Pages

Wednesday, April 24, 2013

திணற வைக்கும் திருச்செந்தூர் கோயில் நிர்வாகம்...!திருச்செந்தூர் கோயில் அர்ச்சகர்களுக்கும் பணியாளர்களுக்கும் பிரச்சினைன்னு நியூஸ்  பார்த்தேன். ஆமாம் பங்காளிகளுக்குள்ள சண்டை வரத்தானே செய்யும். ஊர அடிச்சு திங்கிற பக்கீஸ்கள் வருமானம் வர்ற இடத்துல அடிச்சுக்கிறது நியாயம்தானே? ரொம்ப தொலைவுல இருந்து  வர்ற ஆளுகளுக்குத்தான் கருவறைக்குள்ள இருக்க செந்தில் நாதன் டெர்ரரா இருப்பாரு அங்கனக்குள்ளயே பொழப்ப ஓட்டிக்கிட்டு இருக்க இந்த மாறி ஆளுகளுக்கு அவரு கல்லு சிலை கூடக் கிடையாது  ச்ச்சும்மா சின்னப் புள்ளைங்க வச்சு வெளையாடுற டெடி பேர், மரப்பாச்சி பொம்ம மாதிரிதான். பின்னே பயம் இருந்தா நெஞ்ச நிமித்திக்கிட்டு பேசுவாய்ங்களா என்ன? அதுவும் அக்கிரமத்தை..

சூரபத்மன சூப்பர் ஹீரோவா நின்னு தமிழ்க் கடவுள் துவம்சம் பண்ணின இடமாச்சேன்னு எனக்கு திருச்செந்தூர் மேல எப்பவுமே ஒரு கிரேஸ் இருந்தது என்னவோ வாஸ்தவம்தான். கடல் வழியா வந்த அசுரன கடற்கரைய விட்டு  ஊருக்குள்ள வர விடாம போட்டுத் தள்ளிட்டு ஸ்டைலா அவர் வேலை (வேலைன்னா ஜாப் இல்லை....வேல்...வேல்...வெற்றி வேல்!!!!) தூக்கி எறிஞ்ச இடத்துல இயற்கையா உருவான சுனையில (நாழிக் கிணறு) குளிக்க எக்ஸ்ட்ட்ரா 5 ரூபா கொடுத்தா மூணு வாளி எக்ஸ்ட்ராவா கிடைக்கும் அப்படியே காசு வாங்கி தண்ணிய தலையில ஊத்துனாலும், அந்த இடம் கலீஜ்ஜாதான் இருக்கும்ன்ற அரசியல எல்லாம் இப்போ நான் பேசலை சார்...

சாமி கும்பிட போன இடத்துல எக்ஸ்பிரஸ், ஸ்பெசல், சாதா, சூப்பர் சாதான்னு போர்டு வச்சு அதுக்கு இம்புட்டு இம்புட்டு காசு கொடுக்கணும்னு பப்ளிக்கா போட்டு இருந்தத போட்டோ மட்டும் புடிச்சது தப்பா? எக்ஸ்பிரஸ் தரிசனத்துக்காக 250 ரூபாய் இருக்க வசதியானவங்க எல்லாம் இப்டிக்கா வாங்க, வக்கத்த பக்கிக எல்லாம் 20 ரூபாய் கொடுத்து அப்டிக்கா போங்கன்னு போட்டு இருந்தது நியாயம்தான்னு நம்ம பாழாப் போன அஞ்சறிவுக்கு எட்டாம....போட்டோ எடுத்தது தப்புன்னு என் மேல கொலை வெறியா பாஞ்ச அந்த கொளுக் மொழுக் குருக்கள் கிட்ட சண்டை வேற போட்டுக்கிட்டு இருந்தேன்.

