜ்மல் கசாப் இந்த தேசத்துக்குள் வந்து அத்தனை கொலைபாதகச் செயல்களையும் செய்ய காரணமாயிருந்தவர்கள் யார்? அந்த சம்பவத்தின் ஆணிவேர் என்ன என்று எல்லாம் இந்தியாவிற்கு தெரியாமலா இருக்கிறது?  இருப்பினும் பணத்திற்காய், இறைவனின் பெயரைச் சொல்லி அவனின் வறுமையை மூலதனமாக்கியவர்களுக்கு இரையாகிப் போன அஜ்மல் கசாப்....

படுகொலை செய்து அத்தனை பேரை கொன்ற போது ஒரு கொடூர மிருகமாய் தானிருந்தான். மிருகத்தை, கொடியவனை எதிரியை களத்திலேயே அழிப்பது போர் மரபு.. அங்கேயே அவன் சுடப்பட்டிருந்தால் மிருகத்தை கொன்றவர்களாயிருப்போம்...ஆனால் அவனை உயிரோடு பிடித்ததின் நோக்கம் அவன் எந்த அமைப்பைச் சார்ந்தவன்? யார் விட்ட அம்பு...? என்று அறியும் பொருட்டுதானே..? எல்லாம் அறிந்த பின்... தவறை உணர்ந்து கடைசிவரை ஏதோ ஒரு இருட்டு அறையில் தண்டனையாய் உயிரோடு வாழ ஆசைப்பட்டவனை நாம் தூக்கிலேற்றி விட்டோம். 

மிருகமாய் இந்தியாவிற்குள் வந்தவன் மனிதனாய் செத்துப் போனான்.

நூறு பேரைக் கொன்றவனைக் பிடித்து சித்திரவதைகள் செய்து விசயத்தை எல்லாம் கேட்டுக் கொண்டு அவனைக் கொல்லாமல் விட நாம் என்ன மடையர்களா? ரத்தத்துக்கு ரத்தம். பழிக்குப் பழி.. கொலைக்கு கொலை என்னும் நியாயத்தோடு அவனின் கல்லறையில் நீதி தேவதையை புன்னகைக்கச் செய்தோம்.

அம்பு செத்துப் போக எய்தவனை பற்றிய அக்கறை இல்லாமல் அண்டை நாட்டுடன் சுமூக உறவுக்காய் இன்னமும்  கொடுக்கும் அரசியலை யார் தூக்கில் போடுவது..? அஜ்மல்கசாப்பை கொன்றது நியாயம்தான் என்ற நமது கூட்டு மனசாட்சிக்கு இன்னும் அரிப்பெடுக்க...

அதை சரி செய்ய அப்சல் குருவின் மரணம் நமக்குத் தேவைப்பட்டது. அஜ்மல் கசாப்பை கண் எதிரே கண்டோம்...துப்பாக்கியோடு அவன் செய்த கொலைகள் அவனது தூக்கை நம்மிடம் நியாயப்படுத்தி இருந்தன, ஆனால் வாதாட வாய்ப்பளிக்கப்படாமல் செத்துப் போன அப்சல் குருவின் இன்னொரு பக்கத்தை, ஆங்கில நாளிதழுக்கு  அவர் கொடுத்திருந்த பேட்டியை படித்தபோது உணர முடிந்தது. அப்சல் குருவை தூக்கில் போட்டது சரி என்று என்னிடம் பேசிய அனேகர் அவரைப் பற்றிய முழுவிபரத்தையும் வாசிக்காதவர்களாகவே இருந்தார்கள். சரி தவறுகளை யார் முடிவு செய்கிறார்கள் நமது தேசத்தில்....? என்ற பயம் எனக்குள் ஏற்பட்டு...பலமிக்க அரசியல்வாதிகள் நினைத்தால் ஊடகங்களின் துணையோடு யாரை வேண்டுமானாலும் தீவிரவாதியாய் சித்தரித்து விடலாம்.. என்ற அச்சம் எனக்குள் தோன்றியது.

வழக்கறிஞர்கள் யாரும் வாதாட முன்வராமல், வழக்கினை ஏற்றவரும்...அழிச்சாட்டியமாய் விட்டு விட...இந்திய கூட்டு மனசாட்சி....மீண்டுமொரு கழுத்தை நெறித்து நீதியை நிறுவிக் கொண்டது.

என் தேசத்திற்கு ஊறு விளைவிக்கும் எவனொருவனையும்...விட்டு விடமாட்டேன் கொன்று போடுவேன்... என்பது நமது வீர மரபு. கொலைகள் யுத்தக் களத்தில் நிகழும் போது அது வீரமாகிறது. தண்டனைகள் என்ற பெயரில் பல வருடங்கள் கழித்து ஒருவனை சாகடித்து தேதி குறித்து விடியற்காலையில் கொல்லும் போது அது வக்கிரமாகிறது.

எந்த அநீதிக்கும் நான் நியாயம் கற்பிக்க இங்கே எழுதவில்லை. என் கேள்வி எல்லாம் நீதி என்பது மனிதர்களை செப்பனிடுவதற்கா இல்லை சாகடிப்பதற்கா?

இப்படி ஒரு மனோநிலையில் நான் எழுதினாலும்....டெல்லி கற்பழிப்பு வழக்கில் பிடிபட்டு இருப்பவர்களை அந்தப் பெண் இறந்த அன்றே தூக்கில் போட்டால் என்ன என்று கூட எனக்குத் தோன்றியது. கையும் களவுமாய் பிடிபட்டு ஒரு கொடிய மரணத்தை நிகழ்த்திய அரக்கர்களை...நமது தேசத்தின் நீதி என்ன செய்யும் தெரியுமா? தண்டனைகள் ஏதும் கொடுக்காமல்...ஒரு 30 வருடம் அவர்களை மரணக் கொட்டடியில் வைத்து அவனை மகாத்மாவாக்கி பிறகு கொல்வார்கள். இது எப்படி சரி என்று எனக்குத் தெரியவில்லை...

இந்தக் கட்டுரை எந்தவித கருத்தையும் வலியுறுத்தி நகராமல்...ஒரு மத்திம நிலையில் மத்தியான நேரத்தில் சாலை கடக்கும் எருமை மாடாகவே நகரட்டும்.  சரி தவறுகளை வாசிப்பவரின் மனோநிலைக்கும் தர்மத்திற்குமே நான் விட்டு விடுகிறேன்.

1993 நடந்த கண்ணி வெடி தாக்குதலை செய்த சந்தனக்கடத்தல் வீரப்பனுக்கு உதவிகள் செய்ததற்காக நான்கு பேரின் முன்பு இப்போது தூக்குக் கயிறு தொங்கிக் கொண்டிருக்கிறது. அசுரகதியில் வழக்கை விசாரித்து, இவ்வளவு சீக்கிரம் தீர்ப்பை வழங்கி நீதி வழங்க காத்திருக்கும் சத்தியத்தை கண்டு எனக்கு சிரிப்புதான் வருகிறது..?

ஓய்வு பெற்ற நீதியரசர் ஐயா கிருஷ்ண அய்யர் மரண தண்டனைகள் கூடாது என்று ஏன் சொல்கிறார் என்று அறிய அவர் எழுதிய புத்தகத்தை ஒரு முறை வாசித்து விட்டும், உலக நாடுகளில் மிகையானவை எல்லாம் ஏன் தூக்கு தண்டனை கூடாது என்று சொல்லி அதை நிறுத்தி விட்டன...என்பன போன்ற விடயங்களை எல்லாம் அறிந்து கொண்டும்...பிறகு கருத்துக்களை கூறுங்கள்...

அது போகட்டும்....

சத்திய புருசனாய் தன்னை வர்ணித்துக் கொண்டு நியாயத்தை பேசும் இந்திய கூட்டு மனசாட்சி எங்கள் பிள்ளையை, பச்சைப் பாலகனை,பெற்றோரை விட்டு, உறவுகளை இழந்து தனித்திருந்த எங்கள் செல்வத்தை கொடுமைகள் செய்து, ....இரக்கமில்லாமல் கொன்று போட்டதற்கு என்ன கருத்து தெரிவிக்கப் போகிறது...?

பிரபாகரன் உனக்கு எதிரி..., எங்கள் அண்ணன், தம்பிமார்கள் என்று வயது வந்த எத்தனையோ பேரை நீ கொன்றாய் சரி...., பிஞ்சுகள் என்ன பாவமடா செய்ததது பாதகனே...? என்று அரக்கன் ராஜபக்சேயைப் பார்த்து என் இந்திய தேசம்  ஏன் கேள்வி கேட்காமல் கொலைகாரனுக்கு பூரண கும்பம் வைத்து மரியாதை செய்கிறது...?

பிஸ்கட் வாங்கிக்  கொடுப்பவன் எதிரியென்று அறிந்தும் அதை வாங்கி உண்ட பிஞ்சை கொல்ல எப்படியடா உங்களுக்கு மனம் வந்தது...? என்று சத்தியம் பேசும் தேசம் ஏன் ஒரு கண்டனக்குரல் கூட எழுப்பவில்லை...?

அழுதாயா பிள்ளையே...? நம் இனம் அழுந்து போயிற்று, நமது விடியல் எரிந்து போயிற்று என்று....புலம்பினாயா மகனே...? உனக்கு உறக்கம் வந்ததா ஐயா? உறக்கத்தில் கொடுங்கனவு கண்டு தாயின் அரவணைப்பு தேடி அலறி எழுந்து... அரக்கர்களின் இயந்திரத் துப்பாக்கிகளைக் கண்டு ஒடுங்கிப் போனாயா செல்வமே ? 

என்ன செய்து விடுவான் இந்தப்  பாலகன் என்று நீ கொன்று போட்டாய் அரக்க இலங்கையே என்று ஏன் நீதி பேசும் இந்தியா கேட்கவில்லை...? 100 பேரைக் கொன்றான் என்று நீ அகப்பட்ட ஒருவனை கொன்று நிரூபித்துக் கொண்ட உன் வீரத்துக்கு ஆண்மையான குரல் கூடவா இல்லை...?

லட்சங்களில் உயிர்களைக் குடித்த அரக்கனை கண்டித்துப் பேச...ராஜாங்க தொடர்புகளை அறுக்க.. திரணியற்றுப் போன நீ....பிள்ளைப்பூச்சிகளைக் கொன்று விட்டு எங்களிடம் நீதி பேசுகிறாய்....

தூக்கு தண்டனைகளை விதித்து நீதியை நிறுவிய உன் இரத்தைக் கைகள்தான்....பாலகர்களைக் கொன்ற அரக்கர்கர்களொடு கை குலுக்கி சர்வதேச சமூகத்தின் மேன்மை பற்றியும் பேசுகிறது...! 

மன்னிப்பதிலும், தண்டனை வழங்குவதிலும் மிகுந்த கருணை கொண்ட ஒரு தேசமே புனிதர்கள் வாழும் தேசமாகிறது...

நாம் எந்த மாதிரியான தேசத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்..? என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்...! 


தேவா. SSunday, February 17, 2013

சாத்திரம் பேசுகிறாய்....கண்ணம்மா...!எல்லாக் கதைகளும் மழையில் அழிந்த அலங்காரக் கோலங்கள் போல காணாமல் போய்விடுகின்றன. வாசம் வீசும் மல்லிகையின் நறுமணத்தை காற்று எப்போதும் களவாடிச் சென்று விடுகிறது. தெருக்களில் ஊர்ந்து செல்லும் எறும்புகளின் வாழ்க்கையிலும் காமமுண்டு, பசி உண்டு, இருப்பிடமுண்டு.... கோபமுண்டு... என்று அறிந்த பொழுதில் இங்கே நமக்கென்று விதிக்கப்பட்டதை விஸ்தரித்துப் பார்த்து அர்த்தம் கொள்வது அறியாமைதானே...?

