Pages

Wednesday, April 24, 2013

திணற வைக்கும் திருச்செந்தூர் கோயில் நிர்வாகம்...!திருச்செந்தூர் கோயில் அர்ச்சகர்களுக்கும் பணியாளர்களுக்கும் பிரச்சினைன்னு நியூஸ்  பார்த்தேன். ஆமாம் பங்காளிகளுக்குள்ள சண்டை வரத்தானே செய்யும். ஊர அடிச்சு திங்கிற பக்கீஸ்கள் வருமானம் வர்ற இடத்துல அடிச்சுக்கிறது நியாயம்தானே? ரொம்ப தொலைவுல இருந்து  வர்ற ஆளுகளுக்குத்தான் கருவறைக்குள்ள இருக்க செந்தில் நாதன் டெர்ரரா இருப்பாரு அங்கனக்குள்ளயே பொழப்ப ஓட்டிக்கிட்டு இருக்க இந்த மாறி ஆளுகளுக்கு அவரு கல்லு சிலை கூடக் கிடையாது  ச்ச்சும்மா சின்னப் புள்ளைங்க வச்சு வெளையாடுற டெடி பேர், மரப்பாச்சி பொம்ம மாதிரிதான். பின்னே பயம் இருந்தா நெஞ்ச நிமித்திக்கிட்டு பேசுவாய்ங்களா என்ன? அதுவும் அக்கிரமத்தை..

சூரபத்மன சூப்பர் ஹீரோவா நின்னு தமிழ்க் கடவுள் துவம்சம் பண்ணின இடமாச்சேன்னு எனக்கு திருச்செந்தூர் மேல எப்பவுமே ஒரு கிரேஸ் இருந்தது என்னவோ வாஸ்தவம்தான். கடல் வழியா வந்த அசுரன கடற்கரைய விட்டு  ஊருக்குள்ள வர விடாம போட்டுத் தள்ளிட்டு ஸ்டைலா அவர் வேலை (வேலைன்னா ஜாப் இல்லை....வேல்...வேல்...வெற்றி வேல்!!!!) தூக்கி எறிஞ்ச இடத்துல இயற்கையா உருவான சுனையில (நாழிக் கிணறு) குளிக்க எக்ஸ்ட்ட்ரா 5 ரூபா கொடுத்தா மூணு வாளி எக்ஸ்ட்ராவா கிடைக்கும் அப்படியே காசு வாங்கி தண்ணிய தலையில ஊத்துனாலும், அந்த இடம் கலீஜ்ஜாதான் இருக்கும்ன்ற அரசியல எல்லாம் இப்போ நான் பேசலை சார்...

சாமி கும்பிட போன இடத்துல எக்ஸ்பிரஸ், ஸ்பெசல், சாதா, சூப்பர் சாதான்னு போர்டு வச்சு அதுக்கு இம்புட்டு இம்புட்டு காசு கொடுக்கணும்னு பப்ளிக்கா போட்டு இருந்தத போட்டோ மட்டும் புடிச்சது தப்பா? எக்ஸ்பிரஸ் தரிசனத்துக்காக 250 ரூபாய் இருக்க வசதியானவங்க எல்லாம் இப்டிக்கா வாங்க, வக்கத்த பக்கிக எல்லாம் 20 ரூபாய் கொடுத்து அப்டிக்கா போங்கன்னு போட்டு இருந்தது நியாயம்தான்னு நம்ம பாழாப் போன அஞ்சறிவுக்கு எட்டாம....போட்டோ எடுத்தது தப்புன்னு என் மேல கொலை வெறியா பாஞ்ச அந்த கொளுக் மொழுக் குருக்கள் கிட்ட சண்டை வேற போட்டுக்கிட்டு இருந்தேன்.

சாமி பொதுதானே..? செந்தில் ஆண்டவர் ஏழைக்கும் பணக்காரனுக்கும் எகத்தாளம் புடிச்சவனுக்கும், குடுமி வச்சவனுக்கும், முழுக்க சிரைச்சவனுக்கும்  ஒரே சாமிதானே? அப்புறம் எதுக்கு காசு இருக்கவன மட்டும் அவர் கிட்ட போய் பாக்க வைக்கணும்? 250 ரூபாய் காசு இல்லேன்னா என்னை தூரத்துல நின்னு பாருடா பக்கின்னு அவரா சார் சொன்னாரு? அவரே கோமணத்தோட ஆண்டிப்பண்டாரமா நயாப் பைசா இல்லாம நின்னவருதானே? தமிழ்க் கடவுளாச்சே...தமிழர்கள ஏன் சார் காசு இருக்கவன் இல்லாதவன்னு பிரிச்சு கிட்டயும் எட்டியும் நின்னு கும்பிடச் சொல்லணும்...? அப்படி சொன்னா என்னா சார் அவரு சாமின்னு கேட்டதுக்கு பதில் சொல்ல முடியாத குருக்கள் அண்ணாச்சி மந்திரங்கள மட்டுமே பொட்டத் தட்டு தட்டிருப்பாரு போல, நாம கேட்ட கேள்விக்கு ஒரு மண்ணாங்கட்டி பதிலும் சொல்லாம...


சார் இங்க போட்டோ எடுக்கக் கூடாது. அது பகவானா இருந்தாலும் சரி பப்ளிக் நோட்டீஸா இருந்தாலும் சரி எடுக்க கூடாதுன்னா கூடாதுன்னு என்கிட்ட எகிற ஆரம்பிச்சார். பொதுவா எல்லா கண்ணும் படுறமாதிரி வச்சு இருக்க அறிவிப்பு பலகைய எடுக்க கூடாதுன்னு நீங்க எப்டி சொல்வேள்...நான் பிளாக்கராக்கும்(!!!!!)...இதை எல்லாம் சும்மா விடமாட்டேனாக்கும்னு பதிலுக்கு நானும் எகிற.. அந்த அர்ச்சகர் இதுக்குமேல இந்த அம்பிய நம்மளால சமாளிக்க முடியாதுன்னுட்டு என்னை அங்க டிக்கட் கொடுத்துட்டு இருந்த உயர்(!!!)அதிகாரிகிட்ட தள்ளி விட்டார்.

அதிகாரின்னாலே நம்ம ஊர்ல சிரிக்க கூடாது. அதுவும் இவர் குத்தகை எடுத்த அதிகாரி போல...என்னா சார் வேணும் ஒங்களுக்கு..இங்க போட்டோ எல்லாம் எடுக்க கூடாதுன்னு என்னை மிரட்ட ஆரம்பிக்க... 'அது இல்லிங்க சார் நான் கோயில் உள்ள எல்லாம் எடுக்கலை ஜஸ்ட் நீங்க போட்டு இருக்க அறிவுப்ப தானுங்க சார் எடுத்தேன்....ஆமா டிக்கட் கொடுத்துட்டு இருக்கீங்களே... நீங்க கவர்மெண்ட் சர்வெண்டா சார் 'னு கேட்டேன் ...அவ்ளோதான் வந்துச்சுப் பாருங்க அவருக்கு கோவம்...

சார்...கோயிலு கவர்மெண்ட் கோயிலு, சாமி கவர்மெண்ட் சாமி, நாங்களும் கவர்மெண்ட் ஆளுங்கதான்..ன்னு எகிறினாரு....

சாமி கவர்மெண்ட் சாமியா எப்டி சார் இருக்க முடியும்னு நான் சத்யராஜ் படமெல்லாம் பாத்த அனுபவ தெனாவெட்டுல கிண்டலா கேக்க அதிகாரி கடுப்பாகிப் போயி..இஷ்டம் இருந்தா வாங்க இல்லேன்னா வேற இடம் பாருங்கன்னு பிச்சைக்காரன விரட்ற மாதிரி விரட்டி வரிசையில போயி நின்னு டிக்கட்ட வாங்குங்கன்னு சைகையில சொன்னாரு....

கையில என் மகள பிடிச்ச மேனிக்கு சகதர்மினி போற வர்ற எடத்துல எல்லாம் அன்னியன் அம்பி மாதிரி ரூல்ஸ் பேசுதே இந்த மனுசன், இதுக்கு கிறுக்கு எதுவும் பிடிச்சுப் போச்சா என்னன்னு தெரியலயேன்ற மாதிரி....தேமேன்னு ஒரு பார்வை பாத்து " ஏங்க...ஏதாச்சும் ஒரு டிக்கட்ட வாங்கிட்டு வாங்க சீக்கிரமா... வந்தமா சாமியக் கும்பிட்டமா போனமான்னு இல்லாம எதுக்குங்க வந்த இடத்துல சண்டை எல்லாம்... இன்னும் கோயிலுக்குள்ளயே நாம போகலியே மாமான்னு கேட்டாப்டி....

சரி கிரகம் தொலையிதுன்னு...க்யூவுல டிக்கட் எடுக்க நிக்கையில தலைவர் படம் பாக்க நிக்கிற மேரியே ஒரு ஃபீலிங்கு எனக்கு... பி.பி எறங்காம 20 ரூபா டிக்கெட் எடுத்துக்கிட்டு தரை டிக்கட்ல முருகன பாக்கப் போயி, நான் கூட்டிட்டுப் போறேன் சாமி கிட்டக்கன்னு உள்ளுள்ள பிஸினெஸ் பேசின ஒரு குருக்கள அன்போட மறுத்துட்டு  போன என்னை சரியா அரை நிமிசம் செந்தில் ஆண்டவர் முன்னால நிக்க வச்சுட்டு அங்க இருந்த அர்ச்சகர் நம்மள பிடிச்சு தள்ள அப்டியே பிரகாரம் விட்டு வெளியில வந்ததுதான் தாமதம்...