சாமி பொதுதானே..? செந்தில் ஆண்டவர் ஏழைக்கும் பணக்காரனுக்கும் எகத்தாளம் புடிச்சவனுக்கும், குடுமி வச்சவனுக்கும், முழுக்க சிரைச்சவனுக்கும்  ஒரே சாமிதானே? அப்புறம் எதுக்கு காசு இருக்கவன மட்டும் அவர் கிட்ட போய் பாக்க வைக்கணும்? 250 ரூபாய் காசு இல்லேன்னா என்னை தூரத்துல நின்னு பாருடா பக்கின்னு அவரா சார் சொன்னாரு? அவரே கோமணத்தோட ஆண்டிப்பண்டாரமா நயாப் பைசா இல்லாம நின்னவருதானே? தமிழ்க் கடவுளாச்சே...தமிழர்கள ஏன் சார் காசு இருக்கவன் இல்லாதவன்னு பிரிச்சு கிட்டயும் எட்டியும் நின்னு கும்பிடச் சொல்லணும்...? அப்படி சொன்னா என்னா சார் அவரு சாமின்னு கேட்டதுக்கு பதில் சொல்ல முடியாத குருக்கள் அண்ணாச்சி மந்திரங்கள மட்டுமே பொட்டத் தட்டு தட்டிருப்பாரு போல, நாம கேட்ட கேள்விக்கு ஒரு மண்ணாங்கட்டி பதிலும் சொல்லாம...


சார் இங்க போட்டோ எடுக்கக் கூடாது. அது பகவானா இருந்தாலும் சரி பப்ளிக் நோட்டீஸா இருந்தாலும் சரி எடுக்க கூடாதுன்னா கூடாதுன்னு என்கிட்ட எகிற ஆரம்பிச்சார். பொதுவா எல்லா கண்ணும் படுறமாதிரி வச்சு இருக்க அறிவிப்பு பலகைய எடுக்க கூடாதுன்னு நீங்க எப்டி சொல்வேள்...நான் பிளாக்கராக்கும்(!!!!!)...இதை எல்லாம் சும்மா விடமாட்டேனாக்கும்னு பதிலுக்கு நானும் எகிற.. அந்த அர்ச்சகர் இதுக்குமேல இந்த அம்பிய நம்மளால சமாளிக்க முடியாதுன்னுட்டு என்னை அங்க டிக்கட் கொடுத்துட்டு இருந்த உயர்(!!!)அதிகாரிகிட்ட தள்ளி விட்டார்.

அதிகாரின்னாலே நம்ம ஊர்ல சிரிக்க கூடாது. அதுவும் இவர் குத்தகை எடுத்த அதிகாரி போல...என்னா சார் வேணும் ஒங்களுக்கு..இங்க போட்டோ எல்லாம் எடுக்க கூடாதுன்னு என்னை மிரட்ட ஆரம்பிக்க... 'அது இல்லிங்க சார் நான் கோயில் உள்ள எல்லாம் எடுக்கலை ஜஸ்ட் நீங்க போட்டு இருக்க அறிவுப்ப தானுங்க சார் எடுத்தேன்....ஆமா டிக்கட் கொடுத்துட்டு இருக்கீங்களே... நீங்க கவர்மெண்ட் சர்வெண்டா சார் 'னு கேட்டேன் ...அவ்ளோதான் வந்துச்சுப் பாருங்க அவருக்கு கோவம்...

சார்...கோயிலு கவர்மெண்ட் கோயிலு, சாமி கவர்மெண்ட் சாமி, நாங்களும் கவர்மெண்ட் ஆளுங்கதான்..ன்னு எகிறினாரு....

சாமி கவர்மெண்ட் சாமியா எப்டி சார் இருக்க முடியும்னு நான் சத்யராஜ் படமெல்லாம் பாத்த அனுபவ தெனாவெட்டுல கிண்டலா கேக்க அதிகாரி கடுப்பாகிப் போயி..இஷ்டம் இருந்தா வாங்க இல்லேன்னா வேற இடம் பாருங்கன்னு பிச்சைக்காரன விரட்ற மாதிரி விரட்டி வரிசையில போயி நின்னு டிக்கட்ட வாங்குங்கன்னு சைகையில சொன்னாரு....

கையில என் மகள பிடிச்ச மேனிக்கு சகதர்மினி போற வர்ற எடத்துல எல்லாம் அன்னியன் அம்பி மாதிரி ரூல்ஸ் பேசுதே இந்த மனுசன், இதுக்கு கிறுக்கு எதுவும் பிடிச்சுப் போச்சா என்னன்னு தெரியலயேன்ற மாதிரி....தேமேன்னு ஒரு பார்வை பாத்து " ஏங்க...ஏதாச்சும் ஒரு டிக்கட்ட வாங்கிட்டு வாங்க சீக்கிரமா... வந்தமா சாமியக் கும்பிட்டமா போனமான்னு இல்லாம எதுக்குங்க வந்த இடத்துல சண்டை எல்லாம்... இன்னும் கோயிலுக்குள்ளயே நாம போகலியே மாமான்னு கேட்டாப்டி....