யோசித்தபடியே...

பத்மாவின் மீது படர்ந்திருந்தேன் நான்.  இருவரின் உடலுக்குள்ளும் காமம் கிளர்ந்தெழுந்து உஷ்ணமாய் இருந்த அந்தச் சூழலில் இருவருக்குமே இந்த உலகத்தைப் பற்றிய கவலை ஏதுமில்லாமல் இருந்தது. கட்டுப்பாடுகளை எங்களுக்குள் பரவி இருந்த தீ எரித்துக் கொண்டிருக்க..காதலை இங்கே வகைப்படுத்தத் தெரியாத ஒரு நிதானம் எங்கள் நிர்வாணத்தில் ஒளிந்து கொண்டிருந்தது.

பனியனைக் கழட்டுடா...என்று "ட்டுடா" விற்கு அவள் கொடுத்த அழுத்ததிற்கு பின்னால் ஒரு நாவல் எழுதுமளவிற்கு காமம் மிகுந்து கிடந்தது. அவள் சிணுங்கிக் கொண்டே பனியனைப் பிடித்து இழுத்தாள்.....

முழு நிர்வாணம் என்பது கருத்துக்கள் அற்ற நிலை. நிறமற்ற வர்ணக் கூட்டு அது. புத்திகளை எரித்து விட்டு ஞானக்குதிரையிலேறி ஐன்ஸ்டீனின் சார்புக்கொள்கையை மெய்ப்பிக்கும் உலகுக்குள் சப்தமற்ற பெரு இரைச்சலோடு நுழைவது. நிர்வாணத்தின் புனிதத்தை எடுத்துச் சொல்லத்தான் உடையற்று இருப்பதை நிர்வாணம் என்று ஆன்மீகம் சொல்லியிருக்குமோ..?

உடையற்று இருப்பதை அம்மணம் என்றும் சொல்லலாம். அம்மணம் என்று சொல்லும் போது மனதில் தோன்றும் ஒரு வக்ரம் நிர்வாணம் என்று சொல்லும் போது தோன்றுவதில்லை. எல்லா வார்த்தைகளுக்குமான காட்சி விரிவாக்கங்கள் நமது மூளையின் சேமிப்பு பகுதியில் நமது புரிதலுக்கு ஏற்ப சேமிக்கப்பட்டிருக்கிறது. வார்த்தைகளில், நாம் காணும் காட்சிகளில் பெரும்பாலும் தவறு இருப்பது இல்லை, அதை ஒப்பீடு செய்யும் நமது புரிதலே இது தவறு இது சரி என்று நமக்குச் சொல்கிறது. நிர்வாணம் என்பது சுதந்திரம். எதையும் கருத்தில் கொள்ளாத நிலை. மனம் நின்று போக செயல் மட்டுமே நிகழும் ஒரு புனிதம். காமத்தில் இது எளிதாய் பிடிபடும். காமம் கடந்தும் நிர்வாணமாய் இருக்க முடியும். உடை இல்லாத நிர்வாணம் என்பது ஒரு சூட்சும குறியீடு. ஆடை அணிகலன்களோடு, சக்கரவர்த்தியாய் ஒரு தேசத்தை கூடா நிர்வாண நிலையில் ஆட்சி செய்ய முடியும்.

நிர்வாணம் என்பது மனமற்ற இயக்கம். 

 கலவியின் போது உடையில்லாத உடல்கள் நிர்வாணம் என்றே அறியப்பட வேண்டும்.  ஆணும் பெண்ணும் உடையற்று உடலைப் பார்க்கும் போது..புத்திக்குள் பற்ற வைக்கப்படும் நெருப்பு பிரபஞ்சத்தின் ஆதியில் சலமனற்று இருந்த சூன்யத்தில் ஏற்பட்ட முதல் அசைவினை ஒத்தது. முதல் சலனம்.

இயக்க முரணில் ஒன்று இந்த திருமண பந்தம்....சரியா...?

பத்மா என் தோளில் கை போட்டு இறுக்கியபடியே என்னை உலுக்கினாள்...எனக்குள் சமூகம் விதைத்திருந்த குற்ற உணர்ச்சி மெல்ல எட்டிப்பார்த்தது..? நான் மெளனமாயிருந்தேன்...!

என்ன சுரேஷ்.. பேசாம இருக்க...?

அவள் முன் நகர்ந்து என்னை அழுத்தி உதடு கடித்துக் கேட்க....நாம தப்பு செய்றோமா..? பத்மா... சாரி சாரி நான்....தப்பு செய்றேனா...? தடுமாற்றமாய் புரண்டு படுத்து.....விட்டத்தைப் பார்த்தபடி பெருமூச்சு விட்ட போது என் மீது ஏறிப் படுத்துக் கொண்டாள் பத்மா...

" எங்கே உங்களின் அளவுகோல்கள்
சரியாய்ப் பிரிக்கின்றன...
காதலையும் காமத்தையும்...?
கோடரியின் முனையில் பட்டுத் தெறிக்கும்
மரமொன்று விறகென்று
எரியூட்டப்பட்ட பின்பு...
மரமுமில்லை..விறகுமில்லை...
சாம்பல் அல்லவோ மிச்சம்...
அங்கே...."

நீதானே கவிதை எழுதினாய்....? என்று என் நெஞ்சினில் தன் விரல்களால் எழுதிக் கொண்டே கேட்டது பத்மா. திருமணத்திற்கு முன் காமம் தவறென்று யார் சொன்னது....? திருமணம் என்பதே நம்பிக்கை இல்லாதவர்களின் ஏற்பாடுதானே..?

" கண்ணகிகள் கற்பு பற்றி பேசிப் பேசி..
திருமண பந்தத்துக்குள் தேடும் காமத்தை
மாதவிகள் காதலை மெளனித்து..மெளனித்து...
காமத்துக்குள் எரித்துப் போடுகிறார்கள்
கண்ணகிகளை....

சொல்லி விட்டு சப்தமாய் சிரித்த பத்மாவைப் பற்றி அதிகம் நீங்கள் தெரிந்து கொள்ளாமல் இருப்பதே நல்லது. ஏனென்றால் உங்களுக்குள் குடித்தனம் நடத்தும் கலாச்சார குட்டிச்சாத்தான்கள்.. கடவுள் வேசமிட்டுக் கொண்டு அவளின் குரல்வளையை நோக்கி வேகமாய் பாய்ந்து விடக்கூடும்....! நீங்கள் நியாங்களைப் பேசினால் அவள் இயல்புகளைப் பேசுவாள், நீங்கள் ஒழுக்கத்தைப் பேசினால் அவள் இயக்கத்தைப் பற்றி பேசுவாள். நீங்கள் சந்தோசத்துக்கு எல்லைகள் உண்டு என்றால் அவள் ஆர்க்கிமிடிஸாய் யுரேகாவின் உச்சம் தெருவில் அம்மண ஓட்டமானது தவறா என்று கேட்பாள். சரி தவறுகள் என்பது தனி மனித வசதிகள் என்று அவள் கூறுவதை நீங்களும் நானும் மறுக்கவே முடியாது. அதனால் அவளை கேள்விகள் கேட்டு அவளின் பதிலில் உங்களின் சுயத்தைப்பார்த்து நீங்கள் மூர்ச்சையாகாதீர்கள்.

திருமணம் என்பது 1000 பேரை அழைத்து எனக்கு நீ... உனக்கு நான் என்று உறுதி செய்து கொண்டு.. எல்லோர் முன்னாலும் இவன் என் கணவன், நான் இவனது மனைவி என்று கூவிக் கூவிச் சொல்லி விட்டு....நேரம், காலம் பார்த்து உடையவிழ்ப்பது...?

என்ன சரியா கவிஞரே....? பத்மா என்னை கேட்ட போது எனக்குச் சிரிப்பு வந்தது....

ஏண்டி லூசு...உன் அளவிற்கு எனக்கு எழுத வராது என்பதால் இப்படி ஒரு வஞ்சப்புகழ்ச்சியா..?

" கணிணி தட்டும்
உன் இயந்திர விரல்களில்
இருந்து
எப்படி பிறக்கிறது
இரத்தமும் சதையுமாய்
இத்தனை கவிதைகள்...? "

நான் ஆச்சர்யமாய் அவளிடம் பலமுறை கேட்டிருக்கிறேன்...! 

வலிகளோடு கூடி
வலிகளைச் சுமந்து
வலிகளோடு பிறக்கும்
வலிகள்தானே படைப்புகளென்பது....

என்று அவள் கூறிய போது அவளின் வலிகளின் உச்சத்திற்கு சாட்சியாய் வெளி வந்துள்ள அவளின் புத்தகங்கள் என் முன் காட்சிப்படுத்தப்பட்டு போகும். என்னால கல்யாணம் இப்போ பண்ணிக்க முடியாது பத்மா....நான் வாழ்க்கையில செட்டில் ஆகணுமே....? நீ கை நிறைய சம்பாரிக்கிறன்னு சொல்லி உன்னை கல்யாணம் பண்ணிட்டு  உன் காசுல எப்டி பத்மா நான் உக்காந்து சாப்பிடுறது....? தப்பு இல்லை...?போனவாரம் கூட ஒரு தயாரிப்பாளர்கிட்ட கதை சொல்லி இருக்கேன்...கண்டிப்பா எனக்கு ஒரு பிரேக் கிடைக்கும்...அப்புறமா...

என்று நான் சொல்லி ஜவ் மிட்டாயாய்  இழுத்துக் கொண்டிருக்கும் இந்த ஐந்து வருடத்தில்...கதை கேட்ட ஒருத்தன் கூட என்னை படமெடுக்க அழைக்கவில்லை. இந்த சமூகத்தில் திறமையாளர்கள் எல்லோருக்கும் எப்படி மார்க்கெட்டிங் செய்வது என்று தெரிவதில்லை. என் திறமை என்னை மேலேற்றும்...என்ற இறுமாப்பில் அவர்களின் முதுகுத் தண்டு நிமிர்ந்தே நிற்கிறது எப்போதும்.கூழைக்கும்பிடுகளும், வணிக ரீதியான உடன்பாடுகளுக்குள்ளும் அவர்கள் நுழைவதே....இல்லை...

கழுத்தில் கடித்தவளை இறுக்க அணைத்தேன்....விதி விலக்குகளை எல்லாம் கொண்ட வாழ்க்கையில் விட்டில் பூச்சியின் சிறு நெருப்பாய் காமம் கனன்று கொண்டிருக்க... அவளை இழுத்து உதட்டோடு உதடு பதித்தேன். சூழ்நிலைகளே இங்கே எல்லாவற்றுக்கும் காரணமாக,  விதிமுறைகள் எல்லாம் வெற்று மாயைகளாக கரைந்து போய்விடுகின்றன...

" என் ப்ரியங்களை எல்லாம்
இந்த வசந்தகாலம்தான்......
சுமந்து கொண்டு திரிகிறது....
அடர் வனத்தில் 
என் அன்பைத்தான்
எப்போதும்... 
கூவிக் கொண்டிருக்கிறது
அந்த ஒற்றைக் குயில்..." 

பத்மாவுக்குள் நானும் எனக்குள் பத்மாவும் கரைந்து கொண்டிருக்கையில்..எங்களின் நீண்ட பெரு மூச்சுக்கள்  அங்கே வேதம் ஓதிக் கொண்டிருந்தன. அக்னி சாட்சியாவது ஏன் என்பதற்கொரு விளக்கத்தை ஏந்திக் கொண்டு, மஞ்சள் கயிறுகளில் முடிச்சுடும் வைபவங்களில்தான் ஒளிந்திருக்கிறது புனிதம் என்று ஓதிய சாத்தானின் கொம்புகளை முறித்து கையில் வைத்துக் கொண்டு எங்களுக்காய் காவல் காத்துக் கொண்டிருக்கின்ற கடவுளை இன்னும் சற்று நேரத்தில் நாங்கள் எட்டிப் பிடிக்கக் கூடும்....

