Pages

Sunday, February 3, 2013

ராஜ மிருகம்....!
பிடறி சிலிர்க்க ஓடி வரும் புரவிகளின் மீது ஏனோ எனக்கு எப்போதும் ஒரு ஈர்ப்பு இருக்கிறது. ஓரிரு முறை கேளிக்கைக்காக குதிரைகளின் மீதேறியதோடு சரி. அதற்குப் பிறகு எனக்கும் குதிரைகளுக்கும் யாதொரு பிணைப்பும் இல்லை, ஆனால் எனது கனவுகளில் எல்லாம் பெரும்பாலும்  குதிரையேறிச் செல்வது போலவும் அதுவும் திமிரான குதிரையின் மீதேறி அது துள்ளிக்குதித்து என்னை தள்ளிவிட முயலுவது போலவும் நான் அடிக்கடி கண்டிருக்கிறேன். முரட்டுக் குதிரைகள் என்றால் எனக்கு ஏனோ ஒரு பிரியம். குதிரையேற்றம் என்பது வெறுமனே ஏதோ ஒரு பிராணியின் மீது பயணித்தல் மட்டுமல்ல அதை ஒரு மிகப் பெரிய கம்பீரமாய்த்தான் நான் கருதியிருக்கிறேன்.

பத்து வயதிலோ  அல்லது பனிரெண்டு வயதிலோ வந்த ஒரு கனவு எனக்கு இன்னமும் நினைவிருக்கிறது. ஒரு புரவியின் மீதேறி மிகவும் மேடாய் இருக்கும் ஒரு கண்மாய்க் கரையில் ஏறி இறங்குகிறேன். அது கனவைப் போல இல்லாமல் நிஜத்தைப் போலவே இன்னமும் மனதில் பசுமையாய் இருக்கிறது. சரிவில் இறங்கும் புரவி தாவிக்குதித்து என்னை கீழே தள்ளிவிட்டு விட்டு வேகமாய் ஓடியே போய்விட்டது. தூக்கத்திலேயே எனக்கு அன்று வந்த கோபமும் ஆத்திரமும் இன்று வரை தீரவில்லை. அழுகையோடு அந்த கனவை தொடர்ந்து குதிரையை ஓடிப் பிடித்து விட முயன்றேன். கலைந்து போன கனவு எனக்கு என்னுடைய குதிரையை மீட்டுக் கொடுக்கவே இல்லை.

மிருகங்களில் குதிரைகள் படுவசீகரமானவை. அவற்றின் உடல்வாகும், நீண்ட கால்களும், அசாத்தியமாய் காற்றில் புரளும் பிடரி மயிரும், அடர்த்தியான வாலும் என்று குதிரைகள் ராஜ கம்பீரமானவை. முரட்டுக் குதிரையின் மூர்க்கம் பத்து சிங்கங்கள் ஒன்று சேர்ந்தாலும் அவ்வளவு பலத்தைப் பெறமுடியாத அளவிலே இருக்கும் என்று எங்கோ நான் வாசித்திருக்கிறேன். அதனால்தான் அறிவியலில் சக்தி பயன்பாட்டை ஹார்ஸ் எனர்ஜி என்று சொல்லி இருக்கிறார்களோ என்று கூட நான் யோசித்து இருக்கிறேன்.

பாலகுமாரனை தீவிரமாய் வாசித்த பொழுதுகளில் அவரை இன்னும் அதிகமாய் நேசிக்க அவரின் குதிரைக் கவிதைகள் எனக்கு உதவியது. குதிரையை அவரும் நேசித்து இருக்கிறார் வெகு அற்புதமாய். எனக்கும் குதிரைக் கவிதைகள் எழுத வேண்டும் என்ற ஆசையில் நான் காகிதத்தில் அவ்வப்போது பென்சிலால் கிறுக்கி வைப்பதுமுண்டு. பொருளற்ற இலக்கில் சொடுக்கி விட்ட திசையில் பயணிப்பதில் கவிதைகளும் குதிரைகளும் ஒரே மூர்க்கத்தைதான் கொண்டிருக்கின்றன.