சரி கிரகம் தொலையிதுன்னு...க்யூவுல டிக்கட் எடுக்க நிக்கையில தலைவர் படம் பாக்க நிக்கிற மேரியே ஒரு ஃபீலிங்கு எனக்கு... பி.பி எறங்காம 20 ரூபா டிக்கெட் எடுத்துக்கிட்டு தரை டிக்கட்ல முருகன பாக்கப் போயி, நான் கூட்டிட்டுப் போறேன் சாமி கிட்டக்கன்னு உள்ளுள்ள பிஸினெஸ் பேசின ஒரு குருக்கள அன்போட மறுத்துட்டு  போன என்னை சரியா அரை நிமிசம் செந்தில் ஆண்டவர் முன்னால நிக்க வச்சுட்டு அங்க இருந்த அர்ச்சகர் நம்மள பிடிச்சு தள்ள அப்டியே பிரகாரம் விட்டு வெளியில வந்ததுதான் தாமதம்...

யாரோ ஒரு நல்ல மனுசன் குடம் புல்லா அர்ச்சனை பாலை வச்சுக்கிட்டு இருந்தவரு அய்யோ பாவம்னு இரக்கப்பட்டு ஒரு கிளாஸ்ல பால் கொடுத்தார். அட இந்தக் கோயில்ல நாம திருப்திப் பட்டுக்கிற மாதிரி இவராச்சும் இருக்காரேன்னு பெருமிதத்தோட புள்ளைக்கும் பொண்டாட்டிக்கும் ஆளுக்கு ஒரு வாய் பாலைக் கொடுத்துட்டு காலி டம்ளர அந்த புண்ணியவான் கிட்ட கொடுத்து ரொம்ப தேங்க்ஸ் சார்னு சொல்லிட்டு நகரப் போனேன்....அவ்ளோதான்...

கபால்னு கையப்புடிச்சு நிறுத்தி, என்னா சார் போறீங்க...? 20 ரூபா கொடுங்க சார்ன்னு அந்தப் புண்ணியவான் அன்னியனா மாறி முறைக்க...எ...எ..துக்க்ங்க சார் காசுன்னு நான் கேட்டதுக்கு....பாலை குடிச்சீங்கள்ள...அதுக்கு என்று தெனாவெட்டினார். அது நீங்கதானே கொடுத்தீங்கன்னு நான் சொல்ல...நீங்க ஏன் வாங்கினீங்கன்னு அவர் கேக்க...கொடுத்தா வாங்கத்தானே செய்வோம்னு நான் சொல்ல்ல...

மறுபடி அங்க வெடிக்க இருந்த ஒரு கலவரத்தை ஓரமா நின்னு அப்பாவியா வேடிக்கைப் பார்த்துட்டு இருந்த பொண்டாட்டிக்காகவும் பிள்ளைக்காகவும் கேன்சல் பண்ணிட்டு இருபது ரூபாயை தேடிப் பிடிச்சு கொடுத்துட்டு நடந்து போயிட்டு இருக்கும் போது சத்தியமா சூரபத்மன முருகன் வதம் செய்த கதையோ, முருகனோ, தமிழோ, பக்தியோ, பாசமோ, அமைதியோ, எந்த வித தாக்கமும்  எனக்கு இல்லை. என்ன ஒண்ணு ஒரே பயமா இருந்துச்சு....அடுத்து எவன் என்ன கேப்பானோ எப்டி எஸ்கேப் ஆவுறதோன்னு....

இப்போ பாத்துக்கிட்டீங்கன்னா கோயில் அதைச் சுற்றி இருக்கும் மக்கள்னு அவுங்க வாழ்க்கை அதைச் சார்ந்துதான் இருக்கும்ன்றத நாம ஏத்துக்கிட்டுதான் ஆகணும் ஆனா அதுல ஒரு தர்மம் இருக்கணும் இல்லையா..? ஆளாளுக்கு டீலிங்க் பேசுறதுக்கு அது என்ன வாரச் சந்தையா...? இல்லை... மன நிம்மதிக்காக வந்து போற கோயிலா?