வியர்வையில் உடல் நனைய, உள்ளுக்குள் எரியும் அக்னி உஷ்ண மூச்சுக்காற்றாய்.... திக்குகள் கடந்து பயணித்துக் கொண்டிருந்த பெரும் பிரபஞ்ச வெளியில்....யாரோ ஒருவனின் ஈமச்சடங்கில் உடலில் பற்றிய நெருப்பு பொசுங்கலாய் பயணித்து அப்போதுதான் ஜனித்து வெளித் தள்ளப்பட்ட ஒரு சிசுவின் நாசியில் முதற்சுவாசமாய் ஏற....வீறிட்டு அழுத குழந்தை ஆணா பெண்ணா என்று பார்க்கிறாள் தாதியொருத்தி.....

பிரளயத்தின் உச்சத்தில் எல்லாம் ஒடுங்கும்; எல்லாம் அடங்கும்; பிரளயம் வெறி கொண்ட குதிரையாய் திமிறிக் கொண்டிருந்தது. சப்தநாடிகளும் நின்று போக அலறலாய் ஓடும் குதிரைகளின் கனைத்தல்  இன்னும் அதிகமாக,  உக்கிரமாய் அவற்றின் வயிறு உதைத்து பிடறி தடவி, வேகத்தைக் கூட்ட சீறிப்பாயும் குதிரையின் பாய்ச்சல் போதாதென்று அதன் கழுத்தைக் கடித்து....முதுகில் அறைந்து விரட்ட. விரட்ட...

தறிகெட்டோடும் குதிரையின் கடிவாளங்கள் இறுக்கி இறுக்கி அறுபட்டே போகும் நொடியில்...பெரும் கனைத்தலோடு....பெரும் பள்ளத்தாக்கில் சீற்றமாய் பாய.....

எல்லா சப்தங்களும் அடங்க,  யாருமற்ற மயானத்தில் படிந்து கிடக்கும் சூன்ய அமைதியில்...எல்லாம் உடைந்து விழ.....

உக்கிரகாமம் உடைந்து, நொறுங்கி வடிவிழந்து.....மொழியிழந்து... பொருள் இழந்து.... உருவமற்று.....

அருவத்தில் விசிறியடிக்கப்பட்ட....
வர்ணக் கலவையிலிருந்து
உயிர்  பெற்றுக் கொள்ளும்
ஓவியத்திலிருந்து 
மீட்டப்படும் யாழிலிருந்து
பிறக்கிறது 
ஒரு...ஜீவ இசை...!

அந்த ரீங்கார இசையில் நான்  அவளாயிருந்த நேரம் எவ்வளவு....? என்று கணக்கிடமுடியாமல்....நானும் பத்மாவும் தற்காலிகமாய் செத்துப் போயிருந்தோம்....!

என் வீட்டுப் படுக்கையறையும், நானும் பத்மாவும்....கலைந்து கிடந்தோம்;  செயற்கையின் முகத்திரைகள் கிழிந்து தொங்க எதார்த்தம் அங்கே ஆஜானுபாகுவாய் அமர்ந்திருந்தது. 


திருத்தம் அழகென்று
யார் சொன்னது...?
ஒழுங்குகள் என்னும்
ஒப்பனையிட்டுக் கொள்ளும்
பொய்கள்....
கலையும் போது
எட்டிப் பார்க்கும்..
ஒழுங்கற்றதில் இருக்கிறது...
எல்லோரும் தேடும் கடவுளின்
இயல்புகள்...!

காதுக்குள் கிசு கிசுத்தபடி...கலைந்து இருந்த தலை முடியை இறுக அள்ளிக் கட்டிக் கொண்டே என் நெற்றியில் அழுத்தமாய் முத்தமிட்டவள்....

கல்யாணம் முடிஞ்சுடுச்சு....சீஃப்....கெட் அப்....!!!!!!

என்னை உலுக்கினாள்...!

கண் விழித்து அவளைப் பார்த்தேன்....

எழுந்து ப்ளேயரை தட்டி விட்டு...

"நெஞ்சு பொறு..., கொஞ்சமிரு......
தாவணி விசிறிகள் வீசுகிறேன்...............
மன்மத அம்புகள் தைத்த இடங்களில்
சந்தனமாய் எனைப் பூசுகிறேன்.............."

இசையை அறைக்குள் வழிய விட்டு விட்டு... உடை மாற்றியபடியே, கிச்சனுக்குள் சென்று நான்கு நிமிடத்தில் திரும்பி வந்தாள்...

இரண்டு கையிலும் சூடாய் காஃபி.... !!!! எழுந்து பெட்சீட்டால் சுற்றிக் கொண்டு  ஜன்னலோரமாய் இருந்த டைனிங் டேபிளில் வந்து அமர்ந்தேன்....எதிரே...பத்மா.....

சூடாய் காஃபியை உறிஞ்சிய போது அவளின் உதடுகள் என் நினைவுக்கு வந்தது....

"டேய் இன்னும் பத்து வருசம்னாலும் உனக்காக காத்து இருப்பேன்டா...  கல்யாணம்ன்றது வெறும் சடங்கு... பேருக்கு கல்யாணம் பண்ணிட்டு.... மனசுக்குள்ள ஆயிரம் பேரை நினைச்சுக்கிட்டு இருக்கறதுதான் கற்புன்னு இந்த சமூகம் சொன்னிச்சுனா....நான் கற்புக்கரசி இல்லப்பா..., அதுக்கு கல்யாணம் பண்ணிக்காமலேயே தாலின்னு ஒண்ணு கட்டிக்காமலேயே எனக்கு பிடிச்ச ஒண்ணோட இருந்துட்டு செத்துப் போக நான் ரெடி...." 

அவள் பேசி கொண்டிருந்தாள்...

சாத்திரம் பேசுகிறாய், - கண்ணம்மா!
சாத்திர மேதுக் கடீ!
ஆத்திரங் கொண்டவர்க்கே, - கண்ணம்மா!
சாத்திர முண்டோ டீ!
மூத்தவர் சம்மதியில் - வதுவை
முறைகள் பின்பு செய்வோம்;
காத்திருப் பேனோ டீ? - இதுபார்,
கன்னத்து முத்த மொன்று!

நான் பாரதியை புத்திக்குள் புரட்டிக் கொண்டிருந்தேன்....!


தேவா. SThursday, February 14, 2013

நீ காத்திருக்கலாம்..!நீ காத்திருக்கலாம்..
கடைசி பேருந்துக்காய்..
பின்னிரவில் காத்திருக்கும்....
ஒரு பயணியைப் போல
இதுவரையில் நான் எழுதாத
உனக்கான கவிதைக்காக...;
நானும் உனக்காக ஒரு கவிதையை
எழுதி அனுப்பிவிட்டு
என் காதலை உறுதிப்படுத்தவும் கூட...
செய்யலாம்...,
ஆனால்...
எதுவமற்று இருக்கையில்
எதிர்ப்பார்ப்புகளோடு
நகரும் இந்த கனத்த நிமிடங்களை...
யார்தான் மீட்டெடுத்துக் கொடுக்க முடியும்..?


தேவா. STuesday, February 12, 2013

ஆதலினாற் காதல் செய்வீர், உலகத்தீரே!காதலிக்கும் அத்தனை பேரும் ஒரு ஆணின் வடிவிலும் பெண்ணின் வடிவிலும் அந்த அற்புத சக்தியை உணர்ந்திருக்கும் போது காதலர் தினம் கொண்டாடி விட்டுததான் போகட்டுமே... என்று நான் சொல்லி முடித்த மூன்றாவது விநாடியில் உங்களுக்குப் பிள்ளைகள் இருந்தால் அவர்களை காதலிக்க விடுவீர்களா? அவர்களின் காதலை ஆதரிப்பீர்களா என்று முன்னூறு உதடுகள் என்னைச் சுற்றி  முணு முணுப்பதின் பின்னணியில்... ஐயம் அக்மார்க் க்ளியர் பெர்சனாலிட்டி என்று விளம்பரம் செய்து கொள்ள முனையும் மனோபாவம் இருப்பது எனக்கு தெரியாமலில்லை..

காதலை ஏதாவது செய்து தடுத்து விடலாம் என்று நினைக்கிறீர்களா? தடுத்து நின்று விட்டால் அது எப்படி சார் காதல் ஆகும்..? இப்போது யாரும் காதலிப்பதில்லை அது வெறும் காமத்திற்கான முன்னேற்பாடுதான் என்று நீங்கள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே... உங்களின் எனதின்  காதல் புகைவண்டிகள் காம ஊருக்குள் செல்லாமல் தான் பயணித்தது என்பதை உறுதி செய்து கொள்ளவும் வேண்டியிருக்கிறது. முத்தமிடுதலை ரகசியமாய், கலவரத்தோடு நாம் செய்யும் போது சாதாரண முத்தமிடுதல் கூட காமத்தின் உச்சமாய் பார்க்கப்படுகிறது நம்மால்...

காமமே பொதுப்படையாக சொல்லிக் கொடுக்கப்படவேண்டும் என்ற புரிதலை நோக்கி உலகம் நகர்ந்து கொண்டிருக்கையில் நீங்கள் காதலர் தினம் கொண்டாட வேண்டாம் என்று சொல்வது எப்படி சரி..? வேண்டுமென்றால் எப்படி காதலர் தினம் கொண்டாடுவது என்று கற்றுக் கொடுங்கள்... என்று நான் சொல்வதும் உங்களுக்கு சரிப்பட்டு வராது, ஏனென்றால் ஏதேனும் ஒன்றைக் கற்றுக் கொடுக்க அதன் அடிப்படை தெரிந்திருக்க வேண்டும்தானே...? காதல் என்று சொல்லவே கூச்சப்படும் நமக்கு எப்படி காதல் தெரியும்..? இப்போது  கூட நான் காதல் ... காதல் .. காதல் என்று சொல்லிக் கொண்டிருக்கையில் பலரின் தலைக்குள் காமம்.. காமம்.. காமம்.... என்றே பலமாய் ஒலித்துக் கொண்டிருக்கும்.

கற்றுக் கொடுக்க அடிப்படையில் ஒரு புரிதல் வேண்டும் ஆனால் மறுப்பதற்கு எந்தவித அறிவும் தேவையில்லை. ஒரு விசயத்தை மறுக்க நீங்கள் அந்த விசயத்தில் எக்ஸ்பர்ட்டாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை. உங்களுக்குள்ளும் எனக்குள்ளும் இருக்கும் முரண்கள் மட்டுமே போதும். இறுக காதுகளை பொத்திக் கொண்டு.. நீ சொல்வதை நான் கேட்க மாட்டேன்..... உன் வார்த்தைகளைக் கடந்து உன்னை நான் உற்று நோக்கமாட்டேன்.. நான் ஒரு வட்டத்திற்குள் சுற்றி வரும் வண்டு... இப்படியே பேசிப் பேசி மூர்க்கமாய் பொதுவில் மறுத்ததையெல்லாம் கள்ளத்தனமாய் யாரும் காணாவண்ணம் செய்து விட்டு....