யாரோ ஒரு நல்ல மனுசன் குடம் புல்லா அர்ச்சனை பாலை வச்சுக்கிட்டு இருந்தவரு அய்யோ பாவம்னு இரக்கப்பட்டு ஒரு கிளாஸ்ல பால் கொடுத்தார். அட இந்தக் கோயில்ல நாம திருப்திப் பட்டுக்கிற மாதிரி இவராச்சும் இருக்காரேன்னு பெருமிதத்தோட புள்ளைக்கும் பொண்டாட்டிக்கும் ஆளுக்கு ஒரு வாய் பாலைக் கொடுத்துட்டு காலி டம்ளர அந்த புண்ணியவான் கிட்ட கொடுத்து ரொம்ப தேங்க்ஸ் சார்னு சொல்லிட்டு நகரப் போனேன்....அவ்ளோதான்...

கபால்னு கையப்புடிச்சு நிறுத்தி, என்னா சார் போறீங்க...? 20 ரூபா கொடுங்க சார்ன்னு அந்தப் புண்ணியவான் அன்னியனா மாறி முறைக்க...எ...எ..துக்க்ங்க சார் காசுன்னு நான் கேட்டதுக்கு....பாலை குடிச்சீங்கள்ள...அதுக்கு என்று தெனாவெட்டினார். அது நீங்கதானே கொடுத்தீங்கன்னு நான் சொல்ல...நீங்க ஏன் வாங்கினீங்கன்னு அவர் கேக்க...கொடுத்தா வாங்கத்தானே செய்வோம்னு நான் சொல்ல்ல...

மறுபடி அங்க வெடிக்க இருந்த ஒரு கலவரத்தை ஓரமா நின்னு அப்பாவியா வேடிக்கைப் பார்த்துட்டு இருந்த பொண்டாட்டிக்காகவும் பிள்ளைக்காகவும் கேன்சல் பண்ணிட்டு இருபது ரூபாயை தேடிப் பிடிச்சு கொடுத்துட்டு நடந்து போயிட்டு இருக்கும் போது சத்தியமா சூரபத்மன முருகன் வதம் செய்த கதையோ, முருகனோ, தமிழோ, பக்தியோ, பாசமோ, அமைதியோ, எந்த வித தாக்கமும்  எனக்கு இல்லை. என்ன ஒண்ணு ஒரே பயமா இருந்துச்சு....அடுத்து எவன் என்ன கேப்பானோ எப்டி எஸ்கேப் ஆவுறதோன்னு....

இப்போ பாத்துக்கிட்டீங்கன்னா கோயில் அதைச் சுற்றி இருக்கும் மக்கள்னு அவுங்க வாழ்க்கை அதைச் சார்ந்துதான் இருக்கும்ன்றத நாம ஏத்துக்கிட்டுதான் ஆகணும் ஆனா அதுல ஒரு தர்மம் இருக்கணும் இல்லையா..? ஆளாளுக்கு டீலிங்க் பேசுறதுக்கு அது என்ன வாரச் சந்தையா...? இல்லை... மன நிம்மதிக்காக வந்து போற கோயிலா?

அதுவும் இல்லாம டாஸ்மாக்ல கோடி கோடியா சம்பாதிக்கிற கவர்மெண்ட்... சாமி கும்பிட வர்ற இடத்துலயாச்சும் ஏழை பணக்காரன்ற பாகுபாடு இல்லாம ஒரே மாதிரியா மனுசங்கள டீல் பண்ணினா என்ன? காசு கூட கொடுக்குறவன் கிட்டப் போயி பாக்கலாம்ன்னு எந்த சாமி சொன்னுச்சுன்னு எவனாலயாச்சும் சொல்ல முடியுமா? கோயிலுக்கு உள்ள போறதுக்கு முன்னாலயே அச்சச்சோ நம்மகிட்ட காசு இல்லேயேன்னு ஒரு மனுசன மனசுக்குள்ள புலம்ப வைக்க எந்த தெய்வமும் ஒத்துக்காது.. அப்படியே ஒத்துக்கிட்டாலும் அதுக்குப் பேரு கடவுள் இல்லை சாத்தான். சத்தியமா காஷ்மீர் பார்டர சுத்தி வர்ற ஒரு பதட்டத்தோட என் முதல் திருச்செந்தூர் கோயில் பிரவேசம் முரட்டுத்தனமா நடந்து முடிஞ்சது.


கோயிலுக்கு வெளியில வந்து சட்டைய மாட்டிக்கிட்டு வேட்டிய இறுக்கமா கட்டிக்கிட்டு நடந்துக்கிட்டு இருக்கப்ப ஒரு ஆத்தா கையில கோலோட வந்து குறி பாக்குறேன் சாமி உங்களுக்கு வந்த கஷ்டம் எல்லாம் தீந்து போச்சுதுன்னு சொல்லவும் நான் திரும்பவும் கோயில ஒரு லுக் விட்டுக்கிட்டே பாசமா பேசுன அந்த ஆத்தா திருப்திக்காக கை ரேகை பார்க்க ஒக்கார்ந்தேன்...

மூத்தது பொண்ணு ....அடுத்து முருகன் வந்து பொறக்க போறான்...முருகன் வந்து பொறக்கப் போறான்னு ஆத்தா ஆருடம் சொல்லவும்... அது ஒண்ணுதான் கொறைச்சல்...ஏற்கெனவே கல்யாணம் ஆன புதுசுல பழனில முருகன் பொறப்பான்னு ஒரு அக்கா சோசியம் சொன்னிச்சு...இந்த முருகாயி வந்து பொறந்தா...மறுபடியுமா....

பொறவு என்ன..

நல்லா சாப்டு ஆத்தான்னு... ஆத்தா கையில 100 ரூபா காசைக் கொடுத்துட்டு.... கோயிலுக்குள்ள இருக்க ஆளுகள மட்டுமாச்சும் நல்லபடியா காப்பாத்துய்யா எங்கய்யா முருகையான்னு நேந்துகிட்டு ஊரப்பாக்க வந்து சேந்தோம் அம்புட்டுதேன்...!


தேவா. S


Friday, April 19, 2013

ருத்ர தாண்டவம்...!சிவம் என்பது உள்ளமை. எப்போதும் உள்ளுக்குள் இருக்கும் அசையாத தன்மை. அது கருவுக்குள் இருக்கும் போதும் ஆடாமல் அசையாமல் இருந்தது. கருவில் இருப்பதற்கு முன்னான அதிர்வு நிலையையே கருவிலிருக்கும் அது கைக்கொண்டிருக்கிறது. அது ஒரு தவ நிலை. தவம் என்பது சலனமற்று இருப்பது. சலனமற்று இருக்க எண்ணங்கள் அற்று இருக்க வேண்டும். எண்ணங்களற்று இருப்பதற்கு முன் அனுமானங்களும், கருத்துப் படிமங்களும் மூளையில் குடியேறி இருக்கவே கூடாது. அர்த்தங்கள் எடுத்துக் கொண்டு ஏற்படுத்திக் கொள்ளும் கற்பிதங்களை எல்லாம் கழித்து நிற்கும் பேறு நிலை... முழுமை.  புத்திக்குள் கருத்துக்கள் ஏற ஏற அதன் விஸ்தரிப்புகள் மனம் என்னும் இல்லாத ஒரு வஸ்துவை உருவாக்கிக் கொள்கின்றன.  நிகழ்வுகளின் கூட்டு அல்லது செயலின் கூட்டு  மனமாகிறது. தனித்து இதுதான் மனமென்று யாராலும் சுட்டிக் காட்ட இயலாது. 

அனுபவங்களின் தொகுப்பு எண்ணமாகிறது. எண்ணங்களின் தொகுப்பு மனம். நாம் நம்மை மனம் என்றே நினைத்துக் கொள்கிறோம். கருவில் இருக்கும் போது என்ன அனுபவம் இருக்க முடியும்? என்ன தேவை இருக்க முடியும்..? எதுவுமற்ற இயற்கையின் போக்கில் மிதந்து கிடக்கும் நிலை. யாரோ உட்கொள்ள நமது பசி அடங்கிப் போகிறது. யாரோ சுவாசிக்க பிராணனை வாங்கிக் கொண்டு உடல் வளர்ந்து கொள்கிறது. தாங்கும் சக்தியை கருப்பை என்னும் சவ்வு கொண்டிருக்கும் காலத்தை யாரும் நிர்ணயம் செய்வது இல்லை. 36 வாரங்களுக்கு முன்னும் பின்னும் அதன் தாங்கு தன்மை  இருப்பது யாரோ நிர்ணயம் செய்தது அல்ல. அதன் வலு அவ்வளவுதான். அதன் பின் சிசுவாய் வெளித் தள்ளப்பட்ட முதற் கணத்தில் தன்னிச்சையாய் பிராணனை சுவாசிக்க ஆரம்பிப்பது மூளையில்  இருக்கும் ஏதோ ஒரு நியாபகத்தின் தொடர்ச்சி அல்லது வேறு வழி இல்லை சுவாசிப்பதற்கு  என்றும் கொள்ளலாம்... தொப்புள் கொடி அறுபட்ட கணத்தில், தானே தன்னை நிறுவிக் கொண்டு உடல் வளர்க்கும் சுப நிகழ்வு அல்லது அசுப நிகழ்வு  நிகழ்ந்து விடுகிறது.