அதுவும் இல்லாம டாஸ்மாக்ல கோடி கோடியா சம்பாதிக்கிற கவர்மெண்ட்... சாமி கும்பிட வர்ற இடத்துலயாச்சும் ஏழை பணக்காரன்ற பாகுபாடு இல்லாம ஒரே மாதிரியா மனுசங்கள டீல் பண்ணினா என்ன? காசு கூட கொடுக்குறவன் கிட்டப் போயி பாக்கலாம்ன்னு எந்த சாமி சொன்னுச்சுன்னு எவனாலயாச்சும் சொல்ல முடியுமா? கோயிலுக்கு உள்ள போறதுக்கு முன்னாலயே அச்சச்சோ நம்மகிட்ட காசு இல்லேயேன்னு ஒரு மனுசன மனசுக்குள்ள புலம்ப வைக்க எந்த தெய்வமும் ஒத்துக்காது.. அப்படியே ஒத்துக்கிட்டாலும் அதுக்குப் பேரு கடவுள் இல்லை சாத்தான். சத்தியமா காஷ்மீர் பார்டர சுத்தி வர்ற ஒரு பதட்டத்தோட என் முதல் திருச்செந்தூர் கோயில் பிரவேசம் முரட்டுத்தனமா நடந்து முடிஞ்சது.


கோயிலுக்கு வெளியில வந்து சட்டைய மாட்டிக்கிட்டு வேட்டிய இறுக்கமா கட்டிக்கிட்டு நடந்துக்கிட்டு இருக்கப்ப ஒரு ஆத்தா கையில கோலோட வந்து குறி பாக்குறேன் சாமி உங்களுக்கு வந்த கஷ்டம் எல்லாம் தீந்து போச்சுதுன்னு சொல்லவும் நான் திரும்பவும் கோயில ஒரு லுக் விட்டுக்கிட்டே பாசமா பேசுன அந்த ஆத்தா திருப்திக்காக கை ரேகை பார்க்க ஒக்கார்ந்தேன்...

மூத்தது பொண்ணு ....அடுத்து முருகன் வந்து பொறக்க போறான்...முருகன் வந்து பொறக்கப் போறான்னு ஆத்தா ஆருடம் சொல்லவும்... அது ஒண்ணுதான் கொறைச்சல்...ஏற்கெனவே கல்யாணம் ஆன புதுசுல பழனில முருகன் பொறப்பான்னு ஒரு அக்கா சோசியம் சொன்னிச்சு...இந்த முருகாயி வந்து பொறந்தா...மறுபடியுமா....

பொறவு என்ன..

நல்லா சாப்டு ஆத்தான்னு... ஆத்தா கையில 100 ரூபா காசைக் கொடுத்துட்டு.... கோயிலுக்குள்ள இருக்க ஆளுகள மட்டுமாச்சும் நல்லபடியா காப்பாத்துய்யா எங்கய்யா முருகையான்னு நேந்துகிட்டு ஊரப்பாக்க வந்து சேந்தோம் அம்புட்டுதேன்...!


தேவா. S


13 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

பழனி நிர்வாகத்தை விட திருச்செந்தூர் நிர்வாகம் எவ்வளவோ பரவாயில்லை எனலாம்...

Anonymous said...

sir neenga pal koduchuttu 20 pay panninga but in my own experience sani bhagavan kompidum pothu theeparathanai ya thoottu kompputtu chumma ninnathu kasu podalanu thitinar sir gurukal