அமர்க்களமாய் ஒரு நாள் செத்துப் போய்விடலாம் என்ற பிடிவாதம் நமக்கு. ஒரு பெண் ஆணை காதலிப்பதையும், ஆண் பெண்ணை காதலிப்பதையும் அடிப்படையில் இங்கே மதத்தை இறுக்கமாய் கட்டிக் கொண்டு ஒழுக்க நெறிகளைப் பற்றி பேசுபவர்கள் வேகமாய் மறுக்கிறார்கள். காதல் என்பது காலை 7:30ல் இருந்து 9:40க்குள்  ஒரு ஸ்விட்ச் போட்ட உடனே வரவேண்டும்...ஸ்விட்ச் ஆஃப் செய்து விட்டால் போய்விட வேண்டும் என்னும் ரீதியில் காதலுக்கு வரையறை கொடுப்பவர்களை பார்த்தால் எனக்கு சிரிப்புதான் வருகிறது.......!

இன்னும் சொல்லப்போனால் காதல் என்பது இவர்களின் பாஷையில் சர்வ நிச்சயமாய் ஆண், பெண் சம்பந்தப்பட்டது மட்டுமல்ல.. இந்த ஆணுக்கு இந்த பெண்ணிடம் மட்டுமே வரவேண்டும் என்ற கொள்கை வேலிகளை போட்டுக் கொண்டதும் கூட. காதலை காதலாய் கொண்டிருந்தால் இந்த கொள்கை வேலிகளும் கட்டுப்பாடுகளும் தேவையற்றது என்பதை இவர்கள் ஒரு போதும் உணர்ந்திருக்கவில்லை...

ஏனென்றால் இவர்களின் காதல் புலிப்பாய்ச்சலில் ஒரு கணத்திற்குள் காமத்தை எட்டிப்பிடிக்கும் பிண்டங்கள் தழுவும் காமத்தை பறிறியே எப்போதும் சிந்திக்கிறது. காதலை உணர்வாய் உள்ளுக்குள் தேக்கி வைத்திருக்க இவர்களுக்குத் தெரியாது. நேசிக்க இவர்களுக்கு இவர்கள் சொல்படி கேட்கும் ஒரு பொம்மை ஒன்று எதிரே இருக்கவேண்டும். அந்த பொம்மை இவர்கள் சொல்படி மட்டுமே கேட்கவேண்டும்.. அந்த பொம்மை சொல்வதை இவர்கள் கேட்பதாய் உறுதியும் செய்து கொள்வார்கள்.

அவ்வளவுதான் காதல்...முடிந்து போயிற்று...! ஒருவரை ஒருவர் இரும்புச் சங்கிலியால் பிணைத்துக் கொண்டு நிபந்தனைக் கத்தியை ஒருவர் கழுத்தில் ஒருவர் வைத்துக் என்னை உனக்குப் பிடித்தால் உன்னையும் எனக்குப் பிடிக்கும். உன்னை எனக்கு பிடிக்க வேண்டுமெனில் நீ நான் சொல்வதை எல்லாம் கேட்க வேண்டும் என்று மாறி மாறி சுயத்தை அழித்துக் கொள்ளும் செயல்தான் இங்கே காதல் என்று பெரும்பாலும் அறியப்படுகிறது.

எனது பருவத்தில் எனக்குள் எட்டிப்பார்த்த காதலை முடக்கிப் போட்டது என்னைச் சுற்றியிருந்த சூழல்தானே அன்றி காதல் ஒன்றும் புரிதலோடு யாரோ தடுத்ததால் மடங்கிக் கொள்ளவில்லை. ஆணும் பெண்ணும் காதலிப்பதை தவறென்று சொல்லிக் கொண்டிருக்கும் இந்த சமூகத்தின் இலக்கியங்கள் எல்லாம் திளைக்கத் திளைக்க காதலைப் பற்றி நிறையவே பேசி இருக்கின்றன. அறிவு சார்ந்து காதலை வகைப்படுத்தி முன்னெடுத்துச் செல்ல வழிகாட்ட வக்கற்ற மூத்த சமூகம்தான் இன்று காதலை தவறென்று கற்பித்து, காதலுக்கு என்று ஒரு தினம் வைத்து கொண்டாடுவது பெருங்குற்றம் என்று கொடிபிடித்து  அதை எரித்துப் போட முயலுகிறது.

திருமணம் என்னும் பந்தம் புனிதமானது என்று சொல்லி நாம் நிறுவ காலம் காலமாய் முயன்று கொண்டிருக்கிறோம் ஆனால் சமீபத்திய "சொல்வதெல்லாம் உண்மை" போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் வெளிச்சத்தில் நமது சமூகத்தினூடே இருக்கும் அழுக்குகள் வெளியே தெரியவும் தொடங்கிருக்கின்றன. நீங்கள் காதலிப்பது தவறென்று கூறி பக்குவமற்ற சில கதைகளை என்னிடம் படித்துக்காட்ட முயன்றால்.... உங்களின்  சோ கால்ட் புனித வரலாறுகளைப் பற்றியும் நான் பேசலாமா என்று உங்களிடம் அனுமதி கேட்கவும் கூடும்...! மாட்சிமை பொருந்திய என் சமூகம் காதலை குறைந்த பட்சம் ஆண் பெண் நேசித்தலுக்காய் ஒரு தினத்தை தேர்ந்தெடுத்து கொண்டாடுகிறதே என்று சந்தோசப் படாமல் அதை அடக்க நினைப்பது எந்த வகையில் சரி...? 

நான் காதலர் தினத்தை தினமும் கொண்டாடுவதுண்டு. சிலேட்டில் அனா...ஆவன்னா.. என்று எழுதிப் பழகுவது போல முன்னொரு காலத்தில் யாரோ ஒரு பெண்ணுக்காய் எனக்குள் குடி கொண்டிருந்த காதல்  காலப்போக்கில் தனது சுயரூபத்தை எனக்கு  காட்ட ஆரம்பித்தது.

அப்புறமென்ன... தூளியில் எத்தனை நாள் குழந்தையைப் போடுவீர்கள்....? எத்தனை  நாள் தான் பெரு மரமொன்று சிறு தொட்டியில் செடியாகவே இருக்க முடியும்..? ஒரு தருணத்தில் கட்டுக்கள் உடைந்துதானே போகவேண்டும்...? தொட்டிகள் எல்லாம் உடைந்து செடி மண்ணில் வேர்பதித்து பரவி நீரினை உறிஞ்சி, கிளைகளோடும், இலைகளோடும் பூத்து, குலுங்கி, வழிப்போக்கர்களுக்கு நிழல் கொடுத்து, பழம் கொடுத்து, பறவைகளுக்கு வசிப்பிடமாகி....

பிரமாண்டப்பட்டுப் போகும் நிலை அது. முதலில் பாலினம் கடந்து,  பின் மனிதம் கடந்து, விலங்குகளையும், பறவைகளையும், சிலையான கடவுளர்களையும் விட்டு நகர்ந்து, பின் உருவம் கடந்து....இயற்கையை உணர்வால் நேசிக்கத் தொடங்கிய நொடியில் காதலின் கன பரிமாணங்கள் எனக்குள் பூ பூக்கத் தொடங்கி இருந்தன 

இங்கே காதலை ஆண்கள் பெண்களிடமும், பெண்கள் ஆண்களிடமும், இன்னும் அதிகபட்சமாய் பிள்ளைகளிடமும், உறவுகளிடம் மட்டுமே எதிர்பார்த்து ஏமாந்து போகிறார்கள். கடைசிவரை இவர்களின் காதல் வளர்ந்தும் தொட்டிலில்  கிடந்து அவஸ்தைப் பட்டுக் கொண்டிருக்கிறது. காதல் என்பதின் அடிப்படை நேசித்தல். அந்த நேசித்தலை ஒரு ஆண் பெண்ணிடமும் பெண் ஆணிடமும் தான் இயற்கையின் படி முதலில் தொடங்க வேண்டும். காதல் என்பது பிரபஞ்சத்தின் ஆதி உணர்வு. தன்னை தானாய் வெளிப்படுத்திக் காணவேண்டியே பெருங்காதலில் பல்கிப் பெருகியது இந்தப் பிரபஞ்சம்.

அண்ட சராசரமும் விவரிக்க முடியாத ஒரு பிணைப்பினால் இணைக்கப்பட்டிருக்கிறது. இங்கே காதலை ஏற்றுக் கொள்ளும் நவீனத்தின் சிற்பிகளில் பலர் தங்களின் முக்காலே மூணே இஞ்ச்  கட்டுக்குள் காதலை வைத்து கொள்ளச் சொல்கிறார்கள்...! கட்டுக்குள் இருப்பது காதலைப் போன்ற ஒன்றாய்த்தான் இருக்க முடிமே இன்றி சர்வ நிச்சயமாய் அது காதலாய் இருக்க முடியாது. நான் காதலால் நிரம்பி வழிகிறேன் என்று சொல்லும் என் கலாச்சார காதலர்களே...

காதலர் தினத்து  அன்றாவது உங்கள் காதல் உங்களின் அவளை நேசிப்பது அவளின் சுதந்திரத்தை பூரணமாக்குவது என்று உறுதி பூணுங்கள்...

எப்போதும் தத்தமது காதலனை தன் சொற்படி கேட்டு நடக்க வைப்பதில்தான் உங்களின் காதல் வெற்றி பெறும் என்று நினைத்து அதற்கான யுத்திகளை கையாளுவதை விட்டு விட்டு உங்கள் அவனின் ப்ரியங்களை கண்ணியப்படுத்துங்கள்...

காதலை எப்போதும் மனதிலே சுமந்து, சுமந்து ஏதோ ஒரு உருவத்திடம் பயிற்சி எடுத்து, உருவம் தொலைக்கும் விசுவரூபத்திற்குள் நுழையுங்கள். காலங்களாய் ஓடிக் கொண்டிருக்கும் ஒரு நதியின் ஓட்டத்தை ப்ரியமாய் உள்வாங்கப் பழகுங்கள். எப்போதும் நமது வாழ்க்கையின் ஜீவனாய் இருக்கும்  சூரியனை காணவில்லையே  என்று இரவு முழுதும் படுக்கையில் புரண்டு புரண்டு உறக்கம் தொலையுங்கள்...

அதிகாலையில் சூரியனின் வரவுக்காய் இருளோடு இருளாய் எதிர்பார்த்து காத்திருங்கள்....வெளிச்சமாய் அவன் மேல் எழும்பி வருகையில் பெருகி வரும் கண்ணீரை காதலாக்கி ஆனந்தமாய் அழுது தீருங்கள்...

அடர் பனி நாளொன்றில் வீசும் குளிரோடு காது மறைத்துக் கொண்டு ஏதேனும் ரகசியங்கள் பேசுங்கள்... நாளை இரவும் நீ வருவாயா என்று கிசுகிசுப்பாய் நிலவிடம் கேட்டு வராத பதிலை மெளனமாக்கி அந்த சம்மதத்தை கவிதையாக்கி காகிதத்தோடு கரைந்து கிடங்கள்...

விடியலில் வாசல் மறித்து நிற்கும் ஒரு பூனையையும், நாயையும் கண்டு ஒதுங்கிச் செல்லாமல்.... ஹவ் ஆர் யூ டுடே..? என்று கண்கள் பார்த்து காதலாய் கேளுங்கள்....உங்களுக்கு அதிர்ஷ்டமிருந்தால் அவை தங்களின் காதலை ஏதேனும் ஒரு சப்தமெழுப்பி காட்டவும் கூட செய்யலாம்....; வாரத்தில் ஒரு நாளில் பறவைகள் சூழ்ந்த மரமொன்றுக்கு தனியே செல்லுங்கள்...உங்கள் ப்ரியத்தை மெளனமாக்கி பரவச் செய்து அங்கே பேசிக் கொண்டிருக்கும் பறவைகளின் மொழியோடு கரைந்தும் போங்கள்....

இப்படியெல்லாம் நீங்கள் மாற வேண்டுமெனில் முதலில் யாரையாவது முழுமையாய் காதலியுங்கள். முழுமையில் அங்கே சரணாகதி ஒன்று நிகழ....நான் என்னும் ஆணவம் அழிந்து போகிறது. ஆணவம் அழிந்து போக எதிரே இருப்பவரால் என்ன ஆதாயம் என்று கள்ளக் கணக்குகள் போடாமல் நேசிக்க முடிகிறது.