வயிறு ஏதோ செய்ய அந்த அவஸ்தையை வெளிக்காட்ட சப்தம் எழுப்ப  வயிற்றுப் பசி தீர்க்கப்படும் அரசியலை குழந்தையாய் நாம் கற்றுக் கொண்டு இன்னமும் எது எதற்கோ அழுது கொண்டிருக்கிறோம். தொடர்ச்சியாய் பசி  தீர்க்கப்பட்டுக் கொண்டேதானிருக்கிறது. எதற்குப் பசி தீர்க்கப்பட வேண்டும் அல்லது ஏன் பசிக்க வேண்டும்? என்ற கேள்வியை எழுப்பிய போதுதான் ஏதேதோ திறப்புகளை வாழ்க்கை திறந்து கொடுத்தது எனக்கு.

சூன்யமே மூலம்... அந்த மூலத்தை நோக்கிய பெரும் சுழற்சியின் சிறு துகள்தான் நான் என்றறிந்த போது சுற்றி நடக்கும் ஓராயிரம் நாடகங்களின் அபத்தங்களை விளங்கிக் கொள்ள முடிந்தது. மனம் தடிக்க, தடிக்க அகங்காரம் கூடிப் போகும் அசிங்கம் விளங்கியது. நீங்களோ நானோ தனித்து இங்கு எதுவும் செய்யவில்லை. செய்யவும் முடியாது. எல்லாமே நிகழ்ந்து கொண்டிருக்கிறது. நீங்கள் மழை வேண்டும் என்று நிறைய தடவை நினைத்திருப்பீர்கள். ஏதோ ஒரு தடவை நீங்கள் நினைத்த அன்று எதேச்சையாய் மழை பெய்ய நான் நினைத்தேன் பெய்தது என்று சந்தோசப்பட்டுக் கொள்வீர்கள். 

இங்கே எல்லோரும் எல்லாருமாக முடியாது. யார் யார்க்கு என்ன சூழலோ, எது எது ஜீன்களில் நிறைந்து கிடக்கிறதோ அதுதான் உங்களையும் என்னையும் தீர்மானிக்கிறது. புறச்சூழல் நம்மை தீர்மானிக்க முடியும் என்றாலும் புறச்சூழலை தீர்மானிப்பது  பெரும்பாலும் நமது பிறப்பாகிப் போகிறது. 100 கிலோ மீட்டர் வேகத்தில் உங்களாலும் என்னாலும் ஓட முடியும் என்றாலும் நமக்கு முன்னால் ஆயிரம் கிலோ மீட்டருக்கு அப்பால் இருக்கும் ஒருவனால் மணிக்கு 10 கிலோ மீட்டர்தான் ஓட முடியுமென்றாலும் அவனை நாம் அடைய சில காலம் ஆகும். சில காலம் என்று நான் சொல்வது சில, பல பிறப்புகள்... தூரம் என்று நான் சொல்வது பொருள் பலம் அல்ல. ஆன்ம பலம். ஆன்ம புரிதல்.

தயவு செய்து பொருள் பலத்தை ஆன்மீகத்தின் பக்கத்திலே கூட கொண்டு வராதீர்கள். சாதாரண விசயங்களை எப்போதும் அசாதாரணமான விசயங்களோடு கோர்த்து விடாதீர்கள். தெருவோரங்களில் படுத்து உறங்கி பிச்சை எடுத்து உண்ணும் ஒரு பிச்சைக்காரனின் நிம்மதி மெர்ஸிடிஸ் பென்ஸ் காரில் செல்லும் பணக்காரனிடம் இருக்காது என்னும் உண்மை உங்களுக்குத் தெரியும்தானே..? மேலை நாட்டு கலாச்சாரம் நமது பாரத தேசத்திற்குள் எப்போது எட்டிப்பார்த்ததோ அப்போதுதான் வர்க்க பேதம் என்று ஒன்று இருக்கிறது என்று நாம் அறிந்து கொண்டோம். சாதி பேதம் என்னும் பாகுபாடுகள், மற்றும் அடக்கு முறைகள் மெல்ல மெல்ல எட்டிப்பார்க்க ஆரம்பித்ததே கி.பி. ஆறாம் நூற்றாண்டுக்கு பிற்பாடுதானே..?

ஏழை, பணக்காரன், முதலாளி, தொழிலாளி என்பதெல்லாம் நமக்குத் தெரியவே தெரியாது. இதை நான் சொல்வதாலேயே.... ஏதோ சமீபத்திய காலத்தை நான்  சொல்கிறேன் என்று பகுத்தறிவு ஞானிகள் என்னிடம் தர்க்கம் செய்ய வரவேண்டாம். உங்களின் வரலாற்று அறிவுக்கு முன்பும் இந்த தேசம் இருந்தது. சித்த புருஷர்களும் முனிவர்களும் ஆன்ம தெளிவு பெற்றவர்களும் நிறைந்து  கிடந்த காலம் அது. அரசனாயிருந்தாலும், அறிஞனாயிருந்தாலும், குடியானவனாய் இருந்தாலும் முக்தி என்னும் விடுதலையை நோக்கி தங்களை நகர்த்துவதே பெரும் பேறு என்று எண்ணி வாழ்ந்த காலம் அது. முக்தி என்பது விடுதலை.  சுதந்திரம்.  ஏதோ ஒரு கடவுளையும், மதத்தையும் அமைப்பையும் உடைத்து பகுத்தறிவோடு எழுந்து நிற்கும் ஒரு வீரியம். 

முக்தி அடைந்தவர்களை யாரும் கட்டுப்படுத்த இயலாது. 18 சித்தர்களும் பகுத்தறிவுவாதிகளே..! அவர்கள் எந்த மூட நம்பிக்கையும் விதைக்கவில்லை. அவர்கள் இந்த பேருண்மையை வாழ்க்கையை மறுத்து உணரவில்லை. வாழ்க்கையை ஏற்று உணர்ந்தவர்கள். இருப்பதின் வீரியம் அறிந்து, காரணம் அறிந்து, சக்தியை உணர்ந்து மூடநம்பிக்கைகளை உடைத்துப் போட்டு சீறிப்பாய்ந்த புலிகள் இவர்கள். வாழ்க்கையை  ஏற்று நகர்தல் வேறு, மறுத்து நகர்தல் வேறு. முதலாவது பாஸிட்டிவ் எனர்ஜி, இரண்டாமாவது நெகட்டிவ் எனர்ஜி.

பணம் இருந்தால் எல்லாம் அப்போது மரியாதை இல்லை. தெளிவு, புரிதல், நிம்மதி இருப்பவனை தேடி எல்லாமே வந்தது. அப்படி வரும் போது அதை எல்லாம் நிராகரித்து இயற்கையோடு இயைந்து அவர்கள் வாழ்ந்த காலங்கள் அவை. நீங்கள் வசதி என்று எதை எதை எல்லாம் சொல்கிறீர்களோ அது எல்லாம் நவீனம் நமது மூளையில் சுமத்தி வைத்திருக்கும் பொய்கள்.

குளிர் சாதன அறைக்குள் இருப்பதை வசதி என்று சொல்வதற்கு முன்னால், குளிராய் காற்றும், மரங்களும் இல்லாமல் வெயிலில் வெந்து செத்த ஒருவனின் மூளையில் இருந்து தன்னைக் காத்துக் கொள்ள உருவானது அது என்று உணருங்கள். அது வசதி இல்லை. குறைபாடுகள் கொண்ட சூழல்கள் கொண்டவன் தன்னைக் காத்துக் கொள்ள கண்டு  பிடித்த ஒரு அறிவியல் சாதனம். நீங்களும் நானும் எல்லா மரத்தையும் வெட்டி சுற்றுப்புற சூழலுக்கு கேடு விளைவித்து விட்டு, இயற்கையின் வளங்களை எல்லாம் அழித்து விட்டு....திட்டமிடல் இல்லாமல் இன்று சீரழிந்து கொண்டிருக்கிறோம்.

ஆன்மீகம் பொருளோடு தொடர்புடையது அல்ல. அது அகத்தோடு தொடர்புடையது. மனிதர்களுக்குள்ளேயே பிரிந்து நின்று கொண்டு அதிகாரம் செய்து கொண்டு தங்களை ஏக போக ராஜாக்களாய் காட்டிக் கொள்கிறார்கள். கோபப்படுகிறார்கள், அதிகாரம் இருப்பதாலேயே..மீசை முறுக்கி கொக்கரிக்கிறார்கள்... புள்ளி விபரங்களை புத்திக்குள் பதுக்கிக் கொண்டு  தேவைப்பட்ட போது வார்த்தை ஜாலங்கள் செய்து தங்களை அறிவாளிகளாக காட்டிக் கொள்கிறார்கள்...