எழுத்தினை கடிவாளமாக்கி
என் கவிதைக் குதிரையை
நான் காகிதத்தில் 
சொடுக்கிவிடும் வேகத்தில்
ஏதேதோ அனுபவங்கள்
புத்தியை உரசி
கிளர்ந்தெழுந்து
நர்த்தனமாட...
..
...
டொக்... டொக்.. டொக்...டொக்....
...
...
...
குளம்படி சப்தங்களே 
எனக்கு கவிதையாகிப்  போகும்..!

காமத்தை குதிரையோடு இலக்கியங்கள் அவ்வப்போது ஒப்பீடு செய்வதுமுண்டு. முறுக்கேறிய காமம் குதிரையின் திமிரை ஒத்தது. குதிரையின் காமத்தை இங்கே ஒப்பீடு செய்வதில்லை மாறாக குதிரையின் அலட்சியத்தையும், அதன் முறுக்கையும், திமிரையும், தட்டிக் கொடுத்து தட்டிக் கொடுத்து குதிரையின் போக்கில் சென்று அதை கட்டுப்படுத்துவதையுமே காமத்தோடு ஒப்பிட்டு இருக்க முடியும் என்று நான் யோசிப்பதுண்டு. இலகுவான எந்த ஒரு காரியமும் திருப்தியைக் கொடுக்க முடியாது.

போராட்டத்தின் உச்சத்தில் தோற்கப்போகிறோம் என்று தெரிந்து தோற்றே விடுவோம் என்று எண்ணும் போது ஜெயிக்கும் கணம்தான் அதி அற்புதமானது. மூர்க்கமான குதிரைகள் அப்படித்தான்....நம்மை வெற்றி கொண்டு விட்டதாகவே எண்ணி இறுமாப்போடு தாவி ஓடும்....கவனமாய் அதன் கடிவாளம் பற்றி, அங்கும் அங்கும் அலைய விட்டு சோர்வடையச் செய்து...நமது வலுவை புரிய வைக்க நமது ஆதிக்கத்தின் பலத்தைக் உணர்ந்து குதிரை மெல்ல மெல்ல நமது கட்டுக்குள் வரத் தொடங்கும். 

குதிரையைப் பற்றி எழுத தோன்றிய உடனேயே நான் இங்கே எழுதி கொண்டிருப்பதின் பின்னணியில் முழுக்க முழுக்க என் உள்ளுணர்வே இருக்கிறது. தீர்க்கமான சலனமற்ற நிலையில் அதுவும் நம்மை ஈர்க்கும் விசயங்களை உற்று நோக்க சரளமாய் ரிஷி மூலம் நதி மூலங்கள் தெரிய ஆரம்பித்து விடுகின்றன. பெரும்பாலான தீர்வுகளை நான் ஆராய்ச்சிகளிலும், புள்ளி விபரங்களைப் புத்தகங்களிலும் தேடுவதில்லை. உள்ளுக்குள்ளேயே கேட்டு தெரிந்து கொள்வேன். தரவுகளின் அடிப்படையில் ஒருவேளை அது தவறு என்றாலும் எனது கற்பனையின் அடிப்படையில் அது சரி என்று நான் புளகாங்கிதம் அடைந்து கொள்வேன். தரவுகளின் அடிப்படையில் நிலவு ஒரு பாலைவனம்தானே....? தரவினை தலையில் தூக்கிக் கொண்டு  திரிபவர்களுக்கு எலும்பும், இரத்தமும், நரம்பும், நரகலும், அழுக்குமே ஆணாய்த் தெரியும், பெண்ணாய்த் தெரியும்.....பிறகெப்படி...ஒரு பெண்ணைப் பார்த்து

அவள்  கெண்டை விழிகளின்
அசைவுகளில்
நித்தம் பொம்மலாட்டம் ஆடும்
பாவை நான்.....

என்று கவிதை எழுதுவதாம்....?  பாவை என்றவுடன் பாவைக்கு பெண் என்று அர்த்தம் எடுத்துக் கொள்ளாதீர்கள். பாவை என்றால்  பொம்மை என்று ஒரு அர்த்தம் கூட உண்டு. அப்புறம் பொம்மை என்றே நீ எழுதி இருக்கலாமே என்று கேட்டால்....ஆமாம் எழுதி இருக்கலாம்தான் எழுதவில்லை. நமது வசதிதானே, செளகர்யம்தானே எழுத்து. நீட்டி, மடக்கி, சுருக்கி, குதிரை நாக்கை நீட்டி, முகவாயை இழுத்து, நிமிர்ந்து,  பின் குனிந்து இஷ்டத்துக்கு செல்லுமே அப்படியே எழுதி விட்டுப் போகிறேன் போங்கள்......