"காதலினால் மானுடர்க்குக் கலவியுண்டாம்
கலவியிலே மானுடர்க்குக் கவலை தீரும்
காதலினால் மானுடர்க்குக் கவிதையுண்டாம்
கானமுண்டாம்; சிற்ப முதற் கலைகளுண்டாம்
ஆதலினாற் காதல் செய்வீர், உலகத்தீரே! "

- பாரதி


அதனால் காதலை தினமும் கொண்டாடுங்கள்... காதலர் தினத்தை அதன் அடையாள தினமாக கொள்ளுங்கள்...!


தேவா. S


Saturday, February 9, 2013

ஒரு கலை படைப்பும் கமலஹாசனும்....!இதுவரை பேசப்பட்ட, பேசப்படும், பேசப்பட போகும் எல்லா விமர்சனங்களையும் விசயத்தை உள்வாங்கிக் கொள்ளும்  பாத்திரத்தின் தன்மையாய் கருதி அதன் முரண்களை என் நினைவுகளுக்குள் இருந்து அழித்துக் கொள்கிறேன். இப்போதுதான் பூத்த ஒரு முல்லைப் பூவைப் போல பளிச்சென்ற.. தன் வெண்ணிறம் காட்டி வாசனையாய் எனக்குள் பரவிக்கிடக்கிறது ஒரு அற்புத கலைஞனின் கலைப் பொக்கிஷம்.

ஒட்டு மொத்த கலைப்படைப்பின் தாக்கத்தையும் எழுத்தாக்கும் பாக்கியம் ஒன்று எனக்கும் அருளப்பட்டிருக்கிறது. ஒரு தலை சிறந்த புத்தகத்தை சட்டென்று வாசித்து முடித்து விட்டால் அது சீக்கிரம் முடிந்து போகுமே என்று பக்கம், பக்கமாய் வாசித்து ஒவ்வொரு பக்கத்திலும் லயித்து, அது கொடுக்கும் பிரம்மாண்ட பிரளயத்தை ஒத்த அனுபவத்தில் திளைத்து, திளைத்து ஊறிக் கிடந்து மெல்ல கண் விழித்து கிறக்கமாய்  உலகோடு இருக்கும் பொருளாதாய நினைவுகளை விட்டு நகர்ந்து.....

தக தக தக
தின தின தின
நக நக நக

திகிட தான தான தான
திகிட திகிட தாக்கின தான
தாக்குட தான
திக்கிட்டு தாக்கத்தா தி தி தி
தான தானகின்
தடானு தான தானகின்
தலானு தான தானகின்
தலானு

என்பது போன்ற அருவியாய் விழும் ஜதியின் ஏற்ற இறக்கங்களில் பயணித்து ஆக்ரோசமான நீரின் சுழற்சிக்குள் முங்கித் திளைத்து எழுவது போல எழுந்து அந்த நீரின் குளிர்ச்சியில் உடலோடு சேர்ந்து புத்தியும் குளிர்ந்து கிடக்க..., வாழ்க்கையின் கன பரிமாணங்களை அந்தப் படைப்பு நமக்குள் மென்மையான மயிலிறகால் வருடுவது போல வருடிக் கொடுத்து ஏதேதோ பாடம் சொல்லும் போது...

பூரணத்தின் முழுமையில் எதுவுமில்லாத ஒன்றைத் தொட்டு தடவி சூட்சுமமாய் உணர்ந்து வெறுமையில் கிடந்து, இறை என்னும் விசயத்தை ஒரு நபராக உணராமல் பிரபஞ்சத்தில் பரவிக் கிடக்கும் எல்லாமாக உணர முற்படும் வினாடிகளுக்கு முன்பு, அதாவது ஆழமான நீரின் ஆழத்தில் எங்கே தரை.. எங்கே தரை... எங்கே இதன் முழுமை, எங்கே எங்கே என்று லயித்து தரை தேடிச் சென்று தரையை முழுமையாய் தொட முயலும் போது நீரானது மீண்டும் மேலே இழுக்க நடு விரலை ஆழத்தில் வெகு ஆழத்தில் இருக்கும் அந்த தரையின் மீது அழுத்தமாய் கீறிய படியே முழுதுமாய் தொட்டு கை பதித்தும் பதிக்க முடியாமல்  மீண்டும் மேலெழும்பி நீரின் மேற்பரப்பை நோக்கி எம்பி வருவோமே... அல்லது நம்மை உந்தித் தள்ளுமே ஒரு சக்தி...

அப்படியான ஒரு மத்திம நிலையில் இப்போது மேலெழும்பிக் கொண்டிருக்கிறேன் நான். 

இறைவன் என்று தனித்து ஒன்றும் இல்லை... இருப்பது எல்லாமே இறைதான் என்று உணர்ந்து சூன்யத்தை சுகித்து வெறுமைக்குள் செல்லும் முன்பு மீண்டும் பக்தி என்னும் வாழ்வியல் அர்த்ததிற்குள் உங்களை ஒரு பாடல் தள்ளிச் செல்ல முடியுமா? கதையையும், திரைப்படத்தின் அடிப்படையையும் பற்றி வேறு ஒரு சூழலில் நாம் பேசலாம்... ஏனென்றால் விசுவரூபம் என்னும் திரைப்படம் மிக அழகான ஆழமான ஒரு கலைப்படைப்பு. மேலோட்டமாய் அங்கே விளங்கிக் கொள்ள ஒன்றுமே இல்லை...

லியானர்டோவின் ஓவியம் போல அத்தனை ரகசியங்களையும் சூட்சுமங்களையும் ஒவ்வொரு காட்சியிலும் கமல் நிரப்பி இருக்கிறார். நியூட் ஐஸ் எனப்படும் சாதரண விழிகளுக்கு அவை புலப்படாமல் போனதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை.  திரைப்படத்தின் ஆரம்பகட்ட காட்சிகளில் தோன்றும் அந்த கதக் மாஸ்டர் கமல்ஹாசன் அந்த கேரக்டரை, அந்த கருவை வைத்தே முழு நீளப்படத்தை எடுத்திருந்து இருக்கலாம் என்ற ஏக்கம் எனக்குத் தோன்றியது ஏனென்றால் அவ்வளவு நளினமானது அந்தப் பாத்திரம். நளினம் என்பது பெண்ணிற்கு மட்டுமே உரித்தான ஒரு இயல்பு அல்ல. அது அழகுணர்ச்சியின் மிகுதி. கூடலின் உச்சம். கலையின் சிகரம்.

எல்லா கலை படைப்புகளின் உச்சத்திலும் ஒரு நளினம் வெட்கத்தோடு எட்டிப்பார்ப்பதை புலனுணர்வு கடந்து பார்ப்பவர்களால் மட்டுமே உணர முடியும். ஒரு சிலையாகட்டும், ஒரு மலையாகட்டும், கதையாகட்டும், கவிதையாகட்டும், கட்டுரையாகட்டும், பாடலாகட்டும்......... அந்த படைப்பு உச்சம் தொடும் போது ஒரு வித பெண்மை என்று நாம் அறிந்து வைத்துள்ள அந்த இயல்பின் உச்சம் நளினம் என்னும் தெய்வீகத்துடன் எட்டிப்பார்க்கும்.

ஒரு பாடலில் கதக் ஆசிரியராக வருவதற்காய் பிர்ஜு மகராஜிடம் பயின்று அதை நடனம் மட்டுமில்லாமல், உடல் அசைவுகள், பேசும் வார்த்தையின் ஏற்ற இறக்கங்கள் என்று எல்லாவற்றிலும் பிரதிபலித்து மிரட்டு மிரட்டு என்று மிரட்டும் அற்புதக் கலைஞன் கமலை பார்த்து ஆனந்தக் கண்ணீர் மட்டுமே எனக்கு வந்தது. அப்போது விவரிக்க வர்த்தைகள் இல்லை என்னிடம். அர்ப்பணிப்பு என்னும் வார்த்தை வீரியத்தின் ஆழத்தை யாரும் அவ்வளவாக விளங்கிக் கொள்வதே இல்லை. முழுதுமாய் நம்மை அர்ப்பணிக்கும் போது நாம் எதுவாக விரும்புகிறோமோ அதுவாகவே மாறிவிடுகிறோம். 

முழுமையான அர்ப்பணிப்பு என்பது சலனமில்லாத ஆழ்மனதில் இருந்தே பிறக்கிறது. யாதொரு எண்ணக் குறுக்கீடுகளும் இல்லாமல்...கூர்மையான வாளினைப்  போன்று அந்த அர்ப்பணிப்பு அற்புதக் கலைப் படைப்பாய் காண்பவர்களின் தெளிவிற்கு ஏற்றார் போல நடு நெஞ்சில் ஆழமாய் இறங்குகிறது. என்னைப் பொறுத்தவரை இசையமைப்பாளரின் அற்புதமான மெட்டோடு 

" உன்னை காணாது நான் இன்று நான் இல்லையே
விதை இல்லாமல் வேரில்லையே……………" 

என்று பாடி, ஆடி, கமல் என்னும் கலைஞன் என்னை கொன்றேதான் போட்டு விட்டான். கதையைச் சொல்லும் கலையே கதக் ஆகிப்போனதாக நான் வாசித்து இருக்கிறேன். உணர்ச்சிகளுடன் வார்த்தையின் ஏற்ற இறக்கங்களில் கதை சொல்வது எல்லோராலும் முடியும்... ஆனால் உணர்ச்சிகள் மிகுந்த ஒரு கதையை உணர்வுக்குள் திரட்டிச் சென்று அதை உள்வாங்கி உடல் மொழியால் சிறிதும் அதன் இயல்பு கெடாமல் வெளிப்படுத்துவது என்பது அவ்வளவு எளிதல்ல. விழிகளும், விரல்களும் தனது அசைவுகளால் ஏதேதோ சொல்ல முகத்தினை சுருக்கி, விரித்து, கோணல் மாணல்களாய் அழுகையையும், சிரிப்பையும், காதலையும், விரக்தியையும் குழந்தைக்கு சோறு பிசைந்து ஊட்டி விடும் ஒரு தாயைப் போல  வாஞ்சையாய் கொடுப்பது என்பதை தெய்வீகம் என்றுதானே நாம் சொல்ல முடியும்...?

பிர்ஜு மகராஜிடமிருந்து உள்வாங்கி அதை நமக்கு படைத்தளித்திருக்கும் கமலஹாசன் மட்டுமில்லை  இங்கே.... அந்த நடனத்திற்கு பாடல் எழுதிய பாடலாசிரியார் கமலஹாசன் கூட உண்டு....

" நிதம் காண்கின்ற வான்கூட நிஜமல்ல...
இதம் சேர்க்கும் கனா கூட சுகமல்ல...
நீ இல்லாமல் நான் இல்லையே..." 

கமல் ஏக்கமாய் வெளிப்படுத்தும் அத்தனை உணர்வுகளிலும் புரிதலோடு அதைக் காணும் அத்தனை பேரும் ராதையாகிப் போக கண்ணண் உங்களுக்கும் எனக்கும் காதலனாகிப் போகிறான். சராசரி மனிதன் அல்ல என்னுடைய காதலன் அவனே எனக்கு கடவுள், அவனைக் காண்பதே எனக்கு சுகம்...அவனோடு கை கோர்த்துக் கொண்டு நடப்பதே இன்பம், அவன் இல்லாத பொழுதுகளில் அவனுக்காய் ஏங்கிக் கிடப்பது இன்னும் சுகம்...