பூமி மெலிதாய் ஒரு நடுக்கம் காட்டி...அதட்டும் போது ஒடுங்கிக் கொள்கிறார்கள். நிலையாமை பற்றி பேசுகிறார்கள். மரணம் என்ற ஒன்று தன்னை நெருங்கும் போது இவர்களுக்கு கடவுள் சிந்தனை வருகிறது. அடுத்து என்ன நிகழும் என்று தெரியாத போது புத்தி பித்து பிடித்துப் போகிறது. வாழ்க்கை எல்லாமுமாக இருக்கிறது. எதுவும் எவராலும் இங்கு நிகழவில்லை என்பதை பின்பு மறந்து போகிறார்கள். வெள்ளைச் சட்டைகளும், வேட்டிகளும் கோட் சூட்களும் மண்ணோடு மட்கிப் போக உடலை மண் தின்னப் போகும் காலத்தை இவர்கள் நினைத்துக் கூட பார்க்க விரும்புவதில்லை.

இது சுழற்சி...இயற்கையின் தாண்டவம்!

உங்களுக்கும் எனக்கும் ஏதோ ஒன்று நிகழ்வதற்கு பலவிதமான சூழல்களும் மனிதர்களுமே காரணமாகிறார்கள். என்னால் ஆனது....நான் செய்தேன்.... என்னால் மட்டுமே முடியும்.. நான் யார் தெரியுமா... என்று சொல்லிக் கொள்ளும் வார்த்தைகளுக்குப் பின் இருக்கும் பேதைமையை உணராமலேயே இருக்கிறோம்.

மனமற்று இருக்கையில்
நானும் நீங்களும்
யாருமற்றுப் போக
செயல்களின் விளைவுகள்
ஏதேதோ நிகழ்த்த நிகழ்த்த
நித்தம் நடக்கிறது
இங்கே ஒரு ருத்ர தாண்டவம்!!!!


தேவா. S
Tuesday, April 16, 2013

தமிழ் எங்கள் உயிருக்கு நேர்....!பிள்ளைகளுக்கு தமிழ் சொல்லிக் கொடுக்க நேரமின்மையும், நமது கலாச்சாரம் என்பதே செயற்கைக் கோள் தொலைக்காட்சிகள் மூலம்தான் நமது பிள்ளைகளுக்கு சென்றடைய முடியும் என்ற நிர்ப்பந்தமும் நமக்கு ஏற்பட்டுப் போனால் அது எவ்வளவு பெரிய சாபம். எவ்வளவு பெரிய கொடுமை. ஆமாம்..பெரும்பாலும் வெளிநாட்டில் வாழும் அத்தனை பேருக்கும் இந்த கொடுமையும் சாபமும் இருக்கத்தான் செய்கிறது. ஏனென்றால் நமது கலாச்சாரத்தை எடுத்துச் சொல்லும் பண்டிகைகளுக்கும்,  திருமணங்களுக்கும்
எப்போதாவதுதான் தாய் நாட்டில் செல்லும் வாய்ப்பு நமது குழந்தைகளுக்கு இருக்கிறது.

வாழும் சூழல் நமது தாய் மொழியோடு பந்தப்பட்டு இருக்காவிடில் அவர்கள் எப்படி தங்களைத் தமிழ்ப் பிள்ளைகளாக உணர்வார்கள்? தமிழ் என்னும் மொழியின் வளத்தையும் தமிழர்களுக்கென்று இருக்கும் பாரம்பரிய கலாச்சாரத்தையும், நமது முத்தமிழின் சுவையையும் அறிவார்கள்...? எட்டு வருடமாக என் மகளுக்கு அப்படியான ஒரு சூழலை எங்களால் அமைத்துக் கொடுக்க முடியாமல் ஒரு குற்ற உணர்ச்சியுடன் தான் எங்களின் அமீரக வாழ்க்கை நகர்ந்து கொண்டிருந்தது. தமிழ்த்துளி பற்றி என்னுடைய கல்லூரி சீனியர்  சங்கர் அண்ணன் கூறிய பின்பு அதில் நிறைய தமிழ்ப் பிள்ளைகளுக்கு தமிழை மையப்படுத்தி திருமதி. ப்ரியா ராஜன் நிறைய செயற்பாடுகளை செய்து கொண்டிருக்கிறார் என்பதை அறிந்து இணைந்த உடன் இன்று அந்த குற்ற உணர்ச்சி சிறிதேனும் எனக்கு குறைந்திருக்கிறது.

தமிழின் பெயரால் எத்தனையோ அமைப்புகள் அமீரகத்தில் இருந்தாலும் தமிழ்த்துளியின் செயல்பாடுகள் அவற்றில் இருந்து வேறுபட்டது. தமிழ்த் துளி கிளைகளையும், இலைகளையும், பழங்களையும் நோக்கி செல்லாமல், அதன் சீரமைப்புகள் நேரடியாக விதைகளைச் சென்று செப்பனிடுவதுதான் இதன் சிறப்பு. தமிழ்ப்பிள்ளைகள் தமிழிலேயே பேசவேண்டும் என்பதோடு வீட்டில் பெற்றோர்களும் தமிழிலேயே பேசுங்கள் என்று வலியுறுத்தும் தமிழ்த் துளி போன்ற அமைப்புகள் சர்வ நிச்சயமாய் வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்தான்.

கடந்த வாரம் தமிழ்த்துளியின் இரண்டாம் ஆண்டு விழாவினை திங்கள் விழா என்ற பெயரில் நாங்கள் கொண்டாடிய பொழுது எங்களின் நிகழ்ச்சிகளை எமது பிள்ளைகளே முன் நின்று நடத்தினர். தமிழ் படிக்கவும் எழுதவும் சூழல் அமையாத தளிர்கள் எல்லாம் தமிழ்த் துளியின் அரவணைப்பால் செந்தமிழில் பேசியும், நமது கலாச்சார நடனங்களை ஆடியும் எம்மை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தினர். தமிழ்த் துளி குழந்தைகளுக்கான அமைப்பு. குழந்தைகளே அதன் உறுப்பினர்கள் என்ற ரீதீயில் செம்மையாய் வடிவமைத்திருக்கும் ப்ரியா ராஜன் மிகவும் பாராட்டப்பட வேண்டியவர்.

அதிவேக ரயிலொன்றின் வேகத்தை ஒத்த அமீரக வாழ்க்கையில் நமது மொழிக்காய், நமது பிள்ளைகளின் தெளிவுக்காய் நேரம் ஒதுக்கி இத்தகைய அமைப்புகளை நடத்துவதும், அவ்வப்போது அவர்களுக்கான தனித்திறன்போட்டிகளையும், கலை நிகழ்ச்சிகளையும் ஒருங்கிணைத்து செய்தலும் எளிதான காரியம் அல்ல. தமிழ் என்பது வெறும் மொழியல்ல அது நமது உணர்வு என்பதால்தான் எல்லா கடுமையான அலுவல்களுக்கும் நடுவே தமிழ்த்துளி இயங்கிக் கொண்டிருக்கிறது.


தமிழ்த்துளியின் இரண்டாம் ஆண்டு விழாவான திங்கள் விழாவின் சிறப்பு விருந்தினராய் சொல்லரசி தேச மங்கையர்க்கரசி விழாவிற்கு தலைமை தாங்கி சிறப்பித்தார். இறையால் ஆசிர்வதிக்கப்பட்ட சிறப்பு ஆளுமை கொண்ட சொல்லரசி தேச மங்கையர்க்கரசியின் சில ஆன்மீகச் சொற்பொழிவுகளை கேட்டிருந்த எனக்கு...

தமிழ்த்துளியின் திங்கள் விழாவில் அவர் பாய்ந்த தமிழ்ப்பாய்ச்சலைக் கண்டு பிரமிப்பும் ஆச்சர்யமும் ஏற்பட்டது. அம்மா என்றும் அப்பா என்றும் பிள்ளைகள் தங்களின் பெற்றோர்களை அழைக்க வேண்டியதின் அறிவியல் நிர்ப்பந்தத்தை அவர் விளக்கினார். ' அ ' என்பது உயிரெழுத்து.. 'ம்' என்பது மெய்யெழுத்து இந்த உயிரும் மெய்யும்  கூடி உயிர்மெய் எழுத்தான 'மா' வை பெற்றெடுக்கிறது, இதே போலத்தான் அப்பா என்ற சொல்லும்.... என்று விளக்கிய அவர் அம்மா என்றும் அப்பா என்றும் நாம் அழுத்தமாய்  உச்சரிக்கும் போது மூளையில் சிந்தனையைத் தூண்டக் கூடிய திரவம் இயல்பிலேயே சுரக்கிறது என்றும் விவரித்தார்.