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

தங்கள் செந்தூர்த் தரிசனம் வாசிக்கையில் அனுதாபச் சிரிப்பு வரத் தவறவேயில்லை. நான் ஈழத்தவன், குலதெய்வம் முருகன், "சீரார் வயல் பொழில் செந்தூரனைக் சென்று கண்டுதொழ நாலாயிரம் கண் படைத்தலனே அந்த நான்முகனே " எனப் படித்ததாலும், இளமையில் இருந்து செந்தூரனைத் தரிசிக்க ஆவலுடனே இருந்தேன். 2004 என் முதல் தமிழகப் பயணத்தில் செந்தூரனிடம் சென்று, மொட்டை போட்டு வருதலும் திட்டமானது. 2004 , ஏப்ரலில் சென்றோம். எந்த நிலையிலும் எந்தக் கோவிலிலும் பணம் கொடுத்துத் தரிசனம் செய்வதில்லை. மூலவரைத் தரிசிக்க எத்தனை மணியானாலும்,இலவச வரிசையே என்ற முடிவுடனே இருந்தேன். ஈழத்தில் மூலவரை அருகில் சென்று தரிசிக்க அரசனைக் கூட அனுமதிப்பதில்லை. அதனால் எமக்கு இந்த அனுபவம் அன்னியமாகப் பட்டது.
செந்தூரனைத் தரிசிக்க மொட்டையும் போட்டு விட்டு வரிசையில் நின்ற போது சுமார் 2 மணி நேரத்தில் பின் சந்நிதானம் அடைந்தேன். கையெடுத்துக் கும்பிடுமுன் பூசகர் ஒரு தள்ளு , அடியேன் வெளியே, ஆனாலும் செந்தூரனைச் சென்று கண்டேன், ஆனால் தொழவில்லை.
பின் பல கோவில்களுக்குச் சென்றேன். சிதம்பரத்திலும் அவஸ்தையே -வேறு யார் அர்சகர்களே!
இப்படியே பிரபல கோவில்கள் யாவற்றிலுமே மிக வேதனையான வழிபாடே, ஆனால் நாம் தங்கியிருந்த
வலசரவாக்கம்- இந்திராநகரில் ஒரு பெருமாள் கோவில், பிள்ளையார் கோவில் நின்ற நாள் பூராகவும் தரிசனமே , மிகுந்த மனநிறைவைத் தந்தவை இச்சிறு ஆலயங்களே!
பின் ஈழம் சென்றும் பல கோவில்களுக்கு வெகு காலத்திற்குப் பின் சென்றேன். திவ்விய தரிசனமே எந்தப் பிடுங்கலும் இல்லை.
தமிழகக் கோவில் தரிசனம்- என் 40 வருடக் கனவு- பெற்ற அனுபவமோ கோவில் பக்கமே இனிமேல் செல்லக்கூடாது. அப்படிப் போனாலும் , கோபுரத்தைப் பார், சிலைகளைக் பார், திரும்பு எனும் மனநிலைக்கு என்னைத் தள்ளி விட்டது.
பிரபல தமிழகக் கோவில்கள் தரிசனம் என்னை, இனிமேல் கோவிலுக்குச் செல்லாதே எனும் நிலையில்
கொண்டு வந்து நிறுத்தியுள்ளது.
என்னிடம் காசு உள்ளது, ஆனால் ஆண்டவனிலுமா? அவனுக்குக் காசு கொடுத்துத் தரிசிப்பதா? மனம் இடம் தரவில்லை.
அப்பணத்தை வாசலில் இருந்து கைநீட்டும் கடவுள்களிடம் கொடுக்கவே விருப்பம்.
சிலசமயம் 2014, தமிழகக் பயணம் உண்டு. கோவில்களுக்கு செல்வேன். அதன் அழகை ரசிக்க.பணத் தரிசனம் இல்லை.
இதை எல்லோருமே கடைப்பிடித்தால் கட்டாயம் மாற்றம் வரும்.

துளசி கோபால் said...

அட முருகா!!! இப்படியா நடந்துச்சு:(

என் அனுபவம் இங்கே.

http://thulasidhalam.blogspot.co.nz/2009/04/2009-16.html

Unknown said...

மிரட்டி வாங்கும் தொனியில் இருக்கும்
அர்ச்சனை எல்லாம்
காசு கொடுத்தால் ஒரு மரியாதை
கொடுக்க விட்டால் அர்ச்சனை நமக்கு

கடவுளே வேண்டாம்

ஜீவன் சுப்பு said...

உலகத்துல எவ்வளவோ பொண்ணுங்க இருக்கும்போது நான் ஏன் ஜெஸ்சிய லவ் பண்றேங்க்குற மாதிரி ஒலகத்துல எவ்ளோ கோடி கோவில்கள் இருந்தாலும் ஏங்க எல்லாரும் குறிப்பிட்ட கோவில்களுக்கு மட்டுமே போறாங்க...? சாமி ல கூட இங்க பாகுபாடு இருக்குதானே .

ஆளே போகாத கோவில் எவ்வளவு இருக்கு ? அர்ச்சகரே இல்லாத கோவில் எவ்வளவு இருக்கு ? அட்லீஸ்ட் ஒங்க குழந்தைகளையாவது அங்க கூட்டினு போங்க . நீங்க போனது கோவில் இல்ல கொல்லையடிக்குற கும்பல் இருக்குற ஒரு பிசினஸ் கூடாராம்.

dheva said...

திருச்செந்தூர்ல கொஞ்சம் வரலாற்றோட சம்பந்தப்பட்ட டச் இருக்கு, அந்த வைபரேசன் நமக்கு கிடைக்கும்ன்றது அங்க ஸ்பெசல்

பழனி...போகர்ன்ற சித்தரால கட்டப்பட்ட நவபாஷாண சிலை மற்றும்...பல மூலிகைகள் கொண்ட மலை. அங்க போறதுக்கும் ஒரு லாஜிக் இருக்கு...