நான் உன் மீது காதல் வயப்பட்டிருக்கிறேன் கண்ணா... ! என்னை உன் அன்பால் நிரப்பு...உன்  காதலால் என்னை திக்கு முக்காடச் செய்..., ஏதேதோ கதைகள் சொல்..., அதி நவநீதா, அபிநய ராஜா, கோகுல பாலா, கோடி பிரகாஷா, விரக, நரக, ஸ்ரீ ரக்க்ஷகமலா, என் கண்ணா.. நான் எத்தனை முறை நான் ஏங்கிச் சாவேன் ? இத்தவணை என்னை ஆட்கொள்வாயா...? என்று கேள்விகள் கேட்டு...

ஒரு சரணாகதிக்கு காத்திருக்கும் அவஸ்தையை வரிகளில் கொண்டு வந்திருக்கும் கமல் உங்களுக்கு ஜீனியஸாகத் தெரியவில்லை என்றால் நான் என்னைப் பைத்தியக்காரன் என்று அறிவித்துக் கொள்வதை பெருமையாக நினைக்கிறேன். 

"அவ்வாறு நோக்கினால்.. 
நான் எவ்வாறு நாணுவேன்..?
கண்ணாடி முன் நின்று பார்த்துக் கொண்டே..."

காதலை உடலுக்குள் ஏந்தித் திரிந்த அத்தனை பேருக்கும் தெரியும் தத்தமது வீட்டு நிலைக்கண்ணாடிகள் எவ்வளவு சந்தோசத்தைக் கொடுத்திருக்கும் என்பது....ஆணாய் இருந்தாலும் சரி பெண்ணாய் இருந்தாலும் சரி.. தத்தமது காதலனையோ காதலியையோ... காண்பிக்கப்போகும் முகபாவங்களை கண்ணாடி முன் நின்று முகத்தை கோணி, கோபித்து, உதடு பிதுக்கி, கண்கள் இடுக்கி, புருவம் உயர்த்தி எத்தனை அபிநயம் பிடித்திருப்போம்....?

முழுமையான ஒரு பாடலை  நமக்கெல்லாம் மிகப்பெரிய அனுபவமாக்கி இருக்கும் கமலை மாயக்காரன் என்றுதான் சொல்ல வேண்டும். 

ஆமாம்...

ஒரே ஒரு பாடலின் மூலம் அத்தனை பேரையும் பெண்களாக்கி, கண்ணனுக்காய் ஏங்கும் காதலிகளாய் ஆக்கிவிட்டானே அந்த பொல்லாதவன்.....அவனை மாயக்காரன் என்று சொல்லாமல்.... பின் எப்படிச் சொல்வதாம்...?

" இது நேராமலே நான் -
உன்னை பாராமலே நான்
இந்த முழு ஜென்மம் போய் இருந்தால்
…………………….
என்று அதை எண்ணி வீண் ஏக்கம்
ஏங்காமலே உன்னை மூச்சாக்கி
வாழ்வேனடா...."


ஹேட்ஸ் அப் கமல்!!!!!!


தேவா. SSunday, February 3, 2013

ராஜ மிருகம்....!
பிடறி சிலிர்க்க ஓடி வரும் புரவிகளின் மீது ஏனோ எனக்கு எப்போதும் ஒரு ஈர்ப்பு இருக்கிறது. ஓரிரு முறை கேளிக்கைக்காக குதிரைகளின் மீதேறியதோடு சரி. அதற்குப் பிறகு எனக்கும் குதிரைகளுக்கும் யாதொரு பிணைப்பும் இல்லை, ஆனால் எனது கனவுகளில் எல்லாம் பெரும்பாலும்  குதிரையேறிச் செல்வது போலவும் அதுவும் திமிரான குதிரையின் மீதேறி அது துள்ளிக்குதித்து என்னை தள்ளிவிட முயலுவது போலவும் நான் அடிக்கடி கண்டிருக்கிறேன். முரட்டுக் குதிரைகள் என்றால் எனக்கு ஏனோ ஒரு பிரியம். குதிரையேற்றம் என்பது வெறுமனே ஏதோ ஒரு பிராணியின் மீது பயணித்தல் மட்டுமல்ல அதை ஒரு மிகப் பெரிய கம்பீரமாய்த்தான் நான் கருதியிருக்கிறேன்.

பத்து வயதிலோ  அல்லது பனிரெண்டு வயதிலோ வந்த ஒரு கனவு எனக்கு இன்னமும் நினைவிருக்கிறது. ஒரு புரவியின் மீதேறி மிகவும் மேடாய் இருக்கும் ஒரு கண்மாய்க் கரையில் ஏறி இறங்குகிறேன். அது கனவைப் போல இல்லாமல் நிஜத்தைப் போலவே இன்னமும் மனதில் பசுமையாய் இருக்கிறது. சரிவில் இறங்கும் புரவி தாவிக்குதித்து என்னை கீழே தள்ளிவிட்டு விட்டு வேகமாய் ஓடியே போய்விட்டது. தூக்கத்திலேயே எனக்கு அன்று வந்த கோபமும் ஆத்திரமும் இன்று வரை தீரவில்லை. அழுகையோடு அந்த கனவை தொடர்ந்து குதிரையை ஓடிப் பிடித்து விட முயன்றேன். கலைந்து போன கனவு எனக்கு என்னுடைய குதிரையை மீட்டுக் கொடுக்கவே இல்லை.

மிருகங்களில் குதிரைகள் படுவசீகரமானவை. அவற்றின் உடல்வாகும், நீண்ட கால்களும், அசாத்தியமாய் காற்றில் புரளும் பிடரி மயிரும், அடர்த்தியான வாலும் என்று குதிரைகள் ராஜ கம்பீரமானவை. முரட்டுக் குதிரையின் மூர்க்கம் பத்து சிங்கங்கள் ஒன்று சேர்ந்தாலும் அவ்வளவு பலத்தைப் பெறமுடியாத அளவிலே இருக்கும் என்று எங்கோ நான் வாசித்திருக்கிறேன். அதனால்தான் அறிவியலில் சக்தி பயன்பாட்டை ஹார்ஸ் எனர்ஜி என்று சொல்லி இருக்கிறார்களோ என்று கூட நான் யோசித்து இருக்கிறேன்.

பாலகுமாரனை தீவிரமாய் வாசித்த பொழுதுகளில் அவரை இன்னும் அதிகமாய் நேசிக்க அவரின் குதிரைக் கவிதைகள் எனக்கு உதவியது. குதிரையை அவரும் நேசித்து இருக்கிறார் வெகு அற்புதமாய். எனக்கும் குதிரைக் கவிதைகள் எழுத வேண்டும் என்ற ஆசையில் நான் காகிதத்தில் அவ்வப்போது பென்சிலால் கிறுக்கி வைப்பதுமுண்டு. பொருளற்ற இலக்கில் சொடுக்கி விட்ட திசையில் பயணிப்பதில் கவிதைகளும் குதிரைகளும் ஒரே மூர்க்கத்தைதான் கொண்டிருக்கின்றன.

எழுத்தினை கடிவாளமாக்கி
என் கவிதைக் குதிரையை
நான் காகிதத்தில் 
சொடுக்கிவிடும் வேகத்தில்
ஏதேதோ அனுபவங்கள்
புத்தியை உரசி
கிளர்ந்தெழுந்து
நர்த்தனமாட...
..
...
டொக்... டொக்.. டொக்...டொக்....
...
...
...
குளம்படி சப்தங்களே 
எனக்கு கவிதையாகிப்  போகும்..!

காமத்தை குதிரையோடு இலக்கியங்கள் அவ்வப்போது ஒப்பீடு செய்வதுமுண்டு. முறுக்கேறிய காமம் குதிரையின் திமிரை ஒத்தது. குதிரையின் காமத்தை இங்கே ஒப்பீடு செய்வதில்லை மாறாக குதிரையின் அலட்சியத்தையும், அதன் முறுக்கையும், திமிரையும், தட்டிக் கொடுத்து தட்டிக் கொடுத்து குதிரையின் போக்கில் சென்று அதை கட்டுப்படுத்துவதையுமே காமத்தோடு ஒப்பிட்டு இருக்க முடியும் என்று நான் யோசிப்பதுண்டு. இலகுவான எந்த ஒரு காரியமும் திருப்தியைக் கொடுக்க முடியாது.

போராட்டத்தின் உச்சத்தில் தோற்கப்போகிறோம் என்று தெரிந்து தோற்றே விடுவோம் என்று எண்ணும் போது ஜெயிக்கும் கணம்தான் அதி அற்புதமானது. மூர்க்கமான குதிரைகள் அப்படித்தான்....நம்மை வெற்றி கொண்டு விட்டதாகவே எண்ணி இறுமாப்போடு தாவி ஓடும்....கவனமாய் அதன் கடிவாளம் பற்றி, அங்கும் அங்கும் அலைய விட்டு சோர்வடையச் செய்து...நமது வலுவை புரிய வைக்க நமது ஆதிக்கத்தின் பலத்தைக் உணர்ந்து குதிரை மெல்ல மெல்ல நமது கட்டுக்குள் வரத் தொடங்கும். 

குதிரையைப் பற்றி எழுத தோன்றிய உடனேயே நான் இங்கே எழுதி கொண்டிருப்பதின் பின்னணியில் முழுக்க முழுக்க என் உள்ளுணர்வே இருக்கிறது. தீர்க்கமான சலனமற்ற நிலையில் அதுவும் நம்மை ஈர்க்கும் விசயங்களை உற்று நோக்க சரளமாய் ரிஷி மூலம் நதி மூலங்கள் தெரிய ஆரம்பித்து விடுகின்றன. பெரும்பாலான தீர்வுகளை நான் ஆராய்ச்சிகளிலும், புள்ளி விபரங்களைப் புத்தகங்களிலும் தேடுவதில்லை. உள்ளுக்குள்ளேயே கேட்டு தெரிந்து கொள்வேன். தரவுகளின் அடிப்படையில் ஒருவேளை அது தவறு என்றாலும் எனது கற்பனையின் அடிப்படையில் அது சரி என்று நான் புளகாங்கிதம் அடைந்து கொள்வேன். தரவுகளின் அடிப்படையில் நிலவு ஒரு பாலைவனம்தானே....? தரவினை தலையில் தூக்கிக் கொண்டு  திரிபவர்களுக்கு எலும்பும், இரத்தமும், நரம்பும், நரகலும், அழுக்குமே ஆணாய்த் தெரியும், பெண்ணாய்த் தெரியும்.....பிறகெப்படி...ஒரு பெண்ணைப் பார்த்து

அவள்  கெண்டை விழிகளின்
அசைவுகளில்
நித்தம் பொம்மலாட்டம் ஆடும்
பாவை நான்.....

என்று கவிதை எழுதுவதாம்....?  பாவை என்றவுடன் பாவைக்கு பெண் என்று அர்த்தம் எடுத்துக் கொள்ளாதீர்கள். பாவை என்றால்  பொம்மை என்று ஒரு அர்த்தம் கூட உண்டு. அப்புறம் பொம்மை என்றே நீ எழுதி இருக்கலாமே என்று கேட்டால்....ஆமாம் எழுதி இருக்கலாம்தான் எழுதவில்லை. நமது வசதிதானே, செளகர்யம்தானே எழுத்து. நீட்டி, மடக்கி, சுருக்கி, குதிரை நாக்கை நீட்டி, முகவாயை இழுத்து, நிமிர்ந்து,  பின் குனிந்து இஷ்டத்துக்கு செல்லுமே அப்படியே எழுதி விட்டுப் போகிறேன் போங்கள்......