அவசர யுகத்தில் எல்லாமே நாகரீகத்தின் பொருட்டு பழமையாய்ப் பார்க்கப்பட்டு மாற்றிக் கொள்ளப்படுகிறது ஆனால் மொழி விசயத்தில் நாம் அப்படி இருக்கக் கூடாது. தமிழ் ஆயுளை வளர்க்கும் மொழி. என்றும் இனிய தமிழ் உலகத்தில் இருக்கும் எல்லா மொழிகளையும் விட சுவையான மொழி. பாரதியார் எல்லா மொழிகளையும்  கற்றவர் ஆனாலும்.... யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல இனிதாவதெங்கும் காணோம் என்றார் என்றால் தமிழ் எவ்வளவு வளமான மொழி என்று அறிக;

இப்படியாய் தொடர்ச்சியாய் தமிழை மையப்படுத்தி திருமதி. தேச மங்கையர்க்கரசி  சொற்பொழிவாற்றியதோடு தமிழ்த்துளியின் திங்கள் விழா அட்டகாசமாய் நிறைவுற்றது.


திங்கள் விழா என்னும் கருப்பொருளில் தமிழ்த்துளி வடிவமைத்திருந்தது வெறும் கேளிக்கை நிகழ்ச்சிகள் அல்ல... அது ஒவ்வொரு தமிழ் மாதத்தையும் மையப்படுத்திய பாடல்கள், உரையாடல்கள் மற்றும் நடனங்கள் என்று கேள்விப்பட்டால் நீங்கள் ஆச்சர்யப்படுவீர்கள்தானே...!!ஆமாம்...இப்போது எங்கள் பிள்ளைகளுக்கு, பாரதியோடு பாரதிதாசன், கண்ணதாசன், திருவள்ளுவர், என்று தமிழ்ப் பெரும் புலவர்களையும் தெரியும், தமிழ் மாதங்களும் தெரியும்...தமிழ் மொழியின் வளமும் அதை பேச வேண்டிய அறிய வேண்டிய அவசியமும் தெரியும்...

பிஞ்சுகளின் வாயில்...
தமிழ்ச் சொற்களாய் 
தத்தித் தத்தி 
நடை பயின்ற 
கொஞ்சு தமிழின்
அழகில் பறிபோனதே
எமது நெஞ்சம்...!

தாய்த் தமிழகத்தில் இருந்து கொண்டு ஆங்கிலத்தில் பேசும் மோகம் கொண்ட என் உறவுகளே....உங்கள் பிள்ளைகளிடம் தமிழில் பேசுங்கள்...! தமிழின் ஆளுமையையும் தமிழராய் இருக்க வேண்டியதின் அவசியத்தையும் எடுத்தியம்புங்கள்...!

தமிழ் நாட்டிலும், வெளிநாட்டிலும் தமிழின் பெயரால் அமைப்புக்கள் வைத்திருக்கும் தோழர்களே...உங்கள் அமைப்பின் செயல்பாட்டினை தமிழின் வளர்ச்சியை மையப்படுத்தியே நகருங்கள்.... தமிழ் பேசா, தமிழின் சிறப்பு இயம்பா எந்தச் செயலையும் தமிழின் பெயர் சொல்லி இனியும் செய்யாதீர்கள்...! தமிழ்த் துளி போன்ற அமைப்புகள் அமீரகம் மட்டுமின்றி இன்னும் எங்கெங்கெல்லாம் தமிழர்கள் பரவி வாழ்கிறார்களோ அங்கெல்லாம் உருவாகி எம் செந்தமிழினை  எமது அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்கட்டும்..!

" தமிழுக்கு அமுதென்று பேர்
அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் "


தேவா. S
Monday, April 15, 2013

கரையை தேடும் ஓடங்கள்..!ஏதேதோ நிகழ்ந்து கொண்டிருக்கிறது தன்னிச்சையாய். ஒரு வண்ணத்துப் பூச்சியைப் பிடிக்க ஓடிய சிறுவன் திரும்ப வழி  மறந்து எங்கேயோ நிற்கும் ஒரு திடுக்கிடலாய் எனக்கு சமகாலம் இருக்கிறது. என் தாத்தா இறந்து போன போது எண்ணெய் தொட்டு வைக்க வேண்டும் என்று இறந்த உடலின் தலையை முதன் முதலாக தொட்ட போது இடுப்பில் கோமணத்தோடு குளியலுக்கு தயாராயிருந்த அந்த உடலை நான் ஆச்சர்யமாய் பார்த்தேன் ஒரு பயத்தோடு.

காலத்தின் திசைகள் இதுதானென்று அறுதியிட்டு யாராலும் சொல்ல முடியாது. என் தாத்தாவும் என்னைப் போல வண்ணத்துப் பூச்சி பிடிக்கச் சென்றவர்தான். வண்ணத்துப் பூச்சி என்ற ஒன்றே இல்லை என்று அறிந்த பின் அவர் மரணித்தாரா இல்லை. அறியாமலேயே வண்ணத்துப் பூச்சியை பிடிக்க முடியவில்லை என்ற ஏக்கத்தில் மறைந்தாரா என்று தெரியவில்லை. ஒரு வேளை வேறு ஏதோ ஒன்றை பிடித்து விட்டு வண்ணத்து பூச்சியை பிடித்து விட்டேன் என்ற இறுமாப்பில் கூட இறந்திருக்க கூடும்.

ரங்கூனிலிருந்து அவர் என் அப்பத்தாவிற்கு எழுதி இருந்த கடிதங்களில் குடும்பத்தின் நிகழ்வுகளைப் பற்றி கேட்டும் கொடுத்து விட்ட பணத்தில் என்ன செய்ய வேண்டும் என்று விவரித்துமே நிறைய எழுதி இருந்தார். உன் உடல் நலனை பார்த்துக் கொள்ள வேண்டியது என்று எழுதி அவர் அடிக்கோட்ட இடமே காதலின் வெளிப்பாடாக இருந்திருக்க கூடும். அதுவும் அந்தக் கடிதத்தை என் அப்பத்தாவிடம் வாசித்தவன் அடிக்கோடிட்டு எழுதியிருக்கும் வாசகத்தை அழுத்தம் திருத்தமாய் சொல்லி இருப்பானா என்று தெரியவில்லை. வெளிப்படுத்திக் கொள்ளாத காதல் எப்படி இருந்திருக்கும் என்று என்னால் அனுமானிக்க முடியவில்லை.

அப்பத்தா தாத்தாவிற்கு அவர் ரங்கூனிலிருந்து இரண்டு வருட காலத்திற்குள்  எழுதிய சில கடிதங்களையும் என்னால் வாசிக்க முடிந்தது. கடிதம் இப்படி ஆரம்பித்து இருந்தது....

" மஹாகனம் பொருந்திய, ஸ்ரீமான், ராஜ ராஜஸ்ஸ்ரீ, சிரஞ்சீவி, மரியாதைக்குரிய அய்த்தான் அவர்களுக்கு.. " என்று நீட்டி இழுத்து சுழிக்கும் இடத்தில் எல்லாம் மயிலின் தலையிலிருக்கும் கொண்டையாய் சுழித்து  எழுதப்பட்டு இருந்தது. கடிதத்தின் தலைப்பில்  " உ சிவமயம் " என்ற  வார்த்தை அழுத்தமாய் இருந்தது.

சிவகோத்திரம். சிவனை பெயரிலும், விபூதியாய் நெஞ்சிலும், நெற்றியிலும், தோளிலும், தனது 75 வயதிலும் என் தாத்தா அணிந்திருப்பதை பார்த்திருக்கிறேன். சிவகாமி அம்மாள் என்ற அப்பத்தாதான் ஒரு வேளை தாத்தா தேடி அடைந்த பட்டாம் பூச்சியாய் இருக்குமோ என்று கூட சில நேரம் யோசித்து இருக்கிறேன். ஒரு மாதிரியான நிதானமான காலத்தில் அவர் வாழ்ந்து முடித்திருக்கிறார். என் அப்பாவின் காலத்தின் முற்பகுதியில் அந்த நிம்மதி பரவி இருந்திருக்கிறது. இப்போது அவரும் சமகாலத்தின் குறைகளை சலித்துக் கொண்டேதான் நகர்ந்து கொண்டிருக்கிறார்.

என்னுடைய காலம் சலிப்பிலேயேதான் தொடங்கி இருக்கிறது. நிதானம் என்ற வார்த்தையையும், நிம்மதி என்ற வார்த்தையையும் எழுதி, எழுதி நிம்மதி அடைந்து விட்டதாய் நினைத்துக் கொள்கிறேன். பட்டாம் பூச்சி இருக்கிறது என்று  என் அப்பா இப்போதும் சொல்கிறார். அவர் அந்த பட்டாம் பூச்சியைப் பிடித்தாரா, இல்லையா என்று தெரியவில்லை. நானும், என் தாத்தாவும் என் அப்பாவும் மட்டும் வாழ்க்கைக்குள் இழுத்துச் செல்லும் பட்டாம் பூச்சியை பிடிக்க ஓடவில்லை. ஒட்டு மொத்த உலகமும் ஓடிக் கொண்டிருக்கிறது.