அதிகாரவர்க்கம் இந்த குதிரைகள் என்பது உங்களுக்குத் தெரியுமா...? கர்ஜித்தல் என்பது கம்பீரம் என்று நீங்கள் சொல்லலாம் ஆனால் அது ஒரு மாதிரியான அடாவடித்தனம். பெரிய, பெரிய கத்திகளோடு ரவுடிகள் வந்து அட்டூழியம் செய்வதற்கு முன்பும் கர்ஜிக்கத்தான் செய்வார்கள். கர்ஜிப்பில் உங்களுக்கும், எனக்கும் என்ன மிஞ்சுகிறது பயத்தைத் தவிர.....

ஆனால்....அதிகாரவர்க்கம்...கனைத்து கனைத்துதான் நகர்ந்து கொண்டிருக்கிறது குதிரைகளைப்போல. யாரங்கே என்று மன்னர்கள் கைதட்டி கர்ஜித்தால் யாரும் பக்கத்தில் கூட வரமாட்டார்கள்தானே...?  கனைத்து அழைத்தலில் ஒரு கர்வம் இருக்கிறது அதட்டலோடு கூடிய அன்பு இருக்கிறது. வன்முறைக்கும், அகிம்சைக்கும் நடுவில் வாழத் தெரிந்தவை குதிரைகள். முன்பெல்லாம் அதிகாரவர்க்கத்தின் கம்பீர வாகனமாய் குதிரைகளே இருந்தன.

பட்டத்து யானைகளுமிருந்தன இல்லை என்று நான் மறுக்கவில்லை ஆனால் பட்டத்து குதிரைகளைப் போல அவை அத்தனை உபயோகமாய் இருந்திருக்கவில்லை. அரசனின் பட்டத்து குதிரையை அரசனாகவே பார்க்கும் ஒரு வித மரபு நம் மக்களிடம் இருந்திருக்கிறது. ஜம்பக்கமாய் வீதியுலா வர யானைகள் உதவிய அதே நேரத்தில், போரிலும் களிறுகளின் படை பிளிறி எதிரிகளை சிதறடிக்கச்  செய்தாலும் சூழலுக்கு ஏற்றார் போல எங்கும் கன கச்சிதமாய் அவற்றை மறைத்து வைக்க முடியாது. யானை விழுந்தால் மீண்டும் எழுந்து நிற்கமுடியாமல் அவற்றின் கனம் தடுத்து விடும்.  குதிரைகள் அப்படி இல்லை....

குதிரைகள் கனகச்சிதமாய் விழுந்த நொடியில் எழுந்து கொள்ளும் பலம் உடையவை. எதுவுமே தன்னால் செய்ய முடியாது இனி மரணம்தான் என்பன போன்ற சூழல்களில்தான் குதிரைகள் வீழ்ந்து போகின்றன. மரணமும் மரணத்தின் அருகாமையுமே குதிரைகளை செயலிழக்கச் செய்கின்றன.

குதிரையின் பிடறியை பிடித்து வருடிக் கொடுத்து, கீழ்தாடையை தடவி பிருஷ்டத்துக்கு மேலே அழுத்தமாய் அடித்து மேலேறி அமர்ந்து அடி வயிற்றில் செல்லமாய் உதைத்து கடிவாளத்தை சொடுக்கி, மெல்ல மெல்ல வேகத்தை அதிகரித்து டொக்...டொக்..டொக்.. டொக்.. என்று குளம்புகள் அதிர குதிரை மூர்க்கமாய் நகர....ஒவ்வொரு டொக்கிற்கும் ஒவ்வொரு முறையும் மேலெழும்பிக் கொடுத்து ஒருவித தாளகதியில் சவாரி செய்ய...நமது உடலின் தசைகள் மெல்ல மெல்ல இறுகியும் போகும்.