அதிகாரவர்க்கம் இந்த குதிரைகள் என்பது உங்களுக்குத் தெரியுமா...? கர்ஜித்தல் என்பது கம்பீரம் என்று நீங்கள் சொல்லலாம் ஆனால் அது ஒரு மாதிரியான அடாவடித்தனம். பெரிய, பெரிய கத்திகளோடு ரவுடிகள் வந்து அட்டூழியம் செய்வதற்கு முன்பும் கர்ஜிக்கத்தான் செய்வார்கள். கர்ஜிப்பில் உங்களுக்கும், எனக்கும் என்ன மிஞ்சுகிறது பயத்தைத் தவிர.....

ஆனால்....அதிகாரவர்க்கம்...கனைத்து கனைத்துதான் நகர்ந்து கொண்டிருக்கிறது குதிரைகளைப்போல. யாரங்கே என்று மன்னர்கள் கைதட்டி கர்ஜித்தால் யாரும் பக்கத்தில் கூட வரமாட்டார்கள்தானே...?  கனைத்து அழைத்தலில் ஒரு கர்வம் இருக்கிறது அதட்டலோடு கூடிய அன்பு இருக்கிறது. வன்முறைக்கும், அகிம்சைக்கும் நடுவில் வாழத் தெரிந்தவை குதிரைகள். முன்பெல்லாம் அதிகாரவர்க்கத்தின் கம்பீர வாகனமாய் குதிரைகளே இருந்தன.

பட்டத்து யானைகளுமிருந்தன இல்லை என்று நான் மறுக்கவில்லை ஆனால் பட்டத்து குதிரைகளைப் போல அவை அத்தனை உபயோகமாய் இருந்திருக்கவில்லை. அரசனின் பட்டத்து குதிரையை அரசனாகவே பார்க்கும் ஒரு வித மரபு நம் மக்களிடம் இருந்திருக்கிறது. ஜம்பக்கமாய் வீதியுலா வர யானைகள் உதவிய அதே நேரத்தில், போரிலும் களிறுகளின் படை பிளிறி எதிரிகளை சிதறடிக்கச்  செய்தாலும் சூழலுக்கு ஏற்றார் போல எங்கும் கன கச்சிதமாய் அவற்றை மறைத்து வைக்க முடியாது. யானை விழுந்தால் மீண்டும் எழுந்து நிற்கமுடியாமல் அவற்றின் கனம் தடுத்து விடும்.  குதிரைகள் அப்படி இல்லை....

குதிரைகள் கனகச்சிதமாய் விழுந்த நொடியில் எழுந்து கொள்ளும் பலம் உடையவை. எதுவுமே தன்னால் செய்ய முடியாது இனி மரணம்தான் என்பன போன்ற சூழல்களில்தான் குதிரைகள் வீழ்ந்து போகின்றன. மரணமும் மரணத்தின் அருகாமையுமே குதிரைகளை செயலிழக்கச் செய்கின்றன.

குதிரையின் பிடறியை பிடித்து வருடிக் கொடுத்து, கீழ்தாடையை தடவி பிருஷ்டத்துக்கு மேலே அழுத்தமாய் அடித்து மேலேறி அமர்ந்து அடி வயிற்றில் செல்லமாய் உதைத்து கடிவாளத்தை சொடுக்கி, மெல்ல மெல்ல வேகத்தை அதிகரித்து டொக்...டொக்..டொக்.. டொக்.. என்று குளம்புகள் அதிர குதிரை மூர்க்கமாய் நகர....ஒவ்வொரு டொக்கிற்கும் ஒவ்வொரு முறையும் மேலெழும்பிக் கொடுத்து ஒருவித தாளகதியில் சவாரி செய்ய...நமது உடலின் தசைகள் மெல்ல மெல்ல இறுகியும் போகும்.

போருக்கு செல்பவன் குதிரையை வாகனமாக்கிக் கொண்டதின் சூட்சுமம் என்ன தெரியுமா? குதிரை சவாரி  முழுக்க முழுக்க நம்மை விழிப்பு நிலையிலேயே வைத்திருக்கும் என்பதுதான்....குதிரையிலேறி சவாரி செய்ய முடியாதவனுக்கு கவனம் ஒரு இடத்தில் இருக்காது. கவனம் இல்லாமல் போருக்குச் செல்பவன் எப்படி எதிரியை கணிக்க முடியும்...?

நான் சொல்வது எல்லாம் போர் மரபுகளை எல்லாம் சரியாக பின்பற்றிய பண்டைய காலம் பற்றித்தான் ...நவீன யுகத்தின் போர்கள் எல்லாம் சுத்த களவாணித்தனங்கள். ஆயுதம் உள்ளவன் அறிவியலின் துணையோடு வானத்தில் போர் விமானங்களில் வந்து குண்டெறிந்து கொல்வதும்..., கண்ணுக்கு காணாத தூரத்தில் நின்று கொண்டு இயந்திர துப்பாக்கிகளால் சுட்டுக் கொண்டு செத்துப்போவதும், சாகடிப்பதும் என்று...இங்கே போர் மரபுகளை காலம் நவீனம் என்ற பெயரில் மாற்றி விட்டது.....

எனக்கொரு ஆசை.......எல்லா தேசங்களும் நவீன கருவிகளை எல்லாம் தூர வீசிவிட்டு  போர் என்றால் மீண்டும் குதிரையேறி....வாள்களைச் சுழற்றிக் கொண்டு மோதவேண்டும். அப்போது தெரியும் இந்தப் பூமிப் பந்தின் சுத்த வீரன் யார் என்று....

சில வாரங்களுக்கு முன்பு எலும்பும் தோலுமாய் குதிரையொன்றை ஒரு மிருகக்காட்சி சாலையில் பார்த்தேன்...கொஞ்சமாய் நான் கொடுத்த புல்லை கடித்து இழுக்க பாய்ந்து என்னிடம் வந்தது கண்டு மனம் கசிந்தது. நல்ல வேளையாக இப்போது குதிரைகளை வைத்து யாரும் பார வண்டி இழுப்பதில்லை. வரலாற்றின் பக்கங்களில் மிகையாக இடம்பிடித்திருக்கும் இந்த ராஜ மிருகங்கள் வண்டி இழுப்பதை ஏனோ என்னால் சகித்துக் கொள்ள முடிவதில்லை....! குதிரைகள் எல்லாம் போர் புரிய பிறந்தவை என்று எனக்கு ஓர் எண்ணமும் உண்டு...

என்ன செய்வது...? இப்போதெல்லாம் ஆங்காங்கே பந்தயத்திற்கு மட்டும் ஓடி விட்டு களைத்து படுத்துக் கொள்கின்றன அந்த கம்பீர மிருகங்கள்...!


தேவா. S
Friday, February 1, 2013

மதம் என்னும் மாயை.....!

சுதந்திரம் என்பது கட்டுகளற்ற பெருவெளி.  யாதொரு கருத்துப் பரவலும் நம்மை கலைத்துப் போட்டு விடாமல் எல்லா செய்திகளின் சாரங்களையும் உற்று நோக்கி பின் முடிவுகளை நோக்கிய ஒரு புலிப் பாய்ச்சல் அது. ஒரு படைப்பாளிக்கு கட்டுகளற்ற சுதந்திரம் இருந்தால் மட்டுமே அவனுக்குள் எண்ணங்கள் தங்கு தடையின்றி ஊற்றெடுக்க முடியும். இந்த சமூகத்தை தத்துவங்களே ஆண்டு கொண்டிருக்கின்றன. தத்துவங்கள் யாரோ ஒருவனுக்குள் தன்னிச்சையாய் கட்டுக்களின்றி ஸ்பூரித்தெழுந்தவை.

தான் வாழும் சமூகத்தின் செயற்பாடுகளை உள்வாங்கிக் கொண்டு சரி தவறுகளை தனக்குத் தெரிந்த மொழியில் பேசுபவனே தலை சிறந்த படைப்பாளியாய் இருக்க முடியும். அவனுக்கு சமூக பொறுப்புணர்ச்சி இருக்க வேண்டும்  என்று ஒரு நிபந்தனையினைக் கொடுத்து விட்டால் அவன் நினைவுகளின் நீட்சிகள் மழுங்கிப் போய்விடும். படைக்கும் ஒருவனின் சிந்தனைகள் சமூக பொறுப்பினை முன்னிறுத்தியே தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது. எதை வேண்டுமானாலும் ஒரு படைப்பாளி பேசலாம். சரிகளை மட்டுமே, சமூகத்திற்கு  நன்மை பயக்கும் விடயங்களை மட்டுமே அவன் பகிரவேண்டும் என்பது ஆதாய நோக்கு கொண்ட மிருக புத்திகள் இயற்றி வைத்த சைத்தானின் சூத்திரம் என்பது உங்களுக்குத் தெரியுமா..?

தர்க்க ரீதியாய் தங்களால் மெய்ப்பிக்க முடியாத விடயங்களை  எல்லாம் நம்பிக்கை என்னும் நயவஞ்சகப் போர்வைக்குள் போட்டு மறைத்துக் கொள்கிறான் மனிதன். நம்பிக்கை என்பது உணர்வால் கட்டியெழுப்பப்பட வேண்டிய கோட்டை. கண்ணெதிரே காணும் விடயங்களைக் கூட உணர்வுகளால் தொட்டுத் தடவி உள்ளுணர்வு சரி என்று சொன்னால்தான் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். கண்களால் காணாத எத்தனையோ விடயங்களை  சட்...சட் என்று உள்ளுணர்வு நமக்குள் சமப்படுத்திப் போட அதை எல்லாம் ஏற்றுக் கொண்டு நாம் நகர்ந்து கொண்டும் இருப்போம். நம்பிக்கை என்பது உணர்ச்சி சார்ந்து, தனது சுயநலம் சார்ந்து, கூட்டு மனோபாவத்தை ஏற்கும் பொருட்டு ஏற்படுமெனில் அங்கே நச்சு மரம் தன் வேரினைப் பரப்பி கிளைகளை பரவ விட ஆரம்பித்து விடுகிறது.

மதம் என்பதைக் கடவுள் என்ற இதுவரை யாராலும் காணப்படாத ஒருவரோடு தொடர்புகள் படுத்திக் கொண்டு அதன் மேன்மைகளை தூக்கிப் பிடிக்க இங்கே மனிதர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். மதம் என்பதை வழிமுறை என்று சொல்லி கொடுத்தபின்பும் எனது கடவுள், எனது வேதம், எனது வாழ்க்கை என்று எனது...எனது என்று மட்டுப்படுத்தும் இடத்தில், எல்லாம்வல்லவனாக அவர்கள் கருதும் ஒரு பிரமாண்டத்தை  கட்டுக்குள் கொண்டு வந்து  தங்களின் எண்ணத்தின் வடிவிற்கு குறுக்கி விடுகிறார்கள். கடவுள் என்னும் விடயத்தை முட்டி முட்டி வழிபாடு செய்யும் எந்த ஒரு மதத்தைச் சார்ந்தவரும் சுட்டிக் காட்ட முடியாமல், வாழ்க்கையின் கடைசி வரை கடவுள் என்பவரை காட்டப்பட முடியாதவர் என்ற உண்மையோடு விழிகள் நிலைகுத்திச் செத்துப் போகவும் செய்கிறார்கள்.

எல்லா சமூகத்திலும் கடவுள் என்பது மனிதரைப் போன்ற ஒன்று இல்லை, உண்மையில் சொல்லப் போனால் அது ஒன்றும் இல்லை என்று உணர்ந்த செம்மையான மனிதர்கள், தான் வாழ்ந்த சமூகத்தின் அறிவுத் தரத்திற்கு ஏற்ப அந்த உண்மையை மறைமுகமாய் போதித்துச் சென்றும் இருக்கின்றனர். வாழ்வியல் முறைகளை மதமாகவும், வேதமாகவும் போதித்துச் சென்றவர்கள் அத்தனை பேரையும் பகுத்து அறிந்து உண்மையை உணர்ந்த பகுத்தறிவாளர்கள் என்றோ, ஞானிகள் என்றோ, இறைத் தூதர்கள் என்றோ, அவதாரங்கள் என்றோ எது எது உங்களுக்கு வசதியோ அப்படி பெயரிட்டு அழைத்துக் கொள்ளுங்கள்....