ஒவ்வொரு மனிதனும் ஒரு வரலாறு. ஒவ்வொரு சூழல், ஒவ்வொரு கதைகள். ஒவ்வொரு கதைக்குள்ளும், வீரம் இருக்கும், விவேகம், இருக்கும், வெற்றி இருக்கும் தோல்வி இருக்கும் ,காதல், காமம், ஏமாற்றம் விரக்தி, நம்பிக்கைகள், மதம், சாதி,...இப்படியான இத்தியாதி இத்தியாதிகள் இருக்கும். என் அப்பாவிற்கு,என் அம்மாவும் நானும் என் குடும்பத்தினரும் இருப்பது போல அவரது அப்பா செல்லையா பிள்ளைக்கு ஒரு ரங்கூனும், சிவகாமி அம்மாளும், ஐந்தாறு பிள்ளைகளும், அவரது அப்பா, ராமசாமி பிள்ளைக்கும் அவரது அப்பா கருப்பையா பிள்ளைக்கும், அவரது அப்பா முத்து பொன்னம்பலம் பிள்ளைக்கும் இருந்திருப்பார்கள்.

என் அப்பாவின் பெயருக்குப் பின்னால் இந்த பிள்ளை என்று போட்டுக் கொள்ளும் பழக்கம் 50-50 ஆக இருந்தது. அதாவது திருமண பத்திரிக்கைகளில் தொடங்கி , உறவுகளின் திருமணத்தில் தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதிற்காகவும்,  தனது தகப்பனாரை சுட்டி செய்திகள் சொல்லவும் அவர் பிள்ளை என்ற பட்டத்தை பயன்படுத்தி இருக்கிறார். அலுவலக சம்பந்தமாகவும் இன்ன பிற தொடர்புகளிலும் அவர் அதை பயன்படுத்தியது இல்லை.  நான் சுத்தமாய் பயன்படுத்துவதில்லை. என் மகளுக்கு அவள் யார் என்ன சாதியென்றே தெரியாத சூழலிலேயே வளர்கிறாள். அவளின் பிரிவினைகள் எல்லாம் இந்தியர்கள், பாகிஸ்தானியர்கள், பிலிப்பினோஸ், அராப்ஸ் அவ்வளவுதான்.. கூடுதலாய் ஒரு கம்யூனிட்டி ஸ்ட்ராங்காக தெரியுமென்றால் அது மலையாளிகள்...மட்டுமே...!

ஏனென்றால் எங்கே சென்றாலும் மலையாளிகள் தங்களின் ஆளுமையை மலையாளிகளாகவே காட்டிக் கொள்வார்கள். கொஞ்சம் பணம் சேர்ந்து நல்ல வசதியாய் இருக்கும் பெரும் பணக்கார தமிழர்கள் இன உணர்வுக்கு வெகு தூரமானவர்கள். தமிழனிடம் அவர்கள் தமிழிலே கூட பேசுவது கிடையாது. பெரும்பாலும் இந்தியாவிற்கு மட்டுமே சாதி மிகவும் அவசியமானதாய் இருக்கிறது. அறிவியல் வளர்ந்து  இன்று எத்தனையோ சமூக இணைவு இணைய தளங்கள் வந்து விட்டது. நமது கல்வியையும் அறிவையும் விஞ்ஞான வளர்ச்சியையும் வைத்துக் கொண்டு வேறு ஏதாவது உபயோகமாய் இந்த பூமிக்குச் செய்து விட்டுப் போவோம் என்ற எண்ணம் இல்லாமல், இன்னமும் சாதியையும், மதத்தையும் பிடித்து தொங்கிக் கொண்டிருப்பவர்களைப் பார்த்தால் சிரிப்பாகத்தான் இருக்கிறது.

சாதி என்ற ஒன்று இல்லை என்று சொல்லும் நீ உன் பிள்ளைக்கு வேறு சாதியில் திருமணம் செய்வாயா..? என்று முதலில் என் சட்டையைப் பிடிப்பார்கள். இது எல்லாம் பழைய பஞ்சாங்க கேள்விகள். வாழ்க்கையே போலி, பூமியே சூரியன் கண்ட ஒரு பெரும் கனவு..இதில் எங்கே இருந்து வந்தது சாதி. என் மகள் யாரைத் திருமணம் செய்து கொள்ளலாம் என்ற ஆலோசனையைத்தான் நாங்கள் சொல்ல முடியும். யாரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதை அவள்தான் முடிவு செய்ய வேண்டும். 100 ட்யூசன் வைத்து அறியாதவர்கள் படிக்கட்டும். நமக்கு ட்யூசனே வேண்டாம் என்ற நிலைக்கு வந்து வெகு நாட்களாயிற்று.

ஆன்ம வெளிச்சம் இல்லாத குருட்டு புத்திகள்தான் இன்று பாகுபாடு அரசியலை நடத்தி இரத்தம் குடித்துக் கொண்டிருக்கின்றன. வெறிபிடித்த நாயை அடித்துக் கொல்வது போல காலம் இவர்களை அடித்து தூக்கிக் கொண்டு போகப் போகிறது. அப்போது என்ன செய்யும் இவர்களின் அரசியலும் சாதியும், மதமும், கடவுளும்...!

இல்லாத வண்ணத்துப் பூச்சியை துரத்துகிறேன் பேர்வழி என்று வனத்தை, வாழ்வாதாரத்தை சேதப்படுத்தும் இந்த மாதிரியான ஜந்துக்களுக்கு பூமியே நரகமாகிப் போகிறது.

நானும் வண்ணத்துப் பூச்சியை துரத்தி வந்தவன் தான் இப்போது வண்ணத்துப் பூச்சி என்று ஒன்று இல்லை என்று  தெரிந்து மீண்டும் வந்த வழியே திரும்ப நினைக்கையில் வழி மறந்து போய்விட்டது. வண்ணத்துப் பூச்சியே இல்லை என்று நான் யாரிடமும் சொல்லவும் முடியவில்லை. என் தாத்தன்களும், பாட்டன்களும், உங்கள் தாத்தன்களும், பாட்டன்களும் கண்டிப்பாய் வண்ணத்துப் பூச்சியை காணாமல் மரித்தவர்கள் என்று உறுதியாய் உங்களிடம் சொல்ல நான் வழி கண்டு பிடித்து மீண்டும் என் வீடு அடைய வேண்டும். பட்டாம் பூச்சி என்ற ஒன்றே இல்லை என்று அறிவதே முக்தி அல்லது விடுதலை என்பது எனக்குத் தெரிந்துதான் விட்டது...

ஆனால்...வழி மறந்து போய் விட்டது மட்டும் இல்லாமல் திரும்பும் வழி மிகவும் சிக்கலாகவும் இருக்கிறது. ஏதேதோ கற்பிதங்கள், ஏதேதோ அனுபவங்கள், ஏதேதோ அறிவுகள், ஏதேதோ வழிகாட்டல்கள், எப்படி எப்படியோ நகரவேண்டும் என்று  சொல்லப்பட்ட வழிமுறைகள்.....இதை எல்லாம் நான் மறக்க வேண்டும், அல்லது அழிக்க வேண்டும்.

அப்போதுதான் நான் வீடு திரும்ப முடியும்.....இல்லையென்றால் என் பாட்டனையும் உங்கள் பாட்டனையும், என் தாத்தனையும் உங்கள் தாத்தனையும் போல்....

பட்டாம் பூச்சி என்று ஏதோ ஒன்றை கற்பித்துப் பிடித்து விட்டதாகக் கருதிய படியோ, இல்லையேல் பட்டாம் பூச்சி ஒன்றை தேடியபடியே....கிடைக்கவில்லை என்ற ஏக்கத்துடனோ...மரிக்கக் கூடும்...

வீடு திரும்ப வேண்டும்....!


தேவா. S

Monday, April 8, 2013

அமுத கீதம் பாடுங்கள்.... ஆடுங்கள்!போன வியாழக்கிழமை மத்தியானம் வீட்டுக்கு போன போது....டாடி ஒரு சர்ப்ரைஸ்ன்னு என் கை பிடிச்சு வீட்டுக்குள்ள ரொம்ப பவ்யமா கூட்டிட்டுப் போன என் மகள் 8 வயசு ஆகியும் ஏன் இன்னும் டாடின்னு கூப்பிடுறா அப்பான்னு தமிழ்ல கூப்டா என்னனு உங்களுக்குத் தோணி இருக்கும். இரண்டு மூணு வயசு வரைக்கும் ஆர்வமில்லாம அவ டாடின்னு கூப்டறத ஏத்துக்கிட்ட வாழ்க்கைச் சூழல், நாம தப்பு பண்ணிட்டோம் நம்ம புள்ளை நம்மள அப்பான்னுதான் கூப்பிடணும்னு யோசிச்சு அவள மாத்த முயற்சிப் பண்றப்ப அவளால மாற முடியாம போயிடுச்சு. ஒவ்வொரு தடவை டாடின்னு சொல்லிட்டு சாரி சாரி அப்பான்னு குற்ற உணர்ச்சியோட அவ பாக்குறத சகிச்சுக்க முடியாம சரி போகுது கழுத எப்டி வருதோ அப்டி கூப்டுமான்னு சொல்லிட்டேன்.