போருக்கு செல்பவன் குதிரையை வாகனமாக்கிக் கொண்டதின் சூட்சுமம் என்ன தெரியுமா? குதிரை சவாரி  முழுக்க முழுக்க நம்மை விழிப்பு நிலையிலேயே வைத்திருக்கும் என்பதுதான்....குதிரையிலேறி சவாரி செய்ய முடியாதவனுக்கு கவனம் ஒரு இடத்தில் இருக்காது. கவனம் இல்லாமல் போருக்குச் செல்பவன் எப்படி எதிரியை கணிக்க முடியும்...?

நான் சொல்வது எல்லாம் போர் மரபுகளை எல்லாம் சரியாக பின்பற்றிய பண்டைய காலம் பற்றித்தான் ...நவீன யுகத்தின் போர்கள் எல்லாம் சுத்த களவாணித்தனங்கள். ஆயுதம் உள்ளவன் அறிவியலின் துணையோடு வானத்தில் போர் விமானங்களில் வந்து குண்டெறிந்து கொல்வதும்..., கண்ணுக்கு காணாத தூரத்தில் நின்று கொண்டு இயந்திர துப்பாக்கிகளால் சுட்டுக் கொண்டு செத்துப்போவதும், சாகடிப்பதும் என்று...இங்கே போர் மரபுகளை காலம் நவீனம் என்ற பெயரில் மாற்றி விட்டது.....

எனக்கொரு ஆசை.......எல்லா தேசங்களும் நவீன கருவிகளை எல்லாம் தூர வீசிவிட்டு  போர் என்றால் மீண்டும் குதிரையேறி....வாள்களைச் சுழற்றிக் கொண்டு மோதவேண்டும். அப்போது தெரியும் இந்தப் பூமிப் பந்தின் சுத்த வீரன் யார் என்று....

சில வாரங்களுக்கு முன்பு எலும்பும் தோலுமாய் குதிரையொன்றை ஒரு மிருகக்காட்சி சாலையில் பார்த்தேன்...கொஞ்சமாய் நான் கொடுத்த புல்லை கடித்து இழுக்க பாய்ந்து என்னிடம் வந்தது கண்டு மனம் கசிந்தது. நல்ல வேளையாக இப்போது குதிரைகளை வைத்து யாரும் பார வண்டி இழுப்பதில்லை. வரலாற்றின் பக்கங்களில் மிகையாக இடம்பிடித்திருக்கும் இந்த ராஜ மிருகங்கள் வண்டி இழுப்பதை ஏனோ என்னால் சகித்துக் கொள்ள முடிவதில்லை....! குதிரைகள் எல்லாம் போர் புரிய பிறந்தவை என்று எனக்கு ஓர் எண்ணமும் உண்டு...

என்ன செய்வது...? இப்போதெல்லாம் ஆங்காங்கே பந்தயத்திற்கு மட்டும் ஓடி விட்டு களைத்து படுத்துக் கொள்கின்றன அந்த கம்பீர மிருகங்கள்...!


தேவா. S
3 comments:

vimalanperali said...

குதிரை படுத்துதூங்காதாமே,உண்மையா?

திண்டுக்கல் தனபாலன் said...

நீங்கள் சொல்வது போல் எப்போதும் விழிப்பு நிலையில் இருக்க வேண்டும் என்று மனக்குதிரையில் பயணம் செய்கிறோம் உறவுகளோடு / மற்றவர்களோடு...

சூழ்நிலையால், அறியாமையால் மற்றவர்களின் மனக்குதிரையிலிருந்து கீழே தள்ளப்படும் போது தான் தெரிகிறது / புரிகிறது, தனித்தே பயணப்படுவது சிறந்தது என்று...

அமரகத்து ஆற்றறுக்கும் கல்லாமா அன்னார்
தமரின் தனிமை தலை. (814)

நல்லதொரு கட்டுரைக்கு வாழ்த்துக்கள்...

அனைவருக்கும் அன்பு  said...

ஒரு உருவம் நமக்குள் வெவ்வேறு சூழல்களில் வேறு வேறு எண்ணங்களை கொடுப்பது போல உங்கள் ஆழ மனதின் அப்பட்ட பிம்பமாய் இந்த எழுத்துக்கள் .அருமை .......ஆனாலும் மீண்டும் போர் புரியும் எண்ணம் குதிரைக்கு வேண்டாம் உயிர் போர்களத்தில் பலியாவது முதலில் குதிரையாகத்தான் இருக்கிறது