மதம் என்பது சுமூக வாழ்வியல் இயங்கு தன்மைக்காய் ஏற்படுத்தப்பட்ட வழிமுறை என்பதை மறந்து போய் இறைவன் நேரடியாய் இங்கே மானுடர்களுக்காய் ஏற்படுத்திக் கொடுத்த கருத்து வடிவங்கள் என்று ஒருவன் நம்புவது இங்கே நம்பிக்கையாகிறது. இப்படி நம்புவது புனிதம் என்று போதிக்கப்பட்டதின் விளைவாக இங்கே வாழும் அத்தனை பேரும் தங்களை புனிதர்களாக காட்டிக் கொள்ள விரும்பி மீண்டும், மீண்டும் தாங்கள் சார்ந்திருக்கும் வழிமுறை, இறைவனால் கொடுக்கப்பட்டது என்று குரல்வளைகள் கிழிய உரக்க பேசிக் கொண்டே இருக்கின்றனர். 

மனிதன் எப்போதும் சாதாரணமானவன் அவனால் எதையும் உருவாக்க முடிந்தது என்று எதுவும் இல்லை என்றும் ஒப்பற்ற கருத்துக்களை வடித்துக் கொடுத்தது இறைவன் அன்றி வேறு யாராய் இருக்க முடியும் என்று முரட்டுத்தனமாய் நம்பும் இந்த சமூகத்தில் நாம் சுகிக்கும் எல்லாமே யாரோ ஒருவனின் அறிவிலிருந்துதான் பிறந்தது என்பதை வசதியாய் மறந்தும் போகிறார்கள். கற்களை உரசி நெருப்பினை உண்டாக்கியவன் இன்று விண்வெளி தோறும் செயற்கைக் கோள்களை அனுப்பி ஆராய்ச்சி செய்ய எந்தக் கடவுளின் உதவியையும் நாடவில்லை. எல்லா செயல்களுக்கும் அவனது அறிவே உதவியது.

அன்பும், அறிவுமே கடவுள். அன்பும் அறிவும் மனிதர்களுக்குள் இருந்து தன்னிச்சையாய் எட்டிப்பார்க்கும் ஏதோ ஒன்றின் கூட்டு. இத்தனை வேதங்களும், அவதாரங்களும், மார்க்கங்களும் வெளிப்பட்டு எத்தனையோ ஆயிரம் ஆண்டுகள் ஆன பின்பும் கூட அந்த ஏதோ ஒன்று எட்டிப் பிடித்து உணரமுடியாததாய் இருக்கிறது. உணர முடியாமல் போனதாலேயே எல்லா வழிமுறைகளும் தோற்றுப் போனதாய் நாம் அறிவித்து விடலாமா? ஆமாம் மதத்தை கடவுளோடு நீங்கள் தொடர்புபடுத்தி என்னிடம் பேசினால் உங்கள் அத்தனை பேரின் மதமும் தோற்றுப் போயிருக்கிறது என்றுதான் என்னால் அடித்துச் சொல்ல முடியும்....

இத்தனை காலஞ்சென்றும் உங்களால் கடவுள் என்பது எது....? என்று உணர முடியவில்லை. அன்பையும், சகிப்புத் தன்மையையும் விசம் பொருந்திய வார்த்தைகளில் தேனாய் தடவி வியாபாரம் செய்யத்தான் உங்களால் முடிகிறது... ஞானம் என்னும் வார்த்தையின் ஆழம் உங்களுக்குத் தெரியவில்லை. ஒரு இயந்திரமாய் உங்கள் வழிபாடுகளையும் நேர்ச்சைகளையும் செய்து கொள்கிறீர்கள். உங்களின் கடவுள் உங்களை சுதந்திரமானவராய் ஆக்குவதற்குப் பதிலாக காற்று புக முடியாத இருட்டு அறைக்குள் புழுக்கத்தின் நடுவே உங்களை கைதியாக்கி வைத்திருக்கிறார். எதை நிறுவ போராடுகிறோம் என்று தெரியாமல் நீங்கள் போராடிக் கொண்டிருக்கும் போதே முதுமையாலோ, வியாதியாலோ, அல்லது ஏதோ ஒரு விபத்தாலோ நீங்கள் வாய்கோணி செத்துப் போய் விடுகிறீர்கள்...

தன்னை அறிய முடியாத அளவிற்கு உங்களை இறுகக்கட்டிப் போட்டிருப்பது உங்களின் வழிமுறை அல்ல..! அந்த வழிமுறைகளை உங்களின் சுயநலத்துக்கு ஏற்ப வார்த்துக் கொண்டிருக்கும் உங்களின் மனோபாவம் என்பதை இறக்கும் வரை நீங்கள் உணரப்போவதே இல்லை. மனதாலேயே நீங்கள் நடத்தும் ஒரு கோர வாழ்க்கையை விட்டு நீங்கள் சார்ந்திருக்கும் ஏதோ ஒரு வழிமுறையிலிருக்கும் சத்தியம் என்னும் கயிறைப் பிடித்து நீங்கள் மேலேறி வரப்போவது எப்போது...?

இறை என்னும் சுதந்திரத்தை உங்கள் நாசி நிறைய சுவாசித்து எப்போது ஆழமான மெளனத்தால் உங்களின் சடங்குகளை எல்லாம் எரிக்கப் போகிறீர்கள். மதம் என்பது சீரிய வாழ்க்கை வாழ சொல்லப்பட்ட வழிமுறை என்றால்... வழிமுறையைக் கொண்டு மேலே முன்னேறாமல் நின்று கொண்டே இருப்பது உங்களின் மதத்திற்கு கிடைத்த தோல்வி இல்லையா.....? வழிகாட்டும் பெயர்ப்பலகையை கண்டுவிட்ட ஆச்சர்யத்தில் ஏன் அதை விட்டு நகர மறுக்கிறீர்கள்...?

வழியைக் காட்டும் பலகையை நட்டு வைத்தவனின் நோக்கம் நீங்கள் அங்கேயே நின்று கொண்டிருப்பதற்கானது அல்ல...அதை விட்டு உங்களின் பாதையில் சுதந்திரமாய் கை வீசி நடந்து நீங்களும் நானும் ஒரு பெரும் பொய் என்று உணரவைத்து எல்லையில்லாத பெரும் ஆனந்ததிற்குள் நம்மை தள்ளி விடுவது....என்பதை ஏன் இன்னும் நீங்கள் உணரவில்லை....?

மதங்கள் என்னும் மையத்தை இப்படித்தான் சில மனிதர்கள் பகுத்தறிவோடு கடந்து சென்று விடுகிறார்கள். அவர்களுக்கு மதம் என்ற ஒரு மையம் இல்லை. மதத்தை கடந்து அவர்கள் சுதந்திர புருசனாக கட்டற்ற பெருவெளியில் சிறகடித்து பறக்கிறார்கள். இப்படி கட்டுக்கள் இல்லாமல் அவர்கள் நகர்வது சிறைப்பட்ட மனோ நிலையில் இருக்கும் உங்களுக்கு எரிச்சல் வருகிறது. உங்கள் நம்பிக்கையை உடைத்துப் போய்விட்டான் என்றும்.... கட்டுகள் இல்லாமல் பறக்கிறான் என்றும் உங்களின் அறியாமையை அவன் மீது குற்றமாய் சுமத்துகிறீர்கள். 

பெரும்பாலும் படைப்பவர்கள் எல்லாம் கட்டுக்களற்ற சுதந்திரம் பெற்றவர்கள். முக்தி என்னும் விடுதலையை சுகித்தவர்கள். சமூகத்தின் கனபரிமாணங்களை சுதந்திரவெளியில் நின்று எழுத்துக்களாகவும், கலையாகவும், இசையாகவும் படைத்துக் கொடுப்பவர்கள். ஏதோ ஒரு மதம் என்னும் மையத்தை எப்போதோ கடந்து வந்திருப்பதாலேயே மதங்கள் உருவானதின் அவசியத்தையும் அவர்கள் உணர்ந்தவர்களாகவே இருக்கிறார்கள்.

அவர்கள் நீங்கள்... நீங்களாக இருப்பதில் யாதொரு பிரச்சினையும் இல்லாதவர்களாக இருக்கிறார்கள் ஆனால் உங்களுக்குத்தான் அவர்கள் அவர்களாய் இருப்பதில் பிரச்சினையிருக்கிறது. அவர்களின் கருத்துக்கள் உங்களை உங்களின் இருட்டறையிலிருந்து வெளியே தர தரவென்று இழுத்து வரவே  எப்போதும் முயலுகிறது. அவர்களைக் கண்டு கொள்ளாமல் நகர்ந்து போக, உங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் சுதந்திரத்தைக் கூட உங்களால் சரியாய்ப் பயன்படுத்திக் கொள்ள முடியாமல் நீங்கள் சதா சர்வ காலமும் சுதந்திர புருசர்களாகிய அவர்களைப் பற்றியே யோசித்துக் கொண்டிருக்கிறீர்கள்.

ஏதேதோ சொல்லி பகுத்தறிவாளர்களை, படைப்பாளிகளை நீங்கள் அசிங்கப்படுத்த முயலும் எல்லா செயல்களும் வானத்தைப் பார்த்து நீங்கள் உமிழ்வதைப் போலவே இருக்கிறது. மீண்டும், மீண்டும் வீழ்த்துவதாய் நினைத்து நீங்களே ஈனப்பட்டுப் போகிறீர்கள். சமூகம், கட்டுப்பாடு, மானுட நலன் என்று ஏதேதோ உளறிக் கொட்டுகிறீர்கள். ஒரு படைப்பாளி அதை கண்டு கொள்வதே இல்லை. அவனுக்குத் தெளிவாய் தெரியும்... நீங்கள் இருட்டறையை விட்டு மேலே ஏறி வர பயந்து கொண்டிருக்கிறீர்கள் என்று...

உங்களின் மதம் என்னும் வாய்ப்பு உங்களின் முன் ஒரு கயிறாய் தொங்கிக் கொண்டிருக்கிறது அதை நீங்கள் பயன்படுத்தவில்லை என்பதை உணர்ந்து...., உங்களுக்காக அவன் எந்த கடவுளரிடமும் சென்று வேண்டிக் கொள்ளாமல் மீண்டும் மீண்டும் படைத்துக் கொண்டிருக்கிறான். தன் புத்திக்குள் படுத்துக் கிடக்கும் அனுபவங்களை உலுக்கி, தன்னை உருக்கி, உருக்கி, வலிகளை எல்லாம் வார்த்தெடுத்து ஒரு பிள்ளையை பெற்று எடுக்கும் தாயின் சிரத்தையோடு  உங்களின் எல்லா காறி உமிழ்தல்களையும்....கண்டு கொள்ளாமல்...

அவன் மீண்டும் மீண்டும் படைத்துக் கொண்டே இருக்கிறான். உங்களின் விருப்பம் அவனை மீண்டும் ஏதோ ஒரு கொட்டடியில் போட்டு அடைப்பதாகவே இருக்கிறது. அவனின் விருப்பம் உங்களை இருட்டுச் சிறையிலிருந்து மீட்டெடுப்பதாகவெ இருக்கிறது...

இது ஒரு சுழற்சி......

நீங்கள் தொடர்ந்து காறி உமிழ்ந்து கொண்டே இருங்கள்...அவன் உங்களின் விடுதலைக்காய் தொடர்ந்து படைத்துக் கொண்டே இருக்கட்டும்...!


தேவா. S