டாடின்னு கூப்டுறாளே தவிர.. தூய தமிழ்ல தொடர்ச்சியா பேசுற அவ பயன் படுத்துற சில தமிழ் வார்த்தைகள் என் நண்பர்களுக்கே தெரியாதுன்னா பார்த்துக்கோங்களேன். தமிழ் படிக்க பள்ளிக்கூடத்துல சூழல் இல்லை. சொல்லிக் கொடுக்க நமக்கு நேரம் இல்லை. இப்படியே எட்டு வருசம் ஓடிப் போக தமிழ் நல்லா பேசுறவ எழுதவும் படிக்கவும் செய்யணுமேன்னு நூலகம்.காம்ல இருந்து செய்முறைத் தாள்களை கொடுத்து அவளுக்கு தமிழ் முழுவீச்சுல சொல்லிக் கொடுத்துட்டு இருக்கோம்.

அவ ஏன் கையப் புடிச்சு  ஆர்வமா என்ன வீட்டுக்குள்ள கூட்டிப் போனான்னு இன்னும் நான் சொல்லவே இல்ல பாருங்க.....சோ.. இப்போ வீட்டுக்குள்ள போவோம்.

ஏம்மா...என்ன ஆச்சுன்னு சத்தமா நான் கேட்டதும் என்ன பாத்து முறைச்சுட்டு...ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்..சத்தம் போடாதீங்க டாடி...நம்ம பால்கனில ஒரு கப்போர்ட் இருக்குல...அது மேல சுவர் ஓரமா ஒரு பறவை குடி வந்து இருக்கு டாடின்னு கிசு கிசுப்பா என் காதுல சொன்னா....

பறவை கூடு கட்டி இருக்கான்னு திரும்ப கேட்டதுக்கு..இல்லை இல்லை குடி வந்து இருக்கு. அது கூட ரெண்டு குட்டிங்க (குஞ்சு) கூட இருக்குன்னு அவ சொல்லவும் . மெதுவா போய் பால்கனியவும் பெட்ரூமையும் பிரிக்கிற அந்த கண்ணாடி வால்க்கு இந்தப்புறம் போய் ரெண்டு பேரும் நின்னு பார்த்தோம். அட ஆமாம்.. ஒரு புறா அங்க புதுசா குடித்தனம் வந்து இருக்கு. ரெண்டு குஞ்சுகளோட அது கொஞ்சிக்கிட்டு இருந்துச்சு. அமீரகம் புறாக்களும், பூனைகளும் நிறைஞ்ச தேசம். பூனை குறுக்கப் போனா சகுனம் சரி இல்லேன்னு சொல்றவன் இந்த ஊர்ல எங்கயுமே வெளில போக முடியாதுன்னா பார்த்துகோங்களேன்.

ஒரு சேதி சொல்றதுக்கு முன்னாடி ஆயிரம் டாடி போடுறவ, புறாக்கள பாத்துட்டு சும்மா இருப்பாளா என்ன..., ஏன் டாடி இந்த புறாவுக்கு சாப்பாடு கொடுக்குதே அது அம்மா புறாவா? அப்பா புறாவா?ன்னு என்ன கேட்டுட்டு நான் என்ன பதில் சொல்வேன்னு ரொம்ப சீரியஸா என்னையே பாத்துட்டு இருந்தவளுக்கு என்ன பதில் சொல்றதுன்னு யோசிச்சு...ம்ம்ம்ம்ம் அது அம்மா புறாதான் பாப்பா....அப்பா புறா வெளியூர்க்கு சம்பாரிக்க போய் இருக்கும். அதுவரைக்கும் அம்மா புறாதான் குஞ்சுகள பாத்துக்கணும்னு சொன்னேன்.

ஓ...அப்டின்னா நான் பொறக்கும் போது நீங்க கூட துபாய்ல இருந்தீங்க என்னைப் பாக்கவே மூணு மாசம் கழிச்சுதான் வந்தீங்களே...அதே மாதிரி இந்தப் புறாங்களோட அப்பா வந்து அப்புறமா கூட்டிட்டுப் போகணும்ல....எனக்கு நைட் உங்க பக்கதுல படுத்தாதன் தூக்கம் வரும் அதே மாதிரி இந்த குட்டிப் புறாங்களுக்கும் ஆசை இருக்கும்ல டாடி...அம்மா புறா மட்டும் தனியா இருக்கு டாடி பாக்கவே பாவமா இருக்குல்ல...

ஆமாம்மா இருக்கும். கொஞ்ச நாள் ஆனா இந்த குட்டிப் புறா ரெண்டும் பறந்து போயிடும் பாப்பா. அப்பா புறா வந்தாலும் சரி வரலேன்னாலும் சரி. எவ்ளோ நாள் அதுங்க கூட்டுக்குள்ளயே இருக்கும்..? இரை தேடி அதுங்க போய்டும்ல...போனதுக்கு அப்புறம் அது, அது வயிறு அது, அது வாழ்க்கை. அப்போ அம்மா புறா, அப்பா புறாவை எல்லாம் தேடாதா டாடி....? ஆச்சர்யமாய் என்னிடம் கேட்டாள்...

அம்மாடி....இப்ப பாத்தீன்னா, அம்மா புறா குட்டிப் புறாங்களுக்கு சாப்பாடு கொடுக்குதே அது எதுக்கு தெரியுமா? மறுபடி அம்மா புறாக்கு குட்டி புறா சாப்பாடு கொடுக்கும்னு எதிர்ப்பார்த்து இல்லை..அதுக்கு கொடுக்கனும். கொடுக்கறதுல அதுக்கு திருப்தி. அந்த ஆசை தன்னாலேயே பை நேச்சர் அதுக்கு இருக்குது. இதுங்க வளர்ந்து எங்கயோ போனதுக்கு அப்புறமும் அம்மா புறா இந்தக் குஞ்சுகளத் தேடும்...எதுக்கு தெரியுமா? கொடுக்கறதுக்கு...

அப்போ அந்த குஞ்சுகளுக்கு வாங்கிக்க வேண்டிய அவசியம் இல்லாத போயிடுது. ஏன்னா அதுங்க பறந்து அது அது இரைய தேட ஆரம்பிச்சுடுதுங்க. ஒரு ரெண்டு நாள் மூணு நாள் அம்மா புறா அதுங்கள தேடிப்பாத்துட்டு...கூட்டை விட்டுட்டு வேற திசையில பறக்க ஆரம்பிச்சுடும். என்னிக்காச்சும் குட்டிப் புறாங்களும் அம்மா புறாக்களும் நேருக்கு நேரா பாத்துகிடும் போது....அது வயித்தப் பத்திதான் அது நினைக்கும் இதுங்க வயித்தப் பத்திதான் இது நினைக்கும். ஏன்னா.... ரெண்டு வயிறும் தனித்தனி மட்டும் இல்லாம, இரை தேடுற தகுதி ரெண்டுக்குமே இருக்குல்ல பாப்பா...

ஹ்ம்ம்ம்ம்ம்ம்...கொஞ்சம் ரொம்பவே ம்ம்ம் கொட்டி கேட்டுக் கொண்டாள்.

நீ எனக்கு இப்டி எல்லாம் இருக்கனும், திருப்பி செய்யணும்னு நான் நினைச்சு செஞ்சா அது எதிர்பார்ப்பு பாப்பா, நாளைக்கு நீ திரும்ப செய்யலேன்னா எதிர்பார்த்தது நடக்கலேன்றதுனால....நமக்கு கோபம் வரும். எரிச்சல் வரும். அப்புறம் எதுவுமே பேசாம பிரிஞ்சு போக வேண்டி வரும். எதிர்ப்பார்க்கவே இல்லேன்னா...எப்டி கோபம் வரும்...? எப்டி சண்டை வரும்..? செய்றது, செய்றதுக்காக குட்டிம்மா...திரும்ப வாங்குறதுக்காக இல்லை.

யார்கிட்டயும் எக்ஸ்பெக்ட் பண்ணக்கூடாதா டாடி...?  மறுபடி ஒரு கேள்வி வந்து விழ...

நீ உனக்கு என்ன தேவைன்னு பார்த்து  முடிவு பண்ணி போய்க்கிட்டே இருக்கும் போது ப்ரியம் இருக்கவங்க நம்ம  கூடவே இருப்பாங்க பாப்பா. நமக்கு உதவி செய்ய முடியாட்டியும், நம்மள நேசிச்சு நாம நல்லா இருக்கணும்னு எப்பவுமே நினைப்பாங்க பாப்பா. எல்லோருக்கும் எல்லோராலயும் எல்லாமே செஞ்சுட முடியாதுடா கண்ணம்மா..., எதுவுமே செய்ய முடியாம போனாலும் தொடர்ச்சியா அன்பு செய்ய நாம உயிரோட இருந்தா போதுமே....


ஆனா.. இப்போ யாரும் அப்டி இருக்கறது இல்லை......நம்மளால எதுவும் ஆகாது, நம்ம கிட்ட ஒண்ணும் இல்லேன்னு சொன்னா பேசக் கூட மாட்டாங்க பாப்பா...!

ஒரு வேளை.....நாளைக்கு டாடியால உனக்கு ஒண்ணு செய்ய முடியலேன்னா என்ன கோவிச்சுக்குவியா...? டாடி கூட பேச மாட்டியா? டாடிய உனக்கு பிடிக்காம போயிடும்மா அக்க்ஷும்மா...?

உதடு குவித்து...அழுகைக்கு தயாரானவள் போல இருந்தாள் அக்க்ஷு....