இடத்துல எந்தப் பிரச்சினையும் கிடையாது சுப்பு தம்பி...பிரச்சினை முரட்டுத்தனமா காசு சேத்து செளகரியமா வாழ நினைக்கிற...மக்கள்கிட்டதான்...!

ஜீவன் சுப்பு said...

சரிதான் அண்ணேன் ..!

முன்னாடி வைப்ரேசன் இருந்துருக்கலாம் . இப்ப வைப்ரேசன் இருந்ததா ...? நிச்சயமா இருந்துருக்காதுங்குறேன் . தனிப்பட்ட ஒவ்வொருவருக்கும் ஒரு நம்பிக்கை இருக்கலாம் , நான் அதை தவறென்று நினைக்கவில்லை . ஆனா ஏன் எல்லாரும் ஒரே மாதிரியே ஒரே பக்கமே போறாங்கன்னு தான் ஆச்சரியமா இருக்கு . அது கோவிலாக இருந்தாலும் சரி ஈமு கோழியா இருந்தாலும் சரி .

பழனில போயி மொட்ட போட்டவங்க மலையயுமில்ல மொட்டயடிச்சுட்டாங்க.

//பிரச்சினை முரட்டுத்தனமா காசு சேத்து செளகரியமா வாழ நினைக்கிற...மக்கள்கிட்டதான்...!//
உண்மைதான்னேன் .

dheva said...

ஜீவன் சுப்பு @

உண்மைதான் தம்பி..!
உள்ளமே பெருங்கோயில்
ஊனுடம்பாலயம்
வள்ளற் பிரானார்க்கு
வாய் கோபுர வாசல்
தெள்ளத் தெளிவார்க்குச்
சீவன் சிவலிங்கம்!

கர்மாவ கழிக்க இப்படி எல்லாம் அலைக்கழிய வேண்டி இருக்கு...!

கும்மாச்சி said...

மாற்றம் நம்மிடையே உள்ளது, கோயில்களில் எந்த காரணம் கொண்டும் பணம் கொடுக்காதீர்கள், எத்துணையோ விளக்கேற்றகூட வழியில்லாத கோயில்கள் உள்ளன, அங்கு சென்று விளக்கேற்றுங்கள், செந்தூர், பழனி, சிதம்பரம், திருப்பதி என்ற எல்லாக்கடவுலகளையும் வழிபட்ட நிம்மதி கிடைக்கும்.

கார்த்திக் சரவணன் said...

திருச்செந்தூர் செல்லும்போது ஒரு 20 ரூபாய் கட்டு எடுத்துச்செல்லுதல் நலம். வேறு எதுவும் சொல்லத் தோன்றவில்லை...

ப.கந்தசாமி said...

யோகன்-பாரிஸ் சொல்லுகிற மாதிரி சின்ன கோவிலில் சாமியைக் கும்பிட்டால் போதும். எல்லா இடத்திலும் சாமி ஒண்ணுதானே? இந்த புரிதல் இல்லாதவர்களுக்குத் தான் கஷ்டம்.

வெங்கட் நாகராஜ் said...

திருச்செந்தூர் மட்டுமல்ல, தேவா, இந்தியாவின் பல கோவில்களில் இதே நிலை தான்.

ஜம்முவில் ஒரு சிவன் கோவில் - கம்பி தடுப்புகளுக்கு நடுவே வரிசையாகச் செல்ல வேண்டும் - வழியில் பல சிவலிங்கங்கள் - அப்படி ஒரு இடத்தில் ஒரு பெரிய உருவம் நின்றுகொண்டு, வரும் பக்தர்களின் தோளைப் பிடித்து நிறுத்தும். பெயர், நக்ஷத்திரம் கேட்டபடியே முதுகில் தட்டிக்கொண்டே இருக்கும் - அதுவும் பலமான தட்டு - அடி எனவும் சொல்லலாம்! சில பல வாக்கியங்களைச் சொன்ன பிறகு ஐம்பது-நூறு கேட்கும்.... கொடுக்கும் வரை தட்டுவது தொடரும்! வட இந்தியாவில் இப்படி தட்டி தான் ஆசீர்வாதம்!

முன்னால் பலர் அடி வாங்க, அவர் என் தோளைப் பிடிக்கும் முன் குனிந்து எடுத்தேன் ஒரு ஓட்டம்!