நோ....டாடி.....வாட் எவர் யூ டூ......ஆர் டோண்ட் டூ.....ஈவன் யூ  ஹேட் மீ.....

ஐ....ஆல்வேய்ஸ் லவ் யூ டாடி.....கண்ணில் கண்ணீர் ததும்ப என்னைக் கட்டிக் கொண்டாள்...

மீ டூ டா குட்டிம்மா....என்று அவளைக் கட்டிக் கொண்டு....புறாக் கூட்டினைப் பார்த்தேன்.....தாய்ப்பறவை குட்டிகளை விட்டு விட்டு...மீண்டும் இரைத் தேட எங்கோ பறக்கத் தொடங்கி இருந்தது.....!


தேவா. S


Saturday, April 6, 2013

துன்பம் நேர்கையில்...யாழெடுத்து..நீ..!யாம் எமது தமிழையே எல்லா சூழ்நிலைகளுக்கும் துணைப்படுத்திக் கொண்டு நகர்ந்திருக்கிறோம். எமது வலிகளை எல்லாம் வார்த்தைகளாக்க முயலும் தருணங்களில் தாய்த்தமிழே எமது சிந்தையிலிருந்து தாயாய் தாலாட்டுப்பாடல்கள் பாடவும் செய்திருக்கிறது, குழந்தையாய் வரிகளில் தவழ்ந்தோடி எமக்கு இன்பம் சேர்த்துமிருக்கிறது. எமது காதலைச் சொல்ல யாம் கவிதைகள் புனைவதுண்டு. எமது வீர செருக்கினை சீறிப்பாயும் வரிகளில் பரவ விட்டதுமுண்டு. கேளிக்கை குதூகலங்களை வார்த்தைகளுக்குள் சொருகி துள்ளிக் குதித்ததுமுண்டு. எமது மொழியே எமது யாக்கைகளின் வெளிப்பாடாகிப் போக சுவாசிக்கும் உயிர்க்காற்றாய் எம்முள் நிறைந்தே அது எப்போதும் கிடக்கிறது.

ஞானத்தைப் பேசவும், போகத்தைப் பேசவும், பக்தியைப் பேசவும், பகுத்தறிவைப் பேசவும் எம்மிடம் இருக்கும் வளமையான எம் மொழி எப்போதும் சோடை போனதில்லை. ஏதோ ஒன்றை யாம் பகிரவிரும்பும் முன்னரே வில்லில் தானே ஏறி நின்று நாணேற்றிக் கொண்டு விறைத்து நிற்கும் அம்பாய் எம் வார்த்தைகள் எய்யப்போகும் இலக்கினை துடிப்பாய் எதிர் நோக்கி நிற்கும். இப்படியாய் எம் மொழியினைக் கொண்டு எமது உணர்வுகளை வடிக்கும் யாம்....துன்பம் நேர்கையில் மட்டும் சோர்ந்து விடுவோமா என்ன....

யாழெடுத்து மீட்டி எம்மை மகிழ்விக்க எம் நெஞ்சுக்கினியவளை(ரை) நாம் அழைக்கும் பொழுதிலே தனியாளாய் அவள்(ர்) வேண்டாம் கூட தமிழும் வேண்டும் என்ற பெரும் விருப்பங்களையே யாம் கொண்டிருந்தோம். ஆதலால்....

துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ
இன்பம் சேர்க்க மாட்டாயா?
துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ
இன்பம் சேர்க்க மாட்டாயா? - எமக்
கின்பம் சேர்க்க மாட்டாயா?

என்ற விண்ணப்பத்தை வைத்து விட்டு. எமது இன்பம் என்ன என்பதை மறை பொருளாக்குகையில் மறை பொருளில் அர்த்தங்கள் மறைந்து போய்விடக்கூடாதென்று....

அன்பிலா நெஞ்சில் தமிழில் பாடி நீ
அன்பிலா நெஞ்சில் தமிழில் பாடி நீ
அல்லல் நீக்க மாட்டாயா கண்ணே
அல்லல் நீக்க மாட்டாயா கண்ணே

அன்பில்லாத எமது நெஞ்சில் தமிழ் இல்லாமல் போனதால்தான்...இத்தனை அல்லலும் சூழ்ந்ததென்று அறிக என் உயிரே அதனால்....நீ தமிழில் பாடி யாழினை இசைத்தால் என் அல்லல் நீங்கித்தான் போகுமென்று நான் அறுதியிட்டுக் கூறுகிறேன் ஏனென்றால் தமிழ் என்றால் அது ஒரு வெறுமனே பத்தோடு பதினோராவது மொழியல்ல....

ஆதியில் உணர்வுகளை வெளிக்காட்ட மனிதன் தனது சப்தங்களைப் பயன்படுத்தி சக மனிதர்களை தொடர்பு கொண்டான். அந்த சப்தங்கள் இப்போது மொழியென திரிந்து அலங்கரித்துக் கொண்டு, உலகெங்கிலும் ஒவ்வொரு நிலத்திற்கேற்றார் போல, வாழும் சூழலுக்கு ஏற்றார்போல, தட்ப வெட்ப புவியியல் அமைப்புக்கு ஏற்றார் போல, இருந்த தனது இயல்பினை இழந்திருக்கிறது.

தமிழும் ஆதி சப்தங்களின் கோர்வைதான் என்றாலும் அதன் செழுமையும் உணர்வுகளை வெளிப்படுத்துகையில் இன்னமும் இருக்கும் அதன் பூர்வாங்க கன்னித்தன்மையும் இயல்பாய் நம் உணர்வுகளை மீட்டத்தான் செய்கின்றன. தமிழ் செம்மொழி. உணர்வுகள் என்னும் சூட்சுமத்தின் ஸ்தூல வடிவம். அதனால் நீ எம் தாய்த் தமிழில் ஒரு பண் பாடி இந்த யாழினை இசைக்கையில் எமது துயரங்கள் எல்லாம் ஓடித்தானே கண்ணே போய்விடும். 

என்று தமிழில் எழுதி தமிழால் தன் துயர் போக்கிக் கொள்ளும் பாவேந்தர் பாரதிதாசன் ஐயா அவர்கள் எந்த அளவுக்கு தமிழை நேசித்திருக்கிறார் என்று நினைக்கும் போது நமக்கு ஆனந்தக் கண்ணீர்தான் வருகிறது.

இனி துன்பம் நேர்கையில்...நீங்களும் நானும் கவலையுற வேண்டாம். நம் தாய்த் தமிழ் இருக்கிறது. தமிழ் மொழியின் செழுமையில் வெளிப்பட்டு நிற்கும் வல்லமை நிறைந்த கவிதைகளும் கட்டுரைகளும், கதைகளும், இசையும் நம்மிடம் கொட்டிக் கிடக்கின்றன..! ப்ரியம் நிறைந்த பாடல் ஒன்றை வசீகரிக்கும் குரல் ஒன்று வெளிப்படுத்தும் போது வார்த்தைகளின் அழுத்தங்களும், மொழியின் வளமையும் இசைக்குள் போய் ஒளிந்து கொண்டு நம்மிடம் கண்ணாமூச்சி ஆடுகின்றன. இன்பத்தில் திளைப்பதென்றால் என்னவென்று நம்மால் உணரமுடியும் தருணங்கள் அதி அற்புதமானவை.

இப்படித்தான் பாரதிதாசனின் இந்தப்பாடலை இணையத்தில் தேடிக் கொண்டிருந்த போது பல்வேறு அறியப்பட்ட பிரபலங்களின் குரல்களில் இசைக்கருவிகளோடு நிறையவே காணொளிகள் இருந்தாலும் எந்த வித தாளக் கருவிகளும் இல்லாமல், பாடலின் முழுமையான வலியையும் தனது குரலுக்குள் கொண்டு வந்து உணர்வுகளை வெளிப்படுத்தியிருக்கும் சவீதாவின்  இந்தக் காணொளிக்குள் விழுந்த என்னால் வெகு நேரம் வெளிவர முடியவில்லை.

தமிழின் சுவையோடு நாம் நகர்ந்து கொண்டிருக்கையில் வார்த்தைகளுக்கு கட்டுப்படாத ஒரு காதலுணர்வும்  சூழ்ந்து கொள்ள,  எனது  உணர்வுகள் விழிப்பு நிலையிலேயே துன்பத்திலிருந்து இன்பம் நோக்கி இடம் பெயர எனது பொழுது ரம்யமானது..

வாசித்தலும், கேட்டலும் சுகம். அதை விளங்கி வெளிப்படுத்துதல் என்பது இறையின் ஆசிர்வாதம். துன்பம் நிறைந்த மனதோடு காணொளியை கேட்க ஆரம்பித்த எனக்கு....யாழெடுத்து எல்லாம் வல்ல பெருஞ்சக்தி தமிழில் பாடி....ஆசுவாசப்படுத்தியதைப் போல உணர்ந்தேனாதலால்...யாம் பெற்ற இன்பத்தை உங்களிடமும் சமர்ப்பிக்கிறேன்.தமிழ் படித்து துயரறுப்போம்....தமிழ் படித்து உயர்வுறுவோம்....! வாழ்க தமிழ்!!!!


தேவா.S